தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் சொல்லதிகாரம் - சேனாவரையம் உரையாசிரியர் : சேனாவரையர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 368 = 384 படிகள் : 2000 விலை : உரு. 240 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34 திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி (EFEO) யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே ‘உயர்தனிச் செம்மொழி’ எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், ‘உலக முதன் மொழி தமிழே’ என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! “எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்” என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. “புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்” தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [ உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய ‘இலக்கண வரலாறு’ என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பையும் பெற்றுத்தந்த பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், ஆகியோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலம்பு. சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நன்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பா. பெரும்பாணாற்றுப்படை மணி. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு “தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்” இதனொடும் இணைக்கப்பட்டுளது! “வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!” அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் ‘கருவிநூல் பதிப்பகம்’ என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள ‘மண்’ எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் ‘தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை’ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் தொல்காப்பியம் ... 01 சொல்லதிகார இயலமைதி ... 22 சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் ... 25 சேனாவரையர் ... 52 சொல்லதிகாரம் - சேனாவரையம் 1. கிளவியாக்கம் ... 65 2. வேற்றுமையியல் ... 115 3. வேற்றுமை மயங்கியல் ... 136 4. விளிமரபு ... 158 5. பெயரியல் ... 170 6. வினையியல் ... 194 7. இடையியல் ... 233 8. உரியியல் ... 256 9. எச்சவியல் ... 275 நூற்பா நிரல் ... 323 சொல் நிரல் (மேற்கோள்) ... 329 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) ... 336 செய்யுள் நிரல் (மேற்கோள்) ... 347 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) ... 352 கலைச்சொல் நிரல் (உரைவழி) ... 357 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் ... 365 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை களையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல் களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல் காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்கு கின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பி யன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்க ணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ் செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல் காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பா வியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் சொல்லதிகார இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல்போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பலஎன்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை ஆஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகிய வற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணையாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப்படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர் திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக் காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவு தற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவேவிடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக்கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பனவெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும்வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கி லும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமையானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப் பட்டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஔவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஔவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவி யாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமையாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ் களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படு வதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழா மையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்ற தாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண் மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண்பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்கு வனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தியிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப்படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்துபடுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்தவில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகிவிட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக்கொண்டு பரப்பாள ரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கணமே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்பனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதி யாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” (252) என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச் சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச் சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக் கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் (349) தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல் காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சொன்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல் காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலை யிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் > நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஔவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப் படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப்பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றி னர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப்பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக் கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்து களை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங் களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டு கிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் சேனாவரையர் சேனாவரையர் என்பது பட்டப்பெயர். எட்டி, காவிதி என்னும் பட்டங்கள்போல் படைத்தலைவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டப்பெயர் அது. அதனால் சேனாவரையரின் முன்னோருள் ஒருவர் அப்பட்டப்பெயர் பெற்று விளங்கி அது குடிப்பெயராகப் பின்னர் விளங்கியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். அரையர் = அரசர்; ‘சேனை அரையர்’ என்பது சேனாவரையர் ஆயது. சேனைமுதலி, தளவாய் முதலி, நாயகர், தலைவர் படையாச்சி (ஆட்சி) என்னும் குடிவழிப் பெயர்களின் வரலாற்றை அறிந்தால் சேனா வரையர் என்பதன் பொருள் தெளிவாகும். ஊரும் காலமும் தூத்துக்குடி திருச்செந்தூர்ப் பெருவழியில் ஆற்றூர் என்றோர் ஊர் உள்ளது. அவ்வூர் பொருநையாற்றின் கரையில் அமைந்தது. அவ்வூரி லுள்ள சோமநாதர் கோயிலில் மாறவர்மன் குலசேகரனின் ஏழாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுள்ளது. அதில் ஆற்றூர்ச் சேனாவரையர் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலங்களைச் சோமநாதர் கோயிலுக்கு வழங்கிய செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1276 என்பர். அதனால் சேனாவரையர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம். ஆற்றூர் ஏரல், கொற்கை சார்ந்த ஊர். கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. அக்கொற்கையில் நாணயம் அடிக்கும் அக்க சாலை இருந்தது. இன்றும் அவ்விடம் ‘அக்கா சாலை’ என வழங்குகின்றது. ஆங்கிருந்த கோயில் ‘அக்கசாலை ஈசுவரர் கோயில்’ என்பதை அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. செழிய நங்கை கோயில் என்பதொன்றும் ஆங்குண்டு. அப்பெயர் நெடுஞ்செழியன், வெற்றிவேற்செழியன் பெயர்களை நினைவூட்டுகின்றது. கொற்கை சூழ்ந்த பகுதியில் படைகள் தங்கியிருந்த சான்று காட்டும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆதலால் அப்படைத் தலைவர் ஒருவர் குடிவழிப் பெயரே சேனாவரையர் என்பதற்குக் கிட்டும் சான்றுகள் இவை எனக் கொள்ளலாம். ஆற்றூர்க் கல்வெட்டு மற்றொன்றில் சேனாவரையர்க்கு ‘அழகப் பிரான் இடைக்கரையாழ்வான்’ என்றொரு பெயருண்மை கொண்டு அப்பெயரே சேனாவரையரின் இயற்பெயராக இருக்கக் கூடும் என்பர். சேனாவரையர் உரையாசிரியர் இளம்பூரணர் உரையைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் ஆகியோர் கொள்கைகளை மறுத்துரைக்கும் இடங்களும் இவர் நூலில் உள. ஆதலால், அவர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது உறுதியாகும். ‘மாறோகம்’ என்பது பழமையானதோர் ஊர். அவ்வூர்ப் புலவர் ‘மாறோகத்து நப்பசலையார்’ என்பார் சங்கச் சான்றோர் வரிசையைச் சார்ந்தவர். அம் மாறோகம் கொற்கை சூழ்ந்த பகுதியாகும். அதன் வழக்கம் ஒன்றைச் சேனாவரையர் தம் உரையுள் எடுத்தாள்கிறார். அதிலும் ‘இக்காலத்தும்’ என நிகழ் காலத்தால் சுட்டுகிறார். தம் ஊர்ச்சார்புச் செய்தியாக விளங்குகின்ற அது, “புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப” என்பது (164). “தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத் ‘தந்துவை’ என்றும் வழங்குப” என்றும் (400), நாட்டைச் சுட்டி எடுத்துக்காட்டுக் காட்டும் இப்பகுதியும் இவர்தம் நாட்டுச் சார்புக்குரிய சான்றாகக் கொள்ள வாய்க்கின்றது. சமயம் ஆற்றூர்ச் சேனாவரையர் அவ்வூர்ச் சோமநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தியால் அவர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாம். மேலும் பிறர் உரைகளின் முகப்பில் இறைவணக்கப் பாடல்கள் இல்லாதிருக்கவும் இவருரை முகப்பில் பிள்ளையார், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோரைப் பற்றிய வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளமை இவர்தம் சமயச்சார்பை விளக்கும். இளம்பூரணர் தொல்பொருள். ஐம்பதாம் நூற்பாவில் மேற்கோள் காட்டும், “தன்தோள் நான்கின்” என்னும் மூத்த பிள்ளையார் பாடலை இவர்தம் உரை நூன் முகப்புப் பாடலாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம். சேனாவரையர் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. மற்றை அதிகாரங்களுக்கு இவர் உரை எழுதினார் என்பதற்குரிய சான்று இவர் உரையிலோ பிற வகைகளிலோ கிட்டிற்றில்லை. ஆனால் எழுத்து, பொருள் அதிகாரங்களில் இவர் கொண்டிருந்த புலமை நலம் சொல் லதிகார உரையால் விளக்கமாகின்றது. நூலாசிரியரைச் சிறப்பித்தல் நூலாசிரியர் தொல்காப்பியர் இலக்கண நூற்பா யாத்தனர் எனினும், அந் நூற்பா இலக்கிய நயமுடையது என்பதை உட்கொண்டவராய்ச் “செய்யுளின்பம் நோக்கி அளபெழுந்து நின்றது” என்றும் (210), “செய்யுளின்பம் நோக்கி வினையொடும் பெயரொடும் என்றார்” என்றும் (295), “தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது” என்றும் (398) இன்னவாறு நயம் உரைக்கும் பகுதிகளால் சேனாவரையர் நூலாசிரியரைச் சிறப்பித்தலை நிலைப்படுத்துகிறார். “அகத்திய முதலாயின எல்லா இலக்கணமும் கூறலிற் பல்வேறு செய்தியின் நூலென்றார்” என்று சொல்லதிகார இறுதி நூற்பா விளக்கத்தில் சேனாவரையர் வரையும் உரை, தொல்காப்பியர் புலமைப் பரப்பை நோக்கிக் கூறியதாம் (463). விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமையுள் அடக்குதலும், தனியே பிரித்து எண்ணலும் என இருமுறைகளும் வடமொழியில் உண்டு என்றும், ஐந்திர நூலார் தனியே பிரித்து எண்ணுபவர் என்றும், தொல் காப்பியர் அம்மதத்தைக் கொண்டவர் ஆகலின் வேற்றுமை எட்டெனக் கொண்டார் என்றும் சேனாவரையர் விளக்கிக் கூறுகிறார். இக்கருத்தை விளக்குதற்கே “பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறப்பட்டது என்பதையும் சுட்டுகிறார் (74). பொருள் விளங்கா நிலையில் ‘அகப்படச் சூத்திரம் செய்யார் (குன்றக் கூறலாக அமையார்) என்றும் ‘பொருள் விளங்க விதந்து கூறுவார்’ (விளக்கித் தெளிவுறக் கூறுவார்) என்றும் இவர் கூறுவன நூலாசிரியர் நூற்ற திறத்தை நயமுறக் கூறுவதாய் அமைகின்றன (35, 36). பலபொருள் ஒருசொல் அமையும் வகைகளைக் கூறி அவ்வகை களின் இலக்கணத்தைத் தனித்தனியே குறிக்கிறார் தொல்காப்பியர். அந்நூன் முறையை நயக்கும் சேனாவரையர், “இலக்கணச் சூத்திரங்களே அமையும்; இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், இருவகைய என்னும் வரையறை அவற்றால் பெறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணம் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது” என்கிறார். இதனால், தொல்காப்பியர் நூலியற்றிய சிறப்பைச் சுட்டும் அளவுடன் நில்லாமல், இந்நெறியைப் போற்றுதல் சிறப்பு எனப் பின்வருவார்க்கு எடுத்துக்காட்டும் தேர்ச்சியாளராகவும் சேனாவரையர் அமைதல் புலப்படுகின்றது. ஆசிரியர் தொடுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர். “வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” என்னும் நூற்பா விளக்கத்தில் (198),”`வேற்றுமை கொள்ளாது’ என்னாது காலமொடு தோன்றுமெனின் தொழில் நிலை ஒட்டும் தொழிற் பெயரும் வினைச் சொல்லாவான் செல்லுமாகலானும், `காலமொடு தோன்றும்’ என்னாது வேற்றுமை கொள்ளாது எனின் இடைச் சொல்லும் உரிச் சொல்லும் வினைச்சொல்லெனப்படும் ஆகலானும் அவ்விரு திறமும் நீக்குதற்கு `வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்” என்றார். வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடைய என்றற்கு `நினையுங் காலை’ என்றார்” என்பது அத்தகையவற்றுள் ஒன்று. இடையியலில் ‘எல்லே இலக்கம்’ என்றொரு நூற்பா அமைந் திருத்தலைக் காண்கிறார் சேனாவரையர். அஃது உரிச்சொல் ஆதலால் உரியியலில் இடம் பெறவேண்டும் என்று நினைக்கிறார். ஆயின் நூற்பா இடையியலில் அன்றோ கிடக்கின்றது! அதனை மாற்றியமைத்தல் நூன்முறையாகாது என்று எண்ணியவராய், “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான் இடைச் சொல் என்று கோடும்” என்கிறார். இதனால் நூலாசிரியர் நுவற்சியைத் தலைமேல் தாங்கிச் செயற்பட வேண்டும் உரையாசிரிய மரபை உணர்த்தி விடுகிறார் அவர். அதற்கு அவரே சான்றாக விளங்குவதைத் தம் எழுத்தா லேயே புரிவிக்கவும் செய்கிறார் (269). முந்நூற்றுத் தொண்ணூற்றொன் பதாம் நூற்பா விளக்கத்திலும் இக்கருத்தைத் தெளிவிக்கிறார். இடைச்சொல், உரிச்சொல் முதலியவற்றை இடைச் சொற்கிளவி, உரிச்சொற் கிளவி என ஆள்கிறார் ஆசிரியர். இவற்றுள் கிளவி என்பது மிகை என்று கருதுவார் உளராகலாம் என எண்ணிய சேனாவரையர், “கிளவி என்பது மிகையெனின்; மிகையாயினும் இன்னோரன்ன அமைவுடைய என்பதுணர்த்துதற்கு அவ்வாறோதினார் என்பது” என அமைதி கூறுகின்றார். இன்னவை நூலாசிரியர் ஆணைவழிச் செல்லும் உரைமரபு காட்டுவன என்க. நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று ‘உய்த்துணர வைத்தல்’ என்பது. எனினும், சில இடங்களில் உய்த்துணர வேண்டாமல் வெளிப்பட நூல் இயற்றுவதும் வழக்கே. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனா வரையர் நயம்பட உரை வரைகின்றார். ‘வழாஅல் ஓம்பல்’ என்று வழுவாமல் காத்த ஆசிரியர் (13), “செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே” என விளக்குகிறார் (16). இந்நூற்பா விளக்கத்தில் சேனாவரையர், “நுண்ணுணர் வுடையார்க் கல்லது அதனால் உணர்தலாகாமையின் விரித்துக் கூறியவாறு” என நூலாசிரியர் பேரியலை வெளிப்படுத்துகிறார். இவ்வாறே, “ஆக்கந் தானே காரண முதற்றே” என்னும் நூற்பா விளக்கத் திலும் (21) நுண்ணுணர் வுடையார்க்குத் தம்மரபினவே (11) என அடங்குவ ஆயினும் ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாமையின் விரித்துக் கூறினார்” என்கிறார். ஆசிரியர் வெளிப்பட விளக்கும் இடங்களில், வேறொரு வாய்பாட்டானும் சேனாவரையர் கூறுகிறார்: “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்னும் நூற்பாவில், “ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப்படுதலின் வழக்காறல்ல என்றானும், செய்யுளாறு என்றானும் கூற அமையுமெனின், `உய்த்துணர்வது சொல் இல்வழி’ எனமறுக்க” என்கிறார். வேண்டும் சொல் இல்லாக்கால்தான் உய்த்துணர வேண்டும் என்னும் நெறியை இவ்வாறே மேலும் கூறுவார் (43, 133). வேறுரைகள் சேனாவரையர்க்கு முன்னரே சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையெழுதியிருந்தார். அவருரை சேனாவரையர் உரைத் தெளிவுக்கு மிக உதவியிருக்கும். இளம்பூரணரின் ஆய்வின் மேல் ஆய்வு சேனாவரையர் செய்தலால், உரைச்செப்பங்களும், விளக்கங்களும் கிடைத்தல் இயற்கை. ஆதலால், முதல் நூற்பாவிலேயே உரையாசிரியரைச் சுட்டுகிறார் சேனாவரையர். “சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார் `எழுத்தொடு புணர்ந்து’ என்றாராகலின், ஒருபுடை ஒற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால் ஓரெழுத் தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க” என்று கூறி உரையாசிரியரைப் பாராட்டுகிறார். உரையாசிரியரை ஐம்பத்திரண்டிடங்களில் சுட்டிச் செல்கிறார் சேனாவரையர். ‘அவர்க்கு அது கருத்தன்று என்க’ என்னும் வாய்பாட்டால் 27 இடங்களிலும், ‘அவ்வுரை போலியுரை என்க’ என்னும் வாய்பாட்டால் 18 இடங்களிலும், ‘உரையாசிரியர் கருத்து இதுவேயாம்’ என ஓரிடத்தும், ‘உரையாசிரியர் பிறர் மதம் உணர்த்திய கூறினார்’ என மூன்றிடத்தும் ‘மறுக்க’ என ஓரிடத்தும், ‘ஆண்டு அடங்காது’ என ஓரிடத்தும் பாராட்டுதல் ஓரிடத்துமாக அவரைச் சுட்டுதல் 52 இடங்களாம். இனி உரையாசிரியர் பெயர் சுட்டாமல் ‘ஓருரை’ என்றும் (249, 428), என்பாரும் உளர் என்றும் (186, 285,316, 368, 450, 451), ஒரு சாரார் என்றும் (394, 441, 449, 452, 453, 457, 463), ‘மற்றொரு சாரார்’ என்றும் (412) உரைக்கின்றவற்றை நோக்கச் சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையை யன்றிச் சேனாவரையர் காலத்திற்கு முன்னரே மற்றோர் உரை இருந்த தென்றும், வாய் வழியாக உலவிய உரை மரபுகளும் விளங்கின என்றும் அறியலாம். “அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே” என்னும் நூற்பா விளக்கத்தில் (407) ‘நிரனிறை தானே’ ‘சுண்ணந் தானே’, ‘மொழிமாற் றியற்கை’ என்பனபோல ஈண்டும் ‘அடிமறிச் செய்தி’ என்பதனைக் குறளடியாக்கி, ‘அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருள்தெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரும் உளர்” என்கிறார் சேனாவரையர். இவ்வாறு இளம்பூரணர் அறுத்தார் அல்லர். சேனாவரையர் கொண்ட பாடமே, அவர் பாடமுமாம். ஆதலால் சேனா வரையரால் சுட்டப்பட்டவர் வேறொருவர் என்பது தெளிவான செய்தி. இவர்க்குப் பின்னர் உரைகண்ட தெய்வச் சிலையார் பாடமும் இளம்பூரணர் கொண்ட பாடமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உரையாசிரியர் பெயர் சுட்டிச் சேனாவரையர் மறுக்கும் இடங்கள் சிலவற்றில் அவ்வுரை, உரையாசிரியர் உரையில் காணப்படாமை கொண்டு உரையாசிரியர் இளம்பூரணரின் வேறொருவர் என்று கருதுவாரும் உளர். உரையைப் படியெடுத்தோர் ‘விழ எழுதுதல்’ உண்டு என்றும், சில இடங்களில் ‘இடைச் செறிப்பு’ உண்டு என்றும் பட்டாங்கு அறிவோர் ஐம்பத்திரண்டு இடங்களில் ஒரு நான்கு இடங்களில் மட்டும் உரையாசி ரியர் உரையின்மை கொண்டு வேறொருவராகக் கருதார். உரையாசிரியரும் இளம்பூரணரும் ஒருவரே என்பதைத் தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரண ஆராய்ச்சி முன்னுரைக்கண் பேரா. திரு. கு. சுந்தரமூர்த்தி தெளிவுறுத்துதல் கண்டு கொள்க. (சை.சி.க. பதிப்பு) உரைமரபு இலக்கண உரையாசிரியர்களின் உரைப் போக்கைப் பொதுவகை யில் நோக்கினால், அவர்கள் பயிற்றாசிரியர்களாக (போதக ஆசிரியர்களாக) இருந்தவர்கள் என்பது விளங்கும். அவ்வகையில் சேனாவரையர் உரையில் ‘வினவி’ ‘விடை’ கூறும் பகுதிகள் மிகவுண்மை தெளிவிக்கும். ‘இச்சூத்திரம் என்ன நுதலிற்றோ?’ எனின், ‘இன்னது நுதலிற்று’ என நூற்பாக்கள் தோறும் சொல்லிச் செல்லுதல் இளம்பூரணர் உரை மரபு. சேனாவரையர் இம்மரபைக் கொண்டாரல்லர். அது கூறாக்காலும் நூற்பாவுக்குப் பொருள் கொள்ளத் தடையொன்றின்மை கண்டு அவர் விலக்கியிருத்தல் கூடும். அவர்தம் உரைச் செறிவு அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது. ஓ ஓ என வழங்கும் ஒலிக் குறிப்பை அறிவோம். “ஓ ஓ, அப்படியா செய்தி”, “ஓ ஓ என்று வாழ்கிறான்” (ஓகோ), “ஓ ஓ என்று கத்தியும் கேட்கவில்லை” இப்படியெல்லாம் இந்நாள் வழங்கும் வழக்கு சேனா வரையர் காலத்திலும் இருந்தமை அவருரையால் அறிய வருகின்றது. அது தொல்காப்பியர் காலத்தில் `ஔ ஔ’ என்று இருந்து மாறியதை அவர் சுட்டுகிறார். `ஔகாரத்தைச் சுட்டும் அவர், “இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப” என்கிறார். (281). ‘கண்டீரே கண்டீரே’ என்பன போலவரும் அசை நிலையடுக்கும், ‘நின்றை காத்தை’ என்பன போலவரும் அசைநிலையும் இக்காலத்து அரிய என்றும், இக்காலத்துப் பயின்று வாரா என்றும் கூறுகிறார் (425, 426). ஏ என்னும் உரிச்சொல் ‘பெற்று’ என்னும் பொருளது என்கிறார் தொல்காப்பியர் (304). அதனை விளக்கும் சேனாவரையர் “பெற்று - பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றது போலும்” என்கிறார். இத்தகைய குறிப்புகள் மொழி வரலாற்றுக்கு வாய்க்கும் அரிய கருவிகளாம். சில சிறப்புப் பெயர்கள், சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைச் சுட்டுவதால் பல்வேறு வரலாற்றுத் துணைகளை வழங்குதல் உரைவல்லார் மரபு. அம்மரபில் தக்க பங்கு பற்றிக் கொள்கிறார் சேனாவரையர். அகத்தியனாரால் தமிழுரைக்கப்பட்டது (73) உறையூர்க்கண் நின்ற சிராப்பள்ளிக்குன்று (82) சீத்தலைச் சாத்தன் (174) தெய்வப் புலவன் திருவள்ளுவன் (41) பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் (165) பரணரது பாட்டியல் (80) பெருந்தலைச் சாத்தனார் (26) பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (26) முடத்தாமக் கண்ணியார் (270) இன்னவை இதற்கு எடுத்துக்காட்டுகள். ‘பெண்’ என்னும் சொல் ‘பெண்டு’ என்றும் வழங்கும். ‘பெண்டாட்டி’ என்றும் வழங்கும். இவ்வழக்கு சேனாவரையரால் பெரிதும் ஆளப்படு கின்றது (24, 25, 161, 163). பொத்தகம் என்பது பழவடிவம். அதனைப் ‘புத்தகம்’ என்பது பின்வழக்கு. சாத்தன் புத்தகம், சாத்தனது புத்தகம் என வழங்குகிறார் சேனாவரையர் (413). நாடகம் அல்லது கலை நிகழ்ச்சி நடத்தும் அரங்கு ‘ஆடரங்கு’ என வழங்குதலும், செயற்கை மலை உருவாக்கி வைத்தலும் (செய்குன்று) சுட்டுகிறார் (415). நிலத்தை ஒற்றி வைக்கும் உறுதியோலை ‘ஒற்றிக்கலம்’ எனவும், விலைக்கு விற்று எழுதிய எழுத்தை ‘விலைத்தீட்டு’ எனவும் வழங்கும் வழக்கைக் குறிக்கிறார் (80). இவை அறிய கலைச் சொற்களாவன. நூலின் இடையும் கடையும் தலையும் மங்கலம் அமைய நூலியற்றும் வழக்கைக் குறிப்பிடுகிறார் (82). கெட்டது என்பது காணாமற் போனது என்னும் பொருள் தருதலை “நம் மெருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?” என்பதால் அறிய வைக்கிறார் (32). “வினை என்பது அறத்தெய்வம். சொல் என்பது நாமகளாகிய தெய்வம்” என்று இவர் கூறுவது ஆழ்ந்த கருத்தினது (57). “உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்னும் தொடக் கத்தன” என்பதால் ஒரு பொருட் பன்மொழிகளை அமைக்கிறார் (24). இனியது என்பதைத் ‘தீவிது’ என்பது நயமாக உள்ளது (78). தொண்டு தொண்டன் என்பவை மதிப்புப் பொருளாக வழங்காமை அவர் காலத்திருந்தது என்பதை, “தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக் கிளவி இழித்தற் கண்ணும் வந்ததால் எனின், ஆண்டு உயர் சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது” என்பதால் அறியச் செய்கிறார் (27). “முன்தேற்று - புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின்முன்னின்று தெளித்தல்” (383). “எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப் படாமையின் ஈண்டு அறியாப் பொருள் என்றது பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாத பொருளையாம்” (31). - இன்னவை தெளிவுறுத்த வல்ல தேர்ச்சிச் சான்றுகள். “உலக வழக்கு நடை இத்தகைத்து என்பதை அருமையாகக் குறிக்கிறார் சேனாவரையர் (416). “உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுவதொன்றன்றி, மேற்றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது” உலக வழக்கை விளக்கும்போதே, சூத்திர யாப்பு இத்தகைத் தெனவும் சொல்லி இரு வழக்கையும் விளக்கும் அருமையது இது. இரண்டன் வேறுபாடுகளை விளக்கிக் காட்டலிலும் விழிப்போடு இருக்கிறார் சேனாவரையர். “இனத்தொடு சார்பிடை வேற்றுமை என்னை எனின், ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமெனப்படும். அணைந்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பெனப்படும் என்பது.” (53) “குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது; பண்பு - பொறியான் உணரப்படும் குணம்” (297) - இத்தகையவை அவை. “ஈண்டு இரட்டைக் கிளவி என்றது மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமையுடையவற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டை யும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை”, என்பது போன்ற இடங்களில் இலக்கணத்தை இலக்கியச் சுவைபடச் செய்யும் நேர்த்தியராகச் சேனாவரையர் விளங்குகின்றார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் சேனாவரையரை மிக மிகப் போற்றியவர் சிவஞானமுனிவரர். “வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்” எனப்பாராட்டும் முனிவரர், “எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார் ஆயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர்” என்றும் தொடர்ந்து எழுதுகின்றார் (தொல்காப்பிய சூத்திர விருத்தி). மொழி என்பதாம் ‘பாஷை’ யைப் பாடையென வழங்குகிறார் சேனாவரையர் (397); வடபாடை என்றும் சொல்கிறார் (401). தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாது என்னும் கொள்கை யுடைய இவர் (401), ‘குமரி வடமொழிச் சிதைவு என்றும் (196) நீர் ஆரியச் சிதைவு என்றும் (398) கூறுவது வியப்பாகாது. செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களுள், “திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும் செய்யுட்குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரியவாகா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க” என்னும் செய்தி சங்க நூற் பரப்பை முழுதுறக்கண்டு கூறிய முடிவுடையதாம். ஞாபகம், அநுவாதம், யோகவிபாகம், நேயம், காரகம், தாது இன்னவற்றை ஆங்காங்குரைத்து விளக்குகிறார். பதினைந்து இடங்களுக்கு மேல் சேனாவரையரின் வடமொழிப் புலமை அறியும் வண்ணம் உரை விளக்கம் அமைந்துள்ளது. தொல்காப்பியர் வடநூலொடு மாறு கொள்ளாமல் நூலியற்றியவர் என்பதை முடிந்த முடிவாகக் கொண்டு உரை வரைந்தவர் சேனாவரையர் என்பது, “வடநூலுள் பொருள் வேற்றுமையான் அல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையும் ஓதப்படாமையானும் ஈண்டும் எல்லா ஆசிரியரும் ஒரு வேற்றுமையாகவே ஓதினார் என்க. வடநூலொடு மாறு கொள்ளாமைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின் விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர். அவ்வாறடக்கலிலார் எனின், அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தன்று” என்பதால் (74) புலப்படும். சேனாவரையரின் கல்வி யாழத்தையும் உரைச்செறிவையும் நூன்முழுவதும் கண்டு மகிழ்வார், அவர்தம் பண்புச் செறிவையும் ஓரிடத்தில் அறிய வாய்க்கின்றது. அது, “வினைச் சொற் காலமுணர்த்துங்காற் சில நெறிப்பாடுடைய வென்பது விளக்கிய, `நெறிப்படத்தோன்றி’ என்றார். நெறிப்பாடாவது அவ்வீற்று மிசைநிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்ற உணர்த்த லாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும்” என்பதாம் (201). ‘உரையாசிரியர்க்கு அது கருத்தன்று’ என்று கூறும் அளவில் நாம் அமைகின்ற நிலையும், ‘போலியுரை’ என்று கூறும் இடங்களிலெல்லாம் நாம் அடைகின்ற புண்பாடும், ‘முற்ற உணர்த்தலாகாவாயினும், சிறிது சொல்லுதும்’ என்பதைக் காணும்போது மாறி ஒரு மயக்க நிலைக்கு ஆட்படுகின்றோம். தாம் காணும் உண்மைப் பொருள் காட்டலில் சேனாவரையர்க்குள்ள தணியா வேட்கையே ‘போலிக் காய்வை’ உண்டாக் கிற்றுப் போலும். ‘பெயர் நிலைக் கிளவியும்’ என்னும் எச்சவியல் நூற்பாவில் வரும் ‘தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும்’ என்பதற்கு, “முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்று உரை கூறி, “யாற்றுட் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் என்பதுமுதலாயின” என்கிறார் சேனாவரைவர். ஆற்றிற் செத்த எருமைக்கும் ஊர்க்குயவர்க்கும் என்ன தொடர்பு? அதுதான், ‘இயைபு இல்லாததை இயையக் காட்டுவது’; அது வருமாறு: மாட்டு வணிகன் ஒருவன், எருதுகள் (மாடுகள்) சில பிடித்தான். அவற்றைத் தன் ஊர்க்கு ஓட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. தன் எருதுகளை நீர் குடிக்கவிட்டுக் காலாறச் சிறிது பொழுது தங்கிப் புறப்பட்டான். அப்போது எதிர்பாராமல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. அவ்வெள்ளத்தால் சில எருதுகள் அடித்துச் செல்ல அவை இறந்துபட்டன. ஆற்றில் இறந்து கிடந்த எருதுகள் நாறலாயின. அடுத்திருந்த ஊரவர்க்கு நாற்றம் தாங்கமுடிய வில்லை. இறந்த எருதுகளை எடுக்கவும் ஊரவர் எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் ஊரவர் இவ்வெருதுகளை அகற்றுதல் எவர் பொறுப்பு என ஊர்க் கணக்கனை வினவ, அவன் தனக்கு வழக்கப்படி தரவேண்டிய தொகையைத் தராத குயவனைப் பழிவாங்க நினைத்துப் பழைய ஏடு ஒன்றை எடுத்து ஒரு பாடலை எழுதி ‘ஊரடங்கல்’ ஏட்டுள் ஊடுவைத்து ஊரவர் முன் படித்துக் காட்டினான். அப்பாட்டு இது: “காட்டெரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகையான் மேற்கே மேகம் தோன்றி மின்னி இடித்து மழைபொழிந்து யாற்றில் நீத்தம் பெருகி அடித்துக் கொல்லும் எருமைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல் இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடனே” மட்கலங்கள் எருவால் சுடப்படுதலால் எழுந்த புகையே, வான் முகிலாகி மழைபெய்ய அந்நீர்ப் பெருக்கால், எருது இறந்ததால், அதனைக் கரையேற்றல் குயவர் கடன் என்று தீர்மானித்தது, பொருந்தாததைப் பொருத்திக் காட்டிய புனைவு தானே. அதிகாரம் என ஒன்று வாய்க்கப் பெற்றால் தன்னலத்தார் எப்படி நடந்து கொள்வர் என்பதும், எப்படியெல்லாம் பொய்ப்புனைவு செய்து அறத்தின் கழுத்தை அறுத்து விடுவர் என்பதும், ஏமாந்தவர்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை கிட்டும் என்பதும் இந்நாள் வரை காட்சிச் செயலாகத் தானே உள்ளது! சேனாவரையர் காலத்தில் அவர் கேட்ட செய்தி, காலமெல்லாமா தொடர வேண்டும்? இதனால், ஏட்டறிவோடு நாட்டறிவும் அருமையாகப் பெற்றுப்பதிவு செய்தவராகிறார் சேனா வரையர் என்பது விளக்கமாம். - இரா. இளங்குமரன் சொல்லதிகாரம் சேனாவரையருரை தன்தோள் நான்கின் ஒன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன்று அளியவென் நெஞ்சே. ஆதியில் தமிழ்நூல் அகத்தியற் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே. தவளத் தாமரைத் தாதார் கோயில் அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே. சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமா சாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே. 1 கிளவியாக்கம் (எழுத்துக்கள் பொருள்தரும் முறையில் சொற்களாகும் வகை உணர்த்துவது) 1. திணை உயர்திணையும் அஃறிணையும் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. நிறுத்த முறையானே சொல்லுணர்த்திய எடுத்துக்கொண்டார்; அதனான் இவ்வதிகாரம், சொல்லதிகார மென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார், ‘எழுத்தொடு புணர்ந்து’ என்றாராகலின், ஒருபுடை யொற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால், ஒரெழுத் தொருமொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல் லாதல் எய்தாதென்க. பொருள் குறித்து வாராமையின் அசை நிலை சொல்லாகா எனின், ‘ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்’ (சொல். 274) என்றும், ‘வியங்கோ ளசைச்சொல்’ (சொல். 273) என்றும் ஓதுதலான், அவையும், இடம் முதலாகிய பொருள் குறித்து வந்தன என்க. ‘யா கா பிற பிறக்கு’ (சொல். 279) என்னுந் தொடக்கத்தனவோ எனின், அவையும் மூன்றிடத்திற்கும் உரியவாய்க் கட்டுரைச்சுவைபட வருதலின் பொருள் குறித்தனவேயாம். இக் கருத்தே பற்றியன்றே ஆசிரியர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல். 155) என்றோதுவாராயிற் றென்க. சொற்றான் இரண்டு வகைப்படும், தனிமொழியும் தொடர்மொழி யும் என. அவற்றுள், தனிமொழியாவது, சமய ஆற்றலான் பொருள் விளக்குவது. தொடர்மொழியாவது, அவாய்நிலையானும் தகுதியானும் அண்மைநிலையானும் இயைந்து பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம். பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச் சொல்லு மெனத் தனிமொழி நான்கு வகைப்படும். ‘மரம்’ என்பது பெயர்ச் சொல். ‘உண்டான்’ என்பது வினைச்சொல். ‘மற்று’ என்பது இடைச் சொல். ‘நனி’ என்பது உரிச்சொல். இருமொழித் தொடரும் பன்மொழித் தொடரும் எனத் தொடர் மொழி இரண்டு வகைப்படும். ‘சாத்தன் வந்தான்’ என்பது இருமொழித் தொடர். ‘அறம் வேண்டி அரசன் உலகம் புரந்தான்’ என்பது பன்மொழித் தொடர். அதிகாரம் என்னும் சொற்குப் பொருள் பல உளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருள் நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியை என்க. வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றியைதலையும், ஒன்றன திலக்கணம் பற்றி வரும் பல சூத்திரத் தொகுதியையும் ‘அதிகாரம்’ என்ப. சொல்லதிகாரம், சொல்லையுணர்த்திய அதிகாரம் என விரியும். அச்சொல்லை யாங்கனம் உணர்த்தினானோ எனின்; தம்மையே எடுத்தோதியும், இலக்கணங் கூறியும் உணர்த்தினான் என்பது. வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான், இவ் வோத்துக் ‘கிளவியாக்க’ மாயிற்று. ஆக்கம்-அமைத்துக் கோடல்; நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை, அரிசியாக்கினார் என்ப வாகலின். சொற்கள் பொருள்கள்மேல் ஆமாறு உணர்த்தின மையான், கிளவியாக்க மாயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் ‘கிளவி’ என்றமையான், தனிமொழியுந் தொடர்மொழியுங் கொள்ளப் படும். கிளவி, சொல், மொழி என்னுந் தொடக்கத்தனவெல்லாம் ஒரு பொருட்கிளவி. இதன் பொருள்: மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணையென்று சொல்லுவர்; மக்களென்று கருதப்படாத பிற பொருளை அஃறிணையென்று சொல்லுவர்; அவ்விரு திணைமேலும் சொற்கள் நிகழும் என்றவாறு. எனவே, உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எனச் சொல் இரண்டு என்றவாறாம். மக்கட்சாதி சிறந்தமையான், ‘உயர்திணை’ என்றார். என்மனார் என்பது செய்யுள் முடிபெய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச் சொல். என்றிசினோர், கண்டிசினோர் என்பன முதலாயின அவ்வாறு வந்த இறந்தகால முற்றுச்சொல். என்ப என்னும் முற்றுச் சொல்லினது பகரம் குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச்சொல் பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின், ‘என்மனார்’ என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது, இந் நூலுள்ளுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், ‘இசை நிறை’ என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார், பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாகலானும், அவர்க்கது கருத்தன்றென்க. மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலான் செய்யுள் முடிபென்பது கூறாராயினார். என்மனார் ஆசிரியர் எனவே, உயர்திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாம். ஆசிரியர் என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது ‘மக்கட்சுட்டு’ எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை. எனவே, மக்களேயாயினும், மக்க ளென்று சுட்டாது பொருளென்று சுட்டியவழி, உயர்திணை எனப்படாது என்பதாம். இனி ‘அவரல’ என்னாது ‘பிற’ என்றே விடின் யாதல்லாத பிற என்று அவாய் நிற்குமாகலின், ‘அவரல’ என்றார். மக்கட்சுட்டே என்று மேல் நின்றமையின் மக்களல்லாத பிற என்று உணரலாம் எனின், ஆற்றல் முதலாயினவற்றாற் கொள்வது சொல் இல்வழி என மறுக்க. இனி ‘அவரல’ என்றே ஒழியின், அவற்றது பகுதியெல்லாம் எஞ்சாமல் தழுவாமையின் எஞ்சாமல் தழுவுதற்கு ‘அவரல பிற’ என்றார். செய்யுளாகலான் ஆயிருதிணை எனச் சுட்டு நீண்டது. வரையறை யின்மையின் ஈண்டு யகரம் உடம்படுமெய் ஆயிற்று. சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாகலின், ஆயிருதிணையின்கண் என ஏழாவது விரிக்க. இன் சாரியை வேற்றுமையுருபு பற்றியும் பற்றாதும் நிற்கும் என்று உரையாசிரியர் இரண்டாவது விரித்தாரா லெனின்:-’சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும், சாரியை உள்வழித் தன் உருபு நிலையலும்’ (எழுத். 157) என்று இரண்டாவதற்குத் திரிபு ஓதினமை யானும் ‘செலவினும் வரவினும் தரவினுங் கொடையினும்’ (சொல். 128) என்புழியும் பிறாண்டு மெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொரு ளுரைத்தமையானும், அவ் வுரை போலியுரை யென்க. ஆயிரு திணையினும் என்னும் உம்மை விகார வகையால் தொக்குநின்றது. இசைக்கும் என்பது செய்யும் என்னும் முற்றுச்சொல். மன் என்னும் இடைச்சொல் மன என ஈறு திரிந்து நின்றது. மன் என்று பாடம் ஓதுவாரு முளர். ஏகாரம் ஈற்றசை. சொல் வரையறுத்தலே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின், ‘ஆடூஉ அறி சொல் மகடூஉ அறிசொல்’ என்றாற்போல ‘உயர்திணைச் சொல்’ ‘அஃறிணைச் சொல்’ என அமையும்; உயர்திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டா எனின்: உயர்திணை அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறி யாகலான், ஆடூஉ மகடூஉப் போல வழக்கொடு படுத்துப் பொருள் உணரலாகாமையின், உயர்திணை மக்கள் அஃறிணை பிற எனல் வேண்டும் என்பது. இவ்வாறு ஒரு பொருள் நுதலிற்றாக உரையாக்கால், சூத்திரம் ஒன்றாமா றில்லை என்க. (1) 2. பால் உயர்திணை முப்பால் 2. ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே. (இ-ள்) ஆடூஉ அறிசொல்லும் மகடூஉ அறிசொல்லும், பல்லோர் அறியுஞ் சொல்லொடு பொருந்தி, அம்மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையனவாம் எ-று. ஆண்மகனை ‘ஆடூஉ’ என்றலும், பெண்டாட்டியை ‘மகடூஉ’ என்றலும் பண்டையார் வழக்கு. அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ‘ஆடூஉ அறிசொல்’ முற்கூறப்பட்டது. பன்மை இருபாலும் பற்றி வருதலின் ‘பல்லோரறிசொல்’ பிற்கூறப்பட்டது. இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கண் சிறுபான்மை தொகப் பெறுதலின், தொக்கு நின்றது. திரிந்த புணர்ச்சி யன்மையின் விகார வகையான் தொக்கதென்பாரும் உளர். ‘சிவணி’ என்னும் வினையெச்சம், உயர்திணைய என்னும் வினைக் குறிப்புக் கொண்டது; ஆறாம் வேற்றுமை ஏற்று நின்ற சொல் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்குமாகலான். உயர்திணையவாம் என்னும் முப்பாற் சொல்லின் வினை, ‘ஆடூஉ அறிசொல்’ ‘மகடூஉ அறிசொல்’ என்னும் இரண்டன் வினையாகிய சிவணி என்னுஞ் செய்தென் எச்சத்திற்கு வினை முதல்வினை யாயினவாறு என்னையெனின், உயர்திணையவாதல், ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் என்பனவற்றிற்கும் எய்துதலான், வினை முதல் வினையாம் என்க; ‘முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின’ (சொல். 230) என்புழி, வினைமுதல்வினை யென்னுந் துணையல்லது, பிறிதொன்றற்குப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல் வேண்டும் என்னும் வரையறை யின்மையின். அல்லாக்கால், ‘இவளும் இவனும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப’ என்பன போல்வன அமையாவாம் என்க. ஆடூஉ அறிசொல் முதலாயினவற்றை உணர்த்தியல்லது அவற்றது இலக்கணம் உணர்த்தலாகாமையின், “பால் உணர்த்தும் எழுத்து வகுப்பவே அவை தாமும் பெறப்படும்; இச்சூத்திரம் வேண்டா ” என்பது கடா அன்மை உணர்க. உயர்திணைச் சொல் உணர்த்தி அதனது பாகுபாடு கூறுகின்றா ராகலின், ‘அம் முப்பாற்சொல் உயர்திணைய’ என்றாராயினும், உயர் திணைச் சொல் மூன்று பாகுபாடு படும் என்பது கருத்தாகக் கொள்க. இக் கருத்தானன்றே, ஆசிரியர் அம் முப்பாற் சொல்லும் என ‘இனைத்தென அறிந்த பொருள் தொகுதிக்குக்’ (சொல். 33) கொடுக்கும் உம்மை கொடா ராயினும், *உரையாசிரியரும் உயர்திணை யெனப்பட்ட பகுப்பை விரிப்புழி இத்துணை யல்லது விரிபடாதென்பது ஈண்டுக் கூறியது என் றுரைத்ததூஉம் என்க. ‘ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே’ (சொல். 3) என்பதற்கும் ஈதொக்கும். (2) *(பாடம்) கொடாராயினதூஉம். அஃறிணை இருபால் 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே. (இ-ள்.) ஒன்றனை அறியுஞ் சொல்லும், பலவற்றை அறியுஞ் சொல்லும் என அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் எ-று. (3) ‘பேடி’ முதலிய சொற்கள் உயர்திணைய ஆதல் 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும்அந் தம்தமக் கிலவே உயர்திணை மருங்கின் பால்பிரிந் திசைக்கும். (இ-ள்.) உயர்திணையிடத்துப் பெண்மைத்தன்மை குறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும், இவையெனத் தம் பொருளை வேறு அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்குடைய அல்ல; உயர்திணையிடத்து அதற்குரிய பாலாய் வேறுபட்டு இசைக்கும் எ-று. பால் வேறுபட்டு இசைத்தலாவது, தாம் உயர்திணைப் பெயராய் ஆடூஉ அறிசொல் முதலாயினவற்றிற்குரிய ஈற்றெழுத்தே தம் வினைக்கு ஈறாக இசைத்தல். (எ-டு.) பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும்; தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார் எனவும் வரும். அலிப்பெயரின் நீக்குதற்குப் ‘பெண்மை சுட்டிய’ என்றும், மகடூஉப் பெயரின் நீக்குதற்கு ‘ஆண்மை திரிந்த’ என்றுங் கூறினார். பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாப் பேடு என்பதும் ஒழிக்கப்பட்டதாம். பெண்மை திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும் பான்மையாகலான் ‘ஆண்மை திரிந்த’ என்றார். பேடியர் பேடிமார் பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடி யென்னும் பெயர்நிலைக் கிளவி யென்னாது ‘பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ என்றார். பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர்நிலைக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது இடைநிலை. ‘தன்மை திரிபெயர்’ (சொல். 56) என்றாற்போலச் சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதி ‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ என்றார். உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் எனவே, தமக்கென வேறு ஈறு இன்மை பெறப்படுதலின், ‘இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே’ எனல் வேண்டா எனின், தமக்கென வேறு ஈறு உடையவாய் ஆடூஉவறி சொல் முதலாயினவற்றிற்குரிய ஈற்றானும் இசைக்குங்கொல் என்னும் ஐயம் நீக்குதற்கு, ‘அந்தம் தமக்கிலவே’ எனல் வேண்டும் என்பது. பாலுள் அடங்காத பேடியையும் திணையுள் அடங்காத தெய்வத்தையும் பாலுள்ளும் திணையுள்ளும் அடக்கியவாறு. சுட்டிய என்பது செய்யிய என்னும் வினையெச்ச மென்றும், ஆண்மை திரிதல் சொற்கின்மையின் பெயர்நிலைக் கிளவி என்பது ஆகு பெயராய்ப் பொருண்மேல் நின்றதென்றும் உரையாசிரியர் கூறினாரா லெனின்: ஆண்மை திரிதல் பெண்மைத்தன்மை எய்துதற் பொருட்டன்றிப் பேடிக்கு இயல்பாகலின், பெண்மை சுட்ட வேண்டி ஆண்மை திரிந்த என்றல் பொருந்தாமையானும், பொருளே கூறலுற்றாராயின் ஆசிரியர் பேடியும் தெய்வமும் என்று தாம் கருதிய பொருள் இனிது விளங்கச் சுருங்கிய வாய்பாட்டாற் சூத்திரிப்பராகலானும், அவர்க்கது கருத்தன்மை யான், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. (4) ஆண்பால் ஈறு 5. னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல். (இ-ள்) னஃகா னாகிய ஒற்று ஆடூஉ அறிசொல்லாம் எ-று. (எ-டு.) உண்டனன், உண்டான்; உண்ணாநின்றனன், உண்ணா நின்றான்; உண்பன், உண்பான்; கரியன், கரியான் என வரும். ஆடூஉ அறிசொல்லாவது னகார ஈற்றுச் சொல்லாயினும், பால் உணர்த்துதற் சிறப்பு நோக்கி ‘னஃகான் ஒற்றே’ என்றார். ‘அறமாவது அழுக்காறின்மை’ என்றாற்போல, னஃகான் ஒற்று ஆடூஉ வறிசொல் என்றாராயினும், ஆடூஉ அறிசொல்லாவது னஃகான் ஒற்றென்பது கருத்தாகக் கொள்க. ‘ளஃகான் ஒற்று’ முதலாயினவற்றிற்கும் இவை ஒக்கும். ஏகாரம் அசைநிலை. உரையாசிரியர் பிரிநிலை யென்றாராலெனின், பிரிநிலையாயின் ஆடூஉ வறிசொற்கு இலக்கணங் கூறுதலன்றிப் பிரித்ததன் சிறப்புணர்த் துதலே கருத்தாமாகலின் அவ்வுரை போலியுரை என்க. (5) பெண்பால் ஈறு 6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல். (இ-ள்.) ளஃகானாகிய ஒற்று மகடூஉ அறிசொல்லாம் எ-று. (எ-டு.) உண்டனள், உண்டாள்; உண்ணாநின்றனள், உண்ணா நின்றாள்; உண்பள், உண்பாள்; கரியள், கரியாள் என வரும். (6) பலர்பால் ஈறு 7. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக் கிளவி உளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. (இ-ள்.) ரஃகானாகிய ஒற்றும் பகரமாகிய இறுதியும் மார் என்னும் இடைச்சொல்லும் இம்மூன்றும் பலரறி சொல்லாம். ஏ என்பது ஈற்றசை எ-று. (எ-டு.) உண்டனர், உண்டார்; உண்ணாநின்றனர், உண்ணாநின்றார்; உண்பர், உண்பார்; கரியர், கரியார் எனவும்; கூறுப, வருப எனவும்; கொண்மார், சென்மார் எனவும் வரும். மார் எதிர்காலம் பற்றிவந்த ஆரேயாம்; ரஃகான் ஒற்றென அடங்கு மெனின், அற்றன்று. ஆரேயாயின் கொண்மார் என்புழி மகரம் காலம் பற்றி வந்ததோர் எழுத்தாகல் வேண்டும். உண்பார் வருவார் எனக் காலம் பற்றி வரும் எழுத்து முதனிலைக் கேற்றவாற்றான் வேறுபட்டு வருமன்றே? அவ் வாறன்றி உண்மார் வருமார் என எல்லா முதனிலைமேலும் மகரத்தொடு கூடி வருதலானும், வினைகொண்டு முடிதற்கேற்பதொரு பொருள் வேறுபாடுடைமையானும் ஆர் ஈறு அன்று, வேறெனவேபடும் என்பது. மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் ஒப்புமை நோக்கி அர் ஆர் என்னும் இரண்டு ஈற்றையும் ‘ரஃகான்’ என அடக்கி ஓதினார். அன் ஆன் அள் ஆள் என்பனவற்றையும் இவ் வொப்புமை பற்றி ‘னஃகான், ளஃகான்’ என அடக்கி ஓதினார். ரகாரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றிப் பெருவழக் கிற்றாய் வருதலின், முன் வைத்தார்; மார் பகரவிறுதியின் சிறுவழக்கிற் றாகலின், பின்வைத்தார். உண்கும், உண்டும், வருதும், சேறும் என்னுந் தொடக்கத்தனவும் பலரறி சொல்லாயினும், அவை ‘எண்ணியல் மருங்கின் திரி’ (சொல். 209)தலின் நேரத் தோன்றாவாகலான், இவற்றை ‘நேரத் தோன்றும் பலரறி சொல்’ என்றார். மூன்றும் பலரறி சொல் என்றாராயினும், பலரறி சொல்லாவது இம்மூன்றும் என்பது கருத்தாகக் கொள்க. (7) ஒன்றன்பால் ஈறு 8. ஒன்றறி கிளவி த ற ட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். (இ-ள்.) ஒன்றறி சொல்லாவது த ற ட என்னும் ஒற்றை ஊர்ந்த குற்றியலுகரத்தை இறுதியாகவுடைய சொல்லாம் எ-று. (எ-டு.) வந்தது, வாராநின்றது, வருவது, கரிது எனவும்; கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவும்; குண்டுகட்டு, கொடுந்தாட்டு, குறுந்தாட்டு எனவும் வரும். கிடக்கை முறையாற் கூறாது ‘த ற ட’ எனச் சிறப்பு முறையாற் கூறினார். குன்றியலுகரம் என மெலிந்து நின்றது. தகர உகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும்பற்றி வருதலும், றகர உகரம் இறந்தகாலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும், டகர உகரம் வினைக்குறிப்பே பற்றி வருதலு மாகிய வேறுபாடுடைமையான், குற்றியலுகரமென ஒன்றாகாது மூன்றாயின. (8) பலவின்பால் ஈறு 9. அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்றே பலவறி சொல்லே. (இ-ள்.) பலவறி சொல்லாவன அ ஆ வ எனவரும் இறுதியை யுடைய அக்கூற்று மூன்று சொல்லாம் எ-று. (எ-டு.) உண்டன, உண்ணாநின்றன, உண்பன, கரியன எனவும்; உண்ணா, தின்னா எனவும்; உண்குவ, தின்குவ எனவும் வரும். உண்ட, உண்ணாநின்ற, உண்ப, கோட்ட என்னுந் தொடக்கத்தன வும் அகரவீற்றுப் பலவறிசொல். அவற்றுள் உண்ப என்பது பகர வீற்றுப் பலரறி சொல்லன்றே? அஃறிணைக் காயினவாறென்னை யெனின், பகர இறுதியாயி னன்றே உயர்திணைக்காவது? ஈண்டுக் காட்டப்பட்டது ‘கானந் தகைப்ப செலவு’ (கலி. 12)’‘ சினையவுஞ் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்துதாங் கொடுப்பபோல்’’ (கலி. 28) என நின்றன போல. எதிர்காலத்து வரும் பகர மூர்ந்து நின்ற அகர ஈறாதலின், அஃறிணைச் சொல்லேயா மென்பது. செய்யுளாகலின், தகைப்பன கொடுப்பன என்னுஞ் சொற்கள் தகைப்ப கொடுப்ப என விகாரவகையான் அவ்வாறு நின்றன வாகலான், வழக்கு முடிவிற்கு அவை காட்டல் நிரம்பாதெனின், தகைத்தன, தகையாநின்றன; தகைத்த, தகையாநின்ற எனவும்; கொடுத்தன, கொடா நின்றன; கொடுத்த, கொடாநின்ற எனவும் இறந்தகாலத்தும் நிகழ்காலத்தும் அகர ஈறு முதனிலைக் கேற்றவாற்றான் அவ்வக்காலத்திற்குரிய எழுத்துப் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடியுமாறுபோல, எதிர்காலத்தும் முதனிலைக்கேற்ற வாற்றான் அக்காலத்திற்குரிய எழுத்துப் பெற்று அன் பெற்றும் பெறாதும் முடியும். எதிர்காலத்துக்குரிய எழுத்தாவன பகரமும் வகரமுமாம். அவற்றுட் பகரம் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடிவுழி, தகைப்பன தகைப்ப, கொடுப்பன கொடுப்ப எனவும்; வகரம்பெற்று அவ்வாறு முடிவுழி, வருவன வருவ; செல்வன செல்வ எனவும் இவ்வாறு முடியுமாகலின், தகைப்ப கொடுப்ப என்பன விகார மெனப்படா, இயல்பே யாம் என்பது. கொடுப்பன யாவை அவைபோல என உவமை கருதாது, அவை தம்மையே சுட்டி நிற்றலின் கொடுப்ப என்பது பெயரன்மை யறிக. அன் பெறாது எதிர்காலத்து வரும் வகரஒற்று ஊர்ந்து நின்ற அகரமாய் வகர ஈறு அடங்கும் எனின், வினை கொண்டு முடிதல் ஒழித்து மார் ஈற்றிற்கு உரைத்தது உரைக்க. அவ்வாறு உரைக்கவே, குகரம் பெற்றவழி அன்பெறற்கு ஏலாமையின், உண்குவ தின்குவ என்னுந் தொடக்கத்தன வகர ஈறேயாம். வருவ செல்வ எனக் குகரம் பெறாதவழி வகர ஈறாதலும் அகர ஈறாதலும் என இரு நிலைமையும் உடையவாம்; என்னை? எல்லா வினைக் கண்ணும் சேறன்மாலைத்தாகிய வகரஈறு ஆண்டு விலக்கப்படாமை யானும், அத்தன்மைத் தாகிய அகர ஈறும் ஆண்டு வந்து அன் பெறாதவழிக் கால வகரம் ஊர்ந்து அவ்வாறு நிற்றலுடைமையானும் என்பது. வரும் என்னும் உகரம் விகாரவகையான் நீண்டு நின்றது. ஈற்று வகையான் மூன்றாகிய சொல் என்பார் ‘அப்பால் மூன்று’ என்றார். (9) இவ் ஈறுகள் வினையொடு வருதல் 10. இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றின்நின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே. (இ-ள்.) உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு திணைக்கண்ணும் உளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலும் அறிய அவ்வச் சொல்லின் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோ ரெழுத்தும் புலப்படுதற்கண் வினைச்சொற்கு உறுப்பாய்ப் புலப்படும் எ-று. திணை இரண்டே, பால் ஐந்தே என வரையறுத்தற்கு ‘இருதிணை மருங்கின் ஐம்பால்’ என்றார். னகாரமும் ளகாரமும் ரகாரமும் மாரும் இறுதிநின் றுணர்த்தும் என்பதற்கு ‘ஈற்றின் நின்றிசைக்கும் பதினோ ரெழுத்தும்’ என்பது ஞாபக மாயிற்று. அல்லனவற்றிற்கு அநுவாத மாத்திரம் என்றார். தாமே என்பது கட்டுரைச்சுவைபட நின்றது. வினை எனப் பொதுப்படக் கூறினாராயினும், ஏற்புழிக் கோடல் என்பதனாற் படர்க்கை வினை என்று கொள்ளப்படும். இவை பெயரொடு வருவழித் திரிபின்றிப் பால் விளக்காமையின் ‘வினையொடு வரும்’ என்றார். (10) பெயரும் வினையும் பால் மயங்கலாகாமை 11. வினையின் தோன்றும் பால்அறி கிளவியும் பெயரின் தோன்றும் பால்அறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. ஒரு திணைச்சொல் ஏனைத் திணைச்சொல்லொடு முடியுந் திணை வழுவும், ஒருபாற்சொல் அத்திணைக்கண் ஏனைப் பாற் சொல்லொடு முடியும் பால்வழுவும், பிறிதொரு காரணம் பற்றாது ஒரு பொருட்குரிய வழக்கு ஒரு பொருண்மேற் சென்ற தெனப்படும் மரபுவழுவும், வினாயதற் கிறையாகாச் செப்புவழுவும், வினாவப்படாத பொருளைப் பற்றி வரும் வினாவழுவும், ஓர் இடச்சொல் ஓர் இடத்துச் சொல்லொடு முடியும் இடவழுவும், காலக் கிளவி தன்னோடியையாக் காலமொடு புணருங் கால வழுவும் என வழு எழுவகைப்படும். வழுவற்க என்றலும் வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இரு வகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுக என்றல் வழுவற்க என்றலாம். குறித்த பொருட் குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றான் அப்பொருள் விளக்குதலின் அமைக என்றல் வழுவமைத்தலாம். இச் சூத்திரம் முதலாக இவ் வோத்து வழுக் காக்கின்றது. (இ-ள்) கூறப்பட்ட பதினோரீற்றவாய் வினைபற்றி வரும் பால் அறி சொல்லும், அவன் இவன் உவன் என்பன முதலாகப் பெயர்பற்றி வரும் பால்அறி சொல்லும், தம்முள் தொடருங்கால், ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல்லொடு மயங்கா, தம்பாற் சொல்லொடு தொடரும். எனவே, பிற பாற்சொல்லொடு தொடர்வன வழு என்பதாம் எ-று. ஈண்டுப் பெயரென்றது பொருளை. திணையுணராக்கால் அதன் உட் பகுதியாகிய பால் உணர்தலாகாமையின், பால்அறி கிளவி எனவே திணையறிதலும் பெறப்படும்; படவே , மயங்கல்கூடா என்றது திணையும் பாலும் மயங்கற்க என்றவாறாம். இன்னும் ‘மயங்கல்கூடா’ என்றதனான், வினைப் பாலறிசொல்லும் பெயர்ப் பாலறி சொல்லுள் ஒரு சாரனவும் இடமுங் காலமும் உணர்த்து மாகலின், அவ்வாறு உணர்த்துவனவற்றானும் மயங்கற்க என்றவாறாம்; ஆகவே, இடமும் காலமும் மயங்காது வருதலும் கூறப்பட்டதாம். (எ-டு.) அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன எனவும்; யான்வந்தேன், நெருநல் வந்தான் எனவும், திணையும் பாலும் இடமும் காலமும் வழுவாது முடிந்தவாறு. அவ் வாறன்றி அவன் வந்தது, அவன் வந்தாள், யான் வந்தான், நாளை வந்தான் என மயங்கி வருவன வெல்லாம் வழுவாம். ‘சிறப்புடைப் பொருளைத் தான் இனிது கிளத்தல்’ என்பதனான் ஐம்பால் உணர்த்துதற் சிறப்புடைய படர்க்கை வினைபற்றி ஓதினாரேனும், ‘தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி’ (சொல். 43) என்றும், ‘முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி’ (சொல். 462) என்றும் பெயர் வழுவமைப்பா ராகலின், தன்மை முன்னிலைப் பாலறி கிளவியும் மயங்கற்க என்பது ஈண்டைக் கொள்ளப்படும். (எ-டு.) யான் வந்தேன், யாம் வந்தேம் எனவும்; நீ வந்தாய், நீயிர் வந்தீர் எனவும் வரும். யான் வந்தேம். நீயிர் வந்தாய் என்னுந் தொடக்கத்தன வழுவாம். ‘மயங்கல் கூடா’ என்றது மயங்குதலைப் பொருந்தா என்றவாறு. மயங்கல்கூடா தம்மரபினவே என்பனவற்றுள் ஒன்றனது ஆற்றலான் ஏனையதன் பொருளும் உணரப்படுதலின் ஒன்றே அமையுமெனின், சொல் இல்வழியது உய்த்துணர்வ தென்க. தம் மரபினவே என்பதனைப் பிரித்து வேறொரு தொடராக்கிச் சொற்கண் மரபு பிறழா தம் மரபினவே என மரபுவழுக் காத்ததாக உரைக்க. இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு. முன் இரு பொருள்பட உரைப்பனவெல்லாம் இந் நூற்புணர்ப்பாகக் கொள்க. யானை மேய்ப் பானைப் பாகன் என்றலும், யாடு மேய்ப்பானை இடையன் என்றலும் மரபு. மேய்த்தல் ஒப்புமையான் யானை மேய்ப்பானை இடையன் என்றலும், யாடு மேய்ப்பானைப் பாகன் என்றலும் மரபுவழு. செப்புவழாநிலையும், வினாவழாநிலையும், சிறப்பு வகையான் ஓதப்படும் இடவழாநிலையும், இவ்வாறு ஓதப்படும் மரபுவழாநிலையும் ஒழித்து, ஒழிந்தன இச் சூத்திரத்தாற் காத்தார். (11) ‘பேடி’ என்னும் சொல் முடிபு 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளலி ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே. (இ-ள்.) ‘உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்’ (சொல். 4) என்று மேற் கூறப்பட்ட ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி ஆடூஉவறி சொல்லொடு புணர்தற்குப் பொருந்தும் இடனுடைத்தன்று எ-று. ஆண்மையறி சொற்கு ஆகிடன் இன்று என்ற விலக்கு ஆண்மை யறி சொல்லொடு புணர்த லெய்திநின்ற பேடிக்கல்லது ஏலாமையின், அலிமேற் செல்லா தென்க. இச் சூத்திரத்தைப் ‘பெண்மை சுட்டிய’ (4) என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது ஈண்டு வைத்தார், இது வழுவற்க என்கின்ற தாகலான். (12) வினாவும் விடையும் வழுவலாகாமை 13. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். (இ-ள்.) செப்பினையும் வினாவினையும் வழுவாமற் போற்றுக எ-று. செப்பென்பது வினாய பொருளை அறிவுறுப்பது. அஃது இரண்டு வகைப்படும், செவ்வன் இறையும் இறை பயப்பதும் என. உயிர் எத்தன் மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து என்றல் செவ்வன் இறை யாம். உண்டியோ என்று வினாயவழி வயிறு குத்திற்று என்றல், உண்ணேன் என்பது பயந்தமையின், இறை பயப்பதாம். ‘கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா’ எனப் ‘பருநூல் பன்னிருதொடி’ என்பது செப்புவழுவாம். ‘சொல் எப்பொருள் உணர்த்தும்’ என்று வினாய வழிச் ‘சொல் ஒரு பொருளும் உணர்த்தாது’ என்பதும் அது; வினாய பொருளை வினாவான் உணர்ந்து வினாய பொருளை யன்றித் தான் குறித்த பொருளைச் செப்பான் உணர்த்துகிறா னாகலின் என்பது. வினா இன்றியும் செப்பு நிகழ்தலின், வினாய பொருளை யெனல் வேண்டா எனின், வினாய பொருளை யென்னாது அறிவுறுப்பது செப்பு எனின், அறியலுறவினை அறிவுறுத்தலின் வினாவும் செப்பாய் அடங்குத லானும், செப்பென்பது உத்தரமென்பதனோடு ஒருபொருட் கிளவியாக லானும், வினாய பொருளை யறிவுறுத்தலே இலக்கணமா மென்பது. ‘குமரியாடிப் போந்தேன்; சோறு தம்மின்’ என வினாவின்றி நிகழ்ந்த சொல் யாண்டடங்கு மெனின், அறியலுறுதலை யுணர்த்தாது ஒன்றனை அறிவுறுத்து நிற்றலிற் செப்பின்பாற்படும். வினாஎதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், உடம்படுதல் எனச் செப்பு அறுவகைப்படு மென்று உரையாசிரியர் கூறினாராலெனின், உயிரெத்தன்மைத் தென்றவழி உணர்தற்றன்மைத் தென்றல் முதலாயின அவற்று ளடங்காமையானும், மறுத்தலும் உடம்படு தலும் வினாவப்பட்டார்கண்ணவன்றி ஏவப்பட்டார்கண்ணவாக லானும், அறுவகைப் படுமென்று பிறர்மதம் மேற்கொண்டு கூறினாரென்பது. வினாவாவது அறியலுறவு வெளிப்படுப்பது. அது மூவகைப்படும்; அறியான் வினாவும், ஐயவினாவும், அறிபொருள் வினாவு மென. அறியான் வினா, உயிர் எத்தன்மைத் தென்பது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையின், பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாமை நோக்கி அறியான் வினாவாயிற்று. ஐயவினா, குற்றியோ மகனோ தோன்றுகின்ற உரு வென்பது. அறிபொருள் வினா அறியப்பட்ட பொருளையே ஒரு பயன் நோக்கி அவ்வாய்பாட்டி னொன் றான் வினாவுவது. பயன், வேறறிதலும் அறிவுறுத்தலு முதலாயின. கறக்கின்ற எருமை பாலோ சினையோ என்பது வினாவழுவாம். ஒரு பொருள் காட்டி இது நெடிதோ குறிதோ என்பதும் அது. உரையாசிரியர் அறிபொருள் வினாவை அறிவொப்புக் காண்ட லும், அவனறிவு தான் காண்டலும், மெய்யவற்குக் காட்டலும் என விரித்து ஏனைய கூட்டி ஐந்தென்றார். இருவகைச் செப்பினும் மூவகை வினாவினும், செவ்வன் இறையும், அறியான் வினாவும், ஐயவினாவும் வழாநிலை யாகலின், வழாஅ லோம்பல் என்பதனாற் கொள்ளப்படும். ஏனைய வழுவமைப்புழிக் காணப்படும். வினா வழீஇயினவிடத்து அமையாதென்று உரையாசிரியர் கூறினாரா லெனின், அற்றன்று. ‘யாதென வரூஉம் வினாவின் கிளவி’ (சொல். 32) எனவும் ‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’ (சொல். 244) எனவும் முன்னர் வழுவமைப்பர் ஆகலான், அது போலியுரை யென்க. (13) 14. வினாவும் செப்பே வினாஎதிர் வரினே. (இ-ள்.) வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்து வினாவிற்கு மறுமொழியாய் வரின், வினாவும் செப்பாம் எ-று. சாத்தா உண்டியோ என்று வினாயவழி, உண்ணேனோ என வரும். வினாவாய்பாட்டான் வந்ததாயினும், உண்பல் என்பது கருத்துப் பொரு ளாகலின் செப்பெனப்படும். உண்டியோ என்று வினாயவழி, உண்பல் உண்ணேன் என்று இறாது தானொன்றை வினாவுவான் போலக் கூறலின், வழுவமைதியாயிற்று. இது செப்புவழுவமைதியேல் ‘செப்பே வழீஇயினும்’ என்புழி யடங்குமெனின், ஒன்றன் செப்பு ஒன்றற் காவதன்றி வினாச் செப்பாயினமையின், வேறு கூறினார். (14) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான. (இ-ள்.) செவ்வனிறையாகாது செப்பு வழுவிவரினுங் கடியப்படாது, ஒருவாற்றான் வினாய பொருட்கு இயைபுபட்ட கிளவி யாதற்கண் எ-று. சாத்தா உண்டியோ என்று வினாயவழி, நீ உண் என்றும், வயிறு குத்தும் என்றும், பசித்தேன் என்றும், பொழுதாயிற்று என்றும் வரும். இவை செவ்வன் இறை அல்லவேனும், வினாய பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்தலின், அமைந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், இவை ‘தெரிபு வேறு நிலையலுங் குறிப்பின் தோன்றலும்’ (சொல். 157) என்புழிக் குறிப்பின் தோன்றலாய் அடங்குமாகலின், ஈண்டுக் கூறல் வேண்டா எனின், அவ்வாறு அடங்குமாயினும், ‘செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ (சொல். 13) என்றதனான் இவையெல்லாம் வழுவாதல் எய்திற்று; அதனான் அமைக்கல் வேண்டும் என்பது. (15) 16. செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே. (இ-ள்.) செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளுந் துணைப்பொருளும் அவ்வப்பொரு ளுக்கு அவ்வப்பொருளேயாம் எ-று. எனவே, சினையும் முதலும் தம்முள் மயங்கி வருதல் வழு என்பதாம். உறழ்பொருளாவது ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படுவது. துணைப்பொருளாவது ஒப்புமை கூறப்படுவது. (எ-டு.) ‘இவள் கண்ணின் இவள் கண் பெரிய, நும் அரசரின் எம் அரசன் முறை செய்யும் எனவும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ, எம் அரசனின் நும் அரசன் முறை செய்யுமோ எனவும்; இவள் கண் ஒக்கும் இவள் கண், எம் அரசனை ஒக்கும் நும் அரசன் எனவும்; இவள் கண் ஒக்குமோ இவள் கண், எம் அரசனை ஒக்குமோ நும் அரசன் எனவும் வரும். ‘அவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே’ (பட்டினப். 300-1) எனவும், ‘துளிதலைத் தலைஇய தளிரன் னோளே’ (குறுந். 222) எனவும் மயங்கி வந்தன வழுவாம் பிறவெனின், அவை செய்யுள் பற்றி வரும் உவம வழு ஆகலின் ஈண்டைக்கு எய்தா, அணியியலுள் பெறப்படும். இம்மகள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வழக்கின்கண்ணும் மயங்கி வருமா லெனின், உண்மை உணர்தற்கு வினாயதன்றி ஐயவுவமை வாய்பாட்டாற் கண்ணைப் புனைந்துரைத்தல் கருத்தாகலின், அன்னவை யெல்லாம் உரை என்னுஞ் செய்யுளாம் என்பது. இந்நங்கை முலையின் இந்நங்கை கண் நல்ல என்னுங் தொடக்கத்தன மயக்கம் இன்மையின் இலக்கண வழக்காம் பிற வெனின், அற்றன்று. ஒத்த பண்பு பற்றியன்றே பொருவுவது? கண்ணொடு முலைக்கு ஒத்த பண்பின்மையான் பொருவுதல் யாண்டையது? ஒத்த பண்பு பற்றிய பொருவுதற்கண்ணது இவ்வாராய்ச்சி என்பது. காக்கப்பட்டன செப்பு வழாநிலையும் வினா வழாநிலையும் என்பார் ‘செப்பினும் வினாவினும்’ என்றார். ‘வழாஅ லோம்பல் (சொல். 13) என்புழி அடங்குமாயினும், நுண்ணுணர்வுடையார்க்கல்லது அதனான் உணர்தலாகாமையின், விரித்துக் கூறியவாறு. தன்னினமுடித்தல் என்பதனால் ‘பொன்னுந் துகிரும் முத்தும் மணியும்’ (புறம். 218) என எண்ணுங்காலும் இனமாய பொருளே எண்ணப்படு மென்பது கொள்க. (16) இயல்புவழக்கும் தகுதிவழக்கும் 17. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. (இ-ள்.) தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் நடக்கும் இலக்கணத்தின் பக்கச் சொற் கடியப்படா எ-று. தகுதி யென்பது அப்பொருட்குரிய சொல்லாற் சொல்லுதல் நீர்மை அன்று என்று அது களைந்து தக்கதொரு வாய்பாட்டான் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் என இத் தொடக்கத்தன. வழக்கு என்பது காரணமின்றி வழங்கற்பாடேபற்றி வருவது. பண்பு கொள் பெயராயினும் பண்பு குறியாது சாதிப்பெயராய் வெள்யாடு வெண்களமர் கருங்களமர் என வருவனவும், குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப் புடையை மீயடுப்பு என்றலும், பிறவும் வழக்காறாம். பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் முதலாகிய குழுவின் வந்த குறிநிலை வழக்கும், கண்கழீஇ வருதும், கான்மேல் நீர்பெய்து வருதும் என்னுந் தொடக்கத்து இடக்கரடக்கும் தகுதி என்றும், மரூஉமுடிபை வழக்காறு என்றும் உரையாசிரியர் அமைத்தாரால் எனின், குழுவின் வந்த குறிநிலை வழக்குச் சான்றோர் வழக்கின்கண்ணும் அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப் படாவாகலானும், இடக்கரடக்கு ‘அவையல் கிளவி’ (சொல். 442) எனவும், ‘மறைக்குங்காலை’ (சொல். 443) எனவும் முன்னர் அமைக்கப்படுதலானும், மரூஉமுடிபு எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டமை யானும், அவர்க்கது கருத்தன்றென்பது. கருமை முதலாயின ஒருநிகரன அன்மையிற் காக்கை யொடு சார்த்திக் களம்பழத்தை விதந்த துணை யல்லது காக்கைக்கு வெண்மை நேராமையின் காக்கையிற் கரிது களம்பழம் என்புழிக் கரிது வெளிதாயிற்றன்று. ஆகலான் வழுவன்று. கிழக்கு மேற்கென்பன வரையறை யின்றி ஒன்றனொடு சார்த்திப் பெறப்படுவனவாத லின் ஒன்றற்குக் கீழ்ப் பாலதனைப் பிறிதொன்றற்கு மேற்பாலதென்றலும் வழுவன்று. சிறுவெள் வாயென்பது இடுகுறி. கருவாடு என்பதும் அது. அதனான் இவை வழக்காறு என அமைக்கப்படாவாயினும், உரை யாசிரியர் பிறர்மதம் உணர்த்திய கூறினார் என்பது. தத்தமக்குரிய வாய்பாட்டானன்றிப் பிறவாய்பாட்டாற் கூறுதல் வழுவாயினும், அமைக என மரபுவழு அமைத்தவாறு. (17) 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. (இ-ள்.) இனப்பொருளைச் சுட்டுதலின்றிப் பண்படுத்து வழங்கப் படும் பெயர் வழக்குநெறி யல்ல, செய்யுள்நெறி எ-று. (எ-டு.) ‘செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும், வெண்திங்களுள் வெயில் வேண்டினும்’ (புறம். 38) என வரும். பல பொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒரு பொருட்குச் சிறந்த பண்பான் விசேடிக்கப்படுவது? ஞாயிறு திங்கள் என்பன பொதுச் சொல் அன்மையிற் செஞ்ஞாயிறு என்றும் வெண்திங்கள் என்றும் விசேடிக்கப்படா வாயினும், செய்யுட்கண் அணியாய் நிற்றலின், அமைக்க என்றார். பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் என இல்குணம் அடுத்து வழக்கின் கண்ணும் இனஞ்சுட்டாது வருதலின் செய்யுளாறென்றல் நிரம்பாதெனின், அவை இனஞ்சுட்டாமையின் வழுவாயின அல்ல, இல்குணம் அடுத்தலின் வழுவாயின. இனஞ்சுட்டலாவது இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படுதல். வெண்மை முதலாயின விசேடித்தலாவது அக் குண மில்லா இனப்பொருளின் நீக்கி அக் குணமுடையதனை வரைந்து சுட்டு வித்தலன்றே? சுட்டப்படுவதன்கண் அக்குணமில்லையாயின் வரைந்து சுட்டுவிக்குமாறு என்னை! அதனால் விசேடிக்கற்பாலது விசேடியாது நின்றதன் றாகலின் ஈண்டைக்கு எய்தா; ‘வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி’ (சொல். 27) என்புழி ஒன்றென முடித்தல் என்பதனான் அமைக்கப்படும். குறுஞ்சூலி, குறுந்தடி என்னுந் தொடக்கத்தன சூலி தடி யெனப் பிரிந்து நில்லாமையிற் பண்புகொள் பெயர் எனப்படா. பண்பு அடாது, வட வேங்கடந் தென்குமரி, முட்டாழை, கோட்சுறா எனத் திசையும் உறுப் புந் தொழிலும் முதலாய அடையடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றென முடித்தல் என்பதனான் செய்யுளாறென அமைத்துக் கொள்ளப்படும். ஒன்றன தாற்றலான் ஒன்று பெறப்படுதலின், வழக்காறல்ல என்றானுஞ் செய்யுளாறென்றானும் கூற அமையுமெனின், உய்த்துணர்வது சொல்லில்வழி என மறுக்க. பண்புகொள் பெயர் இனங்குறித்து வருதல் மரபு; அம்மரபு வழக்கின் கண் வழுவற்க என்றும், செய்யுட்கண் வழுவமைக்க என்றுங் காத்த வாறாயிற்று. (18) 19. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல். (இ-ள்.) தன்னியல்பின் திரியாது நின்ற பொருளை, அதனியல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாது இற்றெனச் சொல்லுக எ-று. இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழுந் தன்மை. (எ-டு.) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி உளரும், உயிர் உணரும் என வரும். இற்றென்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும், உளரும், உணரும் என்னுந் தெரிநிலை வினையும், இற்றென்னும் பொருள்பட நிற்றலின், இற்றெனக் கிளத்தலேயாம். நிலம் வலிதாயிற்று என இயற்கைப்பொருள் ஆக்கம்பெற்று வருமால் எனின், கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட நிலத்தை வலிதாயிற் றெனின், அது செயற்கைப் பொருளேயாம். நீர் நிலமும் சேற்று நிலமும் முன் மிதித்துச் சென்று வன்னிலம் மிதித்தான், நிலம் வலிதாயிற்று என்றவழி, மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின், இயற்கைப்பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். அல்லது நிலத்திற்கு வன்மை விகாரமென்று ஓர்ந்து நிலம் வலிதாயிற்று என்னுமாயின், திங்கள் கரிது என்பது போலப் பிறழ உணர்ந்தார் வழக்காய் ஆராயப்படா தென்க. (19) 20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். (இ-ள்.) காரணத்தான் தன்மை திரிந்த பொருளை, அத்திரிபு கூறுங்கால், ஆக்கங் கொடுத்துச் சொல்லுக எ-று. ஆக்கமொடு கூறல் என்பதனான் திரிபு கூறுதல் பெற்றாம்; என்னை? அதன்கணல்லது வாராமையின். இயற்கைப்பொருள் செயற்கைப்பொருள் என்பன, இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. (20) 21. ஆக்கந் தானே காரண முதற்றே. (இ-ள்) செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுங்கால், காரணத்தை முற்கூறி அதன்வழி ஆக்கங் கூறுக எ-று. தானே என்பது செய்யுட்சுவை குறித்து நின்றது. (எ-டு.) கடுக்கலந்த கைபிழியெண்ணெய் பெற்றமையான், மயிர் நல்லவாயின; எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையான், பைங்கூழ் நல்லவாயின; நீர் கலத்தலான் நிலம் மெலிதாயிற்று; தீச்சார்தலான் நீர் வெய்தாயிற்று என வரும். மயிர் நல்ல, பயிர் நல்ல எனச் செயற்கைப் பொருள் ஆக்கம் பெறாது வந்தனவா லெனின், அந்நன்மை பொருட்குப் பின்தோன்றாது உடன் தோன்றிற்றேல் இயற்கையேயாம்; அவ்வாறன்றி, முன்தீயவாய்ப் பின் நல்ல வாயினவேனும். தீய நிலைமை காணாதான் மயிர் நல்ல பயிர் நல்ல என்றால் படும் இழுக்கென்னை? அது செயற்கையாவது உணர்ந்தான் ஆக்கங் கொடாது சொல்லினன்றே வழுவாவ தென்க. செயற்கைப் பொருளை ஆக்கமுங் காரணமுங் கொடுத்துச் சொல்லுக என்பதே கருத்தாயின் சூத்திரம் ஒன்றாகற்பாற்றெனின்.... அவ்வாறோதின், ஆக்கமுங் காரணமுஞ் செயற்கைப் பொருட்கண் ஒத்தவாயின என்பது பட்டுக் ‘காரணமின்றியும் போக்கின்று’ (சொல். 22) என்பதனொடு மாறுகோட லானும், காரணஞ் செயற்கைப் பொருளதோ ஆக்கத்ததோ என ஐயுறப்படுத லானும், ஆக்கந்தானே காரண முதற்றெனப் பிரித்துக் கூறினாரென்பது. இயற்கைப்பொருள் ஆக்கமுங் காரணமும் பெறாது வருதலும் செயற்கைப் பொருள் அவைபெற்று வருதலும் இலக்கண மெனவே, இவ்வாறின்றி வருவன மரபு வழு என்பதாம். நுண்ணுணர்வுடையார்க்குத் ‘தம்மரபினவே’ (சொல். 11) என அடங்குவ வாயினும், ஏனையுணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணர லாகாமையின் விரித்துக் கூறினார். (21) 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. (இ-ள்.) காரண முதற்றெனப்பட்ட ஆக்கச்சொல் காரணமின்றி வரினுங் குற்றமின்று வழக்கினுள் எ-று. (எ-டு.) மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின என வரும். வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே, செய்யுளுட் காரணம் பெற்றே வருமென்பதாம். (எ-டு.) ‘பரிசிலர்க் கருங்கலம் நல்கவுங் குரிசில் வலிய வாகும்நின் தாள்தோய் தடக்கை’ (புறம். 14) எனவும், ‘‘தெரிகணை யெஃகம் திறந்தவா யெல்லாம் குருதி படிந்துண்ட காகம் – உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து,’’ (களவழி நாற்பது 5) ‘வருமழைய வாய்க்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக் கருமுருகன் சூடிய கண்ணி - திருநுதால் இன்றென் குரற்கூந்தல் பெய்தமையான் பண்டைத்தம் சாயல வாயின தோள்’ எனவும் காரணம் பெற்று வந்தவாறு கண்டுகொள்க. குக்கிற்புறத்த, சிரல்வாய என ஆக்கமின்றி வந்தனவா லெனின், தொகுக்கும் வழித்தொகுத்தல் என்ப தனான் ஆண்டாக்கந் தொக்கு நின்றதென்பது. ‘அரிய கானஞ் சென்றோர்க்கு எளிய வாகிய தடமென் றோளே’ (குறுந். 77) எனவும், ‘நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு’ (குறள். 305) எனவும், செயற்கைப் பொருள் செய்யுளுள் காரணமின்றி வந்தனவா லெனின்:- களவுக்காலத் தரியன இக்காலத்து எளியவாயின என்பது கருத்தாகலான், இக்காலங் காரணமென்பது பெறப்படுதலானும், ஊழானென் பது அதிகாரத்தான் வருமாகலானும், அவை காரணமின்றி வந்தன எனப்படா வென்பது. (22) பால் ஐயமுடையன அமையுமாறு 23. பால்மயக் குற்ற ஐயக் கிளவி தான்அறி பொருள்வயின் பன்மை கூறல். (இ-ள்.) திணை துணிந்து பால்துணியாத ஐயப்பொருளை அவ்வத் திணைப் பன்மையாற் கூறுக எ-று. கிளவி என்றது ஈண்டுப் பொருளை. ஐயப்பொருளாவது சிறப்பியல்பான் தோன்றாது பொதுவியல்பான் தோன்றிய பொருள். (எ-டு.) ‘ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இஃதோ தோன்றுவார்’ எனவும், ‘ஒன்றோ பலவோ செய் புக்கன’ எனவும் வரும். திணைவயின் என்னாது தானறிபொருள்வயின் எனப் பொதுப்படக் கூறியவதனான், ‘ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ கறவை யுய்த்த கள்வர்’ எனவும், ‘ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டலயர்ந்தார்’ எனவும், திணையோடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மை யொருமைப்பா லையமுங் கொள்ளப்படும். ஒருமையாற்கூறின் வழுப்படுதல் நோக்கிப் ‘பன்மை கூறல்’ என வழா நிலை போலக் கூறினாரேனும், ஒருமையைப் பன்மையாற் கூறுதலும் வழு வாகலின், ஐயப்பொருண்மேல் சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தான் பால் வழு அமைத்தவாறாம். (23) 24. உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலை. (இ-ள்.) உருபெனச் சொல்லுமிடத்தும், ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணைப் பொதுச் சொற்கண்ணும், இவ்விரு கூற்றினும் ஐயப்புலப் பொதுச்சொல்லாதல் உரித்து எ-று. எனவே, ‘ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ தோன்றா நின்ற உருபு’ எனவும், ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க உருபு’ எனவும், ‘குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றா நின்ற உருபு’ எனவும், ‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம்’ எனவும் சொல்லுக என்பதாம். ஐயக்கிளவி யென்பது அதிகாரத்தாற் பெற்றாம். உருபினும் என்னாது உருபென மொழியினும் என்றதனான், உருபின் பொருளவாகிய வடிவு பிழம்பு பிண்டமென்னுந் தொடக்கத்தனவும் கொள்க. பன்மை கூறல் உயர்திணைப்பா லையத்திற்கு உரித்தென்றும், உருபென மொழிதல் திணை யையத்திற்கு உரித்தென்றும் உரையாசிரியர் கூறினாராலெனின், அவை அவற்றிற்கே உரியவாயின், அஃறிணைப் பிரிப்பு என்றாற்போல உயர்திணைப்பான் மயக்குற்ற என்றும், திணை யையத்து என்றும் விதந்தோதுவர் ஆசிரியர்; அவ்வாறு ஓதாமையானும், நடையுள் அவை பொதுவாய் வருதலானும், அவை போலியுரை யென்க. ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ என்றற் றொடக்கத்து உயர் திணைப் பன்மை யொருமைப் பால்ஐயத்திற்கு உருபு முதலாயின ஏலாமை யும், திணையைத்திற்கும் ஏனைப் பாலையத்திற்கும் ஏற்புடைமையும் சுட்டி யுணர்க என்பது போதரச் ‘சுட்டுங்காலை’ யென்றார். சுட்டுதல் - கருதுதல். (24) அன்மைக்கிளவி அமையும் இடம் 25. தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. (இ-ள்.) ஐயுற்றுத் துணியும்வழி அன்மைக் கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலு முரித்து என்று சொல்லுவர், துணிந்து தழீஇக் கொள்ளப்பட்ட பொருளின் வேறாய பொருளிடத்து எ-று. என்றது, குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்றானும், ஒருவன் கொல்லோ ஒருத்திகொல்லோ என்றானும், ஒன்றுகொல்லோ பல கொல்லோ என்றானும் ஐயம் நிகழ்ந்தவழித் துணிதலுமுண்டு; பிற நடையுள் துணிந்தவழி மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைத் தன்மை யேற்றினும் அமையும் என்றவாறு. மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகனெனவும், குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றியெனவும், ஆண்மக னென்று துணிந்த வழிப் பெண்டாட்டி யல்லள் ஆண்மகனெனவும், பெண்டாட்டி யென்று துணிந்த வழி ஆண்மகனல்லன் பெண்டாட்டி யெனவும், ஒன்றென்று துணிந்தவழிப் பலவல்ல ஒன்றெனவும் பலவென்று துணிந்த வழி ஒன்றன்று பல எனவும், மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைக்கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றவாறு. உம்மை எதிர்மறையாகலான், வேறிடத்துச் சுட்டாமையே பெரும் பான்மை யென்பதாம். ஆகவே, இவ்வுருபு குற்றியன்று மகனென ஐயப் புலமாகிய பொதுப்பொருண் மேலானும், குற்றியல்லன் மகனெனத் துணி பொருள் மேலானும், அன்மைக்கிளவி அன்மை சுட்டி நிற்றல் பெரும் பான்மை யென்பதாம்; என்னை? வேறிடத்துச் சுட்டாமை யாவது ஈண்டுச் சுட்டலே யாகலான். குற்றியன்று மகன் என்றவழி மகனென்பது நின்று வற்றுமெனின், ‘எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.’ (சொல். 68) என்பதனான் எழுவாய் வெளிப்படாது நிற்றலுமுண்மையான், வெளிப் படாது நின்ற இவனென்னும் எழுவாய்க்கு அது பயனிலையாகலின், நின்று வற்றுதல் யாண்டைய தென்க. அல்லனவற்றிற்கும் ஈது ஒக்கும். குற்றியல்லன் என்புழிக் குற்றியென்பது அல்லனென்னுஞ் சொல்லோ டியைந்தவாறு என்னை யெனின், இவ்வுருபு குற்றியாம் என்றவழி, ஆம் என்பதனொடு குற்றியென்பதூஉம் எழுவாயாய் நின்றே இயைந்தாற் போல, இவன் குற்றியல்லன் என்புழி ஆமென்பதன் எதிர் மறையாகிய அன்மைக் கிளவியொடும் குற்றியென்பது எழுவாயாய் நின்றேயியையு மென்பது. எழுவாயாய் இயைதலி னன்றே, யான் நீ யல்லென் என்புழி, நீயென்பது வேற்றுமைக்கேற்ற செய்கை பெறாது நின்ற தென்க. (25) வண்ணச் சினைச்சொல் அமையுமாறு 26. அடைசினை முதல்என முறைமூன்றும் மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். (இ-ள்.) பண்புச்சொல்லும், சினைச்சொல்லும், முதற்சொல்லும் என மூன்றுங் கூறப்பட்ட முறை மயங்காமல், வழக்கைப் பொருந்தி நடக்கும், வண்ணச்சொல்லொடு தொடர்ந்த சினைச்சொல்லையுடைய முதற்சொல் எ-று. வடிவு முதலாகிய பிற பண்பும் உளவேனும், வண்ணப்பண்பினது வழக்குப்பயிற்சி நோக்கி ‘வண்ணச் சினைச் சொல்’ என்றார். (எ-டு.) செங்கால் நாரை, பெருந்தலைச் சாத்தன் என வரும். கால் செந்நாரை, தலைப்பெருஞ் சாத்தன் என முறை மயங்கி வரின், மரபு வழுவா மென்க. வழக்கினுள் மயங்காது வருமெனவே, ‘கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி’ (புறம். 