திரு.வி.க. தமிழ்க்கொடை 12 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 12 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+368=384 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 190/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் துறவியர். குருவர் முன்ன வரும் மாணவர் பின்னவரும் ஆயவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பிறந்தவர் பட்டினத்தார் எனப்பட்டார். பட்டினம் கடற்கரை சார்ந்த நகர்; பட்டணம் உள்நாட்டு நகர்; இவற்றின் வேறுபாடு அறியார் பட்டினத்தாரைப் பட்டணத்தார் எனவும் வழங்கினர். பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள. அவர் பெயரால் திருப்பாடல் திரட்டு என்றும் ஒரு நூலுண்டு. இரண்டன் பொருள், சொல்லாட்சி இவற்றைக் கொண்டு பட்டினத்தார் ஒருவர் அல்லர்; இருவர் என்பர்; இருவர் என இடமுண்டு; எனினும் தக்க சான்று வேண்டும் என்று குறிப்பிடுகிறார் திரு.வி.க. பட்டினத்தார் தம் அன்னையார் இயற்கை எய்திய போது அவலமுற்றுப் பாடிய பதிகத்தை நோக்குவார் அவர் வாய் பெண்மையைக் கடுமையாகப் பழித்திருக்க மாட்டாது என்பதைத் தெளிவர். ஆதலால் பட்டினத்தார் பாடல் தொகுப்பில் பெண்ணைப் பழிப்பது போலும் பாடல்களை ஒருவர் பாடி இணைத்திருக்கக் கூடும் என்பதற்கு இடமுண்டு. பட்டினத்தாரையும் பத்திரகிரியாரையும் தாயுமானவர் பாராட்டிச் சொல்லி அவர் நிலையை அடைய அவாவி நிற்பதை உணர்வார், அவர்தம் தூய துறவை மதிப்பர். தூயதுறவு பெண்மையைப் பழியாது. இழிமைக்குப் பொறுப்பு, இழிமை ஆக்கிய ஆணுக்கு அல்லவோ சாற்றப்பட வேண்டும்! பெண்ணின் பெருமையைப் பேசியும் எழுதியும் பாடியும் பாடுபட்டும் திகழ்ந்தவர் திரு.வி.க. அவர் தொடக்க நாளில் கொண்டிருந்த சைவ அழுத்தத்தையும் அகன்று அப்பாலுக்கு அப்பாலாய் உயர்ந்தேறி, வள்ளலார் கொண்ட சன்மார்க்கம் என்மார்க்கம்; நன்மார்க்கம் என நாளெல்லாம் உழைத்தவர். பிறப்பிலோ தொழிலிலோ பால் வேறுபாட்டு நிலையிலோ ஊன்றி ஏற்றத்தாழ்வு எண்ணாத ஒப்புரவாளர். ஆதலால், பின்னை இந்நூலைக் காலம் கடந்து பதிப்பிக்கும் போது இந்நாளில் எனில் இவ்விருத்தியுரை எழுதும் பொறுப்பைக் கொண்டிரேன். கொண்டிருப்பின் அவ்வுரைப் போக்கு வேறாயிருந்திருக்கும் என்று சுட்டியிரார். பட்டினத்தார் வரலாறும், பத்திரகிரியார் வரலாறும் அவரவர் பாடல் உரைகளுக்கு முன்னால் வேண்டும் அளவால் தரப்பட்டுள. பின்னர் விருத்தியுரை வரையப்பட்டு, பாடல் முதனினைப்பும் தரப்பட்டுள. விருத்தியுரை என்பதற்கு ஏற்ப விரிவாகவே உளது. அக்காலம் அவரை இயக்கங்களும் அமைப்புகளும் நெருக்கடியாக்காக் காலம். ஆதலால் விருத்தி எழுத வாய்த்தது. திருக்குறளுக்கு எழுதிய விருத்தியோ எனின், கட்டாயமாக எழுதியாகும் வேட்கையில் செய்யப்பட்டதாகும். வீட்டுக் காவல் காலமுமாகும். இவ்விருத்தியின் அமைப்பு பாடல், பொழிப்புரை, விருத்தியுரை என முப்பால் நடையில் பயில்கின்றது. நெடும் பாடலாயின் உரைத்திறத்திற்கு ஏற்ப, பொருளமைவில் பகுத்துக் கொண்டு பகுதி பகுதியாகப் பாடலை அமைத்துப் பொழிப்புரை வரைந்து விருத்தி வரைகிறார். பொழிப்புரை, மூலச் சொல் ஒன்றுக்குத் தானும் பொருள் விடுபாடு இல்லாமல் தொடராய் அமைக்கப்பட்டுளது. பாடல் எனினும் பகுதி எனினும் அதனதன் கருத்தும் அடுத்தே சுருக்கமாக உரைக்கப்படுகின்றது. கோயில் திருவகவல், முதல் மூன்றடிகளுக்கு மூன்று பக்க அளவும் அடுத்த ஈரடிகளுக்கு இருபக்க அளவும் கொண்ட விருத்தி, பாடற்கு ஒருபக்கமாய் அமைந்து, பூரணமாலை 38-க்கு மேல் பெரிதும் பொழிப்புரையாகவே நிற்கக் காண்கிறோம். தொடக்கத்துக் கூறிய விருத்தி பிற்பாடல்களுக்குத் தாமே விளக்கமாதல், பிற்பாடல்கள் எளிமை இன்ன சில ஏதுக்களால் பெருவிளக்கம் தேவைப்படாமல் அமைந்தன என்க. புலம்பே தனிமை என்பது தொல்காப்பியம். பத்திர கிரியார் தாமாக மெய்யுணர்வு நிலையில் நின்று பாடிய பாடல்களே மெய்ஞ்ஞானப்புலம்பலாம். முத்திதருஞான மொழியாம் புலம்பல் என்றே அவர் தொடங்குதல் நூற்பெயர் சுட்டும். அத்தி-முக வன்தன் அருள்பெறுவ தெக்காலம் என வினாவித் தொடங்கும் தொடக்கம், எக்காலம் என்னும்வினாவாகவே தொடர்ந்து ஐஞ்சு-கரத் தான் அடியிணையைப் போற்றி செய்து நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்! என நிறைக்கிறார். தொடக்கமும் ஈறும் மூத்த பிள்ளையாரையே முன் னிறுத்திய முறையீடாய் நூல் அமைகின்றது. பட்டினத்தாரின் முதல் நான்கு அகவல் வைப்பு திருவாசக வைப்புப் போல்வது. ஆனால் பொருள் அமைதியில் இவை நான்கும் நிலையாமையையும் மையல் இயலையும் மிகமிகக் கடிவன. இக்கடிவுகளின் உள்ளீடு, நிலைபெறா உடல்கொண்ட நீ, நிலைபெறு பேற்றை எய்துதல் கடன் என வலியுறுப்பதாம். அகவல், கட்டளைக் கலித்துறை, வெண்பா என நடையிடும் பட்டினத்தார் பாடல் வண்ணம் தாங்கி நின்று தாழிசை கொண்டு கண்ணியால் நிறைகின்றது. சில பாடல்கள் பழைய பிரதிகளில் இல்லாமல் இப்பதிப்பில் இடம் பெற்றமை கொண்டு ஏட்டொடு ஒப்பிட்டுப் பதித்தமை புலப்படுகின்றது. திரு.வி.க. வாழ்வியல் வளர்ச்சி, தமிழ் நடை வளர்ச்சி என்பவற்றை ஆய்வார்க்கு இவ்விருத்தியுரை அடிப்படை அலகாக அமையும் திறத்தது. அத் திரு.வி.க. வா இவர் என எண்ணுவாரும், பின்வளர்ச்சிச் சீர்மை முன்னமேயே அரும்பி நின்றமையை உணர்ந்து திளைப்பதற்கும் வாய்ப்பாகிய நூல் இது. ஆசிரியர் கதிரைவேலர் பதிவு இந்நூலும், பெரியபுராணப் பதிப்பு, கதிரை வேற்பிள்ளை சரிதம் என்பனவுமாம் எனச் சுட்டல் தகும். விருத்தி நடையிடும் வகைக்கு ஓர் எடுத்துக் காட்டு: திருவேகம்ப மாலை 9 ஆம் பாட்டு: கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங் கசிந்துருகி என்னும் பாட்டும் விரிவுரையும் காண்க. காரைக்காலம்மையார் திருமுறை அரும்பதக் குறிப்புரை பதினோராம் திருமுறையில் உள்ளதும், காரைக்கா லம்மையாரால் பாடப்பட்டதுமாகிய மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்பவற்றுக்கு அரும்பதவுரையும் , குறிப்புகளும் எழுதி வெளியிடப்பட்டது இந்நூலாகும். இந்நூலின் ஒருசிறப்பு தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களைக் கொண்டு மூலத்தைப் பழைய ஓலைச் சுவடியுடன் ஒப்பிட்டுப் பதிப்பித்ததாகும். பதிப்பு ஆண்டு 1932. சமணமும் சைவமும் ஒருமையுற்று நிற்கும் நிலையையும், பின்னே சமணத்தில் இயற்கை நெறிக்கு மாறுபட்ட உலகை வெறுத்தல், உடலை ஒறுத்தல், பெண்ணைத் துறத்தல், பெண் பிறவிக்கு வீடு பேறு இல்லை என மறுத்தல் என்பவை புகுந்தமையும் பதிப்புரை விளக்குகிறது. பெரிய புராணம் கூறுமாறு காரைக்காலம்மையாரின் வரலாறு வரையப்படு கிறது. பெண் பிறவிக்கு வீடு பேறு உண்டு என்பது மெய்ப்பிப் பாருள் காரைக்காலம்மையார் சீரிய இடம் பெறுதலைச் சுட்டுகிறது பதிப்புரை. காரைக்காலம்மையாரைப் பற்றி விளங்கும் தோத்திரப் பாடல்களை முன் வைப்பாக வைத்து நூல் நடையிடுகிறது. ஓலைச்சுவடியுடன் ஒப்பிட்டுப் பதிப்பித்த பதிப்பு ஆதலால் பல இடங்களில் பாடவேறுபாடு காட்டுகிறார். எ-டு: 4, 17, 42, 53, 126 அரும்பதக் குறிப்புரை எனினும் விரி விளக்கமும் செய் கிறார். எ-டு 3, 67 அகநானூறு, அப்பர் தேவாரம், கலித்தொகை, குறுந் தொகை, தக்கயாகப்பரணி, திருவாசகம், பிங்கல நிகண்டு, புறநானூறு, பெரிய திருமொழி, மணிமேகலை என்பவற்றை மேற்கோள் காட்டி விளக்குகிறார். 103ஆம் பாடல் கருத்தைப் பென்சர் என்பார் கருத்தொடும் ஒப்பிடுகிறார். நூலில் ஒன்றன் விளக்கமாக ஒன்று வருவதைச் சுட்டுகிறார் (63) பார்க்க என இடம் சுட்டுகிறார் (50) பிறர் உரையை எடுத்துரைக்கிறார் (48) என்னலுமாம், எனினுமாம், என்ற படி என்னும் வாய்பாட்டில் சில குறிப்பிடுகிறார். (8, 109, 82) என்றார் என்றும் கூறுகிறார் (7). bghUSiu¥ nghU« cs® v‹»wh®.(35) அரிதாக இலக்கணம் கூறுகிறார் (24) நல்ல பொருள் விளக்கம் வேண்டும் இடங்களில் புரிகிறார் (1, 14, 21, 65) இவ்வாறு தம் அருங் குறிப்புகளை நடைப்படுத்துகிறார். திரு.வி.க.வின் பதிப்புரை நூற்பொருள் விளக்கம் காணப் பெரிதும் உதவுகின்றது. அருங்குறிப்புகள் பாடற்பொருள் காண நற்றுணை யாகின்றன. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரைகள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் பட்டினத்துப்பிள்ளையார் - திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் முகவுரை 3 பட்டினத்துப்பிள்ளையார் வரலாறு 7 பட்டினத்துப்பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டும் விருத்தியுரையும் 21 தாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடியது 135 உடற்கூற்றுவண்ணம் 155 பத்திரகிரியார் வரலாறு 239 பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் விருத்தியுரையும் 243 நூலினுட் பிரிவு 301 பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடலகராதி 302 பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலகராதி 31`1 காரைக்காலம்மையார் திருமுறை - குறிப்புரை காரைக்காலம்மையார் தோத்திரம் 314 1. திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் 320 2. பண் - இந்தளம் 323 3. திரு இரட்டைமணிமாலை 327 4. அற்புதத் திருவந்தாதி 333 5. திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 364 பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் முகவுரை தெய்வச் செந்தமிழ்த் திருநாட்டில் தோன்றித் துறவறம் வளர்த்த பெரியாருட் சிறந்தவர் இருவர். ஒருவர் பட்டினத்துப் பிள்ளையார்; மற்றொருவர் அன்னார் சீடர் பத்திரகிரியார். பட்டினத்தார் என்னும் பெயரைச் சிலர் பட்டணத்தார் என்று சொல்லுகிறார்; எழுதுகிறார். அது தவறு. இவ்விரு பெரியார் துறவு நிலையை ஸ்ரீ தாயுமான சுவாமிகள் பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் - ஆருந் துறக்கை யரிதரிது என்றும், ஒட்டுடன் பற்றின்றி யுலகைத் துறந்தசெல்வப் - பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ என்றும் விதந்தோதியிருத்தல் காண்க. இத் துறவறத்தார் இருவரும் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வதிந்திருக்க வேண்டு மென்று ஆராய்ச்சிக்காரர் கூறுப. இவ்விருவருள் பட்டினத்தடிகள் அருளிய பிரபந்தங் களுள் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் இவ்வைந்தும் பதினொராந் திருமுறையில் சேர்க்கப் பட்டிருக்கின்றன; ஏனைய பிரபந்தங்கள் பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டு என்னும் பெயரால் வழங்கப் பட்டு வருகின்றன. மற்றப் பத்திரகிரியார் திருப்பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் எனவும், பத்திர கிரியார் புலம்பல் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திர கிரியாரே விநாயக வாழ்த்துள் முத்தி தருஞான மொழியாம் புலம்பல் சொல என்றோதியிருத்தல் காண்க. பட்டினத்தடிகள் அருளிச்செய்த பிரபந்தங்களுள் பதினொராந் திருமுறையில் அடங்கியுள்ள பாடல்களையும், திருப்பாடற்றிரட்டில் அடங்கியுள்ள பாடல்களையும் ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கின், இரண்டையும் ஒருவர் பாடி யிருப்பரோ என்ற ஐயம் ஆராய்வோருக்கு நிகழ்ந்தே தீரும். அவ்வைய நிகழ்ச்சிகொண்டு இரண்டு பட்டினத்தார் வாழ்த்திருக்கவேண்டுமென்று சிலர் கூறுகிறார். அன்னார் கூற்றை வலியுறுத்தப் போதிய சான்றுகள் இந்நாள்வரை கிடைக்க வில்லையாயினும், சொற்பொருள் நடைகளை உற்று நோக்குழி ஐய நிகழ்ச்சிக்கு வழி உண்டென்றே தோன்றும். அதைக் குறித்து ஈண்டு ஆராய நான் புகவில்லை. இப்பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டுக்கும், பத்திர கிரியார் புலம்பலுக்கும் பொழிப்புரையும் விருத்தியுரையும் வரையுமாறு, இற்றைக்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் அமரம்பேடு - இராஜரத்தின முதலியார் அவர்கள் குமாரர் - சென்னைப் பூமகள் விலாச அச்சுக்கூடத்தலைவர் ஸ்ரீமான் முத்துவடிவேல் முதலியார் என்னைக் கேட்டனர். அவர் கேட்டவாறே விரைவாக உரை வரைந்தளித்தேன். அப்பொழுது மிக விரைவாக எழுதப்பட்ட உரையடங்கிய இந்நூல், பத்தாண்டு உறங்கி, இப்பொழுது முதன்முறை அச்சுவிமான மேறிற்று, இதற்குக் காரணம் ஐரோப்பா யுத்தத்தால் நேர்ந்த காகித விலையேற்றமென்று வெளியிட்டோரால் சொல்லப் பட்டது. பூமகள் விலாச அச்சுக்கூடத்தார் பத்தாண்டு கழித்து, அந்நாளில் நான் எழுதிய உரை கொணர்ந்து அதைத் திருத்திக் கொடுக்குமாறு எனக்குப் பெரிதும் ஓய்வில்லா இந்நாளில் கேட்டனர். அந்நாளெழுத்தை நான் கண்டபோது எனக்கே மகிழ்ச்சியுண்டாயிற்று. பத்தாண்டில் கருத்தில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டது என்று மனிதர் மனோநிலையின் பான்மை நினைந்து நினைந்து மனிதன் அறிவைச் சிந்தியாது அறியாமையைச் சிந்தித்தேன். இந்நாளில் இத்தகை உரை வரையும் வேலையில் தலைப்படப் போதிய ஓய்வுமில்லை; பெரிதும் தலைப்படவு மாட்டேன்; ஒரு வேளை தலைப்படினும் கருத்துக்கள் பல மாறுபட உரை வரைவேன். எனது பழைய எழுத்தில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்தேனில்லை. பத்திரகிரியார் புலம்பலில் உரை வரையாது முன்னே விடப்பட்டிருந்த சில பாக்களுக்கு மட்டும் பழைய சம்பிரதாயத்தையொட்டி உரை வரைந்து கொடுத்தேன். பொழிப்புரை பெரிதும் மூலத்தைத் தழுவியே எழுதப் பட்டது. விருத்தி பாடல்களிலுள்ள பல ஐயங்களைப் போக்குங் குறிப்போடு எழுதப்பட்டது. இந்நூலை வெளியிடுவோர் கோலிய வரம்புக்குள் நின்று உரை எழுதப்பட்டது என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உரையில் தெரிந்தும் தெரியாமலுங் குறைகள் நிகழ்ந்திருக்கலாம். அவை களை மன்னிக்குமாறு தமிழ்ப் புலவர்களை வேண்டு கிறேன். இத்தகைய நூல்களையும் உரைகளையும் அச்சிட்டு வெளியிடும் அன்பர் பலர் வியாபாரத்திலும் பொருளீட்டு வதிலும் கருத்தைப் பெரிதுஞ் செலுத்துகின்றாரன்றி, மொழி மீதும் எழுத்துப் பிழைகள் மீதுங் கருத்தைச் செலுத்துகின்றா ரில்லை. காலஞ்சென்ற வித்துவமணிகள் எழுதிய பல உரைகள் சில குஜிலிக் கடைக்காரர்களிடத்தில் அகப்பட்டுத் தவிக் கின்றன. அதை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறுங் கண்ணீர் பெருகுகிறது. தமிழ்வளமும் தமிழ்ப்புலவமையும் அருகிவரும் இந்நாளில் எழுத்துப் பிழையின்றியாதல் நூல்களை அச்சிடு வோர்க்கு மனமார்ந்த நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். மேல்நாடுகளில் வெளியிடப்படும் நூல்களில் அச்சுப்பிழை உறுதல் அரிது. முதற்பதிப்பில் ஒருவேளை பிழையுற்றாலும் இரண்டாம் பதிப்பில் அப்பிழை களைவதில் வெளியிடுவோர் பெருங்கவலை செலுத்துவர். நமது நாட்டில் முதற்பதிப்பில் உறும் பிழைகளைப் பார்க்கிலும் பின்வரும் பதிப்புக்களில் புதுப்பிழைகள் மலிந்து வருகின்றன. நூல்களை வெளியிடுங் கூட்டத்தார் கவலையீனத்தை என்னென்று கூறுவது? இக்குறை நீக்கத் தமிழ்ப்பற்றுடையார் ஒருவழி கோலலாகாதா? இந்நூலை அச்சிட்ட பூமகள் விலாச அச்சுக்கூடத்தார் ஒல்லும் வகை நூல்களை அச்சுப் பிழையின்றி வெளியிட அவாக் கொண்டிருப்பது காண உள்ளம் உவகையெய்துகிறது. இப்பதிப்பை எனக்குப் போதிய ஓய்வில்லா இவ்வேளையில் பெரிதும் எனது உதவி நாடாது தாமே அச்சுப்பிழை பார்த்து வெளியிட்டதற்குப் பூமகள் விலாச அச்சுக்கூடத்தார்க்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர் இனி வரும் பதிப்புக்களையும் பிழையுறாது அச்சிட்டு வெளியிடுவர் என்று நம்புகிறேன். இதுவே எனக்கு இவர்கள் செலுத்த வேண்டிய கைம்மாறு. தமிழ்நாட்டார் இந்நூலை ஆதரிப்பாராக. இராயப்பேட்டை 30-3-1923 திரு.வி. கலியாணசுந்தரன் திருச்சிற்றம்பலம் பட்டினத்துப்பிள்ளையார் வரலாறு சுத்த சாட்குண்ய பரமாப்தபதியாகிய சிவபெருமான் ஆன்மாக்கள் உய்ய வேண்டிக் கைம்மாறற்ற பெருங்கருணை யான் திருவருளையே திருமேனியாகக் கொண்டு, உமாதேவியா ரோடு என்றும் எழுந்தருளியுள்ள மலை ஸ்ரீகைலாயமலை. அஃது ஊழிதோறும் ஓங்கி வளரும் பெருமையுடையது; வெள்ளி மயமாய் விளங்குவது; தன்னைச் சார்ந்தாரைத் தன் வண்ண மாக்கும் இயல்பினது; ஐங்கரத்தண்ணலும், அறுமுகக்கடவுளும் போற்றி வாழ்த்தும் புகழினை வாய்ந்தது. அத்திருமலையைப் புகலாத வேதங்களில்லை; ஆகமங்களில்லை; புராணங்க ளில்லை. நந்தியெம்பெருமான் திருக்கரத்திற் பிரம்பு தாங்கி அவ்வரையின் திருவாயில் காத்துவருவர். தேவர்களும், முனிவர் களும், ஏனைய அன்பர்களும் நந்தியெம்பெருமான் கட்டளை பெற்று அச்சிவமலை யடைவார்கள். இத்துணைச் சிறப்புவாய்ந்த திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளுஞ் சிவபெருமானைத் தரிசிக்கவேண்டி, முன்னொரு நாள், அளகைவேந்தனும், ஐயன் தோழனுமாகிய குபேரன் வெள்ளிமலையின் திருவாயிலணுகி, நந்தியெம்பெருமானைப் பணிந்து, அவர் தம் ஆணைபெற்றுத் திருச்சந்நிதியடைந்து, சிவபிரான் தேவியாரோடு எழுந்தருளியுள்ள திருக்கோலங் கண்டு, ஆனந்தபரவசனாய் ஆண்டவனே! இத்திருக்கோலக் காட்சியை மண்ணுலகிலுள்ள பல திருப்பதிகளிலுங் கண்டின்புற அடியேன் விரும்புகிறேன். அருள் செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றான். அடியவர்கள் வேண்டியவற்றை வேண்டி யாங்களிக்குந் தடங்கருணைப் பெருங்கடலாகிய கண்ணுதற் பெருமான், குபேரன் வேண்டுகோட்கிரங்கிப் பார்வதி தேவியாருடன் இடப ஊர்தியின்மேல் ஆரோகணித்துத் தேவர்களும் முனிவர்களும், கணநாதர்களுந் தம்மைப் புடை சூழ்ந்துவர; காசி, காளத்தி, காஞ்சி முதலிய திவ்விய க்ஷேத்திரங்களி லெழுந்தருளி, ஆங்காங்கே குபேரனுக்குத் திருக்கயிலாயத் திருக்கோலக் காட்சி வழங்கியருளி, ஸ்ரீசிதம்பர மடைந் தருளினார். குபேரனுங் கடவுளடி தொடர்ந்து சென்று, ஒவ்வொரு தலத்தினுந் தான் விரும்பியவாறு உமா மகேசுரனைக் கண்டு பேரானந்தமுற்றுச் சிற்றம்பலத்திற் கேகினான். அளகேசன் ஆண்டுச் சின்னாள் தங்கி அம்மையப்பரைத் தொழுது வருகையில், ஒருநாள், இறைவனை வணங்கி என்னுள்ளங் கோயில் கொண்ட எம்பெருமானே! இச்சோழ நாட்டிலுள்ள திருவெண்காட்டிலே தேவரீரைத் தரிசிக்கச் சிறியேன் விரும்புகிறேன் என்று விண்ணப்பித்தான். அன்பினில் விளைந்த ஆரமுதாகிய சிவபெருமான் அங்ஙனே திருவெண்காட்டிற் கெழுந்தருளினார். பின்னர்க் குபேரனும் அத்திருப்பதி சேர்ந்து, அம்பிகைபாகனைத் தரிசித்து இன்புற்றிருந்தனன். குபேரன் ஆங்கே இருந்துவருநாளில், அத்திருப்பதிக்கு அருகேயுள்ள காவிரிப்பூம்பட்டினத்தை அன்னான் கண் ணுற்றான். அப்பட்டினத்தின் இயற்கை வனப்பும், செயற்கை வனப்பும், ஐவகை மன்ற அமைப்பும், பிறவும் அளகேசனது உள்ளத்தைக் கவர்ந்தன. அளகாபுரி அரசனாகிய குபேரனே காவிரிப்பூம்பட்டினத்தைக் கண்டு மயங்கி, அதனை நீங்க மன மெழாது, அதன்கண் வதிய விரும்பினானெனில், அப்பட்டினத்தின் வளத்தையும் செழுமையையும் அளவிட்டுரைக்க எவரால் இயலும்? திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள கைலாயபதி, குபேரனது உள்ள நிலையையுணர்ந்து, அவனைத் திருநோக்கஞ் செய்து, தோழனே! உன் உள்ளம் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி நிற்கிறது. நீ தாங்கியுள்ள தேகம் போக பூமியின் வாழ்க்கைக் குரியது, மானுடர் வாழும் இக்கர்மபூமிக் குரியதன்று. ஆனது பற்றி, நீ இக் காவிரிப்பூம்பட்டினத்திற் பிறக்கக்கடவாய் என்று திருவாய்மலர்ந்தருளினார். அதுகேட்ட அளகேசன், மெய்ந் நடுங்கி, உள்ளங் கலங்கி ஐயனே! தேவரீர் ஆணையை மறுக்க எவராலும் இயலாது. அதன் வழி நிற்க வேண்டுவதே அடியேன் கடமை. சிறியேன் மானுடப் பிறவியெடுத்து, இவ்வுலக இன்ப நுகர்ச்சியில் நிலைத்து, அழுந்துங்காலத்து ஏழையேனைத் தடுத்தட்கொண்டருளல் வேண்டும் என்று பிரார்த்தித்தான். சிவபெருமான் குபேரனை நோக்கி அங்கனே செய்தருள்வோம் என்றருளிச்செய்து, அம்மையாரோடு திருக்கயிலைக் கெழுந் தருளினார். காவிரிப்பூம்பட்டினத்திலே, வேளாள மரபிலே, சிவநேசர் என்பவர் ஒருவரிருந்தார். அவர் ஞானகலாம்பை யென்னுங் கற்புக்கரசியாரை மணந்து, இல்லறம் நடாத்திவந்தார். வருநாளில், அவருக்கொரு பெண்மகவு பிறந்தது. பின்னர் நீண்ட காலஞ் சிவநேசர் தமக்கு ஆண்மகவு பிறவாமை குறித்துத் தாந்தம் மனைவியாருடன் தவஞ்செய்வாராயினர். அத்தவப் பேறாகக் குபேரன் சிவாஞ்ஞைப்படி ஞானகலாம்பையார் கருவிலுற்றான். அவ்வம்மையாருக்குக் கருக்குறிகள் புலப்பட்டன. அதுகண்ட சிநேசரும், உறவினரும் இன்பக் கடலில் அழுந்தினார். ஒவ்வொரு திங்களாகக் கழிந்து, பத்துத் திங்களாக, ஞானகலாம்பையார் . . . . . . . வோரையிலே, ஓராண் குழவி யீன்றார். தந்தையாராகிய சிவநேசர் அக்குழவிக்குத் திருவெண்காடர் என்னும் நாமஞ் சூட்டி, அப்பிள்ளைப் பெருமானைப் பொன்னேபோற்போற்றி வளர்த்து வந்தனர். திருவெண்காடர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, ஐந்தாம் வயது எய்தப் பெற்றார். அக்காலையில் சிவநேசர் சிவபெருமான் திருவடி நீழலடைந்தனர். அடையவே திருவெண்காடர் தந்தையார்க்கு ஈமக்கடன் முதலியவற்றைக் குறைவறச் செய்து, அற்புதத் திரு விளையாடல்களால் அன்னையார் துயரம் போக்கிக் கொண் டிருந்தார். அறிவிற் சிறந்த அன்னையாராகிய ஞானகலாம்பையார் தக்க ஆசிரியரைக் கொண்டு பிள்ளைப் பெருமானார்க்குக் கல்வி கற்பித்தனர். திருவெண்காடர் சகலகலை ஞானங்களையும் இளமையிலேயே கேட்டுச் சிந்தித்துக் கல்வியினாலாய பலன் கங்காதரன் திருவடிகளைப் பூசித்தலே யென்று தெளிந்து, அப் பூசனையைக் குருமுகத்தாற் பெறவேண்டுமென உறுதிகொண்டு, உணவுங்கொள்ளாது, குருத்தியானமே செய்திருந்தனர். ஒருநாள் சிவபிரான் ஓரந்தணராகத் திருவெண்காடற் கனவிற்றோன்றி அருமைக் குழந்தாய்! திருவோண நட்சத்திரங் கூடிய சோமவாரப் பிரதோஷ தினம் நாளை நேர்கின்றமையால், நீ திருவெண்காடு செல்வாயாக. அங்கு ஒரு வேதியர் உனக்குச் சிவதீக்ஷை செய்து சிவபூசை முறையினையுங் கற்பிப்பர் என்று அருளிச் செய்து மறைந்தனர். உடனே திருவெண்காடர் விழித்தெழுந்து தாங் கண்ட கனவினைத் தாயாருக்குக் குறிப்பாக உணர்த்தி அவ் வம்மையாரோடு திருவெண்காடு சேர்ந்து, சிவ தரிசனஞ் செய்து, குருநாதனை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது கனவிற்றோன்றிய அந்தணரே அங்குக் குருமூர்த்தி யாக எழுந்தருளினார். திருவெண்காடர் வியப்புற்றுக் குருநாதன் திருவடிகளில் விழுந்து வணங்கி நின்றார். குருமூர்த்தி பிள்ளைப் பெருவள்ளலைத் திருநோக்கஞ்செய்து குழந்தாய்! நம்மூர் வியாக்கிரபுரம். நேற்றிரவு இங்கு வந்தோம். எமது கனவில் ஒரு மறையவர் தோன்றி நீ நாளை காலையில் திருவெண்காடு போந்து, அங்குள்ள திருவெண்காடன் என்னுஞ் சிறுவனுக்குத் தீக்ஷை செய்வாயாக என்று கூறி, இச்சம்புடத்தைக் கொடுத்து இச்சம்புடத்தையும் அவனிடஞ் சேர்ப்பாயாக. இதனுள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அஃது அவனால் முற்பிறப்பில் பூசிக்கப் பெற்றது அவன் கைப்பட்டதும் இச்சம்புடந் தானாகத் திறந்து கொள்ளும். நீ அவனோடு ஒரு மண்டலம் உறைவாயாக என்று மொழிந்து திருவுருக்கரந்தார். அப் பெரியார் உரைப்படி யீண்டுப் போந்து, விசாரித்து உன்னைக் கண்டேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அச் சொல்லமிழ்தைச் செவிமடுத்த திருவெண் காடர் குருமூர்த்தியின் திருவடிகளிற் பன்முறை விழுந்து விழுந்து வணங்கிப் போற்றி நின்றார். குருமூர்த்தியாக எழுந்தருளிய பெருமான் திருவெண்காடருக்குச் சிவதீக்ஷை செய்து, கனவிற் பெற்ற சம்புடத்தைக் கொடுத்தருளினார். திருவெண்காட் டடிகள், அச்சம்புடத்தை யேற்றதும், அது திறந்துகொண்டது. அதனுள்ளே சிவலிங்கமும் விநாயக மூர்த்தமுமிருந்தன. அவை களை ஆசிரியர் கற்பித்த முறைப்படி அன்பர் பூசித்து வருவா ராயினர். குருமூர்த்தி பிள்ளைப் பெரியாரோடு நாற்பது நாளிருந்து பின்னர்த் தம்மிச்சை வழிச் சென்றார். பிள்ளைப்பெருமான் திருவெண்காட்டிலிருந்து கொண்டே சிவபூசையும் மாகேசுரபூசையுஞ் செய்து வந்தனர். வரவே முன்னோர் உரிமைப் பொருளெல்லாஞ் செலவாயின. சிவ பூசையினையும் மாகேசுர பூசையினையும் முறையாக முட்டின்றி நடத்தப் போதிய பொருளின்மை குறித்து அடிகள் வருந்தினார். அவரது அன்னையாரும் தமக்குற்ற வறுமை குறித்துப் பெரிதுந் துக்கித்தார். ஒருநாளிரவு சிவபெருமான் திருவெண்காட்டடிகள் கனவிற் றோன்றி, அன்பனே! வருந்தற்க. உன் இல்லமுழுவதும் பொன்னும் மணியும் திரள் திரளாகக் குவியச் செய்தோம் என்று திருவருள் செய்தனர். உடனே ஞானவள்ளலார் விழித்தெழுந்து தாயாருக்குத் தாங்கண்ட கனவைத் தெரிவித்தார். பொழுது விடிந்ததும் அடிகள் காவலாளர் மூலமாகத் தம் வீடுமுற்றிலும் பொன்னும் மணியும் நிரம்பியிருத்தலைக் கேள்வியுற்று, அவை களைக்கொண்டு, சிவபூசை குருபூசை அடியவர்பூசை முதலிய பதி புண்ணியங்களைச் செய்து காவிரிப்பூம்பட்டின மடைந்து, தாம் மேற்கொண்ட அறச்செயல்களை மகிழ்ச்சியோடு நிகழ்த்தி வந்தார். வருநாளில், திருவெண்காடருக்குத் திருமணப்பருவ முற்றது. உறவே ஞானசிகாமணியைப் பெற்ற ஞானகலாம் பையார், அப்பட்டினத்திலே வேளாண்மரபிலே தோன்றிச் சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்து விளங்கிய சிதம்பர செட்டியார் மனைவியாராகிய சிவகாமியம்மையார் ஈன்ற அருந் தவப் புதல்வியாராகிய சிவகலை யென்னும் பெருமாட்டியாரை மணம்பேசித் திருவெண்காடருக்குத் திருக்கலியாணஞ் செய்து முடித்தார். அடிகள் சிவகலையம்மையாரோடு இல்லறத்தை ஒழுங்காகவும் முறையாகவும் நடாத்தி வந்தனர். இங்ஙனம் இல்லறமேற்று வாழ்ந்து வருங்கால், தமக்கு முப்பத்தைந்து வயதாகியும் புத்திரப்பேறுண்டாகாமை குறித்துச் சிறிது வருந்தி, மருதவாணர் திருவடிகளை இடையறாது பூசித்து வந்தார். திருவிடைமருதூரில் சிவசரும ரென்னும் ஒரு வேதிய ரிருந்தார். அவர் சுசீலை யென்னும் அம்மையாரைத் திருமணஞ் செய்து, இல்லற வொழுக்கத்தில் நின்று, தமக்குள்ள உரிமைப் பொருளெல்லாவற்றையுஞ் சிவபூசையிலும், அடியவர் பூசை யிலுஞ் செலவு செய்து, வறுமையாஞ் சிறுமையிலழுந்தி யிருந்தார். அதுகாலை மருதப்பர் அவர் கனவிலும், அவர் மனைவியார் கனவிலுந்தோன்றி, அன்புடையீர்! நமது தீர்த்தக் கரையிலே ஒரு வில்வமர மிருக்கிறது. அதனடியில் நாம் ஒரு குழந்தை வடிவமாகக் கிடப்போம். அக் குழந்தையை யெடுத்துக் கொண்டுபோய்க் காவிரிப்பூம் பட்டினத்திற் புத்திரபேறின்றி அருந்தவஞ் செய்யுந் திருவெண்காடரிடங் கொடுத்து, அக் குழந்தையளவு எடையுள்ள பொன்பெற்று, உங்கள் வறுமை போக்குவீர்களாக என்றருள்செய்து மறைந்தனர். சிவானுக் கிரகத்தின்படி மறுநாள் சிவசருமர் அவ்வில்வமரத்தடியில் ஒரு குழந்தை யிருக்கக்கண்டு, அதனை எடுத்துக்கொண்டுவந்து மனைவியாரிடஞ் சேர்ந்தனர். அம்மையார் அக்குழந்தையின் திருமேனிப் பொலிவு கண்டு அந்தோ! தோன்றி நின்றழியும் பொருட்செல்வத்தின் பொருட்டோ இவ்வருட் செல்வத்தை மற்றவர்க்கு விற்பது? என் மனஞ்சிறிது மெழவில்லையே! என்று வருந்தியிருக்கையில், சிவசருமர், சிவபிரான் திருவருள் காட்டிய வழியே சென்று, காவிரிப்பூம்பட்டினஞ் சேர்ந்து, அங்குள்ள ஒரு சோலையிற் றங்கியிருந்தனர். அவ்வேளையில் சிவபெருமான் திருவெண்காடர் கனவிலும், அவர் மனைவியார் சிவகலையார் கனவிலுந் தோன்றி அன்பர்களே! உங்கள் வீட்டிற்குப் புறத்தே யுள்ள சோலையிற் சிவசருமரென்னும் வேதியரொருவர் மனைவி யாரோடும் ஒரு குழந்தையோடும் வந்து தங்கியிருக்கின்றனர். நீங்கள் அவர்பால் அணுகி அவரை உபசரித்து, இல்லத்திற் கழைத்து வந்து அவர் மனைவியார் கரத்துள்ள குழந்தையளவு எடையுள்ள பொன் கொடுத்து, அக்குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அக்குழந்தையே உங்களுக்கு இருமைப் பயனையும் அளிப்பதாகும் என்று திருவாய்மலர்ந்து மறைந் தருளினார். அங்ஙனமே திருவெண்காடரும், அவர் இல்லக் கிழத்தியாரும் புறக்கடையிலிருந்த சிவசருமரையுஞ் சுசீலை யாரையுங்கொண்டு சிவாஞ்ஞைப்படி அவர்க்கு வேண்டுவ செய்து குழந்தையைப் பெற்றுக் கொண்டார். சிவசருமரும் அவர் மனைவியாருஞ் சிவ தியானத்துடன் திருவிடைமருதூர் நோக்கிச் சென்றனர். சிவபிரான் திருவருளால் கிடைக்கப்பெற்ற அருமைக் குழந்தைக்குத் திருவெண்காடர், மருதப்பிரான் என்னுந் திருப் பெயரிட்டு, அச் சிவபரஞ்சுடரைத் தம்முயிரெனப் போற்றி வளர்த்து உரிய பருவத்தில் வித்தியாப்பியாசஞ் செய்வித்தனர். பட்டினத்தடிகளை வாழ்விக்க எழுந்தருளிய செல்வப் புதல்வராகிய மருதப்பிரான் உலகத்தார் வியக்கத்தக்க அற்புத திருவிளையாடல்கள் பல செய்தனர். அவ் வாடல்கள் தாய் தந்தையர்களை இன்பக்கடலில் திளைப்பித்தன. மருதப்பிரான் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறாவது வயது எய்தப் பெற்றார். ஒருநாள் தந்தையாரிடஞ் சென்று, ஐயனே! நான் தீவாந்தரங்கட்குச் சென்று வாணிபஞ்செய்ய விரும்புகிறேன் என்றார். அதுகேட்ட தந்தையார் மருதப்பிரானை வெளி நாடுகளுக்குக்கனுப்பச் சிறிதும் விரும்பவில்லை யாயினும், புதல்வரின் மனவெழுச்சியையும், குலமுறைமையையும் ஓர்ந்து அப்பா! உன் கருத்துப்படியே செய்வாயாக என்று விடை கொடுத்து அனுப்பினார். மருதப்பெருமான் நண்பர்களோடு கப்பலேறி, ஒரு தீவினையடைந்து, தாங் கொண்டுசென்ற பண்டங்களை விற்றுக்கிடைத்த பொருளால் திருப்பணிகள் பல செய்து, எஞ்சிய சிறு பொருளைக்கொண்டு வரட்டிகளையும் அவல் கடலையையும் மூட்டை மூட்டையாக வாங்கிக் கப்பலில் நிரப்பிக் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பினர். பெருமான் செயல்களைக்கண்ட தோழர்களும், மற்றவர்களும் மருதப் பிரானுக்குப் பித்தேறி யிருக்கின்றதுபோலும் என நினைத்து உடன் புறப்பட்டார்கள். இடையில் மருதவாணர் திருவருளால் காற்றுமழை யுண்டாகக் கப்பல் திசைமாறிப்போயிற்று. உணவுப் பொருள் ஒழியுமட்டும் நேர்வழி புலனாகவில்லை. கப்பலில் இருந்தவர்கள் மருதப்பெருமானை நோக்கி ஐயா! பசியாற்ற அவல் கொடுங்கள் குளிர்காய எருமுட்டை கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்குப் பெருமான் நண்பர்களே! நாம் பட்டினஞ் சேர்ந்ததும் இப்பொழுது என்னால் அளிக்கப்படப் போகிற எருமுட்டைகள் எவ்வளவோ அவ்வளவு எருமுட்டை களைத் தர வேண்டும் என்று கூறி உறுதிப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு, தம்பாலுள்ள வரட்டிகளை வழங்கி யருளினார். கப்பல் திசைகண்டு காவிரிப் பூம்பட்டினஞ் சேர்ந்தது. கலத்துள்ளிருந்தா ரெல்லாரும் கப்பிலினின்று மிறங்கி ஊரையடைந்து, திருவெண்காடரைக் கண்டு அண்ணலே! உமது குமாரனுக்கு அறிவு மயங்கி யிருக்கிறது; சித்தப்பிரமை போலும் என்று கூறித் தத்தம் இல்லஞ் சென்றனர். திருவெண்காடர் தம் புதல்வர் கொணர்ந்த வரட்டி மூட்டை களையும், அவல் மூட்டைகளையும் அவிழ்த்துப் பார்த்தார். எரு முட்டைகள் மாணிக்கக் கற்களாக எரிகின்றன. அவலோடு சிறு பொற்கட்டிகள் பொலிகின்றன. அவை களிடையில் கடல் மத்தியில் மருதப்பிரானோடு சென்றவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரம் திருவெண்காடர் கையிலகப்பட்டது. அதுகண்ட மருதப்பிரான் நண்பர்களும் மற்றவர்களும் அந்தோ! இஃதென்ன மாயம்? நாம் எருமுட்டைகளுக்காகப் பத்திரம் எழுதி யீந்தோம். இப்பொழுது அவையாவும் அரதனங்களாக ஒளிக்கின்றனவே? என் செய்வோம்! என் செய்வோம்!! என்று துயராழியிலழுந்தி நின்றார்கள். திருவெண் காடர் மைந்தரது வாணிபத் திறமையை வியந்து அவரைக் காண அவரது இருக்கை சென்றனர். ஆண்டு அவரைக் காணாது தேடித் தேடித் திரிந்து மனம் வருந்தியிருந்தார். மருதப்பிரான் திருவிடைமருதூரில் தம்மை மறவாது போற்றிப் பூசித்துவந்த சிவசருமருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அத்துவித முத்தி யருளித் தாம் மகாலிங்ககத்தில் சாந்தித்தியமாயினார். இங்ஙனமாக, திருவெண்காடர் நெஞ்சங் கலங்கி வாடின முகத்தினராய் வருந்தி நிற்கும் வேளையில், மனைவியார் ஒரு சிறிய பெட்டி கொண்டுவந்து நாதா! நமது புதல்வன் இப் பெட்டியைத் தேவரீரிடஞ் சேர்க்கும்படி சொல்லிப்போய் விட்டனன் என்று கூறி அப்பெட்டியைப் பட்டினத்தார் திருமுன்வைத்தார். திருவெண்காடர் பேராவலோடு அப் பெட்டியைத் திறந்தார். அதில் காதற்ற ஊசி யொன்றும் ஓலைச்சீட்டொன்று மிருந்தன. பட்டினத்துப் பிள்ளையார் ஓலையை யெடுத்து வாசித்தார். அவ்வோலையில் காதற்ற வூசியும் வாராதுகாணும் கடைவழிக்கே என்று எழுதப் பட்டிருந்தது. அந்த ஞான உரையைக் கண்டதும் பட்டினத்தார் துறவற மேற்கொண்டார். தமது தலைமைச் சம்பிரதியாகிய சேந்தனாரை அழைத்துத் தமது பொருள்கள் எல்லாவற்றையுங் கொள்ளையிடச் செய்யுமாறு கட்டளையிட்டுத் தாயாரின் பொருட்டு வெளியூர்க் கேகாது, அவர் அப்பட்டினத்தின் ஒரு பாங்கரிலுள்ள ஒரு பொது மண்டபத்திற்றங்கி வீடுகடோறும் நுழைந்து பிச்சையேற்று, உண்டு, ஞானநிஷ்டை செய்து கொண்டிருந்தார். அவரது செயல் சுற்றத்தார்க்கு வெறுப்பைத் தந்தது. தமக்கையார் நம்மெதிரிற் பற்பல வீடுகடோறுஞ் சென்று, பிச்சையேற்று, நமது மானத்தை யழிக்குந் திருவெண் காடனைக் கொல்லல் வேண்டும் என உறுதிகொண்டு, நஞ்சு கலந்த ஓரப்பத்தினை உண்ணும்படி பட்டினத்தடிகளுக்கு அனுப்பி வைத்தார். அவ்வஞ்சனையைப் பட்டினத்துப் பிள்ளையார் திருவருளால் உணர்ந்து, அவ்வப்பத்தினைப் பிட்டு ஒரு பகுதியைத் தமக்கையார் வீட்டிறப்பிற் செருகினர். செருகினதும் வீடு தீக்கிரையாயிற்று. சின்னாள் கழித்தபின்னர் அடிகள் அன்னையார் சிவபத மடைந்தனர். அவரது உடலைச் சுற்றத்தார் வழக்கம்போல மயானஞ் சேர்ந்தனர். அதுகாலைத் தாயார்க்கு ஈமக்கடன் செய்யவேண்டிச் சிவபெருமான் ஆணைப்படி வெளியூர்க்குச் செல்லாது காத்துக்கொண்டிருந்த பட்டினத்துப்பிள்ளையார் சுடலை நண்ணினார். நண்ணினதும் உறவினரும் மற்றவர்களும் ஒதுங்கிவிட்டார்கள். திருவெண்காடர் ஆண்டு அடுக்கப் பெற்றிருந்த சிறு விறகுகளை யகற்றிப் பச்சை வாழைப் பட்டைகளை யடுக்கி, அவ்வடுக்கல்மீது அன்னையாரைக் கிடத்திச் சில பாக்கள் பாட, அனல்மூண்டு கொழுந்துவிட் டெரிந்தது. அதற்குமேல் பிள்ளையார் செய்யவேண்டிய கடன்களைச் செவ்வனே செய்து, அத்திருப்பதியினின்றும் நீங்கிப் பல க்ஷேத்திரங்கட்குச் சென்று, சிவபெருமானைத் தொழுது, திருவாரூர் சேர்ந்தார். அங்கே பிள்ளையார் சிலநாள் தங்கி வருகையில் ஒருவன் பிள்ளையாருக்குத் திருவடித் தொண்டனாகத் திருவருளால் கிடைக்கப்பெற்றான். அவன் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிய ஒருநாள் முன்னேரத்தில் உறங்காது, காமவேகத்தால் அருகேயிருந்த மனைவியை வலிந்து புணர்ந்தான். உடனே அன்னான் சந்நி நோயால் பீடிக்கப்பெற்று மரணமடைந்தான். பட்டினத்துப் பெருந்தகையார் அச் செய்தி கேள்வியுற்று, அவன்பா லணுகித் திருவருட்டுணையால் அவனை யெழுப்பினார். பின்னர்ப் பிள்ளையார் திருவாரூரை விடுத்துக் கொங்கு நாட்டை யடைந்து மௌனவிரதம் மேற்கொண்டு நிஷ்டை கூடி வருகையில், ஒருநாள் நள்ளிரவில் பசிமேலீட்டான் ஒரு மூர்க்கன் வீட்டு வாயிலிலே நின்று கைதட்டினார். அக்கயவன் சுவாமிகளி னருமை யுணராதவனாய்த் தடிகொண்டு பிள்ளையாரைப் புடைத்தனன். அன்றுதொட்டு அடிகள் தாமிருக்குமிடந்தேடி அன்னங் கொண்டுவந்தாலன்றி உணவு கொள்வதில்லையென உறுதிகொண்டு, கொங்கு நாட்டினின்றும் நீங்கித் துளுவ நாட்டை அடைந்து, பல திவ்விய க்ஷேத்தரங்களை வணங்கி உஞ்சேனை மாகாணஞ் சென்று, கடவுளைத் தொழுது ஒரு விநாயகராலயத் தில் நிஷ்டையி லமர்ந்திருந்தனர். அமர்ந்திருக்குநாளில் ஒருநாளிரவு சில திருடர்கள் அக் கணபதி ஆலயத்தில் நுழைந்து, தும்பிமுகக் கடவுளை வணங்கி, அவ்வூரையாளும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையிற் புகுந்து, பட்டாடைகளையும், அணிகலன்களையும், பிற பொருள்களையுந் திருடிக்கொண்டு திரும்புகையில், மீண்டும் அவ் விநாயகராலய மடைந்து, யானைமுகத் தண்ணலுக்கு ஒரு மணிப்பதக்க மணிய வேண்டுமெனக் கருதி, ஒரு விலையுயர்ந்த பதக்கத்தை யெடுத்து, இருட்டில் மயங்கி, அங்கே சிவஞான நிஷ்டை கூடியிருந்த பட்டினத்துப் பிள்ளையாரைப் பிள்ளை யாரெனக்கொண்டு அப்பதக்கத்தை அவர் கழுத்திலணிந்து சென்றார்கள். மறுநாள் காவலாளர் சோதனை செய்து வருங்கால் சுவாமிகள் திருக்கழுத் தில் மன்னரது மாணிக்கப் பதக்கம் மிளிர்வது கண்டு, எம் பெருமானைப் பலவாறு துன்புறுத்தினார். அதனால் திருவெண் காடர் நிஷ்டை கலையப் பெற்றார். காவலாளர் ஞானமூர்த்தியை அரசமன்ற மேற்றினார். மன்னன் உண்மை தேறாது பிள்ளையாரைப் கழுமரத்திலேற்றுமாறு ஆணை தந்தான். தண்ட வினைஞர்கள் சிவஞானச் செல்வரைக் கழுமரத்தருகே அழைத்துச் சென் றார்கள். திருவருள்வழியே யொழுகும் பெருமான், என்செய லாவது யாதொன்று மில்லை என்னுந் திருப்பாடலோத, உடனே கழுமரம் தீப்பற்றி யெரிந்து சாம்பலாயிற்று. அதுகேட்ட பத்திரகிரியார் விரைந்து ஓடிக் குருநாதன் திருவடிகளில் விழுந்து வணங்கி யெழுந்து நின்று தம்மை மறந்தார். ஞானசிரியராக எழுந்தருளிய பட்டினத்தடிகள் பத்திரகிரியார்க்கு ஞானோப தேசஞ் செய்து அரசர் பெருமானைத் திருவிடைமருதூருக் கேகுமாறு பணித்துத் தாமும் பல க்ஷேத்திர யாத்திரைசெய்து திருவிடைமருதூரை யடைந்தருளினார். அங்கே பெருமான் பத்திரகிரியார் பிச்சை யேற்றுக்கொண்டு வந்தளிக்கும் அன்ன முண்டு வந்தனர். பத்திரகிரியார் அவ்விடத்தில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அது திருவருளால் இறந்து காசி மன்னன் தவப் புதல்வியாகப் பிறந்து வளர்ந்து மீண்டுந் திருவிடைமருதூரி லுள்ள பத்திரகிரியாரையே குருவாகக் கொண்டு, அவரை யடைந்து, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கிற்று. அதுகாலை அவர்களெதிரில் ஒரு பெருஞ்சோதி தோன்றிற்று. அதிலே அவர்கள் கலந்தருளினார்கள். அவ் வற்புதத்தைக் கண்ட பட்டினத்தடிகள் சிவசந்நிதி யடைந்து அருட்கடலே! அடியேனை இவ்வுலகத்தில் இருத்தியிருப்பதன் குறிப்பு என்னவோ அறிகிலேன் என்று முறையிட்டனர். அதுபோழ்து திருவெண்காட! ஒற்றியூர் வருக என்றோர் அசரீரி எழுந்தது. அவ்வருளொலியைச் செவி மடுத்த பிள்ளையார் இறைவன் திருவுள்ளக் குறிப்புணர்ந்து திருவெண்காடு சேர்ந்தனர். பட்டினத்தடிகள் திருவெண்காடு வந்துள்ள செய்தியைச் சேந்தனார் மனைவியாரும், மைந்தனாருங் கேள்வியுற்றுச் சுவாமிகளிடம் போந்து, திருவடிகளில் விழுந்து வணங்கி நின்றனர். அவர்களைத் திருவெண்காடர் நோக்கி நீங்கள் யாவர்? என்று வினவினார். சேந்தனார் மனைவியார், சுவாமி! அடியேன் தேவரீர்பால் கணக்குப் பிள்ளையாயிருந்த சேந்தனாரின் மனைவி. இவன் என் குமாரன். சுவாமிகளாணைப் படி சேர்ந்தனார் சுவாமிகள் பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையிட வைத்தனர். அரசன் அறியாமையினால் ஐயங் கொண்டு அவரை விலங்கிட்டுச் சிறையிலடைப்பித்தான். அவரது சிறையை நீக்கி யருளவேண்டுஞ் சுவாமி என்று வேண்டிநின்றார். திருவெண்காடர் சிவபிரானைத் தியானஞ் செய்ய, விநாயகர், திருவருளால் சேந்தனார் விலங்கு இரியப் பெற்றுச் சிறை நீங்கி வெளியேபோந்து பட்டினத்தடிகளைக் கண்டு பணிந்து, அடியேன் ஆத்தும சிறையையும் நீக்கி யருளல் வேண்டும் என்று பணிந்து நின்றார். திருவெண்காடர் சேந்தனாரது அதிதீவிர நிலையை யோர்ந்து நீ சிதம்பரத்தை யடைந்து விறகுவிற்று அதனாற் பெறும் ஊதியங்கொண்டு சிவபூசை மாகேசுரபூசை முதலிய பதிபுண்ணியங்கள் செய்து குடும்பத்தோடு வாழ்வாயாக என்று திருவருள் செய்தார். பின்னர்ப் பட்டினத்தடிகள் சீர்காழி, சிதம்பரம், திரு வேகம்பம், திருக்காளத்தி, திருவாலங்காடு முதலிய திருப்பதி களைத் தரிசித்துப் பதிகம் பாடித் திருவொற்றியூரை யடைந் தருளினார். அத் திருப்பதியில் அவர் சிலநாள் தங்கிப் பல வகைத் திருப்பாடல்கள் பாடிச் சிலவேளைகளிற் கடலோரஞ் சென்று, அங்கே விளையாடிக்கொண்டிருக்குஞ் சிறுவர்களோடுகூடி அதியற்புத ஆடல்கள் பல ஆடுவாராயினார். ஒரு நாள் சிவநேசர் ஒரு குழியிலிறங்கி மறைந்தார் அவரோடு விளையாடிக்கொண் டிருந்த பிள்ளைகள் அந்தோ! இஃதென்ன? நம்முடன் கலந்து பல அற்புதச் செயல்கள் புரிந்து கொண்டிருந்த பெரியவர் இக்குழியில் மறைந்தார். அவரைக் காணோம், எங்குச் சென்றார் என்று தேடுகையில் சுவாமிகள் ஒரு மணற்குன்றின்மேல் தோன்றினார். சிறுவர்கள் அவரை யணுகியபோது சுவாமிகள் குழியிற் குதித்து மறைந்தார். இங்ஙனம் அடிகள் பன்முறை இளையவர்கட்கு ஆடல்காட்டி ஒருமுறை குழியிலிறங்கி உட்கார்ந்து சிறார்களை நோக்கி நண்பர்களே! என்மீது ஒரு சாலைக் கவிழுங்கள் என்றருளிச் செய்தார். ஒன்றும் அறியாச் சிறுபிள்ளைகள் அங்ஙனே செய்து சிறிதுநேரங் கழித்துச் சாலைப் புரட்டிப் பார்த்தார்கள். அவர்கள் சுவாமிகளைக் காணாது அவ்விடத்தில் ஒரு சிவலிங்கப் பெருமான் விளங்கக் கண்டு வியந்து ஊரிலுள்ள பலர்க்குத் தாங்கள் கண்ணுற்ற அற்புதச் செயலைத் தெரிவித்தார்கள். ஊரவர் கடலோரம் போந்து சுவாமிகளது சிவலிங்க வடிவத்தைத் தரிசித்துப் பேரானந்த மெய்தினர். தமிழ் நாட்டிலுள்ள அன்பர் பலர் திருவொற்றுயூர் சென்று சுவாமிகள் திருமேனியை வழிபட லாயினர். பட்டினத்துப் பிள்ளையார் மனைவியராகிய சிவகலை யம்மையார் சுவாமிகட்கு முன்னரே அவர்களது திருவடித் தாமரைகளை இடையறாது தியானஞ் செய்துகொண்டிருந்து சிவலோகப் பதவி யடைந்தார். சாந்தி! சாந்தி! சாந்தி!!! பட்டினத்துப்பிள்ளையார் திருநட்சத்திர தினம் ஆடியுத்தி ராட மருட்சிவத்திற் பட்டினத்தார் நாடி யறக்கலந்த நாள். திரு. வி. க. பட்டினத்துப்பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டும் விருத்தியுரையும் கோயிற்றிருவகவல் - 1 நினைமின் மனனே! நினைமின் மனனே சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை நினைமின் மன்னே! நினைமின் மனனே! (பொழிப்புரை) நெஞ்சே! தியானஞ் செய்வாய்; நெஞ்சே! தியானஞ் செய்வாய்; சிவபெருமானை; சிவந்த பொன்மயமான சபையிலே நடஞ் செய்கின்ற நாதனை; நெஞ்சே! தியானஞ் செய்வாய்; நெஞ்சே! தியானஞ் செவ்ய். நெஞ்சே இறைவனை நினைவாயாக என்பது கருத்து. (விருத்தியுரை) சிவபெருமானை யென்றமையான் இறை வனுக்குரிய நிட்கள வடிவத்தினையும், அம்பலவனை யென்றமை யான் அவனது சகள வடிவத்தினையும் குறிப்பித்தவாறாம். நிட்கள மென்பது வாக்கு மனங்கட் கெட்டாததாய், கருவி கரணங்க ளில்லாததாய் விளங்குங் கடவுளினது சொரூபம். சகள மாவது பெருமான் ஆன்மாக்கள் பொருட்டுத் திருவருளையே திருமேனி யாகக் கொண்டு கர சரணாதிகளைத் தாங்கிய வடிவம். ஈண்டு இனம் பற்றி நிட்கள சகள வடிவத்தினையுங் கொள்க. இம்முத்திறத் திருமேனியும் இறைவனுக்குரிய வடிவமே யாகும். இதனை உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவிறந்த, அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வானபோது, திருமேனி உபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்தங், கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே என வரூஉஞ் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தா னுணர்க. சிவநாமத்திற் பரம்பொருளுக்குரிய இலக்கணங்கள் யாவும் அடங்கி நிற்றலால், வேத வேதாந்தங்கள் கடவுளை அந்நா மத்தாற் போற்றுகின்றன. சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி யெம்மான் என்றார் திருநாவுக்கரசரும், அதுபற்றியே ஈண்டு அடிகளும் ஆன்மதத்துவம் வித்தியாதத்துவம் சிவ தத்துவம் என்னும் முத்திறத் தத்துவங்களையுங் கூட்டங்களையுங் கடந்தொளிரும் இன்பப்பொருளைக் கூறமிடத்துச் சிவபெரு மானை என்றார். அம்பலவன் - அம்பலத்தில் நடிக்கின்றவன்; அம்பலம் - சபை - வெளி. பொன்னம்பலம் - கனகசபை. செம்பொன் - சுத்த பொன். முழுமுதற்பொருள் - சிருட்டி, திதி, சம்மாரம், திரோபவம், அனுக் கிரகம் என்னும் பஞ்சகிர்த்தியங்கள் நடைபெற நடித்தருளுமிடங் கனகசபை. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே என்ற தொல்காப்பியச் சூத்திரப்படி நினைத்தலாகிய மனத்தொண் டொன்றைக்கொண்டு ஏனைய வாழ்த்தலாகிய வாக்குத் தொண்டினையும், வணங்கலாகிய காயத் தொண்டினையுங் கொள்க. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம், தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச், சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே, வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே என்றார் அப்பரும். பிறவிக்கு வித்தாயிருப்பது அவா. அவ்வவாவினைப் புலன்கள் வழிச்சென்று எழுப்புவது மனம். அவ்வெழுச்சிமனம் பிறபொருள்களைப் பற்றுங்காலத்து நிகழ்வது. அந் நிகழ்ச்சியை விளையவொட்டாது தடுக்கவேண்டுமாயின் மனதைப் புலன்கள் வழி யுழலச்செய்யாது பிறப் பிறப்பில்லாப் பரம்பொருளி னிடத்துப் பதித்தல் வேண்டும். அதுவே தியானம் எனப்படும். இக்கருத்துப்படவே சுவாமிகள் நினைமின் மனனே! நினைமின் மனனே! சிவபெருமானை; செம்பொனம் பலவனை* * * * என்றருளிச் செய்தார்கள். இதனை பனைக்கை மும்மத வேழ முரித்தவன், நினைப்பவர்மனங் கோயிலாக் கொண்டவன், அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ என்னுந் தமிழ் வேதம் வலி யுறுத்தல் காண்க. மனம் - மனன்; னகரம் போலி. மனனே என்பதிலுள்ள ஏகாரம் விளியுருபு. மனனே நினைமின் - இழிவிற் சிறப்பாக வந்த ஒருமையிற் பன்மை மயக்க மென்ப. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி; பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் என வரூஉந் தொல்காப்பியச் சூத்திரத்தையும், அதற்கு ஆசிரியர் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் கூத்தாராற்றுப் படை யுள் கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ* * * * * * இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் எனப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் கூறியிருத்தலை எடுத்துக்காட்டி, வரைந் துள்ள உரைகளையும் காண்க. நினைமின் மனனே நினைமின் மனனே நினைமின் மனனே நினைமின் மனனே - இவ்வடுக்கு இசைநிறை. இசைபடு பொருளே நான்கு வரம்பாகும் என்றார் தொல்காப்பியனார். பேசுவாழி பேசுவாழி ஆசையோடு மயங்கி, மாசறு மனமே பேசுவாழி பேசுவாழி எனச் சுவாமிகள் பிறாண்டும் அருளிச் செய்திருத்தல் காண்க. சிவபெருமானை நினைமின் மனனே நினைமின் மனனே என்றுஞ் செம்பொ னம்பலவனை நினைமின் மனனே நினைமின் மனனே என்றுங் கொண்டு கூட்டிப் பொருள் கூறுநரு முளர். அலகைத் தேரி னலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க (பொ-ரை) கானற் சலம்போலவும், சுழலுங் காற்றுப் போலவுமுள்ள அநித்திய உலக வாழ்வினையும் உடம்பினையும் நித்தியமாக வெண்ணிப் பாதுகாவா திருப்பாயாக. (வி-ரை) ஈண்டு உலகம் வாழ்வு உடம்பு என்றவை தநுகரண புவன போகங்களை யென்க. அவைகள் உயிர்கட்கு இறைவனால் கொடுக்கப்பெற்ற மாயாகாரிய உடைமைகள். மாயை ஆன்மாக்களின் ஆணவமல நீக்கத்துக்கும், அறிவு விளக்கத் துக்குங் கடவுளாற் றொழிற் படுத்தப்படும் ஒரு கருவி. எனவே உலகமும் உடலும் உயிர்களின் அறிவு விளக்கத்துக்குப் பெருங் கருவிகளென்பது பெறப்படுகின்றது. இதுபற்றியே உண்மை கண்ட பெரியோர் உடலை யோம்புவதிலும், அதுநிமித்தம் உலக வாழ்வை மேற்கொள்வதிலும் வெறுப்புறுகின்றாரில்லை. சிவஞானச்செல்வராகிய திருமூலர் உடம்பா ரழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ் ஞானஞ் சேரவு மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே என்றும், உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன், உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென, உடம்பினை யானிருந்தோம்புவன் யானே என்றும் உலகத்தார்க்கு அறிவுறுத்தியிருத்தல் காண்க. கடவுளுண்மையினையும் உயிருண்மையினையும் மறுத்து உடலுண்மை யொன்றனையே கொண்டு, அதனை யோம்பு வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என இறுமாந்து திரியும் நாத்திகர்கட்கு நல்லறிவுச் சுடர்கொளுத்த வேண்டி ஞானிகள் உடல் மாயா காரியம். அஃத அறிவில்லாப் பொருள்; தோன்றி நின்றழிவது. அதனை யோம்பற்க எனப் பல விடங்களிற் பலவாறு திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். உடலை யோம்புக உடலை யோம்புக என்ற திருவாக்குகள் ஆத்திகர்க்காக எழுந்தன வென்றும், உடலை யோம்பற்க உடலை யோம்பற்க என்ற திருவாக்குகள் நாத்திகர்க்காக வெழுந்தன வென்றுங்கொள்ள வேண்டுவது அறிவுடையோர் கடனாம். ஈண்டுச் சுவாமிகள் உலகப்பொய் வாழ்க்கையை உடலை யோம்பற்க என்றருளிச் செய்தது நாத்திகரை வழிப்படுத்த வேண்டி யென்க. உலகமும் உடலும் மாயா காரியமாகலானும் அவை நீரிற்குமிழிபோற் றோன்றிநின்று ஒடுங்குகின்றமையானும், அவை யிற்றை (காரியத்தை) அலகைத் தேரெனவும் அலமரு காலெனவுங் கூறினார். காரணமாகிய மாயை உள் பொருளே யாம். பூத்தாரும் பொய்கைப் புனலிதுமே யெனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே என்றார் மாணிக்கவாசகனாரும். பிறந்தன விறக்கு மிறந்தன பிறக்குந் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன வழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம் என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் (பொ-ரை) பிறந்த உயிர்கள் யாவும் இறக்கும்; (அங்ஙனம் இறந்த உயிர்கள் யாவும் (மீண்டும்) பிறக்கும்; (நாம ரூபத்தோடு) தோன்றிய பொருள்கள் ஒடுங்கும்; ஒடுங்கிய பொருள்கள் (மீண்டும் நாமரூபத்தோடு) தோன்றும்; பெருத்த பொருள்கள் சிறுக்கும்; சிறுத்த பொருள்கள் பெருகும்; தெரிந்தன யாவும் மறந்துபோம்; மறந்தனவெல்லாம், உணர்வில்வரும், கூடினவைகள் பிரிதலுறும்; பிரிந்தவைகள் (மீண்டுங்) கூடும்; உண்டன வெல்லாம் மலமாக மாறும்; தரித்தவைகள் அழுக்கடையும்; விரும்பப்படுபவைகள் வெறுக்கப்படும்; வெறுக்கப்படுபவைகள் விரும்பப்படும் என்று இவைகளெல்லாவற்றையுஞ் செவ்வனே அறிந்து கொண்டாய். அல்லாமலும், (வி-ரை) பிறந்தன என்றது அண்டசம், சுவேதசம், சராயுசம், உற்பிசம் என்னும் நான்கு வழியாகத் தோன்றும் உயிர்களை. தோன்றின என்றது பிறவற்றை. பெருத்தன தூலப் பொருள்கள்; சிறுத்தன - சூக்குமப் பொருள்கள்; இவை முறையே பருப் பொருள் நுண்பொருள் எனவும்படும் உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும் என்றது நினைப்பு மறப்பை - விழிப்புறக்கத்தை - சகல கேவலத்தை. இதனால் உலகங் காரிய காரண முற்றுக்கொண்டே யிருக்கு மென்பதும், காரிய காரணப்படும் பொருள்கள் என்றும் ஒருபடித்தாய் நிலைபேறாக உள்ளனவாகா என்பதும், அவைகளை நினைப்பதாற் பயன் விளையாதென்பதும் பிறவும் பெறப்படுகின்றன. இக் கருத்தையே சுவாமிகள் கண்டன மறையும் உண்டன மலமாம் - பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் - நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் - பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் - ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும் எனக் கோயில் நான்மணி மாலையினும் விளங்க, உரைத் தருளியது காண்க. பிறந்தன பிறந்தன பிறவிக டோறும் கொன்றனை யனைத்து மனைத்துநினைக் கொன்றன தின்றனை யனைத்து மனைத்துநினைத் தின்றன பெற்றன யனைத்து மனைத்துநினைப் பெற்றன ஓம்பினை யனைத்து மனைத்துநினை யோம்பின செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை சுவர்க்கத் திருந்தனை நரகிற் கிடந்தனை இன்பமுந் துன்பமு மிருநிலத் தருந்தினை ஒன்றொன் றொழியா துற்றனை யன்றியும் (பொ-ரை) நீ பலவாக எடுத்த பிறவிகளெல்லாம் பல உயிர்களைக் கொன்றாய்; அவைகளும் உன்னைக் கொன்றன; அவ்வுயிர்களை நீயுண்டாய்; அவைகளும் உன்னை யுண்டன; எல்லாவற்றையும் நீ யீன்றாய்; அவைகளும் உன்னை யீன்றன; யாவற்றையும் வளர்த்தாய்; அவைகளும் உன்னை வளர்த்தன; செல்வம்வந் துற்றகாலத்து இன்புற்றாய்; வறுமை நேர்ந்த காலத்துத் துன்புற்றாய்; தெய்வலோகத்தில் இருந்தாய்; நரகத்திற் கிடந்தாய்; இப்பரந்த உலகத்தில் சுகத்தையும் அனுபவித்தாய்; துக்கத்தையும் அனுபவித்தாய்; (இக் கூறியவற்றுள்) ஒவ் வொன்றினையும்விட்டு நீங்காது அதனதன்கண் பொருந்தி அனுபவித்தாய்; அல்லாமலும், (வி-ரை) பிறந்தன பிறந்தன - அடுக்கு மிகுதி. களிப்பு - மயக்கத்தால் வரும் இன்பம். சுவர்க்கம் - புண்ணியஞ் செய்வோர் போகுமிடம். அதுபற்றியே சுவர்க்கத் திருந்தனை என்றார். கிடந்தனை - களித்திருந்தனை யென்றபடி. நரகம் - பாவஞ் செய்வோர் செல்லுமிடம். அது குறித்தே நரகிற் கிடந்தனை என்றார். கிடந்தனை - துக்கித்திருந்தாய் என்றபடி. இப்பிறப்பிற் கொலை செய்யப்பட்ட ஒருவனே மறுபிறப்பில் தன்னை முற்பிறப்பில் கொலை செய்தவனைக் கொலை செய்வன் என்பதுபோன்ற கருத்துக்களே யீண்டுக் கூறப்பட்டன. கரும நிகழ்ச்சியை விளங்கியவாறு காண்க. புற்புதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம் என்னநின் றியங்கு மிருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாக் கருதினை யிதனுள் (பொ-ரை) நீர்க்குமிழிபோன்ற (நிலையில்லாச்) சிறு குடிசைபோலவும், அருவருக்கத்தக்க ஒதுக்கிடம்போலவும் நிலவியுலவும் புண்ணிய பாவத்தாலாகிய கூட்டினை (உடலை)க் கல்லைப் பார்க்கிலும் வலியதாக எண்ணினாய்; இவ்வுடம்பிலே. (வி-ரை) நீரி லெழுத்தாகும் யாக்கை என்றார் குமர குருபரர். துச்சிலொதுக்கிடம் - ஒருபொருட் பன்மொழி. துச்சில் - ஒதுக்கிடம். அடவி காடே என்பது போல. புக்கிலமைந் தின்று கொல்லோ உடம்பினுள் - துச்சிலிருந்த உயிர்க்கு என்றார் திருவள்ளுவர். நீரிற்குமிழிபோன்ற உடலைக் கல்லாக் கருதல் அறியாமை என்றபடி. வினைக் கூடு - வினையாலாகிய கூடு, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது என்பது மணி மேகலை. இருவினை - புண்ணியபாவம். புண்ணியம் - நல்வினை; பாவம் - தீவினை. உள் எழனுருபு. பீளையு நீரும் புறப்படு மொருபொறி மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி சளியு நீருந் தவழு மொருபொறி உமிழ்நீர் கோழை யொழுகு மொருபொறி வளியு மலமும் வழங்கு மொருவழி சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து (பொ -ரை) ஒருபொறியில் (கண்ணில்) பீளையும் நீரும் வெளிப்படும்; ஒருபொறியில் (காதில்) வெளித்தோன்றுங் குறும்பி புறப்படும்; ஒருபொறியில்(மூக்கில்) சளியும் நீருங் கசியும்; ஒருபொறியில் (வாயில்) எச்சிலும் கோழையுஞ் சிந்தும்; ஒருவழியில் (குதத்தில்) அபானவாயுவும் மலமும் வெளிவரும்; ஒருவழியில் (குறியில்) நீரும் சீயும் ஒழுகும்; (இவ்வாறு) தீநாற்றம் உள்ளே தொடங்கி யாவர்க்கும் புலனாக வெளியிலே வந்து வீசும். உடலானது இறுதியில் சுடப்பட்ட எலும்பாகிறது. (இத்தகைய அற்ப) உடலிலே பொருந்திய வாழ்க்கையை நன்கு ஆழ விசாரித்துத் தெளிந்து, (வி-ரை) இதனால் உயிரின் பொருட்டு உடலை யோம்பாது, அவ்வுடலையே பெருமையாகக் கருதி அதனை யோம்பி வாழும் நாத்திகரை நோக்கி உடலின் சிறுமை தெரித்த வாறாம். மெய் வாய் கண் மூக்கு செவி - ஞானேந்திரியங்கள். வாக்கு பாதம் பாணி பாயுரு உபதம் - கன்மேந்திரியங்கள். என்பினாற் கழிநிறைச்சி மண்சுவரெறிந்து நம்மில்லம், புன் புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு, முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடத்தே, அன்பனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சனெஞ்செ என ஞானசம்பந்தரும், பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருதவேண்டாம் எனவும், புழுப் பெய்த பண்டிதன்னைப் புறமொரு தோலால்மூடி, ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்றுமில்லைச், சழக்குடை யிதனுளைவர் சங்கடம் பலவுஞ்செய்ய, அழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்டனீரே எனவும் அப்பரும், ஊண்மிசை யுதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் எனச் சுந்தரரும் அருளிச்செய்தமை யோர்க. கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனதற நினைவற விருவினை மலமற வரவொடு செலவற மருளற விருளற இரவொடு பகலற விகபர மறவொரு முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித் திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை நினைமின் மனனே! நினைமின் மனனே சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே! நினைமின் மனனே!. (பொ-ரை) வாசனை பொருந்திய கொன்றை மாலை தரித்த சடாமுடியுடைய பரம்பொருளை, நீங்குதலில்லாத சிவபோகப் பேரானந்தத்தை (மரத்தைவிட்டு நீங்காத) நிழலைப்போல நீங்காத தன்மையுடன் பொருந்தி, எனது என்னும் பற்று அற, நினைவுகெட, இருவினைக் கேதுவாயுள்ள மலம் அழிய, பிறப்பு இறப்பு ஒழிய, மயக்கம் ஓட, ஆணவம் நசிக்க, இரவு பகல் இரிய, இம்மை மறுமை தொலைய, ஒப்பற்ற முதல்வனை; தில்லை வனத்திற் சுயம்புவாகத் தோன்றிய சோதி சொரூபனை; சபாநாதனை; ஆனந்த நடராஜனை; சிதாகாசத்தில் விளங்குஞ் சங்கரனை; அழலிடைப்பட்ட மெழுகைப்போலக் குழைந்து குழைந்து உருகித் தியானஞ் செய்வாய் நெஞ்சே! தியானஞ் செய்வாய்; நெஞ்சே! சிவபெருமானை; சிவந்த பொன்மயமான சபையில் நடஞ் செய்கின்ற நாதனை; தியானஞ் செய்வாய் நெஞ்சே! தியானஞ் செய்வாய் நெஞ்சே! (வி-ரை) ஒழிவருஞ் சிவபெரும் போகவின்பத்தை என்னுங் கருத்தைச் சுவாமிகள் அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வ எனப் பிறாண்டும் அருளிச் செய்துள்ளதைக் காண்க. மரத்தினை விட்டு நிழல் பிரிந்திருப்பதில்லை. அதுபோலச் சிவனைவிட்டுச் சீவனும் பிரிந்து நிற்றலில்லை. பிரிந்து நிற்பதுபோலத் தோற்றுவதே அஞ்ஞானம். இக்கருத்துப் பற்றியே பிரியாது வணங்குவன் எப்பொழுதும் என்றும் ஒன்றி யிருந்து நினைமின்கள் என்றும் அப்பர்சுவாமிகளும் அருளிச் செய்துள்ளார்கள். எனது என்றமையான் இனம் பற்றி யான் என்பதையுங் கொள்க. எனது - புறப்பற்று; யான் - அகப்பற்று. யான் எனதென்னுஞ் செருக் கறுப்பான் வானோர்க்கு, உயர்ந்த உலகம்புகும் என்றார் திருவள்ளுவர். நினைவு என்றமையான் மறப்பினையுங் கொள்க. நினைப்பும் மறப்பும் அற்றவர் நெஞ்சில், வினைப்பற் றறுக்கும் விமலன் இருப்பன் என்பது திருமந்திரம். இருவினைமலம் - கன்மமலம்; மருள் - மாயாமலம்; இருள் - ஆணவமலம். இரவு பகலில்லாவிடமே இன்ப இடம். இகபரம் ஆசையின்மேற்று. இறைவன் புரியுந் திருக்கூத்துக்களுக்குள் ஆனந்தக்கூத்து என்பது மொன்று. விரிவைத் திருமந்திரத்திற் காண்க. இதனாற் கூறியது சிவத்தையே தரிசித்துக்கொண்டிருக்க வேண்டு மென்பது. கோயிற்றிருவகவல் - 2 காதள வோடிய கலகப் பாதகக் கண்ணியர் மருங்கிற் புண்ணுட னாடுங் காதலுங் கருத்துமல் லானின் னிருதாட் பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச் சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து (பொ-ரை)காது அளவு நீண்ட கலகமாகிய பாதகத்தை விளைக்குங் கண்களையுடைய பெண்களின் இடையிலே துன்பத்துடன் செல்லும் விருப்பமும் எண்ணமுமே அல்லாமல், தேவரீருடைய இரண்டு திருவடித்தாமரைகளையும் (சிரசில்) அணியப் புண்ணியஞ் செய்யாத பாவ மிகுந்த அடியேன் பக்கத்துணை நின்று, (வி-ரை) ஓடிய கண்ணென்க: ஓடிய - பெயரெச்சம். கலகப் பாதகம் - கலகத்தைச் செய்யும் பாதகம். கலகமாவது - காமப் போர். இடை - காமத்தை யெழுப்பும் உறுப்புக்களு ளொன்று. கண்ணியர் மருங்கில் - பெண்களிடத்தில் எனலுமாம். புண் - அல்குலுமாம். வேனில்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய, பானலார் கண்ணியர்க்குப் பதைத்துருகும் பாழ்நெஞ்சே, ஊனெலா நின்றுருகப் புகுந்தாண்டா னின்று போய், வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே என்றார் மாணிக்கவாசகனாரும். அங்கோ டிங்கோ டலமருங் கள்வர் ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம் சலமலப் பேழை யிருவினைப் பெட்டகம் வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர் ஊத்தைப் புன்றோ லுதிரக் கட்டளை நாற்றப் பாண்ட நான்முழத் தொன்பது பீற்றற் றுண்டம் பேய்ச்சுரைத் தோட்டம் அடலைப் பெரிய சுடலைத் திடருள் ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம் ஓயா நோய்க்கிட மோடு மரக்கலம் மாயா விகார மரணப் பஞ்சரம் சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம் காற்றிற் பறக்குங் கானப் பட்டம் விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை சதுர்முகப் பாணன் றைக்குஞ் சட்டை ஈமக் கனலி லிடுசில விருந்து காமக் கனலிற் கருகுஞ் சருகு கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமம் பவக்கொழுந் தேறுங் கவைக்கொழுக் கொம்பு மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் பிணமாய்க் கிடக்கும் பிண்டம் பிணமே ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி காலெதிர் குவித்த பூளை காலைக் கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம் அந்தரத் தியங்கு மிந்திர சாபம் அதிரு மேகத் துருவி னருநிழல் நீரிற் குமிழி நீர்மே லெழுத்து கண்டுயில் கனவிற் கண்ட காட்சி அதனினும் பொல்லா மாயக் களங்கம் (பொ-ரை) அங்கும் இங்குமாக ஓடிச் சுழலுகின்ற திருடர்களாகிய ஐவர்கள் கலகஞ்செய்து வருத்துங்காடு; சலமும் மலமும் நிரம்பிய பெட்டி; நல்வினை தீவினை தங்கும் பொய்வீடு; வாதம் பித்தம் சிலேத்மம் என்னும் மூன்றும் வாழுஞ் சிறிய ஊர்; அழுக்கோடு கூடிய புல்லிய தோலும் இரத்தமுஞ் சேர்ந்த கருவி; தீநாற்றம் வீசும் பானை; நான்கு முழ நீளத்தில் ஒன்பது துவாரமுள்ள ஒரு மரத்துண்டு; பேய்ச்சுரை படர்ந்த தோட்டம்; சாம்பல் மிகுந்த பரந்த சுடுகாட்டு மேடு; ஆசையாகிய கயிற்றாற் சுழலும் பம்பரம்; நீங்காத நோய்களுக்கு இருக்கை; ஓடுகிற கப்பல்; மாயையாகிய அவலட்சணம்; மரணக்கூடு; சோறு அடை துருத்தி; (காற்றில்) தூற்றப்படும் பதர்; காற்றிற் பறக்குங் காற்றாடி; கர்மத்துக்குத் தக்கபடி யமன் தரிக்குங் கட்டை; நான்முகன் என்னுந் தையற்காரன் தைக்குஞ் சட்டை; சுடுகாட்டி லிடப் படுஞ் சிறுவிருந்து; காமாக்கினியிற் கருகுஞ் சருகு; புழுக்கள் கிண்டுங் கிழங்குத் தோல்; பாவமாகிய தளிர் ஏறுஞ் சிறு கிளைகளை யுடைய கொழுக்கொம்பு; இளமையில் திருமணக் கோலந் தாங்கி நடக்கும் பிண்டம்; இறுதியில் பிணமாகி அசைவின்றிக் கிடக்கும் பிண்டம்; பிணமான பிறகு ஊரில் நிலைக்க ஒட்டாத துன்ப நோய்; காற்றுக்கு முன்னே குவிந்த பூளைமலர், காலையில் எழுஞ் சூரியன் முற்பட்ட கொடிய பனிக்கூட்டம்; வானத்திற் றோன்றும் இந்திரவில்; இடிக்கின்ற மேகத்தினது உருவின் அருநிழல்; நீரிற் றோன்றுங் குமிழி; நீர்மேல் எழுதும் எழுத்து; உறக்கத்துச் சொப்பனத் திற்றோன்றிய தோற்றம்; அத் தோற்றத்திலும் நிலையுதலில்லாத மாயைக் குறி; (வி-ரை) ஈண்டு ஐம்புலக் கொடுமையைச் சுவாமிகள் குறித்தவாறே அழிவுடைத்தாய் வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக் கழியிடைத் தோணிபோன்றேன் என்றும், முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே யிவர்களோடும், அடியனேன் வாழ மாட்டேன் என்றும், புள்ளுவர் ஐவர்கள் புனத்திடைப் புகுந்து நின்று, துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளையலொட்டார் என்றும் அப்பர் சுவாமிகளும் அருளிச் செய்திருத்தல் காண்க. பெட்டகம் - பெட்டு+அகம். பெட்டு - பொய்; அகம் - வீடு; பெட்டியுமாம். தலைமுதல் கால்வரை நான்கு முழ அளவு பீற்றல் - கிழியல்; ஈண்டுத் துவாரம். ஒருமுழம் உள்ள ஒன்பது துளையுடைத் தாய் அரைமுழம் அதனகலம் என்றார் தாண்டகவேந்தர். பேய்ச்சுரை யென்றது பேய்ச்சுரைக் கொடிபோன்ற கருவிகளை. அவை குடர் முதலியன. பிண்டம் - சடம்; உடல்; மாமிசம். வடிவின்மணமாய் நடக்கும் பிண்டம் எனக் கூட்டுக. உடல் திருமணக் காலத்தும் பிண்டமேயாம்; ஆயினும் அதுகாலை உயிரோடுகூடி யுலவுகின்றமையான் நடக்கும் பிண்டம் என்றார். பிணம் அசைவின்றிக் கிடத்தலான் கிடக்கும் பிண்டம் என்றார். இக்கருத்துக்களைச் சுவாமிகள் பதினொராந்திருமுறையில் நன்கு விளக்கி யோதி யுள்ளன வற்றைக் காண்க. அமையு மமையும் பிரானே யமையும் இமய வல்லி வாழியென் றேத்த ஆனந்தத் தாண்டவங் காட்டி ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே (பொ-ரை) (இத்தகைய உடலானது) வந்து பொருந்தும் பொருந்தும் ஆண்டவனே! பொருந்தும்; மலையரையன் புதல்வியாகிய உமாதேவியார் வாழ்க வாழ்க வென்று துதிக்க, ஆனந்தத் திருக்கூத்தினைக்காட்டி அடியேனைத் தடுத்தாட் கொண்டருள வேண்டுவது தேவரீர் திருவருளினுக்கு அழகாம். (வி-ரை) பிரானே அங்கோ டிங்கோ டலமருங் கள்வர்* * * * களங்கம் அமையும்; தமியேன் பாங்கிருந்து தாண்டவங் காட்டி ஆண்டருள்கை அருளினுக்கழகு எனக் கொண்டு கூட்டிப் பொருளுரைக்க. யாக்கை நிலைதலில்லாதது. அத்தகைய யாக்கையை நிலையுள்ள பொருளாகக் கொண்டு மகளிரின்பத்தி லழுந்துகிறேன். அதனால் துன்பத்தைக் கொடுக்கும் பிறவி மாறி மாறி வந்துகொண்டே யிருக்கும். தேவரீர் திருவருளால் அடியேனை ஆட்கொள்ள வேண்டும் என்பதே இத்திருவகவலிற் போந்த கருத்து. உலக ஆசைகள் பலவற்றுள்ளும் பெண்ணாசை யொன்றே இறைவனையும் மறக்கச் செய்யும் ஆற்றலுடையது. அவ்வாசைக் கடலில் அழுந்திய ஒருவன் தன்முயற்சியால் கரையேற இயலாதவனாய் வருந்துவன். அதுகாலை அவனுக்குக் கடவுளின் திருவருட் டுணையே பெரிதும் வேண்டும். மனமெனுந் தோணிபற்றி மதியெனுங் கோலையூன்றிச், சினமெனுஞ் சரக்கையேற்றிச் செறிகட லோடும்போது, மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறியொணாது, உனையுணும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடையகோவே என்றார் திருநாவுக்கரசர். இமயவல்லி - தாய்; அருள். இவளே ஆன்மாக்களாகிய பிள்ளை கட்காக இறைவனை வேண்டி அவர்களை அவனிடத்திற் சேர்ப்பவள். ஒளியாம் பரமும் உளதாம் பரமும், அளியார் சிவகாமி ஆகுஞ் சமயக், களியார் பரமுங் கருத்துறை யந்தத், தெளிவாஞ் சிவானந்த நட்டத்தின் சித்தியே - திருமூலர். கோயிற்றிருவகவல் - 3 பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம் (பொ-ரை) திருப்பாற்கடலைக்கடைய அதில் உண்டான விஷமாகிய வெண்ணெயை அழகிய கண்டத்தில் அடக்கிய சிவபெருமானே அடைக்கலம். (வி-ரை) தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானை மறந்து திருப்பாற்கடல் கடைந்தமையான், அவர்கள் விரும்பிய அமுதம் பெறாது ஆலம் பெற்றார்கள். பின்னர் அவ்வாலத்தின் கொடுமையாற்றாது சிவபெருமானைச் சரண்புக, அப்பெருமான் ஆலத்தை அமுதாக உட்கொண்டு தேவர்களைக் காத்தருளினது மன்றி அவர்கள் விழைந்த அமுதத்தையும் பெறச் செய்தனர். ஈண்டு அவ்வரலாற்றைக் குறிப்பிட்டது தமது ஆலமனைய ஆன்ம போதத்தை யேற்று அமுதனைய திருவருளைத் தமக்குதவு மாறு சிவபெருமானை நோக்கிக் குறையிரந்தவா றென்க. ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்து, வேசறு வேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பில், தேசுடை யாய் என்னையாளுடையாய் சிற்றுயிர்க் கிரங்கிக், காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே - மாணிக்கவாசகர். அடைக்கலம் - சரண்புகல்; தஞ்சம். அடங்கலு மடக்கிடுங் கடுங்கொலைக் காலனைக் காலெடுத் தடக்கிய கடவுணின் னடைக்கலம் (பொ-ரை) எல்லா உயிர்களையும் ஒடுங்கச் செய்யுங் கொடிய கொலைத் தொழிலையுடைய யமனைத் திருவடி தூக்கி யுதைத்து ஒடுங்கச் செய்த கடவுளே நினது அடைக்கலம். (வி-ரை) இயமனை உதைத்தருளியது மார்க்கண்டேயர் பொருட்டென்க. சிவமே! மார்க்கண்டேயரைப்போல யானும் அடைக்கலம் புகுகின்றேன். என்னை யமவாதனை அணுக வொட்டாதபடி செய்தருள்க என்று வேண்டியவாறாம். மார்க்கண்டர்க்காக மறலிபட்ட பாட்டையுன்னிப் பார்க்கி னன்பர்க் கென்பயங்காண் பராபரமே என்றார் தாயுமானாரும். உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித் திடக்கையி லடக்கிய விறைவநின் னடைக்கலம் (பொ-ரை) எல்லா உலகங்களையும் படைத்தலையுடைய பிரமதேவனது தலையைக் கிள்ளி, அதனை இடது திருக்கரத்தில் தாங்கிய இறைவனே! நினது அடைக்கலம். (வி-ரை) ஈண்டு உலகடங்கலு மென்றது - பிரகிருதி புவனங்களை, பிரமன் தானே பிரமம் என்று செருக்குற்ற போது சிவபெருமான் அவன் தலையைக்கொய்து அவனுக்கு ஞானம் பிறக்கச் செய்தனர். செய்யபொன் னம்பலச் செல்வநின் னடைக்கலம் ஐயநின் னடைக்கல மடியனின் னடைக்கலம் (பொ-ரை) சிவந்த பொன்மயமான சபையிலே நடனஞ் செய்கின்ற திருவருட் செல்வனே! நினது அடைக்கலம்; ஐயனே! நினது அடைக்கலம்; அடியேன் நினது அடைக்கலம். (வி-ரை) அம்பலச் செல்வன் - நடராஜன். செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே என்றார் - ஞானசம்பந்தரும் . ஐயன் - அழகன். மனவலை யலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும் விழுப்பொரு ளறியா வழக்குறு மனனும் ஆணவ மலத்துதித் தளைந்ததி லுளைந்திடு நிணவைப் புழுவென நெளித்திடு சிந்தையும் படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும் தவறு மழுக்காறு மிவறுபொச் சாப்பும் கவடும் பொய்யுஞ் சுவடும் பெருஞ்சின இகலுங் கொலையு மிழிப்புறு புண்மையும் பகையு மச்சமுந் துணிவும் பனிப்பும் முக்குண மடமையு மைம்பொறி முயக்கமும் இடும்பையும் பிணியு மிடுக்கிய வாக்கையை உயிரெனுங் குருகுவிட் டோடுங் குடம்பையை எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக் கொழுந்தசை மேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச் செழும்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை மலவுடற் குடத்தைப் புலவுடற் புட்டிலைத் தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் கொலைபடைக் கலம்பல கிடக்குங் கூட்டைச் சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக் கோட்சரக் கொழுகும் பீறற் கோணியைக் கோபத்தீ மூட்டுங் கொல்லன் றுருத்தியை ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தைப் புலராக் கவலை விளமரப் பொதும்பை ஆசைக் கயிற்றி லாடும்பம் பரத்தைக் காசிற் பணத்திற் சுழலுங்காற் றாடியை மக்கள் வினையின் மயங்குந் திகிரியைக் கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக் காமக் காற்றெடுத் தலைப்பக் கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின் அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம் வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங் கடுநடை வெள்ளிவிடைக் கடவுணின் னடைக்கலம் இமையா நாட்டத் திறையே யடைக்கலம் அடியார்க் கெளியா யடைக்கல மடைக்கலம் மறையவர் தில்லை மன்றுணின் றாடிக் கருணைமொண் டலையெறி கடலை யடைக்கலம் தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்தப் பாசிழைக் கொடியொடு பரிந்தருள் புரியும் எம்பெரு மானின் னிணையடிக் கபயம் அம்பலத் தரசே யடைக்கல முனக்கே. (பொ-ரை) மனம்போன வழியே சென்று (என்னை) வருத்துங் கனவுபோன்ற இவ்வுலக வாழ்வும், உயர்ந்த பொருளை யுணராத குற்றம்பொருந்திய மனமும், சகசமலத்திற் றோன்றி அதிலே கலந்து வேதனைப்படுங் கொழுப்பிலேயுள்ள புழுவைப் போல நெளியுஞ் சிந்தையும், வஞ்சமும், பாவமும், பழிப்பிற் கேதுவான எண்ணமும், குற்றமும், பொறாமையும், மிகுந்த மறதியும், கபடமும், பொய்யும், முரணும், பெருங்போபத்தால் உண்டாகும் போரும், கொலையும், ஈனத்தைப் பயக்குஞ் சிறுமைத் தொழில்களும், பகையும், பயமும், துணிவும், நடுக்கமும், மூன்று குணத்தால் தோன்றும் அறியாமையும், பஞ்சேந்திரியங்களின் சேர்க்கையும், துன்பமும், நோயும் நிறைந்த உடலை; உயிர் என்னும் பறவையானது விட்டு ஒடுங்கூட்டை; எலும்புடனே நரம்பையுங்கொண்டு (கட்டவேண்டிய) இடங்களிற் கட்டிக் கொழுமை பொருந்திய தோலால் மூடியும் ஒழுகும்படியான குடிசையை; செழுமை மிகுந்த சிறிய உதிரப் புழுக்களுடைய கூட்டை; மலம்பொதிந்த உடலென்னும் பாண்டத்தை; மாமிசத்தால் ஆக்கப்பட்ட உடம்பாகிய கூடையை; ஒழிவின்றிச் சோற்றால் நிரப்பப்படுந் துன்பமயமான சிறு பள்ளத்தை; கொலை செய்தற்குரிய ஆயுதங்கள் அநேகமுள்ள தூணியை; வெறுப்பை யுண்டாக்குங் கருமங்களாகிய பல சரக்குச் சேர்ந்த குப்பையை; பொய்ப்பொருள்கள் சிந்துங் கந்தற் கோணியை; கோபமாகிய நெருப்பை யெழுப்புங் கொல்லன் துருத்தியை; பஞ்சேந்திரியமென்னும் பறவைகள் சேர்கின்ற கூட்டை; தொலையாத கவலை விளையும் மரங்கள் அடர்ந்த சோலையை; ஆசையாகிய கயிற்றினாற் சுழலும் பம்பரத்தை; காசினாலும் பணத்தினாலுஞ் சுழலுங் காற்றாடியை; பிள்ளைகள் என்னும் வினையிலே மயங்குஞ் சக்கரத்தை; உலகமென்னும் பெரும்பரப்பிலே உருட்டி விட்ட தேர் உருளையை; பாவமாகிய பண்டங்களுடன் பிறவியாகிய கடலில் நுழைந்து, காம மென்னுங் காற்று மோதிவருத்த, துன்மார்க்க மென்னுங் கரையை அடையும்படியான கொடிய கப்பலை; இரண்டு வினைகளாகிய விலங்குகளுடன் நடமாடும் சிறு கலத்தை; யமன் வந்து கூப்பிட நடுக்கங் கொள்ளும் (இத்தகை) தேகத்தினை; பிணமெனத்தள்ளி யான் வெளிப்படுங் காலை:- தேவரீர் ஸ்ரீ பாதகமலங்களுக்கு அபயம்; நினது அடைக்கலம்; ஆகாயத்திலே உறுத்து இடியிடித்தாற்போல ஆவேசித்து எழும் வேகமான நடையையுடைய வெள்ளிய இடபத்தினை (வாகனமாகக்) கொண்ட கடவுளே! நினது அடைக்கலம்; இமையாத திருவிழிகளையுடைய இறைவனே! அடைக்கலம்; திருவடித் தொண்டர் கட்கு எளியவனே! அடைக்கலம்; அடைக்கலம்; வேதியர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்திலே நின்று திருத்தாண்டவம் புரிந்து, திருவருளை முகந்து அலை களாக வீசுங் கடலே! அடைக்கலம்; தேவர்களும் முனிவர்களுஞ் சென்று திரு முன்னர் நின்று தோத்திரஞ் செய்ய, பசும்பொன் னாபரணங்களைத் தரித்த சிவகாமவல்லியோடு இரங்கித் திருவருள் புரியும் எம்பெருமானே! தேவரீரது இரு திருவடி களுக்கும் அபயம்; சிற்சபையில் நடிக்கின்ற அரசே! தேவரீருக்கே அடைக்கலம். (வி-ரை) முக்குணம் - ரஜோகுணம், தமோகுணம், சத்துவகுணம். ஐம்பொறி - மெய் வாய் கண் மூக்கு செவி.. இடும்பை - தரித்திரமுமாம். உயிரெனுங் குருகுவிட் டோடுங் குரம்பையை என்னுங் கருத்தை குடம்பை தனித்தொழியப்புட் பறந்தற்றே, உடம்போ டுயிரிடை நட்பு எனத் திருவள்ளுவ நாயனாரும் விளங்கக் கூறியுள்ளார். எலும்பு * * * * குடிலை இதனை கால்கொடுத் தெலும்பு முட்டிக் கதிர்நரம்பாக் கையார்த்துத், தோலுடுத்து திரமட்டித் தொகுமயிர் வேய்ந்த கூரை, யோலெடுத் துழைஞர்குடி யொளிப்பதற் கஞ்சுகின்றேன், சேலுடைப் பழனஞ்சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்துளானே என்று அப்பர் சுவாமிகள் அருளிச் செய்தவாறு காண்க, மெழுக்கு எனவும் பாடம். மெழுக்கு - பீளை முதலியன. கோள் - பழிமொழியுமாம் . ஐம்புலம் - சப்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம்; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனத் தமிழர் கூறுப. பொதும்பை - பொந்துமாம், ஈண்டு மக்களென்றது பிள்ளைகளை யென்க. மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும், வினையுளே விழுந்தழுந்தி என்றும் மக்களே மணந்த தாரம் என்றும் அப்பர் சுவாமிகள் கூறினமை காண்க. நெடுமரக்கலம் எனவும் பாடம். நடுவன் - யமன். தோன்றி நின்றழியும் மாயா காரியமாகிய உடலைப் பொருளெனக் கொள்ளாது சிவத்தையே பொருளெனக் கொண்டு அதனைச் சரண்புகுவதே மக்கள் கடமை யென்பது விளக்கியவாறு காண்க. கச்சித்திருவகவல் - 4 திருமால் பயந்த திசைமுக னமைத்து வருமேழ் பிறவியு மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகா தவமே மாதரை மகிழ்ந்து காதல்கொண் டாடும் மானுடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன் விளிவெளி மாக்க டெளிவுறக் கேண்மின் (பொ-ரை) நாராணமூர்த்தி யீன்ற நான்முகன் படைப்பினால் உண்டாகும் எழுவகைப் பிறவிகளிலும் மக்கள் பிறவியில் தோன்றி, மலையரசன் புதல்வியாராகிய உமா தேவியாரின் நாயகராஞ் சிவபெருமான் திருவடித்தாமரைகளைத் தொழுது (என்றும்) விளங்காநின்ற சிவபதவியை அடையாமல், வீணாகப் பெண்களை நோக்கிக் களித்து, விருப்பங் கொண்டு உலாவும் மனுஷர்களுக்கு யான் சில உரைகளை யெடுத்துக் கூறுவேன். அழியும் பொய்த் தோற்றத்தையுடைய மாக்களே! தெளிவுபெறக் கேளுங்கள். (வி-ரை) ஏழ்பிறவி-தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. பிறவிகள் பலவற் றுள்ளுஞ் சிறந்தது மானுடப்பிறவியாகலான் மானுடத்துதித்து என்றார். மனித்தப் பிறவியும் வேண்டுவதேயிந்த மாநிலத்தே வாய்த்தது நந் தமக்கு ஈதோ பிறவி மதித்திடுமின் என அப்பரும், அரிது அரிது மானுடராதலரிது என ஔவையாருங் கூறிப்போந்தமை காண்க. அத்தகைய பெறுதற்கரிய பிறவியைப் பெற்றோர் கடன் சிவனடி தொழலே என்பார். மலைமகள் * * * * அவமே என்றார். பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும், பெறுதற்கரிய பிரானடி பேணார், பெறுதற்கரிய பிராணிக ளெல்லாம், பெறுதற்கரிய பேறிழந்தாரே என்றார் திருமூலரும். இறைவனைப் போற்றாது ஏந்திழையாரை யேத்துவோர், ஆறறிவுடைய மக்களாகாரென்பார் மாக்கள் என்றார். மாவு மாக்களும் ஐயறி வினவே, மக்கள் தாமே ஆறறி வுயிரே என வரூஉந் தொல்காப்பியச் சூத்திரத்தால் தெளிக. முள்ளுங் கல்லு முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும் வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும் தசையு மெலும்புந் தக்கபுன் குறங்கை இசையுங் கதலித் தண்டென வியம்பியும் நெடுமுட றாங்கி நின்றிடு மிடையைத் துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் மலமுஞ் சலமும் வழும்புந் திரையும் அலையும் வயிற்றை யாலிலை யென்றும் சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி நகுவார் கிடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும் குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன் (பொ-ரை) முள்ளிலுங் கல்லிலும் வருந்தி நடக்கின்ற உள்ளங்காலைப் பஞ்சென்று சொல்லியும், வெள்ளிய எலும்புகளாலே காக்கப்பெற்ற கணைக்காலைத் துள்ளும் வரால் மீனென்று கூறிப் புகழ்ந்தும், மாமிசமும் எலும்பும் பொருந்திய அற்பத் தொடையைப் பொருந்தும் வாழைத் தண்டென்று வழங்கியும், நீண்ட உடம்பைச் சுமந்து நிற்கும் இடுப்பை உடுக்கையென்றும், பிடியென்றும் உரைத்துப் புகழ்ந்தும், மலமும் நீரும் கொழுப்பும் மடிப்பும் அசைகின்ற வயிற்றை ஆலிலையென்று சொல்லியும், பருப்போலக் கிளம்பி முன் வளர்ந்து திரண்டு பூரித்துச் சீழ்பாய்ந்து பெருகி நகத்தாற்கீற உலர்ந்து உள்ளுருகிச் சிரிப்பவர்கட் கிடமாய்த் தொங்கி வாடுங் கொங்கையைத் தாமரை மொக்கென்று சாற்றியுங் குலைகின்ற, காமத்தாற் கண்ணிழந்த, குருடர்களுக்குச் சொல்லுவேன். (வி-ரை) ஈண்டுக் கூறிய மகளிர் உறுப்புக்கள் யாவும் காமுகர்களை இன்புறுத்தி மகிழ்விக்கின்றமையான், அவை அவர்களாற் புகழப் பெறுகின்றன. காமிக்குக் கண்ணில்லை யென்னும் பழமொழியுண்மையானும், அவர்கட்கு அகக்கண் விழிப்பின்மையானும் குருடர் என்றார். நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும் ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும் வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப் பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும் வெரிப்பு மூத்தையு மேவிய வாயைத் துப்பு முருக்கின் றூய்மல ரென்றும் அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும் கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும் தண்ணீர் பீளை தவிரா தொழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும் உள்ளுங் குறும்பி யொழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும் கையு மெண்ணுங் கலவா தொழியில் வெய்ய வதரும் பேனும் விளையத் தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லு நரக வாயில் (பொ - ரை) நீட்டவும் முடக்கவும் மிகுந்த பொருள் வாங்கவும் உண்பிக்கவும் பிசையவும் துணைசெய்யும் உள்ளங் கையினைக் காந்தள்மலர் என்று கூறியும், வியர்வையும் அழுக்கும் பொருந்திய கழுத்தை உலகத்தில் இனிய பாக்குமரமென்று சொல்லியும், வெம்மையும் ஊத்தையும் பொருந்திய வாயைப் பவள மென்றும் முருக்கின் புனிதமல ரென்றும் புகன்றும், சோற்றையுங் கறியையும் மென்று (வயிற்றில்) இறக்கும் முன்னே யுள்ள பற்களை முத்தென்று பேசியும், நீருஞ் சளியும் நின்று நின்று ஒழுகுகின்ற கூர்மையான மூக்கைக் குமிழம்பூ என்று பகன்றும், குளிர்ந்த சலமும் பீளையும் நீங்காது சிந்துங் கண்ணை நோக்கிச் செங்கழுநீர் மலரென்றும், உள்ளே யிருந்து குறும்பி கசியுங் காதை வள்ளைத் தண்டினது செழுமை யென்று செப்பி யும், கையின் சேர்க்கையும் எண்ணெயின் சேர்க்கையும் இல்லாமற் போகுமானால், கொடிய புழுதியும் (சுண்டும்) பேனுந் தோன்றத் தக்க தலையோட்டில் முளைத்துக் கிளம்பிய சிக்கு மயிரைத் திரண்ட மேகமென்றும் (இத்தகைச்) சொற்கள் பலபடப் பேசிப் போற்றி நீங்கள் விரும்பி நுழையும் நரகவாசலானது, (வி-ரை) அகம்+கை = அங்கை. அங்கை - அழகிய கையுமாம். துப்பு - சிவந்தவெனினுமாம். தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் காமப் பாழி கருவிளை கழனி தூமைக் கடவழி தொலைபெறு வாயில் என்சா ணுடம்பு மிழியும் பெருவழி மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம் நச்சிக் காமுக னாய்நா னென்றும் இச்சித் திருக்கு மிடைகழி வாயில் திங்கட் சடையோன் றிருவரு ளில்லார் தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி புண்ணிது வென்று புடவையை மூடி உண்ணீர் பாயு மோசைச் செழும்புண் மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி தருக்கிய காமுகர் சாரும் படுகுழி செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில் இத்தை நீங்க ளினிதென வேண்டா பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பவனை முத்தி நாதனை மூவர் முதல்வனை அண்ட ரண்டமு மனைத்துள புவனமும் கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை யிணையடி யிறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுத லொழிந்தே. (பொ-ரை) தோலும் மாமிசமும் நிரம்பிச் சீழ்வடியும் காமக் குகை; கரு உற்பத்தியாகும் வயல்; சூதகம் ஒழுகும் வழி; துவாரம் உள்ள வாசல்; எட்டுச்சாண் உடம்பு வெளி வரும் பெரியவழி; மண்ணுலகில் காமத்தைக் கழித்தற்குரிய மறைவிடம்; அவ் விடத்தை விரும்பிக் காமுகன் என்னு நாய் எப்பொழுதும் ஆசை கொண்டு கிடக்கும் இடைவாசல்; சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமான் திருவருளைப் பெறாதவர்கள் தங்கியுழலும் மெல்லிய பெருவழி; இது புண்ணென்று புடைவையால் மூடியும் உள் நீரூற்றும் ஓசையுடைய சிவந்த புண்; மருள்வாய்ப்பட்டு (திருவருளுண்மை) அறியாத மனிதர்கள் நுழையும் வழி; காம நோய்ப்பட்டு (அதினின்றும்) நீங்காத கீழ்மக்கள் போகும் வழி; (மாதரின்பமே உயர்வுடைத்தெனத்) தருக்கிய காமுகர் அடையும் படுகுழி; செருக்குக் கொண்ட காமுகர்கள் கூடுஞ்சிறு குழி; பெண்களும் ஆண்களும் பிறக்கின்ற பெரிய வழி; மலம் வழிந்து இறங்கும் வாயிலுக்கு அருகே சலமொழுக்கி இறங்குந் தண்ணீர் வாயில். இவ்வாயிலை (அல்குலை) நீங்கள் இன்பம் உடைய தென்று விரும்பாமல், அவ்விலைமாதர்களை (மேற்கூறியபடி) துதித்தலினின்றும் விலகிப் பச்சிலையைக் கிள்ளி அருச்சித் தாலும் அன்பர்களாயின் அவர்கள் மேற் கருணை செலுத்தி (அவர்களைக்) கொண்டாடிச் சிவபதமாகிய வீட்டினைத் தந்தருள்பவனும், மோட்சத்துக்குத் தலைவனும், (தோற்ற வொடுக்கங்களாகிய) விகாரமில்லாத நித்தியனும், தேவ லோகத்தையும் மற்றுமுள்ள லோகங்களையும் படைத்த பெருமானும், திருக்காஞ்சியில் எழுந்தருளியுள்ள கடவுளும் ஆகிய ஒப்பற்ற முதல்வனுடைய இரண்டு திருவடிகளையும் வணங்குங்கள். (வி-ரை) வீடு அடைவதற்கு அல்குலாசையை அறவே யொழித்தல் வேண்டு மென்றவாறாம். அரவகல் அல்குலார் பால் ஆசை நீத்தவர்க்கே வீடு, தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் என்றார் பரஞ்சோதிமுனிவர். எவராயினும் பச்சிலையிடின் அவர்க்கருள் செய்பவன் இறைவன் என்பதை யாராலும் அளவிடுதற் கரியவொரு பரம்பொருளை, நீராலு மலராலு நெஞ்சுருகப் பணலாமே என வரூஉம் எல்லப்பர் உரையான் உணர்க. கண்ட - காரியப்படுத்திய. போகமாதர் என்றது பொதுமகளிரை. திருவேகம்பமாலை அறந்தா னியற்று மவனிலுங் கோடி யதிகமில்லந் துறந்தா னவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையோன் மறந்தா னறக்கற் றறிவோ டிருந்திரு வாதனையற் றிறந்தான் பெருமையை யென்சொல்லு வேன்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியில் எழுந்தருளியுள்ளள ஏகாம்பர நாதனே! இல்லறத்தை நடாத்துகின்றவனைப் பார்க்கிலும், இல்லத்தைவிட்டு நீங்கி (புறப்பற்றை யொழித்து) துறவொழுக்க மேற்கொண்டவன் கோடிபங்கு ம்பட்டவன்; அவனைப் பார்க்கிலும் அகத்துறவு கொண்டவன் நூறு கோடிபங்கு மேம்பட்டவன்; அதருமந் தன்னை விட்டொழிய நன்னூற்களைப் பயின்று, சித்பொருளாகிய தேவரீருடன் விளங்கி; இருவகைத் துன்பங்களற்று, யான் என்னும் முனைப்பை அழித்தவனது மாண்பை யென்னென்று கூறுவேன்? (வி-ரை) ஈண்டு முதற்கண் அறமென்றது இல்லறத்தை. என்னை? பின்னர் இல்லந்துறந்தான் என்றருளிச் செய்தமையான் என்க. அறமெனப்பட்டதே யில்வாழ்க்கை என்றார் திருவள்ளுவரும். இல்லம் - வீடு. இல்லந்துறந்தான் - புறப் பற்றுக்களை விட்டவன்; புறப்பற்றாவது எனதென்பது. உள்ளத் துறவுடையோன் - சந்நியாசி. அறிவோடுள்ளவன் - யோக ஞானி. அறிவுமயமாய் விளங்கும் ஞானியே சீவச்செயல் சிறிதுமின்றிச் சிவமாகி வீடு அடைவனாகலானும், அவன் பெருமையை அள விடுதல் ஆண்டவன் பெருமையை யளவிடுதலோடு ஒக்கு மாகலானும், பிறவானும் பெருமையையென் சொல்லுவேன் என்றார். அப்பெருமை கூறொணாதது என்றபடி. பிறவற்றை யூகித்துக்கொள்க. மறம் - அதருமம். (அழுக்ககாறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலியன) கற்றல் - அபரஞானம்; அறிவோடிருத்தல் - பரஞானம். கல்லார் நெஞ்சில் நில்லா னீசன் எனவும் கற்றுஞ் சிவஞான மில்லாக் கலதிகள் எனவும், கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின் எனவும் வரூஉம் ஆன்றோர் திருவாக்குகளை யோர்க. ஈண்டுச் சுவாமிகள் ஆன்மாக்கட்கு இருநிலை குறிப்பித் துள்ளார்கள். ஒன்று ஆன்மா மறத்தோடிருத்தல்; மற்றொன்று அறிவோடிருத்தல். மறத்தோடுள்ள நிலை பெத்தநிலை யெனப் படும். பிறநிலைகள் சீவன்முத்த நிலையும் முத்த நிலையுமாம். எனவே மறமென்றது தத்துவங்களை யென்க. அறிவென்றது சித்தாகிய சிவத்தையென்க. ஆன்மா தத்துவங்களோடு கலந்துள்ள காலத்தில் தன்னிலை மறந்து தன்னைக் கண்டப் பொருளாகவும் அளவிடக் கூடியதாகவுங் கருது மென்க. இதுபற்றியே சில நூல்கள் ஆன்மாவுக்கு அணுத்தன்மை கற்பிக்கின்றன. ஆன்மா தத்துவங்களைக் களைந்து தத்துவாதீதமாகிய சிவத்தோடு கலந்து விளங்குங் காலத்து அகண்டமாய் அளவற்றதா யொளிருவ தென உண்மை நூல்கள் கூறாநிற்கும். அவனையகன் றெங்கின்றா மாங்கவனா யெங்கும், இவனை யொழிந் துண்டாதலில் திருவருட் பயன். இருவாதனை - நல்வினை, தீவினை. பிறப்பு, இறப்பு - நினைப்பு மறைப்பு. இறந்தான் - சீவபோகத்தைக் கொன்றவன். பெத்த நிலையில் மாண்டவன் என்றபடி. சீவபோத முள்ள மட்டுஞ் சிவந் தோன்றாதென்க. 1 கட்டி யணைத்திடும் பெண்டீரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி முறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற் கொட்டி முழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால் எட்டி யடிவைப் பரோவிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியிலெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! யமனென்னுந் தச்சன், வெட்டி முறித்துத் தள்ளும் மரத்தைப்போல் உடலைக் கீழே தள்ளி வீழ்த்தி விட்டால், கட்டித் தழுவும் மனைவியரும், பிள்ளைகளும் பறைகளை யடிப்பித்து வாத்தியங்களை முழக்குவித்துப் புலம்பு கின்றவர்களாய்ச் சுடுகாடு மட்டும் போந்து (திரும்பி விடுவார்கள்) அதற்குமேல் ஓரடியாயினும் எடுத்துவைப்பார் களோ (வைக்கமாட்டார்கள்). (வி-ரை) இறைவன் - எங்குந் தங்குகிறவன் என்பர் அடியார்க்குநல்லார். பெண்டிரையும் மக்களையுங் கூட்டி அணைப்பது காதலால் என்க. கட்டி யணைத்திடும் என்னுங் குறிப்பு மிக நெருங்கிய உறவின் முறைமையை உணர்த்துவது. நெருங்கிய உறவினராகிய பெண்டிரும் மக்களுஞ் சுடுகாடு மட்டும்போந்து அதற்குமேல் உடனேகா தொழிவரெனில், ஏனைய உறவினர் எவ்வளவு தூரந் துணை போவரென்பதையும், பிற அஃறிணைப் பொருள்கள் எத்துணை உதவி செய்யுமென் பதையும் ஆராய்ந்து தெளிக. காலன் - உயிர்களின் காலத்தை அளவிடுபவன். தச்சன் மரத்தைவெட்டிச் சாய்ப்பதுபோலக் காலனுஞ் சரீரத்தைக் கொன்று சாய்க்கின்றமையான் அவன் தச்சனெனப்பட்டான். எத்தாயார் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடுஞ் சும்மாடாம் ஏவர் நல்லார், செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் என்றார் திருநாவுக்கரசு சுவாமிகளும். 