தமிழக ஆட்சி முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக ஆட்சி ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+120= 136 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா 125/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் முதற்பதிப்பின் முன்னுரை மூன்றாண்டு இளங்கலை (B.A.) வகுப்புக்கும், முதுகலை (M.A.) வகுப்புக்கும் உள்ள புதிய பாடத் திட்டத்தில் தமிழக வரலாறும் பண்பாடும் என்னும் புதிய பாடம் கற்பிக்க வேண்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இரண்டாண்டுகளாக இப்புதிய பாடத்தைக் கற்பித்து வருகின்றேன். இப்பாடத்திற்கென்று ஒரு தனி நூல் இன்மையால், ஆராய்ச்சி நூல்கள் பலவற்றைப் படித்துச் செய்திகளைத் தொகுத்து முறைப்படுத்தி மாணவர்க்கு அறிவித்து வருகின்றேன். பல்லவர் வரலாறு எழுதத் தொடங்கியது முதல் யான் தொகுத்து வைத்திருந்த கல்வெட்டுக் குறிப்புக்களும் இலக்கியக் குறிப்புகளும் இப்பாடத்திற்குப் பெருந்துணை செய்கின்றன. தமிழக வரலாறும் பண்பாடும் என்ற பாடத்தின் ஒரு பிரிவே தமிழக ஆட்சி என்பது. தமிழ் இலக்கியம், சமகால இலக்கியம், அயலார் இந்நாடு பற்றி எழுதியுள்ள குறிப்புக்கள், கல்வெட்டுக்கள், கட்டடங்கள் முதலியன, வழக்கில் உள்ள வரலாற்றுச் செய்திகள் என்பன இதற்குரிய மூலங்களாகும். இவற்றைத் துணையாகக் கொண்டு இக்கால அறிஞர் பல அரச மரபுகளைப் பற்றிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர். அவற்றுள் டாக்டர் மீனாட்சி, பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் என்பவர் எழுதியுள்ள நூல்களும், டாக்டர் மகாலிங்கம் அவர்கள் எழுதியுள்ள தென்னிந்திய ஆட்சி என்னும் அரிய ஆராய்ச்சி நூலும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவையாகும். யான் எழுதிய பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, இரண்டாம் குலோத்துங்கன், பெரிய புராண ஆராய்ச்சி (Thesis for M.O.L.). சைவ சமய வளர்ச்சி (Thesis for Ph. D.) என்னும் ஆராய்ச்சி நூல்களும், இவற்றைத் தயாரித்தபொழுது எடுத்த வேறு பலவகைக் குறிப்புக்களும் மேற்சொல்லப்பெற்ற மூலங்களோடு இந்நூல் வரையத் துணையாக அமைந்தன. ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக யான் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர்களையும் பேரூர்களையும் நூற்றுக்கணக்கான கோவில்களையும் பார்த்து வருபவன்; தஞ்சையிலேயே ஆறு ஆண்டுகள் இருந்து படித்தவன்; தஞ்சை அரண்மனையின் பல பகுதிகளை நேரிற் கண்டவன்; கிருஷ்ணாபுரம், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையெல்லாம் நேரிற் கண்டு குறிப்புக்கள் தயாரித்தவன். இவை அனைத்தின் உதவியைக் கொண்டு, என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், இச்சிறு நூலை வெளியிட்டேன். இது கல்லூரி மாணவர்க்கும் தமிழக ஆட்சியை அறிய ஆவலுறும் தமிழ் மக்களுக்கும் நன்கு பயன்படும். இதனை மேலும் நன்கு விரித்து எழுத விருப்பமுண்டு. திருவருள் துணை செய்யுமாயின் அடுத்த பதிப்பில் மேலும் பல செய்திகளைச் சேர்க்க வாய்ப்பு உண்டாகலாம். தியாகராசர் கல்லூரி, மதுரை மா.இராசமாணிக்கனார் உள்ளுறை எண் பக்கம் 1. ஆராய்ச்சிக்குரிய மூலங்கள் 1 2. தமிழகம் 10 3. அரசுரிமை 14 4. ஆட்சிக் குழுக்களும் அலுவலரும் 38 5. வரவு செலவு 48 6. சட்டம்- முறை- காவல் 59 7. படை 76 8. மண்டல ஆட்சி 95 9. உள் ஆட்சி 101 1. ஆராய்ச்சிக்குரிய மூலங்கள் தமிழகத்தை ஆண்டவர்கள் மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழக் கி.பி. 300 வரையில் தமிழகம் தமிழ் வேந்தராலேயே ஆளப்பட்டு வந்தது. கி.பி. 300 முதல் 900 வரையில் தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற அயல் அரச மரபினரால் ஆளப்பட்டது. அக்காலத்திற்றான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றிச் சைவ வைணவங் களை வளர்த்தனர். ஏறத்தாழக் கி.பி. 900 முதல் 1200 வரையில் சோழப் பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் பேரரசு செலுத்தினர். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்- காபூர் படையெடுப்பு நிகழ்ந்தது. அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் விசய நகர அரசு தோன்றியது. அது தன் பிரதிநிதிகளை அனுப்பித் தமிழகத்தை ஆளச் செய்தது. பின்பு கி.பி. 1529 முதல் 1736 வரையில் விசய நகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இருந்து விசுவநாத நாயக்கர் முதலிய நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். இங்ஙனமே விசயநகரப் பேரரசர் சார்பில் சோழநாட்டின் பெரும்பகுதியைத் தஞ்சை- நாயக்க மன்னர்கள் ஏறத்தாழக் கி.பி. 1530 முதல் 1675 வரையில் ஆண்டு வந்தனர். தஞ்சை நாயக்க மன்னர் ஆண்ட நிலப்பகுதி ஏறத்தாழக் கி.பி. 1675-இல் மகாராட்டிரர் ஆட்சிக்கு உட்பட்டது. மகாராட்டிரர் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு முடிய இருந்தது. ஏறத்தாழக் கி.பி. 1464 முதல் 1660 வரையில் செஞ்சியில் நாயக்கர் ஆட்சி இருந்தது. ஆராய்ச்சிக்குரிய மூலங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவும் சான்றுகளுள், (1) தமிழ் இலக்கண இலக்கியம், (2) சமகால இலக்கியம், (3) அயல்நாட்டார் தமிழகத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்புக்கள், (4) கல்வெட்டுக்கள், (5) கட்டடம் முதலியன, (6) வழக்கில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் என்பன குறிப்பிடத் தக்கவையாகும். (1) இலக்கண இலக்கியம் மேலே கூறப்பெற்ற வரலாற்று மூலங்களுள் தமிழகத்தைப் பொறுத்த வரையில் காலத்தால் முற்பட்டது இலக்கண இலக்கியமாகும். இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் என்பது பலர் கருத்து. அஃது இற்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பெற்றது என்னலாம். அஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவற்றுள் பொருளதி காரம் என்பது அக்காலத் தமிழ் மக்களுடைய அகவாழ்வையும் புறவாழ்வையும் சித்தரித்துக் கூறுவதாகும். தமிழக ஆட்சிபற்றிய செய்திகளை- அரசன் முடி புனைதல், அவனுக்குரிய கடமைகள், அவனுக்குரிய சின்னங்கள், சிற்றரசர்க்குரிய சின்னங்கள், போர் முறைகள், ஒவ்வொரு போர் முறைபற்றிய விவரங்கள், அரசு துறத்தல் என்றாற் போன்ற பல விவரங்களைப் பொருளதி காரத்திற் காணலாம். இப்பேரிலக்கணத்தை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியர், தமக்கு முன்னும் தம் காலத்திலும் தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்தன என்றும், இலக்கிய நூல்கள் பல இருந்தன என்றும் தொல்காப்பியத்தில் குறித்துள்ளார். எனவே, அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண இலக்கியங்கள் வளம் பெற்றிருந்த உண்மை இதனால் பெறப்படுகின்றதன்றோ? பெறப்படவே, தமிழக ஆட்சி தொல்காப்பியருக்கு முன்னரே நெடுங்காலமாக இருந்து வருகின்ற ஒன்று என்பது தெளிவாகிறது. இன்றுள்ள தமிழ் இலக்கிய நூல்களுள் காலத்தால் முற்பட்டவை திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவை. இவற்றை அடுத்துச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் செய்யப்பெற்றன. திருக்குறள் நாடு, நாட்டை ஆளும் அரசன் இலக்கணம், அமைச்சன் இலக்கணம், அரசின் அங்கமான ஒற்றர், தூதுவர் இலக்கணங்கள், படையின் இலக்கணம் என்பன போன்ற பல செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் நூல்களில் தமிழரசர் படைகளைப் பற்றிய விவரங்கள், போர் முறைகள், வெற்றி தோல்விகள், போர் வீரர்களைப் பற்றிய செய்திகள், மறக்குடி மகளிர்பற்றிய செய்திகள், நீதி மன்றம், நீதி முறை, ஊர் மன்றம் என்பன போன்ற ஆட்சிக்குரிய செய்திகள் பல ஓரளவு ஆங்காங்குக் குறிக்கப்பெற்றுள்ளன. மணிமேகலையிலும் தமிழரசர் தலைநகரங்களைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கின்றன. இச்சங்க நூல்கள் எல்லா வற்றிலும் சிற்றரசர்களைப்பற்றிய செய்திகளும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அக்காலத்தில் நடைபெற்ற பயிர்த்தொழில், கைத்தொழில், உள்நாட்டு வாணிகம், வெளி நாட்டு வாணிகம் பற்றிய விவரங்களும் கிடைக்கின்றன. சங்க காலத்துக்குப் பின் தோன்றிய நாயன்மார் திருப்பாடல்கள், ஆழ்வார் அருட் பாடல்கள் போன்ற நூல்களில் பல்லவர், பாண்டியர் ஆட்சிபற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த சைவத் திருமுறைகள், சீவக சிந்தாமணி, தக்கயாகப்பரணி, கம்ப ராமாயணம் போன்ற நூல்கள் சோழர் ஆட்சி பற்றிய பல விவரங்களை நமக்குத் தருகின்றன. சோழர்க்குப் பின் தோன்றிய தனிப் பாடல்கள், திரு விளையாடற் புராணம் போன்ற தல புராணங்கள் என்பவை நாயக்கர் ஆட்சிபற்றிய விவரங்களை ஓரளவு அறியத் துணை புரிகின்றன. நம்பி திருவிளையாடல் காலத்தால் முற்பட்ட தாதலின், பாண்டியர் ஆட்சிபற்றிய செய்திகளை அறிய உதவுகிறது. நாயக்கர் காலத்தில் செய்யப்பெற்ற பரஞ்சோதி திருவிளையாடல் பாண்டியரைப்பற்றிப் பேசுவதாயினும் நாயக்கர் ஆட்சி பற்றிய செய்திகளையே பாண்டியர் ஆட்சி என்னும் தலைப்பில் கூறுகின்றதெனக் கொள்வதே பொருத்தமாகும். இங்ஙனம் ஒவ்வொரு கால நூல்களும் அவ்வக்கால ஆட்சி பற்றிய செய்திகளை அறிய ஓரளவு துணை புரிகின்றன. (2) சமகால இலக்கியம் புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் வரும் பெரும்பாலான பாக்கள் அந்தந்த அரசர் முன்னிலையிற் பாடப்பட்டவை. சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த அவன் தம்பியாரான இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரம் சமகால இலக்கியமே யாகும். இந்த மூன்று நூல்களிலும் ஆட்சி பற்றிய செய்திகள் பல காணப் படுகின்றன. அவை அந்தந்த அரசனை நேரில் வைத்துப் பாடப்பட்டன. ஆதலால், பெரும்பாலும் ஏற்கத்தக்கனவே யாகும். பல்லவர் காலத்தில் நந்திக் கலம்பகம் அவ்வாறே பாடப்பட்டது. அதன்கண் நந்தி போத்தரையனுடைய கொடை, புலமை, தண்ணளி, போர்ச் செயல்கள் முதலியன குறிக்கப் பட்டுள்ளன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுமாறன் மீது பாடப்பெற்ற பாண்டிக்கோவை அவனுடைய போர்ச் செயல்களையும் பிறவற்றையும் குறித்துள்ளது. கலிங்கத்துப்பரணி, மூவர் உலா என்பவை சமகால நூல்களாகும். முதற்குலோத்துங்கனது கலிங்கப்படையெடுப்பை விளக்கி அவனது அவைப்புலவரான சயங்கொண்டார் பாடியதே கலிங்கத்துப்பரணி. விக்கிரம சோழன், அவன் மகனான இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகனான இரண்டாம் இராசராசன் ஆகியோர் காலங்களில் அவர்தம் ஆசிரியரும் அவைப்புலவரும் ஆகிய ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றவையே மூன்று உலா நூல்கள். பேரரசன் போர்ச் செயல்கள், அறப்பணிகள், ஆடை அணிச் சிறப்புக்கள், அவனது ஆட்சி முறை, ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் பெயர்கள், முன்னோர் வீரச்செயல்கள் இன்ன பிறவும் இச்சிறு நூல்களில் இடம்பெற்றுள்ளன. பெரியபுராணம் பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகளைக் கூறுவதாயினும், அதனைச் செய்த சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனது முதலமைச்சர் ஆதலால், அவர் நூலில் கூறப்பட்டுள்ள ஆட்சி பற்றிய செய்திகள் ஓரளவு பல்லவர் காலத்தைப் பற்றியனவாகவும், பேரளவு சோழர் காலத்தைப் பற்றியனவாகவும் கொள்வது பொருத்தமாகும். இது சோழரைப் பற்றிய செய்திகளைக் குறிக்கும் பொழுது மட்டும், ஆட்சி பற்றிய அளவில் சமகால இலக்கியமாகக் கருதலாம். இரட்டையர், காளமேகப்புலவர் போன்ற புலவர் நூல்களும் பாக்களும் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் காலத்திலும் பாடப்பட்டவை யாதலால், இச்சம கால நூல்களிலும் தனிப்பாடல்களிலும் கூறப்பெற்றுள்ள பல செய்திகள் சிறந்த சான்றுகளாகக் கொள்ளற்பாலனவாகும். (3) அயல்நாட்டார் குறிப்புக்கள் சேர சோழ பாண்டியர் பெயர்கள் வடமொழி நூல்களிலும் அசோகன் கல்வெட்டுக்களிலும் காணப் படுகின்றன. எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் தமிழரசுகள் நிலைபெற்றிருந்த உண்மை இவற்றைக் கொண்டு நன்கறியலாம். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பிளைநி, தாலமி, பெரிப்ளூ என்னும் நூலின் ஆசிரியர் என்ற மேலைநாட்டு யாத்திரிகர் தாம் நேரிற் கண்ட தமிழகத்துக் கடல் வாணிகத்தைப் பற்றி எழுதியுள்ளனர்; தமிழரசைப் பற்றித் தாம் கேட்ட வற்றையும் குறித்துள்ளனர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டை நேரிற் பார்த்த யுவான்சுவாங்கு போன்ற சீன யாத்திரிகர் தமிழகத்தைப் பற்றிப் பல விவரங்களை எழுதியுள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் தமிழகத்தைப் பார்வையிட்ட மார்கோ போலோ என்ற மேனாட்டு யாத்திரிகரும், சீன அரசியல் தூதர்களும் எழுதிவைத்துள்ள குறிப்புக்கள் பலவாகும். இக்குறிப்புக்களுள் பல, தமிழ் நூல்களில் இல்லாதவையாகும். விசயநகர ஆட்சிக் காலத்தில் விசயநகரத்துக்கு வந்து தங்கியிருந்த அப்துர் ரசாக் முதலிய அயல்நாட்டுத் தூதரும் அறிஞரும் எழுதி வைத்த குறிப்புகள் பலவாகும். இவ்வாறே மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் காலத்தில் வாழ்ந்த பாதிரிமார்கள் அந்த அரசர்களைப் பற்றியும் நாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதியுள்ள செய்திகள் பல. இவையாவும் தமிழக ஆட்சி பற்றிய பல விவரங்களை அறிய உதவுகின்றன. (4) கல்வெட்டுக்கள் தமிழக ஆட்சிபற்றிய செய்திகளை அறியச் சங்க காலக் கல்வெட்டுக்கள் இல்லை. பல்லவர்காலக் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் கிடைத்துள்ளன. சோழர் காலத்தில் கல்வெட்டுக்களின் பெருக்கம் மிகுதியாகும். அன்பில் பட்டயம் போன்ற பட்டயங்களும் சில கிடைத்துள்ளன. அவற்றுள் பல்லவராயன் பேட்டை சாஸனம் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறே சோழர்கால ஊராட்சி பற்றிய விவரங்களை அறிய உத்தரமேரூர்க் கல்வெட்டுப் பெருந்துணை செய்கின்றது. சோழர் கல்வெட்டுக்களிலும் பட்டயங்களிலும் சோழர் ஆட்சியிலிருந்த படைகளைப் பற்றிய விவரங்கள், போர்ச் செயல்கள், நீதிமுறை, அரசாங்க உயர் அலுவலர், பல வகை வரிகள் பற்றிய விவரங்கள் என்பன போன்ற பல செய்திகள் அறியக் கிடக்கின்றன. விசய நகர ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் இவ்வாறே தமிழக ஆட்சி பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. எனவே, இலக்கியங்களைக் கொண்டு அறிய முடியாத பல செய்திகளைக் கல்வெட்டுக்களைக் கொண்டு நாம் நன்கு அறியலாம். (5) கட்டடங்கள் முதலியன இத்தலைப்பில் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மகாராட்டிரர் இவர்களால் கட்டப்பட்ட கோவில்கள், அரண்மனைகள், அவற்றில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், அரசர் அரசியர் தனி உருவச் சிற்பங்கள் முதலியன அடங்கும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவர்ச்சிற்பங்கள் பல்லவர் வரலாற்றையும், பல்லவ மன்னனது முடிபுனை விழாவையும் நமக்கு அறிவிக்கின்றன. மாமல்லபுரத்து ஆதிவராகர் கோவிலில் உள்ள உருவச் சிற்பங்கள், பல்லவ அரசர்க்கு எத்துணை மனைவியர் இருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. தாராசுரம் சிவன் கோவிலில் உள்ள இரண்டாம் இராசாதிராசன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவரும் முடி அணிந்த நிலையில் இருத்தலை உணர்த்தும் உருவச் சிற்பங்கள் சோழர் கால அரச முடி, அணிகள் முதலியவற்றை நமக்கு உணர்த்துகின்றன. சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் பல்லவர் கால நடிகையரைப் பற்றிய விவரங்களை நமக்கு ஓரளவு தெரிவிக்கின்றன. இவ்வாறே தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் ஆடல்- பாடல் மகளிரைக் குறிக்கும் ஓவியங்கள் சோழர் காலக் கலைவாணிகளைப் பற்றிய விவரங்களை அறிவிக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள நாயக்கர் கால ஓவியங்கள் அரசருடைய ஆடை அணிகளைப் பற்றிய விவரங்களை ஓரளவு நமக்கு உணர்த்துகின்றன. தமிழரசர் ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக்கொண்ட காரணத்தால், அவர்கள் கட்டுவித்த அரண்மனைகள் இன்று காணுமாறு இல்லை. கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பெற்ற தஞ்சை- மகாராட்டிரர் அரண்மனை ஒன்றே நாம் காணத்தக்க நிலையில் இருக்கின்றது. ஏழடுக்கு மாளிகை, கொலுமண்டபம், ஆயுத சாலை, சங்கீத மகால், சரசுவதி மகால், இருட்டு மகால், அந்தப்புர மாளிகைகள், செய்குளம், பெரிய தோட்டம் ஆகிய அனைத்தும் அரண்மனையுள் அமைந்திருக் கின்றன. இந்த அரண்மனையைக் கொண்டு, பண்டைக்கால அரண்மனைகள் எவ்வாறு இருந்தன என்பதை நாம் ஒருவாறு ஊகிக்கலாம். சிற்றரசர் அரண்மனைகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்து கொள்ளப் புதுக் கோட்டை, இராமநாதபுரம், எட்டயபுரம் முதலிய இடங்களில் உள்ள அரண்மனைகள் பெருந்துணை புரிகின்றன. பண்டை அரசருட் சிலர் மலைமீது கோட்டை கட்டி எங்ஙனம் வாழ்ந்தனர் என்பதை அறிய, அழிந்து பட்ட செஞ்சிக்கோட்டை ஓரளவு துணை செய்கின்றது. சமதரையில் கோட்டையின் அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிய வேலூர்க்கோட்டை உதவுகின்றது. (6) வழக்கில் உள்ள சான்றுகள் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) என்பது, மகாமல்லன் (மாமல்லன்) என்ற விருதுப் பெயரைப் பெற்ற முதல் நரசிம்மவர்மனது பெயரைத் தாங்கி நிற்பது. பெருவீரனான இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய வேந்தனை வெற்றி கொண்ட காரணத்தால், முதலாம் நரசிம்மவர்மன் தன்னை மகாமல்லன் (மாமல்லன்) என்று அழைத்துக் கொண்டான். அவனால் சீர்திருத்தப்பெற்ற துறைமுக நகரம் மாமல்லபுரம் என்ற பெயரைப் பெற்றது. இச் செய்திகள் அனைத்தும் மாமல்லபுரம் என்ற தொடரில் அடங்கி இருக்கின்றன. வேள்விக்குடி, பிரமதேசம், பிரமபுரி, சதுர்வேதி மங்கலம், உத்த மதானபுரம் என்ற ஊர்களின் பெயர்கள், பண்டைத் தமிழக மன்னரால் பிராமணர்க்குத் தானமாக விடப்பட்டவை என்ற உண்மையை உணர்த்துகின்றன. ஹேமகர்ப்பம் முதலிய பதினாறு வகைத் தானங்கள் மகாதானங்கள் என்று வடமொழி நூல்களில் கூறப்பெறும். மகாதானபுரம் என்ற ஊரின் பெயர், தமிழக வேந்தர் மகாதானம் செய்த உண்மையைப் புலப்படுத்து கின்றது அன்றோ? கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரப் பெயரும், கங்கைகொண்ட சோழேச்சரம் என்ற கோவிற் பெயரும், கங்கைகொண்டான் என்ற ஊர்ப் பெயரும், கங்கை கொண்டான் மண்டபம் என்ற மண்டபப் பெயரும் முதல் இராசேந்திரசோழன் வழியில் அரசர் பலரை வென்று கங்கை நீரைக் கொணர்ந்த செய்தியை இன்றளவும் குறித்து நிற்கின்றன. இவ்வாறே முடிகொண்டான் என்ற ஆற்றின் பெயர், சோழன் வேற்றரசன் முடியைக் கொண்ட வெற்றியைக் குறித்திருக்கிறது. கிருஷ்ணாபுரம் என்பது கிருஷ்ணப்ப நாயக்கர் பெயரைத் தாங்கி இருக்கின்றது. அங்கு அவ்வரசர் கட்டிய அற்புத வேலைப்பாடமைந்த பெருமாள் கோவில் இருக்கின்றது. நாயக்க மன்னரது சமயத் தொண்டை விளக்க இது மிகச்சிறந்த சான்றாகும். இவ்வாறு சில ஊர்களின் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள் முதலியன தமிழக ஆட்சி பற்றிய சுவையுள்ள செய்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு அழியாத சான்றுகளாக இன்றும் இலங்கி வருகின்றன. எனவே, இவையும் தமிழக ஆட்சியின் நிலையை அறிய உறுதுணையாய் இருக்கின்றன. அறிஞர் ஆராய்ச்சி நூல்கள் இதுகாறும் கூறப்பெற்ற பலவகைச் சான்றுகளைக் கொண்டு இக்கால ஆராய்ச்சி அறிஞர்கள் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, விசய நகர வேந்தர் வரலாறு, மதுரை - நாயக்கர் வரலாறு, தஞ்சை - நாயக்கர் வரலாறு, செஞ்சி வேந்தர் வரலாறு, தஞ்சை- மகாராட்டிரர் வரலாறு என்னும் வரலாற்று நூல்களைத் திறம்பட ஆராய்ந்து எழுதி வெளியிட்டு உள்ளனர். இவற்றுள் டாக்டர் மீனாட்சி எழுதிய பல்லவர் ஆட்சிமுறையும் சமுதாய வாழ்க்கையும் என்னும் நூலும், பேராசிரியர் நீலகண்ட சாதிரியார் எழுதியுள்ள சோழர் வரலாறு, சோழர் ஆட்சிமுறை என்னும் நூல்களும், டாக்டர் மகாலிங்கம் எழுதியுள்ள விசய நகர வேந்தரின் ஆட்சி முறையும் சமுதாய வாழ்க்கையும் என்னும் நூலும் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை. காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வி.ஆர். இராமசந்திர தீட்சிதர் மௌரிய ஆட்சி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை 1932-இல் வெளியிட்டார். தென்னிந்திய அரசுகளைப்பற்றி அறிய அத்தகைய ஆராய்ச்சி நூல் இல்லாதிருந்த குறையைச் சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை அறிஞர் டாக்டர் மகாலிங்கம் என்பவர் நீக்க விழைந்து, தென்னிந்திய ஆட்சி என்னும் பெயரில் 1955- இல் சிறந்த ஆராய்ச்சி நூலை வெளியிட்டனர். தென்னிந்தியாவில் அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், ஆந்திரர், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், விசய நகர வேந்தர், நாயக்கர், மாகாராட்டிரர் ஆகியோர் வரலாறுகளை ஆராய்ந்து, தென்னிந்திய ஆட்சி பற்றிய செய்திகள் அதன் கண் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தின் துணையைக் கொண்டே இந்நூல் எழுதப்படுகிறது. 2. தமிழகம் வட எல்லை இன்றுள்ள தமிழ் இலக்கண இலக்கியங்களுள் காலத்தால்- முற்பட்டது தொல்காப்பியம் அன்றோ, அஃது இற்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்னலாம். அதன் பாயிரத்தில் பனம்பாரனார் என்ற புலவர், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம் என்று கூறியுள்ளார். வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம் என்று சங்க நூற்பாடல்கள் செப்புகின்றன. கி.பி. என்று 12-ஆம் நூற்றாண்டிலும் வேங்கடப் பகுதியே தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது என்பது, அருந்தமிழின் வழக்கங்கு நிகழாதாக என்னும் சேக்கிழார் வாக்கைக் கொண்டு உணரக் கிடக்கிறது. காளத்தி மலைக்கு வடக்கே தமிழ் வழக்கு இல்லை என்பது சேக்கிழார் கூற்று. எனவே, தென்னிந்தியாவில் வேங்கடத்தை ஒட்டினாற் போலக் கிழக்கு மேற்காக ஒரு கோடு கிழிக்கப்படின், அக்கோட்டிற்குத் தென்பாற்பட்ட நிலம் முழுவதும் ஏறத்தாழப் பண்டைத் தமிழகம் என்று சொல்லலாம். தென் எல்லை பனம்பாரனார் கூறிய எல்லைகளில் குமரி ஒன்று. அது குமரியாறு பாயப்பெற்ற, இன்றைய குமரிக்கும் தென்பாற்பட்ட நிலத்தைக் குறித்தது என்று உரையாசிரியர்கள் பொருள் கொண்டனர். பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள என்று வரும் சிலப்பதிகார அடிகளால், இன்றைய குமரி முனைக்குத் தெற்கே குமரியாறு பாயப்பெற்ற பெருநிலப் பகுதி இருந்தது என்பது தெரிகிறது. அதன்கண் ஏழ்பனைநாடு, ஏழ்தெங்கநாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளனர். அந்த நிலப்பகுதியில்தான் பாண்டியர் தலைநகரமான மதுரை இருந்தது. அதன்கண் முதற்சங்கம் நிகழ்ந்தது என்று இறையனார் களவியல் இயம்புகின்றது. அந்நாடு அழிந்த பின்பு கிழக்குக்கரை ஓரத்தில் இருந்த கபாடபுரம் என்பது பாண்டியர் தலைநகரமாயிற்று. அங்கு இடைச்சங்கம் இருந்தது. அதுவும் கடல்கோளால் அழிந்தது. இஃது இறையனார் களவியல் கூறும் செய்தி. இங்ஙனம் கபாடபுரமும் அழிந்த பிறகுதான் இன்றைய மதுரை பாண்டியர் தலைநகரம் ஆயிற்று. அப்பொழுதுதான் இன்றைய குமரி முனை தமிழகத்தின் தென் எல்லை ஆயிற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறு காக்கை பாடினியார் என்ற பெண்பாற் புலவர், வடக்கில் வேங்கடத்தையும் ஏனைய மூன்று பகுதிகளில் கடலையும் எல்லையாகக் கூறினார். இதனால், கடைச் சங்ககாலத்துத் தமிழகத்தின் தென்எல்லை குமரிமுனை என்பது பெறப்பட்டது. மூன்று தமிழ் நாடுகள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை தொன்று தொட்டு இருந்து வரும் மூன்று நாடுகளாகும். இவற்றுள் சேர நாடு என்பது, இன்றைய கொச்சி - திருவாங்கூர் நாடுகளுடன் மலையாள மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி யாகும். சோழ நாடு என்பது, சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வெள்ளாற்றை வட எல்லையாகவும் புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள தென் வெள்ளாற்றைத் தெற்கெல்லையாகவும் கொண்டுள்ள நிலப்பகுதியாகும். அஃதாவது, இன்றைய தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களிலும் தென் ஆற்காடு மாவட்டத்தின் தென்பகுதியிலும் உள்ள நிலப்பகுதியாகும். பாண்டிய நாடு என்பது, இன்றுள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்ட நிலப்பகுதியாகும். சிற்றரசுகள் சோழ நாட்டிற்கு வடக்கே திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான்கள் ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். அப்பகுதிக்கு வடக்கே இருந்த தொண்டை நாட்டில் திரையர்கள் என்ற தொண்டைமான்கள் ஆண்டு வந்தனர். தகடூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை அதியமான்கள் ஆண்டுவந்தனர். இவ்வாறே கொங்கு நாட்டில் ஓரி, குமணன் முதலிய சிற்றரசர்கள் சிறு நிலப்பகுதிகளை ஆண்டுவந்தனர். பறம்பு மலைநாட்டைப் பாரி ஆண்டு வந்தான். பழநிமலைப் பகுதியை வேள் ஆவி ஆண்டுவந்தான். பொதிய மலைநாட்டை வேள் ஆய் ஆண்டுவந்தான். இவ்வாறு தமிழகத்திலிருந்த சிற்றரசர் பலராவர். இவர்கள் முடியரசர்க்கு அடங்காமல் வாழ்ந்த காலமும் உண்டு; அடங்கி வாழ்ந்த காலமும் உண்டு. மூன்று நாட்டு விவரங்கள் சங்ககாலம் பரந்து பட்ட காலம். அக்காலத்தில் ஒரு சமயத்தில் மூவேந்தருள் சேரன் சிறப்புற்றிருந்தான்; மற்றொரு சமயத்தில் சோழன் மேம்பட்டு விளங்கினான்; வேறொரு சமயத்தில் பாண்டியன் பெருமை பெற்று விளங்கினான். ஒவ்வொருவனும் மற்ற இருவரையும் அடக்கி ஆள நினைத்த காலங்களும் உண்டு. சேரருள் செங்குட்டுவனும், சோழருள் கரிகாலனும், பாண்டியருள் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் சிறப்புற்ற வேந்தராவர். இந்த முதன்மை வெறி இம் மரபுகள் அழியும் வரையில் பின் நூற்றாண்டுகளிலும் நிலைத்திருந்தது என்பதை வரலாறு தெரிவிக்கின்றது. கடைச் சங்ககாலம் என்பது ஏறத்தாழக் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்று சொல்லலாம். கி.மு. 300 - க்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பகுதி (தொண்டை, சோழ நாடுகள்) பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. ஏறத்தாழக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் தம் பேரரசைத் தோற்றுவித்தனர். கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர்; இலங்கை முதலிய பல தீவுகளைப் பிடித்து ஆண்டனர்; வட இந்தியாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டினர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மாலிக்- காபூர் தென்னாட்டு அரசுகளை அழித்தார். பின்பு தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்பு விசயநகர வேந்தரின் பிரதிநிதிகளாக இருந்து மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களை நாயக்க மன்னர் ஆண்டு வந்தனர். பின்னர் இந்நிலப் பகுதிகள் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. தஞ்சையில் மகாராட்டிரர் சிறிதுகாலம் ஆண்டனர். பின்பு தமிழகம் வெள்ளையர் ஆட்சிக்கு உட்பட்டது. சிறந்த நகரங்கள் முதலியன சங்ககாலத்தில் சேரநாட்டுத் தலைநகரம் மேற்குக் கடற்கரையில் இருந்த வஞ்சிமாநகரம் என்பது; முசிறி என்பது துறைமுக நகரம். கொங்கு நாடு சேரர்க்கு உட்பட்டபோது கொங்குக் கரூர் சேரர் தலைநகரங்களுள் ஒன்றாக இருந்தது. சேரநாட்டு ஆறுகளுள் மிகச்சிறந்தது பெரியாறு என்பது. சோழநாட்டில் சங்ககாலத்தில் உறையூர் தலைநகராய் இருந்தது; சங்க இறுதிக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் தலை நகராயும் துறைமுக நகரமாயும் இருந்தது. பல்லவர் காலத்தில் கும்பகோணத்தை அடுத்த பழையாறை என்பதே தலைநகராய் இருந்தது; பின்பு சிறிது காலம் தஞ்சாவூர் கோநகராய் விளங்கியது. கி.பி. 11, 12, 13 - ஆம் நூற்றாண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோநகராய் விளங்கியது. சோழப் பேரரசர்க்குக் காஞ்சிபுரமும் ஒரு தலைநகராய் விளங்கியது. சோணாட்டு ஆறுகளுள் தலைசிறந்தது காவிரியாகும். காவிரியாறே சோழநாட்டு மக்களுக்குச் செவிலித்தாய். பாண்டியநாட்டின் தலைநகரம் மதுரை; புகழ்பெற்ற துறைமுக நகரம் கொற்கை என்பது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் (பழைய) காயல் துறைமுக நகரமாயிருந்தது. தொண்டியும் ஒரு துறைமுக நகரம். பிற்காலத்தில் தூதுக்குடி, (தூத்துக்குடி), காயல்பட்டினம் என்பன துறைமுக நகரங்களாய் விளங்கின. சங்ககாலத்தில் பொதுசா (இன்றைய புதுச்சேரியை அடுத்த கடற்கரைப் பகுதி), சோபட்டினம் (மரக்காணம்), மாமல்லபுரம் என்பன சோழநாட்டிற்கு வடக்கே துறைமுகப் பட்டினங்களாயிருந்தன. பல்லவர் காலத்தில் மயிலாப்பூர், மாமல்லபுரம் என்பன சிறந்த துறைமுக நகரங்களாய் விளங்கின. பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் நாகப்பட்டினம் சிறந்த துறைமுக நகரமாய் விளங்கியது. 3. அரசுரிமை அரசு தோற்றம் பண்டைக் காலத்தில் தமிழகம் குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் வாழ்ந்த மக்கள் பல காரணங்களால் பிற நில மக்களோடு போரிட வேண்டிய நிலைமை அடிக்கடி ஏற்பட்டுவந்தது. அதனால் அவ்வந் நிலத்து மக்கள் தம்முள் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனைத் தம் தலைவனாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்படி நடக்கலாயினர். இங்ஙனம் தோன்றிய தலைமையே நாளடைவில் அரசாக வளர்ந்தது என்று சொல்லலாம். குறிஞ்சி நிலத்தில் விளைச்சல் மிகுதியில்லை. பிற நிலத்தார் அங்கு எளிதில் வருதல் இயலாது; அங்ஙனம் வந்து எதனையும் எளிதில் கவர்ந்து செல்லவோ பொருள் இல்லை. பாலை நிலத்தில் நல்ல வளமும் இல்லை; அதனால் விளைச்சலும் இல்லை. நெய்தல் நில மக்கள் நாளும் மீன் பிடித்துப் பிழைப்பவர்கள்; எனவே, எவ்வித உடைமையும் இல்லாதவர்கள்; ஆதலால் இம்மூவகை நிலங்களின் உடைமைகள் பறி போகுமே என்ற கவலை அந்நில மக்களுக்கு இல்லை. அதனால் இம்மூன்று இடங்களிலும் தலைமை தோன்றியிருக்கலாமே தவிர, உடைமையைப் பாதுகாக்க என்றும் நிலையான அரசு தேவைப்படவில்லை. முல்லை நிலத்தில் பசும் புல்வெளிகள் மிகுதி; ஆடு மாடுகள் மிகுதி; அங்குள்ள மக்களுக்கு அவைதாம் செல்வம். அவை பிற நிலத்தாரால் கவரப்படின், அவர் தம் வாழ்வு கெடும். எனவே, கால்நடைகளைப் பாதுகாக்கவும், அவற்றால் வரும் வாழ்வைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு அரசு தேவைப்பட்டது. போருக்கு என்று ஒப்புக் கொண்டிருந்த தலைவனே நாளடைவில் அரசனானான். அவன் கோ, கோன் எனப்பெயர் பெற்றான். (P.T.