238) எனச் செய்யுளுள் மயங்கியும் வரப்பெறும் என்றவாறாம். செவிசெஞ் சேவல், வாய்வன் காக்கை என்பன, செஞ்செவிச் சேவல், வல்வாய்க் காக்கை என்னும் பொருள்பட நின்றமையின், வண்ணச் சினைச்சொல் மயக்க மாயின. அஃதேல், சினையடையாகிய செம்மையும் வன்மையும் முதலடை ஆயினவாறு என்னை யெனின், சினையொடு முதற்கு ஒற்றுமை யுண்மை யான் அவை முதலொடும் இயைபுடைய வென்பது. ‘பெருந்தோள் சிறுநுசுப்பின் பேரமர்க்கண் பேதை’ என்புழி மூன்றாம் வழி முதல் கிடவாது பின்னும் அடையுஞ் சினையும் புணர்த் தமையான் வண்ணச் சினைச்சொல் செய்யுளுள் மயங்கி வந்ததென்று உரையாசிரியர் கூறினாரா லெனின், மூன்றாம் வழிப் புணர்க்கப்படும் பேதை யென்னும் முதற்சொல் பேரமர்க்கண் என்னுந் தொகையொடு வேற்றுமைப் பொருள்படத் தொக்கு, அத் தொகை சிறுநுசுப்பு என்னுந் தொகையோடும் அப்பொருள்படத் தொக்கு, ஒரு சொல்லாய், ‘பெருந் தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றாற் போல மூன்றாம் வழிப் பிற சொல்லடுத்துப் பேதை யென்னும் முதல் கிடந்த தெனவே படுதலின், மயக்க மின்மையான், அவர்க்கது கருத்தன்றென்க. அன்றிப் பெருந்தோள் முதலாகிய மூன்றும் பலபெயர் உம்மைத்தொகை படத் தம்முள் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதை யென்பதனொடு வேற்றுமைத் தொகைபடத் தொக்கன வெனினும், அவை உம்மைத் தொகைபடத் தொகாது நின்று பேதை யென்பதனொடு வேற்றுமைத் தொகைபட ஒருங்கு தொக்கன வெனினும், தம்முள் இயையாது பேதை யென்பதனோடு இயைதலின், ஆண்டும் மயக்கமின்மை யறிக. அஃதேல், இவ்வாறு வருதல் வழக்கிற்கும் உரித்தோ எனின், அடுக்கிய அடையும் சினையும் பொதுமை நீக்குதற்கன்றி அணி குறித்து நிற்றலின் செய்யுட்கே உரித்தென்பது. ‘சிறுபைந்தூவி’ (அகம். 57) எனச் சினையொடு குணம் இரண்டடுக்கி வருதல் செய்யுட்குரித்து என்றும், ‘இளம் பெருங் கூத்தன்’ என முதலொடு குணம் இரண்டடுக்கி வருதல் வழக்கிற் குரித்து என்றும், பிறர்மத மேற்கொண்டு கூறினார். ஒன்றாக பலவாக இனஞ் சுட்டாதன செய்யுட்கு உரியவாம்; இனஞ்சுட்டி நின்றன வழக்கிற்கு உரியவாம் என்பதே உரையாசிரியர் கருத்தென்க. அன்றிப் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் என்பதனான் சினையொடு குணம் இரண்டடுக்கல் செய்யுளாறென்று கொள்ளினும் அமையும்; ‘‘முதலொடு குணமிரண் டடுக்கல் வழக்கியல் சினையோ டடுக்கல் செய்யு ளாறே’’ என்றாராகலின். வண்ணச் சினைச்சொல் என்றதனான் வண்ணமும் சினையும் முதலுங் கூறுதற்கண்ணது இவ்வாராய்ச்சி யென்பதாம். ஆகவே இளம் பெருங்கூத்தன், பெரும்பலாக்கோடு என்னுந் தொடக்கத்தன வேண்டிய வாறு வரப்பெறு மென்றவாறு. மயங்காது வருக என மரபுவழுக் காத்தவாறு. (26) பால் வழுவமைதி 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல. (இ-ள்.) ஒருவனையும் ஒருத்தியையுஞ் சொல்லும் பன்மைச்சொல் லும், ஒன்றனைச் சொல்லும் பன்மைச்சொல்லும், வழக்கின்கண் உயர்த்துச் சொல்லுஞ் சொல்லாம்; இலக்கணமுறைமையாற் சொல்லும் நெறியல்ல எ-று. (எ-டு.) யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என வரும். உயர்சொல் உயர்க்குஞ் சொல். உயர்சொற் கிளவி யென்புழிக் கூறியது கூறலன்மை பண்புத் தொகை யாராய்ச்சிக்கண் சொல்லுதும். தாம் வந்தார் (தொண்டனார்) எனப் பன்மைக்கிளவி இழித்தற் கண்ணும் வந்ததாலெனின், ஆண்டு உயர்சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது. ‘இலக்கண மருங்கின் சொல்லா றல்ல’ என்றதனான் இலக்கண மன்மையும், ‘வழக்கினாகிய உயர்சொற் கிளவி’ யென்றதனான் வழுவன்மை யுங் கூறினார்; கூறவே, வழுவமைதி யென்றவாறாம். அஃதேல், ‘வழக்கி னாகிய உயர்சொற் கிளவி’ யெனவே வழுவமைதி யென்பது பெறுதும்; ‘இலக்கண மருங்கின் சொல்லாறல்ல’ எனல் வேண்டாவெனின், அங்ஙனங் கூறிற் செய்யுள் வரைந்தவாறோ வழுவமைத்தவாறோ என ஐயமாக்கலின், அவ்வாறு கூறல் வேண்டுமென்பது. பன்மைக் கிளவியும் எனப் பொதுவகையான் கூறினாரேனும், உயர்த்தற்கண் வழங்கப்பட்டு வரும் உயர்திணைப் பன்மையும் விரவுப் பன்மையுமே கொள்ளப்படும் என்றற்கு ‘வழக்கினாகிய’ என்றார். தன்னினம் முடித்தல் என்பதனான் எருத்தையும் ஆவையும், எந்தை வந்தான், எம்மன்னை வந்தாள் என உயர்திணையாய் உயர்த்து வழங்கலும், ஒன்றென முடித்தல் என்பதனான் ‘கன்னிஞாழல்,’ (சிலப். கானல் வரி. 18) கன்னியெயில் என அஃறிணையாய் நின்று உயர்திணை வாய்பாட்டான் கூறப்படுதலும், பண்புகொள் பெயர்க்கொடை வழக்கினகத்தும் பெருங் கொற்றன், பெருஞ்சாத்தன் என இல்குணம் அடுத்து உயர்சொல்லாய் வருதலுங் கொள்க. (27) 3. இடம் பகுதியே இடம் குறித்து நிற்கும் சொற்கள் 28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ விடத்தும் உரிய என்ப. (இ-ள்.) செலவு முதலாகிய நான்கு தொழிற்கண்ணும் நிலைபெறப் புலப்படாநின்ற அந்நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூவிடத்திற்கு முரியவாய் வரும் எ-று. செலவு முதலாகிய தொழிற்கண் சிறப்பு வகையான் நிலைபெறாது பொதுவாய் வரும் இயங்குதல் ஈதல் என்னுந் தொடக்கத்தனவற்றின் நீக்குதற்கு ‘நிலைபெறத் தோன்றும்’ என்றார். முற்றும் எச்சமும் தொழிற்பெயருமாகி அத்தொழில்பற்றி வரும் வாய்பாடு பலவாயினும், அவையெல்லாம் இந்நான்கு தொழிலும் பற்றித் தோன்றுதலின் ‘நான்கு சொல்’ என்றார். பொருள் வகையான் முன்னறியப்பட்டமையான் ‘அந்நாற் சொல்லும்’ என்றார். இச் சூத்திரத்துள் ஈங்கு முதலாயின தன்மைக்கண்ணும், ஆங்கு முதலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன. வினைச்சொல் மூன்றிடத்திற்கும் உரியவாதல் வினையியலுள் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல்வேண்டா எனின், ஆண்டுப் பாலுணர்த்தும் ஈற்றான் இடத்திற்குரிமை கூறினார்; ஈண்டு ஈற்றானன்றிச் செலவு முதலாயின முதனிலைதாமே இடங்குறித்து நிற்றலுடைமையான் இவ் வேறுபாடு ஆண்டுப் பெறப்படாமையின் ஈண்டுக் கூறினாரென்பது. அஃதேல், “தருசொல் வருசொல் ஆயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த, படர்க்கையிடத்த கொடைச்சொல்லுஞ் செலவுச் சொல் லும் ” என ஓதுக; இச்சூத்திரம் வேண்டா வெனின், அங்ஙனமோதின், இடஞ் சுட்டும் முதனிலை இந்நான்குமே யென்னும் வரையறை பெறப் படாமை யின், இது வேண்டுமென்பது. அஃதேல், போதல் புகுதல் என்னுந் தொடக்கத் தனவும் இடஞ்சுட்டுதலின் நான்கென்னும் வரையறை அமையா தெனின், அவை இக்காலத்துச் சிலவிடத்துப் பயின்று வருமாயினும், மூன்றிடத்திற் கும் பொதுவாகலினன்றே, ஆசிரியர் அந்நாற் சொல்லுமென இவற்றையே வரைந்தோதுவா ராயிற்றென்பது. (28) தன்மை முன்னிலைக்குரிய சொற்கள் 29. அவற்றுள் தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. (இ-ள்.) கூறப்பட்ட நான்கு சொல்லுள், தருசொல்லும் வருசொல்லு மாகிய இரண்டும் தன்மை முன்னிலையாகிய இரண்டிடத்திற்கும் உரிய எ-று. (எ-டு.) எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான், என்னுழை வந்தான், நின்னுழை வந்தான் எனவும்; ஈங்கு வந்தான் எனவும் வரும். தரப்படும் பொருளை ஏற்பான் தானும் முன்னின்றானும் ஆக லானும், வரவுதொழில் தன்கண்ணும் முன்னின்றான்கண்ணும் சென்று முடிதலானும், ஈற்றானன்றி இவ்விரு சொல்லும் தன்மை முன்னிலைக்கு உரியவாயினவாறு கண்டுகொள்க. ‘நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய’ (சொல். 28) என்று மூன்றிடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவுங் கொள்ள வைத்தமை யான், ‘பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல்’ (புறம். 55) எனவும், ‘வரால், தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ (அகம். 36) எனவும், மயங்கி வருவனவும் அமைக்கப்படும். அஃதேல், படர்க்கைச் சொல் மயக்கமும் எய்துமா லெனின், அஃது எச்சவியலுள் பெறப்படுதலின், (448) ஈண்டுக் கொள்ளப்படாதென்க. ஒருவன் சேய்நிலத்துநின்றும் அணிநிலத்துப் புகுந்தானாயின் சேய்நிலம் நோக்க அணிநிலம் ஈங்கெனப்படுதலின், அவன்கண் வந்தான், ஆங்கு வந்தான் என்பன இலக்கணமேயாம். இந்நான்கும், கொடைப் பொருளன என்று உரையாசிரியர் கூறினாராலெனின், ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கது கருத்தன் றென்க. தரவு வரவை யுணர்த்துவனவற்றைத் தருவதும் வருவதும் போலத் தருசொல், வருசொல் என்றார். (29) படர்க்கைக்குரிய சொற்கள் 30. ஏனை யிரண்டும் ஏனை யிடத்த. (இ-ள்.) செலவுச்சொல்லும், கொடைச்சொல்லும், படர்க்கைக் குரிய எ-று. (எ-டு.) அவன்கட் சென்றான், ஆங்குச் சென்றான், அவற்குக் கொடுத்தான் என வரும். செலவுத் தொழில் படர்க்கையான்கண் சென்றுறுதலானும், கொடைப் பொருளேற்பான் படர்க்கையான் ஆகலானும், ஈற்றானன்றி இவ் விரு சொல்லும் படர்க்கையிடத்திற்குரிய வாயினவாறு கண்டு கொள்க. (30) ‘யாது’ ‘எவன்’ என்னும் வினாக்கள் 31. யாதுஎவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். (இ-ள்.) யாது எவன் என்னும் இரண்டுசொல்லும் அறியாப் பொரு ளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் எ-று. (எ-டு.) இச்சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப் பொருள் எவன் என வரும். எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமையின், ஈண்டு அறியாப் பொருள் என்றது, பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாத பொருளையாம். யா, யாவை, யாவன், யாவள், யாவர், யார், யாண்டு, யாங்கு என்னும் தொடக்கத்தன திணையும் பாலும் இடமும் முதலாகிய சிறப்பு வகை யானும் சிறிதறியப்பட்ட பொருளனவாகலின், அறியாப்பொருள்வயின் செறியத் தோன்றாமையான், இவற்றையே விதந்து ‘அறியாப் பொருள் வயின் செறியத் தோன்றும்’ என்றார். இவையும் திணையும் பாலும் குறித்து வருதலின் சிறப்பு வகையானும் அறியப்பட்ட பொருளனவே யன்றோ எனின், அற்றன்று; இச்சொற்குப் பொருள் யாது எவன் என்று வினாயவழி, இறுப்பானும், அஃறிணை யொருமையும் பொதுமையும் துணிந்து அவற்றுள் பகுதியறிதற்கு வினாவுகின்றானல்லன், பொதுவகையான் வினாவுகின்றான் என்று உணரும் ஆகலின். அவ்வாறாதல், வழக்கினகத்து வினாவுவானதும் இறுப்பானதும் குறிப்பொடு படுத்து உணர்க. முன்னர் வழுவமைத்தற்கு அவை இன்ன பொருட்கு உரிய என அவற்றது இலக்கணம் கூறியவாறு. (31) அவற்றுள் ‘யாது’ வருமாறு 32. அவற்றுள் யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே. (இ-ள்.) கூறப்பட்ட இரண்டனுள் யாதென்னும் வினாச்சொல் அறியாப்பொருள்வயின் வினாவாதலேயன்றி அறிந்த பொருட்கண் ஐயம் நீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து எ-று. (எ-டு.) இம்மரங்களுள் கருங்காலி யாது, நம்மெருதைந்தனுள் கெட்ட எருது யாது என வரும். நமருள் யாவர் போயினார், அவற்றுள் எவ்வெருது கெட்டது எனப் பிறவும் அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவியாய் வருதலின், அவையும் ஈண்டமைக்கற்பால எனின், அவை அறிந்த பொருள் வயின் ஐயந்தீர்தற்கல்லது யாண்டும் வாராமையின், ஈண்டமைக்கப் படாவென்பது. இதனால் வினாவழு வமைத்தார். (32) முற்றும்மை வரும் இடம் 33. இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். (இ-ள்.) கேட்போரான் இத்துணை யென்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் வினைப்படு தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று. (எ-டு.) ‘பன்னிரு கையும் பாற்பட வியற்றி’ (முருகு. 118) எனவும், ‘முரசு முழங்குதானை மூவருங் கூடி’ (பொருந. 54) எனவும் வரும். அறிந்த சினைமுதற்கிளவி எனவே, முன்னறியப்படாக்கால், முருகற்குக் கை பன்னிரண்டு, தமிழ்நாட்டிற்கு வேந்தர் மூவர் என உம்மை பெறாது வரும் என்பதாம். ஐந்தலைநாகம் உடன்றது, நான்மறைமுதல்வர் வந்தார் என்புழி, இனைத்தென அறிந்த சினைமுதற்கிளவியாயினும், வினைப்படுதொகுதி யன்மையின், உம்மை பெறாவாயின. அஃதேல், பன்னிருகையும் என்புழியும் தொகுதிப் பெயர் வினையொடு தொடராது கையென்பதனோடு ஒட்டி நிற்றலின், வினைப்படு தொகுதியன்றாம் பிறவெனின், ஒட்டி நின்ற தாயினும், ஐந்தலை நாகம், நான்மறை முதல்வர் என்பனபோலாது இரு சொல்லும் ஒருபொருண் மேல் வருதலின், கையென்பதனோடு இயைந்த இயற்றி என்னும் வினை தொகுதிப்பெயரோடும் இயைந்ததாம், அதனான் அது வினைப்படு தொகுதியா மென்பது. அஃதேல், கண்ணிரண்டும் குருடு, எருதிரண்டும் மூரி, எனப் பெயர் கொண்டவழி உம்மை பெறுமாறு என்னை யெனின், பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதி யாம் என்க. ஐந்தலை, நான்மறை என்பனவற்றிற்கு நாகம், முதல்வர் என்பன முடிக்குஞ் சொல் அன்மையின், வினைப்படு தொகுதியாகாமை யுணர்க. ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனான் சினை முதற் கிளவி யென்றாராயினும், சிறவாத பண்பு முதலாயினவும் கொள்ளப்படும். (எ-டு.) சுவையாறு முடைத் திவ்வடிசில், கதியைந்து முடைத்திக் குதிரை என வரும். ‘இருதோள் தோழர்பற்ற’ எனவும், ‘ஒண்குழை யொன்று ஒல்கி யெருத் தலைப்ப’ எனவும் உம்மையின்றி வந்தனவா லெனின், ஆண்டும்மை செய்யுள் விகாரத்தான் தொக்கு நின்றன வென்பது. (33) இல்லாப் பொருட்கும் உம்மை இயைதல் 34. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. (இ-ள்.) இல்லாப் பொருட்கும் இடமும் காலமும் பொருளும் முதலாயினவற்றொடு படுத்து இன்மை கூறுதற்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று. (எ-டு.) பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லையெனவும், குருடு காண்டல் பகலுமில்லை எனவும், ‘உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா’ (நாலடி. 104) எனவும் வரும். இல்லாப் பொருட்கு ஒருகாலும் நிலையுறுதலின்மையின், ‘மன்னாப் பொருள்’ என்றார். இடம் முதலாயினவற்றொடு படுத்தற்கண் என்பது ஏற்புழிக் கோடல் என்பதனான் பெற்றாம். அவற்றொடு படாதவழிப் பவளக் கோட்டு நீலயானை யில்லை என உம்மையின்றி வருமென்பதாம். முற்றும்மையும் எச்ச உம்மையுமாகிய வேறுபாடுடைய வேனும், உம்மை பெறுதல் ஒப்புமையான், ‘அன்ன இயற்று’ என்றார். இரண்டு சூத்திரத்தானும் மரபுவழுக் காத்தவாறு. (34) ‘அல்லதுஇல்’ அமையுமாறு 35. எப்பொரு ளாயினும் அல்லது இல்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல். (இ-ள்.) யாதாயினும் ஒரு பொருளையாயினும் ஒருவன் அல்ல தில்லென்னும் வாய்பாட்டான் இல்லையெனலுறின், அப்பொருள் தன்னையே கூறாது அப்பொருளல்லாத பிறிதுபொருள் கூறுக எ-று. (எ-டு.) பயறுளவோ வணிகீர் என்று வினாயவழி, உழுந்தல்லதில்லை; கொள்ளல்லதில்லை என அல்லதில் லென்பான் பிறிதுபொருள் கூறியவாறு கண்டுகொள்க. ‘அல்லதில்லெனின்’ எனப் பொருள்பற்றி ஓதினாராகலின், அல்ல தில்லென்னும் வாய்பாடே யன்றி, உழுந்தன்றியில்லை உழுந்தேயுள்ளது என அப் பொருள்படுவன எல்லாம் கொள்க. உழுந்தல்லதில்லை எனப் பிறிது பொருள் கூறாது பயறல்லதில்லை யென அப்பொருள் கூறின், ‘பயறுள; அல்லன வில்லை’ யென மறுதலைப் பொருள்பட்டுச் செப்பு வழுவாமாறு அறிக. யாதானுமாக அல்லதில்லெனின் பிறிதுபொருள் கூறுக என எஞ்சாமல் தழீஇ யாப்புறுத்தற்கு எப்பொருளாயினும் என்றார். அல்லது இல் என்பதற்குத் தன்னுழையுள்ளதல்லது என்றும், அப் பொருளல்லாப் பிறிதுபொருள் கூறல் என்பதற்கு இனப்பொருள் கூறுக என்றும் உரைத்தாரால் உரையாசிரியரெனின், பயறுளவோ என்று வினாயவழிப் பயறில்லை யென்றாற்படும் வழுவின்மையானும், உள்ளதல்ல தென்றல் கருத்தாயின் ஆசிரியர் அல்லதெனக் குறித்த பொருள் விளங்கா மையின் அகப்படச் சூத்திரியா ராகலானும், பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பா னொருவனுழைச் சென்று பயறுளவோ என்றவழிப் பாம்புணிக் கருங்கலல்லதில்லை யென்றால் இனப்பொருள் கூறாமையாற் பட்ட இழுக்கின்மையானும், அவை போலியுரை யென்க. அல்லதூஉம், இனப்பொருள் கூறுக என்பதே கருத்தாயின், அப்பொருளல்லா இனப் பொருள் கூறல் என்னாது பிறிது பொருள் கூறல் என்னார் ஆசிரியர், அதனானும் அஃதுரையன்மையுணர்க. (35) 36. அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். (இ-ள்.) அல்லதில் என்பான், பிறிது பொருள் கூறாது அப்பொருள் தன்னையே கூறுமாயின், இப்பயறல்லதில்லை எனச் சுட்டிக் கூறுக எ-று. பயறுளவோ என்றவழிச் சுட்டாது பயறல்லதில்லை எனின் “பயறுள உழுந்து முதலாயின இல்லை ” எனப் பிறிது பொருளேற்பித்துச் செப்பு வழுவா மென்பது. அல்லதில் என்பது அதிகாரத்தாற் பெற்றாம். தன்னினமுடித்தல் என்பதனான், பசும்பயறல்லதில்லை, பெரும் பயறல்லதில்லை எனக் கிளந்து கூறுதலுங் கொள்க. ‘செப்பும் வினாவும்’ (சொல். 13) என்றதனான் இவ்வேறுபாடு இனிது விளங்காமையானும், ‘பொருளொடு புணராச்சுட்டு’ (சொல். 37) என வழுவமைக்கின்றா ராகலானும், இவற்றை விதந்து கூறினார். (36) பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் அமையுமாறு 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. (இ-ள்.) சுட்டானன்றிப் பொருள் வரையறுத்து உணர்த்தாச் சுட்டுப் பெயரான் கூறினும், பொருள் வேறாகாது இப்பயறெனச் சுட்டிக் கூறிய பொருளேயாம் எ-று. என் சொல்லியவாறோ எனின், இவையல்லதில்லை என்றவழி, இவை என்பது பயற்றையே சுட்டாது உழுந்து முதலாயினவற்றிற்கும் பொதுவாய் நிற்றலின் வழுவாமன்றே? ஆயினும், முன் கிடந்த பயறு காட்டி இவை யென்றானாகலின், அவற்றையே சுட்டு முதலானமைக்கவெனச் செப்புவழு வமைத்தவாறு. சாதியும் பண்புந் தொழிலும் முதலாயின பற்றி ஒரு பொருளை வரைந்துணர்த்தாது எல்லாப் பொருள்மேலுஞ் சேறலின்’‘ பொருளொடு புணராச் சுட்டுப்பெயர்’’ என்றார். வேறுபடாது, ஒன்றாகும் என்பனவற்றுள் ஒன்றே அமையு மெனின், பொருள் வரைந்துணர்த்தும் பெயரொடு பொருள் வரைந் துணர்த்தாச் சுட்டுப் பெயர் வேறுபாடுடைத்தேனும், ஒரு பொருள்மேல் முடிதலின் ஒரு பொருட்டாமென்பது விளக்கிய, பொருள் வேறு படாது ஒன்றாகும் என்றார். அப்பொருள் கூறுதற்கண் என்னாது பொதுப்படக் கூறியவதனான், பிறிது பொருள் கூறும்வழியும் இவையல்லதில்லை யெனச் சிறுபான்மை சுட்டுப்பெயரான் கூறினும் அமையும் என்பதாம். யானைநூல் வல்லானொருவன் காட்டுட் போவுழி ஓர் யானை யடிச்சுவடு கண்டு ‘இஃதரசுவாவாதற்கேற்ற இலக்கண முடைத்து’ என்ற வழியும், ‘இஃதோ* செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே’ (அகம். 26) என்புழியும், சுட்டுப்பெயர் பொருளொடு புணராது நிற்றலின், அவற்றையே அமைக்கின்றது இச்சூத்திரம் என்பாரு முளர். (37) *(பாடம்) இஃதோர் இயற்பெயரும் சுட்டுப்பெயரும் அமையும்வகை 38. இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். (இ-ள்.) இயற்பெயரும் சுட்டுப் பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிதுவினை கோடற்கு ஒருங்கு நிகழுங் காலம் தோன்றுமாயின், உலகத்தார் சுட்டுப்பெயரை முற்படக் கூறார், இயற் பெயர்க்கு வழியவாகக் கூறுவரென்று சொல்லுவர் புலவர் எ-று. வினைக் கொருங்கியலுங்கால், அப்பெயர் எழுவாயாயும் உரு பேற்றும் நின்றன எல்லாங் கொள்ளப்படும். வினைக்கென்புழி அவ்விரு பெயரும் ஒருவினைகோடலும் தனித்தனி வினைகோடலுங் கொள்க. ஒருங்கியலும் என்றதனான் அவை ஒரு பொருள்மேல் வருதல் கொள்க. (எ-டு.) சாத்தன்அவன் வந்தான், சாத்தன் வந்தான் அவன் போயி னான் எனவும், சாத்தி வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவும் வரும். அவன்தான் வந்தான், அவனொருவனும் அறங்கூறும், ஈதொன்று குருடு என இயற்பெயரல்லா விரவுப்பெயர்க்கும் உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் வரையறையின்றிச் சுட்டுப்பெயர் முற்கிளக்கவும் படுதலின், இயற்பெயர்க் கிளவியென்றார். அவ்வாறு அவை முற்கிளக்கப் படுவது ஒருவினை கோடற்கண்ணே யென்பது. அற்றேல், அவை முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, நங்கை வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க, குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க எனத் தனித்தனி வினை கோடற்கண் சுட்டுப்பெயர் பிற்கிளக்கப்படுதல், பின்னையதற்குத் தன்னின முடித்தலினானும் ஏனையிரண்டற்கும் இயற்பெயரென்ற மிகையானுங் கொள்க. பிறிதுவினை கோடற்கண் எனவே, அவன் சாத்தன், சாத்தனவன் என ஒன்றற் கொன்று பயனிலையாதற்கண்ணும், ஒரு பொருண் மேல் நிகழும் எனவே, அவனுஞ் சாத்தனும் வந்தார். சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருளவாய் வருதற்கண்ணும், யாது முற்கூறினும் அமையும் என்பதாம். வினை என்றது முடிக்குஞ் சொல்லை. சுட்டுப்பெயர் யாண்டும் இயற்பெயர்வழிக் கிளக்கப்படுமென யாப்புறுத்தற்கு, ‘முற்படக்கிளவார்’ என்றும், ‘இயற்பெயர் வழிய’ என்றுங் கூறினார். சுட்டுப்பெயர் என்றாராயினும் அகர இகரச் சுட்டுப்பெயரே கொள்க. இதுவும் ஒரு மரபு வழாநிலை. (38) 39. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. (இ-ள்.) இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கொருங்கியலும் வழிச் சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்து எ-று. (எ-டு.) ‘‘அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி – முகனமர்ந்து அன்னை யலர்கடப்பந் தாரணியின் என்னைகொல் பின்னை யதன்கண் விளைவு’’ எனவரும். இதனுள் சேந்தன் என்பது இயற்பெயர். ஒருவினை கொள்வழிச் சுட்டுப்பெயர் முற்கிளத்தல் வந்தவழிக் கண்டு கொள்க. இது செய்யுளிடத்து மரபுவழு அமைத்தவாறு. (39) சுட்டு முதலாகிய காரணக்கிளவி 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும் சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும். (இ-ள்.) சுட்டை முதலாகவுடைய காரணப் பொருண்மையை உணர்த்தும் சொல்லும் சுட்டுப்பெயர் போலத் தன்னாற் சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொற்குப் பின் கிளக்கப்படும் எ-று. ஈண்டுச் சுட்டப்படும் பொருள் தொடர்மொழிப் பொருள். (எ-டு.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனான் தந்தை உவக்கும், சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனான் கொண்டான் உவக்கும் எனவரும். சுட்டுமுதலாய காரணக்கிளவி உருபேற்று நின்ற சுட்டுமுதற்பெய ரோடு ஒப்பதோர் இடைச்சொல்லாகலின், ‘சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும்’ என்றார். செயற்கென்னும் வினையெச்சம், உருபேற்று நின்ற தொழிற் பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும், உருபும் பெயரும் ஒன்றாகாது பகுப்பப் பிளவுபட்டிசையாது ஒன்றுபட் டிசைத்தலான், அதனின் வேறாயினாற்போல, இதுவும், உருபேற்ற சுட்டுப்பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும் பிளவுபட்டிசையாது ஒன்றுபட் டிசைத்தலான், வேறாகவே கொள்ளப்படுமென்பது. அஃதேல், சாத்தன் வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று எனத் தொடர்மொழிப் பொருளையும் சுட்டி வரும் சுட்டுப்பெயர் கூறாது காரணக்கிளவியே கூறியதென்னையெனின், அவ்வாறு வருவன தன்னினமுடித்தல் என்பதனான் அடங்கும். ஈண்டுச் சுட்டப்படும் பொருளையுணர்த்துவது பெயரன்மையின், சுட்டுப் பெய ரியற்கை என்றது, வழக்கினகத்துச் சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளகத்து முன்னிற்றலுமாகிய அத்துணை யேயாம். செய்யுட்கண் முன்னிற்றல் வந்தவழிக் கண்டுகொள்க. பொருள் பற்றாது பண்பு முதலாயின பற்றிவந்த சுட்டாதலின் வேறு ஓதப்பட்ட தென்று உரையாசிரியர் கூறினாராலெனின், சாத்தன் வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று எனவும், கிழவன் பிரிந்தான் அதனைக் கிழத்தியுணர்ந் திலள் எனவும், எழுவாயாயும் ஏனை வேற்றுமையேற்றும் அச் சுட்டுப் பயின்று வருதலான், பண்பு முதலாயினவற்றைச் சுட்டும் சுட்டெனப் பொது வகையான் கூறாது, ‘காரணக் கிளவி’ என ஒருசார் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றி ஓதுதல் குன்றக்கூறலாகலானும், சுட்டுப் பெயராயின் ‘சுட்டு முதலாகிய காரணக் கிளவி’ என்றும் ‘சுட்டுப் பெயரியற்கையின் செறியத் தோன்றும்’ என்றும் கூறுதல் பொருந்தாமையானும், அது போலியுரை யென்க. இதனான் வழக்கின்கண் மரபு வழாநிலையுஞ் செய்யுட்கண் மரபு வழுவமைதியும் உணர்த்தினார். (40) இயற்பெயரும் சிறப்புப் பெயரும் கூறுமுறை 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். (இ-ள்.) வினைக்கொருங்கியலும்வழிச் சிறப்பினாகிய பெயர்க்கும் இயற்பெயரை உலகத்தார் முற்படக் கிளவார், பிற்படக் கிளப்பர் எ-று. ‘வினைக்கொருங்கியலும்’ என்பது ஏற்புழிக்கோடல் என்பதனாற் பெற்றாம். ஈண்டுச் சிறப்பாவது மன்னர் முதலாயினாராற் பெறும் வரிசை. (எ-டு.) ஏனாதி நல்லுதடன், காவிதி கண்ணந்தை என வரும். உம்மையான், தவம், கல்வி, குடி, உறுப்பு முதலாயினவற்றானாகிய பெயரும் கொள்ளப்படும். அவை முனிவ னகத்தியன் எனவும், தெய்வப் புலவன் திருவள்ளுவன் எனவும், சேரமான் சேரலாதன் எனவும், குருடன் கொற்றன் எனவும் வரும். திருவீர வாசிரியன், மாந்தக்கொங் கேனாதி என இயற்பெயர் முன்வந்தனவாலெனின், அவை தொகைச்சொல்லாகலான், அவற்றின் கண்ணதன்று இவ்வாராய்ச்சியென்பது. ஆண்டியற்பெயர் முன்னிற்றல் பண்புத்தொகை யாராய்ச்சிக்கட் பெறுதும். (41) ஒருபொருள் குறித்த பலபெயர் முடிபு 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. (இ-ள்.) ஒரு பொருளைக் குறித்து வந்த பல பெயர்ச் சொற்கள், ஒரு தொழிலே முடிபாகக் கூறாது பெயர்தொறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒரு பொருளவாய் ஒன்றா எ-று. ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றான் என்னாது ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றான் என வேறு வேறு தொழில் கிளந்தவழி, வந்தானும் உண்டானுஞ் சென்றானும் ஒருவனாகாது வேறு வேறாய்த் தோன்றியவாறு கண்டு கொள்க. ‘எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன் வருக’ என்புழிக் காதல் முதலாயின பற்றி ஒரு தொழில் பலகால் வந்தமை யல்லது வேற்றுத் தொழிலன்மையான், ஒரு தொழில் கிளத்தலேயாமென்பது. ஈண்டுத் தொழிலென்றது முடிக்குஞ் சொல்லை. ஆசிரியன் வந்தானென்று ஒருகாற்கூறி, இடையிட்டு அவனையே பின்னொருகால் பேரூர்கிழான் சென்றான் என்று கூறியவழி, ஒரு தொடரன்மையான் ஆண்டாராய்ச்சி யில்லை யென்பது. அஃதேல், ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றான் என இடையீடின்றி நின்றனவும் ஒரு தொடரன்மையின், ஆராய்ச்சியின்றாம் பிறவெனின், அற்றன்று; உட்டொடர் பலவாயினும், அவற்றின் றொகுதியாய் அவன் தொழில் பலவுங் கூறுதற் பொருண்மைத்தாகிய பெருந்தொடர் ஒன்றெனவே படுமென்பது. ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றிய னிளங்கண்ணன் சாத்தன் வந்துண்டு சென்றான் என்னாது, ஆசிரியன் வந்தான் பேரூர்கிழா னுண்டான் செயிற்றியன் சென்றான் எனப் பெயர்தொறும் வேறு தொழில் கிளத்தல் மரபன்மையின், மரபுவழுக் காத்தவாறாயிற்று. (42) இட வழுவமைதி 43. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். (இ-ள்.) தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விராய் வரப்பெறும் எ-று. என் சொல்லியவாறோ எனின், உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விராய் வந்து, உயர்திணை முடிபு கொள்ளினும் அஃறிணைமுடிபு கொள்ளினும் வழுவாமாகலின், ‘மயங்கல் கூடா தம்மரபின’ (சொல். 11) எனவே, அவை விராய் எண்ணப்படாமையும் எய்தி நின்றது; தன்மைப்பன்மைச் சொல்லான் அஃறிணைச்சொல்லும் முடியுமாகலான், தன்மைச் சொல்லும் அஃறிணைச்சொல்லும் விராய் வந்து உயர்திணைமுடிபு கொள்ளினும் அமையும் எனத் திணை வழுக் காத்தவாறு. (எ-டு.) யானும் என்னெஃகமும் சாறும் என வரும். பன்மைத் தன்மை வினைகோடல் எற்றாற் பெறுதுமோ எனின், ‘தன்மைச்சொல்லே’ யென்றதனானும், ‘பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி எண்ணியன் மருங்கின் திரிபவை யுளவே’ (சொல். 209) என்பதனானும் பெறுது மென்பது. ‘அஃதேல், எண்ணியன் மருங்கின் திரிபவை உளவே’ என்பதனான் விராய்வந்து உயர்திணைமுடிபு கோடலும் பெறப்படுதலின், இச்சூத்திரம் வேண்டா எனின், உய்த்துணர்ந்திடர்ப் படுவது எடுத்தோத் தில்வழி என மறுக்க. (43) 4. எண் ஒருமைக்குரிய சொற்கள் 44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது. (இ-ள்.) ஒருமையெண்ணினை உணர்த்தும் பொதுப்பிரி பாற்சொல் லாகிய ஒருவன் ஒருத்தி என்னுஞ் சொற்கள், ஒருமைக்கண் ணல்லது, இருமை முதலாகிய எண்ணுமுறைக்கண் நில்லா எ-று. எனவே, பொதுப் பிரியாப் பாற்சொல்லாகிய ஒருவர் என்னுஞ் சொல் இருவர் மூவரென எண்ணுமுறைக்கண்ணும் நிற்குமென்பதாம். பொதுப்பிரி பாற்சொல் என்றாரேனும், ஒருவன் ஒருத்தி என்பன வற்றது பாலுணர்த்துமீறே கொள்ளப்படும்; என்னை? எண்ணுமுறை நில்லா என்று விலக்கப்படுவன அவையேயாகலினென்பது. மகன் மகள் என்னுந்தொடக்கத்துப் பெயர்ப்பொதுப்பிரி பாற் சொல்லின் நீக்குதற்கு ‘ஒருமை யெண்ணின்’ என்றும், ஒருவர் ஒன்று என்பன வற்றின் நீக்குதற்குப் ‘பொதுப்பிரி பாற்சொல்’ என்றுங் கூறினார். ஒருவரென்னும் ஆண்மைப்பெண்மைப் பொதுவிற் பிரிதலின் ‘பொதுப்பிரி பாற்சொல்’ என்றார். ‘பொதுப்பிரி பாற்சொல்’ என்னும் ஒற்றுமையான் ‘நில்லாது’ என ஒருமையாற் கூறினார். ஒருவன் ஒருத்தி என ஒருமைக்கண் நிற்றலும், இருவன் மூவன் இருத்தி முத்தி என எண்ணு முறைமைக்கண் நில்லாமையும் கண்டு கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனான் ஒருவேன் ஒருவை என்னும் தன்மை முன்னிலையீறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க. இது பால்வழுக் காத்தவாறு. (44) வியங்கோள் எண்ணுப்பெயர் அமையுமாறு 45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். (இ-ள்.) வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர் திணைவிராய் வருதல் வரையார் எ-று. (எ-டு.) ஆவு மாயனுஞ் செல்க எனவரும். தன்மைப் பன்மை வினைபோலாது வியங்கோள் இருதிணைக்கும் உரிய சொல்லாகலான் இருதிணைச் சொல்லையும் முடிக்குமன்றே? அதனான் ஆவு மாயனுஞ் செல்க என்புழி வழுவின்மையின், அமைக்கற் பாற்றன்று எனின், இருதிணைப் பொருட்கும் உரித்தேனும் ஒருதிணைப் பொருளைச் சொல்லுதற்கண் இருதிணைப்பொருளும் உணர்த்தாமை யின், ஒரு திணையே உணர்த்தல் வேண்டும்; ஒரு திணை உணர்த்தியவழி ஏனைத்திணைப் பெயரோடு இயையாமையின் திணைவழுவாம், அதனான் அமைக்கல் வேண்டுமென்பது. எண்ணென்றா உறழென்றா ஆயிரண்டும் இனனொன்றல் வேண்டு மென்பது இலக்கணமாகலான், யானு மென்னெஃகமுஞ் சாறும் என்புழி யும் ஆவுமாயனுஞ் செல்க என்புழியும் இனனல்லன உடனெண்ணப்படு தலின் வழுவென்றாரால் உரையாசிரியரெனின், திணைவேறு பாடுண் டேனும், யானுமென் எஃகமும் என்புழி வினைமுதலும் கருவியு மாகிய இயைபும், ஆவு மாயனும் என்புழி மேய்ப்பானும் மேய்க்கப்படுவனவுமாகிய இயைபும் உண்மையான் உடனெண்ணப்படுதலானும், யானை தேர் குதிரை காலாள் எறிந்தான் என முன்னர் உதாரணங் காட்டுபவாகலானும் பிறாண்டும் ‘எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின’ (சொல். 51) என ஆசிரியர்க்கு ஆராய்ச்சி முடிபு கோடற்கண்ணதாகலானும், அவர்க்கது கருத்தன் றென்க. அல்லதூஉம், திணைவிராய் எண்ணல் வழு என்பதே கருத்தாயின், ‘நெடுநல் யானையுந் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம்’ (புறம். 72) எனவும், ‘இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்’ (குறள். 920) எனவும், படர்க்கைச்சொல்லும் அஃறிணைக் கிளவியும் விராய் எண்ணுதல் வழக்குப் பயிற்சி யுடைமையான் அவையும் அடங்க உயர்திணைச் சொல்லே அஃறிணைக் கிளவி எனப் பொதுப்பட ஓதாது ‘தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி’ (சொல். 43) எனத் தன்மைச் சொல்லையே விதந்தோதல் குன்றக் கூறலா மாகலானும், அவர்க்கது கருத்தன்மை யறிக. ‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’ (புறம். 9) எனத் திணைவிராய் வந்து முன்னிலைவினை கோடல் எற்றாற் பெறுது மெனின், அந்நிகரன செய்யுள் முடிபு எனப்படும். அவற்றை அதிகாரப் புறனடையாற் கொள்க. திணைவிராய் எண்ணப்படும் பெயர் வியங் கோளல்லா விரவுவினையொடு தொடர்ந்து வருவன வழக்கினுள் உளவேல் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. (45) பொதுமைக் குரிய சொற்கள் மரபு 46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். (இ-ள்.) வேறுபட்ட வினையையுடைய பல பொருட்குப் பொது வாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையான் கிளவார் எ-று. எனவே, பொதுவினையான் கிளப்பர் என்றவாறாம். அவை அடிசில் அணி இயம் படை யென்னும் தொடக்கத்தன. அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும் நால்வகைக்கும், அணி என்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன ஊதுவன எழுப்புவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும் பொது வாகலின், அடிசில் அயின்றார் மிசைந்தார் எனவும், அணி அணிந்தார் மெய்ப்படுத்தார் எனவும், இயம் இயம்பினார் படுத்தார் எனவும், படை வழங்கினார் தொட்டார் எனவும் பொதுவினையான் சொல்லுக. அடிசில் தின்றார், பருகினார் எனவும்; அணி கவித்தார், பூண்டார் எனவும்; இயம் கொட்டினார், ஊதினார் எனவும்; படை எறிந்தார், எய்தார் எனவும் ஒரு சார்க்குரிய வினையாற் சொல்லின் மரபு வழுவாமென்பது. பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றி வேறு வினைப் பொதுச்சொல் என்றார். (46) 47. எண்ணுங் காலும் அதுஅதன் மரபே. (இ-ள்) வேறுவினைப் பொருள்களைப் பொதுச்சொல்லான் கூறாது பிரித்தெண்ணுமிடத்தும் அதனிலக்கணம் ஒரு வினையாற் கிளவாது பொதுவினையாற் கிளத்தலேயாம் எ-று. (எ-டு.) சோறுங்கறியும் அயின்றார், யாழுங்குழலும் இயம்பினார் எனவரும். சோறுங்கறியும் தின்றார், யாழுங்குழலும் ஊதினார் எனின் வழுவாம். அஃதேல், ‘ஊன்துவை கறிசோ றுண்டு வருந்துதொழில் அல்லது’ (புறம். 14) என்புழி உண்டென்பது ஒன்றற்கே உரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின், உண்டலென்பது உண்பன தின்பன எனப் பிரித்துக் கூறும்வழிச் சிறப்புவினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும் பொரு ளெல்லாம் உணவெனப் படுமாகலின் பொதுவினையுமாம். அதனானது வழுவன்றென்பது. கறியொழித்து ஏனையவற்றிற்கெல்லாம் உண்டற் றொழில் உரித்தாகலின் பன்மைபற்றிக் கூறினார் எனினும் அமையும். (47) இரட்டைக் கிளவி இசைக்குமாறு 48. இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா. (இ-ள்.) இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலின் பிரிந்து நில்லா எ-று. (எ-டு.) சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இசைபற்றியும், கொறுகொறுத்தார், மொறுமொறுத்தார் எனக் குறிப்புப்பற்றியும், குறுகுறுத்தது கறுகறுத்தது எனப் பண்புபற்றியும் இரட்டித்து வந்தன பிரிந்து நில்லாமை கண்டுகொள்க. அஃதேல், குறுத்தது குறுத்தது எனப் பிரிந்தும் வந்தனவா லெனின், அற்றன்று. குறுத்த தென்பதொரு சொல் குறுவென்பதொரு சொல்லடுத்துக் குறுகுறுத்ததென நின்று குறுமை மிகுதி உணர்த்திற் றாயின், குறுத்ததென்பது குறுமையுணர்த்தக் குறுவென்பது மிகுதி உணர்த்திற் றாதல் வேண்டும். குறுவென்பது மிகுதியுணர்த்தாமையின் குறுகுறுத்ததென்பது ஒரு சொல்லாய் நின்று அப் பொருளுணர்த்திற் றெனவேபடும். அதனாற்றான் அக்குறுமை மாத்திரம் உணர்த்தி நிற்பது அதனின் வேறாமென்பது. கறுகறுத்த தென்பதற்கும் ஈதொக்கும். கறுத்தது கறுத்தது, குறுத்தது குறுத்தது எனச் சொன்முழுவதும் இருமுறை வாராமையின், அடுக்கன்மை யறிக. ஈண்டிரட்டைக் கிளவி யென்றது, மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமை யுடையனவற்றையன்றி, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை யென்று உணர்க. இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கல் மரபன்மையின், மரபுவழுக் காத்தவாறு. (48) தலைமை பன்மைக்குரிய வழக்குகள் 49. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். (இ-ள்.) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஒரு பெயராய்ப் பலபொருட்குப் பொதுவாகிய சொல்லைப் பிற உள்பொரு ளொழியத் தெரிந்துகொண்டு பொதுமையின் வேறாகச் சொல்லுக தலைமையானும் பன்மையானும் எ-று. தெரிபு என்பதற்குச் செயப்படுபொருள் தலைமையும் பன்மையுமே யாம். பிறரும் வாழ்வா ருளரேனும் பார்ப்பனச்சேரி யென்றல் உயர் திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. எயினர் நாடென்பது அத் திணைக் கண் பன்மை பற்றிய வழக்கு. பிற புல்லும் மரனும் உளவேனும் கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. ஒடுவங்கா டென்பது அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. பார்ப்பார் பலராயினும் கமுகு பலவாயினும் அவை தாமே பன்மை பற்றிய வழக்காம். பலபொரு ளொருசொல்லின் நீக்குதற்கு ஒரு பெயரென்றார். ஒன்றென முடித்தல் என்பதனான், அரசர் பெருந்தெரு, வயிரகடகம், ஆதீண்டுகுற்றி, ஆனதர், எருத்தில் எனப் பொதுச்சொல்லின்றி வருவனவுங் கொள்க. உள்பொருளெல்லாம் கூறாது ஒன்றனையெடுத்துக் கூறுதல் மரபன்றாகலின், பொதுச்சொல்மேற் சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தான் மரபுவழுக் காத்தவாறு. (49) 50. பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. (இ-ள்.) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரி னாலும் வினையினாலும் பொதுமையிற் பிரிந்து ஆண்மைக்கும் பெண் மைக்கும் உரியவாய் வருவன எல்லாம் வழுவாகா, வழக்குவழிப்பட்டன வாகலான் எ-று. உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் என்பது அதிகாரத் தான் வந்தது. ‘தொடியோர் கொய்குழை யரும்பிய குமரிஞாழல்’ என்பது உயர் திணைக்கண் பெயரிற் றிரிந்த ஆணொழி மிகுசொல். வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். இவர் வாழ்க்கைப்பட்டார் என்பது தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இவர் கட்டிலேறினார் என்பது தொழிலிற் பிரிந்த பெண் ணொழி மிகுசொல். நம்பி நூறெருமையுடையன் என்பது அஃறிணைக் கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். நம்மரசன் ஆயிரம் யானை யுடையன் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். தொடி செறித்தலும், மக்கட்டன்மையும், இல்வாழ்க்கைப்படுதலும், கட்டிலேறு தலும், எருமைத் தன்மையும், யானைத் தன்மையும் ஒழிக்கப்படும் பொருட்கு முண்மையான் பொதுவாய் நிற்கற்பாலன ஒருபாற் குரியவாய் வருதலின், மரபுவழு வமைத்தவாறு. பிறசொல்லாற் பிரிவன ‘வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும்’ (சொல். 53) எனவும், ‘தெரிநிலை யுடைய அஃறிணை யியற் பெயர்’ (சொல். 171) எனவும், ‘நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே’ (சொல். 172) எனவும் முன்னோதப்படுதலானும், ஆண்டு வழுவின்மையானும், ஈண்டுத் தாமே பிரிவனவே கொள்க. தம்மான்தாம் பிரியுமென்பார் ‘பெயரினுந் தொழிலினும்’ என்றார். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் தாமே பிரிவன எனினும் அமையும். அஃறிணைக்கண் தொழிலிற் பிரிந்தன உளவேல் கண்டுகொள்க. இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லா மறங்கறக்கும், உழவொழிந்தன என உரையாசிரியர் காட்டினாராலோ வெனின்:- பெற்றமென்னும் பொதுப் பெயர் கறத்தலும் உழுதலுமாகிய சிறப்புவினையான் பொதுமை நீங்குதல் வழுவன்மையான் ஈண்டைக் கெய்தாமையின், அவர்க்கது கருத்தன் றென்பது. (50) திணை விரவுப் பெயர் முடிபு 51. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. (இ-ள்.) திணை விராய் எண்ணப்பட்ட பெயர் செய்யுளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும் எ-று. (எ-டு.) ‘வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடையார்’ எனவும், ‘கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவருமென நான்குடன் மாண்ட தாயினும்’ (புறம். 55) எனவும் வரும். எண்ணுத்திணை விரவுப்பெயர் பெரும்பான்மையும் அஃறிணைச் சொற்கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை, உயர்திணைச் சொற் கொண்டு முடியவும் பெறுமென்பதாம். (எ-டு.) ‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு’ (சிலப். வஞ்சினமாலை) எனவும், ‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட்கு ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார்’ (ஆசாரக்கோவை 64) எனவும் வரும். இருதிணைப்பெயரும் விராய் வந்து ஒரு திணைச்சொல்லான் முடிதல் வழுவாயினும், செய்யுளகத்தமைக எனத் திணைவழு அமைத்தவாறு. “பாணன் பறையன் துடியன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியு மில்லை ” (புறம். 335) என இருதிணைப்பெயரும் விரவி வாராது உயர்திணைப்பெயரே வந்து செய்யுளுள் அஃறிணைமுடிபு கொண்டன என்று உரையாசிரியர் கூறினாராலெனின், பாணன் முதலாயினாரைக் குடியென்று சுட்டிய வழிக் குடிக்கேற்ற தொகை கொடுத்தல் வழுவன்மையான், அவ்வுரை போலியுரை யென்க. குடியென்று சுட்டாதவழிப் பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று இந்நால்வருமல்லது குடியில்லை யென்றேயாம். “தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டனரேல் விட்டகல்க’’ (சிலப். 7: 32) எனவும், “யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் (தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே” ) எனவும் இவை யெவ்வாறு வந்தனவோவெனின்:-அவை தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராய் எண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே, தலைமையில் பொருளும் முடிந்தனவாவ தொரு முறைமை பற்றி வந்தன, ஈண்டைக்கெய்தா என்பது. தானுந் தன் புரவியுந் தோன்றினான் என்பதுமது. (51) பலபொரு ளொருசொல் இருவகை 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று ஆயிரு வகைய பலபொரு ளொருசொல். (இ-ள்.) வினைவேறுபடும் பலபொரு ளொருசொல்லும், வினை வேறுபடாப் பலபொரு ளொருசொல்லும் என இரண்டு வகைப்படும் பலபொரு ளொருசொல் எ-று. இனமுஞ் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடை மையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டுகுற்றி யென்பது போல. இலக்கணச் சூத்திரங்களே யமையும், இச் சூத்திரம் வேண்டா பிற வெனின் இருவகைய வென்னும் வரையறை யவற்றான் பெறப்படாமை யானும், வகுத்துப் பின்னும் இலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும், இச்சூத்திரம் வேண்டுமென்பது. (52) 53. அவற்றுள் வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே. (இ-ள்.) அவ்விரண்டனுள்ளும், வினைவேறுபடும் பல பொரு ளொருசொல், ஒருபொருட்கே சிறந்த வினையானும், இனத்தானும், சார் பானும், பொருள்தெரி நிலைக்கண் பொதுமை நீங்கித் தெளியத் தோன்றும் எ-று. மா என்பது ஒருசார் விலங்கிற்கும், ஒரு மரத்திற்கும், வண்டிற்கும், பிற பொருட்கும் பொது. குருகு என்பது ஒரு பறவைக்கும், உலைமூக்கிற்கும், வளைக்கும், பிறவற்றிற்கும் பொது. நாகம் என்பது மலைக்கும், ஒருசார் மரத்திற்கும், யானைக்கும், பாம்பிற்கும், பிறவற்றிற்கும் பொது. சே என்பது ஒருசார்ப் பெற்றத்திற்கும், ஒரு மரத்திற்கும், பிறவற்றிற்கும் பொது. மாப்பூத்தது; மாவுமருது மோங்கின என வேறுபடு வினையானும் இனத்தானும், மரமென்பது விளங்கிற்று. கவசம் புக்கு நின்று மாக்கொணா வென்றவழிக் குதிரை யென்பது சார்பினான் விளங்கிற்று. குருகு முதலாயின வுமன்ன. வேறுபடுவினையினு மென்றாரேனும், ஒன்றென முடித்தலென்பத னான் இம்மா வயிரம், வெளிறு என வேறுபடுக்கும் பெயருங் கொள்ளப்படும். இனத்தொடு சார்பிடை வேற்றுமை யென்னை யெனின், ஒரு சாதிக் கண்ணணைந்த சாதி இனமெனப்படும்; அணைந்த சாதியன்றி ஒருவாற்றா னியைபுடையது சார்பெனப்படுமென்பது. (53) 54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும். (இ-ள்.) வேறுபடாத வினைகொண்டவழி வேறுபடாது தோன்றும் வினை வேறுபடாப் பலபொருளொருசொல், ஆராயுங்கால் கிளந்து சொல்லப்படும், எ-று. (எ-டு.) மாமரம் வீழ்ந்தது, விலங்குமா வீழ்ந்தது என வரும். வினைவேறுபடாப் பலபொருளொரு சொல்லென வேறு நிற்பன வில்லை; வேறுபடுவினை முதலாயினவற்றான் வேறுபடுவனதாமே பொது வினை கொண்டவழி வினை வேறுபடாப் பல பொருளொரு சொல்லா மென்பது அறிவித்தற்கு ‘ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்’ என்றார். ‘ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்’ என ஒரு சூத்திர மாக உரையாசிரியர் பிரித்தாராலெனின், அங்ஙனம் பிரிப்பின் ஒன்று வினை மருங்கி னொன்றித் தோன்றுதலும் வினைவேறுபடூஉம் பல பொரு ளொரு சொற்கே இலக்கணமாய் மாறுகோடலானும், வினைவேறுபடுவன தாமே பொதுவினை கொண்ட வழி வினைவேறுபடாதனவா மென்பது அதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. முன்னும் பின்னும் வருஞ் சார்பு முதலாயினவற்றான் குறித்த பொருள் விளங்காக்கால், கிளந்தே சொல்லுகவென யாப்புறுத்தற்கு ‘நினையுங்காலை’ என்றார். ஆங்கென்பது உரையசை. குறித்த பொருள் விளங்காமைக் கூறல் மரபன்மையின் மரபுவழுக் காத்தவாறு. (54) தெரிந்து மொழிய வேண்டும் இடம் 55. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. (இ-ள்.) ஒருபொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலா யினவற்றான் விளங்காதாயின், அதனைத் தெரித்துச் சொல்லுக எ-று. (எ-டு.) “அரிதாரச் சாந்தங் கலந்தது போல வுருகெழத் தோன்றி வருமே - முருகுறழும் அன்பன் மலைப்பெய்த நீர்” எனவும், ‘வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த நாண்மலரான் நாறு மருவி நளிமலை நன்னாட’ எனவும் வரும். ‘கலந்தது போல வருமே யிலங்கருவி, யன்பன் மலைப்பெய்த நீர்’ எனவும், ‘நாறு மருவி நளிமலை நன்னாட’ எனவும் தெரித்து மொழி யாதவழிக் குறித்தது விளங்காது வழுப்படுதலின் மரபுவழுக்காத்தவாறு. வடநூலார் இதனை நேய மென்ப. ‘ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை’ (அகம். 68) என்புழி இன்னதனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிறவெனின், உவமை யென்னும் அலங்கார மாயினன்றே இன்ன தொன்றனையெனல் வேண்டுவது? செயலையந் தளிரினது செய்யாத நிறத்தைச் செய்ததுபோலக் கூறுங் கருத்தினனாகலின் பிறிதோ ரலங்காரமாம்; அதனான் அது கடாவன் றென்பது. “படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் எடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி” (மலைபடு. 15) என இன்னோரன்ன வெல்லாம் அவ்வலங்காரம் பற்றி வந்தன. “ஒல்லேங் குவளைப் புலாஅல் மகன்மார்பிற் புல்லெருக்கங் கண்ணி நறிது” என்புழிக் குவளை புலால் நாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணங் கூறாமையின் வழுவாம் பிறவெனின், புதல்வற் பயந்த பூங்குழன் மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்துரைக்கின்றா ளாகலின், குவளை புலால் நாறுதற்கு அவன் தவற்றொடு கூடிய அவள் காதல் காரண மென்பதூஉம், எருக்கங்கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனி கூர் வெப்பம் தன் முகிழ்நகை முகத்தான் தணிக்கும் புதல்வன்மேல் ஒரு காலைக் கொருகால் பெருகு மன்பு காரண மென்பதூஉம் பெறப்படுதலின், வழுவாகா தென்பது. மீக்கூற்ற மென்புழிப் போலக் கூற்றுக் கூற்றமென நின்றது. (55) 5. புறனடை திணைவழுவமைதி 56. குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும். (இ-ள்.) குடிமை முதலாக விறற்சொல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினெட்டு முளப்பட அன்ன பிறவும் அவற்றொடு பொருந்தித் தொக்கு முன்னத்தினுணருங் கிளவிகளெல்லாம், உயர்திணைப் பொருண்மேல் நின்றனவாயினும், அஃறிணைப் பொருளை யுணர்த்தி நின்றவழிப் போல, அஃறிணைமுடிபே கொள்ளும் எ-று. (எ-டு.) குடிமை நன்று, குடிமை தீது; ஆண்மை நன்று, ஆண்மை தீது என வரும். ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறு பொருந்தும் வினை தலைப் பெய்க. தன்மைதிரிபெயர் அலி. இதனோடு ஒருபொருட் கிளவியாய் வருவனவுங் கொள்க. உறுப்பின் கிளவி குருடு முடம் என்னுந் தொடக்கத்தன. காதற்சொல் பாவை யானை யென ஒப்புமை கருதாது காதல்பற்றி வருவன. சிறப்புச் சொல் கண்போலச் சிறந்தானைக் கண்ணென்றலும் உயிர்போலச் சிறந் தானை உயிரென்றலும் என இவை முதலாயின. செறற்சொல் செறுதலைப் புலப்படுத்தும் பொறியறை கெழீஇயிலி யென்னுந் தொடக்கத்தன. விறற் சொல் விறலையுணர்த்தும் பெருவிறல் அருந்திறல் என்னுந் தொடக்கத்தன. தன்மை திரிபெயர் முதலாயின பொருள்வகையான் ஆறாக அடக்கப் பட்டன. குடிமை, ஆண்மை, இளமை, மூப்பு, அடிமை, வன்மை, பெண்மை, உறுப்பின் கிளவி, சிறப்புச்சொல், விறற்சொல் என்பன உயர்திணைக்கண் ஆகுபெயராயல்லது வாரா; அல்லன இருதிணைக்கண்ணும் ஒத்தவுரிமைய வெனக் கொள்க. காதல்பற்றிச் சிறுவனை யானையென்றலும் ஆகுபெயரா மன்றோ எனின்:-யாதானுமோர் இயைபுபற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காயது ஆகுபெயராம்; இயைபு கருதாது காதல் முதலாயினவற்றான் யானை யென்றவழி ஆகுபெயருள் அடங்காது என்பது. சிறுவனை யானை யென்றலும் ஒன்றன்பெயர் ஒன்றற்கு ஆதலொப்புமையான் ஆகுபெய ரென்பாருமுளர். சொல்லா னன்றித் திணைவேறுபாடு சொல்லுவான் குறிப்பொடு படுத்துணரப்படுதலின், ‘முன்னத் தினுணருங் கிளவி’ என்றார். ‘அஃறிணை முடிபின’ என்னாது ‘அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்’ எனப் பொதுப்படக் கூறியவதனான், குடிமை நன்று, குடிமை நல்ல; அடிமை நன்று, அடிமை நல்ல என ஏற்புழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலுங் கொள்ளப்படும். அன்ன பிறவும் என்றதனான் வேந்து வேள் குரிசில் அமைச்சு புரோசு என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. குடிமை முதலியன உயர்திணை யுணர்த்தும்வழி அஃறிணையான் முடிதல் வழுவாயினும் அமைகவெனத் திணைவழு வமைத்தவாறு. (56) இதுவுமது 57. காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. (இ-ள்) காலம் முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத்தன்மைய பிறவுமாகிய அப் பகுதிக்கண் வருஞ் சொல்லெல்லாம், உயர்திணைச் சொல் லாயினும், உயர்திணைக்கண் பால்பிரிந்திசையா, அஃறிணைப்பாலா யிசைக்கும் எ-று. (எ-டு.) இவற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது, உயிர் போயிற்று, உடம்பு நுணுகிற்று, தெய்வஞ் செய்தது, வினை விளைந்தது, பூதம் புடைத் தது, ஞாயிறு பட்டது, திங்க ளெழுந்தது, சொன் னன்று என வரும். ‘பிறவும்’ என்றதனான், பொழுது நன்று, யாக்கை தீது, விதி வலிது, கனலி கடுகிற்று, மதி நிறைந்தது, வெள்ளி யெழுந்தது, வியாழம் நன்று என்பன போல்வன கொள்க. கால மென்பது காலக் கடவுளை. உலக மென்றது ஈண்டு மக்கட் டொகுதியை. உயிரே யுடம்பே யெனப் பொதுவகையாற் கூறினாரேனும், மக்களுயிரு முடம்புமே கொள்ளப்படும்; என்னை? உயர்திணை முடிபு கொள்ளா என விலக்கப்படுவன அவையேயாகலி னென்பது. ‘அஃறிணை யென்மனா ரவரல பிறவே’ என்புழி அஃறிணையா யடங்கி உயர்திணை முடிபெய்தாமையின், அவையும் விலக்கற்பாட்டிற் கேலாவெனின், அற் றன்று. மக்கட்சுட்டுடைமையான் அவை உயர்திணையேயா மென்பது. யாதோ மக்கட்சுட்டுடையவாறெனின், அறஞ்செய்து துறக்கம் புக்கான் எனவும், உயிர் நீத்தொருமகன் கிடந்தான் எனவும், உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கொண்டு நிற்றலின் மக்கட்சுட்டுடையவென்பது. ஓராவை எம்மன்னை வந்தாளென்றும் ஓரெருத்தை எந்தை வந்தானென்றும் உயர்திணை வாய்பாட்டாற் கூறியவாறு போல, உயிருமுடம்பும் அவ்வாறு கூறப்பட்டனவென்று கொள்ளாமோ வெனின், கொள்ளலாம். அவற்றான் வரும் பயனோக்கிக் காதலான் எம்மன்னை எந்தை யென்றான் ஆண்டு; ஈண்டுக் காதல் முதலாயின இன்மையின் மக்கட் சுட்டுடைய வென்பது. பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது. வினை யென்பது அறத் தெய்வம். சொல்லென்பது நாமகளாகிய தெய்வம். அஃதேல், குடிமை யாண்மை யென்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின், அவை இருதிணைப் பொருட்கண்ணுஞ் சேறன் மாலைய; இவை அன்னவல்ல வென்பது. உலகமென்பது இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருளாகிய மக்கட்டொகுதியையும் உணர்த்துமாகலான், இருதிணைக் கண்ணும் சென்றதன்றோவெனின், அற்றன்று. வடநூலுள் உலக மென்பது இருபொருட்கு முரித்தாக ஓதப்பட்டமையின், மக்கள் தொகுதியை யுணர்த்தும்வழியும் உரிய பெயரே யாகலின் ஆகுபெயரன்று; அதனான் ஒருசொல் இருபொருட்கண்ணுஞ் சென்றதெனப் படாது, இருபொருட்கு முரிமையான் இரண்டு சொல்லெனவேபடு மென்பது. வேறுபொரு ளுணர்த்தலின் வேறு சொல்லாதலே துணிவாயினும், பல பொருளொரு சொலென்புழி எழுத்தொப்புமை பற்றி ஒரு சொல்லென்றார். மேலென்பது ஏழாம் வேற்றுமைப் பொருளுணர்த்துவதோ ரிடைச் சொல்லாகலின், ஈறு திரிந்து மேனவென நின்றது. இதுவும் திணைவழுவமைதி. (57) உயர்திணையாய் இசையாமை 58. நின்றாங்கு இசைத்தல் இவணியல் பின்றே. (இ-ள்.) ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர்திணையா யிசைத்தல் ஈண்டு இயல்பின்று எ-று. ஈண்டென்றது காலமுதலாகிய சொற்களை. அவை இடையீடின்றி மேற்சொல்லப்பட்டு நிற்றலின் ‘இவண்’ என்றார். ‘இவணியல்பின்று’ எனவே, குடிமை ஆண்மை முதலாயின சொல்லின்கண், குடிமை நல்லன், வேந்து செங்கோலன் என நின்றாங்கு நின்று உயர்திணையாயிசைத்தல் இயல்புடைத் தென்பதாம். (58) உயர்திணையாய் இசைத்தல் 59. இசைத்தலும் உரிய வேறிடத் தான. (இ-ள்.) காலம்முதலாகிய சொல் உயர்திணையாய் இசைத்தலுமுரிய, ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டவழி எ-று. காலன்கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறுபட்ட வழி உயர்திணையாய் இசைத்தவாறு கண்டுகொள்க. (59) இனம் செப்பல் 60. எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே. (இ-ள்.) இனமாகிய பலபொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறியவழி அச்சொல் தன் பொருட்கினமாகிய பிறபொருளைக் குறிப்பான் உணர்த்தலு முரித்து எ-று. உம்மை எதிர்மறையாகலான் உணர்த்தாமையு முரித் தென்பதாம். (எ-டு.) ‘அறஞ்செய்தான் துறக்கம் புகும்’ எனவும், ‘இழிவறிந் துண்பான்கண் இன்பமெய்தும்’ (குறள். 946) எனவும் வரும். இவை சொல்லு வார்க்கு இனப்பொருளியல்பு உரைக்குங் குறிப்புள்வழி, மறஞ்செய்தான் துறக்கம் புகான், கழிபேரிரையன் இன்பமெய்தான் என இனஞ் செப்புதலும், அக்குறிப்பில்வழி இனஞ்செப்பாமையுங் கண்டுகொள்க. எடுத்த பொருளை உணர்த்தும் மொழியை ‘எடுத்த மொழி’ என்றார். இனனல் பொருளின் நீக்குதற்கு ‘இனம்’ என்றார். அஃதேல், மேற்சேரிக் கோழி யலைத்தது எனக் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டது எனவும், குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது எனவும் இவை இனஞ் செப்பு மென்றும், ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்பன இனஞ்செப்பா வென்றும் உரையாசிரியர் கூறினாரா லெனின், அற்றன்று. கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்தல் அமையாமையானும், குடம் வீழ்தலின்றிக் குடங் கொண் டான் வீழ்தல் அமையாமையானும், கீழ்ச்சேரிக்கோழி யலைப்புண்டலும் குடம் வீழ்தலும் சொல்லாற்றலானன்றி இன்றியமையாமை யாகிய பொருளாற்றலான் பெறப்படுமாகலான் ஈண்டைக் கெய்தா, இது சொல்லாராய்ச்சியாகலா னென்பது. இன்னோரன்ன சொல்லாற்றலான் பெறப்பட்டன வெனின், புகை யுண்டென்றவழி எரியுண்மை பெறுதலுஞ் சொல்லாற்றலான் பெறப்பட்டதா மென்பது. இனி ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்புழிச் சொல்லுவான் ஒழிந்த விலங்கும் ஒழிந்த மக்களுஞ் சாகவென்னுங் கருத்தினனாயின் இவையுமினஞ் செப்புவன வன்றோ வென்பது. அதனான் அவை போலியுரை யென்க. ஒருதொடர் ஒருபொருளுணர்த்தி யமையாது வேறொரு பொரு ளுங் குறித்து நிற்றல் வழுவாயினும் அமைக என மரபுவழுக் காத்தவாறு. (60) பன்மை சுட்டிய சினைநிலைக்கிளவி முடிபு எண்ணுக்குப் புறனடை 61. கண்ணுந் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக்கு இயலும் எழுத்தலங் கடையே. தம்வினைக் கியலு மெழுத்தான் முடிதலும் தம் முதல்வினைக் கியலுமெழுத்தான் முடிதலு மெனச் சினைநிலைக்கிளவி இருமுடிபுடைய வற்றுள், முதல்வினைக் கியலு மெழுத்தான் முடிவுழி யென்பார், ‘தம் வினைக் கியலு மெழுத்தலங்கடை’ யென்றார். (இ-ள்.) கண் முதலாயவும் பிறவும் பன்மை குறித்துநின்ற சினை நிலைக்கிளவி; அவை தம்வினைக்கியலு மெழுத்தான் முடியாது தம் முதல் வினைக்கியலுமெழுத்தான் முடியும்வழிப் பன்மையாற் சொல்லப்படும் யாப்புறவுடைய வல்ல; முதலொன்றாயின் ஒருமையானும், பலவாயிற் பன்மையானுங் கூறப்படும் எ-று. (எ-டு.) கண்ணல்லள், தோணல்லள், முலைநல்லள் எனவும்; கண்ணல்லர், தோணல்லர், முலைநல்லர் எனவும் வரும். பிறவு மென்றதனான் புருவங் காதென்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. பன்மைகூறுங் கடப்பாடிலவே யென்றதனாற் பால்வழுவும், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்றதனாற் றிணைவழுவும் அமைத்தார். பன்மை கொண்டன, பன்மையொருமை மயக்கமில்லாத் திணை வழுவாகலின், தம் வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்பதனான் அமைக்கப்படும். மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப்பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங்கரியள், கவவுக்கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்திணைகொண்டனவும் தன்னினமுடித்தல் என்பதனா னமைக்கப்படும். கோடு கூரிது களிறு, குளம்பு கூரிது குதிரை என அஃறிணைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல்வினையாகிய ஒருமையான் முடிந்தனவும் அமையுமா றென்னையெனின், ஆண்டுப் பன்மையொருமை மயக்கமல்லது திணைவழுவின்மையின் ஈண்டைக்கெய்தா; அப்பன்மை யொருமை மயக்கம் ஒன்றென முடித்தல் என்பதனா னமைக்கப்படும். அஃதேல், இச் சூத்திரத்தான் திணைவழுவொடு கூடிய பால் வழு அமைக் கப்பட்ட தென்பது எற்றாற் பெறுதுமெனின், சினைக்கிளவிக்குத் தம் வினைக்கியலு மெழுத்தாவது அஃறிணை வினைக்குரிய எழுத்தாம்; அஃதல்லாதது உயர்திணை வினைக்குரிய எழுத்தேயாம். என்னை? அஃறிணைக்கு மறுதலை உயர்திணையேயாகலான். அதனால் திணை வழுவுதலும் பெறுதுமென்பது. அஃதேல், தம் வினைக்கியலுமெழுத்தாவன சினைவினைக்குரிய எழுத்தென்றும், அவை யல்லாதனவாவன முதல் வினைக்குரிய எழுத்தென்று முரைக்க; உரைக்கவே, உயர்திணைச்சினையும் அஃறிணைச்சினையு மெல்லாம் அடங்குமெனின், அற்றன்று. அஃறிணைக் கண் சினைவினைக்குரிய எழுத்தொடு முதல்வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லாம் அஃறிணையெழுத்தேயாகலின், ‘தம்வினைக் கியலு மெழுத்தலங்கடை’ யென்பதற் கேலாதாகலான், கண் முதலாயின உயர்திணைச்சினையேயா மென்பது. (61) கிளவியாக்கம் முற்றிற்று. 2 வேற்றுமையியல் (பெயர்கள் உருபேற்றுப் பொருள் வேற்றுமைப்படும் இயல்பு உணர்த்துவது) 1. வேற்றுமையின் வகை 62. வேற்றுமை தாமே ஏழென மொழிப. நான்கு சொற்கும் பொதுவிலக்கணம் உணர்த்தினார், அதற்கிடையீ டின்றி அவற்றது சிறப்பிலக்கணம் உணர்த்துதல் முறைமையாயினும், வேற்றுமை யிலக்கணம் உணர்த்துதற்கு வேறிடமின்மையானும், பொது விலக்கணமாதல் ஒப்புமையானும், உருபேற்றல் பெயர்க்கிலக்கணமாகலின் வேற்றுமை யுணர்த்திப் பெயருணர்த்தல் முறையாகாலானும், கிளவி யாக்கத்திற்கும் பெயரியற்குமிடை வேற்றுமையிலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார். வேற்றுமையாவன பெயரும் ஓரிடைச்சொல்லு மாகலின், அவற்ற திலக்கணமும் பொதுவிலக்கணமேயாம். வேற்றுமையிலக்கணமென ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமையும் அவற்றது மயக்கமும் விளிவேற்றுமையுந் தனித்தனி யுணர்த்தத் தகும் வேறுபாடு யாப்புடைமையான், மூன்றோத்தா னுணர்த்தி னார். பொது விலக்கணமுணர்த்திச் சிறப்பிலக்கணம் உணர்த்துதல் முறையாகலின், முதற்கண்ணதாகிய பெயர்ச்சொற்குப் பயனிலை கோடலும் உருபேற்றலும் காலந்தோன்றாமையுமாகிய இலக்கண முணர்த்துவார் இயைபுபட்டமையான் வேற்றுமையிலக்கணம் உணர்த்தினாரென மேலோத்தினோடு இவ்வோத்திடை யியைபு கூறினாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று. இவ்வோத்துப் பெயரிலக்கணம் நுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதாயின், உருபேற்றலும் பயனிலைகோடலும் காலந் தோன்றாமையுமாகிய பெயரிலக்கணம் முன்னோதி, இயைபு படுதலான் வேற்றுமை யுணர்த்தும் கருத்தினராயின் அவற்றையும் இன்ன விலக் கணத்த என உணர்த்திப் பின்னும் எடுத்துக் கொண்ட பெயரிலக்கணமே பற்றி யோதிப் பெயரியலென ஓரோத்தான் முடியற்பாற்றன்றே? அவ் வாறன்றி, வேற்றுமையிலக்கணமே முன்கூறி, ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பய னிலையே’ (சொல். 66) எனவும், ‘ஈறு பெயர்க் காகு மியற்கைய வென்ப’ (சொல். 69) எனவும் வேற்றுமையிலக்கணம் கூறி, அச் சூத்திரத்தாற் பயனிலை கோடலும் உருபேற்றலும் பெயர்க்கிலக்கண மென்பது உய்த் துணர வைத்துப் பின்னும் வேற்றுமையிலக்கணமே யுணர்த்தி, இதனை வேற்றுமையோத்தென்றும், அவற்றது மயக்கமுணர்த்திய ஓத்தை வேற்றுமை மயங்கியலென்றும், சிறப்பில்லா விளிவேற்றுமை யுணர்த்திய ஓத்தை விளிமரபென்றும், நுதலியதனாற் பெயர் கொடுத்து, மூன்றோத்தாக வைத்து, பெயரியலென வேறோரோத்திற்குப் பெயர் கொடுத்தமையானும், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல். 155) என்பது முதலாகிய ஐந்து சூத்திரமும் பெயரிலக்கண முணர்த்து மோத்தின் முன் வையாது இடை வைத்தல் பொருந்தாமையானும், இவ்வோத்துப் பெய ரிலக்கணம் நுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதன்று, வேற்றுமையிலக் கணமே நுதலி யெழுந்ததெனவே படும்; அதனான் அவர்க்கது கருத்தன் றென்க. அஃதேல், ‘பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா’ (சொல். 70) எனப் பெயரிலக்கணம் ஈண்டுக் கூறியது என்னை யெனின், பயனிலை கோடலும் உருபேற்றலும் பெயரிலக்கண மென்பது ஈண்டுப் பெறப்பட்டமையான், அவற்றோ டியையக் காலந்தோன்றாமையும் ஈண்டே கூறினார், பெயரிலக் கணமாத லொப்புமையானென்பது. (இ-ள்.) வேற்றுமையாவன ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர் எ-று. செயப்படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறு படுத்துணர்த்தலின், வேற்றுமையாயின. செயப்படுபொருள் முதலாயின வற்றின் வேறுபடுத்துப் பொருள்மாத்திரம் உணர்த்தலின், எழுவாயும் வேற்றுமையாயிற்று. அல்லதூஉம், வேற்றுமை யென்பது பன்மை பற்றிய வழக்கெனினுமையும். தாமே யென்பது கட்டுரைச்சுவைபட நின்றது. (1) 63. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. (இ-ள்.) விளிகொள்வதன்கண்ணதாகிய விளியொடு தலைப்பெய்ய வேற்றுமை யெட்டாம் எ-று. வேற்றுமை யென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர், ‘விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப’ (சொல். 118) என்பவாகலின், விளிகொள்வ தென்றது விளிகொள்ளும் பெயரை. அதன்கண் விளியென்றதனான், பெயரு மன்று, பெயரின் வேறு மன்று, விளி வேற்றுமையாவது திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி யென்பதாம். ‘வேற்றுமை தாமே யேழென மொழிப’ (சொல். 62) எனப் பிறர் மதங் கூறி இச்சூத்திரத்தான் தந்துணி புரைத்தார். (2) வேற்றுமையின் பெயர் முறை 64. அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன்அது கண்விளி யென்னும் ஈற்ற. (இ-ள்.) எட்டெனப்பட்ட வேற்றுமையாவன விளி வேற்றுமையை இறுதியாகவுடைய பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண்ணாம் எ-று. பெயர் ஐ ஒடு கு இன் அது கண் என்பன பலபெயர் உம்மைத் தொகை. அஃது ஒரு சொல்லாய் விளி யென்னு மீற்ற என்பதனான் விசேடிக்கப் பட்டது. பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் என விரியும். சிறப்புடைப்பொருளைத் தானினிது கிளத்த லென்பதனான், ஒடுவென்றும் அது வென்றும் ஓதினாராகலின், ஆனுருபும் அகரவுருபுங் கொள்ளப்படும். விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளி யென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார். (3) 2. எழுவாய் வேற்றுமை 65. அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட வேற்றுமையுள், முதற்கட் பெய ரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் எ-று. பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது, உருபும் விளியு மேலாது பிறிதொன்றனொடு தொகாது *நிற்கும் நிலைமை. எனவே, உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனொடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமையாகா தென்றவாறாம். (எ-டு.) ஆ, அவன் என வரும். (4) *(பாடம்) தொடராது. எழுவாய் வேற்றுமைப் பயனிலைகள் 66. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. (இ-ள்.) பொருண்மை சுட்டல்-ஆ வுண்டு என்பது. வியங்கொள வருதல்-ஆ செல்க என்பது. வினைநிலை யுரைத்தல்-ஆ கிடந்தது என்பது. வினாவிற் கேற்றல்-அஃதியாது, அஃதெவன் என வினாச்சொல்லொடு தொடர்தல். பண்பு கொள வருதல்-ஆ கரிது என்பது; தன்னின முடித்த லென்பதனான், ஆ இல்லை, ஆ அல்ல என்னுந் தொடக்கத்துக் குணப் பொருள் அல்லா வினைக்குறிப்பொடு தொடர்தலுங் கொள்க. பெயர் கொள வருதல்-ஆ பல என்பது. அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே யென்பது - அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலையாம் எ-று. முடிக்குஞ் சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பயனாகலின் பயனிலை என்றார். உண்டென்பது பண்பு முதலாயின சுட்டாது உண்மையே சுட்டலின் வேறு கூறினார். பொய்ப்பொருளின் மெய்ப்பொருட்கு வேற்றுமை உண்மையாகலின், அவ்வுண்மையைப் பொருண்மை யென்றார். வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தற்கண்ணும், வினாவிற் கேற்றல் பெயர்கொள வருதற்கண்ணும், வினைக்குறிப்பாயவழிப் பண்பு கொள வருதற்கண்ணும் அடங்குமாயினும் வினையும் பெயரும் பண்பும் முடிக்குஞ் சொல்லாதலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாதலுமுடைய; வியங்கோளும் வினாவும் முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லாமையின், அவ் வேறுபா டறிவித்தற்கு வேறு கூறினா ரென்பது. ‘பெயர்தோன்று நிலை’ (சொல். 65) என்பதனானும், ‘அன்றியனைத் தும் பெயர்ப் பயனிலையே’ யென்பதனானும், பெயர் தோன்றிய துணையாய் நின்று பயனிலைத்தாதல் எழுவாய் வேற்றுமைய திலக்கணமென்பது பெற்றாம். ஆ பல என்புழிப் பலவென்பதற்குப் பயனிலை யாதெனின், அது பயனிலையாய் ஆவென்பதனை முடித்தற்கு வந்ததாகலின், தான் பிறிதொரு சொன்னோக்காது ஆவென்பதனொடு தொடர்ந்து அதனை முடித் தமைந்து மாறுமென்பது. அஃதேல், பயனிலை கொள்ளாதது எழுவாய் வேற்றுமை யாமா றென்னையெனின், உருபேற்றல் பெயர்க்கிலக்கண மாயினும் உருபேலாதவழியும் பெயராமாறு போல, எழுவாய் வேற்றுமை பயனிலை கொள்ளாதவழியும் எழுவாய்வேற்றுமையே யாமென்பது. இலக்கிய மெங்குஞ் செல்லாதன இலக்கணமாமா றென்னையெனின், ஆண்டிலக்கணமாவன உருபேற்றற்கேற்ற தன்மையும் பயனிலையும் பயனிலை கோடற்கேற்ற தன்மையுமாகலின், அத்தன்மை எல்லாவற்றிற்கு முண்மையின் இலக்கணமா மென்பது. அகரச்சுட்டு அன்றி யென ஈறு திரிந்து நின்றது. ‘அன்றியனைத்தும் பெயர்ப்பயனிலை’ யெனவே, பயனிலைகோடல் பெயர்க்கிலக்கண மென்பதூஉம் பெற்றாம். (5) பெயர்த் தொகை பயனிலை கொள்ளல் 67. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. (இ-ள்.) பெயரும் பெயருந் தொக்க தொகையு முள; அவையுமுரிய எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு எ-று. (எ-டு.) யானைக்கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது, கொல்யானை நின்றது, கருங்குதிரை யோடிற்று, உவாப்பதினான்கு கழிந்தன, பொற் றொடி வந்தாள் என வரும். பெயரினாகிய தொகையு மென்னும் உம்மையான், பெயரொடு பெயர் தொக்கனவே யன்றி, நிலங்கிடந்தான், மாக்கொணர்ந்தான் எனப் பெயரொடு வினை வந்து தொக்க வினையினாகிய தொகையுமுள என்பதாம். ஆகவே பெயரொடு பெயரும் பெயரொடு தொழிலுந் தொக்கன தொகை யென்பது பெற்றாம். அவ்வுமுரிய எனப் பொதுவகையாற் கூறினாரேனும், ஏற்புழிக் கோடலென்பதனான் எழுவாய் வேற்றுமையாதற் கேற்புடைய பெயரி னாகிய தொகையே கொள்ளப்படும். இரு தொடர்படச் சூத்திரித் திடர்ப்படுவ தென்னை? பெயரினாகிய தொகையும் எழுவாய்வேற்றுமையாமென்றோத அமையாதோ எனின், அங்ஙனமோதின் பெயரொடு பெயரும், பெயரொடு வினையுந் தொக்கன தொகைச் சொல்லா மென்னுந் தொகையிலக்கணம் பெறப்படாதாம்; அவ் விலக்கண முணர்த்துதற்கு இவ்வாறு பிரித்தோதினாரென்பது. பெயரினாகிய தொகையுமென்ற உம்மையான் வினையினாகிய வினைத்தொகை தழுவப்பட்ட தென்றும், ‘எல்லாத் தொகையு மொரு சொன்னடைய’ (சொல். 420) என்பதனான் தொகைச்சொல்லெல்லாம் எழுவாய்வேற்றுமையாதல் பெறப்படுதலின், ஈண்டு அவ்வுமுரிய அப்பாலான என்றது தொகைச் சொற்குப் பயனிலை கோடன்மாத்திர மெய்துவித்தற்கென்றும், உரையாசிரியர் கூறினாராலெனின், அற்றன்று. வினைத்தொகைக்கு நிலைமொழி வினையென்பது உரையாசிரியர்க்குக் கருத்தன்மை ‘வினையின் றொகுதி காலத் தியலும்’ (சொல். 415) என்னுஞ் சூத்திரத்திற் சொல்லுதும். இனி ‘எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ (சொல். 420) என்பதற்கு ஒரு சொன்னடையவா மென்பதல்லது எழுவாய் வேற்றுமையாமென்னுங் கருத்தின்மையானும், அக்கருத்துண் டாயின் அவையும் எழுவாய்வேற்றுமையாய் நின்று ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ (சொல். 66) என்றதனான் பயனிலை யெய்து மாகலின் ‘அவ் வுமுரிய அப்பாலான வென்றல்’ கூறியது கூறிற்றாமாக லானும், அதுவும் உரையாசிரியர் கருத்தன்றென்க. அஃதேல், தொகையும் எழுவாய்வேற்றுமையா மென்பதே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின் ‘எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே’ (சொல். 65) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்க எனின், பெயர் தோன்றிய துணையாய் நிற்றலும் பயனிலை கோடலுமாகிய எழுவாய் வேற்றுமை யிலக்கண மிரண்டுந் தொகைச்சொற்கு மெய்துவித்தற்கு அவ்விரண்டு சூத்திரத்திற்குப் பின் வைத்தாரென்பது. ஆண்டு வைப்பின், ‘அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ (சொல். 66) என்றதனாற் பயனிலை கோடல் பெயர்க்கேயாயத் தொகைக் கெயதாதா மென்பது. (6) எழுவாயும், தோன்றா எழுவாயும் 68. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. (இ-ள்.) மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விதென்ப ஆசிரியர் எ-று. எனவே, அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலுமுண்டு; அது செவ்விதன்று என்ற வாறாம். பெயரென்றது ஈண்டெழுவாயை. கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான் யாது செய்வல் என்றவழி இது செய் எனவும், இவன் யார் என்றவழிப் படைத்தலைவன் எனவும் செப்பியவழி, யான் நீ இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று, செல்வல், இதுசெய், படைத்தலைவன் என்னும் பயனிலை கொண்டவாறு கண்டுகொள்க. எவ்வயிற் பெயரும் என்றது என்னையெனின்:-செல்வல், இது செய் என்னுந் தன்மை முன்னிலை வினைகளான் யான் நீ யென்பனவற்றின் பொருளு முணரப்படுதலின், யான் செல்வல், நீ யிது செய்யெனப் பெயர் வெளிப்படுதல் பயமின்றாயினும் வழக்கு வலியுடைத்தாகலின், அவ்வாறு வருதல் பயமின்றெனப்படா தென்பது விளக்கிய எவ்வயிற் பெயரு மென்றா ரென்பது. அவ்வியலா னிலைய லென விரியும். பயனிலைக்கு இருநிலைமையு மோதாது எழுவாய்க்கே யோதுதலாற் பயனிலை வெளிப்பட்டே நிற்கும். எவ்வயிற் பெயரும் பயனிலை கோடல் செவ்விதென, உருபேற்றல் செவ்விதன்றா மென வுரைத்து அவ்வாய் நீயி ரென்பன உருபேலாவென்று காட்டினாரால் உரையாசிரியரெனின்:-அவ்வாயென்பது இடைச் சொல்லாய் ஆண்டென்னும் பொருள்பட நின்றவழி உருபேயன்றிப் பயனிலையும் ஏலாதாம். இனி அல்வழிக்கண் (எழுத்து. 326, சொல். 143) நும்மென்பது திரிந்து நீயிரென நின்ற திரிபைப் பெயரெனக் கொண்டு உருபேலா தென்றாராயின், நீயென்பதன் திரிபாகிய நின் என்பதனையும் பெயராகக்கொண்டு பயனிலை கொள்ளா தென்றுங் கூறல்வேண்டும் (எழுத்து. 179). அன்றி நும்மின் திரிபாகிய நீயி ரென்பதனை ‘எல்லாம் நீயிர் நீயெனக் கிளந்து’ (சொல். 174) என இயற்கைப் பெயரோடு ஒருங்கு வைத்தது நீயிரென்னுந் திரிபே இயல்பாக வேற்றுமைக் கண் நும்மெனத் திரியினுமமையு மென்னுங் கருத்தினராயன்றே? அதனான் இயல்பாகக் கொள்ளப்பட்ட நிலைமைக்கண் நீயி ரென்பதனை உருபேலா தென்றா ராயின் நும்மெனத் திரிந்து உருபேற்பதனை உருபேலாதென்றல் பொருந் தாதாம். அதனானது போலியுரை யென்க. (7) பெயர்க்கண் உருபு நிற்கும் இடம் 69. கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப. எழுவாய் வேற்றுமை யுணர்த்தி ஏனை யறுவகை வேற்றுமையிலக் கணமு முணர்த்திய எடுத்துக் கொண்டார். (இ-ள்.) பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறப்பட்ட முறை மையையுடைய உருபு தந்நிலை திரியாது பெயர்க்கீறா மியல்பையுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். அம்முறைபற்றி அவை யெண்ணுப்பெயரான் வழங்கப்படுதலின் ‘கூறிய முறையி னுருபு’ என்றார். வினைச்சொ லிறுதி நிற்குமிடைச்சொல், தாம் என வேறு உணரப் படாது அச்சொற்குறுப்பாய் நிற்குமன்றே? இவை யவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப்பட்டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது’ என்றார். உருபு பெயர் சார்ந்துவரு மெனவே, உருபேற்றலாகிய பெய ரிலக்கணமும் பெறப்பட்டது. (8) பெயரது இயல்பு 70. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே. (இ-ள்.) பெயர்ச்சொல் காலந் தோன்றா, வினைச்சொல் லோடொக் கும் ஒரு கூறல்லாத விடத்து எ-று. சாத்தன், கொற்றன், உண்டல், தின்றல் எனக் காலந்தோன்றாது நிற்றலும், உண்டான், தின்றான் எனத் தொழினிலை யொட்டுவன காலந் தோன்றி நிற்றலுங் கண்டுகொள்க. உண்டான், தின்றான் என்னுந் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப் படும் தொழிற்பெயர் வினைச்சொற்போலத் திணையும் பாலுங் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன் ஆன் முதலாகிய ஈற்றவாய் வருதலின், ‘தொழில்நிலை யொட்டும்’ என்றார். ஒட்டுமென்பது உவமச் சொல். பெயராகிய நிலையை யுடையது பெயர்நிலை யென அன்மொழித் தொகை. பெயர் - பொருள். தொழில்நிலையு மது. ‘காலந் தோன்றா’ என்பன ஒரு சொல்லாய்ப் ‘பெயர்நிலைக் கிளவி’ யென்பதற்கு முடிபாயின. பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் ஈண்டுப் பெறப்படுதலின், அவற்றோடியையக் காலந்தோன்றாமையாகிய பெய ரிலக்கணமும் ஈண்டே கூறினார். பெரும்பான்மை பற்றிக் காலந்தோன் றாமை பெயரிலக்கணமாயிற்று. (9) 3. இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ உருபின் பொருள் 71. இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலின் தோன்றும் அதுவே. (இ-ள்.) ‘பெயர் ஐ ஒடு கு’ என்னுஞ் சூத்திரத்து ஐ எனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவதாம். அஃதியாண்டு வரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணுந் தோன்றுமவை பொருளாக வரும் எ-று. (எ-டு.) குடத்தை வனைந்தான், குழையையுடையன் என வரும். எண்ணுமுறையான் இரண்டாவதென்பது பெறப்படுமாயினும், இக்குறி தொல்லாசிரியர் வழக்கென்ப தறிவித்தற்கு ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிரண்டாவ தென்றார். இது மூன்றாவது முதலாயின வற்றிற்கு மொக்கும். பெயரிய என்பது பெயரென்பது முதலாக முடிந்ததொரு பெய ரெச்சம். தம்மை யுணர்த்துவனவும் பெயரெனப்படுதலின் ‘ஐயெனப் பெயரிய’ வென்றார். வினையே வினைக்குறிப் பென்றாராயினும் அவற்றின் செயப்படு பொருளே கொள்ளப்படும்; அவ்விருமுதலிற் றோன்று மென்றமையான், முதலாதற்கும் வேற்றுமைப் பொருளாதற்கும் ஏற்பன அவையே யாகலின். என்னை அவை முதலாதற் கேற்றவாறெனின், செயப்படுபொருள் முதலாயின தொழிற்குக் காரணமாகலானும், ‘ஆயெட்டென்ப தொழின் முதனிலையே’ (சொல். 112) என அவற்றை முதனிலையென்று கூறுபவாக லானு மென்பது. அஃதேல், செயப்படுபொருளாவது வினைமுதற்றொழிற் பயனுறுவதாதலான், குழை முதலாயினவற்றிற்கு அவ்விலக்கண மேலாமையின் செயப்படுபொருளன்மையான் வினைக்குறிப்பெனல் வேண்டா வெனின், அற்றன்று; ‘அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு, மெய்ந் நிலை யுடைய’ (சொல். 200) என்றாராகலின், குறிப்புச்சொற் காலமொடு தோன்றித் தொழிற்சொல்லாதலும் குழை முதலாயின தொழிற்பய னுறுதலும் ஆசிரியர் துணிபாகலின், அவையுஞ் செயப்படுபொருளா மென்பது. ஆயின், செயப்படுபொருட்கட் டோன்றுமென வமையும், ‘வினையே வினைக்குறிப்’ பெனல் வேண்டாவெனின், அங்ஙனங் கூறின், செயப்பாடினிது விளங்குஞ் சிறப்புடைத் தெரிநிலைவினைச் செயப்படு பொருளையே கூறினாரோ, குறிப்புப்பொருளு மடங்கப் பொதுவகையாற் கூறினாரோ வென்றையமாம்; ஐயம் நீங்க, ‘வினையே வினைக் குறிப்’ பென்றா ரென்பது. வினை வினைக்குறிப்பு என்பன ஈண்டாகுபெயர். புகழை நிறுத்தான், புகழை நிறுத்தல், புகழை யுடையான், புகழை யுடைமை என இரண்டாவது பெயரொடு தொடர்ந்தவழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச்செயப்படுபொருளும் பற்றியே நிற்கு மென்பார், எவ்வழி வரினுமென்று யாப்புறுத்தார். இயற்றப்படுவதும், வேறுபடுக்கப்படுவதும், எய்தப்படுவது மெனச் செயப்படுபொருள் மூன்றாம். இயற்றுதலாவது முன்னில்லதனை யுண்டாக்குதல். வேறுபடுத்தலாவது முன்னுள்ளதனைத் திரித்தல். எய்தப் படுதலாவது இயற்றுதலும் வேறுபடுத்தலு மின்றித் தொழிற்பயனுறுந் துணையாய் நிற்றல். (10) செயப்படுபொருளின் வாய்பாடுகள் அப்பொருளின் பாகுபாடுகள் 72. காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஓப்பின் புகழின் பழியின் என்றா பெறலின் இழவின் காதலின் வெகுளியின் செறலின் உவத்தலின் கற்பின் என்றா அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின் நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா அன்ன பிறவும் அம்முதற் பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனார். செயப்படுபொருள் மூன்றனையும் பற்றி வரும் வாய்பாடுகளை விரிக்கின்றார். (இ-ள்) காப்பு முதலாகச் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபத் தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம்முதற்பொருள் மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப் பால என்று சொல்லுவர் புலவர் எ-று. என்றா வென்பது எண்ணிடைச் சொல். இன்னெல்லாம் புணரியனிலையிடைப் பொருணிலைக்குதவாது (சொல். 250) எண்ணின்கண் வந்தன. முன்னர் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். ‘அம்முதல்’ என்றது கூறப்பட்ட செயப்படுபொருள் என்றவாறு. (எ-டு) எயிலை யிழைத்தான் என்பது இயற்றப்படுவது, கிளியை யோப்பும், பொருளை யிழக்கும், நாணை யறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை யாக்கும், நாட்டைச் சிதைக்கும் என்பன வேறுபடுக்கப்படுவன. குறைத்தல், சுருக்கு தலும் சிறிதிழக்கச் சிதைத்தலுமாம். அறுத்தல், சிறிதும் இழவாமல் சினையையாயினும் முதலையாயினும் இருகூறு செய்தல். ஊரைக் காக்கும், தந்தையை யொக்கும், தேரை யூரும், குரிசிலைப் புகழும், நாட்டைப் பழிக்கும், புதல்வரைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை யுவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை யளக்கும், அடைக்காயை யெண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கணையை நோக்கும், கள்வரை யஞ்சும் என்பன எய்தப்படுவன. வெகுளலுஞ் செறலும் கொலைப்பொருளவாயவழி, வேறுபடுக்கப்படுவனவாம். செறல் வெகுளியது காரியம். இயற்றப்படுவது ஒருதன்மைத்தாகலின், அதற்கொரு வாய்பாடே கூறினார். ஏனைய பல விலக்கணத்த வாகலின் பலவாய்பாட்டான் விரித்துக் கூறினார். அன்னபிறவு மென்றதனான், பகைவரைப் பணித்தான், சோற்றை யட்டான், குழையை யுடையான், பொருளை யிலன் என்னுந் தொடக்கத் தன கொள்க. காப்பு முதலாயின பொருள்பற்றி யோதப்பட்டமையான், ஊரைப் புரக்கும் ஊரையளிக்கும் தந்தையை நிகர்க்கும் தந்தையையொட்டும், தேரைச் செலுத்தும் தேரைக் கடாவும் என்பன போல்வன வெல்லாங் கொள்க. இயற்றப்படுதல் முதலாகிய வேறுபாடு குறிப்புவினைச் செயப்படு பொருட்கண் ஏற்பன கொள்க. (11) 4. மூன்றாம் வேற்றுமை ‘ஒடு’ உருபின் பொருள் 73. மூன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே. (இ-ள்.) மேல் ஒடுவெனப் பெயர்கொடுத் தோதிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலுங் கருவியுமாகிய இரண்டு முதலையும் பொருளாக வுடைத்து எ-று. மேல் ஐயொடு குவ்வென்றோதியவழி ஆனுருபுந் தழுவப்பட்ட மையான், ஈண்டும் அவ்வாறே கொள்ளப்படும்; படவே மூன்றாவதாதலும் வினைமுதல் கருவிப் பொருட்டாதலும் ஆனுருபிற்கு மெய்தும். வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழிற் படுத்துவது. கருவியாவது வினைமுதற் றொழிற்பயனைச் செயப்படு பொருட்க ணுய்ப்பது. அனை யென்பது அத்தன்மையவாகிய முதலென அவற்ற திலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. முதலென்பதற்கு மேலே யுரைத்தாம். (எ-டு.) கொடியொடு துவக்குண்டான், ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் எனவும், அகத்தியனான் தமிழுரைக்கப்பட்டது, வேலானெறிந்தான் எனவும் வரும். பிறபொருளு முளவேனும் வினைமுதல் கருவி சிறந்தமையான் ‘வினைமுதல் கருவி யனைமுதற்று’ என்றார். வினைமுதல் கருவிக்கண் ஒடுவெனுருபு இக்காலத் தருகியல்லது வாராது. (12) அப்பொருளின் வாய்பாடுகள் 74. அதனி னியறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனி னாதல் அதனின் கோடல் அதனொடு மயங்கல் அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை இன்னா னேது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். (எ-டு.) அதனின் இயறல்-மண்ணானியன்ற குடம் என்பது; மண் முதற்காரணம். முதற்காரணமாவது காரியத்தோ டொற்றுமை யுடையது. அதன் தகு கிளவி - வாயாற்றக்கது வாய்ச்சி, அறிவானமைந்த சான்றோர் என்பன. இவை கருவிப்பாற்படும். அதன் வினைப்படுதல்-சாத்தனான் முடியுமிக் கருமம் என்பது. இது வினைமுதற்பாற்படும். அதனின் ஆதல்-வாணிகத்தானாயினான் என்பது. அதனின் கோடல் - காணத்தாற் கொண்ட வரிசி என்பது. இவையுங் கருவிப்பாற்பாடும். இவையைந்து பொருளும் ஒடுவுருபிற்குஞ் சிறுபான்மை யுரியவாயினும், பெரும்பான்மை பற்றி ஆனுருபிற்கே யுரிய போலக் கூறினார். அதனொடு மயங்கல்-எண்ணொடு விராய வரிசி என்பது. அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி-ஆசிரிய னொடு வந்த மாணாக்கன் என்பது. வருதற்றொழில் இருவர்க்கு மொத்த லின், ஒருவினைக் கிளவியாயிற்று. அதனோடு இயைந்த வேறு வினைக் கிளவி-மலையொடு பொருத மால்யானை என்பது. பொருதல் யானைக் கல்ல தின்மையின் வேறுவினைக் கிளவியாயிற்று. அதனோடு இயைந்த ஒப்பல் ஒப்புரை - பொன்னோடிரும்பனையர் நின்னொடு பிறரே என்பது. ஒப்பல்லதனை யொப்பாகக் கூறலின் ஒப்பலொப்புரை யாயிற்று. இம் மூன்றற்கும் உடனிகழ்தல் பொது வென்பதூஉம், அவை ஒடுவெனு ருபிற்கே யுரிய வென்பதூஉ முணர்த்திய, அதனோடியைதல் மூன்றற்குங் கூறினார். அதனொடு மயங்கற்கும் ஈதொக்கும். எல்லாப் பொருட்கண்ணும் அது வென்றது உருபேற்கும் பெயர்ப்பொருளை. ‘அதற்கு வினையுடைமை யின்’ (சொல். 