2 கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையையெடுத் தப்புறந் தன்னி லசையாமன் முன்வைத் தயல்வளவில் ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந்து றங்குவளை எப்படி நானம்பு வேனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியிலெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! (கலியாண காலத்திற் பலரறியக்) கையைப் பற்றிய (உரிமைக்) கணவன் உறங்குங் காலத்திலே, அவனுடைய கையினையெடுத்து அந்தப் பக்கத்தில் அசையாமல் விரைவாக வைத்துப் பக்கத்து வீட்டிற்கு மனப்பூர்வமாகப் போய்த் தூக்கங் கழித்து, மீண்டுந் (தன் நாயகன் பக்கலில் வந்து) தூங்குபவளை நான் எவ்விதம் நம்புவேன்? (வி - ரை) கைப்பிடி என்றமையான் அக்கினி சாட்சியாகத் தேவர்களறியப் பெரியோர் முன்னிலையில் விதிப்படி மணஞ்செய்த குலமகளென்பதும் விலைமகளிரல்லரென்பதும் நனி விளங்கும். தீயொழுக்கமுடைய வீட்டுப் பெண்கள் நாயகன் அயர்ந்து உறங்கும் வேளையை யூகித்தறிதல் முதலியவற்றை அதிவிரைவில் பயின்று தேர்வது இயல்பு. முன் - விரைவு; காலச்சுருக்கம். அயல்வளவில் - அண்டை வீட்டிலுள்ள சோர நாயகனிடத்தில்; ஆகுபெயர். ஒப்புடன் - இசைவுடன் (முன்னேற் பாட்டின்படி.) துயில் நீத்து - புணர்ந்து, இடக்கரடக்கல், தாரு மாலையு மயங்கி என்றார் இளங்கோவடிகள். இதனாற் பெண்களைப் பொருளாகச் கொண்டு அவர்களைப் போற்றி வழிபடும் உலகாயதர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்திய வாறாம். மனைவியை மாத்திரங் கூறாது அவள் கொடுஞ் செயலையுங் கூறியது அவள் பாலுள்ள உறுதியை அறுக்க வேண்டி யென்க. சுவாமிகள் தமது அனுபவத்தைக் கூறினா ரெனச் சிலர் கூறுப. அக்கூற்று ஏற்றுச் கொள்ளற்பாலதன்று. ஈண்டுச் சுவாமிகள் நம்பற்குரிய பொருள் சிவமே என்று வலியுறுத்துவான் புகுந்து, ஒருவனுக்கு உலகில் உயிராயுள்ள மனைவியையும் நமபலாகா தென்றும், அவள் தன்மாட்டு நம்புதலுடைய நாயகன் உறங்கும் வேளையில் அயல்வீடு சென்று பிறனோடு கலந்து இன்பந் துய்த்து மீண்டும் இல்லான் பக்கல் போந்து ஒன்றுமறியாதவள்போல உறங்கி அவனை ஏமாற்றும் நீர்மையுடையாளாகலின் அவளை எப்படி நம்புவதென்றும் உலகிற்கு அறிவுறுத்தினார். உயிர்க்குயிராயுள்ள இல்லாளையும் நம்பாது, சிவத்தையே நம்புதல் வேண்டுமென்பது கருத்து. 3 நன்னாரிற் பூட்டிய சூத்திரப் பாவைநன் னார்தப்பினால் தன்னாலு மாடிச் சலித்திடு மோவந்தத் தன்மையைப்போல் உன்னாலி யானுந் திரிவதல் லான்மற் றுனைப்பிரிந்தால் என்னாலிங் காவதுண் டோவிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! நல்ல நாரினால் இணைக்கப்பெற்ற சூத்திரப் பதுமை, நல்லநார் அறுந்தால், தானே இயங்கிச் சலிப்புறுமோ (உறாது.) அதுபோலத் தேவரீர் திருவருட்டுணையால் அடியேன் நடமாடுவதல்லால், தேவரீரைப் பிரிந்து நின்றால் எளியேனால் இங்கே ஒருசெயல் நிகழ்வதுண்டோ (நிகழாது.) (வி - ரை) சூத்திரப்பாவை - கயிற்றினாலாடும் பாவை. வேதாகமங்களாற் பிரதிபாதிக்கப்பட்ட பொருள் மூன்று - அவை உலகு, உயிர், கடவுள் என்பன. இவையிற்றுள் கடவுள், உலகு உயிர்களில் நீக்கமற நிறைந்துநின்று அவைகளை யியக்குவது. கடவுளை விடுத்து உலகுயிர்கள் வேறாகத் தனித்து நிற்றலில்லை இதுபற்றிய சிவஞானசித்தியும் அரன்கழலை யகன்று நிற்ப தெங்கேயாமே என்று முழங்குகிறது. இறைவனை யன்றிச் சீவர்கட்குச் செயலின்மையான் உனைப் பிரிந்தால் என்னாலிங் காவதுண்டோ என்றார். ஆட்டுவித்தா லாரொருவர் ஆடா தாரே அடக்குவித்தா லாரொருவர் அடங்கா தாரே, ஓட்டுவித்தா லாரொருவர் ஓடா தாரே உருகுவித்தா லாரொருவர் உருகா தாரே, பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே பணிவித்தா லாரொருவர் பணியாதாரே, காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே என்றார் திருநாவுக்கரசு சுவாமிகள். அவனன் றியோரணுவும் அசையாது என்னும் பழமொழியுங் கருதத் தக்கது. 4 நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே அல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! நல்லவர்களுடைய சேர்க்கையும் தேவரீரது பூசையில் விருப்பமும், ஞானமும் அல்லாமல் உறுதி நிலை வேறு உண்டோ? வீடும் சொத்துக்களும் மனைவியும் பந்துக்களும் பிள்ளைகளும் உலகவாழ்க்கையும் அழகிய உடம்பும் இவை யாவுங் (கயிற்றில் அரவு தோன்றுவது போல) வெளிமயக்கத் தோற்றமேயாம். (வி - ரை) நல்லாரென்றது - சாதுசங்கத்தை . மக்கள் அடையவேண்டிய உறுதிப்பொருள் ஞானம். அந்த ஞானஞ் சிவபூசையால் விளங்குவது. சிவபூசையாவது சிவபிரானை இடையறாது தியானிப்பது. ஆப்பூசைக்கு இன்றியமையாதது அன்பு. பூசையினிடத் தன்பு நல்லாரிணக்கத்தால் நிகழும். இம் முறைப்பற்றியே நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே என்றார். மக்கள் ஞானத்தைப் பெற முதலாவது தேடவேண்டுவது நட்பேயாம். இவ்வுண்மை நோக்கியே செயற் கரிய யாவுள நட்பின் என்றார் பெருநாவலரும். இதுகாலை நண்பு என்னுஞ் சொல் தன் உண்மைப் பொருளை யிழந்து நிலவுகிறது. திருவள்ளுவநாயனார் நட்பைப்பற்றி அருளிச் செய்த அதிகாரங்களை நோக்குக. நல்லாரிணக்கம் - நன்னட்பு. நன்னட்புடையோர் இறைவனுக்கு அடியராவர். அடியா ருறவும் அரண்பூசை நேசமும் * - ** எனப் பிறாண்டும் சுவாமிகள் அருளிச் செய்துள்ளார்கள். வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து, இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து என்பது திருவாசகம். இச்செய்யுளான் கொள்ளற்பாலன இவை யென்பதும், தள்ளற்பாலன இவை யென்பதுங் குறிப்பிட்ட வாறாம். உயிர்ச்சார்பு பொருட் சார்புகளையே பொருளாகக் கொண்டு அவைகள் மாட்டு இடையறாப் பற்றுவைப்போர் நல்லாரிணக்கம் முதலியவற்றைப் பெறுதலரிது. 5 பொல்லா தவனெறி நில்லா தவனையும் புலன்கடமை வெல்லாத வன்கல்வி கல்லாத வன்மெய் யடியவர்பாற் செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன் பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! (அடியேன்) கொடியவன்; சன்மார்க்கத்தில் ஒழுகாத வன்; பஞ்சேந்திரியங்களை ஜெயிக்காதவன்; ஞான நூல்களைப் படியாதவன்; உண்மை அடியவர்களிடஞ் சேராதவன்; மெய் பேசாதவன்; தேவரீர் திருவடிக்கு அன்பு இல்லாதவன். (இத்தகைய யான்) பூமியில் ஏன் உடல் தாங்கினேன்? (வி - ரை) மக்கட் பிறவியைத் தாங்கினோர் கடைப்பிடித் தொழுகவேண்டிய நெறிகளை எதிர்மறை முகத்தான் விளக்கிய வாறு காண்க. குலம் பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோலமாய், நலம் பொல்லேன் நான்பொல்லேன் ஞானியல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவேநின்ற விலங்கலேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன், இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என்செய்வான் தோன்றி னேன் ஏழையேனே - திருத்தாண்டகம். இதனால் பொல்லாதவன் இலக்கணங் கூறியவாறு காண்க. உண்மை சொல்லாதவன் திருவடிக் கன்பில்லாதவனாவன் என்றபடி. உண்மைக்கும் ஆண்டவன் திருவடி அன்புக்கும் உள்ள தொடர்பு கருதற்பாற்று. உண்மையில்லாதன் ஆண்டவன் திருவடிக்கு அன்பனாகான் என்பது குறிப்பு. உண்மையின் மாண்பு நோக்கியே ஆண்டவன் திருவடி அன்பிற்கு முன்னர் அதை அமைத்து ஓதினார் என்க. உண்மை யில்லாதவன் பொல்லாதவனாய், நன்னெறி நில்லாத வனாய், புலன்களை வெல்லாதவனாய், கல்வி கல்லாதவனாய், மெய்யடியவர்பால் செல்லாதவனாயிருப்பன் என்று சுவாமிகள் விளக்கியவாறு காண்க. 6 பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லைப் பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை யிடைநடுவிற் குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! உலகத்தில் பிறக்குங்காலத்தில் ஒரு பொருளுங் கொண்டு வந்ததில்லை; பிறந்து பிறகு இறக்குங் காலத்திலும் ஒன்றுங் கொண்டுபோவதில்லை. இடைக்காலத்தில் தோன்றும் பொருட்செல்வஞ் சிவபெருமானால் அளிக்கப்பெற்றதென்று உறுதிகொண்டு (இரப்பவர்கட்கு) கொடுக்கத் தெரியாமல் வாளா மாண்டுபோகுங் கீழ்மக்களுக்கு என்ன உரைப்பேன்?. (வி - ரை) பிறப்பு இறப்புக்கு இடையில் மக்கள் பெறும் பொருள் சிவனருளால் கொடுக்கப்படுவ தாதலான் குறிக்கு மிச் செல்வம் என்றார். எல்லாம் உன் உடைமையே என்றார் தாயுமானார். இப்பொன்னீ இம்மணிநீ என்றார் அப்பரும். அறிவுடையோர் பொருளை வறியோர்க் கீந்து பேறு பெறுவர். அல்லாதார் பொருளைப் பொருளாகக் கொண்டு இடர்ப் படுவர். செல்வத்துப் பயனே ஈதல் என்பது புறநானூறு. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது - ஊதியம் இல்லை உயிர்க்கு ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை, வைத் திழக்கும் வண்க ணவர் - திருக்குறள். பிறப்பு இறப்பு நினைவு தோன்றும் ஒருவனுக்கு இடை வாழ்வின் நிலையாமையும், அவ்வாழ்விலுறும் பொருளாராய்ச்சியும், அவ்வாராய்ச்சியால் அது சிவனுடைமை என்ற உணர்வும், அவ்வுணர்வால் கொடைக் குணமும் உண்டாகுமென்க. ஆகவே மக்கட்குப் பிறப்பிறப்பு நினைவு இடையறாது தோன்றல் வேண்டும். அந்நினைவு தோன்றப் பெறாதார் பொருளைப் பொருளாக்கொண்டு கொடையின்பந் தெரியாது விலங்கு வாழ்வை நடாத்தித் துன்புறுவரென்க. 7 அன்ன விசார மதுவே விசார மதுவொழிந்தால் சொன்ன விசாரந் தொலையா விசாரநற் றோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சுக் கென்னவி சாரம்வைத் தாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! (அடியேனுக்கு முதலில்) சோற்றுக் கவலையே பெருங்கவலையாகத் தோன்றுகிறது; அது நீங்கினால் பொருட்கவலை ஒழியாத கவலையாகிறது; அது கழிந்தால் அழகிய மயில்போன்ற சாயலுடைய மகளிரை நெருங்கிச் சேரவேண்டிய கவலை பலநாள் (துன்புறுத்துங்) கவலையாகிறது. இப்பாவி மனதிற்கு என்ன கவலையை உண்டாக்கிவிட்டாய்?. (வி - ரை) மனிதன் கலியுகத்தில் அன்னத்தால் உயிர் பெற்று விளங்குவன் என்பது சரித்திரம். இதனை உயிரானது முதலாம் யுகத்தில் என்பிலும், இரண்டாம் யுகத்தில் தசையிலும், மூன்றாம் யுகத்தில் இரத்தத்திலும், நாலாம் யுகத்தில் அன்னம் முதலிய வற்றிலுமிருக்கும் என்று பராசரமிருதி ஆசாரகாண்டம் யுகதர்ம பேதத்தில் கூறியவாற்றானுணர்க. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டற்பாலது அன்னமாகலான் முதற்கண் அன்ன விசாரம் என்றார். நல்வழியும் சேவித்துஞ் சென்றி ரந்துந் தெண்ணீர்க் கடல்நடந்தும், பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் போவிப்பம், பாழி னுடம்பை வயிற்றின் கொடுமைக்கா, நாழி அரிசிக்கே நாம் எனக் கூறுவது காண்க. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்றார் சாத்தனாரும். அன்னமும் பொருளும் இல்வழி பெண் விசாரமு மில்லை யென்பதை விளக்க வேண்டுவதில்லை. அன்ன விசாரக் கொடுமையை அதுவேவிசாரம் என்றும், சொர்ண விசாரத்தை தொலையாவிசாரம் என்றும், தோகையர் விசாரத்தை பலகால்விசாரம் என்றும் சுவாமிகள் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது. 8 கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங் கசிந்துருகி நில்லாப் பிழையு நினையாப் பிழையுநின் னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! (சிறியேன்) ஞானநூல்களைப் படியாத குற்றத்தையும், அவைகளைச் சிந்தியாத குற்றத்தையும், மனமிளகியுருகித் திருச்சந்நிதிமுன்னர் நில்லாத குற்றத்தையும், திருவடியைத் தியானஞ் செய்யாத குற்றத்தையும், தேவரீரது ஸ்ரீ பஞ்சாட் சரத்தைச் செபியாத குற்றத்தையும், தேவரீரைத் தோத்திரஞ் செய்யாத குற்றத்தையும், வணங்காத குற்றத்தையும், மற்றுமுள்ள எல்லாக் குற்றங்களையும் பொறுத்துத் திருவருள் செய்வாய். (வி-ரை) கல்லாப்பிழை முதலியன புத்திபூர்வமாக நிகழ்வன. மற்றெல்லாமென்றது அபுத்திபூர்வமாக நிகழ்வனவற்றை. ஞான நூல்களைப் பயிலாதிருத்தல் பிழை யென்றார். என்னை? கல்வி யில்லாதா ருளத்தில் கடவுள் வீற்றிரானாகலான். இதுபற்றியே ஞானசம்பந்தரும் கல்லார் நெஞ்சில் நில்லா னீசன் என்றருளிச் செய்தனர். ஞான நூல்களைக் கற்றபின்னர் அவைகளின் சாரங் களைச் சிந்திக்க வேண்டு மென்பார் கருதாப்பிழையும் என்றார். கல்வியினாலாய பயன் கடவுளை மறவாதேத்தல் என்பார் கசிந்துருகி . . . . bjhHh¥ãiHí«”v‹wh®., கற்ற தனாலாய பயனென்கொல் வாலறிவன் - நற்றாள் தொழாஅ ரெனின் என்றார் பெருநாவலரும். கசிந்துருகி நிற்றல் முதலியன அடியா ரிலக்கணங்களாம். நினைத்தல் - மனத் தொண்டு; சொல்லலுந் துதித்தலும் - வாக்குத்தொண்டு; தொழல் - காயத்தொண்டு; கசிந்துருகி நிற்றலும், அஃதுறாத போது ஆண்டவனைத் தியானித்தலும், அதற்குக் கேடு நேராதவாறு அஞ்செழுத் தோதலும், இம்மனத்தொண்டு ஆக்கம்பெறத் துதித்தலும்; இவ் வாக்குத் தொண்டும் முன்னைய தொண்டுகளும் இடையீடின்றி நிகழக் காயத்தொண்டாற் றொழுதலும் இன்றியமையாதன. எல்லாத் தொண்டுகளுக்கும் அடிப்படை காயத்தொண்டே. இதுபற்றி இறுதியில் அதை அருளினார் போலும்! 9 மாயநட் போரையு மாயா மலமெனு மாதரையும் வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்றுபின் றாதையைக் கூட்டிப்பின் றாயைமறந் தேயுமதே நிட்டை யென்றா னெழிற்கச்சி யேகம்பனே. (பொ-ரை) அழகிய திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! வஞ்சனையுடைய சினேகர்களையும், அழியாத மலமென்னும் பெண்களையுந் தன்னைவிட்டுக் கெட் டொழியத் துரத்தி (சர்வசங்க பரித்தியாகஞ் செய்து) துறந்து உண்மைத் திருவருளாகுந் தாயோடு தொடர்ந்து சென்று, பிறகு தந்தையாகிய சிவத்தைச் சேர்ந்து அதற்கு மேல் தாயை மறந்து பொருந்தியிருப்பதே நிஷ்டையென்று உபதேசித்தருளினான் (எனது குருநாதன்). (வி-ரை) மாயநட்போரென்றது தத்துவங்களை; சகலா வத்தையை. மாயாமலமென்பது சகசமலமென்னும் ஆணவ மலத்தை; கேவலாவத்தையை. ஆன்மா - இரு வினையொப்பு மல பரிபாகஞ் சத்திநிபாதம் பெற்றுச் சிவத்தோடு இரண்டறக்கலந்து ஒன்றியிருப்பதே நிஷ்டையென விளக்கியது காண்க. தாய் - திருவருள், தந்தை - சிவம்; மாயாமலம் - கெடாத மலம்; ஆணவம். திருவருட்பயன் பலரைப் புணர்ந்து மிருட்பாவைக் குண் டென்றும், கணவர்க்குந் தோன்றாத கற்பு என ஆணவத்தைப் பெண்ணிற்கு உருவகித்துக் கூறியிருத்தல் காண்க. ஆணவம் முத்தியிலும் வலிகுன்றிக் கிடத்தலின் அதை மாயா மலம் என்றார். திருவருட் டுணையின்றிச் சிவத்தைக் கூடலொண்ணாது என்பது சித்தாந்த நூற்றுணிபு, முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள், அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத், தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே - தேவாரம். தாயை மறக்கும்நிலை தந்தையாகிய சிவத்தோடு கூடியிருக்கும்நிலை. அதுவே அத்துவிதநிலை என்பது. சுவாமிகள் தாம் பாடிவரும் தலக் கடவுளை வழக்கம் போல முன்னிலைப் படுத்தியும் அவரைக் குருவாகக் கூறு மிடத்துப் படர்க்கைப் படுத்தியும் ஈண்டுக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. 10 வரிக்கோல வேல்விழி யாரநு ராக மயக்கிற்சென்று சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொலேன்றமி யேனுடலம் நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ எரிக்கோ விரையெதுக் கோவிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! செவ்வரி படர்ந்த அழகிய வேல் போன்ற கண்களையுடைய பெண்களினது காம மயக்கத்திற் சிக்கி அவர்களுடன் விளையாடும் பொருட்டு அவர்களைப் புகழ்ந் துரைப்பேன்; ஸ்ரீபஞ்சாட்சரத்தைச் செபியேன், (ஆனபடியால்) எளியேன் உடம்பு நரியினுக்கோ கழுகினுக்கோ பருந்தினுக்கோ கொடிய நாயினுக்கோ நெருப்பினுக்கோ மற்றெதனுக்கோ உணவாகும். (வி-ரை) அனுராகம் - காமம். ஓதுவேன் என்பதற்கு மதன நூல்களை யோதுவேன் எனக் கூறலுமொன்று. வேலங்காடு தடங்கண்ணார் வலையுட்பட்டுன் னெறிமறந்து, மாலங்காடி மறந்தொழிந்தேன் என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், அஞ்செழுத்தை யோதாது அணங்கைமா ரின்பத்தி லழுந்துவோர் சரீரசித்தி முதலியன பெறாது நாய்க்கும் நரிக்கும் இரையாவ ரென்பது. காமநினைவை அழிக்கவல்லது பஞ்சாட்சர ஜெப மாகலின், எழுத்தஞ்சுஞ் சொலேன் என்றார். காம வான்சுற வின்வாய்ப் பட்டு இனியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி, அஞ்செழுத் தின்புணை பிடித்துக் கிடக்கின்றேனை என்றார் மாணிக்கவாசகரும். 11 காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட தூதென்றெண் ணாமற் சுகமென்று நாடுமித் துர்ப்புத்தியை ஏதென் றெடுத்துரைப் பேனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! என் கண்முன்னே செவிகளென்றும் மூக்கென்றும் விழிகளென்றுங் காட்டித் தன்னை மாது என்று சொல்லிக்கொண்டுவரும் அவலட்சண வடிவை, யமன்விடுத்த தூது என்று எண்ணாமல் இன்பவடிவமென்று கருதி விரும்பும் இக்கெடுமதியை என்னென்று எடுத்துச் சொல்வேன்?. (வி-ரை) மாது - பெண்; மாயை - மாயாவடிவம், அது காமிகட்கு இலட்சணமாகவும் ஞானிகட்கு அவலட்சண மாகவுந் தோன்றும். பெண்களிடத்தின்ப மிருப்பதாகத் தோன்றுவது அறியாமையென்பார் துர்ப்புத்தியை என்றார். பெண்ணின்பத் திலேயே நிலைத்திருப்போர் யமலோகஞ் செல்வ ராகலானும், அதற்குக் கருவியாயிருப்போர் மாதராகலானும் அவர் மறலி விட்ட தூதெனப்பட்டார். காது, மூக்கு, கண் முதலியன காமக் கிளர்ச்சிக்குக் கருவியாக நிற்றலின் அவைகளை வெறுத்துக் காதென்று மூக்கென்று கண்ணென்று கூறினார். 12 ஊருஞ் சதமல்ல வுற்றார் சதமல்ல வுற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! (வசிக்கின்ற) ஊரும் நித்தியமன்று; (வினையால் நேர்ந்த) பந்துக்களும் நித்தியமன்று; தவங்கிடந்து ஈன்ற தாய் தந்தையர் களும் நித்தியமல்லர்; மனைவியரும் நித்தியமல்லர்; புத்திரர்களும் புகழும் நித்தியமல்ல; பொருளும் நித்தியமன்று; இவ்வுலகத்திலே எவரும் நித்தியமல்லர். தேவரீர் திருவடிகளே நித்தியமாம். (வி-ரை) உற்று பெற்றபேர் - தாய் தந்தையார். இச்செய்யுள் பலவகை நிலையாமைகளைக் கூறுகிறது. ஊர் முதலிய பொருட் சார்பும் உற்றார் முதலிய உயிர்ச்சார்பும் மாயாகாரியங் களாகலான் அவை தோன்றிநின் றழிவனவாகும். அவைகளைப் பொருளாகக் கொள்வோரும் அவைகளைப் போலத்தோற்ற நிலையொடுக்கங்களை யடைவரென்க. இறைவன் தோற்ற ஒடுக்கங்களில்லாதவன். அவனடியைப் பொருளாக் கொள்வோர் அவனைப் போலப் பிறப்பிறப்புத் துன்பங்களையுறாரென்க. 13 சீறும் வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு கூறு முலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினாற் பீறு மலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட் டேறுங் கரைகண்டி லேனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! சிறுமை பயக்கும் வினையே பெண் வடிவந் தாங்கித் திரண்டு குவிந்து இரண்டாகப் பிரிவுபட்ட கொங்கை களையும், மாமிசத்தையும் உடையதாகித் தன் கொடுஞ் செய்கை யால் கிழித்துக் கழியும் மலத்தையும் இரத்தத்தையுஞ் சொரியும். அத்தகைய பெருங்குழிவிட்டு வெளியேறுங் கரை காண்கிலேன். (வி-ரை) வினையது என்பதிலுள்ள ஏகாரந் தொக்கது. சீறும் - சிறுமைசெய்யும்; வருத்தும் எனினுமாம். கூறு-பிரிவு; கூறும் - புகழும் ஆம். பீறு - குமுதமுமாம் (பீறு-துவாரம்) சாயும் என்பதை யெச்சமாக்கிப் பெருங்குழி யென்னுஞ் சொல்லோடு கூட்டிப் பொருளுரைத்தலுமொன்று. சிறு குழியைப் பெருங்குழி யென்றது அதன் கொடுமையை நோக்கியென்க. கரையென்றது திருவருளை. மண்ணுலகிலுள்ள வரம்பில் பெரும்பவத்தைப், பெண்ணுருவாகப்பிரான் படைத்தனனால், அண்ணல் அஃதுணர்தி அன்னவரைச் சிந்தைதனில், எண்ணவரும் பாவம் எழுமையிலு நீக்குவதோ - கந்தபுராணம். 14 பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந் தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில் இருளறு சொல்லினுங் காணத் தகுங்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! பொருட்செல்வ முடையோர்களை அவர்களுடைய கொடையினாலும், வீரர்களை யுத்தகளத்தினும், தெளிந்த அறிவுடையோர்களை அவர்களது முகத்தினாலும் ஆராய்ந்து அறிந்துகொள்வதுபோலத் திருவருட் செல்வமுடையோர்களை அவர்களது தவத்தினாலும் குணத்தினாலும் கிருபையினாலும் அன்பினாலும் மயக்கத்தைக் கெடுக்கும் மொழியினாலுங் காணக்கூடும். (வி-ரை) பொருளிருந்துங் கொடைச்செய லில்லாதார் பொருளுடையோராகார். அதுபற்றியே பொருளுடையோரைச் செயலிலு மென்றார். பிறவும் அங்ஙனே, தெருளுடையோரை முகத்தினும் என்பதனை அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங் - கடுத்தது காட்டு முகம் என வரூஉந் திருக்குறளா னுணர்க. திருவருட் செல்வங் கைவந்தோர் என்றுந் தவத்திற் கருத்துடையரா யிருப்பர்; சாந்த குணத்திலேயே நிலைத்திருப்பர்; உயிர்களிடத்து இரக்கமுடையவரா யிருப்பர்; அவ்விரக்கத்திற்குக் காரணமான அன்பு சொரூபமாயிருப்பர்; அவர்கள் மொழி கேட்போரது அஞ்ஞானத்தை யழிக்குஞ் சிவமொழியாகும். வீணாக உரையாடார் என்றபடி) ஈண்டு அருளுடையோர் இலக்கணத்தை அருளிச்செய்தற்குக் காரண மென்னையெனில், உலகத்தார், போலியாக அருள்பெற்றோமென வெளிவந்து வஞ்சிக்கும் மருளர்கள் மாயவலையில் வீழ்ந்து இடருறாதபடி அவரைத் தடுத்தாட்கொள்ளவென்க. 15 பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத்தங்கள் துருத்திக் கறுசுவை போடுகின் றார்துறந் தோர்தமக்கு வருத்தி யமுதிட மாட்டா ரவரையிம் மாநிலத்தில் இருத்திக் கொண்டே னிருந்தாயிறை வாகச்சி யேகம்பனே, (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! பஞ்சுமூட்டையைப் போல வயிறு பருக்கின் றதற்கு ஏதுவாக உள்ள துருத்தியில் அறுசுவை யுண்டியினை நிரப்பியடைக்கின்றார்கள்; துறந்தவர்களை வரவழைத்து அன்ன மிடமாட்டார்கள். அவர்களை இப்பரந்த உலகத்தில் ஏன் வைத்துக்கொண்டிருக்கின்றாய்? (வி-ரை) துருத்தி - தீனிப்பை. அறுசுவை - கைப்பு, புளிப்பு, தித்திப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. துறவறத்தாரைக் கவனியாது உண்டு களிக்கும் இல்லறத்தார் விலங்கினுங் கொடிய ராகலான் அவரை துருத்தி போடுகின்றார் என்னும் இழிசொற் களால் குறிப்பிட்டார். இல்லறந் துறவற நிமித்தமாகவே நடத்தப்படும் அறமென்பது சாத்திரக்கொள்கை. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறத்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை என்றார் தெய்வப் புலவரும். துறவொழுக்கத்தாரை வரவழைத்தாவது அவர்களிடஞ் சென்றாவது அன்னம் இட வேண்டுவது இல்லறத்தார் கடமை. விரிப்பிற் பெருகும்; அற நூல்களிற் காண்க. இருந்தாய் - காலவழுவமைதி. 16 பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக் கல்லா யிருந்திடு மாறொக்கு மேயறி வோருளத்தில் வல்லா ரறிவா ரறியார் தமக்கு மயக்கங்கண்டாய் எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி யேகம்பனே. (பொ - ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளி யுள்ள ஏகாம்பரநாதனே! ஞானிகள் (அகக்கண்ணாற் காணும்) வல்லமை யுடையவராகலான் உள்ளத்தில் (சிவ சூரிய வொளியை) அறிவாற் காண்பார்கள். அஞ்ஞானிகளுக்கு (அகக்கண் திறக்கப் படாமையான் அவர்கள் உள்ளத்துள்ள சிவ சூரிய வொளி தோன்றாது) மயக்கமுண்டாகும். இது கொடிய இருளை விலக்குஞ் சூரியவொளி கோட்டான் என்னும் பறவையினது கண்ணுக்கு இருளாக இருக்குந் தன்மை போன்றது. (ஆகையால் இவை) எல்லாம் கண் மயக்கமேயாம். (வி-ரை) கூகை - கோட்டான். இப்பறவைக்குப் பகல் இருளாகத் தோன்றும். அதுபோல அஞ்ஞானிகளுக்கு எங்கும் நிறைந்த சிவவொளி புலனாகாது. ஊமன்கண் போல வொளியு மிகவிருளே, வாமன்கண் காணா தவை என்றார் உமாபதி சிவாசாரியார். மக்களுக்கு இருவகைக் கண்களிருக்கின்றன. ஒன்று அகக்கண்; மற்றொன்று புறக்கண். இவை முறையே ஞானக்கண் ஊனக்கண் எனவும்படும். புறக்கண்ணுக்குச் சிவந் தோன்றாது. அகக்கண்ணிற்கு மாயை தோன்றாது. சிவமெனும் பொருள் போக்கு வரவில்லாதது; அதற்குத் தோற்றமுமில்லை; மறைவு மில்லை; என்றும் ஒரு பெற்றித்தாயிருப்பது. அது தோன்றுவது போலவும் மறைவது போலவும் நிகழ்வது கண்மயக்கால் என்க. இதுபற்றியே சுவாமிகள் எல்லாம் விழிமயக்கே என்றார்கள். முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள், அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் - திருமந்திரம். ஊனக் கண்பாசம் ஊணராப்பதியை, ஞானக் கண்ணி னிற்சிந்தைநாடி - சிவஞானபோதம். 17 வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார் வழக்குரைப்பார் தீதுக் குதவியுஞ் செய்திடு வார்தினந் தேடியொன்று மாதுக் களந்து மயக்கிடு வார்விதி மாளுமட்டும் ஏதுக் கிவர்பிறந் தாரிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியிலெழுந் தருளியுள்ள ஏகாம்பரநாதனே! வாழ்நாள் முழுவதும் வாத தருக்கத்துக்கும் போருக்கும் போவார்கள்; வருவார்கள்; வழக்குத் தொடுப் பார்கள்; தீமையான காரியங்களுக்கு உதவியுஞ் செய்வார்கள்; நாடோறும் பொருளை அலைந்து தேடிப் பெண்ணுக்குக் கொடுத்து மயங்குவார்கள். இவர்கள் இவ் வுலகத்தில் எற்றுக்குப் பிறந்தார்கள்? (வி-ரை) இறைவனைப் போற்றாது வாளா காலங் கழிப்போர் பிறந்தும் பிறவாதாராகலான் ஏதுக்கு இவர் பிறந்தார் என்றார். புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்பது அப்பர் திருவாக்கு. 18 ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்ப ருற்றுபெற்ற தாயாரை வைவர் சதியா யிரஞ்செய்வர் சாத்திரங்கள் ஆயார் பிறர்க்குப காரஞ்செய் யார்தமை யண்டினர்க்கொன் றீயா ரிருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! ஓயாமல் பொய்பேசுவார்கள்; நல்லவர்களைக் குறைகூறுவார்கள்; தவஞ்செய்து பெற்ற தாயாரைத் திட்டு வார்கள்; வஞ்சனைகள் பல செய்வார்கள்; ஞான நூல்களை ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்; மற்றவர்கட்கு உபகாரஞ் செய்யமாட்டார்கள்; தங்களை அடைந்தவர்கட்கு ஒன்றுங் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகில் இருந்தாலென்ன போனாலென்ன? (வி-ரை) பொய்யரிடத்தில் எல்லாத் துர்க்குணங்களும் பொருந்தியிருக்கும். பொய்யாமை யென்னும் ஓர் அறத்தைக் கடைப்பிடிப்போர் எல்லா அறங்களையும் கடைபிடித்தொழு குவோராவர். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற; செய்யாமை செய்யாமை நன்று - திருவள்ளுவர். முன்பாட்டும் இஃதும் ஒரு கருத்தனவேயாம். 19 அப்பென்றும் பெண்மைய தாயினு மாங்கந் நிலத்தியல்பாய்த் தப்பின்றி யேகுண வேற்றுமை தான்பல சார்தலினாற் செப்பில பக்குவம் பக்குவ மாயுள்ள சீவனிலும் இப்படி யேநிற்ப னெந்தை பிரான்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! ஜலமானது எப்பொழுதுஞ் சுத்த பொருளாயிருப் பினும் எந்நிலத்தில் பொருந்துகிறதோ அந்நிலத்தின் சுபாவத் தால் தவறுதலில்லாமல் இயல்பு மாறுபாடுகள் பல பொருந்து தல்போல ஆராய்ந்தறியுங்கால் பக்குவம் அபக்குவமென்னும் வேற்றுமையுள்ள ஆன்மாக்களிடத்திலும் மேற்சொல்லியவாறே எந்தை பெருமான் வீற்றிருந்தருளுவன். (வி-ரை) வெண்மை - பரிசுத்தம், பக்குவம் - அபக்குவமென மாற்றிப் பொருளுரைக்க. எந்தை - எம் தந்தை. ஏகம்பனே என்பதைப் படர்க்கையாகக் கொண்டு ஏகாரத்தை அசையாக் கோடலுமொன்று. சிவம் எங்கணும் நீக்கமற நிறைந்திலங்கும் பொருளாகலான் அஃது ஆன்மாக்களின் அறிவிற்கேற்றவாறு தோன்றி விளங்குமென்பது கருத்து. கண்ணிற் சிறிதுங் குற்ற மில்லாதானுக்கு விளக்கமாகத் தோன்றும் பொருள் கண்ணிற் சிறிது குற்றமுடையானுக்குச் சிறிது மங்கலாகத் தோன்றும். குற்றங் கண்ணிடத்தன்றிப் பொருளிடத் தன்றென்பதை யோர்க. வெண்மை - நிறமெனக் கூறுவோருமுளர். நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகு மாந்தற்கு, இனத்தியல்ப தாகும் அறிவு என்னுங் குறட்பாவையுங் கவனிக்க. 20 நாயாய்ப் பிறந்திடி னல்வேட்டை யாடி நயம்புரியுந் தாயார் வயிற்றி னரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய் காயா மரமும் வறளாங் குளமுங்கல் லாவுமென்ன ஈயா மனிதரை யேன்படைத் தாய்கச்சி யேகம்பனே. (பொ - ரை) திருக்காஞ்சியிலெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! (உயிர்) நாயுடல் தாங்கினாலும் நல்ல வேட்டையாடி (தன்னை வளர்த்தவனுக்கு ஏதாவது) பயனைக் கொடுக்கும். தாயார் வயிற்றில் மக்களாய்த் தோன்றிப் பிறகு செல்வமுள்ளவர் களாகி, காயாத மரமும் நீர்வறண்ட குளமும் கற்பசுவும்போல (ஒருவருக்கும் ஒன்றுங்) கொடாத மனிதர்களை ஏன் சிருஷ்டி செய்தாய்? (வி-ரை) தாய் தமக்கையென்னும் பகுத்தறிவில்லா நாயாகிலும் ஒரு பயனை விளைக்கக்கூடியதாயிருக்கிறது; தாய் தமக்கையென்று பகுத்தறியக்கூடிய மக்களாய்ப் பிறந்தும் என்ன பயன் என்பார் தாயார் வயிற்றில் என்றார். காயாத மரம் நீரில்லாக்குளம் கல்லாற் செய்யப்பட்ட பசு இவைகளினால் என்ன பயன் உண்டு? அதுபோல ஈகையில்லாச் செல்வர்களால் என்ன பயன் என்றவாறு. ஈயாமனிதர் - நாயினுந் தாழ்ந்தவர் என்க. 21 ஆற்றிற் கரைத்த புளியாக் கிடாமலென் னன்பையெல்லாம் போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக் கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய் குன்ற வில்லுடையாய் ஏற்றுக் கொடியுடை யாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) ஐயனே! திரிபுரதகனஞ் செய்து யமனை அடிமை கொண்ட திருவடிகளை யுடையவனே! மேரு கிரியை வில்லாக உடையவனே! இடபக் கொடியை யுடையவனே! இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! என்னுடைய அன்பையெல்லாம் ஆற்றிற் கரைத்த புளியாக்கிவிடாமற் பாதுகாத்து அடியேன்மீது திருவுளஞ் செலுத்தியருள்க. (வி-ரை) சிவபெருமான் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்பர், சண்டேசர் முதலியோர் அன்பை யேற்று அருள் செய்தவர். அவர் தம் அன்பிற்குத் தம்மன்பு ஈடா காதெனக் கருதி அதனை யேற்றருள் செய்ய வேண்டினரென்பது. புரமூன் றெரித்ததும், கூற்றைப் பணி கொண்டதும், குன்றவில் தாங்கினதும் அன்பர்கள் பொருட்டல்லவோ? அக்குணமுடைய ஆண்டவனே! எனது அன்பிற்கும் இரங்கியருள்க என்றபடி. 22 பெண்ணாகி வந்தொரு மாயா பிசாசம் பிடித்திட்டென்னைக் கண்ணால் வெருட்டி முலையான் மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க எண்ணா துனைமறந் தேனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! மாயையாகிய ஒரு பேய் பெண்ணுருவாக வந்து என்னைப் பற்றித் தன் கண்களால் பயமுறுத்தி முலைகளால் மயங்கச் செய்து, அல்குலிடத்ததாகிய புண்ணென்னுங் குழியில் வீழ்த்தி, எனது அறிவென்னும் பொருளைக் கொள்ளை கொள்ள, அடியேன் தேவரீரைக் கருதாது மறந்து நின்றேன். (வி-ரை) பெண்ணுறுப்புக்களில் முலையே ஆடவர்களை மயக்கிக் காமுறச்செய்வது. கடிதடம் - நிதம்பம்; அல்குல். ஆன்ம இலக்கணம் சார்ந்ததன் வண்ணமாய் நிற்றல். ஆன்ம அறிவு பெண்ணின்பத்திற்றேயுங் காலத்து அஃது அவ்வின்பமயமாகவே விளங்கும்; அதுகாலைச் சிவத்தைச் சார்ந்து நில்லாது என்க. மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையிற் பட்டுக், கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன் என்றார் அப்பர் சுவாமிகளும். 23 நாவார வேண்டும் விதஞ்சொல்லு வாருனை நான்பிரிந்தால் சாவேனென் றேயிருந் தொக்கவுண் பார்கள்கை தான்வறண்டால் போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையருக் கீவார் தலைவிதி யோவிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! (செல்வமுள்ள காலத்தில்) வாய்நிரம்ப வேண்டிய பிரிய வசனங்களைச் சொல்லுவார்கள்; நான் உன்னைப் பிரிந்தால் இறந்துவிடுவேன் என்று உடனிருந்து சாப்பிடுவார்கள். செல்வம் வற்றிப்போனால் போய் வாருங்கள் என்று நடுத்தலை பார்த்துக் குட்டியனுப்பும் விலைமகளிருக்கு (வீணாகப் பொருளைக்) கொடுக்கின்றார்கள். அஃது அவர்கள் தலையெழுத்தோ? (வி-ரை) வேண்டும் - விரும்பும். கைவறண்டு போதல் - பொருள்வற்றிப்போதல்; விளக்கொளியும் வேசையர் நட்பு மிரண்டுந், துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியு, நெய்யற்ற கண்ணே யறுமே அவரன்புங், கையற்ற கண்ணே யறும் - நாலடியார். 24 கல்லார் சிவகதை நல்லோர் தமக்குக் கனவிலுமெய் சொல்லார் பசித்தவர்க் கன்னங்கொ டார்குரு சொன்னபடி நில்லா ரறத்தை நினையார்நின் னாம நினைவிற்சற்றும் இல்லா ரிருந்தென் னிறந்தென் புகல்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! சிவசரிதங்களைப் படியார்; நல்லவர்களிடத்திலும் சொப்பனத்திலும் உண்மை பேசார்; பசித்தவர்க்குச் சோறிடார்; குரு உபதேசித்தபடி ஒழுகார்; தருமத்தைச் சிந்தியார்; தேவரீர் திருநாமத்தைச் சிறிதும் எண்ணத்திற் கொள்ளார். இவர்கள் உலகத்தில் இருந்தென்ன இறந்தென்ன சொல்க. (வி-ரை) மக்கள் பிறவி யெடுத்தோர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் சிவகதை கற்றல் முதலியன. நல்லோ ரிடத்தில் சொப்பனத்திலும் மெய்பேசாரெனின் தீயோரிடத்தில் சாக்கிரதையில் எத்தகைப்பொய் பேசுவாரென்பது ஊகிக்கத் தக்கது. 25 வானமு தத்தின் சுவையறி யாதவர் வண்கனியின் தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க் கீனமு தச்சுவை நன்றல்ல வோகச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம் பரநாதனே! தேவாமிர்தத்தின் சுவையை யுணராதவர்கள், வளமுடைய பழத்தின் இரசத்தினது சுவையை விரும்புதல் போலத் தனித்தனியாகத் தேனினதும் அமுதத்தினதும் இனிமை யிலும் தெளிவாய ஞானமிர்தச்சுவை சிறிதும் அனுபவி யாதவர்க்கு (பிரவிர்த்தி விடயமாகிய) குறைபாடுடைய அமுதச் சுவை இனிமையாகத் தோன்றுமல்லவோ? (வி-ரை) தேவாமிர்தம் உண்போர் நரை, திரை, மூப்பு எய்தப்பெறார். ஈனமுதச்சுவை - உலகவிடயம். தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேனுண்ணாதே, நினைத்தொறுங் காண் டொறும் பேசுந்தொறும் எப்போதும், அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங், குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பி - திருவாசகம். கனியினுங் கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க்குழல் பாவைநல் லாரினும், தனிமுடி கவித்தாளு மரசினும், இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே - தேவாரம். 26 ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த பீற்றற் றுருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே ஏற்றுத் திரிந்துவிட் டேனிறை வாகச்கி யேசும்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! நாற்றம் பிடித்த அழுக்கு உடலை; பொய் முதலிய நிரம்பிய ஒதுக்கிடத்தை; மாமிசம் நிறைந்த (ஒன்பது) துவாரமுள்ள துருத்தியை; அன்னமிட்டடைக்குந் தோற்பையை; சொல்லொணாத காற்றினால் நிறையப்பெற்ற நிலையில்லாத பாத்திரத்தைப் பெரிதும் விரும்பியே சுமந்து அலைந்தேன். (வி-ரை) தேகத்தின் சிறுமை தெரியாது அதனைப் போற்றி வளர்த்தேன் என்றபடி துச்சிலொதுக்கிடம் என்றார் பிறாண்டும். ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொரு ளிலாத மாயம் என்றார் வன்றொண்டரும். 27 சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ் செய்த பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டுந் தீங்குக ளாயவுமற் றெல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! வார்த்தையினால் நேரும் பிழைகள்; எண்ணத்தினால் உண்டாகுங் குற்றங்கள்; காயத்தால் செய்த தீத்தொழில்கள்; கண்ணினால் விளையுந் தீமைகள்; தருமநூல் அல்லாத பிற நூல்களைக் கேட்டலினால் வருங்கொடுமைகள் முதலிய பிற குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்து (அடியேனுக்கு) திருவருள் செய்வாய். (வி-ரை) மனம் வாக்கு காயங்களால் நிகழ்த்தப்படுங் குற்றங்கள் குறிக்கப்பட்டன. இவைகட்கு முறையே அரச தண்டனை யமதண்டனை பிரமதண்டனை நேரும் எனப் புராணங்கள் சொல்லுகின்றன. மனந்தூயராய் வாழ்வோர் எவ்வித குற்றத்திற்கும் ஆளாகார்; எவ்வித தண்டனைக்கும் ஆளாகார்; ஆண்டவனுக்கு ஆளாவர். 28 முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற் கூட்டி முகமினுக்கி மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப் பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல் இட்டத்தை நீதவிர்ப் பாயிறை வாசச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! கெடுதலில்லாத மஞ்சளை எண்ணெயிற் குழைத்து முகத்திற்பூசி மினுக்கி, மோதிர மணிந்து, பொட்டு இட்டு, பித்தளையாற் செய்யப்பெற்ற காதணியைத் துலக்கித் தரித்து, பட்டப்பகலிலேயே வெளிமயக்கஞ் செய்யும் பெண்கள் மீது (எனக்கு உண்டாகும்) விருப்பத்தைப்போக்கி அருள்வாய். (வி-ரை) முட்டற்றமஞ்சள் - பதஞ்செய்த மஞ்சள்; பூசு மஞ்சள். மகளிர்(கள்) மஞ்சளை எண்ணெயிற் குழைத்து முகத்திற் பூசிக்கொள்ளுவது தங்கள் முகங்களிலுள்ள குற்றம் திரை முதலியன மறையுமாறென்க. இங்ஙனஞ் செய்வது பண்டைக் காலப் பொதுமகளிர் செயல். இக்காலப் பொது மகளிர் மஞ்சளைக் கரத்தாலுந் தீண்டுவதில்லை. ஈண்டுக் கூறியவாற்றால் மஞ்சள் பூச்சு பொதுவாக எல்லா மகளிர்களுக்கும் உண்டு. குலமகளிர் நாயகனுக்குப் பொருட்செல்வமும் வாழ்நாளும் பெருக மஞ்சள் பூசுவர். விலைமகளிர் பொருட்பறிக்க மஞ்சளைப் பூசுவர். பெண்கள் தேகத்தில் கண்ணுக்குப் புலப்படா சிறு கிருமிகளும் வியர்வையும் அடிக்கடி புறப்பட்டுக்கொண்டே யிருக்கும். அவைகளை யொழிக்கும் பொருட்டு அவர்கள் மஞ்சள் பூசுவார்கள். அக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் மஞ்சளுக் குண்டு. மஞ்சள் பூசாத பெண்கள்மேல் கிருமிகளும் அழுக்குந் திரண்டு திரண்டு நெளியும். அவை அவர்களோடு அணையும் ஆடவர்களைப் பற்றிக்கொள்ளும். அதனால் அவர்கள் நோய்வாய்ப் படுவார்கள். இதுகாலைக் குலமகளிர்களும் மஞ்சள் பூசுதலை விலக்கி வருவது இரங்கத்தக்கது. பித்தளை யோலையை விளக்குவது பித்தளையால் செய்யப் பட்ட அணிகலன்களைத் துலக்கிப் பார்ப்போர் பொன்னணி யென, இரவில் மயங்கும் பொருட்டென்க. ஈண்டு பட்டப்பகலில் என்றமையால் பொது மகளிர்களின் சாமர்த்தியத்தையும் காமுகர்களின் பேதைமை யையும் நன்கு விளக்கியவாறாம். இட்டத்தை நீ தவிர்ப்பாய் என்பதைப்பற்றி முன்னர் எழுதப் பட்டிருக்கிறது. 29 பிறந்துமண் மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்துசிற் றின்பத்தின் மேன்மய லாகிப்புன் மாதருக்குட் பறந்துழன் றேதடு மாறிப்பொன் றேடியப் பாவையர்க்கீந் திறந்திட வோபணித் தாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! இம்மண்ணுலகில் தோன்றி நோயே குடி கொள்ளப் பெற்றுப் பேரின்பத்தை மறந்து, சிற்றின்பத்தின்மீது விருப்பங்கொண்டு, புல்லிய பெண்கள் கூட்டத்தில் நுழைந்து, அலைந்து, தடுமாறிப் பொருள்தேடி, அப்பெண்களுக்கே கொடுத்துச் செத்துப் போகவோ (மனிதரைச்) சிருஷ்டி செய்தாய்? (வி-ரை) இவ்வுலகில் பிறத்தல் பிறவியை யொழித்தற் பொருட்டென்பது நூற்கொள்கை. உடலில் அடிக்கடி நோய் தோன்றுவது பேரின்ப நினைப்பை யூட்டற்கேயாகும். அங்ஙனம் நோய் கண்டு வருந்தியும் சிற்றின்பத்தில் நாட்டங் கொள்வது அறியாமையாம். இதுபற்றியே பிணியே குடி கொண்டு என்றார். மாதர் - விலைமாதர். இறந்திடவோ பணித்தாய் என்றமையால் இறவா வழிதேடுவதே மக்கள் கடமையென்பது பெறப்படுகிறது. யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் எனத் திருவாசகமும் இப்பிறவி நீக்கி யினியொரு காயத்திற், புக்குப் பிறவாது போம்வழி தேடுமின் எனத் திருமந்திரமுங் கூறுதல் காண்க. 30 பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப் பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக் காதங் கரணங் களுமற்ற வானந்தக் காட்சியிலே ஏதங் களைந்திருப் பேனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! ஐம்பூதங்கள் நீக்கி, ஐம்பொறியடங்கி, அவை களிற் பொருந்திட ஐம்புலன்களும் அகன்று, வேற்றுமைப்படும் முக்குணம் அழிந்து, பேராசை யறுந்து, சகல கேவல அவத்தை யொழிந்து, வஞ்சிக்கும் அந்தக்கரணங்கள் நான்கும் ஒடுங்கிய முடிவில் தோன்றுஞ் சிவானந்தத் தோற்றத்தில் யான் என்னும் முனைப்பை அழித்துச் சிவமாய் விளங்குவேன். (வி-ரை) பின்முன் என்பதற்கு முறையே ஆகாமிய பிராரத்த கர்மங்களென்று கொள்வதுமொன்று. ஆகாமியம் ஏறாதவாறு பிராரத்த வினையை நுகர்ந்துவரும் ஒருவனது சஞ்சிதம் நசிக்குமென்க. தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள், முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள், சென்னியில் வைத்த சிவனரு ளாலே என்றார் திருமூலரும். ஐம்பூதம் ஐம்பொறி ஐம்புலன் முக்குணம் ஆகிய இவைகளின் வழி ஆசையும், ஆசைவழி கர்மமும் நிகழலானும் எல்லாவற்றிற்குங் காரணமாகக் கரணங்கள் நிற்றலானும், பூதங் . . . . . கரணங்களுமற்ற என்றார். ஆனந்தக் காட்சியில் ஏதமின்மை ஈண்டுச் சுட்டிக் காட்டப்பட்டது. ஐம்பூதம் - மண், புனல், தீ, காற்று, வெளி. ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம் புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். முக்குணம் - இராஜதம், தாமதம், சாத்விகம். அந்தக்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பூதம், பொறி முதலிய யாவுந் தத்துவங்களாம். இவைகளைக் களைந்து செல்லும் ஆன்மா தத்துவாதீதமாய் ஒளிருஞ் சிவானந்தத்தில் அழுந்தும். அது காலை சீவபோதங் குன்றும். ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில், கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் - திருமந்திரம். வான்கெட்டு மாருதமாய்ந் தழல்சீர்மண் கெடினுந், தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு, ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும்போய், நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ - திருவாசகம். 31 நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப் பொல்லா வெனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ் சொல்லார் நற்கோயி னியமம் பலவகைத் தோத்திரமும் எல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே. (பொ-ரை) நல்ல தாய்போன்றவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! அடியேன் செய்ய வேண்டிய விண்ணப்பம் ஒன்றுளது. அதுகேட்டுக் கொடுத் தருளவேண்டும். (அது வருமாறு) ஞானமில்லாதவனும் பொல்லாதவனும் ஆகிய அடியேனைத் தேவரீர் கொல்லும் பொழுது, சிறந்த சிவபூசை பஞ்சாட்சர செபம் பாடல்பெற்ற நல்ல ஆலயவழிபாடு பலவகைத் துதிகள் அகிய இவை யெல்லாம் (அடியேனால் செய்யப்பெற்று) முடிந்த பின்னரே கொல்லல்வேண்டும். (வி-ரை) சிவபூசை முதலியன செய்தோர் கொல்லப் பெறார்; கொல்லப்பெறினும் மறுபிறப்பில் மனிதராகவே பிறந்து ஞானம் பெறுவர். சிவபூசை முதலியன செய்யாது இறப்போர் மறுபிறப்பில் பகுத்தறிவுடைய மக்களாய்ப் பிறத்தல் அரிது. இதுபற்றியே எப்பிறவியிலுஞ் சிவத்தியானஞ் செய்ய வேண்டு மெனப் பெரியோர் பணித்துள்ளார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி யென்மனத்தே, வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் என்றார் அப்பரும். இதனால் முற்றத் துறந்த முனிவரரும் சிவபூசை முதலியன செய்யுங் கடப்பாடு டையார் என்பது பெறப்படுகின்றது. சிவ பூசை முதலியன மனம் வாக்கு காயங்ளை மாயா காரியங்களிற் செலுத்தாது காப்பன. சிவபூசை முதலியன முற்றுறா முன்னர் நான் கொல்லப்பட்டால் எக்கதியடைவேனோ; அவை முடியப்பெற்ற பின்னர் எனது உடலை உயிரினின்றும் பிரிப்பாயாக என்று ஆண்டவனை நோக்கி வேண்டுதல் செய்யுமாறு காண்க. சிவபூசை முதலியன முற்றுப்பெறுவதற்குகள் மரணம் நேர்ந்தால் ஆன்மா எப்பிறவி தாங்குமோ என்ற அச்சத்தைக் குறிப்பித்த வாறாம். 32 சடக்கடத் துக்கிரை தேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று விடக்கடித் துக்கொண் டிறுமாந் திருந்து மிகமெலிந்து படக்கடித் தின்றுழல் வார்க டமைக்கரம் பற்றிநமன் இடக்கடிக் கும்பொழு தேதுசெய் வார்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! சடமயமான தேகத்துக்கு ஆகாரந்தேடிப் பல வுயிர் களை வதைத்து, அவைகளின் மாமிசங்களை அதுக்கிக் கொண்டு செருக்கி, மிக மிருதுவாகும்படி கடித்துத் தின்று திரியும் மாக்களை யமன் கைப்பற்றி முரட்டுத்தனமாகத் தண்டிக்குங் காலத்தில் (அவர்கள்) என்ன செய்வார்கள், (பாவம்). (வி-ரை) விடக்கு - மாமிசம். அடித்துக்கொள்ளல் - அதுக்கிக்கொள்ளல்; இழிவுகுறித்தவாறு. உயிர்களைக்கொன்று அவைகளின் ஊனை உண்போரை யமன் சிறிது மிரக்கமின்றித் தண்டிப்பன். இதனை கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை, வல்லிடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச், செலவிடு நிலலென்று தீவாய் நரகிடை, நில்லிடுமென்று நிறுத்துவர் தாமே பொல்லாப் புலாலை நுகரும் புலையரை, எல்லாருங் காண இயமன்றன் தூதுவர், சொல்லாகப் பற்றிய தீவாய் நரகத்தின், மல்லாக்கத் தள்ளி மறித்துவைப்பாரே என வரூஉந் திருமந்திரத்தா னுணர்க. மனிதனைப் படைத்த கடவுளே விலங்கு முதலியவற்றைப் படைத்தார்; மனிதன் விலங்கு முதலியவற்றைக் காரணமின்றித் தன் நலங்கருதிக் கொன்று தின்பது நியதிக்கு மாறுபாடாகும். நியதிக்கு மாறாகச் செய்யும் ஒருவனது வினையே அவனைப் பின்னர் இடர்ப்படுத்துமென்க. ஒருவனுக்கு நல்லன செய்வதும் அல்லன செய்வதும் அவன் வினையேயாகும். இறுமாந்து உழல்வார் என்ற குறிப்பு மனிதனது அறியாமையையும் சுய நலத்தையுங் காட்டுவது. விலங்கு முதலியவற்றைக் கொன்றால் கேட்பார் எவருமில்லை என்னும் அறியாமையைப் போக்க விசாரித்துத் தண்டிக்க யமன் இருக்கிறான் என்று அறிவுறுத்திய வாறாம். உயிர்களைப் படைக்கும் ஆற்றலில்லாத மனிதன் அவை களை அழிக்கும் உரிமை ஏற்பது அறமா என்பது கவனிக்கத் தக்கது. 33 நாறு முடலை நரிப்பொதி சோற்றினை நான்றினமுஞ் சோறுங் கறியு நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தங் கூறு மலமு மிரத்தமுஞ் சேருங் குழியில்விழா தேறும் படியருள் வாயிறை வாகச்சி யேம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளி யுள்ள ஏகாம்பரநாதனே! தீநாற்றம் வீசும் உடம்பை, நரிகளுக்குப் பொதி சோறாயுள்ள பொருளை; நான் நாடோறும் அன்ன பதார்த்தங்களால் நிரப்பிய பாத்திரத்தை; மயில் போன்ற சாயலையுடைய பெண்களின் இழித்துச் சொல்லப்படும் மலமும் இரத்தமுஞ் சொரியும் (அல்குல்) குழியில் படியாமல் அதனைவிட்டு முத்தியங் கரையேறும்படி திருவருள் செய்வாய். (வி-ரை) நரிப்பொதிச்சோறு - நரிகளுக்குப் பெரிதும் ஆகாரமாயிருப்பது சீறும் வினை என்னுஞ் செய்யுளைப் பார்க்க. மண் பொன் பெண் என்னும் மூவாசையுள் பெண் ணாசையை வெறுக்க மனிதனுக்குப் போதிய ஆற்றலின்மையான், ஆண்டவன் அருளை வேண்டியாவாறு காண்க. இதைப் பற்றிப் பலவிடங்களில் விரிவுரை எழுதப்பட்டிருக்கிறது. 34 சொக்கிட் டரமனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து திக்குற்ற மன்னரைக் கேட்பவ போற்சிவ நிந்தைசெய்து மிக்குக் குருலிங்க சங்கம நிந்தித்து வீடிச்சிக்கு மெக்குப் பெருத்தவர்க் கென்சொல்லு வேன்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியிலெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! மயக்க மருந்திட்டு அரசமாளிகை நுழைந்து களவாடிய கொடியர் மீண்டும் வந்து, எட்டுத்திக்கும் புகழ் பெற்ற வேந்தனைப் பொருள் கொடுக்கும்படி யாசிப்பது போல, சிவ நிந்தைசெய்து சிறந்த குருலிங்கசங்கம வழிபாடுகளை இழித்துக்கூறி மோட்ச வீட்டை விரும்புங் கொடுமையிற் சிறந்தவர்க்கு என்ன உரைப்பேன்? (வி-ரை) துட்டர் - காவலாளிகளாற் கொண்டுவரப்பட்ட அவர் (துட்டர்) மன்னரைத் தங்களை மன்னிக்கும்படி கேட்பது போல எனினுமாம். சிவநிந்தை புரிவோர் வீடு அடையார். என்னை! வீட்டுக் குரியபொருள் அஃதாகலான், ஏனைய கடவுளர் வீற்றிருக்கு மிடங்கள் புண்ணியஞ் செய்வோ ரடையும் லோகங்கள்; அவை வீடு அல்ல. குருலிங்க சங்கம வழிபாடு வீட்டை யளிப்பது. இதனை செம்மலர் நோன்றாள் சேர லொட்டா, அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ, மாலற நேய மலிந்தவர் வேடமும், ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என வரூஉஞ் சிவஞான போதத்தா னுணர்க. இதனால் குருலிங்க சங்கமத்தின் சிறப்பு உணர்த்தியவாறு காண்க. 35 விருந்தாக வந்தவர் தங்களுக் கன்ன மிகக்கொடுக்கப் பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் னாமத்தைப் போற்றிநித்தம் அருந்தா முலைபங்க ரென்னாரப் பாதக ரம்புவியில் இருந்தாவ தேதுகண் டாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! விருத்தினராக வந்தவர்க்கு வேண்டிய அளவு சோறிட மனங்கொள்ளார்; பொருட்செல்வம் அதிகரிக்க வாழ்வார்; தேவரீர் திருநாமத்தைத் துதித்து நாடோறும் உண்ணாமுலை பங்கா என்றேத்தார். இந்தப் பாதகர்கள் அழகிய உலகத்தில் வாழ்வதால் விளையும் பயன் யாது?. (வி-ரை) இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு என்றார் திருவள்ளுவர். சிவநாமம் போற்றாதவர்கள் பெரும்பாவிகளென்பார் அப் பாதகர் என்றார். சிவசிவ என்கிலர் தீவினையாளர் என்றார் திருமூலரும். பாதகர்களைப் பூமிபாரமென்பார் இருந்தாவ தேது என்றார். மனித உடல் தாங்கி நிற்போர் மற்றவர்க்குத் துணையாகவும், ஈசுரபக்தி யுடையவராகவும் வாழ்தல் வேண்டு மென்பது கருத்து. 36 எல்லா மறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி வல்லா னறிந்துள னென்றுண ராது மதிமயங்கிச் சொல்லான் மலைந்துறு சூழ்விதி யின்படி துக்கித்துப்பின் எல்லாஞ் சிவன்செய லேயென்பர் காண்கச்சி யேகம்பனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! எல்லா நூல்களையும் ஓதியுணர்ந்து நமது வினைக்குத் தக்கபடி நமக்கு ஏற்பட்டுள்ள அளவை எல்லாம் வல்ல இறைவன் அறிந்திருக்கின்றான் என்று தேறாது, அறிவு கெட்டு (அறிவில்லார்) சொற்களால் மலைவுகொண்டு (பிரவர்த்தி மார்க்கத்திலிறங்கி உழன்று அதனால்) உண்டாகும் விதியின்படி வருத்தமடைந்து அதற்குமேல் எல்லாஞ் சிவன் செயலே என்று சொல்லுவார்கள் (இஃதென்ன அறியாமை.) (வி-ரை) இது கற்றறி மூடருக்கு அறிவுகொளுத்த எழுந்த திருவாக்கு. அவாவால் விடயங்களில் நுழையுமுன்னர் எல்லாஞ்சிவன் செயல் என்றிருப்போரது பிரார்த்தம் நசிக்கும்; அன்னாரை ஆகாமிய மணுகாது. விடய இன்பங்களில் நுழைந்து நுகர்ந்து அவைகளால் துன்பம் வருங்கால் எல்லாஞ் சிவன் செயல் என்றுரைப்பது உபசாரம். அவர்களை ஆகாமியம் பற்றும். கற்றோர் மூடர்சொல் கேட்டல் கூடாதென்பார் மதிமயங்கிச் சொல்லான் மலைந்து என்றார். கல்லாத மூடரைக் காணவு மாகாது, கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று - திருமந்திரம். 37 பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர் பூவை வன்னாள் தன்னை நினைந்து வெகுவா யுருகுவர் தாரணியில் உன்னை நினைந்திங் குனைப்பூசி யாத வுலுத்தரெல்லாம் என்னை யிருந்துகண் டாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! பொருளைச் (சேகரிக்க) எண்ணி (பெரு முயற்சி செய்து) ஏராளமாகச் சேகரிப்பார்கள்; இலக்குமி போன்ற அழகுடைய பெண்களை நினைந்து அதிகமாக உருகுவார்கள்; தேவரீரைச் சிந்தித்துப் பூசியாலோபிகள் இவ் வுலகத்தில் வாழ்ந்தென்ன பிரயோசனம்?. (வி-ரை) உலுத்தர் - பொருளாசைக்காரர். எல்லா ஜென்மங் களிலும் உயர்ந்த ஜென்மமாகிய மனிதஜென்மம் சிவத்தியானம் சிவபூசை முதலியன செய்யவே வகுக்கப்பட்டதென்க மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம், ஆனிடைத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ, வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர், ஊனெடுத் துழலு மூமர் ஒன்றையும் உணரா ரந்தோ - சிவஞானசித்தியார். சிவகருமஞ் செய்யார் திருநீறு சாற்றார், தவநெறியாஞ் சைவநெறி சாரார் - அவனிதனில், கான்பரந்த பச்சைக் களாநிழலைக் கைதொழார், ஏன் பிறந்தார் மானுடரா யின்று- திருக்கருவைவெண்பா அந்தாதி. 38 கடுஞ்சொல் லின்பம்வரை யீனரைக் குண்டரைக் காமுகரைக் கொடும்பவ மேசெயும் நிர்மூடர் தம்மைக் குவலயத்துள் நெடும்பனை போல வளர்ந்துநல் லோர்த நெறியறியா இடும்பரை யேன்வகுத் தாயிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! (எந்நேரமுங்) கடுஞ்சொற்களைப் பேசுந் துஷ்டரை. (ஆசாரமில்லாத) இழிந்தவரை; புறணி பேசுகின்றவரை; காமுகரை; கொடிய பாவத் தொழில்களையே செய்யும் நிர்மூடரை பூமியிலே நீண்ட பனைமரம்போல (உருவத்தால் மாத்திரம்) வளர்ந்து உயர்ந்து நல்லவர்களது சன்மார்க்கத்தை யறியாத செருக்கரை ஏன் படைத்தாய்?. (வி-ரை) வம்பர், குண்டர் - சோரபுத்திரர், பணிவுடையன் இன்சொலனாதல் ஒருவற்கு, அணியல்ல மற்றுப் பிற இனிய வுளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்று - திருக்குறள். வம்பர் முதலியோரை முன்னிலைப் படுத்திக் கூறுவதும் பாவமென்று கடவுளைப் பழித்தவாறு காண்க. இதனால் தீயோர் கொடுமை தெரித்தவாறாம். 39 கொன்றே னனேகமுயிரை யெல்லாம்பின்பு கொன்றுகொன்று தின்றே னதன்றியுந் தீங்குசெய் தேனது தீர்கவென்றே நின்றேனின் சந்நிதிக் கேயத னாற்குற்ற நீபொறுப்பாய் என்றே யுனைநம்பி னேனிறை வாகச்சி யேகம்பேனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! பல உயிர்களையெல்லாங் கொலை செய்தேன்; பின்னர் அவைகளை வதைத்து வதைத்துப் புசித்தேன்; அஃதல்லாமலும் பல தீமைகள் செய்தேன்; அவைகளை ஒழிக்க என்றே தேவரீர் சந்நிதானத்தை யடைந்து நின்றேன். ஆகையால், தேவரீர் என் பிழைகளெல்லாவற்றையும் பொறுத்தருள்வீ ரென்றே தேவரீரை நம்பியிருக்கிறேன். (வி-ரை) கொலையும் புலாலுண்ணலுமே பாவங்களில் தலையாயவை. அவை யொழித்தவன் எல்லாப் பாவங்களினின் றும் நீங்கினவனாவான். கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி, எல்லா உயிருந் தொழும் - திருக்குறள். கொல்லாமை யெத்தனைக் குணக்கேட்டை நீக்கும் . . . . . . . . . . கொல்லா விரதங்கொண்டோரே நல்லோர், மற்றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க, எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை பராபரமே - தாயுமானவர். தாம் அறியாமையால் செய்த குற்றங்களை அறிவு விளங்கிய காலத்துக் கடவுள் முன்னும் உலகத்தவர் முன்னும் முறையிடுவது ஞானிகள் வழக்கம். பாவ அறிக்கை என்று பிறர் கூறுப. 40 1ஊரிருந் தென்ன நல்லோ ரிருந்தென் னுபகாரமுள்ள பேரிருந் தென்பெற்ற தாயிருந் தென்மடப் பெண்கொடியாள் சீரிருந் தென்ன சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில் ஏரிருந் தென்வல்ல வாவிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) எல்லாம் வல்லவனே! இறைவனே! திருக் காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! இவ் வுலகத்திலே (சொந்தமாக) ஊரிருந்தென்ன; நல்லவர்களிருந் தென்ன; பரோபகாரிக ளிருந்தென்ன; ஈன்ற தாயிருந்தென்ன; மடமையும் அழகுமுடைய பூங்கொடிபோன்ற வாழ்க்கைத் துணைநலம் (மனைவி) இருந்தென்ன; நல்ல புகழிருந்தென்ன; ஏரிருந்தென்ன; (தேவரீர் திருவருளொன்றில்லாவிடின், இவை களால் என்ன பயன்.) (வி-ரை) இவை யாவும் நிலையுதலில்லாதவை. திருவரு ளொன்றே நிலைபேறாயுளது என்றபடி. ஏர் - உழவுத்தொழில். 41 1வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுண்டொருவன் கல்லா லெறியப் பிரம்பா லடிக்கக் களிவண்டுகூர்ந் தல்லார் பொழிற்றில்லை யம்பல வாணர்க்கோ ரன்னைபிதா இல்லாத தாலல்ல வோனிறை வாகச்சி யேகம்பனே. (பொ-ரை) இறைவனே! திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதனே! ஒருவன் வில்லினால் மோத, ஒருவன் செருப்பினால் உதைக்க, ஒருவன் கோபித்துக் கல்லினால் எறிய, ஒருவன் பிரம்பினால் அடிக்க (நேர்ந்தது) தேனையுண்டு களிக்கும் வண்டுகள் நிறைந்து மேகந் தங்குஞ் சோலை சூழ்ந்த தில்லையம்பதிக்கணுள்ள சிற்சபையில் நடம்புரியும் பெருமானுக்கு ஒரு தாயுந் தந்தையும் இல்லாமலிருக்கின்ற படியால் அல்லவோ? (வி-ரை) வில்லால் அடித்தவன் அருச்சுனன். செருப்பா லுதைத்தவன் கண்ணப்பன். கல்லாலெறிந்தவன் சாக்கியன். பிரம்பாலடித்தவன் அரிமர்த்தன பாண்டியன்; இச்செய்யுளால் இறைவன் தாய் தந்தையரில்லாதவன்; அதாவது பிறப்பு இறப்பு இல்லாதவன் என்னும் உண்மை பெறப்படுகிறது. தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி- திருவாசககம். 42 திருவேகம்ப விருத்தம் அன்னை யெத்தனை யெத்தனை வன்னையோ அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ மூட னாயடி யேனு மறிந்திலேன் இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ என்செய் வேன்கச்சி யேகம்ப நாதனே. (பொ-ரை) திருக்காஞ்சியி லெழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே! (சிறியேன் இதுகாறும் எடுத்த பிறவிகளில் வாய்ந்த) தாய்மார் எத்தனை எத்தனைத் தாய்மாரோ; தந்தைமார் எத்தனை எத்தனைத் தந்தைமாரோ; பின்னும் மனைவிமார் எத்தனை எத்தனை மனைவிமாரோ; புத்திரர் எத்தனை எத்தனைப் புத்திரரோ; முன்னெடுத்த பிறவிகள் எத்தனை எத்தனைப் பிறவிகளோ; அறிவில்லா நாய்போன்ற அடியேன் ஒன்றும் அறிந்தேனில்லை. இனி எடுக்கப்போகும் பிறவிகள் எத்தனை எத்தனைப் பிறவிகளோ என்ன செய்வேன்!. (வி-ரை) உயிர்கள் உடலோடுகூடி வாழுங் காலத்துத் தாம் முன்னரெடுத்த பல பிறவிகளைப்பற்றிச் சிறிதும் அறிய மாட்டா; திருவருள் ஞானங் கைவந்ததும் அறியப்பெறும்; அதுகாலைப் பிறவித் துக்கத்தை யுணர்ந்து இனிப் பிறவாதிருக்க இறைபணி நிற்றல் முதலிய நிட்காமியச் செய்ல்களைச் செய்ய முயற்சி செய்யும். இதுபற்றியே சுவாமிகள் அன்னை யெத்தனை . . . . . என்றருளிச் செய்தார்கள். இச் செய்யுளாற் பிறவியை வெறுத்துக் கூறியவாறாம். 43 திருத்தில்லை காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினுக்கும் தாம்பிணங் கும்பல வாசையும் விட்டுத் தனித்துச் செத்துப் போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண் டினிமேற் சாம்பிணங் கத்துதை யோவென் செய்வேன் தில்லைச் சங்கரனே. (பொ-ரை) தில்லையம்பதிக்கண் வீற்றிருந்தருளுஞ் சிவ பெருமானே! மூங்கிலை யொத்த பருத்த தோள்களையுடைய பெண்களிடத்திலும், பொன்னிடத்திலும், பூமியிடத்திலுந் தாம் நெருக்கமாகக் கொள்ளும் பலவகை ஆசைகளையும் ஒழித்துத் தனிமையாக மாண்டுபோன பிணங்களை இனிமேல் மாளப் போகிற பிணங்கள் கூட்டமாகச் சூழ்ந்து புரண்டு கத்துகின்றன. அந்தோ! (அவர் தம் அறியாமைக்கு) என்ன செய்வேன்?. (வி-ரை) தில்லை - சிதம்பரம். சங்கரன் - சுகத்தைக் கொடுக்கின்றவன். பணைத்தோளார் . . . . . ஆசை யென்றது பெண், பொன், மண் என்னும் மூன்று ஆசையை யென்க. இச்செய்யுளால் இறந்தவர்களைக் குறித்து வருந்துவது அறியாமை யென்பதை உணர்த்தியவாறாம். 1 சோறிடு நாடு துணிதருங் குப்பைதொண் டன்பரைக்கண் டேறிடுங் கைக ளிறங்கிடுந் தீவினை யெப்பொழுது நீறிடு மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால் ஊறிடுங் கண்க ளுருகிடு நெஞ்சமென் னுள்ளமுமே. (பொ-ரை) எக்காலத்துந் திருநீறு சண்ணித்த திருமேனி யுடையவரும், திருச்சிற்றம்பல முடையவரும் ஆகிய எம்பெரு மானது திருத்தாண்டவத்தைக் கண்ணுற்றால் என்விழிகள் ஆனந்த நீரைச் சொரியும், மனமும் உயிரும் உருகும்; ஊரார் (தாமேவலிந்து) அன்னமிடுவர்; குப்பை ஆடையுதவும், திருத் தொண்டு செய்யும் அன்பர்களைக்கொண்டு கைகள் தலைமேல் ஏறும்; தீய வினைகள் அகலும். (வி-ரை) தில்லை நடராஜப் பெருமானைத் தரிசிக்குங்கால் உண்டாகும் நிகழ்ச்சிகளை கையுந் தலைமிசை புனையஞ் சலியன கண்ணும் பொழிமழை பொழியாதே, பெய்யுந் தகையன கரணங் களுமுட னுருகும் பரிவின பேறெய்து, மெய்யுந் தரை மிசை விழுமுன் பெழுதரு மின்றாழ் சடையொடு நின்றாடும், ஐயன் றிருநட மெதிர்கும் பிடுமவ ரார்வம் பெருகுத லள வின்றால் எனப் பெரியபுராணங் கூறுமாற்றான் உணர்க. ஞானிகள் தங்கட்கெனப் பொருள் சோறு முதலிய வற்றை வலிந்து தேடாராகலானும், எல்லாஞ் சிவனுடைமை யெனக் கொள்வராகலானும் மானத்தை அறவே யொழித்தவராகலா னும் சோறிடு நாடு . . . . . என்றார். ஊரெலாம் அட்ட சோறு நம்மதே உவரிசூழ்ந்த, பாரெலாம் படுக்குந் திண்ணை என வரூஉந் திருவிளையாடற் செய்யுளை யோர்க. நாடு - ஆகுபெயர். தாவரத்தில் சகளீகரித்துள்ள மூர்த்தியைத் தரிசித்தோர்க்கு, அன்பர்கள் உள்ளத்தொளிருஞ் சிவமூர்த்தந் தோன்றுமாகலான் அன்பரைக்கண் டேறிடுங் கைகள் என்றார். எல்லா உயிர் களையுஞ் சிவமாகக் கண்டு வணக்கஞ் செய்வோர்க்கு மலச் சேட்டை யின்மையான் இறங் கிடுந் தீவினை என்றார். 2 அழலுக்குள் வெண்ணெ யெனவே யுருகிப்பொன் னம்பலத்தார் நிழலுக்கு ணின்று தவமுஞற் றாமனிட் டூரமின்னார் குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து விழலுக்கு முத்துலை யிட்டிறைத் தேனென் விதிவசமே. (பொ-ரை) கனகசபாபதியின் திருவடிநீழலில் நின்று நெருப்பிடைப்பட்ட வெண்ணெயைப்போல மனமுருகித் தவஞ் செய்யாமல், கொடிய வார்த்தைகளைப் பேசும் மின்னலைப் போன்ற இடையுடைய பெண்கள் கூந்தலுக்குப் பொருத்தமான பூமாலைகளைத் தாங்கிக்கொடுத்து, அவர்கள் விரும்பிய அற்பவேலைகளையுஞ் செய்து விழற்புல்லுக்கு மூன்று துலா நாட்டி நீர் இறைந்த மடவோரைப் போன்றவனானேன். இஃது என் ஊழ்வினையாம். (வி-ரை) சிவபெருமானைப் போற்றாது மாதர்களைப் போற்றி வாளா காலங்கழித்துப் பயனிழந்தேன் என்பார் விழலுக்கு முத்துலை விட்டிறைத்தேன் என்றார். முத்துலை அறியாமைக் குறிப்பு. திருவடிநீழல் - திருவருள். 3 ஓடாமற் பாழுக் குழையாம லோர முரைப்பவர்பாற் கூடாம னல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபநெஞ்சில் நாடாம னன்மை வழுவாம லின்றைக்கு நாளைக்கென்று தேடாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே. (பொ-ரை) சிதம்பரத்தில் வீற்றிருந்தருளுஞ் சிவகுரு நாதனே! (வயிற்றின் பொருட்டு அங்குமிங்கும்) ஓடி அலையா மலும், வீணுக்கு உழையாமலும், பட்சபாதமாய்ப் பேசுபவ ரிடத்திற் சேராமலும், நல்லவர் கூட்டத்தைவிட்டு நீங்காமலும், கொடிய கோபத்தை மனதிற்கொள்ளாமலும், நீதி தவறாமலும், இன்றைக்கு நாளைக்கு என்று பொருள் தேடாமலும் வாழத் தகுந்த திருவருட் செல்வத்தைக் கொடுத்தருள்வாய். (வி-ரை) பாழுக்கு உழைத்தல் - பிரவிர்த்தி மார்க்கத்தில் நிற்றல். ஓரம் - பட்சபாதம். நன்மையீண்டு நீதியின் மேற்று. இன்றைக் கென்செய்வோம் நாளைக் கென்செய்வோம் என்று கவலைகொண்டு பொருள்தேட முயல்வோர் கடவுளுண்மை யில் உறுதியில்லாத நாத்திகரென்க. தன்னலங்கருதி அங்கு மிங்கு மோடல், பாழுக் குழைத்தல் முதலியன கடவுளுண்மையில் உறுதியின்மையைக் காட்டுவனவாம். கடவுளுண்மையில் உறுதியுடையார் தம் நலங்கருதி அங்குமிங்கு மோடார்; உழையார்; ஒன்றுஞ்செய்யார். அவர் எல்லாஞ் சிவன்செய லென்றிருப்பர். அச்செயலுடையாரே சிறந்த செல்வர். எல்லாஞ் சிவனுடைமை எல்லாஞ் சிவன் செயல் என்ற உணர்வுபெறாதார் எவ்வளவு பொருள்பெறினும் நிறையுள்ளம் பெறாது ஏக்கமுற்றே கிடப்பர். ஆதலால் இவரை வறிய ரென்றன்றோ அழைத்தல் வேண்டும்? ஈண்டு அடிகளுந் தன்னலங்கருதி ஓடியுழலாத ஒன்றைச் செல்வம் என்று கூறினார்கள். 4 பாராம லேற்பவர்க் கில்லையென் னாமற் பழுதுசொல்லி வாராமற் பாவங்கள் வந்தணு காமன் மனமயர்ந்து பேராமற் சேவை பிரியாம லன்பு பெறாதவரைச் சேராமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே. (பொ-ரை) சிதம்பரத்தி லெழுந்தருளியுள்ள சிவகுரு நாதனே! ஏற்றந் தாழ்வு நோக்காமலும், யாசிப்பவர்கட்கு இல்லை யென்று சொல்லாமலும், பிறர் குற்றங்கூறித் திரியாமலும், பாவங்கள் வந்து நெருங்காமலும், மனவெழுச்சி குன்றாமலும், தேவரீரது சேவை என்னை விட்டகலாமலும், அன்பில்லாத வர்களிடம் கூடாமலுமிருக்கத் திருவருட் செல்வத்தைக் கொடுத்தருள்வாய். (வி-ரை) பாராமல் - பதார்த்தங்களைப் பாராமல் எனலுமொன்று, பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் - சிவஞானசித்தி. பழுது சொல்லல் - கண்டவற்றிற் கெல்லாங் குறைசொல்லல்; ஞானத்தில் குறைசொல்லல். ஞானத்தில் குறைபாடுடையார்க்கே பிற பொருள்களிலுங் குறைபாடு தோன்றுமென்பது ஞான நூற்றுணிபு. பாவங்கள் வந்து அணுகாமல் - யான் பாவச் செயல்களைச் செய்யத் தலையிடாமல். மனமயர்ந்து பேராமல் - திருவருட் செல்வமே பொருளென மன உறுதி கொண்டு ஊன்றிய மனஞ்சோர்ந்து பிறபொருண் முயற்சியிலெழாமல். சேவை பிரிந்தால் பிறநினைப்பு உறுமாகலான் சேவை பிரியாமல் என்றார். 5 கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் காமற் கனவினும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே. (பொ-ரை) சிதம்பரத்தில் வீற்றிருந்தருளுஞ் சிவகுரு நாதனே! (உயிர்களைக்) கொல்லாமலும், கொன்றைவற்றை யுண்ணாமலும், வஞ்சம், கோள், திருடு (முதலியவற்றைக்) கற்றுக் கொள்ளாமலும், வஞ்சகருடன் சேராமலும், சொப்பனத்திலும் (மறந்தும்) பொய் பேசாமலும், பொய்ச் சொற்களுக்குச் செவி சாயாமலும், மயில்போன்ற சாயலுடைய மாதர்கள் மாய வலையிற் சிக்காமலு மிருக்கத் திருவருட் செல்வத்தைக் கொடுத் தருள்வாய். (வி-ரை) இச்செய்யுளில் பஞ்சமாபாதத்தைக் குறிப்பித்தார். இம்மூன்று செய்யுட்களும் ஒரு கருத்தனவேயாம், அவைகளிற் போந்துள்ள பொருள்விரிவைத் திருக்குறள் முதலிய உண்மை நூல்களிற் காண்க. திருவருட் செல்வம் ஒன்றுபெறின் எத்தகைத் தீமைகளுந் தலைகாட்டா என்பது கவனிக்கத்தக்கது. 6 முடிசார்ந்த மன்னரு மற்றுமுள் ளோரு முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே. (பொ-ரை) கிரீடந் தரித்த அரசர்களும் மற்றவர்களும் இறுதிக் காலத்தில் ஒரு பிடி சாம்பலாக வெந்து மண்ணா வதையுங் (கண்கூடாகக்) கண்டும், மேலும் இப்பூமியிற் பொருந்திய வாழ்வை எண்ணுவதல்லாமல், கனகசபாபதியின் திருவடிகளை யடைந்து நாம் பிழைக்கவேண்டுமென்று உணரு வோரில்லையே (என் செய்வது.) (வி-ரை) மரணமென்பது உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் அனைவருக்கும் பொதுவா யிருப்பதென்பார், முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் என்றார். இத்திருப்பாட்டால் உயிர்கள் இறந்து சாம்பராகி மண்ணாவதைக் கண் கூடாகக் கண்டும் உலகப்பற்றை யொழித்துக் கடவுட்பற்றைக் கொள்ளா திருப்பது எத்துணை அறியாமை என்பதை விளக்கியவாறாம். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்றார் வன்றொண்டர். அழல் வாய் சுடலை தின்னக் கண்டும் என்றார் சாத்தனார். 7 காலை யுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற் சால வுபாதி பசிதாக மாமுற் சஞ்சிதமா மாலை யுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே ஆலமு கந்தரு ளம்பல் வாவென்னை யாண்டருளே. (பொ-ரை) (திருப்பாற் கடலினின்று மெழுந்த) விஷத்தை விரும்பியுண்டருளிய சபாநாதனே! (உயிர்கட்கு நாடோறும்) காலையில் உண்டாகுந் துன்பம் மலத்தாலுஞ் சலத்தாலுமாம்; இஃதல்லாமல் நண்பகலில் உண்டாகும் அருந்துன்பம் பசி யினாலும் தாகத்தினாலுமாம்; முன்னே சேகரித்ததாகிய மாலைத் துன்பம் உறக்கத்தாலுங் காமத்தாலுமாம். இத் துன்பங்களை அறவொழித்து அடியயேனை யாட்கொண் டருள்க. (வி-ரை) உபாதி -துன்பம். பசியுங் தாகமும் மிகக்கொடு மையாக உயிர்களை வருத்துதலின் சால உபாதி என்றார். சஞ்சிதம் - ஈட்டிய வினை. மும்மலத் தொடர்புடையார்க்கு மலசல உபாதி முதலிய உபாதிகள் உண்டு. அத்தொடர் பில்லார்க்கு இவ்வுபாதிகள் இல்லை யென்க. இவ்வுபாதிகளைப் போக்கும் வழி யோகாப்பியாசமாம். உறக்கமுங் காமமும் வினைக்கீடாக விளைதலின் முற்சஞ்சிதமா மாலையுபாதி என்றார். 8 ஆயும் புகழ்த்தில்லை யம்பல வாண ரருகிற்சென்றாற் பாயு மிடபங் கடிக்கு மரவம்பின் பற்றிச்சென்றாற் பேயுங் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்றொடரும் போயென்செய் வாய்மன மேபிணக் காடவர் போமிடமே. (பொ-ரை) மனமே! (அறிஞரால்) ஆராயப்படுஞ் சீர்த்தி வாய்ந்த தில்லைச்சிற்றம்பலநாதர் சமீபத்தில் அணைந்தால் இடபம் பாயும்; பாம்பு கடிக்கும்; பின்தொடர்ந்து போனால், பேய்களும் பிசாசுகளும் பெரிய தலைகளையுடைய பூதங்களும் பின்னே தொடர்ந்துவரும்; பயமுறுத்தும். அக்கடவுள் செல்லு மிடம் பிணங்கள் நிறைந்த சுடுகாடாம். (அவரிடத்தில்) நீ சென்று என்ன செய்வாய்?. (வி-ரை) இடபம் - தருமம், ஞானம் என்பவற்றின் குறிப்பு. பாம்பு - குண்டலிசத்திக்குறி. கணங்கள் - பல மூர்த்தங்கள்; பஞ்சபூதக்குறி யெனலுமாம். பிணக்காடு - மாயை யழிந்த இடத்தைக் காட்டுங் குறிப்பு. இவ்வுண்மை யுணராதார் மாடு, பாம்பு, பூதம், சுடுகாடு எனக்கொண்டு இடர்ப்படுவர். சிவபிரா னிடத்துள்ள இவைகளை அவ்வப் பொருளாகக் கொண்டு வழிபடுகின்றமட்டும் ஞானம் உதயமாகாது: அவைகளின் உண்மை கண்டே வழிபடல் வேண்டுமென்பது இச்செய்யுளின் கருத்து தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி . . . . . எனச் சுவாமிகள் திருவொற்றியூர் ஒருபா ஒருபஃதில் அருளிச் செய்துள்ள பொருள்களைச் சிந்திக்க. 9 ஓடு மெடுத்தத ளாடையுஞ் சுற்றி யுலாவிமெள்ள வீடுக டோறும் பலிவாங்கி யேவிதி யற்றவர்போல் ஆடு மருட்கொண்டிங் கம்பலத் தேநிற்கு மாண்டிதன்னைத் தேடுங் கணக்கென்ன காண்சிவ காம சவுந்தரியே. (பொ-ரை) சிவகாமசௌந்தரியே! (அரையில்) தோலாடை யுடுத்திக் (கரத்தில்) பிக்ஷாபாத்திரமேந்தி வீட்டு வாயில்கடோறு மெதுவாகத் திரிந்து பிச்சையேற்றுத் திக்கற்றவரைப்போல மயங்கி வெட்ட வெளியிலே கூத்தாடி நிற்கும் ஆண்டியைத் தேடுங் காரணம் யாது? (வி-ரை) மக்கள் ஞானம் பெறவேண்டின் அகப்பற்று புறப்பற்றுக்களை அறவே யொழித்து ஓடெடுத்துப் பிச்சை யெடுக்கும் ஆண்டிபோலாதல் வேண்டுமெனக் குறிப்பால் உணர்த்தியவாறாம். மானாபிமானம் விடவேண்டுமென்பது கருத்து. ஆண்டு - தத்துவங்களில் தோயாது தன்னை ஆள்பவன்; பற்றில்லாதவன். சிவசத்தி வழிச்சென்று ஆண்டியை அடைய வேண்டுமென்க. 10 ஊட்டுவிப் பானு முறங்குவிப் பானுமிங்கொன் றொடொன்றை மூட்டுவிப் பானு முயங்குவிப் பானு முயன்றவினை காட்டுவிப் பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி ஆட்டுவிப் பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. (பொ-ரை) உண்பிக்கின்றவனும், தூங்குவிக்கின்றவனும், ஒரு பொருளோடு மற்றோரு பொருளை இசைவிக்கின்றவனும், அவைகளைத் தொழிற்படுத்துகின்றவனும், அங்ஙனந் தொழிற் படுத்திய பயனைக் காண்பிக்கின்றவனும், நல்வினை தீவினை யென்னும் பாசக்கயிற்றின் வழி ஆட்டுவிக்கின்றவனும் தில்லைச் சிற்றம்பலத்திலே ஒரு முதல்வன் உளன். (வி-ரை) நன்னாரிற் பூட்டிய என்னுஞ் செய்யுளையும் அதனது விசேட உரையையும் பார்க்க. 11 அடியார்க் கெளியவ ரம்பல வாண ரடிபணிந்தால் மடியாமற் செல்வ வரம்பெற லாம்வைய மேழளந்த நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலனருட் குடிகாணு நாங்க ளவர்காணு மெங்கள் குலதெய்வமே. (பொ-ரை) தொண்டர்களுக்கு எளிவரும், சிற்சபையில் விளங்குபவருமாகிய ஸ்ரீநடராஜப்பெருமான் திருவடிகளைத் தொழுதால், அழியாமல் திருவருட்செல்வத்தை யடைய வேண்டிய வரத்தைப் பெறலாம். நாங்கள் ஏழுலகங்களையும் அளந்த நாராயணனும் நான்முகனுங் கண்டறியாத நித்தனாகிய சிவபெருமான் திருவருளுக்குரிய அடிமைகளாவோம்; அவர் எங்கள் குலதெய்வமாவர். (வி-ரை) வையம் ஏழினையும் அளந்தமையால் விஷ்ணு மூர்த்தியை நெடியோன் என்றார். வேதியன் - வேதங்களை வெளியிட்டவன்; பிரமன். நிமலன் - மலமில்லாதவன்; சிவ பெருமான். ஈண்டு ஆண்டவனை அடியார்க்கெளியன் என்ற மையான், மற்றையோர்க்கு அவன் எளியவனல்லன் என்பது பெறப்படுகிறது. தான் என்னும் ஜீவபோதமற்று ஆண்டவன் அருள்வழிநின்று அவன் அடியில் ஆர்ந்த மனமுடையார்க்கு இறைவன் எளியவனாவன்; அவர்க்கு ஊழியனாய் அவரிடும் பணியையுஞ் செய்வன். ஜீவபோதமுடையார்க்கு ஆண்டவன் எளியனாகான்; அவ்வுண்மையைச் சுவாமிகள் இத் திருப்பாட்டி லேயே நெடியோனும் வேதனுங் காணாத நித்த நிமலன் என்று குறிப்பிட்டுள்ளார். நெடியோனும் வேதனும் தான்தானே முறையே கடவுளென்றும், ஆண்டவன் அடிமுடியைக் காண வல்லேம் என்றும் இறுமாந்து நின்றமையால், அவர்க்கு அடிமுடி புலனாகவில்லை. ஆண்டவன் அடியார்க் கெளியன் என்பதும், ஏனையோர்க்கு அரியன் என்பதும் இப்பாவால் விளக்கப்பட் டிருத்தல் காண்க. மடியாத செல்வம் - இறவாத வாழ்வு. பிறப் பிறப்பில்லா இறைவனை வழிபடுவோர் இவ்வாழ்வு பெறுவ ரென்க. இக் கருத்துப்பற்றியே அம்பலவாணர் அடிபணிந்தால் என்றார். அம்பலத்தாடும் எம்பெருமான் பிறப் பிறப்பில்லாப் பெரியோன் என்று கூறாத நூல்களில்லை. தத்துவங்கடந்த தனுமுதலுக்குப் பிறப்பேது? இறப்பேது? அவரே எங்கள் குலதெய்வம் என்றபடி. இப் பாவில் ஆண்டானடிமைத்திறம் நன்கு விளக்கப்பட்டிருத்தல் காண்க. 12 தெய்வச் சிதம்பர தேவாவுன் சித்தந் திரும்பிவிட்டாற் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங் கேமண்டலீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடக சாலையெங் கேயிது கண்மயக்கே. (பொ-ரை) தெய்விகம் பொருந்திய சிதம்பரத்தில் வீற்றி ருந்தருளும் பெருமானே! தேவரீர் திருவுள்ளஞ் சிறிது திரும்பி விடுமானால் பொய்யாகிய கனவுபோன்ற பெரிய அரசர்களின் வாழ்வும் உலகமும் ஏது? மெய்யாக எண்ணிய செல்வம் ஏது? சக்கரவர்த்திகளின் உப்பரிகை ஏது? அலங்காரஞ் செய்த நாடக சாலை ஏது? (எல்லாஞ் சூன்யமாம்) இவையாவும் கண் மயக்கமேயாம். (வி-ரை) சித்தம் திரும்பிவிட்டால் - திருவுள்ளம் எங்கள் மீது பதிந்துவிட்டால்; திருவுள்ளம் சராசரங்களினின்றும் நீங்கி விட்டால் எனக் கொள்ளினும் பொருந்தும். கண்மயக்கம் - போலித்தோற்றம். ஆண்டவன் திருவருள் பதியாதவரை செகமும் பிறவும் தோன்றிக்கொண் டிருக்குமென்றபடி. 13 உடுப்பா னும்பாலன முண்பானு முய்வித் தொருவர்தம்மைக் கெடுப்பானு மேதென்று கேள்வி செய்வானுங் கெதியடங்கக் கொடுப்பானுந் தேகியென் றேற்பானு மேற்கக்கொடாமனின்று தடுப்பானு நீயல்லை யோதில்லை யானந்தத் தாண்டவனே. (பொ-ரை) தில்லைம்பதியில் ஆனந்த நடம்புரியும் ஐயனே! ஆடைகளைத் தரிப்பவனும், பாலன்னத்தைப் புசிப்பவனும், ஒருவரைப் பிழைப்பித்து மற்றொருவரைக் கெடுப்பவனும், யாதென்று கேள்வி கேட்பவனும், வறுமை நீங்கக் கொடுப்ப வனும், பிக்ஷாந்தேகி யென்று இரப்பவனும், இரக்கத் தானங் கொடாமல் இடைநின்று தடுப்பவனும் நீயல்லவா? (வி-ரை) சீவச்செயல்கள் யாவுஞ் சிவச்செயலெனக் கூறியவாறு காண்க. அஃது இறைவன் உலகுயிர்களோடு அத்து விகமாகக் கலந்து நிற்றலின் அங்ஙனம் அருளிச்செய்தனர் என்க. அறிவானுந்தானே அறிவிப்பான்தானே? அறிவாய் அறிகின் றான் தானே - அறிகின்ற, மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பாராகாயம், அப்பொருளுந் தானேயவன் - காரைக்காலம்மையார். இந்நிலை பெற்றோர்க்குக் காண்பான் காட்சி காட்டப்படும் பொருள் என்னும் வேற்றுமைகள் தோன்றா. எல்லாஞ் சிவ மாகவே தோன்றும். அத்துவித நிலை என்பது இதுவே. 14 வித்தாரம் பேசினுஞ் சோங்கே றினும்கம்ப மீதிருந்து தத்தா வென்றோதிப் பவுரிகொண் டாடினுந் தன்முன்றம்பி ஒத்தாசை பேசினு மாவதுண் டோதில்லை யுண்ணிறைந்த கத்தாவின் சொற்படி யல்லாது வேறில்லை கன்மங்களே. (பொ-ரை) வாக்கு விதாரமாகப் பேசினாலும், கப்பலேறிப் போனாலும், கம்பத்தின்மேலிருந்து தத்தா என்று சொல்லிப் பவுரிக் கூத்தாடினாலும், தமையன் தம்பி உதவியாகப் பேசினாலும், ஏதாயினும் ஒருகாரியம் ஆவதுண்டோ? தில்லையம்பதியில் பூரண கலைகளோடு வீற்றிருந்தருளும் ஆண்டவன் கட்டளைப்படி அல்லாமல் வேறு செயல்களில்லை. (வி-ரை) வித்தாரம் - விற்பனம்; வாக்குச்சா துர்யம். சோங்கு - ஒருவகை மரக்கலம். பவுரி - கூத்துவிகற்பம். இக்கருத்துள்ள பாக்கள் முன்னே பல உள்ளன. அவை கட்கு எழுதியுள்ள விசேடவுரைகளைப் பார்க்க. 15 பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ அறமார் புகழ்த்தில்லை யம்பல வாண ரடிக்கமல மறவா திருமன மேயது காணன் மருந்துனக்கே. (பொ-ரை) நெஞ்சே! (உலகத்திலே) பிறவாமலிருக்க வரம் பெறுதல் வேண்டும்; (அவ்வரம்பெறாமல்) பிறந்துவிட்டால் மரணமடையாதிருக்க மருந்திருக்கிறது. இஃது எப்படி யென்றால் தருமம் நிறைந்த கீர்த்திவாய்ந்த தில்லையம்பதியிலே சிற்சபை யிலெழுந்தருளியுள்ள ஸ்ரீநடேசபெருமானார் திருவடித் தாமரைகளை மறவாமலிரு. அதுதான் உனக்கு நல்ல மருந்து. (வி-ரை) பிறவி, பெருந்துன்பத்தை விளைப்பதினாலும், அப்பிறவி தாங்கி உலகத்தில் வாழ்ந்து பிராரத்த வினையை நுகர்ந்து வருகையில் மறுபிறப்பிற்கு வித்தாக ஆகாமியகர்மம் ஏறுகின்றமையாலும், பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் என்றார். இது பற்றியே மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் என்றார் தம்பிரான் தோழர். அறியாமையால் ஞானம்பெறாது கர்மங்களைச் செய்து பிறந்துவிட்டால் அப்பிறவியிலேயே மீண்டும் பிறவா நெறியைத் தேடிக்கொள்ளல் வேண்டுமென்பார் இறவா திருக்க என்றார். ஞானம் பெறாது சாகின்றவன் மீண்டும் பிறப்பானாகலான் இறப்பு வேண்டாம் எனப் பெரியயோர் கூறுப. இறப்பு இன்றேல் பிறப்பும் இன்றென்க. யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் என்றார் மணிவாசகனாரும். இறவாமைக்கு மருந்து ஸ்ரீநடராஜப்பெருமான் திருவடிக் கமலங்கள் என்று குறிப்பிட்டார். இறவாமையை விரும்புவோர் சிவபிரானையே போற்றல் வேண்டுமென்க. மருந்தாகிப் பிணிதீர்க்க வல்லவடி என அப்பர்சுவாமிகளும், பெருந்துறையின் மேயபெருங் கருணையாளன், வருந்துயரந் தீர்க்கு மருந்து எனவும், காரணங்க ளெல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன், சரணங்களே சென்று சார்தலுமே தானெனக்கு, மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த, கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ எனவும் மாணிக்கவாசக சுவாமிகளுங் கூறியிருத்தல் காண்க. இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகிறார். பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும், மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி, அறவாநீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க என்றார் - பெரியபுராணம் - காரைக்காலம்மையர் புராணம். இறவாதிருக்கு மருந்து அம்பலவாணர் அடிக்கமலம் மறவா திருப்பது என்று அடிகள் அருளியுள்ளது கருதத்தக்கது. இரவும்பகலும் பிரியாது வணங்குவன் என்றார் அப்பரும். இறைவனை மறவாதேத்துவோரை, வேறு வினைகள் சூழா. அவர் இறைவனையே எண்ணலால் அவர்பால் இறைவன் அருட்குணங்களே பதிகின்றன. அக்குணம் பதியப்பெறுவோர் பிறப்பிறப்பு என்னும் மருளில் வீழாரென்க. 16 தவியா திருநெஞ்ச மேதில்லை மேவிய சங்கரனைப் புவியார்ந் திருக்கின்ற ஞானா கரனைப் புராந்தகனை அவியா விளக்கைப்பொன் னம்பலத் தாடியை யைந்தெழுத்தால் செவியாம னீசெவித் தாற்பிற வாமுத்தி சித்திக்குமே. (பொ-ரை) மனமே! இளையாமலிரு. தில்லையம்பதியி லெழுந்தருளியுள்ள சிவபெருமானை; உலகமெங்கும் நிறைந் திருக்கின்ற ஞானாகரனை; முப்புரங்களை யெரித்தவனை; என்றும் அவியாத விளக்கினை; கனகசபையில் தாண்டவம் புரிபவனை; ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தால் செபியாமல் செபித்தால் பிறவாத வீடு கைகூடும். (வி-ரை) தில்லை மேவிய சங்கரன் யாண்டுளன் என்று செஞ்சே! நீ தவியாதிரு. அவன் புவியார்ந்திருக்கின்ற ஞானாகரன் என்று உலகத்தார்க்கு அறிவு கொளுத்தியவாறு காண்க. நாம் புவியைக் காண்கிறோம். ஆனால் அதன்கண் ஆர்ந்திருக்கிற சிவத்தைக் காண்கின்றேமில்லை. இஃதென்ன அறியாமை? அறியாமையே இதற்குக் காரணம். அவ்வறியா மையைப் போக்கவல்லது ஸ்ரீபஞ்சாக்கர செபமாகலான் ஐந்தெழுத்தால் செவியாமல் நீசெவித்தால் என்றார். ஈண்டுப் பஞ்சாக்கர மென்றது முத்தி பஞ்சாக்கரத்தை. செபியாமல் செபித்தல் - இது கருவி கரணங்களைக் கடந்து சமாதி நீட்டையில் செபித்தல் இஃது அனுபவ நிலையாகலான் சற்குருபால் கேட்டுத்தெளிக. இல்லக விளக்கது இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதி யுள்ளது, பல்லக விளக்கது பலருங் காண்பது, நல்லக விளக்கது நமச்சி வாயவே - தேவாரம். எல்லா ஒளிகளுக்கும் ஒளியளிக்கும் பேரொளி சிவமாதலான் அதை அவியாவிளக்கு என்றார். அவியும் விளக்குகளைக் காணுங் கண்ணை அவியாவிளக்கைக் காண்பதாகச் செய்ய முயல வேண்டுவது அறிஞர் கடமை. 17 நாலின் மறைப்பொரு ளம்பல வாணரை நம்பியவர் பாலி லொருதரஞ் சேவிக்கொ ணாதிருப் பார்க்கருங்கல் மேலி லெடுத்தவர் கைவிலங் கைத்தைப்பர் மீண்டுமொரு காலி னிறுத்துவர் கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. (பொ-ரை) நான்கு வேதப் பொருளாயுள்ள சபாநாயகரை உறுதியாகக்கொண்டு அவர் திருச்சந்நிதியில் ஒருமுறை யாவது வணங்கக் கூடாமல் (லௌகிகத்தில் அழுந்தி வாளா) கிடப்பவர்களை (யமபடர்கள்) அவர்கள்மேல் கருங்கல்லைச் சுமத்திக் கைகளில் விலங்கிடுவார்கள்; மறுபடியும் ஒருகாலில் நிற்கச் செய்சார்கள்; (அவ்வளவில் நின்றுவிடாமல்) தாங்களே நெருங்கிப்போந்து (பாசத்தால்) இறுக்கிக் கட்டுவார்கள். (வி-ரை) நான்கு வேதம்: இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். நால்வேதப் பொருள் சிவபெருமான் என்பதனை வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது, நாதனாம நமச்சி வாயவே அருமறையி னகத்தானை என வரூஉந் தேவாரத்தானுணர்க. கடவுளுண்மையில் நம்பிக்கை வேண்டுமென்பார் அம்பல வாணரை நம்பி என்றார். என்னை? ஏதுக்களானும் எடுத்த மொழியானுஞ் சாதிக்க வொண்ணாதவன் ஆகலான். இறை வனே யெம்மை யென்றும் நம்புவார்க்கன்பர் போலும் என்றார் அப்பர்சுவாமிகளும். சிவபிரானைத் தொழாமலும், அவர் திருநாமத்தை யுச்சரியாமலும் வாளா காலங்கழிப்போர் அடை யும் நரகவாதனையை உபதேசகாண்ட முதலிய உண்மைநூல் களிற் காண்க. கட்டுவர் என்பதற்குத் தம் வழி நிறுத்துவர்; கஷ்டப் படுத்துவர் எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும். சிவ தரிசனஞ் செய்பவரை யமன் அணுகான் என்பதைக் கூறியவாறு. நமன்வரில் ஞானவாள் கொண்டே யெறிவன், சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் என்றார் திருமூலர் 18 ஆற்றோடு தும்பை யணிந்தாடு மம்பல வாணர்தமைப் போற்றா தவர்க்கடை யாளமுண் டேயிந்தப் பூதலத்தில் சோற்றாவி யற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே ஏற்றாலும் பிச்சை கிடையாம லேக்கற் றிருப்பர்களே. (பொ-ரை) கங்கா நதியோடு தும்பைமலரைத் தரித்துத் திருநடஞ்செய்யுஞ் சபாநாயகரைத் தோத்திரஞ் செய்யாத வர்கட்கு இவ்வுலகத்தில் அடையாளங்களுண்டு (அவை யென்ன வெனில்) சோற்று வாசனையுங் கிடைக்கப்பெறாமல். இன்ப மிழந்து, உடுக்க ஆடையு மொழிந்து, இரந்தாலும் பிச்சையகப் படாமல் ஏக்கமடைந்திருப்பார்கள். (வி-ரை) ஆவி - வாசனை. சுகம் - உலக இன்பம். ஏக்கறல் - தாழ்ந்து நிற்றல். சிவபிரானைப் போற்றாதவர்கள் உலக இன்பமும் நுகரமாட்டார்கள் என்பது. மருவுந் துவாத மார்க்க மில்லாதார். குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார், வெருவுந் திருமகள் வீட்டில்லையாகும், உருவுங் கிளையும் ஒருங் கிழப்பாரே - திருமந்திரம். 