இளங்குமரனார் தமிழ்வளம் 34 1. வள்ளுவர் வழியில் வள்ளலார் 2. வள்ளலார் கண்ட சாகாக்கலை ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 34 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 240 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 240/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் வள்ளுவர் வழியில் வள்ளலார் காலம்தோறும் குறள்பெறும் விளக்கம் 1 புகுவாயில் 4 பொருண் முறை 7 1. வள்ளுவரும் வள்ளலாரும் 9 2. வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும் 14 3. வள்ளலார் உரைநடை நூல்களும் திருக்குறளும் 27 4. வள்ளலார் பாடல்களும் திருக்குறளும் 53 5. வள்ளலார் வாழ்வும் திருக்குறளும் 78 6. வள்ளலார் நிறுவனங்களும் திருக்குறளும் 97 வள்ளலார் கண்ட சாகாக்கலை நினைந்து நினைந்து 113 நூல் வரவு 114 1. வள்ளலார் கண்ட சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு 118 2. வள்ளலார் கண்ட ஓதாக் கல்வி 165 3. சன்மார்க்கம் (நன்னெறி) 205 வள்ளுவர் வழியில் வள்ளலார் காலம்தோறும் குறள்பெறும் விளக்கம் ச.மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் நிலம் தொன்மையானது. தொன்றுதொட்டு சான்றோர்கள், புலவர்கள், கவிஞர்கள் தம் சிந்தனை வலிமையால் தமிழுக்கு வளம் சேர்த்தனர். இந்நிலத்தில் எழுந்த சிந்தனைகள் மனிதகுல சிந்தனை வளத்துக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. நன்கு ஆராய்ந்தால் சில துறைகளில் உயர்ந்த தரத்தினை உடையனவாய் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு உடைய தமிழில் காலம்தோறும் சிந்தனையாளர்கள் தோன்றி, மொழிக்குக் கருத்துவளம் நல்கி உள்ளனர். காலங்காலமாக வளர்ந்து வரும் சிந்தனை ஓட்டத்தில், திருவள்ளுவர் தன் சிந்தனை வளத்தால் தனிச் சிறப்பிடம் பெறுகிறார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஒரே குடும்ப நூல் என்று சொல்லும் வகையில் சொல், சொல்லாக்கம், தொடர், சொற்றொடராக்கம், கருத்துக்கள், உவமைகள் ஆகியன ஒத்த தன்மை உடையனவாக அமைந்துள்ன. நுண்ணாய்வு செய்வோர்க்கு இவற்றின் உயிர்ப்பும் ஒருமைப்பாடும் தெளிவாகப் புலப்படும். திருவள்ளுவர் மூத்த சிந்தனையாளர். அனுபவச் செல்வர். அருங்கருத்துக்களை சொற்செட்டுடன் - யாப்புக் கட்டமைப் புடன் சூத்திரம் போல் சிறிய வடிவில் பெரு நூல் செய்த பெரியார். வள்ளுவரின் சிந்தனை வளம் வையகத்தை வாழ்விப்பது; வழிகாட்டுவது காலந்தோறும் வளர்வதற்கேற்ற வளர்ச்சிக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது குறள். திருக்குறள் உயிர்ப்பு பரவாத தமிழ்நூலே கிடையாது; இதன் ஒளி தமிழ் இலக்கியம் முழுவதிலுமே ஊடுருவிச் சென்றுள்ளது. காலந்தோறும் தோன்றும் கவிஞர்கள் திருக்குறளை எடுத்தாண்டுள்ளது எல்லோரும் அறிந்ததே. எனினும், திருக்குறளின் செல்வாக்கு தமிழ் இலக்கியம் முழுதும் புதைந்துள்ள பாங்கு இந்நூலில் விளக்கப் பெறுகிறது. இது ஒப்பாய்வு ஊழி. ஒரு கருத்து காலந்தோறும் பெறும் மாற்றம் - வளர்ச்சி ஒப்பாய்வால் ஒளி பெறுகிறது; கருத்தும் விளக்கம் பெறுகிறது. திருக்குறள் என்னும் தங்கக்கட்டி திருவருட்பாவில் தங்கநகையாக, அழகுமிக்க அணிகலனாக விளங்கும் திறன் இந்நூலில் விளக்கப் பெறுகிறது. வள்ளலார் உணர்ச்சிக் கவிஞராதலால் திருக்குறள் கருத்துக்களைச் சிறந்த ஓவியமாக வரைந்துள்ளார். குறளோவியத்திற்கு திருவருட்பா பாடல்கள் விளக்கமான பெரிய ஓவியங்கள் என்றே கொள்ளலாம். திருக்குறளைப் பதப்படுத்தப்பட்ட கரும்புச்சாறு என்றால், திருவருட்பாவை எல்லோரும் எளிதில் பருகக் கூடிய இன்சுவை நீர் என இயம்பலாம். திருக்குறள் நிலத்தில் புதைந்துள்ள கருத்து மணிகளை வள்ளலார் தம் பாடல்களில் வெளிக்கொணருகிறார்; திருக்குறளுக்கு விளக்கம் தருகிறார். திருவருட்பாவை வள்ளலார் கண்ட முறையும் அனுபவித்து உண்ட முறையும் இந்நூலில் திறனாய்ந்து தெளிவு செய்யப் பெற்றுள்ளது. வள்ளலார் மொழிநடையோ எழுதப் படிக்கத் தெரிந்த எல்லார்க்கும் விளங்குவது. வள்ளலார் தமிழ் மக்கள் தமிழ்; பொதுத் தமிழ். வள்ளுவரின் அருங்கருத்துக்களை, வாழ்க்கைச் சட்டங்களை உயர்தரும நெறிகளை வள்ளலார், தேனில் ஊறிய பலாச்சுளை போல மிகச் சுவையாக விளக்குகிறார். திருக்குறள் வித்துக்கள் எவ்வளவு பெரிய மரமாக விசுவரூபம் எடுத்துள்ளது என்பதை இந்நூலாசிரியர் விளக்குகிறார். குறிப்பாக, வள்ளுவரின் கடவுட் கொள்கை, தத்துவம், உயிருடல் நிலையாமை, மெய்யியல் பற்றிய கருத்துக்களை வள்ளலார் மிகமிக எளிமையாகக் கூறும் திறம் இதில் ஆராயப் பெறுகிறது. தமிழருடைய மெய்யியல் கோட்பாடு வரலாறு எழுதுங்கால், வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை வளர்ந்த வகையினை ஆராய்வார்க்கு இவ்வகை நூல்கள் பெரிதும் துணை நிற்பன. ஆசிரியர் இளங்குமரன் இலக்கியப் பயிற்சி மிக்கவர். இவருடைய கல்விப் பரப்பு, அணுகுமுறை, ஆய்வுநெறி, வளமான தமிழ் நடை, மெய்யில் புலமை, மேன்மை மிகு அறவாழ்வு - இவை இந்த ஒப்பாய்வு நூலுக்கு ஒளி சேர்க்கின்றன. இந்நூலாசிரியர் எதனையும் ஆய்ந்துதான் எழுதுவார் என்பதும், இவர் காய்தல் உவத்தல் அகற்றி ஆய்பவர் என்பதும், அரிய ஆய்வு முடிவுகளைக் கூறுபவர் என்பதும், தமிழ் மரபு அறிந்தவர் என்பதும், தமிழ் மரபு காப்பவர் என்பதும், தமிழ்நலம் ஒன்றே பேணுபவர் என்பதும் நாடறிந்த உண்மை. இவர் படைத்த பல நன்நூல்கள் இவற்றிற்குச் சான்று பகர்வன; இக்கருத்துக்கு அரணாக அமைவன. இவர் சொல்லாராய்ச்சி வல்லுநர்; அடிச்சொல் ஆய்வில் ஆழங்கால் பட்டவர். ஆதலால் சொற்களில் உண்மைப் பொருளும் பொருளின் ஆழமும் கருத்து வீச்சும் கருத்து வளமும் சொற்கள் காலந்தோறும் பெறும் மாற்றமும் அவற்றின் விளைவும் இந்நூலில் நுட்பமாக விளக்கப் பெற்றுள்ளன. இவ்வகைத் திறனாய்வு நூல்கள் ஆசிரியரின் புலமை நலத்திற்கும் ஆய்வுவன்மைக்கும் பெருமை சேர்ப்பதோடு, வள்ளலாரை விளங்கிக் கொள்வதற்கும் வகை செய்யும் என்பது என் கருத்து. வள்ளுவர், வள்ளலார் இருபெரும் சிந்தனையாளர்களின் சிந்தனைச் செழுமையைப் புரிந்து, பயன் கொள்ள இந்நூல் உரை விளக்கமாகும். புகுவாயில் தமிழ் மண்ணில் பிறந்தாலும் உலகவர்க்கெல்லாம் ஒருபேர் அறச்சாலை அமைத்துத் தந்தவர் வள்ளுவப் பெருந்தகை. அச்சாலை வழியே நடைபயின்று நலங் கண்டோர் பலராகலாம்! அவருள் தலையாய ஒருவராகத் தமிழ் மண்ணில் தோன்றியவர் வள்ளலார். வள்ளுவர் வகுத்த அறம் இலக்கணம் என்றால், அவ்விலக் கணத்திற்கு அமைந்த இலக்கியம் வள்ளலார் வாழ்வு. வள்ளலார் பன்னூல் தேர்ந்த ஓதாக்கல்வியர்; அவர் பயின்ற நூல்களுள் தலையாய ஒன்று திருக்குறள்; சிறாரும் முதுவரும் கற்கவேண்டுமெனத் திருக்குறள் வகுப்பு நடாத்த வழி செய்தவரும் வள்ளலார். வள்ளலாரின் திருக்குறள் தோய்வை விளக்கும் சான்றுகள் மிகப் பல. அவற்றைத் தொகுத்த தொகுப்பே ஈதாம். திருக்குறளை அப்படி அப்படியே தம் பாடல்களில் பொன்னிற் பதித்த வயிர மணியென வைத்துச் செல்கிறார் வள்ளலார். திருக்குறள் வழியது இது எனக் கற்பார் உணருமாறு, அதன் தொடர்புகளையும், சொற்களையும் சில இடங்களில் வைக்கிறார். சில இடங்களில், கருத்தைப் பிழிந்து காட்டி இது வள்ளுவ வழியது என உணர்த்துகிறார். வள்ளுவர் வாக்கை உரையாசிரியன்மார் கண்டு தெளிந்த தெளிவினும் மேல் தெளிவாகவும் விரியினும் மேல் விரியாகவும், தெளித்தும் விரித்தும் செல்கிறார். வள்ளுவர் சுட்டும் அடைமொழி ஒன்றை விளக்கும் அருமையைக் கற்பார் களிப்புறுமாறு பலபக்க அளவுகளில் தனிப் பரப்பெனக் காட்டுகிறார். (எ-டு) அழிபசி, உடற்றும் பசி. அசைதானும் வள்ளுவர் வாக்கில் பொருளின்றி வருவது இல்லை எனப் பளிச்சிட்டுக் காட்டுகிறார். (எ-டு) முதற்றே. ஓதாக் கல்வி, சாவாக் கல்வி, பேரா இயற்கை, இன்ன திருக்குறளில் உண்மையைக் கண்டு கொள்ளுமாறு தம் ஆய்வால் துலக்குகிறார்; வாழ்வால் நாட்டுகிறார். வள்ளுவர் வாக்கின் ஒரு பகுதி கொண்டு, அதன் மறுபகுதி ஈதெனக் காண வள்ளலார் உதவுகிறார். வள்ளுவர் சொல்லை மேற்கொண்டு, அதனை வேறோர் பொருளுக்கு வேறொரு வகையில் பயன்படுத்தியும் வியப்புறுத்து கிறார். வள்ளுவர் உள்ளம் காணலில் சிக்கல் ஏற்படுவது அரிதே! அவ்வாறு ஏற்படும் அரிய இடங்களில் சிக்கலை அவிழ்க்க வள்ளலார் முயல்கிறார்; நமக்கும் உதவுகிறார். இவ்வெல்லாவற்றினும் மேலாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் வள்ளுவர் வழிக்குத் தம்மை முற்றாக ஒப்படைத்து, உவமையிலா ஒருவராக ஒளி காட்டுகிறார் வள்ளலார்! இவை வள்ளுவரை வள்ளலார் அணுகிய நெறிகள். இவற்றின் விரியே நூல்விரி! திருநகர் அன்பர், காப்பீட்டுக் கழக மேலாண்மையர் திருமலி மணிமொழியனார் தம் தந்தையார் நினைவுப் பொழிவாக வள்ளுவரும் வள்ளலாரும் என்னும் தலைப்பில் யான் பொழிவதை அவாவினார். அவ்வவாவுதல் ஆட்கொள்ள, என்னுள் முன்னரே முளைத்துக் கிளைத்திருந்த அப்பொருள் விரிவுற்று அடைவு வகையான் ஒருதனி நூலாம் அளவு நல்விளைவாயிற்று. அன்புப் பணி நினைவளவில் அடங்காதே! செயலுருக் கொண்டு பயன் செய்யவேண்டுமே! நினைந்த என் நேரில், வள்ளலார் வழியே வாழ்வாவது எனக் கொண்டு வடலூரையே தம் வாழ்விடமாகவும் கொண்டு - உள்ளுதோறும் உள்ளெலாம் இனிக்கத் திகழும் பெருமகனார் குங்கிலியம் பழ. சண்முகனார் காட்சி வழங்கினார்! அவர் தலைமையிலே காரைக்குடி சன்மார்க்க சபையில் வள்ளுவரும் வள்லாரும் என்னும் தலைப்பில் யான் பொழிவு செய்வதாம் நேர்ச்சியும் உண்டாயிற்று! பொழிவு பொழிவாகப் போய்விடக் கூடாதே. நூலாக வேண்டுமே! பழ. சண்முகனார், தந்தையாம் நிலையில் முந்தியிருக்கச் செய்த பெற்றியர் பேராசிரியர் ச. மெய்யப்பனார். அம் மெய்யப்பரோ, இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல்லை நாளும் பொழுதும் நன்கனம் நல்கி வருபவர். மணிவாசகர் பதிப்பக வழியே மணிமணி நூல்களை வெளியிட்டுத் தமிழ்வளம் கூட்டும் தகவாளர்; அவருக்கு எழுதினேன். எழுதியனுப்பிய அன்றே, இயல்பாக மணிவாசகர் நூலக மதுரைக் கிளைக்குச் சென்ற யான், என் கண் முன்னர் வள்ளலாரும் திருவள்ளுவரும் என்றொரு நூல் புலவர் திரு செந்துறைமுத்து அவர்களால் எழுதப்பட்டு, மணிவாசகர் பதிப்பக வெளியீடாகவே வந்திருத்தலை அறிந்தேன். உடனே தங்கள் பதிப்பகவழி இத்தலைப்பிலேயே ஒரு நூல் வெளிப் பட்டிருப்பதைக் கண்டேன்; ஆகலின் இதன் வெளியீடு பற்றித் தாங்கள் எண்ண வேண்டா என எழுதினேன். ஆனால், விளைவு என்ன? வள்ளுவரும் வள்ளலாரும் மகிழ்ச்சியுடன் வெளியிடு கிறேன். கையெழுத்துப் படியைச் சென்னைக்கு அனுப்புங்கள் என உடனே மறுமொழி பேராசிரியர் அவர்களிடமிருந்து வந்தது. திட்டம்! திட்டம்! திட்டத்தின் வடிவர் மெய்யப்பர்! சுறுசுறுப்பு என்று எழுதிக் காட்டவேண்டிய இடங்களில் மெய்யப்பர் படத்தைப் போட்டுவிடலாம்! பம்பரச் சுழற்சி அவர்க்கு இயல்பாகிவிட்ட நேர்ச்சி! அச்சுழற்சி, தமிழ் வளமாகக் கொழித்தலைக் கண்டு மகிழும் நேய நெஞ்சால் நன்றியுரைத்தல் என் தலைக் கடனாம்! தமிழ்ச் செல்வம், தமிழ்த் தொண்டன், பாவாணர் ஆராய்ச்சி நூலகம், இரா. இளங்குமரன் திருநகர், மதுரை-6. பொருண் முறை 1. வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்வுக் குறிப்பு - வாழ்வுச் சான்று - வாழ்வியல் வழி - திருக்குறள் மாட்சி - திருக்குறள் வெளியீடு - திருக்குறள் வகுப்பு - வள்ளலார் நூற்பகுப்பு. 2. வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும் கல்வி கற்பிக்கும் முறை - செயன் முறை - இல்லறத்தார் இயல் - தினையும் பனையும் - கடன் கொண்டும் கடன் செய்தல் - பழமையும் நாகரிகமும் - பழியஞ்சல் - நல்லோர் வறுமை - ஆகுலநீர - அழிபசி தீர்த்தல் - அன்பியல் - பிறவிப் பெருங்கடல் - முகநட்பும் அகநட்பும் - வரவு செலவு - உலகு இன்புறல் - பொறுத்தலும் மறத்தலும் - கழிநடை. 3. வள்ளலார் உரைநடை நூல்களும் திருக்குறளும் நீதியும் முறையும் - திருக்குறள் அடைவு - நட்பும் கொடையும் - அமைச்சியல் - வருமுன் காத்தல் - அருளுடைமை - அழிபசி - உடற்றும் பசி - தாழும் தாழ்க்கோலும் - ஈகை இன்பம் - ஓர்தல் விளக்கம் - பொய்யும் புனையும் - உடலை நெடிது உய்த்தல் - சாவாக்கல்வி - அருளாட்சி - அருட்கல்வி - உணவு - கொல்லாமை - தன்னை ஓம்பல் - ஒத்ததறிதல் - குணக்குன்று - சினமும் வெகுளியும் - வாழ்வாங்கு வாழ்தல். 4. வள்ளலார் பாடல்களும் திருக்குறளும் விண்ணப்பம் - நெஞ்சறிவுறூஉ - வெகுளாமை - கொல்லாமை - வாய்மை - நிலையாமை - மெய்யுணர்தல் - முதலும் நெய்யும் - இரத்தலும் ஈதலே - விளக்கு - கல்வி - துச்சில் - மெய்ப்பொருள் - எண்ணம் - பொறையுடைமை - பொய்யாமை - அருளுடைமை - பொருளுடைமை - பற்றறுத்தல் - ஒத்ததறிதல் - பிறப்பொருமை - அற்றமும் குற்றமும் - அடக்கமுடைமை - உள்ளும் புறமும் - உணர்ச்சியும் புணர்ச்சியும் - பயனில சொல்லாமை - அவையத்து இருத்தல் - எச்சம் - அறிவுடைமை - அறிவின்மை - கள்ளுண்ணாமை - சொல்லும் சொல் - கல்லாமை - முப்பற்று. 5. வள்ளலார் வாழ்வும் திருக்குறளும் அன்பால் நிரந்து இனிது சொல்லுதல் - ஓதாக் கல்வி - எழுமை எழுபிறப்பு - சொல்வன்மை - பற்றற்ற பான்மை - உருவுகண்டு எள்ளாமை - குறிப்பிற்குறிப்பு - அளவளாவுதல் - அருளாட்சி - சொல்லும் செயலும் - செருக்கறுத்தல் - உயிர்ப்பலி விலக்கு - உணர்ச்சி நட்பு - விருந்தின் சிறப்பு - பக்குவ காலம் - செல்லும் வாய்நோக்கிச் செயல் - முதற்றே - உயிர் தளிர்ப்பத் தீண்டல் - நோற்றலின் ஆற்றல். 6. வள்ளலார் நிறுவனங்களும் திருக்குறளும் நல்லினம் சங்கம் - அருணிலையம் சாலை - மெய்விளக்கம் சபை - சித்திவளாகம் - நிறைவு. 1. வள்ளுவரும் வள்ளலாரும் வள்ளுவரும் வள்ளலாரும் தமிழ்நாடு நன்கு அறியப்பட்ட பெருமக்கள். வள்ளுவர், உலகோர் உள்ளங் கவர்ந்த ஒரு பேர் அறவோர்; வள்ளலாரும், அவ்வாறு உலகோர் உள்ளங்களிலெல்லாம் வீற்றிருக்கத்தக்க பெருமகனாரே! வாழ்வுக் குறிப்பு வள்ளுவர் வாழ்வினைக், காலத்திரை மறைத்து விட்து; அவரோ பிறரோ அவர் வாழ்வினை அக்காலத்தே குறித்தார் அல்லர். பின்னாளில் குறித்தோர், புனைவிலேயே வள்ளுவர் வாழ்வைப் படைத்துக் கொண்டனர். வள்ளலார் வாழ்வு காலத்திரையால் முற்றிலும் மறைந்து போகாத அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது. ஓரிரு வழிமுறை களுக்கு முற்பட்டது. அவரொடு தொடர்பு கொண்டவர்களின் வழிமுறையினரும், தொடர்பு கொண்ட இடங்களும் நம் கண் காணச் சான்றாக விளங்குதல் உண்மை. ஆதலின் அவர் வாழ்வைப் பற்றிய குறிப்புகள் நமக்கு வாய்த்துள. அவற்றுள்ளும் புனைவு இல்லாமல் இல்லை. வாழ்வுச் சான்று வள்ளுவர் வாழ்வியலுக்கு வாய்த்த ஒப்பிலா ஒரு சான்று, திருக்குறளே. இன்னொரு சான்று அவர் வாக்கைத் தம் நூல்களில் பதித்துப் பொன்னே போல் போற்றிக் கொண்டோர் சான்றே! வள்ளலார் வாழ்வியற் சான்று, அவர் பாடிய திருவருட்பா அளவில் நின்றுவிடவில்லை. அவ்வக் காலத்து, அவர்தம் தொடர்பாளர்களுக்கு எழுதிய கடிதச் சான்றுகள் உள. அவரொடு தொடர்பு கொண்டவர்கள் அவருக்கு எழுதிய கடிதச் சான்றுகள் உள. அவரால் நிறுவப்பட்ட நிறுவனச் சான்றுகளும் நேரில் உள. இவற்றின் மேல் அந்நாள் அரசுப் பதிவுச் சான்றுகளும் உண்டு! வாழ்வியல் வழி வள்ளுவர் வாய்மொழியாம் திருக்குறள், வள்ளலார் வாழ்வியல் வளத்திற்கு மிக மிக ஏற்றதாக அமைந்துள்ளமை, இருவர் கருத்துகளையும் அறிவார் எவரும் மேலோட்டமாகவே காணக் கூடிய செய்தி. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் குறளின் விளக்கமே வள்ளலார் தொண்டு. அருளுடைமை அதிகாரத்திற்கு முழுமையாக வாய்த்த உயிரோவியம் வள்ளலார் திருவாழ்வு. அருளுடைமையின் விளக்கவுரை, சீவகாருணிய ஒழுக்கம் என்னும் நூலும், அதன் தொடர்பான அறிக்கைகள் கடிதங்கள் ஆயனவும். மெய்யுணர்தல், தவம், ஒப்புரவு என்பன வற்றுக்கு நடைமுறைச் சான்று வள்ளலாரினும் வேறொரு வரைத் தேட வேண்டியதில்லை. திருக்குறள் மாட்சி வள்ளுவர் காலத்திற்குப் பின்வந்த எப்புலவரும் தாம் இயற்றிய நூலில் திருக்குறளை எடுத்தாளாமல் விடுத்தது இல்லை. முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுதல் என்பதற்குத் திருக்குறளைக் காட்டிலும் ஒரு நூலைத் தமிழ்ப் பரப்பில் சொல்லுமாறு இல்லை. திருக்குறளுக்கு உரைகண்டோர் பதின்மர் என எண்ணப் பட்டாலும், அவருக்குப் பின்னர் இதுகாறும் உரைகண்டவரை எண்ணினால் அவரிற் பன்மடங்காக உளர். தத்தம் மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துக் கொண்ட பெருமக்களோ ஒரு நூற்றுவர்க்கு மேலும் உளர். திருக்குறள் இல்லா நூலகம் இல்லை. திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசாத மேடை இல்லை; எண்கவனகம் (அட்டாவதானம்), பதின்கவனகம் (தசாவதானம்) எனக் குழந்தையர் திறத்திலும் கொஞ்சி மகிழ வாய்த்தது திருக்குறள். திருக்குறள் வகுப்பு, திருக்குறள் முற்றோதல், திருக்குறள் வழித் திருமணம், திருக்குறள் வழிபாடு எனப் புகழுற்று வருவரும் திருக்குறள். பேருந்துகளில் உலாக் கொண்டு வருவதும் திருக்குறள். திருக்குறள் பெயராலும், வள்ளுவர் பெயராலும் உள்ள அமைப்புகளை எண்ணி எழுதிப் பட்டியல் இட்டால் ஒரு பெரு நூலாம் அளவு விரிவுடையதாம். இவ்வெல்லா வற்றினும் மேலானதென்ன? தம் வாழ்வைத் திருக்குறள் வாழ்வாக ஆக்குதல் தானே மேம்பட்டது? அவ்வகையில், வள்ளலார் வாழ்வு திருக்குறளை நடைமுறைப்படுத்திய மேதக்க வாழ்வு என்பதை எண்ணுவார் எவரும் எளிதில் அறியலாம்; வள்ளலார் நூலையும் வாழ்வையும் கற்பார் எவரும் கையிற் கனியென அறியலாம். கடனென்ப நல்லவை எல்லாம், கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு என்னும் செயன்மைக் குறளுக்கு வள்ளலார் வாழ்வு விளக்க வுரையாகத் திகழ்தலையும் அறியலாம். திருக்குறள் வெளியீடு வள்ளலார் திருப்பிறப்புக்குப் பதினோராண்டுகளின் முன்னரே (1812) திருக்குறள் மூலம் நெல்லை அம்பலவாண கவிராயரால் முதன் முதல் அச்சிடப்பட்டுவிட்டது. அதே ஆண்டிலேயே அறிஞர் எல்லிசு அவர்களால் திருக்குறளில் சில அதிகாரங்கள் பொருள் விளக்கம், ஒப்புமை ஆங்கிலப் பெயர்ப்பு ஆகியவற்றுடன் அச்சிடப்பட்டு விட்டது. சென்னையில் தோற்றுவிக்கப்பட்ட கல்விச் சங்கம் என்னும் நிறுவனத்தில், திருக்குறள் கற்பிக்கும் வாய்ப்பும் அவ்வாண்டிலேயே (1812) ஏற்பட்டது. 1835 வரை அச்சுச் சட்டம் என ஒரு சட்டம் இருந்தும், அச்சட்டப்படி கிறித்தவப் பரப்பாளர்களையன்றி எவரும் எத்தமிழ் நூலும் வெளியிடக் கூடாது என இருந்தும், கல்விச் சங்கத்தில் அறநெறி கற்பிக்க உதவும் என்பதாலேயே திருக்குறள் அச்சிட அச்சட்டம் தடைசெய்யவில்லை எனலாம். திருக்குறள் வகுப்பு திருக்குறள், கல்விச் சங்கத்தாரால் கற்பிக்கப்பட்டது எனினும், அதனைப் பொதுமக்கள் பொருளாக முதன் முதல் ஆக்கிவைத்தவர் வள்ளலாரே என்பது சிறப்புக்குரியதாம். அப்பொதுமக்கள் தாமும் எத்தகையர்? இந்நாளில் மழலையர் கல்வி, முதியர்கல்வி என்கிறோமே, அவர்கள் கல்வியை அன்றே தொடங்கி வைக்கிறார் வள்ளலார். ஆடுமாடு மேய்க்கும் சிறார் (ஆபாலர்) முதலாக, முதியர் (விருத்தர்) ஈறாக அனைவரும் திருக்குறள் கற்குமாறு வகுப்பு நடத்த வழிசெய்தார் வள்ளலார். வள்ளலாரின் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயு தனார். அவர் இருமொழி வல்லார் (உபயகலாநிதி). அவரே திருக்குறள் கற்பித்தவர். திருக்குறள் வகுப்பு மூன்று திங்களாக நடந்து வந்தது. நடத்த அதிகாரங்கள் எத்தனை? மூன்றே அதிகாரங்கள்! விரிவுரை என்றால் அவ்வளவு விரிவுரை! கேட்பவர் நிலையறிந்து எளிமையாய்ச் சுருக்கமாய் உரை சென்றிலது. பாடம் கேட்டவர் வாங்கிக் கொள்ள முடியாராய்த் தத்தளித்தனர். வள்ளலார், திருக்குறள் வகுப்பு நடைபெறும் தன்மையை அறிந்தார். மாணவர்களிடம், மூடமுண்ட புலவரை அழையுங்கள் என்றார். மூடம், முண்டம் என்னும் சொற்களைக் கேட்ட மாணவர்கள் திகைத்தனர். அறியாமையை உண்ட புலவர் - அறியாமையை இல்லாமல் செய்துவிட்ட அறிஞர் - எனப் பொருள் கூறி, கேட்பவர் இயல்பறிந்து கற்பிக்குமாறு அவர்க்குக் கட்டளையிட்டார் வள்ளலார். வள்ளலார் திருக்குறள் வகுப்பு நடத்திய தொழுவூரார் இராமலிங்கரு க்குச் சூட்டிய பெயர் வள்ளலார் என்பது. இறைவனை இறையடியார்கள் வள்ளலார் என்று வாயார வாழ்த்தியது தமிழுக்குப் புதுமையில்லை. வள்ளலார் எனக் கொடை யாளரைக் குறிப்பதும் தமிழுக்குப் புதுமையில்லை. அவ் வள்ளலார்களும் பாரி வள்ளல் என்றோ, வள்ளல்பாரி என்றோ பெயர்ச் சுட்டுடன்தான் அறியப்பெறுவர். ஆனால், இராமலிங்கர் வள்ளலார் என்றாலே - பெயர்ச்சுட்டு இல்லாமலே - தமிழுலகில் அறியப்பெறும் தனியுயர் பெருமைக்குரியவர் ஆனார்! வள்ளலார், வளமிக்க செல்வத்தாலோ அச்செல்வத்தை வாரி வாரி வழங்கியமையாலோ அப்பெயர் பெற்றாரா? அல்லது அப்பெயரை அவர்க்குத் தொழுவூரார் சூட்டினாரா? ஒரு குறள், விளக்கம் தருகிறது நமக்கு! குறளில் தோய்ந்து வகுப்பு நடாத்திய தொழுவூரார்க்கு அன்றே அது விளக்கமாயிருக்க வேண்டும். உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு என்பது அக்குறள். வள்ளன்மைக்கு அடிப்படை உள்ளம்; அவ் வுள்ளம் இல்லாதவர் வள்ளல் தன்மையர் என்னும் பெருமையை அடையார் என்பது இதன்பொருள். இதனை நேர்நிலையில் எப்படிக் காணலாம். உள்ளம் உடையவர் கொள்வார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எனின், வள்ளியர் தம் நேர் நிலை தெளிவாகிவிடுகின்றது! உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை, நில்லாது நீங்கி விடும் என்றும் திருக்குறள் கூறுகின்றதே! உள்ளம் உடையவர் வள்ளலார் என்பதற்குச் சான்று வேண்டுமா? இச்சான்று இல்லாதது என அவர் படைப்பில் ஒன்று உண்டா? அவர் வாழ்வில்தான் ஒன்று உண்டா? வள்ளலார், வள்ளுவர் வாய்மொழியில் தோய்ந்து தோய்ந்து திளைத்தவர் என்பதற்குப் பல கூறலென்? நெஞ்சறிவுறுத்தல் ஒன்று போதும் என அமைவோம்! அதன் விளக்கம் வள்ளலார் பாடல்களும் திருக்குறளும் என்னும் பகுதியில் (4) காணலாம். நூற்பகுப்பு வள்ளுவர் வழியில் வள்ளலார் திகழ்ந்தார் என்பதை வள்ளலார் கடிதம், உரைநடை, பாடல், வாழ்வு, நிறுவனம் என்னும் ஐங்கூறுகளொடு நாம் முறையே காணலாம். 2. வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும் வள்ளலார் கடிதங்களுள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை முதன்மையானவை. அவற்றுள் 37 கடிதங்கள் கிடைக்கப் பெற்று அவற்றைத் திரு. ஆ. பாலகிருட்டிண பிள்ளை திருவருட்பா ஐந்தாம் புத்தகமாகிய திருமுகப் பகுதியில் இணைத்துள்ளார். கல்வி கற்பிக்கும் முறை இரத்தினர் கடிதங்களுள் முதல் இரண்டு கடிதங்களில் படிக்க விரும்பும் விருப்பமுடைய வறிய மாணவர்க்கு உதவுமாறு வள்ளலார் வேண்டியுள்ளார். கல்வித் தொண்டில் அடிகளார் கொண்டிருந்த ஆர்வச் சான்றுகளாக அக்குறிப்புகள் உள்ளன. வாழும் உயிர்க்குக் கண், கருவியே என்பதைத் தேர்ந்த வள்ளலார், அக்கல்வியைக் கற்பிக்கும் முறைமையை அக்கடிதங் களில் தெளிவாக்குகிறார். இந்தக் கடிதம் கொண்டு வருகிற சி. குமாரசாமி பிள்ளை படிக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறபடியால் அவனுக்கு எந்தவிதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்த விதத்தில் படிப்பிக்கவேண்டும் என்பது இரண்டாம் கடிதக் குறிப்பு. கேட்பார் எளிமையாக அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை வேண்டும் என்பது திருக்குறள். இதனை எண்பொருளவாகச் செலச் சொல்லல் என்று திருக்குறள் கூறும். செயன் முறை இவ்விரண்டாம் கடிதம் சார்ந்த கடிதத்தில், சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிற படியால் அவனுக்குப் படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற வகை எவ்வகை - அவ்வகை ஆராய்ந்து கூட்டவேண்டும் என்கிறார். இது திருக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் வரும், தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் என்னும் குறளின் உள்ளடக்கப் பொருளாகும். இல்லறத்தார் இயல் இக்கடிதத்திலேயே இல்லற வாழ்வினர்க்கு வேண்டும் இன்றியமையாப் பண்புகள் இவையெனச் சுட்டியுள்ளார் வள்ளலார். பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும் என்னும் இது, பழைமை (81), கண்ணோட்டம் (58), சுற்றந் தழாஅல் (53) என்னும் திருக்குறள் அதிகாரத் தலைப்புகளாதல் அறியத் தக்கது. தினையும் பனையும் வருத்தம் பாராது வரவிடுத்த ஒரு பீசும் ஒன்பது லக்ஷ்ம் பீசுகளாகக் கொண்டேன்; இதுவே அமையும் இனி வருத்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இரத்தினர்க்கு எழுதிய ஆறாங் கடிதத்தில் குறிப்பிடுகிறார் வள்ளலார். சிறு நன்றியையும் மிகப் பெரிதாக எடுத்துக் கொள்ளும் வள்ளலார் பேருள்ளம் இவ் வெழுத்துகளால் புலப்படும். இது, தினைத்துணை நன்றிசெயினும் பனைத் துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்னும் குறளுக்கு வாய்த்த எடுத்துக்காட்டாம். கடன்கொண்டும் கடன் செய்தல் இந்தக் கடிதம் கொண்டு வருகிற அம்மாளுக்குத் தாங்கள் கடன் வாங்குகிற இடத்தில் இரண்டு வராகன் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும், இந்தக் கடிதம் கொண்டு வருகின்றவர்கள் இவ்விடத்தில் வந்து தேகமெலிவைக் காட்டிய படியால் இதே சமயத்தில் இவ்விடத்தில் எனக்கு வழக்கமாகக் கடன் கொடுக்கிறவர்கள் சமீபத்தில் இல்லை. இவர்கள் தேக பக்குவ நிமித்தம்... தங்களுக்கு இந்தப் பிரயாசம் வைத்தேன் என்றும், பதினைந்தாம் கடிதத்தில் எழுதுகின்றார் வள்ளலார். இவ்வாறே பிறர் துயர் தீர்க்கும் பேரிரக்கப் பெருங்குணத்தால் வள்ளலார் செய்த உதவிகள் பல. இவை தம் வளப் பெருக்கால் செய்தவையா? உளப்பெருக்கால் செய்தவையா? இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் என்னும் திருக்குறளுக்குச் சான்றாகத் திகழ்ந்தவர் வள்ளலார் என்பது இவற்றால் விளங்கும். பழமையும் நாகரிகமும் புதுவை வேலு முதலியார் என்பார் வள்ளலார் மேல் பேரன்புடையவர். அவர் தக்க ஒருவர் வழியாக வள்ளலார்க்குப் பணம் விடுத்து வைத்தார். அப்பண வரவறிந்த வள்ளலார் மகிழ்ந்தாரா? ஐயா, நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இது பரியந்தமும் இந்தப் பிணபுடம்வும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் (சோறும் கறியும் பெருஞ்சுமையாக இருக்கின்றதே! ஐயோ! இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி இளைத்துத் துன்பப் படுகின்றவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய! ஐயா! என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாச மெடுத்துக் கொள்ள வேண்டாம். தாங்கள் வேறு விதத்திலும் செலவுக்கு இடம் பார்க்க வேண்டாம் என மறுத்து எழுதுகிறார். உள்ளார்ந்த அன்பால் உதவும் பொருளையும் வள்ளலார் ஏற்க விரும்பினார் அல்லர். நைந்தும் நொந்தும் வலுக்கட்டாயமாக ஒதுக்குகிறார். தொகையை அன்றி வேறு வகையால் உதவு தலையும் வேண்டாவென விலக்குகிறார். வள்ளலார் வளவாழ்வுச் செருக்கா இப்படித் தடுக்கின்றது? இல்லை இல்லை! அவர்தம் தனிப் பெருஞ் சால்பே தடுக்கின்றது. இதனைத் திருக்குறள், இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு என்கிறது. இங்கே இரத்தல் என்பதற்கே இடமில்லை. கொள்ளெனக் கொடுத்த கொடையையும் கொள்ளேன் என்னும் முந்தையர் குறிக்கோள் வாழ்வே பளிச்சிடுகின்றதாம். வேண்டா என வள்ளலார் மறுப்பினும் புதுவை வேலர் அமைந்தாரல்லர். இன்னோர் அன்பர் வழியே மீள் முயற்சி மேற்கொண்டார். தாங்கள் மார்கழி மாதம் ம.ள.ள. ஸ்ரீ முதலியார் நற்குண மணியாகிய சீனுவாச முதலியார்க்கு எழுதிய கடிதத்தால் அவர்கள் என்னைக் கேட்க, நான் மறுக்க, மறித்தும் தங்கள் கடிதம் வர, இதனால் தங்கள் மனத்திற்கு வருத்தம் உண்டாம் என்று மேற்படி முதலியார் அவர்களிடத்தில் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டேன். மற்றவை அவர்களிடத்திற்றானே யிருக்கிறது. இதனைத் தாங்கள் அறிய வேண்டும் என்னும் கடிதப் பகுதியால் பின் நிகழ்ந்த நிகழ்வுகள் வெளிப்படும். தம் அன்பர் மனத்திற்கு வருத்தம் உண்டாகும் என்பதால் தான் அடையாளத்திற்காக ஒரு தொகையை எடுத்துக் கொண்டுள்ளார் என்பது விளங்குகின்றது. வள்ளலார் பரிவு இஃதென விளக்கும் சான்றாவதன்றிப், பணப் பற்றைச் சிறிதும் காட்டிற்றில்லையாம். அன்றியும் வள்ளலார் பழமை பாராட்டும் பண்புக்கு முத்திரையாகவும் திகழ்கின்றதாம். பழமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு என்பது பழமை பாராட்டும் திருக்குறள். கொடைஞர் மனம் நோமே எனத் தம் பேரிரக்கத்தால், பெறக் கூடாததைப் பெறுவார் போலப் பெற்றமை, பெயர்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்னும் குறளில் வரும் நயத்தக்க நாகரிகம் போற்றுதல் ஆம். இவண் நஞ்சுண்ணல், விரும்பாத ஒன்றையும் தருவார் முகம் வாடாமைக்காக ஏற்றுக் கொள்ளும் தகவு குறிப்பதென்க. பழியஞ்சல் பழிச் சொல்லுக்கு வள்ளலார் நாணுதல், இறுக்கத்தார் கடிதத்தில் இடம் பெறும் ஒரு நிகழ்ச்சியால் புலப்படுகின்றது. நான் புரட்டாசி மாதம் அவ்விடம் பிரயாணப்பட்டு வருவதாக ஓர் காரியம் பற்றி நிச்சயித்திருந்தேன். அந்த நிச்சயத்துக்கு ஓர் தடை நேரிட்டது. என்னெனில் நான் புசித்து வருகின்ற கிரகத்தில் யோக்கியராகவும் தலைவராகவும் இருந்த ரெட்டியார் நாளது மாதம் 20ம் தேதி பதவியடைந்தார். ஆதலால் உடனே வருவது ஓர் வகை நிந்தைக்கு இடமாக இருக்கின்றது என்று எழுதுகிறார். இவ்வாறே புதுவை வேலு முதலியார்க்கு எழுதிய கடிதம் ஒன்றிலும் (4) நான் பொசிக்கின்ற ரெட்டியார் வீட்டில் தற்காலத்தில் எசமானராக இருக்கிற ராமகிருஷ்ண ரெட்டியார் என்பவர்க்கு சுமார் 4 மாசந் தொடங்கி உஷ்ண பேதியாகிக் கொண்டிருந்தது. மத்தியில் மத்தியில் நிற்பதும் பேதியாவதுமாக இருந்தது. இப்பொழுது சுமார் இருபது தினமாக வரை கடந்த பேதியாகி எழுந்திருக்க மாட்டாமல் மலசலம் படுக்கையில் தான் விடும்படியான அவ்வளவு அசத்தியும் மெலிவுமாக இருப்பது. சுமார் எட்டு தினத்திற்கு முன் போய் விட்டதென்று கைவிட்டு விட்டார்கள். பின்பு சிவானுக்கிரகத்தால் அணுமாத்திரம் சௌக்கியம்போல் தோற்றுகின்றது. இப்படிப்பட்ட வேளையில் நான் புறப்பட்டு வந்தால் உலகம் நிந்திக்கும். கடவுளுக்கும் சம்மதமிராது. ஆனபடியால் அஞ்சுகிறேன். என்ன செய்வேன் எனத் தவிப்பாக எழுதுகின்றார். இவை, தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வார் பழிநாணு வார் குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை என்னும் குற்றங்கடிதல் குறள்களுக்கு விளக்கமாக இருத்தல் தெளிவாம். பழிக்கு நாணும் பான்மையர், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கொண்டு நாணமடைவர் என்பதும், குற்றமே அழிவைத் தரும் பகை; ஆதலால் குற்றம் செய்யாமையையே உயர் பொருளாகக் கொள்க என்பதும் இக்குறள்களின் கருத்தாம். நல்லோர் வறுமை உயிர்ப் பேரிரக்க உருவராகிய வள்ளலார், மருத்துவத் தேர்ச்சியும் மிக்கவர்; மருந்து செய்யவும் வல்லவர். பிறர்க்கென வாழ்ந்த அப்பெருந்தகை, ஓர் அரிய மருந்து செய்து வைத்திருக்க அம்மருந்து பதனழிந்து பயன்படாது போனது குறித்து வருந்தி எழுதுகிறார் இறுக்கம் இரத்தினர்க்கு: ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி ஏழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த ஓர் பேருழைப்பு ஓர் அசாக்கிரதையால் தன்மை கெடப் பெற்றது. இங்ஙனம் பெறினும் நம் பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும் பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும்போதெல்லாம் ஒரு சிறிது உளம் புடைபெயர்கின்றாம். உயிர்தான் உயிர் இரக்கந்தான் என இரண்டலாது ஒன்றேயாய வள்ளலார் தம் பொருட்டாகவோ அரிய மருந்து பாழ்பட்டதற்கு வருந்துகின்றார்? அப்பேருழைப்பு ஏழையர்க்குப் பயன்படாது ஒழிந்ததே என்பதே அவர்தம் வருத்தமாம். இதே குறிப்பு, நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு என்பதற்குத் தக்க சான்றாம். பிறர்க்கு உதவும் நற்பண்பாளன் வறுமையுடையனாதல் பிறர்க்குச் செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையேயாம் என்னும் இப்பொருளுக்கு, அப்படியே ஒப்ப அமைகின்றதன்றோ வள்ளலார் கொள்ளும் இரங்குதல். ஆகுல நீர திருக்குறள் அறம் என்னும் பெயராலும் வழங்கும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என அறத்தின் இலக்கணத்தை முழுதுற அமைத்துப் பழுதறக் காட்டுவது அது. அதன் தொடர்ச்சியாக அறத்திற்குப் பொருந்தாத ஆரவாரச் செயல்களைப் பற்றியும் கூறும். அது ஆகுல நீர பிற என்பது. ஆகுலமாவது ஆரவாரம், ஆடம்பரம், பகட்டு, போலிமை, ஏமாற்று என்பனவெல்லாமாம். வள்ளலார் சில இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார். அவருடன் செலவு மேற்கொள்வதற்குப் புதுவை வேலு முதலியார் என்பார் விரும்புகிறார்; அதனை அஞ்சல் வழி எழுதி இசைவு வேண்டுகிறார். அவர் கருத்தை அறிந்த வள்ளலார் இரத்தின முதலியார்க்கு எழுதிய கடிதத்தில் (20), அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடி வர பிரயாணப்படுவார்கள். ஆரவாரப் பிரயாணமாக முடியும். ஆகலில், தாங்களும் அவர்களுக்கு இது விஷயத்தில் தெரிவிக்க வேண்டும். நான் மாத்திரம் ரகசியமாக வரும்படி நிச்யித்திருக்கிற்ன. அவசியம் வருவேன் என எழுதுகின்றார். ஆகுலநீர என்பதைத் தானே ஆரவாரப் பிரயாணமாக முடியும் என்கிறார். இம்மட்டோ? இருபத்தெட்டாம் கடிதத்தில் வள்ளலார் தூயவுள்ளம் அப்படியே பளிச்சிடு கின்றது. இராமலிங்கசாமி என்று வழங்குவது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி, அங்ஙனம் வழங்காமை வேண்டும் என்னும் அடிகளார் கட்டளையில் ஆரவாரத்திற்கு அடுத்த பெயர் என்னும் சுட்டுண்மை நோக்கத்தக்கது. இக்கருத்தை வலியுறுத்துவார்போல், தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ, நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கின்றேன்; இருப்பேன் என்கிறார் வள்ளலார். கொடியேற்றுரையாகிய இது வள்ளலாரின் மாசிலா நெஞ்சத்தை எவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றது! நாயக்கர்சாமி என்பவர் தற்காலம் இவ்வுலகில் இருக்கின்ற தான்தோன்றிச் சாமிகளில் தலைநின்ற சாமி என்க. என்னை? அறிய வேண்டுவனவற்றை அறிய முயலாமையோடு பித்த மயக்கான் மனஞ் சென்ற வழிசென்று பித்தச் சாமி என்னும் விசேடப் பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கின்றனர். ஆகலிற் சூழும் வண்ணம் சூழ்க என இரத்தினர்க்கு எழுதும் இருபத்தொன்பதாம் கடிதத் குறிப்பு, ஆகுலுநீர என்பதையும், கூடா ஒழுக்கக் குறிப்புத் தழுவியது என்பதையும் கண்டு கொள்க. அழிபசி தீர்த்தல் வறியவர் பசியைத் தீர்த்தற்கு என்றே ஒருவன் திருவருளால் செல்வனாக உள்ளான் என்பது வள்ளலார் கருத்து. அப் பசிப்பிணி போக்காமல் வறிதே பிறவழிகளுக்குச் செலவிடப்படும் செல்வம் குற்றமுடையதாகும் என்பது அவர் முடிபு. இதனை இரத்தினர்க்கு எழுதிய இருபத்தொன்பதாம் திருமுக வழியே அறிய வருகின்றது. அருநெறி செல்வோர்க்கும் அச்சுறுத்தத் தக்க இவ்வெய்ய பருவத்தின்கண் வான்பெயல் அறியா வன்னெறிப் பட்டு மெய்வருத்தங் கோடல் ஒன்றோ! எவ்வகையானும் களைகண் இன்றிப் பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளாற் கிடைக்கும் பொருட்கருவியை அங்ஙனம் செலுத்தல் இன்றி இங்ஙனம் செலுத்தும் வெறுஞ் செயற்பாட்டிற்கு ஒருப்படும் குறைமையும் கோடற்கு இடனாம். ஆகலில், இதுவிடயத்தில் துணிந்துரைத்தற்குச் சித்தமும் நாவும் செல்வன அல்ல என்கிறார். இத்திருமுகத்தால், வள்ளலாரைத் தம்மிடத்திற்கு வருவித்தற்கும் அவர் பொருட்டாகப் பொருள் செலவிடுதற்கும் இரத்தினர் முயன்றார் என்றும், அம்முயற்சி வெறுஞ் செயற் பாட்டிற்குரியதாய் - அற்றார் அழிபசி தீர்த்தற்கு உதவாததாய் - குறைபடத்தக்கதாய் அமையும் என்றும் குறிப்பிட்டு அச்செயலை விடுக்குமாறு அறிவுறுத்துகிறார் என்பது அறியப்படும். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி என்னும் குறள்மணியின் உள்ளுறை ஈதேயாம். வறியவர்களின் கடும்பசியைத் தீர்த்தற்குப் பயன்படும் செல்வமே பின்னாளில் தம் நலப்பாட்டுக்காக வைப்பகத்தில் போட்டு வைக்கப்பட்ட பாதுகாப்பான செல்வம் என்னும் இக்கருத்துடைய குறளின் ஒளிதானே வள்ளலார் எழுத்தில் வெளிப்படுகின்றது! அழிபசி என்பதன் பெருவிளக்கம் மேலே வரும். அன்பியல் இதே கடிதத்தில் வேலு முதலியார் இயல்பை அருமையாகக் குறிப்பிடுகிறார் அடிகளார்: என்னை அன்றித் தன்னையும் கருதார்; அன்றிப் பொன்னை யும் கருதார்; என்று கருதப்படும் அன்பர் வேலு முதலியார் என்பது அது. அன்பின் இலக்கணமாக வள்ளுவர் சொல்வது இது தானே! அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பதிலுள்ள என்பும் (உடம்பும்) என்பதைத் தானே தன்னையும் கருதார் என்றார். அதற்குமேல் பொன்னையும் கருதார் என்று விலக்கி, என்னையே கருதும் அன்பர் என நிறுவுகின்றாரே! குறள் போலவே குறுநடையில் அன்பின் இலக்கணத்தை அமைத்துக் காட்டுகிறார் அல்லரோ வள்ளலார்! பிறவிப் பெருங்கடல் இறுக்கம் இரத்தினர்க்கு எழுதிய திருமுகக் குறிப்புகளில் (2) பற்ற வேண்டியவை பற்றி உரைக்கிறார் வள்ளலார். பெரியாரைத் துணைக்கோடலும் இறைவன் திருவெழுத்தை இடைவிடாது நினைத்தலும் பற்றியுரைப்பது அது. அவசியம் சாதுக்கள் சார்பு வேண்டும்; சாதுக்கள் சார்பு தற்காலத்தில் கிடைப்பினும் கிடையாவிடினும் நம்மை எழு பிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரின்ப மென்னும் கரையிலேற்றும் சைவப்பதியில் தெய்வப் புணையாக வாய்த்த திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்துக் கொண்டும் சிவபிரான் திருவடிகளைப் பாவித்துக் கொண்டும் வருவது முக்கியத்தினும் முக்கியம்; ஆகலின் நாம் அவசியம் பற்ற வேண்டிய காரியம் இவை; மற்றவையன்று. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் என வரும் பிறவிக்கடல் உருவகத்தை அப்படியே கையாள்கிறார் வள்ளலார். பிறவியைக் கடலாகக் கூறிய வள்ளுவர் இறைவன் அடியைப் புணையாக (மிதப்பாக)க் கூறாமல் கற்பார் கண்டு கொள்ள விடுத்தார். வள்ளலார் புணையைத் தந்ததுடன் கரையையும் காட்டுகிறார். கடல் நீந்துவார் கரை சேரவேண்டும் அல்லவோ! முகநட்பும் அகநட்பும் நட்பு என்பது உறுதியானது, நெருக்கமானது என்னும் பொருளது. நட்பு காதல் ஒருமைக்கு ஒப்பானது. அந்நட்பு உணர்ச்சி ஒப்பால் ஏற்படுவது; புணர்ச்சி நட்பு என்பது புல்லிதே. இவை வள்ளுவக் குறிப்புகள். நட்பின் அருமை உணர்ந்தே நட்பு, நட்பாராய்தல், கூடா நட்பு, நட்பிற்பிழை பொறுத்தல், பழமை எனப் பல அதிகாரங்கள் திருக்குறளில் வைக்கப்பட்டுள. கூடா நட்பில், உள்ளொத்த அன்பு இல்லாதவரோடு உறவாட நேருங்கால் முகத்தால் நட்புப்போல் காட்டி அகத்தால் நட்பு இன்றி இருத்தல் வேண்டும் என்பார் வள்ளுவர். பகைநட்பாங் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல் என்பது அக்குறள். வள்ளலார் இக்கருத்தை உட்கொண்டு எழுதுவார் போல வேலு முதலியார்க்கு எழுதிய கடிதத்தில் (1), நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் என்றபடி ஸ்ரீ ரத்ன முதலியாரைத் தாங்கள் அடக்கிக் கொண்டது பெரிய காரியம். அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் வாக்கினாற் சமீபித்தும் மனத்தினால் நெடுந் தூரமாகியும் இருக்கவேண்டும் என்கிறார். வாக்கினால் சமீபத்தில், சொல்லால் நெருங்குதல்; மனத்தினால் நெடுந்தூரமாதல் உள்ளத்தால் அகலுதல் என்பவற்றைக் காண்க. உள்ளும் புறமும் வேறாதல், வினைவேறு சொல்வேறு படுதல் என்னும் கவடு அல்லது வஞ்சம் இஃதாகாமை கொள்க. இது குற்றமாம் நிலை மேலே பாடற்பகுதியில் விளக்கமாம். வரவு செலவு வருவாய் குறைய வரினும் அதனால் குறைவு இல்லை. அவ்வருவாயினும் செலவு மிகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டுமென வலியறிதலில் கூறுவார் வள்ளுவர். ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை என்பது அக்குறள். ஆகாறு - வருவாய்; இட்டிது - சிறிது; போகாறு - செலவு; அகலுதல் - பெருகுதல். இப் பொருளியற் கருத்தில் வள்ளலார் உள்ளம் ஆழமாகப் பதிந்திருந்தமை கடிதங்கள் பலவற்றால் அறியக் கிடக்கின்றது. வரவுக்குத் தக்க செலவு செய்யவேண்டும் (6) வரவுக்கு ஒத்த செலவொடு வாழ்தல் வேண்டும் (23) வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டு தேகத்திற்குத் திடமுண்டாகும்படி உபசரித்துக்கொண்டு சாக்கிரதை யோடிருக்க வேண்டும்(27) - என இறுக்கம் இரத்தினர்க்கும் தாங்கள் வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டிருக்க வேண்டும் (8) எனப் புதுவை வேலர்க்கும் வரைந்த கடிதங்களில் குறிப்பிடுகிறார் வள்ளலார். உலகு இன்புறல் கற்றவர் ஒருவர் தாம் எவ்வகையால் எதனால் இன்பம் அடைகிறாரோ அதனை அவ்வகையால் பிறரும் அடைவதை விரும்புவர் என்பது பொய்யாமொழி. இதனைத் தாமின் புறுவ(து) உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் என்பார். இக்கருத்து வள்ளலார் அருளிய சபை விளம்பரத்தில் (7) அருமையாக விளக்கமாகின்றது. அறிவு வந்த காலமுதல் அறிந்து அறியாத அற்புத அறிவு களையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் இது தருணந் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற் பெருங்களிப் புடையேனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப் படைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் என்பது அது. இதே கருத்து வள்ளலாரிடம் ததும்பி வழிந்தமை பாடல்களில் பல இடங்களில் வெளிப்படும். ஒரெடுத்துக் காட்டு: ஏனுரைத்தேன்? இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்; யானடையும் சுகத்தினைநீர் தானடைதல் குறித்தே என்பது அது. பொறுத்தலும் மறத்தலும் பொறையுடைமை வள்ளுவ அதிகாரங்களுள் ஒன்று. அதில் ஒரு குறள்: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று ஒருவர் குறையைப் பொறுப்பது சிறப்பு; அதனை அறவே மறந்து விடுவது அதனினும் சிறப்பு என்னும் பொருளுடைய இக்குறளின் விரிவாக்க விளக்கமாகச் சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதிகளை வகுக்கிறார் வள்ளலார்: ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படு கின்றனர் என்றும் அது காலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும், கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதாய் இருந்தாலும் உடனே ஜாக்கிரதைப்பட்டு அதை முற்றிலும் மறந்து விடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல்விளைவை யுண்டுபண்ணாதிருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத்தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடுமறுபடி துவேஷ்த்தை ஒருங்கே விட்டு மறந்து மனக் கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர் களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டுத், தாங்கள் வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சு மில்லாமல் இந்த இடம் விட்டுப்போய்விடத்தக்க முயற்சி ஒவ்வொருவம் செய்தல் வேண்டுவது. ஒத்து இருத்தல், முற்றிலும் மறந்து விடல், மறந்து மனக்கலப்புடன் மருவுதல் என்பவற்றையும் பொறுத்தல், மறத்தல் என்பவற்றையும் இணைத்துப் பார்க்க. கழிநடை இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் என்பார் திருவள்ளுவர். ஒழுக்கமுடையவர் கூறும் உறுதிச் சொல், வழுக்கல் நிலத்து நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுதல்போல் உதவும் என்பது இதன் பொருள். ஊன்றுகோல், ஊற்றுக்கோல் என வலித்தல் பெற்றமை நம்பிக்கொண்ட கோல் நல்வலியையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்னும் குறிப்பினதாம். இல்லாக்கால் தளர்ச்சிக்குத் துணையாம் அக்கோலே, தன் வன்மையின்மையால் பெருங்கேடு நேர்தற்கு வழி செய்துவிடும் என்னும் எச்சரிக்கை காட்டுவதாம். இவ்வூன்றுகோல் இவ்வாறமைய வள்ளலார், இரட்டுறல் விளங்க, ஒழுக்கமுறை ஒன்றனை இனிதின் விளக்குகிறார். இரத்தினர்க்கு எழுதிய பதினாறாம் திருமுகத்தில், தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை ஒருவன் கட்பார்வை போன்றொழுகல் வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன் என்று எழுதுகின்றார். கம்பூன்றி நடக்கும் ஒருவன் நடை கழிநடையாம். அன்றியும் கம்பின்மேல் நடப்பவன் நடையும் (கழைக் கூத்து, ஏற்றக்கோல், நடைபாதை மரம்) கழிநடையாம். இக்கழிநடை ஒருவன் கண்பார்வை, எப்படி இருக்க வேண்டும்? புறம் பாராமல் காலும் கோலும் நோக்கிய நோக்குடன் அமையவேண்டும். இப்பால் அப்பால் சாயாமலும் இயலவேண்டும். இவ்வாறே உலகியல் உணர்ந்து மெய்ப்பொருள் கண்டார் தம் வாழ்வியல் இயல வேண்டும் என்பவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறார் வள்ளலார். அவர் சொல், ஒழுக்கமுடையார் சொல்லாதலால் ஊற்றுக் கோலாம் தன்மையது என்பதையும், அதற்குக் கழிநடையை ஒப்புமை காட்டுதல் வள்ளுவமேல் வளர்ச்சி என்பதையும் அறிதல் நனிநயமாம். வள்ளலார் வரைந்த கடிதங்கள் மிகப்பலவாக இருந் திருக்கக்கூடும். ஆனால், அரிதின் முயன்று பெற்று அச்சிடப் பட்ட வகையால் கிடைத்த கடிதங்களைக் கொண்டு ஒப்பிட்ட ஒப்பீடுகள் இவை. உரைநடை நூல்களில் காணப்படும் குறள் வழித் தொடர்புகளை மேலே காண்போம். 3. வள்ளலார் உரைநடை நூல்களும் திருக்குறளும் வள்ளலார், உரைநடையில் வரைந்த நூல்கள் இரண்டே. அவை, மநுமுறை சுண்டவாசகம், சீவகாருணிய ஒழுக்கம் என்பவை. சன்மார்க்க விண்ணப்பங்கள் என்பதும் இரண்டாவது நூலைத் தழுவி எழுந்ததேயாம். ஆதலால் உரைநடை நூல்கள் மூன்று எனவும் கொள்ளலாம். இனி, விளக்கவுரை வரைந்த நூல்களும் உள. அவை இவற்றின் வேறானவையாகலின் அவற்றையும், உபதேசப் பகுதி களாக வருவனவற்றையும் இதனைத் தொடர்ந்து காணலாம். அவையும் உரைநடை வகையில் அமைந்தவை யாகலின். நீதியும் முறையும் பெரிய புராணத்தில் திருநாட்டுச் சிறப்பு என்பதை அடுத்துள்ளது மநுநீதி கண்ட புராணம். அச்செய்தியைக் கொண்டு வள்ளலார் மநுமுறை கண்ட வாசகம் எழுதினார். உரைநடையால் எழுதுவதை வாசகம் என்பது பிற்கால வழக்கு. அவ்வழக்குக்குத் தகத் தாம் இயற்றிய நூலை வாசகம் என்றார் எனினும் மநுநீதியை, மநுமுறை என மாற்றியமை ஆயத்தக்க அருமையுடையதாம். மநுமுறை என்னும் பெயரமைப்பிலேயே வள்ளலார் கொண்ட வள்ளுவ நாட்டம் இனிது விளங்குகின்றது. திருக்குறளில் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்பவை இரண்டு அதிகாரங்கள். இவவை அடுத்தடுத்துள்ளவை (55, 56). ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை என்பது செங்கோன்மை முதற்பாட்டு. முறை என்பதன் இலக்கணமாக இப்பாடல் இருப்பதுடன் மனுவேந்தன் முறை செய்த முறையையும் விளக்குவதாக உள்ளது. மகன் எனவும் பாராது முறை செய்தவன் அவன் அல்லனோ! மேலும், முறை காக்கும் (547), முறை செய்யா (548, 553, 558), முறை கோடி (559) என்றும் முறை ஆளப்பட்டுள்ளது. அவ்வாட்சிக் கருத்தே மநுநீதியை மநுமுறையென வள்ளலார் கொள்ளுதற்குத் தூண்டிய தெனலாம். திருக்குறள் அடைவு மநுமுறை கண்ட வாசகத்தில் திருக்குறள் கருத்துகள் மிகப் பல ஊடாடியுள. அவற்றைக் காணலாம். மநுவேந்தன் இயல்புகளைக் கூறுகிறார் வள்ளலார்: துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல், நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையும் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு, செய்யத்தக்க காரியங் களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், எதிராளி வலியும் தன் வலியும் துணையானவர் வலியும் காலநிலையும் இடநிலையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத்தக்க உத்தியோகங்களை அவரவர்களுக்குக் கொடுத்தும் பழமை பாராட்டியும் சுற்றம் தழுவியும் கண்ணோட்டம் வைத்தும் என விரித்துச் செல்கிறார். இதில் சிற்றினஞ்சேராமை, பெரியாரைத் துணைக் கோடல், வலியறிதல், காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல், பழமை, சுற்றந்தழாஅல், கண்ணோட்டம் என்னும் திருக்குறள் அதிகாரத் தலைப்புகளில் செய்தி இயலுதல் தெளிவாகும். மற்றும், செயற்கரிய செய்வார் பெரியர் செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்னும் குறள்களின் பொருள்கள் இடம் பெற்றிருத்தல் தெளிவாய் அறியக் கூடியதே. மனுவேந்தன் தகைமைகளை எடுத்துரைக்கும் வள்ளலார் அவனை நண்பனுக்கும் மழைக்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். அவ்வொப்பீடுகளில் வள்ளுவர் வாய்மொழியில் வள்ளலார் தோய்ந்திருத்தல் வெளிப்பட விளங்குகின்றது. குடிகளுக்கு ஆபத்து நேரிடும் போது கட்டிய வதிரம் அவிழ்ந்தவன் கைகள் போல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி கை கொடுப்பதனால் சினேகளை ஒத்தவராய் என்கிறார். இது, உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்னும் குறளை நினைவுபடுத்துவது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை ஒத்தவராய் என்று வள்ளலார் கூறுகிறார். இது, கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு என்னும் குறளில் பளிச்சிடுதலைப் பகரவும் வேண்டுமோ? நட்பும் கொடையும் நட்பை முகநட்பு, அகநட்பு என இருவகைப்படுத்துவார் திருவள்ளுவர். அதனை உட்கொண்ட வள்ளலார் மனுவேந்தன் மைந்தன் வீதிவிடங்கன் வாக்காக முக நட்பாகப் பேசி முகந்துடைக்கின்றவர்கள் போற் சொன்னீர்க்ள் என்றும், அதற்கு மறுமொழி கூறும் அந்தணர் முதலானவர்கள் வாக்காக நாங்கள் முகத்துக்கு இச்சையாக முன்னொன்று பேசிப் பின்னொன்று சொல்கின்றவர்கள் அல்ல என்றும் கூறுதல் எண்ணத்தக்கது. இவை முகநக நட்பது நட்பன்று என்பதை விளக்குதல் கண்கூடு. அமைச்சியல் உலகத்தை ஆளும் அரசன் ஆசை பற்றியாவது வெகுளி பற்றியாவது தாட்சண்ணியம் பற்றியாவது உறவு பற்றியாவது நடுநிலையாக ஞாயங்கண்டு சொல்லாமல் மாறுபட்டால் அதை மறுத்து இது விஷயத்தில் அரசன் நம்மைக் கொல்லு வானாயினும் கொல்லட்டும் அவனுக்கு உறுதி கூறுவதே நமக்குக் கடன் என்று நிச்சயித்துக் கொண்டு ஞாயங்கண்டு நடுநிலையாகச் சொல்வது மதியுடைய மந்திரிகளுக்குத் தருமம் என்று மனுவேந்தன் அமைச்சர்களை நோக்கிக் கூறுவதாக வள்ளலார் கூறுகின்றார். இதில் அமைச்சு அதிகாரச் செய்திகள் பொதுவாகவும், அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் என்னும் குறட்செய்தி சிறப்பாகவும் இடம் பெற்றிருத்தலை அறியலாம். எதனை நோக்கியும் நடுவு நிலைமை தவறுதல் கூடாது என்பதை இப்பகுதியில் விளக்குவதுடன், இதனை அடுத்தே தாய் தந்தையிடத்திலாயினும் தராசுக் கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்கவேண்டுவது அரசர்க்கு அவசியம் வேண்டிய சற்கருமம் என்றும், எந்தப் பொருள் எந்தப் பிரகாரமாய் இருந்தாலும் அந்தப் பொருளின் உண்மையை அறிந்து கொள்வதும் என்றும், உருவு நோக்காது அறிவை நோக்குவதும் என்றும் வருவன குறள் வழிப்பட்ட குறிப்புகள் என்பது வெளிப்படை. இவை, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னர் உடைத்து என்னும் குறள்களை உள்ளடக்கியவை அல்லவோ! வள்ளலார், நடுவு நிலையைச் செப்பம் என அருமையாகச் சுட்டுகிறார். செப்பம் உடையவன் (112), சொற்கோட்டம் இல்லது செப்பம் (119), செப்பமும் நாணும் ஒருங்கு (951) எனத் திருக்குறளில் நடுவுநிலை செப்பம் என ஆளப்பட்டிருத்தல் அறியத்தக்கது. வருமுன் காத்தல் மனுவேந்தன், பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாது விடவேண்டும்; ஆலோசித்து அறியாது செய்துவிட்டால் அது பற்றித் துயரப் படாமல் மேல் செய்யத் தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்யவேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை அனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன? எனத் தன்னைத் தானே நொந்து கொள்கிறான். இப்குதியில், வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் அறிவுடையார் ஆவ தறிவார்; அறிவிலார் அஃதறி கல்லா தவர் என்னும் குறள்களின் திரட்டுப் பொருளும், எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்னும் குறளின் மேல் விளக்கமும் அமைந்திருத்தல் தெளிவாம். அருளுடைமை சீவகாருணிய ஒழுக்கம் என்பது அருளொழுக்கமே. இவ் வருளொழுக்க விரிவு அருளுடைமைத் திருக்குறள் விளக்கமேயாம். நாலாயிரப் பனுவலுக்கு (பிரபந்தத்திற்கு) முப்பத் தாறாயிரப்படி அமைந்ததுபோல் திருக்குறள் அருளுடைமை அதிகாரத்திற்கு அமைந்த பெருவிளக்கம் சீவகாருணிய ஒழுக்கம் எனின் தகும். மன்னுயிர் ஓம்பி அருளாள்வான் என அருளாளன் இலக்கணம் கூறும் வள்ளுவர் (244) அருளுடைமைக்கு அடிக் களமாம் கொல்லாமையிலே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் (322) என அருளாளன் வாழ்வியலைக் குறிப்பார். சீவகாருணிய ஒழுக்க முப்பிரிவுகளிலும், சன்மார்க்க விண்ணப்ப நாற்பிரிவு களிலும் தடைவிடை முதலிய விளக்க வகைகளால் இவற்றை நிலைநாட்டுகிறார் வள்ளலார். உயிர்க்குச் செய்யும் அருளாலேயே இறைவன் அருளைப் பெறமுடியும் என்பது வள்ளலார் கண்டு தேர்ந்த முடிபு. வித்து எதுவோ அதுவே விளைவுமாம் என்பது கண்ணாரக் காணும் உண்மை. ஆதலால் அருளால் அருளைப் பெறலாம் என்பது இயற்கை நியதி. இதனை, வள்ளலாரைப்போல் உணர்ந்து உணர்ந்து உருகி நின்று விளக்கியவர் முன்னும் இலர்: பின்னும் வாய்த்தல் அரியர். உயிர்களுக்குப் பசி தாகம் பிணி இச்சை எளிமை பயம் கொலை என்பவற்றால் துயர்கள் வருமென்றும் அவற்றை விலக்குதலே அருளாளர் கடமை என்றும் கூறும் வள்ளலார், இவ்வேழு துயர்களினும் பசியும் கொலையும் விலக்குதலை முதன்மையாக்கி இறுதியில் பசி நீக்குதலே அனைத்துத் துயரும் நீக்குதலாம் என நிறுவுகிறார். அற்றார் அழிபசி தீர்த்தல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பவற்றுக்குத் திருவருளால் வாய்த்த விளக்கமாகவே அது விளங்குகின்றது. அதன் தொகுப்பு வருமாறு: பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள், தாகம் நீங்குவதற்குத் தண்ணீர் கொடாமல் இரார்கள். தண்ணீர் கொடுப்பது பிரயாசமும் அல்ல. தண்ணீர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்தும் இருக்கின்றது. தாகத்தால் மாற்றிக் கொள்ளத் தக்க ஏகதேச அபாயம் நேரிடுமேயல்லது, அதனால் தேகத்திற்கு ஆனி நேரிடாது. பசியினால், மாற்றிக் கொள்ளக் கூடாத கெடுதி தேகத்திற்கு நேரிடும். பசியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதற்குத் தயவுண்டாகாமல் இராது. பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே அப்பிணிகள் நீங்குகின்றன. பிணிகள் தேகத்தை நெடுநாள் வைத்திருக்கக் கூடும். ஒரு நாளாகிலும் ஆகாரமில்லாமல் தேகத்தை வைத்திருக்கக் கூடாது. பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு இச்சையால் வரும் துன்பங்கள் நீக்குவிப் பதற்குத் தயவு வராமல் இராது. சீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில் ஆகாரத்தில் அல்லது மற்றொன்றிலும் இச்சையே இராது. ஆகாரங் கிடைக்கில் உண்டு பசி தீர்ந்தவர் தம் இச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவும் கூடும். இச்சையோடு பல நாள் தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது. பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர்களுக்குச் சுதந்திரமற்ற சீவர்களது எளிமையை நீக்கத் தயவு வராமல் இராது. பசியினால் வருந்து கின்ற எளிமைக்கு மேற்பட்ட எளிமையே இல்லை. எளிமையைச் சில நாள் சென்று மாற்றிக் கொள்ளக் கூடும். பசியை அவ்வாறு மாற்றிக் கொள்ளக் கூடாது. எளிமையோடு தேகத்தை வைத்திருக்கக்கூடும். பசியோடு வைத்திருக்க முடியாது. பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவருக்குப் பயத்தை நிவர்த்தி செய்விப்பதில் தயவு வராமல் இராது. பசியினால் வரும் பயத்திற்கும் கொலையினால் வரும் பயத்திற்கும் மேற்பட்ட பயமே இல்லை. பயத்தை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக் கூடும். பசியை உபாயத்தால் நீக்கிக் கொள்ளக் கூடாது. பயத்தோடு தேகத்தை வைத்திருக்கலாம். பசியோடு வைத்திருக்கப்படாது. பசியினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும் கொலை யினால் வரும் அவத்தைகளும் துன்பங்களும் தம்முள் ஒத்திருக் கின்றன. ஆதலால், பசியினால் வருந் துன்பத்தையும் கொலை யினால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருண்யத்திற்கு முக்கிய லட்சிய மென்றறிய வேண்டும். பசியினால் வருந் துன்பத்தை நீக்குதலும் கொலையினால் வரும் துன்பத்தை நீக்குதலும் சீவகாருணியத்திற்கு முக்கிய லட்சியமாக இருக்கவும், இவ்விடத்திலும் பசி நீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது என்னெனில், ஒரு சீவன் பசியினால் கொல்லப்படும் என்பதை அறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர் பிழைப்பிக்கும்படி செய்பவர் வேறு வகையால் உயிர்க் கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாமல் இரார்கள். கொலையால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்வியாதவர்கள் பசியால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவுடையவர்கள் ஆகார்கள். பசியால் வரும் கொலையை ஆகாரத்தால் அன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப் படாது. பகை முதலியவற்றால் வருங் கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடும் ஆதலால் கொலையால் வரும் துன்பத்தைப் பசியால் வரும் துன்பத்தில் அமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்ற தென்றறியவேண்டும். அன்றியும் தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும, பசிவருத்த முண்டாகும்போது அவ்வவ் வருத்தங் களையெல்லாம் மறந்து பசிவருத்தம் மேற்பட்டு ஆகாரங் கொடுக்க முயற்சி செய்கின்றார் கள். அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக்குற்றம் பற்றிக் கொலை செய்ய விதிக்கப்பட்ட குற்றவாளியும் பசி வந்தபோது தன் பயத்தையும் துன்பத்தையும் மறந்து அந்தப் பசியை மாற்றிக் கொள்ளுகிறான். வயித்தியரால் தாம் இறந்து விடுவது நிச்சய மென்று தெரிந்து கொண்ட வியாதியாளரும் மூப்பாளரும் பசி வந்தபோது தமது துன்பத்தை மறந்து பசி நீக்க முயலுகின்றார்கள். பசிக்குத் தயவினால் ஆகாரங்கொடுக்கத் துணிந்தவன் வேறு வகையால் சீவர்கள் இம்சை பட்டழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான். ஆகலினும் பசியால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விக்கிற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவதென்றறிய வேண்டும். இன்னும் விரிவாக வரைகிறார் வள்ளலார். இப்பேரருட் பேருரை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்னும் ஒப்புயர்விலா ஒரு மணிக் குறளுக்கு வாய்த்த ஒளி விளக்கமென நடையிடுதல் கண்கூடு. இனிச் சிலச்சில குறிப்புகளை அப்படி அப்படியே தெறித்து விட்டுச் செல்லும் வள்ளலார் உரை வீச்சில் எத்தனை எத்தனையோ குறள் மணிகள் மின்னுகின்றன. பிறர் தாராத விளக்கங்களையெல்லாம் தன்வைப்பாக்கிக் கொண்டு எத்தனையோ குறள்கள் பளிச்சிடுகின்றன. அழிபசி பசியை வாளா கூறாமல் அழிபசி என அதன் கொடுமை விளங்கும் வகையில் குறிக்கிறார் வள்ளுவர். எவருக்கும் உரிய அழிபசி என்பதைக் கூறுவார்போல அற்றார் அழிபசி (226) என்றுரைத்தார். அழிபசியில் உள்ள அழி என்பது எவ்வெவ் அழிவுகளையெல்லாம் உள்ளடக்கியது? திருக்குறளுக்கு இது காறும் உரைகண்ட எவரும் ஒடுங்கிப் போகுமாறு விளக்குகிறார் வள்ளலார். பசியினால் துன்பம் நேரிட்டபோது மனவெழுச்சியால் சகித்துக் கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிர் இழந்து விடுவார்கள். - உயிரிழப்பு உச்சமான அழிவு அன்றோ! பிற அழிவுகள்? பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும் அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்கள் என்றால் அன்னியமாகிய வீடு மாடு நிலம் உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்கள் என்பது சொல்ல வேண்டியதில்லை. - இவை உரிமை அழிவும், உடைமை அழிவும்! “cyf KGJ« MS»‹w r¡fut®¤âah»a murD« gá neÇ£lnghJ jdJ mâfhu ca®¢á KGJ« É£L¤ jhœªj th®¤ijfshš ‘gá neÇ£lJ v‹d brŒtJ? என்று அருகில் இருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்கிறான். - இது பதவிப் பெருமிதம் அழிவு! “giftuhš v¿a¥g£L kh®ãš cUÉa ghz¤ijí« ifahš ão¤J¡ bfh©L vâÇ£l giftiubašyh« mŠrhJ xU ÃÄõ¤âš btšy¤j¡f R¤j åuU« gá neÇ£lnghJ brsÇa¤ij ïHªJ gá¡ fŠá¥ g¡f¤âš É»‹wtiu¥ gh®¤J ‘ïis¥ò tUnk’ ‘r©il v¥go¢ brŒtJ! என்று முறையிடுகின்றார்கள். இது பேராண்மை யழிவு! இவ்வுலக போகங்களோடு இந்திரபோகம் முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவை அறிந்து அநுபவம் விளங்கிய ஞானிகளும் இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையில் இருக்கின்ற யோகிகளும் இறந்தோரையும் எழுப்பத் தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும் முனிவர்களும் தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அநுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள்; பலி நேராத போது நிலை கலங்குகின்றார்கள். - இவை ஞான, யோக, தவ, சித்து அழிவுகள். சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அது குறித்து உயிர் விடத் தக்க ஞானிகளும் பசி நேரிட்டபோது சொல்லத் தகாத வரிடத்தும் சொல்லி மானங்குலைகின்றார்கள். சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர் களும் பசிவந்த போது ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள். கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து செய்தற்கரிய செய்கைகளை செய்து முடிக்க வல்லவர் களும் பசி நேரிட்டபோது அறிவும் கருத்தும் அழிந்து தடுமாறு கின்றார்கள். - இவை மானம், ஒழுக்கம், கல்வி ஆகியவை அழிவு! இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்ட போது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள். நாமே பெரியவர் நமக்குமேற் பெரியரில்லை என்று இறுமாப் படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்ட போது அகங்காரம் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கிறார்கள்.. ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள். - இவை போக அழிவு, செருக்கு அழிவு, ஊதாரித்தன அழிவு! அழிபசி விளக்கம் கடுகைத் துளைத்துக் கடலைப் புகட்டும் குறளாக்குகிறதா? அணுவைத் துளைத்துக் கடலைப் புகட்டும் குறளாக்குகிறதா? உடற்றும்பசி பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிக்கின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம் என்று வள்ளலார் வரைவதில் வள்ளுவர் கூறும், பசியென்னும் தீப்பிணி பற்றுகிறதன்றோ! (227) நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசி என்கிற பாபி இன்றும் வருமே! ïj‰F v‹d brŒnth«! என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருணியம். வெயிலேறிப் போகின்றதே, இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! ïªj Éâtr¤â‰F v‹d brŒtJ! என்று தேனில் விழுந்த ஈயைப்போல திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் சீவகாருணியம். இருட்டிப் போகின்றதே இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம், யாரைக் கேட்போம்! v‹d brŒnth«! என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம். இவை, இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (1048) என்பதன் வழியாகத் தோன்றிய விரிவாக்கச் செய்தி. பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது. வேறிடங்களில் போக வெட்கந் தடுக்கின்றது. வாய் திறந்து கேட்க மனம் வலிக்கின்றது. வயிறு எரிகின்றது. உயிரை விடுவதற்கு உபாயம் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம் என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம். நாம் முன்பிறப்பில் பசித்தவர்கள் பசிக்குறிப் பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார்; அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கு இப்படிச் செய்வாரும் இல்லை என்று விவகரித்துக் கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைப்பதே சீவகாருணியம். தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப்போல, அடி வயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்கு கின்ற விவேவிகளுக்கு ஆகாரங்கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம். நேற்றுப் பட்டினி கிடந்ததுபோல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலிய வசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோமாயினும் பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல; வார்த்திப திசையால் மிகவும் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன செய்வோம்! பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்? என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல் பசி நெருப்பும் பயநெருப்பும் விசார நெருப்பும் உள்ளே மூண்டபடி யிருக்கக் கன்னப் புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே சீவகாருணியம். கண் கை கால் முதலிய உறுப்புக்களிற் குறைவில் லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்கத் தக்க சக்தியுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள்; குருடும் செவிடும் ஊமையும் முடமுமாக இருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்! gá v¥go Ú§F«! என்று தனித் தனி நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே சீவகாருணியம். - இவ்விளக்கங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு நிற்கின்றதே வள்ளுவர் வளச் சொல்லாகிய உடற்றும் பசி என்பது. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணிற் றுடற்றும் பசி என்பதற்கு எவரே இவ்விளக்கங்களைத் தர இயலும்! வள்ளுவர் வாய்மொழி வளம், வள்ளலார் உருகும் உள்ளச் சுரப்பால் அள்ளக்குறையா அளவில் பெருக்கெடுக்கின்றதாம்! பசியினால் ஏற்படும் அழிபாடுகள், பசி நீங்குதலால் உண்டாகும் ஒளி நிலைகள் எல்லாம் மிக விரிவுடையன ஆகலின் இவ்வளவில் அமைவாம். சீவகாருணிய ஒழுக்கம், சன்மார்க்க விண்ணப்பங்கள் ஆகியவை காண்க. தாழும் தாழ்க்கோலும் அன்பினை அடைத்து வைக்கும் தாழ் இல்லை என்பது திருக்குறள். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பது அது. அன்பு ஈன்ற அருட்குழவியை எப்படிச் சொல்லலாம்? தாழ்க்கோலாகச் சொல்லலாம் என்பது வள்ளலார் தேர்ச்சி! வள்ளுவர் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பேறு வாய்த்தவர் அல்லரோ வள்ளலார்? சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவு கோல் என்கிறார் வள்ளலார். அத்திறவுகோலைப் பெறாமல் பிற வழியால் மோட்சவீடு உற்றாரும், ஆங்குப் புகக் கூடாராய் அத்திறவுகோல் பெறுதற்காக மீளவும் பிறப்பராம்: விரதிகளும் பத்தர்களும் இருடிகளும் யோகிகளும் சித்தர் களும் ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவு கோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்சம் என்கிற மேல் வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவு கோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்கள் என்று உண்மையாக அறிய வேண்டும். இதனால் அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடென்றும் அறியப்படும். என்கிறார். அருள் விளக்கமாம் இப்பகுதியில் கொல்லாமை புலா லுண்ணாமை என்னும் வள்ளலார் உயிர்க் கொள்கைகளும் ஆராயப்படுகின்றன. அவ்விரண்டு அதிகாரப் பொருள்களையும் தமிழுலகில் வன்மையாய் முதற்கண் உரைத்த உரவோர் வள்ளுவர் என்பதும், அதனைச் சிக்கெனப்பற்றிச் செழிக்க வளர்த்தவர் வள்ளலார் என்பதும் எவரும் அறிந்த செய்தி. ஈகை இன்பம் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கண் அவர். என ஈயாரை இடித்துரைப்பார் வள்ளுவர். ஈத்துவக்கும் இன்பத்தை வள்ளலார் அருமையாக விளக்குகிறார்: அதனை அபர இன்பம், பர இன்பம் என இரண்டாக்கி ஆய்கிறார். உடுப்பதற்கு வதிரம் இருப்பதற்கு இடம் உழுவதற்கு நிலம் பொருந்துவதற்குப் பெண் விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்தபோது பெற்றுக் கொண்டவர் களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அந்த இன்பத்தைக் கண்டு கொடுத்தவர் களுக்கு உண்டாகின்ற இன்ப விளக்கமும் கடவுள் கரணத்தில் ஏக தேசமும் சீவகரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவை. ஆகலால் அது அபர இன்பமென்றறிய வேண்டும். உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த சீவர் களுக்குச் சீவகாருணியத்தால் ஆகாரங் கொடுக்க உண்டு பசி நீங்கிய தருணத்தில் அந்தச் சீவர்களுக்கு அகத்தி னிடத்தும் முகத்தினிடத்தும் தழைந்து பொங்கித் ததும்புகின்ற இன்பமும் அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறுண்டாகின்ற இன்பமும் ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்று கின்றவையாகலால் பரவின்பமென்றது என்றறிய வேண்டும். - இவை உரைநடை நூல்களால் அறியவரும் திருக்குறள் கருத்துகள். இனி, பொன்வண்ணத் தந்தாதி உரை முதலாக வள்ளலார் வரைந்த வியாக்கியான (விளக்க) வுரைப் பகுதிகளில் சில குறட்பாக்கள் இடம் பெற்றுள. அவற்றைக் குறிப்போம். ஓர்தல் விளக்கம் ஒழியில் ஒடுக்க உரையில் ஓர்ந்து என்பதை விளக்க வரும் வள்ளலார் ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை அறிவு தனக்கெதிரிட்ட உணர்ச்சிப் பொருட் கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப் பொருட்டிறன் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியும், எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப் பெயரும் புடை பெயர்ச்சியும் கோடலிற் கருவித் திறனும் தன் திறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறி நின்றமையைக் குறித்தது காண்க. இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவ நாயனாரும் ஓர்த்துள்ள முள்ளது ணரின் என்றார் என்றறிக என்கிறார் (357). பொய்யும் புனையும் தொண்ட மண்டல சதக ஆய்வில், தொண்ட மண்டலம் என்பதை விளக்க வரும் வள்ளலார், கோமான் என்பதன் புணர்ச்சியை விளக்கி இது கை படலறியான் பொய்படல் ஒன்றோ என்பதற்கு இனம் என்று கூறுகிறார். இக்குறிப்பு, பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் என்னும் குறட் குறிப்பாகும். உடலை நெடிது உய்த்தல் உடலை நெடுங்காலம் சீராக வைத்திருக்கச் செவ்விய வழி அற்றால் அளவறிந்து உண்ணல் என்பார் வள்ளுவர். உடலைப் பெற்றவன் தன் முயற்சியால் செய்யும் செயல் அஃது என்பாராய், அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு என்பார் (943). இக்கருத்தைப் பல வகைகளால் வலி யுறுத்துகிறார் வள்ளலார். எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும் தாம் தம்முடைய தேகத்தைச் சாக்கிரதையாக உபசரித்து வரவேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல் களில் மிதபோசனம், மிதபோகம் புண்ணியப் பயனால் பெற்ற தேகத்தைக் கூடிய வரையில் சாக்கிரதையோடு பக்குவ மார்க்கத்தில் நடத்தல் வேண்டும். - இவை உடலை நெடிது உய்க்குமாற்றை விளக்கும். சாவாக் கல்வி தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உபதேச மொழியில் வள்ளலார் உரைக்கிறார். சாவாத கல்வி என்பது அழியா வாழ்வு பெறும் கல்வியாம். அக்கல்வி இறைவனடி சேரும் கல்வி என்பது வள்ளலார் குறிப்பென அறியலாம். வாழ்வின் நீடிப்பு இன்மை, கவலையால் நேர்வது. மனக் கவலை மாற்றும் மருந்து தனக்குவமை இல்லான் தாள்சேர்தல் என்று கூறும் வள்ளுவர், நீடு வாழ்தலையும் குறிக்கிறார். நீர் வாழ்தலே சாவாத வாழ்வென வள்ளலாரால் கொள்ளப்பட்ட தென்க. அக் குறள்கள், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் என்பன. இரண்டாம் குறளில் வாலறிவன் நற்றாள் தொழலைக் கல்லார், பிறவற்றைக் கற்றதால் ஆவதென்ன என வள்ளுவர் வினாவுவதை நினைத்தால், இறையடி சேர்தற் கல்வியை அது சுட்டுகிறது என அறியலாம். ஆதலின் சாவாக் கல்வி என்று வள்ளலார் குறிப்பது மெய்ப் பொருட் கல்வியே என்பதும், அதன் நிறைவு பேரா இயற்கை என்பதும் கொள்ளலாம். இஃது, ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்னும் குறளால் தெளிவாம். இதனை இறுதியில் வரும் சித்திவளாக விளக்கத்துக் காண்க. அருளாட்சி அருளாட்சி பொருளாட்சி என்பவற்றை இணைத்து நோக்கும் வள்ளுவர், பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு என்றார். மேலும், தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் என்றும் வினாவுவார். இவ்வினாவின் விளக்கம்போல் அமைகிறது வள்ளலார் வினாவும் விடையும். இது உபதேசப் பகுதி சார்ந்தது. கடவுளது திருவருளை எவ்வாறு பெறக் கூடும்? என்பது வள்ளலார் தாமே அமைத்துக் கொள்ளும் வினா. அதற்கு விடை, அருளென்பது கடவுள் தயவு; சீவகாருணியம் என்பது சீவர்கள் தயவு. ஆதலால் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெருவெளிச் சத்தைப் பெறுவதுபோல் சிறிய தயவாகிய சீவ தயவைக் கொண்டு பெருந் தயவாகிய கடவுள் அருளைப் பெறவேண்டும் என்கிறார். அருட்கல்வி மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளால் அறியும் அறிவு ஐயறிவு. அதனின் மேலாம் அறிவு மன அறிவாம் ஆறாம் அறிவு. பகுத்தறிவு மெய்யறிவு இலங்கறிவு விளங்கறிவு என்பனவும் அது. ஐயறிவை ஐயுணர்வு என்னும் வள்ளுவர், மெய்யறிவை மெய்யுணர்வு என்பார். ஐயுணர்வை ஒருவர் அடைந்தாலும் பயனில்லை, மெய்யுணர்வு என்னும் ஒன்று இல்லாதவருக்கு என்று மெய்யுணர்வுச் சிறப்பை அவர் குறிப்பார். ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு என்பது அது (354). மெய்யுணர்வு உண்டாகும் வகையை, ஓர்த்து உள்ளம் உள்ளது உணர்தல் என்றும், ஐயத்தின் நீங்கித் தெளிதல் என்றும், மருள் நீங்கி மாசறக்காணல் என்றும் (357, 353, 352) திருவள்ளுவர் கூறுவார். இதனை வள்ளலார் எளிய உரைநடை ஓட்டத்தில் உவமையால் தெளிவிக்கிறார்: பத்து ஆள் சுமை ஒரு வண்டிப்பாரம்; நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டிப் பாரம். சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலையறிவை ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவநோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம் என்கிறார். இதனால் கல்வியை அறிவுக் கல்வி என்றும் அருட் கல்வி என்றும் இரண்டாகப் பகுத்துக் கொண்டு அறிவுக் கல்வியினும் அருட்கல்வி எத்துணை ஏற்றமுடைய தென்பதை விளக்குகிறார் வள்ளலார். வள்ளுவர் சுட்டும் ஐயுணர்வு என்பது அறிவுக்கல்வி. மெய்யுணர்வு என்பது அருட்கல்வி என வள்ளலாரால் ஆளப் பெறுதல் அறிந்து இன்புறத் தக்கதாம். உணவு மருந்து என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களுள் ஆறுபாடல்களில் உண்டி பற்றியே கூறப் பட்டுள்ளது. உணவே மருந்து என இவ்விருபதாம் நூற்றாண்டில் எழுந்துள்ள குரல் வள்ளுவர் குரல் என்பதை உலகோர்க்கு நாம் அறிவிக்க முயன்றோமில்லை; கருதினோமும் இல்லை. மருந்தென வேண்டா; ஆம்! எனத் திட்டமாகக் கூறுகிறார் திருவள்ளுவர். அருந்தியது அற்றது போற்றி உண்க, அற்றால் அளவறிந்து உண்க, அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து, மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை, இழிவறிந்து உண்பான் கண் இன்பம், கழி பேரிரையான்கண் நோய், பெரிதுண்ணின் நோய் என்றெல்லாம் உணவைக் காட்டியே மருந்ததிகாரத்தை ஓடவிடுகிறார் வள்ளுவர். வள்ளலார் தேர்ந்த மருத்துவர்; சித்தமருத்துவர். அவர் கூறுகின்ற உணவு மருத்துவம் தனியாய்வுக்கும் தனி நூலுக்கும் உரியது. இவண் சில குறிக்கலாம். இக்குறிப்புகள் வள்ளுவர் தரும் மருந்தின் விரிவுரை போல்வன என்பது தெளிவாக விளங்கும். எப்படிப்பட்ட போஜனம் ஆயினும் சிறிது குறையவே புசித்தல்வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தால் அல்லது எந்தவகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத் தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும். இரவில் தயிர் கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்கவேண்டும். அவை சிறுகத்தரி, முருங்கை, அவரை, வற்றல் முதலியவையாம். பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத் தயிர் மோர் நெய், செம்மறிப்பால் தயிர் மோர் நெய், கேழ்வரகு, வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம், முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு முதலிய சித்திரான்னம், காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை, பூசணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால், மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி விதித்தவைகளை அனுசரித்தல். உண்ணத் தொடங்கும்போது முன்புசித்த போஜன முழுதும் ஜீரணித்ததை நன்றாய் ஊன்றியறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசுமுனைபோல் அளவறிந்து அந்த அளவின்படி அதிகவிரைவும் அதிக தாமதமும் இல்லாத படி சமமாகப் புசித்தல் புசிப்பில் பச்சரிசிச்சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி தூதுளை முதலிய இளங்காய், பொன்னாங் கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை - இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக் கால் பங்கு, வெந்தயம் கால்பங்கு, புளிவீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது குழம்பு ரசம் முதலானவைகளைக் கொண்டு பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப் பூண்டு முதலானவைகளைத் தள்ளிப் புசித்தல். பொது நிலையில் இவற்றைக் கூறும் வள்ளலார் சுத்த சன்மார்க்க ஆகாரம், சுத்த சன்மார்க்க ஆகாரவிலக்கு என்பவற்றையும் விரித்தெழுதுகின்றார். இவற்றின் விரிவைத் திருநெறிக் குறிப்புகள் என்னும் வள்ளலார் நூற்பகுதியில் கண்டு கொள்க. முதற்குறிப்பிலே வாத பித்த சிலேத்துமங்களை வள்ளலார் குறிக்கிறார். இவற்றை வள்ளுவர் வளி முதலா எண்ணிய மூன்று என்பார். வளியாவது வாதம். உண்டது அற்றபின் உண்ணலையும், மாறுபாடிலா உண்டி உண்ணலையும், உண்ணும் முறையையும், உணவே மருந்தாம் வகையையும் வள்ளலார் குறிப்புகள் விளக்கி நிற்கின்றன. அருளுடைமைக்குச் சீவகாருணிய ஒழுக்கம் விளக்கமானாற் போல, மருந்து அதிகாரத்திற்கு வள்ளலார் கூறும் உணவுக் குறிப்புகள் விளக்கமாக அமைகின்றதாம். கொல்லாமை அறவினையாதெனில் கொல்லாமை, ஒன்றாக நல்லது கொல்லாமை, கொன்றாகும் ஆக்கம் கடை, கொல்லாமை சூழ்வான் தலை என்றெல்லாம் கொல்லாமை குறித்து ஓதுவார் திருவள்ளுவர். வள்ளலார், ஐம்பெரும் பாவங்களுள் கொலையே தலையாய கொடுமையது என்பதைத் தெளிவிக்கிறார்; கள் காமம் கொலை களவு பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். அவ்வைந்திலும் கொலை விஷேஷ பாவம். எனினும் கள் உண்டவனுக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது. கொலை செய்யத் துணிவு வராமல் இராது. களவு செய்யாமல் இரான். பொய் பேச அஞ்சான். ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்கவேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடாமல் இரா என்கிறார். கொலையே கொடும்பாவம் என ஏற்றுக் கொண்டவர் பிறவற்றுள் எதுவும் குறைவுடையதன்று; அவையும் பிறவற்றை உண்டாக்குவனவே என ஒருமீள் பார்வை பார்க்கிறார் வள்ளலார். கள்ளுண்பானை, அவனை ஈன்றாளும் வேண்டாள்; சான்றோரும் எண்ணார்; ஊரார் நகுவர் என்று சுட்டும் வள்ளுவர் கள்ளுண்பான் நஞ்சுண்பான் என முடிப்பார். காமமாவது பிறனில் விழைதல். பிறனில் விழைவான் பேதை, அறன்கடை விளிந்தான் என்று வள்ளுவரால் இகழப்படுவான். களவென்பது காரறிவாண்மை; களவறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்; களவு வீயா விழுமம் தரும்; கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை எனக் களவாடலைக் கடிந்துரைப்பார் வள்ளுவர். பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். பொய்யாமை அன்ன புகழில்லை; பொய்யாமையே அறம்; வாய்மையின் நல்ல பிற இல்லை; என்பவை பொய்யாமை பற்றி உடன்பாடு எதிர்மறை ஆகிய இருவகைகளாலும் வள்ளுவர் கூறுவன. இவற்றைக் கருதின் கொலைக் கேடுபோலவே மற்றவையும் கேடானவை என்பது உணர வருமாகலின் வள்ளலார் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம்; இதில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா என்றார். தன்னை ஒம்பல் இல்வாழ்க்கையில் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு, ஐம்புலத்தார் ஓம்பல் தலை என்றார் திருவள்ளுவர். இதில் தன்னை ஓம்புதலும் கட்டாயம் வேண்டுவதே என்பதனை வள்ளுவர் கருதினர். அதனாலேயே தான் என்று எண்ணினார். இதனை உணர்ந்த பரிமேலழகர், எல்லா அறங்களும் தானுளனாய் நின்று செய்ய வேண்டு தலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று என விளக்கினார். வள்ளலார் இதற்கு மேல் விளக்கம் செய்கிறார். தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர் களின் பசியறிந்து தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்கள் ஆகில் எவ்வகையிலாவது முயற் சித்தும் பசியைத் தணிக்கவும் அதற்கு இடமில்லையாகில் பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து இன்சொல்லினால் இனிக்கச் செய்து தான் கெட்டிருப்பதே மேலான புண்ணியம். இதில் தான் கொடுக்க முடியாத நிலையில் இரக்கப் படுதலும் இன்சொற் கூறலும் சாலும் என்றும், தன்னைப் பேணாது பிறரைப் பேணிப் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றும் வள்ளலார் குறிப்பிடுதல் விளங்கும். முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின், அகன் அமர்ந்து ஈதலின் நன்றே என வள்ளுவம் குறிக்குமாகலின் இரக்கப்படுதலும் இன்சொற் கூறலும் சாலும் என்றார். தான் கெட்டிருத்தல் என்பது, தான் வாழ்வதற்காக என்றில்லாமல் தன் வாழ்வு பிறர் வாழ்வுக்காகவே போற்றிக் கொள்ளத் தக்கது என்னும் கடப்பாடு உணர்ந்து தன்னைப் போற்றிக் கொண்டு இருத்தல் என்பதாம். மற்றும், உலகத்துயிர்களுள் தானும் ஓருயிர் ஆகலின் தன்னைப் போற்றலும் உலகப் பொதுக் கடமை புரிதலாக ஆதலின் தான் கெட்டிருத்தலாய் அமையும் என்பதுமாம். ஒத்த தறிதல் ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் என்பார் வள்ளுவர். ஒத்தது என்பது என்ன? தனக்கு இன்பஞ் செய்வது எதுவோ, அதுவே பிற உயிர் களுக்கும் இன்பம் செய்யும் என்றும், தனக்குத் துன்பம் செய்வது எதுவோ அதுவே பிற உயிர்களுக்கும் துன்பம் செய்யும் என்றும் உணர்ந்து கொள்ளுதல். அவ்வொத்துணர்வு உடையவனே உயிரோடு இருப்பவனாம். உயிருடையவன் பிறவுயிர்களின் துடிப்புகளையும் அறிவான். அத் துடிப்புகளை அறியாமல் செயலாற்றுபவன் உயிருடையவன் ஆகான். செத்தவன் அவன். அதனால்தான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் என்றார் வள்ளுவர். செத்தவரைத்தாம் பாடையில் வைப்பர்; தாழியுள் வைப்பர்; பெட்டியுள் வைப்பர்; மண்ணுள் வைப்பர்; கல்லறையுள் வைப்பர்; கட்டையில் வைப்பர்; இப்படி வைக்கப்படும் நிலைக்கும் ஒத்த தறியான் உயிர் வாழும் நிலைக்கும் வேறுபாடு இல்லையாம். மூச்சு விடுதல், நாடி துடித்தல், இயங்கல், உண்ணல் இவற்றை யுடைமையால் ஒருவன் உயிருடையவன் ஆகான். உயிர்களின் உணர்வை உணர்ந்து செயலாற்றுபவனே உயிருடையவன் என்பதாம். வள்ளலார் சாதனம் என்பது பற்றி விளக்குகிறார்; சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லாவுயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளவேண்டும். இதுவே சாதனம். நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள்வேண்டும். அவ்வருள், அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு சீவகாருணியத்தால் அல்லது வேறு வகையால் வாராது. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே சீவகாருணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாக இருக்கின்றது என்கிறார். இதில் வரும் எல்லா உயிரையும் தன்னுயிரைப்போல் பார்க்கும் உணர்வே ஒத்ததறிதல். அருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது என்பது, அருளென்னும் அன்பீன் குழவி என்னும் குறளின் குறிப்பு. கடவுள் எழுந்தருளியிருக்கும் கோட்டையை அடைய அருட்சாவி வேண்டும் என்பது, அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்பதன் மேல் விளக்கமாம். அன்பை அடைக்கும் தாழில்லை என்பது, அடையா நெடுங்கதவு அன்பு என்பதாம். வள்ளலாரோ அக்கதவு அடைத்தே இருப்பினும் அதனைத் திறந்துவிடும் தாழ்க்கோல் அருள் என்கிறார். இப்படி இயல்பான உரைநடையிலேயே இணையற்ற வகையில் திருக்குறள் மின்னி ஒளி செய்ய வரை கின்றார் வள்ளலார். சீவகாருணிய ஒழுக்கப் பகுதியிலும் அருள் என்னும் திறவுகோல் குறிக்கப்படுதல் அறியத்தக்கது. சித்தி நிலை சித்திவளாகப் பகுதியில் விளக்கப்பெறும். குணக்குன்று குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்பது திருக்குறள் நீத்தார் பெருமைப்பாட்டு. துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி தானுள்ள அளவு கணமே யாயினும் வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது என இக்குறளுக்கு உரை கூறுவார் பரிமேலழகர். வள்ளலார், திருநெறிக் குறிப்புகளில் ஞானிக்கு ஆன்மாக் களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உடனே அந்த ஜீவன் பபமாகிவிடுவான் என்கிறார். கணமேயும் என்பதும் காத்தல் அரிது என்பதும், உடனே பபமாகி விடுவான் (சாம்பலாகி விடுவான்) என்பதால் விளங்க வைக்கிறார். இனிக் குணமென்னும் குன்றத்தின் கொடுமுடி கண்டு நிலைபெற்ற பெரியோர் வெகுளியாம் தன்மையைத் தம்மிடத்து நொடிப்பொழுதேனும் நிலைபெற விடல் இல்லை என்பதொரு பொருளும் இக்குறளுக்குக் காண வாய்க்கிறது. இதற்குச் சீரிய சான்றென வள்ளலார் வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்று விளங்குகின்றது. வள்ளலார் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயுதனார் என்பதை அறிவோம். அவர் வள்ளலார் பாடல்களைத் திரட்டி 1867 ஆம் ஆண்டில் தமிழுலகம் துய்க்கும் வண்ணம் வெளியிட்டார். முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய பதிப்பு அது. அதன் முகப்பில், திருவருட் பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கபிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்பா எனக் குறித்திருந்தார். அதனைக் கண்ணுற்ற வள்ளலார் விச், ஏங்காணும்; திருவருட் பிரகாச வள்ளலார் என்று உம்மை யார் போடச் சொன்னது? என்று சினந்தார். தொழுவூரார்க்கு இவ்வினா அதிர்வாயிற்று. வள்ளலார் இவ்வாறு சினந்துரைக்க அவர் கண்டதில்லை, ஆகலின் விதிர் விதிர்த்தார். மறுமொழி ஒன்றும் சொல்ல ஓடாமல் திகைத்து நின்றார். அதனை ஆற்றாத வள்ளலார், திருவருட் பிரகாச வள்ளல் ஆர் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்பது ஏற்கும் என அமைதி காட்டினார். இந் நிகழ்ச்சி, குணக்குன்றன்னார் சினத்தை ஒரு நொடிப் பொழுதும் தம்மிடத்து வளர விடார் என்பதற்குச் சான்றாக விளங்குதல் அறிக. சினமும் வெகுளியும் திருக்குறளில் வெகுளாமை என்பதோர் அதிகாரம். வெகுளாமையில் வெகுளி, சினம் என இரு சொற்களையும் ஆள்வார். சினத்தைக் கொல்லி என்பார். சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி; நகையும் உவகையும் கொல்லும் சினம் என்பவை அவை. அச்சினம் சினந்தானைக் கொல்லுதல் உறுதி என்பாராய்த், தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்றார். சினம் வெகுளி என்பவற்றை விளக்குகிறார் வள்ளலார்: சினம் என்பது யாது? உள்வேக்காடு, புடஞயாம் போல் இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டம் பண்ணும். வெகுளி என்பது மீசை துடித்தல், கண் சிவத்தல், கை முதலிய உறுப்புகள் துடித்தல், வாய்குழறி மேல் விழுந்து கூவுதல்; இஃது ஆயுளை நஷ்டம் பண்ணும். ஆகையால் எவ்வகையிலும் கோபத்தின் பூர்வோத்திரமாகிய சினம் வெகுளி என்னும் கூற்றை ஒழித்தல் அவசியம். வள்ளலார் சினம் வெகுளி என்பவற்றைக் கூற்று என்று சொல்வானேன். கூற்று கூறுபடுப்பது அல்லது கொல்வது என்னும் பொருள்தாம். கூற்று என்பதை ஆண்பாலாக்கிக் காட்டியதே கூற்றுவன் என்பதாம். வள்ளுவர் கொல்வது என்பதை வள்ளலார் கூற்று என்கிறார் என்பது இதனால் தெளிவாம். ஆயுளை நஷ்டம் பண்ணும் என்பதும் எண்ணத் தக்கதே. வாழ்வாங்கு வாழ்தல் வாழும் நெறியில் வாழ்வார் வையகத்தில் வாழும் நாளிலேயே வானின்கண் உறையும் தெய்வமெனப் போற்றப்படுவார் என்பது திருவள்ளுவர் தேர்ச்சியுரை. இதனை, வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்னும் குறள் காட்டும். வள்ளலார் வையகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நாளிலேயே வணங்கத்தக்க பெருமகனாராக விளங்கினார். அவரைத் தெய்வமெனவே வழிபட்டாரும் உளர். இதனை அறிந்து அவரே கண்டித்து உரைத்ததும் வருந்தியுரைத்ததும் நாம் முன்னர் அறிந்தனவே. இறைவனை அவர் வள்ளலார் என வழங்க, அவரை வள்ளலார் என அவர்தம் அன்பரும் அடியரும் வழங்கியதும் அறிந்ததே. வள்ளலார் திருவுருவம் அவரை எதிரிட்டு நின்றாரும் எழுந்திருந்து ஏற்றம் தருமாறு இருந்த தெனின், அவரைக் கண்கண்ட கடவுளாகக் கொண்டவர்கள் வழிபட்டு வந்ததிலே வியப்பதற் குரியதில்லையே! வள்ளலார், எவரிடம் கடவுள் உறைகிறார் என்பதையும் எவரிடம் கடவுள் இருந்தும் இல்லாராகிறார் என்பதையும் தெளிவாக உரைக்கிறார். முன்னே அருட்கல்வியே சாவாக்கல்வி என்றும் மெய்ப்பொருட் கல்வி என்றும் கண்டதும் இவண் கருதத்தக்கதாம். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார் என்கிறார் வள்ளலார். மேலும், அந்தத் தயையில்லாதவர்களிடத்துக் கடவுள் இருந்தும் இல்லாமல் இருக்கிறார் என்று அக்கருத்தினை எதிர் நிலை கொண்டும் விளக்குகிறார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியம் படாது என்றும் விளக்குகிறார். அருளே இறைமை என்றும் அருளுடையான் இறையுறை வாளன் என்றும் வள்ளலார் கூறுவது கொண்டு ஆய்ந்தால், ஒரு மண் கட்டி உடைவதற்கும் உருகி நின்ற வள்ளலார் அருள் நிலை சொல்லும் அளவினதன்றே! ஆதலின் வள்ளுவர் சொல்லுமாறு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை எய்திய திருவாளர் வள்ளலார் என்பது தெளிந்த உண்மையாம். இதற்கும் ஒருபடி மேலே சென்று வள்ளலாரை மதிப்பிடு கிறார் மெய்யுணர்வுப் பெருமாட்டி பிளாவட்சுகி அம்மையார். இராமலிங்கம் ஐயத்திற்கு இடமின்றி ஒரு பேரான்மாவே (மகாத்மாவே); அவர் உலகோர் அனைவரும் ஒரு பிறப்புரிமை யுடையவராய் விளங்குவதற்காகவே பணிசெய்து மாந்தரைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் பேரார்வத்துடன் வாழ்ந்திருக் கிறார் என்கிறார். இம்மதிப்புரையால் மாந்தரைத் தெய்வநிலைக்கு ஏற்றும் தெய்வம் வள்ளலார் என அம்மையார் கருதுதல் புலப்படும். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்பது தொல்காப்பியம். எங்கோ பிறந்து வாழ்ந்த அவர் கண்டு கொண்ட காட்சி, இங்குளார்க்கு இதுகாறும் புலப்பட்டதாகச் செயன்முறையில் தோன்றுகின்றதா? அவர் பெயரைச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளிலேயே எத்தனை எத்தனை பிரிவுகள், பிளவுகள், உடைவுகள், உறாய்வுகள், முட்டல்கள், மோதல்கள்! ஆன்மநேய ஒருமைப்பாட்டுக் கொள்கை என்பதை மெய்யாக உணர்ந்தார் எனின் இவற்றுள் ஒன்றேனும் தலை காட்டுமோ? சொல்லால் முழக்கிச் சுகம் காண்பார் எப்படிச் செயலுக்கு வருவர்? இனி வள்ளுவர் வழியில் வள்ளலார் பாடல்கள் அமையும் திறத்தைக் காண்போம். 4. வள்ளலார் பாடல்களும் திருக்குறளும் விண்ணப்பம் முதல் திருமுறையுள் உள்ளது விண்ணப்பக் கலிவெண்பா. அதில் வரும் 413 ஆம் கண்ணியில் இறையே உன்மேல் அன்பு இலேன் எனினும் அன்புடையனென ஒப்பாகக் காட்டித் திரிகின்றேன் என்னும் பொருளில், இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென ஒப்பாரி யேனும் உடையான்காண் என்கிறார். இதில் உள்ள ஒப்பாரி என்னும் சொல்லாட்சி, மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் என்னும் வள்ளுவச் சொல் வழிப்பட்டதாம். பழந்தமிழ்ச் சொல்லடைவில் ஒப்பாரி என்னும் ஆட்சி திருக்குறளில் மட்டுமே உண்டு என்பதும் பின்னுளோரும் அவ்வகையில் ஆண்டது அரிதே என்பதும் எண்ணத்தக்கன. நெஞ்சறிவுறூஉ நெஞ்சறிவுறுத்தலில் குறள் மணிகளை அப்படி அப்படியே அகழ்ந்து மணியெனப் பதித்துக் கொள்கிறார் வள்ளலார். இறைவனை வள்ளுவர் வேண்டுதல் வேண்டாமை இலான் என்பார். வள்ளலார் வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தராகக் காண்கிறார் (62). தம் நெஞ்சை விளித்து, கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற சீர்த்தாட் குறண்மொழியும் தேர்ந்திலையே - பேர்த்தோடும் நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே (411, 412) எனப் பாடுகிறார். இதில், திருக்குறளைச் சீர்த்தாள் குறள் என்கிறார். சீர்த்தாள் ஆவது சீரடி; சிறந்த அடிகளையுடைய குறள் என்பதாம். கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332) என்னும் குறளைக் குறித்தல் அறிக. செல்வம் சேர்வது, கூத்தாட்டு நிகழ்ச்சி காண்பதற்கு ஒருவர் இருவராய் அவை கூடுவது போலச் சிறுகச் சிறுகச் சேர்வது எனவும், கூத்தாட்டு முடிந்த வேளையில் உடனே பெருந்திரளும் ஒருங்கே போவது போலச் செல்வம்போகும் வேளையில் ஒருங்கே போய்விடும் எனவும் சொல்லும் குறள் மொழியை நெஞ்சே! நீ ஆராயவில்லையே என அறிவுறுத்துகிறார். காலம் என்பது என்ன? நொடி நொடியாக அழித்துக் கொண்டு ஓடுவது; ஒவ்வொரு நாளையும் கொன்றழிப்பது; இப்படித்தான் அஞ்சச் செய்கிறது. ஆனால் உண்மையென்ன? ஆளைக் கொல்கிறது; நொடி நொடியும் கொன்று கொண்டே இருக்கிறது என்பதை ஆராயவில்லையே என்கிறார். இது, நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள(து) உணர்வார்ப் பெறின் என்னும் குறட்கருத்து என்பது வெளிப்படையே. வெகுளாமை வெகுளாமையில் வரும் இரு குறள்களைப் பயன்படுத்தும் வள்ளலார், அதற்கு மறுதலையான பொறையுடைமைக் குறள் ஒன்றனையும் இணைத்து ஓரிடத்து மும் மணிகளைப் பதித்ததெனப் பதிக்கிறார். செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனிற் றீயதென்ற தெண்ணிலையே - மல்லல் பெறத் தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்னும் திகழ்வாய்மையுநீ தெளிவாய் (433-435) என்பவை அவை. இவை, செல்லா இடத்துச் சீனந்தீது செல்லிடத்தும் இல்லதனிற் றீய பிற தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்னும் குறள்களாதல் அறிந்தவே (302, 305, 151) மூன்றாம் பாடல் குறிப்பில் திகழ்வாய்மை எனத் திருக்குறளைக் குறித்தல் கண்டு மகிழத்தக்கதாம். கொல்லாமை அறவினை யாதெனில் கொல்லாமை; ஒன்றாக நல்லது கொல்லாமை; நல்லாறெனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (321, 323, 324) என்பவற்றின் பிழிவாக வெளிப்பட்டது, எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற கொல்லா நலஞ் சிறிதும் கொண்டிலையே என்பதாம் (440). வாய்மை அகந்தூய்மையே வாய்மை என்பது திருக்குறள். அதனைப் புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் (298) என்பார். வள்ளலார், தூய்மையென்ப தெல்லாம் துணையா அணைவதுதான் வாய்மையென்ப தென்றே மதித்திலையே என்கிறார் (442). நிலையாமை நிலையாமை பற்றிக் கூறும் வள்ளுவர், உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்றும், நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு என்றும் கூறுகிறார். இதனை உட்கொண்ட வள்ளலார், உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின் நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொன் மருவும் குறட்பா மறந்தாய் என்று ஒண்குறள், மருவுங் குறள் எனப் பெருந்தக்க பெயர் சுட்டிப் பேருவகையோடு உரைக்கிறார் (466 - 467). மெய்யுணர்தல் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (350) என்னும் சொற்பொருட்பின் வருநிலைக் குறளைக் கேளார் அரியர். அதனை அப்படி அப்படியே நூலாசிரியன்மாரும், உரையாசிரியன்மாரும் போற்றிக் கொண்டுளர். வள்ளலார், பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது பற்றற்றால் அன்றிப் பலியாதால் என்கிறார் (624). முதலும் நெய்யும் இரண்டாம் திருமுறையில் பழமொழி மேல் வைத்துப் பரிவு கூர்தல் என்பதொரு பதிகம். அதன் ஒவ்வொரு பாடலின் தொடக்கமும் பழமையாய் வழங்கிவரும் தொடர் ஒன்றனைக் கொண்டு இயல்கின்றது. அப்பத்தில் இரண்டு பாடல்கள் திருக்குறளை முடியாகக் கொண்டுள. முதலிலாமல் ஊதியம் பெற விழையும் மூடனென்ன நின் மொய்கழற் பதமேத் துதலிலாது நின்னருள் பெற விழைந்தேன் என்பது, முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை (449) என்னும் குறள் வழியது. நெய்யினாற் சுடு நெருப்பவிப்பவன்போல் நெடிய துன்பமாங் கொடியவை நிறைந்த பொய்யினாற் பாவம் போக்கிட நினைந்தேன் என்பது, நெய்யால்எரி நுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் (1148) என்னும் குறள் வழியது. இரண்டிடங்களிலும் திருக்குறளை மேற்கோளாகக் கொண்டாலும், குறட் பொருளையே கொண்டார் அல்லர். அதனைத்தழுவித் தம் கருத்தை உரைத்துள்ளார் வள்ளலார். முதல் இல்லாதவர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லார்க்கு நிலைபேறு இல்லை என்பது முதற் குறளின் பொருள். இதனை, முதல் இல்லாதவர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; எனினும் அதனையின்றியே ஊதியம் பெற விரும்பும் மூடனைப் போன்றுளேன்! இறைவனே, நின் திருவடியை வணங்குதலாம். முதல் இல்லாமலே நின் அருளாகிய ஊதியத்தைப் பெற விரும்புகிறேன் என்கிறார். பொருட் பொருளை, அருட் பொருளுக்கு அமைத்துக் கொண்டார் வள்ளலார் என்க. இனி இரண்டாம் குறளும் அவ்வாறு பொருள் மாற்ற வகையிலேயே ஆளப்படுகின்றதாம். ஊரவர் பேச்சால் காமத்தை அவித்துவிடலாம் என்று நினைப்பது, நெய்யைத் தாராளமாக ஊற்றி, எரியும் நெருப்பை அணித்து விடலாம் என்பது போன்றதே என்பது குறளின் பொருள். காமத்தை அணைக்க எண்ணும் எண்ணத்தைப் பாவத்தை மறைக்க நினைக்கும் நினைவாக மாற்றியமைக்கிறார் வள்ளலார். நெய்யைக் கொண்டு, எரியும் நெருப்பை அணைக்க நினைப்பவன்போல் நெடுந்துயரும் கொடுமையும் நிறைந்த பொய்யைக் கொண்டு, பாவத்தை மறைக்க நினைந்தேன் என்கிறார். இவ்வீரிடத்தும் உவமையை வள்ளுவர் வழியில் கையாண்டு, பொருளைத் தம் கருத்துக்கு ஆக்கிக் கொள்கிறார் வள்ளலார். இரத்தலும் ஈதலே இரக்கின் றோர்களுக் கில்லையென் னார்பல் இரத்தல் ஈதலாம் எனலுணர்ந் திலையோ கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல் என்பது இரண்டாம் திருமுறையில் வரும் நெஞ்சைத் தேற்றல் பதிகத்தின் மூன்றாம் பாடல். இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் ஈகின்றவரிடத்தே இரப்பது இரப்பதன்று; ஈதலுக்கு ஒப்பானது; இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்பவரை இரக்கக் கனவில் கூட நினைத்தலும் ஆகாது என்னும் இப்பொருளமைந்த திருக்குறள் இரவு என்பதில் இடம்பெற்றுள்ளது. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவினும் தேற்றாதார் மாட்டு என்பதும் (1054). விளக்கு மேலோர் என்னும் சொல்லுக்கு முன்னோர் என்னும் பொருளும், மேன்மையோர் என்னும் பொருளும் உண்டு. திருவள்ளுவரை மேலோர் என்று வழங்கி வாய்மை விளக்கம் புரிகிறார் வள்ளலார். மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லையென்றார் மேலோர் என்பது அது. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) என்னும் திருக்குறளைக் கொண்டது இப்பாட்டு. இதுவும் இரண்டாம் திருமுறையைச் சார்ந்துள பாட்டே. கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்னும் குறள் எவராலும் அறியப்பட்டதே. அக்குறளில் கசடறக் கற்றல், கற்பவை கற்றல் என்பவற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார். கற்பவற்றைக் கல்லாக் கடையர் என்றும் (அருட்டிறத் தலைசல்) கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் என்றும் (ஆற்றா விண்ணப்பம்) வரும் இடங்களில் அறிக. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் என ஆறாந் திருமுறையிலும் வரும்; இவ்வாறு வருவன பல என்க. துச்சில் துச்சில் என்பது வள்ளுவர் வழங்கும் அரிய சொல். புக்கில் என்பது மனையையும் துச்சில் என்பது அதன் ஒட்டுக் குடியிருப் பையும் குறிப்பது. உடலாகிய ஒட்டுக் குடி வாழ்வைக் குறிக்கத் துச்சில் வள்ளுவரால் பயன்படுத்தப்படுகிறது. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு என்பது அது. அதனைத், துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் என ஆள்கிறார் வள்ளலார் (அபராதத்து ஆற்றாமை). மெய்ப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என இருமுறை அழுத்தினார் வள்ளுவர். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. என்பவை அவை. வள்ளலார் அருட்பெருஞ்சோதி இறைவன் மெய்ப் பொருள்வடிவாக இருத்தலை விளக்குங்கால் இக்குறள்களை நினைவு கூர்ந்து சொல்கிறார்: எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்சோதி இது அருட்பெருஞ்சோதி அகவலில் உள்ளது. திருக்குறளுக்கு ஒரு பெயர் பொய்யாமொழி; அதனை இயற்றிய வள்ளுவர்க்கு ஒரு பெயர் பொய்யா மொழியார் என்பது. அதனைக் கருதிய வள்ளலார் மெய்கண்டோர் என வள்ளுவர்க்குப் பெயர் பொறிக்கிறார். மெய்கண்டோர் கண்ட பொருள் மெய்ப்பொருள் என்பதை விளக்க வேண்டுவதில்லையே! மெய்கண்டார் என்னும் சான்றோர் பெயர் தமிழர்க்குப் புதுவது அன்றே! முன்னே திகழ்வாய்மை என்றதும் எண்ணுக. எண்ணம் எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்னும் குறள் பெரிதும் அறியப்பட்டது. இதனை, எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை அண்ணியுள் ளோங்கும் அருட்பெருஞ் சோதி எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப் பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே எண்ணிய எண்ணிய வெல்லாம் தரஎனுள் நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே என அருட்பெருஞ்சோதி அகவலினும், எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான் எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத் திண்ணிய னாக்கிற்றுப் பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட சோதி என ஆனந்தக் களிப்பிலும் பாடுகிறார் வள்ளலார். இக்கருத்து வேறுசில இடங்களிலும் இடம்பெற்றுளது. பொறையுடைமை மண்ணைப்போல் பொறுமை என்பது பெருவழக்கினது. இதனைத் திருவள்ளுவர், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்று, மண் அகழ்வாரைப் பொறுத்தலைக் காட்டி இகழ்வாரைப் பொறுத்தல் வேண்டும் என்று விளக்குகிறார். தாங்குதல் என்பதற்குப் பொறுத்தல் என்னும் பொருளுண்மை அறிக. இப்பொறையை, வள்ளலார், இறைமையின் பொறையாக்கி இயம்புவாராய்ப். பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே என்கிறார் (திருவடிமுறையீடு 4). உவமையினும் பொருளுக்கு உயர்வு தருகிறார் வள்ளலார்; பாருக்கு மூலமாம் இறை பாரிற் சிறந்தது தானே! இதனைப் புவிக்கிங்கிசைத்திலை நீ, அகழ்ந்தார் தமையும் பொறுக்க வென அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே என்றும் கூறுகிறார் (வாதனைக் கழிவு). பொய்யாமை பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று (297) என்னும் வள்ளுவர், பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292) என்றும் கூறுகிறார். பொய்யுரைத்தலை ஏற்றுக்கொள்ள வள்ளுவர் உள்ளம் இடந்தராது. ஆனால் பிறவுயிர்க்கு நன்மையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவ அடிப்படை. வாய்மை கூறுவதால் பிறஉயிர்க்குத் தீமை ஏற்படுமாயின் அவ்வேளையில் அவ்வாய்மை கூறுவதை விடுத்துப், பொய்மை கூறினால், அப்பொய்மை நன்மை விளைக்குமாயின் அவ்விடத்து மட்டும் கூறலாம் என்பதே அவர் உள்ளம். வரைகடந்து எவ்விடத்தும் எந்நிலையிலும் பொய் கூறலாம் எனல் பொய்யாமொழியார் பொருளுரை யன்றாம். இந்நுட்பம் அறிந்தே வள்ளலார், பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதிலோர் புன்முனை ஆயினும் பிறர்க்கு நைபிழை உளதேல் நவின்றிடேன் என்கிறார் (பிள்ளைச் சிறு விண்ணப்பம்). என்னெனினும் இது முழுதுறு வாய்மை யன்றே எனக் கருதும் வள்ளலார் இதற்குப் பொய்வாய்மை எனப் புதுப்பெயர் தரக் கருதுகிறார் போலும்! அதனால், சுத்தசன்மார்க்க வேண்டுகோளில், பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் என்கிறார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல் என்பதன்றோ குறள்! அருளுடைமை வள்ளுவர் அருளாளர்; வள்ளலார் அருட் பிழம்பு - வள்ளுவர் மன்னுயிர் ஓம்பி அருளாட்சி செய்தலையும் (244) உயிர்க்கு உறுகண் செய்யாமையையும் (216) பிறிதின் நோயைத் தன் நோயாகக் கருதித் தவிர்க்க முந்துதலையும் (315) குறிப்பார். அருள் வடிவாகிய வள்ளலார் அருளுடைமை தொடர் பாகப் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்துக் காட்டுவதென நினைந்தால் அத்தொகுப்பே ஒரு பெருநூல் தொகுப்பாகிவிடும். அதனால் பிள்ளைச் சிறுவிண்ணப்பம். பிள்ளைப் பெரு விண்ணப்பம் என வரும் விண்ணப்பப் பகுதிகள் இரண்டிலும் வரும் சில குறிப்புகளை மட்டும் இவண் காணலாம்: உருவ! என் உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை; இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும் என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ இவை பிள்ளைப் பெருவிண்ணப்பம் சார்ந்தவை. எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் லின்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும் மண்ணுல கதிலே உயிர்கள் தாம்வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமுநான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய் இவை பிள்ளைச் சிறு விண்ணப்பம் சார்ந்தவை. இவை வள்ளுவ வித்தில் இருந்து முளைத்துக் கிளைத்து விளைந்த நன்மணி விளைவேயாம். பொருளுடைமை பொருள் என்பதன் சிறப்பைச் சொல்ல வேண்டுவதில்லை. பொருட்டு என்னும் சொல்லே பொருளின் சிறப்பை நன்கு உணர்த்தும். பொருளையுடையது எது, அது பொருட்டு! அதுவே உலகோரால் பொருட்டாகவும் எண்ணப்படுகின்றது என்பதாம். என்னைப் பொருட்டாக எண்ணவில்லை என்று எத்தனை பேர் குறை சொல்லி நொந்து கொள்ளக் காண்கிறோம்! இதனால்தானே வாழ்வியல் அறிந்த வள்ளுவப் பெருந்தகை, பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் என்றார். அவரே அதற்கு மேலும் சென்று, பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை என்றும் கூறினார். வள்ளுவர் கருத்தைத் தம் வாக்கிலே எடுத்துக் கூறும் வள்ளலார், அப் பொருளுலகைத் தாம் எவ்வாறு பொருட்டாக எண்ணாமல் ஒதுக்கினார் என்பதை வெளிப்படுத்துகிறார். பொருளிலே உலகம் இருப்ப தாதலினால் புரிந்துநாம் ஒருவர்பாற் பலகால் மருவினால் பொருளில் இச்சையாற் பலகால் மருவு கின் றானெனக் கருதி வெருவுவர் எனநான் அஞ்சியெவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய் ஒருவுமப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய் என்கிறார் (பிள்ளைப் பெரு விண்ணப்பம்). இதில் பொருளிலே உலகம் இருப்பது என்பது வள்ளுவர் வாய்மொழி எனக் கொள்ளத் தக்கதே என்க. பற்றறுத்தல் துன்ப நீக்கம் வேண்டுமா? துன்பம் நெருங்கான் துணையை நாடுதல் வேண்டும். இன்ப ஆக்கம் வேண்டுமா? இன்பமே பொருளாய் இருப்பான் துணையா அடைதல் வேண்டும்! இன்ப துன்பங்களுக்கு இருப்பாக இருப்பவன் துணையைக் கொண்டு, இன்ப துன்ப நீக்கம் பெறுதல் கூடுவது இல்லை. இத்தனை விளக்கு முகமாகவே வள்ளுவர், வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்றார். இதனைத் தெளிந்த வள்ளலார், எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை யுறல் வேண்டும் என்று வேண்டுதல் வேண்டாமை இலானிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இது சுத்த சன்மார்க்க வேண்டுகோள். ஒத்த தறிதல் ஒத்த தறிதலை முன்னரும் கண்டுளோம். அதனை ஆன்ம தரிசனத்தில் ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்கிறார் வள்ளலார். ஒத்த தறியாரை ஒருமையிலர் என்றும் கூறுகிறார் (சித்தி விளைவு). இன்னும் இவ்வருளியற் கொள்கை பொருளியல் உலகியல் ஆகியவற்றிலும் விளங்க வேண்டும் என்றும் வேட்கை யுடையவராய், ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை யுளராகி யுலகியல் நடத்தல் வேண்டும் என்கிறார் (சுத்த சன்மார்க்க வேண்டுகோள்). எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும் என்பவர் வேறு எப்படிக் கூற முடியும்? எவ்வுயிரும் தம்முயிர் போற் காணல், எவ்வுயிரும் பொது வெனக் கண்டிரங்கல் என்பவற்றைக் கொண்ட வள்ளலார், எத்துணையும் பேதமுறை தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்த தாலோ என்று கூறுகிறார். இதில் அவர் ஒத்துரிமை யுடையாரை இறைமையாகக் கண்டு, அவரை வழிபடக் கருதும் தம் விருப்பை உரைக்கிறார் அல்லரோ! மேலும் அவர், ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள்! ஊதின சங்கம்! என்று இசை எழுப்பிச் சின்னம் பிடிக்கின்றாரே வள்ளலார்! அவர் ஒத்துரிமையிலே கொண்ட உவகைப் பெருக்கன்றோ இச்சின்ன முழக்கம்! பிறப் பொருமை வள்ளுவப் பேராசான் மெய்யுணர் மணிகளுள் மேதக்க மணி ஒன்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது. இம்மணி தோன்றிய நாளில் இருந்து இதுகாறும் நிகழ்ந்து கிடக்கும் வரலாற்று நோக்கில் இஃது ஆயப்படுமானால் எத்துணைப் பன்னூறு மடங்கு பொலிவுடையதாகத் திகழ்கின்றது! வள்ளுவர் வாழ்ந்த நாளில் இற்றை நாள் போல் சாதிப் பிணக்கு இல்லை. சாதி என்னும் பெயர்தானும் மாந்தர்ப் பிரிவுக்கு இல்லை. விலங்கின் சாதி, பறவைச் சாதி என்பன போன்ற இனப் பகுப்புக்குறியாகவே நின்றது. அந்நாளில் மாந்தர்க்குக் குலம் குடி என்பவை இருந்தன. இனம் என்பதும் சிற்றினம் பேரினம் நல்லினம் அல்லினம் மேலினம் கீழினம் வல்லினம் மெல்லினம் எனத் தொகுதிப் பகுப்புக் குறியாகவே நின்றது. வண்ணம் (வருணம்) என்னும் சொல் நிறத்தையும் இசையையும் குறித்ததையன்றிச் சாதிக் குறிப்புடையதாய் இல்லை. சமயச் சால்பு விளங்கியதை அன்றிச் சமயச் சழக்கு நேர்ந்ததில்லை. செல்வம் வறுமை என்பவை இருந்தன எனினும் அவை மக்களுள் உயர்வு தாழ்வுகளை உண்டாக்கிவிடவில்லை. செல்வத்துப் பயனே ஈதல் என்றும், ஈயாச் செல்வன் இரவலினினும் இழிந்தான் என்றும், தக்கோரிடம் இருந்து இரந்து பெறுவது ஈதல் போலும் பெருமையது என்றும் கருத்துகள் நிலவியிருந்த காலம் அக்காலம். இவற்றை அறியின் இந்நாளைச் சிறுமையும் அந்நாளைப் பெருமையும் எளிதில் புலனாம். புலனாகவே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள்மணி அந்நாளையினும் இந்நாளையில் எத்தகு பெருமையதாய்த் தலைமேற் கொண்டு போற்றத்தக்கது என்பது விளங்கும். சாதிவெறி, சமயவெறி, இனவெறி, மொழிவெறி, பணவெறி, தோல் வண்ணவெறி, தொழில் வண்ணவெறி இப்படி எத்தனை எத்தனை வெறிகள்? இவ்வெல்லாவற்றையும் ஒரு மொத்தமாக விழுங்கவல்ல கட்சிவெறி, கட்சி அரசியல் வெறி, தனிமாந்த வழிபாட்டு வெறி, கொள்கையிலாக் கொள்கை வெறி, கூட்டொவ்வாக் கூட்டு வெறி இப்படி எண்ணத் தொலையாப் புதுப்புது வெளிகள்! இவற்றின் விளைவாம் பிரிவுகள் - பிளவுகள்; முட்டல்கள் - மோதல்கள்; அலைகள் - கொலைகள்! இவ்வெறி யுலகில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் அமுதமொழி கடைப்பிடியாக வந்தாலன்றி உய்வு உண்டா? இதனை வள்ளலார் உணர்ந்தார். வள்ளுவர் உணர்ந்த உணர்வு வள்ளலார் வழியே பெருக்கெடுத்துப் பேராறு என ஓடியது: நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவா ரிலைநீ விழித்துப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே என்று அருட்பெருங்குரு உணர்த்திய அருமையைக் கூறுகிறார் வள்ளலார். குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண்பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகழ்ந்துநீ என்னுளம் எனுமம் பலத்திலே நின்றாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே என உலகோர் நிலையை எடுத்துரைத்துத் தம் உவகை நிலையையும் கூறுகின்றார். சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் எனத்தம் நிலைவிளக்கம் தருகின்றார் வள்ளலார். மேலும், சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனை மேலேற்றித் தனித்திரு வமுதளித்த தனித்தலைமைப் பொருளே எனச் சாதிப் பிரிவுகளைத் தம்மாட்டு ஒழித்த இறையருளைப் பாராட்டுகிறார். உலகவரை நோக்கிச், சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே என எச்சரித்து நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த விரும்புகிறார். பிளவும் பிரிவும் பிணக்கும் இல்லாப் பேரருட் பெருக்க உலகைக் காண்பதற்கு வள்ளலார் விரும்பிய இவ்விருப்பம் வள்ளுவ வித்தின் வான்கனி எனத் தக்கதாம். வள்ளலார் உரைநடைக் குறிப்பு ஒன்று: எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள்செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். இறைவன் நோக்கிய இவ்வேண்டுதல் வள்ளலாருக்காகவோ? அவர்தாம் இறையருள் அருள; அவற்றை யெல்லாம் விட்டு விலகியவர் ஆயினரே! தம்மைச் சார்ந்தோர் தம் அன்பர் தம் அடியர் பின்வருவோர் ஆகிய உலகோர்க்கெல்லாம் வேண்டிய பொது வேண்டுதல் என்க. பற்றிக்கொண்டு பயன்கொள்ளும் பான்மை, சுற்றியிருந்தோர்க்கு இருந்திருக்குமானால் வள்ளலார் வாக்கு வையக வாக்காகவே திகழ்ந்திருக்கும். அது வள்ளுவர் புகழ் பாடியவர்க்கும் வாய்க்கவில்லை; வள்ளலார் புகழ் பாடியவர்க்கும் வாய்க்கவில்லை! வாய் முழக்கம் என்ன பயன் செய்யும்? வாய்மை முழக்கமன்றோ பயன் செய்யும்! அற்றமும் குற்றமும் மறைத்தல் இருவகை; ஒன்று, மானங்கருதி உடலை மறைக்க வேண்டும் வகையான் - உடையால் - மறைத்தல்; மற்றொன்று, குற்றம் உண்டாகாதவாறு உள்ளத்தைக் கட்டுப்படுத்தி மறைத்தல். இவற்றைக் கூறும் வள்ளுவர், இரண்டாம் மறைத்தல் இல்லாக்கால் முதன் மறைத்தலால் ஆவதென்ன என்பார். மற்றும் பிறர் குற்றத்தைப் பெருமை மறைக்கும்; சிறுமையோ பிறர் குற்றத்தையே எடுத்துரைக்கும். அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் என்பவை அவை. இவற்றை உள்ளீடாகக் கொண்டுரைக்கும் வள்ளலார், அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி ஆடிய சிறுபரு வத்தே குற்றமும் குணங்கொண் டென்னையாட் கொண்ட குணப்பெருங் குன்றமே குருவே என இறைவனை விளித்து அபயத்திறன் பாடுகின்றார் (10). சொல்லாட்சி வள்ளுவர் வழி வந்ததாயினும் பொருளாட்சியை வள்ளலார் புதுக்கிக் கொண்ட அருமை எண்ணத்தக்கதாம். அடக்கமுடைமை அடக்க முடைமை விரித்தவர் வள்ளுவர்; ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் உரைத்தவர் அவர்; அடக்கம் அமரருள் உய்க்கும் என மேனிலை காட்டியவர் அவர். அவரே, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் என்றும் உரைத்தவர். அடக்கவகை, அடக்கப் பயன் ஆகியவற்றை விரித்துக் கொள்கிறார் வள்ளலார். படிப்படக்கிக் கேள்வியெலாம் பற்றறவிட் டடக்கிப் பார்த்திடலும் அடக்கியுறும் பரிசமெலாம் அடக்கித் தடிப்புறும்ஊண் சுவையடக்கிக் கந்தமெலாம் அடக்கிச் சாதிமதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி மடிப்படக்கி நின்றாலும் நில்லேனான் எனவே வனக்குரங்கும் வியப்பவென்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி யாட்கொண்ட துரையேயென் னுளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே என்கிறார். கல்வி கேள்வியெலாம் அடக்கம் பார்வையடக்கம் தொடலடக்கம் சுவையடக்கம் முகர்வடக்கம் சாதிமத சமயச் சழக்கடக்கம் சோம்படக்கம் துடிப்படக்கம் என எத்தனை அடக்கங்களைச் சுட்டுகிறார் வள்ளலார். வள்ளுவத்தைத் திரட்டிய அடக்குரை ஈதெனின் ஐயமுண்டோ? இவ்வடக்க விளக்கம் தனிக் கட்டுரையாய் விரிக்கத்தக்க விரிவுடையதென அமைவோம். உள்ளும் புறமும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று சண்முகமணிமாலையில் சாற்றுவார் வள்ளலார். அக்கருத்து அவரிடம் அழுத்தமாக ஊன்றியிருந்தமையால் அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை தப்படி எடுத்துக் கொண் டுலகவர் போலே சாற்றிட மாட்டேன் தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் தப்புரை ஈதன்று சத்தியஞ் சொன்னேன் வாய்மட்டிற் சொல்கின்ற வார்த்தையன் றிதுவென் மனமொத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும் தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும் திருட்டுப்பேச் சன்று புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப் புகன்றசொல் லன்று பற்றறுத்தல் பதிகம் ஒன்றுளே வரும் தொடர்கள் இவை. புறங் கூறாமை, கூடா ஒழுக்கம், தீ நட்பு இவற்றில் வரும் செய்திகள் அல்லவோ இவை. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு என்பவை உள்ளும் புறம்பும், சொல்லும் செயலும் வெவ்வேறாம் இயல்பை எடுத்துக் காட்டுமே! உள்ளொத்த சொல்லும் செயலும் உடைமை தானே விருந்தோம்பல், இன்சொல் உரைத்தல் ஆகியவற்றின் உயிர்ப்பு! இப்படி வள்ளுவர் வாய்மொழி வள்ளலார் வழியில் மடைதிறந்த வெள்ளமெனப் பாய்தல் தொட்ட இடத்தெல்லாம் தட்டுப் படுவதேயாம். உணர்ச்சியும் புணர்ச்சியும் உணர்ச்சி நட்பு, புணர்ச்சி நட்பு என நட்பை இரு கூறாக்குவார் திருவள்ளுவர். புணர்ச்சி நட்பினும் உணர்ச்சி நட்பே நட்பு என்பதும் அவர்தம் முடிவு. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்று இக்கருத்தைத் தெளிவிப்பார். அனுபவமாலையிலே இதனை அருமையாகக் கையாள் கிறார் வள்ளலார். நட்பியலில் இருந்து காதலியலுக்கும், அதில் இருந்து இறையியலுக்கும் மடைமாற்றி நடையுறுத்து கிறார் வள்ளலார். புணர்ச்சி என்பதையே முன் அடையினால் உணர்ச்சியாக்குகின்ற முறைமையையும் படைத்துவிடுகிறார். புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுத நானுண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ? அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் தூயவொளி பெற்றழியா தோங்குவடி வானேன் சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ? பிறியாமல் என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கும் பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம் அறிவாளர் புறப்புணர்ச்சி எனையழியா தோங்க அருளியதீண் டகப்புணர்ச்சி யளவுறைக்க லாமே இன்னவாறு பலப்பல பாடல்களில் இயம்புகின்றார். அகப் புணர்ச்சி என்பதென்ன? வள்ளுவர் வழங்கும் உணர்ச்சியேயாம். பயனில சொல்லாமை பயனில சொல்லாமை பகர்ந்த வள்ளுவர் அச்சொல் கூறுவானையும் கேட்பானையும் நன்றென நயப்பானையும் ஒரு சேரப் பதடிஎன்பார். பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் என்பது அது. மணியிலா நெல்லைப் பதடி (பதர்) என்பது உழவடைச் சொல். பயனின்றிக் கழிந்த ஒரு பொழுதைப் பதடி வைகல் என்றமையால் பதடிவைகலார் எனப் பெயர் கொண்ட சங்கச் சான்றோர் ஒருவர் உளர். அப்பதடி அல்லது பதர் என்பதை வள்ளலார் புத்தாக்கம் செய்து புகல்கிறார். பயனில் சொல் சொல்வதை, வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயனென் என வினாவுகின்றார் (வரம்பிலின்பம் 11). பயனில் சொல்லுக்கு வாய்ப்பதர் என்பது அருமையன்றோ! அதனையுடையாரும் வாய்ப்பதர் தாமே! இவ்வளவோ, வாய்ப்பதர்களால் மெய்ப் பொருளை அல்லது செம்பொருளைக் காண்டற்கு இயலாது என்பதை எடுத்து மொழிகிறார். வன்செய் வாய்வாதருக்கு அரிய பொருளே என்பது அது (நடராசபதிமாலை 25). இது நன்செய் விளைவுமன்று; புன்செய் விளைவுமன்று; வன்செய் விளைவு; அதுவும் அக விளைவும் அன்று; வாய் விளைவு; அவ்விளைவும் மணிவிளைவும் அன்று; காற்றிலே பறந்தோடும் பதர் விளைவு; வாதர் வாதம் செய்பவர்; காற்றார்; காற்றிலே தூற்றும் பொலியில் ஓடும் பதர் அன்னர் என்க. அவையத்து இருத்தல் இறைவனைத் தந்தைமையாகக் கொண்டவர் வள்ளலார். தந்தையாய் மட்டுமன்றித் தாயாகவும் கண்டவர். தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதனே எனத் தெளிந்தவர்; அதனைப் பல்கால் பகர்ந்தவர். தந்தையாகக் கண்ட இறைவன், தந்தை கடமையைச் செய்துள்ளானா? தந்தை கடமை என வள்ளுவர் வகுத்ததென்ன? தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்பது. தம் தந்தையாம் இறைவன் ஓதாது உணரச் செய்ததையும், தமக்குப் படிப்பிக்கப் படித்ததையும் பல இடங்களில் கூறுகிறார் வள்ளலார். தம்மை இறைவன் அவையத்து முந்தியிருப்பச் செய்த தகைமையையும் சொல்ல மறந்தார் அல்லர். அவையத்து முந்தியிருப்பச் செய்த செயலைக் கழக நடு வைத்த செயலாகக் குறிக்கிறார். அக்கழகம் கற்றோர் கழகம்; அடியார் கழகம்; சன்மார்க்கர் கழகம். கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச் செல்வமொடு வளர்க்கின்றாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கிய நாயகன் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என்றெல்லாம் பாடுகிறார். நடுவைத்தல் நடுநாயகமாக வைத்தல் - தலைமையாக வைத்தல் அன்றோ! இன்னும் வளமான தந்தை, கல்வியொடு செல்வமும் சேர வைப்பான் அல்லனோ! இறைவன் செல்வப் பிள்ளையாம் வள்ளலார்க்கு இறைவன் செல்வ வளமும் அருளி அதனால் வளர்த்து வருகின்றானாம்! எச்சம் தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும் என்னும் குறளை எவர் அறியார். எச்சம் தரும் பொருளுள் மக்கள் என்பதும் ஒன்றுதானே! அம்மக்கட் பொருளில், தந்தை தன்மையே தனையன்தன் தன்மையென்று சாற்றுதல் சத்தியங் கண்டீர் என்னப்பன் தன்மை என்றன்மை என்றறிமின் ஒரே பாடலில் வரும் செய்திகளே இவை. தந்தை தன்மை கொண்டு மகன் தன்மை அறியலாம் என்பதை முதற்கண் கூறிய வள்ளலார், மகன் தன்மை கொண்டு தந்தை தன்மையை அறியலாம் என் விற்பூட்டுப் பூட்டுகிறார். ஒரே கருத்தை இருமுறையால் வலியுறுத்துதல் வள்ளுவர்க்கு வழக்கே! வள்ளலார்க்கும் அவ்வழக்குண்டு என்பதைக் காட்டுவது இது. அறிவுடைமை அறிவின் இலக்கணம் கூறும் வள்ளுவர், மனம் போன போக்கில் போகவிடாமல் தீமையில் இருந்து திருப்பி நல்வழியில் செலுத்துவது அறிவு என்பார். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு என்பது அது. இதனை மிக எளிமையாக, மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர் வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் என்கின்றார் (உறுதிகூறல் 1:2). அறிவின்மை அறிவிலாமை விளக்கத்தை முன்னே உரைத்து நாறாத மலரை உவமையாக்குகிறார் வள்ளலார். இவ்வுவமை வள்ளுவர் வழிப்பட்டதாம். இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார் என்னும் குறளில் உள்ள நாறாமலர் உவமை, அறிவுப் பயன் இல்லார்க்கு உரியதாக்கப்படுகின்றது. மலர்ந்தும் மணம் பரப்பா மலர் போல்வர் பிறந்தும் அறிவுப் பயன் கொள்ளா மாந்தர்! இருக்கும் அறிவை எடுத்துரையார்க்கு வள்ளுவர் உவமை யாக்கிய பொருளை, இருக்கும் வாழ்வுப் பயன் இல்லார்க்கு உவமையாக வள்ளலார் அமைத்துக் கொண்டதே ஒரு மாற்றம். அவ்வளவே! கள்ளுண்ணாமை அறிவறிவதற்காகப் பொருள் கொடுத்தல் தகும்; ஆனால், அறியாமையைப் பெறுதற்குப் பொருள் கொடுத்தல் எத்தகு அறியாமையுடையது! கள்ளுக்குக் காசு கொடுத்துக் குடிப்பது அதுதானே! கள்ளுண்பதற்கும் நஞ்சுண்பதற்கும் உள்ள வேறு பாடுதான் என்ன? என்று கூறுபவர் திருவள்ளுவர். கட்குடியனுக்கு அறிவுரைத்துத் திருத்துவோம் என்பது நீராழத்துள் புகுந்த வனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாம் என்றும் அவரே கூறுவார். களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று என்பது அது. குடியர் நிலைதான் இப்படி என்றால் குடியாமலே குடியரெனத் திரிவாரும் உளர் என்று அவர் தன்மையை விளக்கு கிறார் வள்ளலார். பொய் விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர் புலைகொலைகள் புரிகின்றீர் கலகலவென் கின்றீர் கைவிளக்குப் புடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற களியரெனக் களிக்கின்றீர் கருத்திருத்தும் கருதீர் என்கிறார் (உறுதிகூறல் 2:4). கருத்திருந்தும் கருதாமை, கணிய ரெனக் களித்தல், கைவிளக்குப் பிடித்துக் கிணற்றில் விழல் என்பவை ஆளப்பெற்று வள்ளுவரை நினைவுறுத்துகின்றன. சொல்லும் சொல் சொல்லின் இலக்கணத்தைச் சொல்வன்மையில் சொல்வார் வள்ளுவர். அதில் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து என்பது ஐந்தாம் பாட்டு (645). இதற்கு விளக்கம் தருவார் போலப் பாடும் வள்ளலார் இன்னொரு குறளையும் நினைவுறுத்துவார் போல இணைத்துக் கொள்கிறார். அது, ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் (33) என்னும் அறன் வலியுறுத்தற் குறள். சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற எல்லாம் துரிசலவே சூதலவே தூய்மையுடையனவே வெல்லுகின்ற வார்த்தையன்றி வெறும்வார்த்தை என்வாய் விளம்பாதென் னையர்நின்று விளம்புகின்றபடியால் செல்லுகின்ற படியேநீ காண்பாயித் தினத்தே தேமொழியப் போதெனைநீ தெளிந்து கொள்வாய் கண்டாய் ஒல்லுகின்ற வகையெல்லாம் சொல்லுகின்றேன் அடிநான் உண்மையிது உண்மையிது உண்மையிது தானே இது வள்ளலார் தனிப்பாடல்களுள் ஒன்று. கல்லாமை கல்வி அறிவில்லாதான் கற்றோர் அவையில் பேச வேண்டு மென அவாவுகின்றான். அவ் வவாவுதல், பெண்மைக்குச் சான்றாகத் திகழும் மார்பகமே இல்லாத பேடிப்பெண் மணவாளன் ஒருவனொடு கூடி மகிழ விரும்பும் பொருந்தா விருப்புப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவன் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று என்பது அது. இதனைக் குடும்ப கோசத்தில் இளமையில் கல்வியில் கருத்துக் கொள்ளாமல் கடை ப்பிள்ளையாய் வளர்ந்தவன், அக் கல்விச் செல்வத்தைப் பெறுதற்குப் பின்னே விரும்புகின்றான். அதனைக் குறிக்கும் வள்ளலார். அருஞ்செல்வ மெனுங்கல்வி அறிவில்லாக் குறை யொன்றே அடைந்திட் டேனவ் வருஞ்செல்வத் தாசையுளேன் பேடிமணம் நாடிமனம் வருந்தல் போன்றே என்கிறார். இவண் பேடி, மணம் நாடி வருந்துதலை உவமையாகக் காட்டியது அறிக. முப்பற்று காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் என்பது திருக்குறள். விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் அழியுமாறு நடந்தால் துன்பம் வாரா தொழியும் என்னும் இப்பொருளைக் கொண்டு, காமமும் வெகுளியும் கடுஞ்சொல் ஆதிய நாமமும் கனவினும் நண்ண லின்றியே சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய தாமமு மணியும்போற் றாங்கி ஓங்கியும் என்கிறார் வள்ளலார் (குடும்ப கோசம்; முயற்சிப் படலம்). மயக்கம் என்று வள்ளுவர் சொல்லியதைக் கடுஞ்சொல் ஆதிய என்பதால் விரித்துக் கொள்கிறார் வள்ளலார். நாமம் கெடுதலைக் கனவிலும் பொருந்தாமையால் சிறப்பிக்கிறார். ஓங்கி என்பதால் நலப்பேற்றை உறுதி செய்கிறார். இவை வள்ளலார் பாடல்கள் வழியே கண்டவை. இனி வாழ்வு வழியே துலங்கும் வள்ளுவக் காட்சிகளைக் காண்போம். 5. வள்ளலார் வாழ்வும் திருக்குறளும் அன்பை அடைத்து வைக்கும் அடைப்பு ஒன்று இல்லை. அன்புடைமையை அன்புடையார் கண்ணீரே காட்டிவிடும் என்பது திருக்குறள் கருத்து. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பது அது. இக்குறளின் விளக்கம் வள்ளலார்க்குத் தம் ஒன்பதாம் அகவையிலேயே தெளிவாயிற்று. அன்பால் நிரந்து இனிது சொல்லுதல் பள்ளிக் கல்வியிலே வள்ளலார்க்கு நாட்டம் உண்டாக வில்லை. அதனால் அண்ணனார் சபாபதியார்க்குத் தம் தம்பியார் மேல் சினம் உண்டாயிற்று. ஒழுங்காகக் கற்றால் அன்றி வீட்டில் உணவு தருதல் ஆகாது எனத் தம் துணைவியார் பாப்பம்மை யார்க்குக் கட்டளையிட்டார். என் செய்வார் அம்மையார்! அன்னை அன்பு ஒருபால்! ஆளன் ஆணை ஒருபால்! அதனால் ஆளன் இல்லாதபோது பின் வாயில் வழியாக வள்ளலாரை வருவித்து உணவு படைக்கும் நெருக்கடி நிலைமை அவருக்கு உண்டாயிற்று. உரிமைப் பிள்ளைக்கு, ஊர்ப்பிள்ளைகளுக்கு உரிய உரிமை கூட இல்லையே! இவ்வுள நெருக்கடியால் பாப்பம்மையார் பட்டபாட்டுக்கு அளவில்லை. இந்நிலையில், வள்ளலாரின் தந்தையார் நினைவு நாள் வந்தது. அந்நாளில் அயலார் பலர் வந்து பல்வகைச் சுவையுணவு அருந்திச் சென்றனர். வழக்கப்படியே பசித்துக் கிடந்து ஆளிலாப்பொழுது பார்த்துப் புறக்கடை வழியே புகுந்து ஆறி அலர்ந்து போன உணவு உண்ண வள்ளலார்க்கு நேர்ந்தது. அதனைப் படைக்கும் போதே கண் மடை திறந்த நீரென அண்ணியார் கண்ணீர் சொட்டினார். உள் உருக்கம் கண்ணின் வழி பெருகுதல் தானே இயற்கை! அதனைக் கண்டு கலங்கிய இளைய வள்ளலார் என்னெனக் கேட்டார். அன்னையினும் பரிவுடைய அண்ணியார் வடித்த கண்ணீரன்றோ அது? ஊரார் அனைவரும் வந்து உரிய சுவை கெடாமல் உண்டு செல்லும் இந்நாளிலும், திருடர் எனத் தலை மறைந்து புறவாயில் வழியே புகுந்து ஆறி அலர்ந்து போன உணவை உண்ணும் நிலைமை உண்டாயிற்றே என்பதை எடுத்துரைத்தார். அண்ணனார் விருப்பப்படி வீட்டிலேயிருந்தேனும் கற்குமாறு வேண்டினார். அண்ணனார் கண்டிப்பில் உண்டாகாத திருப்பம் அண்ணியார் கண்ணீரால் உண்டாயிற்று! அன்று தொட்டு மாடியில் இருந்த சிற்றறையில் இருந்து கற்கத் தொடங்கினார் வள்ளலார். அக்கால் அவர்தம் அகவை ஒன்பதேயாம். ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட அருட்கடலே என்றும், ஆறொடு மூன்றாண் டாவதிலே முன்னென்னை ஆண்டாய் என்றும் கூறுவார் வள்ளலார். உயிர்க் கல்வியாம் உருக்கக் கல்வித் தூண்டலிலே உருவாகிய கல்வி வள்ளலார் கல்வி என்பதை உணர்தல் வேண்டும். இனி அண்ணனாரும் கற்கவே கட்டளையிட்டார். அண்ணியாரும் அதையே சொன்னார். ஆனால் வள்ளலார் உள்ளம் அண்ணியார் உரையை ஏற்றுப் போற்றியது ஏன்? அண்ணியார், வள்ளலார் உள்ளம் உணர்ந்து அவர் உணர்வொடு கலந்து அவர் ஏற்குமாறு இனிய மெல்லிய நயத்தகு மொழியால் கூறினார். வள்ளுவர் உரைப்படி நிரந்து இனிது சொன்னார். அதனால் வள்ளலார் விரைந்து ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியை அன்பிற்கும் உண்டோ என்னும் குறளுடன், விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்னும் குறளும் இணைத்து நோக்கத் தக்கதாம். ஓதாக்கல்வி ஓதாக்கல்வி வள்ளலார் கற்றகல்வி என்பதைப் பலரும் அறிவர். ஓதாக்கல்வி என்ற தொடர் தோன்றியதும், நினைவுக்கு வருபவரும் வள்ளலாரே! வள்ளுவரும் அக்கல்வியைக் குறித் துள்ளாரா? என்னும் வியப்பும் வினாவும் பலர்க்கும் எழும்பும். வள்ளலார் நூற்கல்வி கல்லார் அல்லர்; நன்கு கற்றவர்; இதனை அவரியற்றிய பாடல்கள் வெட்ட வெளியாகக் காட்டுகின்றன. திருக்குறளை எவ்வளவு ஆழ்ந்து கற்றுளார் என்பதை இந்நூல் காட்டும். திருவாசகம், தேவாரம், திருமந்திரம், பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவற்றையெல்லாம் எத்துணை ஆழமாகக் கற்றிருந்தார் என்பது வள்ளலாரும் வாசகரும் என்பது முதலாக வெளி வந்துள்ள நூல்களால் எளிது விளங்கும். ஆதலால் வள்ளலார் நூற்பயிற்சி இல்லார் என்பது தெளிவிலா முடிவாம். வள்ளலார் பிறரைப் போல் பல்கால் பயில வேண்டுவது இல்லாமல் ஒருமுறை கற்றாலே அப்படியே வாங்கிக் கொள்ளும் திறத்தொடு இருந்தார் என்பதும், அதுவே ஓதாக் கல்வி எனப்படுவதாம் என்பதும் விளங்கும். திருவள்ளுவர் ஓதாக் கல்வி அமையுமாற்றை ஒருமைக் கண் தான் கற்றகல்வி என்கிறார். அக்கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என்றும் கூறுகிறார். ஒருமித்த உணர்வால் ஒருவரால் கற்கப் பெறும் கல்வி அவர்தம் பின்வரும் காலம் அனைத்துக்கும் அழியாப் பொருளாய் அமைந்திருக்கும் என்பது இக்குறளின் பொருளாம். ஒருமைக்கண் கற்ற கல்வி என்பது ஒருமை நிலையில் கற்ற கல்வி. எழுமை என்பது பின்னே தோன்றுகின்ற, வருகின்ற என்னும் பொருளது. ஏமாப்பாவது பாதுகாப்பு. வள்ளலார் ஒருமை நிலையில் கற்ற கல்வியை அவரே உரைக்கிறார்: வன்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சான்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்தென் ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்னும் இப்பாடலில் திருவாசகத்தைப் பயின்ற வகையைத் தெளிவிக்கிறார். வாசகம் வேறு தாம் வேறு எனல் இன்றி ஒன்றாகக் கலந்து விட்டதும் அக்கலப்பு ஊன் கலப்பாய் உயிர்க் கலப்பாய் அமைந்து ஒன்றி விட்டதையும் குறிப்பிடுகிறார். இதுவே ஒருமைக் கல்வி அல்லது ஓதாக் கல்வியாம்! இதனைச் சுந்தரர் தேவாரத்தைச் சுட்டுமுகத்தான் மேலும் தெளிவு செய்கிறார் வள்ளலார். அதனைத் தம் அனுபவம் என்றும் வரையிட்டும் உரைக்கிறார். தேன்படிக்கும் அமுதாம்நின் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே என்பது அப்பாடல். நான் படிக்கும்போது என்னை நான் அறியேன் என்பது என்ன? தானே படிப்பாய் ஆகிய ஒருமை நிலையே அது. நாபடிக்குமாம்; ஊன்படிக்குமாம்; உளம் படிக்குமாம்; உயிர் படிக்குமாம்; உயிர்க்கு உயிரும் படிக்குமாம். ஒருவர் இப்படிக் கற்பாராயின் ஒருமுறை கற்பதன்றி மறுமுறை கற்க வேண்டி நேராது. இதுவே ஒருமைக்கண் கற்கும் கல்வி! ஓதாக்கல்வி! பொதுநிலையிலே சொல்கிறார் ஔவையார்: வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே எற்றோமற் றெற்றோமற் றெற்று ஒரு வெண்பாவை இருமுறை கேட்டால் மனத்தில் பதிந்துவிட வேண்டுமாம். ஏட்டில் ஒரே ஒரு முறை பார்த்துப் படித்தால் மறுமுறை எழுதிவிட வேண்டுமாம். அவனே மகன்; அவனைப் பெற்றவளே பெற்றவள் என்கிறார். இதற்குச் சான்றாக விளங்கிய அந்தகக்கவி வீரராகவர், மாம்பழக்கவிச் சிங்க நாவலர் ஆகியவர் களை நாடறியும். ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப்படித்த விரகன், இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீரராகவன் என்பது தம்மைப் பற்றி அந்தகக் கவிவீரராகவர் குறித்த செய்தி. இவற்றை நோக்கவும் உலக வரலாற்றை நோக்கவும் வள்ளலார் கற்ற ஓதாக் கல்வி புலப்படும். அது வள்ளுவர் கூறிய, ஒருமைக்கண் தான்கற்ற கல்வி என்பதும் விளங்கும். எழுமை எழுபிறப்பு இவ்விடத்தே எழுமை என்பதையும் எண்ணுதல் நலம். கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று; அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று; பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று; குழந்தைப் பருவம் ஒன்று; பாலப்பருவம் ஒன்று; குமரப்பருவம் ஒன்று; விருத்தப்பருவம் ஒன்று - ஆகப்பிறவி -7. இவ்வாறே தாவரம் முதலியவற்றிற்கும் உள என்கிறார் வள்ளலார், இதனால், ஒரு வாழ்விலேயே எழுபிறப்புகள் உண்மையை அவர் குறித்தமை விளங்கும். இவற்றால் எழுமைக்கும் ஏமாப் புடைத்து என்பதுடன், எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு என்று வரும் குறளுக்கும் கருத்துத் தெளிவுண்டாம். ஒரு பிறப்புள் அடங்குவதே எழு பிறப்பு என்க. இனி எழுபிறப்பையும் தனித்தனிப் பிறப்பெனவும் சுட்டுவார் வள்ளலார். இந்தக் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கும் எவ்வேழு பிறப்புண்டு என்று கூறுகிறார். சொல்வன்மை இந்நாளில், சென்னை இலிங்கிச் செட்டித்தெருவின் கண் உள்ள மல்லிகேசுவரர் திருக்கோயில் முகப்பில் இருப்பது மறைமலையடிகளார் நூல் நிலையம். அதன் மேன்மாடி வள்ளலார் திருவருள் மண்டபம் என்பது. வள்ளலார் தம் இளந்தைப் பருவத்தில் முதன் முதலாகச் சொற்பொழிவு செய்த வீடு, சோமு செட்டியார் என்பார் வீடு. அவ்வீடே இந்நாளில் மறைமலையடிகளார் நூல் நிலையமாகவும் வள்ளலார் திருவருள் மண்டபமாகவும் விளங்குகின்றது. வள்ளலாரின் அண்ணனார் சபாபதியார் புராணப் பொழி வாளராக அந்நாளில் விளங்கியவர். சோமு செட்டியார் வீட்டில் சனிக்கிழமை தோறும் சமயச் சொற்பொழிவு ஆற்றி வந்தவர். அவர்க்குக் கையேடு படிப்பார் ஒருவர் இருந்தார். அவர் இடை இடை வராமல் இருந்துவிடுவார். அதனால் சபாபதியார்க்கு இடர்ப்பாடாக இருந்தது. தம்பியார் தமக்குக் கையேடு படித்தால் உதவியாமே என எண்ணினார்; தம் மனைவியாரிடம் எண்ணத்தை உரைத்தார். அவர் வேண்டுதலால் தம்பியாரும் இசைந்து கையேடு படித்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் அண்ணனார்க்கு உடல் நிலை நன்றாக இல்லை; பொழிவுக்குப் போக இயலாமை ஏற்பட்டது. தம்பியாரை அனுப்பிக் கடவுள்வாழ்த்துப்பாடி வழிபாடு செய்து விட்டு வருமாறு வேண்டினார். அவ்வாறே சென்று வழிபாட்டை முடித்து அடுத்த வாரம் முதல் தவறாமல் அண்ணாவின் பொழிவு நிகழும் என்றார் வள்ளலார். ஆங்கிருந்தோர் நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து இச்சொற்பொழிவு கேட்க வந்துளோம். நீங்கள் பாடலைப் படிப்பதே எங்களுக்கு இன்பமாக இருக்கிறது. சில பாடல்களைச் சொல்லி முடிந்த அளவு விளக்கமும் சொல்லுங்கள் என வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலை அப்பொழுது நிறைவேற்றினார் வள்ளலார். வழக்கத்திற்கு மேலாக நெடும் பொழுது ஆயிற்று. பாடல் உணர்விலும் பொருள் நயத்திலும் கேட்டவர்கள் கட்டுண்டு திளைத்தனர். அன்று எடுத்துக் கொண்டது பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் புராணம். அப்புராணம் முடிய வள்ளலாரே ciuah.ற்w வேண்டுமென வேண்டிக்கொண்டனர். அப்படியே நிகழ்ந்தது. அண்ணனாரும் ஒருநாள் தம்பியார் அறியாவண்ணம் மறைந்திருந்து அவர் சொற்பொழிவைக் கேட்டு உருகினார்; உருகிக் கண்ணீர் சொரிந்தார். தம்பியார் சொல்லிய உரை திருவருளோடு ஒன்றியதாக இருப்பதை எண்ணித் திளைத்தார். இவ்வரலாற்றுக் குறிப்பு நம்மை வள்ளுவர்பால் ஈர்க்கிறது. வள்ளுவர் வழங்கிய சொல்வன்மை ஈர்க்கிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப பொழிவதாம் சொல் வள்ளலார் சொல் கேட்டவர்களைப் பிணித்தது; கேளாதவர் களைக் கேட்குமாறு ஏவவும் செய்தது. பற்றற்ற பான்மை வள்ளலார் பொருட்பற்று இல்லாதவர். அவர்க்குச் சோமு செட்டியார் பணம் தந்ததுண்டு. அப்பணத்தை வீட்டுக்குக் கொண்டு சென்றாரல்லர். வழியிலே எறிந்தார்; குறத்திலே எறிந்தார்; கிணத்திலே எறிந்தார். பொருட்பற்று இல்லாமைக் குறிப்பு இது. ஒருநாள் ஒற்றியூரில் ஒரு திண்ணையில் படுத்திருந்தார். வள்ளலார் காதில் கடுக்கன் அணிந்திருந்தார். அந்நாள் வழக்கம் அது. பெற்றோரும் உற்றோரும் தம் ஆண்மக்களுக்கும் அணிகலம் போட்டு அழகு பார்க்கும் காலநிலை அது. அதனால் வீட்டினர் வலியுறுத்துதலுக்காகக் காதில் கடுக்கனை அணிந் திருந்தார். அக் கடுக்கன் மேல், திருடன் ஒருவன் கண் விழுந்தது. திருடன் தம்மை நோக்கி வருவதையும் அவன் நோக்கத்தையும் உணர்ந்து கொண்ட வள்ளலார் உறங்குவார் போலக் கிடந்தார். வலக்காது மேலே இருந்தது. அதில் இருந்த கடுக்கனைக் கழற்றிக் கொண்டான். அதனை அறிந்த வள்ளலார் புரண்டு படுப்பார் போல இடக்காது மேலே வரப் புரண்டார். அதனையும் கழற்றிக் கொண்டு போனான். காதுகளுக்கு இரு துளைகளை அமைத்த இறைவன் காதணிகலம் போடுவதற்குச் சம்மதமுடையவனாக இருந்தால் அதற்கெனத் துளையமைத்திருக்க மாட்டானா? அப்படி அமைக்காமையால் காது மூக்குகளில் துளையிட்டு அணிகலம் அணிதல் ஆண்டவனுக்குச் சம்மதமானதன்று என்று பின்னாளில் கூறும் வள்ளலார் இளமையிலே தம் கடுக்கனைக் கழற்றாமல் கழற்றிக் கொள்ளச் செய்தவர் என்பது விளங்கும். பற்றற்ற துறவோர் ஓடும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் இயல்பினர் என்பர். வள்ளலார் காசைக் கருதவில்லை. காதுக் கடுக்கனைக் கழற்றிக்கொள்ள உதவினார். இவற்றை நோக்க, யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இவன் என்னும் குறள் விளக்கமே இவையெனப் புலனாம். எவ்வெவற்றை வேண்டாவென விடுகின்றாரோ அவ்வவற்றால் அவர்க்குத் துன்பில்லை என்னும் இக்குறளமைதி வள்ளலார் வாழ்வில் எத்தனையோ சான்றுகளுக்கு உறைவிடமாக இருப்பதாம். உருவுகண்டு எள்ளாமை ஓரன்பர் தம் வீட்டுத் திருமணத்திற்கு வருமாறு வள்ளலாரை அழைத்திருந்தார். பெரும்பாலும் இத்தகு நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதைத் தவிர்த்து வந்தவர் வள்ளலார். ஆங்குச் செலவிடப்படும் வீண் செலவுகளைக் கண்டித்தவரும், ஏழை எளியவர்களுக்கு உணவு தரும் ஒன்றே இத்தகு மங்கல நிகழ்ச்சி களில் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றவரும் வள்ளலார். எனினும் அன்பர் வேண்டுதலை ஏற்று ஆங்குச் சென்றார் வள்ளலார். திருமண வீட்டின் முன் வாயிலில் கட்டும் காவலும் மிக்கிருந்தது. ஏழை எளியவர்கள் உள்ளே புகாதவாறு தடுக்கப் படுவதையும், ஆடை அணிகளால் சிறந்தோர் வரவேற்று அழைக்கப்படுவதையும் கண்டார். அவர் உள்ளம் நைந்தது. திருமண வீட்டுள் புக மனமில்லாராய் எதிர்வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அவரை அறிந்த ஒருவர், திருமண வீட்டார்க்குச் சொல்லச் சென்றார். அவரிடம் வள்ளலார் ஒரு பாடலைப் படைத்துத் தந்து மணவீட்டுத் தலைவருக்கு விடுத்தார். எளிமையும் அருமையும் வாய்ந்த அப்பாடல்: சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காயில்லை நல்ல சோமனில்லை பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமனில்லை ஈடில்லை யாதொரு வீறாப்பு மில்லை விவாகமது நாடில்லை நீநெஞ்ச மேஎந்த வாறினி நண்ணுவையே சோடு, மிதியடி; சொக்காய், சட்டை; சோமன், வெண்பட்டாடை; பாடு, உயர்பதவி; ஈடு, தோற்றப் பொலிவு; வீறாப்பு, பெருமிதம்; நெஞ்சமே, இவையில்லை; இனி எப்படித் திருமண வீட்டை அடையக் கூடும்? இவையெல்லாம் இருந்தால் அல்லவோ அடைய வாய்க்கும் என்னும் இப்பா என்ன கருத்தை வெளிப்படுத்துகின்றது? ஆளை மதிக்காமல், ஆடம்பரத்தை மதித்துப் போற்றும் போலித் தன்மையால் நிகழும் உலகியலை வெளிப்படுத்து கின்றது. இது, உருவுகண் டெள்ளாமை வேண்டும்உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்னும் குறட்கருத்துக்கு விளக்கமாக அமைகின்றதாம்! அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அவ்வச்சாணி அன்னாரும் உருவப் பொலிவின்மையால் ஒதுக்கப்படுதல் மட்டுமன்றி இகழப்படுதலையும் குறித்தாரே வள்ளுவர். அதைச் சோடில்லை என்னும் வள்ளலார் பாட்டு பலவகையாலும் விளக்குதல் அறியக் கூடியதன்றோ! குறிப்பிற் குறிப்பு திருவொற்றியூர்த் திருக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் வள்ளலார் தேரடித் தெருவழியாகச் செல்வதில்லை. தென்னண்டை மாடவீதி நெல்லிக்காய் பண்டாரம் சந்து வழியாகவே செல்வார். தற்செயலாக ஒரு முறை தேரடி வீதி வழியாகச் சென்றார். அத்தெருத் திண்ணை ஒன்றில் நெடுநாளாக இருந்து வந்தவர் உடையிலாத் துறவி ஒருவர். அவர் அவ்வழியே போவார் வருவாரைக் குறிப்பில் குறிப்பு உணர்ந்தாராய்க் கழுதை போகிறது; மாடு போகிறது என்பது வழக்கம். அங்கே வள்ளலார் வரக்கண்ட அவர் இதோ மனிதர் வருகிறார் என்று கூறித் தம் கையால் தம்மை மறைத்து நின்றார். அவர்க்கு வள்ளலார் ஏதோ கூறினார்; அன்றிரவே அவர் அவ்விடத்தை விட்டு அகன்றார். இச் செய்தி வள்ளலார் வரலாற்றில் உள்ளது. குறிப்பிற் குறிப்பு உணரவல்லார் என்றும், உறுப் பொத்தல் மக்களொப் பன்றால் என்றும், மக்களே போல்வர் கயவர் என்றும் வள்ளுவர் கூறும் வாய்மொழியை மெய்ப்பிக்க வல்ல தேர்ச்சியர் துறவியார் என்பது வெளிப்படுகின்றது. அன்றியும் வள்ளலாரைக் கண்டு கொண்டது, ஐயப்படாது அகத்த துணர் வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் என்னும் குறளுக்கு விளக்கமாக அமைந்ததாம். வள்ளலார் குறிப்பறியும் தேர்ச்சி எப்படி? தொழுவூரார் குறிப்பிடுகிறார்: இவர் பிறருடைய மனத்தில் நிகழுபவைகளைப் பார்க்க வல்லவர் என்கிறார். கண்ணேரில் நடப்பதைத்தானே காணமுடியும்? வள்ளலார் மனத்து நிகழ்வதையே காணவல்லார் எனின் அவர் குறிப்பிற் குறிப்புணர வல்லார் அல்லரோ! தொழுவூராரின் இக்குறிப்பு பிரமஞான சங்கத்திற்கு எழுதிய உண்மைகள் என்பதில் இடம் பெற்றுள்ளது. அளவளாவுதல் மனோன்மணீயம் இயற்றிய பேராசிரியர் சுந்தரனாரின் ஆசிரியர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் என்பார். அவர் ஒருகால் தில்லைக்குச் சென்றிருந்தார். அதுகால் வள்ளலாரும் அங்கே தங்கியிருந்தார். சுவாமிகளை நேரில் சென்று காண விரும்பிய வள்ளலார் தக்கார் ஒருவரை விடுத்துச் சமயம் அறிந்துவர விடுத்தார். அதனை அறிந்த சுந்தர சுவாமிகள் இங்கா சமயம் பார்த்து வரச் சொன்னார்கள் என்று தாமே முந்துற எழுந்து தம் அன்பர் கூட்டத்துடன் வந்து வள்ளலாரைக் கண்டார். முந்தி வந்து பார்க்க விரும்பியவர் வள்ளலார்! அவருக்கும் முந்திக் கொண்டவர் சுவாமிகள்! என்றும் பணியுமாம் பெருமை என்பதற்கு இவ்விருவர் சந்திப்பும் சான்றாம்! வள்ளலார் ஏன் சுவாமிகளைக் காண விரும்பினார்; சுவாமிகள் ஏன் முந்து நின்றார். இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவ்வாறே அளவளாவி மகிழ்ந்தனர். அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று என்பது திருக்குறள். அளவளாவுதல் கட்டாயமானது. அளவளாவுதல் இல்லாதவன் வாழ்வு, கரையில்லாக் குளத்தில் நீர் நிறைந்தது போல்வது! கரையில்லாக் குளத்தில் நீர் நிற்கவே செய்யாதே! நிறைவது எப்படி? ஆதலால் இல்லாத பொருளை உவமை கூறியதாயிற்று! இல்லாத வாழ்க்கையை இல்லாத கரையுடைய குளத்து நீர்க்குக் கூறி வாழ்க்கை இன்மையைத் தெளிவாக்குகிறார் வள்ளுவர். அளவளாவுதலால் கரையுள்ள குளத்தில் பெருகிய நீரென வளமாக்கிக் கொண்டார் வள்ளலார். ஏரிநிறைந் தனைய செல்வன் கண்டாய் என்பது நாவுக்கரசர் நன்மொழி. அருளாட்சி மஞ்சக் குப்பத்தில் வட்ட ஆட்சியராக வெங்கடசுப்பு என்பார் இருந்தார். அவர் வள்ளலார் அருளுரை கேட்பதற்காக வருவது வழக்கம். அந்நாளில் வட்ட ஆட்சியர் செல்லுமிடத் திற்கு அவர்க்கு முன்னே ஊதுகொம்பு ஊதிக் கொண்டு போக வேண்டும். அம்முறையில் விரைந்து செல்லும் வண்டிக்கு முன்னே ஓடிக்கொண்டே ஊதுகொம்புக்காரன் ஊதிக்கொண்டு வந்தான். வந்தவன் ஓடிக் களைத்தும், ஊதி இளைத்தும் சோர்வுற்ற நிலையை அடிகளார் கண்டார். உள்ளம் உருகினார்; வட்ட ஆட்சியர்க்கு முகங்கொடுக்காதவராய்த் தம் உரையின் இடையே ஊதுகொம்புக்காரனுக்கு உணவு தரச் செய்து ஓய்வு கொள்ள உதவி, அதன்பின் அருளுரை தொடங்கினார். அருளுரை முடித்தபின்னரே எவர்க்கும் உணவு வழங்குவது வழக்கம். அவ்வழக்கத்திற்கு மாறாகவே வள்ளலார் அருட்செயல் இருந்தது. அருளுரை முடிந்த பின் வட்ட ஆட்சியரை அழைத்து எங்கே போக வேண்டும் என்பதை முன்னரே சொல்லி ஊதுகொம்புக் காரனை முன்னே போயிருக்கச் செய்துவிட்டுப் பின்னே சென்றால் அவனுக்கு இவ்வளவு களைப்பும் இளைப்பும் ஏற்படாவே! இந்தப் பதவி எவ்வளவு நாளைக்குத்தான் இருக்கக் கூடியது என்று இரங்கிக் கூறினார். நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை என்பது திருக்குறள். அதிகாரியை எண்ணி அடங்கி ஒடுங்கிச் சிறப்புச் செய்யக்கூடிய உலகியலில், அவரைப் புறக்கணித்து, ஊதுகொம்புக்காரன்மேல் உயிரிரக்கம் கொண்ட அருமை பிறரிடம் காண்டற்கு அருமையேயாம். அடிகளாரே எண்ணி அருள்பாலித்த செயல்தானே இது! கொம்பூதி, தனக்கு உயிர்போகும் நிலையாயினும் கொம்பூதிக் கொண்டே உயிரை விடுவதுதான் தன் விதி என எண்ணும் அடியன்தானே! சொல்லும் செயலும் வள்ளலார் வாய்மொழி அனைத்தும் அருண்மொழியே என்பதில் ஐயப்பாடு இல்லை. அருளே ததும்பிய நெஞ்சில் இருந்து வெளிப்படும் சொல்லும் அருளே என்பதில் மாறு எண்ணுவதற்கு இடமேது? ஊதுகொம்புக்காரனுக்கு உரையின் இடையே வந்து உருகி நின்று உணவு தந்து உதவிய நிகழ்ச்சியை உரைத்தோம். அத்தகைய நிகழ்ச்சிகள் வள்ளலார் வாழ்வில் பல. இன்னும் ஒன்று: வள்ளலார் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வழியே, கண் வலியுடைய ஒருவர் போகக் கண்டார்; அவர் முகமெல்லாம் வீக்கமாகி இருந்தது; வள்ளலார் உள்ளம் உருகியது; உரை தடையுற்றது; உரையை நிறுத்தி, நோயரை அழைத்தார். அவரிடம் கண்ணில் இரசதாளி வாழைப்பழம் வைத்துக் கட்டினால் நோய் ஒழியும் என்றார். அதனைச் சொல்லியனுப்பிய பின்னரே உரையில் நாட்டம் உண்டாயிற்று வள்ளலார்க்கு. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் குறளின் அருமை வள்ளலாரிடம் என்றும் ஒன்றியே இருந்தது. சொல்லிய வண்ணம் செய்தல் பிறர்க்கு அருமையே! அவரோ சொல்லிய வண்ணமன்றிப் பிறவழியில் செல்லுதற்கு இயலாவண்ணம் இயல்பிலேயே ஊறிவிட்டவர். ஆதலால் பிறர்க்கு அருமையாவது அவர்க்கு எளிமையாயிற்றாம். என்னென்ன திண்மைகள் - உறுதிகள் - இருந்தும் ஆவதென்ன? வினையுறுதி இல்லாரை எவர் மதிப்பார்? எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு என்பது திருககுறள் (670). செருக்கறுத்தல் இறுக்கம் இரத்தினர், புதுவை வேலர் ஆகியவர்களைப் பற்றி முன்னரே கண்டுள்ளோம். அவர்கள் வள்ளலாரிடம் மன்றாடியும், உண்ணாநோன்பு இருந்தும் வள்ளலார் உள்ளத்தை உருக்கி அவ்வுருக்கத்தாலேயே வள்ளலார் பாடிய திருவருட் பாவை நூல் வடிவில் வெளியிட ஒப்புதல் பெற்றவர்கள். அந்நூல் பணியை மேற்கொண்டவர் தொழுவூர் வேலாயுதர். நூலில், திருவருட்பா வரலாறு என்பதொன்றைத் தொழுவூரார் பாடிச் சேர்த்தார். அதில் வள்ளலாரைத் திருவருட் பிரகாச வள்ளலார் என்று குறிப்பிட்டிருந்ததையும் அதன் விளக்கத்தையும் இராமலிங்க சுவாமிகள் என்னும் பெயரைப் பற்றிய செய்தியையும் கடிதப் பகுதியில் குறித்துள்ளோம். இவை பெருமை பெருமிதம் இன்மை (979) என்பதை விளக்குவதுடன், யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் (346) என்பதையும் விளக்குவன. யான் என்பது செருக்கு; எனது என்பதும் பற்றுவழி வரும் செருக்கே. தற்செருக்கும், தற்பொருட் செருக்கும் அற்ற வள்ளலார் - மெய்ப்பொருள் உணர்ந்த வள்ளலார் - போலிப் பொய்ச் செருக்குகளில் நாட்டம் செலுத்துவார் என எண்ண முடியுமா? உடலையும் வெளிப்படக் காட்ட விரும்பாதவர், கை வீசி நடத்தலையும் கருதாதவர், காட்டுயர் அணை மேல் கால்மேல் கால் போட்டு இருக்கவும் துணியாதவர் வாழ்வில் செருக்குக்கு இடமேது? வள்ளலார் கடிதங்களும் திருக்குறளும் என்பதிலுள்ள ஆரவாரம் என்னும் பகுதி இதனுடன் எண்ணத்தக்கது. செருக்கைச் சினந்து பாடுகிறார் வள்ளலார்: கலையறியாச் சித்தமெனும் கனமோசப் பயலே காலறியாய் தலையறியாய் காண்பனகண் டறியாய் நிலையறியாய் ஒன்றையொன்றாய் நிச்சயித்திவ் வுலகை நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய் என்று அதனியல் உரைத்து, அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ அசைவாயேல் அரைக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான் அலைவறிவாய் என்றனைநீ அறிவாயோ நான்தான் ஆண்டவன்தன் தாண்டவம்கண் டமர்ந்தபிள்ளை காணே என்று செருக்கை வெற்றி கொண்ட நிலையையும் தம் தகுதியையும் உரைக்கிறார். வள்ளலாரிடம் செருக்குக்கு என்ன வேலை? உயிர்ப்பலி விலக்கு வேட்டவலம் குறுநில மன்னர் அப்பாசாமிப் பண்டாரியார். அவர் துணைவியாரை வருத்திவந்த தீரா நோயைத் தீர்த்தார் வள்ளலார். அதற்காக மகிழ்ந்த அப்பாசாமியார், வள்ளலார்க்கு அடிமை பூண்டு நின்றார். முழுச் செல்வத்தையும் வள்ளலார்க்கு வழங்கவும் எண்ணினார். வள்ளலார் உள்ளம் பொருள் உள்ளமோ? அருள் உள்ளம்! ஆதலால் இரண்டு கட்டளைகளை இட்டார்: அவ்வூர்க் காளிகோயிலில் நடைபெற்று வரும் உயிர்ப் பலியை நிறுத்த வேண்டும். ஊருள் உள்ள நச்சுயிரிகளைப் பிடாரன் ஒருவனைக் கொண்டு பிடித்துக் காட்டுக்குக் கொண்டு போய் விடவேண்டும். அவரைத் தேடிவந்தது உதவி; கேட்டு வரவில்லை. அதனை உயிரிரக்கத் தொண்டுக்கே உரிமைப்படுத்திவிடுகிறார் வள்ளலார். அதனால்தான் அருளாளர் ஆனார்! வள்ளலார் ஆனார்! அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்னும் முழக்கத்தின் மூலவர் ஆனார். கோயில்களுக்கு உயிர்ப்பலியூட்டல், சட்டத்தாலே அந்நாள் தடுக்கப்பட்டுள்ளது. அந்நாளில் சிறு தெய்வ வழிபாட்டிடங் களில் எல்லாம் உயிர்ப்பலி யூட்டல் தடுப்பாரின்றி நடந்து கொண்டு வந்தது. வள்ளலார் முழக்கமிட்டார்; உரையில் வேண்டினார்; செய்யுளிலும் வேண்டினார்; நேரிடையில் தலைப்பட்டுச் செயன்முறையிலும் தடுத்து நின்றார். வள்ளுவர் நெறி அது. அவிசொரிந் தாயிரம் வேட்டலினும் கொல்லாமை நெறி சிறந்ததெனப் பறையறைந்தவர் அவர். அந்நாளில் நிகழ்ந்த கொலை வேள்வியைக் கண்டித்தது அவர் நெறி. அறவினை யாதெனில் கொல்லாமை, ஒன்றாக நல்லது கொல்லாமை தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி(து) இன்னுயிர் நீக்கும் வினை என்றெல்லாம் குறித்தார். உயிர்ப்பலியை நிறுத்தும் அளவில் மட்டுமோ வள்ளலார் அமைந்தார் அல்லர். பாம்புக்கும் அருள் பாலிப்பவராய்ப் பிடாரனைக் கொண்டு பாம்பைப் பற்றிக் காட்டில் விடுமாறு கட்டளையிடுகிறார். இக்கட்டளை வள்ளுவரின் கொல்லாமை, இன்னா செய்யாமை என்பவற்றின் சாரமாம். நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடுபன்றிகுக் குடங்கள் பலிகடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளம்நடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்தினும் பயந்தேன் எனவரும் பாடல் இவண் இணைத்துக் காணத்தக்கது. உணர்ச்சி நட்பு பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழன் நட்பு, பழ நாளிலேயே பாடு புகழ் மிக்கது. ஒருவரை ஒருவர் பாராமலேயே - கேள்வி அளவானையே - உள்ளார்ந்த நட்புக் கொண்டிருந்தனர். அதனை உணர்ச்சி நட்பு என்பர்; இயல்பாகப் பழகி அதனால் உண்டாம் நட்பைப் புணர்ச்சி நட்பு எட்பர். வள்ளுவர், புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்றதற்கு அவர்கள் நட்பை எடுத்துக் காட்டாகக் காட்டுதல் வழக்காயிற்று. அத்தகு நிலையில் வள்ளலார் வாழ்விலும் ஒருநிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதிலும் ஒரு சிறப்பு, இப்பொழுது வருவார் என்று குறித்தபோதிலே பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழனிடம் வந்தது போலவே, வள்ளலார் வந்தெய்தினார் என்பதாம். திருநறுங்குன்றம் சார்ந்தவர் கல்பட்டு ஐயா என்பார். அவர் ஓகப்பயிற்சியர். தம்மை மெய்க்குருவர் ஒருவர் இன்ன மாதம், இன்ன நாள், இன்னநேரம் வந்து ஆட்கொள்வார் என்றுதாம் உணர்ந்தபடி பலர்க்கும் கூறியிருந்தார். அவர் கூறியவாறே பலருங்கூடி எதிர்பார்த்திருந்த நிலையிலே வள்ளலார் ஆங்கு வந்து அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சி உணர்ச்சி நட்பை மெய்ப்பிப்பதாயிற்று. கல்பட்டு ஐயா வடலூர்க்கு வந்து தங்கியிருந்து செய்த அருட்பணிகள் மிகப் பலவாம். வள்ளலார் உள்ளம் அறிந்த அவர் செய்துள்ள தொண்டுகள் வடலூர் வரலாற்றில் நிலைப்புடையவையாம். உணர்ச்சி நட்பை அகப்புணர்ச்சி நட்பென வள்ளலார் வழங்குதல் பாடல் பகுதியில் கண்டதே. விருந்தின் சிறப்பு ஊற்றங்கால் மங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் கேசவரெட்டியார் என்பார். அவர் வள்ளலார் மேல் மட்டற்ற அன்பர்; அவ்வன்பர், வள்ளலார் தம் இல்லத்திற்கு வந்து விருந்துண்ணும் பேறு தமக்கு வாய்க்க வேண்டும் என்னும் பெருவிருப்புடையவராக இருந்தார். விருந்துக்குச் செல்லும் இச்சை வள்ளலாருக்குத் துளியளவும் இல்லை. அதே பொழுதில் அன்பர் விருப்பத்தை நிறைவேற்றா திருக்கவும் உளமொப்ப வில்லை. அதனால் கேசவர் எதிர்பாராத ஒருவேளையில் அவர் வீட்டிற்கு வள்ளலார் சென்றார். உம் விருப்பப்படி விருந்துண்ண வந்தோம் என்றார். அப்பொழுது இல்லத்தில் இயல்பாக இருந்த உணவை உண்டு மகிழ்ந்தார். வள்ளலார் வந்தபேறே பேறு எனக் கொண்ட கேசவரும் இனிது மகிழ்ந்தார். உணவில் என்ன இருக்கிறது? உணவை உட்கொண்டவர் தன்மையல்லவோ எண்ணத் தக்கது! இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் என்பது திருக்குறள் (67). விருந்தின் சிறப்பு சிறப்பன்று விருந் துண்டார் சிறப்பே சிறப்பு என்னும் இக்குறளின் செவ்விய சான்றாகக் கேசவர் தந்தவிருந்தைப் பெருமைப் படுத்திவிட்டாரே வள்ளலார். பக்குவ காலம் உடலை உறுதிப்படுத்த வல்ல ஊட்ட மருந்தொன்று வேண்டும் எனச் சாலை அன்பர்கள் சிலர் வேண்டினர். அதற்கு வள்ளலார் சேங்கொட்டையை இடித்து உரமாக இட்டு அதில் பொற்றலைக் கையாந்தகரை நடச்செய்தார்; அதனை ஆடுமாடு தின்றுவிடாவாறு போற்றிக் காக்கக் கட்டளையிட்டார். பின்னர் கருங்குழிக்குச் சென்று சில நாள்களின் பின்னர் திரும்பினார். கட்டார்ந்த உடல்நிலை பெறுதற்கு விரும்பிய அன்பர்கள், வள்ளலார் பேணிக் காக்குமாறு கட்டளையிட்ட கையாந்தகரை மேல் கருத்திலர் ஆயினர். அவர் கருத்தெல்லாம் சீட்டு என்னும் சூதாட்டத்தில் புகுந்தது. அதிலேயே பொழுது போக்கினர். காப்பில்லாக் கையாந்தகரை ஆடுமாடுகளால் தின்னப்பட்டு அழிந்தது. செயலை அறிந்தார். என் செய்வார்? ஒன்று கூறினார்: உங்களுக்குப் பக்குவம் வரும் காலம் பக்கத்தில் இல்லை என்பதே அது. மெய்யுணர்விலும் தம்மை மறந்து இன்புறலாம். சூதென்னும் பொய்யுணர்விலும் தம்மை மறந்து இன்புறலாம். முன்னை இன்பம் உய்தி இன்பம்; பின்னை இன்பம் அழிவு இன்பம். பின்னதை நாடிப் பொழுதைப் போக்கியவர்கள் முன்னதை எப்படி நாடுவர்? அதனால் இவ்வாறு கூறினார். வள்ளுவர் உரைத்தார்: உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் (933) சூதில் ஓயாது ஈடுபட்டனர்; உடல் வளர்க்கும் உயரூட்டப் பொருளை இழந்தனர். பொருளிழப்பில் பெரிதன்றோ இவ்விழப்பு? செல்லும் வாய் நோக்கிச் செயல் மேட்டுக்குப்பத்தில் அடிகளார் அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டத்திற்கு எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து பெருகியிருந்தனர். அவர்கள் அமர்ந்து கேட்டற்குரிய இடம் பருக்கைக் கற்கள் நிரம்பியதாக இருந்தது. அக்கற்கள் அவர்களை உறுத்தும் என்னும் உறுத்துதல் வள்ளலார்க்கு உண்டாயிற்று. அதனால் மணல் கொணர்ந்து பரப்பினால் அமர்ந்து கேட்க வாய்ப்பாம் என எடுத்துரைத்தார். அதனைப் பொருட்டாக எண்ணாமல் வள்ளலார் அருள்மொழி கேட்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தனர். ஆதலால் அவர்களுக்கு அக்கல்லுறுத்தல் பொருட்டாகத் தோன்றவில்லை. ஆனால் வள்ளலார் உள்ளத் திற்கு அஃதேற்கவில்லை. அத்துயரைப் போக்க எண்ணினார். மழைநீரால் அரிக்கப்பட்டுப் பரவிக்கிடந்த மணல் பகுதியை நோக்கி வள்ளலார் ஒருநாள் மாலைப்பொழுதில் நடந்தார். அங்கே கிடந்த மணலைப் பரசித் தம்கையில் கொண்டு சென்ற துணியில் அள்ளிக் கொண்டு திரும்பினார். அதைக் கண்ட அனைவரும் தத்தம் துண்டு துணி ஆகியவற்றில் மணலை அள்ளி வாரினர்! பட்டு பஞ்சு என வேறுபாடு இன்றி அனைவரும் மணல் சுமந்தனர். சொற்பொழிவு நிகழும் வன்கற்பரப்பு நன்மணற் பரப்பாகியது. வள்ளலார் உள்ளம் உவகையுற்றது. அதே பொழுதில் வள்ளலார் உலகியல் அறிவுத் திறமும் புலப்பட்டது. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல் (673) என்பது வள்ளுவர் வாக்கு, ஒல்லும்வாய் உரைத்தார் வள்ளலார். அஃதொல்லா நிலையில் செல்லும்வாய் நோக்கிச் செயல்பட்டார். செயல் இனிது நிறைந்தது; குறள் நெறியும் சிறந்தது. முதற்றே திருக்குறளின் சொற் சுருக்கம், பொருட் பெருக்கம் ஆகியவை அறிந்தது. அதனைக் கருதியே திருக்குறளைக் கடுகுக்கும் அணுவுக்கும் உவமை காட்டித் திருவள்ளுவ மாலை பாடியது. அத்தகு குறளின் முதற்பாடலாம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் வரும் முதற்றே என்னும் சொல்லில் ஏ என்னும் அசைநிலை உள்ளது. அசைநிலை என்பது பொருள் கருதாமல் ஓசை கருதி வருவதுதானே; இது திருக்குறளின் நிலைக்குத் தகுமா? என ஒரு புலவர் ஐயங் கொண்டார். அவ்வையத்தை வள்ளலாரிடம் வந்து எழுப்பினார். வள்ளலார் சுற்றாமல் வளைக்காமல் எளிமையாக முதற்றே என்பதை முதல் தே (தே-தெய்வம்) எனப் பிரித்துக் கொண்டால் வரும் குற்றமென்ன என்று மறு மொழியுரைத்துக் கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார். அசைநிலைக்கும் பொருளுண்டு என்பதை திருக்குறள் மெய்ப்பிக்கும் எனினும், வள்ளலார் தந்த பொருள் விளக்கம் கேட்டவரை ஆட்கொள்வதாயிற்று. உயிர்தளிர்ப்பத் தீண்டல் உள்ளார்ந்த அன்புடையாரைத் தழுவுதலால் உயிர் தளிர்க்கும் என்பார் திருவள்ளுவர். இன்பத்துப்பால் புணர்ச்சி மகிழ்தலில் உயிர்த் தளிர்ப்பத் தீண்டலை எடுத்துரைக்கும் வள்ளுவர் அவ்வினிய தோளை அமிழ்தான் அமைந்தது என்றும் கூறுவார் (1106). அக்காதற் காட்சி அன்புக் காட்சியாய் - அடியார் காட்சியாய் - வள்ளலார் வாழ்வில் மடைமாற்றமாகிச் சிறத்தல் அறியப்படுகின்றது. நாராயண ரெட்டியார் என்பார் கட்டமுத்துப் பாளையம் என்னும் ஊரைச் சார்ந்தவர். அவர் அடிகளார் மேல் அளவிறந்த அன்பராய் அவர் தம் கொள்கையில் அழுந்தியவராய் இருந்தவர். அடிகளார் திருவுடலைத் தொட்டு இன்பங் காணின் அவ்வின்பம் எத்தகைத்தாக இருக்கும் எனத் தம்முள் விரும்பியிருந்தவர். ஒரு நாள், வழிபாட்டின்போது ஓரமாக நின்றஅவரை அடிகளார் அருகில் சென்று கையைப் பற்றி ஒளி வழிபாடு செய்க எனத் திரு முன்பில் நிறுத்தினார். அவர் பெற்ற இன்பம் எல்லையற்ற தாயிற்று. தம்மைப் பொருட்டாக எண்ணித் தழுவிக் கொண்ட அடிகளார் விரும்பும் திருப்பணிக்கே தம்மை முழுதாக ஒப்படைத்து வடலூரில் வாழ்ந்தார். கல்பட்டு ஐயா இராமலிங் கருக்குப் பின்னே அறச்சாலைகளைக் கண்ணும் கருத்துமாக நடத்தி வந்தார். தம் கையை அடிகளார் தொட்டழைத்த அருமையை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்தார். பலரிடமும் வனைந்து வனைந்து உரைத்துப் போற்றினார். அவர்தம் வாழ்வு அருள் தொண்டுக்கென நீண்டமைந்து, உயிர் தளிர்ப்பச் செய்வதாய் இலங்கியது. நோற்றலின் ஆற்றல் நோற்றல் என்பது என்ன? தாங்குதல், பொறுத்தல் என்பதே நோற்றல் பொருள். துன்பத்தைத் தாங்கித் தாங்கி உரம் பெற்று விட்டால் கூற்றம் என்பது என் செய்யும்? அஞ்சுவார்க்குத் தானே சாவு! அஞ்சாதாரை, அச்சுறுத்த வந்த கூற்றுக்குத்தானே தோல்வி. உற்ற நோய் நோன்றல், துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர், கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு என்னும் தவக்குறள்களை எண்ணினால் வள்ளலார் இறுதிநிலை வெளிப்படும். கூற்றம் என்பது என்ன? உடலையும் உயிரையும் கூறு படுத்தும் (பிரிக்கும்) இயற்கை நியதி. இதற்கு அஞ்சுவார் எவர்? இயற்கை நுட்பம் அறியார் அஞ்சுவர். நுட்பமுணர்ந்த வள்ளுவர், உறங்குவது போலும் சாக்காடு எனப் பேருறக்கம் பறப்பது போல, உடற்கூட்டில் இருந்து உயிர்ப்பறவை பறக்கிறது என்றார்! நல்லுறக்கம் - தன்னை மறந்த பேருறக்கம் வரும்போது ஐயோ! உறக்கம் வருகிறதே என அலறுவார் அறிவுடையரோ! அப்படி எண்ணினால் இறப்புப் பற்றிய அச்சமுண்டாகுமா? கூற்றம் தோற்றுப் புறங்காட்டி ஓடும் நோன்பு வாழ்வை வள்ளுவர் காட்டினார்! படுக்கை அறைக்குள் முழுதுறும் உறக்கம் உறங்கப் போவார் போல ஒளிவு மறைவு இன்றி ஊரறியச் சொல்லிச் சித்திவளாகப் பெருமாளிகைக்குள் புகுந்தார்! அவர் புகவு கூற்றையும் ஆடல் கொண்ட வாழ்வு என்பதை வெட்டவெளி ஆக்கிற்று. சமரச சன்மார்க்கம் பெற்றேன்; இங்கு இறவாமை உற்றேன் என்பது அனுபவமாலை. இதன் மேல்விளக்கம் அடுத்து வரும் பகுதியில் உள்ள சித்திவளாகத்துக் காண்க. 6. வள்ளலார் நிறுவனங்களும் திருக்குறளும் சன்மார்க்கம் என்மார்க்கம் எனக் கண்டவர் வள்ளலார்; அது நன்மார்க்கம் என்பதை உறுதிப் படுத்தியவரும் அவரே. சன்மார்க்கம் என்பது மெய்(யுணர்தல்) வழி. அச்சன் மார்க்கமும் சமரச சன்மார்க்கம் என வழங்கப்படும். அச் சமரசம் என்பது பொதுநிலை ஆகலின், வடலூரார் வாய்மை யுணர்ந்த மறைமலையடிகளார், சமரச சன்மார்க்க சங்கத்தைத் தனித் தமிழில் பொதுநிலைக் கழகம் என மொழியாக்கம் செய்து கொண்டார். மறைமலை அடிகளார் பல்லவபுரத்தில் (பல்லாவரம்) சமரச சன்மார்க்க சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து நடத்தியவர் என்பதும், பின்னர் அதன் பெயரையே பொது நிலைக் கழகம் என ஆக்கிக் கொண்டவர் என்பதும் கருதத்தக்கன. வள்ளலார் முதற்கண் (1865) சன்மார்க்க சங்கம் கண்டார். அதன்பின் தருமச்சாலை (1867), சித்தி வளாகம் (1870), ஞானசபை (1871) என்பவற்றைக் கண்டார். நல்லினம் - சங்கம் ஒருவர் வாழ்வில் இனத்திற்கு மிகுந்த இடமுண்டு. ஒருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் இனத்தால் கூடும். அதனாலேயே பெரியாரைத் துணைக் கோடல் என்பதை முதற்கண் வைத்துச் சிற்றினம் சேராமையை அடுத்தே வைத்தார் வள்ளுவர் (45, 46). தக்கார் இனத்தனாய்த்தான் ஒழுகுதல் (446) இனத்தியல்ப தாகும் அறிவு (452) இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் (453) இனநலம் எல்லாப் புகழும் தரும் (457) இனநலம் ஏமாப் புடைத்து (458) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை (460) என்பவற்றை எண்ணினால் இனத்தின் சிறப்பு இனிது விளங்கும். இந்நல்லினக் கூட்டுக் கருதியே அடிகளார் சன்மார்க்க சங்கம் கண்டார் என்க. சங்கம் என்பது நல்லோர் அவையம் தானே! அறிவாளர் அவையம் தானே! அருணிலையம் - சாலை சங்கம் அறிவமைப்பு; பிறர்க்கு உதவா அறிவின் பயன் என்ன? இல்லை என்பதால் அறிவுப் பயனாம் பிறர்க்குதவும் பேரருள் நிலையமாகத் தருமச்சாலை கண்டார் வள்ளலார். அதன் திறப்பு நாள் அன்றே, பசிப்பிணி தீர்த்த பான்மை விளக்கமாகின்றது: கூடலூர் சார்ந்த துரைசாமி என்பார் அன்னதானத்திற்கு மூன்று வண்டி நெல்லும் ஒரு வண்டி காய்கறியும் ஆக நாலு வண்டி தயாராகும் எனக் குறிப்பிடுகிறார். மு. அப்பாசாமி செட்டி என்பார் (சாலை) துவக்கும்போது மூவாயிரம் சனங்களுக்குக் குறையாமல் கூடுமென்று தோன்றுகின்றது. ஆகையால், அத்தினத்தில் செல்லுகின்ற செலவு முழுவதும் இந்தத் தருமச்சாலையை அபிமானித்த நாமனைவரும் பாகம் செய்து கொண்டு செலுத்துவோமாக எனச் சுற்றறிக்கை விடுத்துள்ளார். பசித்து வருபவர்களுக்கு, சாதி சமய மத சாத்திர கோத்திர உயர்வு தாழ்வு நோக்காது எப்போதும் சாலையில் அடுப்புப் புகைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வள்ளற்பெருமான் கட்டளையிட்டருளிய வண்ணம் பசியாற்றப் பட்டு வருகின்றது என்கிறது திருவருட்பிரகாச வள்ளலார் திவ்விய சரித்திரம் (59-60). இச்சாலைப்பணி வள்ளுவர் உள்ளங்கவர் பணியென எளிதில் அறியலாமே. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்பது திருக்குறள். ஆற்றலுள் எல்லாம் உயர்ந்த ஆற்றலாவது பசியைப் பொறுக்கும் ஆற்றல். அவ்வாற்றலினும் பேராற்றல் அவ்வாறு பசித்தார் பசியை உணவு தந்து மாற்றும் ஆற்றலாம் என்னும் இது, உணவுக் கொடை, தவத்தினும் உயர்ந்த தென்பதைக் காட்டும். ஏனெனில், தவம் என்றது, உற்றநோய் நோன்றல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை யாம் தகைமைகளே. இப் பசியாற்றும் செய்கையோ, பிற உயிர்கள் ஆற்றாமல் தவிக்கும் பசிப் பிணியை மாற்றும் அமுதாம் மருந்து வழங்குவதாக இருத்தலால் என்க. இனி வள்ளுவர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்றார். நூல்வல்லார் காலமெல்லாம் ஆய்ந்து கண்ட கருத்துகள் எல்லாவற்றுள்ளும் தலைமையானது, தமக்கு வாய்த்த உணவைத் தாமே யுண்டமையாது, பலப்பல உயிர்களுக்கும் பகுத்துத் தந்து பசிதீர்க்கும் பான்மையேயாம் என்பது இக்குறளின் பொருளாம் என்க. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் அருள் தளத்தின் மேல் எழுப்பப்பட்ட ஆக்கமிக்க மாளிகையே தருமசாலை என்க. மெய்விளக்கம் சபை வள்ளலார் நிறுவிய மற்றொரு நிறுவனம் சத்திய ஞானசபை. அது சங்கஞ் சார்ந்த திருக்கோயிலாகும். சத்திய ஞான சபையின் செயற்பாட்டை சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஞானசபை என்கிறார் வள்ளலார். சபை தோன்றிய காலம் 1871. வள்ளலார் சத்திய ஞானசபையை எங்கே கண்டார்? ஊனுடம் பாலயம், உள்ளம் திருக்கோயில் என்று மெய்யுணர் வாளர் உரைப்பரே! அப்படிக் கண்டார். சத்திய ஞானசபை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டேன் என்கிறார் வள்ளலார். தம் உள்ளத்துக் கண்ட சபையை, உலகோர்க்காக வடலூர் வெளியிலே கண்டார். சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை யறிவு உண்மையன்பு உண்மையிரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய், எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சிய மாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஒரு ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து அருட்பெருஞ் சோதியாக வீற்றிருத்தலை விரித்துரைக்கின்றார். ஒளிபுக இருள் அகல்வதென, உண்மை விளக்கம் உண்டாக உள்ளொளி உண்டாகும் என்பது விளக்கம் தானே! மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரிற் றலை புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு என்பவை வாய்மைக் குறள்கள். வள்ளலார் தோற்றுவித்த வாய்மை விளக்கச் சபை, சத்திய ஞான சபை. அச்சபை வழிபாடு ஒளிவழிபாடு அன்றிப் பிறவழிபாடு அன்று. அகந் தூய்மை புறந்தூய்மை அடக்கம் அமைதி இவற்றை மூலப் பொருளாகக் கொண்டே மூலப்பொருளை - முதற் பொருளை - ஒளிவழியால் வழிபடவேண்டும் என வள்ளலார் கண்டார். அதனைப் பிறர் அறிவான் வேண்டி, ஞானசபை விளக்க விபவ பத்திரிகை என்னும் அறிவிக்கையிலே சில குறிப்புகளை உணர்த்துகிறார். இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றாற் செய்த குத்து விளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தியுடையவர்களாய் திருவாயிற் படிப்புறத்தில் இருந்து கொண்டு விளக்கேற்றி பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவர் கையிற் கொடுத்தாவது உட்புற வாயில் களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக் காலிட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்ஙனமே செய்விக்க வேண்டும். விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்கு கின்ற பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவரும், எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும், பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும்போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருக்கப்படாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற் சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆதானக் காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் இவ்வாறு சபையைப் பேணல் - சபையில் வழிபாடு நடத்துதல் ஆகியவை பற்றி வள்ளலார் திட்டவட்டமான கொள்கைகளை வகுத்தருளினார். தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்னும் குறள்களை எண்ணினால் வள்ளலார் குறிக்கும் அகத்தூய்மை புறத்தூய்மை விளக்கமாம். பன்னீரகவைக்கு உட்பட்டவர், எழுபத் தீரகவைக்கு மேற்பட்டவர் என்பதில் உள்ள குறிப்பு இயற்கையின் ஆழத்தை உணர்ந்து கூறியதாம். கரவிலா இளமைப் பருவம் முன்னது; மூதிளமை அருணிலைப் பருவம் பின்னது. அகவுணர்வு மேம்பாட்டுக்கு அகவையும் அடிப்படையாய் அமைதல் வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கும் குறிப்புகள் இவை. மனத்துக்கண் மாசின்மையே அறமென வள்ளுவர் வகுப்பராகலின் இளையரையும் மூதிளையரையும் குறித்தார். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் ஆகலின் அவற்றின் ஆட்சி இல்லாப் பருவத்தைத் தெளிந்து ஞான சபைக்குள் புகத் தகுவாரை வரம்பிட்டுக் காட்டினார். திருவாயிற் புறத்தில் இருந்து வழிபடுவார் தன்மை ஆரவாரத்ததாய் அமைதல் கூடாது என்பதில் எவ்வளவு விழிப்பாக அடிகளார் விளங்குகிறார் என்பது புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும் என்பதால் விளங்கும். ஆனால் இற்றை நிலை என்ன? வள்ளலார் வாய் மொழிப்படி வழிபாடு வழக்கில் உள்ளதா? வள்ளலார் வாழ்ந்த நாளிலேயே ஆர்வலர் எண்ணம் தடம் புரண்டது என்பதையும் வள்ளலார் தடுத்தாட் கொண்டார் என்பதையும் அறிகிறோம். வள்ளலாரிடம் சேர்ந்திருந்த கூட்டங்களில் ஒரு சிலர் தோத்திரம் செய்யும் காலத்தில் பிடில் மத்தளம் முதலியவற்றை வைத்துக் கொள்ளுதலும் ஆராதனை செய்யும் காலத்துப் பலவிதமான கோஷங்களுடன் கூச்சல் போடுதலும் பிரம்மதாளம் நகார் கண்டாமணி நாதசுரம் முதலிய ஒலிக்கருவிகளை வைத்துக் கொள்ளுதலும் செய்தனர். அவற்றைக் கண்ட நம் ஐயா அவர்கள் பெரிதும் மனம் வருந்தி அவர்களை நீங்கள் செய்யும் இக் காரியங்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு முற்றிலும் மாறானவை என்பதை நீங்கள் அறிய வேண்டும். மன நெகிழ்ச்சி யோடு ஆண்டவனுடைய தோத்திரங்களை அமைதியாக அன்போடு பாடுவதுதான் சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியத் திற்கு முற்றிலும் உடன்பாடானது என்பதையும் அறியவேண்டும்; அறிந்து இவைகளை அறவே விட்டுவிடவேண்டுவதே உங்கள் கடமை எனக் கண்டிப்பாகத் தெரிவித்தார்கள். அன்றிருந்து அவ் வீணாடம்பரங்கள் எல்லாம் அறவே ஒழிந்தன (திருவருட் பிரகாச வள்ளலார் திவ்விய சரித்திரம் 116-7). மனத்துக்கண் மாசின்மையே அற வழிபாடு என்றும், மற்றவை ஆகுல நீர (ஆடம்பரமானவை) என்றும் கொண்டவர் அடிகளார். அதனால் தூய்மை அமைதி முதலியவையே விளங்கும் வழிபாட்டு நெறியைத் திட்டப்படுத்தினார். தேங்காயைப் பலியாக உடைத்தலையும் அவர் விரும்பினர் அல்லர். இறைவரை நம் வாயினால் வாயார வாழ்த்துவது தவிரப் பிறரைக் கொண்டு வேறு மொழியில் பொருள் புரியாமல் வழிபடுதல் முறையன்று எனவும், திருமுழுக்கு, பூவணி, விளக்கணி, திருவுலா இன்ன ஆரவாரங்கள் சன்மார்க்கம் சார்ந்தவை அல்ல எனவும், அரிதிற் கிடைக்கும் பணத்தை ஏழைகளின் பசி நீக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் எனவும் அடிக்கடி மெய்யன்பர்களுக்கு வள்ளலார் அருளுரை வழங்கினார் என்பதையும் அவ்வரலாறு உரைக்கின்றது (117). ஓரன்பர் திருவிளக்குகள் நிறைய ஏற்றி வைக்க அதனைக் கண்டு, இவ்வளவு அதிகமான விளக்குகள் ஏன்? ஏதோ ஒன்றி ரண்டை வைத்துக் கொண்டு மீதியை ஏழைகளின் உணவுக்குப் பயன்படுத்தலாமே என்று வள்ளலார் கண்டித்தாராம். மற்றோரன்பர் நிரம்பப் பூக்கள் வாங்கி வர ஏன் காணும் இவ்வளவு பூக்கள்? ஆண்டவர் கேட்டாரா? இதனால் நிறைவு அடைவாரா? தும்பை அறுகு முதலியவற்றை நீரே போய்க் கொண்டு வரலாகாதா? இப்பணம் எத்தனை ஏழைகட்குப் பசியைப் போக்கும் என்று நன்னெறி புகட்டினாராம் வள்ளலார். அடிகளார் வாழ்ந்த நாளிலேயே சபையின் நடைமுறை அவர் கருத்துப்படி நிகழாமையால் சபையைப் பூட்டி அதன் திறவுகோலை அவர் உறைந்த சித்திவளாகத் திருமாளிகைக்குக் கொண்டு சென்றுவிட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் திருவுருக் கரந்த பின்னர்ச் சில ஆண்டுகள் கழித்தே சபை திறக்கப்பட்டது என்பதும் அறியத்தக்க செய்திகள். வள்ளலார் தம் கருத்துக்கு மாறுபடச் சபையின் நடவடிக்கை உள்ளது என்பதை உணர்த்திய பின்னரேனும் அவர் கருத்துப்படி நிகழலாயிற்றா? இதனை முற்குறித்த நூல் குறிக்கிறது: (வள்ளலார் கருத்துப்படி) நடந்து வந்த பூசையானது நாளடைவில் மாறுபட்டுச் சன்ர்க்கத்திற்கு விரோதமாக அபிஷேகாதிகள் நாதசுரங்கள் கொட்டு முழக்கங்கள் பேரிகை கண்டாமணிகள் அதிர்வேட்டுகள் முதலிய ஆரவாரங்களுடன் முரணான முறையில் நடந்து கொண்டு வருவதை அந்தத் திருவுளந்தான் தடுத்துச் சன்மார்க்க முறையில் நடைபெற அருளுமாறு நாமெல்லோரும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோமாக என்பது அது (119). ஆகுல நீர நிலைக்குப் போய் விட்ட சன்மார்க்க சபை பற்றித் திரு.வி.க. வருந்தி உரைக்கிறார். இராமலிங்கர் திருவுள்ளங் கண்ட அப்பெருந்தகை உரையையேனும் சன்மார்க்க உலகம் ஏற்றுக் கொண்டதா? இற்றைக்குச் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ்நாட்டில் வதிந்து மறைந்த நம் இராமலிங்க சுவாமிகள், சாதிமத வேற்றுமைகளைப் பலவுரையால் மறுத்துச் சமரச ஞானத்தை அறிவுறுத்திக் கோயில்களெல்லாம் சாதிக் கோயில் களாக மாறியது கண்டு எல்லாரும் போந்து வழிபடுவதற்கென இச்சமரசக் கோயிலை அமைத்துச் சென்றார். இங்கே யாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியில் இருக்கிறதா? ஈங்கும் சாதிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்கைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது? எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் சோதி என்று சுவாமிகள் அருளிச் செய்துள்ளார். இச்சபை அந் நோக்குடன் சுவாமிகளால் நிறுவப்பட்டது. இஃது இப்பொழுது எல்லா நாட்டினர்க்கும் எல்லா மொழியினர்க்கும் எல்லாச் சமயத்தவர்க்கும் எல்லாச் சாதியார்க்கும் பொதுவாகப் பயன்படுகிறதா? எச்சமயத்தவரும் வந்திறைஞ்சா நிற்பர் என்று தாயுமான சுவாமிகள் சிதம்பரத்தின் பொதுமை தெரிந்துப் போந்தார். இப்பொழுது சிதம்பரத்தில் எல்லார்க்கும் இடமுண்டா? தாயுமானவர் காலத்தில் பொதுவுடைமையாகக் கருதப்பட்ட சிதம்பரம், இப்பொழுது சிலருடைமையாகவே கருதப்படுகிறது. அக்கொடுமை கண்டே இராமலிங்க சுவாமிகள் இங்கு இச்சபைக் கோயிலை நிறுவினார். இதுவும் தன் பொதுமையை இழந்து நிற்கிறது. பெரியோர் கொள்கையை வீழ்த்தி அவர்தம் உருவத்துக்கு மட்டும் நம்மவர் விழாக் கொண்டாடுகின்றனர். இக் கொடுமையை யாண்டுச்சென்று முறையிடுவது? ஆண்டவனே! உன்னிடத்திலேயே முறையிடு கின்றேன். வேறு களைகண் இல்லை. என் நாட்டார்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்துவாயாக (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 34-35). 1929 ஆம் ஆண்டிலே திரு.வி..க. வேண்டிக் கொண்ட வேட்கை மொழிகள் இவை. எது சமரசத்திற்கு - பொது நிலைக்கு - என அமைக்கப் பட்டதோ அது சமரசத்தை இழந்தது. இருக்கும் சிதம்பரத்தை விடுத்து எதற்காகப் புதிய சிதம்பரத்தை (உத்தர ஞான சிதம்பரத்தை) வள்ளலார் அமைத்தாரோ அதுவும் அச் சிதம்பர நடை நடந்தால் பயனென்ன? கொலை கொள்ளை என்பவற்றை ஒழிக்கவே பாடுபட்ட பெருமான் கண்ட நிலையத்தின் நிலையே இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது? என ஏங்குமாறு ஆயிற்றே! பெரியோர் கொள்கையை வீழ்த்தி அவர்தம் உருவத்துக்கு மட்டும் நம்மவர் விழாக் கொண்டாடுகின்றனர். இக்கொடுமையை யாண்டுச் சென்று முறையிடுவது? என்று வேகின்றாரே திரு. வி.க! இந்நிலை வள்ளலார் கண்ட திருக்கோயிலை விட்டு இன்றேனும் நீங்கிற்றா? அதே தொடர்கதை! வள்ளுவர் திருக்கோயிலாகத் திகழும் திருக்குறள் கொள்கைகளுக்கும் அதே நிலை; அதே தொடர்கதை! ஒளி வழிபாட்டுக்கெனவே அமைக்கப்பட்ட அத்திருக் கோயில் ஞானானந்தவல்லி சமேத ஆனந்த நடராஜப் பெருமானும் தனிப் பெருங்கருணா நாயகி சமேத அருட் பெருஞ் சோதீவரரும் வெள்ளியம்பலநாதர் பொன்னம்பலநாதரும் எழுந்தருளியிருக்கும் தேவதானமாகிய சத்திய ஞானசபை என 1893 ஆம் ஆண்டிலேயே ஆக்கப்பட்டுவிட்டது. அடிகளார் திருவுருக்கரந்து ஒன்பதே ஆண்டுகள்! அதற்குள் இவ்வளவு மாற்றங்கள்! இது நடந்து தொண்ணூறு ஆண்டுகள் கடந்து விட்டனவே! வடலூரில் செய்யவேண்டுவன பற்றித் தவத்திரு ஊரனடிகள் உன்னிப்பாக உணர்ந்து வடலூர் வரலாற்றில் வரைகின்றார் அவற்றில் சில குறிப்புகள்: அடிகள் நிறுவிய நிலையங்கள் சமயஞ் சார்ந்தவை அல்ல. சமயங் கடந்தவை. இக்குறிப்பு, திருக்குறளுக்கும் பொருந்தும். சமயக்கணக்கர் மதிவழிக் கூறாது இது வழியென்ற பொது நூல் திருக்குறள் என்பது கல்லாடல் சொல்லாடல்! பல்கலைக்கழக நிர்வாகத்துள் - நடை முறையுள் - எங்ஙனம் அரசியல் புகுதல் ஆகாதோ அங்ஙனம் வடலூர் நிலையங்களின் நிர்வாகத்துள் - நடைமுறையுள் - சமயம் புகுதல் ஆகாது நிர்வாக அதிகாரியும் தர்ம கர்த்தர்களும் புலால் மறுத்தவர்களாயிருப்பது அடிப்படைத் தகுதியாக அமைய வேண்டும் வடலூர் ஒரு பெரிய கடவுட் பண்ணையாக இருந்த நிலைபோய்த் தொழிற் பண்ணையாக மாறிவருகிறது பார்வதி புரத்தின் வடபுறத்தே பொட்டல் காடாகக் கிடந்த வெளியை அருள் வெளியாக்கினார் அடிகள். அவ்வருள் வெளியை அப்படியே போற்றிப் பாதுகாக்க வேண்டும் திருப்பணிப் பெயரால் எம்மாற்றமும் செய்திருத்தல் கூடாது. அப்படியே, அதன் பழமையைக் காத்துத் திருப்பணி செய்திருக்க வேண்டும். வடலூரில் திருநீற்றுப் பிரசாதம் வழங்குவதை நிறுத்த வேண்டும். திருநீற்றுப் பிரசாதம் வழங்கும்வரை அது சைவக் கோயிலாகவே இருக்கும் எப்பிரசாதமும் வேண்டுவது இன்று. வேண்டுமாயின் மலர்களைப் பிரசாதமாக வழங்கலாம் - இவை ஊரனடிகளாரால் 1967 இல் எழுதப்பட்டவை. இதுவும் தொடர்கதையே! இதுகாறும் ஏற்று நடைமுறைப் படுத்தப்பட்டிலது. வள்ளுவர் வழியில் வள்ளலார் என்னும் இந்நூலில் இவ்வாய்வு மேற்கொள்வானேன் எனக் கற்பார்க்குத் தோன்றக்கூடும். வள்ளுவர் வாய்மொழி செயன் முறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே வள்ளலார் வாய்மொழியும் செயன்முறைப் படுத்தப்படவில்லை என்பதே இதனைக் குறிக்கும் கருத்தாம். வள்ளுவம் செயன்முறைப்பட்டிருந்தால் இன்று உலக மறையாக உயர்ந்திருக்கும். அனைத்துலக நாடுகளின் ஆணை நூலாகத் திகழ்ந்திருக்கும். தமிழர்தம் தகவிலா இழிநிலை, தகவார்ந்த அந்நூலை உயராவண்ணம் தடுத்துளது. வெளிப்பட்டுள்ள ஒளியும்கூட வேற்று மொழியாளர் காட்டிய ஆர்வச் சிறப்பால் ஏற்பட்டதேயாம். வள்ளலார் கண்ட பொது நிலைக்கோயில் நிலையோ அதன் நிறுவனர் உணர்ந்து உணர்ந்து தெளிந்து தெளிந்து உரைத்த உரைவழியைக் காற்றில் தூற்றிப் பரத்திவிட்டது! திருவருட்பாடல், மெல்லென ஓதி வழிபடல் தவிர்த்து வேற்று மொழி மந்திரம் ஓதி வழிபடும் பிறபிற கோயில்களின் வழிக்கே சென்றுவிட்டது. உருகிச் சொன்னவர் உண்மை நெறிகள் கருகிக் கொண்டு போவதைக் கருத்துள்ளோர் இப்பொழுதேனும் எண்ணிக் கடனாற்ற வேண்டும். செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்றார் திருவள்ளுவர். ஒன்றன் அழிவுக்கு இவற்றுள் ஒரு கெடுதலைச் செய்தாலே போதும்! இரண்டு கெடுதலும் நிகழ்ந்தால் எப்படித் தப்பும்? சித்திவளாகம் வள்ளலார் நிறுவிய மற்றொரு நிறுவனம் மேட்டுக் குப்பத்திலுள்ள சித்திவளாகத் திருமாளிகையாம். சங்கம் சாலை சபை என்னும் சன்மார்க்க நிறுவனம் மூன்றனையும் கண்டோம். இனிச் சித்திவளாகம் பற்றிக் காண்போம். அடிகளார் தனிமையை - தனிமை அமைதியை நாடினார். அதற்குத் தருமச் சாலையின் உறைவும் ஏற்புடையதாக அமைய வில்லை. ஆதலின், சித்திவளாகத்தை அமைத்தார். அங்கிருந்து கொண்டேதான் சபையையும் எழுப்பினார். ஏறா நிலைக்கு ஏறி நிற்றல் - வீடுபேற்றினும் விழுமிய தாம் நிலையில் நிற்றல் - சித்தி எனப்படும். அந்நிலையில் அடிகளார் அமைத்ததும் திருவுருக் கரந்து நிற்க வாய்த்ததும் ஆகியவை சித்திவளாகச் சிறப்பை, அதன் பெயரே விளக்கும். அடிகளாரின் நுண்ணிய நோக்கும் நூலறிதேர்ச்சியும் இப்பெயரீட்டில் விளங்கிக் கிடத்தல் அறிதோறும் இன்பம் பயப்பதாம். இதனை வள்ளலார் வாக்கால் ஊரனடிகளார் தெளிவுறுத்துகிறார்: சித்தி என்பது அருளனுபவம்; இது முத்தியினும் உயர்ந்தது. வள்ளற் பெருமான், சித்தியடைவதற்கு முத்தி ஓர்படியே என்றும், முத்தியைப் பெறுவது சித்தியின் பொருட்டே என்றும் கூறுவர். முத்தி என் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்ற அருட் பெருஞ்சோதி சித்தி என்பதுநிலை சேர்ந்த அநுபவம் அத்திறம் என்றவென் அருட்பெருஞ் சோதி நிலைமுன்னுறு சாதனம் முத்தி என்றும் நிலை சேர்ந்த அனுபவம் சித்தி என்றும் கூறுவது காண்க. சாதனமாகிய முத்தியை அடைந்தால் சாதகமாகிய சித்தியைப் பெறலாம். முத்தியை அடைவது சித்தியைப் பெறுவதற்காகவே. இதனையும் அடிகளே அருட்பெருஞ்சோதி அகவலில், புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவதென் றருளிய அருட்பெருஞ்சோதி என விளக்குகின்றனர். சித்திவளாகத்து வாழ்ந்த வள்ளலார் வாழ்வு செம்பொருள் காணும் வாழ்வாயிற்று. அது வள்ளுவர் வழியில், பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு என்பதாயிற்று. செம்பொருள் கண்டார் கூற்றினை வெற்றி கொண்டவராவர். இதனைக், கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்னும் குறளால் அறியலாம். கூற்றையும் புறங்கண்ட நிலை, பேரா இயற்கை நிலை. இதனைத் திருவள்ளுவர், ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்கிறார். இப்பேரா இயற்கை வள்ளுவரால், ஈண்டு வாரா நெறி (256) எனவும் சொல்லப்படும். சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம் என்னும் வள்ளலார் வாக்கு நிலை சேர்தலைச் சுட்டியது. அந்நிலை சேர்ந்த நிலை வள்ளுவரால் ஈண்டுவாரா நெறி பேரா இயற்கை எனப்பட்டனவாம். இதனால் வள்ளுவர் வழியின் விளக்கம் வள்ளலார் வாழ்வால் தெளிவாகின்ற தென்க. நமக்குரிய மெய்யான சார்பு எதுவென உணர்தல்; பின்னர், அச்சார்பு அல்லாச் சார்பு எதுவென உணர்தல்; அவ்வுணர்வால் சார்பு அல்லாச் சார்பை விடுத்துச் சார்புக்குரிய சார்பை அடைதல்; அச்சார்பால் மீளவும் சார்தராச் சார்பை அடையா திருத்தல். இவற்றைச், சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் என்பதால் கூறுவார் வள்ளுவர். சங்கம் சாலை சபை கண்ட வள்ளலார் சித்தி வளாகம் கண்டு பேரா இயற்கை உற்றமை இவற்றின் விளக்கமாக விளங்குவதை மேலும் விளக்க வேண்டுவதில்லை. நிறைவு வள்ளுவப் பெருந்தகையின் அருளுடைமை ஒப்புரவு மெய்யுணர்தல் தவம் என்பவற்றுக்கெல்லாம், முழுதுறு விளக்கப் பொருளாகவும் வாழ்வியற் சான்றாகவும் நின்று நிலைபெறக் காட்டுவன வள்ளலார் வாக்கும் வாழ்வும் வரைவும் எனல் கையிடைக் கனிபோல் இனிதின் விளங்கும். தமிழர் பெற்ற இப்பேறுகள் அருமையும் பெருமையும் மிக்கவை. இவற்றைக் கருதிப் பார்த்துக் கடைப்பிடியாகக் கொண்டால் பெரும்பயன் உண்டாதல் உண்மையாம். வள்ளலார் கண்ட சாகாக்கலை நினைந்து நினைந்து உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே - புறநானூறு பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது - மணிமேகலை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் தஞ்சை வள மண்ணின் வளங்களுள் ஒன்றாகத் திகழ்வது அருட்பெருஞ்சோதி ஆலயம்! நாளும் பொழுதும் கிழமையும் திங்களும் மண்ணின் வழியும் விண்ணின் வழியும் வள்ளலாரியம் பரப்பி வரும் அருள்நிலையம்! கொள்கை பரப்பு என்பது சொல்லால் அமைவதா? செயலும் சேர்வதே! செறிவதே! திங்கள் ஒன்றுக்கு ஓரிலக்கம் செலவிட்டுப் பசித்தோர் முகம் பார்த்து வழங்கிப் புசித்தோர் முகம் பார்த்து மகிழ்ந்து, தொடர்ந்து போற்றி வரும் அருளற நிறுவனம் அது. நிறுவனம், வள்ளலார் வழி வாழ்வே வாழ்வெனக் கொண்டு தாமும் தம் குடிமையும் வள்ளலாரிய வாழ்வுக்கே, ஈட்டுவ எல்லாம் ஈதலால் காட்டுவ தெனக் கொண்ட அருளாளர் தம்பையா அவர்கள்! சித்த மருத்துவச் செம்மல்! ஆன்ம நேய அருமையர்! எளியேனை வள்ளலாரியத்தில் தோய்த்து தோய்த்து பொழியச் செய்து வரும் தோன்றல்! தஞ்சை, சன்மார்க்க சபைக்கும் ஆதிபகவன் ஆலயத்திற்கும் அணுக்கராக அமைந்து எளியேனையும் அணுக்கள் ஆக்கி வரும் புகழும் வேண்டாப் புகழாளர்! பொழிவுச் செய்தி வான் பொழிவு போல் கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டில் வெளிவரப் பெருங்கொடை வழங்கிய புகழின் இருக்கையர்! அவர்தம் ஆழங்கால் பட்ட தொண்டை நினைந்து நினைந்து நேயப் பரிசிலாக இப்பதிப்பு வெளிப்படுகின்றது! இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் நூல் வரவு வள்ளல் பெருமான் வரவால் வையக வரவாகிய வளப்பொருள்கள் பல. அவற்றுள் சன்மார்க்கம், ஓதாக்கலை, சாகாக் கலை என்னும் மூன்றும் முதல் வரிசையில் நிற்பவை. அவராலேயே உலகறியக் கண்டு பரப்பப்பட்டவை. இவை மூன்றும் வள்ளுவத்தின் வழியாகத்தாம் கொண்ட தென்று வள்ளலார் குறிப்பாக உரைத்தாலும், இம்மூன்றையும் சுட்டிய அளவில், வெளிப்பட வள்ளுவர் தோற்றமுறார்! வள்ளலாரே தோற்ற முறுதல் ஒருதலை; சன்மார்க்கம் நன்மார்க்கம் அஃது என்மார்க்கம் என்று உலகறியக் குரல் கொடுத்தவரும் அதனையே வாழ்வின் கடைப் பிடியாகக் கொண்டு உலகம் உய்ய வழிகாட்டியவரும் வள்ளலாரே! அவர்தம் சன்மார்க்கம் ஆகிய பொதுமை அறநெறி உலகில் தோன்றி வராக்கால், இலகும் உலகம் கலக உலகமாகவே காட்டு விலங்காண்டி வாழ்வில் கண்ட கனிவு தானும் இல்லாமல் அழிந்தே போகும்! அணுக்குண்டு, நீரகக் குண்டு, எரியக் குண்டு என்பவை இல்லாமலே சமயம் மதம் சாதி வருணம் என்பவற்றால் அழிபட்டு வரும் அடையாளத்தாலேயே எதிர்கால உலகம் என்ன நிலைக்கு ஆட்படும் என்பது வெளிப்படும்! ஒரு சமயத்தோடு ஒரு சமயம், ஒரு சமயத்தோடு உட்சமயம், ஒரு சாதியோடு ஒரு சாதி, ஒரு சாதியோடு உட்சாதி, சடங்கு விகற்பங்கள், சார்ந்த நெறிவெறிகள், வெறியே அரசியலாய்க் கோலோச்சும் அழிபாடுகள் என்பவற்றுக்கு, உலகச் சான்றோர் ஒருங்கு கூடி ஒரு தீர்வுகாண வேண்டும் என்று எண்ணினால் - உண்மையாகவே ஆய்ந்து முடிவெடுத்தால் - அத்தூய ஒப்புரவாம் உலக நெறி வள்ளுவர் வழியில் வள்ளலார் நடைப்படுத்தி நாடறியச் செய்த பொது நெறியாம் சன்மார்க்க நெறியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை! இதனை வள்ளலார் வழிஞர் - வள்ளலார் ஆய்ஞர் - வள்ளலார் பரப்பாளர் - வள்ளலார் தொண்டே வாழ்வாகக் கொண்ட பொதுநிலைப் பொருளர் முதற்கண் உணர வேண்டும். அது வள்ளலார் பிறந்த இம் மண்ணின் மைந்தர்க்குக் கடப்பாட்டு ஆவணமாக்கப்பட வேண்டும். மண்ணின் மைந்தரை ஆளும் மக்கள் அரசு, உலகப் பேரொளியாம் வள்ளலாரை முதற்கண் நடுவண் அரசு நன்கு அறிந்து கொண்டு, தான் கொண்ட சமயச் சார்பிலா அடிப்படைக் கோட்பாட்டு மூலவராக இருந்தவரும், அவ்வழியே வழியென வையகத்துக்கு வழங்கியவரும் ஆகியவர் வள்ளலாரே என்பதை உணரச் செய்தல் வேண்டும். வள்ளலார் தம் சன்மார்க்கக் கொள்கைகள் தனிப் பெருந்திரட்டாக முறைப்படுத்தி வரைந்து மொழியாக்கம் இந்தி, ஆங்கிலம் முதலாம் மொழிகளில் செய்வதைத் தன் செம்மொழிச் செயல் திட்டங்களுள் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இச்செயல் வள்ளலார் பெருமை பரப்பும் நோக்கினது அன்று! வையகக் காப்பரணமாக அமைவது என்பதை அறவோரும் அறிவரும் அறிவுறச் செய்தல் வேண்டும். ஒரு பெரு வாழ்வின் பெருந்தகை நோக்கம், உலகம் உய்ய வழிகாட்டும் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இதனை வடலூர் அமைப்புகள் தலைமேல் தாங்கிச் செயல்படுமா? வள்ளலார் கொள்கை வழிப்பட்ட தொண்டு நிறுவனங்கள், தனித்தனித் தோன்றல்கள் தங்கள் பங்களிப்பை வழங்குதல் வாய்க்குமா? அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்! இனி வள்ளலார் தாம் பயின்ற கல்வியும் தமக்குத் தனிப் பெருந்தந்தையாரால் பயிற்றப்பட்டதாம் கல்வியும் ஓதாக்கல்வி என்பதை உறுதிப்பட மொழிகின்றவற்றைத் திரட்டிக் காட்டி அவற்றின் மெய்ப்பொருள் விளக்கமாக அமைந்த வள்ளுவர், திரு.வி.க.வியம், எம் படிப்பறிவு, பட்டறிவு, இயற்கை விளக்கம் என்பவற்றால் விளக்கம் செய்து தெளிவிப்பதாம். வள்ளலார் கூறிய ஓதாக் கல்வி நமக்கும் கைவரப் பெறுவதே என்பதைக் காட்டுவது அது. சாவாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு நுணுகி நுணுகிக் கண்டு உணரத்தக்கது. தடை விடைகள் மல்கியது நேரில் மெய்ப்பித்துக் காட்ட இயலா நெறியது. ஆனால், மெய்ம்மையில் குன்றாதது. சாகாக் கலையும் சால்புக்குக் கட்டளையாக வாழ்வார் தமக்கெல்லாம் வாய்க்கக் கூடியதே என்பதை வள்ளுவர் வழியாகவும் வள்ளலார் வழியாகவும் வையக வாழ்வார்கள் வழியாகவும் காட்டப்படுகின்றது. சொல்லால் முழக்கல் - சொல்லால் மயக்கல் - அறிவுப் பரப்பை விரித்துக் காட்டி விழிக்க வைத்தல் - புரியாமலே புரிந்ததுபோல் நடித்தல் என்பவை இடம் பெறாமல், கருதியது கருதியவாறே, கண்டது கண்டவாறே இட்டுக் கட்டுதல், இசைத்துக் கோத்தல், கற்பார் என்ன கருதுவர், முன்னை நூலர் என்ன எழுதினர், பின்னை நூலர் என்ன எழுதுவர், என்பவற்றைப் பற்றி எண்ணி மயங்காமல் மறுக்காமல், மனச்சான்றை முன் வைத்தே எழுதப்பட்டவை இவையாம்! உலக அமைதிப் புரட்சியாளர் வரிசை ஒன்று எண்ணப்படுமானால், எழுதப்படுமானால் முதல் வரிசையில் முதல் ஆளாய் நிற்க வேண்டியவர் வள்ளலாராகவே இருப்பார் என்பது வாய்மை நெஞ்சக் குரலாம்! குமுகாயப் புரட்சிக்கு ஓங்கிக் குரல் கொடுத்த சான்றோர் வரிசை பெரிது! உலகு பெற்ற உயர்வற உயர்ந்த அவ்வரிசையில் ஓரிடம் தானும் பெறாமை, வள்ளுவர் வள்ளலார் கொள்கைக் குறையன்று! அக்கொள்கையைப் பரப்பாத தமிழர் குறையே குறையாம். அதனைச் செய்தலை இன்றேனும் கொள்ளல் உலக அறப்பணியாம். என் உள்ளிருந்து கோலோச்சுவாருள் வள்ளுவர்க்கும் வள்ளலார்க்கும் தனிப் பேரிடம் உண்டு. அதன் வெளிப்பாடு என் நெஞ்சறி சான்றும் எழுத்துச் சான்றும் மட்டுமல்ல, தஞ்சைமண் என் வாய்மொழிச் சான்றையும் வளமாக அறியும். குறள் அடிகளார் அமரர் பழநிமாணிக்கனார் முன்னின்று உலகத்திருக்குறள் பேரவையும் வள்ளலார் மன்றமும் இணைந்து நடத்தும் வள்ளலார் விழாக்கள்! பலவற்றில் எளியேன் பொழிவுகள் நிகழச் செய்வித்தார்! இதுகால் அவர் வழியே வழியெனக் கொண்ட அருமைத் தோன்றல் பழ.மாறவர்மனார் அத்திருத்தொண்டில் தொடர்ந்து துலங்குகிறார். பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய பெருமகனார் அருட்பெருஞ்சோதி நிறுவனம் - அகத்தியர் ஆலயம் - நிறுவனர். அருள் தொண்டர் மரு. தம்பையா அவர்கள், பல்கால் வள்ளலார் வழியில் ஊறித் திளைத்து யான் உரையாற்ற உதவியுள்ளார். அவரை நேயத்தால் நினைந்து நினைந்து மகிழ்கிறேன். எனக்கமைந்த இயல்பான வள்ளலாரியத்தை மேலும் வளமாக்கிய இப்பொழிவுகளின் திரட்டுக் கொடையே, இதுகால் வெளிப்படும் முச்சுவடிகளும் ஒரு சுவடியாம் சுவடி! இதனைத் தஞ்சை மண்ணில் வெளியிடுதலே தக்கது என்னும் என் உணர்வால், தமிழும் வள்ளுவமும் வள்ளலாரியமும் சிறக்கத் தம் வாழ்வை முழுதுற ஒப்படைத்துத் தந்தை வழிநிற்றல் மைந்தரின் கடனெனக் கொண்ட மாறவர்மனார் தம் தந்தையார் நினைவு வெளியீடாக வெளியிடுவதற்கு மகிழ்ந்து, நன்றி கூறியும் வாழ்த்தியும் நூலாக்கப் பொறுப்பை அவர்க்கு வழங்கி மகிழ்கின்றேன். இன்பமே சூழ்க. இரா.