76) என்பதற்கும் ஈதொக்கும். இன்னானேது என்பது முயற்சியிற் பிறத்தலா னொலி நிலையாது என்பது. அதனினாதலெனக் காரக ஏது முற் கூறப்பட்டமையான், இது ஞாபக ஏதுவாம். இப் பொருள் ஆனுருபிற்கும் இன்னுருபிற்கு முரித்தென்பது விளக்கிய ஏது என்னாது ‘இன்னானேது’ என்றார். இன்னானென்பது உம்மைத்தொகை; அவற்றதேதுப் பொருண்மை எ-று. என வென்பதனை மாற்றி ஏது வென்பதன் பின் கொடுத்து,’ஏதுஎன ஈங்கு வரூஉ மன்ன பிறவு’ மென வியைக்க. ஈங்கனமென்று பாட மோதுவாரு முளர். அதனினியற லென்பதற்குத் தச்சன் செய்த சிறுமாவைய மென்றும், இன்னானென்பதற்குக் கண்ணாற் கொத்தை காலான் முடவனென்றும், உதாரணங்காட்டினாரால் உரையாசிரியரெனின், அற்றன்று. தச்சன் செய்த சிறுமா வைய மென்பது ‘வினைமுதல் கருவி யனைமுதற்று’ (சொல். 73) என்புழி யடங்குதலான் ஈண்டுப் பாற்படுக்க வேண்டாமை யானும், சினை விகாரத்தை முதன்மேலேற்றிக் கூறும் பொருண்மை இன்னா னென்பதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமையாகற்பால வெனின், அற்றன்று. வேற்றுமை மயக்கமாவது ஒரு வேற்றுமையது ஒரு பொருட் கண்ணாக, சில பொருட் கண்ணாக ஏனை வேற்றுமையுஞ் சேறலன்றே? அவ்வாறன்றிச் சிறிதொழித்து எல்லாப் பொருட்கண்ணும் இரண்டுருபுஞ் சேறலானும், வடநூலுள் பொருள் வேற்றுமையானல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையாக ஓதப்படாமையானும், ஈண்டும் எல்லா வாசிரியரும் ஒரு வேற்றுமையாகவே யோதினாரென்க. வட நூலொடு மாறுகொள்ளாமைக் கூறல் ஆசிரியருக்கு மேற்கோளாயின், விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற்பாலராவர்; அவ்வாறடக்கலிலரெனின், அற்றன்று. விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததன்று; ‘‘ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்’’ என்பவாகலின் ஐந்திரநூலார் விளி வேற்றுமையை எட்டாம் வேற்றுமை யாக நேர்ந்தாரென்பது பெறப்படும்; ஆசிரியர் அவர்மதம் பற்றிக் கூறினா ராகலின் அதனொடு மாறுகொள்ளா தென்பது. இக்கருத்து விளக்கிய வன்றே, பாயிரத்துள் ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனக் கூறிற் றென்க. அன்னபிறவு மென்றதனான், கண்ணாற்கொத்தை, தூங்கு கையா னோங்கு நடைய (புறம். 22), மதியோடொக்குமுகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது என்பன போல்வன கொள்க. (13) 5. நான்காம் வேற்றுமை ‘கு’ உருபின் பொருள் 75. நான்கா குவதே குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினும் கொள்ளும் அதுவே. (இ-ள்.) மேல் கு எனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை யேற்று நிற்கும் எ-று. (எ-டு.) அந்தணற் காவைக் கொடுத்தான் என வரும். மாணாக்கற்கு நூற்பொருளுரைத்தான் எனக் கொடைப் பொருள வாகிய சொல்லானன்றிப் பிற வாய்பட்டாற் கூறப்படுவனவும், மாணாக்கற்கு அறிவு கொடுத்தானெனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண் செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளுமெல்லா மடங்குதற்கு ‘எப்பொரு ளாயினும்’ என்றார். பிறபொருளு முளவாயினும், கோடற்பொருள் சிறந்தமையின், ‘எப்பொருளாயினுங் கொள்ளு’ மென்றார். (14) அப்பொருளின் வாய்பாடுகள் 76. அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதன்பொருட் டாதலின் நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று அப்பொருட் கிளவியும் அதன்பால என்மனார். (எ-டு.) அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு வேலி என்பது. வினை-ஈண்டுபகாரம். அதற்குடம்படுதல் - சாத்தற்கு மகளுடம்பட்டார் என்பது. சான்றோர் கொலைக்குடம்பட்டார் என்பதுமது. அதற்குப் படு பொருளா வது பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒரு பங்கிற்படும் பொருள்; அது சாத்தற்குக் கூறு கொற்றன் என்பது. அதுவாகு கிளவி - கடிசூத்திரத்திற்குப் பொன் என்பது. பொன் கடிசூத்திரமாய்த் திரியுமாகலின் அதுவாகு கிளவி யென்றார். கிளவி - பொருள். அதற்கு யாப்புடைமை-கைக்கு யாப்புடையது கடகம் என்பது. அதற்பொருட்டாதல் - கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது. நட்பு - அவற்கு நட்டான், அவற்குத் தமன் என்பன. பகை-அவற்குப் பகை, அவற்கு மாற்றான் என்பன. காதல் - நட்டார்க்குக் காதலன், புதல்வற் கன்புறும் என்பன. சிறப்பு - வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன. அப்பொருளென்றது அன்னபொருளை; இவ்வாடையு மந்நூலானி யன்ற தென்றதுபோல. எனவே, அன்னபிறவு மென்றவாறாம். அப்பொருட்கிளவியு மென்றதனான், பிணிக்கு மருந்து, நட்டார்க் குத் தோற்கும், அவற்குத் தக்காளிவள், உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் என்பன போல்வன வெல்லாங் கொள்க. (15) 6. ஐந்தாம் வேற்றுமை ‘இன்’ உருபின் பொருள் 77. ஐந்தா குவதே இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே. (இ-ள்.) மேல் இன்னெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம். அஃது இப்பொருளி னித்தன்மைத்து இப்பொரு ளென்னும் பொருண்மையை உணர்த்தும் எ-று. ஐந்தாவது நான்கு பொருண்மையுடைத்து; பொருவும், எல்லையும், நீக்கமும், ஏதுவுமென. அவற்றுட் பொரு இருவகைப்படும்; உறழ் பொருவும், உவமப் பொருவுமென. ஏதுவும் இருவகைப்படும்; ஞாபக ஏதுவும், காரக ஏதுவுமென. அவற்றுள் ஞாபகவேதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரக ஏதுப் பொருண்மை அச்சமாக்க மென்பனவற்றாற் பெறப்படும். நீக்கப்பொருண்மை தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றான் பெறப்படும். ஏனை யிரண்டும் இதனி னிற்றிது என்பதனாற் கொள்ளப் படும், அவ்விரண்டனையும் அஃதிருமுறையா னுணர்த்துமாகலான். எல்லைப் பொருள் - கருவூரின் கிழக்கு, இதனினூங்கு என வரும். கிழக்கு ஊங்கு என்பன, வினைக்குறிப் பல்லவேனும் இற்றென்னும் பொருள்பட நிற்றலின், இற் றென்றலேயாம். பொரூஉப் பொருட் குதாரணம் முன்னர்ப் பெறப்படும். (16) அப்பொருளின் பாகுபாடுகள் 78. வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்த லிழித்தல் புதுமை பழமை ஆக்க மென்றா இன்மை யுடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென்று அன்ன பிறவும் அதன்பால என்மனார். (இ-ள்) வண்ணமுதலாகப் பற்றுவிடுதலீறாகச் சொல்லப்பட்டனவும் அவைபோல்வன பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தனவாம் எ-று. வண்ணம் வெண்மை கருமை முதலாயின. வடிவு வட்டஞ் சதுர முதலாயின. அளவு நெடுமை குறுமை முதலாயின. சுவை கைப்புப் புளிப்பு முதலாயின. நாற்றம் நறுநாற்றந் தீநாற்றம் என்பன. (எ-டு.) காக்கையிற்கரிது களம்பழம், இதனின் வட்டமிது, இதனி னெடிதிது, இதனிற் றீவிதிது, இதனிற் றண்ணிதிது, இதனின் வெய்திது, இதனி னன்றிது, இதனிற் றீதிது, இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனி னிளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவனி னிலனிவன், இவனி னுடையனிவன், இதனி னாறுமிது, இதனிற் பல விவை, இதனிற் சிலவிவை எனவும்; அச்சம் கள்ளரி னஞ்சும் எனவும், ஆக்கம் - வாணிகத்தினாயினான் எனவும், தீர்தல்-ஊரிற் றீர்ந்தான் எனவும், பற்றுவிடுதல் - காமத்திற் பற்றுவிட்டான் எனவும் வரும். அச்சமுதலிய நான்கு மொழித்து ஒழிந்த இருபத்து நான்கும் ஒத்த பண்பு வேறுபாடு பற்றிப் பொரூஉப்பொருள் விரித்தவாறு. அன்னபிறவுமென்றதனான், அவனி னளிய னிவன், அதனிற் சேய்த்திது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான் என்பன போல்வன கொள்க. பல வாய்பாட்டொடு வழக்கின்கட் பயின்று வருதலுடைமையாற் பொரூஉப் பொருள் இதற்குச் சிறப்புடைத்தாகலின், பெரும்பான்மையும் அதனையே விரித்தார். (17) 7. ஆறாம் வேற்றுமை ‘அது’ உருபின் பொருள் 79. ஆறா குவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. (இ-ள்.) அதுவெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஆறாவதாம். அது உடையதாய் நிற்குந் தன்னானும் பிறிதொன் றானும் இதனதிதுவென்பதுபட நிற்குங் கிளவியிற் றோன்றுங் கிழமையைப் பொருளாக வுடைத்து எ-று. எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின்கிழமையுமென இரண்டென்றுங் கூறியவாறாம். தன்னென்றது தன்னோ டொற்றுமையுடைய பொருளை; பிறிதென் றது தன்னின் வேறாகிய பொருளை. அஃதேல், தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்தென்னாது இதனதிது வெனு மன்ன கிளவிக் கிழமைத்தென்ற தென்னையெனின்:- பொருட் கிழமையும், பண்புக்கிழமையும், தொழிற்கிழமையும் அவை போல்வனவுமெனக் கிழமைதாம் பல, அவற்றுளொன்று சுட்டாது இதனதிது வென்னுஞ் சொல்லாற் றோன்றும் கிழமைமாத்திரம் சுட்டுமென் றற்கு ‘இதனதிது வெனுமன்ன கிளவிக் கிழமைத்து’ என்றார். இதன விவையென்னும் பன்மையுருபுத் தொடரு மடங்குதற்கு ‘அன்ன கிளவி’ யென்றார். ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறு பல குழீஇய தற்கிழமையும் ஒன்றியற்கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாய தற்கிழமையு மெனத் தற்கிழமை ஐந்து வகைப்படும். பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையு மெனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். அவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (18) கிழமைப்பொருளது விரி 80. இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினையி னென்றா கருவியின் துணையின் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். (இ-ள்.) இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாகச் சொல்லப்பட்டனவும் திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமாகிய மேற்கூறப்பட்ட கிழமைப் பொருட் கண் தோன்றுஞ் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைத் திறத்தனவென்று சொல்லுவர் புலவர் எ-று. திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவுமென்றாரேனும், திரிந்து வேறு படுதல் அன்ன பிறவுமென்றதனான் தழுவப்படுவனவற்றுள் ஒரு சாரன வற்றிற்கே கொள்க. (எ-டு.) எள்ளது குப்பை, படையது குழாம் என்பன குழூஉக் கிழமை; அவை முறையானே ஒன்று பல குழீஇயதும் வேறு பல குழீஇயதுமாம். சாத்தனதியற்கை, நிலத்ததகலம் என்பன இயற்கைக்கிழமை. சாத்தனது நிலைமை, சாத்தனதில்லாமை என்பன நிலைக்கிழமை. இவை யொன்றியற் கிழமை. யானையதுகோடு, புலியதுகிர் என்பன உறுப்பின்கிழமை; உறுப்பாவது பொருளின் ஏகதேச மென்ப தறிவித்தற்கு ஒருவழி யுறுப் பென்றார். சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு என்பன செயற்கைக் கிழமை. அரசனது முதுமை, அரசனது முதிர்வு என்பன முதுமைக்கிழமை; முதுமை யென்பது பிறிதொரு காரணம் பற்றாது காலம் பற்றி ஒருதலையாக அப்பொருட்கட் டோன்றும் பருவமாகலின் செயற்கையு ளடக்காது வேறு கூறினார். சாத்தனது தொழில், சாத்தனது செலவு என்பன வினைக்கிழமை. இவை மெய்திரிந்தாய தற்கிழமை. சாத்தனது உடைமை, சாத்தனது தோட்டம் என்பன உடைமைக்கிழமை. மறியது தாய், மறியது தந்தை என்பன முறைமைக்கிழமை. இசையது கருவி, வனைகலத்தது திகிரி என்பன கருவிக்கிழமை. அவனது துணை, அவனதிணங்கு என்பன துணைக்கிழமை. நிலத்ததொற்றிக்கலம், சாத்தனது விலைத்தீட்டு என்பன கலக்கிழமை. ஒற்றியது முதல், ஒற்றியது பொருள் என்பன முதற்கிழமை. கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல் என்பன செய்யுட்கிழமை; தெரிந்து மொழியாற் செய்யப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தியாயின. இவை பொருட்பிறிதின்கிழமை. முருகனது குறிஞ்சி நிலம், வெள்ளிய தாட்சி என்பன கிழமைக் கிழமை. காட்டதியானை, யானையது காடு என்பன வாழ்ச்சிக்கிழமை. அவற்றுள் முருகனது குறிஞ்சிநிலம், யானையது காடு என்பன நிலப்பிறிதின்கிழமை. காட்டதி யானை என்பது பொருட்பிறிதின் கிழமை. ஏனையது காலப்பிறிதின் கிழமை. திரிந்து வேறுபடூஉ மன்ன பிறவு மென்றதனான், எட்சாந்து, கோட்டு நூறு; சாத்தனதொப்பு, தொகையதுவிரி, பொருளது கேடு, சொல்லது பொருள் என்னுந் தொடக்கத்தன கொள்க. அவற்றுள் எட்சாந்து, கோட்டு நூறு என்பன முதலாயின முழுவதூஉந் திரிதலின், வேறு கூறினார். மேற்சொல்லப்பட்ட தற்கிழமை பிறிதின்கிழமை யென்பனவற்றை விரித்தவாறு. (19) 8. ஏழாம் வேற்றுமை ‘கண்’ உருபின் பொருள் 81. ஏழா குவதே கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. (இ-ள்.) கண்ணெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஏழாவதாம். அது வினைசெய்யா நிற்றலாகிய இடத்தின்கண்ணும், நிலமாகிய இடத்தின்கண்ணும், காலமாகிய இடத்தின் கண்ணுமென அம்மூவகைக் குறிப்பின்கண்ணுந் தோன்றும் எ-று. எனவே, ஏழாவது இடப்பொருண்மைத் தென்றவாறாம். குறிப்பின் தோன்றுமது என்றது அவற்றை யிடமாகக் குறித்தவழி அவ்வேற்றுமை தோன்றுமென்றவாறு. எனவே, இடமாகக் குறிக்கப்படாதவழி அப்பெயர்க்கண் வேற்றுமை தோன்றா தென்பதாம். தன்னின முடித்த லென்பதனான் ஏனை வேற்றுமைச் சொற்களும் அவ்வப்பொருட்கண் குறிப்பில்வழி அவ்வப்பெயர்க்கண் வாராமை கொள்க. (எ-டு.) தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கணிருந்தான், கூதிர்க்கண் வந்தான் என வரும். (20) இடப்பொருண்மை விரி 82. கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். (இ-ள்.) கண் முதலாக இடமீறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பது பொருளும் அவைபோல்வன பிறவும் ஏழாவதன் றிறத்தன எ-று. கண்ணென்னும் பொருளாவது ‘கண்ணின்று கூறுதலாற்றானவ னாயின்’ (கலி. 37) எனவும், ‘கண்ணகன் ஞாலம்’ எனவும், கண் ணென்னு மிடைச்சொல்லா னுணர்த்தப்படும் இடப்பொருண்மை. தேவகை யென்பது திசைக் கூறு. கண்கால் புறமகமுள்ளென்பன முதலா யினவற்றது பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. கண்ணின்று சொல்லியானை என் கண்ணின் றிவை சொல்லற் பாலையல்லை என்றும், ஊர்க்காற் செய்யை ஊர்க்கட்செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க்கண்மரம் என்றும், எயிலகத்துப் புக்கானை எயிற்கட்புக்கான் என்றும், இல்லுளிருந்தானை இற்கணிருந் தான் என்றும், அரசனுழை யிருந்தானை அரசன்கணிருந்தான் என்றும், ஆலின் கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கட்கிடந்தது என்றும், மரத்தின்மே லிருந்த குரங்கை மரத்தின்கணிருந்தது என்றும், ஏர்ப்பின்சென்றானை ஏர்க்கட் சென்றான் என்றும், காட்டுச்சாரோடுவதனைக் காட்டின்க ணோடும் என்றும், உறையூர்க்கயனின்ற சிராப்பள்ளிக் குன்றை உறையூர்க் கட்குன்று என்றும், எயிற்புடை நின்றாரை எயிற்கண் நின்றார் என்றும், வடபால் வேங்கடம் தென்பாற்குமரி என்பனவற்றை வடக்கண்வேங்கடம் தெற்கட்குமரி என்றும், புலிமுன்பட்டானைப் புலிக்கட்பட்டான் என்றும், நூலினிடையுங் கடையுந் தலையு நின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும், கைவலத்துள்ளதனைக் கைக்கணுள்ளது என்றும், தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது என்றும் அவ் விடப்பொருள்பற்றி ஏழாம்வேற்றுமை வந்தவாறு கண்டு கொள்க. எனாஅவென்பது எண்ணிடைச்சொல். கண்முதலாயினவெல்லாம் உருபென்றாரால் உரையாசிரிய ரெனின், உருபாயின், ஏழாவதற்குக் கண்ணென்பது உருபாதல் மேலே பெறப்பட்டமையாற் பெயர்த்துங் கண்காலென்றல் கூறியது கூறிற்றாமாக லானும், ஊர்ப்புறத்திருந்தான், ஊரகத்திருந்தான், கைவலத்துள்ளது கொடுக்கும் எனப் புறம் அகம் வலமென்பனவற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணங் காட்டினமையானும், அவர்க்கது கருத்தன்றென்க. உருபல்லவேல், என்னுழை, என்முன் என நிலைமொழி உருபிற்கோதிய செய்கை பெற்றவாறென்னை யெனின்:- ‘அதற் பொருட்டாகலின்’ (சொல். 76) எனவும், ‘தம்முடைய தண்ணளியுந் தாமும்’ எனவும் உருபின் பொருள் பட வரும் பிறமொழி வந்துழியும் நிலைமொழி அச் செய்கை பெற்று நிற்ற லின், அச் செய்கை உருபுபுணர்ச்சிக்கே யென்னும் யாப்புறவின் றென்க. அன்னபிறவு மென்றதனான், பொருட்கண் உணர்வு, என்கண் அன்புடையன், மலர்க்கண் நாற்றம், ஆகாயத்துக்கட் பருந்து என்னுந் தொடக்கத்தன கொள்க. (21) 9. வேற்றுமையின் தொகைவிரி இயல்பு வேற்றுமைத் தொகையை விரிக்குமாறு 83. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய வென்ப: (இ-ள்.) வேற்றுமைத்தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையே யன்றி, அன்மொழித்தொகையை விரிப்புழிப் பல்லாற்றான் அன்மொழிப் பொருளொடு புணர்ந்து வரும் எல்லாச் சொல்லும் விரிக்கப்படும் எ-று. உருபுதொகப் பொருள் நிற்றலின், வேற்றுமைத்தொகையை வேற்றுமைப் பொருளென்றார். தொகையை வேற்றுமைப் பொரு ளென்றும் பொருளென்றும் யாண்டுமாள்ப. அன்மொழித்தொகை பண்புத்தொகை முதலாகிய தொகை இறுதி நின்றியறலின், ‘ஈற்றுநின் றியலுந்தொகை’ யென்றார். தாழ்குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகளை விரிப்புழி, தாழ்குழலை யுடையாள், பொற்றொடியை யணிந் தாள், மண்ணாகிய காரணத்தா னியன்றது என வரும் உடைமையும், அணிதலும், இயறலும், கருங்குழற் பேதை. பொற்றொடியரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகையை விரிப்புழியும் கருங் குழலையுடைய பேதை, பொற்றொடியை யணிந்த அரிவை, மண்ணானியன்ற குடம் என வந்தவாறு கண்டுகொள்க. பொருள் புணர்ந்திசைக்கு மெனவே, இருதொகைக் கண்ணும் ஒரு வாய்பாட்டா னன்றிப் பொருள் சிதையாம லுணர்த்துதற்கேற்ற வாய்பா டெல்லாவற்றானும் வருமென்பதாம். அவ்வாறாதல் மேற்காட்டப்பட்டன வற்றுள் கண்டுகொள்க. அன்மொழித் தொகையிற் சொற்பெய்து விரித்தல் யாண்டுப் பெற்றாமெனின், அதுவும் அநுவாதமுகத்தான் ஈண்டே பெற்றாமென்க. பெறவே, இரண்டு தொகையும் விரிப்புழி வரும் வேறுபாடு கூறியவாறாம். இதனை ‘வேற்றுமைத் தொகையே யுவமைத்தொகையே’ (சொல். 412) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின், அதுவு முறையாயினும், இனி வருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத் தொகை விரிபற்றிய மயக்க முணர்த்துதலான், ஆண்டுப்படு முறைமையுணர்த்துதல் ஈண்டு மியை புடைத் தென்க. உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து, ஆசிரியர் மத விகற்பங்கூறித் தம்மத மிது வென்பது போதர ஒன்றாக வுரைப்பாரு முளரென்றார். இரண்டாய் ஒன்றாயவழிப் பிறிதுரையின்மையின், உரையாசிரியர் கருத்து இதுவேயாம். (22) வேற்றுமையியல் முற்றிற்று. 3 வேற்றுமை மயங்கியல் (வேற்றுமையுருபுகள் தம்முள் மயங்கிப் பொருள் வேறுபாடு கொள்ளும் இயல்புணர்த்துவது) 1. வேற்றுமையுருபுகள் மயங்குதல் சார்பு பொருளில் ஏழனுருபு 84. கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. மேற்கூறப்பட்ட வேற்றுமை தம்முள் மயங்குமா றுணர்த்திய எடுத்துக்கொண்டார். அம்மயக்கம் இருவகைப்படும், பொருள் மயக்கமும் உருபு மயக்கமுமென. பொருள் மயக்கமாவது தன் பொருளில் தீராது பிறிதொன்றன் பொருட்கண் சேறல். உருபுமயக்கமாவது தன் பொருளிற் றீர்ந்து சேறல். ‘யாத னுருபிற் கூறிற் றாயினும்’ (சொல். 106) என்பதனான் உருபு மயக்கமுணர்த்தினார்; அல்லனவற்றா னெல்லாம் பொருண் மயக்க முணர்த்தினார். இவ்விருவகை மயக்கமு முணர்த்துதலான், இவ்வோத்து வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மயக்கமே யன்றி வேற்றுமைக்கோதிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழீஇ யமைவனவும் பிறவும் இயைபுடையன ஈண்டுணர்த்துதலான், இக்குறி பன்மை நோக்கிச் சென்ற குறியென வுணர்க. (இ-ள்.) இரண்டாவதற் கோதப்பட்ட சார்பு பொருண்மை கருமச் சார்புங் கருமமல்லாச் சார்புமென இரண்டு வகைப்படும். அவற்றுள், கருமச்சார்பு தூணைச் சார்ந்தான் என ஒன்றனையொன்று மெய்யுறுத லாம். கருமமல்லாச் சார்பு மெய்யுறுதலின்றி அரசரைச் சார்ந்தான் என வருவதாம். கருமமல்லாத சார்பு பொருண்மைக்கு உரித்தாய் வருதலு முடைத்து ஏழாவது எ-று. (எ-டு.) அரசர்கட் சார்ந்தான் என வரும். கருமமாவது ஈண்டு மெய்யுறுதலாதலின், அரசர்கட் சார்ந்தான் என்புழி உறுதலின்மையின், சார்பாமாறென்னை யெனின், தூண் பற்றாக ஒரு சாத்தன் சார்ந்தாற்போல அரசர் பற்றாக அச் சார்ந்தானொழுகுதலின் சார்பாயிற் றென்பது. உம்மை எதிர்மறை. தூணின்கட் சார்ந்தான் எனக் கருமச்சார்ச்சிக்கண் ஏழாவது சென்றாற் படுமிழுக்கென்னையெனின், அன்னதொரு வழக்கின்மையே அன்றிப் பிறிதில்லை யென்க. இக்காலத்து அவ்வாறு வழங்குபவாலெனின், கருமமல்லாச் சார்ச்சிக்கண் வருமுருபைச் சார்தலொப்புமையாற் கருமச் சார்ச்சிக்கண்ணுங் கொடுத்து உலகத்தார் இடைத்தெரிவின்றி வழங்கு கின்றா ரெனவேபடும்; ஆசிரியர் ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ யென விதந்து கூறினமையா னென்பது. (1) சினைப்பெயரில் மயங்கும் உருபுகள் 85. சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும் வினைநிலை யொக்கும் என்மனார் புலவர். (இ-ள்.) சினைமேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் எனவரும். வினைக்குறிப்பை நீக்குதற்கு வினையென்றார். வினைநிலையொக்கு மென்றாரேனும், புகழ்தல் பழித்த லென்னுந் தொடக்கத்தன வொழித்து மயங்குதற்கேற்கும் அறுத்தல் குறைத்தல் முதலாயின வினையே கொள்ளப்படும். இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது சென்றதாயினும், சிறுவர விற்றன்றி இரண்டாவதுபோல ஏழாவது வழக்கின்கட் பயின்று வருதலின், ஒக்கு மென்றார்; அது காரணத்தான், கருமமல்லாச் சார்ச்சிக்கும் சினைக் கிளவிக்கும் ஏழாவது உரிமையுடைத்தென உடன்கூறாது, வேறு கூறினா ரென்பது. (2) கன்றல் செல்லுதல் பொருளில் மயங்குவன 86. கன்றலுஞ் செலவும் ஒன்றுமார் வினையே. (இ-ள்.) கன்றல் பொருண்மேல் வருஞ் சொல்லும் செலவு பொருண் மேல் வருஞ் சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில எ-று. (எ-டு.) சூதினைக்கன்றினான், சூதின்கட்கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கட்சென்றான் என வரும். பொருள்பற்றி யோதினமையான், சூதினையிவறினான், சூதின்கணி வறினான்; நெறியை நடந்தான், நெறிக்கணடந்தான் என வருவனவுங் கொள்க. இரண்டாவதற்கு இப்பொருள் மேலே கூறப்பட்டமையான், கன்றல் செலவென்னும் பொருட்கு ஏழாவது முரித்தென்றோத அமையுமெனின், அங்ஙனமோதின் ஏழாவதன் வரவு சிறுபான்மை யென்பதுபடும்; ஆகலின் உடனோதினாரென்பது. சினைநிலைக்கிளவி நிலைமொழிவரையறை யாகலானும், இது வருமொழிவரையறை யாகலானும், வேறு கூறினா ரென்பது. (3) முதற்பெயர் சினைப்பெயர்களில் மயங்குவன 87. முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. (இ-ள்.) முதற் சொல்லொடு தொடர்ந்த சினைச்சொல்லிற்கு ஆறாம் வேற்றுமை முதற்கண் வருமாயின், சினைச்சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும் எ-று. (எ-டு.) யானையது கோட்டைக் குறைத்தான் என வரும். ‘சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்’ (சொல். 85) என்றதனான் முதற்சினைக் கிளவிக்கு இரண்டு வேற்றுமையு மெய்துவதனை நியமித்த வாறு. இது வருஞ் சூத்திரத்திற்கு மொக்கும். (4) 88. முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. (இ-ள்.) அம் முதற்சினைக் கிளவிக்கண், முதற்சொல் முன் ஐகார வேற்றுமை வரின், சினைச்சொல்முன் கண்ணென்னும் வேற்றுமை வருதல் தெள்ளிது எ-று. (எ-டு.) யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும். ‘தெள்ளிது’ என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான் எனச் சிறுபான்மை ஐகார வேற்றுமையும் வருமென்பதாம். சினைக்கிளவிக்கண் மயக்க முணர்த்துகின்ற சூத்திரத்திடைக் ‘கன்றலுஞ் செலவும்’ என்னுஞ் சூத்திரம் வைத்ததென்னை யெனின், ஐயுங் கண்ணுமென்பது அதிகாரத்தான் வரச் சூத்திரஞ் சுருங்குமாகலின், ‘சினை நிலைக் கிளவிக்கு’ என்னுஞ் சூத்திரத்தின் பின் அதனை வைத்தா ரென்பது. (5) 89. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. (இ-ள்.) முதலுஞ் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையேயாய்த் தம்முள் வேறு பொருளாகா; சொல்லுங்கால், சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினான் முதலென்றுஞ் சினையென்றும் வழங்கப்படும் எ-று. ‘சொற்குறிப்பின’ வென்றது, முதலெனப்பட்டதுதானே தன்னைப் பிறி தொன்றற்கு ஏகதேசமாகக் குறித்தவழிச் சினையுமாம்; சினையெனப் பட்டதுதானே தன்கண் ஏகதேசத்தை நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாம் எ-று. கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் என முதற்கோதப்பட்ட உருபு சினைக்கண்ணும் வந்ததாலென்று ஐயுற்றார்க்கு, கருத்து வகையாற் கோடென்பது ஆண்டு முதலாய் நிற்றலின், முதலிற்கு ஓதிய உருபே முதற்கண் வந்ததென ஐய மகற்றியவாறு. (6) பிண்டப்பெயரும் அவ்வியல்பிற்று ஆதல் 90. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. (இ-ள்.) பிண்டத்தை யுணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயரியல் பிற்றிரியா; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் மேற்றொட்டு வழங்கி வாராநின்ற கூற்றான் மருவிய முறை எ-று. பிண்டம் பலபொருட்டொகுதி. ஈண்டு ‘ஆயியல் திரியா’ வென மாட்டெறிந்தது, முதற்சினைக் கிளவிக்குப் போலப் பிண்டப் பெயர்க்கும் முதற்கண் ஆறாவது வரின் சினைக்கு இரண்டாவது வருதலும், முதற்கு இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதலும், சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம். (எ-டு.) குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கட் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும். பிண்டமும் முதலுஞ் சினையுமேயாகலின் வேறு கூறல் வேண்டா எனின், குப்பை யென்புழி, தொக்க பல பொருளல்லது, அவற்றின் வேறாய் அவற்றானியன்று தானொன் றெனப்படும் பொருளின்மையின், தொல் லாசிரியர் அதனை முதலென்று வேண்டார்; அதனான் வேறு கூறினா ரென்பது. படை காடு கா முதலாயினவுமன்ன. (7) உயர் பெயர்வழி ஒடுஉருபு வருதல் 91. ஒருவினை யொடுச்சொல் உயர்பின் வழித்தே. (இ-ள்.) அதனோடியைந்த ஒருவினைக் கிளவியென மூன்றாவதற் கோதிய ஒருவினை யொடுச்சொல் உயர்பொருளை யுணர்த்தும் பெயர்வழித் தோன்றும் எ-று. (எ-டு.) அரசனோடிளையர் வந்தார், ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் என வரும். உயர்பொருட் பெயர்வழி ஒடுக்கொடுக்க எனவே, உயர்பில்வழிச் சாத்தனுங் கொற்றனும் வந்தார் என இரு பெயரும் எழுவாயாய் நிற்கு மென்பதாம். நாயொடு நம்பி வந்தான் என இழிபெயர்க்கண்ணும் ஒரு வினை யொடுச்சொல் வந்ததா லெனின், யாதானுமோ ராற்றான் அதற்குயர் புண்டாயி னல்லது அவ்வாறு கூறார்; கூறுபவாயின், அஃது ஒரு வினை யொடுச்சொ லெனப்படாது; கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்குண்டாக வந்தானெனப் பிறிது பொருள் படுவதோ ரொடு வுருபா மென்க. இதனை வேற்றுமையோத்தின்கண் ‘அதனினியறல்’ (சொல். 74) என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது ஈண்டுவைத்த தென்னையெனின், வேற்றுமையது பெயரும் முறையுந் தொகையும் பொதுவகையான் அவற்ற- திலக்கணமும் உணர்த்தியதல்லது, இன்ன வேற்றுமை இன்னபொருட்கண் இன்னவாறாமென்னும் விசேட இலக்கணம் அதிகாரம்பட்டின்றாகலான், ஆண்டு வையாது மூன்றாவது இப்பொருட்கண் இவ்வாறாமென விசேட விலக்கணம் ‘மூன்றனு மைந்தனும்’ (சொல். 92) எனக் கூறுகின்றாராகலின், அதனோடியைய ஈண்டு வைத்தார்; இதுவும் ஒரு பொருள் பற்றி யோதுகின்ற விசேட இலக்கணமாகலானென்பது. (8) ஏதுப்பொருளில் வரும் உருபுகள் 92 மூன்றனும் ஐந்தனுந் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைய என்மனார் புலவர். (இ-ள்.) மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக் கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல் அவ்வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒரு தன்மைய எ-று. (எ-டு.) வாணிகத்தானாயினான், வாணிகத்தானாய பொருள் எனவும், வாணிகத்தினாயினான், வாணிகத்தினாய பொருள் எனவும் வரும். வாணிகத்தான், வாணிகத்தின் என வுருபொடு தொடர்ந்து நின்ற சொல்லை ஏதுக்கிளவி யென்றார். ‘அதன்வினைப் படுத லதனி னாதல்’ (சொல். 74) என்றும் ‘புதுமை பழமையாக்கம்’ (சொல். 78) என்றும் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் ஏதுப் பொருள் மேற்கூறப்பட்டமையான் இச்சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று. பிரிநிலையேகார முதலாகிய இடைச்சொல்லும் ஒருசார் வினைச் சொல்லும் முன்னோதப்பட்டனவேனும், எச்சமாதலொப்புமை யான் எச்ச வாராய்ச்சிக்கண் அவைதம்மையே, ‘பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே’ (சொல். 430) எனப் பின்னுங் கூறினாற்போல, ஏதுப்பொருண்மை மூன்றாவதற்கும் ஐந்தா வதற்கும் மேற்கூறப்பட்டதாயினும் மயக்கமாதலொப்புமையான் மயக்க வாராய்ச்சிக்கண் ஈண்டுங் கூறினாராகலின், கூறியது கூறலென்னுங் குற்றமின் றென்பது. இஃது ‘அச்சக்கிளவி’ (சொல். 100) என்பதற்குமொக்கும். அஃதேல், மயக்கமாவது ஒரு வேற்றுமை பிறிதொன்றன் பொருட் கட் சேறலன்றே; ஏதுவின்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் தம் பொருளே பற்றி நிற்றலின் மயங்கின வெனப்படாவெனின், நன்று சொன்னாய்! ஏதுப் பொருண்மை தனக்குரியவாற்றான் அவற்றிற்குத் தன் பொருளாயினவாறு போலப் பிறிதொன்றற் குரியவாற்றாற் பிறிதொன்றன் பொருளாதலு முடைமையின், அம்முகத்தான் மயங்கிற்றெனவே படுமென்பது. அல்லதூஉம் ஒரு பொருட்கண் இரண்டுருபு சென்ற துணையான் மயக்கமாயிற் றெனினு மமையும். ‘ஆக்கமொடு புணர்ந்த ஏதுக்கிளவி’ யெனவே, ஆக்கமொடு புண ராது ஞாபகவேதுப் பொருண்மைக்கண் வரும் இன்னும் ஆனும் ஒத்த வர வினவல்ல என்பதாம். ஆண்டைந்தாவது பெருவரவிற்றெனக் கொள்க .(9) நோக்கப்பொருளில் மயங்குவன 93. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்அவ் இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும். (இ-ள்.) ‘நோக்கலி னஞ்சலின்’ (சொல். 72) என இரண்டாவதற் கோதிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும் நோக்கல் நோக்கமு மென இரண்டு வகைப்படும். நோக்கிய நோக்கம் கண்ணானோக்குதல். நோக்கல் நோக்கம் மனத்தானொன்றனை நோக்குதல். அந் நோக்கல் நோக்க மாகிய பொருள் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்குமுரிய ஏதுப் பொருண்மை யுமாம் எ-று. நோக்கல் நோக்கத்தான் நோக்கப்படும் பொருளை, நோக்கல் நோக்க மென்றார். நோக்கல் நோக்க மவ்விரண்டன் மருங்கின் ஏதுவுமாகுமெனவே, அவ்வேதுப் பொருண்மைக்குரிய இரண்டுருபும் அவ்வேதுப் பொருண் மையிற் றீராது இரண்டாவதன் பொருட்கண் வருமென்பதாம். ஓம்படைப் பொருட்கண் வருவனவற்றிற்கும் ஈதொக்கும். (எ-டு.) ‘வானோக்கி வாழு முயிரெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி’ (குறள். 542) என்புழி, வானை நோக்கி வாழும், கோலை நோக்கி வாழும் என இரண்டா வது வருதலேயன்றி, வானானோக்கி வாழும், வானினோக்கி வாழும், கோலா னோக்கி வாழும், கோலினோக்கி வாழும் என மூன்றாவதும் ஐந்தாவதும் வந்தவாறு கண்டுகொள்க. ஏதுவாயினவாறென்னை யெனின், உயிருங் குடியும் வானையுங் கோலையு நோக்குவது அவற்றானாய பயன்பற்றி அவற்றைத் தாமின்றியமை யாமை யன்றே? அதனான் அவ்வாறு பயன்படுவன அவற்றதின்றியமை யாமைக்கு ஏதுவாதலு முடையவென்பது. அஃதேல், வானுங் கோலும் ஏதுவாயவழி நோக்கப்படுவன பிறவாவான் செல்லுமெனின், அற்றன்று. கண்ணுட் குத்தினான் என்றவழிக் கண்ணே செயப்படுபொரு ளாதலும் பெறப்பட்டாற்போல, வானானோக்கும், கோலானோக்கும் என்புழியும் அவைதாமே செயப்படுபொருளாதலும் பெறப்பட்டமையான், நோக்கப் படுவன பிறவாவான் செல்லாவென்பது. (10) உயர்திணை முறைப்பொருளில் நான்கனுருபு 94. அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் உருபுகெடக் குகரம் வருமே. (இ-ள்.) ஆறாம் வேற்றுமைப் பொருண்மேல் வரும் உயர்திணைத் தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னுமுருபு கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் எ-று. ஈண்டு அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபு ஆண்டு வாராமை. நம்பி மகன், நங்கை கணவன் என்னுந் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன், நங்கைக்குக் கணவன் என நான்கனுருபு வந்தவாறு கண்டுகொள்க. உயர்திணைத் தொகைவயி னதுவெனுருபு கெடக் குகரம் வருமென்ற தனான், ஆறனுருபு அஃறிணைப்பால்தோன்ற நிற்றல் பெற்றாம். உயர்திணைத் தொகைவயின் ஆறாவதனை விலக்கி நான்காவதே சேறலின், ‘இதன திதுவிற்று’ (சொல். 110) என்னுஞ் சூத்திரத்தாற் கூறப்படும் பொருளோடு உடன் வையாது இதனை வேறு கூறினார். (11) தடுமாறுபொருளில் மயங்கும் உருபுகள் 95. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. (இ-ள்.) தனக்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப் பெயரொடுஞ் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்றாவதுங் கடியப்படா, அவ்வேற்றுமை தொக அவற்றின் பொருள் நிற்குந் தொகையிடத்து எ-று. (எ-டு.) புலிகொன்ற யானை, புலிகொல் யானை என்புழிப் புலியைக் கொன்ற யானை எனவும், புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும், இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கியவாறு கண்டு கொள்க. கொன்ற, கொல்லென்பன வினைமுதற் பொருட்குரியவாகப் புலியென்பது செயப்படு பொருளாய வழியல்லது இரண்டாவது வாராமை யானும், அச்சொற்கள் செயப்படு பொருட்குரியவாகப் புலி வினை முதலாயவழியல்லது மூன்றாவது வாராமையானும், இவை ஒருபொருட் கண் வந்தன அன்மையின் மயக்கமாமாறென்னை யெனின், ஒரு பொருட் கண் வாராமையின் மயக்கமெனப்படாவாயினும், தடுமாறு தொழிற் றொகைக்கண் இரண்டும் வந்து நிற்றலின் மயக்கப்பாற்படு மென்பது. (12) வேற்றுமை தெரியுமாறு 96. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. (இ-ள்.) தடுமாறு தொழிலொடு புணர்ந்த பெயருள், இறுதிப் பெயர் முன்னர்ப் பொருள் வேறுபாடுணர்த்துஞ் சொல்வரின், அச் சொல்லான் அப் பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர் எ-று. (எ-டு.) புலிகொல்யானை யோடாநின்றது, புலிகொல் யானைக் கோடு வந்தன என வரும். பிறமயக்கம் போலாது ஈண்டுப் பொருள் வேறுபாடுணர்ந்தல்லது உருபு விரிக்கலாகாமையின், ‘மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப’ என்றார். முன் புலியைக் கொன்ற யானை, பின் பிறிதொன்றனான் இறந்துழியும் புலிகொல்யானைக்கோடு வந்தனவென்ப; அவ்வழிக் கொன்றது, கொல்லப்பட்டதென்னும் வேறுபாடு குறிப்பானுணரப்படு மென்பார் ‘உணருமோர்’ என்றார். பிறவுமன்ன. (13) பாதுகாத்தற்பொருளில் மயங்குவன 97. ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும் தாம்பிரி விலவே தொகைவரு காலை. (இ-ள்.) ஓம்படைப் பொருண்மைக்கு ஐகாரவுருபும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கவழி எ-று. ஓம்படுத்தல் - பாதுகாத்தல். (எ-டு.) புலிபோற்றிவா என்புழி, ஓம்படைக்கிளவி இரண்டாவதற் கோதிய காப்பின்கண் அடங்குதலின், புலியைப் போற்றி வாவென ஐகார வுருபும், புலி அவன் போற்றி வருதற்கு ஏதுவாதலுமுடைமையான் புலியாற் போற்றி வாவென ஆனுருபும், ஒத்தவுரிமையவாய் வந்தவாறு கண்டு கொள்க. புலியேதுவாதலு முடைத்தாயின்,’‘ இரண்டன் மருங்கி னோக்க னோக்கமு மோம்படைக் கிளவியு மேதுவு மாகும்’’ என வமையும் இச் சூத்திரம் வேண்டாவெனின், அங்ஙனமோதின் ஓம்படைப் பொருண்மைக்கு ஐந்தா முருபு மெய்தும்; அதனை விலக்குதற்கு ‘ஐயுமானுந் தாம் பிரிவில’ வென வேறு கூறினார். இவை பிரிவிலவெனவே, இன்னுருபு பிரிவுடைத் தாய், புலியிற் போற்றிவாவெனச் சிறுபான்மை வருமென்பதாம். இரண்டு வேற்றுமைக்கும் ஓம்படைப் பொருண்மை இச்சூத்திரத்தா னெய்துவித்தா ரெனினு மமையும். தாமென்பது செய்யுட் சுவைபட நின்றது. (14) வாழ்தற்பொருளில் மயங்கும் ஏழனுருபு 98. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழும் ஆகும் உறைநிலத் தான. (இ-ள்.) ஆறாம் வேற்றுமையின்கண் ஓதிய வாழ்ச்சிக்கிழமைக்கு உறைநிலத்தின்கண் ஏழாவதும் வரும் எ-று. (எ-டு.) காட்டியானை என்பது காட்டதியானையென விரிதலேயன்றிச் காட்டின்கண் யானையெனச் சிறுபான்மை ஏழாவது விரியினு மமையு மென்றவாறு. யானைக்காடு, நம்பியூர் என்பன வாழ்ச்சிக்கிழமைப் பொருள வாயினும், ஆண்டேழாவது மயங்காதென்றற்கு ‘உறை நிலத்தான’ வென்றார். எனவே, உறைநிலப் பெயர் பின்மொழியாயவழியது இம்மயக்க மென்பதாம். (15) கொடைப்பொருளில் மயங்கும் ஆறனுருபு 99. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும். (இ-ள்.) குவ்வென்னு முருபு தொகவருங் கொடையெதிர் கிளவி யாகிய தொகையினது கொடையெதிர்தலாகிய அப்பொருண்மை ஆறாம் வேற்றுமைக் குரித்துமாம் எ-று. (எ-டு.) நாகர்பலி என்பது நாகர்க்கு நேர்ந்த பலியென விரிதலேயன்றி நாகரது பலியென விரியினு மமையு மென்றவாறு. கொடையெதிர் கிளவி யென்பதற்குத் தருசொல் வருசொற்குரைத்த துரைக்க. கொடை யெதிர்தல் கொடையை விரும்பி மேற்கோடல். நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழித் திரிபின்றி அவர்க்கஃதுடைமையாதலின், கிழமைப் பொருட்குரிய உருபாற் கூறினு மமையு மென்றவாறு. (16) அச்சப் பொருளில் மயங்குவன 100. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான. (இ-ள்.) அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்றவழி எ-று. (எ-டு.) பழியஞ்சும் என்புழி, பழியினஞ்சும், பழியையஞ்சும் என இரண்டும், ஒத்த கிழமையவாய் நின்றவா றறிக. அஃதேல், ஒரு பொருட்கண் வரினன்றே மயக்கமாவது; இவை செயப்படுபொருளும் ஏதுவுமாகிய பொருள் வேறுபாடுடையவாகலின் மயக்கமா மாறென்னையெனின், அற்றன்று. ஈண்டேது வாதலே அஞ்சப் படுதலாய் வேறன்றி நிற்றலின், ஒரு பொருட்கண் வந்தனவேயாம்; அதனான் மயக்கமா மென்பது. (17) வேற்றுமை மயக்கம் தொன்னெறி பிழையாமை 101. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயின் நிலையும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. (இ-ள்.) மேல் மயக்கங் கூறப்பட்ட வேற்றுமையேயன்றி, அவை போல்வன பிறவும், தொன்றுதொட்டு வரும் வழக்கிற்பிழையாது, உரு பானும் பொருளானும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று, பிறிதொன் றன் பொருளுந் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமை யெல்லாந் திரிபுடைய வல்ல தெரிந்துணர்வோர்க்கு எ-று. பொதுவகையான் இருவயினிலையு மென்றாரேனும், வழிபோயினா ரெல்லாங் கூறை கோட்பட்டார் என்றவழிக் கூறை கோட்படுதல் கடவுளரை யொழித்து ஏனையோர்க்கே யாயினவாறு போல, ஏதுப் பொருட்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஒரு பொருளேபற்றி நிற்றலின் இருவயினிலையற் கேலாமையான், அவற்றை யொழித்து அஃதேனையவற் றிற்கேயாம். என்னை? ஏனைய தம் பொருளிற் றீராது பிறிதொன்றன் பொருட்கட் சேறலுடைமையான் இருவயினிலையற் கேற்றவா றறிக. அன்ன பிறவாவன - நோயினீங்கினான் நோயை நீங்கினான் எனவும், சாத்தனை வெகுண்டான் சாத்தனொடு வெகுண்டான் எனவும், முறையாற் குத்துங்குத்து முறையிற் குத்துங்குத்து எனவும், கடலொடு காட்டொட் டாது கடலைக் காட்டொட்டாது எனவும் வருவனவும் பிறவுமாம். இக்காலத்துச் சிதைந்து வழங்கும் மயக்கமு முண்மையான், தொன் னெறி பிழையாதன ஆராய்ந் துணரப்படுமென்பார் ‘தெரியுமோர்க்கு’ என்றார். (18) 2. அவ்வுருபுகளின் இயல்புகள் உருபு தொடர்ந்தடுக்கி வருதல் 102. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே. (இ-ள்) பலவுருபுந் தம்முட்டொடர்ந் தடுக்கிவந்த வேற்றுமைச் சொற்களெல்லாம் முடிக்குஞ் சொல்லொன்றனான் முற்றுப்பெற்று நடக்கும், அவ்வொன்றனாற் பொருள் செல்லுமிடத்து எ-று. ஈண்டு வேற்றுமைக் கிளவியென்றது வேற்றுமை யுருபை யிறுதியாக வுடைய சொல்லை. (எ-டு.) ‘என்னொடும் நின்னொடுஞ் சூழாது’ (அகம். 128-7) எனவும், ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்’ (குறள். 543) எனவும் வரும். சாத்தன் றாயைக்காதலன், நாய் தேவனாயிற்று என்புழி, தாயை தேவன் என்பன, காதலன் ஆயிற்றென்னும் பயனிலைக்கு அடையாய் இடைநின்றாற் போல, கோட்டை நுனிக்கட் குறைத்தான், தினையிற் கிளியைக் கடியும் என்புழி, நுனிக்கண் கிளியை யென்பன, குறைத்தான் கடியுமென்னும் முடிக்குஞ் சொல்லிற்கு அடையாய் இடைநின்றவாக லான், அவையடுக் கன்மையின், அவை யுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன் றென்க. குழையைச் சாத்தனது கள்ளரின் என இவ்வாறு தொடராது வருவனவற்றை நீக்குதற்கு உருபு தொடர்ந் தடுக்கியவென்றும், நீ தந்த சோற்றையுங் கூறையையு முண்டுடுத்திருந்தேம் என இன்னோரன்னுழி, ஒரு சொல்லாற் பொருள் செல்லாமையின், அவற்றை நீக்குதற்குப் ‘பொருள் சென்மருங்’ கென்றுங் கூறினார். பிறவுமன்ன, (19) உருபு விரிந்து நிற்குமிடம் 103. இறுதியும் இடையும் எல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார். (இ-ள்) வேற்றுமைத்தொடரி றுதிக்கண்ணும் அதனிடை நிலத்தும் ஆறுருபுந் தத்தமக்கோதிய பொருட்கண் நிற்றலை வரையார் எ-று. (எ-டு.) கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், இருந்தான் குன்றத்துக்கண் எனவும்; நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக்கணிருந்தான் எனவும் வரும். ‘நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையா’ ரெனவே, அப்பொரு ளுணர்த்தாக்கால் நிலவுதல் வரையப்படு மென்பதாம். அங்ஙனம் வரையப் படுவன யாவையெனின், ஆறாவதும் ஏழாவதும், சாத்தனதாடை, குன்றத்துக்கட் கூகை என இடை நின்று தம்பொருளுணர்த்தினாற் போல, ஆடை சாத்தனது கூகை குன்றத்துக்கண் என இறுதி நின்ற வழி, அப்பொரு ளுணர்த்தாமையான், அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுரு பேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடை மையான், அந்நிலைமைக்கண் ஆடைசாத்தனது என இறுதிக்கண்ணும் நிற்குமென்பது. இவ்வரையறை யுணர்த்துதற்கும், ‘மெய்யுருபு தொகாஅ இறுதியான’ (சொல். 105) என முன்னருணர்த்தப்படும் வரையறைக்கு இடம் படுத்தற்கும் ‘ஈறுபெயர்க்காகும்’ (சொல். 99) என்றோதப்பட்ட உருபு தம்மையே இறுதியு மிடையும் நிற்குமென வகுத்துக் கூறினாரென்பது. (20) ஆறனுருபு மற்றொன்றேற்றலும் ஆறுருபும் தொக்கு வருதலும் 104. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. (இ-ள்.) பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும், ஆறுருபுந் தொக்கு நிற்றலும், நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான் வழுவாகா எ-று. ஏற்புழிக் கோட லென்பதனான், பிறிதோருருபேற்பது ஆறாவதே யாம். பிறிதேற்றலு மென்றமையான், தானல்லாப் பிறவுரு பேற்றல் கொள்க. (எ-டு.) சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனத னின், சாத்தனதன்கண் என உருபு உருபேற்றவாறும்; நிலங்கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை, குன்றக்கூகை எனவும்; கடந்தானிலம், இருந்தான் குன்றத்து எனவும் உருபு தொக்கு நின்றவாறுங் கண்டுகொள்க. ‘இறுதியு மிடையு’ மென்பதனை அதிகாரத்தான் வருவித்து இரண்டிடத்துங் கூட்டி யுரைக்க. சாத்தனதனது எனச் சிறுபான்மை தன்னையுமேற்றல் உரையிற் கோட லென்பதனாற் கொள்க. பெயரிறுதி நின்ற உருபு தன்பொருளொடு தொடராது பிறி தோருருபை யேற்றலும், தாம் நின்று தம்பொருளுணர்த்தற்பாலன தொக்கு நிற்றலும் இலக்கணமன்மையின், வழுவமைத்தவாறு. (21) 105. ஐயுங் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ இறுதி யான. (இ-ள்.) ஐகார வேற்றுமைப் பொருளுங் கண்ணென் வேற்றுமைப் பொருளுமல்லாத பிற பொருளின்மேனின்ற உருபு தொடர்மொழி யிறுதிக்கண் தொக்கு நில்லா எ-று. இறுதியுமிடையுமென்பது அதிகரிக்க உருபு தொக வருதலுமென் றமையான் வரைவின்றி எல்லாவுருபும் இறுதிக்கண்ணுந் தொகுமென்பது பட்டதனை விலக்கி, இவ்விரு பொருட்கண் வருவனவே இறுதிக்கட் டொகுவன, அல்லன தொகாவென வரையறுத்தவாறு. அறங்கறக்கும் என இடைக்கண் தொக்கு நின்ற நான்காவது கறக்கு மறம் என இறுதிக்கண் தொக்கு நில்லாமை கண்டு கொள்க. பிறவுமன்ன. (22) உருபு மயக்கம் 106. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். (இ-ள்.) ஒரு தொடர் யாதானுமொரு வேற்றுமையதுருபு கொடுத்துச் சொல்லப்பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளான் அத்தொடர்ப் பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும் எ-று. பொருள் செல்லாமையாவது உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லுந் தம்மு ளியையாமை. அவ்வேற்றுமையைச் சார்தலாவது அதன் பொருட்டாதல். (எ-டு.) ‘கிளையரில் நாணற் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ (அகம். 212) என்றவழி, நான்காவதன் பொருளான் அவ்வுருபேற்ற சொல்லும் அவ்வுருபு நோக்கிய சொல்லும் தம்மு ளியையாமையின், அவற்றை யியைக்கும் ஏழாவதன் பொருட்டாயினவாறு கண்டு கொள்க. உருபு தன் பொருளிற் றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்கு மென உருபுமயக்கங் கூறியவாறாயிற்று. அஃதேல், அரசர்கட்சார்ந்தான் என்புழியும் இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது சென்றதென்றமையான், அதனோடிதனிடை வேற்றுமை யென்னையெனின்:- அரசர்கட்சார்ந்தான் என்புழி, அரசரது சார்தற்கிட மாதலே சாரப்படுதலுமாய் இரு பொருண்மையும் ஒற்றுமைப் பட்டு நிற்றலின், தத்தம்பொருள்வயிற் றம்மொடு சிவணு மாகுபெயர் போல, இடப் பொருண்மைக்குரிய கண்ணெனுருபு அவ்விடப் பொருண்மையோடு ஒற்றுமையுடைத்தாகிய செயப்படுபொருட்கும் ஆண்டுரித்தேயாம். மணற்கீன்ற என்புழி, நான்காவதன் பொருளோடு ஏழாவதன் பொருட் கென்னு மியைபின்மையான், ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டும் ஆகுபெயர்போல, அப்பொருட் குரித்தன்றி வந்ததெனப் படும். அன்ன பிறவற்றுள்ளும் இவ்வேறுபாடு தெரிந்துணர்க. தன்பொருளிற் றீர்தல் இலக்கணமன்மையின், இதனை யிலக்கணத் தோடுறழ்ந்து வருவனவற்றொடு வைத்தார். (23) எதிர்மறைக்கண்ணும் வேற்றுமை தம்பொருள் திரியாமை 107. எதிர்மறுத்து மொழியினுந் தத்தம் மரபின் பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. (இ-ள்.) விதிமுகத்தாற்கூறாது எதிர்மறுத்துக் கூறினும், தத்தமிலக்- கணத்தான் வரும் பொருணிலைமை திரியா வேற்றுமை யுருபு எ-று. (எ-டு.) மரத்தைக் குறையான், வேலா னெறியான் என வரும். என்சொல்லியவாறோவெனின், குறையான் எறியான் என்றவழி வினை நிகழாமையின், மரமும் வேலுஞ் செய்யப்படுபொருளுங் கருவியு மெனப்படாவாயினும், எதிர்மறை வினையும் விதிவினையோடொக்கு மென்பது நூன்முடி பாகலான், ஆண்டுவந்த உருபுஞ் செயப்படு பொருண் முதலாயினவற்றுமேல் வந்தன வெனப்படுமென வழுவமைத்தவாறு. பிறவுமன்ன. (24) உருபுகளின் திரிபு 108. கு ஐ ஆனென வரூஉ மிறுதி அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே. (இ-ள்.) கு ஐ ஆனென வரூஉம் மூன்றுருபும் தொடரிறுதிக்கண் நின்றவழி, அகரத்தொடு பொருந்தி நிற்றலுமுடைய செய்யுளுள் எ-று. (எ-டு.) ‘கடிநிலை யின்றே யாசிரி யர்க்க’ (புள்ளி. 94) எனவுங், ‘காவ லோனக் களிறஞ் சும்மே’ ‘களிறு மஞ்சுமக் காவ லோன’ எனவும், ‘புரைதீர் கேள்விப் புலவரான’ எனவும், ‘உள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான’ (கற். 53) எனவும் வரும். குகரமும் ஐகாரமும் ஈறு கெட அகரத்தொடு சிவணலுடைமை யான், ஐ ஆன் கு என முறையிற் கூறாது, கு ஐ என அவற்றை இயைய வைத்தார். இயைய வைக்கின்றவர் ஐகாரம் முன்வைக்கவெனின், முறை அதுவாயி னுஞ் செய்யுளின்பம் நோக்கிக் குகரம் முன்வைத்தா ரென்பது. அஃதேல், இத்திரிபு ‘தம்மீறு திரிதல்’ (சொல். 251) என இடைச் சொற்கோதிய பொதுவிலக்கணத்தாற் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின், அப் பொது விலக்கணத்தான் எய்துவன, உருபிற்கு மெய்துமேல், ‘பிறிது பிறி தேற்றலும்’, ‘பிறிதவணிலையலாய்’ (சொல். 251) அடங்குதலான், ஈண்டுக் கூறல் வேண்டாவாம்; அதனான் அன்ன பொது விலக்கணம் உருபிற்கெய்தாதென மறுக்க. (25) 109. அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கில் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. (இ-ள்.) அஃறிணைப் பெயர்க்கண் அகரத்தொடு சிவணி ஈறுதிரிதல் குவ்வும் ஐயுமில்லென எய்தியது விலக்கியவாறு. அ எனத் திரிதலை, ‘அ எனப் பிறத்த’ லென்றார். (26) நான்கனுருபால் தோன்றும் பொருண்மைகள் 110. இதன திதுவிற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயற்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவும் நான்க னுருபின் தொன்னெறி மரபின தோன்ற லாறே. (இ-ள்.) இதனதிது இத்தன்மைத் தென்னும் ஆறாவதன் பொருண் மையும், ஒன்றனையொன்று கொள்ளு மென்னும் இரண்டாவதன் பொருண்மையும், ஒன்றனானொன்று தொழிற்படற்கு ஒக்கும் என்னும் மூன்றாவதன் பொருண்மையும், முறைப்பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச்சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருண்மையும், நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும், பண்பின்கணாம் பொருவு மாகிய ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின்கண் ணறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், பற்றுவிடு பொருண்மையும், தீர்ந்து மொழிப் பொருண்மையுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், அவை போல்வன பிறவும், நான்கனுருபாற் றோன்றுதற்கண் தொன்னெறி மரபின எ-று. (எ-டு.) யானைக்குக்கோடு கூரிது எனவும், இவட்குக் கொள்ளு மிவ்வணி எனவும், அவற்குச் செய்யத்தகு மக்காரியம் எனவும், ஆவிற்குக் கன்று எனவும், கருவூர்க்குக் கிழக்கு எனவும், சாத்தற்கு நெடியன் எனவும், காலைக்கு வரும் எனவும், மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் எனவும், ஊர்க்குத் தீர்ந்தான் எனவும், அப்பொருளெல்லாவற்றின்கண்ணும் நான்காமுருபு வந்தவாறு கண்டு கொள்க. வன்பால் மென்பால் என்பவாகலின் நிலத்தைப் பாலென்றார். ‘சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப’ (பொருள். 279) என, உவமை நிலைக்களத்தைப் பண்பென்ப வாகலின், ‘பண்பினாக்கம்’ என்றார். இதுவும் வேற்றுமை மயக்கமாகலின் மேற்கூறப்பட்டவற்றொடு வையாது இத்துணையும் போதந்து வைத்த தென்னையெனின், அது தொகை விரிப்ப மயங்குமதிகாரம்; இது தொகையல்வழி யானையது கோடு கூரிது என்னுந் தொடர்மொழிப்பொருள் சிதையாமல் யானைக்குக் கோடு கூரிது என நான்காவது ஆண்டுச்சென்று நின்றதாகலான், அவற்றொடு வையாராயினாரென்பது. அஃதேல், ஆவின்கன்று எனவும் கருவூர்க்கிழக்கு எனவுந் தொகை யாயும் வருதலின், அப்பொருட்கண் நான்காவது வருதல் ஈண்டுக் கூறற் பாற்றன்றெனின், அஃதொக்குமன்னாயினும், பிற வேற்றுமைப் பொருட் கண் நான்காவது சேறலொப்புமையான் அவற்றிற்கு வேறொரு சூத்திரஞ் செய்யாது இவற்றோ டொருங்கோதினாரென்பது. அன்னபிறவுமென்றதனான், ஊர்க்கட்சென்றான், ஊர்க்கணுற்றது செய்வான் என்னு மேழாவதன்பொருட்கண்ணும், ஊரிற்சேயன் என்னும் ஐந்தாவதன் பொருட்கண்ணும், ஊர்க்குச் சென்றான், ஊர்க்குற்றது செய்வான், ஊர்க்குச் சேயன் என நான்காவது வருதல் கொள்க. பிறவுமன்ன. (27) பிற உருபும் தொகாநிலைத் தொடருள் மயங்குதல் 111. ஏனை யுருபும் அன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. (இ-ள்.) நான்கனுருபல்லாத பிறவுருபுந் தொகையல்லாத தொடர் மொழிக்கண் ஒன்றன்பொருள் சிதையாமை ஒன்று மயங்குதற்கட் குற்றமில, வழங்கு முறைமையான் எ-று. (எ-டு.) நூலது குற்றங்கூறினான் என்னுந் தொடர்மொழிக்கண் நூலைக் குற்றங்கூறினான் எனவும், அவட்குக் குற்றேவல் செய்யும் என்னுந் தொடர்மொழிக்கண் அவளது குற்றேவல் செய்யும் எனவும் வருவன கொள்க. பிறவுமன்ன. (28) தொழில் முதனிலை எட்டாவன 112. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி யென்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே. (இ-ள்.) வினையும், வினைமுதலும், செயப்படுபொருளும், நிலமும், காலமும், கருவியுமாகிய ஆறும், இன்னதற்கு, இது பயனாக என்று சொல்லப் படும் இரண்டொடுந்தொக்குத் தொழிலது முதனிலை யெட்டா மென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. ஈண் டேதுப்பொருண்மை கருவிக்கண் அடக்கப்பட்டது. தொழின்முதனிலை யென்றது தொழிலது காரணத்தை. காரியத்தின் முன்னிற்றலின் முதனிலையாயிற்று. காரண மெனினும் காரக மெனினு மொக்கும். வனைந்தான் என்றவழி, வனைதற்றொழிலும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கிடமாகிய நிலமும், அத்தொழில் நிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரிமுதலாயினவும், வனையப் பட்ட குடத்தைக் கொள்வானும், வனைந்ததனானாய பயனுமாகிய எட்டும்பற்றி அத்தொழில் நிகழ்ந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், தொழிலின் வேறாயது காரகமாகலின், வனைதற்றொ ழிற்கு அத்தொழில்தான் காரகமாமா றென்னை யெனின், வனைந்தானென் பது வனைதலைச் செய்தா னென்னும் பொருட்டாகலின், செய்தற்கு வனைதல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரகமா மென்பது. அற்றாக லினன்றே, கொளலோகொண்டா னென்பது இரண்டாம் வேற்றுமைத் தொடராயிற் றென்பது. இன்னதற்கு, இதுபயனாக என்னும் இரண்டும் அருகியல்லது வாராமையின், ‘அன்னமரபி னிரண்டொடு’ மெனப் பிரித்துக் கூறினார். அஃதேல், செய்வது முதலாகிய முதனிலை வேற்றுமையோத்தினுள் கூறப்பட்டமையின் இச்சூத்திரம் வேண்டாவெனின்:- அற்றன்று; இரண்டாவதற்கோதிய பொருளெல்லாவற்றையுஞ் செயப்படுபொரு ளெனத் தொகுத்து, ஏதுவைக் கருவிக்கண்ணும் வினைசெய்யிடத்தைக் காலத்தின்கண்ணும் அடக்கி, ஏழாகச்செய்து, அவற்றோடு ஆண்டுப் பெறப்படாத வினையென்னு முதனிலை கூட்டி எட்டென்றாராகலின், இப்பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையான், இச்சூத்திரம் வேண்டு மென்பது. இதனாற் பயன் ‘நிலனும் பொருளுங் காலமும் கருவியும்’ (சொல். 234) எனவும் ‘செயப்படுபொருளைச் செய்தது போல’ (சொல். 246) எனவும் வினைக் கிலக்கணங் கூறுதலும் பிறவுமாம். (29) 113. அவைதாம் வழங்கியன் மருங்கின் குன்றுவ குன்றும். (இ-ள்.) மேற்கூறப்பட்ட தொழில் முதனிலைதாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வருமென்னும் யாப்புறவில்லை; வழக்கின்கட் சில தொழிற்கட் குன்றத்தகுவன குன்றிவரும் எ-று. குன்றத் தகுவனவாவன செயப்படுபொருளும் ஏற்பதும் பயனுமாம். (எ-டு.) கொடியாடிற்று, வளிவழங்கிற்று என்புழிச் செயப்படு பொருளும் ஏற்பதும் பயனுமாகிய முதனிலை யில்லையாயினும், ஒழிந்தன வற்றான் ஆடுதலும் வழங்கலுமாகிய தொழினிகழ்ந்தவாறு கண்டுகொள்க. இதனாற்பயன், எல்லாத்தொழிற்கும் முதனிலையெட்டுங் குன்றாது வருமோ சிலதொழிற்குச் சில குன்றிவருமோ வென்னும் ஐயம் நீங்குதலும், செயப்படுபொருள் குன்றிய வினையை யுணர்த்துஞ்சொல் இரண்டா வதனோ டியையா தென்பது பெறுதலுமாம். (30) 3. ஆகுபெயர் அதன் இயல்பு 114 முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி. (இ-ள்.) முதற்சொல் வாய்பாட்டாற் கூறப்படுஞ் சினையறி கிளவியும், சினைச்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் முதலறி கிளவியும், நிலத்துப் பிறந்த பொருண்மேல் அந்நிலப்பெயர் கூறலும், பண்புப்பெயர் அப் பண்புடை யதனை யுணர்த்திப் பண்புகொள் பெயராய் நின்றதூஉம், முதற் காரணப் பெயரான் அக் காரணத்தானியன்ற காரியத்தைச் சொல்லுதலும் அன்மொழிப்பொருண்மேனின்ற இருபெயரொட்டும், செயப்பட்ட பொருண்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லுஞ் சொல்லுமென அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தையுடையன ஆகுபெயர் எ-று. (எ-டு.) கடுத்தின்றான் தெங்குதின்றான் என முதற்பெயர் சினை மேலும், இலை நட்டு வாழும் பூ நட்டு வாழும் எனச் சினைப்பெயர் முதன் மேலும், குழிப்பாடி நேரிது என நிலப்பெயர் அந்நிலத்துப் பிறந்த ஆடை மேலும், இம் மணி நீலம் எனப் பண்புப்பெயர் அப் பண்புடையதன் மேலும், இக்குடம் பொன் எனக் காரணப்பெயர் அதனானியன்ற காரியத் தின்மேலும், பொற்றொடி வந்தாள் என இருபெயரொட்டு அன்மொழிப் பொருள்மேலும், இவ்வாடை கோலிகன் எனச் செய்தான் பெயர் செயப்பட்டதன்மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டா வெனின், அன்மொழித் தொகை தொகையாதலுடைமை யான் ஆண்டுக் கூறினார். இயற்கைப்பெயர் ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாயடங்கும்வழி ஒரு பெயர்ப்பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலுளுணர்த்தப்படும்; அதனான் அது ஆகுபெயராதலுடைமை பற்றி ஈண்டுக் கூறினார். எச்ச வியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச்சொல் லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான் அவற்றை வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூறியவாறு போல வென்பது. தொல்காப்பியனானுங் கபிலனானுஞ் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியங் கபிலமென்றல் வினைமுதலுரைக்குங் கிளவியென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று; ஒரு மொழி யிலக்கணம் ஈண்டுக் கூறாராயினும், வெற்பு சேர்ப்பு என்னும் பெயரிறுதி இதனையுடையா னென்னும் பொருள் தோன்ற அன்னென்பதோ ரிடைச்சொல் வந்து வெற்பன் சேர்ப்பன் என நின்றாற்போல, தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி இவனாற் செய்யப்பட்டதென்னும் பொருள் தோன்ற அம்மென்பதோ ரிடைச்சொல் வந்து அன் கெடத் தொல்காப்பியம் கபிலம் என நின்றனவென்பது ஆசிரியர் கருத்தாம்; அதனான் அவையுதாரண மாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க. ‘அனை(ய)மரபின’ வென்றது அவ்வாறியாதானு மோரியைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காதலென ஆகுபெயரிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு, ஒன்றன் பொருட்கண் ஒன்று சேறலென்னு மொப்புமையான் இவற்றை யீண்டுக் கூறினார். அஃதேல் ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்க மாதலான் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரியரெனின், ஆகுபெயர் ஏனைவேற்றுமையு மேற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமை யாய் நின்றவழியும் அது பிறிதொரு வேற்றுமைப் பொருட்கட் சென்று மயங்காமையின் வேற்றுமை மயக்கமெனப்படாமையானும் அது போலியுரை என்க. (31) 115. அவைதாம் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலும் காலை வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். (இ-ள்.) மேற்கூறப்பட்ட ஆகுபெயர்தாம், தத்தம் பொருளின் நீங்காது தம்பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்தலும், தம் பொருட்கியை பில்லாத பிறிது பொருளைச் சுட்டி நிற்றலுமென இரண்டியல்புடைய வேறுபாடு போற்றி யுணரப்படும் எ-று. கடுவென்னு முதற்பெயர் முதலோடொற்றுமையுடைய சினைமேல் நிற்றல் தத்தம்பொருள்வயிற் றம்மொடு சிவணலாம். குழிப்பாடி யென்னு மிடப்பெயர் இடத்தின் வேறாய ஆடைமேனிற்றல் ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாம். அஃதேல், குழிப்பாடியும் ஆடையும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய இயைபுடைய வாகலினன்றே அதன் பெயர் அதற்காயிற்று; அதனான் அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாமாறென்னையெனின், நன்று சொன்னாய்! அவ்வியைபுடைய வேனும், முதலுஞ்சினையும் பண்பும் பண்புடையதுமாதல் முதலாகிய ஒற்றுமை யாகிய இயைபிலவாகலின், அவை தம்முள் வேறெனவேபடும்; அதனாற் குழிப்பாடியென்பது ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டலே யாமென்பது. ஒற்றுமையாகிய இயைபுள்வழி அது தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணிற்றென்றும், அவ்வியைபின்றி இடமும் இடத்துநிகழ் பொருளுமாதன் முதலாகிய இயைபே யாயவழி அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டிற்றென்றும், வேறுபடுத்துணரப்படுமென்பார், ‘வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டு’ மென்றார் என்பது. அஃதேல், இதனைப் பிரித்து ஒரு சூத்திரமாக உரைத்தாரால் உரையாசிரியரெனின், அங்ஙனம் பிரிப்பின், தம்மொடு சிவணலும் பிறிதுபொருள் சுட்டலு மாகிய இவற்றது வேறுபாட்டின்கணென்பது இனிது பெறப்படாமை யானும், எழுத்தோத்தினுள் ‘புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்’ (எழுத். 156) என்னுஞ் சூத்திரத்து இந்நிகர்ப் பாதுகாவலைப் பிரியாது ஒன்றாகவே யுரைத்த லானும், அவர்க்கது கருத்தன் றென்க. (32) 116. அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளவென மொழிப உணர்ந்திசி னோரே. (இ-ள்.) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளுமிடமு முடையவென்று சொல்லுவர் உணர்ந்தோர் எ-று. (எ-டு.) பதக்கு தூணி யென்னும் அளவுப்பெயர் இந்நெற்பதக்கு இப்பயறு தூணி எனவும், தொடிதுலாமென்னும் நிறைப்பெயர் இப்பொன் றொடி இவ் வெள்ளி துலாம் எனவும், அளக்கப்பட்ட பொருண் மேலும் நிறுக்கப்பட்ட பொருண்மேலும் ஆகுபெயராய் நின்றவாறு கண்டு கொள்க. ஒன்று இரண்டென்னும் தொடக்கத்து எண்ணுப் பெயரும் எண்ணப் பட்ட பொருண்மேனின்றவழி ஆகுபெயரேயாகலின் அவற்றை யொழித்த தென்னையெனின் அவை எண்ணப்படு பொருட்கு முரியவாகலின் ஆகுபெயரெனப்படா; அதனான் அவற்றை யொழித்தா ரென்பது. (33) அதற்குப் புறனடை 117. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. (இ-ள்.) சொல்லப்பட்டனவேயன்றி வேறு பிறவும் ஆகுபெயருள வேல், அவையெல்லாஞ் சொல்லப்பட்டவற்ற தியல்பானுணர்ந்து கொள்க எ-று. சொல்லப்பட்டவற்ற தியல்பாவது யாதானுமோ ரியைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றன்மேல் வழங்கப்படுதல். (எ-டு.) யாழ் குழல் என்னுங் கருவிப்பெயர் யாழ் கேட்டான், குழல் கேட்டான் என அவற்றானாகிய ஓசைமேலும் ஆகுபெயராய் நின்றன. யானை பாவை என்னும் உவமைப்பெயர் யானை வந்தான், பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருண்மேலும், ஏறு குத்து என்னுந் தொழிற்பெயர் இஃதோரேறு, இஃதொருகுத்து என அத்தொழிலானாம் வடுவின் மேலும், வருவனவெல்லாங் கொள்க. பிறவு மன்ன. இயைபுபற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காங்கால், அவ்வியைபு ஒரிலக் கணத்ததன்றி வேறுவேறுபட்ட இலக்கணத்தை யுடைத்து; அவ்விலக்கண மெல்லாம் கடைப்பிடித்துணர்க என்பார், ‘வேறுபிற தோன்றினும்’ என்றார். (34) வேற்றுமை மயங்கியல் முற்றிற்று. 4 விளிமரபு (சொற்கள் விளியேற்கும் இயல்புணர்த்துவது) 1. விளியின் இயல்பு 118. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப. நிறுத்த முறையானே விளிவேற்றுமை யுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. (இ-ள்.) விளியென்று சொல்லப்படுவன தம்மையேற்கும் பெயரொடு விளங்கத் தோன்று மியல்பையுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருட்டாதல் பெயரானே விளங்குதலிற் கூறாராயினார். ஈறுதிரிதலும், ஈற்றயனீடலும், பிறிது வந்தடைதலும், இயல்பாதலு மென்னும் வேறுபாடுடைமையான் ‘விளியெனப் படுப’ என்றார். கொள்ளும் பெயரோ டெனவே, கொள்ளாப் பெயருமுள வென்பதாம். இயல்புவிளிக்கண் திரியாது நின்ற பெயரீறே விளியெனப்படுதலின், ஆண்டுந் தெற்றென விளங்கு மென்பார் ‘தெளியத் தோன்றும்’ என்றார். (1) 119. அவ்வே இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. (இ-ள்.) விளி கொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவை யென மாணாக்கனுணர்தற்பொருட்டு அவை யிவ்வோத்தினகத்துப் பொருள்படக் கிளக்கப்படும் எ-று. இது கூறுவாமென்னுந் தந்திரவுத்தி. ‘அவ்வே’ யெனக் ‘கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் (சொல். 118) எனப் பெயரா னுணர்த்தப்படுவதாய் நின்ற விளியைச் சுட்டிய பெயரைச் சுட்டுதல் இடருடைத்தெனின், விளிவேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின், அப்பெயரைச் சுட்டவே விளியுஞ் சுட்டப்பட்டனவேயாம்; அதனான் இடரின் றென்பது. இவ்வாறுரையாது அவ்வேயெனச் சுட்டப்பட்டன விளி வேற்றுமை யெனின்:- வருஞ் சூத்திரத்தின் அவைதா மெனப்பட்டனவும் விளி வேற்றுமையேயாய் ‘மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர்’ (சொல். 120) என்பதனோடு இயையாவாமென்பது. விளி கொள்ளும் பெயரும், கொள்ளாப் பெயரும், உயர்திணை விரவுப்பெயர் ஈண் டுயர்திணைப் பெயருள்ளும் அடங்குதலும், நுண்ணுணர்வினார்க் கல்லது அறிய லாகாமையின், ஏனோரும் அறிதற்கு அவை கிளக்கப்படுமென்பார் ‘இவ்வென வறிதற்கு’ என்றார். (2) 2. உயர்திணைப்பெயர் விளியேற்குமாறு உயர்திணைக்கண் விளியேற்கும் உயிரீறுகள் 120. அவைதாம் இ உ ஐ ஓ வென்னு மிறுதி அப்பால் நான்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. (இ-ள்.) கிளக்கப்படுவனவாகிய பெயர்தாம் இ உ ஐ ஓ என்னு மிறுதியையுடைய அக்கூற்று நான்கு பெயரும் உயர்திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர் எ-று. அஃறிணைப்பெயர் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழியும், விரவுப்பெயர் உயர்திணைக்கண் வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராமென்றற்கு ‘உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய’ வென்றார். (எ-டு.) ‘சுடர்த்தொடீ கேளாய்’ (கலி. 51) எனவும், சாத்தீ எனவும், அவை உயர்திணைப் பெயராய் விளியேற்றவாறு கண்டு கொள்க. மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர் அப்பால் நான் கென்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து, ஒரு சொன்னீர் மையவாய், அவைதாமென்னும் எழுவாய்க்குப் பயனிலையாயின. அஃதேல், உயர்திணை விரவுப்பெயரைப் பொருள்பற்றி உயர் திணைப் பெயர்க்கண் அடக்கினாரா லெனின், முன்னர் ‘விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (சொல். 150) எனல் வேண்டாவாம் பிற வெனின், நன்று சொன்னாய்! ‘விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ என்புழி, விரவுப்பெய ரென்னாது அஃறிணை விரவுப்பெயரென அஃறிணைக்கண் வருவன வற்றை விதந்தோதுதலான், உயர்திணைக்கண் வருவன உயர்திணைப் பெயருள் அடங்கு மென்பதற்கு அச் சூத்திரமே கரியாயிற்றென்பது. அல்லதூஉம், புள்ளியீற்றுயர்திணைப் பெயர்க்கண் அவ்வீற் றுயர்திணை விரவுப் பெயரு மடங்கி விளிகோடலெய்துதலா னன்றே, தான் நீயிரென்பன விளி கொள்ளாவென எய்தியது விலக்குவாராயிற்று; அதனானுமடங்குதல் பெறுதுமென்பது. அல்லதூஉம், உயர்திணை யதிகாரத்து முறைப்பெயர் விளியேற்குமாறு கூறினமையானும் பெறப்படும். விரவுப்பெயரை உயர்திணைப் பெயரொடு மாட்டெறிப வாகலின், மாட்டேற்றான் முறைப் பெயர் ஆகாரமும் ஏகாரமும் பெற்று விளியேற்ற லெய்தாமையின் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரியரெனின், அக் கருத்தினராயின் அஃறிணையென்னுஞ் சொல்லொழித்துக், ‘கிளந்த விறுதி விரவுப் பெயரே விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (சொல். 150) எனவும், இதன் பின் ‘முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே’ (சொல். 126) எனவும், இதன்பின் னகார ளகார வீற் றிருவகை முறைப்பெயரு மடங்கப் ‘புள்ளி யிறுதி யேயொடு வருமே’ எனவும் ஓதுவார்மன் னாசிரியர்; என்னை? மயங்கக் கூறலென்னுங் குற்றமும் நீங்கிச் சூத்திரமுஞ் சுருங்குமாதலான். அவ்வா றோதாமையானும், முறைப் பெயரே யன்றித் தான் நீயி ரென்பனவும் ஈண்டுக் கூறப்பட்டமையானும், உரையாசிரியர்க்கு அது கருத்தன் றென்க. (3) அவற்றுள் இகர ஐகார ஈறுகள் 121. அவற்றுள் இ ஈ யாகும் ஐஆய் ஆகும். மேற்கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு கூறுகின்றார். (இ-ள்.) அவற்றுள் என்பது அந் நான்கீற்றினுள் என்றவாறு. நம்பி, நம்பீ என இகரம் ஈகாரமாயும், நங்கை, நங்காய் என ஐகாரம் ஆயாயும் ஈறு திரிந்து விளியேற்கும் எ-று. (4) ஓகார உகர ஈறுகள் 122. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். (இ-ள்.) கோ, கோவே எனவும், வேந்து, வேந்தே எனவும், ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும் எ-று. (5) 123. உகரந் தானே குற்றிய லுகரம். (இ-ள்.) மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம் எ-று. திரு, திருவே எனச் சிறுபான்மை முற்றுகரவீறு முளவேனும், ஓதியமுறையானே விளியேற்பன குற்றுகரவீறே யாகலின் குற்றியலுகர மென்றார். (6) பிற ஈறு விளிகொள்ளாமை 124. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர். (இ-ள்.) மேற்கூறப்பட்ட நான்கீறுமல்லா உயிரீறு உயர்திணைக்கண் விளி கொள்ளாவென்று சொல்லுவர் புலவர் எ-று. கொள்வன இவையென வரையறுத் துணர்த்தவே, ஏனைய கொள்ளா வென்பதுணரப்படும், வரையறைக்குப் பயன் அதுவாகலான்; அதனா னிச்சூத்திரம் வேண்டாவெனின், அஃதொக்கும்; வரையறையாற் பெறப் படுவதனையே ஒருபயன் நோக்கிக் கூறினார். யாதோ பயனெனின், ஏனையுயிர் விளிகொள்ளாவென, மேற்கூறப்பட்ட உயிர் கூறியவாறன்றிப் பிறவாற்றானும் விளி கொள்வனவு முளவென்ப துணர்த்துதற் கென்பது. (எ-டு.) கணி, கணியே; கரி, கரியே என வரும். பிறவுமன்ன. தாமென்பதனான் ஏனையுயிர் தம்மியல்பாற் கொள்ளாவாயினுஞ் சொல்லுவான் குறிப்புவகையாற் கொள்வனவு முளவென்பதாம். மக என்பது விளி பெறாதாயினுஞ் சொல்லுவான் குறிப்பான் மகவேயென விளியேற்றவாறு கண்டுகொள்க. (7) அளபெடைப் பெயர் 125. அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. (இ-ள்.) அளபெடை தன்னியல்புமாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர் இ ஈ யாகாது இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையை யுடையவாம் எ-று. அளபெடைமிக் கியற்கையவாகுஞ் செயற்கைய வென்னாது ‘மிகூஉ மிகர விறுபெயரென’ அநுவதித்தாரேனும், மாத்திரைமிக் கியல்பா மென்பது அதனாற் பெறப்படும். (எ-டு.) தொழீஇஇ எனவும், தொழீஇஇஇ எனவும் வரும். இ ஈ யாகாமையின் ‘இயற்கைவாகு’மென்றும், மாத்திரை மிகுத லாகிய செயற்கையுடைமையாற் ‘செயற்கைய’ வென்றுங் கூறினார். இகர விறுபெயரென்பது இகரத்தானிற்ற பெயரென விரியும். (8) முறைப்பெயர் 126. முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி ஆவொடு வருதற் குரியவு முளவே. (இ-ள்.) முறைப்பெயரிடத்து ஐயென்னு முடிபு ஆயாகாது ஆவொடு வருதற்கு முரியனவுள எ-று. (எ-டு.) அன்னை, அன்னா எனவும்; அத்தை, அத்தா எனவும் வரும். உம்மையான் அன்னாய் அத்தாய் என ஆயாதலுமுடைய வென்ப தாம். உம்மை பிரிந்து நின்றது. (9) அண்மை விளி 127. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். (இ-ள்.) நான்கீற் றண்மைச்சொல்லும் இயற்கையாய் விளி யேற்கும் எ-று. அண்மைக்கண் விளி கொள்வதனை ‘அண்மைச்சொல்’ என்றார். (எ-டு.) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி என வரும். (10) உயர்திணைக்கண் விளியேற்கும் புள்ளி ஈறுகள் 128. னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. உயிரீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்தி, இனிப் புள்ளியீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்துகின்றார். (இ-ள்.) புள்ளியீற்றுயர் திணைப்பெயர் ன ர ல ள வென்னும் அந்நான்கீற்ற வென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. ன ர ல ள வென்னுமொற்றை ஈறாகவுடைய சொல்லை ‘னரலள’ வென்றார். (11) பிற ஈறு விளிகொள்ளாமை 129. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. (இ-ள்.) அந்நான்குமல்லாத புள்ளியீற்றுப் பெயர் விளிகொள்ளா எ-று. ஈண்டும் விளிகொள்ளா வென்றதனாற் பயன், கூறப்பட்ட புள்ளியீறு பிறவாற்றான் விளி கொள்வனவுளவென்ப துணர்த்தலாம். (எ-டு.) பெண்டிர், பெண்டிரோ எனவும், தம்முன், தம்முனா எனவும் வரும். பிறவுமன்ன. ‘விளங்குமணிக் கொடும்பூணாஅய்’ (புறம். 130) என ஏனைப் புள்ளி சிறுபான்மை விளியேற்றலுங் கொள்க. (12) அந்நான்கனுள், னகர ஈறு 130. அவற்றுள் அன்னென் இறுதி ஆவா கும்மே. (இ-ள்.) அவற்றுள் அன்னென்னும் னகர வீறு ஆவாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) சோழன், சோழா; சேர்ப்பன், சேர்ப்பா என வரும். (13) அதன்கண் அண்மைவிளி 131. அண்மைச் சொல்லிற்கு அகர மாகும். (இ-ள்.) அண்மைவிளிக்கண் அன்னீறு அகரமாம் எ-று. (எ-டு.) துறைவன், துறைவ; ஊரன், ஊர என வரும். (14) ஆன் என்னும் ஈறு 132. ஆனென் இறுதி இயற்கை யாகும். (இ-ள்.) ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் எ-று. சேரமான், மலையமான் என்பன கூவுதற்கண்ணும் அவ்வாறு நிற்றல் கண்டுகொள்க. (15) அவ்வீற்று வினையாலணையும்பெயர் 133. தொழிலிற் கூறும் ஆனென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. (இ-ள்.) தொழிலா னொருபொருளைச் சொல்லும் ஆனீற்றுப் பெயர் விளிக்கண் ஆயாம் எ-று. (எ-டு.) வந்தான், வந்தாய்; சென்றான், சென்றாய் என வரும். விளியதிகாரமாகலான் விளிவயினான எனல் வேண்டா எனின், சொல்லில்வழி உய்த்துணர்வதென்று மறுக்க. (16) பண்புப்பெயர் 134. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. (இ-ள்.) ஆனீற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர்போல ஆயாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) கரியான், கரியாய்; செய்யான், செய்யாய் என வரும். (17) அளபெடைப் பெயர் 135. அளபெடைப் பெயரே அளபெடை யியல. (இ-ள்.) ஆனீற்றளபெடைப்பெயர் இகரவீற்றளபெடைப் பெயரேபோல மூன்று மாத்திரையி னீண்டு இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) உழாஅஅன், கிழாஅஅஅன் என வரும். அளபெடை மூன்றுமாத்திரையின் நீண்டிசைத்தலாகிய விகார முடைமையான் ‘ஆனெ னிறுதி யியற்கை யாகும்’ (சொல். 132) என்புழி அடங்காமை யறிக. (18) முறைப்பெயர் 136. முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. (இ-ள்.) னகரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும் எ-று. (எ-டு.) மகன், மகனே; மருமகன், மருமகனே என வரும். (19) னகர ஈற்றுள் விளி ஏலாதவை 137. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. (இ-ள்.) தானென்னும் பெயரும், அவன் இவன் உவனென்னும் சுட்டு முதற்பெயரும், யானென்னும் பெயரும், யாவனென்னும் வினாப்பெயரு மாகிய அவ்வனைத்தும், னகர வீறேயாயினும், விளிகொள்ளா எ-று. (20) ரகார ஈறு 138. ஆரும் அருவும் ஈரொடு சிவணும். நிறுத்த முறையானே ரகாரவீறு விளியேற்குமா றுணர்த்துகின்றார். (இ-ள்.) ரகாரவீற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும் எ-று. (எ-டு.) பார்ப்பார், பார்ப்பீர்; கூத்தர், கூத்தீர் என வரும். (21) அவ்வீற்று வினையாலணையும் பெயர் 139. தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. (இ-ள்.) மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற்பெயர்க்கும் ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமன்று எ-று. (எ-டு.) வந்தார், வந்தீரே; சென்றார், சென்றீரே என வரும். அர் ஈற்றுத் தொழிற்பெயர் வந்தவழிக் கண்டுகொள்க. ஏகாரம் வருதலும் வழுக்கின்றென்றதனான், ஏகாரம் பெறாது ஈரொடு சிவணலே பெரும்பான்மை யென்பதாம். (22) பண்புப்பெயர் 140. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. (இ-ள்.) அவ் விரண்டீற்றுப் பண்புகொள் பெயரும், அவ்வீற்றுத் தொழிற்பெயர் போல, ஈரொடு சிவணியும், சிறுபான்மை ஈரோ டேகாரம் பெற்றும் விளியேற்கும் எ-று. கரியார், கரியீர்; இளையர், இளையீர் எனவும்; கரியீரே, இளையீரே எனவும் வரும். (23) அளபெடைப் பெயர் 141. அளபெடைப் பெயரே அளபெடை யியல. (இ-ள்.) ரகாரவீற் றளபெடைப்பெயர், முற்கூறிய அளபெடைப் பெயரேபோல, மூன்று மாத்திரையின் மிக்கியல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) சிறாஅஅர்; மகாஅஅஅர் என வரும். (24) ரகர ஈற்றுள் விளி ஏலாதவை 142. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. (இ-ள்.) அவர், இவர், உவர் என வரும் ரகாரவீற்றுச் சுட்டு முதற் பெயர், னகாரவீற்றுச் சுட்டுமுதற்பெயரே போல விளி கொள்ளா எ-று. (25) 143. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று அம்முறை யிரண்டும் அவற்றியல் பியலும். (இ-ள்.) நும்மின் திரிபாகிய நீயிரும், வினாவின் பெயராகிய யாவரும் என்னும் இரண்டும், மேற்கூறிய சுட்டுப்பெயரே போல, விளியேலா எ-று. நீயிரென்பதனை நும்மெனத் திரியாது நும்மென்பதனை நீயிரெனத் திரிப்பினும் இழுக்காகாதென்னுங்கருத்தான் எழுத்தோத்தினுள் நும்மென நிறுத்தித் திரித்தா ராகலான், அதுபற்றி நீயிரென்பதனை ‘நும்மின் றிரிபெய’ ரென்றார். (26) லகர ளகர ஈறு 144. எஞ்சிய விரண்டன் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும். நிறுத்த முறையானே லகார ளகாரவீற்றுப்பெயர் விளியேற்குமா றுணர்த்திய எடுத்துக்கொண்டார். (இ-ள்.) உணர்த்தாது நின்ற லகார ளகாரமென்னும் இரண்டு புள்ளியையும் இறுதியாகவுடைய பெயர்கள் ஈற்றயலெழுத்து நீண்டு விளியேற்கும் எ-று. (எ-டு.) குரிசில், குரிசீல்; மக்கள், மக்காள் என வரும். (27) 145. அயல்நெடி தாயின் இயற்கை யாகும். (இ-ள்.) ஈற்றயலெழுத்து, நெட்டெழுத்தாயின் இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) பெண்பால், கோமாள் என வரும். (28) ளகர ஈற்று வினைப்பெயரும் பண்புப்பெயரும் 146. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆளென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. (இ-ள்.) வினையின்கண்ணும் பண்பின்கண்ணும் வரும் ஆளீற்றுப் பெயர் இயல்பாகாது, ஆயாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) நின்றாள், நின்றாய் எனவும்; கரியாள். கரியாய் எனவும் வரும். ‘விளிவயினான’ என்பதனை முன்னும் பின்னுந் தகுவனவற்றொடு கூட்டுக. (29) முறைப்பெயர் 147. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. (இ-ள்) ளகாரவீற்று முறைப்பெயர், னகாரவீற்று முறைப் பெயர் போல, ஏகாரம் பெற்று விளியேற்கும் எ-று. (எ-டு.) மகள், மகளே; மருமகள், மருமகளே என வரும். (30) ளகர ஈற்றுள் விளி ஏலாதவை 148. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். (இ-ள்.) அவள், இவள், உவளென்னும் ளகார ஈற்றுச் சுட்டு முதற் பெயரும், யாவளென்னும் வினாப்பெயரும், மேற்கூறிய சுட்டு முதற்பெய ரும் வினாப்பெயரும்போல, விளிகொள்ளா எ-று. (31) லகர ளகர ஈற்று அளபெடைப் பெயர் 149. அளபெடைப் பெயரே அளபெடை யியல. (இ-ள்.) லகார ளகார வீற்றளபெடைப்பெயர், மேற்கூறிய அள பெடைப்பெயரே போல, அளபு நீண்டு இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) மாஅஅல், கோஒஒஒள் என வரும். இவை அளபெடைப் பெயராயின், மால் கோளென அளபெடை யின்றி வருவன செய்யுணோக்கி அளபு சுருங்கி வந்தனவாம்; இவை அள பெடைப் பெயரல்லவாயின், அளபெடைப்பெயர் வந்தவழிக் கண்டு கொள்க. (32) 3. அஃறிணை விரவுப்பெயர் விளியேற்குமாறு 150. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. உயர்திணைப் பெயரும் உயர்திணை விரவுப்பெயரும் விளிகொள் ளுமாறுணர்த்தி, இனி யஃறிணை விரவுப்பெயர் விளிகொள்ளுமா றுணர்த்துகின்றார். (இ-ள்.) கிளந்த இறுதியாவன உயிரீறு நான்கும் புள்ளியீறு நான்கு மாம். அவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைக்கண் வரும் விரவுப்பெயர் மேற்கூறிய நெறியான் விளியேற்கும் எ-று. (எ-டு.) சாத்தி, சாத்தீ; பூண்டு, பூண்டே; தந்தை, தந்தாய் எனவும் சாத்தன், சாத்தா; கூந்தல், கூந்தால்; மக்கள், மக்காள் எனவும் வரும். சாத்தி, பூண்டு, தந்தை, சாத்த என அண்மைவிளியாய் வருவனவுங் கொள்க. ஓகாரவீறும் ரகாரவீறுமாய் வருவன விரவுப்பெய ருளவேற் கொள்க. பிறவுமன்ன. (33) 4. அஃறிணைப்பெயர் விளியேற்குமாறு 151. புள்ளியு முயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே. (இ-ள்.) புள்ளியீறும் உயிரீறுமாகிய அஃறிணைப்பெயரெல்லாம், விளி கொள்ளுங் காலந்தோன்றின், ஏகாரம் பெறுதலைத் தெற்றென வுடைய எ-று. (எ-டு.) மரம், மரமே, அணில், அணிலே; நரி, நரியே; புலி புலியே என வரும். அஃறிணைப்பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும், விளி கேளாதனவற்றைக் கேட்பனவாகச் சொல்லுவார் கருதியவாற்றான் விளியேற்பனவுமல்லது, ஒழிந்த பெயரெல்லாம் விளி யேலாமையின், ‘விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்’ என்றார். அதனானே சுட்டுப் பெயர் முதலாயின விளி யேலாமையுங் கொள்க. ‘தெளிநிலையுடைய ஏகாரம் வரலே’ என ஏகாரம் பெற்று விளி யேற்றலை யாப்புறுப்பவே, யாப்புறவின்றிச் சிறுபான்மை பிறவாற்றான் விளியேற்பனவு முளவென்பதாம். அவை ‘வருந்தினை வாழியென் னெஞ்சம்’ (அகம். 