19 அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை நித்தனை யம்மை சிவகாம சுந்தரி நேசனையெங் கத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள் எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. (பொ-ரை) எல்லா உயிர்கட்குந் தந்தையை; முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனை; நித்தியனை; தாயாகிய சிவகாமசுந்தரியின் நாயகனை; எமது கர்த்தனை; கனகசபையில் நடம்புரியும் அழகனைத் தரிசிக்க நம் கண்கள் எத்தனை கோடி யுகங்களோ தவஞ்செய்திருக்கின்றன. (வி-ரை) உலகிலுள்ள எல்லாச் சமயத்தவர்களுஞ் சிவ பெருமானையே வழிபடினும் அவர் சிவநாமத்தால் வழிபடா மையானும், தத்துவங் கடந்த சொரூப உண்மையைத் தேறாமை யானும், சித்தாந்த சைவர் சிவநாமத்தால் இறைவனை வழிபடு கின்றா ராகலானும், கடவுள் சொரூபந் தத்துவங் கடந்த தென்னுங்கொள்கை யுடையா ராகலானும் கத்தனை யெனப் பொதுவாகக் கூறாது நங்கத்தனை என்றருளிச் செய்தார். பின்னர் அதனை வலியுறுத்த பொன்னம்பலத் தாடு மையனை என்றார் 20 திருச்செங்காடு நெருப்பான மேனியர் செங்காட்டி லாத்தி நிழலருகே இருப்பார் திருவுள மெப்படி யோவின்ன மென்னையன்னைக் கருப்பா சயக்குழிக் கேதள்ளு மோகண்ணன் காணரிய திருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே. (பொ-ரை) அக்கினிபோன்ற திருமேனியுடையவரும், திருச்செங்காட்டில் ஆத்தி மரத்தடியில் எழுந்தருளியிருப்ப வரும் ஆகிய சிவபெருமானது திருச்சித்த மெப்படியோ! அடியேனை யின்னந் தாயார் கருக்குழியில் வீழ்த்துமோ! (அல்லது) திருமால் காண்டற்கரிய திருவடியைக் கொடுத்தருளுமோ! ஒன்றுந் தெரியாது; எல்லாஞ் சிவன் செயலாம். (விரை) இதனால் ஆன்மாக்கள் பரதந்திரரென்றபடி. 21 திருவொற்றியூர் ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான் செய்யுந் திருவொற்றி யூருடை யீர்திரு நீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. (பொ-ரை) திருவொற்றியூரி லெழுந்தருளியுள்ள சிவ பெருமானே! கோழையுங் கட்டி, கண்களும் உள்வாங்கி, உணர்வுங் கெட்டு, தேகமும் பொய்யாகிவிடும்பொழுது அடியேன் ஒரு வரம் வேண்டுகிறேன் அதனைத் திருவருள் செய்ய வேண்டும். (அஃதென்னவெனில்) விபூதி யணிந்து, கைகளைத் தொழச் செய்து, பஞ்சாட்சரத்தை யோதக் கற்பித்தருளு மென்பது. (வி-ரை) செய்யும் என்பதைத் திருவொற்றியூ ரென்பதோடு கூட்டிப் பொருளுரைத்தலுமொன்று. கண்கள் உள்வாங்கல் - கண்கள் பஞ்சடைதல். அறிவழிதல் - புலன்களொடுங்கல். தேகம் பொய்யாதல் - உயிர்போதல்; தேகம் நழுவல். நீறு - மலத்தை நீறாக்குவது. திருநீறிடலும், கைதொழலும், ஐந்தெழுத் தோதலுஞ் சிவத்தியானத்தை யுண்டாக்குவனவாம். உயிர் உடலினின்றும் பிரியுங்காலத்து எப்பொருளையும் அவரவரது சிவத்தியானத்தோடு பிரிதல் வேண்டும். இல்லையேல் அவாவிற் கேற்ற பிறவி தாங்கும். மரிக்கும்போ துன்னும் வடிவினையாவி, பரிக்கு நினைவு பரிந்து எனச் சோமவார விரதகற்பங் கூறிய வாற்றா னுணர்க. சிவத்தியானத்தோடு நீங்கும் ஆன்மா சிவ பிரானைத் தரிசித்துச் சிவமாம் என்க. அங்கத்தை மண்ணுக் காக்கி அர்வத்தை யுனக்கே தந்து, பங்கத்தைப் போகமாற்றிப் பாவித்தேன் பரமாவுன்னைச், சங்கொத்த மேனிச்செல்வா சாதல்நாள் நாயேனுன்னை, எங்குற்றா யென்றபோதால் இங்குற்றேன் என்கண்டாயே - தேவாரம். 22 சுடப்படு வாரறி யார்புர மூன்றையுஞ் சுட்டபிரான் திடப்படு மாமதிற் றென்னொற்றி யூரன் றெருப்பரப்பின் நடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மேவிதி யேட்டைக் கிழிப்பதுவே. (பொ-ரை) மனமே! மூன்று புரங்களையும் எரித்த முதல்வனும், உறுதியான பெரிய மதில்களாற் சூழப்பெற்ற அழகிய திருவொற்றியூரி லெழுந்தருளி யுள்ளவனுமாகிய தியா கேசப்பெருமானது அகன்ற திருவீதியில் நடக்கும் அடியவர் களுடைய திருவடிகள் நமது சிரசின்மேற் படும்படி நன்றாக உருண்டு கிடத்தலே பிரமன் ஏட்டைக் கிழிப்பதாகும். (இவ் வுண்மையை ஞானமின்றி யிறந்து சுடுகாட்டிற்) சுடப்படுகின்ற கீழ்மக்கள் அறியார். (வி-ரை) தென் - தெற்குமாம். இச்செய்யுளால் திருவொற்றி யூரின் உயர்வும் அடியார்கள் பெருமையும் விளக்கிய வாறாம்.23 திருவிடைமருதூர் காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி ஓடே யெடுத்தென்ன வுள்ளன்பி லாதவ ரோங்கிவிண்ணோர் நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. (பொ-ரை) உள்ளத்தில் மெய்யன்பில்லாதவர்கள் வனத் திலே சஞ்சரித்தா லென்ன? காற்றையே யுணவாகக் கொண்டா (சீவித்தா) லென்ன? கந்தைத் துணியை யணிந்து பிட்சா பத்திரத்தையே தாங்கிப் பிச்சை யேற்றாலென்ன? (ஒன்றும் பயனில்லை) உயர்ந்த தேவர்களுலகமே யென்னத்தக்க திருவிடை மருதூரில் வீற்றிருந்தருளுஞ் சிவபெருமானிடத்தில் உண்மை யன்புடையவர்கள் பெண்களுடன் வீட்டிலே யிருந்தாலும் உண்மை ஞானத்தால் உண்டாகும் முத்தி யின்பத்தை யடை வார்கள். (வி-ரை) நாரியர்பால் வீடு என்றது இல்லறத்தை, நாரியர்பால் வீடு என்றது பொதுமகளிரில்லமெனக் கூறுவோரு முளர். அஃதீண்டுப் பொருந்தாது. இறைவனுக்கு வேண்டியது அன்பு. அவ்வன்புடையார் எவ்விடமிருந்தாலென்ன என்பதைக் குறிப்பித்தவாறாம். வெறும் வேடத்தால் ஒருவித பயனுமில்லை என்றபடி. இக்கருத்தை அடிகள் புண்ணிய புராதன புதுப் பூங்கொன்றை என்னுந் தொடக்கத்த ஆசிரியப்பாவால் விரித்துக் கூறியிருக்குமாற்றானுணர்க. கான காடு கலந்து திரியிலென், ஈனமின்றி யிருந்தவஞ் செய்திலென் என்றும், நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் என்றும் அப்பர் சுவாமிகளும் கூறியுள்ளார்கள். 24 தாயும் பகைகொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய சேயும் பகையுற வோரும் பகையிச் செகமும்பகை ஆயும் பொழுதி லருஞ்செல்வ நீங்கிலிங் காதலினாற் தோயுநெஞ் சேமரு தீசர்பொற் பாதஞ் சுதந்திரமே. (பொ-ரை) பிரவிர்த்தி மார்க்கத்தி லழுந்தும் மனமே! ஆராய்ந்து யோசிக்குங் காலத்தில், இவ்வுலகத்தில் அரிய பொருட்செல்வம் நீங்குமானால் பெற்ற தாயாரும் பகையாவர்; மணஞ்செய்த மனைவியரும் பகைவராவர்; தன் பிள்ளைகளும் பகைவராவார்கள்; சுற்றத்தினரும் பகைவராவர்; இவ்வுலகிலுள் மற்றவர்களும் பகைவராவார்கள். ஆனபடியால் நமக்குச் சுதந்திரமாக உள்ளது திருவிடைமருதூரி லெழுந்தருளியுள்ள சிவபெருமானாரது திருவடித்துணையே. (வி-ரை) கொண்ட பெண்டீர் என்றமையான் பொருட் பெண்டிரை விலக்கியவாறு காண்க. கல்லானே யாயினுங் கைப்பொரு ளொன்றுண்டாயின், எல்லாருஞ் சென்றங்கெதிர் கொள்வர் - இல்லானை, இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லா தவன்வாயிற் சொல்-ஔவையார். 25 திருக்கழுக்குன்றம் காடோ செடியோ கடற்புற மோகன மேமிகுந்த நாடோ நகரோ நகர்நடு வோநல மேமிகுந்த வீடோ புறந்திண்ணை யோதமி யேனுடல் வீழுமிட நீடோய் கழுக்குன்றி லீசா வுயிர்த்துணை நின்பதமே. (பொ-ரை) ஓங்கி யெழுந்துள்ள திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருந்தருளும் பெருமானே! அடியேன் சரீரஞ் சாயுமிடம் காட்டிலோ; மரத்தடியிலோ; கடற்கரையிலோ; பெருமை மிகுந்த நாட்டிலோ; நகரத்திலோ; நகரத்தினிடையிலோ; நன்மை சிறந்த வீட்டிலோ; வெளித்திண்ணையிலோ; (ஒன்றும் அறியேன் ஆதலால்) தேவரீர் திருவடிகளே எனது உயிர்க்குத் துணை. (வி-ரை) நாடு - நாடப்படுவது. வீட்டில் எல்லாச் சௌகரியங் களும் உண்மையான் நலமே மிகுந்த என்றார். தமியேன் - தனியேன்; வறியேன். இறப்பது நிச்சயம் அஃது எப்பொழுதோ எங்கேயோ நிகழ்ந்துவிடும். உடல்துணையை நான் பொருள் படுத்துகின்றேனில்லை. உயிர்த்துணையையே வேண்டி நிற்கிறேன் என்றபடி. உயிர்க்குத் துணை ஆண்டவன் திருவடி என்னும் உணர்வு பெற்றோர் உடல்நலம் நாடார். அது வீழுமிடங்களையுங் கருதார். உயிர்த்துணை யின்னதென்று ணராதார் தாம் உலவும்போதும் உடல்நலங் கருதி வாழ்ந்து, இறந்த பின்னரும் அதைத் தம்முடைமையாகக் கொள்ளுமாறு எனது உடலை இவ்விடத்தில் இவ்வாறு புதைக்கவேண்டு மென்று குறிப்பிடுகிறார். இம்மூடர்க்கும் அறிவுகொளுத்த ஓதிய பாடல் இது. 26 திருக்காளத்தி பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண்கயி லாபுரிக் காளத்தியே. (பொ-ரை) தென்கயிலாயமென்னுந் திருக்காளத்தியி லெழுந்தருளியுள்ள சிவபெருமானே! தாயார் வயிற்றிற் பத்து மாதந் தங்கிப் பின்னர்ப் பூமியிற் பிறந்து வளர்ந்து பட்டுவத்திரம் (முதலிய வதிரங்களைக்) கட்டி முத்தாபரணங்களையும் பவளமாலைகளையும் அணிந்து, இங்குமங்கும் ஓடியும் ஆடியும் (உலக இன்பங்களை நுகர்ந்து) பூர்த்தியாகிய பிறகு இறந்து கிடக்கின்ற பிணத்தின் சமீபத்திலே இனிமேல் இறக்கப்போகும் பிணங்கள் கூச்சலிட்டு அழுங் காரணமென்ன? (வி-ரை) திருக்காளத்திக்குத் தென்கயிலாயமென்றும் ஒரு பெயருண்டு. காளத்தி -ஆகுபெயர். காம்பிணங்கும் என்னுஞ் செய்யுளைப் பார்க்க. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலு, மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டாம், நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும், எமக்கென் னென்றிட் டுண்டிரும் - ஔவையார். 27 பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தாற்குண்டு பொன்படைத்தோன் தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத் தன்மையைப்போல் உன்னாற் பிரயோசனம் வேணதெல் லாமுண் டுனைப்பணியும் என்னாற் பிரயோசன மேதுண்டு காளத்தி யீசுரனே. (பொ-ரை) திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே! பொன்னாலாகவேண்டிய பயன் பொன்னைப் பெற்றவர்களுக்குண்டு. பொன்னைப் பெற்றவனால் பொன்னுக்கு ஆகவேண்டிய பயன் என்ன இருக்கின்றது, அது போலத் தேவரீரால் விளையவேண்டிய பயன் அடியேனுக்குப் பல உண்டு. தேவரீரைத் தொழும் அடியேனால் தேவரீருக்கு ஆகவேண்டிய பயன் என்ன இருக்கிறது (ஒன்றுமில்லை.) (வி-ரை) உவமானம் வெளிப்படை. சிவம் இன்பப்பொரு ளாகலான், அதனை யடையுஞ் சீவர்கட்கு அவ்வின்பம் நுகர்த லாகிய பயனுண்டு. சீவர்களால் சிவத்திற்கு என்ன பயனுளது என்றபடி. இதனை தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர், அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால், சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை யுறை சிவனே, எந்தையே யீசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனோர் கைம்மாறே என மாணிக்க வாசகசுவாமிகள் அருளிச் செய்தவாற்றா னுணர்க. 28 வாளான் மகவரிந் தூட்டவல்லே னல்லன் மாதுசொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன் றொண்டுசெய்து நாளாறிற் கண்ணிடந் தப்பவல் லேனல்ல னானினிச்சென் றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே. (பொ-ரை) வாளினால் (பெற்ற) பிள்ளையை யறுத்து (இறைவனை) உண்பிக்கப் (போதிய) வல்லமையுடையனல்லேன் மனைவி கூறிய சபதத்தால் இளமை யின்பத்தை விட்டொழிக்கத் தீரமுடையவனல்லேன், (ஐந்து நாளாகத்) திருத்தொண்டு செய்து ஆறாநாளிற் கண்ணைத் தோண்டி (ஆண்டவன் திருக்கண்ணில்) அழுத்த ஆற்றாலுடையவனல்லேன். இத்தகைய அடியேன் திருக்காளத்தி நாதனுக்கு இனிப்போய் ஆட்படுவது எப்படி?. (வி-ரை) வாளால் மகவரிந்தூட்டினவர் - சிறுத்தொண்ட நாயனார். மாதுசொன்ன சூளால் இளமை துறந்தவர் - திருநீல கண்ட நாயனார். காமத்தை வெறுத்தற்கரிய பருவம் இளமை யாகலான் இளமை துறக்க என்றார். காளையாம் பருவம் செத்துங் காமுறு இளமை செத்தும் என்றும், பொறையிலா வறிவுபோகப் புணர்விலா இளமை . . . . என்றும் வளையாபதி கூறுமாற்றானுணர்க. தொண்டு செய்து என்பதைப் பிறவற் றோடு சேர்ப்பினும் பொருந்தும், கண்ணிடந் தப்பினவர் - கண்ணப்ப நாயனார். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க. மகவை யரிதல், இளமை துறத்தல், கண்ணிடந்தப்பல் ஆகிய இச்செயல்கள் செயற்கருஞ் செயல்களாகும். இவை, உடலையும் மனைவி மக்களையும் பொருளாகக் கொண்டுள் ளார்க்கு மிக அருமையாகத் தோன்றும். அவைகளைப் பொருளாகக் கொள்ளாது அவைகளின் மேல் சிறிதும் பற்றின்றி அறிவுமயமாய் நிற்போர்க்கு அவைகள் மிக எளிமையாகத் தோன்றும். உலகப் பற்றை யொழித்தே கடவுளுக்கு ஆளாதல் வேண்டுமென்பதை அறிவித்தவாறாம். 29 முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற் செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடும் அப்போது கண்கலக் கப்பட வும்மமைத் தாயையனே எப்போது காணவல் லேன்றிருக் காளத்தி யீசுரனே. (பொ-ரை) ஐயனே! திருக்காளத்தியி லெழுந்தருளியுள்ள பெருமானே! மூன்று வேளையுஞ் சோறுண்ணவும், உறங்கவும், காமவிகாரத்தால் செப்புக்கிண்ணமென்று சொல்லப்படும் இளைய தனங்களையுடைய பெண்களோடு புணரவும், உயிர் விடுங்காலத்தில் கண்கலங்கித் துக்கப்படவுஞ் செய்தாய், (ஆகையால்) யான் எந்தக் காலத்தில் தேவரீரைத் தரிசிக்க வல்லவனாவேன்? (வி-ரை) முப்போது - காலை, உச்சி, மாலை. புசித்தலிலும் தூங்குவதிலும் இளைமுலையாருடன் சேர்வதிலுங் காலங் கழிப்போர் இறுதிக்காலத்துப் பெருந்துக்கமுற்று மரண மடைவர்; மீண்டும் உலகிற் பிறந்து உண்ணல், உறங்கல் முதலிய களியாட்டுக்களைச் செய்து இறப்பர். இங்ஙனே பிறப் பிறப்புக்களாற் றுன்புறுத்தப் பெறுவோர் கடவுள் திருவடியைக் காணார் என்னும் உண்மையை இப்பாசுரத்தால் அறி வுறுத்தினார். கடவுளைக் காணவேண்டுமாயின் மேற்போந்த மூன்றையும் விடவேண்டுமென்பது பெரிதுங் கவனிக்கத்தக்கது. உறக்கத்துக்குங் காம விச்சைக்குங் காரணமாயிருப்பது உணவு. அதுபற்றியே அறிவுடையோர் மிதமாகச் சத்துவ குண ஆகாரங்களைப் புசித்து வருவர். 30 இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்து மின்னார் அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும் புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள் பொன்முகலிக் கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. (பொ-ரை) பொன்முகலி நதிக்கரையிலும் கல்லால விருட்சத்தடியிலும் எழுந்தருளியுள்ள காளத்தியப்பனே! இவ் வுலகத்தில் உணவின் பொருட்டே அல்லும் பகலும் (அங்கு மிங்கு) மோடித்திரிந்து மெலிந்து பெண்களின் மின்னலைப் போன்ற இடையிலே, நோய்க்கிடமான குழிக்குச் சமீபத்தில் வழுவழுப்பு நிறைந்து (இரத்தநீர் முதலியன) சிந்துங் குழிப் புண்ணிலே சுழலும் வறியேனை ஆட்கொண்டருள்க. (வி-ரை) கடவுளிடத் தன்பின்றி ஆகாரத்தின் பொருட்டே யுழலுவோர் கதியை பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டரன் நாம நவில்கிலார், ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து, காக்கைக் கேயிரை யாகிக்கழிவரே என அப்பர்சுவாமிகள் கூறியவாற்றான் உணர்க. அவலம் - நோய்; வருத்தம். அசும்பு - வழுக்கு நிலம். புரை - குழிப்புண்; துவாரம். பொன்முகலி - திருக்காளத்தியிலுள்ள ஒரு நதி. கல்லால் - ஒருவகை மரம். அதனடியில் சிவபிரான் தக்ஷணாமூர்த்தமாக எழுந்தருளியிருப்பர்; கெண்டையந் தடங்கணல்லார் தம்மையே கெழுமவேண்டிக், குண்டராய்த் திரிதந்தைவர் குலைத்திடர்க் குழியினூக்கக், கண்டுநான் தரிக்கில்லேன் காத்துக்கொள் கறை சேர்கண்டா, அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர்மூ லட் டனீரே- தேவாரம். 31 நாறுங் குருதிச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீய் ஊறு மலக்குழி காமத் துவார மொளித்திடும்புண் தேறுந் தசைபிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட் டேறும் பதந்தரு வாய்திருக் காளத்தி யீசுரனே. (பொ-ரை) திருக்காளத்தியி லெழுந்தருளியுள்ள சிவ பெருமானே! துர்நாற்றம் வீசும் இரத்தம் நிரம்பிய நீர்க்கால்; தோற்குழி; தினந்தோறுஞ் சீயொழுகும் மலக்குழி; விருப்ப மெழுப்புந் தொளை; மறைந்திடும் புண்; மிகுந்த தசை வெடிப்பு; இத்தகைய இரகசியமான இடத்திலே யுள்ள சிறு இன்பத்தை விடுத்துப் (பேரின்பத்தை யடைய) தேவரீரது மேலான திரவடியை உதவி யருள்க. (வி-ரை) இதனால் அல்குலின் இழிவும், அதனது இன்பத்தின் சிறுமையும், இறைவன் திருவடிப் பெருமையும் தெரிவித்தவாறாம். 32 கைலாயம் கான்சாயும் வெள்ளி மலைக்கர சேனின் கழனம்பினேன் ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய்கர வூரனுக்கா மான்சாயச் செங்கை மழுவலஞ் சாய வளைந்தகொன்றைத் தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. (பொ-ரை) வாசனை வீசுந் திருக்கயிலாயத்துக்குத் தலைவனே! கரவூரிலுள்ள ஓரடியவன் நிமித்தம் அழகிய திருக்கரங்களி லேந்திய மான் இடது பக்கஞ் சாயவும் மழு வலது பக்கஞ் சாயவும் திருமுடியில் தரித்த கொன்றை மலரிலேயுள்ள தேன் சிந்தவும் அருமையான திருமேனியை வளைத்த சிவக் கொழுந்தே! அடியேன் தேவரீர் திருவடிகளை நம்பியுள்ளேன். மாமிசம் பொதிந்த உடலைத் தாங்கும் பிறவியை யொழித் தருள்க. (வி-ரை) கரவூர் - திருவிரிஞ்சிபுரம். இத்திருப்பதியில் ஓராசைவ சிறுவர்க்காகச் சிவபெருமான் திருமுடியை வளைத்தருளினர். விரிவை அத்தலபுராணத்திற் காண்க. இத் திருப்பாட்டால் ஊன் உடலை யொழிக்க விரும்புவோர் ஊன் உடலில்லாச் சிவபெருமானையே நம்பி வழிபடவேண்டு மென்பது பெறப்படுகிறது. பிறவியை யொழிக்கவே இறைவனை வணங்கவேண்டு மென்பதனை வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால், தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச், சூழ்ந்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன், பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானு முன்னைப் பரவுவனே என வரூஉம் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கா னுணர்க. 33 இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துதின்று பல்லுங் கறையற்று வெள்வாயு மாயொன்றிற் பற்றுமின்றிச் சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே அல்லும் பகலு மிருப்பதென் றோகயி லாயத்தனே. (பொ-ரை) திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே! வீட்டைவிட்டுத் துறந்து, பசிநேர்ந்த காலத்திற் பிச்சை யேற்றுண்டு, பற்களில் (தாம்பூலக்) கறையின்றி வெளுத்த வாயாகி ஒரு பொருளிலும் பற்றில்லாமற் சொல்லையும் பொருளையுங் கடந்து (போக்கி) அவைகளுக்கு மேலாக விளையுஞ் சுகானந்த நித்திரையிலே இரவும் பகலும் இருப்பது எந்தக் காலமோ?. (வி-ரை) இல்லத்தில் மனைவி மக்களானும் பிறவாற்றானும் மாறிமாறிக் கவலைகள் பெருகுமாகலானும், அவை மனதை அலைத்து நிட்டைகூடலைத் தடுக்குமாகலானும், அறங்களுட் டலையாயது துறவற மாகலானும் இல்லந் துறந்து என்றார். இல்லத்திருந்தும் விடய வின்பங்களில் தோயாத அறிவாற்ற லுடையோர் இல்லத்திற் றங்கியே நிட்டைகூடி யிருப்பரென்க. இக்கருத்தையுஞ் சுவாமிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். துறவொழுக்கம் பூண்டார் மானாபிமானமின்றி எல்லாஞ் சிவன் செயல் எல்லாஞ் சிவனுடைமை யென்று பசிவந்த காலத்தில் இரந்துண் பராகலான் பசிவந்த போதங் கிரந்துதின்று என்றார். அச்சிவ னுண்ணின்ற அருளை யறிந்தவர், உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதமற நினைந், திசைகெட் டேகாந்தத் தேறியிருப் பாரே எனத் திருமந்திரங் கூறுவது காண்க. தாம்பூலந் தரித்தல் முதலியன இல்லற மேற்கொண் டொழுகுவோர்க்கு ஏற்படுத்தப்பட்டன. பற்றுள்ளமட்டும் சொல்லும் பொருளுந் தலைகாட்டுமாகலான் பற்றுமின்றிச் சொல்லும் பொருளுமிழந்து என்றார். சொல்லும் பொருளும் மாயாகாரியங்களாகலானும், அவ்வாசனை யுள்ளவரை நிமல நிட்டையுறாதாகலானும் சொல்லும் பொருளு மிழந்து என்றார். சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்துநின்ற சொலற்கரிய சூழ லாயிது வுன்றன்மை என்றார் அப்பர் சுவாமிகளும். சுகானந்தத் தூக்கம் - ஞானானந்தம்; யோகானந்தத்திற்கு மேற்பட்டது. யோகானந்தம் ஞானானந்தத்திற்குச் சோபான மென்பது சித்தாந்த ஞானநூற் கொள்கை. ஞானானந்தம் எப்பொழுதும் நீங்காததாகலான் அல்லும் பகலும் என்றார். 34 சினந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த் தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற வனந்தனி லென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே. (பொ-ரை) சிவபெருமானே! திருக்கயிலைவாசனே! கோபத்தை யொழித்து, ஆசையை யறுத்து, செயலற்று, நினைந்த வைகளை யழித்து, மறப்பையும் அகற்றி, எண்ணமில் லாதவனாய்த் தனித்துநின்று சிவானந்த நித்திரை பொருந்து கின்ற தூக்கத்திலே எந்தக் காலத்தில் நிலைத்திருப்பேன்? (வி-ரை) சினத்துக்கு அடிப்படை ஆசை. ஆசை நிறைவேறா விடத்துச் சினம் பிறத்தலின் என்க. சினமும் ஆசையுமுள்ள மட்டும் செய்கை நிகழ்ந்துகொண்டிருக்குமாதலின் மூன்றாவ தாகச் செய்கையைக் குறிப்பிட்டார். நினைப்புள்ள போது நினையாமையும், நினையாமையுள்ள போது நினைப்பும் மாறிமாறிப் போந்தடுக்குமாகலின் இரண்டையுமற்று என்றார். நினைப்பும் மறப்பும் அற்ற சிந்தையே நிர்ச்சிந்தை யெனப்படும். அச்சிந்தையே தியானத்துக்குரியது. நினைப்பும் மறப்பும் அற்றவர் நெஞ்சில் என்றும், நினைப்பற நினைந்தேன் என்றுஞ் சான்றோர் கூறியிருத்தல் காண்க. கோபம் ஆசை முதலியன தத்துவக் காரியங்கள். அவையுள்ள மட்டும் மனிதன் நிர்ச்சிந்தை யுடையனாகமாட்டான். அது பற்றியே அவைகளை யறுக்க வேண்டுமென்றார். இவைகட்குப் பிரமாணமும் வியாக்கி யானமும் விரிக்கிற் பெருகும். தன்னந் தனியேயிருந்து என்றது தன்னைத்தானறிந்து நிற்றலை யென்க. தத்துவச் செயல் களற்றதும் ஆன்மா தன்னைத்தானறிந்து சிவானந்தத்தி லழுந்து மாகலான் தனந்தனியேயிருந்து ஆனந்த நித்திரை . . . என்றார். தன்னிற்றன்னை யறியுந் தலைமகன், தன்னிற் றன்னை யறியிற் றலைப்படும், தன்னிற் றன்னை யறிவில னாயிடில், தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே - என்றார் அப்பர் சுவாமிகள். ஆனந்த நித்திரை தங்குகின்ற வனம் என்பது மனக் கண்ணால் நோக்கத்தக்கது. என்னே இன்பம்! 35 கையார வேற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத் தையா துடுத்துநின் சன்னிதிக் கேவந்து சந்ததமு மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப ஐயாவென் றோல மிடுவ தென்றோகயி லாயத்தனே. (பொ-ரை) திருக்காயிலாயபதியே! கைநிரம்பப் பிச்சை வாங்கி நின்று அவ்வண்ணமே புசித்துக் (கிழிந்த) கரித்துணியைத் தையாமல் அணிந்து, தேவரீர் திருச்சந்நிதி யடைந்து, எந்நேரமும் உடல் பூமியில் பொருந்தும்படி தேவரீரைத் தொழுது, அகத்தே உண்டாகும் (ஆனந்த மேலீட்டான்) மயிர்ச்சிலி சிலிர்ப்ப ஐயனே என்று அழுது முறையிடுவது எந்த நாளோ? (வி-ரை) ஊணும் உடையுமே துறவிகளுக்கு வேண்டு மென்பது ஈண்டு அறியத்தக்கது. கரித்துணி, தையாது என்பவைகள் மானாபிமான மில்லாமையைக் குறிப்பவைகள். மெய்யாரப்பணிதல் - அட்டாங்க நமகாரஞ் செய்தல். உரோமம் விதிர்விதிர்ப்ப - புளகங்கொள்ள. ஓலமிடல் - அபயமிடல், அழைத்தல். 36 நீறார்த்த மேனி யுரோமஞ் சிலிர்த்துள நெக்குநெக்குச் சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகிநின் சீரடிக்கே மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர் ஆறாய்ப் பெருகக் கிடப்பதென் றோகயி லாயத்தனே. (பொ-ரை) திருக்கயிலாய நாதனே! விபூதியணிந்த உடலிலே மயிர்க்கூச்செறிந்து, மனம்விண்டு விண்டு சேறாய்க் கரைந்து கரைந்து உருகித் தேவரீர் திருவடியிலே இடையறாத தியானம் பொருந்திப் பேரின்ப மேலிட்டு மார்பிலே கண்களினின்றும் நீரானது ஆறாகப் பெருகும்படி நிலைத்திருப்பது எந்தநாளோ? (வி-ரை) ஈண்டு அன்பர்கள் அடையாளங்கள் குறிக்கப் பட்டன. விரிவு உபதேசகாண்டத்திற் காண்க. தூயவெண்ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப், பாய்வதுபோ லன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல், மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் விதியுள்ளே- பெரியபுராணம். 37 செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின் எல்லையிற் புக்கிட வேதாந்த மாயெனக் காமிடத்தே அல்லலற் றென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே. (பொ-ரை) சிவபெருமானே! திருக்கயிலைத் தலைவனே! நாடோறும் தனவந்தர்கள் பின்னே தொடர்ந்து போய்த் தனக்குள்ள கஷ்டங்களெல்லாவற்றையும் எடுத்துச்சொல்லிப் பல்லைக்காட்டி வருந்தாமல், சிவானந்தப் பரவெளியிலே பிரவேசித்துத் தன்னந்தனியனாய் எனக்குகந்த இடத்திலே துன்பம் நீங்கி எந்நாளிருப்பேன்?. (வி-ரை) பொருட்செல்வரைநாடி அவமானமும் இடருங் கவலையும் அடைவதினும், அருட்செல்வனாகிய ஆண்டவனை யடைந்து கவலையற்று ஆனந்தமுற்றிருப்பது மேன்மை யென்ற படி. அத்தன் - தந்தையுமாம். 38 மந்திக் குருளையொத் தேனில்லை நாயேன் வழக்கறிந்துஞ் சிந்திக்குஞ் சிந்தையை யானென்செய் வேனெனைத்தீ தகற்றிப் புந்திப் பரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல் எந்தைக் குரியவன் காணத் தனேகயி லாயத்தனே. (பொ-ரை) சிவபெருமானே! திருக்கயிலாயபதியே! அடியேன் குரங்குக்குட்டியைப் போன்றவனல்லன். சிறியேனது வழக்கத்தை யுணர்ந்திருந்தும் (பிரவர்த்திமார்க்கத்துக் கேது வான காரியங்களை) எண்ணும் மனதை யான் என்ன செய்வேன்? அடியேனைத் தீமையினின்றும் விலக்கி உள்ளத்தெழும் அன்பால் குட்டியைத்தானே கவ்விக்கொண்டு செல்கின்ற பூனையைப் போல ஆட்கொண்டருளத் தந்தையாகிய தேவரீருக்கு உரிமை பூண்டிருக்கிறேன். (வி-ரை) தாய்க்குரங்கு தான் ஓரிடத்திலிருந்து மற்றோ ரிடத்திற்குச் செல்லுங்காலத்துத் தன் குட்டியைத் தானே தூக்கிச் செல்லாது. குட்டியே தாய்க்குரங்கை உறுதியாகப் பற்றிக் கொள்ளும். இதனை மர்க்கடநியாயமென்ப. இவ்வுப மானத்தால் சீவர்கள் தம் முயற்சியால் சிவத்தைப் பற்றுதலில்லை யென்பதை விளக்கியவாறாம். தாய்ப்பூனை யோரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுங்காலத்துத் தன் குட்டியைத் தானே கவ்விச் செல்லும். இதனை மார்ச்சால நியாய மென்ப. இவ் வுவமையைற் சிவபெருமான் திருவருளே சீவர்களைத் தாங்கிச் சென்று நன்னெறியிலுய்க்க வேண்டுமென்பதை அறிவுறுத்திய வாறாம். அவனருளாலே அவன்தாள் வணங்கி என மாணிக்க வாசக சுவாமிகளும், என்னை யேதும் அறிந்திலேன் எம்பிரான், தன்னை யானுமுன் ஏதும் அறிந்திலேன்; என்னைத் தன்னடி யானென் றறிதலும், தன்னை யானும் பிரானென் றறிந்தனே என அப்பர் சுவாமிகளும் அருளிச்செய்துள்ளார்கள். 39 வருந்தேன் பிறந்து மிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தே னாகிற் புகுகின்றி லேன்புகழ் வாரிடத்தில் இருந்தே னினியவர் கூட்டம் விடேனிய லஞ்செழுத்தாம் அருந்தே னருந்துவ னின்னரு ளாற்கயி லாயத்தனே. (பொ-ரை) திருக்கயிலை நாயகனே! தேவரீர் திருவருளால் இனி ஜெனனஞ் செய்தும் மரணமடைந்துந் துன்பப்பட மாட்டேன்; மயக்கஞ் செய்யும் ஐம்புலன் வழியே சென்று புறப் பொருள்களில் நிலைக்கமாட்டேன்; நரகத்திற் பிரவேசிக்க மாட்டேன்; தேவரீர் திருவடிகளைப் புகழும் அடியவர் திருக் கூட்டத்திற் சேர்ந்துவிட்டேன்; இனி அத்திருக் கூட்டத்தை விட்டுப் பிரியமாட்டேன்; அழகிய ஸ்ரீ பஞ்சாக்கர மென்னும் அரிய தேனை யுண்பேன். (வி-ரை) புலன்கள் மாறிமாறி மயக்கி யீர்த்துப் புறப் பொருள்களி லழுந்தி யறிவைக் கெடுக்கின்றமையான் மயக்கும் புலன் என்றார். மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்புல னைந்தின்வழி யடைத்து என்றார் மாணிக்கவாசகரும், ஸ்ரீபஞ்சாக்கரத்தை திருமூலர் நன்று கண்டூர் நமச்சிவாயப் பழம் என்று கூறியிருத்தல் காண்க. 40 மதுரை விடப்படு மோவிப் பிரபஞ்ச வாழ்க்கையை விட்டுமனந் திடப்படு மோநின் னருளின்றி யேதின மேயலையக் கடப்படு மோவற்பர் வாயிலிற் சென்றுகண் ணீர்ததும்பிப் படப்படு மோசொக்க நாதா சவுந்தர பாண்டியனே. (பொ-ரை) சொக்கலிங்கப் பருமானே! சோமசுந்தர பாண்டியனே! தேவரீர் திருவருட்டுணையின்றி, இவ்வுலக வாழ்க்கையை விட்டுவிட முடியுமோ? அதனை விடுத்து (மீண்டும்) மனமானது (அதிற் றோயாமலிருக்கும்) உறுதியைப் பெறுமோ? நாடோறும் மனம் அலைந்துதிரியக் கடமைப் படுமோ? ஈனர்கள் வீட்டுவாயில்களிற் போய்க் கண்களில் நீர் நிரம்பித் துன்பமடையக் கூடுமோ? (வி-ரை) சிவபிரான் திருவருளாலேயே சீவர்கட்கு இன்ப துன்பங்கள் நிகழ்கின்றன என்பது. 41 பொது உடைகோ வணமுண் டுறங்கப் புறந்திண்ணை யுண்டுணவிங் கடைகா யிலையுண் டருந்தத்தண் ணீருண் டருந்துணைக்கே விடையேறு மீசர் திருநாம முண்டிந்த மேதினியில் வடகோடு யர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. (பொ-ரை) இந்த உலகத்திலே உடுப்பதற்குக் கௌபீனம் உண்டு; தூங்குவதற்குத் திண்ணைப்புறம் உண்டு; ஆகாரத்திற்குக் கிடைக்குங் காயும் இலையும் உண்டு; குடிப்பதற்குத் தண்ணீர் உண்டு; நீங்காத துணைக்கு இடப வாகனத்தின் மேல் ஆரோ கணித்தருளுஞ் சிவபெருமானுடைய திருநாமம் உண்டு; ஆன படியால் ஆகாயத்திலுள்ள சந்திரனுக்கு வடமுனை உயர்ந்தா லென்ன? தென்முனை தாழ்ந்தாலென்ன? (வி-ரை) மானாபிமானம் விடுத்த சாதுக்களுக்கு நன்மை தீமையில்லை; புண்ணிய பாவமில்லை; க்ஷேமக்ஷாமமில்லை என்றபடி. சந்திரன் வடமுனை உயர்ந்திருந்தால் ஊருக்கு நன்மை யெனவும், தென்முனை சாய்ந்திருந்தால் ஊருக்குத் தீமை யெனவும் நூல்கள் கூறுகின்றன. இது விருப்பு வெறுப்புள்ள இல்லறத்தார்க்கன்றி அவையில்லாத துறவறத்தார்க்கில்லை யென்பது அறியத்தக்கது, திருஞானசம்பந்தர் அருளிச் செய்த கோளறுபதிகம் நோக்க. நாளென்செயும் வினைதானென் செயும் எனை நாடிவந்த கோளென்செய்யும் என்றார் அருண கிரிநாதரும். 42 வீடு நமக்குத் திருவாலங் காடு விமலர்தந்த ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திர மோங்குசெல்வ நாடு நமக்குண்டு கேட்டதெல் லாந்தர நன்னெஞ்சமே ஈடு நமக்குச் சொலவோ வொருவரு மிங்கில்லையே. (பொ-ரை) நல்ல மனமே! நமக்கு வீடாகவிருப்பது திருவாலங்காடு என்னுந் திருத்தலம். சிவபெருமான் கொடுத் தருளிய திருவோடு நமக்கு உண்டு; அஃது எக்காலத்தும் வற்றாத பாத்திரமாகும். நாம் வேண்டியவற்றை யெல்லாம் கொடுக்க மேம்படுஞ் செல்வம் நிறைந்த தேசங்கள் உண்டு. (ஆகையால்) நமக்கு ஒப்புசொல்ல இங்கு ஒருவருமில்லை. (வி-ரை) திருவாலங்காடு - தொண்டைநாட்டு முப்பா னிரண்டு திருப்பதிகளுள் ஒன்று. காரைக்காலம்மையார் கயிலையடைந்து கடவுளைத் திருவடியின்பங் கேட்ட காலத்துப் பெருமான் அம்மையாரை நோக்கி அவ்வின்பந் திருவாலங் காட்டிற் சென்று அடைவாயாக என்று திருவாய் மலர்ந் தருளினர். இதனாலே ஆன்மாக்கள் பந்தம்விட்டு நிற்குமிடந் திருவாலங்காடு என்பது பெறப்படுகிறது. இது பற்றியே வீடுநமக்குத் திருவாலங்காடு என்றார். விமலர் - மல மில்லாதவர். திருவோட்டிற்கு வற்றுதலில்லை யென்பது வெளிப்படை. துறவறமேற்கொண்டோர்க்கு ஒப்பாவர் ஒருவரு மில்லை என்றபடி. 43 நாடிக்கொண் டீசரை நாட்டமுற் றாயிலை நாதரடி தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலைசெக மாயைவந்து மூடிக்கொண் டோமென்றுங் காமாயுதங்கண் முனிந்தவென்றும் பீடிப்பையோ நெஞ்சமேயுனைப் போலில்லை பித்தர்களே. (பொ-ரை) மனமே! சிவபெருமானை விசாரித்தறிந்து அவர் மேல் குறிவைத்தாயில்லை; அக்கடவுளின் திருவடிகளைத் தேடிக் கொண்டாடித் தெளிவுற்றாயில்லை; (இவைகளைச் செய்யாமல் என்பாலணுகி) உலக மாயையினால் மறைக்கப்பட்டோ மென்றும், மன்மத பாணங்கள் (எம்மைச்) சீறித் துன்புறுத்து கின்றன வென்றும் (முறையிட்டு என்னை) வருத்துவையோ? உன்னைப்போலப் பித்தர்கள் இல்லை. (வி-ரை) மனமே! சிவபெருமானை நாடாமல் உலக விடயங் களால் துன்பப்படுகின்றேம் என்று சொல்வது அறியாமை. செய்யவேண்டிய கடமை சிவத் தியானம் என்பதும், அதுசெய்யின் உலகத்துன்பங்கள் தாமே விலகுமென்பதும், பெறப்படுகின்றன. இச்செய்யுள் மனதை நோக்கி அறிவு சொல்லுகிறவகையாக அருளிச்செய்யப் பெற்றது. மன்மத பாணங்கள் - தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம். 44 கையொன்றுசெய்ய விழியொன்று நாடக் கருத்தொன் றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழு மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே. (பொ-ரை) அடியவர்களுடைய இருவினையும் ஒழித்தவனே! கையானது ஒரு தொழிலைச் செய்ய, கண் ஒரு பொருளை நோக்க, மனம் ஒன்றை நினைக்க, பொய் பொருந்திய வஞ்ச நாவானது ஒன்றைப் பற்றி வார்த்தையாட, புலால் நாற்றம் வீசும் உடலானது ஒரு பரிச உணர்ச்சியில் நிற்க, காது ஒன்றைக் கேட்கப் பிரியங்கொள்ளுஞ் சிறியேன் செய்யும் பூசையை எப்படி ஏற்றுக் கொள்வாய்? (வி-ரை) புலன்கள் ஒடுங்கி மனமொன்றவே சிவபூசை செய்யப்படல்வேண்டும். அவ்வொற்றுமையால் துவிதபாவனை ஒழிந்து அத்துவித பாவனை சித்திக்கும். அத்துவிதத்துக்குத் துவைதம் சோபனம். வேத முதலிய கலைகள் இரண்டையும் வலியுறுத்திப் பேசும். வேதமுட னாகம புராண இதிகாசமுதல வேறுமுள. கலைகளெல்லாம், மிக்கான அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாயெடுத்துரைக்கும், ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞானமாகும். என வருந் தாயுமானார் திருவாக்கு கருதற்பாலது. அத்துவித ஞானத்துக்கு இன்றியமையாத சிவபூசை செய்யும்போது ஐம்புலனும் மனமும் அலைந்து திரிதலாகாது. புலன்கள் வழி மனதைச் செலுத்திச் செய்யப்படும் பூசையினால் எவ்வித நலனும் விளையாது; ஆண்டவனும் அப்பூசையை ஏற்றுக்கொள்ளான். சிவபூசை செய்யும்போது கருவி கரணங்களையும் அப்பூசைவழி நிறுத்த வேண்டும். புலன்களையும் மனதையும் பூசைவழி செலுத்தாது செய்யப்படும் பூசை திருட்டுப் பூசையெனப்படும். ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள வளப்பருங் கரணங்க ணான்குஞ் - சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிக மேயாக - இந்துவாழ் சடையானாடு மானந்த வெல்லையில் தனிப்பெருங் கூத்தின் - வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியுண் மலர்ந்தார் - பெரிய புராணம். ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை- தேவாரம். நாவின் கொடுமை நோக்கி, பொய்யொன்று வஞ்சகநா என்றார். என்னை? பாவங்களில் தலையாய பொய்யை நிகழ்த்துவது நாவாகலான் என்க. 45 கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால் எண்ணுண்டு சாத்த வெதிர்நிற்க வீச னிருக்கையிலே மண்ணுண்டு போகு தையோ கெடுவீரிந்த மானிடமே. (பொ-ரை) கெட்டுப்போகின்றவர்களே! (சிவபெருமானைத்) தரிசிப்பதற்குக் கண்களுண்டு; (அவனைச்) சிந்திப்பதற்கு மனம் உண்டு; குழைந்து உருகி (அவன் புகழைப்) பாடுவதற்குப் பண்கள் உண்டு; (அவைகளைப் பிறர் பாடக்) கேட்பதற்குக் காதுகள் உண்டு; (இறைவன் திருவடிகளைப்) பச்சிலையால் அருச்சிப் பதற்கு மந்திரங்களுண்டு. இத்திருத்தொண்டுகளைச் செய்து திருமுன் நிற்பதற்கு (நம் பொருட்டுச்) சிவபெருமான் திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கையில் (மேற்போந்த காரியங்களுக்கெனத் தாங்கிய) இம்மனித சரீரத்தை ஐயோ! மண் தின்று போகிறதே! (வி-ரை) உலகத்திலுள்ள பல வகைப் பிறவிகளிற் சிறந்தது மானுடப்பிறவி. அப்பிறவியில் இறைவனாற் கொடுக்கப் பெற்றுள்ள கண் முதலிய உறுப்புக்கள் அவ்விறைவனைக் காணவும் வழிபடவுமே பயன்படல் வேண்டும். திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய்மலர்ந்துள்ள திரு அங்கமாலையை உய்த் துணர்க. இறைவன் வழிபாட்டிற்குக் கிடைக்கப்பெற்ற மானுட தேகத்தைப் பிறவழிகளிற் படுத்துவோர் மண்ணுக்கிரையாவர் என்பார். மண்ணுண்டு போகுதையோ இந்த மானிடமே என்றார். மண்ணாவது திண்ணம் என்றார் சுந்தரரும். 46 சொல்லினுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லினு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர் இல்லிலு மன்ப ரிடத்திலு மீச னிருக்குமிடங் கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே. (பொ-ரை) எல்லாச் செல்வமுடையவனும் நெற்றியில் கண்ணை யுடையவனுமாகிய எமது கடவுள் மந்திரத்திலும், மந்திரமுடிவிலும், வேதமாகிய சுருதியிலும், இருளிலும்; குற்ற மில்லாத ஆகாயத்திலும், தத்துவங்களை ஆராய்ச்சி செய்து அவைகளைச் சடமென்றொதுக்கிச் சித்துப்பொருளான சிவத்தோடு கலந்து நிட்டை புரிவோர் வாழும் வீடுகளிலும், அன்பர்களிடத்திலும், வீற்றிருப்ப தல்லாமல் கல்லினிடத்திலுஞ் செம்பினிடத்திலுமோ வீற்றிருப்பான்? (வி-ரை) ஈசன் - சர்வ ஐசுவரியமுடையவன். கண்நுதல் - நெற்றியிற் கண்ணையுடையவன். வேதம் - அறிதற்கருவி. சுருதி - காது; ஒலி - வேதம் எழுதாக் கிளவியாகலானும் ஒலி மாத்திரையாகக் கேட்கப்படுதலானுஞ் சுருதியெனப்பட்டது. இச்செய்யுள், எங்கும் நிறைந்துள்ள கடவுளைக் கல்லாகவுஞ் செம்பாகவுங் கருதுவோர்க்கும், அவ்வுருவங்களிலன்றிப் பிற விடங்களிற் கடவுளுண்மையை மறுப்போர்க்கும் அறிவு கொளுத்த எழுந்ததாகும். இத்திருவாக்கு கடவுள் எங்கும் நிறைந்தவன் என்னுங் கொள்கையுடையராய், அவன் உண்மை வடிவம், வாக்கு, மனங்கட்கு எட்டாததெனக் கொண்டு, அவனது சகள வடிவத்தை வழிபடும் அறிவுடையவர்கட்காக எழுந்ததன்று என்பது கவனிக்கத்தக்கது. சிலர் இத்திருப்பாசுரத்தின் உள்ளக் கிடக்கையை நுணித்தறியாது ஆலய வழிபாட்டை மறுக் கின்றனர். அன்னவரைச் சுவாமிகள் அருள்வாக்குகளை முற்றிலும் ஆராய்ச்சி செய்யாதவரென ஒதுக்குக. சுவாமிகள் ஆலய வழிபாட்டைப் போற்றிக் கூறிய பாக்கள் இந்நூலில் பல படக்கிடத்தல் கவனிக்கற்பாலது. பொருளைக் கல் செம்பாகக் கொள்வோர்க்குக் கடவுளில்லை. கடவுளாகக் கொள்வோர்க்குக் கல் செம்பில்லை என்றபடி. உளியிட்ட கல்லையும் என்னும் பாட்டிற்கு வரைந்துள்ள விசேடம் நோக்குக. 47 வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால் நினைப்போ தளவுநில் லாதுகண் டாய்சிவன் பாதநினை நினைப்போரை மேவு நினையாரை நீங்கிந் நெறியினின்றால் உனைப்போ லொருவருண் டோமன மேயெனக் குற்றவரே. (பொ-ரை) மனமே! ஒரு தேகமென்பது முன்னை வினையின் பயனேயாம். அது வினை நீங்கினால் இறையளவும் நில்லாது. (ஆகையால்) சிவபெருமான் திருவடிகளைச் சிந்தனை செய்; சிந்தனை செய்வோரைச் சேர்ந்திரு; சிந்தனை செய்யாதவரை விட்டு விலகு. இந்த நல்ல வழியில் நின்றால் உன்னைப் போல எனக்கு உற்றதுணைவர் வேறொரு வருளரோ? (வி-ரை) பிராரத்த வினையின் பயனே தேகமாகும். பிராரத்த வினை நசித்துவிடின் தேகமென்பதேயில்லை. பிராரத்த வினையை நசிக்கச்செய்யாமல், அதன் மூலமாக ஆகாமிய வினையை யேற்றிக்கொண்டால் பிறவி யொழியாது. பிராரத்த வினையை நுகர்ந்து வருகையில் சிவபூசையிலுஞ் சிவாலய வழிபாடு முதலியவற்றிலுங் கருத்தைப் பதித்துவிட்டால் ஆகாமிய வினை யேறுதற்கு இடம் பெறாதொழியும். எனவே பிறவியை யொழிப்பதற்கு வழிகள் சிவபூசை சிவாலய சேவை அடியாருறவு முதலியனவாம். 48 பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து முட்டச் சுருட்டியென் மொய்குழ லாள்கையில் முன்கொடுத்துக் கட்டி யிருந்த கனமாயக் காரிதன் காமமெல்லாம் விட்டுப் பிரியவென் றோவிங்ங னேசிவன் மீண்டதுவே. (பொ-ரை) பட்டுத்துணியைக் கிழித்துப் பெரிய ஓர் ஊசியை விருப்புடனெடுத்து, (அப்பட்டுத் துண்டில் வைத்து) நன்றாகச் சுருட்டி, எனது நெருங்கிய கூந்தலையுடைய மனைவியின் கரத்திலே விரைந்து கொடுத்தருளி, என்னைப் பந்தித்திருந்த பெரிய மாயாவல்லியின் ஆசைகளெல்லாம் என்னை விட்டொழிய வேண்டியல்லவோ இப்படியே சிவகுருநாதன் எழுந்தருளிவந்தது?. (வி-ரை) சுவாமிகள் தமக்குக் கடவுள் அருளிச்செய்த வரலாற்றை இத்திருப்பாட்டிற் குறித்துள்ளார்கள். 49 சூதுற்ற கொங்கையு மானார் கலவியுஞ் சூழ்பொருளும் போதுற்ற பூசலுக் கென்செய லாஞ்செய்த புண்ணியத்தால் தீதற்ற மன்னவன் சிந்தையி னின்று தெளிவதற்கோ காதற்ற வூசியைத் தந்துவிட் டானென்றன் கைதனிலே. (பொ-ரை) சூதாடு கருவிபோன்ற தனங்களையுடைய மனைவியும், மான்போன்ற கண்களையுடைய காமக்கிழத்தியரின் புணர்ச்சி யின்பமும், மற்றுஞ் சூழ்ந்துள்ள பொருள்களும் மரணகாலத்தி லுண்டாகின்ற இந்திரியங்களின் போருக்கு என் செய்யக்கூடும்? முற்பிறப்பிற் செய்த புண்ணியத்தால் மாசில்லாத் தலைவனாகிய சிவபெருமான், உள்ளத்திலே இப்பிறப்பில் உண்மை தெளியும் பொருட்டோ என் கரத்திற் காதற்ற ஊசியைக் கொடுத்தருளினன்? (வி-ரை) கொங்கை - ஆகுபெயர். மானார் சூதுற்ற கொங்கையும் கலவியும் எனக் கூட்டிப் பொருள்கொள்ளலு மொன்று. போது - எப்போது மெனினுமாம். ஐம்புலன்கள் பூசல் விளைக்கின்றன வென்பதை ஐவர் வந்து வதுதருகிது விடென்று, ஒப்பவே நலியலுற்றால் உய்யுமா றறிய மாட்டேன் என்றும் கூட்டமா யைவர்வந்து கொடுந்தொழிற் குணத்தராகி, ஆட்டுவார்க் காற்றகில்லேன் என்றும் அப்பர் சுவாமிகள் அருளிச்செய்தவாற்றா னுணர்க. மன்னவன் என்றது மருத வாணரை. தீது அற்ற - இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய சிந்தையினின்றி எனக்கொள்ளினுமாம். 50 வாதுற்ற திண்புய ரண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்றெப் போதும் புகலுநெஞ் சேயிந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப் புதைந்த திரவியமென் காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே. (பொ-ரை) மனமே! (அருச்சுனன் முதலியவரோடு) போர் புரிந்த வலிய தோளையுடையவரும், திருவண்ணாமலையி லெழுந்தருளி யிருப்பவரும் ஆகிய சிவபெருமானார் திருவடித் தாமரைகளை யடைந்து எந்நேரமும் தோத்திரஞ் செய். இவ் வுலகத்தில் தீமை நிறைந்த (இன்பம், கல்வி, சீர், ஐசுவரியம் முதலிய) செல்வமிருந்து மென்ன பயன்? வருந்தித் தேடிப் புதைத்துவைத்துள்ள பணமிருந்து மென்ன பயன்? மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வராது. (வி-ரை) கடைவழிக்குத் துணையாயிருப்பது சிவபெருமான் திருவடித்துணையாகலான். அதனையே போற்றவேண்டு மென்பது. நம்பொருள் நமக்களென்று நச்சி யிச்சை செய்து நீர், அம்பரம் அடைந்துசால அல்லலுய்ப்ப தென்முனம், உம்பர் நாதன் உத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை, நம்பன் மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே - தேவாரம். 51 வேதத்தி னுட்பொருண் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித் தவன்மொழி கேட்டிலையோ செய்தபுண்ணி யத்தால் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே. (பொ-ரை) வேதத்தின் உட்பொருளும், மண்ணாசையை யும், பெண்ணாசையையும் விட்டுவிடும்படி உபதேசித்தவனும் ஆகிய சிவகுருநாதனது ஒரு மொழியைக் கேட்க வில்லையோ? பூர்வ புண்ணியத்தால் சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளி மயமாகிறபொழுது (இறக்குங் காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன்வாராது. (வி-ரை) மண்ணாசை பெண்ணாசைகளை விட்டுவிடும்படி வேதத்தின் உட்கருத்தை உபதேசித்தவன் எனப் பொருள் கூறினும் பொருந்தும். பொன்னாசையையும் உடன்சேர்க்க. மூவாசையில் முயங்காது இறைவன் திருவடியையே பற்றுக் கோடாகக் கொள்வோர் இருளில் வீழார் என்பது கருத்து. ஊசி வரலாற்றை அடிகள் வரலாற்றிற் காண்க. ஆன்மா ஒளி மயமாம் பொழுது ஒளிக்கு வேறாகப் பொருள் தோன்றாதிருத்தல் அநுபவத்தில் அறிதற்பாலது. அந்நிலையே உயரிய நிலையென்க. 52 மனையாளு மக்களும் வாழ்வும் தனமுந்தன் வாயின்மட்டே இனமான சுற்ற மயானமட் டேவழிக் கேதுதுணை தினையா மளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந் தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே. (பொ-ரை) (செத்துப் பிணமான பிறகு) மனைவியும் மைந்தரும் வாழ்வும் பொருளும் வாசல்வரையிலுமே துணை நிற்கும். சாதியாராகிய பந்துக்கள் சுடுகாடு வரையிலுந் துணை நிற்பர். அதற்குமேல் உயிர்போகும் வழிக்குத் துணை செய்து நிற்பது யாது? தினையளவாதல் எள்ளளவாதல் உயிர் போகு முன் செய்த தவமானது துணைநின்று தன்னைப் பாதுகாக்கச் சிவலோகங் கைகூடும். இஃதுண்மை. (வி-ரை) உயிர்ச்சார்பும் பொருட்சார்பும் இறந்தபின் துணைசெய்யமாட்டா. அதுகாலைத் துணைசெய்வது தவமே யாகும். ஆனபடியால் உலகத்தில் மனைவி மக்களோடு களி யாட்டயராது தவத்தைச் செய்யவேண்டுமென்பது. மக்களே மணந்ததார மவ்வயிற் றவரையோம்பும், சிக்குளே யழுந்தியீசன் திறம்படேன் தவமதோரேன், கொப்புளே போலத்தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக்களே பரத்தையோம்ப என் செய்வான் தோன்றினேனே- தேவாரம். பண்டம் பொய்க்கூரை பழகி விழுதலால், உண்ட அப்பெண்டிரும் மக்களும் உடன் செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது, மண்டி அவருடன் வழிநட வாதே- திருமந்திரம். 53 அத்தமும் வாழ்வு மகத்துமட் டேவிழி யம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தல மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமுமே. (பொ-ரை) பொருளும் அதனாலுண்டாகும் வாழ்வும் வீட்டளவிலேயே நின்றுவிடும். மிகுதியாகச் சூழ்ந்திருந்த (மனைவி முதலிய) பெண்களும் கண்களில் நீர் சிந்தத் தெரு வளவிலேயே நின்றுவிடுவார்கள். இரண்டு கைகளையுந் தலை மேல் வைத்துத் தேம்பித் தேம்பி யழும் பிள்ளைகளுஞ் சுடலை யளவிலேயே நின்று விடுவார்கள். இரண்டு வினைகளாகிய புண்ணியமும் பாவமுமே பின்பற்றிச் செல்லும். (வி-ரை) அத்தம் - அர்த்தம் - பொருள். அம்பு - நீர். புண்ணியஞ் செய்வோர் சொர்க்கமடைவர். பாவஞ் செய்வோர் நரகமடைவர். உடலினின்றும் உயிர் பிரிந்த காலத்து உடன் துணையாக வருவது தாந்தாஞ்செய்யும் வினையெனக்கொண்டு உலகத்தில் அறஞ்செய்யவேண்டு மென்றபடி. அன்றறிவா மென்னாது அறஞ்செய்க, மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை- திருவள்ளுவர். 54 சீயுங் குருதிச் செழுநீர் வழும்புஞ் செறிந்தெழுந்து பாயும் புடைவையொன் றில்லாத போது பகலிரவாய் ஈயு மெறும்பும் புகுகின்ற யோனிக் கிரவுபகன் மாயு மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே. (பொ-ரை) சீயும், இரத்தமாகிய கொழுநீர் சுரக்கும் நிணமும் மலிந்து வெளிவந்து பாய்கின்ற புடவையொன்று இல்லாத காலத்தில் பகலிலும் இரவிலுமாக ஈயும் எறும்பும் நுழைகின்ற பெண்குறிக்காக இரவும் பகலுங்கெடும் மனிதர் களைக் கெடாமல் வைத்திருக்க ஒரு மருந்துமில்லையே. (வி-ரை) பாயும் - பெயரெச்சம். பாயும் யோனியென்க. பெண்களையே கடவுளாகக் கொண்டுள்ள பேதைமாக்களுக்கு அறிவு கொளுத்தியவாறாம். 55 சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை தினம்பசித்தால் நீதுய்க்கச் சோறு மனைதோறு முண்டு நினைவெழுந்தால் வீதிக்கு ணல்ல விலைமாத ருண்டிருந்த மேதினியில் ஏதுக்கு நீசலித் தாய்மன மேயென்றும் புண்படவே. (பொ-ரை) நெஞ்சமே! இவ்வுலகத்தில் குளிர்ந்த பனிக் காலத்திற்குப் போர்த்துக்கொள்ள உறுதியான கந்தைத் துணி யுண்டு. நாள்தோறும் பிச்சையேற்று நீ புசிப்பதற்கு அன்னம் வீடுதோறும் உண்டு; காம நினைப்பு தோன்றினால் தெருக் களிலே அழகிய வேசிமாருளர். நீ யெப்பொழுதும் புண்படும்படி எற்றிற்குச் சலிக்கின்றாய்?. (வி-ரை) சிக்கெனவு - உறுதி. பனிக்கு துய்க்க எனக் கூறிக்(காம) நினைவிற்கெனக்கூறாது நினைவெழுந்தால் எனக் கூறினமையான் ஞானிகட்குக் காமநினைவு எழாதென்பது பெறப்படுகின்றது. மாதரென்னாது விலைமாதரென்றமையான் குலமாதரை யிச்சிப்பது பாவமென்பதைக் குறிப்பித்தனர். நலக்குரியார் யாரெனில் நாமநீர் வைப்பில், பிறர்க்குரியாள் தோள்தோ யாதார்) என வருந் திருவள்ளுவர் திருவாக்கைச் சிந்திக்க. சந்திர கலையினின்றும் பொழியும் அமிர்ததாரை யுணவுகொள்ளும் யோக ஞானிகட்குக் காம இச்சை தோன்றவே தோன்றாது. அமிர்ததாரை பொழியும் நிலைபெறாத யோகிகட்கு ஒவ்வொருவேளை காம இச்சை தோன்றுதலுண்டு. 56 ஆறுண்டு தோப்புண் டணிவீதி யம்பலந் தானுமுண்டு நீறுண்டு கந்தை நெடுங்கோ வணமுண்டு நித்தநித்த மாறுண்டு லாவி மயங்குநெஞ் சேமனை தோறுஞ்சென்று சோறுண்டு தூங்கிப்பின் சும்மா விருக்கச் சுகமுமுண்டே. (பொ-ரை) தினந்தோறும் மாறுபட்டு விடயங்களில் உழன்று மயங்கும் மனமே! (குளிப்பதற்கு) நதி உண்டு; (இளைப் பாறவும் உலவவுந்) தோப்பு உண்டு; (தங்கவும் உறங்கவும்) அழகிய தெருவிலே பொதுக்கட்டிடம் உண்டு; (தரிக்க) விபூதி யுண்டு; (உடுக்க) கந்தையும் நீண்ட கௌபீனமும் உண்டு; வீடு தோறும் போய்ப் பிச்சையேற்று அன்னம் புசித்து உறங்கிப் பின்பு சும்மா இருப்பதனால் இன்பமும் உண்டு. (வி-ரை) சும்மாயிருத்தல் - நிஷ்டை கூடியிருத்தல். மக்கள் இறுதியில் அடையவேண்டுவது இவ்வின்பம். அவ்வின்பம் மனதை விடயங்களில் தோயவிடாது ஒன்றச்செய்து நிஷ்டை கூடினால் விளையும். தேக சுகமில்லாக் காலத்து மனம் ஒன்று படாது. அதுபற்றித் தேகசுகத்தைத் தேடிக்கொள்ளல் வேண்டும். அதற்கு ஆறுதோப்பு முதலியன இருக்கின்றன. இவைகளால் தேக சுகம் பெற்று நிஷ்டைகூடி இறைவனடி யின்பத்தை நுகர்வது மக்கள் கடமை. இங்ஙனமின்றி விடயங்களி லழுந்தி மனமலைந்து சஞ்சலமுற்றுக் கலங்கி நிஷ்டை கூடாது துன்பமடைவது அறியாமை யென்க. 57 உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யி லொடுங்கிவந்தால் தடுக்கப் பழைய வொருவேட்டி யுண்டு சகமுழுதும் படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு பசித்துவந்தால் கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே நமக்குக் குறைவில்லையே. (பொ-ரை) மனமே! குளிர்காற்றிலும், வெயிலிலும் ஒடுக்க முற்று (வாடி வருந்தி) வந்தால் (அத்தட்ப வெப்பங்களைத்) தடுக்கும் பொருட்டு உடுத்திக்கொள்வதற்கும் போர்த்துக் கொள்வதற்கும் ஒரு பழைய வேஷ்டி யுண்டு; படுத்துக் கொள்வதற்கு உலக முழுவதும் திண்ணைப்புறம் எவ்விடத்திலும் உண்டு. பசித்து வந்தால் உணவு கொடுக்கச் சிவபெருமானுண்டு. (ஆகையால்) நமக்கு ஒரு குறையும் இல்லை. (வி-ரை) சிவனடியார் பசியால் வருந்தின் சிவபெருமான் தாமே நேராக வந்தாதல் வேறு சில உயிர்களின் மூலமாகவாதல் அவர்கட்கு அன்னமளிப்பர். எல்லாஞ் சிவன் செயல் என்னும் அறிவு தோன்றாதவர்கள் அன்னத்தைக் கருதியே யிடர்ப் படுவார்கள். சிவபெருமான் அப்பர் சுவாமிகளையுஞ் சுந்தர மூர்த்தி சுவாமிகளையும் பொதிசோற்றானும் பிச்சைச் சோற் றானும் உண்பித்த சரிதங்களை யோர்க. 58 மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெல்லாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட் டோமினிக் கேண்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையுமுண்டே. (பொ-ரை) மாடு உண்டு; கன்று உண்டு; பிள்ளைகள் உண்டு என்று இறுமாந்து சதோஷிப்பதெல்லாம் ஒரு காலத்தில் அழிவடையும் என்னும் விதத்தை ஞானிகள் சொல்லக்கேட்டு அவைகளின்மீது கொண்டிருந்த பற்றை விட்டுவிட்டோம். மனனே! இனிக் கேட்பாயாக. நமக்குப் பிச்சையேற்கத் திருவோடு உண்டு; உடுக்கக் கந்தையுண்டு; உள்ளத்திலே ஓத ஸ்ரீபஞ்சாட்சர முண்டு; குண்டலந் தீண்டும் ஸ்ரீகண்டத்தையுடைய சிவ பெருமான் அடியவர்கள் துணையும் உண்டு. (வி-ரை) இத்திருச் செய்யுளில் துறவறத்தின் மாண்பு விளக்கமுற ஓதியிருத்தல் காண்க. 59 மாத்தா னவத்தையு மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டை யுண்டோநித்த னன்புகொண்டு வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று பார்த்தா லுலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே. (பொ-ரை) பெரிய தேவலோகப் பொருள்களையும், மாயா சரீரத்தால் விளையும் மயக்கத்தையும் வெறுத்துத் துறந்தவர்க்குச் செய்யவேண்டிய நிஷ்டை யொன்று உண்டோ? இருவகைப் பற்றுக்களையும் ஒழித்தவர்கள், சிவபெருமானிடத்தில் அன்பு வைத்து வியர்வை யுற்றால் குளித்துப் பசியெடுத்தல் (பிச்சை யேற்று) உண்டு (நித்திரை வந்தால்) கண்ணுறங்கிப் பிறர் பார்த்தால் உலகத்தவர்களைப்போல இருப்பார்கள். (வி-ரை) மா - பெரிய; தானம் - தேவலோகம். அங்குள்ள பொருள்:- சிந்தாமணி, கற்பகம், காமதேனு முதலியன. உலகத்தில் புண்ணியஞ் செய்வோர் அடையும் உலகம் தேவலோகமாகும், ஞானிகள் அந்த உலகத்தையும் அங்கேயுள்ள பொருள்களையும் விரும்பமாட்டார்கள். என்னை? அவ்விருப்பத்தால் பிறவி பெருகுமாதலின். வானேயும் பெறில் வேண்டேன் என்றார் மாணிக்கவாசக சுவாமிகள். மாயாபுரி என்றது உடலை. புலன்களால் விளையுந் துன்பங்கள் முன்னர் விளக்கப் பட்டுள்ளன. சொர்க்க முதலிய லோகங்களின் பற்றினையும் உட்பற்றினையும் விட்டவர்களையே யீண்டு பற்றற்றவர் என்றார். வேண்டுதல் வேண்டாமை யில்லாதவர்கட்கு நிட்டை வேண்டுவதில்லை யென்பது சாத்திரக் கொள்கை. நிட்டை யாவது ஞானம் பெறுவதற்கு ஒருசாதனம்; உலகத்தவர்களாற் பல துன்பங்கள் நேரிடுமாகலின் ஞானிகள் உலகத்தவர்களைப் போல உண்டும் உறங்கியுங் காலங் கழிப்பார்கள். உலகத்தவர் அநித்திய உலகத்தைப் பொருளாகக் கொண்டு அதன் மாட்டு அன்பு செலுத்துவர். ஞானிகள் அவர்போலன்றி நித்தியப் பொருளாகிய சிவத்தின்மீது இடையறாப் பேரன்பு செலுத்து வார்கள். அதுபற்றியே நித்தன் அன்புகொண்டு என்றார். 60 ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்வல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கேவுப தேசமிதே. (பொ-ரை) மனமே! தெய்வம் ஒன்று என்று இரு; அத் தெய்வம் என்றும் உண்டு என்று நம்பி யிரு; உயர்ந்த செல்வங்கள் யாவும் அநித்தியமென்று இரு; பசித்தவர்களுடைய முகத்தை இரக்கத்தோடு பார் (அவர்கட்கு இரங்கி அன்னமிடு.) நல்ல தருமமும் நல்ல சிநேகமும் நல்லன என உறுதி கொண்டிரு. நடுநிலை குன்றாமல் வினைக்குத் தக்கவாறு இறைவன் விதிப்படி இவ்வளவு கிடைத்தது என்று திருப்தியாயிரு; இதுவே உனக்கு யான் செய்யவேண்டிய உபதேசம். (வி-ரை) வேத வேதாந்தங்கள் ஏகமேவாத் துவிதீயம் முதலிய வாக்கியங்களாய் கடவுள் ஒருவனே என அறுதி யிட்டுரைத்தலின் ஒன்றென்றிரு என்றார். தெய்வமிரண்டு பல என்னுங் கொள்கை அஞ்ஞானம் பயப்பதென்பது ஈண்டு அறியத்தக்கது. காலமும் நாள்கள் ஊழிபடையாமுன் ஏக உருவாகி என்றார் அப்பர் சுவாமிகளும். ஒன்றென்ற தொன்றே காண் என மெய்கண்டாருங் கூறியிருத்தல் காண்க. தெய்வம் ஊழுமாம். நல்லற மென்பதை யில்லற மெனச் சிலர் கூறுப. இருவகை யறத்தையுங் கோடலே பொருத்தம். நட்பின் சிறப்பை, செயற்கரிய யாவுள நட்பின் என்றார் திருவள்ளுவர். கிடைத்த மட்டுந் திருப்தி யடைவதே அருள்வழி நிற்பதாகும். பிராரத்த வினையளவாக இறைவனாணை ஆன்மாக்களுக்கு வேண்டுவ உதவலான் பெற்றமட்டுந் திருப்தியடையாது மேலும் பெற அவாவுவோர் அறவழி யொழுகுவோரல்ல ராகலான் நடு நீங்காமலே என்றார். இத்திருச் செய்யுளிற் போந்த உபதேச மொழி வழி நிற்போர் இறைவனடியை யடைவரென்க. 61 நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்மல் ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை யடர்ந்தசந்தைக் கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே யுனக்குப தேசமிதே. (பொ-ரை) மனமே! சத்குரு மூர்த்தியின் திருவடிகளைத் தேடத்தக்க பொருளென்றே கருதியிரு; அத்திருவடிகளையே உறுதியாக நம்பு; பொல்லா தேகத்தைப் பதுமை யாட்டமென்றே யெண்ணியிரு; பந்துக்களை நெருங்கிய சந்தைக் கூட்டமென்றே யிரு; இவ்வுலக வாழ்க்கையைக் குடஞ் சாய்த்த நீரோட்டமென்றே யிரு; உனக்கு யான் செய்ய வேண்டிய உபதேசமிதுவே. (வி-ரை) சத்குரு - உண்மையைக் காட்டி அஞ்ஞானத்தை யழிப்பவன். (சத் - என்றும் உள்ளது; குரு - அஞ்ஞானத்தை நீக்குபவன்,) நாட்டம் - நோக்கம். ஓராதே யொன்றையு முற்றுன்னாதே நீமுந்திப், பாராதே பார்த்ததனைப் பார், - திரு வருட்பயன். தேகத்தைப் பொருளாகக்கொண்டு ஆடும் ஆடல்கள் யாவும் பொய்யாய்ப் பொன்றுவன வென்பார் பொம்மலாட்டம் என்றார். சுற்றத்தவர்கள், சந்தை கூடு மிடத்தில் ஒன்று சேர்வோர் சிறிது நேரம் முறை பாராட்டியும் சம்பாஷித்தும் உண்டும் களிப்புற்றுப் பின்னர்ப் பிரிந்து தத்தம் வீடுகளுக்குச் செல்வோரை ஒப்பச் சின்னாள் நெருங்கி யுறவாடிப் பிரிகின்றமையான் சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றேயிரு என்றார். தந்தைதாய் தமர்தார மகவெனு மிவரெலாஞ் சந்தையிற் கூட்டம் இதிலோர் சந்தேகமில்லை என்றார் தாயுமானாரும். வாழ்வு - மனைவி மக்கள் முதலியவ ரோடு கூடியிருப்பது. வாழ்வு சிறிது காலம் நிலைத்து அழிகின்றமையான் குடங்கவிழ்நீர் என்றார். நீர் குடத்திலுள்ள மட்டும் அளவுபட்டு நிலைத்திருக்கும். குடஞ் சாய்ந்தததும் நீர் வெளியோடி மறைந்துபோம். உடலோடு கூடிய வாழ்வும் அத்தன்மைத்தே. வாழ்வாவது மாயம் என்றார் வன்றொண்டப் பெருந்தகையாரும். இச் செய்யுளால் உடல் சுற்றம் வாழ்வு முதலியன நிலையுதலில்லாதன வென்பதம், அவை நமது அறிவு விளக்கத்துக்கு இறைவனால் கொடுக்கப் பெற்ற துணைக்கருவிக ளென்பதும், அவைகளையே உறுதிப் பொருளாகக் கொள்வது அறியாமை யென்பதும், அவை யாவும் பொருளல்ல என்று பதேசித்த குருவை யிடையறாது சிந்திக்கவேண்டு மென்பதும், சிந்தியாதொழியின் உலகமும் அதன் வாழ்வும் மீண்டும் பொருளாகத் தோன்றி அறியாமையை வளர்க்குமென்பதும் விளங்குதல் காண்க. 62 என்செய லாவ தியாதொன்று மில்லை யினித்தெய்வமே உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே. (பொ-ரை) ஆண்டவனே! இனிமேல் (தேவரீருக்கு யான் அடிமைப்பட்ட பின்னர்) எனது செய்கையிலே ஆகுங் காரியம் ஒன்றுமில்லை. எல்லாம் தேவரீர் திருவருட் செயலே யென்று அறியப்பெற்றேன். இந்தத் தேகந்தாங்கிய பின்னர் யான் செய்த தீவினை ஒன்றேனும் இல்லை, இப்பிறவி யெடுப்பதற்கு முன்னே (முற்பிறப்பில்) செய்த தீவினை தானோ இந்த விதமாக வந்து சேர்ந்தது?. (வி-ரை) இச்செய்யுள் சுவாமிகள் கழுமரத்தை நோக்கிப் பாடியது. விரிவு சரிதம் பார்க்க. நிலையியற் பொருளிலும் இயங்கியற் பொருளிலும் இறைவன் நீக்கமற நிறைந்து அவை களை நடந்துகின்றனன். அவனன்றி யோரணுவும் அசையா தென்பது ஆப்தவாக்கு. எல்லாம் அவன் செயலாக விருப்ப அச்செயலைத் தஞ்செயலாகச் சீவர்கள் கொள்வதே அறியாமை. அறியாமை நீங்கிய பெரியயோர் எல்லாஞ் சிவன் செயலாகக் காண்டலான் என் செயலாவது . . . . பெற்றேன் என்றார். யான் பிராரத்த வினையை நுகர்ந்து வருகையில் ஆகாமிய வினையேறக் கூடிய செயல் ஒன்றுஞ் செய்யவில்லை யென்பார் இந்த வூனெடுத்தபின் செய்த தீவினை யாதொன்று மில்லை என்றார். இப்பொழுது தண்டவினைமாக்கள் வயப்பட்டு அரசனால் கழுவேறுந் தண்டனை விதிக்கப் பெற்றதற்குக் காரணமாயுள்ள தீவினை யிப்பிறப்பில் ஒன்றுஞ் செய்யவில்லை யென்றும், முற்பிறப்பில் செய்திருக்க வேண்டு மென்றுந் தெரிவிப்பார், பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே என்றார். ஞானிகள் அடையும் துன்பத் திற்குக் காரணம் முன்னூழ் என்றுணர்க. எல்லாஞ் சிவன் செயல் என்றிருப்போர்க்கு ஆகாமிய கர்மம் இல்லை யென்பதையும் அறிக. 63 திருவேட மாகித் தெருவிற் பயின்றெனைத் தேடிவந்து பரிவாகப் பிச்சை பகருமென் றானைப் பதம்பணிந்தேன் கருவாகு மேதக் கடற்கரை மேவக் கருதுமென்னை உருவாக்கிக் கொள்ளவல் லோவிங்ங னேசிவ னுற்றதுவே. (பொ-ரை) சிவவேடந் தாங்கினவனாய் வீதியில் உலாவி அடியேனைத் தேடி வந்தடைந்து விருப்பமாகப் பிச்சை யெடும் என்று அருளிச்செய்த குருநாதன் திருவடிகளைத் தொழுதேன். கருவாகிய துன்பக் கடற்கரையையடைய எண்ணியிருந்த சிறியேனைச் சிவபெருமான் தன்னுருவாக்கிக்கொள்ள அன்றோ இவ்வாறு எழுந்தருளிவந்தது?. (வி-ரை) பிக்ஷாடண வேடந்தாங்கிப் பிச்சையிடுங்களெனத் தாருகாவன ரிஷிப்பெண்களைக் கேட்ட சிவபெருமானை யெனப் பொருளுரைப்பினும் பொருந்தும். சகலரை ஆட் கொள்ளச் சிவ பெருமான் குருமூர்த்தியாய் எழுந்தருளி வருவா ராகலான் திருவேடமாகி யென்றார். திருவேடம் - சிவவேடம்; சங்கமவேடம். பிச்சையெடுக்குமாறு பணித்தல் உபதேசமொழி. கரு - கரை. பிறவி - கடல். இச் செய்யுள் உபதேச குருவாக எழுந் தருளிய வடிவத்தை அறி வுறுத்துவது காண்க. பிச்சை பகரும் என்பதற்குப் பிச்சையிடும் எனப் பொருள் கொள்ளுநரும் உளர். சிவபெருமான் பட்டினத்தடிகள்பா லணுகிப் பிச்சை கேட்டதாக ஒரு கதை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது. உருவாக்கல் - சிவமாக்கல். 64 விட்டே னுலகம் விரும்பே னிருவினை வீணருடன் கிட்டே னவருரை கேட்டு மிரேன்மெய் கெடாதநிலை தொட்டேன் சுகதுக்க மற்றுவிட் டேன்றொல்லை நான்மறைக்கும் எட்டே னெனும்பர மென்னிடத் தேவந்திங் கெய்தியதே. (பொ-ரை) பழைய நான்கு வேதங்களுக்கும் எட்டப்படேன் என்னும் மேலான பொருள் என்னிடத்தில் வந்து பொருந்தினதும் உலகப் பற்றை விட்டுவிட்டேன்; புண்ணிய பாவங்களில் ஆசை வையேன்; பிரயோசன மில்லாதவர்களோடு நெருங்க மாட்டேன்; அவர் தம் வார்த்தைகளுக்குச் செவியுஞ் சாய்த்துக் கொண்டிரேன்; அசத்தாந் தன்மையில்லாத ஒரு நிலையைப்பற்றி விட்டேன்; இன்ப துன்பங்களை யொழித்துவிட்டேன் (வி-ரை) இருவினை - புண்ணிய பாவம். மெய்கெடாத நிலை - சிந்தாந்தன்மை; உண்மை அழியாதநிலை. சரீரசித்தி யெனினுமாம். மாயைக்குத் தோற்றக் கேடு உண்மை யானும், அவை சித்துப் பொருட்கின்மையானும், அஃதென்றும் ஒரு படித்தா யுண்மையானும் மெய்கெடாதநிலை என்றார். வான்கெட்டு மாருதமாய்ந் தழல்சீர் மண்கெடினும், தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு என்றார் மாணிக்க வாசகனார். ஈண்டு வீணரென்றது மூவாசை யுடையோரை யென்க. தொடல் - தொடங்கல்; தலையிடல். சுக துக்க மற்ற விடமே பிறவி யொழிந்தவிடம். அதுவே பேரானந்தம். இன்பமுந் துன்பமும் இல்லானே யுள்ளானே என்பது திருவாசகம். வேத வேதாந்தங்களையுங் கடந்த சித்தாந்தப் பொருளென்பார், நான்மறைக்கு மெட்டேன் எனும்பரம் என்றார். அல்லையீ தல்லை யீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித் திளைக்குஞ் சுந்தரன்- திருவிளையாடற் புராணம். மறைகளீறு முன் தொடரொணாத நீ - திருவாசகம். எய்தியது என்பதிலுள்ள உம்மை தொக்கது. 65 அட்டாங்க யோகமு மாதார மாறு மவத்தையைந்தும் விட்டேறிப் போன வெளிதனி லேவியப் பொன்றுகண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூர லுண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்ப மென்னை விழுங்கி யிருக்கின்றதே. (பொ-ரை) அஷ்டாங்க யோகங்களையும், ஆதாரங்கள் ஆறையும், அவதை ஐந்தையுங் கழித்து மேலேயேறிச் சென்ற பரவெளியிலே ஓர் அற்புதத்தைக் கண்ணுற்றேன். வண்டு (தேனை யுண்பது) போன்று செவ்விய சந்திரகலை பொழியுஞ் ஞானா மிர்த தாரையைப் பருகிக் களிப்புற்றிருக்க (சீவபோத முயற்சி யால்) எட்டமுடியாத பேரானந்தமானது என்னை விழுங்கி யிருக்கின்றது. (வி-ரை) அட்டாங்க யோகம்: இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆறாதாரம்: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. ஐந்தவத்தை:- சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம். இவைகளைக் கடந்து சென்றால் சுத்த வெளியொன்று தோன்றும். அது திருவருள் வெளியெனவும் படும். பாழெனவுங் கூறுப. அவ்வெளியிலே சந்திரகலை அமிர்தத்தாரை சொரியும். அதனையுண்ணும் ஆன்மா மீட்டும் மாயை வயப்படாது பேரானந்தமயமாய் விளங்கும், இஃது அநுபவத்தால் அறிதற்பாலது. உண்ணீ ரமுதமுறு மூறலைத் திறந், தெண்ணீ ரிணையடித் தாமரைக்கே செலத், தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதி ராநலக் கண்ணுற்றோடே சென்றுகால் வழிமாறுமே அமுதப்புலன் வருமாற்றங் கரைமேல், குமிழக் கந்தற் சுடரைந்தையுங் கூட்டிச், சமையத்தண் டோட்டித் தரிக்க வல்லார்க்கு, நமனில்லை நற்கலை நாளில்லை தானே- திரு மந்திரம். ஆன்மா பெத்தநிலையில் ஆணவத்தால் விழுங்கப் பெறுவதுபோல முத்தநிலையில் சிவத்தால் விழுங்கப் பெறுதலான், பேரின்ப மென்னை விழுங்கி யிருக்கின்றதே என்றார். ஆணவத்தோ டத்துவிதமானபடி மெய்ஞ்ஞானத், தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ என்றார் தாயுமானார். வண்டு - வட்டு; எதுகை நோக்கிவந்த வலித்தல் விகாரம். வட்டு - திரட்சியுமாம். 66 எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கெனு மிந்தமண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக்கெனுந் தான்புசிக்க நரியெனக் கென்னும்புன் னாயெனக் கென்னுமிந் நாறுடலைப் பிரிய முடன்வளர்த் தேனித னாலென்ன பேறெனக்கே. (பொ-ரை) (செத்தபின்) துர்நாற்றம் வீசும் இத் தேகத்தை நெருப்பு எனக்கு உரியது என்று சொல்லும்; புழுவோ எனக் குரியது என்று சொல்லும்; இந்த மண்ணும் எனக்குத் தகுந்த ஆகாரம் என்று சொல்லும்; பருந்தோ எனக்குரியதென்று சொல்லும்; நரி தான் உண்ணும் பொருட்டு எனக்குரியது என்று சொல்லும்; இழிந்த நாய் எனக்கு உரியதென்று சொல்லும். (இவ்வுண்மை யறியாமலிதனை) விருப்பத்துடன் வளர்த்தேன். இதனால் எனக்கு என்ன பயன்? (ஒன்றுமில்லை.) (வி-ரை) உயிர் நீங்கினபின்னர் உடல் நெருப்பு புழு முதலிய வற்றிற்கு ஆகாரமா யொழிதலின் அதனை வளர்க்காமல் உயிர் விளக்கத்திற் கேதுவாயுள்ள அறத்தை வளர்க்க வேண்டு மென்பது. நாய் நமதென நரிநமதெனப் பிதா, தாய் நமதென நமன் றனதெனப்பிணி, பேய் நமதென மனமதிக்கும் பெற்றி போல், ஆய் நமதெனப் படும்யாக் கையாரதே- திருவிளையாடற் புராணம். இதைப்பற்றி முன்னரும் எழுதப்பட்டிருக்கிறது. 67 அண்ணறன் வீதி யரசிருப் பாகு மணிபடையோர் நண்ணொரு நாலொன்ப தாமவ ரேவலு நண்ணுமிவ்வூர் துண்ணென் பசிக்கு மடைப்பள்ளி யான சுகமுமெல்லாம் எண்ணிலி கால மவமே விடுத்தன மெண்ணரிதே. (பொ-ரை) பிராணன் உலாவும்வழி ஆன்மாவின் அரசாட்சி யிடமாகும், ஆழகிய சேனாவீரர் பொருந்திய முப்பத் தறுவர். அவர் (ஆன்மாவாகிய அரசன் வேண்டுங்கால் அவனுக்குப்) பணியுஞ்செய்வர். (அவர் பணிசெய்தற்கிடமாக உள்ள உடலாகிய) இவ்வூர் கொதித்தெழும் பசிக்குச் சமையற் சாலையாம். இத்தகையவான இன்பங்க ளெல்லாவற்றையும், அளவற்ற காலம் வீணாக வொழியச் செய்தோம். அதனை அளவிடல் அருமை. (வி-ரை) இச்செய்யுட்குப் பொருள் பலர் பலவாறு கூறுப. உண்மைப் பொருள் சிவாநுபூதிச் செல்வர்கட்கே இனிது விளங்கும்; கலைப்புலமை சிறிதுடைய என்போன்றார்க்கு விளங்காதென்க. பிராணன் வழி ஆன்ம இருக்கை யென்பதை என்னுளே யுயிர்ப்பாய்ப் புறம்போந்து புக், கென்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே எனவும், உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் எனவும் வரூஉம் அப்பர்சுவாமிகள் திருவாக்கானுணர்க. ஈண்டு ஆன்மா என்றது பரமான்மாவை. 68 என்பெற்ற தாயரு மென்னைப் பிணமென் றிகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும்பின் வலம்வந்து குடமுடைத்தார் உன்பற் றொழிய வொருபற்று மில்லை யுடையவனே. (பொ-ரை) எல்லாவற்றையும் அடிமையாக உடையவனே! என்னை யீன்ற அன்னையாரும் என்னைப் பிணமென்று இகழ்ச்சி செய்து விட்டனர். என்பால் பொருளைப் பெற்று வந்த மனைவி யரும் போ என்று கூறி அழுது ஒழித்தார்; வலிமையுள்ள பிள்ளை களும் என் பின்னே சுற்றி வந்து குட முடைத்து விட்டார்கள். இனித் தேவரீர் பற்றே யன்றிப் பிறிதொரு பற்று அடியேனுக் கில்லை. (வி-ரை) உயிர் உடலினின்று நீங்கிய பின்னர் அதற்கு மனைவி தாய் தந்தை மக்கள் முதலியோர் வழித்துணையாக மாட்டார். இறந்தபின் உயிர்க்கு உறுதுணையா யிருப்பது அன்பு என்றபடி. பற்று - அன்பு; விருப்பம். இத்தகைய கருத்துள்ள பாக்கள் பல மேல்வந்துள்ளன. அவைகட்கு வரைந்துள்ள விசேட உரைகளைக் காண்க. 69 கரையற்ற பல்லுங் கரித்துணி யாடையுங் கள்ளமின்றிப் பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத வூணும் புறந்திண்ணையுந் தரையிற் கிடப்பு மிரந்துண்ணு மோடுஞ் சகமறியக் குறைவற்ற செல்வமென் றேகோல மாமறை கூப்பிடுமே. (பொ-ரை) (தாம்பூல முதலியவற்றால்) அழுக்குப்படியாத பற்களும், கரித்துணி ஆடையும், வஞ்சனை யில்லாமல் பொறுமை நிறைந்த மனமும், சுவையில்லாத ஆகாரமும், தெருத்திண்ணைப் புறமும், தரையிற் படுக்கையும், பிச்சையெடுத்துச் சாப்பிடுந் திருவோடும் (ஆகிய இவைகள்) குறைவில்லாத செல்வமென்று உலகமறிய அழகிய வேதங்கள் முழங்கும். (வி-ரை) ஈண்டுச் செல்வமென்றது அருட்செல்வத்தை இக் கருத்துள்ள பாக்களைப் பார்க்க. 70 எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே. (பொ-ரை) எட்டுத் திசைகளிலும் பதினாறு கோணங் களிலும் எவ்விடத்திலும் ஒரே தன்மையாய் நிறைந்து எழும்பித் தோன்றுஞ் சோதியை அறிவீனர்களெல்லாரும் கட்டிச் சுருட்டித் தங்களுடைய அக்குளில் வைப்பார்கள்; மனதில் வைக்க மாட்டார்கள். அவர்கள் பட்டப்பகலை யிரவென்று சொல்லும் பாவிகளே யாவார்கள். (வி-ரை) சோதியை - சோதியைப்பற்றிச் சொல்லும் நூலை; ஆகுபெயர். இறைவன் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கின்றானாகலின் எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய், முட்டித் ததும்பி முளைத்தெழுந்த சோதியை என்றார். இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களை வாசித்து அவைகளை அக்குளில் அடக்கிக் கடவுள் இப் புத்தகத்தில்தான் இருக்கிறார் எனக்கொள்வது அறியாமை யென்பர், மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் என்றார். எங்குமுள்ள பொருளை ஓரிடத்திலிருப்பதாக கருதுவது அறியாமையென்க. எங்குமுள்ள கடவுள் ஓரிடத்தி லிருக்கின்றா ரென்போரது பேதைமையை விளக்க பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே என்றார். இறைவனை உள்ளத்திற்கொண்டு வழிபடவேண்டுமென்பார் கருத்தில் வையார் என்றார். என்னுள்ளங் கவர் கள்வன் என்றார் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும். கன்மனவீர் கழியுங் கருத்தே சொல்லிக் காண்பதென்னே, நன்மனவர் நவில்தில்லையுள் சிற்றம்பலத்துநட்டம், பொன்மலையில் வெள்ளிக்குன் றது போலப் பொலிந்திலங்கி, என் மனமே யொன்றிப்புக் கனன்மோந்த சுவடில்லையே என்றார் அப்பர் சுவாமிகளும். 71 வாய்நாறு மூழன் மயிர்ச்சிக்கு நாறிடு மையிடுங்கண் பீநாறு மங்கம் பிணவெடி நாறும் பெருங்குழிவாய்ச் சீநாறும் யோனி யழனாறு மிந்திரியச் சேறுசிந்திப் பாய்நாறு மங்கையர்க் கோவிங் ஙனேமனம் பற்றியதே. (பொ-ரை) வாய் ஊத்தை நாற்றம் வீசும்; சிக்கு மயிர் வியர்வை (யழுக்கு) நாற்றம் விசும்; மைதீட்டிய கண்கள் பீளைநாற்றம் வீசும்; தேகம் பிணநாற்றம் வீசும், பெரிய குய்யவாய் சீநாற்றம் வீசும்; யோனி தீநாற்றம் வீசும்; இந்திரியச்சேறு சிந்துற்றுப் பாய் நாற்றம் வீசும். (இத்தகைய இழிவிற் கிடமா யுள்ள) பெண்களுக்காகவோ இவ்விடத்தில் என் மனம் இச்சையி லழுந்தியது? (வி-ரை) கண்பீநாறும் - கண்பீளை சிந்தும் எனினுமாம். இழிபொருள்களொழுகும் அங்கங்களையுடைய மாதர்கள் மேல் பற்று வையாமல் திருவரு ளொழுகுந் திருமேனியனாகிய சிவ பெருமானிடத்தில் பற்று வைத்தல் வேண்டும் என்றபடி. 72 உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண் டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில் தரிக்கக் கரித்துணி யாடையு முண்டெந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்துகொண் டேன்குறை யேதுமெனக் கில்லையே. (பொ-ரை) செபஞ் செய்வதற்குச் சிறந்த பஞ்சாட்சர முண்டு; வேதாகமங்களின் வாக்கியப்படி இறுமாந்து அணிந்து கொள்ளுதற்கு விபூதியுண்டு; கட்டிக் கொள்வதற்கு வீதிக் குப்பை மேடுகளிற் கரித்துணியாடையுண்டு; எல்லாச் சாதி யாரிடத்திலும் பிச்சையெடுக்கத் துணிந்துவிட்டேன். (ஆகையால்) எனக்கு யாதொரு குறைவுமில்லை. (வி-ரை) செபிக்கப் பஞ்சாக்கரமும், பூச விபூதியும், அணியக் கரித்துணியும், இரந்துண்ணப் பல சாதியும் இருக்கின்றன. உலகத்தில் மனிதர்கள் உடை உணவு முதலியவற்றிற்கே அரிய காலத்தைச் செலவுசெய்து சிவத்தியானமின்றி யிடர்ப்படுகி றார்கள். யானோ அவைகளைச் சிறிதுங் கஷ்டமின்றிப் பெறுகிறேனாகலின் எனக்கொரு குறையுமில்லை என்றபடி. 73 ஏதப்பட் டாயினி மேற்படும் பாட்டை யிதென்றறிந்து போதப்பட் டாயில்லை நல்லோ ரிடஞ்சென்று புல்லறிவால் வாதைப்பட் டாய்மட மானார் கலவி மயக்கத்திலே பேதைப்பட் டாய்நெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தருமே. (பொ-ரை) மனமே! பிழைபட்டாய். ஞானிகளை யடைந்து இனிமேலடையும் நெறி யின்னதென்றுணர்ந்து ஞானம் விளங்கப் பெற்றாயில்லை. சீவபோத வறிவால் துன்பப்பட்டாய். அறியாமை மிக்க மான்போன்ற கண்களையுடைய பெண்களின் இன்பமயக்கத்தில் அழுந்திக் கீழாயினாய். உன்னைப்போலப் பைத்தியக்காரரும் இல்லை. (வி-ரை) முற்பிறப்பில் வினையீட்டினமையால் இப்பிறவி தாங்கினை யென்பார் ஏதப்பட்டாய் என்றார். இப்பிறவியி லாயினும் மறுமைக்கு நன்னெறி யடையவேண்டுமெனக் கருதிப் பெரியோர்களிடத்தில் இதோபதேசம் பெற்றுச் சிவபோத மேற்பட வேண்டுமென்பார், இனி . . . . சென்று என்றார். அங்ஙனஞ் செய்யாத இப்பிறவியிலுஞ் சீவபோதத்தால் பிரவிர்த்தி மார்க்கத்தில் ஒழுகுவது அறியாமை யென்பார், புல்லறிவால் போதப்பட்டாய் என்றார். மறுபிறவியெடுப் பதற்கு இப்பிறவியிலேயே விதையிடுவது போன்றது பெண் ணின்ப மாகலானும், அதுவே மனிதனைச் சிறுமைப் படுத்துவதாகலானும் மடமானார் கலவி மயக்கத்திலே பேதைப் பட்டாய் என்றார். முன்பிறப்பில் செய்தவினையை யிப்பிறப்பில் அனுபவித்துத் துன்புறுவதை யுணர்ந்தும் மேலைக்கு நல்வழி தேடாது சிற்றின்பத்தில் உழல்வது பித்தர் செய்கைபோன்ற தென்பார், உனைப்போலில்லை பித்தருமே என்றார். 74 சுரப்பற்று வல்வினை சுற்றமு மற்றுத் தொழில்களற்றுக் கரப்பற்று மங்கையர் கையிணக் கற்றுக் கவலையற்று வரப்பற்று நாதனை வாயார வாழ்த்தி மனமடங்கப் பரப்பற் றிருப்பதன் றோபர மாபர மானந்தமே. (பொ-ரை) மேலானவனே! சீவபோத ஊற்று அழிந்து, கொடிய வினையின் பயனாகிய மனைவி முதலிய பந்துக்களும் ஒழிந்து, சீவகரணச் செய்கைகள் அடங்கி, வஞ்சனையின்றி, பெண்கள் கூட்டுறவு நீங்கிச் சஞ்சலந் தொலைந்து, அளவு கடந்து (அன்பால்) கடவுளாகிய தேவரீரை வாயாரவாழ்த்தி மனம் ஒடுங்குமாறு ஆசையற்று இருப்ப தல்லவோ பரமானந்தம்?. (வி-ரை) சுற்றம் வினையென்பதனை மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும், வினையுளே விழுந்தழுந்தி என வரூஉம் அப்பர்சுவாமிகள் திருவாக்கானுணர்க. சீவ போதமும் கரணச்செயலும் ஆசையும் அற்றவிடமே அனந்தமாம் என்றபடி. ஆனந்தம் ஆனந்த மென்ப ரறிவிலார், ஆனந்த மாநடம் யாரு மறிகிலார், ஆனந்தமா நடம் யாரும் அறிந்தபின், தானந்த மற்றிட மானந்த மாமே ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள், ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள், ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்த மாமே- திருமந்திரம். 75 பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லனைவர்க்குந் தாழ்மைசொல்லிச் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெளிந்தவரே. (பொ-ரை) திருவடி ஞானங் கைவரப் பெற்றவர்கள் பிசாசுபோல அலைந்து, செத்த பிணம்போலச் செயலற் றிருந்து, பிறர் இட்ட பிச்சைக ளெல்லாவற்றையும் நாய் போல உண்டு, நரிபோல அங்குமிங்குந் திரிந்து, கற்புடைய பெண்களைத் தாய்போல எண்ணி, எல்லாருக்கும் பந்துக்களைப் போலத் தாழ்மையான வார்த்தைகளைப் போதித்து, குழந்தைபோ லிருப்பார்கள். (வி-ரை) இதனால் ஞானிகள் இலக்கணங் கூறியவாறாம். விடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீணனிட்ட முடக்கே புழுவந் துறையிட மேநல முற்றுமிலாச் சடக்கே கருவி தளர்ந்துவிட் டாற்பெற்ற தாயுந்தொடாத் தொடக்கே யுனைச்சுமந் தேனின்னி னேது சுகமெனக்கே. (பொ-ரை) மாமிசபிண்டமே! பருந்தினுடைய விருந்தே! குண்டிகையேந்தி வீணனாகிய பிரமன் சிருட்டித்த கோணலே! புழுக்கள் வந்து தங்குமிடமே! நன்மை யென்பது சிறுதுமில்லாத உடலே! உறுப்புக்கள் தளர்ந்துவிடுமாயின் ஈன்றதாயுந் தீண்டாத தொடக்கமே! உன்னை யிதுகாறும் தாங்கினேன். உன்னால் எனக்கு இன்பம் உண்டோ? (வி-ரை) முடக்கு - மட்கலமுமாம். சடக்கு - சட்டையுமாம். தொடக்கே - சப்த தாதுக்களால் கட்டப்பட்ட கட்டே; தீட்டுப்பொருளே எனினுமாம். உடலைப் பொருளாகக்கொண்டு அதனைப் போற்றும் உலகாயுதருக்கு அறிவுறுத்தும் செய்யுளிது. சிவபூசை சிவாலய வழிபாடு செய்யாது மரிப்போர் தேகம் பருந்து முதலியவற்றிற்கு உணவாய் ஒழியும் என்க. அத்தேக மெடுத்ததால் சிறுதும் பயன் பெறாது பலவகைச் சிற்றின்பங் களால் மேலைத் துன்பத்திற்கு விளைநிலம் போன்றதா யுண்மையின் ஏது சுகமெனக்கே என்றார். முதல் கோயில் திருவகவற்கு நாமெழுதிய விசேட உரையில் உடலைப்பற்றி எழுதியுள்ளோம். 77 அழுதாற் பயனென்ன நொந்தாற் பயனென்ன வாவதில்லை தொழுதாற் பயனென்ன நின்னை யொருவர் சுடவுரைத்த பழுதாற் பயனென்ன நன்மையுந் தீமையும் பங்கயத்தோன் எழுதாப் படிவரு மோசலி யாதிரென் னேழைநெஞ்சே. (பொ-ரை) எனது ஏழைமனமே! (துன்பம் வந்த காலத்தில்) அழுதால் என்ன பிரயோசனம்; வருந்தினால் என்ன பிரயோசனம்; (கடவுளை) வணங்கினால் என்ன பிரயோசனம்; உன்னை ஒருவர் புண்படும்படி சொன்ன நிந்தனையால் என்ன பிரயோசனம்; ஆவது ஒன்றுமில்லை. நல்லனவும் தீயனவும் பிரமன் எழுதாதவழி வந்து பொருந்துமோ? (ஆகையால்) தளர்ச்சி யடையாதே. (வி-ரை) யாவும் விதிப்படி நடக்குமென்பது. 78 ஊரீ ருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீ ரனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகநகைக்க வேரீ ருமக்கவர் தாமே தருவ ரிணையடியே. (பொ-ரை) ஊரவர்களே! உங்களுக்கோ ருபதேசஞ் செய்கிறேன். கேளுங்கள்; தேக முழுவதுஞ் சமணர்களைக் கழுவிலேற்றிய விபூதியைப் பூசிக்கொள்ளுங்கள்; திண்ணைப் புறத்தில் நித்திரை செய்யுங்கள்; பந்துக்களைவிட்டு நீங்கி உலகஞ் சிரிக்கப் பிச்சையெடுங்கள். (இங்ஙனஞ் செய்வீர்களாயின்) சிவபெருமானே வலிந்து வந்து) தமது திருவடிகளை உங்களுக்கு உதவுவர். (வி-ரை) ஊரீர் - விளி. திருனசம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருநீற்றால் கூன்பாண்டியன் சுரநோயைத் தணித்துச் சமணர் களைக் கழுவேற்றிய வரலாற்றைப் பெரியபுராணம் திருவிளை யாடற் புராணம் முதலிய புராணங்களிற் காண்க. புறந்திண்ணை - தெருத் திண்ணை. அனந்தல் - நித்திரை. ஈண்டு - யோக நித்திரையின்மேற்று. நாட்டார் நகைசெய்ய நாமேலை வீடெய்த என்றும், நாடவர் பழித்துரை பூணதுவாக என்றும் மணிவாசகனார் அருளிச்செய்தமை காண்க. விபூதி தரித்துத் தெருத்திண்ணையி லுறங்கிப் பிச்சை யேற்றுண்டு உலக எண்ணமின்றி யிருப்பதே சிவபெருமானுக் குகந்த செயலென்க. அற்றது பற்றெனில் உற்றது வீடு என்னும் பெரியோர் மொழியையும் ஓர்க. இணையடி என்றது திருவருளை. 79 நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டாய் ஆற்றிற் கிடந்துந் துறையறி யாம லலைகின்றதே. (பொ-ரை) மனமே! நீ விபூதியைத் தேக முழுவதும் பூசிக்கொண்டாலு மென்னபயன்? தீர்த்த யாத்திரை செய்தாலு மென்னபயன்? மருள் நெறியினின்றும் பெயர்ந்து அருள்நெறியிற் றலைப்படவேண்டிய வழியை அறியவில்லையே. பெரிய வேதங்களில் விரிந்து கிடக்கும் ஏழுகோடி மந்திரங்களாலும் என்ன பயன் பெற்றாய்? ஆற்றிலே யிருந்தும் ஏறுந் துறை தெரிந்து கொள்ளாமல் அலைகின்றனையே. (வி-ரை) அடிகள் மேற்செய்யுளில் உடம்படங்கப் போரீர் சமணைக் கழுவேற்றுநீற்றை என்று ஓதி, இப்பாசுரத்தில் நீற்றைப் புனைந்தென்ன என்றோதியிருத்தலான் விபூதியை யணியவேண்டு மென்பதும், அதனை யன்புடன் அணியவேண்டு மென்பதும், போலியாகப் பூசுதலாற் பயனில்லை யென்பதும் அடிகள் கருத்தென்பதை உய்த்துணர்க. சுவாமிகள் திருநீறு மிட்டு என்றும் தரிக்கத் திருநீறுமுண்டு என்றும் பிறாண்டும் அருளிச் செய்திருத்தல் காண்க. இச்செய்யுளொன்றைக் கொண்டு விபூதி யணிவதில் பயனில்லையென்பது ஆசிரியர் கொள்கையென நிறுத்துவது அறியாமை. விபூதியணிந்தும் மருள்நெறியில் உழலும் மாக்களை நோக்கி நீற்றைப்புனைந் தென்ன என்றார். வேடநெறிநில்லார் வேடம்பூண்டென் பயன், வேடநெறி நிற்பார் வேடம் மெய்வேடம் என்றார் திருமூலரும். நீராடப்போ யென்ன எழுகோடி மந்திர மென்ன கண்டாய் இவையும் அன்பில்லாரை நோக்கிக் கூறியன என்க. அன்புடன் நீராடல் முதலியன செய்யவேண்டு மென்பது ஆசிரியர் கருத்து. ஏழு கோடி மந்திரம் - ஏழு முடிபுகளையுடைய மந்திரம். கோடி எண்ணன்று கோடி தீர்த்தங்கலந்து குளித்தவை, ஆடினாலும் அரனுக் கன்பில்லையேல், ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி, மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே- தேவாரம். 80 செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிக் பரிதவி யாமற் பரானந்தத்தின் எல்லையிற் புக்குநல் லேகாந்த மாயெனக் காமிடத்தே அல்லலற் றென்றிருப் பேனால நீழ லரும்பொருளே. (பொ-ரை) கல்லால விருட்சத்தடியி லெழுந்தருளியுள்ள சிவபெருமானே! நாள்தோறும் பொருட்செல்வ முடையவர் களைப் பின் தொடர்ந்துபோய் (அவர்கள் மகிழ) உபசார வார்த்தைகள் பேசிப் பற்களைக் காட்டி வருந்தாமல் பேரானந்த எல்லையில் நுழைந்து எனக்கு உரிய இடத்திலே மிகவும் ஏகாந்த மாகத் துக்கமற்று எந்தக் காலத்தி லிருப்பேன்?. (வி-ரை) கல்லால விருட்சத்தடியில் எழுந்தருளியிருக்கும் பொருள் தக்ஷிணாமூர்த்தி. அம்மூர்த்தி மோன ஞானோப தேசத்தைச் சொல்லாமற் சொல்லுதலான் அரும் பொருள் எனப்பட்டார். எல்லை - முடிவு; கரை. ஏகாந்தம் - தனிமை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்றார் ஔவையாரும். 81 ஓங்கார மாய்நின்ற வத்துவி லேயொரு வித்துவந்து பாங்காய் முளைத்த பயனறிந் தாற்பதி னாலுலகு நீங்காம னீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய் ஆங்கார மானவர்க் கெட்டாக் கனிவந் தமர்ந்திடுமே. (பொ-ரை) பிரணவமாக நின்ற பொருளிலே ஒரு விதை பொருந்தி வளமாகத் தோன்றிய பிரயோசனத்தை உணர்ந்தால் பதினான்கு லோகங்களிலும் நீங்காமல் நீங்கி நிறையாமல் நிறைந்து அகண்டாகாரமாய் நான் என்னும் முனைப்பு உடையார்க்குக் கிட்டாத பழம் வந்து சேரும். (வி-ரை) பிரணவசமாதி யடைந்தோர் எங்கும் நிறைந்துள்ள சிவத்தோடு கலந்து எங்குமாய் விளங்குவரென்பது. நீங்காமல் நீங்கி நிறையாமல் நிறைதல் என்பது தத்துவங்களை விடுத்துச் சிவத்தைப் பற்றலையென்க. அகங்கார முள்ள மட்டும் இறைவன் நிறைவிற் கலத்த லின்மையான் அகங்காரமானவர்க் கெட்டா என்றார். இறைவனை நமச்சிவாயப்பழம் எனவும் , ஈசனெனுங்கனி எனவும் பெரியோர் கூறியிருத்தல் காண்க. 82 விதியார் படைப்பு மரியா ரளிப்பும் வியன்கயிலைப் பதியார் துடைப்புநம் பாலணு காது பரானந்தமே கதியாகக் கொண்டுமற் றெல்லாந் துயிலிற் கனவெனநீ மதியா திருமன மேயிது காணன் மருந்துனக்கே. (பொ-ரை) மனமே! சிவானந்தத்தையே உற்றதுணையாகக் கருதி மற்ற எல்லாவற்றையும் உறக்கத்தில் தோன்றுங் கனவென்று கொண்டு அவையிற்றைக் கருத்துட் கொள்ளாதிரு. இதுதான் உனக்கு (பிறவியறுக்கும்) நல்ல மருந்ததாகும். (இங்ஙனமிருப்பின்) பிரமதேவன் சிருஷ்டியும், நாராயணமூர்த்தியின் இரட்சிப்பும், சிறந்த திருக்கயிலாயத்தைப் பதியாகக் கொண்டெழுந் தருளியுள்ள உருத்திரபகவான் சம்மாரமும் நம்மிடம்வந்து நெருங்கமாட்டா. (வி-ரை) பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்வோர் முத்தொழில் வாய்ப்படுவர். மாறுதலில்லாச் சித்துப் பொருளைப் பொருளாகக் கொள்ளலே பிறவிநோய்க்கு மருந்தாகுமென்க. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு, மருளானும் மாணாப் பிறப்பு- குறள். மும்மூர்த்திகளின் மூன்று தொழில்களுஞ் சிவ பெருமானைக் கண்டோர்க்கு இல்லை யென்க. மும்மூர்த்திகளும் பசுக்களென்பது வேதக்கொள்கை. வியன்கயிலைப் பதியார் என்றது சீகண்ட பரம சிவனை; தற்பர சிவத்தை யன்று. மூவர்கோனாய் நின்ற முதல்வன் என்றார் மாணிக்கவாசகரும். 83 நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரமதி யாமல்வரும் பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி நோய்க்குண்டு தேசிகன் றன்னரு ணோக்கங்க ணோக்குதற்கே. (பொ-ரை) (முயற்சியின்றி உணவு பெற) நாய்க்கு எச்சிலிலைகள் உண்டு; (அதுபோல) நமக்கும் (வீடுகடோறும்) பிச்சை யன்னம் உண்டு; யமனை ஜெயிப்பதற்குப் பஞ்சாட்சர ஜெபம் வாய்க்கு உண்டு; மதியாமல் எதிர்த்துவரும் பேய்க்கு விபூதியுண்டு; மயக்கத்தை யடையச்செய்கின்ற பிறவியென்னுங் கொடிய நோய்க்கு ஆசாரியனுடைய திருவருள் நோக்கம் நோக்குதற்கு உண்டு. (நமக்கென்ன பயம்.) (வி-ரை) கூற்றை - அஞ்ச உதைப்பன அஞ்செழுத்துமே என்றார் ஞானசம்பந்தரும். திருவருள் நோக்கம் - சட்சுதீட்சை. 84 நேமங்க ணிட்டைகள் வேதங்க ளாகம நீதிநெறி ஓமங்க டர்ப்பணஞ் சந்தி செபமந்தர யோகநிலை நாமங்கள் சந்தனம் ண்ணீறு பூசி நலமுடனே சாமங்க டோறு மிவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே. (பொ-ரை) நியமங்களும், நிஷ்டைகளும், வேத அத்திய யனமும், ஆகமமோதலும், நியாயவழி யொழுகலும், ஓமங்களும், தர்ப்பணமும், சந்தியாவந்தனமும், செபமும், மந்திரமும், யோக நிலையும், சிவநாம உச்சரிப்பும், சந்தனம் விபூதி இவைகளை யணிந்து சிறப்புடனே ஒவ்வொரு சாமத்திலும் இவர்களால் செய்யப்படும் பூசைகளும் வஞ்சனையேயாம். (வி-ரை) உண்மை அன்பின்றிச் செய்யப்படும் நியமம் முதலியன வஞ்சனை யென்றபடி. நீற்றைப் புனைந்தென்ன என்னுஞ் செய்யுளைப் பார்க்க. வேதங்களாகம நீதிநெறி யென்பதற்கு வேதாகமங்களிற் கூறியுள்ள அறவழிக் கேதுவான எனக் கொள்ளினுமாம். நேமம் - நியமம்; மரூஉ. அஷ்டாங்க யோகத்துள் முதலது. ஓமம் - அக்கினி வளர்த்தல். தர்ப்பணம் - மந்திரநீர் இறைத்தல். 85 நானெத் தனைபுத்தி சொன்னாலுங் கேட்டிலை நன்னெஞ்சமே ஏனிப் படிக்கெட் டுழலுகின் றாயினி யேதுமிலா வானத்தின் மீனுக்கு வன்றூண்டி லிட்ட வகையதுபோல் போனத்தை மீள நினைக்கின் றனையென்ன புத்தியிதே. (பொ-ரை) நல்ல மனமே! நான் எவ்வளவு புத்தி சொன்னாலும் நீ கேட்கவில்லை; ஏன் இவ்வாறு கெட்டு அலை கின்றாய்; இனிமேல், ஒரு தொடர்பு மில்லாத ஆகாயத்திலுள்ள மீன்களைப் பிடிப்பதற்கு வலிய தூண்டிலை யெறிந்த தன்மை போல ஒரு தொடர்புமின்றிச் சென்றதைச் குறித்து மறுபடியும் எண்ணுகின்றாய். இஃது என்ன புத்தி? (வி-ரை) வான்மீன் - நட்சத்திரம். போனத்தை யென்றது கழிந்த மாயாகாரியங்களை. கழிந்தவரைக் குறித்துக் கருதுகின்றவன் அறிவீனன் என்க. சென்றது கருதார் நாளை சேர்வது நினையார் என்பது கைவல்யம். கற்றார்முற் றோன்றாக்கழி விரக்கம் என்றார் காக்கைபாடியனாரும். சென்ற பொருளைக் குறித்து நினைந்து நினைந்து வருந்துதல் வானத்துள்ள நட்சத்திரங்களைப் பூமியிலிருந்தபடியே பிடிக்கத் தூண்டிலெறிந்த பேதைமையை யொக்கும் என்றபடி. 