திரு.வி.க. தமிழ்க்கொடை 13 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 13 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 22+290=312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 155/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை திரு.வி.க. பல்வேறு ஆசிரிய நிலைகளில் ஒளி செய்தவர். மாணவர்களுக்குக் கற்பிக்கும் போதக ஆசிரிய நிலை, பொது மக்கள் ஊடகமாக விளங்கும் இதழாசிரிய நிலை, நூல் இயற்றும் நூலாசிரிய நிலை, நூல் பதிப்பிக்கும் பதிப்பாசிரிய நிலை, நூல் உரைகாணும் உரையாசிரிய நிலை எனப் பல்வேறு ஆசிரிய நிலைகளில் கடமை புரிந்தார். எழுத்தாளும் நிலை போலவே, பொழிவாளும் நிலையும் பெற்றார். பேச்சும் எழுத்தும் ஒருமை யாய்த் திகழும் பெற்றியும் பெற்றார். தாம் பொழி வாளராகவும், போதகாசிரியராகவும் திகழ்ந்த சீர்மையால் பொதுமக்கள் நலம் கருதித் திருக்குறள் வகுப்புகளும் நடத்தினார். அவற்றின் பயிற்சி யும் உந்துதலும் திருக்குறள் விரி வுரையாகித் தமிழுலகம் பெருங் கொடையாகக் கொள்ள வாய்த்ததாம். சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சபையில் - நக்கீரர் கழகச் சார்பில் நிகழ்ந்த தமிழ் வகுப்பில் நடத்திய திருக்குறள் பாடம் (1915) சென்னைத் திருவல்லிக்கேணி தியோசாபிகல் சங்கக் கிளையில் நடத்திய திருக்குறள் வகுப்பு (1928) ஆகியவற்றைக் கண்டு கேட்ட அன்பர்களின் வேண்டல் திருக்குறள் உரை வரைய வேட்கையை ஆக்கிற்று. தென்காசித் திருவள்ளுவர் கழக விழாவுக்குச் சென்ற காலை (1936) குற்றாலச் சாரல் உரையாடலில் அது தூண்டப்பெற்று, நவசக்தியில் வாரந்தோறும் வரையச் செய்தது. திருக்குறள் உரைவரையத் தொடங்குதற்கு முற்படத் தாம் இயற்றிய பெண்ணின் பெருமையிலே தம் குறட்காதல் வெளிப் பாட்டைச் சுட்டுகிறார் (1927) பெண்ணின் பெருமை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஓர் ஆராய்ச்சி நூல். அதன்கண் இயற்கை யறம் என்றொரு பகுதியிருக்கிறது. நூலின் உயிர்நாடி ஓடும் இடம் அப்பகுதியே. அது திருக்குறளின் உள்ளத்தைக் குறிக் கொண்டு நிற்றல் வெள்ளிடை மலை என்று இந்நூல் அணிந் துரையில் வரைந்துள்ளமை காண்க. திருக்குறள் மேல் தமக்குண்டாகிய காதலின் காரணத்தை அணிந்துரையில் குறிக்கிறார் திரு.வி.க. 1) திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது; 2) அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது; 3) பெண்ணை வெறுத்தல் முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது; 4) மனமாசகற்றலே துறவு என்று இயற்கை நுட்பத்தை விளக்கியது; 5) இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது; இன்ன பிற என்கிறார். திருக்குறளுக்குப் புத்துரை காணவேண்டும் என்னும் வேட்கை தம் முப்பத்தொன்றாம் அகவையில் எழுந்ததென்றும், உரை எழுத வாய்த்தது ஐம்பத்து மூன்றாம் அகவையில் என்றும் குறிப்பிடும் அவர், யான் அந்நாளைய கலியாண சுந்தரனா யில்லை. அந் நாளைய கலியாண சுந்தரன் பெரிதும் ஏடுகளையே கட்டி அழுதவன்; ஏட்டுப் புழுவாய் இருந்தவன். இப்பொழுது ஏட்டுக்கல்வி அவனை விடுத்து ஒருவுகிறது. இயற்கையின் உள்ளுறையாயுள்ள இறைக்கல்வியை அவன் வேட்டு நிற்கிறான் என்கிறார் (தோற்றுவாய்). இதனால் ஏட்டுக் கல்வியால் மட்டும் திருவள்ளுவர் நெஞ்சங்கண்டு உரை வரைய இயலாது என்பதை வெளிப்படுத்து கிறார்! மேலும் ஓர் அரிய குறிப்பை வாழ்க்கைக் குறிப்புக்களில் குறிக்கின்றார்: யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறுந் திருக்குறள் படிப்புத் தீக்குணங்களை அறவே களைய வில்லை. கமலாம்பிகையின் ( தம் துணைவியாரின்) சேர்க்கை அக்குணங்களைப் படிப்படியே ஒடுக்கியது. அவள் திருக்குறள் படித்தவள் அல்லள். எனக்கு அவளே திருக்குறளாக விளங்கி னாள். மனைவாழ்க்கையில் ஈடுபடப் படத் திருக்குறள் நுட்பம் விளங்குவதாகிறது. திருவள்ளுவர் உள்ளத்தை உணர்தற்கு மனை வாழ்க்கை இன்றியமையாததென்பது உள்ளங்கை நெல்லிக் கனியாயிற்று. யான் பின்னாளில் எழுதிய திருக்குறள் விரிவுரைக்கு இல்வாழ்க்கையின் அனுபவம் பெருந்துணையாய் நின்றது. என்பது அது. ஈரடிக்குறளுக்கு இத்துணைப் பாரிய விரிவுரை வேண்டுமோ என எவரும் வினவார். பனித்துளியில் பனைத் தோற்றமும், பளிங்காடியில் பனிமலையும் அடங்குவதெனத் தேர்ந்துரைக்கப்பட்ட நூல் திருக்குறள். கடுகைத் துளைத்தும் அணுவைத் துளைத்தும கடலைப்புகுத்தி வைத்த பெற்றியது என்றாரும் உளர். ஈரடி தானே என்று தூய நீரின் ஆழம் காணக் கைவிட்டு ஈராயிரம் அடியாக விருத்தலைக் கண்டு எய்த் தமையை எடுத்துக்காட்டினார் உளர். (முதற்குறள் உவமை) திரு.வி.க. இவ்வுரை விரிவை நோக்கும் நோக்கு என்ன? திருவள்ளுவர் நூல், குறள் வெண்பாக்களால் ஆக்கப் பட்டது. ஒவ்வொரு குறளிலும்ஒவ்வொரு கடலுண்டு என்று கூறல் மிகையாகாது. ஒவ்வொரு பாவில் ஒவ்வொரு கடலைப் புகுத்த வந்தவர் வெறும் இசை நிரப்புதற் பொருட்டு வெற் றொலியையும் வெற்றெழுத்தையும் வெற்றுச் சொல்லையும் பெய்வரோ? ஒரு போதும் பெய்யார். அவர்தம் வாய்மையி னின்றும் பிறந்துள்ள ஒவ்வோர் ஒலியும், ஒவ்வோர் எழுத்தும் , ஒவ்வொரு சொல்லும் பொருளுடையனவாகவே இருக்கும். அவற்றை வெறும் இலக்கிய இலக்கணக் கண்கொண்டு பார்த்தல் மட்டும் போதாது. இயற்கைக் கண்கொண்டும் அவற்றை உற்று நோக்கல் வேண்டும். இயற்கை நோக்குக்கு நுண்பொருள் புலனாகும். அளபெடை அசைநிலை என்று பிறரால் கூறப் படுவன எல்லாம் திருவள்ளுவர் மொழியில் பொருளுடையன வாகவே திகழும் என்கிறார். இந்நோக்கே இவ்விரிவுரை மூலமாம். முடிக்கல அளவில் (கிரௌன்) பாயிரத்திற்கும் இல்லற வியல் ஆறு அதிகாரங்களுக்கும் ஆக நூறு குறள்களுக்கு எண்ணூறு பக்கம் உரை வரைந்துள்ளார். ஏறக்குறைய ஒரு சீருக்கு ஒரு பக்கம் எனக் குறிக்கலாம். அவர் இவ்விரிவுரை கண்ட நாளில் உரைக்களஞ்சியம், உரைக்கொத்து, உரைவேற்றுமை என்னும் தொகைகள் வரப்பெறவில்லை. திருக்குறள் மேற்கோள், சொல்லடைவு இன்னவகை நூல்களும் எழுந்தில. ஆகவே, இவ்வுரைப் பெருக்கம் திரு.வி.க. அவர்களின் கல்விப்பரப்பு, ஆழிய சிந்தனை, இயற்கை நோக்கு, இல்வாழ்க்கைப் பேறு, பொதுத்தொண்டு, தொழிலாளர் இயக்கம் இன்னவற்றின் திறங்களுக்குச் சான்றாகித் திகழ்கின்றமை புலப்படும். இவ்விரிவுரையின் சீர்த்திமைக்கு ஓர் அளவுகோல், இவ் வகையிலேயே காணல் வேண்டும். அதற்கு இரண்டு சான்றுகள் காணலாம். ஒன்று: இராவ்சாகேப் கு. கோதண்டபாணியார் முதற்குறள் உவமை என்றோர் அரிய நூல் கண்டார். அகரமுதல என்னும் குறளுக்கு 216 பக்க அளவில் உரைவிளக்கம் கண்ட நூல் அது. 1956இல் வெளிவந்தது. வெளியிட்டது சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். இன்னொன்று: திருக்குறள் மணி விளக்கவுரை. பன் மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரால் வரையப்பட்டது. திருக்குறள் முதல் நான்கு அதிகாரங்களுக்கு முடிக்கல அளவில் (கிரௌன்) 960 பக்கம். வெளிவந்த ஆண்டு 1967. அதன் இரண்டாம் பகுதி இல்வாழ்க்கை முதலாய நான்கு அதிகாரங்கள். 862 பக்கம். ஆண்டு 1968.இச்சான்றுகளைக் காட்டிய நோக்கம் என்னை எனின், திருக்குறள் உரைவிரிவாக்கத் தூண்டல் எவர் வழிப்பட்டது என்பதைக் குறிக்கவேயாம். திருக்குறள் ஒரு சிறந்த அகப்புற நூல் என்னும் திரு.வி.க. இந்நூலாசிரியர் அகப்புற ஆராய்ச்சியில் கைபோனவர் என்பது இவர் நூலால் தெரிகின்றது. என்கிறார். (கடவுள் 7) தமிழர் பொருளியல் வாழ்வு அகம் புறம் ஆகிய இரு கூறுபட்டு இலங்குதலையும் அவற்றின் வழியில் திருவள்ளுவர் வாழ்வு இலங்குதலையுக் குறிக்கிறார். புனைவிலா மெய்ம்மை வாழ்வு அஃதாம். திருவள்ளுவர் கற்பன கற்றார்; கேட்பன கேட்டார்; அவர், தாம் கற்றனவும் கேட்டனவும் வாழ்வில் ஒன்றப் பெறுதற்கு இல்வாழ்க்கையேற்று இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தி, அவ்வழியில் நின்று, தொழில் புரிந்து, பொருளீட்டி, இன்பந் துய்த்து நன்மக்களைப் பெற்று, அன்பராய், விருந்தோம்பி, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண்மை எய்தி, மனமாசகன்ற அறவோரால், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டித் திருக்குறள் என்னும் தனிநூலை அருளி னார் என்கிறார். இல்வாழ்வைச் சுட்டியது ஏன்? இல்வாழ்வைத் தமிழரும் கற்பாரும் எய்துதல் வேண்டும் என்றும் வேட்கையால் குறித்தாராம். ஆனால் அவர் கண்ட தமிழக நிலை என்ன? சிறந்த அகப்புற நூலாம் திருக்குறளை ஈன்ற பெருமை வாய்ந்த தமிழ்நாடு. இந்நாளில் எந்நிலை உற்றிருக்கிறது. தற்காலத்தில் தமிழ்நாடு, திருவள்ளுவரின் சொல்லையும் சொற்றொடரையும் உருட்டிக் கொண்டிருக்கிறது. பின்னாளில் தமிழுலகில் நுழைந்த கதை நூல்கள் பலவும் போலித் துறவு நூல்கள் பலவும் நாட்டின் அகக்கண்ணைத் தூர்த்து விட்டன. அதனால் புறக்கண்ணொளியும் மங்கலாயிற்று என அவலமுறு கிறார். இவற்றால் திரு.வி.க. திருக்குறள் விளக்கம் எழுதியதன் நோக்கம் தமிழர் அகவாழ்விலும் புறவாழ்விலும் சிறந்தோங்க வேண்டும் என்பதற்கேயாம் என்பது புலப்படும். இனி, இவ்விரிவுரை நடையிடும் முறையை அறியலாம். திருக்குறள் விரிவுரைக்கு ஓர் அரிய தோற்றுவாய் வரைகின்றார். அதன் பிழிவு, திருவள்ளுவர் உலகையே திருக்குறளாக எழுதி னார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம் என்பது அது. அதன் விரிவே தோற்றுவாய். திருக்குறள் பொது நிலையம் எனக் கூறும் திரு.வி.க. அதனுள் புக முயல்வோம்; முயன்று புகுந்தால் திருவள்ளுவரைக் காணலாம். திருவள்ளுவர் இறந்து பட்டாரில்லை; அவர் உயிருடன் திருக்குறள் நிலையத்தில் வீற்றிருக்கிறார். உலகீர்! அவரைக் காண எழுக! எழுக! என அறைகூவல் விடுக்கிறார். தம் நிலையையும் உரைக்கிறார்: யான் இப்பொழுது ஏட்டுக்கும் இறைக்கும் இடையில் நிற்கிறேன். இறையருள் கூடின் திருவள்ளுவரை நேரே காணும் பேறு பெறுவேன். மற்றவர்க்கும் அவரைக் காட்டுவேன். இறையருள் எனக்குக் கிட்டுமோ? கிட்டாதோ? அறிகிலேன் என்பது அது. அடுத்து நூல் பற்றி எழுதுகிறார். முப்பால் விளக்கம் கூறி வீடு பற்றியும் எழுதுகிறார். வீடு என்பது விடுதலை; கட்டற்றது என விளக்கும் அவர், வீடு என்பது தனியே இருப்பது அன்று என்பதையும், வீடு பற்றித் தனித்த நூல்களால் உலகம் உற்ற அல்லல் போதும்! போதும்! என்பதையும் விரித்தெழுதிப் பாயிரம் வரைகிறார். கடவுள் வாழ்த்தைப் பாயிரத்துக்கும் பாயிரம் என்கிறார். நூலுக்கு விரிவுரை வரையும் திரு.வி.க. முதற்கண் அதிகாரப் பெயரைத் தக்காங்குப் பகுத்துக் கொண்டு ஆய்கிறார். அதன் நிறைவில் உள்ளுறையும் அமைவும் என்னும் தலைப்பில் அவ்வதிகாரப் பொருண்மையையும் குறள் வைப்பு முறையையும் தெளிவிக்கிறார். எடுத்துக்கொண்ட குறளுக்கு முதற்கண் பொருள் பொதிந்த தலைப்பு ஒன்றனைக் குறிக்கிறார். பின்னர்க் குறளைப் பொறிக்கிறார். மேலே பொருள், கருத்து, விருத்தி என மும்மை வரன் முறையில் உரைவிளக்கம் புரிகிறார். விருத்தியில் சொல்லையும் சொற்றொடரையும் பகுத்தும் தொகுத்தும் விரித்தும் இணைத்தும் ஒப்பிட்டும் ஆய்கிறார். முதற்குறளுக்கு வரைந்த உரைபோல் எல்லாக்குறள்களுக்கும் உரைவிளக்கம் வரையப் பெற்றிருப்பின் இந்நூல் இருமடங்கும், மும்மடங்கு மாய்ப் பெருகியிருக்கும். இரண்டாம் குறள் கற்றதனால் ஆய என்பதன்றோ! அக்குறள் ஐந்தாம் இடத்தில் கொள்ளப் படுகிறது. ஏன்? திரு.வி.க. கொள்ளும் பொருண்முறை வைப்புமுறை அஃதாம்! மணக் குடவர் வைப்புமுறையைப் பரிமேலழகர் தம் முறைக்குக் கொண்டு சென்றார் அல்லரோ! அதனை நினைக. பிற உரையாசிரியர் வைப்புமுறைகளையும் காண்க. இவ்வைப்புமுறை மாற்றங்கள் என்ன செய்யும்? திருக்குறள் மூல வைப்பை வரிசையுறக்காண வைக்காது. ஆதலால் பெருகப் பரவியதும், முதற்கண் அச்சீடு பெற்றதுமாம் பரிமேலழகர் வைப்பு முறையையே பலரும் பற்றினர் என்க. உரைநிறைவில் மேலும் சில குறிப்புகளைப் பொறித்தலை மேற்கொள்கிறார். இம்முதற் குறள் நிறைவில், பாட்டின் மாண்பு, ஓர் இனிய குளிர் தரு என்பவை. அன்னவை அவை. ஒருபாடல் நிறைவித்து அடுத்த பாடல் விருத்தி எழுதத் தொடங்குங்கால் முடிந்த பாடல் கருத்தை எடுத்துரைத்துத் தொடர்ச்சிச் சிறப்பை வெளிப்படுத்துகிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் பாடல் விருத்தியில் முதற்பாட்டு விருத்தியில் கடவுளுக்குரிய மூன்றுநிலை சொல்லப்பட்டன. அவற்றுள் கடவுள் குருவைக் கோயிலாக் கொண்டு கடனாற்றுவது இப்பாட்டிற் குறிக்கப் பெற்றிருக்கிறது என்கிறார். அவித்தல் அழித்தல் அன்று; அடக்கல்; நாவடக்கம், கையடக்கம் போல என விளக்கும் திரு.வி.க. அவித்தான் என்னும் சொல்லை மேலாய்வு செய்கிறார். ஐந்தவித்தான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப. இறைவனுக்கு ஐந்து உண்டோ? இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன். உருவம், அருவம், அருவுருவம் முதலிய எல்லாவற்றையும் கடந்தவன். மாற்ற மனம் கழிய நின்றவன். அவனுக்கு ஐம்புலனே இல்லை. புலனே இல்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது? என வினாவி விளக்கும் திரு.வி.க. கடவுள் நிலைகளுள் ஒன்றான குருவன் நிலையே ஐந்தவித்த நிலை எனத் தெளிவிக்கிறார். கோளில் பொறியில் என வரும் பாடலில் உள்ள, எண்குணத்தான் என்பதற்கு, எண்ணும் குணத்தான்; அன்பன் எண்ணுங் குணங்களையுடையவன் என்று பொருள் கூறும் திரு.வி.க. எண்குணத்தான் என்பதற்கு எட்டுக் குணங்களை யுடையவன் என்றுங் கூறலாம் என்று பிறர் உரையையும் குறிக்கிறார். ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் என்னும் பாடமே பலரும் கொண்டதாம். Mdhš âU.É.f., ஐந்தவித்தான் ஆற்றற் ககல்விசும்புளார் கோமான் எனப் பாடம் கொள்கிறார். இப்பாடம் எவருடையது எனச் சுட்டினார் அல்லர். குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளியைக் கணப்பொழுதும் காக்க முடியாது என்று உரைகள் பலவும் கூற, திரு.வி.க. வெகுளி கணமேயுங்காத்தல் அரிது என்பது வெகுளி எழாமையை உணர்த்துவது. குணமென்னுங் குன்றேறி நின்றார்க்கு வெகுளி எங்கிருந்து பிறக்கும்? அவர்கட்கு வெகுளி ஏது? வெகுளியினின்றும் விடுதலை அடைந்தவரே, குண மென்னும் குன்றேறி நின்றவர். அவரே நீத்தார் என மெய்யுரை காட்டு கிறார். வீழ்நாள் படாஅமை என்னும் குறளில் வரும் வழி யடைக்கும் கல் என்பதன் பொருளாய்வில் வழியமைக்கும் கல் என்கிறார். பழங்காலத்தில் குகைக் குடியிருப்பையும், கொல்லைப் புறத்தையும் கல்லால் அடைத்தல் உண்டு. கல்லடார் என்பது அதன் பெயர். வழியடை என்பது வழியில் வைக்கும் தடுப்பையும், அணைக்கட்டையும் குறிப்பது. ஆக, அடைக்கும் என்பதற்கு அமைக்கும் எனப் பொருள் காட்டிய திரு.வி.க. அவ்வளவில் அமையாராய், அடைக்கும் என்பதற்கு மூடும், தடுக்கும் என்று பொருள் கூறுவோருமுளர். உண்மை காண அறிஞர் முயல்வா ராக என்கிறார். அறத்தாறு இதுவென வேண்டா என்னும் பாடல் விளக்கத்தில், அறநெறி இதுவா, அதுவா என்று ஆராய்ந்து சொல்ல வேண்டுவதில்லை. அறநெறி அதுவாகவும், இதுவாக வும் விளங்கி எங்கும் என்றும் பொதுவாக நிற்கும் தன்மை வாய்ந்தது என்றும், பல்லக்கைச் சுமந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். பல்லக்கில் ஊர்ந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோராகலாம். அறவோராகும் வாய்ப்பு இருவர்க்கும் உண்டு. ஒருவர்க்கு மட்டும் அவ்வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார். உண்மை காண அறிஞர் முயல்வாராக என்றது போல் திரு.வி.க. இவண் பொறிக்க வில்லை எனினும், உண்மை காணவேண்டியதாகவே உள்ளது. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரைகள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். அணிந்துரை உலகைப் பண்படுத்துங் கருவிகள் சிலவே. அவற்றுள் சிறந்தன நூல்கள்; அற நூல்கள். நூல்களை ஈரினமாகப் பிரிக்கலாம். ஒன்று அறவோர் வழிப்பிறப்பது; இன்னொன்று மற்றவர் வழிப் பிறப்பது. முன்னையதால் மன்பதைக்கு நலம் விளைந்தே தீரும்; பின்னையதால் தீங்கு விளைதலும் உண்டு. அறவோர் இன்னாரென்று எப்படி உணர்தல் கூடும்? ஒருவரது அகநிலையை அளந்து காண்டல் அருமை; புறக் குறிப்புக் களால் அவர்தம் அகநிலையை ஒரோவழி உணர்தல் கூடும். அறவோர் இன்னார் என்று உணர்த்தும் புறக் குறிப்புக்கள் சில உள. அவை இன்ன இன்ன என்று நூலினுள் விருத்தியில் சில இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றன. புறக் குறிப்புக்களைவிட நிலைமையை நன்கு விளக்க வல்லது ஒன்றுளது. அது நன்னூல். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - மறைமொழி காட்டி விடும் எனவரூஉம் திருவள்ளுவர் வாய்மொழியை நோக்குக. திருவள்ளுவர் வெறுங் கலைப்புலமையளவில் நின்றவரல்லர்; அவர் இயற்கைப் புலமை என்னும் தெய்வப் புலமை பெற்றவர்; அறவோர். திருவள்ளுவர் அறவோரென்பது அவர்தம் தெய்வப் புலமையினின்றும் முகிழ்ந்த வாடா மலராகிய திருக்குறளால் நனி விளங்கும். திருவள்ளுவரின் அறத்தில் நின்று, பொருளில் புகுந்து, இன்பத்தில் இயைந்தால் அவர்தம் உள்ளம் புலனாகும். திருவள்ளுவரைப் பற்றியும் அவரது நூலைப்பற்றியும் தோற்றுவாயிலும்,வேறு சில இடங்களிலும் என் கருத்தை வெளியிட்டுள்ளேன். ஆதலின், இங்கே அவரைக் குறித்தும், அவரது நூலைக் குறித்தும் விரித்துக் கூறுதல் வேண்டுவதில்லை. திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக் காதலுண்டு. காரணம் பலப்பல. சிலவருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப் பால் விடுத்தது; அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது: பெண்ணை வெறுத்தல் முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது: மனமாசகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது; இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது; இன்னபிற. எனது குறட்காதல், முன்னே 1927-ம் ஆண்டில் பெண்ணின் பெருமை என்னும் நூலாகத் திரண்டது; இப்பொழுது திருக்குறள் விரிவுரையாக உருக்கொண்டு வருகிறது. பெண்ணின் பெருமை, திருக்குறளை அடிப்படையாக் கொண்டெழுந்த ஓர் ஆராய்ச்சி நூல். அதன்கண் இற்கை அறம் என்றொரு பகுதியிருக்கிறது. நூலின் உயிர்நாடி ஓடும் இடம் அப்பகுதியே. அது திருக்குறளின் உள்ளத்தைக் குறிக் கொண்டு நிற்றல் வெள்ளிடைமலை. விரிவுரை எண்ணம் எங்ஙனம் தோன்றி வளர்ந்த தென்பதையுஞ் சிறிது சொல்கிறேன். சென்னை இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணி பக்தஜன சபையில் - நக்கீரர் கழகச் சார்பில் - சிலகாலம் தமிழ் வகுப் பொன்று என்னால் நடத்தப்பட்டது. அவ்வகுப்பில் 1915-ம் ஆண்டில் திருக்குறள் பாடஞ் சொல்லத் தொடங்கினேன் . அதனால் திருவள்ளுவர் வாய்மொழியில் ஒன்றி ஒன்றிப் படிந்து பொருளை நோக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வேளை யில் திருக்குறளுக்குக் காலத்துக் கேற்ற முறையில் விரிவுரை யொன்று காண்டல் வேண்டும் என்ற விருப்பம் என்பால் எழுந்தது. சென்னைத் திருவல்லிகேணியில் தியோசாபிகல் சங்கக் கிளையொன்றுண்டு. அதன் தலைவராயிருந்தவரும், ஹிந்து அறநிலையப் பாதுகாப்புக் கூடத்தில் அமைச்சராயமர்ந்து நேர்மைத் தொண்டாற்றியவரும், எனது உள்ளங் கவர்ந்த கெழுதகை நண்பருள் ஒருவரும் ஆகிய திருவாளர்-ஸி. எ. சாமிநாத முதலியார் தமது சங்க மண்டபத்தில் வியாழக்கிழமை தோறும் திருக்குறள் வகுப்பு நடத்துமாறு அடிக்கடி என்னைக் கேட்டுவந்தர். அவர்தம் நட்பும் விருப்பும் என்னை இணங்கச் செய்தன. 1928-ம் ஆண்டில் ஆங்கே திருக்குறன் வகுப்புத் தொடங்கப்பட்டது. அவ்வகுப்பில் யான் சொல்லி வந்த முறை யில் பொருளையும் விருத்தியையும் எழுத்துருவில் நல்குதல் வேண்டுமென்று நண்பர் சாமிநாத முதலியாரும் மற்றவரும் வலியுறுத்துவர். அவ்வலியுறுத்தல் இராயப்பேட்டைக் கழகத் தில் எழுந்த விருப்பதை வேட்கையாக முதிரச் செய்தது. தென்காசியில் திருவள்ளுவர் பெயரால் ஒரு கழகம் நடை பெற்று வருகிறது. அக்கழத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்துக்குத் தலைமை பூணுதற்கு 1936-ம் ஆண்டில் முதல் முதலாக அழைக்கப்பெற்றேன். விழா முடிந்த பின்னர்க் கழகத்தார் சிலரும் யானும் வண்டு யாழ் செய் குற்றாலமலை நோக்கினோம். அம் மலையின் சண்பகாடவியில் கழகக்தாரும் யானும் உறவு கொண்டு பேசிய பேச்சுக்கள், திருவல்லிகேணிச் சங்கத்தில் முதிர்ந்தெழுந்து நிலவிக்கொண்டிருந்த வேட்கையை மீக்கூரச் செய்தன. தென்காசியினின்றும் சென்னை திரும்பியதும் வாரந் தோறும் நவசக்தியின் முதற் பக்கத்தில் திருக்குறள் விரிவுரை வரைந்து வரலானேன்; பின்னே அதைப் பலவழியிலும் நூல்முறையில் ஒழுங்குபடுத்தினேன். அவ்விரிவுரை பாயிரப் பகுதி இந்நூல் வடிவாக இது போழ்து வெளியிடப்பட்டது. மற்றொரு பகுதி (இல்லற இயல் -முதல் ஆறு அதிகாரம்) தனியே வெளியிடப்பட்டது. நூலாசிரியன்மார்க்கு முதலாவது மன அமைதி வேண்டும். மன அமைதிக்குப் பலதிற வாய்ப்புக்களிருத்தல் வேண்டும். வாய்ப்புக்களில் இடம் பொருள் ஏவல் இன்றியமையாதன. இவற்றில் ஒன்றையேனும் எனக்கு ஆண்டவன் பொருந்திய முறையில் அருளவில்லை அமைதியைப் பலவழியிலுங் குலைக்குஞ் சூழலிடை நின்றே எனது சிறிய தொண்டை ஆற்றி வருகிறேன். மற்றுமொன்று ஈண்டுக் குறிக்க விரும்புகிறேன். அது, யான் நூல்களை யாக்கப் புகும்போதும், அவற்றைப் பதிப்பிக்கப் புகும்போதும் பெரிதும் விளைவது. அதைச் சுருங்கச் சொல் கிறேன். நூலாய்தல், நூல் யாத்தல், பத்திரிகை நடத்தல் ஆகிய தொண்டுகளில் மட்டும் என் வாழ்வு ஈடுபட்டு நிற்கவில்லை. வேறு பலதிறத் தொண்டுகளிலும் என் வாழ்வு ஈடுபட்டு நிற்கிறது. அவற்றுள் ஒன்று தொழிலாளர்க்குச் சேவை செய்வது. நூற்றொண் டில் யான் நுழையும்போதெல்லாம் பெரிதும் தொழிலாளர் தொல்லை எப்படியோ மூண்டுவிடுகிறது இஃதோர் அற்புதம் திருக்குறளுக்கு விரிவுரை காணப்புகுந்த சில வாரத்துக்குள் வேலை நிறுத்தம், சென்னைகர்நாட்டிக் ஆலையில் நேர்ந்தது; பின்னே பக்கிங்காம் ஆலையில் நிகழ்ந்தது; தொடர்ந்து சூளை ஆலையில் விளைந்தது. இப் பாயிரப்பகுதியைப் பதிப்பிக்க முயன்றபோதும் சூளை ஆலையே அடைக்கப்பட்டது. அதனால் தொழிலாளர் மூவாயிரவர்- அவர் சார்பினர் ஏறக்குறைய ஏழா யிரவர்-ஆகப் பதினாயிரவர் தொல்லையில் மூழ்கினர். இவர் தந் தொல்லை படியும் மனம் எந்நிலையிலிருக்கும் என்று சொல்ல லும் வேண்மோ? திருவள்ளுவர் அறம் உலகிடை- ஆட்சியிலும் குடிமையிலும்-பரவிநின்றால், இத்தகைத் தொல்லைகளின் தோற்றத்துக்கே இடம் இராது. இடம் பொருள் ஏவல் இன்மையும், அமைதி குலைக்குஞ் சூழலும், தொழிலாளர் தொல்லையும் மனத்தை அமைதியில் நிறுத்துமா? இதை அகத்திணை (Psychology) ஆராய்ச்சி யாளர்க்கு விடுத்துச் செல்கிறேன். தொல்லை நோய்க்கு மருந்துண்டோ? மருத்துவர் என்ன விடை இறுப்பரோ அறிகிலேன். எனக்கொரு மருந்து துணை செய்து வருகிறது. அஃதென்னை? அஃது எனது தாய்மொழி; அமிழ்தினும் இனிய தாய்மொழி. என்போன்றார்க்கென்று தமிழ்க் கலைகள் தோன்றினவோ என்று யான் அடிக்கடி நினைப்பதுமுண்டு. தொல்காப்பியனார், நக்கீரனார், நல்லந்துவனார், திரு வள்ளுவர், இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர் மாணிக்க வாசகனார், நம்மாழ்வார், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதியார் முதலிய தமிழ் மருத்துவர் யான் நூலெழுதும் சிற்றறையிலும் வீற்றிருக்கின்றனர். அவர் முன்னே தொல்லை அணுகி எங்ஙனம் நோய் செய்யும்? அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர் இப்பாக்களின் சொல்லிலும் பொருளிலும், இரண்டுங் கலந்த ஒருமையிலும் ஒன்றி ஒன்றித் திளைக்கும் மனம் எந்நிலை எய்தும்? அம்மனத்தைத் தொல்லை உறுத்துங்கொல்? தொல்லை விளையும்போதெல்லாம் பெரிதும் நூலை எழுதும் அல்லது பதிப்பிக்கும் வாய்ப்பை அடியேனுக்குக் கூட்டும் ஆண்டவன் அருட்டிறத்தை என்னென்று வியந்து கூறுவேன்! இல்லையேல் தொல்லை என்னை என்செய்யுமோ? எனது வாழ்வில் தொல்லை ஒரு பக்கம்! அதைத் தகையும் மருந்து மற்றொரு பக்கம்! தொண்டு இன்னொரு பக்கம்! இது நிற்க. திருவள்ளுவர், திருக்குறள் வாயிலாக உலகுக்கு விடுத்துள்ள நற்செய்தியைத் தற்கால ஆராய்ச்சியால் விளக்குவது ஒருமுறை. இதனினும் சிறந்தது, திருக்குறளுக்கு விரிவுரை காணும் வாயிலாக ஆசிரியரது நற்செய்தியை விளக்குவது. இவ்விரிவுரை, பொருள் -கருத்து- விருத்தி என்னும் முக் கூறு களைக் கொண்ட ஓர் ஆராய்ச்சியேயாகும். பொருள், பாட்டை விளக்குவது; கருத்து, பொருளின் நுண்மையைத் தெரிப்பது; விருத்தி, இரண்டையும் பருமையில் தெளியச் செய்வது. பாட்டு உயிர்; பொருள் உள்ளம்; கருத்து மெல்லிய கரணம்; விருத்தி உடல். விருத்தி கட்டுரை போன்றது. அதைக் கட்டுரையாக் கொண்டு பாட்டின் உள்ளங் காண முயலுமாறு அன்பர்களை வேண்டுகிறேன். விருத்தியில் கூறியது கூறல் மல்குவதுபோல் தோன்றும். அதைக் கூர்ந்து நோக்கின் அது வழிமொழிதல் என்னும் அநுவாதமாகக் காணப்படும். பாட்டின் ஒரே சொல்லோ சொற்றொடரோ கருத்தோ மீண்டும் மீண்டும் வருமிடங்களில் அதை அதை அவ்வவ் விடத்துக் கேற்ற முறையில் விளக்கஞ் செய்தற்கு வழிமொழிதல் இன்றியமையாததாகிறது. முன்பின் கூட்டிக் கருத்தைத் தெளிவு செய்து கொள்வது நல்லது. விருத்தியில் மனிதப் பிறவியின் விழுப்பம், கூர்தல் அறம், தநுகரண புவன போகப் பேறு, அறம் மனத்துக்கண் மாசிலனாதல் என்பது, இன்ன பிற சில இடங்களில் காட்சியளிக்கும். இவை ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவித வடிவாகக் காட்சியளித்தல் நோக்கற்பாலது. இவ்விரிவுரை காணுதற்கு ஊக்கமூட்டிய நண்பருக்கும், கழகத்தார்க்கும், எவ்விதப் பயனுங் கருதாது தமிழன்பு ஒன்றே கொண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைபுரிந்த திருவாளர் - மாங்காடு துரைசாமி முதலியார்க்கும் எனது நன்றி உரியதாக. யான் மனிதன்; அடிக்கடி தொல்லையில் மூழ்குவோன்; குறைபாடுடையவன். குறைபாடுடையவன் உரையில் குறைபாடி ருத்தல் இயல்பு. புலவோர் குற்றங் குறைகளைப் பொறுத் தருள்வாராக. சென்னை 1-8-1939 திருவாரூர் - வி.கலியாணசுந்தரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix அணிந்துரை xvii நூல் தோற்றுவாய் 3 நூல் 10 பாயிரம் 15 1. கடவுள் வாழ்த்து 19 2. வான் சிறப்பு 126 3. நீத்தார் பெருமை 173 4. அறன் வலியுறுத்தல் 241 பாட்டு முதற் குறிப்பு 290 திருக்குறள் விரிவுரை (பாயிரம்) (1939) தோற்றுவாய் திருவள்ளுவர் என்னும் நினைவு .தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்னை? காரணத்தைத் திருவள்ளுவர் அருளிய நூல் உணர்த்தும். அந்நூலே திருவள்ளுவரை உணர்த்துதற்குரிய கருவியுமாகும். திருக்குறளை ஆராய்ந்தால், அதன்கண் உலகமிருத்தல் நன்கு புலனாகும். திருவள்ளுவர், உலகையே திருக்குறளாக எழுதினர். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர்உலகுக்கென்றே பயின்றார்; உலகுக்கென்றே வாழ்ந்தார். அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகமாயினர்; உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிட மிருந்து பரிணமித்த ஒரு நூல் எந்நினைவை யூட்டும்? அஃது உலக நினைவை யூட்டுதல் இயல்பே. ஆகவே, திருவள்ளுவர் நினைவு தோன்றும்போது, உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை யென்க. உலகம் உலகம் எது? இவ்வினாவிற்குச் செவ்வனிறை இறுத்தல் அரிது. உலகம் இதுவே என்று அறுதியிட்டுக் கூறல் இயலாது. உலகம் பலவிதம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வோர் உலகம் உண்டு. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொருபோது ஒவ்வோர் உலகம் உண்டு என்று கூறல் மிகப் பொருத்தம். ஒருவர் தம் வாழ்வில் எத்துணையோ முறை பிறக்கிறார்; எத்துணையோ முறை இறக்கிறார். நொடிக்கு நொடி பிறப்பும் இறப்பும் உறுகின்றன. இந்நிகழ்ச்சியை உணர்ந்து நடப்போர் சிலரே. ஒருவர் ஒன்றைப் பற்றி ஒருபோது ஒருவித எண்ணங் கொள்கிறார். அவரே அதைப் பற்றி வேறுபோது வேறுவித எண்ணங் கொள்வோராகிறார். இவ்வாறு எண்ணங்கள் தோன்றி நின்று மறைந்து வருகின்றன. தோற்றம் மறைவு என்றால் என்ன? பிறப்பு இறப்பு என்றால் என்ன? இரண்டும் ஒன்றே. நாளுநாள் சாகின் றாமால் நமக்குநாம் அழாததென்னே என்றார் வளையா பதியாரும். பருவுடல் தோன்றுவதும் மறைவதும் மட்டும் பிறப் பிறப் பாகா.எண்ணங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பிறப் பிறப்பின் பாற்பட்டனவே. இப்பிறப்பிறப்பு, மெய்யுணர்வு தோன்றும்வரை நிகழ்ந்து கொண்டே போகும். முகிழ்க்கும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வோர் உலகமென்க. ஆதலால், உலகம் எது என்று எங்ஙனம் அறுதியிட்டுக் கூறுவது? எண்ணமே உடலும் உலகுமாம். அடிப்படை எண்ணம். எண்ணத்தின்படியே எல்லாம் உருக்கொள்ளும். எண்ணம் நுண்மை; உரு பருமை. நாடு உலகைப் பற்றிப் பலர் பலவாறு கூறுப. அவர்தங் கூற்றுக்களை எடுத்த பொருளுக்கேற்ப இங்கே முக்கூறுபடுத்திக் கொள்கிறேன். ஒன்று, உலகம் பூதங்களால் ஆக்கப்பட்ட தென்பது; இன்னொன்று, உலகம் நாடுகளால் (Nations) ஆக்கப் பட்டதென்பது; வேறொன்று, உலகம் கலைகளால் ஆக்கப்பட்ட தென்பது. இம்மூன்றனுள் சிங்க நோக்காக நிற்பது நாடு. நாடு ஒருவகையில் முன்னையதிலும், மற்றொரு வகையில் பின்னைய திலும் ஒன்றும். நாட்டை வெறும் பௌதிகமாகப் பார்ப்பது ஒருவகை; அதைக் கலையாக நோக்குவது இன்னொரு வகை. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. அது கல்வி, தொழில், அரசு, நாகரிகம், வாழ்வு முதலியவற்றையுங் கொண்டது. நிலப்பரப்பு, பூதகாரியம். கல்வி, நாகரிகம், வாழ்வு முதலியன கலையின் பாகுபாடுகள். இவ்விரண்டையுங் கொண்ட ஒன்றே நாடு என்பது. தமிழ்நாடு உலகில் பல நாடுகளிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு பெயருண்டு. நாட்டுப் பெயர்கள் பெரிதும் அவ்வந் நாட்டு மொழியினின்றும் அரும்பியன. திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தவர்; தமிழ்மொழியில் நூல் செய்தவர். அவர் நினைவு தோன்றும்போது தமிழ் நாட்டின் நினைவன்றோ தோன்றுதல் வேண்டும்? உலக நினைவு தோன்றுவதென்னை? ஈண்டுத் தமிழ்நாடென்றது இப்போதுள்ள தமிழ் நாட்டைக் குறிப்பதன்று. அது பழந்தமிழ்நாட்டைக் குறிப்பது. தமிழ்நாட்டுக்கு அடிகோலி, அதை ஆக்கிய பேரறிஞர் பரந்த நோக் குடையவர். அவர் உலகியலை நன்குணர்ந்தவர் உலகியலில் இரு விதச் சிறப்புக்களுண்டு. ஒன்று சிறியது; மற்றொன்று பெரியது. உலகியல், சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியவற்றிற் கலந்தும், இவற்றைக் கடந்தும் விளங்குவது. சாதி மதம் மொழி நிறம் நாடு முதலியன கலந்த நிலை சிறியது; இவற்றைக் கடந்தநிலை பெரியது. சிறிய நிலை பன்மை; பெரிய நிலை ஒருமை. பன்மை யில் ஒருமை காண முயல்வது அறிவுடைமை. பன்மையைப் பிரிவுக்கும் பிணக்குக்கும் இரையாக்குவது அறியாமை. பழந் தமிழர் பழந்தமிழறிஞர் கருத்து, சிறிய பன்மையில் படியவில்லை. அவர்தம் நோக்கு, பெரிய ஒருமையில் சென்று ஒன்றியது. வேற்றுமை அவர்க்குப் புலனாகவில்லை; ஒற்றுமையே அவர்க்குப் புலனாகியது. அவர் நடாத்திய வாழ்வு அத்தகையது. பழந்தமிழர் மொழியில் ஈண்டு ஒன்று நினைவிற்கு வருகிறது. அது வருமாறு:- 1யாதும் ஊரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்த லதனினு மிலமே. இப் புறப்பாட்டை உற்று உற்று நோக்குக; நோக்கி நோக்கி உன்னுக; உன்னி உன்னி அதில் ஒன்றுக. பாட்டுப் பொருளில் வேற்றுமைக்கு இடமுண்டோ? பிணக்குக்கு இடமுண்டோ? எல்லாம் ஒருமை! யாதும் ஊர், யாவருங்கேளிர் (சுற்றத்தார்). பழந்தமிழரது பரந்த நோக்கு என்னே! என்னே! அப் பழந்தமிழர் நாடு எங்கே? தமிழ் நாடே! உலகாக விளங்கிய தமிழ் நாடே! நீ யாண்டுச் சென்றனை! மீண்டும் எழுவையோ? பழந் தமிழே! உன் நாடு சிறுமண்ணாய்க் கிடக்கிறது; பிரிவுக்கும் பிணக்குக்கும் இரையாகிறது. அஃது உலகாக மீண்டும் விளங் குதல் வேண்டும்; திருவள்ளுவர் நாடாதல் வேண்டும்; யாதும் ஊரே-யாவரும் கேளிர் என்ற உனது விழுமிய கொள்கைக்கோர் இலக்கியமாக நிற்றல் வேண்டும். யாதும் ஊரே - யாவரும் கேளிர் என்ற உனது உள்ளுறையன்றோ இந்நாளில் சமதர்மம் சமதர்மம் (Socialism) என்று விரித்துப் பேசப்படுகிறது? பல்லாயிரம் ஆண்டு கட்கு முன்னரே நீ சமதர்மம் பேசினை; சமதர்மத்தில் நின்றனை; வாழ்ந்தனை. இந்நாளில் உன்னிலை இரங்கத்தக்கதாயிருக்கிறது. உனது பழமையைக் குறிக்கோளாக் கொண்டு இக்காலத்தவர் வாழ்வு நடாத்துவாராக. திருவள்ளுவர் திருவள்ளுவர் யார்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க் குடியில் தோன்றியவர். அவர் நெஞ்சம், சாதி மதம் நிறம் மொழி நாடு முதலிய சிறுமைக் கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக் கொண்டது. இத்தகைய நூல் ஒர் இனத்துக்குரியதாகுமா? உலகுக்குரியதாகுமா? இப்பெருநூலை அருளிய ஒருவர் ஓர் இனத்துக்குரியராவரா? உலகுக்குரியராவரா? எனவே, திருவள்ளு வர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுதல் இயல்பே. இதில் வியப்பொன்றுமில்லை. மொழியும் பொருளும் திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தவர். அவர்தந் தாய் மொழி தமிழ்; அவர் தமிழில் நூல் செய்தனர். நூலின் மொழி தமிழ்; பொருளோ உலகுக்குரிய ஒன்று. இது வெள்ளிடைமலை. இவ்வாறு நூல் செய்தோர் அரியர்; செய்வோரும் அரியர். இதுபற்றியே தமிழ்நாட்டுச் சமதர்மப் புலவராய், இற்றை ஞான்று நமது நடுவண் வாழ்ந்த பாரதியார், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று வீறுகொண்டு மகிழ்ச்சியுடன் ஓதியருளினார். வரலாறு உலகுக்கு ஒரு நூலை அருளிய திருவள்ளுவரது உண்மை வரலாறு நமக்குத் தெரியவில்லை. 1இப்போது வழங்கி வரூஉம் அவர்தம் வரலாறு பின்னே புனையப்பட்டது. பல தமிழாசிரி யரது வரலாறுகள் சரித்திர முறையில் நமக்குக் கிடைக்கவில்லை. இது நாடு செய்த பாவம். சரிதம் என்னும் பெயரால் புனைந் துரைகளே பெரிதும் நாட்டில் உலவுகின்றன. அவரவர் அருளிய நூலைக் கொண்டே அவரவர் நிலையை ஊகித்து உணர வேண்டுவது அறிஞர் கடமை. திருவள்ளுவர் யாத்த திருக்குறள் என்னும் தமிழ்ப் பொது நிலையம் எல்லார்க்குங் காட்சி வழங்குகிறது. அந்நிலையத்தைப் பார்ப்போம்; அதனுள் புக முயல்வோம்; முயன்று புகுந்தால் திருவள்ளுவரைக் காணலாம். திருவள்ளுவர் இறந்துபட்டா ரில்லை. அவர் உயிருடன் திருக்குறள் நிலையத்தில் வீற்றிருக் கிறார். உலகீர்! அவரைக் காண எழுக; எழுக. வைப்புகள் ஒரு நிலையத்தில் புகுந்து, அதன்கண் வாழ்வோரைக் காணுதற்குப் பல வாயில்களைக் கடத்தல் வேண்டும். திருக்குறள் நிலையத்துக்கும் பல வாயில்களுண்டு. அவையே திருக்குறளி லுள்ள வைப்புகள். அவற்றைப் பார்ப்பதால், போற்றுவதால், அல்லது ஓதுவதால் மட்டும் அவை திறந்து வழிகாட்டா. அவற்றைப் பயின்று பயின்று, அவற்றின் பொருளை உணர்ந்து உணர்ந்து, அவற்றின்படி வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாழ் வினரை வரவேற்க வாயில்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. வாயில்கள் வழிகாட்டும்; திருவள்ளுவரிடஞ் சேர்க்கும். உரையாசிரியர் திருவள்ளுவரைத் தாங் காணவும், பிறர்க்குக் காட்டவும் உழைத்தவர் பலர். பலருள் குறிக்கத்தக்கவர் பதின்மர். அப்பதின்மர் பெயர்களை, தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமே லழகர் பரிதி - திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற் கெல்லை யுரையெழுதி னோர் எனவரூஉம் வெண்பா தெரிவிக்கிறது. பதின்மருள் முதல் முதல் உரை கண்டவர் தருமர். அவர்க்கே எல்லா வாழ்த்தும் வணக்கமும் உரியன. இப்பொழுது அச்சாகி வெளிவந்துள்ள உரைகள் இரண்டு. ஒன்று மணக்குடவருடையது; மற்றொன்று பரிமேலழ கருடையது. பழைய உரைகளுள் இறுதியது பரிமேலழகருடையது. இதுவே பெரிதும் போற்றப்படுவது. பரிமேலழகர் பெருங் கல்வியாளர்; வடமொழி தென்மொழிப் புலவர். அவர்தம் உரையில் அவரது காலத்துக்கேற்ற பொருள்களும், எக்காலத்துக்கு முரிய பொருள்களுமாக இரண்டுஞ் செறிந்து கிடக்கின்றன. வேறு மொழிப் புலவர் சிலரும் திருவள்ளுவரைக் காண முற்பட்டனர். இன்னும் பலர் முற்படுதல் வேண்டும். திருவள்ளுவர் ஒளி, உலகம் முழுவதும் காலும் நாளே நன்னாளாகும். அந்நாள், யாதும் ஊராகவும் யாவருங் கேளிராகவும் பொலியுந்த திரு நாளாகும். திருக்குறளை யான் இளமையில் ஒருவாறு பயின்றேன். பின்னே மணக்குடவரும் பரிமேலழகரும் உதவியுள்ள உரை களைத் துணையாக் கொண்டு ஆய்ந்து ஆய்ந்து பார்த்தேன். இவ் விருவரும் தமிழ்த்தாய்க்கு ஆற்றியுள்ள தொண்டை எம்மொழியால் வழுத்தவல்லேன்! மனமொழி மெய்களால் இருவரையும் போற்றுகிறேன். காலத் திறவு திருக்குறள் நிலையத்துக்கு இக்காலத்துக்குரிய திறவு ஒன்று வேண்டும் என்னும் உணர்வு பலரிடை எழுந்ததையான் அறிவேன். இவ்வுணர்வு அடிக்கடி என்பாலுந் தோன்றி நின்ற ழிந்ததுண்டு. திருக்குறளுக்கு ஒரு புத்துரை காண்டல் வேண்டும் என்ற எண்ணம் முதல் முதல் எழுந்த போது எனக்கு வயது முப்பத் தொன்றிருக்கும். இவ்வுரை எழுதப் புகுந்தபோது எனது வயது ஐம்பத்துமூன்று. இந்நாளில் யான் அந்நாளைய கலியாண சுந்தரனாயில்லை; அந்நாளைய கலியாணசுந்தரன் பெரிதும் ஏடுகளையே கட்டி அழுதவன்; ஏட்டுப்புழுவாயிருந்தவன். இப்பொழுது ஏட்டுக் கல்வி அவனை விடுத்து ஒருவுகிறது; இயற்கைக் கல்வி அவனைப் புல்குகிறது. இயற்கையின் உள்ளுறை யாயுள்ள இறைக் கல்வியை அவன் வேட்டு நிற்கிறான். இயற்கை வாழ்வு யான் இப்பொழுது ஏட்டுக்கும் இறைக்கும் இடையில் நிற்கிறேன். இறையருள் கூடின் திருவள்ளுவரை நேரே காணும் பேறு பெறுவேன்; மற்றவர்க்கும் அவரைக் காட்டுவேன். இறையருள் எனக்குக் கிட்டுமோ? கிட்டாதோ? அறிகிலேன். இயற்கை அன்னையின் திருவருளையாதல் யான் முற்றும் பெற்றேனா? இல்லை. நகர வாழ்வு அதைத் தகைந்து நிற்கிறது. நகர வாழ்வை விடுத்தால் சில சேவைகளுக்குத் தடைநேரும். என் செய்வேன்! பலதிற வேலைச்சூழலிடை மூழ்கி நிற்குஞ்சிறியேன், இயற்கை அன்னையின் திருவருட்டுணை கொண்டு, திருவள்ளு வரைக் காண ஒல்லும்வகை முயல்வேன்; வழுக்கியும் வீழ்வேன். யான் மனிதன்; குறையுடையேன்; சிறுமையுடையேன்; அறியா மையுடையேன். ஏட்டினின்றும் இயற்கையினிடமும், இயற்கையினின்றும் அதன் உள்ளுறையான இறையினிடமுஞ் செல்லுதல் வேண்டும். இஃதொருவித ஒழுங்கு முறை. இம்முறையைத் தொல் காப்பியனார் செவ்வனே கோலியுள்ளனர். தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களால் ஆக்கப் பெற்றது. மூன்றனுள் எழுத்துஞ் சொல்லும் ஏட்டுக் கல்விக்குத் துணை செய்வது. இயற்கை வாழ்வு இறைவாழ்வைக் கூட்டுதல் இயல்பு. இம்முறை ஈண்டுக் கருதற்பாலது. இம்முறையால் திருவள்ளுவரை வழிபட முயல்கிறேன். இயற்கை அன்னையின் துணை வேண்டும். நூல் திருவள்ளுவர் அருளிய நூல் திருக்குறள். திரு+குறள்= திருக்குறள். திரு, பல பொருள் ஒரு சொல். இங்கே இரண்டு பொருள் குறிக்கத்தக்கன. ஒன்று செல்வம்; மற்றொன்று அழகு. செல்வம்: அறம், பொருள், இன்பம். அழகு: கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்; இது பேராசிரியர் கூறியது. குறளில் முச்செல்வமென்னும் அறம்- பொருள் - இன்பம் உண்மையானும், கண்டோரால் விரும்பப்படுந் தன்மை நோக்க மாகிய அழகு உண்மையானும் அது, திரு என்னும் பொருந்திய அடைபெற்றுத் திருக்குறள் என்று அழைக்கப்படலாயிற்று. திருவையுடைய குறள் என்று விரிக்க. குறள் - குறுமை; குறுகியது. குறுகிய பா - குறட்பா. இது குறுவெண்பாட்டு என்றும், குறள் வெண்பா என்றுஞ் சொல்லப் படும். முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டது குறள் வெண்பா. 1குறுவெண் பாட்டிற் களவெழு சீரே குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்ட ஒரு நூல், குறள் என்னும் பெயர் பெறலாயிற்று. குறள் - குறுமை; பண்புப் பெயர். குறள், ஈரடி வெண்பாவுக்காம்போது பண்பாகு பெயராய், இவ்வெண்பாக்களால் ஆக்கப்பட்ட நூலைக் குறிக்கும் போது கருவியாகு பெயராய், இருமடியாகு பெயராதல் காண்க. முப்பால் திருக்குறள் முப்பாலுடையது. முப்பால், அறம் - பொருள் - இன்பம் என்பன. வீடு எங்கே? å£il¤ âUtŸSt® jÅna tF¤J¡ TwhJ ÉL¤j bj‹id? இதற்குக் கூறப் படுங் காரணம் பலப்பல. திருவள்ளுவர் வீட்டையுங் கூறினார் என்பதை நிறுவிக் காட்டுதற்கு, வீட்டுப் புலவோர் படும்பாடு என்னே! அவர், கடவுள் வாழ்த்து துறவு நிலையாமை மெய்யுணர்வு அவாவறுத்தல் முதலிய அதிகாரங்களை எடுத்துக் காட்டுவர்; மூலை முடுக்களிலுள்ள சில குறட்பாக்களையும் சொற்றொடர்களையும் சொற்களையும் எடுத்துக் காட்டுவர். திருவள்ளுவர்மீது அவர் கொண்டுள்ள அன்பு பாராட்டற்குரியது. அவர் எடுத்துக் காட்டும் அகச் சான்றுகளெல்லாம் திருவள்ளுவர் வீட்டுண்மையில் உறுதியுடையார் என்பதை வலியுறுத்துவன வாகவேயிருக்கின்றன. திருவள்ளுவர் வீட்டுண்மையில் உறுதி யுடையார் என்பதை மறுப்பார் யார்? திருவள்ளுவர் வீட்டுக்கெனத் தனிப்பால் வகுத்துக் கூறாமைக்குக் காரண மென்னை என்னும் வினாவிற்கு எடுத்துக்காட்டுக்களில் யாண்டாயினும் விடை யிருக்கிறதா என்பது சிந்திக்கத்தக்கது. வீடு வீடு, வாக்கு மனங்கட்கு எட்டாதது. அத்தகைய ஒன்றை எவ்வாக்கால் விளம்புதல் கூடும்? இதுபற்றியே பரிமேலழகரும், ‘* * * வீடென்பது சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது, இலக்கண வகையாற் கூறப்படாமையான், நூல்களாற் கூறப் படுவன ஏனைய மூன்றுமே யாம் என்று ஒருவாறு விளக்கிப் போந்தனர். அறவழி நின்று, பொருளாக்கி, இன்பம் நுகர்வோர் வீடு அடைதல் ஒருதலை. அறம் பொருள் இன்ப வாழ்வின் பயன் வீடு. அடைவாகவும் பயனாகவுமுள்ள ஒன்றை எப்படிச் சொல்லால் அறுதியிட்டுச் சொல்வது? வீடு, அறம் பொருள் இன்பங்க ளினின்றும் வேறுபட்டு நிற்பதன்று. அது மூன்றினும் விரவி நிற்பது. திருக்குறளிலுள்ள ஒவ்வொரு பாலிலும் வீடு விரவியே நிற்கிறது. வீடு, விடு என்னும் அடியினின்றும் பிறந்தது. விடுதலை வீடு. கட்டினின்றும் விடுதலையடைவது வீடு. வீடு எங்கிருப்பது? அதற்கென ஒரு தனியிடம் உண்டோ? கட்டுடையார்க்கு அது புலனாகாமையால், அவர் அதற்கென ஒரு தனியிடம் வகுத்தனர் போலும்! வீட்டை மறைத்திருப்பது கட்டு. கட்டு அறுந்ததும் வீடு பொருளாகும். கட்டு கட்டும், கட்டின் பாகுபாடுகளும் திருக்குறளில் சில விடங்களில் புகுந்திருக்கின்றன. இருள்சேர் இருவினை, அழுக்கா றவா வெகுளி இன்னாச்சொல், பிறப்பென்னும் பேதைமை, சார்புகெட, காமம் வெகுளி மயக்கம், பற்று விடற்கு எனவரூஉந் திருக்குறள் மொழிகளை நோக்குக. கட்டறுந்தால் மனம் மாசிலதாகும். மாசற்ற இடம் வீடாய்ப் பொலியும். இந்நிலையுற்றார்க்கு எல்லாம் வீடே. எந் நாளும் இன்பமே துன்பமில்லை என்று அப்பரும், அருநரகவை யும் நீ என்று நம்மாழ்வாரும், பரலோகராச்சியம் உம்முடைய உள்ளத்திலிருக்கிறது என்று கிறிது பெருமானும் அருளிய செம்மொழிகளை உன்னுக. இம்மொழிகளை இப்பெரியார் யாண்டிருந்து அருளினர்? இவ்வுலகத்திலிருந்தே அருளினர். இவருக்கு இவ்வுலகம் எவ்வாறு தோன்றிற்று? வீடாகவே தோன்றிற்று. ஆதலால், வீடு என்பது ஓரிடத்தில் தனியே இருப்பதன்றென்க. பழமை கட்டையறுத்தற்கு அறவழியில் நின்று, கல்வி பயின்று, தொழில் புரிந்து, பொருளீட்டி, இன்பம் நுகர்தல் வேண்டும். இச்செந்நெறியே வாழ்வுக்குரியது. இதுவே இயற்கை வாழ்வு. இந்நுட்பமுணர்ந்த அறிஞர், அறம் பொருள் இன்ப வாழ்வையே உலகுக்கு அறிவுறுத்தினர். இம்மூன்றிற் கலவாத வீடு ஒன்று தனித்திருப்பதாக அவ்வறிஞர்க்குத் தோன்றவில்லை. அறம் பொருள் இன்ப வாழ்வில் வீடு பொலிதல் அவர்க்கு நனிவிளங் கிற்று. உண்மை கண்டவர் உண்மை உரைத்தல் இயல்பு. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றில் வீடும் விரவி வருமாறு கூறுவது பழைய முறை. பழைய நூல்கள் யாவும் இம் முறை வழியே பிறந்தன. இடைக்காலத்தில் தோன்றிய நூல் களும் உரைகளும் பழங் கொள்கையைக் கலக்கிவிட்டன. இதற்குக் காரணம் காலப் போக்கென்று கூறுவது பொருத்தம். திருவள்ளுவர் முப்பாலே வகுத்தருளினர். போலி வீடு நாளடைவில் வீட்டைப் பற்றிய தனி நூல்கள் பெருகின. இவற்றுள் மிகச் சிலவே பழங் கொள்கைக்குத் துணை போவன. பல, அறம் பொருள் இன்ப வாழ்வில் பொருளற்ற நிலையா மையையும், இயற்கையை வெறுத்தல் - பெண்ணை வெறுத்தல் - என்னும் போலித்துறவையும் நுழைத்து நல்வாழ்வுக்கு இடர் செய்தன. இந்நூற் பெருக்கால், அறம்- பொருள் - இன்ப வாழ்வு அருகுவதாயிற்று. மக்கள் எண்ணம், அறம் பொருள் இன்பக் கலப்பற்ற போலி வீட்டில் - வெறும் பாழில் - படிந்தது. அதனால் மன்பதையில் தீயொழுக்கம் புகுந்தது. இந்நாளில் உலகம் எக்காட்சி வழங்குகிறது? கொலையுங் களவுங் கள்ளுங் காமமும் பொய்யுந் தாண்டவம் புரியாத இடமும் உளதோ? தனித்த வீடென்று அறம் பொருள் இன்ப வாழ்வை வெறுக்க ஏவும் நூல்களை இயற்றுவது பாவம். அறம் பொருள் இன்ப வாழ்வின் பயன் வீடாயிருத்தலான், வீட்டைத் தனியே பிரித்துக் கூறுவது எற்றுக்கு? இது வெறும் பாழைக் கூறுவதாக வாக்கு மனமுடைய மக்களால் கொள்ளப்படும். அறம் பொருள் இன்ப வாழ்வுக்குரிய நூல் செய்வோரே உலகுக்கு நலஞ் செய்வோராவர். அறம் - பொருள் - இன்பம் - அற்ற தனித்த வீட்டு நூல் களால் உலகம் உற்ற அல்லல் போதும்; போதும். அறம் பொருள் இன்ப வாழ்வு, வீட்டை உணர்த்தவல்லது. ஆதலால், இந்நாளில் அறம் பொருள் இன்ப வாழ்வு அதாவது இயற்கை வாழ்வு பெருகுதல் வேண்டும். இதற்கு உறுகருவியாகத் துணைபுரிய வல்லது திருவள்ளுவரது முப்பால் நூல். மரபு திருவள்ளுவர் அருளியது முப்பால் நூல். (முப்பால், அறம்-பொருள்-இன்பம் என்பன). அறமும் பொருளும் புறத்தில் அடங்குவன; இன்பம் அகத்தில் அடங்குவது. அகம் புறம் என்னும் இரண்டும், அறம் பொருள் இன்பம் என்று மூன்றாக விரிந்தன. அகம் புறம் தமிழ் மரபென்றும், அறம் பொருள் இன்பம் வடமொழி மரபென்றும் சொல்வோரும் உளர். எதனின்றும் எது பிறந்தது? எது முன்னையது? vJ ã‹idaJ? என்று போரிடுவோரும் உளர். போராட்டத்துக்கும் திருவள்ளுவர் நூலுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது எனது கருத்து. திருவள்ளுவர் நூல், மரபு கடந்தது. அது மன்பதைக்குரியது. அதை மரபு என்னுஞ் சிறையில் புகுத்த முயல்வது அறமாகாது. உண்மை எவருடைமை? அது தமிழருடையதா? மற்ற வருடையதா? ஓர்க. தமிழறிஞரிடை அகம் புறம் என்று தோன்றிய உண்மை, மற்றவரிடை அறம் பொருள் இன்பமாகத் தோன்றியிருக்கலாம். இவரிடை அறம்பொருளின்பமாகத் தோன்றி உண்மை, அவரிடை அகம் புற மாகத் தோன்றியிருக் கலாம். ஒவ்வொரு நாட்டறிஞரிடை ஒவ்வொருவித உண்மை தோன்றும். அஃது அவ்வந்நாட்டாருடைமை என்று நினைப்பது தவறு. அறிஞர் எந்நாட்டவராயினும் அவர் காணும் உண்மை உலகுக்கு உரியதாகும். அதை, மரபின்பாற்படுத்திப் போரிடுவது அறியாமை. அறிஞர் உலகுக்கு உரியவர்; அவர் பிறந்த நாட்டுக்கு மட்டும் உரியவராகார். திருவள்ளுவர் தமிழ்நாட்டிற் பிறந்தவர்; தாய்மொழியை நன்கு பயின்றவர். அவர் அந்நாளில் தமிழ் நாட்டிற் புகுந்த பிராகிருதம், பாலி, சமகிருதம் முதலிய மொழிகளிலுள்ள நூல்களையும் பயின்றிருப்பர். திருவள்ளுவர் தாம் பெற்ற கலைப்புலமை யளவில் நின்று திருக்குறளை யாத்தனர் என்று சொல்வதற்கில்லை. இதனை அவர்தம் நூலை ஆராய்வதால் தெளிதல் கூடும். திருக்குறளை ஆய்ந்து பார்த்தால், அது கலைப் புலமை கடந்த இயற்கைப் புலமையால் முகிழ்த்த தெள்ளறிவினின்றும் பிறந்ததென்பது விளங்கும். ஆராய்ச்சியாளர், சாதி வெறி மதவெறி மொழிவெறி முதலிய வெறிகளற்றவராயிருத்தல் வேண்டும். திருவள்ளுவர், கற்பன கற்றார்; கேட்பன கேட்டார். அவர், தாம் கற்றனவும் கேட்டனவும் வாழ்வில் ஒன்றப் பெறுதற்கு இல்வாழ்க்கையேற்று, இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்தி, அறவழியில் நின்று, தொழில் புரிந்து, பொருளீட்டி, இன்பந் துய்த்து, நன்மக்களைப் பெற்று, அன்பராய், விருந்தோம்பி, எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண்மை எய்தி, மனமா சகன்ற அறவோராய், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டித் திருக்குறள் என்னுந் தனி நூலை அருளினர். நாடு, தனது பழங் கொள்கையினின்றும் வீழ்ந்து, சாதி வெறி மதவெறி மொழிவெறி முதலிய சிறுமைகட்கு இரையான போது, அவ்வவ் வெறியர் திருவள்ளுவரைப் பற்றிப் பலப்பல வாறு கீறலாயினர். வெறி ஏறிய மதியில் உண்மை விளங்குங் கொல்? வெறியற்ற மதிகொண்டு திருக்குறளை ஆராய்க; ஆராய்ந்தால் திருக்குறள், மரபு கடந்த ஒரு நூலாகவே விளங்கும். பாயிரம் ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் - பாயிரமில்லது பனுவ லன்றே என்பது ஆன்றோர் மொழி. பாயிர இயல், இலக்கண நூல்களிலும் உரைகளிலும் விரித்துப் பேசப்பட்டி ருக்கிறது. பாயிரத்துக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று நூன்முகம் என்பது. நூலின் முகம் பாயிரம் எனில், அதன் சிறப்புக்கு விளக்கவுரை வேண்டுவதில்லை. நூன்முகம் முகம் யாக்கையின் ஓர் உறுப்பு; அது சிறந்த உறுப்பு. முகமில்லா உருவம் உருவம் ஆகாது. அஃது உருவம் என்னும் பெயரை இழக்கிறது. முகம் அகத்தை உணர்த்துவது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகம்போல முன்னுரைப்ப தில் என்றார் பெரியார். பாயிரம் முகம் போன்றது. நூலின் அகத்தைப் பாயிர முகத்திற் காணலாம். நூலின் பொருளடக்கத்தை உணர்த்துவது நூன்முகம். பாயிரத்துக்குப் பொருளடக்கம் என்றொரு பொருளும் உண்டு. பாயிரத் திலக்கணம் பகருங் காலை- நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி - யாசிரிய மானும் வெண்பா வானும் - மருவிய வகையான் நுவறல் வேண்டும் என்பது சூத்திரம். முப்பால் கொண்ட திருக்குறளுக்கு முகம்போன்றது பாயிரம். பாயிரம் - கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்களால் ஆகியது. இந்நான்கனுள் கடவுள் வாழ்த்துப் பொது; ஏனைய மூன்றும் சிறப்பு. நூலின் பொருண்மை இம்மூன்றிலும் அடங்கிக் கிடக்கிறது. எல்லாம் கடவுள் வாழ்த்தில் அடங்கும். கடவுள் வாழ்த்தைப் பாயிரத்துக்குப் பாயிரம் என்று கொள்க. அறம் - பொருள் - இன்பம் அறம் - பொருள் - இன்பம் என்னும் மூன்றனுள் அரிமா நோக்குடையது பொருள். பொருள், இன்பத்துக்கும் அறத்துக் கும் இன்றியமையாதது. பொருளில்லையேல் இன்பத்துக்கும் அறத்துக்கும் ஆக்கம் ஏது? பொருள் ஆக்கமுடையதாயினும் அதனடியிலும், அதன் வழி நிகழும் இன்பத்தினடியிலும் அறம் நிலவுவதாயிருத்தல் வேண்டும். அறமற்ற பொருள் பொருளாகாது; அஃதற்ற இன்பமும் இன்பமாகாது. பொருளுக்கும் இன்பத்துக்கும் அறத்தின் சார்பு தேவை. இரண்டுக்கும் அடிப்படை அறம். அறம் மரம் போன்றது; பொருளும் இன்பமும் கவடுகள் போன்றன. இஃது அறன் வலியுறுத்தலில் தெளிவு செய்யப் படும். அறம் தனித்தும், பொருளின்பங்களில் ஒன்றியும் நிலவுவது. இப்பெற்றி அறத்திலுண்மையால் அது முதலில் வைக்கப் பட்டது. அறமும் இன்பமும் பொருளால் நிகழ வேண்டு மாதலின் பொருள் நடுவண் வைக்கப்பட்டது. பயன் இன்பமா தலின் அஃது இறுதியில் வைக்கப்பட்டது. நடைமுறை அறம் பொருள் இன்பம் என்னும் வழக்குத் தொன்று தொட்டது. இவ்வழக்குப் பற்றியே திருவள்ளுவர் நூல் யாத்தனர். நடைமுறையில் இவ்வழக்கு மாறுபடும். மாறுபாட்டைப் பாயிரத்திற் காணலாம். அறம் பொருள் இன்பம் என்ற வழக்கு நடைமுறையில் 1பொருள் இன்பம் அறம் என்று மாறிவரும். இன்பமும் அறமும் நிகழ்தற்குப் பொருட்டுணை வேண்டுமாதலின், பொருள் முதலில் நிற்கலாயிற்று. வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவண தெய்த இருதலையு மெய்தும் நடுவண தெய்தா தானெய்தும் உலைப்பெய் தடுவது போலுந் துயர் எனவரூஉம் நாலடியார் பாட்டைப் பார்க்க. வைப்பு பொருள் வழி நிகழ்வது இன்பம். இரண்டுக்கும் அடிப் படை அறம். இம்முறைப்பாட்டை உளங்கொண்டு, வான் சிறப்பு நீத்தார் பெருமை அறம் வலியுறுத்தல் ஆகிய பாயிர அதிகாரங்களில் படிக; படிந்து திளைக்க. இவை முறையே பொருள் - இன்பம் - அறம் - ஆகிய மூன்றற்கும் அறிகுறியாக நிற்றலை உணர்தல் கூடும். அரசு, கல்வி, தொழில், செல்வம் முதலியன பொருளின் பாற்பட்டன. 1இவையெல்லாம் வான் வறண்டால், அறவழியில் நடைபெறுங்கொல்? பொருள் நலத்துக்கு மழை வேண்டற் பாலது. இதனால் வான்சிறப்பு, பொருட்பாலை உணர்த்துவ தென்றறிக. நீத்தார் பெருமை என்ன கூறுகிறது? குணமென்னுங் குன்றேறி நின்றார் பெருமை கூறுகிறது. குணமென்னுங் குன்றேறி நின்றார் செயலென்னை? எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண் டொழுகல். இந்நிலை, தலைவனுந் தலைவியுஞ் சேர்ந்து வாழ்ந்து நுகரும் இன்ப அன்பின் பெருக்காலும் பயனாலும் கூடுவது. தனித்தனியே வாழ்வு நடாத்துவோர்க்கு இன்ப அன்பு நிகழ்தல் அரிது. கலப்பிலேயே அன்பு எழும். அன்பு மனமாசைக் கழுவுவது. மனமாசுக்கு ஊற்று எது? முனைப்பு. முனைப்புள்ள இடத்தில் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அன்பு கிளந்தெழாது. முனைப்பைச் சாய்க்கும் ஆற்றல் கலப்பால் நிகழும் அன்புக்கு உண்டு. இந்நுட்பம், நீத்தார் பெருமையில் சிறிதும், நூலிடைப் பெரிதும் விளக்கப்படும். நீத்தார் பெருமை காமத்துப்பாலின் தெளிவு என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. மனமாசை நீத்த அறவோரே நீத்தாரெனப்படுவர். அறன் வலியுறுத்தலில் அறமிருத்தல் வெளிப்படை, இதற்கு விரிவுரை வேண்டுவதில்லை. பொருளும் இன்பமும் அறவழியில் நிகழ்தற்குக் கடவுள் உண்மையில் உறுதி தேவை. இவ்வுறுதி இல்வழி அறநெறிக்கு இடர் விளையும். இதனால் கடவுள் வாழ்த்து முதலில் அமைக்கப்பட்டது. பொருளும் இன்பமும் அறத்தில் அடங்கும்; எல்லாம் கடவுளில் அடங்கும். மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம். இது கடவுள் நிலை. எனவே, திருவள்ளுவர் முப்பால் வாயிலாக ஒரு சிறந்த அற நூல் உலகுக்களித்தனரென்க. இதனை விரிந்த முறையில் நூலின் வாயிலாகவும், சுருங்கிய முறையில் பாயிரத்தின் வாயிலாகவும் உணரலாம். பாயிரத்தின் விழுப்பம் பர்னார்ட்ஷா என்றோர் ஆங்கிலப் புலவர் இருக்கிறார். அவர் உலகறிந்த ஒருவர். அவரால் பன்னூல்கள் எழுதப்பட்டன. அந்நூற்களின் பாயிரங்களைக் கொண்ட ஒரு திரட்டு நூல் வெளிவந்திருக்கிறது. அப்பாயிர நூற்கொரு பாயிரம் பர்னார்ட் ஷாவால் வரையப்பட்டது. அதில் அவர், நூலின் பாயிரம் அறிஞர்க்கென்றும், நூல் மற்றவர்க்கென்றுங் குறித்துள்ளனர். இக்குறிப்புப் பாயிரத்தின் விழுப்பத்தை உணர்த்துவது. நூலின் உள்ளுறையைப் பாயிரத்தில் நுண்மையாகத் திகழ வைப்பதற்குக் காரணம் அறிஞர்க்கு நூலின் உள்ளுறை எளிதில் விருந்தாதற் பொருட்டேயாம். பொது 1. கடவுள் வாழ்த்து திருக்குறள் அதிகாரத் தலைப்புக்கள், பெரிதும் ஒவ்வோர் அதிகாரத்தின் முதற்பாட்டிலுள்ள அதிகாரப் பொருண்மை குறிக்குஞ் சொல்லையோ சொற்றொடரையோ கொண்டன வாயும், சிறிது அதிகாரப் பொருண்மையைக் கொண்டன வாயும் அமைந்திருத்தல் வெள்ளிடைமலை. இவ்வதிகாரத்தை நோக்குழி, இஃது ஆதிபகவன் அல்லது உலக முதல் என்னுந் தலைப்புடையதா யிருக்கலாம் என்று தோன்றுகிறது. திருவள்ளுவர் அணிந்த தலைப்பு எதுவோ தெரியவில்லை. கடவுள் வாழ்த்து என்ற தலைப்பே ஏடுகளில் மிளிர்கிறது. இத்தலைப்பே பழையதாயின், இஃது அதிகாரப் பொருண்மை கொண்டு சூட்டப்பெற்றதெனக் கோடல் வேண்டும். ஆதிபகவன் - உலக முதல் - கடவுள் - இவை யாவும் பொருண்மையில் வேற்றுமையுடையனவல்ல; எல்லாம் ஒன்றே. கடவுள் கடத்தலையுடையது கடவுள் என்றும், எல்லாவற்றையுங் கடந்து நிற்பது கடவுள் என்றும், உள்ளமாகிய உயிரைக் கடவுவது (செலுத்துவது) கடவுள் என்றும் பலவாறு கூறுப. அவரவர் அறிவாற்றலுக்குத் தக்கவாறு கடவுள் பொருளாகிக் கொண்டே போகும். மெய்யுணர்வு விளங்கியதும் கடவுளின் உண்மைநிலை புலனாகும். கடவுளை அது என்றும், அவள் என்றும், அவன் என்றும் சொல்வது உலக வழக்கு. ஊர் பேரில்லா ஒன்றை எப்படிச் சொன்னாலென்ன? மூவித நிலை கடவுள் ஒன்றே. அதன் இயல்கள் பல. பல இயல்களைத் திரட்டி மூவகைப்படுத்தலாம். ஒன்று எல்லாவற்றையுங் கடந்து தனித்து நிற்கும் நிலை; மற்றொன்று எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நிற்கும் நிலை; இன்னொன்று குருவினுள் கூர்ந்து விளங்கும் நிலை. முன்னையது வழிபாட்டுக்குரியதாகாது; பின்னையன வழிபாட்டுக்குரியனவாய்த் துணைபுரிவன. மனமுடைய மக்கள் - வாக்குடைய மக்கள் - எல்லா வற்றையுங் கடந்து நிற்கும் ஒன்றை எப்படி நினைத்தல் கூடும்? எப்படி வாழ்த்தல் கூடும்? எல்லாமாயுள்ள நிலை நினைத்தற்குரியது; வாழ்த்தற் கரியது. இதுவே கடவுள் இயற்கையை உடலாக் கொண்ட நிலை. இயற்கை உடல்; கடவுள் உயிர். இயற்கையில் இறை நீக்கமறக் கலந்துள்ள நுட்பம், இயற்கை வழிபாட்டாலேயே சிலர்க்கு இயல்பாக விளங்கும். பலர்க்கு அஃது அவ்வழிபாட்டால் விளங்குவதில்லை. இப்பலர்க்குக் குருநாதன் அருள் தேவை. கடவுள் குருநாதன் உள்ளத்தையுங் கோயிலாக்கொண்டு உயிர்கட்கு அருள் செய்தலால் கடவுள் நிலைகளுள் குருநாதன்நிலையும் ஒன்றாகும். குருநிலை அதி காரத்துள் விளக்கப்படும். (குருநிலையைத் தனியாக் கொள்ளாது, இயற்கை நிலையுடன் ஒன்ற வைப்பதும் ஒருவகை.) வாழ்த்து தலைப்பு, கடவுள் என்றிராமல், கடவுள் வாழ்த்து என்றிருத்தலால், அதிகாரத்துள் வாழ்த்து யாண்டுளது என்று சிலர் கருதலாம். முதற்பாட்டில் வாழ்த்துக்குரிய கடவுள் உண்மையும், மற்றப் பாக்களில் வாழ்த்தும் சொல்லப்பட்டி ருத்தலைச் சிந்தித்துப் பார்த்தால் கடவுள் வாழ்த்து என்பதன் நுட்பம் இனிது விளங்கும். வாழ்த்து, முன்னிலை - படர்க்கை - வழி நிகழ்வதுண்டு. இங்கே சொல்லப்பட்ட வாழ்த்துப் படர்க்கையின்பாற்பட்டது. உள்ளுறையும் அமைவும் கடவுள் வாழ்த்தில் கடவுள் எல்லாவற்றையுங் கடந் துள்ளமை, இயற்கையை உடலாக் கொண்டமை, குருவினுள் கோயில் கொண்டமை, திருவடி போற்றல் ஆகிய நான்கு பொருள் பொலி தருகின்றன. முதல்நிலை வழிபாட்டுக் குரிய தன்றாதலின், அதை முதற்பாட்டில் நுண்மையாகவும், இரண்டாவது வழிபாட்டுக்குரியதாயினும் அதன் பயன் சிலர்க்கே விளைவதாதலின் அதை இரண்டாம் பாட்டில் குறிப்பாகவும், மூன்றாவது பலர்க்கும் பயன்படுவதாதலின் அதை மூன்றாம் பாட்டில் விளக்கமாகவும், நான்காவது செயலுக்குரிய தாதலின் அதை ஏழு பாக்களில் விரிவாகவும் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்தில் அருளியுள்ளதை ஆழ நினைந்து தெளிவு பெற வேண்டுவது மக்கள் கடமை. (i) கடவுள் உண்மை 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. பொருள் எழுத்து எல்லாம் அகரம் முதல - (உலகிலுள்ள) எழுத்துக் களெல்லாம் (ஆதி) அகரத்தை முதலாக உடையன, (அது போல) உலகு ஆதிபகவன் முதற்றே - உலகம் முழு முதற் கடவுளை முதலாக உடையது. கருத்து உலகம் முழுமுதற் கடவுளை முதலாக உடையது. விருத்தி எழுத்தெல்லாம் அகரம் முதல எழுத்து - தொழிற் பெயர்; நாதத்தினின்றும் ஒலியாகவும் வரியாகவும் எழுவது; முகிழ்ப்பது: ஆகுபெயர். எழுத்து எல்லாம் - உலக மொழிகளிலுள்ள எழுத்துக் களெல்லாம். அ - ஆதி நாதம். கரம் : எழுத்துச் சாரியை. முதல - முதல் என்னும் பெயரினடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று; பன்மை. முதல் - காரணம். எழுத்தெல்லாம் எழுத்தெல்லாம் என்றது, உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையுமென்க. உலகிலுள்ள மொழிகள் இவ்வளவின என்று அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. ஆராய்ச்சியாளர் மொழிகளின் தொகையை ஒருவாறு கணக்கெடுத்துள்ளனர். அவர்தங் கணக்கில் அகப்படாத மொழிகளுமிருக்கலாம். இது காறும் கணக்கில் அகப்பட்டுள்ள மொழிகளின் தொகை மூவாயிரம். இவற்றிற் பல வரிவடிவம் பெற்றன; சில வரிவடிவம் பெறாதன. அகரம் உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களெல்லாம் அகர ஒலியையே முதலாகக் கொண்டியங்குகின்றன. இஃதென்ன வியப்பு? பல்வேறு நாடு - பல்வேறு வகுப்பு - பல்வேறு நாகரிக முடைய மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் அகர ஒலியை முதலாகக் கொண்டிருத்தல் வியப்பே. இஃது உயிர்கட்கெல்லாம் பிறப்பிடம் ஒன்றே என்னும் உண்மையைக் குறிப்பாக உணர்த்து வதாகும். இதனின்றும் அறியக்கிடப்பது உலக சகோதரநேயம் (Universal Brotherhood). எழுத்துக்கட்கெல்லாம் முதலாக உள்ள அகர ஒலி அளவில் ஆசிரியர் நிற்கிறாரில்லை. அவர் அகர ஒலியின் வழியே அகரத்தின் அடியிற் செல்கிறார். அகரம் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு வித வடிவம் பெற்றிருக்கிறது. அவ்வடிவத்தில் வேறுபாடிருத்தல் கண்கூடு. வேறுபாடுடைய வடிவகரம் எங்ஙனம் எல்லா மொழி எழுத்துக் களின் அடிப்படையாகும்? வடிவம் வடிவம் இருவகைத்து, அவை ஒலி வடிவம், வரி வடிவம் என்பன. ஒலி வடிவம் கண்ணுக்குப் புலனாகாதது; வரி வடிவம் கண்ணுக்குப் புலனாவது. ஒலிக்கும் வடிவம் உண்டு. இது விஞ்ஞானிகளால் நிறுவப் பெற்ற உண்மை. ஒலி வடிவம் வரி வடிவம் என்னும் நீண்டகால ஆட்சியை ஓர்க. 1இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடையெறியப்படுத லானும், செவிக்கட் சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்கு மென்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை யென்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்தலென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்ற தென்று உணர்க எனவரூஉம் நச்சினார்க்கினியத்தையும் உன்னுக. வடிவம் வேறுபாடுடையதாதலின், அதன்பாற்பட்ட அகரம், எல்லா மொழி - எழுத்துக்கட்கும் மூலமாகாது. ஆசிரியர் குறிப்பிட்ட அகரம் வடிவங் கடந்தது. அஃது, எல்லா மொழி - எழுத்துக்கட்கும் அடிப்படையாக நிலவுவது; எல்லா வற்றிற்கும் பொதுவாயிருப்பது; வேறுபாடில்லாதது. அஃது எது? காரண ஒலி வரி வடிவத்துக்குப் பிறப்பிடம் ஒலி வடிவம். ஒலி வடிவத் துக்குப் பிறப்பிடம் எது? நாதம். ஒலி, தன் வடிவத்தை இழக்கும் போது அது நாதத்தில் ஒடுங்கும். ஒலி இருவிதம். ஒன்று காரண ஒலி; மற்றொன்று காரிய ஒலி. இவை முறையே அகத்திசையொலி, புறத்திசை யொலி எனப்படும். இதனை, 1எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை யரிறப நாடி அளவிற் கோட லந்தணர் மறைத்தே அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளவுநு வன்றிசினே என்று தொல்காப்பியனார் கூறுமாற்றானறிக. காரண ஒலி விகாரமற்றது. காரிய ஒலி விகாரமுறுவது. காரண ஒலியே நாதம் என்பது. நாதம் சூக்குமைக்குஞ் சூக்குமை யாயிருப்பது. நாதம், எல்லா ஒலிகட்கும் மூலம். நாதமூலமே ஆசிரியர் குறிப்பிட்ட அகரமென்க. இதுபற்றியே அதற்கு ஆதி அகரம் என்று பொருள் கூறப்பட்டது. ஆதி அகரம் ஆதி அகரம் இயல்பாயுள்ளது; விகாரமற்றது; நாத மாத்திரையாய்த் திகழ்வது; ஒலி வடிவம், வரி வடிம் என்னும் இரண்டையுங் கடந்தது; எழுத்துக்கட்கெல்லாந் தாயகமா யிருப்பது. ஆதி அகரத்தினின்றும் அகர ஓசை எழுகிறது. அகர ஓசை பல வகை எழுத்துக்களாகிறது. இப்பலவும் அகர ஓசையும், ஆதி அகரமின்றேல் இல்லை யென்க. ஆதி அகரம், தனித்து நின்றும், அகர ஓசையாகியும், மற்ற எழுத்துக்க ளெல்லாமாகியும், அவற்றை இயக்குவதாகியும் விளங்கும் பண்பு வாய்ந்தது. இது கூர்ந்து உன்னத்தக்கது. யானே எழுத்துக்களில் அகரமாகின்றேன் என்று கண்ணபிரானும், அக்கரங்க ளின்றாம் அகரவுயி ரின்றேல் என்று மெய்கண்டாரும் அருளிய மொழிகளை நோக்குக. அகமே புறம் அகரத்தினூடு புகுந்து, அதன்கண் ஒன்றினால், அஃது எழுத்துக்கட்கு மட்டும் ஆதியா யிருப்பதுமன்றிப் பிறவற்றிற்கும் ஆதியாயிருப்பதும் புலனாகும். அகத்தை ஆராய்ந்து சென்றாலும், புறத்தை ஆராய்ந்து சென்றாலும் இரண்டினடியி லும் ஆதி அகரம் ஒன்றே பொலிதலை உணரலாம். ஆதி அகர உணர்வு பெறுவோர்க்கு அகமே புறம் என்பதன் நுண்மை இனிது விளங்கும். குருநாதன் அருளால் ஒருவன் நாட்டத்தை உட் செலுத்தும் பயிற்சியில் அமர்கிறான். அவனது பயிற்சி மிக மிக அவன்றன் பொறிபுலன்கள் மனத்தில் ஒடுங்கும். மேலும் மேலும் நாட்டம் ஊடுருவிச் செல்லச் செல்ல மனமும் ஒடுங்கும். மனம் ஒடுங்க ஒடுங்க உயிர்ப்புணர்வு தோன்றும். இந்நிலை கடந்தால் ஒருவித ஒலி பொருளாகும். அதைக் கடந்தால் வேறு ஒருவித ஒலி எழும். அதையுங் கடந்தால் இன்னொருவித ஒலி தோன்றும். அதுவே காரண ஒலி; தாயொலி; நாதம்; ஆதி அகரம். புறத்தே நானாவித உருவங்கள் காட்சியளிக்கின்றன. அகம் ஒன்றஒன்றப் புறத்தின் நானாவிதம் பொன்றிப் பொன்றி ஒருமையாகும். ஒருமை ஓங்க ஓங்க ஒலியே விளங்கும். இவ்வொலி நுணுகி நுணுகிக் காரண ஒலியாகிய தாயொலியிற்சேரும். தாயொலியே நாத மென்பது; நாதமே ஆதி அகரம். கருவில் புல்லோ கொடியோ செடியோ புழுவோ புள்ளோ விலங்கோ மன்பதையோ எதை ஆராய்ந்தாலும், அதன் கரு முதலில் ஆதி அகரம் பொலிந்து கொண்டிருக்கும். அண்ட பிண்டம் எதை ஆராய்ந்தாலும் அதனடியில் ஆதி அகரம் ஒளிரும். ஆதி அகரமே ஓங்காரத்தின் முதன்மை. அகரத்தைப் பற்றித் திரு. மாணிக்க நாயக்கர் செய்த ஆராய்ச்சிகளடங்கிய நூல்களைப் பார்க்க. ஓங்காரம் எல்லாவற்றிற்கும் தோற்றுவாய் ஓமென்னும் ஓங்காரம். இது பெரியோர் கண்ட உண்மை. X§fhu« všyht‰¿‰F« _y« v‹W vtU§ TWt®; v«kiwí« KH§F«., ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்காரஞ் சீவ பரசிவ ரூபமே என்பது திருமந்திரம். ஓம் என்பது அ-உ-ம் என்னும் மூன்றொலியால் ஆகியது. இம்மூன்றனுள் முதலது அகரமே யாகும். அகரம் அங்காத்தலை யுடையது; அதாவது தோற்றத்துக்கு நிலைக்களனா யிருப்பது. அகரம் தோற்றத்துக்கும், உகரம் நிலைக்கும், மகரம் ஒடுக்கத்துக்கும் அறிகுறிகள். தோன்றும் ஒன்று எழுந்து நின்று மீண்டும் ஒடுங்கும். அஃது ஒடுங்குவது எங்கே? அது தோன்றிய இடத்திலேயே ஒடுக்கமுறல் இயல்பு. எவ்வகைத் தோற்றத்துக்கும் முதலாயிருப்பது ஆதி அகரம்; தோன்றிய வழியே எல்லாம் ஒடுங்குதற்கு நிலைக்களனாயிருப்பதும் அவ்வாதி அகரமே. ‘* * * அந்தம் ஆதி என்மனார் புலவர்- சிவஞானபோதம் : 1. இளங் குழந்தையினின்றும் எழும் ஒலி எது? உன்னுக. அஃறிணை உயிர்களின் ஒலியிலும் அகரமிருத்தல் ஊகித்துணரற் பாற்று. எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதி அகரம் என்று சுருங்கச் சொல்லலாம். இதுபற்றிய விரிவுரை ஈண்டைக்கு வேண்டுவ தில்லை. 