இந்தியப் பெரியார் இருவர் - டாக்டர் இராஜகோபாலாச்சாரியார் - டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : இந்தியப் பெரியார் இருவர் - டாக்டர் இராஜகோபாலாச்சாரியார் - டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+72 = 88 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 55/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந் துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமை யாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவ தில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தர வேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) முகவுரை இந்தியப் பெரியார் இருவர் என்னும் பெயர் கொண்ட இந்நூல்-இந்தியாவின் இறுதிக் கவர்னர் ஜெனரலாக இருந்த டாக்டர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் வரலாற்றையும், இன்றைய குடியரசுத் தலைவராகவுள்ள டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்கள் வரலாற்றையும் மாணவர்க்கேற்ற முறையிற் கூறுவதாகும். இப்பெரியார் இருவரும் பட்டதாரிகள்; புகழ் பெற்ற வழக்கறிஞர்கள்; நாட்டு உரிமைப் போரிற் கொண்ட வேட்கை காரணமாகத் தம் தொழிலைத் துறந்தவர்கள்; பல முறை சிறை சென்றவர்கள்; ஓய்வின்றி நாடு முழுவதும் சுற்றி நாட்டு நலனைப் பற்றிச் சொற்பொழிவாற்றியவர்கள்; காந்தியடிகளின் உள்ளங் கவர்ந்த ஊழியர்கள்; உத்தமப்பண்பு உடையவர்கள். இப்பெருமக்களுடைய வரலாறுகள் - கொள்கைகள் இக்கால மாணவவுலகத்திற்குத் தேவையானவை. எதிர்காலத்தில் இந்நாட்டாட்சியிற் பங்குகொண்டு தொண்டுபுரிய இருக்கும் இக்கால மாணவர்கள் சில அடிப்படைக் கொள்கைகளை இறுகப்பற்றி நடத்தல் வேண்டும். அவ்வடிப்படைக் கொள்கை களை இப்பெருமக்கள் வரலாறுகள் அளிக்கவல்லன. கல்வித்துறை அறிஞர் இந்நூலினைக் கடைக் கணித்து மாணவர் உலகிற்குப் பயன்படுமாறு செய்ய வேண்டுகிறேன். ஆசிரியன் பொளுளடக்கம் கவர்னர் ஜெனரல் டாக்டர் இராஜகோபாலாச்சாரியார் 1. கல்விப் பயிற்சி 1 2. சேலம் வாழ்க்கை 8 3. சென்னை வாழ்க்கை 16 4. உரிமைக்குப் பின் 24 5. நற்பண்புகள் 28 6. பொன்மொழிகள் 32 குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் 1. கல்விப் பயிற்சி 38 2. தொண்டில் ஆர்வம் 43 3. வழக்கறிஞர் தொழில் 47 4. உரிமைப் போரில் உழைப்பு 51 5. நற்பண்புகள் 63 6. பொன் மொழிகள் 66 கட்டுரைப் பயிற்சி 72 கவர்னர் ஜெனரல் டாக்டர் இராஜகோபாலாச்சாரியார் 1. கல்விப் பயிற்சி முன்னுரை இந்தியா வெள்ளையர் ஆட்சிக்கு உட்பட்டபோது முதல் கவர்னர் ஜெனரலாயிருந்தது வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர். இந்தியா முழுவுரிமை பெற்றபோது இறுதிக் கவர்னர் ஜெனரலாக இருந்து, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தமது ஆட்சிப் பொறுப்பைவிட்டு விலகிய பெரியார் நமது டாக்டர் ச. இராஜகோபாலாச்சாரியார். வெள்ளையர் ஆட்சித் தொடக்கத்தின்போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் வெள்ளைக்காரர். வெள்ளையர் தொடர்பு நீங்கும் தறுவாயில் கவர்னர் ஜெனராக இருந்தவர்- இந்தியக் குடியரசுத் திட்டத்தை வகுத்தபோது இந்திய அரசாங்கத்தின் இணையற்ற தலைவராய் இருந்தவர்-இந்தியராகிய ஆச்சாரியார். ஆச்சாரியார் சேலம் மாவட்டத்தினர்; சிறந்த வழக்கறிஞர்; சீர்திருத்தக்காரர்; உரிமைப் போரில் காந்தியடிகளின் மாணவராகிப் பலமுறை சிறை சென்றவர்; தென்னாட்டில் உரிமைப்போரை முன்னின்று நடத்தியவர்; வருவது உரைக்கும் அரசியல் அறிஞர்; சென்னை மாகாண முதலமைச்சராய் இருந்தவர்; இடைக்கால இந்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஏற்றவர்; வங்க மாகாணக் கவர்னராய் இருந்தவர்; இறுதியில் இணையற்ற இந்தியக் கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து உலகப்புகழ் பெற்றவர். ஆச்சாரியார் நமது மாகாணத்தவர்; தமிழில் மிக்க பற்றுடையவர்; பல தமிழ் நூல்களை வெளியிட்டவர்; பல அரிய குணச்சிறப்புக்களை உடையவர். இவரது வரலாறு நமது வாழ்க்கைப் பாதைக்கமைந்த வழிகாட்டியாக அமையக் கூடும். ஆதலின், இவர் வரலாற்றைச் சுருக்கமாகவாயினும் படித்தறிதல் மாணவர்க்கு இன்றியமையாத நன்மையைத் தருவதாகும். சிறந்த மரபு இராஜகோபாலாச்சாரியாருடைய முன்னோர் `கல்வியிற் குறை விலாத காஞ்சி மாநகரை’ச் சேர்ந்தவர்கள். அவர்கள் வைணவ சமய நூல்களையும், வடமொழி நூல்களையும் நன்கு பயின்று ஆச்சாரியராய் விளங்கினமையின் `சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்கள். அவருள் ஒருவராகிய சக்கரவர்த்தி வரதாச்சாரியார் என்பவர் காஞ்சியில் வாழ்ந்தவர். அவர் ஒரு நாள் வேகவதியாற்றில் நீராடிக் கொண்டிருந்த பொழுது வெள்ளத்தில் மிதந்துவந்த பிணம் ஒன்றைக் கண்டார்; அதனைக் கரை சேர்த்து விதிப்படி கொளுத்தினார்; பின்னர் நீராடித் தமது மனைபுகுந்தார். இந்த நிகழ்ச்சியை அறிந்த உற்றரும் உறவினரும் அவரைச் சாதியினின்றும் விலக்குச் செய்தனர்; அவர் இல்லத்திற்குப் போதலைத் தவிர்த்தனர். ஒரு நாள் வரதாச்சாரியாருடைய தந்தையாரின் ஆண்டு நினைவுநாள் வந்தது. அன்று புரோகிதர் வரவில்லை; ஆயினும் மனஞ் சலிப்புறாது அவர் தாமே யாவற்றையும் செய்யத் தொடங்கினார். அவ்வமயம் ஒரு பெரியவர் அவர் முன் தோன்றினார்; எல்லாச் சடங்குகளையும் செய்தார்; உடனிருந்து உண்டார். அப்புதியவரைக் காண, அதுவரை ஒதுங்கி நின்ற உற்றார் உறவினர் ஓடிவந்தனர். புதியவர் அவர்கiளப் பார்த்து, “வரதாச்சாரி உங்கட்குப் பொல்லான்; எனக்கு நல்லான்” என்று கூறிச் சென்றனர். அங்ஙனம் தக்க சமயத்தில் உதவிச் சென்றவர் திருமாலே என்பது அவர்கள் கருத்து. அந்நாள் முதல் வரதாச்சாரியார் `நல்லான் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்டார். அப்பெரியார் மரபில் வந்தவரே நமது ஆச்சாரியார். சக்கரவர்த்தி ஐயங்கார் நமது ஆச்சாரியரது தந்தையார் பெயர் சக்கரவர்த்தி ஐயங்கார் என்பது. அவர் சேலம் மாவட்டத்தில் ஓசூர்த் தாலூகாவைச் சேர்ந்த தொரப் பள்ளி என்னும் சிற்றூரினர். அச்சிற்றூர் தென் பெண்ணை யாற்றங்கரையில் உள்ளது. அவ்வூரில் பலவகைத் தொழில் புரிபவரும் வாழ்கின்றனர். ஊர் ஓரளவு வளமுடையது. சக்கரவர்த்தி ஐயங்கார் அவ்வூர் மணியக்காரர். அவர் வடமொழியிற் சிறந்த அறிஞர்; தமிழில் ஓரளவு படித்தவர்; சிறந்த ஒழுக்கமுடையவர்; அனைவரையும் தம்மைப் போலவே மதித்து நடந்தவர்; உண்மை, நேர்மை முதலிய நற்குணங்களைப் பெற்றவர். இத்தகைய பண்பு களால் ஊரார் அவரைத் தம்மூர்த் தலை மனிதராகப் போற்றி வந்தனர். அவரது வடமொழிப் புலமையைச் சென்னை மாகாணக் கல்லூரி வடமொழிப் பேராசிரியரான டாக்டர் ஹாப்பர்ட் என்பவர் கேள்வி யுற்று, அவரை நேரிற்கண்டு அளவளாவிக் களித்தனராம். சென்னைக் கவர்னராயிருந்த கன்னிமாராப் பிரபு ஓசூருக்குச் சென்றிருந்த பொழுது, அவரை வரவழைத்துப் பேசி அவரது புலமையைப் பாராட்டினராம். இங்ஙனம் சிறந்த வடமொழி அறிஞராய் விளங்கிய சக்கரவர்த்தி ஐயங்காரது இல்லறத்தை நல்லறமாக்கி வந்த மனைவியார் சிங்காரம்மாள் என்பவர். அவர் கணவருக்கேற்ற காரிகையராய் வாழ்ந்து, மக்கள் மூவரைப் பெற்றனர். அவர்கள் நரசிம்மன், சீனிவாசன், இராஜகோபாலன் என்பவர்கள். நமது இராஜகோபாலாச்சாரியார் மூன்றாம் மகனார் ஆவர். அவர் 1878-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் நாள் பிறந்தவர். கல்விப் பயிற்சி ஆச்சாரியார் ஓசூரில் இருந்த நாட்டாண்மைக் கழகப் பள்ளியில் ஆறாம் வயதில் சேர்க்கப்பட்டார். அவர் பிற பிள்ளைகளைப்போலவே விளையாட்டில் ஊக்கம் காட்டினார்; பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்தினார்; எல்லா மாணவரிடத்தும் வேறு பாடின்றிக் கலந்து பழகினார்; சிலம்பு விளையாட்டில் தேர்ச்சி பெற்றார்; பாடங்களில் தமக்குத் தோன்றிய ஐயங்களை ஆசிரியரிடத்தும் தந்தையாரிடத்தும் அவ்வப்போது கேட்டுத் தெளிந்தார். அவர் தம் பெற்றோர் தமக்குக் கொடுத்துவந்த காசுகளைப் பெற்று மற்றப் பிள்ளைகளைப்போலத் தின்பண்டங்களை வாங்கித் தின்பதில் செலவழிக்கவில்லை; அவற்றைச் சேர்த்து வைத்துத் தமக்குத் தேவையான நூல்களை வாங்கிப் படித்து வந்தார். இப்பழக்கம் அவரிடம் பல நூல்களைச் சேர்த்தது; நாளடைவில் அந்நூல்களின் தொகுதி ஒரு சிறிய நூல்நிலையமாகக் காட்சியளித்தது. எல்லா மாணவரிடமும் இப்பழக்கம் இருக்குமாயின், வீட்டுக் கொரு நூல் நிலையம் காட்சியளிக்குமல்லவா? பெங்களூரில் கல்வி கற்றல் ஓசூர்ப்பள்ளியிற் படித்துத் தேறிய ஆச்சாரியார் பெங்களூர் லண்டன் மிஷன் உயர் நிலைப்பள்ளியிற் சேர்ந்தார்; அங்கு நூல் நிலையத்தில் இருந்த நூல்களுள் தம் தகுதிக்கேற்ற நூல்கள் பலவற்றைப் படித்து முடித்தார். அவ்வகன்ற படிப்பினால் அவரது பொது அறிவு விரிவுற்றது. அவர் மெட்றிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள சென்ட்ரல் கல்லூரியிற் சேர்ந்தார். அங்கு அவர் தம் பாடங்களைச் செவ்வனே படித்து வந்தமையாலும் பொது நூல்களை நிரம்பப் படித்து வந்தமையாலும் மாணவர்திலகமாக விளங்கினார். கல்லூரி ஆசிரியர்கள் அவரது அகன்ற அறிவினைப் பாராட்டினர். அவர் பி. ஏ. வகுப்பில் அறிவியற்கலையைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்றார்; ஆங்கிலத்திற் பெருவிருப்பம் காட்டினார்; ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனைத்தையும் நன்கு படித்தார்; சர் வால்டர் ஸ்காட் வரைந்த நாவல்களை விரும்பிப் படித்தhர்; அவருடைய ஆங்கில அறிவையும் அறிவியற்கலை ஆர்வத்தையும் கண்ட டெய்ட் என்ற ஆங்கிலப் பேராசிரியரும், கூக் என்ற அறிவியற்கலைப் பேராசிரியரும் அவரிடம் மிக்க அன்பு காட்டினர். அவரது கல்வி முன்னேற்றத்திற் கருத்தைச் செலுத்தினர். ஆச்சாரியார் 1897-இல் தமது பதினெட்டாம் வயதில் பி. ஏ. தேர்வில் வெற்றி பெற்றார்; ஆங்கிலத்திலும் அறிவியற் கலையிலும் முதல்வராய்த் தேறிப் பரிசும் பெற்றார். திருமணம் ஆச்சாரியார் கல்லூரி இடைநிலை வகுப்பில் வாசித்தபொழுதே - அவரது பதினாறாம் வயதில் - திருமணம் சிறப்புடன் நடைபெற்றது. அவரது மனை வாழ்வைச் சிறப்பிக்கவந்த அம்மையார் பெயர் அலர்மேல்மங்கம்மாள் என்பது. அவர் சித்தூர்ரைச் சேர்ந்தவர். சட்டக்கல்லூரி மாணவர் ஆச்சாரியார் கல்லூரியில் நடைபெற்ற கழகக் கூட்டங்களிற் கலந்துகொண்டு பேசிப் பேசிச் சிறந்த பேச்சாளராகவும் வாதத்தில் வல்லுநராயும் இருந்த காரணத்தால், அவர் வழக்கறிஞராதலே ஏற்றதென்று தந்தையார் கருதினார்; அக் கருத்தால் அவரைச் சென்னைச் சட்டக்கல்லூரியிற் சேர்த்தார். ஆச்சாரியார் அங்கு இரண்டு ஆண்டுகள் படிக்கலானார். சென்னைக் கடற்கரையில் உள்ள `ஐஸ் ஹவுஸ்’ என்ற மாளிகை அப்பொழுது மாணவர் இல்லமாக இருந்தது. ஆச்சாரியார் அவ்வில்லத்தில் தங்கிப் படித்து வந்தார். விவேகானந்த அடிகள் ஆச்சாரியார் சட்டக்கல்லூரி மாணவராயிருக்கையில் விவேகானந்த அடிகள் சென்னைக்கு வந்தார். ஆச்சாரியார் தங்கியிருந்த மாணவர் விடுதியில் அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விவேகானந்தர் யாவர்? அவர் வங்க மாகாணத்தைச் சேர்ந்தவர்; பி. ஏ. பட்டம் பெற்றவர்; சிலம்பம் மற்போர் முதலிய பயிற்சிகளில் வல்லவர்; இராமகிருஷ்ண பரம ஹம்சர் என்ற பெரியாருடைய மாணவர். அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரிற்கூடிய உலகச் சமய மாநாட்டிற்கு இந்துசமயச் சார்பிற் சென்றவர்; அங்கு இந்துசமயப் பழமையையும் பெருமையையும் எடுத்துப் பேசி உலகறியச்செய்து புகழ் பெற்றவர்; அமெரிக்கர் பலரை மாணவராக்கி இராம கிருஷ்ண மடத்தை அமெரிக்காவில் நிறுவினவர்; பின்னர் ஐரோப்பிய நாடுகளிற் சுற்றிச் சமயப் பிரசாரம் செய்து தாய்நாடு மீண்டவர்; மீணட் பின்னர் இந்தியா முழுவதும் சுற்றி இந்திய சமுதாய ஒற்றுமை, இந்து சமயச் சிறப்பு முதலிய பொருள் பற்றி அங்காங்குச் சொற்பொழிவாற்றினவர். `இந்து சமூகம், சாதிவேறுபாடு-தீண்டாமை-பெண்ணடிமை-இனப்பற்றின்மை-கல்வியின்மை-மூடநம்பிக்கைகள் இவற்றால் சீரழிந்து கிடக்கிறது. இச்சமூகம் நன்னிலையடைய வேண்டுமாயின் மேற் சொல்லப்பட்ட குறைகள் நீக்கப்படல் வேண்டும். இவற்றை நீக்காதவரை இந்து சமூகம் வன்மையும் சிறப்பும் பெறாது’, என்பது அடிகளது அழுத்தமான கருத்தாகும். அடிகள் இக்கருத்தினை எல்லா இடங்களிலும் நன்கு வற்புறுத்திவந்தார். அவர் சென்னையிற் பேசியபொழுதும் இதனை வற்புறுத்தினார். இளமையிற் பதிந்த எண்ணங்கள் அடிகள் தமது விடுதியில் தங்கியிருந்தது ஆச்சாரியாருக்கு மிகுந்த களிப்பினை அளித்தது. அவர் அடிகளது சொற்பொழிiவக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; `இத் துறவியார் நமது சமூக நலனைப் பற்றிக் கூறுவன அனைத்தும் உண்மையே. இவரால் நமது இந்து சமயம் கடல் கடந்த நாடுகளிலும் தெரிய வழியேற்பட்டது. இப்பெரியாரைப் போல ஒவ்வொரு துறவியும் சமூகத்தொண்டு செய்யின், நம்மக்கள் விரைவில் முன்னேற்றம் பெற வழியுண்டாகும்,’ என்று தமக்குள் எண்ணினார். “தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாந் தலை” என்ற கொள்கையுடைய ஆச்சாரியார், அடிகள், விடுதியில் மாணவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபொழுதும் அவருடைய பொன்னுரைகளைக் கேட்டுவந்தார். அடிகளுடைய திருவிருவம் ஆச்சாரியருடைய உள்ளத்தில் ஆழப்பதிந்தது; அவருடைய நல்லுரைகள் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அடிகள் வருத்தத்துடன் குறிப்பிட்ட சமூகக் குறைகளை இயலும் அளவு “எனது வாழ்நாட்களில் நீக்கப் பாடுபடுவேன்,” என்று உறுதி கொண்டார். பி. எல். பட்டம் ஆச்சாரியார் மிக்க ஊக்கத்துடன் சட்டத் தேர்வுக்குப் பயின்றார்; சட்டமாணவர் கழகத்திற் சேர்ந்து, தம் வாதத் திறனை ஆசிரியர்கள் பாராட்டும்வண்ணம் வளர்த்தார்; சொல்வன்மை யின் சிறப்பினை ஓர்ந்து உணர்ந்தார்; “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் லின்மை யறிந்து” என்னும் வள்ளுவர் அறிவுரைகளுக் கிணங்கத் தம் சொல்லின் வளத்தைப் பெருக்கிக் கொண்டார்; நூல் நிலையத்தில் உள்ள பலநாட்டுச் சட்டங்களை இயன்றவரை வாசித்தார்; இறுதியில் தமது இருபதாம் வயதில் (1899-இல்) பி. எல். பட்டம் பெற்றார். 