86 அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த வைம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள்செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களைபறித் தேன்வளர்த் தேன்சிவ போகத்தையே. (பொ-ரை) பஞ்சாக்கர மென்னுங் கோடரியால் இந்த ஐந்துபுலனுக் கிருப்பிடமான கொடிய ஐம்பொறிக் கட்டையை வேரற வெட்டிச் செழுமை செய்து மிகவும் பண்படுத்திச் சதாசிவ மென்ற விதையை விதைத்துக் கூட்டமாகிய களைகளைப் பிடுங்கிச் சிவபோக மென்னும் பயிரை வளர்த்தேன். (வி-ரை) ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி. புலன் தங்குமிடம் - பொறி. களை - காமம், குரோதம் முதலியன; தத்துவக்கூட்டங்கள். பஞ்சாட்சர செபத்தால் ஐம்புலச்சேட்டைகள் அடங்கும், அவை அடங்கின் மனம் ஒன்றுபடும். அதற்குமேல் சதாசிவத் தியானமுண்டாம். அஃதுண்டாகத் தத்துவக்கூட்டங்கள் ஓடுங்கிச் சிவந் தோன்றும் என்றபடி. இதனால் ஸ்ரீபஞ்சாட்சர செபத்தின் இன்றியமையாமை தெரிவித்தவாறாம். 87 தாயாருஞ் சுற்றமும் பெண்டிருங் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள் நீயாரு நானா ரெனப்பகர் வாரந்த நேரத்திலே நோயாரும் வந்து குடிகொள்வ ரேகொண்ட நோயுமொரு பாயாரு நீயுமல் லாற்பின்னை யேதுநட் பாமுடலே. (பொ-ரை) சரீரமே! அன்னையாரும் பந்துக்களும் மனைவி யாருங் கைநெகிழ விடுத்துப், பின்னிடுங் காலத்தில் (மரண தசையில்) நீ யார் நானார் என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்தில் வியாதி வந்துசேரும். சேர்ந்த வியாதியும், படுத்துக் கொண்டிருக்கிற பாயும் நீயும் அல்லாமல் வேறு உறவு ஏது? (வி-ரை) கைவிடுத்துத் தாழ்ந்திடு நாள் - செயலற்றுச் சாகின்ற காலத்தில். உலகத்தில் செவ்வனே வாழ்கின்ற காலத்தில் மக்கள் தாயென்றும் தந்தையென்றும் மனைவியென்றும் மக்க ளென்றுஞ் சூழ்ந்து உறவாடுவார்கள்; உயிர் போகின்ற காலத்தில் நீயார் நானார் என்று வீட்டளவிலேயே நின்றுவிடுவார்கள். அத்தகையினர்மீது பற்றுவைத்து வாழ்வது அறியாமை யென்றபடி. மத்தயானையேறி மன்னர்சூழ வருவீர்காள், செத்த போதே யாருமில்லை சிந்தையுள் வைம்மின்கள் என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகளும். 88 ஆயும் பொழுது மயிர்க்கால்க டோறு மருங்கிருமி தோயு மலக்குட்டை யாகிய காயத்தைச் சுட்டுவிட்டால் பேயு நடன மிடுங்கட மாமென்று பேசுவதை நீயு மறிந்திலை யோபொரு டேட நினைந்தனையே. (பொ-ரை) மனமே! ஆராய்ந்து பார்க்குங் காலத்தில் ஒவ்வொரு மயிர்க்காலிலுஞ் சிறிய புழுக்கள் மலியும் மலம் நிறைந்த குட்டையாகிய உடலைச் சுட்டுவிட்டால், பிசாசுகள் நடனமிடுஞ் சுடுகாடு என்று உலகத்தவர் வார்த்தையாடுவதை நீ கேட்டு உணரவில்லைபோலும். (அத்தகைய தேகத்தைப் பொருளாகக் கருதிப்) பொருட்செல்வந் தேடத் துணிந்தா யல்லவா? (வி-ரை) உயிர் நீங்கிய பிறகு பேய்க்கிடமாகும் உடம்பைப் பொருளாகக் கொண்டு பொருட்செல்வந் தேடுவது அறியாமை யென்றபடி. அருட்செல்வந் தேட உழைப்பதே மக்கள் கடமை யென்றவாறு. 89 பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக் காணும் படிக்கல்ல மங்கையர்க் கல்லநற் காட்சிக்கல்ல சேணுங் கடந்த சிவனடிக் கல்லவென் சிந்தைகெட்டுச் சாணும் வளர்க்க வடியேன் படுந்துயர் சற்றல்லவே. (பொ-ரை) தரித்துக்கொள்ளும் ஆபரணங்களுக்காக அல்ல; பொருளைக் குறித்து அல்ல; நிலங்களைக் கொள்ளும் பொருட்டல்ல; பெண்கள் நிமித்தம் அல்ல; அழகிய பொருள்களைக் கண்டு களித்தற்கு அல்ல; அகாயங் கடந்து விளங்குஞ் சிவபெருமான் திருவடிக்கும் அல்ல; என் மன மகிழ்ந்து ஒரு சாண் வயிற்றை வளர்க்க அடியேன் படுங் கஷ்டங் கொஞ்சமன்று (வி-ரை) அடிகள் கொங்குநாட்டில் தங்கியிருந்தபோது, ஒருநாள் ஒருவன் வீட்டையடைந்து பிச்சையேற்ற காலத்து, அவ் வீட்டுக்காரன் சுவாமிகளைக் கள்வனெனக் கருதிப்புடைத்தனன். அதுகண்ட எதிர்வீட்டுக்காரன் சுவாமிகளை அழைத்துச் சென்று உபசரித்து அன்னமிட்டனன். அது காலை அடிகள் பாடியபாட்டு இஃதெனக் கூறுப. இச் செய்யுளால் பசியின் கொடுமை குறித்தவாறாம். மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை, தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின், கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும், பசிவந்திடப் பறந்து போம்- ஔவையார். பசி சிவ யோகிகளையும் விட்டகலாது. சிவயோகம் முதிரப்பெற்று அமிர்ததாரை உணவாமளவும் பசிநோய் யோகிகளையும் வருத்தியே தீரும். (எப்பற்றுமின்றி யோகத்தில் தலைப்பட்ட அன்பர்கள் பசியை ஆற்றவேண்டுவது இல்லறத்தார் கடன்.) 90 வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க் கெட்டாத புட்ப மிறையாத தீர்த்த மினிமுடிந்து கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே முட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே. (பொ-ரை) (வெள்ளி செம்பு முதலிய தகடுகளில்) பொறியாத சக்கரம்; செபியாத மந்திரம்; பிறர்க்கு எட்டாத புஷ்பம்; இறையாத சலம்; நன்றாக முடிந்து (பெட்டகத்திற்) கட்டிவையாத லிங்கம்; நினையாத மனம்; நினைவிலே கட்டுப் படாத பூசை. (இவைகளை யல்லவோ) சிவகுருநாதன் (எனக்கு) உபதேசித்தனன். (வி-ரை) கருவிகரணங்களைக் கடந்து அநுபூதியில் அறியவேண்டியதாகலின் வெட்டாத சக்கரம் . . . . . . . . . என்றார். சொல்லமுடியாத தொன்றைச் சொல்லளவில் நிறுத்திக் கூறுவது அறியாமை யென்க. சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி எனத் தாயுமானாரும், உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள் எனத் திருமூலரும் அருளிச் செய்துள்ளார்கள். கலைஞானத்தால் விளக்கமுறும் அறிவு காட்சி காண்பான் காணப்படும் பெருள்என்ற வேற்றுமையை உணர்த்துவதாம். குருநாதன் உபதேசமொழி கேட்டதும் விளங்கப்பெறும் மெய்யறிவு மனிதன் தூலகரணம் முதலிய வற்றை மறக்கச் செய்கிறது. அந்நிலையில் தோன்றுவன யாவும் ஞானமயமான பொருள்களாகும். அதனால் அவைகளை வெட்டாத சக்கர மென்றும், பேசாத மந்திரமென்றும், எட்டாத புட்பமென்றும், இறையாத தீர்த்தமென்றும், கட்டாத லிங்க மென்றும், கருதாத நெஞ்சமென்றும், முட்டாத பூசையென்றும் ஞானிகள் சொல்வது வழக்கம். மனவுணர்வு கடந்த ஒரு நிலையைப் பெரியோர் அவ்வாறு உலகத்தார்க்கு அறிவுறுத்துவ ரென்க. 91 எருமுட்டை பிட்கி னுதிர்ந்திடுஞ் செல்லுக் கெவரழுவார் கருமுட்டை புக்குக் கழலகன் றாய்கன துக்கமதாய்ப் பெருமுட்டுப் பட்டவர் போலழும் பேதையிர் பேத்துகிறீர் ஒருமுட்டும் வீட்டு மரனாம் மென்றைக்கு மோதுமினே. (பொ-ரை) கருவாகிய முட்டையில் நுழைந்து சிவ பெருமானுடைய திருவடிகளை நீங்கியுள்ளவர்களே! மிகுந்த துன்பம் உடையவர்களாய்ப் பெரிய இடையூறு அடைந்தவர் களைப்போலப் புலம்பும் அறிவில்லாதவர்களே! (தேகமழிந்து விடுமென்க.) கலங்குகின்றீர்கள். வராட்டியைப் பிட்டால் அதினின்றுஞ் சிந்துகின்ற செல்லுக்கு யாவர் அழுவார் (ஒரு வரும் அழார்). ஒருவகைத் துன்பமும் வரவொட்டாதபடி தடுக்குஞ் சிவநாமத்தை யெப்பொழுதுந் துதியுங்கள். (வி-ரை) வராட்டியைப் பிட்டகாலத்தில் சிந்துஞ் செல்லுக்கு அழுவாரில்லை; அழுவோர் மூடராவர். அதுபோல உடலழிவதைக் குறித்து அழுவது அறியாமை என்றபடி. சிவபிரான் திருவடியை மறந்தவரே கருவாய்ப்படுவராகலான் கரு முட்டை புக்குக் கழலகன்றீர் என்றார். வீடல் - அழித்தல். சிவநாமம் பிறவியை யொழிப்பதாகலான் ஒருமுட்டும் வீட்டும் அரனாமம் என்றார் சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும், சிவசிவ என்றிடத் தேவரு மாவர், சிவசிவ என்றிடச் சிவகதி தானே- திருமூலர். 92 மையாடு கண்ணியு மைந்தரும் வாழ்வு மனையுஞ்செந்தீ ஐயாநின் மாயை யுருவெளித் தோற்ற மகிலத்துள்ளே மெய்யா யிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே. (பொ-ரை) சிவந்த நெருப்புத் திருமேனி யுடையவனே! (அழல்வண்ணா) மைதீட்டிய கண்களையுடைய மனைவியும், பிள்ளைகளும், வாழ்க்கையும், வீடும் தேவரீரது மாயையாகிய பொய்த்தோற்றம். (அவை முதலில்) இந்த உலகத்திலே சத்தியமாயிருந்தன. (பின்னர்) நாள்கழிய நாள்கழிய முற்றிலுஞ் சூன்யமாய், பழைய கட்டுக்கதையாய்ச் சொப்பனமாய் மெல்ல ஒழிந்தன. (வி-ரை) உருவெளித் தோற்றம் - மனமருட்சியால் உண்டாகும் பொய்த்தோற்றம். இதுபற்றியே மாயையை அநிர் வசனீயமென வேதாந்தமோதும். மாயாகாரியங்கள் முதலில் மெய்யாகத் தோன்றுவது அறியாமையான் என்க. பழங்கதை கனவு இவை பொய்ம்மையைக்காட்டுங் குறிப்பு மொழிகள். வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலங்கல்வி யெனும், பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ், சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த, வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ என்றார் மணிவாசகனாரும். 93 ஆயாய்ப் பலகலை யாய்ந்திடுந் தூய வருந்தவர்பாற் போயா கிலுமுண்மை யைத்தெரிந் தாயில்லை பூதலத்தில் வேயார்ந்த தோளியர் காமவிகா ரத்தில்வீழ்ந் தழுந்திப் பேயாய் விழிக்கின் றனைமன மேயென்ன பித்துனக்கே. (பொ-ரை) நெஞ்சமே! பல ஞானநூல்களை ஆராய்ச்சி செய்கின்றாயில்லை, அவைகளை ஆராயும் பரிசுத்தம் பொருந்திய அரிய தவசிரேட்டர்களிடஞ் சென்றாகிலும் உண்மையைத் தெளிந்தாயில்லை. உலகத்திலே மூங்கிலை யொத்த மாதர்களினது காம மயக்கத்தில் தோய்ந்து முழுகிப் பேய்போல விழிக்கின்றாய். உனக்கு என்ன பயித்தியம்? (வி-ரை) சாத்திரங்களை யாய்தல் அபரஞானம். உண்மை விளங்கப்பெறுதல் பரஞானம். உண்மை - என்றும் விகாரம் எய்தாது ஒரு பெற்றித்தாயுள்ள பரம்பொருள். கற்றல் கேட்டல் இல்லா அறிவீனர்கட்கு அறிவுகொளுத்தியவாறாம். கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர் தங்க ளோடும் - உற்றிலேன் என்றார் அப்பரும். 94 அடியா ருறவு மரன்பூசை நேசமு மன்புமன்றிப் படிமீதில் வேறு பயனுள தோபங் கயன்வகுத்த குடியான சுற்றமுந் தாரமும் வாழ்வுங் குயக்கலங்கள் தடியா லடியுண்ட வாறொக்கு மென்றினஞ் சார்ந்திலரே. (பொ-ரை) உலகத்தில் திருத்தொண்டர்களின் நேசமும், சிவபூசையில் விருப்பமும், பக்தியும் அல்லாமல் வேறு பிரயோசன மளிக்கக்கூடிய பொருளுண்டோ? பிரமன் படைத்த குடும்பமாகிய பந்துக்களும் மனைவியும் வாழ்க்கையுங் குயவனாற் செய்யப்பட்ட மட்கலங்கள் தடியினால்அடிபட்ட விதத்தை யொக்குமென்று எண்ணி அடியவர் திருக்கூட்டத்திற் சேர வில்லை (உலகத்தார்). (வி-ரை) அடியார் - திருவருளில் பொருந்தியிருப்பவர். அடி - திருவருள். நல்லா ரிணக்கமும் என்னுஞ் செய்யுளைப் பார்க்க. 95 ஆங்காரப் பொக்கிசங் கோபக் களஞ்சிய மாணவந்தான் நீங்கா வரண்மனை பொய்வைத்த கூடம்விண் ணீடிவளர் தேங்கார் பெருமதிற் காம விலாசமித் தேகங்கந்தல் பாங்கா யுனைப்பணிந் தெப்படி ஞானம் பலிப்பதுவே. (பொ-ரை)இவ்வுடலாகிய கந்தல் ஆங்காரத்திற்குப் பொக்கிஷம்; கோபத்திற்குக் களஞ்சியம்; ஆணவம் விட்டகலாத அரண்மனை; பொய் நிறைந்த கூடம்; ஆகாயமளவு ஓங்கி வளர்ந்து நிறைவு பொருந்திய பெரிய மதில் சூழ்ந்த காம விலாசம் (ஆகையால்) தேவரீரை முறைப்படி வணங்கி எவ்விதம் ஞானம் பெறுவது? (வி-ரை) கந்தல் - நவதுவாரம். ஆங்காரம் - முனைப்பு. பொக்கிஷம் - திரவியசாலை. ஆங்காரம் நிறைந்த இடம் என்றபடி. களஞ்சியம் - பண்டகசாலை. கூடம் - அறை; வீடு. விலாசம் - விளையாட்டுத்தலம். அகங்காரம், கோபம் முதலிய தீக்குணங்கள் உள்ள மட்டும் ஞானங் கைகூடா தென்பது. 96 ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியனை மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே. (பொ-ரை) நீங்காத பிறவி யெடுத்து ஏக்கமுற்று ஏக்கமுற்று அலைந்த மனமே! என்றும் அழியாத மோட்ச வீட்டிற்கு மருந்து கேட்பாயாக. உற்பத்தி யில்லாதவனும், மழுமான் ஏந்திய திருக் கரங்களை யுடையவனும், திருமாலாகிய இடபத்தையுடைய வனுமாகிய சிவபெருமானை மனதால் நினைத்துக் கண்ணால் நீர் ஒழுக்கி ஞானம் வேண்டுமென்று தேம்பி யழுவாயாக. (வி-ரை) பிறவிக்குக் காரணம் மனத்தினின் றெழுமெண்ண மாகலான் ஒழியா . . . . நெஞ்சே என்று விளித்தார். அழியாப் பதவி - சாயுச்சியம். அநாதியனை - ஆதியில்லாதவனை. பிறவியை யொழிக்கவேண்டுமாயின் பிறவியில்லாக் கடவுளை யடைய வேண்டுமென்பார் அநாதியனை என்றார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார் என்றார் திருவள்ளுவரும். பிறப்பில்லாக் கடவுள் சிவபிரான் என்பார் மழுமான் கரத்தனை மால்விடையானை என்றார். பிறவிக்கு வித்தாகிய நினைப்பு முதலியவற்றிற்குக் காரணமா யிருப்பது மனமாகலானும் அம்மனம் எவ்வெப் பொருளைப்பற்றிச் செல்கிறதோ அவ்வப்பொருளை நுகர்வதற்கேற்ற பிறவிகளுண்டா மாகலானும், அது பிறப்பிறப்பில்லாக் கடவுளைத் தியானஞ் செய்யுமாயின் பிறப்பிறப்புத் துக்கங்களொழியு மாகலானும் மனத்திலுன்னி என்றார். மனம் எவ்வழியோ அவ்வழியே வாக்கு காயமும் நிற்குமென்க; விழியாற் புனல் சிந்தல் விம்மியழல் முதலியன அன்பர்களின் புறக் குறிப்புக்கள். மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென், கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி யுள்ளம், பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங், கைதா னெகிழவிடே னுடையா யென்னைக் கண்டுகொள்ளே அழுதா லுன்னைப் பெறலாமே அழுமதுவே யன்றி மற்றென் செய்கேன்- திருவாசகம். ஈண்டு நன்மை யென்றது பிறவாமையை. 97 நாய்க்கொரு சூலு மதற்கோர் மருத்துவ நாட்டிலுண்டோ பேய்கொரு ஞானம் பிடிபடு மோபெருங் காஞ்சிரங்காய் ஆக்குவ ரார தருந்துவ ராரது போலுடம்பு தீக்கிரை யாவதல் லாலேதுக் காமிதைச் செப்புமினே. (பொ-ரை) நாயினுக்கு ஒரு கருப்பமும், அதற்கு ஒரு வைத்தியமுந் தேசத்தி லுண்டோ? பேயினுக்கு ஒப்பற்ற ஞானம் பதியுமோ? பெரிய எட்டிக்காயை வளர்ப்பவர் யார்? அதனை யுண்பவர் யார்? (அதுபோல) உடலானது அக்கினிக்கு ஆகார மாகுமன்றி வேறு எதற்குப் பிரயோசனப்படும்? சொல்லுங்கள். (வி-ரை) இத்திருப்பாடல், பத்திரகிரியார் தம்மை வணங்கி நின்றபோது அவர்க்கு உடலினிழிவைச் செவியறி வுறுத்த அடிகள் அருளிச் செய்ததென்ப. நாய் கருப்பமுற எவரும் வைத்தியஞ் செய்யார். அதுபோல மூவாசையென்னும் பேய் கொண்ட ஒருவனுக்கு மெய்ஞ்ஞானோபதேசஞ் செய்ய எவரும் முந்தார். அறிவுடையோர் எட்டியை வளர்க்கவு மாட்டார்; அதனைத் தின்னவும் மாட்டார் அதுபோல அறிஞர் உடலையும் ஓம்பார்; அதனால் இன்பமும் நுகரார் என்றபடி. ஆக்குவார் என்பதற்குச் சமைப்பார் எனக் கூறுவோருமுளர். 98 கச்சிற் கிடக்குங் கனதனத் திற்கடைக் கண்கள்பட்டே இச்சித் திருக்கின்ற வேழைநெஞ் சேயிம வான்பயந்த பச்சைப் பசுங்கொடி யுண்ணா முலைபங்கர் பாதத்திலே தைச்சுக் கிடமன மேயொரு காலுந் தவறில்லையே. (பொ-ரை) கச்சுக்குள்ளே இருக்கின்ற பருத்த கொங்கை களின்மேல் கடைக்கண்ணோக்கஞ் செலுத்தி அவைகளையே விரும்பியுள்ள அறிவில்லா மனமே! மலையரையன் பெற்ற மிகப் பசிய பூங்கொடிபோன்ற உண்ணாமுலை யம்மையாரை இடப்பாகத்தில வைத்துள்ளவராகிய சிவபிரானுடைய திருவடி களிலே பதிந்திருப்பாயாக. நெஞ்சே! (அப்பொழுது) உனக்கு ஒருகாலுந் தவறுதல் உண்டாகாது. (வி-ரை) கச்சு - முலைக்கட்டு. ஆடவர்களுக்குக் காமக் கிளர்ச்சியை யுண்டுபண்ணுவன கொங்கைகளாகலான் கனதனத்தில் என்றார். பெண்கள் தனத்தில் கருத்துக் கொள்ளுவதால் ஞானம் விளங்காதாகலான் ஏழை நெஞ்சே என்றார். வேனில்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய, பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே என்றார் மாணிக்கவாசகரும். உண்ணாமுலை யென்ற குறிப்பால் பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னியாவள் என்ற திருவாக்கின் உண்மை தொனித்தல் காண்க. இறைவன் திருவடி இன்பக்கருவியாகலான் பாதத்திலே தைச்சுக்கிட என்றார். அன்புடைத் தொண்டர்க்கு அமுதருத்தி, இன்னல் களைவன இன்னம்ப ரான்றன் இணையடியே என்றார் திருநாவுக்கரசர். திருவடி - திருவருள். 99 மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவுங் கோனாகி யென்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை போனாலும் பேறிருந் தாலுநற் பேறிது பொய்யன்றுகாண் ஆனாலு மிந்த வுடம்போ டிருப்ப தருவருப்பே. (பொ-ரை) பெண்களின் கண்ணாகிய வலையினைத் தாண்டி ஏறிவந்தேன். நீர் நிழல்போல என்னுடன் வாழுங் குருமூர்த்தியும் ஞானாசாரியராக எழுந்தருளித் திருவருள் விலாசத்திற் குடியேற்றிக் கொண்டான். இனி விளையுங் குற்றம் ஒன்றுமில்லை. உடலழிந்து போனாலம் பேறு; உலகத்தி லிருந்தாலும் பேறு, இது பொய்யன்று. ஆனாலும் இந்தத் தேகத்தோடு கூடியிருப்பது அருவருக்கத் தக்கதேயாம். (வி-ரை) மான் ஆர் - மான்போன்ற. பிறவிக்கு வித்தகிய பெண்ணாசையைக் கடந்தேன். குருவின் திருவருளையும் பெற்றேன். இனி வீடு அடைவதில் ஐயமில்லை. ஆனாலும் தேகமுள்ளமட்டுங் கர்மங்கட்கு ஏது உண்மையான் அதனை யொழிக்க வேண்டும் என்றபடி. 100 சற்றாகி னுந்தனைத் தானறி யாய்தனை யாய்ந்தவரை உற்றா கிலுமுரைக் கப்பொருந் தாயுனக் கானநிலை பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற்சென்றென் பெற்றாய் மடநெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தனுமே. (பொ-ரை) அறியாமையோடு கூடிய மனமே! கொஞ்ச மாகிலும் உன்னை நீ உணராய்; தன்னை யாராய்ந்து தெளி வடைந்தவரை அடைந்தாகிலும் அவர்கள் தங்கள் அனுபவங் களைச் சொல்ல (அதனைக் கேட்க) ஒருப்படாய்; உனக்கு வேண்டிய உறுதி நிலையைக் கடைப்பிடிக்கமாட்டாய்; சற் குருவை வணங்காய் (இவைகளைச் செய்யாமல்) வேசையர் களிடஞ் சென்று என்ன பயன் அடைந்தாய்? உன்னைப்போலப் பித்தன் இல்லை. (வி-ரை) தன்னைத் தானறிதல் - தன்னைத் தேகமென்னும் அறிவு நீங்கி ஆன்மாவென்னும் அறிவு உதயமாதல். தன்னை யறியும் அறிவே தலைவனை யறியும் அறிவென்க. 101 உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையு மூற்றையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலே னுயர்பொன் னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேனினிமே லொன்றும் வேண்டிலனே. (பொ-ரை) உளியினாற் செதுக்கப்பட்ட கல்லுருவையும், அழகமையச் செய்யப்பட்ட சாந்துருவையும், அழுக்கு நீங்கப் புளியிட்டுத் துலக்கிய செம்புருவையும் வணங்கமாட்டேன். பொன்போலப் பொலிகின்ற (இறைவன்) திருவடி யிரண்டையும் நெஞ்சினுள்ளே பதிய வைப்பது உறுதியென்று புறத்தே சொல்லி (அத்திருவடிகளை) உள்ளே நிறுத்திவைத்தேன். இனிமேல் ஒன்றையும் விரும்புவனல்லேன். (வி-ரை) ஒளியிட்ட தாளிரண்டு - இடகலை, பிங்கலை என்பாருமுளர். ஆலயங்களில் கல்லினாலுஞ் சாந்தினாலுஞ் செம்பினாலுஞ் செய்யப்பட்ட உருவங்களையே பொருளாகக் கொண்டு வழிபடுவோர் அஞ்ஞானிகள். அவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முயலாதவர்கள். அவ்வுருவங்களில் சாந்நித்தியமா யமர்ந்துள்ள மூர்த்தியை வழிபடுவதே ஞானத்துக் கேதுவாம். கல், மண், சாந்து, செம்பு என்னும் எண்ண முடையார்க்குக் கடவுளெண்ணந் தோன்றாது. கடவுளெண்ணம் உடையார்க்குக் கல், மண், சாந்து, செம்பு என்னும் எண்ணந் தோன்றாது. மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை, பரத்தை மறைத்தது பார்முதல் பூதம், பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே, பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம், பொன்னில் மறைந்தன பொன்னணி பூடணம், தன்னை மறைத்தனதன் கரணங்களும், தன்னில் மறைந்தன தன்கரணங்களே என வரூஉந் திருமூலர் திருவாக்கை உய்த்துணர்க. இறைவனுக்குரிய அட்டமூர்த்தங்களுள் விசேடித்தது ஆன்மமூர்த்த மென்பது வேதாந்தக் கொள்கை. ஆன்ம மூர்த்தத்தை வழிபட்டுச் சமாதி கூடுவோரே அத்துவித முத்தி யெய்தப்பெறுவர். இதுபற்றியே ஞானிகள் இறைவனை ஆன்மமூர்த்தமாக வழிபடுவார்கள். இதுவே அகப்பூசை யென்னப்படும். அடிகள் ஞானசமாதி நிஷ்டை கைவந்தவராகலான் தாளிரண்டு உள்ளே இருத்துவ துண்மையென்று என்றார். மாயனை நாடி மனநெடுந் தேரேறிப், போயின நாடறி யாதே புலம்புவர், தேயமு நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக், காயமிந் நாட்டிடைக் கண்டுகொண் டேனே என்றார் திருமூலர். 102 1கல்லா லெறியுண்டுங் காலா லுதையுண்டுங் காளைகையில் வில்லா லடியுண்டு முன்னாள் விடமுண்டு மேலிளித்துப் பல்லாற் புரமெரி யேகம்ப வாணர் பதாம்புயத்தின் சொல்லார் செவியினிற் கேளா திருந்ததென் றொல்வினையே. (பொ-ரை) கல்லால் அடிபட்டும், காலால் உதைப்பட்டும், ஒரு காளை கையிலேயுள்ள வில்லால் அடிபட்டும், பூர்வத்தில் விஷத்தை யுண்டும், பல் வெளியிற்றோன்ற புன்னகையால் மூன்று புரங்களையும் எரித்த ஏகாம்பரநாதருடைய திருவடித் தாமரைகளின் தோத்திரங்களை அருமையான காதுகளில் கேளாதிருந்ததற்குக் காரணம் என் பழவினையேயாம். (வி-ரை) கல்லெறிந்தவர் - சாக்கியநாயனார். காலா லுதைத்தவர் - கண்ணப்பநாயனார். காளை - அருச்சுனன். விடமுண்டல் - ஆன்மாக்களின் பாசத்தை ஏற்றல். திரிபுர மெரித்தல் - மும்மலமழித்தல். விடமுண்ணல் திரிபுரமெரித்தல் முதலியன ஒவ்வோர் ஆன்மாவினிடத்தும் நிகழ்வன. ஆல முண்டாய் அமுதுண்ணக் கடையவனே என்று மாணிக்க வாசகரும், அப்பணி செஞ்சடை ஆதிபுராதன் - முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள் - முப்புரமாவது மும்மல காரியம் - அப்புரம் எய்தமையார் அறிவாரே என்று திரு மூலரும் கூறியிருத்தல் காண்க. 103 1ஒருநான்கு சாதிக்கு மூவகைத் தேவர்க்கு மும்பருக்குந் திருநாளுந் தீர்த்தமும் வேறுள தோவத் திசைமுனால் வருநாளில் வந்திடு மந்தக் கண்ணாளன் வகுப்பொழியக் குருநாத னாணைகண் டீர்பின்னை யேதிக் குவலயத்தே. (பொ-ரை) நால்வகை வருணத்தார்க்கும், பிர்மா, விஷ்ணு, ருத்திரர் என்னும் மூன்றுவகைத் தேவர்கட்கும், மற்ற வானவர் கட்கும் திருவிழாவும் தீர்த்தமும் வேறு உண்டோ? நான்முகனால் (சிருஷ்டிக்கப்படும் யாவும்) கூடுகின்ற காலத்திற் கூடும். அவன் சிருஷ்டி யொழியுமாயின் அதற்குமேல் சிவகுரு நாதன் கட்டளை வழியாகவும் நடைபெறும். இப்பூமியில் வேறு என்ன இருக் கிறது? (வி-ரை) நால்வகைச்சாதி - பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர். மூவகைத் தேவர் - பிர்மா விஷ்ணு ருத்திரர். உம்பர் - தெய்வலோகத்தார், பிரம சிருஷ்டி பிரகிருதி மட்டு மாகலானும், அதற்குமேல் அவன் செயலின்றி எல்லாஞ் சிவன் செயலாகலானும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக் குருநாதனாணை என்றார். 104 தாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடியது வெண்பா ஐயிரண்டு திங்களா வங்கமெலா நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி. (பொ-ரை) பத்து மாதங்களாகச் சுமந்து, உடல் முழுவதும் வருந்தி யீன்று, ஆண்குழந்தை யென்ற உடனே விருப்பத்தோடு எடுத்து, அழகிய இரண்டு கைத்தலங்களில் ஏந்திப் பொற்கலசம் போன்ற தனங்களால் பாலைக் கொடுத்தவளாகிய அன்னையை இனி எந்தப் பிறப்பிற் காணப்போகிறேன்? (வி-ரை) பையுள் என்றும் பாடம். முலைதரல் - பாலூட்டல், பிறந்து ஆண்மகவெனக் கேட்டதும் பிரசவ நோயையுங் கவனியாது குழந்தையை அன்பாக எடுத்தணைப்பது தாய்மார் இயல்பாகலான் பையலென்ற போதே பரிந்தெடுத்து என்றார். கனகம் - பொன். தாயின் பெருமை அறிவுறுத்தியவாறு. 1 முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்தே அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழன்மூட்டு வேன். (பொ-ரை) முன்னம் இரவும் பகலும் சிவபெருமானைப் போற்றித் தவஞ்செய்து பத்துமாதஞ் சுமந்து, வயிறு சரிய வருந்தித் தாங்கி யீன்ற அன்னையாருக்கோ எரியும்படி அக்கினி மூட்டுவேன்? (வி-ரை) முந்நூறு நாட்சுமந்தே அந்திபகலாச் சிவனை ஆதரித்தே எனக் கொள்ளலுமாம். பன்னாள் புத்திரப் பேறின்றிச் சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து தம்மை யீன்றமையான் முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து என்றார். முந்நூறு நாளளவும் என்றும் பாடம். முந்நூறு நாள் என்றது நாட்பெருக்கைக் குறிக்கு முகத்தான் தாயின் அன்பைக் குறிப்பிட்டவாறாம். தவங்கிடந்து பெறும்பிள்ளை நல்லொழுக்க முடையதாயிருக்கும். காம இச்சையால் பிறப்பது மிருக சுபாவ முடையதாயிருக்கும். மணவினை முடிந்த சிறிது காலத்துக்குள் கருத்தரித்த லாகாதென்றும், பன்னெடுங் காலங்கடந்து நாயகியின் மனமும் நாயகன் மனமும் பிள்ளைப்பேறு கருதிச் சிவபிரான் தியானத்தில் பதிந்து கிடக்கும்போது கருத்தரித்தல் நலமென்றும் பெரியோர் கூறுப. 2 வட்டிலிலுந் தொட்டிலிலு மார்மேலுந் தோண்மேலுங் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன். (பொ-ரை) ஏணையிலும், தொட்டிலிலும், மாரிலும், தோளிலும், கட்டிலிலும் என்னைக் கிளத்தி விரும்பி முற்றிலும் இடுப்பில் வைத்துப் பாதுகாத்துச் சிறப்புச்செய்த அன்னை யையோ கட்டையில் வைத்து நெருப்பிலிடுவேன்? (வி-ரை) சிறகு - பக்கம். குழந்தையின் அழுகை தணிவிக்கத் தாய் குழந்தையைப் பல பக்கங்களில் வைப்பது வழக்கம். 3 நொந்து சுமந்துபெற்று நோவாம லேந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றுந் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன். (பொ-ரை) வருந்திப் பத்துமாதஞ் சுமந்து ஈன்று வருந்தாமல் என்னை யேந்திப் பாலூட்டி வளர்த்துக் காத்துத் தனியே விடுத்துத் தங்கியிராமல் இரவும் பகலும் கையிலே வைத்துக் காப்பாற்றிய அன்னைக்கோ (அவள்) தேகத்தில் நெருப்பை மூட்டுவேன்? (வி-ரை) முன்னறிதெய்வம் தாயே. பின்னறிதெய்வமே கடவுள். ஈன்றாளில் என்ன கடவுள் என்றார் பெரியோரும், ஆண்டவன் முதல் முதல் தாயாகவே உயிர்களை ஈனுகிறான். அவன் முதல் காட்டும் வடிவம் தாய் வடிவேயாகும். அத்தகைத் தாயை மறப்பது எத்தகைப் பாவமென்று ஈண்டுச் சொல்ல வேண்டுவதில்லை. பட்டினத்தார் தாயின் மாண்புணர்ந்த பெரியாராகலான் தாய்தனக்கோ என்றார். 4 அரிசியோ நானிடுவே னாத்தா டனக்கு வரிசையிட்டுப் பார்த்துமகி ழாமல் - உருசியுள்ள தேனே யமிர்தமே செல்வத் திரவியபூ மானே யெனவழைத்த வாய்க்கு. (பொ-ரை) எனது அன்னைக்கு வரிசை வைத்துக் கண்டு மகிழாமல், சுவையுள்ள தேனே! அமிர்தமே! செல்வப் பொரு ளுடைய அரசனே! என்று என்னைக் கூப்பிட்ட வாய்க்கு அரிசியையோ நான் இடுவேன். 5 அள்ளி யிடுவ தரிசியோ தாய்தலைமேற் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமன் - மெள்ள முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன் மகனே யெனவழைத்த வாய்க்கு. (பொ-ரை) மெதுவாக முகத்தின்மேல் முகம் வைத்து முத்தமிட்டு என்னுடைய மகனே என்று கூப்பிட்ட வாயில் அரிசியையோ அள்ளியிடுவது? அன்னை சிரசின்மேல் கூசாமல் கொள்ளியையும் இடுவேனோ? (வி-ரை) அருமையாகப் பெற்று வளர்த்துச் சீராட்டி இனிய மொழிகளால் அழைத்துத் துன்பம் அணுகவொட்டாதபடி என்னைப் போற்றிய அன்னையார்க்குக் கைம்மாறாக நெருப் பிடவும், அரிசியிடவும், கொள்ளிவைக்கவும் நேர்ந்ததே என் றிரங்கியவாறாம். மேற்போந்த செய்யுள்களிலுள்ள ஓகாரங்களை எதிர் மறைப்பொருளாகக் கொள்வோருமுளர். 6 கலிவிருத்தம் முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே பின்னை யிட்டதீ தென்னி லங்கையில் அன்னை யிட்டதீ யடிவ யிற்றிலே யானு மிட்டதீ மூள்க மூள்கவே. (பொ-ரை) முன்காலத்தில் (சிவபெருமான்) இட்ட நெருப்பு திரிபுரத்தில் (மூண்டது); பின்காலத்தில் (அநுமான்) இட்ட நெருப்பு தெற்கேயுள்ள இலங்காபுரியில் (மூண்டது) ; என் தாயார் இட்ட நெருப்பு அடிவயிற்றில் (எரிகிறது); (அதுபோல) யானும் இட்ட நெருப்பு மூண்டெரியக் கடவது; மூண்டெரியக் கடவது. (வி-ரை) இச்செய்யுள் அன்னையார் தேகம் வெந்து நீறாக வாழை மட்டைகள் எரியும்படி அருளிச் செய்தது. அன்னையார் பிரிவின் துக்கம் அளவிடற்பால தொன்றென் பார், அன்னை யிட்டதீ அடிவயிற்றிலே என்றார். 7 வெண்பா வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்பல் ஆகுதே பாவியே னையகோ - மாகக் குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக் கருதி வளர்த்தெடுத்த கை. (பொ-ரை) ஆகாயத்திற் பறக்குங் குருவிகள் என் எதிரே பறவாதபடி என்னைச் சீராட்டி அன்புடன் போற்றி வளர்த்துக் காத்த கைகள் நெருப்பில் வேகின்றனவே. வெந்து சாம்பற் பொடியாகின்றனவே. ஐயயோ? யான் பாவியாய் நின்றேன். (வி-ரை) சில பறவைகள் நீழலால் குழந்தைகட்கு நோயுண் டாகலின் மாகக்குருவி பறவாமல் கோதாட்டி என்றார். கருதி - போற்றி; கருத்தாக என்றபடி. என்னைப் போற்றி வளர்த்த கைகள் வேகின்றதைக் கண்டும் உயிர் பெற்றிருக்கின்றே னாதலால் நான் பாவியானேன் என்றபடி. என்னை வளர்த்த கைகள் வெந்து நீறாவதைக்கண்டு நிற்பதோ. யான் அன்னையாருக்குச் செலுத்த வேண்டிய கைம்மாறு என்றிரங்கியவாறாம். 8 வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ வென்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி யுகந்து வரங்கிடந்தென் தன்னையே யீன்றெடுத்த தாய். (பொ-ரை) திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சின்மயனே! எப்பொழுதுந் தேவரீரையே நாடி விரும்பி வரம் வேண்டி நின்று என்னைப் பெற்றெடுத்த அன்னை வெந்து விட்டாளோ? தேவரீர் திருவடியடைந்தாளோ? என்னை மறந்து விட்டாளோ? (வி-ரை) தவப்பேற்றால் தம்மை ஈன்ற தாய் என்றவாறு காம விச்சையால் தம்மைப் பெறவில்லை என்றபடி. ஒருகணமும் என்னை மறவாத அன்னை என்னை மறந்தாளோ என்றி ரங்குகிறார். நின் பதத்தில் வந்தால் என்னை மறக்கக்கூடும். என்னை? நீ என்னினுமினியன் ஆகலின். சோணகிரி - சிவந்த மலை; அக்கினிமலை; அண்ணாமலை. 9 வீற்றிருந்தா ளன்னை வீதி தனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் - பாற்றெளிக்க எல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காமல் எல்லாஞ் சிவமயமே யாம். (பொ-ரை) என் தாய் திடகாத்திரமா யிருந்தாள்; தெருவி லிருந்தாள்; நேற்று உயிரோடிருந்தாள்; இன்று வெந்து சாம்பராய் விட்டாள்; என் என்று மனவருத்தமடையாமல் எல்லாரும் பால் தெளிக்க வந்து சேருங்கள். எல்லாஞ் சிவமயம் ஆகும். (வி -ரை) நேற்று நன்றாக இருந்தாள். தெருவில் உலாவி யிருந்தாள். ஐயோ! இன்று இறந்துவிட்டாளே எனக் கூறிக் கதறிப் புலம்புதல் உலக இயற்கை. எல்லாஞ் சிவன் செயல் சிவன் மயம் எனக் கொள்வது ஞானிகளியற்கை. 10 திருவிடைமருதூர் மென்று விழுங்கி விடாய்கழிக்க நீர்தேடல் என்று விடியுமெனக் கென்கோவே - நன்றி கருதார் புரமூன்றுங் கட்டழலாற் செற்ற மருதாவுன் சந்நிதிக்கே வந்து. (பொ - ரை) என்னுடைய தலைவனே! தருமநெறியைக் கடைப்பிடித் தொழுகாதவராகிய அரக்கர்களுடைய மூன்று புரங்களையும் மிகுந்த நெருப்பினால் நீறாக்கிய மருதப்பிரானே! தேவரீர் திருச்சந்நிதியில் வந்தும், உணவை மென்று உட்கொண்டு தாகவிடாய் தணிக்க ஜலந்தேடுந் தொழில் எனக்கு என்று ஒழியும்? (வி-ரை) உலகத்தில் மக்கள் பலதுறைகளில் நின்று உழைப்பது வயிற்றின் பொருட்டேயாம். சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே என்று பிறாண்டும் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார்கள். வயிற்றின் பொருட்டுச் செய்யப்படும் இலௌகிகத் தொழில்கள் திருவருள் வழிக்கு முட்டாகிப் பிறவிக்கும் வித்தாகின்றன. அதுபற்றியே பெரியோர் பசியை யொழிக்கத் தொடக்கத்தில் பயிற்சி செய்வர். ஈண்டுத் திருவருளமுதங் கைவரப் பெற்றும் பசியின் கொடுமை யிடர்ப் படுத்துகிறதேயென இரங்கியவாறாம். 11 திருவொற்றியூர் கண்டங் கரியதாங் கண்மூன் றுடையதாம் அண்டத்தைப் போல வழகியதாந் - தொண்டர் உடலுருகத் தித்திக்கு மோங்குபுக ழொற்றிக் கடலருகே நிற்குங் கரும்பு. (பொ-ரை) மேம்பட்ட புகழினை வாய்ந்த திருவொற்றியூர் சமுத்திரக்கரையிலே நிற்கின்ற கரும்பு; கண்டம் நீலநிற முடையதாம்; திரிநேத்திரங்களை யுடையதாம்; ஆகாயத்தை யொத்த அழகு பொருந்தியதாம்; அடியவர்கள் திருமேனி யுருகும்படி யினிப்பதாம். (வி-ரை) ஆகாய அழகு உருவ வழிபாடுடையார்க்குப் புலனாகாது. வடிவிலா ஆகாயம் அகக்கண்ணிற்குப் புலனாகும் போது ஆண்டவன் கண்டங்கருமையும், அவன் கண்மூன்றும் தோன்றும். இது யோகநிலை. அந்நிலையில் உடலுருக இன்பந் தோன்றும். அதைக் கரும்பு என்றார் அடிகள். முக்கட் செங்கரும்பே என்றார் தாயுமானாரும். மனத்தமுதாஞ் சங்கரனை என்றார் மாணிக்கவாசகனார். தேகாத்மபுத்தி தேயத் தேய ஆனந்தம் பெருகும் என்பார் உடலுருகத் தித்திக்கும் என்றார். 12 ஓடுவிழுந்து சீப்பாயு மொன்பதுவாய்ப் புண்ணுக் கிடுமருந்தை யானறிந்து கொண்டேன் - கடுவருந்துந் தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவில் போவா ரடியிற் பொடி. (பொ-ரை) துவாரம் விழுந்து சீயொழுகும் நவவாசல் களுள்ள புண்ணுக்கு உபயோகிக்கும் ஔடதத்தை யான் தெரிந்து கொண்டேன். அது விடமுண்ட தேவதேவனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவொற்றியூர் வீதியிலே செல்வோர்களின் பாதத்திலேயுள்ள தூளியாம். (வி-ரை) ஓடு - பருவுமாம். ஒன்பது வாய் - நவதுவாரம்; கண்ணிரண்டு, காதிரண்டு, மூக்குத்துவாரம் இரண்டு, வாயொன்று, குதம் ஒன்று, குறியொன்று. ஒண்ணுளே யொன்பது வாசல்வைத்தாய் என்றார் அப்பர் சுவாமிகளும். புண் ணென்றது - உடலை. புண்ணுக்கு மருந்து அடியவர் திருவடித் துகள் என்றபடி. அடியவர் திருவடித்துகளைப் பிறவிப் பிணிக்கு மருந்தாகக் கொள்வோர் ஆணவமற்றவராவர். திருவொற்றி யூரிற் சஞ்சரிப்போர் சீவன்முத்தராகலான் திருவொற்றியூர்த் தெருவிற், போவா ரடியிற் பொடி என்றார். மேற் செய்யுளைக் காண்க. 13 வாவியெல்லாந் தீர்த்த மணலெல்லாம் வெண்ணீறு காவணங்க ளெல்லாங் கணநாதர் - பூவுலகில் ஈது சிவலோக மென்றன்றே மெய்த்தவத்தோர் ஓதுந் திருவொற்றி யூர். (பொ-ரை) உண்மைத் தவமுடையார் உலகத்திலே இது சிவ லோகம் என்று பலமுறை புகழும் திருவொற்றியூர்க் கண்ணுள்ள தடாகங்களெல்லாம் புண்ணியத் தீர்த்தங்களாம். மணல் முற்றிலும் விபூதியாம். சோலைகள் யாவுஞ் சிவகண நாதர்களாம். (வி-ரை) இது சிவோகம் பாவனை கைவரப் பெற்றார் கூற்று. 14 திருவாரூர் ஆரூர ரிங்கிருக்க வவ்வூர்த் திருநாளென் றூரூர்க டோறு முழலுவீர் - நேரே உளக்குறிப்பை நாடாத வூமர்கா ணீவிர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர். (பொ-ரை) திருவாரூர்ப் பெருமான் இவ்விடத்தில் வீற்றிருப்ப அவ்வூரில் திருவிழா என்று பற்பல ஊர்கடோறும் அலைந்து திரிகின்றவர்களே! நேராக உள்ளக் குறிப்பைத் தெளியாத ஊமைகளே! நீங்கள் தீபமிருக்க (அதனை விடுத்து வெறுந்) தீயை நாடுபவர்கள். (வி-ரை) அகத்திலுள்ள ஆரூரைக் காணாது புறத்தேயுள்ள தலங்களைத் தரிசிக்கச் செல்வது அறியாமை யென்றபடி. 15 எருவாய்க் கிருவிரன் மேலேறுண் டிருக்குங் கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய் - திருவாரூர்த் தோரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய் நீரோடும் தாரைக்கே நீ. (பொ-ரை) மலத்துவாரத்துக்கு இரண்டங்குலத்தின் மேலேயுள்ள புழுக்கூடாகிய கருக்குழிக்கோ வருந்தினாய்? திருவாரூர் தேரோடுந் தெருவிலே ஜலம் பாயுஞ் சிறுவழியின் பொருட்டு நீ மாண்டு கிடக்கின்றாய் (அந்தோ இஃதென்ன அறியாமை.) (வி-ரை) தன்னடியவன் ஒருவன் காம விகாரத்தால் எண்ணெய் நானஞ்செய்த நாளில் மனைவியுடன்கூடி மாண்டனன். அவன் உயிர் பெற்றெழப் பாடிய பா இது. திருவாரூர் வீதியைச் சிறப்பித்தவாறாம். திருவாரூர் வீதி யென்றது சுழுமுனா நாடியை. திருவாரூர் வீதியிலிருந்துஞ் சிற்றின்பத் தழுந்திக் கெட்டனையே என்றிரங்கியபடி. 16 திருக்காளத்தி பொய்யை யொழியாய் புலாலைவிடாய் காளத்தி ஐயரே யெண்ணா யறஞ்செய்யாய் - வெய்ய சினமே யொழியாய் திருவெழுத் தைந்தோதாய் மனமே யுனக்கென்ன மாண்பு. (பொ-ரை) நெஞ்சமே! பொய் பேசுதலை விடமாட்டாய்; மாமிச பக்ஷணத்தை விலக்கமாட்டாய்; திருக்காளத்தியப்பரைச் சிந்தனை செய்யமாட்டாய்; தருமஞ் செய்யமாட்டாய்; கொடிய கோபத்தை நீக்கமாட்டாய்; ஸ்ரீ பஞ்சாட்சரத்தை ஓதமாட்டாய்; உனக்கென்ன பெருமை யுண்டாகப் போகிறது? (வி-ரை) பொய்யும் புலாலும் சினமும் மனிதன் ஞான நிலையைக் கெடுப்பன. சிவத்தியானமும் அறமும் பஞ்சாட் சரமும் ஞானநிலையை விளங்கச் செய்வன. அல்லன செய்யாது நல்லன செய்வது மனதுக்கு மாண்பு என்றபடி. 17 திருக்காஞ்சி எத்தனையூ ரெத்தனைவீ டெத்தனைதாய் பெற்றவர்கள் எத்தனைபே ரிட்டழைக்க வேனென்றேன் - நித்தம் எனக்குக் களையாற்றா யேகம்பார கம்பா உனக்குத் திருவிளையாட் டோ. (பொ-ரை) ஏகாம்பரநாதனே! கம்பனே! எத்தனை ஊர்கள்? எத்தனை வீடுகள்? பெற்றவர்கள் எத்தனை அன்னைமார்கள்? எத்தனை பெயர்களை வைத்துக் கூப்பிட (அவைகட்கெல்லாம்) ஏன் ஏன் என்று நாடோறும் பதிலுரைத்தேன். (இதனால்) எனக்கு உண்டாகும் இளைப்பை யொழிப்பாய். நான் துன்புறுவது தேவரீருக்குத் திருவிளையாட்டாக விருக்கிறது போலும்! (வி-ரை) பல ஊர்களிலும் பல வீடுகளிலும் பல தாய்மார்கள் வயிற்றிலும் பிறந்து பல பெயர்களைத் தாங்கிக் களைத்துவிட்டேன். பிறந்தது சாலும்; இனிப் பிறக்கவாற்றலும் இல்லை. திருவருள் செய்யாய் என்றிரந்தபடி. 18 திருவிருப்பையூர் மாதா வுடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவுங் கைசலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை கருப்பையூர் வாராமற் கா. (பொ-ரை) கடவுளே! திருவிருப்பையூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! (என்னைப் பலமுறையும் பெற்றுப் பெற்றுத்) தாயாருந் தேகந் தளரப் பெற்றாள். கொடிய வினையை யுடையனாகிய யானுங் கால் ஓயப்பெற்றேன். பிரமனும் (சிருஷ்டித்துச் சிருஷ்டித்துக்) கைச்சலிக்கப்பெற்றான். இனி யொரு தாயின் வயிற்றிற் பிறவாதபடி காத்தருள்க. (வி-ரை) இப்பிறவி நீக்கி யினியொரு காயத்திற் புக்குப் பிறவாத போம்வழி தேடுமின் என்றார் திருமூலரும். 19 திருக்காரோணம் அத்தி முதலெறும்பீ றானவுயி ரத்தனைக்குஞ் சித்த மகிழ்ந்தளிக்குந் தேசிகா - மெத்தப் பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி இசிக்குதையா காரோண ரே. (பொ-ரை) யானைமுதல் எறும்பீறாக உள்ள எல்லா உயிர்களையுந் திருவுள முவந்து ரட்சித்துவரும் பெருமானே! திருக்காரோணக் கடவுளே! மிகவும் பசிக்கின்றது ஐயா! பாழான வயிற்றைப் பிடித்து இழுக்கின்றது ஐயா! (என் செய்வேன்.) (வி-ரை) யானைமுதல் எறும்பீறாக உள்ள உயிர்களுக் கெல்லாம் ஆண்டவன் அமுதளித்துக் காத்துவரும் உண்மை காண்பவர் பசி வரும்போது ஆண்டவனை நோக்கியே முறையிடுவர். இறைவ னுண்மையில் ஐயுறுவோர் பசியை ஒழிக்கும்பொருட்டுச் செல்வரிடஞ் சென்று யாசிப்பர். இவர் ஆண்டவனிடத்து அன்பில்லாதவர். கருப்பினுள் முட்டைக்குங் கல்லினுட் டேரைக்கும் விருப்புற் றமுதளிக்கு மெய்யன் என்றார் ஔவையார். தேசிகன் - ஆசாரியன்; பெரியன். 20 திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே உற்றா ரழுமுன்னே யூரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு. (பொ-ரை) யமன் வருவதற்கு முன்னே, கண்பார்வை கெடுவதற்கு முன்னே, பாலுண்ட கடைவாய்ப் பல் விழுவதற்கு முன்னே, பந்துக்கள் மேலே விழுந்து அழுவதற்கு முன்னே ஊரவர்கள் சுடுவதற்கு முன்னே (மனமே) திருக்குற்றாலத்துக் கடவுளையே தோத்திரஞ் செய்வாயாக. (வி-ரை) புலன்கள் கெட்டபோதும் பின்னை நேரும் யமவாதனையாலும் கடவுளைச் சிந்திக்க முடியாதாகலான். காலன் வருமுன்னே . . . . . . . . குற்றாலத் தானையே கூறு என்றார். 21 திருவையாறு மண்ணுந் தணலாற வானும் புகையாற எண்ணரிய தாயு மிளைப்பாறப் - பண்ணுமயன் கையா றவுமடியேன் காலாற வுங்கண்பார் ஐயா திருவை யாறா. (பொ-ரை) ஐயனே திருவையாற்றில் எழுந்தருளியுள்ள பெருமானே! பூமியும் உஷ்ணமடங்கவும், ஆகாயமும் புகை யடங்கவும், அளவிறந்த தாய்மார்களும் களைப்பாறவும், சிருஷ்டிக்கும் பிரமன் கை ஓயவும், சிறியேன் காலாறவும் கடைக்கண் நோக்கி யருள்க. (வி-ரை) மண் தணலாறல் - கொளுத்திய பூமி நெருப்பு அடங்கல். வான்புகையாறல் - கொளுத்துங்காலத்தில் ஆகாயத்தை நோக்கிச் செல்லும் புகை அடங்கல். பிற வெளிப் படை. 22 சிதம்பரம் சிற்றம் பலமுஞ் சிவனு மருகிருக்க வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம் பிறந்திடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சங் கறந்திடத்தை நாடுதே கண். (பொ-ரை) சிதம்பரமும் சிவபெருமானும் சமீபத்திலே யிருக்க நாம் ஒன்றுமில்லாக் சூந்யத்தைத் தேடிக்கொண்டோம். அறியாமையை யுடைய மடநெஞ்சமானது (நாம்) ஜெனனஞ் செய்த தானத்தை நாடுகிறது. கண்ணானது (நாம்) பால் உண்ட தனத்தை விரும்புகிறது. (வி-ரை) சிற்றம்பல மென்றது - இருதய கமலத்தை. சிவன் என்றது இருதய கமலத்தில் வீற்றிருந்தருளும் பரமான்மாவை. இவை யிரண்டுங் காயத்துள்ளிருப்பதுவும் அவைகளை வேறிடத் திலிருப்பதாகக் கருதுவது அறியாமை யென்பார் சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க, வெற்றம் பலந்தேடி விட்டோமே என்றார். பிறந்த இடம் - அல்குல். கறந்த இடம் - தனம். எல்லா மாதர்களையுந் தாய்போலக் கருதுதல் வேண்டுமென்றபடி. 23 பொது தோடவிழும் பூங்கோதைத் தோகையுனை யிப்போது தேடினவர் போய்விட்டார் தேறியிரு - நாடி நீ என்னை நினைத்தா லிடுப்பி லுதைப்பேனான் உன்னை நினைத்தா லுதை. (பொ-ரை) இதழ்விரித்த மலர்மாலையைச் சூடிய கூந்தலையும் மயில்போன்ற சாயலையும் உடையமாதே! உன்னை இப்பொழுது தேடினவர் சென்று விட்டார்; தெளிவாயிரு; நீ என்னை விரும்பி நினைத்தால் உன் இடுப்பில் உதைப்பேன்; நான் உன்னை நினைத்தால் நீ என்னை உதை. (வி-ரை) சீவன் முத்தர்க்குங் காமவிச்சை ஒவ்வொரு வேளை எழுதல் இயல்பு. அவ்வேளையில் அதன்கண் அவர் படிந்து பின்னை அதை வெறுப்பர். சுவாமிகள் தம்பாலெழுந்த எண்ணத்தையும், அதை யெழுப்பியதையும் உருவகப்படுத்தி வெறுத்துக் கூறியுள்ளது கவனித்தத்தக்கது. அடிகள் ஒரு விலைமாதினைக் காமுற்றதாகவும், அவளிசைவதற்குள் இந்திரியம் கலிதமாய் விட்டதாகவும், அதற்குமேல் அவள் சுவாமிகள் விருப்பத்தை நிறைவேற்ற முயன்றதாகவும், அது காலைப் பிள்ளையார் இச்செய்யுளை யருளிச் செய்ததாகவுஞ் சிலர் கூறுப. இது நம்பத்தக்கதன்று. இக்கதையை ஆதாரமாகக் கொண்ட வேறொரு பொய்க்கதை நமது தமிழ் நாட்டில் உலவுகிறது. பட்டினத்தார் விந்துவை அவ்விலைமாது உண்டு அருணகிரிநாதரை யீன்றாள் என்று சொல்லப்படுகிறது. சுக்கிலத்தை உண்டு கருத்தரிப்பது இயற்கைக்கு அரண் செய்வ தன்று. அருணகிரியார் பதினாறாம் நூற்றாண்டில் பிரபுட தேவன் காலத்திலிருந்தவர். பட்டினத்தார் பத்தாம் நூற்றாண்டி லிருந்தவர். இவர் திருப்பாடல்கள் பதினொராந் திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பட்டினத்தார் சேக்கிழாருக்கு முன்னே ஞானசம்பந்தருக்குப் பின்னே தமிழ்நாட்டில் தோன்றி னவர். ஆறுநூறாண்டு கடந்து பிறந்த அருணகிரியாரைப் பட்டினத்தார் பிள்ளை என்று கூறுவது பொருந்தாது. விரிக்கிற் பெருகும். 24 வாசற் படிகடந்து வாராத பிச்சைக்கிங் காசைப் படுவதில்லை யண்ணலே - யாசைதனைப் பட்டிறந்த காலமெலாம் போதும் பரமேட்டி சுட்டிறந்த ஞானத்தைச் சொல். (பொ-ரை) பெருமையிற் சிறந்தவனே! சிவபெருமானே! வாயற்படியைத் தாண்டிக்கொண்டு வந்திடாத பிச்சையில் பிரியம் வைப்பதில்லை. அப்பிச்சைக்குப் பிரியம் வைத்தழிந்த காலம் சாலும். இனிச் சுட்டறிவிற் கெட்டாத ஞானத்தை உபதேசிப்பாயாக. (வி-ரை) சுட்டிறந்த ஞானம் - ஞாதுரு ஞானஞேயங் கடந்த திருவடி ஞானம். 25 நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும் இச்சையிலே தானங் கிருப்பதுவும் - பிச்சைதனை வாங்குவது முண்பதுவும் வந்துதிரு வாயிலிலே தூங்குவதுந் தானே சுகம். (பொ-ரை) விஷத்தையுடைய பாம்பினை யணிந்த சிவ பெருமானை நன்மை உண்டாகப் பணிவதும், பணியும் விருப்பத்திலே உள்ளத்தைக் கிடத்தியிருத்தலும், பிச்சை யேற்றலும், அதனை யுண்டலும், உண்டபின் வந்து சிவாலயத் தில் உறங்குவதுவே இன்பம். (வி-ரை) நச்சரவம் - குண்டலி சத்திக் குறிப்பு. இச்சையிலே யென்பதற்குச் சிவபெருமான் இச்சையிலே எனலுமாம். திருவருள் வழி யென்றபடி. 26 இருக்கு மிடந்தேடி யென்பசிக்கே யன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தா லுண்பேன் - பெருக்க அழைத்தாலும் போகே னரனே யென்தேகம் இளைத்தாலும் போகே னினி. (பொ-ரை) சிவபெருமானே! யான் இருக்கின்ற இடத்தைத் தேடி யென் பசிநோ யொழியும்பொருட்டு உருக்கமாகச் சோறு கொண்டுவந்தால் புசிப்பேன். (அவ்வாறின்றித் தங்களிடத்துக்கு என்னை வரும்படி) மிக வருந்திக் கூப்பிட்டாலும் போகேன். என் உடல் மெலிந்தாலும் இனிப்போக மாட்டேன். (வி-ரை) பசியின் பொருட்டுத் தாமே பிறர் இல்லஞ் சென்று இரப்போர் திருவருள்வழி யொழுகாதவர். திரு வருள்வழி நிற்போர் எங்கிருப்பினும் அவர்க்குத் திருவருள் தூண்டுதலால் பலர் தாமே வலிந்து வந்து அன்னமிடுவர். உடல் பொருள் ஆவி மூன்றையுஞ் சிவார்ப்பணஞ் செய்வோரைக் காக்குங் கடன் சிவபெருமானுடைய தென்பது. 27 விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலைச் சுட்டுவிடப் போகிறார் சுற்றத்தார் - பட்டதுபட் டெந்நேர முஞ்சிவனை யேத்துங்கள் போற்றுங்கள் சொன்னே னதுவே சுகம். (பொ-ரை) உயிரானது தேகத்தை விட்டு நீங்கப் போகிறது; நீங்கினதுந் தேகத்தைப் பந்துக்கள் நெருப்பில் எரித்துவிடப் போகின்றார்கள். என்னபாடு பட்டாயினும் எப்பொழுதும் (இடையறாமல்) சிவபெருமானைத் தோத்திரஞ் செய்யுங்கள்; வணக்கஞ் செய்யுங்கள். m~njÆ‹g«.(c©ik) விளம்பினேன். (வி-ரை) உடலைவிட்டு உயிர் நீங்குங் காலம் இஃதென்னும் உறுதியின்மையான் விட்டுவிடப் போகுதுயிர் என்றார். உயிர் நீங்கினதும் பந்துக்கள் உடலைச் சுட்டுவிடுவார்கள். அதற்குமேல் செய்வ தென்னை? உடலின்றி உயிர் ஒரு கருமத்தையுஞ் செய்யாது. ஆனதுபற்றி உயிர் உடலோடு கூடி வாழுங் காலத்திலேயே சத்கருமங்களைச் செய்யவேண்டு மென்றார். மாயா காரியங்களை நினைப்பதால் துக்கமும், பிறவியும் பெருகு மாகலானும், இன்பப் பொருளாகிய இறைவனை யிடையறாது போற்றலானும், நினைவதாலும் இன்பம் பெருகிப் பிறவி யொழி யுமாகலானும் எந்நேரமுஞ் சிவனை யேத்துங்கள் போற்றுங்கள், சொன்னே னதுவே சுகம் என்றார். 28 ஆவியொடு காய மழிந்தாலு மேதினியில் பாவியென்று நாமம் படையாதே - மேவியசீர் வித்தா ரமுங்கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி. (பொ-ரை) அறியாமையுடைய மனமே! உயிரோடு உடல் ஒழிந்தாலும் பூவுலகில் பாவி என்று பெயர் தாங்காதே. பொருந்திய செல்வச் செருக்கும் டம்பமும் வேண்டாம். இறந்தவரை யொப்ப உலகில் உலவு. (வி-ரை) பாவியென்ற நாமம் படையாதே - பாவச் செயல்களைச் செய்யாதே என்றபடி. செல்வச் செருக்கு முதலியன பிறவிவாய்ப் படுத்துவன ஆகலான் மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் என்றார். செத்த பிணம் செயலின்றிக் கிடப்பதுபோலச் செயலின்றிக் கிடப்பதே ஞான நெறியாம். என்னை? திரிகரணச் செயல்களே மறுபிறப்பிற்குக் காரணமாகலின். செயலின்றிக் கிடத்தல் - கருவிகரணங்க ளோய்ந்து கிடத்தல். 29 பின்முடுகு வெண்பா இப்பிறப்பை நம்பி யிருப்பரோ நெஞ்சகமே வைப்பிருக்க வாயின் மனையிருக்கச் - சொப்பனம்போல் விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக் கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. (பொ-ரை) மனமே! சேமித்த பொருளிருக்க, வீடு வாசல் இருக்க, கனவைப்போல விக்கலெடுத்துப் பற்கள் கிட்டிக் கொள்ள, கண்கள் மிகவும் பஞ்சடைந்து கபத்தை யொழுக்கி யிறந்து சாப்பறை யடித்தலை (பிரத்தியட்சமாகப்) பார்த்தும் இந்தப் பிறவியை (உறுதியாக) நம்பியிருப்பார்களோ (அறிவுடை யோர்கள்?) (வி-ரை) கடவுளைப் போற்றலின்றிப் பெருமுயற்சி செய்து ஈட்டிய பொரு ள் வீடு முதலியன கெடாமலிருப்ப அவைகளைச் சேமித்த புருஷன் இறந்துவிடுவதைக் கண் கூடாகக் கண்டும் உடலைப் பொருளாகக் கருதுகின்றார்களே யென்றிரங்கிய வாறாம். நம்முடன் தொடர்ந்து மறுமைக்கு உய்தி கொடுக்கும் அறச்செயல்களைச் செய்யல் வேண்டும் என்றபடி. வைப்பு - செல்வம். அப்பு - நீர்; ஈண்டுக் கபம் கோழை. இருப்பையோ என்றும் பாடம். 30 மேலு மிருக்க விரும்பினையே வெள்விடையோன் சீல மறிந்திலையே சிந்தையே - கால்கைக்குக் கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப் பட்டவுடல் கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (பொ-ரை) மனமே! காலுக்குங் கைக்குந் தலையணை வைத்து, மெத்தை பரப்பிக் குத்தி அடிபட்ட தேகத்தைக் கட்டை யிலே வைத்துச் சுடுவதைப்பார்த்தும் மேலும் உலகத்தில் வாழ ஆசைப்பட்டாய்; வெள்ளிய இடபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானது தருமநெறியைத் தெரிந்து கொண்டாயில்லை. (வி-ரை) மரணமடைவதைப் பிரத்தியக்ஷமாகக் கண்டும் உலகத்தில் என்று மிருப்போமென விஷயங்களில் தலையிடுவது அறியாமை யென்றபடி. 31 ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே அன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே - வன்கழுக்கள் தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு. (பொ-ரை) மனமே! கொடிய கழுகுகள் பாய்ந்து பாய்ந்து சிறகுகளைத் தட்டிமூடித்தேகத்தைச் சின்னபின்ன மாக்கிக் கூச்சலிட்டுக் கொத்தி யுண்பதைப் பார்த்தும் நவ துவாரங்களை யுடைய தோல்பையாகிய உடலிடத்தில் விசுவாசம் வைத்துத் திரிந்தாயே. (வி-ரை) கழுகு முதலிய பறவைகளுக்கு உணவாகுந் தேகத்தைப் பொருளாகக் கொண்டு காலங் கழிப்பது அறியாமை யென்றவாறு. 32 இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே மன்னரிவ ரென்றிருந்து வாழ்ந்தவரை - முன்னம் எரிந்தகட்டை மீதி லிணைக்கோ வணத்தை உரிந்துருட்டிப் போட்டது கண்டு. (பொ-ரை) மனமே! அரசர் இவர் என்று உலகத்தார் புகழ உயிரோடிருந்து வாழ்ந்தவரை முன்னே வெந்து கரியான கட்டையின்மேல் கட்டியிருந்த கௌபீனத்தையும் உரிந்து உருட்டி விட்டதையும் பார்ந்து இன்னம் பிறவி யெடுக்க விருப்பங் கொள்வையோ? (வி-ரை) கௌபீனத்தையும் உரிந்து கொள்கின்றார் என்றது நம்மால் தேடப்பட்ட சிறுமைப்பொருளும் நம்முடன் வரமாட்டாது என்பதைக் குறிக்கவென்க. அரசனும் இறந்த பின்னர்ச் சுடுகாட்டிற் கட்டைபோல உருட்டப்படுவதையுங் கண்டு பிறவியொழிக்கும் அறக்காரியங்களைச் செய்யாது மறக் காரியங்களைச் செய்ய விரும்புவது அறியாமை யென்றபடி. 33 முதற்சங் கமுதூட்டு மொய்குழலார் தம்மை நடுச்சங்க நல்விலங்கு பூட்டுங் - கடைச்சங்கம் ஆம்போ தனவூது மம்மட்டோ விம்மட்டோ நாம்பூமி வாழ்ந்த நலம். (பொ-ரை) முதலில் சங்கானது பாலை யுண்பிக்கும்; இடையில் சங்கானது நெருங்கிய கூந்தலையுடைய மாதர்களைச் சிறந்த தளையாகப் பூட்டும்; முடிவில் சங்கானது சாவுக்குரிய தொன்றாகி முழங்கும். நாம் உலகத்தில் வாழ்ந்த சிறப்பு அவ்வளவோ இவ்வளவோ? (வி-ரை) முதல் - குழந்தை பருவம். நடு - கல்யாண பருவம். கடை -சாங்காலம். சங்கானது குழந்தைப் பருவத்தில் பாலடையாக உதவுகிறது; கல்யாண காலத்தில் மங்கலவாத்திய மாகிறது; இறந்த காலத்தில் சாவாத்திய மாகிறது. இம் மூன்றினும் சங்கே சாக்குறிப்பைக் காட்டி நிற்றலான் எப்பருவ வாழ்வை வாழ்வெனக் கொள்வது என்றார். 34 எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரமிவை அத்தனையு மண்டின்ப தல்லவோ - வித்தகனார் காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே மேலைக் குடியிருப்போ மே. (பொ-ரை) இவை எத்தனைதினஞ் சேர்ந்து ஆக்கிய தேகங்கள். அவை யாவையும் மண் சாப்பிட்டு விடுகின்ற தல்லவோ; சிவபெருமான் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக இரவு பகல் இல்லா இடத்திலே மறுமையில் குடி புகுவோம். (வி-ரை) ஆன்மாக்கள் அநாதி கேவலத்தினின்றும் வெளிப்பட்டு மரம், பறவை, மிருகம் முதலிய பல பிறவிகளை யெடுத்து மனித சரீரந் தாங்கப் பல்லூழிகால மாகுமாதலான் எத்தனைநாள் கூடி யெடுத்த சரீரம் என்றார். அவ்வளவு அருமையாக வெடுத்த சரீரத்தை மண்ணுக்கிரையாக்கல் அறியாமை யென்பார் அத்தனையும் மண்டின்பதல்லவோ என்றார். மண்ணுக்கிரையாகாம லிருப்பதற்கு வழி சிவபிரான் திருவடியைப் பற்றுத லென்பார் வித்தகனார் காலைப்பிடித்து என்றார். இரவு பகலற்ற விடம் - சுகதுக்கமில்லாவிடம்; நினைப்பு மறப்பு இல்லாவிடம். 35 எச்சிலென்று சொல்லி யிதமகிதம் பேசாதே எச்சி லிருக்கு மிடமறியீர் - எச்சிறனை உய்த்திருந்து பார்த்தா லொருமை வெளிப்படும்பின் சித்த நிராமயமா மே. (பொ-ரை) எச்சில் என்று இழிவுரை கூறி நன்மை தீமைவார்த்தை யாடாதேயுங்கள். எச்சிலுள்ள இடத்தை யுணரமாட்டீர்கள். எச்சிலை நன்கு ஊகித்துப் பார்த்தால் ஒற்றுமை புலனாகும். அதற்குமேல் சித்திசுத்தி யுண்டாம். (வி-ரை) எச்சில் தோஷமுள்ளமட்டும் துவிதபுத்தியறாது. அத்தோஷம் நீங்கிய பின்னர் ஏக உணர்ச்சி யுண்டாம். அதனால் சித்தவிகாரம் ஒழியும். 36 எத்தனைபேர் நட்டகுழி யெத்தனைபேர் தொட்டமுலை எத்தனைபேர் பற்றி யிழுத்தவிதழ் - நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியின்மட மாதரைவிட் டுய்யடா வுய்யடா வுய். (பொ-ரை) எத்தனைபேர் புணர்ந்த அல்குல்; எத்தனை பேர் பற்றிய தனங்கள்; எத்தனைபேர் (பற்களால்) கடித்து வலித்த உதடு; நாடோறும் பொய்யையே பேசும் உலகில் வாழும் அறியாமையுடைய பெண்களை விடுத்து நீங்கிப் பிழைப்பாயாக; பிழைப்பாயாக; பிழைப்பாயாக. (வி-ரை) ஈண்டு மாதரென்றது - விலைமாதர்களை. அடா - இழிவுக்குறிப்பு. 37 இருப்பதுபொய் போவதுமெய் யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்குந் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்குந் தான். (பொ-ரை) மனமே! உலகத்தில் நிலையாக வாழ்வது பொய்; இறந்துபோவது சத்தியம் என்று யோசித்து ஒருவருக்குங் கெடுதி நினையாதே. பெருத்த உடலை நம்முடைய தென்று நாம் களி கூர்த்திருக்க, நாய், நரி, பேய், கழுகு (முதலியவைகள்) தம்முடைய தென்று களிகூர்ந்திருக்கின்றன. (வி-ரை) எல்லா உயிரையுந் தன்னுயிரைப்போல் பார்த்தலே சிறந்த அறநெறியாகலான் ஒருத்தருக்குந் தீங்கினை யுன்னாதே என்றார், தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல், மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமின் என்றார் சிந்தாமணிக்காரரும். நிலையாமையைக் கருதுவதே ஓருயிர்க்குந் தீங்கு செய்யாம லிருப்பது என்பார் இருப்பதுபோய் போவதுமெய்யென் றெண்ணி, யொருத்தருக்குந் தீங்கினை யுன்னாதே என்றார். தொந்தி - ஆகுபெயர் (வயிறு). 38 எத்தொழிலைச் செய்தாலு மேதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கு மோனத்தே - வித்தகமாய்க் காதிவிளை யாடியிரு கைவீசி வந்தாலுந் தாதிமன நீர்க்குடத்தே தான். (பொ-ரை) சாதுரியமாய் பிரிந்து விளையாடிக்கொண்டு கைகளை வீசி நடந்துவந்தாலும் தோழிப்பெண்ணின் எண்ணம் நீர்க்குடத்திலேதான் நிலைத்து நிற்கும். அதுபோல எந்தவேலை செய்தாலும், எவ்வித துன்பமடைந்தாலும் முத்தர்களது உள்ளம் மோன நிலையிலேயே பதிந்து நிற்கும். (வி-ரை) தாமரையில் சலமிருப்பதுபோல் முத்தர்கள் உலகத்தில் வாழ்வர் என்றபடி. நாரியர்வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞானிகள் வீடெய்துவரே என்றார் முன்னரும். 39 மாலைப் பொழுதினறு மஞ்சளரைத் தேகுளித்து வேலை மினக்கிட்டு விழித்திருந்து - சூலாகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை பித்தானா லென்செய்வாள் பின். (பொ-ரை) மாலைக் காலத்தில் நல்ல மஞ்சளை அரைத்து நானஞ்செய்து வேலைகளைச் செய்யாமல் கண்விழித்திருந்து கருவடைந்து பிள்ளையை யீன்றாள்; வளர்த்தாள்; நாம மிட்டாள். அங்ஙனம் அருமையாகப் பெற்ற பிள்ளையானது பைத்தியக்காரனாய்விட்டால் பிறகு என்ன செய்வாள் பாவம்? (வி-ரை) எல்லாம் விதிப்படி நடக்கும் என்றபடி. கண் விழித்தல் - நாயகனோடுகூடல். மினக்கிடல் - தடைசெய்தல். 40 விருத்தம் நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி நலமொன்று மறியாத நாரியரைக் கூடிப் பூப்கிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையிற் கானுழைத்துக் கொண்டே ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல வகப்பட்டீரே. (பொ-ரை) நாவெடிக்கப் பொய்பேசி, (நவநிதியை யொப்ப) ஏராளமாகப் பொருளைச் சம்பாதித்து, நன்மை யென்பது சிறிது முணராத பெண்களைச் சேர்ந்து பூமியானது பிளவுறும்படி வெளிப்படும் புற்றினின்றும் புறப்படும் ஈசல்களைப்போலப் புலபுல வெனவுங் கலகலவெனவும் பிள்ளைகளைப் பெற்று விடுவீர்கள். அவைகளைக் காப்பாற்றும் விதத்தை அறிந்து கொள்ள மாட்டீர்கள்; கைவிடவு மாட்டீர்கள். இரண்டாகப் பிளந்த மரத்துளையில் காலைநுழைய விடுத்துக்கொண்டு, ஆப்பை அசைத்து அசைத்துப் பிடுங்கி விட்ட குரங்கைப்போல அகப்பட்டுக் கொண்டீர்கள்; இவ்வுலக துன்பத்தில் கஷ்டப்பட அகப்பட்டுக் கொண்டீர்கள். (வி-ரை) மரப்பிளவில் காலை நுழைத்துக்கொண்ட குரங்கின் துன்பத்திற்கு உலகத் துன்பத்தை யுவமிதத்து ஊகிக்கத் தக்கது. பொய்யின் கொடுமையை நாப்பிளக்க என்றார் பொய்யால் ஈட்டும்பொருள் பயனளிப்பதாகாது அறவழியால் பொருளீட்ட வேண்டுமென்பது சுவாமிகள் கருத்து. அற வழியால் ஈட்டப்படும் பொருளைத் தக்கார்க்கு உவகையோ டளிக்கவேண்டுமேயன்றி, அதனை வேசையர்களுக்கு அளித்த லாகா தென்பதை நவநிதியந்தேடி . . . . நாரியரைக்கூடி என்று குறிப்பாக உணர்த்துகிறார். 41 வேறு மத்தளை தயிருண் டானு மலர்மிசை மன்னி னானும் நித்தமுந் தேடிக் காணா நிமலனே நீயின் றேகிச் செய்த்தளை கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்த னிட்ட கைத்தளை நீக்கி யென்முன் காட்டுவெண் காட்டு ளானே. (பொ-ரை) மத்தினால் கடையப்பட்ட தயிரைச் சாப்பிட்ட விஷ்ணுமூர்த்தியும், தாமரைப் பூவின்மீது வீற்றிருக்கும் பிரம தேவனும் நாடோறுந் தேடியுங்காணாத மலரகிதனே! திருவெண் காட்டில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! தேவரீர் இன்று எழுந்தருளி வயல்களில் கயல்மீன்கள் பாயும் நாங்கூர் சேந்தனை அரசனிட்ட விலங்கினின்று விடுவித்து என்முன்னே அவனைக் கொண்டுவந்து காட்டி யருளவேண்டும். (வி-ரை) இத்திருப்பாட்டிலுள்ள வரலாற்றை அடிகள் சரிதத்திற் காண்க. 42 வடிவந் தானும் வாலிபம் மகளுந் தாயு மாமியும் படிகொண் டாரு மூரிலே பழிகொண் டாட னீதியோ குடிவந் தானு மேழையோ குயவன் றானுங் கூழையோ நடுநின் றானும் வீணனோ நகரஞ் சூறை யானதே. (பொ-ரை) உருவம் இளமையுடையது; புதல்வியும் அன்னையும் மாமியும் நிலைத்துவாழும் பதியிலே பழியை யெடுத்துக் கூறல் நியாயமோ? குடியிருக்க வந்தவன் வறியனோ? குயவனும் வன்மையில்லாதவனோ? இடை நிற்கின்றவனும் வீணனோ? பதியுஞ் சூறையாய் விட்டதே. (வி-ரை) குடிவந்தான் - சீவன்; குயவன் - பிரமன்; நடுவன் - யமன்; மகன் - ஆணவம்; தாய் - மாயை; மாமி - கர்மம். 43 மண்ணு முருகு மரமுருகு மாயை யுருகு மானுருகும் பெண்ணு முருகு மாணுருகும் பேதாபேத வகையுருகும் அண்ண லுருகு மிடத்தமர்ந்த வாத்தாளுருகு மரவணையான் எண்ணியுருகுங் குருநாத னென்பா லுரைத்தவோர் மொழியே. (பொ-ரை) எனது குருநாதன் அருளிச்செய்த ஒரு மொழியை நினைந்து மண்ணுருகும்; மரமுருகும்; மாயையுருகும்; மயக்கமும் உருகும்; பெண்ணும் உருகும்; ஆணும் உருகும்; பேதாபேதப் பொருள்கள் எல்லாம் உருகும்; சிவ பெருமானும் உருகுவர்; அவரதிடப்பாகத்தில் பொருந்தியுள்ள அன்னை யாகிய பார்வதிதேவியாரும் உருகுவர்; சர்ப்பாசயனமுடைய வரான நாரயணமூர்த்தியும் உருகுவர். (வி-ரை) அரவணையான் எண்ணி என்பதைக் குருநாதன் என்பதனோடு கூட்டிப் பொருளுரைப்போருமுளர். ஒரு மொழியின் பெருமை கூறியவாறாம். இதனைச் சொல்லாத வார்த்தை யென்றார் தாயுமானார். உருகும் உருகும் என்னுங் குறிப்பு மண்முதல் நாதமீறாக உள்ள தத்துவங்கள் கழன்று விலகுதலை அறிவுறுத்துவதாம். மண்ணுமுருகும் எனத் தொடங்கி ஆத்தாள் உருகும் என முடித்திருத்தற் கவனிக்கற் பாலது. உருகலாவது காரியம் காரணத்தில் ஒடுங்குவதை உணர்த்துவதென்க. குரு - அஞ்ஞானத்தை அழிப்பவன். 44 உடற்கூற்றுவண்ணம் தனதனதான தனதனதான தந்த தனந்தன தந்ததனந்த தனனதனந்த தனனதனந்த தானனதா னன தானனதந்த - தந்ததனதான தனதானனா. ஒருமடமாது மொருவனுமாகி யின்பசுகந்தரு மன்புபொருந்தி யுணர்வுகலங்க வொழுகியவிந்து வூறுசுரோணித மீதுகலந்து - (பொ-ரை) அறியாமைக் குணமுடைய ஒரு தலைவியும் ஒரு தலைவனுந் தன்னந்தனியராய், இன்பசுகத்தை யளிக்கும் அன்பில் நிலைத்து, அறிவு மயங்க, (தலைவன் வழியாக) வெளிவந்த சுக்கிலம் (தலைவி வழியாக) வெளிவந்த சுரோணிதத்திற் கலந்து, (வி-ரை) மடம் - மடமை - அறியாமை; பெண்கள் நாற்குணத்துளொன்று. (நாற்குணம்: அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு). ஆகி - வேறு எவருமின்றித் தாமிருவராய். இருவ ருள்ளமும் அன்பால் ஒன்று பெற்று நிலைபெற்றாலன்றி இன்பம் நிகழாதாகலான் இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி என்றார். அன்பு பொருந்தி - கூடி; புணர்ந்து - இடக்கரடக்கல். இருவர் தம் உள்ளமும் ஒன்றிய கலவியால் விளையும் இன்பஞ் சொலற் கரியதாய், எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் மனஅமுதாய் அகலாது நிற்பதாயுள்ள பேரின்பமாகலின் இன்ப சுகந்தரு என்றார். சொற்பா லமுதிவள்யான் சுவையென்னத் துணிந் திங்ஙனே, நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானி வளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற், கற்பாவி யவரைவாய்க் கடிதோட்ட களவகத்தே உணர்ந்தார்க் குணர்வரியோன் தில்லைச்சிற்றம்பலத் தொருத்தன், குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடி யிடை தோள்,புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய், மணந்தாழ் புரிகுழலாளல்குல்போல வளர்கின்றதே என வரூஉம் மாணிக்கவாசகனார் திருவாய் மொழியானுணர்க. விந்து வெளிப்படுங்கால் அறிவால் அளவிடு கற்கரியதோ ரின்பம் முறுகியெழுந்து அறிவையும் விழுங்கித் தான் முனைத்து நிற்றலான் உணர்வு கலங்கி என்றார். உணர்வு கலங்காவிடத்து வெளிவரும் விந்து பயனளிப்ப தொன்றன்று. விந்து ஒழுகிய என்ற சொல்லாலும், சுரோணிதம் ஊறு என்னுஞ் சொல்லாலும், விசேடிக்கப் பட்டிருத்தலை யூகித்துக் கொள்க. சுக்கிலமுஞ் சுரோணிதமுங் கலவாவிடத்துப் புத்திரோற்பத்தி யின்மையான் கலந்து என்றார். சுக்கிலம் - ஆண்விந்து; வெண்ணிறமுடையது. சுரோணிதம் - பெண்விந்து; செந்நிறமுடையது. சுக்கில காரியம் எலும்பு முதலியனவென்றும், சுரோணிதகாரியம் இரத்தம் தசை முதலியனவென்றுங் கூறுப. உணர்வு கலங்கி யென்றும் பாடம். பனியிலொர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்துபு குந்துதிரண்டு பதுமவரும்பு கமடமிதென்று பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற - (பொ-ரை) (சுக்கிலமுஞ் சுரோணிதமுங் கலந்து) பனித் துளியில் ஒரு பாதியளவான சிறுதுளி தலைவியின் கருவிற் பாய்ந்து திரண்டு தாமரை மொட்டினையும் ஆமையினையும் போன்று கண், உடல், வாய், காது, கால், கைகள் என்று சொல்லப்பட்ட, (வி-ரை) அறுகுநுனி பனியனைய . . . . . . . . . என்றார் அருணகிரிநாதரும். கால், கை முதலிய உறுப்புக்கள் தோன்றுவதற்கு முன்னர்க் கரு பிண்டவடிவாக விருத்தலான் கமடமிதென்று என்று கூறினார் கமடம் - ஆமை. கரு ஆமை போன்ற வடிவம் பெறுவதற்கு முன் தாமரை அரும்புபோல இலங்கலான் பதும வரும்பு என்றார். பதுமம் - தாமரை. உருவமுமாகி யுயிர்வளர்மாத மொன்பதுமொன்றுநி றைந்துமடந்தை யுதரமகன்று புவியில்விழுந்து யோகமும்வாரமு நாளுமறிந்து - (பொ-ரை) வடிவம் பெற்று உயிர்வளர்தற்குப் பத்து மாதம் பூர்த்தியாகி அத்தலைவியின் வயிற்றினின்றும் வெளிவந்து பூமியில்விழ; (உறவினர்) யோகம் வாரம் நாள் (முதலியவற்றை ஆராய்ந்து) அறிந்து, (வி-ரை) உகரம் - வயிறு. யோகம் வாரம் நாள் அறிதல் - சோதிடம் பார்த்தல். மகளிர்கள்சேனை தரவணையாடை மண்படவுந்தியு தைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை யமுதமருந்தி யோரறிவீரறி வாகிவளர்ந்து - (பொ-ரை) பெண்கள் கூட்டம் ஏணைத்துகிலில் கிடத்தி உறங்கச்செய்ய, பூமியில் தன் உடல் படும்படி நெகிழ்ந்து வந்து தவழ்ந்துங் கவிழ்ந்தும் மடமைக்குணம் பொருந்திய மயில் போன்ற சாயலையுடைய தாயாரின் முலைப்பாலைக் குடித்து ஓரறிவு ஈரறிவு ஆக அறிவு விளங்கப்பெற்று வளர்ந்து, (வி-ரை) மகளிர்கள் சேனை - தாய்வீட்டுப் பெண்கள். அணையாடை - ஏணைத் துகில். மண்பட - பூமியில் பொருந்த; புழுதிபட. உந்தி - ஏணையினின்றும் வெளியே நெழிந்து வந்து. மடமை அறியாமை. ஓரறிவு ஈரறிவுமுதல் ஆறறிவு என்றபடி. மக்கட்கு ஆறறிவு என்பது ஈண்டு அறியத்தக்கது. ஒளிநகையூற லிதழ்மடவாரு வந்துமுகந்திட வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைமொழிந்து வாவிருபோவென நாமம்விளம்ப - (பொ-ரை) பிரசாசிக்கின்ற பற்களோடு ஊறுதலையுடைய உதடுகளைப் பெண்கள் விரும்பி முத்தமிட அவர்களிடந் தவழ்ந்து சென்று மடியிலிருந்து குதலைச் சொற்களைப் பேசி வா, உட்காரு, போ என்று அதிசய வார்த்தைகளை யுரைக்க, (வி-ரை) ஊறல் - வாய்த்தினைவுவாம். நாமம் - அதிசயம் இணக்கம் முதலியவற்றைக் காட்டுஞ் சொல்; பெயருமாம். உடைமணியாடை யரைவடமாட வுண்பவர்தின்பவர் தங்களொடுண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து தேடியபாலரோ டோடிநடந்து - அஞ்சுவயதாகி விளையாடியே, (பொ-ரை) உடுக்கையாகிய இரத்தினாபரணங்களும் அரை ஞாணும் அசையும்படி உண்பவர்களோடுந் தின்பவர்களோடும் உடனிருந்து உண்டு, வீதியிற்சென்று உட்கார்ந்து புழுதியை வாரிப் பூசிக்கொண்டு, தன்னை நாடிவந்த குழந்தைகளுடன் ஓடியும் நடந்தும் விளையாடி ஐந்து வயதை யடைந்து, (வி-ரை) உடைமணி ஆடை அரைவடம் - இவைகட்குத் தனித்தனியாகப் பொருள்கொள்ளினும் பொருந்தும். உண்பவர் - சோறு முதலியவற்றை உண்பவர், தின்பவர் - கறி முதலியவற்றைத் தின்பவர். (உண்டி நான்குவகை: உண்ணல், தின்னல், நக்கல், பருகல். சோறு முதலியன உண்ணல்; கறி முதலியன தின்னல்; தேன் முதலியன நக்கல்; நீர் முதலியன பருகல்.) புழுதி - மண்துகள். அளைந்து - பூசி. ஐந்துவயது - ஞானோபதேசமும் வித்தியாரம் பமுஞ் செய்யும் வயது. உயர்தருஞான குருவுபதேச முந்தமிழின்கலை யுங்கரைகண்டு வளர்பிறையென்று பலரும்விளம்ப வாழ்பதினாறு பிராயமும்வந்து - (பொ-ரை) மேன்மை யளிக்கும் ஞானாசாரியனது உபதேசம் பெற்றுத் தமிழ் நுல்களை யோதி அவைகளின் எல்லையைக் கண்டு, பலரும் வளர்பிறை யென்று சொல்லுமாறு வளர்ந்து சிறந்த பதினாறு வயது அடைந்து, (வி-ரை) உயர் - உயர்வு; தொழிற்பெயர். உயர்வென்றது மோட்ச இன்பத்தை, ஞானோபதேசஞ் செய்யப்பெற்ற பின்னரே வித்தியாரம்பஞ்செய்வது தொன்றுதொட்ட வழக்கு. கரைகண்டு - ஐயந்திரிபற வுணர்ந்து; எல்லா நூல்களையும் வாசித்து என்றபடி. மயிர்முடிகோதி யறுபதநீல வண்டிமிர் தண்டொடை கொண்டைபுனைந்து மணிபொனிலங்கு பணிகளணிந்து மாகதர்போகதர் கூடிவணங்க - (பொ-ரை) தலைமயிரை வகிர்ந்துகட்டி ஆறு கால்களை யுடைய நீலவண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த பூமாலையாற் கொண்டையை அலங்கரித்து, இரத்தினங்களாலும் பொன்னாலும் செய்யப்பட்டுப் பிரகாசிக்கின்ற ஆபரணங்களைத் தரித்து, இருந்து புகழ்வோரும் நின்று புகழ்வோரும் ஒருங்கு சேர்ந்து வணங்க, (வி-ரை) அறுபதம் - ஆறுகால். வண்டிற்கு ஆறுகால், இமிர்தல் - ஒலித்தல்; மொய்த்தல். மணிபொன்னிலங்கு மணிகள் - இரத்தினமிழைத்த பொன்னாபரண மெனினுமாம். மதனசொரூப னிவனெனமோக மங்கையர்கண்டும ருண்டுதிரண்டு வரிவிழிகொண்டு சுழியவெறிந்து மாமயில்போலவர் போவதுகண்டு - (பொ-ரை) காமக்கிழத்தியர்கள் (இவனைப்) பார்த்து இவன் காமனைப்போன்ற வடிவினன் என்று (எண்ணி) மயங்கி ஒன்று கூடிச் செவ்வரிபடர்ந்த தங்கள் கண்களால் சுழற்றி மருட்டி அழகிய மயிலைப்போல் அவர்கள் செல்வதைக் கண்ணுற்று, (வி-ரை) மதனசொரூபன் - மன்மதனைப் போன்ற அழகு டையவன். மோக மங்கையர் - விலைமாதர்கள். சுழிய எறிந்து - அவன் மனநிலை கெட்டு அறிவு மயங்க வீழ்த்தி. காமுற்றார்க்குக் காமமீதூர மயிலைப்போல நடத்தல் மங்கையரியல்பு. மனதுபொறாம லவர்பிறகோடி மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை மருவமயங்கி யிதழமுதுண்டு தேடியமாமுதல் சேரவழங்கி - (பொ-ரை) மனந்தளராமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அழகிய செம்பொற் கலசம்போன் றொளிருந் தனங்கள் தன் மார்பிற் பொருந்தப் புணர்ந்து அதரபானஞ் செய்து, சம்பாதித்த பெருஞ் செல்வப்பொருளை முழுவதும் அவர் களுக்குக் கொடுத்து, (வி-ரை) அவர் பின்னர் நாய்போலோடி என்பார் ஓடி என்றார். மங்கலம் - பொலிவு. மயங்கி - கூடி; இடக்கரடக்கல். தாரு மாலையு மயங்கி எனவும், எதிர் எனவும் இளங்வோ வடிகள் சிலப்பதிகாரத்துட் கூறியவாற்றானறிக. தேடிய - தானும் தன் முன்னோரு மீட்டிய. சேர - முழுவதும். ஒருமுதலாகி முதுபொருளாயி ருந்ததனங்களும் வம்பிலிழந்து மதனசுகந்த விதனமிதென்று வாலிபகோலமும் வேறுபிரிந்து - (பொ-ரை) மூலதன மொழிந்து மற்றுமுள்ள உரிமைப் பொருள்களாகிய செல்வங்களையும் தீயவழியில் செலவழித்துக் காமவின்பத்தின் துக்க மிஃதென்று சொல்லும்படி இளமைப் பருவ அழகு மாறுபட்டு, (வி-ரை) முதுபொருள் - வீடு நிலம் முதலியன. இளமையில் விலைமாதர் போகத்திலே யழுந்துபவர் விரைவில் வாலிப வனப்பு நீங்கப்பெற்று ஆண்டண்மையுங் குன்றப்பெறுவராக லான் மதன சுகந்த விதனமிதென்று என்றார். மதன சுகந்த விதனமாவது அந்தோ இவ்வளவு சீக்கிரத்தில் நமக்குக் கிழ முகமாய் விட்டதே. ஆண்டன்மை குன்றிவிட்டதே என்று வருந்துவது. வளமையுமாறி யிளமையுமாறி வன்பல்விழுந்திரு கண்களிருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து வாதவிரோத குரோதமடைந்து செங்கையினிலோர் தடியுமாகியே, (பொ-ரை) அழகும் மாறுபட்டு, இளமையும் மாறுபட்டு வலிய பற்கள் விழுந்து, இரண்டு கண்களின் ஒளி குன்றி, வயது மூப்படைந்து, நரை திரை அடர்ந்து, வாதம் நிலை கெட்டு மாறி வேறுபட்டுச் சிவந்த கையில் ஒரு தடி பிடித்து, (வி-ரை) வளமை - செல்வமுமாம். திரை - மறைப்பு. விரோத குரோதமெனப் பொருள் கோடலுமொன்று. வருவதுபோவ தொருமுதுகூனு மந்தியெனும்படி குந்திநடந்து மதியுமழிந்து செவிதிமிர்வந்து வாயறியாமல் விடாமன்மொழிவது - (பொ-ரை) இங்குமங்கும் உலவுதலையுடைய ஒரு கிழக்கூன் குரங்கு என்று சொல்லும்படி குந்தியும் நடந்தும், அறிவு கெட்டு, காது செவிடடைந்து, ஓயாமல் சொல்வது இன்னதென் றறியாமல் வாயில் வந்தவாறு பிதற்றி, (வி-ரை) ஒரு முதுகூன் - அதிக கூனுடன் எனினுமாம். முதுமை + கூன் = முதுகூன் எனக் கொள்வோருமுளர். முதுகு - முது; கடைக்குறை. குந்தி நடந்து - உட்கார்ந்தபடியே நடந்து; தவழ்ந்து எனக் கொள்வோருமுளர். துயில்வருநேர மிருமல்பொறாது தொண்டையுநெஞ்சமு லர்ந்துவறண்டு துகிலுமிழந்து சுணையுமழிந்து தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு - (பொ-ரை) தூக்கம் வரும்வேளையில் உண்டாகும் இருமலைப் பொறுக்க முடியாமல் தொண்டையும் மார்பும் உலர்ந்து வறட்சியடைந்து, கட்டிய ஆடையும் நழுவிச் சுரணைகெட்டு, (அந்நிலையைக் கண்ணுற்ற) மனைவியரும் மக்களும் மனக் குழப்பங்கொள்ள, (வி-ரை) சுணை - சுரணை; அபிமானம். கோரணி - கோளாறு; குழப்பம்; வியசனம். கலியுகமீதி லிவர்மரியாதை கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச கலகலவென்று மலசலம்வந்து கால்வழிமேல்வழி சாரநடந்து - (பொ-ரை) கலியுகத்தில் இவர் நீதியைப் பாருங்கள் என்று சொல்பவர்கட்குக் கவலை அதிகரிக்கச் சலசலவென்று மலசல மிழிந்து கால்வழியாகவும் மேல்வழியாகவும் பொருந்த வொழுகி, (வி-ரை) மூன்று யுகங்களி லிருந்தவர்கள் பிறர் துயரைத் தங்கள் துயர்போல் கொண்டுதவிபுரியும் பரோபகாரிகளாகலானும், கலியுகத்திலுள்ளவர்கள் தேகாத்மவாத புத்தியிற் றலைப்பட்டுப் பிறர் துயரைக் கண்டு எள்ளி நகையாடும் வன்கண்ணர்களா கலானும் கலியுகமீதி லிவர்மரியாதை என்றார். கலியுகத்தில் தேகத் தளர்ச்சியுற்று உலகத்தில் வாழலாகாதென்பது கருத்து. மேல்விழி - உடலின்மேல். தெளிவுமிராம லுரைதடுமாறி சிந்தையுநெஞ்சமு லைந்துமருண்டு திடமுமுலைந்து மிகவுமலைந்து தேறிநல்லாதர வேதெனநொந்து - (பொ-ரை) உள்ளத் தெளிவுமன்றி, வாய்குளறி, எண்ணமும் மனமுங் குலைந்து மயங்கி உறுதிகெட்டு மிகவுந் தடுமாறி ஆராய்ந்து சிறந்த துணை (நமக்கு இதுகாலை) ஏது என்று வருந்தி, (வி-ரை) உரை தடுமாறல் - பேச்சுத் தடுமாறல். திடமு முலைந்து - மனோதிடங்குன்றி. அலைந்து எனவும் பாடம். மறையவன்வேத னெழுதியவாறு வந்ததுகண்டமு மென்றுதெளிந்து இனியெனகண்ட மினியென தொந்த மேதினிவாழ்வுநி லாதினிநின்ற - (பொ-ரை) வேதநாயகனாகிய நான்முகன் தலையில் எழுதியபடியே கண்டமும் வந்துவிட்டது என்று தெளிவடைந்து இனியென்ன கண்டமிருக்கிறது, இனியென்ன தொந்தமிருக்கிறது; இனி உலகவாழ்வு நிலையாகவிராது, எஞ்சி நின்ற, (வி-ரை) வேதன் எழுத்து - தலைவிதி. கண்டம் - தத்து. தொந்தம் - தொடர்பு; சம்பந்தம். நின்ற - யான் செய்த லௌகிகக் கடமைகள்போக எஞ்சி நின்ற. கடன்முறைபேசு மெனவுரைநாவு றங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து கடைவழிகஞ்சி யொழுகிடவந்து பூதமுநாலுசு வாசமுநின்று - நெஞ்சுதடுமாறி வருநேரமே. (பொ-ரை) கடமை முறைகளைப் பேசுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நாவானது எழாமல் வலித்துக்கொள்ளக் கையால் சாடைகாட்டிப் பேசி வாயில் விடப்படுங் கஞ்சி உள் செல்லாமல் வெளியே யொழுகப் பிராணவாயுவும் பூதமும் நான்கு சுவாசமும் அடங்கி மனந்தடுமாறலுறுங் காலத்தில், (வி-ரை) கடன்முறை - கடன் முதலிய காரியங்களெனக் கூறினும் பொருந்தும். வளர்பிறைபோல வெயிறுமுரோம முஞ்சடையுஞ்சிறு குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவுமிலங்க மாமலைபோல்யம தூதர்கள் வந்து - (பொ-ரை) மூன்றாம்பிறைச் சந்திரனைப்போன்ற பற்களும், மயிரும், சடையும், சிறுகுடியும், தடித்த உள்ளமும், கரிய உருவமும் விளங்கப் பெரிய மலைபோல யமதூதர்கள் நெருங்கிச்சூழ, (வி-ரை) விஞ்சு மனது - இரக்கமில்லா உள்ளம். வலைகொடுவீசி யுயிர்கொடுபோக மைந்தரும் வந்துகு னிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவிபுலம்ப மாழ்கினரேயிவர் காலமறிந்து - (பொ-ரை) பாசவலையால் வீசி உயிரைப் பிடித்துக் கொண்டு போகப் பிள்ளைகள் வந்து குனிந்து புலம்பவும், வருந்தி மடியில் விழுந்து நாயகி யழவும் அந்தோ இவர் இறந்தனரே என்று கால வகையைக் குறித்து, பழையவர்காணு மெனுமயலார்கள் பஞ்சுபறந்திட நின்றவர்பந்த ரிடுமென வந்து பறையிடமுந்த வேபிணம்வேக விசாரியுமென்று - (பொ-ரை) பழைய மனித ரல்லவோ என்று சொல்லிக் கொள்ளும் அயலார்கள் வேகமாகவந்து அங்குள்ளவர்களை நோக்கி எல்லோருஞ் சென்று பந்தரிடுங்கள் என்று சொல்ல, பறையர்கள் பறைமுழக்கத் தொடங்கப் பிணத்தைச்சுட விசாரியுங்கள் என்று கூறி, (வி-ரை) பஞ்சு பறந்திட - பஞ்சுபோலோடி; வேகமாக வந்து சேர்ந்து. பந்தரிடல் - பிணத்துக்குமேல் வத்திரத்தால் விதானம் மைத்துத் தாங்கி வருதல். பலரையுமேவி முதியவர்தாமி ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து பாவகமேசெய்து நாறுமுடம்பை - (பொ-ரை) பலபேர்களைப் பணித்தனுப்பிவைத்து, பெரியவர்கள் பூமியில் கிடக்கும் பிணத்தைச் சிலர் கழுவுங்கள் என்று கட்டளையிட்டு, ஆபரணம், வத்திரம், பூமாலை, வாசனை இவைகளைத் தரித்துத் தங்களன்பை வெளிப்படுத்தி நாற்றம் வீசும் தேகத்தை, வரிசைகெடாம லெடுமெனவோடி வந்திளமைந்தர்கு னிந்துசுமந்து கடுகிநடந்து சுடலையடைந்து மானிடவாழ்வென வாழ்வெனநொந்து - (பொ-ரை) முறை பிறழாமல் தூக்குங்கள் என்று சொல்ல, இளம்பிள்ளைகள் ஓடிவந்து குனிந்தெடுத்துத் தோளில் வைத்துச் சுமந்து விரைந்து நடந்து சுடுகாட்டை யடைந்து இவ்வளவு தானா மனிதவாழ்வு இவ்வளவுதானா மனிதவாழ்வு என மயான வைராக்கியம் பேசி வருந்தி, விறகிடமூடி யழல்கொடுபோட வெந்துவிழுந்துமு றிந்துநிணங்க ளுருகி யெலும்பு கருகியடங்கி யோர்பிடிநீறுமி லாதவுடம்பை - நம்புமடியேனை யினியாளுமே. (பொ-ரை) விறகுகளைப் பரப்ப (அதிற் பிணத்தைக் கிடத்தி) மறைத்து நெருப்பிட்டு மூட்ட உடல் வெந்து தசை விழுந்து முறிந்து கொழுப்புக்களுருகி, எலும்புகள் கரியாகி, தீயடங்கிய பின்னர் ஒருபிடி சாம்பருமில்லாத தேகத்தைப் பொருளாக நம்பும் அடியேனை யினி யாண்டருளும் (பெருமானே.) (வி-ரை) தேகத்தின் அநித்தியம் தெரித்தவாறாம். இவ்வாறு அழியும் உடலைப் போற்றி ஆண்டவனை மறந்து வாழ்நாள் கழிப்பது அறியாமை என்றபடி. விறகிடை என்றும் பாடம். முதல்வன் முறையீடு கன்னி வனநாதா கன்னி வனநாதா. (பொ-ரை) மதுரைமாநகரில் வீற்றிருந்தருளுங் கடவுளே! மதுரைமாநகரில் வீற்றிருந்தருளும் கடவுளே! (வி-ரை) கன்னிவனம் - மதுரை. கன்னி - மீனாட்சி. மீனாட்சியால் ஆளப்பெற்ற வனம் என்றபடி. கன்னிவனம்- அழியாவனம் எனலுமாம். கன்னி - அழியாத. மூல மறியேன் முடியு முடிவறியேன் ஞாலத்துட் பட்டதுயர் நாட நடக்குதடா. (பொ-ரை) ஆதியும் உணரேன்; அடையும் அந்தத்தையும் உணரேன். உலகத்தில் நேர்ந்த துன்பம் என்னை அடைந்து மேற்கொள்ளச் செய்கிறது. (வி-ரை) உலகத்தில் துன்பம் அனுபவமா யிருக்கிறது. அத்துன்பத்தின் காரணம் யாது? அதன் உற்பத்தி யென்ன? அதன் முடிவு என்ன? என்பது எனக்குத் தோன்றவில்லை என்றபடி. துன்பம் உண்மையான் அத்துன்பத்துக்குக் காரணமு மிருத்தல் வேண்டும். அதுவே கருமம் என்பது. அக்கருமத்திற்கு ஆதியு மில்லை; அந்தமுமில்லை. அஃது அநாதியாக உள்ளது. 1 அறியாமை யாமலத்தா லறிவு முதற்கெட்டனடா பிரியா வினைப்பயனாற் பித்துப் பிடித்தனடா. (பொ-ரை) அஞ்ஞானத்தை யுண்டாக்கும் மலத்தால் என் அறிவு முழுதும் கெடப்பெற்றேன். நீங்காத வினைப்பயனால் பைத்தியம் பிடிக்கப் பெற்றேன். (வி-ரை) அறியாமை மலம் - ஆணவம். இம்மலம் அறிவு என்னும் முதற்பொருளை முற்றிலும் விழுங்கி நிற்பது. பிரியா வினை - பிராரத்த கருமம். 2 தனுவா தியநான்குந் தானாய் மயங்கினண்டா மனுவாதி சத்தி வலையிலகப் பட்டனடா. (பொ-ரை) நான் தனுமுதலாகச் சொல்லப்பட்ட நான் கிலுந் தோய்ந்து அவைகளின் மயமாய் மயங்கினேன்; நீதியான திரோதான சத்தி வலையில் அகப்பட்டுச் சிக்கினேன். (வி-ரை) தனு - தேகம். தனுவாதிநான்கு - தனு, கரணம், புவனம், போகம் என்பன இவை மாயாகாரியம். தன்னை அறிவாகக் கருதாமல் மாயா காரியங்களாய தனு, கரண, புவன, போகங் களாகக் கருதல் அஞ்ஞானம் ஆகலான் மயங்கினேன் என்றார். திரோதான சத்தி - மறைத்தற்றொழிலைச் செய்வது. அது கருணையால் ஆன்மாக்களின் மலத்தைக் கழுவ மறைத்தலால் மனுவாதி சத்தி என்றார். 3 மாமாயை யென்னும் வனத்தி லலைகிறண்டா தாமா யுலகனைத்துந் தாது கலங்கிறண்டா. (பொ-ரை) பெரிய மாயையென்று சொல்லப்படுங் கான கத்தில் அலைகிறேன். அம்மாயையாய் நின்று உலக முழுவதுந் தாதுகலங்கப் பெறுகிறேன். (வி-ரை) தன்னை மாயையாகக் கருதுதல் பிறவிநோய் அளிப்பதாகலான் தாது கலங்கிறண்டா என்றார். 4 கன்னி வனநாதா கன்னி வனநாதா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! மண்ணாசை பட்டேனை மண்ணுண்டு போட்டதடா பொன்னாசை பெண்ணாசை போகேனே யென்குதே. (பொ-ரை) மண்ணிடத்து ஆசைவைத்த என்னை அம் மண்ணே சாப்பிட்டுவிட்டது. பொன்னாசையும் பெண்ணாசையும் நீங்கேம் என்று சொல்கின்றனவே. (வி-ரை) எவர் எப்பொருளிடத்து ஆசை வைக்கின்றாரோ அவர் அப்பொருள் மயமாவர்; அதனை அனுபவிப்பர். மண்ணில் விருப்பம் வைப்போர் மண்ணாவர்; மண்ணிற் பிறப்பர். மூவாசையுள்ள மட்டும் ஆனந்தம் விளையாதென்றபடி. 5 மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே திக்கரசா மாசையது தீரேனே யென்குதே. (பொ-ரை) பிள்ளை பந்துக்கள் ஆசை என்னை மறவேம் என்று சொல்லுகின்றனவே. எட்டுத் திக்கையும் ஆளவேண்டும் என்னும் அவா நீங்கேன் என்று சொல்கிறதே. (வி-ரை) பிள்ளை ஆசையும், அரச ஆசையும் மிகக் கொடியன. அவ்வாசைகளைக் கழற்றல் மிக அருமை. 6 வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. (பொ-ரை) கல்வி பயிலும் விருப்பம் என்னைவிட்டு நீங்கேன் என்கிறது. சித்துக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசை அழியேன் என்கிறது. (வி-ரை) கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்றார் வாதவூரர். சித்தாசை பெரும்பைத்தியம். ஆசைகளில் தலை யாயது சித்தாசை என்னலாம். 7 மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. (பொ-ரை) மந்திரத்தில் பதிந்துள்ள பற்று மறவேன் என்கிறது. அலங்காரத்தில் கொண்டுள்ள பிரியம் விடேன் என்கிறது. (வி-ரை) ஈண்டு மந்திரமென்றது சூன்யமந்திரம் முதலியவற்றை. ஸ்ரீ பஞ்சாட்சரம் ஞானபூசைக் குரியதாகலின் அதை மந்திரமென்று கூறினாரில்லை. அலங்காரவாசை எத்துணையோ பேரைப் பிணமாக்குகிறது. 8 கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே செட்டுதனி லாசை சிதையேனே யென்குதே. (பொ-ரை) உடுத்தும் வதிர முதலியவற்றில் பதிந்துள்ள விருப்பம் அகலேன் என்கிறது. பொருள் சேர்ப்பில் எழுந்துள்ள பற்று அழியேன் என்கிறது. (வி-ரை) வதிர ஆசை அளவோடிருப்பது நலம். தனக்குள்ள வதிரங்கள் போதாவென்று மேலும் மேலும் ஆசைப்படுவதை நோக்கி யிரங்கியவாறாம். அறவழியால் பொருளீட்டித் தக்கார்க்கு உவகையோடளித்தல் வேண்டும். அதனைச் சேர்த்துக் காக்குமாறு ஆசை தூண்டுகிறது என்றபடி. 9 மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே சோற்றுக் குழியுமின்னுந் தூரேனே யென்குதே. (பொ-ரை) மாற்றி யுடுக்கப்படுஞ் சலவைத்துணியில் ஆசையொழியேன் என்கிறது. அன்னக்குழி யின்னும் நிரம்பேன் என்கிறது. (வி-ரை) அன்னக்குழி - வயிறு. தோய்த்துலர்ந்த துணியில் மனம் திருப்தியடையவில்லை என்றபடி. 10 கன்னிவனநாதா கன்னிவனநாதா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! ஐந்து புலனு மடங்கேனே யென்குதே சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. (பொ-ரை) பஞ்சேந்திரியங்களும் ஒடுங்கமாட்டேம் என்கின்றன. மனஞ் சஞ்சலப்படுந் துன்பத்தினின்றுந் தீரேன் என்கிறது. (வி-ரை) ஐந்துபுலன் - சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். சிந்தை -மனம். ஐம்புலன் ஒடுங்கினால் மனமொடுங்கும். மனமொடுங்கினால் துன்பம் நீங்கும். துன்பத்துக்குக் காரணமான புலன்கள் ஒடுங்கவில்லையே என்றபடி. 11 காமக் குரோதங் கடக்கேனே யென்குதே நாமே யரசென்று நாடோறு மெண்ணுதே. (பொ-ரை) காமக் குரோதங்கள் விடமாட்டேம் என்று சொல்கின்றன. அகங்காரம் தேகமாகிய நகரத்துக்கு நானே தலைவன் என்று தினந்தோறும் நினைக்கிறது. (வி-ரை) நாம் - முனைப்பு; அகங்காரம். காமம், குரோதம் முதலியன உள்ளமட்டும் நான் என்னும் முனைப்பு ஒழியாது. 12 அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே கைச்சு மின்னுமானங் கழலேனே யென்குதே. (பொ-ரை) அச்சமும் அகங்காரமும் தாழேம் என்கின்றன. புறப்பொருள் யாவற்றையும் வெறுத்தும் இன்னும் மானமானது நீங்கேன் என்கிறது. (வி-ரை) அகங்காரமுள்ளமட்டும் அச்சமுண்டு; அச்ச மொழிந்த விடத்தில் ஞான உணர்ச்சி யரும்பும். மானவுணர்ச்சி உள்ளமட்டும் பற்று முற்றும் அறாதென்பதை விளக்கியவாறு காண்க. 13 நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே ஆர்க்கு முயராசை யழியேனே யென்குதே. (பொ-ரை) மனம் நீரிற் குமிழிபோன்ற தேகத்தை நித்தியப் பொருளாகக் கருதுகிறது. விடயங்களை அனுபவிக்கும் பேரவா கெடேன் என்கிறது. (வி-ரை) மனவுணர்வு உள்ளமட்டும் தேகம் பொருளாக நித்தியமாகத் தோன்றுதல் இயல்பு. மனமொடுங்கினால் தேகத்தின் அநித்தியம் புலனாகும். விடயநுகர்ச்சிக்கு அவா கருவியாக நிற்கிறது. அவ்வவா ஒழிந்தால் நித்தியா நித்தியம் புலனாகி ஆனந்த முண்டாகும். 14 கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும் எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. (பொ-ரை) கண்கூடாகக் கட்டையிலே எரிகிறதைப் பார்த்தும் என்றும் அழியாம லிருப்போம் என்று மனம் நினைக்கிறதே. (வி-ரை) கண்கூடாக உடல் நிலையுதலில்லாதது என்று கண்டும் அதனைப் பொருளாக்கொள்ளும் அறியாமை குறித்து இரங்கியவாறாம். 15 அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. (பொ-ரை) (மனம்) அநித்தியத்தை நித்தியமாகக் கொண்டு அதனையே தனக்குப் பற்றுக்கோடாகவும் நினைக்கின்றது; ஏகாந்தமா யிருக்கமாட்டேன் என்கிறது; தன்னை மறக்க மாட்டேன் என்று சொல்லுகிறது. (வி-ரை) பொருளல்லவற்றைப் பொருளாகக்கொள்ளுதல் அறியாமை. செம்பொருளை விளங்கச்செய்வது அறிவு. அவ்வறிவு தன்னை மறக்குமட்டும் விளங்காது. தன்னை மறத்த லாவது தேகத்தைப் பொருளாகக் கொள்ளாதநிலை. 16 நரகக் குழியுமின்னு நான்புசிப்பே னென்குதே உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. (பொ-ரை) நரகக்குழி இன்னும் நான் உன்னை யுண்பேன் என்று சொல்கிறது. பாம்பின் படத்தையொத்த கடிதடம் உன்னை யின்னுங் கெடுப்பேன் என்கிறது. (வி-ரை) நரகமும் பெண்ணாசையும் தேககாத்மவாதி களையே யிடர்ப்படுத்தும்; ஆத்ம ஞானிகளுக்கு நரகமும் அல்குலும் சிவமாகத் தோன்றும். நரகத் துன்பமும் பெண் ணாசையும் அஞ்ஞானத்தின் சாயல் என்பது கவனிக்கத்தக்கது. தம்மிடத்துள்ள அஞ்ஞானத்தை நரகமாகவும் நிதம்பமாகவும் கூறியவாறு காண்க. 17 குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே அரும்பு விழியுமென்ற னாவியுண்பே னென்குதே. (பொ-ரை) தென்னங்குரும்பை போன்ற தனங்கள் உன்னைக் குடிகெடுப்போம் என்கின்றன. நீலோற்பல மலரைப் போன்ற கண்களும் உன் உயிரைச் சாப்பிடுவேம் என்கின்றன. (வி-ரை) மகளிர்கள் முலையும் விழியும் காம இச்சையை எழுப்புங் கருவிகள். பாசத்துக்குள்ள வலிமை கூறியவாறாம். மாத ருருக்கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. (பொ-ரை) யமன் பெண்ணுருவந் தாங்கிவந்து மோசஞ் செய்ய நினைக்கின்றான். ஒருபற்றுக்கோடுமின்றி (அக்கினி முற்பட்ட) அரக்கைப்போல இளகுகின்றேன். (வி-ரை) பெண்ணாசையால் துன்பம் விளைதலால் பெண்ணை யமனாகக் கூறினார். இவ்வாறு அடிகள் கூறுவது வழக்கம். 