இளங்குமரன் 08.10.2007 1. வள்ளலார் கண்ட சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு தோற்றம் ஒடுக்கம் அரும்பு, முகை, மொக்கு, மலர், அலர், வீ, செத்தை, செதும்பு என்பவை மலரின் பல பருவ நிலைகள். தளிர், துளிர், கொழுந்து, முறி, இலை, பழுப்பு, சருகு என்பவை இலையின் பல பருவ நிலைகள். கரு, பீள், குழவி, மக, பைதல், குமரம், கட்டிமை, வாலியம், முதுமை, பெருமுதுமை என்பவை மக்கட் பிறவியின் பல்வேறு நிலைகள். இவை எங்கும் என்றும் இயற்கை வளர்நிலையாய் அமைந்து காணக்கிடப்பவை. தோன்றுவன வெல்லாம், வளரும் முதிரும் முற்றும் முடியும் என்பதை அறியக் காட்டுவனே இவை. ஓரறிவு முதல் ஆறறிவு உயிரி வரை தோற்றமும் மறைவும் ஆகிய மாறும் இயற்கையை மாறாது கொண்டவை என்பதை விளக்குவன. நிலையாமை இந்த உலகம் நிலையாமையை நிலைபேறாகக் கொண்டது. நில்லா உலகம் புல்லிய நெறித்தே - தொல்காப்பியம் நில்லாத வற்றை நிலையினை என்றுணரும் புல்லறி வாண்மை கடை - திருக்குறள் நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு - திருக்குறள் நின்றான் இருந்தான் கிடந்தான் தன்கேளலறச் சென்றான் - நாலடியார் மணமகனே பிணமகனாய், மணப்பறையே பிணப் பறையாய் - திருவிளையாடல் இக்காட்சியைக் கண்கூடாக்கி வருகிறது - இந்நாள் தெருவிளையாடல்கள். எற்கண் டறிகோ எற்கண் டறிகோ என்மக னாதல் எற்கண் டறிகோ - என்பது சிதைவுற்றுக் களத்தில் கிடக்கும் மகனைக் கண்டு அரற்றும் தாயின் அவலக்குரல் கல்நின்றான் எந்தை : கணவன் களப்பட்டான் : முன் நின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி, எய்போற் கிடந்தான்என் ஏறு - என்பது மறக்குடி மங்கையின் வீறு. தீப்பாய் அம்மை கோயிலும் வழிபாடும் நாடறி செய்தி கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் எனக் கோப் பெருந்தேவி, கோவைத் தழுவி உயிர்விட்டது சிலப்பதிகாரச் செய்தி. துறந்தார் பெருமை எவ்வளவினது? இது வினா. இறந்து போனவர் எண்ணிக்கை எவ்வளவினது? அவ்வளவினது -இது வள்ளுவர் விடை. அமரர் போர்க்களம் சென்று மாண்டவர் அமரர், அமர் = போர். அமரர் = போர்க்களத்தில் இறந்தவர் இயல்பாக வீட்டில் இருந்து இயற்கை எய்திய, தாய், தந்தை, பாட்டன் பாட்டி, பூட்டன் பூட்டி, ஓட்டன், ஓட்டி, சேயோன், பழையோள் என்பார் இல்லுறை தெய்வம். பொது நலத்திற்கு உயிரீந்த ஈகர், ஊரும் நாடும் உவக்க நடுகல்லாகிப் பீடும் பெயரும் எழுதி வழிபடப்பட்டமை, பொது வழிப் புகழ். குடும்ப நலத்திற்கு வாழ்ந்து இயற்கை எய்தியவர் குடும்ப விளக்காகி, நாள் வழிபாடு பெற்றனர். இளமை நிலையாது, வளமை நிலையாது, உடல் நிலையாது என்பவை நாளும் பொழுதும் நாம் காணும் காட்சிகள்! இவை சமயக் கோட்பாடுகள் ஆகின. நிலையா உலகில் நிலைபெற வழிகாணுங்கள் எனத் தூண்டின சமய நூல்களும் நெறி நூல்களும், குருவர் உரையும் அதுவே ஆயின. காஞ்சித் திணை என்னும் தமிழ்நெறிப் புறத்திணையும் அதுவேயாம். மனைவியை இழந்தான் கொள்ள வேண்டும் துறவின் பெயர் தபுதாரம். கணவனை இழந்தாள் கொள்ள வேண்டும் துறவின் பெயர் தாபதம் இவை தொல்காப்பியம். ஒரு தாய் புத்தர் வரலாற்றில் இடம் பெற்றதொரு நிகழ்ச்சி. உண்மையை உறுதியாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொள்ள வாய்த்த அருமையது அது. தன் ஒரே மகவை இழந்த தாய், புத்தர் பெருமான் முன் தன் இறந்த மகவின் உடலோடு நின்றாள். பெரும! இம்மகவு இறந்தது; தாங்கள் அருள் புரிந்தால் இம்மகவு எழும் என்று வேண்டினார். அத்தாயின் அவலமுணர்ந்த பெருமான் அவள் வழியாகவே அவள் உணருமாறு, அம்மா, உன் மகவை எழுப்பித் தருவேன். ஆனால், அதற்கு ஒரு பொருள் வேண்டும். கொஞ்சம் கடுகு வேண்டும். அந்தக் கடுகு இதுவரை எவரும் சாகாத வீட்டில் இருந்து வாங்கியதாக இருக்க வேண்டும் என்றார். உடனே வாங்கி வருவதாகப் புறப்பட்டாள் தாய். அவள் அவலம் அறிந்தோர் கடுகு தந்தனர். அவள், இவ்வீட்டில் எவரும் இறந்திலரோ என்று வினாவிய வினாவுக்கு என்ன சொல்வர்? தத்தம் வீட்டு இறப்புகளை உரைத்தனர். சாவு இல்லா வீடு உலகில் இல்லவே இல்லை என்பதை அவளே உணர்ந்து கொண்டு மீண்டும் புத்தரை அடுத்தாள். அம்மா! பிறந்தார் அனைவரும் இறந்தே ஆவர். இறவார் இல்லா வாழ்வு இல்லை என்பதை நீ உணருமாறே இது செய்தேன். எதை நீ உணர வேண்டும் என நினைத்தேனோ அதை உணர்ந்தாய் எனத் தேற்றி அனுப்பினார். பிறந்தவர் அனைவரும் இறந்தே ஆவர் என்பதால்தான் சங்கச் சான்றோர், நினைக்கென வரைந்த எல்லை (நினக்கென அமைந்த காலம்) நலமுற வாழ்க என வாழ்த்தினர். வேட்கை சாவா வாழ்வு - இறவா நிலை - வேண்டும் என வேட்கையுடையராகப் பலர் இருந்தனர். இவர் இவர் என்றும் இறவா நிலையர் என எண்ணவும் பட்டனர்! உடலோடு உயர்வான் புக, வேள்வியால் கூடும் எனவும் கூறிக் கொண்டனர்! சொல்லளவால் முழக்கப்பட்டவை அல்லாமல் இவை காட்சியள வால் மெய்ப்பிக்கப்பட்டனவா? என வினவின் விடை என்ன? உடலும் உயிரும் உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - என்பது தமிழ் மந்திரம் தானே! உண்டி உல்லாமல் உயிர்வாழ்வு இல்லை என்பதால் தானே, உண்டி கொடுத்தோர்உயிர்கொடுத்தோரேஎனப்பட்டனர்(மணிமே.11..96) உயிரின் மதிப்புக்கு முற்பட்டது, உண்டியின் மதிப்பு அல்லவா! உண்டியின் மதிப்புச் சான்றுதானே, அமுத சுரபி! ஆபுத்திரன் பெருமை, மணிமேகலை பெருமை, அமுத சுரபிப் பெருமை என்றால், அமுதரசுரபிப் பெருமையே சோற்றுப் பெருமைதானே! சோற்றுக் குள்ளே உள்ளான் சொக்கப்பன் (இறைவன்) என்னும் பழமொழி கேளாததா? பசி பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்னும் பழமொழி கூறும் பத்தும் எவை? மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம் - என்பது நல்வழி (27). பசியின் கொடுமை என்ன? ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது - இதுவும் நல்வழியே (13). பசி துயரா! நோய்; பிணி! பசியென்னும் தீப்பிணி: பசிக்கு உணவு வழங்குவோர் மருத்துவர்! அவர் பசிப்பிணி மருத்துவர்! அவர் பசிப்பிணி என்னும் பாவியது தீர்க்கும் மருத்துவர்! - இவை புறநானூறும், மணிமேகலையும் கூறுவன. பசிப்பிணி தீர்த்தோர் புகழே புகழ்: மணிமேகலை இசைக்கின்றது: குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புனை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் óண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பá¥ã என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது (11:76-81) உலகத்து நூலார் உரைத்தவற்றை யெல்லாம் ஒருங்கே திரட்டிப் பார்த்து ஓர் அறம் கூறுக என்றால், அவ்வொன்று பசிப்பிணி தீர்த்தலாம் அறமே என்கிறார் திருவள்ளுவர். அது, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பது (322). ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்பதும் அற்றார் அழிபசி தீர்த்தல் (226) - என்பதும் திருக்குறளே. பசித்துயர், பசிநோய், பசிப்பிணி-தாங்கா முடினவன் ஒருவனைத் திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் என்கின்றது மணிமேகலை (11:87). ஏன்? அரும்பசி களைய ஆற்றுவது காணான் என விடையும் தருகின்றது. துறவன்-முனிவன்-உற்றநோய் நோன்றலாளன்-அவன் நாயூன் தின்றான் எனின், பசிக் கொடுமை மட்டும் தானா காரணம்? இல்லை! உயிர் மேல் இருந்த பற்று! சாவின் மேல் இருந்த அச்சம்! சாவு கொடுமையில் எல்லாம் கொடுமையான துயராகத் தோன்றுவது சாவு! இது பொய்யாமொழி! சாதலின் இன்னாதது இல்லை என்கிறது அது (230). சிலர் சாவைத் தாமே ஏற்கின்றனரே, வலிய ஏற்கின்றனரே எனின், வாழ்வுக் கொடுமை சாவை விரும்பி ஏற்க வைக்கின்றது என்பதே பொருளாம். விளக்கின் விரிவுறும். பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே என ஆயிரம் சொன்னாலும் (மணிமே. 24:103-104), ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும் என எடுத்துக் காட்டினாலும், செத்தாரைச் சாவார் சுமப்பார் என்பதை நேரில் கண்டாலும், சாதல் துயர்க்கு இணை சாதல் துயரேயாம். உயிரின் மதிப்பு உயிரின் மதிப்புக்கு இணை உயிரின் மதிப்பே. எத்தனை நோயுற்றாலும், எத்தனை வறுமைக்கு ஆட்பட்டாலும், எத்தனை இழிமைக்கு ஆளானாலும் உயிர் இருக்கும் வரை அவனை/அவளை/ சவம் பிணம் என்னார், புதையார்! எரியார்! எவ்வளவு வளமான உடலர், செல்வர், பதவியர், பெருமையர் எனினும் உயிர் போனபின், பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு எரிப்பர்! புதைப்பர்! அடக்குவர்! கோடியைக் கொண்டு போனாலும் போ, என் உயிரைக் கொள்ளாமல் போனால் போதும் என்னும் நிகழ்வுகள் இல்லையா? வழிவழியாய்த் தேடிய உடைமைகளை எல்லாம் இழந்து கட்டிய உடையோடு, எல்லாம் இழந்தும் உயிரை இழக்க விரும்பாராய் வருவார் இலரா? இன்னவரைக் காணுங்கால் உயிரின் மதிப்பும், இறப்பின் கசப்பும் ஒருங்கே புலப்படும் அல்லவோ! நோற்றலின் ஆற்றல் மெய்யுணர்வு, நாவுணர்வு, மூக்குணர்வு, கண்ணுணர்வு, செவியுணர்வு, மன உணர்வு எனப் படிப்படியே விளங்கி, விரிந்து, நரை திரை மூப்பு ஏற்பட்டு, உடல் தளர்ந்து சுவையும் பார்வையும் கேள்வியும் படிப்படியே தேய்மான முற்று உணர்வு தடுமாறி நினைவு இழந்து போகும் இயற்கையை உணர்ந்து அமைந்து ஒடுங்கியவர் இடம், ஊரவர் கூடி வழிபடும் ஒடுக்கங்களாக, திருமடம் திருக்கோயில்களாகத் திகழ்வதும் கண்முன் காண்பவே யாம். அவர் சாவுக்கு அஞ்சாமை ஏன்? சாவை எதிர்கொண்டமை எதனால்? அவர் இயற்கை அறிவர்; இயற்கை வாழ்வர்; இயற்கை இறைமையில் தோய்ந்தவர்; அவர்க்குச் சாவு அச்சப் பொருள் ஆவது இல்லை! சாவுக்கு அஞ்சாதவரைக் கண்டு, சாவு அஞ்சுகிறது; அவர் முன் நிற்க ஆற்றாது ஓடுகிறது. அந்நிலையே, கூற்றம், தோற்றுக் குதித்து ஓடும் நிலை இதனை வள்ளுவம், கூற்றம் குதித்தலும் கைகூடும்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்று கூறும். அல்லல் அருளாள்வார்க்கு இல்லை என்றும் அறுதியிட்டுக் கூறும். துன்பத்திற்குத் துன்பம் செய்யவும் இடும்பைக்கு இடும்பை ஆக்கவும் வல்லார் அவர்! இன்பத்திற்கு இன்பம் விரும்பார், துன்பத்திற்குத் துன்பம் உறார் அவர் உள்ளம் அவா அறுத்த உள்ளம்! நிலைபெற்று மலை போலும் உள்ளம்! அது பேரா இயற்கைப் பெருமையது? பானையை வீசிஎறிந்து பாறையை உடைக்க முடியுமா? கோழி முட்டையால் குன்றம் சிதையுமா? காலா என் காலருகே வாடா என்னும் வீறுடையான்முன் காலன் அச்சம் உண்டா? நஞ்சு தானே! இன்னும் எவ்வளவு குடிக்க வேண்டும்; கொண்டு வா என்பானை இறப்பு நெருங்குமா? அஞ்சினால் தானே நஞ்சு! நஞ்சே அமுது ஆனால், பொருள் என்ன? அஞ்சாப் பெருமிதம் அது! ஐயோ கொல்கிறானே ஐயோ கொல்கிறானே - இது கோழையின் குரல்! தின்னவரும் புலிதன்னையும் அன்பொடு நோக்கல், - இது ஆளுமை வெற்றி! சாகத் துணிந்தவனுக்குக் கடலும் காலளவு அஞ்சியவனைக் குஞ்சும் வெருட்டும்! - பழமொழிகள் அச்சம் செத்துப் போனவன் மட்டுமே அச்சப் பொருளில்லை! செத்துப் போனவன் செத்த இடமும் அச்சம்! அவனைப் புதைத்த இடமும் அச்சம்! பேயச்சம்! பேரச்சம்! அச்சமே பிறப்பானது அது! அரசன் அதிவீர ராமன், அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்று என்றான். அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை என்றார் பாரதி. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றார் வள்ளுவர் அச்சம் எங்கே இருந்தது? mŠrhik v§nf ïUªjJ?- இரண்டும் உள்ளத்தே தான் இருந்தன. உள்ள உறுதியே உறுதி உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; வெறுக்கை=செல்வம் உள்ளம் உடைமை உடைமை உடையர் எனப்படுவது ஊக்கம் இவை வள்ளுவம். பூதஉடல் புகழ்உடல் மண் நீர் தீ காற்று விண் என்னும் ஐம்பூதச் சேர்க்கையால் அமைந்தது உலகம். உயிரிகளின் உடலும் அவ்வைம்பூதக் கலப்பால் அமைந்தது பொறிபுலன்களைத் தாங்கி வாழ்கின்றது. பூதங்களால் அமைந்த உடல் பூதஉடல். அப்பூத உடலொடு உயிர் கூடி நின்று செய்த செயல்களின் வழியாக அடைந்த புகழ்ப் பேற்று உடல்-உருவ உடல். உருவ உடல் வழியாகப் பெற்ற அருவ உடல்-புகழ்உடலாகும். அவ்வுடல் பூதஉடல் போல் அழிவுடையது அன்று. நிலைபேறானது. அதனால், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்றில் (233) என்றது திருக்குறள். ஓரியற்பட அமையாத உலகத்தில் உயர்ந்த புகழ் ஒன்றுமே அல்லாமல், அழியாது இருப்பது எதுவும் இல்லை என்பது இதன் பொருளாம். ஆதலால், அழிவதாம் பூத உடலைக் கொண்டு, என்றும் அழியாப் புகழ் உடலைப் பெறுதல் வேண்டும் என்க. புகழ்ப்பேறு, உயிர்க்கு ஊதியப் பேறாகும். அது, ஈகையால் கிட்டுவதாகும். தாம் கொண்ட உடலால் தேடிய பொருள்களால் மட்டுமன்றித், தம் உடலையும் பிறர்க்கெனவே வழங்கும் ஈகத்தால் விளைவது அது என்பதை, ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று விளக்குகிறது திருக்குறள் (231). ஈதல் உண்டானால் இசை(புகழ்) பட வாழ்தலும் உண்டு என இருமையும் ஒருமையாய் நிகழ்வதைத் தெளிவித்த சிறப்பை எண்ணினால், பூத உடலோடேயே புகழுடற் பேறும் தொடங்கி விடுதல் புரியும். வாழும் போதே அடையும் பெருமை ஒளி எனப்படும். thœÉ‹ ã‹d® miltJ ‘òfœ! ஒளி ஒரு கால எல்லை அளவில் நிற்பது. புகழோ, கால-இட-எல்லை கடந்தது என விளக்கமாகின்றது. பிறவிநோக்கு, உயிர்க்கு ஊதியமாம். புகழ்ப் பேறு எய்தி, என்றும் அழியா நிலைபேறு உறுவது என்பது தெளிவாம். ஒருவர் புகழ் பெறவும், மற்றொருவர் இகழ் உறவும் வாழ்கின்றனரே எனின், முன்னவர் பிறவி நோக்கும், அப்பிறவிப் பயனும் உணர்ந்தவர். பின்னவர் பிறவி நோக்கும் அப்பிறவிப் பயனும் உணராதவர், அவரவர் புகழுக்கும், இகழுக்கும் அவரவரே பொறுப்பாளர் அல்லாமல், பிறர் பொறுப்பாளர் அல்லர் என்பதை வள்ளுவர் தெளிவிக்கிறார். அது, புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்? என்பது (237) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பது (500) காண்க. வித்தகர்: தக்கார், வாழும் வாழ்வாலே தாம் தக்கார் என்பது புலப்பட வாழ்கிறார். வறுமை வந்தால் பலர் நெறிதவறுகிறார்; கொள்கை வழுவுகிறார்; குறைகளில் விளையாடுகிறார். ஆனால் தக்கார், வறுமையுற்றால் அவ்வாறு நிலையில் கீழே இறங்கு கிறாரா? சங்கு இருக்கிறது; வெண்ணிறமானது; முத்துக்கு உறைவிடமானது. அச்சங்கு, சுடப்படுகிறது நூறாக-தூளாக-சுடப்படுகிறது. சுட்டது கரியாகுமே! சங்கு கரியாயதா? கருகியதா? வெளுத்தது-சுடச்சுட மேலும் மேலும் வெளுத்தது. அதுபோல் தக்கோர்க்கு எத்தகு வறுமை வாட்டினாலும் தம் நிலைத்தளர்வு வாராது. அவர் மேலும் தக்கோராகவே திகழ்வர்! அம்மட்டோ! அத்தக்கோர், இயற்கை எய்துகிறார்! அவ்வியற்கை தகவிலார் இயற்கை எய்தியது போல வாளா ஒழிகின்றதா? இல்லை! அசைக்கின்றது! அசைக்கின்றது! தக்கோரை எல்லாம் அசைக் கின்றது. அத்தக்கோர் வழியைப் பற்றி நடக்க பாரெல்லாம் பரப்பத் தூண்டுகின்றது. ஒருவர் மறைவு உயர்ந்தோரை எல்லாம் - உலகை எல்லாம் - அசைக்கும் திறம் எப்படி பெற்றது? அவர் தக்கோராக இருந்த தகவே அவராகச் சார்ந்தாரை எல்லாம், சார்வாரை எல்லாம் சார்ந்து நிலைபெற்றது. ஒரு வித்து, உயர்வித்து! மண்ணில் விழுகின்றது! இயற்கை அவ்வித்தை முளைக்கச் செய்கிறது. முளை-செடியாய்-மரமாய் ஆகின்றது! ஒரு வித்து பருவந்தோறும் காய்த்துக் கனியும் கனிகளைப் பல்லாயிரமாகத் தருகின்றது; தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது. ஒரு நெல்மணி, வித்தாக இருந்து முளைக்கின்றது. பத்து இருபது நாற்பது எனப் பண்ணையாகின்றது. கதிருக்கு நூறு ஆயிரம் என நெல் மணிகளைத் தாங்கி நின்று உலகுக்கு உயிர்ப் பொருளாகத் திகழ்கின்றது. வாட்ட வாட்ட வறுமை வந்தாலும் வாடா ஒளி யும், செத்தாலும் ஆயிரம் ஆயிரம் பிறப்பாய்த் திகழும் புகழும், எல்லார்க்கும் வாய்க்குமா? வாயாது! ஆதலால், நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது என்றார் திருவள்ளுவ வித்தகர். வித்தகர் ஆவார், வித்தின் தன்மை அமைந்தவர். புத்தரும் வர்த்தமானரும் கிறித்துவும் நபியும் வள்ளுவரும் வள்ளலாரும் பிறரும் வித்தகப் பேறு பெற்றவர்! சித்தர் வித்தகர் மனமாசில்லா அறவர்; அருளாளர்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் அந்தண்மையர். அவர் தமிழ் மண்ணில் சித்தர் என வழங்கப்பட்டார். சித்தர் என்பார் சித்தத்தே மாசில்லாதவர், இத்தன்மை யுடையார் மானிட உருவில் இருந்தாலும் தெய்வ நிலையர்! இது, சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் என்னும் மணிவாசகத்தாலும், சித்தன் போக்கு சிவன் போக்கு என்னும் மக்கள் மொழியாலும் விளங்கும். உலகவர் நலம் கருதிய சித்தர் கொடைகள் அளப்பரியன, அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சித்தமருத்துவம். சித்தர்கள், தம்மையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு ஆய்ந்து கண்ட மருத்துவம் அஃதாம். சித்தர்கள் பதினெண்மர் என்பது ஒரு கணக்கு. சித்தர் பாடற்றிரட்டு மருத்துவ நூல்கள் என்பவற்றை நோக்கினால் இவ்வெண்ணிக்கை மிகுகின்றது. ஊரும் பேரும் உரையா நெறியராகச் சித்தர்கள் வாழ்ந்தமையால் அவர்களைப் பற்றிய புனைவுகள் பின்னவர்களால் பெருக வழங்கலாயின. எனினும், அவர்கள் ஒடுக்கங்கள் ஆங்காங்கு இருத்தலைக் கொண்டும் அவர்கள் பாடல்களைக் கொண்டும் சில செய்திகளை அறிந்து கொள்ள வாய்க்கின்றது. சித்தர் பெயர்களும் அவர் தொடர்புடைய இடங்களுமாக வழங்குபவை: சித்தர் இடம் அகத்தியர் பொதியமலை அகப்பேய்ச் சித்தர் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) இடைக்காட்டுச் சித்தர் திருவண்ணாலை இராம தேவர் அழகர்மலை கருவூர்த் தேவர் கருவூர் கமலமுனி திருவாரூர் குதம்பைச் சித்தர் திருக்கழுக்குன்றம் கொங்கணமுனி திருப்பதி சட்டைமுனி திருவரங்கம் சுந்தரானந்தர் மதுரை தன்வந்திரி வைத்தீசுவரன் கோயில் திருமூலர் சிதம்பரம் நந்திதேவர் சீர்காழி பட்டினத்தார் திருவொற்றியூர் பதஞ்சலி முனிவர் இராமேசுவரம் பாம்பாட்டிச் சித்தர் திருக்கடவூர் போகர் பழனிமலை மச்ச முனி திருப்பரங்குன்றம் வான்மீகி எட்டி குடி இச்சித்தர்களின் ஒடுக்கங்கள் சில உள்ளமையும், தனி வழிபாட்டு நிலையங்களாக இருப்பதையும் காணலாம். சித்தர் ஒடுக்கங்கள் சிவலிங்க வழிபாடாக நிகழ்தலும் அறியத் தக்கது இறைநிலை எய்திய இவர்கள் இன்றும் வாழ்வாராகவே மக்களால் எண்ணிப் போற்றப்படுகின்றனர். இனி, அறநூல்கள் சிலரைச் சாவா உடம்பினர் எனப் பாராட்டுதல் அறியத் தக்கது. சாவா உடம்பினர் : எக்காலும் சாதல் உறுதியே என்கிறது அறநெறிச் சாரம் (119) சாவாத இல்லை, பிறந்த உயிரெல்லாம் என்கிறது நான்மணிக்கடிகை. (79). திரிகடுகம், மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும்-உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய் தினார் என்கிறது (16). வான் (உயர்ந்த) புகழ் நட்டான் சாவான் சாகமாட்டான் நன் மனைவியுற்றான் சாவான்; உண்ணுநீர்க் கேணி தோண்டி உதவினான் சாவான் எனப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றது. அன்றி, சாவான் என்னாமல் சாவா உடம்பு எய்தினார் என்கிறது. அவ்வுடம்பு பூத உடம்பு அன்று; புகழ் உடம்பு என்பது தெளிவாம். புகழுடம்பு உண்டாகும் வகையையும் அவ்வுடம்பு பரவி நிலைபேறு ஆதலையும் ஏலாதி இயம்புகிறது (63) ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் பேணொடும் எண்ணும் எழுத்துமிவை - மாணொடு கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈந்தார் இம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து என்பது அது. கேட்டும் எழுதியும் ஓதியும் பயிற்சி பெறுவார்க்கு (மாணவர்க்கு) ஊண், உடை, எழுத்தாணி, புத்தகம், மேலும் வேண்டுவவும் எண், எழுத்து என்பவற்றையும் உதவி வாழ்பவர் புகழை உலகம் தேடி வந்து எழுதும். அப்புகழுக்கு உரியவராக அவர் வாழ்வார் என்பது இப்பாடற் பொருள். இனிப் பூத உடம்பு அழிதலையும் புகழுடம்பு அழியாமையையும் நீதி நெறி விளக்கம் விளம்புகிறது. படைத்தற் கடவுள் தந்த உடம்பு பூத உடம்பு; படைக்கும் புலவன் தந்த உடம்பு புகழ் உடம்பு; புலவன் படைத்த உடம்பு போல், படைத்தற் கடவுள் படைத்த உடல் நிலை பெறாது என்கிறது. அது, கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு என்பது (7) புகழுடம்பு கருதியே சான்றோர் பூத உடம்பு தாங்குவரேயன்றி, மற்றை வகையால் தம் உடம்பைப் பேணுவார் அல்லர் என்பதையும் அந்நீதி நெறிவிளக்கம் கூறும். களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடையது ஊனுடம் பென்று புகழுடம்பு ஓம்புதற்கே தானுடம்பு பட்டார்கள் தாம் என்பது அது (40). புகழுடம்பு பற்றிக் கருதாமல் பூத உடம்பு பேணுதல் கருத்தாகி வாழ்தல் உயிர் வாழ்வன்று, நடைபிண வாழ்வு எனவும் பழிக்கிறது நீதிநெறி விளக்கம் (31) முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப துண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிகொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம் என்பது அப்பாடல் மூப்பையும் பிணியையும் முன்னேவிடுத்துப் பின்னே கூற்றுவன் உயிரைக் கொள்ளையிட வருவான். அவனைத் தடுக்க வல்லது ஒன்றே ஒன்று; அது, அற அரணம்; பிற அரணம் அவனைத் தடுத்து நிறுத்தா என்று, அறநெறிச் சாரம் கூறுகின்றது (21). மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து கூற்ற அரசன் குறும்பெறியும் - ஆற்ற அறவரணம் ஆராய்ந்து அடையின் அஃதல்லால் பிறவரணம் இல்லை உயிர்க்கு என்பது அப்பாடல். அறத்தைப் பேணிக் காத்தால் உயிர்க்கு அவ்வறமே அரணாக நின்று புகழால் நிலைபெறுத்தும் என்பது கருத்தாம். இனிப் பூத உடம்பு நிலைபெறக் காண்கிறோமா எனின் இல்லை என்பதே மறுமொழியாம். உலகச் சிந்தனை எல்லாம் ஒருங்கு திரண்டிருந்த பெருமையர் புத்தர் என்பர், விவேகானந்தர். அப்புத்தர், நிர்வாணம் பற்றிய வரலாறு உலகறிந்தது. அவர் நகம், பல் முதலியவற்றை வழிபாட்டுப் பொருளாகக் கொண்ட பௌத்த சமய உலகம் புகழுடம்பைப் போற்றுவதை அன்றிப், பூத உடம்பைக் கண்டதும் கொண்டதும் இல்லையே! இலெனினார் உடல் போற்றி வைக்கப்பட்டுள்ளது. தோமசு முனிவர் உடலும் காக்கப்படுதல் உண்டு. ஆனால், அவை இயக்கம் உடையவையா? மருத்துவ ஆய்வுக்குத் தம் உடலைச் சேமிப்பாக்கிடத் தந்தை கூறியவாறு, மக்கள் மருத்துவ மனையில் வழங்கினர். எம் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். முதற்கண் வழங்கிய நிலையில் உடல் காணப்படவில்லை முதலாண்டில், மூன்றாம் ஆண்டில், சிறிதும் அடையாளம் காணமுடியவில்லை! மரண மிலாப் பெருவாழ்வோ அழியா நிலையோ உடலுக்கு இல்லை என்பது விளக்கியாக வேண்டியது இல்லை. மணிமேகலையில் வரும் ஒரு காதை சக்கரவாளக் கோட்டம் உரைத்தது என்பது (6) அதில், சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும் பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும் இன்னா இசையொலி என்றுநின் றறாது என்கிறது (66-74; 79). சக்கரவாளக் கோட்டம் என்பது சுடுகாட்டுக் கோட்டமாம். கோட்டம் = கோயில். மாந்தர் வாழ்நாளையும் வீழ்நாளையும் இறப்பு அவலங் களையும் கபிலர் அகவல் விரிக்கின்றது : மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை ஐம்ப திரவில் அகலும் துயிலினால் ஒட்டிய இளமையால் ஒரைந்து நீங்கும் ஆக்கை இளமையால் ஐம்மூன்று நீங்கும் எழுபது போகநீக் கிருப்பன முப்பதே... நாளை நாளை என்பீர் ஆகில் நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர் நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர் எப்போ தாயினும் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான்; பொருளொடும் போகான்; சாற்றவும் போகான்; தமரொடும் போகான். நல்லார் என்னான்; நல்குர வறியான்; பொல்லார் என்னான்; செல்வரென் றுன்னான்; தரியான் ஒருகணம்; தறுக ணாளன்; உயிர் கொடு போவான்; உடல்கொடு போகான்; என்பது அது. கபிலர் அகவல் மேலும் குரல் கொடுக்கிறது; ஏதுக் கழுவீர் ஏழை மாந்தர்கள் உயிரினை இழந்ததோ? உடலினை இழந்ததோ? உயிரிழந் தழுதுமென் றோதுவீர் ஆகின் உயிரினை அன்றும் காணீர்; இன்றும் காணீர்; உடலினை அன்றும் கண்டீர்; இன்றும் கண்டீர் என்கிறது. இச்செய்திக்கு முன்னோடியானது மணிமேகலை : உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே! உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் என்பது. இதில், உயிர் தன் வினைப்பயனால் ஏதோ ஓர் உடலகத்துள்ளது. அதனைக் காணற்கியலாது. காணற்கில்லா அதனைக் கண்டு உதவ வேண்டும் என்றால், எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. உடல் அழிவது போல் உயிர் அழியாது: ஆனால் அதனைக் காணவோ காட்டவோ முடியவும் செய்யாது என்பது உணர்த்தப்படுகிறது. இறை உயிர்தளை : இறை, உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் அழியாதவை என்பது சிவனியக் கொள்கை. இதன்படி பார்த்தால், எவ்வுயிர்க்கும் பொதுவாம் இயற்கை தானே இது. அரிதின் முயன்று பெறக் கூடியது என்பதற்கு இடமில்லையே. அதனை வேண்டிப் பெற வேண்டுவதென்ன? வேண்டினும் வேண்டாவிடினும் உயிர்க்குச் சாகா நிலையும், மரணமிலாப் பெருவாழ்வு நிலையும் வாய்த்திருப்பவை தாமே எனத் தெளிதல் வேண்டும். இப்பொது நிலை தவிர்த்த சிறப்பு நிலையே சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு எனக் கொள்ள வேண்டும். இறை, உயிர், தளை எனப்படும் மூன்றும் என்றும் நிலை பேறானவை: அழியாதவை என்னும் ஒரு முடிபு பொதுமையில் காணப்படினும் அதற்கும் ஒரு முட்டுக் கட்டை உள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்னும் நிலையாமை மூன்றனைக் கூறிய திருமூலர் அவற்றை அடுத்தே உயிர் நிலையாமையையும் கூறுகிறார். அப்பகுதியில் பாடல்கள் பத்து உள்ளன: அவை, எல்லாம் இறக்கின்ற கண்டும், எம்பெருமான் அடி ஏத்தார், அழைக்கின்ற போது அறியார் அவர்தாமே ஐவருக்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரம் அச்செய்யைக் காத்து வருவார்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவருமச் செய்யைக் காவல் விட் டாரே - 188 வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறியாரே - 190 இன்னவாறு கூறுகின்றன. யாக்கை நிலையாமையே இவை குறிப்பனவாயின் அப்பகுதியிலே இடம் பெற்றிருக்கும். ஆதலால், உயிர் நிலைக்கும் எனவும், உயிர் நிலையாமையும் உண்டு எனவும் இரு கொள்கைகள் இருந்தன என எண்ண வேண்டும். இனி உயிர் நிலையாமை என்பதை உயிர் உடலில் நிலையாமை என்று பொருள் கொள்வதும் உண்டு. அவ்வாறாயின் யாக்கை நிலையாமைக்குள்ளேயே அடங்கி விடுமே! உயிர் நிலையாது என்னும் கொள்கைக்கும், உயிர் நிலையானது என்னும் கொள்கைக்கும் உள்ள இடைவெளி எதிரிடைவழி, முரண்வழி, அதனை எண்ணித் தெளிய வேண்டும். மரணமிலாப் பெருவாழ்வு, சாகாக் கலை என்பவற்றை விரித்தும் வெளிப்படவும் உரைத்தவர் வள்ளலாரே. எண்ணிலா இடங்களில் மீள மீள உரைத்தவரும் அவரே. அந்நிலைக்குச் சிலபடி நிலைகள் அவர் பாடலாலேயே அறிய வாய்க்கின்றன. மகன்மை : வள்ளலார் இறைவனைத் தம் தந்தையாகக் காண்கிறார். இறைவன் வள்ளலாரைப் பிள்ளையாகவும் ஏற்றுக் கொள்கிறான். இம் மகன்மை தந்தைமை முறையை எண்ணுவோம். அப்பா, அத்தா, தந்தையே என விளிப்பவற்றைக் குறித்து மொழிவதன்று இது. பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப் பெரு விண்ணப்பம் என்பவை இறைவனைத் தந்தையாகக் கொண்டு, தாம் மகனாக நின்று வேண்டுவதாகக் கொள்ளல் முறையாம். தடித்தவோர் மகனைத் தந்தைதானடித்தால் என்பதை உவமைப் பொதுமையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நினது செல்வப் பிள்ளை என எனக்குப் பெயரிட்டாய் (3895) நீயே என் பிள்ளை (4043) சிற்றம்பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே (4057) சிற்சபை உடையான் செல்வ மெய்ப் பிள்ளை என்றொரு பேர்ப் பட்டமும் தரித்தேன் (4736) மகன்மையொடு, உரிமை கொள்ளப்பட்ட படிமான முறைமை யையும் சுட்டுகிறார். அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே அடிகள் ஆக்கிக் கொண்டாய் (5035) அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே அதன்பின் பிள்ளை ஆக்கி அருள் இங்களித்த சோதியே நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே நானும் நீயும் ஒன்றென் றுரைத்து நல்கு சோதியே (5059) அடியன், பிள்ளை, நேயன் என்னும் மும்மைப் பேறும் தன்னொடு தானாம் பேறும் வழங்கியமையை உரைக்கிறார். இந்த வார்த்தை என் வார்த்தை அன்று : திருச்சிற்றம்பல முடையார் செல்வப் பிள்ளை வார்த்தை என்றும் திருமுகம் ஒன்றில் குறிப்பிடுகிறார், இந்நிலையில் தம் உரை, தம் உரை அன்று என்றும், இறைவன் உரையே தம் உரையாக வெளிப்படுகின்றது என்றும் வள்ளலார் உணர்ந்தார். நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று (5504) நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் (5594) இறையைப், புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும் என்னும், இளமை தொட்ட வள்ளலார் வேட்கை, படிப்படியே நிறைவேறிவரும் செய்திகளே இவையாம். தடை : இறையோடு ஒன்றுதற்குத் தடையாக இருப்பவை எவை என்பவற்றை எண்ணுகிறார் வள்ளலார், அத்தடைகள் செயற்கை யாகவும் போலிமையாகவும் வஞ்சமாகவும் கயமையாகவும் இருப்பதைத் தேர்ந்து தெளிந்து அறிகிறார், அவற்றை அகற்றும் வாழ்வை உறுதியாகக் கொள்கிறார். அவ்வாறே பிறரும் கொண்டு உய்வு பெற வேண்டுமென்று பல்கால் எடுத்தெடுத்து உரைக்கிறார். தாம் வெற்றி கொண்டதை உரைத்து, அவ்வாறே பிறரும் வெற்றி கொள்ள இயலுமென்பதை விரித்து உரைக்கிறார், பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி (3696) பவம் = பாவம். கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் (3766) வேதநெறி ஆகமத்தின் நெறிபவரா ணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே (3787) கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக (3768) சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் (4075) இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் (4086) நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே (4174) இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம் இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் மயல் ஒரு நூல் மாத்திரம்தான் சாலம்என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலமென அறிக (4176) மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது (4503) குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று (4504) சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக (4508) இந்தச் சாதி இந்த மதம் எனும்வாய்ச் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே (4637) மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக (4653) இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு (4654) சாதியை நீள்சமயத்தை மதத்தைஎலாம் விடுவித்தென் தன்னை ஞான நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானை (4674) சாதிசமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞானசபைநிலை பெற்றது (4913) சாதி சமயச் சழக்கை விட்டேன்அருட் சோதியைக் கண்டே னடி (4949) சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் (4955) சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்னவே சாற்றப் புகினும் சாலார் (5015) சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே (5566) நாமே, பிரமமெனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் (5699) சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம் அன்றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் (5805) - வள்ளலார் கடிந்துரைத்த தடைகளின் முழுத்தொகுப்பு அன்று இது. இவை போதும் என்று அமைவோம். தடைநீக்கம் : இத்தடைகள் அகன்ற - அகற்றப்பட்ட நிலையில் தோன்றுவது, சன்மார்க்கம் என்னும் பொது நிலை அதுவே, ஆன்ம நேயப் பெருநெறி. அப்பெருநெறியை அடிகள் பெற்றுக் கொண்டார்! பற்றியும் கொண்டார். அதற்குச் சில சான்றுகள் : பல அல்ல! முன்னே காட்டியவற்றிலும் சில உள. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் (4079) ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகிஉல கியல் நடத்தல் வேண்டும் (4082) எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் (4083) எவ்வுலகமும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் (4086) இவை, சுத்த சன்மார்க்க வேண்டுகோளில் மின்னுவன. சன்மார்க்க சங்கத் தலைவனே, நிற்போற்றும் என்மார்க்கம் நின்மார்க்க மே - என்பது சன்மார்க்க உலகின் ஒருமை நிலையில் ஒளிர்வது (5621) ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங் கென்மார்க்க மும்ஒன்றா மே - இது சுத்தசிவ நிலையில் உள்ள ஓரொளி (5527) சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர் எல்லாம் செய் வல்லநம திறைவனையே தொழுவீர் புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாயத் தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே - இது தனித் திரு வலங்கலில் ஒரு பேரொளி (5452) சாதி சமய சடங்கு விகற்பம் கடந்த சன்மார்க்க நிலையில் வள்ளலார் பெற்ற பேறு என்ன? பலப்பல பாடல்களில் பகர்கிறார் சில சான்றுகள் : உடல்பொருள் ஆவியும் உனக்கே பின்கடன் இன்றிக் கொடுத்தனன் (3742) உடல்உயிராதிய எல்லாம் நீ எடுத்துக் கொண்டுன் உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் (3802) உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை (3806) என் உயிரும் என் உடலும் என்பொருளும் யானே இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே தன் உயிரும் தன் உடலும் தன்பொருளும் எனக்கே தந்துகலந் தெனைப்புணர்ந்த தனிப்பெருஞ் சுடரே (4149) நானும் தானும் ஒருவடி வாகி (4188) தானும் அடியேனும் ஒருவடிவாய் (4189) என்னைச் சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து (4532) என்னைத் தானாக்கிக் கொண்ட தயாநிதி (4553) என்னைத் தன்மயமாக்கிய (4579) என்புடை நீ இருக்கின்றாய் உன்புடையான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இவ்வொருமை யார் பெறுவார்? (4639) என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டிங் கென்பால் அன்பால் தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்தளித்த தலைவன் (4672) உன்னைவிட மாட்டேன்நான் உன்னாணை எம்பெருமான் என்னைவிட மாட்டாய்-இருவருமாய் மன்னி (5394) நானானான் தானானான் நானும்தா னானான் (5410) உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒரு திருப் பொதுவென அறிந்தேன் (5426) நீதான், என்னை விடமாட்டாய் நான் உன்னை விடமாட்டேன் இருவரும் ஒன்றாகி இங்கே இருக்கின்றோம் (5448) என்னுடலும் என் பொருளும் என்னுயிரும் தான் கொண்டான் தன்னுடலும் தன்பொருளும் தன்னுயிரும் என்னிடத்தே தந்தான் (5522) எந்தேகம் அதிற்புகுந்தார் எம்உளத்தே இருந்தார் எம் உயிரில் கலந்த நடத்திறையவர் (5704) கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர்திரு மேனியிலே கலந்தமண மதுதான்... நான் அது ஆனேனே (5763) பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் (5818) சன்மார்க்கம் கண்டுகொண்ட அருளாளர். இறைவனும் தாமுமாய் இணைந்து விடுகின்றனர் என்பதை, வள்ளலார் மொழி வழியே தெளிந்து கொள்ளுதல் மேலாய்வுக்குத் தேவையாம். ஒன்றுநிலை: தீப்பற்றிக் கொண்ட வீட்டுள் இருந்து வெளியேறும் துடிப்பு. வெள்ளச் சுழலுள் அகப்பட்டவன் வெளியேறத்துடிக்கும் துடிப்பு என்பவை போல, இறையருளைப் பெறவும், அவனோடு இணையவும் அடியார் துடிப்புக் கொள்வர் என்பதை வள்ளலார் வழியே வெளிப்பட அறியலாம் அவர்கள் ஆழிய எண்ணத்தில், இறையோடு ஒன்றும் இறைநிலையே இறவாப் பெருநிலை, சாவாக்கலை, மரணமிலாப் பெருவாழ்வு என்னும் திண்ணிய வண்ணம் உண்டாகின்றது என்பது தெளிவாகின்றது. பிறப்பு இறப்பு இலா இறையோடு ஒன்றியவர்க்கு, இந்நிலைகள் ஏற்படா என்னும் தெளிவுண்டாகிய பேற்றில் அவர்கள் திளைக்கின்றனர் என்பதும், அத்திளைப்பிலே அவர்கள் வாக்குகள் வெளிப்படுகின்றன என்றும் கொள்ளல் முறையாம். இன்றே காணப் பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே என முதல், திருமுறையிலேயே வள்ளலார் வேண்டுகிறார் (187) சாகாத கல்வி நிலை காணேன் என்பது ஐந்தாம் திருமுறை (3035) இதனை அடுத்தே, சாகாத நிலைகாட்டி என்றும் (3038) மரணமற்று வாழ்க எனத் திருவார்த்தை அளித்தாய் என்றும் (3074) கூறுகிறார், சாகாத கல்வியே கல்வி (3678) என்றும் துணிவு கொள்கிறார். சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் (3322) - எனத் தம் ஏக்கம் உரைக்கிறார். இந்நிலை படிப்படியே மாறி மரணமிலாப் பெருவாழ்வு பெற்றதாக உரைக்கின்றார். அவற்றுள் சில: பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே (3707) திரைந்த என் உடம்பைத் திருவுடம் பாக்கித் திகழ்வித்த சித்தனே (3755) நரைதிரை முதலாம் துவந்தம் தவிர்த்து (3756) இவ்வடிவமே அழிவுறாப் பதிவடிவாமாறே (3852) இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடிவாமாறே (3861) செத்தார் எழுகெனச் சிந்தை செய்முன்னம் சிரித்தெழவே எனக்களித்தாய் (3867) பிறவாமல் இறவாமல் பிறங்க வைத்தாய் (3992) மலஉடம்பை அழியாத விமல வடிவாக்கி எல்லாம் செய்யவல்லசித்து தானே வந்தளித்த (4013) இறவாத தேகம் கொடுத்தான் (4045) இறவா வரமளித்து (4615: 125, 158) சாவா நிலை இது தந்தனம் (208) மாய்ந்தவர் மீட்டும் வருநெறிதந்து (231) உயிர் உடல் கெடாவகை (731) உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக உயிருள்யாம் எம்முள் உயிர் நிலை உணர்ந்தே (969-74) சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து (1065) இனிப் பிறவா நெறி எனக்களித்த (1163) காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ் பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப் படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே (4636) சாகாத கல்வியிலே தலைக்காட்டிக் கொடுத்தீர் (4748) மரணமெனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே பரணமுறு பேரிட்டுப் பெருநிலமும் தாண்டிப் பசையறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான் என்னுடையான் அருளாணை என்குருமேல் ஆணை (4853) செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் (4875) செத்தாரை மீட்டுகின்ற திண்மையைப் பெற்றேன் (4958) இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் (4959) சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவையே (4977) பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் (4994) சாகாக் கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே (5061) செத்தாரை எழுவார் என்று கைத்தாளம் போடு (5263) இறந்தார் எழுவரென்ற புறந்தாரை ஊது (5264) சிவமாக்கிக் கொண்டானென் றூதூது சங்கே (5274) மரணம் தவிர்ந்தேன் என்றறையப்பா முரசு (5295) செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி (5294) தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்து எனையாண்ட துரையே (5311) ஊன் செய்த தேகம் ஒளிவடிவாக நின்றோங்கு கின்றேன் (5397) செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் (5367) செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது (5417) காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக் கருவி யாலே கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தையருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே (5450) தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச் செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்த பெரும் பொருளே (5468) திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும் பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே (5482) ஊனே புகுந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்த ஒருபொருளை (5483) பெற்றேன் என்றும்இறவாமை....x‹whndh«” (5486) அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன் (5513) நரைமரண மூப்பறியா நல்ல உடம்பினரே நற்குலத்தார் (5572) நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்து நிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவ னைந்தேத்துதும்நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே (5576) மரணமிலாப் பெருவாழ்வில் வாழ வம்மின் (5598) என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் (5601) மேலும், இறையோடு ஒன்றிய நிலையில், எல்லாம் வல்ல சித்தளித்து (4615:297) என்றும், எனக்கும் நின்னைப்போல நுதற்கண் ஈந்து (5001) என்றும் சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய் (4797) என்றும் கூறுவனவற்றை எண்ணுக. பெருமிதம்: ஒரு வாழ்விலே பெருமிதம். நான்கு வகையால் எழும் என்று தொல்காப்பியர் சுட்டுவார். அவை, கல்வி, தறுகண், இசைமை, கொடை என்பன என்பதை, கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே என்பார். சிறந்தமைந்த இல்லற வாழ்வு வாய்க்கப் பெற்றாரும் பெருமிதம் கொள்வர் என்பதைத் திருவள்ளுவர். வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு என்பார் (1193) இறவாப் பேறு தாம் பெற்ற பெருமிதம், வள்ளலார்க்கு ஏற்பட்டமையை அறை கூவுகிறார்! தாமே பெற்ற வீறுமிக்க பேறெனவும் கொள்கிறார். நோவாது நோன் பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின் பேரருளை என்போலப் பெற்றவரும், எவ்வுலகில் யாருளர் நீ சற்றே அறை என்பது இது. தேவா, எனைப் போல் நோற்றவரும், சார்ந்தவரும், பெற்றவரும் யாருளர்; நீ சற்றே அறை என்பது இணை ஒன்றில்லாப் பெருமிதம் இல்லையா? (5624) இது காறும் வள்ளலார் அருளிய பாடல்களின் வழியாக நாம் கண்டவை இவையாம். உரைநடை வழியாக அறியக் கிடப்பவை எவை என்பதையும் எண்ணல் வேண்டும். திருவருள் விளக்கத்தால் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றோம், என்பது சுத்த சன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பத்துளது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும் என்பது சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்துளது. சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன். தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைத் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கம் செய்வானானால் அவன் ஆயிரம் வருடம் சீவித் திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து கொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம் (இரண்டரை நாழிகை என்பது ஒரு மணிநேரம்) எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம் இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான். - இவை உபதேசக் குறிப்பில் உள்ளவை. நான் இப்போது இந்த cடம்பில்ïருக்கின்றேன்ïனிvல்லாcடம்பிலும்òFந்துfள்வேன் எ‹று,சுtமிகள்ஸ்ரீ முfஆ©டுகhர்த்திகைமீ த்âல்உŸளிருந்தவிsக்கைத்திUமாளிகைப்புwத்தில்tத்துத்திUவாய்மyர்ந்தருளினார் கŸஎ‹றோருrய்திஉŸளது.அj‹ பின்னுள்ள ஒரோ ஒரு செய்தி? சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை என்பதே 30.01.1874 ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19ம் தேதி நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத் தான் இருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார் என்பது அது. காணப்பட்டவை: இதுவரை கண்ட செய்திகள் எவை? சுருக்கத் திரட்டு வருமாறு: ஓரறிவு முதல் ஆறறிவு உயிரிவரை உள்ளவை எல்லாம் தோன்றி வளர்ந்து மறையும் இயல்பினவாகவே உள்ளன. மாந்தர் வாழ்வு ஆறறிவுடையது எனினும், ஓரறிவுயிரி போலவே தோன்றி ஒடுங்குவதே கண்கூடு, என்றும் வாழ்பவர் (சிரஞ்சீவி) என்று சொல்லப்படுபவர் எவர்தாமும் காணும் வடிவில் காணப்படு வார் அல்லர். மாந்தர் உடம்பு பூத உடம்பு. புகழ்உடம்பு எனப் பேசப்படும் நிலையது. பூத உடம்பு நிலையற்றது. ஆனால் புகழுடம்பு நிலை பெற்றது. அது புகழ் நிலையதே அல்லாமல் கண் கூடாகத் தோன்றும் தோற்ற முடையது அன்று. பிறருக்கு என வாழும் வாழ்வால் அப்புகழ் வாழ்வைப் பெறலாம். பூத உடல் வாழ்வு, சாதிமத சடங்கு விகற்பமற்ற பொது நிலையாம் சன்மார்க்க நிலை உற்றால் இறை நிலை எய்தும். இறை நிலை வேறு, சன்மார்க்க நிலை வேறு என்று இல்லா ஒருமை நிலையில் ஒன்றிவிட்டால், இறை நிலை எவ்வாறு சாவாநிலை ஆகுமோ அவ்வாறே சாவா நிலையாகிவிடும். இறைநிலை எப்படி உருவ நிலையில் காணுதற்கு இயலாததோ அதே நிலை தான் அதனைச் சார்ந்த சன்மார்க்கி நிலையுமாம் என்பதேயாம் என்பது. மேலும், அமரநிலை, நடுகல் நிலை, ஒடுக்க நிலை, பெருந்தகை நிலை, என்பனவும் அறியப்பட்டனவாம். திருக்குறளில் சாகாக் கலை: தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது என்று வள்ளலார் கூறியதை நாம் கருத வேண்டும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் என்னும் இரண்டு பாடல்களையே வள்ளலார் சுட்டிக் காட்டினார் என நாம் கொள்ளலாம். ஏனேனில், நீடு வாழ்தல் என்னும் ஆட்சி அப்பாடல்களில் இருத்தலால் என்க. இப்பாடல்களுக்குப் பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரையைக் காணல் ஓரளவு பயனாம். அவர்கள் நம்பாமதத்தினர் (நாத்திகர்) அல்லர். நம்பு மதத்தினர்! வள்ளலார். அவர்களைப் போல நம்பு மதத்தராக இருந்து படிமேல் படியேறி, சன்மார்க்கம் (பொது நிலை) கண்டவர். நம்பா மதத்தாரை, நம்புமதத்தாரைக் கடிவது போலவே கடிந்தனர். ஆதலால், பழைய உரைகளை நோக்குதலே முறையாம். மலர்மிசை ஏகினான் என்பதற்கு மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார், எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின் கண் அழிவின்றி வாழ்வார் என்பது பரிமேலழகர் உரை. மணக்குடவர், மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப் பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே நிலத்தின் மேல் நெடுங்காலம் வாழ்வார் என்று பொருள் கூறுகிறார். மேலும், நிலம் என்று பொதுப்பட கூறியதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும். தொழுதாற் பயன், என்னை என்றாற்குப் போகம் நுகர்தலும் வீடுபெறலும் என்று கூறுவார் முற்படப் போக நுகர்வார் என்று கூறினர் என்று விளக்கமும் வரைகிறார். பூமியின் கண் சகல பாக்கியமும் அநுபவிப்பர் எனப் பரிதியார் பகர்கிறார். காளிங்கர், மலர்மிசை ஏகினான் என்பது எல்லாருடைய நெஞ்சத் தாமரையினும் சென்று பரந்துள்ளான். மாணடி என்பது மாட்சியுள்ள அடி. நிலமிசை நீடுவாழ்வார் என்பது நித்தராயுள்ளார் இந்நிலத்தின்கண் இவ்வாறு வணங்கி வழிபட்டு எவ்வுயிர்க்கும் உயிராய் நின்ற இறைவனது குற்றந் தீர்ந்த அடியினைச் சேர்ந்தவர் யாவர் மற்ற அவரே முத்தராவர் என்கிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் பாடலுக்குப் பரிமேலழகர், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறி களை வழியாக வுடைய ஐந்தவாவினையும் அறுத்தானது மெய் யான ஒழுக்க நெறியின் கண் வழுவாது நின்றார். பிறப்பின்றி எக்காலுத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் என்று உரை கூறுகிறார். மணக்குடவர், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின் கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற ஒழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார் என உரைகூறி, இது சாவில்லை என்றது, என்றும் கூறுகிறார். இகபரம் (என்னும்) இரண்டிலும் நெறிநின்று அநேக காலம் வாழ்வர் என்று பரிதியாரும், முத்தராவர் என்று காளிங்கரும், ஒரு காலமும் அழிவில்லாமல் இருக்கின்ற மோட்சத் திலே எக்காலமும் வாழ்வார்கள் என்று தாமத்தரும், இகத்திலும் பரத்திலும் நெடுங்காலம் வாழ்வர் என நச்சரும், முத்தராய் நெடுங்காலம் வாழ்வர் என்று தருமரும் கூறுகின்றனர். இவற்றுள் சாவில்லை என்னும் மணக்குடவர் உரையே வள்ளலார் கருத்தொடும் பொருத்தி நடக்கின்றது என்பது வெளிப்படை. மருந்து என்னும் அதிகாரத்தில், அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு என்பது நோயின்றி நெடுங்காலம் வாழும்-உடலொடு வாழும் - வாழ்வு பற்றிக் கூறுவதேயாம். தும்மும் ஒருவரைக்கண்டு மற்றவர் நீடு வாழ்க என்பதும் உடலொடு நெடிது வாழும் வாழ்வு பற்றியதேயாம். சாவாநிலை (மரணமிலாப் பெருவாழ்வு) என்னும் குறிப்பொடு இவற்றைக் கொள்ளற்கு இல்லை. இருகுறிப்பு: வள்ளலார் கூறிய இரண்டு குறிப்புகளை நாம் மீள எண்ணுதல் வேண்டும். ஒன்று, நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்பது உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே என்னும் அருட் பெருஞ்சோதி அகவல் அடிகளில் (969-974), எவ்வுயிரும் தம் உயிராக் கொள்ளும் இறை நிலை விளக்குதலை அறியலாம். உயிரெலாம் என்பது உயிரியெலாம்-உயிர் நின்ற உடம்பெலாம்-என்பது தானே பொருள். ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்னும் மணிமொழியையும் எண்ணுக. அழியாப் புகழுடலர் இவரென்னத் திருவள்ளுவர் ஒருவரைச் சுட்டுகிறார். அவர், நினைவு, சொல், செயல் என்னும் மும்மையாலும் செம்மை போற்றும் சீராளர் என்பார். அது, உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பது. உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளானாக இருப்பவன் இறந்தவன் அல்லனே! அவன் தன்னுடலால் மறைந்தாலும், தன்னுயிரால் மறைந்தாலும் அவர் காலத்திற்குப் பின்னர் வாழ்பவர் உள்ளத்தெல்லாம் உறைந்து உணர்வித்து - உயர்வித்து - அழியா வாழ்வினனாக அல்லவோ திகழ்கிறான். உடம்பெலாம் உறையும் ஒளியாளன் - ஒளி உயிராளன் அல்லனோ அவன்! உளதாகும் சாவு : உலகத்தார் உள்ளத்துள் இருப்பவன் சாவா நிலையானா? மரணமிலாப் பெருவாழ்வு வாழ்பவனா என்னின் ஆம் என்கிறது திருக்குறள். அது, உளதாகும் சாக்காடு என்கிறது. என்றும் எங்கும் உள்ளதாக வாழும் சாவு அது, அனைவர்க்கும் பொதுவான தன்று. வித்தகர்க்கு மட்டுமே உரியது. இக்குறள் முன்னே பொதுவகையால் சுட்டப்பட்டது. இப்பொழுது வள்ளலார்க்குச் சிறப்பு வகையால் சுட்ட மேற்கொள்ளப்பட்டது என்க. அருகரும், புத்தரும், வள்ளுவரும், கிறித்துவும், நபிகளும் குருநானக்கும், வள்ளலாரும், இராம கிருட்டிணரும்-கண்காணும் வடிவில் தோன்றுகின்றார் அல்லர் எனினும் அவர்கள் பெயரால் கால்கொண்டு உயர்ந்தோங்கும் நிறுவனங்கள்-நிலையங்கள்-இயக்கங்கள் - பரப்பகங்கள் - எத்தனை? எத்தனை? இவை யனைத்தும் இப்பெருமக்கள் புகழ் வடிவங்கள் அல்லவோ! ஒருவராய் நின்ற வாழ்வு, கோடி கோடிப் பேராய்க் கொடி தூக்கி நிற்குமானால் அது முடிந்து போன வாழ்வு ஆகாதே! மேலும், மேலும் முளைத்தெழும் வாழ்வு அல்லவோ அது! ஆதலால் அவ்வாழ்வு சாவா வாழ்வோம்! பொதுமக்கள் வழக்கிலே இயல்பாகச் சாகா வரம் பெற்றவன் என்பதுண்டு. அடியார்கள் சாகாவரம் அருள்வாய் என்று தாம் வழிபடும் இறையிடம் முறையிடல் உண்டு. மக்கள் வழக்கில் சாகாவரம் பெற்றவன் என்பது சாவாரம் செத்தவன் என இழிமைப் பொருளில் வழங்குகின்றது. உடல் நலிவுற்றது நெடுநாள் வாழ்ந்தாலும் சாவாமல் இருப்பவனைக் குறிப்பது நடைமுறைப் பொருள். சொல் சிதைவுற்றும் அதன் பழம்பொருளை இழந்து விடவில்லை என்பது அச்சொற் பொருளாலே புலப்படுகின்றது. சாவா வரம் வேண்டுதல் நிலைவேறு. அதனைப் பெற்றதாகக் கொள்ளும் பெருமிதம் வேறு. இப்பெருமிதம் தம் உணர்வு மேம்பாட்டில் எழுவது. நொடியும் நொடியும் சாவைக் கண்ணாரக் காணும் உலகம் எளிதாகச், சாவாமையை ஒப்புக்கொள்ளுமா? உலகியல் : செத்தாரை எழுப்பிக் காட்டுக : காட்டினால் நம்புவோம் என்னும் நெருக்கடி வள்ளலார் முன்னேயே நிகழ்கின்றது. செத்தாரை எழுப்பும் திறம் நமக்கு இறையருளால் வாய்த்தது என்னும் அவர் திருமொழிகளும் தூண்டுதலாயின பூசலார் நாயனார் எழுப்பிய மனக்கோயில் வெளிப்பாடு உடையதா? வள்ளலார் கொண்டவை எல்லாம் அகநிலைக் காட்சிப் பேறுகள்; அவற்றைப் புறநிலைக் காட்சியாக்க வேண்டும் என்பார்க்கு இரங்குவதை அன்றி என்ன செய்யக் கூடும்? வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர் பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் என்று அறிக்கை வெளியிட்ட (25.01.1872) நாற்பது நாள்களை அடுத்தே (09.03.1872), சலிப்பு உண்டாகின்றது. சலிப்பு : இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது, அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால், சாலையில் இருக்கிறவர்களெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழியில்லை சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறார். புதுவை இரத்தினர்க்கு எழுதிய அஞ்சலொன்றில் (19) சித்திரை வைகாசி இவ்விரண்டு மாதமும் போக ஆனி மீ இருபது தேதிக்கு மேல் என் தேகம் இருந்தால் அவசியம் சென்ன பட்டணம் வருவேன். இதுதவறாது என்பது நினைவில் வருகின்றது. வள்ளலார் சில நாள் பலநாள்களுக்கு ஒருமுறை சித்திவளாகத் திருமாளிகையில் இருந்து போய் வந்துள்ளார். பின்னர் சீமூக ஆண்டு தைமாதம் பத்தொன்பதாம் நாள் (30.01.1874) நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார் என்று சொல்லியிருக்கிறார். வள்ளலார் வழியாக அறிந்து கொள்ள வாய்க்கும் செய்திகள் இவ்வளவே! அவர் எப்படி மறைந்தார் - அடையாளம் எதுவும் இல்லாமல் அறை எப்படி வெறுமையாய் இருந்தது என்பவை பற்றியவை மெய்ப்பிக்க முடியாதவையாம். உடல் : உடல், உடல் உறுப்பு என்பவை ஓரொத்தவையாக இருத்தல் அரிது. அவ்வாறு ஓரொத்தவையாக அமையினும் அவற்றின் இயக்க நிலை, உணவு நிலை, உணர்வு நிலை, பேணல் நிலை, மரபு நிலை, வளர் நிலை இன்னவற்றால் ஓரொப்பாக இருப்பவை அல்ல. ஒருவர் அருகே வரும் போதே வியர்வை நாற்றம், வாய் நாற்றம் முதலாயவை அருவறுப்பாக்கிவிடுகின்றன. சிலர் உடல் பூச்சு மணம், தடவு மணம், தெளிப்பு மணம் இல்லாமல் கூட அருவறுப்பாகத் தெரிவதில்லை. ஆயினும் என்ன? எவ்வுடல் பிணமாகிவிட்டாலும் நாறாமல் இருப்பதில்லை எரியூட்டப்பட்டாலும் ஊன் எரிந்து கரியும் போது அவ்வெரி யுடன் வெளிப்படும் காற்றால் சில கல் தொலைவுக்கு எரியும் நாற்றம் பரவவே செய்கின்றது. சிலர்க்கு அந்நாற்றம் மயக்கத்தை ஆக்கிவிடலும் காண்பதேயாம். பாரிய கட்டை - எரு - எண்ணெய் முதலியவை இட்டு எரித்தாலும் என்பின் எச்சம் இல்லாமல் ஒழிவது இல்லை. சூடம் எனப்படும் கர்ப்பூரம் எரிந்தாலும்-கலப்படம் இல்லாத கர்ப்பூரமாக இருந்தாலும் அது எரிந்த பின்னர் அவ்விடத்தில் கரி இல்லாமல் இருப்பதில்லை. கரி என்பது எரிந்த இடம் என்பது காட்டும் சுவடு-அடையாளம். ஒளிவடிவானார், வெளி வடிவானார் என்பவை எல்லாம் மங்கல வழக்காகக் கொள்வதே வாழ்வியல் தெளிவாம். செத்தாரைத் துஞ்சினார் என்பதும் இடுகாட்டை நன்காடு என்பதும் மங்கல வழக்கு என இலக்கணரால் கூறப்படும். அம்முறையிலேயே இறந்தாரை வீடுபேறடைந்தார், சிவகதியடைந்தார், கயிலாச பதவியுற்றார், வைகுண்ட பதவியடைந்தார், இறைவனடி அடைந்தார் என்பவை கருதுகோள் மொழிகளே அல்லாமல் காட்சி மொழிகள் அல்ல என்பது மெய்ம்மையாம். நோயரை அடியார் சிலர் நலப்படச் செய்த செய்திகள் உள. தமக்குள் எழுகின்ற எழுச்சி, தம் மதிப்புக்கு உரியார் காட்சி உரை முதலியவற்றால் ஏற்படுகின்ற எழுச்சி என்பவற்றில் ஏற்படும் ஆக்கங்கள் உண்டு. அதன் அடிப்படை நம்பிக்கை ஆகும். என் இளந்தைப் பருவம் கடந்த பதினாறு, பதினேழு, பதினெட்டு அகவை அளவில் நூற்றுக் கணக்கான பேர்களின் தேள் கடியைக் குறைத்து இல்லாமல் போகச் செய்திருக்கிறேன். எந்த மந்திரமும் யான் சொன்னதில்லை. எந்த மாயமும் செய்ததில்லை. துண்டை வீசி - வேப்பிலை வீசி என் நினைவில் உள்ள பாடல்களை மெல்லெனச் சொல்லிச் சில நிமிடங்கள் சொல்ல வலி குறைந்தது என்றும் இல்லை என்றும் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பேச்சி என்றும் ஓர் அம்மையார் தேள் கடியால் வாய் நுரை கக்கி மயங்கி உருண்டு கொண்டு கிடந்தார். யான் கால்மணிப் பொழுதுக்குள் இயல் நிலைக்கு அவர் வரக் கண்டு மகிழ்ந்தேன். மருந்து மட்டும் நோய் தீர்ப்பது இல்லை. மருந்து தருவார் மேல் உள்ள நம்பிக்கையும் நோயைத் தீர்த்தல் உலகறிந்த செய்தி. மதிக்கத்தக்க சான்றோர், அடியார், துறவர், தூயர் ஆயோர் மேல் உலகம் மதிப்பு வைத்திருக்கிறது. அவர்கள் வருகை, வாழ்த்து, உரையாடல் முதலியவை இயற்கை ஊட்டமாய் அமைந்து எழுச்சியுறச் செய்கிறது. எல்லாம் தீர்ந்தது: இனி எத்துயரும் எந்நோயும் இல்லை என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அதுவே நலமருந்தாகி விடுகின்றது. நம்பகத்தார், நம்பிக்கையாளர் இருவர் நிலை சார்ந்த தீர்வு இது. கறந்த பால் மடியில் புகாமைபோலப் பிரிந்த உயிர் மீளவும் அக்கூட்டில் புகுவது இல்லை. சில வேளைகளில் அரிதாக ஒடுங்கி நிற்கும் உயிர் மீள இயக்ம் பெறுதல் உண்டு. அது போய்விட்ட உயிர் அன்று, இயக்கம் தடையுற்று அடங்கி நின்ற உயிர் அஃதாம். கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்னும் ஒரு கலை பேசப்படு கிறதே! திருமூலர் வரலாறும், அருணகிரியார் வரலாறும் எடுத்துக் காட்டப்படுகின்றனவே எனின், அதன் மெய்ம்மம் திருக்குறளால் தெளிவுறும். ஒருவன் என்றும், ஒருத்தி என்றும் இருப்பார் உயிரொன்றிய காதல் வாழ்வில் ஒருவராகி விடுகின்றனர். உயிர் பகுத்து இருந்த அவர் உயிரொன்றாகித் திகழ்கின்றார். ஒன்றி அன்பின் முளையாகிய மகவு பிறந்த போது அதனையே தம் உயிராகக் கொண்டு தளிர்க்கின்றனர். இந்நிலை கூடுவிட்டுக் கூடு பாய்தலாம். பறவைக் கூடு மட்டுமா கூடு? கூடு என்பது உடல் அல்லவா! கூடும் கூடும் இணைந்த நிலைதானே கூடல்! புலமைச் செல்வர்கள் கூடித் தமிழாய்ந்த இடம் கூடல் எனப்பட்டதும், பிரிந்த தலைவன் வருகையை அறிய அறிகுறியாகக் கொள்ளப் படும் கண்ணை மூடிக் கொண்டு தலைவி மணலில் விரலால் போடப்படும் கோடு கூடல் இழைத்தல் எனப்பட்டதும் அறிக. ஒருவர்க்காக ஒருவர் இன்ப அன்பிலும் துன்பத்துடிப்பிலும் தாம் அவராக அல்லது அதுவாக மாறுதல் கூடுவிட்டுக் கூடு பாய்தலாம். திருமூலர் ஆயன் காட்டிய அன்பை ஆக்களின் மேல் காட்டித் தம் ஆயன் எனவே அவை கொண்டு மகிழுமாறு செய்த செயல் கூடுவிட்டுக் கூடு பாய்தலே என அறிக. திருவள்ளுவர் இதனை, அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்கிறார். மேலும், அறிவு பெற்ற பயன் ஆருயிர்க்கு வரும் துயரைத் தீர்த்தலே என்பதை, அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதினோய் தன்நோய் போல் போற்றாக் கடை என்கிறார். அன்பின் அடையாளமும், அறிவுப் பேறும் கூடுவிட்டுக் கூடு பாயும் பேரருள் பெருநெறியே என்பதை அறிவால் வள்ளலார், வாழ்வியலை அக்கண்ணோட்டத்துடன் நோக்குதல் வேண்டும். அவ்வுயிர் இவ்வுயிர் என்னாமல் எவ்வுயிரும் தம்முயிராய் வாழ்ந்த பெருமையர் என்பது வெளிப்படை : எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்என நான் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ. (5297) என்னும் தனித் திருவலங்கல் ஒன்றே ஓராயிரம் ஒளிவிளக்கமாய்ப் புலப்படுத்தும். இன்னும் இதன் தனித்தனி விளக்கப் பேருரையெனக் கொள்ளத் தக்க பாடல்களையெல்லாம் தொகுப்பின் அத்தொகை எவ்வளவு பாரியதாய் அமையும்? எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம் தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய் அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்த என் நடுக்கம்ஆர் அறியார் (3463) என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலே என்கொலோ இவர்தாம் துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய் அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே (3468) காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன் ஏணுறு மாடுமுதல் பலவிருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கோணுறு கோழி முதற்பல பறவை கூவுதல் கேட்டுளம் கலைந்தேன் வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன் (3469) வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் (3471) நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன் (3472) துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன் கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும் (3473) பிள்ளைப் பெரு விண்ணப்பத்தில் கொட்டிய அருள் மழையில் ஒரு பகுதியே இப்பாடல்கள் : இவையெல்லாம் இராமலிங்கம் என்பாரையா காட்டுகின்றன? ஆருயிர் அனைத்துமாய் நின்ற அருட்பெரும் வள்ளலாராக அல்லவோ காட்டுகின்றன. இவை கூடுவிட்டுக் கூடு பாயும் - உயிர்க்கு உயிராம். ஒரு தெய்வ வாழ்வாகத் திகழ்பவை தாமே! காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய் (3353) சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய் (3354) நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செவ்வேன் எந்தாய் (3355) கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண் நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் (3357) பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெறு வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தருபலா மாமுதற் பழத்தின் தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் (3358) - இன்னவாறு வரும் பாடல்களைக் கண்டு வள்ளலார் பெருந்தீனியர் எனலாமோ? தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாக் கூட்டி என வரும் பாடல்கள் போன்றவற்றைக் கொண்டு பெருஞ்சுவையர் எனப் பேசி விடலாமோ? உலகியலில் அவ்வாறு இருப்பார் நிலைக்குத் தம்மைத் தாமே ஆட்படுத்தி அவர் பொருட்டாக அழுந்தி நின்று பாடிய அருளிரக்கப் பாடல்களே யன்றித் தம் நிலை குறித்த பாடல்கள் அல்ல எனக் கொள்ளலே வள்ளலாரை உணர்ந்தவர் கொள்ளும் சால்பாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை ஊண் எனக் கொண்டவர் மட்டுமல்லர் : பிறரும் அவ்வாறு கொள்ளல் நலம் எனக் கூறியவரும் வள்ளலார். ஒரு வேளை ஊண் என்பது, காலையில் கால்; நண்பகலில் அரை; இரவில் கால்; ஆக வேளைகள் மூன்றற்கும் கூடிச் சேர்த்து ஒரு வேளை உணவு என்பது குறித்ததாம். அறிவிலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப் பிறிவிலா தென்னுள் கலந்தநீ அறிதி (3393) இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன் நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீதரு வித்திடில் அதுநின் தன்சுதந் தரம் இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லை (3394) இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது துன்புருங் கொல்லோ என்றுளம் நடங்கிச் சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன் (3439) உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி உற்றநான் முதல்ஒரு சிலநாள் பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள் உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன் மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய் (3440) இன்னவற்றால் வள்ளலார் கொண்ட ஊண் வெறுப்பையும், தாயர் முதலியவர் வருத்தம் தீர்க்க உண்டதையும் அறியும் போது ஊணிலே நாட்டம் கொள்ளா உண்மையை உணரலாம். ஆனால், பிறரோ பிறவுயிரோ ஊணின்றிக் கிடக்க நேர்வது கண்டு உருகிய உருக்கம் பனிமாலிமய உருக்கென்னச் சீவகாருணிய ஒழுக்கத்தின் வழி அறிய முடியும். பசி வாட்டி வருத்தும் கொடுமையையும், பசியாற்றினார் எய்தும் பேற்றையும் அவரைப் போல் விரித்து விளக்கி உரைத்தார் ஒருவர் இல்லை என்னும் அளவில் அவர் ஓங்கி நிற்றல் கண்கூடு. வயிறரா உண்ண வழியின்றி இருப்பார் பசிக்குத் தரும் உணவு உணவு அன்று. அது, எப்பொருளை எவ்வாறு பாதுகாப்பாகச் சேர்த்து வைக்க வேண்டுமோ அப்படிச் சேர்த்து வைக்கின்ற பெரும்பயனை நல்குவது என்பார் திருவள்ளுவர். வள்ளலாரோ பசித்தோர்க்கு உதவும் ஈவு இரக்கமே வீட்டின் வாயிலைத் திறக்கும் திறவு கோல் என்பார். நேற்றுக் கொன்றுவிட்டுச் சென்ற வறுமை இன்றும் வாட்ட வருமோ என்று ஏங்கும் வறியரைக் கூறுவார் திருவள்ளுவர். வள்ளலார் அவர்படும் ஏக்கத்தை எல்லாம் தாமே பட்டு வருந்துவார்போல எழுதும் எழுத்து, உயிரிரக்கப் பெருவெள்ளப் பெருக்கேயன்றி எழுதும் எழுத்தன்றாம். ஏழை எளியவரின் சாவாக்கலை எது? மரணமிலாப் பெருவாழ்வு எது? அதனை உணர்ந்து தாம் செய்யும் அளவில் நில்லாமல் பிறர்பிறரும் பசிப்பிணியாற்றும் அறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முழங்கி எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் அறச்சாலை நிறுவிய அண்ணலாரும் வள்ளலார். அம்மட்டோ நோயில்லா நெறி, நெடுவாழ்வு என்பவற்றை யெல்லாம் அவரைப்போல வெளிப்படுத்தி உரைத்தார் அரியர். மருத்துவம் என்பதைக் கரவாக வைத்துக் கொள்ளும் கலைபோல் தன்னலத்தார் சிலர் இருந்த காலத்தே குன்றின்மேல் இட்ட விளக்காக நேரிடையாகவும், கடித வழியாகவும், எழுத்து வழியாகவும் விளக்கிய பெருந்தகை உள்ளத்தார் வள்ளலார் : மருத்துவம் உடல் நலம், உளநலம் குறித்தது. இருவகை யாலும் வள்ளலார் பெரும்பணி ஆற்றியுள்ளார் : பின் வருவார்க்கும் வழிகாட்டியுள்ளார். அவ்வழிகாட்டுதலாய் அமைந்தவை அக்குறிப்புகள் மூலிகை குண அட்டவணை என்னும் பட்டியலில் இடம்பெற்ற சிறு குறிப்புகள் (485) சஞ்சீவி மூலிகைகள் என்றும் எழுதியுள்ளார். நித்திய கரும விதி பெரிதும் உடல் உளநலக் குறிப்பு களேயாம். உபதேசக் குறிப்புகளிலும், மடல்களிலும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள. முத்தி அடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பதா தலால் எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும். ஜீவர்களுக்கு வாந்தி பேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் இவை போன்ற பல வகைக் கெடுதியாலும் உண்டாகின்றன. சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்கா திருக்கிற வதுவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வதுகள் யாவெனில் சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பமம். நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம் தேக நஷ்டம் செய்வது உப்பு சாதம் வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய்விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது தாமசகுணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வத்துக்களில் எண்ணெய் போகச் சுடவைத்துச் சாப்பிடுதல் வேண்டும். காலங் கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக் கெடுதி, குளிக்க வேண்டுமாகில் வெந்நீரில் குளிக்க வேண்டும். கரிசாலையை தினே தினே பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வர வேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும் - இவை உபதேசக் குறிப்புகளில் சில. தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வர வேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல்களில் மித போசனம் மித போகம். தாம் தேக முதலிய கருவிகளைச் செவ்வனிறுத்தி நடத்த வேண்டும் என்று எழுதுவது தவிர வேறொன்றும் எழுதுவது அவசியமாகத் தோற்றவில்லை. இனி, ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி யேழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த பேருழப்பு - ஓர் அசாக்கிரதையால் தன்மை கெடப்பெற்றது. இங்ஙனம் பெறினும் நம் பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும், பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும் போதெல்லாம் ஒரு சிறிது உளம்புடை பெயர்கின்றாம். ஆகலின் அப்புடை பெயர்ச்சியை இன்னும் இரண்டு மூன்று திங்களின் நீக்கப் பெற்று ஆண்டு அவசியம் வருவேம். யாம் வருமளவும் தேக முதலிய கருவிகளைக் கடைக் கணித்து வருக. - இவை திருமுகச் செய்திகளுள் சில. ஒருவர்க்கு உடலில் கட்டியொன்று உண்டாக, கொவ்வைச் சாறும் கோள்வெடி யுப்பும் கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக: பூசுக உடைந்தபிற் பூரம் பூசுக பாசுறு முருங்கைப் பட்டைச் சாற்றினில் என எழுதுகிறார். சாகாக்கலை என்னும் மரணமிலாப் பெருவாழ்வு தாம் பெற்றாலும் பிறருறு துயர் தாங்காமையுடன் அவர் துயர் தீர்க்கும் பெருமுயற்சியும் அடிகளார்பால் இருந்தமை உணரத் தக்கதாம். ஒருவர் இயற்கை எய்தியது அறிந்து வருந்திய வள்ளலார் அது (இறப்பு) அரி பிரமாதிகளுக்கும் உள்ள காரியம்; ஆதலால் புதிதல்ல என்று துணிந்தேன் என்கிறார். சாதலும் புதுவது அன்றே என்னும் புறநானூற்றுத் தொடரை நினைவூட்டுவது இது. இத்திருமுக முப்பிலே ஒரு பாடல் வைத்துளார் (21) அப்பாடல் : மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண் உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உருவ னேனும் கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடித்துண்ணும் கருத்த னேல்எம் குருவானை எமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொ ணாதே என்பது. ஆணைப் பெண்ணாக்கல்; பெண்ணை ஆணாக்கல்; இறந்தாரை எழுப்பல் - ஆகிய திறம் வல்லான் எனினும் என்கிறார். இவ்வாறு கூறல் பாவலர் மரபாக இருத்தல் தாயுமானவர் பாடல் முதலியவற்றால் அறியக்கூடும். இனி, பொதுமக்கள் வழக்கொன்றை எண்ணுதல் வேண்டும். அது, செயலற்றுக் கிடப்பானைச் செத்தபயல் என்று வசை மொழிதல், மற்றொன்று, ஆழ்ந்து, எழுப்பவும் எழும்பாமல் இமையும் திறவாமல் கட்டைபோலக் கிடப்பானை அடித்துப் போட்டுச் செத்தவன் போல என்று கூறுதல். திருக்குறளில் பின்னது, துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் என ஆளப்பட்டுள்ளது. துஞ்சுதல் ஆழ்ந்த உறக்கம் என்பதையும், இறத்தல் என்னும் பொருளையும் தரும். துஞ்சு துயில் கொள்ள என்னும் மணிமேகலைத் தொடரும், கூடகாரத்துத் துஞ்சிய, காரியாற்றுத் துஞ்சிய என்பவை முதலாக வரும் புறப்பாடல் பாட்டுடையார் பெயர்களும் காட்டும். இவற்றொடு செத்தாரை எழுப்புதல் என்பதை எண்ணினால், செயலற்றுக் கிடப்பாரைத் தூண்டி வீறுபெறச் செய்தல் செத்தாரை எழுப்புதல் ஆகும். விவேகானந்தர், எழுமின்! விழிமின்! குறிதவறாது சென்மின்! என வீறுடன் முழங்கி இளையரையும் வளர்ந்த வரையும் முதியரையும் மகளிரையும் துறவரையும் தட்டி எழுப்பியமையை அவர் உயிர்ப்புமிக்க பொழிவுகளால் உணரலாம்! வள்ளலார், செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது மடம் பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம் தினம் துஞ்சிய மாந்தரை எழுப்புக! நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து என்னும் வள்ளலார் வாக்குகள் என்ன சொல்கின்றன? சன்மார்க்கி சாகான்; சாவவன் சன்மார்க்கி ஆகான் என்னும் கொள்கையை முன் வைக்கும் வள்ளலார் கூறிய இவை சன்மார்க்கம் சார்ந்தார் இறவார் என்பதையே கூறுகின்றன. மடம் பெற்ற மனிதர்கள் மதிபெற்றுத் திடமாகச் செயலாற்றல் இழந்த பேற்றை மீளப் பெற்ற பேறு ஆகும் அல்லவோ! திரு.வி.க. அவர்கள் கூறிய சித்தம் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் என்பது என்ன? சித்தம் திருந்தாமை சாவு சித்தம் திருந்துதல் பிறப்பு என்பதை அறிதல் செத்தார் எழுவர் என்பதற்கு நல்ல விளக்கமாம். சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்பதன் திரட்டு என்ன? உலகம், நிலையாமை, நிலைபேறு என்னும் இரண்டையும் உடையது. ஆக்கம் கேடு என்னும் இரண்டும் அமைந்தது. இவ்வுலகில் ஆக்கம் பற்றி நின்று அழியா வாழ்வு பெறக்கூடும். பூத உடல் மறைந்தாலும் அழிந்தாலும், மறையாத அழியாத புகழ் உடல் இறவாப் பெருநிலை இறைமை வாழ்வு! அதுவே இறை தானாய், தான் இறையாய் நிற்கும் நிலைபேற்று வாழ்வு என்பதாம். மேலும் செயலற்றுக் கிடப்பாரும் தீமையில் உழல்வாரும் கிளர்ந்து செயலாற்றலும் திருந்தி வாழ்தலும் செத்தார் எழுதலும் என்க. திரு.வி.க காட்டும் ஓர் ஓவியம் : தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாபோல் மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழ்ந்தவன் எல்லா உயிரிலும் இருக்கை பெற்றவன் எல்லாம் தன்னுள் இருத்தலைப் பார்த்தவன் தன்னுயிர் மன்னுயிர் மன்னுயிர் தன்னுயிர் என்ற உண்மையில் நின்றவன் அருகன் அருகே. (147-152) 2. வள்ளலார் கண்ட ஓதாக் கல்வி ஓதுதல் : “ïsikÆš fš” v‹wh® xsitah®., இளமைக் கல்வி சிலையில் (கல்லில்) எழுத்து என்பது பழமொழி. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பது உலக நீதி. ஓதுவது ஒழியேல் என்பதும் ஔவைமொழி. நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத்தீரும் என்பதும் பழமொழி. தீரும் என்பது மறந்து விடும் என்பதாம். ஓதி மறப்போன் ஓட்டைக் குடமே என்பது அன்பும் அறிவும். ஓதுதல் வேண்டும்; தொடர்ந்து ஓதுதல் வேண்டும்; ஒதுவது ஒழிந்தால், ஓதியதும் ஒழியும் - என்பவற்றை விளக்குவன இவை. ஓதிய பேதை : ஓதி உணர்கிறான் ஒருவன்; ஓதியதைத் தவறாமல் மனத்துக் கொண்டிருக்கிறான்; கொண்டதைப் பிறர் உணர எடுத்துரைக்க வல்லனாகவும் இருக்கிறான்; ஆனால் அவன், தான் ஓதியதற்குத் தக்கவாறு அடங்கி இராமல் அடங்கானாகக் கண்டவாறு திரிகிறான்; அவன் பேதை அல்லன்; பேதைக்கும் பேதை; என்பது வள்ளுவம். அது, ஓதிஉணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் என்பது. ஓதுவார் : இராசராசன் காலத்தில் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிக்க (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலியவற்றைப் பண்ணோடு பாடவல்ல) ஓதுவார்களை நியமித்தான். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு அவன் அமர்த்திய ஓதுவார் நாற்பத்து எண்மர் என்பது அக்கோயில் கல்வெட்டு. அவ்வோதுவார் முப்போதும், ஐம்போதும் திருக்கோயிலுக்கு வந்து திருப்பதிகம் ஓதுவார். அவர் ஓயாமல் ஒழியாமல் நாளும் பொழுதும் ஓதுவதால் ஓதுவார் எனப்பட்டனர். ஓதினார் அல்லர்; ஓதுகிறார் அல்லர்; அவை இறந்த காலமும் நிகழ் காலமும் ஆம். என்றும் ஓதுபவரை எதிர்காலத்தால் பெயரிட்டு முக்காலும் ஓதுவார் என்பதற்குப் பெயரீடு செய்தனர். மலை நிற்கும்; ஆறு ஓடும்; மழை பொழியும்; தேன் இனிக்கும் என்பவை போல. இடைவிடாமை : ஓதுதல் = இடைவிடாது பயிலுதல்; இடைவிடாது கூறுதல், இசைத்தல் என்க. கடல் அலை ஓயுமா? அலை ஓய்வது எப்போது? தலை முழகுவது எப்போது? என்பது பழமொழி. அலையோடு அலையாய்த் தலை முழுக வேண்டுவது தான் என்பது குறிப்பு. ஓயா அலைகடலை ஓதக் கடல் என்பது இலக்கிய ஆட்சி. அலை எழுச்சியை ஓதம் என்பது பொதுமக்கள் ஆட்சி. ஓதம், ஓத்து ஓதுவது யாது? ஓத்து. ஓதும் நூல் ஓத்து எனப்பட்டது. அதனை முறைப்பட அமைத்தல் ஓத்து முறை வைப்பு எனப்படும். உத்தி வகைகளுள் அஃது ஒன்றாம். ஓத்தை மறந்தாலும் மீள நினைவுக்குக் கொண்டுவர வாய்ப்பு உண்டு. ஆனால், ஓதியவன் ஒழுக்கத்தை இழந்து விட்டால் இழந்தவனே ஆவன் என்பது வள்ளுவம். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பது அது. இதுகாறும் அறிந்தவற்றால், இடைவிடாது பல்கால் பயிலுதலும், கூறுதலும் ஓதுதல் என்பதாம் எனத் தெளியலாம். பயில்வான் : பயிலுதல் என்பதொரு சொல். அது பயிற்சி என்பதுமாம். ஒரு முறை செய்வதோடு அமையாது, பலகால் செய்து - படித்து - பழகுதல் பயிலுதலாம் வண்டியோட்டுதல் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சி, நீந்துதல் தாவுதல் ஓடுதல் முதலாம் விளையாட்டுப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, இசைப் பயிற்சி, பொழிவுப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி என எண்ணுங்கள்! எத்தனை எத்தனையோ பயிற்சிகள், உங்கள் எண்ணத்தில் வளைய வளைய வருதல் காணலாம். பயிற்சி ஒரு முறை செய்ததுடன் நிற்பதன்று; பல்கால் தொடர்ந்து பலநாள் செய்வதே பயிற்சியாம். பயிற்சி யாலேயே பெயர் பெற்றார் ஒருவர், அவர் ஓதுவார் போன்றவர். பயில்வான் என்னும் பெயர் பெற்றவர். களரிப் பயிற்சி : விளையாட்டுப் பயிற்சி, களரிப் பயிற்சி என்பவற்றில் தேர்ந்த ஆசான் பெயர் பயில்வான். ஓயாது ஒழியாது பயின்று கொண்டே இருத்தலால் பயிற்றும் தொழிலேற்ற அவர் என்றும் பயில்வான் ஆக விளங்குகிறார். பயின்றார், பயில்கிறார் எனினும், பயில்வான் என்றே பெயர் பெற்றுத் திகழ்கிறார். களரிப் பயிற்சி செய்யும் அவையங்கள் பல கம்பன் காலத்து இருந்தமையாலும், இளைஞர்கள் அக்களங்களில் பயின்றமை யாலும், கந்தனை அனையவர் கலைதெரி கழகம் எனப்பாடு புகழ் பெற்றது. சங்க காலத்தே பெருநற்கிள்ளி என்பான் ஒரு சோழவேந்தன் இருந்தான். அவன் அரிய பயிற்சியாளன்; ஆடல் களம், போர்க் களம் ஆகியவற்றில் பெரும்பங்கு கொண்டான். நாடு போற்றும் புகழாளனாகத் திகழ்ந்தான். அதனால் அவன், போரவைக்கோ எனப் பட்டம் பெற்றான். அவனைப் புகழ்ந்து பாடிய புலமையர், போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்றனர். அவன், செருக்குற்று வந்த ஆமூர்மல்லன் என்பானை, களரியிலே வளைத்து வாட்டிய அருமையை நக்கண்ணையார் என்னும் புலமைச் செல்வியார் பாடிய பாடல் புறநானூற்றில் புகழ்வாழ்வு கொண்டு திகழ்கின்றது! பன்னுதல் : கூறுதல், சொல்லுதல், இயம்புதல், இசைத்தல், நவிலுதல் என்பன வெல்லாம் சொல்லுதல் என்னும் பொருள் தருவன. எனினும், தனித்தனிச் சிறப்புப் பொருள் கொண்டவை. இவ்வாறே பல்கால் சொல்லுதல், மீளமீளச் சொல்லுதல் பன்னுதல் எனப்படும். ஏன் பன்னிப்பன்னிப் பேசுகிறாய் என்பது மக்கள் வழக்கு. இவற்றால் ஓதுதல், பயிலுதல், பன்னுதல் என்பவை ஒரு முறையுடன் நில்லாமல் பன்முறை கொள்ளும் தொடர் முயற்சியைக் குறித்தல் விளக்கமாம். ஆதலால், ஓதுதல் என்பது படித்தல் எனப்படாமல், பல்கால் படித்தல் எனப் பொருள் கொள்ளப்பட வேண்டிய சொல்லாகும் என்பதைத் தெரிதல் வேண்டும். கல்வி முறை : கல்வி பற்றிய பல விளக்கங்களை நன்னூல் இலக்கணம் நம்முன் வைக்கின்றது. கற்றல், கற்பித்தல், நூல், முறையோதல் என்பன பற்றி யெல்லாம் அது சொல்கின்றது. ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும் ஆசான் உரைத்தவை தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றலன் ஆகும் அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும் என்பவை, கற்பவை பற்றிய சில நூற்பாக்கள் (42-45). ஒருமுறையுடன் அமையாமல் இருமுறை பாடம் கேட்டால் நூலில் பெரும்பாலும் பிழையில்லாமல் அறிதல் கூடும். அதனை, மூன்று முறை கேட்டால், கேட்டவன் தானேயும் பிறர்க்குச் சொல்லும் முறை அறிந்து சொல்லவல்ல தேர்ச்சியும் பெறுவான். எனினும், ஆசிரியன் உரைத்த பாடத்தை அமைந்து மனங்கொளக் கேட்டாலும் கேட்டவற்றில் கால்பங்கே உளங்கொள வாய்க்கும். தம்மைப் போல் பாடம் கேட்ட மாணவரொடு சேர்ந்து படித்தலால் கால் பங்கும் கற்றதைப் பிறர்க்கு எடுத்துரைத்தலால் அரைப்பங்கும் ஆக முழுப்பங்கும் பெற வாய்க்கும் என்பது இந்நூற்பாக்களின் பொருளாம். இப்பாடலில், முக்கால் கேட்டல் என்பது பல்கால் கேட்டலாம். ஒன்றல் பல என்பது தமிழ்நெறி. பாடம் கேட்கும் முறையை, செவிவாய் ஆக நெஞ்சு களன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து என்கிறது அந்நன்னூல். வாயால் உண்டு வயிற்றில் சேர்க்கும் ஊண்முறைபோலச் செவியால் கேட்டு நெஞ்சமாம் களஞ்சியத்தில் கல்வியாம் மணியைச் சேர்த்துப் பயன்பெறல் வேண்டும் என்பது இதன் பொருள். மேலும் பாடம் கேட்பவன் இயல் எப்படி இருக்க வேண்டும் எனின், பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி என்னும் அந்நன்னூல். நீர் வேட்கையுடையான் அவ்வேட்கை தணிக்கவும், பசிமிக்கோன் அப்பசி தீர்க்கவும் எவ்வாறு விரும்புவானோ அவ்வாறு கல்வியை விரும்பிக் கற்க வேண்டும் என்பது அது. கற்கும் திறம் : ஆர்வத்தால் கேட்பானும் ஒருமுறை கேட்ட அளவில் முழுதுறக் கற்க இயலாமை ஏன் எனின், அறிவுக் கூர்ப்பு ஒரே வகையாய் அனைவர்க்கும் அமைவது இல்லை. பெற்றோர் நிலை, சூழல்நிலை என்பனவும் ஒன்றாயிருப்பதில்லை. ஆதலால், கற்றுக் கொள்ளும் திறமும் ஒன்றாய் அமைவது இல்லை என்க. பாடம் ஒன்று; கற்பிப்பாரும் ஒருவர்; ஆயினும் அவர் கற்பிப்பதைப் பெறும் மாணவர் பலரும், பலவகையில் இருத்தலைக் காணின் இது தெளிவாகும்; தேர்வு வைப்பின் அவர்கள் மதிப்பெண் ஒப்பப் பெறாமை இதனை நன்கு வெளிப்படுத்தும். திரி விளக்கு : அகல் விளக்கில் - குத்து விளக்கில் - திரிகள் போட்டு எண்ணெய் விட்டு எரியூட்டினால், அத்திரிகளுள் ஈரம்பட்ட திரியொன்று இருந்தால், அது மற்றைத் திரிகளைப்போல் உடனே பற்றி எரியாது; அரிதில் பற்றிக் கரிந்தும் எரியும். அதுபோல், சிலர் மந்த நிலை, கேட்டவை கேட்டவை உளங்கொள இயல்வது இல்லை. இதனை, இன்னிசை இருநூறு என்னுநூல், ஈரத் திரியின் இருந்தகளி நெய்த்திரியில் சாரும் தழலொப்ப நூற்பொருள் சாருமால் என்று கூறும் (102) தீப்பற்றல் : சூடத்தில் பற்றும் தீ, கரியில் பற்றும் தீ, வாழைத் தண்டில் பற்றும் தீ மூன்றும் எரிநிலையில் வேறுபடுதலை, கர்ப்பூர அறிவு, கரி அறிவு, கதலி அறிவு என முத்திறப்படுத்திக் கூறுவது உண்டு. அறிவைப் பெற்றுக் கொள்ளும் மாணவர் திறங்கொண்டு தலைமாணாக்கர், இடைமாணாக்கர், கடைமாணாக்கர் எனப் பாகுபடுத்திப் பார்த்தல், எடுத்துக் காட்டுடன் நன்னூலில் காணலாம். அன்னம் ஆவே; மண்ணொடு கிளியே; இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் தலை இடை கடைமா ணாக்கர் என்பது அது. மன்ணொடு கிளி, இடைமாணாக்கர்; அன்னமும் ஆவும், தலைமாணாக்கர்; (இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்) ஆடு, எருமை, நெய்யரி, கடைமாணாக்கர்) என்று உவமைப்படுத்திக் காட்டியது அது. அன்னம் முதலியன உவமையாகும் வகையை ஆங்குக் காண்க. நன்னூலார் கூறிய மும்முறை கேட்டலை, இருமுறை கேட்டலாக்கினார் ஔவையார். ஒரு வெண்பாவை இருமுறை கேட்ட அளவில் ஒப்பித்தல் வேண்டும். அதனை எழுத்து வடிவில் ஒரு முறை பார்த்துவிட்டால் தவறாது எழுதுதல் வேண்டும் என்பது அவர் கருத்து. அதனை, வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானை என்பார். பதிவுத் திறம் : ஓரிருமுறை கேட்ட அளவில் மனமாம் ஏட்டில் அழியாப் பதிவாக்கிக் கொள்ளும் ஆற்றலாளர் தமிழ்மண்ணில் வாழ்ந்தனர். அவருள் ஒருவர் அந்தகக் கவிவீரராகவர். அவர் தம்மை, ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்தே எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன் என்கிறார். கட்பொறியின் ஒளி இழந்த அவர், உள்ளொளி வல்லாராகத் திகழ்ந்தமை போலவே திகழ்ந்தவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர். அவர் ஒரு பாடலை ஒரு முறை கேட்ட அளவில் மனத்தகத்தே வரப்படுத்திக் கொள்ளும் திறத்தினர். அவர், ஒரு முறை கேட்டுஒப்பிப்பார் (ஏக சந்தக்கிரகி) எனப்பட்டார். அவர்க்குக் கையேடு படித்தவர் இருமுறை கேட்டு ஒப்பிப்பார் எனத் திகழ்ந்தார். இவ்வாறு, பல்கால் படியாமல், கேளாமல் ஓரிருகால் கேட்டு மனத்தே வரப்படுத்திக் கொள்ள வல்லார், உலகளாவிய பார்வையில் பலராவர். தமிழ் மண்ணில் வாழ்ந்த ஞானசம்பந்தர், மெய் கண்டார், குமரகுருபரர் என்பாரைச் சுட்டலாம். அத்தகும் உள்வாங்கு திறம் கொண்டவர் வள்ளலாராவர் என்க. ஓதாக் கல்வி : ஓதாக் கல்வி திருக்குறளில் உள்ளது என்கிறார் வள்ளலார். அதனை நாம் கண்டு கொண்டால் தெளிவு பிறக்கும். எளிமையில் காண இயலாவாறு உரைமயக்கம் செய்து கொண்டிருத்தலை நாம் கண்டு கொண்டாலன்றித் தெளிவு ஏற்படும் வாய்ப்பு இல்லை. திருக்குறளில் ஓதாக் கல்வி பற்றி உரைக்கும் பாடல் எதுவென வள்ளலார் கூறினார் அல்லர்! சாகாக்கலை திருக்குறள் முதல் அதிகாரத்தில் உள்ளமையைச் சுட்டும் வள்ளலார், இவ்வோதாக் கல்வியுள்ள அதிகாரத்தைத் தானும் சுட்டிக் காட்டினார் அல்லர்! நாம் முயன்று வள்ளுவப்பார்வையே பார்வை எனப் பார்த்தால் அக்குறள் தலைகாட்டுகின்றது. அது, ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்பது. ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்விதானே ஏழு பிறப்பினும் ஏமமாதலை உடைத்து என்றவாறு என்பது மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய இருவர் உரையுமாம். இது, வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமாறு என்பது என்றது இக்குறளுக்கு இவர்கள் தரும் மேல் விளக்கம். ஒரு பிறப்பிலே கற்ற கல்வி ஏழு பிறப்புக்கும் உதவும் என்றவாறு என்பது பரிதியார் உரை. ஒரு பிறப்பின்கண் நல்வழிக்குரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனேதான் கற்ற கல்வியானது அங்ஙனம் கற்ற இணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாம் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியேயன்றிப் பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியை உடைத்து என்றவாறு என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர், ஒருவனுக்குத் தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி எழுபிறப்பினும் சென்று உதவுதலையுடைத்து என்றவாறு, வினைகள் போல உயிரின்கட்கிடந்து ஒது புக்குழிப் புகுமாகலின் எழுமையும் ஏமாப்புடைத்து என்றார். எழுமை மேலே கூறப்பட்டது. உதவுதல் நன்னெறிக்கண் உய்த்தல் என உரையும் விளக்கமும் வரைகிறார். மேல் என்றது எழுபிறப்பும் தீயவை தீண்டா என்னும் குறளில் (62) ஆகும். வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின் கண்ணும் என்று எழுபிறப்பு என்பதற்கு உரை கூறி விளக்கம் செய்தார். அப்பாடலில், ஒருமைச் செயலாற்றும் பேதை என்பதில் வரும் ஒருமைக்கு, இவ்வொரு பிறப்புள்ளே என்றே உரை எழுதினார் பரிமேலழகர். பிறரும் அவ்வாறே எழுதினர் (835) ஆனால், ஒருமை மகளிரே போல என்னும் குறளில் வரும் ஒருமைக்கு, கவராத மனத்தினை யுடைய மகளிர் என உரைகின்றார் (974). கவராத என்பது பிரிவு - பிளவு - படாத ஒருமுகப்பாடு என்னும் பொருள் தருவதாம் (974). ஒருமை : கால் நடக்கிறது; கண் பார்க்கிறது; எங்கோ பார்த்துக் கொண்டு, எங்கோ நடந்தால் நடை என்னாகும்? மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின் பால் உய்ப்ப தறிவு என்பவை மனத்தை ஒருமைப்படுத்திச் செலுத்துதலே சுட்டுவவாம். வானிலே பறந்து வரும் பறவைக்குக் குறிபார்க்கிறான் ஒருவன். அவன் நிற்பது கீழே; அது பறப்பது மேலே. அதுவும் நிற்கும் பறவை அன்று; பறந்து வருவது. அதற்குக் குறி வைப்பது என்றால், பறவை வருமிடமும் அம்பு செல்லுமிடமும் அல்லது துமிக்கிக் குண்டு சேரும் இடமும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவோ! அவன் எண்ணமெலாம் ஒருமுகப்பட்டு அல்லவோ செயல்புரிகின்றன! எங்கோ பார்த்து எங்கோ செயல்படுதல் என் பயணம்? இயற்கையே, நமக்கு ஒருமுகப்படுதலைக் கற்பித்துக் கொண்டே உள்ளது! கண்ணிரண்டு எனினும் இரட்டைப் பார்வை இல்லையே! காதிரண்டு எனினும் இரட்டைக் கேள்வி இல்லையே! இவ்வாறு தானே நா இரண்டு, நுரையீரல் இரண்டு, குடல் இரண்டு என்றாலும் ஒருமுகப்பட்டுச் செயல்படுகின்றன அல்லவோ! அவ்வாறு ஒருமுகப் பார்வை, ஒருமுகக் கேள்வி என்பவையே ஊன்றி நிற்க உதவும். எதையோ எண்ணிக் கொண்டு எதையோ செய்வது பயன் தராது; இடரும் தரும். குறிக்கோள் : குறிக்கோள் என்பது என்ன? ஒரு குறியையே உறுதிப் பிடியாகக் கொண்டு நடப்பதே குறிக்கோள் என்பதாம். ஒரு முகப்பட்டுச் செயல் புரியும் எதுவும் வெற்றிக்கு மூலமாம். ஒருவர்க்கு ஒரு குறிக்கோள் தானா உண்டு? ஒரே செயல்தானா உண்டு? எனின், எக்குறிக்கோளில் அல்லது எச்செயலில் ஈடுபடுகிறோமோ அப்பொழுதில் அதுவாகவே இருத்தல் முழுதுற ஒப்படைத்தல் வேண்டும் என்பதாம். விவேகானந்தர் பள்ளியில் பயின்றபோது நடந்ததொரு நிகழ்ச்சி. ஆசிரியர் பாடம் தொடங்கினார்; ஆனந்தர் கண்களை மூடினார்; ஆசிரியர் பாடம் முடித்தார்; ஆனந்தர் மூடிய கண்களைத் திறந்தார். ஏன் பாடம் தொடங்கியதும் கண்ணைமூடி, பாடம் முடித்ததும் கண்ணைத் திறந்தாய்! உறங்கினாயா? என்றார் ஆசிரியர். இல்லை; உறங்கவில்லை! உங்கள் பாடத்தை முழுதுறக் கேட்டு உள்வாங்கிக் கொள்வதற்காகக் கண்களை மூடினேன். கண்திறந்திருந்தால் பக்கம் பார்க்கவும் கவனம் தவறவும் ஆகலாம். அதனால்தான் என்றார் ஆனந்தர். ஆசிரியர் நம்பவில்லை. ஆனந்தர், ஆசிரியர் கற்பித்த பாடம் முழுவதையும் அப்படியே ஒப்பித்தார், வியந்தார் ஆசிரியர். இக்கேள்வியே ஒருமையொடு கேட்ட கேள்வியாம். ஆனந்தர் ஒருமுகப்படுத்தல் பற்றி உரையாற்றினார் அமெரிக்காவில். அவர் நிலையை ஆய விரும்பினோர், மேடைக்குக் கீழே வெடி வைத்தனர். வெடியொலி கேட்டுக் கூட்டம் வெளியேறியது. விவேகானந்தரோ எந்தவோர் அதிர்வும் இலாராய்த் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்! ஒரு முகப் பட்டார்க்கு அவருள்ளேயே உலகம் ஒடுங்கிப் போகின்றது! உலகியல் நிகழ்வு அவ்வேளையில் அவர்களை அசைப்பதும் இல்லை! அலைப்பதும் இல்லை! நிலையில் திரியாது அடங்கிய மலையின் நிலை அது. விவேகானந்தர் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரம் பக்கம் படித்து அக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலராகத் திகழ்ந்தார் என்பது வரலாறு. கவனகம் : எண்கவனகம், பதின்கவனகம், பதினாறு கவனகம், முப்பத்திரண்டு கவனகம், நூறு கவனகம் வல்லார் உளர். அவர் நிலை என்ன எனின், அவ்வக் கவனகத்தின் போது அதுவாகவே இருந்து உள்வாங்கி ஒழுங்குறப் பதிவாக்கி வைத்துக் கொண்டு வைத்தது மாறாமல் மீள எடுத்து வழங்குகிறார். முன்னாளில் வாழ்ந்தவர் செய்கு தம்பிப் பாவலர்; நூற்றுக்கவனகர்; இரு நூற்றுக் கவனகமும் ஒரு முறை செய்தார். ஆயிரக்கணக்காகக் கொண்டுள்ள நூலகத்தில் பணி செய்வார், தாம் விரும்பும் நூலை கைவைத்த இடத்தில் கண்டு எடுக்கிறாரா இல்லையா? ஆயிரக்கணக்காக அடுக்கி வைக்கப்பட்ட மருந்துகளை, எளிமையாய் நொடிப்போதில் எடுத்துத் தருகின்றனரே! இவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்ன? ஒருமுகப் பட்ட பார்வையின் வெற்றியே அஃதாம். ஒருமுகம் : ஒருமை, எழுமை என்னும் சொற்களைக் கண்டதும், உரைகாண்பார்க்குத் தோன்றுவது ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்னும் பழக்கப்பட்டுப் போன செய்தியே முன்வந்து விடுகின்றதாம். ஆனால், ஒருமை மகள் என்பதில் எழுமைச் சொல் இல்லை. அதனால், ஒருமை என்பதற்குக் கவர்த்தல் இல்லாத அல்லது ஒருமுகப்பட்ட என்னும் பொருள் காண நேர்ந்துவிடுகின்றது. பரிமேலழகரே அப்பொருளைத் தந்து விடுகிறார். ஒருமைப்பாடு என்பது பலரும் பொருள் அறிந்தோ அறியாமலோ சொல்லவும் கேட்கவும் ஆகிய சொல்லாகி விட்டது. தம் எண்ணப்படியே செயல்படும் ஒருவரை ஒரு மனசு என்று ஊரவர் வழங்குவதையும், சொல்லிய விலையை அன்றி மாற்றாத ஒருவர் கடையை, ஒரு சொல் கடை என்பதையும் யான் அறிவேன். இவ்வாறு பிறரும் அறிந்திருக்கக் கூடும். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்னும் குறளுக்கு, ஒருப்பட்ட உள்ளத்தோடு ஒருவன் கற்ற கல்வி அவனுக்குப் பின் வரும் வாழ்நாள்களில் எல்லாம் அழியாத பாதுகாப்பாக இருத்தலை யுடையது எனப் பொருள் கொள்ள வாய்க்கின்றது. ஒருமை : வள்ளலார் பாடிய கந்த கோட்டப் பாடலில், ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கல வாமை வேண்டும் என்று (முதல் பதிகத்திலேயே) ஒருமையைச் சுட்டுதல் எண்ணத் தக்கது. ஒருமைப் பயனை, ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை என இறைமைப் பேற்றை உரைப்பதும் எண்ணுக (2792). ஒருமையின் உலகெலாம் ஓங்குக என்னும் திருப்பள்ளி எழுச்சி (4890) நினைக. ஒருமையின் வடிவாகவே நின்ற வள்ளலார் கற்ற கல்வி ஒருமைக் கல்வியே என்று கொள்ளுதல் பொருந்துவதாம்! வேலு முதலியார்க்கு எழுதிய பாடலொன்றில். ஒருமையிலா மற்றவர் போல் எனை நினைத்தல் வேண்டா என்கிறார்! வள்ளலார் தாமே தம்மைச் சுட்டுவது அல்லவோ இது! ஆற்றங்கரை, குளத்தங்கரை அடுத்துள்ள சிற்றூர் மகளிர் நீரைக் குடங்களில் எடுத்துத், தலையில் ஒன்றும் இடையில் ஒன்றுமாய் வைத்து நடையிட்டு, வாய்பேச கைவீச வயல் வரப்புகளில் நடையிட்டு வருதலை இன்றும் காணலாம்! எத்தனை செயல்கள் ஒருமைப்பாட்டால் இடரின்றி இயல்பாக நிகழ்கின்றன! ஐந்தவித்தல் : அருகர் பெருமானுக்கு ஒரு பெருமையைத் தமிழுலகம் தந்தது. அது, புலன் ஐந்தும் வென்றான் என்பது. புத்தர் பெருமான் நிலையும் அதுவே, இவர்கள் ஐந்தவித்த அறவோர் ஆயவர். ஐந்து, மெய் வாய் கண் மூக்கு செவி! அவித்தல் பக்குவப்படுத்தல். இதனைத் திருவள்ளுவர், பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் என்றும், ஐந்தவித்தான் ஆற்றல் என்றும் கூறினார். திருவள்ளுவர் உவமை வகையால், ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து - என்றார். எதனால் ஐந்தடக்கிக் காப்பது எனின், உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து - என்றார். மனச் செருக்கு, மனச் சுழற்சி, மன நிலையாமை என்பவற்றைக் கருதி மனம் எனும் மாடு, மனக்குதிரை, மனக் குரங்கு என்பாரும் பிறவாறு கூறுவாரும் உளர். மாட்டிலும், குதிரையிலும், மந்தியார் ஆட்டமே பெரிதாம். அதனையும் அடக்கி வைக்கும் அழகோவியத்தைத் தீட்டிக் காட்டுகிறார் சீத்தலைச் சாத்தனார். வெயில்நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலாட ரங்கின் மந்திகாண் பனகாண் என்பது அது. ஒன்றில் முழுதுற ஈடுபடுங்கால் அதுவாகவே மாறிவிடுதல் மன இயற்கையாம்! அதுவாதல் : ஆழ்ந்த படிப்பின் போது ஆடும் மணியொடு ஆனை நடையிட்டுச் சென்றதும் தெரிவது இல்லை! ஆரவாரக் கொட்டு முழக்கும் புலப்படுவது இல்லை! படிப்போ எழுத்தோ பணியோ பார்வையோ அதுவாகச் செய்யும் நிலையில் அவர் அதுவாகித் தம்மை மறந்தாராகிறார். அவர் அச்செயலாராக, அக்காட்சியாராக ஆவாரேயன்றிச் செயலற்றவர் ஆகமாட்டார். இதனைத், தன்னை மறந்த லயம் - என்பார் பரதியார். செயல் மறந்து வாழ்த்துதும் - என்பார் பேராசிரியர் சுந்தரனார்! எங்கெங்கே காணினும் அங்கங்கே நீயன்றோ - என்பார் தாயுமானார். கூனியாக நடித்த ஒருவனை நாடகத்தில் பார்த்த உணர்ச்சியாளன், அவன்மேல் தன் செருப்பைக் கழற்றி வீசினான் என்றால் என்ன பொருள்? அவன் நடித்தான் அல்லன்! கூனியாகவே மாறிவிட்டான் என்பதுதானே பொருள்! இறந்தவனாக நடிக்க வேண்டிய காட்சி! காட்சி முடிந்தது! இறந்தானாக நடித்தவன் எழவே இல்லை! இறந்தே கிடந்தான்! அதுவாகிய நிலை அது! அந்நிலை ஒருமை நிலை! அந்நிலை யுற்றவர் ஒரோ ஒரு முறை படித்த - கேட்ட - எதனையும் தம் உள்வாங்கி என்றும் வைத்துக் கொள்ள வல்லார் என்பதாம். வரலாறு : வள்ளலாரின் தமையனாராகிய சபாபதிப் பிள்ளை அக்காலக் கல்வி முறைப்படி திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி முதலிய நூல்களைத் தம் அருமைத் தம்பியார்க்கு நாடோறும் வழுவாமல் கற்பிக்கலானார். ஆனால், இராமலிங்கமோ சொல்லி வைத்த பாடங்களைக் கண்ணும் கருத்துமாகக் கற்பதில்லை. எந்நேரமும் ஏதோ வேறொரு சிந்தனையில் ஆழ்ந்து, தமையனார் மொழியைச் சிறிதும் ஆக்குவதில்லை என அடிகளாரைப் பற்றி மணி திருநாவுக்கரசர் எழுதுகிறார். திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலியவை தமிழ்ப் புலமை பெறுவார்க்குச் சொற்பொருட் களஞ்சியமாகத் திகழ்ந்தவை. அவற்றைக் கற்க வேண்டுமெனின் கற்பார், எழுத்தற வாசித்தவராக இருத்தல் வேண்டும். அத்தகவு இலாரைக் கற்குமாறு கற்பிப்பார் சொல்ல மாட்டார்! சொல்லியும் தாரார்! ஆதலால், வள்ளலார் நிகண்டுப் பாடம் கற்கத் தூண்டப்பட்டார் என்றால், எழுத்து சொல் தொடர் ஆயவை கற்றிருந்தார் என்பதாம். கூறப்பட்ட நிகண்டு நூல்களோ, சதகம், அந்தாதி என்பனவோ உரைநடை நூல்கள் அல்ல! பாடல் நூல்கள்! ஆதலால், பாடற் பயிற்சியும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. சபாபதியார் கற்பித்த நூல்களில் ஊன்றாத வள்ளலார், அவர் தாமாகத் தமக்குத் தோன்றிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு தமக்கு விருப்பமான நேரங்களில் படிப்பார். ஆனால், தம் தமையனார் கட்டளைப்படி எந்நூலையும் உருப்போட்டுப் படித்து அப்படியே ஒப்புவிக்க மாட்டார் என்கிறார் மணி திருநாவுக்கரசு. தமக்கு விருப்பமான நூலை, தமக்கு விருப்பமான நேரங்களில் படிப்பார்! இது படிப்பு இல்லையா? முன்னரே படிக்க அறிந்திருந்தால் அன்றி, எப்படி விருப்பமான நூல்களை, விருப்பமான நேரங்களில் படிக்க முடியும்? ஒரு முறை படித்தாலே பச்சை மரத்து ஆணியினும் பதியும் திறம் வாய்க்கப் பெற்றிருந்த வள்ளலார், உருப்போட வேண்டியது என்ன? ஒப்பிக்க வேண்டியது என்ன? இராமலிங்கரை, அண்ணார் விருப்பப்படி கல்வி கற்க வேண்டுகிறார்; தூண்டுகிறார் அண்ணியார். அண்ணார் சொல்லுக்கு ஆட்படாத இளவல் அண்ணியார் வடித்த கண்ணீர் நனைக்க இளகித் தடையில்லாது ஏற்கிறார். தண்ணீர் ஆற்றலும் அருமையும் உலகுக்கு உணர்த்தவே பிறந்த வள்ளலார், அண்ணியாரிடமிருந்து கற்றுக் கொண்ட - ஓதாமல் கற்றுக் கொண்ட முதற்பாடம் - உருக்கம்! எந்தப் பள்ளிக் கல்வியாலும் உண்டாகாத இயற்கை ஆன்ம நேய உருக்கக் கல்வி அது. அப்படியே நான் செய்யத் தடையில்லை. நாளைக்கே மேல் மாடியில் எனக்குத் தனியே ஓர் அறையை விட்டுவிட வேண்டும். அவ்வறையை மெழுகித் தூய்மை செய்து வைத்து விடுங்கள். நான் கல்வி கற்கத் தொடங்குவேன் என்றனர் என்கிறார் மணி திருநாவுக்கரசர். வள்ளலார், ஓர் அறையை விட்டுவிட வேண்டும் : தூய்மை செய்து விடுங்கள் இத்தகைய கட்டளை உரையை உரைப்பார் என அவருள்ளம் அறிந்தார் ஒப்பார். ஓரறை வேண்டினார்; பெற்றார்; கற்றார் என்றே அமைவோம். தமிழ் : தமிழ் மொழி அமைப்பு எத்தகையது? இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றிடத்தே மனம்பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்பது வள்ளலார் எழுத்து. மேலும், தமிழ்ப் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவானு பூதியைக் கொடுக்கும் என்றும் கூறுகிறார். எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பது தமிழ் மொழித் தகவு பற்றிய பாடல் தொடர். தமிழ் எழுத்துகளைக் கூட்டினால் போதும்; சொல் தானே வந்து நிற்கும். எதனால்? ஓரெழுத்துக்கு ஒரே ஒலி; எழுத்து ஒலிச் சேர்க்கையே சொல்! எ.