1அகாரம் உயிரென் றறையலு மாமே 1அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் ஒளி ஆதி அகரம் என்னும் புணையைப் பற்றினால், அஃது இறையடி என்னுங் கரையைச் சேர்த்தல் ஒருதலை. ஈண்டு இறையடி என்றது அருளொளியை என்க. அகரத்துக்கு அணித்தே ஒளியிருக்கிறது. அமல யோகத்தில் நாதங் கடந்ததும் சோதி தோன்றுதல் இயல்பு. அந்நாதமே அகரம்; ஆதி அகரம். அற்ற விடத்தே அகாரம தாவது உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப் பொருள் குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே என்றார் திருமூலரும். அகரம், ஒளிக்கும் உலகுக்கும் இடையில் சிங்கநோக்கா நிற்கிறது. ஒளியின் துணையால் அகரம் நானாவிதக் கலை களாகவும் உலகங்களாகவுமாகிறது. ஒளி கடந்த நிலையும் இறைக்கு உண்டு. அது சொல்லுக்கு அடங்காதது. அதைச் சொல்லால் சொல்லப் புகுவது அறியாமை. இறையொளிக்கு அணித்தே நின்று, எல்லாவிதத் தோற்றங் கட்கும் நிலைக்களனாயுள்ள ஆதி அகரத்தையே ஆசிரியர் நூலின் முதற்கண் வைத்தோதினர். ஆசிரியர் ஆழ்ந்து சென்று ஆதி அகரத்தைப் பற்றியது கருதத்தக்கது. கடவுளுண்மையை நிறுவுதற்கு அவ்வகரத்தை ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கொண்டதும் ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கற்பாலது. உலகு ஆதிபகவன் முதற்றே உலகு - எல்லா உலகங்களையுங் கொண்டது. ஆதிபகவன் - முழுமுதற் கடவுள் ஆதிபகவன் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை; ஆதியாகிய பகவன் என்று விரியும். வடநூல் மரபுப்படி ஒற்று மிகவில்லை; தமிழ் முடிபாயின் செய்யுள் விகாரமாம். முதற்றே - முதல் என்னும் பெயரினடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று; ஒருமை. ஏகாரம் : தோற்றம் ; பிரிநிலையுமாம். உலகு உலகு என்பது பலபொருள் ஒருசொல். இங்கே உலகு தொகையாக நின்று பல வகையை உணர்த்துகிறது. உலகம் பலவிதம் என்பது பழமொழி. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோர் உலகம் ஒவ்வொரு போதுண்டு என்பது அநுபவ மொழி. இது பற்றித் தோற்றுவாயிலுஞ் சிறிது கூறியுள்ளேன். எல்லாவித உலகையும் இங்கே இரு கூறுபடுத்திக் கொள்ள லாம். அவை, உயிர் - உயிரல் பொருள் என்பன. இவ்விரண்டின் தொகுதியையே ஈண்டு உலகம் என்றது. பல வகை மரங்கள் கொண்ட ஒன்று, தோட்டம் என்று வழங்கப்படு வதுபோலப், பலவித உயிர்களையும் பலவித உயிரல் பொருள் களையுங் கொண்ட ஒன்று உலகம் வழங்கப்படுகிறது. 1உலகம் என்பது ஈண்டு மக்கட் blhFâia* * * * * * * உலகமென்பது இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருளாகிய மக்கட் டொகுதியையு முணர்த்து மாகலான், இருதிணைக்கண்ணுஞ் சென்றதன்றோ வெனின்: - அற்றன்று: வடநூலுள் உலகமென்பது இருபொருட்கு முரித்தாக ஓதப் பட்டமையின், மக்கட் டொகுதியை யுணர்த்தும் வழியும் உரிய பெயரேயாகலின் ஆகுபெயரன்று; அதனால் ஒருசொல் இரு பொருட் கண்ணுஞ் சென்ற தெனப்படாது இருபொருட்கு முரிமையான இரண்டு சொல்லெனவே படுமென்பது. வேறு பொருளுணர்த்தலின் வேறு சொல்லாதலே துணிவாயினும், பல பொருள் ஒரு சொல் லென்புழி எழுத்தொப்புவமை பற்றி ஒரு சொல்லென்றார் * * - சேனாவரையம் 1உலகமென்பது பல பொருள் ஒரு சொல்லாய் நிலத்தை யும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி ÉFnkD«* *’ -நச்சினார்க்கினியம் ஈண்டு உலகு என்றது, உயிரையும் உயிரல் பொருளையுங் கொண்ட ஒன்றை யென்க. ஆசிரியர் உலகு நாம் காணும் ஞாயிறும், அதைச் சுற்றி இயங்கும் மண்டி லங்களுஞ் சேர்ந்த ஒன்று ஓர் உலகம். இவ்வாறு பல ஞாயிறு களும் பல மண்டிலங்களுஞ் சேர்ந்த உலகங்கள் பல உள. இன்னும் பல பெரிய பெரிய மண்டிலங்களிருக்கின்றன. மக்கள் ஆராய்ச்சிக்கு எட்டாத மண்டிலங்களும் இருக்கும். இவற்றை யெல்லாங் கொண்ட ஒன்றே ஈண்டு ஆசிரியர் கூறியுள்ள உலகு என்பது. மண்டிலங்களும் உயிரும் மண்டிலங்கள் சிலவற்றில் உயிர்களிருக்கின்றன என்றும், சிலவற்றில் உயிர்களில்லை என்றும் இக்கால வானநூலார் கூறுகின்றனர். எல்லா மண்டிலங்களிலும் உயிருண்டு என்பது பண்டை மூதறிஞர் கொள்கை. உயிர்கட்கு முத்திற உடலங்களுண்டு. அவை பருவுடல் (தூல சரீரம்), நுண்ணுடல் (சூட்சும சரீரம்), முதலுடல் (காரண சரீரம்) என்பன. இவற்றுள் பருஉடலற்ற உயிர்கள் வாழும் மண்டிலங்களை உயிர்கள் வாழாதன என்று இக்கால வானநூலார் கூறுகின்றனர் போலும். (விஞ்ஞான உலகம் சிறைப்பட்டுக் கிடப்பதன்று. அஃது எப்பொழுதும் வளர்ந்து போகுந் தன்மையது. அது வளர வளர இன்னும் பல நுட்பங்கள் காணப்படலாம்.) உலகமும் கடவுளும் உலகம் ஆராய்ச்சிக்குக் கருவியாகத் துணைபுரிவது. கடவுளோ ஆராய்ச்சிக்கு எட்டாதது. ஆராய்ச்சிக்கு எட்டாத ஒன்றன் உண்மையை, ஆராய்ச்சிக்கு எட்டும் ஒன்றைக் கொண்டே நிறுவிக்காட்டுதல் வேண்டும். கடவுளுண்மை கூறப்புகுந்த ஆசிரியர், நேரே அதைக் கூறாது, உலகம் ஒரு கடவுளையுடையது என்று உலகை முன்னிலைப்படுத்தி அதைக் கூறியவாறு காண்க. கண்ணுக்குப் புலனாகும் உலகை விடுத்து, கண்ணுக்குப் புலனாகாத கடவுளுண்மையைக் காணவோ காட்டவோ முயல்வது முயற்கொம்பு நாடி அலைந்தவன் கதையாக முடியும். உலகைக் கொண்டே கடவுளுண்மை கூறு வது அறிவுடைமை. இம்முறை ஆசிரியரால் கடைப் பிடிக்கப் பட்டது. ஆதிபகவன் கடவுள் ஒன்று. அஃது ஊர் பேரில்லாதது. அதற்குப் பலதிற இயல்களுண்டு. இயல்களிற்சில வருமாறு:- ஒன்றா யுண்மை, எல்லாவற்றையுங் கடந்தமை, எங்கும் நிறைந்தமை, இயற்கையை உடலாக் கொண்டமை, குருவின் உள்ளத்தில் கூர்ந்து விளங்கிக் கோயில் கொண்டமை, எல்லாம் தோன்று தற்கும் நிற்றற்கும் ஒடுங்குதற்கும் நிலைக்களனா யுண்மை, தான் ஒன்றினுந் தோன்றி நின்று ஒடுங்காமை, எல்லாவற்றிற்குந் தான் ஆதியாயுண்மை, தனக்கோராதியின்மை, அறிவுடைமை, அன்புடைமை அருளுடைமை, முறையீட்டுக்கு இரங்குந் தகைமை, பாவமன்னிப்புடைமை முதலியன. இவ்வொவ்வோ ரியலுக்கும் ஒவ்வொரு பெயர் புலவரால் புனையப்பட்டது. ஒவ்வோ ரியலையோ அததற்குரிய பெயரையோ பற்றி ஒவ் வொன்றையும் ஒவ்வொரு கடவுள் என்று கொள்வது அறியாமை. சில விடங்களில் இவ்வாறு கொள்ளப்பட்டி ருக்கிறது. அக் கொள்கையை மாற்ற முயலவேண்டுவது அறிஞர் கடமை. ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரந் - திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ என்றார் மாணிக்கவாசகனார். கடவுளுக்குரிய பல பெயர்களுள் ஆதிபகவன் என்பதும் ஒன்று. ஆசிரியரும் ஆதி பகவனும் ஆசிரியர் காலத்தில் கடவுளுக்குரிய பெயர்களில் ஆதி பகவன் என்பது மன்பதையில் பெரிதும் ஆட்சி பெற்றிருக்கும். அதனால் ஆசிரியர் பொதுமைபற்றி அதை ஆண்டிருக்கலாம். இஃது ஆசிரியரது பொதுநோக்கைப் புலப்படுத்துவது. ஆசிரியர், செவ்விய தீந்தமிழ் அரசு வீற்றிருந்த காலத்தில் வதிந்தவர். இதற்கு அவர் அருளிய நூலே சான்று கூறும். அவர் காலத்தில் பிராகிருதமும் பாலியும் வடமொழியும் அறிஞரிடை வாழ்வு பெற்றிருந்தன. அந்நாளில் சமயக்கணக்கர், இறைவனுக்கு வழங்கப்பட்ட பல பெயர்களுள், ஆதி பகவன் என்பதையே பெரிதும் ஆண்டிருப்பர். அவ்வாட்சி ஆசிரியருள்ளத்தைக் கவர்ந்திருக்கும். ஒரு நாட்டில் ஒருவிதப் புதுமை புகும்போது, அது நாட்டவர் நெஞ்சைக் கவர்வது இயல்பு. இவ்வியல்பு, தமிழ் மக்களிடைச் சிறந்து விளங்குவதைச் சரித்திர உலகம் நன்கு அறியும். காலப்போக்கில் ஆக்கம் பெறும் பிறமொழிச் சொற் களையும், சொற்றொடர்களையும், கருத்துக்களையும் பொருந்திய முறையில் எடுத்தாள்வது தவறாகாது. தனக்கோர் ஆதியின்றி, எல்லா உலகும் தோன்றி நின்று ஒடுங் குதற்குத் தானே ஆதியாய் நிற்றலால் இறைவன் ஆதிபகவன் எனப்படுகிறான். ஆதி ஆதி என்பது தோற்றம், தொடக்கம், முதல், பழமை ஆகிய பொருளுடைத்தா யிருத்தல் வெளிப்படை. ஆதிக்கு வேறு சில பொருள்களும் உண்டு. அச்சிலவற்றுள் இரண்டைச் சிறப்பாக இங்கே குறிக்கலாம். அவை ஞாயிறு, நேர்ச்செலவு என்பன. நேர்ச்செலவை நெடுஞ்செலவென்பர் சிலர். 1ஆதி பழமையும் அரனும் மாலும் முதலும் நேரோட்டமும் மொழியப் பெறுமே 2ஆதி........btÆ‹kÂ¥ பீடம் போன்றான் (ஆதி - ஞாயிறு) 3ஆதிக்கொளீஇ யசையினை 4அடிபடு மண்டிலத் தாதி போகிய கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும் (ஆதி - நேரோட்டம்: ஐவகைக் குதிரைக் கதிகளுள் ஒன்று.) பகவன் பகவன் என்னுஞ் சொற்குக் கடவுள் என்று எவரும் பொருள் கூறுவர். பகவன் - அறுகுணங்களை யுடையவன்: பகம் + அன் =பகவன் ; பகம் - அறுகுணங்களுடைமை. அறுகுணங்கள் : அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் (விட்டுணு புராணம்). பகவன் என்பதற்கு வேறு சில பொருள்களு முண்டு. <ண்டைக்கு ஞாயிறு, குரு (குரு - சித்தன் அல்லது கேவலஞானி) என்பன சாலும். பட்டாரகன் மால் பங்கயன் பரமன் - இரவி அருக்கன் புத்தனும் பகவன் என்பது 1பிங்கலந்தை. (பட்டாரகன் - ஞானகுரு அல்லது சித்தன். இரவி - ஞாயிறு, சூரியன்.) செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் என்றார் 2 இளங்கோவடிகள். பகவன் - கேவலஞானி என்பர் அடியார்க்கு நல்லார். (கேவலஞானி - திரிகாலமுணர்ந்தவன்). பகவன் என்னும் பெயர் பலபொருளுடையதாயினும், அது சிறப்பாகக் கடவுளுக்கே வழங்கப்படுகிறது. அப்பெயர் சமயத்தவர் எல்லாராலும் பொதுமையில் வழங்கப்பெற்று ஆட்சியில் வந்திருக்கிறது. இது, பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் எனவரூஉம் மண்டலபுருடர் வாய்மையால் விளங்குகிறது. பகவன் என்னும் பெயர் கடவுளுக்கும், வேறு பிறர்க்கும் பிறவற்றிற்கும் வழங்கப்படுதலின், ஈண்டு அது கடவுளின் மேலது என்பார் ஆதிபகவன் என்றார். மண்டிலங்கள் நாம் வாழும் மண்டிலம் நமக்குப் பெரியதாகத் தோன்று கிறது. இதைப் பார்க்கிலும் பெரிய பெரிய மண்டிலங் களிருக்கின்றன. அவையெல்லாம் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு ஞாயிற்றையுஞ் சுற்றி வரூஉம் மண்டிலங் கள் பற்பல உள்ளன. அவையல்லாத மண்டிலங்களு முண்டு. அவை யாவும் நேர்பட இயங்குகின்றன. அந்நேரிய இயக்கத்தில் சிறிது பிறழ்வு நேருமாயின், மண்டிலங்களின் கதி என்னாகும்? மண்டிலங்க ளெல்லாவற்றையும் நேர்பட இயக்குவது எது? இறைவன் துணை. இவ்வாணையை என்னென்று விளக்கு வது! மண்டிலங்களையெல்லாம் நேர்படச் செலுத்தும் ஆற்றலுடையவன் இறைவன் ஆதலின், அவன் ஆதிபகவன் என்று போற்றப்படுகிறான். (ஆதி - நோரோட்டம்; நேர்ச் செலவு). ஞாயிறுகளுக்கெல்லாம் ஞாயிறு ஆதிக்கும் ஞாயிறு என்றொரு பொருளிருக்கிறது: பகவனுக்கும் ஞாயிறு என்றொரு பொருளிருக்கிறது. இதனால் ஞாயிறுகளுக்கெல்லாம் ஞாயிறாக விளங்குவோன் ஆதிபகவன் என்னும் உண்மையை ஆசிரியர் விளக்கினர் என்க. மக்கள், இயற்கைக் கூறு ஒவ்வொன்றையும் கடவுளாக் கொண்டு கொண்டு, பின்னே அவைகட் கெல்லாம் அரசாக வுள்ள ஞாயிற்றைக் கடவுளாக் கொண்டு, அதன் பின்னே ஞாயிற்றுக்கும் ஒளிவழங்கும் பெருஞாயிற்றைக் கடவுளாக் கொண்ட வரலாறு ஈண்டுச் சிந்திக்கற்பாலது. 1‘mU¡fʼn சோதி அமைத்தோன் திருமந்திரம் - அண்டாதித்தன், பிண்டாதித்தன், மனவாதித்தன், ஞானாதித்தன், சிவாதித்தன் - பார்க்க. ஞான குரு ஞானகுருநாதன் உள்ளத்தில் கடவுளையன்றிப் பிரிதொன் றின்மையால், அவன் உடல் கடவுளுக்குரிய கோயிலாகிறது. அக்குருநாதன் மூலமாகக் கடவுளை யுணர்தல் மரபு. ஞான குருக்களுக்கெல்லாம் ஆதி ஞான குருவாக இறைவனிருத்தலான், அவன் ஆதிபகவன் என்று சொல்லப்படுகிறான். (பகவன் - ஞானகுரு). கடவுளின் மூன்று நிலை கடவுள் தனித்து நிற்கும் நிலை ஒன்று. இது வாக்கு மனங் கடந்தது. இது வழிபாட்டுக்கு உதவாதது. கடவுள், இயற்கையை உடலாக்கொண்டு தான் உயிராக நிற்கும் நிலை வேறொன்று. இது வழிபாட்டுக்குக் கொழு கொம்பு போன்றது. இயற்கை வழிபாட்டால் அதன் உள்ளுறையாகிய இறை எளிதில் விளங்குவதில்லை. ஒரோவழி அது விளங்குவது முண்டு. இயற்கை வழிபாடு முதிர முதிரக் குருநாதன் காட்சி தோன்றும். குருநாதன் அறிவுறுத்தலால் இயற்கையின் உள்ளு றையாகிய இறையை உணரலாம். அதற்குமேல் இறையின் தனி நிலை விளங்கும். குருநாதன் எவன்? தனக்கென ஒன்றின்றித் தானற்றுக் கடவுள்வழி நின்று கடவுளை யன்றிப் பிறிதொன்று விளங்கப் பெறாத உள்ளமுடையவன் குருநாதன். குருநாதன் வழிக் கடவுளின் அருட்செயல் நிகழ்தலால், குருநாதன் செய லெல்லாம் கடவுளின் செயலாகும். குருநாதன் உள்ளத்தைக் கடவுள் கோயில் கொண்டு கடனாற்றுவதும் ஒரு நிலை. இதனை மூன்றா வதாகக் குறிக்கலாம். குருநாதன் நிலையைப் பற்றிச் சன்மார்க்க போதமும் திறவும் என்னும் நூலில் ஒல்லும் வகை விளக்கி யுள்ளேன். விளக்கம் ஆண்டுப் பார்க்க. ஆகவே, கடவுளின் நிலை மூன்றாதல் காண்க. அவை தனித்த நிலை, இயற்கையை உடலாக் கொண்ட நிலை, குருவைக் கோயிலாக் கொண்ட நிலை என்று சுருங்கிய முறையில் நினை வூட்டிக் கொள்க. ஆதி பகவனில் மூன்றாம் இம்மூன்று நிலையும் ஆசிரியர் குறித்தருளிய ஆதிபகவனி லிருத்தல் கருதற்பாலது. (i) ஆதிபகவன் தனக்கோராதியின்றி எல்லாவற்றிற்கும் தானே ஆதியாய் நிற்கும் நிலையொன்று, இது வாக்கு மனங் கடந்தது; வழிபாட்டுக் குரியதன்று. (ii) ஆதியும் பகவனும் ஞாயிறாகப் பொருளுணர்த்துங் கால், அஃது ஆதிபகவன் இயற்கை வடிவினன் என்பதைக் குறிப்பதாகும். இந்நிலை வழிபாட்டுக் குரியது. (iii) ஆதிபகவன் ஞானகுரு என்னும் பொருளில் நிற்கும் போது, அவனது குருநிலை விளங்குவதாகிறது. இது வழி பாட்டுக்கு எளியது. எனவே, ஆதிபகவனில் மூன்று நிலை யிருத்தலை ஆராய்ந்து பார்க்க. பொதுமை இம்மூன்று நிலையுள், மூன்றையும் அல்லது இரண்டை யும் அல்லது ஒன்றையுங் கொள்ளாத சமயமில்லை. கடவுள் உண்மையை மறுக்கும் இனத்தார்க்கு மூன்றில் யாண்டாயினும் இடமுண்டா என்று சிலர் வினவலாம். அவர்க்கும் இடமுண்டு என்று விடையிருக்க. இயற்கைநிலை அவர்க்கும் உரிய ஒன்றென்க. இயற்கை வழிபாட்டில் இருவித நோக்குண்டு. ஒன்று, இயற்கை உடல்; இறை உயிர் என்னும் எண்ணத்துடன் வழிபடுவது; மற்றொன்று, உயிரின் எண்ணமின்றி வழிபடுவது. இவ்வினத்தில் கடவுளுண்மையில் உறுதியில்லாதார் சேர்வர். ஆகவே, ஆசிரியர் எல்லார்க்கும் உரியதாய்ப் பயன் படத்தக்க ஒரு பெரும் ஓத்தினை அருளினரென்க. உவமை எழுத்தெல்லாம் அகரத்தை முதலாக உடையன; (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என்றார். முன்னது பின்னதற்கு எடுத்துக்காட்டாய் நிற்றல் காண்க. இதனை எடுத்துக்காட்டுவமை என்பர் பரிமேலழகர். உவமைக் கும் பொருளுக்கும் இடையில் உவம உருபின்றி வருவது எடுத்துக்காட்டுவமை. காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் * * * *’ என்னுந் திருக்கோவைப் பாட்டுக்கு உரைகண்ட பேராசிரியர், கலந்தாரிருவர் என்பது பாடமாயின், காகத்திருகண்ணிற் கொன்றே மணி என்பதனை எடுத்துக்காட்டாக உரைக்க என்றதும் ஈண்டு உன்னற்பாலது. வேறுபட வந்த உவமத் தோற்றங் - கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் என்னுந் 1தொல்காப்பியச் சூத்திர விரிவுரைக்கண், அகர முதல வெழுத்தெல்லா மாதி- பகவன் முதற்றே யுலகு என்ற வழி, இரண்டு பொருள் வேறு வேறு கூறியதன்றி அகர முதல எழுத்தெல்லாம் அதுபோல என்றானும், ஆதிபகவன் முதற்று உலகம் அது போல என்றாலும் ஒன்றாகத் துணியுமாற்றான் உவமையும் பொருளுங் கூறாமையின் அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று. பிறவும் அன்ன. இவை ஏனையுவ மத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம் என்று பேராசிரியர் குறித்திருத்தல் காண்க. அவை தாம் - தத்தங் குறிப்பினெச்சஞ் செய்யும் என்னுந் 2தொல்காப்பியச் சூத்திரத்துக்கு விளக்கஞ் செய்யப் புகுந்த சேனாவரையர், அகர முதல வெழுத்தெல்லாமாதி - பகவன் முதற்றே யுலகு, அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் - றேறியார்க் குண்டோ தவறு என்ற வழிமுறையானே அது போல எனவும், நீத்தார்க்கே தவறு எனவும் வருவன எஞ்சிய இசைப்பொரு ளுணர்த்தலான் இசையெச்சமாயின என்று கூறியிருத்தலை ஒர்க. ஆதி அகரமும் ஆதி பகவனும் 1அகரம் தனித்தும், அகர ஒலியா யெழுந்தும், மற்றெழுத் துக்க ளெல்லாமாகியும், அவற்றை இயக்கியும் வருவதுபோல, ஆதிபகவனும் தனித்தும், உலகெலாமாகியும், அவற்றை இயக்கியும் வருகிறான். பன்மை ஒருமை எழுத்தெல்லாம் பன்மை; உலகு ஒருமை. உவமை பன்மை; பொருள் ஒருமை. எழுத்து - பால்பகா அஃறிணைப் பெயர். அதனைப் பன்மைப்படுத்தி எழுத்து அகர முதல என்று கூறினும் வழுவா காது. உலகு என்பதும், உலகங்களெல்லாவற்றையுங் குறிப்பதே. பன்மைத் தொகுதியை ஒருமையாகக் கூறல் மரபு. காரிய உலகைப் பன்மையாகக் கூறின், காரணத்தையும் பன்மையாகக் கொள்ளுதற்கு இடமுண்டாதல் பற்றியும், அநேகேச்சுரவாதம் உலகில் இருத்தல் பற்றியும் காரணமாகிய கடவுளின் ஒருமையை வலியுறுத்தற் பொருட்டுக் காரியத்தையும் ஒருமையாக உரைத்தனர். உயிரும் உயிரல் பொருளுஞ்சேர்ந்த ஒன்றைப் பன்மையாகக் கூறுவது பொருத்தமாகாது. எழுத்தெல்லாம் பன்மை; அதற்கேற்ப, அது முதல என்னும் பன்மை முடிபு பெற்றது. உலகம் ஒருமை; அதற்கேற்ப, அது முதற்றே என்னும் ஒருமை முடிபு பெற்றது. எல்லாம் எல்லாம் என்பது பெய்யப்பட்டிருத்தல் வெறுஞ்செய்யு ளோசை நிரப்பலுக்கு மட்டுமன்று. எழுத்தெனக் கூறின், தாம் தமிழில் நூல் யாக்கப் போந்தமையான், மக்கள் எழுத்து என்பதைத் தமிழெழுத்தென்று கொள்ளுதற்கு, இடமுண்டாகு மென்று கருதி, அதைத் தகையவும், உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களையெல்லாங் குறிக்க வேண்டியும் ஆசிரியர் எழுத்தெல்லாம் என்று விளக்கமாகக் கூறினர். ஏகாரம் முதல என்பதில் ஏகாரமில்லை. முதற்றே என்பதில் ஏகாரமிருக்கிறது. எழுத்துக்களைக் காரியமென்று கொள்வதில் வாதம் நிகழ்வதில்லை. உலகு காரியமா காரணமா என்ற வாதம் இன்னும் நிகழ்ந்து வருகிறது. ஆதலால், அதற்குத் தேற்றந் தேவை யில்லை; இதற்குத் தேற்றந்தேவை. உலகம் காரியம்; அதற்கொரு காரணம் உண்டு என்பதை வலியுறுத்தற்கு முதற்றே என்று தேற்றங் கூறினார். கடவுளுண்மையில் உறுதி இம் முதற்பாட்டில் கடவுளுக்கு வாழ்த்தோ வணக்கமோ கூறப்பட்டில்லை. ஏன்? வாழ்த்து வணக்கங்கட்கு முன்னர் கடவுளுண்மையில் உறுதி வேண்டுமாதலின். உறுதியின்றி வெறுமையில் கடவுள் கடவுள் என்று வாழ்த்துவதாலும் வணங்குவதாலும் பயன் விளையாது. உறுதியற்ற வாழ்த்தும் வணக்கமும், நீராட வேட்கை கொண்ட ஒருவன், கானலை நீரெனக் கருதி, அதில் மூழ்கச் சென்றதுபோல முடியும். முதலாவது வேண்டற்பாலது கடவுளுண்மையில் உறுதி. இவ்வுறுதி முதற்பாட்டில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பெண் - ஆண் கடவுளுக்குப், பெண் ஆண் என்னும் வேற்றுமையில்லை. கடவுள் எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் ஒன்று. இங்ஙனமாக ஆசிரியர் கடவுளை, ஆதி பகவன் என்று ஆண்பாலால் மட்டுங் கூறியதென்னை என்று இக்கால மக்களிற் சிலர் ஐயுறலாம். ஆதி என்பதற்கு மேலே சில பொருள்கள் சொல்லப் பட்டன. அவற்றுடன் ஆதி என்பது, சத்தியை - பெண்ணை - உணர்த்தும் ஒரு சொல்லாகவும் மிளிர்கிறது. பன்னிரண் டாங்கலை ஆதி வயிரவி ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி எனவரூஉந் 1திருமூலர் திருவாக்குக்களை நோக்குக. ஆதி, பெண்கூறுங் கடவுளுக்கு உண்டு என்பதையும் அறிவுறுத்துவது. பகவனின் தாய்மைக் கூறே பெண்மை என்பது. இதுபற்றிப் பெண்ணின் பெருமை என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. தோடுடைய செவியன் என்பதும் இதுபோன்றதே. தோடு பெண்ணின் காதணி. தோடுடைய செவியன் என்றருளிய ஞான சம்பந்தரே, பிறாண்டும், பெண்ணாணாய வார்சடை அண்ணல் பேணு பெருந் துறையே என்றருளியுள்ளதையும் நோக்குக. பாட்டின் மாண்பு திருக்குறள் முப்பால் நூலென்றும், நூலுக்குப் பாயிரமா யிருப்பன வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் மூன்றதிகாரங்களென்றும், பாயிரத்துக்குப் பாயிரமா யிருப்பது கடவுள் வாழ்த்தென்றும் முன்னர்ச் சொல்லப்பட்டன. இம்மாண்பு வாய்ந்த கடவுள் வாழ்த்தின் இம்முதற்பாட்டுள் எல்லாம் நுண்மையாகவும் குறிப்பாகவும் பொலிந்து திகழ்கின்றன. ஓர் இனிய குளிர்தரு திருக்குறள், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவன் முதற்றே உலகு என்னும் விதையினின்றும் எழுந்த ஓர் இனிய குளிர்தரு. முதற் பாட்டு விதை. பாயிரம் முளை. அறம் - பொருள் - இன்பம் - என்னும் முப்பாலுங் கவடுகள். இயல் அதிகாரம் முதலியன. கோடு துணர் முதலியன. திருக்குறள் நூல் தரு. 2அந்தமில் ஆதியம் பகவன் 3ஆதிபகவனை அருகனை மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே (1) (ii) கடவுளின் இயற்கை நிலை 2 இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. பொருள் இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - கடவுள் இயற்கையைச் சேர்ந்துள்ள புகழை விரும்பினாரிடம், இருள்சேர் இருவினையுஞ் சேரா - அறியாமை (அவிழ்ந்து) ஒன்றும் வினை இரண்டும் சென்றடையா. கருத்து இயற்கை இறையை விரும்பினாரிடம் இருவினையுஞ் சென்றடையா. விருத்தி முதற் பாட்டின் விருத்தியில் கடவுள் நிலை மூன்று என்பது சொல்லப்பட்டது. அம்மூன்றனுள் ஒன்று, கடவுள் இயற்கையை உடலாக் கொண்டது. அஃது இக்குறளில் விளங்குதல் காண்க. இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு இறைவன் - எங்குந் தங்கியுள்ளவன். பொருள் - பொருளை, பொருளுடன் (பொருட்சேர் என்று பாடங் கொள்வோருமுளர்). பொருள் - இயற்கை; மாயை. சேர் - சேர்ந்துள்ள, கலந்துள்ள. சேர்புகழ் - வினைத்தொகை. இறைவன் பொருள்சேர் புகழ் - கடவுள் இயற்கையைச் சேர்ந்துள்ள புகழை, கடவுள் இயற்கையுடன் கலந்துள்ள புகழை, கடவுள் இயற்கையை உடலாக் கொண்ட புகழை. தலைவன தாகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களை என்பது மணக்குடவர் உரை; இறைவனது மெய்மை சேர்ந்த புகழை என்பது பரிமேலழகர் உரை. புரிந்தார் - விரும்பினார்; கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் - கலித்தொகை : 23 : 12. புரிந்தார் என்பதற்கு, பொருந்தினார் என்று மணக்குடவர் பொருள் கொண்டனர். புரிதல் - இடைவிடாது சொல்லல் என்றனர் பரிமேலழகர். மாட்டு - இடத்து; பக்கத்திலும் என்னலுமொன்று; ஏழனுருபுமாம். இறைவன் இறை என்னுஞ் சொல் தொன்மை வாய்ந்தது; பொருள் பொதிந்தது. இறை - இறுத்தல்; தங்குதல். 1வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை 2குடைநீழற் பதிபடர்ந் திறைகொள்ளுங் குடிபோல 2அடலேற் றெழுந்திறுத் தார்க்கு ஈண்டு இறை கடவுள்மேலது; அரசன்மேல தன்று. அரசன் ஆணை ஓரெல்லைக்குள் தங்குவது. கடவுள் ஆணை எங்குந் தங்குவது. கட்டின்றி எங்குந் தங்கும் ஒருவனே இறைவன் என்க. இறைவன் எப்பொருளிலுந் தங்குகிறவன் என்பர் அடியார்க்கு நல்லார். (சிலப்பதிகாரம் - 10 : 184 : உரை) பொருள் எங்கும் என்பது அண்டபிண்ட சராசரங்கள் எவ்வளவு உண்டோ அவ்வளவிலும் அடங்குவது. அண்டபிண்ட சராசரங் களெல்லாம் மாயா காரியங்கள். மாயையும், அதன் காரியங்களும் அடங்கிய ஒன்றே ஈண்டுப் பொருள் என்னப் பட்டது. மாயை - மாயா ; மா - ஒடுங்குதல் ; யா - வருதல். எல்லாக் காரியங்களும் ஒடுங்குதற்கும், ஒடுங்கிய வழியே தோன்றுதற்கும் நிலைக்களனாயிருப்பது மாயை. மாயையின் உள்ளும் புறமும் கலந்தும், அதைக் கடந்தும் நிற்பது கடவுள். மாயை - சடம்; மாறுதலடைவது. கடவுள் - அறிவு; மாறுத லடையாதது. மாயை, பிரகிருதி - அசுத்தம் - சுத்தம் என்று மூவகைப்படும். இவை முறையே பருமை - பருநுண்மை - நுண்மையாயிருப்பன. மாயையின் வகை இரண்டென்போருமுளர்; மூன்றுமில்லை இரண்டுமில்லை ஒன்றே என்போருமுளர். எங்கும் என்பது, மாயா சம்பந்தம் வரை நிலவுவது. அதைக் கடந்தது கடவுளின் தனித்த நிலை. மாயை - மாயா: வடமொழி. இதற்குத் தமிழ் இயற்கை. ஆகவே, எங்கும் என்பது மாயையை - அதாவது இயற்கையைக் குறிப்பதென்க. இறைக்கு எங்குந் தங்குதல் என்னும் பொருளுண்மையான், அதுவே கடவுள் இயற்கையை உடலாக்கொண்ட நிலையை உணர்த்துவதாகிறது. இறை எங்கும் நீக்கமறத் தங்கியிருப்பதைப் பற்றி உலகின் நானாபக்கங்களிலுமுள்ள மறை மொழிகளெல்லாம் முழங்கு கின்றன. அம்மொழிகள் கடலெனப் பரந்து கிடக்கின்றன. அக் கடலெல்லாம், இறை என்னும் ஈரெழுத்துச் சொல்லில் அடங்கியுள்ளன. எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங் கிருப்பதுநீ யன்றோ பராபரமே என்றார் தாயுமானார். இது மறைமொழிகளின் சாரம். இறைவன் எங்கும் அதாவது இயற்கையில் தங்குவோன் என்னும் உண்மையை, பொருள் சேர்புகழ் என்று ஆசிரியர் தெளிவு செய்துள்ளனர். பொருளுக்குள்ள பல பொருளில் ஒன்று, பதார்த்தம் (Matter) என்பது. பதார்த்தம் மாயா காரியம். 1பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் என்றும், 2தோன்றியவை விளக்கத்தால் உண்மையாம் ஐம்பொறிக்குந் தொடர்பால் நிற்கும் ஆன்றபதார்த் தங்களெலாம் * *’ என்றும் ஆன்றோர் அருளியிருத்தல் காண்க. ஈண்டுப் பொருள், பதார்த்தம் - மாயை - இயற்கை - என்னும் பொருளின் மேற்று. சேர்புகழ் சேர் - சேர்ந்துள்ள, கலந்துள்ள; இறைவன், பொருளில் - இயற்கையில் - கலந்திருப்பது எள்ளளும் எண்ணெயுஞ் சேர்ந்தாற் போல என்க. கொள்ளும் * * * * * * நள்ளுங்கீழுளும் மேலுளும் யாவுளும் - எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே என்பது திருவாசகம். இறைவன் இயற்கையுடன் கலந்துள்ள நிலையே புகழுக் குரியது. எல்லாப் புகழும் ஆண்டவனுக்கே என்று கிறிது முதலிய பல பெரியோர் அருளிப் போந்தனர். இயற்கை கடந்த இறைநிலை, வாக்கு மனங் கடந்ததாய், வழிபாட்டுக்கு உதவாத தாயிருத்தலின், ஆங்கே புகழுக்கு இடமில்லை. 1புகழ்ச்சியைக் கடந்த போகமே என்பது மணிவாசகம். புகழ்ச்சிக்குரியது இறைவன் இயற்கையுடன் கலந்த நிலையே யாகும். இயற்கை உடல்; இறை உயிர். இயற்கையை உடலாக் கொண்ட இறைநிலையே வழிபாட்டுக்குரியது. மனம் வாக் குடையார், இயற்கை - இறையையே வழிபாட்டுக்குக் கொழு கொம்பாகக் கோடல் வேண்டும். இவ்வழிபாடு குருநாதனைக் கூட்டும். குருநாதன் அருள், இயற்கையிற் கலந்துள்ள இறை நிலையையும், பின்னே இயற்கையைக் கடந்துள்ள தனித்த இறை நிலையையும் உணர்த்தும். தருக்க வாதம் இயற்கை - இறைநிலை பிரித்தற்கரியது. இயற்கை என்றும் இறை என்றும் இரண்டையுஞ் சொல்லாற் பிரித்துக் கூறலாம்; பொருளால் இரண்டையுந் தனித்தனியே வெவ்வேறாகப் பிரித்தல் இயலாது. இதனால் இயற்கையும் இறையும் ஒன்றா வேறா என்னும் பலதிற ஐயப்பாடுகள் நிகழ்வதுண்டு. இயற்கை யும் இறையும் ஒன்றென்போரும் உளர்; வேறு வேறு என்போரும் உளர்; கலப்பால் ஒன்று - பொருளால் வேறு என்போரும் உளர். இக்கொள்கைகளினின்றும் பிறந்த கவடுகள் பல; கோடுகள் பல. அவரவர் தத்தங்கோளைத் தருக்க வாதங்களால் நிறுவுவர். அவை அறிவுக்கு நல்விருந்தாகும். ஆனால் தருக்க வாதங்களில் கருத்திருத்து மட்டும் உண்மை விளங்குதல் அரிது. தருக்க வாதங்களே பல மதங்களாக உலகில் நிலவுகின்றன. மனத்தைத் தருக்க வாதங்களில் செலுத்துவதைப் பார்க்கினும் வழிபாட்டிற் செலுத்துவது சிறப்பு. ஆசிரியர் தருக்க வாதங் கடந்த அறம் - பொருள் - இன்பம் என்னும் இயற்கைச் செந் நெறியை அறிவுறுத்தியவர். இறைவன் இயற்கையை உடலாக்கொண்ட நிலையே உடலோடு கூடியுள்ள உயிர்களின் வழிபாட்டுக் குரியது. இயற்கை - இறையை, உயிர்கள் மனமார நினைக்கலாம்; வாயார வாழ்த்தலாம். இயற்கைக் கூறுகளிற் படியும் நினைவும் வாழ்த்தும் புலவர் வாயிலாகப் பலதிறக் காவியங்களாகவும், ஓவியங்களாக வும், கதைகளாகவும், நாடகங்களாகவும், பிற வாகவும் பரிணமித் திருக்கின்றன. புரிந்தார் இறைவன் பொருள் சேர்ந்த நிலையே வழிபாட்டுக் குரியதாதலின். புகழ் புரிந்தார் என்றனர். இறைவன் பொருள் சேர் புகழை விரும்பி நினைத்தலும், விரும்பிச் சொல்லுதலும் வேண்டும். விருப்பின்றி நினைத்தலுஞ் சொல்லலும் போலியாம். அடிப்படை விருப்பம் என்பார், புரிந்தார் என்றனர். இறைவன் பொருள்சேர் புகழை விரும்பாது, தன் புகழை விரும்பிப் பேசுவது மடமை. முன்னதால் இன்பம் விளையும்; பின்னதால் துன்பம் விளையும். மாட்டு மாட்டு என்பது, இருள்சேர் இருவினையுஞ் சேரா என்பதை அவாவி நிற்கிறது. இறைவன் பொருள்சேர்புகழ் புரிந்தார் மாட்டு, இருள்சேர் இருவினையுஞ் சேரா என்றபடி. இதை ஆராய்வோம். இருள்சேர் இருவினையுஞ் சேரா இருள் - அறியாமை, அஞ்ஞானம், அவித்தை, ஆணவம். அறிவை ஒளி என்றும், அறியாமையை இருள் என்றுஞ் சொல்வது மரபு. ஈண்டு இருளுக்கு மயக்கம், பிறவி முதலிய பொருளும் உரைக்கலாம். சேர் - ஒன்றும், பொருந்தும். சேர் இருவினை - வினைத்தொகை. இருவினை - நல்வினை, தீவினை. நல்வினை - புண்ணியம்; தீவினை - பாவம். உம் - முற்றும்மை; இனைத்தென்று அறிபொருளில் வந்தது. சேரா - அடையா, அணுகா. இருள்சேர் இருவினை இருள் உள்ளவரை வினையுண்டு. இருளற்றால் வினையும் அறும். எல்லாவற்றிற்கும் மூலம் இருள். உயிர், இருளில் கட்டுப்பட்டுக் கிடப்பது. இருள் ஒடுங்கி னாலன்றி உயிர் விடுதலை பெறாது. உயிருக்கு விடுதலை நல்க இறைவன் அதற்குத் தனு கரண புவன போகங்களை வழங்கு கிறான். தனு கரண புவன போகங்கள் மாயா காரியங்கள். மாயை உயிரின் இருளை விலக்கி விளக்கஞ் செய்வது. இதனால் மாயையை 1மாயா தனு விளக்காம் என்று பெரியோர் கூறிப் போந்தனர். மாயா காரியமாகிய தனு முதலியவற்றை உயிர் அடைந்ததும், அது சிற்றறிவும் சிறு தொழிலும் விளங்கப் பெறுகிறது. மாயையின் கூட்டுறவால் இருள் சிறிது விலகு தலால் சிற்றறிவு அரும்புகிறது. இந்நிலையில் மாயையிலுள்ள கர்ம சூக்குமம் காரியப்பட்டு வினை (தொழில்- செயல் -கர்மம்) புரிவதாகிறது. மாயையின் கூட்டுறவுக்கும், அதன்வழி வினை நிகழ்தலுக்கும் மூலமாயிருப்பது இருள் என்பதை மறத்தலாகாது. இருட்கட்டு மாயையால் அவிழ்ந்து, மாயையிற் கரந்து வெளிப் படுங் கர்ம சூக்குமத்தின் முகிழ்ப்பில் சேர்க்கை பெறுகிறது. அச்சேர்க்கையால் இருவினை நிகழ்கின்றன. இருள், மூலமாக நின்றெழுந்து சேர, இருவினை நிகழ்தலால், இருள்சேர் இரு வினை என்றார். இருள் சேர்தற்குரிய இருவினை என்று தெளிவு செய்துகொள்க. கருமை பூசப் பெற்ற ஒரு பளிங்குருண்டையை நினைந்து கொள்வோம். உருண்டை வெண்ணிற முடையது. வெண்மை கருமையால் மறைந்து கிடக்கிறது. ஒரு சிற்றுளியால் ஒருவன் கருமையைச் சிறிது கீறினால் அவ்வளவில் வெண்மை புலனாகும்; முற்றுஞ் செதுக்கினால் முழு உருண்டையும் வெண்மை மயமாக விளங்கும். பளிங்குருண்டை, உயிர். கருமை, இருளென்னும் அறியாமை. சிற்றுளி, மாயை. ஒருவன், இறைவன். இறையருள் 2காரிட்ட ஆணவக் கருவறையில் யான் கண்ணிலாக் குழவியைப் போல் கட்டுண்டிருந்தேன். அறியாமை இருட் கட்டால் எனது அறிவு விளங்கவில்லை. இக்கட்டை அவிழ்த்துத் தன்னைப் போல் என்னை ஆக்க இறைவன் திருவுள்ளங் கொள்கிறான். இறைவன் கட்டில்லா முற்றறிவுடையனாதலின், அவன்பால் அழுக்காறு முதலிய தீமைகளில்லை. அவன் அருளே வடிவா யிலங்குவோன். நெருப்பில் வெம்மை இயல்பாயிருக்கிறது. நீரில் தண்மை இயல்பாயிருக்கிறது. இவைபோல இறைவனிடத்தில் அருள் இயல்பாயிருக்கிறது. அருளின் செயலென்னை? பிறர்க்கு உதவ லன்றோ? இறைவன் அருள், கட்டிலுள்ள உயிர்கட்குத் துணை புரிய எழுகிறது. கட்டிலுள்ள எனக்கு, இறைவன் மாயையை எடுத்துப் பலதிற உடலங்களைத் தருகிறான். அதனால் யான் படிப்படியே அறிவு விளக்கம் பெறுகிறேன். உயிர் அறியாமைக் கட்டில் தன்னிலை யுணராது கிடத்த லான், அது தானே சென்று உடல் பெறுதல் இயலாது. அறியா மைக் கட்டுச் சடமாதலின் அதுவுந் தானே சென்று உடல் மாயையுஞ் சடமாதலின் அதுவும் தானே உடலாகாது. இவை களை ஒன்றுபடுத்தற்கு ஒருவன் வேண்டற் பாலன். அவன் எப்படிப்பட்டவனா யிருத்தல் வேண்டும்? அவன் உயிரைப் போலக் கட்டுடையவனாய், மாயையைப் போலச் சடமயமாய் இருத்தல் கூடாது. அவன் கட்டில்லாதவனாய் முற்றறிவுடைய வனா யிருத்தல் வேண்டும். குருடனுக்குக் குருடன் எங்ஙனம் வழிகாட்ட வல்லவனாவன்? இறைவன் மாயையை உயிருடன் கூட்டுகிறான். மாயை, பலதிற உடலங்களாகியாகி அவ்வவ்வளவில் உயிரின் அறிவு விளங்கத் துணைபுரிகிறது. இப்பொழுது (உயிராகிய) யான் மனிதப்பிறவி தாங்கி யுள்ளேன்; நானார்? உலகம் எது? ïiw vJ? என்று ஆராய் கிறேன். இவ்வாராய்ச்சிக்குக் கருவியாயுள்ளது ஆறாவது அறிவு. இவ்வறிவு விளங்குதற்குரிய கரணங்கள் மனிதப் பிறவியில் அமைகின்றன. சீர் புகழல் இருளில் கிடந்த எனக்கு இறைவன் செய்த நன்றி என்னே! அந்நன்றியை நினைந்து நினைந்து, அவனருளை வியந்து வியந்து, அவன்சீர் புகழ வேண்டுவது எனது கடமையன்றோ? அவன் சீர் புகழாது, என் சீர் புகழ்ந்து வருவேனாயின், யான் எத்தகைய நன்றி கொன்ற பாவியாவேன்! யான் எங்ஙனம் உய்யுநெறி காண்பேன்? இறைவன் சீர் புகழ்ந்தால் அவனது அருட்குணம் என்பால் பதியும். யான் உய்வேன். என் சீர் புகழ்ந்தால் என்பால் மருட்குணங்களே மீக்கூரும். இக்குணங்கள் என்னைப் பிறவிப் பெருங்கடலில் உய்க்கும். ஆதலால், அவன் புகழ் விரும்புதலே அறிவுடைமை. இந்நுட்பம் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் - சிவபுராணத்தில் - நன்கு விளங்குகிறது. கண்ணுதலோன் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்த தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் (அதனால்) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். இம் மணிமொழி இத்திருக்குறளுக்கு விரிவுரை போன்றதா யிருத்தலை உன்னுக. இருவினையுள் தீவினை (பாவம்) சேராதிருக்க முயல்வது நல்லதே. நல்வினை (புண்ணியம்) சேராதிருக்க ஏன் முயலல் வேண்டும் என்று கருதற்கு இடனுண்டாகலாம். நல்வினை நல்லுலகும், நல்லுடலும், நல்வாழ்வுங் கூட்டும்; ஆனால் பிறவிநோயை நீக்காது. அதனால் இருவினையும் ஆசிரியரால் குறிக்கப் பெற்றன. நல்வினை பொன்விலங்கு போன்றதென்றும், தீவினை இரும்பு விலங்கு போன்றதென்றும் கூறுப. பலதிறக் கருத்துக்கள் இருள் - அறியாமை. வினை - கர்மம். பொருள் - மாயை இப்பாட்டில் மும்மலம் பேசப்பட்டிருத்தல் காண்க. மும்மலம் உள்பொருளென்றும், இல்பொருளென்றும், அநிர்வசனிய மென்றும் வழங்கப்படுகின்றன. மூன்றையுங் கொள்வோருளர்; இரண்டை மட்டுங் கொள்வோருளர்; ஒன்றையே கொள்வோ ருளர்; இவை யாவும் பொய்யென்போரு முளர். இப் பலதிறக் கருத்துக்களை வெளியிட்டோர் அனை வரும் பேரறிஞரே யாவர். பேரறிஞரிடைக் கருத்து வேற்று மைகள் எழுதற்குரிய மூலகாரணம் காலதேச வர்த்தமானப் போக்கேயாகும். சேரா உயிரின் இருளை நீக்க ஆண்டவன் மாயா உடலையும் உலகையும் அளிக்கிறான். உயிர், உடல் தாங்கி உலகில் வாழும் போது, மாயையுள் ஒடுங்கி மறைந்து நின்ற கர்ம சூக்குமம், தூலம் பெறுகிறது; பெற்றதும் இருவினை நிகழ்கின்றன. இருவினையும் மாய்தல் வேண்டும். இதற்கு இறைவன் பொருள்சேர் புகழைப் புரிதல் வேண்டுமென்று ஆசிரியர் வழிகாட்டியுள்ளனர். அவ்வழியே நடந்தால் இருவினை மீண்டும் சேரா என்றபடி. இருவினையுஞ் சேரா என்பது, மாயை நீக்கத்தையும் இருள் ஒடுக்கத்தையுங் குறிப்பதென்க. மும்மலமும் அறும் என்றவாறு. இருவினையுஞ் சேரா என்று கர்ம மல அழிவை மட்டுங் குறித்ததென்னை என்று சிலர் கருதலாம். கர்மவேர் அறுந்தால் மற்றவை காய்ந்து உலர்ந்து நீறாகுமாதலின் என்க. கர்ம மூலம் உள்ளவரை மற்ற இருமலமும் வாலசைத்துக் கொண்டே யிருக்கும். இதனால் கர்மமாகிய வினைமீது ஆசிரியர் கருத்துச் சென்றது போலும். இருவினையுஞ் சேராமையே பிறப்பிறப்பு அற்ற நிலை. இருவினை, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் பக்கமும் அணுகாதென்பார், மாட்டு என்றார். இதனால் இருவினையின் சிறுமையையும், இறைவன் பொருள்சேர் புகழ் புரிதலின் பெருமையையும் விளக்கியவாறாம். இப் பாட்டால் இருள்சேர் இருவினையுஞ் சேராதிருப்ப தற்குரிய வழி, இயற்கை - இறையின் புகழில் நாட்டஞ்செலுத்து வது என்பது விளக்கப்பட்டது. இறைவன் புகழில் நாட்டஞ் செலுத்தினால், வினை என் செய்யும்? பிற என் செய்யும்? எல்லாப் புகழ்ச்சிகட்கும் உரியவன் ஆண்டவனே. இவ்வாறு கிறிதுவும், முகம்மது நபியும் அருளியுள்ளனர். 1வேதவேள்வியை....Phy நின்புகழே மிகவேண்டும் * * *’ 2அப்பா...... எப்பாரும் எப்பதமும் எங்கணுநான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் 3இருள்புரி வினைகள் சேரா இறைவன தறத்தை எய்தின் (2) (iii) கடவுளின் குருநிலை 3 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறிநின்றார் நீடுவாழ் வார். பொருள் பொறிவாயில் ஐந்து அவித்தான் - ஐம்பொறிகளையும் வரியாகவுடைய ஐம்புலனையும் அடக்கினவனது, பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - பொய்யற்ற ஒழுக்க வழியில் நின்றவர், நீடு வாழ்வார் - நீண்ட காலம் வாழ்வர். கருத்து குருநாதன் வாயிலாகக் கடவுள் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்ட காலம் வாழ்வர். விருத்தி முதற்பாட்டு விருத்தியில் கடவுளுக்குரிய மூன்று நிலை சொல்லப்பட்டன. அவற்றுள் கடவுள் குருவைக் கோயிலாக் கொண்டு கடனாற்றுவது இப்பாட்டிற் குறிக்கப் பெற்றிருக்கிறது. பொறிவாயில் ஐந்தவித்தான் பொறி - ஐம்பொறி : மெய், வாய், கண், மூக்கு, செவி, வாயில் - வழி ஐந்து - ஐம்புலன்: ஊறு, சுவை, ஓளி, நாற்றம், ஓசை (பரிசம், ரசம், ரூபம், கந்தம், சப்தம்). ஐம்பொறிக்கும் ஐம்புலனுக்குமுள்ள தொடர்பு:- மெய்யில் நிகழ்வது ஊறு; வாயில் சுவை; கண்ணில் ஒளி, மூக்கில் நாற்றம்; செவியில் ஓசை. ஐந்து - தொகைக் குறிப்பு. அவித்தான் - அடக்கினான்; அறுத்தான் என்பர் பரிமேலழகர்; கெடுத்தான் என்பர் அடியார்க்கு நல்லார்; ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம் : 10 : 194 : உரை); அடியார்க்கு நல்லாரே அடக்கலுமாம் என்று குறிப்பிலுரைத்துள்ளார். பொறிவாயில் ஐந்து ஐம்பொறி, ஐம்புல நுகர்ச்சிக்கு வாயிலா யிருப்பவை; அதனால் பொறிவாயில் ஐந்து என்றார். 1மெய்வாய் கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற - ஐவாய வேட்கை அவாவினை * * * *’ வெறும் ஐந்தவித்தான் என்று கூறாது, பொறி வாயில் ஐந்தவித்தான் என்று கூறியதென்னை? ஐம்பொறி - பஞ்சேந்திரியம்; ஐம்புலன் - பஞ்ச தன்மாத்திரை. இரண்டும் தனித் தனித் தத்துவங்கள். ஆனால் இரண்டுந் தொடர் புடையன. ஐம்புலன், ஐம்பொறிச் சார்பில் எழுந்து இயங்குவன. ஐம்பொறிச் சார்பின்றி ஐம்புலன் எழா; இயங்கா. பொறி பருமை; புலன் நுண்மை. நுண்மைக்குப் பருமையின் துணை பொதுவாகத் தேவை. நுண்மை தனக்குரிய பருமையின் துணையின்றி நிகழ்வதில்லை. ஐம்புலனுண்மை அவைகட்குரிய ஐம்பொறிப் பருமையின் சார்பின்றி எழுவதில்லை. பருமைப் பொறி வாயிலாகவே நுண்மைப் புலன் இயங்கும். வேறு வாயிலாகப் புலன் இயங்குவதில்லை. எவ்வெப் பொறிவழி எவ்வெப் புலன் எழுகிறதோ அவ்வப்பொறி வழியே அவ்வப் புலன் அடங்குதல் வேண்டுமாதலின், ஐந்தவித்தான் என்று கூறாது, பொறி வாயில் ஐந்தவித்தான் என்று கூறினர். பொறிவாயில் ஐந்தவித்தான் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும் ஐந்தின்கண்ணும் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது என்பது மணக்குடவர் உரை. ஐந்தவித்தல் ஐம்புலனை அவித்தலாவது, ஐம்புலனையும் அடக்குவது; புலனை அறவே அழிப்பதன்று. புலன்களை அழித்தால் அவை அறிவற்ற பொருளாகும். நாவடக்கம், கையடக்கம் முதலிய வழக்குகளை நோக்குக. இவைகட்கு நாவழிவு கையழிவு என்னும் பொருளையா கொள்வது? நாவடக்கமா யிரு, கையடக்கமா யிரு என்னும் வாசகங்கட்கு முறையே ஒன்றையுந் தின்னாதே ஊமையாயிரு என்றும், கையைவெட்டிக் கொள், ஒன்றையுஞ் செய்யாதே என்றும் எவரே பொருள் கூறுவர்? பொருந்திய உணவை உண், நல்லன வற்றைப் பேசு, திருடாதே, நல்லனவற்றைச் செய் என்பன வல்லவோ அவ்வாசகங்களின் பொருள்? இவ்வாறே புலனடக்கம் என்பதற்கும் பொருள் கொள்க. புலன்களை நெறியல்லா நெறி யில் செலுத்தாமையே புலனடக்க மென்பது; புலன்களை அழித்துக் கொள்வதன்று. புலன்கள் அழிக்கத் தக்கனவாயின், அவை படைப்பில் அமைய வேண்டுவதில்லை. அவை படைப்பில் அமைந்துள்ளன. படைப்பில் அமைந்துள்ளவற்றை அழிக்கப் புகுவது இயற்கை நெறி பற்றி ஒழுகுவதாகுமோ? புலன்கள் அழிக்கப்படின் அவை அசேதனமாகும். அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆகுமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே என்றார் திருமூலர். ஆகவே, அவித்தல் என்பது அறவே அழிப்பதன்று; புலன்கள் தீய வழியிலுழன்று கொடுமை செய்வதை அடக்கி அவற்றை நல்வழியில் செலுத்துவதென்க. அவித்தான் ஐந்தவித்தான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப. இறைவனுக்கு ஐந்து உண்டோ? இறைவன் பிறப்பிறப்பு இல்லாதவன்; உருவம் அருவம் அருவுருவம் முதலிய எல்லாவற்றையுங் கடந்தவன்; மாற்ற மனங்கழிய நின்றவன். அவனுக்கு ஐம்புலனேயில்லை. புலனே யில்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது? ஐந்தவித்தான் என்றமையால், ஒருபோது ஐம்புலக் குறும்புடையனாயிருந்து, பின்னை அக்குறும்பை அவித்தவன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. இறை வனோ புலனில்லாதவன். புலனே இல்லாதபோது, குறும்புக்கு இடம் ஏது? ஆகவே, ஐந்தவித்தானை எல்லாங் கடந்த இறைவன் என்று சொல்லுதல் பொருந்தாதென்க. ஐந்தவித்தான் இறைவனல்லனாயின், அவன் கடவுள் வாழ்த்தில் புகுந்திருத்தலென்ன? என்னுங் கடா எழும். ஈண்டுக் கடவுளுக்குரிய மூன்று நிலையை உன்னின் உண்மை விளங்கும். குரு நிலை மூன்று நிலையுள் ஒன்று, கடவுள் குருவினுடலைக் கோயிலாக் கொண்டு உயிர்கட்கு அருள் புரிவது. இக்குரு நிலையை உணர்த்துவது ஐந்தவித்தான் என்பது. ஐந்திலிருந்து ஐந்தவித்தவன் குருநாதன். குருநாதன் உடலைக் கோயில் கொண்டு கடனாற்றுவதுங் கடவுள் நிலை களுள் ஒன்றாதலான், ஆசிரியர் ஐந்தவித்தானை (குரு நாதனை)க் கடவுள் வாழ்த்தில் வைத்து ஓதினரென்க. குருநாதன் மனிதனா? ஆண்டவனா? குருநாதன் மனிதக் கோலமுடையவன். அவன் அகத்தில் வீற்றிருப்பவன் ஆண்டவன். குருநாதன் தனக்கென ஒன்றில்லாதவன்; கடவுளே விளங்கும் உள்ளமுடையவன்; கடவுள் இயக்க இயங்குவோன். மனமில்லாக் கடவுள் குருநாதன் வழி நினைப்பவனா கிறான்; மொழியில்லாக் கடவுள் குருநாதன் வழிப் பேசுவோனா கிறான்; மெய்யில்லாக் கடவுள் குருநாதன் வழிச் செயல் புரிவோனாகிறான். இறைவன் குருநாதன் வழிக் கடனாற்று வோனாகிறான் என்று சுருங்கச் சொல்லலாம். கடவுள் நிலை களுள், கடவுள் குருநாதன் வாயிலாகக் கடனாற்றுவதும் ஒன்று. இஃது எல்லாவற்றிற்கும் அடிப்படை. கடவுள் எல்லாவற்றையுங் கடந்து விளங்குவது. இஃது உணர்வு கடந்த தனித்த தூய நிலை. இது வழிபாட்டுக்கு உதவாதது. கடவுள், இயற்கையை உடலாக் கொண்ட நிலையும் ஒன்று. இயற்கையுள் இறையிருத்தலை எப்படித் தெளிவது? இயற்கை வழிபாட்டால் அதனுள் விளங்கும் இறை பெரும் பான்மையோர்க்குப் புலனாவதில்லை. மிக மிகச் சிலர்க்கே அவ் வழிபாட்டால் இறையுண்மை விளங்கும். இது புறனடை. இயற்கை வழிபாடு மக்களைப் பண்படுத்துதற்குரியது. பண்புக்கு இயற்கை வழிபாடு இன்றியமையாததே. இயற்கை வழிபாடு முதிர முதிரப் படிப்படியே இயற்கை யின் நானாபேதங்கள் மறையும்; எல்லாம் ஒலிமயமாகும். இந் நிலையில் குருநாதன் காட்சிளிப்பன்; காட்சியளித்து உண்மையை அறிவுறுத்துவன். அவன் அறிவுறுத்தலால் இயற்கையில் கோயில் கொண்டுள்ள இறையின் ஒளி விளங்கும்; மனம் ஒடுங்கும். பின்னே எல்லாவற்றையுங் கடந்த கடவுளின் தனிமையை உணரும் நிலை கூடும். இப் பேற்றிற்கெல்லாம் அடிப்படை குருமொழி என்பதை மறத்தலாகாது. குரு ஒருவரா? பலரா? குரு ஒருவரா? பலரா? குருமார் உள்ளத்தில் ஒருவனே இருந்து கடனாற்றலால், அவரனைவரும் உணர்வில் ஒருவரே யாவர். வழிபாட்டில் முதல் முதல் புகுவோர், குருமாரைப் பலரென எண்ணுவர். அவர் தாம் விரும்பும் ஒரு குருவை வழி படலாம்; மற்றவரை நிந்தித்தலாகாது. தம்மைப் பண்படுத்திக் கொண்டவர்க்குக் குருநாதன் உண்மையை அறிவுறுத்தியதும், அவர்க்கு எல்லாக் குருமாரும் ஒருவராகவே தோன்றுவர். குரு நிலையைப் பற்றியும் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் சன்மார்க்க போதமும் திறவும் என்னும் நூலில் விளக்கமாகவும் தெளிவாகவும் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு அந்நூலிற் காண்க. குருமார்க்கு உலகில் வழங்கும் பெயர்கள் பல. அவற்றுள் சில வருமாறு: சித்தன், அருகன், புத்தன், கிறிது, நபி, மாடர், ஆச்சாரியன், தீர்த்தங்கரன், குமரன், மூர்த்தி முதலியன. இப்பெயர்களின் பொருள் ஒன்றே. குருநாதன் இயல் குருநாதனுக்கெனச் சிறப்பியல்கள் பல உண்டு. அவற்றைச் சொல்வது பாவம். ஆனால் இந்நாளில் போலிகள் தோன்றி உலகை வஞ்சிக்கின்றார்களாதலின், குருநாதன் இயல்களிற் சில கூறுதல் பாவமாகாது. குருநாதன் மேனி பொன்வண்ணமாயிருக்கும். அவன் மேனியில் இளமை தவழும். நரை திரை மூப்பு அவனை அணுகா. அவன் நோய்வாய்ப் படான். ஞானக் கனல் அவனைச் சூழ்ந்து நிற்கும். பிறருடைய நோயும் அவன் முன்னிலையில் தானே நீங்கும். சில வேளைகளில் குருநாதன் நினைப்பாலோ, பார்வை யாலோ, தொடுதலாலோ நோய் தீர்ப்பன். உயிர்கள் அவன் உபதேசம் பெற்றதும் அவற்றின் காம குரோதம் முதலியன பொன்றும். குருக்கோயில் கடவுள் நாமரூபமின்றி வாக்கு மனங்கட் கெட்டாத தாதலின், வாக்கு மனமுடைய யான் எப்படி அதனை வழி படுவேன்? கடவுளுக்கெனத் தனிவழிபாடு வேண்டுவதில்லை. வழிபாட்டையுங் கடந்தது கடவுள். வழிபாட்டுக் கென்று இருவித இறைக்கோயிலுள்ளன. ஒன்று இயற்கைக் கோயில்; மற்றொன்று குருக்கோயில். இயற்கைக் கோயிலையும் வழிபாட்டையும் இரண்டாம் பாட்டில் ஆசிரியர் அருளினர்; குருக்கோயிலையும் வழிபாட்டையும் இப்பாட்டில் நுட்பமாக அவர் தெளிவு செய்துள்ளனர். கடவுளுக்குரிய மூன்று நிலையை உன்னின், இப்பாடல் மூன்றாவதாகிய குரு நிலையைக் குறிப்பதென்பது இனிது விளங்கும். இப்பாட்டில் குருநாதன்வழிக் கடவுள் கடனாற்று வதை உணர்த்தியவாறாம். பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் பொய் - மெய்யல்லாதது. தீர் - அற்ற, இல்லாத; அறுக்கும் எனினுமாம். தீர் ஒழுக்கம் - வினைத்தொகை. நெறி - வழி, மார்க்கம். பொய் ஒழுக்க நெறி - சன்மார்க்கம். நின்றார் - உறுதியாக நின்றார்; (நிற்றல் - உறுதியாக ஒன்றில் படிந்து நிற்றல்). பொய்தீர் ஒழுக்கநெறி பொய் எல்லாப் பாவங்கட்கும் அடிப்படை. அஃதொன் றழிந்தால் மற்றெல்லாந் தாமே ஒழியும். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்றார் ஆசிரியர். பொய்யற்ற நெறியே ஒழுக்கமுடையது. பொய்யுள்ள நெறி ஒழுக்க முடையதாகாது. ஒழுக்க நெறிக்குப் பொய்யாமை இன்றியமையாத தென்று வலியுறுத்துவார், பொய் தீர் ஒழுக்க நெறி என்றார். பொய்யை அறுக்கும் ஆற்றல் ஒழுக்கத்துக்குண்மையான், பொய்யை அறுக்கும் ஒழுக்கம் என்று கொள்ளலுமொன்று (தீர் - அறுக்கும்). ஒழுக்க நெறி நிற்க உறுதி கொண்டால் பொய் தானே படிப்படியாக அகன்றொழிதல் ஒருதலை. எல்லாத் தீமைகட்கும் மூலமாயுள்ள பொய்யினின்றும் மக்கள் விடுதலையடைதல் இயலுமா என்னும் ஐயம் பிறத்தல் இயல்பு. பொய்மைகட் கெல்லாம் உயிராயுள்ள பொய்மை யொன்றுளது. அப்பொய்மை ஒழிந்தால் மற்றப் பொய்களும், அவற்றின் கூறுபாடுகளும் தாமே ஒழியும். அப்பொய்மை எது? அடிப்படையான பொய்மை இறை எங்குமுள்ளது. எங்குமுள்ள ஒன்றை, அங்கு இங்கு என்று கொள்வது பெரும் பொய். இப்பொய்யே எல்லாப் பொய்மைகளுக்குந் தாயகம். இத் தாய்மைப் பொய் ஒழிந்தால் மற்றவையெல்லாம் தாமே ஒழியும். முதற்பொய்யை ஒழிக்கவே மக்கள் முயலல் வேண்டும். இறை அங்கிங்கெனாதபடி எங்குமுள்ளதை உணர்ந்து வாழ்வோர்க்கு எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகத் திகழும். அவர்க்கு ஒருவர் பகைவராகவும், மற்றொருவர் நண்பராகவும் தோன்றார்; எவ்வுயிருஞ் சகோதரமாகவே தோன்றும். இவ்வன்பு நிலை யடைந்தோர் உள்ளம் எவரைக் கொலை செய்ய எழும்? எவர் பொருளைக் களவாடத் துணியும்? எவரை - எதைக் காமுறும்? எதற்காகப் பொய்யில் புகும்? ஆகவே, பொய்களுக் கெல்லாம் உயிராயுள்ள ஒன்றை யொழிக்கவே மக்கள் உளங் கொளல் வேண்டும். ஐவகை..... பொய் வளரு நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய்யிலா மெய்ய ரறிவில் போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்குவர வற்ற பொருளே என்பது தாயுமானார் திருவாக்கு. பொய் தீர் ஒழுக்க நெறியே கடவுள் நெறி என்பது. பொய் தீர் ஒழுக்க நெறியே நடந்தால் கடவுள் திருவடி சேரலாம். இந் நெறி: நன்னெறி, அறநெறி, செந்நெறி, திருநெறி, அருள்நெறி, முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. சன்மார்க்கம் என்பதும் இதுவே. பொய் தீர் ஒழுக்க நெறி, குருநாதன் வழிக் கடவுள் உணர்த்துவதாதலின், ஐந்தவித்தானது பொய் தீர் ஒழுக்க நெறி என்றார். அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவறிய நெறியெல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி எனவரூஉம் ஆழ்வார் திருவாய்மொழியை நோக்குக. சமயங்களின் அகம் எச்சமயப் பெயரையுங் குறியாது, பொய் தீர் ஒழுக்க நெறி என்றது உன்னத் தக்கது. மெய்யான ஒழுக்க நெறியே வாழ்வுக்கு வேண்டற்பாலது. இவ்வொழுக்க நெறியையே சமயங்க ளெல்லாம் அறைகூவுகின்றன. சமயங்களின் அகத்தில் ஒழுக்க நெறி ஒன்றே ஒளிர்கிறது. இந்நுட்பந் தேறாது சமயவாதிகள் பிணங்கிப் பூசலிடுகிறார்கள். சமயப் பூசலுள்ள வரை பொய்தீர் ஒழுக்க நெறி புலனாகாது. பொய்தீர் ஒழுக்கநெறிக்குச் சமரச ஞானம் வேண்டற்பாலது. எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே அங்கவர்க் கமைந்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே என்று நம்மாழ்வாரும், வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே என்று அப்பரும், ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை மாந்தர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே என்று திருமூலரும், சமயபே தத்தவர்க் கணுகொணா மெய்ப்பொருள் என்று அருணகிரியாரும், வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கில் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை என்று தாயுமானாரும். பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையென் கணவர்திருப் பேர்புகலென் கின்றாய் அருகர்புத்த ராதியென்பேன் அயயென்பேன் நாரா யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவ னென்பேன் பருகுசதா சிவமென்பேன் சத்திசிவ மென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரப்பிரம மென்பேன் துருவுசுத்த பிரமமென்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவ மென்பனிவை சித்துவிளை யாட்டே என்று இராமலிங்கரும் அருளியுள்ள சமரச மொழிகளை நோக்குக. என்றும் உள்ளது பொய்தீர் ஒழுக்கநெறி இன்று தோன்றியதன்று; நேற்றுத் தோன்றியதன்று. அதைக் காலத்தால் அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. அஃதென்றும் இருப்பது. அது குருநாதன் அறிவுறுத்திய வழி விளங்குவது. என்றும் உள்ள பொய்தீர் ஒழுக்கநெறி மிகச் சிலர்க்கு இயல்பாகவே விளங்கும். பெரும்பான்மையோர்க்கு அஃது இயல்பில் விளங்குவதில்லை. இவர்க்குக் குருநாதன் துணை வேண்டும். உண்மையைக் குருநாதன் காட்டக் காணும் நீர்மையே பெரும்பான்மையோர்க்கு உண்டு. ஐந்தவித்தான் அருள் ஒருவர், பிறந்து வளர்கிறார்; கற்பன கற்கிறார்; கேட்பன கேட்கிறார்; கற்றல் கேட்டலை வாழ்வில் தெளிவு பெற மண வாழ்வில் தலைப்படுகிறார்; பிள்ளைப்பேறு முதலியன பெறு கிறார். தமக்கு உண்மையெனத் தோன்றும் ஒரு நெறியில் நிற்க முயல்கிறார்; அந்நெறிக்குரிய நூல்களை ஓதுகிறார்; கோயிலுக் குப் போகிறார்; முறைப்படி வழிபாடு செய்கிறார்; இன்ன பிறவும் நிகழ்த்திய வண்ணமிக்கிறார். அவர்தம் வாழ்வு கழிந்து கொண்டே போகிறது. மரணம் நெருங்குகிறது. அந்தோ! இறப்பதற்கா பிறப்பது? இறப்பை ஒழிப்பதற்கே பிறப்பு உண்டாகிறது. பிறந்தபின் இறவாத வழிதேடுதல் வேண்டும். அஃது எது? அதுவே பொய்தீர் ஒழுக்கநெறி. அஃது ஐந்தவித்தான் (குருநாதன்) அருளால் விளங்குவது. அருள் பெறும் வழி ஐந்தவித்தான் அருளைப் பெறுவது எப்படி? அதற்குரிய உழைப்பில் தலைப்பட்டால் அவன் அருளைப் பெறலாம். உழைப்புக்குரிய முறைகளை அறிவுறுத்துவது திருவள்ளுவர் நூல். கல்வி, திருமணம், பிள்ளைப்பேறு, கோயில் வழிபாடு இன்னபிற பொய்தீர் ஒழுக்கநெறிக்கு வழிகோலுவன. இவை, நிலயம் எழுப்புதற்குரிய சாரம் போன்றன. இவற்றின் வாயிலாகப் பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் பெறுதல் வேண்டும். பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம், பழைய பாவங்களைக் குறித்துக் கசிந்து கசிந்து உருகும்; மேலும் மேலும் பாவங்களைச் செய்யத் துணியாது. இந்நிலையைக் குருநாதன் உணர்ந்ததும் பொய்தீர் ஒழுக்க நெறியை உணர்த்துவன். குருமாருட் சிலர் குரு ஒருவரா பலரா என்பது மேலே விளக்கப்பட்டது. குருமார் பலர் என்னும் உணர்வே தொடக்கத்தில் தோன்றும். குருவருளால் பொய்தீர் ஓழுக்க நெறி விளங்கிய பின்னர்ப் பன்மை யுணர்வு நீங்கும். குருமார் திருக்கூட்டம் ஒன்றுண்டு. அவர் உள்ளத்தில் ஒளிரும் பொருள் ஒன்றேயாதலின் அவரனைவரும் ஒருவரே யாவர். அவருள் இங்கே குறிக்கத் தக்கவர் எண்மர். அவர்: முகம்மது, இயற்கை அன்னை, கிறிது, விருஷபதேவர், புத்தர், கண்ணபிரான், குமரன், தட்சிணாமூர்த்தி. இவரனைவரும் உணர்வில் ஒருவரே என்பதை மறத்தலாகாது. (சிலர்க்கு இயற்கை வழிபாட்டளவில் உண்மை விளங்குதலான், இயற்கை அன்னையையும் குருமார் கூட்டத்தில் சேர்த்துக் கூறுவது மரபு.) ஆரம்பர் கடமை குருமார் எவரையேனும் ஒருவரைத்தொடக்கத்தில் வழிபட்டு, அவர் வழி நின்று ஒழுகி வரலாம். இவ் வழிபாட்டால் பாவத்துக்கு அஞ்சும் நெஞ்சம் உண்டாகும்; உண்டானதும் அவர்தங் கோலமே குருவாகத் தோன்றும். குருநாதன், பொய் தீர் ஒழுக்க நெறியை உணர்த்துவன். பொய்தீர் ஒழுக்க நெறி விளங்கியதும், எல்லாக் குருமாரும் ஒருவராகவே காட்சியளிப்பர். பிறர் நிந்தனையின்றி ஒருவரை உறுதியாகப் பற்றுவது ஆரம்பர் கடமை. ஒருமைக் கூற்று குருமார் அனைவரும் ஒருவரே என்னும் நுட்பமும், இறைவன் ஒருவனே அவர் வாயிலாக உயிர்களுக்கு அருள் செய்கிறான் என்னும் நுட்பமும் தோன்றவே குருநாதனை ஐந்த வித்தான் என்று ஆசிரியர் ஒருமையால் கூறினர் என்க. ஐந்தவித்தான் என்னுங் குருநாதனது உள்ளங்கோயில் கொண்ட இறைவனையே ஐந்தவித்தான் என்று ஆசிரியர் உலகுக்கு உணர்த்துகிறார். ஐந்தவித்தான் வாயிலாக இறைவன் கடனாற்றுகிறான் என்பது கருத்து. கடவுளுக்குரிய மூன்று நிலையுள், மூன்றாவதாகிய குரு நிலை ஈண்டுக் குறிக்கப்பட்டதெனக் கொள்ளின் எவ்வித ஐயப் பாட்டுக்கும் இடமிராது. நின்றார் பொய்தீர் ஒழுக்க நெறியை எண்ணுவதால் மட்டும், பேசுவதால் மட்டும் பயன் விளையாது. அந்நெறியில் நிற்றல் வேண்டும். செயலை வலியுறுத்த வேண்டி, நின்றார் என்றார். வாசாஞானங் கூடாது என்பது கருத்து. நின்றார் என்பதே நன்னெறியில் நிற்பதைக் குறிக்கும். அவ்வளவில் ஆசிரியர் நில்லாது, நெறி நின்றார் என்றனர்; அவ்வளவிலும் நில்லாது, ஒழுக்க நெறி நின்றார் என்று மேலும் கூறினர்; அதற்கு மேலும் சென்று, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்று அருளினர்; அந்நெறி இன்னதென்பார், ஐந்த வித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்று விளக்கிக் காட்டினர். இறை, குருநாதன் வழி அறிவுறுத்தும் பொய்தீர் ஒழுக்க நெறியே உய்வளிக்க வல்லது என்பதையும், அதன் கண் உறுதியாக நின்றொழுகல் வேண்டும் என்பதையும் விளக்கியவாறாம். நீடு வாழ்வார் நீடுவாழ்வார் - மரணமின்றி வாழ்வர். நீடு - அழியாமை. நீடு வாழ்வார் என்பதன் குறிப்புரையில் இது சாவில்லை என்றது என்று மணக்குடவர் கூறியுள்ளதும், அதற்கு, பிறப் பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் என்று பரிமேலழகர் உரை விரித்திருப்பதும் உன்னற்பாலன. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்பதனாலாய பயன் நீடு வாழ் தலாகும். இந்நெறி நின்று நீடு வாழ்ந்தவர் கதைகள் பல உண்டு. நீடு வாழ்தலாவது மரணமிலாப் பெருவாழ்வெய்தல். மனிதப் பிறவியும் சாகா நிலையும் உயிர் பலதிறப் பிறவி தாங்கித் தாங்கி மனிதப் பிறவி தாங்குகிறது. மனிதப் பிறவியில் பகுத்தறிவு விளங்குதற்குரிய கரணங்கள் அமைந்துள்ளன. குருவருளால் ஐந்தவிந்ததும் பகுத் தறி வென்னும் ஆறாவதறிவு விளங்கும். ஆறாவதறிவு விளங்கப் பெற்றோர், பொய்தீர் ஒழுக்க நெறியினின்றும் வழுவாத் திறம் பெறுவர். இது சாகா நிலை கூட்டும். சாகா நிலையாவது மீண்டும் பிறவாமை. இக்காய நீக்கி இனியொரு காயத்தில் புக்குப் பிறவாத போம்வழி தேடுமின் என்றார் திருமூலர். மீண்டும் பிறவாமையே இறவாமை என்பது. மூவகை உடலங்களுள் வினை சேர்தற்குரியது பருவுடல். பருவுடல் மீண்டும் தாங்கா நிலை எய்துவது மீண்டும் பிறவாமை என்க. பருவுடலையும் ஞான ஒளி மயமாக்கிக் கொள்ளும் நிலை உண்டு. இந்நாளில் அந்நிலை கூடுதல் அரிது. அத்தகைய நிலை ஒன்றுண்டு என்பது உறுதி. அஞ்ஞானம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத் தியானத்தில் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறு நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க உடலழி யாதே நீல நிறனுடை நேரிழை யாளொடும் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞால மறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி யாணையே என்று திருமூலர் அருளியிருத்தலை ஓர்க. நீடு வாழ்தல் பருவுடலொழிந்த நுண்ணுடல், மீண்டும் பருவுடல் தாங்காதொழியும் நிலை கூடினாற் போதும். இதுவும் சாகா நிலையின் பாற்பட்டதே. மக்கள், பருவுடல் வாழ்வு பெற்றிருக்குங் காலத்தில், பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்கும் பேறு பெறின் வினைகளெல்லாம் நசித்துப் போகும். வினைகள் நசித்து விடின் பருவுடல் மீண்டும் அமைதற்கு ஏதுவில்லை. நுண்ணுடல், பருவுடல் தாங்காது மேல்நிலையைப் படிப்படியே எய்தும். அதனால் உயிர் முழு விடுதலை அடையும். அழியா இன்பப் பேறே நீடு வாழ்தல் என்பது. மீண்டும் பிறவாமை என்னும் இறவாமையில் உறுதியில்லா தார், ஒழுக்க நெறி நிற்பதால் இவ்வுலகில் பிணி முதலிய கொடுமை கட்கு இரையாகாது, நீடு வாழ்தலாகும் என்றாதல் கொள்வாராக. ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்கநெறி என்றோ, ஐந்தவித் தான் அறிவுறுத்திய பொய்தீர் ஒழுக்கநெறி என்றோ கொள்க. ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்த லாகிய சாகாநிலை பெறுவர் என்னும் உண்மையை இப் பாட்டால் தெரிவித்தவாறாம். 1ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண் 2பொறிவாயில் ஐந்தவித்த புனிதன் நீயே (3) 4 (iv) திருவடி போற்றல் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். பொருள் மலர்மிசை ஏகினான் - (குருநாதனின்) நெஞ்சத் தாமரை யில் எழுந்தருளினவனது, மாண் அடி - பெருமை பொருந்திய திருவடியை, சேர்ந்தார் - அடைந்தவர், நிலமிசை - நிலத்தின்மீது, நீடு வாழ்வார் - நெடிது வாழ்வர். கருத்து குருநாதன் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவடியை அடைந்தவர் நீண்ட காலம் வாழ்வர். விருத்தி பொறிவாயில் ஐந்தவித்தானுக்கு அடையாளம் என்னை? அவன் நெஞ்சத்தாமரை இறை கோயிலாதல் அடையாளம் என்க. இஃது இப்பாட்டின் உள்ளுறை. இதுமுதல் ஏழு பாட்டிலும் குருநாதன் திருவடி போற்றல் பேசப்பட்டிருத்தல் சிந்திக்கற்பாலது. வழிபாட்டுக்குரிய அடி அல்லது தாள் ஒவ்வொரு பாட்டிலும் திகழ்தல் காண்க. அடியில்லாத இறைவன் குருவைக் கோயில் கொண்ட நிலையில் அடி பெறுகிறான். வழிபாட்டுக்குரிய சிறந்த இடம் திருவடி என்பது மரபு. உலகில் தோன்றிய பெரியோர் அனைவரும் ஒருமுகமாக இறைவன் திருவடியையே போற்றியிருத்தல் வெள்ளிடைமலை. திருவடி இருபொருளுடையது. ஒன்று திருவருள்; மற்றொன்று பாதம். 1இறை நினைவு தோன்றும்போது திருவடி திருவருளை உணர்த்தும்; குரு நினைவு தோன்றும்போது அது பாதத்தை உணர்த்தும். ஏழு பாட்டும் கடவுளின் குருநிலையைச் சிறப்பு முறையில் கூறுவன. குருவினுள்ளிருந்து வழிபாடுகளை ஏற்றுக் கொள் வோன் இறைவனே யாவன். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் மலர் - தாமரை; பூவெனப்படுவது பொறிவாழ் பூவே; இங்கே நெஞ்சத் தாமரை. மிசை - ஏழனுருபு; மீது எனினுமாம். ஏகினான் - போந்தான், எழுந்தருளினான்; நடந்தான் என்னலுமொன்று. மலர்மிசை நடந்தோன் மலரடி - சிலப்பதிகாரம்: 10 : 204. இதயம் தாமரைபோலிருத்தலால் மலர் எனப்பட்டது; (நெஞ்சத்தாமரை- இருதய புண்டரீகம் - ஹ்ருத் புண்டரீக்). மலர்மிசை மின்சாரம் எங்குமிருப்பது; இருப்பினும் அஃது எங்கும் விளங்கித் தோன்றுவதில்லை. பொறி அமைத்துத் தொழிற் படுத்துமிடத்தில் அது விளங்கி ஒளி செய்கிறது. மின்சாரத்தைப் போலவே இறை நிலையையுங் கொள்க. இறை எங்குமிருப்பது; எங்குமிருப்பினும் அது விளங்கித் தோன்றுவதில்லை. ஆனால் பொய்தீர் ஒழுக்க நெறியில் நின்றவரது மலர்மிசை - நெஞ்சத் தாமரையில் - இதயத்தில் - இறை ஒளி செய்கிறது. இங்கே மலர் என்றது குருநாதனது நெஞ்சத் தாமரையை என்க. இதயம் உயிர்கள் தாங்கும் பலதிற உடலங்களுள் சிலவற்றில் இதயமே புலனாவதில்லை; சிலவற்றில் இதயம் மிக நுண்மை யாக அரும்பி நிற்கிறது; சிலவற்றில் அது மலர்ந்திருக்கிறது. மக்கள் உடலில் மட்டும் பிறவி நோக்கத்தை நிறைவேற்றுதற்குரிய முறையில் இதயம் அமைந்திருக்கிறது. மக்களின் இதயத்துக்கும், மக்களையடுத்த வேறு சில அஃறிணை உயிர்களின் இதயத்துக்கும் வேற்றுமை என்னை? இரண்டையுஞ் சத்திரமிட்டுப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் இரத்தம் நிணம் முதலியன செறிந்த புலால் கொத்தையே காண் கிறோம் என்று உலகியல் ஆராய்ச்சியாளர் கூறலாம். இஃது உன்னற்பாலதே. மனிதப் பிறவி விலங்கு முதலிய உயிர்களின் இதயத்தால் பகுத்தறிவுக் குரிய மூளை அமைவதில்லை. மக்கள் இதயம், பகுத்தறிவுக்குரிய மூளை கூர்ந்து விளங்குதற்குத் துணைபுரியும் இயல்பில் அமைந் திருக்கிறது. மக்கள் உடல், புற உறுப்புக்கள், அக உறுப்புக்கள், கிளை உறுப்புக்கள், மற்றக் கருவி கரணங்கள் யாவும் பகுத்தறிவு மலர்தற்குரிய வண்ணம் பொருந்தியிருக்கின்றன. இவ்வாய்ப்பு மக்கள் பிறவிக்கு மட்டும் உண்டு; மற்றப் பிறவிகட்கில்லை. அதனால் மக்கள் பிறவி விழுமியதென்று உண்மை கண்ட பெரியோர் அனைவரும் ஒருமுகமாகக் கூறிச் சென்றனர். 1குனித்த.... மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே 1வாய்த்தது நந்தமக்கு ஈதோ பிறவி மதித்திடுமின் இவை போன்ற ஆன்றோர் மொழிகள் பல உண்டு. விழுமிய மனிதப் பிறவியில் வாய்த்துள்ள சிறப்பை நல்வழி யில் பயன்படுத்தப் புகுவது அறிவுடைமை. அதை நல்வழியில் பயன்படுத்தாது கிடத்தல் அறியாமை. பிறவியை நல்வழியில் பயன் படுத்தலாவது பொய்தீர் ஒழுக்க நெறி என்னுஞ் செந்நெறியில் நிற்பது. பிறவியை நல்வழியில் பயன்படுத்தாமை என்பது அச் செந்நெறியில் நில்லாமை யாகும். மனிதரில் மனிதர் மனிதப் பிறவி தாங்கினோர் அனைவரும் மனிதராகார். மனிதரிலுங் கல்லுண்டு; புல்லுண்டு; மரமுண்டு; புழுவுண்டு; பாம்புண்டு; புள்ளுண்டு; விலங்குண்டு; பிற உண்டு. மனிதரில் மனிதராக முயல்வதே சிறப்பு. இது பற்றியே ஆசிரியர் தொல் காப்பியனார் மனிதப் பிறவி தாங்கினோரை ஈரினமாகப் பிரித்தனர். அவை மக்களினம் மாக்களினம் என்பன. அவர், மாவு மாக்களும் ஐயறி வினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே என்று கூறியது காண்க. ஒழுக்க நெறி நின்று பகுத்தறிவென்னும் ஆறாவதறிவை மலரச் செய்வோர் மக்கள்; மற்றவர் மாக்கள். இவர் விலங்கனை யார். உலகில் தற்போது நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அருகியும், மாக்கள் கூட்டம் பெருகியும் வருகின்றன. இதற்குரிய மூல காரணம் என்னை? மனிதர் ஓழுக்க நெறியில் நிற்கும் வாய்ப்புப் பெறாமையே யாகும். வாய்ப்பைக் கூட்டும். கல்வி, தொழில், அரசு, நாகரிகம், வாழ்வு முதலியன மறைந்து வருகின்றன. திருவள்ளுவர் நூலில் ஒழுக்க நெறிநிற்கும் வாய்ப்புக்குரிய கல்வி முதலியன ஒளிர்கின்றன. இயற்கை வழிபாடு மனிதப் பிறவி தாங்கினோர் இயற்கை வாழ்வினின்றும் வழுக்கி வீழ வீழ அவர் மாக்களாகி மாள்வது ஒருதலை. இயற்கை வழிபாடு மனிதரை மக்களாக்கும் ஆற்றல் வாய்ந்தது. இவ்வழிபாடு உயிர்களைப் பண்படுத்துந் தகைமையுடையது. இயற்கை வழி பாட்டால் தம்மைப் பண்படுத்திக் கொள்வோர்க்குக் குருநாதன் காட்சி யளித்து அருள் புரிவன். குருநாதன் காட்சி பெறுதற்குரிய அரிய பிறவியைப் பாழ்படுத்தலாமோ? உலகீர்! நந்தமக்கு வாய்த்தது நற்பிறவி. இது விழுமியது. இப்பிறவியிலேயே உய்யு நெறி காண்டல் வேண்டும். இதற்கெனப் படியுங்கள்; இதற்கெனத் தொழில் புரியுங்கள்; இதற்கென அரசு கோலுங்கள்; இதற்கென வாழுங்கள்; பாழுக்கு உழையாதேயுங்கள்; நற்பிறவி பாழாகும்; இப் பிறவி மீண்டும் வாய்க்குமோ? இதயக் கோயில் மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேற வேண்டின், இதயத்தை அழுக்காறு அவா வெகுளி முதலியன நிறைந்த - இரத்தம், நிணம், புழு முதலியன மலிந்த - புலால் கூடாக வைத்துக் கொண்டிருத்தல் கூடாது. அவ்வாறு அதை வைத்துக் கொண்டி ருந்ததால் அஃது ஊறுபடும்; இளகும்; அதனால் பலதிற நோய்கள் உண்டாகும்; முடிவில் மரணம் நேரும். மரணமடையவா நாம் பிறந்தோம்? அரிய மனிதப் பிற வியைப் பெற்றோம்? மரணமிலாப் பெருவாழ்வு பெறுதற் கன்றோ கடவுள் நமக்கு மனிதப் பிறவியைக் கொடுத்தார்? இப்பிறவியின் அமைப்புக்களெல்லாம் மரணமிலாப் பெரு வாழ்விற்குத் துணை செய்வனவல்லவோ? மனிதப் பிறவியில் இதயம் - பொன்னான இதயம் - அமைந்திருக்கிறதே! இதைப் பாழ்படுத்தல் நன்றோ? புலால் கூடாயுள்ள இதயத்தைப் பொற்றாமரையாகச் செய்தல் வேண்டும். இத் தாமரை ஆண்டவன் கோயிலாதல் வேண்டும். இந் நல்வாய்ப்பு இதயத்தில் இயல்பாகவே அமைந் திருக்கிறது. இதைத் தெளிந் துணரவேண்டுவது நமது கடன். நமது கடனை ஒழுங்குபெற ஊக்கங்கொண்டு ஆற்றினால், இதயத் தாமரையில் ஏகியுள்ள இறைவன் புலனாவன். ஆசிரியர் இதை இத்திருக்குறளில் நன்கு விளக்கியுள்ளார். உள்ள மலர் ஆசிரியர்க்கு இதயம் புலால் கூடாகத் தோன்றவில்லை. அஃது அவர்க்கு மலராகத் தோன்றிற்று. அதனால் அவர் மலர் என்றார். ஆசிரியர் தமது உள்ளத்தை மலராக்கிக் கொண்டவர். அவர் அதை மலராகக் கண்டவர். அக்காட்சி அவரை மலர் எனச் சொல்வித்தது. மலர் - இது சொன்மலரா? பொருண் மலரா? சொன் மலரை நோக்கி நோக்கி, அதன்கண் ஒன்ற ஒன்றப் பொருண் மலர் விளங்கும். நாண்மலரே மகிழ்ச்சி யூட்டுவது. வாடா உள்ள மலரோ எத்தகை மகிழ்ச்சி யூட்டும்? இது சொல்லுந் தகையதன்று. மலர்த் தேனில் இனிமையுண்டு. இவ்வினிமை தெவிட்டுவது; நிலைபேறா யிருப்பதன்று. உள்ள மலர்த் தேனின் இனிமையோ தெவிட்டாதது; நிலைபேறாயிருப்பது. உள்ள மலர்த் தேனே அமிர்தம் என்பது. இவ்வமிர்தம் நாடி நரம்புகளிற் பாய்ந்து உயிரையும் உடலையும் ஆனந்தமயமாகச் செய்யும். தினைத்தனை * * * * அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே * * *’ என்பது மணிவாசகம். சிறப்பு உள்ள மலர்க்கு இத்துணைச் சிறப்புண்மைக்குக் காரண மென்னை? ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. சுருங்கிய உரை சாலும். உடலின் உள்ளுறுப்புக்கள் பல. பலவற்றுள் சிறந்தன மூன்று. ஒன்று மூளை; மற்றொன்று உள்ளக் கமலம் (இதயம்); இன்னொன்று ஈரல். இம்மூன்றனுள் சிறந்தன மூளையும் உள்ளக் கமலமுமாகும். மூளையினுஞ் சிறந்தது உள்ளக் கமலம். சிறுபிராணி யொன்றைப் பற்றி அதன் மூளையைப் பரு ஊசியினால் குத்தினால், அது செயலற்று மயங்கிக் கிடக்கும். ஆனால் அது சாவதில்லை. ஊசியினால் அப்பிராணியின் இதயத்தில் குத்தினால், உடனே அஃது உயிர்துறக்கும். இவ்வாறு பலதிறச் சோதனை செய்து செய்து, உயிர் நிலையம் உள்ளக் கமலம் என்னும் முடிவிற்கு வந்தனர் அறிஞர். இதனால் உள்ளக் கமலமெனும் இதயத்தின் சிறப்பு விளங்குதல் காண்க. விழிப்பில் மூளை தொழில் புரிதல் உண்மை. உறக்கத்தில் அஃது என்ன தொழில் செய்கிறது? இதயம் விழிப்பிலும் உறக்கத் திலும் தொழில் புரிகிறது. இதயத்தின் இயக்கம் ஒடுங்கினால் உயிருக்கு இடம் ஏது? இதனாலும் இதயத்தின் மாண்பு புலனாகிறது. நாம் உண்ணும் உணவு சத்தாகவும் சக்கையாகவும் பிரி கிறது. சக்கை கீழே கழிகிறது. சத்து இதயத்தில் புகுகிறது; இரத்த மாகிறது. இதய இயக்கத்தால் இரத்தம், நாடி நரம்புகள் வழியே உறுப்புக்களிலெல்லாம் பாய்ந்து உடலை ஓம்புகிறது. சத்து, மூளையின்வழி உடலை வளர்க்கிறதா? இதயத்தின் வழி உடலை வளர்க்கிறதா? ஓர்மின். சத்து, இரத்தமாக மாறி உடலை ஓம்புதற்குத் துணை புரியும் உயிர்ப்பு நிலவுவது எங்கே? (நுரையீரல் வழி) இதயத்திலன்றோ அது நிலவுகிறது? உடம்பினுள் உயிருள்ள இடம் இதயம் என்பது பல வழியாலும் உறுதி செய்யப்பெற்ற ஓர் உண்மை. உயிர்வழி உடலை இயக்கும் இறைச் சக்தியுள்ள இடம் இதயமென்று சான்றோர் நன்கு விளக்கிப் போந்தனர். ஆகவே, உடலுயிர் இயக்கத்துக்குரிய உயிர்பொறி - ஆவி நிலையம் - சக்தி பீடம் - (Power House) இதயம் என்று கொள்க. 1என்னில் யாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்ப ரீசனே மலர் இருவிதம் உள்ள மலர் என்னும் இதயம் இருவிதம். ஒன்று உடலுக் குரியது; மற்றொன்று உயிருக்குரியது. உடலுக்குரியது பருமை; உயிருக்குரியது நுண்மை. உயிரிருக்கும் இடம் உடலுள்ளம்; உயிர்க்குயிரிருக்கும் இடம் உயிருள்ளம். பெரியோர் பொதுவாக உள்ளமலர் எனக் கூறிவிடுவர். அதன் நுட்பம் ஏட்டுப்படிப்பால் விளங்காது; குருவின் நோக்காலோ, மொழியாலோ, தீண்டலாலோ விளங்குவது. இதை வெற்றுரையால் விரித்துக் கொண்டு போதல் இயலாது; கயமையுமாகும். ஆகத்துளே மகிழ்ந்த சோதிப்ரகாச இன்பம் ஆவிக்குளே துலங்க - அருள்வாயே என்னுந் திருப்புகழில் கருத்தை இருத்தி ஒன்றுக. பரிய உடலுள்ளத்தின் வளத்தைப் பொறுத்தே நுண்ணிய உயிருள்ளம் நிலவும். உயிரின் உள்ள வளத்துக்கு உடலின் உள்ள வளம் வேண்டற்பாலது. உடலுள்ளம் வளமிழந்தால் உயிருள்ளம் நிலவுதற்கே இடமின்றிப் போகும். அதனால் மரணமிலாப் பெருவாழ்வு கூடுதல் அரிதாகும். இன்னோரன்ன காரணம் பல பற்றி, உண்மை கண்ட பெரியோர் பலர், உடலுள்ளத்தை வளம்படுத்துமாறு உலகுக்கு அறிவுறுத்தினர். ஏகினான் உள்ளத்தில் எப்பொழுதும் எந்நிலையிலும் இறைவன் இருக்கிறான். உள்ளம் அழுக்காறு முதலிய தீமையும், புன்புலால் நாற்றமும் உடையதா யிருக்கும்போதும், இவையற்ற நிலையிலும் இறைவன் உள்ளக் கமலத்தில் வீற்றிக்கிறான். முன்னைய நிலையில் இறைவனுண்மை உயிரின் கண்ணுக்குப் புலனாவ தில்லை; பின்னைய நிலையில் இறைவனுண்மை உயிரின் கண்ணுக்குப் புலனாகும். உள்ளம், நல்லியல்புகளால் பொன்மலராயதும், அதனிடத் தில் இறைவனுண்மை உயிரின் கண்ணுக்குப் புலனாகிறது. இந்நிலையில் தன் உள்ளத்தில் முன்னரே இறைவன் இருந்தமை உயிர்க்கு விளங்குகிறது. முன்னரே அகமலரில் இறைவன் இருந்தமையை ஏகினான் என்று ஆசிரியர் இறந்த காலத்தால் எடுத்துக் காட்டினர். இதை விரைவு பற்றி வந்த காலவழுவமைதி என்று கூறுவோர் கூறுக. எனதாவி உள் கலந்த * * * என்று நம்மாழ்வார் அருளியதை ஈண்டு உன்னுக. இறைவன், உயிரின் அஞ்ஞான நிலையில் புறத்தேயிருந்து, அதன் ஞானநிலையில் உள்ளே புகுவோன் என்று கொள்ளற்க. இறைவன் போக்குவர வில்லாதவன். இது பற்றி நினைப்பவர் மனம் என்னும் நூலில் விளக்கியுள்ளேன். இறைவனது உண்மை: உயிர்க்கு விளங்கா நிலை ஒன்று; விளங்கும் நிலை ஒன்று. இவ்விளங்கல் விளங்காமை உயிரிடத் திருப்பன. இவை இறைவனிடத்திருப்பன அல்ல. இறைவன் என்றும்- எங்கும்- ஒரு பெற்றியாயிருப்பவன். உயிரின் அகக்கண் திறப்புக் கேற்றவாறு இறைவனது உண்மை புலனாகிக் கொண்டே போகும். திறப்புக்கு உறுகருவியாயிருப்பது உள்ளக் கமலம். 1என் மனமே சென்று புக்கனன் போந்த சுவடில்லையே என்பது அப்பர் திருவாக்கு. போந்த சுவடில்லையே என்பதை நோக்குக. இறைவன் உயிரின் உள்ளத்தில் புதிதாகப் புகுந்தி ருந்தால் போந்த சுவடிருக்கும். அவன் பண்டே உள்ளத்தி லிருந்தமை விளங்கினமையால் போந்த சுவடில்லை என்றார். இந்நுட்பத்தை, பூவினிற் கந்தம் பொருந்திய வாறு போல் - சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது எனவரூஉந் திருமூலர் திருமந்திரம் நன்கு தெளிவுசெய்தல் காண்க. சமய நெறி உள்ளக்கமலத் தெழுந்தருளியுள்ள இறைவனை உணர்தற் கென்றே உலக வாழ்வு கொடுக்கப்பட்டது. இவ்வாழ்வை இயற்கை நெறி என்னுஞ் சமய நெறியில் நின்று ஒழுங்கு பெற நடாத்துவோர் குருநாதன் காட்சி பெறுவர். குருநாதன் அருளால் உள்ளக் கமலத்துள்ள ஒருவன் விளங்குவன். சமய நெறிகள் பலவா யிருக்கின்றனவே. mt‰WŸ vij¥ g‰¿ xGFtJ? என்னும் அச்சம் எவருங்கொள்ள வேண்டு வதில்லை. எவர்க்கு எச்சமயத்தில் விருப்பம் தோன்றுகிறதோ அவர் அச்சமயத்தில் நின்றொழுகலாம். சமய வாதத்தில் மட்டும் ஈடுபடலாகாது. அவ்வச் சமய வழி நின்றொழுகினால், முடிவில் எல்லாம் ஒன்றாகவே தோன்றும். மழை நீர் ஒன்றே ஒவ்வொருவர் நிலத்தில் நிற்கிறது. நிலத்தின் வரம்புகள் தோன்றுமட்டும், மக்கள் இஃது என்னிலத்து நீர் - இஃது உன்னிலத்து நீர் என்று சொல்லிக் கொள்வார்கள். பெருமழை பொழிந்து வெள்ளம் பெருக் கெடுத்து வரம்புகளை மறைத்தால் எல்லா நீரும் ஒன்றாகும். அந்நிலையில் என்னீர் எங்கே? c‹Ü® v§nf? இவ்வாறே முன்னே தோன்றும் சமயபேதங்கள் பின்னே சமரசமாகத் தோன்றும். சமயபேதப் பேச்சும் வேண்டா; வாதமும் வேண்டா. வேண்டுவது சமய ஒழுக்கம் (வழிபாடு). எச்சமய ஒழுக்கத்தையுங் கடைப்பிடிக்கலாம். பெரு நிலை கூடும்வரை, சமயப் படிகளை வலிந்து வெறுத்துத் தள்ளுதல் கூடாது. அவரவர் அவ்வச் சமயப் படிகளில் நின்று ஒழுகிவருவது பெருநிலைக்கு வழிதேடுவதா கும். இல்லையேல், தீய எண்ணங்களால் உள்ளம் புன்புலாலாகிப் புழுத்து நாறி இளகி நோய்வாய்ப்பட்டு மரணத்தைக் கூட்டும். எச்சரிக்கை! 1புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால் திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார். 2நாடு நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்றென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயில்கொள் வானே 3மூர்த்திதலந் தீர்த்தம் முறையால் தொடங்கி னர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே 4நீங்கள் விசுவாச முடையவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை யெல்லாம் பெறுவீர்கள். 1...b#g¤âš உறுதி கொள்ளுங்கள்; ஜெபம் உண்மை யாகவே (ஒருவரைத் தீயொழுக்கத்தினின்றும் காக்கும்; அல்லா வைத் தியானிப்பது மிகப்பெரிது.... இம் முதுமொழிகள் வழிபாட்டையும் ஜெபத்தையும் வலியுறுத்துவது காண்க. வழிபாடும் ஜெபமும் கரவற்றனவா யிருத்தல் வேண்டும்; நேரியனவா யிருத்தல் வேண்டும். நேர்மை ஒழுக்கத்தை ஓம்பும். பெரியோர் மொழிகள் இறைவன் உள்ள மலரில் வீற்றிருப்பதைப் பற்றிப் பெரியோர் வழிப் பிறந்த திருமொழிகளெல்லாம் ஒரே முகமாக முழங்கு கின்றன. அம்மெய்ம்மொழிகளை அவரவர் நூல்களிற் காண்க. இரண்டொரு மொழிகள் வருமாறு:- 2ஹ்ருத்பத்ம மத்யே ஸர்வம்த த்ப்ரஜ் ஞாநேத்ரம் ப்ரஜ்ஞா நேப்ரதிஷ் டிதம் ப்ரஜ்ஞா நேத்ரோ லோக: ப்ரஜ்ஞாப்ர திஷ்டா ப்ரஜ்ஞா நம்ப்ரஹ்ம 3மனனக மலமற மலர்மிசை எழுதரும் மனனுணர் வளவிலன் 4வானவன் காண்..... கருதுவார் இதயத்துக் கமலத்தூறும் தேனவன் காண் 5மாவாதல் களிறாதல் ஏறாதல் ஏறா மலர்த்தா மரைக்கே செலத்தாள் வைக்குந் தேவாதி தேவா நமதே நமது 6பரலோக இராஜ்யம் உமது உள்ளத்தில் இருக்கிறது 7சிலுவையையும் மாதா கோயிலையுந் தேடினேன்; ஒன்றுங் கண்டேனில்லை. உருவம் உள்ள கோயிலையும் இல்லாத கோயி லையும் பார்த்தேன். உண்மை விளங்கவில்லை. கடிவாளத்தைக் காபா பக்கந் திருப்பினேன். கடவுளைக் கிழவனுந் தேடினான்; இளைஞனுந் தேடினான். கடவுளைக் காணோம். என் உள்ளத்தை நோக்கினேன். அவ்விடத்தில் அவனைக் கண்டேன். kற்ற இடங் களில் அவன் கிடைக்கவில்லை. 8கோயிலைச் சுற்றுவதால் பயன் விளையாது. மனத்தைக் கோயிலாக் கொண்டு வழிபடு. மலர்மிசை ஏகினான் எவன்? இறைவன். எவர் மலர் மிசை? குருநாதன் உள்ள மலர்மிசை. இறைவனை மலர் மிசை கொண்ட குருநாதனை வழிபடுவது இறைவனை வழிபடுவதேயாகும். மாணடி சேர்ந்தார் ïறைவன்mடிâருவருளுக்குmறிகுறி.mt‹ குருநாதன் உள்ளங் கோயில்கொண்ட நிலையில் அவனது அடி திருவடி யாகிறது. இறைவன் அருளினும் மாண்புடையது வேறொன்றில்லை. அது மக்களின் பிறவிநோயைப் போக்கவல்லது. அத்தகைய மாட்சிமை வாய்ந்த திருவருளை மாணடி என்றது பொருத் தமே யாகும். குருநாதன் அடி புன்புலால் நாறும் புண்ணுடையதன்று. அது பொன்மலரென மிளிர்ந்து உள்ளத்தில் ஒளி கால்வது. அதன் ஒளி மாக்களை மக்களாக்குவது. அதனால் அது மாணடி எனப் பட்டது. சேர்ந்தார் - அடைந்தார், அடைதலை முக்கூறுபடுத்தலாம். ஒன்று உடலால் அடைதல்; மற்றொன்று மொழியால் அடைதல்; இன்னொன்று மனத்தால் அடைதல். மனத்தால் அடைதலில் ஏனை இரண்டும் அடங்கும். மனத்தால் அடைதலாவது இடை யறாது நினைத்தல். சேர்தல் - இடையறாது நினைத்தல் என்றார் பரிமேலழகர். 1மற்றுப் பற்றெனக் கின்றிநின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் தியான யோகம் இடையறாது நினைத்தலே தியான யோகம் என்பது. யோகம் பலவிதம். முயன்று வலிந்து மூச்சைப் பிடித்தல், முகத்தைச் செக்கச் செவேலென ஆக்குதல் முதலியன யோகக் கூறுகளாகா. இவை களால் தீமை விளைதலுமுண்டு. உடல் நலங் கருதிச் செய்யப்படுஞ் சிறுயோகம் மலயோகத் தின்பாற்பட்டது. இதையுந் தெளிந்தார் மாட்டுக் கேட்டுச் செய்வது நல்லது. பெரியோர் கூறியது அமலயோகம். இதற்கு, முயன்று வலிந்து மூச்சை ஈர்த்தல், நிறுத்தல், விடுத்தல் முதலியன வேண்டு வதில்லை. அமலயோகம் குருநாதன் அருளால் கூடுவது. இப் பேறு எளிதில் கிடைத்தல் அரிது. இதற்குப் படியாயிருப்பது ஒழுக்க நெறி. அறநெறி நின்று நெஞ்சை நிட்காமியமாகச் செய் வோர்க்குக் குருவருளால் கூடுவது அமல யோகம். நிட்காமிய கர்ம யோகத்தைப் பகவத்கீதை நன்று அறிவுறுத்துகிறது. 1காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின் வீட்டிற் புகுதல் மிகஎளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேர்அண்ட மூச்சைஉள்ளே ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே. அமல யோகத்துக்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படு கின்றன. இவ் யோகத்துக்கு இடையறாத தியானம் வேண்டும். தியான யோகத்தின் விளைவே அமல யோகம் என்பது. இரண்டுந் தொடர் புடையன. முடிவில் இரண்டும் ஒன்றாகும். தியானயோகம் குருநாதன் அருட்பேற்றிற்கு முன்னரும் பின்னரும் நிகழ்வது. முன்னையதற்கும் பின்னையதற்கும் முறையில் வேறுபாடு உண்டு. இஃது அநுபவத்தில் விளங்குவது. பின்னையதே அமலயோகம். தியானயோகம் குருவின் காட்சிக்கு முன்னும் பின்னும் நிகழ்வது என்னும் உண்மை மாணிக்கவாசகர் அருளிய போற்றித் திருவகவலால் நன்கு விளங்குகிறது. அன்பர்கள் அப்பகுதியை ஊன்றி நோக்குவார்களாக. ‘* * * தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுள முருகி யழுதுடல் கம்பித் தாடியு மலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற் பசுமரத் தாணி யறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கோணுத லின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு சாருங் கதியது பரமா அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலு நினையா தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனு மாறு கரையது புரள நன்புல னொன்றி நாதவென் றாற்றி உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் கண்களி கூர நுண்டுளி யரும்பச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி நிலமிசை நீடுவாழ்வார் என்பது கொண்டு அமலயோகர் என்று கூறலானேன். இங்கே சேர்ந்தார் என்பது அமல யோகரைக் குறிப்பது. ஐந்தவித்தானது பொய் தீர் ஒழுக்கநெறி நிற்றல் மேற் பாட்டில் பேசப்பட்டது. ஒழுக்கநெறி நிற்றல் என்பது பொது. நிற்றலுக்குரிய சிறப்புமுறை இதுமுதல் ஏழு பாட்டிலுஞ் சொல்லப்பட்டுள்ளது. திருவடி சேர்தல் சிறப்பு முறை. அதனால் மாணடி சேர்ந்தார் என்றார். 1பொய்யெல்லா * * * * தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே நிலமிசை நீடுவாழ்வார் நீடுவாழ்வார் என்பதற்கு விளக்கவுரை மேற்பாட்டில் கூறப்பட்டது. அங்கே ..... நின்றார் நீடுவாழ்வார் என்றார். இங்கே ..........nr®ªjh® நீடுவாழ்வார் என்றார். நெறியில் நிற்றலும் அடியில் சேர்தலும் இயல்பல்லவோ? அங்கே நிலமிசை இல்லை. இங்கே அஃதிருக்கிறது. நிலம் நிலம் என்பது மண்ணுலகத்தை மட்டுங் குறிப்பதன்று. அஃது எல்லாவற்றையுங் குறிப்பது. நிலம்: நில் என்னும் அடியாகப் பிறந்தது. மண்டிலங்க ளெல்லாம் ஞாயிற்றின் ஆணை வழியினின் றும் வழுவாது நின்று, அஞ்ஞாயிறு பொழியும் ஒளியாலும் வெம்மையாலும் பிறவாற்றாலுங் கோட்டின் வழிச் சுழன்று வருகின்றன. ஞாயற்றின் ஆணைவழி நிற்றலால் மண்டிலங்களும் நிலம் என்னும் பெயர் பெற்றன. உயிர் பருவுடல் நீத்ததும் அதனதன் இயல்புக் கேற்ற ஒவ்வொரு நிலம் புகும். உயிர் அவ்வந் நிலமிசை நீடுவாழ்தல் ஈண்டுச் சொல்லப்பட்டது என்னலாம். இந்நிலமிசை நீடுவாழ்தல் என்று கூறினுமாம். இவ்வாறு கூறுவோர் நிலமிசையும் நீடுவாழ்வார் என்று கொள்வர். மிசை நிலம் என மாற்றி மேல்நிலம் அதாவது வீடு என்று கூறுதலுமொன்று. நீடு வாழ்தலையும், அதற்குரிய திருவடி சேர்தலையும், திருவடி விளங்குமிடம் மலர்மிசை என்பதையும் குறிப்பிட்டவாறு காண்க. 1மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென் தலைமிசை தானணிப் பொறாஅது (4) 5 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின். பொருள் வால் அறிவன் - தூய அறிவனாகிய இறைவனது, நல்தாள் - நல்ல திருவடியை, தொழஅ ரெனின் - (ஒருவர்) வணங்கிக் கொண்டிராராயின், கற்றதனால் ஆய - (அவர் பல நூல்களைக்) கற்றதனால் விளைந்த, பயன் என் கொல் - பயன் என்னையோ? (ஒன்றுமில்லை). கருத்து கற்றதனாலாகிய பயன் இறைவனை வணங்குவது. விருத்தி கற்றலின் பயனும், வாலறிவன் இயல்பும் இப்பாட்டின் உள்ளுறை. மேற்பாட்டிற் போந்த மலர்மிசை ஏகினானை உணர்தலே கல்வியின் பயன் என்றும், இறைவன் மலர்மிசை ஏகியிருத்தலைத் தெளிந்தால் அவன் வாலறிவனாயுள்ள இயல்பு இனிது விளங்கும் என்றும் அறிக. வாலறிவன் நற்றான் தொழாஅ ரெனின் வால் - தூய்மை; 2ஊர்தி வால்வெள் ளேறே. அறிவன் - அறிவுடையவன் ; இங்கே இறைவன். நற்றாள் - மாணடி. தொழாஅ ரெனின் - வணங்கிக் கொண்டிராராயின்; அளபெடை இடையறாமையைக் குறிப்பது. வாலறிவன் வால் அறிவன் - தூய அறிவன்; இறைவன். அறிவு இறைக்கும் உண்டு; உயிர்க்கும் உண்டு. இரண்டறி வுக்குமுள்ள வேற்றுமை என்ன? முன்னையது அறியாமையற்ற அறிவு; பின்னையது அறியாமை விரவிய அறிவு. அவ்வறிவு, இவ்வறிவின் அறியாமையைப் போக்கித் தன்னைப் போலாக்கத் துணைபுரிவது. குறள் : 2 : குறிப்புப் பார்க்க. அறிவு - அறியாமை அறிவின் பண்பு அன்பு. அறியாமையின் பண்பு அன்பின்மை (பகைமை). இவற்றை விளக்குதற்கு விரிவுரை வேண்டுவதில்லை. அவரவர் தத்தம் உள் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து உணரப் பயின்று வரின் உண்மை விளங்கப் பெறுவர். வாழ்வில் சிலபோழ்து அன்பு எழுகிறது; சிலபோழ்து பகைமை எழுகிறது. எப்பொழுது அன்பு எழுகிறது? எப்பொழுது பகைமை எழுகிறது? அழுக்காறு அவா வெகுளி முதலியன கரணங் களில் தாக்குறாதபோது அன்பு எழுகிறது. அவை கரணங்களில் தாக்குறும்போது பகைமை எழுகிறது. இஃது அநுபவம். அழுக் காறு முதலியன எழாத போது, அறிவு ஆட்சி பெறுகிறதென்றும், அவை எழும் போது அறியாமை ஆட்சி பெறுகிறதென்றுங் கொள்க. அறியாமையே அழுக்காறு முதலிய அரக்கத் தன்மை களுக்குத் தாய்வீடென்க. இறை, அறியாமையே இல்லாத முழு அறிவாதலின், அது முழு அன்புடையதாயிருக்கிறது. உயிர், அறியாமை விரவிய அறிவாதலான், அது முழு அன்புடையதாக விளங்குவதில்லை. அன்பின் சிறப்பியல் பென்னை? பிறர் துயரைக் காணும் போது அதைக் களைய விரைவது அன்பின் சிறப்பியல்பு. இறை முழு அன்பு. அஃதென்ன செய்கிறது? உயிரின் அறியாமை கண்டிரங்கி, அதன் கட்டையறுத்து, அதைத் தன்னைப் போலாக்கத் திருவுள்ளங் கொள்கிறது; கொண்டு உயிருக்குத் தனு கரண புவன போகங்களை வழங்குகிறது. இத்துணையால் உயிர் படிப்படியே அறியாமையினின்றும் விடுதலை அடைந்து அடைந்து அறிவாகிறது; அதாவது இறைநிலை எய்துகிறது. அறிவும் உடலும் உயிர், ஆண்டவனருளால் பலதிற உடலங்களைத் தாங்கத் தாங்க அறிவும் சிறிது சிறிதாக முகிழ்க்கப் பெறுகிறது. உயிர் தாங்கும் உடல்நிலைமைக்கேற்ற அளவில் அறிவும் முகிழ்க்கும். இதைக் கொண்டு, உயிர்களை - ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறி வுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் என்று முறை முறையே ஆன்றோர் வகுத்தனர் போலும். இவ்வாறு படிப் படியே அளவு விளங்கப்பெறும் உயிர், என்றாதல் ஒரு போது அறிவு மயமாகியே தீரும். இதுவே உயிரின் தூய அறிவு நிலை. தூய அறிவுநிலை உயிர், தூய அறிவு நிலையை எப்பொழுது எய்துகிறது? கருவி கரணங்கள் முற்றும் அற்ற நிலையில் என்க. கருவி கரணங் களைப் பெறுதற்கு முன்னர் உயிர் அறியாமை மயமாயிருந்தது (இருள்மயமாயிருந்தது). அது கருவி கரணங்களைப் பெற்ற போது (படிப்படியே) அறிவு விளங்கப் பெறுகிறது; பெற்ற கருவி கரணங்களை முற்றும் அற்ற நிலையில் தூய அறிவாகிறது. இடை யில் பற்றுங் கருவி கரணங்கள் அறியாமையைக் கழுவுவதற்குத் துணைபுரிவனவாம். இங்கே உயிருக்கு மூன்று நிலை உண்டாவது நோக்கற் பாலது. ஒன்று முழு அறியாமை நிலை; மற்றொன்று அறியாமை கழலும் அவ்வவ்வளவில் அறிவு விளங்கும் நிலை; இன்னொன்று முழு அறிவு நிலை. அறிவும் மூளையும் இடை நிலையில், அறிவு பெருகப் பெருகக் கருவி கரணங்கள் மென்மையுற்றுக் கொண்டே போகும். அறிவுக்கு நிலைக்களன் மூளை. மூளை மென்மை உறஉற அறிவு கூர்ந்து கூர்ந்து விளங்குவதாகும். இஃது ஆராய்ச்சியாளரால் காணப் பெற்ற உண்மை. எடுத்துக்காட்டாக இரண்டொரு குறிப்பு வருமாறு:- மீன் மூளை கல்போலிருக்கிறது. அதன் கால் உறுப்புக்கள் கூராமல் (உள்ளது சிறவாமல்) கிடக்கின்றன. அது தரையில் நடமாடுவதில்லை. ஆமைக்கு ஐந்துறுப்பு உண்டு. அவ்வுறுப்புக் களைக் கொண்டு அஃது ஊர்கிறது. காரணம் என்னை? மீனின் மூளையினும் ஆமையின் மூளை மென்மைப் படுவதாகும். இன்னும் மூளை மென்மை உற உற உயிர் கட்குப் படிப்படியே சிறகு முதலியன முளைக்கின்றன; பின்னே நான்கு கால் முதலியன உண்டாகின்றன. மேலும் மூளை மென்மை உறஉற முன் காலிரண்டும் தரையில் படியாமல் கைகளாகி மேலெழுகின்றன. இந்நிலையில் உயிர்கள் இரண்டு கால் கொண்டு நடப்பனவா கின்றன. இருகால் பெற்ற மனிதப் பிறவி பரிணமித்த காலம் பலவாறு சொல்லப்படுகிறது. இப்பொழுது முப்பது லட்சம் ஆண்டுக்கு முன்னர் மனிதப் பிறவி தோன்றியிருத்தல் வேண்டும் என்ற ஆராய்ச்சி பிறந்திருக்கிறது. இவ்வாராய்ச்சி என்றும் ஒரு பெற்றியாயிராது. கால அளவு மாறுபட்டுக் கொண்டு போகும். இதைப்பற்றிய கவலை இங்கே வேண்டுவதில்லை. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மனிதருக்கும், இப்பொழுதுள்ள மனிதருக்கும், வேற்றுமை உண்டா இல்லையா என்பதே ஈண்டுக் கருதற்பாலது. மனிதர் தோன்றிய நாள்முதல் இன்றுவரை ஒரு தன்மையராயிருந்ததில்லை. மனிதருக்குக் கோரைப் பற்களும், மிகப் பருத்த நீண்ட குடர்களும் இருந்த காலமும் உண்டு. அவை, மூளை மென்மை உறஉறத் தேய்ந்துங் குறைந்தும் போயின. தேய்வு குறைவுக்கேற்ப அறிவு விளங்கிக் கொண்டு போதல் இயல்பு. முற்கால - இடைக்கால - மனிதரைப் பார்க்கிலும் இக்கால மனிதர் எவ்வளவு அறிவு விளக்கம் பெற்றுள்ளனர் என்பது வெள்ளிடை மலை. இவ்வறிவு சிற்சில சமயம் நேரிய வழியில் இயங்காதொழிவது ஒருவித குறைபாடு. நாளடைவில் குறைபாடு நீங்கும். குறைபாடே போராட்டத்துக்குக் காரணம். போராட்டம் என்றும் நிலவுவதன்று. போராட்டம் ஒருவித நிலை. (இது பொது முறை. முற்கால - இடைக்காலங்களில் தோன்றிய பெரியோர் தன்மைகளை உயிர் வளர்ச்சி ஆராய்ச்சி யில் நுழைத்துப் பார்ப்பது தவறு. இதுபற்றி இடம் நேர்ந்துழி விளக்குவன்.) இயற்கை நூல் ஆராய்ச்சியாளர் தற்கால மனிதன்வரை போந்துள்ளனர். அவர்தம் ஆராய்ச்சி வளர வளரப் பலதிற நுட்பங்கள் வெளியாகும். அவ்வாராய்ச்சி மனிதப் பிறவிக்கு மேலும் போகும். மூளை மென்மை உறஉற அறிவு விளங்குதல் ஈண்டு உன்னற் பாலது. மூளைக் கேற்றவாறு கருவி கரணங்கள் அமைந்து வருகின்றன. மூளை மென்மை உற்று உற்றுப் போவதைக் கொண்டு, கருவி கரணங்களே இல்லாத ஒருநிலை உண்மையை ஊகித்து உணரலாமன்றோ? அதுவே தூய அறிவு நிலை. முழு அறிவு மயம் உயிர், கருவி கரணமற்றுத் தூய அறிவாகும் பொழுது அதற்கொரு நிலைக்களன் ஏற்படுதல் வேண்டும். அந்நிலைக் களன் தூய அறிவாகிய இறை. முழு அறியாமையுடனிருந்த உயிர், இடையில் கருவி கரணங்கள் பெற்றுப் பெற்று, அறியாமை யினின்றும் விடுதலை அடைந்து அடைந்து, முடிவில் கருவி கரணம் முற்றும் இழந்து, முழு அறிவாகிய இறையுடன் ஒன்றி முழு அறிவாகிறது. அறிவி லணுக அறிவது நல்கிப் பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட் டறிவது வாக்கி அருளது நல்கும் செறிவொடு நின்றார் சிவமாயி னாரே எனவரூஉந் திருமந்திரத்தை ஓர்க. உயிர் அறியாமை மயமா யிருத்தலால், அதன் அறியாமையை நீக்குதற்பொருட்டுக் கருவி கரணங்களுடைய உடலை, அதற்கு வழங்குதற்குத் துணைபுரியும் இறை எத்தன்மையதா யிருத்தல் வேண்டும்? அஃது, அறியாமையே இல்லாததாய், கருவி கரண உடல் தாங்காததாய், முழு அறிவு மயமா யன்றோ இருத்தல் வேண்டும்? இறை அறியாமையே இல்லாதது; கருவி கரண உடல் தாங்காதது; முழு அறிவு மயமாயிருப்பது. அத்தகைய இறையைக் குரு நிலையில் வாலறிவன் என்றார் ஆசிரியர். வாலறிவன் ஒருவன். அவன் நிலையடைவோர் பலர். அவர் அறிவரெனப்படுவர். அறிவனையடைந்து அறிவன் நிலை அடைவோர் அறிவராதல் இயல்பு. அறிவர், தூய்மையில்லாத அறியாமையினின்றும் விடுதலையடைந்து, தூய அறிவனாகிய இறைவன் துணையால் தூய அறிவுப்பேறு பெறுதலால், இறைவனை அவரினின்றும் வேறுபடுத்தற் பொருட்டு வாலறிவன் என்றார். இறைவன் அறிவு என்பதையும், அறிவன் என்பதையும், கருவி கரணம் அற்றவன் என்பதையும் விளக்கும் அநுபூதி மான்கள் மெய்யுரைகள் பல. இரண்டொன்று வருமாறு:- 1அறிவே ஆலங்காடா 2அறிவான தெய்வமே 3அறம் பகர்ந்த அறிவன் நீயே 4கரணங்க ளெல்லாங் கடந்து நின்ற கறை மிடற்றன் 5கடவுள் ஆவியே நற்றாள் வாலறிவன் தாளே நற்றாள். ஏனையோர் தாள்கள் நற்றாள்களல்ல. வாலறிவன் இயற்கையாகவே கட்டில்லாதவனா தலானும், அவன் தாள் கட்டுடையார்க்கு நலஞ்செய்ய அவர்தங் கட்டறுக்குந் தன்மையுடையதாகலானும், அத்தாள் நற்றாள் என்னப்பட்டது. பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்றாள் என்றார் என்று பரிமேலழகர் கூறியதும் ஈண்டு நோக்கத்தக்கது. வாலறிவனவல்லாத ஏனையோர் கட்டுடையாராகலானும், அன்னார் வாலறிவன் நற்றாள் பற்றிக் கட்டறுக்க வேண்டு மாதலானும் அவர் தந் தாள்கள் நற்றாள்களாகா. முன்னே மாணடி என்றார்; இங்கே நற்றாள் என்றார். மாண் நல் இரண்டும் ஒரு கருத்துடையனவே. மாண் நல் என்னும் அடைமொழிகள், பிறர் அடியினும் இறைவன் அடி அல்லது தாள் சிறந்தது என்பதை வலியுறுத்துவன. இரண்டு பாக்களில் அடியை அல்லது தாளை அடை மொழியால் அணி செய்தமையால் கீழ்வரும் பாக்களில் வரும் அடியை அல்லது தாளை அவ்வடையால் அணி செய்யாது விடுத்தனர். பொருள் கொள்ளும்போது, மாண் அல்லது நல் என்னும் அடை மொழியைச் சேர்த்துக் கொள்வது பொருத்தமாகும். தொழாஅ ரெனின் தாளே தொழுதற் குரியதாதலின், தாள் தொழாஅ ரெனின் என்றார். தொழாஅ ரெனின் என்னும் அளபு கொண்ட எதிர்மறைக் கூற்றில் ஒருவித ஆணையும், இன்றியமை யாமையும், ஆர்வமும், இரக்கமும், இன்ன பிறவும் கிளர்ந்து நிற்றல் புலனாகிறது. அக்கூற்றில், இறைவன் தாளைத் தொழுதே தீரல் வேண்டும். இல்லையேல் வாழ்வு என்னாம்! mªnjh! என்னும் உள்ளுறையும் பொலிவது காண்க. அளபெடை இசை நிரப்புவது அளபெடை என்று கூறுவோர் கூறுக. இலக்கண வரம்பு எதுவாயினுமாக. இலக்கிய இலக்கணம் முறையாகப் பயின்ற பின்னர், இயற்கையில் ஒன்றி, அறிவை விடுத்துத் துழவும் பயிற்சியும் பெறுதல் வேண்டும். ஈண்டுப் போந்துள்ள அளபெடை வெறும் இசையை மட்டும் நிரப்பி நிற்பதன்று. அது பொருளும் உடையது. திருவள்ளுவர் நூல், குறள் வெண்பாக்களால் ஆக்கப் பட்டது. ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு கடலுண்டு என்று கூறல் மிகையாகாது. ஒவ்வொரு பாவில் ஒவ்வொரு கடலைப் புகுத்த வந்தவர் வெறும் இசை நிரப்புதற் பொருட்டு வெற்றொலி யையும், வெற்றெழுத்தையும், வெற்றுச் சொல்லையும் பெய் வரோ? ஒருபோதும் பெய்யார். அவர்தம் வாய்மை யினின்றும் பிறந்துள்ள ஒவ்வோர் ஒலியும், ஒவ்வோர் எழுத்தும், ஒவ்வொரு சொல்லும் பொருளுடையனவாகவேயிருக்கும். அவற்றை வெறும் இலக்கிய இலக்கணக் கண் கொண்டு பார்த்தல் மட்டும் போதாது. இயற்கைக் கண்கொண்டும் அவற்றை உற்று நோக்கல் வேண்டும். இயற்கை நோக்குக்கு நுண்பொருள் புலனாகும். அளபெடை, அசைநிலை என்று பிறரால் கூறப்படுவன வெல்லாம், திருவள்ளுவர் மொழியில் பொருளுடையன வாகவே திகழும். தொழாஅர் என்பதிலுள்ள அகர அளபெடையை நோக்குக; அதனுடன் ஒன்றுக; ஒன்றித் திளைக்க. எழுத்து மறையும். எழுத்து இயற்கை ஒலியாகும். அங்கே நுண் பொருள் விளங்கும். தொழாஅர் என்பது இடையறாது தொழுது கொண்டி ருத்தலை உணர்த்துவது. தினைப் பொழுதுந் தொழுகையை மறத்தலாகாதென்பது அதன் நுண்பொருள். பனைக்கை * ** * தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ என்றார் அப்பர். இக் குறட்பாவில் இடையறாது என்னுங் குறிப்பு யாண்டு மில்லை. அஃது அளபெடையிலேயே மிளிர்கிறது. இடையறாத் தொழுகை, அழுக்காறு முதலியனவும் புன்புலால் முதலியனவும் பொதிந்த இதயத்தைப் பொன் மலராக்கி, அதன் மிசை ஏகி யுள்ள இறைவனை உணர்த்தவல்லதென்க. தொழுகை தொழுகை வாழ்வுக்கு இன்றியமையாதது. தொழுகையற்ற வாழ்வு சிறை நீர் போன்றது. தொழுகையால் ஆவி சாவி ஆகாது. ஆவிக்கு ஆக்கமளிப்பது தொழுகையே. உடல் நலத்துக்கு உணவு. உயிர் நலத்துக்குத் தொழுகை. எவரைத் தொழுவது? மலக்கட்டால் தொடக்குண்டு கிடப் போரையா தொழுவது? இவரைத் தொழுவதால் மலக்கட்டு எப்படி அறும்? குருடனைக் குருடன் பற்றி நடந்தால் என்னாகும்? மலக்கட்டே இல்லாத வாலறிவன் நற்றாளே தொழுகைக்கு உரியது. அதனால் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின் என்றார். தம்மையே * * * பொய்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் என்றார் வன்றொண்டரும். வாலறிவன் தாளைத் தொழாதார் என்னாவரோ என்பார், தொழாஅ ரெனின் என்றார். அவர் பிறவி நோக்கத்தை இழந்தவராவராதலின், அவரை என்னாவரோ என்று குறித்த ஆசிரியர்க்கு மனமெழவில்லை. இரக்கம் காரணம் போலும்! தன்னல அழிவு தொழுகையால் விளையும் நலன்கள் என்னை? தொழுகை யால் விளையும் நலன்களைப் பலபடக் கூறலாம். அவைகளுள் விழுமிய ஒன்றை ஈண்டுக் குறிப்பிடுவது சிறப்பு. அது தன்னல அழிவு. தொழுகை என்னுஞ் சொல்லே நெஞ்சைக் கவர்கிறது. அதில் தாழ்மையும், பணிவும், அமைதியும், அன்பும் பொலி கின்றன. இவ்வியல்புகளைத் தொழுகையால் பெறுதல் உறுதி. இவை தன்னலத்தை அழித்தல் ஒருதலை. தொழுகை, மனம் மொழி மெய்களால் நிகழ்தல் வேண்டும். மனம் மொழி மெய் மூன்றுந் தொடர்புடையன. அவை அரும்பு மலர் காய் போன்றன. மனத்தொழுகை, தியானம்; மொழித் தொழுகை, இயற்கை - இறைவனை வாழ்த்தலும் பரநலப் பேச்சுமாகும்; மெய்த் தொழுகை, இயற்கை - இறை வழிபாடும், உயிர்ப் பணியுமாம். உயிர்கட்குச் செய்யப்படும் பணி இருவிதம். ஒன்று தன்ன லத்தை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று பரநலத்தை அடிப்படையாகக் கொண்டது. பரநலத்தை அடிப் படையாகக் கொண்டது தெய்வ வழிபாடாகும். தொண்டில் ஈடுபடப்படத் தன்னலம் படிப்படியே கெட்டுக்கெட்டு முறைமுறையே பரநலம் உறும். இதை விரித்துக் கூறுவது திருவள்ளுவர் நூல். தன்ன லத்தை எப்படி அழிப்பது என்பதும், பரநலத்தை எப்படி வளர்ப்பது என்பதும் திருவள்ளுவர் நூலில் செவ்வனே அறிவுறுத்தப் பெற்றிருக்கின்றன. மனத்தால் இறைவனை உன்ன உன்ன இறைவன் இயல்பு களாகிய அன்பு முதலியன படியும். அன்பு முதலியன படியப் படிய அவைகளுக்கு மாறுபட்ட இகல் முதலியன மடிந்து போகும். இகல் மடிந்து அன்பு படிந்த உள்ளத்தினின்றும் பிறக்கும் மொழி எத்தகையதாயிருக்கும்? செயல் எத்தகையதா யிருக்கும்? அம்மொழி இறையினுடையதாகும்; அச்செயலும் இறையினுடையதாகும். இறைவன் எத்தகையன்? அன்பாய், தன்னல மற்றவனாய், பரநலமே உடையவனா யிருப்பவன். அவன் இயல் படிந்த மனத்தினர் பேச்சையுஞ் செயலையும், அவன் பேச்சு- அவன் செயல் - என்று கூறுதல் தவறாகாது. உயிரின் இயல்பு, சார்ந்ததன் வண்ணமாவது. அஃது ஆணவத்தோடிருக்கும்போது ஆணவ மயமாயிருக்கும்; இறை யோடிருக்கும்போது இறை மயமாயிருக்கும். ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ என்றார் தாயுமானார். உயிர் ஆணவத்தினின்றும் விடுதலையடைந்து தாணுவா தற்குத் துணை செய்வது தொழுகை. தொழுகை முதலாவது மனத்தைத் தூய்மை செய்கிறது. தூய நெஞ்சம் தன்னலத்துக்கு இடந்தராது. அதன் கண் பரநலமே நிலவும். இந்நெஞ்சுடையார் செய்யுந் தொண்டே தொண்டாகும். மனமாசகன்ற அறவோர் நெஞ்சத் தாமரையில் இறைவன் விளங்கலால், அவர் என்றும் ஒப்புரவாளராய்ப் பயன் கருதாத் தொண்டு நிகழ்த்தியவண்ணமிருப்பர். அவர் இறை போன்றவர் என்பது மேலே சொல்லப்பட்டது. உயிர்க ளெல்லாம் தன்னைப் போலாதல் வேண்டுமென்று இயற்கையின் வாயிலாகவும், குருவின் வாயிலாகவும் இறைவன் தொண்டு செய்து கொண்டே யிருக்கிறான். அவனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அவனே பெருந்தொண்டன். அத் தொண்டனைத் தொழுது தொழுது தொண்டராவோரும் என்றும் உயிர்கட்குத் தொண்டு செய்து கொண்டேயிருப்பர். மேன்மக்கள் தொண்டே செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் (இயற்கை கடந்த தனி இறையைத் தெளிந்து அதனுடன் ஒன்றுபடும்வரை) ஓய்வை விரும்பமாட்டார்கள். அவர்கட்கு வீடுபேறு தொண்டே; ஓய்வு வீடு பேறன்று. இதுபற்றியே தொழாஅ ரெனின் என்பதற்கு வணங்கிக் கொண்டிராராயின் என்று பொருள் சொல்லப்பட்டது. அளபெடையின் நுட்பம் செவ்வனே விளங்குதல் காண்க. என் கடன் பணி செய்து கிடப்பதே எனவரூஉம் அப்பரெம் பெருமான் திருவாக்கை ஓர்க; சிறப்பாகக் கிடப்பதே என்பதை ஓர்க. இத் தலைப்புக் கொண்ட ஒரு நூலும் என்னால் இயற்றப் பட்டது. உயிர்கட்குப் பயன் கருதாப் பரநலத் தொண்டு செய்யும் பேறு, தொழுகையாலேயே கூடும். தொழுகையால் மனம் தூய்மையுறுகிறது. தூய மனத்தில் இறையின் இயல்புகள் படிகின்றன. இவ்வியல்புகளால் தன்னலம் அழிந்து பரநலம் எழுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படை தொழுகை. அதன் பெற்றி நோக்கியே வாலறிவன் நற்றாள் தொழாஅரெனின் என்றார். இறைவன் தாள், திருவருளுக்கு அறிகுறி என்பது முன் பாட்டில் விளக்கப்பட்டது. வாலறிவன் நற்றாளைத் தொழு தலாவது அவன் திருவருளை உன்னி உன்னி அதுவாகிப் பயன் கருதாச் சேவை செய்வதென்க. சேவைக்கு அடிப்படை அருளன்றோ? இது, சமயம் நேர்ந்துழி நன்கு விளக்கப்படும். கற்றதனா லாய பயன் என்கொல்? கற்றதனால் ஆய - கல்வி பயின்றதனால் ஆகிய; கற்றதனால் விளைந்த; நூல்களைக் கற்றதனால் விளைந்த; ஞானத்தைக் குருவாயிலாகக் கற்றதனால் விளைந்த என்னலுமாம். ஆய - ஆகிய : பெயரெச்சம். என் - எவன் : தொகுத்தல் விகாரம். எவன் என்னும் வினாப்பெயர் என்னென்றாய் ஈண்டின்மை குறித்து நின்றது- பரிமேலழகர். எவனென்பதோர் பெயருமுண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னை யென்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக் குறிப்பு முற்றென்க - சேனாவரையம்; படுத்த லோசை யால் எவன் என்பது பெயருமாம். அஃது இக்காலத்து என் னென்றும் என்னை யென்றும் மருவிற்று- நச்சினார்க்கினியம். (தொல்காப்பியம் - சொல் - வினையியல் : 22). கொல் : ஈண்டு அசை என்பர். கொல் என்னும் இடைச் சொல்லை ஐயப்பொருளில் கூறுவதும் அசைநிலையாகக் கொள்வதும் மரபாகிவிட்டன. கொல்லே ஐயம் என்பது தொல்காப்பியச் சூத்திரம் (இடையியல் : 2). திருக்குறள் நூலில் வெற்றுச் சொல் காண்டல் அரிது என்பதற்குக் காரணம் இப்பாட்டின் விருத்தியில் மேலே சொல்லப்பட்டது. கொல் பெரிதும் வினாக் குறிப்பைத் தொடர்ந்து வருவது இயல்பு. இதுபற்றியே என்சொல் என்ப தற்கு என்னை என்று மட்டும் பொருள் கூறாது, என்னையோ என்று பொருள் கூறப்பட்டது. ஆகவே, கொல்லும் ஈண்டுப் பொருளுடையதென்க. கற்றதனால் கற்றதனால் என்பதுடன் அதன் இனமாகிய கேட்ட தனால் என்பதையுஞ் சேர்த்துக் கொள்க. கற்றலினாலுந் தெளிவு விளைதலுண்டு; கேட்டலினாலுந் தெளிவு விளைத லுண்டு.தெளிவுக்குஇரண்டும்வேண்டற்பாலன.1கற்றல்கேட்டலுடையார்பெரியார்கழல்கையால்ழுதேத்த... என்பது ஞாசம்பந்தர் திருவாக்கு. கற்றிலனாயினுங் கேட்க அஃதொருவன் - ஒற்கத்துக் கூற்றாந் துணை என்பது ஆசிரியர் திருவாக்கு. கற்றதனால் என்பதற்குப் பல நூல்களைக் கற்றதனாலும் கேட்டதனாலும் என்று கொள்க. கல்வி - அறியாமையைக் கல்வி அறிவை விளக்கஞ் செய்வது. கல்வி மூவிதம். அவை ஏட்டுக் கல்வி, இயற்கைக் கல்வி, இறைக் கல்வி என்பன. ஏட்டுக் கல்வியைத் தொடர்ந்து இயற்கைக் கல்வி பெற முயல்வது நல்லது. இயற்கையின் வாயிலாக, அதன் உயிராகிய இறையை உணருங் கல்வி பெற முயல்வது அதனினும் நல்லது. Kக்கல்வியுடையராலும் நூல்கள் இயற்றப்படுவதுண்டு. இa‰if¥ பல்கலைக் கழகத்தில் பயின்றோர் தங்கூர்த்த மதி யால் நூல்களின் திறங்களை அளந்து கூறுதல் கூடும். இவர்க்கு, இறையருள் மாந்தோரால் அருளப்பெற்ற நூல்கள் இவை என்பதும், இயற்கை இன்பம் நுகர்ந்தோரால் யாக்கப் பெற்ற நூல்கள் இவை என்பதும், Vட்டளவில்Ãன்றோரால்ïயற்றப்bபற்றüல்கள்ïவைvன்பதும்eன்குòலனாகும்.ïiwt‹ இயலுணர்ந்து அவன்தாள் தொழுவதே பயனுடையதாகும். இறைவன் இயலுணர்ந்து அவன் தாள் தொழுதற்குக் கல்வி வேண்டும். இதுபற்றியே கற்றதனால் என்றார். இங்ஙனமாயின் கல்லார் நிலை என்னாம் என்று சிலர் கருதலாம். கல்லாரும் இறைவன் தாளைத் தொழுகின்றனர். ஆனால் இவர் இறைவன் இயலுணர்ந்து அவன் தாளைத் தொழுகின்றாரில்லை. கற்றவரோ இறைவன் இயலுணர்ந்து அவன் தாளைத் தொழுகின்றனர். இதுவே கல்லார் தொழுகைக் கும் கற்றார் தொழுகைக்கும் உள்ள வேற்றுமை. இறைவன் இயல் கலையளவிலாதல் அறிவில் விளங்க அவன் தாளைத் தொழுவதே நேரியதாகும். இறைவன் இயல் உணர்தற்குக் கல்வி வேண்டற்பாலதே. 1கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்றும், 2கற்றவ ருண்ணுங் கற்பகக் கனியை என்றும் தமிழ்மறை முழங்குதல் காண்க. ஆய பயன் ஆசிரியர் கற்றதனால் என்ற அளவுடன் நின்றாரில்லை; மேலுஞ் சென்று ஆய பயன் என்றார். இதனால் கற்பது மட்டும் போதாது என்பது விளங்குகிறது. கற்றதனால் ஆய பயன் ஒன்றிருக்கிறது. அஃதென்னை? அது தொழுகை. தொழுகையற்ற கல்வி கல்வியாகாது. கற்றுஞ் சிலர் இறைவன் தாள் தொழாது கிடக்கின்றனர். அவர் கல்வியாலாய பயனை இழந்தவரே யாவர். ஆடித் திரிந்து நான் கற்றதுங் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ என்று தாயுமானார் இரங்குதல் காண்க. கற்றுங் கடவுளைத் தொழாதார் கல்லாரே யாவர். நூல்களைக் கற்றதனால் மட்டும் பயன் விளையாது. நூல்களைக் கற்று, வாலறிவன் நற்றாளைத் தொழுதல் வேண்டும். அத்தொழுகை கற்றதனாலாகிய பயனை விளைவிக்கும். ஏட்டுக் கல்வி பயின்று இறைவனைத் தொழாது கிடப் போர் மேலும் மேலும் விளக்கம் பெறா தொழிவர். அவர் வழுக்கி வீழினும் வீழ்வர். உயிர்கள் மேலும் மேலும் விளக்கம் பெறுதற்கும், அவை வழுக்கி வீழாமல் காப்புப் பெறுதற்கும் தொழுகை கொழுகொம்புபோல் துணை புரியும். தொழுகை, மக்களை ஏட்டுக்கல்வியினின்றும் உயர்த்தி, இயற்கையில் நாட்டத்தைச் செலுத்த உந்தும்; மேலும் இறையின் உண்மையை அவர்கள் உணரவும் துணை புரியும். ஆகவே, மக்கள் தொழுகையின்றி ஏட்டுக்கல்வி யளவில் நிற்றல் தங்கள் வாழ்வுக்கு இழுக்குத் தேடுவதாகும். என்கொல்? என்கொல் என்பதிலுள்ள விரைவைச் சிந்திக்க. இது தொழுகையின் இன்றியமையாமையை உணர்த்துவது. தொழு தல் வேண்டும் என்பார் என்சொல் என்றார். கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாளைத் தொழுவது; இல்லையேல் கற்றதனாலாய பயன் என்கொல் என்றபடி. கற்றதன் பயன் என்னை? வாலறிவன் உண்மையை உணர்ந்து, அதனால் தெளிவுபெற்று, மற்றவர்க்குச் சேவை செய்வது. இதற்குத் துணைபுரிவது தொழுகை. தொழுகை கற்றதனாலாகிய பயனை விளைவித்தலால் வாலறிவன் நற்றாள் தொழாஅரெனின், கற்றதனாலாய பயன் என்கொல் என்றார். 6 வேண்டுதல் வேண்டாமை 1இலானடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பை இல. பொருள் வேண்டுதல் வேண்டாமை இலான் - விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது, அடி சேர்ந்தார்க்கு - திருவடியை அடைந் தவர்க்கு, யாண்டும் - எவ்விடத்தும், இடும்பை இல- துன்பங்கள் இலவாம். கருத்து துன்பமொழிக்க விருப்பு வெறுப்பில்லா இறைவனடி சேர்தல் வேண்டும். விருத்தி வாலறிவன் நற்றாளைத் தொழுதற்குக் கல்வி வேண்டு மென்பது மேற்பாட்டின் நுட்பம். அக்கல்வியால் வேண்டுதல் வேண்டாமை விளையும் என்பது இப்பாட்டின் நுட்பம். வேண்டுதல் வேண்டாமை இலான் வேண்டுதல் வேண்டாமை - விருப்பு வெறுப்பு; ராகத்வேஷம். வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதற்கு, இன்பமும் வெகுளியும் இல்லாதானது என்று மணக்குடவர் பொருள் கூறியுள்ளார். அவரே, பொருளுங்காமமும் ஆகா என்பதற்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்று பெயரிட்டார் என்று விளக்கஞ் செய்திருக்கிறார். இலான் - இறைவன். வேண்டுதல் வேண்டாமை வேண்டுதல் உள்ள இடத்தில் வேண்டாமையுமிருக்கும். இஃதுள்ள இடத்தில் அஃதுமிருக்கும். ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்றுமிருத்தலால் இரண்டும் இங்கே குறிக்கப் பெற்றன. விருப்பு வெறுப்பு நிகழ்ச்சிகளின் அடிப்படையான காரணம் அறியாமை (அவித்தை); அதனின்றும் பிறக்கும் காம வெகுளி மயக்கம் முதலியன தொடர் காரணம். எக்காரணம் பற்றியோ ஒரு பொருளினிடத்து விருப்போ வெறுப்போ தோன்றுகிறது. அதை நிறைவேற்றிக் கொள்ளப் பலவகைச் செயல்களில் - கர்மங்களில் - தலைப்படல் நேர்கிறது. அச்செயல்களின் பயன் யாண்டுச் செல்லும்? பயன், தான் பிறந்த இடத்தையே நோக்கிச் செல்லும். மண்கட்டியை எறிந்தால் அஃது எங்கே விழும்? அது மண்ணிலேயே வந்து விழும். நெருப்பு, தன்னைத் தீண்டுவோரைச் சுடுவது இயற்கை. ஒரு வினை எத்தனையோ கான்முளைகளை ஈனும். கான் முளைகள் புற்றீசல்போலப் பெருகும்; கொடி கொடியாய்ப் படரும்; வினைக்கொடிகள் வலைபோலாகும். வலையில் உயிர் சிக்கிக் கொள்ளும். சிக்கல் இடும்பை (துன்பத்தை) விளைத்தல் இயல்பு. இடும்பைகள் பல; பலதிறத்தன. வினைகளெல்லாந் திரண்டு திரண்டு துன்பங்களின் விளை வாகின்றன. துன்பங்களின் பாகுபாடு பலவிதம். அவற்றைப் பிறப்புத் துன்பம் இறப்புத் துன்பம் என்னும் இரண்டில் அடக்கலாம். பிணி மூப்பு முதலியன இடைப்பட்டன. பிறப்பிறப்புத் துன்பம் ஒழிந்தால் மற்றத் துன்பங்களெல்லாம் தாமே ஒழியும். ஆதலால், பிறப்பிறப்புத் துன்பத்தை ஒழிக்க முயல்வதே சிறப்பு. இரண்டும் எப்படி ஒழியும்? வேண்டுதல் வேண்டாமை அற்ற நிலையில் இரண்டும் ஒழியும். அறியாமையினின்றும் வேண்டுதல் வேண்டாமை பிறக்கின்றன. இவற்றினின்றும் எண்ணற்ற வினைகள் தோன்று கின்றன. எல்லாவற்றிற்கும் மூலம் அறியாமை. அறியாமை வேரை அறுப்பதற்கு வேண்டுதல் வேண்டாமை எழாதவாறு காத்தல் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை அறியாமைக்கும், பல வினை களின் விளைவிற்கும் நடுவண் சிங்கநோக்கா யிருப்பன. அவை எழாதவாறு காக்கப்படுமேல் மூலமும் அழியும்; விளைவும் ஓழியும். இலான் இறைவன் வாலறிவனாதலால் அவனிடத்தில் அறியா மையே கிடையாது. அறியாமை யில்லாத இடத்தில் வேண்டுதலும் இராது; வேண்டாமையும் இராது. இது பற்றியே இறைவனை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்றார். இறைவனிடம் அறியாமை இன்மையான் அவன்மாட்டு வேண்டுதல் வேண்டாமை நிகழ்தற்கு ஏதுவில்லை. இலான் என்பது, இறைவன் இயல்பாகவே வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்பதை உணர்த்துவது. இறைவன் எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாதலின், எதைக் குறித்தும் அவனிடம் வேண்டுதல் வேண்டாமை எழுதல் அருமை. குறைவுள்ள இடத்தில் அவை எழுதல் இயற்கை. குறைவு உள்ளத்தை அறிவால் நிறைவாக்கிக் கொண்டால் வேண்டுதல் வேண்டாமை எழுதற்கு இடமிராது. அடி சேர்ந்தார்க்கு அடி சேர்தல் என்பதைப் பற்றி, மலர்மிசை ஏகினான் என்னுங் குறளின் விருத்தியில் சில கூறப்பட்டன. ஈண்டைக் கேற்பச் சில கூற விரும்புகிறேன். விருப்பு வெறுப்பு இல்லாதவன் இறைவன். அவனடி சேர்ந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராவர். உயிர் சார்ந்ததன் வண்ணமாவது இயற்கை. இறைவன் இயல்பாகவே விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனடி சேர்ந்தோரும் அவனது சேர்க்கையால் விருப்பு வெறுப்பை அறுத்துக் கொண்டவராவர். ஆகவே, இறைவனை விருப்ப வெறுப்பு இல்லாதவன் என்றும், அவனடி சேர்ந்தவரை விருப்பு வெறுப்பு அற்றவர் (அறுத்துக் கொண்டவர்) என்றுங் கொள்க. வழி விருப்பு வெறுப்பை அறுத்துக் கொள்ளுதற்குரிய வழி என்ன? வழி ஆசிரியரே காட்டுகிறார். வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு என்பதில் ஆசிரியர் காட்டும் வழி யிருத்தல் காண்க. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்தல் உற்ற வழியாகும். வேண்டுதல் வேண்டாமையை ஒழிக்க இறைவன் திருவடி சேருமாறு ஆசிரியர் அறிவுறுத்துகிறார். திருவடியைச் சேர்தலா வது, திருவடியை இடைவிடாது நினைத்தல். இவ்வாறு பரிமே லழகர் உரை கண்டுள்ளனர். இறைவன் திருவடியை இடையறாது நினைத்தலால் வேண்டுதல் வேண்டாமை அறும்நிலை எய்தல் ஒருதலை. நினைத்தல் அதினும் இடையறாது நினைத்தல் கூடுதற்கு முயற்சி தேவை. அம் முயற்சிக்குரிய துறைகளைக் கொண்டதே திருவள்ளுவர் நூல். ஈண்டுப் பொதுப்பட இரண்டொன்று குறித்தல் நலம். உடல் - பொறி - புலன் - மனம் உயிர் நலனுக்கென்று உடலும் உலகமும் வழங்கப்பட்டன. உடல் தாங்கிய உயிர் உலகிடை வாழ்ந்து, வேண்டுதல் வேண் டாமை அறும் நிலை எய்தல் வேண்டும். இதற்குத் தடைகள் பல இருக்கின்றன. தடைகள் எங்கே இருக்கின்றன? உடலிலா? உலகிலா? உடலும் உலகும், உயிர் நலனுக்கென்று ஏற்பட்டவை. நலனுக்கென்று ஏற்பட்டனவற்றுள் அந்நலனைக் கெடுத்தற் கென்று தடைகள் எங்கிருந்து தோன்றின? உயிருக்கும் உலகுக்கும் இடையிலிருப்பது உடல். உடல் இல்வழி உயிர் உலகை உணராது; இன்பம் நுகராது. உணர்வுப் பேற்றுக்கும் இன்ப நுகர்ச்சிக்கும் கருவியாயிருப்பது உடல். உடலில் ஐம்பொறி அமைந்திருக்கின்றன. ஐம்பொறி வழி எழுவன ஐம்புலன். ஐம்புலனுக்கும் ஊற்றாயிருப்பது மனம். மனத்தை இயற்கை வழிச் செலுத்தினால் புலன்களும் அவ்வழிச் செல்லும். மனத்தை வேறுவழியிற் செலுத்தினால் புலன்களும் அவ்வழியே செல்லும். மனம் எவ்வழி அவ்வழியே புலன்களும் உழலும். பொய்யறிவு மனம் குரங்கு என்று சொல்லப்படுகிறது. அது குரங்கா? அதைக் குரங்காக்குவது ஒன்று. அஃது எது? அது பொய்யறிவு. பொய்யறிவு என்பதும், அறியாமை என்பதும் ஒன்றே. உயிர் களைப் பாழ்படுத்துவது அறியாமை. 1பேதைமை யென்னும் வித்திற் பிறந்தபின் வினைக ளென்னும் வேதனை மரங்கள் நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட் டவலம் பூத்து மாதுய ரிடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும் பொய்யறிவைப் போக்கினால் மெய்யறிவு முகிழ்க்கும். மெய்ம்மையை மறைத்திருப்பது பொய்ம்மை. பொய்ம்மை எப்படிப் புகுந்தது? புலன்களைச் செயற்கையிற் செலுத்தச் செலுத்தப் பொய்ம்மை புகுந்து கொண்டே யிருக்கும். பொய்ம்மை, மனத்தைக் குரங்காக்குகிறது. மனக் குரங்கு புலங்களைப் பேயாக்குகிறது. பேய்ப் புலன் வேண்டுதல் வேண்டாமையை எழுப்புகிறது. அதனால் இடும்பை விளைகிறது. மனமும் புலனும் பொய்ம்மைக்கு ஆளாதலால் நல்லன வெல்லாம் தீயனவாகும்; இன்பமெல்லாம் துன்பமாகும்; வாழ்வே தீய - துன்ப - மயமாகும். தீயன, நல்லனவாதல் வேண்டும்; துன்பமெல்லாம் இன்பமாதல் வேண்டும். இதற்கென் செய்வது? உலகையும் மனத்தையும் ஒன்றுபடுத்தும் புலன்களைச் செம்மை செய்தல் நல்லது. புலன்களைச் செம்மை செய்தலாவது அவற்றை அவித்தல்; அவித்தலாவது நிர்மூலமாக்குவ தன்று. விரிவு பொறிவாயில் ஐந்தவித்தான் என்னுங் குறளின் விருத்தியிற் பார்க்க. புலன் செம்மையுறின் மனமுஞ் செம்மையுறும். மனச் செம்மையால் பொய்ம்மை பொன்றும்; மெய்ம்மை முகிழ்க்கும். துக்க நிவாரணம் புலன்களுள் சிறந்தது கட்புலன். இப்புலனால் எதையும் நல்லனவாகக் காணப் பயிலுதல் வேண்டும். கட்புலன் நல் வழிப்பட்டால், மற்றப் புலன்களும் படிப்படியே அவ்வழிப்படும். இப் புலப்பயிற்சி துக்க நிவாரணத்துக்கு வழி காட்டும். துக்க நிவாரண மார்க்கம் பல துறைகளை யுடையது. அவற்றை எட்டாகச் சில பெரியோர் தொகுத்துள்ளனர். முதலாவது நற்காட்சி. இதனுடன் மற்றுமுள்ள ஏழும் வருமாறு:- 1நற்காட்சி நல்லொழுக்க நல்வாய்மை நல்வாழ்க்கை நற்செய்கை யோடைந்து நாடு 1நன்முயற்சி நன்காங் கடைப்பிடிநல் லோர் தம்பால் செல்கையிட னெட்டனைத்துந் தேறு இவ்வெட்டையும் வாழ்வில் கடைப்பிடித் தொழுகினால், சீலக் கதவு திறந்துகொள்ளும். சீலம் சீலம் ஐந்து என்றும், எட்டு என்றும், பத்து என்றும் சொல்லப்படும். இவைகளில் நூறு, ஆயிரம் முதலிய எல்லாச் சில வகைகளும் அடங்கும். தொடக்கத்தில் பஞ்ச சீலத்தைப் பற்றி யொழுகுதல் சாலும். கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, பிறர்மனை விழையாமை, பொய்யாமை என்பன பஞ்ச சீலம். இவ்வைந்தும் வாழ்வில் ஊன்றினால் மற்றச் சீலங்கள் தாமே படியும். சீல சமாதி சீலம் முதிர முதிரச் சமாதி கூடும். இது சீல சமாதி எனப் படும். சீல சமாதியால் பழம்பிறப் புணர்வு தோன்றும்; பழம்பிறப் புணர்வு. வேண்டுதல் வேண்டாமையால் விளைந்த இடும்பை களை நன்கு உணர்த்தும். அவ்வுணர்வால் பொய்யறிவு மறையும்; மனம் நன்னிலை எய்தும்; புலன்கள் இயற்கைவழி நடக்கும்; இயற்கை இறைவடிவாகத் தோன்றும்; இறைவன் குருவழியாகக் காட்சியளிப்பன்; அவனடியில் மனம் படிந்து ஒன்றும். அந்நிலை யில் இடும்பைகள் இலவாகும்; உலக மெல்லாம் நல்லனவாக - இன்பாக - விளங்கும். கீழ்நிலையில் இறையடி நினைத்தலென்று ஏதாயினும் ஓர் உருவை மட்டும் நினைத்தல் போதாது. அதனுடன் நற்காட்சி முதலிய மார்க்கத்துறைகளிலும், கொல்லாமை முதலிய சீலங்களிலும் நின்றொழுகப் பயிலுதல் வேண்டும். இப்பயிற்சி களும் இறைவனடி நினைத்தலின் கூறுபாடுகளாகும். உயிர்கள், வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத இறைவனடியைச் சேரச் சேர, அவைகளிடத்துள்ள வேண்டுத லும் வேண்டாமையும் படிப்படியே அற்றுப் போகும்; மற்றவர் களைச் சேர்தலால் அவை அறா. கண்ணில்லாதானுக்குக் கண்ணுள்ளான் வழிகாட்டுவதே ஒழுங்கு. ஆதலால், உயிர் களின் வேண்டுதல் வேண்டாமை நீக்கத்துக்கு, வேண்டுதல் வேண்டாமை இல்லாத ஒருவனது அடிச் சேர்க்கை வேண்டற் பால தென்க. இதுபற்றியே, வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு என்றார். யாண்டும் இடும்பை இல யாண்டும் - எவ்விடத்தும் என்பர் மணக்குடவர்; எப்பொழுதும் என்பர் பரிமேலழகர். இடும்பை - துன்பங்கள்; வேண்டுதலாலும் வேண்டாமை யாலும் நேரும் துன்பங்கள். எவ்விடத்தும் - எப்பொழுதும் - இடும்பையில்லை என்றபடி. வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் இடும்பை இல்லாதவன் - என்றும் இயற்கையாகவே இடும்பை இல்லாதவன். அவனடி சேர்ந்தோரும் இடும்பை அற்றவராவர். அவரை இடையில் எவ்விடத்தும் - எப்பொழுதும் - எக்காரணம் பற்றியும் இடும்பை பற்றாது. இதுபற்றியே ஆசிரியர் யாண்டும் இடும்பை இல என்று அருளினர். இன்பமும் துன்பமும் இறைவன் இன்பமயமா யிருப்பவன். அவனை இன்ப மென்றே அநுபூதிமான்கள் போற்றியுள்ளார்கள். மாறி நின்று.... ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்றார் மணிவாசகனார். இறைவன் ஓரிடத்திருந்து மற்றோரிடத்தில்லாதவனல்லன். அவன் அங்கிங் கெனாதபடி எங்குமிருப்பவன். அவனே எல்லாம். அவனையன்றி யொன்றில்லை. இன்பமாயுள்ள இறைவன் எங்கு முள்ள ஒருவனாய், எல்லாமாயிருத்தலான், துன்ப இருப்புக்கு இடம் ஏது? எங்கும் இன்பம் - எல்லாம் இன்பம். வேண்டுதலும் வேண்டாமையும் இயற்கை இன்பத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றன. இறைவனடிச் சேர்க்கையால் வேண்டுதலும் வேண்டாமையும் அற்றதும் துன்பம் பாழ்படும். அந்நிலையில் எல்லாம் இன்பமாகும். எங்குமிருப்பது இறை அல்லது இன்பந்தானே. இறைவனடி சேர்ந்தார்க்கு எவ்விடமும் இன்பமாகும்; எப்பொழுதும் இன்பமாகும். அவர்க்கு நரகம் - சுவர்க்கம் என்பன இல்லை. இவ்வுலகந் துன்பமய மென்றும், வேறோர் இன்பமயமான உலகம் இருக்கிறதென்றும் நினைப்பது அறியாமை. அறியாமை யினின்றும் பிறக்கும் வேண்டுதல் வேண்டாமை அற்றால், எல்லா உலகமும் - அதாவது எவ்விடமும்- இன்பமயமாகும். 1துன்பமும் இன்பமும் ஆகியசெய்வினை யாய்உல கங்களுமாய் இன்பமில் வெந்நர காகி இனியநல் வான்சுவர்க் கங்களுமாய் மன்பயில் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால் இன்புறும் இவ்விளை யாட்டுடையானைப் பெற்றேதும் அல்லலிலனே 1யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும்நீ ஆனால் வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் 2நாமார்க்கும்....vªehS« இன்பமே துன்பமில் எவ்விடமும் இன்பமயம் என்பதை, எவ்விடத்தும் துன்ப மில்லை என்னும் பொருள்பட யாண்டும் இடும்பையில் என்று ஆசிரியர் கூறினர். இவ்வாறு கூறியதன் நோக்க மென்னை? உயிர் பொய்யறிவால் அதாவது அறியாமையினால் இடும்பையுள் மூழ்கிப் பின்னே மெய்யறிவு விளக்கத்தால் இடும்பையினின்றும் விடுதலையடைந்ததும், அதற்கு இடும்பையிலாமையே தோன்றும். நோயினின்றும் விடுதலை பெறுவோர் நோயொழிந்தது என்று கூறுவது வழக்கம். இடும்பையின் கொடுமையை உணர்த்த வேண்டி, இடும்பையில என்றார். முழு விடுதலை, யாண்டும் இன்பமயமாயிருத்தலை விளங்கச் செய்தலால், யாண்டும் இடும்பையில என்றார். அற நிலை விருப்பு வெறுப்பின்றி உலகில் வாழ்தல் இயலுமா என்று சிலர் கருதலாம். துக்க நிவாரணமார்க்கத்தில் நிற்பதாலும், சீல சமாதியாலும் விருப்பு வெறுப்பற்ற இன்ப வாழ்வு நடாத்தல் கூடும் என்று மேலே சுருங்கச் சொல்லப்பட்டது. இப்பயிற்சியில் ஈடுபட்டோர்க்கு விருப்பு வெறுப்பற்று வாழ்வதில் அருமைப் பாடு தோன்றாது; மற்றவர்க்கு அருமைப்பாடு தோன்றலாம். விருப்பு வெறுப்பற்ற நிலையே அறமென்பது. இதுபற்றி அறன் வலியுறுத்தலில் விரித்துக் கூறுவன். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை, பிள்ளைபேறு, அன்புடைமை, விருந்தோம்பல் முதலியன மனமாசினை அகற்றுவன. மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம் என்பது ஆசிரியர் திருமொழி. ஒப்புரவில் (Social Service) ஈடுபடப்பட விருப்பு வெறுப்பு அற்றுப்போகும்; பொது நோக்கு உண்டாகும்; எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் உணர்வு மலரும். அந்நிலையில் விருப்பு வெறுப்புக்கு இடம் ஏது? வேண்டுதல் வேண்டாமைக்கு அடிப்படை அறியாமை என்பதும், அறியாமையினின்றும் எழும் வேண்டுதல் வேண்டாமை இடும்பை விளைக்கும் என்பதும், அறியாமை அகன்றதும் அறிவு விளங்கும் என்பதும், அறியாமை பொய்யறிவு என்றும் அறிவு மெய்யறிவு என்றும் வழங்கப்படுகின்றன என்பதும், இறைவன் அறியாமை இல்லாதவன் என்பதும், அதனால் அவனை இடும்பை அணுகுவதில்லை என்பதும், இறைவனை அடைந் தோரும் அறியாமையினின்றெழும் வேண்டுதல் வேண்டாமை யின் விளைவாகிய இடும்பை அற்றவராவர் என்பதும் சுருங்கிய முறையில் விளக்கப்பட்டன. இன்னொரு முறை இதுகாறும் அறியாமையினின்றும் பிறக்கும் விருப்பு வெறுப்பும், அவற்றின் விளைவும், அவற்றை ஒழிப்பதற்குரிய வழியும் பேசப்பட்டன. இனி இன்னொரு முறை கொண்டு விருப்பு வெறுப்பைப் பற்றியும் அவற்றின் விளைவைப் பற்றியும் சிறிது பேசுவோம். இறைவன் அறியாமையே இல்லாதவன்; அறிவு மய மாயிருப்பவன். ஆகவே, இறைவன்பால் அறியாமையை அடிப் படையாகக் கொண்ட வேண்டுதல் வேண்டாமை இருத்தற்கு இடமில்லை. அறிவு மயத்தினின்றும் வேண்டுதல் வேண்டாமை எழுதற்கு இடமுண்டா? இல்லையா? என்பது உன்னற்பாலது. அறியாமையின் விளைவு, அழுக்காறு அவா வெகுளி முதலியன. அறிவின் விளைவு, அன்பு அருள் பொறுமை முதலியன. இவற்றுள் இறை இயல்புகள் எவை? பின்னையன. என்னை? இறைவன் அறிவு மயமாக விளங்கலின் என்க. அறியாமையினின்றும் எழும் வேண்டுதல் வேண்டாமை, அழுக்காறு முதலியவற்றை ஈனுகின்றன. அதேபோல அன்பு முதலியவற்றை ஈனுதற்கு அறிவினின்றும் வேண்டுதல் வேண்டாமை எழுதல் வேண்டுமன்றோ? ஆதலின், வேண்டுதல் வேண்டாமை என்னும் வெறுஞ் சொற்களை மட்டுங் கொண்டு வாதத்தி லிறங்குவது தவறு. அவற்றின் நிகழ்ச்சிகளைக் கொண்டு பொருளுணர்தலே சால்பு. இந்நியாயங் கொண்டு, வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதை நோக்குவோம். நோக்கினால் அதற்கு, அறியாமையை முதலாகக் கொண்ட விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்று பொருள் விரித்தலே பொருத்தம் என்பது நனி விளங்கும். இதனின்றும் அறிவை முதலாகக் கொண்ட வேண்டுதல் வேண்டாமை உடையவன் இறைவன் என்று ஊகஞ் செய்யலா மன்றோ? வேண்டுதல் வேண்டாமை என்பன, இறைவனுக்குரிய மூன்று நிலைகளுள், முதலாவதாகிய மாற்ற மனங் கடந்ததில் விளங்குதல் அரிது; இரண்டாவதாகிய இயற்கையை உடலாக் கொண்டதில் ஒரோவழி விளங்கும்; மூன்றாவதாகிய குருநிலையில் நன்கு விளங்கும். எப்படி? குரு நிலையில் இறைவனது குருநிலையே இவ்வதிகாரத்தில் பெரிதும் அறிவுறுத்தப்படுகிறது. குருநாதன் உள்ளத்தில் விளங்குவது இறையொன்றே. இறையாவது அன்பு. அன்பாவது பிறர் துன்பங் கண்டிரங்கி நலஞ்செய்ய எழுவது. அன்பாகிய இறைவன் குருவினுள் வீற்றிருந்து என்ன நினைக்கிறான்? உயிர்களெல்லாம் என்றே அறியாமை யினின்றும் விடுதலையடைந்து அறிவாகப் போகின்றன என்று நினைந்த வண்ணமிருக்கிறான். இறைவன் உயிர்களின் நலங் கருதுவதில் விருப்பும், தீமை கருதுவதில் வெறுப்பும் உடைய வனாயிருக்கிறான். இவ்விருப்பு வெறுப்பே இறைவன்றன் வேண்டுதல் வேண்டாமை என்பன. இவை, அன்பு - அருள் - பொறுமையினின்றும் பிறப்பன என்பதையும், அழுக்காறு - அவா - வெகுளி முதலியவற்றினின்றும் பிறப்பனவல்ல என்பதையும் மறத்தலாகாது. இறைவனடி சேர்ந்து இடும்பை நீங்கப் பெற்ற பெரியோர் உள்ளமும் உலகநலத்தில் விருப்பும், அதன் தீமையில் வெறுப்புங் கொள்ளும். அன்புள்ளம் அன்பேநிலவும் உள்ளம் எதை விரும்பும்? எதை வெறுக்கும்? அவ்வுள்ளம், உயிர்களின் துன்பம் வீழ்க; வறுமை, பிணி முதலிய கொடுமைகள் நில்லாதொழிக; நலம் பெற்றிருப் போர் மேலும் மேலும் நலம்பெறுக; தீமையுற்றிருப்போர் தீமையினின்றும் விடுதலையடைந்து நலமுறுக; உயிர்களிடை வேற்றுமை அழிக; எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று விரும்பிய வண்ணமிருக்கும்; இவைகளுக்கு மாறுபட்டவைகளை வெறுத்த வண்ணமிருக்கும். இந்நிலையினரும் உலகில் வாழ்ந்தார்; வாழ்கிறார்; வாழ்வார். ஆதலால், வேண்டுதல் வேண்டாமையின்றி உலகில் எங்ஙனம் வாழ்தல் கூடும் என்று எவரும் ஐயுறவேண்டுவதில்லை. வெறுஞ் சொல்லையும் ஏட்டையும் கட்டி அழாது, இறைவனடி நினைந்து, ஒப்புரவில் ஈடுபட உறுதி கொள்ளுதல் வேண்டும்; கொண்டால் பொய்யறிவு வழி வேண்டுதல் வேண்டாமை எழுவது தொலைந்து, மெய்யறிவு வழி அவையெழும். அதனால் இடும்பை அருகும்; இன்பம் பெருகும். வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு - யாண்டும் இடும்பை இல்; மற்றவர்க்கு யாண்டும் இடும்பை யுள என்றபடி. யாண்டும் இடும்பையிலவாதற்கு இறைவனடி சேர்தல் வேண்டும் என்று அறிவுறுத்தியவாறாம். 1வேண்டுதல் வேண்டாமை யிலாத வீரனடி 2காய்தல் உவத்த லிலானை 1இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 2உவத்தல் காய்தலா லுன்றிரு வடித்தலத் தெழுந்தோர்க் குவத்தல் காய்தலுன் திருவுளத் தொன்றுநீ யிலையேல் சுவர்க்க மாநர கத்தவர் துன்னுவ துனது தவத்தின் தன்மையோ தம்வினைத் தன்மையோ அருளே (4) 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. பொருள் தனக்கு உவமை இல்லாதான் - தனக்கு ஒப்பு இல்லாத இறைவனது, தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடியை அடைந்தவர்க்கு அல்லாமல், மனக்கவலை மாற்றல் அரிது - (ஏனையோர்க்கு) மனக்கவலையை அழித்தல் இயலாது. கருத்து இறைவன் திருவடியே மனக் கவலையை அழிக்க வல்லது. விருத்தி முற்பாட்டில் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் என்றும், இப்பாட்டில் தனக்கு உவமை இல்லாதான் என்றும், அதில் யாண்டும் இடும்பையில் என்றும், இதில் மனக்கவலை மாற்றலரிது என்றும் சொல்லப்பட்டனவற்றி லுள்ள தொடர்புகள் உன்னற்பாலன. வேண்டுதல் வேண்டாமை இல்லாத ஒருவனே தனக்கு உவமை இல்லாதவன். யாண்டும் இடும்பை இலவாதலே மனக்கவலை மாற்றுவது. தனக்கு உவமை இல்லாதான் தனக்கு என்னுங் குறிப்பு, தனிமையைப் புலப்படுத்துவது. உவமை - ஒப்பு; ஒப்புடன் உயர்வையுங் கொள்க. தனக்கு உவமை இல்லாதான் என்பது, இறைவனிலும் ஒப்பானதும் உயர்வானதும், ஒப்பானவரும் உயர்வானவரும் முறையே ஒன்றும் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவது. தனக்கு தனக்கு என்பது தனிமையைப் புலப்படுத்துவது. தனிமை யாவது ஒப்பற்றது. தனக்கு என்பதை உன்னி உன்னிச் சொல்லிச் சொல்லிப் பார்த்தால், அதன்கண் உவமையின்மை ஒலித்தலை உணரலாம். தனக்கு என்பதைத் தொடர்ந்து நிற்கும் உவமை யில்லாதான் என்பது, அத் தனக்கு என்பதிலேயே ஒலித்தலைத் தேர்க. தனக்கு என்பதன் விரிவு, உவமையில்லா தான் என்று தொனிப் பொருள்களில் கொள்க. உவமை இல்லாதான் இறைக்கு உவமையாக எதைக் கொள்வது? உலகைக் கொள்ளலாமா? உயிரைக் கொள்ளலாமா? உலகு, உயிர், இறை என்னும் மூன்றனுள் எல்லாம் அடங்கும். அவற்றில் அடங்காத பிற இல்லை. உலகும் உயிரும் இறைக்கு உவமையாகுமா என்பதை நோக்குவோம். உலகு - உயிர் இறை உலகு உயிர் இறை என்னும் மூன்றனுள், இறை எல்லா வற்றினும் உயர்ந்தது. மற்ற இரண்டும் அதற்கு ஒப்பான வையு மல்ல; உயர்வானவையு மல்ல. (உலகு - மாயா காரியமாகவுள்ள எல்லாவகை உலகங்களையுங் கொண்டது. உயிர் - எல்லா வகை உயிர்களையும் (மக்கள் தேவரையும்) கொண்டது.) உலகு அறிவற்றது; என்றும் ஒருபெற்றியா யிராதது; மாறுந் தகையது அதாவது காரியப்படுந் தன்மையது. உயிர் அறியாமை விரவிய அறிவுடையது; அறியாமையால் பொய்யை மெய்யாகவும் மெய்யைப் பொய்யாகவுங் கருதிப் பிறப்புத் துன்பங்களால் இடர்ப்படுவது; குருநாதன் துணையால் அறியாமை நீங்கப் பெற்றுத் துன்பத்தினின்றும் விடுதலை யடையும் இயல்புடையது. இறை என்றும் ஒரே பெற்றியாயிருப்பது; மாறுதலில்லா தது; முற்றறிவுடையது; அறியாமையே இல்லாதது; அறிவில்லா உலகையும், அறியாமை விரவிய அறிவாகிய உயிரையும் இயக்குவது. மாறுந் தகையதாகிய உலகும் - அறியாமையுடைய உயிரும் - இயல்பாகவே இவ்விரண்டுமில்லாத இறைக்கு எங்ஙனம் உவமையாகும்? ஆராய்ச்சி உலகும் உயிரும் ஆராய்ச்சிக்கு எட்டுவன. இறை ஆராய்ச்சிக்கு எட்டாதது. பலதிற உலகங்களும், அவற்றின் கூறுகளும் அவ்வவற்றி லுள்ள சக்திகளும், பிறவும் ஆராய்ச்சிக்கு எட்டுவனவாம். இவ் வாராய்ச்சியினின்றும் விஞ்ஞானக் கலைகள் பிறத்தல் கண்கூடு. உயிர் நுண்ணியதாயினும், அதன் உண்மையை உலகைக் கொண்டும் - உடலைக் கொண்டும் - வேறு பல ஏதுக்களைக் கொண்டும் நிறுவலாம். ஆதலால், உயிரும் ஆராய்ச்சிக்கு ஒரோ வழி எட்டுவதாகும். இறையை ஆராய ஆராய அஃது ஆராய்ச்சிக்கு எட்டாது கடந்து கொண்டே போகும். அஃது எல்லையின்றிக் கடந்து கொண்டே போகும். இறை எல்லையற்றதன்றோ? அகண்டமான தன்றோ? எல்லையற்ற ஒன்றை, எல்லையுள் நிற்போர் எப்படி ஆராய்வது? அகண்டத்துக்கு அகலமேது? நீளமேது? வடக்கு - தெற்கு ஏது? கிழக்கு - மேற்கு ஏது? கருவி கரணங் கடந்த ஒன்றைக் கருவி கரணமுடையார் அளந்து காண்டல் எளிதோ? மரக்கால் ஆழாக்கில் அடங்குவதில்லை. கடல் கேணியில் அடங்குவதில்லை. கருவி கரணங் கடந்து, குருநாதன் அருளால் அறிவுக்கு அறிவாய் நிற்கும் பேறுபெற்று, இறை நுட்பத்தைத் தெளிந் தோரும், இறையின் அளக்கப்படாத தன்மையைப் பலபட உலகுக்கு அருளியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:- 1ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டாஞ் சுடர்விட்டுளன் எங்கள் சோதி 2நற்பதத்தார்....... சொலற்கரிய சூழலாய் இதுஉன் தன்மை 3சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க. 3உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன் 4இன்றெனக்கு.... யாருன்னை அறிய கிற்பாரே 4பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருண் முடிவே 4கீத மினிய குயிலே கேட்டியே லெங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவிற் பாதாள மேழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்றதொன்மை ஆதிகுண மொன்று மில்லான் அந்தமில்லான் வரக்கூவாய் 1யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் அந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமல் விளம்புகின் றேனே 2அல்லையீது அல்லையீது என மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்திளைக்குமிச் சுந்தரன் ஆராய்ச்சிக்குப் பொருளாகாத ஒன்றற்கு ஆராய்ச்சிக்குப் பொருளாகும் உலகும் உயிரும் உவமை யாகுங்கொல்? மூன்று நிலையும் உவமையும் வாக்கு மனங் கடந்த இறைநிலை உவமை யற்றது. மற்ற இயற்கை நிலையும், குருநிலையுங் கூடவா உவமையற்றன என்னுங் கேள்வி பிறக்கலாம். இறைவனுக்குரிய மூன்று நிலையும் உவமையற்றனவேயாம். வாக்கு மனங்கடந்த ஒன்று உவமை யற்றது என்பது மேலே காட்டப்பட்டது. இயற்கை நிலை இயற்கை, இறையின் உடல். இயற்கையுடலின் உயிர் இறை. உடலாகிய இயற்கை பலபல வடிவமாகக் காரியப்படுதற்கு உயிராகிய இறை துணைபுரிகிறது. இயற்கை நானாவிதமாகத் தோன்றும்; நிற்கும்; ஒடுங்கும். இத் தோற்ற நிலை யொடுக்கம் உடலாகிய இயற்கைக்கே உண்டு; உயிராகிய இறைக்கு இல்லை. 3நுரையுந் திரையும் நொட்புறு கொட்பும் வரையில் சீகர வாரியுங் குரைகடற் பெருத்துஞ் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி யிருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடை யடங்கும்நீ ஒன்றினுந் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய் எனவரூஉம் பட்டினத்தாரது அநுபவ மொழியை ஓர்க. மாறுதல், உடலாகிய இயற்கைக்கே உண்டு என்பதும், உயிராகிய இறைக்கு இல்லை என்பதும் ஈண்டுச் சிறப்பாகக் கருதற்பாலன. தோற்ற ஒடுக்கமில்லாத ஒன்றற்கு உவமை சொல்ல அத் தோற்ற ஒடுக்கமில்லாதனவல்லவோ வேண்டும்? அவ்வியல்பு டையன உண்டோ? இல்லை. அவ்வியல்புடையது ஒன்றே. அஃது இறை. அதற்கு எதை உவமையாகக் கூறுவது? குருநிலை இறையின் குருநிலை, வாழ்த்து வணக்கத்துக்குப் பெரிதும் உரியதாய்ப் பயன்பட்டு வருதலின், அதற்காதல் எதையேனும் அல்லது எவரையேனும் உவமை கூறலாமா? அஃதும் எவ்வுவமை யிலும் அடங்காது. குருநாதன் உடலுடையனாயினும் அவனுடலுக்கும் மற்றவருடலுக்கும் வேற்றுமையுண்டு. குருநாதன் உள்ளத் தாமரை தோற்றக்கேடில்லாத இறைவனது மூலட்டானம். அவன் உடல் அவ்விறைவனது கோயில். குருநாதன் உடல் பொன்மயமாக மிளிரும். அதற்கு அழிவில்லை. அழுக்காறு அவா வெகுளி முதலியன நெளியும் உள்ளங் களைக் கொண்ட உடலங்கள் அழிதன்மாலையன. அழுக்காறு முதலியன தீய எண்ணங்களை எழுப்புகின்றன. அவை, நஞ்சாகிக் குருதியில் - நரம்புகளில் - என்புத்துளைகளில் - பாய்ந்து, மயிர்க்கால்தொறுங் கசிகின்றன; கொலைப் பூச்சிகளை ஈனுகின்றன; நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காட்டை விளைக் கின்றன. தீய எண்ணங்கள் இவ்வாறு உடலை அரித்து அரித்துக் கேடு சூழ்தலால், பிறப்பிறப்புத் துன்பங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. குருநாதன் உள்ளத் தாமரையில் இறையுண்மை விளங்கித் தோன்றலால், அங்கே அன்பு, அருள், பொறுமை முதலிய நல்லியல்புகள் எழுகின்றன. அவை அமிழ்தாகிக் குருதி, நாடி, நரம்பு, என்புத்துளை முதலியவற்றிற் பாய்ந்து, மயிர்க் கால்களில் தேங்கி நிற்கும். அதனால் உடலுக்கு, நரை - திரை - பிணி - மூப்பு - சாக்காடு - நேர்வதில்லை. (பக்கம் 75 பார்க்க.) உவாக்கட னள்ளுநீ ருள்ளகந் ததும்ப வாக்கிறந்து அமுத மயிர்க்கால் தோறுந் தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழை குரம்பை தோறு நாயுட லகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் எற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளு றாக்கை யமைத்தன னொள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் கருணை வான்றேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் என்று மாணிக்கவாசகர் திருவண்டப் பகுதியில் விளக்கி யிருத்தல் காண்க. இதனை, உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ இருவென்ற தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே என்று இராமலிங்க சுவாமிகளும் வியந்து போற்றியுள்ளனர். குருநாதன், பசி, நீர்வேட்கை, அச்சம், சினம், அவா, மயக்கம், நினைப்பு, மறப்பு, வியர்வை, களைப்பு, மதம், மோகம், பகைமை, உறக்கம், துக்கம், பிணி, மூப்பு, இறப்பு, பிறப்பு முதலிய குற்றங்களைக் கடந்து நிற்பவன். இக்குற்றங்கள் குருநாதனை அணுகவும் அணுகா. இறையுளங் கொண்ட குருநாதனிடம் இன்னோரன்ன இயற்கை கடந்த குணங்களிருக்கின்றன. இத்தகைய இறையின் குருநிலைக்கு எதை அல்லது எவரை உவமையாகக் கொள்வது? உவமை காணோம். தன் பெருமை உணராமை தனக்கு உவமை இல்லாதானிடத்து வேண்டுதலும் இராது; வேண்டாமையும் இராது. வேண்டுதல் வேண்டாமை இல்லா தானிடத்துத் தற்பெருமை நாட்டம் எழாது. தற்பெருமை, பிறர் பெருமையைக் காணும்போது எழும் பொறா மையினின்றும் பிறப்பது. பொறாமை இல்லாத இடத்தில் தற்பெருமை எழாது. பொறமைக்கு அடிப்படை அறியாமைச் செருக்கு. அறியாமை யினின்றும் பிறப்பன வேண்டுதல் வேண்டாமை என்பது முற்பாட்டில் விளக்கப்பட்டது. வேண்டுதல் வேண்டாமை இல்லானே தற்பெருமை அற்றவன் என்க. தற்பெருமை அறியாமையின் விளைவாதலான் அதற்குக் கட்டு உண்டு; எல்லை உண்டு. தற்பெருமையற்ற நிலை கட்டற்றது; எல்லையற்றது. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாத வனாதலின், அவன்பால் தற்பெருமை எழுதற்கே இடமில்லை. தற்பெருமையற்ற இறைவன் கட்டும் எல்லையும் அற்றவனாத லின், அவன் தனக்குவமை யில்லாத தனியனா யிருக்கிறான். அவனே பெரியன். உற்றுஉற்று நோக்கினால் இறைவன் ஒருவனே பெரியன் என்பது நனி விளங்கும். என்னை? இறைவன் தற்பெருமை யற்றவனாதலின் என்க. இறைவன் ஒருவனே பெரியன் என்பதை நபிகள் நாயகம் நன்கு அறிவுறுத்தியுள்ளனர். இறைவனே பெரியன். இறைவனிலும் பெருமையுடையார் ஒருவருமில்லை. இறைவன் முற்றறிவால் - கறையற்ற முழு அன்பால் - எல்லா உலகங்களையும், உயிர்களையும் இயக்கி வருகிறான். அவன் தொண்டுக்கு ஒப்பானதும், உயர்வானதுமில்லை. ஒப்புயர்வற்ற தொண்டு செய்யும் ஒருவனே எல்லாப் பெருமையுமுடையவன். அவன் பெருமைக்குமேல் பெருமை யின்மையால் அவனிடம் தற்பெருமை எப்படி எழும்? அவனுக்குத் தன் பெருமையே விளங்காது. தன்பெருமை தானறியாத் தன்மையன் காண சாழலோ என்றார் மாணிக்கவாசகனார். தன்பெருமை யுணரா ஒருவன் உவமையுடையவனா யிருப்பானா? உவமையில்லாதவனா யிருப்பானா? தன்பெருமை யுணரா ஒருவனே உவமை இல்லாதவன் என்க. இன்ன பலவற்றை உளங்கொண்டே ஆசிரியர், தனக்கு உவமை இல்லாதான் என்று அருளினர். இறைவனுக்கு உவமை உலகினுமில்லை; உயிரினுமில்லை. இறைவன் உவமை யில்லாதவன் என்பதைப் பல பெரியோர் பலவாறு விளக்கிச் சென்றனர். அவருள் குறிக்கத்தக்கவர் சிலர். இறைவன் சொல்லொணாதவனாதலால், அவன் உவமை யில்லாதவன் என்பதை ஆலமர் செல்வனும், அரசமர் செல்வனும் மோனத்தால் உணர்த்தினர். அந்நிலையைப் போதனையினாலும், சாதனையினாலும் விளங்கச் செய்தவர் கிறிது பெருமானும், நபிகள் நாயகமுமாவர். இறைக்கு ஒப் பாகவோ உயர்வாகவோ, ஒன்றையும் ஒருவரையும் நினைத்தலுங் கூடாது. தாள் சேர்ந்தார்க்கு அல்லால் தனக்கு உவமையில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் என்பது, சேரத்தக்கது இறைவன் தாளே என்னும் உண்மையை உணர்த்துவது. மற்றவர் தாளைச் சேர்ந்தால் என்ன? மனக் கவலை மாறாது. மனக் கலையை மாற்றும் ஆற்றல் உவமை யில்லாத ஒருவன் தாளுக்கே உண்டு. சேர்தல் என்னுஞ் சொற்பொருள் விளக்கத்தை மேற்பாட்டிற் பார்க்க. அல்லால் என்பது தாளைச் சேர்ந்தே தீரல் வேண்டும் என்னும் ஆணையை உளங்கொண்டது. மனக் கவலை மாற்றல் அரிது மனம் எது? அஃதொரு பொருளா? அன்றா? இஃதொரு பெரிய வாதம். மனத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது. மனத்தின் இயலை நன்கு தெரிந்தோர் கவலையற்றிருக்கும் வழியை எளிதில் உணர்வர் என்பதில் ஐய மில்லை. மனத்தைச் செலுத்தும் வழி அவர்க்கு நன்கு புலனாகும். மனத்தின் இயலை உணர்தற்கு முயற்சி வேண்டற்பாலது. முயற்சி, வழியைப் புலப்படுத்தும். மன இயல் அகத்திணை என்றும், புறத்திணை என்றும் நந்தமிழ் நூல் களில் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை என்பது ஒழுக்கம். (அகவொழுக்கம் - அகத்திணை; புறவொழுக்கம் - புறத்திணை). அகத்திணை நூல்களில் மன இயல்களின் கூறுபாடுகளைக் காணலாம். அகநானூறும் கலித்தொகையும் திருக்கோவை யாரும் அகநூல்களிற் சிறந்தன. நமது நாட்டில் நாளடைவில் அகநூல் வளங் குன்ற லாயிற்று. அகநூல் மொழிப்புலமைக்கே பெரிதும் பயன் படுத்தப்பட்டது. மொழிவளம் நூலின் ஒரு சிறு கூறு. நூலின் உயிர் மன இயல். இதை முன்னியுணரும் பெற்றியை நாடு இழந்தது. இதனால் கவலை பெருகலாயிற்று. நமது நாட்டு அகநூல்கள் மனக்கவலையை மாற்றும் வழியை யுணர்த்துவன என்னும் அளவுடன் இங்கே நின்றுவிடுகிறேன். இது பற்றிக் காமத்துப் பாலுக்கு உரை காணும் வாய்ப்பு நேர்ந்துழி விளக்கஞ் செய்வன். மேல்நாட்டில் அகத்திணை (Psychology) ஆராய்ச்சி நாளுக்குநாள் பெருகி வருகிறது. காதல் துறை ஒன்றை மட்டும் அந்நாட்டார் ஆராய்வதில்லை. அன்னார் வேறு பல துறை களையும் அகத்திணை வழி ஆராய்கின்றனர். அவர்தம் அக ஆராய்ச்சித் திறன் புறத்தை நன்கு பயிலத் துணை செய்கிறது. அகத்திணை ஆராய்ச்சி குன்றிய இடங்களில் ஆண்மை அற்றுப் போகும். இந்நூலாசிரியர் அகப்புற ஆராய்ச்சியில் கைபோனவர் என்பது இவர்தம் நூலால் தெரிகிறது. திருக்குறள் ஒரு சிறந்த அகப்புற நூல். இத்தகைய நூலை ஈன்ற பெருமைவாய்ந்த தமிழ்நாடு இந்நாளில் எந்நிலை உற்றிருக்கிறது? தற்காலத்தில் தமிழ்நாடு, திருவள்ளுவரின் சொல்லையும் சொற்றொடரையும் உருட்டிக் கொண்டிருக்கிறது. பின்னாளில் தமிழுலகில் நுழைந்த கதை நூல்கள் பலவும் போலித்துறவு நூல்கள் பலவும் நாட்டின் அகக்கண்ணைத் தூர்த்துவிட்டன. அதனால் புறக் கண்ணொளியும் மங்கலாயிற்று. மனிதர் மனத்தால் ஆக்கப்பட்டவர். அவர் மனத்தை யன்றோ பயிலுதல் வேண்டும்? மனத்தைப் பயிலப் பயில அவர் தம்மையும் உணர்வர்; தம்மைச் சூழ்ந்துள்ள உலகையும் உணர்வர். இவ்வுணர்ச்சி கவலையறுக்குங் கருவியாகும். மனம் பொருளாகும் நிலையும் உண்டு; பொருளாகா நிலையும் உண்டு. அது பொருளாகா நிலையில் அதைப்பற்றிய பேச்சே எழாது. மனம் அறிவுக்கும், பொறிபுலனுக்கும் இடையில் நிற்பது. மனம், புலனாய், பொறியாய், உறுப்பாய், உடலாய், உலகாய்க் காட்சியளிப்பது. அண்ட பிண்டங்களெல்லாம் மனமேயாகும். எண்ணமே எல்லாம் என்பது தத்துவம். ஒரு நிலையத்தை எடுத்துக் கொள்வோம். அது கல் மண் சுண்ணம் முதலியவற்றால் ஆக்கப்பட்டது என்று சொல்லப்படு கிறது. நிலையம் அழிந்தால் கல் மண் சுண்ணம் முதலியனவே காணப்படுகின்றன: அதனால் நிலையத்தைக் காணோம். கல் மண் சுண்ணம் மட்டுமா நிலையம்? கல்லுக்குக் கல்லென்று பெயர்; மண்ணுக்கு மண்ணென்று பெயர்; சுண்ணத்துக்குச் சுண்ணம் என்று பெயர். இவற்றால் ஆக்கப்பட்ட ஒன்று, நிலையம் என்னும் புதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. நிலையம் எது? கல்லா? மண்ணா? சுண்ணமா? பிறவா? இவைமட்டுமல்ல. பின்னை என்னை? நிலையம் எழுப்பப்படுதற்கு முன்னர், இவ்வண்ணம் நிலையம் எழுப்பப்பெறல் வேண்டும் என்று சிற்பன் மனத்தில் ஓர் உருவம் முகிழ்க்கிறது. அந்நுண்ணிய உருவம் கல் மண் சுண்ணம் முதலிய கருவிகளின் துணை கொண்டு ஒரு நிலையமாகக் காட்சியளிக் கிறது. ஆகவே, நிலையத்துக்குப் பிறப்பிடம் மனமாதல் காண்க. பிறவற்றையும் இவ்வாறே கொள்க. உலகிலுள்ள எப்பொருளை ஆராய்ந்தாலும், அது மனத்தி னின்றும் அரும்பி முகிழ்ப்பதென்பது நன்கு புலனாகும். பொருள்களுக்கும், அவைகளைத் தாங்கும் உலகுக்கும், எல்லா வற்றையும் உணர்தற்குக் கருவி கரணங்களாக உள்ளனவற்றிற்கும் மூலமாயிருப்பது மனமே. இயற்கை - செயற்கை யுலகங்க ளெல்லாம் மனத்தினின்றுமே பிறக்கின்றன என்று சுருங்கச் சொல்லலாம். மனமிறந்தால் இவை யாவும் மறையும். மனத்தின் மூலத்தை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. இடம் நேர்ந்துழி அதை ஆராய்வோம். ஈண்டு மனத்தளவில் நிற்பது சாலும். கவலை மனத்துக்கு இருமுகம் உண்டு. ஒன்று புறமுகம் அல்லது மேன்முகம்; இம்மனம் நினைப்பு மறப்பு உடையது. இன் னொன்று அகமுகம் அல்லது கீழ்முகம்; இம்மனம் நினைப்பு மறப்பு அற்றது. மனம் உடுக்கை போன்றது. உடுக்கையைத் தலைகீழாகப் பிடித்தால் அஃது எப்படி யிருக்குமோ அப்படியிருப்பது மனம். மனத்தின் மேல்நோக்கில் எல்லா உலகமுந் தோன்றும்; அதன் கீழ்நோக்கில் எல்லாம் மறையும். கீழ்நோக்கில் மனம் ஒடுங்கிச் செயலற்று அறிவின்வாய்ப்படுகிறது. அப்பொழுது மனோ விகாரத்துக்கு இடமில்லை. இதுவே நினைப்பு மறப்பு அற்ற நிலை. மனத்தின் மேல்நோக்கில் எல்லாம் தோன்றலால், அத் தோற்றத்தினின்றும் நினைப்பு மறப்பு வழியே சுகதுக்கங்கள் பிறக்கின்றன. அவைகளால் கவலை யுண்டாகிறது. இன்ப முண்டேல் துன்பமுண்டு ஏழைமனை வாழ்க்கை என்றார் வன் தொண்டர். கவலையற்றால் எல்லாத் துன்பங்களும் அறுதல் ஒருதலை. கவலை பிறக்குமிடம் மனமாதலால், மனக்கவலை என்றார் ஆசிரியர். மனத்துக்குங் கவலைக்குந் தொடர்புண்டு. 1அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளந் தன்பா லுடையது மக்கள் யாக்கை * * *’ மனோ விகாரத்தால் கவலை பிறக்கிறது. கவலையால் நரை திரை பிணி முப்பு சாக்காடு முதலிய துன்பங்கள் தோன்று கின்றன. மூலமாகிய மனமிறந்தால் எல்லாம் இறந்துபடும். 2இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கெவ்வண்ணம் வந்ததென் றண்ணியான் பார்க்கில் மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி. மாற்றல் மனம், கீழ் நோக்கித் தனக்கு அடிப்படையாயுள்ள ஒன்றில் ஒன்றாது, மேல் நோக்கித் தன்னிடத்திருந்து விரியும் புலன் பொறி உலகம் முதலியவற்றில் உழன்று கொண்டிருக்கு மட்டும், கவலை பெரிதாகி நோய் செய்து கொண்டிருக்கும். கவலையால் உடல் நலமுங் கெடும்; உயிர் நலமுங் கெடும். கவலையை மாற்றுதல் வேண்டும். எப்படி? கவலைக்கிடமாயுள்ள மனத்தைப் பண்படுத்தல் வேண் டும். மனம் கவலை வழியில் ஓடி ஓடி உழன்று கவலை மயமாகி யிருக்கிறது. அதைக் கீழ்முகத்தில் திருப்ப முயல்வது சிறப்பு. அஃது எளிதில் திரும்புமா? அதன் வழியே சென்று அதைத் திருப்ப முயல்வது நன்முறை. முரட்டுக் குதிரை நேரிய வழியில் போகாது குறுக்கு வழி யில் பாயும்போது, அதைச் செலுத்துவோன் என்செய்கிறான்? அவன் அதை மருட்டுகிறானில்லை; அதைத் தட்டிக் கொடுக் கிறான்; அதன் வழியாகவுஞ் சிறிது செல்கிறான்; பின்னே தன் வழியே அதைச் செலுத்திப் பார்க்கிறான். இவ்வாறு அவன் குதிரையைப் பண்படுத்திப் பண்படுத்தித் தன் வயப்படுத்து கிறான். நாளடைவில் குதிரை தானே நேரிய வழியில் செல்வ தாகும். மனத்தையும் இவ்வாறு பண்படுத்துவது முறை. சில ஞானிகள் மனத்தை முன்னிலைப்படுத்தி, அதை வேண்டுதல் செய்யுமாபோலப் பாடல்கள் அருளியுள்ளது ஈண்டுக் கருதற் பாலது. மனம் நல்லதே. ஆனால் அது மேல்நோக்கும்போது சஞ்சலம் விளைகிறது. பொன்போன்ற என்மனம் சஞ்சலத்தால் குரங்காம் என்றார் பெரியோர். மனத்தைக் கீழ் முகத்தில் திருப்பிப் பண்படுத்து முறைகள் பலபடக் கிடக்கின்றன. அவற்றுள் சிறந்தது, அதை இறைவன் தாளில் சேர்க்க முயல்வது. இம்முயற்சி நாளடைவில் மனக் கவலையை மாற்றி நலஞ்செய்யும். அரிது அரிது - இல்லை; உறற்பால, தீண்டா விடுதல் அரிது என்றாற்போல ஈண்டு அருமை இன்மைமேல் நின்றது- இது பரிமேலழகர் குறிப்புரை. ......jhŸ சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்றார். இது, மனக்கவலையை மாற்றவல்ல மருந்து இறைவன் தாள் ஒன்றே என்பதை வலியுறுத்துவது. இறைவன் தாளைச் சேர்ந்தால் மனக்கவலை எளிதில் மாறும் என்று சொல்வதைப் பார்க்கிலும், இறைவன் தாளைச் சேராதொழிந்தால் மனக் கவலை மாறுதல் அரிது என்று சொல்வது பொருட் செறிவுடை யதாகும். அருமைப்பாட்டை உணர்த்தினால் கவலை தீர்க்க மனம் விரைந்தெழும். அதற்குரிய உணர்வும் ஊக்கமும் பிறக்கும். இதுபற்றியே அரிது என்றார். இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்; தனக்குவமை இல்லாதவன். இவ்வியல்புடைய இறைவனுக்குக் கவலை ஏது? வேண்டுதல் வேண்டாமையும், உவமையும் இல்லாத இறைவன் தாளை மனம் சேரச் சேரக் கவலை அறுந்து கொண்டே போகும். மனக்கவலைக்கு மருந்து இறைவன் திருத் தாளே யாகும். தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் - மனக்கவலை மாற்றல் அரிது என்பது, தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்து மனக்கவலையை மாற்றுக என்று அறிவுறுத்துவதாகும். 1ஈடுமெடுப்புமிலீசன் 2மைப்படிந்த * ** ** ஒருவமனில்லி 3‘mUfÜ* **xUtdhÆid ஒப்பவ ரின்மையால் 4பூரணை * **இணையாரு மில்லாப் பெரியோர்க்கு (7) 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்த லரிது. பொருள் அற ஆழி அந்தணன் - தரும சமுத்திரமாகிய இறைவனது, தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடியை அடைந்தவர்க்கு அல்லாமல், பிறஆழி நீந்தல் அரிது - (மற்றவர்க்குப்) பிற கடல் களைக் கடத்தல் இயலாது. கருத்து பாவக்கடல்களைக் கடத்தற்கு இறைவன் திருவடியே துணை. விருத்தி வேண்டுதல் வேண்டாமை இல்லாத இடத்தில் அந் தண்மை சுரத்தல் இயல்பு. தனக்குவமையில்லாத இறைவன்றன் அந்தண்மை அளவற்றது. அளவற்ற அந்தண்மை வாய்ந்த இறைவன், இங்கே அறவாழி அந்தணன் என்று சொல்லப் பட்டான். அவன் தாளே மனக்கவலையை நீக்கி அறமல்லாத பிறவாழிகளை நீந்தத் துணைபுரிய வல்லது. அறஆழி அந்தணன் அறம் - தருமம்; தீமையை அறுத்து நன்மையை விளைப்பது; மாசற்றது. ஆழி - ஆழமுடையது; சமுத்திரம். அந்தணன் - அம் தணன், அம்தண்மையுடையவன், அழகிய தண்மையுடையவன், அருளாளன், அருளறமுடையோன்; இறைவன். (தண்மை - தண்ணளி; அருள்.) அறஆழியாகிய அந்தணன் என்றோ, அறஆழி என்னும் அந்தணன் என்றோ கொள்க. அறம் அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் - இழுக்கா வியன்ற தறம் என்றும், மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறம் என்றும் ஆசிரியரே அறன் வலியுறுத்தலில் அறத்தின் இயல்பை விளக்கியிருத்தல் காண்க. மாசற்ற ஒன்றே அறம் என்பது ஆசிரியர் கருத்து. இறை மாசற்ற ஒன்று என்று மேலோர் பலருங் கூறியுள்ளனர். ஆகவே, அறமும் இறையும் ஒன்றெனக்கொள்க. மாசில்லாதது தூய்மை; தூய்மையே அறம்; அறமே இறை. 1நன்றுடையானைத் தீயதில்லானை 2அறமே மறங்கள் * * * *mwnk சிவனுக்கொருவடிவம் 3அறத்தகை முதல்வன் 3முரணாத் திருவற மூர்த்தியை 4என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் ஆழி ஆழமுடையது ஆழி. ஈண்டு ஆழி என்றது அளவற்ற ஆழமுடைய ஒன்றைக் குறிப்பது. அளவுள்ள ஆழமுடையது சமுத்திரம்; அளவற்ற ஆழமுடையது இறை. சமுத்திரத்தின் ஆழத்தை அளவிடுதல் கூடும். இக்காலக் கணக்கர் சமுத்திரத்தின் ஆழத்தை அளவிட்டுக் கூறுதல் கண்கூடு. இந்நாளில் ஆராய்ச்சியின் பொருட்டுக் கருவிகளால் சமுத்திரத்தின் அடியிலுள்ள உயிர்கள் பிடிக்கப்படுகின்றன; மணல்கள் எடுக்கப்படுகின்றன; பிறவுஞ் செய்யப்படுகின்றன. இறையின் அகலம் நீளம் உயர்வு ஆழம் முதலியவற்றை அளந்து கூறல் அரிது. இறை எல்லையற்ற ஒன்று. எல்லையற்ற ஒன்று அளவுக்கு எட்டுங்கொல்? இறை உவமையற்றது; அதாவது எல்லையற்றது. எல்லை யற்ற ஒன்றை எல்லையுற்ற பொருள்களில் மிகப் பெரிய ஒன்றைக் குறித்து உணர்த்துவது தொன்றுதொட்ட வழக்கு. அப் பொழுதே எல்லையற்ற ஒன்றை உயிர்கள் மனத்திற் பற்றி ஒருவாறாதல் நினைத்தல் கூடும். உலகில் ஆழமுடையது எது? கடல். கடலினும் ஆழமுடையது இறை. அஃது அடியுடையது; இஃது அடியற்றது. அடியற்ற ஆழ முடைய ஒன்றை உலகுக்கு எப்படி உணர்த்துவது? அதை உலகில் ஆழமுடைமையில் ஈடும் எடுப்பும் அற்ற ஒன்றைச் சுட்டி உணர்த் தினால், அதன் மாண்பு ஒருவாறு புலனாகும். இதுபற்றியே ஆழி என்னுஞ் சொல் ஆளப்பட்டது போலும். அறவாழி அறவாழி - கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்று; அறத்தில் ஆழமுடையது என்பது பொருள். கடவுளை அருளாழி என்றும், கருணைக்கடல் என்றும், கிருபாசமுத்திரம் என்றும் சொல்வது மரபு. இஃது இறைவனது அருளின் - கருணையின் - கிருபையின் - அளவற்ற ஆழத்தை உணர்த்துவது; எல்லையுடைய நீர்க்கடலை உணர்த்துவதன்று. முழு அருள், மருண் மாசு கலப்பற்ற அறம். இதனால் அறத்தை அருளறம் (தயா தருமம்) என்று அறத்திறனுணர்ந்த ஆன்றோர் கூறிச்சென்றனர். அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து அந்நாட் பிறந்தவர் அருளறங் கேட்டார் அருளறம் பூண்டங் காருயி ரோம்புவர் அருளற மொழியாய் எனவரூஉம் ஆட்சிகளை நோக்குக. (மணிமேகலை) அந்தணன் முழு அருளறமுடையவன் இறைவன் ஒருவனே. அதனால் அவன் அந்தணன் என்று போற்றப்படுகிறான். 1இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்: இங்கே அந்தணன் என்பதற்கு இறைவன் என்று ஆசிரியர் நச்சினார்க் கினியர் பொருள் கண்டிருத்தலை ஓர்க. இறைவன் முழு அருளறமுடையவனாதலின், அவன் அறவாழி அந்தணன் என்னப்பட்டான். இறைவன் அருளறத்தில் ஆழியாயுள்ளவன் என்பது கருத்து. இறையும் கடலும் ஆறு ஏரி முதலியன ஒருபோது வற்றுந் தன்மையன; கடலோ வற்றாக் தன்மையுடையது. கடல்நீர் வற்றினால் உலக இருப்புக்கு இடம் எது? கடலிடைப் புதுநிலப் பரப்பு எழுவதுண்டு. அப் பரப்பள வில் நீர் வேறொரிடம் புகும். நீர் அறவே வற்றாது. வற்றாமையு டையது கடல். (இந்து மகா சமுத்திரத்தின் பெரும் பகுதி நிலமா யிருந்த காலம் உண்டு. வடஆப்பிரிக்கா வனாந்திரம் கடலா யிருந்த காலமும் உண்டு. இமயம் கடலிடைக் கிடந்த காலமும் இந்நாளில் குறிக்கப்படுகிறது). அளவுடைய கடல் நீருக்கே வற்றுதல் இல்லை எனில், அளவில்லாக் கடலாகிய இறைவனது அருளறத்துக்கு வற்றுத லிருக்குமோ? இறைவன் என்றும் வற்றாத அறவாழி என்க. அவ்வாழி நீராழியினும் பெரியது; ஆழமுடையது. இவ்வுலகிலும், மற்ற உலகங்களிலும் வாழும் உயிர்களின் தொகை எண்ணற்றது. அவ்வுயிர் ஒவ்வொன்றினும் உயிராக நின்று ஈசன் அருள் சுரக்கிறான். அவ்வருள் எல்லையுடையதா குமோ? அதன் ஆழத்தை அளந்து கூறல் எவரால் இயலும்? அதை அளக்க அளக்க அஃது ஆழ்ந்து ஆழ்ந்து கொண்டே போகும்; எல்லையின்றி ஆழ்ந்து கொண்டே போகும். அதன் ஆழங் காண்டல் அரிது. இவ்வியல்புடைய இறைவனை, அறவாழி என்று கூறாது, வேறென்னென்று கூறுவது? இறைவன் அறவாழி யாதலின், அவன் வரையாதருளும் அந்தணன் என்று போற்றப்படுகிறான். வேறு பொருள் அறவாழி என்பதற்குத் தரும சக்கரம் என்றும் பொருள் கூறலாம். அறம் - தருமம்; ஆழி - சக்கரம், வட்டம். தருமம் எல்லார்க்கும் பொது. அஃது ஒரு சார்பில் ஒரு விதமாகவும், மற்றொரு சார்பில் மற்றொரு விதமாகவும் பயன் படுவதன்று. எல்லார்க்கும் பொதுமையில் பயன்படும் ஒன்றைச் சக்கரம் என்று உருவகப்படுத்திச் சொல்வது மரபு. இதனால் தருமம், தரும சக்கரம் என்று வழங்கப்படுகிறது போலும். தரும சக்கரத்தைப் பொதுமைப்பட உருட்டுவோன் அருளறமுடையவனாயிருத்தல் வேண்டும்; இல்லையேல் தரும சக்கரத்தை உருட்டுவதில் காய்தல் உவத்தல் நேரும். தரும சக்கரம் காய்தல் உவத்தலைக் கடந்தது. முழு அருளறமுடையவன் இறைவன் ஒருவனே யாதலின், அவன் உருட்டும் அறவாழி ஞாயிற்றொளிபோல் எல்லார்க்கும் பொதுவாகப் பயன்படுவதாகும். அவ்வறவாழியை இறைவன் தாங்கி நிற்றலான், அவன் அந்தணன் என்று ஓதப்படுகிறான். 1களிசேர் கணையுடை காமனையுங் காய்ந்த அளிசே ரறவாழி அண்ணல் இவனென்ப 1உலக மூன்றும் உடையோய்நீ * s* * * கொலையி லாழி வலனுயர்த்த குளிர்முக் குடையின் நிழலோய்நீ 2அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன் பாரம் 2தரும சக்கரம் உருட்டினன் வருவோன் 2ஆதி முதல்வன் அறவாழி யான்வோன் பாத பீடிகை பணிந்தனள் 3அருளோ டெழும் அறவாழியப்பா 3ஆண்டுகொண்டா யறவாழிகொண்டே வென்ற அந்தணனே அந்தணர் அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தோரும் அந்தணரே யாவர்; அருளாளராவர் என்றபடி. அந்தண ரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் - செந்தண்மை பூண்டொழு கலான் என்றார் ஆசிரியரும். அறவாழி அந்தணனைச் சேராதர் வன்கண்ணராவர். தாள் சேர்ந்தார்க் கல்லால் தாள் சேர்தலைப் பற்றிப் பலதிறக் குறிப்புக்கள் மேற்பாக் களில் பொறிக்கப்பட்டன. அறவாழி அந்தணன்தாள் திருவருளுக்கு அறிகுறி. திருவருளாகிய தாளை நினைக்கும் வகைகள் பல உண்டு. மனம் உள்ளவரை உருவங் கடந்த ஒன்றை நினைத்தல் இயலாது. உருவம் என்று, காலம் முழுவதும் ஏதேனும் ஒரு செயற்கைக் குறியையே நினைந்து கொண்டிருத்தலுந் தவறு. செயற்கைக் குறியை இயற்கை வழியில் பெருக்கிக் கொண்டு தியானப் பயிற்சி செய்வது அருட்பேற்றுக்கு வழி காண்பதாகும். செயற்கைச் சிறு குறியினின்றும், பரந்து விரிந்த மரம் காடு மலை ஆறு கடல் முதலியவற்றை நினைக்கும் பயிற்சி பெறுதல் வேண்டும். இப் பயிற்சி அந்தண்மையை வளர்த்துக் கொண்டே போகும். அழகிய காட்சி வழங்கும் இயற்கைக் கூறுகளுள் ஆழியும் ஒன்று. ஆழியை நினைப்பதும் இயற்கை இறையை வழிபடும் துறைகளில் ஒன்றாகும். நீராழி நினைப்பும் அளவற்ற அந்தண்மைக்கு வழிகாட்டும். இயற்கை நீராழி வழிபாட்டின் சிறப்பை உணர்த்த வேண்டி, ஆழி என்னுஞ் சொல் பெய்யப் பட்டதென்க. அல்லல் என்பது தாளைச் சேர்தலின் இன்றியமையா மையை அறிவுறுத்துவது. பிற ஆழி நீந்தல் அரிது பிற - அறத்துக்கு வேறாகிய பிற; மறம், பாவம். ஆழி - கடல். பிறஆழி - பிறகடல்கள்; பாவக் கடல்கள். அறத்துக்கு மாறுபட்டது மறம். மறம் - நன்மையை மறுத்துத் தீமையை விளைப்பது; பாவம். மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்று - அறத் துறை மாக்கள் திறத்திற் சாற்றி - சிலப்பதிகாரம்: 14 : 27 - 8. (மறம் - அகிதம்; அறம் - இதம் - அடியார்க்கு நல்லார்). அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் - மணிமேகலை: 21 : 20. பிற ஆழி அறம் அல்லாத பிற என்னை? மறம் அல்லது பாவம் என்று எவருங் கூறுவர். மக்கள் அறநெறி நின்றொழுக முயல்கிறார்கள். இம்முயற்சி பெரிதும் வெற்றி அளிப்பதில்லை. எவ்வழியிலாதல் பாவம் வாழ்விடைப் புகுந்துவிடுகிறது. மிகச் சிறுபாவம் வாழ் விடைப் புகினும் வாழ்வு கேடுறும். ஒரு கலப்பாலில் ஒரு சொட்டு நஞ்சு வீழினும் அக் கலப்பாலும் நஞ்சாகிறதன்றோ? சிறுபாவம் விரைந்து பரவிப் பெருகிக் கடலாகி உயிரை ஆழ்த்தும். பாவம் கடலாகி உயிரை ஆழ்த்தி வருத்தலால் அதையும் ஆசிரியர் ஆழி என்றார். நீந்தல் அரிது ஆழி என்றதற்கேற்ப நீந்தல் என்றார். கடலில் அகப் பட்ட ஒருவன் கடலிலேயே ஆழ்ந்து சாக எண்ணுவனோ? எண்ணான். அவன் கடலைக் கடக்கவே விரைவன். கடக்கும் முயற்சி இயல்பாதலின், நீந்தல் என்றார். கடலோரத்தில் அகப்பட்ட ஒருவன் தன் கையால் நீந்திக் கரை நண்ணுதல் கூடும். நடுக்கடலில் அழுந்தும் ஒருவனுக்குக் கை நீண்ட நேரம் துணைபுரியாது. அவனுக்கு வேறு துணை தேவை. அவனுக்கு ஒரு சிறு மரத்துண்டாவது புணையாய்த் துணை செய்தல் வேண்டும். பாவக் கடல்களை எப்படிக் கடப்பது? இதற்கு ஆசிரியர் குறிக்கும் புணை என்னை? அதை உறுதியாகப் பற்றினால் மறக் கடல்களெல்லாவற்றையுங் கடத்தல்கூடும். பாவம் உலகில் பாவத்தைப் பற்றிய பேச்சு அதிகம்; ஆராய்ச்சி - இவை போன்ற ஆராய்ச்சிகள் நீண்டகாலமாக நிகழ்ந்த வண்ண மிருக்கின்றன. இவ்வாராய்ச்சிகளால் விளையும் பயன் மிகமிகச் சிறியது. இவை கலைஞானிகளின் பொழுது போக்குக்கு ஒரோ வழி துணைபுரியும். ஆராய்ச்சியுடன் முயற்சியும் வேண்டும். பாவம் உள்ளதாயினுமாக; இல்லதாயினுமாக; ஆதியா யினுமாக; அநாதியாயினுமாக. பாவம், வாழ்வில் நிகழ்தல் உண்மை. அது நிகழ்ந்து நிகழ்ந்து பெருகுதலும் உண்மை. அதைப் பெருகாதவாறு தடுத்து, அறவே ஒழிக்க வழி தேடுவது அறிவுடைமை. பாவத்தில் வீழ்வோர் எளிதில் எழுதல் இயலாது. பாவம் நாளுக்குநாள் வளர்ந்தே போகும் ஒரு பாவத்தினின்றும் ஓராயிரம் பாவம் பிறக்கும். அவை கடலெனப் பெருமை. அவற்றின் பெருக்கைக் குறிக்கவே பிறஆழி என்றார் ஆசிரியர். பாவம் ஒரு கடலாக அன்றிப் பல கடலாகப் பெருகுந் தன்மை யுடையது என்றபடி. மேலும் மேலும் பெருகுந் தன்மைவாய்ந்த பாவம் எங்கே முடிவடையும்? அதற்கு முடிவுண்டா? இல்லையா? முடிவுண்டா யின், அம் முடிவுகாண எவ்வழியைக் கடைப்பிடிப்பது? வழி பற்றிய பாவத்தைப் பெருகவிடாது குறைக்கவும், அறவே குலைக்கவும் வழிகள் உள்ளன. வழிகள் பலபடச் சான்றோர் களால் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் அரியனவும் உண்டு; எளியனவும் உண்டு. கடும் விரதங்கள், அருந் தவங்கள், பெருஞ் சீலங்கள், கொடும் யோகங்கள் முதலியனவும்; வீட்டைத் துறத்தல், காட்டுக்கேகல், பட்டினி கிடத்தல், உடலை வருத்தல், கனலிடை நிற்றல், புனலிடை மூழ்கல், மூக்கைப் பிடித்தல், மூச்சை அடக்கல் முதலியனவும் அரியன. இவற்றின் அருமைப்பாடுகளை இங்கே விளக்க வேண்டுவதில்லை. மனையுடன் வாழ்தல், மக்களை ஈனல், விருந்தோம்பல், தானஞ்செய்தல், சீலங்காத்தல், ஆண்ட வனை வழிபடல், உயிர்கட்குத் தொண்டு செய்தல் முதலியன எளியன. எளியனவற்றுள்ளும் எளியதொன்றிருக்கிறது. அஃது எது? அஃதே ஆசிரியர் குறிப்பது. அஃது அறவாழி அந்தணன் தாளைச் சேர்வது. சேர்தல், நினைத்தல் என்பது மேலே விளக்கப் பட்டது. இறைவன் தாளை நினைப்பதால் பாவக்கடல்களைக் கடத்தல் கூடுமா என்று எவரும் ஐயுற வேண்டுவதில்லை; சிறிதும் ஐயுறவேண்டுவதில்லை. மக்கள் எப்படியோ பாவத்துக்கு ஆளாகிறார்கள். அதற்கு ஆளாகும் எளிமை மக்களிடம் இருக்கிறது. எளிய மக்கள் தங்கள் வல்லமையால் மட்டும் பாவங்களினின்றும் விடுதலை யடைதல் அருமை. செய்த பாவங்களை ஒழிக்கவும், இனிப் பாவங்கள் செய்யாத ஆற்றலைப் பெறவும் தங்கள் வல்லமையைக் காட்டி லும் மேலான வல்லமையுடைய ஒருவன் துணையை நாடுதல் வேண்டும். அவன் எத்தன்மையனா யிருத்தல் வேண்டும்? அவன் பாவமே இல்லாதவனாய், இரக்கமே யுடையவனாய், முறை யீட்டுக்குச் செவிசாய்த்து எளிவந்து மன்னிப்பருள்வோனா யிருத்தல் வேண்டும். இந்நீர்மையன் எவன்? ஆண்டவன் ஒருவனே. அவன் அறவாழி அந்தணன். கசிந்தழுகை அறவாழி அந்தணனை நினைந்து நினைந்து, செய்த பாவங்குறித்து உண்மையாக வருந்திக் கசிந்து கசிந்து உருகி உருகி அழுது நிற்பவர் மனம் மீண்டும் பாவத்தில் நாட்டஞ் செலுத்தவும் அஞ்சும். பாவத்தில் அச்சம் தோன்றப்பெற்ற மனம் மீண்டும் பாவஞ் செய்ய ஒருப்படாது. மீண்டும் பாவஞ்செய்ய ஒருப்படாத மனத்தினர் பாவக்கடலைக் கடத்தற்கு இறைவன் திருவடியாகிய திருவருட்டுணை என்னும் புணை வந்தே தீரும்- மக்களின் அழுகைமட்டும் உண்மையுள்ளதாயிருத்தல் வேண்டும். அழுகை உண்மையா போலியா என்பது எங்குமுள்ள ஆண்ட வனுக்குத் தெரியும். அவனை ஏமாற்றல் எவராலும் இயலாது. இறைவன் திருவடிப்புணை பாவக்கடலைக் கடத்தற்கு வேண்டற் பாலது. இதுபற்றியே, அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தாற் கல்லால் - பிறவாழி நீந்தல் அரிது என்றார் ஆசிரியர். அறவாழி அந்தணன் தாளைச் சேர்ந்தோர் பிறவாழிகளை எளிதில் கடப்பர் என்றபடி. பாவக்கடல்களைக் கடப்பதற்குத் துணைசெய்யும் புணை எது? அறவாழி அந்தணன் தாள். அறவாழி அந்தணன் தாளைச் சேர்ந்தோர் பாவக் கடல் களை நீந்துவர். மற்றவர் பாவக்கடல்களை நீந்த இயலாதவராய் அழுந்துவர். பிறவாழி என்பதற்குப் பரிமேலழகர் பிறவாகிய கடல் களை என்று பொருள்கூறி, அறம் பொரு ளின்பமென உட னெண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமை யான், ஏனைப் பொருளும் இன்பமும் பிற என்னப்பட்டன என்று விரிவுரை கூறியுள்ளார். பிறவாழி நீந்தலரிது என்பதற்கு, பிறவாழியை நீந்தலா காது. அது பெறுதலரிது என்று பொருள் கண்டு, இது காமமும் பொருளும் பற்றிவரும் அவலங் கெடு மென்றது என்றொரு குறிப்பும் பொறித்தனர் மணக்குடவர். வேறு பொருள் பிறவாழி என்பதைப் பிறவு ஆழி என்று கொண்டு, அதற்குப் பிறவிக்கடல் என்று பொருள் கூறுவோருமுளர். பிறவு - பிறப்பு. 1மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினோ டிறவு மானான் அருந்தவ முனிவரொ டானிழற்கீழ் இருந்தவன் வளநக ரிடைமருதே 2கார்ப்படைத்த நிறத்தோனைக் கைதொழுவார் பிறவாழிக் கரைகண் டாரே (8) 9 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 1இறைவ னடிசேரா தார். பொருள் இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியைச் சேர்ந்தவர், பிறவி பெருங்கடல் - பிறவியாகிய கரைகாணாக் கடலை, நீந்துவர் - கடப்பர், இறைவனடி சேராதார் - இறைவன் திருவடியைச் சேராதவர், நீந்தார் - (பிறவிப் பெருங்கடலைக்) கடவார். கருத்து இறைவனடி சேர்ந்தோர் பிறவிக்கடலை நீந்துவர். விருத்தி முன்னே பிறவாழி என்றார்; இங்கே பிறவிப் பெருங் கடல் என்றார். பாவத்தின் விளைவே பிறவி. பாவக்கடல்கள் (பிறவாழி) திரண்டே பிறவிப் பெருங்கடலாதலால் இங்கே பிறவிப் பெருங்கடல் என்றார். இறையடிச் சேர்க்கையால் பிறவாழி நீந்தினோர் பிறவிப் பெருங்கடலில் வீழார். பிறவிப் பெருங்கடலை நீந்தினோர் பிறவாழியில் மீண்டும் வீழார். இறைவனடி சேராது ஆர் பிறவிக்கடலை நீந்துவர்? (எவரும்) நீந்தார் என்று கொண்டும், இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்துவரோ நீந்தார் என்று கொண்டும் பொருள் கூறுவோருமுளர். (ஆர் - யார் என்பதன் மரூஉ. செய்யுளோசையின் பொருட்டு ஓகாரம் தொக்க தென்பர்.) இறைவனடி - சேர்ந்தார் - சேராதார் இறைவன் : இரண்டாம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. அடி - திருவடிப்புணை ; திருவருள். சேர்ந்தார் : சொல்லெச்சம் (சொற்குறைவு.) சேர்ந்தார் - சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர்- யார்? (பிறவிப் பெருங் கடலை) நீந்தார்- யார்? முன்னையதற்குப் பாட்டில் வெளிப் படையாக ஒன்றுங் காணோம். பின்னையதற்கு, இறைவனடி சேராதார் என்பது விடையாக நின்று கொண்டிருக்கிறது. இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தாரெனில், இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்பது சொல்லாமலே விளங்கும். பாட்டில் சேர்ந்தார் என்னுஞ் சொல்லில்லை. சேராதார் என்பதையும், நீந்துவர் என்பதையும் ஊன்றி நோக்கினால் சேர்ந்தார் என்னுஞ் சொல் எஞ்சி நிற்றல் விளங்கும். அச்சொல் சேர்ந்தாலன்றிப் பாட்டின் பொருள் நிறைபெறாது குறைபட்டுக் கிடக்கும். பொருள் கூறுங்கால் எஞ்சி நிற்குஞ் சொல்லை வருவித்துக் கொள்ளல் வேண்டும். அச் சொல்லை வருவித்துப் பொருள் கூறும் முறையிலேயே பாட்டின் மற்றச் சொற்கள் அமைந்துள்ளன. ஆகவே, இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்றும், இறைவனடி சேராதார் அக்கடல் நீந்தார் என்றுங் கொள்க. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - நீந்தார் பிறவி : பேதைமை காரணமாக வருவது. பெருங்கடல் - கரைகாணாக் கடல் ; கரைகாணாக் கடலென்பார் பெருங்கடல் என்றார் - அடியார்க்கு நல்லார் (சிலப்பதிகாரம் : 15 : 28 : உரை). பிறவி பிறவிகள் பலதிறத்தன. அவற்றுள் சிறந்தது மனிதப் பிறவி. என்னை? மனிதப் பிறவியில், உயிர் தன்னைப் பற்றியுள்ள பேதைமையின் இருப்பைத் தெரிதற்கும், தன்னையறிதற்கும், தனக்காதாரமாயுள்ள தலைவனை யுணர்தற்கும் உரிய கருவி கரணங்கள் வாய்த்திருத்தலின் காண்க. பேதைமை காரணமாக உயிர் உடலைத் தாங்கியதும் அதற்குச் செய்கை முகிழ்க்கிறது. அச்செய்கை இறைவழி நிகழின் பிறவியொழியும். இல்லையேல் பிறவி பெருகிக் கொண்டே போகும். பிறவி பெருக நேரினும், அப்பொழுதும் என்றாதல் இறைவனடித் துணையாலேயே அப்பிறவியை யொழித்தல் வேண்டும். பிறவி நோய்க்கு உரிய மருந்து இறைவனடியன்றி வேறொன்றில்லை. பிறவி எப்படிப் பெருகுகிறது? பிறவிக்கு வித்து, பேதைமை (அவிச்சை). பேதைமையிலிருந்து செய்கை (கர்மம்) பிறக்கிறது. செய்கையிலிருந்து உணர்வும் (விஞ்ஞானமும்), உணர்விலிருந்து அருவுருவமும் (ரூபாரூபமும்), அருவுருவத்திலிருந்து வாயிலும் (ஞானேந்திரியமைந்தும் மனமும்), வாயிலிலிருந்து ஊறும் (பரிஸமும்), ஊற்றிலிருந்து நுகர்வும் (சுகதுக்க அநுபவமும்), நுகர்விலிருந்து வேட்கையும், வேட்கையிலிருந்து பற்றும், பற்றிலிருந்து பவமும் (கருமத் தொகுதியும்), பவத்திலிருந்து தோற்றமும், தோற்றத்திலிருந்து வினைப்பயனும் (கர்மபலமும்) பிறக்கின்றன. 1‘ngijik செய்கை உணர்வே அருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோர் ரறியிற் பெரும்பே றறிகுவர் அறியார் அறியின் ஆழ்நர கறிகுவர் கருமத் தொகுதி, பிறவி (தோற்றம்) ஆதல் கருதற்பாலது. பவமெனப்படுவது கரும ஈட்டம் கருமத்தொகுதி காரணமாக - வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்- மணிமேகலை : 30 : 93 : 113. பிறவி, காரண காரியம் ஆகி ஆகி இடையீடின்றித் தொடர்ந்து தொடர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. ஒரு பிறவியை எடுத்துக் கொள்வோம். அதனை ஆராய்ந்தால் அது காரண காரியமாய்த் தொடர்ந்து வருதலை உணரலாம். அது முற் பிறவியின் காரியமாகவும், வரும் பிறவிக்குக் காரணமாகவும் நிற்றல் விளங்கும். காரண காரியத் தொடர்ச்சியாவது வித்து முளை போன்றது. பெருங்கடல் காரண காரியமாய்த் தொடர்ந்து பெருகும் பிறவியைக் கடலென்று சொல்வது மரபு. ஈண்டுக் கடல் என்றது பரப்புக்கும் ஆழத்துக்கும் அறிகுறி. கடலின் கரை காணக்கூடியது. கருமப் பிறவிப் பெருக்கோ கரை காணாதது. இரண்டுக்கும் உள்ள வேற்றுமை தோன்றவே பிறவிப் பெருங்கடல் என்றார் ஆசிரியர். பிறவி என்னும் பெருங்கடல் என்றார் சாத்தனாரும் (மணிமேகலை : 11 : 24). நீந்துவர் - நீந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்த முயல வேண்டுமா? வேண்டாவா? துன்பத்திலுள்ளோர் அதை நீக்க முயல்வது இயற்கை; முயலாதார் துன்பத்தினின்றும் விடுதலையடையார். பிறவிப் பெருங்கடலை நீந்த முந்துவதே அறிவுடைமை. அகன்று பரந்து ஆழ்ந்து கிடக்குங் கடலில் - ஒருவர் அகப்பட நேர்ந்தால் அவர் எப்படிக் கரையேறுவர்? அவர்க் கொரு புணைத்துணை வேண்டுமன்றோ? அஃதின்றி அவரால் கரையேறுதல் இயலுங்கொல்? கரையுடைய கடலைக் கடத்தற்கே புணை வேண்டுமெனின், கரைகாணாப் பிறவிப் பெருங்கடலைக் கடத்தற்கு ஒரு புணை வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை. அப்புணை எது? அதுவே இறைவனடி. இறைவனடி சேர்ந்தார் நீந்துவர்; மற்றவர் நீந்தார் (நீந்தா தழுந்துவர் என்றபடி). 1தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதலந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே 2சொற்றுணை * * * கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே 3சூழ்கதிர் மதிய மன்ன சுடர்மணிப் பூணி னானும் வீழ்தரு கதியி னீங்கி விளங்குபொன் னுலகத் துய்க்கும் ஊழ்வினை துறத்த லானும் உணர்வுசென் றெறித்த லானும் ஆழ்கடற் புணையி னன்ன அறிவரன் சரணடைந் தான் 4நீப்பரும் பிறவிநீர்க் கடலை நீந்துநற் றேப்பையாந் திருவுரு வென்றி றைஞ்சிடா எனவரூஉம் ஆன்றோர் மொழிகளை நோக்குக. குருநாதன் வழி பிறவிப் பெருங்கடலில் உயிர் அமிழும் இயல்புடையது. அதற்குப் புணையாகத் துணைபுரியும் ஒன்று அக் கடலிடை அமிழாததா யிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அமிழும் ஒன்றற்குத் துணைபுரிதல் கூடும். இறை, பிறவிப் பெருங்கடலில் வீழாதது; அக்கடலிடை வீழ்ந்து தவிக்கும் உயிர்களைக் கருணையினால் (திருவடியால்) கரையேற்றுவது. இவ்வியல்புடைய இறையின் அடியையே பிறவிப் பெருங்கடலிடை வீழ்ந்து கிடக்கும் உயிர் பற்றுதல் வேண்டும். தன்போன்ற உயிரை அது பற்றினால் இரண்டும் அமிழ்ந்து அழிந்து போகும். இறை பிறப்பிறப்பில்லாதது; உருவம் முதலியன இல்லாதது. இத்தகைய ஒன்று நேரேபோந்து உயிர்கட்கு அருள்வதில்லை. ஆனால் இறை குருவாயிலாக உயிர்கட்கு அருள்புரிவது வழக்கம். ஈண்டோர் ஐயம் நிகழலாம். அது, குருநாதன் இறையைப் போலப் பிறப்பிறப் பற்றவனா என்பது. குருநாதன் தனக்கென்று ஒன்றும் இல்லாதவன்; இறையே விளங்கப் பெற்ற உள்ள முடையவன். அவன் செயல் இறை செயலேயாகும். நாமரூப மில்லாத இறை, குருநாதன் உள்ளத்தைக் கோயிலாக்கொண்டே உயிர்கட்கு அருள்புரியும். குருநாதன் பொன்னுடல் இறைக்கு ஆலயமாக மட்டும் பயன்படும். பிறப் பிறப்பில்லா இறை யொன்றேயொளிரும் உள்ளமுடைய குரு நாதனுக்கும் பிறப்பிறப்புத் துன்பம் கிடையாது. இது பற்றியே குருநாதனை இறையாகக் கொண்டு வழிபடும் மரபுகளும் உலகில் ஏற்பட்டுள்ளன. குருநாதனை இறைவனாகக் கொள்வது தொன்று தொட்டு வரூஉம் ஒரு பெருஞ் சம்பிரதாயம். இச் சம்பிரதாயம், இறைவனுக்குப் பிறப்புக் கூறுதற்கு இடைநாளில் துணை நிற்க நேர்ந்தமையான், இதற்கு மாறுபட்ட சம்பிரதாயமும் தோன்ற லாயிற்று. இதுபற்றி இவ் விருத்தியுரைக்கண் பல இடங்களிலும், யான் இயற்றியுள்ள வேறு நூல்களிலும் விரித்துக் கூறியுள்ளேன். பிறவிப் பெருங்கடலை நீந்துதற்கு இறைவனடியின் சேர்க்கை இன்றியமையாதது. அச்சேர்க்கை பெறாதார் பிறவிப் பெருங்கடலைக் கடத்தல் அரிது. 1ஆதி வேதம் பயந்தோய்நீ யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ நீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீ நாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன் பாத கமலந் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே 2இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான் என்னுமொரு மகர வாய்ப்பட் டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம் எனக்கொங்கை வரிசை காட்டுந் துப்பிதழ் மடைந்தையர் மயற்சண்ட மாருதச் சுழல்வந்து வந்த டிப்பச் சோராத ஆசையாங் கானாறு வான்நதி சுரந்ததென மேலும் ஆர்ப்பக் கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங் கைவிட்டு மதிம யங்கிக் கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே கண்ணருவி காட்டும் எளியேன் செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை செய்வையோ சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந் தமே. (9) 10 கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. பொருள் எண்குணத்தான் தாளை - இறைவனது திருவடியை, வணங்கா தலை - வணங்காத தலைகள், கோள் இல் பொறியின் - புலன்களைப் பெறாத பொறிகளைப்போல, குணம் இலவே - பயன் இல்லாதனவேயாம். கருத்து இறைவனடியை வணங்காத் தலைகள் பயனற்றனவாம். விருத்தி திருவடி போற்றலை யுணர்த்தும் பாக்கள் ஏழு. இவை களுள் மேற்போந்த ஆறு பாட்டிலும் பெரிதும் தியானமே பேசப்பட்டது; உறுப்பு வணக்கம் சிறப்பாகப் பேசப்படவில்லை. இப்பாட்டில் சிறந்த உறுப்பு வணக்கம் குறிக்கப்பட்டுளது. தலை வணக்கம் முனைப்பின்மையை உணர்த்துவது. முனைப் பறுந் தால் பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குரிய புணை கிடைக்கும். எண்குணத்தான் தாளை வணங்காத் தலை எண்குணத்தான் - எண்ணுங் குணத்தான்; அன்பன் எண்ணுங் குணங்களையுடையவன். எண்குணத்தான் என்பதற்கு எட்டுக் குணங்களை யுடைய வன் என்றுங் கூறலாம். தலை - உறுப்பிற் சிறந்தது; இடமுமாம். எண்குணத்தான் இறைவன் குணமில்லாதவன் என்றும், நிர்க்குணன் என்றும், குணாதீதன் என்றுஞ் சொல்லப்படுகிறான். 1குலமி லான்குணங் குறியிலான் குறைவிலான் கொடிதாம் புலமி லான்தனக் கென்னவோர் பற்றிலான் பொருந்தும் இலமி லான்மைந்தர் மனைவியில் லான்எவன் அவன்சஞ் சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே. இறைவன் குணமில்லாதவனெனில், எக்குணமில்லாதவன்? இராசதம், தாமதம், சாத்விகம் ஆகிய மாயாகுண மில்லாதவ னென்க. இக்குணமல்லாத வேறு குணம் இறைவனுக்கு உண்டு. அஃது அருட்குணம். அருட்குணம் சின்மயமா யிருப்பது. சகுணன் உயிர்களெல்லாம் தன்னைப் போலாதல் வேண்டுமென்று இறைவன் இடையீடின்றி நினைந்த படியே இருக்கிறான். அந்நினைவு இறைவனது அருட்குணத்தினின்றும் பிறப்பது. அருட்குணம் இறைவனிடத்தில் என்றும் இயல்பாக அமைந் திருப்பது. அக்குணம் உயிர்கட்கு நலஞ்செய்ய எழுந்த வண்ணமி ருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. அருட்குணமுடைய இறைவன் உலகில் சகுணன் என்று போற்றப்படுகிறான். (சகுணன் - குணத்தோடு கூடியவன்). இறைவனது சகுண நிலையே வழி பாட்டுக்கு வேண்டற்பாலது. சகுணம் அருளாலாவது. 2உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும் கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம் தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே. சகுணநிலை குருநிலை என்பது ஒருவித மரபு. இதுபற்றி யுள்ள கருத்து வேற்றுமைகள் பல. அக் கடையை ஈண்டுப் பரப்புவது அநாவசியம். குணமும் பெயரும் இறைவன்றன் அருட்குணங்களின் கூறுபாடுகள் பலப்பல; எண்ணிறந்தன என்றுங் கூறலாம். ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு பெயர் வழங்கப்படுகிறது. பொருள் ஒன்று; பெயர் பல என்பதை மறத்தலாகாது. ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ என்றார் மாணிக்கவாசகனார். இறைவனது அருட்குணத்தின் கூறுபாடுகளுக்கு வழங்கப் படும் பெயர்கள் பலவற்றைத் திரட்டிச் சிலர் ஆயிரமாகவும், சிலர் நூறாகவும், சிலர் பத்தாகவும், சிலர் எட்டாகவும், சிலர் ஆறாகவும், சிலர் ஐந்தாகவும், சிலர் மூன்றாகவும் தொகுத்து உலகுக்கு உதவியுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை யாக நிற்பது ஒன்றே. அஃது அருள்; அருட்சக்தி. இறைவன் ஒருவனே. அவன் பல தன்மைகளையுடையவனா யிருக்கிறான். அத்தன்மைகளை யெல்லாம் விரித்தல் அரிது. தாலிபுலாக நியாயம் பற்றி ஈண்டு இரண்டொன்றை எடுத்துக் காட்டுதல் சாலும். அவை: பெருமை, எங்குமிருத்தல், தூய்மை, வண்மை, அழகு முதலியன. இவை ஒவ்வொன்றும் ஒன்றன் கூறுபாடேயாம். பெருமையுடைய ஒருவனே எங்குமிருப்பவன்; எங்குமிருப்ப வனே தூயன்; தூயனே வள்ளல்; வள்ளலே அழகன். பிற இயல்பு களுக்கும் இத்தகைப் பெயர்களுண்டு. ஒவ்வோரியல்பையும் ஒவ்வொரு தெய்வமாகக் கொள்வது அறியாமை. ஒருவனே எல்லா மாயிருக்கிறான். ஆண்டவன் ஒருவனே பெரியவன் என்பதற்கு அல்லா என்றும், எங்குமிருப்பவன் என்பதற்கு விஷ்ணு என்றும், தூயன் என்பதற்குச் சிவன் என்றும், வண்மையுடையவன் என்பதற்குத் தியாகேசன் என்றும், அழகன் என்பதற்கு முருகன் என்றும் சொல்லப்படுகின்றன. இவ்வாறு ஆயிரம் பெயர், நூறு பெயர் முதலிய கணக்கற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இப்பெயர் களையெல்லாம் பூண்டுள்ளவன் ஒரே இறைவன் என்பதை மறந்த இடத்திலேயே பன்முகச் சமயநெறி தோன்றி இடர்ப் படுத்தும். அன்பன் எண்ணுமாறு அன்பன் ஆண்டவனை எப்படி எப்படி நினைக்கிறானோ அப்படி அப்படியெல்லாம் ஆண்டவன் தோன்றி அவனுக்கு அருள் செய்வன். உலகில் இதுகாறும் தோன்றிய அன்பர் பலர் ஆண்டவனை எவ்வெவ்விதமாகவோ எண்ணி எண்ணி வழி பட்டனர். அவரவர் எண்ணத்தின்படியே ஆண்டவன் அருள் சுரந்துள்ளான். இதுபற்றிய கதைகள் பல உண்டு. 1அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே அன்பன் எண்ணும் வழி ஆண்டவன் அருள் புரிதலால், ஆண்டவன் எண்குணத்தனாகிறானென்க. அன்பன் எண்ணு மாறு ஆண்டவன் குணமுடையவனாகிறானென்பது நுட்பம். எட்டுக் குணம் இறைவனது பல்வகைக் குணங்களில் எட்டுக்குணங்கள் சிறப்பாக இந்நாட்டுப் பெரியோர் சிலரால் கொள்ளப்பட்டன. அக்கொள்கையை உட்கொண்டு, எண்குணத்தான் என்பதற்கு எட்டுக் குணமுடையான் என்று பொருள் கூறுவோருமுளர். இஃதும் இயைந்த ஒன்று. பலவகையில் ஆயிரம், நூறு, பத்து அடங்குவதுபோல எட்டும் அடங்குமன்றோ? 2எண் குணங்களாவன:- தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடி விலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ் வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது. 3அணிமாவை முதலாக வுடையன வெனவும், 4கடையிலா அறிவை முதலாக வுடையன வெனவும் உரைப்பாருமுளர். 5பண்ணவன் எண்குணன் 6பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே வீட்டுலக நண்ணார் வீனைக்கள் வராறலைப்ப ஒட்டிடுப எண்குணனுங் கோட்பட் டுயிராவே 7இறைவனீ ஈசனீ எண்குணத் தலைவனீ 8எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம் தாளை தாளைப் பற்றிய பலதிறக் குறிப்புக்கள் மேற்பாக்களிற் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவனது ஒரு தாள், யான் என்னுஞ் செருக்கை அறுத்து அருள்வது; மற்றொரு தாள், எனது என்னுஞ் செருக்கை அறுத்து அருள்வது: யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் - குயர்ந்த உலகம் புகும் என்றார் ஆசிரியர். வணங்கா வணங்கா - வணங்காத, வளையாத, பணியாத, வணக்கம் - வளைவு. என்ன வளைவு? முனைப்பின் வளைவு; முனைப்பறுதல். முனைப்பற்ற விடத்தில் தாழ்மை தானே அரும்பும். நான் என்னும் முனைப்பு வளைந்தால் கருவி கரணவுறுப்புக் களெல்லாம் தாமே வளையும். முனைப்பற்ற வணக்கமே வணக்கமாகும். முனைப்பறாத வெறும் புறவணக்கம் வணக்கமாகாது. எண்குணத்தான் தாளை வணங்க வணங்கச் செருக்கு அற்று அற்று முறைமுறையே எண்குணம் படியும். எண்குணத் தில் மூழ்குவது இறைவனடியில் இன்புற்று வாழ்வதாகும். நாவார * * * * எண் குணத்துளோமே என்றார் அப்பரும். தலை தலை, உறுப்புக்களில் தலைமையுடையது. இனம்பற்றித் தலையுடன் பிற வுறுப்புக்களையுங் கொள்க. அப்பர் திருஅங்க மாலை பார்க்க. தலை வணங்கினால் மற்ற உறுப்புக்களெல்லாம் தாமே வணங்கும். அதனால் தலையை ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிட்ட வாறாம். உறுப்புக்களெல்லாம் திரிகரணத்தில் அடங்கும். திரி கரணம்: மனம் மொழி மெய். தலை, மெய்யிற்கு அறிகுறி. தலையைக் கொண்டு மற்ற மனமொழிகளையுங் கொள்க. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியுந் தந்த தலைவனை ‘* * * தாளை வணங்காத் தலை என்றது தலை வணக்கத் துக்குரிய தென்பதை வலியுறுத்துவது. தாளையும் தலையையும் உறுப்பாக் கொண்டு வழிபாடு செய்வது ஒரு முறை; உறுப்பாக் கொள்ளாது வழிபாடு செய்யும் முறையும் உண்டு. இது சொல்லால் சொல்லுந் தகையதன்று; குருநாதன் திருமுன்னே விளங்கும் ஒருவித நுட்பம். தலையால் தாளை வணங்குதல் செருக்கறுத்தலை அறிவுறுத்துவது. தலைநிமிர்வு முனைப்புக்கு அறிகுறி. அதன் வணக்கம் தாழ்மைக்கு அறிகுறி. மேலேயுள்ள தலை, கீழேயுள்ள தாளில் விழுவது, முனைப்புச் சாய்ந்து விழுந்து ஒடுங்குதலைத் தெரிப்பது. தலை - இடத்து என்று பொருள் கூறுவோரும் உளர். கோளில் பொறியின் குணமிலவே கோள் - கொள்ளுதல், கொள்கை : முதனிலை திரிந்த தொழிற்பெயர். கோள் இல் - கொள்ளுதல் இல்லாத. கோளில் என்பதற்கு அறிவில்லாத என்று மணக்குட வரும், தத்தமக் கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத என்று பரிமேலழகரும் உரை கண்டுள்ளனர். பொறியின் - ஐம்பொறி போல; பாவைபோல. இன் - ஐந்தாம் வேற்றுமை யுருபு ; உவமப் பொருளின் மேலது. கோளில் பொறியின் என்றமையான், பொறியின் என்பதைக் கொண்டே, கோளில் என்பதற்குப் பொருளு ரைத்தல் பொருத்தம். குணம் இலவே - ஏகாரம் தேற்றம். கோளில் பொறியின் பொறி - ஐம்பொறி ; பாவை (பதுமை). ஐம்பொறி : மெய், வாய், கண், மூக்கு, செவி. பொறி மக்களுக்கும் உண்டு ; பாவைக்கும் உண்டு இரண்டுக்கு முள்ள வேற்றுமை என்னை? மக்களது பொறியில் புலன் (அறிவு) உண்டு; பாவையினது பொறியில் புலனில்லை. புலன் ஐந்து; அவை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஐம்பொறியில் ஐம்புலன் பொருந்தியுள்ள முறை: மெய்க்கு - ஊறு, வாய்க்கு - சுவை, கண்ணுக்கு - ஒளி, மூக்குக்கு - நாற்றம், செவிக்கு - ஓசை. பொறிவாயிலாகவே புலன் இயங்கும். புலனற்ற பொறி உயிரற்ற உடல் போன்றது. புலனில்லாத மக்களின் பொறி பாவையின் பொறி போன்றதே யாகும். இருவிதப் பொறிக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. இதனால் புலனற்ற பொறியுடையவரைப் பாவை என்று கூறலாமன்றோ? ஆகவே, ஈண்டுப் பொறியை ஐம்பொறி என்றோ பாவை என்றோ கொள்ளலாம். இரு பொருள்படும் முறையில் பொறி திகழ்கிறது. பொறியின் இயல்பு புலன்களைக் கொண்டிருப்பது. பொறியின் கோள் புலன். இதைக் கொண்டு பொறியை இருவித மாகக் கொள்ளலாம். ஒன்று கோள் பொறி; மற்றொன்று கோளில் பொறி. கோள் பொறி புலனைக்கொண்ட பொறி; கோளில் பொறி - புலனைக் கொள்ளாத பொறி. ஈண்டுப் பொறியுடன் போந்துள்ள கோள் என்பதே புலனை யுணர்த்துவதாகும். கோள் என்பதற்கு வேறாக புலன் என்றொரு சொல்லை வருவித்துப் பொருளுரைத்தல் வேண்டுவதில்லை. கோள் என்பதே ஆகுபெயராக நின்று புலனை உணர்த்துகிறது. கோளில் என்பதற்கு அறிவில்லாத என்று மணக்குடவர் பொருள் கூறியிருத்தலும் ஈண்டு உன்னற்பாலது. எண்குணத்தான் தாளை வணங்காத தலை பயனற்றது எப்படி? புலனற்ற பொறிபோல என்றபடி. புலனடக்கம் தலை மூளைக்கு நிலைக்களன்; மூளை மனத்துக்கு நிலைக்களன்; மனம் புலன்களுக்கு நிலைக்களன்; புலன்கள் பொறிகளுக்கு நிலைக்களன்கள். பொறிகள் யாண்டு மலர்ந்து நிற்கின்றன? தலையிலல்லவோ? மனத்துக்கும் பொறிகளுக்கும் இடையில் இயங்குவன புலன்கள், புலன்களே பொறிகள் வாயிலாக எல்லாவற்றையும் மனத்துக்கு அறிவிக்கும் பண்பு பெற்றிருக்கின்றன. மனத்துக்கு ஆக்கந்தேடும் பொறுப்பும், அதற்குக் கேடு செய்யும் பொறுப்பும் புலன்களுடையன என்பதை விளக்க வேண்டுவதில்லை. இதுபற்றியே புலன்கள்மீது சான்றோர் கருத்துச் செலுத்தி, அவற்றைத் தீயவழி உழலச் செய்யாமல் ஒடுக்கி, நல்ல வழியில் இயங்கச் செய்யவே பெரிதும் முயன்றனர். அம் முயற்சித் திறங்கள் பல. அவற்றுள் சிறந்ததும், இயற்கையின் போக்குக்கு உரியதுமா யிருப்பது ஒன்று. அஃது இறையை வணங்குதல் என்பது. ஆசிரியர் இறையைத் தலையால் வணங்குவதை அறிவுறுத்தியிருத்தல் சிந்திக்கற்பாலது. தலை வணங்கினால், பொறியும், புலனும், மனமும், மூளையும், பிறவும் வணங்குதல் இயல்பு. உலகுக்கும் மனத்துக்கும் நடுநின்று, அவற்றை ஒன்று படுத்தும் புலன்கள், இறைவழி இயங்கின், உலகமும் மனமும் இறைவண்ணமாகும். இவ்விரண்டும் இறைவண்ணமாயின், முனைப்புக்கு இடம் ஏது? முனைப்பு அறுதற்குத் தலைவணக்கம் இன்றியமையாதது. தலை வணக்கமாவது புலன் வணக்கம் அல்லது அடக்கம் என்று கொள்க. புலனடக்கமாவது புலன்களின் இருப்பையே அழித்துக் கொள்வதன்று. புலன் இருப்பு அழிந்தால், மகன் தலை வெறுஞ் செயற்கைப் பொறிகளைத் தாங்கும் பாவையின் தலைபோன்ற தாகும். ஆகவே, புலனடக்கமென்பது புலனை முனைப்பறுக்கும் வழியில் இயக்குவதென்க. இது, பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் பாட்டில் விளக்கப்பட்டது. புலனை முனைப்பறுக்கும் வழியில் இயக்குதற்கு முனைப்பே யில்லாத இன்ப அன்பாயுள்ள இறைவணக்கம் வேண்டும். ஒவ்வொரு புலனும் இறையினிடம் ஈடுபடுதல் வேண்டும்; அவ்வீடுபாட்டால் புலன்கள் இறை மயமாகும். புலன்கள் இறை மயமானால், அவைகட்கு உலகம் இறை மயமாகவே புலனாகும். இறை மயமான உலகை, இறை மயமாயுள்ள புலன்கள், மனத்துடன் தொடர்புபடுத்தி, மனத்தையும் அம்மயமாக்கும். இந்நிலையில் முனைப்பு, தான் இருத்தற்கு இடம் பெறாது அகன்று ஒழியும். சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன் கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஜம் புலன்க ளார வந்தெனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே இத்திருவாசகத்தை உற்று நோக்குக; புலன்கள் இறை வனிடம் ஆர்ந்து கிடத்தலையோர்க; காண்டல் கேட்டல் உண்ணல் உயிர்த்தல் உறுதல் எல்லாம் இறைவன் அருட்குணங்களில் தோய்ந்து தோய்ந்து இன்புறுதலை உன்னுக. இறையிடம் ஆரும் புலன்களையுடைய பொறிகளே பொறிகள். ஏனைய கல் - மரம் - பாவை - என்றபடி. கோளில் பொறியின் என்று குறித்து, தாளை வணங்காத் தலை என்றமையான், இறையிடம் ஈடுபட்ட புலன்கள் அமைந்த பொறிகளையுடைய தலையே தலை என்பது நன்கு விளங்குதல் காண்க. இறைவனை வணங்குந் தலையே புலன் பொறி யுடையது என்பதும், இறைவனை வணங்காத தலை அவையற்றது என்பதும் ஆசிரியர் உள்ளக்கிடக்கை. எனவே, மக்கள் கோளில் பொறித் தலையாராய் வாழாது, கோளுடைப் பொறித்தலையராய் வாழ்வது சிறப்பு. இறைவனை வணங்காத் தலை புலனற்ற பொறிபோல ஆசிரியர் உள்ளத்துக்குப் பொருளானமைல், கோளில் பொறியின் * * * *’ என்றார். குணமிலவே இறைவனை வணங்குதற்கென்று உறுப்புக்கள் படைப்பில் அமைந்துள்ளன என்றும், இறைவனை வணங்கும் உறுப்புக்கள் குணமுடையன என்றும், பிற குணமில்லாதன என்றும் விளக்கும் பொருட்டு, எண்குணத்தான் தாளை வணங்காத்தலை * * * குணமிலவே என்றார். குணமிலவே என்பது உயிரற்ற தன்மையை உணர்த்துவது. குணமிலவே : பன்மை. இதற்கேற்பத் தலைகள் என்று பொருள் கொள்ளப்பட்டது. உலகிலுள்ளார் தலைகளெல்லாம் எண்குணத்தான் தாளை வணங்கிக் குணம்பெறுதல் வேண்டு மென்பது ஆசிரியர் கருத்து. அதனால் பன்மை ஒலிக்க வணங்காத் தலை(கள்) குணமிலவே என்றார். வணங்காத்தலை கள் குணமிலவே என்பது, தலைகள் எண்குணத்தானை வணங்கிக் குணம்பெறல் வேண்டுமென்னும் உண்மையை அறிவுறுத்துவது. பிறவிப்பயன் இத் திருக்குறளில் பேசப்பட்டிருக்கிறது. பிறவிப்பயன் யாண்டுளது என்னும் உண்மையை இத்திருக்குறள் விளங்கச் செய்கிறது. பிறவிப்பயன் இறைவன் திருவடியை வணங்கலில் இருத்தலை ஆசிரியர் இக்குறள் வாயிலாகத் தெரிவிக்கிறார். வணக்கத்தின் மாண்பு இக்குறட்பாவில் புலனாதல் காண்க. 1மருவார் குழலி ***** *****