19 கந்தனை யீன்றருளுங் கன்னி வனநாதா எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. (பொ-ரை) முருகப்பெருமானைப் பெற்றருளிய மதுரைக் கடவுளே! எவ்வகையில் இவ்வுலக மயக்கத்தினின்றும் வெளி வந்து தேவரீர் திருவடியை யடைவேன். 20 கன்னி வனநாதா கன்னி வனநாதா (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ. (பொ-ரை) புல்லாகியும் பூடாகியும் வாடிய காலம் போதாதோ. கல்லாகியும் மரமாகியுங் கடந்தகாலம் போதாதோ. (வி-ரை) பூடு - பூண்டு. பல பிறவிகள் தாங்கி உழன்றும் இன்னும் ஆசை கழன்று ஞானம்பெறாமை கருதிப் பலவாறு வருந்துகிறார். புல்லாகிப் பூடாய் என வருந் திருவாசகத்தைச் சிந்திக்க. 21 கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ. (பொ-ரை) கீரிப்பிள்ளையாகியும் புழுவாகியும் அழிந்த காலம் போதாதோ. நீர்வாழ்வனவாகியும் ஊர்வனவாகியும் இருந்தகாலம் போதாதோ. (வி-ரை) நீர்வாழ்வன - மீன், முதலை முதலிய. ஊர்வன - பாம்பு, தேள் முதலியன. 22 பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ (பொ-ரை) பூதமொடு தேவர்களாகிச் சென்றநாள் போதாதோ. துன்பஞ்செய்யும் இராட்சதர்களாகிக் கெட்டநாள் போதாதோ. 23 அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ. (பொ-ரை) தாயார் வயிற்றில் (வெளியே தோன்றாமல்) அழிந்தகாலம் போதாதோ. அரசனாகி வாழ்ந்து செத்தகாலம் போதாதோ. 24 தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ. (பொ-ரை) அன்னையாகி மனைவியாகிச் சிறுமையுற்ற காலம் போதாதோ. குழந்தையாகி நாயகனாகிப் போனகாலம் போதாதோ. 25 நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ. (பொ-ரை) வியாதியால் பீடிக்கப்பட்டு மெலிவுற்று வருந்திய காலம் போதாதோ. பேய்களுண்ணப் பேயாகி ஜெனித்த காலம் போதாதோ. 26 ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ ஈனப் புசிப்பி லிளைத்தநாள் போதாதோ. (பொ-ரை) குற்றம் நிறைந்த தேகத்தில் கூன் குருடாகிப் பிறந்தநாள் போதாதோ. குறைபாடுள்ள ஆகாரத்தால் மெலிந்தநாள் போதாதோ. (வி-ரை) ஊன உடல் - மாமிச உடலுமாம். ஈனப் புசிப்பு - அற்ப போஜனம். 27 பட்ட களைப்பும் பரதவிப்பும் போதாதோ கெட்டநாள் கெட்டேனென்று கெட்டநாள் போதாதோ. (பொ-ரை) பிறவி யெடுக்குங் காலங்களில் அடைந்த இளைப்பும் வருத்தமும் போதாதோ. காலமெல்லாங் கெட்டு விட்டேன் என்று பிறர் சொல்லக் கேளாமற் போனதும் போதாதோ. 28 நில்லாமைக் கேயழுது நின்றநாள் போதாதோ எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ (பொ-ரை) தேகம் முதலிய நிலையாமையைக் குறித்து புலம்பி நின்றகாலம் போதாதோ. பலரும் என் சுமையைச் சுமந்தகாலம் போதாதோ. 29 காமன் கணையாற் கடைபட்டல் போதாதோ ஏமன் கரத்தா லிடியுண்டல் போதாதோ. (பொ-ரை) மன்மத பாணத்தால் இழிவடைந்தது போதாதோ. யமன் கையால் இடியுண்டது போதாதோ. 30 நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ தேன்றுளபத் தானேமி தேக்குண்டல் போதாதோ. (பொ-ரை) பிரமதேவனால் எழுதப்பட்ட விதியேட்டின் படி கஷ்டப்பட்டது போதாதோ. தேனொழுகுந் துளசி மாலை யையுடைய திருமாலின் ஆஞ்ஞா சக்கரத்தால் வருந்தியது போதாதோ. 31 உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ வருத்த மறிந்தையிலை வாவென் றழைத்தையிலை. (பொ-ரை) உருத்திரக்கடவுளின் சங்காரத்தால் இடர்ப் பட்டநாள் போதாதோ, ஆண்டவனே; எனது துயரத்தையறிந்தா யில்லை; வாவவென்று கூப்பிட்டாயில்லை. 32 கன்னி வனநாதா கன்னி வனநாதா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை இறப்பைத் தவிர்த்தையிலை யென்னென்று கேட்டையிலை. (பொ-ரை) ஜென்மத்தை யொழித்தாயில்லை. பிறகு ஆட்கொண்டாயில்லை. மரணத்தை யொழித்தாயில்லை. என்ன வென்று கேட்டாயில்லை. (வி-ரை) இத்துணைத் தேகங்கள் தாங்கி வருந்தி இளைத்துச் சலிப்புற்றுள்ள என்னை ஆளலாகாதா என்று விண்ணப்பித்தவாறு காண்க. 33 பாச மெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. (பொ-ரை) என்னுடைய மலத்தை அறுத்தாயில்லை. அம்மலத்தா லுண்டாகிய துன்பத்தை நீக்கினாயில்லை. பூசப்படுகின்ற விபூதியைத் தரித்துக்கொள் என்று அளித்தா யில்லை. 34 அடிமையென்று சொன்னையிலை யக்குமணி தந்தையிலை விடுமுலகம் போக்கியுன்றன் வேட மளித்தையிலை (பொ-ரை) (எமக்குநீ) அடியவன் என்று சொன்னாயில்லை. உருத்திராக்கமணி கொடுத்தாயில்லை. விடக்கூடிய உலகத்தை நீக்கி உனது திருவேடத்தை யுதவியருளினாயில்லை 35 உன்னி லழைத்தையிலே யொன்றாகிக் கொண்டையிலை நின்னடியார் கூட்டத்தி னீயழைத்து வைத்தயிலை. (பொ-ரை) உன்னுடனிருப்பக் கூப்பிட்டாயில்லை. இரண்டறக் கலக்கச் செய்தாயில்லை. உனது அடியார் திருக் கூட்டத்தில் கூட்டிவைத்தாயில்லை. 36 ஓங்கு பரத்து ளொளித்தவடி யார்க்கடியான் ஈங்கோ ரடியா னெமக்கென் றுரைத்தையிலை (பொ-ரை) மேலான பரஞ்சுடரில் மறைந்த அடியவர் களுக்கு அடியவன் இவ்வுலகத்தி லொருவனிருக் கின்றான் என்று சொல்லி யருளவில்லை. 37 நாமந் தரித்தையிலை நானொழியா நின்றையிலை சேம வருளிலென்னைச் சிந்தித் தழைத்தையிலை. (பொ-ரை) (எனக்குச்) சிவனடியான் என்னும் பெயரைச் சூட்டினாயில்லை. முனைப்பு நீங்கத் திருவருள் செய்தாயில்லை. திருவருள்வைப்பி லென்னைக் கருதிக் கூப்பிட்டு நிறுத்தினா யில்லை. 38 முத்தி யளித்தையிலை மோனங் கொடுத்தையிலை சித்தி யளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை. (பொ-ரை) மோட்சந் தந்தாயில்லை. மோனநிலையை யுதவினாயில்லை. திருவருட்சித்தியையுந் திருவருள் செய்தா யில்லை. என்னை யடியனாக்கிச் சிறப்புச் செய்தாயில்லை. 39 தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை அவிப்பரிய தீயாயென் னாசை தவிர்த்தையிலை. (பொ-ரை) எனது துக்கத்தைப் போக்கினாயில்லை; என்னைச் சிவமாக்கினாயில்லை; ஆற்றற்கரிய நெருப்பாகிய என்னாசையை யொழித்தாயில்லை. 40 நின்ற நிலையி னிறுத்தியெனை வைத்தையிலை துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை. (பொ-ரை) தேவரீர் கல்லால விருட்சத்தடியில்அசைவற நின்றநிலையில் அடியேனையும் நிறுத்திவைத்தாயில்லை. நெருங்கிய கரணங்களோடு பிறதத்துவக் கூட்டங்கள்கெடத் திருநோக்கஞ் செய்தாயில்லை. 41 கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை நிட்டையிலே நில்லென்று நீநிறுத்திக் கொண்டையிலை. (பொ-ரை) பந்திக்கப்பட்டுள்ள உலகத்தோற்றமாகிய பந்தம் நீங்கத் திருநோக்கஞ் செய்தாயில்லை. நிஷ்டை நிலைத் திருவென்று நிற்கச்செய்தாயில்லை. 42 கன்னி வனநாதா கன்னி வனநாதா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! கடைக்க ணருள்தாடா கன்னி வனநாதா கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டவரப் பாரேடா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! கடைக்கணோக்கஞ் செய் தருளுக. என்னை ஞானமடையாதபடி கெடுக்கும் ஆணவத்தை நசுக்கித் தேவரீரை நெருங்கி நிற்கத் திருவுளங்கொள்க. (வி-ரை) என்னை ஆட்கொண்டால் தேவரீர் திருக்கோ லங்களைக்கண் டின்புறுவேன் என்றபடி. இனி மூர்த்தி இலக் கணத்தை வாழ்த்துதல் காண்க. 43 காதல் தணியேனோ கண்டு மகிழேனோ சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ (பொ-ரை) (திருவருள் நோக்கஞ் செய்யின்) உலகவிருப்பம் அடங்கப்பெறேனோ? தேவரீரைக் கண்டு களிகூரேனோ? இறப்பு ஒழியப்பெறேனோ? பிறவித்துன்பம் நீங்கப் பெறேனோ. 44 உன்னைத் துதியேனோ வூர்நாடி வாரேனோ பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ. (பொ-ரை) தேவரீரைத் தோத்திரஞ் செய்ய மாட்டேனோ. க்ஷேத்திரங்களை விரும்பி யாத்திரை செய்யேனோ. பொன் போன்ற திருவடியைத் தரிசிக்கமாட்டேனோ, தரிசனத்தால் பேரானந்தம் உறேனோ. 45 ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ. (பொ-ரை) ஓங்கார வடிவமான பொன்சிலம்பின் அலங் காரத்தைக் காணேனோ. வளமாக தண்டை முதலிய பலவகை அணிகளையுங் காணேனோ 46 வீரகண் டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ சூரர்கண்டு போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ. (பொ-ரை) வீரகண்டாமணியினது ஜெய முழக்கத்தைக் காணமாட்டேனோ. சூரர்கள் தரிசித்துத் துதிக்கும் அழகைக் காணமாட்டேனோ. 47 இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ விடையி லெழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ. (பொ-ரை) இடுப்பில் புலித்தோல் அணிந்த அழகைத் தரிசிக்கமாட்டேனோ. இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் வெற்றி மேன்மையைத் தரிசிக்கமாட்டேனோ. 48 ஆனை யுரிபோர்த்த வழகுதனைப் பாரேனோ மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ. (பொ-ரை) யானைத்தோல் போர்த்த அழகைக் காண மாட்டேனோ. மானைப் பிடித்து ஏத்துந் தாமரைபோன்ற திருக்கரத்தைக் காணமாட்டேனோ. 49 மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ ஆண்டார் நமக்கென் றறைந்து திரியேனோ (பொ - ரை) இறந்தவர்களுடைய சிரங்களை மாலையாகத் தரித்துள்ள அழகைக் காணேனோ, எங்களுக்குத் தலைவர் என்று எங்கணுஞ் சொல்லித் திரியமாட்டேனோ. 50 கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ. (பொ-ரை) திருக்கண்டங் கறுத்துள்ள காரணத்தை யோசியேனோ. அடியார் கூட்டத்தில் நின்ற காட்சியைக் காணேனோ. 51 அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ திருநயனக் கடையொளிருஞ் செழுங்கொழுமைப் பாரேனோ. (பொ-ரை) கருணை கனிந்த பூரண சந்திரனைப் போன்ற திருமுக விலாசத்தைக் காணேனோ. கிருபாகடாட்சம் நிறைந்த கடைக்கண்ணில் பிரகாசிக்கும் அழகிய வளத்தைக் காணேனோ. 52 செங்குமிழின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ அங்கனியை வென்ற வதரத்தைப் பாரேனோ. (பொ-ரை) செய்ய குமிழமலர்போன்ற நாசியின் அழகைத் தரிசிக்கமாட்டேனோ. அழகிய கொவ்வைக்கனியைச் செயித்த திருவுதடுகளைத் தரிசிக்கமாட்டேனோ. 53 முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ. (பொ-ரை) முல்லைப் பூவைப்போன்று சந்திரிகை பொழியும் பற்களின் பிரகாசத்தைப் பார்க்கமாட்டேனோ. கருமை நிறைந்த புருவத்தின் அழகைப் பார்க்கமாட்டேனோ. 54 மகரங் கிடந்தொளிரும் வண்மைதனைப் பாரேனோ சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ. (பொ-ரை) மகரக்குண்டலங்கள் பிரகாசிக்கும் அழகைக் காணமாட்டேனோ. தலைக்கண்ணுள்ள திருமுடியின் அழகை யும் சிவந்த சடாபாரதத்தையுங் காணேனோ. 55 கங்கையொடு திங்கணின்ற காட்சிதனைப் பாரேனோ பொங்கரவைத் தான்சடையில் பூண்டவிதம் பாரேனோ (பொ-ரை) கங்கையுடனே சந்திரன் பொலிகின்ற தோற்றத்தைக் காணேனோ. சீறும் பாம்பினைச் சடையில் தரித்த வகையைக் காணேனோ. 56 சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ எருக்கறுகூ மத்தையணி யேகாந்தம் பாரேனோ. (பொ-ரை) சரக்கொன்றை பூத்த சடைக்கற்றையைத் தரி சியேனோ. எருக்கு, அறுகு, ஊமத்தை இவைகளைத் தரித்துள்ள தனிமையைத் தரிசியேனோ. 57 கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ அக்கினியை யேந்திநின்ற வானந்தம் பாரேனோ. (பொ-ரை) கொக்கிறகை அணிந்துள்ள சீராட்டைக் காணேனோ. நெருப்பை யேந்தியுள்ள இன்பத்தைக் காணேனோ. 58 தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ தாக்கு முயலகன்மேற் றாண்டவத்தைப் பாரேனோ (பொ-ரை) தூக்கிய திருவடியையும் உடுக்கையின் முழக்கத்தையும் பார்க்கமாட்டேனோ. எதிர்த்த முயலகன்மேல் புரியுந் திருநடனத்தைப் பார்க்கமாட்டேனோ. 59 வீசு கரமும் விகசிதமும் பாரேனோ ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ. (பொ-ரை) சிற்சபையில் வீசுகின்ற திருக்கரங்களையும் புன் னகையையும் பார்க்கமாட்டேனோ. தரிசிப்போர்க்குக் காதலைக் கொடுக்கும் அபயஹதத்தைப் பார்க்கமாட்டேனோ. 60 அரிபிரமர் போற்ற வமரர் சயசயெனப் பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ. (பொ-ரை) விஷ்ணுவும் பிரமனும் தோத்திரஞ்செய்யத் தேவர்கள் சயசய வென்று சொல்ல உமாதேவியார் இடப் பாகத்தில் எழுந்தருளியுள்ள திருக்கோலத்தைத் தரிசியேனோ. 61 சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ. (பொ-ரை) திருநீற்றின் வனப்பைக் காணேனோ. சந்திர சேகரமூர்த்தியாய்க் கிருபை செய்தலைக் காணேனோ. 62 கன்னி வனநாதா கன்னி வனநாதா. (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக் கடவுளே! கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேனோ பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ. (பொ-ரை) தேவரீர் திருவருளைப் பெறாமல் வாளா ஒழிந்தகாலம் ஒழிந்தாலும் இனியாயினுந் தேவரீர் கிருபை நோக்கேனோ. துன்பநாளாகப் பலநாள் கழிந்தாலும் இனி யாயினும் தேவரீர் திருவடி யெனக்குச் சித்தியாதோ. 63 நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ எப்பருவ முங்கழன்ற வேதாந்தங் கிட்டாதோ. (பொ-ரை) மலம் பரிபாகம் ஆகுங்காலம் எனக்கு உண்டாகாதோ. எல்லாக்காலமும் (தத்துவமும்) விலகிய ஏகாந்தம் உண்டாகாதோ. 64 வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ. (பொ-ரை) சொல்லைக்கடந்து விளங்கும் மௌனநிலை எனக்கு வாராதோ. முனைப்பு அழிந்து விளங்கும் மேலான சுத்தநிலை வாராதோ. 65 வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ சிந்தையையந் தீர்க்குமந்த தேறலது கிட்டாதோ. (பொ-ரை) கொடிய பிறவித்துன்பத்தை யொழிக்கும் அப் பரவெளி கைகூடாதோ. மன மயலை யொழிக்குஞ் சிவமெனுந் தெளிவு கைகூடாதோ. 66 ஆன வடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ஊன மறவென்னை யுணர்த்துவித்தல் கிட்டாதோ. (பொ-ரை) தொண்டுபட்ட அடியவர்கட்கு அடிமை செய்யுந் தன்மை யெனக்கு நேரிடாதோ. மலங்கழல என் அறிவை விளக்கி என்னை விளங்கச்செய்யுந் தன்மை நேரிடாதோ. 67 என்னென்று சொல்லுவண்டா யென்குருவே கேளேடா பின்னை யெனக்குநீ யல்லாற் பிறிதிலையே. (பொ-ரை) என் குருநாதா! என்னவென்று எடுத் துரைப்பேன் கேட்பாயாக. எனக்குத் தேவரீரை அல்லாமல் பின்னைப் பற்றுக்கோடா யுள்ளவர் வேறொருவருமில்லை. 68 கன்னி வனநாதா கன்னி வனநாதா (பொ-ரை) மதுரைக்கடவுளே! மதுரைக்கடவுளே! அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ. (பொ-ரை) சோற்றுத்துக்கம் ஒழிந்த இடந் தோன்றாதோ. பொருள் துக்கம் ஒழிந்த இடம் புலனாகாதோ. 69 உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ. (பொ-ரை) உலகத் துன்பங் கழிந்த இடங் கை கூடாதோ. பாசத் தொகுதி போன்ற பெண்கள் வாழாத இடங் கைகூடாதோ. 70 ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ செப்புதற்கு மெட்டாத தெளிந்தவிடங் கிட்டாதோ. (பொ-ரை) சமான திருட்டாந்த பந்தமெனு மிவையற்ற இடம் நேராதோ. வாக்கினால் சொல்வதற்கும் எட்டாத தெளிவுள்ள இடம் நேராதோ. 71 வாக்கு மனாதீத வகோசரத்திற் செல்வவெனைத் தாக்கு மருட்குருவே நின்றாளிணைக்கே யான்போற்றி. (பொ-ரை) வாக்கு மனங்களுக்கு மேலாக உள்ள துரியத்தில் யான் போக என்னைச் செலுத்தும் திருவருட் குருமூர்த்தி! தேவரீர் திருவடி இரண்டினுக்கும் வணக்கம். 72 அருட்புலம்பல் ஐங்கரனைத் தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று தங்காமல் வந்தொருவன் தற்சொரூபங் காட்டியெனை. (பொ-ரை) திருவருளைப் பெறவேண்டுமென்று ஐந்து கரங்களையுடைய கணபதியைக் கும்பிட்டேன். (அதன்பயனாக) ஒருதலைவன் தாமதஞ் செய்யாமல் என்முன்னேவந்து தனது உண்மை வடிவினைக் காண்பித்து அடியேனை, (வி-ரை) உயிர்களின் திருவருள் மூலமாகக் கடவுளை யடைய வேண்டுவதாகலான் அருளடைய வேண்டுமென்று என்றார். ஐங்கரன் - விநாயகன்; மூலாதாரத்தில் வீற்றிருப்பவன். ஒருவன் என்றது குருநாதனை. 1 கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி. (பொ-ரை) (பெண்ணே) பலவாக உண்டாகும் பிறவியை யொழிக்க (என்பொருட்டுக்) குருவடிவந் தாங்கினான்; வஞ் சனையுடைய ஐம்புலச் சேட்டைகளைக் களையவேண்டி என் முன் எழுந்தருளி வந்தான். (வி-ரை) பிறவிகள் எண்ணிறந்தன ஆகலான் கொள்ளைப் பிறப்பு என்றார். பிறவிக்கு வித்தாயிருப்பது அவா. அவ்வவா ஐம்புலன் வழியாக உண்டாவது. அவ்வைம்புலச் சேட்டை குருதரிசனத்தால் அடங்கும் என்றபடி. மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே என்றார் மாணிக்கவாசகனார். 2 ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும் சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் றுரிசறவே. (பொ-ரை) குற்றம் நீங்கும்படியாக ஆறு ஆதாரங்களையும், அவ்வாதாரங்களில் பொருந்தியுள்ள ஐம்பத்தோ ரெழுத்துக் களையும், அவ்வாதாரங்களைச் சுற்றியுள்ள மாயா அரண்களை யுடைய கோட்டை முதலிய எல்லாவற்றையும் (குருநாதன் தனது நெற்றிக்கண்ணால்) சுட்டு நீறாக்கினான். (வி-ரை) ஆதாரம் ஆறு;- மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. இவைகளுக்குக் கோணங்களுண்டு அக்கோணங்களுக்கு இதழ்களுண்டு அவ்விதழ் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரெழுத்தாக ஐம்பத்தோ ரெழுத்துக்களுண்டு. 3 மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம் தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வந்ததடி. (பொ-ரை) அதிக விகாரத்தை யுண்டுபண்ணும் பல வகைத் தத்துவக் கூட்டங்கள் நிலைகலங்கி யொடுங்கின. (வி-ரை) விகாரம் - தோற்றம் ஒடுக்கம். தத்துவங்கள் - மாயா காரியங்கள். அவை முப்பத்தாறு. தத்துவங்களைப் பொருளாகக் கொண்டிருந்த எண்ணம் ஒழிந்தது என்றபடி. 4 என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள் தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. (பொ-ரை) என்னுடன் தோன்றினவர்க ளெல்லாரும் மாண்டுபோனார்கள். யான் இனித் தனியனாய் வாழ மாட்டேன். (வி-ரை) என்னுடன் பிறந்தார் - மேற்சொன்ன தத்துவங்கள். தனு, கரண முதலியன. ஆன்மாவின் இயல்பு ஒன்றைப்பற்றியே நிற்பது என்பதும், தனித்து நிற்பது அன்று என்பதுஞ் சாத்திரக்கொள்கை. என்னைப்பற்றி யிருந்த தத்துவங்களாகிய சகோதரர்கள் மாண்டுவிட்டார்கள். இனியான் பற்ற வேண்டியது கடவுளையே. யான் தனித்து வாழும் இயல்பினன் அல்லன், சார்ந்ததன் வண்ணமாயிருப்பவன் என்றபடி. 5 எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி சொல்லி யழுதாற் றுயரமெனக் காறுமடி. (பொ-ரை) தத்துவங்களெல்லாம் அழிந்த இடம் என்று ஒழியும். அதனைப் பன்னிப்பன்னி அழுதால் எனது துக்கம் நிவர்த்தியாகும். (வி-ரை) தத்துவம் - காரியம். மாயை - காரணம்! காரணம் உள்ளமட்டும் காரியம் நிகழுமாகலான் காரணங்கெட வேண்டியவாறாம். களம் என்றது மாயையை. 6 மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி விண்முதலா மைம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி. (பொ-ரை) (பெண்ணே) பிருதிவி முதலிய பஞ்சபூதங்கள் கெட்டு ஒழிதலைக் கண்டேன். சப்தம் முதலிய தன்மாத்திரைகள் ஒன்றுமில்லாமல் அழிதலையுங் கண்டேன். (வி-ரை) தத்துவ வகைகளைத் தெரிவிக்கின்றார். பஞ்ச பூதம் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம். தன்மாத்திரை - சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். பூதங்களின் சேஷ்டையும் பொறி களின் சேஷ்டையும் அடங்கின என்றவாறு. 7 நீக்காப் புலன்களைந்து நீறாக வெந்ததடி வாக்காதி யைவரையு மாண்டுவிழக் கண்டேண்டி. (பொ-ரை) விலக்கவியலாத ஐம்புலன்களும் சாம்பராக எரிந்தன. வாக்கு முதலிய ஐந்தும் அழிந்ததையுங் கண்ணுற்றேன். (வி--ரை) ஐம்புலன் - மெய், வாய், கண், மூக்கு, செவி. வாக்காதி ஐவரென்றது - கன்மேந்திரியங்களை. அவை வாக்கு பாதம் பாணி பாயுரு உபதம் என்பன. 8 மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி. (பொ-ரை) உட்கரணங்களெல்லாம் முறைமுறையாகக் கெட்டழிய அவைகளின் கூட்டாளிகளாகிய பிற இந்திரியங் களும்பட்டு விழுவதைக்கண்டேன். (வி-ரை) மனக்கரணம் என்றது - அந்தக் கரணத்தை. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. இவை அந்தக் கரண மெனப்படும். 9 ஆத்தும தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி போற்றும்வகை யெப்படியோ போத மிழந்தானை. (பொ-ரை) ஆத்தும தத்துவங்கள் தம் வைப்புக்கெட நீறாயின. இனிக் குருநாதனைத் தோத்திரஞ்செய்யும் வழி யெப்படி? (வி-ரை) மேற்சொல்லிய தத்துவம் இருபத்து நான்கிற்கும் ஆத்மதத்துவம் என்று பெயர். ஆத்துமதத்துவம் இருபத்து நான்காவன:- பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு. ஆத்ம தத்வத்தோடு கருவி கரணங்கள் ஒழிதலான் போற்றுதல் முதலியன செய்ய இயலாமை தெரிவித்தபடி. போதம் இழந்தானை - அகங்கார மில்லாதவனை; குரு நாதனை. 10 வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி சுத்தவித்தை யைந்தினையுஞ் சுட்டான் றுரிசறவே. (பொ-ரை) வித்தியாதத்துவங்கள் எரிந்து ஒழிவதைக் கண்ணுற்றேன். குருநாதன் சுத்தவித்தை முதலிய ஐந்து தத்துவங் களையும் என்னைப் பற்றியிருந்த மலமகலத் தகித்து விட்டான். (வி-ரை) வித்தியா தத்துவம் ஏழு. அவை காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை என்பன. சுத்தவித்தை முதலிய ஐந்தும் சிவதத்துவம் எனப்படும். அவை சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்பன. 11 மூன்று வகைக்கிளையு முப்பத் தறுவரையும் கான்று விழச்சுட்டுக் கருவே ரறுத்தாண்டி. (பொ-ரை) ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வம் என மூன்று வகையாகப் பிரிந்துள்ள தத்துவக்கூட்டங்களையும், அம்மூன்றின் விரிவாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கழன்றுவிழக் கொளுத்தி அவைகளின் உற்பத்தியை அறவே யழித்தான் (குருநாதன்). (வி-ரை) குருநாதன் சட்சுதீட்சையால் தத்துவங்களை வேரற எரித்தான் என்றபடி. 12 குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ உருவாகி வந்தானோ வுருவழிக்க வந்தானோ. (பொ-ரை) ஞானாசிரியனாக எழுந்தருளி வந்தானோ? அல்லது தத்துவக்கூட்டங்களை யொழிக்கவந் தருளினானோ? சகளீகரித்த திருமேனியோடு வந்தானோ? அல்லது என்னுடைய உருவத்தைக்கெடுக்க வந்தானோ? (வி-ரை) சிவபெருமான் குருமூர்த்தியாக எழுந்தருளிச் சட்சுதீட்சை செய்ததும் ஆன்மாக்களைப் பற்றியுள்ளமும் மலங்களறுதலால் உருவழிக்க வந்தானோ என்றார். உரு வழித்தலாவது பிறவியை யொழிப்பது. 13 கேடுவரு மென்றறியேன் கெடுமதிகண் டோற்றாமல் பாடுவரு மென்றறியேன் பதியாண் டிருந்தேண்டி. (பொ-ரை) கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமையால் எனக்குக் கெடுதி வருமென்று அறிந்தேனில்லை. துன்பம் நேரிடு மென்று தெரிந்துகொண்டேனில்லை. (வீணாக) உலகத்தை ஆண்டுகொண்டிருந்தேன். (வி-ரை) கெடுமதி கண்ணுக்குத் தோன்றாதென்பது ஒரு பழமொழி. பின்னால் கெடுதிவருமென்று கருதாது ஆட்சிபுரியும் அரச வாழ்க்கையைக் கண்டித்தவாறு. பதி என்பதற்குத் தேகமெனப் பொருளுரைப்பினும் பொருந்தும். 14 எல்லாரும் பட்டகள மின்னவிட மென்றறியேன் பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி. (பொ-ரை) தத்துவங்களெல்லாம் அழிந்த இடம் இன்ன இடம் என்று தெரியவில்லை. தீமையை யொழிக்குஞ் சிவகுரு நாதனைக் கண்டேன். (வி-ரை) தத்துவங்கள் ஒடுங்கினதும் ஆன்மாவிற்குப் புலனாவது சிவம் ஒன்றேயாகலான் பொறியிலியைக் கண்டேண்டி என்றார். சிவந்தோன்றப் பெறுவோர்க்கு உலகந் தோன்றாது என்பது சாத்திரம். 15 உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள் அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள். (பொ-ரை) உடலினுள்ளே இருந்த தத்துவங்க ளெல்லாம் அழிந்தன. அந்த உடலினிடத்திலேயுள்ள அறுபது தத்துவக் காரியங்களும் அழிந்தன. (வி-ரை) தத்துவம் முப்பத்தாறும் காரணதத்துவம் எனப் படும். தத்துவம் அறுபதும் காரியதத்துவமாம். ஆகத் தத்துவம் தொண்ணூற்றாறாதல் காண்க. விரிவைத் தத்துவக் கட்டளை களிற் காண்க. 16 ஒக்க மடிந்ததடி யூடுருவ வெந்ததடி கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி. (பொ-ரை) மேற்கூரிய இருவகைத் தத்துவங்களும் ஒருங்கே அழிந்தன. அவை நன்றாக வெந்து சாம்பராயின. கல்கோட்டை போன்ற உடல்முழுவதும் கரிக்கோட்டையாக முடிந்தது. (வி-ரை) கல்கோட்டை - வச்சிரதேகம். கரிக்கோட்டை - வெந்து நீறான சாம்பர்த்துகள். 17 தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் றுரிசரவே கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி. (பொ-ரை) துன்பங்கெடத் தொண்ணுற்றாரு தத்துவங் களையும் எரித்தான். பிறர் திருஷ்டிபட்டது. இனி அத் தத்துவங்கள் முளையாதபடி வேரறுத்துவிட்டான் (குருநாதன்.) (வி-ரை) தத்துவகாரியமும் காரணமும் அழிந்தபடியால் இனி உடல் வாராதென்றபடி. 18 ஓங்காரங் கெட்டதடி வுள்ளதெல்லாம் போச்சுதடி ஆங்காரங் கெட்டதடி யடியோ டறுத்தாண்டி. (பொ-ரை) பிரணவமும் அழிந்தது. அதன் உள்ளிருந்த எல்லாத் தத்துவங்களும் நசிந்தன. அதற்குமேல் ஆணவமுங் குன்றியது. இவை யாவையும் வேரறக் களைந்தான் (குரு நாதன்.) (வி-ரை) எல்லாத் தத்துவங்களுக்கும் பிறப்பிடமாயுள்ளது பிரணவம். அது கெடின் எல்லாத் தத்துவங்களும் கெட்ட படியாம். பிரணவம் - சுத்தமாயை. அது நசித்ததும் ஆணவமலம் அகலும். 19 தரையாங் குடிலைமுதல் தட்டுருவ வெந்ததடி இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. (பொ-ரை) நிலம்போல எல்லாவற்றிற்கும் தாரகமாக உள்ள குடிலை முதலிய தத்துவங்கள் நிலைகலங்கி வெந்து சாம்பராயின. (ஆகையால்) விவகாரஞ்செய்யும் மனத்துன்பங்கள் எல்லாவற்றையும் ஒழித்தான். (வி-ரை) குடிலை - சுத்தமாயை. இஃது எல்லாத் தத்துவங் கட்கும் ஆதாரமாயிருத்தலான் தரையாங் குடிலை என்றார். முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி. (பொ-ரை) பூர்வ கர்மங்க ளெல்லாவற்றையும் ஒழித்தான். அதனால் யான் என் சொரூபத்தை யறியத் தனியளாய் நிற்கலானேன். (வி-ரை) வினைப்பற்று அற்றதும் ஆத்மதரிசனம் உண்டாம். அதுகாலை மலந் தோன்றாதென்க. 21 என்னையே நானறிய விருவினையு மீடழித்துத் தன்னை யறியத் தலமெனக்குச் சொன்னாண்டி. (பொ-ரை) இரண்டு வினைகளைக் கெடுத்து என்னை யானறிந்து கொள்ளத் தன்னை யறியும்பொருட்டுத் தானிருக்கும் இடத்தை யெனக்குச் சொன்னான். (வி-ரை) தன்னையறிந்தபின் தலைவனையறியும் உண்மையை விரித்தவாறாம். 22 தன்னை யறிந்தேண்டி தனிக்குமரி யானேண்டி தன்னந் தனியே தனியிருக்கும் பக்குவமோ. (பொ-ரை) தன்னை யறிந்தேன். அறிந்து அவனோடு (தலைவனோடு) கூடி அனுபவிக்கும் பக்குவப்பருவமடைந்தேன். இனித் தன்னந்தனியளாய் இருக்கும் பக்குவம் போலும்! (வி-ரை) இனித் தத்துவங்களோடு கூடாது வாழ்வேன் என்ற படி. தன்னை யறிவதும் தலைவனை அறிவது மொன்றே. 23 வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி காட்டுக் கெறித்தநிலா கனவாச்சே கண்டதெல்லாம் (பொ-ரை) நான் அடைந்தவீட்டில் ஒருவருமில்லை. அதைப்போல யானும் வெறும் வெளியாய் முடிந்தேன். ஆன படியால் யான் பார்த்த விடயங்களெல்லாம் காட்டிற்குச் சந்திரிகை வீசிய நிலாவாகவும், சொப்பனமாகவும் முடிந்தன. (வி-ரை) மோட்சத்தில் கருவி கரண முதலிய தத்துவங்கள் ஒன்றுமில்லை. அத்தகைய தத்துவங்களை விவகாரத்தில் பொரு ளாகக்கொண்டு அவைகளாலாய பயன்களை மெய்யாகக் கோடல் அறியாமை என்றபடி. முப்பாழும் பாழாய் முடிவி லொரு சூநியமாய் என்றார் ஔவையாரும். 24 நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பாட்டலவோ பகையாரோ கண்டவர்கள் பார்த்தாருக் கேச்சலவோ. (பொ-ரை) எல்லாவற்றையும் விடுத்துத் தன்னந்தனியளாய் வாழ்வதைப் பார்த்தவர்கள் என்னை நோக்கிச் சிரிக்க மாட்டார் களோ? அது தேசத்துக்கு ஒருபாட்டாக அன்றோ முடியும்? பார்த்தவர்களும் பகைக்கமாட்டார்களோ? கண்டவர்களுக்கு வசையன்றோ? (வி-ரை) ஆன்மாவின் இயல்பு சார்ந்ததன்வண்ணமா யிருத்தல். இப்பொழுது ஆன்மா தத்தவக்கூட்டங்களை விடுத்துத் தனித்திருக்கும் நிலையைக் குறிப்பித்தவாறாம். இனி ஆண்டவனோடு ஆன்மா கூடுதல் வேண்டுமென்பது. தத்துவ மொடுங்கினதும் குருபரன் திருவருள் பதிதல் வேண்டும். அதை நாடி நகையாரோ . . . . . . என்று கூறினார். 25 இந்நிலைமை கண்டாண்டி யெங்கு மிருந்தாண்டி கன்னி யழித்தாண்டி கற்பைக் குலைத்தாண்டி. (பொ-ரை) எங்கும் நிறைந்துள்ள தலைவன் இந்தத் தன்மையைக் கண்ணுற்றான். அவன் என் கன்னித்தன்மையைப் போக்கிக் கற்பை அழித்துவிட்டான். (வி-ரை) ஆன்மா தத்துவக்கூட்டங்களை விடுத்துத் தனித்து நிற்பது கண்ட குருநாதன் ஆன்மாவை ஆட்கொண்டனன் என்க. 26 கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும் பொற்புக் குலைத்தமையும் போத மிழந்தமையும். (பொ-ரை) கற்பழித்ததும், பிறவி வேரறுத்ததும், அழகு கெடுத்ததும், அறியாமை போக்கடித்ததும் (அன்றியும்.) (வி-ரை) ஆன்மா ஆண்டவனோடு ஒன்றுபட்டு நுகர்ந்த இன்பத்தைக் குறித்தவாறாம். 27 என்ன வினைவருமோ வின்னமெனக் கென்றறியேன் சொன்னசொல் லெல்லாம் பலித்ததடி சோர்வறவே. (பொ-ரை) இன்னும் எனக்கு என்ன வினைகள் வந்து சேருமோ என்பது எனக்குத் தெரியவில்லை, தளர்ச்சி நீங்க எனது குருநாதன் அருளிய உரைகள் எல்லாம் பலித்து விட்டன. 28 கங்குல்பக லற்றிடத்தே காட்டிக் கொடுத்தாண்டி பங்க மழித்தாண்டி பார்த்தானைப் பார்த்திருந்தேன். (பொ-ரை) இரவு பகல் இல்லாவிடத்தில் என்னைக் குறித்துக் காட்டினான், (அதனைக் கண்டதும்) எனது குற்றத்தைப் போக்கினான். அங்கு என்னை நோக்கிய ஒருவனை யான் நோக்கிக் கொண்டிருந்தேன். 29 சாதியிற் கூட்டுவரோ சாத்திரத்துக் குள்ளாமோ ஓதி யுணர்ந்ததெல்லா முள்ளபடி யாச்சுதடி. (பொ-ரை) என்னை யொருவன் இவ்வாறு கெடுத்தபடி யால் இனி என்னைச் சாதியில் சேர்ப்பார்களா? இம்முறை நூல் வழிபட்டு நிற்குமோ? யான் ஓதித் தெரிந்துகொண்ட விடயங் களெல்லாம் உள்ளவாறு முடிந்தன. (வி-ரை) சாதி யென்றது தத்துவத்தை. ஆண்டவனோடு கூடிய ஆன்மா மீண்டுந் தத்துவத்தில் தோய்வதில்லை. கலந்தபின் பிரிவதில்லை என்றார் அப்பர். 30 என்னகுற்றஞ் செய்தேனோ எல்லாருங் காணாமல் அன்னை சுற்றமெல்லா மறியாரோ வம்புவியில். (பொ-ரை) எல்லாருங் காணாதிருக்க நான் என்ன தவறுதல் செய்தேனோ? யான் குற்றஞ் செய்ததும் செய்யாததும் அழகிய உலகத்தில் தாய் உறவினர் எல்லாரும் தெரிந்து கொள்ள மாட்டாரோ? 31 கொன்றாரைத் தின்றேனோ தின்றாரைக் கொன்றேனோ எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ. (பொ-ரை) பல பிறவிகளில் என்னைக் கொன்றவர்களை யான் புசித்தேனோ? என்னைக் கொன்று புசித்தவர்களை யான் கொன்றேனோ? எண்ணாத விடயங்களை யெல்லாம் எண்ணும் விருப்பத்தை மறந்துவிட்டேனோ?. 32 சாதியிற் கூட்டுவரோ சமயத்தோ ரெண்ணுவரோ பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கிட மாச்சுதடி. (பொ-ரை) என்னைச் சாதியிற் சேர்ப்பார்களோ? சமயத் தவர்கள் என்னை நினைப்பார்களோ? எல்லாரையுங் கலங்கச் செய்து வாழ்ந்து வந்தது பேச்சுக்கிடமாக முடிந்தது. 33 கண்டார்க்குப் பெண்ணலவோ காணார்க்குக் காமமடி உண்டார்க ளுண்டதெலா மூணல்லா துண்பர்களோ. (பொ-ரை) பார்த்தவர்கட்குப் பெண்ணன்றோ? பாரா தவர்கட்குக் காமமேயாம்:புசிப்பவர்கட்குப்புசிப்பனஎல்லாம்உணவாகக்கொண்டன்றிப்புசிப்பார்களோ?. 34 கொண்டார்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ விண்டவர்கள் கண்டவரோ கண்டவர்கள் விண்டவரோ. (பொ-ரை) அனுபவத்தில் அடைந்தவர்கள் அடைந்தன வெல்லாம் அவைகளை அடையாதவர்கள் அடைவார்களோ? அவ்வநுபவத்தைச் சொன்னவர்கள் அதைக் கண்டவர்க ளாவார்களோ? அதைக் கண்டவர்கள் சொன்னவர்கள் ஆவார் களோ?. (வி-ரை) கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது ஆன்றோர் வாக்கு 35 பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ தொண்டாய தொண்டருளந் தோற்றி யொடுங்குமதோ. (பொ-ரை) அப்பரம்பொருள் பழைய நான்கு வேதங்களும் போற்றுந் தன்மையுடையதன்றோ? அடிமைப்பட்ட அடியவ ருள்ளத்தில் தோன்றி ஒடுங்குமல்லவோ?. 36 ஓத வரிதோ வொருவ ருணர்வரிதோ பேத மறவெங்கும் விளங்கும் பெருமையன்காண். (பொ-ரை) அப்பொருள் சொல்லுவதற் கருமையானதோ? ஒருவரும் அறிவதற்கு அருமையானதோ? மாறின்றி யெங்கணும் விளங்கிக்கொண்டுள்ள பெருமையுடையது. 37 வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண் நோக்க வரியவன்கா ணுண்ணரிய நுண்ணியன்காண். (பொ-ரை) வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்டுநிற்கும் மனோலயன். பார்க்கின்றதற்கு அருமையானவன். அதிநுட்பத் திற்கும் நுட்பமாக உள்ளவன். (வி-ரை) மனோலயன் - மனத்தில் லயப்படுகிறவன். மனோலய மடையாதவர்கள் பார்வைக்குத் தோன்றாதவன். மிக நுண்ணிய பொருளிலும் நுண்மையாய் வீற்றிருப்பவன் என்றபடி. 38 சொல்லுக் கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண் கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண். (பொ-ரை) சொல்லில் அடங்காதவன். சொற்கடந்து விளங்குபவன். கல்லுள்ளேயுள்ள நெருப்பொளிபோன்றவன். (வி-ரை) விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் - தேவாரம். 39 சுட்டிறந்த பாழதனிற் சுகித்திருக்கச் சொன்னவன்காண் ஏட்டி லெழுத்தோ எழுதினவன் கைப்பிழையோ. (பொ-ரை) சுட்டி யுணர்தலைக் கடந்த வெட்டவெளியிலே இன்பவாழ்வைப் பெற்றிருக்க எனக்கு உபதேசித்தவன். அவன் எனக்கு உரைத்த ஒருமொழி ஏட்டில் எழுதப்படும் எழுத்தாகுமோ? அதை எழுதினவன் கைத்தவறோ? (வி-ரை) சுட்டி யுணர்வன யாவும் அழிதன்மாலையன. சுட்டுணர்வு கடந்த ஒன்றே மோட்சமென்பது. அஃது எழுத முடியாதது என்றபடி. 40 சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென வடைய விழுங்கினண்டி. (பொ-ரை) என்னைச் சும்மாயிருக்கச் செய்தான். அதன் சூழ்ச்சியை நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆ! ஆ! சும்மா இருப்பதே பொருளென்று தெரிந்ததும் முற்றிலும் என்னை விழுங்கிவிட்டான். (வி-ரை) சும்மா விருப்பதே சுகம் என்பது பழமொழி. தத்துவச் சார்பு உள்ளமட்டும் சும்மாவிருத்த லருமை. தத்துவங் கெட்டுக் குருமொழி பதிந்த உடன் சும்மா விருக்கும் நிலை கூடும்; தக்ஷணாமூர்த்தியின் உண்மை தெளிக. சும்மா இருக்கும் நிலை பெற்றோர்க்கு உலகம் புலனாகாது. சும்மா இருசொல்லற என்றலுமே - அம்மா பொருளொன்று மறிந்திலனே - என்றார் அருணகிரியார். 41 பார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி கோத்த நிலைகுலைத்த கொள்கை யறியேண்டி. (பொ-ரை) கண்ட இடங்களெல்லாம் கடவுளாகக் கண்டேன். ஞானங் கைவராத பெத்தகாலத்தில் உலக முதலிய மாயாகாரியங்களை ஒழுங்குபடுத்திய முறையை இப்பொழுது கெடுத்து ஒன்றாகச் செய்த அவன் கொள்கையை யான் அறியேன். (வி-ரை) அத்துவிதநிலை அடைந்தேன் என்றபடி. 42 மஞ்சன மாட்டி மலர்பறித்துச் சாத்தாமல் நெஞ்சுவெறும் பாழானே னின்றநிலை காணேண்டி. (பொ-ரை) கடவுளுக்கு அபிஷேகஞ் செய்து பூக்களைக் கொய்து சூட்டாமல் மனதை வெறுஞ் சூந்நியமயமாக்கி விட்டேன். அதனால் இறைவன் எழுந்தருளியுள்ள இடத்தைக் காணவில்லை. (வி-ரை) ஆன்மா சிவமாக்கிவிட்டமையான் துவித பாவனையில்லை என்றபடி. துவித பாவனை யுள்ளமட்டும் சரியைத் தொண்டுசெய்வது வழக்கு. அத்துவித நிலையடைந் தோர்க்குச் சிவம் உருவமாக ஓரிடத்தில் தோன்றி விளங்கா தாகலின் நின்றநிலை காணேன்டி என்றார். 43 பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல் ஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி. (பொ-ரை) பல பாக்களை வாயினாற்பாடி நூல்களை வாசித்திருந்தாலும் பல பூக்களைக் கடவுளுக்குச் சூட்டாமலும், க்ஷேத்திர யாத்திரை செய்யாமலும், வீணே கெட்டு விட்டேன். (வி-ரை) மலர் சூட்டல், பாராயணம், க்ஷேத்திர யாத்திரை முதலியன மோனநிலைக்குச் சோபானங்கள், இவைகளை முறையே செய்பவர்க்குக் குருநாதன் வாய்ப்பன். மூர்த்தி தலந்தீர்த்தம் முறையாய் வயங்கினர்க்கு - வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்றார் தாயுமானார். சிலவேளை சிவமும் சிலவேளை உலகமும் தோன்றப்பெறும் சீவன் முத்தர்களும் சரியைத் தொண்டுசெய்வார்கள். என்னை? உலகம் தோன்றும்போது அவர் மனம் தத்துவத்தில் விழாதவாறு தடுக்கவேண்டியென்க. முத்திநிலை யடைந்தவர்க்குத் தொண்டு வேண்டுவதில்லை. என்னை? அவர்க்கு உலகத் தோற்ற மின்மையான் என்க. சிவமாந் தன்மை யெய்துதற்குச் சோபானங் களாகிய தொண்டுகளிலேயே கருத்தைப் பதியவைத்திருப்போர் புண்ணிய லோகங்களை அடைவரன்றித் தேகமொழியும் பிறவா நிலையெய்தார். தேகத்தை ஒழிக்க வேண்டுமானால் உருவ வழிபாடு செய்தலாகாது. இவ்வுண்மையைச் சுவாமிகள் மேற் செய்யுளிலும் இச்செய்யுளிலும் விளக்கியவாறு காண்க. 44 மாணிக்கத் துள்ளொளிபோல் மருவி யிருந்தாண்டி பேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண். (பொ-ரை) மாணிக்கத்திலுள்ள ஒளியைப்போல விளங்கி யிருந்தான். அவன் விரும்பி வணக்கஞ்செய்யு மடியார்களும் அறிவால் உணர்தலன்றி இன்ன தன்மையன் என்று எடுத்துச் சொல்லக்கூடாத சிறப்பினை யுடையவன். 45 அன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில் என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண். (பொ-ரை) ஆதிகாலந்தொட்டு இற்றைக்காலம் வரையிலும், அறிவு முதிராத வயதிலும், எப்பொழுதும் பொதுவாயிருக்கின்ற நிராமயன். (வி-ரை) இறைவன் தனது விளக்கத்தை எல்லாரிடத்திலும் பொதுவாகவும், அடியார்களிடத்தில் சிறப்பாகவும் நிலைக்கச் செய்துள்ளான். அவனது சிறப்பு விளக்கத்தைப் பெறப் போதிய பக்குவம் இன்னும் யான் வாய்க்கப் பெறவில்லை என்றபடி. 46 சித்தவி காரத்தாலே சின்மயனைக் காணாமல் புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே. (பொ-ரை) மனவிகாரத்தால் அறிவு மயமான கடவுளைக் காணாமல் அறிவு திரிந்து ஐம்பொறி வழியாக உழன்றேன். (வி-ரை) ஐம்பொறி வழியாக உழலுமட்டும் ஆண்டவனைக் காண இயலாது என்றவாறு. 47 பத்தி யறியாமற் பாழிற் கவிழ்ந்தேண்டி ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி. (பொ-ரை) அன்பை யுணராமல் வீணான விடயங்களில் விழுந்தேன். பொருத்தமான இடங்களில் தூங்குவதே நல்ல தென்று ஒருப்பட்டு மிருந்தேன். 48 செத்தாரை யொத்தேண்டி சிந்தை தெளிந்தேண்டி மற்றாரு மில்லையடி மறுமாற்றங் காணேன்டி. (பொ-ரை) இறந்தவர்களைப் போன்றவனானேன். மனத் தெளிவடைந்தேன். மற்ற எவரும் என்னிடம் இல்லை. மறு மொழியுமில்லை. (வி-ரை) புலன்களை யடக்கி அன்பின்வழி நின்றால் பிணத்தைப்போல் சும்மாவிருக்கும் ஒருநிலை கைகூடும். அதனால் சித்தசுத்தியும் ஞானத் தெளிவும் உண்டாகும். தெளிவு உண்டாகிய பின்னர் எப்பொருளுந் தோன்ற மாட்டா. உரையைக் கேட்டுப் பதிலுரைக்க அந்நியர்களும் தோன்ற மாட்டார்கள். 49 கல்வியல்ல கேள்வியல்ல கைகாட்டுங் காரணங்காண் எல்லையள வற்றதடி யெங்கு நிறைந்ததடி. (பொ-ரை) ஞானமென்பது கல்வியால் வருவதன்று; கேள்வியால் வருவதன்று. அஃது இறைவன் சின் முத்திரையாகக் கைகாட்டுங் குறிப்பா லுணர்வது. அது வரம்பு கடந்தது; எங்கும் நீக்கமற விளங்குவது. 50 வாசா மகோசரத்தை மருவியிடங் கொண்டாண்டி ஆசூச மில்லாண்டி யறிவுக் கறிவாண்டி. (பொ-ரை) வாக்கு மனங்கட்கு எட்டாத ஓரிடத்தில் வீற்றிருந்து அதனையே தனக்குரிய இடமாக்கிக் கொண்டான். அவனுக்கு ஆசூசமில்லை. அவன் அறிவுக்கு அறிவாயிருப்பவன். 51 பத்துத் திசைக்கு மடங்காப் பருவமடி எத்திசைக்கு மெங்கு மிடைவிடா தேகமடி. (பொ-ரை) (இறைவன் வடிவம்) பத்துத்திசையிலுங் கொள்ளாதது. எத்திசையுலும் எங்கணும் இடையறாமல் நிற்கும் ஏக சொரூபன். (வி-ரை) ஒருவனே எங்கணும் வீற்றிருக்கின்றான் என்றபடி. 52 தித்திக்க வூறுமடி சித்த முடையார்க்குப் பத்திக் கடலுட் பதித்தபரஞ் சோதியடி. (பொ-ரை) அன்பாகிய சமுத்திரத்தில் அமிழ்ந்த மேலான சோதிசொரூபன். அவனை இடையறாது தியானஞ் செய்யும் மனமுடையவர்களுக்கு இனிமையாகச் சுவைக்கின்றவன். (வி-ரை) தின்று கண்டோர்க்கு அது தித்தித்த வாறே- திருமூலர். 53 உள்ளுணர்வாய் நின்றவர்த முணர்வுக் குணர்வாண்டி எள்ளளவு முள்ளதிலே யேறிக் குறையாண்டி. (பொ-ரை) அக உணர்வாக நிற்பவர்களுடைய அறிவிற்கு அறிவாக இருப்பவன். தனது பூரணத்துவத்தில் சிறிதும் ஏற்றத் தாழ்வடையாதவன். (வி-ரை) என்றும் எங்கணும் ஒரு தன்மையாய் விளங்குபவன் என்றபடி. 54 தூருந் தலையுமிலான் றோற்ற மொடுக்கமிலான் ஆரு மறியாம லகண்டமாய் நின்றாண்டி. (பொ-ரை) அடிமுடியில்லாதவன்; பிறப்பு இறப்பு இல்லாதவன். எவராலும் உணரப்படாமல் அகண்டாகாரமாய் வீற்றிருக்கின்றனன். 55 எத்தனையோ வண்டத் திருந்தவர்க ளெத்தனைபேர் அத்தனைபே ருண்டாலும் அணுவுங் குறையாண்டி. (பொ-ரை) எல்லா அண்டங்களிலுமுள்ள யாவரும் அவனது இன்பத்தை நுகர்ந்தாலும் சிறிதுங் குறைபாடின்றி விளங்குபவன். 56 வாக்கு மனமும் வடிவுமிலா வான்பொருள்காண் போக்கு வரவுமிலான் பொருவரிய பூரணன்காண். (பொ-ரை) வாக்கு மனம் உருவம் இவையில்லாதவன். நித்திய வதுவாக விருப்பவன் போக்கு வரவு இல்லாதவன். ஒப்பு சொல்லுவதற்கு அருமையான பரிபூரணன். 57 காட்சிக் கெளியான்காண் கண்டாலுங் காணான்காண் மாட்சிமனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ளொளிகாண். (பொ-ரை) திருவருள் பெற்றவர் தங்கண்ணுக்குச் சுலபமாகத் தோன்றுபவன். அங்ஙனம் கண்ணுக்குப் புலப் பட்டாலும் இத்தன்மையன் எனச் சொல்ல இடம்பெறாதவன். ஞானக்குறியில் உள்ளத்தை நாட்டினவர்க்கு மாணிக்கத்தி னுள்ளே ஒளிரும் பிரகாசத்தைப் போன்றவனாயிருப்பன். 58 வாழ்த்தி யவனை வழிப்பட்டால் மன்னுயிர்கள் தோற்ற வரியான்காண் சொல்லிறந்த சோதியன்காண். (பொ-ரை) நிலைபெற்ற ஆத்மகோடிகள் அவனைத் தோத்திரஞ் செய்து வணங்கினாலும் அவன் கண்ணுக்கு எதிராகத் தோன்றுபவனல்லன். உரைகடந்த பேரொளியன் (ஆகலான்.) 59 ஐய மறுத்தவனை யாராய்வா ருண்டானால் வையகத்தே வந்து மலர்பாதம் வைத்திடுவான். (பொ-ரை) சந்தேக விபரீதங்களை யொழித்துப் பொரு ளுண்மை நிச்சயித்து, அவனை ஆராய்ச்சி செய்பவர் இருப்பாராயின் அப்பரமன் அவர்பொருட்டுக் குருமூர்த்தியாக உலகத்திலே வந்து திருவடித்தாமரைகளால் தீட்சை செய்வான். 60 அணுவுக்கு மேருவுக்கு மகம்புறமாய் நின்றான்காண் கணுமுற்று ஞானக் கரும்பின் றெளிவான்காண். (பொ-ரை) மிக நுண்ணிய பொருளிலும் மிகப் பருப்பொரு ளிலும் உள்ளும் புறமுமாய் வீற்றிருப்பவன். ஞான மென்னுங் கணுமுற்றிய கரும்பில் ஒழுகும் தேனின் சுவை போன்றவன். 61 எந்நாளு மிந்நாளு மிப்படியா யப்படியாய்ச் சொன்னாலுங் கேளான்காண் சோத்திரத்திற் கொள்ளான்காண். (பொ-ரை) எக்காலத்திலும் இக்காலத்திலும் இப்படி அப்படி என்று சொன்னாலுங் காது கொடுத்துக் கேட்க மாட்டான். 62 ஆத்தாளுக் காத்தாளா மப்பனுக்கு மப்பனுமாம் கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல்காண். (பொ-ரை) தாய்க்குத்தாயாகவும்தந்தைக்குத்தந்தையாகவும்மற்றஉறவினர்கட்குஉறவினராகவும்நின்றுஅருள்செய்யும்திருவருட்கடல்(எமதுகடவுள்.) 63 இப்போ புதிதோடி யெத்தனைநா ளுள்ளதடி அப்போதைக்கப்பேhதருளறிவுªதந்தாண்டி. (பொ-ரை) இன்று தோன்றிய புதிய பொருளோ? எத்தனையோ காலமாக இருப்பதன்றோ? (அநாதியாக இருப்பது) ஜீவர்கள் பரிபக்குவம் அடையும் அவ்வக்காலங்களில் திரு வருளையும் ஞானத்தையுங் கொடுப்பது. 64 பற்றற்றார் பற்றாகப் பற்றி யிருந்தாண்டி குற்ற மறுத்தாண்டி கூடி யிருந்தாண்டி. (பொ-ரை) அகப்பற்று புறப்பற்றுக்களை விட்டவர்களைப் பற்றாகப் பற்றிக்கொண்டான்; எனது பாசத்தை யொழித்தான்; என்னோடு அத்துவிதமாகக் கலந்திருந்தான். 65 வெட்ட வெளியிலெனை மேவி யிருந்தாண்டி பட்டப் பகலிலடி பார்த்திருந்தா ரெல்லோரும். (பொ-ரை) பட்டம் பகலிலே சிதாகாசத்திலே என்னில் பொருந்தி யிருந்தான். இதை எல்லாரும் பார்த்திருந்தார். 66 வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல் தாழாமற் றாழ்ந்தேண்டி சற்றுங் குறையாமல். (பொ-ரை) என்றும் அழியாமல் வாழும்படியான திருவருள் வாழ்வு எனக்குக் கைகூடிற்று, அதில் யான் நிலைத்திராமலும் அதினின்றுங் கீழ்ப்படாமலும் சிறிதுங் குறையாமல் ஆனந்த நிலையில் தோய்ந்துவிட்டேன். 67 பொய்யான வாழ்வெனக்குப் போதுமெனக் காணேண்டி மெய்யான வாழ்வெனக்கு வெறும்பாழாய் விட்டதடி. (பொ-ரை) நிலையுதலில்லாத உலக வாழ்வு எனக்குச் சாலுமென உள்ள நிறைவு கொண்டேனில்லை. உண்மையான வாழ்வு எனக்கு ஒன்றுமில்லா வெளியாக முடிந்தது. 68 கன்னி யழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி என்னியல்பு நானறியே னீதென்ன மாயமடி. (பொ-ரை) எனது கன்னிப் பருவத்தைக் கெடுத்தவனைக் கண்ணாரக் கண்டேன். என்னுடைய தன்மையை யான் அறியாம லிருந்தேன். இஃதென்ன மாயம்? (வி-ரை) கடவுளைப்போல ஆன்மாவும் சர்வவியாபகம் முதலிய குணங்களை உடையது என்பது சாத்திரக்கொள்கை. அத்தகைய ஆன்மாவைத் தேகமாகவும் கண்டப்பொருளாகவும் பெத்ததசையில் கொண்டிருப்பது அறியாமை என்றபடி. 69 சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவா யில்லையடி எல்லாருங் கண்டிருந்து மிப்போ தறியார்கள். (பொ-ரை) (இறைவன் என்னோடு கலந்திருப்பதையும் அக் கலப்பால் விளையும் இன்ப நலனையும்) வார்த்தையால் பிறர்க் கெடுத்து விளக்கவேண்டுவதற்கு வாயில்லை. அதனை எல்லாரும் நூலறிவால் அறிந்திருந்தும் இப்போது அறிய மாட்டார்கள். (வி-ரை) உண்முகமாக அநுபவிக்கும் இன்பநிலையை விரித்துரைக்கப் புகுங்கால் மனச்சேட்டை உண்டாகும். அச் சேட்டையால் தோன்றிய இன்பங் கெடும். இன்பநலத்தை அநுபவித்தறிய வேண்டுவதேயன்றி வாயினால் எடுத்து விளம்புந் தன்மைய தன்றென்பது வெளிப்படை. கடவுள் கலப்பையும் அதனால் தோன்றும் இன்பத்தையும் எல்லாரும் பகிர்முகமாக நூலறிவால் உணர்கின்றார்; ஆனால் பெத்த தசையில் மல மறைப்பால் அனுபவத்தின் அறியமாட்டார் என்றபடி. 70 கண்மாய மிட்டாண்டி கருத்து மிழந்தேண்டி உண்மாய மிட்டவனை யுருவழியக் கண்டேண்டி. (பொ-ரை) கண்சாடையால் வஞ்சனை செய்தான். அதனால் யான் மன உறுதியைக் கெடுத்துக்கொண்டேன். இவ்வாறு அந்தர்முகமாக வஞ்சனை செய்தவனை வடிவமில்லா திருக்கக் கண்டேன். 71 என்னசொல்லப் போறேனோ விந்த வதிசயத்தைக் கன்னி யிளங்கமுகு காய்த்ததடி கண்ணார. (பொ-ரை) அவனை நோக்கிக்கொண்டிருந்தபோது என் கண் கவர ஓர் அழகிய இளைய பாக்குமரமானது குலை சாய்த்தது. இந்த அற்புதத்தை என்னென்று சொல்லுவேன்? 72 ஆர்ந்தவிட மத்தனையு மருளா யிருக்குமடி சார்ந்த விடமெல்லாஞ் சவ்வாது மணக்குமடி. (பொ-ரை) இறைவனோடு கலந்த இடங்களெல்லாம் திருவருள் மயமாக இருக்கின்றன. சென்ற இடமுழுவதும் சவ்வாது வாசனை வீசுகிறது. 73 இந்த மணமெங்கு மியற்கைமண மென்றறிந்து அந்தச் சுகாதீதத் தருட்கடலில் மூழ்கினண்டி. (பொ-ரை) இந்த வாசனை எங்கும் வீசும் இயற்கை வாசனை யென்று அறிந்து அந்த ஆனந்த அதீதமாகிய திருவருட் கடலில் திளைத்தேன். 74 இரும்பினுறை நீர்போல வெனைவிழுங்கிக் கொண்டாண்டி அரும்பிலுறை வாசனைபோ லன்றே யிருந்தாண்டி. (பொ-ரை) காய்ச்சிய இரும்பு நீரை விழுங்குவது போல் என்னை விழுங்கிவிட்டான். பூவில் உள்ள வாசனை போல் என்னிற் பிரியாது இருந்தான். 75 அக்கினிகற் பூரத்தை யறவிழுங்கிக் கொண்டாப்போல் மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி. (பொ-ரை) நெருப்பு கற்பூரத்தை எரித்து ஒன்றுமில்லாமல் செய்வதுபோல என்னையும் ஒருவருணரா வண்ணம் உட்புகுந்து பொருந்தி மறையச்செய்தான். 76 கடல்நீரு மாறும்போற் கலந்துகரை காணேண்டி உடலு முயிரும்போ லுட்கலந்து நின்றாண்டி. (பொ-ரை) கடல்நீரில் ஆற்றுநீர் கலப்பதுபோல் யான் கடவுளிற் கலந்து கரை காணாதிருக்கின்றேன். இறைவன் என்னிடத்தில் உடலில் உயிர் கலந்து இருப்பதுபோலக் கலந்து நிற்கின்றான். (வி-ரை) சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரம் பார்க்க. 77 பொன்னுமுரை மாற்றும்போற் பொருவரிய பூரணன்காண் மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள்ளொளிபோல். (பொ-ரை) பொன்னில் அதன்மாற்றுப் பிரிவின்றி யிருப்பது போலச் சீவர்களிடத்தில் நீக்கமின்றி நிறைந்து நிற்பன். ஒப்பற்ற பரிபூரணன். அவன் மாணிக்கத்தில் ஒளிபோல உயிர்களிடத் திருத்தலை யறிவது சிவாநுபூதியாம். 78 கங்குகரை யில்லாண்டி கரைகாணாக் கப்பலடி எங்குமள வில்லாண்டி யேகமாய் நின்றாண்டி. (பொ-ரை) எல்லை, அளவு முதலியன இல்லாதவன்; துறை காணாத கப்பலனையன்; எங்கும் நிற்கின்றவன்; ஏகன். 79 தீவகம் போலென்னைச் சேர்ந்தபர சின்மயன்காண் பாவமொன் றில்லாண்டி பார்த்திடமெல் லாம்பரங்காண். (பொ-ரை)மானைக் காட்டி மானைப் பிடிப்பதுபோல் தன்னை என் வடிவாகக் காட்டி என்னைப் பற்றக்கூடிய மேலான ஞானரூபன்; பாவமில்லாததவன்; கண்ட விடமெல்லாந் தோன்றும் மேலான பொருளா யிருப்பவன். 80 உள்ளார்க்கு முள்ளாண்டி யூருமில்லான் பேருமில்லான் கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி. (பொ-ரை) அவனையென்றும் உள்ளத்தில் வைத்துப் போற்றுபவர்கட்கு அவர்கள் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டிருப்பவன். அவனுக்கு ஊருமில்லை; பேருமில்லை; கொடிய ஐம்புலன்களை அழிக்குங் காரணமாகக் குருவடிவங் கொண்டு வந்தான். 81 அப்பிறப்புக் கெல்லாம் அருளா யமர்ந்தாண்டி இப்பிறப்பில் வந்தா னிவனாகு மெய்ப்பொருள்காண். (பொ-ரை) முன்னைப் பிறவிகடோறுந் திருவருளாக எனக்குத் துணைசெய்தான். இப்பிறப்பில் குருவாக வந்து ஆண்டு கொண்டான். இவனே உண்மைப்பொருள். (வி-ரை) பிறவிகடோறும் சிவசத்தியாகிய திருவருட் சத்தி திரோதான சத்தியாக நின்று ஆத்மாக்களைப் பந்த நிவர்த்தி செய்து வருகின்ற தாகலானும், அவ்வருளுக்கு வேறாக இறைவன் பிரிந்து நிற்றலின்மையானும், அவ்வருளே அவன் வடிவம் ஆகலானும், அருளா யமர்ந்தாண்டி என்றார். 82 நீரொளி போலெங்கு நிறைந்த நிராமயன்காண் பாரொளி போலெங்கும் பரந்த பராபரன்காண். (பொ-ரை) நீரொளிபோல் எங்கும் நிறைந்தவன். பூமி யொளிபோல எங்கும் பூரணமாக விளங்குபவன். 83 நூலா லுணர்வரிய நுண்மையினு நுண்மையன்காண் பாலாறு சர்க்கரைபோற் பரந்தபரி பூரணன்காண். (பொ-ரை) கலைஞானத்தால் அறிகின்றதற்கு அருமையான மிக நுண்ணிய பொருளினும் நுண்ணியதாக இருப்பவன். பாலிற் கலந்த சர்க்கரைபோல எங்கும் நிறைந்த பரிபூரணன். 84 உளக்கண்ணுக் கல்லா தூன்கண்ணா லோருமதோ விளக்குச் சுடரொளிபோல் மேவி யிருந்தாண்டி. (பொ-ரை) ஞானக் கண்ணுக் கல்லாமல் ஊனக் கண்ணால் உணரப்படாதவன். தீப ஒளிபோல ஞானக்கண்ணுடையா ரிடத்தில் பொருந்தியிருப்பன். 85 கல்லு ளிருந்த கனலொளிபோற் காரணமாய்ப் புல்லி யிருந்தும் பொருவரிய பூரணன்காண். (பொ-ரை) எல்லாப் பொருள்களுக்குங் காரணமாகப் பாறையிலிருந்த நெருப்பொளிபோல் பொருந்தியிருந்தாலும் அவன் ஒப்பற்ற பரிபூரணப்பொருள். 86 பொற்பூவும் வாசனைபோற் போதம் பிறந்தார்க்குக் கற்பூவும் வாசனைபோற் காணாக் கயவருக்கு. (பொ-ரை) ஞானோதயம் உண்டானவர்கட்கு அழகிய பூவிலுள்ள வாசனை போலவும், அஃதில்லார்க்குக் கற்பூவிலுள்ள வாசனைபோலவும் எங்கடவுள் விளங்குவன். (வி-ரை) கற்பூவிற்கு வாசனை யின்மை வெளிப்படை. இல்பொருளுவமை. 87 மைக்குழம்பு முத்தும்போல மருவிமற வாதவர்க்குக் கைக்குட் கனியாகுங் கருவறுத்த காரணர்க்கு. (பொ-ரை) தன்னை மறவாதவர்களுக்கு மைக்குழம்பு, முத்து இவைகள் போலவும் பிறவியை யொழித்த பெரியோர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோலவும் இருப்பன் (இறைவன்). 88 பளிங்கிற் பவளமடி பற்றற்ற பாவலர்க்குக் கிளிஞ்சியை வெள்ளியென்பார் கிட்டாதார் கிட்டுவரோ. (பொ-ரை) அகப்பற்று புறப்பற்றுக்களை யொழித்தவர் கட்குக் கண்ணாடியிற் பவளத்தைப் போன்றிருப்பன். கிளிஞ் சலை வெள்ளியென்று மருளுகின்றவர் அவனை அடையாதவர். அத்தகையினர் அவனை அடைவரோ? 89 ஏட்டுக் கடங்காண்டி யெழுத்திற் பிறவாண்டி நாட்டி னரிகளெல்லா நற்புரவி செய்தாண்டி. (பொ-ரை) நூலிற் கட்டுப்படாதவன்; எழுத்தில் தோன்றாவன் (எழுத்தால் அறியப்படாதவன்); நாட்டிலேயிருந்த நரிகளெல் லாவற்றையும் சிறந்த குதிரையாகச் செய்தவன். (வி-ரை) சொற்பொருள் கடந்தவனாயினும் அன்பர் பொருட்டு வடிவந் தாங்கிப் பல அருளாடல்கள் புரிவான் என்றவாறு. 90 பஞ்சப் பிரளயத்து மிஞ்சி யிருப்பாண்டி நஞ்சு பொதிமிடற்றா னயனத் தழல்லிழியான். (பொ-ரை) ஐந்துவகைப் பிரளத்திலும் அழியாமல் நிற்பவன். அவன் விடம் பொருந்திய கண்டத்தை யுடையவன்; நெற்றியில் அக்கினிக் கண்ணை யுடையவன். 91 அகங்காக்கும் புறங்காக்கும் அளவிலா வண்டமுதல் செகங்காக்குங் காணாத் திசைபத்துங் காக்குமடி. (பொ-ரை) அவன் உட்பொருளையுங் காப்பன்; புறப் பொருளையுங் காப்பன்; கட்புலனுக் கெட்டாத எண்ணிறந்த அண்டங்ளைக் காப்பன்; பத்துத் திசைகளையும் காப்பன். 92 பேசாப் பிரமமடி பேச்சிறந்த பேரொளிகாண் ஆசா பாசங்கள் அணுகாத பேரொளிகாண். (பொ-ரை) (அவன்) பேசவொண்ணாப் பிரமம்; வார்த்தை கடந்த பேரொளி; ஆசையென்னும் பிசாசுகள் நெருங்கப்பெறாத பரஞ்சோதி. 93 தேச மிறந்தவன்காண் திசையிறந்த தென்கடல்காண் ஊசி முனையூன்ற வில்லா வுறுபொருள்காண். (பொ-ரை) (அவன்) உலகங் கடந்தவன்; திக்குக் கடந்த தென்சமுத்திரம்; ஊசி முனையை யூன்றவும் இடமில்லாமல் எங்கும் வியாபகமாக விருக்கின்றான். 94 சிப்பியில் முத்தொளிகாண் சின்மய நோக்கில்லார்க்கு அப்பி லொளிபோ லமர்ந்த வரும்பொருள்காண். (பொ-ரை) ஞான நாட்டம் உடையோருக்குச் சிப்பியில் முத்தொளி போன்றிருப்பன்; அஃதில்லார்க்கு நீரிலொளி போன்றிருப்பன். அத்தகைய அரும்பொருள். 95 ஆலா விருட்சமடி அளவிலாச் சாகையடி மேலாம் பதங்கள்விசும் பூடுருவு மெய்பொருள்காண். (பொ-ரை) ஆலமரத்தைப் போன்றவன். அதன் கிளைகளைப் போல எண்ணிறந்த மூர்த்தபேதங்களை யுடையவன். உயர்ந்த பதங்களிலும், ஆகாசத்திலும் ஊடுருவிப் பாய்ந்துள்ள உண்மைப் பொருளாக இருப்பவன். 96 வங்கிஷமெல் லாங்கடந்து மருவுமா மலர்ப்பதங்காண் அங்கிஷ மாயெங்கும் ஆய்ந்த வரும்பொருள்காண். (பொ-ரை) சாதி குலங்கள் எல்லாவற்றையுங் கடந்து சித்திக்கும் அப் பரம்பொருளின் திருவடித்தாமரைகள். அறிவுடையோர் கூறுகூறாக அளந்து ஆராய்ச்சி செய்த அருமை யான பரம்பொருள். 97 நாமநட்ட மானதடி நவிலவிட மில்லையடி காமனைக்கண் ணாலெரிக்கக் கனல்விழித்த காரணன்காண். (பொ-ரை) மன்மதனைக் கண்ணால் தகிக்க அக்கினிக் கண்ணைத் திறந்த முதல்வன். அவனது நடனம் புதியதாக முடிந்தது. அதைச் சொல்லவும் இடமில்லை. 98 கொட்டாத செம்பொனடி குளியாத் தரளமடி எட்டாத கொம்பிலடி யீப்புகாத் தேனமுதம். (பொ-ரை) கம்மியனால் தட்டாத செம்பொன்; முழுகி யெடாத முத்து; எட்டாத கொம்பிலே ஈநுழையாத தேனமிர்தம். 99 காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாத் தின்னதென்றே ஆணி யுடன்கூட்டி யடங்கவிட்டுக் கொண்டாண்டி. (பொ-ரை) உயர் பசும் பொன்துண்டைக் கல்லிலுரை யாமலே அதன் தன்மையை யுணருமாபோல, எதையுஞ் சோதனைக்குட்படுத்தாது எல்லாவற்றையும் இயல்பாக அறிந்து கொண்டான். 100 அளவிறந்த வண்டத்தா ரத்தனைபே ருண்டாலும் பிளவளவுந் தான்சற்றும் பேசாப் பிரமமடி. (பொ-ரை) எண்ணில்லாத அண்டங்களில் உள்ளார் எல்லாரும் ஒருங்கே பங்கிட்டு அனுபவித்தாலும் சிறிதும் பேசாத பிரமம். 101 கன்னெஞ்சி னுள்ளே கழுநீலம் பூத்தாப்போல் என்னெஞ்சி னுள்ளே யிணையடிகள் வைத்தாண்டி. (பொ-ரை) கல்போன்ற என் நெஞ்சில் கழுநீலமலர் மலர்ந்தாற்போல் என் நெஞ்சிலே இரண்டு திருவடிகளையும் பதியவைத்தான். 102 வேதப் புரவியடி விரைந்தோடி யும்மறியார் காதற்ற ஞானமடி காண்பார்க் கருத்துடையோர். (பொ-ரை) அவன் ஏறுவது வேதமாகிய குதிரை; அதனைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடியும் அவனை அறிய மாட்டார்கள்; அவனை யறியும் ஞானம் காதினால் கேளாத தாகும் (மௌன நிலை); அவன் தன்னை ஞானக்கண்ணால் தரிசிப்போருடைய மனதைவிட்டகலாதவன். 103 பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன் நேசத்தைக் காட்டியடி நில்லென்று சொன்னாண்டி. (பொ-ரை) பாசவினை அழியச் சட்சுதீட்சை செய்த திருநோக்கத்துடன் அன்பையுங் காட்டி நிட்டையிலிரு என்று அருளிச்செய்தான். 104 ஓசை யொடுங்குமிட மோங்காரத் துள்ளொளிகாண் பேசா திருக்கும் பிரமமிது வென்றாண்டி. (பொ-ரை) சப்தம் அடங்கும் தானத்தைத் தனக்கிடமாகக் கொண்டவன்; பிரணவத்துள் ஒளியா யிருப்பவன்; பேசாத மௌனநிலையே பிரமநிலை என்று அருளிச் செய்தான். 105 சின்மய நன்னோக்காற் சிற்சொரூபங் காட்டியெனைத் தன்மயமா யாக்கியே தானவனாய் நின்றாண்டி. (பொ-ரை) ஞானப் பார்வையால் (என் மலத்தைக் கெடுத்து) தனது ஞானவடிவத்தை எனக்குக் காண்பித்து, என்னைத் தன் மயமாக்கித் தான் அவனாக நின்றான். (வி-ரை) தத்வமசி அகம் பிரமாமி என்னும் மகா வாக்கியப்பொருளை விளம்பியவாறாம். 106 தானென்னைப் பார்த்தாண்டி தன்னைத்தா னல்லாமல் நானென்ன சொல்லுவண்டி நவிலவிட மில்லையடி. (பொ-ரை) அவன் என்னைப் பார்த்தான். அங்ஙனம் பார்த்தது தன்னைத்தான் அல்லாமல் (வேறொருவரையல்ல) இதை நான் என்னவென்று சொல்லுவேன்? சொல்வதற்கும் இடமில்லை. 107 இன்றிருந்து நாளைக் கிறக்கிறபே ரெல்லோரும் என்றுபரி பூரணத்தி லினிதிருக்கச் சொன்னாண்டி. (பொ-ரை) இன்று உயிருடனிருந்து நாளை மரித்துப் போகும் உயிர்களெல்லாரையும் எப்பொழுதும் பரிபூரணத்திலே நிலைத்திருக்கும்படி (தட்சணாமூர்த்தமாக எழுந்தருளிச் சின் முத்திரை வாயிலாக) அருளிச்செய்தான். 108 பார்க்கி லெளிதலவோ பற்றற்ற பற்றலவோ ஆர்க்கு மிடங்காட்ட வவனிதனில் வந்தாண்டி. (பொ-ரை) எல்லா உயிர்கட்கும் உறுதி யிடத்தைக் காட்ட உலகத்தில் குருமூர்த்தியாக எழுந்தருளி வந்தான். ஞானவிழியாற் பார்த்தால் எளிதாகத் தோன்றுபவன். பாசப் பற்றை யழித்த திருவருட் பற்றாயிருப்பவன். 109 இத்தனை காலமடி யிறந்து பிறந்ததெல்லாம் இத்தனையு மில்லையடி யிரும்பிலுறை நீரானேன். (பொ-ரை) இத்தனை நாளாக இறந்து பிறந்த தொழில்கள் எல்லாம் இனியில்லை யெனும்படியாயின. நான் இரும்புண்ட நீரானேன். 110 எக்காலம் பட்டதடி யிறந்தது பிறந்ததெல்லாம் அக்கால மெல்லாம் அழுந்தினே னானரகில். (பொ-ரை) பிறப்பு இறப்புக்கள் எத்தனை காலம் எனக்கு உண்டாயினவோ அத்தனை காலமெல்லாம் நான் நரகத்தில் அழுந்தினவனானேன். 111 காலங் கழிந்ததடி கர்மமெல்லாம் போச்சுதடி நாலு வகைக்கருவு நாமநட்ட மாச்சுதடி. (பொ-ரை) காலமென்பது என்னை விட்டகன்றது, கர்மங் களெல்லாம் ஒழிந்தன; நால்வகைப் பிறப்பும் அறவே ஒழிந்தது. 112 முப்பாழுக் கப்பால் முதற்பாழ் முழுமுதலாய் இப்போது வந்தான்காண் எனைவிழுங்கிக் கொண்டான்காண். (பொ-ரை) மூன்று பாழுக்கு மேலாக முற்பாழிலுள்ள கடவுளாய் இப்பொழுது என் எதிரில் எழுந்தருளினான். அவன் என்னை விழுங்கிக்கொண்டான். 113 பாலின்க ணெய்யிருந்தாற் போலப் பரஞ்சோதி ஆலிங்க னஞ்செய் தறவிழுங்கிக் கொண்டாண்டி. (பொ-ரை) பாலினிடத்திலே நெய்யிருந்தாற்போலப் பரஞ் சோதியாகிய கடவுள் என்னைத் தழுவி முழுவதும் விழுங்கிக் கொண்டான். 114 தெத்தபட மானேண்டி தீயிரும்பி னீரானேன் ஒத்தவிட நித்திரையென் றோது முணர்வறிந்தேன். (பொ-ரை) (நான் கடவுளோடு ஐக்கியப்பட்டேன்.) நெருப்பிற் பட்ட துணியானேன்; இரும்புண்ட ஜலமானேன். தகுந்த இடத்தில் யோக நித்திரை செய்யவேண்டுமென்று சொல்லும் அறிவை யுணர்ந்தேன். 115 ஒப்பு முவமையுமற் றோதவரி தாயபொருள் இப்பூவி னிற்குருவே யென்னவந்தோன் றாள்வாழி. (பொ-ரை) தாஷ்டாந்த திருஷ்டாந்தங்களைக் கடந்து சொல்லமுடியாத பரம்பொருள், இந்த உலகத்திலே குருமூர்த்தி யென்று சொல்லும்படியாக எழுந்தருளி வந்தவனுடைய திருவடிகள் வாழ்க. 116 ஒப்பாரி சொல்லிடினு முவமை பிழைத்திடினும் முப்பாழுங் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார். (பொ-ரை) மூவகைப் பாழையும் ஓதியுணர்ந்த முதல்வர் ஒப்பாரி சொல்லி யழுதாலும் திருஷ்டாந்தம் பழுதுபட்டாலும் பொறுத்தருள்வார். 117 இறந்தகாலத்திரங்கல் வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன்சொல்லாஞ் சாத்திரங்கள் சொல்லிச் சதுரிழந்து கெட்டேனே. (பொ-ரை) சொல்லுறுதியில்லாத மனிதருக்கு அற்ப வார்த்தைகளாகிய சாத்திரங்களை எடுத்துச் சொல்லி அதனால் எனது தன்மையைப் போக்கிக் கெட்டுவிட்டேன். 1 மெத்தமெத்த செல்வாக்கில் வேறு மருளடுத்துத் தத்தித் தலைகீழாய்த் தானடந்து கெட்டேனே. (பொ-ரை) அதிக செல்வாக்கினால் பலவகை மயக்கங்கள் தொடர்ந்து செருக்கித் தாறுமாறாக நடந்து கெட்டேன். 2 வழக்கந் தலங்களினு மண்பெண்பொன் னாசையினும் பழக்கந் தவிராமற் பதியிழந்து கெட்டேனே. (பொ-ரை) நான் வசித்துப் பழகிய இடங்களிலும் மண் பெண் பொன் என்னும் மூவாசையிலும் மனதைப் பதித்துச் செய்துகொண்ட பழக்கத்தை ஒழித்துக் கொள்ளாமல் அடைய வேண்டிய ஓரிடத்தைப் போக்கிக் கெட்டேன். 3 ஆணி பொருந்து மரும்பூமி யத்தனையுங் காணி நமதென்று கனம்பேசிக் கெட்டேனே. (பொ-ரை) உறுதியான வளங்களையுடைய அருமையான பூமி, காணி முதலிய எல்லாவற்றையும் நம்முடையன வென்று பெருமை பேசிக் கெட்டேன். 4 ஆசார மில்லாத வரச ருடன்கூடிப் பாசாங்கு பேசிப் பதியிழந்து கெட்டேனே. (பொ-ரை) ஒழுக்கமில்லாத இராஜாக்களுடன் சேர்ந்து போலியுரைகளைப் பேசி அடையவேண்டிய பதியை அடையாமல் கெட்டேன். அசடருடன் என்றும் பாடம். 5 குருமார்க்க மில்லாக் குருட ருடன்கூடிக் கருமார்க்கத் துள்ளே கருத்தமிழ்ந்து கெட்டேனே. (பொ-ரை) குருநெறி யில்லாத குருடர்களுடன் சேர்ந்து பிறவி வழியில் விழுந்து மனங்கெட்டு அழிந்தேன். 6 ஆல மருந்து மரன்பெருமை யெண்ணாமல் பாலர்பெண்டீர் மெய்யென்று பதியிழந்து கெட்டேனே. (பொ-ரை) விஷத்தைப் பானஞ்செய்த சிவபெருமான் பெருமையைத் தியானஞ் செய்யாமல் மக்கள் மனைவியரை உண்மையானவர்களென்று எண்ணி அடையவேண்டிய ஒரு நிலையை யிழந்து கெட்டேன். 7 பிணவாச முற்ற பெருங்காய மெய்யென்று பணவாசை யாலே பதியிழந்து கெட்டேனே. (பொ-ரை) பிணநாற்றம் வீசும் பெரிய தேகத்தை உண்மை யென்று பொருளாசையால் வீடுபேற்றை யிழந்து கெட்டேன். 8 கண்ட புலவர் கனக்கவே தான்புகழ உண்ட உடம்பெல்லா முப்பரித்துக் கெட்டேனே. (பொ-ரை) என்னைப் பார்த்த வித்துவான்கள் பெருமித மாகப் புகழ்ந்துரைக்க அதனால் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்துள்ள உடம்பு முழுவதும் பூரித்துக்கெட்டேன். 9 எண்ணிறந்த சென்ம மெடுத்துச் சிவபூசை பண்ணிப் பிழையாமற் பதியிழந்து கெட்டேனே. (பொ-ரை) அளவில்லாத பிறவிகளை யெடுத்துச் சிவபூசை செய்து உய்யாமல் (மோட்ச) வீட்டையிழந்து கெட்டேன். 10 சிற்றெறும்பு சற்றுந் தீண்டப் பொறாவுடம்பை உற்றுருக்க வுஞ்சுடவு மொப்பித்து மாண்டேனே. (பொ-ரை) சிற்றெறும்பு சிறிது தீண்டினாலும் தாங்க முடியாத தேகத்தைச் (சுற்றத்தவர்கள் சுடுகாட்டில்) வருத்தவும் சுடவும் ஒப்புவித்து அழிந்தேன். 11 தன்னுடம்பு தானே தனக்குப் பகையாமென் றெண்ணுமுணர் வில்லாம லின்பமென்று மாண்டேனே. (பொ-ரை) தன் தேகமே தனக்குப் பகையாம் என்று கருதும் அறிவில்லாமல் அதைச் சுகம் என்று எண்ணி அழிந்தேன். 12 தோலெலும்பு மாங்கிஷமுந் தொல்லன்னத் தால்வளரு மேலேலும்புஞ் சுற்றமென்று வீறாப்பாய் மாண்டேனே. (பொ-ரை) பழையசோற்றால் வளருந் தோல், எலும்பு, மாமிசம், மேலேலும்பு ஆகிய இவைகளை உறவெனக்கொண்டு இறுமாந்து கெட்டேன். 13 போக்கு வரத்தும் பொருள்வரத்துங் காணாமல் வாக்கழிவு சொல்லி மனமறுகிக் கெட்டேனே. (பொ-ரை) இறப்பு பிறப்பு திருவருள் நிகழ்ச்சி இவைகளை யாய்ந்து உண்மை தெளியாமல் பயனில்லாச் சொற்களைப் பேசி மனமயங்கிக் கெட்டேன். 14 நெஞ்சொடு புலம்பல் மண்காட்டிப் பொன்காட்டி மாய விருள்காட்டிச் செங்காட்டி லாடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர்தங் கண்வலையிற் சிக்கிமிக அங்காடி நாய்போ லலைந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! திருச்செங்காட்டிலே நடஞ்செய்கின்ற சிவகுருநாதனை வழிபடாமல் மண்ணைக்காட்டி, பொன்னைக் காட்டி, மருட்சியில் வீழ்த்தும் இருளைக்காட்டி, கண்சாடை காட்டி மயக்கும் விலைமாதர்களுடைய நயனவலையிற் சிக்குண்டு கடைத்தெரு நாய்போல மிகவும் அலைந்து கெட்டனையே. (வி-ரை) மண் பொன் பெண் என்னும் மூவாசையுங் குறிக்கப் பெற்றிருக்கின்றன. இம்மூன்றினுங் கொடியது பெண்ணாசை யாகலான் மாய விருள்காட்டிக் கண்காட்டும் வேசியர் என்றார். மண்ணாசைதன்னில் பொன்னாசைதன்னில் பெண் ணாசை நீத்தல் அரிதே பெரியோர் தமக்கும் என்பது திருவிளை யாடற் புராணம். அக்கினி சாட்சியாகத் திருமணஞ் செய்யுங் குலமகளிரை வேறு பிரித்துக்காட்டுவான் வேசியர் என்றார். ஞானிகள் பெண்களை யிழித்துக் கூறும் இடங்கடோறும் விலை மகளிர்களையும், விலைமகளிர்களுடைய தீயொழுக்கம் வாய்ந்த குலமகளிர்களையுங் கொள்க. மூவாசை வயப்பட்டு நிற்போர் இறைவன் வயப்பட்டு நில்லாராகலான் தேசிகனைப் போற்றாமல் என்றார். மூவாசை கொண்டு முயங்கு நெஞ்சே போரூரில் - தேவாசை கொள்ளத் தெரியாதோ என்றார் சிதம்பர சுவாமிகளும். வேசி வயப்பட்டோர் நாயுனுங் கடைய ரென்பார் அங்காடி நாய்போல் என்றார். அங்காடி நாய் - இழிவுக்குறிப்பு. 1 புட்பா சனவணையிற் பொற்பட்டு மெத்தையின்மேல் ஒப்பா வணிந்தபணி யோடாணி நீங்காமல் இப்பாய்க் கிடத்தி யியமனுயிர் கொள்ளுமுன்னே முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மலர்கள் பரப்பிய அழகிய பட்டு மெத்தையின்மேல், செப்பமாகத் தரித்திருந்த ஆபரணங்களோடு பெருமை நீங்காமல் இங்கே பாயிற் படுக்கச்செய்து யமன் உயிரைக் கொண்டுபோகுமுன்னே மூன்று பாழிற்குங் காரண மான முழுமுதற்பொருளைத் துதிசெய்ய முயற்சி செய்தா யில்லை. (வி-ரை) இயமன் உயிரைக் கொண்டுபோகுமுன்னே இறைவனைத் துதிக்கக வேண்டுமென்பது. வெம்மை நமன் தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் - இம்மையுன்றா ளென்றனெஞ்சத் தெழுதிலை யீங்கிகழில் - அம்மையடி யேற்கருளுதி யென்பதிங் காரறிவார் - செம்மைதரு சத்திமுற்றத் துறையுஞ் சிவக் கொழுந்தே என்றார் அப்பர் சுவாமிகளும். 2 முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும்பாழாய் அப்பாழுக் கப்பானின் றாடுமதைப் போற்றாமல் இப்பாழாம் வாழ்வைநம்பி யேற்றவர்க் கொன்றீயாமல் துப்பாழாம் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! (இப் பொய்யுலக வாழ்வை யுறுதி யாகக்கொண்டு) மூவகைப் பாழும் பாழாக முதற்பாழும் வெளியாக அவ்வெளிக்கு மேலாகத் திருநடஞ்செய்யும் பரம் பொருளைத் துதிசெய்யாமலும் இரப்பவர்க்கு ஒன்று கொடமாலும் வீணாக நேர்ந்த வினையை அடைந்தனையே. (வி-ரை) முப்பாழ் - ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வம் என்பன. முதற்பாழ் - பரவெளி. தத்துவங்கள் யாவும் பாழான விடமே இறைவன் திருநடம்புரியும் இடமென்க. தத்துவங் கடந்த தனிப்பொருளைப் போற்றுவோர் இன்பம் பெறாது தத்துவங்களைப்போலப் பாழ்படுவர் என்பதை அறிவித்த வாறாம். இறைவனைப் போற்றற்கறிகுறி இரப்பவர்க்கீத லென்பதையுங் குறிப்பாக அறிவுறுத்தியவாறு காண்க. நல்லா ரெனினுங் கொளல்தீது மேலுலகம் - இல்லெனினும் ஈதலே நன்று- குறள். 3 அன்னம் பகிர்ந்திங் கலைந்தோர்க் குதவிசெயுஞ் சென்ம மெடுத்துஞ் சிவனருளைப் போற்றாமல் பொன்னு மனையுமெழிற் பூவையரும் வாழ்வுமிவை இன்னுஞ் சதமாக வெண்ணினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! சோற்றைப் பங்கிட்டுப் பசியால் வருந்தித் திரியும் ஏழைகட்கு உபகாரஞ் செய்யும் மனிதப் பிறவியை யெடுத்துஞ் சிவபிரான் திருவருளை வழுத்தாமல் பொன், வீடு, அழகிய பெண், உலகவாழ்வு ஆகிய இவைகளை இன்னமும் நிலைபேறாகக் கருதினாய். (வி-ரை) உலகத்தில் பிறவிகள் பல. அவையிற்றுள் சிறந்தது மக்கட்பிறவி. என்னை? ஆறாவது அறிவு விளங்கப்பெறும் பிறவி யாகலின். மக்கள் தாமே ஆறறி உயிரே என்றார் தொல் காப்பியனாரும். அவ்வாறாவது அறிவின் குணம் இரக்க மென்பது அனுபவ சித்தாந்தம். அதுபற்றியே யீண்டு மக்கள் பிறவியை அலைந்தோர்க்கு உதவி செய்யும் சென்மம் என்றார். மனிதப் பிறவி தாங்கியும் பிறர்க் குதவி செய்யுங் கருணைக் குணம் பெறாதவர் விலங்கு, புள், மரம் போன்றவராவர். அத்தகைய விழுமிய பிறவியாலாயபயன் சிவபிரான் திருவருள் வழி நிற்றல் என்பார் சிவனருளைப் போற்றாமல் என்றார். அருள் - இரக்கம். அருள்வழி யொழுகாமல் மருள்வழி யுழலல் அறியாமை யென்பார் பொன்னும் மனையும் எழிற்பூவையரும் வாழ்வும் இவை - இன்னுஞ் சதமாக எண்ணினையே என்றார். மனிதப் பிறவியை யெடுத்தோர் பொன் முதலியவற்றைப் பொருளாகக் கொண்டு போற்றலாகா தென்றபடி. 4 முற்றொடர் பிற்செய்த முறைமையால் வந்தசெல்வம் இற்றைநாட் போற்றோமென் றெண்ணாது பாழ்மனமே அற்றவர்க்கு மீயாம லரன்பூசை யோராமல் கற்றவர்க்கு மீயாமற் கண்மறந்து விட்டனையே. (பொ-ரை) கெடுமனமே! முற்பிறப்பிற் செய்த புண்ணியத் தாற் கிடைத்த செல்வத்தை இப்பிறவியில் (தமது முயற்சியால்) அடைந்தோம் என்று நினையாமலும் (அதை) ஏழைகளுக்குக் கொடாமலும், சிவபூசையைச் சிந்தியாமலும், படித்தவர்களுக்கு உதவாமலும் (அகங்காரத்தால் எல்லாவற்றையும்) மறந்தாய். (வி-ரை) பொருட் செல்வமுடையார் தஞ்செல்வத்தை நோக்கிச் செருக்குறாது பூர்வ புண்ணியத்தின் பயனாக வந்தது இச்செல்வம் என்று எண்ணி மேலும் மேலுந் தருமஞ்செய்ய வேண்டுமெனக் குறிப்பித்தவாறாம். பொருளை அற்றவர்க்கும் கற்றவர்க்கும் உதவுதல் வேண்டுமென்றது கருதத்தக்கது. கண் மறந்து விடல் - செல்வச் செருக்கால் கண் மூடிக்கொள்ளல் எனினுமாம். 5 மாணிக்க முத்து வயிரப் பணிபூண்டு ஆணிப்பொன் சிங்கா தனத்தி லிருந்தாலும் காணித் துடலைநமன் கட்டியே கைப்பிடித்தால் காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! இரத்தினம் முத்து வயிரம் இவற்றா லாகிய ஆபரணங்களைத் தரித்து, சிறந்த பொன்னாற் செய்யப் பட்ட சிங்காசனத்திலிருந்தாலும், இயமன் உடலைக் கூறிட்டுக் கட்டிக் கையைப் பிடித்தால் (அதுகாலை) ஒரு காணி யளவு பொன்னும் நம்வோடு வருதலைப் பார்த்தேமில்லை. (வி-ரை) எத்துணைச் செல்வமுடையராக வாழினும் அச் செல்வம் உயிர்போங்காலத்து உடன் வரமாட்டாதென்றபடி. மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் - செத்த போதே யாருமில்லை சிந்தையில் வைம்மின்கள் - வைத்த உள்ளம் மாற்ற வேண்டாம் வம்மின் மனத்தீரே - அத்தர் கோயில் எதிர் கொள்பாடி யென்ப தடைவோமே என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் 6 கற்கட்டு மோதிரநற் கடுக்கனரை ஞாண்பூண்டு திக்கெட்டும் போற்றத் திசைக்கொருத்த ரானாலும் பற்கிட்ட வேமனுயிர் பந்தாடும் வேளையிலே கைச்சட்டங் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! வயிரக் கல்லிழைத்த மோதிரம், அழகிய கடுக்கன், அரைஞாண், ஆகிய இவைகளைத் தரித்து எட்டுத் திக்குகளினின்றுந் தோத்திரஞ்செய்ய ஒவ்வொரு திசைக்கு ஒவ்வொருவராக நின்றிருந்தாலும், பல் கிட்டிக் கொள்ள இயமன் உயிரைப் பந்தாடுவதுபோலத் தன்னிஷ்டப்படி செலுத் துகின்ற காலத்தில் ஓர் எழுது ஓலையும் உடன் தொடர்ந்துவரப் பார்க்கின்றேமில்லை. (வி-ரை) திக்கெட்டும் போற்றத் திசைக்கொருத்தரானாலும் - திசைக்கொருவர் நின்று போற்றிப்புகழும் பெருவாழ்வைப் பெற்றிருந்தாலும் என்றபடி. 7 முன்னநீ செய்ததவ முப்பாலுஞ் சேருமன்றிப் பொன்னும் பணிதிகழும் பூவையுமங் கேவருமோ தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல் கண்ணற்ற வந்தகன்போற் காட்சியற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! பூர்வஜென்மத்தில் நீ செய்த தவ மானது மும்மையிலும் வந்து பொருந்துவ தல்லாமல், பொருளும், அணிகள் பொலியும், பெண்களும் அவ்விடத்தில் வந்து சேருமோ? தன்னை நிலையாகக் கருதி உண்மைக் குரு நாதனைத் தோத்திரஞ் செய்யாமல் கண்ணழிந்த குருடனைப் போலப் பார்வை யிழந்தாய். (வி-ரை) மும்மை - இம்மை. அம்மை - உம்மை. தன்னை - தேகத்தை; பொன் முதலியவற்றை. காட்சி - ஞானக்காட்சி. 8 பையரவம் பூண்ட பரமர்திருப் பொற்றாளைத் துய்ய மலர்பறித்துத் தொழுது வணங்காமல் கையி லணிவளையுங் காலிலிடும் பாடகமும் மெய்யென் றிறுமாந்து விட்டனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! படத்தையுடைய பாம்பை ஆபரண மாக அணிந்த ஆண்டவன் அழகிய திருவடிகளைத் தூய்மை யான பூக்களைக் கொய்து, அவைகளால் அருச்சித்துப் பணிந்து போற்றாமல், கரத்திற் றரிக்குங் காப்பினையும் காலிற் றரிக்கும் பாடகத்தினையும் சதம் என்று செருக்குற்றிருந்தாய். (வி-ரை) பொன்னாபரணங்களைப் பொருளாகக் கருதியிறு மாந்து கிடப்பது அறியாமை. அவைகளைப் பொருட்படுத்தாது இறைவனை மலர்களால் அருச்சித்து அருளைப் பெற முயல வேண்டும் என்றபடி. பூக்கைக் கொண்டான் பொன்னடி போற்றிலார் என்றும், பூமாலை புனைந்தேத்தி யென்றும், இட்டுக்கொள்வன பூவுள நீருள என்றும், பூமாலை புனைந் தேத்தேன் என்றும், நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுதுதூவி யென்றும், புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு என்றும் பெரியோர்கள் அருளிச் செய்திருப்பது காண்க. 9 மாதுக் கொருபாகம் வைத்தவரன் பொற்றாளைப் போதுக் கொருபோதும் போற்றி வருந்தாமல் வாதுக்குத் தேடியிந்த மண்ணிற் புதைத்துவைத்தே ஏதுக்குப் போகநீ யெண்ணினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! உமாதேவியாருக்கு இடப்பாகத்தை உதவியருளிய சிபெருமான் திருவடிகளை ஒருநாளைக்கு ஒரு வேளையாவது தோத்திரஞ்செய்து இரங்காமல் சண்டையின் பொருட்டுச் சம்பாதித்து இப்பூமியிலே புதைத்துவைத்து எந்த நிலையை யடைய நினைந்தாய்? (வி-ரை) வாதுக்கு - சண்டையிலே எனினுமாம். பொருளைப் பங்கிடும்போது பிள்ளைகள் ஒருவரோடொருவர் சண்டை யிடுவது இயல்பாகலான் வாதுக்குத் தேடி என்றார். மண்ணிற் புதைத்துவைத்து என்பதை பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து என ஔவையாரும் கூறியுள்ளார். 10 அஞ்சருளைப் போற்றி யைந்துபுல னைத்துறக்க நெஞ்சே யுனக்கு நினைவுநான் சொல்லுகிறேன் வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வாராமல் செஞ்சரணத் தாளைச் சிந்தைசெய்வாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! பஞ்ச சத்திகளைப் பூசித்துப் பஞ்சேந்திரியங்களை யடக்க உனக்கு நான் ஒரு ஞாபகம் ஊட்டுகிறேன். மனமே! கரவை யொழித்து வேறு எண்ணம் நிகழாமல் சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமானைத் தியானஞ்செய்வாய். (வி-ரை) அருள் - சத்தி. அஞ்சருள் - பஞ்சசத்தி. ஐம்புலச் சேட்டையை யொழிக்கின்றதற்கு வழி சிவபிரான் திரு வடிகளைத் தியானஞ்செய்வது என்றவாறு. கரவு முதலிய தீக் குணங்களை வைத்துக்கொண்டு கடவுளைத் தியானிப்பதனால் பயனில்லை யென்பார் வஞ்சத்தை நீக்கி என்றார். பாவ முதலிய தீமைகளுக்கு வேறாக உள்ள புண்ணிய முதலியவற்றையுஞ் செய்யலாகா தென்பார் மறுநினைவு வாராமல் என்றார். புண்ணியம் பொன் விலங்கு போன்றது; பாவம் இரும்பு விலங்கு போன்றது. 11 அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல் உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச் சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே. (பொ-ரை) ஆச்சரியமாக இந்தத் தேகத்தில் உயிரொடுங்கு வதற்கு முன்னரே சற்குருநாதனைத் துதிசெய்து தவ வாழ்க்கையைப் பெறாமல் இயற்கையாகத் தோன்றுஞ் சிவந்த பொன் முதலிய உலகப் பெருவாழ்வை உறுதியாக நம்பிப் பாம்பின் வாயி லகப்பட்ட தவளை போன்றவனானேன். (வி-ரை) ஆவி - உயிர்; பிராணன். உயிரொடுங்குவதற்குள் சற்குரு தரிசனம் பெற்றுத் தவமேற்கொண் டொழுகவேண்டும் என்றபடி. செம்பொன் உடைமை முதலியவற்றைப் பாம்பிற்கு உவமிக்கப்பட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. பாம்பின்வாய் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை என்றார் அப்பரும். 12 உற்றாரார் பெற்றாரா ருடம்பிறப்பார் பிள்ளைகளார் மற்றா ரிருந்தாலென் மாளும்போ துதவுவரோ கற்றா விழந்தவிளங் கன்றதுபோ லேயுருகிச் சிற்றாகிச் சிற்றின்பஞ் சேர்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! பந்துக்கள் யார்? ஈன்றவர் யார்? உடன் தோன்றினவர் யார்? புத்திரர்களார்? மற்ற எவரிருந்தாலு மென்னை? (அவர்கள்) இறக்கும்போது வந்து உதவி செய்வார்களோ? பசுவை யிழந்த இளங்கன்றினைப்போல மன முருகிச் சிறுமைப்பட்டுச் சிறு இன்பத்தை யடைந்தாய். (வி-ரை) எத்தாயார் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடுஞ் சும்மாடாம் ஏவர்நல்லார் - செத்தால்வந்து உதவுவார் ஒருவரில்லை என்றும், தந்தையார் தாயார் தாரமார் புத்தி ரரார் தாந்தாமாரே - வந்தவா றெங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கேதும் மகிழவேண்டாம் என்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்திருப்பது காண்க. சிற்றின்பத்தின் பொருட்டுப் பசுவைப் பிரிந்த கன்றைப்போல மனமுருகுவது அறியாமை யென்றவாறு. பேரின்பத்தின் பொருட்டு உழைக்க வேண்டுமென்க. 13 வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப் பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக் கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே. (பொ-ரை) இல்லமிருக்கவும், அன்னையிருக்கவும், விரும்பும் மனைவியிருக்கவும், பெருமையிருக்கவும், ஆகார மிருக்கவும், புதல்வர்களிருக்கவும், மாடுகளிருக்கவும், கன்று களிருக்கவும், சேமித்து வைத்துள்ள செல்வமிருக்கவும், தேக மிருக்கவும் நீ சென்றவழி யெவ்வழியோ? (வி-ரை) உயிர்ச்சார்பும் பொருட்சார்பும் உன்னை யிடை விடாது பற்றியிருக்க நீ யெல்லாரையும் வஞ்சித்து ஒருவருக்கும் புலனாகாமல் சென்றது வியக்கத்தக்கது என்றபடி. எவையும் உயிர் போங்காலத்தில் உதவமாட்டா என்பது கருத்து 14 சந்தனமுங் குங்குமமுஞ் சாந்தும் பரிமளமும் விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை யொய்யாரக் கந்தமலர் சூடுகின்ற கன்னியருந் தாமிருக்க எந்தவகை போனாயென் றெண்ணிலையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! சந்தனம், குங்குமம், சாந்து மற்றுமுள்ள வாசனைகள் இவைகளை அலங்காரமாகப் பூசி மிகச் சல்லாப மாக வாசனையுடைய பூக்களைத் தரிக்கும் பெண்மணிகளும் உடனிருக்க நீ யெப்படிச் சென்றாய் என்று நினைக்கவில்லை. (வி-ரை) மேற்கூறிய பொருள்கள் எல்லாவற்றினும் உன்னால் பெரிதும் விரும்பப்படுவோர் மகளிர். அவர்களுக்குந் தெரியாமல் நீ சென்றது வியப்பினும் வியப்பு என்றபடி. இவ் வுலகத்தில் எவ்வகை யின்பத்தினும் பெண்ணின்பம் உயர்ந்த தாகலான் அவ்வின்பமுடையாரை வேறுவிரித்து இச் செய்யுளிற் கூறினார். நின்மாட்டுத் தணியாக் காதலுடைய பெண்களும் உடன் வரமாட்டாராகலான் நீ போகும் வழியை யுன்னி யெப் பொருண்மீதும் பற்று வையாமல் கடவுளிடத்துப் பற்றுவைக்க வேண்டுமென்பது. 15 காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல் ஆற்றுவெள் ளம்போல வளாவினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! காற்று நிரம்பிய துருத்தியாகிய கொடிய வினைவாய்ப்பட்ட ஊற்றைச் சரீரத்தை நிலையாக உள்ளது என்று செருக்கிப் பசித்தோரைக் கண்டு இரக்கங் கொண்டு அவருக்குச் சோறிடாமல் நதியின் வெள்ளத்தைப் போல அளவளாவுகின்றாய். (வி-ரை) தன் உடலைப் பொருளாக மதித்து இறுமாந்து பிறரைக் கவனியாம லிருப்பவர்கட்கு அறிவுறுத்தியவாறாம். ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் - திருவள்ளுவர். அகரமாயிரம் அந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பகருஞானி பகலூண் - பலத்துக்கு நிகரில்லை யென்பது நிச்சயந் தானே- திருமூலர். ஆற்றுநீர் பயன்படுவதுபோல வெள்ளம் பயன்படுவதில்லை. அதனால் கேடே விளைகிறது. 16 நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப் பாக்களவா மன்னம் பசித்தோர்க் களியாமல் போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது ஆர்ப்படுவ ரென்றே யறிந்திலையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! நீரில் தோன்றுங் குமிழியைப் போன்ற வாழ்க்கையை மெய்யென்று நினைத்துப் பசித்தவர்களுக்குப் பாக்களவு சோறுங் கொடாமல் கோழைகட்டுந் துன்பத்தில் காலன்பற்றி வலிக்கின்ற காலத்தில் யார் துயருறுவார் என்று தெரிந்தாயில்லை. (வி-ரை) உடலை நிலையாகக் கருதி ஏழைகளுக்கு அன்ன மிடாதவர் யமவாதனைக்குட்படுவர் என்பது திண்ணம். அவ்வாதனையைத் தாங்க எவரும் முந்தார் என்பதைத் தெரிவித்த வாறாம். உடலைப் போற்றாது அன்னதானஞ் செய்து யமனூர் புகாமல் இறைவனடி யடையுமாறு அறிவுறுத்தியவாறாம். 17 சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையான் முன்னந்த மார்பில் முளைத்த சிலந்திவிம்மி வன்னந் தளதளப்ப மயங்கிவலைக் குள்ளாகி அன்னம் பகிர்ந்துண்ண வறிந்திலையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மிகச் சிறிய நெற்றியையுடைய பெண்ணானவள் முன்னர்ச் செய்த பல தீவினையால் அவளது அழகிய மார்பின்முன்னே கிளம்பிய கட்டிபோன்ற தனங் களானவை பருத்து அழகு ஒழுக; அதனால் மயங்கி அம் மாய வலையிற் சிக்கி ஏழைகளுக்குச் சோறு பங்கிட்டுப் பின்னர்ச் சாப்பிடத் தெரிந்தாயில்லை. (வி-ரை) சீறும் வினை என்னும் பாட்டைப் பார்க்க. 18 ஓட்டைத் துருத்தியை யுடையும் புழுக்கூட்டை ஆட்டுஞ் சிவசித்த ரருளைமிகப் போற்றியே வீட்டைத் திறந்து வெளியையொளி யாலழைத்துக் காட்டும் பொருளிதென்று கருதிலையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! துவாரம் பொருந்திய தோற்பையும் உடைந்துபோகும் புழுக்கூடும்போன்ற உடலை ஆட்டுஞ் சிவபிரானுடைய திருவருளைப் பெரிதும் ஏத்தி ஆணவ அறையைத் திறந்து சிவத்தைச் சத்தியால் கூப்பிட்டு எல்லா வற்றையுங் காண்பிக்கும் பொருள் இஃதென்று நினைக்க வில்லையே. (வி-ரை) சிவபிரான் காட்ட உயிர்கள் காண்கின்றன என்பதை உணர்வோர் சீவன்முத்தர். உணராதவர் பெத்தர். 19 ஊன்பொதிந்த காய முளைந்தபுழுக் கூட்டைத் தான்சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல் கான்பரந்த வெள்ளங் கரைபுரளக் கண்டேகி மீன்பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மாமிசம் நிறைந்த தேகத்தைக் கிண்டும் புழுக்கள் வசிக்கும் கூட்டை வீணாகத் தாங்கினதுமல்லாமல் நீ சற்குருநாதனைப் போற்றாமல் கானற்சலங் கரைபுரள அதைப் பார்த்துச் சென்று மீன்கள் (அதனை உண்மைச் சலமாகக் கருதி) பாய்ந்து வருந்தினது போல வருத்தமடைந்தாய். (வி-ரை) கானற்சலம் - பேய்த்தேர். 20 உடக்கை யொருக்கி யுயிரை யடைத்துவைத்த சடக்கைச் சதமென்று சார்ந்தங் கிறுமாந்தை உடக்கைத் தகர்த்தே யுயிரையமன் கொள்கையிலே யடக்கமாய் வைத்தபொரு ளங்குவர மாட்டாதே. (பொ-ரை) காற்றாகிய சுள்ளாணியை முறுக்கி உயி ரென்னும் பொருளை அடைத்துவைத்த தேகத்தைப் பொரு ளென்று எண்ணி அதிற்றங்கிச் செருக்குற்றிருந்தாய். அச் சுள்ளாணியை யுடைத்துப் பிராணனை இயமன் பிடித்துக் கொண்டுபோகையில், யாருக்குந் தெரியாமல், அடக்கமாக வைத்திருந்தபொருள் இயமலோகத்துக்கு வாராது. 21 தித்திக்குந் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல் பற்றிப் பிடித்தியமன் பாசத்தாற் கட்டும்வண்ணம் சுற்றி யிருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! இனிக்குந் தேனை, உண்ணத் தெவிட்டாத தெள்ளிய அமிழ்தை, மோட்சத்துக்குக் காரண மான மூன்று பாழை வணங்காமல் இயமன் கெட்டியாகப் பிடித்துக் கயிற்றாற் கட்டும்படி உன்னைச் சூழ்ந்துள்ள (உயிர்ச் சார்பு பொருட்சார்புகளாகிய) வினையில் அழுந்தினாய். (வி-ரை) தேனை - தேன்போன்றவனை. அமுதை - அமுதத்தை யொத்தவனை. முப்பாழை - மூவகைத் தத்துவங் கட்கும் அதிபதியை. சுற்றியிருக்கும் வினையில் விழுந்து அழுந்தினால் யமன் பாசத்தாற் கட்டுப்பட நேரும் என்றபடி. 22 அஞ்செழுத்தா யெட்டெழுத்தா யைம்பத்தோ ரட்சரமாய்ப் பிஞ்செழுத் தாய்நின்ற பெருமானைப் போற்றாமல் வஞ்சகமா யுற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப் பஞ்சரித்துத் தேடிப் பாழுக் கிறைத்தோமே. (பொ-ரை) ஸ்ரீ பஞ்சாட்சரமாகவும், ஸ்ரீ அஷ்டாட்சர மாகவும், ஐம்பத்தோ ரட்சரமாகவும், சக்தி யட்சரமாகவும் விளங்கியுள்ள கடவுளைத் துதிசெய்யாமல் கரவாகப் பொருந்திய தனங்களையுடைய திரீகள் மாயவலையிற் சிக்கி, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அடைந்து அரிய காலத்தைப் பாழாக்கி விட்டோம். (வி-ரை) ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ கால மெல்லாம், பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே என்றார் மாணிக்கவாசகரும். 23 அக்கறுகு கொன்றைதும்பை யம்புலியுஞ் சூடுகின்ற சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல் மக்கள்பெண்டீர் சுற்றமுடன் வாழ்வைமிக நம்பியன்பாய் எக்கா லமுமுண்டென் றெண்ணினையே நெஞ்சமெ. (பொ-ரை) மனமே! கண்டிகையையும் கொன்றை மலரையும் தும்பைப் பூவையும் சந்திரனையும் தரிக்கின்ற சிவபிரான் திருவடிகளைப் பணிந்து துதிசெய்யாமல், புத்திரர்களையும் மனைவிமார்களையும் பந்துக்களோடு வாழ்வையும் மிக அன்பாக நம்பி (அவைகளை) எந்தக் காலமுஞ் சதமென்று எண்ணினாய். 24 ஆண்ட குருவி னருளை மிகப்போற்றி வேண்டுங் கயிலாய வீட்டுவழி பாராமல் பூண்டகுழன் மாதுநல்லார் பொய்மாய்கைக் குள்ளாகித் தூண்டி லகப்பட்டுத் துடிகெண்டை யானேனே. (பொ-ரை) ஆட்கொண்ட குருநாதன் திருவருளை மிகவும் துதிசெய்து விரும்பப்படுந் திருக்கயிலாய மோஷமார்க்கத்தை நோக்காமல் பூச்சூடிய கூந்தலுடைய மாதர்களின் பொய்யாகிய மாயைக்குள்ளாகித் தூண்டிலிலே அகப்பட்டுத் துடிக்கின்ற கெண்டை போன்றவனானேன். 25 ஏணிப் பழுவா மிருளையறுத் தாளமுற்றும் பேணித் தொழுங்கயிலை பேறுபெற மாட்டாமல் காண வரும்பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன் ஆணியற்ற மாமரம்போ லாகினனே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஏணிப் பழுமரத்தைப்போன்ற ஆணவ மலத்தை யொழித்து இறைவனுக்கு முற்றிலும் அடிமைப்பட விரும்பி வணங்கும் திருக்கயிலாய கதியை அடைய ஒட்டாமல் (உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை) அரிய உறுதிப் பொருளாகக் காணும்பொருட்டுக் கண் கலங்கிச் சிறியேன் ஆணிவேர் அறுந்த மாமரத்தை யொத்தவனானேன். (வி-ரை) இருள் - ஆணவமலம். உயிர்ச்சார்பு பொருட் சார்புகளை உறுதிப்பொருளாகக் கோடல் கண்கலக்கத்துக்கே யிடமென்க. அவ்வாறு கருதுவோர் ஆணிவேர் அறுந்த மரத்துக்கு ஒப்பிடப்பட்டிருத்தல் காண்க. ஆன்மாவிற்கு உறுதி யளிப்பதும் ஆணியாக நிற்பதும் கயிலைப்பேறென்க. அதைப் பெறாமை குறித்து இச்செய்யுளில் இரங்கியவாறாம். 