16) ‘கருங்கால் வெண்குரு கொன்று கேண்மதி’ (நற். 24) ‘காட்டுச் சாரோடுங் குறுமுயால்’ ‘ஒண்டூவி நாராய்’ என்னுந் தொடக் கத்தன. (34) 5. புறனடை இருதிணைப் பெயரிலும் சேய்மைவிளி 152. உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. (இ-ள்.) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் விளியேற் பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்குமிடத்து, தத்தம் மாத் திரையி னிறந்திசைத்தனவாம், சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கத்தின்கண் எ-று. (எ-டு.) நம்பீஇ, சாத்தாஅ என வரும். ‘அளபெடை மிகூஉம்’ என்றமையான், அளபெடைப் பெய ரொழித்து நின்ற பெயர் கொள்க. அளபிறந்தன என்றது, நெட்டெழுத்து அளபெடையாயும், அளபெடை மூன்று மாத்திரையி னிறந்தும், சேய்மைக்குத் தக்கவாறு நீண்டிசைக்கும் என்றவாறு. சேரமான், மலையமான் என்னும் ஈற்றயல் அளபிறந்தவழி இயல்பு விளி யென்னாது ஈற்றயல் நீண்டதாகக் கொள்க. அளபிறப்பன எழுத்தாக லின், ஒற்றுமை நயத்தாற் பெயரளபிறந்தன என்றார். (35) அம்ம என்னும் இடைச்சொல் விளி 153. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. (இ-ள்.) அம்மவென்னும் அசைச்சொல்லினது நீட்டம், விளி கொள்ளும் பெயரொடு தோன்றாது, இடைச்சொல்லொடு தோன்றிற் றாயினும், விளியாகக் கொள்வர் தெளிவோர் எ-று. (எ-டு.) அம்மா சாத்தா என வரும். சாத்தா என்பதே எதிர்முகமாக்குமாயினும், அம்மா என்பதும் அவ் வெதிர்முகமாக்குதலே குறித்து நிற்றலின், விளியாகக் கொள்ளப்படு மென்பார் ‘விளியொடு கொள்ப’ என்றார். (36) உயர்திணைப்பெயருள் விளி ஏலாதவை 154. தநநு எஎன அவைமுத லாகித் தன்மை குறித்த னரளஎன் இறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. (இ-ள்.) த ந நு என்னு முயிர்மெய்யையும் எ என்னுமுயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற ன ர ள என்னும் மூன்று புள்ளியை இறுதியாகவுடைய சொல்லும் அவை போல்வன பிறவுமாகிய பெயர்ச்சொல் வருமாயின், விளியொடு பொருந்துதலில எ-று. (எ-டு.) தமன் தமர் தமள், நமன் நமர் நமள், நுமன் நுமர் நுமள், எமன் எமர் எமள் எனவும்; தம்மான் தம்மார் தம்மாள், நம்மான் நம்மார் நம்மாள், நும்மான் நும்மார் நும்மாள், எம்மான் எம்மார் எம்மாள் எனவும் வரும். அன்னபிறவுமென்றதனான், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என வருவன கொள்க. அஃதேல், இவற்றைத் தத்தமீற்றகத் துணர்த்தாது ஈண்டுக் கூறியதென்னை யெனின், இவற்றை யீற்றகத் துணர்த்தின் மூன்று சூத்திரத் தானுணர்த்தல் வேண்டுதலிற் சூத்திரம் பல்கும்; அதனானாண்டுணர்த்தாரா யினார். அஃதேல், உயர்திணை யதிகாரத்துக்குப் பின்வைக்கவெனின், ஆண்டு வைப்பின் ‘விளம்பிய நெறிய விளக்குங் காலை’ (சொல். 150) என்னும் மாட்டேற்று இனிது பொருள் கொள்ளாதாம்; அதனான் பிறிதிட மின்மையின் ஈண்டு வைத்தாரென்பது. (37) விளிமரபு முற்றிற்று. 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இலக்கணம் உணர்த்துவது) 1. சொற்களின் இயல்பு சொற்கள் பொருளுணர்த்தல் 155. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. நான்கு சொல்லும் பொதுவகையா னுணர்த்தி, பொதுவிலக்கண மாத லொப்புமையானும் வேற்றுமை பெயரோ டியைபுடைமையானும் பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத்திற்கும் இடை வேற்றுமையிலக் கணமுணர்த்தி, இனிச் சிறப்புவகையான் நான்குசொல்லு முணர்த்துவா னெடுத்துக்கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற்கண்ணதாகிய பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனா னிது பெயரியலென்னும் பெயர்த்தாயிற்று. (இ-ள்.) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; பொருள் குறியாது நில்லா எ-று. ‘ஆயிரு திணையி னிசைக்கும்’ (சொல். 1) என்றதனான் இது பெறப் படுதலின் இச்சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று. சொல்லிசைக்கும் பொருளாவன இவ்விரண்டு திணையுமே பிறிதில்லையென்பதல்லது, சொல்லெல்லாம் பொருளுணர்த்துதன் மாலையவே; உணர்த்தாதன வில்லையென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின், அசைநிலை முதலாயினவும் பொருள்குறித்து நிற்குமென ஐய மறுத்தற்கு இச்சூத்திரம் வேண்டு மென்பது. அசைநிலை முதலாயின பொருளுணர்த்துமாறு மேலே கூறிப் போந்தாம். முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்பன பொருளுணர்த்தாவா லெனின், அவை தொடர்மொழியாகலான் ஈண்டைக் கெய்தா வென்பது. அஃதேல், தொடர்மொழிதான் பொருள் குறியாது வருமோவெனின், வாரா. அவை மெய்ப்பொருள் குறிப்பனவும் பொய்ப்பொருள் குறிப்பனவு மென இருவகைப்படும். அவற்றுள், பொய்ப்பொருள் குறிப்பனவும் பொருளுணர்த் துவனவேயாம்; அல்லாக்கால், இல்லோன் றலைவனாக வருந் தொடர் நிலைச் செய்யுள் பொருளுணர்த்தாமையின், அவை புலவராற் கொள்ளப் படாவென்பது. அஃதேல், இச் சூத்திரம் முதலாக ஐந்து சூத்திரத்தாற் கூறப்பட்டன பொதுவிலக்கண மாகலான், இவற்றை ஈண்டு வையாது கிளவியாக்கத்துள் வைக்கவெனின்:- இவை பொதுவிலக்கணமே யெனினும், ஆண்டுக் கூறப் பட்டன வழூஉக் காத்தலும் வழுஉக்காத்தற்கு உபகாரமுடையனவு மன்றே? ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தன’ என ஐயமகற்றலும் சொற் பொருள் இனைத்துப் பாகுபடுமென்றலும், சொல் லினைத்தென்றலு மென்பன வழூஉக் காத்தலும், வழூஉக்காத்தற் குபகாரமுடையனவு மன்மையான், ஆண்டுணர்த்தாது, பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்புவகை யான் நான்கு சொல்லு முணர்த்துங்கால் அவை யுணர்த்தியல்லது உணர்த்தலாகாமையின், அவற்றை யீண்டுணர்த்தினாரென்பது. பொருள் வேறுபாடு பற்றிச் சொல் லுணர்த்துமாறு முன்னர்க் காணப்படும். (1) சொல் தன்னையும் பொருளையும் உணர்த்தல் 156. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். (இ-ள்.) தன்னின் வேறாகிய பொருளறியப்படுதலும் பொருளறியப் படாது அச் சொற்றானே யறியப்படுதலும் இரண்டுஞ் சொல்லானா மென்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) சாத்தன், வந்தான், பண்டு காடு மன், உறு கால் என்பன வற்றான் பொருளுணரப்பட்டவாறும், நீயென்கிளவி, செய்தெனெச்சம், தஞ்சக் கிளவி, கடியென் கிளவி என்பனவற்றாற் பொருளுணரப்படாது அச் சொற்றாமே யுணரப்பட்டவாறுங் கண்டுகொள்க. ‘ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே’ (சொல். 1) ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (சொல். 155) ‘ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப’ (சொல். 69) என்புழிச் சொல்லென்னுஞ் சொல்லும் பெயரென்னும் பெயரும் அறியப்படுதற்கண் சொன்மை தெரிதலாம்; ஏனைச் சொல்லும் ஏனைப் பெயரு மறியப்படுதற்கண் பொருண்மை தெரிதலாம்; அதனான் ஆண்டுச் சொன்மை தெரிதலும் பொருண்மை தெரிதலும் ஒருங்கு வந்தன எனப்படும். அல்லாக்கால், சொல்லென்னுஞ் சொல் பொருளுணர்த்துதலும் பெயரென்னும் பெயரிறுதியுருபு வருதலும் பெறப்படாவா மென்பது. மேலைச் சூத்திரத்தாற் சொற்கள் பொருளுணர்த்து மென்பது பெறப்பட்டமையான், தானும் பிறிதுமெனப் பொருள் இரண்டு வகைப் படுமென அதனது பாகுபாடு உணர்த்தியவாறு. இதனாற் பயன், சொற் றன்னையுணர நின்றவழியுஞ் சொல்லே யாமென ஐயமறுத்தலாம். (2) குறிப்பும் வெளிப்படையும் 157. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (இ-ள்.) மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன்மாத்திரத் தான் விளங்கி வேறுநிற்றலுஞ் சொன்மாத்திரத்தாற் றோன்றாது சொல் லொடு கூடிய குறிப்பாற் றோன்றலுமென, இரண்டு கூற்றை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) அவன், இவன், உவன்; வந்தான், சென்றான் என்றவழிப் பொருள்தெரிபு வேறு நின்றன. ஒருவர் வந்தார் என்றவழி ஆண்பால் பெண்பாலென்பதூஉம், சோறுண்ணாநின்றான் கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்றவழித் தீங்கட்டாய் என்பதூஉம், குறிப்பாற் றோன்றின. கடுத்தின்றான், தெங்குதின்றான் என ஒன்றன் பெயராற் பிறிது பொருள் தோன்றலுங் குறிப்பிற் றோன்றலாம். தின்றானென்னுந் தொழிலொடு முதற்பொருள் இயையாமையின் அதனோ டியையுஞ் சினைப்பொருள் அத்தொட ராற்றலாற் பெறப்பட்டமையான் குறிப்பிற்றோன்றலாகாதெனின், அற்றன்று. அவ்வியையாமை சொல்லுவான் குறிப்புணர்தற் கேதுவாவ தல்லது முதற்பெயரைச் சினைப்பொருட்டாக்கு மாற்றலின்றாகலான், அதுவுங் குறிப்பிற் றோன்றலேயாமென்க. பிறவுமன்ன. ‘இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த இடத்து’ (குறள். 879) என்னுந் தொடர்மொழியான், “நிலைபெற்றபின் களையலுறிற் களைய லுற்றாரை அவர்தாங் கொல்வர்; அதனாற் றீயாரை அவர் நிலைபெறாக் காலத்தே களைக” என்னும் பொருள் விளங்குதலுங் குறிப்பிற் றோன்றலாம். அணியிலக்கணங் கூறுவார் இன்னோரன்னவற்றைப் பிறிது மொழித லென்பதோரணி யென்ப. (3) சொற்களின் பாகுபாடு 158. சொல்லெனப் படுப பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. (இ-ள்.) சொல்லாவன பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமென இரண்டென்று சொல்லுவர் அறிந்தோர் எ-று. பெயர்ச்சொற் கிலக்கணம் வேற்றுமையோத்தினுட் கூறினார்; வினைச்சொற் கிலக்கணம் வினையியலுட் கூறுப. பிற சொல்லு முளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப் ‘பெயரே வினையென் றாயிரண் டென்ப’ என்றார். இவற்றுள்ளும் பொருளது புடை பெயர்ச்சியாகிய தொழில்பற்றாது அப் பொருள்பற்றி வருஞ் சிறப்புடை மையாற் பெயரை முற்கூறினார். (4) 159. இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கின் தோன்று மென்ப. (இ-ள்.) இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையை யுஞ் சார்ந்து தோன்றும் எ-று. ‘அவற்றுவழி மருங்கிற்’ றோன்று மென்றாரேனும், பெயரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் இவ்விரண்டையும் அவற்றொடு தலைப் பெய்யச் சொல் நான்காமென்பது கருத்தாகக் கொள்க. சார்ந்து தோன்று மெனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும். வழக்குப் பயிற்சி நோக்கி இடைச்சொல் முற்கூறினார். (5) 2. பெயர்ச்சொல்லின் இலக்கணம் 160. அவற்றுள் பெயரெனப் படுபவை தெரியும் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துதற்கு உபகாரமுடைய பொதுவிலக்கண முணர்த்தி, நிறுத்த முறையானே இனிப் பெயர்ச்சொல் உணர்த்துகின்றார். (இ-ள்.) மேற்கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப் படுவன உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறிணைக்குரியவாய் வருவனவும், இரண்டு திணைக்கு மொத்த வுரிமையவாய் வருவனவுமென, மூன்று வேறுபாட்டனவாம், தோன்று நெறிக்கண் எ-று. (6) 161. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான. (இ-ள்.) இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாம் எ-று. அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறு ஆடூவிற்கும் மகடூ விற்கும், அஃறிணை யாண்பாற்கும் உரித்தாய் வருதலானும், அவள், மக்கள், மகள் என ளகரவீறு மகடூவிற்கும், பல்லோர்க்கும், அஃறிணைப் பெண் பாற்கும் உரித்தாய் வருதலானும், பெண்டாட்டி நம்பி எனவும், ஆடூ மகடூ எனவும் இகரவீறும் ஊகாரவீறும் இருபாற்கு முரியவாய் வருதலானும், வினைச்சொற்போல இன்னவீறு இன்னபாற் குரித்தெனப் பெயர்ச்சொல் ஈறுபற்றி உணர்தலாகாமையின், ‘உரியவையுரிய’ என்றார். பிறவுமன்ன. பல்குமென் றஞ்சி இன்ன பெயர் இன்ன பாற் குரித்தெனக் கிளந் தோதாராயினார். அஃதேல், இவற்றது பாற்குரிமை யெற்றாற் பெறுதுமோ வெனின், ‘உரியவை’யென்றது வழக்கின்கட் பாலுணர்த்துதற்குரியவாய் வழங்கப்படுவன வென்றவாறன்றே? அதனான் வழக்கு நோக்கிக் கொள்ளப் படுமென்பது. மற்றும், நஞ்சுண்டான் சாம் என்பது ஒருபாற்குரிய சொல்லாயினும், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப் பாற்கு முரித்தாம் அச்சொல்லென இப்பொருண்மை யுணர்த்துகின்றது இச்சூத்திரமென்றாரால் உரையாசிரியரெனின், நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான் ஒரு பால்மேல் வைத்து நஞ்சுண்டான் சாமென்றதல்லது, ஆண்டுத் தோன்றும் ஆண்மையும் ஒருமையுஞ் சாதற்குக் காரணமென்னுங் கருத்தினனல்லன்; அதனாற் சொல்லுவான் கருத்தொடு கூடிய பொருளாற்றலாற் சாதல் ஏனைப்பாற்கும் ஒக்குமெனச் சேறல் சொல்லிலக்கணத்திற் கூறப்படாமையான், ஆசிரியர், ‘ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவன தாமே வழக்கென மொழிப’ (பொருளியல். 28) என இப்பொருண்மை பொருளியலிற் கூறினாராகலின், இச் சூத்திரத்திற்கு அஃதுரையாதல் உரையாசிரியர் கருத்தன்றென்க. அல்லதூஉம் பார்ப்பான் கள்ளுண்ணான் என்றவழிக் கள்ளுண்ணாமை சாதிபற்றிச் செல்வ தொன்றாகலின் பார்ப்பனிக்கும் பார்ப்பார்க்குமல்லது பிற சாதியார்க்கும் அஃறிணைக்குஞ் செல்லாமையின், ஐம்பாற்கிளவிக்குமுரிய வென்றல் பொருந்தாமையானும் அவர்க்கது கருத்தன்மை யறிக. (7) 3. உயர்திணைப் பெயர்கள் 162. அவ்வழி அவன் இவன் உவனென வரூஉம் பெயரும் அவள் இவள் உவளென வரூஉம் பெயரும் அவர் இவர் உவரென வரூஉம் பெயரும் யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோடு அப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. (இ-ள்.) மூவகையாக மேற்சொல்லப்பட்ட பெயருள், அவனென்பது முதலாக யாவரென்ப தீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப்பெயர் எ-று. யானென்பது, ஒருவன் ஒருத்தி யென்னும் பகுதி யுணர்த்தாதாயினும், அத்திணை யொருமை யுணர்த்தலின் பாலறிவந்த பெயராம். அல்லதூஉம், பாலறி வந்தவெனப் பன்மைபற்றிக் கூறினாரெனினுமமையும். (8) 163. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த இகர இறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் முறைமை சுட்டா மகனு மகளும் மாந்தர் மக்க ளென்னும் பெயரும் ஆடூ மகடூ ஆயிரு பெயரும் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன. (இ-ள்.) இப்பெயர் பதினைந்தும் மேற்கூறப்பட்டன போலப் பாலறிவந்த உயர்திணைப்பெயராம் எ-று. ஆண்மையடுத்த மகனென் கிளவி ஆண்மக னென்பது. ஒற்றுமை நயத்தான் ஆண்மை யுணர்த்துஞ் சொல்லை ஆண்மை யென்றார். இது பெண்மையடுத்த வென்புழியு மொக்கும், பெண்மையடுத்த மகளென் கிளவியும் பெண்மையடுத்த இகரவிறுதியுமாவன பெண்மகள், பெண் டாட்டி என்பன. நம்மூர்ந்துவரூஉ மிகரமும் ஐகாரமுமாவன நம்பி, நங்கை என்பன. நமக்கின்னாரென்னும் பொருள்பட வருதலின் நம்மூர்ந்துவரூஉ மென்றார். அவை நம்மென்பது முதனிலையாக அப்பொருளுணர்த்தா வாயின், நம்மூர்ந்து வரூஉ மிகரமும் நம்மூர்ந்து வரூஉ மைகாரமுமெனப் பிரித்துக் கூறல் வேண்டுமென்பது. இவை யுயர்சொல். முறைமை சுட்டா மகனு மகளுமாவன முறைப்பெயரன்றி மகன் மகளென ஆடூ மகடூ வென்னுந் துணையாய் வருவன. மாந்தர் மக்களென்பன பன்மைப் பெயர். ஆடூ மகடூ வென்பன மேற் சொல்லப்பட்டன. சுட்டு முதலாகிய அன்னும் ஆனுமாவன அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன்; அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்பன. இவற்றுள் ஆனீறு இக் காலத்துப் பயின்று வாரா. அவை முதலாகிய பெண்டென் கிளவி இக்காலத்து விழுந்தனபோலும். பெண்டன் கிளவி யென்று பாடமோதி, அவையாவன அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பாருமுளர். ஒப்பொடு வரூஉங் கிளவியாவன பொன்னன்னான்; பொன்னன்னாள் என்னுந் தொடக்கத்தன. இவை மேலன போலப் பயின்று வாராமையின், அவற்றோடொருங்கு வையாது வேறு கூறினார். (9) 164. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். (இ-ள்.) எல்லாரு மெனவும், எல்லீரு மெனவும், பெண்மகனெனவும் வரும் மூன்றும் மேற் கூறப்பட்டனபோலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் எ-று. புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார்* இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப. எல்லாரும் எல்லீரும் என்புழிப் படர்க்கைப் பன்மை யுணர்த்தும் ஆரும் முன்னிலைப் பன்மை யுணர்த்தும் ஈரும் உம்மை யடுத்து வருத லானும், பெண்மகனெனப் பால் திரிதலானும், இவற்றை வேறு கூறினார். (10) *மாறோக்கம்-கொற்கை சூழ்ந்த நாடு. மாறோகம் எனவும் பாடம். 165. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரோடு அன்றி யனைத்தும் அவற்றியல் பினவே. (இ-ள்.) நிலப்பெயர் முதலாகச் சொல்லப்பட்டனவும் மேலன போலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் எ-று. நிலப்பெயர் - அருவாளன், சோழியன் என்பன. குடிப்பெயர் - மலையமான், சேரமான் என்பன. குழுவின் பெயர் - அவையத்தார், அத்தி கோசத்தார் என்பன. வினைப்பெயர் - வருவார், செல்வார் என்பன; தச்சன், கொல்லன் என்பனவு மவை. உடைப்பெயர் - அம்பர் கிழான், பேரூர்கிழான் என்பன; வெற்பன், சேர்ப்பன் என்பனவுமவை. பண்பு கொள் பெயர்-கரியான், செய்யான் என்பன. பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயர்-தந்தையர், தாயர் என்பன. பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்-பெருங்காலர், பெருந்தோளர் என்பன. பல்லோர்க் குறித்த திணை நிலைப்பெயர் - பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன. பல்லோர்க் குறித்தவென்று விசேடித்தலான், இம்மூவகைப் பெயருள் ஒருமைப் பெயர் இரண்டு திணைக்கு முரியவாம். கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்- பட்டிபுத்திரர், கங்கைமாத்திரர் என்பன. இவை ஆடல்குறித் திளையார் பகுதிபடக் கூடியவழி யல்லது வழங்கப்படாமை யிற் குழுவின் பெயரின் வேறாயின. அக் குழுவின் பெயர் ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழ்வன. இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயராவன ஒருவர், இருவர், முப்பத்துமூவர் என்பன. இன்றிவரென்பது இத் துணையரென்னும் பொருட்டுப்போலும். எண்ணா கிய வியல்பு பற்றிப் பொருளுணர்த்துதலான் ‘எண்ணியற் பெயர்’ என்றார். ஒருநிமித்தம்பற்றிச் சேறலிற் பல்பெயர் ஒரு பெயராக அடக்கப் பட்டமையான், நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினார். அஃதேல், ஒப்பொடு வரூஉங்கிளவியும் அன்னதாகலின் இவற்றொடு வைக்கற் பாற்றெனின்? அற்றேனும், வழக்குப்பயிற்சி யின்மையான் அவற்றொடு வைத்தா ரென்க. (11) புறனடை 166. அன்ன பிறவும் உயர்திணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பெயர்போல்வன பிறவும், உயர் திணைக்கண் பன்மையும் ஒருமையுமாகிய பாலறிவந்த எல்லாப் பெயரும், உயர்திணைப் பெயராம் எ-று. *பாலறிவந்த என்னாது, ஒருமைப்பாலுணர்த்துவனவும் அடங்கு தற்குப் ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த’ என்றார். அன்னபிறவுமாவன-ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றை யாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தன. (12) *(பாடம்) முப்பாலறிவந்த 4. அஃறிணைப் பெயர்கள் 167. அதுஇது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. நிறுத்த முறையானே உயர்திணைப் பெயருணர்த்தி, இனி யஃறிணைப் பெயருணர்த்துகின்றார். (இ-ள்.) அது, இது, உதுவென வரூஉம் பெயரும், அப்பெயர்க்கு முதலாகிய சுட்டே முதலாக ஆய்தத்தொடு கூடி அஃது, இஃது, உஃது என வரூஉம் பெயரும், அவை, இவை, உவையென வரூஉம் பெயரும், அச்சுட்டே முதலாக அவ், இவ், உவ் என வரூஉம் வகரவீற்றுப் பெயரும், யாது, யா, யாவை என்னும் வினாப்பெயருமென இப்பதினைந்து பெயரும், பால் விளங்க வரூஉம் அஃறிணைப் பெயராம் எ-று. சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும் அவை முதலாகிய வகர வீற்றுப் பெயரும் அவையல்லதின்மையின், அவ்வாறு கூறினார். (13) 168. பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள வில்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும் ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன. (இ-ள்.) பல்லவென்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும் மேற்கூறப்பட்ட அஃறிணைப் பெயர்போலப் பாலுணர நிற்கும் எ-று. பல்ல, பல, சில, உள்ள, இல்ல வென்னும் ஐந்து பெயரும் தம்மை யுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. வினைப்பெயர்க் கிளவியாவன வருவது, செல்வது என்பன; பண்பு கொள் பெயராவன கரியது, செய்யது என்பன; இனைத்தெனக் கிளக்கு மெண்ணுக் குறிப் பெயர் ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருண்மேனின்றன. ஒப்பினாகிய பெயர்நிலையாவன பொன்னன்னது, பொன்னன்னவை என்பன. முன்னையவைபோலப் பல்ல முதலாயின வழக்கின்கட் பயின்று வாராமையின், வேறு கூறினார். பல சில வென்பன பயின்றவாயினும், பல்ல இல்ல உள்ள என்பனவற்றோடு ஒப்புமையுடையவாகலின், அவற்றொடு கூறினார். (14) அவற்றிற்குக் கள் விகுதி 169. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. (இ-ள்.) கள்ளென்னு மீற்றொடு பொருந்தும் அஃறிணையியற்பெயர் கள்ளீற்றொடு பொருந்துதற்கண் பலவறி சொல்லாம் எ-று. அஃறிணை யியற்பெயராவன ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர். ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இயற்பெயரென்றார். இவை கள்ளென்னு மீற்றவாய், ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலின் பலவறி சொல்லாயினவாறு கண்டுகொள்க. அஃறிணையியற்பெய ரெனவே, பாலறிபெயரேயன்றி அஃறிணைப் பொதுப்பெயரு முளவென்பது பெற்றாம். பாற்குரிமை சுட்டாது அஃறிணைக்குரிமை சுட்டிய, ‘அவ்வியற் பெயர்’ என்றார். (15) புறனடை 170. அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. (இ-ள்.) மேற்கூறப்பட்ட பெயர்போல்வன பிறவும், அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்குரிய எ-று. அன்னபிறவு மென்றதனாற் கொள்ளப்படுவன பிறிது, பிற; மற்றையது, மற்றையன; பல்லவை, சில்லவை; உள்ளது, இல்லது; உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன. (16) அஃறிணை இயற்பெயர் பால் உணர்த்துமாறு 171. தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. (இ-ள்.) கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் விளங்கும் நிலையுடைய, அதற்கேற்ற வினையொடு தொடர்ந்தவழி எ-று. (எ-டு.) ஆ வந்தது, ஆ வந்தன; குதிரை வந்தது, குதிரை வந்தன என வினையாற் பால் விளக்கியவாறு கண்டுகொள்க. இஃது அஃறிணைப் பெயரிலக்கணமாயினும், பொதுப்பெயர் வினையொடு வந்து பால் விளங்குத லொப்புமை நோக்கி ஈண்டு வைத்தா ரென்பது, அஃதேல், கள்ளொடு சிவணுமென்பதனையும் ஈண்டு வைக்க வெனின், இயற்பெயர் முன்னராரைக்கிளவி போலக் கள்ளென்பது அஃறிணை யியற்பெயர்க்கு ஈறாய் ஒன்றுபட்டு நிற்றலின், வினையானன்றிப் பெயர்தாமே பன்மை யுணர்த்தியவாம்; அதனால் அதனைப் பாலறி வந்த பொரு ளுணர்த்தும் அதிகாரத்து வைத்தார். (17) 5. விரவுப்பெயர்கள் திணை தெரியுமாறு 172. இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின் திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே. (இ-ள்.) இருதிணைச் சொல்லாதற்குமொத்த உரிமையவாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடும் விரவுப்பெயரெல்லாம், ஆராயுங்கால், தத்தம் மரபின் வினையோடியைந்தல்லது, திணைவிளங்க நில்லா எ-று. வினையோடல்லதெனவே, திணைக்கேற்றவாற்றான் ஈறு வேறு படாது ஓரீற்றவாய் நிற்றலின் பெயர் தாமே நின்றும், தத்தமரபினென்ற தனாற் பொதுவினையொடு வந்தும் திணை விளக்கா வென்பது பெறப்படும். இனி அவை தத்தம் மரபின் வினையொடு பால் விளக்குமாறு:- சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முடவன் வந்தது என வந்தவாறு கண்டுகொள்க. தத்தம் மரபின் வினையாவன உயர்திணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினோரீற்றுப் படர்க்கைவினை. எல்லாப் பெயரு மென்பதனை ஆறு போயினாரெல்லாருங் கூறை கோட்பட்டார் என்பது போலக் கொள்க. இருதிணைக்கும் பொதுவாகிய சொல், வினையாற் பொதுமை நீங்கி ஒருதிணைச்சொல்லா மென்பது கருத்தாகலின், ஈண்டுப் பாலெனப் பட்டது திணையேயாம். ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனான் தத்தம் மரபின் வினையோடல்லது பால்தெரிபில என்றாரேனும், சாத்தனொருவன் சாத்தனொன்று எனத் தத்தம் மரபின் பெயரொடு வந்து பால்விளக்குதலுங் கொள்க. (18) 173. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை யொருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான. (இ-ள்.) நிகழ்காலம்பற்றி வரும் பலர்வரை கிளவியான் உயர்திணை யொருமைப்பால் தோன்றுதலும் உரித்து, அவ்வொருமைப்பால் தோன்றுதற் கேற்ற வினையிடத்து எ-று. பலர்வரை கிளவியென்றது செய்யுமென்னு முற்றுச்சொல்லை. (எ-டு.) சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலுமாகிய வினை அஃறிணைக்கேலாது ஒருவற்கும் ஒருத்திக்கு மேற்றலின், உயர்திணை யொருமைப்பால் விளங்கிய வாறு கண்டுகொள்க. நிகழூஉநின்ற தொழிலையுணர்த்துஞ் சொல்லை ஒற்றுமை நயத்தான் ‘நிகழூஉநின்ற பலர்வரைகிளவி’ யென்றார். நிகழூஉநின்ற வென்றது நிகழா நின்ற வென்றவாறு. நடத்தல் கிடத்தல் முதலாகிய பிறதொழில்பற்றி வரும் பலர்வரை கிளவியான் உயர்திணையொருமை தோன்றாமையின், ‘அன்னமரபின் வினைவயி னான’ வென்றார். தோன்றலு முரித்தென்னும் எதிர்மறை யும்மையான், அன்ன மரபின் வினைக்கட் டோன்றாமையு முரித்தென்னாது, பலர்வரை கிளவியாற் றோன்றாமையு முரித்தென்று கொள்க. அஃதேல், யாழெழூஉதலுஞ் சாந்தரைத்தலு முதலாகிய தொழில் வேறுபாடு பற்றி வரும் முன்னிலை வினையானும் வியங்கோளானும் இருவகை யெச்சத்தானு மெல்லாம் உயர்திணைப்பால் தோன்றுதலான் பலர்வரை கிளவியி னென வரைந்துகூறல் பொருந்தாதெனின், அற்றன்று. ‘முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல்’ (சொல். 193) என முன்னிலைப் பெயராற் பாலுணருமாறு முன்ன ருணர்த்தப்படுதலானும், அன்னமரபின் வினைபற்றி வரும் வியங்கோள் ஏவற் பொருண்மைத்தாகலின் ஏயதுணர்ந்து செய்யு முயர்திணை சுட்டியல்லது பெரும்பான்மையும் வாராமையான் ஆண்டன்ன மரபின் வினையாற் பாலுணர்தல் ஒருதலை யன்றாகலானும் பெயரெச்சத்திற்கு முடிவாகிய பெயரும், வினையெச்சமும் சிறுபான்மை பொதுவினை கொண்ட வழியல்லது தத்த மரபின் வினை கொண்டவழி அவ்வினையே பால் விளக்கலான் ஆண்டெச்சம் பால் விளக்கல் வேண்டா மையானும், அவை யொழித்துப் பலர் வரை கிளவியே விதந்து கூறினார், இருவகை யெச்சத்தானும் வியங்கோளானுஞ் சிறு பான்மை உயர்திணைப் பால் தோன்றல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. நிகழ்காலத்துப் பிறசொல்லை நீக்குதற்குப் ‘பலர்வரைகிளவி’ யென்றார். பன்மைவிரவுப்பெயரை நீக்குதற்கு ‘நிகழூஉநின்ற’ வென்றார். மேல் விரவுப்பெயர் தத்தமரபின் வினையோடல்லது பால்தெரிபில வென்றார்; இனி அவற்றானன்றிப் பொதுவினையானும் பால்தெரிய நிற்கு மென்பது உணர்த்தியவாறு. அஃதேல், சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும் எனச் செய்யுமென்னுஞ் சொல்லான் அஃறிணைப் பாலுந் தோன்றுதலின், அது கூறாராயிற் றென்னையெனின்:-எழூதலும் அரைத்தலும் அஃறிணைக் கென்னும் இயைபில்லாதவாறு போலப் புற்றின்றல் உயர் திணைக்கு எவ்வாற்றானு மியைபின்றெனப் படாமையானும், கன்றீனும் என்புழி ஈனுமென்னும் வினையானன்றிக் கன்றென்னுஞ் சார்பான் அஃறிணைப் பால் தோன்றுதலானும், ஒருமை வினையான் ஒரோவழி அஃறிணைப்பால் தோன்றினும் அது சிறுபான்மையாகலானும், கூறாரா யினா ரென்பது. (19) விரவுப்பெயரின் தொகை, வகை 174. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய அல்ல பிறவு மாஅங்கு அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே. விரவுப்பெயர் பால்தெரிய நிற்குமா றுணர்த்தி, இனி அவைதம்மை யுணர்த்துவா னெடுத்துக் கொண்டார். (இ-ள்.) இயற்பெயர் முதலாக நீ யென்ப தீறாக எடுத்துச் சொல்லப் பட்டனவல்லாத அன்னபிறவும் ஆண்டு வருமாயிற் சொல்லப்பட்ட வற்றொடுங் கூட்டுக எ-று. இயற்பெயராவன சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருளேபற்றி வரும் இடுபெயர். இயற்பெயரெனினும் விரவுப்பெய ரெனினு மொக்குமாயினும், அவற்றுள் ஒருசாரனவற்றிற்கு அப் பெயர் கொடுத்த தென்னையெனின்,அவற்றது சிறப்பு நோக்கி அப் பெயர் கொடுத்தார்; பாணியுந் தாளமும் ஒருபொருளவாயினும் இசை நூலார் தாளத்துள் ஒருசாரனவற்றிற்குப் பாணியென்னும் பெயர் கொடுத்தாற் போல வென்பது. சினைப்பெயராவன பெருங்காலன், முடவன் என அச்சினை யுடைமையாகிய நிமித்தம்பற்றி முதன்மேல் வரும் பெயர். சினைமுதற் பெயராவன சீத்தலைச்சாத்தன், கொடும்புறமருதி எனச் சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர். சாத்தன், மருதி யென்னு முதற்பெயர் சினைப்பெயரொடு தொடர்ந்தல்லது குறித்த பொருளுணர்த்தாமையிற் சினை முதற் பெயராயின. முறைப்பெயராவன தந்தை தாயென முறைபற்றி முறையுடைப் பொருண்மேல் வருவன. முறையாவது பிறவியான் ஒருவனோ டொருவற்கு வருமியைபு. அல்லன வைந்துந் தம்மை யுணர்த்தி நின்ற வாகலான், தாமென்பது முதலாகிய சொல்லேயாம். பிறவுமென்றதனான், மக, குழவி போல்வன கொள்க. இவற்றை உயர் திணைப் பெயரென்றாரால் உரையாசிரியரெனின், மரபியலுள், ‘மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான’ (மர. 14) எனவும், ‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை’ (மர. 19) எனவும், அவை அஃறிணைக்காதல் கூறி, ‘குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே’ (மர. 23) என வுயர்திணைக்கு மோதிவைத்தாராகலின், அவை விரவுப்பெயரேயாம்; அதனான் அது போலியுரை யென்க. ஒரு நிமித்தத்தான் இரண்டுதிணைப் பொருளுமுணர்த்துதலின் விரவுப் பெயர் பொருடோறு நிமித்தவேறுபாடுடைய பலபொருளொரு சொல்லன்மை யறிக. (20) விரவுப்பெயரின் விரி 175. அவற்றுள் நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்தம் மரபின. (இ-ள்.) மேற்கூறிய விரவுப்பெயருள் இயற்பெயருஞ் சினைப் பெயருஞ் சினைமுதற்பெயரும் ஓரொன்று நந்நான்காம்; முறைப்பெயர் இரண்டாம்; ஒழிந்தன ஐந்து பெயருந் தத்தமிலக்கணத்தனவாம் எ-று. தத்தமிலக்கணத்தன வென்றது பொதுவிலக்கணத்தன வல்ல, சிறப் பிலக்கணத்தனவேயா மென்றவாறு. எனவே, அவை ஓரொன்றாகி நிற்கு மென்றவாறாம். ஈண்டுத் தத்தமென்பது, அந்நிகரன வெனப் பொதுமை சுட்டாது, ஓரொன்றாய் நின்ற பெயரைச் சுட்டி நின்றது. தனிப்பெயரைந் தும் விரிப்பெயர் பதினான்குமாகப் பத்தொன்பதென்றவாறாம். கூறப்பட்ட பெயரது பாகுபாடாகிய ஒருபொரு ணுதலுதல்பற்றி ஒரு சூத்திரமாயிற்று. நான்காய் விரிதலும் இரண்டாய் விரிதலுந் தாமே யாதலு மாகிய பொருள்வேற்றுமையான் மூன்று சூத்திரமெனினு மமையும். (21) இயற்பெயர் 176. அவைதாம் பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்று அந்நான் கென்ப இயற்பெயர் நிலையே. சினைப்பெயர் 177. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. சினைமுதற் பெயர் 178. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று அந்நான் கென்ப சினைமுதற் பெயரே. முறைப்பெயர் 179. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்று ஆயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. இயற்பெயர் முதலிய நான்கன் விரியாகிய பதினான்கும் இவையென வுணர்த்தியவாறு. இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். இயற்பெயர் முதன்மூன்றும் ஓரொன்று நந்நான்காய் விரிதலும், முறைப் பெயர் இரண்டாதலும், மேலைச் சூத்திரத்தாற் பெறப்பட்டமை யான் அந் நான்கும் இரண்டுமாவன இவையென்பது இச்சூத்திரங்கட்குக் கருத்தாகக் கொள்க. இவ்வா றிடர்ப்படாது தொகைச்சொற்களைப் பயனிலையாகக் கொள்ளவே, இச் சூத்திரங்களான் அவையின்ன வென்ற லும் இத்துணைய வென்றலும் பெறப்படுமாகலின், மேலைச் சூத்திரம் வேண்டாவெனின்; அற்றன்று. இவற்றான் விரவுப்பெயர் பத்தொன்பதென் னும் வரையறை பெறப்படாமை யானும், வகுத்துக்கூறல் தந்திரவுத்தியாக லானும் அது வேண்டு மென்பது. (22-25) பெண்மை சுட்டிய பெயர் 180. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. மேற்கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும்பற்றிப் பாலுணர்த் திய வெடுத்துக்கொண்டார். அவை பெண்மைப்பெயர் நான்கும், ஆண்மைப் பெயர் நான்கும், பன்மைப்பெயர் மூன்றும், ஒருமைப்பெயர் மூன்றுமாம். (இ-ள்.) பெண்மை பற்றி வரும் நான்கு பெயரும் அஃறிணைப் பெண்ணொன்றற்கும் உயர்திணை யொருத்திக்கும் உரிய எ-று. அந்நான்குமாவன:- பெண்மையியற்பெயரும். பெண்மைச்சினைப் பெயரும், பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை முறைப் பெயருமே யாம். (எ-டு.) சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும்; முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும்; அவை முறையானே அஃறிணைப் பெண்மைக்கும், உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. முடமென்பது சினையது விகாரமாகலிற் சினையாயிற்று. ஒன்றற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், பெண்மை சுட்டிய பெயரென்றமையான் அஃறிணைப் பெண்ணென்றேயாம். இஃது ‘ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்’ (சொல். 181) என்புழியு மொக்கும். ஒன்றிய நிலையுடையவற்றை ‘ஒன்றிய நிலை’ யென்றார். (26) ஆண்மை சுட்டிய பெயர் 181. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. (இ-ள்.) ஆண்மை பற்றி வரும் நான்கு பெயரும் அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை யொருவனுக்கும் உரிய எ-று. அந்நான்குமாவன: ஆண்மை யியற்பெயரும், ஆண்மைச் சினைப் பெயரும், ஆண்மைச் சினைமுதற்பெயரும், ஆண்மை முறைப் பெயருமே யாம். (எ-டு.) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவும்; தந்தைவந்தது, தந்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணையா ணொன்றற்கும், உயர்திணை யாண்பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (27) பன்மை சுட்டிய பெயர் 182. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே யொருவ ரென்னும் அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. (இ-ள்.) பன்மை சுட்டி வரும் மூன்று பெயரும் அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை யொருமையுமெனச் சொல்லப்பட்ட அம்மூன்று பாற்கும் உரிய எ-று. அம்மூன்றுமாவன: பன்மை யியற்பெயரும், பன்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைமுதற்பெயருமாம். (எ-டு.) யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங்கழுத்தல் வந்தன, நெடுங் கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும்; பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணை யொருமைக்கும், அத்திணைப் பன்மைக்கும், உயர்திணையொருமைக்கு உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பன்மைக்கேயன்றி ஒருமைக்குமுரியவாய் வருவனவற்றைப் பன்மைப் பெயரென்ற தென்னையெனின் நன்று சொன்னாய்: பெண்மைப் பெயர் முதலாயின பிறபெயரா னுணர்த்தப்படாத பெண்மை முதலாயின வற்றை உணர்த்தலானன்றே அப்பெயரவாயின. என்னை? பெண்மை முதலாயின பிறபெயரா னுணர்த்தப்படுமாயின், அப்பெண்மை முதலாயின வற்றான் அப் பெயர் வரைந்து சுட்டலாகாமையின். பன்மைப்பெயர் ஒருமை யுணர்த்து மாயினும், பிறவற்றா னுணர்த்தப்படாத பன்மையை ஒருகா லுணர்த்தலின் அப்பன்மையான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப் பெயரவாயின. அற்றேனும், பன்மை சுட்டிய பெயரென்றமையாற் பன்மையே யுணர்த்தல் வேண்டுமெனின், அற்றன்று. இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலுமென விசேடித்தல் இருவகைத்து. வெண்குடைப் பெருவிறல் என்றவழி, செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி வெண்குடையா னென்பதுபட நிற்றலின் அஃதியைபின்மை நீக்கலாம். கருங்குவளை என்றவழிச் செம்மை முதலாயினவற்றோடு இயைபு நீக்கலின், அது பிறிதினியைபு நீக்கலாம். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல, ஒருமையியைபு நீக்காது பன்மை சுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டுமென்பது படநின்றது. அதனான் விசேடிக்குங்காற் பிறிதினியைபு நீக்கல் ஒருதலையன்றென்க. அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை யொரு மையுமாகிய பலவற்றையும் உணர்த்தலாற் பன்மை சுட்டிய பெயரென்பாரு முளர். அஃதுரையாசிரியர் கருத்தன்மை அவ் வுரையான் விளங்கும். அன்றிப்பாற்கு மென்னுமும்மை, அம்மூன்றுபாற்கு மென்பது படநிற்றலின், முற்றும்மை. (28) ஒருமை சுட்டிய பெயர் 183. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. (இ-ள்.) ஒருமை சுட்டிவரும் மூன்று பெயரும் அஃறிணை யொருமைக்கும், உயர்திணை யொருமைக்கும் உரிய எ-று. அம்மூன்றுமாவன: ஒருமையியற்பெயரும், ஒருமைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைமுதற்பெயருமாம். (எ-டு.) கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும்; செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும்; கொடும்புறமருது வந்தது, கொடும்புறமருது வந்தான், கொடும்புறமருது வந்தாள் எனவும் அவை முறையானே அஃறிணை யொருமைக்கும், உயர்திணையொருமைக்கும் வந்தவாறு கண்டுகொள்க. பெண்மைப் பெயரும் ஆண்மைப் பெயரும் ஒருமை யுணர்த்து மாயினும், இவை பெண்மை ஆண்மையென்னும் வேறுபாடுணர்த்தாது ஒருமையுணர்த்தலான், இவற்றை ஒருமைப் பெயரென்றார். (29) தாம் என்னும் பெயர் 184. தாமென் கிளவி பன்மைக்கு உரித்தே. தத்தம் மரபினவெனப்பட்ட பெயர் பாற்குரியவாய் வருமா றுணர்த்து கின்றார். (இ-ள்.) தாமென்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மைப் பாற்கு உரித்து எ-று. (எ-டு.) தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (30) தான் என்னும் பெயர் 185. தானென் கிளவி யொருமைக்கு உரித்தே. (இ-ள்.) தானென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப் பாற்கு உரித்து எ-று. (எ-டு.) தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது என வரும். (31) எல்லாம் என்னும் பெயர் 186. எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. (இ-ள்.) எல்லாமென்னும் பெயர் இரண்டு திணைக்கண்ணும் பன்மை குறித்து வரும் எ-று. வழியென்றது இடம். பொருள் சொன்னிகழ்தற்கிடமாகலிற் பல்பொருளைப் ‘பல்வழி’ என்றார். (எ-டு.) எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தன என வரும். எல்லாமென்னும் பெயர் இரண்டுதிணைக்கண்ணும் பன்மை குறித்து வருமென்னாது ‘பல்வழி’யென்றது, மேனி யெல்லாம் பசலை யாயிற்று என ஒரு பொருளின் பல்லிடங்குறித்து நிற்றலுமுடைத்தென்ப தூஉம் கோடற்கும் போலும். அஃது எஞ்சாப்பொருட்டாய் வருவதோ ருரிச்சொல்லென்பாரு முளர். (32) எல்லாம்: மேலும் ஒரு விதி 187. தன்னு ளுறுத்த பன்மைக் கல்லது உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை. (இ-ள்.) எல்லாமென்னுஞ் சொல் உயர்திணைக் காங்கால், தன்மைப் பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது எ-று. ‘நெறிதா ழிருங்கூந்த னின்பெண்டி ரெல்லாம்’ (கலி. 97) எனப் படர்க்கைக்கண்ணும் வந்ததாலெனின், எழுத்ததிகாரத்துள் ‘உயர்திணை யாயி னம்மிடை வருமே’ (எழுத். 190) எனத் தன்மைக்கேற்ற சாரியை கூறினமையானும், ஈண்டு நியமித்தலானும், அஃதிடவழுவமைதியா மென்பது. தன்மைச்சொல் அஃறிணைக்கின்மையின், எல்லாமென்பது பொதுமையிற் பிரிந்து தன்னுள்ளுறுத்த பன்மைக்கண் வந்துழி உயர்திணை யீற்றுப் பெயரெனப்படினும், இருதிணைப்பன்மையு முணர்த்துதற் கேற்றுப் பொதுப் பிரியாது நின்றவழி விரவுப் பெயராதற் கிழுக்கின்மை யறிக. எல்லாப் பார்ப்பாரும், எல்லாச் சான்றாரும் எனப் படர்க்கைக்கண் வருதலும் கோடற்குத் தன்னுள்ளுறுத்த பன்மைக் காங்கால் உயர்திணை மருங்கி னல்லதாகாதென மொழிமாற்றி யுரைத்தாரால் உரையாசிரிய ரெனின், படர்க்கைக்கண் வருதல் இடவழுவமைதியென்ற வழிப்படு மிழுக் கின்மை யானும், ‘தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ (சொல். 43) எனவும், ‘யான் யாம் நாமென வரூஉம் பெயர்’ (சொல். 162) எனவும் பிறாண்டு மோதியவாற்றான், தன்மைச்சொல் அஃறிணைக்கின்மை பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாமையானும், எழுத்ததிகாரத்துள் ‘உயர்திணை யாயி னம்மிடை வருமே’ (190) எனத் தன்மைக்குரிய சாரியையே கூறலானும், அது போலியுரை யென்க. ஆண்டு ஆக்கம் பெருக்கம். பெருக்கமில்லையெனவே, சிறு பான்மை ஏனையிடத்திற்கு முரித்தா மென்பாருமுளர். (33) நீயிர், நீ என்னுஞ் சொற்கள் 188. நீயிர் நீயென வரூஉங் கிளவி பால்தெரி பிலவே யுடன்மொழிப் பொருள. (இ-ள்.) நீயிர் நீயென்னு மிரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி தெரியநில்லா, இருதிணையு முடன் றோன்றும் பொருள எ-று. உடன்மொழிப்பொருள வென்றது, இருதிணைப்பொருளும் ஒருங்கு வரத்தோன்று மென்றவாறு. பிரித்தொருதிணை விளக்கா வென்ற வாறு. (எ-டு.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருதிணைக்கு முரிய பெயரெல்லாந் தத்தமரபின் வினையொடு வந்து திணை விளக்குமன்றே? இவற்றிற்கு அன்ன வினையின்மையின் ஒருவாற்றானுந் திணை விளக்காமையின், ‘பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள’ வென்றார். (34) நீ என்னுஞ் சொல் 189. அவற்றுள் நீயென் கிளவி யொருமைக் குரித்தே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டு பெயருள் நீயென்னும் பெயர் ஒருமைக்குரித்து எ-று. ஒருமையாவது, ஒருவன் ஒருத்தி ஒன்றென்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை. (எ-டு.) நீ வந்தாய் என வந்தவாறு கண்டுகொள்க. (35) நீயிர் என்னுஞ் சொல் 190. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. (இ-ள்.) நீயிரென்னும் பெயர் பன்மைக்குரித்து எ-று. பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொதுவாகிய பன்மை. (எ-டு.) நீயிர் வந்தீர் என வந்தவாறு கண்டுகொள்க. ‘எல்லாம் நீயிர் நீ’ (சொல். 174) எனவோதியவாறன்றி, ஒருமை பன்மை யென்னும் முறைபற்றி ஈண்டு நீ யென்பதனை முற்கூறினார். அன்றி, முந்து மொழிந்ததன் றலைதடுமாற்றமென்னுந் தந்திரவுத்தி யெனினு மமையும். நீயிர் நீயென்பன இருதிணையைம்பாலுள் ஒன்றனை வரைந் துணர்த்தா வாயினும், ஒருமை பன்மையென்னும் பொருள் வேறுபா டுடையவென வரையறைப்படுவழி, வரையறுத்தவாறு. (36) ஒருவர் என்னுஞ் சொல் 191. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை. (இ-ள்.) மேல் இன்றிவரென்னு மெண்ணியற் பெயரென்றோதப் பட்டவற்றுள், ஒருவரென்னும் பெயர்ச்சொல், உயர்திணைமுப்பாலுள் ஒருபால் விளக்காது, ஒருவன் ஒருத்தியென்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும் எ-று. (எ-டு.) ஒருவர் வந்தார் எனப் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருபாற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், ஒருவரென்னும் ஒருமைப்பெயரா னுணர்த்தப் படுதற்கேற்பன ஒருவன் ஒருத்தியென்ப னவே யாகலான், அவையே கொள்ளப்படும். உயர்திணை யொருமைப்பால் இரண்டென் றறியப் பட்டமையான் இருபாற்குமுரித் தென்னுமும்மை முற்றும்மை. உயர்திணைப் பெயராயினும், பாலுணர்த்தாமையும் முன்னத்தானுணர்த்தலும் இதற்கு மொக்கு மாகலின், ஈண்டுக் கூறினாரென்பது. (37) அதன் வினைமுடிபு 192. தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும். (இ-ள்.) ஒருவரென்னும் பெயரதியல்பு கருதின், அஃது ஒருமைப் பெயராயினும், பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கேற்கும் எ-று. (எ-டு.) ஒருவர் வந்தார், ஒருவரவர் என வரும். ஒருமைப்பெயர் பன்மை கொள்ளாதாயினும், இது வழுவமைதி யிலக்கணமென்ப தறிவித்தற்குத் ‘தன்மைசுட்டி’ னென்றார். (38) நீயிர், நீ, ஒருவர் என்னுஞ் சொற்களுக்கு மேலும் ஒரு முடிபு 193. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். (இ-ள்.) நீயிர் நீ ஒருவ ரென்பனவற்றை இன்னபாற் பெயரென் றறிய லுறின், சொல்லுவான் குறிப்பொடு கூட்டி முறையானுணர்க எ-று. ஒருசாத்தன், ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானுந் தன்னுழைச் சென்றவழி, ‘நீ வந்தாய், நீயிர் வந்தீர்’ என்னுமன்றே; ஆண்டது கேட்டான் இவ னின்னபால் கருதிக் கூறினான் என்பதுணரும். இனி ‘ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுக லாற்றின்’ என்றவழிச் சொல்லு வானொடு கேட்டான் இவன் ஆடூஉ ஒருமை குறித்தானென உணரும். பிறவுமன்ன. இனி இடமுங் காலமும் பற்றிப் பால் விளங்கும்வழியும் அறிந்து கொள்க. ஏகாரம் தேற்றேகாரம். முறையினுணர்தலென்பது பாதுகாவல். (39) பெண்மகன் : முடிபு 194. மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி மகடூஉ வியற்கை தொழில்வயி னான. இனியொருசா ருயர்திணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எஞ்சி நின்ற இலக்கணங் கூறுகின்றார். (இ-ள்.) மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மக னென்னும் பெயர், வினைகொள்ளுமிடத்து மகடூஉவிற்குரிய வினை கொள்ளும் எ-று. (எ-டு.) பெண்மகன் வந்தாள் என வரும். பொருண்மைபற்றி மகடூஉ வினைகொள்ளுமோ ஈறுபற்றி ஆடூஉ வினைகொள்ளுமோ என்று ஐயுற்றார்க்கு ஐய மகற்றியவாறு. ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனான் தொழில்வயினான வென்றாராகலின், சிறப்பில்லாப் பெயர்வயினானும் பெண்மகனிவள் என மகடூஉ வியற்கையா மென்பதாம். (40) பெயரீற்றயல் செய்யுளுள் திரிதல் 195. ஆவோ வாகும் பெயருமா ருளவே ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே. (இ-ள்.) ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயர்களுமுள; அத்திரியுமிட மறிக செய்யுளுள் எ-று. (எ-டு.) ‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவ முன்னி யோரே’ (குறுந். 7) எனவும், ‘கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் னிழை நெகிழ் பருவரல் செப்பா தோயே’ (நற். 70) எனவும் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. ஆன், ஆள், ஆர், ஆய் என்னுமீற்றவாகிய பெயரல்லது, சேரமான், மலையமான் என்னுந் தொடக்கத்தன அவ்வாறு திரியாமையின், ‘ஆயிட னறிதல்’ என்றார். உழாஅன், கிழாஅன் என்பனவோ வெனின், அவை அன்னீற்றுப்பெயர் ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றன வென்பது. ஆனீறாயவழி (சொல். 135), உழவோன், கிழவோன் எனத் திரியுமாறறிக. (41) உயர்திணை ஈறுஅமைந்த விரவுப்பெயர்கள் 196. இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கின் தோன்ற லான. (இ-ள்.) செய்யுளுட் கருப்பொருண்மேற் கிளக்கப்படும் இரு திணைக்குமுரிய பெயர் உயர்திணை யுணர்த்தா; அவ்வந் நிலத்துவழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருதலான் எ-று. (எ-டு.) ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி’ என்புழி, கடுவன், மூலன், குமரியென்பன அஃறிணைப் பொருளவாயல்லது நிலத்துவழி மருங்கிற் றோன்றாமையின், உயர்திணை சுட்டாதவாறு கண்டுகொள்க. நிலமாவது, முல்லை குறிஞ்சி மருத நெய்த லென்பன. அஃதேல், இவை உயர்திணை யுணர்த்தாவாயின் அஃறிணைப் பெயரேயாம்; ஆகவே, இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், அற்றன்று. கடுவன் மூலனென்பன அன்னீறு ஆண்மையுணர்த்துமன்றே? அஃறிணைப் பெயர் அவ்வீற்றான் அப்பொருளுணர்த்தாமையின், அவை விரவுப் பெயரேயா மென்பது. அலவன் கள்வனென்பனவோ வெனின்:-அவை சாதிப்பெய ரெனப்படுவ தல்லது ஆண்மைப்பெயரெனப்படா வென்க. குமரியென்பது, வடமொழிச் சிதைவாய் வடமொழிப்பொருளே உணர்த்த லின், விரவுப்பெயரேயாம். (42) 197. திணையொடு பழகிய பெயரலங் கடையே. (இ-ள்.) கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணை சுட்டுவது, அவ்வத்திணைக்குரியவாய் வழங்கப் பட்டு வரும் பெயரல்லாதவிடத்து எ-று. எனவே, திணைக்குரியவாய் வழங்கப்பட்டுவரும் பெயர் இரு திணையுஞ் சுட்டிவரு மென்பதாம். திணையொடு பழகிய விரவுப்பெயராவன காளை விடலை யென்னுந் தொடக்கத்தன. (எ-டு.) ‘செருமிகு முன்பிற் கூர்வேற் காளை’ (நற். 184) எனவும், ‘திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே’ (அகம். 195) எனவும், உயர்திணை சுட்டி வந்தவாறு கண்டுகொள்க. இவை உயர்திணைப்பொரு ளன்றோ வெனின், ஓரெருத்தையும் காளை விடலை யென்பவாகலின், விரவுப்பெயரெனவே படுமென்பது. கடுவன், மூலன், குமரியென்பனவும் கருப்பொருளுணர்த்தலின் திணையொடு பழகிய பெயராம் பிறவெனின், அற்றன்று. விலங்கும் புள்ளு முதலாகிய பொருள் உள்வழி யெல்லாம் அவற்றிற்குரிய பெயர் சொல்வ தல்லது, பொருளுண்டாயினும், இந்நிலத்து இப்பொருள் இப்பெயரான் வழங்கப் படா வென்னும் வரையறையில்லை. தலைமக்கள் எந்நிலத்து முளராயினும், பாலைநிலத்துக் காளை மீளியென்னும் பெயர் செல்லா மருதநிலத்து; மருதநிலத்து மகிழ்நன் ஊரனென்னும் பெயர் செல்லா பாலைநிலத்து. அதனாற் பொருள்வகையானன்றிப் பெயர் தந்திணைக் குரிமை பூண்டு நிற்றலின், அவற்றைத் திணையொடு பழகிய பெயரென்றா ரென்பது. (43) பெயரியல் முற்றிற்று. 6 வினையியல் (வினைச்சொல்லின் இலக்கணம் உணர்த்துவது) 1. வினைச்சொல்லின் பொதுவியல்பு வினை இன்ன தென்பது 198. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். நிறுத்த முறையானே வினைச்சொல்லாமா றுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனா னிவ்வோத்து வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. (இ-ள்.) வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும் எ-று. ஈண்டு வேற்றுமை யென்றது உருபை. (எ-டு) உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க. வேற்றுமை கொள்ளாதென்னாது காலமொடு தோன்றுமெனின் தொழினிலையொட்டுந் தொழிற்பெயரும் வினைச்சொல்லாவான் செல்லுமாகலானும், காலமொடு தோன்று மென்னாது வேற்றுமை கொள்ளாதெனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் லெனப்படு மாகலானும், அவ் விருதிறமும் நீக்குதற்கு ‘வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்’ என்றார். வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவுமுள; அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென்றற்கு, ‘நினையுங்காலை’ என்றார். அவை யிவையென்பது முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கண முணர்த்தியவாறு. (1) காலம் 199. காலந் தாமே மூன்றென மொழிப. (இ-ள்) மேற்றோற்றுவாய் செய்யப்பட்ட காலம் மூன்றென்று சொல்லுவர் புலவர் எ-று. தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றது. (2) காலம் மூன்றாவனவும், குறிப்பு வினையும் 200. இறப்பி னிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. (இ-ள்.) இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்று சொல்லப்படும் அம் மூன்று காலமுங் குறிப்புவினையொடும் பொருந்தும் மெய்ந்நிலைமையை யுடைய, வினைச்சொல்லானவை தோன்று நெறிக்கண் எ-று. எனவே, காலமூன்றாவன இறப்பும், நிகழ்வும், எதிர்வு மென்ப தூஉம், வெளிப்படக் காலம் விளக்காதன குறிப்புவினை யென்பதூஉம் பெற்றாம். (எ-டு.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என வரும். இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப் பட்டு முற்றுப்பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சியாகலின், அஃதொருகணம் நிற்பதல்லது இரண்டுகணம் நில்லாமையின், நிகழ்ச்சியென்பதொன்று அதற்கில்லை யாயினும், உண்டல் தின்றலெனப் பஃறொழிற் றொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், உண்ணாநின்றான், வாராநின்றான் என நிகழ்ச்சியு முடைத்தாயிற் றென்பது. வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன் என இறந்தகாலமும் நிகழ்காலமும் முறையானே பற்றி வருதலும், நாளைக் கரியனாம் என எதிர்காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக. ‘மெய்ந்நிலையுடைய’வென்றது, விளங்கித் தோன்றாவாயினும் காலம் வினைக்குறிப்பொடும் கோடல் மெய்ம்மையென வலியுறுத்தவாறு. (3) வினைச்சொற்களின் வகை 201. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வருஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. பொதுவகையாற் கூறிய வினைச்சொல்லைச் சிறப்புவகையா னுணர்த்திய வெடுத்துக்கொண்டார். (இ-ள்.) குறிப்புப் பொருண்மைக்கண்ணுந் தொழிற் பொருண்மைக் கண்ணுந் தோன்றிக் காலத்தொடு வரும் எல்லா வினைச்சொல்லும், உயர் திணைக்குரியனவும் அஃறிணைக்குரியனவும் இரண்டு திணைக்கும் ஒப்பவுரியனவுமென, மூன்று கூற்றனவாம், தோன்றுநெறிக்கண் எ-று. கரியன், செய்யன் என்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலிற் குறிப்பென்றார். (எ-டு.) உண்டான், கரியன்; சென்றது, செய்யது; வந்தனை வெளியை என வரும். ‘குறிப்பொடுங் கொள்ளும்’ (சொல். 200) என மேற் குறிப்பியைபு பட்டு நிற்றலிற் ‘குறிப்பினும் வினையினும்’ என்றார். முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை இஃதிறந்த காலத்திற்குரித்து, இது நிகழ்காலத்திற்குரித்து, இஃதெதிர் காலத்திற்குரித்து என வழக்கு நோக்கி, உணர்ந்துகொள்க வென்பது விளக்கிய, ‘காலமொடு வரூஉம்’ என்றார். வினைச்சொற் கால முணர்த்துங்காற் சிலநெறிப்பா டுடைய வென்பது விளக்கிய, ‘நெறிப்படத் தோன்றி’ என்றார். நெறிப்பாடாவது அவ் வீற்றுமிசை நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றவுணர்த்தலாகா வாயினும், அவ்வீறுணர்த்தும்வழிச் சிறிய சொல்லுதும். (4) 2. உயர்திணை வினை தன்மைப்பன்மை வினைமுற்று 202. அவைதாம் அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும் உம்மொடு வரூஉங் கடதற வென்னும் அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. நிறுத்த முறையானே உயர்திணைவினையாமா றுணர்த்துகின்றார். அவைதாம் இருவகைய, தன்மைவினையும் படர்க்கைவினையுமென. தன்மை வினையும் இருவகைத்து; பன்மைத்தன்மையும் ஒருமைத்தன்மையு மென. தனித்தன்மையும் உளப்பாட்டுத்தன்மையுமெனினு மமையும். இச் சூத்திரத்தாற் பன்மைத்தன்மை யுணர்த்துகின்றார். (இ-ள்.) மேன் மூவகைய வெனப்பட்ட வினைச்சொற்றாம் அம் ஆம் எம் ஏம் என்னுமீற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉங் கடதறவாகிய கும்மும் டும்மும் தும்மும் றும்மும் என்னுமீற்றவாகிய சொல்லுமென, அவ் வெட்டும் பன்மையுணர்த்துந் தன்மைச் சொல்லாம் எ-று. தனக்கு ஒருமையல்லதின்மையின் தன்மைப்பன்மையாவது தன் னொடு பிறரை உளப்படுத்ததேயாம். அவ்வுளப்படுத்தல் மூவகைப்படும்; முன்னின்றாரை உளப்படுத்தலும், படர்க்கையாரை உளப்படுத்தலும், அவ் விருவரையும் ஒருங்குளப்படுத்தலுமென. அம் ஆம் என்பன முன்னின்றாரை உளப்படுக்கும்; தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுக்கும். எம் ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் கடதற அவ்விருவரையும் ஒருங்குளப் படுத்தலுந் தனித்தனி யுளப்படுத்தலுமுடைய. ஈண்டும் அவைதாமென்பதற்கு முடிபு ‘அவைதாம் இ உ ஐ ஓ’ (சொல். 120) என்புழி உரைத்தாங் குரைக்க. அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும்பற்றி வரும். உம் மொடு வரூஉம் கடதற எதிர்காலம் பற்றி வரும். முன்னின்ற நான்கீறும் இறந்த காலம் பற்றி வருங்கால், அம்மும் எம்மும் கடதறவென்னு நான்கன்முன் அன் பெற்று வரும். ஏம் அன் பெற்றும் பெறாதும் வரும். ஆம் அன் பெறாது வரும். (எ-டு.) நக்கனம் நக்கனெம், உண்டனம் உண்டெனம், உரைத்தனம் உரைத்தனெம், தின்றனம், தின்றனெம் எனவும்; நக்கனேம் நக்கேம், உண்டனேம் உண்டேம், உரைத்தனேம் உரைத்தேம், தின்றனேம் தின்றேம் எனவும்; நக்காம் உண்டாம், உரைத்தாம் தின்றாம் எனவும் வரும். அந்நான்கீறும் ஏனை யெழுத்தின்முன் ழகாரமும் ஙகாரமு மொழித்து இன் பெற்று வரும். (எ-டு.) அஞ்சினம், அஞ்சினாம், அஞ்சினெம், அஞ்சினேம்; உரிஞினம், உரிஞினாம், உரிஞினெம், உரிஞினேம் என வரும். பிறவெழுத் தோடு மொட்டிக்கொள்க. கலக்கினம், தெருட்டினம் என்னுந் தொடக்கத் தன குற்றுகர வீறாகலான், அதுவும் ஏனை யெழுத்தேயாம். இனி அவை நிகழ்காலம் பற்றி வருங்கால், நில், கின்று என்பனவற் றொடு வரும். நில்லென்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும். (எ-டு.) உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணாநின்றாம், உண் கின்றாம்; உண்ணாநின்றனெம், உண்கின்றனெம்; உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றனேம், உண்கின்றனேம் என வரும். ஈண்டு அன் பெற்ற விகற்பம் இறந்த காலத்திற் கூறியவாறே கொள்க. உண்ணாகிடந்தனம், உண்ணாவிருந்தனம் எனக் கிட இரு என்பனவுஞ் சிறுபான்மை நிகழ்காலத்து வரும். நிகழ்காலத்திற்கு உரித்தென்ற நில்லென்பது, உண்ணாநிற்கும் உண்ணாநிற்பல் என வெதிர்காலத்தும் வந்ததாலெனின்,அற்றன்று. ‘பண்டொருநாள் இச்சோலைக்கண் விளையாடாநின்றேம்; அந்நேரத் தொரு தோன்றல் வந்தான்’ என்றவழி, அஃதிறந்த காலத்து நிகழ்வு பற்றி வந்தாற்போல், ஆண்டெதிர் காலத்து நிகழ்வுபற்றி வருதலான், ஆண்டும் அது நிகழ்காலத்திற் றீர்ந்தின் றென்க. அவை எதிர்காலம்பற்றி வருங்கால் பகரமும் வகரமும் பெற்று வரும். வகரமேற்புழிக் குகரமும் உகரமும் அடுத்து நிற்கும். (எ-டு.) உரைப்பம், செல்வம்; உண்குவம், உரிஞுவம் என வரும். ஒழிந்த வீற்றோடு மொட்டிக்கொள்க. பாடுகம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலுங் கொள்க. உம்மொடு வரூஉம் கடதற-உண்கும், உண்டும், வருதும், சேறும் என வரும். உரிஞுதும், திருமுதும் என ஏற்புழி உகரம் பெற்று வரும். கும்மீறு, வினைகொண்டு முடிதலின், ஒழிந்த உம்மீற்றின் வேறெனவேபடும். டதற வென்பன, எதிர்காலத்திற்குரிய எழுத்தன்மை யான், பாலுணர்த்தும் இடைச்சொற்கு உறுப்பாய் வந்தன வெனவேபடும். படவே, அவற்றை உறுப்பாகவுடைய ஈறு மூன்றாம்; அதனான் உம்மென ஓரீறாக அடக்கலாகாமையின், அந்நாற்கிளவியொ டென்றார். (5) தன்மையொருமை வினைமுற்று 203. கடதற வென்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு என்ஏன் அல்என வரூஉம் ஏழும் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. (இ-ள்.) கடதற வென்னு நான்கு மெய்யை ஊர்ந்து வருங் குற்றிய லுகரத்தை ஈறாகவுடைய சொல்லும், என், ஏன் அல்லென்னு மீற்றவாகிய சொல்லுமென அவ்வேழும், ஒருமையுணர்த்துந் தன்மைச்சொல்லாம் எ-று. குற்றுகரம் நான்கும், அல்லும், எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம், காலவெழுத்துப் பெறுங்கால், உம்மீற்றோ டொக்கும். அல்லீறு பகரமும் வகரமும் பெற்று வரும். என் ஏன் என்பன மூன்று காலமும் பற்றி வரும். (எ-டு.) உண்கு, உண்டு, வருது, சேறு எனவும்; உரிஞுகு, திருமுகு எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென் எனவும்; உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் எனவும்; உண்பல் வருவல் எனவும் வரும். காலவெழுத் தடுத்தற்கண் எம்மீற்றோடு என்னீறும், ஏமீற்றோடு ஏனீறு மொக்கும். ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிந்தொட்டிக் கொள்க. குற்றியலுகரமென ஒன்றாகாது நான்காதற்கு முன்னுரைத்தாங் குரைக்க. எதிர்காலம் பற்றி வழக்குப்பயிற்சியு மில்லாக் குற்றுகரத்தை அங்ஙனம் வரும் அல்லோடு பின் வையாது, மூன்றுகாலமும் பற்றிப் பயின்று வரும் என் ஏன் என்பனவற்றின் முன் உம்மீற்றோடியைய வைத்தது, செய்கென்பது போலச் செய்குமென்பதூஉங் காண்கும் வந்தேம் என வினைகொண்டு முடியுமென்ப தறிவித்தற்கெனக் கொள்க. (6) செய்கு வினையொடு முடிதல் 204. அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியாது என்மனார் புலவர். (இ-ள்.) மேற்கூறப்பட்ட ஒருமைத் தன்மைவினை ஏழனுள், செய் கென்னுஞ் சொல் வினையொடு முடியுமாயினும், முற்றுச் சொல்லாதலிற் றிரியாது எ-று. (எ-டு.) காண்கு வந்தேன் என வரும். செய்கென்கிளவி அவ்வியல் திரியா தெனவே, ‘பெயர்த்தனென் முயங்க யான்’ (குறுந்.84) எனவும், ‘தங்கினை சென்மோ’ (புறம்.320) எனவும், ‘மோயின ளுயிர்த்த காலை’ (அகம்.5) எனவும் ஏனை முற்றுச் சொல் வினை கொள்ளுங்கால் அவ்வியல் திரியு மென்பதாம். அவை திரிந்தவழி வினை யெச்சமாதல் ‘வினையெஞ்சு கிளவியும் வேறு பல்குறிய’ (சொல். 457) என்புழிப் பெறப்படும். இருசாரனவும் பெயர் கொள்ளாது வினை கொண்டவழிச் செய்கென் கிளவி திரியாதென்றும் ஏனைய திரியுமென்றுங் கூறிய கருத் தென்னை யெனின், நன்று சொன்னாய்! காண்கு வந்தேன் என்றவழிச் செய்கென் கிளவி வினையெச்சமாய்த் திரிந்ததாயிற் செய்தெனெச்சமாதற் கேலாமையின், செயவெனெச்சமாய்த் திரிந்ததெனல் வேண்டும். வேண்டவே, செயவெனெச்சத்திற்குரிய வினைமுதல்வினையும் பிற வினையும் அது கொள்வான்செல்லும்; வினைமுதல் வினையல்லது கொள்ளாமையிற் செயவெனெச்சமாய்த் திரிந்த தென்றல் பொருந்தாது. பிறிதாறின்மையின், முற்றுச்சொல்லாய் நின்றதெனவே படும். அதனான் அவ்வியல் திரியாதென்றா ரென்பது. அல்லதூஉம், செய்கென் கிளவி சிறுபான்மை யல்லது பெயர் கொள்ளாமையின், பெரும்பான்மையாகிய வினைகோடல் அதற்கியல்பேயாம்; ஆகவே அது திரிந்து வினைகொள்ளு மெனல் வேண்டாவாம்; அதனாலும் முற்றாய் நின்று வினைகொண்ட தென்றலே முறைமையென் றுணர்க. ‘முற்றுச் சொல்கும் வினையொடு முடியினும் முற்றுச்சொ லென்னு முறைமையி னிறவா’ என்றார் பிறருமெனக் கொள்க. ‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84) என்னுந் தொடக்கத்தன இறந்த கால முணர்த்தலிற் செய்தெனெச்சமாதற் கேற்புடைமையான், அவற்றைத் திரிபென்றார். முன்னர் ‘எத்திறத் தானும் பெயர்முடி பினவே’ (சொல். 429) என்பதனாற் பெயரொடு முடிதலெய்துவதனை விலக்கியவாறு. (7) படர்க்கையொருமை வினைமுற்று 205. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. தன்மைவினை யுணர்த்தி, இனி யுயர்திணைப் படர்க்கைவினை யுணர்த்துகின்றார். (இ-ள்) அன், ஆன், அள், ஆள் என்னு மீற்றையுடைய நான்கு சொல் லும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் எ-று. இவை நான்கீறும் மூன்றுகாலமும் பற்றி வரும். (எ-டு.) உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன் எனவும்; உண் டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும்; உண்டனள், உண்ணாநின்ற னள், உண்பள் எனவும்; உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவும் வரும். காலத்துக் கேற்ற எழுத்துப் பெறுங்கால், அன்னும் அள்ளும் அம்மீற்றோடும், ஆனும் ஆளும் ஆமீற்றோடு மொக்கும். அவ் வேறுபா டெல்லாமறிந் தொட்டிக்கொள்க. (8) படர்க்கைப்பன்மை வினைமுற்று 206. அர்ஆர் பஎன வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. (இ-ள்.) அர் ஆர் ப என்னுமீற்றையுடையவாய் வரு மூன்று சொல்லும் பல்லோரை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் எ-று. ரகாரவீறு இரண்டும் மூன்றுகாலமும் பற்றி வரும்; பகாரம் எதிர்காலம் பற்றி வரும். (எ-டு.) உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர் எனவும்; உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவும்; உண்ப எனவும் வரும். அன்னீற்றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும், ஆனீற்றிற்குரிய காலவெழுத்து ஆரீற்றிற்கு முரிய. பகரம் உகரம்பெற்றும் பெறாதும், உரிஞுப உண்ப என வரும். வருகுப எனச் சிறுபான்மை குகரமும் பெறும். இவ்வேறுபாடு ஏற்புழியறிந் தொட்டிக் கொள்க. (9) செய்மார் என்னும் வாய்பாடு 207. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. (இ-ள்.) முன்னையனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும்; அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும் எ-று. பகரத்திற்குரிய காலவெழுத்து மாரைக் கிளவிக்கு மொக்கும். (எ-டு.) எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார் என வரும். குகரம் வந்தவழிக் கண்டுகொள்க. மாரைக்கிளவி வினையோடல்லது பெயரொடு முடியாமையின், எச்சமாய்த் திரிந்து வினைகொண்ட தெனப்படாமை யறிக. அஃதேல், ‘பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புறம். 375) எனவும், ‘காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே’ (நற். 64) எனவும் மாரீற்றுச்சொற் பெயர்கொண்டு வந்தனவாலெனின், அவை பாடுவார் காண்பார் என்னும் ஆரீற்று முற்றுச்சொல்லின் எதிர்மறையாய் ஒருமொழிப்புணர்ச்சியான் மகரம் பெற்று நின்றன. மாரீறாயின், அவை பாடாதொழிவார், காணாதொழிவார் என எதிர்மறைப் பொருண்மை யுணர்த்துமாறில்லை யென்க. (10) உயர்திணைக்குரிய வினைமுற்றுக்கள் 208. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பாலுணர வந்த இருபத்து மூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக் கிளக்கப்பட்ட உயர்திணை யுடையன எ-று. ஈண்டுக் கூறிய படர்க்கைவினையே கிளவியாக்கத்துட் கூறப் பட்டன; அவை வேறல்லவென்பார், ‘முன்னுறக் கிளந்த’வென்றார். அதனாற் பயன், அன் ஆன் அள் ஆளென்பன ஆண்பால் பெண்பாலுணர்த் துதல் ஈண்டுப் பெறுதலும், னஃகானொற்று முதலாயின படர்க்கைவினைக் கீறாய்நின்று பாலுணர்த்துதல் ஆண்டுப் பெறுதலுமாம். அஃதேல், முற்றுப்பெற ஓரிடத்துக் கூறவமையும், ஈரிடத்துக் கூறிப் பயந்ததென்னை யெனின்:- பாலுணர்த்தும் இடைச்சொற்பற்றி உயர்திணைப் படர்க்கை வினை யுணர்த்துதல் ஈண்டுக் கூறியதனாற் பயன்; ஆண்டுக் கூறியதனாற் பயன் வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்திலக்கண வழக்குணர்த்துதலா மென்க. பெயரியல் நோக்கிப் ‘பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்’ என்றாற்போல, வினையியல் நோக்கி ‘வினையிற் றோன்றும் பாலறி கிளவியும், மயங்கல் கூடா’ என வமையும், ஆண்டுக் கூறல் வேண்டா வெனின், அற்றன்று. இருதிணையைம்பாற் சொலுணர்த்தாக்கால் திணை பால்பற்றி வழுவற்க வெனவும் வழீஇயமைக வெனவும் வழுக்காத்த சூத்திரங்களெல்லாவற்றானும் பொருளினிது விளங்காமையானும். வினையுள்ளுந் திரிபின்றிப் பால் விளக்குதற் சிறப்புடையன படர்க்கை வினையே யாகலானும், அவற்றைப் பிரித்து ஆண்டுக் கூறினாரென்பது. படர்க்கைப் பெயரீறு திரிபின்றிப் பாலுணர்த்தாமையின், இலக்கண வெழுத்தோடு கூறாது, எதிரது நோக்கிக் கொள்ள வைத்தாரென்க. மூன்றுதலை யிட்ட வந்நாலைந்துமாவன இவை யென இனிது விளங்கப் ‘பன்மையு மொருமையும் பாலறி வந்த’ என்றார். இதனாற் பயன், உயர்திணைவினை மூன்றுதலையிட்ட நாலைந் தென்னும் வரையறை. (11) தன்மைப்பன்மை வினை - அஃறிணையை உளப்படுத்தல் 209. அவற்றுள் பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியன் மருங்கின் திரிபவை உளவே. (இ-ள்.) கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுள், பன்மை யுணர்த்துந் தன்மைச்சொல் எண்ணியலும் வழி அஃறிணையை யுளப்படுத்துத் திரிவனவுள எ-று. (எ-டு.) ‘யானுமென் எஃகமுஞ் சாறும்’ என வரும். தன்மைப்பன்மை வினைச்சொல், உயர்திணை வினையாகலின், உயர்திணையே உளப்படுத்தற்பாலன; அஃறிணையை உளப்படுத்தல் வழுவாயினும் அமைக வென்பார், திரிபவை யுளவென்றார். அதனான் இச்சூத்திரத்தை ‘முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே’ (சொல். 208) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைத்தார். திரியுமென்னாது திரிபவையுள வென்றதனான், எல்லாந் திரியா சிலவே திரிவன வென்பதாம். (12) யார் என்னும் குறிப்புமுற்று 210. யாஅர் என்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே. (இ-ள்.) யாரென்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் முப்பாற்கு முரித்து எ-று. (எ-டு.) அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும். ‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங் கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாந் தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன் தூதொடு வாராத வண்டு’ என்புழி, வண்டுதான் யார் என, யாரென்பது அஃறிணைக்கண்ணும் வந்ததா லெனின், அது திணைவழுவமைதி யெனப்படும். இது வினைக்குறிப்பாயினும், பல்லோர் படர்க்கை யுணர்த்தும் ஆரீற்றின் மூன்றுபா லுணர்த்தும் வேறுபாடுடைமையான், அவற்றொடு வையாது ஈண்டு வைத்தார். செய்யுளின்ப நோக்கி அளபெழுந்து நின்றது. வினாவின்கிளவியென அதன்பொரு ளுணர்த்தியவாறு. (13) வினைமுற்றுக்கள் சில ஈற்றயல் திரியுமாறு 211. பாலறி மரபின் அம்மூ ஈற்றும் ஆஓ ஆகுஞ் செய்யு ளுள்ளே. (இ-ள்.) பால் விளங்க வருமியல்பையுடைய அம்மூன் றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாகுஞ் செய்யுளிடத்து எ-று. பாலறிமரபி னென்றதனான் பாலுணர்த்துதற்கண் திரிபுடை ஆமீறு விலக்குண்ணும், மார் சிறுவழக்கிற் றாகலானும், ஆகாரம் ஓகாரமாதற் கேலாமையானும், அம்மூவீறாவன ஆன் ஆள் ஆர் என்பனவேயாம். (எ-டு.) ‘வினவிநிற்றந் தோனே’ (அகம். 48), ‘நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே’ (அகம். 248), ‘பாசிலை, வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந். 216) என ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. வந்தோம், சென்றோம் என வழக்கினுள் வருவனவோ வெனின், அவை ஏமீற்றின் சிதைவென மறுக்க. (14) 212. ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும். (இ-ள்.) முன்னிலையீற்றுள், ஆயென்னுமீறும் மேற்கூறப்பட்டன போல ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளுள் எ-று. (எ-டு.) ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம். 80) என வரும். கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஓகாரமாதல் பெயரியலுட் கொள்ளப்படும் (சொல். 195). ஆயென்கிளவி ஆவோவாவது பெரும்பான்மையும் உயர்திணைக் கண் வந்தவழி யென்பதறிவித்தற்கு, முன்னிலை யதிகாரத்துக் கூறாது ஈண்டுக் கூறினார். அவற்றொடு கொள்ளுமென்றது அவற்றோ டொக்கு மென்றவாறு. (15) உயர்திணைக் குறிப்பு வினைமுற்று 213. அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானுங் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென்று அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். (இ-ள்.) ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட்கண்ணும், ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும், ஒப்பின்கண்ணும், பண்பின்கண்ணுமென அப்பகுதிக்காலங் குறிப்பாற் றோன்றும் எ-று. அப்பகுதிக்காலமாவது அப்பொருட்பகுதிபற்றி வருஞ் சொல் லகத்துக் காலமாம். அப்பகுதிக் காலங் குறிப்பாற் றோன்றுமெனவே, அப்பொருள்பற்றி வினைக்குறிப்பு வருமென்றவாறாம். உடையானது உடைமைத்தன்மையேயன்றி உடைப்பொருளும் உடைமையெனப்படுதலின் உடைமையானு மென்பதற்கு உடைப்பொருட் கண்ணுமெனவு முரைக்க. உரைக்கவே, உடைப்பொருட்கண் வருங்கால். உடைப்பொருட் சொல்லாகிய முதனிலைபற்றி வருதலும் பெறப்படும். கருமையனென்பது உடைமைப் பொருளாயடங்கலின், பண்பினானும் என்புழிக் கரியனென இன்ன னென்பதுபட வருதலே கொள்க. வாளாது உடைமையானும் என்றவழி ‘அன்மையின்’ (சொல். 214) என்பது போல அவ்வொரு வாய்பாடே பற்றி நிற்கும். இதனை இஃதுடைத் தென்பதுபட வரும் எல்லா வாய்பாடுந் தழுவுதற்கு ‘அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானு’ மென்றார். ‘கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு’ மென்பதற்கும் ஈதொக்கும். ஆயின் இஃதிரண்டாம் வேற்றுமைப் பொருளாமெனின், ஆண்டுடைமை உருபு நோக்கிய சொல்லாய் வருவதல்லது இரண்டாம் வேற்றுமைப் பொருளெனப் படாது. என்னை? அது செயப்படு பொருண் மைத்தாகலின், அதனான் உடைமை ஆறாவதன்பொருளெனவேபடு மென்பது. (எ-டு.) கச்சினன் கழலினன் எனவும், இல்லத்தன் புறத்தன் எனவும், பொன்னன்னன் புலிபோல்வன் எனவும், கரியன் செய்யன் எனவும் வரும். கச்சினான், இல்லத்தான் எனப் பெயருங் குறிப்பாற் காலம் விளக் கலின் அப்பால் காலங்குறிப்பொடு தோன்று மென்றதனான் வினைக் குறிப் பென்பது பெறுமாறென்னை யெனின், ‘தொழினிலை யொட்டு மொன்றலங் கடை’ (சொல். 70) எனத் தொழிற்பெயரல்லன காலந் தோன்றா வென்றமையால், கச்சினான் இல்லத்தா னென்பன காலம் விளக்காமையின், குறிப்பாற் காலம் விளக்குவன வினைக்குறிப்பாதல் பெறுதும். அல்லதூஉம், வினைக்குறிப்பும் காலந்தோன்றுதலை இலக்கணமாகவுடைய வினைச் சொல்லே யாதலின், தெற்றென விளக்காவாயினுங் காலமுடையவெனவே படும். பெயர்க்கு அன்னதோ ரிலக்கணமின்மையின், காலந் தெற்றென விளக்குவன வுளவேற் கொள்வதல்லது, காலம் விளக்காத பெயருங் காலமுடையவென உய்த்துணருமாறில்லை. அதனானுங் குறிப்பாற் காலமுணர்த்துவன வினைக்குறிப்பே யென்பது பெறப்படு மென்க. தன்னினமுடித்த லென்பதனான், ஐயாட்டையன், துணங்கையன் எனச் சிறுபான்மை காலமும் வினைசெய்யிடமும் பற்றி வருவனவுங் கொள்க. (16) இன்னும் பிற 214. அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியுங் குறிப்பே காலம். (இ-ள்.) அன்மை இன்மை உண்மை வன்மை யென்னும் பொருள் பற்றி வருவனவும், அவை போல்வன பிறவும், குறிப்புப் பொருண்மையொடு பொருந்தும் எல்லாச் சொல்லுங் காலங் குறிப்பா னுணரப்படும் எ-று. காலங் குறிப்பா னுணரப்படுமெனவே, இவையும் வினைக்குறிப்பா மென்றவாறாம். (எ-டு.) அல்லன், அல்லள், அல்லர் எனவும்; இலன், இலள், இலர் எனவும்; உளன், உளள், உளர் எனவும்; வல்லன், வல்லள், வல்லர் எனவும் வரும். பொதுப்படக் கூறியவதனான், பொருளிலன், பொருளிலள், பொரு ளிலர் என உடைமைக்கு மறுதலையாகிய இன்மையுங் கொள்ளப்படும். இவை ஒரு வாய்பாடேபற்றிப் பிறத்தலின், வேறு கூறினார். பண்போடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின்:- இன்மை, பொருட்கு மறுதலையாகலின், பொருளின்கட் கிடக்கும் பண்பெனப் படாது. அன்மையும் உண்மையும் பண்பிற்கு மொத்தலிற் பண்பெனப் படா; என்னை? குணத்திற்குக் குணமின்மையின். வன்மை-ஆற்றல்; அதுவுங் குணத்திற்கும் உண்டாதலிற் குணமெனப்படாது; ஊறெனின், அது பண்பா யடங்கும். அதனாற் பொருட்கட் கிடந்து தனக்கொரு குணமின்றித் தொழி லின் வேறாய குணத்தின் அன்மை முதலாயின வேறெனப்படும். பண்பெனி னுங் குணமெனினு மொக்கும். இக் கருத்தேபற்றியன்றே ஆசிரியர் இன்மை யும் உண்மையுமுணர்த்துஞ் சொற்களை முடிப்பாராயிற் றென்பது. ‘என்ன கிளவியு’மென்றது ‘அன்னபிறவு’ மெனப்பட்டவற்றையே யாகக் கொள்க. குறிப்பே காலம் என்றவழிக் குறிப்பென்றது குறிக்கப்படுவதனை. அன்னபிறவு மென்றதனான், நல்லன், நல்லள், நல்லர்; தீயன், தீயள், தீயர்; உடையன், உடையள், உடையர் என வித்தொடக்கத்தனவெல்லாங் கொள்க. (17) குறிப்பு வினைமுற்றின் ஈறு 215. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருண்மையுடையவாய் வரும் வினைச்சொல், மேல் வரு முயர் திணைக்கட் கூறிய தெரிநிலை வினையோ டொக்கும் எ-று. தெரிநிலைவினையோ டொத்தலாவது, உயர்திணைத் தெரிநிலை வினைக்கோதிய ஈற்றுள் தமக்கேற்பனவற்றொடு வினைக்குறிப்பு வந்தவழி, அவ்வவ் வீற்றான் அவ்வப்பாலும் இடமும் விளக்கலாம். மேல் வினைக்குறிப்பு இன்னபொருள்பற்றி வருமென்றதல்லது இன்னவீற்றான் இன்னபால் விளக்குமென்றிலர்; அதனான் அஃதீண்டுக் கூறினார். கூறப்பட்ட பொருட்கண் வந்தனவாயினும், இல்லை, இல், இன்றி என்பன பால் விளக்காமையின், அவற்றை நீக்குதற்குப் ‘பன்மையு மொருமையும் பாலறி வந்த’ வென்றார். ஒருபொருட்கட் பல வாய்பாடும் ஒருபொருட்கண் ஒரு வாய்பாடும் பற்றி வரும் இருதிறமும் எஞ்சாமற் றழுவுதற்கு, ‘அன்னமரபின்’ என்றார். தன்மையும் படர்க்கையும் உணர்த்துந் தெரிநிலைவினை யீற்றுட் குறிப்புவினைக்கேற்பன:- அம், ஆம், எம், ஏம், என், ஏன் என்னுந் தன்மை யீறாறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர் என்னும் படர்க்கை யீறாறும் எனப் பன்னிரண்டாம். (எ-டு.) கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியென், கரியேன் எனவும்; கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எனவும் அவ்வவ்வீறு அவ்வவ்விடமும் பாலும் விளக்கியவாறு கண்டுகொள்க. ஒழிந்த பொருட்கண்ணு மொட்டிக்கொள்க. ஆன், ஆள், ஆர், என்பன நிலப்பொருண்மைக்கண் அல்லது பிற பொருட்கண் பயின்று வாரா. இன்னும், மேலைக்கிளவியொடு வேறுபாடில வென்றதனான், வந்தனன் எனத் தெரிநிலைவினை தொழின்மை மேற்படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்தியவாறு போல, உடையன் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்துதலுங் கொள்க. வந்தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமா றறிக. இஃது ‘அஃறிணை மருங்கின், மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே’ (சொல். 221) என்பதற்கு மொக்கும். (18) 3. அஃறிணை வினை பன்மை வினைமுற்று 216. அஆ வஎன வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. உயர்திணைவினை யுணர்த்தி, இனி யஃறிணைவினை யுணர்த்து கின்றார். (இ-ள்.) அகரமும் ஆகாரமும் வகர வுயிர்மெய்யு மாகிய ஈற்றை யுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையாம் எ-று. அகரம் மூன்று காலமும்பற்றி வரும். ஆகாரம் எதிர்மறைவினையாய் மூன்று காலத்திற்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும். அகரம், இறந்தகாலம்பற்றி வருங்கால், கடதற வென்னு நான்கன்முன், அன் பெற்றும் பெறாதும் வரும். ஏனை யெழுத்தின்முன் ரகார ழகார மொழித்து இன் பெற்று வரும். யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி அன்பெற் றும் பெறாதும் வரும். நிகழ்காலத்தின்கண் நில், கின்றென்பனவற்றோடு அன்பெற்றும் பெறாதும் வரும். எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன்பெற்றும் பெறாதும் வரும். (எ-டு.) தொக்கன தொக்க, உண்டன உண்ட, வந்தன வந்த, சென்றன சென்ற எனவும்; அஞ்சின எனவும்; போயின போயன போய எனவும்; உண்ணாநின்றன உண்ணாநின்ற, உண்கின்றன உண்கின்ற எனவும்; உண்பன உண்ப, வருவன வருவ எனவும் வரும். உரிஞுவன உரிஞுவ என உகரத்தோடு ஏனை யெழுத்துப்பேறும் ஏற்றவழிக் கொள்க. வருவ, செல்வ என்னுந் தொடக்கத்தன அகரவீறாதலும், வகர வீறாதலுமுடைய வென்பது கிளவியாக்கத்துட் கூறினாம். ஆகாரம் காலவெழுத்துப் பெறாது, உண்ணா, தின்னா என வரும். வகரம், உண்குவ தின்குவ என வெதிர்காலத்திற் குரித்தாய்க் குகரமடுத்தும், ஓடுவ, பாடுவ எனக் குகரமடாதும் வரும், உரிஞுவ, திருமுவ என உகரம் பெறு தலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்தவெழுத்தோடும் ஒட்டிக் கொள்க. (19) ஒருமை வினைமுற்று 217. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். (இ-ள்.) ஒன்றனை யுணர்த்தும் படர்க்கை வினையாவது, தறட வென்பனவற்றை ஊர்ந்துநின்ற குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லாம் எ-று. தகரவுகரம் மூன்று காலத்திற்கு முரித்து. றகரவுகரம் இறந்த காலத் திற்குரித்து. டகரவுகரம் மூன்றுகாலத்திற்குமுரிய வினைக்குறிப்பிற்கல்லது வாராது. அஃதேல், வினைக்குறிப்புக் கூறும்வழிக் கூறாது ஈண்டுக் கூறிய தென்னையெனின்:- ‘அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே’ (சொல். 221) என வினைக்குறிப்புப் பாலுணர்த்துமாறு தெரிநிலை வினையொடு மாட்டெறியப்படுமாகலின், டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரி நிலை வினைக் கீறாகாமையின், மாட்டேற்று வகையாற் பாலுணர்த்துதல் பெறப்படாதாம்; அதனான் ஈண்டு வைத்தார். தகரவுகரம், இறந்தகாலத்து வருங்கால் புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞியது எனக் கடதறவும் யகரமுமாகிய உயிர்மெய்ப் பின் வரும். போனது என னகர உயிர்மெய்ப்பின் வருவதோவெனின்:- அது சான்றோர் செய்யுளுள் வாராமையின், அது சிதைவெனப்படும். நிகழ்காலத் தின்கண், நடவாநின்றது, நடக்கின்றது; உண்ணாநின்றது, உண்கின்றது என, நில், கின்றென்பனவற்றோடு அகரம் பெற்று வரும். எதிர்காலத்தின்கண், உண்பது, செல்வது எனப் பகரவகரம் பெற்றுவரும். றகரவுகரம், புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென்றன்று எனக் கடதற வென்பனவற்றின்முன் அன்பெற்று வரும். கூயின்று, கூயிற்று; போயின்று, போயிற்று என ஏனையெழுத்தின்முன் இன் பெற்று வரும். ஆண்டு இன்னின் னகரந் திரிந்துந் திரியாதும் வருதல் கொள்க. வந்தின் றென்பதோவெனின்:- அஃது எதிர்மறுத்தலை யுணர்த்துதற்கு வந்த இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறைவினை யென மறுக்க, அஃதெதிர்மறையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் என வரும் ஏனைப்பாற் சொல்லா னறிக. டகரவுகரம் குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும். (20) அஃறிணைக்குரிய வினைமுற்றுக்கள் 218 பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பாலறியவந்த அவ்வாறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் எ-று. பன்மையு மொருமையும் பாலறிவந்த வென்பதற்கு முன்னுரைத் தாங்குரைக்க. இதனாற் பயன், அஃறிணைச்சொல் ஆறே பிறிதில்லையென வரையறுத்தலெனக் கொள்க. (21) ‘எவன்’ என்னும் குறிப்புமுற்று 219. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவனென் வினாவே. (இ-ள்.) எவனென்னும் வினாச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை இரண்டுபாற்கும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) அஃதெவன், அவையெவன் என வரும். னகரவீறாய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனை வேறு கூறினார். அஃதேல் நுமக்கிவன் எவனாம் என வுயர்திணைக்கண்ணும் வருமாலெனின்:- ஆண்டு அது முறைபற்றி நிற்றலின், அஃறிணைக்கண் வந்ததெனவேபடு மென்பது. அஃதேல் நுமக்கிவனென்ன முறையனாம் என்பதல்லது என்ன முறையாம் என்பது பொருந்தாதெனின்:- என்னமுறை என்பது ஆண்டு முறைமேனில்லாது ஒற்றுமை நயத்தான் முறையுடையான் மேனிற்றலின், அமையுமென்க. எவனென்பதொரு பெயரும் உண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்புமுற் றென்க. (22) அஃறிணைக் குறிப்பு வினைமுற்று 220 இன்றில உடைய என்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். (இ-ள்.) இன்று இலவென்பன முதலாகிய பத்தும் வினைக்குறிப்புச் சொல்லாம், எ-று. அவற்றுள், இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பன தம்மையுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. (எ-டு.) இன்று, இல, கோடுடைத்து, கோடுடைய, அதுவன்று, அவையல்ல, உள என வரும். ஈண்டும், கோடின்று, கோடில என உடை மைக்கு மறுதலையாய இன்மைபற்றி வருவனவுங் கொள்க. உடையவென்பது முதலாயவற்றைச் செய்யுளின்ப நோக்கி மயங்கக் கூறினார். அவ்வேழனையும் பொருள்பற்றி யோதாராயினார்; கிளந்தோதிய வழியுஞ் சூத்திரமுஞ் சுருங்குமாகலானென்பது. உளதென்பது பெருவழக்கிற் றன்மையின், உளவென்பதே கூறினார். அது தன்னின முடித்தலென்பதனாற் கொள்ளப்படும். பண்புகொள்கிளவி - கரியது, கரிய; செய்யது, செய்ய என வரும். பண்பினாகிய சினைமுதற்கிளவி - நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய என வரும். பண்படுத்த சினைபற்றியல்லது அவ்வினைக்குறிப்பு நில்லாமை யின், பண்பினாகியவெனப் பண்பை முதனிலையாகக் கூறினார். பெருந் தோளன் என உயர்திணைக்கண்ணும் பண்படுத்து வருதல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. வேற்றுமைப் பொருள்பற்றி வருங்கால், பிறிதின் கிழமையும் உறுப்பின்கிழமையல்லாத தற்கிழமையும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும்பற்றி அஃறிணை வினைக் குறிப்புப் பயின்று வாராமை யின், சினைக்கிழமையே கூறினார். அப்பொருள்பற்றிப் பயிலாது வருவன உரையிற் கோடலென்பதனாற் கொள்ளப்படும். ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனாற் கொள்ளினு மமையும். ‘அறிந்த மாக்கட் டாகுக தில்ல’ (அகம். 15). ‘மெல்விரன் மந்தி குறை கூறுஞ் செம்மற்றே’ (கலி. 40) எனவும், ‘அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே’ (புறம். 173) எனவும் வரும். ‘வடாது’ ‘தெனாது’ (புறம். 6) என்பனவும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம். ஒப்பொடு வரூஉங் கிளவி - பொன்னன்னது, பொன்னன்ன என வரும். ஒப்பொடு வருதலாவது ஒப்புப் பொருள்பற்றி வருதல். வழக்குப்பயிற்சி நோக்கிப் பத்தென வரையறுத்தவாறு. (23) குறிப்பு வினைமுற்றின் ஈறு 221. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருள்பற்றி வரும் வினைச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை வினையோ டொக்கும் எ-று. சொல் பற்றியும் பொருள் பற்றியும் கூறிய இருவகையும் எஞ்சாமற் றழுவுதற்கு ‘அன்னமரபின்’ என்றார். ஒத்தலாவது, அஃறிணை வினைக்கோதிய ஈற்றுட் பொருந்துவன வினைக் குறிப்பின்கண் வருங்காலும், அவ்வவ் வீற்றான் அவ்வவ் விடமும் பாலும் விளக்குதல். பொருந்துவனவாவன, ஆகாரமும் வகாரமுமொழித்துக் குற்றுகரம் மூன்றும் அகரமுமாம். அவற்றுட் டகரமூர்ந்த குற்றுகரம் ‘ஒன்றன் படர்க்கை (சொல். 217) என்புழிக் கூறுதலான், ஒழிந்த மூன்றும் ஈண்டுக் கொள்ளப்படும். அவை அவ்வப்பால் விளக்குதல் மேற்காட்டப்பட்டன வற்றுட் கண்டுகொள்க. (24) 4. விரவு வினை பெயர், முறை, தொகை 222. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. (இ-ள்.) முன்னிலை முதலாகச் செய்தவென்ப தீறாகக் கூறிய முறை யானின்ற எட்டுச் சொல்லும், பொதுமையிற் பிரிந்து ஒருகால் உயர்திணை யுணர்த்தியும், ஒருகால் அஃறிணையுணர்த்தியும், வேறுபடுந் தொழிலை யுடையவாய், இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்தவுரிமைய எ-று. முன்னிலை வினைச்சொல்லாவது எதிர்முகமாய் நின்றான் தொழிலுணர்த்துவது. வியங்கோள் ஏவற்பொருட்டாய் வருவது. வாழ்த்துதன் முதலாகிய பிறபொருளுமுடைத்தாகலின், இக்குறி மிகுதிநோக்கிச் சென்ற குறியென வுணர்க. வினையெஞ்சுகிளவி வினையை யொழிபாகவுடைய வினை. இன்மை செப்பல் இல்லை, இல் என்பன. வேறென்பது தன்னை யுணர்த்தி நின்றது. செய்ம்மனவென்பது மனவீற்று முற்றாய் எதிர்கால முணர்த்தும். செய்யுமென்பது முற்றும் எச்சமுமாகிய இருநிலைமையுமுடைத்தாய் உம் மீற்றான் நிகழ்காலமுணர்த்தும். செய்தவென்பது அகரவீற்றெச்சமாய் இறந்த கால முணர்த்தும். செய்ம்மன முதலாகிய மூன்று வாய்பாட்டானும், அவ்வீற்றவாய்க் காலமுணர்த்தும் உண்மன, உண்ணும், உண்ட என்னுந் தொடக்கத்தன வெல்லாந் தழுவப்பட்டன. அவற்றான் அவை தழுவப்பட்டவாறென்னை யெனின், எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடாகலின், பொதுவாகிய செய்தல் எல்லாத்தொழிலையும் அகப்படுத்து நிற்கும்; அதனான் அவற்றான் அவை தழுவப்படு மென்க. அவை பொதுவுஞ் சிறப்பு மல்லவேல், என் செய்யா நின்றான் என்று வினாயவழி, உண்ணாநின்றான் எனச் செப்புதல் இயையாதா மென்க. இது செய்து செய்பு என்பனவற்றிற்கு மொக்கும். அஃதேல், சிலவற்றை ஈற்றானுணர்த்திச் சிலவற்றை வாய்பாட்டா னுணர்த்திய தென்னையெனின், அம்மீறும் அன்னீறும் ஐயீறும் முதலாகிய சொற்கண் காலப்பன்மையான் வரும் வாய்பாட்டுப் பன்மையாற் சூத்திரம் பெருகு மென்றஞ்சி, அவற்றை ஈற்றானுணர்த்திக் கால வேறுபாடு இலேசாற்கொள்ளவைத்தார். காலப்பன்மையில்லனவற்றை வாய்பாட் டானு முணர்த்துப, ஈற்றானு முணர்த்துப. முற்றாதலும் பலவாய்பாட்டாற் பயின்று வருதலு முடைமையான், முன்னிலைவினையை முன்வைத்தார். ஏவற்பொருண்மை முன்னிலை வினைக்கண்ணு முண்மையிற் பொருளியைபுடைத்தாகலானும், இடங் குறித்து முற்றாய் வருதலொப்புமையானும், அதன்பின் வியங்கோள் வைத் தார். அதன் பின், முற்றாதலொப்புமையான் இன்மைசெப்பல் வேறென் கிளவி செய்ம்மன வென்பனவற்றை வைத்தல் முறைமையாயினும், முற்றின் கண் வினையெச்ச முண்மையானும், ஈற்றுப்பன்மையொடு பயின்று வருதலானும், வினையெச்சம் வைத்தார். இன்மை பற்றி வரும் வினை யெச்சமு முண்மையான் அதனோடியைய இன்மை செப்பல் வைத்தார். வினைக்குறிப்பாத லொப்புமையானும், செய்ம்மனவிற் பயிற்சியுடைமை யானும், அதன்பின் வேறென்கிளவி வைத்தார். முற்றாத லொப்புமையான், அதன்பின், செய்ம்மன வைத்தார். முற்றாம்நிலைமையு முடைத்தாகலின், அதன்பின் செய்யுமென்பது வைத்தார். பெயரெச்சமாத லொப்புமையான், அதன்பின், செய்த வென்பது வைத்தார். இவ்வா றியைபுபற்றி வைத்தமை யான், ‘அம்முறை நின்ற’ வென்றார். ‘திரிபுவேறுபடூஉஞ் செய்தியவாகி’ யெனவே, வேறுவேறுணர்த்தி னல்லது ஒரு சொற் சொல்லுதற்கண் இருதிணையு முணர்த்தாமை பெறுதும். (25) முன்னிலையொருமை வினைமுற்று 223. அவற்றுள் முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். (இ-ள்.) கூறப்பட்ட விரவுவினைகளுள், முன்னிலைச் சொல், இகர வீறும் ஐகாரவீறும் ஆயீறுமாகிய மூன்றும் ஒருவற்கும் ஒருத்திக்கும் ஒன்றற்கும் ஒப்பச்செல்லும் எ-று. முன்னிலைக்கிளவி யென்பதற்கு முடிபு ‘அவைதாம் அம் ஆம் எம் ஏம்’ (சொல். 202) என்புழி ‘அவைதாம்’ என்பதற் குரைத்தாங் குரைக்க. இகரம் தடற வூர்ந்து எதிர்காலம் பற்றி வரும். ஐகாரம் அம் மீற்றிற் குரிய எழுத்துப்பெற்றும், ஆயீறு ஆமீற்றிற் குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும். (எ-டு.) உரைத்தி, உண்டி, தின்றி எனவும்; உண்டனை, உண்ணா நின்றனை, உண்பை எனவும்; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய் எனவும் வரும். ஒழிந்தவெழுத்தோடு மொட்டிக்கொள்க. ‘ஐயசிறி தென்னை யூக்கி’ (குறிஞ்சிக் கலி. 1) என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வரும். உண், தின்; நட, கிட என்னுந் தொடக்கத்த முன்னிலை ஒருமை பெறுமாறென்னையெனின், அவை ஆயீறாதல் எச்சவியலுட் பெறப்படு மென்க. (26) முன்னிலைப்பன்மை வினைமுற்று 224. இர் ஈர் மின்னென வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்லோ ரனைய என்மனார் புலவர். (இ-ள்.) இர், ஈர், மின்னென்னும் ஈற்றையுடைய மூன்று சொல்லும், பல்லோர்கண்ணும் பலவற்றின்கண்ணுஞ் சொல்லுதற்கண் ஒத்தவுரிமைய எ-று. இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஈரீறு ஆரீற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும். மின்னீறு பிறவெழுத்துப் பெறாது, ஏற்றவழி உகரம் பெற்று, எதிர்காலம் பற்றி வரும். (எ-டு.) உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் எனவும்; உண்டீர் உண்ணாநின்றீர், உண்குவீர் எனவும் உண்மின், தின்மின், உரிஞுமின் எனவும் வரும். ஒழிந்த வெழுத்தோடு மொட்டிக்கொள்க. முன்னிலைவினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி ஐகாரமும் ஆயும் இருவும் ஈருமென்னு நான்கீற்றவாய், கழலினை, நாட்டை, பொன்னன்னை, கரியை எனவும்; கழலினாய், நாட்டாய், பொன்னன்னாய், கரியாய் எனவும்; கழலினிர், நாட்டினிர், பொன்னன்னிர், கரியிர் எனவும்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர், கரியீர் எனவும் வரும். ஒழிந்த பொருளோடு மொட்டிக்கொள்க. போறி என இகரவீற்று வினைக்குறிப்புமுண்டாலெனின், போன்றனன், போன்றான் என்பனபோல வந்து தெரிநிலை வினையாய் நின்றதென மறுக்க. அஃறிணை வினைக்குறிப்பும் உயர்திணை வினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி வருதலின், அவற்றை யெடுத்தோதிற் றென்னை யெனின்:- இன்று முதலாயின பொருள் பற்றி வந்தன கிளந் தோதலாஞ் சுருக்கத்தன ஆகலானும், சினைமுதற்கிளவி பண்புமடுத்து வருதல் உயர்திணை யதிகாரத்துப் பெறப்படாமையானும் அவற்றை யோதுவார் ஏனைப் பொருளு முடனோதினார். முன்னிலை வினைக்குறிப்புப் பலவாதலானும், எடுத்தோதாவழிப் படுவதொரு குறைபாடின்மையானும், இவற்றை யுய்த்துணர வைத்தா ரென்பது. அல்லது, எடுத்தோத்தில்வழி உய்த்துணர்வதெனினு மமையும். முன்னிலை வினையீற்றான் எதிர்காலம்பற்றி வரும் இகரத்தையும் மின்னையும் முதலும் இறுதியும் வைத்து, மூன்று காலமும்பற்றி வரும் நான்கீற்றையுந் தம்மு ளியைய இடை வைத்தார். அல்லது, பொருண்மை கருதாது சூத்திர யாப்பிற்கேற்ப வைத்தா ரெனினுமமையும். (27) ஏனை வினைகள் 225. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே. (இ-ள்.) முன்னிலைவினை யொழித்து ஒழிந்த ஏழுவினைச் சொல்லும் மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்குமுரிய, தத்தம் பொருட்கண் தோன்றுமிடத்து எ-று. இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப்பாற்கும் உரியவாத லெய்தினவெனினும், முன்னர் விலக்கப்படுவன வொழித்து ஒழிந்த விடமும் பாலும் பற்றி வருமாறு ஈண்டுக் காட்டப்படும். (எ-டு.) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க எனவும்; உழுது வந்தேன், உழுது வந்தேம், உழுது வந்தாய், உழுது வந்தீர், உழுது வந்தான், உழுது வந்தாள், உழுது வந்தார், உழுது வந்தது, உழுது வந்தன எனவும்; யானில்லை, யாமில்லை, நீயில்லை, நீயிரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை யில்லை எனவும்; யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்; யானுண்மன, யாமுண்மன, நீயுண்மன, நீயிருண்மன, அவனுண்மன, அவளுண்மன, அவருண்மன, அதுவுண்மன, அவையுண்மன எனவும்; யானுண்ணுமூண், யாமுண்ணுமூண், நீயுண்ணுமூண், நீயிருண்ணுமூண், அவனுண்ணுமூண், அவளுண்ணுமூண், அவருண்ணுமூண், அதுவுண்ணு மூண், அவையுண்ணுமூண் எனவும்; அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எனவும்; யானுண்டவூண், யாமுண்டவூண், நீயுண்ட வூண், நீயிருண்டவூண், அவனுண்டவூண், அவளுண்டவூண், அவருண்ட வூண், அது வுண்டவூண், அவையுண்டவூண் எனவும் வரும். (28) வியங்கோள் வினை 226. அவற்றுள் முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும் மன்னா தாகும் வியங்கோள் கிளவி. (இ-ள்.) மேல் ‘எஞ்சிய கிளவி’ (சொல். 225) எனப்பட்ட ஏழனுள், வியங்கோட்கிளவி, முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தொடு நிலைபெறாதாம் எ-று. ஆயீரிடத்தொடு கொள்ளாதென்னாது மன்னதாகு மென்றதனான், அவ்விடத்தொடு சிறுபான்மை வருதல் கொள்க. மன்னுதல் பெரும் பான்மையும் நிகழ்தல். சிறுபான்மை வருவன: நீ வாழ்க என்னும் வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும், யானுநின்னோ டுடனுறைக என்னும் வேண்டிக் கோடற் பொருண்மைக்கண்ணும் வருவனவாம். ‘கடாவுக பாகநின் கால்வ னெடுந்தேர்’ என்பதும் வேண்டிக்கோடற் பொருண்மைக் கண் வந்ததாம். தன்மைக்கண் ஏவலில்லை. முன்னிலைக்கண் ஏவல் வருவதுண்டேற் கண்டுகொள்க. அஃதேல் வியங்கோளீறு கூறாராயிற் றென்னையெனின்:- எழுத் தோத்தினுள் ‘ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்’ (எழுத். 210) என அகரவீற்றுள் எடுத்தலாற் பொருந்திய மெய்யூர்ந்து அகரவீறாய் வருதலும், செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ (சொல். 13) எனவும், ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ (சொல். 463) எனவும். ‘மறைக்குங் காலை மரீஇய தொராஅல்’ (சொல். 443) எனவும், உடம்பொடு புணர்த்தலான் அல்லீறாய் வருதலும் ஆலீறாய் வருதலும் பெறுதலின், வியங்கோளீறுங் கூறினாரெனவே படும். பிறவு முளவேற் கொள்க. (29) செய்யும் என்னும் வினை 227. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னுங் கிளவியொடு கொள்ளா. (இ-ள்.) பல்லோர் படர்க்கையும் முன்னிலையும் தன்மையுமாகிய அவ்வயின் மூன்றும், நிகழ்காலத்து வருஞ் செய்யுமென்னுஞ் சொல்லொடு பொருந்தா எ-று. அவ்வயி னென்றது, இடமும் பாலுமாகிய எஞ்சிய கிளவிக்குரிய பொருட்கண் என்றவாறு. நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியோடென அதனாற் றோன்றுங்கால முணர்த்தியவாறு. இவையிரண்டு சூத்திரமும் பொதுவகையா னெய்தியனவற்றை விலக்கி நின்றன. (30) வினையெச்ச வாய்பாடுகள் 228. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. பொதுவகையா னெய்தியவற்றுள், வியங்கோட்கிளவிக்குஞ் செய்யு மென்னுங் கிளவிக்கும் எய்தாதன விலக்கி, இனி நிறுத்த முறையானே வினையெச்சத்தினது பாகுபாடுணர்த்துகின்றார். (இ-ள்.) செய்தென்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் வினை யெச்சமாம் எ-று. அவ்வகையொன்பது மென்றது, இறுதி நின்ற இடைச்சொல்லான் வேறுபட்ட ஒன்பது மென்றவாறு. அவ் விடைச்சொல்லாவன உகரமும், ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவும், இன்னும், அகரமும், குகரமுமாம். ‘செய்கென் கிளவி வினையொடு முடியினும்’ (சொல். 204) எனவும், ‘செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்’ (சொல். 450) எனவும், இறுதி யிடைச்சொ லேற்றவாற்றாற் பிரித்துணர வாய்பா டோதினாற் போல, ஏற்றவாற்றான் இறுதியிடைச்சொற் பிரித்துணர்ந்துகொள்ள ஈண்டும் வாய்பாடுபற்றி யோதினார். உகரம், கடதறவூர்ந்து இயல்பாயும், ஏனையெழுத்தூர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்தகாலம்பற்றி வரும் இவ் வுகரவீறு இகரமாதலும், யகரம் வரக் கெடுதலும் ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ (சொல். 457) என்பதனாற் பெறப்படும். (எ-டு.) நக்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; எஞ்சி, உரிஞி, ஓடி எனவும்; ஆய், போய் எனவும் வரும். சினைஇ, உரைஇ, இரீஇ, உடீஇ, பராஅய், தூஉய், தாஅய் என்பனவோவெனின், அவை செய்யுண்முடி பென்க. ஆகி, போகி, ஓடி, மலர்த்தி, ஆற்றி என்புழி முதனிலை குற்றுகர வீறாதலின், ஏனையெழுத்தாத லறிக. கடதற வென்பன குற்றுகரத்தொடு வருமிடமும் தனிமெய்யாய் வருமிடமும் தெரிந்துணர்க. அஃதேல், ஆய் என்பதனை யகரவீறென்றும், ஓடியென்பதனை இகரவீறென்றுங்கொள்ளாது. உகரவீறென்ற தென்னையெனின், நன்று சொன்னாய்! இகரவிறுதி இடைச்சொல்லாயின், இறுதி யிடைச்சொல் எல்லாத் தொழிலும்பற்றி வருதலிற் செலவு வரவென்பனவற்றொடும் வரல்வேண்டும். இனிச் செய்தெனெச்சத் துகரமும் இறுதியிடைச்சொல் லாதலின் ஆகுதல் ஓடுதலென்னுந் தொழில்பற்றியும் வரல்வேண்டும். செலவு வரவுபற்றி இகரம் வாராமையானும், ஆகுதல் ஓடுதல் பற்றி உகரம் வாராமையானும், இறுதி யிடைச்சொல் இகரமேயாக உகரமேயாக ஒன்றாவதல்லது இரண்டெனப் படாதாம். உகரம் ஒன்றாய் நின்று கடதற வூர்ந்த விதிவினைக்கட் பயின்று வருதலானும், எதிர்மறை யெச்சமெல்லாம் பெரும்பான்மையும் உகரவீறாயல்லது வாராமையானும், உகரம் இயல்பாக இகரம் அதன் றிரிபென்றலே முறைமை யென்க. யகரவீற்றிற்கும் இஃதொக்கும். ஊகாரம் உண்ணூவந்தான், தின்னூவந்தான் எனப் பின்வருந் தொழிற்கு இடையின்றி முன்வருந் தொழின்மேல் இறந்தகாலம்பற்றி வரும். அஃது உண்ணா என ஆகாரமாயும் வரும். பகரவுகரம் நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகா நின்று வந்தான் என்றவாறு. ஈண்டு நிகழ்காலமென்றது முடிக்குஞ் சொல்லா னுணரப்படுந் தொழிலோடு உடனிகழ்தல். உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும், ஏற்றவழிப் பெறுதல் கொள்க. எனவென்பது கடதற வூர்ந்து இறந்தகாலம்பற்றி முடிக்குஞ் சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணமென்பதுபட வரும். (எ-டு.) சோலைபுக்கென வெப்பநீங்கிற்று; உண்டெனப் பசி கெட்டது; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று என வரும். எஞ்சியென எனவும், உரிஞியென எனவும், ஏனை எழுத்தொடும் வருமாறறிந் தொட்டிக் கொள்க. இயர், இய என்பன, எதிர்காலம் பற்றி, உண்ணியர், தின்னியர்; உண்ணிய, தின்னிய என வரும். போகியர், போகிய என ஏற்றவழிக் ககரம் பெற்று வருதலுங் கொள்க. இன் எதிர்காலம்பற்றிக் காரணப்பொருட்டாய் வரும். (எ-டு.) மழைபெய்யிற் குளநிறையும்; மெய்யுணரின் வீடெளிதாம் என வரும். நடப்பின், உரைப்பின் என ஏற்றவழிப் பகரம் பெற்று வருதலுங் கொள்க. அகரம், மழை பெய்யக் குளம் நிறைந்தது; ஞாயிறு பட வந்தான், உண்ண வந்தான் என மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப, உரைக்க என ஏற்றவழிப் பகரமும் ககரமும் பெறுதல் கொள்க. குகரம் உணற்கு வந்தான்; தினற்கு வந்தான் என வெதிர்காலம் பற்றி வரும். புகரமும் குகரமும் உகரத்தின்கண்ணும், எனவும் இயவும் அகரத்தின் கண்ணும் அடங்குமெனின், ஆரீற்றில் மார் அடங்காமைக்கு உரைத்தாங் குரைக்க. செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுரு பேற்று நின்ற தொழிற் பெயரின் வேறாதல் கிளவியாக்கத்துட் கூறினாம். திரியாது நிற்கும் ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவு மென்னும் ஐந்தீற்றுவினையெச்சமும் வழக்கினுள் இக்காலத்து வாராவாயி னும், சான்றோர் செய்யுளுள் அவற்றது வாய்பாட்டு வேற்றுமை யெல்லாங் கண்டு கொள்க. (31) 229. பின்முன் கால்கடை வழிஇடத்து என்னும் அன்ன மரபின் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. (இ-ள்.) பின்னும், முன்னும், காலும், கடையும், வழியும், இடத்தும் என்னுமீற்றவாய் வருவனவும், அவைபோலக் காலங் கண்ணி வருவன பிறவும், வினையெச்சமாம் எ-று. (எ-டு.) நீயிர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் எனவும், நீ யிவ் வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ எனவும், பின் இறப்பும் நிகழ்வும் பற்றியும், மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என முன் இறந்தகாலம் பற்றியும், ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்’ (கலி. 35) எனவும், ‘அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’ (கலி. 10) எனவும் காலீறு மூன்று காலமும் பற்றியும், ‘தொடர்கூரத் தூவாமை வந்தக்கடை’ (கலி. 22) எனக் கடையீறு இறந்தகாலம்பற்றியும், உரைத்த வழி, உரைக்கும் வழி, உரைத்த விடத்து, உரைக்குமிடத்து என வழி யென்னு மீறும் இடத்தென்னுமீறும் மூன்றுகாலமும் பற்றியும் வரும். கால், வழி, இடத் தென்பனவற்றின் நிகழ்காலத்து வாய்பாடு எதிர்காலத்திற்கு மேற்ற லறிக. கூதிர் போயபின் வந்தான் எனவும், நின்றவிடத்து நின்றான் எனவும், பின் முதலாயின பெயரெச்சத்தொடும் வந்தவழி, இறப்பு முதலாகிய காலங் கண்ணாமையின், அவற்றை நீக்குதற்குக் ‘காலங் கண்ணிய’ வென்றார். காலவேறுபாட்டான் வரும் வாய்பாட்டுப் பன்மையெல்லாம் ஒரு வாய்பாட்டாற் றழுவலாகாமையின், இவற்றை ஈறுபற்றி யோதினார். அன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மென்றதனான், உண்பாக்கு, வேபாக்கு என வரும் பாக்கீறும், உண்பான் வருவான் என்னும் ஆனீறும், ‘நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே’ (குறிஞ்சிக்கலி. 3) என்னும் உம்மீறும், ‘அற்றா லளவறிந் துண்க’ (குறள். 943) என்னும் ஆலீறும், எதிர்மறை பற்றிக் ‘கூறாமற் குறித்ததன்மேற் செல்லும்’ (கலி. 1) என வரும் மல்லீறும், ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (குறள். 701) என்னும் மகர வைகார வீறுங் கொள்க. ‘என்ன கிளவியு’ மென்றதனான், இன்றி, அன்றி, அல்லது, அல்லால் என வருங் குறிப்புவினையெச்சமுங் கொள்க. (32) அவற்றுள் முதல்மூன்று வாய்பாடுகள் 230. அவற்றுள் முதல்நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட பதினைந்து வினையெச்சத்துள், முதற் கணின்ற செய்து, செய்யூ, செய்பு என்னு மூன்றும் தம் வினைமுதல் வினையான் முடியும் எ-று. (எ-டு.) உண்டு வந்தான், உண்ணூ வந்தான், உண்குபு வந்தான் எனவும்; கற்று வல்லனாயினான், கல்லூ வல்லனாயினான், கற்குபு வல்லனாயினான் எனவும் வரும். ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய, யாஅவிரி நீழற் றுஞ்சும்’ (குறுந். 232) எனச் செய்தெனெச்சம் வினைமுதல் வினையல்லா வினையான் முடிந்ததா லெனின், அது ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ (சொல். 457) என்புழிப் பெறப்படும். இது முன்னர் ‘வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபா கும்மே’ (சொல். 432) எனப் பொதுவகையான் முடிவனவற்றை எதிரது நோக்கி இவை மூன்றும் வினைமுதன் முடிபினவென நியமித்தவாறு. அஃதேல், இதனையும் ஆண்டே கூறுகவெனின், ஆண்டுச் செய்து செய்யூச் செய்பு என்னு மூன்று மெனக் கிளந்தோதுவதல்லது, முதனிலை மூன்றுமெனத் தொகுத்தோத லாகாமையானும், ஈண்டு இயைபுடைத் தாகலானும், ஆண்டுக் கூறாது ஈண்டுக் கூறினாரென்பது. (33) 231. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றின் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோர் அனைய வென்மனார் புலவர். (இ-ள்.) வினைமுதன் முடிபினவாகிய அம்மூன்று சொல்லும், சினைவினை நின்று சினைவினையொடு முடியாது முதல்வினையொடு முடியினும், வினையா னொருதன்மைய எ-று. வினையா னொருதன்மைய வென்றது, முதல்வினையொடு முடியினும் முதலொடு சினைக்கொற்றுமையுண்மையாற் பிறவினை கொண்டன வாகா, வினை முதல்வினை கொண்டனவேயா மென்றவாறு. (எ-டு.) கையிற்று வீழ்ந்தான், கையிறூ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வரும். ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய’ என்புழிப்போலக் கையிற்றென்னுஞ் செய்தெனெச்சம் கையிறவெனச் செயவெனெச்சப் பொருட்டாய் நின்றதென வமையும், இச்சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று. வினைமுதல்வினை கொள்ளாதவழியன்றே அது பிற பொருட் டாயது? வினைமுதல் வினைகொண்டு தன் பொருளே யுணர்த்து வதனைப் பிறபொருண்மே னின்ற தென்றல் பொருந்தாமையின், அது கடாவன் றென்க. (34) பிற வாய்பாடுகள் 232. ஏனை எச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாமியல் மருங்கின் முடியும் என்ப. (இ-ள்.) முதனிலை மூன்றுமல்லாத பிற வினையெச்சம் வினைமுதல் வினையானும், ஆண்டு வந்து பொருந்தும் பிறவினையானும், வரையறை யின்றித் தாமியலுமாற்றான் முடியும் எ-று. (எ-டு.) மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்தென மரங்குழைத்தது எனவும்; மழை பெய்யிய ரெழுந்தது, மழை பெய்யியர் பலி கொடுத்தார் எனவும்; மழை பெய்யிய முழங்கும், மழைபெய்யிய வான் பழிச் சுதும் எனவும்; மழை பெய்யிற் புகழ்பெறும், மழை பெய்யிற் குளநிறையும் எனவும்; மழை பெய்தற்கு முழங்கும், மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்து தும் எனவும்; இறந்தபின் னிளமை வாராது, கணவன் இனிதுண்டபின் காதலி முகமலர்ந்தது எனவும் அவை வினைமுதல் வினையும் பிறவினையும் கொண்டவாறு கண்டுகொள்க. அல்லனவும் இருவகை வினையுங்கோடல் வழக்கினுட் கண்டுகொள்க. வரையறையின்றி இருவகை வினையுங்கோடலின் ‘வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபா கும்மே’ (சொல். 432) என்னும் பொதுவிதியான் முடிவனவற்றை ஈண்டுக் கூறல்வேண்டாவெனின், வினையெச்சங்களுள் ஒருசாரன வினைமுதல் வினைகொள்ளுமென்றத னான், ஏனை யெச்சம் பிறவினையே கொள்ளுமோ இருவகை வினையுங் கொள்ளுமோ என்றையமாம்; அதனான், ஐயநீங்க இவ்வாறு கூறல் வேண்டு மென்பது. அஃதேல், வினையொடு முடிதல் ஈண்டுக் கூறப்பட்டமையின் எச்ச வியலுள் ‘குறிப்பும் முடிபாகும்’ என வமையும், வினையுமெனல் வேண்டா வெனின், குறிப்புமென்னு மும்மையாற் றழுவப்படுவது சேய்த்தாகலின் தெற்றென விளக்காமையானும், வினைமுதலென்பது பெயர்க்கும் வினைக் கும் பொதுவாகலானும், வினையுமெனல் வேண்டுமென்பது. (35) வினையெச்சங்கள் அடுக்கி முடிதல் 233. பன்முறை யானும் வினைஎஞ்சு கிளவி சொன்முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. (இ-ள்.) ஒரு வாய்பாட்டானும் மற்றைப் பலவாய்பாட்டானும் வினையெஞ்சுகிளவி அச்சொற்கண் முறையான் முடியாது அடுக்கிவரினும், முன்னின்றவெச்சம் முடிய ஏனையவும் பொருண் முடிந்தனவாம் எ-று. (எ-டு.) உண்டு தின்றாடிப் பாடி வந்தான் எனவும், உண்டு பருகூத் தின்குபு வந்தான் எனவும் வரும். முன்னது முடிய முடியுமென்றாராயினும், உண்டு தின்று மழை பெய்யக் குளநிறையும் என்றவழி, முன்னதன்றொழிலான் ஏனைய முடி யாமையின் பன்முறையான் அடுக்குங்கால் முன்னதன் றொழிலான் முடிதற் கேற்பனவே கொள்க. சொன்முறை முடியாமையாவது தம்மொடு தாமும் பிறசொல்லும் முடியாமை. உண்டு வந்தான்; தின்று வந்தான் எனச் சொற்றொறும் வினை யியைதன் மரபு. அங்ஙனம் நில்லாது தம்முளியைபில்லன அடுக்கிவந்து இறுதி வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல்லான் எல்லாம் முடியினும் இழுக்காதென அமைத்தவாறு. வினையெச்சம் பன்முறையானு மடுக்கி ஒரு சொல்லான் முடியு மெனவே, பெயரெச்சம் ஒருமுறையா னடுக்கி ஒரு சொல்லான் முடியு மென்பதாம். நெல்லரியு மிருந்தொழுவர்’ (புறம். 24) என்னும் புறத்தொகைப் பாட்டினுள் ‘தென்கடற் றிரைமிசைப் பாயுந்து’ எனவும், ‘தன்குரவைச் சீர் தூங்குந்து’ ‘எனவும், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து’ எனவும், ‘முந்நீர்ப் பாயும்’ எனவும் செய்யுமென்னும் பெயரெச்ச மடுக்கி ‘ஓம்பா வீகை மாவே ளெவ்வி, புனலம் புதவின் மிழலை’ என்னும் ஒரு பொருள் கொண்டு முடிந்தவாறு கண்டுகொள்க. ஆங்குத் ‘தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய’ என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. பிறவுமன்ன. (36) பெயரெச்ச வாய்பாடுகள் 234. நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. வினையெச்சமுணர்த்தி, இனிப் பெயரெச்ச முணர்த்துகின்றார். (இ-ள்.) செய்யும், செய்த என்னுஞ் சொற்கள், தொழின் முதனிலை யெட்டனுள் இன்னதற்கு இது பயனாக என்னும் இரண்டொழித்து ஏனை யாறுபொருட்கும் ஒத்த வுரிமைய எ-று. இவற்றிற் கொத்தவுரிமைய வெனவே, ஒழிந்த விரண்டற்கும் இவற்றோ டொப்ப வுரியவாகா, சிறுபான்மை யுரிய வென்றவாறாம். (எ-டு.) வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங்கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து உம்மீறு காலவெழுத்துப் பெறாது ஆறுபொருட்கு முரித்தாய் வந்தவாறு. புக்கவில், உண்டசோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்தவென்னும் பெயரெச்சத்திறுதி அகரம் கடதறவும் யகர னகரமும் ஊர்ந்து அப்பொருட்குரித்தாய் வந்தவாறு. நோய் தீருமருந்து, நோய் தீர்ந்த மருந்து என்னு மேதுப் பொருண்மை, கருவிக்க ணடங்கும். அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான், ஆ கொடுத்த பார்ப்பான் எனவும்; ஆடையொலிக்குங் கூலி, ஆடையொலித்த கூலி எனவும் ஏனை யிரண் டற்குஞ் சிறு பான்மை யுரியவாய் வந்தவாறு. எல்லைப்பொருள் பஃறொழில்பற்றி வருஞ் சிறப்பின்றாகலிற் றொழின்முதலொடு கூறாது ‘இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்’ (சொல். 78) என்னும் பொருண்மையாற் றழீஇக்கொண்டாராகலின், பழமுதிருங் கோடு, பழமுதிர்ந்தகோடு எனச் சிறுபான்மை எல்லைப் பொருட்குரிய வாதலுங் கொள்க. ‘நின்முகங் காணு மருந்தினே னென்னுமால்’ (குறிஞ்சிக்கலி. 24) என்புழிக் காட்சியை மருந்தென்றா னாதலின், காணு மருந்தென்பது வினைப்பெயர் கொண்டதாம்; ‘பொச்சாவாக், கருவியாற் போற்றிச் செயின்’ (குறள். 537) என்புழிப் பொச்சாவாக் கருவியென்பதுமது. ‘ஆறுசென்ற வியர்’ என்புழி வியர் ஆறுசேறலான் வந்த காரியமாகலின், செயப்படு பொருட்கணடங்கும். நூற்ற நூலானியன்ற கலிங்கமும் ஒற்றுமை நயத்தான் நூற்ற கலிங்க மெனப்படும். ‘நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ’ (பதிற்று. 12) எனப் பெயரெச்சத்தி னெதிர்மறை பொருட்பெயர் கொண்டு நின்றதாம். பிறவுங் கூறப்பட்ட பொருட்க ணடங்குமாறறிந் தடக்கிக் கொள்க. உண்டான் சாத்தன், மெழுகிற்றுத் திண்ணை என்புழி உண்டான் மெழுகிற்று என்னு முற்றுச்சொல் வினை முதலுஞ் செய்யப்படு பொருளு மாகிய பொருட் குரியவாமாறுபோல, இவ்விருவகைப் பெயரெச்சமும் நில முதலாகிய பொருட்குரியவாமென அவற்றது அறு பொருட்கு முரிமை உணர்த்தியவாறு. முடிபு எச்சவியலுட் பெறப்படும். பொருளைக் கிளவி யென்றார். நிலமுதலாயினவற்றைப் பெயரெச்சப் பொருளென்னாது முடிக்குஞ் சொல்லெனின், அவ்வறுபொருட்கு மென்னாது அவ்வறு பெயர்க்கு மென் றோதுவார்; ஓதவே, ‘பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே’ (சொல். 433) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம்; அதனான் இவை பொருளென்றலே யுரை. அம் ஆமென்பன முதலாக அகரமீறாகக் கிடந்த இறுதி இடைச் சொற்குக் கூறப்பட்ட காலவெழுத்துச் சிறிய சிதைந்துவரினும், சிறுபான்மை பிறவெழுத்துப் பெறினும், நுண்ணுணர்வுடையோர் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. (37) செய்யும் என்னும் பெயரெச்சம் 235. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே. (இ-ள்.) நிலமுதலாகிய பொருளொடு வருங்கால் செய்யுமென்னுஞ் சொல், விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யென்னும் மூவகைக்கும் உரித்தாம் எ-று. உரித்தாய் வருமாறு ‘எஞ்சிய கிளவி’ (சொல். 225) என்னுஞ் சூத்திரத்திற் காட்டினாம். அவற்றொடு வருவழியென, செய்யுமென்னுஞ் சொல் அப் பொருண்மைக் குரித்தாயும் உரித்தன்றியும் வரும் இருநிலைமையும் உடைத்தென்பது பெறுதும். அவற்றொடு வரு நிலைமை பெயரெஞ்சு கிளவியாம்; அவற்றொடு வாரா நிலைமை முற்றுச்சொல்லாம். அஃதேல், அது முற்றுச்சொல்லாதற்கண்ணும் பெயரெஞ்சு கிளவியாதற்கண்ணும் வேற்றுமை யென்னையெனின், ஏனை முற்றிற்கும் ஏனை யெச்சத்திற்கும் வேற்றுமையாவதே ஈண்டும் வேற்றுமையா மென்க. முற்றுச் சொல்லிற்கும் எச்சத்திற்கும் வேற்றுமை யாதெனின், பிறிதொரு சொல்லோடியையாது தாமே தொடராதற்கேற்கும் வினைச்சொல் முற்றாம்; பிறிதொரு சொற் பற்றியல்லது நிற்றலாற்றா வினைச்சொல் எச்சமாம். இது தம்முள் வேற்றுமை யென்க. அஃதேல், உண்டானென்பது சாத்தனென்னும் பெயர வாவி யன்றே நிற்பது? தாமே தொடராமென்றது என்னை யெனின், அற்றன்று. உண்டான் சாத்தன் என்றவழி, எத்தையென்னும் அவாய்நிலைக் கண் சோற்றை யென்பது வந்தியைந்தாற்போல, உண்டான் என்றவழி யாரென்னும் அவாய்நிலைக்கண் சாத்தனென்பது வந்தியைவ தல்லது, அப்பெயர்பற்றியல்லது நிற்றலாற்றா நிலைமைத்தன்று அச்சொல்லென் பது. இவ்வேற்றுமை விளங்க ஆசிரியர் முற்றுச்சொல்லென்றும், எச்ச மென்றும், அவற்றிற்குப் பெயர் கொடுத்தார். (38) இருவகையெச்சமும் எதிர்மறுத்து நிகழ்தல் 236. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. (இ-ள்.) பெயரெச்சமும் வினையெச்சமும், செய்தற் பொருளவன்றி அச்செய்தற்பொருண்மை எதிர்மறுத்துச் சொல்லினும், அவ்வெச்சப் பொருண்மையிற் றிரியா எ-று. பொருணிலையாவது தம்மெச்சமாகிய பெயரையும் வினையையுங் கொண்டல்லது அமையாத நிலைமை. என் சொல்லியவாறோவெனின், செய்யும் செய்த எனவும், செய்து செய்யூ செய்பு எனவும் பெயரெச்சமும் வினையெச்சமும் விதிவாய்பாட்டா னோதப்பட்டமையான், ஆண்டுச் செய்யா, செய்யாது என்னு மெதிர்மறை வாய்பாடு அடங்காமையின்,அவை எச்சமாதல் பெறப்பட்டின்று. அதனான், அவையும் அவ்வெச்சப் பொருண் மையிற் றிரியாது பெயரும் வினையுங் கொள்ளுமென எய்தாத தெய்து வித்தவாறு. (எ-டு.) உண்ணா வில்லம், உண்ணாச் சோறு, உண்ணாக் காலம், வனையாக் கோல், ஓதாப் பார்ப்பான், உண்ணா வூண் எனவும்; உண்ணாது வந்தான், உண்ணாமைக்குப் போயினான் எனவும் வரும். உண்ணா என்பது உண்ணும், உண்ட என்னுமிரண்டற்கும் எதிர் மறையாம். உண்ணாத என்பதுமது. உண்ணாது என்பது உண்டு, உண்ணூ, உண்குபு என்பனவற்றிற் கெதிர்மறை. உண்ணாமைக்கு என்பது உண்ணியர், உண்ணிய, உணற்கு என்பனவற்றிற்கும் உண்ண எனச் செயற்கென்பதுபட வரும் செயவெனெச்சத்திற்கும் எதிர்மறையாம். உண்ணாமை, உண்ணா மல் என்பனவும் அதற்கு எதிர்மறையாம். பிறவும் எதிர்மறை வாய்பா டுளவேற் கொள்க. உண்டிலன், உண்ணாநின்றிலன், உண்ணலன், உண்ணான் என முற்றுச்சொல்லும் எதிர்மறுத்து நிற்குமாகலின், பொருணிலை திரியா தென அதற் கோதாராயிற் றென்னை யெனின், விதிவினைக்கும் எதிர்மறை வினைக்கும் பொதுவாக ஈறுபற்றி ஓதியதல்லது விதிப்பொருளவாகிய வாய் பாடு பற்றி ஓதாமையின், ஆண்டுக் கட்டுரையில்லை யென்க. (39) எச்சங்களிடை இடைப்பிறவரல் 237. தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். (இ-ள்.) தத்தமெச்சமாகிய வினையொடும் பெயரோடும் இயையுங் குறிப்பையுடைய எச்சொல்லாயினும், இவ்வெச்சத்திற்கும் அவற்றான் முடிவனவாகிய தமக்கும் இடைநிற்றல் வரையார் எ-று. (எ-டு.) உழுது சாத்தன் வந்தான், உழுதேரொடு வந்தான் எனவும்; கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை எனவும் வரும். சிவணுங் குறிப்பின வரையாரெனவே, சிவணாக் குறிப்பின வரைப வென்பதாம். சிவணாக்குறிப்பினவாவன; ஒருதலையாக எச்சத்தோ டியைந்து நில்லாது நின்ற சொல்லொடுந் தாமே யியைந்து கவர் பொருட் படுவன. உண்டு விருந்தொடு வந்தான்; ‘வல்லமெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்றவழி, விருந்தொடுண்டென வினையெச்சத்தோடு மியைதலிற் பொருள் கவர்க்கும்; வல்லமெறிதல் நல்லிளங் கோசர்க்கும் ஏற்குமாகலின் ஆண்டும் பொருள் கவர்க்கும். அன்ன சிவணாக் குறிப்பினவாம். எச்சொல்லாயினு மென்றதனான், உழுதோடிவந்தான், கவளங் கொள்ளாச் சுளித்த யானை (சீவக. 1076) என எச்சமும் இடைநிலையாதல் கொள்க. சாத்தன் உண்டு வந்தான், அறத்தை யரசன் விரும்பினான், உண்டான் வந்த சாத்தன் என ஏனைத் தொடர்க்கண்ணும் பிற சொல் இடை நிற்ற லொக்கு மாயினும், எச்சத்தொடர்க்கு இடைநிற்பனவற்றின்கண் ஆராய்ச்சி யுடைமையாற் கூறினார். (40) செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றயல் கெடுதல் 238. அவற்றுள் செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம் அவ்விட னறித லென்மனார் புலவர். (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட எச்சங்களுட் செய்யுமென்னும் பெய ரெச்சத்திற்கு ஈற்றுமிசை நின்ற உகரந் தன்னானூரப் பட்ட மெய்யொடுங் கெடுமிட மறிக எ-று. கெடுமிடனறிக வென்றது, அவ்வீற்றுமிசையுகரம் யாண்டுங் கெடாது; வரையறுக்கவும்படாது; சான்றோர் வழக்கினுள்ளும் செய்யு ளுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க வென்றவாறு. (எ-டு.) வாவும்புரவி, போகும்புழை என்பன ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங்கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெடு மெனவே, செய்யுமென்னு முற்றுச் சொற்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும், மெய்யொழித்துங் கெடுமென்பதாம். (எ-டு.) ‘அம்ப லூரு மவனொடு மொழிமே’ (குறுந். 51), ‘சார னாட வென் றோழியுங் கலுழ்மே’ என வரும். பிறவுமன்ன. (41) 5. காலமயக்கம் இறந்தகாலம் எதிர்காலம் எய்தும் இடம் 239. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். (இ-ள்.) செய்தென்னும் வினையெச்சத்தினது இறந்தகாலம் வாராக் காலத்தை எய்துமிடமுடைத்து எ-று. ஈண்டுச் செய்தெனெச்சத் திறந்தகால மென்றது முடிபாய் வரும் வினைச்சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்கு அவ்வெச்சத்தா னுணர்த்தப் படுந் தொழில் முன்நிகழ்தலை. அது வாராக்கால மெய்துதலாவது, அம்முன் னிகழ்வு சிதையாமல் அவ்வெச்சம் எதிர்காலத்து வருதல். (எ-டு.) நீயுண்டு வருவாய், உழுது வருவாய் எனச் செய்தெனெச்சம் பொருள் சிதையாமல் எதிர்காலத்து வந்தவாறு கண்டு கொள்க. ‘எய்திட னுடைத்தே வாராக் காலம்’ என்றதனான், உண்டு வந்தான், உழுது வந்தான் என அவ்வெச்சம் இறந்தகாலத்து வருதல் இலக்கண மென்பதாம். இறந்தகாலத்துச்சொல் எதிர்காலத்து வந்ததாயினும் அமைகவெனக் காலவழு வமைத்தவாறு. (42) முக்காலங்கட்கும் உரிய பொருளை நிகழ்காலத்தாற் கூறுதல் 240. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். (இ-ள்.) மூன்றுகாலத்தும் உளதாம் இயல்பையுடைய எல்லாப் பொருளையும் நிகழ்காலத்துப் பொருணிலைமையுடைய செய்யு மென்னுஞ் சொல்லாற் கிளக்க எ-று. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை யெம்முறைப் பொரு ளுமாவன, மலையது நிலையும் ஞாயிறுதிங்கள தியக்கமு முதலாயின. அவற்றை இறந்தகாலச்சொல்லானும், எதிர்காலச்சொல்லானும், ஏனை நிகழ்காலச் சொல்லானும் சொல்லாது, இறந்தகாலத்தையும் எதிர்காலத் தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குஞ் செய்யு மென்னுஞ் சொல்லாற் சொல்லுக என்றவாறு. பொதுச்சொற் கிளத்தல்வேண்டு மெனவே, முற்றானும் பெய ரெச்சத்தானுங் கிளக்க வென்பதாம். (எ-டு.) மலைநிற்கும், ஞாயிறியங்கும், திங்களியங்கும் எனவும்; ‘வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந், தண்கடல் வையத்து’ (பெரும்பா. 17) எனவும் வரும். நிகழ்காலச் சொல்லாயினும் ஒருகாற் பொதுவாக லுடைமையாற் ‘பொதுச்சொல்’ என்றார். நிகழ்காலச்சொல் இறந்தகாலமும் எதிர்காலமு முணர்த்துதல் வழுவாயினும் அமைகவென அமைத்தவாறு. (43) விரைவுபொருளில் காலம் மயங்குதல் 241. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர். (இ-ள்.) எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருபடியாக வரும் வினைச்சொற்பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளையுடைய எ-று. சோறு பாணித்தவழி, உண்ணாதிருந்தானைப் போகல் வேண்டுங் குறையுடையானொருவன் ‘இன்னு முண்டிலையோ’ என்றவழி, ‘உண்டேன் போந்தேன்’ என்னும்: உண்ணாநின்றானும் உண்டேன் போந்தேன் என்னும். ஆண்டு எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரிய பொருளை விரைவு பற்றி இறந்தகாலத்தாற் கூறியிருப்பதைக் காண்க. தொழில் இறந்தனவல்லவேனும், சொல்லுவான் கருத்து வகையான் இறந்தனவாகச் சொல்லப்படுதலின், ‘குறிப்பொடு கிளத்தல்’ என்றார். எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும், நிகழ்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும் என இரண்டாகலான், ‘விரைந்த பொருள’ என்றார். (44) சிறப்புப் பொருளில் காலம் மயங்குதல் 242. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்.) மிக்கதன்கண் நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம்மிக்க தனது பண்பைக் குறித்துவரும் வினைமுதற் சொல், சுட்டிச் சொல்லப்படுவதொரு வினைமுதலில்லாதவிடத்து, நிகழ்காலத்தான் யாப்புறுத்த பொருளை யுடைத்தாம் எ-று. முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுட் டெய்வஞ் சிறந்தமை யான், அதற்குக் காரணமாகிய தவஞ்செய்தல் தாயைக்கோறன் முதலாகிய தொழிலை ‘மிக்கது’ என்றார். தெய்வமாய இருவினை மிக்கதன்கண் வினைச் சொல்லாவன, தவஞ்செய்தான், தாயைக் கொன்றான் என்னுந் தொடக்கத்தன, அப் பண்பு குறித்த வினைமுதற்கிளவியாவன, சுவர்க்கம் புகும்; நிரயம் புகும் என்பன. யாவன் றவஞ்செய்தான் அவன் சுவர்க்கம் புகும், யாவன் றாயைக் கொன்றான் அவனிரயம் புகும் எனவும்; ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லி னிரயம் புகும் எனவும், மிக்கதன் வினைச்சொனோக்கி அம்மிக்கதன் றிரிபில் பண்பு குறித்த வினைமுதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டு கொள்க. அப் பண்பு குறித்தவென்பதற்கு மிக்கதாகிய இருவினைப்பயனுறுதல் அவ்வினைமுதற் கியல்பென்பது குறித்தவென்று உரைப்பினுமமையும். பொதுவகையாகக் கூறாது ஒருவற் சுட்டியவழி, அவன் றவஞ் செய்து சுவர்க்கம் புக்கான், புகுவன் என ஏனைக்காலத்தாற் சொல்லப் படுதலின், அவ்வாறு ஒருவற் சுட்டுதலை நீக்குதற்கு, வினைமுதற்கிளவி யாயினுஞ் செய்வ தில்வழி யென்றார். செய்வதென்றது செய்கையை யென்பாரு முளர். வினைச்சொல்லென்றாரேனும், தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும். தாயைக் கொன்றா னிரயம் புகும் என வினைப்பெயராய் வருதலுங் கொள்க. தவஞ்செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப் படுவதனை நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவாயினும் அமைகவென வழு அமைத்தவாறு. அஃதேல், ‘இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை’ (சொல். 245) என்புழி இது தெளிவாயடங்குமெனின், அற்றன்று. இயற்கையுந் தெளிவும் சிறந்த காரணமாகிய தெய்வத்தானாக பிறிதொன்றானாக திரிதலுமுடைய; இது திரிபின்றாகலானும், இறந்தகாலத்தாற் சொல்லப்படாமையானும், ஆண்ட டங்காதென்பது. இதனது திரிபின்மையும் அவற்றது திரிபுடைமை யும் விளக்குதற்கன்றே, ஆசிரியர் ‘மிக்கதன் மருங்கின்’ என்றும், ‘இயற்கை யுந் தெளிவுங் கிளக்கும் காலை’ என்றும் ஓதுவாராயிற்றென்பது. (45) ‘இது செயல் வேண்டும்’ என்னும் முற்று 243. இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். (இ-ள்.) இது செயல்வேண்டு மென்பதுபட வருஞ்சொல், தன் பாலானும் பிறன்பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண் மையை யுடைத்தாம் எ-று. தானென்றது செயலது வினைமுதலை. ஓதல்வேண்டும் என்றவழி வேண்டுமென்பது ஓதற்கு வினைமுதலா யினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க. இதனான் ஒருசார்வினைச்சொல் பொருள்படும் வேறுபாடுணர்த் தினார், உணர்த்தாக்காற் றெற்றென விளங்காமையி னென்பது. (46) வற்புறுத்தற் பொருளில் வரும் வினா வினைச்சொல் 244. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே. (இ-ள்.) துணிந்து திட்பமெய்துதற்கு வரும் வினாவையுடைய வினைச்சொல் வினைநிகழ்வுணர்த்தாது எதிர்மறுத்துணர்த்துதற்கு உரித்தாதலு முடைத்து எ-று. வினாவாவன ஆ, ஏ, ஓ, என்பன. கதத்தானாக களியானாக ஒருவன் தெருளாது ஒருவனை வைதான்; அவன்றெருண்டக்கால், வையப்பட்டான் ‘நீ யென்னை வைதாய்’ என்ற வழித் தான் வைதவை யுணராமையான் ‘வைதேனே’ யென்னும்; ஆண்டவ் வினாவொடு வந்த வினைச்சொல் வைதிலே னென்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தவாறு கண்டுகொள்க. வினாவொடு வந்தவழி எதிர்மறைப் பொருள்படுமா றென்னையெனின், சொல்லுவான் குறிப்பு வகையான் எதிர்மறைப் பொரு ளுணர்த்திற் றென்க. எதிர்மறைப் பொருளுணர்த்திற்று ஆண் டேகாரமாகலின், வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற்குரிமையு முடைத்தென்றல் நிரம்பாதெனின், எதிர்மறையாயின பயன்றருவது வினா வுடை வினைச்சொ லென்றாராகலின், அஃதெதிர் மறுத்தல் யாண்டைய தென மறுக்க. வினைநிகழ் வுணர்த்தற்பாலது வினையது நிகழாமை யுணர்த்துதல் வழுவாயினும் அமைகவென வினைச்சொற்பற்றி மரபுவழு வமைத்தவாறு. (47) இயற்கைப்பொருளிலும் தெளிவுப்பொருளிலும் காலம் மயங்குதல் 245. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. (இ-ள்.) எதிர்காலத்துக்குரிய வினைச்சொற்பொருண்மை இயற்கை யாதலும் தெளியப்படுதலும் சொல்லுமிடத்து, இறந்தகாலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் விளங்கத் தோன்றும் எ-று. இயற்கையென்பது பெற்றி முதலாயினவற்றா லுணரப்படுவது; தெளிவு நூற்றெளிவான் வருவது. ஒருகாட்டின்கட் போவார் கூறைகோட்படுதல் ஒருதலையாகக் கண்டு இஃதியற்கையென்று துணிந்தான், கூறைகோட்படாமுன்னும், இக்காட்டுட் போகிற் கூறைகோட்பட்டான், கூறைகோட்படும் என்னும். எறும்பு முட்டை கொண்டு தெற்றி யேறின் மழை பெய்தல் நூலாற் றெளிந் தான், அவை முட்டைகொண்டு தெற்றி யேறியவழி, மழை பெய்யா முன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும். ஆண்டு எதிர்காலத் திற்குரிய பொருள் இறந்தகாலத்தானும் நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க. (48) இது காலவழு வமைத்தவாறு. செயப்படுபொருள் வினைமுதல் போல வருதல் 246. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. (இ-ள்.) செயப்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலு மரபு எ-று. வழக்கியன் மரபெனவே, இலக்கண மன்றென் றவாறாம். (எ-டு.) திண்ணை மெழுகிற்று, கலங் கழீஇயிற்று என வரும். திண்ணை மெழுகப்பட்டது, கலங் கழுவப்பட்டது என்றுமன் னாகற் பாலது, அவ் வாய்பாடன்றி வினைமுதல் வாய்பாட்டான் வருதலும் வழக்கினு ளுண்மையான் அமைகவென வினைச்சொற் பற்றி மரபுவழு வமைத்தவாறு. செயப்படுபொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதினடப்படுதனோக்கி அரிசிதானேயட்டது எனச் செயப்படு பொருளை வினைமுதலின் றொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபென் றற்கு, ‘தொழிற்படக் கிளத்தலும்’ என்றார். இதனைக் கரும கருத்த னென்ப. (49) பிறாண்டும் காலம் மயங்குதல் 247. இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. (இ-ள்.) இறப்பும் எதிர்வுமாகிய இரண்டுகாலமும் மயங்கு மொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும் எ-று. (எ-டு.) இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ யென்செய்குவை என வரும். அவ்விரண்டு காலமும் மயங்குமொழிப் பொருளாய்த் தோன்று மெனவே, அவற்றை யுணர்த்துஞ்சொன் மயங்குமென்றவாறாம். அவை பெயரும் வினையுமாய் மயங்குதலின், மயங்கு வினைச்சொற் கிளவி யென்னாது பொதுப்பட ‘மயங்குமொழிக் கிளவி’ என்றார். தோன்றுமென்பது பெயரெச்சமெனினு மிழுக்காது. பண்டு விளையாடினார் என்றும் நாளை வருவன் என்றுமன்றே கூறற்பாலது? அவ்வாறன்றித் தம்முண் மயங்கக் கூறினு மமைகவெனக் காலவழு வமைத்தவாறு. (50) 248. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். (இ-ள்.) இறப்பும் எதிர்வுமேயன்றி நிகழ்காலமும் அவற்றொடு மயங்கும் எ-று. (எ-டு.) இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும் நாளை வரும் எனவும் வரும். சிறப்பத்தோன்று மெனவும், மயங்குதல் வரையா ரெனவும் கூறினார்; இறப்பும் எதிர்வும் மயங்குதல் பயின்று வருதலானும், அத்துணை நிகழ்கால மயக்கம் பயின்று வாராமையானு மென்க. மூன்றுகாலமுந் தம்முண் மயங்குமென்றாரேனும், ஏற்புழியல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே, வந்தானை வருமென்றலும் வருவானை வந்தானென்றலுமென இவை முதலாயினவெல்லாம் வழுவென்பதாம். பிறவுமன்ன. (51) வினையியல் முற்றிற்று. 7 இடையியல் (இடைச்சொல்லின் இலக்கணம் உணர்த்துவது) 1. பொதுவிலக்கணம் இடைச்சொல்லின் இயல்பு 249. இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. நிறுத்த முறையானே இடைச்சொலுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனான், இவ்வோத்து இடையியலென்னும் பெயர்த்தா யிற்று. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச்சொல்லாயிற்று. (இ-ள்.) இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயரொடும் வினையொடும் வழக்குப்பெற் றியலும்; தாமாக நடக்குமியல்பில எ-று. ‘இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்றும்’ (சொல். 159) என்றதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருதல் பெறப் பட்டமையான், ‘பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலுந் தமக்கியல் பில வென்றது’, ஈண்டுப் பெயரும் வினையு முணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொரு ளுடையவல்ல வென்றவாறாம். (எ-டு.) ‘அதுகொ றோழி காம நோயே’ (குறுந். 5) எனவும், ‘வருகதில் லம்ம வெஞ்சேரி சேர’ (அகம். 276) எனவும், பெயரும் வினையுஞ் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்தவாறு கண்டுகொள்க. சார்ந்து வருதல் உரிச்சொற்கு மொத்தலின், தமக்கெனப் பொரு ளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம். ‘தமக்கியல் பிலவே’ யென்றது, சார்ந்தல்லது வாராவென வலியுறுத்தவாறு. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பில’வெனப் பொதுப்படக் கூறியவதனான், சாரப்படுஞ் சொல்லின் வேறாய் வருதலேயன்றி, உண்டனன் உண்டான் எனவும், என்மனார் என்றிசினோர் எனவும், அருங்குரைத்து எனவும், அவற்றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க. இனி ஓருரை:- ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்றும்’ என்பதற்கு, “சார்ந்து வருதலான் இடைச் சொல்லும் உரிச்சொல்லுஞ் சிறப்பில; இவை யுட்படச் சொன்னான்கா” மென்பது கருத்தாகலின், இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்னும் வேறுபாடு அதனாற் பெறப்படாது. என்னை? இடைச் சொல் பெயர்சார்ந்தும் உரிச்சொல் வினைசார்ந்தும் வரினும் அவற்றது சிறப்பின்மையுஞ் சொன்னான்காதலும் உணர்த்துதல், சிதையாதாகலான். அதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்பது இச் சூத்திரத்தாற் கூறல் வேண்டு மென்ப. அவ்வுரை யுரைப்பார் ‘பெயரினும் வினையினு மெய்தடு மாறி’ (சொல். 297) என்பதற்கும் பெயரும் வினையுஞ் சார்ந்தென்று பொருளுரைப்ப. (1) அதன் பாகுபாடு 250. அவைதாம் புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென்று அப்பண் பினவே நுவலுங் காலை. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள்தாம், இரண்டு சொற் புணருமிடத்து அப் பொருணிலைக் குதவுவனவும், வினைசொல்லை முடிக்கு மிடத்துக் காலப் பொருளவாய் வருவனவும், செயப்படுபொருண் முதலாகிய வேற்றுமைப் பொருட்கண் உருபென்னுங் குறியவாய் வருவன வும், பொரு ளுடையவன்றிச் சார்த்திச் சொல்லப்படுந் துணையாய் வருவனவும், வேறு பொருளுணர்த்தாது இசைநிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங் குறிப்பாற் பொருளுணர்த்துவனவும், ஒப்புமை தோன்றாதவழி அவ் வொப்புமைப்பொருள் பயப்பனவு மெனக் கூறப் பட்ட ஏழியல்பையுடைய சொல்லுமிடத்து எ-று. புணரியனிலை புணரியலது நிலை. ஆண்டுப் பொருணிலைக்குதவு தலாவது எல்லாவற்றையும் என்புழி வற்றுச் சாரியை நிலைமொழிப் பொருள் அஃறிணைப் பொரு ளென்பதுபட வருதலும், எல்லா நம்மையும் என்புழி நம்முச்சாரியை அப்பொருள் தன்மைப்பன்மை யென்பது பட வருதலுமாம். அல்லனவும் தாஞ் சார்ந்து வரும் மொழிப்பொருட்கு உபகாரமுடையவாய் வருமா றோர்ந்து கொள்ளப்படும். அல்லாக்கால், சாரியை மொழியாகா வென்பது. வினைச்சொல் ஒரு சொல்லாயினும் முதனிலையும் இறுதிநிலையும் இடைச்சொல்லுமாகப் பிரித்துச் செய்கை செய்து காட்டப்படுதலின், ‘வினை செயன் மருங்கின்’ என்றார். அம் முடிபுணர்த்தாமைக்குக் காரணம் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்றா’ என்புழிச் சொல்லப்பட்டது. அவற்றுள் ஒரு சாரன பாலுணர்த்தாமையானும், எல்லாங் காலமுணர்த்து தலானும், ‘கால மொடு வருநவும்’ என்றார். வேற்றுமைப் பொருளவாய் வருவன பிறசொல்லுமுள வாகலின், அவற்றை நீக்குதற்கு உருபாகுநவு மென்றார். பிறசொல்லாவன ‘கண்ணகன் ஞாலம்’ (திரிகடுகம்) ‘ஊர்க்கா னிவந்த பொதும்பர்’ (குறிஞ்சிக்கலி. 20) என ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வருங் கண் கால் முதலாயினவும், ‘அனையை யாகன் மாறே’ (புறம். 4) ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40) ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள். 545) என மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண் வரும்மாறு உளி என்பனவும், அன்ன பிறவு மாம். அஃதேல், வேற்றுமையுருபுமென் றோதுவார்; ஓதவே, இவை நீங்குமெனின், அஃதொக்கும்; அவை தம்மையுந் தழீஇக்கோடற்கு ‘வேற்றுமைப் பொருள் வயின்’ என்றார். அவை வருங்கால் நிலைமொழி யுருபிற்கேற்ற செய்கை ஏற்புழிப் பெறுதலுடைமையின், ‘உருபா குநவும்’ என்றார். இஃது இருபொரு ளுணர்த்தலான் இருதொடராகக் கொள்க. அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினை யொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின், அசைநிலை யாயிற்று. அவை அந்தின் முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’ ‘உரைத்திசி னோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின், அசைநிலை சொல்லாயின வென்பாரு முளர். செய்யுட்கண் இசைநிறைத்து நிற்றலின், இசைநிறையாயின. குறிப்புச் சொல்லுவான் கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைத் தாங்குறித்து நிற்றலின், தத்தங்குறிப்பினென்றார். சொல்லுவான் குறித்த பொருளைத் தாம் விளக்குமெனவே, ‘கூரியதோர் வாள்’ என மன்னானன்றி ஓசை வேறுபாட்டான் ஒருகாற்றிட்பமின்றென்னுந் தொடக்கத்து ஒழியிசைப் பொருள் தோன்றலும் பெறப்படும். பொருட்கும் பொருளைப் புலனாகவுடைய உணர்விற்கும் ஒற்றுமை கருதிப் பொருளுணர்வைப் பொரு ளென்றார். ‘மிகுதி செய்யும் பொருள’ (சொல். 299) என்பது முதலாயினவற்றிற்கும் ஈதொக்கும். ஒக்குமென்னுஞ் சொல்லன்றே ஒப்புமை யுணர்த்துவது. அச்சொல் ஆண்டின்மையான் ஒப்புமை தோன்றாமையான், ஒப்பில் வழியாலென் றார்; உவமையொடு பொருட்கு ஒப்பில்லை யென்றாரல்லரென்பது. ஒக்கு மென்னுஞ் சொல்லை ஒப்பென்றாரென்பாருமுளர். ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவாவன, அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப என்பன முதலாகப் பொருளதிகாரத்துக் கூறப்பட்ட முப்பத்தாறனுள் ஒக்குமென்ப தொழிய ஏனையவாம். சாரியையும், வேற்றுமையுருபும், உவமஉருபும், குறிப்பாற் பொருளு ணர்த்துமாயினும், புணர்ச்சிக்கண் உபகாரப்படுதலும் வேற்றுமைத் தொகைக்கும் உவமத் தொகைக்கும் அவ்வுருபுபற்றி இலக்கணங் கூறுதலும் முதலாகிய பயனோக்கி, இவற்றை வேறு கூறினார். இடைச்சொ லேழனுள்ளும் முதனின்ற மூன்றும் மேலே யுணர்த்தப் பட்டமையான் முன் வைத்தார். ஒப்பில்வழியாற் பொருள் செய்குந முன்னரு ணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார். ஒழிந்த மூன்றும் இவ்வோத்தின் கண் உணர்த்தப்படுதலின் இடை வைத்தார். (2) இடைச்சொல் நிற்கும் இடமும் வேறுபாடும் 251. அவைதாம் முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலுந் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை யெல்லாம் உரிய வென்ப. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலேயன்றி, தம்மாற் சாரப்படுஞ்சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோரிடைச்சொல் ஓரிடைச்சொன்முன் வருதலுமாகிய அத்தன்மையவெல்லாம் உரிய எ-று. (எ-டு.) ‘அதுமன்’ எனவும், ‘கேண்மியா’ (புறம். 148) எனவும், சாரப்படுமொழியை முன்னடுத்து வந்தன. ‘கொன்னூர்’ (குறுந். 138 ) எனவும், ‘ஓஒவினிதே’ (குறள். 1176) எனவும், பின்னடுத்து வந்தன. ‘உடனுயிர் போகுக தில்ல’ (குறுந். 57) என ஈறு திரிந்து வந்தது. ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) என்பது பிறிதவணின்றது. அவைதாமெனப் பொதுவகையா னோதினாரேனும், இவ்விலக் கணம் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் அசைநிலை முதலாகிய மூன்றற்குமெனக் கொள்க. அன்னவையெல்லா மென்றதனான், ‘மன்னைச் சொல்’ (சொல். 252) ‘கொன்னைச்சொல்’ (சொல். 254) எனத் தம்மை யுணர நின்றவழி ஈறு திரிதலும், ‘னகாரை முன்னர்’ (எழுத். 52) என எழுத்துச்சாரியை ஈறு திரிதலுங் கொள்க. (3) 2. சிறப்பிலக்கணம் ‘மன்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 252. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் மூவகை யிடைச்சொல்லுள் தத்தங் குறிப்பாற் பொருள் செய்குந பொருளுணர்த்துதற் சிறப்புப் பரப்புடைமையான் அதனை முன்னுணர்த்துகின்றார். (இ-ள்.) கழிவு குறித்து நிற்பதும், ஆக்கங் குறித்து நிற்பதும், ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதுமென மன்னைச்சொல் மூன்றாம் எ-று. (எ-டு.) ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ (புறம். 235) என்புழி மன்னைச்சொல், இனி அது கழிந்த தென்னும் பொருள் குறித்துநின்றது. ‘பண்டு காடும னின்று கயல் பிறழும் வயலாயிற்று’ என்புழி அஃதாக்கம் குறித்து நின்றது. ‘கூரியதோர் வாண்மன்’ என்புழித் திட்ப மின்றென்றானும் இலக்கணமின் றென்றானும் எச்சமாய் ஒழிந்த சொற்பொருண்மை நோக்கி நின்றது. (4) ‘தில்’ என்னும் சொல் 253. விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. (இ-ள்.) விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஆண்டொழிந்து நின்ற சொற்பொருளை நோக்கி நிற்பது மெனத் தில்லைச்சொல் மூன்றாம் எ-று. (எ-டு.) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே’ (குறுந். 14) என அவளைப் பெறுதற்க ணுளதாகிய விழைவின்கண் வந்தது. ‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே’ (குறுந். 14) எனப் பெற்றகாலத் தறிகவெனக் காலங்குறித்து நின்றது. ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) என வந்தக்கால் இன்னது செய்வலென்னும் ஒழியிசைப்பொரு ணோக்கிற்று. (5) ‘கொன்’ என்னுஞ் சொல் 254. அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. (இ-ள்.) அச்சப்பொருளதும், பயமின்மைப் பொருளதும், காலப் பொருளதும், பெருமைப்பொருளதுமெனக் கொன்னைச் சொல் நான்காம் எ-று. (எ-டு.) ‘கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே’ (குறுந். 91) என்புழி அஞ்சி வாழுமூர் எனவும், ‘கொன்னே கழிந்தன் றிளமை’ (நாலடி. 55) என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும், ‘கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ’ என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும், ‘கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே’ (குறுந். 138) என்புழிப் பேரூர் துஞ்சினும் எனவும், கொன்னைச்சொல் நான்கு பொருளும் பட வந்தவாறு கண்டுகொள்க. (6) ‘உம்’ என்னுஞ் சொல் 255. எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே. (இ-ள்.) எச்சங் குறிப்பது முதலாக ஆக்கங் குறிப்பதீறாக உம்மைச் சொல் எட்டாம் எ-று. (எ-டு.) சாத்தனும் வந்தான் என்னுமும்மை, கொற்றனும் வந்தா னென்னும் எச்சங் குறித்து நிற்றலின், எச்சவும்மை. கொற்றனும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங் குறித்து நிற்றலின், எச்ச வும்மை. ‘குறவரு மருளுங் குன்றத்துப் படினே’ (மலைபடு. 275) என்பது குன்றத்து மயங்கா தியங்குதற்கண் குறவர் சிறந்தமையாற் சிறப்பும்மை. ‘ஒன்று, இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கட் டோன்று மடக்கமு முடையன் இல்லோர் புன்க ணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன்’ (கலி. 47) என்புழி இன்னானென்று துணியாமைக்கண் வருதலின் ஐயவும்மை. சாத்தன் வருதற்கு முரியன் என்பது, வாராமைக்குமுரிய னென்னும் எதிர் மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின், எதிர்மறையும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என எஞ்சாப் பொருட்டாகலான் முற்றும்மை. ‘நிலனு நீருந் தீயும் வளியு மாகாயமு மெனப் பூதமைந்து’ என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மை. “இரு நில மடிதோய்தலிற் றிருமகளு மல்லள்; அரமகளு மல்லள்; இவள் யாராகும்” என்றவழித் தெரிதற்பொருட்கண் வருதலிற் றெரிநிலையும்மை. திருமகளோ அரமகளோ என்னாது அவரை நீக்குதலின், ஐயவும்மையின் வேறாத லறிக. ஆக்கவும்மை வந்தவழிக் கண்டுகொள்க. உரையாசிரியர் நெடியனும் வலியனுமாயினான் என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்கவும்மை யென்றார். ‘செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே’ (சொல். 25) என்னுமும்மை, வழுவை யிலக்கண மாக்கிக் கோடல் குறித்து நின்றமையின் ஆக்கவும்மை என்பாரு முளர். பால் உணவும் ஆயிற்று என்றால், அதுவே மருந்துமாயிற்று என வருதல் (ஆக்கம்). (7) ‘ஓ’ என்னுஞ் சொல் 256. பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப ஓகா ரம்மே. (இ-ள்.) பிரிநிலைப் பொருட்டாவது முதலாக ஓகாரம் அறுவகைப் படும் எ-று. (எ-டு.) ‘யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’ (குறுந். 21) என்பது தேறுவார் பிறரிற் பிரித்தலிற் பிரிநிலை ஓகாரமாயிற்று. சாத்தனுண்டானோ என்பது வினாவோகாரம். யானோ கொள்வேன் என்பது கொள்ளே னென்னு மெதிர்மறை குறித்து நிற்றலின், எதிர்மறை யோகாரமாம். கொளலோ கொண்டான் என்பது, கொண்டுய்யப் போயினா னல்ல னென்பது முதலாய ஒழியிசை நோக்கி நிற்றலின் ஒழியிசையோகாரம். “திருமகளோ அல்லள் அரமகளோ அல்லள் இவள் யார்?” என்றவழித் தெரிதற் கண் வருதலிற் றெரிநிலையோகாரம். ஓஒபெரியன் என்பது பெருமை மிகுதி யுணர்த்தலிற் சிறப்போகாரம். (8) ‘ஏ’ என்னுஞ் சொல் 257. தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. (இ-ள்.) தேற்றேகார முதலாக ஏகார மைந்து எ-று. (எ-டு.) உண்டோ மறுமை எனத் தெளிவின்கண் வருதலிற் றேற் றேகாரம். நீயே கொண்டாய் என வினாப்பொருளுணர்த்தலின் வினா வேகாரம். அவரு ளிவனே கள்வன் எனப் பிரித்தலிற் பிரிநிலை யேகாரம். நிலனே நீரே தீயே வளியே என எண்ணுதற்கண் வருதலின் எண்ணேகாரம். ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம். 1) என்பது செய்யு ளிறுதிக் கண் வருதலின் ஈற்றசையேகாரம். ‘வாடாவள்ளியங் காடிறந் தோரே’(குறுந். 216) எனச் செய்யுளிடையும் வருதலின் ஈற்றசையென்பது மிகுதி நோக்கிச் சென்ற குறி. இஃ தசைநிலையாயினும் ஏகார வேறுபாடாகலின் ஈண்டுக் கூறினார். (9) ‘என’ என்னுஞ் சொல் 258. வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி. (இ-ள்.) வினை முதலாகிய ஆறு பொருண்மையுங் குறித்து வரும் என வென்னு மிடைச்சொல் எ-று. (எ-டு.) ‘மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்’ (புறம். 143) என வினைப் பொருண்மையும், ‘துண்ணெனத் துடித்தது மனம்’ எனக் குறிப்புப் பொருண்மையும், ஒல்லென வொலித்தது என இசைப் பொருண்மையும், வெள்ளென விளர்த்தது எனப் பண்புப்பொருண்மையும், நிலனென நீரெனத் தீயென வளியென என எண்ணுப்பொருண்மையும், ‘அழுக்கா றெனவொரு பாவி’ (குறள். 168) எனப் பெயர்ப் பொருண்மையுங் குறித்து, எனவென்னுஞ் சொல் வந்தவாறு கண்டு கொள்க. (10) ‘என்று’ என்னுஞ் சொல் 259. என்றென் கிளவியும் அதனோ ரற்றே. (இ-ள்.) என்றென்னு மிடைச்சொல்லும் என வென்பது போல அவ் வாறு பொருளுங் குறித்து வரும் எ-று. (எ-டு.) ‘நரைவரு மென்றெண்ணி’ (நாலடி. 11) எனவும்; ‘விண் ணென்று விசைத்தது’ எனவும், ‘ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு’ (ஐந்திணை ஐம்பது 28) எனவும், பச்சென்று பசுத்தது எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும், பாரி யென்றொருவனுளன் எனவும் வரும். (11) விழைவின்கண் வரும் ‘தில்’ 260. விழைவின் தில்லை தன்னிடத் தியலும். (இ-ள்.) ‘அப்பான் மூன்றே தில்லைச்சொல்’ (சொல். 253) என்று சொல்லப்பட்ட மூன்றனுள், விழைவின்கண் வருந் தில்லை தன்மைக் கணல்லது வாராது எ-று. தன்மைக்கண் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும் பிறாண்டுங் கண்டு கொள்க. இடம் வரையறுத் தோதாமையின், விழைவின்றில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்டதனைப் பின்னுங் கூறினார், ஏனையிடத்து வாராதென்று நியமித்தற்கென்பது. (12) ‘ஏ’ ‘ஓ’ சொற்களுக்கு மேலும் ஒரு முடிவு 261. தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப. (இ-ள்.) தெளிவின்கண் வரும் ஏகாரமுஞ் சிறப்பின்கண் வரும் ஓகாரமும் அளபான் மிக்க இசையை யுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. அளபெடையாய் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும் பிறாண்டுங் கண்டுகொள்க. (13) ‘மற்று’ என்னுஞ் சொல் 262. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை அப்பா லிரண்டென மொழிமனார் புலவர். (இ-ள்.) மற்றென்னுஞ்சொல் வினைமாற்றும் அசை நிலையுமென இரண்டாம் எ-று. (எ-டு.) ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’ (நாலடி. 9) என்றவழி அறஞ்செய்தல் பின்னறிவாமென அக்காலத்து வினைமாற்றுதலான் மற்றென்பது வினைமாற்றின்கண் வந்தது. ‘அதுமற் றவலங் கொள்ளாது நொதுமல் கழறும்’ (குறுந். 12) என அசைநிலையாய் வந்தது. கட்டுரை யிடையும் மற்றோ என அசைநிலையாய் வரும். (14) ‘எற்று’ என்னுஞ் சொல் 263. எற்றென் கிளவி இறந்த பொருட்டே. (இ-ள்.) எற்றென்னுஞ் சொல் இறந்த பொருண்மைத்து எ-று. (எ-டு) ‘எற்றென் னுடம்பி னெழினலம்’ என்பது என்னலமிறந்த தென்னும் பொருள்பட நின்றது. ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ என்பதூஉம் இதுபொழுது துணிவில்லாருள் துணிவில்லா- தேன் யான்என்று துணிவிறந்த தென்பதுபட நின்றது. (15) ‘மற்றையது’ என்னுஞ் சொல் 264. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய இனங்குறித் தன்றே. (இ-ள்) மற்றையதெனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றை யென்னும் ஐகாரவீற் றிடைச்சொல் சுட்டப்பட்டதனை ஒழித்து, அதனினங் குறித்து நிற்கும் எ-று. ஆடை கொணர்ந்தவழி அவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணாவென்னும். அஃது அச்சுட்டிய வாடை யொழித்து அதற்கின மாகிய பிறவாடை குறித்து நின்றவாறு கண்டுகொள்க. பெரும்பான்மையும் முதனிலையாய் நின்றல்லது அவ்விடைச்சொல் பொருள் விளக்காமையின், ‘மற்றையதென்னுங் கிளவி’ என்றார். சிறு பான்மை மற்றையாடை எனத் தானேயும் வரும். மற்றையஃது மற்றையவன் என்னுந் தொடக்கத்தனவும் அவ்விடைச்சொன் முதனிலையாய பெயர். (16) ‘மன்ற’ என்னுஞ் சொல் 265. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். (இ-ள்.) மன்ற வென்னுஞ்சொல், தெளிவுப் பொருண்மையை யுணர்த்தும் எ-று. (எ-டு.) ‘கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே’ (நற். 34) என வரும். மடவையே யென்றவாறாம். (17) ‘தஞ்சம்’ என்னுஞ் சொல் 266. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ (புறம். 73) எனத் தஞ்சக் கிளவி அரசுகொடுத்த லெளிதென எண்மைப் பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. (18) ‘அந்தில்’ என்னுஞ் சொல் 267. அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்று ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப. (இ-ள்.) அந்திலென்னுஞ் சொல், ஆங்கென்னும் இடப்பொரு ளுணர்த்துவதும் அசைநிலையுமென இரண்டாம் எ-று. (எ-டு.) ‘வருமே சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ (குறுந். 293) என்புழி ஆங்கு வருமென்றவாறாம். ‘அந்திற், கச்சினன் கழலினன்’ (அகம். 76) என வாளாதே அசைத்து நின்றது. (19) ‘கொல்’ என்னுஞ் சொல் 268. கொல்லே ஐயம். குற்றிகொல்லோ மகன்கொல்லோ எனக் கொல் ஐயத்துக்கண் வந்தவாறு. (20) ‘எல்’ என்னுஞ் சொல் 269. எல்லே இலக்கம். எல்லென்பது உரிச்சொ னீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான், இடைச்சொல்லென்று கோடும். ‘எல்வளை’ (புறம். 24) என எல்லென்பது இலங்குதற்கண் வந்தவாறு. (21) ‘ஆர்’ என்னுஞ் சொல் 270. இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. (இ-ள்.) இயற்பெயர் முன்னர் வரும் ஆரென்னு மிடைச்சொற் பலரறிசொல்லான் முடியும் எ-று. ஈண்டியற்பெயரென்றது இருதிணைக்கும் அஃறிணை யிருபாற்கு முரிய பெயரை. (எ-டு.) பெருஞ் சேந்தனார் வந்தார், முடவனார் வந்தார், முடத்தாமக் கண்ணியார் வந்தார், தந்தையார் வந்தார் எனவும்; நரியார் வந்தார் எனவும் வரும். தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்னும் ஐந்து மொழித்து அல்லா வியற்பெய ரெல்லாவற்று முன்னரும் அஃறிணை யியற்பெய ரெல்லாவற்று முன்னரும் ஆரைக்கிளவி வருதலின், பெரும்பான்மை குறித்து ‘இயற்பெயர் முன்னர்’ என்றார். நம்பியார் வந்தார், நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர் திணைப் பெயர் முன்னர் வருதல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. ஆரைக்கிளவி கள் ளென்பதுபோல ஒற்றுமைப்பட்டுப் பெயரீறாய் நிற்றலின், ஆரைக்கிளவி பலரறி சொல்லான் முடியுமென்றது அதனை யீறாகவுடைய பெயர் பலரறி சொல்லான் முடியு மென்றவாறாம். ‘பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே’ என ஆரைக்கிளவிய தியல்புணர்த்தவே, அஃது உயர்த்தற் பொருட்டாதலும், திணைவழுவும் பால்வழுவும் அமைத்தலும் பெற்றாம். ஒருமைப்பெயர் முன்னர் ஒருமை சிதையாமல் ஆரைக்கிளவி வந்து பலரறிசொல்லான் முடிதலின், ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேறாத லறிக. (22) அதற்கு, மேலும் ஒரு விதி 271. அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல். (இ-ள்.) ஆரைக்கிளவி அசைநிலையா மிடமறிக எ-று. (எ-டு.) ‘பெயரி னாகிய தொகையுமா ருளவே’ (சொல். 67) எனவும், ‘எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே’ (எழுத். 61) எனவும் வரும். ‘ஆகுவழியறித’ லென்றதனான், அசைநிலை யாங்கால் உம்மை முன்னரும், உம்மீற்று வினைமுன்னரு மல்லது வாராமை யறிக. சிறுபான்மை பிறாண்டு வருமேனுங் கொள்க. (23) ‘ஏ’ ‘குரை’ என்னுஞ் சொற்கள் 272. ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண் டாகும் இயற்கைய வென்ப. (இ-ள்.) ஏயென்னு மிடைச்சொல்லும் குரையென்னுமிடைச் சொல் லும் இசைநிறையும் அசைநிலையு மென ஓரொன்றிரண்டாம் எ-று. (எ-டு.) ‘ஏஎ யிஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண்’ (கலி. 61) என்பது இசைநிறை. ‘ஏஎயென் சொல்லுக’ என்பது அசைநிலை. ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம். 5) என்பது இசைநிறை. ‘பல்குரைத் துன்பங்கள் சென்றுபடும்’ (குறள். 1045) என்பது அசைநிலை. தொடர்மொழி முதற்கட் பிரிந்துநின்றல்லது பெரும்பான்மையும் ஏகாரம் இசைநிறையும் அசைநிலையு மாகாமையின், சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டிசைத்து இடையும் இறுதியும் நிற்குந் தேற்றேகார முதலாயின வற்றோடு ஒருங்கு கூறாது வேறு கூறினார். அஃதேல், இதனை நிரனிறைப் பொருட்டாகக் கொண்டு ஏ இசை நிறை; குரை அசைநிலை யென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று. மற்று அந்தில் என்பனபோலப் பொருள்வகையான் வேறுபடுவனவற்றை இரண்டாமென்ப தல்லது, சொல்வகையான் இரண்டாகிய சொல்லை இரண்டா மென்றதனான் ஒரு பயனின்மையின், அவர்க்கது கருத்தன் றென்க. அல்லதூஉம், ஒரு சொல்லே இசைநிறையும் அசைநிலையுமாக லுடைமையான் அவற்றையுடன்கூறினா ரென்னாக்கால், இசைநிறையும் அசைநிலையும் ஒருங்கு மயங்கக்கூறலா மாகலானும் அவர்க்கது கருத்தன்மை யுணர்க. (24) ‘மா’ என்னுஞ் சொல் 273. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். (இ-ள்.) மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும் எ-று. (எ-டு.) ‘புற்கை யுண்கமா கொற்கை யோனே’ எனவரும். (25) முன்னிலை அசைச்சொற்கள் 274. மியாஇக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். (இ-ள்.) மியா முதலாகிய ஆறும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச்சொல்லாம் எ-று. (எ-டு.) கேண்மியா சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக வென்றி தோழி’ எனவும், ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2) எனவும், ‘உரைமதி வாழியோ வலவ’ எனவும், ‘மெல்லம் புலம்ப கண்டிகும்’ எனவும், ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகம். 7) எனவும் வரும். (26) ‘இகும்’ ‘சின்’ என்னும் சொற்கள் 275. அவற்றுள் இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும் தகுநிலை யுடைய என்மனார் புலவர். (இ-ள்.) மேற்கூறப்பட்ட ஆறனுள், இகுமுஞ் சின்னும் படர்க்கைச் சொல்லொடுந் தன்மைச்சொல்லொடும் பொருந்து நிலையுடையவென எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தவாறு. (எ-டு.) ‘கண்டிகு மல்லமோ’ (ஐங்குறு. 121) எனவும், ‘கண்ணும் படுமோ வென்றிசின் யானே’ (நற். 61) எனவும், தன்மைக்கண் வந்தன. ‘புகழ்ந் திகு மல்லரோ பெரிதே’ எனவும், ‘யாரஃ தறிந்திசி னோரே’ (குறுந். 18) எனவும் படர்க்கைக்கண் வந்தன. (27) ‘அம்ம’ என்னுஞ் சொல் 276. அம்மகேட் பிக்கும். (இ-ள்.) அம்மவென்னு மிடைச்சொல் ஒருவனை ஒருவன் ஒன்று கேளென்று சொல்லுதற்கண் வரும் எ-று. (எ-டு.) ‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31) என வரும். மியா இக முதலாகிய அசைநிலை ஒரு பொருளுணர்த்தாவாயினும் முன்னிலைக்க ணல்லது வாராமையான் அவ்விட முணர்விக்குமாறு போல, அம்ம வென்பதூஉம் ஒரு பொரு ளுணர்த்தாதாயினும் ஒன்றனைக் கேட்பிக்குமிடத்தல்லது வாராமையான் அப்பொருளுணர்விக்கு மென்பது விளக்கிய, ‘கேட்பிக்கு’ மென்றார். (28) ‘ஆங்க’ என்னுஞ் சொல் 277. ஆங்க உரையசை. (இ-ள்.) ஆங்கவென்னு மிடைச்சொல் கட்டுரைக்கண் அசை நிலையாய் வரும் எ-று. (எ-டு.) ‘ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி’ என வரும். (29) ஒப்பில் போலி 278. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். (இ-ள்.) ஒப்புமை யுணர்த்தாத போலிச்சொல்லும் ஆங்கவென்பது போல உரையசையாம் எ-று. (எ-டு.) மங்கலமென்ப தோரூருண்டு போலும் என வரும். போலும் போல்வது என்னுந் தொடக்கத்துப் பலவாய்பாடுந் தழுவுதற்குப் ‘போலி’ யென்றார். ‘நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம்’ (நாலடி. 124) என்பதுமது. அசைநிலையும் பொருள் குறித்தல்லது நில்லாமையின் ‘அப் பொருட் டாகும்’ என்றார். (30) அசைநிலைச் சொற்கள் 279. யாகா பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி. (இ-ள்.) யா முதலாகிய ஏழிடைச் சொல்லும் அசை நிலையாம் எ-று. (எ-டு.) யா பன்னிருவர் மாணாக்கருள ரகத்தியனார்க்கு எனவும், ‘புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா’ (கலி. 99) எனவும், ‘தான் பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி’ (புறம். 140) எனவும், ‘அதுபிறக்கு’ எனவும், ‘நோதக விருங்குயி லாலுமரோ’ (கலி. 33) எனவும், ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ எனவும், ‘விளிந்தன்று மாதவர்த் தெளிந்த வென் நெஞ்சே’ (நற். 178) எனவும் வரும். இடம் வரையறாமையின் இவை மூன்றிடத்திற்கு முரிய. ஆங்கவும் ஒப்பில்போலியும் உரை தொடங்குதற்கண்ணும் ஆதரமில்வழியும் வருதலின் வேறு கூறினார். (31) பிரிவில் அசைநிலைகள் 280. ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை. (இ-ள்.) ஆக, ஆகல், என்பது என்னு மூன்றிடைச் சொல்லும், அசைநிலையாங்கால், இரட்டித்து நிற்கும் எ-று. பிரிவிலசைநிலை யெனவே தனித்து நின்று அசைநிலை யாகா வென்பதாம். ஒருவன் யானின்னேன் என்றானும், நீ யின்னை என்றானும், அவனின்னன் என்றானும் கூறியவழிக் கேட்டான் ஆகஆக, ஆகல்ஆகல் என்னும்; இவை உடம்படாமைக்கண்ணும் ஆதரமில்வழியும் வரும். ஒருவனொன் றுரைப்பக் கேட்டான் என்பதுஎன்பது என்னும். அது நன்குரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும் வரும். பிறாண்டுவரினும் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. (32) ‘ஔ’ என்னுஞ் சொல் 281. ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிரே ஆயியல் நிலையுங் காலத் தானும் அளபெடை நிலையும் காலத் தானும் அளபெடை யின்றித் தான்வருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். (இ-ள்.) இரண்டு மாத்திரையை யுடைத்தாய மொழிக் கீறாகா தெனப்பட்ட ஔகாரம், பிரிவி லசைநிலை யென மேற்கூறப்பட்டனபோல இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டியாது அளபெடையாய் நிற்குமிடத் தும், அளபெடையின்றித் தான்வருமிடத்தும், பொருள் வேறுபடுதலுள; அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகுமோசை வேறு பாட்டாற் புலப்படும் எ-று. பொருள் வேறுபாடாவன வழக்கு நோக்கச் சிறப்பும் மாறு பாடுமாம். (எ-டு.) ஔஔவொருவன் றவஞ் செய்தவாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஔஔ வினிச்சாலும் என்றவழி, மாறுபாடு தோன்றும். ஔஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு, ஔஉவினி வெகுளல் எனவும்; ஔவவன் முயலுமாறு, ஔவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத்தும் அளபெடாதும் வந்தவழியும், அப்பொரு டோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப. பிறபொருள்படுமாயினும் அறிந்து கொள்க. ஈரளபிசைக்கு மென்றேயொழியின் நெட்டெழுத்தெல்லாவற்று மேலும், இறுதியிலுயி ரென்றேயொழியின் எகரவொகரத்து மேலுஞ் சேறலான், ‘ஈரளபிசைக்கு மிறுதியி லுயிர்’ என்றார். இது தத்தங் குறிப்பிற் பொருள் செய்வதாயினும் அடுக்கி வருத லுடைமையான் ஈண்டு வைத்தார். (33) பிற குறிப்புச் சொற்கள் 282. நன்றீற்று ஏயும் அன்றீற்று ஏயும் அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். நன்றீற்றேயும் அன்றீற்றேயுமாவன நன்றே அன்றே என்பன. அந்தீற் றோவும் அன்னீற்றோவுமாவன அந்தோ அன்னோ என்பன. நன்றின தீற்றின்கண் ஏயென விரியும். இவ்விரிவு ஏனையவற்றிற்கு மொக்கும். நன்றீற்றே யென்பதனான் ‘நம்மூர்ந்து வரூஉ மிகர வைகாரமும்’ (சொல். 163) என்புழிப்போலச் சொன்முழுவதுங் கொள்ளப்படும். ஒழிந்தனவு மன்ன. குறிப்பொடுகொள்ளு மென்றது, மேலதுபோல இவையுங் குறிப் போசையாற் பொருளுணர்த்து மென்றவாறு. ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு மேவாதான் நன்றே நன்றே, அன்றே யன்றே என அடுக்கலும் வரும்; அவை மேவாமைக்குறிப்பு விளக்கும். அவனன்றே யிது செய்வான் என அடுக்காது நின்றவழி, அன்றீற் றேவுக்குத் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும். ஏனையிரண்டும் அடுக்கியும் அடுக்காதும் இரங்கற்குறிப்பு வெளிப்படுக்கும். இவையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன. அன்னபிறவு மென்றதனான், அதோ அதோ, சோ சோ, ஒக்கும் ஒக்கும் என்னுந் தொடக்கத்தன கொள்க. (34) ‘உம்’ என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு 283. எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையுந் தத்தமுள் மயங்கும் உடனிலை யிலவே. இனி, மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படு மிலக்கண வேறுபா டுணர்த்துகின்றார். (இ-ள்.) எச்சவும்மை நின்றவழி எஞ்சு பொருட்கிளவியாம் எதிர் மறையும்மைத் தொடர் வந்து தம்முண் மயங்குதலில எ-று. சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் எனின் இயையாமை கண்டுகொள்க. ஏனையும்மையொடு மயங்குதல் விலக்காராயிற் றென்னை யெனின், அவை எஞ்சுபொருட்கிளவியவாய் வாராமையி னென்பது. (35) 284. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். (இ-ள்.) எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி உம்மையில் சொல்லாயின், அவ்வும்மையில் சொல்லை அவ்வும்மைத் தொடர்க்குப் பின் சொல்லாது முன் சொல்லுக எ-று. (எ-டு.) சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் என வரும். கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின், முற் கூறியதனை விலக்குவதுபோன்று பொருள் கொள்ளாமை கண்டுகொள்க. ‘அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான் கடல்போலுங் கல்வி யவன்’ என்பது மது. உம்மையடாதே தானே நிற்றலிற் செஞ்சொலென்றார். செஞ்சொலாயின் முற்படக் கிளக்க வெனவே, எஞ்சுபொருட்கிளவி உம்மையொடு வரிற் பிற்படக் கிளக்க வென்றவாறாம். (36) முற்றும்மை எச்சமாதல் 285. முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி யுரித்தும் ஆகும். (இ-ள்.) முற்றும்மை யடுத்து நின்ற தொகைச்சொல் லிடத்து எச்சச்சொல் லுரித்துமாம் எ-று. (எ-டு.) பத்துங்கொடால், அனைத்துங்கொடால் என்புழி முற் றும்மை தம்பொருளுணர்த்தாது சிலவெஞ்சக் கொடு வென்னும் பொருள் தோன்றி நின்றவாறு கண்டுகொள்க. முற்றுதலென்னும் பொருளது பண்பு முற்றியவும்மையென ஒற்றுமை நயத்தாற் சொன்மே லேறி நின்றது. உரித்துமாகு மெனவே, எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். ஏற்புழிக்கோட லென்பதனான் எச்சப்படுவது எதிர்மறை வினைக்க ணென்று கொள்க. பத்துங்கொடு என்பது பிறவுங் கொடு வென்பது பட நிற்றலின், விதிவினைக்கண்ணும் எச்சங் குறிக்கு மென்பாரு முளர். இப்பொ ழுது பத்துங்கொடு என்பது கருத்தாயின், இப்பொழுது பத்துக்கொடு என உம்மையின்றியும் பொருள் பெறப்படும்; பத்துங்கொடு பிறவுங்கொடு என்பது கருத்தாயின், இஃதெச்சவும்மையாகலின் ஈண்டைக் கெய்தாது; அதனான் அது பொருத்தமின் றென்க. இவை மூன்று சூத்திரத்தானும் வழுவற்க வென இடைச்சொற் பற்றி மரபுவழுக் காத்தவாறு. (37) ‘ஏ’ என் இறுதிக்கு மாத்திரை நிலை 286. ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே. (இ-ள்.) செய்யு ளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசையேகாரங் கூற்றிடத்து ஒருமாத்திரைத் தாகலு முரித்து எ-று. (எ-டு.) ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம். 