டு : அ-ம்-மா=அம்மா. அ-ப்-பா=அப்பா. சொல்லைச் சேர்த்து வரச் சொற்றொடர்தானே வரும். எ-டு: அம்மா வந்தார். எழுத்துத் தெளிவும், எழுத்தைக் கூட்டிப் படிக்கும் திறனும் இருந்தால் எந்த நூலையும் எளிதாகப் படிக்கலாம்; பொருள் புரியலாம். எ.டு: அகர முதல எழுத் தெல்லாம் நன்றி மறப்பது நன்றன்று வடவேங்கடம் தென்குமரி எழுத்து ஒலியும் இயற்கை வழியது; இயற்கை வழியதே எழுத்து வடிவம்; சொற் பொருளோ, வாய்வழிப் பயின்று வந்த தாய் மொழி! ஆதலால், இடரேதும் இன்றி எந்நூலையும் பயிலலாம். கேட்டதையும் படித்ததையும் மனத்தகத்தே பதித்துக் கொள்ளும் திறம் தனித்தனியானது. ஒருவர்க்கு ஒருமுறை போதும்; இன்னொருவர்க்கு மும்முறை வேண்டும்; மற்றொருவர்க்குப் பத்து முறையும் தேவையாகலாம்! வள்ளலார் உள்ளப் பதிவுக்கு ஒருமுறை படிப்பது போதுமாக இருந்தது. அதனால், தனித்த இடத்தில் இருந்து, படிப்பே நோக்காக இருந்து, தாமாக ஒன்றிவிட்ட இறையுணர்வோடு வள்ளலார் படித்த நூல்களுக்கு வரம்பு இல்லை. வரம்பு இல்லை என்பது எப்படித் தெரியும்! கையேடு : வள்ளலார் தமையனார் சபாபதியார் புராணச் சொற் பொழிவாளர். அவைகள், செல்வர் இல்லங்கள் முதலியவற்றிற்குச் சென்று அங்குக் கூடினோர் இன்புறப் புராணப் பாடல் -கதை-விளக்கம் சொல்லும் பணி அது. அதற்குப் புராணம் சொல்பவரை அல்லாமல் கையேடு படிப்பார் ஒருவரும் உடனிருப்பார். சொற்பொழிவாளர் விளக்கம் சொல்ல வேண்டிய பாட்டை அவையோர் இனிதில் கேட்கும் வகையில் இசையோடு பாடுவர்; பிரித்து, சந்திச் சிக்கல் இல்லாமல் பொருள் கூறுவார்க்கு எளிதாம் வகையில் நிறுத்தி பாடுவார். சொற்பொழிவாளர்க்கு ஓய்வு தரும் வகையால் அப்பொழிவின் தொடர்பான பாடல் களையும் கூட்டி இசைப்பார். சொற்பொழிவாளர் வர இயலாப் பொழுதுகளில் அவரே பொழிவு செய்யவும் வல்லாராக இருப்பார். கையேடு என்பது சொற்பொழிவாளரை ஒத்த திறம் வாய்ந்தவர் படிக்கும் இயல்பினதாகும். சபாபதியார்க்குக் கையேடு படித்தவர் ஒரு பெண் மணியார். அவர்க்கு உடல் நலம் இல்லாமையால் புராணப் பொழிவுக்கு வரக்கூடவில்லை. பொழிவோ நிகழ வேண்டும்; பொழிவுத் துணையாம் கையேடோ வரவில்லை. இக்கட்டான நிலையில் சபாபதியார் தம் துணைவியாரிடம் தம்பி கையேடு படிக்க ஏற்பாடு செய்யமுடியுமா? என்றார். அண்ணியம்மையார் அவர் நிலையை உணர்ந்து தம்பியாரை அணுகி அன்போடு உதவ வேண்டினார். வள்ளலாரும் இசைந்து சென்றார். இராமலிங்கம் புராணம் வாசிக்கத் தொடங்கினார். எடுத்த எடுப்பே எல்லாருக்கும் இன்பத்தை ஊட்டியது. குரலின் சுவையும் கூடிக் கொண்டது. சொல்லும் வகையோ மனத்தைக் கரைக்கிறது; ஒவ்வொரு மொழியும் உள்ளத்தே பொதிந்து அன்பிலூறித் தேனில் ஊறிய பழம்போலத் தித்திக்கிறது. பாட்டைப் பிரித்துப் பிரித்து அந்நுவயித்துப் படித்தார். இடமறிந்து தொடர்களை எடுத்துக் கொடுத்தார். மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். சபாபதியார்க்கோ உவகை பொங்கி வழிந்தது என்கிறார் மணி திருநாவுக்கரசர், கையேடு படிக்கும் ஆற்றல் நூற்கல்வி வல்லார்க்கே, எந்த நூல் சொல்லப்படுகிறதோ அந்த நூல் முன்னரே படிக்கும் முறையால் படிக்கப்பட்டு, கேட்பவர் சுவைக்கும் வகையில் பிரித்துச் சொல்லமைதி கண்டு இசையோடு சொல்ல வேண்டிய கலை, அக்கலையை அவைக்குக் காட்ட, கேட்டபொழுதே வள்ளலார் இசைந்தார் என்றால், அத் தகுதியைப் பெற்றிருந்ததுடன் அந்நூல் கற்றவராகவும் இருந்தார் என்பது விளங்கும். இன்னும் இதற்கு மேலாம் ஒரு நிகழ்ச்சி : சொற்பொழிவு : வள்ளலார் தமையனார் சென்னை மல்லிகேசுவரர் கோயில் முகப்பில் இருந்த சோமு செட்டியார் வீட்டில் புராணப் பொழிவு செய்து வந்தார். அப்பொழிவின் போது ஒரு நாள் அவர்க்கு உடல் நலம் இல்லாமையால் செல்ல இயலவில்லை. என் செய்வார்? தம் துணைவியார் பார்வதி (பாப்பாத்தி) அம்மையாரிடம், தம் தம்பியை ஆங்குச் சென்று கடவுள் வாழ்த்து அளவேனும் பாடி வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டினார். அண்ணியார் சொல்லை வழக்கம் போல ஏற்ற இராமலிங்கர் சோமர் இல்லம் சென்றார். இராமலிங்கம் அன்று சொல்லக் கடவதாகிய பரஞ்சோதி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய திருவிளையாடற் புராணத்துள் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்தைப் பத்திச் சுவை சொட்டச் சொட்ட யாவரும் கருவி கரணாதி சேட்டையற்று நிற்ப விடிய விடியப் பிரசங்கித்தனர். ஜனங்கள் வியப்பால் விழுங்கப்பட்டு இராமலிங்கம் சாதாரண மனிதரல்லர்; ஏதோ தெய்வப்பிண்டம் எனக் கொண்டு அவர்பால் அச்சமும் அன்பும் கொண்டு நின்றனர். பிறகு அவ்வணிகப் பிரபு சபாபதிப் பிள்ளைக்குப் பதிலாக இனி அவர் தம்பியே பிரசங்கம் செய்தால் போதும் என்று கூறினார் என்கிறார் மணி திருநாவுக்கரசு. இச்சோமு செட்டியார் இல்லம் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக, மறைமலையடிகள் நூலகம், வள்ளலார் மாளிகை என்பவற்றைக் கொண்டதாய் விளங்குகின்றது. ஆங்கு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த இடம் என்னும் கல்வெட்டு உள்ளது. கையேடு படித்ததும், தம் தமையனாரின் பொழிவினும் மேம்படப் புராணப் பொழிவு செய்ததும் ஆகியவை வள்ளலார் அதற்கு முன்னரே கற்றிருந்த நூற்கல்வியை வெளிப்பட விளக்கும் நிகழ்ச்சிகளாம். வள்ளலார் உரைச் சிறப்பை மற்றையோர் கூற, தாம் கேட்கும் அவாவினராய் மறைந்து இருந்து தமையனார், பொழிவு கேட்டதாகிய செய்தியால், படிக்கவில்லை என்று தம் தம்பியைக் கண்டித்தும் தண்டித்தும் வந்த அவர், தம்மினும் மேம்படக் கற்றாராகக் கொள்ளவும் உள்ளுள் வியக்கவும் நேர்ந்ததாம். வள்ளலார் பொழிவு இவ்வாறு அமைய அவர் எழுத்து வழியாக அறியக் கிடக்கும் நூற்கல்வி அளவு தான் எத்தகையது! கல்விப் பரப்பு : வள்ளலார் தம் கருத்தாக - தம்முணர்வாகப் பாடிய பாடல்கள் மட்டுமா, அவர் பாடல்களில், உரைநடைகளில், கடிதங்களில் உள? எத்தனை எத்தனை நூல்களை மேற்கோள் காட்டுகிறார்! தொல்காப்பியம் : வள்ளலார் காலம், தொல்காப்பியக் கல்வி துலக்கமில்லாத காலம். சென்னையில் ஒருவரும் திருவாரூரில் ஒருவரும் ஆக இருவரே தொல்காப்பியம் வல்லாராக இருந்தார் என்கிறார் பழந்தமிழ்ப் பதிப்பாசிரியர் சி.வை.தாமோதரனார். வள்ளலார் தொண்ட மண்டல சதகப் பதிப்பில் தொல்காப்பிய மேற்கோளைக் காட்டுவதை நோக்குவார், அவர் அதனைக் கல்லாதவர் எனக் கொள்ளக் கூடுமோ? அப்படி அவர் காட்டும் மேற்கோள் நூல்கள் ஒன்றா இரண்டா? முதல் ஐந்து திருமுறைகளில் அருணகிரியார், கண்ணப்பர், திருநாளைப் போவார், காழி வள்ளல், காழிக் கவுணியன், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோரைப் பாடுகிறார். இங்கித மாலையோ பாவன்மை மொழிவன்மை பொருள் காண் திறம் அணிநயம் சொற்றேர்ச்சி என்பவை அனைத்தும் அமைந்தார் தமக்கே பாடவும் பொருள் காணவும் இயலும் பாடல்களைக் கொண்டதாம். விண்ணப்பக் கலிவெண்பாவோ தேவாரத் திருத்தல அடங்கல் முற்றாகக் கற்றார்க்கே பாட இயல்வதாம். நெஞ்சறிவுறுத்தல் முன்னையோர் மொழிபொருளேயன்றி மொழியையும் அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளை மகிழ்ச்சி கொள்ளச் செய்த உத்தியதாம். ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை ஆளுடைய அரசுகள் அருள்மாலை ஆளுடைய நம்பிகள் அருள் மாலை ஆளுடைய அடிகள் அருள் மாலை ஆகிய நான்குமோ, நால்வராகவும் தாமே கூடுவிட்டுக் கூடு பாய்ந்து துய்த்த துய்ப்பு வெள்ளமாம்! இவற்றை அறிபவர், இவரை ஓதாதவர் (படியாதவர்) என்பாரா? யாப்பு : வள்ளலார் பாடிய யாப்பு வகைகள் தாம் எத்தனை? குறள் வெண்பா, குறள் வெண் செந்துறை, குறட்டாழிசை, நேரிசை வெண்பா, வெண்டுறை, நிலைமண்டில ஆசிரியப்பா, ஆசிரியத் துறை, அறுசீர், எழுசீர், எண்சீர், பன்னிரு சீர், பதினான்குசீர், நாற்பத்தெண்சீர், நூற்றுத் தொண்ணூற்றாறு சீர் விருத்த வகைகள், வண்ண விருத்தம், சந்த விருத்தம், கலிவெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலிநிலைத் துறை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வண்ணக் கலிவிருத்தம், வஞ்சித்துறை, இசைப்பாடல் - தாழிசை, இசைப்பாடல் சிந்து (தவத்திரு ஊரனடிகளார் பதிப்பு) என்னும் இருபத்தொன்பது வகை யாப்புக் கோப்பு வள்ளலார் பாடிய வகை என்றால் ஏறத்தாழத், தமிழ் யாப்பை முற்றாக எடுத்துக் காட்டி இசைத்த குயில் அவரல்லரோ! சொல்லாட்சி : கொடைமடம் என்னும் சொல்லாட்சி, புறநானூற்றுப் பயிற்சி இலார்க்கு எய்துமோ? துச்சில் என்னும் சொல்லாட்சி, திருக்குறள் தேர்ச்சி இலார்க்கு எய்துமோ? நெடுமொழி வஞ்சித் துறை, புறப்பொருள் இலக்கணக் கல்வி இலார்க்குக் கைவருமோ? வழிமொழி என்னும் ஆட்சி ஆளுடைய பிள்ளையாரும், பழமொழிமேல் வைப்பு என்னும் ஆட்சி ஆளுடைய அடிகளாரும் வழங்கிய கொடைகள் அல்லவோ! குருவர் : ஆளுடைய பிள்ளையார் தம் வாக்கால் உயிர் அனுபவம், அருள் அனுபவம், சிவ அனுபவம் கற்பித்ததையும், திருநெறித் தமிழ் கொண்டு ஐயம்; நீத்தருளியதையும், கற்பம் பல முயன்றாலும் வரலரும் திறனெலாம் ஒருபகற்பொழுதில் உற அளித்ததையும் சுட்டுகிறார். ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்னும் கருத்தால் தம்மை ஆட்கொண்ட ஆளுடைய அரசைப் பாராட்டுகிறார். ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்னும் அருமைப் பாடலால் தம் கரணம் கரைந்து கரைந்து உருகுதலைச் சுட்டுகிறார்! அப்பாடல் ஆளுடைய நம்பிகள் பாடல். ஒன்றைக்கற்பார் கற்க வேண்டும் வகையை ஆளுடைய நம்பிகள் பாடலைக் கற்ற வகையால் வள்ளலார் உணர்த்துகிறார். தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவம்காண் தனிக்கருணைப் பெருந்தகையே! என்பது அப்பாட்டு. சுந்தரர் பாடற் சுவை, தேனும் அமுதும், மேலும் தாம் இனிக்க விரும்பும் சுவை. சுந்தரர் பாட்டை விடாது ஓதியமையை விளக்குவது, தினந்தோறும் என்பது. படிப்பின் இலக்கணம், நான் படிக்கும்போது என்னை நான் அறியேன் என்பது. நாப்பாடம் மட்டுமன்று தாம்படித்த பாடம், ஊன்படிக்க, உளம்படிக்க, உயிர்படிக்க உயிர்க்கு உயிரும் படிக்க-படித்த படிப்பு! வெறுஞ்சொல் அன்று - அனுபவம்! சான்று எவர்? தனிக்கருணைப் பெருந்தகையாம் இறை! - இவரா படியாதவர்? படிப்பின் இலக்கணமே, படிப்பார்க்கு உணர்த்திய படிப்பாளியா படியாதவர்? ஆளுடைய அடிகள் வாசகப் பாடலில் வள்ளலார் எப்படித் தோய்கிறார்? சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகு புகழ் மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே. வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும் என்உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே. வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்பறவைச் சாதிகளும் வேட்டமுறும்; பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும்; என்னிலிங்கு, நானடைதல் வியப்பன்றே தேவார திருவாசகங்களில் ஆராக்காதல் கொண்டு அடிகளார் கற்றமை, அவர் வாக்காலே அறிய வாய்ப்பவை இவையும் இன்னவையுமாம். உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் (3527) எனத் திருமந்திரக் கல்வியைச் சுட்டுகிறார். திருக்குறள் : இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால் இரத்தம் ஈதலாம் எனல் உணர்ந் திலையோ - என்பது இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு - என்பது அக்குறள் (1054) நெஞ்சறிவுறுத்தலில், கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே (411) செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும் திகழ்வாய் மையும்நீ தெளியாய் (433-435) உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின் நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல் மருவும் குறட்பா மறந்தாய் (466, 467) பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது பற்றற்றால் அன்றிப் பலியாதால் (624) என்னும் குறள்மணிகளைப் பெய்து வைத்த பெற்றிமை நூற்கல்வி பெறாமல் கூடிவருவதோ? நூலறிவு பெறாமலும் நுண்ணறிவுடன் திகழ்வாரும் உண்டு. அறங்கூறுமன்ற ஆய்வினும் மேதக்க ஆய்வு பட்டறிவு வழியே பெற்று ஊர்வழக்குகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வல்லாரும் திகழ்ந்ததுண்டு. நூற்கல்வி கல்லானுக்கும் கழிய நல்ல ஒட்பம் உண்டாதல் உண்டு என்பதை வள்ளுவம் சுட்டுகின்றது. நூற்கல்வி இல்லாரும் நுண்ணிய நூற்கல்வி வல்லார்க்கும் வழிகாட்டியாகத் திகழ்தல் உண்டு என்பதன் உலகறி சான்று வீரமாகுரவர் விவேகானந்தர் தமக்குக் குருவராக விளங்கிய இராமகிருட்டிணர். ஒரு பொருளையே நூற்கல்வியிலா ஆசிரியரும் நூற்கல்வி மிக்க மாணவரும் பெற்றாலும் அறிவுறுத்தும் வகையால் இருவரும் வேறுபடுவர். நூற்கல்வியிலார் மேற்கோள்களையும், நூற்கல்வி யுடையார் மேற்கோள்களையும் ஒப்பிட்டுக் காணின் உண்மை விளங்கும். நூற் கல்வியிலார் மேற்கோள் உவமை கதை விளக்கம் எவையெனினும் நூற்சான்றுடன் அமையா! தம் பட்டறிவு தம் உள்ளறிவு ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கும். இன்ன நூலில் இவர் இவ்வாறு கூறுகிறார் என்னும் குறிப்பு இராது. நூற்கல்வி பெற்றார் உரையிலோ பிறர் கூறிய நூற் குறிப்புகள், தம்பட்டறிவு தம் உள்ளறிவு ஆயவற்றின் சான்றாக முந்து முந்து வந்து நிற்கக் காணலாம். இவ்வேற்றுமை நோக்கத் தக்கதாம். தொன்மக் கதைகள் பல நூற்கல்வி கல்லார் உரையிலும் வரல் உண்டே எனின், அக்கதை நாடளாவிய அளவில் கதையாய் - நாடகமாய் - உரையாடலாய் - பரப்பப் பட்டமை கேட்டுக் கூறப்பட்டவையே ஆகும் என்க. கல்விப் பரப்பு : வள்ளலார் தம் உபதேசக் குறிப்புகளுள், கலை அறிவும் அருள் அறிவும் - பற்றி உரைக்கிறார் (93). பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம்; நானூறு வண்டிச்சுமை ஒரு சூல் வண்டிப் பாரம்; சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவமுயற்சியால் படிக்கச், சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் நோக்கத்தால் அறியத் தொடங் கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம் என்கிறார். மொழிஞாயிறு பாவாணர், மொழியார்வமும் கூர்த்த மூளையும் உடைய ஒருவர் இயல்பாக ஐம்பது மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார். மலையகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் தமிழ்மொழியின் முன்மை தாய்மை முதலிய வற்றை நிலைநாட்டுவதற்காகத் தாம் முப்பது மொழிகளைக் கற்றதாக உரைக்கிறார். ஐம்பத்தெட்டு மொழிகளில் வேர்ச்சொல் காட்டி விளக்கம் செய்கிறார். இலங்கை ஞானப்பிரகாச அடிகளும் இத்தகு புலமையோடு திகழ்ந்தார் என்பதும் இவண் எண்ணத் தக்கவை. இயற்கைக் கல்வி : இனிக் கற்றார் கல்லார் என இல்லாமல் எவ்வெவர்க்கும் கிட்டும் ஓதாக்கல்வி ஒன்று உண்டு. வாய் திறந்து சொல்லாமல் வையக இயற்கை வழங்கிக் கொண்டே காலம்காலமாகத் திகழ்ந்து வரும் ஓதாக்கல்வி அது. பொறி புலக் கூர்மையாளர் எவர் எனினும் விலக்கின்றிக் கற்றுக் கொள்ள வாய்த்த இயற்கைக் கல்வி. காகா என்பது கேட்டுக் காக்கை என்றும், குர்க்குர் என்பது கேட்டுக் குரக்கு என்றும், கீர்கீர் என்பது கேட்டுக் கீரி என்றும் குக்குக்குகு என்பது கேட்டுக் கூகை என்றும் கூறியதும், ஈஈஈ என்னும் ஒலி கேட்டு ஈப்பெயரிட்டதும் சலசல என்னும் ஒலி கேட்டு சலம் என்று வழங்கியதும் கிண்கிண் என்னும்ஒலி கேட்டுக்கிண்கிணி என்றுகூறியதும் முதலியவை ஓதாமல் வாய்த்த பெயர்களாம். இவ்வகையால் ஒலி வழிச் சொற்களெல்லாம் ஓதாமல் வாய்த்தவை என்க. தென்றலின் மென்மை, வாடையில் வருத்துதல் பனியின் நளுக்குதல் வெயிலின் வெம்மை கனியின் இனிமை காயின் புளிப்பு - இன்னவை ஓதாமல் நாம் அறியவாய்ப்பவை எறும்பின் வரிசை, சேவல் எழுச்சி, வண்டின் செலவு, பறவையின் கூடு, விலங்கின் குகை இன்னவை யெல்லாம் தம்மை ஓதாமல் ஓதுகின்றன. தும்பியின் இசை, மயிலின் ஆட்டம், குயிலின் கூவல், புல்லின் செறிவு, நெல்லின்மணி இன்னவை அவனை ஈர்க்கின்றன. அருவி ஒழுக்கு, ஆற்றின் ஓட்டம், முகிலின் முழக்கம், மழையின் பொழிவு, மின்னல் இடி, கடல் அலை இவை எல்லாம் அவனை ஆட்கொள்கின்றன. ஓதாமலே அவை அவனை அறிந்து கொள்ளுமாறும் எண்ணுமாறும் செய்கின்றன. உயிரொலிகளாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ, என்பவை எல்லாம் அவன் செவிக்கண் பட்டு இன்பம் சேர்க்கின்றன. இவற்றை உணர்ந்தோர், இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கை நடம் செய்கின்ற சீர்மையைப் பாராட்டினார். இயற்கையே அறிவாய் : பொதுவாக அமைந்த ஓதாக்கல்வியை வள்ளலார், இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்ப மாகி - என்கிறார் (3666) கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சவைத்தண் ணீரே உகந்தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே இப்பாடல் பொருளாகிய குளிர்தரு முதலியவை கண்டு கொண்ட துய்ப்புப் பொருள்களே அல்லாமல் ஓதிவந்த பொருள்களா? இயற்கை கற்பிக்கும் பாடங்களை ஆழ எண்ணினால், பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்; பார்வை சரியாக இருந்தால் என்னும் உண்மை விளங்கும்! சான்றாக வருவன காண்க. ஒருவர்க்குத் தேவைப்படும் குறிக்கோள் வாழ்வை உணர்த்தும் காட்சிகள் அவை; இயற்கை உணர்த்தும் வகை; எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும்; உயிர்க்கது தூண்டுகோல் போலாம் ஒரு சிறு புல் : இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்போடு சாருதல் காண்டி; அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்ஊண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ! என் தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின், புள்ஆ எருது அயத் தொருசார் சிக்கிநீர் சென்மின் எனத்தன் சிறுவரைப் புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனும் காண்போர் ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது ஆங் காங்கு தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப ஆர்த்தெழும் அன்பினும் அனைத்தையும் கலந்துதம் என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர். புல் ஆசான் ஆகிக் குறிக்கோள் வாழ்வைக் கற்பிப்பது இப்பகுதி. வாய்க்கால் : தமக்கூண் நல்கும் வயற்குப யோகம் எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகுமிவை யெனவோர்ந் துருட்டிக் கொண்டு சென் றிட்டுமற் றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும் குகைமுகம் இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும் கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும் ஊறிடும் சிறிய ஊற்றாய்ப் பரந்தும் ஆறாய் நடந்தும் மடுவாய்க் கிடந்தும் மதகிடைச் சாடியும் வாய்க்கால் ஓடியும் பற்பல படியான் பட்டங் கீட்டியது அற்பமே ஆயினும் ஆதரவாய்க் கொள்; இன்னமும் ஈதோ ஏகுவன் எனவிடை பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவன் அடைந்துமற் றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையவர் யாவர்? - வாய்க்கால் காட்டும் ஓயா உழைப்புப் பாடம் இது. நாங்கூழ்ப் புழு : ஓ ஓ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு ஓவாப் பாடே! உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ! எம்மண் ஆயினும் நன்மண் ஆக்குவை விடுத்தனை இதற்கா எடுத்தவுன் யாக்கை உழுதுழு துண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக் கொணர்ந்தும் புகழ் வேண்டார் போல ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால் இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்; எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்பும் கோடி கோடியாய் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைகிறது) விழுப்புகழ் வேண்டலை அறிவோம் ஏனிது? துதிக்கலம் உன்தொழில் நடத்துதி ஆ! ஆ! எங்கும் இங்ஙனே இணையிலா இன்பம் பங்கமில் அன்பும் தங்குதல் திருந்தக் காணார் பேணும் வாணாள் என்னே! மண்புழு காட்டும் மாண்புகழ் வாழ்வு இது. - மனோன்மணீயம் - இரண்டாம் களம். இவை தம் வாயால் ஓதவா செய்தன? நேரிய நெஞ்சம் கூரிய பார்வையும் இருப்பின் இயற்கை கொள்ளை கொள்ளையாய்க் கற்பிக்கும் கல்வியைப் பெறுதல் உறுதி. இயற்கை வழியே நாம் எண்ணிப் பெறும் கல்வி ஓதாக் கல்வியாம். இக்கல்வியைப் பெறுதற்குக் கட்டடத்துள் கற்கும் கல்வி கட்டாயம் தேவைப் படுவது இல்லை! எத்தனை கதைகளை, நாட்டுப் பாடல்களைப் பொதுமக்கள் தாம் தாமே உண்டாக்கி உள்ளனர் அல்லவா! ஓதாக் கல்வியாம் இயற்கைக் கல்வி கற்றோர் பண்பாடு, செயல்திறம், வழிகாட்டுதல் என்பவை தாமே ஓதும் கல்வியர்க்குக் கிட்டியன. ஓதிய கல்வியர் தந்ததா, தாலாட்டு, ஒப்பாரி, கும்மி முதலாம் தமிழ் வளங்கள்? பழமொழி என்ன, விடுகதை என்ன, சொலவடை என்ன ஓதாக் கல்வியர் தாமே உலகுக்கு வழங்கினர். நூல் குவி குவியாகக் கிடந்தென்ன? இயற்கை கொட்டிக் கொட்டிக் கிடந்தென்ன? அவற்றைக் கண்டு கொள்ளும் கருத்து, உள்ளுறும் ஊற்றாய்ச் சுரக்க வேண்டும் அல்லவோ! வள்ளலார் அருவியாய் வெள்ளமாய்ப் பொழிந்த பாக்களின் உள்ளுறும் ஊற்றுக்கண் எது? இயற்கை! இயற்கையோடு இயைந்த இறைமை! இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்து, இயற்கை ஒலியும் இயற்கை வரியும் அமைந்த தமிழ்! வள்ளலாரே சொல்கிறார் சான்றுக்குச் சில : வள்ளலார் வாய்மொழி : ஓதாது உணர உணர்த்தி 2775 கற்றதுநின் னிடத்தேபின் கேட்டது நின்னிடத்தே 304 ஓதாமல் உணர உணர்விலிருந் துணர்த்தி 3053 ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே 4112 ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து 4615-23 ஓதி, ஓதாமல் உற எனக் களித்த 123 முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி 4891 ஓதா தனைத்தும் உணர்கின்றேன் 5004 ஓதாதுணர்ந்தேன் மீதானம் உற்றேன் --- பாடிப் படிக்கின்றேன் படிப்பேன் படிப்பித்தவாறே 5315 யான்பாட நீதிருத்த என்னதவம் செய்தேனோ 5318 பெருவிண்ணப்பத்திலே பேசுகிறார் வள்ளலார். குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியில் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என்தரத்தில் பயின்று அறிதற்கு அருமை யாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்று வித்தருளினீர் என்கிறார். எல்லாம் செய்யவல்ல இறை, இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி இருப்பதை இயம்புகிறார். இயற்கை அறிவு, இறையறிவு எனத் தெளிந்து தேர்ந்த நிலை இது. வள்ளலார் வழியே தம் வழியென வாழ்ந்து காட்டிய தமிழ்த் தென்றல் திரு.வி.க; இயற்கை வழியே பெற்ற ஓதாக்கல்வித் திறங்களை ஓதிஓதித் திளைக்கிறார்; ஓதாக் கல்வி இயற்கைக் கல்வி என்பதையும் தெள்ளத் தெளிவாய்க் காட்டுகிறார்: இயற்கைத் தெய்வம் இயற்கை தாண்டி இலங்கிடும் தெய்வமே ஏழை யேனுனை எப்படி எண்ணுவேன்? முயற்சி செய்யினும் மூளை வெடிக்குதே முன்ன வாஉன் முழு நிலை என்னையோ? 1 இயற்கை யாகி இருக்க இரங்கினை ஏழை எண்ணி எளிதில் மகிழவோ முயற்சி யின்றி முனைப்பறல் கூடுதே முன்ன வாஉன் முழுநிலை எற்றுக்கே. 2 இயற்கை பள்ளியாய் என்றும் நிலவலை ஏழை பின்னே உணர்ந்து தெளிந்தனன்: செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச்செலா செழுமை கண்டவர் தீமையில் விழுவரோ? 3 மண்ணில் நின்று பொறையைப் பயிலலாம் மரத்தி லேஒப் புரவைப் பயிலலாம் விண்ணை நோக்கி ஒளியைப் பயிலலாம் வேலை சென்றலைப் பாட்டைப் பயிலலாம் 4 மயிலி லேதிகழ் நாடகம் கற்கலாம் வண்டி லேநிமிர் யாழினைக் கற்கலாம் குயிலி லேஉயர் கீதத்தைக் கற்கலாம் கோவி லூருங் குணத்தினைக் கற்கலாம். 5 அன்னை காட்சியில் அன்பைப் படிக்கலாம் அணங்கின் காதலில் வாழ்க்கை தெளியலாம் கன்னி சூழலில் தெய்வம் வழுத்தலாம் காளை ஈட்டத்தில் வீரம் உணரலாம். 6 மலையி லேறி மவுனம் பழகலாம் வான ஞாயிற் றொளியைப் புசிக்கலாம் கலையில் காணாக் கருத்தைத் தெளியலாம் கணக்கில் பன்மை கரைதல் அறியலாம் 7 வேங்கை போந்துதன் வாலைக் குழைக்குமே வேழம் ஓடி விரைந்து வருடுமே பாங்குப் பாம்பு படமெடுத் தாடுமே பறக்கும் புட்கள் பரிவுடன் சேருமே. 8 ஓதாக் கல்வியென் றோதிடுங் கல்வியென் றுலகம் சொல்வதன் உண்மைத் தெளிவெது ஓதாக் கல்வி இருக்கை இயற்கையே ஓதும் கல்வி உறைவிடம் ஏட்டிலே. 9 ஓதாக் கல்வி பெருக இயற்கையின் உள்ளம் தெய்வமென் றுண்மை அடையலாம் சாகாக் கல்வியின் தன்மை உணரலாம் சாந்த மெய்ம்மையின் சார்பு விளங்குமே. 10 ஏரைப் பூட்டி உழுவோர் உளத்திலும் ஏற்றம் பாடி இறைப்போர் உளத்திலும் நாறு பற்றி நடுவோர் உளத்திலும் நல்லி யற்கை இறையருள் நண்ணுமே. 11 பருத்தி சேர்க்கப் பரிவோ ரிடத்திலும் பாண ராட்டை விடுவோ ரிடத்திலும் பொருத்தி நூலினை நெய்வோ ரிடத்திலும் பொன்னி யற்கை இறையருள் பொங்குமே. 12 சுரங்கம் மூழ்கிக் குளிப்பவர் நெஞ்சிலே சூழ்ந்து கல்லை உடைப்பவர் நெஞ்சிலே இரும்பைக் காய்ச்சி உருக்குவர் நெஞ்சிலே எழிலி யற்கை இறைமை இயங்குமே. 13 சோலை வாழ வளர்ப்பவர் சிந்தையில் தூய பிள்ளை பெறுபவர் சிந்தையில் நூலும் சிற்பமும் யாப்பவர் சிந்தையில் நுண்ணி யற்கை இறைமை நுழையுமே. 14 விளைவு செய்யும் வினைஞ ருலகமே வீறி வேர்விட் டெழுந்து விரிந்திடின் இளமை ஞாலம் இயற்கை இறைமையின் இனிமை யாகி வளமை கொழிக்குமே. 15 திருப்பணி நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் செகத்தில் வீழாச் செழுங்கனி கொய்தல் சீவக் கோயில் சிதைப்பதே ஆகும். ஆடும் மஞ்ஞை அலற அடித்தல் அலகுக் கோழி கதறத் துணித்தல் பாடு மாங்குயில் பார்த்துச் சுடுதல் பரமன் கோயில் இடிப்பதே யாகும். வேள்வி என்றோ உயிர்க்கொலை செய்தல்? வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல்? கேள்வி இல்லை கிளர்ச்சியும் இல்லை, கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ? நூல் : புதுமை வேட்டல். ஓதும் கல்வியால் வாராத வெல்லாம் இயற்கை வழங்கும் ஓதாக் கல்வி வழியாய் வரப் பெறுதலால், செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச் செலா என்று முடிவு செய்து, செழுமை கண்டவர் தீமையில் விழுவரோ? என வேற்றுப் பொருள் வைப்பு அணியில் நிலைநாட்டுகிறார் திரு.வி.க. வள்ளலார் விழைவு : தாம் கொண்ட இயற்கை இறைமைக் கல்வியை ஓதாக் கல்வியை - உள்கி உள்கி அறிந்த கல்வியை - எல்லவரும் உறல் வேண்டும் என வள்ளலார் விழைந்தார்; வேண்டினார்; எனினும், உலகியல் பொதுமைக் கல்விமுறை அஃதன்று என்று அறிந்த வராய், ஆபால விருத்தர் கல்வி கற்கும் வகையில் சாலை அமைத்தார்; உபயகலாநிதி தொழுவூர் வேலாயுதரைக் கற்பிக்கும் ஆசிரியப் பணிக்கு அமைத்தார். சன்மார்க்க விவேக விருத்தி என்னும் மாத இதழ் வெளிவர ஏற்பாடு செய்தார். இவை பற்றிய அறிக்கைகள் வெளியிட்டார். சன்மார்க்க விவேக விருத்தி 1867 உ சற்குருவே நம : சன்மார்க்க விவேக விருத்தி விளம்பரம் அறிவுடைய நண்பர்க்கு அன்போடு வந்தனம் செய்து அறிவிக்கை. நண்பர்களே! உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்தல் வேண்டும். அங்ஙன மறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனை யடைதற்குத் தக்க நன்முயற்சிக்கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தி யென்னும் பத்திரிகை யொன்று வழங்குவிக்கு நிமித்தம், இதனடியில் தனித்தனி நம்மாலியன்ற அளவில் மாதந்தோறும் பொருளுதவி செய்வதாகக் கையொப்பமிட்டு மேற்குறித்த வண்ணம் நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக இங்ஙனம் சன்மார்க்க சங்கத்தார் சிதம்பரம் இராமலிங்கம் ரூ 1.00 எனத் தொடங்கி வைக்கிறார் வள்ளலார். 49 பேர்கள் கையொப்பமும் தொகையும் அவ்வறிக்கையில் உள்ளன. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னிட்ட செய்தி இது என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதே ஆண்டிலேயே சன்மார்க்க போதினி என்னும் கல்விச் சாலை ஏற்படுத்துதலினும் வள்ளலார் முனைந்துள்ளார்; அறிக்கை : சன்மார்க்க போதினி 1867 ஆபால விருத்தர் வரையில் யாவர்க்கும் பயில்விக்கும் சன்மார்க்க போதினி என்கிற சாதிர பாடசாலையொன்று நியமிக்கப்படும் பார்வதிபுரம் பிரபவ வருடம் மீ உ தமிழ் ஆரியம் இங்கிலீஷ் சன்மார்க்க போதினி... சாலையில் உபய கலாநிதிப் பெரும்புலவர் தொ.வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால் ... இவ்வளவே, முன்னுள்ள ஏடு கிழிபட்டும் இடையிலும் பின்னுமுள்ளவை எழுதப்படாமலும் ஓர் அன்பர் கையெழுத்தில் இருக்கிறது. எனத் திருமுகப் பகுதியில் பால கிருட்டிணர் காட்டியுள்ளார். ஆ பாலர் எவர்? ஆடு மாடு மேய்த்துத் திரியும் சிறுவர். அவர்கள் கல்வி பயில வேண்டும்; அவர்கள் பயிலாமை அவர்கள் குற்றமன்று; அவர்களுக்குக் கல்வி தாராமையே குறை என்பதை உணர்ந்தாராய் வள்ளலார் ஏற்படுத்திய கல்வித் திட்டம். தேடு கல்வியி லாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் தான், கலைமகள் வழிபாடு என்பார் பாரதியார். கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் என்பார் பாவேந்தர். அரசின் கடன் கல்வி வழங்கல் என்பதை உணர்ந்தே வள்ளுவர் இறைமாட்சியை அடுத்தே கல்வியை வைத்தமை அறிதல் வேண்டும். தொல் பழ நாளிலேயே இளம்பாலரும், பாலரும் கல்வி கற்றனர் என்றும், கற்பித்தவர் இருந்தனர் என்றும் சங்க நூல்களில் வரும் புலவர் பெயர்களாலேயே அறியக்கூடும். சான்றாக : இளம் பாலாசிரியர் பாலாசிரியர் என்பார். அவரினும் மேம்பட்டார் ஆசிரியர், பேராசிரியர் என்பார். ஊர் தோறும் நூல் கற்பிக்கும் கணக்காயர் இருந்தனர்; இருக்க வேண்டும் என்ற எண்ணம் சான்றோர்க்கு இருந்தமையால், கணக்காயர் இல்லாத ஊரும்; பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்துண்ணும் தன்மை இல்லாதவர் அயலிருப்பும் ஆகிய மூன்றும் பாழ் என்று பழித்தனர். வள்ளலார் ஆபாலர்க்கு மட்டும் கல்வி தர விழைந்தார் அல்லர். முதியோரும் கற்க வழிகண்டார். அதனால் ஆ பால விருத்தல் என்றார் என்க. அந்நாளிலேயே பன்மொழி கற்பிக்கும் பார்வை வள்ளலார்க்குத் தோன்றியமையை உணர்தல் வேண்டும். இப்பள்ளிகள் அவரவர் வேலைக் கேடாக இல்லா வகையில் இயல வேண்டும் எனின், இவை இரவுப் பள்ளி நடத்தலும் வேண்டும் என்பதாம். தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால் என அறிக்கைக் குறிப்பு உள்ளமை கொண்டு கல்வி கற்பிக்க வாய்த்த அறிஞர் பலர் என்பதும் புலப்படும். 1812 ஆம் ஆண்டிலேயே கல்விச் சங்கம் என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டு அறிஞர் பலர் கற்பித்த செய்தியும், ஆங்கு அறநெறி கற்பிக்க வேண்டித் திருக்குறளை அவ்வாண்டிலே நெல்லை அம்பல வாண கவிராயர் திருக்குறள் - நாலடியார் மூலப் பதிப்பு செய்ததும், எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்து விளக்கவுரை கண்டு 1812 இல் வெளியிட்டதும் அறியும் நாம், வள்ளலார், திருக்குறள் வகுப்பு நடாத்த ஏற்பாடு செய்ததையும் எண்ணல் வேண்டும். இனி, சமரச வேத பாடசாலை என்னும் ஒரு சாலை 11.01.1872 இல் ஏற்படுத்தப்பட்டது : திருச்சிற்றம்பலம் இஃது சமரச வேத பாடசாலை இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங் களையும் உண்மை உரைத்தல் இன்சொல்லாடல் உயிர்க்கு பகரித்தல் முதலிய சற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும். இதில் வாசிக்கின்றவர்களுக்கு சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பில் பயிற்சி நேரிட்டால், அந்தப் பயிற்சிக்கும் அவரவர்கள் குடும்பத்திற்கும் தக்கபடி மாதந்தோறும் பொருளுதவி செய்யப்படும். காலை மாலை சுமார் ஐந்தைந்து நாழிகை வாசித்தல் வேண்டும் திருச்சிற்றம்பலம் பிரஜோற்பத்தி.குரு.வருடம் .............. ...jEukâ உயக்ஷ ............. இவ்வறிக்கையால் ஒரு கல்வியைக் கற்பார்க்கு வேண்டத் தக்க தகுதிகள் திட்டப்படுத்தப்பட்டுள்ளன. அகவை வரம்பு, கற்கும் பொழுது வரம்பு ஆயவும் உள. கற்றுத் தேர்ச்சி பெற்றார் குடும்பம் அவர் வருவாயைக் கொண்டே நடத்த வேண்டியதாக இருப்பின், பயிற்சிக்குத் தகவும், குடும்பத்திற்குத் தகவும் மாதந்தோறும் பொருளுதவி புரிய வேண்டும் என்பதும் இந்நாளில் கூட நடைமுறைப் படுத்த அரியதாம். உலருக்குப் புதுவதாம் கல்வித்திட்டம் அதுவும் பொதுவுடைமை அரசுதானும் அரும்பாத காலத்துத் திட்டம் என்பதை எண்ணின் பெருவியப்பாம்! கற்பார்க்கு உதவி : வெவ்வேறு இடங்களில் இருந்து கற்க விரும்பியோரும் வள்ளலார் துணையைநாoவந்ததுண்டு. அவர்கள் இயலும் வகையால் உதவி பெற வள்ளலார் எழுதிய கடிதங்கள் சில அறிய வாய்க்கின்றன : இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகத்தில் (1) சிரஞ்சீவி நமசிவாயப் பிள்ளை அவ்விடம் படிக்க வேண்டு மென்று வருகின்றான். அவனைப் படிப்பின் விஷயத்தில் மாத்திரம் அடிக்கடி விசாரிக்க வேண்டும் என எழுதுகின்றார். அவர்க்கு எழுதியஇன்னொUதிருமுகத்திš (2) இந்தக் கடிதம் கொண்டு வருகிற சி.குமாரசாமி பிள்ளை படிக்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறபடியால், அவனுக்கு எந்த விதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்த விதத்தில் படிப்பிக்க வேண்டும், சிரஞ்சீவி நமசிவாயத்துக்கம் இதுவே (31.5.1858) என எழுதுகிறார். இதே கடிதத்தில் இணைத்து முருகப்பிள்ளை என்பார்க்கு எழுதியதில், சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிறபடியால் அவனுக்குப் படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற வகை எவ்வகை அவ்வகை ஆராய்ந்து கூட்ட வேண்டும் என்கிறார். இரத்தின முதலியார்க்குப் பின்னே எழுதிய கடிதம் ஒன்றில் (28) படிப்பிக்கிற விஷயத்தில் அதிக அதிக்கிரம பிரயாசை எடுத்துக் கொள்ளப்படாது என்கிறார். சென்னை பட்டணம் பெத்து நாயக்கன் பேட்டை ஏழுகிணற்றுக் கடுத்த வீராசாமி பிள்ளை வீதியில் இங்கிலிஷ் இகூல் மாடர் மகா ள ள ஸ்ரீ இரத்தின முதலியார் என்னும் முகவரியால் அவர் இருப்பிடம், தொழில் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளலாம். பிறரைப் படிக்க வைப்பதில் வள்ளலார் கொண்டிருந்த ஆர்வம் இவற்றால் நன்கு விளங்கும். கற்பிக்கும் முறை : எந்த விதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்தவிதத்தில் படிப்பிக்க வேண்டும் என்னும் வள்ளலார் எழுத்து கற்பித்தல் நெறிமுறை சுட்டுவதாகும். வள்ளலார் நண்பராய் இருந்த சுந்தரம் பிள்ளை என்பார் ஆசிரியப் பணி புரிந்தார். அடி உதவுவது போல் அண்ணன்தம்பிஉதவமாட்டான்என்பதுbகாண்டbfள்கையராய்மhணவரைஅoத்துக்க‰பிக்கின்றார்எ‹பதறிந்தார்வŸளலார்.அjdhš mவர்க்கொருâருமுகம்Éடுத்தார்.m¤âUKf« mWÓர்க்கழிbநடிலடிஆசிÇயவிரு¤தப்பாlல்ஆகு«. படிப்பதுநன் றெனத்தெரிந்த பாங்குடையாய் மன்றுள்வெளிப் பரம னன்பே தடிப்பதுநன் றெத்தேர்ந்த சதுருடையாய் அறநவின்ற தவத்தாய் வீணில் துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்போர் உடையாய்என் தோழ கேள்நீ அடிப்பதுமச் சிறுவர்களை அடிப்பது நன் றலஎன்மேல் ஆணை! ஆணை! தொழுவூர் வேலாயுதர் தம் புலமைப் பேறனைத்தும் விளங்க இளையர்க்கும் தொடக்கக் கல்வியர்க்கும் புரியாத அரும்பெருஞ் செய்திகளை யெல்லாம் கொண்டு திருக்குறளுக்கு உரை விரித்துச் சொல்வதை அறிந்த வள்ளலார், கற்பார் நிலையறிந்து கற்பித்தல் வேண்டும் கடப்பாட்டைக் கற்பித்ததும் நாம் எண்ணத்தக்கதாம். வள்ளலார் தாம் bபற்றeலப்பேறுகள்aவும்vவரும்bபறnவண்டும்vன்னும்bபருவேட்கையர்vனினும்,jம்bபற்றXதாக்கல்விப்nபற்றைcணர்ந்துmதனைப்ãறரும்bபறnவண்டும்vனÉரும்பினர்vனினும்,mனைவர்க்கும்mந்நிலைtயாதtய்மையைcணர்ந்துmவரவர்Ãலைக்குத்jகவும்,nதவைக்குத்jகவும்,bபாருள்தேடுnபற்றுக்குத்jகவும்bபாதுÃலைக்fல்வியும்,gன்மொழிக்fல்வியும்bபறுதற்குtழிவகைbசய்யKயன்றார்vன்பதும்eம்vண்ணத்தக்கFறிப்புகளாம்.tŸsyh® ஓதாக்கல்வியில் ஓங்கி நின்றவர். ஆயினும், ஓதும் கல்வியை ஒதுக்கினார் அல்லர். ஓதுதற்குச் சாலை அமைத்தார்; ஓத விரும்பினார்க்கு உரிய வழிகாட்டி உதவினார். பிறர் அறிவுறத் தாம் ஓதி ஓதி நின்றார். ஏன்? அவரவர்க்குத் தக, கொள்வார் கொள்வகை அறிந்து கொடுப்பதே கல்விக் கொடை என்பதை உலகியல் பட்டறிவால் தெளிந்து கொண்ட வகையால் ஆகும். அவர் நிலைக்குத் தக அவர் ஒருவரைக் காணவாய்த் திருப்பின், சாலை அறிக்கைகளில் சலிப்புத் தலைகாட்டி யிராதே அவர்க்கு! பற்று, பற்றுதலில் அல்லவோ வேண்டும்! வள்ளலாரை வாழ்ந்த நாளிலும் தமிழகம் கண்டு கொண்டு, அவர் பிறந்ததன் பயன்பேற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை; பின்னும் பெற்றுக் கொள்ளுதல் அரிதாகவே உளது. வள்ளலார், ஏறாத மேட்டில் ஏறிநின்று மொழிந்த சன்மார்க்கமே என்மார்க்கம் என வாழும் கூட்டம் உருவாக வேண்டும்! உருவாக்கவும் வேண்டும்! உலகம் உய்யத்தக்க ஒரோவழி அதுவே தான்! ஓதாக்கல்வி முடிநிலை பன்முறை பயின்று மனத்தில் வரப்படுத்திக் கொள்ளும் கல்வி, ஓதும் கல்வி - பொதுநிலையில் எவர்க்கும் அமைந்த கல்வி இது. ஒரு முறை கற்ற - கேட்ட - அளவால் வரப்படுத்திக் கொள்ளும் கல்வி, ஓதாக் கல்வி. இதற்குப் பொறி புலன்களையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தும் திறம் இயல்பாக அமைந்திருத்தல் வேண்டும். உள்கி உள்கித் தாமே கண்டு கொள்ளும் உள்குதல் கல்வியும் ஓதாக் கல்வியே. இதற்கு, என்ன, ஏன், எப்படி, எவ்வாறு முதலாய வினாக்களைத் தாமே எழுப்பி விடை காணல் வேண்டும்! இயற்கை இறைமை வழியாக உணரப்பெறும் கல்வியும் ஓதாக் கல்வியே. இதற்கு, இயற்கையோடு ஒன்றி அதுவாகிவிடும் முழுதுறும் ஒப்படைப்பு வேண்டும். இவற்றால், ஓதாக்கல்வி மூவகையால் உண்டாகும் என்பது விளக்கம். இம் மூவகைக் கல்வியும் வள்ளலார்க்கு வாய்த்தவை என்பதைச், சான்றுகளுடன் விளக்கிய சுவடி இஃது என்க. 3. சன்மார்க்கம் (நன்னெறி) சமரசம், சன்மார்க்கம், அருட்பெருஞ்ஜோதி ஆகிய சொற்களை எவர் நினைத்தாலும் சொன்னாலும் முற்பட நின்று ஒளிமுகம் காட்டுபவர் வள்ளலாரே யாவர். வள்ளலார் இளந்தைப் பருவத்திலே வழிபடு கடவுளாகக் கொண்டவர் சென்னைக் கந்த கோட்டப் பெருமானே என்பது அவர் வரலாறு. அவர் பாடிய தெய்வமணிமாலை, அக்கந்த கோட்டத்தில் பாடப்பட்டதே. தெய்வமணி மாலை, 31 பாடல்களையுடையது. திருத்தணிகையையும் நிரம்பப்பாடினார். இவை திருமுருகன் திருக்கோயில்கள். குறிஞ்சிப்பாடியை அடுத்த சிங்கபுரிக்கோயில் அடிகளால் பாடப்பட்டது. அதுவும் முருகன் கோயிலே. திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயில், புள்ளிருக்கும் வேளூர், திருவாரூர், திருவதிகை, திருவண்ணா மலை, திருமுதுகுன்றம், திருத்தில்லை ஆகிய திருக்கோயில் களையும் பாடினார். இவை சிவபெருமான் திருக்கோயில்கள். திருஎவ்வுளூர், திருக்கண்ணமங்கைத் திருக்கோயில் களையும் வள்ளலார் பாடினார். இவை திருமால் திருக்கோயில்கள். இவற்றைத் தவிர, ஏழுகிணறு துலுக்காணத்தம்மனையும், கருங்குழி விநாயகரையும் வள்ளலார் பாடியுள்ளார். முருகு முதலாகப் பெருகிய வழிபாடு, வடலூர் வாழ்வில் ஒளிவழிபாடாகத் திகழ்கின்றது. சமயங்கடந்த சால்பில் ஓங்குகின்றது. அவர் மார்க்கம் சன்மார்க்கம் ஆயது. அதனைப் பற்றிய பாடல்கள் ஆறாம் திருமுறையிலேயே பெரிதும் இடம் பெற்றன. முன்னரே பாடிய பாடல்கள் சில ஐந்து திருமுறை களிலும் இடம்பெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டன. வடலூர்ப் பாடல்களும் வெளிப்படவில்லை. வள்ளலார் மறைவின் பின்னரே, சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியாரால் (1885) வெளியிடப்பட்டது! ஏன், வெளிவரக் காலத் தாழ்வாயது ஆறாம் திருமுறை எனின், அத்திருமுறைப் பாடலில் இருந்த சமயப்புரட்சிக் கருத்துக்களே தடைக்குக் காரணமாம் என்க. வள்ளலார் விளங்கிய காலத்திலேயே அவரே அப் பாடல்கள் வெளிப்பட விரும்பவில்லை. அவர்க்கு அணுக்கராக இருந்த அன்பர்களும் வெளியிட ஆர்வம் காட்டவில்லை. மற்றைத் திருமுறைகளை வெளியிட்ட தொழுவூரார் தாமும் ஆறாம் தொகுதியை வெளியிட்டிலர். சமயப்புரட்சி, சமயச் சீர்திருத்தம் என்பவை மட்டும் தடையாயிற்றில்லை. சாதிச்சழக்கு, சடங்குப் பொய்மை, உருட்டுப்புரட்டு வாழ்வு, புலைவேள்விக் கண்டிப்பு, உருவ வழிபாடற்ற ஒளிவழிபாடு என்பனவெல்லாம், சமய-மத-சாதி-சடங்கு வெறியர்க்கு ஏற்கத் தக்கனவாக இல்லை. வெளிப்பட நிகழ்ந்த மருட்பாப் போர் போல்வது அன்று, இவ்வகப்போர், சாதி சமயச் சடங்குகளே வாழ்வு மூலமாக்கிக் கொண்டவர்க்கும், கொண்டவரைச் சார்ந்தவர்க்கும் வள்ளலார் கருத்து பேரிடியாக இருந்தமையாலேயே ஆறாம் திருமுறை வெளியீட்டுக்கு வள்ளலாரும் இசைந்திலர்; ஆர்வலர்களும் ஈடுபட்டிலர். பின்னைப் பகுத்தறிவுப் பெரியாரால், தலைமேல் கொள்ளப் பட்ட வள்ளலாரைச், சமயப் பெரியாரென அந்நாளில் இருந்தவர் ஏற்றிருப்பர் என, இந்நாளில் நம்மால் கூ.ட எண்ணத்தக்கதாக இல்லை, என்றால் அந்நாள் நிலை எப்படி இருந்திருக்கும்? அச்சிடப்படாவிட்டாலும் அப்பாடல்கள் அணுக்க ஆர்வலர் சிலரளவிலேனும் படிக்கப்படாமல் இருந்திருக்க முடியாதே! காரல் மார்க்கசு, உரூசோ, சாக்ரடீசு, தால்சுதாய், இங்கர்சால் இன்னவர் பட்டபாடுகளை எண்ணும்படி தூண்டுகிறதே இது. சமயப் புரட்சியாளர் கிறித்து, நபிகள் பாடுகள் உலகம் அறியாதவை அல்லவே! வள்ளலார் புரட்சி, இவர்கள் செய்த புரட்சி எவற்றுக்கும் குறைத்து மதிப்பிடும்படியாக இல்லையே! சமயச் சடங்கரையும் ஏகான்மவழியரையும் கந்த கோட்டப் பாடலிலேயே கண்டிருக்கிறார். இரண்டகரை இனம் கண்டு ஒதுக்குகிறார். ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். - இவ்வளவில் நின்றாரா? உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும். - இது இரண்டகரைச் சுடாதா? கரையில் வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல் கதறுவார், கள்ளுண்ட தீக் கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு கடும் பொய்இரு காதம் நாற வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு மவுனடம் இடு வார் இவரை மூடர்என ஓதுறு வழக்கு (10) என்கிறார். காக்கைக் கூட்டம் கூடிக் கலாமிட்டுக் கதறுவது போல்வார்; கள் குடித்த தீய நாற்றமும் வாய் ஊத்தை நாற்றமும் காதத் தொலைநாறவும் பொய் புளுகு மூட்டை இருகாதத் தொலை நாறவும் அளவின்றித் தருக்கம் புரிவார். ஆனால், சிவமணம் கமழத் திகழும் மலரன்ன வாயினரைக் காணின் வாய்மூடிக் கிடப்பார்; இத்தகு மூடரை நெருங்குதல் ஆகாது என்கிறார். இந்நாற்றப் பிறவியர் வள்ளலாரை ஏற்றுப் போற்றுவரா? மேலும் இப்பாடலை அடுத்தே, நாம்பிரமம் நமையன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை நவில்கின்ற வாகியாந் தரம்இரண் டினும்ஒன்றே நடுநின்ற தென்று வீணாள் போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பார் சாதிப்பார் தாம் புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும் அறிவுகாண் (11) என்று பாடுகிறார். நாமே அப்பிரமமாகிய பெரிய பொருள்; நம்மையன்றிப் பிரமம் என வேறே இல்லை; நன்மை தீமை என்பவை இல்லை; சொல்லப் படுகின்ற பாகியம், அந்தரம் என்ற இரண்டுமே பொருந்த வழிபாடு நடுநிலையாயது என நாளை வீணாக்குவர்; பிரம நீதிகள் என்ற பலவற்றை எடுத்துக்காட்டிக் கேட்போர் அறிவு மலைக்குமாறு கூறித் தருக்க நெறியிற் சாதிப்பார்; அந்நிலையில் தாம் மேற்கொண்ட புல்லிய நெறிகளைக் கைவிடமாட்டார்; செய்வினை புகுந்து துன்பம் விளைக்குமிடத்துத் தமது பிரமக் கொள்கையைக் கைவிடுவர்; சாகும் பிரமங்களாகிய இவர்கள் தம்மைப் பிரமம் என்று சொல்லும் அறிவு, தாம்புக் கயிற்றைப் பாம்பென்று எண்ணியுரைக்கும் மயக்க அறிவேயாம் எனக் கூறும் இம்மொழி, நாம் பிரம்மத்தாரை நடுக்காதிருக்குமோ? முற்பாடற் குறிப்பில் (10), வள்ளல் பெருமான் காலத்தில் திருவொற்றியூர்ப் பகுதியில் வேதாந்த தர்க்க குடார தாலுதாரி என்ற சிறப்புடைய ஒருவர் இருந்தார் என்றும், அவர் எப்போதும் கட்குடியில் வீழ்ந்து கிடப்பார் என்றும் திரு.வி.உலகநாத முதலியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அக்குடிகாரரைத்தான் வள்ளற் பெருமான் நினைக்கின்றாரோ எனத் திரு.வி.க. அவர்கள் ஐயுற்றதுண்டு. என்கிறார் உரைவேந்தர் ஔவை சு.து.பிற்பாடல் (11). பிரமவாதிகளின் புன்மையைப் புகன்றதாகும். ஆறாந் திருமுறை, சாதி, சமய, சடங்கு அற்ற சன்மார்க்க மலைமேல் ஏறிநின்று வையகம் அறிய வள்ளலார் அருளிய பேருரையாகும். எம் சமயமே சமயம், அல்லாதவை சமயமல்ல; எம் சாதியே உயர்சாதி, மற்றவை இழிமையவை; எம் சடங்கே சடங்கு, ஏனையவை ஏற்க இயலாதவை, எனப் பிணக்கு - பிளவு - பிரிவுபட்டு வாழ்ந்த வெறிமையர், வள்ளலார் பொதுமை யுரையைப் பொறுமையாய் எண்ணிப் போற்றுவரோ? ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும் ஒருநிலையர் ஆதல் வேண்டும் என்னும் ஒப்புரவுச் சன்மார்க்கத்தைத், தனித்தனி யாட்டத்தில் தழைத்து மகிழ்பவர் ஏற்பரோ? உலகவரைப் போலத் தெய்வம் பலப்பல சொல்லி, திருத்தலந்தோறும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தம் பாடுதல் விடுத்து, உருவிலா உருவ ஒள்ளொளி, வழிபாட்டை ஒரு சமயமாகக் கொண்டார் வள்ளலார். ஊரெலாம் கூடிக் கூடிப் பரவவும் பாராட்டவும், ஆரவாரம் இன்றிச், சடங்கும் அறவே இன்றி, ஒளிவழிபாடும் திருவடிப் புகழ்ச்சியும் புலவூண் துறந்த அந்தண்மையும் உயிர்ப்பாகக் குழைந்து குழைந்து நின்ற குருவர் வள்ளலார், ஏறாத மேட்டில் ஏறிப்பாடிய பாட்டை எதிராளர் ஏற்க இசைவரோ? இசைந்தால் என்ன? ஏற்றால் என்ன? எதிர்த்தால் என்ன? ஏசினால் என்ன? பழுத்த பலாச்சுளை பார்ப்பவர் இல்லாமல் பயன் படாமல் பாழ்பட்டுப் போகக் கூடாது என்னும் பற்றுமையும் பரிவும் ஒருங்கே உற்ற பெருமக்கள் சிலர், தம் துணிவுக் கொடையாகவே நமக்கு ஆறாம் திருமுறை வாய்த்ததுவாம்! வள்ளலார் வளம் - மெய் வளம் - வையக வளமாக வழங்கிய அப்பெருமக்களை, உள்கி உள்கிப் போற்றி மேலே செல்வோம். ஐந்தாம் திருமுறை வரை ஓரீர் இடங்களில் இருந்த சன்மார்க்கம், ஓதாக்கல்வி, சாகாக்கலை வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பொங்குமா கடலாய்த் திகழும் பகுதி ஆறாம் திருமுறை. இறைமையைப் பொது எனவும், அதன் உறைவைப் பொது எனவும் கண்டது பழந்தமிழகம். அப்பொதுவே, பொதியில், வள்ளலார் இறைமை இருக்கையை வயங்குமணிப் பொது (3238) வாகக் கண்டு களிக்கிறார். அப்பொதுவியல் என்னெனின் ஆன்மநேயம் - அன்பு - எனக் கண்டு திளைக்கிறார். அவ்வன்பின் சுரப்பார் அதன் சிறப்பை, அன்புப் பிடியுள் அகப்படும் மலை அன்புக் குடில்புகும் அரசு அன்பு வலைக்குட்படு பரம்பொருள் அன்புக் கையமர் அமுது அன்புக் கடத்தடங்கு கடல் அன்புயிரில் ஒளிர் அறிவு அன்பணுவுள் அமைந்த பேரொளி அன்புருவாம் சிவம் எனப் பரவிப் பரவித் திளைக்கிறார். அன்பாம் பண்பே இறை! அதற்கு, ஓர் உருவம் ஒரு நாமம் ஒன்றும் இல்லை! அவ்வன்பின் மூர்த்த அடையாளம் ஒளி! உள்ளொளி விளக்கம், புறத்தொளி! அவ்வொளி இவர்க்குரியதா? அவர்க்குரியதா? எவர்க்குரியதும் இல்லை! எல்லாருக்கம் உரிய அது பொது பொதுவுக்கு உரிய இடமும் பொது அப்பொதுவே, சன்மார்க்கப் பொது! அப்பொது, எனக்கு மட்டுமன்றி எவர்க்கும் எவ்வுயிர்க்கும் பொதுவாம் பொதுமைப்பொது! அன்பில் பொதுமை! ஒளியில் பொதுமை! வழியும் வழிபாடும் பொதுமை! தேங்காய் - தட்டு - தாம்பாளம் - சூடம் - பற்றி (பத்தி) - பழம் - பூ - சுருள் - பணம் - நீறு - நெருப்பு - நெய் - நெருக்கடி - கூச்சல் - குழப்பம் இடி - மிதி - கதை - புனைவு - சந்தடி - வெடி - வேட்டு - கொட்டு - முழக்கு - கும்மாளம் என்பவற்றால் வாழ்வும் வருவாயும் கொண்டவர்களும் - கொடுத்துக் கொடுத்தே பழகிப்போன கும்பலும், வயங்குமணிப் பொது வழிபாட்டை - ஒளிவழிபாட்டை ஒப்புமோ? ஆனால், அறிவுத் தெளிவால் ஒப்பிடுவார் திரள் திரளாகி, வடலூர்ப் பெருவெளியைக் கண்காணும் மக்கட் கடலூர் ஆக்கி வருவதைக் கண்டு, பொறுத்துக் கொண்டாவது இருக்குமா? இராது அல்லவோ! பௌத்த சமயம், அருக சமயம், கிறித்தவ சமயம், இசுலாமிய சமயம் எனப்பிறபிற சமயங்கள் கிளர்ந்து தனித்தனிக் கொள்கை, கோயில், வழிபாடு எனக் கொண்டது பற்றிக் கொள்ளாத கவலை, வெறுப்பு - எதிர்ப்பு - ஆயவை, தம் சமயத்தில் இருந்து தனித்து மேடேறி அருட்பெருஞ்சோதி விளக்கமாகத் திகழ்தலைக் காணுமளவில் பொறுத்துக் கொள்ள முடியுமா? கதிர்ஒளியைக் காணப்பொறுக்காமல் கதவைச் சாத்திக் கொண்டால் கதிர் ஒளி புறப்பட்டுப் பட்டொளி செய்யாமல் அமைந்துவிடுமா? அப்படி வெளிப்பட்டதே ஆறாம் திருமுறை. அதில் என்னதான் அப்படிச் சொல்கிறார்? தாம் கண்ணாரக் கண்ட சீர்கேடுகளைத் தமக்கே உயிர்ப்பாக இருந்த ஆன்ம நேயப் பெருக்கால் உலகம் உய்வதே குறித்து உரைக்கத் தொடங்கினார். உரைப்பதோ உண்மை! ஆனால், உண்மையின் கசப்பு ஒப்பி ஏற்கும் உயிரமுதாம் மருந்து ஆகிவிடுமோ, சடங்கு பொய் புரட்டு ஏமாற்று வஞ்சம் ஆயவையே வாழ்வாகிப் போனவர்க்கு? சாதிமையிலும் சடங்கிலும் மூழ்கிக் கிடந்த திருத்தில்லைச் சிற்றம்பலம் வள்ளலார்க்கு, இயற்கை உண்மை வெளியாகவும் இயற்கை விளக்கமாகவும் இயற்கைத்தனி இன்பமாகவும் பேரொளிப் பிழம்பாகவும் தோன்றுகின்றது - இது சடங்கர்க்கு ஒப்புமா? தற்செருக்கே வடிவாயவர்க்குத் தன்னொடுக்கப் பாலபாடம் தானும்புரியுமா? ஆற்றாமைப் பதிகம் முதல் முறையீடு ஈறாக நான்கு பதிகங்களும் தம் குறையைத் தழுதழுத்துத் தழுதழுத்துக் கூறியதாகும். பின்னும் பல உள. கறையும் குறையும் இலாத நெஞ்ச வெளிப்பாடு இஃதாம். சாகாத கல்வி அறியவும், மரணபயம் தவிர்த்திடும் சன்மார்க்கம் அறியவும் தமக்குள்ள வேட்கையையுரைக்கிறார். இறைமையைத் தந்தைமையாய்த் தாம் பிள்ளைமையாய்ப் பெருகிய வேட்கையில் பிறந்தவை பிள்ளைச் சிறுவிண்ணப்பமும், பிள்ளைப்பெரு விண்ணப்பமுமாம். சிதம்பரம் என்றும் பெரும் புகழ்க்கோயில் நடைமுறை தமிழ் மறைக்கு இணங்கவும் ஆகம நெறிக்கு அமையவும் இயலவில்லை; சீர்கேடான வழியில் செல்கின்றது; இதனை, மறை ஆகமம் ஆகியவை கூறுமாறு நடைபெறப் புதுப்பிக்க இச்சைப்படுகின்றேன் என்கிறார். திருவளர் திருச்சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில் உருவளர் மறையும் ஆகமக்கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும் கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய் என்பது அது (3405) சிதம்பரம் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கம் செய்யும் பொருட்டாகவும் என்றும் சமாதிக்கட்டளையில் தெரிவிக்கிறார். கோயிலைப் புதுக்குவது மட்டுமன்று, மலர் பெய்து மலர் பெய்து திருமேனி அழகுகண்டு உள்மகிழவும் திருவிழாக் காட்சி எடுத்துக் காணவும் வேண்டும் என்கிறார். நேரே சென்று தாமே மலரிட்டு விளக்கிட்டு எழில்மேனி கண்டு இறைஞ்ச வேண்டும் என விரும்புகிறார். பொதுமையைக் கெடுக்கும் பூதமாகவே உருக்கொண்ட தீக்கிதர், இந்நாளிலேயே திருச்சிற்றம்பல மேடையில் அப்பெருமானே பொருளாகப் பாடிய மணிவாசகர் வாசகப் பாடலைப் பாட ஒப்பாது உலைக்களமாய் எரிபவர், அந்நாளில் எப்படித் திருமுகம் காட்டியிருப்பார்? அருண்மைக்கு அடைபட்டு விட்ட அக்கோயில் நிலை என்ன செய்தது வள்ளலாரைத் தனிக் கோயில்காண ஏவியது. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும், சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும் துங்கமே பெறுஞ்சற் சங்கம் நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய். எனச் சங்கம், கோயில், சபை என்பவை காண ஏவுதல் பாட்டு இது. சங்கம் கண்டாரா? கோயில் கண்டாரா? சபை கண்டாரா? எல்லாம் கண்டார். அவர் விரும்பியவாறே, சங்கத்தில் அடியேன், அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் என்பது நிறைவேறிற்றா? நிறைவேறக் கிளர்ந்த போதே, பழகிப் போன பேய்மைச் சடங்கு ஆங்கும் தலைகாட்டிற்று; தலைவிரித்து ஆடவும் தொடங்கிற்று! எப்படி அறியலாம்? வள்ளலார் எழுத்தாலேயே அறிய முடிவதுதான் அவலம்! அவலத்தில் அவலம்! அவர் வாழ்நாளின் போதே, அவர் கண்முன்னரே நிகழ்ந்தன; அரங்கேற்ற மாயின! சாலையில் உள்ளார்க்கு இட்ட ஒழுக்கக்கட்டளை (9.3.1872)யில், இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டா கிறது. அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் பட வேண்டும் என்று எழுதியுள்ளார். சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி (25.11.1872) என்பதில், இங்கே வசிக்கம் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டா யினாலும் அல்லது உண்டாகிறதாயிருந்தாலும், உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல் விளைவை யுண்டு பண்ணாதிருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும், அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர் களோடு மறுபடி அத்துவேஷத்தை ஒருங்கேவிட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர் களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தலனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய் விடத்தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது என்னும் கட்டளையுள்ளமை உண்மையை உணர உதவுகின்றது. சித்திவளாக விளம்பரமும் (08.09.1893) சில தெளிவுகளை உண்டாக்குகின்றது. சித்தி வளாகத்தில் வந்திருக்கின்றவர்களும், வருகின்றவர் களும், வருபவர்களுமாகிய ஜனங்களுக்கு அறிவிப்பது. மேல்குறித்த விடத்தில் இந்த மாதத்திற்கடுத்த புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர் வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள்விப்பட்டு நம்புதலோடு நீங்கள் நீர்களும் பொருள் வகையாலும் தேக வகையாலும் உழைப்பெடுத்துக் கொண்டு பின்பு நிட்டூரப்பட்டுக் கொள்ளுதல் வேண்டாம். அந்தக் கேள்வி உண்மை யல்ல. இவ்விடத்தில் அற்புதம் விளங்குவது மெய்யோ பொய்யோ, இந்தக் காலமோ எந்தக் காலமோ, ஆகலில் இந்த அறிவிப்பினால் ஜாக்ரதையோடு உங்கள் உங்களுக்கு அடுத்த காரியங்கள் எவையோ அவைகளைச் செய்வீர்களாக என உலக அறிவிப்புச் செய்கின்றார். அன்பர் ஒருவர் (1870 சூன் 8) ஒருவர்க்கு நம் பெருமான் இப்போது எவ்விடத் தெழுந்தருளியிருக்கின்றது. அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றனர்கள். இதுவிபரங்களை யுடனே கட்டளையிடும்படி கோருகிறேன். அந்தப் பக்கங்களி லிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றிய படியே சிலபல சொல்லுந்தோறு மனந்துடிக்கின்றது. ஆதலால் உண்மை விடயங்களை யுணர வருள் செய்தல் வேண்டும். என எழுதுகிறார். சென்னையில் இருந்து தொ.வேலன் (தொழுவூர் வேலாயுத முதலியார்) எழுதிய கடிதம் இது. இவற்றால் அடிகளாரை அடுத்திருந்தாரும் முழுதுறு சன்மார்க்க நெறியராய்ப் பின்பற்றி நின்றார் அல்லர் என்றும், அவர்களாலும் சங்கம் சபை கோயில் கடமைகள் அடிகளார் நினைத்த வண்ணமே முழுதுற நிறைவேறவில்லை என்றும், பல்வேறு வதந்திகளும் அவற்றால் சஞ்சலமும் உண்டாயின என்றும் அறியலாம். இனி நாட்டவர் நிலையோ, வழிபாட்டோர் நிலையோ, அடியார் பக்தர் என்பார் நிலையோ வள்ளலார் உள்ளம் ஏற்கும் வகையில் இல்லை. சன்மார்க்கம் என்மார்க்கம் நன்மார்க்கம் என அமைந்தார் அல்லர். சமயத்தில் புகுந்துள்ள கறைகளை வெளிப்பட எடுத்தெடுத்துக் காட்டிக் கண்டிக்கத் தொடங்கினார். அக்கண்டிப்பு இன்னசமயம் என்று இல்லாமல் பொதுமை நெறிக்குக் கேடாக இருப்பவற்றை யெல்லாம் கண்டித்தார். பிள்ளைச் சிறுவிண்ணப்பத்தில் (3408), மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திட மாட்டேன். என்று தம் நிலைவிளக்கம் அறைகிறார். பிள்ளைப்பெரு விண்ணப்பத்திலே, தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ! கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப், புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுவெனக் கண்டிரங் காது கொலை நெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே (3477) என்கிறார். சன்மார்க்கத் தலைநெறி கொள்ளாது, கலை நெறியில் போகின்றார்; புலைநெறி விரும்புகின்றனர். கொலை நெறி நிற்கின்றனர் என நைகின்றார். கலையரையும் புலையரையும் கொலையரையும் வாட்டாவா இன்னவை? பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப் பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும் இங்கும் போருற் றிறந்துவீண் போயினார். (3677) பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவிய திதனால் செந்நெறி அறிந்திலர் (3696) கூறுகின்ற சமயமெலாம் மதங்களெல்லாம் பிடித்துக் கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார். (3766) வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும். (3767) கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக (3768) சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் (4075) ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகிய உலகியல் நடத்தல்வேண்டும் (4086) இச்சாதி சமயவிதற் பங்களெலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும். (4086) உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லரவர் புற இனத்தார். (4160) கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம் பிள்ளைவிளை யாட்டு (4173) நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்துப்பார். (4174) மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது; வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது; கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது; கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. (4503) சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பமெலாம் தவிர்ந்து போக. (4508) சாதியும் மதமும் சமயமும் பொய்யென (4615-211) இந்தச் சாதி இந்த மதமெனும் வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த(4637) மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக. (4653) இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெல்லாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு (4654) சாதியைநீள் சமயத்தை மதத்தையெலாம் விடுவித்தென் தன்னை ஞான நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானை(4674) சாதிமதம் சமயமெனும் சழக்கையும் விட் டடக்கி (4764) சாதிசமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது. (4913) சாதிசமயச் சழக்கைவி டேன் அருட் சோதியைக் கண்டேனடி அக்கச்சி சோதியைக் கண்டேனடி. (4949) சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு (4955) சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே சாற்றப் புகினும் சாலார். (5015) நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு. (5268) சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் சமயமதா சாரமெனச் சண்டையிட்ட கலக வழக்கு வெளுத் ததுபலவாம் பொய்ந்நூல் கற்றவர்தம் மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த முழக்கு வெளுத் தது. (5387) அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அவைரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித்திட. (5485) சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதியியல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வே பிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று. (5508) சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதலழ கலவே. (5566) மதமெனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம். (5799) எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே இறைவரென்ப தறியாதே இம்மதவா திகள்தாம் கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே கதைக்கின்றார். (5800) சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரம்அன் றெனவே (5805) - இவையெல்லாம் திருவருட்பாவில் இடம் பெற்றவை. இவற்றின் திரட்டு என்ன? இறையின் பெயரால் புலை கொலை ஆகா புலை கொலை புரிவோர் புறவினத்தார் இவை தவிர்ந்தோர் உறவினத்தார் சாதி சமய மத நெறி, பொய். சாதி சமய மத வெறி, சூது. பல் சமய மத நெறி பிள்ளை விளையாட்டு. பல் சமய மத நெறி பேய்த்தனம். பல் சமய மத நெறி பாவம். பல் சமய மத நெறி பயனற்றது. பல் சமய மத நெறி சழக்கு. சமயத் தெய்வம் துரும்பு. நால்வருணம் ஆசிரமம் பிள்ளைவிளையாட்டு. சதுமறை ஆகம சாத்திரம் சந்தைப்படிப்பு. சமயக் கூட்டம் கொள்கைக் கூட்டம். சாத்திரம் குப்பை. கலையுரைத்த கற்பனை கண்மூடித்தனம். நாத்திக நாக்க முடைநாக்கு. சமயப் பெயரால் சண்டைபோர் கூடா. சமயப் பெயரால் தருக்கமிடுதல் வேண்டா. ஒரே இறை என்பதறியார், யானைகண்ட குருடர். அருட் பெருஞ்சோதியே இறை. சன்மார்க்கமே மார்க்கம். சன்மார்க்க மாவது அருள்நெறி. உலகவர் ஒருமையுளராகக் கடனாற்றல், சன்மார்க்கப் பணி. சாதி, சமயம், சாத்திரம், கலைக்கற்பனை, தருக்கம், நாத்திகம் இவை தீமையானவையா? அருள்நெறிக்குக் கேடானவையா? இவற்றை எண்ணுவோம். சாதி : சாதி என்பது மனித இனம் சார்ந்ததாக நம் முன்னோர்கள் கருதினர் அல்லர். பறவைச் சாதி, விலங்கின் சாதி, மீனின் சாதி என்றே கண்டனர். குலம் குடி என்பவை மாந்தர்க் குரியவை. குடி என்பது குடும்பம்; பல குடும்பம் சேர்ந்தது குலம். குலமும் ஒன்றே குடியும் ஒன்றே என்பது கபிலரகவல். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது திருமந்திரம். மக்கள் மன அறிவர்; ஓருயிர்த் துடிப்பை ஓருயிர் உணர்ந்து ஒன்றனுக்கு ஒன்று உருக்கமாய் உதவியாய் வாழ்தல் மன அறிவு மாண்பு. அந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும், யாதானும் நாடாமால் ஊராமால் என்பதும் விளக்கமுறும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெரு நெறி ஆட்சி கொளும். எல்லா உயிரும் இன்புற்றிருப்பதல்லாமல் வேறு ஒன்று கருதா விழுப்பம் மாந்தர் அனைவருக்கும் உண்டாகும். இவற்றுக் கெல்லாம் தடையாவது சாதி. சந்நியாசிக்கும் சாதி அபிமானம் உண்டு என்னும் சால்பிலாப் பழமொழி என்ன சொல்கின்றது? சந்நியாசியாகிய துறவியும் எவ்வெவற்றைத் துறந்தான் எனினும் சாதியைத் துறவான் என்பது தானே பொருள்? சாதி வெறியன் காட்டும் பற்று, அறம், அருள், நட்பு, உதவி என்பன வெல்லாம் எதுவாக இருக்கும்? அச்சாதிச் சார்பை அன்றி வேறாக இராதே! ஒருவன் எத்தகு கேடன் - தீயன் - பாவி - எனினும் தன் சாதியான் எனின், அக்குறைகளை எண்ணாமல் அவனைத் தழுவிக் கொள்வதும் பாதுகாப்பதும், பொதுவறக்கேடு அல்லவோ! சாதிச்சண்டையைத் தூண்டும் சண்டாளர் யார் எனின், சாதி அரசியலே அரசியல் என ஆகிப்போனவர். அறியாமையால் சாதி மோதல் ஏற்படின் அறியும்போது தானே அணைந்து போகும். அறிந்தே சாதி மோதலை உருவாக்கும் அறிவறந்த சாதி அரசியலர், சாதி இதழர், சாதித் தலைவர் சாதியை என்றும் அணையவிடா எரிதழல் ஆக்குவர். சாதியில் உயர்வு தாழ்வு தீண்டாமை பாராமை என்பன வெல்லாம். ஏற்பட்ட கெடு, தம்மொத்த மாந்தரை, விலங்காய் புழுப் பூச்சியாய் நோக்க வைத்தது. விலங்குகளுக்குத் தரும் உரிமையையும் தாராமல் ஒடுக்கியது. புழுப்பூச்சியினும் இழிமை யாய் நசுக்கியது. நான் தாழ்த்தப்படுகிறேன், இழிமைப்படுத்தப் படுகிறேன் என்பது தானும் உணரக் கூடா நிலையில், அது தலைவிதி எனப்படும் தன்னல நம்பிக்கை ஊட்டப்பட்டது. மலைப்பாதைப் படிகள் போலச்சாதிகள் ஒன்றன் கீழ் ஒன்றாய் எண்ணவைத்து உச்சியில் பார்ப்பனீயம் நின்று கொண்டது. அப்பார்ப்பனீயத்தை அடுத்து நின்ற வேளாளச்சாதி, எனக்குமேலே பார்ப்பான் மட்டும் தானே, ஆனால் எனக்கு கீழே எத்தனை சாதிகள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்! சூத்திரச் சாதிகளுக்குமேல் நாங்கள் நிற்கிறோம், சற்சூத்திரச் சாதியர் நாங்கள் என்று அவர்களும் பார்ப்பனத் தன்மையராய் - அவரினும் கூட அழுத்தமான தன்மையராய்ச் செம்மாந்து நின்றனர். நாலாம் படிக்கட்டில் நின்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர் தாமும் தமக்குக் கீழே மூன்று படிக்கட்டுகள் இருப்பதை எண்ணி குற்றமில்லை நமக்குக் கீழேயும் உள்ளனர் என அமைந்தனர். கடைப்படிக்கட்டாரோ கடவுள் விதித்த விதி, மேலே உள்ளவர்களுக்கு அடித்தொண்டு செய்து அதன் பயனாய் அடுத்த பிறவியில் மேல் படிக்கட்டைப் பெறலாம் என ஒடுங்கிவிட்டனர். És¡Fkh‰W¡F¥ g£L¡FŠr« v‹gJ nghy ï¡bfhL« rh⥠ãÇit ‘tUzháuk jUk«’ vd ‘nknyh®!’ tH§»d®, ‘nkija®! பரப்பினர். இதற்குத் தெய்வத் தன்மை தந்து வஞ்ச நெஞ்சை நிலைப்படுத்தினர். பார்ப்பனன் மட்டுமே கோயில் கருவறைக்குள் கால் வைக்கப் பிறந்த பிறவி; அவன் புனை சுருட்டு மந்திரங்களே வழிபாட்டுக்கு உரியது. அவன் பிறவி தெய்வப்பிறவி; அவன் மொழி தேவமொழி; வழிபாட்டுரிமை அவனை அன்றி எவனுக்கும் இல்லை. வழிபாட்டுக்கு வருவோர் சாதிக்கட்டுக்குத்தக நிற்க வேண்டும் தீண்டாதாரும் பாராதாரும் கோயில் சுற்றுப் பக்கத்திற்குத்தானும் வருதல் தீட்டு என்றனர். அவர் வழிநின்ற ஆட்சியர் நிலை என்ன? அவரும் பார்ப்பனர்க்குச் சூத்திரர் தாமே! பார்ப்பனர் நலம் எவை எவை என்பது கண்டு கண்டு தொண்டு புரியத் தானே அவர் பிறந்த பிறவியர்! சாதிச் சிறுமையை அதன் சண்டாளத் தனத்தை என்ன தான் எழுதுவது? சாதிச் சிறுமை தொழிலை விட்டதா? அருளாளராக எவர் இருப்பினும் அவர், அந்தணர், ஆட்சி அமைச்சு அலுவல் பார்ப்பவர், அரசர் கொள்வதும் கொடுப்பதுமாம் பண்டமாற்றர், வணிகர் உழவும் தொழிலும் புரிந்த உதவியர், வேளாளர். இவை சாதி யல்ல! எவரும் ஆளலாம்; வணிகம் புரியலாம்; தொழிற் கடனாற்றலாம்; எவரும் அருள்நெறி வாழ்வினரா கலாம். அவரவர் நிலையில் அவரவர் சிறப்பானவரே! இத் தொழில் செய்வார் உயர்ந்தோர், இத்தொழில் செய்வார் தாழ்ந்தோர் எனப்படவில்லை. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி என்று ஔவையார் கூறினார். (நல்வழி : 3) வையகம் காப்பவ ரேனும் - சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே - புவி போற்றிடக் காப்பவர் மேலோர் என்று பாரதியார் பாடினார் பாவேந்தர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதலியோர் சாதி ஒழிப்பில் பேரக்கறை காட்டிப் பாடுபட்டனர். வள்ளலார் கண்ட சன்மார்க்க சபையோ சாதிக்கல்லைப் பொடிப் பொடியாக்கியாக வேண்டும் என்பது அது. சாதி நோய்த் தீர்வுக்கு நன்மருந்து சாதிக்கலப்பு மணமே யாம் ஆயினும், வேறிரு குறிப்புகளும் எண்ண வேண்டும். வருணாச்சிரம தருமம் என்று பேசிக் கொண்டு அரிசன் எனப்பெயர் மாற்றத்தால் உயர்த்த வேண்டும் என்று நினைப்பது முரண்பட்டது. அவ்வாறே, சாதி ஒழிப்பே எம் குறிக்கோள் சாதிச் சலுகையை நாங்கள் விடமாட்டோம் என்பதும் முரண். பள்ளி அலுவலகம் ஆவணம் தேர்தல் ஆகிய எவற்றில் சாதிமை இருப்பினும் சாதிக்கு நீர்விட்டும் உரமிட்டும் வளர்ப்பதேயாம்! வெந்நீர் விட்டாலும் போதாது; வெட்டிச்சாய்க்க வேண்டும். முள் மரமாகிய சாதியை, நீர்விட்டும் உரமிட்டும் காவல் காத்தும் வருதல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் செயலேயாம்.! மாந்த நேய அடிப்படையில் பொருளியல் அடிப்படையில் சலுகைகள் இருப்பதே நேர்மையும் நெறிமையும் மானப்பேறுமாம். சாதிமை ஒழிப்பொடு கூடிய மாந்தநேயச் சால்புக் கொடையே மானப் பேற்று மாண்பாம்! இனிச் சமயம் - மதம் என்பவை பற்றிக் காணலாம். சமயம் (மதம்) சமயத்தைத் தோற்றுவித்த பெருமக்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களாக வாழ்ந்தவர்கள்; உள்ளும் புறமும் ஒத்த தூயர்; உலகம் உய்யக் காலத்தால் வழிகாட்ட வந்த ஒளிவிளக்கு அன்னவர். அவர்கள் வழியில் வந்தோர் - பரப்பினோர் - பின் பற்றினோர் வாயால் கொள்கை சொல்லி, வாழ்வால் போற்றா தவராகப் பெரும்பாலோர் ஆகிவிட்டனர். அருவியின் தூய்மை, அழுக்கு சேறு முடை நாற்றம் கழிவு சேரச் சேரச் சாய்க்கடை யாவது போலப் புகழ் வாய்ந்த சமயத்தைச் சழக்காய் - குப்பையாய் - பொய் புரட்டு ஏமாற்று வஞ்சம் கொள்ளை கொலை என்பவற்றுக்கு இடமாக்கிவிட்டனர். இந்நிலையில் சமயம் முட்டல் மோதல் பிணக்கு பித்தலாட்டப் பேய்மைக்கு அடிமைப்பட்டுப் போயதால் நல்லோர் வெறுத்தொக்கும் பொருளாயிற்று. இந்து சமயமோ சாதிச்சழக்கின் விளை நிலமாகவே மாறிவிட்டது. எந்தவொரு சமயமாவது தனக்குள் முட்டி மோதிப் பிணங்காமல் இருக்கக் காணமுடிகிறதா? அரசியல் சீரழிவுக்கு முற்பட்ட சீரழிவு சமயச் சீரழிவு என்று சொல்லத் தக்கதாகத் தாமே உள! ஒன்றது பேரூர் வழிஅதற் காறுள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயை ஒத் தார்களே மணிமேகலையில் வரும் சமயக் கணக்கர் திறம்கேட்ட காதை என்ன? நீலகேசி, குண்டலகேசி, வாதப்போரென்ன? சமண - பௌத்த - மதங்களை வேதமார்க்கம் முட்டியழித்து நாடுகடத்திய தென்ன? கழுவேற்றிய கதை என்ன? கசினி, கோரி காலமுதல், இன்றுவரை நிகழும் கோயி லிடிப்பு - சிலையடைப்பு என்பவை என்ன? சசியா வா என்ன? தென்கலை வடகலைச் சிக்கல் என்ன? அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு இப்பழமொழி உள்ளீடு என்ன? அஞ்ஞானிகளே விளிப்பு என்ன? சிலுவைப் போரென்ன? கடவுளைப் படைத்தவன் முட்ள், சமயம் - மதம் - அபினி என்பவை கிளர்ந்தமை ஏன்? அருட்பா - மருட்பா வழக்கு - கண்டன அறிக்கைகள் ஏன்? சமயம் என்பது பக்குவப்படுத்துவது; முட்டுவது மோதுவது அன்று. சமைப்பது என்ன? பக்குவப்படுத்துவது தானே! சிலை சமைப்பது என்பது என்ன? சிலை வடிப்பது தானே! பெண்ணொருத்தி சமைந்தாள் என்றால் பக்குவ நிலையுற்றார் என்பது தானே! பக்குவப்படுத்த வந்ததே பக்குவத்தைக் கெடுத்தால் எதுதான் பக்குவம் ஆக்குவது? ஆதலால் பக்குவமே வடிவாகிய வள்ளலார் சமயச் சழக்கைக் கடந்து சமயச் சார்பில் ஓங்கிச் சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் கண்டார். சமயத்தின் மதத்தின் பேரால் ஆன்ம நேயம் குன்றாமல் குறையாமல் இருக்கவும், ஆன்மாவுக்கு ஆன்மா உருக்கம் கொண்டு உதவி நிற்கவும் வழிகாட்டினார். அதே பொழுதில் இயற்கை இறைமையை ஒப்பாரையும் ஒப்பிச் சென்றாரும் அல்லர் என்பது எண்ணத்தக்கது. வள்ளலார் தம்மை இயற்கை விளக்கம், சமய நெறியில் செலுத்தாது சன்மார்க்கத்தில் செலுத்திய வகையைச் சுட்டுகிறார். தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் திருவருள் மெய்ப் பொதுநெறியில் செலுத்தி (3053) சமயமதக் குழிநின் றென்னை எடுத்தானை (3944) சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்திய நற்றுணையே (4165) சமயநெறி மேவா தென்னைத் தடுத்து (4783) என்று இன்னவாறு சுட்டுகிறார். மாறுபட்டவை, வேறுபட்டவை, முட்டுபவை, மோதுபவை எனப் பேயாட்டமும், கூட்டம் சேர்ப்பதும் கொள்ளையடிப் பதுமாம் நோக்கில் அருளாளர்களால் ஆன்மநேய சூதாட்டக் களமாகி விட்டதுமாம் சமயங்கள் மெய்நோக்கின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆதலின், ஒன்றாய் இணையத் தக்கவையே என்பதை, பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே (2118) என்பதால் விளக்குகிறார். கடலுக்குப் பல்வேறு ஆறுகள் கூடுவதால் புணரி என்பதொரு பெயர். வள்ளலார் இறையொடும் இணையும் இணைவைப் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் (4088) என்பார் சாதி சமயம் மதம் ஆகியவை நீங்கி, ஒன்றெனக் காணும் உணர்ச்சி என் னுறுமோ? (4077) என அவாவி நிற்கிறார் வள்ளலார். சாத்திரம் சடங்கு : சாத்திரம் சடங்கு இவற்றைத் தவிர்ப்பானேன்? இவற்றால் ஏற்படும் கேடென்ன? எந்த இயற்கை விளக்கம் ஓரறிவு முதல் பேரறிவாம் ஆறாம் அறிவு வரை விளக்கம் செய்து இயற்கை விளக்கப் பிறவியாய்ச் செய்ததோ அந்த இயற்கை விளக்கப் பிறவியைத் தாழ்த்தித் தாழ்த்தி விளக்காய் பறவையாய் பாம்பாய் புழுவாய் பூச்சியாய் மரமாய் புல்லாய் இயற்கை விளக்கமிலாக் கல்லாய் மண்ணாய்க் கீழ்மைக் குழிக்குள் தள்ளுவன சாத்திரமும் சடங்கும். ஆதலால் சாத்திரம் சடங்குக் குப்பை என்றார் வள்ளலார். பொய்க்கதை புனைசுருட்டு பொருட்பறிப்பு இவற்றைத் தன் மூலதனமாகக் கொண்டு கொழுப்பது சாத்திரமும் சடங்கும். ஆறறிவு படைத்த பிறவி தற்சிந்தனை இழந்து ஆடு மாட்டுக் கும்பலாய்க் கூடித் தலையாட்டிப் பிறவியாய்த் தோற்றம் தந்து கொத்தடிமையாய்க் குன்றிப்போகச் செய்தவை சாத்திரமும் சடங்குகளுமேயாம். எக்குற்றமும் செய்; இதனைக் கொடு; உனக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என மூளைச் சலவை செய்வது அது. சோதிட நம்பிக்கை ஆக்கித் தன்னம்பிக்கையை அறவே தொலைப்பது சாத்திரமும் சடங்குமாம். கோயில் வளத்தைத் தம் வளமாக்கி, கோயிலுக்கு உரிமைப்பட்ட மக்களைக் கோயிலுக்குப் புறம்பே தள்ளி, அம்மக்கள் மொழியைத் தீட்டு மொழி என்றும் நீச்ச மொழி என்றும் பழித்துப் பார்ப்பன மயமாக்கியது சாத்திரமும் சடங்குகளுமேயாம். ஆதலால் அவற்றைக் குப்பையாகக் கொட்டி மண்போட்டு மட்கிப் போகவைக்க வேண்டும் என்று வள்ளலார் கிளர்ந்து நின்றார். சாத்திரம் சடங்குகளுக்கு ஒப்புகை வழங்கி அதன் நிலைப்பாட்டைத் தெய்வ சம்மதம் ஆக்குவது போல இல்லாக் கதைகளை எல்லாம் இட்டுக் கட்டிப் புராணங்கள் படைத்தனர். அறிவறிந்த தமிழரையும், மண்ணின் மைந்தர் கொடை வளத்தால் தோன்றிய மடங்களையும் சாத்திரமும் சடங்குகளும் வளைத்துக் கொண்டன. தமிழர் பண்பாட்டு நெறி இயற்கை வழிப்பட்ட மெய்யியல் இறைமை நெறி, ஒப்புரவு நெறி ஆகியவை ஒடுக்கப்பட்டன; ஒழிக்கவும்பட்டன. இயற்கை அறிவுச் சமயம் வீழ்ந்த நிலை இது. இதனால் மக்கள் உய்வுக்குச் தேவைப்பட்ட சன்மார்க்கக் குடையையும் கொடியையும் எடுத்து வழிகாட்ட வெளிப்பட்டார் வள்ளலார். அருட்பெருஞ்சோதித் தனிப்பெருங்கருணைப் பரப்பாளியானார். கலையில் கற்பனை இருக்கலாம். வாழ்வை, அக்கலைக் கற்பனை ஆக்கிவிடுவது ஆகாதே! வாழ்வை நடிப்பாய் கூத்தாய் மேடைப் பொருளாய் பார்வைப் பொருளாய் பொழுது போக்குப் பொருளாய் ஆக்கிவிடக் கூடாதே என்பதால், கலையுரைத்த கற்பனைக் கண்மூடி வழக்கத்தைக் கடிந்தார் வள்ளலார்.! தருக்கம் தருக்கம் வேண்டா என்றார் வள்ளலார் - ஏன்? தருக்கம் பொருளுண்மை காட்டுவதற்குப் பதிலாகத் தருக்கம் செய்பவன் மூளைக் கூர்ப்புப் பொருளாக அமைந்து விடுதல் உண்மை. முறை மன்றத்தில் வாய்ச்சாலம் வல்லார் வழக்கு வெல்வதும், மெய்யர் வழக்குத் தோற்பதும் கண்கூடு அல்லவா! பொய்யுடை ஒருவன் சொலல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே என்றும், மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே என்றும் மன்னன் அதிவீரராமன் கூறியதை எண்ணினால் தருக்கநெறி வாக்குத்திறவோன் வல்லமை சார்ந்தது என்பது புலப்படும். ஒரு பாடல் முற்றிலும் பிழையானது என்றார் எவரோ அவரே அப்பாடல் முற்றிலும் சரியானது என்று நிறுவினார் என்றால், தருக்கப்பாடு இன்னது எனப்புலப்படுத்தவில்லையா? இராமாயண சங்கோத்ரவிக்ருதி என்பது அது. சிவஞான முனிவர் செய்தது. இனி, இன்மைக் கொள்கையாம் நாத்திகம் என்பது என்ன? உள்ளது என்பதில் ஏறிவிட்ட தன்னலம், அழுக்கு, ஏமாற்று, இழிமை என்பவற்றை ஒழிக்கும் வகையால் தோன்றியதே தமிழகத்து நாத்திகம். தந்தை பெரியாருக்கு முற்பட வாழ்ந்தவர் வள்ளலார்; அதனால் அவர் சுட்டும் நாத்திகம் பெரியாரைக் குறித்தது அன்று என்று உணர்தல் வேண்டும். உண்டு என்பது இல்லை என்பதும், இல்லை என்பது உண்டு என்பதும் பண்டு தொட்டுப் பயிலும் நெறியே என்பது, உலகத்தார் உண்டு என்பது இல்லென்பான் என வள்ளுவரால் பேசப்பட்டமையால் உணரலாம். ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவே என்னில் பலவேயாம் நன்றே என்னில் நன்றேயாம் தீதே என்னில் தீதேயாம் அன்றே என்னில் அன்றேயாம் ஆமே என்னில் ஆமேயாம் என்னும் கம்பர் வாக்கால் அன்று ஆம் என்பவை வழங்கப் பட்டமை அறியலாம். உலகாதயம் என்னும் கொள்கை உலகளாவியதாம்! பூதவாத நிலையும், ஐயறிவு நிலைப்பாட்டுக் கொள்கையும் பண்டே உண்டாம். இன்மை, வெறுமையாகிப் பல்வேறு தீமைகளையும், செருக்கு, தான்தோன்றித் தனம் என்பவற்றையும் உண்டாக்கி விடும். அஞ்சுவதற்கு அஞ்சல் என்னும் அறம் அற்றுப்போனால் உலகியல் அளப்பரிய கேட்டுக்கு ஆளாகிவிடும். ஆதலால், நாத்திகத்தைக் கடிந்து கூறினார் வள்ளலார். ஒருவர், சன்மார்க்க நெறியைக் கூர்ந்துணர்ந்தார் எனின், அவர் நாத்திகக் கொள்கையை நாடியே இரார் என்பது, வள்ளலார் கொள்கையைத் தாங்கிப் பிடித்த தந்தை பெரியார் செயலால் நன்கு விளக்கம் பெறுதல் அறியலாம். சன்மார்க்கக் கொள்கைகள் திருவருட்பாவில் இடம் பெற்றவைபற்றி எண்ணினோம். விளக்கமும் கண்டோம். இனி உரைநடை வழியே வள்ளலார் வெளிப்படுத்திய விரிபொருள் விளக்கங்களைக் காணலாம். உரைநடையில் வள்ளலார் எழுதிய சன்மார்க்க விளக்கம் இருவகைப்படும். ஒன்று : சீவகாருணிய ஒழுக்கம் மற்றொன்று, சன்மார்க்க விண்ணப்பங்கள். இவற்றுள் முன்னது, முப்பிரிவுகளைக் கொண்டது. பின்னது, நான்கு விண்ணப்பங்களைக் கொண்டது. ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற்பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே (உயிரிரக்க கடைப்பிடியே) கடவுள் வழிபாடு என்பதை விளக்குவது இது. சீவகாருணிய ஒழுக்கம் என்பது என்னெனில் : சீவர் களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு, தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் என்றறிய வேண்டும். சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகும் என்னில், சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அநுபவிக்கக் கண்டபோதாயினும், கேட்டபோதாயினும், இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகு மென்றறியல் வேண்டும் என்றார். மேலும் சீவனின்மேல் சீவனுக்கு உண்டாகும் ஆன்ம உருக்கம் பழைய ஆன்ம உரிமை என்கிறார்; அது: சீவர்ககள் எல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட படியால், ஒருமையுள்ள சகோதரர்களே யாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும், துக்கப் படுவாரென்றறிந்த போதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கம் உண்டாவது சகோதர உரிமை ஆதலின், ஒரு சீவன் துக்கத்தை அநுபவிக்கக் கண்டபோதும் துக்கப்படுமென்றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்றறிய வேண்டும் என்கிறார். சிலருக்கு ஆன்ம உருக்கம் இல்லையே எனின், தமது சகோதரர் என்னும் ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளி மழுங்கின படியால் கண்டறியக் கூடியதில்லையாய் ஆயிற்று என்கிறார். சீவகாருணிய ஒழுக்கம் என்னும் நூல் சத்திய தருமச் சாலையை நிறுவியபோது, அதன் நோக்கமாகிய சன்மார்க் கத்தை விளக்குவதற்காக அடிகளால் உபதேசிக்கப்பட்டது என்றும், இதுவே அடிகளாரின் முதன்மையான சாத்திரநூல் என்றும் வள்ளலார் வாழ்வராய், வள்ளலார் படைப்புகளின் பதிப்புக் கொடைஞராய்த் திகழ்ந்த பாலகிருட்டிணர் பகர்கிறார். சீவகாருணிய நூற் சுருக்கம் :  ஆன்மலாபம் அடைவதற்காகவே பிறப்பு கடவுளால் கொடுக்கப்பட்டது.  கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெறுவதே ஆன்மலாபம்.  கடவுளின் இயற்கை விளக்கத்தைக் கொண்டே அதனை அடையக்கூடும்.  கடவுளின் இயற்கை விளக்கத்தைச் சீவகாருணிய ஒழுக்கத்தாலன்றி வேறெந்த வழியாலும் பெற இயலாது.  சீவகாருணிய ஒழுக்கம் என்பது சீவர்களுக்கு சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல்.  சீவர்கள் எல்லாம் ஒத்த உரிமையுள்ள சகோதரர்கள். ஆதலால் ஒரு சீவனுக்குத் துக்கம் உண்டாகும் போது மற்றொரு சீவனுக்கு உருக்கம் உண்டாகும்.  பசி, கொலை முதலியவைகளால் வரும் துயரங்களை நீக்கத் தக்க அறிவும் உரிமையும் இல்லாத சீவர்கள் விஷயத்தில், அவற்றை நீக்கத்தக்க அறிவும் உரிமையும் உள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயையினால் நீக்குவதே சீவகாருணியத்தின் முக்கிய இலட்சியம்.  ஒரு சீவனைக் கொன்று மற்றொரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுவது சீவகாருணிய ஒழுக்கம் ஆகாது.  மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து, காய், தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணியத்திற்கு விரோதமன்று.  மாமிச ஆகாரம் துஷ்ட மிருகங்களுக்குப் பரம்பரை ஆகாரமே ஒழிய, நியதி ஆகாரம் அன்று.  சீவகாருணியம் என்கிற மோட்ச வீட்டுத் திறவுகோலைச் சம்பாதித்துக் கொண்டவர்கள், நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.  சீவகாருணியம் இல்லாது செய்யப்படுகிற ஞானம், யோகம், தவம், விரதம், செபம், தியானம் முதலியவைகள் எல்லாம் பயனற்றவை.  சீவகாருணிய ஒழுக்கமுடையவர்கள் எந்தச் சாதியார் ஆயினும், எந்தச் செய்கை உடையவர் ஆயினும் யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர். சன்மார்க்க விண்ணப்பங்கள் : சத்திய ஞான சபையைக் குறித்து ஏற்பட்டனவாகும்.  உண்மைக் கடவுள் ஒருவரே.  எங்கும் பூரணராய் விளங்குபவர்.  உண்மை அன்பால் கருத்தில் கருதி, வழிபாடு செய்தால் அவர் அருள் கிட்டும்.  சன்மார்க்கத்திற்குச் சமயங்கள் மதங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆகாரம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் முக்கியமான தடை.  ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியம். - என்பவற்றை விரித்துக் கூறுகின்றன அவை. அடிகளார் எழுதிய திருமுகங்களிலும் சன்மார்க்கம் விளக்கம் பெறுகிறது. தம் அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்களில், தீர்க்காயுளும் சகல சம்பத்தும் உண்டாவனவாக, தமது சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன் என்றும்  தங்கள் சேம சரித்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மனம் அவலங்கொள்ளுகின்றது என்றும்,  பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும் என்றும்,  இந்தப் பாடல்கள் பங்கியில் அனுப்பி என்னிடம் சேருகின்ற பரியந்தம் நான் ஒருவேளை போசனம்தான் செய்வேன் என்று எழுதியதைப் பார்த்த பின்பு, நான் சாப்பிடுகிற சாதம் உடம்பில் பொருந்தவில்லை. பட்டினி கிடந்தவனைப் போல இருக்கிறேன், ஆதலால் என்னை நிம்மதியுள்ளவனாக்க எண்ணங்கொண்டு ஒருவேளை போசனம் கொள்ளுகிற நிபந்தனை நீக்கி உடனே தபாலில் எனக்குத் தெரிவித்தால் அல்லது நான் சலிப்பைத் தவிரேன். ஒருவேளை போசனம் உள்ளவனாகவே-யிருப்பேன். இது சத்தியம். என்மேல் ஆணை என்றும்.  தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வரவேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல் களில் மித போசனம் மிதபோகம்... நான் தம்முடைய தேகத்திற்கு விசேஷம் திடம் உண்டாகத் தக்க அவுஷதம் கொண்டு வருவேன் என்றும்,  நான்புசித்து வருகின்ற கிரகத்தில் யோக்கியராகவும் தலைவராவும் இருந்த ரெட்டியார் நாளது மாதம் 20 ஆம் தேதி பதவியடைந்தார். ஆதலால் உடனே வருவது ஓர்வகை நிந்தைக் கிடமாக இருக்கிறது என்றும்,  தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை ஒருவன் கட் பார்வை போன்றொழுகல் வேண்டும் என்றும் பிரார்த்திக் கிறேன். அன்றி உணவுறக்க முதலியவற்றால் உடம்பை மெல்லென நடத்தல் வேண்டும் இஃதென் வேண்டுகோள் என்றும்,  ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி ஏழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த ஓர் பேருழைப்பு - ஓர் அசாக்ரதையால் தன்மை கெடப் பெற்றது. இங்ஙனம் பெறினும் நம்பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும் பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும் போதெல்லாம் ஒரு சிறிது உளம் புடை பெயர்கின்றாம் என்றும்,  அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடிவர பிரயாணப்படுவார்கள் ஆரவாரப் பிரயாணமாக முடியும் என்றும்  இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும், உயிருடம்பைக் கடித்துண்ணும் கருத்தனேல், ஞானியெனக் கூறொணாதே என்றும்  இருவர் பிணியாளர் வேறு கதியின்றி என்பாற் புகலடைந் திருக்கின்றார். அப்பிணி சிறிது சாந்தப்பட்டவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வர நிச்சயித்திருக்கிறேன் என்றும்,  (தங்கள் உத்தியோகம் நீங்குவது) கேட்டநாள் தொடங்கி மனம் சஞ்சலித்துக் கொண்டே யிருக்கின்றது. என்றும்,  இராமலிங்கசாமி என்று வழங்குவிப்பது என் சம்மதமன்று என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில், இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும் என்றும்,  எவ்வகையாலும் களைகண் இன்றி பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளால் கிடைக்கும் பொருட் கருவியைஅங்ஙனம் செலுத்தலின்றி இங்ஙனம் செலுத்தும் வெறும் செயற்பாட்டிற்கொருப்படுங் குறைமையும் கோடற் கிடனாம். ஆதலால், இது விடயத்தில் துணிந்துரைத்தற்குச் சித்தமும் நாவும் செல்வன அல்ல என்றும்,  நாயக்கர்சாமி என்பவர் தற்காலம் இவ்வுலகில் இருக்கின்ற தான்தோன்றிச் சாமிகளில் தலைநின்ற சாமி என்க. என்னை? அறிய வேண்டுவனவற்றை அறிய முயலாமையொடு பித்த மயக்கால் மனம் சென்றவழி சென்று பித்தச்சாமி என்னும் விசேடப்பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கிறார். ஆதலால் சூழும் வண்ணம் சூழ்க என்றும்,  இதைச் சமரச வேத சன்மார்க்க சங்கத்தவர் அல்லாதவர் களுக்கு வெளிப்பட வாசிக்கப்படாது என்றும் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதிய திருமுகங்கள் (37) காட்டும் குறிப்புகள், சன்மார்க்க விளக்கக் குறிப்புகளாகக் கொள்ளத் தக்கனவாம்.  அப்படிப்பட் இடங்களிலெல்லாம் வாக்கினால் சமீபித்தும் மனத்தினால் நெடுந்தூரமாகியும் இருக்க வேண்டும்  தாயைப்பார்க்கிலும் அனந்தங்கோடிபங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நம் ஆண்டவன்  என்னைக் குறித்துத் தாங்கள் பணவிசயத்தில் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டாம்  எனக்கு நிம்மதி இல்லாமல் தங்களிடம் வந்தால் தங்களுக்கு எப்படி நிம்மதி வரும்?  யாவர்க்கும் மனது விகற்ப மாகாதபடிக்கும் தயவு வேறுபடாத படிக்கும் தங்கள் கருத்தின்படி நடத்தலாம் - இவை புதுவை வேலு முதலியார்க்கு எழுதிய திருமுகங்களில் (6) இருந்து எடுக்கப்பட்டவை. வள்ளலார் கொண்ட பொதுமை அறக் கோட்பாடும் நடைப்படுத்தமும் எத்தகு விளைவை உண்டாக்கிற்று என்பது எண்ணிப்பார்க்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றும் இல்லா அத்தூய வாழ்வு வடலூர்க் குடிகள் சுவாமிகளுக்குச் சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம் என்பதைக் கண்ட அளவால் புலப்படும். ஏழு செண்டு, ஏழு செண்டு இரண்டு வளையம் (லிங்சு), என்று நிலம் தந்தவர்கள் உளர். அவற்றின் நிலவரி ஏழு அணா ஐந்து பைசா, எட்டணா. இவற்றை வழங்கிய வள்ளல்கள் தம் செல்வம் எங்கே எவ்வளவு என்று கணக்கிட முடியாப் பெருஞ்செல்வர்களா? பண்ணையார்களா? தொழிற்சாலைத் தோன்றல்களா? நிலம் எழுதிக் கொடுத்தவர்களுள் இருபத்து மூன்று பேர் கையெழுத்துப் போடத் தெரியாத கீறல் வைப்பாளர். கையெழுத்துப் போட்டவர்களும் கயிஎழுத்து, கயிஎழுது, கையிழுத்து, காயிழுத்து, கையியெழுத்து என்றெழுதியவர்களே பலர். கையெழுத்து, கைஎழுத்து என்று எழுதியவர் நால்வரே. அறுனாசல செட்டி, னாறாயணன்பசி, கொமறசாமி படயாசி, தங்கள் பெயர்களைத்தான் இவ்வாறு எழுதியுள்ளனர்! வள்ளலார்க்கு உதவுவதே வாழ்வாவது என்று கொண்டால் அன்றி இவ்வெளிய வறியவர் தம் உடைமையாக இருந்தவை எவையோ அவற்றில் ஒரு நூற்றில் ஓராயிரத்தில் ஒரு பங்கு என்று இல்லாமல் முற்றாக எழுதித் தந்திருப்பர்? முழுதுறு ஒப்படைப்பு இதுவே என்பது தகும்! கல்லார் மிக நல்லர் என்பதும் ஏற்கும்! இவர்களை இப்பாலே வைத்து, அப்பாலே நோக்குவோம்! பெருத்த வேளாண்மையரும் இலக்கம் கோடி தேடிய நிதிப் பெருக்கரும் செய்த செயலை வள்ளலார் காண்கிறார்! அவர்க்குக் கலக்கமாகிறது! இவர்கள் கல்லா! மண்ணா! கனிவு என்னும் பொருள் ஒன்றை இவர் கண்டறியவே மாட்டாரோ என நைகிறார். ஒரு குழந்தை ஓடி வருகிறது! பசிக்கு உணவு கேட்டுக் கை நீட்டுகிறது. அச்சிறுகையில் ஒருபிடி சோறு விழுகிறது! இரண்டாம் முறையும் சிறுகை நீண்டு வருகிறது! இனியும் கொடுத்தால் உழவுக்கு வேண்டிய முதல் குறைந்து போகும் என்று எண்ணிய பெரிய கை இல்லை போ என உதறுகிறது! இப்படிக் கருமித்தனமாகச் சேர்த்ததை - உழவுக்கு முதல் குறையாமல் வைத்து விளைவித்ததை எப்படிச் செலவிடுகிறது? பேய்த்தனமாகக் கொண்டாடும் விழாவுக்குச் செலவிடுகிறது. கொட்டு - குரவை - மேளம் - வாணம் என வாரி வாரி வீசுகின்றது! ஊரையெல்லாம் - பக்கத்து ஊரையெல்லாம் - கூட்டி வைத்து குடி, கூத்து, கும்மாளம், விருந்து எனத் தொலைக்கிறது. வந்துவிட்ட நோயைத் தீர்ப்பதற்கும், விருந்தால் ஆக்கிக் கொண்ட புது நோய்க்கு மென மருந்து, மந்திரம், மாத்திரை, குறி, கோடாங்கி எனத் தொலைக்கிறது! உயிருடன் வாழும்போது பேணிக் காக்காமல் ஏச்சும் பேச்சும் இழிவும் கழிவுமே ஆக்கி நாளும் பொழுதும் மெலிந்தும் நலிந்தும் போகவைத்துச் சாகடித்துவிட்டுச் செத்தபின், எட்டுக்கும் இழவுக்கும் கொட்டுக்கும் முழக்குக்கும் என அழுகிறது! வெள்ளமானால் என்ன, மழையே இல்லையானால் என்ன, விளைந்தால் என்ன, பயிரே வெந்தால் என்ன, கட்ட வேண்டிய வரியைக் கட்டு என்று கடுத்துநிற்கும் கொடுங்கோல் தண்டவரிக்கும் கொட்டுகிறது! இரக்கம், உருக்கம், உதவி, ஒருமை என்னும் உணர்வு அறவே இல்லாப் பிறவி பிறந்து தொலைந்துள்ளதே! என்னே! என்னே! கொடுமை என்று பலப்பல நினைவுகள் வாட்ட எழுகின்றது ஒரு பாட்டு! அது : மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடியூண் வழங்கில் இங்கே உழவுக்கு முதல்குறையும் என வளர்த்தங் கவற்றையெலாம் ஓகோ பேயின் விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே! என்னே! என்பது (5331) பாழாம், சாத்திரம் சடங்கு, வேடிக்கை விழா, திருமுழுக்கு, தீமிதி, ஊசித்துளைப்பு, தேரிழுப்பு, யாகம், தானம் என்னும் நெறியல்லா நெறியைச் சன்மார்க்கம் பொருளாக எண்ணவே எண்ணாதாம்! உருக்கப் பிறவியர், கருக்கும் கடமையில் கால் வைப்பரோ? வள்ளலார், உள்ளம் உருக்கம் சால்பு சமன்மை அறியப் பலப்பல வேண்டுமா? பசித்தோர் முகம் பார்க்க, எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் ஆன்ம நேயம் கொள்க பசித்திரு! தனித்திரு! விழித்திரு! காது குத்துதல் இறைக்குச் சம்மத மற்றது கணவனை இழந்தால், மனைவியின் தாலி வாங்குதல் ஆகாது மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்தல் ஆகாது இறந்தாரை எரித்தல் வேண்டா, கருமாதி திதி செய்தல் கூடா புலை கொலை தவிர்க இயற்கையோடு இயைந்த விளக்கமே இறைமை ஒளி வழிபாடே உயர்வழிபாடு அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருளைக் கொண்டே அருளை அடைக ஓதாக் கலையே உயர்கலை சாவாப் பெருநிலை கூடும் இறையருளால் எல்லாம் செயல் கூடும் இறையருளால் சாதி சமயம் சடங்கு என்பவை நீங்கியது சன்மார்க்கம் ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒரு நிலையர் ஆதல் வேண்டும் என்பது சன்மார்க்கப் பெருநெறி யாம் பெற்ற பேறுகள் அனைத்தும் எவ்வுயிரும் பெறுதல் வேண்டும் இவற்றை எண்ணுக! எண்ணுக! எண்ணம் வாழ்வாகச் சிறக்க! சன்மார்க்கமாம் நன்மார்க்கம் உலகை உய்விப்பதாக! சபை வழிபாட்டு விதி ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்குவைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி, கரண சுத்தி யுடையவர்களாய் திருவாயிற் படிப் புறத்தில் இருந்துகொண்டு விளக்கேற்றி, பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது எழுபத் திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது, உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசுதுடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்ய வேண்டும். விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும் எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள் இடம் போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய் தெய்வ நினைவுள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும் போதும் தூசுதுடைக்கும் போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட விருக்கப்படாது. அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற் சபைக்குள் வைத்து, அப்பெட்டித் திறவுகோலை ஆதானக் காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும். சித்திவளாக வழிபாட்டு விதி சுவாமிகள் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் - ஆண்டவர் இப்போது தீபமுன்னிலையில் விளங்குகிறபடியால் - உங்களுடைய காலத்தை வீணில் கழிக்காமல் நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப் போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். நினைந்து நினைந்து என்னும் பாடல் நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே யென்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந் தேத்துதுநாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல் கின்றேன் பொற்சபையில் சற்சபையில் புகுந்தருணம் இதுவே சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படு கின்றவர் என்றும், அது காலையில் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப்பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல்விளைவை உண்டுபண்ணாதிருக்கும். அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தை களால் சண்டை விளையத்தக்கதாக வைதாலும் அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர் களோடு மறுபடி அத்துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது. அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தை யாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண் டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும். அப்படித் தெரிவிக்கா தவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப்பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம்விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது. - சி. இராமலிங்கம். சன்மார்க்க சங்கத்தில் வாழ்வார் பழக்கவிதியாகிய இதில் குறிப்பிடும் செய்திகள், சாலை விளம்பரம், சபை விளம்பரம், அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை, சாலை சம்பந்தி களுக்கு இட்ட சமாதிக் கட்டளை முதலியவற்றில், இடம் பெறாதவை, சங்கம் அமைத்து அங்குள்ளார் நிலைகண்டு, அறிவுறுத்தியது இதுஎன அறிதல் வேண்டும். மேலும், அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு, இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத் திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் பட வேண்டும் என்று (9.3.1872) எழுதிய எழுத்து முன்னதன் விளக்கமாகும். சன்மார்க்க நெறி எவ்வளவு மேம்பட்ட நெறி என்பதும், அதனைக் கொள்வார் எத்தகு பக்குவியாக இருத்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு பக்குவியாக அமையாதார் அந்நெறியைப் பற்றுவார் போல் காட்டிப் புகுந்தால் என்ன ஆகும் என்பதும் இற்றை வடலூர் சாலை சபை முலியவற்றைக் காண்பார்அறியக் கூடும். சபைக்குள் புகுவார் வயது கருதப்படுகிறதா? புகும்நிலை கருதப்படுகிறதா? மெல்லென ஓதுதல் நிகழ்கிறதா? ஏறாத மேட்டில் ஏறி வள்ளலார் பெற்ற பேற்றால் உருவாகிய நிலையங்கள் நிறுவனங்கள் எத்தகையர் கைப்பட்டு எந்நிலை யுற்றுக் கிடக்கின்றன? பளிங்குக் கல்லும் பளிச்சீடும் சன்மார்க்க விளக்கமாகி விடுமா? வள்ளலார் வழிநெறியை ஒழித்துவிட்ட வழிபாட்டு நெறி சன்மார்க்க விளக்கமாகிவிடுமா? புறத்தே வெளுத்து அகத்தே கறுத்தார் ஆயிரம் செய்தாலும் ஒருமையுளார் செய்யும் ஒரு செயலுக்கு ஒப்பாகாது காண்! வள்ளற் பெருமானாரை உள்ளி உள்ளி உருகி உருகி ஓடித்தேடி வருவார், உள்ளே வந்தபின் அடையும் நிலை என்ன? ஏந்திநிற்கும் கையை அன்றி என்ன காண்கின்றனர்? அக்காட்சி நாட்டுக்கு ஆகவே ஆகாது என்பதற்காக நிறுவப்பட்ட இடத்தில், அவையே விளக்கமானால் நிலையம் கண்டு திரும்புவார் நிலையில் எதுபதிவாகிக் கிடக்கும்? பூச்சாலும் பேச்சாலும் புண்ணை நீக்கிப் பொலிவாக்கி விட முடியாது! அங்கே மட்டுமன்றி எங்கெங்குள்ள சன்மார்க்க நிலையங்களிலும் வள்ளலார் கொள்கை மட்டுமே கோலோச்ச வேண்டும்! கொலுவிருக்கையாக்கிக் கூடிக் கலைதல் கொள்கைப் பேறு ஆகிவிடாது! சாதி சமயம் சடங்கு அற்ற அருள்விளக்கப் பொதுநிலைக் கழகமாக வள்ளலார் பெயரிய நிலையங்கள் திகழுமாக! அத்தகைய நிலையங்களே ஆன்மநேய ஒப்புரவு நிலையங்களாய் உலகை உய்விக்கும் நிலையங்கள்.