26 கோத்துப் பிரகாசங் கொண்டுருகி யண்டமெல்லாம் காத்த படியே கயிலாயஞ் சேராமல் வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போ லுள்ளுருகி ஏற்றுங் கழுவி லிருந்தபிண மானேனே. (பொ-ரை) எல்லா உயிர்களிடத்திலுங் கலந்து இரக்கம் வைத்து அவைகளை இரட்சித்தபடியே திருக்கயிலாயம் அடையாமல் வேறுவகையான மருளுருவந்தாங்கி (இரக்க மில்லாமல்) எளியேன் சலத்தைப்போலப் பலவாறு கலங்கி யேற்றப்படுங் கழுவிற்றொங்கிய பிணத்தை யொத்தவனானேன். (வி-ரை) அண்ட மெலாம் - உயிர்கள் எல்லாம்; ஆகுபெயர். பிரகாசம் - அருட்பிரகாசம்; இரக்கம் - எல்லா உயிர்களிடத்தும் இரக்கங் கொள்வதே கயிலாயநெறி என்றபடி. எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவனென்று - எவ்வுயிர்க்கும் அன்பா யிரு- என மறைஞான தேசிகரும், எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவுநின் - தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே எனத் தாயுமானாரும், தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல் - மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமின் எனத் திருத்தக்க தேவருங் கூறியிருத்தல் காண்க. திருக்குறள் அருள் அதிகாரத்தையும் நோக்க. வேற்றுருவப்பட்டு என்றது அருளு ருவல்லாப் பிறவுருவை. பிறவுரு - இரக்கமில்லா வுருவை. இரக்கமில்லாதவர் உயிர்களைக் கொன்று புலாலுண்ணலால் வேற்றுருவப் பட்டு . . . . . . . . . . பிணமானேன் என்றார். 27 நிலைவிட் டுடலையுயிர் நீங்கி யகலுமுன்னே நிலைதொட்ட வேடனெச்சிற் றின்றானைச் சேராமல் வலைபட் டுழலுகின்ற மான்போற் பரதவித்துத் தலைகெட்ட நூலதுபோற் றட்டழிந்தாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! உயிர் தனக்கிருப்பிடமாகிய உடலை விடுத்து நீங்கிப் பிரிவதற்கு முன்னரே வில்லேந்திய வேடராகிய கண்ணப்ப நாயனாருடைய எச்சிலைச் சாப்பிட்ட சிவ பிரானை அடையாமல், வலையிற் சிக்கி அலைகின்ற மானைப் போல வருந்தி நுனிகெட்ட நூலைப்போலக் கலங்கி யொழிந்தாய். (வி-ரை) வேடன் - கண்ணப்பன். எச்சில் தின்றானை என்பது ஆண்டவன் அன்பிற் கெளியன் என்பதைக் குறிப்பிடுவது. நூல் நுனிகெட்டால் அஃதூசியில் நுழையாது பயனழிந்து நிற்றல்போல யானும் அறிவுகெட்டுப் பெறும்பயனை யிழந்து நிற்கின்றேன் என்றவாறு. 28 முடிக்கு மயிர்ப்பொல்லா முழுக்குரம்பை மின்னாரின் இடைக்கு நடைக்கு மிதங்கொண்ட வார்த்தைசொல்லி அடிக்கொண்ட தில்லைவனத் தையனே நாயனையேன் விடக்கை யிழந்த மிருகமது வானேனே. (பொ-ரை) என்னை அடிமைகொண்ட சிதம்பரநாதனே! நாய்போன்ற யான், கொடிய புழுக்கள் நிறைந்த அற்பக் குடிசையொத்த பெண்பாலாரின் மயிர் முடியைக் குறித்தும், இடையைக் குறித்தும், நடையைக் குறித்தும், நல்ல இனிய வார்த்தைகள் பேசி மாமிசத்தை யிழந்த விலங்காகி நின்றேன். (வி-ரை) எல்லாப் படியாலும் எண்ணினா லிவ்வுடம்பு, பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை என்றார் ஔவையார். இடையும் நடையும் காமக்கிளர்ச்சியை எழுப்புவன. 29 பூவாணர் போற்றும் புகழ்மதுரை சொக்கரது சீபாதம் போற்றிச் சிவலோகஞ் சேராமல் தாவாரந் தோறுந் தலைபுகுந்த நாய்போல ஆகாத நெஞ்சமே யலைந்து திரிந்தாயே. (பொ-ரை) ஞானத்துக்கு உதவியாகாத மனமே! மண்ணிற் பிறந்தோர் தோத்திரஞ் செய்யுங் கீர்த்தி வாய்ந்த மதுரையம் பதிக்கண் வீற்றிருந்தருளும் ஸ்ரீ சொக்கநாதரது ஸ்ரீபாதமலரை வணங்கிச் சிவலோகமடையாமல், வீடுகள் தோறும் திரிந் தலையும் நாய்போல உழன்று வருந்தினாய். (வி-ரை) வாழ்நர் - வாணர். 30 பத்தெட்டா யோரைந்தாய்ப் பதின்மூன் றையுங்கடந்த ஒத்திட்டு நின்றதோ ரோவியத்தைப் போற்றாமல் தெத்திட்டு நின்ற திரிகண்ணிக் குள்ளாகி வித்திட்டாய் நெஞ்சே விடவு மறியாயே (பொ-ரை) மனமே! முப்பத்தாறு தத்துவங்களையும் பொருந்தி மேலாக ஒளிருஞ் சொரூபத்தை வணங்காமல், விளை யாட்டில் அழுந்திய கட்புலன் வாய்ப்பட்டு உலகவின்பத்தில் அறிவாகிய விதையை விதைத்துவிட்டார். அதனை விடுத்து விலகவும் தெரிந்துகொள்ள மாட்டாய். (வி-ரை) பத்து எட்டு ஐந்து பதின்மூன்று - முப்பத்தாறு (தத்துவம்) முப்பத்தாறு தத்துவத்தையுங் கடந்தொளிரும் செம்பொருள் யாண்டும் நீக்கமற நிரம்பி எழுதப்பட்ட சித்திரம்போல அசைவற்று நிற்றலால் நின்றதோர் ஓவியத்தை என்றார். திரிகண் - வினைத்தொகை. 31 அஞ்சுட னேழாகி யைமூன்று மெட்டுமொன்றாய் மிஞ்சி யிருந்த விளக்கொளியைப் போற்றாமல் பஞ்சிலிடு வன்னியைப்போற் பற்றிப் பிடியாமல் நஞ்சுண்ட கெண்டையைப்போல் நானலைந்து கெட்டேனே. (பொ-ரை) முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து விளங்கும் சுடர் விளக்கை வணங்காமல் பஞ்சில் வைத்த நெருப்பைப்போல விரைவில் பற்றிக்கொள்ளாமல் விடம் உண்ட கெண்டைமீனைப்போல நான் உழன்று கெட்டேன். (வி-ரை) பஞ்சிலிடும் நெருப்பைப்போல, அதி விரைவில் இறைவனோடு கலவாமல் என்றபடி. 32 ஊன முடனே யடையும் புழுக்கூட்டை மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல் ஆனதொரு பஞ்சவர்க ளாண்டிருந்த தேசம்விட்டுப் போனதுபோ லேநாம் போய்ப்பிழைத்தோ மில்லையே. (பொ-ரை) குற்றத்தோடு நசிக்கும் புழு நிரம்பிய கூடாகிய உடலை மானத்தோடு தாங்கிப் பூமியில் செத்துப் போகாமல், பஞ்சபாண்டவர்கள் தாங்கள் ஆண்டுகொண்டிருந்த நாட்டை விட்டுக் காட்டிற்குப் போனதுபோல நாமுங் காடடைந்து பிழைத்தோமில்லை. (வி-ரை) துறவு மேற்கொள்ள வேண்டுமென்றபடி. மானாபி மானத்தை உடலிற் புகுத்தி வாழ்வது வீண் என்றபடி. 33 ஊறை யிறைக்கின்ற வுப்பிருந்த பாண்டத்தை நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை வீறாம் புரத்தை விரும்புகின்ற தெப்படியென் றாறாத நாட்டி லகன்றிருந்தே னில்லையே. (பொ-ரை) மலசலங்களை இறைக்கின்ற உப்பிருந்த பாத்திரத்தை; நாற்றம் அடையாமல் நாறி ஒழியும் புழுக்கூட்டை; செருக்கு நிறைந்த உடலைக் காதலிப்பது எவ்வாறு; அதி னின்றும் விலகி என்றும் அழியாத பதியில் போந்திருந்தே னில்லை. (வி-ரை) ஆறாதநாடு - சிவபூமி. 34 அரிய வரிதேடி யறியா வொருமுதலைப் பரிவுட னேபோற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல் கரியபெரு வாழ்வைநம்பிக் காமத் தழுந்தியே அரிவாயிற் பட்ட கரியதுபோ லானேனே. (பொ-ரை) அருமையான நாராயணமூர்த்தியுந் தேடி அரிய இயலாத ஒப்பற்ற தலைவனும், அம்மூர்த்தி விருப்பத்தோடு வணங்கும் பரஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை வணங்காமல், அழிந்துபோகும் சிறிய வாழ்வை உறுதியெனக் கொண்டு காம இன்பத்தில் விழுந்து நிலைத்துச் சிங்கத்தின் வாயில் அகப்பட்ட யானைபோன்றவனானேன். 35 தந்திரத்தை யுன்னித் தவத்தை மிகநிறுத்தி மந்திரத்தை யுன்னி மயங்கித் தடுமாறி விந்துருகி நாதமா மேலொளியைக் காணாமல் அந்தரத்தே கோலெறிந்த அந்தகன்போ லானேனே. (பொ-ரை) ஆகமங்களைக்கருதி யோதி அதனால் பயனில்லை என்று தவத்தை முற்றும் நிறுத்தி, வேதமந்திரத் தையே சொல்லி மயங்கி மனமலைந்து விந்துநாதங் கடந்து மேலொளிருஞ் சிவபரஞ்சுடரைத் தரிசியாமல் ஆகாயத்திலே ஊன்றுகோலை யெறிந்த குருடனைப் போன்றவனானேன். (வி-ரை) தந்திரம் - ஆகமம். மந்திரம் - வேதம். ஆகமநெறி விடுத்து வேதநெறி நிற்போர் விரைவில் ஞானம் பெறாமல் தடுமா றுளத்தினராய் வருந்துவர் என்பது. என்னை? வேதத்தில் பல கடவுளர் பல நெறிகள் பேசப்படலான் அதனை ஆராய்வார்க்கு உள்ளம் விரைவில் ஒருமைப்பட்டுத் தவநெறி கூடாதாகலானென்க. இதனால் வேதமார்க்கத்தை யிழித்துக் கூறவேண்டுமென்பது ஆசிரியர் கருத்தன்று. ஆகமத்துணை யின்றி வேத உண்மை விளங்காதென்று விளக்கியவாறு காண்க. (விரிக்கில் பெருகும்.) 36 விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின் சிலையார்கை வேடனெச்சிற் றின்றானைப் போற்றாமல் அலைவாய்த் துரும்பதுபோ லாணவத்தி னாலழுங்கி உலைவாய் மெழுகதுபோ லுருகினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! பாணபத்திரனுக்குப் பெருமை பொருந்திய ஆளாகிப் பின்னொருகால் வில்லையேந்திய கண்ணப்பநாயனார் எச்சிற் புசித்தவனை வணங்காமல், ஆணவத்தில் அழுந்தி அலையில் அகப்பட்ட துரும்பைப் போலவும், உலையிற் பட்ட மெழுகைப்போலவும் வருந்தி யிடர்ப்பட்டாய். (வி-ரை) பாணபத்திரன் வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க. 37 பூரணமாலை மூலத் துதித்தெழுந்த முக்கோண சக்கரத்துள் வாலை தனைப்போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கும்நிறைந்துள்sபொருளே! மூலாதாரத்தில் முளைத்துத் தோன்றிய மூன்று கோணமாக விருக்கின்ற சக்கரத்திலே வாலை யென்னுஞ் சத்தியை நிறுத்தி வழிபடாமல் அறிவிழந்தேன். (வி-ரை) பூரணம் - எங்கும் நிறைந்துள்ள பொருள். மூலாதாரம் - குய்யத்துக்குங் குதத்துக்கும் இடையிலிருப்பது; அதன் மத்தியிலே நான்கு இதழ்களுடைய ஒரு மலர் வடிவ மிருக்கும். அது கடப்ப மலரை யொத்திருக்கும். அம் மலரினிடை யில் ஓங்கார அட்சரம் விளங்கும். அதன் நடுவண் கணபதியும் வாலையும் வீற்றிருப்பர். 1 உந்திக் கமலத் துதித்துநின்ற பிர்மாவைச் சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! உந்திக் கமலத்தில் வெளிப்பட்டு நின்ற பிரமதேவனை எதிர்கொண்டு தரிசியாமல் கெட்டுப்போனேன். (வி-ரை) உந்திக்கமலம் - சுவாதிஷ்டானம். இது மூலா தாரத்துக்கு இரண்டு விரற்கடைமேல் விளங்குவது; சதுர வடிவமாக விருப்பது. அதனிடையிலே ஆறிதழுடைய ஒரு புட்பவட்டம் பொலிகின்றது. அதன் நடுவண் நகர அட்சரம் துலங்கும். அதில் பிரமதேவனும் சரவதியுமிருப்பர். 2 நாவிக் கமல நடுநெடுமால் காணாமல் ஆவிகெட்டு யானு மறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நாபிக்கமல மத்தியிலேயுள்ள நாராயணமூர்த்தியைத் தரிசியாமல் உயிர் கெட்டு யானும் அறிவிழந்தவனானேன். (வி-ரை) நாபிக்கமலம் - மணிபூரகம். இது சுவா திஷ்டானத்துக்கு எட்டு விரற்கடைமேலிருப்பது; இஃதண்ட வடிவாக விருக்கும். இதன் நடுவில் பத்து இதழுடைய ஒரு புட்பவட்ட மிருக்கின்றது. அதனிடையில் மகர அட்சரம் விளங்கிக்கொண்டிருக்கும். அவ்வட்சரத்தில் விஷ்ணுமூர்த்தியும் இலட்சுமியும் வீற்றிருப்பர். 3 உருத்திரனை யிருதயத்தி லுண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானுங் கலங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! உருத்திரனை இதயகமலத்தில் வைத்து உண்மையுடன் காணாமல் மனமழிந்து நான் கலக்கமடைந்தேன். (வி-ரை) இதயகமலம் - அநாகதம். இது மணிபூரகத்துக்கு மேல் பத்து விரற்கடைமே லிருப்பது. முக்கோண வடிவமாய் விளங்கும். அக்கோணத்தில் பன்னிரண்டிதழுடைய ஒரு புட்ப வடிவமிருக்கும். அதில் சிகர அட்சரம் ஒளிரும். அவ்வட்சரத்தில் உருத்திரமூர்த்தியும் உமாதேவியும் வீற்றிருப்பர். 4 விசுத்தி மயேசுரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சும் பதறினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! விசுத்தியிலே மகேசுரனைக் கண்திறந்து நோக்காமல் பசியால் மெலிந்து மனம் வருந்தினேன். (வி-ரை) இஃது அநாகதத்துக்குப் பத்து விரற்கடைமே லிருப்பது; கண்டதானத்திலுள்ளது. அறுகோணவடிவா யொளிரும். அக்கோணத்தில் பதினாறிதழுடைய ஒரு புட்ப வடிவமிருக்கும். அதில் வகர அட்சரம் விளங்கும் அவ்வட் சரத்தில் மகேசுவரனும் மகேசுவரியும் வீற்றிருப்பர். 5 நெற்றி விழியுடைய நிர்மலச தாசிவத்தைப் புத்தியுடன் பாராமற் பொறியழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! (ஆஞ்ஞையில்) நெற்றிக்கண்ணையுடைய நின்மலப் பொருளாகிய சதாசிவத்தை அறிவோடு நோக்காமல் புத்தியைக் கெடுத்துக் கொண்டேன். (வி-ரை) ஆஞ்ஞை - இது விசுத்திக்குப் பன்னிரண்டு விரற்கடைமே லிருப்பது. புருவமத்தியில் விளங்குவது. அதில் மூன்றிதழுடைய ஒரு புட்பவடிவமிருக்கும். அதில் யகர அட்சாரமிருக்கும். அதன்கண் சதாசிவனும் மனோன்மணியும் வீற்றிருப்பர். 6 நாத விந்துதன்னை நயமுடனே பாராமல் போத மயங்கிப் பொறியழிந்தேன் பூரணமே. (பொ-ரை) நாதவிந்துக்களை விருப்பத்துடனே நோக்காமல் அறிவு மயங்கிப் பொறிகலங்கினேன். (வி-ரை) நாதம் விந்து - சத்திதத்வம், சிவதத்வம். இவ்விரு தத் துவங்களுஞ் சிவத்திற்குரியன. சிவம் பிறதத்துவங்களை அதிட்டான வாயிலாகவும் நாத விந்து என்னும் இரு தத்துவங்களையும் தானே நேராகவும் இயக்குகின்றதென்பது சித்தாந்தம். 7 உச்சி வெளியை யுறுதியுடன் பாராமல் அச்சமுட னானு மறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சிதாகாசத்தை உறுதியாக நோக்காமல் பயத்தால் யான் புத்தி கெடுத்துக் கொண்டேன். (வி-ரை) உச்சிவெளி - நாதவிந்து கடந்த சிதாகாசம். 8 மூக்கு முனையை விழித்திருந்து பாராமல் ஆக்கைகெட்டு நானு மறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மூக்கு நுனியைத் தூக்கமின்றி நோக்காமல் உடல் நொந்து யான் அறிவழிந்தேன். 9 இடபிங் கலையி னியல்பறிய மாட்டாமல் தடையுட னேயானுந் தயங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சந்திர சூரியகலைகளின் தன்மை யறியமாட்டாமல் தடையுடனே யான் மயங்கினேன். 10 ஊனுக்கு ணீனின் றுலாவினதைக் காணாமல் நானென் றிருந்து நலமழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! உடலிலே தேவரீர் எழுந்தருளி யிருப்பதைப் பாராமல் அதையே நான் என்றுகொண்டு பெறும் பயனைக் கெடுத்துக்கொண்டேன். (வி-ரை) தேகத்தைப் பொருளாகக் கொள்வது அறியாமை யென்றபடி. 11 மெய்வாழ்வை நம்பி விரும்பிமிக வாழாமல் பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே. (பொ-ரை) சத்திய வாழ்வை நம்பி விரும்பிப் பெருமையாக வாழாமல், அசத்திய வாழ்வை நம்பி அழுதேன். (வி-ரை) மெய்வாழ்வு - தோற்றக் கேடின்றி யென்றும் ஒரு பெற்றியாய் வாழும் வாழ்வு. பொய்வாழ்வு - தோன்றி நின்றழியும் உலகவாழ்வு. 12 பெண்டுபிள்ளை தந்தைதாய் பிறவியுடன் சுற்றமிவை உண்டென்று நம்பி யுடலழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மனைவி, மக்கள், பிதா, மாதா, உடன்பிறந்தவர், பந்துக்கள் எல்லாரையுஞ் சதமென்று நம்பித் தேகம் நீங்கப்பெற்றேன். 13 தண்டிகைப்பல் லாக்குடனே சகலசம் பத்துகளும் உண்டென்று நம்பி யுணர்வழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தண்டிகை, பல்லக்கு இவைகளோடு சகல செல்வங்களும் மெய்யென்று நம்பி அறிவைக் கெடுத்துக்கொண்டேன். 14 இந்த வுடலுயிரை யெப்போதுந் தான்சதமாய்ப் பந்தமுற்று நானும் பதமழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! இந்தத் தேகத்தையும் ஆன்மாவையும் பொருளாகக் கொண்டு நான் அஞ்ஞானத்தாற் கட்டுப்பட்டு அடையவேண்டிய பயனைக் கெடுத்துக்கொண்டேன். 15 மாதர் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்து போத மயங்கிப் பொறியழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பெண் ணென்னும் உலக மயக்கத்திலே விழுந்து அறிவு மயங்கிப் பொறிகளைக் கெடுத்துக்கொண்டேன். 16 சரியைகிரி யாயோகந் தான்ஞானம் பாராமல் பரிதிகண்ட மதியதுபோற் பயனழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளை நாடாமல் சூரியனைக் கண்ட சந்திரனைப்போல அடையவேண்டிய பிரயோசனத்தை யிழந்தேன். 17 மண்பெண்பொன் னாசை மயக்கத்தி லேவிழுந்து கண்கெட்ட மாடதுபோற் கலங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மண், பொன், பெண் என்னும் மூவாசை மயக்கத்திலே விழுந்து குருட்டு மாடுபோலக் கலங்கிநின்றேன். (வி-ரை) மூவாசையால் ஞானக்கண் மறைக்கப்படும். 18 தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல் அநியாய மாய்ப்பிறந்திங் கலைந்துநின்றேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! ஒப்பற்ற தலைவனைக் கண்டு ஏகாந்தமாகவிருந்து வாழாமல் அநியாய மாகப் பிறந்து இங்கு உழன்று வருந்தினேன். 19 ஈராறு தண்கலைக்கு ளிருந்துகூத் தாடினதை ஆராய்ந்து பாராம லறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பதினாறு கலைக்குள் நின்று திருநடஞ் செய்ததை ஆராய்ச்சிசெய்து யோசியாமல் புத்தியைக் கெடுத்துக்கொண்டேன். 20 வாசி தனைப்பார்த்து மகிழ்ந்துனைத்தான் போற்றாமல் காசிவரை போய்த்திரிந்து காலலுத்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! வாசியைக் கண்டு களித்துத் தேவரீரைத் தோத்திரஞ் செய்யாமல் காசி மட்டுஞ் சென்று கால்கள் ஓயப்பெற்றேன். 21 கருவிகடொண் ணூற்றாறிற் கலந்துவிளை யாடினதை இருவிழியாற் பாராம லீடழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தொண்ணூற் றாறு தத்துவங்களிலும் விரவித் தேவரீர் திருவிளையாடல் செய்வதை இருவிழிகளாலுங் காணாமல் கெட்டுப் போனேன்.22 உடலுக்குள் நீநின் றுலாவினதைக் காணாமல் கடமலைதோ றுந்திரிந்து காலலுத்தேன் பூரணமே. (வி-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேகத்துக்குள்ளே தேவரீர் உலவுவதைப் பாராமல் காடு மலைகள் தோறும் அலைந்து கால்கள் ஓயப்பெற்றேன். 23 எத்தேச காலமுநா மிறவா திருப்பமென்று உற்றுனைத்தான் பாராம லுருவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எந்தத் தேசத் திலும் எந்தக் காலத்திலும் நாம் சாவாதிருப்போமென்று தேவரீரை உற்று நோக்காமல் என்னைக் கெடுத்துக் கொண்டேன். 24 எத்தனைதாய் தந்தை யிவர்களிடத் தேயிருந்து பித்தனா யானும் பிறந்திறந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எத்தனை மாதா பிதாக்கள் கருவிலே அறிவு கெட்டவனாய்ப் பிறந்திறந்தேன். 25 பெற்றலுத்தாள் தாயார் பிறந்தலுத்தேன் யானுமுன்றன் பொற்றுணைத்தாள் தந்து புகலருள்வாய் பூரணமே. (பொ-ரை) என்னைப் பெற்றுப் பல தாய்மார்கள் அலுத்துவிட்டார்கள். யானும் அவர்கள் வயிற்றிலே பிறந்து பிறந்து இளைத்தேன். (ஆனபடியால்) தேவரீருடைய பொன் போன்ற இரு திருவடிகளைச் சரண்புகக் கொடுத்தருள்வாய். 26 உற்றா ரழுதலுத்தா ருறவின்முறையார் சுட்டலுத்தார் பெற்றலுத்தாள் தாயார் பிறந்தலுத்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பந்துக்கள் அழுது அழுது அலுத்தார்கள். உறவின்முறையார் சுட்டு சுட்டு அலுத்துவிட்டார். எனது அன்னை என்னைப் பெற்றுப் பெற்று அலுத்துவிட்டாள். யானும் பிறந்து பிறந்து அலுத்துப் போனோன். (வி-ரை) உற்றார் - தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியவர். உறவின்முறையார் - ஏனையை பந்துக்கள். 27 பிரமன் படைத்தலுத்தான் பிறந்திறந்து நானலுத்தேன் உரமுடைய வக்கினிதா னுண்டலுத்தான் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நான்முகன் சிருஷ்டித்து அலுத்துவிட்டான். நான் பிறந்தும் இறந்தும் அலுத்துவிட்டேன். பலமுடைய அக்கினிதேவன் என்னைத் தின்று தின்று அலுத்துப்போனான். 28 எண்பத்து நான்குநூ றாயிரஞ்செனன முஞ்செனித்துப் புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நான் எண் பத்துநான்கு நூறாயிரம் பிறவிகளை யெடுத்து வருத்தப்பட்டு அழுதேன். 29 என்னை யறியாம லெனக்குள்ளே நீயிருக்க உன்னை யறியாம லுடலிழந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எனக்குத் தெரியாமல் அத்துவிதமாக என்னில் தேவரீர் கலந்திருக்க, யான் தேவரீரைத் தெரிந்து கொள்ளாமல் மரித்துப் போனேன். (வி-ரை) இறைவன் ஆன்மாக்களிடத்துப் பிறிவின்றிக் கலந்து நிற்றலை யறியாதிருப்பதே அஞ்ஞானம். அக்கலப்பை யறிந்து அவனோடு ஒன்றுபடுவதே ஞானம். உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியெனும் - கள்ளத்தை யறிய மாட்டேன் என்றார் அப்பர் சுவாமிகள். 30 கருவா யுருவாய்க் கலந்துல கெலாநீயாய் அருவாகி நின்ற தறிகிலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! கருவாகவும், உருவாகவும், (அவைகளிற்) கலந்து உலகமெல்லாந் தாமேயாகி யும் அருவாக நிற்கின்ற உண்மையைத் தெரிந்து கொண்டிலேன். (வி-ரை) கருவாய் - கருவாக இருந்த காலத்திலும். உருவாய் - உடல்தாங்கிய காலத்திலும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தேவரீரை அறியாதிருப்பது என்ன அறியாமை என்றபடி. 31 செம்பொற் கமலத் திருவடியைப் போற்றாமல் பம்பைகொட்ட வாடும் பசாசானேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சிவந்த பொன் போன்ற திருவடித் தாமரைகளை வணங்காமல் உடுக்கை யடிக்கத் தலைவிரித்தாடும் பிசாசை யொத்தவனானேன். 32 எனக்குள்ளே நீயிருக்க வுனக்குள்ளே நானிருக்க மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே. (பொ-ரை) என்னில் தேவரீர் எழுந்தருளியிருக்கத் தேவரீரில் யான் இருக்க (இத்தகை நெருக்கமுடைய தேவரீர் என்னுடைய) உள்ளத் துன்ப மொழிய வரமருளல் வேண்டும். 33 எழுவகைத் தோற்றத் திருந்துவிளை யாடினதைப் பழுதறவே பாராமற் பயனழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீர் எழுவகைப் பிறவிகளிலும் நின்று திருவிளையாடல் புரிந்ததைக் குற்ற நீங்கக் காணாமல் அடைய வேண்டிய பிரயோசனத்தை யிழந்தேன். (வி-ரை) எழுவகைத் தோற்றம் - தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். எழுவகைப் பிறவி யான் எடுத்த காலத்திலுந் தேவரீர் என்னை விடுத்துப் பிரிந்ததில்லை யென்றபடி. 34 சாதிபே தங்கள் தனையறிய மாட்டாமல் வாதனையா னின்று மயங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைகின்ற பொருளே! சாதி வித்தியா சங்களின் தன்மையைத் தெரிந்துகொள்ள முடியாமல் அவ் வேதனைக்குட்பட்டு மயங்கிக் கிடந்தேன். (வி-ரை) சாதி பேதங்களைக் கண்டித்தவாறாம். சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் - கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்வீர் - பாத்திரஞ் சிவமென்று பணிதீரேல் - மாத்திரைக் குள்ளருளுமாற் பேறரே எனத் திருநாவுக்கரசரும், மலமில்லை மாசில்லை மனாபிமானக் - குலமில்லை எனத் திருமூலரும் அருளிச் செய்திருத்தல் காண்க. 35 குலமொன்றாய் நீபடைத்த குறியை யறியாமல்யான் மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! குலமொன் றாகத் தேவரீர் உண்டாக்கியிருக்கும் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் யான் மலபாத்திரமாகிய தேகத்திலிருந்து மயங்கினேன். (வி-ரை) அறிவைப் பொருளாகக் கொள்ளாது தேகத்தைப் பொருளாகக்கொண்டு வாழ்ந்தமையான் சாதி முதலிய மயக்கங் களில் விழ நேர்ந்தது என்றவாறு. 36 அண்டபிண்ட மெல்லா மணுவுக் கணுவாகநீ கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! அண்ட பிண்ட மெல்லாவற்றிலும் அணுவுக்கு அணுவாகத் தேவரீர் கலந்து கொண்டிருக்குந் திருமேனியின் குறிப்பை உணரேன். 37 சகத்திரத்தின் மேலிருக்குஞ் சற்குருவைப் போற்றாமல் அகத்தினுடை யாணவத்தா லறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! ஆயிரம் இதழுடைய தாமரைபோன்ற இதயத்தில் மேவியுள்ள சற்குரு நாதனை வழிபடாமல் உள்ளத்திலுள்ள ஆணவமலத்தால் அறிவைப் போக்கிக்கொண்டேன். 38 ஐந்து பொறியை யடக்கியுனைப் போற்றாமல் நைந்துருகி நெஞ்ச நடுங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பஞ்சேந்திரி யங்களை அடக்கித் தேவரீரை வணங்காமல் மனங் கசிந்து கசிந்து வருந்திக் கலக்கமடைந்தேன். 39 என்னைத் திருக்கூத்தா லிப்படிநீ யாட்டுவித்தாய் உன்னை யறியா துடலழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! அடியேனை (ஊழிற்குத் தக்கவாறு) திருவருள் நோக்கத்தின்படி மாயையால் இவ்வண்ணம் ஆட்டுவித்தாய். ஆட்டுவித்துத் தேவரீரை அறியாமல் மரணமடைந்தேன். 40 நரம்புதசை தோலெலும்பு நாற்றத்துக் குள்ளிருந்து வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நரம்பு, தசை, தோல், எலும்பு என்னுந் துர்வாசனையிற் றங்கியிருந்து திருவருள் எல்லையை உணரமுடியாமல் கலக்கமடைந்தேன். 41 சிலந்தியிடை நூல்போற் சீவசெந்துக் குள்ளிருந்த நலந்தனைத்தான் பாராமல் நலமழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சிலந்திப் பூச்சியில் நூலிருப்பதுபோலச் சீவர்களிடத்துத் தேவரீர் எழுந் தருளியிருந்த சிறப்பை உற்றுநோக்காமல் பயனைப் போக்கிக் கொண்டேன். 42 குருவாய்ப் பரமாகிக் குடிலைசத்தி நாதவிந்தாய் அருவா யுருவான தறிகிலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! குருவாகியும், கடவுளாகியும், பிரணவமாகியும், சத்தியாகியும், நாதமாகியும், விந்துவாகியும், அரூபமாகியும், ரூபமாகியும் விளங்கிக் கொண்டுள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளவில்லை. 43 ஒளியாய்க் கதிர்மதியா யுள்ளிருளா யக்கினியாய் வெளியாகி நின்ற வியனறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பரஞ் சோதியாய், சூரிய சந்திரராய், ஆணவ விருளாய், அக்கினியாய், ஆகாசமாகி நின்ற திறத்தைத் தெரிந்துகொள்ளேன். 44 இடையாகிப் பிங்கலையா யெழுந்த சுழுமுனையாய் உடலுயிராய் நீயிருந்த வுளவறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! இடைகலை யாய், பிங்கலையாய், மேலே கிளம்பிய சுழுமுனையாய், உடலில் ஆத்மாவாய்த் தேவரீர் எழுந்தருளியிருந்த சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளவில்லை. 45 மூலவித் தாய்நின்று முளைத்துடல்தோ லுமிருந்து கால னெனவழிக்குங் கணக்கறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எல்லா வற்றிற்குங் காரணமாக இருந்து தோன்றித் தேகந்தோறும் ஆத்ம வடிவமாக நிலைத்து இயமனைப்போல அழிக்குங் குறிப்பைத் தெரிந்துகொண்டேனில்லை. 46 உள்ளும் புறம்புமா யுடலுக்குள் நீயிருந்த தெள்ளளவு நானறியா திருந்தேனே பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேகத்தின் அகத்திலும் புறத்திலுந் தேவரீ ரெழுந்தருளியிருந்ததைச் சிறிதும் நான் உணர்தேனில்லை. 47 தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றமெல்லாம் நீயாகி நின்ற நிலையறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! அன்னையாய் அப்பனாய் உறவினர் பந்துக்கள் எல்லாம் தேவரீராக விளங்குகின்ற அத்துவித நிலையைத் தெரிந்துகொண்டே னில்லை. 48 விலங்குபுள் ளூர்வனவசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக் குலங்களெழு வகையில்நின்ற குறிப்பறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மிருகம், பறவை, நகர்வன, தாவரம், தேவர், நீர்வாழ்வன, மனிதர்கள் என்னும் எழுவகைப் பிறப்புக்களில் தேவரீர் எழுந்தருளியிருக்கின்ற கருத்தை அறிந்தேனில்லை. 49 ஆணாகிப் பெண்ணா யலியாகி வேற்றுருவாய் மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! ஆணாகியும் பெண்ணாகியும் அலியாகியும் பல வேறு வடிவமாகியும், பெருமையோடு நின்ற தன்மையைத் தெரிந்தேனில்லை. 50 வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்துகிழந் தானாரும் பாலையாய் நின்ற பயனறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பாலைப் பருவ மாகியும், யௌவனப் பருவமாகியும், சிறந்த முதுமைப் பருவ மாகியும் சத்தியமாகியும் நின்ற பயனை அறிந்தேனில்லை. 51 பொய்யாய்ப் புவியாய்ப் புகழ்வா ரிதியாகி மெய்யாகி நின்ற வியனறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பொய்யாகியும், உலகமாகியும், புகழப்படுகின்ற கடலாகியும், உண்மையாகியும் விளங்குகின்ற பெருமையை யறியேன். 52 பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி நாவாய்ச் சொல்லான நயமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மலராகியும், வாசனையாகியும், பொன்னாகியும், அதன் நிறமாகியும், நாவாகியும், அதிற் பிறக்கின்ற சொல்லாகியும் நிற்கின்ற சிறப்பை அறியேன். 53 முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய் இதமாகி நின்ற வியலறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! ஆதியாய், இடையாய், மூன்று பொருளாய், மூன்று உலகாய், நல்லதாய் நின்ற தன்மையை யான் தெரிந்துகொண்டேனில்லை. 54 ஊனா யுடலுயிரா யுண்ணிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மாமிசமாய், (மாமிசத்தாலாய) தேகமாய், தேகத்தில் ஆன்மாவாய், ஆன்மாவில் நிறைந்த கண்ணொளி போன்றதாய், தேனாய், சுவையாய் நின்ற உண்மை உணரேன். 55 வித்தாய் மரமாய் விளைந்தகனி யாய்ப்பூவாய் சித்தாகி நின்ற திறமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! விதையாகியும், விருட்சமாகியும், பழுத்த பழமாகியும், பூவாகியும், அறிவாகியும் நின்ற உண்மை உணரேன். 56 ஐவகையும் பெற்றுலக வண்டபகி ரண்டமெல்லாந் தெய்வ மெனநின்ற திறமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பஞ்ச பூதங்களைத் தந்து அவற்றின் காரியமாய் அண்டபகிரண்டங்க ளெல்லாவற்றிற்குங் கடவுளென்று விளங்குகின்ற உறுதி யான் அறியேன். 57 மனமாய்க் கனவாகி மாய்கையா யுள்ளிருந்து நினைவாகி நின்ற நிலையறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! உள்ளமாய் சொப்பனமாய், மாயமாய், மனதிலிருந்து நினைவாய் விளங்கின தன்மை யான் உணரேன். 58 சத்தி சிவமிரண்டாய்த் தான்முடிவி லொன்றாகிச் சித்திரமாய் நின்ற திறமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சத்தி சிவம் என்னும் இரண்டு பொருளாகியும், முடிவில் ஒரு பொருளாகி யும், அத்தகைச் சித்திரமாகியும் விளங்கின பெருமை தெரிந்தே னில்லை. 59 பொறியாய்ப் புலனாகிப் பூதபே தப்பிரிவாய் அறிவாகி நின்ற வளவறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பொறியாய், புலனாய், பூதமாய், அவற்றின் பேதமாய், அறிவாய் நின்ற அளவினை அறிந்தேனில்லை. 60 வானிற் கதிர்மதியாய் வளர்ந்துபின்னொன் றானதுபோல் ஊனுடலுக் குள்ளிருந்த வுயிர்ப்பறியேன் பூரணமே. (பொ-ரை) ஆகாயத்தில் சூரிய சந்திரராய் வளர்ந்து பிறகு ஓரொளியாதல்போல மாமிசத்தாலாகிய உடலுக்குள்ளிருந்த பிராணனைத் தெரிந்துகொண்டேனில்லை. 61 பொய்யும் புலையுமிகப் பொருந்திவீண் பேசலன்றி ஐயோ வுனைவுரைக்க வறிகிலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பொய்மை யையும் புலாலுண்ணலையும் மிகவுங் கொண்டு வீணாகப் பேசுதல் அல்லாமல் அந்தோ! தேவரீரை வழுத்தத் தெரிந்து கொள்ளவில்லையே. 62 நிரந்தரமா யெங்கு நின்றுவிளை யாடினதைப் பரமதுவே யென்னப் பதமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எப்பொழுதும் எங்கும் நீக்கமற நிறைந்து ஐந்தொழிலாகிய ஆடலைச் செய்யும் ஒன்றையே மேலான பொருளாகக் கொள்ளுந் தன்மை யறிந்தே னில்லை. 63 கொல்வாய் பிறப்பிப்பாய் கூடவிருந் தேசுகிப்பாய் செல்வாய் பிறர்க்குட் செயலறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! அழிப்பாய், படைப்பாய், உடனிருந்தே அளிப்பாய், பிறருள் செல்வாய், இத்தகை அருட்செயல்களை அறியேன். 64 வாரிதியாய் வையமெல்லா மன்னுமண்ட பிண்டமெல்லாஞ் சாரதியாய் நின்ற தலமறியேன் பூரணமே. (பொ-ரை) கடலாய், உலகம் யாவும் நிலைபெற்ற அண்டபிண்டங்க ளெல்லாவற்றையுஞ் செலுத்துபவனாய் நின்ற இடத்தைத் தெரிந்துகொண்டேனில்லை. 65 வித்தாய் மரமாய் வெளியா யொளியாய்நீ சத்தா யிருந்த தரமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீர் விதையாய், மரமாய், வெளியாய், ஒளியாய், உண்மைப் பொருளாயிருந்த தன்மை யான் அறியேன். 66 தத்துவத்தைப் பார்த்துமிகத் தன்னை யறிந்தறிவால் உய்த்துனைத்தான் பாராம லுய்வாரோ பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தத்துவ தரிசனஞ் செய்து அதற்குமேல் மிகுதியுந் தன்னைத்தானறிந்து அந்த அறிவால் தேவரீரை ஆராய்ந்து நோக்காமல் பிழைப்பார் களோ? 67 ஒன்றா யுயிரா யுடல்தோறு நீயிருந்தும் என்று மறியார்க ளேழைகள்தாம் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீர் ஏகமாய் ஆன்மாவாய்த் தேகந்தோறும் எழுந்தருளியிருந்தும் அறிவில்லாதவர்கள் தேவரீரை எப்பொழுதும் அறிய மாட்டார்கள். 68 நேற்றென்று நாளையென்று நினைப்புமறப் பாய்ப்படைத்து மாற்றமாய் நின்ற வளமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நேற்று என்றும் நாளை யென்றும் நினைப்பு மறப்பு உடையவர்களாக உயிர் களைச் சிருஷ்டித்துத் தேவரீர் அவைகளுக்கு வேறாக உள்ள சிறப்பை அறியமாட்டேன். 69 மனம்புத்தி சித்த மகிழறிவாங் காரமதாய் நினைவாந் தலமான நிலையறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மனம், புத்தி, சித்தம் இறுமாப்புடைய அறிவாகிய ஆங்காரமாய், அவைகளைக் கருதும் இடமாக உள்ள ஒருநிலை உணரேன். 70 உருப்பேத மின்றி யுயர்ந்தசத்த பேதமதாய்க் குருப்பேத மாய்வந்த குணமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! வடிவத்தில் வேற்றுமையின்றி மேலான ஓசையில் வேற்றுமை யுடையதாய் நிறபேதமாக எழுந்தருளிய தன்மை உணரேன் 71 சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னுமொரு உட்சமய முண்டென் றுரைத்தனையே பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! அறுவகைச் சமய பேதங்களை உண்டாக்கி மேலும் ஓர் அகச்சமயம் உண்டென்று அருளிச்செய்தாய். 72 முப்பத் திரண்டுறுப்பாய் முனைந்துபடைத் துள்ளிருந்த செப்படி வித்தை திறமறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்த பொருளே! முப்பத்திரண்டு அங்கங்களாக உடலை விரைந்து சிருஷ்டித்துத் தேவரீர் அதனுள்ளே எழுந்தருளியுள்ள சாலவித்தையின் ஆற்றலை உணரேன். 73 என்னதான் கற்றாலென் னெப்பொருளும் பெற்றாலென் உன்னை யறியாதா ருய்வரோ பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எத்தனை நூல்களைப்படித்தா லென்னபயன்? எவ்வளவு செல்வமடைந்தா லென்னபயன்? தேவரீரை உணராமல்யார்தான்பிழைப்பர்? 74 .f‰w¿nth மென்பார் காணார்க ளுன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பறுமோ பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! எல்லா நூல் களையும் படித்துவிட்டோம் என்று சொல்பவர்களே தேவரீர் திருவடியைக் காணமாட்டார்கள். அதைப் பெறாதவர்களுடைய பிறவி யெங்ஙனம் ஒழியும்?. (வி-ரை) கல்வியாலாயபயன் கடவுளை வணங்குதல் என்ற வாறு, கற்றுஞ் சிவஞான மில்லாக் கலதிகள் என்று திருமூல தேவரும், கற்றதனா லாயபயன் னென்கொல் வாலறிவன் - நற்றா டொழாஅ ரெனின் என்று திருவள்ளுவருங் கூறியிருத்தல் காண்க. 75 வானென்பா ரண்டமென்பார் வாய்ஞான மேபேசித் தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! (தேவரீரை) ஆகாசம் என்று சொல்லுவார்கள்; அண்டமென்று சொல்லு வார்கள்; வாசாஞானம்பேசித் தாங்களென்று சொல்லுவார்கள். இவர்கள் வீணர்கள்; தாங்கள் வந்த ஆரம்ப வரலாற்றை அறியாதவர்கள். 76 ஆதியென்பா ரந்தமென்பார் ரதற்குண்டு வாயிருந்த சோதியென்பார் நாதத் தொழிலறியார் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! முதலென்று சொல்லுவார்கள்; முடிவென்று சொல்லுவார்கள்; அவ்விரண் டிற்கும் இடையிலுள்ள சோதியென்று சொல்லுவார்கள். இவர்கள் நாத தத்துவத்தின் செயலை அறியாதவர்கள். 77 மூச்சென்பா ருள்ளமென்பார் மோனமெனு மோட்சமென்பார் பேச்சென்பா ருன்னுடைய பேரறியார் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்தள்ள பொருளே! உயிர்ப்பு என்று சொல்லுவார்கள்; மனமென்று சொல்லுவார்கள்; மௌனம் என்னும் முத்தியென்று சொல்லுவார்கள்; ஒளி வடிவமென்று சொல்லுவார்கள்; அவர்கள் தேவரீரது திருப்பெயரை உணராதவர்கள். 78 பரமென்பார் பானுவென்பார் பாழ்வெளி யாய்நின்ற வரவென்பா ருன்றன் வழியறியார் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீரை மேலான பொருளென்று சொல்லுவார்கள்; சூரியனென்று சொல்லுவார்கள்; சூந்யமாகவுள்ள நிலையென்று சொல்வார் கள்; அவர்கள் தேவரீரது அருள்வழியை யறியாதவர்கள். 79 எத்தனைபே ரோவெடுத் தெடுத்துத் தானுரைத்தார் அத்தனைபேர்க் கொன்றான தறிகிலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பலபேர் தேவரீர் நிலையைப் பலவாறு பன்முறையெடுத்துக் கூறியுள்ளார். அவர் கருத்துக்கெல்லாம் தேவரீர் ஒரு பொருளாக விளங்கினதை உணர்ந்தேனில்லை. 80 நகார மகாரமென்பார் நடுவே சிகாரமென்பார் வகார யகாரமென்பார் வகையறியார் பூரணமே. (பொ-ரை) நகர மகரமென்று சொல்வார்கள்; இடையிலே சிகரத்தை அமைத்துக் கூறுவார்கள்; வகர யகரங்களையும் புகல்வார்கள். அவர்கள் ஸ்ரீ பஞ்சாக்கரத்தின் உண்மை வழியை அறியாதவர்கள். 81 மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து பகுத்தறிய மாட்டாமற் பயனழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பெருமையாகக் காம மயக்கத்தி லழுந்தி நன்மை தீமை பகுத்தறிய முடியாமல் பெறும் பிரயோசனத்தைக் கெடுத்துக் கொண்டேன் 82 உண்மைப் பொருளை யுகந்திருந்து பாராமற் பெண்மயக்கத் தாலே பிறந்திறந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சத்திய வதுவை விரும்பி ஓரிடத்தில் தனித்திருந்து நோக்காமல் மாதர் மயக்கத்தில் விழுந்து ஜெனன மரண துன்பங்களை யேற்றேன். 83 வாயார வாழ்த்தி மகிழ்ந்துனைத்தான் போற்றாமல் காய மெடுத்துக் கலங்கினேன் பூரணமே. (பொ-ரை)எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீரை வாய்நிரம்பத் தோத்திரஞ் செய்து வணங்காமல் வீணாகத் தேகத்தைச் சுமந்து கலக்கமடைந்து கெட்டேன். 84 சந்திரனை மேகமது தான்மறைத்த வாறதுபோற் பந்தமுற யானுமுனைப் பார்க்கிலேன் பூரணமே. (பொ-ரை) எங்குநிறைந்துள்ள பொருளே! சந்திரனை மேகமானது மறைத்தவிதம்போல என்னிற் பாசம் பொருந்த அதனால் யான் தேவரீரைத் தரிசிக்கிலேன். 85 செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல் அந்தரமாய் நின்றங் கலைந்தேனான் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! செந்தாமரை மலர் போன்ற தேவரீர் திருவடிகளை நாடோறுந் தோத்திரஞ் செய்யாமல் ஒரு பற்றுக்கோடுமின்றி நின்று திரிந்து கெட்டேன். 86 நீர்மேற் குமிழிபோல் நிலையற்ற காயமிதைத் தாரகமென் றெண்ணிநான் தட்டழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நீரின்மீது தோன்றி நின்று அழியும் நிலையில்லாத குமிழிபோன்ற தேகமாகிய இதனை ஆதாரமாக நினைத்து நான் நிலைகுலைந்து கெட்டேன். 87 நெஞ்ச முருகி நினைந்துனைத்தான் போற்றிநெடு வஞ்சகத்தைப் போக்க வகையறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீரை மனமுருகித் தியானித்து வணங்கிப் பெரிய கரவினை யொழிக்க வழி யுணர்ந்தேனில்லை. 88 எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கு நிறைந்திருந்த துள்ள மறியா துருகினேன் பூரணமே. (பொ-ரை) எங்கும் நிறைந்துள்ள பொருளே! எள்ளுக்குள் எண்ணெய்போல எவ்விடத்திலும் வியாபித்திருப்பதை எனதுள்ளம் அறியப்பெறாமையால் இடர்ப்பட்டேன். 89 மாயா பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே ஓயாச் சனை மொழித்திலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மாயையின் காரியமாகிய உலக மயக்கத்திலே மூழ்கித் தணியாத பிறவியை ஒழித்துக்கொண்டேனில்லை. 90 பூசை யுடன்புவன போகமெனும் போக்கியத்தால் ஆசையுற்றே நானு மறிவழிந்தேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பிறர் தோத்திரஞ் செய்தலோடு உலக போகபாக்கியங்களில் விருப்பம் வைத்து நான் உணர்வு கெடப்பெற்றேன். 91 படைத்து மழித்திடுவாய் பார்க்கிற்பிர மாவெழுத்தைத் துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சிருஷ்டித்துச் சம்மாரஞ் செய்வாய் (அதைஉற்று) நோக்கின் பிரமன் எழுதும் எழுத்தாகிய தலைவிதியையும் அழித்து என்றும் இறவாது வாழுஞ் சிரஞ்சீவிபதத்திலும் விளங்கச் செய்வாய். 92 மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீயிருந்த தந்திரத்தை நானறியத் தகுமோதான் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தேவரீர் மந்திர வடிவமாகவும் ஆகம வடிவமாகவும் நான்கு வேத வடிவமாகவும் வீற்றிருந்த சூழ்ச்சியை நான் உணருந்தரத்தனோ? 93 அல்லாய்ப் பகலா யனவரத காலமெனுஞ் சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே. (பொ-ரை) இரவாய் பகலாய் எல்லாக்காலம் என்னப்படுஞ் சொல்லாய்ப் பகுத்தறியுஞ் சம்பந்தத்தை யுய்த்துணரேன். 94 நரகஞ் சுவர்க்கமென நண்ணு மிரண்டாயும் அரகரா வென்ப தறிகிலேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நரகலோகம், சுவர்க்கலோகம் என்று ஆன்மாக்கள் அடையத் தகுந்த இரண்டு லோகங்கள் ஏற்பட்டும் ஹர ஹரா என்று சொல்ல அறிந்தே னில்லை. 95 பாவபுண் ணியமென்னும் பகுப்பாய் படைத்தழித்திங் காவலையுண் டாக்கிவைத்த வருளறியேன் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பாவம், புண்ணியம் என்னும் பகுப்பாக உண்டாக்கி அவைகளைக் கெடுத்து ஆசையையும் உண்டாக்கிவைத்த திருவருட்டிறத்தை அறியேன். 96 சாந்தமென்றுங் கோபமென்றுஞ் சாதிபே தங்களென்றும் பாந்தமென்றும் புத்தியென்றும் படைத்தனையே பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! சாந்தமென்றும், கோபமென்றும், சாதி வேற்றுமைகளென்றும், பந்தமென்றும், புத்தியென்றும் உண்டாக்கினாய். 97 பாச முடலாய்ப் பசுவதுவுந் தானுயிராய் நேசமுட னீபொருளாய் நின்றனையே பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பாசமே தேகமாகவும் பசுவே உயிராகவும் விருப்பத்துடன் தேவரீர் பதிப்பொருளாகவும் எழுந்தருளி யிருக்கின்றீர். 98 ஏதி லடியா ரிரங்கியிகத் தில்வந்துன் பாத மதில்தாழப் பரிந்தருள்வாய் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! மாசில்லாத அடியவர்கள் மனமுருகி யிங்கே தேவரீரை யடைந்து தேவரீர் திருவடிகளில் வணங்க அன்போடு திருவருள் செய்வாய். 99 நானேநீ நீயேநா னாமிரண்டு மொன்றானால் தேனில் ருசியதுபோற் றெவிட்டாய்நீ பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! நானே நீயாகவும் நீயே நானாகவும் இரண்டற்று ஒன்றானால் தேனினது சுவைபோலத் தித்திப்பாக விருப்பாய். 100 முடிவிலொரு சூனியத்தை முடித்துநின்று பாராமல் அடியிலொரு சூனியத்தி லலைந்தேனே பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! தத்துவ முடிவிலேயுள்ள நிராதார வதுவை யென்னுட்படுத்தி நிலைத்து நில்லாமல் கீழுள்ள மாயையில் நிலைத்துக் கெட்டேன். 101 பூரண மாலைதனைப் புத்தியுட னோதினர்க்குத் தாரணியில் ஞானந் தழைப்பிப்பாய் பூரணமே. (பொ-ரை) எங்கு நிறைந்துள்ள பொருளே! பூரண மாலையென்னும் இதனை அறிவோடு (பொருளுணர்ந்து) பாராயணஞ் செய்பவர்கட்கு உலகத்திலே ஞானத்தைப் பெருகச் செய்வாய். 102 நெஞ்சொடு மகிழ்தல் அன்றுமுத லின்றளவு மாக்கையொடு சூழ்ச்சியுமாய் நின்ற நிலையறிய நேசமுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! பிறந்த நாள்முதல் இந்நாள்மட்டும் உடலோடு தந்திரமாக நிலைத்துள்ள உண்மையை உணர விருப்பங்கொண்டாய். 1 அங்கங் குணர்வா யறிவாகி யேநிரம்பி எங்கெங்கு மானதிலே யேகரித்தாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! அவ்வவ் விடங்கடோறும் உணர்வாகியும் அறிவாகியும் நிரம்பி எவ்வெவ்விடங்களிலுங் கலந்து நிற்கின்றாய். 2 அலையாத பேரின்ப வானந்த வெள்ளத்தில் நிலையா யுருவிறந்து நின்றனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மாறாத பேரானந்த வாரிதியில் நிலையாக உருவங்கெட்டு நின்றாய். 3 பாராமற் பதையாமற் பருகாமல் யாதொன்றும் ஓரா துணர்வுடனே யொன்றினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஒன்றையும் பாராமலும், பார்த்துப் பதை பதையாமலும். அநுபவியாமலும், ஆராயாமலும் அறிவுடனே இறைவனோடு கலந்தாய். 4 களவிறந்து கொலையிறந்து காண்பனவுங் காட்சியும்போய் அளவிறந்து நின்றதிலே யன்புற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! களவைநீக்கிக் கொலையைநீக்கிக் காட்டப்படும்பொருளும் அதைக்காணுங் காட்சியும் ஒழிந்து அளவு கடந்து நின்ற ஒன்றிலே விருப்பம் வைத்தாய். 5 பேச்சிறந்து சுட்டிறந்து பின்னிறந்து முன்னிறந்து நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! உரைகடந்து சுட்டுணர்வைத் தாண்டி வருங்கால மழிந்து சென்றகால மொழிந்து (போக்கு வரவில்லா) ஒன்றிலே நீ பெரிதும் விருப்பம் வைத்தாய். 6 விண்ணிறந்து மண்ணிறந்து வெளியிறந்து வொளியிறந்து எண்ணிறந்து நின்றதிலே யேகரித்தாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஆகாயத்தைக் கடந்து, நிலத்தைக் கடந்து, வெளிகுன்றி, ஒளி மங்கி, எண்ணைத் தாண்டி நின்ற ஒன்றிலே கலந்தாய். 7 பார்த்த விடமெங்கும் பரமெனவே யுட்புறம்புங் கோத்தபடி யுண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! கண்ட விடமெல்லாங் கடவுள் என்று சொல்லும்படி அகத்திலும் புறத்திலுங் கலந்துள்ள தன்மையை உண்மை யென்று கொண்டாய். 8 ஊரிறந்து பேரிறந்து வொளியிறந்து வெளியிறந்து சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஊரைக் கடந்து பேரைக்கடந்து ஒளி குன்றி வெளி நீங்கி புகழ்கெட்டு நின்ற ஒன்றிலே நிலைத்தாய். 9 ஆண்பெண் ணலியென் றழைக்கவரி தாய்நிறைந்து காண்பவரி தாயவிடங் கண்ணுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும் பகுத்துக் கூப்பிட முடியாமல் எங்கணும் ஒரு பெற்றியாய் நின்று பார்த்தற்கரிய ஓரிடத்தைப் பார்த்தாய். 10 ஆங்கார மச்ச மகற்றி யறிவினொடு தூங்காமற் றூங்கிச் சுகம்பெற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! கர்வம், பயம் இவைகளை நீக்கி அறிவுடனே தூங்காமல் தூங்கி இன்பம் அடைந்தாய். 11 ஆதியாய் நின்ற வகண்டபரி பூரணத்தைச் சாதியா நின்றவிடஞ் சார்வுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! எல்லாவற்றிற்குங் காரணமாக விருக்கின்ற அகண்டாகார வத்துவைத் தெரியத்தக்க இடத்தில் சேர்ந்தாய். 12 விருப்புவெறுப் பில்லாத வெட்ட வெளியதனில் இருப்பே சுகமென் றிருந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! விருப்பு வெறுப்பில்லாத சிதா காசத்தில் இருக்கின்றதே இன்பம் என்று கருதி அவ்விடத்தி லேயே தங்கினாய். 13 ஆருமுறாப் பேரண்டத் தப்புறத்து மிப்புறத்தும் நீரு முப்புமென்ன நிலைபெற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! எவரும் அணுகாத பெரிய அண்டத் திலே அப்பக்கத்திலும் இப்பக்கத்திலுஞ் சலமும் உப்பும்போல நின்றுவிட்டாய். 14 உடனாக வேயிருந்து முணரவரி யானோடு கடனீரு மாறும்போற் கலந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! என்னுடன் அத்துவிதமாகக் கலந்திருந்தும் அறிகின்றதற்கு அரியவனா யிருப்பவனோடு சமுத்திர சலமும் நதியும் போலக் கலந்துவிட்டாய். 15 நெடியகத்தைப் போக்கி நின்ற சழக்கறுத்துப் படிகத்துக் கும்பம்போற் பற்றினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மிக்க அகங்காரத்தை அழித்து அதனால் நிலைத்துள்ள குற்றத்தை யொழித்துப் படிகத்தாற் செய்யப்பட்ட குடத்தைப்போலாகி இறைவனைப் பற்றிக் கொண்டாய். 16 மேலாகி யெங்கும் விளங்கும் பரம்பொருளிற் பாலூறு மென்சுவைபோற் பற்றினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாய் எவ்விடத்திலும் ஒளிருங் கடவுளிடத்தில் பாலிலுள்ள மெல்லிய சுவைபோலக் கலந்தாய். 17 நீரொடுதண் ணாலிவிண்டு நீரான வாறேபோல் ஊரொடுபே ரில்லானோ டொன்றினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! சலத்தோடு தோன்றுங் குளிர்ந்த ஆலங்கட்டி யுடைந்து சலமாவதுபோல ஊர்பேரில்லாத கடவுளோடு கடவுளாகக் கலந்தாய். 18 இப்பிறப்பைப் பாழ்ப்படுத்தி யிருந்தபடி யேயிருக்கச் செப்பவரி தாயவிடஞ் சேர்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! இப்பிறவியைக் கெடுத்து என்றும் ஒரு படித்தாயிருப்பச் சொல்லுதற்கரிய விடத்தில் சேர்ந்ததாய். 19 மேலாம் பதங்களெல்லாம் விட்டுவிட் டாராய்ந்து நாலாம் பதத்தி னடந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! மேலாகிய பதவிக ளெல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆராய்ச்சி செய்து நான்காம் பதவியில் சென்றாய். (வி-ரை) நான்காம் பதவி - சாயுச்சியம். 20 கடங்கடங்க டோறுங் கதிரவ னூடாடி அடங்குமிடந் தானறிந் தன்புற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! ஒவ்வொரு பாண்டத்திலும் சூரிய பிம்பந் தோன்றிப் பாண்டம் உடைந்த வழிச் சூரியப் பிரதி பிம்பஞ் சூரியனில் அடங்குமிடத்தைத் தெரிந்துகொண்டு அன்பு செலுத்தினாய். (வி-ரை) கடம் - தேகம். சூரியன் - பிரமம். 21 கற்றவனாய்க் கேட்டவனாய்க் காணானாய்க் காண்பவனாய் உற்றவனாய் நின்றதிலே யொன்றுபட்டாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! கற்றவனாகவும் கேட்டவனாகவும் காணாதவனாகவுங் காண்பவனாகவுங் நண்ணினவனாகவும் நிலைத்துள்ள ஒன்றிலே கலந்தாய். 22 நாலு வகைக்கரண நல்குபுல னைந்துமொன்றாய்ச் சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! நான்குவித கரணங்களும் விடயங்களில் தாக்குவிக்கும் ஐம்புலன்களும் ஒன்றாகத் தூய்மை பொருந்தி நின்ற ஒன்றிலே கலந்தாய். 23 விட்டிடமும் தொட்டிடமும் விண்ணிடமு மண்ணிடமுங் கட்டுமொரு தன்மையெனக் கண்ணுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! விட்ட விடம் தொட்ட விடம் தேவலோகம் பூலோகம் இவை இறைவன் ஆணையால் கட்டுப்பட்டுள்ள ஒற்றுமை கண்டாய். 24 எந்தெந்த நாளு மிருந்தபடி யேயிழுக்க அந்தச் சுகாதீத மாக்கினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! எப்பொழுதும் மாறுதலின்றி ஒரு படித்தாய் விளங்க மேலான ஆனந்தமயமாய் விட்டாய். 25 வாக்கிறந்து நின்ற மனோகோ சரந்தனிலே தாக்கறவே நின்றதிலே தலைசெய்தாய் நெஞ்சமே. (பொ-ரை) வாக்கு மனங்கட்கு எட்டாத அகண்ட நிலையில் கரணத் தாக்குதல் இல்லாமல் மேன்மை பெற்றாய். 26 எத்தேச சமுநிறைந்தே யெக்கால முஞ்சிறந்து சித்தாய சித்தினிடஞ் சேர்ந்தனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! எந்நாட்டிலும் நிரம்பி எக்காலத்திலும் சிறந்து விளங்கும் அறிவுப் பொருளினிடத்துச் சேர்ந்தாய். 27 தாழாதே நீளாதே தன்மயம தாய்நிறைந்து வாழாதே வாழ மருவினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! குறுகாமலும் பெருகாமலும் என்றும் ஒரு பெற்றியாயுள்ள தன்வயமாக வியாபித்து வாழாமல் வாழச் சென்றாய். 28 உள்ளும் புறம்பு முவட்டாத வானந்தக் கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! அகமும் புறமுந் தெவிட்டாத பேரானந்தக் கள்ளைக் குடித்து நின்று அதிலே நோக்கஞ் செலுத்தினாய். 29 வாதனைபோய் நிட்டையும்போய் மாமௌன ராச்சியம்போய்ப் பேதமற நின்றவிடம் பெற்றனையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! உலக வாசனை யழிந்து, நிஷ்டையு மொழிந்து, பெரிய மோன ராஜ்ஜியமுஞ் சென்று நீ நான் என்னும் வேற்றுமைகெட நின்ற விடத்தை யடைந்தாய். 30 இரதம் பிரிந்துகலந் தேகமாம் வாறேபோல் விரகந் தவிர்ந்தணல்பால் மேவினையே நெஞ்சமே. (பொ-ரை) மனமே! இரசம் பிரிந்து உடனே கலந்து ஒன்றாமாறுபோல அவாக்களை யொழித்துச் சிவத்தோடு ஒன்றுபடக் கலந்தாய். 31 சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளு மாறேபோல் நீதிகுரு வின்றிருத்தாள் நீபெற்றாய் நெஞ்சமே. (பொ-ரை) மனமே! சூரியன் தன்னைச் சூழ்ந்துள்ள பனிச் சலத்தை அழிப்பதுபோல உனது அஞ்ஞானத்தை ஒழித்த சற்குருவின் திருவடிகளை அடைந்தாய். 32  பத்திரகிரியார் வரலாறு பத்திரகிரியார் அரச குலத்தில் தோன்றினவர்; சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர்; அறநெறி வழாது உஞ்சேனை மாகாளம் என்னும் பதியை யாண்டவர். அவரது அரசாட்சி காலத்தில் ஒருநாள் திருடர் பலர் ஒன்றுகூடி நகர்ப்புறத்திலே யுள்ள ஒரு குறுங்காட்டிலே திருக்கோயில் கொண்டு வீற்றிருந் தருளும் விநாயகக் கடவுள் திருச்சந்நிதியடைந்து பெருமானே! யாங்கள் இன்றிரவு அரசமாளிகை புகுந்து களவிடப் போகிறோம். தேவரீர் திருவருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து, ஊரை யடைந்து, நள்ளிரவில் அரண்மனை புகுந்து, தாம் விரும்பியவாறு பட்டாடைகளையும், பொன்னாபரணங்களை யும், மாணிக்கப் பதக்கங்களையும், பிறபொருள்களையும் திருடிக்கொண்டு சென்றார். அன்னார் செல்லுங்கால் தமக்குத் திருவருள் புரிந்த கணபதி ஆலயமடைந்து ஒரு மாணிக்க மாலையை அக்கடவுளுக்குச் சூட்டி வழியே போய்விட்டனர். அதுபோழ்து அர்த்த ராத்திரியாகையால்அம்மாணிக்கமாலை விநாயகர் திருக்கழுத்தில் விழாமல் அங்கு நிஷ்டைகூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில் விழுந்தது. பொழுது விடிந்ததும் அரசமாளிகையில் களவு நிகழ்ந்த செய்தி ஊரெங்கணும் பரவிற்று. அரசன் ஆணைப்படி வேவு காரர்கள் திருடர்களைத் தேடத் தொடங்கினார்கள். ஊர்ப் புறத்தேயுள்ள குறுங் காட்டுவழிச் சென்ற வேவுக்காரர்களிற் சிலர் விநாயகராலயத்தினுள் நிஷ்டை செய்து கொண்டிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் வேந்தன் மாணிக்கமாலை பொலிதலைக் கண்டு அவரைப் பற்றிப் பலவாறு துன்புறுத்தி னார். சுவாமிகள் நிஷ்டை கலைந்து வேவுகாரர்களைத் திருநோக்கஞ் செய்தருளினார். அவர்கள் அடிகளைப் பிடித்துத் தள்ளிக் கொண்டுபோய் அரசன் முன்னிலையில் நிறுத்தி னார்கள். பத்திரகிரி மன்னர் தீர விசாரியாது பட்டினத்தாரைக் கழுவேற்றுமாறு கட்டளையிடத் தண்டவினைஞர்கள் சுவாமி களைக் கழுமரத்தருகே அழைத்துச் சென்றார்கள். பெருமான் கழுமரத்தைத் திருநோக்கஞ் செய்தருளி என்செயலாவ தொன்று மில்லை என்னுந் திருப்பாசுரத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். உடனே கழுமரம் அக்கினியால் எரியுண்டு சாம்பராயிற்று. இச்செய்தி கேள்வியுற்ற அரசர்பெருமான் விரைந்து ஓடிவந்து சுவாமிகள் திருவடிக்கமலங்களில் அடியற்ற பனைபோல் விழுந்து தங்குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார். பட்டினத்தடிகள் ஞானதிருஷ்டியால் பத்திகிரி யாரது சத்திநிபாதநிலையை யுணர்ந்து நாய்க்கொரு சூலும் என்னுந் திருச்செய்யுளையருளிச்செய்து ஞானதீட்சை செய்தருளினார். பத்திரகிரியாரும் உள்ளத் துறவடைந்து ஞானாசிரியராகிய பட்டினத்தார் ஆணைவழி நிற்பாராயினர். பட்டினத்துச் சுவாமிகள் பத்திரகிரியாரை நோக்கி திருவிடை மருதூருக்குச் செல்க என்று கட்டளையிட்டுத் தாம் க்ஷேத்திர யாத்திரை செய்யச் சென்றுவிட்டார். பத்திரகிரியார் குருவாணைப்படி திருவிடைமருதூரை யடைந்து சிவயோகத்தி லமர்ந்திருந்தனர். பட்டினத்தார் பல தலங்களைத் தரிசித்துப் பலவகைப் பாக்களைப் பாடித் திருவிடைமருதூர் சேர்ந்தனர். பத்திரகிரியார் வீடுகடோறுஞ் சென்று பிச்சையேற்றுக் குருராயனை உண்பித்துச் சேடத்தைத் தாமுண்டு குருவின் திருவுள்ளக் குறிப்பின்படி மேலைக்கோபுர வாயிலிலிருந்து குருநாதனை வழிபட்டு வந்தனர். வருநாளில் ஒருநாள் பத்திரகிரியார் பிச்சையேற்று ஆசாரியாருக்கு நிவேதித்துத் தாஞ்சேடத்தை யுண்ணப்புகுங்கால், ஒரு பெட்டைநாய் பசியால் மெலிவுற்று வாலைக் குழைத்துக் கொண்டு வந்தது. அதனைக் கண்டதும் பத்திரகிரியார் இரக்க முற்று அதற்குச் சிறிது அமுதிட்டனர். அன்று தொட்டு அந்நாய் அவரை விட்டுப் பிரியாமல் அவ்விடத்திலேயே தங்கிவிட்டது. அந்நாய் முற்பிறப்பிலே அங்கதேயத்திலே விலைமாது வடிவந்தாங்கி யிருந்தது. அவ்விலைமாது இளையர், முதியர் என்னும் வேற்றுமையின்றிக் கூடிக் கலந்து பொருளீட்டி மது உண்டு தீயொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினாள். ஒருநாள் ஒரு பிரமசாரி குருவாணைப்படி அமுதுநாடி அத்தாசி இல்லம் போந்தான். அவள் தான் தூர்த்தர்களோடு உண்டு மிகுந்த சேடத்தை அப் பிரம்சாரிக்கு அன்பின்றி விளையாட்டாகத் தந்தாள். பிரமசாரி அதையுண்டு சென்றான். அவ்விலைமாது தான்புரிந்த பாவச்செயல்களின் காரணமாகப் பெட்டை நாயாகப் பிறந்தாள். அவள் பிரமசாரிக்குச் சேடமீந்ததன் பயனாகப் பத்திரகிரியார்பா லுறைந்து அவர் அளிக்குஞ் சேடத்தை யுண்ணும் பேறுபெற்றாள். பத்திரகிரியார் அந்நாயைப் பாதுகாத்து வந்தனர். வருங் கால் ஒருதினம் மருதவாணர் ஒரேழை வடிவந்தாங்கிப் பட்டினத்தடிகளிடஞ் சென்று ஐயா! பசியால் வருந்துகிறேன்; அன்னமிடும் என்று கேட்டார். அதற்குச் சுவாமிகள் மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்குச் செல்க என்றார். ஏழைக் கோலந் தாங்கிவந்த ஏழை பங்காளன் அங்ஙனே மேலைக் கோபுர வாயிலை யடைந்து அங்கிருந்த பத்திரகிரியாரைக் கண்டு ஐயா! கீழைக் கோபுர வாயிலில் ஒருவரிருக்கின்றார். அவரை யென் பசிக்கு அன்னமிடுமாறு கேட்டேன். அவர் மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி யிருக்கின்றான்; அங்கே செல்க என்று சொன்னார். அவர் சொற்படி யான் இங்கு வந்தேன். என் பசியை யாற்றும் என்றார். அது கேட்ட பத்திரகிரியார் அந்தோ! பிச்சையேற்கும் இந்த வோடும், எச்சில் தின்னும் இந்த நாயுமோ என்னைக் குடும்பி யாக்கின என்று கையிலிருந்த ஓட்டையெறிந்தார். அது நாயின் தலையிற்பட்டது. படவே ஓடுமுடைந்தது. நாயு மாண்டது. மருதவாணரும் மறைந்தனர். மாண்டநாய் ஞானி யெச்சிலுண்ட விசேடத்தால் காசி மகாராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தது. அரசன் பேரன்போடு ஞானவல்லியென்று நாமஞ்சூட்டி வளர்த்து வந்தான். ஞானவல்லி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து திருமணப்பருவம் அடைந்தாள். அரசன் ஞான வல்லியின் அறிவு குணஞ் செயலுக் கேற்ற ஒரு நாயகனைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தான். அதனை யறிந்த ஞானவல்லி ஒருநாள் தந்தைபால் சென்று ஐயனே! யான் யாருடைய வாழ்க்கைக்கும் உரியவளல்ல; திருவிடைமருதூரிலே மேலைக் கோபுர வாயிலிலே எழுந்தருளியுள்ள தவசிரேஷ்டருக்கே யுரியவள் என்று கூறினள். மன்னவன் பெண்ணின் மன உறுதியைக்கண்டு தெளிந்து அவள் விரும்பியவாறே அவளைத் திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஞான வல்லி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கி அடிநாய் மீண்டுந் திருவடி நாடி வந்தது என்றாள். பத்திரகிரியார் அவளது பக்குவநிலையை யறிந்து அவளது கையைப் பற்றிக் கொண்டு சென்று கீழைக்கோபுர வாயிலில் வீற்றிருந்தருளுந் தமது ஞான குருவள்ளல் திருமுன் நிறுத்தி சுவாமி! தேவரீர் எச்சிலுண்ட நாயினுக்கு இவ்விழி பிறவி யெய்தலாமோ என்று விண்ணப்பித்தார். பட்டினத்தடிகள் எல்லாஞ் சிவன் செயல் என்று திருவருளைத் தியானஞ் செய்ய, ஆண்டு ஒரு பெருஞ் சோதி தோன்றிற்று. அதில் பத்திரகிரியார் அப் பெண்ணுடன் புகுந்து இரண்டறக் கலந்தார். பத்திரகிரியார் திருநக்ஷத்திர தினம் பத்ர கிரிமன்னன் பால்வண்ண னாயதினஞ் சித்திரை மாமகமாஞ் செப்பு.  திருச்சிற்றம்பலம் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் விருத்தியுரையும் விநாயகர் வணக்கம் முத்தி தருஞான மொழியாம் புலம்பல்சொல்ல அத்தி முகன்றன் அருள்பெறுவ தெக்காலம் (பொ - ரை) மோட்சத்தை யளிக்கும் ஞானமொழியாகிய புலம்பலை யான் பாட யானைமுகக் கடவுளுடைய திருவருளைப் பெறுவது எந்தக்காலம்? (வி - ரை) எடுத்துக் கொண்ட காரியம் இடையூறின்றி யினிது முற்றுப் பெறற்பொருட்டு விநாயகக் கடவுளை முதற்கண் வழுத்துதல் தொன்றுதொட்ட மரபாதலின், ஈண்டு ஆசிரியரும் இம் முதற்பாவால் யானைமுகக் கடவுளை வழுத்துவா ராயினர். என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல் - முன்னரே யுனது தாள் முடிவுறப் பணிவரேல் - அன்னர் தஞ் சிந்தைபோ லாக்குதி யலதுனை - உன்னலார் செய்கையை யூறுசெய் திடுதிநீ - கந்தபுராணம். முத்தி - பந்தம் விட்ட விடம்; வீடு - முத்தி. ஞானத்தாற் கைகூடுவ தொன்றாகலான் முத்திதரு ஞான மொழி என்றார். ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணநல்ல வாகமஞ் சொல்ல வல்ல வாமென்னும், ஊனத்தா ரென்கடவ ரஞ்ஞானத்தா லுறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ் ஞானந்தான், ஆனத்தாலதுபோவ தலர்கதிர் முன்னிருள் போலஞ் ஞானம்விடப் பந்தமறு முத்தியாகும், ஈனத்தார் ஞானங்க ளல்லாஞான மிறைவனடி ஞானமே ஞானமென்பார் ஞானத்தா லரனை யருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம் ஞானநெறி யடைந்தவர் சிவனை - சிவஞானசித்தி. ஞான மொழியாம் புலம்பல் - ஞானமொழிகளால் ஆக்கப்படும் புலம்பல். ஞானிகள் தாம்பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறுவான் வேண்டிக் கைம்மாறற்ற பெருங் கருணையானே தங்கள் அநுபவத்தை வெளியிடுவ தியல்பாகலின் புலம்பல் சொல்ல என்றார். யான் பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம் என்றார் திருமூலர். அத்திமுகம் - யானைமுகம் - பிரணவ சொரூபம். முத்தி தரும் வேத மொழிந்த புலம்பல்சொல்ல என்றும் பாடம். நூல் ஆங்கார முள்ளடங்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமற் றூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம். (பொ - ரை) ஆணவத்தை அடங்கச்செய்து பஞ்சேந்திரி யங்களை யெரித்தொழித்துத் தூங்காமல் தூங்கி ஆனந்த மடைவது எந்தக்காலம்? (வி - ரை) ஆங்காரம் - ஆணவம்; அறியாமை அஞ்ஞானம் எனவும்படும். அஃது ஆன்மாக்களை அநாதியாக பந்தித்து நிற்பது. அதன் முனைப்பைக் கெடுத்துச் சத்தி குன்றச்செய்வதே முத்தியாகலான் அடக்கி என்றார். ஐம்புலன் புறப் பொருட்கண் பதிந்து அவற்றாலாகும் இன்பத்தை நுகருமாறு ஆசை யெழுப்பி ஆன்மாக்களின் சொரூபநிலையைக் கெடுப்பனவாகலின் சுட்டறுத்து என்றார். தூங்காமல் தூங்கல் - யோகநித்திரை; அறிதுயில் தூங்கிக்கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே - தூங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே - தூங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே - தூங்கிக் கண்டார் நிலைசொல்வ தெவ்வாறே திருமூலர். 1 நீங்காச் சிவயோக நித்திரைகொண் டேயிருந்து தேங்காக் கருணைவெள்ளந் தேக்குவது மெக்காலம் (பொ - ரை) இடையறாத சிவயோக நித்திரை செய்து கொண்டே யிருந்து, தெவிட்டாத அருள் வெள்ளம் பெருக் கெடுப்பது எந்தக்காலம்? (வி - ரை) இடையறாது கடவுளைத் தியானிப்பதே சிவ யோகமாம். அதனால் உண்டாகுந் துயில் அறிதுயிலாம். அத்துயில் கைவந்த பெரியோர்கள் கருவி கரணங்களுடன் கூடாமல் திருவருளிற் றிளைத்து நிற்பராகலான் தேங்காக் கருணைவெள்ளம் தேக்குவது மெக்காலம் என்றார். 2 தேங்காக் கருணைவெள்ளந் தேக்கியிருந் துண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம் (பொ - ரை) தெவிட்டாத அருள் வெள்ளம் பெருக் கெடுத்திருப்ப அதில் நிலைத்துப் புசிப்பதற்குப் புசியாமல் விட்டகுறை வந்து சேர்வது எந்தக்காலம்? (வி - ரை) உண்பதற்கு - அநுபவிப்பதற்கு. வாங்காமல் - அநுபவியாமல், விட்டகுறை - அநுபவியாமல் விடப்பட்டுக் குறைவாகவுள்ள விடயங்கள்; சஞ்சிதம். இது நசித்துவிடுமாயின் திருவருள் பெறுவது திண்ணம் என்றபடி. 3 ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். (பொ - ரை) நீங்காத துன்பத்தினால் மனந்தளர்ந்து வாட்ட முறாமல் ஒழியாத பிறவித் துன்பத்தை அழிப்பது எந்தக்காலம்? (வி - ரை) உலகத் துன்பம் உள்ளமட்டும் மனத்தளர்ச்சி யொழியாது. மனத்தளர்ச்சி யுள்ள மட்டும் பிறவித் துன்பம் நீங்காது என்றபடி. பிறவித் துன்பத்தை யொழிக்க முயல்வதே மக்கள் கடமை. அதனை யொழிக்க மனதை உலகத் துன்பத்தில் பதியாதிருக்குமாறு சரியையாதி திருத்தொண்டுகள் செய்ய வேண்டுமென்க. 4 மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். (பொ - ரை) ஒழியாத பிறவி மயக்கத்தைக் கெடுத்துத் தேகமென்னும் கோட்டையை வசப்படுத்துவது எந்தக்காலம்? (வி - ரை) பிறவாழ்வைப் பெறவேண்டியவாறு, காயாபுரிக் கோட்டை கைக்கொள்வது - சரீரசித்தி. 5 காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா வனுபூதி வந்தடுப்ப தெக்காலம். (பொ - ரை) சரீரசித்தி யடைவதற்குக் கெடாத சுவாநுபூதி கூடுவது எந்தக்காலம்? (வி - ரை) சுவாநுபூதியால் சரீரசித்தி கைகூடும் என்றபடி. மூன்று மடக்குடைப் பரம்பிரண் டெட்டுள - வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குல - நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட் - டூன்றி யிருக்க வுடலழியாதே திருமூலர். 6 சேயாய்ச் சமைந்து செவிடூமைபோற் றிரிந்து பேய்போ லிருந்துன் பிரமைகொள்வ தெக்காலம். (பொ - ரை) ஒரு பிள்ளையாகப் பிறந்து செவிடரைப் போலவும் ஊமைகளைப் போலவுந் திரிந்து பேய்பிடித்தவரைப் போல வாழ்ந்து தேவரீர் பயித்தியம் பிடிப்பது எந்தக்காலம்? (வி - ரை) புலனறிவில்லாச் சடங்களாகத் தோன்றுதலால் அறிவு விளக்கமுறா தாகலான் சேயாய்ச் சமைந்து என்றார். மக்கள் பிறவிதாங்கிப் புலன்களைப் புறப்பொருள் வழிவிடாமல் அவைகளை உள்முகமாக அடக்க வேண்டுமென்பார் செவிடூமை போற்றிரிந்து என்றார். இந்திரியங்களை விடயங்களிற் செலுத் தாதிருக்க வேண்டுமெனக் கூறியவாறு. பேய் பிடிக்கப் பட்டான் செயல்கள் யாவும் பேயின் செயல்களாகுமாறுபோலச் சீவன் செயல்கள் சிவன் செயல்களாக வேண்டுமென்பார் பேய்போ லிருந்து உன் பிரமை கொள்வது என்றார். உன் பிரமை கொள்வது - சிவத்தையே நினைத்துச் சிவமயமாவது. 7 பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்து பெண்ணைத் தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். (பொ - ரை) பேயைப்போலத் திரிந்தும், பிணத்தைப் போல ஓரிடத்திலிருந்தும், பெண்களைத் தாய்மார்கள் போலக் கருதித் தபத்தை முடித்துக்கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) பேய்போல் திரிவதும் பிணம்போல் கிடப்பதும் பெண்களைத் தாய்போல் நினைப்பதுந் தவமென்க. 8 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகங்காட்டி மால்காட்டு மங்கையரை மறந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) காலைக்காட்டி, கையைக்காட்டி, கண்கள், முகம் இவைகளைக்காட்டி, மயக்கத்தைக் காட்டும் பெண்களை மறந்திருப்பது எந்தக்காலம்? (வி - ரை) ஈண்டு மங்கையரென்றது வேசிகளை. பெண் ணாசையை யொழிக்கவேண்டு மென்றபடி. மண்ணாசை தன்னிற் பொன்னாசை தன்னிற் பெண்ணாசை நீத்தலரிதே பெரியோர் தமக்கும் என்றார் பரஞ்சோதியாரும் வேலங்காடு தடங்கண்ணார் வலையுட்பட்டுன் னெறிமறந்து - மாலங்காடி மறந்தொழிந்தேன் மணியேமுத்தே மரகதமே - சுந்தரர். 9 பெண்ணினல் லாராசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டு மூடிக் கலந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) அழகிய மகளிராசையென்னும் பித்தை யொழித்து இரண்டு கண்களையும் மூடித் தேவரீரோடு அத்துவிதபாவனை யுற்றிருப்பது எந்தக்காலம்? (வி-ரை) பெண்ணாசை யுள்ளமட்டுஞ் சிவயோகங் கைகூடா தென்றவாறு. மையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக் - கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன் - ஐநெறிந் தகமி டெற்றே யடைக்கும்போ தாவி யார்தாம் - செய்வதொன் றறிய மாட்டேன் றிருப்புக லூர னீரே - திருநாவுக்கரசர். 10 வெட்டுண்ட புண்போல் விரிந்தவல்குற் பைதனிலே தட்டுண்டு நிற்றல் தவிர்வதுவு மெக்காலம். (பொ - ரை) வெட்டுப்பட்ட புண்ணைப்போல பிளவு பட்டுள்ள அல்குற் பையிலே விழுந்து சிக்குப்பட்டு நிற்பதை யொழிப்பது எந்தக்காலம்? 11 ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமல் தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம். (பொ - ரை) என்றும் ஆறாத புண்ணில் அழுந்தியிராமல் தெளிவுறாத சிந்தையைத் தெளிவுறச் செய்வது எந்தக்காலம்? 12 தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே சிந்தை தனிற்கண்டு சிக்கறுப்ப தெக்காலம். (பொ - ரை) அப்பன், அன்னை, பிள்ளைகள், உடன் பிறந் தவர்கள் ஆகிய இவர்களெல்லாரும் பொய்யென்று மனதில் உறுதியாகக்கொண்டு அச்சிக்கை யறுப்பது எந்தக்காலம்? (வி - ரை) தந்தை, தாய், மனைவி முதலியோரையே பொருளாகக்கொண்டு அவர்கள் நிமித்தம் பாடுபட்டுழைத்துக் கடவுளைக் கருதாதிருப்பது அறியாமை யென்றபடி. மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும் - வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே என்றும் எத்தாயார் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடுஞ் சும்மாடாம் எவர்நல்லார் - செத்தால்வந்து உதவுவார் ஒருவரில்லை என்றும், தந்தையார் தாயார் தாரமார் புத்திரரார் தரந்தா மாரே வந்தவா றெங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கேது மகிழவேண்டாம் என்றுந் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய் திருத்தலைக் காண்க. 13 மன்னுயிரைக் கொன்று வதைத்துண் டுழலாமல் தன்னுயிர்போ லெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். (பொ - ரை) பிறவுயிர்களைக் கொன்று வதைத்து அவைகளைத் தின்று திரியாமல் அவைகளைத் தன்னுயிர்போல் எண்ணித் தவத்தைப் பூர்த்திசெய்து கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) எல்லா வுயிர்களையுந் தன்னுயிர்போல் கருதி அவைகளுக்குத் தீங்கு செய்யாதிருப்பதே தவமென்க. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை - அற்றே தவத்திற் குரு கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி - எல்லா உயிருந் தொழும் - திருக்குறள். கொல்லா விரதங் குவலயமெல் லாம் ஓங்க - எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை பராபரமே கொல்லா விரதங் கொண்டாரே நல்லோர்மற் - றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே - தாயுமானார். 14 பாவியென்றே பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல் ஆவிநின்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம். (பொ - ரை) பாவியென்கிற பெயரைத் தாங்கிக் கொடிய நரகத்தில் வீழாமல் ஆன்மா நிற்கின்ற சூழ்ச்சியைத் தெரிந்து கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவியென்ற நாமம் படையாதே என்றார் பட்டினத்தடிகள். ஆவிநின்ற சூத்திரம் - ஆன்மா நிற்கின்ற சூழ்ச்சி; ஆன்மா உடலில் கலந்துள்ள உண்மையை அறிவது; ஆன்மாவைத் தேகமாகக் காணாமல் ஆன்மாவாகவே காணுதல்; தன்னைத்தானறிதல். ஆன்மாவைத் தேகமாகக் கொண்டுள்ள மட்டும் பாவியென்னும் பழிப்புக்கு இடமுண்டென்பது கருத்து. 15 உளியிட்ட கல்லு முருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம். (பொ - ரை) உளியால் செதுக்கப்பட்ட கல்லும், உருவாக அமைத்த செவ்விய சாந்தும், புளியினால் துலக்கப்பட்ட செம்பும் பொருளாகத் தோன்றுவது எந்தக்காலம்? (வி - ரை) கல்லினாலுஞ் சாந்தினாலுஞ் செம்பினாலுஞ் செய்யப்பட்ட உருவங்களையே ஆலயங்களில் அமைத்து மக்கள் வழிபடுகின்றார்கள்; அவைகளைக் கல்லாகவுஞ் சாந்தாகவுஞ் செம்பாகவுங் கொண்டு வழிபடுவோர் மேலும் மேலும் அஞ்ஞானத் தழுந்துவர். கல், சாந்து, செம்பு என்னும் பாவனை யேயின்றி அவைகளைச் சிவமாகப் பாவித்து வழிபடுவோர் விரைவில் ஞானம்பெற் றின்புறுவர். அது பற்றியே யீண்டு உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும் - புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் என்றார். பொருள் - சிவம். சிலாபாவனை யுள்ளமட்டுஞ் சிவபாவனை தோன்றா தென்பது கருத்து. திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச் சிவ னெனவே கண்டவர்க்குச் சிவனுறைவனங்கே - உருக்கோலி மந்திரத்தா லெனநினையு மவர்க்கும் உளனெங்கும் இலனிங்கு உளனென் பார்க்கும் - விருப்பாய வடிவாகி யிந்தனத்தின் எரிபோல் மந்திரத்தில் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும் - உருக் காண வொண்ணாத பான்முலைப்பால் விம்மி ஒழுகுவது போல் வெளிப்பட் டருளுவ னன்பர்க்கே - சிவஞான சித்தியர். 16 வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும் வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) உல்லாசத்திலும் அலங்காரத்திலும் பாட்டிலும் காலத்தைச் செலவழிக்கும் வழக்கங்களை யெல்லாம் மறந்திருப்பது எந்தக்காலம்? 17 பட்டுடை பொற்பணியும் பாவனையுந் தீவினையும் விட்டுவிட் டுன்பாதம் விரும்புவது மெக்காலம். (பொ - ரை) பட்டாடைகளையும், பொன்னாபரணங்களையும், போலி நடிப்பையும், கொடிய பாவங்களையும் விட்டொழித்துத் தேவரீர் திருவடிகளை விரும்புவது எந்தக்காலம்? 18 ஆமைவரு மாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல் ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம். (பொ - ரை) ஆமையானது தன்னை நெருங்கிவரும் மனிதரைப் பார்த்துத் தன் ஐந்துறுப்புக்களையும் ஒடுக்கிக் கொள்வதுபோல மோனநிலையை யடைந்து ஐம்புலன்களையும் ஒடுக்கிக்கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) ஆமை ஐந்துறுப்புக்களையும் நினைத்தபோது அடக்கிக் கொள்ளும் இயல்புடைமையான், ஐந்துறுப்படக்கி என்னும் ஒருபெயர் பெற்றிருக்கிறது. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக் க லாற்றின் - எழுமையும் ஏமாப் புடைத்து - திருவள்ளுவர். 19 தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங் கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம். (பொ - ரை) பல்லக்கு சத்திரம் பணப்பை வீடு இவைகளைக் கண்டின்புற வேண்டுமென்னும் எண்ணம் ஒழிவது எந்தக் காலம்?. 20 அத்த னிருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ் செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம். (பொ - ரை) சிவபிரான் எழுந்தருளியுள்ள தானத்தை ஆராய்ச்சிசெய்து கண்டு நாடோறும் இறந்த பிணத்தைப் போலத் திரிவது எந்தக்காலம்? (வி - ரை) அத்தனிருப்பிடம் - தத்துவங் கடந்தவிடம். ஆராய்ச்சி செய்வது - தத்துவத்தை யாய்வது. பிணத்திற்கு எவர் என்ன செய்யினும் விருப்பு வெறுப்புத் தோன்ற மாட்டா. அதுபோல உலகத்தார் இகழ்ச்சி புகழ்ச்சிகளை நாடாது தேகப்பற்றின்றி யிருக்கவேண்டுமென்பது. தேகப்பற்றில்லா ஞானிகள் பிணம்போன்று செய்கையின்றி உலவுவராகலான் சவம் போற் றிரிதல் என்றார். செத்தாரைப் போலே திரி என்றார் பட்டினத்தடிகளும். பிறவற்றை யூகித்துக்கொள்க. 21 ஒழிந்ததரு மத்தினைவைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய் கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். (பொ - ரை) பாவமில்லாத பதி புண்ணியத்தை உறுதியாக வைத்துக்கொண்டு உள்ளே யிருக்கின்ற எலும்பு வெள்ளெலும் பாகித் தசை கழிந்தசலம் போலக்கிடந்து தேவரீரையினிக் காண்பதுஎந்தக்காலம்? (வி - ரை) ஒழிந்த - பாவத்தினின்றும் விலகிய. ஈண்டுத் தருமம் புண்ணியத்தின் மேற்று. உள்ளெலும்பு வெள்ளெலும்பாய் - உடல் வற்றி. ஒழிந்த கருத்தினை என்றும் பாடம். 22 அற்ப சுகமறந்தே யறிவையறி வாலறிந்து கொப்பத்தில் வீழ்ந்துகொண்டு கோளறுப்ப தெக்காலம். (பொ - ரை) உலகமென்னும் படுகுழியில் வீழ்ந்து கொண்டு, சிறு இன்பத்தை மறந்து, அறிவை அறிவாலறிந்து, அஞ் ஞானத்தை யொழிப்பது எந்தக்காலம்? (வி - ரை) கெர்ப்பம் என்றும் பாடம். கொப்பம் - படுகுழி. கோள் - குற்றம். அஞ்ஞானம் அற்பசுகம் - தோன்றி நின்றழியுஞ் சிற்றின்பம். அறிவை - சிவத்தை. அறிவு சிவமிரண்டென்ப ரறிவிலார் - அறிவு சிவமாவ தாரு மறிகிலார் - அறிவு சிவமாவ தாரு மறிந்தபின் - அறிவே சிவமா யமர்ந்திருப்பாரே - திருமூலர். அறிவை யறிவால் அறிவதே யழியாவின்பம். அறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே என அருணகிரிநாதர் திருவாய் மலர்ந்திருத்தல் காண்க. 23 கருப்படுத்தி என்னையமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் உருப்படுத்தி யாள வுடன்படுவ தெக்கலாம். (பொ - ரை) என்னை மனிதனாகப் பிறப்பித்த பின்னர் யமன் என் கையைப் பற்றிக்கொள்ளா முன்னர் சிவரூபந் தந்து ஆண்டருளத் திருவுளங்கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) கருப்படுத்தி - பிறப்பித்து. மனிதப்பிறிவி யெடுத்தவர்கள் யமன்கையி லகப்படாமல் சிவலோகமடைய முயற்சிசெய்ய வேண்டுமென்பது. யமபயமின்றிச் சிவனடி சேர வேண்டுமாயின் அவனடிக்குத் தொண்டுசெய்ய வேண்டுமென்க. கற்றுக் கொள்வன வாயுள நாவுள - இட்டுக் கொள்வன பூவுள நீருள - கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் - ஏற்றுக் கோநம னால்முனி யுண்பதே - அப்பர் சுவாமிகள். 24 தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள்முன் சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம். (பொ - ரை) தூண்டு விளக்கு அவிந்துவிட இருள் தொடர்ந்து மூடிக்கொண்டாற்போல இறந்தும் பிறந்தும் வந்த வழியைத் தெரிந்துகொள்வது எந்தக்காலம்? (வி - ரை) வெளிச்சமும் இருளும் போலப் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன என்றபடி. 25 தூரியின் மீன்போற் சுழன்றுமனம் வாடாமல் ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம். (பொ - ரை) வலையிற் சிக்கிய மீனைப்போல மனமலைந்து வருந்தாமல் குருநாதனைத் தேடி அவனுடைய திருவடியைவணங்குவதுஎந்தக்காலம்?26 .v©û றுகமிருந்து மெய்தாத வீடுபெற வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம். (பொ-ரை) எண்ணூறு யுகம் உலகத்தில் வாழ்ந்தாலும் அடையமுடியாத மோட்சத்தையடைய வெள்ளிய விபூதி யணிந்து ஒளிர்வது எந்தக்காலம்? (வி - ரை) எத்தனைநாள் உலகத்தி லிருந்தாலும் விபூதி நெறியாகிய சைவசமயத்தை யடைந்தே முத்திபெற வேண்டு மென்பது. விபூதி - அருட்சத்திக்குறி. பராவண மாவது நீறு என்றார் ஞானசம்பந்தரும். நீறு மாசில்லா மனத்தைக் காட்டுங் குறியென்பது ஆன்றோர் கொள்கை. பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள் என்றார் சேக்கிழார் பெருமான். உள்ளே மாசினைப் பொதியவைத்து வெளியே நீறிடுவதால் பயன் சிறிதுமில்லை யென்க. வெளியே மாத்திரம் வெண்ணிற விபூதி தரித்துப் பாவ காரியங்களைச் செய்வோர் சைவராக மாட்டார். 27 அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற் சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) போலி வேடங்களைத் தரித்து இங்கு அலைந்து உழலாமல், சிவவேடங்களைத் தரித்துப் பெருமை பெற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை)அவவேடம் - போலிவேடம்; (வேளியே மாத்திரம் விபூதி ருத்திராட்சங்களைத் தரித்து மனத்தூய்மை யின்றி அதிக்கிரமச் செயல்களைப் பழி பாவத்துக்கு அஞ்சாமல் செய்வோர் அவவேடக்கார ரெனப்படுவர்.) வேடநெறி நில்லார் வேடம் பூண்டென் பயன் - வேடநெறி நிற்போர் வேட மெய் வேடம் - திருமந்திரம். சிவவேடம் - விபூதி ருத்திராட் சதாரணம். விபூதி - தூய்மைக்குறி. ருத்திராட்சம் - ஜீவ காருண்ணியக் குறி. (மனந்தூயராய் ஜீவர்கள் மாட்டு இரக்கமுடையார் சிவவேடக் காரராவர்.) செம்மலர் நோன்றாள் சேரவொட்டா அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலற நேயமு மலிந்தவர் வேடமும் - ஆலயந்தானும் அரனெனத் தொழுமே - மெய்கண்டார். 28 அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன் தொண்டருக்குத் தொண்டனெனத் தொண்டுசெய்வ தெக்காலம். (பொ - ரை) தேவர்கள் பொருட்டு விஷத்தைப் பானஞ் செய்து சிற்சபையில் நடம்புரியுஞ் சிவபெருமானுடைய அடியவர்க்கு அடியவனென்று அவர்கட்குத் தொண்டுசெய்வது எந்தக்காலம்? (வி - ரை)தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் நஞ்சுண்ட வரலாற்றைக் கந்தபுராணம் முதலிய புராணங்களிற் காண்க. சிவனடியார்க்கு அடியவரை வழிபடுவது பெறும் பேறாகலான் தொண்டருக்குத் தொண்டனெனத் தொண்டு செய்வது என்றார். அடியார்க்கு மடியேன் அடியார்க்கு மடியேன் என்று திருத்தொண்டத்தொகையில் வன்றொண்டர் பெருந்தகை யாரும், அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் - இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே எனத் தாயுமானாரும் அருளிச் செய்திருத்தல் காண்க. 29 பன்றி வடிவெடுத்துப் பாரிடத்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்கலாம். (பொ - ரை) நாராயணமூர்த்தி வராக உருக்கொண்டு பூமியை அகழ்ந்து சென்றுங் காணாத மலைமேலுள்ள விளக் கொளிபோன்ற சிவபெருமானைத் தோத்திரஞ் செய்வது எந்தக்காலம்? (வி - ரை) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை என்றார் மாணிக்கவாசகரும். குன்றில் என்பது திருவண்ணாமலையை யுணர்த்துங் குறிப்பு. 30 தித்திக்குந் தெள்ளமிர்தைச் சித்தாந்தத் துட்பொருளை முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். (பொ - ரை) இனிக்குந் தெள்ளிய அமிர்தமும், சித்தாந் தத்திற் போந்த இரகசியப் பொருளும், மோட்சத்துக்கு வித்து மாகிய சிவபரஞ்சுடரை முன்னந் தியானஞ் செய்வது எந்தக் காலம்? (வி - ரை) கருவிகரணங்களைக் கடந்து சிவத்தில் உள்ளத்தைப் பதியச்செய்த அன்பர்கட்கு அச்சிவந் தேவாமிர் தம் போன்று இனிமை பயக்குமென்க. சட்டோ நினைக்கமனத் தமுதாஞ் சங்கரனை என்றார் வாதவூரடிகளும். உலகிலுள்ள பலகோடி சமயங்கள் பொருளாக் கொண்டுள்ள யாவும் தத் துவங்களேயாம். சிவ சித்தாந்த மொன்றே தத்துவங் கடந் தொருளிருஞ் சிவத்தைப் பொருளாகக் கொண்டுள்ளது. அது பற்றியே சித்தாந்தத் துட்பொருளை என்றார். சித்தாந்தத்தே சீவன்முத்தி சித்தித்தலாற் - சித்தாந்தத்தே நிற்பர். முத்தி சித்தித்தவர் - சித்தாந்த வேதாந்தஞ் செம்பொ ருளாதலால் - சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே - திருமூலர். புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன் மிருதிவழி யுழன்றும் புகலுமாச்சிரம - அறத்துறைகளவை யடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பல தெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ் - சிறப்புடைய புராணங்களுணர்ந்தும் வேதச்சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற்சைவத் - திறத்தடைவ ரதிற்சரியை கிரியாயோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர் சித்தாந்தத்தே சிவன்றன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றிலே சீவன்முத்தராக - வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந்தம் பொழிந்துவரும் பிறப்பை யறுத்து - முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பனென்று மொழிந்திடவும் உலகரெலா மூர்க்கராகிப் - பித்தாந்தப் பெரும்பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவ ரிது வென்ன பிராந்தி - அருணந்தி சிவாசாரியார். புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப் புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப் - பிறப்பிலதாய் இருள் வெளி போற் பேதமுஞ் சொற்பொருள் போற் பேதா பேதமின்றிப் பெருநூல் சொன்ன - அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாகுஞ் - சிறப்பினதாய் வேதாந்தந் தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம். உமாபதி சிவாசாரியார். முத்தாந்த வீதிமுள ரித்தொழும் அன்பருக்கே - சித்தாந்த வீதிவருந் தேவேபராபரமே - தாயுமானார். 31 வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே ஏகாந்த மாக விருப்பதினி யெக்காலம். (பொ - ரை) வாயினால் வேதவேதாந்தங்களை யெல்லாம் பேசுதலை அறவே யொழித்து ஏகாந்தமாக நிஷ்டை கூடி யிருப்பது எந்தக்காலம்? 32 மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல் உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். (பொ - ரை) பயனில்லா வேறு இடங்களைத் தேடி எனது ஜீவியகாலத்தை வீணாகக்கழியாமல், ஆன்மாக்களுக்கென்று ஏற்பட்டுள்ள அருளிடத்தைத்தேடி அதில் யோகநித்திரை செய்வது எந்தக்காலம்? 33 இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். (பொ - ரை) இன்றைக்கு உயிரோ டிருப்பவர்கள் நாளைக்கு உயிரோடு வாழ்வது பொய்யென்று நியாயசபையிலுள்ள அறிஞர்கள் கூறுந்தன்மையை அறிவது எந்தக்காலம்? (வி - ரை) இன்றுளேன் நாளை யில்லேன் இன்றுளார் நாளையில்லை யெனும் பொருள் - ஒன்றுமோரா துழிதரும் ஊமர்காள் - அன்று வானவர்க் காகி விடம் உண்ட - கண்டனார் காட்டுப் பள்ளிகண் டுய்மினே - திருநாவுக்கரசர். நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு - திருவள்ளுவர். இன்றைக் கிருப்பாரை நாளைக் கிருப்ப ரென் றெண்ணவோ திடமில்லை - தாயுமானார். 34 கஞ்சா வபினியுடன் கள்ளுண்டு வாடாமற் பஞ்சா வமிர்தம் பருகுவது மெக்காலம். (பொ - ரை) கஞ்சா அபினியோடு கள்ளைக் குடித்துக் கெடாமல் பஞ்சாமிர்தத்தை உண்பது எந்தக்காலம்? (வி - ரை) புறப்பூசை பஞ்சாமிர்தம்: பால், தயிர், நெய், சர்க்கரை, பழம். அகப்பூசை பஞ்சாமிர்தம்: சந்திர மண்டலத்தி னின்று பொழியும் அமிர்ததாரை. 35 செஞ்சலத்தி னாற்றிரண்ட செனனமோட் சம்பெறவே சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். (பொ - ரை) செந்நீரால் வடிவங்கொண்ட பிறப்பானது துன்பத்தினின்றும் மோட்சமடைய உலகக் கவலைகளை விடுத்துத் தேவரீர் திருவடிகளை யடைவது எந்தக்காலம்? 36 கும்பிக் கிரைதேடிக் கொடுப்பா ரிடந்தோறும் வெம்பி திரிகை விடுப்பதினி யெக்காலம். (பொ - ரை) வயிற்றுக்கு ஆகாரந் தேடும்பொருட்டுப் பொருள் கொடுப்பவர்கள் வீடுகடோறும் வருந்தி யுழலுவதைத் தவிர்ப்பது இனி எந்தக்காலம்? (வி - ரை)வயிற்றின் பொருட்டு உலகத்தில் வாழ்வது அறியாமை யென்றபடி. 37 ஆடுகின்ற சூத்திரந்தா னறுமளவு மேதிரிந்து போடுகின்ற நாள்வருமுன் போற்றுவது மெக்காலம். (பொ - ரை) நடமாடுகின்ற தேகமானது சாகுமட்டு முழன்று சாகுநாள் வருவதற்கு முன்னரே தேவரீரைத் தோத்திரந் செய்வது எந்தக்காலம்? (வி - ரை) ஆடுகின்ற சூத்திரம் - தேகம்; சூத்திரக்கயிரிலுள்ள மட்டும் ஆடும் பாவைபோன்றலின் நடமாடுங் கோயில் என்றார் திருமூலர். அறுமளவும் - சூத்திரக்கயிறு அறுமட்டும். உடலி னின்றும் உயிர் பிரியுமட்டும்; தளருமட்டு மெனலுமாம். 38 நவசூத் திரவீட்டை நானென் றலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். (பொ - ரை) ஒன்பது துவாரமுடைய தேகத்தை நான் என்று சொல்லித் திரியாமல் சிவசூத்திரத்தைத் தெரிந்து உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) தேகத்தை நான் எனக் கொள்வோர் தேகான்ம வாதிகள், நாத்திகர். அவர்கள் தேகத்தையே பொருளாகக் கொள்ளாமல் மீண்டு மீண்டுந் தேகத்தையே தாங்கும் இழி பிறவி யடைவார்களென்க. தேகத்துக்கு வேறாக ஆன்மா என்பதொன்றுள தென்றும் அவ்வான்மாவை உடலுட் படுத்தி யியக்குஞ் சூத்திரதாரி சிவபிரான் என்றும் அநுபவத்தில் அறிவதே அறிவாகலான் சிவசூத்திரத்தை தெரிந்தறிவ தெக்காலம் என்றார். நவசூத்திரம்போட்டு நானல நீயென் றிருந்த எனவும் பாடம். 39 மறந்து மலசலங்கள் மாயும்புழுக் கூட்டைவிட்டுக் கரந்து னடியிணைக்கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். (பொ - ரை) மறப்புண்டாகி மலசலங்கள் தாமே யொழுக இறக்குங் கிருமிகள் நிறைந்த உடலை விடுத்து நீங்கித் திருவருளில் ஒளித்துத் தேவரீர் இரண்டு திருவடிகளின் கீழ் இரண்டறக் கலந்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) மறந்து - அறிவுகெட்டு. கூட்டைவிட்டு - தன்னைத் தேகமாகக் கருதும் அறியாமையினின்றும் நீங்கி. கரந்து - ஆன்மாவிற்குத் தாரகமாயுள்ள திருவருளில் மறைந்து தாயாகிய திருவருட்டுணையால் தந்தையாகிய சிவபிரானிடஞ் சேர வேண்டு மென்பது சித்தாந்தம். மாயநட் போரையும் மாயா மலமென்னும் மாதரையும் - வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் - தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந் - தேயுமதே நிட்டையென்றா னெழிற்கச்சி யேகம்பனே - பட்டினத்தார். ஊனறியா தொன்று முயிரறியா தொன்றுமிவை - தானறியா தாரறிவார் தாம் - உமாபதிசிவம்.40 இம்மைதனிற் பாதகனா யிருவினைக்கீ டாயெடுத்த பொம்மைதனைப் போட்டுன்னைப் போற்றிநிற்ப தெக்காலம். (பொ - ரை) இப்பிறவியில் பாவத்தைச் செய்தவனாய், இருவினைக்குத் தகுந்தபடி யெடுத்த பொம்மையாகிய உடலை நீக்கித் தேவரீரைத் துதிசெய்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) இப்பிறவியில் செய்யும் பாவமே மறுபிறப்புக்கு வித்தாக வருதலின் இம்மையில் பாதகனாய் இருவினைக் கீடா யெடுத்த என்றார். இப்பிறவியிற் பாவஞ் செய்யாமல் இறை பணி செய்து காலங்கழிக்க வேண்டுமென்றபடி. நாளவமே போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே - ஆளாய செய்துய்வோம் என்றார் ஞானசம்பந்தர். 41 உப்பிட்ட பாண்ட முடைந்துகருக் கொள்ளுமுன்னே அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம். (பொ - ரை) உப்புப் பானை போன்ற தேகம் அழிந்து மறு பிறவி யெடுப்பதற்கு முன்னர்க் கங்கை தரித்த சடாபாரத்தை யுடைய சிவபிரானுக்கு அடிமைப்படுவது எந்தக்காலம்? (வி - ரை) தேகமழிவதற்கு முன் கடவுளுக்கு அடிமைப்பட வேண்டுமென்பது. முன்னே யுரைத்தான் முகமனே யொக்கு மிம்மூவுலகு, அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ - உன்னை நினைந்தே கழியும் என்னாவி கழிந்த தற்பின் - என்னை - மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டி யதே நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக்கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு, பாய்ந்தொருத்தி படர்சடை மேற் பயிலக்கண்டு படஅரவும் பனிமதியும் வைத்தசெல்வர் - தாந்திருத்தித் தம்மனத்தையொருக்காத் தொண்டர் தனித் தொருதண் டூன்றிமெய் தளராமுன்னம் - பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீராகில் பொல்லாப் புலால்துருத்தி போக்கலாமே - தேவாரம். 42 சேவை புரிந்து சிவரூபக் காட்சிகண்டு பாவை தனைக்கழித்துப் பயனடைவ தெக்காலம். (பொ - ரை) வழிபாடு செய்து சிவரூபங்கண்டு பெண் ணாசையை யொழித்து அடையவேண்டிய பயனை அடைவது எந்தக்காலம்? (வி - ரை) ஆசை யறுப்பதற்கு வழி சிவசேவையுஞ் சிவ தரிசனமுமென்பது. பாவை - தேகமுமாம். கிழித்து என்றும் பாடம். 43 காண்டத்தை வாங்கிக் கருமேக மீண்டதுபோல் பாண்டத்தை நீக்கிப் பரமடைவ தெக்கலாம். (பொ - ரை) கரியமேகமானது கடல்நீரைக் குடித்துத் திரும்பினதுபோலத் தேகத்தை யொழித்துச் சிவத்தை யடைவது எந்தக்காலம்? 44 சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல் ஊற்றைச் சடம்போட் டுனையடைவ தெக்காலம். (பொ - ரை) சோற்றுத் துருத்தியாகிய உடலைச் சுமந்து திரிந்து வருந்தாமல், அவ்வூத்தைத் தேகத்தை யொழித்து விட்டுத் தேவரீரை அடைவது எந்தக்காலம்? 45 தொடக்கைச் சதமெனவே சுமந்தலைந்து வாடாமல் உடுக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம். (பொ - ரை) தேகத்தையே நிலையுள்ள பொருளாகக் கொண்டு சுமந்து உழன்று வருந்தாமல், தத்துவங்களைக் களைந்து தேவரீரை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) தொடக்கை - தேகத்தை; தொடக்கு - கட்டு, சிக்கு. உடுக்கை - உடுப்பு. ஆன்மாவிற்கு உடுக்கை தத்துவங்கள். தத் துவங்களைக் களைந்தே சிவத்தை யறியவேண்டு மாகலான் உடுக்கைக் கழற்றி உனையறிவ தெக்காலம் என்றார். ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் - கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் - திருமந்திரம். 46 ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். (பொ - ரை) ஆசை யென்னும் வலையிற் சிக்கிக் கெடாமல் நாதமயமான மணிவிளக்கில் இரண்டறக் கலந்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) ஓசை - நாதம். மணித்தீபம் - சிவசோதி. 47 கூறரிய நால்வேதங் கூப்பிட்டுங் காணாத பார ரகசியத்தைப் பார்த்திருப்ப தெக்காலம். (பொ - ரை) சொல்லுதற்கரிய நான்கு வேதங்களும் அழைத்துங் காணாத பெரிய இரகசியப் பொருளைக் காண்பது எந்தக்காலம்? (வி - ரை) அல்லையீ தல்லையீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்திளைக்குமிச் சுந்தரன் என்றார் பரஞ் சோதி முனிவரும். மறைக ளீறுமுன் தொடரொணாதநீ என்பது திருவாசகம். 48 புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பி னிருளகல்வ தெக்காலம். (பொ - ரை) புல்லாகவும், மிருகமாகவும், புழுவாகவும், மனிதனாகவும் பிறந்தபிறப்புகளின் பந்தத்தைப் போக்குவது எந்தக்காலம்?. (வி - ரை) பிறவிக்கு மூலவித்தா யிருப்பது ஆணவமல மாகலான் பிறப்பின் இருள் என்றார். இருள் - ஆணவம். 49 தக்கும்வகைக் கோர்பொருளும் சாராம லேநினைவில் பக்குவம்வந் துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். (பொ - ரை) எனது உள்ளத்தில் மாயாகாரிய விஷயங்கள் தங்கும் வழியில் சேராமல் மலபரிபாகமுற்றுத் தேவரீர் திரு வருளையே நோக்கி யிருப்பது எந்தக்காலம்? 50 பருவத் தலைவரொடும் பல்கியின்பங் கொள்வதற்குத் தெரிவைப் பருவம்வந்து சிக்குவது மெக்காலம். (பொ - ரை) பரிபக்குவ காலத்தில் ஆட்கொள்ளும் முதல்வ ராகிய சிவபிரானுடன்கூடி யானந்த மடைவதற்குத் தெரிவைப் பருவமடைந்து அவரிடத்தில் அகப்படுவது எந்தக்காலம்? (வி - ரை)தெரிவை - இருபத்தாறாவது வயது. இவ்வயதில் தலைவிமார் தலைவர்களோடு அச்சம் நாணமின்றிக் கலந்து கூடிச் சுகிப்பர். ஈண்டுத் தெரிவை யென்றது ஆன்மாவை. புருவத் தலைவரொடும் புல்கி யின்பங்கொள் வதற்கு என்றும் பாடம். 51 தெரிவையுறும் பக்குவத்தின் சீரொட்டெல் லாமறிந்து குருவையறிந் தேநினைத்துக் கும்பிடுவ தெக்காலம். (பொ - ரை) தெரிவைப் பருவத்தை யடையும் பக்குவ காலத்தில் எல்லாச் சிறப்புகளையுமறந்து, ஞானகுருவை யுணர்ந்து தியானித்து நமகாரஞ் செய்வது எந்தக்காலம்? 52 வம்படிக்கு மாதருடன் வாழ்ந்தாலு மன்னுபுளி யம்பழமு மோடும்போ லாவதினி யெக்காலம். (பொ - ரை) பலவகை லீலைகளால் கெடுதல் செய்யும் பெண்களுடன் கூடியிருந்தாலும் (அவர்களிடத்தில்) புளியம் பழமும் ஓடும்போல நிலைத்திருப்பது இனி எந்தக்காலம்? (வி -ரை)பெண்களிடத்தில்கலந்துங்கலவாமலிருப்பதுஎந்தக்காலமென்றபடி?. 53 பற்றற்று நீரிற் படர்தா மரையிலைபோல் சுற்றத்தை நீக்கமனந் தூரநிற்ப தெக்காலம். (பொ - ரை) உலகப்பற்றை யொழித்து ஜலத்தில் படருந் தாமரையிலைபோலப் பந்துக்களை யொழிக்க மனம் விலகி நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) தாமரை நீரிலிருப்பினும் அந்நீரைத் தன்னிடத்தில் பற்றச் செய்யாம லிருப்பதுபோலப் பந்து மித்திரர்களோடு வாழ்ந்தாலும் அவர்கள் பற்று மனதில் தாக்கா வண்ணம் வாழ்தல் வேண்டுமென்பது. உடல் தூரநிற்பதென உரையாமல் “மனந்தூரÃற்பதுvன்றுரைத்ததுfவனிக்கத்தக்கது. இல்லறத் திலிருந்து கொண்டே விடய இன்பங்களில் உள்ளம் அழுந்தாத படி வாழவேண்டுமேன்பது கருத்து. 54 சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம் சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம். (பொ - ரை) சரசசல்லாப லீலையிலே ஒருவன் மனைவி கண்ட இன்பத்தைச் சொல்லுதல்போல யான்கண்ட இன்பத்தை யெனக்குச் சொல்வது இனி எந்தக்காலம்? (வி - ரை) செய்த - தந்த எனினுமாம். ஆர - போல. மனைவி - ஆன்மா. நாயகன் - சிவபெருமான். 55 மருவ வயற்புருடன் tருநேரங்fணாமல்cUFkd« போலெனுள முருகுவது மெக்காலம். (பொ - ரை) சோரநாயகன் தன்னைப் புணரவருங் fலத்âல்tருவதைக்காணாமல்cருகும்(ஒருத்தியினுடைய)kனதைப்nபாலvன்மனம்cருகுவதுvந்தக்காலம்?(É - ரை) ஈண்டுஉவமம் உருகுதன் மேற்று. 56 தன்கணவன் றன்சுகத்திற் றன்மனம்வே றானதுபோல் என்கருத்தி லுன்பதத்தை யேற்றுவது மெக்காலம். (பொ - ரை) (ஒருத்தி) தன் நாயகனிடத்திற்கூடி யின்பத்தை யநுபவிக்குங்கால் அவள் மனம் (பிற நாயகனை நாடி) வேறு பட்டிருப்பதுபோல, என் சிந்தையைத் தேவரீர் திருவடியில் பதியவைப்பது எந்தக்காலம்? (வி - ரை) ஒழுக்கமில்லாப் பெண்மக்கள் தங்கள் உரிமை நாயகன்மாட்டுப் புணருங்காலத்து, தங்கள் மனதைச் சோரநாயக னிடத்தில் பதியவைப்பது வழக்கம். அதுபோலப் பிரபஞ்ச வாசனையில் அடியேன் வீழும்போதும், எனது மனம் தேவரீர் திருவடியைப்பற்றி நிற்க வேண்டும் என்றபடி. எந் நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் ஆண்டவன் நினைவு இடையறாதிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தல் காண்க. பிரபஞ்சக்களியாடல்களில் முன்வினையால் வீழ நேரினும், அவைகளின் பால், பற்றுக்கொள்ளாது ஆண்டவனைப் போற்றி நின்றால், பின்வினை தொடராது - ஈண்டுப் பிராரத்த நுகர்வும் ஆகாமியத் தடுப்பும் கூறியவாறு காண்க. 57 கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல் தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம். (பொ - ரை) (நீண்ட காலம்) தன்னுடன் உறைந்து (காரணமின்றித் தன்னை) விட்டு நீங்கிய நாயகியைக் காணாது அவளைத் தேடித் தேடித் தவிக்கும் நாயகனைப்போல, தேவரீரை நாடிச் சிந்தை செலுத்துவது எந்தக்காலம்? (வி - ரை)கூடிப் பிரிந்துவிட்ட - புணர்ந்த உடனே பிரிந்து மறைந்த என்றுங் கொள்ளலாம். தன் விருப்பப்படி வாழ்ந்து பிரியும் மனைவியைத்தேடும் ஒருவன் மனோநிலையைப்போலத் தேவரீரை நாடுவதில் யானும் அத்தகை மனோநிலையைப் பெறுதல் வேண்டுமென்றபடி. 58 எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல் கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம். (பொ - ரை) இளமைப் பருவமுடைய காதலியாரிடத்து எப்படி மோகம் உண்டாகிறதோ அப்படித் தேவரீர் திருவடிவத் தியானத்தில் உள்ளத்தைப் பதியவைப்பது எந்தக்காலம்? (வி - ரை) மோகநிகழ்ச்சி பெரிதும் இளமையினிடத் துண்மையால் எவ்வனத்தின் மோகம் என்றார். பேரின்பத் துக்குச் சிற்றின்பம் சோபானமாதலால் ஆசிரியர் சிற்றின்ப உதாரணங்களையே எடுத்துக் காட்டுகிறார். 59 கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச் சொன்ன பரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம். (பொ - ரை) கண்களினின்றும் ஆனந்தநீர் கசிந்து கசிந்து முத்துப் போல ஒழுக ஞானோபதேசஞ் செய்த மேலான பொருளை ஆராய்ந்து உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) அன்பின்றி ஆண்டவனுண்மையை ஆராய்ந் தறிதல் அரிதாகலான் கண்ணா லருவிக் கசிந்து கசிந்து. . . . . . . என்றார். கண்களினின்றும் ஆனந்தநீர் பெருகுதல் அன்பிற்கு அறிகுறியாகும். முகமெல்லாங் கண்ணீர்மல்க முன் பணிந் தேத்துந் தொண்டர் என்பது அப்பர் திருவாக்கு. கையுந் தலைமிசை பொழியஞ் சலியன கண்ணும் பொழிமறை யொழியாதே என்பது சேக்கிழார் திருமொழி. 60 ஆக மிகவுருக வன்புருக வென்புருகப் போக வனுபூதி பொருந்துவது மெக்காலம். (பொ - ரை) உடல் மிக உருக, அன்பு பொங்க, என்பு நெக்குவிடச் சிவபோக அனுபூதியில் திளைப்பது எந்தக்காலம்? (வி - ரை)சீவன் முத்த நிலையில் ஆவிக்கும் யாக்கைக்கும் தொடர்புண்மையால் ஆவியானந்தத்தில் தோயும்போது யாக்கை முதலியனவும் உருகிக் கசியும். இதுபற்றியே மாணிக்கவாசகனார் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்றருளிச் செய்தார். நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே - புக்கு நிற்கும் பொன் னார்சடைப் புண்ணியன் என்றார் அப்பரும். 61 நீரிற் குமிழிபோ னிலையற்ற வாழ்வைவிட்டுன் பேரிற் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம். (பொ - ரை) நீரினின்றும் எழும் குமிழிபோல நிலையுத லில்லாத இப்பொய்வாழ்வை விடுத்துத் தேவரீரிடத்தில் அருள் வெள்ளம் என்பால் பெருக்கெடுத்து ஓடுவது எந்தக்காலம்? (வி - ரை) வாழ்வின் சிறுமை நோக்கி நீரிற் குமிழி போல என்றார். நிலையுதலில்லாத வாழ்வை நிலையாகக் கொண்டு இடர்ப்படாது அதை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்யவேண்டுமென்று குறிப்பிட்டவறாம். தம்மால் விரும்பப் பட்ட பொருளைக் காணுமிடத்து அருள் நிகழ்தல் இயல்பு. இறுதியாகப் பெறவேண்டிய பேறு கடவுள் பேறாகலான், அவரைக் காணும்போது ஆன்மாவினிடத்து இயல்பாக உள்ள அருள் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடு மென்றபடி. 62 அன்பை யுருக்கி யறிவையதன் மேற்புகட்டித் துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்ப தெக்காலம். (பொ - ரை) பக்தியைச் செறியச்செய்து அதன்மீது ஞானத்தைச் செலுத்தித் துன்ப வலையாகிய பாசக்கட்டை அறுத்தெறிவது எந்தக்காலம்? (வி - ரை) அன்பை யுருக்குதலாவது அன்பைக் கட்டின்றிச் செறியச் செய்வது. அன்புக்கு முண்டோ அடைக்குந்தாழ் என்றார் பெருநாவலர். மெய்யன்பு நிகழும்போது அஞ்ஞானம் அகன்று ஞானம் விளங்குதலால் அறிவை யதன் மேற்புகட்டி என்றார். ஞானமில்லாப் பக்தி மூடப்பக்தியென்க. அன்பெழுந்து அறிவை விளக்கும்போது பாசத் தொடக்குத் தானே கழன்று போமாதலான் துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்ப தெக்காலம் என்றார். உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால் என்றார் அப்பரும். 63 கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல் அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம். (பொ - ரை)கருவிலூறிப் பிறக்குஞ் சிறுநெறி சிந்தியாது, கண்களில் ஆனந்தநீர் அருவிபோல் பெருக்கெடுப்பத் தேவரீர் பால் அன்புவைப்பது எந்தக்காலம்? (வி - ரை) பிறவிநெறிபேணாது இறைநெறி விரும்பிய வாறாம். என்னை? பிறவி துன்ப மளிப்பதாகலானும், இறையன்பு இன்ப மளிப்பாதாகலானு மென்க. ஈண்டு அன்பு என்றது இடையறாத அன்பை யென்க. 64 தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன் பொழியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) (தத்துவங்களை ஆராய்ந்து ஆராய்ந்து) உண்மை தெளியத் தெளிய (எவ்வித தத்துவமுங் கலவாது) தெளிந்த சிவானந்த மென்னும் தேன் பொழியப் பொழிய (அதனை) ஏற்கும் மனதைப் பெறுவது எந்தக்காலம்? (வி - ரை) தெளியத் தெளியத் தெளிந்த சிவானந்தத்தேன் - ஆன்ம தத்துவ ஆராய்ச்சியால் வித்தியா தத்துவம் தெளிய, அத்தத்துவ ஆராய்ச்சியால் சிவதத்துவம் தெளிய, அத் தத்துவ ஆராய்ச்சியால் சிவானந்தத்தேன் தெளிவாகப் பொழியும் என்றபடி, தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே - நினைந்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் - அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் - குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ என வரூஉம் மாணிக்கவாசகர் திருவாக்கு ஈண்டுக் கருதற் பாற்று. 65 ஆதார மூலத் தடியிற் கணபதியைப் பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம். (பொ - ரை) மூலாதாரத்தடியில் வீற்றிருந்தருளும் விநாயகக் கடவுளின் திருவடித் தாமரைகளைத் தொழுது நிற்பது எந்தக்காலம்? (வி - ரை)இச்செய்யுள் முதல் ஆறுசெய்யுட்கண் ஆறாதார நிலையும், அவைகளின் அதிதேவதைகளும் ஓதப்படுதல் காண்க. விரிவைத் தத்துவக்கட்டளைகளிற் காண்க. 66 மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக் கண்வளைந்து பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) பிருதிவி தத்துவகோளத்தில் அதாவது சுவாதிஷ்டானத்தில் அழகோடு எழுந்தருளியுள்ள நான்முகனை உண்முகமாக நோக்கிக்கொண்டிருப்பது எந்தக்காலம்? 67 அப்புப் பிறைநடுவே யமர்ந்திருந்த விட்டுணுவை உப்புக் குடுக்கையுள்ளே யுணர்ந்தறிவ தெக்காலம். (பொ - ரை) அப்புத் தத்துவத்தின் கூறாகியதும் பிறை வடிவமா யிருப்பதுமாகிய மணிபூரகத்தில் அமர்ந்துள்ள நாராயணமூர்த்தியை உப்புக் குடுக்கைபோன்ற உடலுள்ளே அறிந்து தெளிவது எந்தக்காலம்? 68 மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில் தோன்று முருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்கலாம். (பொ - ரை) முக்கோடாக முளைத்தெழுந்த கோணத்தில் அதாவது அனாகதத்திலே உதயமாகும் உருத்திரக் கடவுளை வணங்கி நிற்பது எந்தக்காலம்? (வி - ரை ) அனாகதம் - தேயு சம்பந்தம். 69 வாயுவறு கோணமதில் வாழுமயே சுரனைத் தோயும் வகைகேட்கத் தொடங்குவது மெக்காலம். (பொ - ரை) வாயுவின் அமிசமாகியதும் அறுகோணங் களை யுடையதுமாகிய விசுத்தியில் வாழும் மகேசுரனோடு கலக்கும் விதத்தைக் கேட்கத் தொடங்குவது எந்தக்காலம்? 70 வட்ட வழிக்குள்ளே மருவுஞ்சதா சிவத்தைக் கிட்ட வழிதேடக் கிருபைசெய்வ தெக்காலம். (பொ - ரை) வட்டமாக உள்ள ஆஞ்ஞையில் விளங்குஞ் சதாசிவத்தை அடையும்வழி தேடத் திருவருள் செய்வது எந்தக் காலம்? (வி - ரை) ஆஞ்ஞை ஆகாய சம்பந்தமுடையது. 71 உச்சிக் கிடைநடுவே யோங்கு குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம். (பொ - ரை) உச்சி மத்தியில் பொலியும் குருமூர்த்தியின் திருவடியை உறுதியாகக் கொண்டு தியானயோகஞ் செய்யும் பேறு பெறுவது எந்தக்காலம்? (வி - ரை) ஆறாதாரங்களுக்கு மேலுள்ள உச்சியிலிருக்கிற குருவின் திருவடியே பேற்றை யளிப்பதென்க. ஆறாதார நிலைக் காட்சியும் ஞானத்தை நல்காதென்க. குருதரிசனத்தில் நிச்சய மேற்பட வேண்டுமாதலால் நிச்சயித்து என்றும், என்றும் இடையறாது தியானஞ் செய்ய வேண்டுமாதலால் கொண் டிருந்து என்றுங் கூறியது காண்க. 72 பாராகிப் பார்மீதிற் பஞ்சவர்ணந் தானாகி வேராகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம். (பொ - ரை) பூமியாகி, பூமிமீது ஐந்து பூதமாகி எல்லாவற்றிற்கும் வேறாக நின்று தேவரீர் தோன்றிய மூலத்தை அறிவது எந்தக்காலம்? (வி - ரை) பாராகிப் பார்மீதில் பஞ்சவர்ணந் தானாகி என்றது மண் முதல் ஐந்து பூதமாகி என்றபடி. ஆண்டவன் எல்லாவற்றிற்கும் வேர்போன்றிருத்தலின் வேராகி என்றார். ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை என்றார் மாணிக்க வாசகர். ஆண்டவன் மூலமும் முடிவுமின்றி அநாதியாக விருப்பவன் என்பதைக் குறிப்பிடவேண்டி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம் என்றார். 73 கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ் சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்காலம். (பொ - ரை) அறுக்க முடியாத கட்டுகளால் கட்டப் பட்டுள்ள கருவி கரணங்க ளெல்லாவற்றையும் ஞானாக்கினி யால் எரித்து ஒழித்து நிஷ்டை கூடியிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) அநாதியாகக் கட்டப்பட்ட கட்டுகளையென்க. கருவி கரணங்களுள்ள மட்டும் நிட்டை கூடுதல் அரிதாகலான் கருவிகர ணாதியெல்லாம் சுட்டறுத்து என்றார். நிட்டையிலே தூங்குவதாவது யோகநித்திரை செய்வது. 74 கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்திங் குள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) திருட்டு எண்ணங்களை யெல்லாம் அறவே வேரோடு களைந்து, ஈண்டு உண்மை நோக்கத்தை அறிந் திருப்பது எந்தக்காலம்? (வி - ரை) கள்ளக்கருத்து - உண்மைக்கு மாறுபட்ட கருத்து. தோன்றி நின்றழியும் போலிஞானம். உள்ளக்கருத்து - என்றும் மாறுதலின்றி அழியாத கருத்து. 75 அட்டகா சஞ்செலுத்து மவத்தைச்சட லத்துடனே பட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம். (பொ - ரை) போலிப் புகழ் குறித்து வாசம்செய்வதற்கு ஏதுவாயுள்ள துன்பத்தையுடைய உடலோடுகூடி அநுபவித்த கஷ்டங்களை யெல்லாம் பகுத்துணர்வது எந்தக்காலம்? (வி - ரை) தேகத்தைப் பொருளாக் கொண்டு, அதற்குப் பெருமைநாடி அட்டகாசஞ் செய்ததை இன்பமாகக் கருதிய அறியாமை குறித்து இரங்கியவாறாம். துன்பத்தை இன்பமாகக் கருதினமையால் அவத்தை என்றார். அட்டகாசங்களால் நேர்ந்த கஷ்டங்கள் போதும் போதும் என்று அவைகளில் வெறுப்புக்கொண்டு கூறியவாறு காண்க. 76 அறிவுக் கருவியுட னவத்தைபடும் பாட்டையெல்லாம் பிரிவு படநிறுத்திப் பெலப்படுவ தெக்காலம். (பொ - ரை) பசுஞானத்தோடு பாசஞானத்தால் படுங் கஷ்டங்களை என்னினின்றும் வேறுபட நிறுத்திப் பதி ஞானத்தைப் பலப்படுத்துவது எந்தக்காலம்? (வி - ரை) அறிவு கருவியுடன் என்பதற்கு அறிவென்னுங் கருவியோடு எனினுமாம். அறிவு தத்துவங்களில் வீழ்ந்து வருந்து நிலையை விளக்கியவாறாம். பிரிவுபட நிறுத்துவதாவது அறிவை வேறாகவும் தத்துவங்களை வேறாகவும் நிறுத்துவதென்க. 77 பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப் பேதம் பலவிதமும் பிரிந்தறிவ தெக்காலம். (பொ - ரை) பூதம் பொறிகரணம் முதலியனவாகப் புகுந்து சத்தி சிவமாய் நிற்கும் பலதிற பேதங்களினின்றும் வேறுபட்டு உண்மை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) பூதம் ஐந்து; பொறி ஐந்து; கரணம் நான்கு. பிருதிவிமுதல் நாதமீறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் பேதங்களினின்றும் நீங்கித் தன்னை யறிவதெக்காலம் என்றபடி. 78 தோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல் ஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம். (பொ - ரை) கிளர்ந்தெழும் மூன்று ஆசைகள் என்னைத் தொடர்ந்து சூழாமல், மாயையில் ஊன்றச்செய்யும் ஆசையின் வேரைக்கல்லி அறுப்பது எந்தக்காலம்? (வி - ரை) மூன்று ஆசை - மண், பொன், பெண்ணாசைகள். ஆத்மாவை ஆசையிலழுத்துவது அராகதத்துவம். அதை ஒடுக்கினால் மூவாசை படுமென்க. 79 புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி என்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம். (பொ - ரை) இழிவான இப்பிறப்பில் ஆண்டவனை வழி படுவதற்குள் சூக்கும உடல் பிரிந்துவிட்டால் எனது ஆன்மா எப்பிறப்பில் ஈடேறும் என்பதை அறிவது எந்தக்காலம்? 80 நட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள் கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம். (பொ - ரை) ஆன்மாவிற்கும் இறைவனுக்கு மிடையிலுள்ள நல்ல திரோதாயி என்னுந் திருவருட்சக்தி இறைவனிடத்து (என்னை) அணுக வழிகாட்டிக் கருணை பொழிவது எந்தக் காலம்? (வி - ரை) திருவருட் சக்தியே திரோதான சக்தியாய்ப் பெத்தகாலத்தில் ஆன்மாவிற்கு மலத்தைப் புசிப்பித்துப் பின்னர் மலபரிபாக காலத்தில் அது திருவருட் சக்தியாய் இறை யின்பத்தை யூட்டுமென்க. திருவருட் சக்தியே பெத்தகாலத்தில் திரோதாயி சக்தியாக நிற்றலால் நல்ல அருள் திரோதாயி என்றார். பெத்தகாலத்தில் திருவருட்சக்தி திரோதான சக்தியாய் ஆன்மாவிற்கும் மலத்துக்கும் இடைநின்று ஆன்மாவிற்கு மலத்தை நுகர்வித்தலானும், பின்னர் அச்சக்தியே முத்த காலத்தில் ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடைநின்று இன்பத்தை யூட்டலானும் நட்ட நடுவினின்று என்றார். திருவருட் சக்தியே திரோதாயியாக ஆன்மாவின் நன்மை கருதி அதைச் சிவமாக்கவேண்டி மலத்தில் கூட்டுவதால் நற்றிரோ தாயி என்றார். மலத்தில் கிடக்கும் ஆன்மாவை ஆண்டவ னிடத்துக் கூட்டு மியல்புடைமை திரோதாயி சக்திக் குண்மையான் அருள்கிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம் என்றார். அருள்சிங்க நோக்காக நிற்குஞ் சொல். 81 நானேநா னென்றிருந்தேன் நடுவினிற் கட்டழகி தானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம். (பொ - ரை) ஆன்மாவே பொருளென் றிருந்தேன். இடையில் பேரழகுவாய்ந்த திருவருட்சக்தி தானே தலைவனுண்மையை வெளிப்படுத்தி அவன் திருவடியை உனக்கு நல்குவேன் என்று மொழிவது எந்தக்காலம்? (வி - ரை) ஒருவன் முறையாகத் தத்துவ ஆராய்ச்சி செய்து வருவானாயின், அவன் தத்துவங்களைச் சடமென்றுணர்வது அவைகட்கு வேறாக உள்ள ஆன்மாவைக் காண்பன். அவ்வான்ம ஆராய்ச்சி செய்யுங்காலத்து அதையே பொருளாகக் கொள்ளு தலுமுண்டு. அதற்கு மேலாராயின், ஆண்டவனுண்மை பெற லாம். ஆன்மா உண்மைகண்டு அதுவே பொருளென்று மயங்கும் போது ஆன்மாவிற்கு வேறுபட்டு நில்லாத திருவருட்சக்தி விளங்கித் தலைவனுண்மையை உணர்த்தும். தன்னையறிந்தவன் தலைவனையுணர முயல வேண்டுவதின்மை யானும், அதைத் திருவருட்சக்தி செய்யுமாதலானும் தானே வெளிப்படுத்தி என்றார். திருவருட்சக்தி அழகின் பூரணமாதலால் கட்டழகி என்றார். திருவருளைப் பெண்ணாகக் கூறுதல் சம்பிரதாயம். நானே நினைவிருந்தால் என்ற பாட பேதமுண்டு. ஆன்மாவே பொருள் என்ற நினைவிருந்தால் என்று அதற்குப் பொருள் கூறுக. 82 அடர்ந்த மனக்காட்டை யஞ்செழுத்தாம் வாளாலே தொடர்ந்து தொடர்ந்துவெட்டிச் சுடுவதினி யெக்காலம். (பொ - ரை) மனமென்னும் அடர்ந்த காட்டைப் பஞ்சாட்சர மென்னும் வாளாயுதத்தால், இடைவிடாது தொடர்ந்து தொடர்ந்து வெட்டி எரிப்பது இனி எந்தக்காலம்? (வி - ரை) எல்லா மாயாத்தோற்றமும், அஞ்ஞானமும் தோன்றுமிடம் மனமாதலால் அடர்ந்த மனக்காட்டை என்றார். மனதினின்றும் தோன்றும் எண்ணங்கள் ஒன்றினின்றும் ஒன்று பிறந்து பலவாய்ப் பெருகிப் பெருகி வளர்தலால் மனதைக் காடு என்றார். பஞ்சாட்சர செபத்தால் மனமடங்கலால் அஞ்செழுத்தாம் வாளால் என்றார். காடு என்றதற்கேற்ப வாள் என்றார். தொடர்ந்து தொடர்ந்து என்னும் அடுக்கு இடைவிடாது பஞ்சாட்சர மோதுதல் வேண்டுமென்பதைக் குறிப்பது. 83 ஐந்து பொறிவழிபோ யலையுமிந்த பாழ்மனதை வெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம். (பொ - ரை) பஞ்சேந்திரியங்கள் வாயிலாகச் சென்று உழலும் இந்தப் பாழானமனதை எரிந்துவிழக்கண்டு, இனி ஞானக்கண் திறக்கப்பெறுவது எந்தக்காலம்? (வி - ரை) மனமொடுங்கினால் அகக்கண் திறக்குமென்றபடி. 84 இனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்லாருந் தான்மாண்டு சினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) தத்துவக்கூட்டமழிந்து, அதன் காரியமாக உள்ள காம குரோத முதலிய சத்துருக்கள் தொலைந்து, கோபம் நாசமா யொழியத் திருவருளில் சேர்ந்திருப்பது எந்தக்காலம்? (வி - ரை) எல்லாவற்றினுங் கொடியது சினமாகலான் சினத்தைத் தனியாகக் பிரித்துக் கூறியுள்ளார் சினமுள்ள மட்டும் சிவனைக் காண்டலரிது. சினத்தை நிந்தனை செயுமுனிவரர் தொழ என்றார் அருணகிரியார். அறஞ்செய விரும்பு என்று கூறிய ஔவையார் உடனே ஆறுவது சினம் என்று அருளியது கவனிக்கத்தக்கது. சினமுடையோர் அறவோராகார். 85 அமையா மனதமையு மானந்த வீடுகண்டால் இமையாம னோக்கி யிருப்பதினி யெக்காலம். (பொ - ரை) எவ்வழியிலும் சாந்தியடையாத மனம் இன்ப வீடு கண்டால் சாந்தியடையும் (ஆதலால்) இடையறாது திருவருளை நோக்கியிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) பரத்தையே பார்த்திருப்பின் மனம் ஐம்பொறி வாயிலாக அலையாது ஒடுங்கிவிடுமாதலால், இமையாமல் நோக்கியிருப்பது என்றார். 86 கூண்டுவிடுஞ் சீவன்மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் மாண்டுவிடு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) மெதுவாகக் கொட்டாவி விடுதல் போல உடல்விடுஞ் சீவன் உடல்விட்டுப் பிரிதற்கு முன்னர் நான் என்பது கெட்டிருப்ப தெந்தக்காலம்? (வி - ரை) சீவனதியல்பு உடல்விட்டுப் பிரிவதாகலான் கூண்டுவிடுஞ் சீவன் என்றார். சீவன் பிரியும் எளிமையை கொட்டாவி கொண்டாற்போல் என்றார். சீவன் உடல் விட்டு நீங்குவதற்கு முன்னர் நான் என்பதை அழித்துச் சிவமாதல் வேண்டும். இல்லையேல் பிறவி வளரும். பிறவிக்கு வித்து நான் என்பது. நான் கெட்ட வாபாடி என்றார் மணிவாசகரும். 87 ஊனிறைந்த காய முயிரிழந்து போகுமுன்னம் நானிறைந்து போகவினி நாள்வருவ தெக்காலம். (பொ - ரை) புலால் நிரம்பிய உடலைவிடுத்து உயிர் நீங்குதற்கு முன்னர், நான் என்னும் முனைப்புக் கெட்டுப்போகும் நாள் கூடுவது எந்தக்காலம்? 88 கெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்து சுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) (உலக வழிபேணி) கெட்டழியும் மனிதர்கள் செருக்கு மொழிகள் புகன்றுபோந்து எனது உடலைச் சுட் டெரிப்பதற்கு முன்னர் என்னை (முனைப்பை - சீவபோதத்தை) சுட்டிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) மாயா உடல் சுடப்படுவதற்குள் சீவபோத மழியப்பெறின் பிறவித்துன்ப மணுகாது வீட்டின்பங் கைகூடு மென்க. 89 தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம். (பொ - ரை) தோலாகிய (தேகமாகிய) ஏணிகொண்டு பல க்ஷேத்திரங்கள் யாத்திரைசெய்து சலிப்புறாமல், சாதிரங்க ளாகிய ஏணிகொண்டு உண்மை உணர்ந்து தேவரீரையே கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) தெய்வ உண்மை உணர்ந்து தொழுதலுக்கு க்ஷேத்திர யாத்திரையினும், நூலாராய்ச்சி இன்றியமையாதது என்றபடி. 90 வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம். (பொ - ரை) வாயையும் கண்ணையும் மூடி (மனமொடுங் காமல்) யோகஞ்செய்து மயக்கமுற்று அலையாது, திருவருட் சக்தியோடு யோகநித்திரை செய்து சிவத்தைத் தழுவி நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) போக யோகங்களைக் கண்டித்தவாறாம். 91 காசினி யெலாநடந்து காலோய்ந்து போகாமல் வாசிதனி லேறி வருவதினி யெக்காலம். (பொ - ரை) உலகமெல்லாம் சுற்றிச் சுற்றிக் கால்கள் ஓய்ந்து போகாமல், வாசியை என் வழிப்படுத்தி அதை நடத்துவது இனி எந்தக்காலம்? (வி - ரை) க்ஷேத்திர யாத்திரையே உய்யுநெறி என்று கொண்டு திரிவோரை நோக்கி எழுந்த திருவாக்கு இது. க்ஷேத்திர யாத்திரை ஒரு சாதனமே யாகும். 92 ஒலிபடருங் குண்டலியை யுன்னியுணர் வாலெழுப்பிச் சுழுமுனையின் றாள்திறந்து தூண்டுவது மெக்காலம். (பொ - ரை ) நாதமயமாக உள்ள குண்டலிசக்தியை மூலாதாரத்தில் போற்றி ஆண்டிருந்து அதை ஞானாக்கினியால் கிளப்பிச் சுழுமுனையின் தாளைத் திறந்து திருவருள் முயற்சியில் தூண்டுவது எந்தக்காலம்? 93 இடைபிங் கலைநடுவே யியங்குஞ் சுழுமுனையில் தடையறவே நின்று சலிப்பறுப்ப தெக்காலம். (பொ - ரை) இடைகலைக்கும் பின்கலைக்கும் இடையே விளங்கும் சுழிமுனையில் கட்டு நீங்கவிருந்து சலிப்பை ஒழிப்பது எந்தக்காலம்? (வி - ரை) பிராணனை இரேசக பூரகத்தால் முறைப்படி கும்பித்தால் சலிப்பு முதலியன ஒழியும் என்றபடி. சலித்திருப்ப தெக்காலம் என்ற பாடபேதமுமுண்டு. அது பொருந்தாது. இச்செய்யுள் முதலாகக் கூறப்படும் யோகநிலைகளின் விளக்கத்தைத் திருமூலர் திருமந்திர முதலிய நூல்களில் காண்க. தக்க ஆசிரியர்மூலம் கேட்டுத் தெளிவுறுவது நலம். ஈண்டு விரிக்கிற் பெருகும். எம்போன்றார் விரித்துக் கூறுவதும் அநாவசியம். 94 மூல நெருப்பைவிட்டு முட்டிநிலா மண்டபத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம். (பொ - ரை) மூலாதாரத்திலுள்ள கனலை (காற்றால்) எழுப்பி, அதைச் சந்திர மண்டலத்தில் முட்டுறச் செய்து, ஆண்டிருந்து, பொழியும் அமிழ்தை உண்டு பசி தணிவிப்பது எந்தக்காலம்? (வி - ரை) பால் - ஞானப்பால்; ஞானக்கள் என்றும் பெரியோர் கூறுப இப் பாலருந்துவோர்க்குச் சாக்காடு பிணி மூப்பணுகா. மூலாதாரத்து மூண்டெழு கனலை - காலாலெழுப் புங் கருத்தறிவித்து. . . . . . . என வரூஉம் ஔவையார் திருவாக்கை உற்று நோக்குக. 95 ஆக வெளிக்குள்ளே யடங்காப் புரவிசெல்ல ஏக வெளியி லிருப்பதினி யெக்காலம். (பொ - ரை) (விவகாரதசையில்) உடலிலுள்ள ஆகாசித்தில் அடங்காதவாசி, அதனுள்ளேபோக, (பாரமார்த்திகத்தில்) ஏகாம்பரத்தில் வாழ்வது எந்தக்காலம்? (வி - ரை) ஆகவெளி - விவகார காலத்தில் உடலிலுள்ள மற்றத் தத்துவங்களோடு விரவிய ஆகாயம். அதனுள் வாசி யடங்காது வெளியே வந்தும் நுழைந்தும் உழன்று கொண்டிருக் கும் அதன் போக்கு வரவு குறையக் குறையத் தேக நிலை குன்றி மரணமுண்டாகும். வாசியைப் பிராணாயாமத்தாலும், வேறு பல யோகங்களாலும் உள்ளே அடக்கும் பயிற்சி முதிர்ந்தால் ஏக சொரூபமாக உள்ள சிதாகாசத்தில் உயிர் ஒன்று மென்க. ஏகவெளி - ஏக அம்பரம். அம்பரம் - ஆகாயம்; சூந்யம். 96 பஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட் டாப்பொருளில் சஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம். (பொ - ரை) பலவாறு விரித்தும் திரித்துங்கூறும் பலவகைப் பட்ட சாதிரங்களுக் கெட்டாது விளங்கும் துரியாதீதப் பொருளினிடத்தில் உலவி வாழ்ந்து தவநிலை அடைவது எந்தக்காலம்? (வி - ரை) அபர ஞானத்தால் காணப்படாத பொருள் கடவுள் என்றபடி. சாதிரங்கள் கடவுள் இலக்கணங்களை விரித்துக் கூறுமன்றிக் கடவுளை உணர்த்துதலரிது. பர ஞானத் தால் திருவருள்வழிக் கடவுளைஅடைதல் வேண்டும். 97 மலமுஞ் சலமுமற்று மாயையற்று மானமாற்று நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். (பொ - ரை) மல சல உபாதிகள் நீங்கி , மாயை யொழிந்து, மானமழிந்து, நலமற்று, குலமற்று நான் (ஆன்மா) தனித்து வாழ்வது எந்தக்காலம்? 98 ஓடாம லோடி யுலகைவலம் வந்துசுற்றித் தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். (பொ - ரை) வேண்டுமென்று போகாமல் விளையாட்டாகத் திரிந்து, பூதலத்தைப் பிரதட்சணம்வந்து கடவுள் எங்கே எங்கே என்று - தேடி அலையாமல் கடவுளை என்னிடத்திலேயே காண்பது எந்தக்காலம்? (வி - ரை) ஓடாமல் - கடவுளை நாடி ஓடாமல். ஓடி - காமியங்கருதி ஓடி. விளையாட்டாக உலகை வலம் வந்தாலும் பல தீர்த்தங்கள் படிந்தாலும் கடவுளை அறிய முடியாது. கடவுள் காயத்தையே கோயிலாகக் கொண்டிருக்கிறார். காயமே கோயிலாக என்றார் அப்பர். உடலிடங் கொண்டாய் என்றார் வாதவூரர். தேயமுநாடுந் திரிந்தெங்கள் செல்வனைக்காயமிந் நாட்டிடைக் கண்டு கொண்டேனே என்றார் திருமூலர். 99 அஞ்ஞானம் விட்டே யருண்ஞானத் தெல்லைதொட்டு மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். (பொ - ரை) அறியாமை நீங்கித் திருவருள் ஞானம் பற்றி உண்மை ஞான வீடுபெற்று(பெத்த நிலையினின்றும்) வெளிப்படுவது எந்தக்காலம்? (வி - ரை) அஞ்ஞானம் - அறியாமை. இது நீங்கினதும் சத்தி பதியும். அருள்ஞானம் - சத்தி பதிதல். மெய்ஞ்ஞான வீடு - சிவப்பேறு. வெளிப்படுவது - அஞ்ஞான நித்திரையிலிருந்து எழுவது. 100 வெல்லுமட்டும் பார்த்து வெகுளியெல்லாம் விட்டகன்று செல்லுமட் டுஞ்சிந்தை செலுத்துவது மெக்காலம். (பொ - ரை) தத்துவ சேட்டைகளைச் செயிக்கும்வரை முயன்று, கோபங்க ளெல்லாவற்றையும் ஒழித்து நீக்கி மௌன நிலைக்குச் சிந்தை செல்லுமட்டுஞ் செலுத்துவது எந்தக்காலம்? 101 மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். (பொ - ரை) உயர் பதவி குறித்து ஆராய்ந்து, உண்மைப் பொருளை அகத்தே நிறுத்திச் சாயுச்சிய பதவி நாடி, அதை நான் அடைவது எந்தக்காலம்? 102 எண்ணாத தூரமெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல் கண்ணாடிக் குள்ளொளிபோற் கண்டறிவ தெக்காலம். (பொ - ரை) எண்ணத்துக்கு எட்டாத தூரம் எண்ணி எண்ணிக் கடவுளைக் காணாமல் கண்ணாடியிலேயே உள்ள ஒளிபோல அகத்தேயுள்ள சோதியை நான் பார்த்துணர்வது எந்தக்காலம்? 103 என்னை யறிந்துகொண்டே னெங்கோமா னோடிருக்கும் தன்மை யறிந்து சமைந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) தன்னை யுணருந் தன்மை உணர்ந்தேன்; இனி என் தலைவனோடு கூடியிருக்குந் தன்மை உணர்ந்து இரண்டறக் கலந்திருப்பது எந்தக்காலம்? 104 ஆறாத ரங்கடந்த வானந்தப் பேரொளியைப் பேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். (பொ - ரை) ஆறு ஆதாரங்களையுங் கடந்து ஆனந்தமய மாக ஒளிரும் பரஞ்சோதியை நான்பெறும் பேறாகக்கொண்டு அதை அடைவது எந்தக்காலம்? 105 ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன் காணுதலா லின்பமற்றுக் கண்டறிவ தெக்காலம். (பொ- ரை) ஆணவத்தின் மாயத்தினால் உடலழிந்து போகாமுன் சிவக்காட்சியால் ஆனந்தம் பெற்று உண்மை கண்டறிவது எந்தக்காலம்? 106 மும்மலமுஞ் சேர்ந்து முளைத்தெழுந்த காயமிதை நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கிநிற்ப தெக்காலம். (பொ - ரை) மூன்று மலச்சேர்க்கையால் உண்டாகும் உடலைத் தூய்மைப்படுத்திச் (செம்பொருள்) கண்டு செயலின் றிக் கிடப்பது எந்தக்காலம்? (வி - ரை)மும்மலச் சேர்க்கையால் உடல் உண்டாதலால் மும்மலமுஞ் சேர்ந்து முளைத்தெழுந்த காயமிதை என்றார். தேகத்தை நின்மலப்படுத்துவதாவது கருவி கரண விடய போகங்களை ஒடுக்குவது. செயலற் றிருப்போர்க்கு மீண்டும் தேகம் வராது. 107 முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால் உன்னை வெளிப்படுத்தி யுறுவதினி யெக்காலம். (பொ - ரை) பிரார்த்த வினை நசிக்க மூன்றிவித காட்சியால் தேவரீரை வெளிப்படுத்தித் தேவரீரை அடைவது எந்தக்காலம்? (வி - ரை) மூன்று வகை காட்சி - தூல சூக்கும் காரண சரீர காட்சி அல்லது ஆன்ம வித்யா சிவதத்துவ காட்சி யெனினுமாம். ஆன்மாவிலுள்ள கடவுள் மூன்றுவித காட்சிக்குப் பின்னர்க் காட்சி வழங்கலால் உன்னை வெளிப்படுத்தி என்றார். தன்னிடத்திலுள்ள கடவுளைத் தானே நியதிகளைந்து வெளிப்படுத்த வேண்டுமென்பது. வெளிப்படுத்தல் மூர்த்தி தரிசனம்; உறுவது அமூர்த்தி தரிசனம். 108 கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். (பொ -ரை) கண்ணினிடத்தில் ஒளிபாய்ந்திருப்பதும், கருத்துப்பொருளை ஆராய்ந்து உணர்ந்துகொண்டதும், விண் ணினிடத்தில் ஒளிகண்டதும் எனக்கு விளங்குவது எந்தக்காலம்? (வி - ரை) கண்ணொளி உண்மை உணர்தலாவது உயிரி னிடத்து இறைவன் கலந்திருப்பதை உணர்வது. கருத்தறிந்து கொள்வது மனம் உயிரின் சேர்க்கையால் விடயங்களை உணர்வது போல உயிர் கடவுள் உதவியால் பொருளை உணர்வது. விண்ணில் ஒளிகாண்பது சக்தியில் சிவத்தைக் காண்பது. 109 கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைந் தேயிருந்த நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். (பொ - ரை) சொப்பனங் கண்டாற்போல் என்று சொல்லும் படி ஒளிகாட்டிப் பின்னர் அதை மறைத்திருந்த எனது நினைவை என்றும் பரவெளியில் நிறுத்திவைப்பது எந்தக் காலம்? (வி - ரை) சொப்பனத்தில் காண்பனபல பின்னர் சாக்கிரதையில் மறக்கப்படுவதுபோலத் தேவரீர் திருவுருவைக் கண்டு பின்னர் அதை மறத்தலாகாதென்றபடி. நினைவை - மறைப்பது அஞ்ஞானம். நினைவு அஞ்ஞானத்தால் மறைக்கப் படாதவாறு என்றுஞ் சிதாகாயத்தில் பதிந்திருக்க வெண்டு மென்றபடி. 110 ஆரென்று கேட்டதுவு மறிவுவந்து கண்டதுவும் பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம் (பொ - ரை) பொருளுண்மை காணத் தத்துவங்களை ஆராய்ந்து செல்லும்பொழுது, தத்துவங்கள் ஆராய்ச்சி செய்வது யார் என்று வினவினதும், அதற்குப் பதிலாக ஆன்மா போந்து தத்துவங்களைப் பார்த்ததும், நான்தான் பார் என்று ஆன்மா சொற்றதும் ஆகிய இவைகளைப் பகுத்து ஆராய்ந்து உண்மை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) தத்துவ காரியமாக உள்ள தேகம் நான் அல்ல என்பதும், நான் என்பது ஆன்மாவே என்பதும் விளக்கியவாறு காண்க. 111 நினைக்கு நினைவுதொறும் நிறைந்தபரி பூரணத்தை முனைக்குமேற் கண்டுகண்ணில் முத்துதிர்ப்ப தெக்காலம். (பொ -ரை) ஒவ்வொரு நினைவிலும் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரண சொரூபத்தைச் சுழுமுனைக்குமேலே கண்டு கண்ணில் ஆனந்தநீர் முத்துபோலச் சொரிவது எந்தக்காலம்? (வி - ரை) நினைவிலும் ஆண்டவன் விரவியிருப்பது அவனது பரிபூரணத்துவமென்று குறிப்பிட்டவாறாம். 112 முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய் அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம். (பொ - ரை) மாயா காரியமாகிய ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவம் சிவதத்துவம் மூன்றும் பாழாகி, அதன் சேர்க்கைக்குக் காரணமான ஆணவமும் பாழாகி, அதுவும் கெட்டொழிய இவைகளெல்லாவற்றையுங் கடந்தொளிரும் சிவத்தினிடத்தில் அன்புசெய்வது எந்தக்காலம்? 113 சீயென் றெழுந்து தெளிந்துநின்ற வான்பொருளை நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம். (பொ - ரை) உலகம் பீடை சீ என்று அதனின்றும் நீங்கித் தெளிவாக நின்ற பரம்பொருளைத் தேவரீர் என்று கண்டு தேவரீரோடு நிலைபெற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) தத்துவங்கடந்த ஒன்றையே பொருளெனக் கொள்ளல் வேண்டுமென்பதை அறிவுறுத்தியவாறாம். 114 வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும் யவ்வெழுத்தி னுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம். (பொ - ரை)வகரமும் மகரமும் வாளனைய சிகரமும் யகரத்தில் அடங்கி நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) சி - சிவம்; வ - சக்தி; ய - ஆன்மா; ந - திரோதானம்; ம - மலம். (சி-வ-ய-ந-ம) ஆன்மாவினிடத்தில் சக்தி சிவம் பொருந்த வேண்டுமென்பது. சிகரம் அறியாமையைக் களைவதாகலான் வாளாகுஞ் சிவ்வெழுத்து என்றார். மகாஒடுக்கத்தைக் குறிப்பிட்டவாறு. 115 எழுத்தெல்லா மாண்டிறந்தே யேகமாய் நின்றதிலே அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம். (பொ - ரை) எல்லா எழுத்துக்களும் செத்தொழிந்து ஒன்றாக நின்று, அவ்வொன்றிலே உறுதியாக மனதைப் பதியவைத்து அன்பு பெறுவது எந்தக்காலம்? (வி - ரை) எழுத்தெல்லாம் - அட்சரங்களெல்லாம்; கலை ஞானங்களெல்லாம். ஏக - எல்லா மழிந்தவிடம். ஏகத்தில் மனம் பதிவதன் அருமை நோக்கி அழுத்தமாய்ச் சிந்தை வைத்து என்றார். 116 அருவாகி யுருவாகி ஆதியந்த மாகிநின்ற குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம். (பொ - ரை) அருவமும் உருவமும் முதலும் முடிவுமாகி நிலைபெற்ற குருவாகிப்போந்து சிறியேனைப் பாசக்கடலில் வீழ ஒண்ணாதவாறு தடுத்தாண்டருள்வது எந்தக்காலம்? (வி - ரை) குருவாகவரும் பொருள் அருவாய் உருவாய் ஆதியந்தமாய் விளங்குவதென்க. குரு உதவியின்றி மலபரிபாகம் நிகழாதாகலின் குருவாகிவந்து என்றார். 117 நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாம் தானென்று நீயிருந்த தனுவறிவ தெக்காலம். (பொ - ரை) நான்தான் ஆன்மா என்று உணர்ந்த என்னை (ஆன்மாவை) நான் உணராத காலமெல்லாம் நானே தான் என்று தேவரீர் வீற்றிருந்த உடல் உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) நான் என்பது உடலன்று கடவுளன்று என்பதை உணர்த்தியவாறாம். இதை நானறியாக் காலமெல்லாம் என்னுங் குறிப்பு வலுயுறுத்தல் காண்க. தானென்று நீயிருந்த என்பதற்கு ஆன்மா கடவுளென்றிருந்த என்று பொருள் கோடல் வேண்டும். நீயிருந்ததனு என்றது ஆண்டவனுக்குச் சரீரமாயுள்ள ஆன்மாவினை. தனக்குள் ளிருப்பவன் தலைவன் என்று அறிவது எந்தக்காலம் என்றபடி. 118 என்மனமாய்க் கண்டதெல்லா மெண்ணிஎண்ணிப் பார்த்ததபின்பு தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்துநிற்ப தெக்காலம். (பொ - ரை) சீவபோத மயமாய்க்கண்ட எல்லாவற்றையும் சிந்தித்துச் சிந்தித்துக் கண்டபிறகு சீவபோத மயமாய்க்கொண்டு அதன் கண்ணே ஒன்றி நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) என்மயமாய்க் காண்பது - சீவபோதநிலை; எல்லாம் சீவான்மா என்று கூறும் ஏகாத்மவாநிலை. இந்நிலை பெற்ற பின்னர் ஆராய்ச்சியால் பெறப்படுவது பரமான்மா என்க. அந்நிலையே ஈண்டுத் தன்மயமாய் என்று குறிக்கப்பட்டது. 119 ஒளியி லொளியா முருப்பிறந்த வாறதுபோல் வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம். (பொ - ரை) நிலையாக உள்ள ஒளியினின்றும் ஒளி வடிவங்கள் உண்டாவதுபோலப் பரவெளியினின்றும் திருவருள் வெளி புலனான தன்மையை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) ஒளியில் ஒளியாம் என்பதற்குப் பூத ஒளியி னின்றும் திருவருள் ஒளி என்றும், வெளியில் வெளியான என்பதற்குப் பூதாகாயத்தினின்றும் சிதாகாசமாகிய என்றும் பொருள் கூறுவோருமுளர். ஒளியினின்றும் ஒளி தோன்றுத லாவது எங்குமுள்ள நெருப்பினின்றும் நமது முயற்சியால் ஆங்காங்கே கண்டங் கண்டமாக வர்த்தி வாயிலாகவோ பிறவாயிலாகவோ நெருப்பு உண்டாவதுபோல் என்க. வெளியில் வெளி - எங்கு நிறைந்துள்ள பரவெளியினின்றும் ஆன்மாக்கள் பொருட்டுக் குருவடிவங்கொள்ளும் சத்தி சொரூபம். 120 ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியி லேயடைத்து வெளியிட்டுச் சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம். (பொ - ரை) அருட்சோதிப் பிழம்பான உண்மைப் பொருளை அகத்தில் நிறுத்தி, வெளியமைத்து, மூடி மோட்ச மடைவது எந்தக்காலம்? (வி - ரை) ஆன்மாவில் கடவுளுண்மைகண்டு அது மற்ற விடங்களி லிருப்பதையு முணர்ந்து மோனநிலை பெறுவதைக் குறித்துக் கூறியவாறாம். 121 காந்தம் வலித்திரும்பைக் கரந்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில்வைப்ப தெக்காலம். (பொ - ரை) காந்தம் உருக்காட்டாமல் மறைந்து இரும்பைத் தானே வலிந்து இழுத்துக் கொள்வதுபோல அடியேனைத் தேவரீரும் விரைந்து வலிந்து பிடித்து இழுத்துத் தேவரீர் திருவடியில் சேர்ப்பது எந்தக்காலம்? (வி - ரை) கரத்திழுத்து என்றும் பாடம். கொண்டது விரைவுபற்றி இறந்தகாலமாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. 122 பித்தாயங் கொண்டு பிரணவத்தை யூடறுத்துச் செத்தாரைப் போலே திரிவதினி யெக்காலம். (பொ - ரை) ஞானப்பித்துக்கொண்டு பிரணவங்கடந்து செத்தவர்களைப்போலத் திரிவது இனி எந்தக்காலம்? (வி - ரை) பிரணவம் - சுத்தமாயை. அது கடந்தநிலை; செத்தாரைப் போன்ற நிலை; அந்நிலை விருப்பு வெறுப்பில்லா நிலை; நான் தேகமல்ல என்னுநிலை. பிரணவ சமாதியிலும் காரண சரீரப்பற்றுண்டு என்பது ஈண்டுக் கவனிக்கத்தக்கது. 123 ஒழிந்த கருத்தினைவத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க் கழிந்தபிணம் போலிருந்து காண்பதினி யெக்காலம். (பொ - ரை) எல்லாப் பற்றுமற்ற உள்ளங்கொண்டு உள்ள எலும்புகளெல்லாம் வெள்ளெலும்புகளாகி ஒழிந்த பிணம் போலிருந்து தேவரீரைத் தரிசிப்பது எந்தக்காலம்? (வி - ரை) பிணம்போலிருந்து - யோகநித்திரை செய்து. 124 ஆதி கபிலர்சொன்ன வாகமத்தின் சொற்படியே சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம். (பொ - ரை) முன்னே கபிலர் அருளிச்செய்த சாதிரத் தின்படி சாதிபேதமில்லாமல் வாழ்வது எந்தக்காலம்? (வி - ரை) கபிலர் அருளிச்செய்தது கபிலர் அகவல். அதன் கண் சாதிபேதம் மறுக்கப்பட்டிருக்கிறது. அதை உலகத்துக்கு நினைவூட்டியவாறாம். சாதிவகை ஞானநிலைக்குப் பெருந் தடையென்க. 125 சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்கால் ஊதுந் துருத்தியைப்போட் டுனையடைவ தெக்காலம். (பொ - ரை)சூது, திருடு, பற்றிவரும் வினைகள் என்னும் இவைகள் சேர்ந்து சுட, காற்று ஊதுந் துருத்திபோன்ற உடலை ஒழித்துத் தேவரீரை யடைவது எந்தக்காலம்? (வி - ரை) சூது முதலியவைகளின் சேர்க்கையே தேக மாதலால் சூது களவு தொடர்வினையுஞ் சுட்டிட என்றார். இவை நெருப்பினுங் கொடுமையாகத் தாக்குதலால் சுட்டிட என்றார். 126 ஆசைவலைப் பாசத் தகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம். (பொ - ரை) ஆசைவலையென்னுந் தொடக்கில் சிக்குற்றுக் கெடாமல், ஓசையுடைய இரத்தினத் தீபத்தில் சேர்ந்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) ஓசை மணித்தீபம் - நாதம். மணியில் ஒளி என்று மழியாதிருத்தலின் மணித்தீப மென்றார். 127 கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப் புல்லாய்ப் பிறந்தசென்மம் போதுமென்ப தெக்ககாலம். (பொ - ரை)கல், மரம், மீன், பறவை, புல், முதலிய பிறப் புக்கள் தாங்கி வருந்தியது போதும் போதும் என்று கூவுவது எந்தக்காலம்? 128 தக்கும்வகைக் கோர்பொருளும் சாராம லேநினைவில் பக்குவம்வந் துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம். (பொ - ரை) திருவருள் கிட்டித் தங்கும் வழியைப் பெறு வதற்கு வேறு எப்பொருளிலும் ஒன்றாமல் எனது எண்ணத்தில் பக்குவமுற்றுத் தேவரீர் திருவருளை நோக்கி யிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகுந் தன்மைய தாகலின் அது திருவருளில் பதியவேண்டுமாயின் பிற பொருளில் தோயாதிருக்க வேண்டுமென்க. பிறபொருளில் தோயாதிருக்க ஆன்மாவிற்குப் போதியவன்மை யின்மையால் ஆண்டவன் அருளைநோக்கி யிருக்கவேண்டு மென்க. என்னை? அதுகாலை ஆன்மா வேறுபொருளில் தோயாதிருக்குமாதலின். 129 தூறோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை வேரோ டறுத்து விழுங்குவது மெக்காலம். (பொ - ரை) மாயை என்னும் புதரோடு அசைந்து சுழன்று நின்று அதன் காரியமாகிய தத்துவத்தை வேரோடு களைந்து அதை விழுங்குவது எந்தக்காலம்? (வி - ரை) ஈண்டுத் தூறு என்றது மாயையை. மாயையைப் புதருக்கு ஒப்பிடுவது வழக்கம். சேற்றிற்கும் கூறுவது முண்டு. மாயையினின்றும் பிறருக்குத் தத்துவ வேர் அறுத்து என்றபடி. மாயையைப் புதராகவும் தத்துவத்தை வேராகவுங் கொள்ளுதல் பொருந்தாது. தத்துவ வேர் என்றது தத்துவ மூலத்தை; தத்துவ காரணத்தை; மாயையை என்க. 130 பாச நடுவேறிப் பாய்ந்தெழுந்த சித்திரத்தை ஏச நடுமூலந் திருத்துவது மெக்காலம். (பொ - ரை) பாசத்தின் இடையிலே புகுந்து பதிந்து கிளம்பிய (ஆன்மாவோடு கூடிய) உடலை உலகத்தார் ஏச அதன் தோற்றத்துக்கு ஆதாரமாக உள்ளதை ஒழுங்குபடுத்துவது எந்தக்காலம்? (வி - ரை) சித்திரத்தை - மாயையால் சித்திரிக்கப்படும் உடலை. 131 ஓரின்பங் காட்டு முயர்ஞான வீதிசென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம். (பொ - ரை) ஒப்பற்ற ஆனந்தத்தைக் குறிக்கும் மேலான ஞான வீதியில்போய் (ஆங்குள்ள) பேரானந்த வீட்டைக் கண்டு ஆங்கே (நித்தியானந்த வாழ்வு) பெற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) ஞானத்தை வீதியாகவும் இன்பத்தை அதன்க ணுள்ள வீடாகவும் கூறியிருத்தல் காண்க. 132 காரணமாய் வந்தென் கருத்தி னுரைத்ததெல்லாம் பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) காரண குருவாக எழுந்தருளி எனது உள்ளத்தில் செவ்வனே பதியுமாறு உபதேசித்தவைகளெல்லாம் குறைவிலா நிறைவாகக்கண்டு புகழ்ந்து இருப்பது எந்தக்காலம்? (வி- ரை)அழிவில்லாத் திருவருள் திருமேனிதாங்கி ஞானகுரு வருவதால் காரணமாய் என்றார். காரணம் அழிவற்றதாகலின். புகழ்ந்திருப்பது - பிறிதொன்றைக் கருதாது ஆண்டவன் அருட்டிறத்தைப் புகழ்ந்துரைத்தல். 133 ஆயுங் கலைகளெல்லா மாராய்ந்து பார்த்ததற்பின் நீயின்றி யொன்றுமில்லா நிசங்காண்ப தெக்காலம். (பொ - ரை) ஆராயுங் கலைகளெல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து பார்த்தபின்னர் அவைகளில் தேவரீரை யல்லாது வேறொன்று மில்லாத சிறந்த உண்மையைக் காண்பது எந்தக் காலம்? 134 குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப் பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம். (பொ - ரை) என்னை யாட்கொள்ளுவதைத் தனக்குரிய குறியாகக் கொண்டு அடியார் திருக்கூட்டத்தை எனக்கு நல்கிய தலைவனை என்றும் பிரியாமல் கூடிப் பிறப்பை ஒழிப்பது எந்தக்காலம்? (வி - ரை)அடியார் கூட்டுறவு இன்றியமையாததாகலின் குலமளித்த என்றார். தொண்டரோடு கூட்டுகண்டாய் என்றார் தாயுமானாரும். 135 மத்தடுத்து நின்று மருளாடு வார்போல பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம். (பொ - ரை) மயக்குற்று மருள்கொண்டு ஆடுவார்போல ஞானமயக்குற்றுத் தேவரீர் திருவருளைப் பெற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) மருள்கொண்டு குறிசொல்வோர்க்கு உடலுணர் வின்மைபோல என்றபடி. 136 சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ் வேவாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம். (பொ - ரை) இறவாமல் இறந்து சற்குருவின் திருவடிக் கீழ் வேகாமல் வெந்து வாழவேண்டுவது எந்தக்காலம்? (வி - ரை) சாகாமல் சாவது - மரணமடையாமல் நான் என்ற சீவபோத மழியப்பெறுவது. வேகாமல் வேவது - பூத அக்கினி யால் வேகாமல் ஞான அக்கினியால் சீவபோதம் வேகப் பெறுவது. 137 என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின் தன்னை யறிந்து தவம்பெறுவ தெக்காலம். (பொ - ரை) சிறியேனுக்குத் தெரியாமல் சிறியேனிட மிருந்து சிறியேனை ஆட்டுஞ் சூத்திரமுடைய தேவரீரை உணர்ந்து தவம்பெறுவது எந்தக்காலம்? 138 உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக் கள்ள மனந்தெளிந்து காண்பதினி யெக்காலம். (பொ - ரை) எனது மனமறியாமல் என்பால் மறைந்திருந்த தலைவனை எனது திருட்டுமனம் தெளிவுற்றுக் காண்பது இனி எந்தக்காலம்? 139 வாசித்துங் காணாமல் வாய்விட்டுப் பேசாமல் பூசித்துந் தோன்றாப் பொருள்காண்ப தெக்காலம். (பொ - ரை) நூல்களைப் படித்துப் படித்துங் காணாமலும், வாய்விட்டுப் பேசாத மௌனநிலையில் வெளிப்படாமலும், பூசனையால் தோன்றாமலுமுள்ள செம்பொருளைக் காண்பது எந்தக்காலம்? 140 பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல் பின்னிரண்டு சங்கிலிக்குள் பிணைப்பதினி யெக்காலம். (பொ - ரை) பன்னிரண்டங்குலம் பாயும் காற்றாகிய வாசியை விருப்பப்படி ஓடவிடாது பின்னேயுள்ள இரேசக பூரகங்கள் என்னும் சங்கிலியால் கட்டுவது இனி எந்தக்காலம்? (வி - ரை) இடைகலை வழியாகவும் பிங்கலை வழியாகவும் புகுந்தும் வெளிவந்துந் திரிகின்ற காற்றைக் குதிரையென்று கூறுவது மரபு. அதுபற்றியே ஈண்டுப் புரவி என்றார் ஆசிரியர். ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள என்றார் திருமூலரும். அக்காற்றுப் பன்னிரண்டு அங்குலம் ஓடும் மீளும். கூட மெடுத்துக் குடிபுக்க மங்கையர் - ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் என்பது திருமூலர் திருவாக்கு. அக்காற்றைக் கண்டவாறு ஓடவிடாது, இரேசக பூரகத்தால் அளவாகக் கட்டவேண்டுமாதலால் பின்னிரண்டு சங்கிலிக்குள் என்றார். ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள - வீசிப் பிடிக்கும் விரகறிவா ரில்லை - கூறிய நாதன் குருவி னருள்பெற்றால் - வாரிப் பிடிக்க வசப்படுந் தானே - திருமூலர். 141 நாட்டுக்கா லிரண்டும்விட்டு நடுவக்கா லூடேபோய் ஆட்டுக்கா லிரண்டினுள்ளே யமர்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) நாட்டும் வாயு இரண்டையும் விடுத்து, நடுவி லுள்ள வாயுவிலே சென்று, ஆங்கே நடம்புரியும் ஆண்டவன் இரண்டு திருவடிகளின் கீழ் வீற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) நாட்டுக்கால் இரண்டு - இரேசக பூரகம். நடுவுக் கால் - கும்பகம். மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் - பாயா மிரேசகத்தா லுட்பதி வித்து - மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே - ஆலால முண்டா னருள்பெற லாமே - திருமூலர். 142 பாற்பசுவைப் பூட்டிப் பதியில்வைத்துச் சீராட்டிக் காற்பசுவை யோட்டியதிற் கட்டிவைப்ப தெக்காலம். (பொ - ரை) ஆனந்த அமுதஞ்சொரியும் ஆன்மாவைச் சிவபோதத்தில் இருந்திச் சிறப்புச்செய்து, காற்றாகிய (இரேசக பூரக) மென்னும் பசுவை (பிராணனை)அதனிடைச் செலுத்தி, அக்காற்றால் (ஆன்மாவை)க் கட்டிவைப்பது எந்தக்காலம்? (வி - ரை) ஆன்மாவைக் காற்றால்கட்டல் - கும்பித்தல். இட்டதவ் வீடிள காதிரே சித்துப் - புட்டி படத்தச நாடியும் பூரித்துக் - கொட்டிய பிராணன் பானனுங் கும்பித்து - நட்டமிருக்க நமனில்லை தானே - திருமூலர். 143 பலவிடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவறையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம். (பொ - ரை) மனதைப் பலவிடங்களில் செலுத்தி நோக்காமல், குகையில் போய்த் தங்கித் தேவரீர் திருவருளுக்கு நேர்படுவது எந்தக்காலம்? (வி - ரை) நில அறை - குகை. இயற்கையாகக் கடவுளால் கட்டப்பட்ட அறை. ஈண்டு ஹிருதய குகையைக் குறிப்பிட்ட வாறு காண்க. குகையில் ஆண்டவன் வீற்றிருத்தலால் குகன் என்னும் ஒரு பெயர் அவன் பெற்றிருக்கிறான். குகை வாசத்தால் மனிதன் உடல் உரம் பெறுமென்க. உடல் உரம் யோகத்துக்கு உறுகருவி என்க. புறகுகை வாசம் அக்குகை தரிசனத்துக்குச் சாதனமாவது கருதற்பாலது. 144 காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே ஓமக் கனல்வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம். (பொ - ரை) காமமென்னுங் கடல் கடந்து திருவருள் கரையேறிச் செல்வதற்கு ஞானாக்கினியை எழுப்பித் தேவரீர் திருவருள் விலாசத்துள் வீற்றிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) காமக்கட்டை அழிக்கவல்லது ஞானாக்கினி என்க. மூலாதாரத்தினின்றும் ஞானாக்கினியை வாயுவால் எழுப்பினால். அது காமத்தைத் தகித்து மனதை ஒடுக்கு மென்க. 145 உதயச் சுடர்மூன்று முள்வீட்டி லேகொளுத்தி இதயத் திருநடன மினிக்காண்ப தெக்காலம். (பொ - ரை) தோன்று மூன்று சுடர்களையும் அகமுகத்தில் எழுப்பி, அதன்பயனாக இதய குகையில் ஆண்டவன் திரு நடனத்தை இனிக் காண்பது எந்தக்காலம்? (வி - ரை) முச்சுடர் - சோமன், சூரியன், அக்கினி. பிண்டத் துள்ள மூன்றும் இருளை அழிப்பதுபோல அண்டத்துள்ள அம்மூன்றும் அஞ்ஞான இருளை அழிக்குமென்க. இடகலை பிங்கலை சுழிமுனை இம்மூன்றும் முச்சுடர் என்னப்பட்டன. சுழிமுனை நாடியால் - கும்பகத்தால் - மூலாக்கினி எழும்புவ தியல்பு. எல்லாக்கலையு மிடைபிங்கலைநடுச் - சொல்லா நடுநாடியூடே தொடர்மூலஞ் - செல்லா வெழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் - நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே, அங்கி யெழுப்பி யருங்கதி ரூட்டத்துத் - தங்குஞ் சசியாற் றாமமைந் தைந்தாகிப் - பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் - திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே ஈராறு பெண்கலை யெண்ணி ரண் டாண்கலை - போர்மர புக்குப் பிடித்துக் கொடுவந்து - நேராகத் தோன்று நெருப்புறவே பெய்யில் - ஆராத ஆனந்த மானந்த மானதே - திருமூலர். 146 வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம். (பொ - ரை) வேத வேதாந்த கலைகளை யெல்லாம் விடுத்து அவைகளைக் கடந்து நாதாந்த மூலத்திடை யிருப்பது எந்தக் காலம்? (வி - ரை) நாததத்துவ முடிவிலிருப்பது பரம்பொருள் என்க. அது வேத வேதாந்தங்களால் அறிய ஒண்ணாதது. ஞானத்தி னன்னெறி நாதாந்த நன்நெறி என்றார் திருமூலர். 147 பட்ட மற்றுக்காற்றிற் பறந்தாடுஞ் சூத்திரம்போல் விட்டு வெளியாக விசுவசித்த தெக்காலம். (பொ - ரை) காற்றாடியை யிழந்து காற்றில் பறந்து அசையும் நூலைப்போலப் பாசத் தொடர்பை அறுத்துச் சிதாகாசத்தில் நிலவுவது எந்தக்காலம்? 148 அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்க் கிட்டாப் பொருள் தனைக்கிட்டுவது மெக்காலம். (பொ - ரை) அட்டாங்க யோகத்துக்கும் அதற்கப்பாலு மப்பாலாகி, அதற்கு மேலுங் கிட்டாத பரம்பொருளை அடைவது எந்தக்காலம்? (வி - ரை) அட்டாங்கயோகம் - இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. சீவபோதமற்ற ஞானத்தால் சிவத்தை அறியக்கூடும். 149 ஒட்டாம லொட்டிநிற்கு முடலுமுயிரும் பிரித்தே எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம். (பொ - ரை) பற்றாமல் பற்றிநிற்கும் உடலையும் உயிரையும் பிரித்துப் பசு பாச ஞானங்களால் அறிய ஒண்ணாத பழம் பதியாகிய சிவத்தையுடைய இவ்விடத்தில் திருவருள் என்னும் ஏணியை நாட்டுவது எந்தக்காலம்? 150 பாசத்தை நீக்கிப் பசுவைப் பதியில்விட்டு நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) ஆணவம் கர்மம் மாயை யென்னும் பாசத்தை விலக்கி அவைகளால் பந்திக்கப்பட்டிருந்த ஆன்மாவைச் சிவத்தில் விடுத்து ஆங்கே சுரக்கும் அன்பிலே உறைந்து தேவரீரைத் தியானிப்பது எந்தக்காலம்? 151 ஆசார நேய வனுட்டான மும்மறந்து பேசாமெஞ் ஞானநிலை பெற்றிருப்ப தெக்காலம். (bgh - iu) òw Mrhu nea mDZlhd§fis kwªJ ngrhj c©ik PhdÃiy milªâU¥gJ vªj¡fhy«?152 பல்லாயிரங் கோடிப் பகிரண் டமும்படைப்பே அல்லாது வேறிலையென் றறிவதினி யெக்காலம். (பொ - ரை) பல ஆயிர கோடிக் கணக்காக உள்ள பகி ரண்டங்க ளெல்லாம் ஆண்டவன் சிருஷ்டியே அல்லாமல் வேறிலையென்று அறிவது எந்தக்காலம்? (வி - ரை) பல்லாயிரங்கோடி - பல அண்டங்கள் யாவும் ஆண்டவன் படைப்புக்கு உட்படும் விகாரமெய்துந் தன்மையன என்பது குறிப்பித்தவாறாம். படைப்புக்குட்படாத பொருளைப் பெற்றால் படைப்புக் குட்படுவ தொழியுமென்க. 153 ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை ஓதியறிந் துள்ளே யுணர்வதினி யெக்காலம். (பொ - ரை) முதல் முடிவாகி நின்ற அரிஎன்ற எழுத்தை ஓதியுணர்ந்து மனதில் தெளிவடைவது இனி எந்தக்காலம்? (வி - ரை) அரி என்பது ஆதிமுதல் அந்தம்வரை எல்லா வற்றிற்கு மாதாரமாயிருப்பது. 154 சாத்திரத்தைக் கட்டிச் சதுமறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம். (பொ - ரை) சாத்திரத்தைக் கட்டிச் சுருட்டி ஒழித்து நான்கு வேதங்களைப் பொய்ப்படுத்தி ஞான சூத்திரத்தைக் கண்டு துன்பத்தை ஒழிப்பது எந்தக்காலம்? (வி - ரை) கலைஞானங்களெல்லாம் பொய்யென்றபடி. 155 அல்லும் பகலுமென்ற னறிவையறிவா லறிந்து சொல்லு முறைமறந்து தூங்குவது மெக்காலம். (பொ - ரை) இரவு பகல் என்பாலுள்ள அறிவுப் பொருளைத் திருவருளால் உணர்ந்து அஃது இத்தன்மையது என்று சொல்லும் வகை மறந்து அறிதுயில் செய்வது எந்தக் காலம்? (வி - ரை) இத்தன்மைத்து என்று சொல்லொணா நிலையே மௌனநிலை, உணர்ந்ததைச் சொல்வது கலைஞானமன்றி மெய்ஞ்ஞானமாகாது. 156 இயங்குஞ் சராசரத்தி லெள்ளுமெண் ணெயும்போல் முயங்கு மந்தவேத முடிவறிவ தெக்காலம். (பொ - ரை) இயங்குஞ் சரப்பொருளிலும், அசரப்பொரு ளிலும் எள்ளிடத் தெண்ணெயிருப்பதுபோல விருக்கும் அந்த வேதாந்த உண்மையை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) சராசரத்திடை எள்ளுக்குள் எண்ணெய்போல் கலந்துள்ள நிலை அத்துவிதநிலை என்க. உலகெலா மாகி வேறாயுடனுமாய் என்று மெய்கண்ட சாத்திரங் கூறுவது காண்க. வேதாந்த வுண்மை அத்துவிதத்தை யுணர்த்தலால் வேதமுடி வறிவ தெக்காலம் என்றார். 157 ஊனாகி யூனி லுயிராகி யெவ்வுலகுந் தானாகி நின்ற தனையறிவ தெக்காலம். (பொ - ரை) ஊனாகியும், ஊனில் உயிராகியும், எந்த உலகும் தானேயாகியும் நிற்கின்ற அத்துவித உண்மையை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) எல்லாவற்றிலும் ஆண்டவனிருப்பையும், எல்லா வற்றையும் ஆண்டவனாகக் காண்டல் மெய்ஞ்ஞானநிலை என்க. ஊனாயுயி ரானாயுட லானாயுல கானாய் என்றார் வன்றொண்டர். ஒன்று நீயில்லை அன்றி யொன்றில்லை என்றார் மாணிக்கவாசகர். விரிவைப் பிரமசூத்திரம் சிவஞான போதம் முதலிய நூல்களிலும் அவைகட்கு ஆன்றோர் வரைந் துள்ள பாடியங்களிலும் காண்க. 158 என்னைவிட்டு நீங்காம லென்னிடத்தில் நீயிருக்க உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம். (பொ - ரை) தேவரீர் என்னை விடுத்துச் சிறிதுநேரமும் நீங்காமல் எப்பொழுதும் என்னுடனிருக்க, (அதுபோல) தேவரீரை விடுத்து நீங்காது அடியேன் தேவரீருடனிருப்பது எந்தக்காலம்? (வி - ரை) சிவன் சீவனை விடுத்து நீங்கி யிருப்பதேயில்லை; அவ்வுண்மையைச் சீவன் தன் அறியாமையால் காணாதிருக் கிறான். சிவன் தன்னை விடுத்து நீங்காதிருப்பதைச் சீவன் உணர்வதே மெய்ஞ்ஞானம். சிவன்செயலைத் தன்செயலாகக் கொண்டு சீவன் இடர்ப்படுநிலை அஞ்ஞானநிலை என்க. தன் செயலைச் சிவன் செயலாகக் கொள்வது ஞானநிலை என்க. 159 இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற வான்பொருளைச் சொன்னதென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம். (பொ - ரை) இன்னதென்று சொல்லமுடியாத அளவிறந்த உயர்பொருளை அடியேனுக்குக் குருநாதன் உபதேசித்தா னென்று சிறியேன் உணர்ந்து சொல்வது எந்தக்காலம்? 160 மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி எனதறிவை யம்பாக்கி யெய்வதினி யெக்காலம். (பொ - ரை) சிறியேன் மனதை வில்லாக்கி, ஆன்றவைம் பொறிகளை நாணாக்கி, எனது போதத்தை அம்பாக்கி எய்வது எந்தக்காலம்? 161 என்னை யிறக்கவெய்தே யென்பதியை யீடழித்த உன்னை வெளியில்வைத்தே யொளித்துநிற்ப தெக்காலம். (பொ - ரை) என்னை மாளும்படி அம்பு எய்து எனது இருப்பிடத்தை யழித்த தேவரீரை, பரவெளியில் இருத்தி அதன்கண் நான் மறைந்து நிற்ப தெந்தக்காலம்? (வி - ரை) எய்யப்பட்ட அம்பு பாசக்காட்டில் பாய்ந்து ஆங்குள்ள காம குரோத முதலிய துஷ்ட மிருகங்களைக் கொன்றமை நோக்கி என்னை யிறக்க வெய்தே என்றார். தான் இறத்தாலாவது தன்பாலுள்ள சீவ சேஷ்டைகள் ஒடுங்குவதாம். பதி என்றது காமக் குரோதங்களுக்கு நிலைக்களமாக உள்ள முனைப்பை என்க. சிதாகாசத்தோடு மறைவது சாயுச்சிய பதவி யென்க. 162 கடத்துகின்ற தோணிதனைக் கழைகள்குத்தி விட்டாற்போல் நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம். (பொ - ரை) மீகாமன் ஓட்டுகின்ற தோணியை மூங்கில் கொம்புகள் குத்திவிட்டதுபோல, எனது உடலை நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எந்தக்காலம்? (வி - ரை) திருவருள் என்னை யறியாது என்னை நடத்துஞ் சித்திரத்தை யென்னென்பேன் என்றவாறு. 163 நின்றநிலை பேராமல் நினைவிலொன்றுஞ் சாராமல் சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம். (பொ - ரை) சமாதிநிலை குலையாமலும், அச்சமாதியி லுள்ள ஒன்றிய நினைவில் வேறு எண்ணங்கள் நுழையாமலும், இவ்வாறு பெற்றநிலை மோட்சமென்று தேவரீரைச் சேர்ந்து உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) நின்றநிலை பேராமலும் நினைவிலொன்றும் வாராமலும் சென்றநிலை முத்திநிலை என்றபடி. 164 பொன்னும் வெள்ளியும் பூண்டு பொற்பதத்தை யுள்ளமைத்து மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம். (பொ - ரை) பொன்னையும் வெள்ளியையும் தரித்த அழகிய ஸ்ரீபாதங்களை மனதிலே அமைத்துப் பிரகாசிக்கின்ற சோதி மயமான பரவெளியிலே என்னைவிட்டு மீண்டும் பூதவொளி யில் வரவொண்ணாதவாறு அடைப்பது எந்தக்காலம்? (வி - ரை) பொன், வெள்ளி என்றது நெருப்பையும் நீற்றையும் என்க. வேதாகமங்கள் எனினுமாம். பொன்மலை, வெள்ளிமலை என்போருமுளர். 165 கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல் வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம். (பொ - ரை) குளவிக்கூட்டி லடைப்பட்ட கீடமானது குளவி உருவம் பெற்றதுபோல, மோட்சவீட்டி லடைபட்டுத் திருவருளை விரும்புவது எந்தக்காலம்? (வி - ரை) குளவி புழுக்களை உணவுக்காகக் கூட்டுக் கெடுத்துக் கொண்டுபோய் அவைகளைக் கொடுக்கால் கொட்டி உணர்வழித்துக் குஞ்சுகளோடு அரித்து அரித்துத் தின்பது வழக்கம். கூட்டினுள்ளே புழுக்கள் காணப்படாமல் குஞ்சுகள் மாத்திரங் காணப்படலால் புழுக்களே குளவியாக மாறுதல் அடைகின்றன என்று கொள்ளப்பட்டது. புழு குளவியாகின்ற தெனக் கொண்டு அதை ஆன்மா கடவுளாதற்கு உவமையாகக் கொள்ளப்பட்டு வருகிறது. பிரமரகீட நியாய மென்றொரு நியாயமும் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்நியாயம் உபநிடதங் களிலும் வேறு பல ஞான நூல்களிலும் ஆளப்பட்டிருக்கிறது. புழு குளவியாதலில்லை என்பது தற்கால சாத்திரிகள் கொள்கை. 166 கடலி லொளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல் உடலி லொளித்தசிவ மொளிசெய்வ தெக்காலம். (பொ - ரை) கடலில் மறைந்திருந்த அக்கினி கிளம்பி வெளி வந்தாற்போல, உடலினிடத்தில் மறைந்துள்ள சிவம் பிரகாசிப்பது எந்தக் காலம்? (வி. ரை) அக்கினி - வடவாமுகாக்கினி. 167 அருணப் பிரகாச மண்டமெங்கும் போர்த்ததுபோல் கருணைத் திருவடியிற் கலந்துநிற்ப தெக்காலம். (பொ - ரை) சூரிய ஒளியானது உலகமுழுவதும் மூடினது போல, திருவருள்மயமான தேவரீர் ஸ்ரீபாதங்களில் படர்ந்து நிற்பது எந்தக்காலம்? 168 பொன்னிற் பலவிதமாய்ப் பூஷணமுண் டானதுபோல் உன்னிற் பிறந்துன்னி லொடுங்குவது மெக்காலம். (பொ - ரை) பொன்னினின்றும் பலதிறமான அணி கலன்கள் காரியப்படுவதுபோலத் தேவரீரிடத்தினின்றும் தோன்றித் தேவரீரிடத்தில் ஒடுங்குவது எந்தக்காலம்? 169 நாயிற் கடைப்பிறப்பாம் நான்பிறந்த துன்பமற வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம். (பொ - ரை) நாயினுங் கடைப்பட்ட இழிபிறவி தாங்கிய துயரம் என்னைவிட்டொழிய மூங்கிலினடத்தில் நெருப்பொளி விளங்குவதுபோல என்னிடத்துச் சிவவொளி விளங்குவது எந்தக்காலம்? 170 சூரிய காந்திவெளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல் ஆரியன் றோற்றத் தருள்பெறுவ தெக்காலம். (பொ - ரை) சூரியகாந்தியானது கண்ணாடியிற் படிந்து, அதன் வாயிலாகச் சூழ்ந்து பஞ்சை யெரிப்பதுபோல, குருதரிச னத்தால் பாசம் எரிக்கப்பட்டுத் திருவருள் பெறுவது எந்தக் காலம்? 171 இரும்பிற் கனன்மூட்டி யிவ்விரும்பே யவ்வுருவாய்க் கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம். (பொ - ரை) ஆன்மா என்னு மிரும்பில் திருவருளென்னும் நெருப்பு மூட்ட (மூட்டப் பெற்ற) இரும்பே நெருப்புருவாதல் போல ஆன்மா திருவருள்மயமாய்த் திருவருள் கரும்பினிடத்துள் இனிய சாற்றைக் கண்டறிவது எந்தக்காலம்? 172 கருக்கொண்ட முட்டைதனைக் கடலாமை தானினைக்க உருக்கொண்ட வாறாதுபோ லுனையடைவ தெக்காலம். (பொ - ரை) கடலிலுள்ள ஆமையானது தானீன்ற முட்டையைத் தான் நினைக்க அதுபொறிந்து ஆமை உருப் பெற்றதுபோலக் குருநினைவால் நான் சிவமாவது எந்தக்காலம்? 173 வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல் கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம். (பொ - ரை) ஒருவர் தாம் வாழும் இல்லம் விடுத்து வெளிவருவது போல உடலினின்றும் பிரியுங் குறிப்பை உணர்வது எந்தக்காலம்? 174 கடைந்தவெண் ணெய்மோரிற் கலவாத வாறதுபோல் உடைந்து தமியே னுனைக்காண்ப தெக்காலம். (பொ - ரை) கடைந்த வெண்ணெய் மீண்டும் மோரி னிடத்தில் கலவாதவாறுபோலப் பாசத்தினின்றும் வெளிவந்த நான் (மீண்டும் அதன்கண் வீழாது) தேவரீரைக் காண்பது எந்தக்காலம்? 175 இருளை வெளிவிழுங்கி யேகவுருக் கொண்டாற்போல் அருளை விழுங்குமிரு ளகன்றுநிற்ப தெக்காலம். (பொ - ரை) இருளை வெளிவிழுங்கி ஒரே வெளிமயமாகச் செய்வதுபோலத் திருவருளை விழுங்கியுள்ள இருள் ஒழிந்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) வெளிச்சத்தின் அபாவமே இருள் என்பது தர்க்கம். வெளிச்சம் இருளை விழுங்குவதுபோல இருள்மயமான ஆணவம் திருவருளை (விழுங்கி) மறைத்திருக்கிறது என்றபடி. விழுங்குந் தன்மை குறிப்பிட்டவாறாம். இருளை வெளி விழுங்குவதுபோல இருள்மயமாகிய திருவருள் விழுங்குதல் என்று பொருள் கூறுவது மூலத்தோடு முரண்படுவதாகும். ஈண்டு விழுங்குதலாகிய வினையுவமை ஒன்றே கவனிக்கற்பாலது. முற்றுவமையாகக் கொள்ளலாகாது. முத்திக் காலத்திலும் ஆணவம் தன் வலி குன்றிக் கிடத்தலால் அகன்று நிற்பது என்று கூறினார். 176 மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணி லுறைந்தாற்போல் என்னுணின்ற தென்னுள்ளே யானறிவ தெக்காலம். (பொ - ரை) மின்னல் விண்ணில்தோன்றி விண்ணில் மறைவதுபோல என்னிடத்தில் தோன்றி என்னிலே அடங்கும் பொருளை நான் அறிவது எந்தக்காலம்? 177 கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல் கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம். (பொ - ரை) குடத்தில் கண்டமாக உள்ளநீரில் சூரிய கிரகணங்கள் பாய்ந்தாற்போல, எனது உடலில் நுழைந்து அதனை யிடமாகக்கொண்ட பிரம சொரூபத்தின் அமிசத்தை உணர்வது எந்தக்காலம்? 178 பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்கு மோவுடலைக் காணுகின்ற வென்கருத்திற் கண்டறிவ தெக்காலம். (பொ - ரை) தரிக்கின்ற பொன்னாபரணங்களைத் தரித்தால் அவைகளைப் பொன் சுமக்குமோ? சுமப்பது உடலே. (அதுபோல) என் சிந்தையில் புலனாகின்ற உடலை நான் காணாது அதனுள் நிலவும் பொருளைக் கண்டறிவது எந்தக்காலம்? 179 செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம். (பொ - ரை) செம்பினிடத்தில் களிம்பியிருப்பதுபோலச் சிவத்தை மறைத்துள்ள மிகவும் இடர்ப்படுத்துகின்ற மூன்று மலங்களையும் என்னிடத்தினின்றும் பிரிப்பது எந்தக்காலம்? 180 ஆவியுங் காயமும்போ லாத்துமத்து நின்றதனைப் பாவி யறிந்து பற்றிநிற்ப தெக்காலம். (பொ - ரை) உயிரும் உடலும் ஒன்றை விடுத்தொன்று பிரிந்து நில்லாது கலந்திருப்பதுபோல ஆன்மாவைவிட்டுப் பிரியாது நிற்கும் பரமான்மாவைப் பாவியேன் உணர்ந்து அதன்கண் மனம்பற்றி நிற்பது எந்தக்காலம்? 181 ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா வின்பமதை நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம். (பொ - ரை) ஊமையானவன் கனவுகண்டு அதைப் பிறர்க்குரைக்க முடியாதிருப்பதுபோல, நாம் பெறும் இன்பம் இத்தகைத்தென்று கூறவொண்ணாத மௌன இன்பத்தை நாம் உணர்ந்துகொள்வதற்கு நன்னாள் பிறப்பது எந்தக்காலம்? 182 சாகாச் சிவனடியைத் தப்பாதா ரெப்போதும் போகா வுடலகன்று போவரென்ப தெக்காலம். (பொ - ரை) அழியாத சிவபிரான் திருவடியைப் பிழையாது என்றும் போற்றுவோர் நீங்கா உடல்நீங்கி வீடடைவர் என்பதை அறிவது எந்தக்காலம்? (வி - ரை) வினையால் என்றும் உடல் நீங்காது தொடர்ந்து வருதலால் போகா உடல் என்றார். வினையை யொழிப்பது சிவனடி தியானமாதலால் அதனைச் சிந்திப்போர் வினையால் நீங்காது தொடரும் உடல் நீங்கப்பெற்று வீடுபேறெய்துவர் என்பதை வலியுறுத்தவாறு காண்க. 183 நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம். (பொ - ரை) நிஷ்டை விடுத்து, நினைப்பை ஒழித்து ஒன்றுமில்லா ஆகாசத்தில் கலந்து நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) மனதைக் கட்டுவது நிஷ்டை. அது கூடின் ஒன்றை நினைப்பது ஒழியும். அந்நிலை வாக்கு மனங்கட் கெட்டாத சிதாகாசநிலை. இத்திருப்பாட்டால் நிஷ்டைக்கு மேலாக ஒரு நிலை யுண்மையை அறிவுறுத்தியவாறாம். நினைப்பற நினைந் தேன் என்றார் மணிவாசகரும். நினைப்பும் மறப்பும் அற்றவர் நெஞ்சில் - வினைப்பற் றறுக்கும் விமல னிருப்பன் என்றார் திருமூலரும். 184 வெட்ட வெளிதன்னில் விளைந்தவெறும் பாழைத் திட்ட முடன்கண்டு தெளிவதினி யெக்காலம். (பொ - ரை) வெட்ட வெளியிலே நேர்ந்த ஒன்றுமில்லாத சூந்யத்தை முறைப்படி பார்த்து (உண்மை) தெளிவது இனி எந்தக்காலம்? (வி - ரை) ஈண்டுப் பாழென்றது சிதாகாசத்தை என்க. வெம் பாசத்தை என்றும் பாடம். 185 எங்கும் பரவடிவா யென்வடிவு நின்வடிவாய்க் கங்குல் பகலின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) அடியேன் உருவம் தேவரீர் உருவமாகி எவ்விடத்தும் (இரண்டற்ற மேலான) ஒரே வடிவாய், இரவு பகல் பேதமின்றித் தேவரீரைத் தரிசித்திருப்பது எந்தக்காலம்? (வி - ரை) என் வடிவு - சீவன். உன் வடிவு - சிவம். சிவசீவ பேதமின்றியிருப்பது எங்குமுள்ள பரவடிவம் என்றபடி. கங்குல்பகல் கேவல சகலம் - இரவு பகலில்லாவிடம் - இறப்புப் பிறப்பில்லாவிடம் - சிருஷ்டி சம்மாரமற்றவிடம். 186 உண்டதுவு மாதருடன் கூடிச்சேர்ந் தின்பங் கண்டதுவு நீயெனவே கண்டுகொள்வ தெக்காலம். (பொ - ரை) உலகத்திலுள்ள பல இன்பங்களை நுகர்ந்தும் பெண்களோடு கூடி இன்பம் பெற்றதும் (ஆக இரண்டும்) தேவரீரே என்று கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) பொதுப்பட எல்லா இன்பங்களையுங் குறிப்பிட வேண்டி உண்டதுவும் என்றார். மாதரின்பம் சிற்றின்பங்களிற் றலையாயதாகலான், அதனைத் தனியே வேறுபிரித்து மாத ருடன் கூடிச் சேர்ந்தின்பம் கண்டதுவும் என்றார். உலகத்தி லுள்ள பலவகை இன்பங்களை ஆண்டவன் சொரூப இன்பம் என்று நுகரவேண்டு மென்றபடி. வேறு வழிச் சீவபோதத்தால் நுகர்வது பாவத்துக்குக் கால்கொள்வதாகும். 187 ஈமென்று கேட்டதுவு மென்னுள்ளே நின்றதுவும் ஓமென்று சொன்னதுவு முற்றறிவ தெக்காலம். (பொ - ரை) ஈம் என்ற ஒலி என்செவியி லுற்றதும், என்னுள்ளத்துள்ளே நின்றதும், ஓம் என்று எனக்கு அறிவுறுத்தியதுமாகிய இவற்றை உற்று ஆராய்ந்து உண்மை தெளிவது எந்தக்காலம்? (வி - ரை) ஈம் என்று ஒலிப்பதும் ஓம் என்று உபதேசிப்பதும் என்னுள்ளத்துள்ள ஒன்றே என்றபடி. 188 சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ் சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம். (பொ - ரை) சத்தம் பிறந்தவிடத்தையும் தன்மயமாய் நின்ற விடத்தையும், சித்தம் பிறந்த விடத்தையும்ஆராய்ந்து உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) சத்தம் - நாதம். தன்மயம் - சிவமயம். சித்தம் - மனம். மனம் பிறக்குமிடத்தையும் நாதம் பிறக்குமிடத்தையும் ஆராய்ந்தால் தன்மயம் விளங்கும் என்பதை அறிவுறுத் தியவாறாம். 189 போக்கும் வரவும் புறம்புள்ளு மாகிநின்றும் தாக்கு மொருபொருளைச் சந்திப்ப தெக்காலம். (பொ - ரை) போக்காலும் வரவாலும், புறமும் அகமுமாய் நிற்றலாலும் தன் தொழிலைச் செய்யும் ஒரு பரம்பொருளைக் கண்பது எந்தக்காலம்? (வி - ரை) போக்கு வரவு என்றது கடவுளின் சகள வடிவைக் குறிப்பது. புறமு முள்ளு மென்றது கடவுளின் நிஷ்களவடிவைக் குறிப்பது. இறைவன் இரண்டு வடிவத்தானும் உலகை நடாத்தாலால் தாக்கும் ஒருபொருளை என்றார். 190 நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும் நீயெனவே சிந்தைதனி னேர்படுவ தெக்காலம். (பொ - ரை) நான் நீ என்றுபேதமாக உள்ள இரண்டு மொழிந்து அவை ஒன்றுவதற்கு ஏதுவாயுள்ள தேவரீரே எல்லாம் என்ற எண்ணம் மனதிலுதிப்பது எந்தக்காலம்? (வி - ரை) நான் நீ என்ற பேதபுத்தி பிறவிக்கு ஏதுவானது. நான் நீ என்ற பேதமொழிந்து எல்லாம் ஒன்று என்னும் அபேதநிலை பிறவியை ஒழிப்பது. 191 அறிவையறி வாலறிந்தேயறியு மறிவுதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம். (பொ - ரை) பசு ஞானத்தைப் பதிஞானத்தா லுணர்ந்து, அவ்வாறு உணரும் பதி ஞானத்தில் வேறுபட்டு நில்லாமல் ஒன்றுபட்டு நிற்பது இனி எந்தக்காலம்? 192 நீடும் புவனமெல்லாம் நிறைந்து சித்திரமாய் ஆடுந் திருக்கூத்தை யறிவதினி யெக்காலம். (பொ - ரை) பரந்த புவனங்க ளெல்லாவற்றிலும் நீக்க மற நிறைந்துநின்ற சித்திரமாய் நடம்புரியும் அழகிய நடனத்தை இனி உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) சராசர முழுவதும் ஆண்டவன் நீக்கமற நிறைந்து ஆங்காங்கே நடம்புரிதலால், அவை யாவும் தத்தங் காரியங்களைச் செய்து இயங்குகின்றமையால் நீடும் புவனமெல்லாம் நிறைந்து நின்ற சித்திரமாய் ஆடுந் திருக்கூத்தை என்றார். காளியோடாடிக் கனகா சலத்தாடிக் - கூளியோடாடிக் குவலயத்தே யாடி - நீடியேநீர் தீகால் நீள்வானிடையாடி - நாளுற அம்பலத் தேயாடு நாதனே என்றார் திருமூலரும். நீக்கமற நிறைந்து புரியும் ஆடலைச் சித்திரமா யென்றார். சிந்தூரமதாய் என்றும் பாடம். திருக்கூத்தைக் காண்டலால் பிறவி நாசமாகுதலால் அறிவதினி யெக்காலம் என்றார். 193 தித்தியென்ற கூத்துந் திருச்சிலம்பி னோசைகளும் பத்தியுட னேகேட்டுப் பணிவதினி யெக்காலம். (பொ - ரை) தித்தி என்ற தாளத்துக் கேற்ப ஆடும் திருநடனத்தையும், அதனால் எழும் அழகிய சிலம்பி னோசையையும் அன்போடு செவி மடுத்து இனி வணக்கஞ் செய்வது எந்தக்காலம்? 194 நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில் சயனித் திருந்து தலைப்படுவ தெக்காலம். (பொ - ரை) கண்களுக்கு நடுவினின்றும் வெளி சென்று சேரும் பரவெளியில் உறங்கியிருந்து தேவரீரோடு கலப்பது எந்தக்காலம்? (வி - ரை) புருவமத்தியில் ஐயன் நடம்புரிவது யோகிகள் அறியக்கூடியது. அந்நடனத்தைச் சிதாகாசத்தில் கண்டு அறிதுயில் செய்வதனால் ஆனந்தம் விளையுமென்க. 195 அருவி மலைநடுவே யாயிரக்கால் மண்டபத்தில் திருவிளை யாடற்கண்டு தெரிசிப்ப தெக்காலம். (பொ - ரை) அருவி பாயும் மலை நடுவிலேயுள்ள ஆயிரக் கால் மண்டபத்திலே தேவரீர் புரியுந் திருவிளையாடல் கண்டு இன்புறுவது எந்தக்காலம்? (வி - ரை) அருவி - அமிர்ததாரை. மலை - நந்தி. ஆயிரக்கால் மண்டபம் - ஹிருதயகமலம். 196 மீனிரம்ப வுண்டுகக்கி விக்கிநின்ற கொக்கதுபோல் தேனிரம்ப வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம். (பொ - ரை) மச்சங்களை ஏராளமாக உண்டு கக்கியும் விக்கியும் நின்ற கொக்கைப்போலப் பேரின்பத் தேனை நிரம்ப உண்டு தெவிட்டி நிற்பது எந்தக்காலம்? 197 பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம். (பொ - ரை) கொடிய உடலைக் கீழே தள்ளுமுன்னே அதாவது இறப்பதற்கு முன்னே கல்லை ஒத்த பசுப்போன்ற ஆன்மாவினின்றும் ஞானப்பாலைக் கறப்பது இனி எந்தக்காலம்? (வி - ரை) இறப்பதற்கு முன்னே ஞானம் பெறவேண்டும் என்றபடி. ஆன்மா ஞானம்பெறும் அருமை நோக்கி கல்லா என்றார். 198 வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தை கிட்ட வரத்தேடக் கிருபைசெய்வ தெக்காலம். (பொ - ரை) வெட்ட வெளியிலே விளங்குஞ் சித்சொரூப மாகிய சதாசிவத்தைச் சிறியேன்பால் நெருங்கிவரத் தேடத் திருவருள் செய்வது எந்தக்காலம்? (வி - ரை) சதாசிவத்தைத் தேட எனக்கொள்க. தேடி என்னும் பாடம் பொருத்தமன்று. 199 பேரறிவி லேமனதை பேராம லேயிருத்தி ஓரறிவி லெந்நாளு மூன்றிநிற்ப தெக்காலம். (பொ - ரை) பேரறிவென்னும் சிவத்தி னிடத்திலே மனதை நீங்காமல் நிறுத்திப் பேரறிவு சிற்றறிவு என்னும் பேதமற்ற நிலை யாகிய ஓரறிவினிடத்தில் என்றும் பதிந்து கிடப்பது எந்தக் காலம்? 200 அத்துவிதம் போலுமென்ற னாத்துமத்தி னுள்ளிருந்து முத்தி தரநின்ற முறையறிவ தெக்காலம். (பொ - ரை) அத்துவிதம்போல என் ஆன்மாவினுள் ளிருந்து எனக்கு வீடுபேற்றை அளிக்கின்ற முறைமையை உணர்வது எந்தக்காலம்? (வி - ரை) சிவனும் சீவனும் தனித்தனியாகப் பிரிந்து நில்லாது, இரண்டும் பிரியாது ஒன்றுபட்டு நிற்கும் நிலை அத்துவிதம் என்பது. அத்துவிதம் என்பதிலுள்ள அகரத்துக்கு அன்மை இன்மை மறுமை பொருள்கூறுவர் தத்துவ ஆராய்ச்சி யுடையார். அநுபவ ஞானிகளுக்கு எல்லாப்பொருளும் ஒன் றாகவே தோன்றும். அதை ஈண்டு விரிக்கிற் பெருகும். ஆசாரியர்கள் எழுதிய மாபாடியங்களில் விரிவு காண்க. சிவனும் சீவனும் ஒன்று பட்டுள்ள உண்மைநிலையுணர்வதே பந்த நீக்கமாதலால் முத்திதர நின்றமுறை என்றார். 201 நானின்ற பாசமதி னானிருந்து மாளாமல் நீநின்ற கோலமதில் நிரம்பிநிற்ப தெக்காலம். (பொ - ரை) எனது நிலைக்களமான பாசத்தில் நானிருந்து கெடாமல் தேவரீர் திருவருள் கோலத்தில் கலந்து நிற்பது எந்தக் காலம்? (வி - ரை) நான் மலத்தோடு வாழ்வதை விடுத்துத் திருவருளோடு வாழ்வது எப்பொழுது என்றபடி. ஆணவத்தோ டத்து வித மானபடி மெய்ஞ்ஞான தாணுவினோ டத்துவித மாகுநா ளெந்நாளோ என்றார் தாயுமானாரும். 202 எள்ளுங் கரும்பு மெழின்மலருங் காயமும்போல் உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம். (பொ - ரை) எள்ளுள் எண்ணெய் போலவும், கரும்பினுள் சுவை போலவும், அழகிய மலருள் மணம் போலவும், உடலுள் உயிர் போலவும் சராசரங்களினுள்ளும் புறமும் தேவரீர் வீற்றிருப் பதை உற்றறிவது எந்தக்காலம்? (வி - ரை) அத்துவித நிலைக்கு உதாரணங்கள் காட்டிய வாறு காண்க. 203 அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல் என்னை வகுத்துன்னை யினிக்காண்ப தெக்காலம். (பொ - ரை) அன்னப் பறவையானது நீரை வேறாகவும் பாலை வேறாகவும் பிரித்துப் பாலைக் கொள்வதுபோல என் மாட்டுள்ள யான் எனது என்னஞ் செருக்கை விலக்கித் தேவரீரைக் காண்பது இனி எந்தக்காலம்? 204 அந்தரத்தி னிற்பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல் சிந்தை வைத்துக்கண்டு தெரிசிப்ப தெக்காலம். (பொ - ரை) ஆகாயத்தில் மலர்ந்தெழுந்த தாமரைமீது மனம் வைத்துத் தெரிசிப்பது எந்தக்காலம்? (வி - ரை) சிதாகாசத்தில் மலர்வது சிவம். அந்தரத்தினீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல் என்றும் பாடம். 205 பிறப்பு மிறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று மறப்பு நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம். (பொ - ரை) ஜெனன மரண மொழிந்து, பேச்சு மூச்சழிந்து, மறப்பு நினைப்பு கெட்டுச் சீவபோத மற்றுக் கிடப்பது எந்தக் காலம்? 206 மன்னும் பரவெளியை மனவெளியி லடைத்தறிவே என்னு மொருநினைவை யெழுப்பிநிற்ப தெக்காலம். (பொ - ரை) நிலைபெற்ற பரவெளியை மனவெளியில் பெற்று அறிவு என்னும் ஒரு நினைவோடு நிற்பது எந்தக்காலம்? (வி - ரை) பரவெளி - சிதாகாசம். அதை மனதில் கொணர்வது யோகநிலை . யோக நிலையால் பெறுவது ஞானநிலை. ஞான நிலையானது எல்லாவற்றையும் அறிவாக உணர்வது. 207 ஆசை கொண்டமாத ரடைகனவு நீக்கியுன்மேல் ஓசைகொண்டு நானு மொடுங்குவது மெக்காலம். (பொ - ரை) ஆசை தாங்கியுள்ள பெண்கள் தொடர்பாங் கனவை யொழித்துத் தேவரீர்மீது விருப்பங்கொண்டு நான் என்னும் போதம் அடங்குவது எந்தக்காலம்? (வி - ரை) மாத ராசையைக் கனவாகக் கொள்ளவேண்டு மென்றவாறு. 208 தன்னுயி ரைக்கொண்டு தான்றிரிந்த வாறதுபோல் உன்னுயி ரைக்கொண்டிங் கொடுங்குவது மெக்காலம். (பொ - ரை) மனிதன் தனது உயிரைக்கொண்டு தான் உலகத்தில் நடமாடுவதுபோல, பரமான்மாவாகிய தேவரீரைக் கொண்டு இங்குச் சீவன்முத்தனாக நடமாடுவது எந்தக்காலம்? (வி - ரை) பரமான்மாவால் எல்லாம் நடக்கின்றன என்ற உணர்வின்றி எல்லாம் என்னால் நடக்கின்றன என்று இறுமாந்து கிடப்பது பெத்தநிலை. பரமான்மா ஆட்ட நான் ஆடுகின்றேன் என்ற உணர்வுபெற்று உலகில் வாழ்வது சீவன் முத்தநிலை. உலகமே தோன்றாது சிவமாந்தன்மை யெய்திச் சிவமொன்றே தோன்றப் பெறுவது முத்தநிலை. ஈண்டுச் சீவன் முத்தநிலையை விளக்கியவாறு காண்க. 209 சேற்றிற் கிளைநாட்டுந் திடமா முடலையினிக் காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம். (பொ - ரை) சேற்றில் நாட்டப்பட்ட கிளைக்குள்ள திடத்தைப்போன்ற மிடமுடைய இவ்வுடலைக் காற்றில் துவளும் கயிறாகப் பார்ப்பது எந்தக்காலம்? (வி - ரை) சேற்றில் நடப்பட்ட கம்பம்போன்றது உடல் என்றபடி. அதன் நிலையாமையை உணர்ந்து உலகில் வாழ வேண்டுமென்பார் காற்றிலுழல் சூத்திரமாய் என்றார். 210 என்வச முங்கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) சீவபோதமழிந்து, அஃதிருத்தற் கேதுவாகிய தேகவுணர்வு மழிந்து, ஆன்ம உணர்வுமழிந்து, திருவருளை அடைந்திருப்பது எந்தக்காலம்? 211 தன்னை மறந்து தலத்து நிலைமறந்து கன்ம மறந்து கதிபெறுவ தெக்காலம். (பொ - ரை) தன்னை மறந்து, தான் வாழும் இடம் முதலிய வற்றை மறந்து, தன்னால் செய்யப்படுங் கர்மங்களை மறந்து சிவகதி அடைவது எந்தக்காலம்? 212 என்னையென்னி லேமறைந்தே யிருந்தபதி யும்மறந்து தன்னையுந்தா னேமறந்து தனித்திருப்ப தெக்காலம். (பொ - ரை) சீவனைச் சீவனிடத்துள்ள அஞ்ஞானத்தால் மறைத்திருந்த பதிப்பொருளையு மறந்து ஆன்மாவையு மறந்து ஏகனாகவிருப்பது எந்தக்காலம்? 213 தன்னையுந்தா னேமறந்து தலைவாசற் றாழ்போட்டே உன்னை நினைந்துள்ளே யுறங்குவது மெக்காலம். (பொ - ரை) தன்னைத்தானே மறந்து, தன்னை எழுப்பும் மனதுக்குத் தாளிட்டு அடைத்து, தேவரீரை நினைந்து அகத்தே உறங்குவது எந்தக்காலம்? 214 இணைப்பிரிந்த போதலறி யின்பமுறு மன்றிலைப்போல் துணைபிரிந்த போதருணூல் தொடர்ந்துகொள்வ தெக்காலம். (பொ - ரை) ஒன்றற்கொன்று உற்ற துணையாகவுள்ள அன்றில் பறவைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியுமாயின், பிரிவு தாங்காது மீண்டும் பிரிந்த ஒன்றைத்தேடியின்பமுறும் அப் பறவைகளைப்போல, தோன்றாத் துணையாக விருந்த குருநாதன் என்னைவிட்டுப் பிரிந்தபோது திருவருளையூட்டும் நூல்களைத் தொடர்ந்து ஆராய்வது எந்தக்காலம்? 215 ஆட்ட மொன்றுமில்லாம லசைவுசற்றுங் காணாமல் தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம். (பொ - ரை) ஆட்டமாதல் அசைவாதல் சிறிது மில்லாமல், சலனமல்லாத பரம்பொருளைத் தேடுவது எந்தக்காலம்? 216 முன்னை வினையாலறிவு முற்றாமற் பின்மறைந்தால் அன்னை தனைத்தேடி யமுதுண்ப தெக்காலம். (பொ - ரை) முன்னை யூழால் அறிவு முதிர்ச்சியடையாமல் அதாவது சிவமாகாமல் பின் திரோதானத்தால் மறைவுற்றால், திருவருளாகிய தாயைத் தேடி ஞானாமிர்தம் உண்பது எந்தக் காலம்? 217 கள்ளுண் டவர்போற் களிதருமா னந்தமதாற் றள்ளுண்டு நின்றாடித் தடைபடுவ தெக்காலம். (பொ - ரை) மதுபானஞ் செய்தவர்களைப்போல மயக்க மூட்டும் பேரின்பத்தில் மயக்குண்டு, ஆனந்தக் கூத்தாடி மாயை யினின்றுந் தடைபடுவது எந்தக்காலம்? 218 தானென்ற வாணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே ஏனென்ற பேச்சுமில்லா திலங்குவது மெக்காலம். (பொ - ரை) தான் என்று எழும் ஆணவமும், மற்ற மாயா காரியமான தத்துவங்களும் அழிந்து ஏன் என்ற பேச்சு மூச்சு மின்றியிருப்பது எந்தக்காலம்? 219 நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம். (பொ - ரை) நான் அவனாகக் காண்ப தெல்லாவற்றையும் ஞானக்கண்ணா லுணர்ந்து நான் அவனாக நின்று சரணம் புகுவது எந்தக்காலம்? (வி - ரை) நான் அவனாதல் - சிவமாதல். சரணம் புகுவது - முத்தியிலும் ஆண்டான் அடிமைத்திறங் காட்டுவது. 220 தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி ஆனந்தங் கண்டே யமர்ந்திருப்ப தெக்காலம். (பொ - ரை) சீவன் முடிவில்லாத தற்பர சிவத்தோடு கலந்து, பேரின்பநுகர்ந்து பொருந்தியிருப்பது எந்தக்காலம்? 221 உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம். (பொ - ரை) சீவன் அடைந்த சிதாகாசத்திலே உற்று நோக்கி அதன்கண் போதமழிய மாயை யொழிப்பது இனி எந்தக்காலம்? 222 ஏடலர்ந்த பங்கயமு மிருகருணை நேத்திரமுந் தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம். (பொ - ரை) இதழ் விரிந்த தாமரை முகமும், இரண்டு அருட்கண்களும், தோடு அணியப்பெற்ற குண்டலமும் புலனாவது எந்தக்காலம்? (வி - ரை) தோடு - பெண்கள் காதணி. குண்டலம் - ஆண்கள் காதணி. ஈண்டுச் சக்தி சிவத்தின் அபேதத்தை விளக்கியவாறு காண்க. சிவபெருமானைத் தோடுடைய செவியன் என்றார் திருஞானசம்பந்தர். அருள்தோடும் குண்டலமும் என்றார் வாதவூரடிகளும். 223 ஐயாறு மாறு மகன்றுவெறு வெளியில் மையிருளில் நின்றமன மாள்வதினி யெக்காலம். (பொ - ரை) முப்பத்தாறு தத்துவங்களையும் விலக்கி வெட்ட வெளியிலேயிருந்து, ஆணவத்தில் தோய்ந்த மனவுணர்வு பட்டொழிவது இனி எந்தக்காலம்? 224 காட்டு மருண்ஞானக் கடலிலன்பு கப்பல்விட்டு மூட்டுங்கரு ணைக்கடலின் மூழ்குவது மெக்காலம். (பொ - ரை) சிவமென்னுங் கரைகாட்டும் திருவருள் ஞானக் கடலில் அன்பென்னுங் கப்பல் செலுத்திச் சிவ நேசத்தை மூட்டும் அத்திருவருட் கடலில் திளைப்பது எந்தக்காலம்? 225 நானாரோ நீயாரோ நன்றாம் பரமான தானாரோ வென்றுணர்ந்து தவமுடிப்ப தெக்காலம். (பொ - ரை) நான் யார்? நீ யார்? இரண்டையுங் கடந்து நன்றாகிய மேலான தான் யார்? என்னு முண்மை யுணர்ந்து தவத்தை முடித்துக்கொள்வது எந்தக்காலம்? (வி - ரை) நான் நீ என்பது பேதவுணர்வைக் குறிப்பது. தான் என்பது அபேதவுணர்வைக் குறிப்பது. 226 எவரெவர்க ளெப்படிகண் டெந்தப்படி நினைத்தார் அவரவர்க் கப்படிநின் றானென்ப தெக்காலம். (பொ - ரை) எவரெவர் எவ்வாறு கண்டு எவ்வாறு நினைத்தாரோ அவர் அவர்க்கு அவ்வாறு ஆண்டவன் நின்றான் என்னுஞ் சமரச உணர்வு பெறுவது எந்தக்காலம்? 227 உற்றுற்றுப் பார்க்க வொளிதருமா னந்தமதை நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பதினி யெக்காலம். (பொ - ரை) உற்று உற்று நோக்க ஒளிவீசும் பேரின்பத்தை நெற்றிக்கு நேரே பார்த்து அவ்வின்பத்தில் நிலைத்திருப்பது இனி எந்தக்காலம்? (வி - ரை) இக்கருத்தடங்கிய பாக்கள் பல மேலே போந் துள்ளன. அவைகட்கு வரைந்துள்ள விசேடங் காண்க. 228 விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல் களங்கமற வுன்காட்சி கண்டறிவ தெக்காலம். (பொ - ரை) மின்னுகின்ற நட்சத்திர ஒளியைச் சூரிய ஒளி மறைத்தற்போல, மாசகல தேவரீர் திருக்காட்சியைக் கண்டு ணர்வது இனி எந்தக்காலம்? 229 என்னையே நானறியே னிந்தவண்ணஞ் சொன்னதெல்லா முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவ தெக்காலம். (பொ - ரை) என்னை நான் அறியேன் என்று இவ்வாறு கூறிய எல்லாவற்றையும் ஆன்றோர் கைக்கொள்ளஅடியேன் தேவரீர்முன் தொழுவது எந்தக்காலம்? (வி - ரை) சிறியேன் வேண்டுவது இறை பணி யொன்றே என்றபடி. 230 ஐஞ்சு கரத்தானை யடியிணையைப் போற்றிசெய்து நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம். (பொ - ரை) ஐந்துகரங்களையுடைய கணபதியின் இரண்டு திருவடிகளைப்போற்றி அவைகளை மனதில் இருத்தி அருள் நிலை பெறுவது எந்தக்காலம்? 231  நூலினுட் பிரிவு பதிகம் பக்கம் பட்டினத்துப்பிள்ளை யார் வரலாறு 7 கோயிற்றிருவகவல் - 21 கோயிற்றிருவகவல் - உ 29 கோயிற்றிருவகவல் - ஙு 32 கச்சித்திருவகவல் - ச 36 திருவேகம்பமாலை 42 திருத்தில்லை 70 திருச்செங்காடு 81 திருவொற்றியூர் 82 திருவிடைமருதூர் 83 திருக்கழுக்குன்றம் 84 திருக்காளத்தி 85 கைலாயம் 88 மதுரை 93 பொது 94 தாயாருக்குத் தகன கிரியை செய்கையிற் பாடியது 135 திருவிடை மருதூர் 139 திருவொற்றியூர் 139 திருவாரூர் 141 திருக்காளத்தி 142 திருக்காஞ்சி 142 திருவிருப்பையூர் 142 திருக்காரோணம் 143 திருக்குற்றாலம் 143 திருவையாறு 144 சிதம்பரம் 144 பொது 145 பின்முடுகு வெண்பா 148 விருத்தம் 153 வேறு 155 உடற்கூற்றுவண்ணம் 153 முதல்வன் முறையீடு 166 அருட்புலம்பல் 179 இறந்த காலத்திரங்கல் 199 நெஞ்சொடுபுலம்பல் 201 பூரணமாலை 215 நெஞ்சொடுமகிழ்தல் 233 பத்திரகிரியார்வரலாறு 239 பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் 243 பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடலகராதி செய்யுள் பக்கம் அ அகங்காக்கும் 195 அக்கறுகு 210 அக்கினிகற் 192 அங்கங்கு 233 அச்சமாங்கார 166 அஞ்சக்கரமெ 123 அஞ்சருளை 206 அஞ்சுடனேழாகி 213 அஞ்செழுத் 210 அடியாருறவு 128 அடியார்க்கெ 76 அட்டாங்க 110 அணுவுக்கு 190 அண்டபிண்ட 222 அண்ணறன் 111 அத்தமும் வாழ் 102 அத்தனைமுப்ப 81 அத்திமுத 143 அநித்தியத்தை 167 அப்பிறப்புக் 193 அப்பென்று 55 அரிசியோ 136 அரிபிரமர் 174 அரியவரிதேடி 214 அருள்பழுத்த 173 அலையாதபே 233 அல்லாய்ப்பக 231 அழலுக்குள் 71 அழுதாற்பய 118 அளவிறந்த 196 அள்ளியிடுவ 137 அறந்தானி 42 அறியாமை 163 அற்புதமா 206 அன்றுமுத 187 அன்றுமுத - மாக் 233 அன்னம்பகிர் 202 அன்னவிசார 48 அன்னையெத் 69 அன்னைவயிற்றி 168 ஆ ஆங்காரம் 128 ஆங்காரமச்ச 234 ஆசாரமில்லா 199 ஆணாகிப்பெண் 225 ஆணிபொருந்து 199 ஆண்டகுருவி 211 ஆண்பெண் 234 ஆதாரமோ 177 ஆதியாய்நின் 234 ஆதியென்பார் 229 ஆத்தாளுக் 190 ஆத்துமதத்து 178 ஆயாய்பல 127 ஆயும்புகழ் 74 ஆயும்பொழு 124 ஆருமுறாப் 235 ஆரூரரிங் 141 ஆர்ந்தவிட 192 ஆலமருந்து 200 ஆலாவிருட்ச 195 ஆவியொடு 147 ஆறுண்டு 103 ஆற்றிற்கரை 57 ஆற்றோடு 80 ஆனவடியார் 175 ஆனையுரிபோர் 172 இ இடபிங்கலை 218 இடையாகி 224 இடையில் 172 இத்தனை 198 இந்தமண 192 இந்தவுடலுயி 218 இந்நிலைமை 182 இப்பிறப்பைநம் 148 இப்பிறப்பைப் 235 இப்போபுதிதோ 190 இரதம்பிரி 238 இருக்குமிடந் 146 இருப்பது 151 இருப்பினுறை 192 இரைக்கே 87 இல்லந்துறந் 89 இன்றிருந்து 197 இன்னம்பிறக்க 149 ஈ ஈராறுதண் 243 உ உச்சிவெளி 217 உடலுக்குள் 220 உடுக்கக்கவி 104 உடுப்பானு 77 உடைகோவ 94 உட்கோட்டை 180 உண்மைப் 230 உந்திக்கமல 216 உயிர்தருஞான 158 உருத்திரனார் 170 உருத்திரனை 216 உருப்பேத 228 உரைக்கைக் 115 உலகவிசார 176 உளியிட்ட 131 உள்ளார்க்கு 193 உள்ளுணர் 188 உள்ளும்புற-மு 238 உற்றாரழு 220 உற்றாரார் 206 உன்னிலழை 170 உன்னைத்துதி 171 ஊ ஊட்டுவிப்பா 75 ஊரிருந்து 68 ஊரிறந்து 234 ஊரீருமக்கோ 118 ஊருஞ்சத 51 ஊறையிறை 214 ஊற்றைச் 59 ஊனமுடனே 214 ஊனவுடல் 169 ஊனாயுடலுயி 225 ஊனுக்குணீ 218 ஊன்பொதிந்த 209 எ எக்காலம் 197 எச்சிலென்று 150 எட்டுத்திசை 114 எண்ணிறந்த 200 எண்பத்து 221 எத்தனைதாய் 220 எத்தனைநாள் 150 எத்தனைபேரோ 229 எத்தனைபேர் 150 எத்தனையூர் 142 எத்தனையோ 189 எத்தேசகால 220 எத்தேசமு 238 எத்தொழிலை 151 எந்தெந்த 236 எந்நாளு 190 எரியெனக் 111 எருமுட்டை 126 எருவாய்க்கி 141 எல்லாமறி 65 எல்லாரும் 177 எழுவகைத் 222 எள்ளுக்கு 231 எனக்குள்ளே 221 என்செயலா 107 என்பெற்ற 112 என்னகுற்ற 183 என்னசொல்ல 192 என்னதான் 228 என்னவினை 183 என்னைத்திரு 223 என்னையறி 221 என்னையே 181 என்னோடுட 177 ஏ ஏட்டுக்கடங் 194 ஏணிப்பழுவா 211 ஏதப்பட்டா 116 ஏதிலடியா 232 ஐ ஐங்கரனை 176 ஐந்துபுலனு 165 ஐந்துபொறி 223 ஐயமறுத்த 189 ஐயிரண்டு 135 ஐயுந்தொடர் 82 ஐவகையும் 226 ஒ ஒக்கமடிந்த 180 ஒடுவிழுந்து 140 ஒப்பாரி 199 ஒப்புமுவமை 199 ஒப்புவமை 176 ஒருநான்கு 133 ஒருமடமாது 155 ஒழியாப்பி 128 ஒளியாய் 224 ஒன்பதுவாய் 148 ஒன்றாயுயிரா 227 ஒன்றென்றிரு 105 ஓ ஓங்காரங் 181 ஓங்காரப் 172 ஓங்காரமாய் 120 ஓங்குபரத்து 172 ஓசையொடு 197 ஓடாமற் 71 ஓடுமெடுத்த 75 ஓட்டைத்து 209 ஓதவரிதோ 184 ஓயாமற்பொ 55 க கங்குகரை 193 கங்குல்பக 183 கங்கையொடு 173 கச்சிற்கிடக் 130 கடங்கடங்க 236 கடல்நீரு 192 கடுஞ்சொல் 67 கடைக்க 171 கட்டவுலக 171 கட்டியணை 43 கட்டுவர்க்க 165 கண்டங்கரி 139 கண்டங்கறு 173 கண்டபுலவர் 200 கண்டார்க்கு 184 கண்ணுக்கு கண்ணுண்டு 96 கண்மாய 291 கருவாயுரு 221 கருவிகடொ 219 கல்லாப்பிழை 49 கல்லார் 58 கல்லாலெறியுண் 132 கல்லுளிரு 194 கல்வியல்ல 188 களவிறந்து 233 கரையற்ற 114 கற்கட்டு 204 கற்புக்குலை 183 கற்றவனாய் 236 கற்றறிவோ 228 கன்னியழித்த 191 கன்னெஞ்சி 296 கா காடேதிரி 83 காடோசெடி 84 காட்சிக்கெளி 189 காதல்தணி 172 காதளவோடிய 29 காதென்று 51 காமக்குரோ 166 காமன்கணை 169 காம்பிணங்கு 70 காலங்கழிந்த 98 காலன்வரு 193 காலையுபாதி 74 காற்றுத்துரு 208 கான்சாயும் 88 கீ கீரியாய்க் 168 கு குருமார்க்க 200 குருவாகி 179 குருவாய் 223 குலமொன்றா 222 கெ கெட்டநாள் 175 கே கேடுவரு 180 கை கைப்பிடி 44 கையாரவே 91 கையொன்று 95 கொ கொக்கிறகு 174 கொட்டாத 196 கொண்டார் 184 கொல்லாமற் 73 கொல்வாய் 227 கொள்ளை 176 கொன்றாரை 184 கொன்றே 67 கோ கோத்து 211 ச சகத்திரத்தின் 223 சடக்கடத்து 63 சட்சமய 228 சத்திசிவ 226 சந்தனமுங் 207 சந்திரனை 230 சரக்கொன் 174 சற்றாகினுந் 131 சா சாதிபேதங்கள் 222 சாதியிற்- சமய 184 சாதியிற்சாத் 183 சாந்தமென்று 232 சி சித்தவிகார 187 சிப்பியில் 295 சிலந்தியிடை 223 சிற்றம்பலமுஞ் 144 சிற்றெறும்பு 200 சினந்தனை 90 சின்மயநன் 197 சின்னஞ்சிறு 209 சீ சீதப்பணிக் 103 சீயுங்குறுதி 102 சீறும்வினை 52 சு சுடப்படுவார் 82 சுட்டிறந்த 185 சுந்தரநீற்றின் 174 சும்மாவிரு 185 சுரப்பற்று 116 சூ சூதுற்ற 100 செ செங்குமிழின் 173 செத்தாரை 187 செந்தாமரை 230 செம்பொற் 221 செல்வரைப் 92 செல்வரைப்பின் 120 சொ சொக்கிட்ட 64 சொல்லாலே 191 சொல்லால் 59 சொல்லிலுஞ் 98 சொல்லுக் 285 சோ சோதியான் 238 சோறிடுநாடு 70 த தண்டிகை 218 தத்துவத்தை 227 தந்திரத்தை 214 தரையாங்குடிலை 181 தவியாதிரு 79 தவிர்ப்பை 171 தனிமுதலை 243 தனுவாதிய 163 தன்னுடம்பு 200 தன்னையறிந் 182 தா தாயாகித் தந்தை 224 தாயாகித் 169 தாயாருஞ் 124 தாயும்பகை 84 தாழாதே 238 தானென்னைப் 197 தி தித்திக்க 188 தித்திக்குந் 210 திருமால்பயந்த 36 திருவேட 109 தீ தீவகம்போ 193 தூ தூக்கியகா 174 தூருந்தலைய 189 தெ தெத்தபட 198 தெய்வச்சித 76 தே தேசமிறந்த 195 தொ தொண்ணூற்ற 181 தோ தோடவிழும் 145 தோலெலும்பு 201 ந நகாரமகார 230 நகையாரோ 182 நச்சரவம் 146 நரகக்குழியு 167 நரகஞ்சுவர்க்க 232 நரம்புதசை 223 நல்லாயென 62 நல்லாரிண 45 நற்பருவ 175 நன்னாரிற் 45 நா நாடிக்கொ 95 நாட்டமென் 106 நாதவிந்து 217 நாப்பிளக்க 152 நாமநட்ட 196 நாமந்தரித் 171 நாயாய்ப் 56 நாய்க்குண்டு 122 நாய்க்கொரு 129 நாலின்மறை 80 நாலுவகை 236 நாவாரவே 58 நாவிக்கமல 216 நாறுங்குறுதி 88 நாறுமுடலை 64 நானெத்தனை 123 நானேநீ 232 நான்முகன் 169 நி நிரந்தரமா 227 நிலைவிட்டு 212 நில்லாமை 169 நினைமின்மனனே 21 நின்றநிலையி 171 நீ நீக்காப்புலன் 178 நீரொடுதண் 235 நீரொளிபோ 183 நீர்க்குமிழியா 166 நீர்க்குமிழி 208 நீர்மேற்குமிழி 230 நீற்றைப் 119 நூ நூலாலுணர் 194 நெ நெஞ்சமுருகி 231 நெடியகத் 235 நெற்றிவிழி 217 நே நேமங்கணிட் 122 நேற்றென்று 227 நொ நொந்துசுமந்து 136 நோ நோயுண்ண 169 ப பஞ்சப்பிரளய 195 படைத்து 231 பட்டகளை 169 பட்டைக்கி 99 பண்டாய 184 பத்தியறி 187 பத்துத்திசை 188 பத்தும் 85 பத்தெட்டா 213 பரமென்பார் 229 பருத்திப் 53 பளிங்கி 194 பற்றற்றார் 190 பா பாசமுடலா 232 பாசமெரி 170 பாசவினை 197 பாடிப்படி 186 பாராமலே 72 பாராமற் 233 பார்க்கிலெ 220 பார்த்தவிடமெங் 234 பார்த்தவிடமெல் 186 பாலின்கண் 198 பாவபுண்ணிய 232 பாற்கடல் 32 பி பிணவாச 200 பிறக்கும் 47 பிறந்துமண்ட 61 பிறவாதிரு 78 பு புட்பாசன 202 புல்லாகிப் 168 பூ பூணும்பணி 125 பூசையுடன் 231 பூதங்களற்று 61 பூதமொடுதே 168 பூரணமாலை 233 பூவாணர் 213 பூவாய்மண 225 பெ பெண்டுபிள்ளை 218 பெண்ணாகி 57 பெற்றலுத்தாள் 220 பே பேசாப்பிரம 195 பேச்சிறந்து 234 பேய்போற் 117 பை பையரவம் 205 பொ பொய்யா 225 பொய்யான 191 பொய்யும் 226 பொய்யை 142 பொருளுடை 53 பொல்லாதவ 46 பொல்லாவிரு 54 பொறியாய் 226 பொற்பூவும் 194 பொன்னாற் 85 பொன்னுமுரை 192 பொன்னை 66 ம மகத்துவ 230 மகரங்கிடர் 173 மக்கள்சுற்ற 164 மஞ்சனமா 186 மண்காட்டி 201 மண்ணாசை 164 மண்ணுந்தண 144 மண்ணுமுருகு 153 மண்முதலா 178 மத்தளை 153 மந்திக்குரு 92 மந்திரத்தி 165 மந்திரமாய் 231 மனக்கரண 178 மனமாய் 226 மனம்புத்தி 228 மனையாளு 101 மா மாடுண்டு 104 மாணிக்கத்துள் 187 மாணிக்க 204 மாண்டார் 173 மாதருருக் 167 மாதர்பிர 219 மாதாவுட 142 மாதுக்கொரு 205 மாத்தான் 105 மாமாயை 164 மாயநட்போ 49 மாயாப்பிர 231 மாலைப்பொழுதி 152 மாற்றுஞ்சலவை 165 மானார்விழி 130 மு முடிக்குமயிர் 212 முடிசார்ந்த 73 முட்டற்ற 60 முதலாய் 225 முதற்சங்கமு 149 முத்தியளி 171 முந்தித்தவங் 135 முப்பத்திரண்ட 228 முப்பாழுக் 198 முப்பாழும் 202 முப்போது 87 முல்லைநில 173 முற்றொடர் 203 முன்னநீசெய் 209 முன்னையிட்ட 137 முன்னைவினை 181 மூ மூக்குமுனை 217 மூச்சென்பார் 229 மூலத்துதித் 215 மூலமறியேன் 163 மூலவித்தாய் 224 மூன்றுலகை 179 மெ மெத்தமெத்த 199 மெத்தவிகாரம் 177 மெய்வாய் 218 மென்றுவிழு 139 மே மேலாகி 235 மேலாம்பத 235 மை மைக்குழம்பு 194 மையாடுகண் 127 வ வங்கிஷமே 196 வடிவந்தா 153 வட்டிலிலு 136 வரிக்கோல 50 வருந்தேன் 93 வருவதுபோவ 159 வழக்கந் 199 வளர்பிறை 161 வா வாக்கிறந்து - மவு 175 வாக்கிறந்த - மனோ 236 வாக்குமனமுங் 185 வாக்குமனமும் 189 வாக்குமனாதீத 176 வாசற்படி 145 வாசாமகோ 188 வாசிதனை 219 வாதனைபோ 238 வாதுக்கு 55 வாதுற்ற 100 வாயாரவாழ் 230 வாய்நாறு 115 வாரிதியாய் 227 வார்த்தை 199 வாவியெல்லாந் 140 வாழ்த்தி 189 வாழ்வான 190 வாளான்மக 86 வானமுதத் 58 வானிற்கதிர் 226 வானென்பார் 229 வி விசுத்தி 216 விடக்கே 117 விடப்படு 93 விட்டிடமும் 236 விட்டுவிட 147 விட்டேனுலக 110 விண்ணிறந்து 234 விதியார் 120 வித்தாய் - விளை 225 வித்தாய்வெளி 227 வித்தாரம் 77 வித்தியாதத்வ 179 வித்தைகற்கு 164 விருந்தாக 65 விருப்பு 234 விலங்குபுள் 224 விலையாகிப் 215 வில்லாலடிக் 68 வினைபோக 99 வீ வீசுகரமும் 174 வீடிருக் 207 வீடுநமக்கு 94 வீட்டிலொருவ 182 வீரகண்டா 172 வீற்றிருந்தா 138 வெ வெட்டவெளியி 190 வெந்தாளோ 138 வே வேகுதே 138 வேதத்தினுட் 101 வேதப்புரவி 196 பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலகராதி அ அஞ்ஞானம் 271 அடர்ந்தமனக் 267 அட்டகாசஞ் 264 அட்டாங்க 283 அண்டருக்கா 252 அத்தனிருப்பிட 249 அத்துவிதம் 294 அந்தரத்தினிற் 295 அப்புப்பிறைநடு 263 அமையாமன 268 அருணப்பிரகாச 287 அருவாகியுருவா 275 அருவிமலைநடு 293 அல்லும்பகலு 284 அவவேடம் 251 அறிவுக்கருவி 265 அறிவையறி 292 அற்பசுகமறி 250 அன்பையுரு 261 அன்னம்புனலை 295 ஆ ஆகமிகவுருக 261 ஆகவெளிக்கு 270 ஆங்காரமுள் 244 ஆசாரநேய 284 ஆசைகொண்ட 296 ஆசைவலைப் 257 ஆசைவலை 278 ஆடுகின்ற 255 ஆட்டமொன்று 297 ஆணவமாய் 272 ஆதாரமூலத் 262 ஆதிகபிலர் 277 ஆதிமுதலாகி 284 ஆமைவரு 249 ஆயுங்கலைக 279 ஆரென்று 274 ஆவியுங்காய 290 ஆறாதபுண்ணி 247 ஆறாதாரங் 272 இ இணைப்பிரிந்த 297 இம்மைதனிற் 256 இயங்குஞ்சரா 284 இரும்பிற்கனன் 288 இருளைவெளி 289 இனமாண்டு 267 இன்றுளோர் 254 இன்னதென்று 285 ஈ ஈமென்று 291 உ உச்சிக்கிடை 263 உண்டதுவு 291 உதயச்சுடர் 282 உப்பிட்ட 256 உளியிட்ட 248 உள்ளமறியா 280 உற்றவெளி 298 உற்றுற்றுப் 299 ஊ ஊமைக்கனாக் 290 ஊனாகியூனி 285 ஊனிறைந்த 268 எ எங்கும்பர 291 எண்ணாததூர 272 எண்ணூறுக 251 எவரெவர்க 299 எவ்வனத்தின் 260 எழுத்தெல்லா 275 எள்ளுங்கரு 295 என்மனமாய் 276 என்வசமுங் 297 என்னையறிந்து 272 என்னையறியாம 280 என்னையிறக்க 286 என்னையென் 297 என்னையே 300 என்னைவிட்டு 285 ஏ ஏடலர்ந்த 298 ஐ ஐந்துபொறி 267 ஐயாறுமாறு 299 ஐஞ்சுகரத் 300 ஒ ஒட்டாமலோ 283 ஒலிபடருங் 269 ஒழிந்தகருத்தி 277 ஒழிந்ததரும 250 ஒளியிட்ட 276 ஒளியிலொளி 276 ஓ ஓடாமலோடி 271 ஓயாக்கவலை 245 ஓரின்பங் 279 க கஞ்சாவபினி 254 கடத்துகின்ற 286 கடலிலொளித் 287 கடைந்தவெண் 288 கட்டறுக்க 264 கண்டபுனற் 289 கண்ணாலருவி 260 கண்ணினொளி 273 கருக்கொண்ட 288 கருப்படுத்தி 250 கருவின்வழி 262 கல்லாய்மர 278 கள்ளக்கரு 264 கள்ளுண்டவர் 298 கனவுகண்டா 273 கா காசினியெலா 269 காட்டுமருண் 299 காண்டத்தை 257 காந்தம்வலி 276 காமக்கடல் 282 காரணமாய் 279 கால்காட்டிக் 246 காயாபுரிக் 245 கு கும்பிக்கிரை 254 குறியாகக் 279 கூ கூடிப்பிரிந்து 260 கூட்டிலடை 287 கூண்டுவிடுஞ் 268 கூறரிய 257 கெ கெட்டுவிடு 268 ச சத்தம்பிற 292 சல்லாபலீலை 259 சா சாகாச்சிவ 290 சாவாமல் 280 சாத்திரத்தை 284 சீ சீயென்றெழு 274 சூ சூதுங்களவுந் 277 சூரியகாந்தி 288 செ செஞ்சலத்தி 254 செம்பிற்களி 290 சே சேயாய்ச்சமை 245 சேவைபுரி 256 சேற்றிற் 296 சோ சோற்றுத்துரு 257 த தக்கும்வகை 258 தக்கும்வகை 278 தண்டிகை 249 தந்தைதாய் 247 தன்கணவன் 259 தன்னுயிரை 296 தன்னைமறந்து 297 தன்னையுந்தா 297 தா தானந்தமில் 298 தானென்ற 298 தி தித்திக்குந் 252 தித்தியென்ற 293 தூ தூண்டுவிளக் 251 தூரியினின்மீன் 251 தூறோடிசைந்து 278 தெ தெரிவையுறும் 258 தெளியத்தெளி 262 தே தேங்காக்கருணை 244 தொ தொடக்கை 257 தோ தோலேணிவை 269 தோன்றாசை 265 ந நட்டநடுவி 266 நயனத்திடை 293 நவசூத்திர 255 நா நாட்டுக்கா 281 நாயிற்கடை 288 நானவனாய் 298 நானாரோ 299 நானின்றபாச 295 நானெனவு 292 நானென்றறி 275 நானேநானென் 266 நி நிட்டைதனை 290 நினைக்குநினை 274 நின்றநிலை 286 நீ நீங்காச்சிவ 244 நீடும்புவன 293 நீரிற்குமிழி 261 ப பஞ்சரித்து 270 பட்டமற்று 283 பட்டுடை 249 பருவத் 258 பலவிடத்தே 281 பல்லாயிர 284 பற்றற்று 259 பன்றிவடி 252 பன்னிரண்டு 280 பா பாசநடுவேறி 279 பாசத்தை 283 பாராகிப்பார் 264 பாவியென்றே 248 பாற்பசுவைப் 281 பி பித்தாயங் 277 பிறப்பு 295 பு புல்லாய்வில 258 புன்சனனம் 266 பூ பூணுகின்ற 289 பூதம்பொறி 265 பெ பெண்ணினல்லா 246 பே பேய்போற் 246 பேரறிவிலே 294 பொ பொல்லாத 294 பொன்னிற் 287 பொன்னும் 286 போ போக்கும்வர 292 ம மண்வளைந்த 263 மத்தடுத்து 280 மருவவயற் 259 மலமுஞ்சலமு 271 மறந்து 255 மற்றிடத்தை 254 மனதையொரு 286 மன்னும்பர 296 மன்னுயிரை 247 மா மாயாப்பிறவி 245 மி மின்னெழுந்து 289 மீ மீனிரம்ப 294 மு முத்திதரு 243 முப்பாழும் 274 மும்மலமுஞ் 273 முன்னைவினை 273 முன்னைவியா 298 மூ மூலநெருப்பை 270 மூன்றுவளைய 263 மே மேலாம்பதத்தை 272 வ வட்டவழிக்கு 263 வம்படிக்கு 258 வவ்வெழுத்து 275 வா வாசித்துங்கா 280 வாயுவறு 263 வாயோடுகண் 269 வி விளங்குகின்ற 300 வீ வீடுவிட்டுப் 288 வெ வெட்டவெளிக் 294 வெட்டவெளி 297 வெட்டுண்ட 247 வெல்லுமட்டும் 272 வே வேடிக்கையுஞ் 249 வேதாந்தவேத 283 வேதாந்தவேத 253 காரைக்காலம்மையார் திருமுறை - குறிப்புரை காரைக்காலம்மையார் தோத்திரம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் திருக்கூவப் புராணம் கிடந்து கண்களிற் கேட்கும் வன்புகல் அடைந்த கைகொ டுயிர்ப்பவ னத்தன்வாழ் வடந்த யங்கு வனத்திற் றலையினால் நடந்த அம்மை பதமலர் நண்ணுவாம். 1 சீகாளத்தி புராணம் தோற்ற மில்பரஞ் சோதிதன் வாய்திறந் தாற்ற அன்புடன் அம்மையே யென்னுமோர் பேற்றை முன்பெறப் பேயுரு வெய்திய சாற்ற ரும்புகழ்த் தாயை வணங்குவாம். 2 திருவாலங்காட்டுப் புராணம் ஓதாமற் பலகலையு முணர்ந்தொளிருஞ் சிவஞான உருவ மாகி போதாருங் கயிலையரன் அம்மைவா என அப்பா புகுந்தே னென்று தாதாரு மலர்க்கரத்துச் சதிக்கிசையப் பாணிதிருத் தாள மேந்தும் வாதாடும் பிரானடிக்கீழ் காரைக்கா லம்மைபதம் வணங்கி வாழ்வாம். 3 நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற வுமைநகலுஞ் செம்பொன் னுருவனென் னம்மை யெனப் பெற்றவள் செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே. 4 உமாபதி சிவம் திருத்தொண்டர் புராண சாரம் தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க தனதத்தன் தரும்புனித வதியார் மாவின் செங்கனிகள் திருவருளா லழைப்பக் கண்டு திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க அங்கவுட லிழந்துமுடி நடையா லேறி அம்மையே யெனநாதன் அப்பா வென்று பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற் புனிதனடம் அனவரதம் போற்றி னாரே. 5  காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் 1. பண் - நட்டபாடை திருச்சிற்றம்பலம் 1. கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை யெட்டுத் திசையும்வீசி அங்கங் குளிர்ந்தன லாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 1 2. கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை விள்ள எழுதி வெடுவெடென்ன நக்கு வெருண்டு விலங்குபார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி அள்ளி அவிக்கநின் றாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 2 3. வாகை விரிந்துவெண் நெற்றொலிப்ப மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே கூகையொ டாண்டலை பாடஆந்தை கோடதன் மேற்குதித் தொடவீசி ஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காட்டகத்தே ஆகங் குளிர்ந்தன லாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 3 4. குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னே கண்டிலோ மென்று கனன்றுபேய்கள் கையடித் தோடிடு காடரங்கா மண்டலம் நின்றங் குணாலமிட்டு வாதித்து வீசி யெடுத்தபாதம் அண்ட முறநிமிர்ந் தாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 4 5. விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக் கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப் போயின தாயை வரவுகாணா(து) அழுதுறங் கும்புறங் காட்டிலாடும் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 5 6. பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் பருந்தொடு கூகை பகண்டைஆந்தை குட்டி யிட முட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங்க காடுகாட்டிற் பிட்டடித் துப்புறங் காட்டிலிட்ட பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே அட்டமே பாயநின் றாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 6 7. சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடியாடித் தழலுள்எரியும் பிணத்தைவாங்கித் தான்தடி தின்றணங் காடுகாட்டிற் கழலொலி யோசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை யிட்டுநட்டம் அழலுமிழ்ந் தோரி கதிக்கஆடும் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 7 8. நாடும் நகருந் திரிந்துசென்று நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்டமாடே முன்னிய பேய்க்கணஞ் சூழச்சூழக் காடுங் கடலும் மலையுமண்ணும் விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கனெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 8 9. துத்தங் கைக்கிளை விளரிதாரம் உழையிளி ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதந் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கை மென்தோல் தமருகங் குடமுழா மொந்தைவாசித்(து) அத்தனை அமைவினோ டாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 9 10. புந்தி கலங்கிப் பொறிமயங்கி இறந்தவ ரைப்புறங் காட்டிலிட்டுச் சந்தியில் வைத்துக் கடமைசெய்து தக்கவர் இட்டசெந் தீவிளக்கா முந்திஅமரர் முழவினோசை திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க அந்தியின் மாநட மாடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே. 10 11. ஒப்பினை யில்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்து பப்பினை யிட்டுப் பகண்டைபாடப் பாடிருந் தந்நரி யாழமைப்ப அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்ப மெய்துவாரே. 11 2. பண் - இந்தளம் 12. எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்குஞ் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பாறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவம் கூளி பாடக் குழக னாடுமே. 1 13. நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய் துணங்கை எறிந்து சூழு நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும் கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய் அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழக னாடுமே. 2 14. புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும் பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே. 3 15. செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக் கத்தி யுறுமிக் கனல்விட் டெரிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமா னாடுமே. 4 16. முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடிவெங் காட்டுள்ளே. புள்ளி யுழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே யாகப் பரம னாடுமே. 5 17. வாளைக் கிளர வளைவால் எயிற்று வண்ணச் சிறுகூகை மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலு முதுகாட்டில் தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய் கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழக னாடுமே. 6. 18. நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச் சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின் முந்தி அமரர் முழவி னோசை முறைமை வழுவாமே அந்தி நிருத்தம் அனல்கை யேந்தி அழக னாடுமே. 7 19. வேய்க ளோங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள் ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின் மாய னாட மலையான் மகளும் மருண்டு நோக்குமே. 8 20. கடுவன் உலகளும் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் இடுவெண் தலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில் கொடுவெண் பிறையும் புனலும் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரம னாடுமே. 9 21. குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய் இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தழுவ வெருட்டிக் கொள்ளென் றிசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமல னாடுமே. 10 22. சூடும் மதியஞ் சடைமே லுடையார் சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவ நாசமே 11 திரு இரட்டைமணிமாலை 23. கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய் தளர்த்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களுமெருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே. 1 24. ஈசன் அவனல்லா தில்லை என நினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான். 2 25. பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வாரிடர்கண் டிரானென்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப் பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றொரைவாய் அராநின் றிரைக்குஞ் கடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே. 3 26. அந்தணனைத் தஞ்சமென் றாட்பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே என்கண்டாய் நெஞ்சே யினி. 4 27. இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த கனிவாய் மலைமங்கை காணல்என் செய்திகை யிற்சிலையால் முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயின் மூழ்கத் தனிவார் கணையொன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே. 5 28. சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள் ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்போதும் ஓவாது நெஞ்சே உரை. 6 29. உரைக்கப் படுவது மொன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல் இரைக்கின்ற பாம்பினை என்றுந் தொடேல்இழிந் தோட்டத்தெங்குந் திரைக்கின்ற கங்கையும் தேனின்ற கொன்றையும் செஞ்சடைமேல் விரைக்கின்ற வன்னியும் சென்னித் தலைவைத்த வேதியனே. 7 30. வேதியனை வேதப் பொருளானை வேதத்துக் காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான் வல்லேன மாய்புக்கு மாலவனும் மாட்டாது கில்லேன மாவென்றான் கீழ். 8 31. கீழா யினதுன்ப வெள்ளக் கடற்றள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டனெண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலை நின்மினே. 9 32. தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து கலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட கண்டத்தான் செம்பொற் கழல் 10 33. கழற்கொண்ட சேவடி காணுலுற் றார்தம்மைப் பேணலுற்றார் நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிக ரேதுமின்றித் தழற்கொண்ட சோதிச்செம் மேனி எம் மானைக்கைம் மாமலர்தூய்த் தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே. 11 34. தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர் கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை. 12 35. நினையா தொழுதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர் தஞ்சமென்று மனையா ளையுமக்கள் தம்மையுந் தேறியோ ராறுபுக்கு நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ அனையான் அமரர்பிரான் அண்ட வாணன் அடித்தலமே. 13 36. அடித்தலத்தால் அன்றரக்கன் ஐஞ்ஞான்கு தோளும் முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில் ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின் நீறாடி நெய்யாடி நீ. 14 37. நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் திரங்குவல்வாய்ப் பேய்நின்று பாடப் பெருங்கா டரங்கா பெயர்ந்து நட்டம் போய்நின்று பூதந் தொழச் செய்யும் மொய்கழற் புண்ணியனே. 15 38. புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே ஏண்ணியோ ரைந்தும் இயைந்தனவால் - திண்ணிய கைம்மாவி னீருரிவை மூவுருவும் போர்த்துகந்த அம்மானுக் காட்பட்ட அன்பு. 16 39. அன்பால் அடைவதெவ் வாறு கொல் மேலதோ ராடரவம் தன்பால் ஒருவரைச் சாரவொட் டாதது வேயுமன்றி முன்பா யினதலை யோடுகள் கோத்தவை யார்த்துவெள்ளை என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே. 17 40. ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான் றெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர் படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. 18 41. தமக்கென் றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள் எமக்கொன்று சொன்னால் அருளாங்கொ லாம்இணை யாதுமின்றிச் சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய் உமைக்கென்று தேடப் பெறாதுட னேகொண்ட உத்தமரே. 19 42. உத்தமராய் வாழா துலந்தக்கால் உற்றார்கள் செத்தமர மடுக்கித் தீயாமுன் - உத்தமனாய் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து 20 அற்புதத் திருவந்தாதி 43. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 1 44. இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரெனும் படருநெறி பணியா ரேனுஞ் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு) அன்பறா தென்நெஞ் சவர்க்கு 2 45. அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். 3 46. ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகஞ் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை. 4 47. இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான். 5 48. வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாருந் தாமென்க - ஞானத்தால் முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான். 6 49. யானே தவமுடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்று அம்மானுக் காளாயி னேன். 7 50. ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள். 8 51. அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் - எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு. 9 52. எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று. 10 53. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேஎன் உள்ளத்தினுள் ளடைந்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கெரிசேர் அங்கையாற் காளாம் அது. 11 54. அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அதுவே இனியறிந்தோ மானல் - அதுவே பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலலோர் தனிக்கணக்கு வைத்தார் தகவு. 12 55. தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமேல் ஏபாவந்தான் 13 56. தானே தனிநெஞ்சந் தன்னை உயர்கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து. 14 57. நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரரற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்தருந்து மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்(கு) என்செய்வான் கொல்லோ இனி. 15 58. இனியோநாம் உயர்ந்தோம் இறைவன் தாள்சேர்ந்தோம் இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண். 16 59. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாம் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்(கு) ஆதியாய் நின்ற அரன். 17 60. அரனென்கோ நான்முகன் என்கோ அரியாம் பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத் தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று. 18 61. இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு. 19 62. அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே அவன். 20 63. அவனே இருசுடர்தீ ஆகாச மாவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமான னாயட்ட மூர்த்தியுமாய் ஞான மயமாகி நின்றானும் வந்து. 21 64. வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர் இராநீ ரிருண்டனைய கண்டத்தீர் - எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை. 22 65. பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவ ரெமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையறா உள்ளம் இது. 23 66. இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று) இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 24 67. இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று. 25 68. ஞான்ற குழற்சடைகள் பொன்வரைமேல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கு மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு. 26 69. அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னார்தம் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண் 27 70. பூணாக ஒன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேன்மிளிர நன்கமைத்துக் - கோணாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் (கு) என்முடிவ தாக இவர். 28 71. இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர். 29 72. பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே யணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயுந் தாமும் மகிழ்ந்து. 30 73. மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்த்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு. 31 74. பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். 32 75. நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலகத் (து) எகோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம். 33 76. ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா(று) ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை அடும். 34 77. அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றி னுள்ள மறு. 35 78. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தானதனை யஞ்சி வளருமோ பிள்ளை மதி. 36 79. மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. 37 80. ஈண்டொளிசோர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு. 38 81. கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து. 39 82. மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார் மாட்(டு) உள்ளாதார் கூட்டம் ஒருவு. 40 83. ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவம் மின்னுருவோ நேர்ந்து. 41 84. நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீஅதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - போந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளங்குழவித் திங்கள் இது. 42 85. திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே அறிவான் தனக்கு. 43 86. தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான். 44 87. பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது. 45 88. எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆ ஆ - ஒளிகொள்மிடற் (று) எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழும் திறம். 46 89. திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லாற் பெறத்தானு மாதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான் திருவடிக்கட் சேருந் திரு. 47 90. திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேறா (து) அதுமதியொன் றில்லா அரா. 48 91. அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர் விரிய வோடி - விராவுதலாற் பொன்னோடு வெள்ளிப் புரிபிரிந்தாற் போலவே தன்னோடே ஒப்பான் சடை. 49 92. சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பாலக் கோல மதிவைத்தான் பங்கின் குலப்பாவை நீலக் குழல். 50 93. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து) எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு. 51 94. அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தா லொவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர். 52 95. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53 96. காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு. 54 97. பண்டமரர் அஞ்சப் படுகடலில் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55 98. வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோம் நிலாத்தலையிற் சூடுவோம் நீ. 56 99. நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடஅரவம் மேலாட மிக்கு. 57 100. மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க உடனிருந்தா லொவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்றன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 58 101. பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரு நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவ மேல். 59 102. மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தா லொவ்வாதே - மாலாய கைம்மா மதகளிற்றுக் காருரிவை போர்த்தபோ(து) அம்மான் திருமேனி அன்று. 60 103. அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது. 61 104. ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா (து) ஏதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டெற்றநாள் வல்வேடனாய வடிவு. 62 105. வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா. 63 106. நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி யுழிதருமா கொல்லோ - நிலாவிருந்த செக்கரவ் வானமே யொக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று. 64 107. காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவர்க்கு வீங்கிருளே போலும் மிடறு. 65 108. மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாழ் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. 66 109. பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு. 67 110. சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்(று) எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி. 68 111. முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனிஅவலம் உண்டோ எமக்கு. 69 112. எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா(து) எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 70 113. இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண். 71 114. கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அது வேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து. 72 115. கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீ ரேற்றான் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே எப்போதும் ஓது. 73 116. ஓத நெடுங்கடல்கள் அத்தனையும் உய்த்தட்ட ஏது நிறைந்தில்லை யென்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கலம். 74 117. கலங்கு புனற்கங்கை யூடாட லாலும் இலங்கு மதியிலங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாம் காணில் விசும்பு. 75 118. விசும்பின் விதியுடைய விண்ணோர் பணிந்து பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும் எந்தாய் தழும்பேறி ஏபாவம் பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி 76 119. அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு. 77 120. அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து. 78 121. பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை யேத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொல்லோ சிந்தையார்க் குள்ள செருக்கு 79 122. செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னிறுத்த தஃதே - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால். 80 123. காலனையும் வென்றோம் கடுநரகங் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து. 81 124. சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின். 82 125. மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது. 83 126. நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீயி னாலழியக் கண்டாலும் முக்கணான் கண். 84 127. கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவான் கொல்லோ பெரியானைக் காணப் பெறின். 85 128. பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ(து) உறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தி லொன்றாய நாம். 86 129. நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் அற்றே கெடுமே எறிவினையே என்னும் இருள். 87 130. இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி. 88 131. ஒளிவில்லி மன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவா யஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்னிதனைக் கூறு. 89 132. கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட் (டு) ஏற மிகப்பெருகின் என் செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை. 90 133. திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தொழிந்தோம் எம்மைப் புறனுரைப்ப தென். 91 134. என்னை யுடையானும் ஏகமாய் நின்றானும் தன்னை யறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்(கு) அருளாக வைத்த அவன். 92 135. அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93 136. விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள். 94 137. அவளோர் குலமங்கை ஆகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ(று) என் பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் அன்பணிவார் சொல்லுமினிங் கார். 95 138. ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து. 96 139. மறைத்துலக மேழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு) அளைந்தெழுந்த செந்தீ யழல். 97 140. அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு. 98 141. செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்(டு) அப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தா னங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தா யாடும் நடம். 99 142. நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் றிசைவேம் இடிக்கில் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே(று) உருமேறோ அன்றோ உரை. 100 143. உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொற் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்தது. 101  1. திரங்கி - சுருண்டு; சுருங்கி . குண்டு - உருண்டை; குழி எனினுமாம். பங்கி - மயிர். பரடு - கால்கணு. கணைக்கால் - முழங்காலின் கீழது; பரட்டுக்கு மேலது; திரண்டிருப்பது. உலறு - கோபக்குறியுடன் கூவும் (உலறல் - சினக்குறிப்புத் தோன்ற ஒலித்தல்) 2. கவடு - சந்து. கடைக்கொள்ளி - கொள்ளியின் கடையை (கரியுள்ள பாகத்தை). வாங்கி - இழுத்து; கழற்றி. மசித்து - நசித்துக் குழைத்து, விள்ள - விளங்க; திறப்பாக. வெடு வெடு - கடுமையாகச் சினந்து (கடுமையான சினக்குறிப்பு). நக்கு - சிரித்து (வெகுளி நகை). வெருண்டு - அஞ்சி (நீடுநில்லாத அச்சம்; கதுமெனத் தோன்றி மாய்வது). விலங்கு - குறுக்கு. (விலங்கரு வெஞ்சுரம் - கலித்தொகை: 130: 6, சுளிந்து - சினத்து (இஃதும் ஒருவிதச் சினக்குறிப்பு). பூழ்தி - புழுதி. 3. வாகை - வாகை மரம். இம்மரத்தடியில் பேய்கள் கூடுவது வழக்கம். (காய்பசிக் கடும்பேய்க் கணங்கொண்டீண்டு - மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும் - மணிமேகலை 6:82.3) நெற்று - உலர்ந்த பழங்கள் (அல்லது காய்கள் (வாகைவெண்ணெற் றொலிக்கும் - வேய்பயி லழுவம் - குறுந்தொகை: 7; காய்ந்த வாகை நெற்றொலிப்ப - பெரியதிருமொழி-1) இருள்கூர் நடுநாள் - இருள் மிக்க நடு இரவில்; நள்ளிரவில் என்றபடி (இருள்கிழிப்பது போன்மின்னி வானம் - துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள் - அகநாநூறு: 72: 1-2; நிறைநீர்ப் புள்ளும் - காவுறை பறவையும் நாவுள் ளழுந்தி - விழவுக்களியடங்கி முடிவுகண்டுயின்று - பழவிறன் மூதூர் பாயல்கொன்ற நடுநாள் - மணிமேகலை : 7: 60-3). கூகை - கோட்டான், ஆண்டலை - ஆண்டலைப் பறவை (கோழியினங்களில் இஃதொன்று; இடுகாட்டில் வதிவது; நடு இரவில் கூட்டமாக வந்து கத்துவது; ஆண்மகன் தலையை யொத்த தலையையும் பறவையுடலை யொத்த உடலையும் உடையது. ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் - மணிமேகலை : 6-77) கோடதன் மேல் - மரக்கொம்பின் மீது. ஈகை - இண்டங்கொடி. ஈமம் இடு - பிணத்தைச் சுடுதற்கு விறகுகளை யடுக்கும். (ஈமம் - பிணஞ்சுடுதற்கு அமைக்கும் விறகடுக்கு; கரிபுற விறகின் ஈம ஒள்ளழல் - புறநாறு 231). ஆகம் - உடல்; மார்பு. 4. குண்டில் - சிறுசெய்; சிறுநிலம்; பாத்தி; ஆழத்திலே எனக் கொள்வோருமுளர். ஓமக்குழி - ஓமக்குண்டத்து. கனன்று - சினந்து. இடுகாடு அரங்கு ஆம் மண்டலம் - சுடுகாடெனும் சபையாகிய மண்டலம், மண்டலம் - வட்டத்தில். குணாலம் - கொக்கரிக்கை; வீராவேசத்தால் கொக்கரித்தல்; (நின்றங்குளாளமிட்டு என்பதும் பாடம்; உள்ளானம் - ஒருவகைக் கூத்து; கூத்து விகற்பம்). 5. விழுது - நெய்விழுது; வெண்ணெய். நிணம் - கொழுப்பு. கழுது - பிசாசு. புறங்காடு- சுடுகாடு. 6. பட்டு - மடிந்து; பட்டுப்போன்ற எனினுமாம். நெட்டு உகிர் - நீண்ட நகம். மாறுகால் - வழுக்கும் கால்; பருந்துகால் எனினுமாம். (பாதியிற் பிலந்துழாவு பாறுகால் மாறுகால்- தக்க யாகப்பரணி; 123). கூகை - கோட்டான். பகண்டை - சில்லைப் பறவை. பாறுகால் பேய் குட்டியிட, பருந்தொடு கூகை பகண்டை யாந்தை முட்டையிட எனக் கூட்டுக. கூகை - பேராந்தை; சகோரம். அணங்கு - பேய்மகள். பிட்டு அடித்து. அட்டமே - அண்டமே; அட்டத் திசையுமே; பக்கலில் விரிந்து புரியும் வீரநடனம் என்போருமுளர். 7. துணங்கை - ஒருவகைக் கூத்து (பழுப்புடையிருகை முடக்கி யடிக்கத் - துடக்கிய நடையது துணங்கையாகும்). வாங்கி - இழுத்து. தடி - ஊன்தசை. ஓசை - இயற்கை ஓசையுடைய (ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே - அப்பர்: திருவையாறு). ஒலிப்ப - எதிரொலிப்ப, வட்டணை - ஒருவித விளையாட்டு; தாளமிடுவது போன்றது: (கைத்தலங் காட்டல்; கமல வர்த்தனை; மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்குகின்றாள் - சிந்தாமணி : 1257). ஓரி - சடை (பொன்னொளிர் சடையாதலின் ஆழலுமிழ்ந்து என்கிறார்). கதிக்க - ஒலிக்க. 8. நன்னெறி நாடி நயந்தவரை - சன்மார்க்கத்தை நண்ணி நின்ற நல்லவரை, முதுபிணம்- முது பேய் (குணபும் பிணமும் பேய் பெயர் கூறும் - பிங்கலந்தை: 117.) மூடிமுது பிணத்து இட்டம் மாடே - சீலையால் மூடி முது பேயின் யாகத்தின் பக்கம்; (சீலையால் மூடி முதுபிணம் இடப்பட்ட இடத்தில் என்னலுமாம்; திட்டமாடே எனக்கொண்டு திட்டப்படி என்று கூறுவோருமுளர்), முன்னிய - அணுகிய (மூவிரு காவத முன்னுநரின்றி - மணிமேகலை : 25 : 19). புயங்கன் - புயங்கம் என்னும் நடனஞ் செய்வோன். (புயங்கம் - ஒருவித நடனம்.) 9. துத்தம், கைக்கிளை, விளரி. தாரம், உழை, இளி, ஓசை: இவை இசை ஏழைக் குறிப்பன. ஓசை - குரல். (இவ்வேழும் பிறக்குமிடம் : - குரலது மிடற்றில் துத்தம் நாவினில் - கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே - இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில் - தாரம் நாசியில் தம்பிறப் பென்ப - பிங்கலந்தை : 312). கெழும- பொருந்த. சச்சரி . . . . மொந்தை: இவை வாத்தியங்கள். (சச்சரி - சிறு பறை. கொக்கரை - சங்கு. தக்கை - ஒருவிதப் பறை; பம்பை. தகுணிதம் - பேரி. துந்துபி - முரசு. கரடிகை - ஒரு வகைப் பறை; தோற்கருவி. மென்தோல் - மெல்லிய தோலால் செய்யப்பட்ட கேடகம், தமருகம் - உடுக்கை. குடமுழா - ஒருவகை மத்தளம். மொந்தை- ஒருகண்பறை, அத்தனை அமைவினோடு - அத்தனை அமைப்புடன். 10. புந்தி - புத்தி; கரணங்களுள் ஒன்று. (கரணங்கள்; மனம் சித்தம் அகங்காரம் புத்தி), பொறி - அறிவு; ஞாபகம்; மனமுமாம். கடமை - ஈமக்கடன். முழவின் - மத்தளத்தின். திசைகதுவ - திசைதோறும் விரைந்து பரவ. ஆர்க்க - ஒலிக்க. 11. ஒக்கலித்து - கூட்டமாகக் கூடி ஆரவாரித்து (வெற்றி கருதி ஆர்த்தல்; வாய்கொட்டுதல்). பப்பினையிட்டு - பரவி வட்டமாக நின்று. பப்பினை - பம்பை; யினை எனினுமாம். பகண்டை - ஒருவகைப் பறவை போல் படர்ந்த மயிர்த்தலை. 1. இலவம் - காட்டுப் பஞ்சுமரம். ஈகை - இண்டங்கொடி. சூரை - ஒருவிதக் கொடிச்செடி ; இதற்குச் சூரல் என்றும் பெயர். பட்ட - இறந்துபட்ட. பரந்த - எங்கும் நிம்பியுள்ள; பிணக்காடாயுள்ள. முழவம் - மத்தளம், கூளி - பூதம். குழகன் - அழகன். 2. நிணம் - கொழுப்பு. துணங்கை - ஒருவகைக் கூத்து (மேலே பார்க்க). நவிழ்த்து - அவித்து. மாந்தி - புசித்து. அணங்கு - பேய்மகள். 3. புட்கள் - பறவைகள். பொதுத்த - துளைத்த. அட்க - அணுகுக; நெருங்குக. உட்க - அஞ்ச. சிறு கூகை - சிறு கோட்டான்; சிறு ஆந்தையுமாம். ஊமன் - பெருங்கோட்டான். ஓரி - கிழநரி. கதித்து - கூவி. பிட்க - பிய்க்க; பிள்ளச் செய்ய. 4. உறுமி - விலங்குபோல் உறுமி. இரிந்து ஓட - பலவாறு பிரிந்து ஓட. 5. முள்ளி - முள்ளிச் செடி. முளரி - விறகு. உக்கு - இற்று. வெள்ளில் - விளாமரம்; பாடையுமாம். பியல் - தோள்; பிடரி; முதுகு. 6. வாளை - ஒளியை. கிளர - எழுப்ப; வீச. வால் எயிற்று - வெண்பாற்களுடைய; (வாளைக் கிளைய வளைவாள் எயிற்று வண்மைச் சிறுகூகை என்பதும் பாடம்). முரலும் - கதறும். முதுகாடு - சுடுகாடு. கூளிக்கணங்கள் - பூதகணங்கள். 7. நெகாந்தி - அவிந்து; வெறுமையாக; வறியதாக (தின்பதற் கொன்றுமில்லாமல்). புழுக்கு- ஆகாரம். 8. வேய்கள் - மூங்கில்கள். ஓயும் - தளரும். உலறு கூந்தல் - நிமிர்ந்து உறுத்து நிற்குந் தலைமயிர். அலறுபகுவாய - கதறும் பிளந்த வாயினையுடையனவாகிய. மாந்தி - புசித்து. அணங்கும் - அஞ்சும். மாயன் - சிவபெருமான். மலையான் மகள் - பார்வதிதேவி. 9. கடுவன் - ஆண்குரங்கு. உகளும் - பாயும். கழை - மூங்கில். பொதும்பில் - பொந்தில்; புதரில். ஈமப்புகையும் - எரிந்து கரிந்த விறகடுக்கினின்றும் எழும் புகையும். புனலும் - கங்கையும். கொள் - கொல் (இஃது இக்கால வழக்கு). துடி - உடுக்கை. கறங்க - ஒலிக்க. 10. குண்டை வயிற்று - குட்டி வயிற்று; குழிவயிற்று எனினுமாம். பிறங்கல் - மலை. இண்டு- இண்டைக்கொடி; ஈகை. எயிற்று - பல்லையுடைய. மிண்டி மிளிர்ந்த - நெருங்கிப் பிரகாசித்த. 11. ஆர்த்த - அணிந்த 1. கிளர்ந்து உந்து - எழுந்து தள்ளும். அடும்போது - வருந்தும்போது. நெஞ்சம் - மனமே. இங்கு - இப்பூமியில். வளர்ந்து உந்து - ஒங்கி எழுந்து பெருகி. கோட்டு . . . திங்களும் - பிறையும். ஈசனுக்கு - ஈசனை (உருபு மயக்கம்). வந்தி - வணங்கி. ஈசனை வந்தி என்றபடி. 2. இனவண்டு - வண்டினங்கள். 3. பொரா நின்ற - ஒன்றோடொன்று போரிடும். கொன்றைப் பொதும்பர் - கொன்றைச் செறிவில் (சூழலில்). ஐவாய் அரா - ஐந்து வாயினைடைய பாம்பு; ஐந்துதலைப் பாம்பு (அஞ்சு கொலாமவ ராடரவின் படம் - அப்பர்), பொம் என்று நின்று இரைக்கும் - பொம் என்று நின்று சீறும்; (பொம் - அநுகரண ஓசை). 4. ஆழாமே - பிறவிக்கடலில் அழுந்தாதவாறு; (ஆழாமல் காப்பானை என்றார் மணிவாசகனார்). அளிக்கும் - அருளும்; அணைந்த கொந்து பொன் - தானே வந்த சேர்ந்த திரண்ட பொன். (கொந்து பொன் - கொந்து வேலை செய்யப் பெற்ற பொன் எனினுமாம்) கோள் நாகம் - விடப் பாம்பு. 5. வார் சடை - நீண்ட சடை . அங்கத்திருந்த - உடலில் பாதியாகவுள்ள, மலைமங்கை - பார்வதி. சிலையால் - மேருவில்லால். முனிவார் - பகைவர்தம். திரிபுரம் மூன்றும் - அங்கு மிங்குந் திரியும் தன்மை வாய்ந்த புரங்கள் மூன்றையும். தனிவார் கணை ஒன்றினால் - ஒப்பற்ற நீண்ட அம்பொன்றினால். என் செய்தி - என்ன செய்வார். மலைமங்கை, கங்கையென்பாளை இனிக் காணில் என்செய்தி என்று இயைக்க. 6. அங்கு ஒரு நாள் - துன்பம் வரும் அந்த ஒரு நாள் (உயிர் பிரியும் நாள்). ஆ! ஆ! என்று. ஓவாது - நீங்காது (இடையறாது). 7. இழிந்து ஓட்டத்து எங்கும் திரைக்கின்ற - இறங்கிப் பெருக்கெடுத்து எங்கணும் அலை மோதி வீசுகின்ற. விரைக்கின்ற - மணம் வீசுகின்ற. சென்னித்தலை - திருமுடியினிடத்தில். செவ்வான் தொடைமேல் - அந்திவான் பிறைமீது (பிறைச் சந்திரன் மீது). இரைக்கின்ற - சீறுகின்ற. உரைக்கப்படுவதும் ஒன்றுண்டு. அஃது எது? பாம்பினை என்றுந் தொடேல் என்பது. (பாம்பைக் கண்டால் தன்னைப் பற்றிக் கொள்ளுமென்று சந்திரன் அஞ்சுவன் என்பது மரபு. அத்தகைய பாம்பு எற்றுக்கு என்றபடி.) 8. ஆதிரை நன்னாளானை - திருவாதிரை என்னும் திருநாளுக்குடையவனை; (ஓர் அடியவர் பொருட்டு மூங்கிலில் சிவபிரான் தோன்றிய நாள் திருவாதிரை என்று சொல்வது பௌராணிகம். ஆணவ இருளினின்றும் எழும் ஆன்மாக்களுக்கு ஒளி காட்டுதலைக் குறிக்கும் நாள் திருவாதிரை என்பது ஞானிகள் மரபு. அது தஷணாயனம் மறைந்து உத்தராயனம் தோன்றதற்கு அறிகுறியாக இம்மண்ணுளார் திருவாதிரைத் திருவிழாக் கொண்டாடுகிறார்). வல் ஏனமாய் - வலிய பன்றியாகி. கீழ்புக்கு என்று கூட்டுக. மாட்டாது கில்லேன் அம்மா - முடியாமல் அறியகில்லேன் அம்மா என்றபடி. 9. கடல் தள்ளி - கடலைத் தள்ளி; நீந்தி. விரவார் - பகைவர்களின். புரங்கள் - திரிபுரம். கண்டன் - வீரன். பைம்பொன் - பசுமைப் பொன். தாழாது - காலந்தாழ்த்தாமல். இறைஞ்சிப் பணிந்து வணங்கித் தொண்டு செய்து. (இறைஞ்சுதல் - வீழ்ந்து கிடத்தல்; . . . புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன - கலித்தொகை : 3 : 13. தலைநின்மின் - தலைப்பட்டிருங்கள்; அதே வேலையாயிருங்கள் என்றபடி. 10. தலையாய ஐந்தினையும் சாதித்து - எல்லா மந்திரங்களிலும் தலைமை பெற்றதாகிய திருவைந்தெழுத்தை ஓதிச் சாதனை செய்து என்பது ஒன்று; கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை என்னுந் தலையாய ஐந்தறங்களையுஞ் செய்து என்பது மற்றொன்று; சுத்திகளில் தலையாய பஞ்சசுத்தியைக் கூறல் வேறொன்று. தலையாய அண்டத்தான்- எல்லா உலங்கட்கும் மேம்பட்ட உலகத்திருப்பவன் (தத்துவ புவனங்களைக் கடந்தவன் என்றபடி). 11. கழற்கொண்ட சேவடி காணலுற்றவரே தம்மைப் பேண (காத்த) லுற்றவரென்க; ஏனையோர் தம்மைப் பேணாது கேடு செய்து கொள்வோர் என்க; காணலுற்ற அடியவர் தம்மைப் பேண (வழிபட)லுற்றவர் என்று கொள்ளினும் பொருந்தும்; அடியார்க் கடியவர் என்றவாறு. கழல் - வீரக் கழல். நிழல் கண்டபோழ்து அத்து - நிழலைக் கண்டவிடத்தே. துன்னி - நெருங்கி, நம் அடும் - நம்மை வருத்தும். 12. தொல்லைவினை - பழவினை. தாழாமே - காலந்தாழ்த்தாது. ஒல்லை - சீக்கிரம். ஓர் கூற்றனை - ஒரு பாகத்திலுடையவனை. கூற்று உருவம் காய்ந்தானை - யமனைச் சினந்து வீழ்த்தியவனை. 13. நினையா தொழுதி - நினைந்து வணங்கு. தேறி - அநித்திய மென்று தெனிந்து; (தேறி என்பதைத் தேறு என்னும் பகுதியினடியாகப் பிறந்த விகாரப்பட்ட முன்னிலை வினைமுற்றாகக் கொண்டு, அதற்கு நீக்கு என்று பொருளுரைப் போருமுளர்.) ஓராறு- கங்கை - நொந்தாத - அழியாத. 14. அரக்கன் - இராவணன். ஐ நான்கு - இருபது. முடி தலமும் - முடிகளையும். முடித்தலத்தில் - திருமுடிவில், ஆறு ஆடி - கங்கையாடி. ஆறா அனல் ஆடி - தணியாத தீயாடி. அவ்வனலின் நீறு ஆடி - ஆத்தீயினின்றும் பூக்கும் திருநீறாடி (திருநீறு சண்ணித்தவன்). நீ, நீ - வீரங்குறித்தற் பொருட்டு இருமுறை. 15. தானவர் - அரக்கர். நிரந்து உடனே - முறையே குலைந்து உடனே. சிலை தொட்ட ஆறு என் - வில்லில் அம்பு பூட்டிய விதம் என்ன? திரங்கு - சுருண்ட. பெருங்காடு - சுடுகாடு. அரங்கா - சபையாக. பெயர்ந்து நட்டம் செய்யும். 16. ஓர் ஐந்தும் - ஐம்புலன்களும், இயைந்தன - பொருத்தின. திண்ணிய கைம்மாவின் ஈர் உரிவை - வலிய யானையின் தோலை. மூவுருவும் - உமை முருகன் தான் என்னும் மூவுருவமும் (சோமா கந்தம்). ஆண்டவன் திருவடி அன்புக்கென்று புலன்கள் பொருந்தின என்க. 17. ஆடு அரவம் - ஆடும் பாம்பு. தலையோடுகள் ஆர்த்துக் கோத்தவை முன்னே யிருக்கின்றன; ஆர்த்தல் - பொருத்தல்; நிறைத்தல். ஏறு - எருது. பாம்பு, தலை யோடுகள், என்புமாலை, ஏறு இவை ஒருவரைச் சாரவொட்டால் தடுக்கின்றன என்க. 18. குலவு - வளைந்த; விளங்கும், தங்கும் எனினுமாம். பண்டு - முன்னாளில், உமிழ் - நஞ்சு, ஏறு அல்லால் - எருது அல்லாமல். 19. என்றும் - எந்நாளும். செய்திருப்பேமுக்கு - செய்திருக்கும் எங்களுக்கு. ஒன்று - ஒரு மொழி. அருளாங்கொலாம் - அருளாகிவிடுமோ? (இறைவன் மௌனி. அவன் உணர்த்தும் ஒரு மொழியே (சொல்லாத வார்த்தை) திருவருட் பேற்றுக்கு இலக்காக்குவது. ஒன்று சொன்னால் அது திருவருளாகுமென்று பேசாதிருக்கின்றனையோ என்றபடி. ஒரு மொழியின் உயர் கூறியவாறாம்.) இணை - ஒப்பு. தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. தம்மைச் சுமக்கின்ற வெள்ளேறு போன்றதொன்றை உமைக்காகத் தேடப் பொறுமையின்றித் தாமே உமையைத் தம்முடன் ஒரு பாகத்தில் வைத்துக்கொண்ட உத்தமர் என்றபடி. 20. உலந்தக்கால - இறந்தகாலை. செத்தமரம் - உலந்த மரம்; விறகு. தீயா முன் - கொளுத்தா முன்னர். நீள் ஆழி - நெடுங்கடல். ஆழி நெஞ்சே நெய்யாடி தன் திறமே கிளர்ந்து கேள் ஆழி நெஞ்சே - ஆழ்ந்த மனமே. கிளர்ந்து - விரைந்து எழுந்தது. உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் என்பதும் பாடம். 1. நிறம் - ஒளி; வண்ணம். மை ஞான்ற - கருமை தங்கிய (ஞாலல் - தொங்குதல்) 2. படரும் நெறி பணியாரேனும் - பற்றிச் செல்லும் நெறி இஃதெனப் பணித்தருளாவிட்டாலும், என்பு அறா - என்பு மாலை நீங்காத. எம்மானார்க்கு; அவர்க்கு - எரியாடும் எம்மனார்க்கே என்பதை வலியுறுத்த வேண்டி இருமுறை குறிப்பிட்டவாறாம். 3. பவர்சடை - நெருங்குதலையுடைய சடை. பாகாபோழ் - பாதியில்லாத பிளவை; அதாவது இளம்பிறைச் சந்திரனை. 4. கேளாமை - கேளாமைக்குக் காரணம். நீள் ஆகம் செம்மையான் ஆகி - நெடிய திருமேனி நெந்நிறமுடையனாகி. திருமிடறு மற்று ஒன்று ஆம் - திருமிடறு மற்று ஒன்று ஆம் - திருமிடறு (கண்டம்) மற்றொரு (கரு) நிறமாயிருப்பதாகும். ஒன்று செந்நிறமாகவும் மற் றொன்று கருநிறமாகவும் இருப்பது காரணம் என்றவாறு. கருமை குற்றமுடையதாதலின் என்க. 5. இறக்கம் - சம்மாரம்; அழித்தல். 6. உம்பர் - தேவர். உம்பர்கோன் என்பதற்குச் சிவபிரான் என்று பொருள்கொண்டு, உம்பர்கோன் வானத்தான் (விண்ணகத்தான்) என்றும், தானத்தான் (விண்ணுக்கு வேறாகிய மண்ணகத்தான்) என்றும் பொருள் கொண்டனர் ஆறுமுகத்தம்பிரானார். முன் நஞ்சத்தால் - முன்னே உண்ட விடத்தால். ஞானிகள் நெஞ்சமே ஆண்டவனிடம் என்றபடி. 7. கைம்மா உரி - யானைத்தோல். கண்ணுதலான் - நெற்றியிற் கண்ணுடையான். வெண்மை நீற்ற அம்மானுக்கு - வெள்ளிய திருநீற்றை அணிந்த சிவ பெருமானுக்கு. 8. ஆள்வானுக்கு ஆயினேன் - சிவபெருமானுக்கு ஆளானேன். அன்றே - ஆளான அன்றே. பெறற்கு அரியன் ஆயினேன் - பெறுதற்கு ஒன்றுமில்லாதவ னாயினேன்; (அன்றுந் திருவுருவம் . . .என்னும் பாட்டைப் பார்க்க); பெறுதற்கு அரிய பேறுடையனானேன் என்போருமுளர். ஓர் பொன்வரையே போல்வான் - ஒரு மகா மேருகிரியை ஒத்தவன். அனல் கம் கை ஏற்றான் - நெருப்பையும் கபாலத்தையும் கையில் ஏற்றவன். 9. (ஈசன் அருளே - ஈசன் அருளே - ஈசன் அருளால்) எப்பொருளும் எனக்கு ஆவது என்றபடி. எல்லாவற்றையுந் திருவருட் கண்கொண்டு நோக்குவோர்க்கு எல்லாம் ஆவனவேயாகும். அவர்கட்கு ஆகாதது ஒன்றுமில்லை. 10. மனத்துக்கு, இனிய வைப்பாக (சேம நிதியாக) உண்டே- உண்டோ. 11. ஒன்று, சிவபெருமானுக்கு ஆளாவது என்றபடி. என்னுள்ளதி னுள்ளடைத்தேன் என்பதும் பாடம். 12. பிரானாமாறும் அதுவே என்றும் ஆட்கொள்ளுமாறும் அதுவே என்றும் இனியறிந்தோமானால் என்று கூட்டுக. பனிக்கு அணங்கு கண்ணியார் - கங்கை நதியின் குளிர்ச்சிக்கு நடுக்குறும் கொன்றை மாலையணிந்தவர். ஒண் நுதலின்மேல் - அழகிய தெற்றியின்மேல். ஓர் தனிக்கண் - ஓர் ஒப்பற்ற கண்ணை, தகவு அதுவே என்று சேர்க்க . தகவு - தகைமை. 13. தகவுடையார்தாம் உளரேல் - தகைமையுடைய வராகத் தேவரீர் இருப்பீரேல். (நாகம்) தார் அகலம். சார - பாம்பினை மாலையாக மார்பில் பொருந்த. அந்நாகம் என்றைக்காதல் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமாதலால் என்க. பாவம் - பழி. 14. சேமம் - காப்பு; நலனுமாம். பூண் - அணி. ஆகத்தால் - மார்பால், நீண் நாகத்தானை- நீண்ட பாம்பணிந்தபரமசிவனை. 15. புனைந்தும் - அலங்கரித்தும்; சூடியும். மின் - ஒளி. வான் - மேலான. 16. கனை - ஒலித்தலையுடைய. 17. காண்பார்க்கும் - யோகியர்க்கும். கைதொழுது காண்பார்க்கும் - கைத்திருத் தொண்டர்க்கும். காதலால் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுதலிலுள்ள சிறப்பு உன்னற்பாலது. காதல் நோக்குச் சிறந்தது என்றபடி. 18. முரண் - வலிமை. தானவனை - அரக்கனாகிய இராவணனை. செற்றானை - ஒடுக்கினவனை, பண்பு - இயல்பு. 19. மூவா - முதுமை எய்தாத; என்றும் ஓரியல்பாகவுள்ள. காணும் அறிவு எளிதே என்க. 20. விரிசுடர் - சூரியன் சந்திரன். பார் ஆகாயம் - பார் முதல் ஆகாயம் வரை; (நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்). 21. இஃது இருபதாம் பாட்டின் விளக்கம். இயமானனாய் - ஆன்மாவாய். அட்ட மூர்த்தங் குறிப்பிட்டவாறு காண்க; (மண், புனல், தீ, வளி, வெளி, ஞாயிறு, திங்கள், உயிர்.) ஞான மயமாகி வந்து நின்றானும் அவனே என்க. 22. இராநீர் - மேகம். (நீர் இருளல் - மேகமாதல்; கார்மேகம்.) எங்கள் பிரான் நீர். உம் சென்னிப்பிறையைக் கொள்ளுவதுபோல், இவ்வாளரவின் சிந்தை இருக்கும். அதனைத் தெரிந்து காண்மின் என்றவாறு. 23. பிறை - பிறைச் சந்திரன். புனல் - கங்கை புனல். அரவு - நஞ்சுத்தீயுமிழும் பாம்பு. ஆண்டவன் அருள் செய்யாதொழியினும் எம் மனம் அவனிடங் கொண்ட அன்பினினின்றும் நீங்காது என்றபடி. 24. மீண்டாய் - மறைந்தாய்; (பேதைமை மீளச் செய்கை மீளும் - செய்கைமீள உணர்ச்சி மீளும் . . . வேட்கை மீளப் பற்று மீளும் . . . . - மணிமேகலை30. 119. என் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்றது. (தோன்றி மறைந்த மின்னுஞ்சுடர் உருவம்) இன்னும் என் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஈசன் திருவுருவம் ஆமாறு இது அன்றோ. (சுடர் உருவம் ஈசன் உருவம் என்று தெரிவித்தவாறு காண்க.) சேமம் - நலன், புதையல் என்னலுமாம். 25. எண்ணாதே - ஒன்றும் எண்ணாமலே. பலிதிரியும் - பிச்சையேற்கும். எத்திறமும் - எவ்வியல்பும் எவ்வகையுமாம். ஈமவனத்து - சுடுகாட்டில். என்னுக்கு - என்னத்திற்கு, எம்பெருமான் பலிதிரிதல், ஈமவனத் தாடுதல் முதலியவற்றின் நுட்பத்தை அவனைக் காணாமல் இங்கிருந்துகொண்டு என்ன சொல்வது? அவனைக் காணலுற்ற ஞான்று அவைகளை ஆராய்வோம் என்றபடி. சிவபெருமான் ஒன்றும் எண்ணாது பலிதிரிதல் ஈமத்தாடுதல் முதலியன. ஆணவம் முதலிய மலங்களால் கட்டுண்ட நிலையில் உயிர்கட்கு விளங்காவென்க. அவைகளின் நுட்பம் மலம் நீங்கித் திருவருள் ஞானங் கைவரப்பெறும் போது விளங்கும் என்க. எண்ணாதே பலிதிரிதல் என்பது கருதற்பாலது. ஆண்டவன் உயிர்கள் மாட்டு வைத்துள்ளது இரக்கம் என்று குறிப்பிட்டவாறாம். இறைமைக் குணத்துக்குச் செல்வப் பொருள் வேண்டுவதில்லை என்பதும் விளங்குகிறது. என்பதும் விளங்குகிறது. இறைவன் பொங்கிரவில் ஈமவனத்தாடுவதன் தத்துவம், உயிர்கள் ஆணவவிருளில் மூழ்கித் தங்கள் நிலை தெரியாது கிடக்கும்போது அவைகளை விட்டு இறைவன் பிரியாது, அவைகளைச் செந்நெறிப்படுத்தி இயக்கவேண்டி, அவ்விருளில் ஒளியாய் நின்று ஆடுகின்றான் என்பது, விளக்கம் ஞான நூல்களிற் காண்க. 26. ஞான்ற குழல் சடைகள் - தொங்கிய சுருள் சடைகள். ஞான்று - தொங்கி. மிக்கு அயலே - மிகுந்த அயலே. அக்கு அயலே வைத்த அரவு - என்பு மாலையின் அருகே வைத்த பாம்பு. அரவு பொன் மார்பில் மிளிரும். 27. ஆகத்து - திருமேனியில், முரண் - வலி. ஒன்னார் தம் - பகைவருடைய, திருமேனியில் பாம்பை அணியற்க என்றும், பொன்னாரம் அணிக என்றும் வேண்டுதல் செய்தவாறு காண்க. 28. ஒன்று பூணாக - ஒரு பாம்பை ஆபரணமாக. ஒன்று - மற்றொரு பாம்பை. அதளின் நாணாக - புலித்தோலின் மீது அரை ஞாணாக, கோள் நாகம் - இன்னொருவிடப் பாம்பை. பொறியிலியேற்கு - அறிவிலியாகிய எனக்கு. என் முடிவதாக - என்ன விளைவித்தற் பொருட்டு. இவர் (சிவபெருமான்) புனைந்து, அமைத்து, சூடுவதுமெல்லாம் என்றியைக்க. 29. பொருள் - உண்மை; தத்துவம். பூக்கோல மேனி - தாமரைப் பூவைப்போன்ற செந்தழல் மேனியில். பொடி - திருநீறு. பேய்க்கோலத்தின் நுண்பொருளுணராதார் இகழ்வரென்று கூறியவாறு காண்க. 30. பிறர் - தத்துவச்சேட்டைகளுடையவர். பிறர் - தத்துவச் சேட்டைகளொடுங்கப் பெற்றவர். பிறருடைய என்பு - இறந்தவர்தம் என்பு (தாம் இறவாதாராகலின்) - வன்மை பேயும் - வலிய பேயும். 31. மகிழ்தி - மகிழ்வெய்துவாயாக. மானுடரில் நீயும் திகழ்தி - மனிதர்களில் நீயும் விளங்குவாயாக. (ஆண்டவனிடத்து அன்பு வாய்ந்த நெஞ்சுடையாரே மனிதர்களில் மனிதராகத் திகழ்வோராவர் என்றபடி.) சேமம் - செல்வம்; நலம். யார் என்பேயேனும்- இறந்த எவரென்பே யானாலும். 32. தெரியின் - ஆராய்ந்து பார்த்தால். முதற் கண்ணான் - முதலிலிருப்பவன். மூவாநுதல் கண்ணான் - அழியாத நெற்றிக் கண்ணன். நூல், பிள்ளைப் பிறையின் ஒரு கதிரே (கிரணமே) போந்து ஒழுகியது ஒக்கும். 33. நீர்மை - தன்மை. நுழைவு இலாதார் - மெய்யறிவு நுழைவில்லாதார். 34. அந்தரத்தே - ஆகாயத்திலே. நாம் ஆள் - நாம் (சிவபிரானுக்கு) அடியேம். வேமாறு - வேகும்படி. வல்வினைகள் அடும் - வலிய வினைகள் துன்புறுத்தும். ஆம் ஆறு அறியாவே - என்ன விளையும் என்பதை அவை அறியமாட்டா. வினைகள் முன்பின் சிந்தியாது தங்கள் கடன்களை ஆற்றும் என்றபடி. 35. வெண்மதி அடும் என்று அஞ்சி. அடும் - அழிக்கும். அணிமிடற்ற பேழ்வாய் அரவு - அழகிய தொண்டையையும் பிளந்த வாயையும் உடைய பாம்பு. கோல மணி மிடற்றில்- அழகிய நீலமணி யொத்த கண்டத்தில் மறு ஒக்கும் என்று கூட்டுக. 36. தெறும் என்று - வருத்தும் என்று, பிள்ளை மதிதேய்ந்தும் உழலும். (நாகம்) உறுவான் - அந்நாகம் தன்னை வருத்தும் பொருட்டு. அந்நாகம் தான் தளரத் தன்மீது ஓடுமேல், தான் அதற்கு அஞ்சிப் பிள்ளை மதி வளருமே என்று கொள்க. 37. அடல் அவுணர் - வலிய அரக்கர். அட்ட - அழித்த. மதிஆர் - சந்திரன் நிலவும். மதியாலே - அறிவாலே. என்பு யாக்கையால் இகழாது - என்பு மாலை அணிந்த ஒரு மேனியன் என்பதால் இகழாமல்; என்பினால் யாக்கப்பட்டுள்ள உடல் கொண்டு சிவபிரானை இகழாமல் இவ் வுலகில் வழிபடுவோராயின் என்று கொள்ளலுமாம், என்று யாக்கை கொண்டு இங்கே பிறவார். 38. தார் - மாலை; கொன்றைமாலை. ஏனக்கொம்பு - பன்றிக் கொம்பு. ஏனக்கொம்பு, சந்திரனைப் பாம்பு தீண்டச் சிறுகியது போலதே என்றபடி. 39. கொம்பினை - பார்வதி தேவியாரை. குழகன்தன் - சிவபெருமானுடைய , அம் - அழகிய அணிவரை - அழகிய மேருமலை. மணி வெள்ளிவரை - அழகிய கயிலை மலை, மறித்துப் பொடி யணிந்தால் என்று கூட்டுக. மறித்து மீண்டு. 40. மட. நெஞ்சே! தொண்டர் பாதம் வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழு. ஒருவர் - ஒருவரும். திங்கள் குறுங்கண்ணி கொண்டார் - பிறையாகிய மாலையைச் சூடிய சிவபெருமான். உள்ளாதார் - நினையாதார். ஒருவு - விட்டு நீங்கு. (அடியார் உறவு கொள் என்றபடி). 41. இருபாலும் நீல உருவமாக நேர்ந்து (நெருங்கி) நிறந்தெரிய மாட்டோம். இரண்டு நீலமேக உருவிடைத் தோன்றும் மின்னுருவோ உன்னுடையது என்றபடி, இறைவன் மின்னுருவம் உடையவன் என்றவாறு. 42. ஈர்ந்து - பிளந்து. குழவித்தாய் - குழவித்தன்மையதாய். 43. சில்பலி - பிச்சை. 44. மனக்கு - மனத்துக்கு. தனக்கே - சிவபிரானுக்கே. 45. நோக்கும் - மனத்தாற் கருதும். 46. அளியீர் - கொடாதவரே - திருநீலகண்டத்தையுடைய எந்தையும். பாம்பைப் பூண்டுழலும் எம்மானும் ஆகிய இறைவனை, அரா - பாம்பு, திறம் (இயல்பு) எளியது இது அன்றே. 47. பேதாய் - பேதையே. நிறத்த இருவடிக்கண் ஏழைக்கு - ஒளியுடைய இரண்டு வடுவகிர் போலுங் கண்களையுடைய உமாதேவியார்க்கு. திறத்தால் - இடையறாது தியானிக்கும் தன்மையால். பெறத்தானும் ஆதியோ - வேறு வழியில் பெறுதற்கும் வல்லையோ. 48. ஏனச் செழு மருப்பை - பன்றியின் அழகிய கொம்பை. ஒருநாள் - ஒருநாளும். தேறாது - தெளியாது. மதி - சந்திரன். மதியொன்று இல்லா - அறிவு என்பது ஒன்று இல்லாத. அரா அது - பாம்பு அது. அரா, ஏன மருப்பையும் பார்க்கும்; பிறைக் கொழுந்தாகிய சந்திரனையும் நோக்கும்; இதுவே சந்திரன் என்று இன்னுந் தெரிந்து கொள்ளவில்லை. காரணம் அராவுக்கு மதியின்மையே. அரா, மதி பெறின் இதுவே சந்திரன் என்று பாய்ந்து பற்றும் என்றபடி. 49. அராவி வளைத்து அனைய - அராவி வளைத்தாலென்ன. விராவு கதிர் - நெருங்கிய வெண்ணிலவு. விராவுதலால் - கலத்தலால். புரி புரிந்தால் - நூல் திரித்தால். தன்னோடே ஒப்பான் - தனக்குத் தானே ஒப்பாக உள்ள இறைவனுடைய. சடையாகிய பொன்னும் சந்திரனாகிய வெள்ளியும் புரி புரிந்தாற்போலாவே. 50. வலப்பால் - வலப்பக்கம். குலப்பாவை - உமையம்மையார். குழல் - மயிர். புடை - அருகில். குலப்பாவை நீலக்குழல் கொன்றை தரு கனிகள். . . . போலும். 51. சுழல் ஆர்ப்ப - வீரக்கழல் ஒலிப்ப. ஈமப் பெருங்காட்டில் பேயோடும் - சுடுகாட்டில் பேயுடன். ஆர் அழல் வாய் - நிறைந்த நெருப்பினிடத்து. குழலார் சிறுபுறத்து கோல் வளையை - மயிர் படிந்துள்ள பிடரியையுடைய உமாதேவியாரை. பாகத்து - இடப்பாகம். எழிலாக - அழகு பொருந்த. 52. அம் கண் - அழகிய இடமகன்ற. செக்கர் - சிவப்பு. சிரமாலை தோன்றுவதோர் சீர், முழுமதியம் எழுந்தாலும் ஒவ்வாதே. 53. சேண் - ஆகாயத்து. பேர்யாறு - கங்கை. நீத்தம் - பெருக்கம். பாம்பு - நாண். செவ்வே- காலம்; அழகிய, கொன்றையும் நதிப்பெருக்கும் கார் காலத்தைக் குறிப்பன. 54. நின்னோடு இழிதருவான் - உன்னுடன் கலந்து திரிபவன்; பிரியாதிருப்பவன் (உழிதரல்- திரிதல்). மேனியான் - திருமால். பண்டு - முன்னை நாளில். 55. பணி உறு - பாம்பு வாழும். மணி - நீலமணியொத்த (வடு உண்டு). கண்டத்து வடு ஒன்று, பால் மதிலுள்ள வடு மற்றொன்று என்றபடி. 56. படு வெண்புலால் தலை - பிரம கபாலம். உள் ஊண் - அதனுள்ளே கொள்ளும் உணவை. புறம் பேச - புறங் கூற. வடு - குற்றம். 57. மடவரார் - பெண்கள். பலி - பிச்சை. 58. செக்கர் - சிவப்பு. ஆகத்தான் - உடலுடையவன். சிவத்தின் உரு தீ; பொன். சக்தியின் உரு நீலம்; இருள். சிவத்தின் சடை செம்பொன் நிறமுடையது; சக்தியின் குழல் கருமையது. 59. ஆன் ஏற்றாய் - எருதை ஊர்தியாகக் கொண்டவனே. பண்பு - திருநீறணிவது எவ்வுருவோ என்னும் பண்பை (தன்மையை). பணித்துக்காண் - அருளிச்செய்வாயாக. 60. மாலாய - மயக்கமுடைய. கைம்மா மதகளிறு -துதிக்கையும் மதமுமுடைய யானை. விலங்கல் - மலை. 61. இறைவனது சொரூப இலக்கணங் கூறியவாறாம். God is un known and unknowable - H. Spencer 62. பூதப்பால் - முன்னொரு காலத்தில் ஓரிடத்தில். (பூதம் - இறந்தகாலம்). விசயனோடு எற்ற நாள் - அருச்சுனனோடு - போர் புரிந்த நாளில். 63. கடியுலவு - சீருலவும், (சொற்கழிவு பாதமலர் - மணிவாசகனார்). ஆல் - அசை. 64. நிலா இலங்கும் - நிலவு பொலியும். நேடிக்கொள்வான் - தேடிக்கொள்வான். உழிதருமா - திரியுமாறு. காலையே - காற்றையே. 65. வேளைக்கு வேளை இயற்கையுறும் நிறங்கள் சிவபிரான் திருமேனியில் திகழ்தல் காண்க. 66. பைத்தாடும் - படம் விரித்து ஆடும். உமக்கும் நீல கண்டம். உமது மார்பிலுள்ள பாம்புக்கும் நீல கண்டம். பாம்பு நீலத்தை எவ்விதம் பெற்றது? உமது கண்டத்தை நக்கிப்போலும் என்றபடி. 67. பயின்று - பகை நீங்கப் பழகி. அருவி தூங்குதலால் - கங்கை சொரிதலால், பாம்பு முதலியன பழகித் தூங்குதலால் என்றுங் கொள்ளலாம். (பயின்று தங்கி; பொருந்தி எனினுமாம்.) சிலம்பு ஆம் - சிலம்பு (வீரக்கழல் ) அவருக்குப் பொருந்தும். பாம்பும் மதியும் பகையின்றி ஒன்றி வாழவும், மான் புலியுடன் அச்சமின்றி ஒன்றியிருப்பவும் பயிற்றுதல் செயற்கருஞ் செயலாதலானும், பன்முகப் பெருக்குடைய கங்கையைச் சடையில் அடக்கி வைத்தலும் அருமைப் பாடாதலானும் சிவபெருமான் திருவடியில் வீரக்கழல் புனைந்திருத்தல் தகுதியாம் என்றபடி. 68. சிலம்பு அடியாள் - சிலம்பணிந்த பாதமுடைய உமாதேவியாரின். சிலம்பு அடிமேல் - அச் சிலம்பணிந்த திருவடி மீதூட்டியுள்ள. செவ்வரத்தம் - செம்பஞ்சை. முடிசேர்த்தி நலம் பெற்று எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் என்க. உமையம்மையாரின் ஊடல் போக்க அவர்தஞ் சிலம்படிமே லூட்டியுள்ள செம்பஞ்சை முடிமேல் சேர்த்துக் கோலஞ்செய்தான் என்றவாறு. 69. கொடு மதியான் - வளைந்த பிறையணிந்தவன்; (கோடு - கொடு எனக் குறுகிற்று). நல்ல அடிமேற்கொடு - நல்ல திருவடியைத் தலைமேற்கொண்டு. கூற்றை மதியோம். படிமேல் குனிய வலம் ஆம் - பூமியில் தொண்டு செய்தற்கு வல்லமை கூட்டும். அடிமை கொண்டாடல் - அடிமைத்திறன் கொண்டாடல். அவலம் - துக்கம். 70. போந்து - பனை. இடம் காட்டுதியோ என்று கூட்டுக. 71. மடப்பாவை - கங்கை. வானத்து எழுமதியை இடப்பால . . . வைத்தால் என்றியைக்க. கூறு - தன்மை; பிளவுமாம். 72. கைப்பணி - கைத்தொண்டு. திங்களாய் - சந்திரனை அணிந்திருப்பவனே. கண்ணாளா - கண்ணோட்டம் உடையவனே; கருணை பொழிபவனே. வீடுபேற்றினுந் தொண்டு சிறந்ததெனக் கூறியவாறாம். 73. திருத்தலாம் - செவ்வைப்படுத்திக் கொள்ளலாம். சிக்கென - உறுதியாக. பரு தரங்கம்- பெரிய அலை. 74. கண்ணார் - இடமகன்ற. கலம் - பாத்திரம். ஓதம் - குளிர்ச்சி பொருந்திய. உய்த்து அட்ட - பெய்து நிரப்ப. 75. கங்கையூடாடலாலும் - கங்கை பெருகிப் பாய்தலாலும். பரிசு - தன்மை; கொடை. சடையை விசும்பு என்றவாறு. விசும்பு - வான். (வானிலுள்ள பாம்பு இராகு - கேது,) 76. தேய்ப்பதால். முசிந்து - கன்றி. அம் தாமரை - அழகிய தாமரை. 77. முகடு - வான்முகடு. மறிந்து - கீழும் மேலும் உழன்று தாக்கி. அரங்கு ஆற்றாது - சபை தாங்காது. ஆதலால் அறிந்து ஆடுக என்றபடி. இறைவன் அடி முடி கை முதலியன மாயா லோகங்களில் மட்டும் அடங்கிக் கிடப்பன அல்ல. அவை அவ்வுலகங்களைக் கடந்துஞ் செல்வன என்றபடி. 78. ஏழாய் - ஏழையாய். வாளா - சும்மா. பன்னாள் பணிந்து இரந்தால் (அதனால்) இரங்குமேல் என்றியைக்க. என்னாக - ஒன்றும் ஆகும்படி, ஈந்து அளியான் - கொடுத்துக் காக்கமாட்டான். 79. பாதங்கள் பணிந்தும். போதால் - மலரால். அணிந்தவரை - அணிந்த அடியார்களை, சிந்தையார்க்கு - சிந்தைக்கு (உவப்பால் உயர்திணையாகக் கூறியதென்க.) செருக்கு இது கொல்லோ என்றபடி. 80. வெற்பு எடுத்த - கயிலாய மலையை எடுத்த. எத்தனையோ - இங்கே இருபது; இரண்டுக்கு மேற்பட்ட மையான் எத்தனையோ என்றது. முன் இறுத்தது - முன்னே நசுக்கியது. அரற்றி - ஓலமிட்டு. அஃதே கால் என்றபடி. 81. கோல அரணார் - அழகிய முப்புரத்தார். வெம்தீ அம்பு எய்தான். 82. தாழ் சுடரோன் செங்கதிரும் சாயும் - தங்கும் ஒளி வாய்ந்த சூரியனுடைய சிவந்த கிரணமும் தோல்வியுறும். சடை சார்ந்தார்க்கு . . . பெற்றியதாம். மின் உரைக்கும் - பெண் உரைப்பள்; (மின் - மின்னுமாம்.) 83. காண்பார்கட்கு என்றிரேல் - பார்ப்பவர்கட்கு எவ்வாறு தோன்றும் என்று கேட்பீராயின். 84. விண்டார்கள் - பகைவர்களின். கண்டாலும் - செய்தாலும். எரியும் - அக்கினியும், மதியும் - சந்திரனும். கடுஞ்சுடரும் - சூரியனும். கண் மூன்று; அவை சோம சூரியாக்கினி. கண் - கண்ணோட்டமே; அருளே என்றபடி. முக்கணாங் கண் என்பதும் பாடம். 85. எண்ணார - கருத்தார ; மனமார. 86. ஈது - பேயாய பேறு. 87. மாலை - பாமாலை. ஓர் அறிவினையே - ஒப்பற்ற சிவ ஞானத்தையே. எறி - அழிக்கும்; பாயும். கொட்டும். அற்றே - அன்றே; அப்பொழுதே. 88. எமக்கு (எம்பொருட்டு) அருள் நன்றுடையாய். நக்கு இலங்கும் - சிரித்து (ஒளிசெய்து) விளங்கும், கண்டத்து ஒளியை இருளின் உருவென்கோ . . . மருளில் - மயக்கமில்லாத. 89. ஒளியுடைய வில்லியாகிய ; ஒளி. மறைவுமாம். சிந்தையினிற் சேர்வோனே. 90. தெழித்து - இரைந்து. கங்கையின் அலைகள், பாம்பையும் சந்திரனையும் ஈர்த்துக் கொண்டு சடையையும் அழித்து மேலும் பெருகியோடினால் என் செய்வாய் என்றபடி. 91. திரை - அலையையுடைய கங்கை. உரை மருவி - அவன் திருப்புகழையோதி. அம்மைக்கும் - மறுமைக்கும். புறனுரைப்பது - புறங்கூறல். 93. ஏகமாய் - ஒருவனாய் (ஓசையொலி . . . . உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே - அப்பர்) (தம்பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ - திருவாசகம்.) செய்து அனைய - செய்தாற் போன்ற. தூ - தூய; பரிசுத்தமான. 94. அம்பவள வண்ணன் - அழகிய பவள நிறத்தவன். மைத்து - கறுத்து. மஞ்சுபோல் - மேகம் போன்ற. பொருப்பன் மகள் - மலையரையன் மகள்; உமையம்மையார். நின்னைப் பிரிந்து. 95. அவள் - உமை. ஆகம் - உடல். சலமகள் - கங்கை. ஈதே - இப்படியே; பிரியாள் என்றபடி. தவள நீறு - திரு வெண்ணீறு. இருவரையும் பிரிந்தறியீர். அன்பு அணிவார்- நும்மாட்டு அன்பை அணிந்துள்ளவர். 96. தாயத்தால் - உரிமையால். ஆண்டவனைக் காண்டற்கு அன்பே வழி என்றவாறு. அவ்வன்பு பிறர் கண்ணுக்குப் புலனாகாதது என்று அறிவுறுத்தியவாறு காண்க. 97. நீ எரிப்ப உளைந்து (சுடர்விட்டு) எழுந்து மூவுலகும் நிறைத்திட்டு உள்புக்கு. அளைந்து - மற்றப் பொருள்களோடுங் கலந்து. உறைப்போடு - எரிவோடு. 98. கழலாட - வீரக்கழலாட. பிறங்க - விளங்க. 99. அங்காந்து - வாய்திறந்து. ஐவாய நாகத்தாய் - ஐந்து வாய்ப் பாம்பை அணிந்தவரே. தீப்படுகாட்டு - சுடுகாட்டு. ஒன்றாக - (இப்படியாவது அப்படியாவது) ஒரு வழியில். 100. பொன் ஒப்பாய் நின் ஏறு. படி - பூமி. திசைவேம் - திசைகள் வேகும். அடுக்கல் - மலையில். பொரும் ஏறேரர் - போர் புரியுஞ் சிங்க ஏறோ. ஆன் ஏறோ - எருதோ. உரும் ஏறோ - இடியேறோ. 101. கரைவினால் - உருகிய அன்பால். பேராத - நீங்காத. காரைக்கால் பேய் - காரைக்கால் அம்மை. பூதவுடலெனும் பிரகிருதி மாயாப் பருவுடலை உதறி, நுண்ணுடலெனும் ஞானவுடலைப் பெற்றமையை அம்மையார் பேய் என்று கூறலானார். காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சமரச சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______