1) என்புழி ஓரளபாயினவாறு கண்டுகொள்க. தேற்ற முதலாயின நீக்கி ஈற்றசையே தழுவுதற்கு ‘ஈற்று நின்றிசைக்கு’ மென்றார். செய்யுளிடை நிற்பதனை நீக்குதற்கு ஈற்று நின்றிசைக்கு மென்றே யொழியாது ‘இறுதி’ யென்றார். மேனின்ற செய்யுளுறுப்பொடு பொருந்தக் கூறுதற்க ணென்பார் ‘கூற்றுவயி’ னென்றார். உம்மை: எதிர்மறை. (38) 3. எண்ணிடைச் சொற்கள் எண்ணில் வரும் ‘உம்’ ‘என’ என்பன 287. உம்மை எண்ணும் எனவென் எண்ணும் தம்வயின் தொகுதி கடப்பா டிலவே. (இ-ள்.) உம்மையான் வருமெண்ணும், எனவான் வருமெண்ணும், இறுதிக்கட் டொகை பெறுதலைக் கடப்பாடாகவுடையவல்ல என்றவாறு. எனவே, தொகை பெற்றும் பெறாதும் வருமென்பதாம். (எ-டு.) ‘உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும் அம்மூ வுருபின’ (சொல். 160) எனவும், ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ (சொல். 297) எனவும், ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ எனவும், ‘உயிரென வுடலென வின்றி யமையா’ எனவும் அவ்விருவகை யெண்ணுந் தொகை பெற்றும் பெறாதும் வந்தவாறு. தொகையெனப் பொதுப்படக் கூறிய வதனான் எண்ணுப் பெயரே யன்றி, அனைத்தும் எல்லா மென்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. (39) எண்ணில் வரும் ‘ஏ’ என்பது 288. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர். (இ-ள்.) சொற்றொறும் வாராது எண்ணேகாரம் இடையிட்டு வரினும் எண்ணுதற் பொருட்டாம் எ-று. (எ-டு.) ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்’ எனவும், ‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே யுறலோ டாங்கைம் புலனென மொழிப.’ எனவும் வரும். எண்ணுக் குறித்து வருவன எண்ணப்படும் பெயரெல்லாவற்றொடும் வருதன் மரபாயினும், இடையிட்டு வரினும் அமைகவென அமைத்தவாறு. எனவும் என்றும் சொற்றொறும் வாராது ஒருவழி நின்றும் எண்ணுக் குறிக்குமாலெனின், அவை ஒருவழி நின்று எல்லாவற்றோடும் ஒன்றுதலின் ஆண்டாராய்ச்சி யில்லை யென்க. பிறவெண் ஓடாநின்றவழி ஏகாரவெண் இடை வந்ததாயினும், ஓடா நின்ற பிறவெண்ணேயாமென உரைத்தாரால் உரையாசிரியரெனின், அவ்வாறு விரா யெண்ணியவழிப் பிறவெண்ணாற் பெயர் கொடுப்பின் அதனை ஏகாரவெண்ணென்பாரையும் விலக்காமையானும், பிறவெண்ணா மென்றதனாற் பெறப்படுவதொரு பயனின்மையானும், அவர்க்கது கருத்தன்றென்க. (40) ‘எனா’ ‘என்றா’ என்னுஞ் சொற்கள் 289. உம்மை தொக்க எனாவென் கிளவியும் ஆவீ றாகிய என்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. (இ-ள்.) உம்மை தொக்கு நின்ற எனாவென்னு மிடைச்சொல்லும் என்றாவென்னு மிடைச்சொல்லும் இரண்டும் எண்ணுமிடத்து வரும் எ-று. (எ-டு.) நிலனெனா நீரெனா எனவும், நிலனென்றா நீரென்றா எனவும் வரும். உம்மைதொக்க வெனாவென்கிளவி யெனவே, எனாவுமென அச்சொல் உம்மொடு வருதலுமுடைத்தென்பதாம். உம்மொடு வந்தவழி அவ்வெண் உம்மைஎண்ணு ளடங்கும். எண்ணுவழிப்பட்டன வெனவே, அவை சொற்றொறும் வருதலே யன்றி இடையிட்டும் வருமென்பதாம். ‘பின்சா ரயல்புடை தேவகை யெனா’ (சொல். 82) எனவும், ‘ஓப்பிற் புகழிற் பழியி னென்றா’ (சொல். 72) எனவும் இடையிட்டு வந்தவாறு, இவை எண்ணுதற்கண்அல்லது வாராமை யானும், ‘அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்’ (சொல். 290) எனச் சூத்திரஞ் சுருங்குதற் சிறப்பினானும், இவற்றினை ஈண்டு வைத்தார். (41) தொகை பெற்றே முடியும் எண்ணிடைச் சொற்கள் 290. அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும் ஏயி னாகிய எண்ணின் இறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணி னிறுதியும், இடைச்சொல்லா னன்றிப் பெயரா னெண்ணப்படுஞ் செவ்வெ ணிறுதியும், ஏகாரத்தான் வரும் எண்ணினிறுதியும், யாதானுமோ ரிடத்து வரினுந் தொகையின்றி நில்லா எ-று. (எ-டு.) நிலனெனா நீரெனா விரண்டும் எனவும், நிலனென்றா நீரென்றா விரண்டும் எனவும், நிலநீரென விரண்டும் எனவும், நிலனே நீரேயென விரண்டும் எனவும் தொகை பெற்று வந்தவாறு. செவ்வெண் இடைச்சொல்லெண்ணன் றென்றாராயினும், எண்ணா தலுந் தொகைபெறுதலுமாகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினார். (42) உம்மையெண்ணுக்கு மேலும் ஒரு முடிபு 291. உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார். (இ-ள்.) உம்மை யெண்ணின்கண் உருபு தொகுதல் வரையப்படாது எ-று. ‘பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப’ (சொல். 104) என்னும் பொதுவிதியான் உம்மை யெண்ணின்கண் உருபு தொகல் பெறப் பட்டமையான், பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டாகலான் உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையப்படாது; ஏனையெண்ணின்கண் அவை வரையப்படுமென நியமித்தல் இதற்குப் பயனாகக் கொள்க. ‘குன்றி கோபங் கொடிவிடு பவள மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்’ எனப் பிறவெண்ணின்கண் உருபு தொக்கதாலெனின், அற்றன்று. செவ்வெண் தொகையின்றி நில்லாமையின் அவற்றையென ஒரு சொல் விரிக்கப்படும்; விரிக்கவே, குன்றி முதலாயின எழுவாயாய் நின்றனவா மென்பது. (எ-டு.) ‘பாட்டுங் கோட்டியு மறியாப் பயமில் தேக்கு மரம்போ னீடிய வொருவன்’ ‘இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (சொல். 267) என உம்மை யெண்ணின்கண் உருபு தொக்கவாறு கண்டுகொள்க. வரையா ரென்றதனான், ஆண்டும் எல்லாவுருபுந் தொகா; ஐயுங் கண்ணுமே தொகுவனவெனக் கொள்க. யானை தேர் குதிரை காலா ளெறிந்தார் என உம்மையும் உருபும் உடன் றொக்கவழி, உம்மைத்தொகை யென்னாது உருபுதொகை யென்க வென்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அஃது உம்மைத்தொகையாதலின் ஒரு சொன்னடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும். அத்தொகையிடை உருபின்மை சிற்றறிவினார்க்கும் புலனாம். அதனான் அஃதவர்க்குக் கருத்தன்மை சொல்லவேண்டுமோ வென்பது. (43) 4. புறனடை ‘உம்’ ‘உந்து’ ஆதல் 292. உம்உந் தாகும் இடனுமார் உண்டே. (இ-ள்.) வினைசெயன் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்தாய்த் திரிதலு முடைத்து எ-று. (எ-டு.) ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து’ (புறம். 395) எனவும், ‘நாரரி நறவினாண் மகிழ்தூக் குந்து’ (புறம். 400) எனவும் வரும். வினைசெயன் மருங்கிற் காலமொடு வரும் உம்மென்பது ஏற்புழிக் கோடலென்பதனாற் பெற்றாம். இடனுமாருண்டேயென்றது, இத்திரிபு பெயரெச்சத்திற் கீறாயவழி யென்பது கருதிப்போலும். தம்மீறு திரிதன் முதலாயின இவ்வோத்தினுட் கூறப்படும் இடைச் சொற்கே யென்பது இதனானும் பெற்றாம். வினையியலுள்ளுங் கூறப்படு மாயினும், இடைச்சொற் றிரிபாகலான் ஈண்டுக் கூறலும் இயைபுடைத் தென்பது. (44) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொற்களிலும் வருதல் 293 வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே. (இ-ள்.) வினையொடு நிற்பினும் எண்ணிடைச் சொற்கள் தம்நிலை யிற்றிரியா; அவற்றொடு வருங்கால் அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும் எ-று. (எ-டு.) உண்டுந் தின்றும் பாடியும் வந்தான் எனவும், உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வரும். ஒழிந்த வெண்ணொடு வருவனவுளவேற் கண்டுகொள்க. பெரும்பான்மையும் பெயரோடல்லது எண்ணிடைச்சொல் நில்லா மையின் அதனை முற்கூறி, சிறுபான்மை வினையொடு நிற்றலுமுடைமை யான் இதனை ஈண்டுக் கூறினார். ‘நினையல் வேண்டு மவற்றவற்றியல்பே’ யென்றதனான், எண்ணி டைச்சொல் முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா வென்பதூஉம், வினையெச்சத்தோடும் ஏற்பன பற்றி அல்லது வாராவென்பதூஉம், ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை யென்பதூஉங் கொள்க. சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது எனச் செவ்வெண்தொகை பெற்று வந்ததென்றாரால் உரையாசிரியரெனின், அவை எழுவாயும் பயனிலையு மாய் அமைந்துமாறுதலின் எண்ணப்படாமையானும், மூவரு மென்பது சாத்தன் முதலாயினோர் தொகையாகலானும், அது போலியுரை யென்க. (45) எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல் 294. என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே. (இ-ள்.) என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித் தோன்றி எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றுமிடமுடைய எ-று. (எ-டு.) ‘வினைபகை யென்றிரண்டி னெச்சம்’ (குறள். 674) எனவும், ‘கண்ணிமை நொடியென’ (நூன்மரபு 7) எனவும், ‘பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்’ (குறள். 675) எனவும், அவை ஒருவழி நின்று, வினையென்று, பகையென்று எனவும், கண்ணிமையென நொடியென எனவும், பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடத் தொடு எனவும், நின்றவிடத்துப் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு கண்டுகொள்க. ‘ஒன்று வழியுடைய’ வென்றதனான் சொற்றொறு நிற்பதே பெரும் பான்மை யென்பதாம். சொற்றொறு நின்றவெண் இக்காலத்தரிய. ஒடுவென்ப தோரிடைச்சொல் எண்ணின்கண் வருத லிதனாற் கொள்க. இவை மூன்றும் பொருளிற்பிரிந்து எண்ணின்கண் அசையாய் வருத லுடைய வென்பது உரையாசிரியர்க்குக் கருத்தென்பாரு முளர். அசை நிலை யென்பது இச்சூத்திரத்தாற் பெறப்படாமையானும், ‘கண்ணிமை நொடி’ (எழுத். 7) என்னுஞ் சூத்திரத்து எனவைக் கண்ணிமை யென்பத னொடுங் கூட்டுகவென் றுரைத்தலானும், அவர்க்கது கருத்தன்றென்க. (46) இடைச்சொற்களின் பொருட் புறனடை 295. அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென மெய்பெறக் கிளந்த இயல ஆயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே. (இ-ள்.) மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள், அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்பை யுடையன வாயினும், வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயுந் திரிந்துவரினும், ஆராய்ந்து கொள்க எ-று. எனவே, கூறிய முறையான் வருதல் பெரும்பான்மையென்றும், வேறுபட வருதல் சிறுபான்மையென்றுஞ் சொல்லியவாறாம். வினையொடும் பெயரொடு மென்றது, அவை வேறுபொருள வென்றுணர்த்தற்குச் சார்பு கூறியவாறு. (எ-டு.) ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) எனவும், ‘கலக்கொண்டன கள்ளென்கோ காழ்கோத்தன சூடென்கோ’ எனவும் ஓகாரம் ஈற்றசையாயும் எண்ணாயும் வந்தது. ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம். 273) என மா முன்னிலை யசைச்சொல்லாயிற்று. ‘அதுமற் கொண்கன் றேரே’ என மன்அசைநிலையாயிற்று. பிறவுமன்ன. செய்யுளின்ப ‘நோக்கி வினையொடும் பெயரொடு’மென்றார். (47) இவ்வியலுக்குச் சொற் புறனடை 296. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டனவன்றி யவை போல்வன பிற வரினும், அவற்றைக் கிளந்த சொல்லி னியல்பா னுணர்ந்து கொள்க எ-று. கிளந்தவற்றியலானென்றது, ஆசிரியர்ஆணையானன்றிக் கிளந்தவற் றையும் இன்னவென் றறிவது வழக்கினுட் சார்பும் இடமுங் குறிப்பும் பற்றி யன்றே? கிளவாதவற்றையும் அவ்வாறு சார்பும் இடமுங் குறிப்பும் பற்றி இஃதசைநிலை இஃதிசைநிறை இது குறிப்பான் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க வென்றவாறு. (எ-டு.) ‘சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசில ருய்ம்மார்’ எனவும், ‘சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்ந்தே’ எனவும், ‘அறிவார் யாரஃ திறுவுழி யிறுகென’ எனவும், ‘பணியுமா மென்றும் பெருமை’ (குறள். 978) எனவும், ‘ஈங்கா குநவா லென்றிசின் யானே’ (நற். 55) எனவும், மாள, தெய்ய, என, ஆம், ஆல் என்பனவும் அசைநிலையாய் வந்தன, ‘குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே’ (முருகு. 217) எனத் தொறுவென்பது தான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலு முணர்த்தி நிற்கும். ஆனம், ஏனம், ஓனம் என்பன எழுத்துச்சாரியை. பிறவும் எடுத்தோதாத விடைச் சொலெல்லாம் இப்புறனடையாற் றழீஇக் கொள்க. (48) இடையியல் முற்றிற்று. 8 உரியியல் (உரிச்சொல் இலக்கணம் உணர்த்துவது) 1. பொது இலக்கணம் உரிச்சொல்லின் இயல்பு 297. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். நிறுத்த முறையானே உரிச்சொல் லுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து உரியியலென்னும் பெயர்த்தாயிற்று. தமக்கியல் பில்லா விடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாகலின், உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மை யுஞ் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல் லாயிற்றென்பாருமுளர். (இ-ள்.) உரிச்சொல்லை விரித்துரைக்குமிடத்து, இசை குறிப்புப் பண்பென்னும் பொருண்மேற் றோன்றி, பெயர்க்கண்ணும் வினைக் கண்ணும் தம்முருபு தடுமாறி, ஒருசொற் பல பொருட் குரித்தாய் வரினும் பலசொல் ஒருபொருட் குரியவாய் வரினும் கேட்பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றொடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக் குரிய நிலைக்களத்தின்கண் யாதானுமொரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப்படும் என்றவாறு. என்றது, இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி, ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி, ஒருசொற் பல பொருட்கும் பலசொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்தலாகாமையின், வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றொடு சார்த்தித் தம்மையெடுத் தோதியே அப்பொரு ளுணர்த்தப்படுமென்றும், உரிச்சொற்குப் பொது விலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையு முணர்த்திய வாறு. குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு - பொறியானுணரப் படுங் குணம். கறுப்பு, தவவென்பன பெயர்வினைப்போலி. துவைத்தல் துவைக்கு மென்பன பெயர் வினைக்கு முதனிலையாயின. உறு முதலாயின மெய் தடுமாறாது வருதலின், பெயரினும் வினையினு மெய்தடுமாறி யென்றது பெரும்பான்மைபற்றியெனக் கொள்க. அவை கூறியவாற்றாற் பொருட்குரியவாய் வருமாறு முன்னர்க் காணப்படும். மெய்தடுமாறலும், ஒருசொற் பலபொருட் குரிமையும், பலசொல் ஒரு பொருட்குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட் குரியவாய் வருதலேயாம். ஒருசொல் ஒருபொருட் குரித்தாதல் இயல்பாகலாற் சொல்லா மையே முடியுமென்பது. (1) பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படுதல் 298. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. (இ-ள்.) வெளிப்பட்ட உரிச்சொல் கிளந்ததனாற் பயனின்மையிற் கிளக்கப்படா; வெளிப்பட வாரா உரிச்சொன்மேற்றுக் கிளந்தோதல் எ-று. ‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி, யெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ (சொல். 297) என்றதனான் பயிலாதவற்றைப் பயின்றவற்றொடு சார்த்தியும் பயின்றவற்றைப் பிறிதொன்றனொடு சார்த்தாது தம்மையே கிளந்தும் எல்லா வுரிச்சொல்லும் உணர்த்தப்படு மென்பது பட்டு நின்றதனை விலக்கி, பயனின்மையாற் பயின்ற உரிச்சொற் கிளக்கப்படாது பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படுமென, வரையறுத்த வாறு, மேலவென்பது மேனவென நின்றது. (2) 2. சிறப்பிலக்கணம் உரிச்சொற்களுள் ‘உறு’ ‘தவ’ ‘நனி’ 299. அவைதாம் உறுதவ நனியென வரூஉ மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப. வெளிப்பட வாரா உரிச்சொல்லைக் கிளந்தோதி விரிக்கின்றார். அவைதாம் என்றது வெளிப்பட வாரா உரிச்சொற்றாம் என்றவாறு. அதற்கு முடிபு ‘அவைதாம், அம்மா மெம்மே மென்னும் கிளவியும்’ (சொல். 202) என்புழி உரைத்தாங் குரைக்க. (இ-ள்.) ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி. 185) எனவும், ‘ஈயாது வீயு முயிர் தவப் பலவே’ (புறம். 236) எனவும், ‘வந்துநனி வருந்தினை வாழியென் நெஞ்சே’ (அகம். 19) எனவும், உறு, தவ, நனி யென்பன மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த்தும் எ-று. குறிப்புச்சொற் பரப்புடைமையான் முற்கூறினார். (3) ‘உரு’ ‘புரை’ 300. உருவுட் காகும் புரையுயர்பு ஆகும். (இ-ள்.) ‘உருகெழு கடவுள்’ எனவும், ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற். 1) எனவும், உருவும் புரையும் உட்கும் உயர்பு முணர்த்தும் எ-று. (4) ‘குரு’ ‘கெழு’ 301. குருவுங் கெழுவும் நிறனா கும்மே. (இ-ள்.) ‘குருமணித் தாலி’ ‘செங்கேழ் மென்கொடி’ (அகம். 80) எனக் குருவும் கெழுவும் நிறமென்னும் பண்புணர்த்தும் எ-று. (5) ‘செல்லல்’ ‘இன்னல்’ 302. செல்லல் இன்னல் இன்னா மையே. (இ-ள்.) ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) எனவும், ‘வெயில்புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு. 374) எனவும், செல்லலும் இன்னலும் இன்னாமை யென்னுங் குறிப்புணர்த்தும் எ-று (6) ‘மல்லல்’ ‘ஏ’ 303. மல்லல் வளனே. 304. ஏபெற் றாகும். (இ-ள்.) ‘மல்லன் மால்வரை’ (அகம். 52) எனவும், ‘ஏகல் லடுக்கம்’ (நற். 116) எனவும், மல்லலும் ஏவும் வளமும் பெற்றுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. பெற்று - பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றதுபோலும். இவை யிரண்டு சூத்திரம். (7, 8) ‘உகப்பு’ ‘உவப்பு’ 305. உகப்பே உயர்தல் உவப்பே உவகை. (இ-ள்.) ‘விசும்புகந் தாடாது’ எனவும், ‘உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇ’ (அகம். 35) எனவும், உகப்பும் உவப்பும் உயர்தலும் உவகையுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (9) ‘பயப்பு’ ‘பசப்பு’ 306. பயப்பே பயனாம். 307. பசப்புநிற னாகும். (இ-ள்.) ‘பயவாக் களரனையர் கல்லா தவர்’ (குறள். 406) எனவும், ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ (கலி. 7) எனவும், பயப்பும் பசப்பும் பயனும் நிறவேறுபாடுமாகிய குறிப்பும் பண்பும் முணர்த்தும் எ-று. (10) (11) ‘இயைபு’ ‘இசைப்பு’ 308. இயைபே புணர்ச்சி. 309. இசைப்பிசை யாகும். (இ-ள்.) ‘இயைந்தொழுகும்’ எனவும், ‘யாழிசையூப் புக்கு’ எனவும், இயைபும், இசைப்பும், புணர்ச்சிக் குறிப்பும் இசைப்பொருண்மையு முணர்த்தியவாறு. (12, 13) ‘அலமரல்’ ‘தெருமரல்’ 310. அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி. (இ-ள்.) ‘அலமர லாயம், (ஐங். 66) எனவும், ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்’ எனவும், அலமரலும் தெருமரலும், சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் எ-று. (14) ‘மழ’ ‘குழ’ 311. மழவுங் குழவும் இளமைப் பொருள. (இ-ள்.) ‘மழகளிறு’ (புறம். 38) எனவும், ‘குழக்கன்று’ (புறம். 103) எனவும், மழவுங் குழவும், இளமைக் குறிப்புப் பொருளுணர்த்தும் எ-று. (15) ‘சீர்த்தி’ ‘மாலை’ 312. சீர்த்தி மிகுபுகழ். 313. மாலை இயல்பே. (இ-ள்.) ‘வயக்கஞ்சால் சீர்த்தி’ எனவும், ‘இரவரன் மாலையனே’ (குறிஞ்சிப். 239) எனவும், சீர்த்தியும் மாலையும், பெரும்புகழும் இயல்பு மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (16, 17) ‘கூர்ப்பு ‘கழிவு’ 314. கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும். (இ-ள்.) ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண். 39) எனவும், ‘கழிகண் ணோட்டம்’ (பதிற். 22) எனவும், கூர்ப்பும் கழிவும், ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பை யுணர்த்தும் என்றவாறு. உள்ளதென்றது முன் சிறவாதுள்ள தென்றவாறு. (18) ‘கதழ்வு’ ‘துனைவு’ 315. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள. (இ-ள்.) ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 223) எனவும், ‘துனைபறை நிவக்கும் புள்ளின மான’ (மலைபடு. 55) எனவும், கதழ்வும் துனைவும், விரைவாகிய குறிப்புணர்த்தும் எ-று. (19) ‘அதிர்வு’ ‘விதிர்ப்பு’ 316. அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும். (இ-ள்.) ‘அதிர வருவதோர் நோய்’ (குறள். 429) எனவும், ‘விதிர்ப்புற லறியா வேமக் காப்பினை’ (புறம். 20) எனவும் அதிர்வும் விதிர்ப்பும், நடுக்கமாகிய குறிப்புணர்த்தும் எ-று. அதிழ்வென்று பாடமோதி, ‘அதிழ்கண் முரசம்’ என்றுதாரணங் காட்டுவாரு முளர். (20) ‘வார்தல்’ ‘போகல்’ ‘ஒழுகல்’ 317. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள. (இ-ள்.) ‘வார்ந்திலங்கும் வையெயிற்று’ (குறுந். 14) ‘வார்கயிற் றொழுகை’ (அகம். 173) எனவும், ‘போகுகொடி மருங்குல்’ ‘வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி’ (பதிற். 12) எனவும்; ‘ஒழுகுகொடி மருங்குல்’ ‘மால்வரையொழுகிய வாழை’ (சிறுபாண். 21) எனவும், வார்தல் போகல் ஒழுகல் என்னும் மூன்றுசொல்லும், நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும் எ-று. (21) ‘தீர்தல்’ ‘தீர்த்தல்’ 318. தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். (இ-ள்.) தீர்தலுந் தீர்த்தலுமென்னு மிரண்டும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் எ-று. (எ-டு.) ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) என வரும். தீர்த்தல் விடுதற்பொருண்மைக்கண் வந்தவழிக் கண்டுகொள்க. தீர்த்த லென்பது செய்வித்தலை யுணர்த்திநின்ற நிலைமையெனின், செய்வித் தலை யுணர்த்து நிலைமை வேறோதின் ‘இயைபே புணர்ச்சி’ (உரி. 12) என்புழியும் இயைப்பென வேறோதல் வேண்டும். அதனாற் றீர்த்தலுஞ் செய்தலை யுணர்த்துவதோ ருரிச்சொல் லெனவே படுமென்பது. விடற்பொருட்டாகு மென்பதனை இரண்டனொடுங் கூட்டுக. பன்மை யொருமை மயக்க மெனினு மமையும். (22) ‘கெடவரல்’ ‘பண்ணை’ 319. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. (இ-ள்.) ‘கெடவர லாயமொடு’ எனவும், ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (பொருள். மெய்ப்பாட். 1) எனவும், கெட வரலும் பண்ணையும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும் எ-று. (23) ‘தட’ ‘கய’ ‘நளி’ 320. தடவுங் கயவும் நளியும் பெருமை. (இ-ள்.) ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ (புறம். 394) ‘கயவாய்ப் பெருங்கை யானை’ (அகம். 118) ‘நளிமலை நாடன்’ (புறம். 150) எனத் தடவும் கயவும் நளியும், பெருமையாகிய பண்புணர்த்தும் எ-று. (24) இவற்றிற்குப் பிறபொருள் ‘தட’ ‘கய’ ‘நளி’ என்பவற்றிற்கு, மேலும் பொருள் 321. அவற்றுள் தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். 322. கயவென் கிளவி மென்மையும் ஆகும். 323. நளியென் கிளவி செறிவும் ஆகும். (இ-ள்.) ‘தடமருப் பெருமை’ (நற். 120), ‘கயந்தலை மடப்பிடி’ (நற். 137), ‘நளியிருள்’* எனத் தடவென்கிளவி முதலாயின, பெருமையே யன்றிக் கோட்டமும் மென்மையுமாகிய பண்பும் செறிவாகிய குறிப்பு முணர்த்தும் எ-று. (25 - 27) *(பாடம்) ‘சிலைப்புவல் லேற்றுத் தலைக்கை தந்துநீ, நளிந்தனை வருதல்’ (பதிற்று. 52). ‘பழுது’ ‘சாயல்’ ‘முழுது’ 324. பழுதுபயம் இன்றே. 325. சாயன் மென்மை. 326. முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே. (இ-ள்.) ‘பழுதுகழி வாழ்நாள்’ ‘சாயன் மார்பு’ (பதிற். 16) ‘மண்முழு தாண்ட’ எனப் பழுது முதலாயின, பயமின்மையாகிய குறிப்பும் மென்மை யாகிய பண்பும் எஞ்சாமையாகிய குறிப்பு முணர்த்தும் எ-று. (28 - 30) ‘வம்பு’ ‘மாதர்’ ‘நம்பு’ ‘மே’ 327. வம்புநிலை யின்மை. 328. மாதர் காதல். 329. நம்பும் மேவும் நசையா கும்மே. (இ-ள்.) ‘வம்பு மாரி’ (குறுந். 66), ‘மாதர் நோக்கு’ ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198), ‘பேரிசை நவிர மேஎ வுறையுங், காரி யுண்டி’ (மலைபடு. 82) என வம்பும் மாதரும், நிலையின்மையுங் காதலுமாகிய குறிப்புணர்த்தும்; நம்பும் மேவும் நசையாகிய குறிப்புணர்த்தும் எ-று. (31 - 33) ‘ஓய்தல்’ ‘ஆய்தல்’ ‘நிழத்தல்’ ‘சாய்’ 330. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். (இ-ள்.) ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி. 7) ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி. 96) ‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மது. 309) ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18) என ஓய்தன் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ஆய்ந்த தானை - பொங்குதல் விசித்தலானுணுகிய தானை. உள்ள தென்றது முன்னுணு காதுள்ளது எ-று. (34)  (பாடம்) ‘அவிதலா னுணுகிய தானை’ ‘புலம்பு’ ‘துவன்று’ ‘முரஞ்சல்’ ‘வெம்மை’ 331. புலம்பே தனிமை. 332. துவன்று நிறைவாகும். 333. முரஞ்சன் முதிர்வே. 334. வெம்மை வேண்டல். (இ-ள்.) ‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’ (அகம். 7) எனவும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’ (நற். 170) எனவும், ‘சூன்முரஞ் செழிலி’ எனவும், ‘வெங்காமம்’ (அகம். 15) எனவும், புலம்பு முதலாயின, தனிமையும் நிறைவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்பு முணர்த்தும் எ-று. (35 - 38) ‘பொற்பு’ ‘வறிது’ ‘ஏற்றம்’ 335. பொற்பே பொலிவு. 336. வறிதுசிறி தாகும். 337. ஏற்றம் நினைவுந் துணிவு மாகும். (இ-ள்.) ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற். 34) எனவும், ‘வறிதுவடக் கிறைஞ்சிய’ (பதிற். 24) எனவும், ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145), ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ எனவும், பொற்பு முதலாயின முறையானே பொலிவும், சிறிதென்பதூஉம், நினைவும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (39 - 41) ‘பிணை’ ‘பேண்’ 338. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (இ-ள்.) ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’ எனவும், ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’ (புறம். 99) எனவும், பிணையும் பேணும், பெட்பின் பொருளாகிய புறந்தருதலென்னுங் குறிப்புணர்த்தும் எ-று. பெட்பின் பொருள வென்றதனான் பெட்பின் பொருளாகிய விரும்புதலுணர்த்தலுங் கொள்க. அது வந்தவழிக் கண்டுகொள்க. (42) ‘பணை’ 339. பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும். (இ-ள்.) ‘பணைத்துவீழ் பகழி’ எனப் பணை யென்பது பிழைத்த லாகிய குறிப்புணர்த்தும்; அதுவே யன்றி ‘வேய்மருள் பணைத்தோள்’ (அகம். 1) எனப் பெருப்பாகிய குறிப்பு முணர்த்தும் எ-று. பெருமையாகிய பண்புணர்த்தாது பெருத்தலாகிய குறிப்புணர்த்து மென்பார் பெருப்பென்றார். (43) ‘படர்’ 340. படரே உள்ளல் செலவும் ஆகும். (இ-ள்.) ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறம். 47) ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) எனப் படரென்பது உள்ளுதலுஞ் செலவு மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (44) ‘பையுள்’ ‘சிறுமை’ 341. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள. (இ-ள்.) ‘பையுண்மாலை’ (குறுந். 165) எனவும், ‘சிறுமை யுறுப செய்பறி யலரே’ (நற். 1) எனவும், பையுளுஞ் சிறுமையும், நோயாகிய குறிப் புணர்த்தும் எ-று. (45) ‘எய்யாமை’ 342. எய்யா மையே அறியா மையே. (இ-ள்.) ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ (குறிஞ்சிப். 8) என எய்யாமை அறிவின்மையாகிய குறிப்புணர்த்தும் எ-று. அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான் றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறையன்மையறிக. (46) ‘நன்று’ 343. நன்றுபெரி தாகும். (இ-ள்.) ‘நன்று, மரிதுதுற் றனையாற் பெரும’ (அகம். 10) என நன்றென்பது பெரிதென்னுங் குறிப்புணர்த்தும் எ-று. பெருமை யென்னாது பெரிதென்றதனான் நன்றென்பது வினை யெச்சமாதல் கொள்க. (47) ‘தா’ 344. தாவே வலியும் வருத்தமும் ஆகும். (இ-ள்.) ‘தாவி னன்பொன் றைஇய பாவை’ (அகம். 212) எனவும், ‘கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றென’ (குறுந். 69) எனவும், தாவென்பது வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (48) ‘தெவு’ ‘தெவ்வு’ 345. தெவுக்கொளல் பொருட்டே. 346. தெவ்வுப்பகை யாகும். (இ-ள்.) ‘நீர்த்தெவு நிரைத் தொழுவர்’ (மது. 89) எனவும், ‘தெவ்வுப் புலம்’ எனவும், தெவுந் தெவ்வும், முறையானே கொள்ளுதலும் பகையு மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (49 , 50) ‘விறப்பு’ ‘உறப்பு’ ‘வெறுப்பு’ 347. விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே. (இ-ள்.) ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்’ எனவும், ‘உறந்த விஞ்சி’ எனவும், ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ (புறம். 53) எனவும், விறப்பு முதலாயின செறிவென்னுங் குறிப்புணர்த்தும் எ-று. (51) விறப்பு : பிற பொருள் 348. அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். (இ-ள்.) ‘அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல’ (பெரும்பாண். 226) என விறப்பென்பது செறிவே யன்றி வெருவுதற் குறிப்புமுணர்த்தும் எ-று. (52) ‘கம்பலை’ ‘சும்மை’ ‘கலி’ ‘அழுங்கல்’ 349. கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. (இ-ள்.) ‘கம்பலை மூதூர்’ (புறம். 54) எனவும், ‘ஒரு பெருஞ் சும்மை யொடு’ எனவும், ‘கலிகொ ளாய மலிபுதொகு பெடுத்த’ (அகம். 11) எனவும், ‘உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே’ (நற். 203) எனவும், கம்பலை முதலாகிய நான்கும் அரவமாகிய இசைப்பொருண்மை யுணர்த்தும், எ-று. (53) அழுங்கல் : பிற பொருள் 350. அவற்றுள் அழுங்கல் இரக்கமுங் கேடும் ஆகும். (இ-ள்.) ‘பழங்க ணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ’ (அகம். 66) எனவும், ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர் கட்கு’ (நாலடி. 353) எனவும், அழுங்கல் அரவமேயன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்பு முணர்த்தும் எ-று. (54) ‘கழுமு’ 351. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (இ-ள்.) ‘கழுமிய ஞாட்பு’ (களவழி. 11) எனக் கழுமென்பது மயக்க மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (55) ‘செழுமை’ 352. செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும். (இ-ள்.) ‘செழும்பல் குன்றம்’ எனவும், ‘செழுந்தடி தின்ற செந்நாய் எனவும், செழுமை, வளனுங் கொழுப்புமாகிய பண்புணர்த்தும் எ-று. (56) ‘விழுமம்’ 353. விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையும். (இ-ள்.) ‘விழுமியோர்க் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159) எனவும், ‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27) எனவும், ‘நின்னுறு விழுமங் களைந்தோள்’ (அகம். 170) எனவும், விழுமம் முறை யானே சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (57) ‘கருவி’ ‘கமம்’ 354. கருவி தொகுதி. 355. கமம்நிறைந் தியலும். (இ-ள்.) ‘கருவி வானம்’ (புறம். 159) எனவும், ‘கமஞ்சூல் மாமழை’ (அகம். 43) (குறுந். 158) எனவும், கருவியும் கமமும், தொகுதியும் நிறைவு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ‘கருவிவானம்’ என்புழிக் கருவி மின்னு முழக்கு முதலாயவற்றது தொகுதி. (58, 59) ‘அரி’ ‘கவவு’ 356. அரியே ஐம்மை. 357. கவவகத் திடுமே. (இ-ள்.) ‘அரிமயிர்த் திரண்முன்கை’ (புறம். 11) எனவும், ‘கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே’ (புறம். 19) எனவும், அரியுங் கவவும், ஐம்மையும் அகத்தீடு மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (60, 61) ‘துவைத்தல்’ ‘சிலைத்தல்’ ‘இயம்பல்’ ‘இரங்கல்’ 358. துவைத்தலுஞ் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர். (இ-ள்.) ‘வரிவளை துவைப்ப’ எனவும், ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு. 315) எனவும், ‘கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம். 39) எனவும், ‘ஏறிரங் கிருளிடை’ (கலி. 46) எனவும், துவைத்தன் முதலாயின இசைப்பொரு ளுணர்த்தும் என்றவாறு. (62) இரங்கல் : பிற பொருள் 359. அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும். (இ-ள்.) ‘செய்திரங்காவினை’ (புறம். 10) என இரங்கல், இசையே யன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பு முணர்த்தும் எ-று. கழிந்த பொருள்பற்றி வருங் கவலையைக் கழிந்த பொருளென்றார். (63) ‘இலம்பாடு’ ‘ஒற்கம்’ 360. இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. (இ-ள்.) ‘இலம்படு புலவ ரேற்றகைந் நிறைய’ (மலைபடு. 576) எனவும், ‘ஒக்க லொற்கஞ் சொலிய’ (புறம். 327) எனவும், இலம்பாடும் ஒற்கமும் வறுமையாகிய குறிப்புணர்த்தும் எ-று. இலமென்னு முரிச்சொல், பெரும்பான்மையும் பாடென்னுந் தொழில்பற்றியல்லது வாராமையின் இலம்பாடென்றார். (64) ‘ஞெமிர்தல்’ ‘பாய்தல்’ 361. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (இ-ள்.) ‘தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடுநல். 90) எனவும், ‘பாய்புனல்’ எனவும், ஞெமிர்தலும் பாய்தலும், பரத்தலாகிய குறிப்புணர்த்தும் எ-று. (65) ‘கவர்வு’ ‘சேர்’ ‘வியல்’ 362. கவர்வுவிருப் பாகும். 363. சேரே திரட்சி. 364. வியலென் கிளவி அகலப் பொருட்டே. (இ-ள்.) ‘கவர்நடைப் புரவி’ (அகம். 130) எனவும், ‘சேர்ந்து செறி குறங்கு’ (நற். 170) எனவும், ‘வியலுலகம்’ எனவும், கவர்வு முதலாயின முறை யானே விருப்புந் திரட்சியும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (66 - 68) ‘பேம் ‘நாம்’ ‘உரும்’ 365. பேம்நாம் உருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள. (இ-ள்.) ‘மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள்’ (குறுந். 87) எனவும், ‘நாம நல்லரா’ (அகம். 72) எனவும், ‘உருமில் சுற்றம்’ (பெரும்பாண். 447) எனவும், பேம் முதலாகிய மூன்றும் அச்சமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (69) ‘வய’ ‘வாள்’ ‘துயவு’ 366. வயவலி யாகும். 367. வாளொளி யாகும். 368. துயவென் கிளவி அறிவின் திரிபே. (இ-ள்.) ‘துன்னருந் துப்பின் வயமான்’ (புறம். 44) எனவும், ‘வாண் முகம்’ (புறம். 6) எனவும், ‘துயவுற்றேம் யாமாக, எனவும் வயமுதலாயின, வலியும் அறிவு வேறுபடுதலுமாகிய குறிப்பும் ஒளியாகிய பண்பு முணர்த்தும் எ-று. (70 - 72) ‘உயா’ ‘உசா’ ‘வயா’ 369. உயாவே உயங்கல். 370. உசாவே சூழ்ச்சி. 371. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். (இ-ள்.) ‘பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ (அகம்.19) எனவும், ‘உசாத்துணை’ (பொ. 126) எனவும், ‘வயவுறு மகளிர், (புறம். 20) எனவும், உயா முதலாயின, முறையானே உயங்கலுஞ் சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (73 - 75) ‘கறுப்பு’ ‘சிவப்பு’ 372. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. (இ-ள்.) ‘நிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்’ எனவும், ‘நீ சிவந் திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) எனவும், கறுப்புஞ் சிவப்பும், வெகுளியாகிய குறிப்புணர்த்தும் எ-று. கறுமை செம்மையென்னாது கறுப்புச் சிவப்பென்றதனான், தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளியுணர்த்தாமை கொள்க. (76) இவற்றிற்குப் பிற பொருள் 373. நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப. (இ-ள்.) ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள்’ (பதிற். 15) என அவை வெகுளியேயன்றி நிறவேறுபாடுணர்த்தற்கு முரிய எ-று. இவை வெளிப்படு சொல்லாயினும், ‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’ வென்றதனான், கருங்கண் செவ்வாய் எனப் பண்பாயவழி யல்லது தொழிலாயவழி நிறவேறுபா டுணர்த்தா வென்பது படுதலின், அதனைப் பாதுகாத்தவாறு. (77) ‘நொசிவு’ ‘நுழைவு’ ‘நுணங்கு’ 374. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. (இ-ள்.) ‘நொசிமட மருங்குல்’ (கலி. 60) எனவும், ‘நுழைநூற் கலிங்கம்’ (மலைபடு. 561) எனவும், ‘நுணங்கு துகி னுடக்கம் போல’ (நற். 15) எனவும், நொசிவு முதலாயின, நுண்மையாகிய பண்புணர்த்தும் எ-று. (78) ‘புனிறு’ 375. புனிறென் கிளவிஈன் றணிமைப் பொருட்டே. (இ-ள்.) ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம். 56) எனப் புனி றென்பது ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும் எ-று. (79) ‘நனவு’ 376. நனவே களனும் அகலமுஞ் செய்யும். (இ-ள்.) ‘நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம். 82) எனவும், ‘நனந்தலை யுலகம்’ (பதிற். 63) எனவும், நனவு, களனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (80) ‘மத’ 377. மதவே மடனும் வலியும் ஆகும். (இ-ள்.) ‘பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்’ (அகம். 14) எனவும், ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம். 36) எனவும், மதவென்பது மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (81) இதற்குப் பிற பொருள் 378. மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) ‘மதவிடை’ எனவும், ‘மாதர்வாண்முக மதைஇய நோக்கே’ (அகம். 130) எனவும், மடனும் வலியுமே யன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்புஞ் சிறுபான்மை யுணர்த்தும் என்றவாறு. மதவிடை யென்புழி, மிகுதி, உள்ள மிகுதி. (82) ‘யாணர்’ 379. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. (இ-ள்.) ‘மீனொடு பெயரும் யாண ரூர’ (நற். 210) என யாணரென்பது வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும் எ-று. (83) ‘அமர்தல்’ ‘யாண்’ 380. அமர்தல் மேவல். 381. யாணுக் கவினாம். (இ-ள்.) ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84) எனவும், ‘யாணது பசலை’ (நற். 50) எனவும், அமர்தலும் யாணும், முறை யானே மேவுதலுங் கவினுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (84, 85) ‘பரவு’ ‘பழிச்சு’ 382. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (இ-ள்.) ‘நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே’ (புறம். 335) எனவும், ‘கைதொழூஉப் பழிச்சி’ (மது. 664) எனவும், பரவும் பழிச்சும், வழுத்துத லாகிய குறிப்புணர்த்தும் எ-று. (86) ‘கடி’ என்னுஞ் சொல் 383. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்ச முன்தேற்று ஆயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்.) கடியென்னு முரிச்சொல் வரைவு முதலாகிய பத்துக் குறிப்பு முணர்த்தும் எ-று. (எ-டு.) ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ (குறள். 658) என வரைவும், ‘கடிநுனைப் பகழி’ எனக் கூர்மையும், ‘கடிகா’ (களவழி. 26) எனக் காப்பும், ‘கடிமலர்’ எனப் புதுமையும், ‘கடுமான்’ (அகம். 134) என விரைவும், ‘கடும்பகல்’ (அகம். 148) என விளக்கமும், ‘கடுங்கா லொற்றலின்’ (பதிற். 25) என மிகுதியுங், ‘கடுநட்பு’ எனச் சிறப்பும், ‘கடியையா னெடுந்தகை செருவத் தானே’ என அச்சமும், ‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூ டருகுவ னினக்கே’ (அகம். 110) என முன்தேற்றும் உணர்த்தியவாறு கண்டுகொள்க. முன்தேற்று - புறத்தின்றித் தெய்வமுதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல். (87) இதற்குப் பிற பொருள் 384. ஐயமுங் கரிப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) ‘கடுத்தன ளல்லளோ வன்னை’ எனவும், ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ எனவும், கடியென்கிளவி மேற்கூறப்பட்ட பொருளேயன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்புங் கரிப்பாகிய பண்பு முணர்த்துதற்கு முரித்து எ-று. (88) ‘ஐ’ ‘முனைவு’ ‘வை’ ‘எறுழ்’ 385. ஐ வியப் பாகும். 386. முனைவு முனிவாகும். 387. வையே கூர்மை. 388. எறுழ்வலி யாகும். (இ-ள்.) ‘ஐதே காமம் யானே’ (நற். 143) எனவும், ‘சேற்றுநில முனைஇய செங்கட் காரான்’ (அகம். 46) எனவும், ‘வைநுனைப் பகழி’ (முல்லைப். 73) எனவும், ‘போரெறுழ்த் திணிதோள்’ (பெரும்பாண். 93) எனவும், ஐ முதலாயின முறையானே வியப்பும் முனிவுங் கூர்மையும் வலியுமாகிய குறிப்புணர்த்தும் எ-று. (89 - 92) 3. சொல்லும் பொருளும் உரிச்சொல் பொருள் உணர்த்துமாறு 389. மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் தத்த மரபின் தோன்றுமன் பொருளே. (இ-ள்.) இச்சொல் இப்பொருட் குரித்தென மேற்கூறப்பட்ட உரிச்சொ லெல்லாவற்றையும், அவற்று முன்னும் பின்னும் வருமொழி களை ஆராய்ந்து, அம்மொழிகளுள் தக்க மொழியானே ஒருபொரு ளுணர்த்துக; இவ்வாறுணர்த்தவே, வரலாற்று முறைமையாற் றத்தமக் குரித்தாய பொருள் விளங்கும் எ-று. இஃது என் சொல்லியவாறோ வெனின், ‘உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப’ (சொல். 299) எனவும், ‘செல்ல லின்ன லின்னா மையே’ (சொல். 302) எனவும் ஓதியவழி, அவை வழக்கிடைப் பயின்ற சொல்லன்மையான் இவை மிகுதியும் இன்னாமையு முணர்த்துமென்று ஆசிரியராணையாற் கொள்வ தல்லது வரலாற்றாற் பொருளுணர்த்தப்படாவோ வென்று ஐயுறுவார்க்கு, ‘உறுகால்’ (நற். 300) ‘தவப்பல’ (புறம். 235) ‘நனிசேய்த்து’ (ஐங்குறு. 443) எனவும், ‘மணங் கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) எனவும், முன்னும் பின்னும் வருஞ்சொன் னாடி அவற்றுள் இச்சொல்லோடு இவ்வுரிச்சொல் இயையு மென்று கடைப்பிடிக்கத் தாம் புணர்த்த சொற் கேற்ற பொருள் விளங்குதலின், உரிச்சொல்லும் வரலாற்றாற் பொரு ளுணர்த்து மென்பது பெறப்படுமென ஐய மகற்றிய வாறெனக் கொள்க. வரலாற்றாற் பொருளுணர்த் தாவாயின், குழுவின் வந்த குறிநிலைவழக்குப் போல இயற்கைச் சொல் லெனப்படா வென்பது. (93) கூறிய சொற்கள் பிறபொருளும் உணர்த்தல் 390. கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே. (இ-ள்.) முன்னும் பின்னும் வருபவை நாடியவழி, உரிச்சொற்குக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிற பொருடோன்றுமாயினும், கூறப்பட்ட வற்றோடு அவற்றையுங் கொள்க எ-று. ‘கடிநாறும் பூந்துணர்’ என்றவழிக் கடியென்பது முன்னும் பின்னும் வருபவை நாட, வரைவு முதலாயின பொருட்கேலாது மணப் பொருட் டாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (94) சொற்குப் பொருள் தெரியுமாறு 391. பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே. பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருளுணர்த்துங்காற் படுமுறைமை யுணர்த்துகின்றார். (இ-ள்.) ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளுணர்த்தியவழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள்யாதெனப் பொருட்குப் பொருடெரியுமாயின், மேல் வருவனவற்றிற்கெல்லாம் ஈதொத்தலின், அவ்வினா இறை வரம்பின்றியோடும்; அதனாற் பொருட்குப் பொரு டெரியற்க எ-று. ஒரு சொற்குப் பொருளுரைப்பது பிறிதொரு சொல்லானன்றே? அச்சொற்பொருளும் அறியாதானை உணர்த்துமா றென்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தாற் பெறப்படும். (95) ஆசான் அதனை உணர்த்தும் ஆற்றல் 392. பொருட்குத்திரி பில்லை உணர்த்த வல்லின். (இ-ள்.) ‘உறுகால்’ (நற். 300) என்புழி உறுவென்னுஞ் சொற்குப் பொருளாகிய மிகுதி யென்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்துணர்த்தலுறாது, “கடுங்காலது வலிகண்டாய், ஈண்டு உறுவென்பதற்குப் பொரு”ளென்று தொடர்மொழி கூறியானும், கடுங்காலுள்வழிக் காட்டியானும், அம் மாணாக்க னுணரும் வாயிலறிந்து உணர்த்தல் வல்லானாயின் அப்பொரு டிரிபுபடாமல் அவனுணரும் என்றவாறு. அவற்றானு முணர்த லாற்றாதானை உணர்த்து மாறென்னையெனின், அதற்கன்றே வருஞ்சூத்திரமெழுந்த தென்பது. (96) மாணாக்கன் உணரும் ஆற்றல் 393. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. (இ-ள்.) வெளிப்படத் தொடர்மொழி கூறியானும் பொருளைக் காட்டியானும் உணர்த்தவும் உணராதானை உணர்த்தும் வாயிலில்லை; உணர்ச்சியது வாயில் உணர்வோர துணர்வை வலியாக வுடைத்தாகலான் எ-று. யாதானு மோராற்றா னுணருந் தன்மை அவற்கில்லையாயின், அவனை யுணர்த்தற் பாலனல்ல னென்றவாறு. (97) மொழிப் பொருட்குக் காரணம் உண்மை 394. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (இ-ள்.) உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொரு ளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வதல்லது, அவை அப் பொருளா வதற்குக் காரணம் விளங்கத் தோன்றா எ-று. பொருளொடு சொற்கியைபு இயற்கை யாகலான் அவ்வியற் கையாகிய இயைபாற் சொற்பொரு ளுணர்த்து மென்ப ஒரு சாரார். ஒரு சாரார் பிற காரணத்தா னுணர்த்து மென்ப. அவற்றுண் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது நம்மனோர்க்குப் புலனாகாமை யின், மொழிப்பொருட் காரண மில்லை யென்னாது விழிப்பத் தோன்றா வென்றார். அக் காரணம் பொதுவகையான் ஒன்றாயினுஞ், சொற்றொறு முண்மையிற் சிறப்பு வகையாற் பலவாம்; அதனான் விழிப்பத்தோன்றா வெனப் பன்மையாற் கூறினார். உரிச்சொற்பற்றியோதினாரேனும், ஏனைச் சொற் பொருட்கு மிஃதொக்கும். (98) உரிச்சொற்களில் எழுத்துப் பிரிந்து இசைத்தல் இன்மை 395. எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல்பு இன்றே. (இ-ள்.) முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்தல் உரிச்சொல்லிடத்தியைபுடைத்தன்று எ-று. இவணியல்பின்றெனவே, எழுத்துப் பிரிந்து பொருளுணர்த்தல் பிறாண்டு இயல்புடைத் தென்பதாம். அவையாவன: வினைச்சொல்லும் ஒட்டுப்பெயருமாம். பிரிதலும் பிரியாமையும் பொருளுணர்த்துவன வற்றிக்கே யாகலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல, இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி யெய்தாமை யறிக. தவ நனி யென்னுந் தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருளுணர்த்தலின், அவைபோலப் பிரிக்கப்படுங்கொல்லோ வென்றை யுறாமை ஐயமகற்றியவாறு. (99) 4. புறனடை 396. அன்ன பிறவுங் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து ஓம்படை ஆணையிற் கிளந்தவற் றியலான் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். (இ-ள்.) அன்ன பிறவுங் கிளந்தவல்ல பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் என்பது, சொல்லப்பட்டனவே யன்றி அவை போல்வன பிறவும் பலவாற்றானும் பரந்து வரு முரிச்சொல் லெல்லாம் என்றவாறு. பொருட்குறை கூட்டவியன்ற மருங்கினினைத் தென வறியும் வரம்பு தமக்கின்மையின் என்பது, பொருளொடு புணர்த் துணர்த்த இசை குறிப்புப் பண்புபற்றித் தாமியன்ற நிலத்து இத்துணை யென வரையறுத் துணரு மெல்லை தமக்கின்மையான் எஞ்சாமைக் கிளத்தலரிதாகலின் என்றவாறு. வழி நனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற்றியலாற் பாங்குறவுணர்தல் என்பது, ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி’ (சொல். 297) எனவும், ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ எனவுங் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து ‘எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ (சொல். 297) எனவும், ‘ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்த மரபிற் றோன்றுமன் பொருளே’ (சொல். 389) எனவும், என்னாற் றரப்பட்ட பாதுகாவ லாணையிற் கிளந்தவற்றியல்பொடு மரீஇயவற்றை முறைப்பட வுணர்க என்றவாறு. குறிப்புப்பொருண்மை பலவகைத்தாகலானும், பெயரினும் வினை யினு மெய்தடுமாறியுந் தடுமாறாதும் ஒரு சொற் பலபொருட் குரித்தாயும் வருதலானும், ஈறுபற்றித் தொகுத்துணர்த்தற்கு அன்னவீறுடைய வன்மை யானும், ‘பன்முறை யானும் பரந்தன வரூஉம்’ என்றார். பொருளைச் சொல் இன்றியமையாமையின், அதனைக் குறை யென்றார்; ஒருவன் வினையும் பயனும் இன்றியமையாமையின், ‘வினைக் குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு’ (குறள். 612) ‘பயக்குறை யில்லைத் தாம் வாழு நாளே’ (புறம். 188) என்றாற்போல. பொருட்குறை கூட்ட வரம்பு தமக் கின்மையி னென இயையும். இருமை யென்பது கருமையும் பெருமையு மாகிய பண்புணர்த்தும். சேணென்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும். தொன்மை யென்பது பழைமையாகிய குறிப்புணர்த்தும். இவையெல்லாம் ‘அன்ன பிறவுங் கிளந்த வல்ல’ வென்பதனாற்கொள்க. பிறவுமன்ன. (100) உரியியல் முற்றிற்று. 9 எச்சவியல் (எஞ்சிநின்ற சொல்லிலக்கணம் எல்லாம் தொகுத்து உணர்த்துவது) 1. சொற்களின் வகை நால்வகைச் சொற்கள் 397. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. கிளவியாக்கமுதலாக உரியிய லிறுதியாகக் கிடந்த ஒத்துக்களுள் உணர்த்துதற் கிடமின்மையான் உணர்த்தப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கண மெல்லாந் தொகுத்துணர்த்திய வெடுத்துக்கொண்டார். அதனான் இவ்வோத்து எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. ‘கண்டீ ரென்றா’ (சொல். 425) எனவும், ‘செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்’ (சொல். 450) எனவும், ‘உரிச்சொன் மருங்கினும்’ (சொல். 456) எனவும், ‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ (சொல். 461) எனவும், இவை முதலாகிய சூத்திரங்களா னுணர்த்தப்பட்ட அசைநிலையும் வினைச் சொல் இலக்கணமும் வழுவமைதியும் அவ்வோத்துக்களு ளுணர்த்தாது ஈண்டுணர்த்திய தென்னையோ வெனின், அதற்குக் காரணம் அவ்வச் சூத்திர முரைக்கும்வழிச் சொல்லுதும். பலபொருட்டொகுதிக்கு ஒன்றனாற் பெயர் கொடுக்குங்கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது பிறிதாறின்மையானும், தலைமையும் பன்மையும் எச்சத்திற்கின்மையானும், பத்துவகையெச்சம் ஈண்டு உணர்த்தலான் எச்சவியலாயிற்றென்றல் பொருந்தாமை யுணர்க. செய்யுட்குரிய சொல்லும், அவற்றதிலக்கணமும், அவற்றாற் செய்யுள் செய்வுழிப்படும் விகாரமும், செய்யுட்பொருள்கோளும், எடுத்துக் கோடற்கண் உணர்த்துகின்றார். (இ-ள்.) இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வட சொல்லும் என அத்துணையே செய்யுளீட்டுதற்குரிய சொல்லாவன எ-று. இயற்சொல்லானுஞ் செய்யுட்சொல்லாகிய திரிசொல்லானுமே யன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப்பாடைச் சொல்லுஞ் செய்யுட் குரியவோ வென்றையுற்றார்க்கு, இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன; பிற பாடைச்சொல் உரியவல்லவென்று வரையறுத்தவாறு. செய்யுள் செய்யலாவது ஒருபொருண்மேற் பலசொற் கொணர்ந் தீட்டலாகலான், ஈட்டமென்றார். பெயர் வினை யிடை யுரி யென்பன இயற்சொற் பாகுபாடாகலான், இயற்சொல் அந்நான்கு பாகுபட்டானுஞ் செய்யுட்குரித்தாம். திரிசொற் பெயராயல்லது வாரா. என்மனா ரென்பதனை வினைத்திரிசொல் என்பாரு முளர். அஃது ‘என்றிசினோர்’ ‘பெறலருங் குரைத்து’ (புறம். 5) என்பன போலச் செய்யுண் முடிபுபெற்று நின்றதென்றலே பொருத்த முடைத்து. தில்லென்னு மிடைச்சொல், தில்லவென்றானுந் தில்லையென் றானும் திரிந்து நின்றவழி அவை வழக்கிற்குமுரியவாகலின், திரிசொல் லெனப் படாது. ‘கடுங்கால்’ என்புழிக் கடியென்னு முரிச்சொல், ‘பெயரினும் வினையினு மெய்தடுமாறி’ (சொல். 297) என்பதனாற் பண்புப்பெயராய்ப் பெயரொடு தொக்கு வழக்கினுட் பயின்று வருதலான், திரிசொல் லெனப் படாது. திசைச்சொல்லுள் ஏனைச் சொல்லுமுளவேனும், செய்யுட்குரித் தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட் குரியவாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டுகொள்க. (1) இயற்சொல் 398. அவற்றுள் இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. (இ-ள்.) அந்நான்கனுள், இயற்சொல்லென்று சொல்லப்பட்ட சொற் றாம், செந்தமிழ்நிலத்து வழக்காதற்குப் பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந் தம்பொருள் வழுவாம லுணர்த்துஞ் சொல்லாம் எ-று. அவையாவன: நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலமாவன, வையையாற்றின் வடக்கும் மருதயாற் றின்றெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம். திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின் இயற்சொல்லாயிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற்சொல்லாயிற்றெனினு மமையும். நீரென்பது ஆரியச்சிதைவாயினும் அப்பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் வழங்கப்படுத லான் இயற்சொல்லாயிற்று. பிறவு மிவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க. தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றது. (2) திரிசொல் 399. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. (இ-ள்.) ஒருபொருள் குறித்து வரும் பல சொல்லும் பலபொருள் குறித்து வரும் ஒருசொல்லுமென இருவகைப்படுந் திரிசொல் எ-று. வெற்பு, விலங்கல், விண்டு என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி. எகின மென்பது அன்னமும் கவரிமாவும் புளிமரமும் நாயு முணர்த்தலானும், உந்தி யென்பது யாழ்ப்பத்தலுறுப்பும் கொப்பூழும் தேர்த்தட்டும் கான்யாறு முணர்த்தலானும், இவை வேறு பொருள் குறித்த ஒரு சொல். திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலு மென இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. முழுவதுந் திரிந்தனவற்றைக் கட்டிய வழக்கென்பாரு முளர். அவை கட்டிய சொல்லாமாயிற் செய்யுள் வழக்காமாறில்லை; அதனான் அவையுந் திரிவெனல் வேண்டுமென்பது. அஃதேல், பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொல் பல பொருட்குரித்தாதலும், உரிச்சொன் முதலாகிய இயற்சொற்குமுண்மை யான் அது திரிசொற் கிலக்கணமாமா றென்னையெனின்:- அது திரிசொற் கிலக்கண முணர்த்தியவாறன்று; அதனது பாகுபாடுணர்த்தியவாறு. திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் ‘சொல்லின் முடிவினப் பொருண் முடித்தல்’ என்பதனாற் பெற வைத்தார். கிள்ளை மஞ்ஞை யென்பன ஒருசொல் ஒரு பொருட்குரித்தாகிய திரிசொல்லாதலின் இருபாற் றென்றல் நிரம்பாதெனின், அற்றன்று. ஆசிரியர் இருபாற்றென்ப திரிசொற் கிளவி எனத் தொகை கொடுத்தாராகலின், கிள்ளை மஞ்ஞை யென்பன வற்றோடு ஒரு பொருட் கிளவியாய் வரும் திரிசொலுளவாக லொன்றோ, இவை பிறபொருள் படுதலொன்றோ, இரண்டனு ளொன்று திட்ப முடைத்தாதல் வேண்டும். என்னை? ஆசிரியர் பிற கூறாமையினென்பது. திரித்துக்கொண்டது இயற்கைச்சொல்லான் இன்பம் பெறச் செய் யுளீட்ட லாகாமையானன்றே? அதனாற் றிரி சொல்லெனவே, செய்யுட் குரித்தாதலும் பெறப்படும். (3) திசைச்சொல் 400. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. (இ-ள்.) செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு. என்றது, அவ்வந் நிலத்துத் தாங் குறித்த பொருள் விளக்குவதல்லது அவ்வியற் சொற்போல எந்நிலத்துந் தம்பொருள் விளக்கா வென்றவாறாம். பன்னிருநிலமாவன பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு எனச் செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க. தென்பாண்டிநாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன. ‘தங்குறிப்பின’ வென்று தனிமொழி தம்பொருளுணர்த்து மாற் றுக்குச் சொல்லினார். இருமொழி தொடருமிடத்துத் தள்ளை வந்தாள் என வேண்டியவாறு வரப்பெறு மென்றாரல்ல ரென்பது. (4) வடசொல் 401. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (இ-ள்.) வடசொற் கிளவியாவது வடசொற்கே உரியவெனப் படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம் எ-று. எனவே, பொதுவெழுத்தா னியன்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லா மென்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந்தொடக்கத்தன. வடசொல்லாவது வடசொல்லோடொக்குந் தமிழ்ச்சொல்லென்றா ரால் உரையாசிரியரெனின், அற்றன்று. ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையா னொப்புமையும் வேற்றுமையுமுடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கண முடைமையான் இரண்டுசொல்லெனப்படா; அதனான் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாமென்பது. ஒரு சொல் லாயினும் ஆரியமுந் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேறாயின வெனின், அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற் சோறு கூழென்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனான் இடவேற்றுமையுடையவேனும் ஒரு சொல்லிலக்கணமுடை மையான் ஒருசொல்லேயாம். ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும், இவை வட சொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன வெனல் வேண்டும். அதனான் அது போலியுரை யென்க. அல்லதூஉம், அவை தமிழ்ச்சொல்லாயின் ‘வடவெழுத்தொரீஇ’ யென்றல் பொருந் தாமை யானும், வடசொல்லாதலறிக. (5) 402. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். (இ-ள்.) பொதுவெழுத்தானியன்றனவே யன்றி, வடவெழுத்தா னியன்ற வடசொற் சிதைந்து வரினும், பொருத்த முடையன, செய்யுளிடத்து வரையார் எ-று. (எ-டு.) ‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம். 424) எனவும், ‘தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள்’ (நெடுநல். 115) எனவும் வரும். சிதைந்தன வரினுமெனப் பொதுப்படக் கூறியவதனான், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாய்ச் சிதைந்து வருவனவுங் கொள்க. இச் சூத்திரத்தானும் அவை தமிழ்ச்சொ லன்மையறிக. (6) சொற்கள் அடையும் விகாரம் 403. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர். (இ-ள்.) இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென்னு நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்குங்கால், மெலியதனை வலிக்கவேண்டும்வழி வலித்தலும், வலியதனை மெலிக்க வேண்டும்வழி மெலித்தலும், குறைவதனை விரிக்கவேண்டும்வழி விரித்தலும், மிகுவ தனைத் தொகுக்கவேண்டும் வழித்தொகுத்தலும், குறியதனை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், நெடியதனைக் குறுக்க வேண்டும்வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாகவுடைய எ-று. (எ-டு.) ‘குறுக்கை யிரும்புலி’ (ஐங். 266) ‘முத்தை வரூஉங் காலந் தோன்றின்’ (எழுத். 194) என்பன வலிக்கும்வழி வலித்தல். ‘சுடுமண்பாவை’ ‘குன்றிய லுகரத் திறுதி’ (சொல். 9) என்பன மெலிக்கும்வழி மெலித்தல். ‘தண்ணந் துறைவன்’ (குறுந். 296) என்பது விரிக்கும்வழி விரித்தல். ‘மழவ ரோட்டிய’ (அகம். 1) என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல். ‘குன்றி கோபங் கொடிவிடுபவள மொண்செங்காந்த ளொக்கு நின்னிறம்’ என்புழிச் செவ்வெண்ணின் றொகைதொக்கு நிற்றலின் இதுவுமது. ‘வீடுமின்’ என்பது நீட்டும்வழி நீட்டல். ‘பாசிலை’ (புறம். 54) யென்பது காட்டுவாருமுளர். உண்டார்ந்தென்பது உண்டருந்தெனக் குறுகி நிற்றலிற் குறுக்கும்வழிக் குறுக்கல். ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்பதுமது. பிறவு மன்ன. ‘நாட்டல் வலிய’ வென்றது, இவ்வறுவகை விகாரமும் இன்னுழியா மென்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யுஞ் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்றவாறு. நாட்டல் - நிலைபெறச் செய்தல். (7) 2. பொருள்கோள் நால்வகைப் பொருள்கோள் 404. நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று அவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே. இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம்முட் புணருமாறு கூறுகின்றார். (இ-ள்.) நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்று மென நான்கென்று சொல்லுப, அந்நான்கு சொல்லுஞ் செய்யுளிடத்துத் தம்முட்புணரு முறையை எ-று. நான்கு சொல்லு மென்பதூஉஞ் செய்யுளிடத்தென்பதூஉம் அதிகாரத்தாற் பெற்றாம். நிரனிறையுஞ் சுண்ணமும் மொழிமாற்றாத லொக்குமாயினும், நிரனிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையான், அவற்றைப் பிரித்து அவ்வேறுபாட்டாற் பெயர் கொடுத்து, வேறிலக்கணமில்லாத மொழிமாற்றை மொழிமாற்றென்றார். இச் சூத்திரத்தான் மொழிபுணரியல் நான்கென வரையறுத்தவாறு. (8) நிரனிறைப் பொருள்கோள் 405. அவற்றுள் நிரல்நிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். (இ-ள்.) அந்நான்கனுள், நிரனிறையாவது வினையானும் பெயரானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு நிற்பப் பொருள்வேறு நிற்றலாம் எ-று. தொடர்மொழிப்பொருள் முடிக்குஞ் சொற்கண்ணதாகலான் முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார். வினையினும் பெயரினு மென்றதனான், வினைச்சொல்லான் வருவதூஉம், பெயர்ச்சொல்லான் வருவதூஉம், அவ்விரு சொல்லான் வருவதூஉமென நிரனிறை மூன்றாம். (எ-டு.) ‘மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் - கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு’ என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினை நிரனிறை யாயிற்று, அவை மாசுபோகப் புனன் மூழ்கி, பசி நீங்க அடிசில் கைதொட்டு என வியையும், ‘கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி’ என முடிவனவும் முடிப்பனவு மாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின், பெயர் நிரனிறையாயிற்று. அவை நுசுப்புக் கொடி, உண்கண்குவளை, மேனிகொட்டை என வியையும். ‘உடலு முடைந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலிரு ளாம்பல்பாம் பென்ற-கெடலருஞ்சீர்த் திங்க டிருமுகமாச் செத்து’ என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிற்றலின், பொதுநிரனிறையாயிற்று. அவை கடல் உடலும், இருள் உடைந் தோடும், ஆம்பல் ஊழ்மலரும், பாம்பு பார்க்கும் என வியையும். ‘நினையத் தோன்றி’ யென்றதனான், சொல்லும் பொருளும் வேறு வேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது, ‘களிறும் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’ என மயங்கி வருதலுங் கொள்க. (9) சுண்ணப் பொருள்கோள் 406. சுண்ணம் தானே பட்டாங் கமைந்த ஈரடி யெண்சீர் ஒட்டுவழி யறிந்து துணித்தனர் இயற்றல். (இ-ள்.) சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கணுளவாகிய எண் சீரைத் துணித்து இயையும்வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம் எ-று. அளவடியல்லாதன விகாரவடியாகலிற், பட்டாங்கமைந்தில வாதலிற் பட்டாங்கமைந்த வீரடியெனவே, அளவடியாதல் பெறப்படும். ஈரடியெண்சீர் விகாரவடியானும் பெறப்படுதலின், அவற்றை நீக்குதற்குப் ‘பட்டாங் கமைந்த வீரடி’ யென்றார்; எனவே, சுண்ணம் அளவடி யிரண்டனு ளல்லது பிறாண்டு வாராதென்பது. (எ-டு.) ‘சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை’ என்புழி, ஆழ, மிதப்ப, நீத்து, நிலையென்பனவும், சுரை, அம்மி, யானைக்கு, முயற் கென்பனவும், நின்றுழி நிற்ப இயையாமையின், சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக்கூட்ட, இயைந்த வாறு கண்டுகொள்க. சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ணமென்றார். (10) அடிமறிப் பொருள்கோள் 407. அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. (இ-ள்.) அடிமறிச்செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப, அடிகள் தத்தம் நிலையிற் றிரிந்து ஒன்ற னிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும் எ-று. எனவே, எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமென்பதாம். (எ-டு.) ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே’ என வரும். இதனுட் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியுந் தடுமாறியவாறு கண்டுகொள்க. பெரும்பான்மையும் நாலடிச்செய்யுட்க ணல்லது இப்பொருள் கோள் வாராதென்க. ‘நிரனிறைதானே’ ‘சுண்ணந்தானே’ ‘மொழிமாற்றியற்கை’ என்பன போல, ஈண்டும் ‘அடிமறிச்செய்தி’யென்பதனைக் குறளடியாக்கி, ‘அடி நிலை திரிந்து சீர்நிலை திரியாது, தடுமா றும்மே பொருடெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரு முளர். (11) அதற்கு, மேலும் ஒரு முடிபு 408. பொருள்தெரி மருங்கின் ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரிபுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. (இ-ள்.) பொருளாராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார் எ-று. சீர்நிலை திரியாது தடுமாறுமென்றாராகலின் சீர்நிலை திரிதலும் ஒருவழிக் கண்டு எய்தியதிகந்துபடாமற் காத்தவாறு. இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொருளுரைத்து, ‘சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே சார னாட நீவரு தீயே வார லெனினே யானஞ் சுவலே’ என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியரெனின், யானஞ் சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்க. எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினார். ‘உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே’ என உரைப்போர் குறிப்பான் முதலு மிடையு மீறுங்கோடல் பிறருங் கூறினாரென்பது. (12) மொழிமாற்றுப் பொருள்கோள் 409. மொழிமாற் றியற்கை சொல்நிலை மாற்றிப் பொருளெதிர் இயைய முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல். (இ-ள்.) மொழிமாற்றினதியல்பு, பொருளெதி ரியையுமாறு சொன் னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள்ளும் வழிக் கொளுவுதலாம் எ-று. (எ-டு.) ‘ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி விறன்முள்ளூர் வேங்கைவீ தாநாணுந் தோளா ணிறனுள்ளூ ருள்ள தலர்’ என இதனுள், பாரி பறம்பின்மேற் றண்ணுமைதானாணுந் தோளாள் எனவும், நிறன் விறன்முள்ளூர் வேங்கைவீ எனவும், உள்ளூருள்ளதாகிய அலர் ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழி யறிந்து கொளுவப் பொருளெதிரியைந்தவாறு கண்டுகொள்க. மொழிமாற்று நின்று ஒன்றற்கொன்று செவ்வாகாமை கேட்டார் கூட்டி யுணரு மாற்றாற் கடாவல்வேண்டும். அல்லாக்கால், அவாய் நிலையுந் தகுதியு முடையவேனும் அண்மையாகிய காரணமின்மையாற் சொற்கள் தம்மு ளியையாவா மென்க. (13) 3. வழக்கிலக்கண ஒழிபு பிரிப்பப் பிரியாத பெயர்கள் 410. த ந நு எ எனும் அவைமுத லாகிய கிளைநுதல் பெயரும் பிரிப்பப் பிரியா. செய்யுட்குரிய சொல்லும், சொற்றொடுக்குங்காற்படும் விகாரமும் அவை செய்யுளாக்குங்காற் றம்முட்புணர்ந்து நிற்குமாறுமாகிய செய்யு ளொழிபு உணர்த்தி, இனி வழக்கிலக்கணத்தொழிபு கூறுகின்றார். (இ-ள்.) த ந நு எ என்பனவற்றை முதலாக வுடையவாய்க் கிளைமை நுதலி வரும் பெயரும் பிரிக்கப்படா எ-று. அவையாவன தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் என வரும். உம்மையாற் பிற கிளை நுதற் பெயரும் பிரிக்கப் பிரியாவென்பதாம். அவை தாய், ஞாய், தந்தை, தன்னை என்னுந் தொடக்கத்தன. இவற்றைப் பிரிப்பப் பிரியாவென்றது என்னையெனின், வெற்பன் பொருப்பன் என்னுந் தொடக்கத்து ஒட்டுப்பெயர் வெற்பு+அன், பொருப்பு+ அன் எனப் பிரித்தவழியும், வெற்பு பொருப்பு என்னு முதனிலை தம் பொருள் இனிது விளக்கும். தமன் எமன் என்பனவற்றைத் தம்+அன், எம் + அன் எனப் பிரிக்கலுறின் தம் எம் என்பன முதனிலையாய்ப் பொரு ளுணர்த்துவனவாதல் வேண்டும்; அவை பொருளுணர்த்தாமையான், தமன் எமன் என வழங்கியாங்குக் கொள்வதல்லது பிரிக்கப்படாமையின், அவ்வாறு கூறினாரென்பது. பிறவுமன்ன. அஃதேல், தாம் யாம் என்பன அவற்றிற்கு முதனிலையாகப் பிரிக்கவே, அவையுந் தம் பொரு ளுணர்த்து மெனின், தமன் எமன் என்பன, தன் கிளை என் கிளை எனவும், தங்கிளை எங்கிளை எனவும் முதனிலை வகையான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலுடைய. ஒருமையுணர்த்துங்கால் தாம் யாம் என்பன பொருந் தாமையின் தான் யான் என்பனவே முதனிலையெனல் வேண்டும். வேண் டவே, இவ்வாறு பிரிப்பின் தமன் எமன் என ஓரொன்றிரண்டு சொல்லாதல் வேண்டுதலான், எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையின் ஒரு சொல்லெனவே படும்; இரண்டு சொல்லென்றல் நிரம்பாமையின், அவ்வாறு பிரித்தலும் பொருத்தமின்றென்பது. கிளை நுதற்பெயர் விளிமரபின்கட் பெறப்பட்டமையாற் பெயரி யலு ளுணர்த்தாராயினார். அதனான் ஆண்டியைபுபட்டின்றாகலான், பிரிப்பப் பிரியா ஒருசொல்லடுக்கோ டியைய இதனை ஈண்டு வைத்தார். (14) அடுக்குத் தொடர் 411. இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென்று அவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே. (இ-ள்.) இசைநிறையும், அசைநிலையும், பொருள்வேறுபாட் டொடு புணர்வதுமென ஒரு சொல் லடுக்கு அம்மூன்று வகைப்படும் எ-று. (எ-டு.) ‘ஏ ஏ ஏ ஏ யம்பன் மொழிந்தனள்’ என்றது இசைநிறை. மற்றோ மற்றோ, அன்றே அன்றே என்பன அசைநிலை. பாம்பு பாம்பு; அவ னவன்; வைதேன் வைதேன்; உண்டு உண்டு; போம் போம் என்பன, முறை யானே விரைவுந், துணிவும், உடம்பாடும், ஒரு தொழில் பல கானிகழ் தலுமாகிய பொருள் வேறுபாடுணர்த்தலிற் பொருளொடு புணர்த்தல். பொருள் வேறுபாடு பிறவு முளவேல் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. அடுக்கு ஒருசொல்லது விகாரமெனப்படும்; இரண்டுசொல்லாயின் இருபொருளுணர்த்துவதல்லது இப்பொருள் வேறுபாடுணர்த்தாமையி னென்பது. (15) 4. தொகை மொழிகள் தொகைமொழி ஆறாவன 412. வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே வினையின் தொகையே பண்பின் தொகையே உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று அவ்வா றென்ப தொகைமொழி நிலையே. இனித் தொகையிலக்கண முணர்த்துகின்றார். (இ-ள்.) வேற்றுமைத்தொகை முதலாகத் தொகைச்சொல் ஆறாம் எ-று. வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல் லீறுந் தொகுதலிற் றொகையாயின வென்பாரும், அவ்வப் பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப் படத் தம்மு ளியைதலிற் றொகையாயின வென்பாருமென இருதிறத்தர் ஆசிரியர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒருசொன்னீர்மைப் படாதனவுந் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக்கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கன வில்லை யெனினும் தொகையென வேண்டப்படுமாகலான் அவற்றைத் தழுவுதற் கும், உருபு முதலாயின தொகுதலிற் றொகை யென்பார்க்கும் ஒட்டி யொரு சொன்னீர்மைப்படுதலுந் தொகை யிலக்கணமெனல் வேண்டும். அதனான் உருபு முதலாயின தொகுதல் எல்லாத்தொகையினுஞ் செல் லாமையான், எல்லாத் தொகைக்கண்ணுஞ் செல்லுமாறு ஒட்டி யொருசொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின், இவ்வாசிரியர்க்கு இதுவே துணிவெனப் படுமென்பது. அற்றாயின், ‘உருபு தொகவருதலும்’ (சொல். 104) எனவும், ‘வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்’ (சொல். 418) எனவும், ‘உம்மை தொக்க பெயர்வயி னானும்’ (418) எனவும், ‘உவமை தொக்க பெயர்வயி னானும்’ எனவும் ஓதுதலான் அவை ஆண்டுத்தொக்கன வெனப்படு மன்றோ வெனின், அற்றன்று. ‘அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின்’ (சொல். 94) என்புழி அதுவெனுருபு நின்று கெட்டதாயின் நின்ற காலத்துத் திணைவழுவாம்; அத்திணைவழு அமைவுடைத்தெனின், விரிக்கின்றுழி நான்காமுருபு தொடராது அதுதன்னையே விரிப்பினும் அமைவுடைத்து; அதனான் முறைப்பொரு டோன்ற நம்பிமகன் என இரண்டு சொற் றொக்கன வென்பதே ஆசிரியர் கருத்தெனல்வேண்டும். அல்லதூஉம், வினைத்தொகை பண்புத்தொகை அன்மொழித்தொகை யென்பனவற்றின் கண் வினையும் பண்பும் அன்மொழியும் தொக்குநில் லாமையானும், அஃதே கருத்தாதலறிக. அதனான் உருபும் உவமையும் உம்மையுந் தொகுத லாவது தம்பொருள் ஒட்டிய சொல்லாற் றோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாது நிற்றலேயாம். வேற்றுமைத் தொகையென்பது வேற்றுமைப் பொருளையுடைய தொகையென்றானும் வேற்றுமைப் பொருடொக்க தொகை யென்றானும் விரியும். உவமத்தொகை உம்மைத்தொகை அன்மொழித் தொகை யென்பனவும் அவ்வாறு விரியும். அன்மொழியாவது தொக்க சொல்லல் லாத மொழி. வினைத்தொகை பண்புத்தொகை யென்பன, வினையினது தொகை பண்பினது தொகையென விரியும். வினைபண்பென்றது அவற்றை யுணர்த்துஞ் சொல்லை. ஒரு சொல்லாற் றொகையின்மையிற் பிறிதொரு சொல்லொடு தொகுதல் பெறப்படும். இச்சூத்திரத்தாற் றொகைச்சொல் இனைத்தென வரையறுத்தவாறு. (16) வேற்றுமைத்தொகை 413. அவற்றுள் வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. (இ-ள்.) வேற்றுமைத்தொகை அவ்வேற்றுமை யுருபு தொடர்ப் பொரு ளுணர்த்தியாங் குணர்த்தும் எ-று. எனவே, சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கட் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கட் சாத்தன் கொடுத்தான் எனவும் உருபுதொடர்ப்பொரு ளுணர்த்தும் ஆற்றலில்லன தொகா; அவ்வாற்றலுடையனவே தொகுவன வென்றவாறாம். இரண்டாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத்தொகை அறுவகைப்படும். நிலங்கடந்தான், குழைக்காது எனவும்; தாய் மூவர், பொற் குடம் எனவும் கருப்புவேலி, கடிசூத்திரப்பொன் எனவும்; வரை பாய்தல், கருவூர்க்கிழக்கு எனவும்; சாத்தன் புத்தகம், கொற்றனுணர்வு எனவும், மன்றப் பெண்ணை, மாரியாமா எனவும் வரும். இவை முறையானே நிலத்தைக் கடந்தான், குழையை யுடைய காது; தாயொடு மூவர், பொன் னானியன்ற குடம்; கரும்பிற்கு வேலி, கடிசூத்திரத்திற்குப் பொன்; வரையி னின்றும் பாய்தல், கருவூரின் கிழக்கு; சாத்தனது புத்தகம், கொற்றன துணர்வு; மன்றத்தின்கணிற்கும் பெண்ணை, மாரிக்கணுள தாமா என்னும் உருபுதொடர்ப் பொருளை இனிது விளக்கியவாறு கண்டு கொள்க. பிறவு மன்ன. (17) உவமத்தொகை 414. உவமத் தொகையே உவம இயல. (இ-ள்.) உவமத் தொகை உவமவுருபு தொடர்ப்பொருள் போலப் பொரு ளுணர்த்தும் என்றவாறு. எனவே, புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என் னும் பொருட்கட் புலிச்சாத்தன், மயின்மாதர் என அப்பொருள் விளக்கும் ஆற்றலில்லன தொகா; ஆற்றலுடையவே தொகுவனவென்பதாம். (எ-டு.) புலிப்பாய்த்துள், மழைவண்கை, துடிநடுவு, பொன்மேனி என் பன புலிப்பாய்த்துளன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன நடுவு, பொன்னன்ன மேனி எனத் தம் விரிப்பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. அஃதேல், புலிப்பாய்த்துளையொக்கும் பாய்த்துள்; மழையை யொக்கும் வண்கை என விரிதலின், அவையெல்லாம் வேற் றுமைத் தொகை யெனப்படும்; அதனான் உவமத்தொகையென ஒன்றில்லை யெனின், அற்றன்று. சொல்லுவார்க்கு அது கருத்தாயின் வேற்றுமைத் தொகையு மாம். அக் கருத் தானன்றிப் புலியன்ன பாய்த்துள் பொன்மானு மேனி என வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப் பொருட்கட்டொக்க வழி, உவமத் தொகையாவதல்லது, வேற்றுமைத் தொகை ஆண்டின் மையின் வேற்றுமைத் தொகையாமாறில்லை யென்க. உவமவுருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல்லாகலான், வினையும் வினைக் குறிப்பும் பற்றி வரும். அவைபற்றி ‘என்போற் பெருவிதுப் புறுக நின்னை, யின்னா துற்ற வறனில் கூற்றே’ (புறம். 255) என்புழிப் போலவென்பது குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும், ‘நும்ம னோருமற் றினைய ராயி, னெம்ம னோரிவட் பிறவலர் மாதோ’ (புறம். 210) என்புழி அன்னோரென்பது இடைச்சொன் முதனிலையாகப் பிறந்த குறிப்புப்பெயராகலானும், என்னைப்போல நும்மை யன்னோர், எம்மையன்னோரென இரண்டாவது விரித்தற் கேற்புடைமை யறிக. (18) வினைத்தொகை 415. வினையின் தொகுதி காலத் தியலும். (இ-ள்.) வினைத்தொகை காலத்தின்கணிகழும் எ-று. காலத்தியலுமெனப் பொதுவகையாற் கூறியவதனான் மூன்று காலமுங் கொள்க. தொகுதி காலத்தியலுமெனவே, அவ்வினை பிரிந்து நின்றவழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலாற் காலந்தோன்று மென்ற வாறாம். ஈண்டு வினையென்றது எவற்றையெனின்:- வினைச்சொற்கும் வினைப் பெயர்க்கும் முதனிலையாய், உண், தின், செல், கொல் என வினைமாத்திர முணர்த்தி நிற்பனவற்றை யென்பது. இவற்றை வடநூலார் தாது வென்ப. (எ-டு.) ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல் யானை, செல்செலவு என வரும். கால முணர்த்தாது வினை மாத்திர முணர்த்தும் பெயர், நிலப்பெயர் முதலாகிய பெயரொடு தொக்குழிக் காலமுணர்த்தியவாறு கண்டுகொள்க. காலமுணர்த்துகின்றுழிப் பெய ரெச்சப் பொருளவாய் நின்றுணர்த்துமென்பது ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்-மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும்’ (எழுத். 482) என்பதனாற் கூறினார். தொகைப்பொருளாகிய தாம் பிரிந்த வழிப் பெறப்படாமையின் ஆசிரியர் இவற்றைப் ‘புணரியனிலையிடை யுணரத் தோன்றா’ (எழுத். 482) என்றார். அதனான் இவை தஞ்சொல்லான் விரிக்கப்படாமையிற் பிரிவிலொட்டாம். பெயரெச்சம் நின்று தொக்கதென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று. ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க்கப்படா, வழங்கியவாறே கொள்ளப்படுமென்றது, பிரித்தவழித் தொகைப்பொருள் சிதைதலா னன்றே? கொன்றயானை என விரிந்தவழியும் அப்பொருள் சிதைவின்றேல் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்றா’ (482) என்றற்கொரு காரண மில்லையாம், அதனாற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத் தன்மையின், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்தியவழி வினைத்தொகையுளப்பட ‘இரு பெய ரொட்டும்’ (சொல். 114) என்றாராகலானும், வினை நின்று தொகுதல் அவர்க்குக் கருத்தன்மை யறிக. அஃதேல், வினைத்தொகைக்கு முதனிலை பெயராமன்றோ வெனின்:- உரிஞென்பது முதலாயினவற்றைத் தொழிற்பெயரென்றாராகலின், தொழின் மாத்திர முணர்த்துவனவெல்லாம் தொழிற்பெயரென்பது ஆசிரியர் கருத்தென்க. (19) பண்புத்தொகை 416. வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையினென்று அன்ன பிறவும் அதன்குணம் நுதலி இன்னது இதுவென வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின் தொகையே. (இ-ள்.) வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும் அவை போல் வன பிறவுமாகிய குணத்தை நுதலிப்பின் றொக்கவழிக் குணச்சொற் குண முடையதனை யுணர்த்தலான் இன்ன திதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து இருசொல்லும் ஒரு பொருளின்மேல் வருமியல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத்தொகையாம் எ-று. நுதலியென்னுஞ் சினைவினையெச்சம் வருமென்னு முதல்வினை யொடு முடிந்தது. இயற்கையென்றது, தொக்குழிப் பண்புடையதனைக் குறித்தல் அத்தொகைச் சொல்லதியல் பென்பதல்லது காரணங் கூறப்படாதென்ற வாறு. தொகைக்கணல்லது அச்சொல் தனிநிலையாய், உண், தின், செல், கொல் என்பன போலப் பொருளுணர்த்தாமையின், பண்புத் தொகையும் வினைத்தொகை போலப் பிரிக்கப்படாதாம். (எ-டு.) கருங்குதிரை என்பது வண்ணப்பண்பு. வட்டப்பலகை யென்பது வடிவு. நெடுங்கோ லென்பது அளவு. தீங்கரும் பென்பது சுவை. அன்னபிறவு மென்றதனான், நுண்ணூல், பராரை, மெல்லிலை, நல்லாடை என்னுந் தொடக்கத்தன கொள்க. அவை, கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை எனப் பண்புச்சொல்லும் பண்புடைப் பொருளே குறித்தலான், இரு சொல்லும் ஒரு பொருளவாய் இன்ன திதுவென ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. அஃதேல், கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை என்பன அத் தொகையின் விரியாகலிற் பண்புத்தொகை பிரிக்கப்படாதென்ற தென்னை யெனின், அற்றன்று. தொகைப்பொரு ளுணர்த்துதற்குப் பிறசொற் கொணர்ந்து விரித்ததல்லது, தன்சொல்லான் விரியாமையின் அவை விரி யெனப்படா வென்க. வடநூலாரும் பிரியாத்தொகையும் பிற சொல்லான் விரிக்கப்படு மென்றார். கரியதென்னும் பண்புகொள் பெயர் கருங்குதிரை யெனத் தொக்க தென்றாரால் உரையாசிரியரெனின், அதனைப் பெய ரெச்சம் வினைத்தொகை நிலைமொழி யென்றதற் குரைத்தாங் குரைத்து மறுக்க. பிறசொற் கொணர்ந்து விரிக்குங்கால், கரிய குதிரை கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத்தொகைப் பொருளுணர்த்துவன வெல்லா வற்றானும் விரிக்கப்படும். முதனிலையாவது, கரியன், செய்யன், கருமை, செம்மை என்பனவற் றிற்கெல்லாம் முதனிலையாய்ச் சொல்லாய் நிரம்பாது கரு செவ்வெனப் பண்புமாத்திர முணர்த்தி நிற்பதாம். என்ன கிளவியுமென்றதனான், சாரைப்பாம்பு, வேழக்கரும்பு, கேழற் பன்றி எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும் அத்தொகை யாதல் கொள்க. இவற்றது சாரை முதலாகிய நிலைமொழி பிரித்தவழியும் பொரு ளுணர்த்தலின், இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச் சாரை விசேடித்ததல்லது சாரையைப் பாம்பு விசேடித்தின் றாகலின் ஒன்றை ஒன்று பொதுமை நீக்காமையாற் சாரைப்பாம்பென்பது முதலாயின பண்புத்தொகை யாயினவா றென்னையெனின், நன்று சொன்னாய்! விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய இரண்டனுள் விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம்; விசேடிக்கப்படுவது விசேடித்தின்றென் றாலும் விசேடிக்கப்படுதலாகிய தன்றன்மைக் கிழுக் கின்மையான், விசேடி யாது நிற்பினும் அமையுமென்க. இவ்வேறுபாடு பெறுதற்கன்றே இன்ன திதுவென வரூஉமெனப் பின்மொழியை விசேடிப்பதாகவும், முன் மொழியை விசேடிக்கப்படுவதாகவும், ஆசிரியர் ஓதுவாரா யிற்றென்பது. அற்றேனும், சாரையெனவே குறித்த பொருள் விளங்கலிற் பாம்பென்பது மிகையாம் பிறவெனின், அற்றன்று. உலக வழக்காவது சூத்திரயாப்புப் போல மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுவதொன் றன்றி, மேற் றொட்டுக் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவ தாகலின், அது கடாவன்றென்க. மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுமாயின், யான் வந்தேன், நீ வந்தாய் என்னாது வந்தேன், வந்தாய் என்றே வழங்கல் வேண்டுமென்பது. இனி ஒற்றுமை நயத்தான் என்புந் தோலு முரியவாதலாகிய உறுப்புஞ் சாரை யெனப்படுதலின், அவற்றை நீக்கலாற் பாம்பென்பதூஉம் பொதுமை நீக்கிற் றென்பாருமுளர். உயர்சொற் கிளவி, இடைச்சொற்கிளவி உரிச்சொற்கிளவி என்புழியும், உயர்சொல், இடைச் சொல், உரிச்சொல்லென்பன சொல்லென்பதன்கட் கருத்துடைய வன்றிக் குறி மாத்திரமாய், உயர்வு இடை உரி என்ற துணையாய் நின்றன வாகலின், சாரை யென்பது பாம்பை விசேடித்தாற்போல அவை கிளவி யென்பதனை விசேடித்து நின்றனவென்பது. அவ்வாற்றான் அமைவுடைய வாயினுஞ், சூத்திரமாகலின், உயர்சொல், இடைச்சொல், உரிச்சொ லெனவே யமையும்; கிளவி யென்பது மிகையெனின், மிகையாயினும் இன்னோரன்ன அமைவுடைய வென்ப துணர்த்துதற்கு அவ்வாறோதினா ரென்பது. (20) உம்மைத் தொகை 417. இருபெயர் பல்பெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே. (இ-ள்.) இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைச் சொற் றிரளையும் தனக்குச் சார்பாகக் குறித்து நிற்கும் உம்மைத்தொகை எ-று. (எ-டு.) உவாஅப்பதினான்கு என்பது இருபெயரானாய உம்மைத் தொகை. புலிவிற்கெண்டை என்பது பல பெயரானாய உம்மைத்தொகை. தூணிப்பதக்குஎன்பது அளவுப்பெயரானாய உம்மைத்தொகை. முப்பத்து மூவரென்பது எண்ணியற்பெயரானாய உம்மைத்தொகை. தொடியரை யென்பது நிறைப்பெயரானாய உம்மைத்தொகை. பதினைந்தென்பது எண்ணுப்பெயரானாய உம்மைத்தொகை. இனி அவை விரியுங்கால், உவாவும் பதினான்கும் எனவும், புலியும் வில்லுங் கெண்டையும் எனவும், தூணியும் பதக்கும் எனவும், முப்பதின்மரும் மூவரும் எனவும், தொடியும் அரையும் எனவும், பத்துமைந்தும் எனவும் விரியும். வேற்றுமைத்தொகை முதலாயின பலசொல்லாற் றொகுதல் சிறுபான்மை. அதனான் உம்மைத்தொகை இரு சொல்லானும் பல சொல்லானும் ஒப்பத் தொகுமென்பது அறிவித்தற்கு இருபெயர் பல்பெயரென் றார். கற்சுனைக் குவளையிதழ், பெருந்தோட் பேதை எனப் பிற தொகையும் பெரும்பான்மையும் பல சொல்லான் வருமாலெனின், கல்லென்பதுஞ் சுனையென்பதுங் கற்சுனையெனத் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் குவளையென்பதனொடு தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் இதழென்பத னொடு தொக்குக் கற்சுனைக் குவளையிதழென வொன்றாயிற்று. பெருந்தோ ளென்னுந் தொகை ஒருசொல்லாய்ப் பேதையென்பதனொடு தொக்குப் பெருந்தோட் பேதையென வொன்றாயிற்று. அவை இவ்வாற்றானல்லது தொகாமையின் இருசொற்றொகையேயாம். புலிவிற் கெண்டை என்புழி மூன்று பெயருந் தொகுமென்னாது முதற் பெயரொழித்தும் இறுதிப்பெய ரொழித்தும், ஏனையிரண்டுந் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின் மற்றையதனொடு தொகுமெனின், முன்றொகுமிரண்டற்கும் ஓரியைபு வேறுபாடின்மையானும், இரு தொகைப்படுத்தல் பலசெய்கைத்தாக லானும், அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கனவெனவே படுமென்பது. அளவின் பெயர் முதலாயின, இருபெயராயல்லது தொகாவென வரையறுத்தற்கு இருபெயர் பல்பெயரென அடங்குவனவற்றைப் பெயர்த் துக் கூறினார். கலனே தூணிப்பதக்கு, தொடியே கஃசரை, நூற்றுநாற்பத்து நான்குஎன்புழித் தூணிப்பதக்கு, கஃசரை, நாற்பத்து நான்கு என்பன ஒரு சொற்போல அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின், கலமுந் தூணிப்பதக்கும், தொடியும் கஃசரையும், நூறும் நாற்பத்துநான்கும் என இருமொழி நின்று தொக்க வென்றலே பொருத்தமுடைமையறிக. உம்மைத்தொகை இன்ன பொருள்பற்றித் தொகுமென்னாது ‘அவ்வறு கிளவியும்’ எனச் சொல்லேபற்றி ஓதினாரேனும், ஏற்புழிக் கோடலென்பதனான் ‘உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர் சொன் னடைத்து’ (சொல். 