ÓÃthr ஐயங்கார், இந்தியாவில் கற்காலம், பக்.26.) அம்மரபினர் இன்றும் கோன், கோனார் என்று அழைக்கப்படுதல் காணலாம். மருத நிலத்தில் விளைவு மிகுதி. அந்நிலம் இயற்கை வளம் நிறைந்தது; நீர் வளம் மிக்கது; செல்வம் கொழிக்கும் இடம்; கல்விக்கும் கலை வளர்ச்சிக்கும் ஏற்றது; நாகரிகத்தின் பிறப்பிடம்; பண்பாட்டின் தோற்றுவாய். எனவே, மருத நிலத்திற்குப் பாதுகாப்புத் தேவையானது. பிற மூன்று நிலத்தாரும் மருத நில வளத்தைச் சூறையாடுதல் இயற்கை. ஆதலால் முல்லை நிலத்தைவிட மருத நிலத்திற்குப் பாதுகாப்பு மிகுதியாகத் தேவைப்பட்டது. எனவே, மருத நிலத்தில் நிலையான அரசு ஏற்பட்டது. அரசு வளர்ச்சி காலப்போக்கில் அரசனுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டது. கல்வி கற்றல், கற்றோரை ஆதரித்தல், குடிகளைப் பாதுகாத்தல், தீயவரை ஒறுத்தல், வேள்வி செய்தல் என்பன அரசன் கடமைகளாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழ் மறையாகிய திருக்குறள் அரசனுக்கு அமைச்சன், நாடு, கோட்டை, பண்டாரம், படை, நட்பரசர் என்ற ஆறும் இன்றியமையாதவை என்று வற்புறுத்துகிறது. படைகுடி கூழ் அமைக்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; யானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே என்று புறநானூற்றுப் பாடல் புகல்கின்றது. (செ. 186) இதனால் குடிகளுக்கு அரசனே உயிர் என்று பண்டை மக்கள் கருதினர் என்று கொள்ளலாம். அரசனிடம் கல்வியறிவு, அஞ்சாமை, நுண்ணறிவு, சோம்பலின்மை, செயல்படு திறமை முதலிய பண்புகள் எதிர்பார்க்கப்பட்டன. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. அரசன் ஆட்சி முறைக்குரிய அறத்தில் தவறலாகாது; அறமல்லாதவற்றை நீக்கவேண்டும்; வீரத்தில் மானவுணர்ச்சி யோடு இருத்தல் வேண்டும்; காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருக்கவேண்டும்; இனிய சொற்களைப் பேசவேண்டும்; பொருள் வரும் வழிகளை மேன் மேலும் பெருக்கவேண்டும்; வந்த பொருள்களைச் சேர்க்க வேண்டும்; சேர்த்தவற்றைக் காக்க வேண்டும்; காத்தவற்றைப் பல துறைகளுக்காக வகுக்க வேண்டும்; வகுத்தவற்றை முறைப்படி செலவு செய்யவேண்டும்; நீதிமுறை தவறாது குடிகளைக் காக்கவேண்டும்; புறங்கூறுவோரின் சொற்களைப் பொறுமை யோடு கேட்டு ஆராய்தல் வேண்டும்; கொடை, அருள், செங்கோல் முறைமை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடையவனாதல் வேண்டும். ïit tŸSt® fU¤J¡fŸ.(FwŸ - இறைமாட்சி) அரசன் நெறி தவறுவானா யின் அரசியல் மாறும்; மழை பெய்ய வேண்டும் காலத்தில் பெய்யாது; அதனால் உயிர்களுக்குத் துன்பம் நேரிடும். அதனால் மன்னுயிரெல்லாம் மன்னன் தன்னுயிர் என்னும் தகுதி அழிந்துவிடும் (காதை7, வரி 8-12.) என்று மணிமேகலை கூறுகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய கம்பர், அரசன் குடிகளிடம் அன்பு செலுத்துவதில் தாயை ஒத்திருக்க வேண்டும்; குடிகளுக்கு நன்மை செய்வதில் தவத்தை ஒத்திருக்க வேண்டும்; குடிகள் அறம் பொருள் இன்பங்களில் ஆழ்ந்துவிடாமல் மறுமைக்காக அவர்கள் செய்யவேண்டும்; சாதனங்களை அமைப்பதில் பிள்ளையை ஒத்திருத்தல் வேண்டும்; தீயோரைத் தண்டிப்பதில் நோயை ஒத்திருத்தல் வேண்டும்; அவர்களைத் திருத்துவதில் நோயைத் தீர்க்கும் மருந்தை ஒத்திருத்தல் வேண்டும்; குடிகளின் அறிவாகவும் விளங்க வேண்டும். (கம்பராமாயணம், அரசியல் படலம், செ.4.) என்று கூறியுள்ளார். அரசன் எல்லா உயிர்களையும் தன்னிடத்தே கொண்டுள்ள உடம்பு போன்றவன்; அவன் பிற உயிர்களைத் தன்னுயிர்போல மதித்தல் வேண்டும்; வறியவன் தனக்குரிய சிறிய நிலத்தைக் கண்ணும் கருத்துமாகக் காத்துப் பயிரிடுதல் போல் அரசனும் தன் நாட்டையும் குடிகளையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும், (கம்பராமாயணம், அரசியல் படலம், செ. 10.) என்று கூறியுள்ளது கவனித்தற்குரியது. அரசுத்தன்மை தொன்றுதொட்டு நாட்டில் நிலவிவரும் பழக்க வழக்கங் களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் அரசன் கட்டுப்பட வேண்டியவனாய் இருந்தான். அதனால், அரசன் அரசாங்கத் தலைவனாய் இருப்பினும், அவன் தன் விருப்பம்போல ஆட்சி நடத்த இயலவில்லை. வள்ளுவர் சொன்ன குடி, கூழ் முதலியவை இல்லாமல் தனிப்பட்ட முறையில் அரசன் சிறப்படைய வழியில்லை. தமிழகத்தில் சேர சோழ, பாண்டியர் என்ற மூவரும் முடிமன்னர். இவர்களது ஆட்சிக்கு உட்பட்டும் படாமலும் ஆங்காங்குச் சிற்றரசர் பலர் இருந்து வந்தனர். வீரம், அரசியலறிவு, சிறந்த ஒழுக்கம் முதலிய பண்புகளை உடைய அரசனுக்குப் பின் அவன் மரபினரே, அப்பண்புகளைப் பெற்று வருபவர்கள் என்ற நம்பிக்கையால் அரசுக்கு உரியவர் ஆயினர். அரசனுக்கு உதவியாக ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் இருந்தன என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அமைச்சர் முதல் குதிரைப் படைத் தலைவர் ஈறாகப் பல துறைப் பெருமக்கள் இந்த இரண்டு அவைகளிலும் பங்கு கொண்டிருந்தனர். மன்னன் இவர்களையும் அறக்களத்தந்தணர் முதலிய சான்றோரையும் கலந்தே ஆட்சி புரிந்தான். நாட்டுப் பெருவிழாக்களிலும் நாட்டுப் பெருஞ் செயல்களிலும் இக்குழுவினர் பங்கு கொண்டனர். மன்னன் தவறு செய்யும்போது புலவர் பெருமக்கள் அவன் தவறுகளை எடுத்து விளக்கி அறிவுரை கூறுதல் வழக்கம். சங்க நூல்களில் இவ்வுண்மையை விளக்கும் சான்றுகள் பல உண்டு. கோவூர்கிழார், பரணர், கபிலர், பிசிராந்தையார் முதலிய புலவர் பெருமக்கள் அரசர்க்கு அறிவுறுத்திய சந்தர்ப்பங்கள் பலவாகும். மன்னன் பிறர் யோசனைகளைக் கேளாமல் நெறி தவறும்போது, குடிமக்கள் கலகம் விளைத்து அவனை நெறிப்படுத்துதல் வழக்கம். அரசியலில் ஊர், சபை, நாடு என்ற ஆட்சி மன்றங்கள் இருந்தன. மறையவர் வாழ்ந்த சிற்றூர்களில் இருந்த ஆட்சிமன்றம் சபை எனப் பெயர் பெற்றது. பிற கிராமங்களில் இருந்த ஆட்சி மன்றங்கள் ஊர் எனப் பெயர் பெற்றன. ஒவ்வோர் ஊரிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள் கூட்டமாக இருந்து ஊராட்சியை நடத்தி வந்தனர். பல ஊர்கள் சேர்ந்தது ஒரு நாடு. நாட்டாட்சி மன்றத்தில் எல்லா ஊர்ச் சார்பாளரும் (பிரதிநிதிகளும்) இடம் பெற்றிருந்தனர். இவை தத்தம் பகுதிக்குரிய ஆட்சியை நன்கு கவனித்து வந்தன. நடுஅரசாங்கம் இவற்றின் வேளைகளில் தலையிடுவதில்லை; ஆயினும், பொதுவாக மேற்பார்வையிட்டு வந்தது. இம்மன்றங்கள் தத்தம் சூழ்நிலைக்கேற்பச் சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு செயற்பட்டன. மேலே கூறப்பெற்ற ஐம்பெருங்குழு, எண்பேராயம், புலவர் குழாம், பலவகை ஆட்சி மன்றங்கள் என்பவை அரசனது விருப்பப்படி ஆணை செலுத்துவதைக் கட்டுப் படுத்தி வந்தன என்று கூறலாம். அரசன் கடமைகள் உள்நாட்டில் அமைதியைக் காத்தலும் வெளியார் படையெடுப்புகளிலிருந்து நாட்டைப் பாதுகாத்தலும் அரசனுடைய சிறப்புக் கடமைகளில் முதலிடம் பெறத்தக்கவை. உள்நாட்டில் அமைதியைக் காக்க ஊர்தோறும் ஊர்காப்பாளர் படை (Police) இருந்து வந்தது. அப்படை பகலிலும் இரவிலும் ஊரைப் பாதுகாத்து வந்தது. அப்படையினரே கள்வரையும் பிடித்து வந்தனர். அவர்களுடைய திண்ணிய உடலமைப்பும், திறமையும் சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை என்பன வெளியார் படையெடுப்பை எதிர்த்து நிற்க அமைந்தவையாகும். குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது அறம் எனப்பட்டது. அறத்தைப் பாதுகாப்பது அரசனது கடமை. அறம் என்பது சமுதாய ஒழுங்காகும். வாழையடி வாழையாகச் சமுதாயத்தில் இன்னார் இன்னதைச் செய்யவேண்டும்- இவர் இவரிடம் இன்ன இன்னவாறு நடந்துகொள்ளவேண்டும் என்று நெடுங்காலமாக இருந்து வரும் திட்டமே சமுதாய ஒழுங்கு எனப்படும். அதுவே தர்மம் என்றும் சொல்லப்படும். இந்த நாள்பட்ட திட்டம் சிறிது தவறுமாயினும், சமுதாய அமைப்புக்கெடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்து வந்தது. அதனால் அதனைக் காப்பது அரசனது தலைசிறந்த கடமையாகக் கருதப்பட்டது. அரசனது செங்கோலே இத்தகைய அறத்திற்கு அடிப்படை என்பது வள்ளுவர் கருத்து. சமுதாய ஒழுங்கை நிலைநாட்டியவனே செங்கோல் அரசன் என்று போற்றப்பட்டான். அரசன் எவரிடத்திலும் கண்ணோட்டம் செய்யாமல், குற்றத்தை ஆராய்ந்து, நடுவுநிலைமை பொருந்திச் செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்யவேண்டும். அரசன் குடிகளை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்த வேண்டும். நெறி தவறாத ஆட்சியே அரசனுக்கு வெற்றியைத் தரும்; படைவன்மை வெற்றியைத் தராது. அரசன் குடிகளை வரவேற்று அவர்தம் குறைகளைக்கேட்டு முறை செய்யவேண்டும்; குடிகளைப் பிறர் வருத்தாமல் காக்க வேண்டும்; தானும் வருத்தலாகாது; அவர்தம் குற்றங்களுக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும். பயிரைக் காக்கக் களையை நீக்குதல் போல நல்ல குடிமக்களைக் காக்கக் கொடியவர் சிலரைக் கொலைத் தண்டனையால் ஒழிக்க வேண்டும். இவை எல்லாம் அரசன் கடமைகள், என்பது வள்ளுவர் வாக்கு. குடிகளிடம் பழங்கால முதல் நிலவி வரும் பழக்க வழக்கங்கள் ஒழுக்கமுறைகள் இவற்றைப் பாதுகாத்தலும் அரசன் கடமையாகும். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (செங்கோன்மை.3.) அறன்இழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு (இறைமாட்சி. 4.) என்பது வள்ளுவர் வாக்கு. நாட்டுக்கும் குடிகளுக்கும் நலன் விளைய அரசன் சில வேள்விகள் செய்யவேண்டும் என்று வடமொழி அறநூல்கள் கூறுகின்றன. வடவர் செல்வாக்குத் தமிழகத்தில் பரவிய போது, தமிழ்வேந்தர் பல யாகங்களைச் செய்து, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராய சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்ற அடைமொழிகளைப் பெற்றனர். பல்லவர் காலத்தில் சிவகந்தவர்மன் என்ற பல்லவ மன்னன், அசுவமேதம், அக்நிஷ்டோமம், வாஜபேயம் என்ற வேள்விகளைச் செய்தான் என்று உதயேந்திரப் பட்டயங்கள் உரைக்கின்றன. (R.nfhghy‹, காஞ்சிப் பல்லவர், பக்.34.) பிற்காலச் சோழர்களில் இராசாதிராசன் காலத்தில் பரிவேள்வி (அசுவமேதம்) நடைபெற்றது. (K.A.நீலகண்ட சாத்திரி, சோழ 11, பக்.220.)கி.ã. 17-ஆம் நூற்றாண்டில் தென்காசிப் பாண்டியன் ஒருவன் வேதவேள்வி செய்து சோமயாஜி, தீட்சிதர் என்ற பட்டங்களைப் பெற்றதாகக் கல்வெட்டு உணர்த்துகின்றது. (K.A.நீலகண்ட சாத்திரி, பாண்டிய நாடு, பக். 252.) அரசன் இத்தகைய வேள்விகளைச் செய்யும் பொழுதும், தன் பிறந்த நாள் விழாவிலும், பிற சிறப்பு நாட்களிலும் பலவகைத் தானங்களைச் செய்வது வழக்கம். நாட்டு நலத்திற்கும், குடிகள் நலத்திற்கும் இவ்வாறு தானம் செய்தல் அரசனது கடமை என்பது நம்பப்பட்டது. ஒரு கல்வெட்டில் பதினாறு வகை மகாதானங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவை பொன்முட்டை, பொன்னால் ஆன உலகஉருளை, பொற்குடம், நகைகள் அணியப் பெற்ற பசு, எழுகடல், கற்பக மரம், பொன் காமதேனு, பொன்னாலான தரை, குதிரை பூட்டப்பெற்ற பொன்தேர், தானம் செய்பவனது நிறையுள்ள பொன், ஆயிரம் பசுக்கள், பொன் குதிரை, ஹேமகர்ப்பம் என்ற பொன் பத்திரம், பொன்னாலான யானை பூட்டப்பெற்ற தேர், ஐந்து கலப்பைகள் ஆகும். (Epigraphia Indica, I.pp. 364- 368; S.I. polity, p. 26.) இவற்றுள் தன்நிறையளவு பொன்னை வழங்குதல் துலாபாரம் எனப்பட்டது. சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரையில் மாடல மறையோனுக்குத் துலாபார தானம் செய்தான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. (தோடார் போந்தை வேலோன் தன்னிறை, மாடல மறையோன் கொள்கென் றளித்து - காதை 27, வரி 175- 176. ) அரசன் சிறந்த புலவர்க்கும் மறையவர்க்கும் சமயத் தலைவர்க்கும் நிலங்களையும் சிற்றூர்களையும் தானமாக வழங்கினான். சின்னமனூர்ச் செப்பேடும், பல்லவர், பிற்காலச் சோழர், பாண்டியர், நாயக்கர் செப்புப் பட்டயங்களும் இந்த உண்மையை உணர்த்துகின்றன. பொன்னைப்போல் வளம் கொழிக்கும் ஆற்றங்கரை ஊர்களும் இடங்களும் வேதங்களில் வல்ல மறையவர்க்கு வழங்கப்பட்டதைப் பட்டயங்கள் தெரிவிக்கின்றன. பிரமபுரி, பிரமதேசம் என்பன பிராமணருக்குத் தானம் கொடுக்கப்பட்ட ஊர்களேயாகும். மகாதானபுரம் என்ற ஊரின் பெயரும் மகாதானத்தைப் பற்றிய உண்மையை இன்றளவும் தெரிவித்து நிற்றல் காணலாம். குடிகளால் பின்பற்றப்படும் சமயங்களைப் பாதுகாத்தல் அரசனது கடமையாகும். அதனால் தமிழரசர் தம் நாடுகளில் இருந்த பௌத்த, சமண, சைவ, வைணவக் கோவில்களை வளப் படுத்தினர்; புதிய கோவில்களையும் கட்டுவித்தனர். மன்னரைப் பின்பற்றி உயர் அலுவலரும் சிற்றரசரும் பொதுமக்களும் அவற்றுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அக்கால கோவில்கள் கல்விக்கும் சமய வளர்ச்சிக்கும் நிலைக்களங்களாக இருந்தன; அறிவுக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் உரியனவாக இருந்தன. எனவே, அவற்றை வளப்படுத்துதல் அரசனது கடமையாகும். அரசனது சமயம் எதுவாக இருப்பினும், அவன் தன் நாட்டு மக்களை மகிழ்விக்க, எல்லாச் சமயங்கட்கும் உதவியும் காப்பும் அளித்துவந்தான். சங்க காலத் தமிழரசர் இந்திர விழா போன்ற விழாக் காலங்களில் பல சமய வாதிகளையும் வரவேற்றுப் பொது மேடைகளில் பேசச் செய்தனர்.1 (தண்மணற் பந்தரும் தாழ்தரும் பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்; ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் மணிமேகலை, 1. வரி 58- 61.) அவரவர் விருப்பம்போல எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமையை அளித்திருந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம்- மணிமேகலை கொண்டு நன்கறியலாம். முதல் இராசராச சோழனும் முதல் இராசேந்திர சோழனும், மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் இவற்றை ஆண்ட அரசனது வேண்டுகோளின்படி நாகையில் இருந்த பௌத்த விஹாரத்திற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தைத் தானமாக விட்டனர் என்பது இங்கு நினைக்கத்தகும். குடிகளுக்குச் சமயத் துறையில் ஆர்வத்தை உண்டாக்க அரசர் கோவில் விழாக்களில் கலந்து கொண்டனர்; பலகோவில்களுக்கு யாத்திரையாகச் சென்றனர். ஐயடிகள் காடவர்கோன் பல தலங்களைத் தரிசித்து க்ஷேத்திர வெண்பாப் பாடினார். மூன்றாம் நந்திவர்மனான கழற்சிங்கன் தலயாத்திரை செய்தான். பாண்டியன் நெடுமாறன் தலயாத்திரை செய்தான். பிற்காலச் சோழரும் பாண்டியரும் தலயாத்திரை செய்தனர் என்பது தெரிகிறது. சமுதாய ஒழுங்கைக் காப்பதில் அரசன் இரு வேறுபட்ட கடமைகளைப் பெற்றிருந்தான். சமுதாய அமைப்பு, சமயம், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்கள், அற நிலையங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒன்று. காலத்திற்கு ஏற்பச் சமுதாயத்தை மாற்றியமைத்தல் என்பது மற்றொன்று. குடிமக்களது பொருளாதாரத் துறையிலும் உதவிபுரிதல் அரசனது கடமையாகும். பயிர்த்தொழில், கைத்தொழில், வாணிகம் என்ற மூன்றையும் அரசன் ஆதரித்தான். பல காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள் ஆக்கப்பட்டன; புதிய சிற்றூர்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆறுகளுக்குக் கரைகள், ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன; உயர்த்தப் பட்டன. அவற்றிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டன. நாடெங்கும் நீர் வசதி உண்டாக்கப்பட்டது. ஆற்றுப்பாய்ச்சல் இல்லாத இடங்களில் பெரிய குளங்களும் ஏரிகளும் வெட்டப் பட்டன. அவற்றில் மழை நீர் தேக்கப்பட்டது. அவற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு நீர் கொண்டு செல்லப் பட்டது. விளைபொருள்களும் செய்பொருள்களும் உள் நாடுகளிலும் வெளிநாடு களிலும் விற்பதற்கு அரசாங்கம் உதவியளித்தது. ஏற்றுமதி இறக்குமதிக்குரிய துறைமுகங்கள் பாதுகாக்கப்பட்டன. கப்பல் கொள்ளைக்காரர்கள் தண்டிக்கப் பட்டனர். சேரநாட்டை அடுத்த கடற்பகுதியில் சில தீவுகளில் மறைந்திருந்து வணிகர் கப்பல்களைக் கொள்ளையிட்டு வந்த கடம்பர் என்ற கூட்டத்தாரை நெடுஞ்சேரலாதனும் செங்குட்டுவனும் நிலை குலையச் செய்தனர் என்று பதிற்றுப் பத்துக் கூறுகின்றது. முதல் இராசேந்திரசோழன் தன் போர்க் கப்பல்களை அனுப்பி மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றில் பல பகுதிகளை வென்றது, சோழ நாட்டு வாணிகத்தை நிலை நிறுத்தவே ஆகும் என்று வரலாற்று ஆசிரியர் கருதுகின்றனர். தமிழரசர் ரோமப்பேரரசர்களோடும், சீனப்பேரரசர் களோடும், பிறவெளிநாட்டு அரசர்களோடும் நல்லுறவு கொண்டு கடல் வாணிகத்தை வளர்த்தனர் என்பதைத் தமிழக வரலாற்றால் அறிகின்றோம். வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாட்டுத் துறைமுக நகரங்களில் அயல்நாட்டு வணிகர் உயர்ந்த வளமனைகளில் தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. . (“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கை.”-காதை5. வரி 9- 10.) இசை, நடனம் முதலிய நுண்கலைகளை வளர்த்து ஊக்குவதும் அரசன் கடமையாகும். சோழ மன்னன் மாதவியின் நடன அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கி அவளுக்குத் தலைக்கோலி என்ற பட்டத்தையும் ஆயிரத் தெண்கழஞ்சு பொன்னையும் பசும் பொன்மாலையையும் பரிசு வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. (சிலம்பு, அரங்கேற்று காதை, பரி 159- 163.) அரசுரிமை அரசனாக இருந்து ஆட்சி அநுபவம் பெற்றவரது மரபில் வந்தவரே அடுத்து அரசராக வருவது மரபாக இருந்தது. அஃதாவது, அரசன் மகனே பொதுக்கல்வி கற்ற பிறகு இளவரசனாக முடிசூடித் தந்தையிடமே அரசியல் பயிற்சியைப் பெறுதல் வழக்கம். அரசனுக்கு மனைவியர் பலர் இருப்பினும், அவருள் மூத்தவள் மகனே பட்டத்திற்கு வருதல் மரபு. மூத்தவளுக்குப் பிள்ளை இல்லையாயின், எந்த மனைவிக்குப் பட்டத்துக்குரிய மகன் இருந்தானோ அவனை இளவரசனாக ஏற்றுக்கொள்ளுதல் மரபு. அரசன் பிள்ளையின்றி இறந்தால், அல்லது பிள்ளை இல்லையென்ற உறுதி ஏற்படின், அரசனது தம்பி அல்லது நெருங்கிய உறவினர் பட்டத்தைப் பெறுதல் இயல்பு. பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தவுடன் கொற்கையிலிருந்த வெற்றி வேற்செழியன் அரசனானான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. சுந்தரசோழன் இறந்தவுடன் அவனது ஒன்றுவிட்ட தம்பியான உத்தம சோழன் பட்டத்தை அடைந்தான். அவனுக்குப் பிறகு சுந்தர சோழனது இரண்டாம் மகனான முதல் இராசராசன் பட்டத்தை அடைந்தான். முதல் இராசாதிராசன் பிள்ளையின்றி இறந்தான். ஆதலால் அவன் தம்பியான இரண்டாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறினான். அவன் தம்பி வீர ராசேந்திரன் மணிமுடி சூடினான். ஒரு பரம்பரையைச் சேர்ந்த இறுதி அரசன் பிள்ளையின்றி இறந்தால், பங்காளிப் பரம்பரையினரில் தகுதியுடைய ஒருவர் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. பல்லவ அரசருள் இரண்டாம் பரமேவரன் பிள்ளையின்றி இறந்தான். உடனே அரசியல் அதிகாரிகள் சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீம வர்மன் மரபில் வந்த பல்லவ மல்லனைப் பல்லவ அரசனாக்கினர். அவன் தன் தந்தைக்கு மூத்த மகன் அல்லன்; கடைசி மகன். முதல் மூவரும் அரசராக மறுக்கவே, பன்னிரண்டு வயதுடைய பல்லவ மல்லன் விருப்பத்தோடு முடி சூடிக்கொண்டான். ஆண் பிள்ளைகள் மரபில் அரசுபுரிய பிள்ளை யில்லாவிடில், பெண் பிள்ளைகள் வழியில் பிறந்த ஆடவனை அரசனாக்குதலும் வழக்கமாக இருந்து வந்தது. முதல் இராசராசன் மகளான குந்தவ்வை கீழைச் சாளுக்கிய விமலாதித்தனை மணந்தான். அவ்விருவருக்கும் இராசராச நரேந்திரன் என்பவன் பிறந்தான். அவன் கங்கை கொண்டசோழன் மகளான அம்மங்காதேவியை மணந்து கொண்டான். அவ்விருவருக்கும் பிறந்தவன் முதற் குலோத்துங்கன். இவன் சாளுக்கிய- சோழன். வீரராசேந்திரன் மகனான அதிராசேந்திரன் இறந்தவுடன், ஆண்வழியில் பிள்ளை இல்லாததால், பெண் வழியைச் சேர்ந்த முதற்குலோத்துங்கனே சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான். இவ்வாறே இரண்டாம் இராசராசன் இறந்த பிறகு, ஆண் வழியில் பிள்ளையில்லாததால், விக்கிரமசோழனது மகள் வயிற்றுப் பேரனான எதிரிலிப்பெருமாள் என்பவன் இரண்டாம் இராசாதிராசனாக முடிசூடிக் கொண்டான். ஒரு நாட்டில் பேரரசன் முடிமன்னனாக இருக்கும் பொழுது, அவன் தம்பியர் நாட்டின் சில பகுதிகளை அவனுக்கு அடங்கி ஆண்டு வருதல் உண்டு. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டில் முடியரசனாக விளங்கினான். அதே காலத்தில் பாண்டிய நாட்டின் பல பகுதிகளை அவன் உடன் பிறந்தார் நால்வர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் மூத்தவனுக்கு அடங்கி இளையவர் நாட்டின் சிலபகுதிகளை ஆளுதல் வழக்கம். முதற் குலோத்துங்கன் தன் மக்களையும் உறவினர்களையும் மாகாணத் தலைவர்களாக நியமித்தான். பட்டத்திற்குரிய மைந்தன் இல்லாவிடில் அமைச்சரும் உயர் அலுவலரும் சான்றோரும் பட்டத்து யானையை வெளியில் ஏவி விடுதல் வழக்கம்; அது எவனைத் தன்முதுகின் மீது ஏற்றிக்கொண்டு வருகிறதோ அவனை அரசனாக்குவது அக்கால வழக்கம். அங்ஙனம் தேர்ந்தெடுக்கப் பட்டவரே களப்பிரர் காலத்தில் மதுரையில் வணிகராயிருந்த மூர்த்தி நாயனார் என்பவர். (பெரியபுராணம்- மூர்த்திநாயனார் புராணம். செ. 27- 44.) முடிசூட்டு விழா முடி சூடிக்கொண்ட பின்னரே ஒருவன் சட்டப்படி அரசனாகிறான்; ஆட்சி உரிமையைப் பெறுகிறான். அதனாற்றான் முதலாம் இராசாதிராசன் கொப்பம் போர்க் களத்தில் இறந்தபோது இளவரசனான அவன்தம்பி இரண்டாம் இராசேந்திரன் அப்போர்க்களத்திலேயே முடி சூடிக் கொண்டான். இதனை நோக்க, முடிசூட்டு விழா அரசியல் சிறப்பு வாய்ந்தது- சட்டதிட்ட முக்கியத்துவமும் வாய்ந்தது என்பதை அறியலாம். முடி சூடிக்கொள்பவனுக்கு இன்ன வயது இருக்க வேண்டும் என்னும் வரையறை இல்லை. சங்க காலக் கரிகாற்சோழன் ஐந்து வயதில் முடி சூட்டப்பெற்றான் என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது. (அஞ்சின் முடிகவித் தைம்பதாம் ஆண்டளவில், கஞ்சிக் காவேரி கரைகண்டு -பெருந்தொகை. செ. 779.) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவரை வென்று மீண்ட பொழுது, தாலி களைந்தன்றும் இலனே என்று இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர் வியந்து பாராட்டினார். (புறநானூறு, செ.77.) அதாவது, திருஷ்டி, தோஷம் முதலியன தாக்காதிருப்பதற்குப் பிள்ளைப் பருவத்தில் கழுத்தில் கட்டப்படும் ஐம்படைத்தாலி, இளைஞனானதும் நீக்கப்படுதல் மரபு. அரசனான நெடுஞ்செழியன் அதை நீக்கவில்லை என்பது, அவனது மிக்க இளமையைக் குறித்தவாறாம். எனவே, அவன் சிறுவனாக இருந்தபொழுதே அரசனானான் என்று கருதுதல் தகும். பல்லவமல்லன் பன்னிரண்டு வயதில் முடி சூட்டப் பெற்றான். (R. கோபாலன், பல்லவர் வரலாறு, பக். 114- 118 - இரண்டாம் அம்ம என்பவனும் தன் 12-ஆம் வயதில் வேங்கி அரசனானான். 433-of 1924.) இரண்டாம் இராசாதிராசன் இரண்டு வயதில் அரச பதவி ஏற்றான். அவன் வயது வரும் வரையில் அவனது அமைச்சரான பல்லவராயர் ஆட்சியைக் கவனித்து வந்தார். முடிசூட்டு விழாவைப்பற்றிய விவரங்கள் தமிழ் நூல்களில் கிடைத்தல் அருமை. வைகுந்தப்பெருமாள் கோவில் சிற்பங்களைக் கொண்டு பல்லவர் கால முடிசூட்டு விழாபற்றிய விவரங்களை ஒருவாறு அறியலாம். முடிசூட்டப்பெறுபவன் குதிரைமீது அமர்த்தப்பட்டு அரண்மனைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவான்; அரண்மனையில் அமைச்சர் முதலிய உயர் அலுவலர், நகரப் பெருமக்கள், சிற்றரசர், ஆட்சி மன்றக் குழுவினர் இவர்களால் வரவேற்கப்படுவான். பின்பு அமைச்சர், சேனைத் தலைவர், கடிகையார் முதலிய பெருமக்கள் அவனுக்கு முழுக்குச் (அபிஷேகம்) செய்வர்; முழுக்குக்குப் பின்பு அவனுக்கு அரச சின்னங்களை வழங்குவர். (டாக்டர் மீனாட்சி. வைகுந்தப்பெருமாள் கோவில் சிற்பங்கள், பக்கம். 36- 37.) கிருஷ்ணதேவராயர் முடிசூட்டுவிழா பற்றிய விபரங்களை இங்கு அறிதல் சுவை பயக்கும்; அவர் பொன் ஆசனத்தில் அமர்ந்து பத்துவகைத் தானங்களையும், பதினாறு வகைத் தானங்களையும் செய்தார்; தம் நிறை அளவு பொன்னையும் வெள்ளியையும் முத்துக்களையும் தானம் செய்தார். முழுக்குக்கு என்று கங்கை, யமுனை, சரசுவதி, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி, பொருநை என்ற ஆறுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் அவர் மீது சொரியப்பட்டது. நான்மறையாளர் வேதமந்திரங்களை ஒலித்துக் கொண்டிருந்தனர்; பல்லியங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பின்பு அவர் தங்க நாணயங்களாலும் நவமணிகளாலும் அபிஷேகம் செய்யப்பட்டார். பின்பு சந்தனம், கத்தூரி முதலிய மணப் பொருள்கள் அவர் உடம்பில் பூசப்பெற்றன. (இராய வாசகம், பக். 17- 19.) அபிடேகத்திற்குப் பின்னர்த் தங்கப் பட்டம் அரசர் நெற்றியில் கட்டப்பட்டது; தலையில் முடி சூட்டப்பெற்றது. இங்ஙனம் பட்டம் கட்டப்பெறுவதால் பட்டாபிஷேகம் என்றும், தலையில் மகுடம் சூட்டப்பெறுவதால் மகுடாபிஷேகம் என்றும் முடிபுனைவிழா இருவகைப் பெயர்களைப் பெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே அரச சின்னங்கள் வழங்கப்படும். அந்த வினாடி முதல் அவர் அரசுரிமையை ஏற்றுக் கொண்டார் என்பது பொருள்; அப்பொழுதுதான் தம் பெயரில் அரசியல் ஆணைகளைப் பிறப்பிக்க உரிமை உடையவர் ஆனார். இத்தகைய சடங்குகளைக் கொண்டிருத்தலால் முடி சூட்டு விழா அரசியல் சிறப்புப் பெற்றதாகும். திருமுழுக்குப் பெயர் முடிசூட்டு விழாவின்போது அரசனுக்குத் திருமுழுக்குப் பெயர் (அபிஷேக நாமம்) இடப்படும். பல்லவ மல்லன் (இரண்டாம்) நந்திவர்மன் என்ற அபிஷேக நாமம் பெற்றான். அருண்மொழி வர்மன் பட்டம் பெற்றதும் முதலாம் இராசராசன் என்று பெயர் பெற்றான். இராசேந்திரன் என்று அழைக்கப்பெற்றவன், பட்டம் பெற்றதும் முதல் குலோத்துங்கன் எனப்பட்டான். எதிரிலிப்பெருமாள் பட்டம் பெற்றது (இரண்டாம்) இராசாதிராசன் எனப்பட்டான். (தானார்ணவன் வேங்கி வேந்தனாக முடி சூடியபோது சளாக்கி வீமன் என்ற அபிஷேக நாமத்தைப் பூண்டான். -வேங்கிச் சாளுக்கியர், பக்.207) மன்னன் முடி சூட்டிக்கொண்ட பின்னர்த் தனக்கு நெருக்கமானவருடன் விருந்துண்பான். அவ்வமயம் அவனிடம் அளவு கடந்த பற்றுடைய வீரர்கள் விருந்துண்பர்; தம் அரசன் இறந்தால் தாமும் உடன் இறப்பதாகச் சூள் செய்த கொள்வர். இவர்கள் வேளைக்காரப் படையினர் அல்லது ஆபத்து உதவிகள் என்று பெயர் பெறுவர். இத்தகைய படையினர் பாண்டியனிடம் இருந்தனர் என்று மார்க்கோபோலோ குறித்துள்ளார். இப் படையினர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் இருந்தனர் என்று பெரியபுராணம் பேசுகிறது. (பெரிய புராணம், வெள்ளானைச் சருக்கம், செ. 37- 38) முடிசூட்டு விழாவுக்கு முன் அவனுக்குத் திருமணம் நடந்திருக்குமாயின், மனைவியும் உடனிருந்து முடி சூடிக் கொள்வாள். அவள் அன்று முதல் கோப்பெருந்தேவி அல்லது மாதேவி என்று அழைக்கப்படுவாள். முடிசூட்டு விழாவில் முதலமைச்சனே சிறப்புடை வேலைகளைச் செய்வான். இரண்டாம் இராசாதிராசனது முடிசூட்டு விழா அவனது முதலமைச்சர் பல்லவராயரால் நடத்தப் பெற்றது. (Epigraphia Indica, 21,pp. 185) இவ்விழா பெரும்பாலும் அரண்மனையிலுள்ள திருமுழுக்கு (அபிஷேக) மண்டபத்தில் நடைபெறுதல் வழக்கம். காஞ்சி அரண்மனையிலும், விக்கிரம சோழபுரம் அரண்மனையிலும் இத் திருமுழுக்குமண்டபங்கள் இருந்தன- அங்கு அழகிய அரியணைகள் இருந்தன என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள். 111, 73; 261 of 1915.) தென்காசிப் பாண்டியர் சிலர் தென்காசி விசுவநாதர் திருக்கோயில் மண்டபத்தில் முடிசூடிக்கொண்டனர் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. (Travancore Archaeological Series, I, 7, 10.) பகைவர் நாட்டை வெற்றி கொண்ட மன்னன் பகைவரது தலைநகரில் முடி சூட்டிக்கொள்ளுதல் வழக்கம். அவன் வெற்றிக்கு அறிகுறியாகவும், வீரத்துக்கு அறிகுறியாகவும் இரண்டு முடிகளைச் சூட்டிக்கொள்வான். மூன்றாம் குலோத்துங்கன் கரூரையும் மதுரையையும் வென்று அவ் விடங்களில் வெற்றி முழுக்கும் (விஜயாபிஷேகமும்) வீர முழுக்கும் (வீராபிஷேகமும்) செய்துகொண்டான். (74 of 1895.) கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உறையூரையும் தஞ்சையையும் வென்று முடி கொண்ட சோழபுரத்திலிருந்த அரண்மனைத் திருமுழுக்கு மண்டபத்தில் வீர முழுக்குச் செய்து கொண்டான். (K.A.Úyf©l சாத்திரி, பாண்டியநாடு, பக். 144.) மன்னற்காக ஆட்சி புரிதல் மன்னன் அரசாள இயலாத சிறுவனாய் இருக்கும் பொழுதும் திறமையற்று இருக்கும் பொழுதும் முதலமைச்சனே மன்னனுக்குப் பதிலாக ஆட்சி புரிதல் உண்டு. இரண்டாம் இராசாதிராசன் இரண்டாண்டுச் சிறுவனாக இருந்தபோது முடி சூட்டப் பெற்றான். பல்லவராயர் என்ற முதலமைச்சரே சோழப் பெருநாட்டை - ஆட்சி புரிந்தார். மதுரையை ஆண்ட நாயக்கருள் மூன்று மாதச் சிறு குழந்தைக்கு முடிசூட்டப் பெற்றது. அப்பிள்ளையின் பாட்டியான இராணி மங்கம்மாள் அரசன் சார்பில் நாட்டை ஆண்டாள். (R.r¤âaehj ஐயர், மதுரை நாயக்கர், பக். 204.) முடி துறத்தல் அரசன் நோயுற்று அல்லது முதுமை அடைந்து தன் மகனையோ பிறரையோ அரசனாக்கி முடி துறத்தல் உண்டு. தொல்காப்பியர் இதனைக் கட்டில் நீத்தல் என்பர். (தொல்காப்பியம், புறத்திணை இயல், 76.) சோணாட்டு ஆட்சியைத் தன் மக்கள் இருவரும் விரும்பு கின்றனர் என்பதை உணர்ந்தவுடன், கோப்பெருஞ் சோழன் தன் பதவியைத் துறந்தான என்று புறநானூறு புகல்கின்றது. (செ.217.) பிற்காலச் சோழப் பேரரசர் ஒவ்வொருவரும் இளவரசனுக்குப் போதிய அரசியல் அநுபவம் வந்தவுடன் முடி துறத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அரசுரிமை சங்க காலத்தில் அரசன்- அமைச்சர், தானைத் தலைவர் முதலிய அரசாங்க உயர் அலுவலருடன் அத்தாணி மண்டபத்தில் இருந்து அரசியல் செய்திகளைக் கவனித்து வந்தான். அரசனுடன் கோப்பெருந்தேவியும் உடனிருப்பது வழக்கமாக இருந்திருக்கலாம். மலை வளத்தைக் காணச் சென்ற சேரன் செங்குட்டுவனோடு அவன் பட்டத்தரசியும் உடனிருந்தாள் என்பதும், அமைச்சரும் தானைத் தலைவரும் இளங்கோவடிகளும் சாத்தனாரும் உடனிருந்தனர், என்பதும், கண்ணகியைக்கோவில்கட்டி வழிபடவும், என்று பட்டத்தரசிதான் சொன்னாள் என்பதும் போன்ற செய்திகளை நோக்கும்போது, அத்தாணி அரசுரிமையும் உடனிருந்திருக் கலாம் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். இவ்வழக்கம் பிற்காலச் சோழர்காலத்திலும் இருந்தது என்பது,..........òtd முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி வன்மரான ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது எனவரும் கல்வெட்டால் அறியலாம். (தென்னிந்தியக்கல்வெட்டுக்கள். 