2. சேலம் வாழ்க்கை சேலத்திற் குடியேற்றம் வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஆச்சாரியார் சேலத்தில் தொழில் புரிதலே தக்கது எனக் கருதி அங்குக் குடியேறினார். அவருடன் அவர் தந்தையாரும், மனைவியார் அலர்மேல் மங்கம்மாளும் சென்றனர். ஆச்சாரியார் 1900 - ஆம் ஆண்டு முதல் 1919 மார்ச்சு மாதம் வரை சேலத்தில் இருந்தார். அவர் சேலம் சென்ற காலத்தில் திரு. சி. விஜயராகவாச்சாரியார், திரு. கே. ஜி. வேங்கடசுப்பையர், திரு. பி. வி. நரசிம்மையர் என்ற மூவரும் சேலத்திற் புகழ் பெற்ற வழக்கறிஞராயிருந்தனர். ஆச்சாரியார் தமது நுண்ணறிவினாலும் வாதத்திறமையாலும் விரைவில் மேற்சொன்ன மூவரைப்போலச் சிறப்புப்பெறலானார். முதல் வழக்கில் வெற்றி அவர் சேலம் சென்றவுடன் ஒரு பெரிய வழக்கறிஞரிடம் உதவி யாளராயிருக்க விரும்பினார். ஆனால் அப்பெரியவர் அதற்கு இசைய வில்லை. அப்பெரியவர் ஒரு வழக்கில் தோன்றினார். அதே வழக்கில் ஆச்சாரியாரும் அவருக்கு எதிராகத் தோன்றினார். இருவரும் தத்தம் கட்சிக்காரர் சார்பில் வாதித்தனர். ஆச்சாரியார் சட்ட நுணுக்கங்களை மிகத் தெளிவுற எடுத்துக் காட்டி வாதித்தார்; இறுதியில் அவர் பக்கமே வழக்கு வென்றது. அவ்வெற்றி அவரது தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த அடிப்படையாயிற்று. `இராஜகோபாலாச்சாரியார் என்னும் புதிய வழக்கறிஞர் சட்ட நுணுக்கங்களை நன்கறிந்தவர்; வாதத்திறனில் வல்லவர். அவர் பேச ஒப்புக் கொள்ளும் வழக்கு வெற்றி பெறும்,’ என்ற பேச்சு நகரத்திற் பரவத் தொடங்கியது. கிரிமினல் வழக்கறிஞர் கொலை, கொள்ளை போன்ற அபாய வழக்குகள் `கிரிமினல் வழக்குகள்’ எனப்படும். அவ்வழக்குகளில் வாதித்து வெற்றி பெறுதல் கடினம். சர்தார் படேல் அவர்கள் புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர். ஆச்சாரியாரும் சேலத்தில் கிரிமினல் வழக்குகளில் திறம்பட வாதித்துப் பெயர் பெறலானார். அவர் விரைவில் மேற் சொன்ன மூன்று பெரிய வழக்கறிஞர்களுடன் நீதிமன்றங்களில் நின்று வாதாடும் நிலைமை ஏற்பட்டது. ஆச்சாரியார் வாதம் அடக்க முடையதாகவும், நயமான சொற்களைக் காட்டுவதாகவும், சட்ட நுட்பங்களைத் தெளிவுறக் காட்டுவதாகவும் இருத்தலைக் கண்டு நீதிபதிகள் அவரை மதிக்கத் தொடங்கினர். ஆச்சாரியாருக்குத் திங்கள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் வரையில் வருமானம் வரலாயிற்று. தாழ்த்தப்பட்டவர்க்கு உதவி ஆச்சாரியார் சட்டக்கல்லூரி மாணவராயிருந்த பொழுது கொண்ட மனவுறுதியைச் செயலிற் செய்து காட்ட முயன்றார். தாழ்த்தப்பட்ட மாணவர் சிலர் 1906-ஆம் ஆண்டில் சேலம் நகராண்மைக் கல்லூரியிற் சேர்ந்து படிக்க விரும்பினர். ஆச்சாரியார் அவர்களைக் கல்லூரியிற் சேர்க்க முயன்றார். உடனே உயர் வகுப்பினர் என்போர் பெருங்கிளர்ச்சி செய்தனர்; தங்கள் பிள்ளைகளைக் கல்லூரியிலிருந்து நிறுத்தி விடுவதாக அச்சுறுத்தினர். ஆச்சாரியார் நகராண்மைக் கழகத் தலைவர் களிடம் வாதித்துத் தம்முயற்சியில் வெற்றி பெற்றார். வைதிகர் அவர் மீது கடுஞ்சினம் கொண்டனர். பிரீமேசன் கழகம். சேலத்தில் பிரீமேசன் கழகம் என்ற ஒன்று இருந்தது. உயர்தர அரசாங்க அலுவலரும் வழக்கறிஞரும் வணிகப் பெருமக்களும் அதன் உறுப்பினர். அனைவரும் ஒன்றாக இருந்து உணவு கொள்ள வேண்டும். என்பது அக்கழகத்தின் விதி. சாதி வேறுபாடுகள் அங்குத் தலைகாட்ட மாட்டா. ஆச்சாரியார் அக்கழகத்தில் உறுப்பினராகிச் சமபந்தி உணவினை மிக்க மகிழ்ச்சியோடு உட்கொண்டார். அவரது போக்கு வைதிகர்க்குப் புதுமையாகக் காணப்பட்டது. கப்பல் கம்பெனியில் பங்கு தூத்துக்குடியில் வழக்கறிஞராயிருந்த வ. உ. சிதம்பரம் பிள்ளை என்பவர் திலகர் மாணவர்; காங்கிரசில் தீவிரப் பங்கு கொண்டவர்; தூத்துக்குடித் துறைமுகத் தொழிலாளர் உள்ளங்கவர்ந்த கள்வர்; ஏழை பங்காளர். அவர் தூத்துக்குடியில் இருந்த பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியார் நடத்திவந்த கப்பல் தொழிலை ஒடுக்க இந்தியக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் முதலிய பெருமக்கள் கப்பல் கம்பெனியிற் பங்குதாரராய்ச் சேர்ந்தார்கள். பிள்ளையவர்களின் நாட்டுப் பற்றையும் அவர் மேற்கொண்ட பெரு முயற்சியையும் பாராட்டி நமது ஆச்சாரியாரும் அக் கம்பெனியில் ஆயிரம் ரூபாய்களுக்குப் பங்குகள் எடுத்துக் கொண்டார். அக்கால முதலே ஆச்சாரியாருக்கு நாட்டு விடுதலையில் நாட்டமுண்டாயிற்று. பாரதியார் நட்பு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் உயிர் நண்பர் பாரதியார். அவர் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்; நாட்டுப் பற்று மிக்கவர்; சிதம்பரம் பிள்ளையைப் போலக் காங்கிரசில் மிக்க ஈடுபாடுடையவர்; உரிமை வேட்கையை உண்டாக்கும் இனிய பாக்களைப் பாடினவர். அவர் சென்னையில் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கிப் பல கட்டுரைகள் வரைந்தார்; அரசாங்கம் அவர்மீது கண்ணோக்கம் செலுத்தியதை அறிந்ததும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அப்பாற்பட்ட புதுச்சேரியில் புகுந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் இருக்கலானார். அவருக்குப்பின் அரவிந்த கோஷ், வ. வே. சு. ஐயர் போன்ற அரசியல் பெரியார்கள் புதுவையில் வந்து தங்கினர். ஆச்சாரியார், சுப்பிரமணிய பாரதியார் பாக்களைப் படித்து மகிழ்ந்தார்; அவரது நாட்டுப் பற்றைப் பாராட்டினார். அவர் புதுவையில் சென்று வாழ்கிறார் என்பதை அறிந்ததும் 1910-ல் புதுவை சென்றார்; அங்குப் பாரதியாரைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்; பிற தலைவர்களையும் அங்குக் கண்டு அவர்களது தியாகத்தைப் பாராட்டினார். காங்கிரஸ்காரர்க்கு உதவி ஆச்சாரியார் வழக்கறிஞர் தொழிலைச் செய்து கொண்டே, நாட்டு உரிமைக்குப் பாடுபட்ட காங்கிரஸ் இயக்க வேலைகளையும் கூர்ந்து கவனித்து வந்தார்; அவ்வியக்கத்திற் பாடுபட்ட சுப்பிரமணிய சிவா போன்ற வீரர்க்கு அவ்வப்பொழுது பொருளுதவி செய்தார். 1914-ஆம் ஆண்டில் திருச்சிராப் பள்ளியில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த மாநாட்டிற் கலந்து கொண்டார்; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் சென்று நடவடிக்கை களைக் கவனித்தார். மனைவியார் மறைவு “தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்ற பொய்யா மொழிக்கு இலக்கியமாக விளங்கி வந்த அலர்மேல் மங்கம்மாள் பெண் மக்கள் இருவரையும், ஆண் மக்கள் மூவரையும் பெற்றார்; கணவர் கருத்தறிந்து நடந்து அவரைக் களிப்பித்தார். சில ஆண்டுகள் சென்றபின் அவர்க்குக் காசநோய் கண்டது. அந்நோய் வளர்பிறைபோல வளர்ந்து, மருந்துகட்குக் கட்டுப்படாது, 1915-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது ஆருயிரைக் கொள்ளை கொண்டது. ஆயினும் ஆச்சாரியார் மனந்தளரவில்லை. பலர் வற்புறுத்தியும் அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அப்பொழுது அவருக்கு வயது முப்பத்தாறு. அவர், “என் பிள்ளைகளைக் காப்பதே எனக்கு வாழ்க்கை இன்பம் அளிப்பதாகும்,” என்று கூறிப் பிள்ளைகள் வளர்ப்பிலும் படிப்பிலும் கருத்தைச் செலுத்தினார். சேலம் நகர சபைத்தலைவர் ஆச்சாரியார் 1917-இல் சேலம் நகர சபைத் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 ஆண்டுகளாக அவரது பேச்சுத்திறன், பொது நலத் தொண்டு, நாட்டுப்பற்று இவற்றைக் கவனித்து வந்த நகரத்தார், அவரைக் கொண்டு நகர சபைவாயிலாகப் பல நலன்களைச் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே, அவரைத் தலைவராக்கினர். ஆச்சாரியார் தம்மைத் தேர்ந் தெடுத்த மக்கள் மனம் மகிழத் தம் கடமையைச் செய்யலானார்; வழக்கறிஞர் தொழிலை ஓரளவு சுருக்கிக்கொண்டார்; நாடோறும் நகர சபை அலுவலகத்திற்குச் சென்று, சில மணி நேரம் இருந்து, அன்றாட வேலைகளைக் கவனித்தார்; தம் மோட்டார் வண்டியில் அமர்ந்து நாடோறும் நகரை ஒரு முறை பார்வையிட்டார்; தொழிலாளர்க்கு இரவுப் பள்ளிகளை ஏற்படுத்தினார்; நகர சபை அலுவலரிடம் மிக்க அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து வந்தார்; தம்மைக் காணவந்த பொதுமக்களை மலர் முகத்துடன் வரவேற்று அலுவலகத்திற் பேசி வந்தார்; அவர் கூறி வந்த குறைகளை இயன்றமட்டும் போக்கிவந்தார். சீர்திருத்த வேலைகள் சேலம் நகரத்தில் பிராமணர்கள் வாழும் தெருக்கள் சில உண்டு. அவற்றில் உள்ள நீர்க் குழைகள் ஒரு சமயம் பழுதுபட்டன. அவற்றைப் பழுது பார்க்க ஆச்சாரியார் சில ஆட்களை அனுப்பினார். அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தினர். அதனை உணர்ந்த பிராமணர்கள் பெருங் கிளர்ச்சி செய்தனர். இதுபற்றி நகர சபைக் கூட்டத்தில் ஒரு கண்டனத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. நகர சபைத்தலைவரான ஆச்சாரியார், “இக்கண்டனத் தீர்மானம் நகரசபை விதிகட்கு மாறுபட்டது,” என்று கூறித் தீர்மானத்தைத் தள்ளிவிட்டார். வைதிகர் கிளர்ச்சியோடு நின்றுவிட்டனர். சேலம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் விடுதியில் எல்லா வகுப்பு மாணவரும் இருந்தனர். ஆச்சாரியார் அவ்விடுதியில் வேலைபார்க்கத் தாழ்த்தப்பட்ட இளைஞர் இருவரை நியமித்தனர். உடனே வைதிகர் மீண்டும் கிளர்ச்சி செய்தனர்; தங்கள் பிள்ளைகளை விடுதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக அச்சுறுத்தினர். சிறந்த காங்கிரஸ்காரரான விஜய ராகவாச் சாரியா ணர் வைதிகர் சார்பில் ஆச்சாரியாரைக் கண்டு, இது குறித்துப் பேசினார். இரும்புத்தலையரான ஆச்சாரியார், “இன்னும் எவ்வளவு காலத்திற்குப் தாழ்த்தப் பட்டவர் என்னும் ஓரினத்தை வைத்திருக்கப் போகிறீர்கள்? அவர்கள் இந்துக்கள் அல்லரா? அவர்கள் செய்த பாவம் என்ன? அவர்களை நம்முடன் தாராளமாகப் பழகவிட்டு முன்னுக்குக் கொண்டுவருதல் நமது கடமை அன்றோ? நீங்கள் பிள்ளைகளை விடுதியிலிருந்து நீக்கினால், அப்பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து நீக்க எங்கட்குத் தெரியும்,” என்று உருக்கமாகவும் அழுத்தமாகவும் அறைந்தார். வைதிகர் சோர்ந்தனர். ஆச்சாரியார் நகர சபைத்தலைவராய் இருந்தபொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வசதி அளித்தார்; குடிதண்ணீர் வசதியும் அளித்தார். சீர்திருத்தத் திருமணம் சேலம் மாவட்டத்தில் குமாரமங்கலம் என்பது ஒரு சிற்றூர். டாக்டர் சுப்பராயன் என்பவர் அதன் பெருநிலக் கிழவர். அவர் கன்னட நாட்டுப் பிராமணப் பெண்மணியாரை மணக்க விரும்பினார். அந்த அம்மையார் பெயர் இராதாபாய் என்பது. அக்கலப்பு மணத்தைப் பலர் பலமாக எதிர்த்தனர். ஆச்சாரியார் அக்கலப்பு மணத்தை ஆதரித்தார்; தாமே முன்னின்று அத்திருமணத்தைச் சிறப்புற நடத்திவைத்தார். தாழ்த்தப்பட்டவருடன் விருந்துண்ணல் சிதம்பரத்தைச் சேர்ந்த சகஜhனந்தர் என்பவர் ஒரு துறவியார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; வட மொழியும் தென் மொழியும் நன்கு பயின்றவர். அவர் சிதம்பரத்தில் நந்தனார் பெயரால் பள்ளி ஒன்றை வைத்துத் தாழ்த்தப்பட்டவர்க்குக் கல்வி வசதி அளித்து வருகின்றவர். அவர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்றவர்; நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர். அவர் 1917-இல் சேலம் நகரத்திற்குச் சென்றார். ஆச்சாரியார் அவரை அன்புடன் வரவேற்றார்; அவரைச் சிறப்பிக்க விருந்தொன்றை நடத்தினார். அவவிருந்தில் பெரு மக்கள் பலர் கலந்துக் கொண்டனர். சேலம் நகர வைதிகர் மிக்க சீற்றம் கொண்டனர்; ஆச்சாரி யாரையும் அவருடன் சமபந்தி விருந்திற் கலந்து கொண்ட பிராமணர் களையும் சமூக விலக்குச் செய்தனர்; அவர்கள் வீடுகட்குச் செல்ல லாகாது என்று புரோகிதரைக் கட்டுப்படுத்தினர். ஆச்சாரியாரும் அவர் நண்பர்களும் அக்கட்டுப்பாட்டைக் கண்டு கலங்கவில்லை. அவர்கள் தங்கள் வீட்டுச் சடங்குகளைத் தாங்களே ஒருவர்க்கொருவர் செய்து கொண்டனர். ஆச்சாரியாரின் தந்தையார் 1917-இல் காலமான போதும் வைதிகர் வரவில்லை. ஆச்சாரியார் தம் நண்பர் உதவியால் எல்லாச் சடங்குகளையும் குறைவின்றிச் செய்து முடித்தார். விடுதலைப் பற்று காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிற் செய்து வந்த தொண்டினை ஆச்சாரியார் செய்தித்தாள்களிற் படித்து வந்தார்; அவர் வரைந்த `இந்து ராச்சியம்’ என்னும் நூலைப் படித்து, அடிகளது நுண்ணறிவைப் பாராட்டினார்; அந்நூலைப் படிக்குமாறு தம் நண்பர்களைத் தூண்டினார். மகாராஷ்டிரப் பிராமணரான பால கங்காதர திலகர் உரிமைப் போரில் தலை சிறந்து விளங்கினார். ஆச்சாரியார் அவர் உழைப்பைப் பாராட்டி அவரது சுயாட்சி இயக்கத்திற்கு ஆதரவு நல்கினார். காஞ்சியில் காங்கிரஸ் பணி ஆச்சாரியார் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தொண்டாற்றி வருகையில், 1918-ஆம் ஆண்டு காஞ்சீபுரத்தில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு நடைபெற்றது. கவியரசியார் சரோஜனி தேவியார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பிரமஞான சங்கத்தைச் சேர்ந்தவரும் சுயாட்சிக் கட்சியில் உழைத்துச் சிறை சென்று புகழ் பெற்றவருமான டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரும் வந்திருந்தனர். முதல் உலகப்போர் நடைபெற்ற அக்காலத்தில் மாநாட்டில், “`இந்தியாவுக்கு உரிமை தருவோம்’ என்று ஆங்கிலேயர் வாக்குறுதி யளிப்பின், போரில் ஆங்கிலேயர்க்கு இந்தியா துணை புரியும்,” என்னும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெசன்ட் அம்மையார், `நிபந்தனை இன்றியே ஆங்கிலேயர்க்கு நாம் உதவி புரிய வேண்டும்’ என்னும் தீர்மானம் கொணர்ந்தார். அம்மையார் அத்தீர்மானத்தைப் பற்றி அழகாகப் பேசினார். அதனை எதிர்த்து ஆச்சாரியார் பேசி, முதல் தீர்மானத்தை ஆதரித்தார். இறுதியில் முதல் தீர்மானம் நிறைவேறியது; அம்மையார் தீர்மானம் தோற்றது. அதுமுதல் பெசன்ட் அம்மையார் அரசியலிற் கலக்காது ஒதுங்கிவிட்டார். சித்தரஞ்சனர் பாராட்டு சித்தரஞ்சனதாசர் வங்க மாகாணக் காங்கிரஸ் கட்சித்தலைவர்; பெயர் பெற்ற வழக்கறிஞர்; பெரும் பொருள் ஈட்டியவர்; விடுதலைப்போரில் ஈடுபட்டுத் தொழிலைத் துறந்த பெரியார். அவர் 1918-இல் பம்பாயிற் கூடிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் ஒரு தீர்மானத்தைக் கொணர்ந்தார்; அதனைப் பலர் எதிர்த்தனர். அதனை ஆச்சாரியார் இரண்டோரிடங்களில் சொற்களை மாற்றி அமைத்துச் செவ்வைப்படுத்தினார். உடனே தீர்மானம் நிறைவேறியது. தாசர் ஆச்சாரியாரது நுண்ணறிவை வியந்து பாராட்டினார். 3. சென்னை வாழ்க்கை சென்னையிற் குடியேற்றம் ஆச்சாரியார் நுண்ணறிவும் வாதத்திறனும் ஆட்சித்திறனும் சென்னை மாகாணத்திற் பரவியது. அவர் காங்கிரசில் சேர்ந்து ஆங்காங்கு நடைபெற்ற கூட்டங்களிற் கலந்து கொண்டமையால் இந்தியக் காங்கிரஸ் வட்டாரங்களிலும் அவர் திறமை நன்கு புலனாயிற்று. அறிவாற்றல்களிற் சிறந்த அவர் சேலத்தில் இருத்தலைவிடச் சென்னையில்-மாகாணத்தின் தலைநகரில்-இருத்தல் நல்லது என்பதை உணர்ந்த “ஹிந்து” பதிப்பாளர் எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார் என்பவர், சென்னையிற் குடியேறுமாறு ஆச்சாரியாருக்குக் கடிதம் வரைந்தார். ஆச்சாரியார் அப்பெரியாரது யோசனையை ஏற்று, 1919-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் சென்னையிற் குடியேறினார்; உயர் நீதி மன்ற வழக்கறிஞராய்த் தம்மைப் பதிவு செய்துகொண்டார் ரௌலட் சட்டம் `ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்டப் புரட்சி முறைகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆதலின் அவற்றை அடக்கும் முறைகளை ஆராய்ந்து சட்டம் இயற்றவேண்டும்,’ என்று இந்திய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு நிலைமையை நன்கு ஆராய்ந்து, அடக்குமுறைச் சட்டம் ஒன்றைத் தயாரித்து, இந்திய அரசாங்கத்துக்குக் கொடுத்தது. அக்குழுவின் தலைவர் நீதிபதி ரௌலட் என்பவர். ஆதலின், அச்சட்டம் ரௌலட் சட்டம் எனப் பெயர் பெற்றது. காந்தியடிகள் ரௌலட் சட்டம் தோன்றிய 1919-இல் காந்தியடிகள் காங்கிரசில் தீவிரப்பங்கு கொண்டார். `இச் சட்டம் நமது உரிமைப் போரைத் தடை செய்ய எழுந்ததாகும். இதனை அமைதியான முறையில் எதிர்த்து ஒழித்தலே நல்லது. அமைதியான எதிர்ப்பு, இன்னா செய்யாமை (அஹிம்சை) ஆகிய அறக்கருவிகளைக் கொண்டு அறப்போர் செய்து ஒழிக்க வேண்டும்’ என்று அறிக்கை விடுத்தனர். இக்கொள்கையை நாடு முழுவதும் பரப்ப யாத்திரை செய்தார். ஆச்சாரியாரும் அடிகளும் காந்தியடிகள் சென்னைக்குக் கஸ்தூரிரங்க ஐயங்கார் அழைப்பின்மீது வந்தார்; கஸ்தூரிரங்க ஐயங்கார் காந்தியடிகளை ஆச்சாரியார் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஆச்சாரியாரும் அடிகளும் நன்கு கலந்து பேச வாய்ப்பு ஏற்பட்டது. அடிகளைக் காண அறிஞர் பலர் வந்தனர். அடிகள் அவர்கட்குத் தமது புதிய அறப்போர் முறையை விளக்கினார். வந்திருந்தோருள் பலர் அப்புதிய போர் முறையின் உட்பொருளைத் தெளிவுற அறியாது மயங்கினர். உடனே ஆச்சாரியார் மிகத் தெளிவாக விளக்கிப் பேசினார். அவ்விளக்கத்தைக் கேட்டு அடிகள் பெருவியப்புற்று, ஆச்சாரியாரது நுண்ணறிவைப் பாராட்டினார். இறுதியில் சென்னையில் `சத்தியப் போர்க் கழகம்’ ஒன்று நிறுவப்பட்டது. ஆச்சாரியார் அதன் செயலாளராக இருந்தாற்றான் கழகம் சீரிய முறையில் பணியாற்றும் என்று பலர் கூறி, அவரைச் செயலாளராய்த் தேர்ந்தெடுத்தனர். ஒத்துழையாமைப் போர் “ஆங்கிலேயர்க்குத் தீங்கு செய்யாதே; அவர்களது துப்பாக்கிக்கு எதிராகத் தடியைப் பயன்படுத்தாதே. தூய உள்ளம், உரிமையில் நாட்டம், இன்னா செய்யாமை, அமைதியான மறியல், பொறுமை இவற்றைக் கைக்கொள். இவற்றில் நம்பிக்கை வை. இவையே இறுதியில் வெற்றி தரும்,” என்பது அடிகள் அறவுரை. இந்த அறவுரைப்படி காங்கிரஸ் தொண்டர்கள் நடந்தும், அரசாங்கத்தார் அடக்குமுறைச் சட்டம் கொண்டு, கொடுமை இழைத்தனர்; இரண்டோர் இடங்களில் பீரங்கி கொண்டும் சுட்டனர். இக்கொடுமையைக் கண்டு மனம் வெறுத்த அடிகள், “மாணவர் பள்ளிகளை விடுக; வழக்கறிஞர் நீதிமன்றங்களை விடுக; சட்ட சபை உறுப்பினர் சட்டசபைகளை விடுக; எவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டா,” என்று அறிவுரை கூறி, ஒத்துழையாமைப் போரைத் தொடங்கினார். உடனே நாடு முழுவதிலும் இருந்த காங்கிரஸ்காரர்கள் அவரைப் பின்பற்றினர். ஆச்சாரியார் தமது வழக்கறிஞர் தொழிலை விட்டார்; கல்லூரியிற் படித்து வந்த தம் மைந்தர் இருவரையும் கல்லூரியி லிருந்து நிறுத்தினார். `சொல்வதொன்று செய்வதொன்று’ என்பது அவர் சாதகத்தில் இல்லை அன்றோ? ஆச்சாரியார் தியாகத்தைக் கண்டு மக்கள் வியந்து பாராட்டினர். அத்தியாகத் துக்குப் பிறகு அவரது செல்வாக்கு மிகுதிப்பட்டது. சிறைத் தண்டனை ஆச்சாரியார் அடிகள் கட்டளைப்படி ஒத்துழையாமைப் போரைப்பற்றிப் பல இடங்களிற் பேசிவந்தார்; 1921-ஆம் ஆண்டின் இறுதியில் வேலூர்க் கூட்டத்திற் பேசலாகாது என்று தடுக்கப்பட்டார். ஆச்சாரியார் அத்தடையை மீறிப்பேசினார். அரசாங்கம் அவருக்கு மூன்று திங்கள் சிறைத்தண்டனை அளித்தது. ஆச்சாரியார் சிறையில் என்ன செய்தார்? அவர்தம் சிறை அநுபவங்களை நாடோறும் எழுதி வந்தார்; சாக்ரடீஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞரது வரலாற்றை எழுதினார். இவை இரண்டும் பின்னர் இரண்டு நூல்களாக வெளிவந்தன. ஆச்சாரியார் 1922-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20-ஆம் நாள் விடுதலை பெற்றார். அவருடன் காங்கிரஸ் தொண்டில் ஈடுபட்டிருந்த எம். சிங்கார வேல் செட்டியாரும், ஈ. வே. இராமசாமி நாயக்கரும் அவரை வேலூரில் வரவேற்றுச் சிறப்புச் செய்தனர். `யங் இந்தியா’ ஆசிரியர் ஆச்சாரியார் விடுதலை பெற்ற இரண்டாம் நாள் காந்தியடிகள் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் தாம் வெளியிட்டு வந்த “யங் இந்தியா” என்னும் ஆங்கிலத் தாளை ஆச்சாரியாரிடம் ஒப்புவித்தார்; ஆச்சாரியார் அதன் ஆசிரியரானார். கிராமத் தொண்டு அடிகள் சிறை சென்ற பின்னர்ப் பண்டித மோதிலால் நெஹ்ரு, சித்தரஞ்சன தாசர் போன்ற தலைவர்கள் சட்டசபை நுழைவை ஆதரித்துப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். ஆயின் ஆச்சாரியார், அடிகளைப் பின்பற்றி வாளா இருந்தார். 1924-இல் அடிகள் விடுதலை பெற்று வெளிவந்தார்; `சட்ட சபைக்குச் செல்வோர் செல்க; ஏனையோர் கிராமத் தொண்டு புரிக’, என்று யோசனை கூறினார். சட்ட சபை நுழைவை வெறுத்த ஆச்சாரியார், சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு தாலூகாவில் உள்ள புதுப்பாளையம் என்னும் சிற்றூரில் ஓர் ஆச்சிரமத்தை அமைத்துக்கொண்டு, அதிற்குடியேறினார்; 1924 முதல் 1930 வரை அங்குக் கிராமத் தொண்டு புரியலானார். கதரைப் பரப்புதல், தீண்டாமையை ஒழித்தல், மது விலக்குச் செய்தல், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்தல், நாட்டுக் கல்வியைப் பெருக்குதல் என்பன அடிகள் கொண்ட கிராமத் தொண்டின் பாற்படும். ஆச்சாரியார் தமது ஆச்சிரமத்தில் காந்திசேவா சங்கம் என்பதை அமைத்து, அமைதியான முறையில் மேற் சொன்ன திட்டங்களை நிறைவேற்றிவந்தார். வளமனையில் வாழ்ந்த அவர், ஒரு சிறு குடிலில் வாழலானார். சுற்றுப்புறக் கிராம மக்கட்குப் பஞ்சும், இராட்டைகளும் கொடுக்கப்பட்டன. அவர்கள் நூற்ற நூலைப் பெற்றுக்கொண்டு கூலிதரப்பட்டது. ஆச்சிரமத்தில் அவருக்கு உதவியாக அவரது மூன்றாம் மகனாராகிய நரசிம்மன் என்பவரும் இரண்டாம் மகளாராகிய இலட்சுமி அம்மாள் என்பவரும் பிறரும் இருந்தனர். ஆச்சாரியார் மதுவிலக்குப் பிரசாரத்தைச் சுற்றுப்புறச் சிற்றூர் களில் நிகழ்த்தினார். அதன் பயனாகப் பல கடைகள் மூடப்பட்டன. `குடிகாரர் மனைவிமார்களும் பிள்ளைகளும் ஆச்சாரியாரை மனமார வாழ்த்தினர். ஆச்சாரியார் தமது ஆச்சிரமத்தில் தீண்டப்படாதார் சிலரைத் தொண்டர்களாகச் சேர்த்துக்கொண்டார்; தமிழ் நாட்டுக் கதர்க் கழகத்தையும் ஹரிஜன சேவா சங்கத்தையும் அவரே கவனித்து வந்தார். உப்புப் போர் அடிகள் அறிவுரையை மீறிச் சட்டசபைகட்குச் சென்று ஒரு பயனையும் காணாத மோதிலால் நெஹ்ரூவும் சித்தரஞ்சன தாசரும் திரும்பி வந்து, 1930-இல் அடிகளைப் பின்பற்றலாயினர். அடிகள் உப்பெடுக்கும் உரிமையை ஏழைகட்கு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினார்; அரசாங்கம் மறுக்கவே உப்புப் போரைத் தொடங்கினார். இராஜகோபாலாச்சாரியார் தம் தோழர்களுடன் திருச்சிராப்பள்ளி யிலிருந்து திருமறைக்காடு வரை கால் நடையாக நடந்து சென்றார்; வழி நெடுக இருந்த கிராமத்தாரிடம் காங்கிரஸ் கொள்கைகளைப் பரவச் செய்துகொண்டே சென்றார்; திருமறைக் காட்டில் உப்பெடுத்தார்; ஒன்பது திங்கள் சிறைத் தண்டனை பெற்றார். மீண்டும் சிறை வாழ்க்கை சிறையிலிருந்து 1931 - இல் வெளிவந்த ஆச்சாரியார், அவசரச் சட்டப்படி சிறை செய்யப்பட்டு ஓராண்டுச் சிறை வாழ்க்கை பெற்றார்; ஆயின் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டபின்னர், விடுதலை பெற்றார்; காந்தி-இர்வின் ஒப்பந்தபடி கள்ளுக் கடை மறியல், அயல் நாட்டுத் துணிக்கடை மறியல் செய்யலாம் ஆதலின், அத்துறைகளில் தொண்டர்களை ஏவி, வேலை செய்து வந்தார். புனா ஒப்பந்தம் 1932-இல் மீண்டும் சட்ட மறுப்புப் போர் தொடங்கியது. ஆச்சாரியார் அதில் ஈடுபட்டுச் சிறை சென்றார்; சில மாதங்கட்குப் பிறகு விடுதலை பெற்றார். அப்போது தாழ்த்தப்பட்டவர்க்குத் தனித் தொகுதி வழங்கலாகா தென்று சிறையில் காந்தியடிகள் உண்ணவிரதம் இருந்தார். அதனை அறிந்த ஆச்சாரியார் புனாவிற்கு ஓடினார்; டாக்டர் அம்பேத்கர் போன்ற தாழ்த்தப் பட்ட வகுப்புத்தலைவர்களையும் காங்கிரஸ் தலவர்களையும் ஒன்று கூட்டி, அடிகள் விருப்பப்படி நடக்குமாறு ஏற்பாடு செய்தார். இருதிறத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டாயிற்று. அதுவே புனா ஒப்பந்தம் என்பது. அவ்வொப்பந்தத்திற்குப் பிறகு காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர் நலனில் மிக்க கவனம் செலுத்தத் தொடங்கியது. இலட்சுமி தேவதாஸ் திருமணம் தேவதாஸ் என்பவர் காந்தியடிகளின் மைந்தருள் ஒருவர். அவர் தந்தையாருடன் உரிiப் போரில் ஈடுபட்டவர். அவர் இந்திமொழியைத் தென்னாட்டிற் பரப்புங்காரணமாக 1925-இல் சுற்றுப் பிரயாணம் செய்தார்; ஆச்சாரியாரது காந்தி ஆச்சிரமத்தில் தங்கினார். அப்பொழுது ஆச்சாரியாரது இரண்டாம் மகளாரான இலட்சுமி அம்மாளும் தேவதாஸ் காந்தியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டனர். இக்காதற் செய்தி காந்தியடிகட்கு எட்டியது. அடிகள், “ஐந்தாண்டுகள் ஒருவரை ஒருவர் சந்திக்கலாகாது; கடிதப் போக்குவரத்து இருத்தல் ஆகாது; ஐந்தாண்டுகட்குப் பிறகும் உங்களிடம் இன்றுள்ள காதல் குறையாது காணப்படின், திருமணம் செய்து கொள்ளலாம்,” என்று கூறினார். இளங்காதலர் இருவரும் அடிகள் திட்டத்திற்கு இணங்கினர். ஐந்தாண்டுகள் பறந்தன. 1930-இல் அடிகள் உப்புப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்; பின்னர் ஒத்துழையாமைப் போரில் ஈடுபட்டார். இவற்றால் மூன்றாண்டுகள் கழிந்தன. 1933-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 19-ஆம் நாள் காந்தியடிகள் தங்கியிருந்த ஆச்சிரமத்தில் மிக எளிய முறையில் இலட்சுமி அம்மாளுக்கும் தேவதாசுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்களை அடிகளும் ஆச்சாரியாரும் உளமார வாழ்த்தினர். திருணத்திற்கு வந்திருந்த ஆனே, கேல்கார், பிர்லா, பஜாஜ், சரோஜனி தேவியார், மாகாணம் சீநிவாச சாத்திரியார் என்பவர்கள் மணமக்களை வாழ்த்தி, ஆச்சாரியார் கலப்பு மணத்திற்கு இசைந்தமையைப் பாராட்டினர். மாகாண முதலமைச்சர் 1935-இல் மாகாண சுயாட்சி வழங்கப்பட்டதால், காங்கிரஸ் தேர்தலில் நின்றது. நாட்டுக்காக அரிய தியாகங்களைச் செய்த காங்கிரஸ்காரர்கள் நின்றதால், மக்கள் அவர்களையே தேர்ந்தெடுத்தனர். அதனால் பல மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஏற்பட்டன. சென்னையில் ஆச்சாரியாரை முதலமைச்சராய்க் கொண்ட அமைச்சர் அவை ஏற்பட்டது. அஃது 1937 முதல் 1939 வரை இரண்டாம் உலகப்போர் தோன்றும் வரை மாகாணத்தை ஆட்சி புரிந்தது. அக்குறுகிய காலத்திற்குள் ஆச்சாரியார் செய்த நலன்கள் இவையாகும்: குடியானவர் கடன் நீக்கச் சட்டம், மதுவிலக்குச் சட்டம், கோவில் நுழைவுப் பாதுகாப்புச் சட்டம், சுகாதாரச் சட்டம். சிறை வாழ்க்கை `இரண்டாம் உலகப்போரில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; இந்தியர் ஆங்கிலேயர்க்குப் போரில் உதவி செய்ய லாகாது’, என்று காங்கிரஸ் தீர்மானித்தது. அத்தீர்மானத்தின்படி காங்கிரஸ் அமைச்சர் அவைகள் கலைக்கப்பட்டன. `போரில் ஈடுபடாதீர்கள்’ என்று பிரசாரம் செய்வதன் வாயிலாகத் தனிப்பட்டவர் சிறை சென்றுகொண்டே இருத்தல் வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது. அதன்படி ஆச்சாரியார் பலரைச் சிறைக்கு அனுப்பினார்; 1940-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாமும் சிறை புகுந்தார்; ஓராண்டு வெறுங்காவல் தண்டனைக்குப் பிறகு 1941-இல் விடுதலை பெற்றார். பாகிஸ்தான் ஆதரிப்பு முஸ்லிம் லீகர் பாகிஸ்தானை விரும்பினர். அஃது அடையாத வரை இந்தியாவுக்கு ஆட்சியுரிமை கிடைத்தல் முயற் கொம்பே என்பதை ஆச்சாரியார் உள்ளவாறு உணர்ந்தார்; அதனால் `லீகரது விருப்பத்துக்கு இசைந்து பாகிஸ்தான் அமைப்பை ஒப்புக் கொண்டு உரிமை பெற முயல்வதே காங்கிரஸ்காரர் செயற்பாலதாகிய நற்பணி,’ என்று பல கூட்டங்களிற் பேசினார். காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் ஆச்சாரியார் போக்கிற்கு வருந்தினர்; தமிழ் நாட்டார் அவர்மீது சீற்றம் கொண்டனர். எனவே ஆச்சாரியார் காங்கிரசிலிருந்து விலகி நின்று, தமது பிரசாரத்தைச் செய்துவந்தார். இடைக்கால அமைச்சர் அவை 1945-இல் தொழிற் கட்சியார் இங்கிலாந்தில் வெற்றி பெற்றனர். அப்பொழுது முதலமைச்சரான ஆட்லி விரைவில் இந்தியர்க்கு ஆட்சியுரிமை அளிப்பதாக வாக்களித்தார். உடனே தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ்காரர்களே வெற்றி பெற்றனர். சென்னையிற் பிரகாசம் அமைச்சர் அவை ஏற்பட்டது. 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜவஹர்லால் நெஹ்ரூ தேசீய அரசாங்கத்தை அமைத்தார். ஆச்சாரியார் இந்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஏற்றார். 4. உரிமைக்குப் பின் உரிமை நாள் விழா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் ஆங்கிலேயர் இந்தியர் கையில் ஆட்சியை ஒப்படைத்தனர். இந்தியாவில் அன்று பாகிஸ்தான் அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் ஏற்பட்டன. கராச்சியைத் தலைநகராய்க் கொண்டு பாகிஸ்தான் அரசு தொடங்கியது. டெல்ஹியைத் தலைநகராய்க் கொண்டு இந்திய அரசாங்கம் தொடங்கியது. ஆச்சாரியார் முன்யோசனைப்படி காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு இசைந்திருப்பாராயின், இந்து முஸ்லிம் கலவரங்கள் நேராமல் தடுத்திருக்கலாம். பயங்கர நிகழ்ச்சிகட்குப் பிறகு பாகிஸ்தான் ஏற்படக் காங்கிரஸ்காரர் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களும் ஆங்கில அரசியல் அறிஞர்களும் ஆச்சாரியாரது அரசியல் நுண்ணறிவை வியந்து பாராட்டினர். கவர்னர் பதவி ஆட்சியுரிமை ஏற்பட்ட பின்னர் ஆச்சாரியார் வங்க மாகாணக் கவர்னராக நியமனம் பெற்றார். அப்பொழுது வங்கத்தில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் மிகுந்திருந்தன. ஆயினும் ஆச்சாரியார் அம் மாகாணம் முழுவதும் சுற்றி உருக்கமான சொற் பொழிவுகள் செய்து, அமைதியை நிலை நாட்டப் பாடுபட்டார். காந்தியடிகளும் அங்குச் சென்று அமைதியை நிறுவினார். கவர்னர் ஜெனரல் பதவி இந்தியக் கவர்னர் ஜெனரலான மவுன்ட் பேட்டன் பிரபு ஓர் அலுவலை முன்னிட்டுப் பதினைந்து நாள் இங்கிலாந்து சென்றார். அந்தக் குறுகிய காலத்தில் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாக வேலை பார்த்தார். பின்னர் அப்பிரபு 1948-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 21-ஆம் நாள் தமது பதவியிலிருந்து நீங்கி இங்கிலாந்து சென்றார். அன்றே நமது ஆச்சாரியார் அப்பதவியில் அமர்ந்தார். அவர் இந்தியக் குடியரசு நாள் வரை (26-1-1950) அந்த ஒப்புயர்வற்ற பதவியில் இருந்து தொண்டாற்றினார். அவர் கவர்னர் ஜெனரலாக வந்ததும், அமெரிக்கா, பிரிட்டன் முதலிய வல்லரசுகளின் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர். அவர் நாட்டு அரசாங்கத்தின் தலைவராய் இருந்த பொழுதுதான் ஐதராபாத் அமைதி பெற்றது. பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்பட்டன; குடியரசுத் திட்டம் தயாரித்த பேரவை செவ்வனே வேலை செய்தது. அவர் நாடு முழுவதும் சுற்றிப் பயிர்த் தொழில் முன்னேற்றம், கைத்தொழில் முன்னேற்றம், கிராம முன்னேற்றம், மகளிர் முன்னேற்றம், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, நாட்டு உரிமையைப் பாதுகாக்கும் வழிகள் என்பன போன்ற பல பொருள்களைப் பற்றித் தக்க மேற்கோள்களுடன் பேசினார். குடியரசு விழா குடியரசுத் தலைவராக டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்பதை அறிந்ததும் ஆச்சாரியார் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்; தியாகம், அமைதி, அறிவு, ஆற்றல் இவற்றின் நிலைக்களமாக விளங்குபவரும் காந்தியடிகளின் உண்மைச் சீடருள் ஒருவரும் ஆகிய டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்தினிடம் ஆச்சாரியாருக்குப் பெருமதிப்பு உண்டு. 1950-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26-ஆம் நாள் 10 மணி, 18 ஆம் நிமிடம் இந்தியக் குடியரசு தோன்றியது. அப்பொழுது டெல்ஹியில் கடைசிக் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆச்சாரியார் குடியரசுப் பிறப்பைப் பற்றிய பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: “மக்கள் இந்தியாவை முழுவுரிமை பெற்ற குடியரசு நாடாக்கத் தீர்மானித்தனர். அவர்கள் தங்கள் குடியரசுத்திட்டப் பேரவையில் அரசியல் திட்டத்தை வகுத்துச் சட்டமாக்கி, 1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் நாள் தங்களுக்குத் தாங்களே குடியரசை வழங்கிக் கொண்டனர். “இதுவரை கவர்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த மாகாணங்களும் சுயாட்சி பெற்றிருந்த சம்ஸ் தானங்களும் தலைமை ஆணையாளர் ஆட்சியிலிருந்த மாகாணங்களும் இந்தியக் குடியரசில் அடங்கி விட்டன. இவை அனைத்தும் சேர்ந்தது `இந்திய யூனியன்’ என்று பெயர் பெறும். “குடியரசுத் திட்டம் இன்று (26-1-1950) நடை முறையில் வரவேண்டும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “ஆதலின் இன்று (26-1-1950) முதல் மக்கள் ஆட்சி கொண்ட முழுவுரிமைக் குடியரசு நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது. அரசாங்க அலுவல்களையும் அதிகாரங்களையும் அரசியல் திட்ட விதிகளின் படி இந்திய யூனியனும் அதன் உறுப்புக்களான அரசுகளும் தாங்கிவரும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது.” இங்ஙனம் அறிக்கையைப் படித்த பிறகு ஆச்சாரியார், “1950-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 24-ஆம் நாளான செவ்வாயன்று இந்திய அரசியல் திட்டப் பேரவை கூடி, இந்திய யூனியனின் தலைவராக டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களை, அரசியல் திட்டப்படி தேர்ந்தெடுத்ததாக அரசியல் திட்டப் பேரவைச் செயலாளர் எனக்குச் செய்தி அனுப்பினார். ஆகவே, டாக்டர் இராஜேந்திரரைக் குடியரசுத் தலைவர் இருக்கைக்கு மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்கிறேன்; பதவியேற்பு வாக்குறுதியை எடுத்துக் கொள்ளுமாறு தலைவரை வேண்டுகிnறன்,” என்று கூறினார்; கூறி டாக்டர், இராஜேந்திரiர அழைத்துத் தலைவரது இருக்கையில் அமர்த்தினார். அப்பொழுது பீரங்கிகள் 31 வேட்டுக்களை முழங்கின. ஆச்சாரியார் அறிவுரை குடியரசு மக்களுக்கு ஆச்சாரியார் விடுத்த அறிவுரை இதுவாகும்: “நமது அரசாங்கம் எல்லா இடர்களையும் கடந்து பையப் பைய முன்னேறும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாம் நீடித்து உழைப்பின், பொருளாதார முன்னேற்றம் பெறலாம்; மனச் சோர்வுக்கு இடந்தரலாகாது. உழைப்பே நாட்டுச் செல்வத்திற்கு அடிப்படை. உழைப்பில் குறையேற்படாதவரை பொருளாதாரத்திற் குறை யேற்படாது. மிக்க முயற்சியை மேற்கொண்டு நமது நிலையை உயர்த்துதல் நமது கையில் இருக்கின்றது. நாட்டுக்கு நல்வழியைக் காட்டி நடத்திச் செல்லத் தக்க தலைவர்களை நாம் பெற்றுள்ளோம். அவர்கள் திறமையாளர்கள்; மேலும் நல்லவர்கள். நாம் அவர்கட்கு நமது முழு நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அளிப்போமாக. நாம் அனைவரும் ஒரு பெரிய குடியரசின் நற்குடிமக்களாக இருந்து, நமக்கு இடப்பட்ட பணிகளை ஊக்கத்துடனும், ஓழுங்குடனும் செய்வோமாக. உலகில் உள்ள நாகரிக நாடுகள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரராவோமாக!” இன்றைய தொண்டு இராஜேந்திரர் குடியரசுத் தலைவரான பிறகு டாக்டர் ஆச்சாரியார் ஓய்வு பெற விரும்பிச் சென்னைக்கு வந்தார்; காந்தி நகரில் புதிதாய் அமைப்புண்ட வளமனையில் சிறிது காலம் ஓய்வு பெற்றார்; பின்னர்க் குற்றாலம் சென்று தங்கினார். இந்திய அரசாங்கம் அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்க விருப்பங் கொண்டது. முதலமைச்சர் நெஹ்ரூ, ஆச்சாரியாரைத் தமது அமைச்சர் அவையில் ஒருவராக அமர்த்திக் கொள்ள விரும்பினார். அவ்விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பாது ஆச்சாரியார் டெல்லி சென்றார்; அமைச்சர் ஆனார். “முதுமையிலும் என்கடன் பணி செய்து கிடப்பதே,” என்று கூறிய வண்ணம் இன்று அமைச்சர் பணியை ஆற்றிவருகின்றார். 5. நற்பண்புகள் விரிந்த மனப்பான்மை இராஜகோபாலாச்சாரியார் சமூக விஷயங்களில் விரிந்த மனப்பான்iம உடையவர்; இளமை முதலே சாதி வேறுபாடுகiள வெறுத்தவர்; “எந்த நாட்டிலும் இல்லாத சாதிவேறுபாடுகள் இந்த நாட்டில் இருத்தலாற்றான், இந்தச் சமூகம் ஒற்றுமையற்று வலியிழந்து. கண்டார் பரிகசிக்கும் நிலையில் இருக்கிறது. இந்து சமூகம் வலுப்பெற வேண்டுமாயின், சாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும்; `எல்லோரும் ஓரினம்’ என்னும் மனப்பான்மை இந்துக்களிடம் வளர வேண்டும்,” என்னும் கருத்துடையவர். அவர் இதனைப் பல முறை கூட்டங்களிற் பேசியுள்ளார். எம்மதமும் சம்மதம் ஆச்சாரியார் மத வேறுபாட்டால் உயர்வு தாழ்வு சிறிதும் கருதாதவர். எம்மதமும் சம்மதம் என்ற விரிவான எண்ண முடையவர். அவர் 1950-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் பெசன்ட் அம்மையார் பிறந்த நாள் விழாவில் புது டெல்லியில் ஆற்றிய பேருரையிலிருந்தும் இவ்வுண்மையை நன்குணரலாம். அப்பேருரை உங்கள் உள்ளங்களைப் பண்படுத்த வல்லது. ஆதலின், இங்குச் சுருக்கமாகத் தரப்படுகின்றது; படித்துப் பயன் எய்துக. “`எல்லாச் சமயங்களுக்கும் இறுதிக் குறிக்கோள் ஒன்றே. எல்லாச் சமயங்களும் ஒரு நிலையில் மதிக்கப் படுதலே அறிஞர். செய்யத்தகுவது, என்னும் பொன்னுரையைப் போற்றிப் பரப்பியதே பெசன்ட் அம்மையார் இந்தியாவுக்குச் செய்த நிலைத்த தொண்டாகும். எல்லா வகை வழிபாட்டு முறைகளுக்கும் சடங்குகளுக்கும் உரிய மரியாதை காட்டுவதுதான் இந்திய தேசீய இயக்கத்தின் அடிப்படை. இந்த அடிப்படை குலையின், உரிமை சரிவது உறுதி. `எல்லாச் சமயங்களும் ஆண்டவனையே அடைகின்றன. எவ்விதம் தொழுதாலும் மனிதனது பக்தி ஆண்டவனை அடைகிறது. ஆண்டவன் பக்தனது அன்புக்குப் பதிலளிக்கிறான்,’ என்பது கண்ணன் கூற்று. இக்கருத்தினையே நாயன்மார்களும் ஆழ்வார்களும் அறிவுறுத்தினர். பக்தன் தனது வழிபாட்டில் எப்பெயரையும் எவ்வுருவையும் நிலைபெறச் செய்யினும் அவற்றை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளுகிறான் என்பது பெரியோர் கூற்று. இச்சமய சமத்துவத்தை இதே டெல்லியில் அக்பர் பேரரசர் அறிவுறுத்தினார். நூறாண்டுகளுக்கு முன் இராமகிருஷ்ண அடிகளும் இதனையே வற்பறுத்தினார். “காந்தியடிகள், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகிய பெரியோர்களின் பிறந்த நாட்கள் சேர்ந்தாற் போல் வருகின்றன. இருவரும் ஒரே வகை அறிவுரை வழங்கியவர்; எல்லாவகை வழிபாடுகளுக்கும் ஒத்த மரியாதை காட்டியவர்; ஈசுவரர், அல்லா, ராம், ரஹிம் முதலிய ஆண்டவனுக்குரிய எல்லாத் திருப் பெயர்களும் ஒன்றே என்று விளக்கினவர்.” தீண்டாமை ஒழிப்பு காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புப் பிரசாரம் செய்வதற்குப் பல ஆண்டுகட்கு முன்னரே ஆச்சாரியார் சேலத்தில் செயலளவில் தீண்டாமை நீங்கப் பாடுபட்டார்; அம்முயற்சியில் பல இன்னல் களை அடைந்தார் என்பன முன்னரே கூறப்பட்டன அல்லவா? சகஜானந்த அடிகளுடன் சமபந்தி உணவு உட்கொண்டதால் அவர் சாதிவிலக்குச் செய்யப்பட்டார் என்பதும் முன்பு கூறப்பட்டதே. காந்தி ஆச்சிரமத்தில் தாழ்த்தப்பட்டாரைச் சேர்த்த பொழுதும் சிலர் அவரை அச்சுறுத்தினர். செயலாற்றும் செம்மல் ஆச்சாரியார் தமக்கு நியாயமானது என்று பட்ட எதனையும் செய்யப் பின்வாங்கியதில்லை. அவர் வைதிகரது பலத்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சேலத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தாரல்லவா? அவ்வாறே காந்தியடிகள் கொள்கைக்கு மாறாகவும், காங்கிரஸ் கொள்கைக்கு மாறாகவும் பாகிஸ்தான் கொள்கையை ஆதரித்து, நாடு முழுவதும் பிரசாரம் செய்த வீரர் அல்லரா? அப்பொழுது உண்டான எதிர்ப்புக்கள் பல. அவர் அவற்றைக் கண்டு அஞ்சினாரல்லர். அவர் செயலாற்றும் செம்மலாய் விளங்கினார். சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளவரில் அவர் ஒருவரல்லர். அவர் `சாதி வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டல் வேண்டும்’ என்று கூறியதற்கேற்பத் தம் மகளாரை வைசிய மரபைச் சேர்ந்த காந்தியடிகள் மகனாருக்கு மணம் செய்து தந்தனர். எனின், அவரது செயலாற்றுந் திறனை என்னென்பது! சிறந்த அறிஞர் அவர் வழக்கறிஞர் தொழிலில் சிறந்த அறிஞர் எனப் பெயர் பெற்றார்; பெரும் பொருள் ஈட்டினார். சேலம் நகரசபைத் தலைவராகி அவர் ஆற்றிய அரும் பணிகளைக் கண்ட பொது மக்கள் அவர் ஆட்சித் திறன் வாய்ந்தவர் எனப் பாராட்டினர். மாகாணக் காங்கிரஸ் இயக்கத்தை நடத்திச் சென்ற முறையைக் கண்டும், முழு இந்தியக் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராயிருந்து அவர் கூறி வந்த யோசனை களைக் கண்டும் காந்தியடிகள் முதலிய தலைவர்கள் அவரை அரசியல் அறிஞர் எனப் பாராட்டினர். சென்னை முதலமைச்சராயிருந்து அவர் ஆற்றிய திருப்பணிகளைக் கண்டு மாகாண மக்கள் அவரது அரசியலறிவைப் பாராட்டிப் பேசினர். வங்க மாகாணக் கவர்னராயும், கவர்னர் ஜெனரலாயும் இருந்து அவர் ஆற்றிய செயல்களைக் கண்ட இந்திய அறிஞரும், அயல் நாட்டு அறிஞரும் அவரைப் பலதுறை அறிஞர் எனப் போற்றிப் புகழ்ந்தனர். சிறந்த பேச்சாளர் “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்பது தமிழ் மறை. ஆச்சாரியார் சொற்பெருக்கு இக்குறளுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் உவமைகள் இன்றிப் பேசார்; நகைச்சுவை இன்றிப் பேசார். அவர்தம் சொற்பொழிவுகளில் ஆண்டுள்ள உவமைகளைத் தொகுத்து ஒருவர் நூலாக வெளியிட் டுள்ளார் எனின், நாம் அவரது உவமை நயத்தைப் பற்றி என்னென்பது! அவரது பேச்சில் வஞ்சப் புகழ்ச்சியணி இடம் பெற்றிருக்கும். அவர் அனைவர்க்கும் புரியத்தக்க எளிய நடையிற் பேசுபவர். தமிழ்த் தொண்டு ஆச்சாரியார் தமிழன்னைக்கும் தொண்டு செய்துள்ளார். அவர் சாக்ரடீஸ் வரலாறு, குட்டிக் கதைகள், கண்ணன் காட்டிய வழி, மார்க் அரேலியஸ் ஆத்மசிந்தனை, உபநிஷதப்பலகணி, குடிகெடுக்கும் கள், பிள்ளை வளர்ப்பு, தாவரங்களின் இல்லறம், அபேத வாதம் தமிழில் வருமா? தம்பீ வா, இதையும் படி, வியாசர் விருந்து முதலிய நூல்களைத் தமிழில் வெளிப்படுத்தியுள்ளார்; தமிழ் மறை யெனப் போற்றப் பெறும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல்கள் அனைத்தும் ஆச்சாரியாரது தமிழ்ப்பற்றினை நன்கு விளக்க வல்லவை. இங்ஙனம் அரசியல் அறிஞராயும், தமிழ் அறிஞராயும், பலதுறை அறிஞராயும் விளங்கிவரும் ஆச்சாரியார் வாழ்க்கை நமக்குச் சிறந்த வழி காட்டியாகப் பயன்படுவதாகுக! 6. பொன்மொழிகள் டாக்டர் இராஜகோபாலாச்சாரியார், கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே பற்பல பொருள்கள் பற்றிச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மாணவர்கள், அச்சொற் பொழிவுகளிற் பொதிந்துள்ள உயர்ந்த கருத்துக்களை உணர்தல் நலம்; அவ்வுயர்ந்த கருத்துக்கள் மாணவர்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்த விரும்புங்கால் பயன்படும்; கட்டுரைகள், கதைகள் முதலியவற்றை எழுத விரும்புங்கால் நல்லமேற்கோள்களாகும். எனவே, டாக்டர் ஆச்சாரியார் பல்வேறு சமயங்களில் பல்வேறிடங்களில் ஆற்றியுள்ள சொற்பொழிவுகளின் சிறப்புமிக்க பகுதிகளை ஈண்டுத் தருகிறோம்: தயிரில் வெண்ணெய் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆயின் தயிரில் வெண்ணெய் உளது உளது என்று வாயினால் பன்முறை கூறினாலும் அதைக் காண முடியாது. தயிரைக் கடைந்தெடுத்தாலொழிய வெண்ணெய் வெளிப்படாது. கடைந்தெடுக்காமல், தயிரில் வெண்ணெய் வெளிப்படையாகத் தெரியாமையால் வெண்ணெயே இல்லை என்று கூறிவிடவும் முடியாது. இதுபோல, இறைவன் இருப்பதைப்பற்றிப் பேசிவிட்டால் மட்டும் போதாது; வெளிக்கண்களுக்குத் தோன்றாமையால் இறைவனே இல்லை யென்று கூறிவிடவும் முடியாது இறைவனைக் காணவேண்டுமானால், பக்தியுடன் உள்ளத்தில் விருப்பம் என்னும் தயிரைக் கடைதல் வேண்டும். அப்போதுதான் இறைவன் என்னும் வெண்ணெய் வெளிப்படும். குடியானவன் அடுத்த ஆண்டு பயிரிடுவதற்கென்று வித்துக்களைச் சேமித்து வைத்திருக்கிறான்; கொடிய பஞ்சம் வந்து விட்ட காலத்திலும் வித்துக்களை உணவுக்கென்று பயன்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. அதுபோல, மாணவர்கள் எதிர்காலச் சமுதாய வளர்ச்சிக்குரிய வித்துக்கள். நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுவது தவறான காரியம். நாட்டின் வருங்கால உயர்வை எண்ணி அவர்கள் நன்றாகப் படித்து அறிவை வளரச் செய்துகொள்ள வேண்டும். பிற்காலத்தில் நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரக்கூடிய-நெருக்கடியைத் திறமையாகத் தீர்த்து வைக்கக்கூடிய - ஆற்றலைப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆங்கில மொழியின் அமைப்பும், அழகும், சொல்லாழமும் பொருட் செறிவும் தமிழில் இல்லையென்று தமிழை மறந்த தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இத்தகையோர், புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் ஆக்கினாலல்லாது, தமிழில் இக்காலத்துப் புதிய செய்திகளை விவரிக்க முடியாது என்று கூறுகிறார்கள். பழைய சொற்களையும் பழைய கலைகளையும் மறந்து விட்டதே இத்தகைய எண்ணங்களுக் கெல்லாம் காரணமாகும். வீட்டில் பழைய பெரிய பேழையில் உள்ள பட்டாடைகளை மறந்து விட்டு, கந்தல் உடைகளுடன் கடைக்குச் சென்று கடனுக்குச் சேலை வாங்குவதைப் போன்றது இந்த மொழிப் பிச்சைக் கொள்கை. சிற்பம் எத்துணை அழகு வாய்ந்ததாயிருந்தாலும் கவனித்துப் போற்றாமல் விட்டு விட்டால் கெட்டுப் போகும். பெரிய மாளிகையா யிருப்பினும் துப்புரவாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ளாமற் போனால் குடியிருக்க வசதியும் இடமும் இல்லாமற் போகும். உடலும் எத்துணை நலமுடையதாக இருந்த போதிலும் கவனியாமல் விட்டு விட்டோமானால் நலங்குன்றி நோய்வாய்ப்படும். மொழியும் இவை போன்றதேதான். மொழியைப் போற்றாமல், கவனியாமல் விட்டு விட்டால் நாளடைவில் அழகு குன்றி, சொல்வளம் குன்றி, அமைப்பும் அழகுமின்றி, பொருட்செறிவு குன்றிப்போகும். உலகம் மாயை என்று சிலரால் கூறப்படுகிறது. நம்முடைய சிற்றறிவுக்குள் அடங்கவில்லை அல்லது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக உலகத்தைப் பொய் அல்லது மாயை என்று கூறிவிடலாமா? எறும்பு தன்னறிவுக்கு எட்டாத யானையைப் பற்றிச் சொல்லக்கேட்டு, அதை நம்ப முடியாமல் யானையே பொய் என்று கூறுவது போன்றது தான் உலகம் மாயை என்று கூறுவதுமாகும். மரத்தை ஏதோ ஓர் இடத்தில் நடுகிறோம். அந்த இடத்திலிருந்தே அது செழித்தோங்கி வளர முயல்கிறது. மண்ணிலிருந்து கிடைக்கக் கூடிய சத்துக்கள் அனைத்தையும் அம்மரம் எடுத்துக் கொள்கிறது; தனக்கு வேண்டாதவற்றை விட்டுவிடுகிறது. அதே போல, நாம் தோன்றியுள்ள சமுதாயத்திலே, நம்முடைய உயர்வுக்கு வேண்டியவற்றை யெல்லாம் நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஆசாரக் கட்டுப்பாடுகளைக் கண்டு, முன்னேற்றத்துக்கும் உயர்வுக்கும் வழியில்லையே என்று எண்ணிக் கிடத்தல் கூடாது. தெருவிலும், வாய்க்கால் ஓரத்திலும், மக்கள் நடமாடும் மற்றப் பொதுவிடங்களிலும் மலஜலங் கழித்து வைப்பது மிக அநாகரிகம். இச்செயல் ஊரை அசுத்தப்படுத்துகிறது; மரங்களுக்குக் கேடு உண்டாக்குகிறது. எனவே, எவர் இருந்தhலும் இல்லாதிருந்தாலும் இச்செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும். போலீஸ்காரனுக்குப் பயந்துகொண்டு செய்யாமலிருப்பதும், அவனில்லாத விடத்துச் செய்வதும் தவறு. வீட்டில் குழந்தைகள் கண்டவிடத்தில் அசுத்தம் செய்து விட்டால், நம் குழந்தைகள் தாமே என்று பேசாமலிருந்து அப்படியே செய்ய விட்டுக் கொண்டிருப்போமா? அதுபோலவே, ஊரெல்லாம் ஒரு வீடு என்றும், நாம் அதில் உள்ள குழந்தைகள் என்றும் கருத வேண்டும். வீட்டை நம்முடைய தென்று நாம் கருதுவது போலவே, ஊரையும் நம்முடையதாகக் கருதித் தூய்மையுடைய தாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுதான் நம்முடையது, அது துப்புரவாக இருத்தல் வேண்டும், ஊர் எவருடையதோ, அது எப்படியிருந்தால் என்னவென்று கருதும் மனப் பான்மை அநாகரிகமானதாகும். வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு மாடுகள் முன்னும் பின்னுமாக இழுத்துக் கொண்டிருந்தால் வண்டி போகமுடியாது. அவை இரண்டும் ஒழுங்காக ஒரேவாறாகப் போனால்தான் வண்டியைச் சரியாக இழுத்துக்கொண்டு போகமுடியும். அதே போல, எந்த ஒரு காரியத்தையும் செய்ய முன்வருகிறவர்கள், ஒன்றுபட்டு, ஒரே கருத்துடையவர்களாய் முயன்று வேலை செய்தால்தான், அந்தக் காரியம் திறமையாக முடியும். பலாப்பழம் நன்றாகப் பழுத்த பிறகு சாப்பிட்டால் சுவையுடையதாக இருக்கும்; வயிற்றுக்குக் கெடுதலைச் செய்யாது. ஆனால், காயாக இருக்கும் போதே அவசரப்பட்டுச் சாப்பிட்டோமானால், வயிற்று வலி வந்துவிடும். அதே போன்று எச் செயல் புரிவதாயினும் ஆறஅமரச் சிந்தித்து, எல்லா வசதிகளையும் சரிவர அமைத்துக்கொண்ட பிறகே செய்ய வேண்டும். அவசரப்பட்டுச் செய்தால், அச்செயல் நன்றாக நிறைவேறாமற் போவதுடன் நமக்கே தீமை விளைவிக்கக் கூடியதாய் அமைந்து விடும். நம்முடைய விருப்பம் போல மழைபெய்வது மில்லை, வெயில் காய்வதுமில்லை. அதற்காக அவை வேண்டவே வேண்டா என்று நாம் கூறிவிட முடியுமா? அதுபோல நாட்டில் நாம் விரும்பும் செயல்கள் மட்டுமே நடைபெற வேண்டும், மற்றவை நடைபெறக்கூடாது என்று நாம் கருதலாமா? நல்ல செயல்கள் எதுவானாலும் நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டியதுதான். மாவை வெந்நீரில் கரைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? மாவின்மீது வெந்நீரை அப்படியே கொட்டினால் மா கரையாது; கட்டி கட்டியாக ஆகிவிடும். எனவே, தண்ணீரில் முதலில் மாவைக் கரைத்துக்கொண்டு சிறிது சிறிதாக வெந்நீரை விட்டால் மா வெந்நீரில் கரையும். இதைப் போலவே, எச்செயலையும் வற்புறுத்திப் பலாத்காரமாகச் சாதித்துவிட முடியாது. மெல்ல மெல்ல அறிவு புகட்டும் முறையினால்தான் சாதிக்க முடியும். நற்செயல் செய்தால் நம் ஒழுக்கம் அழகு பெறுகின்றது. தீச்செயல் செய்தால் அதற்கேற்றவாறு நம் ஒழுக்கம் பழுதாகிப் போகின்றது. எச்செயல் செய்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் நண்பர் ஒருவர் இல்லம் செல்கிறோம். நமக்குத் தேநீர் அருந்தும் வழக்கமில்லை. நண்பர் தேநீரளித்து அருந்தச் செய்கிறார். நாம் அருந்துகிறோம்; அடுத்த நாள் அதைத் தயக்க மின்றிக் குடிப்போம்; மூன்றாம் நாள் நாமே அதைத் தேடிக் குடிப்போம்; இவ்வாறு அப்பழக்கத்துக்கு ஆளாகிறோம். அதே போன்று, ஏதோ ஒரு காரணத்தால் இன்று பொய்பேசத் தொடங்கினால், அந்த அளவுக்குப் பொய்யராகிறோம். மறுமுறை பேசத்தயங்குவதில்லை. மூன்றாம் முறை அற்பத்திற்கும் நாமாகவே பொய் பேச ஆசைப்பட்டு விடுகிறோம். இதனால் நம்முடைய ஒழுக்கம் அடியோடு சிதைந்து போகின்றது. நம் எண்ணமும் செயலும் நம் ஒழுக்கத்தைத் தாக்குவது உண்மைதான். ஆனால், நாம் அதே சமயத்தில் அதைப் பழுது பார்த்துச் சரிப்படுத்த முடியும் என்பதும் உண்மையாகும். பித்தளையாலோ செம்பாலோ ஓர் உருவம் செய்கிறோம். உருவம் தவறிவிட்டால், மீண்டும் அதை அடித்து ஒழுங்காகச் செய்துவிடுகிறோம். அதே போல, நம்முடைய ஒழுக்கமும் கெட்டிருந்தாலும் நல்லதாகச் செய்து விடலாம். தவற்றுக்கு நாம் இடங்கொடுத்திருந்தால் அதை ஒழித்துச் செம்மை செய்து கொள்ளலாம். ஓர் அடியில் ஒரு பயன் விளைந்தால் மற்றோரடி மூலம் அதை மாற்றியமைத்துவிடலாம். எனவே, தீச்செயல் ஒன்றைச் செய்துவிட்டால், அதை மீண்டும் செய்யவேண்டும் என்னும் எண்ணம் நமக்குத் தோன்றினாலும், தக்க கவனமும் முயற்சியும் கொண்டு, அவ்வெண்ணத்தை அடிமேலடியடித்துச் செப்பம் செய்து, ஒழுக்கம் பழுதாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நாம் செய்யும் செயல்தான் மிகவும் முக்கியமானது என்று ஒவ்வொருவரும் இறுமாப்புக் கொள்வது இயற்கையா யிருக்கிறது. அப்படி நாம் இறுமாப்புக்கொள்வோமானால், இதே போன்று பிறர் கொள்ளும் இறுமாப்புக்கு நாம் ஏன் பங்கம் விளைவிக்க வேண்டும்! புகைவண்டி ஓடும்போது அதிலுள்ள ஒவ்வொரு பகுதியும் அதிருகின்றது. அதைக்கண்டு சக்கரம் மற்றப் பகுதிகளைப் பார்த்து, “நீங்கள் ஏன் இப்படி அதிருகிறீர்கள்! நான்தான் வண்டியை இழுத்துச் செல்கிறேனே என்று கேட்கலாமா?” கட்டுரை, கதை முதலியவை எழுதும்போது, தக்க ஓரிடத்தில் எழுதுவதை நிறுத்தி, அதைப் படித்துப் பார்க்க வேண்டும். நம் குழந்தைகளை நாம் பார்ப்பது போல, அதைப் பார்க்கக்கூடாது. வெளியார் பார்ப்பது போல, நாம் எழுதியதைப் பார்க்க வேண்டும். நம் மனத்தில் முன்னரே பதிந்துள்ள கருத்துக்களை ஒதுக்கி வைத்து, நாம் எழுதியதை வெளியார் கேட்டால் எப்படி எண்ணுவார்கள், எப்படிப் பொருள் கொள்ளுவார்கள் என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். வேறு எவரோ ஒருவர் கூற, நாம் அதைக் கேட்பது போலப் பாவனை செய்து கொண்டு, படித்துப் பார்க்கவேண்டும். அப்போது தான், நாம் எழுதியிருப்பதில் உள்ள குறைபாடுகள் நமக்கு நன்றாக விளங்கும். நாம் எழுதும்போது, நம் மனத்தில் தோன்றும் பொருள் முழுவதும் அமையுமாறு எழுத வேண்டும். பொருளின் உருவ முழுவதையும் மனக் கண் முன் நிறுத்தி, அதற்கும் எழுதிய எழுத்துக்களுக்கும் ஒற்றுமையுளதா என்று பார்க்கவேண்டும். உருவத்தின் ஒவ்வோர் அங்கமும் மொழியில் அமைந்திருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். துவக்கத்தில், சொல்லழகும் பொருட்செறிவும் கொண்ட முறையில் எழுதி, போகப் போகப் பொருட் செறிவும் சொல்லழகும் குறைந்துபோகக் கூடாது. மொழியழகும், பொருட்செறிவும், கதையின் சுவையும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே சென்றால்தான் படிப்போர் மனத்தைக் கவர்ந்துவிடும். கதை, கட்டுரை, நாடகம், பேச்சு முதலிய எதனை எழுத வேண்டும். கரும்பைத் தின்னும்போது நுனியிலிருந்து தொடங்கி, அடிப்பக்கம் போகப் போக இனிப்பு மிகுவதுபோல, படிப்பவர்களுக்கு மேலும் மேலும் சுவை பெருகிக்கொண்டு போகுமாறு மொழியையும் பொருளையும் அமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் 1. கல்விப் பயிற்சி தோற்றுவாய் இந்தியாவின் தந்தையார் என்று போற்றப்பட்ட காந்தியடிகளின் உள்ளங்கவர்ந்த உத்தமர் நமது குடியரசுத் தலைவராக உள்ள டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இதுகொண்டே இராஜேந்திரருடைய உயர் குணங்களை உய்த்துணரலாகும். அவர் பீகார் மாகாணத்தவர்; வழக்கறிஞர்; பெருவருவாய் பெற்றுத்தந்த தம் தொழிலை நாட்டுத் திருப்பணிக்காகத் துறந்து வறுமைப் பட்டவர்; அடிகளின் அரசியல் மாணவராய்ப் பலமுறை சிறைப்பட்டவர்; ஏழைகட்குத் தம்மால் இயன்ற திருப்பணிகள் செய்தவர்; உள்ளம்-உரை-உடல் என்னும் மூன்றாலும் உண்மைத் தொண்டு செய்தவர்; இன்றளவும் செய்து வருகின்றவர்; பகைவரே இல்லாத உத்தமர்; அவர் கொண்டாடும் கடவுள் அன்பும் தொண்டுமே வாழ்வின் குறிக்கோள். அன்பையும் தொண்iடயுமே பற்றுக்கோடாகக் கொண்டுள்ள நம் தலைவரது சீரிய வரலாறு நமக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையத் தகுவது. ஆதலின், அப்பெரியார் வரலாற்றினைப் படித்தறிதல் இந்திய இளைஞராகிய நம்மவர்க்குக் கடமையாகும். பீகார் மாகாணம் வரலாற்றுப் புகழ்பெற்ற அலெக்ஸாண்டர் காலத்தில் வடஇந்தியாவில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய அரசு, நந்தர்கள் அரசாகும். அது பீகார் மாகாணத்தில் அமைந்ததே யாகும். அதன் தலைநகராகிய பாடலிபுரம் இருந்த இடத்திற்றான் இக்காலப் பாட்னா நகரம் அமைந்திருக்கிறது. “பொன்மலி பாடலி” “நந்தர் பாடலி” என்று சங்கத்தமிழ்ச் செய்யுட்களால் பாராட்டப் பெற்ற பாடலியைத் தலைநகராய்க் கொண்டே நந்தர்க்குப்பின் மோரியப் பேரரசு தோற்ற மெடுத்தது. இந்தியப் பெருவீரனான சந்திரகுப்த மோரியன் வடஇந்தியாவைத் தன் ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட காலத்தில், அவனது பெருநாட்டின் உயிர் நாடியாக விளக்க முற்றதும் பீகார் மாகாணமேயாகும். உலகம் போற்றும் உத்தமப் பேரரசனாகிய அசோகன் ஆண்ட இடமும் அதுதான். மோரியர் காலத்து மெகஸ்தனிஸ் என்ற யவன தூதன் வரைந்த குறிப்புக்களிலிருந்தும், குப்தர் காலத்து பாஹியான், ஹர்ஷர் காலத்து ஹியூன் ஸங் என்ற சீன அறிஞர்கள் எழுதிவைத்துள்ள குறிப்புக்களிலிருந்தும் பீகாரின் பழைமையையும் பெருமையையும் பாங்குற உணரலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பீகார் மாகாணத்திற் பிறந்து வளர்ந்தவரே நமது குடியரசுத் தலைவராகவுள்ள இராஜேந்திரர். இராஜேந்திரர் பிறப்பு பீகார் மாகாணத்தின் வடபகுதியில் உள்ள மாவட்டங்களில் சாரன் என்பது ஒன்று. அம்மாவட்டத்தி லிருந்த நிலக்கிழவருள் மகாதேவ சகாயர் என்பவர் ஒருவர். அவர் சிறந்த பரம்பரையில் வந்தவர். அவர் முன்னோர் வாழையடி வாழையாகவே நிலக் கிழவராயிருந்தவர்; உண்மையுடைமை, அடக்கம், அஞ்சாமை, இரக்கம், பிறர்க்கு உதவிபுரிதல் முதலிய நற்பண்புகள் சிறக்கப் பெற்றவர். அவர் காயஸ்தர் என்னும் கணக்கர் வகுப்பினர். காயஸ்தர் கணக்கில் வல்லவர். வட இந்தியாவில் அரசாங்க அலுவலகங்களிலும் பிற அலுவலகங் களிலும் அவர்கள் திறம்பட வேலை செய்து வருகின்றனர். மகாதேவ சகாயருக்குப் பிள்ளைகள் ஐவர் தோன்றினர். நமது இராஜேந்திரர் ஐந்தாம் பிள்ளையாவார். அவர் 1884 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். தவழ்நடைப் பருவம் இராஜேந்திரர் கடைப்பிள்ளை ஆதலின் பெற்றோராற் பெரிதும் சீராட்டி வளர்க்கப்பட்டார். அவர் தவழ்நடைப் பருவத்திலேயே தம் முன்னோர் படித்து வந்த புத்தகங்களை அவர்கள் கைகளிலிருந்து இழுத்து வைத்துக்கொண்டு படங்களைப் பார்ப்பதும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் வழக்கம். அவர் மந்தமாக இருந்த நேரமே இல்லை; உறங்கும் நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் சுறுசுறுப்பு மிக்கவராகவே காணப்பட்டார். `இவன் தக்க வயதில் சிறந்த அறிஞனாக விளங்குவான்,’ என்று அவரைப் பார்த்த பெரியோர்கள் அப்பொழுதே சோதிடம் கூறினர். “விளையும் பயிர் முளையிலே” தெரியுமன்றோ? கல்விப் பயிற்சி இராஜேந்திரர் பள்ளிக்குப் போகுமுன் வீட்டில் ஒரு மௌல்வி (முஸ்லிம் பண்டிதர்) யிடம் கல்வி பயின்றார்; பின்னர்ப் பள்ளியிற் சேர்ந்து படித்தார். அவர் முதல் வகுப்பிலேயே ஆசிரியர்கள் கவனத்தைத் தம் பால் இழுக்கலானார். அவர் ஒவ்வொரு வகுப்பிலும் முதல்வராகத் தோன்றினார். அவருடைய அன்பு, நாநயம், நன்னடத்தை முதலியன ஆசிரியரையும் மாணவரையும் ஒருங்கே கவர்ந்தன. அவர் தம் அறிவாற்றல்களால் மாணவர் தலைவராய் விளங்கினhர். இராஜேந்திரர் பலவகைப் பள்ளி விளையாட்டுக்களில் பெருவிருப்பங் கொண்டவர்; கால்பந்து விளையாட்டில் முதன்மையானவர். இராஜேந்திரரது மாணவப் பருவத்தில் பீகார் மாகாணம் தனித்தியங்கவில்லை. அது வங்க மாகாணத்துடன் இணைந் திருந்தது. அப்பெரிய மாகாணத்தின் தலைநகரம் கல்கத்தா. பீகார் மாகாண மக்கள் வங்கமக்களைவிடக் கல்வியிற் குறைந்தவர்கள் என்பது அக்கால வங்காளிகள் எண்ணம். அந்த எண்ணம் தவறு என்பதை இராஜேந்திரர் 1902-ஆம் ஆண்டில் மெய்ப்பித்துக் காட்டினார்; அந்த ஆண்டில் நடந்த மெட்றிகுலேஷன் தேர்வில் முதல்வராய்த் தேறினார். அப்பொழுது பீகாரில் நடைபெற்றுவந்த “ஹிந்துஸ்தான் ரெவ்யூ” என்னும் திங்கள் தாளின் ஆசிரியர் அத்தாளில், “இராnஜந்திரர் பீகாரின் தலை மணியாவர். அவர் கல்லூரியிலும் இவ்வாறே விளக்கம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம். அவர் எதிர் காலத்தில் இந்தியாவிற் பெயர் பெறுவார்,” என்று பாராட்டுரை வரைந்தனர். கல்லூரிக் கல்வி இராஜேந்திரர் கல்கத்தாவில் மாகாணக் கல்லூரியிற் சேர்ந்தார்; முன்போலவே தம் கல்லூரிப் படிப்பிற் சிறப்புக் கவனம் செலுத்தினார்; ஓய்வு நேரங்களில் பீகார் மாணவர்களை ஒன்று சேர்த்துக் கழகம் ஒன்றை நிறுவினார்; `பீகார் மாணவர்கள் கல்வியில் அழுத்தமாகக் கவனம் செலுத்த வேண்டும்; நாட்டு நலனுக்குகந்த பொதுப்பணிகளிலும் மிகுந்த ஊக்கம் கொள்ள வேண்டும்,’ என்று அவர்கட்கு அறிவுரை கூறினார்; கழகக் கூட்டங்களில் அவர்களைப் பல பொருள் பற்றியும் பேசவைத்தார்; தாமும் பேசினார் புதியவராக வரும் பீகார் மாணவர்க்கு உண்டி - உறையுள் வசதிகளைத் தேடித் தந்தார்; இத்தகைய நற்பணிகளால் பீகார் மாணவர்க்குள் ஒற்றுமையையும் உள்ளன்பையும் உண்டாக்கினார். அக்காலத்தில் இந்திய வைசிராயாயிருந்த கர்ஸன் பிரபு வங்கத்தை இரண்டாகப் பிரித்தார். வங்கத் தலைவர்கள் அப்பிரிவினையை எதிர்த்தனர். அரசாங்கம் மக்கள் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாமையால், பொதுமக்கள் கிளர்ச்சி செய்தனர்; வெளிநாட்டுத் துணிகளையும் பொருள் களையும் வாங்கலாகாது என்று உறுதி பூண்டனர்; நாட்டுத் தலைவர்கள் நாள்தோறும் கல்கத்தாவிற் கூட்டம் கூட்டிச் சொன்மாரி பொழிந்தனர். இராஜேந்திரர் இளமை முதலே நாட்டுப்பற்று மிக்குடையவர் ஆதலின், தலைவர்களின் சொற்பொழிவுகளை உருக்கத்துடன் கேட்கலாயினர்; தலைவர் களின் பேச்சுக்கள் அவரது உள்ளத்தை உருக்கின. அவர் பீகார் மாணவர் மாநாடு ஒன்றை முதன் முதற் கூட்டினார். அவருக்கு முன் இங்ஙனம் இந்தியாவில் எந்த மாகாணத்திலும் மாணவர் மாநாடு கூட்டப்பட்டதில்லையாம். இராஜேந்திரர் இங்ஙனம் அரசயில் கிளர்ச்சியில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும் கல்லூரிப் படிப்பை மறக்கவில்லை. அவர் 1904-இல் எப். ஏ. தேர்வில் சிறப்புறத் தேறினார். 1906-இல் பி. ஏ. தேர்விலுஞ் சிறப்படைந்தார்; அவர் எம். ஏ. தேர்வுக்காகப் படித்து வந்தபொழுது தந்தையார் காலமானார். எனினும், இராஜேந்திரர் தம் தமையனார் மகேந்திர பிரசாத் என்பவர் ஊக்கமளிக்க, எம். ஏ. தேர்வுக்குப் படித்தார்; பிறகு 1908-இல் எம். ஏ. பட்டமும் பெற்றார்; ஓராண்டு ஒரு கலாசாலையில் ஆசிரியராயிருந்து பின்னர்ச் சட்டக்கல்லூரியிற் சேர்ந்து படித்தார்; 1910-இல் பி. எல். பட்டம் பெற்றார். இராnஜந்திரர் இங்கிலாந்து சென்று ஐ. ஸி. எஸ். பட்டம் பெறவேண்டும் என்பது தமையனார் அவா. நாட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்ட இராஜேந்திரர் அதனை விரும்பவில்லை. அவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தம்மைப் பதிவு செய்து கொண்டு, தொழில் பார்க்கலானார். 2. தொண்டில் ஆர்வம் இந்திய ஊழியர் சங்கம் கோபால கிருஷ்ண கோகலே என்னும் மஹாராஷ்டிரப் பெரியார் சிறந்த கல்விமான். அவர் இந்தியர் நலனுக்கு இராப்பகல் உழைத்தார்; நாட்டு நலனுக்குப் பாடுபட விரும்பும் நல்லவர்களைக் கொண்டு இந்திய ஊழியர் சங்கம் ஒன்றைத் தோற்றுவித்தார். அச்சங்கத்தார் கல்லூரி வாயிலாகக் கல்வி பரவச் செய்தனர். பலவகைக் கொடிய நோய்கள் பரவுதலைத் தடுக்க ஏற்பாடு செய்தனர்; நோய்கள் பரவிய இடங்களிற் சென்று தொண்டு புரிந்தனர். அச்சங்கத்தில் மாகாணம் சீநிவாச சாத்திரியார் போன்ற அறிஞர்கள் தங்கள் சுகபோகங்களைத் துறந்து, தொண்டு செய்து வந்தனர்; ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு மிக்க உணர்ச்சியுடன் வேலை செய்து வந்தனர். இத்தகைய தியாகங் களைக் கொண்ட சங்கத்தைத் தோற்றுவித்தவர் கோகலே என்பவர். காந்தியடிகளே அவரைத் தம் அரசியல் குருவெனக் கொண்டாடினர் எனின், அவரது சிறப்பை என்னென்பது! இராnஜந்திரர் ஆர்வம் இராஜேந்திரர் இந்திய ஊழியர் சங்கத்தைப் பற்றியும் கோகலே அவர்களைப் பற்றியும் நிரம்பக் கேள்வியுற்றார்; கோகலேயைப் பார்க்க அவாவினார்; கோகலே 1910-இல் கல்கத்தா வந்தபொழுது அவரை நேரிற்கண்டு பேசினார். இளைஞரது நாட்டுப்பற்றையும் தொண்டு செய்யும் விருப்பத்தையும் கண்ட கோகலே, அவரை இந்திய ஊழியர் சங்கத்திற் சேர்ந்து தொண்டாற்றும்படி அழைத்தார். இளைஞர், தம் தமையனார் இசைவு பெற்றுப் புனா வருவதாகக் கூறினார். தமையனாருக்குக் கடிதம் இராஜேந்திரர் தமது தமையனாரை நேரிற்கண்டு பேச அஞ்சிக் கீழ்வருமாறு கடிதம் வரைந்தார்: அன்புள்ள அண்ணா அவர்கட்கு, வணக்கம். தங்களிடம் நேரிற்பேச அஞ்சியே இக்கடிதம் தங்கட்கு வரையலானேன். இதனை முழுவதும் படித்துத் தங்கள் முடிவான கருத்தினைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் தங்கள் ஆணைப்படி நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன். கோபாலகிருஷ்ண கோகலே அவர்கள் என்னைத் தமது இந்திய ஊழியர் சங்கத்திற் சேரும்படி கூறினார். நான் அதுபற்றி ஆழச் சிந்தித்தேன். நாட்டுப்பணி செய்வதே நல்லது-ஏழைகட்குத் தொண்டு செய்வதே ஏற்றது என்பது எனது கருத்து. நான் அதற்காக என் வாழ்நாட்களைத் தியாகம் செய்ய விரும்புகிறேன். நம் தந்தையார் மறைந்தபிறகு நமது குடும்பப் பொறுப்புத் தங்களைச் சார்ந்திருக்கிறிது. நான் பொருளீட்டுவேனாயின், தங்கள் சுமை குறையும்-நமது குடும்பமும் தலைநிமிர்தல் கூடும். தாங்கள் முற்றிலும் என்னை நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். என்னைச் சிறப்பாக நம்பியுள்ள நமது குடும்பத்தைத் தவிக்கவிட்டுப் போவது எப்படி என்னும் கவலை என்னையும் வாட்டுகின்றது. ஆயினும், நமது ஒரு குடும்பக் கவலையைவிட ஒரு நாட்டுக் கவலை-கோடிக்கணக்கான ஏழைகள் பற்றிய கவலை-மிகுதியாக என்னை வாட்டுகின்றது. அண்ணா, நான் இக்குடும்பத்தில் இல்லை எனின், நமது குடும்பம் எப்படியோ நடைபெறும் அன்றோ! அவ்வாறு கருதி என்னை மறப்பின், நான் பொது நலத் தொண்டில் ஈடுபட முடியும். நான் எளிய வாழ்க்கை வாழ நன்கு பழகியுள்ளேன். இந்திய ஊழியர் சங்கத்திற் கிடைக்க இருக்கும் வருவாய் எனது எளிய வாழ்க்கைக்குப் போதும். ஆயின், என்னைப் பெரிய துணையென நம்பிய நமது குடும்பம் ஏமாற்ற மடையுமே என்ற கவலைதான் என்னை அடிக்கடி வாட்டுகின்றது. தாங்கள் என்ன நினைப்பீர்களோ என்பதை எண்ணும்போது என் மனம் கவலைப்படுகின்றது. நமது குடும்ப வறுமையைப்பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டா. பிறக்கும் பொழுது ஒருவரும் செல்வத்தை உடன் கொண்டு வரவில்லை; போகும் பொழுதும் உடன் கொண்டு செல்வதில்லை. செல்வம் இடையில் வருவது; இடையிற் போவது. உலகில் தோன்றிய பெரியார்கள் எளிய வாழ்க்கைnய வாழ்ந்தனர். உலகம் ஒழுக்கத்திற்கே மதிப்பளிப்பது; செல்வத்திற்கு மதிப்பளிப்பதாயின், கோடீசுவரர்கள் மகான்களாகக் கருதப் பட்டிருப்பார்களே! அஃது உலக இயற்கை அன்று. ஆதலின் ஏழ்மை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உணவுக்கு ஓரளவு வழியிருத்தலே போதும் என்று உள்ளம் அமைதி பெறின், நமது குடும்பம் என்னைப் பற்றிப் கவலையுறல் தேவையில்லை. `நமது தம்பி நாட்டுக்குத் தொண்டு செய்கிறான்; நாட்டுக்கு ஒரு பிள்ளையை நமது வீடு உதவியிருக்கிறது,’ என்ற எண்ணம் தங்கள் உள்ளத்தில் தோன்றி என்னை ஆசீர்வதித்து எனக்கு விடையளிப்பீர்களாயின், நான் தங்கள் ஆசியுடன் நாட்டுப் பணியில் மனமகிழ்ச்சியுடன் இறங்குவேன். எனது இந்த முடிவைக் குறித்து என் மனைவிக்கும் கடிதம் வரைந்துள்ளேன். நமது தாயார் தமது முதிய பருவத்தில் கவலையுறுவார் என்றஞ்சிக் கடிதம் எழுதவில்லை. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கும் தங்கள் அன்புள்ள தம்பி, இராஜேந்திரப் பிரசாத். உடன் பிறந்தார் உள்ளக்கனிவு. கடிதத்தைப் படித்த தமையனார் மனங்கலங்கினார்; “குடும்பம் தந்தையாரை இழந்தது. குடும்பச் சுமை தாங்க முடியவில்லை. தம்பி படித்து அலுவல் பார்ப்பான்; குடும்பம் கவலையற்று வாழும் என்று நினைத்தேன். ஈன்ற அன்னையாnரா நோயால் நலிவுற்றுப் பாயும் படுக்கையுமாக இருக்கின்றார். இந்நிலையில் தம்பி நாட்டுப் பணி செய்ய விரும்பி வீட்டுப் பணியைக் கைவிடப்பார்க்கிறானே!” என்று எண்ணினார். அவர் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் வெளிப்பட்டது. அவ்வமயம் இராஜேந்திரர் அவர்முன் தோன்றினார்; தமையனார் கண்ணீர் வடிப்பதைக்கண்டார்; அவர் கையில் தமது கடிதம் இருந்ததைப் பார்த்தார்; தமது கடிதச் செய்தியே அவரைக் கலங்கச் செய்தது என்பதை உணர்ந்து தம்மை மறந்து அழலானார். பின்னர் இருவரும் பேசாது பிரிந்தனர். இராஜேந்திரர் மற்றொரு கடிதம் தம் தமையனாருக்கு வரைந்தார்; அதனில் தாம் வீட்டுப்பணியை மறந்தமைக்கு வருத்தம் தெரிவித்துத் தாம் இனி வீட்டுப்பணியில் ஈடுபடுவதாக வாக்களித்தார். அக்கடிதம் படித்த பிறகே தமையனார் உள்ளம் அமைதி அடைந்தது. 3. வழக்கறிஞர் தொழில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இராஜேந்திரர் 1911-ஆம் ஆண்டில் கல்கத்தா உயர் நீதி மன்ற வழக்கறிஞராகத் தம்மைப் பதிவு செய்துகொண்டார். அவர் மாணவராயிருந்த பொழுதே பீகார் மாணவர் கழகத்தை நிறுவியர்; பீகாரிகள் நலனுக்காகத் தொண்டாற்றியவர். ஆதலின் படித்த பீகாரிகள் அவரை நன்கறிந்திருந்தனர். அவர் வழக்கறிஞரானதும் பீகாரிகளின் வழக்குகள் பல அவரிடமே வரத் தொடங்கின. அவர் தம்மிடம் வந்த ஒவ்வொரு வழக்கினையும் நன்கு ஆராய்வார்; ஒழுங்கு, உண்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவ்வழக்கைப்பற்றி நீதிமன்றத்தில் வாதிப்பார். அவர் கூறும் சட்ட நுணுக்கங்கள் நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் திணறச் செய்யும். அவர் வழக்கில் வாகை புனைவார். இராஜேந்திரர் இங்ஙனம் தொடக்க நிலையிலேயே பல வழக்குகளில் வெற்றி பெற்றமையின் வங்காளிகளும் அவரிடம் பலராக வரத்தொடங்கினர். எனவே, அவரது தொழில் வளர்பிறை போல வளரலாயிற்று; வருமானமும் பெருகத் தொடங்கியது. அதனால் அவரது குடும்பம், அவர் தமையனார் எதிர் பார்த்தாற்போல வறுமையின்றி வளம் பெற்று இன்பமாய் நடைபெற்று வந்தது. எம். எல். பட்டம் இராஜேந்திரர் வழக்கறிஞரா யிருந்துகொண்டே எம். எல். பட்டத் தேர்வுக்குப் படித்துவந்தார். அக்காலத்தில் அவர் நாளொன்றுக்குப் பதினெட்டு மணி வீதம் வேலை செய்தார்; ஒவ்வொரு நாளும் வழக்கறிஞர் அலுவல் முடிந்தபிறகு இரவில் நெடுநேரம் வரை கண் விழித்துப் படித்தார். “முயற்சி திருவினையாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்பது அனுபவ வாக்கன்றோ? `முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்’ என்பதற்கிணங்க, அவர் 1915-ஆம் ஆண்டு நடைபெற்ற எம். எல். தேர்வில் முதல் வகுப்பில் தேறிப் பல்லோர் பாராட்டுக்கும் உரியவரானார். பாடலியில் வழக்கறிஞர் தொழில் 1916-ஆம் ஆண்டில் பீகார் மாகாணத்தின் தலைநகரான பாடலியில் (பாட்னாவில்) உயர் நீதிமன்றம் புதிதாக ஏற்பட்டது. ஆதலின் இராஜேந்திரர் கல்கத்தாவை விட்டுத் தமது மாகாண உயர் நீதி மன்றத்தில் தொழில் புரிய விரும்பிப் பாடலியிற் குடியேறினார். அங்கும் அவரிடம் வழக்குகள் வந்து குவிந்தன. அப்புதிய உயர் நீதிமன்றத்தை மதி மண்டலமாகக் கொள்ளின், அங்கிருந்த வழக்கறிஞர்களை விண் மீன்கள் எனக் கூறலாம்; இராஜேந்திரரைத் தண் மதியெனக் கொள்ளலாம். அவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞருள் சிறந்தவரெனப் பெயர் பெற்றார். காந்தியடிகளைச் சந்தித்தல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து காங்கிரசிற் கலந்துகொண்டதும் இந்தியக் குடியானவர் நலன்களைக் கவனிக்கலானார். பீகார் மாகாணத்தில் சம்பரான் என்பது ஒரு பகுதி. அங்குள்ள நிலங்களிற் பெரும்பகுதி நிலைத்த குத்தகைமீது ஐரோப்பியருக்குச் சொந்தமானது. ஓர் ஏக்கர் நிலத்தில் ஆறில் ஒரு பகுதி அவுரியைப் பயிரிட வேண்டும் என்பது ஐரோப்பிய முதலாளிகள் கட்டளை; தவறினால், உழவர்கள் பயிரிடும் உரிமையிலிருந்து விலக்கப்படுவார்கள். வேலை செய்யலாம் எனின், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. உழவர்கள் கல்வியறிவு அற்றவர்கள்; வாயில்லாப் பூச்சிகளாய் மனம் மாழ்கி அடிமைகளாக உழைத்து வந்தனர். அவர்களது துன்ப நிலையைப் பீகார் காங்கிரஸ் ஊழியர்கள் காந்தியடிகளிடம் கூறினர்; 1916-இல் இலக்குமணபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், மேற் சொன்ன உழவர் நிலைபற்றி இரக்கம் காட்டுவதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அடிகள் 1917-இல் சம்பரான் நிலையை உள்ளவாறு அறியப் பீகாருக்குச் சென்றார்; ஏழைகள் பால் பேரிரக்கம் கொண்ட இராஜகுமார சுக்லா என்பவர் அடிகளை அழைத்துச் சென்றார்; பாடலியில் இராஜேந்திரர் இல்லத்திற்கு அடிகளை அழைத்தேகினார். அவ்வமயம் இராஜேந்திரர் வீட்டில் இல்லை. ஆயின், அவர் பின்னர்ச் சம்பரான் சென்று அடிகளுடன் கலந்து கொண்டார். காந்தியடிகள் ஐரோப்பியர் தூண்டுதலால் சம்பரானில் சிறை செய்யப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இராஜேந்திரர் அடிகளை நோக்கி, “தாங்கள் சிறை செல்லின் உங்களைப்பின் தொடர்ந்து வர நானும் என் தொண்டர்களும் இருக்கின்றோம் கவலை வேண்டா. உழவர்க்கு நலன் விளைப்பதே நமது நோக்கம்,” என்றார். அவரது தந்நலமற்ற உரையைக் கேட்ட அடிகள் அகமகிழ்ந்து அவரைத் தழுவிக் கொண்டார். அன்று முதல் அடிகள் இராஜேந்திரரிடம் தனி மதிப்புக் கொள்ளலானார். இங்ஙனம் அடிகள் சிறைப்படின், பலரும் பின்வரத் தயாராயிருந்த உண்மையை அரசாங்கத்தினர் உணர்ந்தனர்; அடிகளை விட்டனர்; வழக்கும் ஒழிந்தது. உழவர் நிலையை ஆராய்ந்தறிய ஒரு குழு அமைப்புண்டது. அடிகள் அக்குழுவில் ஓர் உறுப்பினராயிருந்தார். குழுவினர் உழவர் குறைகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டனர். அதன் பயனாக உழவர் நலனைக் காக்க ஒரு சட்டம் பிறந்தது. இத்தொண்டில் இராஜேந்திரர் தொடக்க முதல் இறுதி வரை அடிகளுடன் இருந்தார். அடிகள் அவருடைய நற்பண்புகளை நன்கறிந்து பாராட்டினார். பாடலியில் பல்கலைக் கழகம் பீகார் மாகாணத்துக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் நிறுவ இந்திய அரசாங்கம் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. (அப்பொழுது இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சராய் இருந்தவர் சர். சங்கரன் நாயர் என்பவர்.) இராஜேந்திரர் அச்சட்டத்தில் இருந்த குறைபாடு களைச் சுட்டிக்காட்டிச் செய்தித் தாள்களில் பல கட்டுரைகள் வரைந்தார்; மாகாணத்தில் பல இடங்களிற் கூட்டங்கூட்டிக் குறைகளை விளக்கிப் பேசினார். இந்திய அரசாங்கம் இராஜேந்திரர் கூறிய திருத்தங்களிற் பலவற்றை ஏற்றுக் கொண்டது. பல்கலைக் கழகம் தோன்றியவுடன் அதன் ஆட்சிக்குழுவில் இராஜேந்திரர் இடம் பெற்றனர்; கல்லூரிப்படிப்பு ஏழைகட்கும் கிடைக்க வேண்டும் ஆதலின் மாணவர் சம்பளத் தொகை குறைவாக இருத்தல் வேண்டும் என்று வாதித்தார்; தாய் மொழியின் வாயிலாகவே பாடங்களைக் கற்பித்தல் வேண்டுமெனப் பேசினார். பொதுமக்கள் நலனில் அவர் காட்டிய ஊக்கத்தை மற்றவரும் ஆதரித்தனர். அவர் விரும்பியவற்றுள் பல நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இராஜேந்திரர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபடும் வரை அப்புதிய பல்கலைக் கழக வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவரது தந்நலமற்ற சேவையை அரசியலாரும் பிற அறிஞர்களும் பாராட்டினர். புகழ்பெற்ற வழக்கறிஞர் இராஜேந்திரர் இங்ஙனம் ஒருபால் காங்கிரஸ் நடவடிக்கை களிலும், மற்றொருபால் பல்கலைக் கழகச் செயல் முறைகளிலும், வேறொருபால் பொதுநலத் தொண்டுகளிலும் ஈடுபட்டுக்கொண்டே தமது வழக்கறிஞர் அலுவல்களையும் பார்த்துவந்தார். அவரது பொது நலவுழைப்பால் அவர் பீகார் மாகாணத் தலைவருட் சிறந்தவரானார். உழவர் முதலிய மக்கள் அவரிடமே தம் வழக்குகளைக் கொணர்ந்தனர். பொருள் மிகுந்த `வணிகரும் அவரையே நாடினர். அவர் தமது அலுவலில் பெரும் பொருள் ஈட்டினார். அவர் `லா வீக்லி’ என்னம் சட்டத்தாள் ஒன்றன் ஆசிரியராயிருந்து, சட்ட நுணுக்கங்கள் பற்றிக் கட்டுரைகள் வரைந்து வந்தார்; பீகாரில் நடைபெற்று வந்த ஆங்கிலத் தாளான `சர்ச் லைட்’ என்பதன் ஆட்சிக் குழுவினருள் ஒருவராயிருந்தார். தொழிலைத் துறத்தல் 1920-ஆம் ஆண்டில் காந்தியடிகள் ஒத்துழையா இயக்கத்தைத் தொடங்கினார். அஃதாவது, `அரசாங்கத்த hருடன் ஒத்துழையாமை-மாணவர் பள்ளிகளைத் துறத்தல், வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைத் துறத்தல், சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபைகளைத் துறத்தல் என்பது. இதனை நாடு முழுவதும் பிரசாரம் செய்யவேண்டும்’ என்று அடிகள் விரும்பினார். அடிகள் திட்டப்படி, நாட்டுப் பணியில் பெரு வேட்கைகொண்ட இராnஜந்திரர், திங்கள் தோறும் ஆயிரக் கணக்கான ரூபாய் வருமானத்தைத் தந்துவந்த தமது வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். உண்மைத் தியாகம் இதுவன்றோ? 4. உரிமைப் போரில் உழைப்பு காங்கிரஸ் தொண்டு இராஜேந்திரர் 1920-இல் தம் அலுவலை விட்டாற் போலவே பல்கலைக் கழகத் தொடர்பையும் விட்டார்; நாள்முழுவதும் காங்கிரஸ் இயக்க வேலைகளைக் கவனிக்கத் தலைப்பட்டார்; தமது மாகாணத்தில் கிராமம்-தாலுகா-மாவட்டம் என்னும் பல இடங்களிலும் காங்கிரஸ் கழகங்களைத் தோற்றுவித்தார். மாகாணம் முழுவதிலும் உள்ள சிற்றூர்கட்கும் பேரூர்கட்கும் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் நன்னோக்கங் களைப்பற்றிப் பிரசாரம் செய்தார்; இலட்சக்கணக்கான வர்களை உறுப்பினராய்ச் சேர்த்தார்; நூல் நூற்றல், ஆடைநெய்தல், தீண்டாமை ஒழிப்பு இவை பற்றிய பிரசாரத்தையும் செய்தார்; ஆங்காங்குக் கதர்க் கடைகளைத் திறந்தார்; காந்தியடிகள் திட்டப்படி அனைத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். பள்ளிகளைத் துறந்த இளைஞர்க்காகப் பீகாரில் பெரிய கலாசாலை ஒன்று இராஜேந்திரர் உள்ளிட்ட காங்கிரஸ் காரரால் ஏற்படுத்தப்பட்டது. அதன்கண் மாணவர் நாட்டுக் குரிய நன்முறையில் கல்வியும் கைத்தொழிலும் கற்றனர். இராஜேந்திரர் அக் கலாசாலையின் துணைத் தலைவராயிருந்து தொண்டாற்றி வந்தார். உரிமைப்போர் தீவிரமாக நடைபெறத் தொடங்கியவுடன் 1930-இல் அரசாங்கத்தார் அதனைக் கைப்பற்றி மூடிவிட்டனர். வாழ்க்கையில் மாற்றம் இராஜேந்திரர் காந்தியடிகளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியது முதல் அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாயின. அவர் காந்தியடிகளைப் போல எளிய உடைகளை அணியத் தொடங்கினார்; கிணற்றிலிருந்து நீர் முகக்கத் தொடங்கினார்; தம் ஆடைகளைத் தாமே துவைக்கலானார்; பிறர் உதவியின்றித் தம் வேலைகளைத் தாமே செய்யப் பழகிக் கொண்டார்; “கிராம மக்களே நாட்டின் செல்வம்; அவர்கள் கல்வி, கைத்தொழில், பயிர்த்தொழில், வாணிகம் இவற்றில் மேன்மைபெற்றால்தான் நாடு சீர்படும். ஆதலின் நாம் செய்யவேண்டும் தொண்டு கிராமச் சீரமைப்புத் தொண்டே யாகும்.” என்று காந்தியடிகள் கூறியது அவரது உள்ளத்திற் பசுமரத் தாணிபோலப் பதிந்தது. அவர் 1920 முதல் கிராமத் திருப்பணியில் மிகுந்த நாட்டத்தைச் செலுத்தினார்; உழவருடன் உழவராயும் தொழிலாளருடன் தொழிலாளியாகவும் வேறுபாடின்றிக் கலந்து பழகினார்; “சாதி வேறுபாடுகள் ஒழிக்கப்படல் வேண்டும்; தீண்டாமை நீக்கப்படல் வேண்டும்; அனைவரையும் ஒரே இனத்தவராய்க் கருதி நடக்கும் விரிந்த மனப்பான்மை வளர்தல் வேண்டும்,” என்னும் அடிகளார் அறிவுரை அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்தது. அவர் அந்த அறிவுரையைத் தம் மாகாண மக்கட்கு எடுத்துக் கூறினார்; தம்மளவில் அனைவருடனும் வேறுபாடின்றிக் கலந்து உறவாடினார். இவ்வரிய செயல்களால் மக்கள் அவரைப் `பீகார் காந்தி’ என்று போற்றலாயினர். மேனாட்டுச் செலவு இராஜேந்திரர் தம் வழக்கறிஞர் அலுவலைத் துறந்த பொழுது பெரிய வழக்கொன்று முடிவுபெறாதிருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் அவ்வழக்கை இறுதிவரை நடத்துமாறு கட்டளையிட்டார். அது 1928-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிரிவி கவுன்சில் முன்பு விசாரணைக்கு வந்தது. இராஜேந்திரர் அதற்காக இங்கிலாந்து சென்றார்; வழக்கு முடிந்த பின்னர் இங்கிலாந்தின் பல பகுதிகளைச் சென்று ஆலைகளையும் தொழிலகங்களையும் பார்வையிட்டார்; பல கூட்டங்களில் இந்திய உரிமையைப் பற்றிப் பேசினார்; தாம் சந்தித்த அரசியல் அறிஞர்களிடம் இந்திய உரிமைப் போரைப்பற்றி விளங்க வுரைத்து, அவர்கள் முன்புகொண்டிருந்த தவறான எண்ணங்கiளப் போக்கினார்; பின்னர் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளையும் பார்க்கச் சென்றார். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, இத்தலி முதலிய நாடுகட்கு இராஜேந்திரர் சென்றார்; சிறந்த அறிஞரெனப் பாராட்டப் பெற்ற ரொமேன் ரோலண்ட் என்னும் பெரியாரைக் கண்டு பேசினார். அப்பெரியார் காந்தியடிகளின் நண்பர். அவர் இந்தியாவினிடம் அன்பு கொண்டவர். அவர் நீண்ட நேரம் இராஜேந்திரரிடம் அளவளாவினார். பின்னர் இராnஜந்திரர் பாரிசில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டிற் கலந்துகொண்டார்; பிறகு ஆஸ்ட்ரியாவின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்ற போரொழிப்பு மாநாட்டிற் பங்குகொண்டார்; அன்பின் சிறப்பு, இன்னா செய்யாமையின் உயர்வு, அருள் உணர்ச்சியின் விளைவு என்பனபற்றிச் சிறந்த சொற்பொழிவாற்றி, மேனாட்டு இயந்திர நாகரிகத்தையும் போர்ப்படைப் பெருக்கத்தையும் வன்மையாய்க் கண்டித்துப் பேசினார். அவரது சொற்பொழிவின் பிற்பகுதியில் சினங் கொண்ட சிலர் அவரைத் தாக்கி ஊறு விளைத்தனர். அதனால் இராஜேந்திரர் வியன்னாவில் பல நாட்கள் இருந்து மருத்துவ உதவி பெறவேண்டியவரானார்; உடல் நலமுற்ற பின்னர், இத்தலியையும் எகிப்தையும் கண்டு, இந்தியா மீண்டார். அவர் இவ்வயல் நாட்டுச் செலவில் கதர் ஆடை, கதர்ச்சட்டை, கதர்க்குல்லாய் ஆகியவற்றையே அணிந்திருந்தார். அவருடைய புதிய உடைகளைக் கண்ட ஐரோப்பியர் பலர், `இஃதென்ன வேஷம்!’ என்று கேட்டனர்; சிலர் எள்ளி நகையாடினர். இராஜேந்திரர் அவர்கட்குக் கதர்த் தயாரிப்பு, அதன் நோக்கம் முதலியவற்றைத் தெளிவாக விளக்கினார். சிறை வாழ்க்கை இராஜேந்திரர் இந்தியா மீண்ட பிறகு, காந்தியடிகள் 1930-இல் உப்புப் போரைத் தொடங்கினார். நாடு முழுவதும் உப்புப் போராட்டம் நடைபெற்றது. தலைவர்களும் தொண்டர்களும் சிறை செய்யப்பட்டனர். அந்த ஆண்டு, சூலைத் திங்களில் இராஜேந்திரரும் சிறைப்பட்டார். அவருக்கு ஆறு திங்கள் சிறை வாழ்க்கை கிடைத்தது. கள்ளுக்கடை மறியல், அயல் நாட்டு ஆடைக் கடை மறியல் முதலிய மறியல் பணிகளில் ஈடுபட்ட காரணத்தால் இராஜேந்திரர் 1932-இல் சிறை செய்யப்பட்டார்; ஆறு திங்கள் சிறைக்கோட்டத்திற் கழித்தார். அவர் மெலிந்த உடலினர்; காங்கிரஸ் இயக்க வேலைகளிலும் மிகுதியாக ஈடுபட்டவர்; ஆதலின், காசநோய்க்கு இரையானார். அவர் அந்நோயால் சிறையில் துன்புற்றார். அரசாங்கத்தார் வேண்டிய மருத்துவ வசதிகளை அளித்தனர். உரிமைப் போராட்டம் உச்சநிலையை அடைய அடைய, அரசாங்கமும் அடக்கு முறையை மிகுதிப் படுத்தியது; அவரச் சட்டங்களைப் பிறப்பித்தது. இராஜேந்திரர் ஹிந்தி மொழியில் `தேசம்’ என்றொரு செய்தித்தாளை நடத்திவந்தார்; ஒத்துழையா இயக்க உயர்வையும் இன்னா செய்யாமையின் உயரிய பண்புகளையும் அத்தாளில் பல கட்டுரைகளாக வரைந்து வந்தார். அந்தத்தாள் ஆயிரக்கணக்கில் செலவாயிற்று. அரசாங்கம் அத்தாளை அவசர அச்சுச் சட்டத்தின் கீழ்க் கைப்பற்றி நிறுத்தி விட்டது; அதன் ஆசிரியரான இராஜேந்திரரையும் சிறை செய்து, பதினைந்து திங்கள் காவலில் வைத்தது. பீகாரில் நில அசைவு இராஜேந்திரர் சிறையில் காசநோயால் துன்புற்ற சமயம் 1934-இல் பீகாரில் கொடிய நில அசைவு உண்டானது. அதனால் கட்டடங்கள் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்தன; பல அழிந்தன; மக்கள் பலர் மாய்ந்தனர்; பலர் வீடின்றித் தவித்தனர்; பலர் உணவு, உடை, உறையுள் இன்றி அல்லற் பட்டனர். தம் மாகாண மக்கட்கு ஏற்பட்ட அவதியினைச் சிறைக்கூடத்தில் இருந்த செம்மல் அறிந்தார். அவரது மனவேதனை மிகுதிப் பட்டது. காசநோயும் மிகுதிப் பட்டது. அரசாங்கம் நோயின் காரணமாக அவரை விடுதலை செய்தது. இராஜேந்திரர் விடுதலையான மூன்றாம் நாள் நில அசைவு உண்டான நிலப்பகுதியை நோக்கி விரைந்து சென்றார்; மக்கள் பட்ட இன்னல்களை நேரில் கண்டு உள்ளம் உருகினார்; இயற்கையின் அழிவாற்றலைக் கண்டு வியப்புற்றார்; மக்கட்கு எங்ஙனம் உதவி புரிவது என்பதை எண்ணினார். இந்தக் கவலையில் அவர் தம் காச நோயை மறந்தார்; வீடு-பொருள்-உணவு-முதலியன இழந்து தவிக்கும் மக்கட்கு உதவி புரியுமாறு செய்தித்தாள்களில் வேண்டுகோள் விடுத்தார்; ஊர் ஊராகச் சென்று செல்வர்களிடம் பொருள் தண்டினார். `முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?’ என்றபடி, தந்நலமற்ற அப்பெரியாரே நேரிற் சென்று கையேந்திய பொழுது, உலோபியும் உள்ளங்கனிந்து பொருள் உதவினான். பணம் சேர்க்கும் முயற்சியில் அவர் பட்டபாடு மிகுதியாகும்; இராப்பகல் உறக்கம் இன்றி வேளையில் சோறின்றி-ஊர் ஊராக அலைந்து பொருள் சேர்த்தார். ஒன்பது மாதங்களில் முப்பது லட்ச ரூபாய்கள் சேர்த்தார்; நில அசைவால் துன்புற்ற மக்கட்கு ஏற்ற முறையில் உதவினார். பொது நல ஊழியரான அவர் சேர்த்த பெருந் தொகையைக் கண்டு இந்தியாவில் வியவாதார் இலர். அனைவரும் அவரது தந்நலமற்ற திருத்தொண்டைப் பாராட்டினர். அப்பொழுது காந்தியடிகள் இராnஜந்திரரது பெருந் தொண்டினைப் பாராட்டி அறிக்கை விட்டனர். காங்கிரஸ் தலைவர் இராஜேந்திரரது தந்நலமற்ற தொண்டு இந்தியர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. காங்கிரஸ்காரரும் அரசியலாரும் பொது மக்களும் அவரது பேரூழியத்தை-பீகாரில் செய்த திருத்தொண்டினைப் பாராட்டினர். ஆயின் தம் ஊழியத்தைப்பற்றி உண்மையாகவே பெருமைப் படாதவர் இராஜேந்திரர். அவர் பிறர் பாராட்டுதலைக் கண்டு வெட்கினார்; `கடமையைச் செய்வதில் பாராட்டா?’ என்று எண்ணினார். அவரது அடக்கம் அனைவரையும் தன்பால் ஈர்த்தது. 1934-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் நாள் காங்கிரஸ் மாநாடு பம்பாயிற் கூடியது. அதன் தலைவர் யார்? நமது இராஜேந்திரரே ஆவர். அப்பொழுது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:- “பீகாரில் உண்டான நில அசைவினால் ஏற்பட்ட தீமைகளைப் போக்க இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பொருள் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அம்மாகாணச் சார்பில் நான் நன்றி செலுத்துகின்றேன்.. . . . . . . . . . . . . . மக்கள் சென்ற நான்காண்டுகளாகப் பெருந்தியாகங்களைச் செய்துள்ளனர்; ஆயிரக்கணக்கானவர் சிறை சென்றனர்; தடியடிபட்டனர். துப்பாக்கிக் குண்டுகட்கு இரையானவர் பலர்; தண்டம் கட்டியவர் பலர்; சொத்துக்கள் பறிமுதலானவர் பலர். பலர் தம் உடல், பொருள், உயிர் என்னும் மூன்றையுமே இழந்தனர். அவர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் சார்பில் வணக்கமும் நன்றியும் கூறுகின்றேன். “உண்மையுடைமை, இன்னா செய்யாமை, நேர்மை என்னும் மூன்று கருவிகளுடன் நமது உரிமைக்கு நாம் போராடுகின்றோம். மனவுறுதி நம்மிடம் நிலை பெறட்டும்; வெற்றி நமதேயாகும்.” இந்தியாவிற் சுற்றுப் பயணம் காங்கிரஸ் தலைவரான இராஜேந்திரர் 1935-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றினார்; பல பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிறைந்த கூட்டங்களில் பேசினார். அவர் ஒரு கூட்டத்தில், “தீண்டாமை இருக்கும் வரை இந்து மதம் தூய சமயமாகக் கருதப்படாது. தீண்டத்தகாதவர் நம்மவர்-இந்துக்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு பழகி, அவர்களை மேனிலைக்குக் கொண்டு வரப் பாடுபடல் வேண்டும். இந்த நாட்டில் ஏறத்தாழ ஏழு கோடி தீண்டப் படாதவர் இருக்கின்றனர். இவர்களே இந்நாட்டு வயல்களில் வேலை செய்பவர்கள்; நமக்கு வேண்டுவன விளைத்துத் தருபவர்கள். இவர்கள் இல்லை எனில் நமக்கு உணவுப் பொருள்கள் இல்லை. நமக்கு உணவு தரும் இப் பெருமக்களுக்கு நாம் நன்றி கூறி, அவர்தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். கோவில் நுழைவு உரிமை, பொது நீர் நிலைகளில் நீர் எடுக்கும் உரிமை, பள்ளிகளிற் படிக்கும் உரிமை, எல்லாத் தெருக்களிலும் நடக்கும் உரிமை என்பவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும்; மனிதரை மனிதர் மதித்து நடக்கப் பழகுதல் வேண்டும்,” என்று மிகவும் உருக்கமாய்ப் பேசினார். 1935-இல் மாகாண சுயாட்சி வழங்கப் பெற்றதும் காங்கிரஸ்காரர் தேர்தலில் ஈடுபட்டனர்; பல மாகாணங்களில் வெற்றி பெற்றனர். சென்னையில் மாகாணக் காங்கிரஸ் தலைவரான இராஜ கோபாலாச்சாரியார் முதல் அமைச்சரானார். ஆனால் பீகாரில் காங்கிரஸ் தலைவரான இராஜேந்திரர் தாம் முதலமைச்சராவதை விரும்பவில்லை; “என் தோழர்களே அமைச்சராயிருந்து பணியாற்றட்டும்” என்று கூறித் தக்காரைக் கொண்டு அமைச்சர் அவையை நிறுவத் துணை புரிந்தார். அங்ஙனம் `பதவி வேண்டா’ என்று உண்மையாய்க் கூறும் தியாகிகள் மிகச் சிலரேயாவர். அறிஞர், இராnஜந்திரரது தியாகத்தைப் பாராட்டினார். காங்கிரஸ் தலைவர் 1939-இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் போரிற் கலந்தது. அவ்வமயம் சுபாஷ் சந்திர போஸ், `நாம் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்ட `நமது உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்’, என்றார். `இச்சமயத்தில் அவர்களை எதிர்த்தல் அறமாகாது,’ என்று அடிகள் கூறினார். உடனே காங்கிரசில் இரண்டு கட்சிகள் தோன்றின. ஒன்று அடிகளை ஆதரித்தது; மற்றொன்று போஸை ஆதரித்தது. இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றுபடுத்தக்கூடிய ஒருவர் அப்பொழுது காங்கிரஸ் தலைவராதல் நல்லது என்று அடிகள் கருதினார். இருதிறத்தாரும் ஏற்கத்தக்க நிலையில் இருந்த உத்தமர் இராஜேந்திரர் ஒருவரே. ஆதலின் அனைவரும் இராஜேந்திரரைக் காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இராஜேந்திரரது ஒப்புயர்வற்ற தனித்தன்மைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? அவர் தலைவராயிருந்த வரையில் இரு கட்சிகளும் ஓரளவு பிணக்கின்றிக் காலம் தள்ளின. சிறைப்படல் போரில் ஆங்கிலேயருடன் ஒத்துழைக்கலாகாது என்று காங்கிரஸ் பேரவை தீர்மானித்தவுடன் 1940-இல் காந்தியடிகள் உட்படப் பலர் சிறைப்பட்டனர். அவருள் இராஜேந்திரரும் ஒருவராவர். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் நாள் காங்கிரஸ் செயற்குழு பம்பாயிற் கூடியது. விடுதலை பெற்ற அடிகளும் பிற தலைவர்களும் கூடினர்; `அரசாங்கம் ஆட்சியுரிமை வழங்கா விடின், மீண்டும் சட்ட மறுப்ப்புப் போரைத் தொடங்க வேண்டும்,’ என்று தீர்மானித்தனர். அன்றிரவு அரசாங்கும் காந்தி, நெஹ்ரூ, படேல் முதலிய தலைவர்களைச் சிறை செய்து கொண்டுசென்றது. அவர்கள் எங்குச் சிறை வைக்கப்பட்டனர் என்பது மறைவாகவே இருந்தது. பாடலியில் இருந்த இராஜேந்திரரும் சிறைப்பட்டார். ஆகஸ்டுப் புரட்சி இங்ஙனம் அரசாங்கம் தலைவர்களைச் சிறைப்படுத்தி வைத்த இடம் அறிவியாது விட்டதும், மக்கள் தம்மை மறந்தனர். அதன் விளைவhக நாட்டில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன; தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன; போலீஸ் நிலையங்கள் கொளுத்தப் பட்டன; அரசாங்கமும் வாளா இருக்கவில்லை; அடக்குமுறைச் சட்டங்களை ஏவி, மக்களுயிரைக் கொள்ளை கொண்டது. நாட்டில் அமைதி இல்லை. இந்த நிலைமை நீடிக்குமாயின் பெருந்தீமை விளையலாம் என்பதை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், போர்ப்படைத்தலைவரான வேவல் பிரபுவை வைசிராயாக 1943-இல் அனுப்பியது. அவர் வந்து ஓராண்டு சென்ற பிறகே அடிகள் விடுதலை பெற்றார். இடைக்கால அமைச்சர் அவை 1945-இல் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. சிந்து, வங்காளம் ஒழிந்த பிற மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அமைச்சர் அவைகளை அமைத்தது. சிந்துவிலும் வங்காளத்திலும் முற்லிம் லீகர் அமைச்சர் அவைகளை அமைத்துக்கொண்டனர். காங்கிரசின் பெருமித வெற்றியைக் கண்ட தொழிற்கட்சி அரசாங்கம் இந்தியாவுக்கு உரிமை வழங்க உறுதிகொண்டது. காங்கிரஸ் தலைவர்களும் மஸ்லிம் லீக் தலைவர்களும் ஒன்று கூடி வைசிராய் மாளிகையிற் பேசினர்; முல்லிம்கள் பலராயுள்ள பஞ்சாப், சிந்து, வங்காளம், வடமேற்கு எல்லைப்புறம், பலுசிஸ்தானம் முதலிய மாகாணங்களைப் பாகிஸ்தான் என்னும் பெயரிட்டு முஸ்லிம்களின் ஆட்சியில் விடவேண்டும் என்பது லீகர் விருப்பம். காங்கிரஸ் அதற்கு இணங்கவில்லை; பின்னர் நாட்டில் உண்டான இந்து-முஸ்லிம் கலகங்களைக் கண்டு, லீகரது விருப்பத்திற்கு இசைந்தது. இரண்டு பதவிகள் நாட்டுக்குரிய திட்டங்களை வகுக்கும் வரை காங்கிரஸ் காரரும் லீகரும் கொண்ட அமைச்சர் அவை நாட்டை ஆள ஏற்பாடாயிற்று. 1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இடைக்கால அமைச்சர் அவை ஏற்பட்டது. இராஜேந்திரர் உணவு இலாகா அமைச்சராய் அமர்ந்தார்; குடியரசுத் திட்டங்களை வகுக்கும் பேரவையில் எல்லா மாகாணப் பிரதிநிதிகளும் இருந்தனர்; இராஜேந்திரர் அப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரிமை நாள் விழா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் இந்தியா உரிமை பெற்றது. அன்று காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்கட்கு நல்லுரை கூறினர். அங்ஙனம் பேசியவருள் இராஜேந்திரரும் ஒருவர். இந்திய வரலாற்று நூற் குழுத் தலைவர் இந்திய வரலாறு சாத்திரிய முறையில் நன்கு ஆராய்ந்து எழுதப்படல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பலரைக் கொண்டு ஒரு கழகம் நிறுவப்பட்டது. டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் அக்குழுவின் தலைவராயிருந்து தொண்டாற்றி வருகிறார். அக்குழுவில் நமது மாகாணச் சார்பில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் இடம் பெற்றுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் மவுன்ட் பேட்டன் பிரபு வைசிராய் பதவியிலிருந்து விலகியபின் நமது இராஜகோபாலாச்சாரியார் இந்தியக் கவர்னர் ஜெனரல் ஆனார். அவர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் நாள் வரை ஏறத்தாழ இரண்டு வருட காலம் அப்பதவியில் இருந்தார். மறுநாள் (26-1-1950) இந்தியா முழுவுரிமை பெற்ற குடியரசு நாடானது. அந்த நன்னாளில் `தியாகத்தின் திருவுருவம்’ என்று அனைவராலும் பாராட்டப் பெறும் டாக்டர் இராnஜந்திரப் பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார். இந்தியக் குடியரசின் முதல் தலைவராதல் பெறுதற்கரிய பேறாகும். அப்பேறு அவருக்குக் கிடைத்தது முற்றும் பொருத்தமேயாகும் அன்றோ? குடியரசுத் தலைவர் பொன்னுரை குடியரசு நன்னாளில் தலைவர் பதவியேற்ற இராஜேந்திரர் குடியரசு நன்னாளைப் பற்றியும், எதிர்கால வேலைகளைப் பற்றியும் பேசினார். அவர் பேசியவற்றிற் குறிக்கத்தக்கன இவையாகும்: “நமது வரலாற்றில் மறக்கமுடியாத நன்னாள் இது. இந்நாளைத் தந்த இறைவனை நாம் வணங்குவோமாக. உண்மை, இன்னா செய்யாமை முதலிய அறக்கருவிகளைக் கொண்டு உலகில் உரிமை பெற வழி காட்டிய நமது நாட்டுத் தந்தையாரை நினைந்து பணி வோமாக. நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது நன்றி உரியதாகுக. “நமது நீண்டகால வரலாற்றிலேயே முதன் முதலாக இன்றுதான் வடக்கே காஷ்மீரம் முதல் தெற்கே குமரிமுனை வரை, மேற்கே கத்தியவார் முதல் கிழக்கே அஸ்ஸாம் வரை உள்ள இந்த நாடு முழுவதும் ஒரே அரசியல் திட்டம் நடைமுறையில் வருகின்றது. இந்தியா முழுவதும் ஒரே இணைப்புக்கு உட்பட்ட நன்னாள் இதுதான். இந்நாட்டில் வாழும் 32 கோடிக்கு மேற்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய யூனியன் இன்றுதான் ஏற்றுக்கொள்கிறது. இன்று முதல் மக்கள் நலனுக்காக மக்களாலேயே நாட்டு ஆட்சி நடைபெறும். “இந் நாட்டில் இயற்கை வளங்கள் மிகுதியாக உள்ளன. மக்களுக்கு மகிழ்ச்சியையும் நலத்தையும் அளிப்பதற்கான அரிய வாய்ப்பு இப்பொழுது கிடைத்துள்ளது. உலகில் அமைதியை நிறுவப் பாடுபடவும் இந்தியாவுக்கு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. “குடிமக்கள் அனைவர்க்கும் நீதி, உரிமை, சமத்துவம் என்பவற்றை வழங்குதல் நமது குடியரசின் குறிக்கோள். இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் பல்வேறு சமயங்களைப் பின்பற்றும்-பல வேறு மொழிகளைப் பேசும்-பல் வேறு பழக்க வழக்கங்களைப் பின்பற்றும்-மக்களிடையே ஒற்றுமை மனப்பான்மையை வளர்ப்பது நமது குடியரசின் குறிக்கோளாகும். “எல்லா நாடுகளுடனும் நட்பு முறையில் வாழ நாம் விரும்புகின்றோம். “நமது நாட்டில் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுதல் வேண்டும் என்பதே நமது நோக்கம். பிணி, வறுமை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதே நமது திட்டம். வாழ்க்கைப் பாதையில் பின்னிலையில் உள்ள மக்களை மற்றவர்க்குச் சமமாக உயர்த்தச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இவை அனைத்தை யும் நடை முறையிற் கொண்டுவர நாம் நமது உரிமையைப் பேணிப் பாதுகாத்தல் வேண்டும். “நமது பொருளாதார உரிமையும் சமூக உரிமையும் விரிவடைய வேண்டும். இவையனைத்தையும் சாதிக்க நாம் மிகுதியான தொண்டும் தியாகமும் செய்ய நேரிடலாம்; நாம் பின்வாங்கலாகாது. “மகிழ்ச்சிக்குரிய இந் நன்னாளை நீங்கள் அனைவரும் கொண்டாடு கின்றீர்கள். இந்த நன்னாளில் உங்கள் பொறுப்பை யும் நீங்கள் உணர்தல் வேண்டும். எந்தக் குறிக்கோளுக்காக நமது தந்தையார் (காந்தியடிகள்) வாழ்ந்தாரோ-எதற்காக ஆருயிர் துறந்தாரோ-அக்குறிக்கோள் நிறைவேற நீங்கள் பாடுபட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். வாழ்க நமது குடியரசு!” குடியரசுத் தலைவர் இராஜேந்திரர் பதவி ஏற்றது முதல் தமது பொறுப்பை யுணர்ந்து பணியாற்றிவருகின்றார். அஸ்ஸாம் நில அசைவுக் காலத்தில் அங்கு உண்டான அழிவுகளையும் மக்களின் துன்பங் களையும் நன்கு விளக்கி உருக்கமாகப் பேசிய பேச்சுக்களும் விடுத்த அறிக்கைகளும் உள்ளத்தை உருக்குவன. அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் அறிக்கையிலும் அவரது களங்கமற்ற உள்ளத்தையும் நாட்டு மக்களது நன்மையில் அவருக்குள்ள ஆர்வத்தையும் நாம் நன்கு காணலாம். சென்ற அக்டோபர் 2-ஆம் நாள் (2-10-1950) காந்தியடிகள் பிறந்த நாள் விழாவன்று அவர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியிலும் இவற்றைக் காணலாம்: “காந்தியடிகள் நமது வாழ்க்கைக்கு ஒளி ஊட்டி ஏற்றிவைத்த விளக்கின் பேரொளி தணியாது மிளிரும்படி பார்த்துக்கொள்வது நமது முதற் கடமையாகும். அவரது பெருந்தொண்டு நம்மை வெளி நாட்டார் ஆடசியிலிருந்து விடுவித்தது; அவரது உயிரிழப்பு நமது சமுதாய அமைப்பைப் பலப்படுத்தியது. அவரது பிறந்த நாள் விழாக் கொண்டாடும் இந்நன்ளாளில் அவருடைய சிறந்த கொள்கைகளை நன்கு உளங்கொண்டு அவை நிறைவேற நாம் உழைக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுதல் நலம். உண்மை, தொண்டு, அன்பு ஆகிய மூன்றையுமே நமது வாழ்க்கைக் குறிக்கோள்களாக வைத்துக் கொண்டு சமூக நீதியையும் மனித சமத்துவத்தையும் நிலை நாட்டப் பாடுபட வேண்டும். உலகில் சமாதானத்தை நீடிக்கச் செய்யும் பாதையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நாட்டுமககள் அனைவரும் அண்ணல் வகுத்த வழியையே உறுதியாகப் பற்றுமாறு வேண்டுகிறேன். அத்தூயவழி ஒன்றுதான் நம்மை உய்விக்கும்; அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.” 5. நற்பண்புகள் நன்றி மறவாதவர் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செந்நன்றி கொன்ற மகற்கு” என்பது பொய்யா மொழி. இதனைப் பாரத வீரனான கன்னன் கருத்தில் இருத்தினான்; தம்பியர் என்றறிந்தும் அவர்களுடன் போரிட்டுச் செஞ் சோற்றுக்கடன் கழித்து ஆவி துறந்து அழியாப் புகழ் பெற்றான். இலங்கை வீரனான கும்ப கருணனும் செய்ந்நன்றி அறிதலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவான். அவன், இராவணன் செய்யும் செயல், அறமுறைக்கு மாறானது என்பதை உணர்த்தினான்; கற்பிற்சிறந்த சீதையைக் களவாடுதல் முடியுடை மன்னருக்கு முறைமை தரும் செயலன்று என்று கூறினான்; கேளாத இராவணனுக்காகப் போரில் உயிர் கொடுத்துத் தன் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே கருமமும் தருமமும் ஆகும். என்று கருதினான்; தம்பியாகிய விபீடணனைக் கண்டு, “ஒருத்தரின் முன்னஞ்சாதல் உண்டவர்க்குரியது” என்று கூறி, இராவணனுக்காகப் போரிட்டுத் தன்னுயிர் நீத்துப் புகழ் பெற்றான்; செய்ந்நன்றியின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இலங்கினான். அறிஞர்கள் இவ்விருவரையும் மேன்மக்கள் என்றே கொண்டாடுகின்றனர். இராஜேந்திரர் அவர்களைப் போலப் போரிடவில்லை; ஆயின் தம்மைப் படிக்கவைத்த-தம்மைப் பாதுகாத்த- தமையனாருக்கு மாறாக இந்திய ஊழியர் சங்கத்திற்சேர்ந்திலர்; `குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற தமையனார் விருப்பப்படியே, தமது ஆவலை அடக்கிக் கொண்டு, வழக்கறிஞர் வேலையை மேற்கொண்டது, அவரது செய்ந்நன்றியறிதலைக் கவினுறக் காட்டுகின்றது. படிப்படியான பற்று ஒருவருக்கு முதலில் வீட்டுப்பற்று இருத்தல் வேண்டும்; அடுத்தபடியாக மாகாணப் பற்று வேண்டும்; அதற்கடுத்ததாக நாட்டுப்பற்று இருத்தல் வேண்டும்; இறுதியாக உலகப்பற்று நிலைபெறுதல் வேண்டும். இராஜேந்திரர் வீட்டுப்பற்றினால் இந்திய ஊழியர் சங்கத்தைத் துறந்தார்; கல்கத்தாவிற் படித்து வந்த பீகார் மாணவரை ஒன்று சேர்த்துக் கழகம் கண்டு அவர்கட்குள் ஒற்றுமையை உண்டாக்கினதும், அவர்கட்கு உணவு விடுதி ஏற்படுத்தியதும், பீகார் மாணவர் மாநாட்டைக் கூட்டியதும், அவரது மாகாணப்பற்றை நன்குணர்த்துவன வாகும். தந்நலம் துறந்து பல இன்னல்களை ஏற்று நாட்டுப்பணி புரிந்தமை அவரது நாட்டுப்பற்றை நன்கு விளக்குவதாகும். “இந்தியா உலக அமைதிக்குப் பாடுபடும்,” என்று குடியரசுத் தலைவரான அன்று கூறியது, அவரது உலகப்பற்றை உள்ளவாறு உணர்த்துவதாகும். அடக்கமுடையவர் இராஜேந்திரர் ஆங்கிலம், பீகாரி, வங்காளி, வடமொழி, ஹிந்தி முதலிய மொழிகளில் வல்லவர்; பலதுறை நூல்களைப் பழுதறப் படித்தவர்; சிறந்த வழக்கறிஞர்; உயர்குணங்கட்கு இருப்பிடமானவர்; காந்தியடிகள் இரவும் பகலும் எண்ணத்தக்க பெருமையுடையவர்; இந்தியக் காங்கிரஸ் செயற்குழுவில் பல ஆண்டுகள் உறுப்பினராய் இருந்தவர்; இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராய் இருந்தவர்; நடு அரசாங்க அமைச்சராய் இருந்தவர்; குடியரசுத் திட்டம் வகுத்த பேரவைத் தலைவராய் இருந்தவர். எனினும், அடக்கத்தையே அணிகலனாய்க் கொண்டவர். “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” என்பதை நன்கு அறிந்தவர். இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சியினரும் பாராட்டத்தக்க உயர்நிலையை அவர் பெற்றமைக்குப் பணிவு ஒன்றே சிறந்த காரணமாகும். சிறந்த எழுத்தாளர் இராஜேந்திரர் கட்டுரைகள் வரைவதில் வல்லுநர். அவர் செய்தித்தாள்களில் வரைந்த கட்டுரைகளே பீகார்ப் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்திய சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யக் காரணமாய் இருந்தன என்பது முன்னர்க் கூறப்பட்டதன்றோ? அவர் “தேசம்” என்ற செய்தித் தாளையும், “லா வீக்லி” என்ற சட்டத்தாளையும் ஆசிரியராயிருந்து நடத்தி வந்தார். அவற்றில் அவர் வெளியிட்ட கட்டுரைகள் அவருடைய பேரறிவினையும் சட்டப்புலமையையும் நன்கு காட்டவல்லவை ஆகும். அவர் சம்பரான் சத்தியாக்கிரகம், கதரின் சிறப்பு, காந்தி தத்துவம் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் வரைந்துள்ளார். `அந்நூல்களின் நடையில் அழகும், விரு விருப்பும் காணலாம்; சொற் செறிவும், பொருளாழமும் பொருந்தியுள்ளன,’ என்று அவற்றைப் படித்த அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். அமைதியின் திருவுருவம் பொது வாழ்வில் அடிக்கடி சொற்போர் நிகழும்; சொற் போரிற் சிலர் சினங் கொள்வர்; சூடேறப் பேசுவர்; பூசலிடுவர்; மரியாதை தவறுவர்; படபடப்புடன் பேசுவர்; பின்னர்த் தம் குறைகளை உணர்ந்து வருந்துவர். இராஜேந்திரர் இத்திறத்தினர் அல்லர். அவர் எதிரியின் வாதத்தைப் பொறுமையுடன் கேட்பர்; ஆழச் சிந்திப்பர்; பின்னர்ப் புன்முறுவலுடன் பதிலளிப்பர்; படபடப்போ, தவறான சொற்களோ அவரிடம் தலைகாட்டா. அவர் எத்தகைய நிலையிலும் அமைதி காட்டுபவர்; பொறுமையைக் கையாள்பவர். காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த அவர் அமைதியின் திருவுருவமாகவுள்ள அவர் நமது குடியரசின் முதல் தலைவராக வந்துள்ளது நாம் செய்த பேறே ஆகும். வாழ்க நம் குடியரசுத் தலைவர்! வாழ்க அவர் திருத்தொண்டுகள்! 6. பொன் மொழிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நாட்டுரிமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கடந்த பல்லாண்டுகளாகப் பல அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தி யுள்ளார். அவற்றில் பல அரிய கருத்துக்கள் பொதிந்துள்ளன; வருங்கால மக்களாகிய மாணவர்கள் கடைப்பிடித்து ஒழுகி, வாழ்க்கையைச் செப்பம் செய்துகொள்ளுதற்குரிய மணி மொழிகள் பல உள. மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டி போல உள்ள அவருடைய அருங்கருத்துக்களில் சிவற்றை மாணவர்களின் நலன் கருதி ஈண்டுத் தருகிறோம்:- ஆரவாரமான பேச்சுக்களோ, ஆடம்பரச் செயல்களோ ஒருவரை மேல்நிலை அடையச் செய்யமாட்டா. அன்பாலும், அமைதியான பொதுநலப் பணியாலும், தியாக வாழ்க்கை நடத்துவதாலுமே ஒவ்வொருவரும் மாநிலம் போற்றும் மாண்புமிக்க நிலைமையினை அடைய முடியும். இளைஞர்கள் மதிவலியில் மிக்கியிருந்தால் மட்டும் போதாது. உடல் வலியிற் குறைந்து காணப்படுவது மாபெரும் தவறாகும். உள்ளக் கிளர்ச்சியிலோ, உடற் பயிற்சியிலோ இளைஞர்கள் பிற்பட்டு நிற்றல் கூடாது. எல்லா வகையான விளையாட்டுக்களிலும் இளைஞர்கள் ஈபடுதல் வேண்டும்; பிற இளைஞர்களையும் ஈடுபடச் செய்தல் வேண்டும். மதிவலி பெறுவதுபோலவே, உடல் வலிவும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இளைஞர்கள் இரவில் நீண்ட நேரம்வரை விழித்திருத்தல் கூடாது; விழித்திருப்பதற்கான கிளர்ச்சியூட்டும் பானவகைகளை அருந்துதல் கூடாது; முன் இரவில் உறங்கிவிடவேண்டும். முன் இரவில் உறங்குவது போலவே, கதிரவன் உதிக்கு முன்னரே, உதய ஒளி தோன்று முன்னரே, வைகறையில் துயில் நிக்கி எழுந்து விடவேண்டும். வைகறையில் எழுந்து படிப்பது, இரவில் விழித்துப் படிப்பதிலும் நூறு மடங்கு மேன்மையானது. மாணவர்கள் தங்களுக்கிடையில் எந்தவகையான வேறுபாட்டையும் கொள்வதுகூடாது; சாதிமத நிறவேறுபாடு களற்று மாணவ உலகம் ஒரே கட்டுப் பாடுடையதாக ஒற்றுமையுடன் விளங்கவேண்டும். தாழ்ந்த மனப்பான்மையை ஒழித்து, தலைநிமிர்ந்து நடக்கும் முற்போக்கு மனப்பான்மை மாணவர்களிடையே எழுதல் வேண்டும். மாணவர்கள் உலகியல் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். சொற்றிறன் பெறப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் சலியா உழைப்பும் நலியா நாட்டுப் பற்றும் உடையவராக விளங்கவேண்டும். சாதிப்பற்று, மதப்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை முதலியவற்றை விட்டொழித்தல் வேண்டும். அனைவரையும் உடன் பிறந்தவராகக் கருதித் தொண்டாற்றுதல் வேண்டும்; தூய வாழ்க்கையையும் ஒழுக்க முடையவராயிருத்தல் வேண்டும். எவருடனும் பகையுணர்ச்சி கொள்ளல் கூடாது; தன்னலக் கருத்தை அகற்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியராகத் திகழப் பழகுதல் வேண்டும். செல்வம், பதவி, பெருமை எல்லாம் சொல்லாமல் ஓடி மறையும் தன்மை வாய்ந்தவை. செல்வம் சேரச் சேரப் பண ஆசை பெருகிக் கொண்டே இருக்கும். பணம் இருந்தால்தான் இன்பம் உண்டாகும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் இது தவறு. இன்பம் என்பது மனத்தைப் பற்றியதேயாகும். அன்றாடம் உழைத்து வயிறு வளர்க்கும் ஏழை, மாளிகையில் வாழும் பணக்காரனை விட மனநிறைவோடிருப்பதைக் காணலாம். எனவே, நல்லொழுக்கமும், அன்பும், தன்னலமற்ற வாழ்க்கை முறையுமே ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டியவை யாகும்; பண வேட்டையன்று. உலகில் பெரும் புகழுடன் விளங்கிய சான்றோர் அனைவரும் வறுமையால் வாடியவர்களே. இதனால் பலருடைய எள்ளுதலுக்கும் துன்புறுத்தலுக்கும் அவர்கள் ஆளானார் களெனினும், அச்சான்றோர் இறவாத புகழ் பெற்று விளங்கு கின்றனர். எள்ளிய வரும் துன்புறுத்தியவரும் பெயர் தெரியாமல் மாண்டொழிந்தனர். எனவே, உலகில் நிலைத்து விளங்கவேண்டுமானால், புகழை நிலைநாட்டும் துறையில் தொண்டாற்ற வேண்டும்; வறுமைக் கஞ்சுதல் கூடாது. எக்காரணங் கொண்டும், எவ்வளவு நலம் பயப்பதாகத் தோன்றினும் மெய்யைப் பொய் யென்றும் பொய்யை மெய்யென்றும் வாதாடும் குணத்தை எவரும் பெறுதல் கூடாது; அத்தகைய எண்ணத்துக்கே இளைஞர்கள் இடம் அளித்தல் கூடாது. நேர்மை, வாய்மை, அஞ்சாமை, ஒழுக்கம் முதலிய வற்றுக்கு இடமளித்து, அவற்றை வளர்த்துவரும் இளைஞர் களைப் பணமும் புகழும் தேடிவந்தடைந்து, அவர்கள் வாழ்க்கையை உயர்த்தும். அடக்கம், நல்லொழுக்கம், நம்பிக்கை ஆகிய மூன்று குணங்களும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவைகளாகும். இறுமாப்பு, ஆடம்பரம், வாய்மையின்மை ஆகிய மூன்றினையும் ஒவ்வொரு வரும் வெறுத்து ஒதுக்கவேண்டும். ஆடம்பரத்தை ஒழித்து, ஏழைமக்கள்பால் அன்பு கொள்ளும் குணத்தை வளர்க்கவேண்டும். பிறரை வஞ்சிக்கும் சொல், செயல் எதனையும் எவரும் மேற்கொள்ளுதல் கூடாது. தலைவரோ ஆசிரியரோ இடும் ஆணைகளை-கற்பிக்கும் நெறிகளை- ஐயுற்று ஆராய்ந்து வாதம் செய்துகொண்டிருப்பதில் காலத்தை வீணாக்கலாகாது. தக்க தலைவரை, அல்லது ஆசிரியரைக் காணும் வரையில் தான் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் வேலை இருத்தல் வேண்டும். கண்டபின், அவர் சொற்படி நடப்பதையே ஒவ்வோர் இளைஞரும் தம் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். இளைஞர்கள் பொதுநலப் பணியில் நாட்டங் கொள்ளுதல் வேண்டும். நாட்டுமக்களிடையே சாதி மத வேறுபாடு கருதாமல் எவருக்கும் எப்பொழுதும் உதவிபுரியக் காத்திருக்கும் வண்ணம் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டும். மாணவர் கழகங்கள் நிறுவித் தொண்டாற்றப் பழகுதல் வேண்டும். ஏழை மக்களின் துயர் துடைக்க முனைந்து நிற்றல் வேண்டும். கழகங்கள் பிறர் நலனுக்காகவே அமைக்கப்படும் பொதுமன்றம் என்பதை மாணவர்கள் நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். கழகத்தைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்த முயலுதல் கூடாது. கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நேர்மையும் வாய்மையும் பொருந்தியவர்களாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். இவர்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்புடைய தலைவர் பதவிக்கு மிகவும் நேர்மை யுடையவராக, கண்ணேhட்ட மற்றவராக, நடுநிலையாளராக இருப்பவரையே தேர்ந்தெடுத்தல் வேண்டும். இயற்கையின் வன்மை அளவிட்டுக்கூறுதற்கரியது; அவ்வன்மை ஒன்றே உலகை ஆக்கவும்காக்கவும் அழிக்கவும் செய்கின்றது. அவ் வன்மையைப் பலர் பலவகைப் பெயர்களிட்டு அழைக்கின்றனர்; உருவம் கற்பிக்கின்றனர்; இறைவன் எனக் கூறி வழிபாடு செய்கின்றனர். அறிஞர்கள் அவ்வன்மையினைத் தனிப்பட்ட முறையில் நன்குணர்ந்து போற்றுகின்றனர். விஞ்ஞhனிகள் அதனை ஆக்கத் துறையிலும் அழிவுத் துறையிலும் பயன்படுத்திக் கொள்ள முயலுகின்றனர். அதன் முழு ஆற்றலையும் இன்றளவும் கண்டவர் எவருமில்லை. ஒரு வேலையைச் செய்ய முயல்கையில், அதற்குரிய பயிற்சி யில்லையே யென்று கவன்று, அதனைச் செய்யாமலே அடியோடு ஒதுங்கி விடுவது முறையாகாது. தன்னலமற்ற தொண்டினையும் பொறுப்புணர்ச்சியையும், துணையாகக் கொண்டு, மேற்கொண்ட பணியினைக் கண்ணுங் கருத்துமாகக் குறைவறச் செவ்வனே செய்து முடிக்க முயல்வதே சிறந்த முறையாகும். பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாடு நம் நாடு; பல்வேறு தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் பெருகியுள்ள நாடு நம் நாடு. இவ்வாறு பல்வகையினராக விளங்கும் நம் நாட்டு மக்கள் அனைவரிடையிலும் உள்ளங் கனிந்து உடன்பிறப்புணர்ச்சியை நிலை நாட்டுவதே இந் நாட்டு மகன் ஒவ்வொருவனுடையவும் குறிக்கோளாக அமைய வேண்டும். நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண்பதே இந்நாட்டு மக்கள் அனைவருடைய நோக்கமாக இருத்தல் வேண்டும். பிணி, வறுமை, அறியாமை முதலியவற்றை நம் நாட்டை விட்டு விரட்டுவதே நம் அனைவருடைய திட்டமாக அமைய வேண்டும். அறிவின் நுட்பமும், வினைத் திட்பமும், சான்றான்மையுமே ஒவ்வொருவரையும் புகழேணியின் உச்சிக்கு ஏற்ற வல்லவை யாகும். ஆகையால், இம் மூன்றினையுமே பெற ஒவ்வொருவரும் இடைவிடாமல் முயலுதல் வேண்டும். எவ்வளவு துன்பங்கள் நேரிட்டாலும், மனத்தைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நடை பெற்றுவிட்டாலும், அசையாமல் நிலைத்து நிற்கும் மலையேபோன்று மன உறுதி குலையாமல் நின்று அன்புப் பெருக்கால் துன்பந்தீரப் பணிபுரிய வேண்டும்; எந்நிலையிலும் கலங்கி விடாமல் அசைக்க முடியா உறுதியுடன் நிற்குமாறு மனத்தைப் பழக்கிக் கொள்ளுதல் வேண்டும். வெற்றி தோல்விகளைக் கருத்தில் அமைக்காமல் `உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்னுமாறு உயர் கருத்திற்கே இடமளித்தல் வேண்டும். கருத்து மாறுபாடு தோன்று மிடத்திலும் இன் சொல்கொண்டே நம் கருத்தை எடுத்துரைத்தல் வேண்டும். பிறர் மனம் புண்படும் வகையில் அல்லாமல் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் நற்பண்பினைப் பெறுதல் வேண்டும். பிறர் துயரம் காணப் பொறாத மனப்பான்மை நம் இளைஞர் களிடையே வளர வேண்டும். கனிந்த உள்ளம் அனைவர்மாட்டும் ஏற்படுதல் வேண்டும். குடும்பத்தவரிடம் வைக்கும் பற்று எத்தகையதோ, அதே போன்ற பற்றை உலக மக்கள் யாவரிடத்தும் வைக்கப் பழகுதல் வேண்டும். மனம், மொழி, மெய் மூன்றிலும் ஒன்றுபட்டிருத்தல் வேண்டும். பிறர் துன்பங் கண்டு மனம் நைந்து, அதனைத்துடைக்கும் எண்ணம் உடையோராதல் வேண்டும். தன்னடக்கம் பயில வேண்டும். ஆடம்பர வாழ்க்கையையும், ஆடை யணிகளையும் வெறுக்க வேண்டும். எளிமை, உண்மை, அன்பு, தொண்டு முதலிய வற்றினை வளர்த்து மனத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுதல் வேண்டும். எதனையும் முற்றிலும் கேட்டுச் சிந்தித்து ஆராய்ந்து மேற்கொள்ளும் பண்பினை வளர்க்க வேண்டும். இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அமைதியின் உருவமாக, அன்பின் உறைவிடமாக, எளிமையின் இருப்பிடமாக, ஆற்றலின் அமைப்பாக விளங்கவேண்டும். வறுமையைப் பற்றி எவரும் கவலைப்பட்டுக் கொண்டிருத்தல் கூடாது. பிறக்கும் பொழுது எவரும் செல்வத்தை உடன் கொண்டு வரவில்லை. இறக்கும் பொழுது எவரும் செல்வத்தை உடன் கொண்டு செல்வதில்லை. செல்வம் இடையில் வருவது; இடையிற் போவது. உலகில் தோன்றிப் புகழை நிலை நாட்டிய பெரியார்கள் அனைவரும் வறுமையில் வாடியவர்களே யாவார்கள். உலகம் செல்வத்திற்கு மதிப்பளிக்க வில்லை; ஒழுக்கம் ஒன்றினுக்கே மதிப்பளிக்கிறது. செல்வத்திற்கு மதிப்பளிப்ப தாயின், கோடீசுவரர்கள் மகான்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும் அன்றோ! அஃது உலக இயற்கை அன்று. எனவே, ஒழுக்கத்தினை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுவிட வேண்டும்; ஒழுக்க நெறியினின்று எவரும் அணுவேனும் வழுவலாகாது. கட்டுரைப் பயிற்சி கீழ்வரும் ஒவ்வொரு பொருள் பற்றியும் ஒன்றரைப் பக்கங்கட்கு மிகாமல் கட்டுரை வரைக:- I 1. ஆச்சாரியார் கல்விப் பருவம். 2. ஆச்சாரியாரும் வழக்கறிஞர் தொழிலும். 3. உரிமைப் போரில் ஆச்சாரியார் பங்கு. 4. ஆச்சாரியார் ஏற்ற பதவிகளும் அவற்றின் வாயிலாகச் செய்த பொதுநலப் பணிகளும். 5. ஆச்சாரியார் நற்பண்புகள். II 1. இராஜேந்திரர் கல்விப் பருவம். 2. இராnஜந்திரரும் வழக்கறிஞர் தொழிலும். 3. உரிமைப்போரில் இராஜேந்திரர் பங்கு. 4. இராஜேந்திரர் செய்த பொதுநலப் பணிகள். 5. இராnஜந்திரருடைய நற்பண்புகள். III 1. இவ்விருவருடைய சிறப்பியல்புகள். 2. இவ்விருவரிடமும் காணப்படும் ஒற்றுமைக்குரியவும் வேற்றுமைக்குரியவும். 3. இவ்விருவரும் பங்குகொண்ட குடியரசு நாள் விழா. 4. அந்நன்னாளில் இவ்விருவரும் கூறிய அறிவுரைகள்.