421) என்பதனான் எண்ணும்மைப் பொருட்கட் டொகுமென்பது பெறப்படும். எண்ணின்கண் வரும் இடைச்சொற் பலவேனும், தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப் பெயராகலான், உம்மைத் தொகையாயிற்று. (21) அன்மொழித்தொகை 418. பண்புதொக வரூஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே. (இ-ள்.) பண்புச்சொற்றொகுஞ் சொல்லினும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கண் நின்று நடக்கும் அன்மொழித் தொகை எ-று. பண்புத்தொகைபடவும் உம்மைத்தொகைபடவும் வேற்றுமைத் தொகைபடவும் அச்சொற்றொக்கபின் அத்தொகை அன்மொழித் தொகையாகாமையின் தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி வருமென்பது விளக்கிய, தொகைவயினானு மென்னாது, ‘பண்புதொக வரூஉங் கிளவி யானு, மும்மை தொக்க பெயர்வயினானும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும்’ என்றார். இறுதிச்சொற் படுத்தலோசையாற் பொருள் விளக்குமாறு வழக்கி னுள்ளுஞ் செய்யுளுள்ளுங் கண்டுகொள்க. (எ-டு.) வெள்ளாடை, அகரவீறு என்பன பண்புத்தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தகரஞாழல் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. பொற்றொடி என்பது வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித் தொகை. இனி, அவை வெள்ளாடையுடுத்தாள், அகரமாகிய ஈற்றையுடைய சொல் எனவும், தகரமு ஞாழலுமாகிய சாந்து பூசினாள் எனவும், பொற் றொடி தொட்டாள் எனவும் விரியும். பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும்பான்மை யாகலின், முறையிற் கூறாது அதனை முற்கூறினார்; வேற்றுமைத்தொகை நிலைக்களத்துப் பிறத்தலின் உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் சிறுபான்மை யாயினும், ஒரு பயனோக்கி அதனை அதன்முன் வைத்தார். யாதோபய னெனின், சிறுபான்மை உவமத்தொகை நிலைக்களத்தும் வினைத்தொகை நிலைக்களத்தும் அன்மொழித்தொகை பிறக்குமென்ப துணர்த்துதலென்க. அவை பவளவாய், திரிதாடி என வரும். அவைதாம் பவளம் போலும் வாயை யுடையாள்; திரிந்த தாடியை யுடையான் என விரியும். பிறவுமன்ன. (22) தொகைமொழிகளிற் பொருள் நிற்குமிடம் 419. அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குட னிலையலும் அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும் அந்நான் கென்ப பொருள்நிலை மரபே. (இ-ள்.) முன்மொழிமே னிற்றலும், பின்மொழிமே னிற்றலும், இரு மொழிமே னிற்றலும், அவற்றின்மே னில்லாது பிற மொழிமே னிற்றலு மென அத்தொகையும் அவற்றது பொருணிலைமரபும் நான்கென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. தொகையும் அவற்றது பொருணிலைமரபும் ஒருவகையான் வேறா யினும், ஒற்றுமைநயம் பற்றி அவைதாமென்றார். பொருணிற்றலாவது வினையோடியையுமாற்றான் மேற்பட்டுத் தோன்றுதல். (எ-டு.) வேங்கைப்பூ என்புழிப் பூவென்னும் முன்மொழிக்கட் பொருணின்றது. அது நறிதென்னும் வினையோ டியையுமாற்றான், மேற் பட்டுத் தோன்றியவாறு கண்டுகொள்க. மேல் வருவனவற்றிற்கும் ஈதொக் கும். இடவகையான் முன்மொழியாயிற்று. அடைகடல் என்புழி அடை யென்னும் பின்மொழிக்கட் பொருணின்றது. இடவகையாற் பின் மொழி யாயிற்று. முன் பின்னென்பன காலவகையாற் றடுமாறி நிற்கும். கடலுங் கடலடைந்த விடமுங் கடலெனப்படுதலின், அடைகடலென்பது அடை யாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை. இனி வரையறை யின்மை யாற் சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்கதோ ராறாம் வேற்றுமைத் தொகை யெனவுமமையும். உவாஅப்பதினான்கு என்புழி இருமொழி மேலும் பொருணின்றது. தன்னின முடித்தலென்பதனாற் பல பெயர்மே னிற்றலுங் கண்டு கொள்க. வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழி மேலும் நில்லாது உடுத்தாளென்னும் அன்மொழிமே னின்றது. வேற்றுமைத் தொகைமுத னான்குதொகையும் முன்மொழிப் பொருள; வேற்றுமைத்தொகையும் பண்புத்தொகையுஞ் சிறுபான்மை பின்மொழிப் பொருளவுமாம். உம்மைத்தொகை இருமொழிப் பொருட்டு. ஆறெனப்பட்ட தொகை பொருள்வகையான் நான்காமெனப் பிறிதொரு வகை குறித்தவாறு, (23) தொகைமொழிகள் ஒருசொற்றன்மைய 420. எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய. (இ-ள்.) அறுவகைத் தொகைச் சொல்லும் ஒருசொல்லாய் நடத்தலையுடைய எ-று. ஒருசொன்னடையவெனப் பொதுப்படக் கூறியவதனான், யானைக் கோடு, கொல்யானை என முன்மொழி பெயராகியவழி ஒரு பெயர்ச் சொன்னடையவாதலும், நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் என முன் மொழி வினையாயவழி ஒருவினைச்சொன்னடைய வாதலுங் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலைகோடலு முதலாகிய பெயர்த்தன்மையும், பயனிலையாதலும் பெயர்கோடலு முதலாகிய வினைத்தன்மையு முடைய வாதல் அவ்வச் சொல்லொடு கூட்டிக் கண்டுகொள்க. நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் எனப் பெயரும் வினையுந் தொக்கன ஒருசொன்னீர்மை யிலவாகலிற் றொகையெனப்படா வென்பாரு முளர். எழுத்தோத்தினுள் ‘பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப-வேற்றுமையுருபு நிலைபெறு வழியுந் - தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்’ (எழுத். 132) என்றதனான், வேற்றுமையுருபு தொகப் பெயருந் தொழிலும் ஒருங்கிசைத்தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின், அவை தொகை யெனவே படுமென்பது. கடந்தானிலம், இருந்தான் குன்றத்து என்பன ஒருங் கிசையாது பக்கிசைத்தலின், அவை தொகையன்மையறிக. ‘எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ என்றதனான், தொகை யல்லாத தொடர்மொழியுள் ஒருசொன் னடையவாவன சிலவுளவென்ப தாம். யானை கோடு கூரிது, இரும்பு பொன்னாயிற்று, மக்களை உயர் திணையென்ப என்பனவற்றுள், கோடுகூரிது, பொன்னாயிற்று, உயர் திணையென்ப என்னுந் தொகையல் தொடர்மொழி ஒரு சொன்னடைய வாய் எழுவாய்க்கும் இரண்டாவதற்கும் முடிவாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (24) உயர்திணையிடத்து உம்மைத்தொகை 421. உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர். (இ-ள்.) உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை பலர்க்குரிய ஈற்றான் நடக்கும் எ-று. பொதுவிற் கூறினாரேனும், மாமூலபெருந்தலைச்சாத்தர்; கபில பரண நக்கீரர் என வரும். விரவுப்பெயர்த்தொகையும் அடங்குதற்கு உயர்திணைப் பெய ரும்மைத் தொகை யென்னாது, உயர்திணைமருங்கி னும்மைத்தொகை யென்றார். அவை ஒட்டி யொருசொல்லாய் நிற்றலிற் பலரறி சொல்லெனப் படும். பலரறி சொற் கபில பரணன் என ஒருமையீற்றான் நடத்தல் வழுவாகலின் வழுக்காத்தவாறு. இதனானுந் தொகை ஒரு சொல்லாதல் பெற்றாம். ஒரு சொன்னீர்மை பெற்றின்றாயின், கபிலன் பரணன் என ஒருமைச்சொல் ஒருமையீற்றான் நடத்தற்கட்படும் இழுக்கென்னையென்பது. (25) 5. பிற ஒழிபு சில இன்ன என்னும் குறிப்புரை 422. வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னுங் குறிப்புரை யாகும். (இ-ள்.) வாராவியல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்னாவியல்பினவற்றை என்பனவாகச் சொல்லுதலும், அத் தன்மையன வெல்லாம் அவ்வப்பொருளியல்பான் இத்தன்மையவென்று சொல்லுங் குறிப்புமொழியாம் எ-று. (எ-டு.) அந்நெறி யீண்டு வந்து கிடந்தது, அம்மலை வந்திதனொடு பொருந்திற்று எனவும்; அவலவலென்கின்றன நெல், மழைமழையென் கின்றன பைங்கூழ் எனவும் வரும். அவை வரவுஞ்சொல்லுதலு முணர்த்தாது இன்னவென்பதனைக் குறிப்பாலுணர்த்தியவாறு கண்டுகொள்க. முலை வந்தன, தலை வந்தன என்பன காட்டுவாருமுளர். ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டாகலான், அவை ஈண்டைக் காகாவென்க. நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது என்பன காட்டினாரால் உரையாசிரியரெனின்:- சொலற்பொருள வன்மையின், அவை காட்டல் அவர் கருத்தன்றென்க. ‘அன்னவை யெல்லா’ மென்றதனான், இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும்; இக்குன் றக்குன்றோடொன்றும் என்னுந் தொடக்கத்தன கொள்க. (26) அடுக்குதல் வரம்பு 423. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். 424. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். (இ-ள்.) மேற்கூறப்பட்ட ஒரு சொல்லடுக்கினுள், இசை நிறையடுக்கு நான்காகிய வரம்பையுடைத்து; பொருளொடு புணர்தற்கண் விரைவுப் பொருள்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பையுடைத்து எ-று. வரம்பாகு மென்றது, அவை நான்கினும் மூன்றினு மிறந்து வாரா, குறைந்து வரப்பெறு மென்றவாறு. (எ-டு.) ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ எனவும் தீத்தீத்தீ எனவும் வரும். அவை மும்முறையாயினும் இருமுறையாயினும் அடுக்கி வருதல், இவற்றைக் குறைத்துச் சொல்லிக் கண்டுகொள்க. இசைப்பொருளாவது செய்யுளின்பம். விரைவிக்குஞ் சொல்லை விரைசொ லென்றார். அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின், அதற்கெல்லை கூறாராயினார். அஃ திருமுறை யடுக்குமென்பது யாண்டுப் பெற்றாமெனின், அடுக்கு என்பதனாற் பெற்றாம்; ஒருமுறை வருவது அடுக்கெனப் படாமையினென்பது. முன்னர்க் கூறப்படும் அசைநிலை அடுக்கி வருமென்பது அதிகாரத் தாற் கோடற்பொருட்டு ‘இசைநிறை யசைநிலை’ (411) என்னுஞ் சூத்திரத் தின் பின் வையாது இச்சூத்திர மிரண்டனையும் ஈண்டு வைத்தார். (27) (28) அசைநிலை அடுக்கு 425. கண்டீர் என்றா கொண்டீர் என்றா சென்றது என்றா போயிற் றென்றா அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி அசைக்குங் கிளவி என்ப. (இ-ள்.) கண்டீரெனவும், கொண்டீரெனவும், சென்ற தெனவும் போயிற்றெனவும் வரும் வினைச்சொன் னான்கும், வினாவொடு பொருந்தி நின்றவழி, அசைநிலையடுக்காம் எ-று. கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லியவழி அதற்குடம்படா தான் கண்டீரே கண்டீரே என்னும்; ஈண்டு வினைச்சொற் பொருண்மையும் வினாப் பொருண்மையு மின்மையின், அசைநிலையாயினவாறு கண்டு கொள்க. வரையாது கூறினமையான், கண்டீரே எனச் சிறுபான்மை அடுக்காது வரு தலுங் கொள்க. ஏனையவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலை யாம். அவை இக்காலத் தரிய; வந்தவழிக் கண்டுகொள்க. (29) 426. கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே. (இ-ள்.) கேட்டை யெனவும், நின்றை யெனவும், காத்தை யெனவும், கண்டை யெனவும் வரும் நான்கும், முன்னிலை யல்லாக்கால், மேற்சொல்லப் பட்ட அசைநிலையாம் எ-று. இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்ற வழி அசைநிலையாய் வருமாறு கண்டுகொள்க. நின்றை, காத்தை யென்பன இக்காலத்துப் பயின்று வாரா. வினாவிற்கு அடையாக அடுக்கிவந்தவழி முன்னிலை யசைநிலையே யாம். இவை அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச்சொல்லாதலு முடைமையான், அந்நிலைமை நீக்குதற்கு, ‘முன்னிலை யல்வழி’ யென்றார். முன்னுறக்கிளந்த வியல்பாகு மென்றதனான், முன்னைய போலச் சிறுபான்மை வினாவொடு வருதலுங் கொள்க. ‘முன்னிலை யல்வழி’ யென்பதற்கு முன்னையபோல வினாவொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரியரெனின், அற்றன்று. வினாவொடு சிவணல் இவற்றிற்கொன்றா னெய்தாமையின் விலக்க வேண்டா; அதனான் அவர்க்கது கருத்தென்றென்க. இரண்டு சூத்திரத்தானுங் கூறப்பட்டன வினைச்சொல்லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான், வினையியலுள்ளும் இடையிய லுள்ளுங் கூறாது ஈண்டுக் கூறினார். அஃதேல், ஆக ஆகல் என்பது என்பனவற்றோடு இவற்றிடை வேற்று மையென்னை அவையும் வினைச்சொல்லாத லுடைமையானெனின், இசை நிறைத்தற்கும் பொருள் வேறுபாட்டிற்கும் அடுக்கிவரி னல்லாது அடுக்காது வருதலே வினைச்சொற் கியல்பாம். ஆக, ஆகல் - என்பது என்பன அடுக்கியல்லது நில்லாமையின், வினைச்சொல் இடைச்சொல் லாயின வெனப்படா. கண்டீர், கொண்டீர் என்பன முதலாயின வினைச் சொற்குரிய ஈற்றவாய் அடுக்கியும் அடுக்காதும் வருதலான் வினைச்சொல் அசைநிலை யாயின வெனப்படும். இது தம்முள் வேற்றுமை யென்க. அல்லதூஉம், வினாவொடு சிவணி நிற்றலானும் வினைச்சொல்லெனவே படுமென்பது. (30) 6. வினைமுற்றின் வகை அதன் இயல்பு 427. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ இடத்தான் வினையினுங் குறிப்பினும் மெய்ம்மை யானும் இவ்விரண் டாகும் அவ்வா றென்ப முற்றியன் மொழியே. (இ-ள்.) முற்றுச்சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூன்று காலமும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும், உயர்திணையும் அஃறிணையும் இருதிணைப் பொதுவுமாகிய பொரு டோறும், வினையானுங் குறிப்பானும் இவ்விரண்டாய் வரும் அவ்வறு வகைச் சொல்லாமென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) சென்றனன், கரியன் எனவும்; சென்றது, கரிது எனவும்; சென்றனை, கரியை எனவும் வரும். இடமுணர்த்தலுந் திணையும் பாலும் விளக்கலும் போல ஒருசாரன வற்றிற்கே யாகாது, எல்லாமுற்றுச் சொற்குங் காலம் முற்சிறத்தலின் ‘சிறப் புடை மரபின் அம்முக் காலமும்’ என்றார். வினையினுங் குறிப்பினும் என்புழி ஓரீற்றவாகிய வினையும் வினைக் குறிப்புமே கொள்ளப்படும்; இவ்விரண்டாதற் கேற்பன அவையே யாகலான். மெய்ம்மையாவது பொருண்மை. உயர்திணையும் அஃறிணையுமல்லது இருதிணைப் பொது வென்ப தொரு பொருளில்லையாயினும், சென்றனை, கரியை என்பன செலவிற்கு வினை முதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம் பற்றி இருதிணைக் கண்ணும் சேறலின் அந்நிமித்தம் இருதிணைப் பொதுவெனப்பட்டது. வினையினுங் குறிப்பினும் இவ்விரண்டாய் வருதலாவது தெரிநிலை வினையாற் றெற்றெனத் தோன்றலும் குறிப்புவினையாற் றெற்றெனத் தோன்றாமையுமாம். முற்றி நிற்றல் முற்றுச்சொற் கிலக்கணமாதல் ‘முற்றியன் மொழியே’ யென்பதனாற் பெற்றாம். முற்றிநிற்றலாவது இதுவென்பது வினையியலுட் கூறினாம் (சொல். 235). திணையும் பாலும் இடமும் விளக்கல் எல்லா முற்றிற்கு மின்மையான் இலக்கணமன்மை யறிக. உயர்திணை அஃறிணை விரவென்னும் பொருண்மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல்பற்றி ‘அவ்வாறென்ப’ வென்றார். காலமும் இடமும் முதலாயினவற்றொடு கூட்டிப் பகுப்பப் பலவாம். ஊரானொரு தேவகுலம் என்றாற்போல மெய்ம்மையானும் என்புழி ஆனென்பது தொறுமென்பதன் பொருட்டாய் நின்றது. முன்னர்ப் பிரிநிலை வினையே பெயரே (சொல். 430) என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுபவாகலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லையும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் வினையெச்சமுமென வினைச்சொன் மூவகைத்தாதல் இனிதுணரப்படு மென்பது. உரையாசிரியர் வினையியலுள் ஓதப்பட்டன சில வினைச்சொற்கு முற்றுச் சொல்லென்று குறியிடுத னுதலிற்று இச் சூத்திரமென்றா ராலெனின், குறியீடு கருத்தாயின் அவ்வாறென்ப முற்றியன் மொழியே என்னாது அவ்வாறும் முற்றியன் மொழி எனல் வேண்டுமாகலான் அது போலியுரை யென்க. முற்றியன் மொழியென்ப என மொழிமாற்றவே குறியீடாமெனின், குறியீடு ஆட்சிப் பொருட்டாகலின் அக்குறியான் அதனை யாளாமையான் மொழிமாற்றி யிடர்ப்படுவ தென்னையோ வென்பது. அல்லதூஉம் முற்றியன் மொழியெனக் குறியிட்டாராயின் இவை பெயரெஞ்சு கிளவி யெனவும், இவை வினையெஞ்சு கிளவியெனவுங் குறியிடல்வேண்டும்; அவ்வாறு குறியிடாமையானும் அது கருத்தன்றாம். அதனான் வினைச் சொல்லுள் இருவகையெச்ச மொழித்து ஒழிந்தசொன் முற்றிநிற்கு மென்றும், அவை இனைத்துப் பாகுபடுமென்றும் உணர்த்தல் இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க. (31) பிறாண்டு வரும் வினைகளும் முற்றாதல் 428. எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையும். (இ-ள்.) மூவிடத்தாற் பொருடோறும் இவ்விரண்டாமென மேற்சொல்லப்பட்ட கட்டளையுட்பட் டடங்காது பிறாண்டு வரும் வினையும் முற்றியல்பாய் நிலையும் எ-று. யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தாமையின், மேற் கூறிய கட்டளையினடங்காது பிறாண்டு வந்தனவாம். சிறப்பீற்றான் வருந் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் பொருடொறும், வினையும் வினைக் குறிப்புமாய் வருதற்கு எய்தாமையின் ‘மெய்ம்மையானு மிவ்விரண் டாகும்’ (சொல். 427) கட்டளையுட்படாது பிறாண்டு வந்தனவாம். குறிப்பு வினைக் கீறாகாது தெரிநிலைவினைக் கீறாவனவுந், தெரிநிலைவினைக் கீறாகாது குறிப்பு வினைக் கீறாவனவும் சிறப்பீற்றவாம். அவை வினை யியலுட் கூறிப் போந்தாம். யார் எவன் என்பன பாலும், இல்லை, வேறு என்பன திணையும் பாலும் உணர்த்தாவாயினும் மேலைச் சூத்திரத்தான் முற்றுச்சொற்குப் பாலுந் திணையு முணர்த்தல் ஒருதலையாக எய்தாமை யின் இடமுணர்த் தாமையே பற்றி ஈண்டுக் காட்டப்பட்டன. திணையும் பாலுமுணர்த்தல் ஒருதலையாயின் ‘தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான்’ (சொல். 427) என ஆசிரியர் முன்னிலையிடம் ஆண்டு வையா ரென்பது. முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமு முணர்த்துமென்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தாரால் உரையாசிரியரெனின், அவை இடவேறுபா டுணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின், அது போலியுரை யென்க. இனி ஓருரை:- மேலைச் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருண் மேல் வரும் எல்லாவினையும் முற்றுச்சொல்லாய் நிற்கும் என்றவாறு. ஈண்டு வினையென்றது வினைச்சொல்லை யாக்கும் முதனிலையை. எல்லா வினையும் முற்றுச்சொல்லாமெனவே, எச்சமாதல் ஒருதலையன் றென்பதாம். ஆகவே, வினைச்சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச்சொல்லே யென்பதாம். எல்லாவினையும் முற்றுச்சொல்லாகலும், கச்சினன், கழலினன், நிலத்தன், புறத்தன் என்னுந் தொடக்கத்து வினைக்குறிப்பின் முதனிலை எச்சமாய் நில்லாமையும், வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. பிறவுமன்ன. இவையிரண்டும் இச்சூத்திரத்திற்குப் பொருளாகக் கொள்க. (32) முற்றுச் சொற்கு முடிபு 429. அவைதாம் தத்தம் கிளவி அடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட முற்றுச்சொற்றாம், தத்தங்கிளவி பல அடுக்கிவரினும், தம்முட் டொடராது எவ்வாற்றானும் பெயரொடு முடியும் எ-று. (எ-டு.) உண்டான் றின்றா னாடினான் பாடினான் சாத்தன்; நல்லனறி வுடையன் செவ்வியன் சான்றோர் மகன் என வரும். அடுக்கி வரினு மென்ற உம்மையான், வந்தான் வழுதி; கரியன் மால் என அடுக்காது பெயரொடு முடிதலே பெரும்பான்மை யென்பதாம். தம்பாற் சொல்லல்லது பிறபாற் சொல்லொடு விராயடுக்கின்மை யின், ‘தத்தங்கிளவி’, யென்றார். என்மனார் புலவர், முப்பஃதென்ப என வெளிப்பட்டும் வெளிப் படாதும் பெயர்முடிபா மென்றற்கு எத்திறத்தானு மென்றார். ‘எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி’ (சொல். 68) என்றதனான், வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையான் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின், ஆண்டு முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நிற்றலுமுடைத் தென்றார்; இது முடிக்கும் பெயராகலின் ஆண்டடங்கா தென்பது. முடிக்கப்படுவதனொடு முடிப்பதனிடை வேற்றுமை, வேற்றுமை யோத்தினுட் கூறினாம். இன்னும் எத்திறத்தானு மென்றதனான், உண்டான் சாத்தன், சாத்தனுண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்க. அஃதேல், முற்றி நிற்றலாவது மற்றுச் சொன்னோக்காமையாகலின் முற்றிற்றேல் அது பெயர் அவாய் நில்லாது; பெயர் அவாவிற்றேல் முற்றுச் சொல்லெனப்படாது; அதனான் முற்றுசொற் பெயர்கொள்ளுமென்றல் மாறு கொள்ளக் கூறலாமெனின், அற்றன்று. உண்டான் சாத்தன் என்பது எத்தை யென்னும் அவாய்நிலைக்கட் சோற்றை யென்பதனோடு இயைந்தாற் போல, உண்டான் என்பது யாரென்னும் அவாய் நிலைக்கட் சாத்தனென் பதனோடு இயைவதல்லது, அவாய் நிலையில்வழி உண்டானெனத் தானே தொடராய் நிற்றல் வினையியலுள்ளுங் கூறினாமென்பது. அஃதேல், சாத்தனென்னும் பெயர் சோற்றையென்பது போல் அவாய்நிற்றலையுள் வழி வருவதாயின், ‘எத்திறத்தானும் பெயர் முடிபினவே’ என விதந்தோதல் வேண்டாவாம் பிறவெனின், நன்று சொன்னாய்! அவாய்நிற்றலை யுள்வழி வருவது, அவ்விரண்டற்கும் ஒக்குமேனும், உண்டானென்றவழி உண்டற் றொழிலாற் செயப்படுபொருள் உய்த்துணர்ந்து பின் அதன் வேறுபா டறியலுறிற் சோற்றையென்பது வந்தியைவதல்லது, சொற்கேட்ட துணை யான் எத்தை யெனக் கேட்பான் செயப்படுபொருள் வேறுபாடு அறிதற்கு அவாவாமையின், சோற்றை யென்பது வருதல் ஒருதலையன்று. இனி உண்டானென்னுஞ் சொல்லாற் பொதுவகையான் வினைமுத லுணர்ந்து, கேட்பான், அதன் வேறுபா டறியலுறுதலின், சாத்தனென்பது வருதல் ஒரு தலையாம். அதனான் இச்சிறப்பு நோக்கி விதந்தோதினா ரென்பது. (33) 7. எச்சச் சொற்களின் வகை அவற்றின் பாகுபாடு 430. பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆயீ ரைந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி. முற்றுச்சொல் லுணர்த்தி எச்சமாமா றுணர்த்துகின்றார். எஞ்சு பொருட்கிளவி கொண்டல்லது அமையாமையின் எச்சமாயினவும், ஒரு தொடர்க்கொழிபாய் எச்சமாயினவுமென அவை இருவகைப்படும். (இ-ள்.) பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் எஞ்சுபொருட் கிளவியாம் எ-று. அவற்றுட் கடைநிலை மூன்றும் ஒருதொடர்க் கொழிபாய் எச்ச மாயின. அல்லன எஞ்சுபொருட்கிளவியான் முடிவன. எஞ்சுபொருட் கிளவியெனினும் எச்சமெனினு மொக்கும். பெயரெச்சம் வினையெச்சம் பெயர் வினையான் முடிதலின், ஆகுபெயராற் பெயர் வினையென்றார். ஆயீரைந்து மெஞ்சுபொருட்கிளவி யென்றாரேனும், எஞ்சு பொருட் கிளவி பத்துவகைப்படு மென்பது கருத்தாகக் கொள்க. எச்சமாவன ஒருசார்பெயரும் வினையும் இடைச்சொல்லுமாதலின், பெயரியன் முதலாயினவற்றுட் பத்தும் ஒருங்குணர்த்துதற் கேலாமையறிக. முடிபும் பொருளு மொத்தலான், என்றென்பதனை எனவின்க ணேற்றினார். (34) பிரிநிலையெச்சம் 431. அவற்றுள் பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரிநிலையெச்சம் ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப்பிரிநிலையுமென இருவகைப்படும். அவ் விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்துஞ் சொல்லொடு முடியும் எ-று. (எ-டு.) தானே கொண்டான்; தானோ கொண்டான் என்னும் பிரிநிலை யெச்சம் பிறர் கொண்டிலரெனப் பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்துஞ் சொல்லான் முடிந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், தானெனப்பட்டானன்றே ஆண்டுப் பிரிக்கப்பட்டான் பிறர் கொண்டிலரென்பது அவனையுணர்த்துஞ் சொல்லன்மையான், அவை பிரிநிலை கொண்டு முடிந்திலவாலெனின், அற்றன்று. தானெனப் பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப் பிறரும் அவனிற் பிரிக்கப்பட்டமை யான், அவை பிரிநிலை கொண்டனவேயா மென்க. பிரிநிலையோடு முடிதலாவது அவனே கொண்டான் என்றவழி, அவனே யென்பது கொண்டானெனப் பிரிக்கப்பட்ட பொருளை வினை யெனக்கொண்டு முடிதலென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று. அவனே கொண்டான் என்புழி அவனென்னும் எழுவாய் வேற்றுமை கொண்டானென்னும் பயனிலை கொண்டது; ஏகாரம் பிரிவுணர்த்திற்று, ஆண்டெச்சமும் எச்சத்தை முடிக்குஞ் சொல்லுமின்மையான், அவர்க்கது கருத்தென் றென்க. (35) வினையெச்சம் 432. வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே. (இ-ள்.) வினையெச்சத்திற்குத் தெரிநிலைவினையுங் குறிப்பு வினை யும் முடிபாம்; ஆண்டைக் குறிப்புவினை ஆக்கவினையொடு வரும் எ-று. (எ-டு.) உழுது வந்தான்; மருந்துண்டு நல்ல னாயினான் என வரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப் பெயரொடு முடிதல் ‘நினையத் தோன்றிய’ வென்றதனாற் கொள்க. வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமையான் இச்சூத்திரம் வேண்டாவெனின், இதற்கு விடை ஆண்டே கூறினாம். ‘வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான் றண்ணியளே’ (குறுந். 84) ‘வில்லக விரலிற் *பொருந்தியவர், நல்லகஞ் சேரி னொருமருங் கினமே’ (குறுந். 370) எனவும்; கற்றுவல்லன், பெற்றுடையன் எனவும் வினைக்குறிப்பு ஆக்கமின்றி வந்தனவாலெனின்:- ஆக்கமொடு வருமென்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வருமென்பது. (36) *(பாடம்) பொருந்தியவாறு எனவும். பெயரெச்சம் 433. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. (இ-ள்.) பெயரெச்சம் பெயரொடு முடியும் எ-று. (எ-டு.) உண்ணுஞ் சாத்தன், உண்ட சாத்தன் என வரும். ‘அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய’ (சொல். 234) என்றதனாற் பெயரெச்சம் பொருள்படுமுறைமை கூறினார். முடிபு எச்சவியலுட் பெறப்படுமென வினையியலுட் கூறியவாறு கடைப்பிடிக்க. (37) ஒழியிசையெச்சம் 434. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. (இ-ள்.) மன்னை யொழியிசையும், தில்லை யொழியிசையும், ஓகார வொழியிசையும் ஆகிய ஒழியிசை யெச்சமூன்றும் ஒழியிசையான் முடியும் எ-று. (எ-டு.) ‘கூரியதொரு வாண்மன்’ ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசை யெச்சம், முறையானே, திட்பமின்று, வந்தாலின்னது செய்வல், கொண்டுய்யப் போமா றறிந்திலன் என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு. பிறவும் முடித்தற்கேற்கும் ஒழியிசை யறிந்துகொள்க. (38) எதிர்மறையெச்சம் 435. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. (இ-ள்.) மாறுகொ ளெச்ச மெனப்பட்ட ஏகார வெதிர்மறையும் (எழுத். 275), ஓகார எதிர்மறையும் (எழுத். 290), உம்மை யெதிர்மறைம் (சொல். 255) ஆகிய எதிர்மறையெச்ச மூன்றும் எதிர்மறையான் முடியும் எ-று. (எ-டு.) யானே கொள்வேன், யானோ கள்வேன், வரலு முரியன் என்னும் எதிர்மறையெச்சம், முறையானே, கொள்ளேன், கள்ளேன், வாரா மையு முரியன் என்னும் எதிர்மறையான் முடிந்தவாறு கண்டு கொள்க. (39) உம்மையெச்சம் 436. உம்மை எச்சம் இருவீற் றானுந் தன்வினை ஒன்றிய முடிபா கும்மே. (இ-ள்.) எஞ்சுபொருட்கிளவியும் அவ்வெஞ்சுபொருட் கிளவியான் முடிவதுமாகிய உம்மையெச்ச வேறுபாடிரண்டன்கண்ணும், தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற்குப் பொருந்திய முடிபாம் எ-று. என்றது, ‘எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்’ (சொல். 284) என்றதனான் உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வரும் எஞ்சு பொருட்கிளவி உம்மையெச்சத்திற்கு முடிபாத லெய்திற்று. என்னை? எல்லாவெச்சத்திற்கும் எஞ்சுபொருட்கிளவியே முடிபாகலின். இனி உம்மையொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினையொன்றேயாகல் வேண்டுமென எய்தாத தெய்துவித்தவாறு. ஒன்றற்காயதே ஏனையதற்கு மாகலிற் றன்வினை யென்றார். (எ-டு.) சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒரு வினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தனும் வந்தான் கொற்றனு முண்டான் என வினை வேறுபட்டவழி உம்மையெச்சமும் எஞ்சு பொருட் கிளவியும் இயையாமை கண்டுகொள்க. அஃதேல், ‘பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே’ (அகம். 2) என வினை வேறுபட்டுழியுந் தம்மு ளியைந்தனவா லெனின், இணர் விரி தலும் ஊர் கோடலும் இரண்டும் மணஞ்செய் காலம் இது வென்றுணர்த் துதலாகிய ஒருபொருள் குறித்து நின்றமையான், அவை ஒரு வினைப்பாற் படுமென்பது. பிறவும் இவ்வாறு வருவனவறிந்து ஒரு வினைப்பாற்படுக்க. எஞ்சுபொருட்கிளவி செஞ்சொலாயவழித் தன்வினை கோடல் ஈண்டடங்காமையான், அது தன்னினமுடித்தலென்பதனாற் பெறப்படும். ‘உம்மை யெச்ச மிருவீற் றானு’ மென்றதனான், உம்மை யெச்சத்திற்கு முடிபாகிய எஞ்சுபொருட்கிளவி உம்மையொடுவரின் எச்சமாமென்பதாம். அஃதெச்சமாங்கால், முன்னின்றது, எஞ்சுபொருட் கிளவியாமென்பது. எதிர்மறையும்மை எதிர்மறை யெச்சமா யடங்குதலின், ஈண்டும்மை யெச்சமென்றது எச்சவும்மையேயாம். (40) அதற்கு, மேலும் ஒரு முடிபு 437. தன்மேல் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறைநிலை யான. (இ-ள்.) உம்மை யெச்சத்தின்முன் எஞ்சு பொருட்கிளவி உம்மையில் சொல்லாய் வருங்கால், நிகழ்காலத்தோடு எதிர்காலமும் இறந்த காலத் தோடு எதிர்காலமும் மயங்குதல் வரையார் எ-று. ‘முறைநிலையான’ வென்றதனான், கூறிய முறையானல்லது எதிர் காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின் வந்து மயங்குதலில்லை யென்பதாம். (எ-டு.) கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன் எனவும், கூழுண்டான் சோறுமுண்பன் எனவும் அவை கூறிய முறையான் மயங்கியவாறு கண்டு கொள்க. இவற்றொடு இது மயங்குதல் வரையா ரெனவே, இறந்தகாலத்தொடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் வரையப் படு மென்றவாறாயிற்று. ‘தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை’ யென்றதனான், உம்மை யடுத்த சொல் வருங்கால், வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒருகாலத் தான் வருமென்பதாம். தன்வினை, காலம்வேறுபடுதலும் படாமையும் உடைமையான், இன்னுழி இன்னவாற்றா னல்லது காலம் வேறுபடாதென வரையறுத்த வாறு. (41) ‘என’ என்னும் எச்சம் 438. எனவென் எச்சம் வினையொடு முடிமே. (இ-ள்.) எனவென்னுமெச்சம் வினைகொண்டு முடியும் எ-று. (எ-டு.) கொள்ளெனக் கொடுத்தான், துண்ணெனத் துடித்தது; ஒல்லென வொலித்தது, காரெனக்கறுத்தது எனவும்; நன்றென்று கொண்டான், தீதென் றிகழ்ந்தான் எனவும் வரும். (42) ஏனை மூன்று எச்சங்கள் 439. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப. (இ-ள்.) சொல்லப்பட்டனவொழிந்து நின்ற சொல்லுங் குறிப்பும் இசையுமாகிய எச்சமூன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட் கிளவியை யுடைய வல்லவென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. என்றது, அவ்வத்தொடர்க்குத் தாமெச்சமாய் வந்து அவற்ற தவாய் நிலையை நீக்கலின், பிரிநிலையெச்ச முதலாயின போலத் தம்மை முடிக்கும் பிறசொல்லைத் தாம் அவாய் நில்லா வென்றவாறு. அவை பிறசொல்ல வாவாது தாம் எச்சமாய் வருமாறு முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். (43) குறிப்பெச்சமும் இசைஎச்சமும் 440. அவைதாம் தத்தங் குறிப்பின் எச்சஞ் செப்பும். (இ-ள்.) அவ்வெச்சமூன்றும் சொல்லுவார் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளையுணர்த்தும் எ-று. (எ-டு.) ‘பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன நிறத்தையோ பீர மலர்’ ‘இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து’ (குறள். 879) என்புழி, முறையானே, ‘பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம்’ எனவும், ‘தீயாரைக் காலத்தாற் களைக’ எனவும் வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயின. ‘அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு’ (குறள். 1) ‘அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு’ (குறள். 1154) என்றவழி, முறையானே, ‘அதுபோல’ எனவும், ‘நீத்தார்க்கே தவறு’ எனவும் வருவன எஞ்சிய இசைப்பொரு ளுணர்த்தலான் இசையெச்ச மாயின. சொல்லெச்சத்திற்கு உதாரணம் முன்னர்க்காட்டுதும். ‘சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே’ (சொல். 441) என்பதனான் அஃதொரு சொல்லாதல் பெறப் படுதலின், இது தொடர்ச்சொல்லாமென்பது. சொல்லென்னுஞ் சொல் எஞ்சுவது சொல்லெச்சமென்பார் இவ்விருவகையும் இசையெச்சமென அடக்குப. பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற்றோன்றலா யடங்குதலின், விண்ணென விசைத்தது என்பது குறிப் பெச்சமென்றும், அதுபோல என்னுந் தொடக்கத்தன விகார வகையாற் றொக்கு நின்றமையான், ஒல்லென வொலித்தது என்பது இசையெச்ச மென்றும், இவை தத்தஞ் சொல்லான் முடிவதல்லது பிற சொல்லான் முடியாமையின் இவற்றை மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியில வென்றாரென்றும், உரைத்தாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று; ‘தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் (சொல். 157) எனச் சொற்பொருட் பாகுபாடு உணர்த்திற்று. குறிப்பிற்றோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடைமையான் எச்சமென்றார்; அதனான் ஆண்டடங்காது. இனி விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல்லெனப் படா; படினும், விண்ணென வீங்கிற்று துண்ணெனத் துளங்கினான் எனவும், ஒல்லென வீழ்ந்தது எனவும் பிற சொல்லானும் முடிதலின் எஞ்சு பொருட் கிளவியில வென்றல் பொருந் தாதாம். என்னை? தஞ்சொலல் லாதன எஞ்சுபொருட் கிளவியாமாகலின். இனி அதுபோல வென்பது தொகுக்கும்வழித் தொகுத்த லென்பத னாற் றொக்கதாயின், அதனைச் சுட்டிக் கூறாவுவமையென அணியியலுள் ஆசிரியர் ஓருவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாது. தொகுக்கும் வழித் தொகுத்தல் ஒருமொழிக் கண்ணதாகலிற் பலசொற் றொகு மென்றலும் பொருத்தமின்று. அதனான் அவர்க்கது கருத்தன்று. விண்ணென விசைத் தது, ஒல்லென வொலித்தது என்னுந் தொடக்கத்தனவற்றை எனவெனெச்ச மென அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் வேறுதாரணங் காட்டல் கருத்தென்க. அல்லதூஉம், எனவெனெச்சமென அடக்காது இசையுங் குறிப்பும்பற்றி வருவனவற்றை வேறோதின், வெள்ளென வெளுத் தது எனப் பண்புபற்றி வருவதனையும் வேறோதல் வேண்டும்; அதனை வேறோதாமையானும் எனவெனெச்சமென அடக்குதலே கருத்தாகக் கொள்க. குறிப்புப்பொருளைப் ‘பசப்பித்துச் சென்றா ருடையையோ’ ‘இளைதாக முண்மரங் கொல்க’ என்பன முதலாகிய தொடர்மொழியே உணர்த்தலான் எஞ்சுபொருளெனப்படா வாயினும், அப் பொருள் பிறசொல்லானல்லது வெளிப்படாமையின், அச்சொல் எச்சமாயிற்று. குறிப்புப்பொருளேயன்றி எஞ்சுபொருளுஞ் சொல்லுவான் குறிப்பொடு படுத்துணர்ந்து தமக்கேற்ற சொல்லாலுணர்த்தப்படுதலின், குறிப் பானெச்சஞ் செப்பல் மூன்றற்கு மொத்தவாறறிக. (44) சொல்லெச்சம் 441. சொல்லென் எச்சம் முன்னும் பின்னும் சொல்லள வல்லது எஞ்சுதல் இன்றே. (இ-ள்.) சொல்லெச்சம், ஒருசொற்கு முன்னும் பின்னுஞ் சொன் மாத்திரம் எஞ்சுவதல்லது, தொடரா யெஞ்சுதலின்று எ-று. ‘உயர்திணையென்மனார்’ (சொல். 1) என்புழி ஆசிரியரென்னுஞ் சொல் முன்னும், ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ (குறுந். 71) என்புழி எமக்கென்னுஞ்சொல் பின்னும், எஞ்சி நின்றவாறு கண்டு கொள்க. ஒருசாரார் இவற்றை இசையெச்சமென்று, ‘சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே’ என்பதற்குச் சொல்லென்னுஞ் சொல்லளவல்லது பிறிது சொல் லெஞ்சுத லின்றென்று பொருளுரைத்து, ‘பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்றாள்’ என்புழித் தாவெனச்சொல்லி யெனச், சொல் லென்னுஞ்சொல் எஞ்சி நின்றதென்று, இதனை உதாரணமாகக் காட்டுப. அவர் ‘முன்னும் பின்னு’மென்பதற்குச் சொல்லென்னுஞ் சொற்கொணர்ந்து கூட்டுவதன் முன்னும் பின்னுமென இடர்ப்பட்டுப் பொருளுரைப்ப. (45) 8. வேறு சில மரபு வகை முதலியன இடக்கர்ச்சொல் 442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். (இ-ள்.) அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக எ-று. அவைக்கண் வழங்கப்படுஞ்சொல்லை ‘அவை’யென்றார், (எ-டு.) ‘ஆன்முன் வரூஉ மீகார பகரம்’ எனவும், ‘கண்கழீஇ வருதும்; கான்மே னீர்பெய்து வருதும்’ எனவும், கருமுகமந்தி, செம்பினேற்றை; ‘புலிநின் றிறந்த நீரல் ஈரத்து’ எனவும் இடக்கர்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறியவாறு. ஈகாரபகரமென்பது போலக் கண் கழுவுதன் முதலாயின, அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றாற் கிளந்தனவல்ல வெனினும், அவையல் கிளவிப் பொருண்மையை யுணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப் பிறிதோராற்றாற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும். இவை ‘தகுதியும் வழக்கும்’ (சொல். 17) என்புழித் தகுதியா யடங்குமெனின், செத்தாரைத் துஞ்சினாரென்றல் முதலாயின வன்றே தகுதி யாவன? ஆண்டுச் செத்தாரென்பதும் இலக்கணமாகலின் அதனானும் வழங்கப்படும்; தகவுநோக்கிச் சொல்லுங்காற் றுஞ்சினாரென்றுஞ் சொல்லப்படும். ஈண்டை யவையல் கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்பாட்டானே கிளக்கப்படும். அதனான் ஆண்டடங்கா வென்பது. இது வழுவமைதி யன்மையாற் கிளவியாக்கத்துக் கூறாராயினார். (46) 443. மறைக்குங் காலை மரீஇயது ஒராஅல். (இ-ள்.) அவையல்கிளவியை மறைத்துச் சொல்லுங்கால், மேற் றொட்டு வழங்கப்பட்டு வருவன மறைக்கப்படா எ-று. (எ-டு.) ஆப்பி, ஆனையிலண்டம் என மரீஇ வந்தன மறைக்கப் படாது வந்தவாறு. ‘பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி’ (பெரும்பாண். 2) என்புழிக் கான்றென்பது, தன் பொருண்மே னில்லாது அணி குறித்துப் பிறிதொரு பொருண்மே னிற்றலின் மரீஇய சொல்லாய் மறைக்கப்படாமையும், அதன் பொருண்மே னின்றவழி மறைக்கப்படுதலுமறிக. (47) ‘ஈ’ ‘தா’ ‘கொடு’ என்பன 444. ஈதா கொடுவென கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி யாகிட னுடைய. (இ-ள்.) ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றை யிரத்தற்கண் வருஞ் சொல்லாம் எ-று. அவை பிறபொருண்மேல் வருதலுமுடைமையான். ‘இரவின் கிளவி யாகிட னுடைய’ வென்றார். வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவு முளவாக இவற்றையே விதந்தோதிய தென்னையெனின், அவை கொடைப்பொருளவாய் வருவ தல்லது இவைபோல இரத்தற்குறிப்பு வெளிப்படுக்கும் இரவின் கிளவி யாய்ப் பயின்று வாராமையானும், இன்னார்க்கு இன்னசொல் லுரித்தென்று வரையறுத்தலும் வழுவமைத்தலுமாகிய ஆராய்ச்சி ஆண்டின்மையானும், இவற்றையே விதந்தோதினாரென்பது. அஃதேல், ‘ஈயென்கிளவி’ (சொல். 445) என்னுஞ் சூத்திரமுதலாய நான்கும் அமையும், இச்சூத்திரம் வேண்டாவெனின், இவை இரவின் கிளவியாதலும் மூன்றென்னும் வரையறையும் அவற்றாற் பெறப்படாமை யின் வேண்டுமென்பது. முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிறாண்டு இன்னசொல் இன்னார்க் குரித்தென்னும் வரையறை யில்லென்ப துணர்த்துதற்கு ஈ தா கொடுவென முன்னிலை வாய்பாடுபற்றி யோதினார். (48) ‘ஈ’ என்னுஞ் சொல் 445. அவற்றுள் ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே. ‘தா’ என்னுஞ் சொல் 446. தாவென் கிளவி ஒப்போன் கூற்றே. ‘கொடு’ என்னுஞ் சொல் 447. கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. (இ-ள்.) ஈயென்கிளவி இரக்கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற்றாம். தாவென்கிளவி அவனோடொப்பான் கூற்றாம். கொடுவென் கிளவி அவனி னுயர்ந்தவன் கூற்றாம் எ-று. (எ-டு.) சோறீ; ஆடை தா; சாந்துகொடு என மூன்று சொல்லும் முறையானே மூவர்க்கு முரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. (49) (50) (51) கொடு : மேலும் ஒரு முடிபு 448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் தன்னைப் பிறன்போல் கூறுங் குறிப்பின் தன்னிடத் தியலும் என்மனார் புலவர். (இ-ள்.) கொடுவென்னுஞ் சொல், முதனிலை வகையாற் படர்க்கை யாயினும், தன்னைப் பிறனொருவன் போலக் கூறுங் கருத்து வகையான், தன்னிடத்துச் செல்லும் எ-று. (எ-டு.) மேற்காட்டப்பட்டது. தன்மைக்கும் முன்னிலைக்கு முரிய தா வென்பதனானாக, பொது வாகிய ஈ யென்பதனானாகவன்றே சொல்லற்பாலது? உயர்ந்தான் அங்ஙனந் தானேற்பானாகச் சொல்லாது, கொடுவெனப் படர்க்கை வாய்பாட்டாற் சொல்லும்; ஆண்டுத் தன்னையே பிறன்போலக் குறித்தானாகலிற் றன்னி டத்தே யாமென இடவழு வமைத்தவாறு. உயர்ந்தான் தமனொருவனைக் காட்டி இவற்குக் கொடுவென்னு மென்றாரால் உரையாசிரியரெனின், ஆண்டுப் படர்க்கைச்சொற் படர்க்கைச் சொல்லோடியைதலான் வழுவின்மையின் அமைக்கல் வேண்டாவாம்; அதனான் அது போலியுரையென்க. (52) பெயர்கள் முதலிய சொற்கள் 449. பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி யனைத்துங் கடப்பா டிலவே. (இ-ள்.) பெயர்நிலைக் கிளவியி னாகுநவும் என்றது - ஒரு திணைப் பெயர் ஒருதிணைக்காய் வருவனவும் எ-று. அவையாவன, ஓரெருத்தை நம்பியென்று வழங்குதலும், ஒரு கிளியை நங்கை யென்று வழங்குதலுமாம். பிறவுமன்ன. திசைநிலைக் கிளவியி னாகுநவும் என்றது-திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான், பூசையான் என்னுந் தொடக் கத்தன. தொன்னெறி மொழிவயி னாகுநவும் என்றது - முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை ‘யாற்றுட் செத்த வெருமை யீர்த்த லூர்க்குயவர்க்குக் கடன்’ என்பது முதலாயின. மெய்ந்நிலை மயக்கி னாகுநவும் என்றது - பொருண்மயக்காகிய பிசிச்செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவனவும் என்றவாறு. அவை, ‘எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது’ என்பது புத்தக மென்னும் பொருண்மேற் றிணை திரிந்து வந்தவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. மந்திரப்பொருள்வயி னாகுநவும் என்றது - மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குதாரணம் மந்திர நூல்வல்லார்வாய்க் கேட்டுணர்க. அன்றியனைத் துங் கடப்பாடிலவே என்றது-அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வ தல்லது இலக்கணத்தான் யாப்புறவுடைய வல்ல என்றவாறு. இஃ திச்சூத்திரத்திற்கு ஒரு சாரா ருரை. ஒருசாரார் பிறவுரைப்ப. இஃ தியற்சொல்லுந் திசைச்சொல்லும் பிறவும் பற்றி வழுவமைத்த தாகலின், கிளவியாக்க முதலாயினவற்றின்கண் உணர்த்துதற் கியைபின்மை யான், ஈண்டு வைத்தார். (53) செய்யாய் என்னுஞ் சொல் 450. செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்என் கிளவி யாகிடன் உடைத்தே. (இ-ள்.) செய்யாயென்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை முற்றுச் சொல் ஆயென்னு மீறு கெடச் செய்யென்னுஞ் சொல்லாய் நிற்றலுடைத்து எ-று. ‘ஆகிடனுடைத்’ தென்றதனான், செய்யா யென ஈறுகெடாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். (எ-டு.) உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவி யாயினவாறு கண்டுகொள்க. செய்யாயென்னும் முன்னிலை யெதிர்மறை செய்யென் கிளவியாதற் கேலாமையின், செய்யாயென்னும் முன்னிலை வினைச்சொலென்றது விதி வினையையேயாம். தன்னின முடித்த லென்பதனான் வம்மின், தம்மின் என்பன மின் கெட வம், தம் என நிற்றலும், அழியலை அலையலை என்னு முன்னிலை யெதிர்மறை, ஐகாரங்கெட்டு அழியல், அலையல், என நிற்றலுங் கொள்க. ஒன்றென முடித்தலென்பதனான், புகழ்ந்தா ரென்னும் படர்க்கைவினை ஆரீறுகெடப் ‘புகழ்ந்திகு மல்லரோ’ என நிற்றலுங் கொள்க. இவை யெல்லாஞ் செய்யுண்முடி பென்பாருமுளர். செய்யா யென்னு முன்னிலையெதிர்மறை எதிர்மறை படாது செய்யென் விதிவினையாதலு முரித்தென் றுரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று. செய்யா யென்னும் எதிர்மறைவினையுஞ் செய்யா யென்னும் விதிவினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும், எதிர்மறைக் கண் மறையுணர்த்தும் இடைநிலையு முண்மையான், முடிக்குஞ்சொல் வேறெனவே படும். மறையுணர்த்தும் இடைநிலையாவன: உண்ணலன், உண்டிலன், உண்ணாது, உண்ணேன் என்புழி வரும் அல்லும், இல்லும், ஆவும், ஏயும், பிறவுமாம். உண்ணாய் உண்ணேன் என் புழி எதிர்மறை யாகார வேகாரங் கெட்டு நின்றன வெனல் வேண்டும்; அல்லாக்கால், மறைப் பொருள் பெறப்படாமையின். அதனான் எதிர்மறைச் சொல்லே விதி வினைச்சொல் ஆகாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆசிரியர் அக்கருத்தினராயின், ‘செய்யா யென்னு மெதிர்மறை வினைச் சொல்’ என்றோதுவார்மன்; அவ்வாறோதாமையான் அவர்க்கது கருத் தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மை யறிக. (54) ‘ஈ’ ‘ஏ’ என்னும் முன்னிலை ஈறுகள் 451. முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. (இ-ள்.) முன்னிலை வினைச்சொன்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம் முன்னிலைச்சொற் கேற்ற மெய்யூர்ந்து வரும் எ-று. (எ-டு.) ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) ‘அட்டி லோலை தொட்டனை நின்மே’ (நற். 300) என அவை முன்னிலைக் கேற்ற மெய்யூர்ந்து வந்தவாறு கண்டுகொள்க. முன்னிலை யென்றாரேனும், செய்யென் கிளவியாகிய முன்னிலை யென்பது அதிகாரத்தாற் கொள்க. ஈகார மொன்றேயாக, புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன் னிலை வினையீற்று வேறுபாட்டிற் கேற்ப மெய் வேறுபட்டு வருதலான், ‘அந்நிலை மரபின் மெய்’ என்றார். ஏகாரம் மகர மூர்ந்தல்லது வாராது. இவ்வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரமாதலின் ஈண்டுக் கூறற் பாற்றன்றெனின், அற்றன்று. ‘இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி’ (சொல். 270) அப்பெயரொடு ஒற்றுமைப்பட்டு நின்றாற்போல, முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் முன்னிலைச் சொல்லோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், அம்மெய் புணர்ச்சிவிகார மெனப்படா வென்க. அஃதேல், இடையியலுள் ‘இயற் பெயர் முன்ன ராரைக் கிளவி’ (சொல். 270) என்பதனோடியைய இதனையும் வைக்க வெனின், ஆண்டு வைப்பிற் செய்யா யென்பது செய்யென் கிளவி யாய வழியது அவ்வீகார வேகார வரவென்பது பெறப்படாமையின், ஈண்டு வைத்தார். ‘செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்’ என்பதனை ஈண்டு வைத்ததற்கும் இதுவே பயனாதலறிக. முன்னிலைச்சொல் விகாரம் ஒருங் குணர்த்தல் அதற்குப் பயனெனினு மமையும். ஈயென்பதோ ரிடைச்சொல் உண்டென்பது இச்சூத்திரத்தாற் பெற்றாம். இவையிரண்டும் ஈண்டுப் புறத்துறவு பொருள்பட நின்றன. அசைநிலை யென்பாருமுளர். (55) புதிய சொற்கள் 452. கடிசொல் இல்லைக் காலத்துப் படினே. (இ-ள்.) இவை தொன்றுதொட்டன வல்லன வென்று கடியப்படுஞ் சொல்லில்லை, அவ்வக்காலத்துத் தோன்றி வழங்கப்படுமாயின் எ-று. (எ-டு) சம்பு சள்ளை சட்டி சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின்கண், ‘சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே’ (எழு. 62) என விலக்கார் ஆசிரியர்; அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயா மென்பது. இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது ஒரு பாதுகாவ லாதலின் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினா ரென்பது. இனி ஒருசாரா ருரை:- இன்ன அநுவதிக்குங் காலமா மக்காலத்து, அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பாடாகலின் அதனைத் தழுவிக்கொண்டவா றென்க. இவையிரண்டும் இச்சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க. இனி ஒன்றென முடித்தலான் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான், புழான் முதலியன வும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். (56) முதற்குறை முதலியன 453. குறைச்சொல் கிளவி குறைக்கும்வழி அறிதல். (இ-ள்.) குறைக்குஞ் சொல்லைக் குறைக்கு மிட மறிந்து குறைக்க எ-று. குறைக்கும்வழி யறித லென்பது, ஒரு சொற்குத் தலையு மிடையுங் கடையுமென இடமூன்றன்றே? அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் லென்றறிந்து குறைக்க வென்றவாறு. (எ-டு.) தாமரை யென்பது, ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ எனத் தலைக்கண்ணும், ஓந்தியென்பது ‘வேதின வெரிநி னோதிமுது போத்து’ (குறுந். 140) என இடைக்கண்ணும், நீலமென்பது ‘நீலுண் டுகிலிகை கடுப்ப’ எனக் கடைக்கண்ணும், குறைக்கப்பட்டவாறும், அவை பிறாண்டுக் குறைத்தற் கேலாமையுங் கண்டுகொள்க. குறைத்தலாவது ஒருசொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தலாகலின் முழுவதுங் கெடுத்தலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் வேறாத லறிக. ‘இயற்சொல் திரிசொல்’ (சொல். 397) என்னுஞ் சூத்திர முதலாயின செய்யுளதிகாரத்துக் கூறாமையானும், ஒரு காரணத்தாற் கூறினாரேனுஞ் செய்யுட்க ணென்று விதந்து கூறாமையானும், இது வழக்கு முடிபென்பாரு முளர். (57) 454. குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல. (இ-ள்.) குறைத்தனவாயினும், அவை குறையாது நிறைந்து நின்ற பெயரியல்புடைய எ-று. என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை ஓந்தி நீலமென நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்கு மென்றவாறாம். குறைந்தவழியும் நிறைந்த பெயராகக் கொள்கவென்றவாறாம். குறைக்கப்படுவன பெயரேயாகலின், ‘நிறைப் பெயரியல’ வென்றார். (58) இடைச்சொல் மரபு 455. இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. (இ-ள்.) பிறிதொரு சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதொரு சொல்லான் வேறுபடுக்கப்படுவனவுமெனச் சொல் இருவகைப்படும். பிறிதொரு சொல்லை வேறுபடுத்தலாவது விசேடித்தல்; பிறிதொரு சொல்லான் வேறு படுக்கப்படுதலாவது விசேடிக்கப்படுதல். இடைச்சொல்லெல்லாம் பிறி தொரு சொல்லை வேறுபடுக்குஞ் சொல்லாம் எ-று. வேறுபடுத்தலும் வேறுபடுக்கப்படுதலும் ஆகிய இரண்டும் பொது வகையான் எல்லாச் சொற்குங் கூறாமை எய்துமாகலின், இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச்சொல் லென்றதனான், இவை வேறுபடுக்குஞ் சொல்லாத லல்லது ஒருஞான்றும் வேறுபடுக்கப்படுஞ் சொல்லாகாவென நியமித்தவாறாம். அவை அன்னவாதல் இடையியலுள் ஓதப்பட்ட இடைச் சொல் வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் வரும்வழிக் கண்டுகொள்க. வேற்றுமைச்சொல் வேற்றுமையைச் செய்யுஞ் சொல்லென விரியும். வேற்றுமையெனினும், வேறுபாடெனினு மொக்கும். இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாயினும், அவற் றுள் ஒரு சாரனவற்றை ‘வேற்றுமைச் சொல்’லென் றாள்ப; இயற்பெயருள் (172, 174) ஒரு சாரனவற்றை இயற்பெயரென்றாற்போல வென்பது. இதுவு மொரு நயம். (59) உரிச்சொற்கண்ணும் அவ்வியல்பு 456. உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. (இ-ள்.) உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா என்றவாறு. எனவே, உரிச்சொல் லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். வேறுபடுக்குஞ் சொல்லேயாவன உறு, தவ, நனி, ஏ - என்னுந் தொடக்கத் தன. இருநிலைமையு முடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறு பொருள், தவப்பல, நனி சேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு; கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லனோய், அருஞ் செல்லல்; இன்னற் குறிப்பு, பேரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக் கப்பட்டும் இரு நிலைமையுமுடையவாய் வருமாறும் வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குரு விளங்கிற்று, செல்லறீர எனத் தாமே நின்று வினைகொள்வன, விசேடிக்கப்படுந் தன்மையுடையவாதலின், விசேடிக்கப் படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித் தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடியாதும் வருவனவும், வழக்குஞ் செய்யுளு நோக்கி யுணர்க. வேறுபடுக்குஞ் சொல்லேயாவன இவையெனத் தொகுத்துணர்த் தற்கும், உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய எனச் சூத்திரஞ் சுருங்கு தற்கும், இடையியலுள்ளும் உரியிய லுள்ளும் வையாது, இரண்டு சூத்திரத் தையும் ஈண்டு வைத்தார். (60) வினையெச்சச் சொற்களின் வேறுபட்ட இலக்கணம் 457. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. (இ-ள்.) மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல விலக்கணத்தையுடைய எ-று. அவையாவன: ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய’ (குறுந். 232) எனவும், ‘ஞாயிறு பட்டு வந்தான்’ எனவும், செய்தெனெச்சம் வினைமுதல் (வினை) கொள்ளாது பிறிதின் வினை கோடலும், அஃதீறு திரிதலும்; ‘மோயின ளுயிர்த்த காலை’ (அகம். 5) எனவும், ‘கண்ணியன் வில்லன் வரும்’ எனவும் முற்றுச்சொல்லது திரிபாய் வருதலும்; ஓடிவந்தான் விரைந்து போயினான் எனவும், வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் எனவும், செவ்வன் றெரிகிற்பான், ‘புதுவத னியன்ற வணியன்’ (அகம். 66) எனவும், தம்மை முடிக்கும் வினைக்கட் கிடந்த தொழிலானும் பண்பானுங் குறிப் பானும் உணர்த்தித் தெரிநிலைவினையுங் குறிப்புவினையுமாய் முடிக்குஞ் சொல்லை விசேடித்தலும்; பிறவுமாம். செய்தெனெச்சத்தீறு திரிதல் வினையியலுட் (228) காட்டிப் போந்தாம். ‘பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்து’ என்புழிப் பெருமென்ப தனை ஒருசாரார் வினையெச்ச வாய்பாடென்ப; ஒருசாரார் வினைச்சொற் பற்றி நின்றதோ ருரிச்சொலென்ப. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக்கணமே யன்றிப் பிறவிலக்கணமு முடைய வென்ப துணர்த்தினார். இனி அவையே யன்றி வினையெஞ்சுகிளவியும் பலவிலக்கணத்தன வென்பது பட நின்றமை யான், உம்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை. அவ்விலக்கணம் ஓரியலவன்றித் திரிதலும் வேறு பொருளுணர்த்துதலும் விசேடித்தலு முதலாகிய வேற்றுமையுடையவாகலின், ‘வேறு பல்குறிய’ வென்றார். வினையெச்சத்துள் விசேடித்தே நிற்பனவுமுளவென்பதூஉம் உணர்த்துகின்றாராகலின், இதனை வினையியலுள் வையாது, ஈண்டு விசேடிக்குஞ்சொல் லுணர்த்துவனவற்றொடு வைத்தார். ‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84) என்பது முதலாயின செய்தெ னெச்சம் முற்றாய்த் திரிந்தனவென்றும், ஒடித்துண்டெஞ்சிய என்பது முதலாயின செயவெனெச்சம் செய்தெனெச்சமாய்த் திரிந்தன வென்றும், முன்னருரைத்தாரால் உரையாசிரியரெனின், ‘பெயர்த்தனென் முயங்க’ என்பது முதலாயின எச்சத்திரிபாயின் எச்சப்பொரு ளுணர்த்துவதல்லது இடமும் பாலும் உணர்த்தற்பாலவல்ல. எச்சப் பொருண்மையாவது மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்கும் பொதுவாகிய வினைநிகழ்ச்சியன்றே? அவ்வாறன்றி முற்றுச்சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலுமுணர்த்த லின், அவை முற்றுத்திரிசொல் லெனவேபடும். சொன்னிலை யுணர்ந்து வினை கோடன் மாத்திரத்தான் வினையெச்சமெனின்:- மாரைக் கிளவியும், வினையொடு முடியும் வேற்றுமையும், பிறவுமெல்லாம் வினையெச்ச மாவான் செல்லும்; அதனான் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ‘கண்ணியன் வில்லன் வரும்’ என வினைக்குறிப்புமுற்றாய்த் திரிதற்கேற்ப தொரு வினை யெச்சம் இன்மையானும், அது கருத்தன்மை யறிக. ‘ஓடித்துண்டெஞ்சிய’ என்பதூஉம் ஞாயிறு பட்டு வந்தான் என்ப தூஉம் பிறவினை கொண்டனவாயினும், செய்தெனெச்சத்திற்குரிய இறந்த கால முணர்த்தலான், ஏனைக்காலத்திற்குரிய செயவெனெச்சத்தின் திரிபெனப்படா; செயவெனெச்சத் திரிபாயிற் செயவெனெச்சத்திற்குரிய காலமுணர்த்தல் வேண்டும். மழை பெய்ய மரங்குழைத்தது எனச் செயவெ னெச்சத்திற்கு இறந்தகாலமு முரித்தெனின், காரண காரியப் பொருண்மை யுணர்த்தும்வழியல்லது செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது; ஒடித்துண்டலும் ஞாயிறு படுதலும் எஞ்சுதற்கும் வருதற்குங் காரணமன்மை யான், ஆண்டிறந்த கால முணர்த்தாமையின், செய்தெனெச்சமாய் நின்று தமக்குரிய இறந்தகால முணர்த்தின வெனப்படும். அதனாற் செயவெ னெச்சஞ் செய்தெனெச்சமாய்த் திரிந்தனவென்றலும் அவர் கருத்தன் றென்க. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்தகாலமுணர்த்தலும், ஞாயிறு பட வந்தான் என்பது ஞாயிறு படா நிற்க வந்தான் என நிகழ்கால முணர்த்தலும் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. (61) மாறுபாடுடையன உடனிற்றல் 458. உரையிடத் தியலும் உடனிலை அறிதல். (இ-ள்.) வழக்கிடத்து உடனிற்கற்பால வல்லனவற்றது உடனிலை போற்றுக எ-று. உடனிற்கற்பால வல்லனவாவன தம்முண் மாறுபாடுடையன. மாறுபாடில்லனவற்ற துடனிலைக்கண் ஆராய்ச்சி யின்மையின், உடனிலை யென்றது மாறுபாடுடையனவற்ற துடனிலையேயாம். (எ-டு.) இந்நாழிக்கிந்நாழி சிறிது பெரிது என, உடனிற்கற்பால வல்லாச் சிறுமையும் பெருமையும் உடனின்றவாறு கண்டு கொள்க. சிறிதென்பது பெரிதெனப்பட்ட பொருளை நோக்காது பெரிதென்பதற்கு அடையாய் மிகப் பெரிதன்றென்பதுபட நிற்றலான், அமைவுடைத் தாயிற்று. அறிதலென்பது இவ்வாறு அமைவுடையன கொள்க வென்றவாறு. மாறுபாடுடையன உடனிற்றல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மை யான் இதனைக் கிளவியாக்கத்துட் கூறாது ஈண்டுக் கூறினார். (62) குறிப்பான் உணரும் சொற்கள் 459. முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே இன்ன வென்னுஞ் சொன்முறை யான. (இ-ள்.) சொல்லானன்றிச் சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப் படுஞ் சொல்லுமுள, இப்பொருள் இத்தன்மையவென்று சொல்லுதற்கண் எ-று. (எ-டு.) செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னு மணிந்த செவி என்றும், வெளியதுடுத்த சுற்றம் என்றும், குறிப்பானுணரப் பட்டவாறு கண்டு கொள்க. குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அன்ன பெருஞ்செல்வத்தார் என்பதூஉங் குறிப்பா னுணரப்படும். இது ‘தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும்’ (சொல். 157) என்புழி அடங்குமெனின், ஆண்டுப் பொருணிலை இருவகைத் தென்ப தல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பிற் றோன்றுமென்னும் வேறுபாடு பெறப்படாமையான், ஆண்டடங்காதென்பது. இதுவும் மேலையோத்துக்களுள் உணர்த்துதற் கியைபின்மையான் ஈண்டுணர்த்தினார். (63) இருசொல் ஒருபொரு ளுணர்த்தல் 460. ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார். (இ-ள்.) பொருள் வேறுபாடின்றி ஒரு பொருண்மேல் வரும் இரண்டுசொற் பிரிவின்றித் தொடர்ந்துவரின், அவற்றைக் கடியார் எ-று. (எ-டு) ‘நிவந்தோங்கு பெருமலை’ எனவும் ‘துறுகன் மீமிசை யுறுகண்’ எனவும் வரும். பிரிவில வென்றது, வேறொரு சொல்லான் இடையிடப்படாது நிற்பன வென்றவாறு. இருசொல் ஒரு பொருண்மேல் வருதல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மையான் ஈண்டுக் கூறினார். ‘வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியே நாடறியக் கெளவை யொருங்கு’ என்புழி, வையைக்கிழவன், கூடலார்கோ என்பன ஒரு பொருளை வரைந் துணர்த்தலாற் பிரிவிலவாகலின் வரையப்படாவென்றும், ‘கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகஞ் சார நட’ என்புழிக் காலேகவண்ணன் என்பது அச்சாந்து பூசினாரெல்லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந்துணர்த்தாமையின், அவை பிரிவுடையவாமென்றும், உரையாசிரியர் உரைத்தாராலெனின், அற்றன்று. ‘நாணி நின்றோ ணிலைகண் டியானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோணின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே’ (அகம். 16) என்புழி, ‘வானத் தணங்கருங்கடவு ளன்னோள்’ என்பது மகளிர்க் கெல்லாம் பொதுவாய் நாணி நின்றோளை வரைந்துணர்த்தாதாயினும், சொல்லுவான் குறிப்பான் அவளையே உணர்த்தினாற்போலக் காலேக வண்ணன் என்பதூஉம் பொதுவாயினுஞ் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப் பெருஞ் சேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் நிற்றலான், அவர்க்கது கருத்தன்றென்க. (64) ஒருமைப்பெயர் பன்மைக்காதல் 461. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகும் இடனுமார் உண்டே. (இ-ள்.) ஒருமைக்குரிய பெயர்ச்சொற் பன்மைக் காகுமிடமு முண்டு எ-று. (எ-டு) ‘ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப’ என்புழித் தாயென்னும் ஒருமை சுட்டிய பெயர் இளையரென்பதனாற் றாயரென்னும் பன்மை உணர்த்தியவாறு கண்டுகொள்க. ‘பன்மைக் காகு மிடனுமா ருண்டே’ யென்பது, ஒருமைச்சொற் பன்மைச் சொல்லொடு தொடர்தற்குப் பொருந்துமிட முண்டென்பதூஉம் படநின்றமையான், ‘அஃதை தந்தை யண்ணல் யானை யடு போர்ச் சோழர்’ என ஒருமைச்சொற் பன்மைச்சொல்லொடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச்சொற் பன்மைச்சொல்லொடு மயங்குதலுடைமையான் ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி’ (சொல். 27) என்புழி அடங்காமை யறிக. ஏற்புழிக்கோடலென்பதனான் உயர்திணைக்கண்ணது இம்மயக்க மென்று கொள்க ஆகுமிடமென்பதனான், பன்மையுணர்த்துதற்கும் பன்மைச்சொல் லொடு தொடர்தற்கும் பொருந்தும்வழிக் கொள்க வென்பதாம். (65) ஆற்றுப்படைக்கண் முன்னிலையொருமை பன்மையொடு முடிதல் 462. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் (இ-ள்.) முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல், பன்மையொடு முடிந்ததாயினும், வரையப்படாது; அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளி டத்துப் போற்றியுணரப்படும் எ-று. கூத்தராற்றுப்படையுள் ‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’ (மலைபடு. 50) என நின்ற ஒருமைச் சொற் போய் ‘இரும்பே ரொக்க லொடு பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடு. 157) என்னும் பன்மைச் சொல்லொடு முடிந்தவாறு கண்டுகொள்க. ஈண்டு முன்னிலை யொருமை பெயராதல் அதிகாரத்தாற் (461) கொள்க. ‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே’ (சொல். 461) என்பதனான் இதுவும் அடங்குதலின், இச்சூத்திரம் வேண்டா வெனின், ‘பன்மையொடு முடியுமிடனுமா ருண்டே’ என்னாது, ‘பன்மைக் காகு மிடனுமா ருண்டே’ என்றாராதலின், ஆண்டுப் பன்மைச் சொற் கொண்டு முடியாது ஒருமைச்சொற் பன்மை யுணர்த்துதலும் பன்மைச் சொல்லொடு ஒரு பொருட்டாகிய துணையாய் மயங்குதலு முணர்த்தினார். அதனான் இக்கொண்டுமுடிபு ஆண்டடங்கா தென்பது. அல்லதூஉம், இம்முடிபு செய்யுட் குரித்தென்றமையானும் ஆண்டடங்காமையறிக. பொதுவகையான் ‘ஆற்றுப்படை மருங்கி’ னென்றாராயினும், சுற்றத்தொடு சுற்றத்தலைவனை ஆற்றுப்படுத்தற்கண்ணது இம்மயக்க மென்பது பாதுகாத்துணர்க வென்பார் ‘போற்றல்வேண்டும்’ என்றார். ‘பான்மயக் குற்ற வையக் கிளவி’ (சொல். 23) என்பதனாற் கூறிய ஒருமை பன்மை மயக்கம் வழுவமைதியாயினும் இலக்கணத்தோ டொத்துப் பயின்று வரும். ‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காத’லும், முன்னிலையொருமை பன்மையொடு முடிதலும் அன்னவன்றிச் சிறுவழக்கினவாதலின், ஆண்டு வையாது ஈண்டு வைத்தார். ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தற்கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல் வழக்கிற்கும் ஒக்குமாகலான், ஆற்றுப்படையெனப் பொதுவகையாற் கூறினார். (66) 9. சொல்லதிகாரத்திற்குப் புறனடை இருவகை வழக்கும் தொன்னூல் நெறி பிழையாமை 463. செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். (இ-ள்.) செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கண் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொல்லெல்லாவற்றையும் பல்வேறு செய்கையுடைய தொன்னூனெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத் துணருமாற்றாற் பிரித்துக் காட்டுக எ-று. என்றது, ‘நிலப்பெயர் குடிப்பெயர்’ எனவும், ‘அம்மா மெம்மேம்’ எனவும் பொதுவகையாற் கூறப்பட்டன. அருவாள நிலத்தானென்னும் பொருட்கண் அருவாளன் எனவும்; சோழநிலத்தானென்னும் பொருட் கண் சோழியன் எனவும்; இறந்தகாலத்தின்கண் உண்டனம், உண்டாம் எனவும்; நிகழ்காலத்தின்கண் உண்ணாநின்றனம், உண்ணாநின்றாம், உண்கின்றாம் எனவும்; எதிர்காலத்தின்கண் உண்குவம், உண்பாம் எனவும் வேறுபட்டு வருமன்றே? அவ்வேறுபாடெல்லாம் கூறிற் பல்குமென்றஞ்சிக் கூறிற்றிலராயினும், தொன்னூ னெறியிற் பிழையாமல் அவ்வேறுபா டுணரப் பிரித்துக் காட்டுக நூல்வல்லா ரென்றவாறாயிற்று. இது பிறநூன் முடிந்தது தானுடம்படுதலென்னுந் தந்திரவுத்தி. பிறவுமன்ன. செய்கை - விதி. சொல்வரைந்தறிய வெனவே, வரைந்தோதாது பொதுவகையா னோதப் பட்டவற்றின்மேற்று இப்புறனடை யென்பதாம். இனி ஓருரை:- செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற் கிளக்கப் படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சிநின்ற சொல்லெல்லா வற்றையும் அவ்வத் தொன்னூனெறியிற் பிழையாமைச் சொல்லை வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்காட்டுக என்றவாறு. என்னாற் கிளக்கப்படாது என்பது பெற்றவாறென்னை யெனின், கிளந்தன பிற நூலிற் கொணர்ந்து காட்டல் வேண்டாமையிற் கிளக்கப் படாதன வென்பது பெறப்படுமென்க. புறனடையாற் கொள்ளப்படுவன:- யானு நீயு மவனுஞ் செல்வேம் எனவும், யானு நீயுஞ் செல்வேம் எனவும் ஏனையிடத்திற்குரிய சொல் தன்மைச் சொல்லோ டியைந்தவழித் தன்மையான் முடிதலும்; அவனு நீயுஞ் சென்மின் எனப் படர்க்கைச்சொன் முன்னிலையோடியைந்தவழி முன்னிலையான் முடிதலும்; ‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்’ என்புழிப் பல்லே முள்ளுமெனத் தன்மையாகற்பாலது பல்லோருள்ளு மெனப் படர்க்கைப் பன்மையாயவழி அமைதலும்; ‘முரசுகெழு தானை மூவ ருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும’ (புறம். 35) என்புழி, மூவிருள்ளுமென முன்னிலையாகற் பாலது மூவருள்ளுமெனப் படர்க்கையாயவழி அமைதலும்; ‘இரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழிக் கூர்ங்கோட்டதென ஒருமையாகற்பாலது கூர்ங்கோட்டவெனப் பன்மையாயவழிஅமைதலும் ஆம். பிறவுமுளவேற் கொள்க. அகத்தியமுதலாயின எல்லாவிலக்கணமும் கூறலிற் ‘பல்வேறு செய்தியி னூலெ’ன்றார். இவ்விரண்டுரையும் இச்சூத்திரத்திற் குரையாகக் கொள்க. (67) எச்சவியல் முற்றிற்று. சொல்லதிகாரச் சேனாவரையருரை முற்றிற்று. நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அ ஆவஎன - 9, 216 அ எனப் பிறத்தல். 109 அச்சக் கிளவிக்கு 100 அச்சம் பயமிலி 254 அசைநிலைக் கிளவி 271 அடிமறிச் செய்தி 407 அடைசினை முதல்என 26 அண்மைச் சொல்லிற்கு 131 அண்மைச் சொல்லே 127 அதற்குவினை யுடைமையின் 76 அதனி னியறல் 74 அதிர்வும் விதிர்ப்பும் 316 அதுஇது உதுவென 167 அதுச்சொல் வேற்றுமை 213 அதுவென் வேற்றுமை 94 அத்திணை மருங்கின் 219 அந்தி லாங்க 267 அந்நாற் சொல்லும் 403 அப்பொருள் கூறின் 36 அம்ம என்னும் 153 அம்ம கேட்பிக்கும் 276 அம்முக் கிளவியும் 231 அமர்தல் மேவல் 380 அயல்நெடி தாயின் 145 அர் ஆர் பஎன 206 அரியே ஐம்மை 356 அலமரல் தெருமரல் 310 அவ்வச் சொல்லிற்கு 295 அவ்வழி அவன் இவன் 162 அவ்வே இவ்வென 119 அவற்றின் வரூஉம் 290 அவற்றுள் அழுங்கல் 350 அவற்றுள் அன்னென் 130 அவற்றுள் இஈ யாகும் 121 அவற்றுள் இகுமுஞ் 275 அவற்றுள் இயற்சொற் 398 அவற்றுள் இரங்கல் 359 அவற்றுள் ஈயென் கிளவி 445 அவற்றுள் எழுவாய் 65 அவற்றுள் செய்கென் கிளவி 204 அவற்றுள் செய்யும் 238 அவற்றுள் தடவென் கிளவி 321 அவற்றுள் தருசொல் 29 அவற்றுள் நான்கே 175 அவற்றுள் நிரல்நிறை 405 அவற்றுள் நீயென் 189 அவற்றுள் பன்மை 209 அவற்றுள் பிரிநிலை 431 அவற்றுள் பெயரெனப் 160 அவற்றுள் முதல்நிலை 230 அவற்றுள் முன்னிலைக் 223 அவற்றுள் முன்னிலை தன்மை 226 அவற்றுள் யாதுஎன 32 அவற்றுள் விறப்பே 348 அவற்றுள் வினைவேறுபடூஉம் 53 அவற்றுள் வேற்றுமைத் 413 அவற்றொடு வருவழிச் 235 அவைதாம் அம்ஆம் 202 அவைதாம் இ உ ஐ ஓ 120 அவைதாம் உறுதவ 299 அவைதாம் தத்தங் குறிப்பின் 440 அவைதாம் தத்தம் கிளவி 429 அவைதாம் தத்தம் பொருள் 115 அவைதாம் புணரியல் 250 அவைதாம் பெண்மை 176 அவைதாம் பெயர் ஐ 64 அவைதாம் முன்மொழி 419 அவைதாம் முன்னும் 251 அவைதாம் வழக்கியல் 113 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயரே... 