327.) அரசன் கழுத்தில் பல வகை மாலைகளை அணிந் திருப்பான்; முன் கையில் கடகம் விளங்கும்; விரல்களில் மோதிரங்கள் இருக்கும்; காலில் வீரக் கழல் இருக்கும்; உடம்பின்மீது பட்டாடை போர்த்திருப்பான். மாறவர்மன் குலசேகர பாண்டியன் நவமணிகள் பதித்த பலவகை அணிகளை அணிந்திருந்தான்; விலையுயர்ந்த 100 (108) பெரிய முத்துக்களும் மணிக்கற்களும் இணைக்கப் பெற்றபட்டுக் கயிற்றை (பட்டு நூல் மாலையை)க் கழுத்திலிருந்து தொங்கவிட்டிருந்தான்; காலை மாலைகளில் அந்த முத்துக்களையும் மணிகளையும் உருட்டிச் செபித்தான்; கையில் மிக்க விலையுயர்ந்த முத்துக்கள் பதித்த தங்கக் கடகங்கள் மூன்றை அணிந்திருந்தான்; கால்களிலும் விலையுயர்ந்த வீரக் கழலை அணிந்திருந்தான்; கால் விரல்களில் மோதிரங்களை அணிந்திருந்தான், என்று மார்க்கோபோலோ குறித்துள்ளார். (K.A.N. Sastry, Foreign Notices of S.I. p. 164.) அத்தாணி மண்டபத்தில் அரசன் பொன் அரியணை மீது அமர்ந்திருப்பான். அவன் தலைமீது வெண்கொற்றக் குடை நிழல் செய்யும்; இரண்டு பக்கங்களிலும் பணிப்பெண்கள் சாமரை வீசவர். அரசியல் உயர் அலுவலரும் நகரப் பெருமக்களும் அவையை அலங்கரிப்பர். அரசவையின்உயர்வும்சிறப்பும்,அரண்மனைஉயர்அலுவலராலும்பணிமக்களாலும்பாதுகாக்கப்பட்டன.அவர்கள் அரசன் பணியிலேயே இருப்பவர்கள். அவர்கள் தலைவன் பிற்காலத்தில் சர்வாதிகாரி எனப் பெயர் பெற்றான். அரசனைக் காண வருவோர்க்கு நேரங் குறித்தல் முதலிய gலவும்ïவ்வதிகாரிfவனித்துtந்தான்.v¥bghGJ« அரசனுடன் இருந்து அவன் திருவாய் மலர்ந்தருளிய கட்டளைகளை எழுதுவதும் சிறப்புச் செயல்களை அவன் நினைவுக்குக் கொண்டு வருதலும் அரசனது அந்தரங்கச் செயலாளர் கடமையாகும். அவன் திருமந்திர ஓலை எனப்பட்டான். அரண்மனை அலுவலர் அரசனது அரண்மனையில் வேலை செய்யும் ஆண்கள் பலர்; பெண்கள் பலர். அரசனது தனித் தன்மையைப் பாதுகாக்கவென்றே அமைந்த பணிமக்கள் பலராவர். அரண்மனைக்குத் தேவையான உடைகளைத் தைப்பவர். நகைகளைச் செய்பவர், தோட்டங்களைப் பாதுகாப்பவர். விளக்கேற்றுபவர், அரண்மனைப் பொருள்களைத் துடைப்பவர் எனப் பலவகைப் பணிமக்கள் அரண்மனையில் வேலை செய்தனர். அரசனது தனித் தன்மையைப் பாதுகாப்பவருள் வெண்கொற்ற குடையை ஏந்தி வருபவர், விளக்குக் கொண்டு வருபவர், அரசனுடைய கரிகளையும், பரிகளையும் கவனிப்பவர், வெற்றிமுரசு கவனிப்பவர், அடைப்பைக்காரர் சாமரம் வீசுபவர் என்பவர் குறிக்கத் தக்கவர். அரசனுக்கு வெற்றிலை பாக்குக் கொடுப்பவர் அடைப்பக்காரர் எனப் பட்டனர். அவர் இருவகைப் பட்டனர். முதல் வகையினர் பெரிய பிள்ளையாண்டான் எனவும், இரண்டாம் வகையினர் சிறிய பிள்ளையாண்டான் எனவும் பெயர் பெற்றனர். (Pudukkottai State Manual, p. 446.) சோழப் பேரரசர் அரண்மனையில் பேரரசர் நாடோறும் நடத்திய வழிபாட்டிற்குரிய பணிகளைச் செய்துவந்த பணிமக்கள் பலராவர். அவர்களைக் கண்காணிக்க ஓர் உயர் அலுவலன் இருந்தான். அவனது அலுவற் பெயர் தேவார நாயகம் என்பது. (தேவாரம் என்னும் சொற்கு வழிபாடு என்பது பொருள். -தமிழ்ப்பொழில், துணர்34, மலர்9, பக். 268.) அரண்மனைப் பணிமக்கள் பல கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு கூட்டமும் வேளம் எனப்பட்டது. அவருள் பெண்களே மிகப் பலராவர். ஒரு சோழனது அரண்மனையில் மூவாயிரம் ஆடல் பாடல் மகளிர் இருந்தனர் என்று நேரில் கண்ட அயல் நாட்டார் (சௌ- ஜூ- குவா என்ற சீனர்) குறிப்பிட்டுள்ளார். (Chau - Ju -Kua, p.95.) அரசன் மனைவியர் பண்டை இந்திய அரசர் ஒவ்வொருவருக்கும் மனைவியர் பலர் இருந்தனர். சிலருக்கு நூற்றுக்கணக்கான மனைவியரும் இருந்தனர். சங்ககால அரசருக்கு எத்துணை மனைவியர் இருந்தனர் என்பது திட்டமாகக் கூற இயலாது. பூத பாண்டியனுக்கு மனைவி கோப்பெருந்தேவி, சேரன் செங்குட்டு வனுக்கு மனைவி இளங்கோவேண்மாள் என்று இருந்தனர். ஆயின், வெளிமான் போன்ற சிற்றரசர்க்கு மனைவியர் சிலர் இருந்தனர் என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது. பேகனுக்குக் கண்ணகி என்ற அம்மை இருந்தாள்; தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குப் கோப்பெருந் தேவி இருந்தாள். பகைவரை யான் வெல்லேனாயின், யான் எனது மனைவிவியை விட்டுப் பிரிந்தவனாவேன், (அவர்ப்புறங் காணேன் ஆயின், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக. -புறநானூறு, செ. 71.) என்று பூதபாண்டியன் சூள் உரைத்ததை நோக்க, அவனைப் போன்றவர் ஒரு மனைவியோடு வாழ்ந்தனர் என்பதை அறியலாம். பலதாரம் அக்காலத்தில் தடையில்லையாயினும், நலங்கிள்ளி, பூதபாண்டியன், செங்குட்டுவன், பேகன் போன்ற அரசர் பலர் ஒரு மனைவியரோடு வாழ்ந்தனர் என்று கருதுதல் பொருத்தமாகும். பல்லவ மன்னர் மனைவியர் சிலரோடு வாழ்ந்தனர் என்பதை, அவர்தம் உருவச் சிற்பங்களும் கல்வெட்டுக்களும் உணர்த்துகின்றன. பிற்காலச் சோழர் மனைவியர் பலரைப் பெற்றிருந்தனர். என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு மனைவியர் ஐந்நூற்றுவர் இருந்தனர்; நாட்டிலிருந்த அழகிகளை எல்லாம் மணந்து கொள்ளுதல் அரசர் வழக்கம் போலும்! என்று மார்க்கோபோலோ குறித்துள்ளார். (சிலப்பதிகாரம், காதை 16, வரி. 131- 133.) ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறைவிடமும் பிற வசதிகளும் அளிக்கப்பட்டன. ஆடல்- பாடல் மகளிர் அரண்மனையில் அரசனை ஆடல் பாடல்களால் இன்புறுத்தவும், பிற பணிகளைச் செய்யவும் நூற்றுக்கணக்கான அழகிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த முறை பிற்காலச் சோழர் காலத்தில் விரிந்திருந்தது. அரண்மனையில் இருந்த ஆடல் பாடல் மகளிரையும், அழகிய பணிப் பெண்களையும், அவர்கள் மிக நெருங்கி அரசனோடு பழகுவதையும் கண்ட மேனாட்டார், அத்துணையரும் அவன் மனைவியரென்றே கருதி விட்டனரோ, அல்லது உண்மையிலேயே நூற்றுக் கணக்கான மனைவியர் இருந்தனரோ, உண்மை தெரியவில்லை. அரண்மனையுள் இருந்த ஆடல் பாடல் மகளிர் ஆடினர்- பாடினர் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறியலாம். அவர்களுடைய ஆடல் பாடல்களிலும் உடல் அழகிலும் மன்னர்கள் மதி மயங்குதலும் உண்டு என்பதையும் அதே நூல் தெரிவிக்கின்றது. (K.A.N. Sastry, F.N. of S.I.p. 184.) மெய்காப்பாளர் சிற்றரசர் பலர் அரசவையில் அரசனது மெய்காப்பாளராக இருந்துவந்தனர். அவர்கள், திருமெய்காப்பார் என்று பெயர் பெற்றனர். அவர்கள் அரசன் செல்லுமிடமெல்லாம் உடன் சென்றனர்; நெருங்கிப் பழகினர்; நாட்டில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். தமிழிலுள்ள உலா நூல்களைக் கொண்டும் இவ்வுண்மையை உணரலாம். அரசன் இறந்து, அவன் உடலுக்கு எரியூட்டும் பொழுது இம் மெய்காப்பாளரும் அத்தீயைச் சுற்றிலும் தீயை உண்டாக்கித் தாமும் விழுந்து இறப்பது வழக்கம். அங்ஙனம் செய்வதால் அவர்கள் அடுத்த பிறவியிலும் தம் அரசனிடம் இருப்பர் என்பது அவர்தம் நம்பிக்கையாம், என்று மார்க்கோ போலோ குறித்துள்ளார். (K.A.N. Sastry, F.N. of S.I. P.P. 165.) பொழுது போக்கு அரசன் தம் ஓய்வு நேரங்களில் வேட்டையாடுதல் உண்டு. யானை, புலி, காட்டு எருமை முதலியவற்றை அரசன் வேட்டையாடுவான்; குடிமக்களுக்குத் துன்பம் செய்யும் கொடிய விலங்குகளை வேட்டையாடுவான். அவ்வாறு கொடிய விலங்குகளை வேட்டையாடுவது அரசனது கடமை என்று பெரிய புராணம் பேசுகிறது. அரசன் போர்ப்பயிற்சி மிக்கவன்; ஆதலால் போரில் வல்ல வீரர்களோடு பழகுவான். போர்ப் பயிற்சிக் கூடம் போரவை எனப்பட்டது. பெருநற்கிள்ளி என்ற சோழன் இத்தகைய பேரவையில் சிறந்த பங்கு கொண்டவன்; ஆதலால் பேரவைக் கோப்பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றான். (புறநானூறு, செ. 80- 85.) பண்டைக்கால முதலே மல்லர்கள் தமிழகத்தில் இருந்தனர். அவர்கள் அரசன் முன்னிலையில் மற்போர் புரிவர். அரசனும் பிறரும் அதனைக் கண்டு களிப்பது வழக்கம். சங்ககாலத்தில் உறையூரில் முக்காவனாட்டு ஆமூர் மல்லன் என்று ஒருவன் இருந்தான். அவன் மற்போரில் சிறந்தவன்; போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்பவனால் பொருது கொல்லப்பட்டவன். சாத்தந்தையார் என்ற புலவர் பாக்களால் இச்செய்திகளை அறியலாம்.(புறநானூறு, செ.80.) மகாராஷ்டிரர் தஞ்சையை ஆண்டபொழுது இத்தகைய மல்லர்கள் வதாதுகள் என்று பெயர் பெற்றனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் பாண்டியன் ஒருவனோடு மற்போர் புரிந்து வெற்றி பெற்றார் என்று நாயக்கர் வரலாறு நவில்கின்றது. அரசன் சூதாடுவதும் உண்டு. இசையரங்கு, நடன அரங்கு, நாடக அரங்கு இவற்றில் அரசன் இருந்து பொழுது போக்குவது உண்டு. வடநாடு சென்று மீண்ட களைப்புத் தீரச் சேரன் செங்குட்டுவன் பரூர்ச் சாக்கையன் நடனத்தைக் கண்டு களித்தான் எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.(காதை 28. வரி 65- 78.) சங்ககாலப் பேரரசரும் சிற்றரசரும் இசையில் வல்ல பாணரையும் பாடினியரையும், கூத்தில் வல்ல கூத்தரையும் விறலியரையும் நன்கு ஆதரித்தனர் என்பதைச் சங்க நூல்களால் அறியலாம். இரண்டாம் இராசராசசோழன் அவையில் புலவர் பலர் கூடித் தமிழ்ச் சுவையை எடுத்துப்பாராட்டுவர். அரசன் அவற்றை விரும்பிக்கேட்பான். இதனால் அவனது புலவர் அவையை, அகத்திய முனிவரும் தமிழ்ச் சங்கமும் இருந்த பொதியின் மலையாக ஒட்டக்கூத்தர் உருவகம் செய்தார்.(இராசராசன் உலா, கண்ணி 67.) இங்ஙனம் அரசர்கள் புலவர் பெருமக்களோடு இன்பமாகப் பொழுது போக்குவர். பல்லவ மகேந்திரவர்மன் சிறந்த இசைப்புலவனாகவும் இசை ஆராய்ச்சியில் வல்லவனாயும் இருந்தான்; நடனத்தில் ஆர்வம் கொண்டான். இராசசிம்ம பல்லவனும் சிவபெருமான் ஆடிய நடன வகைகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தான். சோழர் காலத்தில் ஆண்டுதோறும் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேசுவர நாடகம் நடைபெற்றது; இராசராச நாடகமும் நடைபெற்றது. சோழ அரசர்கள் நடிகர்க்கு மானியம் ஈந்து நன்கு ஊக்கினர். அக்காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற நூலும் இருந்தது. (301 டிக 1907, 190 டிக 1907, 40 டிக 1906) இவற்றை நோக்க, சோழ மன்னருள் சிலரேனும் நாடகங்களைக் கண்டு களித்தனர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். அலுவல் திட்டம் அரசன் ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் நிகழ்ச்சி நிரலின்படி தன் வேலைகளை நடத்தி வந்தான். ஒவ்வொரு பகுதியும் நான்குமணி வீதம் ஒரு பகல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதற் பகுதி அறத்தின் வழிக் கழிக்கப்பட்டது; (புறநானூறு, செ.69) இரண்டாம் பகுதி ஆட்சி வேலை களுக்காகச் செலவிடப் பட்டது; மூன்றாம் பகுதி புலவர்களைச் சந்திக்கவும் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும் கழிக்கப்பட்டது. இரவில் ஒரு பகுதி, மறுநாள் நடைபெற வேண்டும் எனும் அரசியல் வேலைகளை நினைப்பதில் கழியும். (புறநானூறு, செ.366) ஒரு பகுதி ஆடல் பாடல்களிற் கழியலாம்; ஒரு பகுதி உறக்கத்தில் கழியலாம். ஆனால் பகலைப் போலவே இரவிலும் ஒவ்வொரு பகுதியும் நான்கு மணி நேரம் என்று கொள்ளுதல் பொருந்தாது. பொற்கைப் பாண்டியன் போன்ற தமிழரசர் இரவில் நகர் வலம் வருதல் வழக்கம். குடிகளின் குறைகளை அவர்தம் பேச்சால் அறிந்து அவற்றை நீக்கவும், குடிகளது வாழ்க்கை முறைகளை அறியவும், ஊர் காப்பாளர் இரவில் தம் கடமைகளைச் செய்கின்றனரா என்பதை அறியவும் அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருதலும் உண்டு. பிறந்தநாள் விழா முதலியன அரசனது பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாப் பட்டது. அது பெருமங்கலம் (புறத்திணை இயல், சூ.91.) என்று தொல்காப்பியத்தில் பெயர் பெற்றது. அந்நாளில் அரசன் சிறைக் கோட்டத்தைக் காலி செய்வான்; சில வரிகளை நீக்குவான்; பலவகைத் தானங்களைச் செய்வான். முதலாம் இராசராசசோழன் சதய நாளில் பிறந்தவன். ஆண்டுதோறும் அந்தநாள் கொண்டாடப்பட்டது. அவன் சேரநாட்டுத் திருநந்திக் கரையில் இருந்த சிவன் கோவிலில் சதய நட்சத்திர நாளைக் கொண்டாட ஒரு சிற்றூரையே தானமாக அளித்தான். (Travancore Archaeological Series, 1, pp.291-292) போரில் சிறந்து விளங்கிய தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அரசன் தனது ஆட்சி மண்டபத்திலிருந்து கொண்டு ஏனாதி, மாராயன் போன்ற பட்டங்களையும், மோதிரம் முதலிய பொருள்களையும் வழங்கிச் சிறப்பிப்பது வழக்கம். பிற்காலச் சோழர் காலத்தில் பிற உயர் அலுவலர்க்கும் அரையன், பேரரையன் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. அரசன் உலாப் போதல் மிகச் சிறந்த நிகழ்ச்சியாகும். பிறந்தநாள் விழா முதலிய சிறப்பு நாட்களில் அரசன் உலாப்போதல் நிகழும் போலும்! உலாப் புறப்படும் மன்னன் முதலில் நீராடி, உயர்ந்த பட்டாடைகளைஅணிவான்; தன் வழிபடு கடவுளை வணங்குவான்; பின்பு தான் அணிந்து கொள்ளவேண்டிய விலையுயர்ந்த அணிகளை அணிந்து கொள்வான். அவற்றுள் மகர குண்டலங்கள் (காதணி), கேயூரம் (தோள்வளை), மணிகள் பதித்த கடகம் (முன்கையணி), கெளதுபம், முத்துமாலை (மார்பு அணிகள்), உதரபந்தம் (அரைப்பட்டிகை) என்பன குறிப்பிடத்தக்கவை. பின்னர் அரசன் மணிகள் பதித்த முடியைத் தலையில் அணிவான்; அலங் கரிக்கப்பட்ட தனது பட்டத்து யானைமீது ஏறி அமர்வான். அவ்வளவில் வெண்கொற்றக் குடை அவன் தலைக்கு மேல் பிடிக்கப் பெறும்; இரண்டு பக்கங்களிலும் கவரி வீசப்பெறும்; வலம்புரிச் சங்கு ஊதப்பெறும்; மூவகை முரசங்கள் முழங்கும்; வாட்படை வீரர் மன்னனைச் சுற்றி வருவர்; அரசனுக்குரிய கொடி உயர்த்திப் பிடிக்கப்பெறும். யானை மீது வரும் மன்னனுக்கு முன்னும் இரு பக்கங்களிலும் அவனது ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர், அமைச்சர் முதலிய பெருமக்கள் வருவர். இவ்வுலாப்பற்றிய விவரங்களை மூவர் உலாவிற் பரக்கக் காணலாம். (விக்கிரம சோழன் உலா, கண்ணி 41-90) கோ நகரங்கள் சங்க காலத்தில் சேரர்க்குக் கருவூரும் (வஞ்சியும்), முசிறியும் கோநகரங்களாய் விளங்கின; சோழர்க்கு உறையூரும் காவிரிப் பூம்பட்டினமும் தலைநகரங்கள். பாண்டியர்க்கு மதுரையும், கொற்கையும் தலைநகரங்கள். இவற்றுள் முசிறி, காவிரிப்பூம் பட்டினம், கொற்கை முதலியன துறைமுக நகரங்கள். சேரன் கொங்கு நாட்டை வென்றபோது கொங்குக் கருவூர் சேரர்க்குரிய மற்றொரு தலைநகரமாயிற்று அவ்வாறே சோழர் தொண்டை நாட்டை வென்ற பிறகு காஞ்சீபுரம் சோழர்க்கு ஒரு தலைநகர மாயிற்று. பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் தலை நகரமாகவும், மாமல்லபுரம் துறைமுக நகரமாகவும் விளங்கின. பல்லவர் காலத்தில் சிற்றரசராய் இருந்த சோழர்க்குக் குடந்தையை அடுத்த பழையாறை கோநகராய் இருந்தது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தஞ்சாவூர் சோழர் தலைநகரமாயிற்று. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் கங்கை கொண்ட சோழபுரம் புதிய தலைநகராய் அமைந்தது. அக்காலத்தில் தஞ்சாவூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், காஞ்சீபுரம் என்பவை அரண்மனைகளைப் பெற்றிருந்தன. இரண்டாம் இராசராச சோழன் காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் உலா வந்தனன் என்று அவன் ஆசிரியரான ஒட்டக்கூத்தர் கூறியுள்ளமையால், (இராசராசசோழன் உலா, கண்ணி 55.) காவிரிப்பூம்பட்டினமும் பிற்காலச் சோழரது அரண்மனையைப் பெற்றிருந்தது என்று கொள்ளலாம். தஞ்சாவூர் பின் வந்த நாயக்கர்க்கும், மகாராட்டிரருக்கும் தலைநகராய் விளங்கிற்று. அதுபோலவே மதுரையும் பாண்டியர்க்குப் பின் வந்த நாயக்கர்க்குத் தலைநகராய் விளங்கியது. மதுரை நாயக்கர்க்குச் சிறிது காலம் திருச்சிராப்பள்ளியும் தலைநகராய் இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பிரிவுகளைக் கொண்டது. கடற்கரையில் அமைந்த நகரப்பகுதி மருவூர்ப்பாக்கம் எனப்பட்டது. அங்குத் துறை முகத் தொடர்பான கட்டிடங்களும் அயல் நாட்டு வணிகர் இல்லங்களும் இருந்தன. பட்டினப்பாக்கத்தில் சோழன் அரண்மனையும் குடிமக்கள் வாழும் தெருக்களும் இருந்தன. மதுரையைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில் இருந்தது. அதனை அடுத்துப் பெரிய காவற்காடு இருந்தது. அதற்கு அப்பால் ஆழமான அகழி இருந்தது. நாயக்கர் காலத்தில் அகன்ற மதிற் சுவர்கள் இரண்டு இருந்தன. சேரர் கரூர் (வஞ்சி) பேரியாற்றங்கரையிலும், உறையூர் காவிரிக்கரையிலும், மதுரை வையைக் கரையிலும் அமைந்திருந்தன. அரண்மனைகள் சங்க காலத்தில் அரண்மனை கோயில் எனப்பட்டது; வாயில் வந்து கோயில் காட்ட என்பது சிலப்பதிகாரம்; பிற்காலச் சோழர் காலத்தில் மாளிகை எனவும் திருமாளிகை எனவும் பெயர் பெற்றது. ஒவ்வோர் அரண்மனையிலும் வேத்தியல் (கொலு) மண்டபம், கலைமண்டபம், அரண்மனைத் தோட்டம், விளையாட்டு வெளியிடம், கோவில், போர்க்கருவிகள் வைக்கப்படும் கட்டிடம், அரச குடும்பத்தினர் வாழும் மாடமாளிகைகள் எனப் பல கட்டிடங்களும் பிறவும் அமைந்திருந்தன. அழிந்தன போக இன்று எஞ்சியிருப்பது தஞ்சாவூர் அரண்மனை ஒன்றே. அதனை நேரில் பார்ப்பவர் அரண்மனையின் பல பகுதிகளையும் அவை பயன்பட்ட வகையினையும் நன்கு உணரலாம். அரச இலச்சினை சேரர்க்கு வில்லும், சோழருக்குப் புலியும், பாண்டியருக்கு மீனும் அரசியல் இலச்சினைகளாகும். அவர்கள் கொடிகளிலும் இவையே எழுதப்பட்டிருந்தன. அரசாங்க ஓலைகளிலும் கப்பல்களிலும் ஏற்றப்பட்ட பொதிகள் மீதும் இந்த இலச்சினைகளே பொறிக்கப்பட்டிருந்தன. இமயமலையில் சேரன் வில்லையும், சோழன் புலியையும், பாண்டியன் கயலையும் பொறித்தனர் என்று சிலம்பு செப்புகிறது. தமிழரசர் செப் பேட்டுப் பட்டய முகப்பிலும் இந்த முத்திரைகள் காணப் படுகின்றன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்க்கு நந்தி இலச்சினை இருந்தது. அவர்கள் கொடியில் நந்தி எழுதப்பட்டிருந்தது. பிற்காலச் சோழர் இலச்சினைகளில் வில்,புலி, கயல் ஆகிய மூன்றும் பொறிக்கப்பட்டன. அவர்கள் சேர பாண்டியர்களை அடக்கி ஆண்டமையை இந்த இலச்சினை குறிக்கின்றது. விசய நகர வேந்தர் பன்றி இலச்சினையைப் பெற்றிருந்தனர். அவர்களது கொடியும் பன்றிக் கொடியே. 4. ஆட்சிக் குழுக்களும் அலுவலரும் பழைய காலந்தொட்டே சமுதாயம் தனி மனிதனை அரசாளவிட்டதாகத் தெரியவில்லை. ஆட்சித்துறையில் அவனுக்கு உதவிபுரிய அரசியல் மேதைகளும் சான்றோரும் நாட்டுப் பிரதிநிதிகளும் இருந்து வந்தனர் என்று கருதுவது பொருத்தமாகும். கடிந்து அறிவுரை கூறும் அறிஞர் துணை அரசனுக்குத் தேவை. அப்பொழுதுதான் அவன் காவலை யுடைய அரசனாவான். அத்தகைய காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது வள்ளுவர் கருத்து. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்பது அவர் வாக்கு. ஐம்பெருங் குழு சங்க காலத்தில் அரசனுக்கு உதவியாக அமைச்சர் இருந்தனர் என்று புறநானூறு புகல்கின்றது. (பாஅல் புளிப்பினும் பகலி ருளினும், நாஅல் வேத நெறிதிரியினும், திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி- புறநானூறு, செ.2.) சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அரசனோடு தொடர்பு கொண்ட இரண்டு பெருங்குழுக்கள் குறிக்கப் பெற்றுள்ளன. மாசனம், புரோகிதர், மருத்துவர், கணியர், அமைச்சர், என்பவர் ஐம்பெரும் குழுவினர் என்று சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். (காதை 5, வரி 157 உரை.) இவருள் மாசனம் என்பது குடி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் குறிப்பது. இவர்கள் குடிகளின் நலன்களையும் தேவைகளையும் அரசனிடம் எடுத்துக் கூறிப் பாதுகாக்கப் பயன்பட்டனர்; நாட்டில் சமயத் தொடர்பான செயல்களைப் புரோகிதர் கவனித்தனர். இவர்களைச் சமயப் பிரதிநிதிகள் என்றும் கூறலாம். மருத்துவர் நாட்டுச் சுகாதாரத்தைக் கவனித்து வந்தனர். கணியர் நாட்டில் நடைபெற வேண்டிய நல்ல செயல்களைத் தொடங்குதற்குரிய நாளையும் நேரத்தையும் குறிக்கவும், வருவது உரைக்கவும் பயன்பட்டனர், நாட்டின் வருவாயையும் அரசாங்கச் செலவையும் நீதி முறையையும் அமைச்சர் கவனித்தார். இவ்வொவ்வொரு குழுவினரும் தனித்தனியே தலைநகரத்தில் கூடித் தம் கடமைகளைச் செய்து வந்தனர் என்று கருதலாம். (திராவிட இந்தியா, பக். 248) சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் (1) அமைச்சர், (2) புரோகிதர், (3) படைத்தலைவர், (4) தூதுவர், (5) சாரணர் ஆகிய ஐவர் குழுக்களே ஐம்பெரும் குழுக்கள் என்று கூறியுள்ளார். அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் (காதை 5, வரி 157 உரை.) என்பது இளங்கோவடிகள் வாக்கு. இதனால் இவ்வைம்பெருங் குழுவினர் அரசுத் தொடர்புடையவர்- அரசனோடு இருப்பவர் என்பது பெறப்படும். (காதை 3, வரி 126.) தூதுவர் என்பவர் பல நாடுகளுக்குச் சென்று தங்கி அரசியல் தூது சொல்வர். சாரணர் என்பவர் ஒற்றர். எண்பேராயம் கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர் என்பவர் எண்பேராயத்தராவர். (காதை 5, வரி 157 உரை) இவருள் (1) கரணத்தியலவர் - அரசாங்கப் பெருங்கணக்கர், (2) கருமவிதிகள்- அரசாங்க வேலைகளை நடத்தும் தலைவர்கள்; (3) கனகச்சுற்றம் - அரசாங்கப் பொருட்காப்பு அதிகாரிகள்; (4) கடை காப்பாளர்- நாடு காக்கும் அதிகாரிகள்; (5) நகரமாந்தர்- நாட்டில் இருந்த பல நகரங்களின் பிரதிநிதிகள்; (6) படைத்தலைவர்- காலாட்படைத் தலைவர்; (7) யானை வீரர்- யானைப் படைத்தலைவர்; (8) இவுளி மறவர்- குதிரைப் படைத்தலைவர். மன்னன் ஐம்பெருங் குழுவினரையும் எண்பேராயத்தாரை யும் கலந்தே ஆட்சி புரிந்தான். இப்பெருமக்கள் நற்குடிப் பிறப்பு, கல்வி, நல்லொழுக்கம், உண்மையுடைமை, தூயவுள்ளம், நடுவுநிலைமை முதலிய நற்பண்புகள் பெற்றிருத்தல் வேண்டும் என்று மன்னர் எதிர்பார்த்தனர். நாட்டுப் பெருவிழாக்களிலும், நாட்டுப் பெருஞ் செயல்களிலும் இக்குழுவினர் பங்கு கொண்டனர். மதுரை நகரம் எரியுண்டபோது ஆசான் (புரோகிதன்), பெருங்கணி, அறக்களத்து அந்தணர்(நீதிபதிகள்), காவிதி (அரசாங்க உயர் அலுவர்), மந்திரக் கணக்கர் (அரசாங்க ஓலை எழுதுவோர்), கோவிலதிகாரிகள் என்பவர்கள் பேச முடியாதிருந்தனர் என்று சிலம்பு செப்புகிறது. (ஆசான் பெருங்கணி அறக்களத் தந்தனர், காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு, கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும், ஓவியச் சுற்றத்து உரையவிந் திருப்ப-காதை 22. வரி 8- 11.) இதனை நோக்க இவர்களும் ஆட்சியில் பங்கு கொண்டவர்கள் என்பதை அறியலாம். அமைச்சர் திருவள்ளுவர் அமைச்சர் இலக்கணத்தையும் கடமைகளையும் பத்துப்பாக்களில் கூறியுள்ளார். எனவே, அவர் வாழ்ந்த சங்ககாலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பது தெளிவு. அஞ்சாமை, நற்குடிப் பிறப்பு, நாடுகாக்குந் திறமை, கற்றறிந்த அறிவு, முயற்சி இவற்றைச் சிறப்புற உடையவனே அமைச்சன். பகைவருக்குத் துணையானவரைப் பிரித்தல், தம்மிடம் உள்ளரைக் காத்தல், தம்மைப் பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளல் இவற்றில் அமைச்சன் வல்லவனாக இருத்தல் வேண்டும்; செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்புறச் செய்ய வல்லவனே அமைச்சன். அவன் அறத்தை அறிந்திருத்தல் வேண்டும்; அறிவு நிறைந்த பொருந்தப் பேசுபவனாய் இருத்தல் வேண்டும்; எக்காலத்திலும் செயல் செய்யும் திறமை உடையவனாய் இருத்தல் வேண்டும்; இயற்கை அறிவும் நூலறிவும் பெற்றிருத்தல் வேண்டும்; நூலறிவால் செயலைச் செய்யும் வழிகளை அறிந்த போதிலும், உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செயலாற்ற வேண்டும்; அரசனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூற அஞ்சாதவனாய் இருத்தல் வேண்டும். இவை அமைச்சரைப்பற்றிய வள்ளுவர் கருத்துக்கள். மதுரைக் காஞ்சியில் அமைச்சர் காவிதி மாக்கள் என்று குறிக்கப்பட்டுள்ளனர்; நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஓரீஇ உயர்ந்து பாயுகள் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள். (வரி 496- 499) அறைபோகு அமைச்சர் (காதை 5, வரி. 130.) நூலறி புலவர் (காதை 25. tÇ 116.), அருந்திறல் அமைச்சர்(காதை 26, வரி 4. என்று சிலப்பதிகாரம் அமைச்சரைப் பற்றிக் கூறுகின்றது. சேரன் செங்குட்டுவனிடம் வில்லவன் கோதை என்ற அமைச்சன் இருந்தான் என்று அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். (காதை 25, வரி 151. உரை.) சங்ககாலத்தில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்று கருதப்படும் மநு நீதிச் சோழன் தன் மகனை முறை செய்ய நினைத்தபொழுது அமைச்சர் வேறு வேறு யோசனைகளைக் கூறினர் என்று பெரியபுராணம் பேசுகிறது. (திரு நகரச் சிறப்பு, செ. 30, 37.) பல்லவர் காலத்திலும் அமைச்சர் இருந்தனர். (R. கோபாலன், காஞ்சிப் பல்லவர், பக் 38.) மகேந்திரவர்மன் ஆட்சியில் அமைச்சர் இருந்தனர் என்று சேக்கிழார் கூறியுள்ளார். (திருநாவுக்கரசர் புராணம், செ. 90.) கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரறையன் ஆகிய மாறங்காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்கரோகணஞ் செய்த பின்னை, அவனுக்கு அனுஜன் உத்தர மந்த்ரபதம் எய்தின பாண்டிய மங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித்தான் (E.I.VII p. 317.) என்பது மதுரை மாவட்டத்து யானைமலைக் கல்வெட்டுச் செய்தி. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் மாறன் சடையன் ஆட்சியில் மாறன்காரி என்பவன் முதலமைச்சனாயிருந்தான். அவனுக்குப்பின் அவன் தம்பியான மாறன் எயினன் என்பவன் முதலமைச்சனா யிருந்தான் என்பதை இக்கல்வெட்டிலிருந்து நாம் அறியலாம். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் மாணிக்கவாசகர் பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார் என்பதைத் திருவிளையாடற் புராணம் தெரிவிக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிங்கத்துப் பரணி அமைச்சர்களைக் குறிப்பிடுகின்றது. அவர்கள் மந்திர பாரகர் எனப்பட்டனர். (கண்ணி, 327.) கலிங்க அரசனுக்கு எங்கராயன் என்ற அமைச்சன் இருந்தான் என்று அதே பரணி கூறுகின்றது. விக்கிரம சோழனுடன் அமைச்சரும் உலா வந்தனர் என்று ஒட்டக்கூத்தர் குறித்துள்ளார். பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் அநாபய சோழனுக்கு முதலமைச்சராய் இருந்தார் எனச் சேக்கிழார் புராணம் செப்புகிறது. (கண்ணி 74.) சோழர் காலத்தில் பல்லவராயர் என்ற முதலமைச்சர் சில படைகளுக்கும் தலைவராக இருந்தார். விசய நகர ஆட்சியிலும் அமைச்சர்கள் இருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். ஒரு நாட்டு ஆட்சியில் எத்துணை அமைச்சர் இருந்தனர் என்பதை அறியத் தெளிவான சான்றுகள் இல்லை. நாயக்கர் காலத்தில் முதலமைச்சன் பிரதானி, தளவாய் என்ற பெயர்களைப் பெற்றிருந்தான். முதலமைச்சன் அரசனது ஆலோசனைக் குழுவில் முதலிடம் பெற்றிருந்தான். ஆட்சியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தவன் அவனே. அவன் ஆட்சியின் பல துறைகளைக் கவனித்து வந்தான். (சத்தியநாதையர், மதுரை நாயக்கர்.) உடன் கூட்டத்து அதிகாரிகள் உடன் கூட்டத்து அதிகாரிகள் என்ற தொடர் சோழர் கல்வெட்டுக்களில் அடிக்கடி வருகின்றது. உடன் கூட்டம் என்ற தொடரை நோக்கும்பொழுது, அரசனுடன் இருந்து ஆட்சித் துறையில் செயலாற்றும் கூட்டம், அல்லது யோசனை கூறிச் செயலாற்றும் கூட்டம் என்று பொருள் கொள்ளலாம். அதிராசேந்திரன் காலத்துத் திருப்பாசூர்க் கல்வெட்டு ஒன்று உடன் கூட்டத்து அதிகாரிகளையும் வேறு சிலர் உயர் அலுவலர் பெயர்களையும் குறிக்கின்றது. திருமுக்கூடல் கல்வெட்டு ஒன்று அரசனது ஆணையைக் கூறி, அந்த ஆணையில் உடன் கூட்டத்து அதிகாரிகள் அறுவர் கையெழுத்திட்டதாகவும் கூறுகின்றது. (113 of 1930; Epigraphia Indica 21, p. 221, 234, 244,) உடன்கூட்டத்து இசைவும், நாடு என்னும் பேரவையின் இசைவும் பெற்றே பல்லவராயர் இரண்டாம் இராசாதி ராசனுக்கு முடி சூட்டினார் என்று பட்டயம் குறிக்கின்றது. (113 of 1930; Eigraphia Indica 21 p. 190, 192.) உடன் கூட்டத்தைச் சேர்ந்த நிலவரி வசூலிக்கும் இலாக்காவைப் பற்றிய குறிப்பு முதற் குலோத்துங்கன் காலத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. (429 of 1916) இவை அனைத்தையும் நோக்க, சோழப் பேரவையில் நடைபெற்ற அன்றாட நிகழ்ச்சிகளில் உடன் கூட்டம் தொடர்பு கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது. அரசாங்கத்தின் பல துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளரின் (பிரதி நிதிகளின்) ஆலோசனைக் குழுவாக அஃது இருக்கலாம்; அஃது அரசனுக்கும், அமைச்சரவை- அவர்தம் இலாக்காக்கள் ஆகியவற்றுக்கும் இடையில் இருந்து தொண்டாற்றி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். (Dr. Mahalingam, S.I. polity,p. 131.) சேனைத் தலைவன் சேனைத் தலைவன் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருந்தான். பிற்காலச் சோழன் படைத்தலைவன் தண்ட நாயகன் என்று அழைக்கப்பட்டான்; தண்டம் என்ற சொல் படை, நீதி, ஆட்சி புரிதல் என்ற பொருள்களை உடையது. ஆவூர் உடையார் என்பவன் ஒரு தண்ட நாயகன். அவன் ஜயங் கொண்ட சோழ மண்டலத்தை ஆண்டு வந்தான் என்று சோழர் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. (39 of 1921.) அச்சொல் படைத் தலைவனையும் சில இடங்களில் குறிக்கின்றது. புரோகிதன் சங்க காலத்தில் ஆசான் (புரோகிதன்) ஐம்பெருங்குழுவில் இடம் பெற்றிருந்தான். பிற்காலத்தில் புரோகிதன் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. சமயத் துறையிலும் ஒழுக்கத் துறையிலும் புரோகிதன் ஆலோசனை கேட்கப்பட்டது போலும்! பிற்காலச் சோழர் காலத்தில் புரோகிதரின் இடத்தில் இராசகுரு அமர்ந்திருந்தான். அவனது சொல்லுக்கு அரசன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான் என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. மூன்றாம் குலோத்துங்கன் ஆணையைச் சுவாமி தேவர் என்ற இராசகுரு மாற்றிவிட்டார் என்று கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. நாட்டின் சமயத்தைப் பாதுகாக்கத் தர்மாதிகாரி என்று ஒருவன் தஞ்சை மகாராட்டிரர் காலத்தில் இருந்தான். (கே.ஆர். சுப்பிரமணியர், தஞ்சை மகாராட்டிர மன்னர்கள், பக். 88.) செயலாளன் ஆட்சிக் குழுவின் செயலாளன் உள்படு கருமத் தலைவன் எனப் பழங்காலத்தில் பெயர் பெற்றான். (டாக்டர் சோமசுந்தர பாரதியார், திருவள்ளுவர்.) சோழன் காலத்தில் திருவாய்க் கேள்வி என்று பெயர் படைத்த அலுவலன் செயலாளனாக இருந்திருக்கலாம். விஜய நகர காலத்தில் அவன் இராயசம் என்று பெயர் பெற்றான். தமிழகத்து மடங்களில் மடாதிபதியிடம் செயலாளராக இருப்பவர் இராயசம் என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர். அரசாங்க உயர் அலுவலர் ஒரு நாட்டு அரசாங்கம் நடைபெறத் தெளிவான இலாக்காக்கள் இருத்தல் வேண்டும். அவற்றில் வேலைபார்க்க உயர் அலுவலர்களும் எழுத்தர்களும் இருப்பது இயல்பு. அவ்வலுவலரும் சோழர் கல்வெட்டுக்களில் கருமிகள், பெருந்தரம் அல்லது பெருந்தனம் என்றும், பணி மக்கள், சிறுதரம் அல்லது சிறுதனம் என்றும் அழைக்கப்பட்டனர். சிறுதனத்துப் பணிமக்கள், சிறுதனத்து வலங்கை வேளைக்காரப் படைகள், பெருந்தனத்துச் சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ராமன், பெருந்தரம் திருமலை வெண்காடன், பெருந்தனத்து ஆனை ஆட்கள், பெருந்தனத்து வலங்கை வேளைக்காரப் படைகள் என்பன போன்ற தொடர்கள் கல்வெட்டுக்களில் காணப் படுகின்றன. தனம் என்பதும் தரம் என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்கள் ஆதலால், சேனாதிபதி போன்ற உயர்தர அலுவலர் பெருந்தரம் என்றும், அடுத்து வேலை பார்ப்பவர் சிறுதரம் என்றும் அரசாங்க முறையில் அழைக்கப் பட்டனர் என்று கொள்வதே பொருத்தமாகும். (A.R. E. 1913, 22. ஊர்மக்களின் தலைவன் இன்றும் பெருந்தனக்காரன் என்று அழைக்கப்படல் இங்கு Ãid¡f‰ghyJ.) பெருந்தரத்தைச் சேர்ந்த உயர் அலுவலர் கருமிகள் என்றும் அழைக்கப்பட்டனர்; சிறுதரத்தைச் சேர்ந்தவர்கள் பணிமக்கள் என்றும் அழைக்கப் பட்டனர். இவ்விருவகைக்கும் இடைப்பட்ட அலுவலர் சிறுதனத்துப் பெருந்தனம் என்று அழைக்கப் பட்டனர் என்று கொள்ளலாம். (29 of 1897.) படைத்தலைவன் போன்ற உயர் அலுவலர்க்கு குறிப்பிட்ட ஊர் அல்லது நிலம் மானியமாக வழங்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் வருவாய் முழுவதும் ஓர் அதிகாரி பெறும்படி அரசன் ஆணையிட்டிருப் பான்; சில சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் ஒரு பகுதி வருவாயை மட்டும் அவன் பெற்றுக்கொள்ளும்படி விதித்திருப்பான். நிலம் மட்டும் அவனுக்குச் சொந்தமாயிராது. சில காலங்களில் குறிப்பிட்ட ஊரோ, பெரும் பகுதி நிலமோ உயர் அலுவலர்க்கு வழங்குவதும் உண்டு. அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட ஊரின் அல்லது நிலத்தின் வருவாயில் ஒரு பகுதியை அரசனுக்கு வழங்க வேண்டும்; போர்க்காலத்தில் ஒரு சிறுபடையையும் அரசனுக்கு உதவ வேண்டும். நாயக்கர்கள் ஆட்சியில் பாளையக்காரர் இத்தகைய முறையில் இருந்தனர். பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசராகிய அரசாங்க அலுவலரும் இம்முறையில் இருந்தனர்; இத்தகைய உரிமை பெற்றமையாற்றான் கிழார், நாடாள்வார், எனப் பெயர் பெற்றனர் போலும்! ஊரோ, நிலமோ தமக்கு உரிமையாகப் பெற்றவர், தம் விருப்பம் போல் அவற்றைச் செய்துகொள்ள உரிமை உடையவர் ஆவர். ( K.A.N.rh¤âÇ, சோழர் II, பக்241.) அரசியலில் பணியாற்றிய உயர் அலுவலர் ஏனாதி, மாராயன் ( மாராயம் பெற்ற நெடுமொழி -தொல்காப்பியம். மாராயம் மனைவி மாராசி எனப்பட்டான்.) என்றாற் போன்ற பட்டங்களைப் பெற்றனர். இப்பட்டங்கள் போர்த் திறமையைக் குறித்தே முதலில் வழங்கப்பட்டன; பின்பு காலப் போக்கில் போரில் ஈடுபடாத உயர் அலுவலர்க்கும் வழங்கப்பட்டன. சங்ககாலத் தமிழகத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனது பெயரைத் தாங்கி அவனது அரண்மனைப் பொற்கொல்லன் இருந்தான் என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிகிறது. (தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற, பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி. -சிலம்பு. காதை 16- வரி 109- 110.) சோழர் ஆட்சியில் அரையன், பேரரையன், இராசன், அதிராசன், பிள்ளை, முதலி, நாடாள்வான் என்ற பட்டங்களை உயர் அலுவலர் தாங்கியிருந்தனர். (S.I. polity p. 137.)இராசராசப் பிரம்மாதிராசன் என்றாற்போலச் சிலர் தம் காலத்திலிருந்த அரசர் பெயர்களையும் தாங்கியிருந்தனர். திருவாய்க் கேள்வி: இவன் அரசனுடன் இருந்து அவன் கூறும் கட்டளைகளைக் கேட்டு எழுதுபவன். திருமந்திர ஓலை: இவன், அரசன் தன் அமைச்சரவையில் முடிவு செய்த செய்திகளை எழுதும் உயர் அலுவலன். இங்ஙனம் எழுதும் அரசாங்கத் துறையின் தலைவன் திருமந்திர ஓலை நாயகம் என்பவன். விடையில் அதிகாரி: இவன் அரசாங்கத் தொடர்பான கேள்விகட்கு விடை எழுதும் அதிகாரி. இவனுக்குக் கீழ் ஒரு துறை இருந்தது. ஆணத்தி: இங்ஙனம் எழுதப்படும் விடைகளை அனுப்பும் துறைக்குத் தலைவன் ஆணத்தி என்பவன். அரசாங்க ஆணைகளையும் செப்பேடுகளையும் எழுதத் தக்க திறமையாளர் அடங்கிய துறை ஒன்றும் இருந்தது. கோவில்களை மேற்பார்க்கும் அதிகாரிகளும் இருந்தனர். நிலவரி பற்றிய துறைகள் புரவுவரித் திணைக்களம் என்பது ஓர் அரசாங்கப் பிரிவாகும். இது நிலவரி வசூலிக்கும் துறை என்று கூறலாம். இத்துறை பத்துப் பிரிவுகளைப் பெற்றிருந்தது. அவை:- (1) புரவு வரித் திணைக்களம், (2) வரிப்பொத்தகம், (3) புரவு வரித் திணைக்களக் கண்காணி, (4) முகவெட்டி, (5) தெரிப்பு, (6) தரவு சாத்து, (7) பழநியாயம், (8) வரியிலீடு, (வரியேடு), (9) வரிப் புத்தகக் கணக்கு, (10) பட்டோலை என்பன. (1) வரி வசூலிக்கும் முழுத்துறையும், நிலவரித் தொடர்பான எல்லாவற்றையும் முதலில் கவனிக்கும் துறையும் சேர்ந்த ஒன்றே புரவு வரித் திணைக்களம் என்று சொல்லலாம். (2) வரிக் கணக்கு வைத்துள்ள துறை வரிப்பொத்தகம் எனப்பட்டது. (3) வரிக் கணக்கைப் பரிசீலனை செய்யும் துறை புரவு வரித் திணைக்களக் கண்காணி என்று பெயர் பெற்றது. (4) நிலம் பற்றிய அரசன் ஆணைகளைச் செப்புப் பட்டயங்களிலும் கல்லிலும் வெட்டுவோர் இருந்துவந்த துறை முகவெட்டி எனப்பட்டது. (5) நிலத்தை அளந்து பார்க்கும் துறை தெரிப்பு (Survey) எனப்பட்டது. (6) கொடுத்த பணத்திற்கு இரசீது கொடுக்கும் துறை தரவு சாத்து எனப்பட்டது. (7) பழைய பாக்கிகளைக் கவனிக்கும் துறை பழ நியாயம் எனப்பட்டது. (8) வரிப்புத்தகத்தில் வரிகளைப் பதிவு செய்யும் துறை வரியிலீடு எனப்பட்டது. (9) வரிப்புத்தகத்திலுள்ள கணக்குகளைக் கவனிக்கும் துறை வரிப்புத்தகக் கணக்கு எனப்பட்டது. (10) அரசன் ஆணைகளைப் பாதுகாக்கும் துறை பட்டோலை எனப்பட்டது. (A.R.E. 1931- 32, 14.) ஆவணக் களரி ஆவணம் - பத்திரம். களரி- அலுவலகம். அந்நாளில் ஊர்கள்தோறும் எழுதப்படும் ஆவணங்களை (பத்திரங்களைக்) காப்பிட (பதிவு செய்ய) ஆவணக் களரியும் (Registration office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று நிலத்தின் விலையையும் நான்கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதிமொழி கூறி ஆவணம் காப்பிடப் பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியிருப்பதாயிருப்பின், அவ்வூரிலுள்ள கோயிற் சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம். (T.V.S. பண்டாரத்தார், முதற்குலோத்துங்கன், பக். 93) அரசாங்க வேலைகளை மேற்பார்க்க உயர் அலுவலர் நாடு முழுமையும் சுற்றுவதுண்டு. அரசர்களும் தம் அரசாங்க நடவடிக்கைகளை அறிவதற்காக அவ்வப்பொழுது நாடு சுற்றிவருவதுண்டு. 5. வரவு செலவு வரவுக்குரிய வழிகள் (1) நிலவரி, (2) சொத்துவரி, (3) அலுவல்வரி, (4) வணிக வரி (5) தொழில்வரி, (6) படைக்குரிய வருமானம், (7) சமுதாய- குழுவரிகள், (8) நீதி மன்றங்களில் விதிக்கும் தண்டப்பணம், (9) காட்டு வருமானம், சுரங்க வருமானம், உப்பள வருமானம், நாதியற்ற சொத்து முதலியன. (1) நன்செய், புன்செய் என்று பயிர் நிலங்கள் இருவகையாகப் பிரிக்கப்பட்டு நிலவரி விதிக்கப்பட்டது. அவை மா, குழி, காணி, முக்காணி, அரைக்காணி, முந்திரிகை என்று சிற்றளவிலும், வேலி என்று பேரளவிலும் பேசப்பட்டன. ஒரு வேலியின் 1/52, 428. 800 என்னும் சிறு பகுதியும் சோழர் காலத்தில் கணக்கிடப்பட்டது என்று தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. (A.R.E. 1900, para 25.) ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலங்களில் உற்பத்தி மிகுதியாகவும் மற்ற நிலங்களில் குறைவாகவும் விளைவைப் பொறுத்து வரி விதிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் கோவில்கள், தொழிலாளரும் பண்ணையாட்களும் வாழுமிடங்கள், குளங்கள், மன்றம், கோவில்களைச் சேர்ந்த நந்தவனங்கள், நெல் அடிக்கும் களம், கால்நடைகள் மேயும் இடம், ஆற்றங்கரையை அடுத்த சதுப்புநிலம், உடைப்பு உண்டான நிலங்கள், பயிரிட முடியாத நிலம், இடுகாடு, சுடுகாடு என்பவை வரி விதிக்கப்படாத இடங்களாகும். வரி விதிக்கப்பெற்ற நிலங்கள் தரம் பெற்ற நிலங்கள் என்றும், வரி விதிக்கப் பெறாதவை, தரமிலி நிலங்கள் என்றும் சோழர் காலத்தில் பெயர் பெற்றன. (A.R.E. 1935- 36, para 43.) ஒரு வேலியின் இருபதில் ஒரு பாகம் மா எனப்படும். ஒரு மாவுக்கு இவ்வளவு என்று வரி விதிக்கப்பட்டது. நிலவரி கடமை என ஒரு காலத்தில் பெயர் பெற்றது. நாற்பது கலம் விளையும் ஒரு மா நிலத்திற்கு 3 கலம் வரியாக வாங்கப்பட்டது. சில இடங்களில் மிகுதியாகவும் வாங்கப்பட்டது. சோழர் காலத்தில் நிலங்கள் யாவும் அளக்கப்பட்டன. முதல் இராசராசன் காலத்திலும், முதல் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்திலும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் அளக்கப்பட்டன. நிலம் அளந்த கோல்கள் 12, 14, 16, 20 அடி நீளமுள்ளவை. (229 of 1910, 261 of 1902, 413 of 1922, 104 of 1928) இவையல்லாமல் கடிகைக் களத்துக் கோல், ஸ்ரீபாதக் கோல், மாளிகைக் கோல் என்று வேறு அளவுகோல்களும் இருந்தன. (160 of 1921, 87 of 1900,99 of 1913) நிலம் அளக்க அரசாங்க இலாகா ஒன்று இருந்தது. முதல் இராசராசன் காலத்தில் அந்த இலாகாவின் தலைவன், சேனாதிபதி குரவன் இராசராச மகாராசன் என்பவன், அவன் நிலம் அளந்ததால் உலகளந்தான் என்று பெயர் பெற்றான். (A.R.E. 1913, para 21) நிலவரி ஆறில் ஒரு பகுதி அரசாங்கம் வசூலித்தது என்பது பொதுக்கூற்று. பல இடங்களில் பல காலங்களில் நான்கில் ஒரு பங்கும் மூன்றில் ஒரு பங்கும் இரண்டில் ஒருபங்கும் அரசாங்கத்திற்குச் சென்று வந்தது. (2) சொத்துவரி இக்காலத்தில் ஒரு மனிதனது ஆண்டு வருவாயைக் கொண்டே, சொத்து வருவாய் விதிக்கப்படுகிறது. பழங் காலத்தில் அவனது வருவாயைப்பற்றி அரசாங்கம் கவலைப் படவில்லை; அவனது சொத்தின்மீதே வரி விதிக்கப்பட்டது. வீடுகள், மனைகள், பசுக்கள், எருதுகள், ஆடுகள், வண்டிகள், குதிரைகள், நகைகள் முதலியவற்றின்மீது வரி விதிக்கப்பட்டது. (A.R.E. 1915, para 44; 1917; para 47; 1921,para 41 etc.) (3) அலுவல் வரி ஒவ்வொருவனும் செய்து வந்த தொழிலுக்கும் அத்தொழிலுக்கு அவன் பயன்படுத்திய கருவிக்கும் வரி விதிக்கப்பட்டது. குயவன் தான் செய்த தொழிலுக்கும், பயன் படுத்திய திரிகைக்கும் வரி செலுத்தினான். அவ்வாறே சலவைத் தொழிலாளி தன் தொழிலுக்கும் தான் பயன்படுத்திய கல்லிற்கும் வரி செலுத்தினான். இவ்வாறே ஒவ்வொரு தொழிலாளியும் வரி செலுத்தினான். வண்ணான் கல்லுக்குச் செலுத்திய வரி பல்லவர் காலத்தில் பாறைக் காணம் என்றும், சோழர் காலத்தில் வண்ணார் பாறை என்றும், பெயர் பெற்றது. அவன் தொழிலுக்குச் செலுத்திய வரி கல்லாயம் எனப்பட்டது. கள் இறக்கியவன் தன் தொழிலுக்கும், தான் பயன் படுத்திய ஏணிக்கும் வரி செலுத்தினான். (A.R.E. 1910,para 54.) இந்த அலுவல் வரிகள் நாணயமாகவே செலுத்தப்பட்டன. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்தால் அவர் அனைவருமே வரி செலுத்தக் கடமைப்பட்டவர் என்பது அக்கால விதியாகும். (294 of 1910.) தமிழகத்தில் தங்கி இருந்த பிற நாட்டாரும் வரி செலுத்தினர். யாத்திரை செய்தவரும் வரி செலுத்தினர். பிள்ளை வரி, ஆள்வரி, பேர் கடமை என்ற வரிகளும் வழக்கில் இருந்தன. (Ins of pudukkottai state, 711, 733, 784) (4) வணிக வரி ஓரிடத்தில் விற்பதற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின்மீது விதிக்கப்பட்ட வரி தல ஆதாயம் எனப்பட்டது. ஒரு மாவட்டத்தின் வழியாக விற்பனைக்குரிய பொருள்கள் அனுப்பப்படும்போது விதிக்கப்பட்ட வரி மார்க்க ஆதாயம் எனப்பட்டது. அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி மாமூல் ஆதாயம் எனப்பட்டது. மார்க்க ஆதாயம் என்பது மாவட்ட எல்லைகளில் அல்லது நகர எல்லைகளில் அமைக்கப் பட்டிருந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். ஒரு நகரத்திலிருந்து வேறு மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொருள்களுக் காகப் பல சுங்கச் சாவடிகளில் வரி கட்டவேண்டிய கட்டாயம் அக்காலத்தில் இருந்தது. அதனால் குடிமக்கள் மிகவும் துன்புற்றனர். அதனால் முதற் குலோத்துங்க சோழன் இச்சுங்க வரியை நீக்கினான்; சுங்கம் தவிர்த்த குலோத்துங்கன் என்று குடிமக்களால் பாராட்டப்பெற்றான் (374 of 1908) (5) தொழில் வரி உப்பு உண்டாக்கியதைப் பொறுத்தும், இறக்கப்பட்ட கள்ளைப் பொறுத்தும், அக்காலத்தில் வரி வசூலிக்கப்பட்டது. தறி, செக்கு, மரக்கலம், படகு முதலிய தொழில் நிலையங்கள் மீது விதிக்கப்பட்ட வரியே தொழில்வரி எனப்பட்டது. (6) படைக்குரிய வருமானம் மிகப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் படையைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களிடமிருந்து அரசாங்கம் வரி வசூலித்தது. அவ்வரி பட்டயக காணிக்கை, தண்டநாயகர் மகமை என்று பெயர் பெற்றன. (E.I.7. p. 304; 510 of 1921.) கோட்டைகளைப் பாதுகாக்க வசூலிக்கப்பட்ட பணம் கோட்டைப் பணம், கோட்டைப் பதிவு என்று பெயர் பெற்றன. (A.R.E. 1917. 97; 1922,para 43.) முதற் பராந்தகன் குடமூக்குச் சபையார்க்கு மூவாயிரம் கழஞ்சு பொன் தண்டம் விதித்து, அதனைப் பாண்டிப் படைக்குச் செலுத்தும்படிக் கட்டளையிட்டான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. (255 of 1911.) ஒரு வேலி நிலத்திற்கு ஒரு கழஞ்சு பொன் வீதம் ஆலங்குடி மக்கள் தன் வேங்கி நாட்டுப் போருக்குச் செலுத்தவேண்டும் என்று வீரராசேந்திரன் கட்டளை பிறப்பித்தான். (521 of 1920.) இங்ஙனம் போர்க் காலங்களில் தனிவரி வசூலிக்கப்பட்டதென்பது இவற்றால் தெரிகிறதன்றோ? இரவு என்பது ஒரு வரிக்குப் பெயர். அரசன் சில சமயங்களில் போர் அல்லது பஞ்சம் நேர்ந்தபொழுது- குடிமக்களிடம் பொருள் உதவிக்கு இரந்தான்போலும்! அப்பொழுது குடிமக்கள் செலுத்திய பணம் இரவு எனப் பெயர் பெற்றிருக்கலாம். (K.A.N. சாத்திரி, சோழர், பக். 522.) 7. சமுதாய- குழுவரிகள் வலங்கைச் சாதியினரிடமும், இடங்கைச் சாதியினரிடமும் பிற வகுப்பினரிடமும் ஒருவகை வரி வசூலிக்கப்பட்டது. அது பட்டிறை, பட்டறை, (குழு வரிகள்), சம்மாதம் (பதினெட்டுச் சாதிகள்மீது வரி) எனப் பெயர் பெற்றன. (373 of 1916, 30 of 1913, 221 of 1910. ) கோவில் நடை முறைக்கு என்று தனிவரி வசூலிக்கப்பட்டது. திருமணத்திற்கும், திருமண ஊர்வலங் களுக்கும் தனித்தனி வரிகள் வசூலிக்கப்பட்டன. நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டப் பணம் மன்றுபாடு, தண்டம், முதலிய பெயர்களைப் பெற்றது. பட்டியில் அடைக்கப்படும் சண்டிக் கால்நடைகளுக்கும் தண்டம் விதிக்கப்பட்டது. (A.R. E. 1920, para 79.) காட்டு வருமானம் முதலியனவும் அரசாங்கத்தைச் சேர்ந்தனவேயாகும். பலவகை வரிகள் வரியைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள் ஆயம், இறை, கடமை என்பன. பலவகைச் சிறு வரிகள் சிற்றாயம், சில்லிறை என்ற பெயரில் வழங்கப்பட்டன. ஊர், சபை, நகரம் என்பவை விதித்த வரிகள் ஊரிடு வரிப்பாடு எனப்பட்டன. அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரிகள் அனைத்திற்கும் குடிமை என்ற பொதுப்பெயர் இருந்தது. (K.A.N. சாத்திரி, சோழர், பக். 522- 123.) வரி வசூலிக்கும் முறைகள் அரசாங்கம் தான் விதித்த வரியைத் தானியமாகவும், பணமாகவும் வசூலித்தது. தானியமாக வசூலித்தல் நெல் ஆயம், நெல் முதல் எனப்பெயர் பெற்றது; பின்னது காசாயம், பொன் முதல் எனப்பெயர் பெற்றது; பின்னது காசாயம், பொன் முதல் எனப்பெயர் பெற்றது; சோழர் காலத்தில் நிலவரி தானியமாகவே வாங்கப்பட்டது. அவ்வாறு வாங்கப்பட்ட தானியம் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த அரசாங்கக் குதிர்களில் சேர்க்கப்பட்டது. ஏனைய வரிகள் பணமாகவே வசூலிக்கப்பட்டன. சில இடங்களில் நிலவரியும் பணமாகவே வசூலிக்கப்பட்டது. வரி வாங்கும் முறைகள் குடிகளிடம் வரிகளை வசூலிக்க ஏறத்தாழ நான்கு முறைகள் கையாளப்பட்டன: (1) அரசாங்கம் ஓர் இலாகாவையே அமைத்து அரசாங்க அலுவலரைக் கொண்டு நேரே வரியை வசூலித்தல்; (2) அரசாங்கத்திற்கும் குடிகளுக்கும் இடையில் ஒரு குழுவினர் இருந்து வரிகளை வசூலித்தல்; (3) குறிப்பிட்ட நிலப்பகுதியின் வருவாயை ஒருவரிடம் ஒப்படைத்து, அதன் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் ஆண்டுதோறும் கொடுக்கச் செய்தல்; (4) ஒரு நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் ஒரு தலைவனிடம் ஒப்படைத்தல்; அத்தலைவன் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அரசனுக்குச் செலுத்துவதோடு போர்க்காலத்தில் படை உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டு நடத்தல். (S.I. polity, p. 177.) (1) அரசனுக்குரிய நிலங்களுள்ள கிராமங்களில் அக்கிராமத் தலைவர்கள் உழவர்களிடம் வரி வசூலித்து அரசாங்கத்திற்கு அனுப்புவர். சில கிராம நிலங்கள் உழவரால் விளைக்கப்பட்டன; கிராமத் தலைவர்களால் வரி வசூலிக்கப்பட்டது. (2) ஊரவை அல்லது சபை இருந்த கிராமங்களில் அந்த அவையினர் அல்லது சபையினர் சட்டப்படி வரிகளை வசூலித்து அரசாங்கத்திற்குச் செலுத்தி வந்தனர். (3) குத்தகை, கட்டுக் குத்தகை, சித்தாயம் (சிற்றாயம்?) என்ற முறையில் சில கிராமங்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் பெற்று வந்தது. (4) சோழப் பெருநாட்டுச் சிற்றரசர்கள் தங்கள் நிலப்பகுதிகளில் வரிகளை வசூலித்தனர்; ஒரு பகுதியை நடு அரசாங்கத்துக்கு அனுப்பினர்; மற்றொரு பகுதியைத் தங்கள் ஆட்சிக்கு வைத்துக்கொண்டனர். இத்தலைவர்கள் ஆண்டு தோறும் இவ்வாறு கப்பம் செலுத்தி வந்தனர். மதுரை நாயக்கர் ஆட்சியில் இவ்வாறே பாளையக்காரர்கள் இருந்து வந்தார்கள். (S.I. polity, பக். 177- 180) வரி விதிப்புத் துறை அரசாங்க வரவையும் செலவையும் கவனிக்கப் பொருள் துறை (இலாகா) ஒன்று தனியே இயங்கி வந்தது. சங்க காலத்தில் அந்த இலாகாவில் காவிதிகள் (வரியிலார்) என்பவர் உயர் அலுவலராக இருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. காவிதி என்பவன் பொருள் அமைச்சன். அவனுக்குக் கீழ் ஆயக் கணக்கர் என்பவர் வேலை பார்த்தனர். (சிலப். காதை 22 - வரி9; காதை 28- வரி 205. காவிதி - வரியிலார் என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆயம்- வருவாய்- குறள் 933) ஆயம்- வருவாய். பிற்காலச் சோழர் காலத்தில் புரவு வரித்திணைக் களம் என்பது இந்த இலாகாவே ஆகும். (S.I. polity, p. 181) சில நிலங்களுக்கு உரிய வரியை ஒரே தொகையாகச் செலுத்திவிடின், அந்நிலங்களுக்கு ஆண்டுதோறும் வரிவிதிப்ப தில்லை. எனவே, அவை இறையிலி எனப்படும். கோவிலுக்கோ, மடத்திற்கோ, வேறு தானம் செய்வதற்கோ நிலங்களை வாங்குவோர் அந்நிலங்களுக்குரிய தொகையையும் வரியையும் ஒரே முறையில் செலுத்தி விடுவது வழக்கம். அந்த வரித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் வரும் வட்டிப்பணம் எதிர் காலத்தில் வரிக்கு ஈடுசெய்ய முடியும். இந்த முறையால் அரசாங்கமோ ஊரவையோ வரியை இழக்கவில்லை என்பது இங்கு அறியத்தகும். சில பகுதிகளில் இவ்வாறு அறநிலையங்களுக்கு விடப்படும் நிலங்களுக்குரிய வரியை ஈடுசெய்ய, அந்த ஊரிலுள்ள மற்ற நிலங்களுக்கு உயர்ந்த வரி விதிப்பதும் உண்டு. (S.I. polity, p. 182) நாட்டின் சில பகுதிகளில் தை மாதத்தில் வரி வசூலிக்கப் பட்டது. பெற்றுக்கொண்ட வரிக்கு இரசீது கொடுக்கப்பட்டது. வரியில் ஒரு பகுதி கட்டப்பட்டதுடன், அந்த ஆண்டுக்குரிய எச்சம் குறிக்கப்பட்டு, அதனைப் பெறுகிற உரிமையையும் எழுத்து வடிவில் பெற்றுக்கொண்டு, அவ்வாறே அத்தொகையை வசூலிப்பது அதிகாரிகள் பொறுப்பாக இருந்து வந்தது. சில பகுதிகளில் ஆண்டுக்கு மூன்று முறை வரி வசூலிக்கப்பட்டது. விசயநகர ஆட்சியில் ஆண்டு தோறும் நவராத்திரி காலத்தில் வரி வசூலிக்கப்பட்டது. (S.I. polity, p. 185) வரிச் சுமை ஒரு மாவிற்குக் குறைந்த அளவுள்ள நிலமாயினும் அதன்கண் விளைந்த அரிசியைக் கவளமாக்கி யானைக்குத் தருவதாயின், அவ்வரிசி அதற்குப் பல நாட்கள் உணவாகும். மாவை விடப் பெரிய விளைநிலம் ஆயினும், அதன்கண் யானையைப் புகவிட்டால், அது உண்ணும் அளவைவிடச் சிந்தி நாசமாக்கும் அளவே மிகுதியாக இருக்கும். அது போலவே அறிவுடைய அரசன் குடிகளிடம் அளவோடு வரி வசூலித்தால், அவனது அரசாங்கப் பண்டாரம் பெருகும்; அவனும் பாராட்டப்படுவான். அரசன் அறிவற்றவனாயும், நன்னெறியிற் செல்லாத வரி வசூலிக்கும் அலுவலரை உடை யவனாகவும், குடிமக்கள்மீது பொறுப்பற்ற முறையில் வரிகளைச் சுமத்துப வனாகவும் இருந்தால், தானும் அநுபவியாமல் நாட்டையும் பாழ்படுத்தியவன் ஆவான், என்று பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு எடுத்துக்கூறினார். (புறநானூறு, செ. 184.) வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் தொடர்பு என்ற குறட் கருத்து இங்கு நினைவு கூரத் தகும். பழங்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் கொடிய முறையில் வரி வசூலிக்கப்பட்டது. மகேந்திர மங்கலத்து அவையோர் சோழ அரசாங்கப் படையினரால் தண்ணீரில் அழுத்தப்பட்டனர்; கொடிய வெய்யிலில் நிறுத்தப்பட்டனர். பின்பு அவர்கள் தஞ்சாவூர் சென்று முதலாம் இராசராசனிடம் முறையிட்டனர் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (159 of 1895) தான் வரிப்பணம் பாக்கி இல்லை என்று சொன்னதற்காக ஒரு பெண்மணி துன்புறுத்தப்பட்டாள். அதனால் அவள் விடத்தை உட்கொண்டு இறந்தாள். அவளைக் கொடுமைப்படுத்திய வரி அதிகாரி, அக்குற்றத்திற்காக அவ்வூர்க்கோவிலில் நாள்தோறும் தன் செலவில் விளக்கு எரியத் தானம் செய்தான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. (159 of 1895, 80 of 1906) சில சமயங்களில் அரசாங்கத்துக்கு வரி செலுத்த இயலாமல் குடிகள் நிலங்களை விற்றனர். புன்னை வாயில் என்ற ஊர் அவையினரிடம் முழுவரித் தொகையையும் வசூலிக்க முடியாமையால், வரி அதிகாரி அவர்களைச் சிறையிலிட்டான். அதன் மீது ஊரவையினர் கிராமத்தைச் சேர்ந்த 80 வேலி நிலத்தை இருநூறு பழங்காசுகளுக்கு விற்று முழு வரியையும் செலுத்திவிட்டனர். (202 of 1912) தாங்க முடியாத வரிச் சுமையினால் சில சமயங்களில் குடி மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்புக் காட்டுவதும் உண்டு. முதற் குலோத்துங்கன் காலத்தில் பசுக்கள் மீதும் பெண் எருமைகள் மீதும் திடீரென்று வரி விதிக்கப்பட்டது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த வலங்கைச் சாதியினர் ஒன்று கூடினர்; சோழர் ஆட்சியின் தொடக்க காலம் முதல் சோழ மண்டலத்து எழுபத்தெட்டு நாடுகளிலும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் பூமிகளிலும் பசுக்களுக்கும் பெண் எருமைகளுக்கும் வரி விதிக்கப்படவில்லை. ஆதலால் புதிய அதிகாரி விதித்த வரியைக் கொடுக்க இயலாது; மேலும், புஞ்சை விளைச்சலில் ஐந்தில் ஒரு பகுதியும் குளத்துப் பாய்ச்சல் விளைவில் மூன்றில் ஒரு பகுதியும் வரியாக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தீர்மானித்தனர். (464 of 1911) மூன்றாம் இராசராசன் காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசாங்க அதிகாரிகள் பலர் அதிக வரிகளை வாங்கத் தொடங்கியதால், உழவர்கள் நல்ல நிலை ஏற்படும் வரை நிலங்களில் பயிர் வையாமல் நிறுத்திவிட்டனர். இதனை அறிந்த மன்னார்குடி அவையினரும் சுற்றியிருந்த ஐந்து நாடுகளின் பேரவையினரும் ஒன்று கூடினர்; வழக்கமான வரிகளை மட்டுமே செலுத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். (S.I. I. VI. 48, 50, 58) சில சமயங்களில் வரிச்சுமையால் வலங்கை, இடங்கைச் சாதிகள் அரசாங்கத்தை அச்சுறுத்தின. விருத்தாசலப் பகுதியில் அரசாங்க அதிகாரிகளும் நிலக்கிழார்களும் குடிகளைத் துன்புறுத்தினர். காணியாழ்வானும் பிராமணரும் வரிகளைப் பெற்றுக்கொண்டனர். எனவே, அந்த இருவகைச் சாதியினரும், நம்மைக் கொடுமைப் படுத்தியவர்களுக்குத் தங்க இடம் உதவுவதோ, அவர்களுக்குக் கணக்கு எழுதுவதோ, அவர்கள் சொல்வதை ஒப்புக் கொள்வதோ கூடாது; இம்முடிவுக்கு மாறாக, நடப்பவர் கொல்லப்படுவார், என்று தீர்மானித்தனர். (92 of 1918) அதிகாரிகள் விளைச்சலுக்கு ஏற்றவாறு வரி விதிக்காமல் மிகுதியாக வரி விதித்தமையால், நாம் ஊரை விட்டே ஓட நினைத்தோம். நம்முள் ஒற்றுமை இல்லாமையால் நாம் கொடுமைப்படுத்தப்பட்டோம். இனி நாம் விளைச்சலுக்கு ஏற்றபடியே வரி செலுத்துவோம்; அதிகமாக விதித்தாலும் கொடோம், என்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கொறுக்கை (குறுக்கை) என்னும் ஊரில் இருந்த வலங்கை- இடங்கைச் சாதியினர் தீர்மானித்தனர். அவர்களே இன்னின்ன பொருளுக்கு இவ்வளவு வரி என்று திட்டமிட்டனர். கொய்யா மரம், பாக்குமரம், பனை மரம், வாழை மரம், கரும்பு, செந்தாமரை, முத்துக்கொட்டைச் செடி, எள், புளி, இஞ்சி முதலியவை பயிரிட வரி விதிக்கப்பட்டது என்பது அத்திட்டத்தி லிருந்து அறியப்படுகிறது. (216 of 1917) வரிச்சுமையால் குடிமக்கள் பயிர் செய்வதை விடுத்து, அயலூர்களில் குடியேறின்மையும் உண்டு. அரசாங்கம் அவர்களை வருந்தி அழைத்து வரிச் சுமையைக் குறைத் தமைக்கும் சான்றுகள் பல உண்டு. பெருநகரில் இருந்த நெசவாளர் வரிகட்ட இயலாது வேறு ஊரில் குடியேறினர். விசயநகர அரசாங்கம் அவர்களது வரியைக் குறைத்தது. பழைய ஊரில் குடியேறும்படி வற்புறுத்தியது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. (370 of 1923.) தென் ஆர்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளில் வலங்கை, இடங்கைச் சாதிகள் மீது மிகுதியாக விதிக்கப்பட்டிருந்த இனவரி, இடங்கைவரி என்பவற்றைச் செலுத்த இயலாமல் வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். இதனையறிந்த அரசன் அப்பகுதியை ஆண்ட தலைவனிடம் அவ்வரிகளை நீக்கும்படி ஆணையிட்டான். இவ்வாறு சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (476 of 1921.) அரசாங்கச் சலுகை ஆற்று வெள்ளத்தால் நிலங்கள் விளைச்சல் தன்மையை இழந்துவிட்டால், அரசாங்கம் வேண்டிய உதவி செய்வது வழக்கம்; மீண்டும் பயிரிடத் தொடங்கிய முதலாண்டில் பாதிவரியைத் தான் வசூலிக்கும்; அடுத்த ஆண்டு முக்கால் பகுதி வரியை வசூலிக்கும்; பணமாகச் செலுத்தும் குடிமை, காணிக்கை வரிகளை நீக்கிவிடும். பழைய வரியில் பாதியும், புதுவரியும் வசூலிக்கும்; முதலாண்டில் குடியிருப்பவர்க்கும் கடமை, அரசுப்பேறு, வாசல்பணம், ஆயம், புல்வரி முதலிய வரிகளில் பாதி அளவே முதலாண்டில் வசூலிக்கும்; அடுத்த ஆண்டு முக்கால் வரியை வசூலிக்கும். இவ்வாறே கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் உரிய நிலங்கள் மீது வரி வசூலிக்கப்படும். ஒரு கிராமம் கொள்ளை, படையெடுப்பு இவற்றால் துன்பப் பட்டாலும் இதே முறையில் குறைந்த வரி வசூலிக்கப்படும். (422 of 1912, 629 of 1923.) பயிரிடப்படாத இடங்களில் குடியேறிப் பயிரிடுமாறு அரசாங்கம் மக்களைத் தூண்டுவதுமுண்டு. இங்ஙனம் பயிரிடப் பண்படுத்தப்படும் நிலத்திற்குக் குறித்த காலம்வரை அரசாங்கம் வரி விதிக்காது. அரசாங்கச் செலவு பெருநாட்டிலிருந்த சிற்றரசர்கள் தத்தம் நாட்டுக் காவற்படைக்கும் போர்ப்படைக்கும் தாங்களே செலவழித்துக் கொண்டனர். நடு அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்தம் அலுவலுக்காக மானியங்கள் விடப்பட்டன. ஆட்சிக்குட்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் (மாகாணத்திலும்) நாடுகாவல் (போலீ) படையினர் அந்தந்த நாட்டு வருவாயில் பணியாற்றி வந்தனர். ஒவ்வோர் ஊரிலும் ஊராட்சி மன்றம் இருந்து வழக்குகளைத் தீர்த்து வந்தமையால், நடு அரசாங்கத்திற்கு அதற்கென்று தனிச் செலவு ஏற்படவில்லை. இக்காலத்தைப் போலப் பல வகைத் துறைகளிலும் அக்கால அரசாங்கம் பொருள் செலவிடத் தேவையில்லை. (1) ஆயினும் அக்கால அரசர்கள் ஒருவரோடொருவர் ஓயாது போரிட்டு வந்தனர் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆதலால் நடு அரசாங்கம் தனது வருவாயின் பெரும் பகுதியைப் படைப் பெருக்கத்திற்காகச் செலவிட்டு வந்தது. சோழப் பெருநாட்டில் சோழப் பேரரசர் பல இடங்களிலும் 74 படைகளை வைத்திருந்தனர் எனின், அப்படைகளுக்குப் பெரும்பொருள் செலவாகியிருக்க வேண்டும் அல்லவா? (2) அறக்கூழ்ச்சாலை, வேறு பல தானங்கள் இவற்றிற்காக ஒரு பகுதி வருவாய் செலவிடப்பட்டது. கோவில் கட்டுதல், பூசை விழாக்கள் செய்தல், மடங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் இவற்றை நடத்த உதவுதல், என்பவற்றிற்கும் அரசாங்க வருவாயின் ஒரு பகுதி செலவிடப்பட்டது. (3) பண்டைத் தமிழரசர் நல்லிசைப் புலவர்களுக்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும் பொருளுதவி செய்தனர். உருத்திரன் கண்ணனார் என்ற புலவர், சங்ககாலக் கரிகால் வளவன்மீது பட்டினப்பாலை பாடிப் பதினாயிரம் பொன் பரிசு பெற்றார் (கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், கண்ணி 21) இரண்டாம் இராசராசன் தன்மீது உலாப் பாடிய ஒட்டக்கூத்தர்க்கு - ஒரு கண்ணிக்கு ஆயிரம் பொன் வீதம் (391 கண்ணிக்கும் 391 ஆயிரம் பொன்) பரிசளித்தான். (சங்கரசோழன் உலா, கண்ணி 25- 26.) இவ்வாறு வரையாது வழங்கிய அரசர் பலராவர். (4) ஆற்றுக்கு அணை போடுதல், குளம் எடுத்தல், கால்வாய் வெட்டுதல், சத்திரம் கட்டுதல், பூங்கா அமைத்தல் என்னும் பொதுப்பணிகளுக்கு அரசாங்க வரியே பயன்படுத்தப்பட்டது. (5) கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, வார்ப்புக்கலை முதலியவற்றை ஆதரிக்கவும் அரசாங்க வருவாய் செலவிடப்பட்டது. (6) அரசாங்க வருவாயில் குறிப்பிடத் தக்க அளவு அரண்மனை அலங்காரத்திற்கும், அரசனுடைய உடை குடி அந்தப்புர, கேளிக்கை இவற்றிற்காகவும் செலவிடப்பட்டது. (7) ஆண்டுதோறும் வருவாயின் ஒரு பகுதி எதிர்பாரா நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. இங்ஙனம் ஆண்டுதோறும் ஒதுக்கி வைக்கப்படும் பணம் பெரிய அளவில் அரசாங்கப் பண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டது. (S.I. polity, pp. 195- 196) 6. சட்டம்- முறை- காவல் சட்டங்கள் ஒரு நாட்டை ஆளும் அரசாங்கம் தனது ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக இயற்றும் சட்டங்களின் தொகுப்பே சட்டம் என்று சொல்லப்படும். பழங்காலச் சட்டங்கள் பெரும்பாலும் சமயத்தையும் நீதிகளையும் அடிப் படையாகக் கொண்டே இயற்றப்பட்டன. ஒவ்வொரு வகுப்பாரும் இன்ன இன்னவாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகள் அமைக்கப்பட்டன. மனிதன் தனிப்பட்ட முறையிலும் சமுதாய முறையிலும் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்ந்து மறுவுலகில் நலம்பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டே, பழங்காலச் சட்டங்கள் அமைக்கப்பட்டன என்பது அறிஞர் கருத்து. (S.I. polity, p. 197) அரசாங்க தண்டனை என்பது குடிமக்களைத் தீநெறியி னின்றும் நல்வழிப்படுத்துவதாகும். ஆதலால், தண்டனையை அறம் என்றும் அறிஞர் கூறுவர். அரசாங்கம் விதிக்கும் சட்டதிட்டங்களை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது இக்காலத்தைப் போலவே பழங்காலத்திலும் நன்கு வற்புறுத்தப் பட்டது. அரசன் சமுதாயப் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டும். அதற்கு அவன் அறத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்; நீதியை அனைவர்க்கும் வழங்கவேண்டும். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடாதெனின் என்பது தமிழ் அறம். அரசன் கொடியவரைத் தண்டித்தல், பயிரைக் காக்கக் களைநீக்குவது போன்ற செயலாகும் என்பது வள்ளுவர் கருத்து. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் எனவே, தீயோரைத் தண்டித்தல் அறச்செயலாகவே கருதப்பட்டது. இது முன்னரும் கூறப்பட்டது. அறநூல் சங்க காலத்தில் பசுவின் மடியை அறுத்தல், மகளிரது கருவைச் சிதைத்தல், பார்ப்பாரை அவமதித்தல் முதலியன செய்தவர் பெரிய அறங்களைச் சிதைத்தவர்’ என்று கருதப் பட்டனர்.(புறநானூறு, செ. 34) ஒருவன் செய்த நன்மையை மறந்தவனுக்கோ, நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தவனுக்கோ உய்வில்லை என்று அறம் பாடிற்றே ஆயிழை கணவ, என்று புலவர் ஆலந்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் கூறினார். (புறநானூறு, செ. 34) இங்கு, அறம் என்பது நீதிநூல் அல்லது அறநூல். எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது திருக்குறள். ஆலந்தூர்கிழார் குறிப்பிட்ட அறம் இதுவே. எனவே, அப்புலவர் காலத்தில் திருக்குறள் அறநூலாகக் கருதப்பட்டது போலும்! அக்காலத்தில் போர் தொடங்க விரும்பிய அரசர் முதற்கண், யாம் நும் நாட்டின்மீது படையெடுப்போம். நும் நாட்டில் உள்ள பசுக்களும், குற்றமற்ற பார்ப்பனரும், பெண்டிரும், நோயுடையவரும், பிள்ளை பெறாதவரும் எமது அம்புகளுக்கு இலக்காகாமல் தப்பித்துக் கொள்ளுங்கள், என்று கூறுவது மரபு. இத்தகைய போர்ச் சட்டம் அக்காலத்தில் இருந்து வந்தது. இது அறநெறி என்று கருதப்பட்டது. (புறநானூறு, செ.9) சமுதாயத்துக்குரிய சட்ட திட்டங்களைக் கொண்ட நூல்கள் அறநூல்கள் (தரும சாத்திரங்கள்) என்று பெயர் பெற்றன. அவை வடமொழியில் வடநாட்டு மக்களுக்கு எழுதப் பட்டனவே தவிரத் தமிழ் மக்களுக்கு அல்ல. ஆயினும், சங்க காலத்திற்குப் பின்னர்த் தமிழர் அல்லாத பல்லவர் தமிழகத்தை ஆளத் தொடங்கியது முதல், வடவர்க்காக எழுதப்பட்ட தரும சாத்திரங்களின்படி தமிழகத்தை ஆளத் தொடங்கினர். வடநாட்டில் முதலில் தரும சாத்திரங்களின்படியே சட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அந்நூல்களுக்கு உரையாசிரியர்கள் தோன்றி விளக்கங்கள் எழுதத் தொடங்கிய பிறகு, அவ்வுரையாசிரியர்கள் பல்வேறு இனமக்களின் நீண்ட கால வழக்காறுகளையும் ஒப்புக்கொண்டனர். (S.I. polity. p. 198) அரச குடும்பத்தினரைக் கொலை செய்தல், அரசன் உதவிய அறங்களைச் சிதைத்தல், அரசன் விதித்த தண்டத்தைச் செலுத்தாமை, கோவிலுக்கென்று அரசன் ஆணையிட்ட பணத்தைச் செலுத்தாமை, சமுதாய அமைதியைக் கெடுத்தல் போன்றவை அரசத் துரோகச் செயல்கள் என்று கருதப்பட்டன. இவ்வாறே கிராமத் துரோகம், நாட்டுத் துரோகம் என்றும், இத்தகைய தவறுகள் இடத்துக்கு ஏற்பப் பெயர் பெற்றன. ஊரவைகள், கிராமத் துரோகத்துக்குத் தண்டனை விதித்தன. அவ்வாறே நாடாள்வார் நாட்டுத் துரோகிகளைத் தண்டித்தனர். வேட்டைச் சட்டம் முதலியன உடுக்கையை ஒத்த கால்களை உடையனவும், மடிந்த காதுகளை உடையனவும் ஆகிய யானைக் கன்றுகள் முதலிய விலங்குகளின் குட்டிகளையும் சூல் கொண்ட பெண் விலங்கு களையும் வேடர்கள் வேட்டையாடார் என்று சேக்கிழார் கண்ணப்ப நாயனார் புராணத்தில் கூறியுள்ளார். (செ.86) இக்காலத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் இத்தகைய சட்டங்கள் இருந்து வருகின்றன. சோழர் அமைச்சரான சேக்கிழார் இதனைக் கூறியிருத்தலால், சோழர் காலத்தில் இத்தகைய சட்டம் ஒன்று இருந்திருக்கலாம் என்று கருதுவது பொருத்தமாகும். கொடிய விலங்குகளால் தமக்கும் தம் உடைமைகட்கும் தீங்கு நேருவதாக வேடர், கண்ணப்பரின் தந்தையான வேட்டுவ அரசனிடம் முறையிட்டனர். (செ. 43) அவன் குடிகளின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு வராமற்காப்பது தன் கடமை ஆதலால், கொடிய விலங்குகளை அழிக்கத் துணிந்தான். உடலைப்பற்றிய குற்றம் (offences against person), உடமையைப் பற்றிய குற்றம் (Offences against property) என்பவை நேராமற் காப்பது அரசின் கடமை என்று இன்றும் சட்டம் கூறுகிறதன்றோ? (C.K.S. முதலியார், சேக்கிழார், பக் 50) இது முற்காலத்தும் வழக்கில் இருந்தது என்பது இதனால் தெரிகிறதன்றோ? ஒருவர் அடைமானமாக வைத்த உடைமை பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலுமே அடைமானம் பெற்றவரிடம் இருத்தல் வேண்டும். அதன் பிறகு உரியவர்களிடம் எவ்விதத் தொகையும் கேட்காமல் உடைமையை உடையவரிடம் ஒப்புவித்தல் வேண்டும் என்பது விஜயநகர ஆட்சியில் சட்டமாக இருந்தது. (619 of 1917) ஒருவரது அரசாங்கப் பணிக்காக வழங்கப்படும் இனாம் நிலங்கள் அடைமானம் வைக்கவோ, விற்கவோ கூடாது. அங்ஙனம் செய்பவர், அரசத்துரோகிகளும் சமுதாயத்துரோகி களும் பெறத்தகும் தண்டனையைப் பெறுவர் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. (193 of 1916) கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஓர் ஊரைச் சேர்ந்த பிராமணர்கள் கூட்டங்கூடி, கன்னிகாதானமாகத் தம்முள் மணம் முடிக்கவேண்டும் என்றும், இதற்கு மாறாக நடப்பவர் சாதிநீக்கம் செய்யப்படுவதோடு அரசனால் தண்டிக்கப்படுவர் என்றும் தீர்மானித்தனர் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. (428 of 1887) இங்ஙனம் ஓர் இனத்தார் முடிவு சட்டமாகிறது என்பது அறியத்தகும். நீதி மன்றங்கள் அரசன் குடிகளுக்குத் தந்தையும் தலைவனும் ஆவான். எனவே, குடிகளின் குறைகளை விசாரித்து முறை வழங்குதல் அரசனது சிறப்புக் கடமையாகிறது. சங்க காலத்தில் வள்ளுவர் நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தால் நீதி மன்றத்தார் கடமைகளை உணர்த்தியுள்ளார்; உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழும்; அதுபோலக் குடிகள் மன்னனது நெறி தவறா முறையை நோக்கி வாழ்வர். குடிமக்களுடைய குறையைப் பொறுமையோடு கேட்டு முறை வழங்காத அரசன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான் என்பது வள்ளுவர் வாக்கு. (அதிகாரம் 55, 2, 8) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (அதிகாரம் 12, 8.) என்பதும் அப்பெருமான் வாக்காகும். சோழநாட்டுத் தலைநகரான உறையூர் நீதிமன்றத்திற்குப் பெயர் போனது என்று சங்கப்பாடல் குறிக்கின்றது. (மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து;அறநின்று நிலையிற் றாகலின் அதனால்; முறைமைநின் புகழும் அன்றே. -புறநானூறு, செ. 39) பண்டைக்காலத்தில் அரண்மனை வாசலில் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் அம்மணியை அசைத்து ஓசை உண்டாக்குவர். உடனே மன்னன் அவர்களைத் தன் கொலுமண்டபத்திற்கு அழைத்து வரச்செய்து அவர்தம் குறைகளைக் கேட்பான்; ஏற்றமுறையில் நீதி வழங்குவான். மனுநீதிச்சோழன் வரலாறே பண்டைத் தமிழரசர்தம் நீதி முறைக்கு ஏற்ற சான்றாகும். (பெரியபுராணம், திருநகரச் சிறப்பு, செ. 27- 44.) கண்ணகியின் வழக்கைப் பாண்டியன் நெடுஞ்செழியன், தன் அரண்மனையில் மாதவியோடு தனித்திருந்தபோது, மிகவும் பொறுமையாகக் கேட்டான் என்பதிலிருந்து, அவசரகாலங் களில் அரசன் எந்த இடத்திலிருந்தும் வழக்குகளை விசாரிப்பது வழக்கம் என்பது தெரிகிறது, இளைஞனாக இருக்கும் தான் முறை தவறாது நீதி வழங்குவானோ என்று ஐயுற்ற இருவர்க்கு, முதிய நீதிபதி வேடத்தில் தோன்றிக் கரிகாலன் முறை வழங்கினான் என்று பழம் பாடல் கூறுகின்றது. (பழமொழி, செ.6.) சங்ககால - நீதிமன்றம் மன்றம், அவை, அவைக்களம், அறக்களம் எனப்பட்டது. நீதிபதிகள் அறக்களத்து அந்தணர் எனப் பட்டனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. (காதை 22, வரி 8.) பல்லவர் காலத்தில் உயர்நீதி மன்றம் தர்மாசனம் எனப்பெயர் பெற்றது. கிராமங்களில் ஊர் அவைகள் இருந்தன. ஊர் அவையாரே ஊர் வழக்குகளைத் தீர்த்தனர்; உரிய தண்டனைகளை விதித்தனர். யானும் என் மரபினரும் இவருக்கு அடிமை என்று சுந்தரர் பாட்டனார் எழுதிக் கொடுத் திருப்பதால், சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்ட கிழ வேதியர் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையினரே நடுவு நிலையிலிருந்து எல்லாவற்றையும் விசாரித்துத் தீர்த்தனர். இவ்வாறே சிறுவரான விசார சருமர் செய்த தவற்றுக்கு அவர் தந்தை விசாரிக்கப்பட்டான், அவன் அவையோரிடம் மன்னிப்பு வேண்டினான் என்று பெரிய புராணம் பேசுகின்றது. (தடுத்தாட்கொண்ட புராணம், செ. 469; சண்டேசுரவர் புராணம், செ.40 - 43.) சோழர் ஆட்சியில் இத்தகைய ஊர் அவைகளும் சபைகளும் நாடுகளும் (நாட்டு மன்றங்களும்) வழக்குகளை விசாரித்து நல்ல முறையில் முடிவு வழங்கின என்பதைப் பல கல்வெட்டுக்களால் அறிகிறோம். விசயநகர ஆட்சிக் காலத்தில் பிரதானி (முதலமைச்சன்) நீதிமன்ற உயர் அதிகாரியாக இருந்தான். சில சமயங்களில் அரசனும் பிரதானியும் அமர்ந்து வழக்கைத் தீர்ப்பதுண்டு. மதுரை வீரப்ப நாயக்கர் ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் நீதிபதிகள் இருவர் இருந்தனர். அவர்கள் ஊர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டனர். (மதுரை நாயக்கர், பக். 241.) ஒரு நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண ஆளுநர் (கவர்னர்) அல்லது அரசப் பிரதிநிதி மாகாண நீதிமன்றத்தில் தலைமை தாங்கி முறை செய்து வந்தனர். ஊராட்சி மன்றத்தார், கோவில் அதிகாரிகள், சங்கத்தார், சாதித் தலைவர்கள் என்பவர் ஊர் வழக்குகளைத் தீர்த்தனர். இத்தகைய ஊர் மன்றங்கள் முடிவு செய்யும் வழக்குகளில் சில, அரசனைத் தலைவனாகக் கொண்ட உயர்நீதி மன்றத்திற்குச் செல்வதும் உண்டு. (S.I. Polity,p. 208) நீதி நடைமுறை திருநாவுக்கரசர் சமணத்தைக் கண்டித்துப் பிரசாரம் செய்த காரணத்தால் அவரை விசாரித்துத் தண்டிக்க விரும்பிய பல்லவ மகேந்திரவர்மன் அமைச்சரையும் படையையும் அனுப்பித் திருநாவுக்கரசைச் சிறை செய்தான். (திருநாவுக்கரசர் புராணம், செ. 90-91.) செல்வாக்குள்ள பெரியவரைப் பெரிய அதிகாரிகள் சென்று மரியாதையுடன் சிறை செய்தல் இன்றும் காணலாம். திருநாவுக்கரசர் சிவலிங்கத்தைத் தரிசிக்கவிடாமற் பழையாறையில் சமணர் செய்த குழ்ச்சியை அரசன் அறிந்து விசாரித்துச் சமணரைத் தண்டித்தான்; (திருநாவுக்கரசர் புராணம், செ. 297- 298.) தண்டியடிகளைப் பழித்துப் பேசிய சமணர்க்கும் தண்டியடிகட்கும் உண்டான விவாதத்தை விசாரித்து, நேரில் உண்மை உணர்ந்து நீதி வழங்கினான். (தண்டியடிகள் புராணம், செ. 15- 20.) சமயத்தைப் பாதுகாப்பது மன்னர் கடமை என்பதை அக்கால அரசரும் உணர்ந்திருந்தனர் என்பது இவற்றால் அறியலாம். சுந்தரருடைய தந்தைக்குத் தந்தையார் வெண்ணெய் நல்லூர்ப் பித்தனார்க்குத் தாமும் தம் வழியினரும் அடிமை என்று இசைவு (ஒப்பந்தம்) எழுதிக்கொடுத்திருந்தார். அதைத் திருவெண்ணெய் நல்லூர்ப்பிச்சன் கொண்டுவந்து சுந்தரர் தமக்கு அடிமை என்று சொன்னார். அப்பொழுது அவ்வூர்ச் சபையினர் படித்துப் பார்த்தனர்; ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பவற்றை ஆராய்ந்தனர்; ஓலையில் இருந்த கையெழுத்தைத் தம் அரண்தரு காப்பில் இருந்த மூல ஓலைக்கையெழுத்தோடு ஒப்பிட்டனர்; பின்னரே இசைவு வழக்கில் முடிவு கூறினர். இச்செய்தி தடுத்தாட்கொண்ட புராணத்திற் காணப்படுகிறது. (தடுத்தாட்கொண்ட புராணம், செ. 59- 63.) ஒரு வழக்கில் நீதித்தீர்ப்புக்குத் துணை செய்வன மூன்று வகைப்பட்ட சாட்சியங்களாகும். அவை ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பன. ஆட்சி என்பது, தொன்றுதொட்டு, அதாவது இத்தனை காலம் என்று அறியப்படாத காலமாய்ச், சான்றோராற் கையாளப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கமாம். அதனையே ஆன்றோர் ஆட்சி என்பர். ஆவணம் என்பது, ஒரு வழக்கைத் தீர்மானிக்க உதவும் சுவடி ஓலை முதலிய எழுத்துச் சீட்டுக்கள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் செல்வது. இவை முறையே (Oral Evidence) வாய்மொழிக் கூறு என்றும், (Documentary Evidence) சுவடிக் கூறு என்றும் தற்கால ஆங்கில நீதி முறையில் பேசப்பெறும். அயலார் தங்கள் காட்சி என்பதனால் தாமே கண்டது சான்றாகுமன்றிப் பிறர் கண்டதைக்கேட்டுப் பேசுவது சான்றாகாது என்று ஒதுக்கப்பெற்றதும் தெரியலாம். Hearsay is not evidence என்ற இந்நாள் விதியும் காண்க. ஆவணம் என்பவை அந்நாளில் ஓலைகளில் எழுதப் பெற்றன. அவைகளில் எழுதிக்கொடுத்தோர் பெயரும், எழுதி வாங்கிக்கொண்டோர் பெயரும், எழுதும் பொருளின் விவரமும் அடங்கும். இறுதியில் இதற்கு இவை என் எழுத்து என்ற எழுதிக்கொடுத்தோர் கையெழுத்தும் இடப்பட்டிருக்கும். ஒப்பந்தங்களுக்கு இசைவு என்பது பெயர். இவ்வகை ஒப்பந்தங்கள் பண்டை வழக்கத்திற்கும் ஆட்சிக்கும் மாறுதலாகவும் இருக்கலாம். அவ்வாறு உலக ஒழுக்கத்திற்கும் மாறுபட்டிருப்பினும், இசைவு சபையாருக்குத் தெளிவு பெறுத்தப்பெற்றால், அதுவே தீர்மானிக்கப்படும். ஆட்சிக்கு விரோதமென்று ஒரு இசைவு வழக்கைத் தள்ளிவிட மாட்டார்கள். இசைவு வழக்கு என்பது இருவர் ஒப்பந்தத் தினைப்பற்றிக் கோரும் தீர்மானத்தை உட்கொண்ட தாம். அவ்வழக்குகளைத் தான் causes based on agreement என்று ஆங்கில முறை சொல்லும். அவ்வாறு எழுதிக் கொடுக்கும் இசைவு ஓலைகளுக்குச் சாட்சிக்காரர்கள் கையைழுத்துப் போடுவதும் வழக்கம். சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்க்கு மேலெழுத்திடுவோர் என்று பெயராம். எழுதிக் கொடுத்தவர் இறந்து பட்டால், சாட்சிக்காரர்களின் கையெழுத்தையும் எழுதிக்கொடுத்தவரின் கையொப்பத்தையும் வேறு சாசனங்களையும் கொண்டு, அவை அவையே என்று நிச்சயித்துத் தீர்ப்புக்கொடுப்பார்கள். அவ்வாறு இறந்தோர் கையெழுத்துக்களை அவர்களுடையனவாம் என்ற நிச்சயிக்கிறதற்கு, அவர்களுடையன என நிச்சயமாய் அறிந்த வேறு கையெழுத்து ஓலைகளை வரவழைத்து, இரண்டு கையெழுத்துக்களையும் ஒப்புநோக்கி நிச்சயிப்பதும் தீர்மானிப்பதும் அந்நாள் வழக்கு விசாரிக்கும் முறைகளில் ஒன்றாகும். இதனால் Comparison of handwriting and signatures என்று இந்நாள் ஆங்கில நீதி முறைக்காரர் கொண்டுள்ள விதிகள், பல நூற்றாண்டுகளின் முன் அக்காலத்தே தமிழர்கள் கையாண்ட விதிகளாக நாம் அறிகிறோம். இவ்வாறு கையெழுத்துக்கள் ஒத்துப் பார்ப்பதற்காக அந்த ஊர்களில் உள்ளவர்களது கையெழுத்துக்களையும் கையொப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க நீதிச்சாலைப் பாதுகாப்பில் காப்பாற்றி வைக்கும் வழக்கமும் இருந்தது. இது இந்நாள் பத்திரப் பதிவு (Registration) இயலார் செய்யும் முறையைவிட மேற்பட்ட முறையில் விளங்குவது காணலாம். இம் முறைகள் தடுத்தாட் கொண்ட புராணத்திலே சுந்தரமூர்த்திகளைப் பரமசிவனார் வல்வழக்கிட்டு வெண்ணெய் நல்லூர்ச் சபையிலே தமது ஆள் ஓலையைக் காட்டித் தம் பக்கம் தீர்ப்புப்பெற்று ஆட்கொண்டருளிய வரலாறுகளிலும் பிறவற்றாலும் நன்கு அறியக்கிடக்கின்றன. ஊர்கள்தோறும் உள்ள நீதிமுறைச் சபைகளிலே தக்கோர் இருந்து செந்நெறியிலே நமர்- பிறர் என்ற எவ்வகைப் பேதமும், ஒருபாற் கோடிப் பாரபட்சம் செய்தலும் இல்லாமல், இருவகையும் ஒப்பநாடி நீதித் தீர்ப்புச் செய்து வந்தார்கள். அந்தச் சபைகளுக்குக் கரணத்தான் (குமாதா- clerk) ஒருவன் உண்டு. அவனே அந்தச் சபையார் ஏவலின்படி நீதி விசாரணைக் காரியங்களில் உதவி செய்வான். அவனே நீதி மன்றத்தில் சுவடி முதலியவற்றைக் காவல் புரிபவன். (C.K.S. முதலியார், சோழர், பக். 66- 68.) மாறவர்மன் சுந்தரபாண்டியதேவன் காலத்தில் குளத்தூர் மக்களும், அவ்வூர்க் கோவில் அதிகாரிகளும் ஒரு கட்சியாக இருந்தனர்; விக்கிரமசோழ நாடாள்வான் என்பவன் எதிர்க்கட்சியாளன். ஆற்று நீர் உரிமை பற்றி இவ்விருதிறத் தாருக்கும் பூசல் உண்டானது. இருதிறத்தாரையும் சான்றோர் விசாரித்து, ஆற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் எடுக்கலாம் என்றும், மீன் பிடிக்கும் வரியில் ஒரு பாதி கோவிலுக்கும் மறுபாதி விக்கிரமசோழ நாடாள்வானுக்கும் சேரவேண்டும் என்றும் முடிவு செய்தனர். (380 of 1914) திருவதிகை திருவீரட்டானேசுவரர் கோவிலைச் சேர்ந்த தானத்தார், மாகேசுவரர் ஆகியோருக்கும் அதிராஜ மங்கலிய புரத்து நகரத்தார்க்கும் எல்லை பற்றிய வழக்கு ஒன்று நடந்தது. வீரபாண்டியதேவன் காலத்தில் செய்யப்பட்ட முடிவை நகரத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் செய்யப்பட்ட முடிவுகளை மாகேசுவரரும் தானத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அரசாங்க அதிகாரிகளான உடையார் காலிங்கராயர், நரசிங்கதேவ முதலியார், திருமஞ்சன மாளிகையார், விசுவநாததேவர் என்பவர்கள் அவ்வழக்கை விசாரித்து முடிவு செய்தனர் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. (380 of 1914; 69 of 1924; S.I. polity, p. 214.) வழக்கை விசாரித்து முடிவு கூறுவோர் இடத்திற்கேற்பவும் வழக்கிற்கு ஏற்பவும் வேறுபட்டிருந்தனர். உடையார்குடிக் கோவில் வழக்குகளைத் தீர்க்க அக்கோவில் மாகேசுவரர், பல கோவில்களைச் சேர்ந்த அதிகாரிகள், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த யாத்ரிகர், உடையார்குடியில் இருந்த கைக்கோள முதலிகள் முதலியோர் நடுவராக இருந்தனர் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (570 of 1920; A.R.E. 1921, para 40) இத்தகைய வழக்கு முடிபுகளில் அமைதி பெறாதவர், மண்டலத் தலைவனுக்கோ அல்லது அரசனுக்கோ விண்ணப்பம் செய்துகொள்ளலாம். அவர்கள் தாமாகவே முடிவுகூற முடியாதபோது, நாட்டார் உதவியை நாடுவர். அவர்களாலும் முடியாதபோது, சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மகாசனங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வார்கள். விசய நகர ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரகளூர் சிவன்கோவில் வழக்கு ஒன்று மேற்சொல்லப்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டது. (413 of 1913; A.R.E. 1914, para 26.) நிலங்களைப் பற்றிய சில வழக்குகளில், நீதிபதிகள் நிலங்களைப் பார்த்த பிறகே முடிவுகூறுவது வழக்கம். அவரவர்க்குரிய பத்திரங்களையும் நிலங்களையும் பரி சோதித்த பிறகே வழக்கு ஒன்று தீர்க்கப்பட்டது. மதுரை நாயக்கர் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் (பதினாறாம் நூற்றாண்டில்) இத்தகைய வழக்கு ஒன்று தீர்க்கப்பட்டது. (582 of 1926) சில வழக்குகளில் போதுமான சான்றுகள் இருப்பதில்லை. வழக்காளிகள் இருவருமே ஒருவரையொருவர் குறை கூறுவர். அந்த நிலையில் நீதிபதிகள் தாம் ஐயப்படுபவரைச் சில சோதனைகளுக்கு உள்ளாக்குவர். காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்தல், தீ மிதித்தல், கொதிக்கும் நெய்யில் கையை விடுதல் முதலியன அக்காலச் சோதனைகளாகும். இச்சோதனை களுக்குட்பட்ட வழக்காளிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அச்சோதனையால் துன்புறாதிருந்தால், அவர்கள் வழக்கில் வென்றவர்களாவர்; துன்புற்றால் வழக்கில் தோற்றவராகக் கருதப்படுவர். ஒரு வழக்கின் முடிவு, வழக்காடிய இருவருள் ஒருவருக்குத் திருப்தி இல்லை என்றால், அவர் வென்றவரைச் சோதனைக்கு உள்ளாக்கும்படி அதிகாரிகளை வேண்டிக் கொள்ளலாம். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வழக்கு ஒன்று நடந்தது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. (S.I. polity, pp. 223- 224) குற்ற வழக்குகள் கொலை, களவு, சோரம், மாற்றுக் கையெழுத்திடுதல் முதலியவை குற்ற வழக்குகளைச் (Criminal) சேர்ந்தவை. இக்குற்றங்களைச் செய்தவர் அரசாங்க வேலைக்குத் தகுதியற்றவர் என்பது தீர்மானிக்கப்பட்டது. (A.R.E. 1899, para 63.) ஏனைய வழக்குகளைப் போலவே கடுந் தண்டனைக்குரிய வழக்குகளும் ஊர் மன்றங்களிலும், நாட்டு மன்றங்களிலும் விசாரித்து முறை வழங்கப்பட்டன; தேவை ஏற்படின், அரசனும் அமைச்சனும் நேரில் விசாரித்து நீதி வழங்கினர். ஒருவன் வேட்டையாடும்போது குறிதவறி ஒரு வெள்ளாளனைக் கொன்று விட்டான். அவனை விசாரிக்க எழுபத்தொன்பது நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கூடினர்; தன் குற்றத்திற்கு ஈடாக அவனது ஊர்க்கோவிலில் இரண்டு நந்தா விளக்குகள் எரிப்பதற்காக அறுபத்து நான்கு ஆடுகளைக் கோவிலுக்கு விடும்படி தீர்ப்புக் கூறினர். (67 of 1906) ஒரு நாடாள்வான் விற்படையினரின் தலைவருள் ஒருவனைக் குத்திக் கொன்றுவிட்டான். இரண்டாம் இராசேந்திர சோழன், அக்குற்றவாளி கோவிலில் ஒரு நந்தா விளக்கு வைக்க வேண்டும் என்று கிராம அதிகாரிகளுக்கு ஆணை போக்கினான். (227 of 1904) ஒரு வெள்ளாளன், தவறுதலாக வேறொருவனைக் கொன்றுவிட்டான். அரசாங்க அதிகாரி அவ்வழக்கை விசாரித்தான். கோவில் பட்டர்கள், அவன் வேளாளனாக இருத்தலால் கொலைத் தண்டனை கூடாது என்று கூறினர். அரசாங்க அதிகாரி அந்த முடிவை ஏற்றுக் கொண்டான். (200 of 1929; ஒரு குலத்துக்கு ஒரு நீதி இருந்தமையைக் காண்க.) ஒரு வணிகன் வைப்பாட்டி வைத்திருந்தான். மற்றொருவன் ஓர் இரவு அவளை கெடுக்க முனைந்தான். வணிகன் அங்ஙனம் வந்தவனைக் குத்திக் கொன்றான். இவ்வழக்கை விசாரித்த பெரியவர்கள், வணிகனும், இறந்தவனது நெருங்கின உறவினனும் ஆக, இருவரும் சேர்ந்து உள்ளூர்ச் சிவன் கோவிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்கட்டும் என்று முடிவு கூறினர். (77 of 1906) வேண்டுமென்றே நடைபெற்ற கொடிய குற்றங்களுக்குக் கடுந் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஐந்து பிராமண சகோதரர்களும் சில வெள்ளாளர்களும் தங்கள் சாதித் தொழில்களை விட்டுக் கீழ் வகுப்பார் தொழிலை மேற்கொண்டனர். அவர்கள் கொடிய கருவிகளைக் கொண்டு பிராமணர்களைக் கொலை செய்தனர்; பிராமணப் பெண்களை இழிவு படுத்தினர்; கொள்ளை அடித்தனர்; கால் நடைகளைக் கைப்பற்றி விற்றனர். இக்கொடுமைகளை விக்கிரம சோழன் அதிகாரிகளுக்கு (இது நடந்த நாட்டு அதிகாரிகளுக்கு)த் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அக்குற்றவாளிகளைப் பிடித்து அடித்தனர்; தண்டம் விதித்தனர்; அவர்கள் வீடுகளை அழித்தனர். இத்தண்டனைகளால் அவர்கள் திருந்தவில்லை. உடனே மக்கள் அந்த நாட்டை ஆண்ட பொத்தப்பி அரையர் என்பவரிடம் முறையிட்டனர். அவர் ஒரு படையை ஏவினார். குற்றவாளிகள் அப்படை வீரருள் சிலரைக் கொன்றனர்; அவர்களுடைய போர்க் கருவிகளையும் கைக்கொண்டனர். ஆயினும், படைவீரர், குற்றம்புரிந்த பிராமண சகோதரர் ஐவருள் இருவரைச் சிறைப்பிடித்து, அரசன் முன்னிலையில் கொண்டு சென்றனர். அவ்வமயம் மற்ற மூன்று சகோதரர்களும் காவலரைக் கொன்று குற்றவாளிகளை விடுவித்தனர். இதனை அறிந்த அரசன், கீழ்வகுப்பினரைத் தண்டித்தற்கு உரிய விதிகளின்படி அக்குற்றவாளிகளைத் தண்டிக்கும்படி கட்டளை யிட்டான்; அத்துடன், அவர்களது வழிவழிச் சொத்து கோவிலுக்கும் அறநிலையங்களுக்கும் விற்கப்படவேண்டும், விற்றுவரும் தொகையிலிருந்து அவர்கள் செய்த குற்றங்களுக் குரிய தண்டனைத் தொகையை எடுத்துக் கொள்ளவேண்டும், எஞ்சிய தொகையை அக்குற்றவாளிகள் பெயரில் கோவிலுக்குத் தானமாக அளித்துவிட வேண்டும், என்று ஆணை பிறப்பித்தான். (315 of 1909; A.R. E. 1910, para 34.) இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அறிவன யாவை? ஊர் அவையார் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது, அரசாங்க அதிகாரிகளும் அரசனும் தலையிட்டு வழக்கை முடிவு செய்வர் என்பது தெரிகிறது; மேலே கூறப்பெற்ற குற்றவாளிகள் பொது மக்களால் பிடிக்கப்பட்டனர் என்பதும், அவர்கள் கீழ் வகுப்பினர்க்குரிய தண்டனை விதிக்கப்பட்டனர் என்பதும் தெரிகின்றன. அதிகாரி முன்னிலையில் குற்றவாளிகளே தம்முள் ஒரு முடிவுக்கு வருதலும் உண்டு. புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த தெற்குப் பகுதி மக்களுக்கும் வடக்குப் பகுதி மக்களுக்கும் மாறுபாடு உண்டானது; அதனால் பல கொலைகள் நிகழ்ந்தன. வடபகுதியினர் மிக்க அட்டூழியம் செய்தனர். அதனால் அவர்கள் தங்கள் மக்களில் சிலரைத் தெற்குப் பகுதியினரிடம் ஒப்படைத்தனர்; கோவில் அதிகாரிகள் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி இருதிறத்தாரும் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கலாகாது. இதற்கு மாறாக நடந்தால் இருதிறத்தாரும் கூடித்தீமை செய்பவன் நிலங்களைக் கைப்பற்றிக் கோவிலுக்குத் தானமாக விடலாம், அங்ஙனம் தானமாக விடப்பட்ட நிலங்களுக்கு அந்தக் குற்றவாளியே வரி செலுத்த வேண்டும், இவற்றோடு ஊரவைக்கும் அரசனுக்கும் அவன் தண்டம் செலுத்தவும் நேரலாம் என்று ஒப்பந்தம் செய்தனர். (Ins. of. pudukkottai State 683) அரசத் துரோகம் செய்தவர் சொத்து அரசாங்கத்தாரால் கைப்பற்றப்பட்டது. அத்துரோகிகள் சில சமயங்களில் கொல்லப்பட்டனர்; அவர்கள் நிலங்கள் ஏலம் விடப்பட்டன. (112 of 1911; 246 of 1917, 506 of 1918, 279 of 1927) சில சமயங்களில் குற்றவாளி கடவுள் சிலைக்கு முன் உறுதி மொழி வாங்கப்படுவான்; தான் குற்றம் செய்யவில்லை என்று கடவுள் விக்கிரத்துக்கு முன் சத்தியம் செய்வான்; நெருப்பில் காய்ந்த இரும்புத் துண்டை நாவால் நக்குவான். நாவில் காயம் ஏற்படாவிடின், அவன் குற்றமற்றவனாகக் கருதப்படுவான்; குற்றவாளி சில சமயங்களில் தெய்வச் சிலைக்கு முன் சத்தியம் செய்துவிட்டு, நெருப்பில் காய்ந்து கொண்டிருக்கும் இரும்பை எடுப்பதுமுண்டு. காயம் பட்டால் குற்றத்துக்கு உரிய தண்டம் விதிக்கப்படுவான்; சிலைக்குமுன் ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய நெய் இருக்கும். தான் குற்றம் செய்யவில்லை என்று சத்தியம் செய்தவன், இரண்டு விரல்களை நெய்யுள் விடுவான். உடனே அவ்விரல்கள் ஒரு துணியால் சுற்றப்பட்டு முத்திரை வைக்கப்படும். மூன்றாம் நாள் அக்கட்டு நீக்கப்படும். விரல்களில் காயம் இருந்தால் அவன் கடுமையாக தண்டிக்கப்படுவான். இம்மூன்று சோதனைகளும் கி.பி. 15- ஆம் நூற்றாண்டில் விசய நகர ஆட்சியில் வழக்கில் இருந்தன. (S.I. polity, p. 233.) குடுமியான் மலைக் கோவில் கருவறையிலிருந்து விலை யுயர்ந்த நகை களவாடப்பட்டது. ஐயுறப்பட்ட சிவபிராமணரைப் பக்கத்துச் சிற்றரசர்கள் - பேரூர்கள் - நாடுகள் இவற்றைச் சேர்ந்த தலைவர்கள் கூடி விசாரித்தனர்; பெரிய பட்டர்களையும் கலந்து யோசித்தனர். அம்மண்டலத் தலைவன் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் காய்ச்சிய இரும்பைப் பிடிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். நால்வர் கைகளில் காயம் பட்டது. மற்றொரு குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். குற்றவாளிகள் அனைவரும் சிவத் துரோகிகள் என்று தீர்மானிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுடைய நிலங்களும் பிற உடைமைகளும் திருநாமத்துக்காணி என்ற பெயரில் கோவிலுக்குச் சேர்க்கப்பட்டன. அச்சொத்துக்கள்மீது முன்பே பணம் கொடுத்தவர், கோவிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு, தங்கள் அடைமானத்தை விடும்படிக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. (Ins. of pudukkottai; State, 691.) சில கல்வெட்டுச் செய்திகளிலிருந்து கோவில் அதிகாரிகளும் ஊர் அவையினரும் திருடு முதலிய குற்ற வழக்குகளை விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது தெரிகிறது. ஒரு கோவில் திருட்டு வழக்கில் குற்றவாளியின் சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டது; ஒரு கை வெட்டப் பட்டது; அவன் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டான். (Ins. of pudukkottai; State 867.) தண்டனை குற்ற வழக்குகளில் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனை மென்மையாகவும் வன்மையாகவும் இருந்து வந்தது. பணம் தண்டமாக விதித்தல், சிறையில் கைகால்களை வெட்டுதல், தூக்கிலிடுதல், குத்திக் கொலை செய்தல், யானையின் காலால் இடறுவித்தல் முதலிய தண்டனைகள் கொடிய குற்றவாளி களுக்கு விதிக்கப்பட்டன. இவற்றோடு குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சங்க காலத்தில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இட்டுக் கொல்ல நினைத்தான் என்பது புறப்பாடலால் அறிகின்றோம். (செ. 46.) பல்லவர் காலத்தில் சமண சமயத்தைத் தாக்கிப் பிரசாரம் செய்த திருநாவுக்கரசர் யானையால் கொல்ல விடப்பட்டார்; விடம் கலந்த உணவு உண்ணுமாறு தூண்டப்பட்டார்; நீற்றறையில் போடப்பட்டார்; கல்லோடு கட்டிக் கடலில் எறிபட்டார். (திருநாவுக்கரசர் புராணம், செ. 95- 132.) இவை பல்லவர் காலத்துக் கொடுந்தண்டனைகள் என்னலாம். பிற்காலச் சோழர் ஆட்சியில், குற்றம் வன்மை வாய்ந்ததாயின், குற்றவாளி மரச்சட்டத்தில் கட்டப்படுவான்; 50 முதல் 100 அடி வரை தடிகொண்டு அடிக்கப்படுவான். கொடிய குற்றமாயின், யானையின் காலால் இடறப்பட்டுக் கொல்லப் படுவான், என்று சௌ-ஜு- குவா என்ற சீன யாத்திரிகர் குறித்துள்ளார். (F.N. of S. India, p. 143) விசய நகர ஆட்சியில், திருடனுடைய ஒரு காலையும் கையையும் வெட்டிவிட்டனர். மிகப் பெரிய அளவில் திருட்டு நடத்திய குற்றவாளி தூக்கிலிடப்பட்டான். அரசத் துரோகம் செய்த பெருமக்கள் (வயிற்றின் வழியாக) கழுவேற்றப்பட்டனர்; கூர்மையான மரக்கழு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். அரசத் துரோகம் செய்த சாதாரண மக்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டுக் கழுத்து வெட்டப்பட்டனர். அரசனையே கொல்ல நினைத்த கொடியவர் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். அவர் தம் குடும்பங்கள் நாட்டைவிட்டே விரட்டப்பட்டன. சில சமயங்களில் இறக்கும் நிலையில் குற்றவாளிகள் சித்திரவதை செய்யப்பட்டனர். (Sewell, A Forgotten Empire, p. 383- 4.) சங்க காலத்தில் குற்றவாளிகளை வைக்கச் சிறைச் சாலைகள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் மணிமேகலை யின் காலத்தில் சிறைக்கோட்டம் இருந்தது. அது அவள் வேண்டுகோளால் அறக்கோட்டம் ஆக்கப்பட்டது என்று மணிமேகலை காப்பியம் கூறுகிறது. பிற்காலத்திலும் சிறைகள் இருந்தன. ஒருவனைக் கொன்றவன் கொல்லப்பட்டவனுடைய ஊர்க்கோவிலில் விளக்கெரிப்பதாக ஒப்புக் கொள்கிறான். இதற்குக் கொல்லப்பட்டவன் உறவினர்கள் இசையின், கொலையாளி தண்டனையின்றி விடப்படுவான். இதனைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. (48 of 1897 etc.) சில பகுதிகளில் கடுமையான குற்றங்களுக்குத் தண்டப் பணம் வசூலிக்கப்படும். ஒரு கன்னிப் பெண்ணைக் கெடுத்தவன் 108 பொன் தண்டம் கட்டவேண்டும்; வேறு பெண் பிள்ளையைக் கெடுத்தவன் 32 பொன் தண்டம் செலுத்த வேண்டும்; காதை அறுத்தவன் 16 பணம் கட்டவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. (E.I. 25.P 238.) இச் செய்திகளை உணர்த்தும் கல்வெட்டுக்கள் சிலவுண்டு. (Ins. of pudukkottai State, 484, 913.) காவற் படை ஊர்களில் களவு முதலியன நடைபெறாது காப்பது ஊர்க்காவலர் கடமை. ஊர்க்காவலரே இக்காலத்தில் போலீசார் எனப்படுகின்றனர். மதுரையில் சங்க காலத்தில் ஊர்க்காவலர் இருந்தனர். அவர்கள், அனைவரும் கண்ணுறங்கும் நடு யாமத்தில் நகரத் தெருக்களில் சுற்றி வருவர்; புலி போலும் வீரமுடையவர்; அஞ்சாமை மிக்கவர்; கள்வரின் சூழ்ச்சிகளை அறிந்தவர். குறி தவறாது அம்பு எய்வதில் வல்லவர்; மழையால் தெருவில் நீர் மிகுந்திருப்பினும், இருள் கவிந்து இருப்பினும், தம் கடமையைச் செய்வர். அவர்கள் கரிய நிறத்தினர்; கரிய உடையினர். அவர்கள் கையில் வாள் பிடித்திருப்பர். அவர்கள் இடையில் நூலேணி இருக்கும்; காற்றினும் கடிதிற் செல்லும் கள்வரையும் கட்டிப் பிடிக்கும் வலிமை உடையவர் என்று மதுரைக் காஞ்சி தெரிவிக்கின்றது. (மதுரைக்காஞ்சி, வரி 632- 647) சோழ நாட்டு நகரங்களில் இரவில் இடையாமத்தில் ஊர் காப்பவர் விளக்குடன் சென்று ஊரைக் காத்தனர் என்பது தெரிகிறது. (புறநானூறு, செ. 37.) சிற்றூர்களில் ஊர்க்காவலர் போலீ வேலையைச் செய்து வந்தனர். இவ்வாறே நாடு என்னும் பெரும் பிரிவை நாட்டுக்காவலர் காத்து வந்தனர். இவர்கள் முறையே பாடி காவலர் என்றும் நாடு காவலர் என்றும் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றனர். இவர்களுக்கு ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டாரும் ஆண்டுக்கு இவ்வளவு நெல் என்று கொடுத்து வந்தனர். பல ஊர்களில் ஊரவையினர் இவர்களுக்கென்று நிலத்தைச் சொந்தமாக விட்டிருந்தனர். ஊர்க்காவல் அல்லது நாடு காவல் முறையே பரம்பரை வேலையாக இருந்து வந்தது. அக்காவலர் அரசத் துரோகம் செய்யின், வேலை போய்விடும்; நிலமும் பறிக்கப்படும். ஊரார் காவலுக்குக் கொடுப்பது நெல் மட்டுமன்று. பராக்கிரம பாண்டியன் காலத்தில் நெல் விளையும் ஒவ்வொரு மா நிலத்திலும் ஒரு கலம் நெல்லும், ஒவ்வொரு பாக்கு மரத்திற்கும் வீசம் பணமும், கரும்பு, மருக்கொழுந்து, இஞ்சி, வாழை விளையும் ஒவ்வொரு மா நிலத்திற்கும் 5 பணமும் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 பணமும் ஊர்க்காவலருக்குக் கொடுக்கப்பட்டன என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. (407 of 1921) ஊரின் அளவுக்குத் தக்கபடி ஊர்க்காவலர் சிலராயும், பலராயும் இருந்து வந்தனர். திருவொற்றியூரில் 48 காவல்காரர் பணியாற்றி வந்தனர். (240 of 1912) விசய நகரத்தில் மட்டும் 12000 நகரக் காவலர் இருந்தனராம். நாடு என்னும் பெருநிலப் பரப்பை ஆண்டு வந்தவன் நாடாள்வான் எனப்பட்டான். அவன், தன் கீழ்க் காவலர் பலரைத் தலையாரிகள் என்ற பெயரில் நியமித்து நாடு காவல் வேலையைப் பார்த்து வந்தான். முன் சொன்ன முறையில் வந்த நாடு காவல் வருமானம் அவனைச் சேர்ந்தது. அவன் அத்தொகையிலிருந்து தன் ஆட்களுக்குத் திங்கள் தோறும் பணமாகவோ, நெல்லாகவோ சம்பளம் கொடுத்து வந்தான். பெருநாடு பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுச் சிற்றரசர் பலர் கையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சிற்றரசரும் தத்தம் நாட்டைக்காவல் புரிந்தனர்; வருவாயில் ஒரு பகுதி பேரரசனுக்கும் ஒரு பகுதி தங்களுக்கும் ஒரு பகுதி தம் காவலுக்கு உட்பட்ட நாட்டு நலத்துக்கும் செலவழித்தனர். இங்ஙனம் செய்து வந்தவர்களே நாயக்கர் காலத்துப் பாளையக்காரர்கள். அடுத்தடுத்த இரண்டு நாட்டுத் தலைவர்கள் தம்முள் அமைதியின் பொருட்டு உடன்படிக்கை செய்து கொள்வ துண்டு. இதனால் இரு நாடுகளிலும் அமைதியே நிலவியிருக்கும். நகரத்தில் திருட்டோ கொள்ளையோ நடப்பின், ஊர்க்காவலர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவன் கொள்ளை யடிக்கப்பட்டால், அந்த இடம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ, அந்த நாட்டுக் காவல் தலைவன் பொருளை இழந்தவனுக்குத் தண்டம் கொடுக்க வேண்டும் என்று விசய நகர வேந்தர்கள் கட்டளையிட்டிருந்தனர். விசய நகரத்தில் மட்டும் 12,000 நகரக் காவலர் இருந்தனர். ஒவ்வொரு வருக்கும் மாதம் 30 பணம் சம்பளம் கொடுக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. விசயநகர ஆட்சியில் காவல்காரர் என்ற பெயரில் ஊர்க்காவலர் இருந்தனர், பெரு நாட்டில் சிறப்புப் பகுதிகளில்- எல்லைப்புறப் பகுதிகளில்- அரசாங்க நிலைப் படைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் அப்பகுதிகளில் நாடுகாவற் பணியைச் செய்து வந்தனர். (South Indian Polity, pp. 244- 247.) 7. படை போர்க்காரணங்கள் (1) நாடு பிடிக்கும் வேட்கை போருக்கு ஒரு காரணமாகும். (2) ஒரு தமிழரசன் மற்ற இரு தமிழரசரை வென்று மூன்று முடிகளைத் தானே சூடிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் போருக்குரிய காரணமாகும். (3) ஓர் அரசன் மகளை மணமுடிக்க இயலாது ஏமாற்றம் அடைதல், அரசர்கள் அப்பெண்ணின் நாட்டின்மீது போர் தொடுத்தற்கு ஒரு காரணமாகும். மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகை இட்டதற்கு இது காரணமாகக் கூறப்பட்டது. (4) தன் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்கள் கப்பங்கட்டத் தவறியபோது அரசன் போர் புரியவேண்டிய நிலை ஏற்பட்டது. முதற் குலோத்துங்கன் கலிங்கத்தின் மீது படையெடுத்தது இதற்காகத்தான். (5) அரசர்கள் தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியைத் தம் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் பல போர்கள் மூண்டன. கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்பட்ட இடத்தைப் பற்றிச் சோழருக்கும்- சாளுக்கியருக்கும், விசய நகர அரசருக்கும்- பாமினி அரசர்களுக்கும் அடிக்கடி போர்கள் மூண்டன என்பது வரலாறு கண்ட உண்மையாகும். படை வகை படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்னும் குறளில் படை முதற்கண் கூறப்பட்டிருத்தல், படையின் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும். இந்த உண்மையைத் தமிழரசர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். தொல்காப்பியம் - புறத்திணை இயலில் படைகளைப் பற்றிய விவரங்களும், போர்களைப் பற்றிய விவரங்களும் நன்குவிளக்கப் பட்டுள்ளன. படை பல பிரிவுகளாகப் பிரிந்து, பல பெயர்களைப் பெற்றிருந்தது. அது, அணி, உண்டை, ஓட்டு எனப்பல பெயர்கள் பெற்றது. முதல் வரிசைப் படைகள் ஆக்கம், தார் (கொடிப் படை), தூசி, நிரை என்றும், பின் வரிசை கூழை என்றும் பெயர்கள் பெற்றன. யானைப்படை, குதிரைப்படை, காலாட் படை என்று படை பல பிரிவுகள் பெற்றது. தேர் தேர் மிகச் சிறியது; வீரனும் பாகனும் இருக்கத்தக்க அளவில் செய்யப்பட்டது. தேரில் மர வேலைப்பாடு மிகுதி. பல நிறங்கள் பூசப்பட்டிருந்தன. தேரைக் குதிரைகள் இழுத்துச் சென்றன. சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட்சென்னி குதிரை பூட்டப் பெற்ற பொன் தேரின்மீது பொலிவோடு காணப்பட்டான் என்று பரணர் பாடியுள்ளார். (புறம், செ. 4.) உருவப்பல் தேர் என்ற தொடர், அச்சோழனிடம் நன்கு அமைக்கப்பெற்ற பல தேர்கள் இருந்தன என்பதைத் தெரிவிக்கிறது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன், ‘காற்று இயங்கினாற் போலும் தாவுதல் உடைத்தாகிய கதியை உடைய குதிரையோடு கொடி அசையும் உச்சியை உடைய தேரை உடையவன்.(புறம் செ. 197.) புற நானூற்றில் மட்டும் ஏறத்தாழ 25 செய்யுட்களில் தேர் குறிக்கப்பட்டுள்ளது. தேர்ப்பாகர் இருந்தனர். தேர் மொட்டு, தேர்வட்டை முதலிய தேரின் உறுப்புக்கள் கடைகளில் விற்கப்பட்டன. தேர்ப்பாகர் தேர் ஊருநர் என்று பெயர் பெற்றனர். (சிலம்பு காதை 5, வரி 55) இவை அனைத்தையும் நோக்க, சங்க காலத்தில் தேர்கள் பயன்பட்டன என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாரிவள்ளல் முல்லைக்குத் தேர் ஈந்தான் என்பதும் இங்கு நினைக்கத் தகும். ஆயின், தேர்ப்படை என்று ஒரு படை இருந்தமைக்குச் சான்றில்லை. (தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்என்பது தொல்காப்பியம்- புறத்திணை இயல், சூ. 17) யானைப்படை சேரநாடு யானைகளுக்குப் பெயர் போனது. ஆய்வள்ளல் பரிசிலருக்கு யானைகளையே பரிசாகக் கொடுத்தான் என்று புறநானூறு புகல்கின்றது. அரசன் ஏறிச் சென்ற யானை நெற்றிப்பட்டம் உடையது; வேறு பல ஆபரணங்களை உடையது; தந்தத்தில் பூணை உடையது. (புறநானூறு, 326, 153, 97) யானைமீது அரசனது கொடி காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அரசன் யானைமீது சென்று பகைவர் கோட்டைக் கதவுகளை அதன் கொம்புகளால் குத்தச் செய்வான். யானைகள் தம் கொம்பு களால் குத்திக் கதவுகளை உடைத்தன. கணைய மரத்தை முறித்தன; போர்க் களத்தில் புகுந்து பகை வீரரைச் சிதறடித்தன; பகை வருடைய மதிலரண்களை அழித்தன.(புறநானூறு, 3, 6, 9, 13, 31,) சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஏறியிருந்த யானை எமனைப் போன்ற தோற்றமுடையது; கடலில் செல்லும் கப்பல் போலவும் விண்மீன்களுக்கு இடையே செல்லும் முழுமதி போலவும் காணப்பட்டது. அது மறவர்கள் புடை சூழச் சென்றது என்று ஒரு செய்யுள் பேசுகின்றது. (புறநானூறு, செ. 13) யானைப்படை வீரர் வேல்களைத் தாங்கிப் போரிட்டனர். சீறூர் மன்னன் படைகளை எதிர்த்துப் போரிட்ட யானைகள் அம்புகளால் தாக்குண்டு தம் பெண் யானைகள் நாணும்படி ஓடின. (புறநானூறு, செ. 308.) நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் நடைபெற்ற போரில் யானைகள் பங்கு கொண்டன என்று கோவூர்கிழார் குறித்துள்ளார். (புறநானூறு, செ. 44.) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடமும் யானைப்படை இருந்தது என்று முல்லைப்பாட்டு மொழிகின்றது. பகைவரது கோட்டைக் கதவுகளை உடைக்கும் முயற்சியில் தனது கொம்பு ஒடிந்ததால் சோழனது ஆண் யானை தன் பிடியைப் பார்த்து வெட்கப்பட்டது என்று முத்தொள்ளாயிரம் கூறுகின்றது. சங்க காலத்தில் யானையை வெல்லுவதே வீரனது கடமை என்று கருதப்பட்டன என்பது, களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறநானூறு செ.312) என்ற புறப்பாட்டு அடியால் தெளிவுறும். முயலைக் குறி தவறாமல் எய்த அம்பைக் கையில் பிடிப்பதைவிட, யானை மேல் எறிந்து தவறிய வேலைக் கையிற் பிடித்தல் சிறந்தது என்று வள்ளுவர் கூறியுள்ளார். (அதிகாரம், 78, செ. 2.) இதனால் யானையை எய்வதே வீரனுக்கு அழகு என்பது பெறப்பட்டது; கோழிப் போர், கௌதாரிப் போர், ஆட்டுக் கிடாய்ப் போர் என்பவை போல யானைப் போரும் சங்க காலத்தில் நடை பெற்றது என்பது, குன்றேறி யானைப்போர் கண்டற்றால் என்ற குறளடிகளால் அறியலாம். (அதிகாரம், 76, செ. 8.) பல்லவர்களும் யானைப்படை வைத்திருந்தனர் என்பதைக் கூரம் பட்டயங்களும், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்களும் உணர்த்துகின்றன. சௌ- ஜு- குவா என்ற சீன யாத்திரிகர் சோழ மண்டலக் கரையிலிருந்த போர் யானை களைப் பற்றிப் பேசுமிடத்து, அரசாங்கத்திடம் அறுபதாயிரம் போர் யானைகள் இருக்கின்றன. அவற்றின் உயரம் ஏழு அல்லது எட்டு அடி இருக்கும். ஒவ்வொரு யானையின்மீதும் ஓர் அம்பாரி உண்டு. அதில் வீரர் பலர் இருந்துகொண்டு நீண்ட தொலைவு வரையிலும் அம்புகளை விடுவர்; பகைவரை நெருங்கியவுடன் ஈட்டிகளை எறிவர். போரில் வெற்றி பெற்றால், யானைகளுக்குச் சிறப்புப் பெயர் இடப்படும், என்று குறித்துள்ளார். (F.N. of S.I. P. 144) ஒரு யானை முப்பது வீரர்களைச் சுமந்து செல்கிறது. ஒரு போர் யானை ஏறத்தாழ 1500 மனிதர்களுக்குச் சமமென்று சொல்லலாம். யானைகளின் தந்தங்களில் கூர்மையான போர்க் கருவிகள் கட்டப்படும், யானைகள் அவற்றைப் பகைவர்மீது பாய்ச்சிப் பகைவர் படைகளில் பெருங்குழப்பத்தை உண்டாக்கும், என்று ஜார்டன என்ற அயல் நாட்டார் கூறியுள்ளார். (F.N. of S.I.g¡. 206.) தக்கோலப் போரில் இராசாதித்தியன் யானைமீது இருந்து போரிட்டான். முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போரில் யானைமீதிருந்து போர் புரிந்தான். குதிரைப் படை சங்ககால அரசர் தேர்களில் காற்றைப்போலக் கடுகி ஓடத்தக்க குதிரைகள் இருந்தன என்பது முன்பு கூறப்பட்டது. அரசனுக்குரிய ஆட்சி மன்றக் குழுவினருள் குதிரைப்படைத் தலைவரும் பங்கு கொண்டிருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அவர்கள் இவுளி மறவர் எனப் பட்டனர். எனவே, சங்க காலத்தில் பண்பட்ட குதிரைப் படைகள் இருந்தன- அப்படைகளுக்குத் தலைவர்கள் இருந்தனர் என்பன இதனால் பெறப்படுகின்றன அல்லவா? குதிரைகள் சிந்து, பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளிலிருந்து மிகப் பலவாகத் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. பாண்டியனது அமைச்சரான மணிவாசகர் திருப்பெருந் துறையில் இறக்குமதியான குதிரைகளை வாங்க அரசாங்கப் பணத்துடன் திருப்பெருந்துறைக்குச் சென்றார் என்ற வரலாற்றுச் செய்தி, கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலும் பாண்டியர் குதிரைகளை வாங்கினர் என்பதை உணர்த்துவதாகும். கி.பி. 13- ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டைப் பார்வையிட்ட மார்க்கோ போலோ என்பவர், பாண்டியன் ஆண்டுதோறும் இரண்டாயிரம் குதிரைகளை வாங்கி வந்தான். ஒவ்வொரு கப்பலிலும் பிற பொருள்களோடு குதிரைகளும் வந்தபடி இருந்தன. ஒரு குதிரையின் விலை ஏறத்தாழ 400 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை இருந்தது. தமிழகத்தில் வெப்பத்தாலும், வளர்ப்பு முறைத் தவற்றாலும் குதிரைகள் அடிக்கடி நோயுறுதலும், இறத்தலுமாக இருந்தன (F.N. of S.I. polity, pp. 166- 168.) என்று குறித்துள்ளார். காலாட்படை சங்ககாலப் போர்வீரர் மறவர் எனப்பட்டனர். மறம்- வீரம். அவர்கள் வில், வேல், வாள் முதலிய போர்க்கருவிகளைக் கொண்டு போரிட்டனர். எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என்ற புறப்பாட்டு அடியால், வில்லும் அம்பும் இருந்தமை வெளியாகும். அவர்கள் பசுக்களைக் கவர்தல், அகழி தாண்டிக் கோட்டையைப் பிடித்தல், வெட்ட வெளியில் போரிடல் முதலிய பல திறப் போர்களில் வல்லுநராய் இருந்தனர். அவர் முன்படை வீரர், பின்படைவீரர், துணைப்படை வீரர் எனப்பல பெயர்களுடன் இருந்தனர். படைவீரர் தங்கள் அரசனிடம் மிக்க அன்பும் பக்தியும் கொண்டிருந்தனர்; அவனுக்காக உயிர் விடவும் துணிந்தனர். போரில் முன் வைத்த காலைப் பின் வைக்கலாகாது- போரில் புறங்காட்டலாகாது என்பது தமிழர் போர் அறம். மார்பில் காயம்பட்ட வீரனையே அவன் மனைவி பாராட்டுவாள். குடும்பத்திலுள்ள ஆடவர் அனைவரும் போரில் இறந்தாலும் அக்குடும்பப் பெண்கள் மிக்க மகிழ்ச்சி அடைவர்; தம் ஆடவர் போர்த்திறனைப் பாராட்டிப் புகழ்வர். வீரமகளிர் போர்க்களம் சென்று இறந்த தம் கணவர் உடலைத் தழுவி உயிர் விடுவர். இவையெல்லாம் சங்ககாலச் செய்திகள். சங்ககால வீரர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் தொல்காப்பியம்- புறத்திணை இயல், புறநானூறு, பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் இவற்றில் பரக்கக் காணலாம். தமிழரசர் முக்கியமான எல்லைப்பகுதிகளில் கோட்டை களை அமைத்து, அங்கு நிலைப்படைகளை வைத்திருந்தனர். பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசர் தம் அளவுக்கு ஏற்றபடி படைகளை வைத்திருந்தனர்; உணவு, உடை, ஊதியம் இவற்றை வீரர்களுக்கு வழங்கினர். பிற்காலச் சோழர் காலத்தில் நாட்டுப்படை, கைக்கோளப் பெரும்படை, வேளைக்காரப்படை எனப் பலவாறு படைகளுக்குப் பெயர்கள் அமைந்திருந்தன. அரசாங்கப் படையில் பல பிரிவுகள் இருந்தன. பண்பட்ட வீரர் படையே கைக் கோளப் பெரும் படை எனப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் படையில் 31 பிரிவுகள் இருந்தன. (S.I. Ins. II, Insp. 9.) வேளைக்காரப்படை என்பது, அரசனுக்கு ஆபத்து வரும் வேளையிலும், நாட்டுக்கு ஆபத்து வரும் வேளையிலும் தம் உயிரையும் மதியாமல் போர் புரியும் வீரர்களைக் கொண்டது. தேவைப்பட்ட போது வந்து உதவி புரியும் நிலைப்படை இது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இன்னது செய்யத்தவறினால் இன்னவாறு மடிவோம் என்று சபதம் செய்து கொண்ட வீரரே வேளைக்காரர் எனப்பட்டனர். இவருள் சிலர் ஊர்களைப் பாதுக்காத்தனர்; சிலர் திருச்சூல வேளைக்காரர் என்ற பெயரில் கோவில்களைக் கண்காணித்தனர். வேளைக்காரப் படையினர் பாண்டியனிடம் ஆபத்துதவிகள் என்று பெயர் பெற்றனர். (391, 395 of 1917; 532, 433 of 1917.) சோழர் காலத்தில் மளையாளப் படை, வடுகர் படை என்பனவும் இருந்தன. சாதாரண காலத்திலும் நாட்டைப் பாதுகாக்க அமைந்த படையே நாட்டுப்படை என்பது. ஐந் நூற்றுவர் என்றார் போன்ற வணிகர் சங்கங்கள் தங்கள் வாணிகத்தின் பொருட்டுப் படைகளை வைத்திருந்தன. வீரர்களுக்கு விடப்பட்ட நிலங்கள் அல்லது வருவாய் அமரம் எனப்பட்டது. (S.I. polity pp. 259- 261. ) படைக்கருவிகள் சங்க காலத்தில் வேல், வாள், வில் அம்பு முதலியன சிறந்த போர்க்கருவிகளாக இருந்தன. மதுரைக்கோட்டை மதில்மீது கீழ்வரும் போர்க்கருவிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.; வளைந்து தானே எய்யும் இயந்திர வில், கரியவிரல் உடைய குரங்கு போல் இருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி, கல்லை உமிழும் கவண், காய்ந்து இறைத்தலால் சேர்ந்தாரை வருத்தும் நெய், செம்பை உருக்கும் மிடா, உருக்காய்ச்சி எறிவதற்கு எஃகு பட்டிருக்கும் உலைகள், கல் இட்டு வைக்கும் கூடை, தூண்டில் வடிவாகச் செய்து விடப்பட்டு வைத்து மதில்ஏறும் எதிரிகளைக்கோத்து வலிக்கும் கருவி, கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கலி, ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக்கொத்தி முளையைக் கடிக்கும் பொறி வரிசைகள், மதில்மீது ஏறுவோரை மறியத் தள்ளும் இருப்புக்கவை, கழுக்கோல், அம்புக்கட்டு, ஏவறைகள், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்திரம், மதிலின் உச்சியைப் பிடிப்பவர் கைகளைக்குத்தும் ஊசிப் பொறிகள், பகைவர்மேல் சென்று கண்ணைக்கொத்தும் சிச்சிலிப்பொறி, மதில் உச்சியில் ஏறினவர் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பால் செய்து வைத்த பன்றிப் பொறி, மூங்கில் வடிவாகப்பண்ணி அடிப்பதற்கு அமைத்த பொறி, கதவுக்கு வலிமையாக உள் வாயிற்படியில் நிலத்தில் விழவிடும் மரங்கள், கனையமரம், விட்டேறு, குந்தம், ஈட்டி, நூற்றுவரைக்கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, புலிப்பொறி, குடப்பாம்கு சகடப்பொறி, தகர்ப்பொறி, ஞாயில் (குருவித்தலை). (காதை 15, வரி 207- 217; உரை.) விசயநகர வேந்தர் காலத்தில் வெடிமருந்தும் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. பெருவழிகள் போருக்கு புறப்படுமுன் அரசன் தனது பலம், பணம், நாடு, காலம், மாற்றான் பலம் முதலியவற்றை ஆராய்வது வழக்கம்; அரசியல் தூதுவரைக் கொண்டும் ஒற்றரைக் கொண்டும் பகைவருடைய படைவன்மையை அறிவது வழக்கம்: படையெடுக்கு முன்பு, கீழ்ப்படியுங்கள்; இன்றேல், உங்கள் நாடு அழியும், என்று பகைவருக்கு எச்சரிக்கை விடுதல் மரபு. சேரன் செங்குட்டுவன் தன் படைகளுடன் இமயமலை சென்றான். - கரிகாலன் இமயமலை சென்றான் என்பவற்றை நோக்க, சங்ககாலத்தில் இந்தியாவில் பெருவழிகள் (Highways) இருந்தன என்பது தெரிகின்றது. தமிழ் நாட்டிலிருந்து வட நாட்டிற்குச் செல்ல அந்திர (வடுக) நாட்டிற்கு மேற்கே பெருவழி ஒன்று இருந்தது. அது வழிவழி மேற்கு என்று சொல்லப்பட்டது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட்டங்கள் அடங்கிய நிலப் பகுதிக்குக் கிழக்கே இவ்வடுக வழி மேற்கு அமைந்திருந்தது. அந்நிலப் பகுதியைப் பாணர் (Banas) ஆண்டு வந்தனர். கி.பி.3- ஆம் நூற்றாண்டில் மயூரசர்மன் என்ற கதம்பர் குல முதல்வன் நாடு பிடிக்கத் தொடங்கிய பின்பு பாண அரசர்கள் வட ஆர்க்காடு மாவட்டத்திற் குடியேறினர். (Epigraphia Indica, Xi. p. 231; S.I. I. III. p.90.) இப்பெருவழி சங்க காலத்திலேயே இருந்தது என்பதற்கு இச்செய்தியே ஏற்ற சான்றாகும். பிற்காலச் சோழர் காலத்தில் கங்கை கொண்ட சோழனது படை கங்கை வரையில் சென்று மீண்டது. முதற் குலோத்துங்கன் படை கலிங்கம் வரையில் சென்று மீண்டது. சோழர் படைகள் துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பாலும் சென்று போரிட்டன என்ற செய்திகளை நோக்க, பிற்காலச் சோழர் காலத்திலும் நாட்டில் பெருவழிகள் இருந்தன என்பது தேற்றம். ஒரு நாட்டின்மீது படைவீரர் செல்லும் பொழுது அவர்களோடு சமையற்காரர், சலவைத் தொழிலாளர்கள் தண்ணீர் தருபவர், இரும்புக் கொல்வர், பணி மக்கள், பணிப் பெண்கள் முதலியோர் செல்வது வழக்கம். வீரர்களுக்கு உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்க ஆடல்- பாடல் மகளிரும் உடன் செல்வர். (S.I. polity, p. 268) போர் வகை ஒரு நாட்டின்மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது வெட்சித் திணை எனப்படும். இம் முயற்சியில் ஈடுபட்டவர் வெட்சி மலர்களைச் சூடுவர். இம்முயற்சியை எதிர்த்து நிற்பது கரந்தைத் திணை எனப்படும். அவர்கள் கரந்தை மலர்களைச் சூடிக் கொள்வர். பின்பு அந்நாட்டின் மீது படையெடுப்பு நடைபெறும். அது வஞ்சித் திணை எனப்படும். அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித் திணை எனப்படும். கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத் திணை எனப்படும். கோட்டையுள் இருந்து எதிர்த்தல் நொச்சித் திணை எனப்படும். கோட்டைக்கப்பால் வெட்ட வெளியில் நடை பெறும் கடும் போர் தும்பைத் திணை எனப்படும். போரில் பெற்றி பெறுதல் வாகைத் திணை எனப்படும். ஒவ்வொரு திணைச் செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அத்திணைக்குரிய மலர்கள் அணிந்து கொள்ளுதல் மரபு. மேலே கூறப்பட்ட ஒவ்வொரு திணைப்போரும் பல படிகளையுடையது. அப் படிகள் துறைகள் எனப்படும். இப்போர்க்கலை பற்றிய விளக்கம் தொல்காப்பியம்- புறத்திணை இயலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இக்கலை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்தில் திடீரென ஏற்பட்டிருத்தல் இயலாது. தொல்காப்பியர்க்கு முன்னரே - பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழையடி வாழையாக வளர்ந்து வந்த போர்க் கலையின் விரிவே தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது என்று கொள்ளுதலே அறிவுடைமையாகும். அரசன் அல்லது அவன் நம்பிக்கைக்குரிய படைத் தலைவன் படைகளுக்குத் தலைமைத் தாங்கிப் போருக்குச் செல்லுதல் வழக்கம். கரிகாலன், சேரன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் போன்றோர் தாமே படைகளுக்குத் தலைமை தாங்கினர். கங்கை கொண்ட சோழன் காலத்தில் இளவரசன் இராசாதிராசனே படைகளுக்குத் தலைமை தாங்கினான். பாசறை நிகழ்ச்சிகள் பாண்டியன் நெடுஞ்செழியனது பாசறை இரவு நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு குறிக்கப்பட்டுள்ளன. இவ் விவரங்களி லிருந்து பாசறை நிகழ்ச்சிகளை ஒருவாறு நாம் அறியலாம்: “பாண்டியன் தனக்கென்றமைந்த கூடாரத்தில் திரைச் சீலை தொங்கவிடப்பட்ட உள்ளறையில் உள்ள படுக்கையில் ஒரு கையை வைத்தும் மற்றொரு கையை முடியுடன் சேர்த்தும் இருக்கிறான்; முதல் நாட்போரில் யானையை வேலால் எறிந்து இறந்த வீரரை நினைக்கிறான்; அம்பு தைத்த துன்பத்தால் செவி சாய்த்துப் புல் உண்ணாமல் நிற்கும் பரிகளை நினைக்கிறான்; ‘இப்படை இவ்வளவு தளர்ச்சியுற்றிருப்பதால், இதனைக் கொண்டு நாம் நாளை வெற்றி காண்பது எங்ஙனம்? எனத் தளர்ச்சி அடைகிறான். அவ்வமயம் அங்குக் காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர் மன்னனைப் பணிந்து வாழ்த்தி, நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை எனக் கூறுகின்றனர். அப்பொழுது தூய வெள்ளையாடையை உடுத்த அழகிகள் விளக்கைக் கொளுத்துகின்றனர். பாசறையில் நான்கு தெருக்கள் கூடும் ஒவ்வொரு சந்நிதியிலும் ஒரு யானை காவலாக நிறுத்தப்பட்டுள்ளது. அரு கரும்பையும், நெற்கதிரோடு கலந்து கட்டிய இலையையும், அதிமதுரத் தழையையும் உண்ணவில்லை; அவற்றால் தனது நெற்றியைத் துடைக்கிறது; அவற்றைத் துதிக்கையில் ஏந்தித் துதிக்கையைத் தன் கொம்பின்மீது வைத்த வண்ணம் நிற்கின்றது. பாகன், யானைப் பேச்சுக்களைச் சொல்லிப் பிளவுபட்ட பரிக்கோலால் கவளத்தை உண்ணும்படிக் குத்துகிறான். இடுப்பில் வாள் அணிந்த பெண் வேலையாட்கள் நெய் நிறைந்த திரிக்குழையில் நீண்ட திரியைக் கொண்டு செவ்வையாக அமைந்த விளக்குகளை ஏற்றுகின்றனர்; விளக்குகள் அவியும் பொழுது தம் கையில் உள்ள பந்தத்தைக் கொண்டு அவற்றைக் கொளுத்துகின்றனர். சட்டையும் தலைப்பாகையும் அணிந்த மெய்காப்பாளர் அரசனது இருப்பைச் சுற்றி வருகின்றனர். சட்டையிட்ட ஊமர் அரசன் பள்ளியறையைக் காவல் செய்கின்றனர். அரசனோ, மறுநாள் எவ்வாறு போர் செய்யலாம் என்பதைப் பற்றி எண்ணிய வண்ணம் துயில் கொள்ளாதிருக்கின்றான். (டாக்டர் மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டுக் காட்சிகள், பக் . 47- 48. (பழநியப்பா பிரதர், திருச்சிராப்பள்ளி)) கோட்டையும் முற்றுகையும் கோட்டைகள் தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை, காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என்று நான்கு வகைப்படும். நாட்டின் எல்லைப்புறங்களில் அக்காலத்தில் காடுகள் இருந்தன. எல்லைப்புறக் கோட்டைகள் படைகள் தங்கி இருப்பதற்காகவே அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று எனப்பட்டன. (394 of 1921) இத்தகைய கோட்டைகளின் செலவுக்காகக் கோட்டைப் பணம் என்ற வரி வசூலிக்கப்பட்டது. (Travancore Archeacological Series, V.P. 205.) உள்நாட்டிலும் முக்கியமான பகுதிகளில் இத்தகைய கோட்டைகள் இருந்தன. சங்க காலத்தில் பறம்பு மலை மூவேந்தரால் முற்றுகை இடப்பட்டது. சோழன் நலங்கிள்ளி- நெடுங்கிள்ளிகளின் போரில் ஆவூர்க்கோட்டையும், உறையூர்க் கோட்டையும் முற்றுகையிடப்பட்டன. இம் முற்றுகைத் தொடர்பான விவரங்களைப் புறநானூற்றில் காணலாம். முற்றுகையிடுபவர் உழிஞையார் எனப்படுவர். முற்றுகை யிடப்படுபவர் நொச்சியார் எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் செய்த போர்வகைகள் தொல்காப்பியத்திலும், புறப்பொருள் வெண்பா மாலையிலும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. விசயநகரம் ஏழு மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்தவர் வசதியாக இருக்கப் பழங்காலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்றாம் குலோத்துங்கன் மதுரைக் கோட்டையை அழித்தான், மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சாவூர்க் கோட்டையையும் உறையூர்க் கோட்டையையும் அழித்தான் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சங்க காலத்தில் கோட்டைக் கதவுகள் யானைகளால் தாக்கப்பட்டன- யானைகள் தங்கள் தந்தங்களால் தாக்கின என்ற செய்திகள் முன்னரே குறிக்கப்பட்டன அல்லவா? கடற்படை தமிழகம் பல நூற்றாண்டுகளாகக் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது. எனவே, மூன்று தமிழரசர்களும் கடற்படையை வைத்திருந்தனர் என்பது பொருந்தும். கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்து ஒரு தீவில் வாழ்ந்து வந்த கடம்பரை நெடுஞ்சேரலாதன் வென்றான்; அவ்வாறே செங்குட்டுவனும் வென்றான்; கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்று பெயர் பெற்றான். இவ்விவரங்களைப் பதிற்றுப்பத்தில் காணலாம். பல்லவர் காலத்தில் முதலாம் நரசிம்மவர்மன் மாமல்ல புரத்திலிருந்து கடற்படையை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பினான். (S.I. I. II. P. 356.) இராசசிம்மன் இலட்சத் தீவுகளை வென்றான். (E. I. 18 .p. 152.) இச்செய்திகள் பல்லவர் கடற்படை வைத்திருந்தனர் என்ற உண்மையைத் தெரிவிக்கின்றன. பிற்காலச் சோழரிடம் பெரிய கடற்படை இருந்தது. அக்கடற்படையின் துணையால் முதலாம் இராசராசன் இலங்கையையும் முந்நீர்ப்பழந்தீவு பன்னீரா யிரத்தையும் வென்றான்; கங்கைகொண்ட சோழன் மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், நிகோபர்த் தீவுகள் முதலியவற்றை வென்றான். அரசர் வஞ்சினம் போருக்குச் செல்லுமுன் அரசர் சிலர் சூள் உரைத்தல் வழக்கம். சேரன் செங்குட்டுவன் இமயமலை வரை படை யெடுத்துச் செல்லும்போது சூள் செய்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். (காதை 25, வரி 128- 140.) மதுரையை ஆண்ட பூதபாண்டியன், என் மீது படையெடுத்து வந்த பகைவரை வெல்லேனாயின், என் மனைவியைவிட்டு யான் பிரிவேனாக; அறம்நிலை பெற்றுள்ள அவையில் (நீதி மன்றத்தில்) அறமற்ற ஒருவனை வைத்து முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக. மையல் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய மாவன், எயில் என்னும் ஊருக்குத் தலைவனாகிய ஆந்தை, அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் என்னும் என் நண்பரது மகிழ் நகையைத் தப்பியவன் ஆகுக; பல உயிர்களையும் பாதுகாக்கும் பாண்டிய அரச மரபிலிருந்து நீங்கிப் பகைவருடைய வன்புலங்களைக் காக்கும் காவலாளியாகப் பிறப்பேனாகுக, எனச் சூளுரைத்தான். (புறநானூறு, செ. 71.) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இப்பகைவரை யான் வெல்லேனாயின், என்னைக் கொடுங்கோல் அரசன் என்று என் குடிகள் தூற்றுவராக. மாங்குடி மருதன் போன்ற புலவர் பெருமக்கள் எனது நாட்டைப்பாடாது ஒழிவராக,” என்று சூள் செய்தான்.(புறம், செ. 72.) சோழன் நலங்கிள்ளி, இப் பகைவரை யான் வெல்லேனாயின், எனது மாலை பொது மகளிர் மார்பில் துவள்வதாக, என்று சூள் உரைத்தான். (புறம். செ. 73.) போர் நிகழ்ச்சிகள் கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினான். அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன. கூகைகள் இருந்து குழறின என்று பட்டினப்பாலை கூறுகின்றது. (வரி 239- 260) படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர் பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்: கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் புறநானூற்றில் காணலாம். பிற்கால அழிவுகளைக் கலிங்கத்துப் பரணியில் விரிவாகக் காணலாம். நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் கொற்ற வள்ளை என்று பெயர் பெறும். (புறநானூறு, செ. 4, 7, 41, 98) அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்; கவடி விதைக்கப்படும். வென்ற அரசர் வெல்லப் பட்ட நாட்டுக் குளங்களில் தம் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர், அல்லது தங்கள் இலச்சினையைப் பொறிப்பர்; வென்ற அரசர் தோற்ற அரசர் குடியிலிருந்து தம் காலுக்குரிய கழலைச் செய்து கொள்வர்; வீரகங்கணமும் செய்து கொள்வர். இவை சங்க நூல்களில் காணப்பெறும் செய்திகள். வென்ற அரசன் போர்க்களத்தில் செய்யும் வேள்வி களவேள்வி எனப்படும். வென்ற அரசன் தோற்ற அரசன் மனைவியருடைய தலைமயிரைக் கயிறாக்கி அதனைத் தன் தேரை இழுக்கப் பயன்படுத்துவதும் உண்டு. தோற்ற அரசனுடைய பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதிய வைத்தலும் உண்டு. வெற்றி பெற்ற மன்னருள் சிலர் இங்ஙனம் கீழ்த்தரமாக நடத்தலும் உண்டு. இவை பற்றிய விவரங்களைப் புறநானூற்றிலும் பத்துப்பாட்டிலும் பதிற்றுப்பத்திலும் காணலாம். போர் வீரருட் சிலர் தமது தனிப்போர் முறையால் சிறப்புப் பெறுதலும் உண்டு. அத்தகைய வீரன் போரில் உயிர் விட்டால், அரசனும் பிறரும் அவன் நினைவாக வீரக்கல் நட்டு வழிபாடு செய்வர். வீரர் முகத்தில் அல்லது மார்பில் புண்பட்டால் வெட்கப்படுவர்; அவற்றைக் கிழித்து விரைவில் இறந்துபடுவர். இது மறக் காஞ்சி எனப்படும். (வாகைப்படலம், வெண்பா 22.) போரில் இறந்துபட்ட வீரர் உடல்களைத் தழுவி அவர்தம் மனைவியர் போர்க்களத்திலேயே உயிர் விடுவர். ஒரு தாய் தன் ஒரே மகனைப் போர்க்கோலம் கொள்ளச் செய்து போருக்கு அனுப்பினாள். அவளுடைய தந்தை, தமையன் மார், கணவன் ஆகியோர் முன்பு நடைபெற்ற போர்களில் இறந்தனர். இறுதிப்போரில் மகனும் இறந்தான். அவன் உடல் முழுவதையும் அம்புகள் தைக்கப்பெற்றிருந்ததைக் கண்ட தாய் மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டாள் என்று புறப் பொருள் வெண்பாமாலை கூறுகின்றது. (தொல். புறத்திணையியல், சூ. 79.) போர்க்களத்தில் உயிர்விட்ட வீரனுக்காக அவன் குடும்பத்தாருக்கு நிலங்கள் வழங்குவது உண்டு. அங்ஙனம் வழங்குதல் உதிரப்பட்டி (உதிரம்- இரத்தம்) எனப்படும். (47of 1928...29, A.R.E. 1929, Para 34.) சிறப்பு முறையில் தம் ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்கள் ஏனாதி, மாராயன் என்ற பட்டங்களைப் பெற்றனர். படை அமைப்பு அரசனுடைய யானைப் படைக்கு ஒரு பெரிய தலைவன் உண்டு. இவ்வாறே ஒவ்வொரு படைக்கும் பெரிய தலைவன் இருந்தான். ஒவ்வொரு படையிலும் பல உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வோர் உட்பிரிவுகளுக்கும் ஒரு சிறிய தலைவன் இருந்தான். இப்பலவகைப் படைகளும் சேர்ந்த அமைப்புக்குப் பெருந் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் சேனாதிபதி தண்ட நாயக்கன், மகாதண்ட நாயக்கன், தளவாய் எனப் பல காலங்களில் பலவாறு பெயர் பெற்றான். அவனுக்கு அரசாங்க விருதுகளும் மரியாதைகளும் உண்டு. அவன் ஒரு சிற்றரசனுக்குரிய தகுதியில் வாழ்ந்தான். அவன் சில சமயங்களில் முதலமைச்சனாகவும் இருந்தான். முதலாம் இராசேந்திரன் போன்ற இளவரசர்களே சில காலங்களில் அப்பதவிகளில் இருந்தனர். சில சமயங்களில் தண்ட நாயகப்பதவி மட்டும் தனித்து இருந்தது. பேரரசன் படைகள் பேரரசனது படை பயிற்சிப்பெற்ற படையாகும். அதன் சில பகுதிகள் பெருநாட்டின் எல்லைப் புறங்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் கோட்டைகளை அமைத்துக்கொண்டு நிலையாக இருந்து வந்தன. சில படைகள் உள்நாட்டுப் பகுதிகளில் இருந்த கோட்டைகளில் ஆங்காங்கு இருந்து வந்தன. சில பகுதிகள் தலை நகரத்தில் இருந்தன. மற்றும் சில பகுதிகள் நாடு காவல் முதலிய பணிகளில் குறைகள் நேராமல் பார்த்து வந்தன. இப்படை களெல்லாம் பண்பட்டவை. சிற்றரசரும் படைகளும் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர்கள் பலர் இருந்தனர். ஒவ்வொரு சிற்றரசனிடமும் படைகள் இருந்தன. பேரரசனுக்குத் தேவைப்படும் பொழுது சிற்றரசர்கள் தங்கள் படைகளை உதவவேண்டும் என்பது விதி. ஆனால் அப்படை வீரர் பண்பட்டவரல்லர். அவருட் பலர் போர்க்காலத்தில் மட்டும் வீரராக இருப்பர்; எஞ்சிய காலங்களில் பயிர்த் தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பர், இத்தகைய வீரரைக் கொண்ட படைகளால் சிறந்த முறையில் போர் செய்தல் இயலாததன்றோ? தென்னிந்தியப்படை வீரர் போர்த்துறையில் குறையுடையவர் என்பதற்குரிய காரணங்களில் இது சிறப்பான தாகும். போர்க்காலங்களில் அவர்களை மகிழ்விக்க ஆடல் பாடல் மகளிர் உடன் செல்வர். அவர்களுடைய ஆடல் பாடல்கள் வீரர்க்கு மகிழ்ச்சியை ஊட்டினும், வேறு நினைவுகளையும் ஊட்டி வந்தன. எனவே, இம்முறையும் போர்த்திறமை பழுதடை வதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது. சிற்றரசர்கள் தம்முள் அடிக்கடி போர் புரிந்தனர்; பேரரசனுக்கு அடங்காமலும் சில சமயங்களில் திரிந்தனர்; வலிமையற்ற பேரரசன் ஆட்சியில் சிற்றரசர்கள் நாடு பெருக்குவதில் ஈடுபட்டனர். மூன்றாம் இராசராசன் ஆட்சியில் சிற்றரசர் தம் வலிமையைப் பெருக்கிக் கொண்டனர். சேந்த மங்கலத்தை ஆண்ட கோப்பெருஞ்சிங்கன் தன் பேரரசனாகிய மூன்றாம் இராசராசனையே சிறைப்படுத்தினான். சிற்றரசர்களைப் போலவே அவர்தம் படைத்தலைவர்களும் சில சமயங்களில் ஒற்றுமையின்றிப் பூசலிட்டுக் கொண்டனர். இத்தகைய பல காரணங்களால் தமிழ்ப்படை வீரர் பிற்காலங்களில் வலிமை இழந்தனர்; அதனால் முலிம்கள் படையெடுத்த போது புறங்கொடுத்தனர். முலிம் வீரர்கள் கட்டுப்பாடு உடையவர்கள்; சிறந்த முறையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள், அவர் தம் கட்டுப்பாடு இந்து வீரர்களுக்கு அமையவேண்டும் என்பதற்காகவே கிருஷ்ணதேவராயர் முலிம் வீரர்களைக் கொண்ட படைஒன்றை அமைத்தார். அப்படை தொடர்ந்து இருந்து வந்தது. (S.I. polity,pp, 292- 293) அயல் நாட்டுத் தொடர்பு ஒவ்வொரு நாட்டிலும் எல்லாப் பொருள்களும் கிடைப்ப தில்லை. எல்லா நாடுகளிலும் எல்லாக் கைத்தொழில்களும் நடைபெறுதலும் இல்லை. ஆதலால் ஒரு நாடு பிறநாடுகளோடு நட்புக்கொண்டு தனக்கு வேண்டிய பொருள்களைப் பெறுவதே இயல்பு; அந்நாடுகளில் இல்லாத - தன்னிடத்தில் மட்டும் உள்ள- பொருள்களை அங்கு அனுப்புவதும் இயல்பு. இந்த முறையில் தான் உள் நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணிகமும் தோன்றின. ஏறக்குறைய ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாடு அயல் நாடுகளுடன் வாணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. வாணிகத் தொடர்பால் நாகரிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் உண்டாதல் இயற்கை. தமிழகம் கிழக்கில் உள்ள சீனம், மலேயா, ஜாவா முதலிய நாடுகளுடனும், மேற்கில் ரோம், கிரீ, எகிப்து, சிறிய ஆசியா, அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஹீப்ரு மொழி நூல்களில் சொல்லப்பட்ட துகி என்பதும், தமிழ்த் தோகை என்பதும் சாலமன் (கி.மு. 1000) கப்பல்களிற் தமிழகத்துப் பொருள்கள் சென்றன என்பதும், கி.மு. 3000 க்குக் குறையாத காலத்தில் தேக்கு மரத் துண்டங்கள் அரேபிய நாட்டிற்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன என்பதும் தமிழகத்துக் கடல்வாணிகப் பழைமையை உணர்த்தும் சான்றுகளாகும். (Caldwell, comp. gr.p. 88; Regozin, Vedic India. p . 305.) அண்மையில் உள்ள இலங்கைத்தீவுடன் அரசியல், வாணிகம், பண்பாடு ஆகியவற்றில் தொடர்பு கொண்டிருந்தது. மௌரியர் காலத்தில் வடநாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. அரசர்கள் தங்கள் அண்மை நாட்டு அரசர்களைப் பெரும்பாலும் ஐயக்கண் கொண்டே பார்த்து வந்தனர். ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. அதனால் எல்லைப் புறங்களை எப்பொழுதும் வீரர்கள் காவல் காத்து வந்தனர். மண்ணாசையே பெரும்பாலான போர்களுக்கு அடிப்படைக் காரணம். சேர, சோழ, பாண்டியர் ஒரே மொழி பேசி, ஒரே நாகரிகத்தில் வளர்ந்தவர். ஆயினும், அவருள் ஒற்றுமை இல்லை; சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தனர். அப்பொழுது அவர்களைக் கண்டு மகிழ்ந்த காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஏதில் மக்கள் பொதுமொழி கொள்ளா(து) இன்றே போல்கநும் புணர்ச்சி என்று வாயார வாழ்த்தினார். (புறநானூறு, செ. 58.) சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் காணப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்த பொழுது ஔவையார், நீங்கள் விண்மீன்களைப் போலப் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீர்களாக! என்று உளமார வாழ்த்தினார். (செ. 367.) ஒற்றர் ஆட்சி முறையில் சிறந்த உறுப்பாகவும் படை அமைப்பின் சிறந்த உறுப்பாகவும் ஒற்று எண்ணப்பட்டது. அரசாங்க அலுவல் துறைகளில் ஒற்றுத்துறை ஒன்று. ஒற்றர் இலக்கணம் திருக்குறளில் கீழ்வருமாறு நன்கு கூறப்பட்டுள்ளது; நீதி நூல்களும் ஒற்றரும் அரசனுக்கு இரண்டு கண்கள். அரசனுடைய கண் செல்லாத இடங்களிலெல்லாம் நிகழும் நிகழ்ச்சிகளை ஒற்றர் அறிந்துவந்து கூறுவதால், அவர்கள் கண் எனப் பட்டனர். இந்த ஒற்றருட் சிலர் அரண்மனையில் இருப்பார்; சிலர் வெளி நாடுகளில் இருப்பர்; அரசனுக்கும், நாட்டுக்கும் வர இருக்கும் தீங்கினை உளவறிந்து உரிய காலத்தில் தெரிவிப்பர். இவர்கள் ஒற்றர் என்பதை பிறர் அறியா வண்ணம் நடந்து கொள்வர்; பிறர் ஐயங்கொண்டு விசாரிக்கும் பொழுது உண்மையைக் கூறாது, ஐயத்தைப் போக்கி அகல நடப்பார்; முற்றத் துறந்த முனிவர் வேடத்திலும் சென்று, புகுதற்கரிய இடங்களில் புகுந்து ஆராய்வர். அரசன் ஓர் ஒற்றன் சொல்லிய வற்றை வேறு ஒற்றன் கூற்றைக் கொண்டு ஆராய்ந்து உண்மை அறிவான். ஒன்றை ஆராயும் பொழுது ஒற்றர் பலர் வேலை செய்வார். ஆயின், அவர்கள் ஒருவரை ஒருவர் அறியார். ஒற்றுத் தொழிலில் சிறந்தவனுக்கு அரசன் பிறருக்கு தெரியாமல் சிறப்புச் செய்ய வேண்டும். (குறள் அதிகாரம் 59.) நமது வடநாட்டு யாத்திரையை வடநாட்டு மன்னர் அறியும்படி ஓலை போக்குங்கள், என்று சேரன் செங்குட்டுவன் கூறியபொழுது, அழும்பில் வேள் என்பவன், செங்குட்டுவனை நோக்கி, நமது வஞ்சி மாநகரில் பலநாட்டு ஒற்றர்கள் இருக்கின்றனர். நம் பகை அரசர் ஒற்றர்களும் இருக்கின்றனர். ஆதலால் நமது மாநகரத்தில் பறை அறைதல் போதும். இச்செய்தி ஒற்றர் வாயிலாக அந்தந்த அரசர்க்குத் தெரிந்து விடும், என்று கூறினான். (சிலம்பு காதை 25, வரி 173- 177.) இத்தகைய ஒற்றர் சங்ககாலம் முதல் இன்றுவரை இருந்து வருகின்றனர். தூதுவர் ஒற்றரைப் போலவே அரசர்க்கு இன்றியமையாத உதவி யாளர் தூதுவர் எனப்பட்டனர். தூதுவரைப் பற்றியும் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்: திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்: நற்குடிப் பிறப்பும் அரச பக்தியும் ஆவன அறியும் அறிவுடமையையும் ஆராய்ந்த சொல் வன்மையும், நீதி நூல் அறிவும் தூதர் பெற்றிருத்தல் வேண்டும். கண்டவர் விரும்பும் தோற்றப் பொலிவும், பலரோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும், இயற்கை அறிவும் தூதருக்கு இன்றியமையாதவை. வேற்றரசரிடம் சென்று காரண வகையால் செய்திகளை விளக்கி, இன்னாத காரியங்களைச் சொல்லும் பொழுது வெய்ய சொற்களை நீக்கி, இனிய சொற்களால் மனமகிழச் சொல்லித் தன் அரசனுக்கு நலம் உண்டாகச் செய்பவனே தூதன். தான் வந்த காரியத்தை மாற்றரசன் மனங்கொள்ளச் சொல்லி, அவன் சினந்து நோக்கினால் அதற்கு அஞ்சாது, தான் வந்த காரியத்தை நயம்பட முடிப்பவனே தூதன். தூதன் பொருள், காமம் முதலிய வற்றால் தூயவனாதல் வேண்டும்; எத்தகைய விருப்பத்திற்கும் இடந்தராமல் தன் காரியத்தில் கண்ணாயிருப்பவனே உண்மைத் தூதன். தன் அரசன் சொல்லிவிட்ட செய்தி வேற்றரசனுக்கு வேம்பாய் இருப்பினும், நயம்படக் கூறுதல் வேண்டும். அதனால் தன் உயிர் போவதாயினும் அஞ்சலாகாது. (குறள், அதிகாரம் 69.) இத்தகைய தூதர் சங்ககாலத்திலும் பிற்காலங்களிலும் தமிழகத்தில் இருந்து வந்தனர். சங்ககாலத்தில் ஔவையார் என்ற பெண்பாற்புலவர் அதியமானிடமிருந்து காஞ்சி அரசனான தொண்டைமானிடம் அரசியல் தூதராகச் சென்றார், தமது பேச்சுத் திறமையால் அதியமானது போர்த்திறனை விளக்கினார், நடக்க இருந்த போரைத் தடுத்தார் என்பன புறநானூற்றுப்பாடல் ஒன்றால் தெரிகின்றது. (செ. 95.) சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து பத்தினியின் உருவம் பொறிக்கத்தக்க சிலையைக்கொண்டு வரத் தன் படையுடன் புறப்பட்டு, வழியில் நீலகிரியில் தங்கினான். அவன் நண்பரான நூற்றுவர் கன்னரால் அனுப்பப்பெற்ற சஞ்சயனைத் தலைவனாகக் கொண்ட தூதுக்குழு அப்பொழுது அவனைக் கண்டது. சஞ்சயன் சேரனைப் பணித்து, கண்ணகியின் உருவத்தைப் பொறிக்கத்தகும் கல்லைக்கொண்டு வரவே நீங்கள் யாத்திரை செய்வதாயிருப்பின், அந்த வேலையை நாங்களே செய்வோம். இச்செய்தியை எம் அரசர் சொல்லியனுப்பினார், என்று கூறினான். செங்குட்டுவன், வடநாட்டு மன்னனான கனகனும் விசயனும் தமிழரசர் வீரத்தை இழித்துக் கூறினராம். அதனையும் மனத்தில் வைத்தே இச்சேனை வடக்கு நோக்கிச் செல்கின்றது. நீ உன் அரசரிடம் சொல்லி நாங்கள் கங்கையாற்றைக் கடக்கும் முறையில் படகுகளை உதவச் செய்க, என்று கூறி அனுப்பினான். (சிலம்பு , காதை 26, வரி 137- 165.) இதிலிருந்து சேரன் செங்குட்டுவனது அரசியல் செல்வாக்கும் அயல்நாட்டு உறவு இருந்த தன்மையையும் நாம் நன்கு உணரலாம் அன்றோ? சங்ககாலத்தில் பாண்டியன் உரோமப் பேரரசனான அகட என்பவரிடம் தூதுக்குழுவை அனுப்பினான். (K.A.N.rh¤âÇ, சோழர், பக். 84.) பல்லவர் காலத்தில் இராசசிம்ம பல்லவன் ஒரு தூதுவனை சீனத்திற்கு அனுப்பினான். சீனப்பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான்; அவனை மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்; அத்தூதன் பல்லவ நாட்டுக்குத் திரும்பிய போது பூ வேலைப்பாடு பொருந்திய பட்டு அங்கியையும் வேறுசில விலையுயர்ந்த பொருள்களையும் வழங்கினான். (டாக்டர் மீனாட்சி, பல்லவர் ஆட்சியும் சமுதாய வாழ்க்கையும், பக். 90.) முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் என்ற சோழ மன்னர்கள் சீனத்துக்குத் தூதுக் குழுவினரை அனுப்பினர். முதற் குலோத்துங்கனால் அனுப்பப் பட்ட தூதுக் குழுவில் 72 பேர் இருந்தனர். அவர்கள் யானைத் தந்தம், மணப் பொருள்கள் முதலியவற்றை எடுத்துச் சென்றனர். சீனப் பேரரசன் பதிலுக்குப் பல பொருள்களை வழங்கிச் சிறப்பித்தான். (K.A.N.rh¤âÇ, சோழர் I பக் 266- 7.) கி.பி. 1280 -இல் குலசேகரப் பாண்டியன் ஜமாலுத்தீன் என்ற தூதுவனைச் சீனத்துக்கு அனுப்பினான்; தன் பகைவரை வெல்லத் தனக்கு உதவி புரியும்படி வேண்டினான். சீனப் பேரரசன் அத்தூதுவனை வரவேற்றான்; அவனுடன் தன் தூதுவனையும் பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். அச் சீனத் தூதன் சிறிது காலம் பாண்டிய நாட்டில் தங்கியிருந்து, 1282-இல் சீனத்துக்குத் திரும்பினான். பாண்டியன் விலையுயர்ந்த முத்துக்களையும் நகைகளையும் மெல்லிய பட்டாடைகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் (ஆண்டு தோறும்) தன் தூதர் வாயிலாகச் சீனத்துக்கு அனுப்பினான். 1285-இல் சீனத்திலிருந்து தென் இந்தியா நாடுகளுக்குத் தூதர் வந்தனர். இது முதல் ஆண்டு தோறும் இருநாடுகளிலிருந்தும் தூதர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். (V.R.R. தீட்சிதர், தென்னிந்தியாவும் சீனமும், பக். 16- 18.) இவ்வாறு தமிழரசர்கள் சீனத்தோடு உறவு கொண்டாற் போலவே மலேயா, கிழக்கிந்தியத் தீவுகன் இவற்றை ஆண்ட அரசர்களோடும் நல்லுறவு கொண்டு இருந்தனர். கி.பி. 1006-இல் அந்நாட்டு அரசனது வேண்டுகோளால் முதல் இராசராசன் நாகப்பட்டினத்தில் புத்தர் கோவில் ஒன்றை எடுப்பிக்க உதவினான்; அதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தை மானியமாகவிட்டான். (K.A.N.rh¤âÇ, ஸ்ரீ விஜய வரலாறு, பக். 75- 76.) இங்ஙனம் வரும் அரசியல் தூதர்கள் மிகச் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டனர். பல வசதிகளோடு கூடிய தனி மாளிகை அவர்களுக்கு விடப்பட்டது. இதுபற்றிய விவரங்களை அறிய விரும்புவோர், விசய நகர ஆட்சியில் அப்துர் ரசாக் என்ற தூதுவர் பெற்ற சிறப்புக்களை அவர் எழுதிய குறிப்பைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். 8. மண்டல ஆட்சி மாகாணப் பிரிவுகள்: சங்க காலத்தில் ஒரு நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அதிகாரியை நியமித்து ஆளச் செய்வது ஆட்சியில் நல்ல பயனை உண்டாக்கும் என்பது இன்றளவும் இருந்துவரும் நல்ல கொள்கையாகும். நம் முன்னோர் இதனை நடைமுறையில் செய்து காட்டினர். முத்தூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம் என்ற நாட்டுப் பிரிவுகளை நோக்க, சோழ பாண்டிய நாடுகள் பல கூற்றங்களாகச் சங்க காலத்தில் பிரிக்கப்பட்டி ருந்தன என்று நினைத்தல் பொருத்தமாகும். தொண்டை நாட்டில் இருபத்து நான்கு பிரிவுகள் இருந்தன என்பது திட்டமாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரிவும் கோட்டம் எனப்பட்டது. அக்கோட்டங்களாவன: (1) புழல் கோட்டம் (2) ஈக்காட்டுக் கோட்டம் (3) மணவிற் கோட்டம் (4) செங்காட்டுக் கோட்டம் (5) பையூர்க்கோட்டம் (6) எயில் கோட்டம் (7) தாமல் கோட்டம் (8) ஊற்றுக்காட்டுக் கோட்டம் (9) களத்தூர்க் கோட்டம் (10) செம்பூர்க் கோட்டம் (11) ஆம்பூர்க் கோட்டம் (12) வெண்குன்றக் கோட்டம் (13) பல்குன்றக் கோட்டம் (14) இளங்காட்டுக் கோட்டம் (15) காலியூர்க் கோட்டம் (16) செங்கரைக் கோட்டம் (17) படுவூர்க் கோட்டம் (18) கடிகூர்க் கோட்டம் (19) செந்திருக்கைக் கோட்டம் (20) குன்றவட்டான கோட்டம் (21) வேங்கடக் கோட்டம் (22) வேலூர்க் கோட்டம் (23) சேத்தூர்க் கோட்டம் (24) புலியூர்க் கோட்டம் (R. கோபாலன், காஞ்சிப்பல்லவர், பக். 147.) இவை பல்லவர் காலத்தில் இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆயின், இவை பல்லவரால் உண்டாக்கப் பட்டன என்பதற்குச் சான்று இல்லை. பல்லவர் காலத்தில் விஷயம், இராட்டிரம் என்று நாட்டின் உட்பிரிவுகள் பெயர் பெற்றனவே தவிரக் கோட்டம் என்ற தனித் தமிழ்ப் பெயர் பெறவில்லை. மேலும், பல்லவர் பாலி மொழியிலும் வடமொழி யிலும் பட்டயங்களை வெளியிட்ட அயல் அரசராவர். எனவே, இப்பெயர்கள் சங்க காலத்தன எனக் கொள்ளுவதே ஏற்புடையதாகும். சங்க காலத்தில் சோழ நாட்டில் பன்றி நாடு என்ற உட்பிரிவு இருந்தது. தொண்டை நாடு- அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டு பிரிவுகளைப் பெற்றிருந்தது. சேர நாடு - கற்கா நாடு, வேள் நாடு, குட்ட நாடு, குடநாடு, பூழி நாடு எனப் பல நாடுகளைப் பெற்றிருந்தது. இவற்றை நோக்க, இவற்றுள் ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் தனித்தனி ஆட்சி பெற்ற நாடாக இருந்திருத்தல் வேண்டும்- பின்பு முறையே, பன்றி நாடு சோழர் ஆட்சியிலும், அருவா நாடும், அருவா வடதலையும் தொண்டைமான்கள் ஆட்சியிலும், கற்கா நாடு முதலியன சேரர் ஆட்சியிலும் சேர்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். (S.I. polity,pp . 302- 303.) இடைக் காலத்தில் பிற்காலச் சோழர் காலத்தில் சோழப் பெருநாடு என்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை அரசனது விருதுப் பெயரைத் தாங்கி நின்றன. (1) தொண்டை நாடு சயங்கொண்ட சோழமண்டலம் எனவும், (2) பாண்டிய நாடு இராசராசப் பாண்டி மண்டலம் எனவும், (3) சேர நாடு மலை மண்டலம் எனவும், (4) சோழநாடு சோழ மண்டலம் எனவும், (5) கங்காடு முடிகொண்ட சோழ மண்டலம் எனவும், (6) நுழம்பபாடி நிகரிலி சோழ மண்டலம் எனவும், (7) கொங்கு நாடு அதிராசராச மண்டலம் எனவும், (8) வேங்கி நாடு வேங்கி மண்டலம் எனவும், (9) ஈழநாடு மும்முடிச் சோழ மண்டலம் எனவும் வழங்கப்பட்டன. (S.I. I. II. Int.pp. 21- 29.) ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. சோழமண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு வளநாடும் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாகும். (S.I.I. II.4) வளநாட்டின் பெயர்கள் ஆளும் அரசன் பெயர்களைக் கீழ் வருமாறு தாங்கி நின்றன; அருமொழி தேவ வளநாடு, சத்திய சிகாமணி வளநாடு, கேரளாந்தக வளநாடு (தென்கரை கேரளாந்தக வளநாடு), இராசேந்திரசிம்ம வளநாடு (வடகரை இராசேந்திர சிம்ம வளநாடு, இராசாரய வளநாடு, நித்த விநோத வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு (தென்கரை நாடு), வடகரை இராசராச வளநாடு. (S.I.I. II. Int pp. 21- 27.) இங்குக் குறிக்கப் பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் முதல் இராசராச சோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். முதற் குலோத்துங்க சோழன் இப்பெயர் களை நீக்கித் தன் பெயர்களை இட்டான். சான்றாக, சத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்று பெயரிடப்பட்டது. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்ய வந்த சோழவள நாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன. உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன் என்பன குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது கலிங்கத்துப் பரணியால் அறியப்படும் செய்தியாகும். (T.V.S.g©lhu¤jh®, முதற்குலோத்துங்கன், பக். 78) ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைப் பெற்றிருந்தது. சில ஊர்கள் தனியூர் எனப்பட்டன. எனவே, அது இன்றைய சென்னை நகரத்தைப் போலத் தனி ஆட்சி பெற்றதாக இருந்திருக்கலாம். கல்வெட்டில் மண்டலம்- வளநாடு- நாடு -ஊர் என்பவை முறையே குறிக்கப்படுதல் மரபு. சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ, வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் F‹w¤ö®”(95 of 1920) என வரும் (வளநாடு= கோட்டம்). சோழ மண்டலத்து அருமொழி தேவ வளநாட்டுச் சேற்றூர்க் கூற்றத்துக் கண்டியூர். சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டுப் பழையாறு (S.I. I. IV. 529) என வரும். மண்டல அமைப்பு சங்க காலத்தில் தமிழகம் சேர சோழ பாண்டிய நாடுகளைச் சிறப்பு நாடுகளாகப் பெற்றிருந்தது. சேர சோழ பாண்டியரே முடியுடை மூவேந்தர். இந்த மூன்று நாடுகளின் எல்லைகளிலும் நாட்டு உட்பகுதிகளிலும் சிற்றரசர் சிலர் இருந்து வந்தனர். அவர்கள் தத்தம் சிறு நாடுகளுக்கு அண்மையிலிருந்த முடி மன்னனுக்கு அடங்கியும் அடங்காமலும் இருந்தனர். பல்லவர் ஆட்சி கிருஷ்ணையாறு முதல் காவிரியாறுவரை பரவியிருந்தது. அந்நாடு விஷயங்கள், இராஷ்டிரங்கள் என்ற பிரிவுகளைப் பெற்றிருந்தது. இராஷ்டிரம் என்பது மண்டலம் என்ற பிரிவுக்கு இணையாகும். (R. Gopalan, pallavas of Kanchi.p. 148) இவற்றுள் இராஷ்டிரம் என்பது இராஷ்டிரபதி என்பவன் ஆட்சியிலும், விஷயம், என்பது விஷபயதி என்பவன் ஆட்சியிலும் இருந்தன. (S.I. polity, p .313..) தொண்டை நாடு துண்ட ராஷ்டிரம் எனப்பட்டது. பல்லவ நாட்டிலும் சிற்றரசர் சிலர் இருந்து வந்தனர். பல்லவர்க்குத் திறைகொடா மன்னவர் (சமாசப் பதிப்பு, பக், 110. செ.4.) என்று சுந்தரர் தேவாரம் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் மேலே கூறப்பெற்ற மண்டலங்களை அரச மரபினர் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டுவந்தனர். சோழப் பேரரசர் தாம் வென்ற நாடுகளுக்குரிய அரசர்களையே தமக்கு அடங்கி அந்நாடுகளை ஆளும்படி விட்டனர்; அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபொழுது, அவர்களை நீக்கித் தம் மைந்தரை அல்லது நம்பிக்கைக்கு உரியவரை மண்டலத் தலைவராக்கினர். இம்மண்டலங்களில் வேறு பல சிற்றரசர்கள் சிறிய நிலப்பகுதிகளை ஆண்டுவந்தனர். தெலுங்கச் சோழர், பொத்தப்பிச் சோழர், சம்புவராயர், வாணாதிராயர், யாதவராயர், அதிகமான்கள், காடவராயர், பல்லவராயர், மழவராயர் எனப்பல சிற்றரசர்கள் சோழப் பெருநாட்டில் இருந்து வந்தனர். மண்டலத் தலைவன் மண்டல ஆட்சியைக் கவனித்து வந்தான். அவனுக்குக் கீழ்ப் பலதிறப்பட்ட அதிகாரிகள் இருந்து வந்தனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனிப்படை இருந்தது. அவர்கள் ஆட்சியில் பெரும்பாலும் நடு ஆட்சி தலையிடு வதில்லை. பேரரசன் கீழ்வரும் உரிமைகளை உடையவன். படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் முடியும் நேர்வன பிறவுந் தெரிவு கொன் செங்கோல் அரசர்க்குரிய (மரபியல், சூத்திரம் 72) என்பது தொல்காப்பியம். சிற்றரசர் சிலவற்றிற்கு உரியவர். வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்குரிய (மரபியல், சூத்திரம் 84) என்பது தொல்காப்பியம். சிற்றரசர் இவற்றோடு படையும் வைத்திருந்தனர். விசய நகர வேந்தர் காலத்தில் அவர் ஆண்ட பெருநாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவன் ஆட்சியில் விடப்பட்டது. அவன் நாயக்கன் எனப் பட்டான். அவன் பேரரசனுக்கு ஆண்டுதோறும் தனது வருமானத்தில் பாதியைக் கொடுத்து வந்தான்; போர்க் காலங்களில் படை உதவி செய்து வந்தான். அவன் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து வந்தான்; குடி மக்களுக்குத் தன் ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுபடுத்தி வந்தான்; ஆண்டுப் பிறப்பன்று பேரரசனுக்குக் காணிக்கை செலுத்தி வந்தான். (Sewell, A Forgotten Empire, pp, 281, 282, 380.) பேரரசன் சிற்றரசர் பெண்களை மணந்து கொள்ளுதல் வழக்கம். முதல் இராசராசன் மனைவியருள் - வானவன் மாதேவி என்பவள் சேரன் மகள்; மீனவன் மாதேவியார் என்பவள் பாண்டியன் மகள்; இலாட மாதேவியார் என்பவள் இலாடராயர் என்ற சிற்றரசன் மகள். மதுரையை ஆண்ட நாயக்கர் காலத்தில், அவர்தம் பெருநாட்டில் பல பாளையபட்டுகள் உண்டாயின. பாளையக் காரர் மேலே கூறப்பெற்ற நாயக்கர்களைப் போலவே நாயக்கர் ஆட்சிக்கு அடங்கி ஆண்டு வந்தனர். நடு அரசின் அதிகாரம் ஒவ்வொரு மாகாணத் தலைவனது ஆட்சியையும் நடு அரசாங்கம் கவனித்து வந்தது; தலையிடவேண்டும் தேவை உண்டான பொழுதுமட்டுமே தலையிட்டது. விசய நகரப் பேரரசுக்கு மதுரை நாயக்கர் ஆட்சி உட்பட்டது. இத்தகைய அரசுகள் நெறி தவறும் பொழுது, விசய நகரப் பேரரசர்கள் சிற்றரசர் நாடுகளுக்கு ஆணையாளரை நியமித்தனர். அவ்வாணையாளர் பெரும்பாலும் படைத் தலைவராகவே இருந்தனர். அவர்களுக்கு அடங்கியே மதுரை நாயக்கர் முதலிய அரசர்கள் ஆண்டு வந்தனர். (Mahalingam Administration and Social life under Vijayanagr,pp. 203- 4.) தன்னைப் பேரரசன் என்று ஏற்றுக்கொள்ளாமல் கப்பங்கட்டத் தவறிய சிற்றரசரைப் படை வன்மையால் பேரரசன் ஒடுக்குவதும் உண்டு. முதற்குலோத்துங்கனது கலிங்கத்துப் படையெடுப்பு இதற்குச் சிறந்த சான்றாகும். பேரரசன் அரசியல் அறிவிலும் போர்த்திறத்திலும் சிறந்துள்ள வரையிற்றான் சிற்றரசரும் மாகாண ஆட்சியாளரும் பேரரசுக்கு அடங்கியும் துணை செய்தும் வாழ்வர்; பேரரசன் திறமையற்றவனாயின், சிற்றரசரும் மாகாண ஆட்சியாளரும் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கித் தம் ஆட்சி உரிமையை நிலைநாட்டிக் கொள்வர். மௌரியப் பேரரசு முதலிய வல்லரசுகள் தேய்ந்து மறைந்தமைக் குரிய சிறந்த காரணம் இதுவேயாகும். 9. உள் ஆட்சி உள் ஆட்சி என்பது நாடு ஆட்சி என்றும் ஊர் ஆட்சி என்றும் இருவகைப்படும். பல ஊர்கள் அடங்கியது ஒரு நாடு. சங்ககால மன்றங்கள் ஊரார் பொதுவாகச் சந்திக்கும் இடம் ஊர் மன்றம் எனப்பட்டது. அதுவே விழாக்களும் வேடிக்கைகளும் நடைபெறும் பொது இடம்; ஊர்த் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வழிபாடு நடைபெறும் இடம். இங்ஙனம் ஊரார்க்கு உயிர்நாடியாக இருந்த மன்றம் பகை அரசரால் கைப்பற்றப்பட்டு கழுதைகள் பூட்டப்பெற்ற ஏர்கொண்டு உழப்படுமாயின், அச்சிற்றூர் பகைவர் கைப்பட்டது என்பது பொருளாகும். (புறம் 276.) கிள்ளிவளவன் தன் பகைவனான மலையமான் பெற்ற ஆண்மக்கள் இருவரை (சிறுபிள்ளைகளை) மன்றில் நிறுத்தி யானையைக் கொண்டு கொல்லநினைத்தான். (புறம் 46.) மன்றில் பலர் காணத் தண்டனைகளும் நிகழ்த்தப் பெற்றன என்பது இதனால் தெரிகிறது அன்றோ? கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காரணத்தால் உறையூர் மன்றம் வறிதே கிடந்தது என்று பொத்தியார் என்ற புலவர் வருந்தினார். (புறம் 220). அரசர்கள் புலவர்களோடு பொழுது போக்கவும் ஆட்சிச் செய்திகளை கவனிக்கவும் மன்றங்களைப் பயன்படுத்தினர் என்பது இதனால் பெறப்படுகின்றதன்றோ? சிற்றூர் மன்றங்கள் மேலே சொல்லப் பெற்றவாறு ஊரார் வழக்குகளைத் தீர்க்கவும், தண்டனை விதிக்கவும், ஊர் நிலங்கள் வாங்கவும் அல்லது விற்கவும், ஊர்ப் பொதுவான விழாக் களையும் கொண்டாட்டங்களையும் நடத்தவும் பயன்பட்டன என்று கொள்வதே பொருத்தமாகும். (K.A.N. sastri studies in chola History and Administratoin, p, 76,) ஊராட்சி மன்றங்கள் தமிழகத்து ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய ஆட்சி மன்றம் இருந்தது. ஆட்சி மன்ற உறுப்பினர் ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஊரின் தன் பகுதிக்குரிய சார்பாளர்களின் (பிரதிநிதிகளின்) பெயர்களை எழுதிக் குடத்தில் போடுவர். அக்குடத்தின் மேல் அரசாங்க இலச்சினை வைக்கப்படும். அதிகாரிகள் அம்முத்திரையை நீக்கி ஒவ்வொரு ஓலையாகப் படிப்பர். இதனை, கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள் என்னும் அகநானூற்றுப் பாடலால் அறியலாம். (செ. 77) இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஊராட்சியைக் கவனித்தனர். பல்லவர் காலத்திலும் பிற்காலச்சோழர் காலத்திலும் இத் தேர்தல் முறையே தொடர்ந்து வந்தது என்பதைக் கல் வெட்டுக்கள் அறிவிக்கின்றன. ஊராட்சி மன்ற உறுப்பினர் கல்வி கேள்விகளில் சிறந்திருந்தனர். (புறநானூறு, செ. 226.) ஊரில் வளர்ந்திருந்த பெரிய ஆலமர நிழலில் ஊராட்சி மன்றங்கள் நடைபெற்றன. அத்தகைய இடம் அம்பலம், மன்றம், பொதியில் எனப் பெயர் பெற்றது. இடைக்காலத்தில் இத்தகைய அவைகள் பல்லவர் காலத்திலும் இருந்தன. (288 & 302 of 1902, 157 & 161 of 1621, S. I.I. III. 5 etc..) சோழர் காலத்தில் இவைபற்றிய விவரங்கள் மிகுதியாகத் தெரிகின்றன. பிராமணரை மிகுதியாகக் கொண்ட ஊராட்சி மன்றங்கள் சபைகள் எனப்பட்டன. மற்றவரை மிகுதியாகக் கொண்ட ஊர்களில் இருந்த மன்றங்கள் ஊர் என்றே அழைக்கப்பட்டன. பல ஊர்களைக் கொண்ட ஒரு நாட்டு ஆட்சி மன்றம் நாடு எனப்பட்டது. இவையல்லாமல் நகரம், வளஞ்சியர், மணிக்கிராமம், மூலப்படையார் எனச் சில அவை, அடுத்த இரண்டும் வணிகப் பொருளாதாரக் கழகங்கள் என்று சொல்லலாம். நான்காவது கோவிலாட்சித் தொடர்பான அவை என்னலாம். இவை நான்கும் ஊராட்சி மன்றத்துக்கு அடங்கித் தனித்தனித் துறையில் பணியாற்றி வந்த கழகங்கள் என்னலாம். ஊர்த் தலைவன் ஊராட்சி மன்றத்திற்கும் அரசாங்கத்துக்கும் இணைப்பை உண்டாக்கும் நிலையில் இருந்தான். அரசன் பிறப்பித்த ஆணைகள் அவனிடமே வந்தன. ஊரார் அவனை மிக்க மரியாதையுடன் நடத்தி வந்தனர். சில சமயங்களில் அரசன் ஆணைகள் ஊரவையார்க்கே வந்தன. சில ஊர்களில் அரசாங்க அலுவலன் ஊர்த் தலைவனுக்குப் பதிலாகப் gÂah‰¿dh‹. (S.I. polity. pp; 335- 6). ஊர் - சபைகளின் கடமைகள் நிலங்களுக்கு வரி விதித்தல், தொழில் வரி விதித்தல், வரிகளை வசூலித்தல், அவற்றில் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் சேர்த்தல், மறுபகுதியை ஊர் நலத்திற்குப் பயன்படுத்தல், குறிப்பிட்ட கால அளவுக்குள் வரி செலுத்தாதவர் நிலங்களைப் பறிமுதல் செய்து விற்றுப் பணத்தை அரசாங்கத்திடம் சேர்த்தல், தோட்டம் ஏரி- வாய்க்கால் முதலியவற்றைக் கண்காணித்தல், ஊர்க் கோவில் ஆட்சியை மேற்பார்த்தல், வழக்குகளை விசாரித்து நீதி வழங்குதல், ஊரார் நன்மை தீமைகளைக் கவனித்தல் முதலியன அவையினர் கடமையாகும். இவை ஊர், சபை என்னும் அமைப்புக்களுக்கும் பொது வானவை. உறுப்பினர் தேர்தல் ஓர் ஊர் பல குடும்புகளாகப் (Wards) பிரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பு மக்களும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பர். அங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுபவர் கால்வேலி நிலமும் சொந்த மனையில் கட்டப் பெற்ற வீடும் பெற்றிருத்தல் வேண்டும்; பல சாத்திர நூல்களைக் கற்றுப் பிறருக்கு உணர்த்த வல்லராய் இருத்தல் வேண்டும்; முப்பத்தைந்துக்கு மேற்பட்டு எழு பத்தைந்து வயதுக்கு உட்பட்டவராய் இருத்தல் வேண்டும்; நல்வழியில் சம்பாதித்த பொருளும் தூய வாழ்க்கையும் பெற்றிருத்தல் வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டு எந்தச் செயற்குழுவிலும் உறுப்பினராய் இருத்தல் ஆகாது. அவையில் உறுப்பினராயிருந்து கணக்குக் காட்டாத வரும், ஐவகைப் பெருந்தீமைகள் செய்தவரும், ஊர்க் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டவரும், கள்ளக்கையெழுத்து இட்டவரும், பிறர் பொருளைக் கவர்ந்த வரும், குற்றங் காரணமாகக் கழுதை மீது ஏற்றப் பெற்றவரும், கையூட்டு வாங்கினவரும் கிராமத் துரோகி என்று கருதப் பட்டவரும் உறுப்பினராதற்குத் தகுதியற்றவர். தேர்தல் நடைபெறும் நாளில் அரசாங்க உயர் அலுவலர் ஒருவர், சபை கூடுவதற்கான இடத்தில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்படும். அங்குள்ள நம்பிமாருள் (அர்ச்சகருள்) வயது முதிர்ந்த ஒருவர், அந்தக் குடத்துள் ஒன்றும் இல்லை என்பதை ஊரார்க்குக் காட்டிக் கீழே வைப்பார். பின்பு ஒரு குடும்பினர் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதுவர். அவ்வோலைகளை சேர்த்து, அக்குடும்பின் பெயர் எழுதிய வாயோலையால் மூடப்பட்டுக் கட்டப்படும். அக் கட்டுக் குடத்துள் வைக்கப்படும்; இங்ஙனமே பிற குடும்பினரும் ஓலை இடுவர். பின்பு அம்முதியவர் சிறுவன் ஒருவனை அழைத்துக் குடத்திலிருந்து ஓர் ஓலைக்கட்டை எடுப்பிப்பார்; அதனை அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்குவர்; அவற்றுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுப்பிப்பர்; அதனைக் கிராமக் கணக்கனிடம் தருவர். அவன் தன் கையில் ஒன்றுமில்லை என்பதைச் சபையோருக்குக் காட்டி, அவ்வோலையை வாங்கி, அதில் எழுதப்பட்டுள்ள பெயரை உரக்கப் படிப்பான். பின்பு அதனை அங்குள்ள பெரியோர் அனைவரும் படிப்பர். இதன் பின்னர் அப்பெயர் ஓர் ஓலையில் வரையப்படும். இங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அக்குடும்பின் சார்பாளர் (பிரதிநிதி) ஆவர். இங்ஙனமே பிற குடும்புகளுக்கும் தேர்தல் நடைபெறும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்றவரே சபை உறுப்பினராவர். (உத்தரமேரூர்க் கல்வெட்டு, டாக்டர், இராசமாணிக்கனார், இரண்டாம் குலோத்துங்கன்.பக். 104- 5.) சபையின் நடைமுறை ஒவ்வொரு சபையினரும் பல குழுவினராகப் பிரிந்து நின்று கிராம வேலைகளைக் கவனிப்பர். ஒவ்வொரு குழுவும் வாரியம் எனப்படும். அவை சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் எனப் பல வகைப்படும். குற்றங்களை விசாரித்தலும் அற நிலையங்களை மேற்பார்வையிடுதலும் சம்வத்சர வாரியர் கடமையாகும். வயதிலும் அநுபவத்திலும் முதிர்ந்தவரே சம்வத்சர வாரியராக இருக்கவேண்டு மென்பது விதி. ஏரி குளம் முதலிய நீர் நிலைகளைப் பாய்ச்சுவித்தலும் ஏரி வாரியத்தார் தொழிலாகும். தோட்டங்கள் பற்றிய செய்திகளைக் கவனித்தல் தோட்ட வாரியர் பொறுப்பாகும். வரியாகவும் தண்டமாகவும் வாங்கப் பட்ட காசுகளை ஆராய்வது பொன் வாரியர் கடமையாகும். ஊரில் பஞ்சம், வெள்ளத்தால் அழிவு முதலிய தீமைகள் ஏற்படின், ஊராரைக் காப்பதற்கு முன் ஏற்பாடாகக் குடி மக்களிடம் நெல் முதலிய தானியங்களை ஆண்டுதோறும் வாங்கிச் சேர்த்து வைத்தல் பஞ்ச வார வாரியர் தொழிலாகும் (உத்தரமேரூர்க் கல்வெட்டு, டாக்டர், இராசமாணிக்கனார், இரண்டாம் குலோத்துங்கன்.பக். 106) இச்சபையினர் பெரு மக்கள் ஆளுங் கணத்தார் எனவும் பலவாறு அழைக்கப் பட்டனர். இவர்களது ஆட்சிக்குரிய விடுதி ஒன்று ஊரில் இருந்தது. அவ்விடுதியில் ஊரைப்பற்றிய கணக்குகளை எழுதிப் பாதுகாத்தவன் கரணத்தான் எனப்பட்டான். சபையார் விரும்பும் பொழுது இவன் நேரில் இருந்து கணக்கைக் காட்டுதல் வேண்டும். சில பெரிய மன்றங்களில் மத்தியதன் என்று ஒருவன் இருந்தான். அவன் மன்ற நடவடிக்கைகளை எழுதுபவனாக இருந்திருக்கலாம். சாதாரண குற்றங்கள் முதல் கொலைக் குற்றங்கள் வரை உள்ள எல்லா வகை வழக்குகளையும் சபையார் விசாரித்தனர்; குற்றங்களுக்கு ஏற்றவாறு பொன் தண்டம் விதித்தல், சிறையிடல், கொலைத் தண்டனை விதித்தல் என்றமுறையில் நீதி வழங்கினர்; எளிய குற்றங்களுக்கும் அறியாமையால் நேர்ந்த தவறுகளுக்கும் கோவில்களில் விளக்கெரிக்கும்படித் தீர்ப்பளித்தனர். சில சபைகளில் ஐந்துக்கு மேற்பட்ட வாரியங்களும் இருந்தன. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த காவேரிப் பாக்கம் (காவிதிப்பாக்கம், சபையில் எட்டு வாரியங்கள் இருந்தன. அவை சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், கழனிவாரியம், பஞ்சவார வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழி வாரியம், (நிலங்களை மேற்பார்க்கும் குழு) என்பன. (S.I. I. III. 156) ஊர்ச்சபை ஒரு முக்கியமான செய்தி பற்றி முடிவுக்கு வரக்கூடவில்லையாயின், அவ்வூரில் உள்ள மற்றொரு சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளும். மூன்றாம் இராசராசசோழன் காலத்தில் ஓர் ஊரிலிருந்த மூலப்படை (கோவில் ஆட்சிக் குழு), ஊர்ச்சபைக்கு உரிய தேர்தல் விதிகளையும் ஊராட்சி முறைகளையும் முடிவு செய்தது என்று கல்வெட்டு கூறுகிறது. (89 of 1931- 32; A.R.E. 1932, para 19) இங்ஙனம் நடைபெறுதல் சிறுபான்மை நிகழ்ச்சியாகும். ஊர் ஆட்சிமுறை சபைக்கு (பிராமணர் ஆட்சி மன்றத்திற்கு) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டவாறே ஊர் மன்றத்திற்கும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று கொள்வதே பொருத்தமாகும். இவர்கள் பிராமணர் அல்லாதராதலின், வேத நூல் கல்வி வற் புறுத்தப்படாமல் இருந்திருக்கலாம். (A.R. E. 1913, para 23) கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சாத்த மங்கலம் என்ற சிற்றூரில் இந்துக்களுக்கு ஒரு மன்றமும் சமணருக்கு ஒரு மன்றமும் இருந்தன. (466 of 1912) ஊரில் இரு சமயத்தவர் எண்ணிக்கை ஓரளவு அதிகமாக இருப்பின், இரண்டு மன்றங்கள் தனித்தனியே இருந்து செயலாற்றி வந்தன என்பது இதனால் தெரிகிறது. ஊரவையார் கணம், ஆளுங்கணம், ஊர் ஆள்வார் என்று பெயர் பெற்றிருந்தனர். தண்டல், நியாயத்தார் என்ற பெயர் கொண்ட அலுவலர் ஊர் மன்றத்தில் வேலை பார்த்தனர் என்று கருதலாம். (58 of 1898, 40 of 1895, 610 of 1902, S.I.I. VIII. 207) ஊரார் செலுத்த வேண்டிய வரிகளைத் தண்டல் செய்தவர் தண்டல் எனப்பெயர் பெற்றனர்; வழக்கு களைக் கவனித்து ஊரவையார் சார்பில் நியாயம் வழங்கியவர் நியாயத்தார் எனப்பட்டனர் போலும்! இவர் அரசாங்க அதிகாரியாகவும் இருக்கலாம். ஆட்சி மன்ற வேலைகள் (1) ஊர் மக்களுள் பெரும்பாலருக்கு நிலம் இருந்ததால் அவர்கள் அனைவரும் ஊர் நலனைக் கருதும் ஊர் அல்லது சபை நடவடிக்கைகளில் ஒத்துழைத்தனர். ஊரார் நிலங்களுக்குத் தேவைப்படும்போது ஊர் அல்லது சபை விதித்த வரி ஒன்று; அரசாங்கம் விதித்த நிலையான வரி ஒன்று. ஊர் அல்லது சபை விதித்த வரியைத் தள்ளும் அல்லது குறைக்கும் உரிமை ஊர் அல்லது சபைக்கு உண்டு. இத்தகைய உரிமை உடைமையால் ஊர் அல்லது சபை வரி வசூலில் சில சட்டங்களை ஏற்படுத்தவும் உரிமை பெற்றிருந்தது. சட்டங்களைப் பின்பற்றி வரிசெலுத்தாதவர் ஒரு நாளைக்கு ஒரு மஞ்சாடிப் பொன் தண்டம் விதிக்கப்பட்டனர் என்று நின்றவூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. (176 of 1929 - 30) உரிமையாளர் இல்லாத நிலங்கள் மன்றத்தைச் சேர்ந்தன. அந்நிலங்களுக்கு உரிய கடமை, குடிமை என்ற வரிகளை மன்றம் அரசாங்கத்திற்குச் செலுத்தியது. (224 of 1917) வரி வசூலிக்கும் உரிமையைச் சில ஊர் மன்றங்கள் கோவில் ஆட்சியாளரிடமும் ஒப்படைத்தன. (321 of 1910) (2) ஊரில் உள்ள அறநிலையங்களை மேற்பார்த்தலும் மன்றத்தார் கடமை. சில ஊர்களில் மன்றத்தின் ஒரு பிரிவினரான தரும வாரியர் அவற்றைக் கவனித்து வந்தனர். (S.I. I.III. 6) (3) சபை சில சமயங்களில் அரசன் ஆணையைச் செயற்படுத்த, அவனது பிரதிநிதியாக அவ்வூரிலிருந்த அதிகாரியுடன் ஒத்துழைப்பதும் உண்டு. சபை அவ்வதிகாரியுடன் கலந்து ஊர்ச் செயல்களைக் கவனிப்பதும் உண்டு. (330 of 1917.) (4) ஊர்க் காவலர் (பாடி காவலர்) கோவிற் காவலராகவும் மன்றத்தார் மேற்பார்வையில் பணி செய்து வந்தனர். (207 of 1925) (5) வயல்களின் எல்லை பற்றிய சண்டைகளை மன்றத்தார் விசாரித்து முறை வழங்குதல் வழக்கம். (6) குற்றவாளிகளின் நிலங்களைக் கைப்பற்றும் உரிமை மன்றங்களுக்கு உண்டு; அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை மன்றத்தார் அவ்வூர்க் கோவிலுக்கு அளித்து விடுவர். (179 of 1912) (7) ஊரவையாரே நடு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து மன்றத்தில் பணியாற்றவும் வாய்ப்பு உண்டு. முதலாம் இராசராசன் ஆணைப்படி வீரநாராயண சதுர்வேதி மங்கலச் சபையார், அரசனால் துரோகிகள் என்று குறிக்கப்பட்டவர் நிலங்களைப் பறிமுதல் செய்தனர். (244 of 1917) (8) ஊரில் வசூலாகும் பணத்தில் கோவிலுக்கென்று நடு அரசாங்கம் ஒதுக்கிய தொகையை மன்றம் கோவிலுக்குச் செலுத்தி வந்தது; கோவிலுக்கு வேண்டிய பணி மக்களையும் சில சமயங்களில் உதவி வந்தது. (S.I. I. II. 4, 5, 70) முதற் குலோத்துங்கன் காலத்தில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலச் சபையார் கூடித் திருநாராயண பட்டன் எழுதிய குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலைப் படிக்கக் கேட்டு, அவனுக்கு நிலம் வழங்கினர். (198 of 1919) (9) மன்றத்தில் கரணத்தான், மத்தியதன் என்று சில அலுவலரும் வேலை பார்த்தனர். மன்ற நடவடிக்கைகளை எழுதி வந்தவன் மத்தியதன் ஆகலாம். ஊர்க் கணக்குகளை வைத்திருந்தவன் கரணத்தான் ஆவன். சில சபைகளில் இந்த இருவர் வேலைகளையும் ஒருவனே கவனித்தான். சில ஊர்களில் வீரர்களே தங்கியிருந்தனர் அவை படைப் பற்று எனப்பட்டன. அத்தகைய ஊர்களின் ஆட்சியைப் படை வீரர் குழுவினரே கவனித்து வந்தனர். (S.I. polity , p 368) நாடு நாடாக இசைந்த நாட்டோம் என்று கல்வெட்டில் வருவதால், நாடு என்பது பலரைக்கொண்ட ஒரு பேரவை என்று எண்ணுதல் தகும். நாட்டைச் சேர்ந்த ஒவ்வோர் ஊரிலுமிருந்து ஒரு பிரதிநிதி நாடு என்னும் பேரவையில் இடம் பெற்றிருக்கலாம். அல்லது அது செல்வாக்குள்ள பெருமக்களைக் கொண்ட பேரவையாக இருக்கலாம். தொழில் சங்கங்கள் பண்டைக் காலத்தில் இன்னின்ன சாதியார் இன்னின்ன தொழில்களைத்தான் செய்யவேண்டும் என்ற வரையரை பெரும்பாலும் வழக்கில் இருந்தது. நெசவாளர், ஆடைக்குச் சாயம் இடுபவர், தையற்காரர், தேவாங்கர், பாஞ்சாளத்தார் (இரும்புக் கொல்லர், பொற் கொல்லர், கன்னார், தச்சர், சிற்பிகள்), குயவர், செக்கார், (எண்ணெய் ஆட்டுபவர்) செருப்புத் தைப்பவர், இடையர், வேடர், வண்ணார், நாவிதர் என்பவர் தனித்தனித் தொழிற் சங்கங்களை வைத்திருந்தனர். (A.R.E. 1918, paras 84 & 85) இவ்வாறே பட்டு நெசவாளர், கோணி செய்பவர், கூடை முடைபவர், உப்பெடுப்பவர், முதலியோரும் தனித்தனிச் சங்கங்களை வைத்திருந்தனர். (S.I.I. V. 423, 433, 447, 627) வெள்ளாளர் சங்கம் சித்திரமேழி எனப்பெயர் பெற்றது. அதன் உறுப்பினர் சித்திர மேழிப் பெரிய நாட்டார், பூமி புத்திரர், நாட்டு மக்கள், எனப் பெயர் பெற்றனர். இச் சங்கத்தார் இருந்த பல கிராமங்கள் சேர்ந்த பகுதி சித்திர மேழிப் பெரிய நாடு எனப்பட்டது. தனி ஊர்கள் சித்திர மேழி நல்லூர், சித்திரமேழிவிடங்கர் எனப் பெயர் பெற்றன. தமிழரசர் இச் சங்கத்தை நன்கு ஆதரித்தனர். இச்சங்கத்தார் தானிய உற்பத்தியையும், பங்கீட்டையும் கவனித்தனர் என்று கருதலாம். (177 of 1900, 21 of, 1903, 209 of 1937, 16 of 1911 215 of 1930 75of 1903.) இங்ஙனம் ஒவ்வொரு வகைத் தொழிலாளரும் ஒரு சங்கத்தை அமைத்துச் சில சட்டதிட்டங்களை அமைத்துக் கொண்டனர், ஏன்? சங்க உறுப்பினர் எல்லோருக்கும் ஏறத்தாழச் சமமாகத் தொழில் நடைபெற வேண்டும் என்பதற்கு அரசாங்கத்தை வேண்டித் தொழில் சலுகைகள் பெறுவதற்கு இச்சங்கங்கள் பயன்பட்டன. சில ஊர்களில் வாழ்ந்த பொற்கொல்லர் இரட்டைச் சங்கு ஊதுவதற்கும் வீட்டுச் சடங்குகளின்போது வாத்தியங்களை முழக்கவும், செருப்பணிந்து போகவும், தங்கள் வீடுகளுக்குக் காரை பூசவும் உரிமை பெற்றனர் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. (151 of 1905; S.I.I. iii. 25; S.I.I. V.238.) இவ்வாறே நெசவாளர் முதலியோரும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துச் சில சலுகைகள் பெற்றனர். (A.R. E. 1918, para 70.) இத்தொழிற் சங்கங்கள் தொழில் செய்வோருக்கு வேண்டிய சமுதாய கவுரவத்தைப் பெற முனைந்ததோடு, சமய வளர்ச்சிக்கும் பாடுபட்டன என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகிறது. கருவூரில் வாழ்ந்த இடையர்கள் தங்கள் பிள்ளைகளின் சாந்தி முகூர்த்தத்தின் போது ஓர் ஆட்டை உள்ளூர்க் கோவிலுக்கு வழங்குவதென்று முடிவு செய்தனர்; இவ்வாறே தங்கள் பெண்கள் கணவரோடு குடித்தனம் செய்யத் தொடங்கும் பொழுதும் ஓர் ஆட்டை ஊர்க்கோவிலுக்குத் தானம் செய்தனர்; சங்கத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினன், தான் ஒப்புக்கொண்ட கடமையை நிறைவேற்றத் துணையிருந்தனர்; அவன் செய்யத் தவறினால், தாங்கள் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். (165 of 1936-37. S.I.I. III.18.) வணிகர் சங்கங்கள் வலஞ்சியர், நானா தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நானா தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. இவைகளைப்போலவே குதிரைச் செட்டிகள் சங்கம், சாலியர் சங்கம் எனச் சில சங்கங்களும் இருந்தன. குதிரைச் செட்டிகள் மலை நாட்டிலிருந்து வந்தனராம். (181 of 1926.) மாணிக்கவாசகருக்காக வந்த குதிரை வாணிகர் மலைநாட்டிலிருந்து வந்தனரென்றே வரலாறு கூறுகின்றது. குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்தருளியும் -திருவாசகம், கீர்த்தித் திரு அகவல். வரி 27- 28. ) கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோபோலோ என்ற மேலை நாட்டார் ஒருவகை வணிகரைப்பற்றிப் பின்வருமாறு வியந்து கூறியுள்ளார்: இவ்வணிகர் பொய்யுரையாதவர்; களவு செய்யாதவர்; அடுத்தவரைக் கெடுக்காதவர்; குடியும் இறைச்சியும் உட் கொள்ளாதவர்; தூய வாழ்க்கை நடத்துபவர்; பூணூல் அணிபவர்; உருவ வழிபாடு செய்பவர்; சகுனம் பார்ப்பவர். (F.N. of S.I. pp. 176- 177 இத்தகைய வணிகர் வருணனையைப் பட்டினப்பாலைலும் காணலாம்.) மணிக்கிராமம் மணிக்கிராமம் என்பது ஒரு வணிகர் சங்கத்தின் பெயர். இச்சங்கம் தென்னிந்தியா முழுதும் பல கிளைகளைப் பெற்றிருந்தது; சையாம் போன்ற வெளிநாடுகளிலும் பரவியிருந்தது. இதன் உறுப்பினர் பல்வேறு பொருள்களை விற்றுவந்தனர். இச்சங்கத்தின் தலைவன் பல்லக்கில் செல்லுதல் போன்ற பல உரிமைகள் அரசனால் வழங்கப் பெற்றவன். (E. I. iv.pp. 290- 295.) இஃது உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு வாணிகத்தையும் சிறந்த முறையில் நடத்தி அரசாங்கத்திற்கு வருவாய் தேடித் தந்தது என்று சொல்லலாம். நானா தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் ஐய ஒளே (ஐஹொளே) அல்லது நானா தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர் சங்கம் தக்கணத்திலும் தமிழகத்திலும் பல கிளைகளோடு பணியாற்றி வந்தது. இது வீர பௌஞ்ச மதத்தைப் பாதுகாத்து வந்தது. இதன் உறுப்பினர் ஐம்பொழில் பரமேசுவரி எனப்பட்ட ஜயபொழில் நாச்சியார் என்ற அம்மனை வணங்கி வந்தனர். அவருள் - ஆயிரம் மாவட்டத்தார், பதினெண் பூமியார், முப்பத்திரண்டு வளர்புரத்தார், பதினெண் பட்டினத்தார், கடிகைத்த வளத்தார் (64 வணிக அவையார்) எனப்பல உட்பிரிவுகள் இருந்தன. (A.R. E. 1913, para 25) அவர்கள் பல நாடுகளில் சுற்றி நிலவழியாலும் கடல் வழியாலும் ஆறு நாடுகளில் நுழைந்ததாகக் கூறியுள்ளனர். அவர்கள் சையாம், சுமத்திரா, பர்மா, இலங்கை நாடுகளிலும் வாணிகம் செய்தனர். இச்சங்கத்தின் தலைமையிடம் தக்கணத்தில் ஐஹொளே என்ற ஊரில் இருந்தது. அதனால் இச்சங்க உறுப்பினர் ஐயவளெபுர பரமேசுவரி மக்கள் எனப்பட்டனர். இவர்கள் பலமொழி பேசுவோர்; பல நாட்டினர், இவருள் சுதேசி வணிகர், பரதேசி வணிகர், நானாதேசி வணிகர் என்று முப்பெரும் பிரிவினர் இருந்தனர். இவர்கள் நெல் முதலிய தானிய வகைகளையும் மிளகு, எள், பாக்கு, குதிரைகள், யானைகள், நவரத்தினங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வாணிகம் செய்தனர். இவர்கள் சங்கவேலைகள் ஐநூற்றுவர் அடங்கிய சபையால் செயற்படுத்தப்பட்டன என்று கொள்ளலாம். இச்சபையர் காட்டூர் என்ற ஊரை வீர பட்டணம் எனப் பெயர் மாற்றினர்; நாட்டாரைக் கொண்டும் நகரத்தாரைக்கொண்டும் ஒரு கிராமத்தை வணிகர் கிராமமாக மாற்றிக்கொண்டனர். இத்தகைய வணிகர் கிராமங்களில், சபையாரைப் போலவே, ஊராட்சி நடத்தினர்; பிற ஊர்களில் கோவில் திருப்பணிகளும் பிற அறங்களும் செய்தனர். சங்கத்து ஒவ்வோர் உறுப்பினரும் சில சமயங்களில் சங்க நிதிக்காக ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வந்தனர்; சில சமயங்களில் தாங்கள் விற்ற பொருள்களின் அளவுக் கேற்றவாறு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வந்தனர்; சில சமயங்களில் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியை அறத்திற்குப் பயன்படுத்தினர். இச்சங்கத் தலைவன் நானாதேசித் தலைவன், பட்டண சுவாமி, பட்டணக்கிழார், தேசிகன் தண்ட நாயகன் எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தான். நாடு சுவாமி, மணிகாரர், பல கடைகளை மேற்பார்க்கும் அதிகாரி எனப்பல அதிகாரிகள் இச்சங்கத்தில் பணியாற்றினர். இச்சங்க உறுப்பினர் மிகுந்த ஒற்றுமையுடன் பணி செய்தனர். தன் வருமானத்தை மறைத்த உறுப்பினன் கடவுளுக்கும் அரசனுக்கும் இனத்துக்கும் துரோகி என்று பழிக்கப்பட்டான். இதன் உறுப்பினர் நகரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். எனவே, இவரது வணிகர் சங்கம் நகரம் எனவும் பெயர் பெற்றது. சபையின் உட்பிரிவுகளைப் போலவே நகரமும் பல வாரியங் களைப் பெற்றிருந்தது. நகர கரணத்தார், நகர மத்தியதர் என்ற அலுவலர் நகரத் தில் வேலை செய்தனர். (S. I. polity, pp 360- 394.) நமது தமிழகத்தில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகளோடு சிறந்த முறையில் வாணிகம் செய்து வருபவரும், கோவில் திருப்பணிகளில் அளவற்ற ஊக்கம் காட்டி வருபவரும் தனவைசியரே யாவர். இவர்கள் இன்று நகரத்தார் என்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் 96 நகரங்களை அமைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததாகவும், அந்நகரம் கடல் கொந்தளிப்பில் அழிந்தபோது திருச்சிராப்பள்ளி- புதுக் கோட்டைப் பகுதிகளில் குடியேறியதாகவும் கூறுகின்றனர். வேந்தன்பட்டி முதலிய நகரங்களில் வாழ்கின்ற நகரத்தாருள் ஒரு சாரார் தம் திருமண இதழ்களின் தொடக்கத்தில் ஐந்நூற்றீசர் திருவருளை முற்கொண்டு என்னும் தொடரை அச்சிட்டு வருகின்றனர். நகரத்தார் ஏழு கோவில்களைச் சேர்ந்தவர். அவருள் ஐந்நூற்றீசரை வழிபடுவர் மாத்தூர்க் (*மாற்றூர்?) கோயிலார் என்பது தெரிகிறது. உறையூர், அரும்பாக்கூர், மண்ணூர், மணலூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர் என்ற ஏமூர் வகையார்க்கும் ஐந்நூற்றீசர் குலதெய்வம் என்பது கூறப்படுகிறது. மாத்தூர்க் கோவில் சிவனுக்கு ஐந்நூற்றீசர் என்பது பெயராகும். இளையாற்றங்குடிக் கோவிலைச் சேர்ந்தவருள் அரும்பாற் கிளையரான பட்டணசாமியார் என்பவர் ஒரு வகையினர். இராசா சர். முத்தையா செட்டியார் பட்டணசாமியார் மரபின ராவார். இளையாற்றங்குடிக் கோவிலுள் பட்டணசாமி கோவில் ஒன்று இருக்கின்றது. ஐந்நூற்றுவர் சங்கத் தலைவன் பழங்காலத்தில் பட்டணசாமி என்று அழைக்கப்பட்டான் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவை அனைத்தையும் நோக்கச் சோழர்கால நகரத்தாருள் இவர் முன்னோரும் ஒரு பகுதியினராக இருந்திருக்கலாம் என்று கருதுதல் பொருத்தமாகும். கோவில் அரசர்கள், சிற்றறசர்கள், முன் சொன்ன வணிகப் பெருமக்கள், பிற குடிமக்கள் ஆகிய அனைவருமே கோவிலைத் தம் உயிராகக் கருதி, அதில் திருநந்தா விளக்கு எரிக்கவும், பூசை செய்யவும், விழாச்செய்யவும் ஏராளமான நிலங்களையும் தோட்டங்களையும் பொன்னையும் நகைகளையும் பொன்- வெள்ளிப் பாத்திரங்களையும் பூசை முதலியவற்றுக்குரிய செப்பு முதலிய உலோகப் பாத்திரங்களையும் கால்நடைகளையும் பிறவற்றையும் மிகுதியாக வழங்கினர். இவற்றோடு ஊரிலிருந்து அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வரிகளில் சில கோவிலுக்குத் தரப்பட்டன. பொதுமக்களிடமும் கோவிலுக்கென்று வழக்க மாகப் பணம் வசூலிக்கப்பட்டது. நீதி மன்றங்களில் விதிக்கப் பட்ட தண்டத்தில் ஒருபகுதி பணமாகக் கோவிலுக்குச் செலுத்தப்பட்டது; சில இடங்களில் ஆடுகளாகவும் வேறு பொருள்களாகவும் செலுத்தப்பட்டது. நாதியற்றவர் சொத்துக்கள் கோவிலைச் சேர்ந்தன. இவ்வாறு பல வழிகளில் கோவிலுக்கு நிலமும் பணமும் பிறவும் பெருகின. எனவே, இவற்றைக் கவனித்துப் பாதுகாக்கவும், நிலங்கள் முதலிய வற்றைக் குத்தகைக்கு விட்டு வசூலிக்கவும், கோவில் பரி வாரத்தார் அனைவர் வேலைகளையும் மேற்பார்க்கவும் ஆட்சிக் குழு தேவைப்பட்டது. ஆட்சிக் குழுவிற்கு அடங்கிய கணக்கர் முதலிய அலுவலர் தேவைப்பட்டனர். கோவில் வேலைகளைக் கவனிக்கப் பலர் நியமனம் பெற்றனர். அவர்களுக்கெல்லாம் நிலங்கள் மானியமாக விடப்பட்டன. கோவில் ஆட்சி செய்யூர், பெரியபாளையம், அகத்தியான் பள்ளிக்கோவில் போன்ற சிறிய கோவில்கள் அர்ச்சகர் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தன. (449 of 1902. 309 of 1908, 505 of 1904.) மாகேசுவரர் என்ற சைவத்துறவிகள் ஆட்சியில் சில கோவில்கள் இருந்தன. (480 of 1922.) திருக்களர் கோவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஆண்டார்கள் ஆட்சியில் இருந்தது; மூன்றாம் இராசராசன் காலத்தில் மகேசுவரர் ஆட்சிக்கு மாற்றப்பட்டது. (S.I.I.III 260.) சில கோவில்கள் கோவிலைச் சார்ந்த மடத்துத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. (101, 121 of 1925.) சில கோவில்கள் ஊரவையர் மேற்பார்வையில் இருந்தன. (362 of 1917, 160 of 1929, 332 of 1910.) நடுத்தர வருவாயுள்ள பெரியகோவிலில் கோவிலுக்கென்றே தனி ஆட்சிக்குழு இருந்தது. அக்குழுவினர் ஸ்ரீ காரியம் செய்பவர், கோவில் கணப்பெருமக்கள், பாத மூலத்தார் (S.I.I. VI. 322, 206 of 1915, S.I.I.V. 686.) எனப் பலவாறு பெயர்பெற்றிருந்தனர். அக்குழுவினருள் ஊரவையார், மாகேசுரவர், மடம் (இருப்பின் அதன்) தலைவர் என்பவர் இடம் பெற்றிருந்தனர். (47 டிக 1920, 100 டிக 1906.) சில கோவில்களின் ஆட்சி ஊரவை, கோவில் ஆட்சிக் குழு, ருத்ரமாகேசுவரர் ஆகிய மூவரிடமும் இருந்தது.(152, 210 டிக 1929) சில பெரிய கோவில்கள் தனிப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இருந்தன. அவர்கள் ஊரவையார்க்குக் கட்டுப்பட்டிருந்தனர்.(100டிக 1929. 605 டிக 1920, 210 டிக 1921, 21 டிக 1922. 271 டிக 1927.) வேறு சில பெரிய கோவில்களில் இருந்த அதிகாரிகள், கோவில் ஆட்சிக்குழுவினர், ஊரவையார் சேர்ந்து இவருடன் கோவில் காரியங்களைக் கவனித்தனர். (152, 154, of 1895.) கோவில் ஆட்சி ஒரு குழுவினரிடம் அல்லது ஊரவையாரிடம் இருந்தாற் போலவே, கோவிலிலுள்ள நடுக்கோவில் (சிறப்புடைக்கோவில்) ஒருகுழுவினர் ஆட்சியில் இருத்தலும் உண்டு. அக்குழுவினர் கோவிற் பணத்திலிருந்து கடன் தருவர்; கடன் பெறுவர்; கோவிற் பணிகளைக் கவனிப்பர். (A.R.E. 192, p 111) கோவிலைப் பற்றிய மிக முக்கியமான செய்திகள் அரசன் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுதலும் உண்டு. (201, 206 of 1919) கோவிலில் இருந்த பொக்கிஷசாலை ஸ்ரீபண்டாரம் எனப்பட்டது. அதுபற்றிய கணக்குப்புத்தகம் ஸ்ரீ பண்டாரப் பொத்தகம் எனப்பட்டது. (327 of 1921) சிவன் கோவில் பண்டார அதிகாரிகள் சிவபண்டாரிகள் எனப்பட்டனர். (S.I.I.I. 146) நடுகோவில் ஆட்சி போலவே முழுக் கோவில் ஆட்சி நடத்துவோரும் இருந்தனர். அவர்கள் கோவில் நிலங்களை விற்கவும், நிலங்களை வாங்கவும் உரிமை பெற்றிருந்தனர். (A. R.E. 1922. p 177.) கோவிலுக்கு அவரவர் செய்த தானப் பத்திரங்கள் (மூல ஓலைகள்) ஸ்ரீ பண்டாரத்தில் வைத்துப பாதுகாக்கப்பட்டன; அதே சமயத்தில் அவை கோவிற் சுவரிலும் வெட்டுவிக்கப்பட்டன. (299 , 326 of 1913) கோவிலைச் சேர்ந்த தேவரடியார் முதலிய மக்கட்கும் பசுக்கள் முதலிய கால்நடைகட்கும் சூலப்பொறி பொறிக்கப்பட்டிருந்தது. (543 of 1921 and 537 of 1922.) கோவில் நிலங்களைப் பயிரிடும் உரிமை பலருக்கு வழங்கப்பட்டது. கோவிலில் விடப்பட்ட ஆடுகள் இடையராலோ பிறராலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கோவிலுக்குக் குறிப்பிட்ட அ ளவு நெய் அல்லது எண்ணெய் அளப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இத்தகைய ஒப்பந்தங்களில் உண்டாகும் குறைகளைக் கோவில் ஆட்சியாளர் கூடி முடிவு செய்தனர். சிவன் கோவில்களில் திருப்பதிகம் ஓதவும், பெருமாள் கோவில்களில் திருவாய்மொழி ஓதவும் நிலதானம் விடப்பட்டது. இவ்வாறே வேத மந்திரங்களை ஒலிக்கவும் இதிகாச புராணங் களைப் படித்து விளக்கவும் நிலதானம் செய்யப்பட்டது. (63 of 1897. 163 of 1909. 240 of 1910, 365. of 1912.) சில கோவில்களில் வேதங்கள், சாத்திரங்கள், வடமொழி இலக்கணம் இவற்றைக் கற்பிக்கக் கல்லூரிகள் இருந்தன. அவற்றில் படித்த மாணவர்க்கு உண்டி, உடை, உறையுள் ஆகிய மூன்றும் இலவசமாக அளிக்கப்பட்டன. திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் இத்தகைய கல்லூரி ஒன்று இருந்தது. அதனை அடுத்து ஒரு மருத்துவமனையும் இருந்தது, அதனில் பதினைந்து படுக்கைகள் போடப்பட்டிருந்தன. (A.R.E. 1919. para16) பல கோவில்களில் நடன மண்டபங்கள் இருந்து நடனக் கலையை வளர்த்தன; இசை அரங்குகள் இருந்து இசையை வளர்த்தன. ( 65, 253 of 1914) ஒவ்வொரு பெரிய கோவிலிலும் ஆடலையும் பாடலையும் வளர்க்க ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்தனர். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் ஆடல் பாடல் மகளிர் நானூற்றுவர் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வேலி நிலமும் ஒரு வீடும் வழங்கப்பட்டன. அனைவரையும் கோவிற் செல்வமே காத்து வந்தது. எல்லாக் கோவில்களின் வரவு செலவுக் கணக்குகளும் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டன. மதுராந்தகன் கண்டராதித்தன், காழி ஆதித்தன், அருமொழி மூவேந்த வேளார் முதலிய அரசாங்க அலுவலர் பலருடைய பெயர்கள் கல்வெட்டுக்களிற் காண்கின்றன. (282 of 1906, 109 of 1914, 28 of 1819, 240 of 1931 ect.) இந்த அதிகாரிகள் கோவில் கணப்பெருமக்கள், ஊரவையார் என்பவர் முன்னிலையில் கோவில் நகைகளைக் கணக்கிட்டு மதிப்பிட்டுக் குறித்துக் கொண்டனர் (210 of 1929, S. I.I. 211) கோவில் கணக்குகளைப் பார்வையிட்டனர்; கோவில் பணத்தைக் கையாண்டவர்- சொன்னபடி கோவிலுக்கு நெல் முதலியவற்றைக் கொடுக்கத் தவறிய குத்தகையாளர் இவர்தம் நிலங்களை- வீடுகளைப் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் சிவத்து ரோகிகள், ஊர்த்துரோகிகள் என்று ஏசப்பட்டனர் . (189 of 1929, 57 of 1914.) இவை அனைத்தையும் நோக்க, அக்காலக் கோவில்கள், அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் பெரும்பங்கு கொண்டி ருந்தன- ஊரின் உயிர் நாடியாக விளங்கின என்று கூறுதல் பொருத்தமாகும் இவற்றின் சீரழிவு பல்லவர் காலமுதல் சோழர்காலம் முடியக் கல்வெட்டுக் களில் குறிக்கப்பெற்ற இவ்வூராட்சி மன்றங்களும், கோவிலாட்சி மன்றங்களும் சோழராட்சிக்குப் பிறகு சீரழிந்து மறைந்தன. இதற்கு உரிய காரணங்கள் யாவை? (1) கி.பி. 14ஆம் நூற்றாண்டில் முலிம் படையெடுப்பினால் நாடு அமைதியை இழந்தது சிறந்த காரணமாகும். (2) பின்வந்த விசயநகர ஆட்சியில் சிற்றரசர் (நாயக்கர்) ஆட்சி மிகுந்தமையும், படை அடிப்படையில் நாடு ஆளப்பட்டமையும் மற்றொரு காரணமாகும். (3) கிராமத்தில் அரசாங்க அதிகாரிகளை நியமித்து அவர்களைக் கொண்டே கிராம நடவடிக்கைகளை நடைபெறச் செய்தமை மற்றொரு காரணமாகும். (4) தமிழகத்தை ஆண்ட சுல்தான்கள் பல்லவரைப் போலவும் சோழரைப் போலவும் கிராம ஆட்சி மன்றங்களில் மிகுந்த கவலை காட்டாமை வேறொரு காரணமாகும். இத்தகைய பல காரணங்களால், பல நூற்றாண்டுகளாக நன்முறையில் நடைபெற்று வந்த சபைகளும் ஊர் மன்றங்களும் கோவிலாட்சி மன்றங்களும் சோழர்க்குப்பின் சீரழிந்து மறைந்தன. (S.I. polity,pp. 370- 372.)  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)