135, 141, 149 அளபெடை மிகூஉம் 125 அளவும் நிறையும் 116 அன் ஆன் அள் ஆள் 205 அன்மையின் இன்மையின் 214 அன்ன பிறவுங் கிளந்த 396 அன்ன பிறவுந் தொன்னெறி 101 அன்ன பிறவும் அஃறிணை 170 அன்ன பிறவும் உயர்திணை 166 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆக ஆகல் என்பது 280 ஆங்க உரையசை 277 ஆடூஉ அறிசொல் 2 ஆண்மை சுட்டிய 181 ஆண்மை திரிந்த 12 ஆண்மை யடுத்த 163 ஆயென் கிளவியும் 212 ஆரும் அருவும் 138 ஆவோ வாகும் 195 ஆறன் மருங்கின் 98 ஆறாகுவதே அதுவெனப் 79 ஆனென் இறுதி 132 இசைத்தலும் உரிய 59 இசைநிறை அசைநிலை 411 இசைப்படு பொருளே 423 இசைப்பிசை யாகும் 309 இடைச்சொல் எல்லாம் 455 இடைச்சொல் கிளவியும் 159 இடையெனப் படுப 249 இதன திதுவிற் றென்னும் 110 இதுசெயல் வேண்டும் 243 இயற்கைப் பொருளை 19 இயற்கையின் உடைமையின் 80 இயற்சொல் திரிசொல் 397 இயற்பெயர்க் கிளவியும் 38 இயற்பெயர் சினைப்பெயர் 174 இயற்பெயர் முன்னர் 270 இயைபே புணர்ச்சி 308 இர் ஈர் மின் என 224 இரட்டைக் கிளவி 48 இரண்டன் மருங்கின் 93 இரண்டா குவதே ஐயெனப் 71 இருதிணைச் சொற்கும் 172 இருதிணைப் பிரிந்த 161 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பல்பெயர் 417 இலம்பாடு ஒற்கம் 360 இறப்பின் நிகழ்வின் 200, 427 இறப்பே யெதிர்வே 247 இறுதியும் இடையும் 103 இறைச்சிப் பொருள் 196 இன்றில உடைய 220 இன்ன பெயரே 193 இனச்சுட் டில்லாப் 18 இனைத்தென 33 ஈதா கொடுவெனக் 444 ஈரள பிசைக்கும் 281 ஈற்றுநின் றிசைக்கும் 286 ஈற்றுப்பெயர் முன்னர் 96 உகப்பே உயர்தல் 305 உகரந் தானே 123 உசாவே சூழ்ச்சி 370 உணர்ச்சி வாயில் 393 உம்உந் தாகும் 292 உம்மை எச்சம் 436 உம்மை எண்ணின் 291 உம்மை தொக்க 289 உம்மை யெண்ணும் 287 உயர்திணை மருங்கின் 421 உயர்திணை யென்மனார் 1 உயாவே உயங்கல் 369 உரிச்சொல் மருங்கினும் 456 உரிச்சொற் கிளவி 297 உருபுதொடர்ந்து 102 உருபென மொழியினும் 24 உருவுட் காகும் 300 உரையிடத் தியலும் 458 உவமத் தொகையே 414 உளவெனப் பட்ட 152 எச்சஞ் சிறப்பே 255 எச்ச வும்மையும் 283 எஞ்சிய கிளவி 225 எஞ்சிய மூன்றும் 439 எஞ்சிய விரண்டன் 144 எஞ்சுபொருட் கிளவி 284 எடுத்த மொழிஇனஞ் 60 எண்ணுங் காலும் 47 எண்ணே காரம் 288 எதிர்மறுத்து 107 எதிர்மறை யெச்சம் 435 எப்பொரு ளாயினும் 35 எய்யா மையே 342 எல்லாச் சொல்லும் 155 எல்லாத் தொகையும் 420 எல்லாம் என்னும் 186 எல்லாரு மென்னும் 164 எல்லே இலக்கம் 269 எவ்வயிற் பெயரும் 68 எவ்வயின் வினையும் 428 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எறுழ்வலி யாகும் 388 எற்றென் கிளவி 263 என்றும் எனவும் 294 என்றென் கிளவி 259 எனவென் எச்சம் 438 ஏ பெற் றாகும் 304 ஏயுங் குரையும் 272 ஏழா குவதே 81 ஏற்றம் நினைவும் 337 ஏனை எச்சம் 232 ஏனைக் காலமும் 248 ஏனைக் கிளவி 190 ஏனைப் புள்ளி 129 ஏனை யிரண்டும் 30 ஏனை யுயிரே 124 ஏனை யுருபும் 111 ஐந்தா குவதே 77 ஐயமுங் கரிப்பும் 384 ஐயுங் கண்ணும் 105 ஐவியப் பாகும் 385 ஒப்பில் போலியும் 278 ஒரு பெயர்ப் பொதுச்சொல் 49 ஒரு பொருள் 42, 399, 460 ஒருமை சுட்டிய எல்லா 183 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் 461 ஒருமை யெண்ணின் 44 ஒருவ ரென்னும் 191 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை யொடுச்சொல் 91 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 217 ஒன்றுவினை மருங்கின் 54 ஓம்படைக் கிளவிக்கு 97 ஓய்தல் ஆய்தல் 330 ஓவும் உவ்வும் 122 கடதற வென்னும் 203 கடிசொல் இல்லைக் 452 கடியென் கிளவி 383 கண்கால் புறமகம் 82 கண்டீர் என்றா 425 கண்ணுந் தோளும் 61 கதழ்வுந் துனைவும் 315 கம்பலை சும்மை 349 கமம்நிறைந் தியலும் 355 கயவென் கிளவி 322 கருமம் அல்லாச் 84 கருவி தொகுதி 354 கவர்வு விருப்பாகும் 362 கவவகத் திடுமே 357 கழிவே ஆக்கம் 252 கழுமென் கிளவி 351 கள்ளொடு சிவணும் 169 கறுப்புஞ் சிவப்பும் 372 கன்றலுஞ் செலவும் 86 காப்பின் ஒப்பின் 72 காலந் தாமே 199 காலம் உலகம் 57 கிளந்த அல்ல 296, 396 கிளந்த இறுதி 150 கு ஐ ஆனென 108 குடிமை ஆண்மை 56 குத்தொக வரூஉங் 99 குருவுங் கெழுவும் 301 குறித்தோன் கூற்றம் 55 குறிப்பினும் வினையினும் 201 குறைச்சொல் கிளவி 453 குறைத்தன ஆயினும் 454 கூர்ப்புங் கழிவும் 314 கூறிய கிளவி 390 கூறிய முறையின் 69 கெடவரல் பண்ணை 319 கேட்டை என்றா 426 கொடுவென் கிளவி 447, 448 கொல்லே ஐயம் 268 சாயன் மென்மை 325 சிதைந்தன வரினும் 402 சிறப்பி னாகிய 41 சினைநிலைக் கிளவிக்கு 85 சீர்த்தி மிகுபுகழ் 312 சுட்டுமுத லாகிய 40 சுட்டு முதற் பெயரும் 148 சுட்டு முதற் பெயரே 142 சுண்ணந் தானே 406 செந்தமிழ் சேர்ந்த 400 செப்பினும் வினாவினும் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூச் 228 செய்தெ னெச்சத்து 239 செய்யாய் என்னும் 450 செய்யுள் மருங்கினும் 463 செயப்படு பொருளைச் 246 செயற்கைப் பொருளை 20 செல்லல் இன்னல் 302 செலவினும் வரவினும் 28 செழுமை வளனும் 352 சேரே திரட்சி 363 சொல்லென் எச்சம் 441 சொல்லெனப் படுப 158 ஞெமிர்தலும் பாய்தலும் 361 தகுதியும் வழக்கும் 17 தஞ்சக் கிளவி 266 தடவுங் கயவும் 320 தடுமாறு தொழிற்பெயர்க்கு 95 தத்தம் எச்சமொடு 237 தநநு எஎன 154 தநநு எஎனும் 410 தன்மேல் செஞ்சொல் 437 தன்மைச் சுட்டின் பன்மைக்கு 192 தன்மைச் சொல்லே 43 தன்மை சுட்டலும் 25 தன்னு ளுறுத்த 187 தாமென் கிளவி 184 தாவென் கிளவி 446 தாவே வலியும் 344 தானென் கிளவி 185 தானென் பெயரும் 137 திணையொடு பழகிய 197 தீர்தலுந் தீர்த்தலும் 318 துயவென் கிளவி 368 துவன்றுநிறை வாகும் 332 துவைத்தலுஞ் சிலைத்தலும் 358 தெரிநிலை யுடைய 171 தெரிபுவேறு 157 தெவ்வுப் பகை 346 தெவுக்கொளல் 345 தெளிவின் ஏயுஞ் 261 தேற்றம் வினாவே 257 தொழிலிற் கூறும் 133 தொழிற்பெய ராயின் 139 நம்பும் மேவும் 329 நளியென் கிளவி 323 நன்றீற்று ஏயும் 282 நன்றுபெரி தாகும் 343 நனவே களனும் 376 நான்கா குவதே 75 நிகழூஉ நின்ற 173 நிரல்நிறை சுண்ணம் 404 நிலப்பெயர் குடிப்பெயர் 165 நிலனும் பொருளும் 234 நிறத்துரு உணர்த்தற்கும் 373 நின்றாங்கு இசைத்தல் 58 நீயிர் நீயென 188 நும்மின் திரிபெயர் 143 நொசிவும் நுழைவும் 374 பசப்புநிற னாகும் 307 படரே உள்ளல் 340 பண்புகொள் பெயரும் 134, 140 பண்புதொக வரூஉங் 418 பணையே பிழைத்தல் 339 பயப்பே பயனாம் 306 பரவும் பழிச்சும் 382 பல்ல பலசில 168 பல்லோர் படர்க்கை 227 பலவயி னானும் 51 பழுது பயம் இன்றே 324 பன்முறை யானும் 233 பன்மை சுட்டிய 182 பன்மையும் 208, 215, 218, 221 பால்மயக் குற்ற 23 பாலறி மரபின் 211 பிண்டப் பெயரும் 90 பிணையும் பேணும் 338 பிரிநிலை வினாவே 256 பிரிநிலை வினையே 430 பிறிதுபிறி தேற்றலும் 104 பின்முன் கால்கடை 229 புதிதுபடற் பொருட்டே 379 புலம்பே தனிமை 331 புள்ளியு முயிரும் 151 புனிறென் கிளவி 375 பெண்மைச் சினைப்பெயர் 177 பெண்மை சுட்டிய 4, 178, 180 பெண்மை முறைப் பெயர் 179 பெயர்நிலைக் கிளவி காலம் 70 பெயர்நிலைக் கிளவியின் 449 பெயரி னாகிய 67 பெயரினும் தொழிலினும் 50 பெயரெஞ்சு கிளவி பெயரொடு 433 பெயரெஞ்சு கிளவியும் 236 பேநாம் உருமென 365 பையுளுஞ் சிறுமையும் 341 பொருட்குத்திரி பில்லை 392 பொருட்குப் பொருள் 391 பொருண்மை சுட்டல் 66 பொருண்மை தெரிதலும் 156 பொருள்தெரி மருங்கின் 408 பொருளொடு புணராச் 37 பொற்பே பொலிவு 335 மகடூஉ மருங்கின் 194 மதவே மடனும் 377 மல்லல் வளனே 303 மழவுங் குழவும் 311 மற்றென் கிளவி 262 மற்றைய தென்னுங் 264 மறைக்குங் காலை 443 மன்றவென் கிளவி 265 மன்னாப் பொருளும் 34 மாதர் காதல் 328 மாரைக் கிளவியும் 207 மாலை இயல்பே 313 மாவென் கிளவி 273 மிக்கதன் மருங்கின் 242 மிகுதியும் வனப்பும் 378 மியாஇக மோமதி 274 முதல்முன் ஐவரின் 88 முதலிற் கூறுஞ் 114 முதலுஞ் சினையும் 89 முதற்சினைக் கிளவிக்கு 87 முந்நிலைக் காலமும் 240 முரஞ்சன் முதிர்வே 333 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத் 285 முறைப்பெயர் 136, 147 முறைப்பெயர் மருங்கின் 126 முன்னத்தின் உணரும் 459 முன்னிலை சுட்டிய 462 முன்னிலை முன்னர் 451 முன்னிலை வியங்கோள் 222 முனைவு முனிவாகும் 386 மூன்றனும் ஐந்தனும் 92 மூன்றா குவதே 73 மெய்பெறக் கிளந்த 389 மொழிப்பொருட் காரணம் 394 மொழிமாற் றியற்கை 409 யாஅர் என்னும் 210 யாகா பிறபிறக்கு 279 யாணுக் கவினாம் 381 யாத னுருபிற் கூறிற்று 106 யாதுஎவன் என்னும் 31 ரஃகான் ஒற்றும் 7 வடசொற் கிளவி 401 வண்ணத்தின் வடிவின் 416 வண்ணம் வடிவே 78 வம்பு நிலையின்மை 327 வயவலி யாகும் 366 வயாவென் கிளவி 371 வறிது சிறிதாகும் 336 வன்புற வரூஉம் 244 வார்தல் போகல் 317 வாராக் காலத்தும் 241 வாராக் காலத்து வினைச்சொல் 245 வாரா மரபின 422 வாளொளி யாகும் 367 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 வியலென் கிளவி 364 விரைசொல் லடுக்கே 424 விழுமஞ் சீர்மை 353 விழைவின் தில்லை 260 விழைவே காலம் 253 விளிகொள் வதன்கண் 63 விளியெனப் படுப 118 விறப்பும் உறப்பும் 347 வினாவுஞ் செப்பே 14 வினையின் தொகுதி 415 வினையின் தோன்றும் 11 வினையினும் பண்பினும் 146 வினையெஞ்சு கிளவிக்கு 432 வினையெஞ்சு கிளவியும் 457 வினையெனப் படுவது 198 வினையே குறிப்பே 258 வினையே செய்வது 112 வினையொடு நிலையினும் 293 வினைவேறு படூஉம் 52 வெம்மை வேண்டல் 334 வெளிப்படு சொல்லே 298 வேற்றுமைத் தொகையே 412 வேற்றுமை தாமே 62 வேற்றுமைப் பொருளை 83 வேறுவினைப் பொதுச் 46 வையே கூர்மை 387 ளஃகான்ஒற்றே மகடூஉ 6 னஃகான் ஒற்றே ஆடூஉ 5 னரலள என்னும் 128 சொல் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அ அஞ்சினம் 202 அஞ்சினாம் 202 அஞ்சினெம் 202 அஞ்சினேம் 202 அணிலே 151 அது 167 அத்தா 126 அத்தாய் 126 அரசர் 165 அரிவாள் 415 அருந்திறல் 56 அருங்குரைத்து 249 அருவாளன் 165, 463 அல்லது 229 அல்லள் 214 அல்லன் 214 அல்லால் 229 அவ் 167 அவள் 161 அவன் 65, 157 அவை 167 அழியல் 450 அன்றி 229 அன்னா 126 அன்னாய் 126 ஆ ஆ 65, 169 ஆக்கள் 169 ஆகி 228 ஆடரங்கு 415 ஆடு 161 ஆணை 402 ஆய் 228 ஆயர் 165 ஆனம் 296 இ இஃது 167 இடையன் 11 இரீஇ 228 இல்ல 168 இல்லத்தான் 213 இல்லது 170 இல்லன 170 இல 220 இலர் 214 இலள் 214 இலன் 214 இவ் 167 இவ்வாளன் 163 இவர் 157 இவன் 162 இளையீர் 140 இளையீரே 140 இன்றி 229 இன்று 220 உ உஃது 167 உடீஇ 228 உடையர் 214 உடையள் 214 உடையன் 214 உண் 450 உண்கின்ற 216 உண்கின்றது 217 உண்கின்றன 216 உண்கின்றனம் 202 உண்கின்றனெம் 202 உண்கின்றனேம் 202 உண்கின்றாம் 202, 463 உண்கின்றேம் 202 உண்கு 203 உண்கும் 7, 202 உண்குவ 9, 216 உண்குவம் 202, 463 உண்குவிர் 224 உண்குவீர் 224 உண்ட 9 உண்குவென் 203 உண்டது 217 உண்டல் 70 உண்டன 9, 216 உண்டன்று 217 உண்டனம் 202, 463 உண்டனர் 7, 205 உண்டனள் 6 உண்டனன் 5, 205, 249 உண்டனிர் 224 உண்டனென் 203 உண்டனெம் 202 உண்டனேம் 202 உண்டனை 223 உண்டாம் 463 உண்டாய் 223 உண்டி 223 உண்டாள் 6 உண்டார் 7, 206 உண்டான் 5, 70, 198, 200, 201, 202, 205, 249 உண்டியோ 13, 14 உண்டிலன் 236 உண்டு 203, 228 உண்டீ 451 உண்டீர் 224 உண்டும் 7, 202 உண்டேன் 203 உண்ணலன் 236, 450 உண்ணா 9, 216, 228 உண்ணாகிடந்தனம் 202 உண்ணாது 450 உண்ணாநிற்கும் 202 உண்ணாநிற்பல் 202 உண்ணாநின்ற 9, 216 உண்ணாநின்றம் 202 உண்ணாநின்றள் 6 உண்ணாநின்றது 217 உண்ணாநின்றன 9, 216 உண்ணாநின்றனம் 202, 463 உண்ணாநின்றனர் 7, 206 உண்ணாநின்றனள் 6 உண்ணாநின்றனன் 5, 205 உண்ணாநின்றனிர் 224 உண்ணாநின்றனெம் 202 உண்ணாநின்றனென் 203 உண்ணாநின்றனேம் 202 உண்ணாநின்றனை 223 உண்ணாநின்றாம் 463 உண்ணாநின்றாய் 223 உண்ணாநின்றார் 7, 206 உண்ணாநின்றாள் 205 உண்ணாநின்றான் 5, 200, 205 உண்ணாநின்றிலன் 236 உண்ணாநின்றீர் 224 உண்ணாநின்றேம் 202 உண்ணாநின்றேன் 203 உண்ணாவிருந்தனம் 202 உண்ணாய் 450 உண்ணான் 236 உண்ணிய 228 உண்ணியர் 228 உண்ணேன் 13, 14, 450 உண்ப 9, 206, 216 உண்பது 217 உண்பர் 7, 206 உண்பல் 14, 202 உண்பள் 6 உண்பன 9, 216 உண்பாக்கு 229 உண்பாம் 463 உண்பாய் 223 உண்பார் 7, 206 உண்பாள் 6, 205 உண்பான் 5, 200, 205, 229 உண்பேன் 203 உண்பை 223 உண்மார் 7 உண்மின் 224 உது 167 உந்து 399 உரிஞபு 228 உரிஞி 228 உரிஞியது 217 உரிஞினம் 202 உரிஞினாம் 202 உரிஞினெம் 202 உரிஞினேம் 202 உரிஞுகு 203 உரிஞுதும் 202 உரிஞுப 206 உரிஞுவ 216 உரிஞுவம் 202 உரிஞுவன 216 உரிஞுமின் 224 உரைக்க 202 உரைக்கும்வழி 229 உரைக்குமிடத்து 229 உரைத்தவழி 229 உரைத்தவிடத்து 229 உரைத்தனம் 202 உரைத்தனெம் 202 உரைத்தனேம் 202 உரைத்தாம் 202 உரைத்தி 202 உரைத்திசினோரே 250 உரைத்தேம் 202 உரைப்ப 228 உவ் 167 உவ்வாளன் 163 உளர் 214 உவன் 162 உவை 167 உழவோன் 195 உழாஅன் 195, 135 உள்ளது 170 உள்ளன 170 உள 220 உளள் 214 உளன் 214 ஊ ஊர 131 ஊரன் 197 எ எஞ்சி 228 எஞ்சியென 228 எட்டி 166 எமர் 154, 410 எமள் 154, 410 எமன் 154, 410 எம்மார் 154, 410 எம்மாள் 154, 410 எம்மான் 154, 410 எல்லாரும் 164 எல்லாவற்றையும் 250 எல்லீரும் 164 என்மனார் 249 என்றிசினோர் 279 ஏ ஏற்றி 228 ஏனம் 296 ஏனாதி 166 ஒ ஒருத்தி 44 ஒருவன் 44 ஒருவர் 44 ஒன்று 168 ஓ ஓடி 228 ஓடுவ 216 ஓனம் 296 க கச்சினன் 213 கடல் 169 கண் 56 கண்ணன் 402 கமுகு 398 கரிது 8, 427 கரிய 220 கரியது 168, 220 கரியம் 215 கரியர் 7, 215 கரியள் 6, 215 கரியன் 5, 198, 201, 213, 215 கரியன 9 கரியாம் 215 கரியாய் 146, 224 கரியார் 7, 215 கரியாள் 6, 215 கரியிர் 224 கரியீர் 140, 224 கரியீரே 140 கரியெம் 215 கரியென் 215 கரியேம் 215 கரியேன் 215 கரியை 224, 427 கருங்களமர் 17 கருங்குதிரை 416 கருங்குவளை 182 கருவாடு 17 கலக்கினம் 202 கழலினாய் 224 கழலினிர் 224 கழலினீர் 224 கழலினை 224 கழுதை 169 கற்குபு 228 கறுகறுத்தது 48 கா 90 காடு 90 காத்தை 426 காவிதி 166 காளை 197 கிடவாய் 450 கிழவோன் 195 கிழாஅன் 195 கிழாஅஅஅன் 135 குங்குமம் 401 குண்டுகட்டு 8, 217 குதிரை 169 குதிரைகள் 169 குரிசில் 144 குருகு 53 குருடு 56 குறுஞ்சூலி 18 குறுகுறுத்தது 48 குறுந்தடி 18 குறுந்தாட்டு 217 கூத்தீர் 138 கூயிற்று 217 கூயின்று 217 கூழ் 398 கெழீஇயிலி 56 கேண்மியா 251, 274 கொடாநின்ற 9 கொடாநின்றன 9 கொடுத்த 9 கொடுத்தன 9 கொடுப்ப 9 கொடுப்பன 9 கொண்மார் 7 கொல்யானை 420, 415 கொல்லன் 165 கொற்றன் 70, 174 கொறுகொறுத்தார் 48 கொன்னூர் 251 கோஒஒஒள் 149 கோட்ட 9 கோமாள் 145 கோவே 122 ச சட்டி 452 சமழ்ப்பு 452 சள்ளை 452 சாத்த 150 சாத்தற்கு 69 சாத்தன் 70 சாத்தன்கண் 69 சாத்தனதற்கு 104 சாத்தனதன்கண் 104 சாத்தனதனின் 104 சாத்தனதனை 104 சாத்தனதனொடு 104 சாத்தனது 69 சாத்தனின் 69 சாத்தனை 69 சாத்தனொடு 69 சாத்தா 150 சாத்தி 150 சாத்தீ 120, 150 சில்லவை 170 சில 168 சிறாஅஅர் 141 சிறுவெள்வாய் 17 சினைஇ 228 சுருசுருத்தது 48 செங்கேழ் 456 செய்ய 220 செய்யது 168, 201 செய்யன் 213 செய்யாய் 134 செய்யான் 165 செல்கம் 202 செல்வ 9 செல்வது 217, 168 செல்வல் 68 செல்வன 9 செல்வார் 165 சென்மார் 7 சென்மியா 274 சென்ற 216 சென்றது 201, 217, 427 சென்றன்று 217 சென்றன 216 சென்றனன் 427 சென்றனை 427 சென்றாய் 133 சென்றான் 157 சென்றீ 451 சென்று 228 சேர்ப்பா 130 சேர்ப்பன் 165 சேரமான் 132, 165 சேறு 203 சேறும் 7, 202 சோழா 130 சோழியன் 463, 165 சோறீ 445 சோறு 398 த தகைத்த 9 தகைத்தன 9 தகைப்ப 9 தகைப்பன 9 தகையாநின்ற 9 தகையாநின்றன 9 தச்சன் 165 தந்தாய் 150 தந்துவை 400 தந்தை 150, 410 தந்தையர் 165 தம் 450 தம்மாள் 154, 400 தம்மான் 154 தம்முனா 129 தமர் 154, 410 தமள் 154, 410 தமன் 154, 410 தயிர் 398 தள்ளை 410 தாஅய் 228 தாயர் 165 தாயிற்று 8 திருமுகு 203 திருமுதும் 202 திருமுவ 216 திருவே 123 தின்குவ 9, 216 தின்மின் 224 தின்றல் 70 தின்றனம் 202 தின்றனெம் 202 தின்றனேம் 202 தின்றாம் 202 தின்றான் 70 தின்றி 223 தின்றேம் 202 தின்னா 9, 216 தின்னிய 228 தின்னியர் 228 தீ 398 தீங்கரும்பு 416 தீயர் 214 தீயள் 214 தீயன் 214 துஞ்சினார் 17 துணங்கையன் 213 துறைவ 131 தூஉய் 228 தெங்கு 169, 398 தெருட்டினம் 202 தெனாது 220 தொக்க 216 தொக்கன 216 ந நக்கனம் 202 நக்கனெம் 202 நக்காம் 202 நக்கு 228 நக்கேம் 202 நங்காய் 121 நங்கை 163 நட்டம் 402 நட 450 நடக்கின்றது 217 நடவாநின்றது 217 நம்பி 161, 163 நம்பீ 121 நம்பீஇ 152 நம்மார் 154, 410 நம்மாள் 154, 410 நம்மான் 154, 410 நமர் 154, 410 நமள் 154, 410 நமன் 154, 410 நரியே 151 நல்லர் 214 நல்லள் 214 நல்லன் 214 நாகம் 53 நாட்டாய் 224 நாட்டினீர் 224 நிலம் 398 நின்றாய் 146 நின்றை 426 நீர் 398 நீலம் 18 நும்மார் 154, 410 நும்மாள் 154, 410 நும்மான் 154, 410 நுமர் 154, 410 நுமள் 154, 410 நுமன் 154, 410 நூறு 168 ப படை 90 பத்து 168 பதினைந்து 417 பராஅய் 228 பராரை 416 பல்ல 168 பல்லவை 170 பல 168 பலா 169 பறி 17 பாகன் 11 பாசிலை 403 பாடுகம் 202 பாடுவ 216 பாய்புனல் 361 பார்ப்பார் 165 பார்ப்பீர் 138 பால் 398 பாவை 56 பிற 17 பிறர் 154, 166 பிறள் 154, 166 பிறன் 154, 166 பிறிது 170 புக்கது 217 புக்கன்று 217 புக்கீ 451 புலியான் 449 புலியே 151 புறத்தன் 213 பூசையான் 449 பூண்டு 150 பூண்டே 150 பூயிலான் 166 பெண்டாட்டி 161, 163 பெண்டிரோ 129 பெண்பால் 145 பெண்மகள் 163 பெண்மகன் 161, 164 பெருகிற்று 17 பெருவிறல் 56 பெற்றம் 400 பேடிகள் 4 பேடிமார் 4 பேடியர் 4 பொறியறை 56 போ 450 போகி 228 போகிய 228 போகியர் 229 போய் 164, 228 போய 216 போயது 217 போயன 216 போயிற்று 217 போயின்று 217 போயின 216 ம மக்கள் 101 மக்காள் 150, 163 மகடூ 161 மகவே 124 மகள் 161 மகளே 147 மகன் 163 மகனே 136 மகாஅஅஅர் 141 மகிழ்நன் 197 மஞ்ஞை 399 மணி 401 மதவிடை 378 மரமே 15 மருமகளே 147 மருமகனே 136 மலை 169 மலையமான் 132, 152, 165 மற்றையான் 154, 166 மற்றையஃது 264 மற்றையவன் 264 மற்றையன 170 மற்றையார் 154, 166 மற்றையாள் 154, 166 மா 398 மாஅஅல் 149 மாந்தர் 163 மீயடுப்பு 17 மீளி 197 முடம் 56 முடவன் 174 மெல்லிலை 416 மேரு 401 மொறுமொறுத்தார் 48 ய யா 31, 167 யாங்கு 31 யாண்டு 31 யாது 31 யார் 31 யாவர் 31 யாவள் 31 யாவன் 31 யாவை 31, 167 யான் 162 யானை 56 வ வட்டப்பலகை 416 வட்டம் 402 வடாது 220 வண்ணத்தான் 166 வணிகர் 165 வந்த 216 வந்தன்று 217 வந்தன 216 வந்தாய் 133 வந்தான் 157 வந்தில 217 வந்திலர் 217 வந்திலள் 217 வந்திலன் 217 வந்தின்று 217 வந்தீரே 139 வந்து 228 வம் 450 வருகுப 206 வருதும் 7 வருப 7 வருமார் 7 வருவ 9, 216 வருவது 8, 168 வருவார் 165 வருவான் 229 வல்லர் 214 வல்லள் 214 வல்லன் 214 வளி 398 வனைந்தான் 112 வா 450 வாயிலான் 166 வாராநின்றது 8 வாரி 401 விண்டு 399 விலங்கல் 399 வெங்காமம் 334 வெண்களமர் 17 வெள்யாடு 17 வெள்ளாடை 418 வெள்ளொக்கலர் 459 வெளியை 201 வெற்பன் 165 வெற்பு 399 வேட்டுவர் 165 வேந்தே 122 வேபாக்கு 229 வேளாளர் 165 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அஃதியாது 66 அஃதெவன் 66, 219 அகத்தியனாற் தமிழுரைக்கப் பட்டது 73 அடிசில் அயின்றார், மிசைந்தார் 46 அடிமை நல்ல 56 அடிமை நன்று 56 அடைக்காயையெண்ணும் 72 அடைகடல் 419 அணியணிந்தார், மெய்ப்படுத்தார் 46 அதனிற்சேய்த்திது 78 அதுஉண்டஊண் 225 அதுஉண்ணுமூண் 225 அதுஉண்மன 225 அதுசெல்க 225 அதுபிறக்கு 279 அதுவந்தது 11 அதுவரும் 225 அதுவன்று 220 அதுவில்லை 225 அதுவேறு 225 அந்தணர்க் காவைக் கொடுத்தான் 75 அந்நெறி யீண்டுவந்து கிடந்தது 422 அம்மலைவந்து இதனொடு பொருந்திற்று 422 அம்மாசாத்தா 153 அரசர் பெருந்தெரு 49 அரசரைச்சார்ந்தான் 84 அரசன் ஆகொடுக்கும் பார்ப்பான் 234 அரசன்க ணிருந்தான் 82 அரசனது முதிர்வு 80 அரசனது முதுமை 80 அரசனோ டிளையர் வந்தார் 91 அரிசி தானே யட்டது 246 அரிசியை யளக்கும் 72 அலமரலாயம் 310 அவட்குக் குற்றேவல் செய்யும் 111 அவர் செல்க 225 அவர் யார் 210 அவர் வந்தார் 11 அவர் வேறு 225 அவளுண்ணுமூண் 225 அவ ரில்லை 225 அவருண்டவூண் 225 அவருண்ணுமூண் 225 அவருண்மன 225 அவரு ளிவனே கள்வன் 257 அவலவ லென்கின்றன நெல் 422 அவள் செல்க 225 அவள் யார் 210 அவள் வந்தாள் 11 அவள்வரும் 225 அவள் வேறு 225 அவளது குற்றேவல் செய்யும் 111 அவ ளில்லை 225 அவளுண்டவூண் 225 அவளுண்மன 225 அவற்குக் கொடுத்தான் 30 அவற்குச் செய்யத்தகு மக்காரியம் 110 அவற்குத் தக்கா ளிவள் 76 அவற்குத் தமன் 76 அவற்கு நட்டான் 76 அவற்குப் பகை 76 அவற்கு மாற்றான் 76 அவற்று ளெவ்வெருது கெட்டது 32 அவன்கட் சென்றான் 30 அவன்கண் வந்தான் 29 அவன் செல்க 225 அவன் யார் 210 அவன் வந்தான் 11 அவன்வரும் 225 அவன் வேறு 225 அவன்றான் வந்தான் 38 அவனி னளிய னிவன் 78 அவனுண்டவூண் 225 அவனுண்ணுமூண் 225 அவனுண்மன 225 அவனு நீயுஞ் சென்மின் 463 அவனே கொண்டான் 431 அவனொருவனு மறங்கூறும் 38 அவை செல்க 225 அவை யில்லை 225 அவை யுண்ணு மூண் 225 அவை யுண்மன 225 அவை யெவன் 219 அவை வந்தன 11 அவை வரும் 225 அவை வேறு 225 அறங் கறக்கும் 105 அறஞ்செய்தான் றுறக்கம்புகும் 60 அறஞ் செய்து துறக்கம் புக்கான் 57 அறத்தை யரசன் விரும்பினான் 237 அறத்தை யாக்கும் 72 அறிவானமைந்த சான்றோர் 74 அனைத்துங் கொடால் 285 ஆ ஆ கரிது 66 ஆகாயத்துக்கட் பருந்து 82 ஆ கிடந்தது 66 ஆ கொடுத்த பார்ப்பான் 234 ஆங்குச் சென்றான் 30 ஆங்கு வந்தான் 29 ஆசிரியன் பேரூக்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் 42 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றான் 42 ஆசிரியன் வந்தான் 42 ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் 91 ஆ செல்க 66 ஆ டரங்கு 415 ஆடிய கூத்தன் 234 ஆடை தா 446 ஆடை யொலிக்குங் கூலி 234 ஆடை யொலித்த கூலி 234 ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இஃதோ தோன்றுவார் 23 ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ தோன்றாநின்ற உருபு 23 ஆண்மகனல்லன் பெண்டாட்டி 25 ஆண்மை தீது 56 ஆண்மை நன்று 56 ஆ தீண்டு குற்றி 49 ஆப் பி 443 ஆ பல 66 ஆலின்கட் கிடந்தது 82 ஆ வந்தது 171 ஆ வந்தன 171 ஆ அல்ல 66 ஆ வில்லை 66 ஆவிற்குக் கன்று 110 ஆவின் கன்று 110 ஆ வுண்டு 66 ஆவு மாயனுஞ் செல்க 45 ஆறு சென்ற வியர் 234 ஆனதர் 49 ஆனை யிலண்டம் 443 இ இஃதொரு குத்து 117 இஃதோ ரேறு 117 இக்காட்டுட் போகிற் கூறை கோட் பட்டான் 245 இக்காட்டுட் போகிற் கூறை கோட் படும் 245 இக்குடம் பொன் 114 இக்குன் றக்குன்றோ டொன்றும் 422 இகழ்ச்சியிற் கெட்டான் 78 இச்சொற்குப் பொருள் யாது 31 இச்சொற்குப் பொருளெவன் 31 இசையது கருவி 80 இதனிற் கடி திது 78 இதனிற் சில விவை 78 இதனிற் சிறந்த திது 78 இதனிற் சிறி திது 78 இதனிற் பல விவை 78 இதனிற் பழை திது 78 இதனிற் புதி திது 78 இதனிற் பெரி திது 78 இதனிற்றண்ணி திது 78 இதனிற் றீ திது 78 இதனிற்றீவி திது 78 இதனின் முதி திது 78 இதனின் மெலி திது 78 இதனின் வட்ட மிது 78 இதனின் வலி திது 78 இதனின்வெய் திது 78 இதனினன் றிது 78 இதனி னாறு மிது 78 இதனி னிழிந்த திது 78 இதனி னிளை திது 78 இதனி னூங்கு 77 இதனினெடி திது 78 இந்நாழிக் கிந்நாழி சிறிது பெரிது 458 இந்நெற் பதக்கு 116 இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும் 422 இப்பயறு தூணி 116 இப்பொன் றொடி 116 இம்மணி நீலம் 114 இம்மரங்களுட் கருங்காலி யாது 32 இம்மா வயிரம் 53 இம்மா வெளிறு 53 இய மியம்பினார், படுத்தார் 46 இயைந் தொழுகும் 308 இரண்டனுட்கூர்ங்கோட்ட காட்டுவல் 463 இருந்தான் குன்றத்து 104 இருந்தான் குன்றத்துக்கண் 103 இரும்பு பொன்னாயிற்று 420 இலை நட்டு வாழும் 114 இவ்வாடை கோலிகன் 114 இவ்வாடையு மந்நூலா னியன்றது 76 இவ்வுரு குற்றி யாம் 25 இவ்வுருபு குற்றியன்று மகன் 25 இவ்வெள்ளி துலாம் 115 இவட்குக் கொள்ளு மிவ்வணி 110 இவர் கட்டிலேறினார் 50 இவர்பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர் 247 இவர் வந்தார் 27 இவர் வாழ்க்கைப்பட்டார் 50 இவள்கண்ணி னிவள் கண் பெரிய 16 இவள் கண்ணி னிவள் கண் பெரியவோ 16 இவள்கண்ணொக்கு மிவள்கண் 16 இவள்கண்ணொக்குமோஇவள்கண் 16 இவள்பண்டு இப்பொழிலகத்து விளையாடும் 248 இவற்குக் காலமாயிற்று 57 இவன்குற்றி யல்லன் 25 இவன் யார் 68 இவனி னில னிவன் 78 இவனி னுடைய னிவன் 78 இற்க ணிருந்தான் 82 இறந்தபின் இளமை வாராது 232 இன்றிவ்வூர்ப்பெற்றமெல்லா மறங்கறக்கும் 50 இன்னற் குறிப்பு 456 ஈ ஈங்கு வந்தான் 29 ஈதொன்று குருடு 38 உ உடம்பு நுணுகிற்று 57 உண்குபு வந்தான் 230 உண்ட சாத்தன் 433 உண்ட சோறு 234 உண் டருந்து 403 உண்டான் சாத்தன் 234, 429 உண்டான் வந்த சாத்தன் 237 உண்டான்தின்றான் ஓடினான் பாடி னான் சாத்தன் 429 உண்டு உண்டு 411 உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் 233 உண்டு பருகூத் தின்குபு வந்தான் 233 உண்டும்தின்றும் பாடியும் வந்தான் 293 உண்டு வந்தான் 239 உண்டு விருந்தொடு வந்தான் 237 உண்டெனப் பசி கெட்டது 228 உண்டேஎ மறுமை 257 உண்ண வந்தான் 228 உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் 293 உண்ணாக் காலம் 236 உண்ணாச் சோறு 236 உண்ணாது வந்தான் 236 உண்ணாமைக்குப் போயினான் 236 உண்ணா வில்லம் 236 உண்ணா வூண் 236 உண்ணுஞ் சாத்தன் 433 உண்ணு மூண் 234 உண்ணூ வந்தான் 230 உயிர்நீத் தொருமகன் கிடந்தான் 57 உயிர் போயிற்று 57 உயி ருணரும் 19 உயி ரெத்தன்மைத்து 13 உயிரென உடலென வின்றி யமையா 287 உருகெழு கடவுள் 300 உரைத்தென உணர்ந்தான் 228 உவாப்பதினான்கு 417, 419 உவாப்பதினான்கு கழிந்தன 67 உழுது சாத்தன் வந்தான் 237 உழுது வந்தது 225 உழுது வந்தவன் 432 உழுது வந்தன 225 உழுது வந்தாய் 225 உழுது வந்தார் 225 உழுது வந்தான் 225, 239, 432 உழுது வந்தீர் 225 உழுது வந்தேம் 225 உழுது வந்தேன் 225 உழுது வருதல் 432 உழுது வருவாய் 239 உழு தேரொடு வந்தான் 237 உழு தோடி வந்தான் 237 உழுந்தல்ல தில்லை 35 உழுந்தன்றி யில்லை 35 உறந்த விஞ்சி 347 உறு கால் 389, 392, 156 உறு பொருள் 456 ஊ ஊர்க்கட் செய் 82 ஊர்க்கட் சென்றான் 110 ஊர்க்கண் மரம் 82 ஊர்க்க ணுற்றது செய்வான் 110 ஊர்க்குச் சென்றான் 110 ஊர்க்குச் சேயன் 110 ஊர்க்குத் தீர்ந்தான் 110 ஊர்க் குற்றது செய்வான் 110 ஊர்ப்புறத் திருந்தான் 82 ஊரகத் திருந்தான் 82 ஊரிற் சேயன் 110 ஊரிற் றீர்ந்தான் 78 ஊரைக் காக்கும் 72 ஊரைச் சாரும் 72 ஊரைப் புரக்கும் 72 ஊரை யளிக்கும் 72 எ எந்தை வந்தான் 27, 57 எம்மரசனி னும்மரசன் முறை செய்யும் 16 எம்மரசனை யொக்கும் நும் மரசன் 16 எம்மரசனை யொக்குமோ நும்மரசன் 16 எம் மன்னை வந்தாள் 27, 57 எயிலை யிழைத்தான் 72 எயிற்கட் புக்கான் 82 எயிற்க ணின்றான் 82 எருத்தில் 49 எருப்பெய் திளங்களை கட்டு நீர் கால் யாத் தமையாக் பைங்கூழ் நல்லவாயின 21 எல்லாச் சான்றாரும் 187 எல்லாப் பார்ப்பாரும் 187 எல்லாம் வந்தன 186 எல்லாம் வந்தார் 186 எல்லாம் வந்தீர் 186 எல்லாம் வந்தேம் 186 எல்வளை 269 எள்ளுமார் வந்தார் 207 எறும்பு முட்டைகொண்டு தெற்றி யேறின் மழை பெய்தது, பெய்யும் 245 என்னுழை வந்தான் 29 எனக்குத் தந்தான் 29 ஏ ஏஎ யென் சொல்லுக 272 ஏ கல்ல டுக்கம் 304, 456 ஏர்க்கட் சென்றான் 82 ஏனாதி நல்லுதடன் 41 ஒ ஒருத்தி கொல்லோ பலர் கொல்லோ 23 ஒருபெருஞ் சும்மையொடு 349 ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ 25 ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ 23 ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ கறவை யுய்த்த கள்வர் 23 ஒருவன் தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகும் தாயைக் கொல்லின் நிரயம் புகும் 242 ஒருவர் வந்தார் 157, 191, 192 ஒருவரவர் 192 ஒல்லென வொலித்தது 258, 438 ஒழுகு கொடி மருங்குல் 317 ஒற்றியது முதல் 80 ஒற்றியது பொருள் 80 ஒன்றன்று பல 25 ஒன்றுகொல்லோ பலகொல்லோ 25 ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க உருபு 24 ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம் 24 ஒன்றோ பலவோ செய் புக்கன 23 ஓ ஓஒ பெரியன் 256 ஓடி வந்தான் 457 ஓதல் வேண்டும் 243 ஓதாப் பார்ப்பான் 236 ஓதும் பார்ப்பான் 234 ஔ ஔஉவினிவெகுளல் 281 ஔஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு 281 ஔஔ வினிச் சாலும் 281 ஔஔ வொருவன்ற வஞ் செய்தவாறு 281 ஔ வவன் முயலுமாறு 281 ஔ வினித் தட்டுப்புடையல் 281 க கங்கை மாத்திரர் 165 கடந்தா னிலத்தை 103 கடந்தானிலம் 104 கடலைக் காடொட்டாது 101 கடலொடு காடொட்டாது 101 கடி கா 383 கடிசூத்திரத்திற்குப் பொன் 76 கடிசூத்திரப் பொன் 413 கடிநுனைப்பகழி 383 கடி மலர் 383 கடுத் தின்றான் 157 கடு நட்பு 383 கடும் பகல் 383 கடு மான் 383 கண் கழீஇ வருதும் 442 கண்டீரே கண்டீரே 425 கண் ணல்லள் 61 கண் ணல்லர் 61 கணவ னினி துண்டபின் காதலி முக மலர்ந்தது 232 கணையை நோக்கும் 72 கதியைந்து முடைத்திக் குதிரை 33 கபில பரண நக்கீரர் 421 கபிலரது பாட்டு 80 கருங் குதிரை ஓடிற்று 67 கருங்குழற் பேதை 83 கருப்பு வேலி 104, 413 கரும்பிற்கு வேலி 76 கருமுக மந்தி 442 கருவூர்க் கிழக்கு 413 கருவூர்க்குக் கிழக்கு 110 கருவூரின் கிழக்கு 76 கருவூர்க்குச்செல்லாயோ சாத்தா 13 கல்லூ வல்லனாயினான் 230 கலங் கழீஇயிற்று 246 கலனே தூணிப்பதக்கு 417 கவவுக் கடியள் 61 கழிபே ரிரையானின்ப மெய்தான் 60 கள்வரை யஞ்சும் 72 கள்ளரி னஞ்சும் 78 கற்குபு வல்லனாயினான் 230 கற்பார்க்குச் சிறந்ததுசெவி 76 கற்று வல்லன் 432 கற்று வல்லனாயினான் 230 கறுகறுத்தது 48 கறுத்த காயா 373 கன்னி ஞாழல் 27 கன்னி யெயில் 27 கனலி கடுகிற்று 57 காக்கையிற் கரிது களம் பழம் 17, 78 காட்டதி யானை 80, 98 காட்டி யானை 98 காட்டின்கண் யானை 98 காட்டின்க ணோடும் 82 காண்கும் வந்தேம் 203 காண்கு வந்தேன் 204 காணத்தாற் கொண்ட அரிசி 74 காமத்திற் பற்றுவிட்டான் 78 காரெனக் கறுத்தது 438 காலன் கொண்டான் 59 காலைக்கு வரும் 110 காவிதி கண்ணந்தை 41 கான்மே னீர் பெய்து வருதும் 442 குடத்தை வளைந்தான் 71 குடிமை தீது 56 குடிமை நல்ல 56 குடிமை நல்லன் 56 குடிமை நன்று 56 குதிரை வந்தது 171 குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க 38 குப்பையது தலையைச் சிதறினான் 70 குப்பையைத் தலைக்கட் சிதறினான் 70 குப்பையைத் தலையைச் சிதறினான் 70 குமரி ஞாழல் 50 குமரியாடிப் போந்தேன் சோறு தம்மின் 13 குரிசிலைப் புகழும் 72 குருடன் கொற்றன் 41 குருடு காண்டல் பகலுமில்லை 34 குரு மணி 456 குரு மணித் தாலி 301 குருவிளங்கிற்று 456 குழல் கேட்டான் 117 குழிப்பாடி நேரிது 114 குழையை யுடையன் 71 குழையை யுடையான் 72 குளம்பின்று 8 குளம்பு கூரிது குதிரை 61 குற்றிகொல்லோ மகன் கொல்லோ 25, 268 குற்றிகொல்லோ மகன் கொல்லோ தோன்றா நின்ற உருபு 24 குற்றியல்லன் மகன் 25 குற்றியன்று மகன் 25 குன்றக் கூகை 104 குன்றத்துக் கணிருந்தான் 103 குன்றத் திருந்தான் 420 கூதிர்க்கண் வந்தான் 81 கூரியதொரு வாண்மன் 252, 434 கூழுண்டான் சோறு முண்பன் 437 கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன் 437 கேழற் பன்றி 412 கைக்க ணுள்ளது 82 கைக்கு யாப்புடையது கடகம் 76 கைப்பொருளொடு வந்தான் 91 கையிற்று வீழ்ந்தான் 231 கையிறூ வீழ்ந்தான் 231 கொடியொடு துவக்குண்டான் 73 கொடுத்தான் சாத்தற்கு 103 கொடும்புற மருதி 174 கொடும்புற மருது வந்தது 183 கொடும்புற மருது வந்தாள் 183 கொடும்புற மருது வந்தான் 183 கொண்மார் வந்தார் 207 கொப்பூழ் நல்லள் 61 கொல்யானை நின்றது 67 கொல்லுங் காட்டுள்யானை 237 கொள்ளல்ல தில்லை 35 கொள்ளெனக் கொடுத்தான் 438 கொளலோ கொண்டான் 112, 256 கொற்ற னுணர்வு 413 கொற்றனும் வந்தான் 255 கொன்ற காட்டுள் யானை 237 கோட் சுறா 18 கோட்டது நுனியைக் குறைத்தான் 89 கோட்டின்கட் குறைத்தான் 85 கோட்டு நூறு 80 கோட்டைக் குறைத்தான் 85 கோட்டை நுனிக்கட் குறைத்தான் 89 கோட்டை நுனியைக் குறைத்தான் 89 கோடில 220 கோடின்று 8, 220 கோடு கூரிது களிறு 61 கோடுடைத்து 220 கோடுடைய 220 கோதை வந்தது 183 கோதை வந்தான் 183 கோதை வந்தாள் 183 கோலானோக்கி வாழும் 93 கோலி னோக்கி வாழும் 93 கோலை நோக்கி வாழும் 93 கோ வாழி 127 ச சாத்தற்குக் கூறு கொற்றன் 76 சாத்தற்குக் கொடுத்தான் 103 சாத்தற்கு நெடியன் 110 சாத்தற்கு மக ளுடம்பட்டார் 76 சாத்தன் உண்டு வந்தான் 232 சாத்தன்கையெழுதுமாறு வல்லன் அதனாற் றந்தை உவக்கும் 40 சாத்தன் தாயைக் காதலன் 102 சாத்தன் யா ழெழூஉம் 173 சாத்தன் வந்தது 172, 181 சாத்தன்வந்தான் 156, 172, 181 சாத்தன்வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று 40 சாத்தன்வந்தான் அவன் போயினான் 38 சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் 284 சாத்தன்வருதற்கு முரியன் 254 சாத்தன தாடை 103 சாத்தன தியற்கை 80 சாத்தன தில்லாமை 80 சாத்தனது உடைமை 80 சாத்தனது கற்றறிவு 80 சாத்தனது செயற்கை 80 சாத்தனது செலவு 80 சாத்தனது தொழில் 80 சாத்தனது தோட்டம் 80 சாத்தனது நிலைமை 80 சாத்தனது விலைத்தீட்டு 80 சாத்தன தொப்பு 80 சாத்த னவன் 38 சாத்தனவன் வந்தான் 38 சாத்தனான் முடியு மிக்கருமம் 74 சாத்தனின் வலியன் 103 சாத்தனுங் கொற்றனும் வந்தார் 91 சாத்த னுண்டான் 429 சாத்த னுண்டானோ 256 சாத்தனும் வந்தான் 255 சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் 436 சாத்தனொடு வந்தான் 103 சாத்தனொடு வெகுண்டான் 101 சாத்தனை வெகுண்டான் 101 சாத்த னொருவன் 172 சாத்த னொன்று 172 சாத்தா உண்டியோ 14 சாத்தி சாந்தரைக்கும் 173 சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டா னுவக்கும் 40 சாத்தி வந்தாள் 180 சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க 38 சாந்து கொடு 447 சாரைப்பாம்பு 416 சான்றோர் மகன் 429 சீத்தலைச்சாத்தன் 174 சுடுமண் பாவை 403 சுவை யாறு முடைத்திவ் வடிசில் 33 சூதினைக் கன்றினான் 86 சூதினைக் கன்றும் 72 சூதின்க ணிவறினான் 86 சூதினை யிவறினான் 86 சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது 74 செங்கால் னாரை 26 செம்பி னேற்றை 442 செயிற்றியன் சென்றான் 42 செல்ல றீர 456 செல்ல னோய் 456 செவியிலி வந்தது 183 செவியிலி வந்தாள் 183 செவியிலி வந்தான் 183 சேரமான் சேரலாதன் 41 சொல்லது பொருள் 80 சொன் னன்று 57 சோலை புக்கென வெப்பம் நீங்கிற்று 228 சோறுங் கறியு மயின்றார் 47 த தகரஞாழல் 418 தட்டுப்புடைக்கண் வந்தான் 81 தந்தை வந்தது 181 தந்தை வந்தான் 181 தந்தையார் வந்தார் 270 தந்தையை நிகர்க்கும் 72 தந்தையை யொட்டும் 72 தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் 255 தவஞ் செய்தான் சுவர்க்கம் புகும் 242 தவப் பல 456, 389 தன்க ணிகழ்வது 82 தாம் வந்தார் 184 தாம் வந்தார் தொண்டனார் 27 தாய் மூவர் 413 தாய் வந்தாள் 180 தாயைக்கொன்றான் நிரயம் புகும் 242 தான் வந்தது 185 தான் வந்தாள் 185 தான் வந்தான் 185 திங்க ளியங்கும் 240 திங்க ளெழுந்தது 57 திண்ணை மெழுகிற்று 246 திருமகளோ வல்லள் அரமகளோ வல்லள் இவள்யார் 256 திருவீர வாசிரியன் 41 தின்னூ வந்தான் 228 தினற்கு வந்தான் 228 தினையிற் கிளியைக் கடியும் 102 தீங்கரும்பு 416 தீச்சார்தலா னீர் வெய்தாயிற்று 21 தீவெய்து 19 துண்ணெனத் துடித்தது மனம் 258 துயிலுங் காலம் 234 தூணின்கட் சார்ந்தான் 84 தூணைச் சார்ந்தான் 84 தெங்கு தின்றான் 114, 157 தெய்வஞ் செய்தது 57 தெய்வப்புலவன் திருவள்ளுவன் 41 தெவ்வுப் புலம் 346 தெற்கட் குமரி 82 தென் குமரி 18 தேவர் வந்தார் 4 தேவன் வந்தான் 4 தேரைக் கடாவும் 72 தேரைச் செலுத்தும் 72 தொகையது விரி 80 ந நங்கை கணவன் 94 நங்கையார் வந்தார் 270 நங்கை வந்தாள அவட்குப் பூக்கொடுக்க 38 நங்கை வாழி 127 நஞ்சுண்டான் சாம் 161 நட்டார்க்குத் தோற்கும் 76 நட்டாரை யுவக்கும் 72 நம்பி நூறெருமை யுடையன் 50 நம்பி மகன் 94 நம்பியார் வந்தார் 270 நம்பி யூர் 98 நம்பி வாழி 127 நம்மரச னாயிரம் யானை யுடையன் 50 நம்மெருதைந்தனுட்கெட்ட வெருது யாது 32 நமருள் யாவர் போயினார் 32 நரியார் வந்தார் 270 நளி யிருள் 323 நன்றென்று கொண்டான் 438 நனி சேய்த்து 389, 456 நாகர்க்கு நேர்ந்த பலி 99 நாகர் பலி 99 நாகரது பலி 99 நாட்டைச் சிதைக்கும் 72 நாட்டை பழிக்கும் 72 நாணையறுக்கும் 72 நாம நல்லரா 365 நாய் தேவனாயிற்று 102 நாயொடு நம்பி வந்தான் 91 நாளை அவன் வாளொடுவெகுண்டு வந்தான் பின் நீயென் செய்குவை 247 நாளை வரும் 248 நான்மறை முதல்வர் வந்தார் 33 நிலங்கடந்தான் 104, 413, 420 நிலத்த தகலம் 80 நிலத்த தொற்றிக்கலம் 80 நிலத்தைக் கடந்தான் 103 நிலம் வலிது 19 நில நீரென விரண்டும் 290 நிலனென்றா நீரென்றா 289 நிலனென்றா நீரென்றா விரண்டும் 290 நிலனென்று நீரென்று தீயென்று 259 நிலனென நீரெனத் தீயென வளியென 258 நிலனெனநீரெனத் தீயென வளியென... நான்கு 287 நிலனெனா நீரெனா 289 நிலனெனா நீரெனா விரண்டும் 290 நிலனே நீரே தீயே வளியே 257 நிலனே நீரே யென விரண்டும் 290 நின்னுழை வந்தான் 29 நினக்குத் தந்தான் 26 நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ 229 நீ யிது செய் 68 நீயிர்பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் 229 நீயிர் வந்தீர் 188 நீயிர் வேறு 225 நீயிருண்ட வூண் 225 நீயிருண்ணு மூண் 225 நீயிருண்மன 225 நீ யுண்ட வூண் 225 நீ யுண்ணு மூண் 225 நீ யுண்மன 225 நீ யுண்டு வருவாய் 239 நீர் கலத்தலா னிலம் மெலிதாயிற்று 21 நீர் தண்ணிது 19 நுமக்கிவன் எவனாம் 219 நூலது குற்றம் கூறினான் 111 நூலைக் கற்கும் 72 நூலைக் குற்றம் கூறினான் 111 நெடுங்கழுத்தல் வந்தது 182 நெடுங்கழுத்தல் வந்தன 182 நெடுங்கழுத்தல் வந்தாள் 182 நெடுங்கடுத்தல் வந்தான் 182 நெல்லைத் தொகுக்கும் 72 நெறிக்கட் சென்றான் 86 நெறிக்கண் நடந்தான் 86 நெறியைச் செல்லும் 72 நெறியைச் சென்றான் 86 நெறியை நடந்தான் 86 நோய் தீர்ந்த மருந்து 234 நோயி னீங்கினான் 101 நோயை நீங்கினான் 101 ப பகைவரைப் பணித்தான் 72 பகைவரைவெகுளும் 72 பச்சென்று பசுத்தது 259 பசப்பித்துச் சென்றாரு டையையோ வன்னநிறத்தையோ பீரமலர் 440 பசும்பய றல்ல தில்லை 36 பட்டி புத்திரர் 165 படைத் தலைவன் 68 படையது குழாம் 80 படை வழங்கினார், தொட்டார் 46 பண்டு காடுமன் 156 பண்டு காடுமன் இன்றுகயல் பிறழும் வயலாயிற்று 252 பண்டொருநாள் இச்சோலைக்கண் விளையாடாநின்றேம் 202 பத்துங் கொடால் 285 பயறல்ல தில்லை 35 பய றில்லை 35 பயறுளவோ வணிகீர் 35 பயிர் நல்ல 21 பரணரது பாட்டியல் 80 பருநூல் பன்னிருதொடி 13 பலவல்ல ஒன்று 25 பவளக்கோட்டு நீலயானை சாத வாகனன் கோயிலுள்ளுமில்லை 34 பழது கழி வாழ்நாள் 326 பழமுதிர்ந்தகோடு 234 பழமுதிருங் கோடு 234 பழி யஞ்சும் 100 பழியினஞ்சும் 100 பழியையஞ்சும் 100 பாம்பு பாம்பு 411 பார்ப்பான் கள்ளுண்ணான் 161 பார்ப்பனச் சேரி 49 பாரியென் றொருவனுளன் 259 புக்க வில் 234 புகழை நிறுத்தல் 71 புகழை நிறுத்தான் 71 புகழை யுடைமை 71 புகழை யுடையான் 71 புணர் பொழுது 415 புதல்வரைப் பெறும் 72 புதல்வற் கன்புறும் 76 புலிக்கட்பட்டான் 82 புலி கொல்யானை 95 புலி கொல்யானை ஓடாநின்றது 96 புலி கொன்ற யானை 95 புலிப் பாய்த்துள் 414 புலி போல்வன் 213 புலி போற்றி வா 97 புலிய துகிர் 80 புலியாற் கொல்லப்பட்ட யானை 95 புலியாற் போற்றி வா 97 புலியிற் போற்றி வா 97 புலியைக் கொன்ற யானை 95 புலியைப் போற்றி வா 97 புலிவிற் கெண்டை 417 பூதம் புடைத்தது 57 பூ நட்டு வாழும் 114 பெண்டாட்டி யல்லள் ஆண்மகன் 25 பெண்மகன் வந்தாள் 194 பெருங்கால் யானை வந்தது 182 பெருங்கால் யானை வந்தன 182 பெருங்கால் யானை வந்தாள் 182 பெருங்கால் யானை வந்தான் 182 பெருந்தலைச்சாத்தன் 26 பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி 26 பெரும்பலாக்கோடு 26 பெருஞ்சேந்தனார் வந்தார் 270 பேடியர் வந்தார் 4 பேடி வந்தாள் 4 பேரூர்கிழான் உண்டான் 42 பொருட்க ணுணர்வு 82 பொருளது கேடு 80 பொருளிலர் 214 பொருளிலள் 214 பொருளிலன் 214 பொருளை யிலன் 72 பொருளை யிழக்கும் 72 பொழுது நன்று 57 பொற்குடம் 413 பொற்றொடியரிவை 83 பொற்றொடி வந்தாள் 67, 114 பொன் மேனி 414 பொன் னன்னது 168, 220 பொன் னன்ன 220 பொன் னன்னவை 168 பொன் னன்னன் 213 பொன் னன்னாள் 163 பொன் னன்னிர் 224 பொன் னன்னீர் 224 பொன் னன்னை 224 பொன்னை நிறுக்கும் 72 பொன்னோ டிரும்பனையர் நின்னொடு பிறரே 74 போம் புழை 238 போம் போம் 411 போயின போக்கு 234 ம மகனல்லன் குற்றி 25 மகிழ்ச்சியின் மைந்துற்றான் 78 மங்கல மென்பதோ ரூருண்டு போலும் 278 மட் காரணம் 83 மட் குடம் 83 மண்ணா னியன்ற குடம் 74 மதிமுகம் வியர்த்தது 67 மதியோ டொக்கு முகம் 74 மயிர் நல்ல 21 மரத்தின்க ணிருந்தது 82 மரத்தைக் குறைக்கும் 72 மரத்தைக் குறையான் 107 மருந்துண்டு நல்லனாயினான் 432 மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று 228 மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது 229 மலையொடு பொருத மால்யானை 74 மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் 232 மழை பெய்தற்கு முழங்கும் 232 மழை பெய்தெனப் புகழ் பெற்றது 232 மழை பெய்தென மரங் குழைத்தது 232 மழை பெய்யக் குளம் நிறைந்தது 228 மழை பெய்யிய முழங்கும் 232 மழை பெய்யியர் பலிகொடுத்தார் 232 மழை பெய்யிய ரெழுந்தது 232 மழை பெய்யிய வான் பழிச்சுதும் 232 மழை பெய்யிற் குள நிறையும் 232 மழை பெய்யிற் புகழ்பெறும் 232 மழைமழை என்கின்றன பைங்கூழ் 422 மழை வண்கை 414 மற்றை யஃது 264 மற்றையது கொணா 264 மற்றை யவன் 264 மற்றோ மற்றோ 411 மறஞ் செய்தான் துறக்கம் புகான் 60 மறியது தந்தை 80 மறியது தாய் 80 மன்றப் பெண்ணை 413 மனை வாழ்க்கைக்குப் பற்று விட்டான் 110 மனைவியைக் காதலிக்கும் 72 மாக் கொணர்ந்தான் 67 மாடத்தின் கணிருந்தான் 81 மாந்தக் கொங்கேனாதி 41 மாப் பூத்தது 53 மாமரம் வீழ்ந்தது 54 மாமூல பெருந்தலைச்சாத்தர் 421 மாரி யாமா 413 மாவு மருது மோங்கின 53 மீ யடுப்பு 17 முட்டாழை 18 முடக்கொற்றன் வந்தது 181 முடக்கொற்றன் வந்தான் 181 முடக்கொற்றி வந்தது 180 முடக்கொற்றி வந்தாள் 180 முடத்தாமக் கண்ணியார் வந்தார் 270 முடத்தி வந்தது 180 முடத்தி வந்தாள் 180 முடவன் வந்தது 172, 181 முடவன் வந்தான் 172, 181 முடவனார் வந்தார் 270 முந்நீர்ப் பாயும் 233 முப்பத்து மூவர் 417 முயற்சியிற் பிறத்தலா னொலி நிலையாது 74 முருகனது குறிஞ்சி நிலம் 80 முலை நல்லர் 61 முலை நல்லள் 61 முறையாற் குத்துங் குத்து 101 முறையிற் குத்துங் குத்து 101 மொறுமொறுத்தார் 48 ய யாபன்னிருவர் மாணாக்கருள ரகத்தியனார்க்கு 279 யாம் வேறு 225 யாம் வந்தேம் 11, 27 யாமில்லை 225 யா முண்ணுமூண் 225 யாமுண்மன 225 யாவன் றவஞ்செய்தா னவன் சுவர்க்கம் புகும் 242 யாவன் றாயைக் கொன்றா னவன் நிரயம்புகும் 242 யாழ் கேட்டான் 117 யாழுங் குழலு மியம்பினார் 47 யான் நீயல்லென் 25 யான் வந்தேன் 11 யான் வைதேனே 244 யானில்லை 225 யானுண்ணுமூண் 225 யானு நின்னோடுடனுறைக 226 யானு நீயுஞ் செல்வேம் 463 யானு நீயு மவனுஞ் செல்வேம் 463 யானு மென் எஃகமுஞ் சாறும் 209 யானைக்குக் கோடு கூரிது 110 யானைக் கோடு 420 யானைக்கோடு கிடந்தது 67 யானைக்கோடுகூரிது 420 யானை குதிரை தேர் காலா ளெறிந்தான் 45 யானையது காடு 80 யானையது கோடு 80 யானையைக் கோட்டின் கட் குறைத்தான் 88 யானையைக் கோட்டைக் குறைத்தான் 88 யானை வந்தது 182 யானை வந்தன 182 யானை வந்தாள் 182 யானை வந்தான் 182 யானே கொள்வேன் 435 யானோ கள்வேன் 435 வ வட்டப் பலகை 416 வடக்கண் வேங்கடம் 82 வட வேங்கடம் 18 வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் 76 வடுகரச ராயிரவர் மக்களை உடையர் 50 வந்தான் சாத்தனொடு 103 வந்தான் வழுதி 429 வயிறு குத்திற்று 13 வயிறு குத்தும் 15 வரலு முரியன் 435 வலியன் சாத்தனின் 103 வரை வீழருவி 104 வழிபோயினா ரெல்லாம் கூறை கோட்பட்டார் 101 வளி உளரும் 19 வனையாக் கோல் 236 வனையுங் கோல் 234 வாணிகத்தா னாய பொருள் 92 வாணிகத்தி னாய பொருள் 92 வாணிகத்தானாயினான் 74, 92 வாணிகத்தி னாயினான் 78, 92 வாம்புரவி 238 வாயாற் றக்கது வாய்ச்சி 74 வாழுமில் 234 வானா னோக்கி வாழும் 93 வானி னோக்கி வாழும் 93 விண்ணென்று விசைத்தது 259 விரைந்து போயினான் 457 விலங்கு மா வீழ்ந்தது 54 விளங்கு குரு 456 வினை விளைந்தது 57 வெண் களமர் 17 வெண்குடைப் பெருவிறல் 182 வெள்ளி எழுந்தது 57 வெள்ளிய தாட்சி 80 வெள்ளென விளர்த்தது 258 வென்ற வேல் 234 வேங்கைப் பூ 419 வேந்துசெங்கோலன் 58 வேந்துவாழி 127 வேலா னெறிந்தான் 73 வேலா னெறியான் 107 வேலியைப் பிரிக்கும் 72 வேழக்கரும்பு 412, 416 செய்யுள் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அ அஃதை தந்தை யண்ணல் யானையடு போர்ச் சோழர் 461 அகரமுதலவெழுத்தெல்லாமாதி பகவன் முதற்றேயுலகு 440 அகன்றவர் திறத்தினி நாடுங்கால் 229 அகனமர்ந்து செய்யாளுறையும் 380 அட்டிலோலை தொட்டனை நின்மே 451 அடகுபுலால்பாகுபாளிதமுமுண்ணான் கடல்போலுங் கல்வியவன் 284 அணித்தோ சேய்த்தோ கூறுமினெ மக்கே 220 அதிர வருவதோர் நோய் 316 அதுகொ றோழி காம நோயே 249 அது மற் கொண்கன் றேரோ 295 அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் 102 அந்திற் கச்சினன் கழலினன் 267 அம்ப லூரு மவனொடு மொழிமே 238 அம்ம வாழி தோழி 276 அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும் 338 அரமிய வியலகத் தியம்பும் 402 அரிதாரச் சாந்தங் கலந்தது போல 55 அரிமயிர்த் திரண்முன்கை 356 அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் றோளே 22 அருந்திறல் 356 அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும் 338 அலமர லாயம் 310 அவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே 16 அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல 348 அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன் 39 அழுக்கா றென ஒரு பாவி 258 அழுந்துபடு விழுப்புண் 403 அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்த சொற் றேறியார்க் குண்டோ தவறு 440 அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே 272 அற்றா லளவறிந் துண்க 229 அறிந்த மாக்கட் டாகுக தில்ல 220 அறிவார் யாரஃ திறுவுழி யிறுகென 296 அனையை யாகன் மாறே 250 ஆ ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி 277 ஆமா நல்லேறு சிலைப்ப 358 ஆரிய மன்னர் பறையி னெழுந் தியம்பும் 409 ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் 332 ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் 45 இ இஃதோ செல்வற் கொத்தனம் 37 இயல்புளிக் கோலோச்சு மன்னன் 250 இரவரன் மாலையனே 313 இருதோ டோழர் பற்ற 33 இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் 462 இருமனப் பெண்டிருங் கள்ளும் கவறும் 45 இலம்படு புலவர் ஏற்றகை நிறைய 360 இவளும் இவனும் 2 இழிவறிந் துண்பான்க ணின்பமெய்தும் 60 இளைதாக முண்மரங்கொல்க 440 ஈ ஈங்காகு நவா லென்றிசின் யானே 296 ஈயாது வீயு முயிர்தவப் பலவே 299 உ உசாத்துணை 370 உடலு முடைந்தோடு மூழ்மலரும் 405 உடனுயிர் போகுகதில்ல 251 உயர்திணை என்மனார் 441 உயவுப்புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே 349 உரற்கால் யானை... 230 உரற்கால் யானை ஒடித்துண்டெஞ்சிய 457 உருகெழு கடவுள் 300 உருமில் சுற்றம் 365 உரைமதி வாழியோ வலவ 274 உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய் நல னளைஇ 305 உள்ளம் போல உற்றுழி யுதவும் 108 உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் 76 உறந்த விஞ்சி 347 உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா 34 உறு கால் 389, 392, 156 உறு புனல் தந்துலகூட்டி 299 உறு பொருள் 456 ஊ ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை 55 ஊதைகூட்டுண்ணு முகுபனி 210 ஊர்க்கா னிவந்த பொதும்பர் 250 எ எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன் வருக 42 எய்யா மையலை நீயும் வருந்துதி 342 எல்லாவுயிரொடுஞ் செல்லுமார் முதலே 271 எல்வளை மகளிர்... 233 எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார் 449 எற்றென் னுடம்பி னெழினலம் 263 எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லா தேன் 263 என்னொடும் நின்னொடுஞ் சூழாது 102 ஏ ஏஎ யிஃதொத்தனென்பெறான் கேட்டைக் காண் 272 ஏஏஏஏ யம்பன் மொழிந்தனள் 411 ஏகல் லடுக்கம் 304 ஏறிரங் கிருளிடை 358 ஐ ஐதே காமம் யானே 385 ஐய சிறி தென்னை யூக்கி 223 ஒ ஒக்க லொற்கஞ் சொலிய 360 ஒண்குழை யொன்றொல்கி யெருத் தலைப்ப 33 ஒண்செங்காந்த ளொக்கு நின் நிறம் 291, 403 ஒண் டூவி நாராய் 151 ஒருத்தி கொல்லோ பலர்கொல்லோ... 23 ஒருபெருஞ் சும்மையொடு 349 ஒல்லென்றொலிக்குமொலி புன லூரற்கு 259 ஒல்லேங்குவளைப்...... புல்லெருக்கங் கண்ணி நறிது 55 ஒன் றிரப்பான்போலிளிவந்துஞ் சொல்லு முலகம் 255 ஓ ஓஒ வினிதே 251 ஓப்பிற் புகழிற் பழியி னென்றா 289 ஓம்பா வீகை மாவே ளெவ்வி புனலம் புதவின் மிழலை 233 ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே 295 க கடல்போற் றோன்றல காடிறந் தோரே 257 கடவுளாயினு மாக மடவைமன்ற வாழிய முருகே 265 கடாவுக பாக கால்வ னெடுந்தேர் 226 கடிகா 383 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு 383 கடிநாறும் பூந்துணர் 390 கடிநிலை யின்றே யாசிரி யர்க்க 108 கடிபுனன் மூழ்கி யடிசில் கைதொட்டு 405 கடிமரந் தடியு மோசை 358 கடிநுனைப் பகழி 383 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 384 கடியையா னெடுந்தகை செருவத்தானே 383 கடுங்கா லொற்றலின் 383 கடுஞ்சினத்த கொல்களிரும் 51 கடுத்தன ளல்லளோ வன்னை 384 கடும்பகல் 383 கடுமான் 383 கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி 196 கண்டிகு மல்லமோ 275 கண்ணகன் ஞாலம் 82, 250 கண்ணிமை நொடியென 294 கண்ணியன் வில்லன் வரும் 457 கண்ணின்று கூறுதலொற்றா... 82 கண்ணும் படுமோ வென்றிசின் யானே 275 கதழ்பரி நெடுந்தேர் 315 கதழ்பரிய கடுமாவு 51 கம்பலை மூதூர் 349 கமஞ்சூன் மாமழை 355 கயந்தலை மடப்பிடி 322 கயலற லெதிரக் கடும்புனற் சாஅய் 330 கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு 377 கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென 344 கருங்கால் வெண்குரு கொன்று கேண் மதி 151 கருவி வானம் 354 கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ 462 கலிகொ ளாயம் மலிபுதொகு பெடுத்த 349 கவர்நடைப்புரவி 362 கவளங் கொள்ளாச் சுளித்த யானை 237 கவிசெந்தாழிக்குவிபுறத் திருந்த 26 கழிகண்ணோட்டம் 314 கழுமிய ஞாட்பு 351 கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே 357 களவாய்ப் பெருங்கை... 320 களிறுங் கந்தும் போல நளிகடற் 405 களிறு மஞ்சுமக் காவ லோன 108 கழனிநல்லூர்... 195 கறவை கன்றுவயிற் படா 340 கறுத்த காயா 373 காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் 274 காமஞ் செப்பாது கண்டது மொழிமே 274 காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே 207 காலேக வண்ணனை... 460 காவலோனக் களிறஞ் சும்மே 108 கான்மேனீர் பெய்து வருதும் 442 கானக நாடன் சுனை 406 கானந் தகைப்ப செலவு 9 கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி 337 கிளையரில் நாணற் கிழங்கு 106 குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு 350 குருமணித் தாலி 301 குழக்கன்று 311 குறுக்கை யிரும்புலி 403 குன்றிகோபம் கொடிவிடு பவளம் 291, 403 குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே 296 கூறாமற் குறித்ததன்மேற் செல்லும் 229 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் 229 கெடவர லாயமொடு 319 கைதொழூஉப் பழிச்சி 382 கொடிகுவளை கொட்டை நுசுப்புண் கண் மேனி 405 கொடுஞ்சுழிப் புக அர்த் தெய்வம் 383 கொய்தளிர்த் தண்டலை... 460 கொன்முனை யிரவூர் 254 கொன்வரல்வாடை நினதெனக் கொண்டேனோ 254 கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே 254 கொன்னே கழிந்தன் றிளமை 254 கோனோக்கி வாழுங் குடி 93 ச சாயன்மார்பு 325 சார னாடவென் றோழியுங் கலுழ்மே 238 சிலைப்புவல்.... நளிந்தனை... 323 சிவந்த காந்தள் 373 சிறிதுதவிர்ந்தீகமாளநின் 296 சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே 250 சிறுபைந்தூவி 26 சிறுமை யுறுப செய்பறி யலரே 341 சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே 252 சினையவுஞ் சுனையவும் நாடினர் 9 சுடர்த்தொடீ கேளாய் 120 சுரையாழ வம்மி மிதப்ப 406 சூரல் பம்பிய.... 408 சூன்முரஞ்செழிலி 333 செங்கேழ் மென்கொடி 301 செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் 18 செய்திரங்காவினை 359 செழுந்தடி தின்ற செந்நாய் 352 செழும்பல் குன்றம் 352 சேர்ந்து செறிகுறங்கு 363 சேற்றுநிலமுனைஇய செங்கட் காரான் 386 சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்ந்தே 296 த தங்கினை சென்மோ 204 தச்சன் செய்த சிறுமா வையம் 74 தசநான் கெய்திய பணை 402 தடமருப் பெருமை 321 தண்ணந் துறைவன் 403 தப்பியா ரட்ட களத்து 22 தம்முடைய தண்ணளியுந் தாமும் 51, 82 தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து 361 தவப்பல 388 தன்குரவைச் சீர்... 233 தாவி னன்பொன் றைஇய பாவை 344 தான்பிற வரிசையறிதலிற் 279 திருந்துவேல் விடலையொடு 197 துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை 318 துயவுற்றேம் யாமாக 368 துளிதலைத் தலைஇய தளிரன் னோளே 16 துன்னருந் துப்பின் வயமான் 366 துனிகூ ரெவ்வமொடு 314 துனைபறை நிவக்கும் புள்ளினம் மான 315 தெரிகணை யெஃகம் திறந்த 22 தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள் 310 தென்கடற்றிரை மிசைப்பா யுந்து 233 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை 229 தொடியோர் கொய்குழையரும்பிய 50 ந நயந்துநாம் விட்ட 329 நரைவருமென்றெண்ணி 259 நல்லவையெல்லாந் தீயவாம் தீயவும் 22 நல்லறிவுடையன் செவ்வியன் 429 நல்லை மன்னென நகூஉப் 211 நளிமலை நாடன் 320 நன்றுமரிதுதுற்றனையாற் பெரும 343 நனந்தலை யுலகம் 376 நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே 229 நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன் 376 நனிசேய்த்து 389, 456 நாணிநின்றோள் நிலைகண்டி யானும் 460 நாம நல்லரா 365 நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து 292 நாறு மருவி நளிமலை... 55 நில்லாது பெயர்ந்த.... 463 நிவந்தோங்கு பெருமலை 460 நிழத்யானை மேய்புலம் படர 330 நிற்கறுப்பதோ ரருங்கடி முனையரண் 372 நின்முகங் காணு மருந்தினே 234 நின்னுறு விழுமம் களைந்தோள் 353 நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து 292 நீர்த்தெவு நிறைத்தொழுவர் 345 நீலுண் டுகிலிகை கடுப்ப 453 நுணங்குதுகி னுடக்கம்போல 374 நும்ம னோருமற்றினையர் 414 நுழைநூற் கலிங்கம் 374 நூலாக் கலிங்கம்.... 234 நெடுநல் யானையும் தேரு மாவும் 45 நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல்வ தூஉம் 278 நெல்லரியு மிருந்தொழுவர் 233 நெல்லுகுத்துப பரவும்... 382 நெறிதா ழிருங்கூந்த.... 187 நொசிமட மருங்குல் 374 நோதக விருங்குயி லாலுமரோ 279 ப பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி 443 பசப்பித்துச் சென்றா ருடையையோ 440 படுத்துவைத் தன்னபாறை மருங்கின் 55 பணியுமா மென்றும் பெருமை 296 பதவு மேய்ந்த மதவுநடை நல்லான் 377 பயக்குறை யில்லை.... 396 பரிசிலர்க் கருங்கலம் நல்கவுங் 22 பருந்திருந் துயாவிளி பயிற்று 369 பல்குரைத் துன்பங்கள் சென்று படும் 272 பழங்கண் ணோட்டமு நலிய 350 பழுதுகழி வாழ்நாள் 324 பன்னிரு கையும் பாற்பட இயற்றி 33 பாசிலை 403 பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே 211 பாடுகோ பாடுகோ பாடுகோ 423, 424 பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா 330 பார்ப்பார்தவரே சுமந்தார் 51 பார்ப்பா ரறவோர் பசுப்பத் 51 பிரியின் வாழா தென்போ தெய்ய 279 பீடின்று பெருகிய திருவிற் பாடின் 207 புகழ்ந்திகு மல்லரோ 250, 450 புதுவத னியன்ற வணியன் 457 புரைதீர் கேள்விப் புலவ ரான 108 புலிநின் றிறந்த நீரல் லீரத்து 442 புலிப்பற் கோத்த... 331 புற்கை யுண்கமா கொற்கை யோனே 273 புறநிழற் பட்டாளோ 279 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி 375 பெயர்த்தனென் முயங்க 457 பெயர்த்தனென் முயங்கயான் 204 பெருங்கை யற்றவென் புலம்பு 457 பெருந்தலைச் சாத்தன் 26 பெருந்தோட் சிறு நுசுப்பிற் பேரமர்க் கட் பேதை 26 பெருவரை யடுக்கம் பொற்ப 335 பெருவிற லமரர்க்கு வென்றி தந்த 29 பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே 253 பேரிசை நவிர 329 பைபுண்மாலை 341 பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் 436 பொச்சாவாக் கருவியாற் போற்றிச் 234 பொன்னுந் துகிரு முத்தும் மணியும் 16 போரெறுழ்த் திணிதோள் 388 ம மண்முழு தாண்ட 326 மணங்கமழ் வியன்மார் 389, 302 மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி 453 மல்லன் மால்வரை 304 மலைநிலம் பூவே துலாக்கோல் 288 மலைவான் கொள்கென உயர்பலி 258 மழகளிறு 311 மற்றறிவா நல்வினை 262 மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் 365 மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் 405 மாதர் வாண்முக மதைஇய நோக்கே 378 மால்வரை யொழுகிய வாழை 317 மாறாக் காதலர் மலைமறந் தனரே 407 மீனொடு பெயரும் யாண ரூர 379 முந்நீர்ப் பாயுந்து 233 முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் 266 முரசுகெழு தானை மூவ ருள்ளும் 463 முரசு முழங்கு.... 33 மெல்லம் புலம்ப கண்டிகும் 274 மெல்விரன் மந்தி குறைகூறும் 220 மையில் வாண்முகம்.... 307 மோயின ளுயிர்த்த காலை 457 ய யாணது பசலை 381 யாரஃ தறிந்திசினோரே 275 யாழிசையூப் புக்கு 309 யானுந் தோழியு மாயமு மாடுந் 51 யானுமென் எஃகமுஞ் சாறும் 209 வ ‘வடாது’, ‘தெனாது’ 220 வடுக ரருவாளர் வான்கரு நாடர் 51 வந்துநனிவருந்தினைவாழி 299 வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப 212 வம்பு மாரி 327 வயவுறு மகளிர் 371 வரிவளை துவைப்ப 358 வரால், தூண்டில்... 29 வருகதில் லம்மவெஞ் சேரி சேர 249, 434 வருந்தினை வாழியென் நெஞ்சம் 151 வருமழைய வாய்கொள்ளும் 22 வருமே சேயிழை யந்திற் கொழுநற் 267 வல்லமெறிந்த நல்லிளம்.... 237 வலனாக வினையென்று வணங்கிநாம் 229 வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் 320 வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் 340 வறிதுவடக் கிறைஞ்சிய 336 வாடா வள்ளியங் காடிறந் தோரே 257 வாண்முகம் 367 வார்கயிற் றொழுகை 317 வார்ந்திலங்கு வையெயிற்று 317 வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின் 253 வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த 55 வானத் தணங்கருங்கடவு.... 460 வானோக்கிவாழு முயிரெல்லாம் 93 விசும்புகந் தாடாது 305 விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை 316 வில்லக விரலிற் பொருந்தியவர் 432 வில்லோன் காலன கழலே 195 விழுமியோர்க்காண்டொறுஞ் 353 விளங்குமணிக் கொடும்பூணாய் 129 விளிந்தன்று மாதவர்த் தெளிந்த 279 விறந்த காப்பொ டுண்ணின்று 347 வினவி நிற்றந் தோனே 211 வினைக்குறை தீர்ந்தாரிற் 396 வினைபகை யென்றிரண்டி னெச்சம் 294 வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் 240 வெங்காமம் 334 வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் 457 வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்து 302 வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் 347 வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் 432 வேதின வெதிநி னோதிமுது போத்து 453 வேய்மருள் பணைத்தோள் 339 வேற்றுமையில்லா விழுத்திணைப் 353 வேனி லுழந்த வறிதுயங் கோய் 330 வைநுனைப் பகழி 387 வையைக் கிழவன் வயங்குதார் 460 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (எண்: நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 171 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிமை 201 அஃறிணை விரவுப்பெயர் 150 அச்சக் கிளவி 100 அசைக்குங் கிளவி 425 அசைச்சொல் நீட்டம் 153 அசைநிலைக் கிளவி 250, 267, 271, 279 அடிமறிச் செய்தி 407 அடிமறி மொழிமாற்று 404 அண்மைச் சொல் 127, 131 அதுச் சொல் வேற்றுமை 213 அதுவென் வேற்றுமை 87, 94 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 79 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயர் 135, 141, 149 அளவின் பெயர் 417 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 412, 418 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 114 ஆடியற் பெயர் 165 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 176 ஆண்மைச் சினைப்பெயர் 177 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 179 ஆய்தப் பெயர் 167 ஆயென் கிளவி 212 ஆரைக் கிளவி 270 ஆற்றுப்படை 462 இ இகர இறுபெயர் 125 இசைநிறைக் கிளவி 250 இசைப்படு பொருள் 423 இடைச்சொல் கிளவி 159 இடைநிலை 237 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 243 இயற்சொல் 397, 398 இயற்பெயர் 174, 175 இயற்பெயர்க் கிளவி 38, 41, 196 இயற்கைப் பொருள் 19 இரட்டைக் கிளவி 48 இரவின் கிளவி 444 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 201 இருதிணைச் சொல் 172, 222 இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவி 161 இருபாற் கிளவி 219 இருபாற் சொல் 3 இருபெயர் 417 இருபெயரொட்டு 114 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 419 இருவயின் நிலையும் வேற்றுமை 101 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 196 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 77 இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயர் 18 ஈ ஈயென் கிளவி 445 உ உடன்மொழிப் பொருள் 188 உடனிலை அறிதல் 458 உடைப் பெயர் 165 உம்மை எச்சம் 436 உம்மைச் சொல் 255 உம்மைத் தொகை 412, 417, 421 உம்மை தொக்க எனாவென் கிளவி 289 உம்மை தொக்க பெயர் 418 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 201 உரிச்சொல் கிளவி 159, 297 உருபு தொக வருதல் 104 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 102 உருபுநிலை 69 உவமத் தொகை 412, 414 உள்ளதன் நுணுக்கம் 330 உளவென் கிளவி 220 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 56 எ எச்சக் கிளவி 285 எஞ்சுபொருட்கிளவி 284, 430, 439 எடுத்த மொழி 60 எண்ணியற் பெயர் 165, 417 எண்ணின் பெயர் 417 எண்ணுக்குறிப் பெயர் 168 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எதிர்மறை எச்சம் 435 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எழுவாய் வேற்றுமை 65 எற்றென் கிளவி 263 என்றென் கிளவி 259 என்னா மரபு 422 எனவென் எச்சம் 438 எனவென் கிளவி 258 ஏ ஏதுக் கிளவி 92 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 71 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 73 ஒப்பல் ஒப்புரை 74 ஒப்பில் போலி 278 ஒப்பினாகிய பெயர்நிலை 168 ஒப்பொடு வரூஉங் கிளவி 163, 220 ஒருசொல் அடுக்கு 411 ஒருசொல் பலபொருள் 297 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 460 ஒருபொருள் குறித்த வேறுசொல் 399 ஒருமை இயற்பெயர் 176 ஒருமை சுட்டிய பெயர்நிலைக்கிளவி 461 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 80 ஒருவினைக் கிளவி 74 ஒருவினை யொடுச்சொல் 91 ஒருமைச் சினைப்பெயர் 177 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 178 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறிசொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 86 ஓ ஓம்படை ஆணை 396 ஓம்படைக் கிளவி 97 க கடிசொல் 452 கடியென் கிளவி 383 கண்ணென் வேற்றுமை 84, 88, 213 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 81 கயவென் கிளவி 322 கழுமென் கிளவி 351 காரணக் கிளவி 40 காலக் கிளவி 207, 221 காலங் கண்ணிய என்ன கிளவி 229 காலமொடு வரூஉம் வினைச்சொல் 201 கிளைநுதல் பெயர் 410 குடிப் பெயர் 165 குழுவின் பெயர் 165 குற்றியலுகரம் 123 குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி 215 குறுக்கும் வழிக் குறுக்கல் 403 குறைச்சொல் கிளவி 453 குன்றியலுகரம் 8, 203, 217 கொடுவென் கிளவி 447, 448 கொடையெதிர் கிளவி 99 கொன்னைச் சொல் 254 ச சார்பென் கிளவி 84 சினைநிலைக் கிளவி 85 சினைநிலைப் பெயர் 165 சினைப்பெயர் 174, 175 சினைமுதற் கிளவி 16, 33 சினைமுதற்பெயர் 174, 175 சினையறி கிளவி 114 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 137, 142, 148 சுண்ணம் 404, 406 செஞ்சொல் 284, 437 செந்தமிழ் சேர்ந்தபன்னிரு நிலம் 400 செந்தமிழ் நிலம் 398 செய்கென் கிளவி 204 செய்தென் எச்சம் 239 செய்யும் என்னுங் கிளவி 227 செய்யுமென் கிளவி 235 செய்யுள் ஈட்டச் சொல் 397 செய்யுள் மருங்கு 463 செய்யென் கிளவி 450 செயப்படுபொருள் 246 செயற்கைப் பொருள் 20 செயற்படற் கொத்த கிளவி 110 செறற்சொல் 56 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 152 சொல்லென் எச்சம் 441 சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 405 சொற்குறிப்பு 89 சொன்மை தெரிதல் 156 த தகுதி 17 தஞ்சக் கிளவி 266 தடவென் கிளவி 321 தடுமாறு தொழிற்பெயர் 95 தருசொல் 29 தன்மைச் சுட்டல் 25 தன்மைச் சொல் 43, 202 தன்மை திரிபெயர் 56 தன்வினை உரைக்குந் தன்மைச் சொல் 203 தன்னுளுறுத்த பன்மை 187 தாமென் கிளவி 184 தாவென் கிளவி 446 தானென் கிளவி 185 தானென் பெயர் 137 திசைச் சொல் 397 திசைச்சொற் கிளவி 400 திசைநிலைக் கிளவி 449 திணைநிலைப் பெயர் 165 திரிசொல் 397 திரிசொற் கிளவி 399 தில்லைச் சொல் 253 தீர்ந்துமொழிக் கிளவி 110 துயவென் கிளவி 368 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்த கிளவி 32 தெரித்துமொழி கிளவி 55 தெரிபுவேறு நிலையல் 157 தொகுக்கும்வழித் தொகுத்தல் 403 தொகைமொழி நிலை 412 தொழிற்படக் கிளத்தல் 246 தொழிற்பெயர் 139 தொழின்முதல் நிலை 112 தொன்னெறி மரபு 110 தொன்னெறி மொழி 449 ந நளியென் கிளவி 323 நிரல்நிறை 404, 405 நிலப்பெயர் 165 நிறைப் பெயர் 454 நிறைப்யெர்க் கிளவி 417 நின்றாங்கு இசைத்தல் 58 நீட்டும்வழி நீட்டல் 403 நும்மின் திரிபெயர் 143 நோக்கல் நோக்கம் 93 ப பகுதிக் கிளவி 17 பண்பின் தொகை 412, 416 பண்பினாகிய சினை முதற் கிளவி 220 பண்புகொள் கிளவி 220 பண்புகொள் பெயர் 114, 134, 140, 165, 168 பண்புதொக வரூஉங் கிளவி 418 பல்பெயர் 417 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 227 பலசொல் ஒருபொருள் 297 பலர்சொல் நடை 421 பலர்வரை கிளவி 173 பலரறிசொல் 7 பலவற்றுப் படர்க்கை 216 பலவறி சொல் 3, 9 பற்றுவிடு கிளவி 110 பன்மை இயற்பெயர் 176 பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி 209 பன்மைச் சினைப்பெயர் 177 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 61 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 பால்பிரிந் திசையா உயர்திணை 57 பால்மயக் குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 110 பால்வரை தெய்வம் 57 பாலறி மரபு 211 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 167 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 162 பாலறி வந்த என்ன பெயர் 166, 170 பிண்டப் பெயர் 90 பிரிநிலை எச்சம் 431 பிரிவில் அசைநிலை 280 பிறிதுபிறி தேற்றல் 104 பிறிது பொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 115 பின்மொழி நிலையல் 419 புணரியல் நிலை 250 புனிறென் கிளவி 375 பெண்டென் கிளவி 163 பெண்மை இயற்பெயர் 176 பெண்மைச் சினைப்பெயர் 177 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 பெண்மை முறைப்பெயர் 179 பெண்மையடுத்த மகனென் கிளவி 164 பெயர்க்குரி மரபு 290 பெயர்ச்சொற் கிளவி 110 பெயர்தோன்றுநிலை 65 பெயர்நிலைக் கிளவி 41, 70, 164, 186, 191, 449 பெயர்ப் பயனிலை 66 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 67 பெயரெஞ்சு கிளவி 236, 238, 433 பொதுப்பிரிபாற் சொல் 44 பொருட்கிளவி 76 பொருண்மை தெரிதல் 156 பொருண்மை நிலை 157 பொருள்சென் மருங்கு 106 பொருள் தெரிநிலை 53 பொருள்நிலைமரபு 419 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணர்தல் 411 பொருளொடு புணரா சுட்டுப்பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ அறிசொல் 2, 6 மகளென் கிளவி 163 மகனென் கிளவி 163 மந்திரப் பொருள் 449 மயங்குமொழிக் கிளவி 247 மற்றென் கிளவி 262 மற்றைய தென்னுங் கிளவி 264 மன்றவென் கிளவி 265 மன்னாப் பொருள் 34 மன்னைச் சொல் 252 மாரைக் கிளவி 7, 207 மாவென் கிளவி 273 மிகுதி செய்யும் பொருள் 299 முதலறி கிளவி 114 முதற்சினைக் கிளவி 87 முந்நிலைக் காலம் 240 முப்பால் 210 முப்பாற் சொல் 2 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத்தொகை 285 முற்றியன் மொழி 427 முறைநிலைப் பெயர் 165 முறைப் பெயர் 126, 153, 174, 175, 179 முறைப்பெயர்க் கிளவி 136, 147 முன்மொழி நிலையல் 419 முன்னத்தினு ணருங் கிளவி 56, 459 முன்னிலை அசைச்சொல் 274 முன்னிலைக் கிளவி 223 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 462 முன்னிலை வினைச்சொல் 450 மூவிடம் 28 மெய்ந்நிலை பொதுச் சொல் 240 மெய்ந்நிலை மயக்கு 449 மெய்ப்பொருள் 120 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 389 மெய்பெறக் கிளந்த கிளவி 463 மெய்யறி பனுவல் 96 மெலிக்கும் வழி மெலித்தல் 403 மேலைக் கிளவி 215 மொழிப்பொருட் காரணம் 394 மொழிபுணர் இயல்பு 404 மொழிமாற்றி யற்கை 409 மொழிமாற்று 404 ய யாணர்க் கிளவி 379 யானென் பெயர் 137 வ வடசொல் 397 வடசொற் கிளவி 401 வடவெழுத்து 401 வண்ணச் சினைச்சொல் 26 வயாவென் கிளவி 371 வருசொல் 29 வலிக்கும்வழி வலித்தல் 403 வழக்கினாகிய உயர்சொல் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 239, 241, 245 வாரா மரபு 422 வாழ்ச்சிக் கிழமை 98 வியங்கோள் 222 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 வியங்கோள் கிளவி 226 விரிக்கும்வழி விரித்தல் 403 விரைசொல் அடுக்கு 424 விரைந்த பொருள் 241 விளிகொள் பெயர் 120, 128 விறற்சொல் 56 வினாவின் கிளவி 32, 210 வினாவின் பெயர் 137, 143, 148 வினாவுடை வினைச்சொல் 244 வினைக் குறிப்பு 71 வினைச்சொற் கிளவி 241, 245 வினைசெய் இடம் 81 வினைசெயன் மருங்கு 250 வினைப்படு தொகுதி 33 வினைப்பெயர் 165 வினைப்பெயர்க் கிளவி 168 வினைமாற்று 262 வினைமுதல் உரைக்கும் கிளவி 114 வினைமுதல் கருவி 73 வினைமுதற் கிளவி 234, 242 வினையின் தொகுதி 415 வினையின் தொகை 412 வினையின் தோன்றும் பாலறி கிளவி 11 வினையெஞ்சு கிளவி 222, 228, 236, 432, 457 வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 52, 54 வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் 52, 53 வெளிப்பட வாரா உரிச்சொல் 298 வெளிப்படு சொல் 298 வேட்கைப் பெருக்கம் 371 வேற்றுமைக் கிளவி 110 வேற்றுமைத் தொகை 412, 413 வேற்றுமை தொக்க பெயர் 418 வேற்றுமைப் பொருள் 83 வேறுபெயர்க் கிளவி 42 வேறுபொருள் குறித்த ஒருசொல் 399 வேறுவினைக் கிளவி 74 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 222 கலைச்சொல் நிரல் (உரைவழி) (எண்: நூற்பா எண்) அ அஃறிணை ஆண் 181 அஃறிணைக் கிளவி 45 அஃறிணைச்சினை 61 அஃறிணைப் பன்மைப் படர்க்கை 216 அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் 94 அஃறிணைப் பெண் 180 அஃறிணைப் பெயர் 120 அஃறிணைப் பெயரிலக்கணம் 171 அஃறிணைப் பொருளென்பதுபட வருதல் 250 அஃறிணை வினைக்குறிப்பு 224 அண்மை நிலை 1 அணிகுறித்துப் பிறிதொரு பொருண்மேனிற்றல் 443 அணிநிலம் 29 அணியிலக்கணம் 157 அதிகாரப் புறனடை 45 அநுவாதம் 83 அநுவாத மாத்திரம் 10 அய்யவும்மை 255 அர்ஈற்றுத் தொழிற்பெயர் 139 அரவமாகிய இசைப் பொருண்மை 349 அவாய்நிலை 1, 235, 429 அவைக்கண் வழங்கப்படுஞ்சொல் 442 அளபெடைப் பெயரொழித்து நின்ற பெயர் 152 அளவடி 406 அறிபொருள் வினா 13 அறுபொருட்குமுரிமை 234 அறுவகைத் தொகைச் சொல் 420 அறுவகை வேற்றுமையிலக்கணம் 69 அன்பெற்ற விகற்பம் 202 அன்மைக்கிளவி 25 அன்மைத் தன்மை 25 அன்மொழிப் பொருள் 83 அன்னீற்றிற்குரிய காலவெழுத்து 206 அன்னீற்றுப்பெயர் 195 ஆ ஆடூஉ அறிசொல் 1 ஆண்மைச் சினைப் பெயர் 181 ஆண்மைச் சினை முதற்பெயர் 181 ஆண்மையியற்பெயர் 181 ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல் 1 ஆராய்ச்சி 288 ஆரியச்சிதைவு 398 ஆரீற்று முற்றுச் சொல் 207 ஆரென்னு மிடைச் சொல் 270 ஆற்றுப் படைச்செய்யுள் 462 ஆனீற்றளபெடைப் பெயர் 135 ஆனீற்றிற்குரிய காலவெழுத்து 206 ஆனீற்றுப் பண்புகொள் பெயர் 134 ஆனீற்றுப்பெயர் 133 இ இசைக் குறிப்பு 297 இசை நிறைத்தல் 250 இசைநிறையடுக்கு 423 இசை நூலார் 174 இசைப் பொருள் 358 இசைப் பொருண்மை 258, 309 இசையெச்சம் 440 இடப் பொருண்மை 81 இடம் வரையறுத்தோதாமை 260 இடம் வரையறாமை 279 இடவழு 11 இடவேறுபாடு 428 இடும்பையுமாகிய குறிப்பு 353 இடைச்சொற்குச் சிறப்பிலக்கணம் 249 இயல்பாதல் 118 இயல்பின்மை மாத்திரை 182 இயல்விளிக்கண் திரியாது நின்ற பெயரீறு 118 இயைபின்மை நீக்கல் 182 இரக்கமுங் கேடுமாகிய குறிப்பு 350 இரண்டாம் வேற்றுமைத் தொடர் 112 இரவின் கிளவி 444 இருசார்மொழி 401 இருசொற்றொகை 417 இருதிணைக்கும் பொதுவாகிய சொல் 172 இருதிணைப் பெயர் 51 இருதிணைப் பொருள் 45 இருதொடர் 250 இருபெயர்ப் பண்புத் தொகை 419 இருபெயரொட்டுப் பண்புத் தொகை 20 இருபொருளுணர்த்தல் 250 இருமொழித்தொடர் 1 இரு மொழிமேனிற்றல் 419 இருவகையெச்சம் 427 இருவினைப் பயனுறுதல் 242 இல்லாப் பொருள் 34 இலக்கணச் சூத்திரங்கள் 52 இலக்கண மன்மை 27 இலக்கண வழக்கு 16 இலக்கணவெழுத்து 208 இழிபெயர் 91 இளமைக் குறிப்புப் பொருள் 311 இறந்தகாலத்துச் சொல் 239 இறந்தகால முற்றுச்சொல் 1 இறந்த பொருண்மை 263 இறுதியிடைச் சொல் 228 இறை பயப்பது 13 இனஞ்சுட்டாதன 26 இனஞ்சுட்டி நின்றன 26 இனப்பொருள் 18, 35 ஈ ஈற்றசையேகாரம் 257 ஈற்றயனீடல் 118 ஈறுதிரிதல் 118 ஈன்றணிமையாகிய குறிப்பு 375 உ உணர்த்தும் வாயில் 393 உந்தி 399 உம்மையெச்ச வேறுபாடு 436 உயர்சொற் கிளவி 416 உயர்திணைக்கண் பெயரிற்றிரிந்த ஆணொழி மிகுசொல் 50 உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை 421 உயர்திணைச் சினை 61 உயர்திணைத் தெரிநிலை வினை 215 உயர்திணைப் படர்க்கை வினை 205, 208 உயர்திணைப் பெயர் 120 உயர்திணை முடிபு கோடல் 43 உயர்திணையாயிசைத்தல் 58 உயர்திணை விரவுப் பெயர் 120 உயர்திணைவினை 202 உயர்திணை வினைக்குறிப்பு 224 உயிரீறு 124 உரிச்சொற் கிளவி 416 உரிச்சொனீர்மை 269 உருபு தொகப் பொருள் நிற்றல் 83 உருபு தொடர்ப் பொருள் 413 உருபு தொடர்மொழி 105 உருபு மயக்கம் 84 உருபேற்றல் 62 உரை தொடங்குதல் 279 உரையாசிரியர் 1, 4, 5, 13, 26, 29, 40, 54, 60, 62, 68, 74, 82, 83, 102, 114, 120, 161, 161, 174, 182, 187, 255, 272, 288, 291, 293, 294, 408, 415, 426, 428, 440, 448, 450 உரையிற் கோடல் 220 உலைமூக்கு 53 உவம வழுஆ 16 உவமவுருபு தொடர்ப் பொருள் 414 உள்ளமிகுதி 378 உளப்பாட்டுத்தன்மை 202 உறழ்பொருள் 16 உறுப்பின் கிழமை 80 உறுப்புத் திரிதல் 399 உறைநிலப்பெயர் 98 எ எச்சங்குறித்து நிற்றல் 255 எச்சத்தொடர் 237 எச்சப் பொருண்மை 236 எச்சப் பொருண்மை குறியாது நிற்றல் 285 எச்ச வாராய்ச்சி 92 எச்சவும்மை 255 எஞ்சாப் பொருள் 255 எஞ்சுபொருட் கிளவி 437, 439 எடுத்தோதாத விடைச் சொல் 296 எண்ணப்படும் பெயர் 288 எண்ணிடைச்சொல் 82 எண்ணிடைச் சொற்கள் 293 எண்ணியற் பெயர் 191 எண்ணின்கண் வரும் இடைச்சொல் 417 எண்ணுதற்கண் வாராமை 289 எண்ணுப்பொருண்மை 258 எண்ணும்மை 255 எண்ணேகாரம் 257 எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தல் 241 எதிர்காலத்து வரும் பகரம் 9 எதிர்மறைப் பொருள் 244 எதிர்மறைப் பொருண்மை 207 எதிர்மறையன்மை 342 எதிர்மறையும்மை 255 எதிர்மறையெச்சம் 228 எதிர்மறையோகாரம் 256 எதிர்மறைவாய்பாடு 236 எதிர்மறைவினைச் சொல் 450 எழுத்துப் பிரிந்து பொருளுணர்த்தல் 395 எழுத்துச் சாரியை 251, 296 எழுத்துப்பேறு 216, 451 எழுத்தொப்புமை 57 ஏ ஏகாரத்தான்வரும் எண் 290 ஏகாரப் பிரிநிலை 431 ஏகாரவெதிர் மறை 435 ஏதுச்சொல் 92 ஏதுப் பொருண்மை 92, 112 ஏயென்னு மிடைச் சொல் 272 ஏவாமைக்குறிப்பு 282 ஏழுவினை 225 ஏற்புழிக் கோடல் 10, 34, 41, 67, 104, 417, 461 ஏற்புழிப் பெறுதல் 250 ஏனாதி 166 ஏனைப் பாடைச் சொல் 397 ஏனையெச்சம் 235 ஐ ஐகாரவீற்றிடைச் சொல் 264 ஐந்தீற்று வினையெச்சம் 228 ஐயக்கிளவி 24 ஐயப் புலமாகிய பொதுப் பொருள் 25 ஒ ஒப்புமையுணர்த்தாத போலிச்சொல் 278 ஒருசார் வினைச்சொல் 92 ஒருசொல் ஒரு பொருட் குரித்தாகிய திரிசொல் 399 ஒருசொல் ஒருபொருட் குரித்தாதல் 297 ஒருசொல் பல பொருட்குறித்தல் 399 ஒருசொல்லிலக்கண முடைமை 401 ஒரு சொன்னடைத்தாய் உருபேற்றல் 291 ஒருதிணைச் சொல் 172 ஒரு தொடர்க்கொழிபாய் எச்சம் 430 ஒரு நிமித்தத்தான் இரண்டு திணைப் பொருளுமுணர்த்துதல் 174 ஒருபொருட்கட் பலவாய்பாடு 215 ஒருபொருட்கண் ஒரு வாய்பாடு 215 ஒருபொருட் கிளவி 13, 399 ஒருபொருண்மேற் பலசொற் கொணர்ந்தீட்டல் 397 ஒருபொருள் நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி 1 ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி 462 ஒருமைத் தன்மை 202 ஒருமைத் தன்மை வினை 204 ஒருமையுணர்த்துந் தன்மைச் சொல் 203 ஒருமொழிப் புணர்ச்சி 195, 207 ஒழியிசை யோகாரம் 256 ஒன்றனை யுணர்த்தும் படர்க்கை வினை 217 ஒன்றியற் கிழமை 79 ஒன்று பல குழீஇய தற்கிழமை 79 ஒன்றென முடித்தல் 44, 45, 49, 452 ஓ ஓகார எதிர்மறை 435 ஓகாரப் பிரிநிலை 431 ஓகாரவொழியிசை 434 ஓம்படைப் பொருண்மை 97 ஓம்படைப் பொருள் 93 ஓரீற்றவாகிய வினை 427 ஓரெழுத்தொருமொழி 1 க கட்டுரைக்கண் அசைநிலை 277 கட்டுரைச் சுவை 62 கடா அன்மை 2 கடி சூத்திரம் 76 கருப்பொருளுணர்த்தும் விரவுப் பெயர் 197 கருமச்சார்ச்சி 84 கருமமல்லாச் சார்ச்சி 85 கழிந்தபொருள் பற்றி வருங் கவலை 359 கழிவாகிய குறிப்பு 359 காரக ஏது 77 காரகம் 112 காரண காரியப் பொருண்மை 457 காரணப் பொருண்மை 40 காரணம் 112 காலக்கடவுள் 57 காலக்கிளவி 11 காலத்தின் கிழமை 79 காலந்தோன்றாமை 62 காலப்பிறிதின் கிழமை 80 காலம் விளங்காத பெயர் 213 காலமுணர்த்தாது வினை மாத்திர முணர்த்தும் பெயர் 415 காலவழு 11, 239, 245 காலவெழுத்து 207, 216, 234 காலவேறுபாடு 222 காவிதி 166 கிழமைப் பொருட்கண் தோன்றுஞ் சொல் 80 கிழமைப் பொருட்குரிய உருபு 99 கிழமைப் பொருண்மை 154 குணச்சொல் 416 குரையென்னுமிடைச் சொல் 272 குழுவின் வந்த குறிநிலை வழக்கு 389 குறிப்பான் எஞ்சி நின்றபொருள் 440 குறிப்புச் செயப்படுபொருள் 71 குறிப்புப் பொருண்மை 201, 258, 396 குறிப்போசை 282 குற்றுகரம் 228 குறிப்புவினை 427, 428, 432 குறிப்பு வினையெச்சம் 229, 414 கொடைச்சொல் 30 கொடைப் பொருளவாகிய சொல் 75 கொள்ளாப் பெயர் 119 ச சாதிப் பெயர் 196 சாரப்படும் சொல்லின் வேறாய் வருதல் 249 சாரப்படுமொழி 251 சான்றோர் செய்யுள் 217, 397 சிறப்பில்லாப் பெயர் 194 சிறப்பிலக்கணம் 62 சிறப்பும்மை 255 சிறப்புவிதி 275 சிறப்போகாரம் 256 சிறுவழக்கு 211 சினைக்கிளவி 85 சினைச்சொல் 88 சினைமுதற் கிளவி 224 சினை வினைக்குரிய எழுத்து 61 சினை வினையெச்சம் 416 சீர்நிலைதல் 408 சூத்திரயாப்பு 224, 416 செஞ்சொல் 436 செப்பு வழா நிலை 16 செப்புவழு 13, 35, 37 செய்தெனெச்சம் 457 செய்யப்பட்ட பொருள் 114 செய்யுட்கண் இசை நிறைத்து நிற்றல் 250 செய்யுட்கண் மரபு வழுவமைதி 40 செய்யுட்குரியசொல் 397, 410 செய்யுட்சுவை 97 செய்யுட் சொல் 397 செய்யுட் பொருள்கோள் 397 செய்யுமென்னும் பெயரெச்சம் 233 செய்யுள் செய்வுழிப்படும் விகாரம் 397 செய்யுள் முடிபு 45 செய்யுள் நெறி 18 செய்யுளிறுதி 257 செய்யுளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசை 286 செய்யுளின்பம் 108, 210, 220 செய்யுளொழிபு 410 செய்யென் கிளவி 451 செயவெனெச்சம் 457 செயற்கென்னும் வினையெச்சம் 40 செலவுச்சொல் 30 செலவுத் தொழில் 30 செவ்வன் இறை 13, 15 செவ்வெண் தொகை 291, 293 செறிவென்னுங் குறிப்பு 347 சேய்நிலம் 29 சேறலொப்புமை 110 சொல்லாராய்ச்சி 60 சொல்லிசைக்கும் பொருள் 155 சொல்லிலக்கணம் 161 சொற்பெய்து விரித்தல் 83 சொற்பொருண்மை 252 ஞ ஞாபகஏது 77 ஞாபகவேதுப் பொருண்மை 92 த தகுதி 1 தட்டுப் புடையல் 281 தந்திரவுத்தி 119, 179 தம்மாற் சாரப்படுஞ்சொல் 251 தமக்கெனப் பொருளின்மை 249 தமிழ்ச் சொல் 401 தருசொல் 99 தலைதடுமாற்ற மென்னுஞ் தந்திரவுத்தி 190 தலைமைப் பொருள் 51 தலைமையில் பொருளை 51 தற்கிழமை 79 தன்பொருளிற்றீர்தல் 106 தன்மைக்கண் வருதல் 260 தன்மைக்குரிய சாரியை 187 தன்மைக்கேற்ற சாரியை 187 தன்மை திரிபெயர் 56 தன்மைப் பன்மை வினைச் சொல் 209 தன்மைவினை 202 தன்வினை கோடல் 436 தன்னியல்பு மாத்திரை 125 தன்னின் வேறாகிய பொருள் 156 தன்னினம் முடித்தல் 27, 36, 40, 81, 213 தன்னினும் பிறிதினுமாகிய கிழமை 79 தனிமொழி 1 தாது 415 தாளம் 174 திசைக்கூறு 82 திசைச்சொல் 449 திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு 49 திணையுள் அடங்காத தெய்வம் 4 திணையொடு பழகிய பெயர் 197 திணையொடு பழகிய விரவுப்பெயர் 197 திணைவழு 56 திணை வழுவமைதி 57, 210 திணைவழுவோடு கூடிய பால்வழு 61 திணை விராய் எண்ணப்பட்ட பெயர் 51 தெரிநிலையும்மை 255 தெரிநிலையோகாரம் 256 தெரிநிலை வினை 427, 428, 432 தெளிவுப் பொருண்மை 265 தென்பாண்டி நாட்டார் 400 தென்பாண்டிநாடு 400 தேர்த்தட்டு 399 தேவகை 82 தேற்றேகாரம் 257 தொக்க சொல்லல்லாதமொழி 412 தொக்கவழித்தொகை 415 தொகுதலிற்றொகை 412 தொகைச் சொற்கள் 179 தொகைச் சொற்குப் பயனிலை கோடல் 67 தொகையல்லாத தொடர்மொழி 420 தொகையாதலுடைமை 114 தொகையிலக்கணம் 67, 412 தொடர்நிலைச் செய்யுள் 155 தொடர்மொழி 1 தொடர்மொழி எச்சம் 440 தொடர்மொழிப் பொருள் 40, 110, 405 தொடிதுலாமென்னும் நிறைப்பெயர் 116 தொல்லாசிரியர் 62, 71, 90 தொழிலது முதனிலை 112 தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் 50 தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் 50 தொழிற்கிழமை 79 தொழிற்பயனுறுதல் 71 தொழிற்பொருண்மை 201 தொழினிலையொட்டு 198 தொன்னூலாசிரியர் 463 தொன்னூனெறி 463 ந நசையாகிய குறிப்பு 329 நடுக்கமாகிய குறிப்பு 316 நாற்கிளவி 202 நிகழ்காலச் சொல் 240 நிகழ்காலத்துப் பொருணிலை 240 நிலத்தின் கிழமை 79 நிலைப் பொருண்மை 215 நிலைபெறும் வேற்றுமை 101 நிறவேறுபாடு 373 நினைவும் துணிவுமாகிய குறிப்பு 337 நீயிரென்னும் பெயர் 190 நீயென்னும் பெயர் 189 நுண்மையாகிய பண்பு 374 நுணுக்கமாகிய குறிப்பு 330 நோக்கப்படும் பொருள் 93 நோயாகிய குறிப்பு 341 ப பக்கிசைத்தல் 420 படர்க்கைப் பெயரீறு 208 படர்க்கையாரை உளப்படுத்தல் 202 படர்க்கை வினை 10, 11, 202, 208 படர்க்கை வினைக்கீறாய் நின்று பாலுணர்த்துதல் 208 படுத்தலோசை 418 பண்பினது தொகை 412 பண்புக்கிழமை 79 பண்புகொள்பெயர் 17 பண்புகொள் பெயர்க்கொடை 27 பண்புச்சொல் 416 பண்புடைப் பொருள் 416 பண்புத்தொகை நிலைக் களத்துப் பிறத்தல் 418 பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை 1 பண்புத்தொகை யாராய்ச்சி 27, 41 பண்புப் பொருண்மை 258 பத்துவகையெச்சம் 397 பதக்குத் தூணியென்னும் அளவுப் பெயர் 116 பயனிலை கோடல் 62, 67 பயனின்மையாற் பயின்ற உரிச்சொல் 298 பயிலாத உரிச்சொல் 298 பரத்தலாகிய குறிப்பு 361 பலசொல் ஒரு பொருட்குரியது 399 பலசொல்லாற் றொகுதல் 417 பலபொருட்டொகுதி 90 பலபொருளொருசொல் 49 பலரறிசொல் 7, 421 பன்மைத்தன்மை 202 பன்மைபற்றிய வழக்கு 49 பன்மையுணர்த்துந் தன்மைச் சொல் 202 பன்மை யொருமை மயக்கம் 61 பன்மொழித்தொடர் 1 பாணி 174 பாதுகாவல் 193 பார்ப்பனச் சேரி 49 பால்வழு 11 பால் விளங்க நிற்கும் உயர்திணைப்பெயர் 162 பால் விளங்க வருமியல்பு 211 பால்விளங்க வரூஉம் அஃறிணைப்பெயர் 167 பாலுணர்த்தும் இடைச்சொல் 202, 208 பாலுள் அடங்காத பேடி 4 பாற்குரிமை 161 பிரிக்கப்பட்ட பொருள் 431 பிரிநிலையேகாரம் 257 பிரிநிலையோடு முடிதல் 431 பிரியாத்தொகை 416 பிறபாடைச் சொல் 397 பிறமொழிமேனிற்றல் 419 பிறிதின் கிழமை 79 பிறிதின்வினை கோடல் 457 பிறிதினியைபு நீக்கல் 182 பிறிதுபொருள் சுட்டும் ஆகுபெயர் 106 பிறிதுமொழிதலென்பதோரணி 157 பிறிது வந்தடைதல் 118 பிறிதுவினை கோடல் 38 பிறிதொன்றன் பொருட்கட் சேறலுடைமை 101 பிறிதொன்றனோடு தொக்கு நின்றபெயர் 65 பிறிதோர் வேற்றுமைப் பொருள் 114 பிறிதோருருபை யேற்றல் 104 பின்மொழிமேனிற்றல் 419 புடையானொப்புமை 401 புணர்ச்சிக் குறிப்பு 309 புள்ளியீற்றுப்பெயர் 129 புள்ளியீற்றுயர் திணைப் பெயர் 120 புள்ளியீறும் உயரீறுமாகிய அஃறிணைப்பெயர் 151 புறத்துறவு 451 புறத்தொகை 233 பெண்மகன் 164 பெண்மைச்சினைப் பெயர் 180 பெண்மைச் சினைமுதற் பெயர் 180 பெண்மை சுட்டாப் பேடு 4 பெண்மை முறைப்பெயர் 180 பெண்மையியற்பெயர் 180 பெயர்க்கிலக்கணமாகல் 62 பெயர்க்கேயாய தொகை 67 பெயர்ச்சொற்குப் பயனிலை கோடல் 62 பெயர் தோன்றிய துணை 65 பெயர் நிலைக் கிளவி 4 பெயர்ப் பாலறி சொல் 11 பெயர்ப் பொருண்மை 258 பெயர்வினைப் போலி 297 பெயரதியல்பு 192 பெயரா னெண்ணப் படுஞ்செவ்வெண் 290 பெயரிலக்கணம் 62, 66, 155 பெயரிற் பிரிந்த ஆணொழி மிகு சொல் 50 பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் 50 பெயரிறுதி நின்ற உருபு 104 பெயரிறுதியுருபு வருதல் 156 பெயரெச்சம் 428, 433 பெயரொடுபெயர் 67 பெயரொடு பெயர் தொக்கன 67 பெயரொடு வினை 67 பெயரொடு வினைவந்து தொக்க வினை 67 பெரிதென்னுங் குறிப்பு 343 பெருந்தொடர் 42 பெருமையாகிய பண்பு 320 பொதுவிதி 291 பொதுவிலக்கணம் 62, 108, 155, 160, 297 பொய்ப் பொருள் 66, 155 பொருட் கிழமை 79 பொருட் கினமாகிய பிற பொருளைக் குறிப்பால் உணர்த்தல் 60 பொருட்குரிய சொல்லாற் சொல்லுதல் 17 பொருட்குரிய வழக்கு 11 பொருட் பிறிதின் கிழமை 80 பொருண் மயக்காகிய பிசிச்செய்யுள் 449 பொருணிலை மரபு 419 பொருள் சிதையாமலுணர்த்துதற்கேற்ற வாய்பாடு 83 பொருள் மயக்கம் 84 பொருள் வரைத்துணர்த்தாச் சுட்டு 37 பொருள் வரைத்துணர்த்தும் பெயர் 37 பொருள் வேறுபாடு 160 பொருளதுபுடை பெயர்ச்சி 158 பொருளின் கிழமை 79 பொருளின் பொதுமை 46 பொருளினது புடை பெயர்ச்சி 200 பொருளுணர்த்து முறைமை 297 பொருளொடு புணர்த்துணர்த்த இசை குறிப்பு 396 பொருளோடு சொற்கியைபு 394 பொரூஉப் பொருள் 78 போலியுரை 5, 13, 40, 54, 60, 68, 74, 114, 174, 293, 401, 428, 448 ம மக்களிரட்டை 48 மகடூ அறிசொல் 1 மதவிகற்பம் 83 மயக்கமாகிய குறிப்பு 351 மரபு வழாநிலை 11, 38 மரபு வழு 11, 42, 46, 48, 49, 50, 60, 244, 246, 285, மரூஉமுடிபு 17 மன்னை யொழியிசை 434 மாட்டேறு 154 மாரீற்றுச் சொல் 207 மிகச்சொற் படாமை 416 முடிக்குஞ் சொற்பொருள் 66 முதல்வினைக்குரிய எழுத்து 61 முதலொடு குணம் இரண்டடுக்கி வருதல் 26 முதற்சினைப் பெயரியல் 90 முதற்சொல் 88 முதனிலை 410 முதனிலையாயபெயர் 264 முதுசொல் 449 முழுவதுந் திரிந்தன 399 முற்றுகரவீறு 123 முற்றுதலென்னும் பொருளது பண்பு 285 முற்றும்மை 255 முன்மொழிமேனிற்றல் 419 முன்னில்லதனையுண்டாக்குதல் 71 முன்னிலை ஒருமை 223 முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் 462 முன்னிலைச் சொல் 444 முன்னிலைச் சொல் விகாரம் 451 முதனிலைத் தொழில் காரணம் 228 முன்னிலைப் பாலறி கிளவி 11 முன்னிலை மொழி 274 முன்னிலை யசைச் சொல் 295 முன்னிலை வாய்பாடு 444 முன்னிலை வினைக் குறிப்பு 224 முன்னிலை வினைகோடல் 45 முன்னின்ற வெச்சம் 233 முன்னின்றாரை உளப்படுத்தல் 202 முன்னுள்ளதனைத் திரித்தல் 71 மூவிடம் 428 மூன்றிடத்துப் பெயர் 68 மூன்றுமாத்திரையின் மிக்கியல்பு 141 மெய்திரிந்தாயதற்கிழமை 79 மெய்ப்பொருள் 66, 155 மெய்ம்மையாகிய காரணம் 394 மென்பால் 110 மேலைக் கிளவி 217 மொழிபுணரியல் 404 மொழிமாற்றியுரைத்தல் 187 ய யாப்புறவு 155 யோகவிபாகம் 11 ர ரகார வீற்றளபெடைப் பெயர் 141 ரகார வீற்றுச்சுட்டு முதற்பெயர் 142 வ வடசொல் 401 வடநூலார் 1, 55, 416 வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமை 1 வடமொழிச் சிதைவு 196 வடமொழிப் பொருள் 196 வரலாற்று முறைமை 389, 394 வரவு தொழில் 29 வருமொழி வரையறை 86 வரையறை 52 வரையறையின்றி இருவகை வினையுங் கோடல் 232 வலியும் வருத்தமுமாகிய குறிப்பு 344 வழக்கிலக்கணத் தொழிபு 410 வழக்கின்கண் மரபு வழாநிலை 40 வழக்குநெறி 18 வழக்குப் பயிற்சி 159, 165, 220 வழுத்தலாகிய குறிப்பு 382 வழுவமைத்தல் 444 வன்பால் 110 வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்பு 379 வாழ்த்துதற் பொருண்மை 226 விசேட இலக்கணம் 91 விடுதலாகிய குறிப்பு 318 விதிப்பொருளவாகிய வாய்பாடு 236 விதிவினை 236, 450 விதிவினைச்சொல் 450 விரவுப் பெயர்த் தொகை 421 விரும்புதலாகிய பண்பு 334 விரும்புதலுணர்த்தல் 338 விலங்கிரட்டை 48 விளிகொள்ளும் பெயர் 119 வினாப்பொருளையுணர்த்துஞ் சொல் 210 வினா வழாநிலை 16 வினாவழு 11, 32 வினா வேகாரம் 257 வினா வோகாரம் 256 வினைக்கட் கிடந்த தொழில் 457 வினைக்கிலக்கணம் 112 வினைக்குறிப்பு 8, 213, 428 வினைச் செயப்படுபொருள் 71 வினைச் சொற் பொருண்மை 241 வினைசெயன் மருங்கு 292 வினைப் பாலறிசொல் 11 வினைப்பெயர் 234, 432 வினைப் பொருண்மை 258 வினைமுதல் வினை 232 வினைமுதற் பொருள் 95 வினைமுதற்றொழிற் பயன் 73 வினையினது தொகை 412 வினையெச்சம் 427, 428, 432, 457 வினையெச்சமாதல் 204 வெளிப்பட்ட உரிச்சொல் 298 வெளிப்படவாரா உரிச்சொல் 299 வெளிப்படுசொல் 373 வேண்டிக் கோடற் பொருண்மை 226 வேற்றுமைத் தொகை நிலைகளத்துப் பிறத்தல் 418 வேற்றுமை பொருடொக்க தொகை 412 வேற்றுமைப் பொருளையுடைய தொகை 412 வேற்றுமை யிலக்கணம் 62, 155 வேற்றுமையுணர்த்திப் பெயருணர்த்தல் 62 வேற்றுமையுமுடைமை 401 வேற்றுமையுருபை யிறுதியாகவுடைய சொல் 102 வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப்பொருள் 414 வேறுபடுத்தல் 71 வேறுபல குழீஇய தற்கிழமை 79 வேறுவினைப் பொதுச் சொல் 46 ளகார ஈற்றுச் சுட்டுமுதற் பெயர் 148 ளகார வீற்று முறைப் பெயர் 147 னகார வீற்றுச் சுட்டுமுதற் பெயர் 142 னகார வீற்று முறைப் பெயர் 136, 147 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எ. கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எ. வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எ.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாதிரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எ. வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாதிரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாதிரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாதிரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார்  Foot Notes 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார்