இளங்குமரனார் தமிழ்வளம் 9 திருக்குறள் கட்டுரைகள் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 9 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12+ 220 = 232 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங் களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடு கிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் திருக்குறள் கட்டுரைகள் 1. இன்பம் வேண்டுமா? 3 2. எது அமிழ்து? 7 3. ஐந்து யானைகள் 11 4. பழிவழியைப் பாராதே! 16 5. இனிய சோலை 20 6. உண்டா? இல்லையா? 25 7. யாருக்கு இன்பம்? 29 8. கதவு இல்லாத வீடு 34 9. பார்க்க வாடும் பனிப்பூ 39 10. இரும்பும் கரும்பும் 43 11. இழிவும் உயர்வும் 48 12. குருட்டு நீதிபதி 54 13. அடக்கு! அடங்கு! 60 14. கல்லார் மிக நல்லர் 65 15. குடிகேடன் 70 16. அழியும் உலகில் அழியாப்புகழ் 75 17. பொறுக்க முடியாதா? 82 18. பூனையும் புலியும் 87 19. மக்கட் பதடி 92 20. தீயும் தீமையும் 98 21. மருந்து மரம் 104 22. எது ஈகை? 108 23. சிறியர்க்கு அரியதும் பெரியர்க்கு எளியதும் 111 24. அருட் செல்வர் 115 25. படைகொண்டார் நெஞ்சு 119 26. புகழ்மிக்க தவம் 124 27. எண்ணமும் செயலும் 129 28. வழி நடையும் வாழ்க்கை நடையும் 135 29. காவற் கடன் 140 30. துன்புறுத்தாத் துறவு 146 31. ஒன்றே ஒன்று 153 32. எது வியப்பு? 161 33. ஆசை அறுமின்கள் 168 34. கணையும் யாழும் 177 35. நோயெல்லாம் நோய் செய்தவருக்கே 182 36. வகுத்தான் வகுத்த வகை 190 37. உலகு புகழ் உயர்நூல் 199 திருக்குறள் கட்டுரைகள் 1. இன்பம் வேண்டுமா? குழந்தாய்! உனக்கு என்ன வேண்டும்? என்று பெற்றோர்கள் கேட்கின்றனர்; பெரியவர்கள் கேட்கின்றனர். குழந்தை விரும்புபவற்றைக் கேட்கின்றது. அவ்வாறு கேட்பவற்றிலே குழந்தையின் தன்னலமும் புலப்படும்; பொது நலமும் புலப்படும்; குறுகிய உள்ளமும் புலப்படும்; விரிந்த உள்ளமும் புலப்படும். எப்படியானாலும் தனக்கு. விருப்பானவற்றையே குழந்தை கேட்கும். வெறுப்பானவற்றைக் கேட்காததுடன் கிடைத்தாலும் உதறியடிக்கும். விம்மி விம்மி யழுது, பாலைப் பெற்றுப் பருகும் குழந்தை, மருந்தைக் கண்டதும் முகம் வீங்க அழுவது ஏன்? குடிக்க வற்புறுத்தினால் என்ன ஓட்டம் ஓடுகின்றது; இழுத்துப் பிடித்தால் என்ன உதை உதைக்கிறது; அழுகிறது; தரையில் விழுந்து புரள்கிறது; பிடித்துப் புகட்டத் தொடங்கினாலும் வாயை இறுக மூடி, பல்லைக் கடித்து, படாதப்பாடு படுத்துகிறது! இவ்வளவும் ஏன்? விருப்பு வெறுப்பு என்னும் உணர்ச்சிகளின் விளைவேயாம். தம்பி! பந்து விளையாடு என்று கட்டளை இடும் பொழுது ஏற்படும் இன்பம், தம்பி! பலசரக்கு வாங்கி வா என்று வேண்டும் பொழுது இருப்பது இல்லையே! ஏன்? விளையாட்டில் உள்ள விருப்பும் வேலையில் உள்ள வெறுப்பு மேயாம். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களிடம் மட்டும்தான் இவ்விருப்பு வெறுப்பு உண்டா? இல்லை; வளர்ந் தவர்களிடமும் உண்டு; முதியவர்களிடமும் உண்டு. பருவத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு வழிகளில் விருப்பு வெறுப்பு ஏற்படும். சிறுவர் விருப்பு வெறுப்புகளுக்கும் பெரியர் விருப்பு வெறுப்பு களுக்கும் உள்ள வேற்றுமை இவ்வளவு தான்! பெரியவர்கள், தம் வாழ்வை விரும்புகிறார்கள்; வறுமையை வெறுக்கிறார்கள்; நண்பர்களைக் காண விரும்புகிறார்கள்; பகைவர்களைப் பார்க்க வெறுக்கிறார்கள்; அன்பர்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்; அன்பிலார் முன்னேற்றத்தை வெறுக்கிறார்கள். தம் இனத்தினர், கொள்கையினர், நிறத்தினர், கட்சியினர் சமயத்தினர் ஆகியோரை விரும்புகின்றனர். இவ் விருப்பை மற்றவர்களிடம் குறைக்கின்றனர்; வெறுக்கத் தொடங்கு கின்றனர்; வெறுப்பிலேயே நிலைக்கவும் செய்கின்றனர். பெறுதற்கரிதாம் மானிடப் பிறவி பெற்றதன் பயன் என்ன? விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஆறாம்அறிவாம் பகுத்தறிவைப் பெற்றதன் பயன் என்ன? ஆன்றோர்களும், சான்றோர்களும் அருளிய நூல்களைக் கற்றதன் பயன் என்ன? தனித்தனி பெற்ற பட்டறிவின் பயன் என்ன? எந்த ஒன்றாலும் பயனில்லை என்றால் மாந்தர் வாழ்வுக்கு என உள்ள சிறப்புத் தான் என்ன? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்று சொல்லுகிறோம். இப்பழமொழியைக் காலமெல்லாம் பாராட்டு கிறோம்; ஐந்தில் வளைய வேண்டும் என்பதை வற்புறுத்த எழுந்த பழமொழியே அன்றி, அதற்குப் பின் வளையவே வளையாது என்பதை உறுதிகூற எழுந்த பழமொழி அன்று. ஐந்தில்வராத பண்பாடு, அறிவு, திறமை ஐம்பதிலோ அதற்கு முன்னோ பின்னோ வரட்டுமே! வந்தால் நன்மை தானே. ஐந்திலே ஏற்படும் விருப்பு வெறுப்பு நிலைமைகள் ஐம்பதிலுமா அழுத்தமாக நிற்க வேண்டும்? விருப்பு வெறுப்பு எப்படி ஏற்படுகிறது? நம் முன்னோர் செல்லும் வழி; நம் அன்பர்கள் போகும் வழி; நமது மாற்றாரும் பகைவரும் நடக்கும் வழி; அவர்களைப் பற்றிப் பிடித்துப் கொண்டு செல்லும் நம் வழி ஆக எல்லாமும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. ஒன்றைப் பார்த்து ஒன்று செய்யப்படுகின்றது. பிறகு ஒன்று போல நடக்காதா? ஒருவன் பண்பைத் தெரிய வேண்டுமானால் அவன் பழகும் நண்பர்களின் பண்பைக் கொண்டே கண்டு விடலாம் என்பர்; நான் சொல்வேன்:- ஒருவனது பண்பை அவன் நண்பனைக் கொண்டு மட்டுந் தான் காணமுடியும் என்பது இல்லை; அவன் படிக்கும் நூலைக்கொண்டு காணலாம்; அவன் உலாவச்சென்று வரும் இடத்தைக் கொண்டு காணலாம்; அவன் பார்க்கும் படங்களைக் கொண்டு காணலாம்; அவன் மாட்டி வைத் திருக்கும் படங்களைக் கொண்டு காணலாம்; உண்ணும் உணவு, உடுக்கும் உடை இவற்றைக் கொண்டும் காணலாம்; இன்னும் எவ்வெவற்றையோ கொண்டும் அறியலாம். ஒரு கதை சொல்வது உண்டு: ஒரு கிளிக்கு இரு குஞ்சுகள் இருந்தன; ஒன்று ஒரு துறவியார் மடத்திலே வாழ்ந்து வந்தது; மற்றொன்று புலால் விற்கும் கடை யொன்றில் வளர்ந்து வந்தது. துறவியின் வளர்ப்புக் கிளி எவர் வந்தாலும் அடிகாள் வருக! அமர்க! நீர் பருகுக! களைப்பு ஆறுக என்னும் மொழிகளைக் கூறி இன்புறுத்திற்று. புலவுக் கடைக் கிளியோ எப்பொழுதும் வெட்டு; குத்து; ஆட்டுக்கறி ஆறணா; கோழிக்கறி நாலணா என்று கத்திக் கொண்டு இருந்தது. காரணம் என்ன? ஒரே தாயின் இரட்டைக் குஞ்சுகள்; இயல்பில் ஏன் இவ்வேற்றுமை? சேர்ந்த இனத்தைப் பொறுத்தது பண்பாடு என்பது தெளிவாக வில்லையா? அதனால்தான் சான்றோர்கள் நல்லாரைக் காண்பது நன்று; நல்லார் சொல் கேட்பது நன்று; நல்லார் குணங்கள் உரைப்பது நன்று; நல்லாரோடு இணங்கி இருப்பது நன்று என்றனர். அன்றியும், தீயாரைக் காண்பது தீது; தீயார் சொல் கேட்பது தீது; தீயார் குணங்கள் உரைப்பது தீது; தீயாரோடு இணங்கி இருப்பது தீது என்றனர்! ஏன்? ஈக்கு விடம் தலையில் உண்டு; கொடிய தேளுக்கு விடம் கொடுக்கில் உண்டு; பாம்புக்கு விடம் பல்லில் உண்டு; தீயவருக்கோ உடம்பில் ஒவ்வோர் அணுவிலும் விடம் உண்டு. அதனால்? கொம்புள்ளவற்றுக்கு ஐந்து முழம் விலகுக; குதிரைக்குப் பத்து முழம் விலகுக; யானைக்கு ஆயிரம் முழம் விலகுக; தீயவர்க்கு மட்டும் கண்ணில் அகப்படாத தொலைவு விலகுக என்றனர். இந்நிலைமையில் இன்ப துன்பம் ஆக்கும் விருப்பு வெறுப்பு அகல யாரைச் சேர்வது? துலைக்கோல் தட்டு உள்ளது. பொருள் வைக்கவும் எடுக்கவும் தாழ்கிறது உயர்கிறது. ஏறி ஏறி இறங்குகிறது. இப்படித் தான் மனிதனும் இன்ப துன்பங்கள் அடைந்து மேலும் கீழும் ஏறி இறங்கித் துன்புறுகின்றான். துலைக்கோல் தட்டில் எப்பொருளும் இல்லாவிடில் ஏறவும் செய்யாது; இறங்கவும் செய்யாது; சமனிலையில் நின்றுவிடும். இந்நிலைமையை மனிதன் அடைந்து விட்டானோ இன்பமில்லை துன்பமில்லை! இதனைப்பெற வழியென்ன? இதனை இயல்பாகக் கொண்டிருக்கும் இறைவனை அடைக்கலம் ஆதல் வேண்டும் என்பது ஆன்றோர் நெறி. இறப்பும் பிறப்பும், இன்பமும் துன்பமும், வேண்டுதல் வேண்டாமையும் இல்லாதவன் யாவன்? அவனே இறைவன். அவ்விறைவனைப் பற்றுதலே துன்பமில்லா திருக்க வழி. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது வள்ளுவர் வாய்மொழி!  2. எது அமிழ்து? துள்ளியோடும் இயல்புடையது மான். அதன் புள்ளிகளின் அழகு பார்ப்பவர்களின் மனத்தை ஒன்றச் செய்யும்; நீண்ட கண்கள் ஓவியர்க்கு விருந்தாம்; அதன் மருண்ட பார்வை கவிஞர்க்குக் கழி பேருவகையாம்! கல்லிலும் குழைந்து விளையாடும் அதன் மெல்லிய சாயல்! புல்லுணவன்றிப் புலாலுணவு கொள்ளா மான் கொடுங்கானில் :அஞ்சி அஞ்சி நடுங்கி வாழும்; ஆணும் பெண்ணும் குட்டியும் கூடி இன்புற விளையாடும் விளையாட்டின் இடையே நொடி நொடி தோறும் அச்சமும் அவலமும் பின்னிப் பிணையும். அருவியின் முழக்கில் அயர்ந்து அதன் சூழலிலே நின்று திளைக்கும் மான், புலியின் உறுமலையும் பாய்ச்சலையும் மறந்து விடுவது இல்லை! இத்தகைய மான் ஒன்று தன்னைக் கொல்லும் விலங்கின் முன் அச்சமற்று நிற்கின்றது என்றால் நிகழக் கூடியதா? பகை விலங்கின் காற்றடித்தாலே பதைத்தோடும் மான் பக்கத்தே நிற்கின்றது என்றால் நம்பக் கூடியதா? நம்பக் கூடாததுதான்! இருந்தாலும், நம்ப முடியாததும் உலகில் நடப்பது உண்டு அன்றோ! செந்நாய் கொடிய விலங்கு; அதனை மான், கண்ணால் பார்க்க வேண்டாம்; காதால் அதன் குரலைக் கேட்கவும் வேண்டாம். அதன் மணம் அடித்தாலே போதும்! துள்ளி ஓடி மறையும்! ஏன்? மானை விடாது துரத்திச் சென்று மாட்டிக் கொல்வதில் வல்லது செந்நாய்! ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குப் பேரின்பம் அல்லவா! கலைந்து ஓடும் மானைக் கண்டால் குலை பதறத் தாக்காமல் விடுமா செந்நாய்? இச் செந்நாயின் நாக்கு நீளமானது; விரைந்து ஓடி வியர்த்து நின்றால் நீர் ஒழுக்கிச் சொட்டும்; அந்நீரைப் பருகும் ஆவலால் நிற்கிறது மான் - மெல்லிய பெண் மான். ஏன்? வேறெங்கும் நீரில்லை; ஓடித் தேடிப் பார்த்தும் ஓரிடத்தும் நீர் கிடைக்கவில்லை; மழை பெய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. வான் வறளத் தானும் வறள்கிறது நிலம்! ஈரம் உலர உலர எரிச்சல் மிகப் பெறுகின்றது தரை! ஊன்ற முடியாக் கொடுமை மான் கால்களுக்கு; தாங்க முடியா வெம்மை முதுகுக்கு! இதயத்தில் ஈரம் இருக்கிறது; நாவில் ஈரம் சிறிதும் இல்லை! என்ன செய்யும் மான்? அஞ்சி அஞ்சித் திரிந்த நிலைமை அகன்றது; ஆற்றல் சிறிது சிறிதாக வளர்ந்தது; நீரின் கொடிய வேட்கை துணிவு ஊட்டியது; தன் உயிரைக் காக்க எண்ணிய எண்ணம் உயிரைப் போக்கத் திரியும் செந்நாயையும் பொருட்டாக எண்ணாத நிலைக்குத் தள்ளியது. நாயின் நாவினின்றொழுகும் நீரை நக்கிக் குடித்தேனும் ஈரப்பசை உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறது அப்படியே செந்நாய் வடிக்கும் நீரை நக்குகிறது. அந்நீர் குடிக்கத் தக்கதா? மான் குடித்துப் பழக்கம் பெற்றதா? விளைவு என்ன? மானுக்கு நீர் விக்குகிறது! இக்காட்சி கற்பனையானது தான். வெம்மைக் கொடுமையை விளக்கும் கற்பனை இது. கலிங்கத்துப் பரணி என்னும் கலை மணம் கமழும் நூலில் இக்கற்பனை இடம் பெற்றுள்ளது. மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை என்பது மெய்ம் மொழி. என்ன இல்லை? நீர் இல்லை; நீரின் விளைவால் உண்டாகும் உணவு இல்லை; விளைவு தரும் புல்லும் பூண்டும், செடியும், கொடியும், பயிரும் பயன் மரமும் சோலையும் காடும் இல்லை. இதனை உண்டும் தின்றும் உயிர் வாழும் புழுவும் பூச்சியும், பறவையும் விலங்கும் மாந்தரும் பிறவும் இல்லை! என்ன இருக்கும்? கொடிய பாறையும், பொடிந்த பூழ்தியும், வறண்ட பாலையும், வாய்த்த வெடிப்பும், கரிந்த காடும் எரிந்த எலும்பும் காணப் பெறும்! மழையில்லாவிடின் என்ன இல்லை? என்பதற்குப் பதிலாக என்ன உண்டு? என்று கேட்டால் போதும்! விடை சரியாகி விடும். உலக வாழ்வுக்குக் காரணமாக இருப்பவற்றுள் எல்லாம் காரணமாக இருப்பது மழையே. ஆதலின் மழையே அமிழ்து! கடவுளின் அருட் பெருக்கு! உயிர்களின் வித்து! ஒழுக்கத்தின் வடிவு! ஆதலின் கடவுளை வாழ்த்தும் மாந்தன் கடவுள் அருளை வெளிப் படையாகக் காட்டி நிற்கும் வானின் சிறப்பை உணர்தல் வேண்டும். ஆதலின் கடவுள் வாழ்த்தின் பின் வான்சிறப்புக் கூறினார் வள்ளுவர். அவர், மழையின் தனிப்பெருஞ் சிறப்பினை, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது என்று கூறியுள்ளார். வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அன்றி மண்ணில் பசிய நிறப் புல் முளைத் தலையும் காண முடியாது, என்பது இக்குறளின் பொருள். புல்லே முளைக்காது என்றால் பிறவற்றைக் காண முடியுமா? புல்லுக்கு விதை போடுவதோ, நீர் விடுவதோ களை யெடுப்பதோ, காவல் புரிவதோ, உரமிடுவதோ உழவன் செய்வது இல்லை. என்றாலும் தானே முளைத்துக் கிளைத்து வளமுற வாழும் வாய்ப்புப் பெற்றுள்ளது புல்; மழைமட்டும் வேண்டும் அவ்வளவே! புல்லுக்கு உற்றறியும் ஓர் அறிவுதான் உண்டு. அதாவது, வெட்டிப் போட்டால் வாடும்; நீர் விட்டால் வளரும்! இவ்வளவே அதன் உற்றறிவு! உற்றறிவுடைய - ஓரறிவுடைய - புல்லே தலை காட்டாத போது, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு, உடைய உயிர்கள் வாழ முடியுமா? ஆறறிவுடைய மக்கள் வாழ்வு நடைபெறுமா? ஆக அனைத்துக்கும் காரணமாக இருப்பது மழையே என்றால் அதன் சிறப்பை உணர்த்த வேறென்ன வேண்டும்? மழையில்லையேல் உயிர்கள் தோன்றா; மழை சிறிது காலம் பெய்யாது பொய்த்தால் என்ன நிகழும்? நாட்டில் ஒழுக்கம் என்பது துளியளவும் இராது. நீரொழுக்கம் விண்ணி லிருந்து கிடைக்காவிட்டால் நல்லொழுக்கம் மண்ணில் தலை காட்டவே செய்யாது. இதனால்தான், நாட்டை ஆள்வோர்களை அச்சுறுத்தக்கூடிய ஒன்று உண்டு; அது மழை வறண்டு போவதே என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். உயிர்களை உண்டாக்கி, வளர்த்து, ஒழுக்கமுடன் பேணி வரும் மழையின் சிறப்பை எப்படி உரைப்பது? மழையே அமிழ்து; அமிழ்தே மழை எனலாம். வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. வானத்திலிருந்து இவ்வுலகை மழை காத்து வருகின்ற காரணத்தால் அது அமிழ்தம் என்று உணரத்தக்கது ஆகும்.  3. ஐந்து யானைகள் முதிர்ந்து தளர்ந்த கிழவர் அவர்; முதுமையிலும் உணர்ச்சியாக நடந்தார்; அவர் போகும் தெருவின் ஒரு புறத்தில் நிலம் அதிர நடக்கும் யானை ஒன்று ஓட்டமும் நடையுமாக வருகின்றது. அதன் மணி கேட்பவர்கள் துடிக்கும் வண்ணம் ஒலிக்கின்றது. காரணம், யானை மதங் கொண்டுவிட்டது. உணர்ச்சியின் எல்லை கடந்துவிட்ட யானையின் நடைக்கு எல்லை இருக்குமா? பாகன் ஏவலை மீறி அழிவு வேலையில் இறங்கிவிட்டது. தெருவில் பார்த்தவர்கள் பதைத்தனர்; திண்டாடி ஓடினர்; வீட்டு வாயிலிலும் முற்றத்திலும் நின்ற பெண்களும் பிள்ளைகளும் ஒளிந்தனர்! கிழவரால் ஓடித் தப்ப முடியவில்லை. யானையின் கையினுள் சிக்கிக் கொண்டார்! வலிய யானையின் கையிலிருந்து மெலிந்த அக்கிழவர் விடுபடுவது எப்படி? எளிமையானதா? யானை கையில் இறுக்கிப் பற்றிக்கொண்டாலே போதும், மூச்சு இருக்காது கிழவருக்கு! காலின் கீழே அவரைப் போட்டு யானை மிதிக்குமானால்....? ஓடிவந்தான் அருளாளன் ஒருவன்; அருள் இருந்தால் போதுமா? ஆண்மையும் அவனிடம் இருந்தது! அவன் கிழவனை யானைக் கையிலிருந்து விடுவிக்க ஒரு நொடிப் பொழுது எண்ணினான்: அடுத்த நொடியிலே யானைக் கையினுள் தான் நுழைந்தான்; கிழவனை விடுவித்தான். கிழவன் தப்பினான்; அவன் தப்ப வழி? யானையின் கையை அழுத்தித் திணறவைத்துக் கொண்டே விரைந்து அதன் கையிலிருந்து விடுபட்டான்; கொம்பைப் பற்றிப் பிடித்து நெற்றி வழியே மேலே ஏறினான்; கருமலைமேல் எழுந்த கதிரவன் போல் காட்சி வழங்கினான்! அவ்வீரனைப் பாராட்டலாம் அல்லவா! உயிர்தந்த உரவோன் எனப்போற்றலாம் அல்லவா! அவ்வீரன் பெயரென்ன? கோவலன் என்பது அவன் பெயர்! சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியத் தலைவன் அவனே! யானையை அடக்குவது எளிய செயலா? மாட்டைப் பிடித்து நிறுத்த-மஞ்சு விரட்டிலே-என்ன பாடு படுகின்றனர். எத்தனைபேர் குடரைப் பிடுங்கிக் குருதி கொட்டச் செய்து விடுகிறது;-குற்றுயிராக்கி விடுகிறது;-கொன்று விடுகிறது! இத்தகைய நிலைமையில் கட்டுப்பாடற்றுக் காட்டிலே திரியும் யானையைப் பிடிப்பது எளிதாகுமா? பெரிய அளவில் குழி தோண்டுவர்; மரம் கிளைகளைப் போட்டுப் பரப்புவர். அதன்மேல் சருகு, இலை, தழை இவற்றைப் போட்டுக் குழி தெரியாதவாறு மூடுவர். யானைக்கு விருப்பான இலை தழைகளெல்லாம் குவிக்கப் பெற்றிருக்கும். அதனைக் கண்ட ஆவலில் யானை விரைந்து போகும்; பொய்க் குழிக்குள் யானை வீழும்; வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்! பின்னர் பட்டினி போட்டும், அச்சுறுத்தியும், விரும்பும் உணவு தந்தும் ஓரளவு கட்டுப்படுத்திப் பழகிய யானையைக் கொண்டு, அதனையும் வயப்படுத்துவர். அப்பப்பா! என்னபாடு யானையைப் பிடிக்கவும் பழக்கவும்? யானை கட்டுக்கு அடங்காத போது செய்த அழிவும் சரி; கட்டுக்கு அடங்கிய போது செய்யும் ஆக்க வேலைகளும் சரி-மிகமிக வியப்பானவையே! காட்டு மரங்களை யானை போல இழுத்துவர எவரால் முடியும்? எவ்விலங்கால் இயலும்? விலங்கு விளையாட்டு நடத்துவோர் அதனை எத்தனை வகைகளிலெல்லாம் பழக்கப் படுத்திவிடுகின்றார்! அந்தப் பெரிய உருவம் சிறிய முக்காலியில் உட்காருவது வியப்பு இல்லையா? கரைபுரண்டோடும் காட்டாற்றைத் தடுத்து அணை கட்டினால் எவ்வளவு அழிவுகள் அகல்கின்றன! பயன்கள் விளைகின்றன; காடுகள் கழனிகளாக மாறுவது கரைகளால் தானே! இவ்வாறு கரையும் கட்டுப்பாடும் யானைக்கும், ஆற்றுக்கும் மட்டும்தானா வேண்டும். மக்களுக்கு வேண்டாமா? யானையைக் கட்டுப்படுத்துகிறான் மனிதன்; ஆற்று வெள்ளத்தையும் அவன் கட்டுப்படுத்துகிறான். இன்னும் எவ்வெவற்றையோ கட்டுப்படுத்தித் தன் இச்சைப்படி ஆட வைக்கிறான்; அதுபோல், அவன் மனத்தை மட்டும் கட்டுப்படுத்த இயலாமல் திணறுகிறான்; கவலையில்லாமலும் திரிகிறான். உள்ளத்தைக் குரங்கு என்பவர்களும் உளர்; குதிரை என்பவர்களும் உளர். இதுபோல், உறுப்புக்களை யானை என்பவர்களும் உளர். ஐம்பொறிகளும் விரும்பியபடி யெல்லாம் அலைந்தால், காட்டு யானைகள் தாமே அவை! அவற்றை அடக்குவதுதான் மனிதன் என்பதற்குரிய அடையாளம். கோட்டையும் படையும் கொண்டு குவலயம் ஆளும் ஆற்றல் படைத்தவனுக்கும் அவன் உள்ளத்தை அடக்கி ஆள்வது அரிதாயுள்ளது. புறத்தே வந்து தாக்கும் பகைவர்களை யெல்லாம் புறமிட்டு ஓடத் தாக்கவல்ல வீரர்கள், உள்ளிருந்தே தம்மைக் கெடுக்கும் தீய எண்ணங்களாம் பகைவர்களை அழிப்பது அரிதாகின்றது. இவ்வாறானால் அது உண்மை வீரமா? அவர்களும் உண்மை வீரர்களா? உள்ளத்தை அடக்கி ஆள முடியாமை ஏன்? உள்ளம் ஓடி ஓடிப் போக விடுத்து, ஒருநாளில் எங்கும் போகக்கூடாது எனத் திடுமெனத் திட்டமிட்டால் முடியுமா? கோழி குப்பையைக் கிளறும்; அப் பழக்கத்தால் பளிங்கு பதித்த தரையிலும் கிளறும்; பழக்கத்தால் வந்தது இது. இதனால் தெரிவது என்ன? நல்லவற்றை நாம் நாள் தவறாமல் நினைத்தும் செய்தும் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்; உறங்கினாலும் விழித்தாலும் நம் கட்டளையையோ, முயற்சியையோ எதிர்பாராது ஓடுகின்ற மூச்சு போல, உறுப்புக்களும், அவற்றில் தலையாய உள்ளமும் ஒழுங்கான உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டுவிட வேண்டும். காந்தியடிகள் மூன்று பதுமைகள் வைத்திருந்தார். மூன்றும் குரங்குப் பதுமைகள், மூன்றும் மூவேறு தன்மையன; ஒன்று கைகளால் கண்ணை மூடியிருக்கும்; மற்றொன்று - வாயை மூடியிருக்கும்; இன்னொன்று காதை மூடியிருக்கும். ஏன் பார்க்க வேண்டியதைப் பார்க்கவும், பேசவேண்டியதைப் பேசவும், கேட்கவேண்டியதைக் கேட்கவும் வேண்டும். அடக்கமின்றிப் பார்க்கவும். பேசவும், கேட்கவும் கூடாதென்பதைக் காட்டுவதற் காகவே இவற்றை வைத்திருந்தார். காந்தியடிகள் எப்படி அடங்கி வாழ்ந்தவர்! இணை சொல்ல இயலுமா? குணமென்னும் குன்று ஏறி நின்ற அவரே, தம் கண்முன் இவற்றை வைத்துப் போற்றினார் என்றால் நாம் உள்ளத்தை அடக்க, எவ்வளவு உறுதிப்பாடு கொள்ள வேண்டும்? இதனை எண்ணித் தெளிவாக உணர்ந்த திருவள்ளுவப் பெருந்தகை உலகம் நலமெய்துமாறு கூறியுள்ளார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும் ஐந்து உறுப்புக்கள் என்று சொல்லுகிறார்கள்; அவை எளிய உறுப்புக்கள் இல்லை. வலிய யானை போன்றவை-கட்டுக்கு அடங்காது செல்லும் மதயானை போன்றவை. அவற்றை அடக்கி ஆண்டால் ஒழிய மனிதன் நன்மை அடைய முடியாது. இவ்யானைகளை அடக்க வழியென்ன? யானையை அடக்கவதற்குப் பல கருவிகள் உள. குத்துத்தடி, கவைமுட்கருவி, தோட்டி-இப்படிப் பல உள. குத்துத் தடியும், கவைமுட்கருவியும் யானையைப் புண்ணாக்கி வலியினால் ஓடி இளைக்கச் செய்து அடக்குவன. தோட்டியோ, புண் ஆக்காமலும், மேலே போகவிடாமலும் நிலைகுலையச் செய்து நிறுத்துவது; உறுப்புக்களாகிய கொடிய யானைகளை ஒருவன் அடக்க வேண்டுமானால் அவனுக்குச் சரியான தோட்டிதான் வேண்டும். (தோட்டி வளைந்திருக்கும் கருவி; தோட்டி-தொரட்டி என வழங்குகிறது. அங்குசம் என்பர்.) அத்தோட்டி யாது? போன வழிகளிலெல்லாம் போக விடாதது அறிவு; தீயவற்றிலிருந்து விலக்கித் தடுத்து நிறுத்துவது அறிவு; நல் வழியில் செலுத்துவதும் அறிவு; ஆதலால் அறிவினும் உயர்ந்த தோட்டி இல்லவே இல்லை. அவ்வறிவுத் தோட்டி கொண்டே அடக்கல் வேண்டும். அப்படி அடக்கினால் என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? நினைத்த அனைத்தும் கிடைக்கும்! இவ்வுலக நன்மைகளும் மேலுலக நன்மைகளும் எளிதில் எய்தும். நல்ல வித்து ஒன்று உள்ளது. அதை வாய்ப்பு மிக்க நல்ல நிலத்திலே உரிய பருவத்திலே போட்டால் முளைக்காதா? நன்றாக முளைக்குமல்லவா! அறிவு என்னும் தோட்டியால் ஐம்புலன்களை அடக்குபவன், மேலுலகமாம் நன்னிலத்தில் முளைக்கத்தக்க விதையாவான். இவ்வளவு கருத்துக்களையும் எவ்வளவு சுருக்கமாகக் கூறியுள்ளார் வள்ளுவர்! உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 4. பழிவழியைப் பாராதே! எல்லாரும் இன்பமாக வாழ்வதைக் காண்பதே எனக்கு இன்பம் என்று தாயுமானவர் உரைக்கிறார். இரந்து வந்தவனுக்கு ஈந்து, அவன் முகத்தில் அரும்பும் இன்பத்தே காண்பதே இன்பம் என்று மொழிகிறார் பொய்யில் புலவர். துன்புறுத்தும் ஆசைகளை ஒழிப்பதே இன்பம் என்று இயம்புகிறார் புத்தர் பெருமான். அறவழியால் பொருள் தேடி, அப்பொருளால் அடைவதே இன்பம் எனச் சான்றோர் பலர் சாற்றுகின்றனர். இவர்களைப்போல இவ்வுலகிலுள்ள மாந்தர்கள் அனைவரும் எண்ணுகின்றனரா? புகை குடிப்பதிலே, கள்ளருந்துவதிலே, புல்லியர்களுடன் தொடர்பு கொள்வதிலே, பொய் வஞ்ச வழிகளில் போவதிலே, அடுத்துக் கெடுப்பதிலே, அயலாரைத் தூற்றித் திரிவதிலே, இன்பங் காண்பவர்கள் எத்தனைப் பேர்? இவர்கள், இன்பம் என இவற்றைக் காண்பானேன்? பொய்யின்பத்தை-போலியின்பத்தை-மெய்யின்பமாகக் காணுகின்றனர். போலி இன்பந் தந்த அவை மறுநொடியிலேயே துன்பம் விளைத்தலைக் காண்கின்றனர். அத்துன்பத்தைப் போக்குவதற்காக மேலும் மேலும் அப்போலி இன்பச் சேற்றிலேயே ஆழுகின்றனர்; அமிழ்ந்தும் விடுகின்றனர். பிறருக்கும், சேற்று வழியைக் காட்டும் கைகாட்டி மரமாகின்றனர். புகை குடிக்கும் ஒருவன், புகையை இழுத்து விடுவதிலே, அப்புகை காற்றில் கலந்து எழில் நடனம் ஆடிச் செல்வதில், உதட்டை வெதுப்பிக் குளிரைப் போக்குவதில், சிறுசிறு இன்பங் காணுகிறான். அதனால், பொருட் செலவை அவன் பொருட்டாக எண்ணுவதில்லை; வாய் நாற்றத்தைப் பற்றிக் கருதுவது இல்லை; உதடுகள் கருத்துப் போவதையும் வெளிறிப் போவதையும் நினைப்பது இல்லை; அருகில் வருவோர், அடுத்து இருப்போர், அன்பு மனைவி, அருமைக் குழந்தை வெறுப்பதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இதயத்துள் நாள்தோறும் புகை ஏறிப் படிந்து படிந்து வெதுப்பி வெதுப்பி சயமாகவும், தகையாகவும் உருவாகி, ஊனை உருக்கி உள்ளத்தைக் கெடுத்து உயிருக்கு உலை வைப்பதை உன்னுவது இல்லை. இத்தனைக்கும் காரணம், போலி இன்பம் அவன் விரும்பும் பொருளாகப் போய்விட்டதே! கடும் உழைப்புக்கு ஆளானவனும் கொடுங்கவலைக்கு ஆளானவனும் அவற்றை மாற்றுதற்கு முதலாவதாகக் கள்ளை - மதுவகைகளை - அருந்துகிறான். மதியை மயக்கும் மது வகையால் அலுப்பும் கவலையும் அகலக் காணுகின்றான். அதுவே அமிழ்தாக அவனுக்கு ஆகின்றது. அதன் முதிர்ச்சியால் குடியன் ஆகின்றான். மேலும் முதிர முதிர குடிகெடுகின்றது. குழலையும் யாழையும் வெல்லும் மழலை மொழியும் குழந்தையையும், இன்ப துன்பங்களில் இணைந்து பங்கேற்று நிற்கும் இல்லாளையும், ஈன்றெடுத்து இன்புறப் பேணி நின்ற தாயையும், அரும் பாடுபட்டுப் பெருநலம் விளைத்து நின்ற தந்தையையும், அற்ற காலத்து நற்றுணையாம் சுற்றத்தினரையும் கண்போலமைந்த நண்பர்களையும், ஏசிப்பேச, அடித்து உதைக்க, ஏவுகின்றது மதுவகை! இதுவா இன்பம்? யாருக்குத் தான் இன்பம்? அருந்தியவனுக்கு இன்பமா? அடுத்திருந்தவருக்குத் தான் இன்பமா? இத்துணைத் துன்பங்கள் இணைந்திருந்தும் இஃதே இன்பம் எனக் குடியர்கள் கருதக் காரணமென்ன? இன்ப துன்பங்கள் அவரவர் மனநிலை, வளர்ந்த நெறி இவற்றைப் பொறுத்தன. பல்வேறுபட்ட மன நிலையும் வளர் நெறியும் உடைய உலகில் எப்படி ஒன்றுபட்ட இன்பநிலை காணமுடியும்? பெரியர் இன்ப நிலைக்களம் வேறு; சிறியர் இன்ப நிலைக் களம் வேறு; தாயன்பன் இன்ப நிலைக்களம் வேறு; பேயன்பன் இன்ப நிலைக்களம் வேறு; முயற்சியாளன் இன்ப நிலைக்களம் வேறு; சோம்பன் இன்ப நிலைக்களம் வேறு; அறிஞன் இன்ப நிலைக்களம் வேறு; அறிவிலி இன்ப நிலைக் களம் வேறு! பூ மணம் உடையதா? மீன் மணம் உடையதா? எது விரும்பும் மணம்? எது வெறுக்கும் மணம்? - நாற்றம்! ஒரு சிறுகதை; தவப்பெரியார் இராமகிருட்டிணர் உரைத்தது. மீன் விற்பவள் ஒருத்தி ஒரு நகருக்குச் சென்றாள். மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. தன் ஊருக்குத் திரும்ப அவளால் முடியவில்லை. நகரில் இருந்த பூக்கடை ஒன்றில் படுத்திருந்தாள். அவளுக்கு அங்கே இருந்த பூ மணத்தால் உறக்கம் பிடிக்கவில்லை. உறக்க மில்லாமையால் அவள் மிக அல்லல் அடைந்தாள். பின், தன் மீன் கூடை, துணி இவற்றை எடுத்துத் தன் தலைப்பக்கம் வைத்துக் கொண்டு அதன் மணத் திலே உறங்கினாள்! எப்படி மூக்கின் நறுமணப் பயிற்சி? நினைத்த உடனே நாறுவதுபோல் தெரிகிறது மீன் கூடை; நினைக்கும்போதே மணப்பதாகத் தெரிகிறது பூக் கூடை! ஆனால் அவளுக்கு ஏன் அப்படியாகிவிட்டது? ஒரு வண்டி; மலம் அள்ளி அதனைக் கொட்டுவதற்குச் செல்லும் வண்டி! முன்னால் அது போகிறது ; நாம் அருகில் நடக்கிறோம் ; நம்மால் நடக்க முடிகிறதா? குடரைப் பிடுங்கி எடுப்பது போல் இல்லையா? ஆனால் வண்டியில் அமர்ந்து வண்டி ஓட்டுவோர் மகிழ்சியாக வடையும் வாழைப்பழமும் தின்று கொண்டு ஓட்டுவதையும் காண்கிறோம்! அவருக்கு என்ன நாற்றம் அடிக்காதா? தொடக்கத்தில் நாற்றமாக இருந்திருக்கும்; நம்மைப் போலவே நாற்றத்தால் திணறியிருப்பார் ; பின்னர் பழக்கமாகி விட்டது ; நாற்றம் பற்றிய கவலை அவருக்கு இல்லை ! இப்படித் தான் தீய இன்பங்களில் ஈடுபட்டு அழுந்திவிட்டவர்களுக்குத் தீமை பொருட்டாகத் தெரிவதில்லை; மானக்கேடு, பொருட் கேடு, உடற்கேடு இவற்றை நினைவதே இல்லை. வெளியிடத்தில் இருப்பவனை விளக்குக்கொண்டு தேடிக் காணலாம்; அவனுக்கும் விளக்கொளியைக் காட்டலாம்! நீருள் மூழ்கியிருப்பவனை விளக்குக் கொண்டு எப்படித் தேடிக் காண்பது? அவனுக்கும் காட்டுவது? சரி, இன்பம் என்பதுதான் என்ன? அவரவர் மன நிலை, பழக்க நிலை, அறிவு நிலை போலெல்லாம் இன்ப நிலை இருக்குமானால் அது உண்மை இன்பம் ஆகுமா? வாழ நூல்செய்த வள்ளுவரிடம் சென்று ஐயா, இன்பம் எது? என்று வினவினால் கூறகின்றார் : அறத்தான் வருவதே இன்பம். ஐயா, அறமல்லா வழியாலும் அடையும் இன்பம் உண்டே என்றால், ஆமாம் ; அறத்தின் வழியில் வாராத இன்பம் இன்பம்போல் தோன்றும் ; ஆனால் இன்பம் தருவது இல்லை ; அதனைப் புறத்தே ஒதுக்கித்தள்ள வேண்டும் ; தள்ளாமல் எவனேனும் சிறிதளவு கொள்ள நினைவான் எனினும் தீராப் பழியைத் தந்தே தீரும். அப்பழிவழிப் பக்கம் பாராதே! என்று விடைதருகிறார். அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல.  5. இனிய சோலை சோலை ... இதனை நினைக்கும் பொழுதே எவ்வளவு இன்பம்! செடிகளும் மரங்களும் வரிசை வரிசையாக இருப்பதும், வகை வகையான வண்ணமலர்கள் வனப்புற அமைந்திருப்பதும், இளந்தென்றல் இனிதுறத் தாலாட்ட, பூவும் கொடியும் இலையும் தளிரும் அசைந்தாடுவதும், பண்ணோடிசைத்துத் தண்தேன் பருக வண்டுகள் திரிவதும் கண்டோர்க்குக் கழி பேருவகை செய்யும் என்பதில் ஐயமில்லை. சோலை அழகை நுகர்வதால் கண்ணுக்கு இன்பம்! ஆங்கு எழுப்பும் வண்டொலியும் பிறவொலிகளும் செவிக்கு இன்பம்! மலர்மணம் தென்றலோடு தவழ்ந்து வருவதை நுகரும்போது மூக்கிற்கு இன்பம்! மெய்யொடு தழுவி மீதூர்ந்து வரும் இளங் காற்றை அனுபவித்தலால் உடலுக்கு இன்பம்! நறுஞ்சுவைப் பழங்களை விருந்தென அருந்தலிலே நாவிற்கு இன்பம்! இப்படி ஐம்பொறிகளும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புற உதவுவது சோலையே! இத்தகைய சோலையின் வனப்பில் உள்ளம் இழவாதவர் உண்டோ? நிழல் அருமை வெயிலில் தெரியும் என்பர். வெறு நிழலே அரிய இன்பம் அளிப்பின் ஐம்புல இன்பமும் அளிக்கும் அழகுக் சோலை எதற்கு அருமைப்பாடு உடையதாம்! அதிலும், நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மணற் பரப்பில் ஒதுங்குவதற்கு ஓரிலை நிழலும், நாவை நனைப்பதற்கு ஒரு துளி நீரும் கிடைக்காத பாலைவெளி நடுவே. ஒரு நீரூற்றுப் பசுஞ்சோலை காணப்படுமாயின் அஃது எத்தகு இன்பம் பயக்கும்! இந்நிலைக்கு ஆட்பட்டு நின்றோர்க்கு அன்றி மற்றையோர்க்குக் கற்பனை செய்தும் காண்பதும் அரிதாம்! இப்பாலைவனப் பசுஞ்சோலை போலவே இவ்வுலகப் பெரும்பரப்பில் இல்வாழ்க்கை உள்ளது. வெதுப்பிற்கு நிழலும், தகைப்பிற்கு நீரும், பசிக்குச் சோறும், நோய்க்கு மருந்தும் தரும் இடமாக மட்டுமா இல்லம் இருக்கிறது? வருகை அறிந்து வரவேற்குமா சோலை? பசியை அறிந்து பரிவுடன் ஊட்டுமா சோலை? உள்ளம் மகிழ இன்னுரையாடுமா சோலை? இத்தனையும் இல்லாச் சோலையினும், இல்லறச் சோலை பல்வழிகளாலும் நல்லின்பம் பயக்கும் அல்லவா! கனிச் சோலைகளில் எல்லாம் கவின் சோலையாக, நற்பூஞ்சோலைகளில் எல்லாம் நறும் பூஞ்சோலையாக, தண்ணிழற் சோலைகளி லெல்லாம் தனிப் பெருஞ் சோலையாகத் திகழ்வது இல் வாழ்வேயாம். இவ்வில்வாழ்வின் தன்மை-பண்பு-என்ன? இல்வாழ்க்கை என்னும் தங்கத்தைக் கட்டளைக் கல்லில் எத்தனை எத்தனை முறைகளில் எவ்வெவ் வழிகளில் தேய்த்துப் பார்த்தாலும் அன்பு என்னும் குறையில்லா மாற்றையே காண வேண்டும். அன்பு வேறு இல்வாழ்வு வேறு அன்று; இரண்டும் ஒன்றேயாம். அன்பு இல்லா இல்லறம் எத்துணைச் சிறப்புடைய தாயினும் என்னபயன்? அன்பு இல்லா மாந்தர் எவ்வெவ் வழிகளால் பேரும் பெருக்கமும், சீரும் செல்வமும் பெற்றிருந்தும் என்ன பயன்? எல்லாம் வீணே! அன்பிலார் வாழ்வு உயிர் வாழ்வா? இல்லை! இல்லை! அவர் உடலகத்து உயிர் நின்றிருந்தாலும் அவ்வுடல் எலும்பும் தோலும் போர்த்துக்கட்டிய வெற்றுக்கூடு என்றே கருதப் பெறும். அக்கூட்டில் மூச்சு ஓடிக்கொண்டு இருந்தாலும், அம்மூச்சில் அன்பு உயிர்ப்பு இல்லாமையால், கொற்பட்டறைத் துருத்தி விடும் மூச்சுக்கு இணையாகவே இருக்கும்! இரண்டு புறாக்கள் பறந்து பறந்து அலுப்படைகின்றன. நிழல் தேடிப் பறக்கின்றன. மேலும் பறக்க முடியாமல் ஒரு மரக்கிளையில் இணையாய் அமர்கின்றன. மரக்கிளையிலோ ஓரிலையும் இல்லை! வெயிலும் தலையை உடைக்கிறது! வெயில் மிகுதியாலும் பறந்து இளைத்ததாலும் வியர்வையைத் தாங்க முடியவில்லை! காற்றும் சிறிதும் அசையவில்லை! என் செய்யும்? இரு புறாக்களுள் ஒன்று பெட்டை; மற்றொன்று ஆண்! பெண் புறாவால் வெப்பக் கொடுமையையும், அதன் விளைவாம் புழுக்கத்தையும், அதன் விளைவாம் வியர்வையையும் தாங்க முடியவில்லை! ஆண் புறாவுக்கு அன்பு இருக்கிறது. அன்பு இருந்தால் போதுமா? போதும்! அன்பு இருந்தால் போதும் என்றால் அன்பு என்ன நிழல் செய்யும் குடையா? காற்றளிக்கும் விசிறியா? இன்புறுத்தும் நன்னீரா ஆமாம்! இவை எல்லாமும் அன்புதான்; அன்பு தருவனதான்! ஆண்புறா பெண்புறாவை நெருங்கிநின்று கழுத்தோடு கழுத்தாக வளைந்து தழுவியது; தன்னிரு சிறகுகளையும் இன்னிழல் செய்யும் நன் பந்தலாக்கியது. ஆக்கியதுடன் மேலும் கீழும் பக்கமும் அசைத்து இன்காற்று எய்த விசிறியது. ஆஆ! அன்பு தந்த இன்பம் என்னே! ஆண் பறவைக்குப் பெண்பறவைமேல் அன்பு! கொடும் புலிக்கும் அதன் குட்டிமேல்அன்பு! யானைக்கும் அதன் கூட்டத் தின் மேல் அன்பு! இத்தகைய அன்பின் அளவுதான் மனிதனுக்கும் வேண்டுமா? இவ்வளவில்தான் அன்பு உண்டானால் மனிதனுக்கும் பறவைகளுக்கும் விலங்கு களுக்கும் உள்ள வேற்றுமை தான் என்ன! பெட்டை என்றும் குட்டி என்றும் இனம் என்றும் அன்பு காட்டும் அளவுடன் விளங்கும் பறவையும் நிற்கலாம்; குற்றம் இல்லை; ஏனெனில் அதற்குப் பகுத்தறிவும், அதன் விளைவாம் உள்ளொளியும் இல்லை! மனிதனுக்கும் இந்நிலை இருத்தல் கூடாது அல்லவா! அன்பு காட்டுதல் இல்வாழ்வின் பண்பு! முழுக்க முழுக்க அதுதான் பண்பு! ஆனால் அவ்வன்பு ஊரையும் உலகையும் ஒன்றாய் எண்ணி வளைத்து நிற்க வேண்டும். தொடக்க நிலை தன்குடும்பம், தன்பெண்டு, தன் சுற்றம் ஆகலாம்! ஆனால் இறுதி நிலை அல்லது முடிநிலை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பெருநிலைக்கு வளர்தல் வேண்டும். இவ்வாறு எல்லோரிடையும் அன்பு பெருகி வளராமைக்குக் காரணமென்ன? அன்பு தன் வீட்டொடும் தெருவொடுந் நிற்கக் காரணமென்ன? இனத்தொடும் நிறத்தொடும் அமையக் காரணமென்ன? அன்பின் முழுமையும் வெளிப்படா வண்ணம் உள்ளத்தே சில மாசுகள் மூடிக்கிடக்கின்றன. அம் மாசுகளை அகற்றினோர் அன்பு விரிகின்றது. அகற்றார் அன்பு, அளவில் சுருங்கி வட்ட மிடுகின்றது. உள்ளத்தை மூடிக்கிடக்கும் மாசுகள் யாவை? அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆய நான்குமே மாசுகள். அதாவது பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல் என்பவையே அவை. இவை குடியிருக்கும் உள்ளத்தில் தூய்மை உறையுமா? தொண்டு திகழுமா? உலகெல்லாம் ஒன்றாய் எண்ணும் தாயுள்ளம் தங்குமா? சில கிணறுகளைக் காண்கிறோம்; தூசியும், பாசியும் வழுக்கும் அமைந்துகிடக்கின்றன. அக்கிணற்றுப் பக்கங்கள் சரிந்தும், பாதைமூடியும், தேடுவார் இன்றி, எடுப்பார் இன்றிக் கிடக்கின்றன. எட்டித் தொலைவில் செல்வோர் மூக்கையும் உறுத்தும் அளவுக்கு நாற்றம் மிக்க கட்டுக்கிடையாகிக் கிடக் கின்றன. சில கிணறுகள் கீழே கிடக்கும் சிறு மணலையும் தெளிவாக ஒளிவிட்டுக் காட்டும் பளிக்கு நீர் உடையதாகிக் காணப்படுகின்றது. அயர்ச்சியுடன் வந்தோர்க்கு ஆரமுதாகி அருத்துகின்றது. அருந்தினோரது பாராட்டுதலுக்கு உரியதாகின்றது. சுருங்கக் கூறின், தான் தோன்றிய பயனை எய்துகின்றது. மாசுபடிந்த நீர்க்கிணறுபோல்வாரும் இல்வாழ்வு நடாத்துகின்றனர்; மணிநீரன்ன நீர்க்கிணறு போல் வாரும் இல்வாழ்வு நடாத்துகின்றனர். எவர் வார்வு பயன் வாழ்வு? எவர் வாழ்வு நல்வாழ்வு? அறவாழ்வு? உழுது விதைத்துப் பாடுபடும் உழவன், போட்ட முதலையும், உழைத்த உழைப்புக்கு ஊதியத்தையும் பயிர்விளைந்து பயன்தந்த பொழுதிலே எடுத்து மகிழ்கின்றான். இது நல்லுழவன் செல்லும் நெறி! அதுபோலவே அன்புப் பண்புடன் இல்லறம் நடாத்தும் ஒருவன் அறம் என்னும் பயனை அடைதல் வேண்டும். அறப்பயன் பெற்ற வாழ்வே வெற்றி வாழ்வு-பிறருக்கு எடுத்துக் காட்டாம் வாழ்வு! இதனை உலகோர் உணரவேண்டும். உணர்ந்து வாழ்வை இன்பப் பூங்கா ஆகவும், பயன்மிக்க பழச் சோலையாகவும் ஆக்கவேண்டும் என்று கருதினார் வள்ளுவர். அவர் எண்ணிய நல்லெண்ணம். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்னும் குறள் மணியாய் உருப்பெற்றுத் தன்னொளி பரப்பி நன்னலம் புரிகின்றது!  6. உண்டா? இல்லையா? மணலில் குடம் குடமாக நீரைச் சாய்க்கிறோம். நீர் நின்றபாடு இல்லை ; சற்று நேரத்துள் நீர் விட்டதற்கு அடையாளமும் இல்லாது போய்விடுகின்றது. கரிசல் மண் தரையில் ஒரு குடம் நீர் விட்டால் போதும் ; நிலம் எளிதில் நீரை உறிஞ்சுவது இல்லை; உறிஞ்சிய பின்னரும் ஈரப்பசை எளிதில் போவது இல்லை. மணல் நிலத்தில் நாள் தவறாமல் மழை பெய்தாலும் வறட்சி காணல் கண்கூடு. கரிசல் தரையில் உழுது விதைக்கும் போது ஒரு மழை பெய்தால் போதும் ; அதன் ஈரங்கொண்டே பயன் தருவது தெளிவு. ஓரிடத்தே நீர்ப்பசை நெடிது நிற்கவும், ஓரிடத்தே நீர்ப்பசை உடனுக்குடன் அற்றுப் போகவும் காரணம் என்ன? நீர் உறிஞ்சும் அணுக்களின் பெருக்க சுருக்கத் தன்மையே! இத்தகைய தன்மையுடைய வீடுகள் இல்லையா? நீர் நில்லா மணல் வீடுகளும் நாட்டில் உண்டு ; நீர் நிற்கும் கரிசல் மண் வீடுகளும் நாட்டில் உண்டு; வீடு கட்டப்பட்ட பொருளோ கட்டும் இடமோ பற்றியவை அல்ல மணல் கரிசல் என்பவை ! வீட்டில் வாழும் மக்களைப் பற்றியவையே! சிலர் வாழ்வு மணல் வாழ்வாக உளது ; சிலர் வாழ்வு கரிசல்மணல் வாழ்வாக உளது. மணல் அன்னவர்கள் எவ்வளவு வருவாய் வந்தாலும், வரவு அறியு முன்னரே இன்ன வழி என்று இல்லாமல் செலவிட்டு வறட்சிக்கு ஆட்படுகிறார்கள். ஐந்து பேர்கள் இருந்து கொண்டு திங்களுக்கு 1000 ரூபாய் வருவாய் வந்தாலும் அது கொண்டு குடித்தனம் நடத்த முடியாமல் 5, 10 நாட்கள் கடக்கு முன்னரே கைமாற்று கடன் விற்பனை என்று திரிகின்றார்கள். போகும் பொழுதும்-உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டு போகும் பொழுதும்-ஐம்பதினாயிரம் நூறாயிரம் என்று பெண், பிள்ளைகள் மேல் கடன் ஏற்றி வைத்து, இழுபறியோடு, ஏச்சுப்பேச்சோடு, வழக்கு வதைகளோடு போகின்றனர். திங்களுக்கு ரூ.100 கடன் பட்டான் என்றால், ஆண்டில் 1200க்குக் கடனாளியாகின்றான். அவன் 40 ஆண்டுகள் வாழ்ந்தால் ரூ.48000க்கும் கடன் ஏறுமல்லவா? இத்தகையவனைப் போய்த் தொலைய மாட்டானா என்றுகூட ஏங்குபவர்கள் இருக்கத்தானே செய்வர்! ஆனால், ரூ.1000 ஊதியம் பெறும் ஒருவனது வேலைக் காரனாக இருந்து, திங்களுக்கு ரூ.50 சம்பளம் பெறும் ஒருவன், தன் பெண்டுபிள்ளைகளின் செலவை ரூ. 30க்குள் முடித்துக் கொண்டு, திங்களுக்கு ரூ. 20 மீதம் வைத்து, ஆண்டில் ரூ. 240ம் அவன் பணியாற்றிய 30 ஆண்டுகளில் ரூ. 7200ம் திரட்டி, வீடும் நிலமும் வாங்கி, கையிருப்பும் காட்டிச் செல்கின்றான். ஏன்? நல்லுள்ளம் படைத்த பணியாளாக அவன் இருப்பான் என்றால் கடன் துயருக்கு ஆட்பட்டுக் கைக்காசு தருவோர் இல்லாமல், இறந்து கிடக்கும் மேலாளின் இறுதிச் செலவுக்குக்கூடத் தன் கையிலிருந்து தருவான்! இந்நிகழ்ச்சிகள் நடைமுறையில் இல்லாதவையா? இவற்றை எண்ணிப் பார்த்தால் என்ன புலனாகின்றது? வருவாய் எவ்வளவாக இருந்தாலும் கவலையில்லை. வருவாயினும் செலவினம் குறைதல் வேண்டும். வருவாயைக் கொண்டு மதிப்பிடத்தக்கது இல்லை வாழ்வு ! செலவைக் கொண்டு மதிப்பிடப் படுவதே வாழ்வு! வருவாய் குறைவாய் இருப்பினும் குற்றம் இல்லை; அவ் வருவாயினும் மிகுதியாக வெளியேறி விடாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்று அறவோர் அறிவுறுத்துவர். அவரே அளவிட்டு வாழாதவன் வாழ்வு, கரையற்ற குளத்தில் பெருகிய நீருக்கு இணை என்று உவமை காட்டுவர். வருவாய்க்கு ஏற்பச் செலவிடுதல் ஆணின் பொறுப்பா? பெண்ணின் பொறுப்பா? இல்லை-இல்லத் தலைவன் பொறுப்பா? தலைவி பொறுப்பா? இருவர் பொறுப்பும்தான். இருப்பினும், தலைவிக்கே மிகுதியான பொறுப்பு உண்டு. ஏனெனில் இல்லத்தை ஆள்பவள் யாவள்? அவளே இல்லாள்! ஏழு பால் மாடுகள் வைத்திருந்த ஒருத்தி, ஒரு பால் மாடு வைத்திருந்த ஒருத்தியிடம் பிரைமோர் கேட்டுப் போனாளாம்! எப்படி? இப்படி மாடி வீட்டு வாழ்வு உடையவர்களும், மண் குடிசையகத்துச் சென்று அரிசியும் உப்பும் பருப்பும் எண்ணெயும் கை மாற்று வாங்கியும், கடன் வாங்கியும் நாளும் பொழுதும் கழித்து வாழ்வது இல்லையா! வீட்டுக்கு வெளியே சென்று கடன் ஆற்றுபவன் கணவன்: வீட்டில் இருந்து செயலாற்றுபவள் மனைவி; பொருள் தேடி வருபவன் கணவன்; பொருந்திய வழிகளிலே செலவிடுபவள் மனைவி ! மழை தவறாமல் பெய்ததால் மட்டும் பயனுண்டா? தேக்கி வைக்கும் அணை வேண்டுமே ! திருப்பிவிடும் கால்வாய், வாய்க்கால், வயல் வேண்டுமே! கரையாகக் குடும்பத்திற்கு இருப்பவள் எவள்? அவளே இல்லாள்! இதனால்தான் பெண்ணிற்கு வேண்டிய பண்புகளைக் கூறவந்த பெரியோர்கள் கணவன் வருவாய்க்கு ஏற்பச் செல விட்டு வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள் என்றனர். அப்படி இல்லாதவள் வாழ்க்கைக்குப் பிணியாக தீராப்பிணியாக இருப்பவள் என்பதுதானே அவர்கள் கருத்து. முரிவாய் ஆன அடுப்பிலே, மூளிவாய் ஆன சட்டியிலே, உப்பின்றி வெந்த குப்பைக் கீரையைத் தின்று உயிர்வாழும் வீட்டிலே இருக்கும் அமைதியும் இன்பமும் பத்துவகைக் கறியுடனே பாங்காய்ச் சமைத்துண்ணும் வீட்டிலே நெய்யில் லாமையால் இருப்பது இல்லை. கட்டிய கந்தைத் துணியிலுள்ள அழுக்கினைப் போக்க நனைத்து அடித்தால் பஞ்சுபஞ்சாகப் பறக்கும் ஏழைகள் வீட்டிலே தவழும் அமைதி வாழ்வு. நூலாடைகள் பலவாக இருந்தும், பட்டாடை இல்லாக் குறை கருதிய வீடுகளில் இருப்பது இல்லை. கூழுக்குத் தாளமிடும் வீட்டிலே உள்ள பொறுப்புணர்ச்சி, பாலுக்குச் சீனியில்லை என்று ஏங்கும் வீட்டிலே இருப்பது இல்லை! ஏன்? இல்லாளின் பண்புடைமைக் கேற்ப அமைவதே குடும்ப அமைதியும் வாழ்வும்! ஆகலின் ஒருவன் எந்த நல்லபேறுகளைப் பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி நற்குண நற்செயல் உடைய மனையாளைப் பெறுதல் வேண்டும். அவ்வாறு ஒருவன் பெற்றானே ஆயின் அவனுக்கு இல்லாததென எதுவும் இல்லை; எல்லாமும் உண்டு. அவளிடம் நற்குண நற்செயல்கள் இல்லையேல் வேறு எவை எவை இருந்தும் அவற்றாலெல்லாம் எத்தகைய பயனும் இல்லை. எல்லாமும் இல்லை என்றே ஆகிவிடும். இதனைத் தெள்ளிதின் தெரிவிக்க விரும்பிய வள்ளுவப் பெருந்தகை, இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை என்றார். இதனினும் மேம்பட்ட உரை ஒன்று இல் வாழ்க்கைக்கு உண்டா?  7. யாருக்கு இன்பம்? வள்ளுவர் யார்? திருக்குறளை இயற்றியவர். அவர் தந்தையார் பெயர் என்ன? தெரியாது! அவர் தாயார் பெயர் என்ன? தெரியாது! அவர் பெற்றோர் உலகுக்கு என்ன நன்மை செய்துள்ளனர்? தெரியாது! ஆனால் வள்ளுவரைத் தந்தது போலான - மற்றொரு நன்மையைச் செய்திருக்க முடியாது. அத்தகைய பெருநலங் கனிந்த பேற்றை எவரும் பெற்றார் அல்லர்! வள்ளுவரால் அவர்தம் பெற்றோர்கள் பயன் பெற்றார்களா? என்ன பயன் பெற்றார்கள்? பயன் பெற்றிருக்க வேண்டும்; நல்ல மகனைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் என்னும் பேறு பெற்றிருக்க வேண்டும். ஒருமா மணியாய் ஓங்கும் திருமாமணியாம் திருக்குறள் தந்த பெரு மகனைத் தந்த பெரியோர்கள் என்னும் பெருமையைப் பெற்றிருக்க வேண்டும் - வள்ளுவர் பிறந்த சில நாட்களிலே அவர்கள் இறந்திருந்தால்கூட; வாட்டும் வறுமைக்கு ஆளாகி நொடிதோறும் செத்துத் செத்து வாழ்ந்திருந்தால்கூட; எண் எழுத்து இன்னது என அறியாராய் இருந்திருந்தால் கூட! திரு. வி. க. யாவர்? திருவாரூர் விருத்தாசலர் தந்த நன் மணியே திரு. வி. க! செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த துள்ளம் அவர் பிறக்கும் பேறு பெற்றது. திரு. வி. க. வினால் அவர் தந்தையார் பெற்ற இன்பம் என்ன? பயன் என்ன? பிள்ளைப் பருவக் குறுகுறு நடையைக் கண்டும், மழலை மொழியைக் கேட்டும் இன்புற்றார். படிப்பில் முதல்வராகவும், பண்பில் முதல்வராகவும் பத்தாம் வகுப்பு வரை பாராட்டுப் பெற்று வளர்வதை அறிந்து இன்புற்றார். பத்தாம் வகுப்பை முடிக்கும் முன்னரே இயற்கை எய்தினார். அவர், கலியாண சுந்தரரால் என்ன பயன் பெற்றிருக்கக் கூடும்! பயன் பெறவில்லை என்றால் கூட, அவர் பெற்ற பெருமைக்கு எல்லையுண்டோ? திரு.வி.க. போலும் ஒரு மைந்தன் பிறக்கக் கொடுத்துவைக்க வேண்டுமே என்று ஏங்கும் எத்தனை எத்தனையோ மெய்யன்பர்கள் இருக்கும் ஒன்றே விருத்தாசலர் பெற்ற பேறு ஆகலாம். ஒரு திரு.வி.க. பிறந்ததனால் உலகுக்கு என்ன கிடைத்தது? தமிழ் உரை நடை தகுதியுற்றது; தமிழ்க் காவிய இலக்கியம் புதுமை பொலிந்தது; தமிழ் ஆராய்ச்சி உலகம் தகவுடைய ஆய்வாளரைப் பெற்றது; தமிழ் நாட்டு மேடை மெல்லிய பூந்தென்றல் காற்றைப் பெற்றது; தொழிலாளர் தமக்கென முயலாத் தோழரைப் பெற்றனர்; பெண்டிர், கண்போல் தம்மைக் கருதி வளர்க்கும் பெருந்தகையைப் பெற்றனர்; உலகச் சமயங்கள் ஊன்றுகோல் பெற்றன; அரசியல் உலகம் அறநெறி யுற்றது. திரு. வி. க. வினால் பெருமை பெறாத நல்லியக்கங்கள், நற்கழகங்கள், நற்சிந்தனைகள்-அவர் கால எல்லைக் கோட்டுக்குள்-இல்லவே இல்லை. சுருங்கச் சொன்னால் தமிழ் மொழியும், தமிழ் இனமும், தமிழ் நாடும் தலைதூக்கி நடக்கத் தக்க தகவினைப் படைத்தார்; தென்னாட்டுக் காந்தியாக, இலக்கிய வாழ்வாக, தெய்வத் திருத் தொண்டராகத் திகழ்ந்தார்! திரு. வி. க. வினால் தந்தையார் பெற்ற நலமும், இன்பமும் பெரிதா? தரணி பெற்ற நலமும் இன்பமும் பெரிதா? ஆயிரத்தில் ஒரு கூறுகூட, தந்தையார் பெற்றது இல்லை! காந்தியார் பிறந்தார்; காபா காந்தியும் புத்திலிபாய் அம்மையும் பேறு பெற்றனர். வாய்மை போற்றும் மைந்தனைக் கண்டு பெற்றோர் இன்புற்றனர்; அரசியல் தலைமை நடாத்தும் அருஞ்செயல் கண்டு சுற்றமும் நட்பும் இன்புற்றன. ஆனால் அவர்களினும் மேம்பட்ட இன்பம் எய்தியவர் எவர்? இந்தியர்-ஏன்-உலகர்! காந்தியடிகள் வழிகாட்டுதலால் - கோடி கோடியாக முன் வந்த தேயத் தொண்டர்களுக்குத் திருந்திய வழிகாட்டி ஈர்த்துச் சென்றதால் - உரிமை எய்தினோம்; அடிமை நீங்கினோம்; மனிதராக வாழும் பேறு பெற்றோம்; இந்தியக் கண்டத்து வாழ்வாரும் மாந்தர்தாம்; உணர்வு உடையவர்தாம் என்று அடிமையாக்கி வைத்திருந்த அயலோரும் மதிக்கும் மாண்பு எய்தினோம். எல்லாவற்றினும் மேலாக உலக மன்றில் தலை நிமிர்ந்து நடக்கும் வாய்ப்புப் பெற்றோம், பட்டி தொட்டிகளில் வாழ்வோனது மூச்சும் பாராள்வோரை அசைக்கும் அளவுக்குப் பெருமையும், உரிமையும் பெற்றது. மறப்போர் வன்கொடுமை சேற்றில் மாறி மாறி நடந்து கொண்டிருந்த வெறியாளர்களுக்கும், அன்பு வழியால் துன்புறுத்தாக் கொள்கையால் உலகை வெல்லும் அறப்போர் நெறி இருப்பது புலனாயிற்று. அமைதி நாடுவோர் இதயத்தெல்லாம், அருள் நெஞ்சர் நினைவிலெல்லாம் அண்ணல் காந்தியார் உறைகின்றார். அவரால் பெற்றோர் பெற்ற இன்பம் மிகுதியா? சுற்றம் எய்திய பெருமை மிகுதியா? உலகம் பெற்ற பேறு பெரிதா? நீராவியாற்றலைக் கண்டு, நெறிப்படுத்தி எத்துணை எத்துணையோ நற்காரியங்களைச் சாதிக்கும் வழியைத் தர எடிசனாரால் முடிந்தது. நீராவி ஆற்றலால் இயங்கும் புகைவண்டியினைப் புவிக்குத் தந்து புதுநலங் கனிவித்த பெருந்தகைமை இஃச்டீவன்சனார்க்கு உண்டு. விண்ணேறிப் பறக்கும் பறவை போலப் பறந்து இளைப்பு களைப்பு இன்றி, உலக வலம் வருவதற்கு உதவியமை ரைட் உடன் பிறந்தார்க்கு உண்டு! இப்படி இப்படி எத்துணை எத்துணை ஆயிர மாயிரம் அறிவாளிகள் அருளாளர்கள் உலக முன்னேற்றத்திற்கு உழைத்துளர். இவர்களால் இவர் தம் பெற்றோர் தாம் இன்புற்றனரா? இவர் தம் வழி வழி வந்தோர் தாம் இன்புறு கின்றனரா? இன்புறுவரா? இன்று! அறிவுடையவர் அகிலப் பொதுச் சொத்து என்ற நன்னெறி கண்ட பெருமை நம் தமிழகத்திற்கு உண்டு என நெடுஞ்சிடைக் கொள்க. மக்கள் அறிவுடைமையால் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியினும் மாநிலம் அடையும் இன்பமே பெரிதாம்! இதனை அறநூல், தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. என அருளும். இத்தகைய அறிவுடைய மக்களாக வாழ விரும்பாதார் வாழ்வும் ஒரு வாழ்வாகுமோ? சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! சான்றோன் ஆகுதல் மைந்தர்க்குக் கடனே!  8. கதவு இல்லாத வீடு துளியும் வெளியேறாவண்ணம் நீரைத் தடுத்து நிறுத்தும் அணைகள் உண்டு. சிறிதும் வெளிப்போகா வண்ணம் சிக்கெனச் செறித்து வைக்கும் காற்றடைப்புகள் உண்டு. வெளிச்சம் ஊடுருவி வெளிப்படா வண்ணம் அமைந்த திண்சுவர்களும், அழுத்தத் திரைகளும் உண்டு. எக்சுக் கதிர்கள் (X RAY) ஊடுருவா வண்ணம் பூச்சமைந்த சுவர்கள் உண்டு. உள்ளிருக்கும் மணமும் நாற்றமும் சற்றும் புறம்போகா வண்ணம் மூடிவைக்கும் செப்புகள் உண்டு. சல்லிக் காசும் செலவிடாமல் பேயாகக் கட்டிக் காத்துப் பேரர்களுக்கும் பயன்படாமல் மண்ணில் புதைத்து, மண்ணுக்கு இரையாகி மாயும் பேர்வளிகளும் உண்டு. பந்தயக் குதிரைகளையும், மஞ்சுவிரட்டுக் காளைகளையும், மதயானையும் நகரவிடாமல் தடுத்து நிறுத்தும் உரனுடை யவர்களும் உண்டு. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் அடக்கிக் காக்க முடியாது; வெளிக்காட்டாமலும் இருக்க முடியாது. அந்த ஒன்று மட்டும் உள்ளத்தே அமைந்து-உண்மையாகவே-உயிராகவே அமைந்து-இருந்தால்!அந்த ஒன்று யாது? மலையும் ஆறும் காடும் நிலமும் அரணாகக் கொண்டு நாட்டைக் காப்பர். கோட்டை கட்டியும் அகழ் வெட்டியும் கோநகரைக் காப்பர். சுற்றுச் சுவர் எழுப்பியும் காவலாள் வைத்தும் பெரு மனைகளைக் காப்பர். கொல்வது போலும் வறுமைக்கு ஆளாகி நொடி தோறும் செத்துச் செத்துப் பிழைத்திருக்கும் ஏழையரும் கதவாலும் பூட்டாலும் வீட்டைக் காப்பர். காவல் மிகுதியைக் காட்டுவதற்கு அமைந்தவை தாமே இந்நாள் இருப்புப் பெட்டிகளும் நுண்வினைப் பூட்டுகளும் நிலவறைகளும்! காவல் மிக்க உலகத்திலே காவல் எதற்கும் கட்டுப்படாது நிற்கும் பொருள் உண்டா? உண்டு! அஃது எது? அதுவே அன்பு! சடையப்ப வள்ளல் பெருமனைக்கு நெடுங்கதவு உண்டு. அந்நெடுங் கதவினைப் பூட்டுவது இல்லை; ஏன்? பூட்ட வேண்டாத அளவுக்கு இரவும் பகலும் கொடை நடக்கும்! மற்றொன்று பொருள் போகி விடும் என்ற அச்சம் இல்லாமையால் பூட்டிக் காக்க வேண்டியது இல்லை. விரும்புபவை எவையோ அவையனைத்தையும் தடையாதுமின்றிக் தந்து அன்பால் தழுவி அனுப்பும் சடையன் வீட்டிலா களவு போகும்? சடையப்பர் உள்ளங்கவர் கள்வர் ஆதலால் பொருட் கள்வருக்கு வேலை யில்லை. அடையா நெடுங்கதவு அவர் மனைக்கு அடையாள மாயிற்று! வீட்டுக்குக் கதவு இருந்தால் போதுமா? கதவினால் என்ன பயன் தாழ் இல்லாவிட்டால்? தாழ்தான் கதவின் உயிர்ப்பு; கதவின் பயன்; கதவின் காவலாள்! சடையன் வீட்டில் கதவு உண்டு; கதவுக்கு தாழும் உண்டு; ஆனால் அடைப்பது மட்டும் இல்லை. அன்புறையும் உள்ள வீட்டிற்குக் கதவும் இல்லை தாழும் இல்லை! வாயில்கள் உண்டு! அவை தாம் கண்கள்! இமைகள் கதவுகள் ஆகாவா? ஆம் ஆம் இமைகள் கதவுகள் ஆகலாம்; மேலும் கீழும் அடைத்து மூடும் இரட்டைக் கதவுகள் தாம் அவை அக்கதவுகள் தூசி தும்புகளை உள்ளே புகாமல் காக்கும் கதவுகளே அன்றி, உள்ளே உள்ள அன்பினை வெளிக் காட்டாத இறுக்கக் கதவுகள் அல்ல! அன்புணர்வை நொடிப் பொழுதுகூட வெளிப்படுத்தத் தடையாகும் பிழைபட்ட கதவுகளும் அல்ல! இவ்வாறானால் இமைக் கதவுகளை வீட்டுக் கதவுகளுக்கு இணையாகக் கூற முடியுமா? என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே! அன்பர்பணி செய்யஎனை யாளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே! என அலமரும் தாயுமானார் அன்பு உறையுளுக்கு அடைக்குந் தாழ் உண்டோ? மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமுநான் சகித்திட மாட்டேன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வெதும்பியழும் வடலூர் வள்ளலார் அன்புக்கு அடைக்குந் தாழ் உண்டோ? ஒன்று இல்லை என்று கேட்டு வருவானது முகத்தைக் காணப் பொறுக்காது என் மனம் என ஏங்கும் வள்ளுவனார் அன்புக்கும் அடைக்குந்தாழ் உண்டோ? இல்லை! இல்லை! அடைக்குந் தாழ் இல்லையென எப்படி அறியலாம்? துன்புறும் உயிரைக் கண்டு, உயிர்த் துடிப்பைக் கண்டு, உள்ளந் துண்ணென நடுங்க, உரை குழற, மெய்ம்மயிர் சிலிர்க்க, கண்ணீர் விடுவார் உளரே! அவரே அன்பர்! அவர் அன்புடைமைக்கு அடையாளங்களே இவைகள்! வெளிப்படையாக விளக்கும் சான்றே கண்ணீர்! கண்ணீரே அன்பின் புலப்பாடு! கண்ணீரின் அகப்பாடே (உள் நிகழ்ச்சியே) அன்பு! இரண்டும் உருவும் நிழலும் போல்வன; மலரும் மணமும் போல்வன; மதியும் ஒளியும் போல்வன; தமிழும் இனிமையும் போல்வன! உலகம் நாடக மேடை; மக்கள் நடிகர்கள்; என்பர். இந் நடிப்பு உலகத்திலே வாழும் நடிகர்களில் மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் நடிப்பார் இருப்பர் அல்லரோ! இருப்பர்; இருத்தல் இயல்பே! வஞ்சகன், தனக்கு எழுந்த சினத்தை அடக்கிக் காத்து, பொறுமையாளனாய் அன்பனாய் நண்பனாய் அருளாளனாய் அறவோனாய்க் காட்டித் திரிந்து காலம் வரும்போது நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருந்த வஞ்சகத்தை நிறைவேற்றிக் கொள்கின்றான் அன்றோ! செல்வன் ஏழையென நடித்து எத்துணை ஏமாற்றம் புரிகிறான். இப்படி அன்பும் நடிப்பாக இருக்கலாமல்லவா! ஆம்! அன்பு இல்லாதவன் குறிப்பிட்ட வேளையில் அன்பனாக நடிக்கலாம்! நடிக்கவும் கூடும். ஆனால் அன்பு உடையான் அன்பு இல்லானாக நடிக்க இயலாது. இன்னல் அடையும் உயிரைக் கண்டு கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல் தாவிச் செல்லும் அன்பைத் தடுப்பது எப்படி? தடுத்து நடிப்பது எப்படி? அன்பியல்பை உணர எல்லோர்க்கும் இயலுமோ? அன்புடையவர்க்கே அன்பின் இயல்பு அறிதற்கு இயலும். பாம்பறியும் பாம்பின் கால் என்பது பழமொழி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும். (அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? இல்லை; அன்புடையார்க்கு அரும்பும் கண்ணீரே உள்ளே உள்ள அன்பைத் தெள்ளிதில் புலப்படுத்தும்.)  9. பார்க்க வாடும் பனிப்பூ நாம் வீட்டிலே இருப்பது எதற்காக? நம் வீடு இருப்பது எதற்காக? மனைவியொடும் மக்களொடும் வாழ்வது எதற்காக? இக்கேள்விகளைக் கேட்டால் பலரும் பலவாறு விடை யளிப்பர். அவரவர் மனநிலை போலெல்லாம் விடைநிலை இருக்கும்! பொருள் தேடுவது எதற்காக? தேடிய பொருளைச் சேர்த்துவைப்பது எதற்காக? சேர்த்த பொருளைப் போற்றிக் காப்பது எதற்காக? இக்கேள்விகளைக் கேட்டாலும் பலரிடமிருந்தும் பலவகை விடைகளை பெறக்கூடும். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் அருளாளர் களும் உலகில் உளர். என்பணி அரட்டை அடித்துத் திரிவதே என அலமரும் ஆட்களும் உளர். இவ்விரு திறத்தார் விடைகளும் எப்படி ஒருசீராய் இருக்கக் கூடும்? வீட்டில் இருப்பதும், நன்றாகச் செல்வம் தேடிக் காப்பதும் எனக்காக; என் மனைவிக்காக; என் மக்கட்காக; என் பேரருக்காக; என்பவர்கள் உலகில் மிகப்பலர். அவர்களைச் சின்னதோர் கடுகிலும் சிறுத்த இயல்பினர் எனக் கவிவாணர் இடித்து உரைப்பினும், அதுபற்றிக் கவலை எள்ளளவும் கொள்ளாராய் வாழ் நாளெல்லாம் பேயாய்ப் பாடுபட்டுத் திரிந்து. கோடி கோடியாகத் தேடியும் இறுதி மூச்சுவிடும் நேரத்தும் ஏற்பட்டதோர் அமைதியின்றி வெதும்பலொடு மடிகின்றனர். சிலரே, வீட்டில் இருந்து வாழ்வது எனக்காக அன்று; எக்களுக்காகவும் அன்று; பிறருக்காக என்கின்றனர். எங்கள் வீட்டில் உலையேற்றுவது எங்களுக்காக அன்று; விருந்தினர்களைப் போற்றுவதற்காக என்கின்றனர். நாங்கள் உண்பது எங்கள் உவகைக்காக அன்று; விருந்தினர் உவப் படைவதற்காக என்கின்றனர். ஒருவர் சொன்னார்:- எனக்கு ஒருவகை நாள் வரக்கூடாது. எவ்வகை நாள்? என்று கேட்டார் அடுத்தவர். பதில் உரைத்தார் அவர்: விருந்தாளி இல்லாமல் யானே தனித்து உண்ணக் கூடிய நாள். போர்ப் புண்படாத நாட்களெல்லாம் புல்லிய நாட்கள் என்றுரைக்கும் வீரனுக்கு இணையானவர் அல்லரோ இவ் விருந்து வேட்கையர்? விருந்தாளிகளை வரவேற்பதிலும், இனிய உரையாடுதலிலும், விருந்து செய்தலிலும் பேரின்பம் காணும் பெருநோக்கத்தை பண்டுதொட்டே வழி வழியாகப் பெற்று வளர்சிறப்பு அடைந்தது தமிழகம்! படையாமல் உண்ணாத தமிழ்நாடு என்ற பாராட்டும் அளவுக்குப் பண்பாட்டில் ஓங்குவது தமிழகம்! தமிழனின் தனிப் பண்புகள் இவையென விரல்விட்டு எண்ணினால் அவற்றுள் முன்னாக ஓடிவந்து நிற்பது விருந்தோம்பல் என்றால் மிகை யாகாது. விருந்தினரைப் பேணும் வாழ்வு விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்வு என்று பெரியயோர்களால் பேசப்படும். விருந்தினர்களைக் கண்டு அவர்களுக்கு உதவ முடியாமல், அவர்களுக்கு உதவாமல் இருக்க மனமும் இல்லாமல் வருந்தும் வறுமை வாழ்வு விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்வு என்று இகழப்படும். உண்டிக் கழுகு விருந்தோடு உண்டல் என்றும், வேளாளன் (உழவன்) என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்றும் உணவுச்சிறப்பும், உணவளிக்கும் உழவன் சிறப்பும் உயர்த்து உரைக்கப் படும். அறிந்துவரும் விருந்தினர்களும் இருப்பர்; அறியாது வரும் விருந்தினர்களும் இருப்பர்; என்றாலும் விருந்து என்பதற்குப் புதிது என்றும், விருந்தினர் என்பதற்குப் புதியர் என்றுமே பொருள். எத்துணை முறை வந்தாலும் சரி, பன்முறை பழகி வந்தாலும் சரி அவர்களையெல்லாம் புதியராக எண்ணிப் போற்ற வேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும் பியதே இச்சொற்கள் போலும்! ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கலாமே. விருந்தினர் வந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை! சிறுவர்களுக்குச் சுவையான சோறு, கறி, பாயசம், வடை கிடைக்கும் என்ற மகிழ்ச்சி! பெரியவர்களுக்கும் விருந்தாளியின் உவப்பையும் உறவையும் தேடிக்கொள்வதிலே மகிழ்ச்சி! கிழவர்கள் கிழவிகள் கூட, நல்ல பண்டங்கள் எல்லாம் கிடைக்கும், நாவுக்குச் சுவையானவையாகவே கிடைக்கும் என்ற ஆசையால் வீட்டுப் பொறுப்பு உடைய மகன் மகள் விருந்தினரைப் போக விட்டாலும் போகவிடாமல் வற்புறுத்தித் தடைபோடுவர். ஏன்? விருந்துச் சுவை தங்களுக்கும் உண்டு என்பதால் தானே! வந்த விருந்தினரைப் பேணுவதும், வர இருக்கும் விருந்தினரை எதிர்நோக்குவதும் இல் வாழ்வான் இயல்பு என்பதைத் தமிழர் போற்றினர். விருந்தாளிகளுக்குக் கதவு திறந்து வைத்திருப்பவனுக்கே மேலுலக வாயிற் கதவும் திறந்திருக்கும் என்று புலவர் பலர் பாடினர். அதைப்போற்றி வாழ்ந்த இல்லறத்தார் தங்களுக்கெனக் கட்டிய வீடுகளின் முற்பகுதியிலே திண்ணை போட்டிருப்பர்; திண்ணையில் விளக்கேற்றி வைப்பர். பொழுதாகி வந்த வழிப்போக்கர் - விருந்தினர் - வெளித்திண்ணையில் படுத்திருந்தாலும் இடைவேளையில் எழுந்த வீட்டுக்காரர், அவரை உண்ணச் செய்வது கடமை எனக் கருதினர். இன்றும் தங்கள் திண்ணையில் பட்டினியாகப் படுத்திருக்கும் ஒருவரைக் கண்டு வருந்தி இந்த வீட்டுத் திண்ணையில் பட்டினியாகக் கிடந்த பாவம் எங்களுக்கு வேண்டாம் ஐயா, ஒரு சத்திரம் மடம், சாவடியில் பசியாகக் கிடந்தால் கூடக் கவலை இல்லை; மனைவி மக்களோடு இருக்கும் வீட்டில் இப்படிப் படுக்கலாமா ஐயா! என்று கடிந்து கூறிச் சாப்பாடு போடுபவர்களும் பட்டி தொட்டிகளில் உள்ளவர் என்றால் பண்டு தொட்டு வந்த நம் பண்பாடே காரணமாம். உண்ண வேண்டுவோர் அனைவரும் வருக; உணவு ஆயத்தமாக உள்ளது என்பதை அறிவிப்பதற்காகச் சமையல் ஆனவுடன் வீடுதோறும் முரசு அடிப்பது முற்கால வழக்கமாம். அப்படி வந்த விருந்தினர்களை முறைசொல்லி அழைத்து, முதன்மை தந்து பேணுவார்களாம். சிறு வெதுப்பையும் தாங்காத மெல்லியது அனிச்சப்பூ. அப்பூவினும் மெல்லியர் விருந்தினர். வீட்டுக்காரர் சிறிது முகமாறிப் பார்த்தாலும் போதும்; தூரத்தே கண்டு தொலைதூரம் போகிவிடுவான் விருந்தாளி என்று நினைத்துப் போற்றுவார்களாம். இத் தகையவர்களிடம் வீட்டில் இருப்பது எதற்காக? பொருள் தேடுவது எதற்காக? என்றால் என்ன சொல்லுவர்? இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்பர்.  10. இரும்பும் கரும்பும் கற்கண்டு கையிலே இருக்க அதைத் தின்ன மாட்டாமல் கருங்கல்லைத் தேடி எடுத்து, வாயில் போட்டுப் பல்லை உடைத்துக் கொள்ளலாமா? கரும்பைக் கையிலே வைத்துக் கொண்டு அதனைத் தின்ன விரும்பாமல் எங்கோ தேடி அலைந்து இரும்பினை எடுத்துப் கடித்துப் பல்லைத் தவிடு பொடி ஆக்கலாமா? காய்ந்த பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்று இளைக்கலாமா? மல்லிகைப் பூவை மடியகத்து வைத்துக் கொண்டு புல்லிய எருக்கினை எடுத்துத் தொடுத்துச் சூடலாமா? கவிந்து நிற்கும் தோட்டத்துச் சந்தன மரநிழலை விடுத்துக் காட்டகத்தே நிற்கும் கற்றாழை நிழலை நச்சிச் செல்லலாமா? இவையனைத்தும் ஆகாதவை - வேண்டத் தகாதவை என்றால் இன்னும் சற்றே எண்ணிப் பார்க்கத் தான் வேண்டும். உயரிய தலைவர்; உரிமை மிக்க இல்லம்; வீட்டிலுள்ள ஒவ்வொருவர் விருப்புக்கும் தேவைக்கும் ஏற்ற வளங்கள்; வாய்ப்புக்கள். எத்தகைய குறைவும் இல்லை எவருக்கும் ; எந்த வகையிலும்! அடக்குவோர் இல்லை; அடங்கி நடக்க அவசியம் இல்லாமையால் அடங்குவோரும் இல்லை. உரிமை ஆட்சி செலுத்தும் இடத்தே அடங்குதலுக்கும் அடக்குதலுக்கும் வேலை இல்லை அல்லவா! நல்ல தலைவரது ஆட்சிக்கு உட்பட்ட அவ் வீட்டிலே பயன் பொருள்கள் உண்டு ; கண்ணைக் கவரும் கவின் பொருள்களும் உண்டு. வாழ்ந்தால் மட்டும் போதாது, கண்டோர் வியக்க வாழவேண்டும் என்பது அவர் கருத்து. அதுபோலவே உண்டால் மட்டும் போதாது, உரிய முறையால் உடலோம்பும் முறையால் பிறர் பின்பற்றும் முறையால் உண்ணவேண்டும் என்பது அவர் எண்ணம். அது போலவே பேசினால் மட்டும் போதாது, நயன்மிக்க பயன் சொற்களாகக், கேட்டோர், செவியினிக்க, உளம் உவக்க, உணர்வு எழும்பப் பேசவேண்டும் என்பது அவர் திட்டம். இத்தகைய எடுத்துக்காட்டான வீட்டிலே ஒருவன் வாழுகின்றான்; தேனருந்த மாட்டாமல் தெய்வத் தாமரை மலரைச் சிதைத்து அழித்து மீனருந்தும் நாரைபோல வாழுகின்றான். எப்படி? நாட்டிலே கிடைக்கும் நல்ல பழவகைகள் எல்லாம் வீட்டிலே இருக்க விருப்பம்போல் எடுத்துக் கொள்ளும் உரிமை இருக்க, ஊட்டுதற்கும் ஆள் இருக்க அவற்றை உண்ண மறுக்கிறான் என்றால் நாம் அவனைப் பற்றி என்ன நினைக்கலாம்? அவனே, தோப்புக்குச் சென்று மரத்தில் ஏறிப் பறித்து அதே கனியை உண்டால் என்ன நினைக்கலாம்? அவனே, நள்ளிருள் போதில் யாரும் அறியா நிலைமையில் அயலார் தோப்பிற்குச் சென்று அதே கனியைத் திருடித் தின்றால் என்ன நினைக்கலாம்? அவனே, மாரி இரவில் மயங்கு இருள் வேளையில், உச்சமாய் ஓங்கிய மரத்தில் ஏறி, திருட்டுத் தனமாய்க் காயைப் பறித்து - புளிக்கும் காயை - உவர்க்கும் காயை - பிஞ்சுக் காயை - கச்சல் காயை - பால் வழியும் காயை - பயந்து பயந்து தின் கின்றான் என்றால் என்ன நினைக்கலாம்? மீனருந்தும் நாரை என்று மட்டுமா நயமாகச் சொல்லி நிறுத்துவோம்! அவனைப் போலும் அறிவும் பண்பும் இல்லாதவன் உலகில் முன்னும் பிறந்ததும் இல்லை; பின்னும் பிறக்கப் போவதும் இல்லை என்போம். என்றாலும் நாம் மட்டும் கனியிருக்கக் காய் கவரும் சிறு புன் செயலை நாள் தவறாமல் வேளை தவறாமல் செய்யத் தவறுவது இல்லை. கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே விளக்கிருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே என்றெல்லாம் நாவுக்கரசரால் உணர முடிந்தது; அவரைப் போன்ற மெய்யுணர்வாளர்களாலும் உணர முடிந்தது. மற்றையோரெல்லாம் கனியிருக்கக் காய் திருடத் தவறுவது இல்லை. உலகம் பெருங் குடும்பம்; உலகக் குடும்பத்து உரிமைத் தலைவர் இறைவர்; நாம் அவர் தம் கால் வழியினர்! என்றாலும் அவர் தம் உரிமைப் பாட்டை உணர்ந்து பயன்படுத்தாமல் மனம் போனபடி எண்ணி, வாய் போனபடி பேசி வாழ்கிறோம். கனிகளைச் சுவைக்க விடுத்துக் காய்களைத் திருடிக் கெடுகிறோம். இயற்கையாய் அமைந்த இனிய சொற்களை விடுத்து, தனக்கும் பிறருக்கும் இன்பம் தராத-மாறாகத் துன்பந்தரக்கூடிய - சொற்களைச் சொல்கிறோம். இது கனியிருப்பக் காய் கவர்வது இல்லையா? பூக்களில் இருக்கும்பொழுது தேன் தூய்மையும் நறுமையும் உடையதாக இருக்கிறது. ஈக்களால் கூட்டுக்குக் கொண்டு வந்த போதும் அவ்வாறே இருந்தது. ஆனால் கடைக்கு வந்தபோது தேனும் கடையாகி விட்டது! நிறத்தில் மாற்றம்; மணத்தில் மாற்றம்; சுவையில் மாற்றம்; ஏன்? நாற்றமும் கூடச் சேர்ந்து விடுகின்றது. மனிதன் தன் நலத்துக்காகத் தான் தேனின் நறுஞ்சுவையைக் கெடுக்கின்றான். இப்படியே தான் இன் சொல்லை வன்சொல்லாக்கி வாயினை நாற வைக்கிறான். சுனை நீரும் அருவி நீரும் தூயதாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஆற்றிலும் குளத்திலும் சேரும்பொழுது எத்தனை எத்தனைக் கழிவுகள் சேர்கின்றன! தூய நீராக இருக்க விடுகின்றனவா? இது போலவே குழந்தையிடத்தும் சரி, வளர்ந்து விட்ட பெரியோரிடத்தும் சரி இயல்பாகவே இனிமை தரக் கூடிய, இரக்கமிக்கிருக்கக் கூடிய, வஞ்சம் அற்று இருக்கக்கூடிய சொற்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் உணர்ச்சியை ஓட விட்டுக் கெடுத்துக் கெடுத்துப் பழகியவன், இது கொடுஞ் சொல், இது பயனிலாச் சொல், இது கேட்கத் தகாத சொல்லத் தகாத சொல், இது கொலைச் சொல் என்று அறிந்து தெளியும் அறிவின்றி மலர் வாயை மலக் கூடமாக்கித் தான் போகும் இடமெல்லாம் நாற வைக்கிறான். சொல்லின் சுவையைக் கெடுப்பதுடன் தானும் கெடுகின்றான். பிறரையும் கெடுக்கின்றான். தன்னிடம் மற்றவர்கள் பணிவாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு தரங் குறைந்தவனும் எண்ணத் தவறுவது இல்லை; இனிய சொல் தன்னிடம் பிறர் இயம்ப வேண்டும் என்று விரும்பத் தவறுவது இல்லை. ஆனால் அவன் மட்டும் இவற்றைக் காற்றில் தூற்றிப் பதராய் நிற்பதை விடுவது இல்லை. இத் தகையவன் நிலைமை இரங்கத் தக்கது தான்! கனிச்சாறு சுவைப்பதை அனுபவத்தில் காணுகின்றான். தன்னைப் போலவே பிறருக்கும் சுவைக்கும் என்று அறிந் திருக்கிறான். என்றாலும் தனக்குக் கனிச்சாறு தருவோனுக்குக் கைப்பு நீரைத் தருகின்றான் பதிலாக! எத்தனை நாட்களுக்குத் தான் கனிச்சாறு வழங்கிக்கொண்டே இருப்பான்! கைப்பு நீரை ஏற்றுப் போற்றிக்கொண்டிருப்பான்? பதிலுக்குப்பதில் ஏன் பதிலுக்குப் பன்மடங்கு தர முனைந்துவிடலாம் அல்லவா! கண்ணாடி முன் நின்று சிரித்தால், சிரிப்பதைக் காணலாம். உதட்டைக் கடித்தால் அதைக் காணலாம், மலைமுன் நின்று பாடினால் அதே ஒலியைக் கேட்கலாம்; திட்டினால் அதைத் தான் கேட்கவேண்டும். உலகம் இவற்றைப் போன்றே உள்ளது. நாம் செய்தது போலவே நமக்கும் உலகம் பதில் செய்கிறது; நாம் சொல்வது போலவே நமக்கும் உலகம் பதில் சொல்கிறது. பன்னீர் தெளிப்பவன் தானும் பன்னீர்த் துளியும் மணமும் பெறுகிறான். சாணநீர் தெளிப்பவன் அதன் துளியும் மணமும் பெறுகிறான். பிறருக்குப் போய்ச் சேருமுன் தனக்கு வருகின்றது அது என்பதை உணர்ந்து விட்டால் அவன் பன்னீர் இருக்க அதனைத் தெளிக்காமல் சாணநீர் தெளிக்க நினைவானா? இன்சொல் தெளிப்பவன் இன்சொல் பெறுகிறான்; வன்சொல் தெளிப்பவன் வன்சொல்லே பெறுகிறான். விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? தினை விதைத்தவன் தினை யறுப்பான் என்பவை பழமொழிகள். வாழ்வியலை நன்கறிந்த சங்கப்புலவர் கணியன் பூங் குன்றனார் நன்மை ஆகட்டும், தீமையாகட்டும் அவை நமக்குப் பிறர்தர வருவன அல்ல; நாமே ஆக்கிக் கொள்வன என்று பொது நெறி காட்டினார். வள்ளுவரோ, இனிய சொற்கள் நம்மிடம் இயல்பாய் இருக்க அதனை விடுத்து, இன்னாத சொற்களைச் சொல்வது கனி இருக்கக் காய் கவர்ந்து கொண்டதற்கு இணையாகும் என்று சிறப்பு நெறி காட்டினார். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.  11. இழிவும் உயர்வும் நாய் என்றால் நண்பன் எனினும் தாங்கமாட்டான். நாய் போன்றவன் என்றால் உயிர் அன்பனாக இருந்தாலும் வெறுப்பான். கைவிரலைச் சுடக்கிட்டுக் காட்டிக் கூப்பிட்டாலே போதும் சண்டைகள் கிளைத்துவிடும் என்னை நாயென்றா கருதினை என்று. ஏன் ஐயா! மெதுவாகப் பேசுமே; என்ன சொல்லி விட்டேன்; வள்ளு வள்ளு என்று விழுகிறீர் என்று பெயர் கூறாமல் ஒலிக்குறிப்புக் காட்டினால் போதும், உற்ற உறவினரும் பொறார். சண்டைக்காரர் என்றாலோ என்ன நேரும் என எழுதிக் காட்ட வேண்டியது இல்லை. ஏன்? நாயின் இழி செயல்களால் நம் உணர்வில் ஏற்பட்டுள்ள எண்ணங்களின் விளைவு. அதே நேரம், புலியல்லவா சிங்கக் குட்டிக்கு என்ன என்று உவமை காட்டிப் பேசினால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏன்? அவ்வுயிர்கள் மேல் நாம் கொண்டிருக்கும் உயர்பாட்டு எண்ணங்களே காரணமாம். நாய் பல நல்ல தன்மைகள் கொண்டு இருந்தாலும் ஓரிரண்டு இழிதன்மைகள் உடன் கொண்டுள்ளமையால் அவ்விழி தன்மைகளே நம் முன் நின்று வெறுக்கச் செய்கின்றன. புலி, சிங்கம் பல கொடிய தன்மைகளுக்கு உறைவிடமாக இருந்தாலும் அவை ஓரிரண்டு போற்றும் தன்மைகளைத் தன்னகத்துக் கொண்டிருக்கும் காரணத்தால் அவ்வுயர் தன்மைகளே நம்முன் நின்று விரும்பச் செய்கின்றன. இவையெல்லாம் எண்ணுவோர் எண்ணச் சாயல் அன்றி, எண்ணப்படும் பொருளின் சாயல் இல்லை என்பதை எண்ணிப் பார்த்த எவரும் எளிதில் தெளிவர். இழிபாடு உடைய நாய் உயர்வு எய்துவது இல்லையா? உயர்வு எய்துகின்றது; எப்பொழுது? மெத்தைக் கட்டிலில் படுக்கவைப்பதையோ, மண நீர் தெளித்துக் குளிப்பாட்டப் படுவதையோ, உரொட்டித் துண்டுகளையும் அப்ப வகைகளையும் (கேக்) ஊட்டப் பெறுவதையோ கருதியமையால் அன்று! இவை ஒரு சில செல்வக் குடும்ப வளர்ப்புப் பேறு நாய்கட்குக் கிட்டலாம். ஏழையர் குடிசைக் கூழிலா நாய்க்குக் கிட்டுமா? நாய் அடையும் உயர்வு, அதன் இயல்பான சிறந்த தன்மை ஒன்றைக் கொண்டேயாம். அந்த ஒன்றும், நன்றியுணர்வு என்று போற்றப் பெறுவதேயாம்! விலங்கினத்திற்கு அரிதான, மனித இனத்திலும் எளிதில் வாய்க்கப் பெறாத நன்றியுணர்வுச் செல்வம் நாயின் வழிவழிச் செல்வமாக வாய்த்து வருகின்றது எனின் அதனை ஆயிரம் ஆயிரம் முறை பாராட்டலாம் அல்லவா! யானை அனையவர் நட்பை அறவே ஒதுக்க வேண்டும்; ஏனெனில் யானை, உணவு தந்தும் உரிமை கொண்டாடிப் பழகியும் உடன் உறைந்தும் இருந்தால் கூட சினங்கொண்ட பொழுதிலே பாகனையே கொல்லும்; ஆனால், நாயோ, தனக்கு ஒரு வேளை உணவு தந்தவன் கை வேலைத் தூக்கித் தன் உடலில் பாய்ச்சினாலும் வாலை ஆட்டிக்கொண்டிருக்கும்; யானையின் நன்றி மறந்த தன்மை இருந்தவாறு என்னே! நாயின் நயமிக்க நன்றியுணர்வு இருந்தவாறு என்னே! என்று புகழ்பவர்கள் உளரானால் நாய் நன்றியறிவால் பெற்ற பெருமை தானே! உயிரோடு உளநாளிலும் நடைப்பிணமாய் இறக்கும் காலத்திலும் முடைப் பிணமாய் ஒழியும் நாய், இருந்தாலும் ஆயிரம் பொன் என்றும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்றும் போற்றப் பெறும் யானையினும் உயர்வு அடைவது எளிதா? நாய்க்குப் பெருமை தரும் நன்றியுணர்வை நினைக்கும் வேளையில் மனிதன் நன்றியுணர்வையும் எண்ணவேண்டும். நாயின் நன்றியறிவுக்கு உயர்ந்து நிற்கின்றானா, ஆறறிவாம் பேரறிவும், உள வளர்ச்சியும், மொழித் திறமும் ஒருங்கு கொண்ட மாந்தன்? ஒப்பவேனும் நிற்கின்றானா-உயர்வு. இல்லாவிடினும்? நன்றியறிதல் உடையோரும் உளர்; இல்லோரும் உளர்; ஒரே குடியில் வந்தோரில்கூட! ஒரு குலையிலேயே மணி நெல்லும், பாலடையாப் பதரும் உண்டு என்பதை அறிவோம் அன்றோ! நன்றியறிதல் வேண்டுமா? எவருக்காக? எதற்காக? நன்றியறிதல் இல்லையேல் உலகமே இல்லை; உயர்ந்தோரே இல்லை; ஆதலால் வேண்டும்; தனக்காகவும் வேண்டும்; பிறருக்காகவும் வேண்டும். நன்றியறிதல் உடையோர் நானிலப் பாராட்டுக்கு உரியர் ஆகின்றனர்; அவ்வறிவில்லார் வாழும் காலத்தும் பழியொடு வாழ்ந்து, ஒழியும் காலத்தும் வசையொடு நிலைக்கின்றனர். நன்றியுணர்வுடையோர் நாட்டில் பெருகினால் நலஞ் செய்வோர் தொகை பெருகும். நன்றி மறந்த கூட்டம் நாட்டில் மிகுந்தால் நலஞ்செய்யும் உள்ளமும் நைந்து சோரும். உணர்ச்சி அளவிலே கூடப் பாராட்டாத உலகியலே நினைந்து நினைந்து பெருகி விரிந்த நன் நெஞ்சங்கள் சோர்ந்து மடிந்து ஒடுங்கும். உலகில் நலஞ்செய்வோர் தொகை பெருக வேண்டுமா? நன்றி அறிவுடையோர் தொகை பெருகுதல் வேண்டும். கோடி கோடி விளக்குகள் அழகுற மாட்டி ஒளியூட்டினாலும் செங்கதிர் ஒன்றுக்கு நேராகுமா? ஆயிரம் ஆயிரம் குழை விளக்குகளை ஏற்றிவைத்தாலும் தண்மதியின் வெண்ணிலவுக்கு இணையாகுமா? மின் விசிறிகள் பன்னூறு பன்னூறு சுழன்றாலும் இன்னறுந் தென்றலுக்கு ஒப்பு ஆகுமா? ஒப்பா இவற்றை மாந்தர் குலம் மண்ணில் தோன்றிய காலமுதல் எய்தி வருகின்றதே! இவற்றுக்காகத் தரும் செல்வம் உண்டா? விலை உண்டா? வாடகைதான் உண்டா? விலைக்குப் பெறாமல், வாடகை தராமல் ஒளி விளக்குகள், மின் விசிறிகள் கிடைத்து விடுகின்றனவா? இவற்றை இலவசமாய் எந்நாளும் ஏற்றத் தாழ்வு இன்றிப் பெற்றிருக்கும் மாந்தன் நன்றியுணர்வு உடையவனாக இருத்தல் வேண்டுமன்றோ! வர்த்திக்குக் கடைக்காரனிடம் காசுதரும் வேளையிலே விளக்கமாக வேண்டுமல்லவா, கடவுளின் பெருந்தகைமை? ஓலை விசிறி வாங்கும் நேரத்தே ஒவ்வொருவர் உள்ளத்தேயும் ஒளிவிட வேண்டுமல்லவா, உலக முதல்வன் அருட்கொடை? மின்சாரக் கட்டணம் செலுத்தும் வேளையில் எல்லாம், மண் எண்ணெய் வாங்கும் நேரத்தில் எல்லாம் அளப்பரும் இறைவன் வளச்செயல் நினைவில் நிற்கவேண்டும் அல்லவா? இப்படி இப்படி இயற் கையில் பெறும் பொய்யாவளங்களை நினையுந்தொறும் நினையுந்தொறும் மெய்யுணர்வு பெருகித் தெய்வ நலம் போற்றவேண்டும் அன்றோ! இதுதானே நன்றியுணர்வின் முதற்படி! வற்றாச் செல்வம் தந்த வள்ளலைப் பாராட்டாதவன், சிற்றுதவிகளைச் சிந்தையில் கொள்வானோ? பேருள்ளமும் நல்லறிவும் ஒருங்கு அமைந்தவர்கள் சாலையைப் பாராட்டுவார்; சாலை அமைக்கத் தூண்டியவர் களைப் பாராட்டுவர்; சாலைக்குச் சரளை உடைத்தவனை, மண் கொணர்ந்தவனை, நீர் எடுத்தவனைப் பாராட்டுவர். இது போலவே, கிணறு வெட்டியவனை, குளம் தோண்டியவனை. அணைகட்டியவனை, ஆலயம் நாட்டியவனை - துணை செய்தவர்களைப் புகழ்வர். இவர்களை நினையும் பெருந்தகைமை இருக்க வேண்டுவது மனிதப் பண்பாடு ஆகவும் நெஞ்சார நினையாதவர்களை, நாவார வாழ்த்தாதவர்களை, எந்தக் கூட்டத்துள் வைப்பது? ஊருக்குப் பொதுவாகச் செய்த நலங்களை, காட்டுக்குப் பொதுவாகச் செய்த நலப்பெருஞ் செயல்களை உணரத் தவறினாலும், தமக்கென்றே ஒருவன் செய்த நன்மையை மறக்கலாமா? ஒரு கவளம் சோறின்றிச் சாவக் கிடக்கும் வேளையிலே, ஒரு மிடறு நீரின்றி மடியக் கிடக்கும் பொழுதிலே ஓடிவந்து உதவியவனை மறக்கலாமா? கொலைஞர்கள் இடையிலே அகப்பட்டுச் சாவ இருக்கும் ஒருவனைக் காலத்தால் வந்து காப்பாற்றிய ஒரு பெரியனை ஆருயிர் உள்ளவரை மறக்கலாமா? இவற்றையும் மறந்து விடுபவர்களை மனித இனத்தில் வைத்துப் பேச முடியுமா? நாயினும் இழிவுடையவர் இவரே! இறைவன் பேரருளால் செய்யும் பெருநலங்களை உணர்ந்து அறியும் பேறு இல்லாமல் சிலர் போகலாம். குற்றந்தான்; என்றாலும், பொறுக்கத்தக்கதேயாம். மன்பதை நலமெய்துமாறு பொதுவாகச் செய்த நலங் களை நினைக்க ஒருவன் தவறலாம். அதனையும் மன்னிக்கலாம்; ஆழ்ந்த சிந்தனையும் அதன் வழிச் செல்லாமையும் கருதி! தனக்கென்றே பயன் எதுவும் கருதாமல் உரிய இடத்தில் - அரிய காலத்தால் - செய்த உதவிகளை மறந்தவனை எப்படி மன்னிக்க முடியும்? அவனை மன்னிப்பது உலக நலங்களை உலைவைப்பதாக ஆகுமே! பதில் நன்றி கருதாமல் நன்றி செய்த பண்பாளனுக்குப் பல்லாயிரம் நன்றிகள் செய்ய வேண்டும் கடமை இருந்தும், எதுவும் செய்யாது, செய்த நன்றியையும் மறந்து வாழும் வாழ்வும் ஒரு வாழ்வோ? ஆம்! அதுவும் வாழ்வுதான்! என் வாழ்வு? கொலை வாழ்வு! நன்றி கொன்ற வாழ்வு! செய்ந்நன்றி கொன்ற வாழ்வு! கொலை, கொள்ளை, பொய்மை முதலாக செய்யத் தகாத குற்றங்களைச் செய்தவனுக்கு குற்றம் நீக்க வழிகள் உண்டு; பெரியோர்களது மன்னிப்புக்கும், இறைவனது அருளுக்கும் வாய்ப்பு உண்டு; தவறு செய்தவன் தவறு என உணர்ந்து திருந்திவிடுவான் ஆனால்! செய்த நன்றியை மறந்த சிற்றறி வினனுக்கோ உய்வு என்பது இல்லவே இல்லை. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது பொய்யா மொழியார் மெய்யுரை. செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லை என்பது புறநானூறு காட்டும் அறவுரை.  12. குருட்டு நீதிபதி கோல் என்பதற்குச் செம்மையான ஆட்சி என்னும் பொருள் உண்டு. ஆட்சியில் செம்மை காப்போம் என்னும் உறுதிப் பாட்டை உலகுக்கு உணர்த்துவதற்காக அரசர்கள் ஒருகோல் வைத்திருந்தனர். அதுவே செங்கோல் என்று அழைக்கப் பெற்றது. இன்னுஞ் சிலர் கைகளிலே செங்கோல் வைத்திருந்தாலும்கூட ஆட்சியிலே செம்மை காக்காமல் கொடுமை கொண்டு ஒழுகியது உண்டு. அவர்கள் கோல் கொடுங்கோல் என்று தூற்றப் பெற்றது. கொடுங்கோல் வேந்தர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்று கருதப் பெற்றதும் உண்டு. கோலொடு நின்று குற்றம் புரிந்து வாழுதல் வேலோடு நின்று வெறுக்கும் செயல் புரிதலுக்கு இணையாக அறிஞர்களால் சுட்டப் பெற்றதும் உண்டு. நேர்மைக்கு அளவாக இருந்த கோல், நீட்டி அளக்கவும் பயன்படுத்தப் பெற்றது ஆயிற்று. அப்படி ஆயினவே முழக் கோல், கசக்கோல் என்பவை. அடிக்குச்சி என்பதும் இவற்றின் விளைவு! இனி, நிறுத்து எடைகாணும் கருவியும் கோல் என்று பெயர் ஏற்றது. அதனை நிறைகோல் என்பர். துலாம் அளவு நிறுத்து எடுக்கும் நிறுவைக் கோலினைத் துலாக்கோல் என்று அழைத்தனர் முன்னோர். எடைப்படி இல்லாமல் அக்கோலில் உள்ள வரைகளைக் கொண்டே நூறு பலம் வரை நிறுக்கும் வாய்ப்பு துலாக்கோலின் சிறப்புடைமையாம். துலாக் கோலை வெள்ளிப் பூண் பிடித்து வைத்திருந்தோர் வெள்ளிக் கோல் என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தனர். பின்னாளைத் தராசுக்கு முன்னோடியாக இருந்தது துலாக்கோலேயாம். இவற்றால் நேர்மை ஆகட்டும், நீளம் ஆகட்டும், நிறுவை ஆகட்டும் அளவினைத் திட்டமிட்டுக் காட்டும் ஒன்றே கோல் என்பதன் பொருளாதல் உறுதியாகின்றது. கோலின் சிறப்பியல்போ எண்ணி எண்ணி வியக்கத் தக்கதாம். வேண்டியவர் ஆனால் என்ன; வேண்டாதவர் ஆனால் என்ன; வேற்றுமை காட்டுமா அளவில்? ஆள்வோர் ஆனால் என்ன; அவர் அடி நின்றார் என்றால் என்ன; இரு திறமாகக் காட்டுமா? உயர்ந்த பொருள் என்றால் என்ன; தாழ்ந்த பொருள் என்றால் என்ன; நீர்ப் பொருள் என்றால் என்ன; திடப் பொருள் ஆனால் தான் என்ன; வேற்றுமையுண்டா? கோல்களில் தனிச் சிறப்புடையது எது? தூக்குகின்றவரைப் பற்றியும், வாங்குபவர் கொடுப்பவர் பற்றியும், தன் கண் வைத்த பொருள் பற்றியும் ஏற்ற மாற்றம் காட்டாமல் உள்ளது உள்ளவாறே ஒட்பமுறக் காட்டும் உயர்வுடைமை துலாக் கோலுக்குத் தானே உண்டு. சமனாக முதற்கண் நின்று வைக்கப் பெற்ற பொருளுக்கு ஏற்ப உயர்ந்து தாழ்ந்து நாவால் முறை வழங்கும் சிறப்பு வேறு எக் கோலுக்கும் இல்லையே! இத்தகைய கோலின் சிறப்பு வெளிப்பட எவ்வாறு கூறலாம்? முதற்கண் சமனிலையில் நிற்கின்றது; பின் உள்ளது உள்ளவாறு செம்மையுறச் சீர்தூக்கும் கோல் என்பது சாலப் பொருந்தும். சமன் செய்து சீர்தூக்கும் கோல் நமக்கு வற்புறுத்திக் கொண்டிருப்பது என்ன? மாந்தர்களே விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையுடன் வாழுங்கள் எனக் காட்டி வற்புறுத்துகின்றது. வாங்குவதற்கு என்றும் விற்பதற்கு என்றும் வெவ்வேறு அளவைகள் நிறைகோல்கள் சிறு வணிகரும் பெரு வணிகரும் வைத்திருக்கக் காண்கிறோம். வேறு வேறு அளவைகள் நிறை கோல்கள் வைத்திராதவர்களும் அளப்பதிலும் நிறுப்பதிலும் கைவரிசை காட்டி வஞ்சம் செய்வதைக் காண்கிறோம். உனக்கு என்றும் பிறருக்கு என்றும் வேற்றுமை காட்டாதே; கரவு செய்யாதே; என்னியல்பை உற்றுப்பார்! என்று தராசு—துலாக்கோல்—தன் நாவால் பல்லாயிர முறைகள் எடுத்துக் காட்டி நின்றும் வணிகர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. எண்ணிப் பார்ப்பவர் ஓரிருவர் உளராயின் அவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி! ஏனையோர் நிலைமை என்ன? தன்னலங் காரணத்தால் பொது நலத்தைக் கொன்று புதைக்கின்றனர்; அல்லது சுட்டு எரிக்கின்றனர். இவர்களைப் போலும் கொலைஞர்கள் உலகில் உளரோ? அறக்கொலைஞர் இவர்களே! பிற உயிர்க் கொலைஞர் அறிவிலா—அருளிலாக் கொலைஞர்! வயிற்றுக்கு இல்லை என்று வழியே வருவோரை வாட்டி வதைக்கும் வன்னெஞ்சர்கள் வரினும் மானம் தாழாமல், மனப்போர் தாங்காமல் மாட்டிக்கொல்லும் கொடுங் கொலைஞரினும், உண்ண, உடுக்க, உறைய, தேவைக்கு விஞ்சிய வாய்ப்பு இருந்தும் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் ஒருமுழத் துணிக்கும் அலமரும் மக்களின் வயிற்றில் மண்ணடித்து, மானத்தைச் சுரண்டி வாழும் பொருட் பேராசை பெருநஞ்சக் கொலைஞரே புன் கொலைஞர். மறைந்து திருடும் திருடரைச் கண்டுபிடித்துத் தண்டிக்கக் காவலாளிகள் உளர். ஆனால் கண்காண நேரில் திருடிக் கொண்டே வாழும் வெள்ளைச் சட்டைக் கருஞ்சந்தைக் காரர்களைக் குற்றக் கூண்டேற்ற வழியில்லை! வழியிருந்தாலும் வாய்ப்பு இல்லை! குற்றவாளி ஆக்காமல் இருக்கும் குற்றத்தோடு நிற்காமல், புகழ்ந்து பேசிப் புடைசூழ்ந்து வாழ்வதும் இயற்கையாகி விட்டது. எல்லாம் பணத்தின் திருவிளையாடல். பண்டமாற்று பணமாற்றாக என்று உருவெடுத்ததோ அன்றே அறத்தின் தலையில் மண் விழுந்துவிட்டது. உலக நலங்கருதிச் செய்யவேண்டியது தூய வணிக நெறியிலே, நடுவு நிலைமைக்கு எடுத்துக் காட்டாம் சமன் கோலை வைத்துக்கொண்டு அறக்கேடு செய்தல் கூடாது. அவர்கள் செய்தாலும், அறங்கூறும் பெரியராகிய நடுவர்கள் (நீதிபதிகள்) செய்தல் கூடவே கூடாது! நடுவு நிலை நிற்கவேண்டியோர் சிறு பிறழ்ச்சிக்கு உள்ளத்தே இடந்தருவர் ஆயினும் அது பெரும் பெரும் கேடுகளாகச் சூழலாம். இறைவன் திருமுன்னிலை போல்வது நீதிமன்றம்! அறக் கடவுளே உருக் கொண்டு வந்து திருத்தொண்டு புரிவது போல்வது அவர்கள் பதவி! சாட்சிகளோ, வழக்குக்கு ஆட் பட்டவர்களோ உணர்ச்சிவயப்பட்டுப் பொல்லா உரைகள் புகல்வர் ஆயினும் அவர்கள் சொல்லுக்கு மதிப்புத்தராது, தனது மான உணர்ச்சிக்கும் மதிப்புத் தராது குற்றத்தை முறையுற ஆய்ந்து முறை வழங்க வேண்டிய சால்பினதே நடுமைப் பணி! பொருளுக்கும், புகழுக்கும், பதவிக்கும், படிப்பிற்கும், இனத்திற்கும், நிறத்திற்கும், கட்சிக்கும், சாதிக்கும் வேற்றுமை காட்டாமல் எல்லா உயிர்களின் மாட்டும் ஊடகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே ஓர் அறக் குருதி ஓட்டத்திற்கு காப்பளிக்க என்றே வாய்ந்தவர் நடுவர்! இத்தகையர் எத்தகு நடுவு நிலை பேணுதல் வேண்டும்? அவர்களின் ஒரு சொல் கொல்லவும் செய்யும்; உயிர் ஊட்டவும் செய்யும் என்றால் அச்சொல்லின் மதிப்புத்தான் என்னே! ஆம்! சொல்லே இறைவனாக இருந்தது; இறைவனோடு இருந்தது என்னும் மணிமொழிகளைப் போற்றி வாழ்வோரே நடுவு நிலை நாடும் சான்றோர்! இதனை வற்புறுத்த விழைந்த சான்றோர் பலர். அவர்களுள் வள்ளுவனார், நடுவு நிலையைக் கண்முன் காட்டும் சமன்கோல் கொண்டு நிலைநாட்டினார். கூரிய துலைநாக்கு நேர்நின்று செம்மை காட்டுகின்றது. அதுபோல் அறவோர் செந்நாவும் நடுநிற்க வேண்டும். என்பது அவர்தம் கருத்து. நீதிநெறியில் நெஞ்சம் நிலைத்த சான்றோர் சிலர் ஒரு கற்பனைப் படைப்புச் செய்துளர். அது நீதி தேவன் குருடன்; அவன் கையில் சமன்கோல் இருக்கும் என்பதே. இக்கற்பனை காட்டுவது யாது? கண்ணோட்டம் காட்டி அறந்திறம்பி விடக்கூடாது என்பதேயாம். புலவர் மணிகள் சிலர், நடுவுநிலை கைவிட்ட அமைச்சன் சொல்வழி நிற்கும் வேந்தன் கோல் சுடுவதுபோன்ற வெங்கதிர் சுடுகின்றது என்றும், நடுவு நிலை பிறழ்ந்தவர்கள் இல்லிலே வேதாளம் சேரும் வெள்ளெருக்குப் பூக்கும், முள்செடி முளைக்கும், மூதேவி வாழ்வாள், பாம்பு குடியிருக்கும் என்றும் நயம்பட உரைத்தனர். அறிவான் முதிர்ந்த ஆன்றோர்கள் உளர்; பண்பான் முதிர்ந்த சான்றோர்கள் உளர்; இவர்கட்கு ஓர் அணிகலம் இல்லையேல் பெற்றிருக்கும் அறிவாலும் உற்றிருக்கும் பண்பாலும் ஒரு பயனும் இல்லை. அந்த ஓர் அணிகலம் நடுவுநிலை என்பதே என்பது அறநூலின் நடுவுநிலைத் தொகுப்புரை. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.  13. அடக்கு! அடங்கு! தோட்டக்காரன் தன் தோட்டத்தை எப்படிக் காக்கிறான் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்; அல்லது நேரிடையாகக் காணவேண்டும். அவ்வாறு கண்டோமானால் அவன் காவற் சிறப்பு நமக்கு எத்துணை எத்துணையோ அறிவுகளை வழங்கத் தவறாது. தோட்டக்காவலை ஆராயும் வேளையிலே இரு தோட்டக் காரர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். ஒருவன் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்திற்கு உரிமையானவன், மற்றொருவன் அவனினும், பன்னூறு பங்கில் ஒரு பங்குகூட இல்லாதவன். அகன்று பரந்த தோட்டக்காரனுக்கும் காவலில் அக்கறையுண்டு. எனினும், சுருங்கிய தோட்டக்காரன் அளவுக்கும் பேரக்கறை இல்லை! ஓரொரு வேளை பெருந்தோட்டக்காரன் காவலில் தவறினால் கூட, அவன் வாழ்வு கெட்டுவிடாது. ஆனால் சுருங்கிய தோட்டக்காரன் காவலில் சிறிது அயர்ச்சி எய்தினால் போதும்; பேரிழப்புக்கு ஆளாவான். வருவாய் அனைத்தும் பாழானாலும் ஆகலாம்! இவ்வாறாயின் இருவேறு தோட்டக்காரர்களும் காவல் போற்றுவர் எனினும், வேற்றுமை உண்டு அல்லவா! இனிக், காவலை உற்று நோக்குவோம். மூன்று வகையாகக் காவல் புரிகின்றான் தோட்டக்காரன், ஒன்று; வெளியேயிருந்து ஆடு மாடுகள், கழுதை பன்றிகள் போகித் தின்றும் சிதைத்தும் கெடுத்து விடாது காத்தல்; மற்றொன்று; கள்வர் புகுந்து திருடியோ கொள்ளை கொண்டோ செல்லாவாறு காத்தல்; இன்னொன்று, தன்னுள் தானாகக்கிளம்பி, வெதுப்போ நோயோ பற்றிக் கெட்டுவிடாது காத்தல். இம்மூன்று வழிகளாலும் காப்பதே காவல்! எந்த ஒரு காவல் நெறி தவறினாலும் வருவாய் கெட்டு, வாழ்வும்வறண்டு போவது உறுதியே. இக்காவல் முறை நமக்கு என்ன வலியுறுத்துகின்றது? நம்மையும் அக்காவல் முறையைக் கைக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது. நாம் எந்தத் தோட்டத்தை இவ்வாறு காப்பது? நம் மனமே தோட்டம்; சின்னஞ்சிறிய தோட்டம்! இத் தோட்டத்திற்கும் முன் கண்ட மூவகைக் காவல்களும் வேண்டும். ஒன்று தவறினாலும் பேரிழப்பேயாம்! மனத்தை உள்ளிருந்து கிளம்பும் கோபம் காமம் முதலாம் உணர்ச்சிகள் கெடுக்கலாம். வெளியே யிருந்து பழகும் நண்பர்கள், பார்க்கும் காட்சிகள் ஆய சூழ்நிலைகளும் கெடுக்கலாம். உள்ளிருந்தே உருவாகி வரும்—கருவொடு பற்றிவரும்—நோய் நொடிகளும் இயற்பண்புகளாகிய மரபு நிலைகளும் கெடுக்கலாம். இம்மூன்று வகைக் கேடுகளும் பற்றாமல் தக்க வழித் தக்கவழிக் காத்தோம்பினால் மனநிலம் மாண் நிலம் ஆகும்! ஆங்கு அறப்பயிர் செழிக்க வளரும்! இன்பப் பயன் எளிதில் கிட்டும்! முறைபெறக் காக்க வேண்டுமே! தோட்டத்தைக் காப்பது எளிது ஆகலாம். மனத்தைக் காப்பது அரிது அல்லவா எனலாம். ஆம்! மனத்தைக் காத்தல் அரிதினும் அரிது என்றும் சொல்லலாம்; அதே வேளையில் எளிதினும் எளிது என்று சொல்லவும் வேண்டும். அவரவர் உள்ளத் திண்மையைப் பொறுத்ததே அது. மனக்காவலில் முதற்காவல் மனத்தின் வாயில்களைக் காத்தல்; மனவாயில்கள் வாய், கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐந்துமாம். இவற்றை எப்படிக் காப்பது? இவ்வாயில்கள் வழியாக ஏற்படக்கூடிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் உணர்வுகளைத் தக்கவாறு அடக்கிக் காப்பதே மனக் காவலாகும். அடக்குதல் வேண்டுமா? அடங்குதல் வேண்டுமா? அடக்குதல் முதல்நிலை; அடங்குதல் முடிநிலை. ஒடுக்குதல் முதல்நிலை; ஒடுங்குதல் முடிநிலை. அடக்கி அடக்கி, ஒடுக்கி ஒடுக்கிப் பழகித் தன் இயற்கையாகிவிட்ட காலையில் அடங்குதலும் ஒடுங்குதலும் இயற்கையாகிவிடும். அடக்குதலும் ஒடுங்குதலும் உள்ள அருமைப்பாடு அடங்கு தலிலும் ஒடுங்குதலிலும் இல்லை. ஏனெனில் பழகிப் பழகி இயற்கையாகிவிடுகிறது. பழகி முதிர்ந்த ஒன்று எளிமையாதல் இயல்பே. இளங் கன்று தொட்டு நாள் தவறாமல் தூக்கித்தூக்கிப் பழகிவந்த ஒருவன், கன்று காளையான போதும் தூக்கினானாம். அவனுக்கு நாள் தவறாமல் சிறிதுசிறிதாக வளர்ந்து வந்த பழக்கம் எளி தாயிற்று. ஆனால் புதிதாக ஒருவன் காளையைத் தூக்க முடியுமா? இத்தகையதுதான் அடக்கமும், காவலும் பிறவும். அடக்கத்திற்குச் சான்றாகப் பன்றியைக் கூறுவர். ஆம்! அடக்கத்தில் உயர்ந்துததான் அது. என்ன நிலை ஏற்பட்டாலும் சரி, பன்றி தன்னை அடைத்திருக்கும் தொழுவத்தில் மலமும் நீரும் கழிக்காது. அதன் உணர்வோடு படிந்துவிட்ட தன்மை இது. அறிவுடைய மாந்தன் கூட—குழந்தை அன்று—சாலை வெளியையும், சந்தைக் கடையையும், பூங்காக்களையும் பொது மன்றங்களையும் மல நீரால் பாழாக்கி வரும் இழிபாடு உடைய நேரத்தே மலந்தின்று வாழும் பன்றியின் அடக்கம் பாராட்டத் தக்கதே. பன்றியினும் அடக்கத்திற்குத் தக்க சான்றாவது ஆமையே. அஞ்சி வாழும் உயிர் வகையுள் ஒன்று ஆமை. அது சிறிதளவு அலைப்பு—அல்லல்—ஏற்படுமாயினும் அஞ்சும். அச்சத்தால் தன்னைக் காக்குமாறு தலையையும், கால்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும். இதனைச் சுரித்தல் என்பர் ஆராய்ந்தோர். ஏன் சுரிக்கிறது? அஞ்சவேண்டிய ஒன்று அடுக்குமானால். எப்படிச் சுரிக்கிறது? உணர்ச்சிகளை உள்ளடக்கி, எத்தகைய தாக்குதல் ஏற் பட்டாலும் கேடு நேரா அளவில் கல்லாக இருக்கும் ஓட்டினுள் சுரிக்கிறது. எவற்றைச் சுரிக்கிறது? நான்கு கால்கள், ஒரு தலை ஆய ஐந்தையும். இப்பொழுது ஆமையை அடக்கத்திற்குக் காட்டிய பொருத்தம் புலப்படுகிறதா? ஐம்புலன்களை அடக்கிக் காப்பதற்கு ஐந்துறுப்புக்களை அடக்கும் ஆமைபோலும் சான்று உண்டோ? ஐந்து உறுப்புக்களையும் ஓரோட்டினுள் அடக்கிக் காக்கும் ஆமைபோல், ஒரு பிறப்பில் ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வானானால் அவனுக்கு வரும் பிறப்புகளி லெல்லாம் பாதுகாப்பு உண்டு. எல்லாரும் செய்யத்தக்க எளிய செயலையும் செய்யாமை சிறுமை! எல்லாரும் செய்தற்கு அரிய செயலைச் செய்வது பெருமை! பெருமை அடைய விரும்புதலும், விருப்புக்கு ஏற்ப முனைதலும் பெரியர் தன்மை. அடக்குதற்கு அரியதாம் புலன்களை அடக்கிவாழ்தல் பெரியர் தன்மையே! ஆமை முதுகில் அலவன் (நண்டு) துயில் கொள்ளும் என்கிறது இலக்கியம். இது பொய்யுரையன்று; மெய்யுரையே. அடக்கிவாழும் ஆமை, வலிய ஓட்டின்மேல் நண்டு உறங்குவது பற்றிக் கவலையுற ஒன்றுமில்லை. அதன் அடக்கம் அவ்வளவு செரிவுடையது. இன்றேல். நெல்லரிவோர் பல்லரிவாளின் கூர்மழுங்கினால் ஆமை ஓட்டில் தீட்டுவர் என்று இலக்கியம் புனைந்துரைக்குமா? ஒரு சொல் சொல்லுமுன் ஒன்பது சொற்கள் சொல்லி, அச்சொற்களாலே உள்ளே இருக்கும் நாற்றங்களையும் வெளிக்காட்டித் திரிவோர்களைக் காணும் நாம், எத் துணை வசை மொழிகளும், பழி மொழிகளும் கேட்டாலும் காதில் போட்டுக் கொள்ளாமல் பொறுமைக் கடலாக ருக்கும் பெருந்தகையார்களையும் காண்கிறோம். இவை நாவடங் காமையையும், அடங்கியமையையும் காட்டும். இப்படியே பிற அடக்கங்களைக் கொண்டவர்களையும், கொள்ளாதவர்களையும் நாம் நாள்தோறும் கண்டுகொண்டு தானே இருக்கிறோம். ஆமை உறுப்புக்களை அடக்கிக் காக்கிறது அதன் ஓடு; அதுபோல் மாந்தர் உறுப்புக்களை அடக்கிக் காக்கிறது அறிவால் அமைந்த செறிவு அல்லது உரன்! ஊக்கமுடைமை என்பதும் அதுவே! அடக்கமுடைமை எனினும் சரியே! ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.  14. கல்லார் மிக நல்லர் படித்தவனாக நடந்து கொள்ள வேண்டாமா? என்று இடித்துரைப்போரை இன்று எங்கும் காண்கிறோம். படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் என்ன தான் வேற்றுமை; பண்பினைத் தராத கல்வியும் ஒரு கல்வியா? என்று வெறுத்துரைப்போரைப் பார்க்கிறோம். படித்தால் போதுமா? உலகநிலை தெரிய வேண்டாம்? புத்தகப் பூச்சியாக்குவதுதான் பள்ளியின் பணி என்றால் அது நாட்டைப் பிடித்த கேடுதான் என்று திருத்தம் வேண்டுவோர் மொழியைப் பன்முறை கேட்கிறோம். இவற்றில் இருந்து புலனாவது என்ன? கற்றவர்களிடமிருந்து உலகம் பலவற்றை எதிர் நோக்கு கின்றது. அவ்வெதிர் நோக்கத்திற்கு ஏற்பக் கற்றோர்கள் இல்லாதபோது பட்டபாடு எல்லாம் வீண்தானா என்று ஏங்குகிறது. அவ்வேக்கம் தான் சொல் உருக்கொண்டு அடி போடுகின்றது. நிலத்தைத் தரிசாக போட்டிருக்கிறான் ஒருவன். மற்றொருவன் பருவம் அறிந்து உழுது பட்டம் அறிந்து விதைத்து, முறையறிந்து பேணி, வருகின்றான். வந்தும், கண்ட பயன் ஏதும் இல்லை என்றால் இவனுக்கும் தரிசு போட்டவனுக்கும் என்ன வேற்றுமை? இவன் முயன்றான். அவன் முயலவில்லை; இவனுக்குப் பயனில்லை. அவனுக்கும் பயன் இல்லை! பயனெதிர் நோக்காப் பணி! என்பது கல்விக்கும், உழவுக்குமா? உழைத்தும் கண்டு முதல் இல்லாதவன் தரிசாகப் போட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே என்று அப்பொழுது எண்ணமாட்டானா? ஏரும் கலப்பையும் சார்த்தி விடு; மாடு வண்டியை விற்றுவிடு என்று எவனேனும் சொல்ல மாட்டானா? இப்படித்தான் கல்லாதவனுக்கும் கற்றவனுக்கும் வேற்றுமை இல்லாத நடைமுறைச் செயல்கள் உள்ளபோது உலகம் ஏசுகின்றது; பேசுகின்றது படிப்பையும், பள்ளியையும், கற்றோரையும், கற்பித் தோரையும் இகழ்கின்றது. இது இயற்கை தானே! படித்தவன் படித்தவனாக நட என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? படித்தவன் படித்தவனாக நடக்காமல் படிக்காதவனுக்கும் கீழ் நிலையில் நடப்பான் ஆனால் அவன் கல்வி பெறத் துணை புரிந்த சமுதாயம் (மன்பதை) கண்டிக்க உரிமை கொண்டது தானே! குழந்தை தவறும் போது தாய் வருந்துவது இல்லையா? திட்டுவது இல்லையா? குழந்தை கெட்டுப்போக வேண்டும் என்பதா அவள் கருத்து? கற்றவர் மாந்தர்; கல்லாதார் விலங்கு என்று கருதும் மன்பதை கற்றும் கல்லாராய் நிற்பவரைக் கடிந்துரைப்பதில் என்ன வியப்பு? கற்றறிவில்லா மாந்தர் கண் கெட்ட மாடேயாவர் என்று வெறுத்துரைக்கும் மன்பதை, பல்லாண்டுகள் கற்றும் கல்லார் நிலைமையில் ஊறிய மாந்தரை நோக்கிக் காழ்ப்பு அடைதல் தவறா? கண்ணுடையர் என்போர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்று முறையுரைக்கும் மன்பதை கண்ணினைப் பெற்றிருந்தும் புண்ணாக்கித் திரிவோரைக் கண்டும் போற்றிப் புகழுமா? போற்றும் உரிமையுடைய மன்பதைக்குத் தூற்றும் உரிமை மட்டும் இல்லாமல் எப்படிப் போகும்? போற்றுதற்குரியவற்றில் ஒதுங்கி நின்று விட்டுத் தூற்றுதற்கு மட்டும் நான் என்று முன் வந்து நிற்கும் பிழைபட்டோர் மலிந்த நாட்டில்—மலிந்த நாளில்—தூற்ற வேண்டிய ஒன்றைத் தூற்றாமல் இருத்தலை எதிர் நோக்க முடியுமா? அப்படியானால் கற்றவர்களிடமிருந்து மன்பதை எவற்றை எதிர்பார்க்கிறது? கற்றவர்களிடமிருந்து மன்பதை எத்துணை எத்துணையோ காரியங்களை எதிர்நோக்குகின்றது. அவற்றுள் எல்லாம் ஒன்றே ஒன்றை மிக எதிர்நோக்குகின்றது. அந்த ஒன்றும் கற்றோரிடம் அமைந்துவிட்டால் மற்ற எல்லாமும் உடன்வரும் என்று திண்ணிதாய் நம்புகிறது. அதுவும் உண்மையே! இளவேனில் வரவும், தென்றல், வருதலும், குயில் கூவுதலும், தேமா தளிர்த்தலும் தொடர்ந்து நிகழ்வது இல்லையா? அந்த ஒன்று எது? உலகம் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பின் பற்றி நடத்தல் வேண்டும் என்பதே. உலகம் என்பது என்ன? உயர்ந்தோர் பெரியோர், வழி காட்டுவோர் ஆயோர்களே உலகம். பெரியோர்களே உலக வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் காரணமானவர்கள். அவர்கள் நடைமுறையே உலக நடைமுறை; அவர்களைப் பின்பற்றிச் செல்வதே கற்றோர் கடமை; கல்விப் பயன்! நடந்து காட்டுதல் அரிது; அதனினும் அரிது நடக்க வேண்டிய நெறிகளை நடைமுறையால் கண்டு நெறிப்படுத்துவது! நடப்பதையும், வண்டி ஓட்டிச் செல்வதையும் விட, சாலைக்கு வரைப்படம் தயாரிப்பதும், சாலையமைப்பதும் அரிய செயல்கள் அல்லவா! செவ்விய சாலை அமைந்தபின் எளிதாய் இனிதாய் நடக்க வாய்ப்பு இருந்தும் எத்தனைப்பேர் சாலை ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்? இது போல் அறநெறியை அரும்பாடு பட்டு வகுத்தும்; நடந்து வழி காட்டியும் சென்றோர் இருக்க அவர்கள் காட்டிய வழிச் செல்வதில் எத்தனைத் தவறுகள்; முறைகேடுகள்? வள்ளுவர் சொல்வார்: உயர்ந்தோர்கள் எப்படி வாழ் கிறார்களோ அப்படி வாழ்பவர்களே அறிவுடையர்; நல்ல பல நூல்களைக் கற்றறிந்தாலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைக் கற்காதவர்கள் அறிவில்லாதவரே. பெற்றிருக்கும் பட்டங்களைக் கொண்டு மதிக்கும் இந் நாளையிலே ஒருவன் ஒழுகுமுறை கொண்டு மதிப்பிடுதல் கூடுமா? என்னும் வினா எழும்; எழுதலும் வேண்டும். பட்டத்தை மதிக்க வேண்டும்; அறிவுடைமை காரணத்தால் பெற்றது ஆகலின். அனால் பெற்ற பட்டத்தின் பயன் என்ன? பயனில்லாப் பட்டம், சிறார்பட்டம், தம்பட்டம் என்று விடுக! பயனில்லா ஒன்றால் பயன்? உப்புமலைமேல் உட்கார்ந்து இருக்கலாம். அங்கே இலைபோட்டும் உண்ணலாம். ஆனாலும் உப்பு எடுத்துப் போட்டால் தானே சுவை? இல்லையேல்..! நூல்களை வாங்கி வாங்கி அழகுறஅடுக்கிவைக்கலாம்;வனப்புமிக்கநிலைப்பேழைகளில்வைத்திருக்கலாம்... கசடறக் கற்று, அதன்படி நின்றால்தானே! இப்படியே உளது உலகநடை—உயர்ந்தோர் நடை—பேணாத கற்றோர் வாழ்வும்! உயர்ந்தோரை உணர்ந்து, அவர் நெறிகளை அறிந்து, அவர்கள் நடைப்பேற்றில் கண்ட நிறுத்தங்கள், திருப்பங்கள், தங்கல்கள் இவற்றைத் தெளிந்து அறிந்தவன் பின்பற்றிச் செல்ல வில்லை என்றால், கல்வியும் இல்லாமல் பெரியோர் தொடர்பும் இல்லாமல் வாழும் கல்லாத ஒருவன் பின்பற்றிச் செல்லக் கூடுமா? fல்லாதவன் நிலைமையும், கற்றவன் நடை முறையும் ஒன்றாக இருக்குமானால் இருவருக்கும் என்னதான் வேற்றுமை? கல்லாதவன் சாலையில் மலங்கழிக்கிறான்; கற்றவனும் அப்படியே செய்கின்றான். கல்லாதவன் வாய்க்குவந்த சொற்களை யெல்லாம் சொல்கிறான்; அவனுக்குத் தாழாமல் கற்றவனும் பேசுகின்றான். கல்லாதவன் வஞ்சம், சூது, பொய், களவு இவற்றில் நிலைக்கிறான்; அவனிலும் தந்திரமாக, மிகமிக நுட்பமாகப் பன்னூறு மடங்கு வஞ்சம், சூது, பொய், களவு, கையூட்டு, கள்ளக் கணக்கு முதலாய கயமைகளையே கால்களாகக் கொண்டு பேய்நடை போடுகின்றான். வந்ததோர்வேற்றுமை என்ன? இதனைநினைக்கும் போதுதான், தாயுமானவர் மொழிந்தது எவ்வளவு உண்மை என்று புலப்படுகின்றது. கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாதஎன் கர்மத்தை என்சொல்வேன் மதியைஎன்சொல்லுவேன் பலகற்றல் நல்லது; இயலாவிடில் சில கற்றாலும் போதும்; உலக நடையை உற்று அறிந்து ஒட்டி ஒழுகுதல் வேண்டும். இவ்வாறு அமைந்தோரே கற்றார்; பிறர் எல்லாம் கல்லார்; அறிவும் இல்லார்; அனைத்தும் இல்லார்! உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்  15. குடிகேடன் அளவிறந்து சுவைநீர் குடித்துக் கெடுபவன் குடிகேடன்! புகை வகைகளைக் குடித்துக் கெடுபவன் குடிகேடன்! மது வகைகளைக் குடித்துக் கெடுபவனும் குடிகேடன்! எந்த ஒரு முயற்சியும் கொள்ளாமல் இருந்து குடியைக் கெடுப்பவன் குடிகேடன்! குடியை எந்த வழியில் ஆயினும் சரி கெடுப்பவன் எல்லாம் குடிகேடனே! தன்னைக் கெடுத்துக் கொள்வது தவறு; குடியைக் கெடுப்பது தகுமா? தன்னைக் கெடுப்பது எவ்வாறு தவறாகும்? பிறரைக் கெடுத்தால் அல்லவோ தவறு, என எண்ணலாம்! பிறர் உழைப்பால் உண்டு, பிறர் உழைப்பால் குடித்து, பிறர் உழைப்பால் உடுத்து, பிறர் உழைப்பால் உறைந்து, பிறர் உழைப்பால் இன்பப் பொழுது போக்கி, பிறர் உழைப்பால் இடப்பட்டோ, சுடப்பட்டோ ஒழியும் ஒருவன் தனக்குப் பல வகைகளாலும் உதவிய சமுதாயத்திற்கு எந்த ஒரு சிற்றுதவியும் செய்யாது போனால்—சமுதாயம் செய்த உதவி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானே! கடமை உணர்ச்சி உடையவன் தன்னைப் பேணிக் காத்த சமுதாயத்திற்கு உதவாமல் சாவானா? உதவிய சமுதாயத்திற்குப் பதில் உதவாததுடன் கேடும் செய்து விட்டுப் போனால்?... மாட்டை வளர்க்கிறோம்—பால் முதலாம் பயன் பெறுகிறோம். ஆட்டைக் காக்கிறோம்—பணப்பேறு பெற்று மகிழ்கிறோம். நாயை வளர்க்கிறோம்—நன்றியும் காவலும் கைவரப் பெற்று இன்புறுகிறோம். பூனையைப் போற்றுகிறோம்—எலித் தொல்லை குறைந்து நலமெய்துகிறோம். இவற்றை வளர்க்க எத்தகைய பயனும் இல்லாத துடன், முட்டியும் கடித்தும் தொல்லையும் ஆக்கும் என்றால் வளர்ப்போமோ? இவ்வாறே மன்பதை, ஒருவனைப் பயன் கருதிப் பேணு தலும், பயனில்லாக் காலையில் வெறுத்தலும் முறைதானே! தன்னைப் பேணிய மன்பதையைப் பேணாத ஒருவனை மன்பதை பேணிக் காக்குமானால் அதன் தலையில் வேறு யாரும் மண் அள்ளிப் போட வேண்டுமா? தனக்குத் தானே குழிதோண்டி வைத்து மண்ணைப் போட்டு மூடிக்கொண்டது ஆகும்! தன்னைக் கெடுத்துக் கொள்வதே மன்பதைக்குச் செய்யும் நன்றி கொன்ற செயல் என்றால், தன் குடும்பத்தையும், பல குடும்பங்களை உள்ளடக்கிய குடியையும் ஒருங்கு கெடுப்பது எத்துணைத் தீமை! உலகம் என்னும் ஓவியமகளை அழகுபடுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு! ஒவ்வொரு குடிக்கும் உண்டு. எல்லோரும் உலகமகள் ஓவியத்தை அழகுபடுத்தும் கடமை ஆற்றுவதில், ஓரொருவர் தவறினும் முழுமை அழகு நிரம்பாதே! கையாகவும், காலாகவும் இருந்து அழகுறுத்தத் தக்கோர் கடமை தவிர்ந்தால் முடமும் நொண்டியுமாக அன்றோ காட்சி வழங்குவள்? கண்ணும் காதும் வாயுமாக இருந்து அழகு படுத்தத் தக்கோர் கடமை ஆற்றத் தவறின் குருடும், செவிடும், ஊமும் ஆகவன்றோ காட்சி வழங்குவள்? அந்தோ! அனைத்து அழகும் எய்தினாலும் ஓரொருவர் செயலால் உலகப் பேரணங்கு ஆரழகு இழந்து விடுவளே! இத்தகைய கேட்டிற்குக் காரணமாக இருப்பவர் யாராயினும் என்ன? அவர் குடிகேடர் அன்றி, உலகக் கேடரே! காலில் கட்டி கிளம்பினாலும் துயர்தான்! வயிற்றில் கோளாறு ஏற்படினும் துன்பந்தான்! பல்லில் வலி ஏற்படினும் படாப்பாடுதான்! கண்ணிலே புண்ணுற்றாலும் தாழா வலிதான்! உலக மகள் உறுப்பில் எச்சிறு தாக்குதல் ஏற்படினும் துன்பந்தான்—கேடுதான்! அவள் நகமும் பல்லுங்கூடப் போற்றி யாக வேண்டிய பொருள்களே; புறக்கணிக்கத் தக்கவை அல்ல! இத்தகைய எண்ணச் சூழலிலே நாம் புகுங் காலையில், ஒருவன் தான் கெடலின்றி, தன் மன்பதையையும் சேர்த்துக் கெடுக்கும் கழகத் தலைமைப் பொறுப்பு ஏற்று நிற்பான் ஆயின் அவனைப் பல்லாற்றானும் எச்சரிக்க வேண்டுவது கடமை என உணர்வோம். அவ்வெச்சரிக்கை காட்டுதல் அறிந்தோர் கடன்; அறவோர் கடன்! குடிகெடுக்கும் கேடுகள் பலப்பல! அவற்றுள் ஒன்று வெஃகுதல்; பிறர் பொருளை விரும்புதல். பிறர் பொருளை விரும்புதல் குடிகேடா? அது வேண்டும், இது வேண்டும் என்று ஓயாமல் ஒழியாமல் தேடி அலைவது கூடாது; போதும் என்ற மனம் வேண்டும்; இன்றேல் அமைதி கிட்டாது ஆசையே அல்லல்களுக்குக் காரணம் இவ்வாறு பெரியோர் உரைமொழிகள் உண்மையை அறிவோம். ஆனால் இந்த ஆசையினும், கொடிய ஆசை பிறர் பொருளை வெஃகும் (கவர விரும்பும்) ஆசை! ஒருவன் நல்ல பொருளை வைத்திருப்பான்; விரும்பியே வைத்திருப்பான்; அப்பொருளை ஒருவன் பெற நினைப்பது முதல் தவறு! அதாவது ஆசை உண்டாகிய தவறு. அது, அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, அல்லது ஆக்கிக் கொள்ளவோ தூண்டுமாயின் குறைவு இல்லை. ஆனால் அப்பொருளையே பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாகின்றான். இம்முனைப்பு எங்குக் கொண்டுபோய் விடும்? முதல்முறை விருப்பாக இருக்கும்; மறுமுறை பெறுதற்கு ஏவும்; அடுத்தமுறை கவர்தற்குத் தூண்டும்; பின் கவர்தற்குரிய வழிவகைகளைத் தேடித் தேடி அலையும். அலையும் உள்ளம் நிலை கலங்கி ஒருநாள் கவரவே செய்யும். இவ்வளவுக்கும் அடிப்படை பிறர் பொருள் விரும்புதல் ஆகிய வெஃகுதலே. ஆதலால் வெஃகுதலே களவு என்னும் காழ் கொண்ட— வைரம் ஏறிய—முள்மரத்தின் வித்து! முள் மர விதை நிலத்து விழாமல் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. நிலத்தில்தானே விழுந்து விட்டாலும் முளைத்து எழுந்தவுடனேயாவது கிள்ளியெறிதல் வேண்டும். அதில் தவறின், கிளையாகிக் கொம்பாகி வளருமுன்னேனும் பிடுங்க வேண்டும். அதில் தவறின், கோடரி தூக்கித்தான் தொலைக்க வேண்டும்—அது கையைக் கொல்லும்—கோடரியை வெல்லு வதும் உண்டு!வெஃகுதல் விதை, விழாமல் முளைக்காமல் காப்பது நலம். இல்லையேல் விலங்கு பூட்டுதலிலும், கடுங்காவலிலும், கால் கை இழத்தலிலும் கொண்டு போய்விடும். இத் தண்டனைகளை வெஃகுவோர்—பிறர் பொருட்களை வெஃகுக! ஒருவன் ஒரு பள்ளியைத் தோற்றுவிக்கும் நன்னெஞ்சங் கொள்கிறான். அதற்கென அரசு ரூ. 30000 வங்கியில் போட்டு வைக்க ஆணையிடுகிறது. அதனை நிறைவேற்றுமாறு தன் கைப்பணம் காணாமல் கூட, ஓரிரு நிலத்தையும் விற்றுச் சேர்த்துக் கட்ட முயல்கிறான், ஏழைக்கு எழுத்து அறிவித்தல், அன்ன சத்திரம் ஏற்படுத்துதலினும், ஆலயம் அமைத்தலினும் கோடி புண்ணியம் தருவது என உணர்ந்த அந் நல்லோன்! அவன் பொருளையும் கவர விரும்புகிறான் ஒரு கீழோன்; விரும்பும் ஒன்றே போதாதா? திருடவும் வேண்டுமா? பல கோடிப் பேர்களுக்கு அறிவு ஒளியூட்ட எழும் தெய்வக் கலைக் கூடத்தை எழாமல் தடுக்க முனைகின்றானே பாவி! இக்குற்றம் வெறுக்கத்தக்க ஒன்றா? அவனிடம் இப்பணம் சேர்ந்தால் யாது செய்யும்? பலபேர் குடியைக் கெடுக்கும்! இதற்கோ பிறர் நன்பொருள் விரும்புவது! இத்தகையனை எச்சரித்து வழி காட்டித் திருத்த வேண்டியது அறவோர் கடன்; பின்பற்றிச் சென்று நல்வாழ்வு வாழ வேண்டியது அறிந்தோர் கடன்! நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். 16. அழியும் உலகில் அழியாப்புகழ் பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தைக் கரையமைத்துத் தடுத்து நிறுத்துவது அரிது. நீர் பெருகி நிற்கும் கரையைப் பெயர்த்து விடுவது எளிது. கரை அமைத்தல் அறிவொடும் பெருவலிமை யுடையார்க்கும் அரிய செயல்; கரையை உடைத்தல் அறிவாற்றல் இல்லார்க்கு எளிய செயல். பெருகி வரும் வெள்ளம் செய்யும் கொடுமைகள் கணக்கில் அடங்கா. கரையை மட்டுமா அழிக்கின்றது. வயல் வெளிகள், தோட்டங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் எல்லாவற்றையும் அழிக்கின்றது. பயன் தருவனவற்றைச் சிறுபொழுதில் பாழாக்கிச் சிதைக்கின்றது, வெள்ளக் கொடுமையைத் தவிர்க்க முன்னாளிலே வேந்தன் கரிகாலன் முனைந்தான். இந் நாளை ஆட்சியோ கால்களும், அணைகளும் அமைப்பதைத் தன் பணிகளுள் தலையாய பணியாகக் கொண்டுளது. வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் அணையுண்டு; உள்ளப் பெருக்கைத் தடுத்து நல்வழிப் படுத்த அணை உண்டா? அடங்காது ஆரவாரித்துச் செல்லும் வெள்ளத்தைத் தடுக்கும் கரை; பொங்கி எழுந்து கிளம்பும் வெகுளியைத் தடுக்கும் பொறை; அல்லது பொறுமை! பொறுமை அணை கட்டினால் வெகுளி வெள்ளம் அடங்கும்; உள்ள நிலம் சிறக்கும்! பண்பு விளைவு பலபடியாய்ப் பெருகும்! அடங்காக் கோபமும் ஆறாச் சினமும் தீரா வெகுளியும் வெள்ளமாகக் கிளம்பி விட்டால் உள்ளம் தாங்குமா? பொறுமையைப் பற்றிய நல்லுரைகள் பலப்பல நாட்டில் நிலவுகின்றன. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடு ஆள்வார் இஃதோர் பழமொழி! பொறையிற் சிறந்த கவசமில்லை இஃதோர் பாடல் வரி; நூற்சுருக்கம்! கவசம் (மெய்ம்மறை) உடலுக்கும் உயிருக்கும் காப்பளிக்கும் கருவி! அதுபோன்றதே பொறுமை! பொறுமையின் சிறப்புப் புலப்படவில்லையா! ஒருவன் பலப்பல கீழ்ச் செயல்களைச் செய்கிறான்; என்றாலும் பொறுமை என்னும் ஒரே ஒரு போர்வையைப் போர்த்துக் கொள்வானாயின் அத்துணைக் கீழ்ச் செயல்களையும் மூடி மறைத்துக் கொண்டு விடுகிறான்; உடலில் ஏற்பட்டுள்ள உறுப்புக் குறைகளை, வெட்டு வடுக்களை, கொடு நோய்களை உடையாலும் மேலாடையாலும் மறைத்து விடுவது இல்லையா! அதுபோல் என்கிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார். தவற்றை மறைக்கும் மறையாகப் பொறை இருக்கிறது என்றாலும், பொறுமையின் சிறப்பை உவமை காட்டத் தவறி விடவில்லை. பொறுமை சிறந்ததுதான்! ஆனால் அறிவு இல்லாதவரிடம் பொறுமை காட்டுவது நமக்கு நலம் தருமா? துன்பத்தை வலிய வாரிக்கட்டிக் கொள்வதற்காகவா பொறுப்பது? இவ்வாறு சிந்திக்க வேண்டும்; எதிர் ஓட்டமாகச் சிந்திப்பது நல்லதே. தெளிவும் திருத்தமும் விளைப்பது அதுவே! நேராகச் சிந்திப்பதிலும் எதிராகச் சிந்திப்பதே சிந்தனையின் ஆழம்! நீர் நேரோட்டம் ஓட மீன் எதிர் ஓட்டம் ஓடவில்லையா? காந்தியடிகள் ஒரு குதிரை வண்டியில் போய்க் கொண்டிருக்கிறார்; வெறிகொண்ட வெள்ளையர்கள் அவரைக் கண்டு, வண்டியை விட்டுக் கீழே இழுத்துப் போட்டு அடிக்கின்றனர்; உதைக்கின்றனர். சாணத்தையும், நாறும் முட்டையையும் கல்லையும் அவர் மேல் வீசி எறிகின்றனர். பொறுக்கின்றார்; பொறுமை மலையாய் நிற்கின்றார்; வெறியர் மீது வழக்குப் போடுமாறு வேண்டுகின்றனர் பலர்; காந்தி அடிகளோ மறுக்கின்றார். ஏன்? அறியாமல் செய்கின்றார்கள்; ஒருநாள் தாம் செய்தது தவறு என அறிவார்கள். அறிந்த பின்னர் திருந்த வழியுண்டாகும். குற்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால் அவர்கள் திருந்துவதற்கு ஏற்படும் வாய்ப்பைக் கெடுப்பதாகிவிடும் என்று கருதினார். அவ்வெண்ணம் பாழயிற்றா? சாதாரண ஆத்மா வை மகாத்மா ஆக்கி வைக்கவில்லையா? இதுதான் பொறுமையின் பரிசு! கோடரி கொண்டு ஒருவன் ஒரு மரத்தை வெட்டுகிறான்; அவனுக்கும் நிழல் செய்கிறது மரம். மண்ணைத் தோண்டுகிறான் ஒருவன்; அவனையும் தாங்கிக்கொண்டு இருக்கிறது நிலம். பொறுமைக்கு இவை எடுத்துக் காட்டுக்கள் இல்லையா? மரத்தைப் போலவும் மண்ணைப் போலவும் மனிதன் இருக்க முடியுமா? உயிர்த் துடிப்பு உடையவன் தாங்க முடியுமா? நமக்கு முடியாமல் இருக்கலாம். உலகுக்கு முடியாதென எப்படி நாம் முடிவு கட்டலாம்? எறும்பு கடித்தால் எத்தனை பேர்கள் தாங்க முடியாமல் அழுகின்றனர்? தேளைப் பார்த்தே எத்தனை பேர் அடித்துத் துடித்து விழுந்து மயங்குகின்றனர்? இவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு இயேசு பெருமானை மதிப்பிடலாமா? சிலுவையில் அறையப்பட்டும், தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பல பாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர் பிழையை மன்னியும் என்று முழுமுதல் இறைவனை வேண்டி நிற்க எவரால் முடியும்? முடிந்தால் ஒரே ஒரு இயேசு பெருமான் தான் புவியில் தோன்றியிருப்பாரா? அருமையும் பெருமையும் வாய்ந்த பொறுமையை அனைவரும் பின்பற்ற முடியாமை ஏன்? பொறுக்காதவன் இன்பம் அடைகிறான்; அற்ப இன்பம் தான் அடைகிறான்; அடுத்த வேளையிலே அடுத்த நாளிலே துன்பம் உண்டாக்கக்கூடிய இன்பந்தான் அடைகின்றான். ஆனால் அவன் அடையும் இன்பம் உடனுக்குடன் வந்து விடுகின்றது. பொறுமையின் இன்பம் - நன்மை - பொறுத்துத்தான் வருகின்றது. அது வரும்வரை காத்திருக்கப் பெரும் பாலோரால் முடிவது இல்லை. அடுத்த வேளையில் கிடைக்கும் அல்வாவைப் பார்க்கிலும் உடனுக்குடன் கிடைக்கும் சீடை உருண்டையைச் சிறுவர்கள் விரும்புவது இல்லையா? மறுநாள் கிடைக்க இருக்கும் பத்து ரூபாய்களைப் பார்க்கிலும் கைமேல் கிடைக்கும் பத்துக் காசு பெரிதாகத் தோன்றவில்லையா? இத்தகு இளையர் மனநிலை போன்றதுதான் பொறுமை இல்லார் நிலைமையும். என்னைப் பற்றிப் புறங்கூறினான்; விடுவேனா; நான் ஊருக்கே பறையடித்துவிட்டேன் என்று மகிழ்பவர் மிகுதி. என்னை அடிக்க அவன் கையைத் தூக்கினான்; அக்கையை ஒடித்து அவன் மறு கையிலே தந்து விட்டு வந்தேன் என்று செருக்குபவர் உண்டு. மேலதிகாரியிடம் என்னைப் புறங்கூறினான்; அடுத்த வாரமே அலுவலகத்துள் கால் வைக்காதவாறு செய்து விட்டேன்; தொலை தூரத்திற்குத் தூக்கி விட்டுவிட்டேன்; அவனும் அவன் குடும்பமும் மாற்றிச் செல்லப்பட்டபாடு! இப்படி இறுமாப்போர் இல்லையா? இவர்கள் கண்ட இன்பந்தான் என்ன? ஒரு நொடி இன்பம்; பிறர் துடிக்கக் காணும் இன்பம், பிறர் கண்ணீர் வடிப்பதைக் காணும் இன்பம், கண்ணுடையவன் கொள்ளும் இன்பமா? இவன் என்ன கண்ணீர் வடிக்கப் பிறக்காதவனா? கலங்காதிருக்கப் பிறந்தவனா? இவ்வாறு என்னை ஒருவன் செய்திருந்தால் நான் என்ன பாடுபட்டிருப்பேன் ; என் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும் என்று எண்ணும் நெஞ்சம் உண்டானால் இவ்வாறு மனஞ் செருக்கிப் பேசவும், சிறு செயல் புரியவும் கூடுமா? எவனொருவன், பிறனொருவன் செய்த தவற்றைப் பொறுக்காமல் துன்புறுத்தப் போகின்றானோ, அவன் தன் மனத்துள், உன்னைத் துன்புறுத்துமாறு ஏவும் உணர்ச்சி எதுவோ, அவ்வுணர்ச்சிக்கு நானும் ஒருநாள் ஆட்படுவேன் என்று நினைவானே ஆயின் பொறுமையைப் போற்றியே தீர்வான். அடங்காக் கோபம் கொள்கிறான் ஒருவன். அவன் அடுத்தவனுக்கு அழிவு செய்வதன்முன், தானே அழிவான், தீக்குச்சி தான் மற்றதை எரிக்கு முன், தான் அழிந்துவிடாதா? மற்றவை எரியாது தப்பினாலும் அது தப்புமா? இதனை எண்ணியேனும் பொறுமை காட்டலாமே! கட்டைகளை அடுக்கி, நெருப்பு மூட்டி அதன் மேல் ஒருவன் படுத்துக்கொள்ளலாமா? அவ்வாறு படுத்தால் எத்தனை மணி நேரம் இன்பங் காண்பான்? ஆனால் கட்டைகளை இழைத்துச் செவ்வை செய்து கட்டிலாக்கிப் படுப்பதில் தொடக்கத் துன்பம் இருக்கலாம். இதற்காகச் சுட்டெரிக்கும் கட்டையை விரும்பி, கட்டிலை வெறுப்பார் உண்டா? பொதுவாகச் சிலரால் பொறுமையாயிருக்க முடிகின்றது. இத்தகையாரும் பகைவரிடம் பொறுமை காட்டுகின்றனரோ? தனக்குத் துன்பஞ் செய்தவர்களைப் பொறுப்பதே பொறுமை. அவர்களும் இன்பம் உறவேண்டும் என்று எண்ணுவதே போற்றத்தக்க பொறுமை. துன்பஞ் செய்தார்க்கும் இன்பம் இடையறாது செய்வதே தலையாய பொறுமை! தம்மை இகழ்ந்தாரைத் தாம் பொறுத்துக் கொள்வதுடன், எம்மை இகழ்ந்த இக் குற்றத்தால் இவன் துன்புறுவானே என்று வருந்துவது சான்றோர் இயல்பு என்று சாற்றுகின்றது நாலடியார். இச் சான்றோருள் ஒருவராக இருக்க ஏன் ஒவ்வொருவரும் முயலக்கூடாது? துன்புறுத்தியவர்களது நன்மை கருதி நாம் பொறுத்தல் பெருமை. இல்லையேல் நம் நன்மை கருதியாவது பொறுக்க வேண்டாமா? அப்படி என்ன நன்மை நமக்கு உண்டாகின்றது? தீமை செய்தவர்க்குப் பதில் தீமை செய்பவர்கள் ஒருநாள் அடையும் சிற்றின்பமே இன்பமாகக் கொள்கின்றனர். தீமை செய்தவர்களைப் பொறுத்துக் கொண்டவர்களுக்கோ இறக்கும் அளவும் இன்பம் உண்டாகின்றது. யார் இறக்கும் அளவுக்கும்? தீமை செய்தவன் இறக்கும் அளவுக்குமா? இல்லை! தீமையைப் பொறுத்துக் கொண்டவன் இறக்கும் அளவுக்குமா? இல்லை! இந்த ண அளவுக்கும்! ஆம் உலகம் அழியும் வரை, பொறுத்தார்க்குப் புகழ் உண்டு. அவரே பூமி ஆள்வார்! பிறர் சில்லாண்டுகள் ஆண்டு மாண்டு ஒழிவர். ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.  17. பொறுக்க முடியாதா? தண்ணீரில் கண்ணுக்குத் தோன்றாத எண்ணரிய நுண்ணிய உயிர்கள் உறைகின்றன. அவை சிறியவை எனினும் அரிய மனித உயிரை உண்டு ஏப்பமிட வலியன. ஆதலால் தூய நீர் பருகுதல் வேண்டும்; காய்ச்சி வடித்துப் பருகுதல் நலம். இது உடல் நலம் காக்கும் நெறி. இதனைத் தெளிவாக உணர்ந்த பெரியோர் தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே என்றனர். உணராத் தன்மையுடையோர், பழமொழியைத் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழியாதே என்றனர். தண்ணீரைப் பழிக்கக்கூடாது எனப் பொருள்கொண்டு, எத்தகைய அழுக்கு நீரையும் பருகுதல் வேண்டும் எனக் கருதி விட்டனர். தூயநீர் போற்றுதற்கு எழுந்த பழமொழியே அழுக்கு நீர்ப் புகழ்பாடக் காரணமாயிற்று. மொழிக் கோளாறா? மூளைக் கோளாறா? குடிநீர் தூயதாக இருக்கவேண்டும்; குளிக்கும் நீர் எப்படியும் இருக்கலாமா? நாம் நன்றாக அறிவோம், நன்னீராற்றில் நீராடும் பொழுது ஏற்படும் இன்பமும், கண்ட வெல்லாம் அடித்துச் செல்லும் காட்டாற்றுப் பெருக்கில் நீராடுங்கால் ஏற்படும் அருவருப்பும்! பூம்புனல் பொருநை ஆற்றில் நீராடுதற்கும் கூவம் ஆற்றில் (சாக்கடை ஆற்றில்) நீராடுதற்கும் வேறுபாடு இல்லை என்று பித்தரும் கூறார். மூக்கைத் துளைத்து, மனத்தைக் குமட்டி, குடரைப் பிடுங்கும் அழுக்காறு எங்கே? செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்க மந்தவளி யுமிழ்மலய வளர்குடுமி நின்றிழிந்து கொந்தவிழு மலர்வீசிக் கன்னிநடை போட்டுச் செல்லும் இனிய பொருநை (தாமிர வருணி) ஆறு எங்கே! ஆனால், ஒருவன் யான் பொருநை ஆற்றில் நீராட விரும்பினேன்; அது எனக்கு இன்பம் அளிப்பதாய் இல்லை; தூய்மை தருவதாய் இல்லை: கூவம் ஆறே இன்பமும் தூய்மையும் தருகின்றது என்றான் ஆனால், அவன் கூவத்திற்கு அண்மையிலுள்ள கீழ் பாக்கத்தில் இருக்கத்தக்கவன் ஆகவேண்டும்; அல்லது, பொய்யாப் பொருநையைத் தரும் குற்றாலத்திற்கு அனுப்பப்பட வேண்டியவன் ஆக வேண்டும். என்ன சொன்னாலும் சரி; கூவம் ஆற்றில் குளிப்பதை விரும்பாவிடினும் ஆங்குக் குளிப்பவர்களே மிகுதி; பொருநை ஆற்றை விரும்பினாலும் ஆங்குக் குளிக்காதவர்களே மிகுதி. என்ன, வேடிக்கையாக இருக்கிறதா? அல்லது எழுதுபவருக்கு ஏதாவது...! என்று தோன்றுகிறதா? முன்னைச் சொல்லியது உண்மையே! உவமை அது; பொருள் வருமாறு: நன்னீர்ப் பொருநை - பொறுமை! சாக்கடைக் கூவம் - பொறாமை! பொறாமை எனினும் அழுக்காறு (அழுக்கு + ஆறு) எனினும் ஒன்றே. இந்த அழுக் காற்றிலே, இழுக்க மிக்க அழுக்காற்றிலே குளிக்காதவர் எவர்? நெஞ்சைத் தொட்டு நேரிய பதில் மொழி யட்டும்! பொறாமை யில்லாதவர் அடிகள் என் முடிமேலன! கூவத்தில் குளிப்பதா? சாக்கடையில் நீராடுவதா? என்று வெறுப்பவர்களும், அழுக்காற்றில் மூழ்காது, நீந்தித் திளையாது இருப்பது இல்லை என்றால், இவ்வாறு நல்லாறு அன்று; அழுக்காறு என்று பெயரிட்டதன் பயன்தான் என்ன? ஆறு என்னுஞ் சொல்லுக்கு நெறி, வழி என்னும் பொருளும் உண்டு. நாம் இரண்டு வழிகளை எடுத்துக் கொள்வோம். ஒன்று நல்வழி—அதாவது தக்க சாலையும், நீரும் நிழலும் சத்திரங்களும் மைல்கல்களும் வழிகாட்டி மரங்களும் உள்ளவழி. மற்றொன்று தூசியும் தும்பும், காடும் மேடும், ஓடையும் உடைப்பும், மலமும் சாணமும் நிறைந்து மூக்கைப் பிடிக்கவும், மூட்டுகளைப் பெயர்க்கவும் செய்யும் வழி. நல்வழிச் செல்வதா? நாற்ற வழிச் செல்வதா? அதிலும் நல்வழியே ஊருக்குச் செல்வதாய் இருக்க, நாற்றவழி புலி கரடி வாழும் பொல்லாக் காட்டுக்குச் செல்வதாய் இருந்தால்? நீராற்றை எண்ணினாலும் சரி, நெடுவழியை எண்ணினாலும் சரி! போகவே போகிறோம்; நீந்தவே நீந்துகிறோம்—நல்லாற்றை நாடினால் என்ன? அழுக்காற்றை விட்டால் என்ன? அழுக்காறு செய்யும் தீமைகள் ஒன்றா இரண்டா? அறத்தைக் கெடுக்கும்! ஆக்கத்தைத் தொலைக்கும்! அழியாப் பகையை ஆக்கும்! அரு நரகத்துத் தள்ளும்! இவை போதாவா? இன்னும் அழுக்காறு செய்யும் கேடுகள் உள. கொடு எனக்கேட்டு ஒன்றை இரந்து நிற்பது இழிவு. வாங்கிக் கொள்க என விரும்பித் தருவது சிறப்பு. இச் சிறப்பினை எவரும் பெற விரும்ப வேண்டும். சிறப்பினையும் பெறக் கருதாமல் கொடுப்பவரே தெய்வக் கொடையாளர். ஒருவன் கொடுக்க நிற்கிறான்; ஒருவன் இழிவென்று பாராமலும் வாங்க நிற்கிறான்; இதனைத் தடுக்கவும் ஒருவன் நிற்கிறான்! தடுக்க நிற்பவனைப் போல் கடையாயவன் ஒருவன் இருக்க முடியுமா? தானும் கொடுக்காமல், பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் ஒருவனை இந்நிலம் பொறுத்துக் கொண்டிருக்கும் காரணத்தால்தான் பொறுமைக்கு நிலம் எடுத்துக்காட்டு ஆயிற்று போலும்! கொடுப்பதை ஏன் தடுக்க வேண்டும்? இவன் கொடுத்துச் சிறப்பு அடைந்துவிடக் கூடாது; அவன் வாங்கி வாழ்ந்துவிடக் TlhJ—v‹d பெருந்தன்மை! அப்பப்பா! உலகம் இத்தகைய நல்லோர்களால் தான் வாழ வேண்டும். பிறன் வாழ்வு கண்டு பொறாமைப் படுவதே தவறு; அதிலும் பிறன் கொடுக்கும் கொடையைப் பொறாமல் தடுத்து நிறுத்துவது மன்னிக்கத்தக்க தவறா? இத்தவறு செய்யும் பேதை தான்மட்டும் கெடுவது இல்லை; தன் சுற்றத்தையும் சேரக் கெடுப்பான். தனக்கும் சுற்றத்திற்கும் உடுக்க வழியில்லாமல், உண்ண வழியில்லாமல் கெடுத்துத் தொலைப்பான்! வள்ளுவர் போலும் அற நெஞ்சும், அருள் நெஞ்சும் கொண்டு உலக நலம் பேணியவர்கள் எவர்? அவரே எவ்வளவு கொதிப்படைந்து கூறுகிறார். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிக் கெடும் அழுக்காற்றின்—பொறாமையின்—கொடுமையை விளக்க வேறும் வேண்டுமா? வேண்டாம் என்றுதான் காவியக் கம்பன் கவி பாடுகின்றான்: எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்கிது அழகோ! தகைவில் வெள்ளி! கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய். முள்ளுடை வேல மரங்கள் செறிந்து வளைந்து நிற்கின்றன. நிழலோ குறைவு; முள்ளோ மிகுதி முள்வேல் காட்டின் உள்ளே செழிப்புற வளர்ந்த வாழையும், பலாவும் நிறைந்த சோலையுண்டு. ஆங்கே போய் நிழல்பெற, சுவைக்கனி பெற வெள்வேல் விடுமா? இவ்வெள்வேல் அன்னவர்களே உள்ளம் உவந்து கொடுக்கக் காத்திருக்கும் வள்ளியோர்களை முந்தி நின்று தடுக்கும் புல்லியர்கள்—பொறாமையாளர்கள்! ஒருவர் செல்வ நிலை கண்டோ, அவர் பிறருக்கு வழங்குவது கண்டோ, வாங்குவது கண்டோ அழுக்காறு கொண்டதால் அவனுக்கு ஆவது என்ன? இவன் பொறாமைப் படுவதால் அவர்களுக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டு விடுமா? இக்கெட்டவன் எண்ணமே அவர்களைத் துன்புறுத்த வல்லதாயின், அந் நல்லவர்கள் எண்ணம் இவனை எப்பாடு படுத்த வல்லது? பெரும்பொருள் இழப்பு ஏற்படுகிறது; அதைப் பொறுக்க முடியாமல் போகலாம். தீரா வலி வருகின்றது: அதனைப் பொறுக்க முடியாமல் ஆகலாம். மானக் கேடு வருகின்றது; அதைப் பொறுக்க முடியாமை ஏற்படலாம். உயிர்த் தொடர்புடையார் இறக்கின்றார்; அதைப் பொறுக்க எவ்வழியாலும் இயலாமை நேரலாம். ஆனால், அடுத்தவன் செல்வத்திலோ புகழிலோ ஓங்குவதைக் கண்டு பொறுக்க முடியாது ஏன் போக வேண்டும்? தன்னால் இயலாத செயல்களை அவனேனும் செய்கின்றானே; தன்னைப் பின்பற்றி வருமாறு வழிகாட்டுகின்றானே; என்று நெஞ்சார வாழ்த்த வேண்டியது இருக்க, பொறுக்க முடியாமல் பொறாமைத் தீயை வளர்த்து ஏன் தன் குடியைச் சுட்டெரிக்க வேண்டும்? எவ்வளவு சொன்னாலும், வாய்ப்பனைத்தும் இழந்துவிட எண்ணிக்கொண்டு இருப்பவன் ஏற்பானா, பழி மூட்டையைப் பாவக் கிடங்காய்ப் போக உறுதி கொண்டவன் பிறர் நல்லுரைகளைச் செவியில் போட்டுக் கொள்வானா? மயிர்க்கால்கள் தோறும் தைத்து ஊடுருவுமாறு சொல்லம்பு தொடுத்தார் வள்ளுவராம் வில்லாளி! அதன் தைப்புக்கு உணர்ச்சி கொள்ளாது மரத்தவன் மரத்தவனே! நாம் என்ன புதிதாகச் சொல்வது; அவர் சொன்னதையே சொல்லி முடிக்க வேண்டியது தான்! கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிக் கெடும்.  18. பூனையும் புலியும் மண்ணுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தவர்கள் விண்ணுலக இன்பத்தை அடைவார்கள். அவர்கள் தேவராகத் திகழ்வர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தேவர்களின் கண்கள் இமையாடுவது இல்லையாம். அதனால்தான் இமையவர் என்று பெயர் பெற்றார்களாம். இச்செய்தியை நூல்களில் கண்ட ஒருவர் நல்ல கற்பனை ஒன்றைப் படைத்துள்ளார். தாமே ஒரு கற்பனைக் கேள்வியை உண்டாக்கிக் கொண்டு, தாமே விடையும் படைத்தார். தேவர்கள் ஏன் கண் இமைத்தல் இல்லை? நேருக்கு நேராக நின்று புகழ்ந்து பேசும் சிலர், தம்மால் புகழப்பட்டோர் சிறிது அகன்றதும் பழிக்கிறார்கள். இத்தகை யர்களுக்கு அஞ்சித்தான் தேவர்கள் கண்ணிமையாது ஒரே விழியாய் விழித்துக் கொண்டு இருக்கின்றனர். இமை மூடித் திறக்குமுன் புறஞ்சொல்லி விடுவார்களாம்; அதற்காகவே! கற்பனை எப்படி நயமிக்கதாயுளது! புறஞ் சொல்லுபவர்களுக்கு இக்கற்பனை போன்ற சுடுசரம் - தீயம்பு - உண்டா? இல்லத்தின் உள்ளே இருந்து, இன்முகம் கொண்டு நன்னீர் அருந்தி நறுஞ்சுவை உணவு உண்டு மகிழ்ந்த ஒருவன், வீட்டிற்கு வெளியே வந்து அவ்வீட்டுக்கே கொள்ளிவைக்கிறான்- இத்தகைய செயலே முன்னால் புகழ்ந்து பின்னால் பழிப்பது! ஊக்கம் உடைய ஆணோ, உள்ளம் உடைய பெண்ணோ புறஞ் சொல்லலாமா? நேரில் சொல்ல முடியாத கோழை; நெஞ்சு விட்டுரைக்க முடியாத வஞ்சகர் என்பதே பொருள். வீரமிருந்தால் நேருக்கு நேர் நில் என்பது போன்று வீரம் இருந்தால், உண்மை இருந்தால் நேருக்கு நேர் சொல்; அதுவே ஆண்மை! திருத்த வேண்டும் என்று கருதினால் உன் நண்பனை நேருக்கு நேர் நின்று சொல்லால் தாக்கு! நன்றாகத் தாக்கு! மீண்டும் உன் முகத்தில் விழிக்க முடியாத அளவுக்குக் கூடத் தாக்கு! வள்ளுவர் கூறுவது போல் இடித்து உரை. தொல் காப்பியர் கூறுவது போல். வேம்பும் கடுவும் (நஞ்சு) போலாயினும் உரை. ஆனால் மறைந்து நின்று பழித்து ஒன்றும் கூறாதே! பகைவனுக்கும் இத்தொண்டினைச் செய்தல் வேண்டாம். உன்னைப் பழிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? பழித்தால்—பழிக்குமேல் பழி! இடித்தால் இடிக்குமேல் இடி! எங்குப் போய் நிற்கும்? நண்பனையாவது முன்னின்று தாக்கலாம்; பகைவனை அதுவும் செய்தல் கூடாது. அவனைக் காணாத இடத்து அவன் சிறப்பியல்களைப் புகழ்ந்துரைக்கத் தொடங்கினால் போதும் — அவன் நண்பாளன் ஆகிவிடுவான். நண்பனே ஆயினும் பின்னின்று பழித்தால் பகைவன் ஆகிவிடுவான். நட்பும் பகையும் நாவில் தான்! இதனைக் கருதிய ஒருவர் உரைத்தார்; பிறரால் புகழப்பெற விரும்பும் ஒருவன் எந்நாளும் ஒன்றைப் போற்றியாதல் வேண்டும். அந்த ஒன்றும் பிறர்பிறர் புகழ்ச் செயல்களைப் பரப்பி, அவர் செய்த பழிச் செயல்களை மறைத்து விடுவதே! மறைந்து ஒன்றைச் செய்தால் என்ன பொருள்? எவருக்கும் தெரியாமல் இருட்டில் செய்யும் எந்த ஒரு காரியமும் நல்ல காரியமாக இருக்குமா? - நிழற் படம் கழுவுவது போல் ஓரிரண்டு செயல்கள் விதிவிலக்காக இருக்கலாம். மற்றயவை? இருட்டிலே செய்வது வஞ்சம், சூது, கொலை, கள்ள வணிகம், கயமை இப்படித்தான் இருக்கும். மையிருள் சூழ்ந்த மதிமறை நாளில் ஏற்படும் தீய நினைவுகள் கொடியவருக்கும், நிறைமதி நிலா வொளி பரப்பும் நாளில் தோன்றுவது இல்லையாமே! இருட்டிலே தோன்றும் கெட்ட நினைவுகள் வெளிச்சத்தில் தோன்றுவது இல்லையாமே! இருட்டில் புரட்டராய் வாழ்வாரும் வெளிச்சத்தின் முன் அற நெஞ்சராய் வாழ்கின்றனரே! ஆக, ஒருவன் வெளிப்படையாய்ப் பேசி, வெளிப்படையாய்ச் செயலாற்றி வருவான் என்றால் அவனது களங்கமற்ற உள்ள நிலைமை தானே வெளியாகின்றது! கள்ளமெல்லாம் உள்ளே வைத்து, உள்ளொன்றும் புற மொன்றுமாக நடித்து வாழுவோன் பெருச்சாளியாகவேனும், மூட்டையாக வேனும், நரியாகவேனும் இருத்தல் வேண்டும்; வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை என்பது பழமொழி. மறைந்து வாழ்பவன் எவன்? மறைந்து குடிப்பது எதை? மறைந்து பேசுவது எதை? மறைந்து செய்வது எதை? இவற்றை எண்ணிப் பார்த்தும் புறங்கூறித் திரிபவர்க்குப், போகாத இடந்தனிலே போக வேண்டாம்; போக விட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம் என்று உலகநாதன் எவ்வளவு உரக்க முழக்கினாலும் ஏறுமா? என்றும் புறஞ்சொல்லலாகாது பாப்பா என்று பாரதி பன்முறை பரிவுடன் வேண்டினாலும் பயன்படுமா? பிறருக்கு மறைத்துப் பேசுவதாக ஒருவன் நினைக்கலாம். அவன் எவ்வளவு சிறந்த நடிப்பாளன் என்றாலும் நெடுநாள் மறைக்க முடியாது. அப்படி மறைத்தாலும் அவன் நெஞ்சையுமா மறைத்து விட முடியும்? நெஞ்சை ஒழித்த வஞ்சகம் உண்டா? நெஞ்சுக்கு இணையான சாட்சி உண்டா? நெஞ்சே, உள் நின்று சிரிக்கும். புறஞ் சொல்லைக் கேட்பவர் காது செவிடா? அவர்கள் பிறரிடம் கூறா ஊமரா? அடுத்தவர் உறங்கினாலும் கதவைத் திறந்து, தட்டி எழுப்பி இன்னார் இன்னபடி உங்களைச் சொன்னார் என்று சொன்னால் தான் வயிறு நிறைந்ததாக, அன்றைத் திருப்பணி இனிது நிறைவேறியதாக மகிழ்பவர்கள் புறஞ் சொல்லாக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது. தொடர்புடையவனே - தான் புறங் கூறியதைப் பிறர் அறிந்தபின் நாணி நிற்க வேண்டியவனே - துணிந்து சொன்னால் சூறைக் காற்றாக - அறையும் பறையாக - இருப்பவன் விடுவானா? அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மாத்திரம்? புறங் கூறுபவர்க்கு மூத்தவரே புற எழுத்தர்! இப்படி ஒருவர் உளரா? அறத்திற்குப் புறம்பான வழியிலே எழுதுபவர் புற எழுத்தர் தானே! வலக்கையிற்குப் பதில் இடக்கையால் எழுதுவது, எவன் பேரிலோ கையெழுத்திட்டு எழுதுவது, பெயர் எழுத வீரமில்லாமல், வீர முழக்கங்கள் காட்டி எழுதுவது - ஆம்! மொட்டைக் கடிதங்கள், முரட்டுக் கடிதங்கள், முறைகெட்ட கடிதங்கள் என்றெல்லாம் பட்டங்கள் பெறுமே அக் கடிதங்களை எழுதுவது - அதனால் எவன் குடியையாவது கெடுப்பது - இத்தொண்டு செய்யும் பெரியவரே புற எழுத்தர்! இப்புற எழுத்துத்தான் புறஞ்சொற்பூனை பெற்றுவிட்ட புலிக்குட்டி! தாய் எட்டடி தாவினால், குட்டி பதினாறு அடி தாவாதா? புறச் சொல்லையும், புற எழுத்தையும் சொல்லுபவர்களும் எழுதுபவர்களும் போகட்டும்; கேட்டுத் தொலைக்கிறார்களே! நம்பித் தொலைக்கிறார்களே! இவர்கள் தாம், உண்மையாக நேர்முக உரைக்குப் பாடை கட்டுபவர்! இவர்கள் செவிசாய்த்து, பல் காட்டிக் கேட்காவிட்டால் எவனாவது புறங்கூறுவானா? உங்களை இன்னான் இன்ன இன்னபடியெல்லாம் திட்டினான் என்று ஒருவன் மன்னனிடம் சொன்னானாம்! பரிசும் பாராட்டும் கிடைக்கும் என்பது அப்புறஞ்சொற் புன்மகன் எண்ணம். மன்னன் சொன்னானாம்;, அவனோ என் காதுக்குக் கேட்காமல் சொன்னான் இவனே நேருக்கு நேர் நின்றுதிட்டினான்; வேறு சாட்சி வேண்டியது இல்லை; இவனைச் சிறைக்குள் தள்ளுங்கள். புறங் கூறத் தொடங்கும் ஒருவனிடம் சீ! நீ ஒரு மனிதனா? என்று ஒரு கேள்வி போடட்டும்! பிறகு யாரிடமேனும் புறங்கூற வாய் திறப்பானா? கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். முன்னால் நின்று இரக்கம் இல்லாமல் கடுஞ்சொல் சொன்னாலும் ஒருவன் முன் இல்லாதபோது அவனைப் புறங்கூறுதல் கூடாது.  19. மக்கட் பதடி “அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்?-அன்பில் ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்? இன் உரைகள் தருபவர் ஆர்?-வீட்டை இன்னகை யாலொளி செய்பவர் ஆர்? எனப்பல வினாக்களை அடுக்கிப்பாடுகின்றார் கவிமணி. இவ்வினாக்களுக்குரிய ஒரே விடை தாயர் என்பதே. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர்களெனச் சொல்வோர்களுள் தலையாயவர் தாயரே! தாயர், மக்கள் நலங்கருதித் தாங்கும் துயர்கள் எத்துணை? எத்துணை? தாயர் எவ்வாறு தமக்கு வரும் துயர்களைத் தாங்குகின்றார்? என்று வினவுவோமாயின் அவரிடம் இயற்கையாய் அமைந்துள்ள தாய்மையால் தாங்குகின்றார் என்ற விடையே பெறலாம். தாயாக மாறிவிட்டேன் என்னும் உவகையால் மகப்பேறு அடையும் துன்பத்திலும் இன்பங் காண்கிறார் தாயர். உலகுக்குச் சிறப்பளிக்கும் ஒருவனைத் தந்துவிட்டேன் என்னும் உவகையால், அவனைச் சான்றோன் ஆக்குவதற்குள் அடையும் துன்பங்களையெல்லாம் துகளாக எண்ணி இன்புறுகிறார். இன்னார் போல இருக்கவேண்டும் என்னும் ஈடிலாச் சிறப்புக்காக எல்லா இன்னல்களையும் புன் முறுவலுடன் ஏற்கின்றார். ஈன்ற பொழுதில் அவருக்கு இருந்தது துளி இன்பம். அம்மா! உன் மகன் நல்லவன், அறிவாளி ஆற்றலாளி; பண்பாளி என்று பிறர் பாராட்டக் கேட்ட பொழுதிலே அது பெருவெள்ளமாகப் பெருகும். அதுகாறும் பட்ட துயரெல்லாம் அடியோடு ஒழியும். இவனைப்பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ என்று பாராட்டத்தக்க மக்களைப் பெறுவதொன்றே தன் பிறவிப் பயனென்று வாழும் தாய்க்கு இணை தாயேதான்! இத்தகையதாயினிடம்சென்றுஉன்மகன் மகனா...சீ...சீஎன்றுஒருவன்இகழ்ந்தல்அவள்மனநிலைஎவ்வறு இருக்கும்? உன் மகன் மகனல்லன்; மக்களுள் பதர் என்றால் எப்படித் துடிப்பாள்! இழிவுற நடந்து, பழிபெறும் ஒருவனை மகன் என்று எண்ணாள்; எண்ணி இன்புறாள். சாந்து இருக்கிறது என்று திறந்த செப்பினுள் பாம்பு இருக்கக்கண்டால் ஏற்படும் நிலைமை என்ன? அதே நிலைமைதான், பேரும் புகழும் தருவான் எனக் கருதப்பெற்ற மைந்தன் பாவமும் பழியும் தரும்போது ஏற்படும். பதர் என்று ஒருவனைப் பழிக்கிறானே; அவனும் பதராக இருக்கலாம் அல்லவா! ஆம்; தீயவன் ஒருவன் ஒருவனை நல்லவன் என்றால் அவன் முழுத்தீயவனாகவே இருத்தல் வேண்டும். தீயவனுக்கு நல்லதாகத் தோன்றுவது தீயதாகத்தானே இருக்க முடியும். அவனுக்குக்கெட்டவன் என்று தோன்றுபவன் எவன்? கெட்டது என்று தோன்றுவது எது? நல்லவனும், நல்லதுமே! இத்தகைய தீயவன் ஒருவன் ஒருவனைப் பதர் என்று பழித்தான் எனில் கவலை இல்லை; கருத்துடன் எண்ணி மகிழவும் செய்யலாம். ஆனால், வீண் சொற்களோ, வெறுஞ் சொற்களோ சொல்லாத ஒருவர், சொல்லத் தொடங்குமுன் சொல்லின்விளைவு, சொல்முறை, கேட்போர் இயல்பு, சொல்வோன் தகுதி, உலகியல் இவற்றை எண்ணியன்றிச் சொல்லாத ஒருவர் ஒரு தாயினிடம் வந்து உம் மகன் மக்களுள் பதர் என்றால் அவ்வுரை பொய்யுரையாமா? அதனைத் தன் காதால் கேட்டதாய் நெஞ்சம் எப்பாடுபடும்? மகனைச் சான்றோன் ஆக்க வேண்டிய தந்தையின் மனநிலைதான் எவ்வாறு இருக்கும்? உன் மகன் கோழை, போரில் புறமுதுகுகட்டினான்;புண்பட்டான்என்றுகூறினான்nபார்க்களத்தில்நின்றுதhக்கஆற்றாமல்ஓடிவந்தஒருபுன்மகன்.தhயும் வாள் எடுத்துக் கொண்டு வன்களம் சென்றாள். போர்புரிதற்காகவா? இல்லை! nகாழை மைந்தன் என்னும் குற்றச்சாட்டு உண்மையானால் தன்னைக் களத்திலே பலியூட்டிக்கொள்ளுதற்கு! ஆனால் புலிக்குகைபோன்ற அம்மங்கைநல்லாள்வயிற்றில்பிறந்தஅவ்வீரச்சிறுவன்மர்பில்புண்பட்டுக்கிடந்தான்.மந்தன் மாண்டான் என்னும் இன்பத்தால் ஈன்ற பொழுதில் பெரிய உவப்பு அடைந்தாள்!இவ்வன்னையிடத்துப்பழிப்புரையாடியnபதையர்nபால்வார்பிதற்றுதல்பற்றிக்கவலைப்படnவண்டியதுஇல்லை.மாண்புடையோர் பழிப்புரைஒன்றேbபாருட்டாகக்கருதத்தக்கது.நெற்பயிர் விளை என்னும் மொழிபோற்றி நடவு செய்த ஒருவன் கதிர்விடும் நாளை எதிர்நோக்கி இருந்தான்; கதிரும் வெளிவந்தது. காவற்காரன் ஓடிவந்து ஐயா, நம் வயலில் நெற்பயிர் கதிர் வாங்கியுள்ளது; ஆனால் எல்லாம் பாலடையாப் பதராய் உள்ளது! என்கிறான். நெற்பயிர் விளைத்தவன் நெஞ்சம் எவ்வாறாகும்? உன் மகன் பதர் என்ற போது தாய் அடைந்த துயர்நிலையில் இவன் நிலை அடையுமல்லவா! இவ்வுணர்ச்சி ஏற்படாத உழவன் உழவனும் அல்லன்; பெற்றோர் பெற்றோருமல்லர்!மகன் பதர் என்னும் பட்டம் பெறுவது எப்பொழுது? கோடி செல்வம் தேடித் திரட்டி வைக்காததாலா? கொல்லும் புலியை வெல்லாததாலா? ஊக்கமுடன் வரும் படையைத் தாக்கி அழிக்காததாலா? அறிவுப் போட்டியிலோ ஆற்றல் போட்டியிலோ திறம் இழந்ததாலா? இவ்வகைகளால் என்றால் பல்லாயிரம் பல்லாயிரம் பேர்கள் பதர்களாக நேரிடலாம். உடல்வலு, உணர்ச்சி, ஒள்ளிய அறிவு இல்லாத அனைவரும் பதரே என்றாக நேரிடும். ஆனால் பதர் என்று எவரைக் குறிப்பிடுகின்றனர்? பயனில்லாத சொற்களைச் சொல்பவன் பதர்; பயனில்லாத சொற்களைக் கேட்டுத் தலையசைப்பவன் பதர்; பயனில்லாத சொற்களைத் தான் விரும்பிக் கேட்டதுடன் பிறர் விரும்புமாறு பேசிப் பொழுது போக்குபவன் பதர்; இவர்களுக்குத் துணை நிற்கும் அனைவரும் பதர். இவர்களைப் பதர் என்று கூறினால் என்ன? இந்த எளிய காரியத்தையும் செய்ய முடியாத இவர்களை ஆயிரம் முறைகள் பதர் என்று பழிக்கலாம்; குற்றம் இல்லை. அரிய மானிடப் பிறவியுற்று, குறுகிய நாள் வாழ்ந்து, பெரும் பெருங் கட்டுப் பாடுகளைச் செய்ய வேண்டிய வாழ்வில் வீண் அரட்டை வம்புப் பேச்சுக்களிலும், வெற்று ஆரவாரப் பேச்சுக்களிலும் தலையிட்டுக் கெடுக்கும் ஒருவனை —ஒருத்தியைப் —பதர் என்பது போன்ற தகுதிப் பட்டம் வேறு இல்லை!நெல்லோடு நெல்லாக வளர்ந்து நெல்லோடு நெல்லாகக் காட்சியளிக்கிறது நெற்பதர்! மனிதரோடு மனிதனாக வளர்ந்து மனிதனாகக் காட்சியளிக்கிறான் மனிதப் பதர்! மணியுடைய நெல்லுக்கும் பதருக்கும் வெளிப்படையான உருவவேற்றுமை இல்லை. பயனில்லாத சொற்களைச் சொல்லித் திரியும் மனிதப் பதருக்கும் பயன் சொல்லுடன் வாழும் மாந்தருக்கும் உருவால் வேற்றுமை இல்லை. நெற்பதருக்கு மணி என்னும் உள்ளீடு இல்லை. மனிதப் பதருக்கும் அறிவு என்னும் உள்ளீடு இல்லை. காற்றிலே தூற்றும்பொழுது நெற்பதர் நெடுந்தொலை சென்று வீழும்! சான்றோர்கள் அவையின் இடையே மனிதப் பதரும் தொலைதூரத்தில் புறக்கணித்து ஒதுக்கப்படுவான். நென்மணி கோட்டைக்குள் போட்டுப் பாதுகாக்கப்பெற, பதர் குப்பைக் குழிக்குப் போகும்! பயன் மொழியாளர் இறவாத நூல்களில் இடம் பெற்று ஓங்க, பதர்களோ புல்லியர் நாவளவில் நின்று நாற்ற மெடுப்பர். நெற்பதர் பிறவிப் பயனை இழக்கும்! மனிதப் பதரும் அப்படியே! நெற்பதருக்கு இணையான மனிதப்பதரை மனிதன் என்பது தகுமா? தகாது; அவன் மனிதன் அல்லன்; மனிதப்போலி; மனிதப் பதர்! மனிதப் பதரைப்பெற்ற எந்தத் தாயும் மன மகிழ்வாளா? ஈன்ற தாயானும் வெறுக்கப்படும் மனிதப் பதரின் நிலைமை இரங்கத்தக்கதுதான். பதர் இருக்கட்டும்; ஒருவன் எப்படிப் பதர் ஆகின்றான்? எந்த வேளையும் இல்லாமல் சுற்றித் திரிவதே திருப் பணியாகக்கொண்டு அலைபவன் பதர் ஆகின்றான்—பயன் படாத—பயன்படுத்தப்படாத—இரும்பு துருவேறிக் கெடுவது இல்லையா? சோம்பலே சுகம் எனக் கொண்டு இருந்த இடத்தை விட்டு எழும்புவதும் ஒரு பெரிய மலையைப் புரட்டுவதாகக் கருதுபவன் பதர் ஆகின்றான். தன்மானம் இல்லாமல் பிறரைக் காரணமின்றிப் புகழ்ந்து பேசிப் பிழைக்க முனைபவன் பதர் ஆகின்றான். நூலறிவோ நுண்ணறிவோ இல்லாமல் தன்னறிவைத் தவறாக எடைபோட்டுச் சொல்வோர் உரையைக் காதில் போட்டுக் கொண்டு புலம்பித் திரிபவன் பதர் ஆகின்றான். செல்வ வளர்ப்பாலும், கவலையற்ற வாழ்வாலும் பயனற்றவை சொல்லி, பயனற்றவை செய்து பதர் ஆகின்றான். கையால் அளக்க வேண்டியதை வாயால் அளந்து களிப் படைபவன் பதர் ஆகின்றான். பயனற்ற ஒரு நாளைச் சங்கப் புலவர் ஒருவர் பதடி வைகல் என்றார். பயனின்றிக் கழிந்த ஒரு நாளே பதடி வைகல் (பதர்நாள்) ஆகும்பொழுது பயனில்லாத சொற்களைப் பேசியே வாழ் நாளெல்லாம் கழிக்கும் ஒருவனை என்னென்பது? மக்கட் பதடி எனல் தகும். வள்ளுவர், பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்; மக்கட் பதடி எனல் என்கிறார்.  20. தீயும் தீமையும் கதிர் எழுவதில் பேரின்பம் கண்ட காட்டு மனிதன் காரிருளைக் கண்டு அஞ்சினான். கொடிய விலங்குகள் காரிருளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னைச் சூறையாடுவதைக் கண்டு துன்புற்றான். எப்பொழுதுவிடியும் என்று எதிர்பார்த்துக் கிடந்தான். பொழுது விடிந்தால்தான் தனக்கு விடிவு உண்டு என்பது அவன் எண்ணத்தில் ஆழமாகப் பதிந்து இருந்தது. இந்நிலைமையில் கதிரோன் கிழக்கே எழுந்தால்—அது கதிராகக் காட்சியளிக்குமா?—கடவுளாகவே காட்சி தந்தது; கைதூக்கி வணங்கினான்; வாயார வாழ்த்தினான். இருள் வரும்; ஏக்கமும் உடன் வரும்; பொழுது விடியும்; வேதனை குறையும்—இப்படித்தான் நாளும் பொழுதும் கழித்தான். இரவில் கவலையின்றி இருக்க வழியில்லையா என எண்ணினான். அவன் எண்ணம் அவனைச் சுற்றிப் பற்றி எரியும் தீயில் படிந்தது. அதில் நன்றாக ஊன்றியது. கற்களையும், மூங்கில்களையும் தேய்த்துத் தேய்த்துத் தீ உண்டாக்கினான். இயற்கையைக் கண்டு கண்டு தோய்ந்த அறிவால் படைத்த படைப்பு அது. அதனை வளர்த்தும், துணிப் பந்தங்களில் பற்ற வைத்துப் பிடித்தும் தீய விலங்குகளின் அச்சத்தைக் குறைத்தான். தீமையை ஒழித்துக்கட்ட அவன் கண்ட கருவி தீயாயிற்று. தீ புல்லில் பற்றி எரியும்போது பொரிந்து விழுந்த புல்லரிசி சுவை மிக்கதாய் இருக்கக் கண்டான்; கிழங்கும் காயும் பக்குவமாதலைக் கண்டான்; ஊன், வாய்க்கு மெதுவாகப் பதப்படுதலைக் கண்டான்; - படிப்படியாகத் தீயின் துணையால் வயிற்றுத் தீத் தணிக்கும் சுவைப் பொருள்களைப் படைத்து இன்புற்றான்; பிறரையும் இன்புறச் செய்தான். மூளையால் வளர்ந்த மாந்தன் மேலும் முன்னேற்றங் கண்டான், சுட்டுப் பதப்படுத்தும் தீயால் உடலைச் சுட்டு நோய்களைத் தீர்க்க முடியும் என்பது அவன் தெளிவு ஆயிற்று. அதன் விளைவு தான், மாடுகளுக்குச் சூடுபோட ஏவியது; பிறந்த குழந்தைகளுக்கும் சூடுவைக்கத் தூண்டியது. வளர்ந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான மருத்துவ இயலும் தோல் நோய்க்கு மருந்தாகச் சுடச் சொல்கின்றது. ஆனால், தீயால் இல்லை; சூட்டுக் கோலால் இல்லை; மின்சாரத் தீயால்; விஞ்ஞானக் கருவிகளால்! தீ - தீதானே! சுடுவதுதானே - சூடு ஏற்றி நோய் தணிப்பதுதானே முறை! தீ இந்நாளில் என்ன என்னவெல்லாம் செய்கின்றது? புகை வண்டியைச் செலுத்துகின்றது; உந்து வண்டியை இயக்குகின்றது; விமானத்தைப் பறக்க வைக்கின்றது. இன்னும் பலப்பல செய்கின்றது. தீயில்லையேல் ஒளி இல்லை; சுவை இல்லை; ஆற்றலும் இல்லை என்று ஆகிவிட்டது. தீயால் கெடுதல் ஏற்படுவது இல்லையா? எத்தனை எத்தனை ஆலைகளை வீடுகளை உண்டு ஏப்பமிடுகின்றது தீ! எத்தனை மக்களை, உயிர் வகைகளை, பொருள்களைச் சுட் டெரித்துச் சாம்பல் ஆக்குகின்றது தீ! தீயைப் போலும் கொடுமை செய்யும் ஒன்று உண்டா? தீயின் கொடுமையை அறிந்துதானே, அத்தன்மையை உடையவனைத் தீயன் என்றும், அவன் செய்யும் தீச்செயலைத் தீமை என்றும் பெயரிட்டனர். என்னும் எண்ணங்கள் கிளைக்கலாம். அவ்வாறு கிளைப்பது நல்லதே - தெளிவு பிறக்கும் ஆதலால். தீ வழியாகத் தீமை உண்டாவது உண்மை தான். எப் பொழுது தீமை உண்டாகிறது? அதன் மீது மனிதன் தன் குணத்தை ஏற்றிவிட்டுச் செலுத்தும்பொழுது தீமை செய்கிறது. புகைவண்டி இயக்கியாக வைத்து மனிதன் செலுத்தும் பொழுது அது நன்மை செய்கின்றது. அதனைத் துப்பாக்கி முனையில் வைத்து, மனிதன் தன் கைமுத்திரையை வைத்து அனுப்பும் பொழுது கொலைத் தீமை புரிகின்றது. இது தீயின் முத்திரையா? தீயவனின் தீமை முத்திரையா? வழிகாட்டும் ஒளி விளக்காகப் பயன்படுத்துகிறான் ஒருவன்; அதே தீயை அடுத்த வீட்டைக் கொழுத்தப் பயன் படுத்துகிறான். தீ கக்கும் மருந்தால் தீராப் பிணியைப் போக்க முனைகிறான் மருத்துவன்; தீ கக்கும் வெடி மருந்து கண்டு துடிதுடிக்க வைக்கிறான் மரத்துப் போன அறிவாளி ஒருவன். இவை தீயின் குற்றமா? தீமையின் பழியா? தானாகத் தீப்பிடித்து அழிப்பது இல்லையா? உண்டு; நீரால் அழிவு இல்லையா? நிலத்தால் அழிவு இல்லையா? காற்றால் அழிவு இல்லையா? எல்லாவற்றாலும் அழிவு உண்டு! கட்டி வைத்த வீடு விழுந்து உள்ளிருப்பவன் காலனுலகு செல்கின்றான்! விழுங்கும் சோறு விக்குதலால் பிணமாகின்றான்; தீயால் அழிவு ஏற்படுவதில் வியப்புக்கு என்ன இருக்கிறது? எச்சரிக்கை வேண்டும்; இல்லையேல் இயற்கைக்கு இரையாக வேண்டியதுதான். மலைப்பாறை உருண்டு வந்து அழிப்பதைக் குற்றமென அதன் மீது ஏற்றலாமா? ஒதுங்கிக் கொள்ளும் எச்சரிக்கை இல்லாத மனிதப் பாறை மீது குற்றத்தைச் சுமத்தலாமா? ஒதுங்கிக் கொள்ளமுடியாத இக்கட்டான நிலைமை என்றால்— மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்! பாறைமீது குறைப்பட ஒன்றுமில்லை. இப்படித்தான் தீமீதும் குறைப்பட ஒன்றும்இல்லை. தீயை அறிந்தோம்; தீயவனைப் பார்த்தோம்! சுடும் தீயிற்கு அஞ்ச வேண்டுமா? சுட்டெரிக்க ஏவிவிடும் தீமைக்கு அஞ்ச வேண்டுமா? கொதித்து எழும்பும் எண்ணெய்க் கொப்பரைக்கு அஞ்ச வேண்டுமா? கொதிக்கும் அக் கொப்பரையில் தூக்கிப்போடும் கொடுமைக்கு அஞ்ச வேண்டுமா? கொடிய சொற்களுக்கு அஞ்ச வேண்டுமா? கொடிய சொற்களைத் தேடி எடுத்து அடுக்கிக் கேட்போரைக் கொதிப்பேற்றிக் கொலைக்குத் துணை செய்யும் வன்கொடுமைக்கு அஞ்ச வேண்டுமா? ஆம்! அறிவும் உணர்ச்சியும் இல்லாத பொருள்களுக்கு அஞ்சி வாழ வேண்டியது இல்லை. அவை ஒரு தன்மை பற்றியன. அவற்றை அடக்கி ஆள்வோன் கருத்துக்கு ஏற்பத் தொண்டாற்றித் துணைபுரிவன. அல்லது அழித்துக் கெடுப்பன. ஆனால் உணர்ச்சியும் அறிவும் உடைய மனிதன் தான் தேடிப் போய்த் தீமை செய்வான். உள்ளத்தே கருவாக வைத்திருந்து காலம் அறிந்து தீமை புரிவான். தீமை புரிந்ததாக வெளிக்கும் தெரியாமல் அடக்குவான். தான் செய்த தீமையைப் பிறர்மேல் ஏற்றிப் பெருந்தீமையும் புரிவான். ஆனால் உயிரற்ற அற்பப் பொருள்களோ இவற்றைச் செய்யா. இவ்வாறு எண்ணினால் தீயின் சிறப்புப் புலப்படும்; தீமையின் இழிவும் புலப்படும். தீ வேறு; தீமை வேறு; தீ நன்மை செய்யும் ஓரொரு வேளை பிறர் ஏவுதலாலும் இயற்கை விளைவாலும் கேடு செய்யும். அதற்கு அத் தீ காரணமில்லை. ஆனால் தீமை எந்த ஒரு நன்மையும் செய்யுமா? தீமையிலிருந்து நன்மை காண்பது என்பது நஞ்சிலிருந்து அமுது காண்பது போல்வது. எந்தத் தீமையும் நன்மை ஆகாது. நன்மை வேண்டுமானால் செய்யத் தகாத முறையால் செய்யப் பெற்றுத் தீமை விளைக்கலாம். எந்த நல்ல முறையால் செய்தாலும் தீமை தீமைதான் தரும். வேண்டுமானால் நுண்ணறிவுடன் செய்யும் தீமை - மற்றைத் தீமைகளினும் - பல்லாயிர மடங்கு தீய விளைவுகளை ஆக்கலாம். இவ்வளவும் தெளிந்த பின் தீயிற்கு அஞ்சவேண்டும் என்போமா? தீமைக்கு அஞ்சி ஒடுங்கவேண்டும் என்று உறுதி செய்வோமா? தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் என்று திருவள்ளுவர் அச்சுப் புத்தகங்களின் வாயிலாகப் பேசு கின்றார். ஆனால் தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப் படும் என்று தான் வள்ளுவர் பேசியிருப்பார் என எழுதுகிறார் பெரும் புலவர் அரசஞ் சண்முகனார். ஏனெனில், தீயவே தீய பயக்கும் தீ தீமை அன்றி நன்மையும் பயக்கும். அதனால், தீயவே என ஏ தெளிவு கருதி இடப் பெறல் வேண்டும்; யானே கள்வன் என்று முடிவுரைக்கவில்லையா பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். வள்ளுவருக்குச் சிறப்பளிக்கும் உண்மை மாற்றங்களை ஏற்றுக்கொள்வதால் குற்றமில்லையே!  21. மருந்து மரம் மருந்தை நினைக்கும் பொழுது மனத்தைக் குமட்டுவது உண்மைதான் ; வாந்தியெடுப்பதும் மெய்தான்; எப்படி இருந்தாலும் அதனைப் போற்றாமல் இல்லை; அதன் அணைப்புக்கு ஆட் படாது இருப்பதும் இல்லை. மருந்து, கசப்பு மிக்கது ஆகலாம்; கொதிப்பு மிக்கது ஆகலாம்; நாடி நரம்புகளிலெல்லாம் புகுந்து அதிர்ச்சியூட்டலாம். இருந்தாலும் அதன், பின் விளைவை எண்ணிப் புறக்கணிக்காமல் போற்றித்தான் ஆகவேண்டும், நோயாளர் மட்டும் அன்றி நோய் இல்லாரும்! என்றேனும் ஒருநாள் நோயர் ஆகலாம் அல்லவா! மருந்தின் நலம் அறிந்த பெரியோர்கள் மருந்து அமிழ்து போன்றது என்றனர். முன் கைத்துப் பின் இனிக்கும் ஆன்றோர் சொல் போல்வது மருந்து என்றனர். உடன் பிறந்தே கொல்லும் நோயை, ஒன்றாத குன்றின்மேல் நின்றிருந்தும் தீர்க்கும் தன்மையது என்றனர். உயர்ந்தோர் உரைமணிகளை, மருந்தினும் இனிய கேள்வி என்று பெருமைப்படுத்திக் காட்டினர். மருந்து கொடுத்தவர் மருத்துவர் ஆனார்; மருத்துவர் தொழில் மருத்துவம் ஆயிற்று; அவர் மருந்து கொடுக்கும் இடம் மருத்துவமனை ஆயிற்று ; மருந்துச் செடிகளைத் தேடுவதும், தேடிப் பொடி செய்வதும், சாறு இறக்கிப் பதம்படுத்துவதும் புலமையாளர்களால் போற்றப்பெற்று உலக நலங் கருதிய தொண்டு ஆயிற்று. காய்ச்சல் கண்டோன் ஒருவன், அவனுக்கு உரிய மருந்தை அவனே கண்டு பிடித்துத்தான் நோயைத் தீர்க்க வேண்டுமானால், அவன் உடல், உயிரை அதுவரை தாங்கி நிற்குமா? ஆனால், இன்னபடி வெதுப்பு இருந்தால் இன்ன மருந்தை இன்ன அளவில் இன்ன முறையில் தருக என்று எழுதி வைத்தும், பழக்கி வைத்தும் சென்ற பெரியோர்கள் தொண்டு உலக நலங்கனிந்த தொண்டாம்! தாம் கண்ட மருந்தைத் தம் சவக் குழியுடன் மறைத்து வைத்துப் பிறர் அறியா வண்ணம் செய்தவர்கள் அறிவுடைமையால் பெரியர் எனினும், பண்புடைமையால் மிகக் கீழிறங்கி விட்டவர்களே ஆவர்! உலக நலம் நாடும் செயலைத் தந்நலத்தால் மறைத்து விட்டார்களல்லவா! சீதை இலங்கையில் அரக்கியர்கள் இடையே நைந்திருந்து துன்புற்றாள். அத்துன்பினை நினைக்கும் காவியக் கம்பனுக்கு மருந்தே முந்தி நிற்கின்றது. பாறைகளின் நெருக்கலுக்கு ஆட்பட்டு, மழைத்துளி வரக் காணாத மருந்து மரம் போலத் துன்புற்றாள் என்கிறான். பாறைகளாக அரக்கியர் உளர்; மழைத் துளியாக இராமன் உளான்; மருந்து மரமாகச் சீதை உளாள்! இவ்வுவமையில் நோக்கத்தக்கது என்ன? உலகுக்குப் பயன்படும் மருந்து, ஏதுமின்றி வறண்டு கிடக்கின்றது என்பதே. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் என்பவன் ஈதலும் இசைபட வாழ்தலும் பொருளெனக் கொண்ட பெருவள்ளியோன். அவன் தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இல்லை என்னாது எல்லையின்றி ஈந்தான். இருக்கும் பொருள் அனைத்தும் கொடுத்துத் தீர, இன்னும் இரப்பவர் பெருகினர். என் செய்வான்? வீரனான அவன் வேல் எடுத்துக் கொண்டு போர்க் களம் சென்றான்; பகைவரை வென்றான்; ஆங்குப் பெற்ற பொருள்களால் இரவலர் துன்பம் போக்கி இன்புற்றான். இத்தகைய ஈர்ந்தூரான் உடல் எவ்வாறு காணப் பெற்றது? கண்ணால் காண ஆற்றாத வடுக்களுடன், வெட்டுப் புண்களுடன் தோன்றியது. மருந்து கொள்ளத்தக்க மரத்தில் எத்தனை வெட்டுகள்—கிழிப்புகள்—சிறாய்ப்புகள்! அத்தனையும் ஈர்ந்தூரான் உடலில் இருந்தன. மருந்துமரம் படும்பாடும், பயனும் ஈர்ந்தூர் கிழான் வழியாக விளக்கப் பெறுகிறது அன்றோ! இலை தழைகளாகத் தோன்றலாம்; அழியலாம்; குப்பையை மூடலாம்; கோபுரத்தில் முளைக்கலாம். ஆனால், மருந்து மரமாகத் தோன்றுதல் எவ்வளவு பேறு! காட்டகத்தே தோன்றிக் கண்ணுக்குத் தெரியாது போயொழியும் மரத்தால் யாருக்குப் பயன்? ஊரகத்தே தோன்றி உயிர்காக்கும் மருந்து மரமாகக் கிளைத்து வளர்வது எத்தகு நலம் பயக்கும்? மருந்து மரமாகத் தோன்றுவது போலும் பிறவிப்பயன் இல்லை. கோவிலகத்தே, புல்லாய் முளைக்க, கல்லாய்க் கிடக்க விரும்பிய அடியார்களும், மருந்து மரமாய் முளைக்கக் கேட்பது சிறக்கும் போலும்! மனிதனாகப் பிறந்து விட்டபின் மருந்து மரத்தைப் பற்றி நினைத்துப் பயன் என்ன? அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப் பட்டு ஆவது என்ன? என்னும் எண்ணங்கள் கிளைக்கலாம். நம் வாழ்வை மருந்து மரம்போல் பயன்படுத்தி விட்டால் போதும். நாம் மருந்தாகப் பயன் படலாம்; நாம் தேடும் செல்வத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம். அவ்வளவு போதும். எப்படி மருந்தாகப் பயன்படுவது? பயன்படுத்துவது? மருந்து போல் பிறர் துயர் துடைத்தற்குத்தான் வாழ்தல் வேண்டும். செல்வம் தேடுகிறோம்; அச்செல்வத்தைப் பிறர் பசித்துயர் தீர்க்க, வறுமைப்பிணி அகற்ற, கல்வியின்மை போக்க பயன் படுத்தினால், - அதாவது அற நிலையங்களும், மருத்துவ நிலையங்களும், கல்வி நிலையங்களும் அமைக்கப் பயன்படுத்தினால் அச்செல்வம் மருந்து மரம் ஆகாதா? நம் பொருட் செல்வம் மட்டும்தான் பிறருக்குப் பயன் படுகிறதா? வேறு செல்வங்கள் இல்லையா? அவற்றைப் பயன் படுத்துவதும் மருந்து மரமே! தம் பொருளாகத் தம்மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊருக்கு உழைக்க, உயர்ந்த கண்டு பிடிப்புக்கள் செய்ய, அறத் தொண்டு புரிய முற்பட்டால் அப்புதல்வராம் செல்வம் மருந்து மரமே! ஏழைக்கு எழுத்து அறிவிக்கும் நற்பணியை இனிது நடாத்துவோன் பெற்ற கல்விச் செல்வம் மருந்து மரமே. தன்னடையைக் கண்டு பிறரையும் நடக்கத் தூண்டி நல் வாழ்வு வாழ்வோன் பண்புடைமைச் செல்வம் மருந்து மரமே. உயிரோட்டம் ஆகும் குருதி ஓட்டம் குறைந்து உயிருக்குப் போராடி நோய்க்கிடையில் கிடக்கும் ஒருவனுக்குத் தன் உடலிலிருந்து ஒரு துளி அளவிலேனும் குருதி யளிப்போனது குருதிச் செல்வமும் மருந்து மரமே! குப்பை கூளங்களைக் கண்ட இடங்களில் கொட்டாதவாறு மலநீர்களை நடைபாதையில் கழிக்காதவாறு பொது இடங்கள் தூய்மை இழக்காதவாறு மன்றங்களும், அவைகளும், கோவில்களும் தகுதி இழக்காதவாறு உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் தொண்டுச் செல்வமும் மருந்து மரமே! பிறருக்குப் பயன் படும் அனைத்தும் மருந்து மரமே. இவ்வாறு மருந்து மரமாக வாழ முயன்றால் வேறும் இன்ப உலகம் உண்டா? இவ்வுலகமே இன்ப உலகம் என்றும், இங்கு வாழ்பவர்களே தெய்வ நிலை வாழ்வுடையவர்கள் என்றும் ஆதல் உறுதி. ஆனால், நாமும் நம் செல்வமும் மருந்து மரமாக விளங்க வேண்டுமே! விளங்க, ஒன்றே ஒன்று வேண்டும்; அது பெருந் தகைமை என்பதே. பிறர் வாழத் தான் வாழ்தலே பெருந்தகைமை! மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.  22. எது ஈகை? ஒருவன் ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுத்துத் திரும்பப் பெறுகிறான்; இதற்குக் கைமாற்று என்று பெயர்.ஒரு பண்டத்தைக் கொடுத்து வேறொரு பண்டத்தைப் பதிலுக்குப் பெறுகிறான்; இது பண்டமாற்று ஆகிறது, பணத்தால் ஒரு பொருளை வாங்குகிறான்; பணத்திற்கு ஒரு பொருளை விற்கிறான் - இது வணிகம் ஆகிறது. இம்மூன்று வழிகளும் வாணிகத்துள் அடக்கிவைக்கத் தக்கவையேயாம்! உடனடியாக ஏற்படும் பொருளாதார நன்மை கருதியோ, அல்லது பின் விளையும் பொருளாதார வாய்ப்புக் கருதியோ கொடுத்து வாங்கப்படுபவை இவை! இவை அல்லாமல், ஒருவர் தம் பொருளைப் பிறருக்குத் தருங்கால் நிலத்தின் மேலோ வீட்டின் மேலோ வேறு ஒப் பந்தத்தின் மேலோ இன்ன காலத்திற்கு இவ்வளவு தொகைக்கு இவ்வளவு வட்டியுடன் என்று பேசி எழுத்துச் சான்றுடன் கொடுப்பது உண்டு. இது வட்டிக் கடன் முறை. திருமணம் காதணி விழா, பூப்பு நீராட்டு, புதுமனை புகுவிழா, இறுதிக்கடன் இவற்றுக்கு உற்றார் உறவினர்களோ, அன்பர்களோ நண்பர்களோ பொருளோ பணமோ தருவது உண்டு. இது வட்டியில்லாக் கடன்முறை இது கைமாற்றுப் போன்றதும் இல்லை; மற்ற முறைகள் போன்றதும் இல்லை. அதே பொருள் மீண்டும் பெறப்படுவது உண்மைதான். அது திரும்பி வராவிடில் தெருவில் திட்டும் வசையுமாகத் திருக் கூத்து நடத்துவதும் மெய்மைதான்! ஆனால் அது எப்பொழுது திரும்ப எதிர்பார்க்கப் படுகிறது? ஏதேனும் ஒரு விழா நடக்கும் பொழுதுதான்! இம்முறை செய்முறை என்றும் வழங்கப்பெறும். இன்னொன்று, அன்பளிப்பு! இதே அன்பளிப்பும் இக்காலத்துத் திரும்ப எதிர் நோக்குவதாகவும், திருப்பி வராவிடில் பழிப்புக்கு உரியதாகவும் போய்விட்டது. சாதாரணமாக, விருந்தோம்பலிலே இதனைப் பார்க்கலாமே! பத்துவகைக் கறியுடன், பாயசம் வடையுடன் விருந்து செய்து அனுப்பினேன். அவன் வீட்டுக்குப் போன என்னை வெற்றிலைபோடு என்றாவது சொன்னானா? என்று கூறுவோரது ஏக்க உரையிலேயே அவர்கள் எதிர்நோக்குதல் தெளிவாகப் புலனாகும். இங்குக் காட்டிய அனைத்தும் செல்வம் உடையவர் செல்வம் உடையவர்க்கு அதிகமாகவோ, குறைவாகவோ, அளவாகவோ உதவும் உதவிகளே அல்லாமல் வாழ்க்கைத் தரத்தின் அடியினும் அடியாய் அமைந்த ஏழ்மையரை எழுப்ப உதவும் உதவி அன்று. வாய்ப்பு உடைய ஒருவருக்குச் செய்யும் எதுவும் வீண் போகி விடுவது இல்லை. பயன் கருதாது செய்தாலும் கூட, பயன் பெற்றவர் அதனினும் பல மடங்காகச் செய்ய முனைகின்றாரே அன்றி வாளா இருக்க நினைவது இல்லை. அப்படி இருந்தால் தம் தகுதிக்கும், செல்வ நிலைக்கும் இழுக்கு என்றே எண்ணு கின்றார்; இத்தகையவருக்குச் செய்வது எவ்வாறு பயன் கருதாதது ஆகும்? எவருக்குச் செய்வது பயன் கருதா உதவி? ஓர் ஏழைப் புலவர் சொல்கின்றார்; அவருக்கு இணையான வறியவர் ஒருவரை அவரால் கற்பனை செய்தும் காண முடியவில்லை; அதனால் வள்ளலிடம் உரைக்கின்றார்; எமக்கு ஈபவர்களே பிறர்க்கு ஈபவர்கள்; எம்மை அன்றிப் பிறருக்கு ஈபவர்கள் தமக்குத் தாமே ஈபவர்கள் இப்புலவர் வறுமைக்கு வேறு சான்று வேண்டுமா? இப்புலவருக்கு ஈந்தவனது வள்ளன்மைக்கு வேறு சான்று வேண்டுமா? புலவர் துறையூர் ஓடை கிழார்! வள்ளல் ஆய் அண்டிரன்! புலவர் ஊர் துறையூர்! வள்ளல் ஊர் ஆய்குடி! பொருள் கருதிக் கொடுப்பது அன்றிப் புகழ் கருதியும் கொடுத்தல் கூடாது; மேலுலக இன்பங் கிடைக்கும் என்னுங் கருத்தாலும் கொடுத்தல் கூடாது; என்றெல்லாம் வள்ளல்கள் கருதினர்; ஈகையால் சிறந்தனர். ஆம்! அக்காலம் ஈகை என்னும் இனிய பறவை விண்ணேறிப் பறந்து இன்புற்ற காலம் எனலாம்! கைமாறு கருதியா பெய்கிறது மழை? கைமாறு கருதியா தருகிறது கனிமரம்? இத்தகையரே வள்ளல்கள்; இன்னவர் இனியவர் என்று பாராது ஈபவர்கள்! வறியவர்க்குக் கொடுப்பது பற்றியும் சில திட்டங்கள் இட்டுள்ளனர் ஆன்றோர். அவர்கள், ஒருவர் கேட்குமுன் அவர் குறிப்பு அறிந்து நிலை அறிந்து ஈதல் வேண்டும் என்றனர். அன்றிப் பன்முறை வற்புறுத்திக் கேட்டுக் கொடுப்பது சிறப்பன்று என்று உரைத்தனர். அன்றியும் பன்முறை நடக்க வைத்துக் கொடுப்பது நடைக்கூலி அல்லது காற்கூலி என்றனர். இவர்களுக்கும் உயரிய நிலைமையில் நின்ற உரக்கப் பேசியவர்களும் உளர். அவர்கள் யான் எதுவும் இல்லாதவன் எனவந்த ஒருவன், மற்றொருவரிடத்துச் சென்று மீண்டும் இச்சொல்லைச் சொல்லாத அளவுக்கு மிகுதியாகக் கொடுத்தல் வேண்டும் என்றனர். இத்தகையோர் கையே, நெடுங்கை என்றும் தருகை என்றும் குறித்துள்ளனர். ஒருவன் கையினும் மற்றொருவன் கைதாழக் கூடாது; உயர்தல் வேண்டும். இத்தகைய உயர்வு ஈகையில்தான் உண்டு என்றனர். ஈவோர் கை முடங்கக் கண்டது இல்லை என்பது அவர்கள் முடிவுரை. ஈகையால் பெயர் சிறந்த நாடு இந்நாடு. வள்ளல்களின் புகழ் பாடுதலில் பெருமையுறும் இலக்கியங்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ் மொழி; தமிழ்ப் புலவர் நா! இத்தகைய நாட்டிலே ஈகைச் சிறப்புப் பற்றி அறியக் கிடக்கும் குறிப்புகள் ஏராளமாம். அவற்றின் முடிந்த கருத்துக்கள் என்னவென்றால், ஈகையும் இசைபட வாழ்தலுமே பிறவிப்பயன் அவ் வீகை வறியார்க்கு ஈவதே யாம்! பிறருக்கு ஈவதெல்லாம் மீண்டும் பெறுதல் கருத்துடன் தருவதே யாம். வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறியெதிர்ப்பு-திரும்பப்பெறுதலைக் குறியாக உடைமை) 23. சிறியர்க்கு அரியதும் பெரியர்க்கு எளியதும் உலகந் தோன்றிய நாள் தொட்டே பிறப்பும் உளதாயிற்று. இறப்பும் உளதாயிற்று. மனிதன் உடைமையைத் திரட்டி வைக்கத் தொடங்கிய காலந் தொட்டே வாழ்வும் உளதாயிற்று; வறுமையும் உளதாயிற்று, பிறப்பு இறப்பு, வாழ்வு வறுமை ஆகிய இவை காலம், இடம், இனம், மொழி, நிறம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிலைப்பதாயிற்று. இவை இல்லா உலகம் வியப்புக்கு உரியதே அன்றி, உள்ள உலகம் வியப்புக்கு உரியதாய் இல்லை. பிறப்புக்கு மனிதன் மகிழ்கிறான்; விழாவும் செய்கிறான்; எல்லோர் பிறப்புக்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு எனினும், வாழ்வோர் குடியில் பிறக்கும் பிறப்பிற்குத் தனிப் பெருமை உண்டு. மன்னவர் குடிப் பிறப்புக்கு நாடே விழாக் கோலம் பூணும் நற்பேறு உண்டு. ஆனால் எவர் இறப்புக்கும் விழாச் செய்வது இல்லை. இரங்கல் கூட்டம் நடத்துவது உண்டு. இதே போல் வாழ்வு கண்டு மகிழ்வதும், வறுமை கண்டு வருந்து வதும் எங்கும் காணற்கு உரியவே! எல்லோர் பிறப்பும் மகிழ்வுக்கு உரியதா? எல்லோர் இறப்பும் துன்புக்கு உரியதா? எல்லோர் வாழ்வும் இன்புக்கு உரியதா? எல்லோர் வறுமையும் துன்புக்கு உரியதா? அவன் இருந்தால் என்ன? போனால் என்ன? என்று பிறர்கூற வாழ்வோர் இல்லையா? இருந்துங் கெடுத்தான் இறந்துங் கெடுத்தான் என ஏசப்படுவோர் இல்லையா? அவனுக்கு இத்தகைய வறுமையா? என்று ஏங்குமாறு வறுமையுறும் நல்லோன் இல்லையா? இவனுக்கு இத்தகைய வாழ்வா? என்று வருந்துமாறு வாழும் பொல்லாதவன் இல்லையா? சிலர் வாழ்வை வெறுக்கிறோம்; இத் தீயவனும் வாழ் கிறானே என வெதும்புகிறோம்; இவ்வஞ்சகனுக்கும் வாழ்வு அளிக்கிறானே இறைவன்என நோகிறோம்: இக் கொலைகாரனும் ஏமாற்றிப் பொய்ச்சான்றால் மெய்யன் ஆகித் தப்பி விட்டானே, அறத்திற்குக் கண்ணில்லையா என்று பழிக்கிறோம்; பட்டப் பகலிலே கொள்ளையடித்து வாழும் இப்பாவி கோடீசுவரன் ஆகி விட்டானே; இருள் கவ்வி விட்டதா நாடு ஆள்வோரை என்று துடிக்கிறோம். இதே போல், கோடி கிடைத்தாலும் சொன்ன சொல் மாறாத நாநயம் உடைய இவனுக்கோ இவ்வறுமை; வஞ்சம் சூது அறியாத இவனுக்கோ இவ்வளவு அல்லல்; கொடையும் தயையும் பிறவிக்குணமாகக் கொண்ட இவனுக்கோ இக் கொடுந் தாழ்வு; பிறர் பொருளுக்கு எள் அளவும் விரும்பாமல் வாழ்ந்த இந்நல்லோனுக்கோ இப் பேரிழப்பு என்று பேசுகிறோம். முன்னவன் வாழ்வை வெறுக்கும் அளவினும் பன்னூறு மடங்கு பின்னவன் வறுமைக்கு வருந்து கின்றோம்; அழுகின்றோம்; அரற்றுகின்றோம். முன்னவன் செல்வத்தைத் திரட்டி மலைபோல் குவித்து வைத்திருக்கலாம்; பின்னவன் வறுமைப் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கலாம். என்றாலும் எவனுக்குப்பழி? எவனுக்குப் புகழ்? எவன் கால்படும் தூசியாகின்றான்? எவன் தலைமேல் சூடும் மணிமுடியாகின்றான்? முன்னவன் செல்வம் பழிவளர்வதற்கு ஏதுவானது. பழிச் செல்வம் சீரியதா? புகழ்வறுமை சீரியதா? என்று பண்பிலா உலகில்—பண உலகில்—கேட்டால்—பழி வருகிறதா புகழ் வருகிறதா கவலையில்லை— பணம் வருகிறதா அது போதும்; நாய்விற்ற காசு குரைக்கவா செய்யும்; நரகலில் கிடந்த காசு நாறவா செய்யும் என்று பதில் கூறும். ஆனால் அறன் உணர்ந்த சான்றாண்மை உலகில் கேட்டால் வறுமையோ வாழ்வோ அது பற்றிக் கவலையில்லை. புகழே வேண்டும் என்னும். வெளிப்படையாகக் கண்காண மலை தோன்றலாம்; பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே வைரமும் தங்கமும் ஆழ்ந்து கிடக்கலாம். ஆழத்தில் கிடக்கிறது என்பதற்காக வெளிப் படையாக நிற்கும் மலைக்கல்லை மதிக்க முடியுமா வைரத்தினும்? அதன் அருமையை நோக்க வேண்டாமா? என்று சான்று காட்டித் தெளிவு படுத்தும்.வாழ்வு என்பது என்ன? மன நிறைவே வாழ்வு! போதும் என்ற மனமே பொன்! வறுமை என்பது என்ன? இது இல்லையே என்று ஏங்கும் ஏக்கமே வறுமை! ஆசையே துன்பம்-வறுமை! வசை ஒழிய வாழும் வாழ்வே உயிர் வாழ்வு என்று உண்மை உரைத்தார் வள்ளுவர்; அவரே இசை ஒழிய வாழ்பவரே (பழியுடன் வாழ்பவரே) இறந்தவர் என்ற மெய்ம்மை மொழிந்தார். வாழ்வும் அடையலாம்; வறுமையும் அடையலாம்—எந்தவொரு கேடும் இல்லை; நன்மையும் இல்லை. பிறக்கலாம், இறக்கலாம்—இவையும் அத்தகையவே. பெற்றது புகழா, பழியா? என்பதே எடைபோட்டுக் காணவேண்டிய பொருள். நல்லோர் வாழ்வு போற்றப்படுகிறது; நல்லோர் வறுமை மிகப் போற்றப்படுகிறது; தீயோர் வாழ்வு பழிக்கப்படுகிறது; தீயோர் வறுமை மிகப் பழிக்கப்படுகிறது. நல்லோர் மறைவு உலகோர் நெஞ்சை அசைக்கிறது. தீயோர் மறைவு உள்ளத்தைத் தொடுவதே இல்லை. உலகியல் இவ்வாறு அமைவது ஏன்? வாழ்வும் வறுமையும், பிறப்பும் இறப்பும் உலகப் பொது; எல்லோர்க்கும் உரிமைப் பொருள்; எவராலும் நீக்குதற்கு அரியது; பிறப்புடன் நிழல்போல் தொடர்ந்து நிலைப்பது. இவற்றை அறிவுடைய பண்புடைய மாந்தர் வென்று நிமிர்ந்த நடை போடுகிறாரா இல்லையா? இவர்கள் வரலாறு நமக்கு என்ன காட்டுகின்றது? புகழ் வளர்வதற்குக் காரணமான வறுமையைப் பெறவேண்டும் புகழ் வளர்வதற்குக் காரணமான சாவினைப் பெறவேண்டும் வறுமையால் புகழ் வருமா? ஏன் வராது! பொருளைச் சூதிலே தொலைத்தால், கள்ளிலே கவித்தால், ஆடம்பரச் செயல்களில் அழித்தால் ஆடாத ஆட்டம் ஆடினான்; கெட்டான் எனப் பசிப் பழிக்கும் உலகம். ஆனால் பள்ளிக்கூடம் தோற்றுவிப்பதிலே, மருத்துவமனை கட்டுவதிலே, ஊர்க்கிணறு தோண்டுவதிலே வாசக சாலை, நூலகம் நிறுவுவதிலே வறியார்க்கு உதவுவதிலே ஒருவன் வறுமையுற்றால் எவரேனும் செய்யத் தகாதன செய்தான்; கெட்டான் என்பரோ? என்பார் உளராயின், அவரைப் போலும் கொடியவர் முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அல்லது வள்ளுவர் அறைவது போல் கொடுப்பதைத் தடுக்க நினைக்கும் கொடியோன் குடும்பத்துடன் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவான் என்று சாபம் போடவேண்டும். இனிப் புகழ்வரும் இறப்பு உண்டா? ஏன் இல்லை! ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவு புகழுக்குரியதா? பழிக்குரியா? கணைக்கால் இரும்பொறையும், பிசிராந்தையாரும் கபிலரும் மானத்திற்காகவும் உயிரோடு உயிரான நட்புக்காகவும் உயிர் துறந்தது புகழுக்குரியவா? பழிக்குரியவா? இவை பழிக்குரிய சாவுகள் என்றால் அவர்களுக்காக அந்தோ என இரங்கல் தெரிவிக்க வேண்டியதுதான்! ஏன்? பழிவாழ்வு வாழ்கிறார்கள் அல்லவா! புகழ் வளரும் வறுமையும், சாவும் எவருக்குக் கிடைக்கும்? ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்குக் கிடைக்கும்; எளிதிலும் கிடைக்கும்; பிறருக்குத் தான் அரிது. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.  24. அருட் செல்வர் நெசவு ஆலை உரிமையாளருக்கு வேட்டிப் பஞ்சம் இருக்க முடியாது. கரும்பு ஆலை உரிமையாளர்க்குச் சருக்கரைப் பற்றாக்குறை இருக்க இயலாது. இவைபோல உலகத்து உயிர்கள் அனைத்தின் மீதும் பேரருள் செலுத்திவரும் பெருந்தகைமை யாளருக்குத் தன்னுயிருக்கு அஞ்சும் நிலைமை இருக்காது. பன்னீரைப் பிறருக்கு இறைப்பவனுக்குப் பன்னீர்த் துளி விழாதா? அதன் மணம் மணக்காதா? இது போலவே அருளை வெள்ளமாக இறைப்பவனுக்கு அருள் மழை பொழியாதா? அதன் இன்ப நலம் எய்தாதா? தீமையாகட்டும் நன்மையாகட்டும் நாமே தேடிக் கொள்வதுதான்; உயர்வு ஆகட்டும் தாழ்வு ஆகட்டும் நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வது தான் இது பழந்தமிழர் பண்பாட்டுத் தெளிவுரை! இவ்வாறாயின், அருளை விதைப்பவன் வளர்ப்பவன் காப்பவன் அருட்பயன் பெறத்தானே செய்வன்? தினை விதைப்பவன் தினை அறுப்பான் என்பது பழமொழி! உலக உயிர்களை அருள் நீரால் வளர்த்து வருவதைக் கடனாகக் கொண்ட அருள் வள்ளல் அருட்கனியை, வேண்டுங்கால் வேண்டுங்கால் எல்லாம் எளிதில் அனுபவிப்பான். அருளாளனுக்குத் துன்பம் என்பது இல்லை! எதனால்? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்! ஏன்? அருளாளன் பிள்ளை ஊரார் அனைவரின் உள்ளன்புக்கும் உரித்தாகிப் போகிவிடுகின்றது அல்லவா! ஒருவன் கவனிப்புச் சிறக்குமா? ஊராரின் ஒத்த கவனிப்புச் சிறக்குமா? எல்லா உயிர்களுக்கும் அல்லல் நேரிடாமல் தன்னுயிர் போல் பேணும் ஒருவனை மற்றை உயிர்கள் அனைத்தும் தம் உயிரின் உயிராகப் போற்றாவா? தமக்கு அழிவு நேரினும், அருளாளனுக்கு அழிவு ஏற்படக்கூடாது என அமைந்து காத்து வாழவே செய்யும். அருள் என்பது யாது? அன்பு என்னும் அருமைத்தாய் பெற்றெடுத்த பிள்ளையே அருள். தொடர்பு உடையவர்களிடத்து ஏற்படும் நேயம் அன்பு! தொடர்பில்லாத உயிரிடத்தும் ஏற்படும் நேயம் அருள்! உற்றார் நோய்வாய்ப்பட, இறப்பு வாய்ப்பட அலமருகிறோம்—இஃது அன்பு! உலகின் எந்த மூலையில் எவ்வுயிரும் எய்தும் நோவுக்கும் இறப்புக்கும் அலமருவது அருள்.கபிலர் என்னும் புலவர் பெருமகனுக்குப் பாரி வள்ளல் கொடை கொடுத்தது அன்பின் விளைவு. அதே பாரி, ஆடி அசைந்து பற்றிப் படரக் கொழு கொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தேரளித்தது அருள்! அரிசில்கிழார் முதலாம் பெருமக்களைப் பேகன் ஆதரித்தது அன்புத் தொண்டு. அதே பேகன், மழை மேகம் கண்டு மனங்களித்து ஆடிய மயிலை வாடைக்கு நடுங்குவதாக எண்ணித் தான் வாடிக் கொடுகிக் கொண்டும் அதற்குப் போர்வை போர்த்தியது அருள் தொண்டு! எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் என்பது அன்பு வாக்கு. ஆருயிர்கட் கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்பது அன்பின் முதிர் நிலையாம் அருள்வாக்கு. இப்பொழுது அன்புக்கும் அருளுக்கும் உள்ள வேற்றுமை புலனாகும். புலன் ஆனால், அருளாளர் அனைவரும் பழுத்த அன்பர்; அன்பர் அனைவரும் அருள் கல்லூரியின் தொடக்கநிலை மாணவர்; அருளாளர் அனைவரும் அன்பர்களே; ஆனால் அன்பர்கள் அனைவரும் அருளாளர்கள் அல்லர்; அருளாளர் ஆபவர்களும் உளர்; ஆகாதவர்களும் உளர் என்பன தெளிவாம். அருளாளருக்குத் துன்பம் இல்லையா? கிரேக்கப் பெரியார் - மெய்யுணர்வுப் பேரறிஞர் - சாக்ரடீசு போலும் அருளாளர் உலகில் உளரா? அவர் இறக்கு மாறு நஞ்சு தரவில்லையா? ஆட்சிப் பொறுப்பு உடையவர்களும் சமய மன்றில் தலைநின்றவர்களும் என்ன பாடுபடுத்தினர்? ஆகையால் அருளாளருக்குத் துன்பமில்லை என்பது எப்படி உண்மையாம்? எனலாம்! ஆம் - கேட்க வேண்டிய கேள்விகள் தாம். கருத்தினை மாற்றிக்கொண்டால் சரி; இல்லையேல் கொடுநஞ்சு கொடுக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியபோது சாக்ரடீசு அஞ்சினாரா? இன்ன நாள் உமக்கு நஞ்சு தருவோம் என்று திங்கட் கணக்குக்குமுன் முடிவு செய்து அச்சுறுத்தியும் அதனைப் பொருட்டாக எண்ணினாரா? நஞ்சைக் குவளையில் கொண்டுவந்து தந்த பொழுதும், குடித்தபொழுதும் சிறு அளவிலேனும் சோர்ந்தாரா? இல்லையே! அருளாளராகிய அவரை அச்சுறுத்தினர்; ஆனால் அவர் அஞ்சினார் அல்லர்; நஞ்சைப் பருகிய பொழுதும் நஞ்சு உடலில் இப்படி இப்படி வேலை செய்கிறது என்று உடன் இருந்த மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்! அஞ்சியவர் இது செய்வாரா? சாச்ரடீசை அச்சுறுத்தித் தலைகால் தெரியாமல் ஆடியவர்களே இவரது அஞ்சாமை கண்டு தோல்விப் படுகுழியில் வீழ்ந்து விடவில்லையா? துன்பத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே எல்லா உயிர்களும் விரும்புகின்றன. தங்களைக் காத்துக் கொள்ளும் வேட்கையில், தங்களைத் தாக்க வரும் எந்த ஒன்றையும் அஞ்சாது தாக்கவோ, தாக்கி அழிக்கவோ முனையாது இருப்பது இல்லை. தீ, மேல்நோக்கி எழும்புவது போல, நீர், கீழ்நோக்கி ஓடுவதுபோல இஃது உயிரின் இயற்கை. தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது நோக்கமே அன்றி, மற்றவற்றைக் கொல்ல வேண்டும் என்பது கருத்து அன்று; மனிதன் நிலைமை இதனினும் உயர்ந்து ஓங்கி நிலைக்க வேண்டும் அல்லவா? மாந்தன் மற்றை உயிர்களைத் துன்புறுத்தாததுடன், அவற்றை அருளுடன் நோக்கவும் காக்கவும் முனைந்துவிட்டால் போர் உண்டா? போட்டி உண்டா? தாக்குதல் உண்டா? தவிப்பு உண்டா? எவையும் இல்லை! இவ் வுண்மையை வள்ளுவர் ஆய்ந்து எழுதினார். புத்தர் உணர்ந்து நடந்தார்; காந்தியடிகள் இவ்வுணர்விலே ஊன்றினார். இந்த ஒன்றையே உயிர்க் கொள்கையாகக் கொண்டு உலகில் நிலைத்தார். ஆம்! வள்ளுவர் கண்ட அருட்கொள்கையே - துன்புறுத்தாக் கொள்கையே - அண்ணல் காந்தி மூச்சு ஆயிற்று! அவர் பெற்ற வெற்றியனைத்தும் அருள் வெற்றியே! தனக்கென்றே வாழ்வது கீழ்மை! தனக்கும் பிறருக்கும் என வாழ்வது பொதுநிலை! பிறருக்கு - பிறவுயிர்களுக்கு - எனவே வாழ்வது பெருமை! பெருமைக் குரியவற்றைப் பேணுபவர் பெரியர்! மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை,  25. படைகொண்டார் நெஞ்சு பாலை நிலக் கொடுமையைப் பகர வேண்டியது இல்லை. காடும் மலையும் வளங்குன்றி வறண்டு பயனற்றுப் பாறையும் பொடியும் ஆகிக் காணப்பெறுவது பாலை. நிழலைக் காண்பதற்கே அரிதான அந் நிலத்தில் நீரைக் காண்டற்கு இயலுமா? நீரும் நிழலும் இல்லா நிலம்போல ஈரமும் இணக்கமும் இல்லா நெஞ்சமும் பாலைக்கு இயல்பு போலும்! கொள்ளும் பொருள் ஏதும் இல்லாவிட்டாலும் துள்ளும் அழகு காண்பதற்காக வழியே வருவோரை வெட்டி வீழ்த்தும் கொடியவர்கள் பாலையில் உண்டு எனின் பாலையின் ஈரமிலாத் தன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? பாலை நிலமக்கள் மட்டும் அல்லர்! கையிலே எத்தகைய படைக் கருவிகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் இரக்கமின்மை படிப்படியாகப் படிந்து விடும் போலும்! படைக் கருவியைக் கண்டு கண்டு, பயன்படுத்திப் பயன்படுத்திப் பழகிப்போன மனம் அருள் என்னும் ஒரு பொருள் இருப்பதையே மறந்து விடும் போலும்! இரக்கமற்று மரத்துப்போன உள்ளத்திற்கும், விலங்குக்கும் என்ன வேற்றுமை? தான் வாழ எந்த ஒரு கொடுமை புரிதற்கும் அஞ்சாது விலங்கு - விலங்குணர்வு! அந்நிலைமைக்கு ஆட்பட்ட ஆறறிவு உள்ளமும் விலங்கு உள்ளமேயாம்! கீழான சொற்களைச் சொல்லிச் சொல்லித் திரிபவனுக்குத் தான் சொல்வது கீழ்மைச்சொல் என்பது தெரியாது. அது பழக்கமாகி விடுகின்றது; சொல்லின் பொருள் இன்னது, அதன் விளைவு இன்னது என்பது அறியாமலே போய்விடுகின்றது. பசுக்கன்றுக்கு மலம் வெறுப்பு ஊட்டும்; பன்றிக்கு மலம் விருப்பாகவே இருக்கும்; பசுவின் இயல்பும் பழக்கமும் அத்தகையது; பன்றியின் இயல்பும் பழக்கமும் இத்தகையது; எனினும் இவ்வளவு வேற்றுமையுடைய பசுக்கன்றும் பன்றியுமே ஒன்றுபட்டு விடுமாமே! ஓருணர் வுடையனவாய் அமைந்து விடுமாமே! பன்றியொடு சேர்ந்த கன்றும் மலந்தின்னும் என்னும் பழமொழி எதை உறுதி செய்கின்றது? தீய பழக்கத்தின் கொடுமையைக் காட்டும் கலங்கரை விளக்கம் ஆகின்றது. இப்படித்தான் படைகொண்டவர் செய்யும் கொடுமை உள்ளது; படை கொண்டவரைச் சேர்ந்தவர் செய்யும் கொடுமையும் உள்ளது. தன்னை வடிவாகக் கொண்டு இறைவன் மனிதனைப் படைத்தான். தன் ஆற்றலில் ஒரு கூறினை மனிதனிடம் வைத்தான். அத்தகைய மனிதன் என்ன நினைக்கவேண்டும்? யான் கடவுளால் படைக்கப்பட்டேன்; கடவுள் வடிவு ஆகப் படைக்கப் பட்டேன்; கடவுள் திருவடிக்கீழ் ஒருநாள் நறு மலராகக் கிடப்பேன்; ஆம்! ஒருநாள் கடவுளாகவே இருப்பேன் என்று நினைப்பானேல் கீழ்மைப் பண்பில் உழல இடமில்லை. இதனைத் தடுப்பது எது? மனிதனிடம் உயர்ந்த இயல்பு படிந்து கிடப்பது உண்மை. ஆனால், அவன் மறக்கின்றான்; இல்லை; இல்லை; பிறவித் தன்மைகளும், சூழ்நிலைகளும் மறக்கச் செய்கின்றன; மனித உணர்வை மாற்றி விலங்கு உணர்வை எழுப்புகின்றன. எழில்மிகு மலையை மூடுபனி மறைத்து விடுவது இல்லையா? மூடி மறைந்த போழ்தில் அதன் எழில் நம் கண்ணுக்குத் தோன்றாது இருக்கலாம்; அதனைக் கொண்டு மலைக்கு எழில் இல்லை என்று கூறிவிட முடியுமா? மூடுபனி மறையட்டும்; மலையின் எழில்; பள்ளத்தாக்கின் கவின்; நெளிந்து ஓடும் தண்ணிய ஆற்றின் வனப்பு, மரஞ்செடி கொடிகளின் மாண்பு அனைத்தும் புலனாகும்! மூடுபனி அகலவேண்டும் அவ்வளவு தான்! மலையை மறைக்கும் மூடுபனிபோல் மனிதனை மறைக்கும் மூடுபனிகள் பலப்பல! அவற்றுள் ஒன்று கொடுமையின் வடிவாய் நின்று, தன்னைக் கொண்டிருப்பவனையும் கொடியவன் ஆக்கி வைக்கும் கொலைக்கருவி! அமைதியாளனையும் அருளாளனையும் வெறியாளனாகத் தூண்டிவிடும் கொலைமது! இரும்பு இருந்தவன் கை சும்மா இராது என்பது பழமொழி! கொல்லிரும்பு வைத்திருப்பவன் கை சும்மா இருக்குமா? உணர்ச்சி ஓய்ந்து கிடக்குமா? உள்ளம் அமைந்து கிடக்குமா? கொலைக்கருவி கொண்டிருப்பவன் கொடியவன்; அவனுக்கு இணையான கொடியவன் இல்லையா? உண்டு! அவன் கொலைக் கருவியைப் பயன்படுத்துதற்குப் பயிற்சிக் களமாக இருந்த ஒன்று உண்டு! அதுவே ஊன்கடை! ஊனைத் தருவோனும் சரி, அதனைப் பெறுவோனும் சரி! இரக்கம் இல்லாதவர்களே! ஏன் கொல்லுபவர் ஒருவர்; கொலைக்குத் துணை நிற்பவர் ஒருவர்! ஏன் கொல்லுகிறார் உயிர்களை? வாங்குவோர் இருக்கும் காரணத்தால், அவர்கள் தலையில் கட்டி ஊதியம் தேட வாய்ப்பு இருக்கும் காரணத்தால் கொலை நடக்கிறது! இக் கொலையைக் கொடுமையானது என்று எவரேனும் - முற்கூறிய இருவருள் எவரேனும் - கருது கின்றனரா? வள்ளுவர் கருதுகிறார்; அவர்வழி யுணர்ந்தோர் கருதுகின்றனர்; வள்ளுவர் போலும் அருளாளரும், அவர் வழியுணர்ந்தோர் போலும் தொண்டரும் எந்நாட்டில் இருந்தாலும், எந்நாளில் இருந்தாலும் கருதுகின்றனர். மற்றவர்கள்? சுவையான ஊன் உண்ண நினைபவர் பிறிதோர் உயிரின் துடிப்பை, துயரை, இறப்பை எண்ணுவது இல்லை. ஏன்? தன்னலம் நாடும் நெஞ்சம் அவர்க்கு உடமையாகின்றது; பிறர் நலம் நாடும் நெஞ்சம் ஒழிகின்றது. தன் உடல் பருக்க விரும்புகின்றான்; அவ்விருப்பு பிறவுடலைத் தின்ன ஏவுகின்றது. இப்படிப் பட்ட கொலைக் கொடுமை படிந்துவிட்ட உள்ளத்திலே அன்பு நிலைக்க முடியாது; அருள் அரும்ப முடியாது. அறம் தளிர்க்க முடியாது. அன்பும் அருளும் அறமும் முகிழ்த்து எழாத நெஞ்சில் நல்ல எண்ணம் எழும்புதல் கூடுமோ? புள்ளிமான் துள்ளி ஓடித் தப்புதற்குத்தான் நினைகின்றது. ஓடி ஓடி ஒளிகின்றது; அஞ்சி அஞ்சி நடக்கின்றது; என்றாலும் புலி அதற்காகப் பரிவு காட்டுகின்றதா? கொல்லுவதைப் பற்றிச் சிறிய அளவில் கூட நடுக்கம் ஏற்படுவது அதற்கு இல்லை. அதுபோலவே தன் உணவுக்குப் பிறிதொன்றன் உடலைத் தின்னத் தொடங்கியவன் உள்ளத்திற்கும் அதன் துடிப்புப் பற்றிக் கவலையற்றுப் போகின்றது. ஒரு பெரியவர் சொல்கின்றார்; அவர் பாரசீகநாட்டைச் சேர்ந்தவர்; கலீல்சிப்ரான் என்பது அவர்தம் பெயர்; என்னைக் கொல்லுவதற்கு ஏவும் உணர்வு எதுவோ அவ்வுணர்வால் யானும் ஒருநாள் கொல்லப்படுவேன் என்று. ஒன்றைக் கொல்லுதற்குப்போகும் ஒருவன் தன் நெஞ்சத்து ஒரு நொடிப் பொழுது எண்ணவேண்டும். இவ்வாறு எண்ணும் நெஞ்சம் அமைந்துவிட்டால் பெரும்பாலான கொலைகள் ஒழியும். விவேகானந்தர் விளம்பினார்; இறைவன் மக்களுக்காக மற்றை உயிர்களைப் படைத்தார்; ஆகலின் அவற்றைக் கொன்று தின்பது குற்றமில்லை என்று பலர் உரைக்கின்றனர். சமயங்களும் கூறுகின்றன. இஃது இயற்கை அல்லா நெறியாம். புலிகளுக்கு எழுத்தறிவும், பேச்சுத் திறமும் இருந்தால் புலிகளுக்காகவே மனிதரைக் கடவுள் படைத்தார்; அவர்களைக் கொன்றுதின்பது குற்றமில்லை என்றே எழுதி வைத்திருக்கும். இவ்வாறு கொலை பற்றியும், கொன்றுதின்பது பற்றியும் ஆன்றோர்கள் கடிந்து உரைப்பது ஏன்? தீயவற்றில் நிலைத்த நெஞ்சம் நல்லவற்றை நினையாது என்பதனாலேயாம். இக் கோட்பாட்டில் அழுத்தமாக நின்ற பெருந்தகை வள்ளுவர்! தொல் பழமைக் காலந்தொட்டு, இக்காலம் வரை வாழ்ந்துள்ள பெருமக்களுள் வள்ளுவருக்கு இணையாகப் புலாலுண்ணலையும், கொலைபுரிதலையும் கடிந்து கூறியவர் இவர்! அவர் நெஞ்சினின்று முகிழ்ந்த அனைத்துக் கருத்துக்களிலும் அருளும் அறமும் பின்னிப் பிணையாமலோ, மின்னி மிளிராமலோ இல்லை! இவ் விரண்டையும் புலமைத் துலைக்கோலின் இணைத் தட்டுகளாகக் கொண்டே வாழ்வியலாம் வாணிகம் புரிகின்றார் வள்ளுவர். அப்பெருந்தகையின் வாணிகப் பெருஞ்சந்தையில் கிடைக்கும் நற்பொருள்களைத் தேடிப் பெற்றுக்கொண்டால் ஒழிய வாழ்வுக்குப்பேறு இல்லை! பேறு பயக்கும் உயர்பண்டம் ஒன்று வருமாறு! படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை யுண்டார் மனம்.  26. புகழ்மிக்க தவம் காந்தியடிகள் உலகில் தோன்றினார்; கதர்த்துணிக்கு ஒரு பெருமை ஏற்பட்டது. மற்றைத்துணிகளிலும் கதர்த்துணிக்கு ஏன் பெருமை ஏற்பட்டது. மற்றைத் துணிகள் நூல்மதிப்பால், நெசவின் தரத்தால், சாயச் சிறப்பால் மதிக்கப்படுகின்றன. ஆனால் கதர் இவற்றுடன் நில்லாமல் வேறு பலவற்றால் மதிக்கப்படுகின்றது. கதரை நினைத்தவுடனே அதனை வளர்த்து வளமாக்கிவிட்ட காந்தியடிகள் அருள் நோக்கு, அமைதிப்போர், அறநெஞ்சம், உலகெல்லாம் ஒன்றெனக் கருதும் உயர்பாடு, உழைப்பின் பெருமை, எளிய வாழ்வின் எழில் ஆய அனைத்தும் கண்முன் தோன்றித் தனிப்பெரும் சிறப்பினை நல்குகின்றன. புகழ் மல்கிய கோவில் கருவறைச் சிலைக்கும், பொருட் காட்சிச்சாலைக்கும் எத்துணை வேறுபாடு? அத்துணை வேறுபாடு உண்டாக்கிவிட்டது கதர்த் துணிக்கும் மற்றைத் துணிகளுக்கும். காந்தியடிகளின் தொண்டன், உரிமைக்கட்சிக்கு உழுவலன்பன் என்பதைக்காட்டும் புறக்கோலமாக அமைந்து விட்டது கதர்! துணியால் அமைந்த சிறப்பு அன்று! துணியால் எனின் காந்தியடிகள் கதரை வளர்க்கு முன்னரே தனிப்பெருமை இருந்திருக்கவேண்டும்! அஃதில்லை. கதர்த்துணியின் உள்ளின் உள்ளாக ஒளிந்து கிடந்துஆனால் பளிச்செனத்தோன்றிஒளிவிடும் உணர்வால் ஏற்பட்ட சிறப்பு. இதுபோலவே ஒரு காலத்தே காவித்துணிக்குத் தமிழகத்தில் தனிப்பெருமை ஏற்பட்டது. என்கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் நிலைக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் காவியுடுத்தனர். தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு நோக்கும் அருளாளர் காவியுடுத்தனர். புகை நடுவினில் தீ இருப்பது போல் பகை நடுவிலும் இறைவன் உள்ளான் எனக் கருதிய ஆன்றோர்கள் காவியுடுத்தனர். பிறவுயிர்கள் ஈடேறுதற்குக் கல்வியறிவும், மெய்யுணர்வும் தருவதும், தொண்டு புரிவதும் இவர்கள் கடப்பாடுகளாக இருந்தன. ஆகலின் இத்தகையரே அருளாளர் என்றும், அறவோர் என்றும், துறவிகள் என்றும், தவத்தோர் என்றும் பெரும்பேறு பெற்றனர். இவர்கள் சிறப்பு, இவர்களால் உடுத்தப்பெற்ற காவியுடைக்கும் ஏறியது ஏன்? காந்தியடிகள் மேல் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்திய கருங்கல், வைரத்தினும் மதிக்கப்பெற்று, கலைக்காட்சியாகவும், திகழ்கின்றது அல்லவா! துறவி என்பதும், துறவி அல்லன் என்பதும் அவன் உள்ளுணர்வைப் பொறுத்த நிலை! என்றாலும் புறத் தோற்றங்களால் வெளிப்படுத்துக் காட்டும் தன்மை நாட்டில் ஏற்பட்டுவிட்டது. முக்கோல் கொண்டிருத்தலும், கமண்டலம் வைத்திருத்தலும் துறவிக்கு உரியன ஆயின. சடை வளர்த்தலும் மழுக்க வழித்தலும் வழக்கமாயின; மரவுரியுடுத்துதலும் காவி யுடுத்துதலும் நிலைத்துவிட்டன. இவை போல் பலப்பல புற கோலங்களும் தலையெடுத்தன. இவற்றைக் கொண்டிருப்பது ஒன்றே துறவு - தவம் - என்று கருதும் குழுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கிளைத்துவிட்டது. நெற்பயிர் தோன்றிய நாளிலேயே, புற்களையும் தோன்றியிருக்கக்கூடும் அல்லவா! உள்ளத்தே தவத்தன்மை கொண்டிருப்பான் ஒருவன், புறத்தேயும் அதனைக்காட்டுமாறு ஏதேனும் கோலம் கொள்வன் ஆயின் குற்றமில்லை. ஆனால் அகத்தே தவவுணர்வு சிறிதும் இல்லாத ஒருவன் புறத்தே மட்டும் கோலம் காட்டித் திரிவது கூடா ஒழுக்கமாகும் - பிறரை ஏமாற்றித் திரியும் வஞ்சக ஒழுக்கமாகும். பசுத்தோல் போர்த்த புலி என்று உவமை காட்டிக் கூறலாம். இத்தகைய தவக் கோலம் கேடு செய்வதேயாம். ஆதலின் உள்ளத்தே இல்லாமல் புறத்தே சடைவளர்த்தலாலும், தாடி நீட்டலாலும், மழுக்க வழித்தலாலும் பயனில்லை. உள்ளத்தே தவவுணர்வு மிக்கோர் இவற்றைக் கொண்டால் என்ன? கொள்ளாவிடின்தான் என்ன? என்று வற்புறுத்திக் கூறவேண்டிய நிலைமை ஆன்றோர்களுக்கு ஏற்பட்டது. அதனால், மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்றார் வள்ளுவப் பெருந்தகை. தவத்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பு நாட்டில் இருந்தது. அவர்களைப் போற்றிக் காப்பது வீடாளும் தலைவன் தலைவியர் கடப்பாடாகக் கொள்ளப்பட்டு இருந்தது. அதேபோல், நாடாளும் வேந்தர், அமைச்சர் கடப்பாடாகவும் கொள்ளப்பட்டு இருந்தது. இத்தகைய சிறப்பு, தவத்திற்கு ஏற்படவே தவத்தோர்போல நடிப்பவர்களும் மிகுந்து விட்டனர். எந்தவொரு நல்ல பொருளுக்கும் போலிப் பொருள் உண்டாவதோ படைக்கப்படுவதோ உலகியலில் காணப்படுவது தானே! மெய்த் தவத்தோர்க்கு இடையே பொய்த் தவத்தோர் தோன்றிவிட்டபின், மெய்யர் எவர், பொய்யர் எவர் என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாகி விட்டது. பொய்த் துறவியர் போற்றப் பெற்றதும், மெய்த் துறவியர் பழிப்புக்கு ஆட்பட்டதும் உளதாயிற்று. ஆம்! ஏமாற்றுவோர் தொகை மல்கிய காலங்களிலெல்லாம் ஏமாறுவோர் தொகை பெருகாமல் தீராதே! திருக்கோவலூர் வேந்தர் மெய்ப்பொருள் நாயனார். தவத்தோரை—துறவிகளை—பேணுவதே கடைத்தேறும் வழியெனக் கொண்டு ஆண்டு வந்த பெருந்தகை. அவரை நாடி வந்தார் ஒரு துறவி! துறவி தேடி வந்தால் தடையாதுமின்றி உள்ளே வரவிடுக என்பது வேந்தன் ஆணை! அதன் வழி நிற்க வேண்டிய வாயிற் காவலனும், மெய்காப்பாளனும் துறவியாரை வேந்தன் இருக்கும் தனி மாளிகைக்கு அனுப்பினர்; போன துறவியோ, சிவபெருமானால் அடியார் உய்யும் வண்ணம் அருளிச் செய்யப்பெற்ற அரிய வேதப் பொருள் ஒன்றை உனக்குக் கூறுமாறு வந்தேன் என்றார். மெய்ப் பொருளாளர், தாங்கள் என் மாட்டுக் கொண்டுள்ள பெருங் கருணைக்குக் கடப்பாடு உடையேன்; தாங்கள் அருளிச் செய்தல் வேண்டும் என்று துறவியாரை இருக்கச் செய்து முன்னிருந்து வேதப் பொருள் கேட்கத் தொடங்கினார். தம் கண்களை மூடிக்கொண்டு இறைவன் அருளை வியந்தார் மெய்ப் பொருளாளர். அவ்வேளையில் ஏடு அவிழ்ப்பவர்போல் அவிழ்ந்து மறைத்து வைத்திருந்த வாளை எடுத்தார் துறவி! முன் திட்ட மிட்டிருந்தபடியே மெய்ப்பொருள் நாயனாரைக் குத்தித் தீர்த்து விட்டான். எத்தனையோ வகைப் படைகளையும் கொண்டு பன்முறை முயன்றும் முடிக்க முடியாத செயலைத் தவவேடம் கொண்டு எளிதில் முடித்துக் கொண்டான் முத்தநாதன் என்னும் பேருடைய வேந்தனாம் அப்போலித் துறவி! தவக் கோலத்தை மெய்ப் பொருளாக மதித்தார் மெய்ப் பொருளார்! அஃது அவருக்கு இயல்பு. ஆனால் முத்தநாதன் உலகத்தார்க்கு என்ன படிப்பினையை உண்டாக்கி விட்டான்? தவக்கோலத்தைக் கொண்டவர்களையெல்லாம் நம்பாதீர்; என்னைப் போலும் போலித் தவத்தோரும் உளர் என்பதை உண்டாக்கி விட்டான். புறத்தோற்றம் ஒன்று கொண்டே முடிவு செய்ய முடியாத ஒன்று தவம். அதனை உள்ளுணர்வு கொண்டே முடிவு செய்யவேண்டும் என்பது வள்ளுவர் முதலாம் சான்றோர்கள் கோட்பாடு. இக்கோட்பாட்டை உலக நலங்கருதி அவர்கள் தெளிவாக உரைத்துள்ளனர். தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; மற்றை உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது; இவையே தவத்தின் மெய்யான வடிவம் என்று உரைத் துள்ளனர். தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல் தவமோ? அதனை அவர்கள் பொறுத்தால்தான் உலகுக்கு என்ன? பொறுக் காவிட்டால்தான் உலகுக்கு என்ன? எனச் சிலர் மனத்திலேனும் எண்ணம் உண்டாகலாம். ஆனால், தம்துயரைப் பொறுக் காமையால்தான் பலப்பல துயர்களும் உலகை—உயிர்களைச்—சூழ்கின்றன என்னும் கருத்துத் தோன்றின் உண்மை புலனாம். நோய் தம்மை வாட்டும்போது, வறுமை உறுத்தும்போது, பிறிதொன்று செய்த தீமைக்கு இரையாகும்போது, அமைந்து கிடந்தவரும் ஆரவாரித்து எழும்புவதையும், பொறுத்து இருந்த வரும் பொங்கி எழுவதையும் காண்கிறோம்; தம் துன்பத்திற்காக ஏற்படும் முனைப்பைக் கடந்து நிற்பது அல்லவா ஆண்மை! ஆண்மையுள் எல்லாம் ஆண்மை! அவ்வாண்மையைத் தவம் என்பது தகும்! தம்மை அறைந்த கையைத் தழுவிக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் அனைவராலும் செய்யக்கூடிய நடைமுறைச் செயலா? தம்மைத் திட்டியவரை அந்தோ! என்னைத் திட்டிய குற்றத்தால் இவன் துன்புறுவானே என்று இரக்கம் செலுத்துவது அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் எளிய தன்மையா? தம் வீடு எரிந்து கருகிச் சாம்பலாகும்போது என்ன எழிலுடன் தீ விளையாடுகின்றது என்று அனுபவித்தல் அனைவருக்கும் இயல்வதா? தம் குழந்தை இறந்த வேளையில் இறைவன் படைத்த எழில் மலரை அவனே விரும்பிப் பறித்துக் கொண்டான் என்று அமைவது எல்லோருக்கும் முடிந்ததா? எல்லோருக்கும் முடியாதவற்றை— அரியவற்றை—எளிதில் செய்வோரே தவத்தோர். இத்தவத்தோர் புறக் கோலம் கொண்டிருந்தால் என்ன? கொள்ளாவிட்டால் தான் என்ன? இனி, மற்றை உயிர்களுக்கு எத்துணைத் துன்பமும் செய்யாமல் ஒருவர் வாழமுடியுமா? ஏன் முடியாது? தன் துயரைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுது ஒருவனுக்கு ஏற்பட்டுவிட்டதோ அப்பொழுதே பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாத இயல்பு அவனுக்கு ஏற்பட்டு விட்டது என்பது உண்மை. மற்றை உயிர்களுக்குத் துன்பம் ஏன் செய்கின்றான்? தன்னலத்தால் செய்கின்றான்; தன்னலமே அற்றுவிட்டால் துன்பம் ஏது? துடிப்பு ஏது? புத்தர் காடு மலைகளில் அலைந்தார்; பசி, நோய், வெயில், மழை இவற்றைத் தாங்கினார். தமக்கு ஏற்பட்ட கொடிய துன்பங்கள் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் புன்முறுவலுடன் ஏற்றார். இவற்றால் புத்தருக்கு ஏற்பட்ட பெருமை ஓரளவுதான். ஆனால் பேரளவாயது எதனால்? தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது இருந்ததுடன், பிறரையும் பிற பிற உயிர்களுக்குத் துன்பம் செய்ய விடாமல் காத்தார்; உயிர்களுக்குத் தம் வாழ்நாள் எல்லாம் இன்பஞ் செய்து வாழ்ந்தார். வில்லால் அடியுண்டு சாகக்கிடந்த அன்னத்தைக் காப்பாற்றியது அவர் தம் அருள் நெஞ்சம். அறங்கூறும் அவையம் அளவும் சென்று வெற்றி கொண்டது அவர் தம் அருள் துணிவு. பேரரசன் பிம்பிசாரனையும் வாதாடி உயிர்ப் பலியை ஒழிக்கும் அளவுக்கும் துணிந்தது அவர் தம் பெருங் கருணை! சாதாரண கௌதமரை—அருளாளர் புத்தராக்கியது எது? அவர் கொண்ட தவ ஒழுக்கமே! அத்தவ ஒழுக்கம் யாது? உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. 27. எண்ணமும் செயலும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலே மூடைகளும் பொருள்களும் குவிந்து கிடந்தன; காக்கும் அரண் எதுவும் இல்லை; பூட்டு இல்லை; தாழ்க்கோல் இல்லை; காவலர்களும் இலர்; ஆம்! எத்தகைய காவலும் வேண்டாத அளவில் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது ஏன்? அந்நகரில் திருட நினைப்பவரே இலர்; பிறகு திருட்டு நடக்க முடியுமா? ஒருவன் ஒரு மூடையைக் களவு செய்தான் என்றால், அந்த நொடியிலேயே அவன் களவு செய்த மூடை அவன் கழுத்தில் ஏறிக் கொள்ளும். எவ்வளவு முயன்று எடுத்து எறிந்தாலும் அகலாது. அவன் விருப்பப்படி எங்கேனும் ஓடிவிடவும் முடியாது. ஊரைச் சுற்றிச் சுற்றி வரச்செய்து, ஊரார் அனைவருக்கும் இவன் திருடன் என்பதைத் தெளிவாகக் காட்டி இழிவு செய்யும். எது? ஒரு பூதம்! வெள்ளிடை மன்றப் பூதம் என்பது அதன் பெயர், இந்தப் பூதத்தின் செயலை அறிந்தபின் எவர் மனத்திலேனும் கரவு எண்ணம், களவு வேட்கை இருக்க முடியுமா? பிறரை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் ஒருவர் மனத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று அறநெஞ்சம் வேண்டும்; அல்லது அளவிடற்கரிய தண்டனை வேண்டும். இத்தண்டனை முறையை வலியுறுத்துகிறது காவிரிப்பூம்பட்டின வெள்ளிடை மன்றப் பூதம். பண்பாடு, பழக்க வழக்கம், கல்வி, குடும்பநிலை இவற்றைப் பொறுத்தே ஒருவன் உளநிலை அமைவதுண்டு. ஆகலின் அவனை நல்வழிக்குக் கொண்டு வர எண்ணினால் இவற்றுக்குத் தகுமான தண்டனை தருதல் வேண்டும். இக்கருத்துடைய பலப்பலர் பலப்பல வழிகளைக் காட்டியுளர். இறைவன் எங்கும் நிறைந்தவன்; அவனுக்கு மறைத்து எந்தவொரு செயலையும் செய்துவிட முடியாது. எவருக்கும் தெரியாமல் இதைச் செய்து விடலாம் என்று எண்ணுவது பேதைமைத் தன்மை. இறைவன் உள்ளத்தும் உள்ளவன்; புறத்தும் உள்ளவன். இத்தகையவனுக்கு நாம் எண்ணும் எண்ணம் இன்னது, இத்தகையது என்பது புலப்படாமல் போகுமா? ஆதலால் பிறர் பொருளைக் கவர நினைப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுவிடும்! குற்றம் உடையது ஆகிவிடும். ஆகையால் களவு எண்ணத்தை விடுக என்றனர் சிலர். வேறு சிலர், களவு செய்ய எண்ணும் எண்ணத்தைப் பிறர் அறியமாட்டார் என அறியாமல் எண்ணுவது தவறு! எண்ணுபவர் நெஞ்சம் எண்ணத்தை நன்றாக அறியுமல்லவா! அந்நெஞ்சமே ஒருநாள்—ஒருநாள் என்ன—அப்பொழுதே—இடித்துக் காட்டாதா? நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் உண்டா? தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்றனர். வேறு சிலர் நெஞ்சில் இருப்பதைப் பிறர் அறியமுடியாது என நினைத்தால் தவறாம்; நெஞ்சின் நினைவு சிறிதும் மாறாமல் மறையாமல் முகத்தில் தெளிவாகி விடுமே! கண்ணில் காட்டி விடுமே என்று மடக்கினர். இன்னுஞ் சிலர் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்! ஆதலால் வஞ்சிக்க நினைக்கும் மதியிலியே! உன்னை வஞ்சிக்க ஒருவருமில்லை என்று நினைக்காதே! என்றனர். கடவுளுக்கும் நெஞ்சுக்கும் அஞ்சாமல் காரியம் ஆற்றும் ஆட்கள் நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் இக்காலம் இல்லையா?—முற்காலத்து இருந்தது இல்லையா? இத்தகையவர்களுக்காகக், களவுக்குப் பெருந்தண்டனை உண்டு! களவு செய்பவன் இவ்வுலகில் கொடிய நோய்களுக்கு ஆட்படுவான். அவன் மகன் வறுமையில் சிக்கித் தவிப்பான். இவன் கூட்டமே நரகத்திற்குப் போய்ப் படாப் பாடுகள் படும் என்று உரைத்தனர். இதற்கும் அஞ்சாதவர்களை என்ன செய்வது? ஊர்ப் பெரியவர்கள் கூடிக் குற்றம் புரிந்தவனைக் கசையால் அடித்தும், காறியுமிழ்ந்தும், கழுதைமேல் ஏற்றி ஊரைச் சுற்றி வரச்செய்தும், கோவிலுக்கு விளக்கிட வைத்தும், இவ்வளவு பணம் அபராதம் (ஒறுப்பு) என்று விதித்தும், ஊரைவிட்டு விரட்டியும்—இத்தகைய தண்டனைகளெல்லாம் வழங்கினர். இந்நாளில் அப்பணியை நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும், சிறைக் கூடங்களும், கொலைக் களங்களும் ஆற்றுகின்றன. இவ்வளவு இருந்தும் களவு ஒழிந்து விட்டதா? செல்வம் உள்ளோரும் இல்லை; இல்லோரும் இல்லை; எல்லோருக்கும் ஒப்பான அளவில் உண்டு; என்னும் நாடுகளிலும் ஒவ்வோர் பொழுதில் திருட்டும் வஞ்சமும் தலைகாட்டுவதாக அறிகின்றோமே! இதனை ஒழிக்க வழியே ஏற்படாதா? என்னும் எண்ணம் ஏற்படாது இருப்பது இல்லை. பிறர் துயரைத் தம் துயராக, பிறர் இழப்பைத் தம் இழப்பாக, பிறர் வாழ்வு தாழ்வுகளைத் தம் வாழ்வு தாழ்வுகளாகக் கருதும் ஒரு நிலைமை மாந்தருக்கு ஏற்படவேண்டும். ஏற்படுமாறு அறிவுடையவர்கள் பாடுபடவேண்டும். பேச்சாலும், எழுத்தாலும் அறிவாளிகள் பாடுபட்டால் போதுமா? அவை போதும் என்றால் இந்த அறிவாளிகள் தேவையே இல்லை நாட்டுக்கு! இப்பொழுது அறநூல்கள் ஒன்றிரண்டா உள? அறங்கூறும் பாக்கள் ஓராயிரம் ஈராயிரமா உள? அறமுரைத்த ஆன்றோர்கள் தாம் எத்துணையர்? அருள் உரைத்த பெரியவர்கள்தாம் எத்துணையர்? அவர்கள் செய்யாத செயலையோ இனிவரும் அறிவாளர்கள் செய்துவிடப் போகின்றனர்? அறவோர்கள் நடந்து காட்டிய நன்னெறிகளைக் கண்ட தொண்டர்களும், மக்களும் நன்றாக இருக்கிறது; உயர்வாக இருக்கிறது என்று வாயால் புகழ்ந்தார்களே ஒழிய, நெஞ்சார நினைக்கவில்லை. நேரிதென வாழ்வில் கொள்ளவில்லை. வாழ்க ஓங்குக என்று உரக்கக் கூச்சலிட்டார்களே ஒழியப் பின்பற்றிச் செல்லவில்லை. உயர்ந்தவர்கள் வாழ்வை நிலைக் களமாகக் கொண்டு, பின்பற்றி நடந்து காட்டும் ஒரு குழுமத்தை—தொண்டர் படையை—உருவாக்கவில்லை! பின் நாளிலும் பெரியவர்கள் உரைத்த உரைகள் சரியா? தவறா? பொருந்துமா? பொருந்தாதா? என்பவற்றை ஆராயும் சொல்லாராய்ச்சி அளவிலேயே - அதிலும் முரண்பட்ட அளவிலேயே தத்தம் குறுகிய பான்மையைக் காட்டிப் பிரிந்து பிரிந்து, பிளவாகிப் பிளவாகி, ஒதுங்கி ஒதுங்கி, பகைத்துப் பகைத்து, கெடுத்துக் கெடுத்து, நாட்டை அலைக் கழித்தது அல்லாமல் கண்டதோர் பயனில்லை. நல்லவர் ஒருவர் பெயரால் நான்குபேர்கள் கூடிப் பணி புரிய அறியாதவர்கள், நூறுநூறு பேர்களாக ஆயிரம் ஆயிரம் பேர்களாகத் தெருக்கள் தோறும் கூடிக்கூடி வெறியாட்டம் ஆடுவதைக் காண்கிறோம். போலிமானம், போலிப் புகழ், போலிப் பாராட்டு, போலித் தலைமை இவற்றையே பொருளைக் கொண்டு பொழுதெல்லாம் தொலைத்துப் புன் பிணமாய்ப் போயொழிபவரே மிகுந்துளர். இத்தகையர் உள்ளம் நன்னிலையுற வேண்டுமாயின் இனி, அறிவாளர், அறவோர், அருளாளர் சொல்லைக் காட்டி மேடையில் முழக்கிப் பயனில்லை! இது வரை கொள்ளை கொள்ளையாகச் சொல்லியாகிவிட்டது. இனியும் அவ்வழியே சென்றால் பயன் ஏற்படப் போவது இல்லை! ஓரிருவர், ஒரு நூற்றுவர் இரு நூற்றுவர் திருந்தலாம்! ஆனால் உலகம் திருந்துதற்கு இயலாது. ஆகையால் இதற்கோர் வழிகாட்டியாக வேண்டும். ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, அறவோர்கள், அருளாளர்கள் பெயரால் அறநெறி காட்டும் அருட் கழகங்கள் தலையெடுத்தல் வேண்டும். அவை, அமைதியான முறையில் ஊரூர் தோறும், தெருத் தெருத் தோறும் கிளைகளுடன் வளரவேண்டும். மேடை ஏறாமல், முழக்கமிடாமல், நடைமுறைச் செயலாலே, ஒழுக்கத்தைக் கற்பித்தாக வேண்டும். இத்தகைய ஒழுக்க நெறியினருக்கும் எதிர்ப்புக்கள் ஏற்படலாம். ஏச்சுப் பேச்சுக்கள் எய்தலாம். கல்லடி சொல்லடி கிட்டலாம். என்ன கிடைத்தாலும் புன் முறுவலுடன் ஏற்றுக்கொள்ளும் புகழ் பூண்ட பொறுமை நிலை வேண்டும். கொள்கை உறுதி கொழுந்து விட்டெறியும் சுடராக ஓங்குதல் வேண்டும். ஒதுங்கிச் செல்பவர்களையும் ஒன்றிச் சென்று அனைத்துக்கொள்ளும் அருமை வேண்டும். இவ்வாறு அமையின் ஒரு நூற்றாண்டு அளவிலேனும் வஞ்சம், சூழ்ச்சி, திருட்டு, பொய் அகன்றொழிய வாய்ப்பு உண்டு. இத்தகைய காலத்தேதான், தீயது செய்வதை அன்றித் தீயது நினைப்பதும் குற்றமே என்னும் கொள்கை உருவாகும். நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் என்னும் ஆன்றோர் ஆய்வு நெறி இடம் பெறும்! இந்நெறி முதிர்ந்த காலத்தேதான். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். என்னும் வள்ளுவம் கொடி கட்டிப் பறக்க முடியும். இஃதிலா நிலைமையில் வயிற்றுப் பாட்டுக்காகத் திருடுபவன், மானங் காக்கும் உடைக்காகக் களவு செய்பவன், கசக்கிப் பிழியும் கடன் தொல்லைக்காகக் கொள்ளையடிப்பவன், ஆம்—கன்னக் கோல் எடுத்து இடித்தும் காரிருளில் கதவுகளைத் திறந்து காணாமல் திருடியும் செல்பவர் மட்டுமே திருடர்கள் பட்டியலிலே இருக்க, சிறைக் கூடத்திலே நலிய, தூக்குக் கயிற்றிலே தொங்க நேரிடும்! பொய்யும் புரட்டுமான கணக்கு எழுதி, அரசாங்கத்தின் கண்ணிலேயும், பொதுமக்கள் கண்ணிலேயும் மண்ணைத் தூவி, இருப்புச்சரக்கை இருட்டடிப்புச் செய்து, கள்ளச் சந்தையில் ஒன்றுக்குப் பத்தாய் விலையிட்டுப் பணஞ்சேர்த்தும், பஞ்சு மெத்தையிலே ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டு அநியாய வட்டி வாங்கி என்புருக்கி நோய்போல் சமுதாயத்தை அரித்துச் செல்வம் திரட்டியும், அதிகாரத்தாலும், பதவியாலும் பெறும் சம்பளத்தினும் பன்னூறு மடங்கு கிம்பளம் என்னும் பெயரால் பணம் குவித்தும் வாழ்வோர் சமுதாய மேலோராய் ஏறு நடையிட்டு உலவித்திரியுநிலை மாற்றமுறப் போவது இல்லை. தவறும் இடத்திலெல்லாம், தவறுபவரையெல்லாம் எவ்விடத்தும், எவரும் தட்டிக் கேட்பார், சமுதாயத்தினர் தம் தனிப்பட்ட பகைவனைப் பார்க்கிலும், சமுதாயப் பகைவனையே—அறத்தின் பகைவனையே—பகைவனாகக் கருதிக் காறியுமிழ்வர், மனித இனத்தில் வைத்து மரியாதை செலுத்தமாட்டார், போன போன இடங்களிலெல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல், அன்பு அணைப்பு இல்லாமல், நண்பு, சுற்றம் கருதாமல் சமுதாயப் பகைவனை வெறி நாயை வெருட்டியடிப்பது போல அனைவரும் வெருட்டுவர் என்னும் நிலைமை ஏற்பட்டால் அன்றித், திருடுவது அன்றித், திருட நினைப்பதும், குற்றம் செய்வது அன்றிக் குற்றமானதை எண்ணுவதும் குற்றமே என்னும் நிலைமை ஏற்படாது. இந்நிலைமை வருவது இனி, வள்ளுவர் கையில் இல்லை! திருக்குறள் பொன்வரிகளில் இல்லை! இருப்பது கற்பவர் நெஞ்சிலும், நிற்பவர் நிலையிலுமே! உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.  28. வழி நடையும் வாழ்க்கை நடையும் பிள்ளை உள்ளமே வெள்ளை உள்ளம்; மிகப் பெரியவர்கள் உள்ளமும் அத்கையதே. ஏன்? களங்கம் எதுவும் இல்லை அவர்கள் உள்ளத்தில். மதிக்காவது மறு உண்டு; ஆனால் சான்றோர்களுக்கு அஃது இல்லை என்பது ஆன்றோர் மொழி! பிள்ளை நிலையிலிருந்து வளர்ந்து விட்ட மாந்தர்கள் உள்ளத்தே பலப்பல கறைகளைக் காணுகிறோம். நச்சுயிர்களும், கொடு விலங்குகளும் உறையும் காடுகளாகவும் குகைகளாகவும் அவர்கள் உள்ளங்கள் இருக்கக் காண்கின்றோம். நம்மோடு அவ்வுள்ளங்களுக்கு ஏதேனும் ஒரு வகையால்—பகைத்தோ—உறவாடியோ—தொடர்பு உண்டாகிவிட்டால் வாடுகிறோம். வதங்குகிறோம். தொடர்பு இல்லையானால் கவலையின்றி ஒதுங்குகிறோம். உள்ளம் கொடுமைக்கும் களங்கத்திற்கும் உறைவிடமாகப் பிறவியிலேயே அமைந்து உள்ளதா? பின்னாளில் உருவாக்கி வளர்த்துக் கொண்டதா? பிறப்பிலேயே உள்ளம் அத்தன்மைத் தாகவே அமைந்துள்ளது என்றால் நாம் கவலைப்படுவதில் கை கண்ட பயனேதும் இல்லை; மாற்றியமைக்கவும் முடியாது. ஏனேனில் இறைவன் படைப்பை நாம் மாற்றி அமைத்து விட இயலுமா? ஆனால், உள்ளம் குழந்தைப் பருவத்தில் களங்க மற்றதாகவே—மாசு மறு அற்றதாகவே—உள்ளது. இளம் உள்ளத்திற்கும் பளிங்கிற்கும் வேற்றுமை இல்லை! பின்னர்த்தான், உள்ளத்தில், பழக்க வழக்கங்கள், பெற்றோர்கள் நண்பர்கள் செயல்முறை, வழிகாட்டுதல், உடல்நிலை தொழில்நிலை, உணவு ஆயவை அனைத்தும் புதிது புதிதாகச் சிலச்சில முத்திரைகளை வைத்துச் செல்கின்றன. முத்திரைகளிலே நல்ல முத்திரைகளும் உண்டு; தலைகீழ் முத்திரைகளும் உண்டு; என்ன என்று புலப் படாமல் ஏங்க வைக்கும் முத்திரைகளும் உண்டு; ஏதோ ஒரு வகையில் முத்திரைகள் விழுவது உண்மையே! பளிங்கிலே தூசி படிவது இல்லையா? புகை பிடிப்பது இல்லையா? வடுக்களும், சிறாய்ப்புகளும் ஏற்படுவது இல்லையா? அப்பொழுது விதவிதமான, காணப் பொறுக்காத காட்சிகளை யெல்லாம் காண முடியும் அன்றோ! அது பளிங்கின் இயற்கைத் தன்மையா? இல்லை! பின்விளைவு! இப்படித்தானே ஆற்று நீரும் உள்ளது. மழையாக வீழும் போது மாசு உண்டா துளியில்? மண்ணில் வீழ்ந்தபின் எத்தனை எத்தனை அழுக்கு—குப்பை—கூளம்—வண்ணம் சுவை? உள்ளமும் பளிங்கும் ஒப்பானவையே. அது போல், உள்ளமும் நீர்த்துளியும் ஒப்பானவையே. பளிங்கில் பட்ட கறையை அகற்ற முடியும்; நீரின் அழுக்கையும் அகற்ற முடியும்; உள்ளக் கறையைப் போக்க முடியுமா? கறையை எளிதில் போக்கிவிட முடியும் என்பது வள்ளுவப் பெருமகன் போன்றோரின் தெளிவு. உடலில் அழுக்கிருந்தால் எவ்வளவு எளிதில் நீக்கி விடுகிறோம். எதனால்? தூயநீரால்! நீரால் எவ்வாறு உடல் அழுக்கை நீக்கி விடுகிறோமோ அப்படி எளிதாக உள்ளத்து அழுக்கையும் நீக்கி விடமுடியும்! அதற்குத் தண்ணீர் வேண்டாம்; வெந்நீர் வேண்டாம்; மருந்துப் பொடியோ மணப்பொடியோ வேண்டாம். அவை யனைத்தும் உள்ளக் கறையைப் போக்கப் பயன்படக் கூடியனவா, இல்லை! வாய்மை என்னும் நீரால்தான் உள்ளந் தூய்மை அடைய முடியும். புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் என்பது வள்ளுவர் வாய்மை உரை. வாய்மை நீரால் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தலாம் என்று வள்ளுவர் கூறினாரோ இல்லையோ, உடனே ஒருவர் வரிந்து கட்டிக் கொண்டு ஓடோடி வந்தார். அவர் ஒரு சிக்கலான ஆராய்ச்சியில் மாட்டிக் கொண்டு இருந்தார். வாய்மை என்பது யாது, என்பதை அவரால் தெளிவு செய்து கொள்ள முடியாமல் தவித்துக் கிடந்தார். வந்த விரைவிலே நெடு மூச்சு வாங்கப் பேசினார்: ஐயா, நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு அதாவது - உள்ளதை உள்ளவாறு கூறுவதுதானே வாய்மை! உள்ளதை உள்ளவாறே எவ்விடத்தும் எப்பொழுதும் கூறி விட வேண்டுமா? உள்ளதைச் சொன்னால், ஊரே அழியும், உறவே கெடும், உயிரே போகும் என்னும் நிலைமை ஏற்பட்டாலும் விளைவைப் பற்றிக் கவலைப் படாமல், சொல்லி விடுவதுதான் வாய்மையா? ஏழைத் தந்தையினிடம் அவன் மகன் அப்பா ஏழு சட்டை வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்! தந்தையினிடம் காற் பணம் கூட இல்லை. இருந்தாலும் ஏழு என்னடா ஒன்பது தைப்போம் என்கிறான்! இது பொய் தானா? உன் முகம் குரங்கைப் போலவே இருக்கிறது; கொஞ்சம் கூட மாற்றமில்லை என்று கன்னமும் கண்ணும் குழிந்த ஒருவனை ஒருவன் கூறுகிறான். உண்மை உரைக்கிறான் என்று உவப்பால் அணைத்துக் கொள்வானா குரங்கு மூஞ்சியன்? நாள் தவறாமல் தெருத்தோறும் அலைந்துதிரிந்து பண்டமாற்றுச் செய்யும் ஒருவனை நீ நாய் போல் அலைகிறாய் என்றால் உண்மை என்று ஏற்றுக் கொண்டு அன்பு மழை பொழிவானா? மக்களைச் சாகக் கொடுத்த ஓரன்னை மனம் நைந்து நொந்து மெலிந்து ஒடுங்கிப் போக, நாள் செல்லச் செல்ல மற்றவர்கள் தேற்றுதலும், மற்றைப் பிள்ளைகளின் நல்வாழ்வும் கருதிச் சற்றே தேறியிருந்த பொழுதில் ஒருத்தி வந்து அடியே அம்மா! பிள்ளையைச் சாகக் கொடுத்தவள் போலாகவா இருக்கிறாய்? கொழு கொழு என்று இருக்கிறாயே என்று அவளிடமே உண்மை சொன்னால் அதற்கு மேல் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பாள்? காலை வெட்டி விடுவேன் என்று ஒருவன் தன் கோபத்தில் பகைவனைப் பற்றிப் பேசி விடுகின்றான். இதனைக் கேட்ட ஒருவன் தாங்க மாட்டாமல் பகைவனிடம் போய்ச் சொல்லி விடுகின்றான். கத்தியை எடுத்துக் கொண்டு கடுகடுப்புடன் வருகின்றான் பகைவன். அவ்வேளையில் ஒருவன் அவன் முன் போய், நீ சொல்பவன் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதே. நானும் கூடஇருந்தேன். அவன் என்ன சொன்னான், எங்களுக்குள் எப்படியோ பகை ஏற்பட்டு விட்டது, இது கூடவே கூடாது, அவன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டாவது பகையை விட்டு விட வேண்டும் என்றான்! உன் காலை வெட்டுவதாகவா கூறினான்? என்று இடை நின்று தடுத்து விடுவது தவறா? பிரிந்தவர்களை ஒன்று படுத்துவது குற்றமா? அதற்குச் சிறிது மாற்றிச் சொல்லுவது பொய்யா? வள்ளுவர் கூறினார்: அன்பா! நீ கேட்பது சரிதான். உள்ளதை உள்ளவாறு சொன்னால் நன்மை விளைவதுதான் மிகுதி. சிற்சில இடங்களில் தீமை விளையும் என்று தெளிவாகத் தெரியுமானால் அவ்விடங்களில் மட்டும் உள்ளதை உள்ளவாறு கூறாமல் இருக்கலாம்; சற்று மாற்றியும் கூறலாம். இத்தகைய இடங்களிலெல்லாம் அணுவளவும் கூறுபவனது நன்மை கருதியதாக உரை இருக்கவே கூடாது. அவ்வாறு இருக்குமெனின் அது பொய்மையினும் மாபெரும் பொய்மையாகும். குற்றங்களிலெல்லாம் தலையாய குற்றமும் ஆகும். ஆனால் பிறர் நலங் கருதிச் சொல்லும் பொய்மை மட்டுமே அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அவ்விடத்து மட்டும் அப்பொய்மை மெய்மையின் பயனாம் நன்மையைத் தரும் ஒரே ஒரு காரணத்தால் மெய்யாகக் கருதப்பெறலாம். ஆனால் அதுவும் மெய்யன்று! உரையை நோக்கப் பொய்யாம்; உளத்தையும், பயனையும் நோக்க மெய்யாம். அது கூடாது எல்லா இடங்களிலும் உள்ளது உள்ளவாறு கூறலே மெய்யென்று காட்டி உலகுக்குக் கேடு சூழ்வது மெய்யின் பெயரால் கொலை செய்வதாகும். இந்நிலையில் மெய்மை செய்யும் கொலையையோ, கொடுமையையோ எண்ணி மெய் கொலைக்கு நிகர் என்று காட்டுவது பொருந்துமா? பிறருக்குச் சிறிதளவும் தீமை பயக்காத சொல்லைச் சொல்லுவதே வாய்மை. பொய்மையாக இருந்தால் கூட அது செய்யும் நன்மையைக் கருதிக் கருத்தளவிலே அதனை வாய்மை இடத்தில் நிறுத்தி நடிக்க விட்டாலும் குற்றமாகாது. இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவன், சொல்லைக் கொண்டு இது பொய், இதுமெய் எனப் பிரித்து இடர்களுக்கு ஆளானேன். சொல்லின் பயனை நோக்கித்தான் பொய், மெய் அறியவேண்டும் என இன்று அறிந்துகொண்டேன் என்று முழங்கினான். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்று கூறி, நடந்தான்! நடந்தது பாதை வழியில் இல்லை! வாழ்க்கை வழியில்!  29. காவற் கடன் மனிதன் கடமைகள் பலப்பல; அவற்றுள் காவற் கடமையோ தலைதூக்கி நிற்கும் ஒன்று. பழங்காலம் ஆகட்டும், தற்காலம் ஆகட்டும், வருங்காலம் ஆகட்டும் காவற் கடமை ஆட்சி புரியாத மாந்தர் இல்லை எனலாம். வீட்டுக் காவலை மனிதன் பெரிதும் போற்றுகிறான். இல்லையேல் கதவும், பூட்டும், பெட்டியும், நிலவறையும், புரையும் இத்துணையளவுக்கு மிகுந்து காணமுடியுமா? பெட்டி பூட்டுத் தொழிற்சாலைகளும், நீர், நிலம், காடு, சுவர் முதலான அரண்களும் மல்கியுள. இத்தனைக்கும் மேலாகத் தரணி வாழும் மன்னுயிர் அனைத்தும் தன்னுயிராகப் பேணுதற்கு முடியாட்சிக் காலத்தில் காவலர்கள் இருந்தனர்; தளபதிகள் இருந்தனர். குடியாட்சிக் காலத்தில் காவல் அமைச்சரும், காவல்துறையும் கடனாற்றுகின்றன. நாட்டையும் வீட்டையும் காத்தால் போதுமா? அவரவர் கூட்டை - அவரவரை - காத்தலே சிறந்த காவல் என்பதை வற்புறுத்தாத பெரியோர்கள் இலர்! தற்காத்தல் வேண்டும்; சொற்காத்தல் வேண்டும்; நிறை காக்கும் காப்பே காப்பு; யாகாவாராயினும் நாகாக்க; காக்க பொருளா அடக்கத்தை - இப்படி எத்துணை எத்துணையோ காவல் வழிகளைக் காட்டியுள்ளனர் ஆன்றோர். வீடு, நாடு, உள்ளம் என்னும் இம் முத்திறக் காவல்களுள் அரிதானது யாது என்பது சிந்தனைக் குரியது. நாட்டுக் காவல் நன்கு அமையுமாயின் வீட்டுக் காவலைப்பற்றிக் கவலைப்பட வேண்டுவது இல்லை. வீட்டுக்காவல் சிறப்புற அமையின் உள்ளக் காவலுக்குத் துணையாக இருக்கும். என்றாலும், மற்றையக் காவல்களினும் உள்ளக்காவலே அரிது எனல் வெளிப்படை. கோட்டையும் படையும் கொண்டு குவலயம் காக்கும் ஒருவனும் உள்ளத்தைக் காப்பது அரிது என்பர். பொதுவான மனம் பொறாது பூவுல கெல்லாம் என்னதே என்றாகச் செய்வேன் எனப் போர்ப் பறை கொட்டிக் கிளம்பிய வீர வேந்தர்களாலும் உள்ளத்தைக் காக்க இயலவில்லையே! வீரன், சேரன் செங்குட்டுவனால், பாண்டியனும் சோழனும் பகர்ந்த தோற்றோடியவர்களைச் சிறைபிடித்து வந்தது போலும் வீரம் யாம் கண்டது இல்லை என்னும் சொல்லைத் தாங்கிக் கொள்ள முடிந்ததா? கொதித்து எழுந்து, வடநாட்டுப் போரை அடுத்துத் தென்னாட்டிலும் ஒரு களப்பலி உண்டாக்கிவிட முனைய வில்லையா? பாண்டிய சோழ வேந்தர்களாலும், சேரன் செங்குட்டுவன் வெற்றித் திறங்கண்டு, வாழ்த்த முடிந்ததா? பழித்துரைக்கத் தானே முந்திக் கொண்டு நின்றனர்! இவர்கள் அனைவரும் பொறுத்தல் சிறப்பாம்; மறுத்தல் அதனினும் சிறப்பாம் என்னும் பொன்னெறியை அறியாதவர்களா? இவர்கள் நிற்கட்டும்! வீர உணர்வாளர்கள்; மாற்றார் படைகளை மண்டியிட்டு மண் கவ்வ வைத்தலில் பழக்கப்பட்டு விட்டவர்கள்! களப்பலி யூட்டுதலில் கைவரப் பெற்றவர்கள்! உரன் என்னுந் தோட்டியால் ஓரைந்தும் காக்க வேண்டிய உரவோர்களும், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கி வாழ வேண்டிய துறவிகளும் ஓரொரு வேளையில்-சிலர் பல வேளையில் கூட-உள்ளங் காக்கும் கடமையில் தவிர்ந்து, சாதாரண மாந்தர் நிலைமைக்கு இறங்கி விட்டதைக் காட்ட எத்துணைக் கதைகள் உள. இவை என்ன காட்டுகின்றன? உள்ளக்காவலின் அருமையையே காட்டுகின்றன அன்றோ! மாந்தர் உள்ளத்து ஏற்படும் உணர்ச்சிகள் பலப்பல. நல்லுணர்ச்சிகள் வளர்க்கப்பட வேண்டியவை; வளர வேண்டியவை; போற்றிப் புகழப் பட வேண்டியவை. தீய உணர்ச்சிகள்—ஒழிக்கப் பட வேண்டியவை; அழிக்கப்பட வேண்டியவை பழிக்கப்பட வேண்டியவை. வெள்ளம் தடுத்து நிறுத்துவது அரிதா? அணையைப் பெயர்த்து விடுவது அரிதா? எது நலம் பயக்கும்? கோபம் போன்ற தீய உணர்வுகளை ஒடுக்கி அடக்குவதே அரிது. கோபம் அடைய எவராலும் முடியும். குழந்தையாலும் முடிகின்றது; விலங்காலும் முடிகின்றது கோபப்பட! ஆனால் அக் கோபத்தை அடக்க எத்துணை நூலறிவு, நுண்ணறிவு, பண்பாடு வேண்டியுளது? எளிதாகக் கிளம்பி வன்கொடுமை புரியும் சினத்திற்கு மனிதன் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வந்தபின் காப்பவனிலும், வருமுன் காப்பவனே பெரியன் என்பது முதுமொழி! கோபத்தைக் காப்பதைப் பொறுத்த அளவில், இம் முதுமொழியைத் தெய்வ மொழி என்றாலும் தகும். கோபமும் நஞ்சும் இணை என்பர்—செயலால்; பல், கண், உடல் ஆகியவை நஞ்சுண்டால் கருகும்; உரை குழறும்; உடல் துடிக்கும்; மயக்கம் ஏறும் மதி மருளும்; இத்தன்மைகள் அனைத்தும் சினங் கொண்டவனுக்கும் உண்டு. ஒருவன் தீராச் சினத்தனாகக் கொதித்தெழும்போது அவன் எழில் முகத்தைப் பளிங்கில் பார்க்க வேண்டும். அல்லது நிழற் படம் ஒன்று எடுத்து அவன் அமைதி கொண்ட நேரம் காட்ட வேண்டும். அப் பொழுது அழகு ஒழுக அமைந்த அவ்வெழில் ஓவியம் அவனைக் கண்டு நகை செய்யும். அறிவுடையன் ஆயின் அழுவான்; ஒரு வேளை திருந்தவும் கூடும்.கோபம் செய்யும் கொடுமைகள் ஒன்றா இரண்டா? கோபம் பாவம் சண்டாளம் என்று அடுக்கியதெல்லாம் ஒரு பகுதிதான்; முழுமை அன்று. காட்டில் ஒரு மரத்தில் பற்றிக் கொண்ட தீ அதனோடு ஒழிகின்றதா? முதலாவது தீப்பற்றிய மரம் அழியும்பின், அடுத்ததுஅடுத்ததுகாடே அழியும்! இப்படித்தான் கோபம் கொண்டவன் தன்னோடு தன் குடியையும் அழிக்கிறான். இதனால் அன்றோ சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர். சேர்ந்தாரைக் கொல்லுவது எது? தீ! இங்குத் தீயாக இருப்பது சினம்! இது சுட்டெரிப்பது இனம்! எப்பொழுதும் உதவுவதற்குக் காத்து நிற்கும் ஒரு பெரும் இனத்தைச் சுட்டெரிக்க முந்து நிற்கும் சினம் செய் கொடுமை அளவில் படுமா? உடற் கூறு ஆய்ந்தவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் மகிழ்ச்சி யடைகிறான் என்றால், வாய் விட்டுச் சிரித்து இன்புறுகிறான் என்றால் அப்பொழுது பணி புரியும் நரம்புகள் பதின் மூன்றாம். ஆனால், அவன் முகங் கடுகடுத்துக் கொடுங் கோபத்திற்கு ஆளானான் என்றால் அப்பொழுது வேலை செய்யும் நரம்புகள் நாற்பத்து ஏழாம்! என்னே சினத்தின் கொடுமை! விரும்பிச் செய்ய வேண்டிய எளிய இனிய சிரிப்பை மனிதன் புறத்தே தள்ளுகிறான்! வெறுத்து ஒதுக்க வேண்டிய வெகுளியை அரவணைத்துக் கொள்ளுகிறான். இதனை அறிவீனம் என்பதா? அவனவன் தலை விதி என்று வாய் மூடிக் கிடப்பதா? நாட்டோடு நாட்டுக்குப் பகை நேரலாம். ஒரு நாட்டிலும் அரண்மனைக்கு வெளியே யிருந்து பகை நேரலாம். இவற்றுக்கு ஆள்வோர் அஞ்ச வேண்டியதுதான். தக்க வழிகளால் பகைமையை ஒழிக்க வேண்டியதுதான். என்றாலும் அரண்மனைக்கு உள்ளே இருந்து கொண்டு செயல்களிலெல்லாம் ஊடாடிக்கொண்டு இருக்கும் அமைச்சன் ஒருவன் பகை கொண்டானே ஆனால் - இல்லை சிறிய அளவிலேனும் மாறுபாடு கொண்டான் ஆனால்அவனுக்குத்தான் அரசு மிக மிக அஞ்ச வேண்டும். பழுதெண்ணும் மந்திரியுள் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடியுறும் என்பது வள்ளுவர் வாய்மொழி. இவ் வாய்மொழி நமக்கு வற்புறுத்துவது யாது? மனிதன் புறப் பகைகளைக் கண்டு அஞ்சுவதினும், ஒழிப்பதினும், அகப் பகையைக் கண்டு அஞ்சுவதும் ஒழிப்பதுவுமே இன்றியமையாதது என்னும் நற் கருத்தை வலியுறுத்துதல் தெளிவாம். இதனை நினைத்துச் செயலாற்றியவர்கள் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்தோர் ஆவர்! சீத்தலைச் சாத்தனாரைப் பற்றி ஒரு செய்தி: அவர் உயர்ந்த மொழிப் பற்றாளர். அவர் காணும் நூல்களில் எந்த வொரு பிழை வரக் கண்டாலும் வெதும்புவார், மொழிக் கொலையைக் கண்டு கண்டு நைவார். அந்நைவு சினமாகக் கிளம்பும். அவ் வேளையில் எல்லாம் தம் உணர்ச்சியை அடக்குவதற்காகத் தம் எழுத்தாணியை எடுத்துத் தம் தலையிலே குத்திக் கொள்வார், இந்தப் பிழையைப் பார்க்கப் நேர்ந்ததே என்று. பிழை செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதில், பிழையைப் பார்க்க நேர்ந்த குற்றத்திற்காகத் தம்மைத் தண்டித்துக் கொண்ட பெருமை சாத்தனார்க்கு இயல்பாயிற்று. மொழியிற் பிழை செய்த புலவர்களைத் தலையில் குட்டு வைத்த பிள்ளைப் பாண்டியனையும், குறும்பி அளவாகக் காதைக் குடைந்து எட்டின மட்டும் அறுத்த வில்லியையும் ஒன்றிரண்டாகப் புலவர்கள் குடுமியை முடித்து வெட்டி விட்டு ஓட்டிய ஒட்டக் கூத்தனையும் பற்றிய செய்திகளை அறிந்து, அதே கண்ணோட்டத்தில் சாத்தனார் சால்பையும் நோக்க வேண்டும். எத்துணை இடைவெளி? உந்தி எழும்பும் கோபத்தைத் தடுப்பதற்குக் கெய்சர் என்னும் வேந்தன் ஒரு வழியைக் கொண்டிருந்தான். தனக்குக் கோபம் வருகின்றது என்றால் உடனே தன் காதைப் பிடித்துத் திருகிக்கொள்வான்; பிறரைத் திருகிக் கோபத்தைப் பாவமாக மாற்றுவதைப் பார்க்கிலும் தன்னைத் திருகி அடக்க முடையவன் ஆவது நலம் என்பது அவன் தெளிவு! சீத்தலைச் சாத்தனார் பரம்பரை என்று சொல்லலாம்போல் இல்லையா? நாடாளும் மன்னவரும் நாவல்ல புலவர்களும், ஆன்றோர்களும் சான்றோர்களும் சினத்திற்கு அஞ்சி, வெளிவரா வண்ணம் காக்க விரும்பினார்களே! காரணம் என்ன? சினத்தைப் பொருள் என்று கருதி வாழ்ந்தவன் உறுதியாக அழிவான். நிலத்தில் அறைந்தவன் கைதவறாது படுவது போலச், சினங்கொண்டவனும் பட்டழிவான். அன்றியும் சினத்தை வளர்த்துவிட்டவர்கள் உயிருடையவர்கள் என்று பெரியோர்களால் கருதப்பட மாட்டார்கள். இறந்தவர்களாகவே எண்ணப்படுவர். சினத்தைத் துறந்தவர்களே உண்மைத் துறவிகள். பிறரல்லர்! இத்தகைய தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டமைதான் கோபத்தை வெறுக்கக் காரணமாயிற்று. இங்குக் காட்டியவற்றால் நாம் கொள்ளக் கிடப்பது என்ன? உண்டி, உடைகளால் ஒருவன் தன்னைக் காத்துவிட முடியாது. உறவினர் நண்பர்களைக் கொண்டும் தன்னைக் காத்துவிட முடியாது. பொன் பொருள்களாலும் காக்க முடியாது. மருந்து, ஆடல் பாடல் இவற்றாலும் காக்கமுடியாது. காப்பாற்றுவது ஒன்றே ஒன்றுதான். நாம் நம்மிடம் சினம் நேராமல் காப்பாற்றவேண்டும். அச்சினம் இல்லாமை நம்மைக் காப்பாற்றும். அவ்வளவே! தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.  30. துன்புறுத்தாத் துறவு உயிரைத் தந்தேனும் கொண்ட உறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கொள்கையாம். எதிர்ப்படும் இடையூறுகளை எண்ணி இடைமுறிந்து விடுவது கொள்கையாகாது; முறிந்து விடுபவனும் கொள்கையாளன் ஆகமாட்டான். உண்மையான கொள்கையாளன், கொண்ட கொள்கையை நிறைவேற்றுவதில் கொள்ளும் அக்கறையில் குறையாத அளவு, கொள்கை நிறைவேற்றப் பெறவேண்டிய வழிதுறைகளிலும் அக்கறை செலுத்துவான். எப்படியும் கொள்கை நிறை வேறுவது ஒன்றே அவன் குறிப்பாக இருக்காது. முறை கேடாம் வழியால்தான் தன் கொள்கை நிறைவேற்றப் பெற்றாக வேண்டும், இன்றேல் இல்லை என்னும் ஒரு நிலைமை எய்துமானால் அதற்காக அக் கொள்கையை நிறைவேற்றாமல் விடுவானே அன்றிக் குறுக்கு வழியிலே போகான். புலியைப் பற்றிய செய்தி ஒன்றுண்டு. காட்டு விலங்குகளைச் சாடி உண்பது அதற்கு இயல்பு. வாலைச் சுழற்றித் தாவி எதிர்ப் பட்ட விலங்கை அடித்து, மேலே தூக்கி எறியுமாம். அவ்வாறு எறியுங்கால், மேலே சென்ற விலங்கு தனக்கு வலப்புறம் வீழுமாயின் உண்ணுமாம். இடப்புறம் வீழ்ந்தால் அதனை உண்ணாதது மட்டுமின்றி, அன்று முழுவதுமே உண்ணாது பட்டினி கிடந்து, மறுநாள் வேறொன்றை வலம்பட வீழ்த்தி உண்ணுமாம்! இச் செய்தி புலியின் கொள்கை அழுத்தத்தையும், முறையான வழிச் சிறப்பையும் நன்கு உணர்த்தும். எப்படியும் வாழலாம் என்பது கொள்கையாளியின் கோட்பாடன்று! இப்படித்தான் வாழ வேண்டும் என்னுங் கொள்கை உறுதிகொண்டு வாழ்பவனே கொள்கையாளி! புலியன்ன கோட்பாட்டாளன்! இதனால்தான் சங்கப் புலவன் ஒருவன் சாற்றினான். விளைந்த வயலைத்தேடி. வளைந்து முதிர்ந்த கதிரைக் கொய்து உணவாகத் தன் இருப்பிடத்தில் நிறைத்து வைக்கிறது எலி. இத்தகைய எலியைப் போன்ற அற்ப முயற்சியால் பெரும்பொருள் திரட்டிப் பிடித்துச் சேர்த்து வைக்கும் உள்ளமில்லாதவர்கள் நட்பு இல்லாது ஒழிக! வலிய பன்றி, இடப்பக்கத்தே வீழ்ந்தது கருதி, அன்று அவ்விடத்து உண்ணாது போகி, மறுநாள் பெரியமலைப் பக்கத்தே யானையை வலம்பட வீழ்த்தியுண்ணும் புலியன்ன கொள்கையுடையவர்களோடு பொருந்தி வாழும் நாட்கள் உண்டாவதாக! என்ன அருமையான கொள்கை! இக்கொள்கையை வகுத்துக்காட்டிய புலவன் யாவன்? பாவேந்தனும் கோவேந்தனுமாகத் திகழ்ந்த சோழன் நல்லுருத்திரன் அவன்! புறநானூற்றில் ஒளி விடுகின்றது இவ்வொள்ளிய பா! நாகரிகம் என்பது என்ன? உடுப்பதிலே உண்பதிலே, உபயோகிக்கும் பொருள்களிலே, உரையிலேயா அடங்கிக் கிடக்கிறது. காலந்தோறும் இடந்தோறும் வேற்றுமையுறும் இவை நாகரிகமாகா! நாகரிகம் உள்ளத்தைப் பொறுத்தது! எந்நாளும் மாற்றமில்லாத் தன்மையது! ஆம்! உயர் கோட் பாடுகளே நாகரிகம்! எஞ்சிய வெல்லாம் போலி நாகரிகம்! நண்பர்கள் முன்வந்து நஞ்சைத் தந்தாலும் சிறிய வேற்றுமையுணர்வும் இல்லாது உண்பதே நாகரிகம்! என்றுரைக்கும் பண்டைத் தண்டமிழ்ச் சான்றோர்களின் ஒருமித்த முடிவில் உயர் கோட்பாடே நாகரிகம், என்னுங் கருத்து இலங்குதலை உன்னுக! பழங்கால வீரன் ஒருவன் போர்க் களம் சென்றான். ஆங்கு யானை ஒன்று அவனைத் தாக்குமாறு வெறிகொண்டு வந்தது. அவனோ, அஞ்சினான் இல்லை. எதிர் வந்து தாக்க முனைந்த போதும் தாக்கினான் இல்லை. அமைதியாக நின்றுகொண்டு இவ்யானையின் வீரமோர் வீரமோ? எதிரி தாக்க முனை யாதிருந்தும் ஊக்கமாகத் தாக்க வரும் இது வீரம் உடைத்து அன்று! விலங்குக்கு அதன் இயல்பு போகுமா? என்ற புன் முறுவல் பூத்து நின்றான். அடுத்திருந்த ஒரு வீரன் கேட்டான் நீ ஏன் யானையைத் தாக்காமல் பார்த்து நிற்கிறாய்? வீரன் கூறினான்: இரண்டு கைகளையுடைய யான் ஒரு கையுடைய யானையை வென்றாலும் வெற்றியாகுமோ? இணையான ஒன்றை எதிர்த்து வெல்லுவதே வெற்றி; வென்று பழி எய்துவதினும் தோற்பதே சிறப்பு கேள்விகேட்ட வீரன் வாய் திறக்கவில்லை! என்ன கொள்கை பாருங்கள்! யானை வீரன் குதிரை வீரனைத் தாக்கமாட்டான். குதிரை வீரன் காலாள் வீரனைத் தாக்கமாட்டான்; வில்வீரன் வேல் வீரனைத் தாக்கமாட்டான். வேல் வீரன் வாள் வீரனைத் தாக்கமாட்டான். வாள் வீரன் படைக்கலம் இல்லாத வீரனைத் தாக்கமாட்டான். எந்த வீரனும் உறுப்பு இழந்தவன், ஆடை நெகிழ்ந்தவன், குடுமி அவிழ்ந்தவன், புறமுதுகிட்டவன், போருக்கு வராமல் ஒதுங்கி நின்றவன், இளையர், கிழவர், பெண்டிர் ஆகியவர்களைத் தாக்கமாட்டான். அக்காலப் போர்க் கொள்கை அது. காலந்தோறும் வேறுபடும் கோட்பாடுகள் உள. பழங் காலப் போர்க் கொள்கைகளை இக்காலம் போற்ற முடியுமா? காலநிலை மாறிவிட்டது! கோட் பாடுகளும் மாறவேண்டியவை ஆய்விட்டன. ஆனால் மாறாக் கொள்கைகள் இல்லையா? புறக் கருவிகள் மாறிமாறி அமைவதும் அகக் கருவிகள் மாறாமையும் கண்கூடு! வள்ளுவப் பெருந்தகையும், கிறித்து பெருமானும் தெளிந்த அன்பு நெறியும், அருள் நெறியும் எக் காலத்துக்குப் பொருந்தா? எவ்விடத்திற்குப் பொருந்தா? அக் கோட்பாடுகள் மாறிவிடுமாயின் மனிதப் பூண்டு வாழமுடியுமா? ஆகவே, மாறி மறையும் கோட்பாடுகளில் அழுந்தி நிற்பதினும். மாற்றமுறாக் கொள்கைகளில் அழுந்தி நிற்பது ஆயிரம் ஆயிரம் மடங்கு அவனுக்கும் மன்பதைக்கும் நலம் பயக்கும். அத்தகைய மாறாக் கொள்கையை உயிரெனக் கொண்டோரே மாநிலம் போற்றும் மாண்பினராக உள்ளனர். எஞ்சியோர் சிற்சில காலத்துச் சிற்சில இடத்துக் கிளர்ந்து, ஓரெல்லையுள் மறைந்து போகின்றனர். இன்றைய உலகம் புதுமைப் பேறாகக் கொள்ளும் ஒரு கொள்கை துன்புறுத்தாக் கொள்கையாம். (அகிம்சை) இக் கொள்கை வள்ளுவம் பிறந்த இம்மண்ணுக்குப் புதியது அன்று. காந்தியடிகள் தோன்றியபின், இக்கொள்கை புதிய விளக்கம் பெற்றிருக்கின்றது. கோகினூர் வைரம் என்றாலும் ஒரு குடிசைக்குள் மறைத்து வைக்கப்பெற்று இருந்தால், அதன் சிறப்பை அகிலம் அறிவது எப்படி? உலக மேடையிலே, உயர்ந்தோர் அரங்கிலே உலவவிட்டால் உண்மை நிலை புலனாம்! இப் பணியைத்தான் காந்தியடிகள் செய்து காட்டினார்! ஏட்டளவில் இருந்த துன்புறத்தாக் கொள்கை உலகெலாம் பரவும் நிலை கண்டார். காரணம் என்ன? சொல்வீரர் அல்லர் அவர்! செயல் வீரர்! செயலாற்று இன்றேல் செத்துமடி என்பது அவர் வாக்கினின்று முகிழ்த்த முழுமணி! துன்புறுத்தாக் கொள்கையின் பயன் என்ன? இன் புறுத்தலே பயனாம்! இதனினும் உலகுக்கு என்ன வேண்டும்? துன்புறுத்துதலால் ஒருநாளும் துன்பத்தை ஒழிக்க முடியாது. பழிக்குப் பழி செய்தலால் ஒருநாளும் பழியை ஒழிக்க இயலாது. அடித்தால் எழும்பும் பந்தை அடிக்காமல் விட்டால் அன்றி அமைந்துவிடக் காணமுடியுமோ? எரியும் நெருப்பில் நீர்விடின் jÂí«—mizí«? நெய்யை விடின் மேலும் எழும்! சினத்தைச் சினத்தாலும், பகையைப் பகையாலும், வெறுப்பை வெறுப்பாலும், அழிவை அழிவாலும் தீர்த்து விடுவோம் என முனைபவர்கள் வெற்றி காணப் போவது இல்லை. பொறுத்தல் ஒன்றாலேயே, இன்னா செய்தார்க்கும் இனியது செய்யும் ஒன்றாலேயே, வெறுத்து ஒதுங்குபவர்க்கும் விருப்புச் செய்யும் ஒன்றாலேயே வழிப்படுத்த முடியும். இத்தகையன செய்ய அனைவராலும் இயலுமோ? அனைவராலும் எளிதாகச் செய்ய இயலுமாயின் விரல் விட்டு எண்ணத்தக்க உயர்பெருஞ் சான்றோர்கள் தாமா உலகந் தோன்றிய காலமும் இன்றுவரை இருந்திருப்பர்? இஃதொன்றே இக்கோட்பாட்டின் அருமையைப் புலப்படுத்தத்தக்க சான்றாதல் உறுதி. முனைப்பும் பற்றும் அறுவதுதான் துறவு—தவம்! இவை அற்றவன் இல்லத்தில் நின்றாலும் துறவிதான்! இவை உள்ளவன் துறவறத்தில் நின்றாலும் துறவியாகான்! உடையும் சடையுமோ துறவு? உள்ளத் துறவே துறவு! ஏனைப் புறத் துறவுக் கோலம்— உள்ளத் துறவு இல்லையாயின்—வெறும் வேடமே! முனைப்பும் பற்றும் அடங்கிய துறவிக்கு அருளாளிக்கு— ஒருவன் நேரிடையாகத் துன்பஞ் செய்தாலும் என்ன உணர்வு ஏற்படும்? ஏற்பட வேண்டும்? இவன் அறியாது துன்பஞ் செய்கிறானே! இதன் பயனை அடைய வேண்டி நேரிடுமே என்று இரக்கம் செலுத்தும் உணர்வு எழவேண்டும். அதுவே முதற்படி. அவன் செய்த துன்பத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்ளுதல் இரண்டாம் படி! பொறுத்துக் கொள்வதுடன் கேடு செய்தான் என்னும் எண்ணம் தனக்கு எப்பொழுதேனும் ஏற்படாவண்ணம் மறந்து விடுவது மூன்றாம் படி! தனக்குக் கேடு செய்தவனுக்குத் தன்னாலோ—அன்றிப் பிறராலோ எத்தகைய கேடும் நிகழ்ந்துவிடா வண்ணம் காத்து நிற்பது நான்காம் படி! அவனுக்கு நன்மை செய்வது ஐந்தாம் படி! நன்மை செய்தது கருதி மகிழாவண்ணம்—தன் கடமை அது எனக் கருதி நிலைப்பது ஆறாம் படி! இவ்வனைத்திற்கும் சான்றாக இலங்கிய பெரியோர்கள் அன்றோ—வாராது வந்த மாமணிகளாக இலங்குகின்றனர்! துன்புறுத்தாக் கொள்கை பற்றி வள்ளுவம் என்ன வகுக்கின்றது? வள்ளுவத்தின் எப்பகுதியும் துன்புறுத்தும் கொள்கைக்குத் துணைபோவது இல்லை என்பது பொதுவிதி. ஆயினும், சிற்சில குறள்மணிகளோ துன்புறுத்தாக் கொள்கையின் அடித்தளமாக நின்று ஆயிரம் ஆயிரம் ஊழிகளுக்கும் வள்ளுவத்தின் மாண்பைப் பறைசாற்றுவனவாக உள்ளன. கறுத்தின்னா செய்தவக் கண்ணும் அவர்நாண செய்யாமை மாசற்றார் கோள் இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் இக்குறள் மளணிகளை உன்னுக! உன்னுக! உலகங் கடப் பட்டுள்ளதா? இல்லையா?  31. ஒன்றே ஒன்று நூல் - நூற்பது நூல் ஆகிறது! கைவல்ல ஒருவன் தூய பஞ்சு கொண்டு நூற்று நூலாக்குகிறான்! நூல் - ஆடையாகிறது. மானங்காக்கிற - மதிப்பும் தருகிறது. மேலாடை இன்றிச் சபைபுகுந்தால் இந்த மேதினியோர், நூலாயிரம் படித்தாலும் பெரிதென்று எண்ணார் என ஒரு புலவர் பாடுகின்றார் அல்லவா! மனிதனுக்கு அடையாளமாக, நாகரிக முதிர்வுக்குச் சான்றாக இலங்குவது ஆடை! சொல்லைப் பஞ்சாகக் கொண்டு, நூற் நூற்கும் நுண்ணியர்களும் உளர். அவர்களுக்குப் பாக்களும், உரைநடையும் இழை நூல்கள் ஆகின்றன. இதுவும் நூல்தான்! முன்னது ஆடைநூல்; பின்னது அறிவுநூல்! முன்னையது எத்தகைய வேலைப்பாடும். விலையும் உடையது ஆயினும் திரிதிரியாகும்; நைந்துபோம்; கிழியும்! பின்னையது வளரும்; மேலும் மேலும் விளக்கம் பெறும்! வாழும்; விரியும்! நூற்றுப்பத்தாயிரம் பொன்பெறினும் நூற் சேலை நாற்றிங்கள் தன்னில் கிழிந்துபோம் என்று நூற்சேலை இயல்பை நுவன்ற ஔவையார், என்றுங் கிழியாது என்பாட்டு என்று ஒள்ளிய முடிவுரை வழங்கினார் பாட்டியலுக்கு! ஆடையை, அடுத்தடுத்து நாமதனைத் தப்பினால் நம்மையது தப்பும் என்று விளையாடிப் பாடிய இரட்டையர் ஆடை தப்பியது; பாடல் தப்பியதோ? ஆடை நூலிலும் தரம் உண்டு; அறிவு நூலுக்கும் தரம் உண்டு! தரங்கண்டறிவதும் தரம் உடையார்க்கே இயலும். புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் என்றார் புலமையுணர்ந்த சான்றோர் ஒருவர். பாலெல்லாம் நல்ல பாலாமா? நூலெல்லாம் வள்ளுவர் நூலாமா? என்று வினவினார் பழம்புலவர் ஒருவர். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமா? சொல்லெல்லாம் வள்ளுவர் சொல்லாமா? என்று கேட்கிறார் புதுப் புலவர் ஒருவர். நூல்கள் அனைத்தும் உயரிய நூல்கள் ஆவது இல்லை! நூற் பெயர்க்குத் தகுதி இல்லாத சிலவும் நூல் ஆதலுண்டு, அவையெல்லாம் காலமென்னும் கரையான் வாய்ப்பட்டொழியும். தக்கவை நிலைத்துத் தனிக் கோல் செலுத்தும். காலதேவன் ஒருவனே மெய்யறிவுடைய நீதிபதி! அவன் திருமுன்னிலையில் ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இல்லை! அவன் வேண்டியதை வாழவைப்பதிலும், வேண்டாதவற்றை ஒழித்துத் தள்ளுவதிலும் சற்றேனும் இரக்கம் காட்டுவது இல்லை! எஞ்சி நிற்கும் சங்க நூல்கள் இதற்குச் சான்று! இடைக்காலத்தே புற்றீசல் போல் கிளம்பிய எத்துணை நூல்களும் நூலாசிரியர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருநாள் நாடகமாடிப் போய்விட்டனர்! ஆடுநர்க் கழியும் உலகம் என்று புறநானூற்று ஆசிரியரோடு நாம் சேர்ந்து கொண்டு அமைதியாகக் குறிக்கலாம். அல்லது நாடகமே உலகம் என்று பொதுமக்களுடன் சேர்ந்து முழங்கலாம்! அற்ப வாழ்வு நூற்களின் தன்மை இத்தகைய இரங்கல் நிலையில் உள்ளது. உயர் நூலைப் படைத்தவன் எத்தகையன் ஆதல் வேண்டும்! அவனை அமரன் எனலாம்; சாவாத நூலைப் படைத்துள்ளவன் அவன் அல்லனோ! அதனால் அன்றே, சாவும் உடலைப் படைக்கும் நான்முகனினும், சாவா உடம்பாம் பாடலைப் படைக்கும் பாவலன் உயர்ந்தோன் என நாலடி பாடுகின்றது. முதல் நூற் பெருமகன் தொல்காப்பியன் நூலாசிரியனைப் பற்றி யாதுரைக்கின்றான்? வினையின் நீங்கியவன்; விளங்கிய அறிவன்; முனைவன்; அவனே நூலாசான்; ஆம்; வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும். என்றான்! நூலின் பயன் என்ன? பலரும் பலவாறு கூறுப! எனினும் ஒன்றெனல் தகும்! நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு, அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே மரத்தின், கனக் கோட்டம் தீர்க்கும் நூல்போல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு இம்மொழி மணிகளால் நாம் பெறும் பொருள் பலவோ? ஒன்றே! நேர்படுத்துதல் அல்லது செம்மைப் படுத்துதல் என்பதே அது. செம்மையிலா ஒன்று அறிவு ஆமோ? வீடு ஆமோ? உள்ளம் ஆமோ? மரத்தடி ஒன்றை அறுக்க வேண்டுமா? நூலடிக்கின்றனர். மனைவகுக்க வேண்டுமா? நூல் பிடித்துக் கோடிழுத்து, முளையடிக்கின்றனர்! நூல்மேல் நடத்தல் போல் நேராய் நட என்கின்றனர். நூல் போட்டு அமைக்காத ஓர் ஒழுங்கு இல்லவே இல்லை! நூல் போட்டு (கோடு போட்டு) அமைக்காது நேராய் எழுத இயல்வது இல்லை. நேராய் எழுதினாலும் நூல் போட்டு எழுதினால் போல் எழுதியுள்ளான் என்று நூல் பெயர் போவது இல்லை. நூலின் செல்வாக்கை மட்டுமோ இவைகாட்டுகின்றன? இல்லை செம்மையையும் ஒருசேரக் காட்டுகின்றன அல்லவோ? இத்தகைய நூலறிவினைப் பெற எத்துணைப் பேர்கள் என்னென்ன பாடுகள் பட்டுள்ளனர்; நாற்பது கல் தொலைவு நடையாக நடந்து சென்று, நூல் ஒன்று பெற்றுப் படித்து இன்புற்றார் அமெரிக்க நாட்டு ஆபிரகாம் லிங்கன். கண்ணொளியில்லா அந்தகக் கவி வீரராகவரும், மாம்பழக் கவிச்சிங்க நாவலரும் இலக்கிய இலக்கணக் கண்களைக் கொண்டு பேறு பெற்று நிலைத்தனர்! மனமே கற்பலகையாய், செவியே கண்ணாய்க் கற்றுத் தெளிந்தனர்! புல்லைக் கண்டு பின்பற்றிச் செல்லும் மாடுபோலப் பின்பற்றிச் செல்லுவேன் எனக்கு நூல் தேடித் தருபவர்களைத் தேடி என்கிறார் கிரேக்க நாட்டு ஞானி சாக்ரடீசு! நடுத்தெருவிலே நிறுத்தி ஞாயிறுதோறும் கசைகளால் அடிப்போம்; காறியுமிழ்வோம் அவ்வளவும் பெற்றுக் கொண் டால்தான் நீ படிக்க முடியும் என்று ஒரு விதி ஏற்பட்டால் கூட தண்டனைக்கும் இழிவுக்கும் அஞ்சிப் படிப்பதை விடமாட்டேன் என்றார் உலக மேதை கார்ல்மார்க்சு. ஓய்வு ஒழிவு இன்றி விடுதலைத் தொண்டில் ஈடுபட்டிருந்த அருட் பெரியார் காந்தியடிகள் பகவத் கீதை வரிகளை எழுதிச் சுவரில் ஒட்டிவைத்து, அதைப் பார்த்து மனனம் செய்து கொண்டே பல் விளக்கினார்! இவ்வாறு நூற் காதல் கொண்ட வர்கள் ஏராளம் பேர்! இக் காதல் ஒன்றே நூல் மாண்பினையும், பயனையும் காட்டாவோ? உலக மொழிகளோ ஆயிரம் ஆயிரம்! ஒவ்வொரு மொழியும் கொண்டுள நூல்களோ பல்லாயிரம் பல்லாயிரம்! அவற்றின் அறக் கருத்துக்களோ பல் கோடி! பல்கோடி! அற்ப வாழ்வுடைய மாந்தர், தம் வாழ்நாட்களுள் முற்றும் முடியக் கற்றுத் தெளிவு கொள்ளமுடியுமோ? எனின் முடியாது என்பதே விடை! இவ்வாறாயின் நூற்களின் முடிந்த முடிவினை அறியாமலே சிலர் வாழ்நாளை முடித்துச் சென்றுவிடக் கூடுமே, அல்லது நூற் கருத்தை நுனித்தறியும் நுண்ணிய அறிவு வாய்க்காது போகக் கூடுமே, இத்தகையர் நிலை இரங்கத் தக்கது அன்றோ! இவர்கட்கு எவ்வாறு நூலின் முடிவு காட்டுவது? இவ்வினாவை ஏனையோர்களிடம் கேட்டுத்திரிந்து பொழுதை வீணாக்குவதினும் வள்ளுவப் பெருந்தகையினிடம் சென்று வினவின் வாய்த்த விடை தருகின்றார். என்ன விடை தருகின்றார்? தன்னிடம் உள்ள பொருளைப் பகுத்துக்கொடுத்துத் தானும் உண்டு பிற உயிர்களைக் காத்தல் வேண்டும். இதுவே அற நூலோர்கள் தொகுத்துரைத்துள்ள அறங்கள் அனைத் தினும் தலையாய அறமாம்! பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பும் ஒன்று அறத்தலைமை பெறத் தகுமா? தகும் என்பது தகும்! எப்பொழுது ஒருவன் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர் களையும் பேணும் அளவினும், உலகத் துயிர்களையெல்லாம் பேணும் அளவுக்கு உள்ளம் விரிந்து விட்டானோ அவன் வேறு யாது செய்தல் வேண்டும்? அவன், எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் - அவர் உள்ளமே இறைவன் நடம்புரியும் இடம் என்பது ஆன்றோர் முடிந்த கருத்து. இத் தெய்வத் திருவுருவாய் இலங்கும் பெரியர்களிடத்து அரும்பும் குறையும் உண்டாமோ? ஒரு மரத்தில் கனி கவிந்துளது என்றால், காயும், பிஞ்சும், பூவும், அரும்பும், இலையும், வளாரும், கிளையும், அடியும், வேரும் இன்றியோ அம்மரம் இருக்கும்? கனிபெற்ற அளவானே மற்றவையெலாம் பெற்றுள என்பது உறுதியாதல் போல, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பான்மை எய்திற்று என்றாலே எல்லா அறங்களும் அவனிடைக் குடி கொண்டுள என்பது பொருளாம்! இதனால் அன்றே, கவிஞர் பெருமான் கம்பர் கல்வி முளையாய், கேள்வி கிளையாய், தவம் இலையாய், அன்பு அரும்பாய், அறம் மலராய், இன்பு கனியாய் - கனிந்தது என்று கூறியுள்ளார். உணவினால் வாழ்வது - உரம் பெறுவது - உடல்! உணவின் ஓட்டம் தான், உதிர ஓட்டமாகி உடலகத்து உயிர் உறைகின்றது. ஆகையால், மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்றுரைத்தார் சீலமுணர்ந்த செந்தண்மைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்று சாத்தனார்க்கு முன்னாகவே பாடினார், குடபுலவியனார் என்னும் கடனறி புலவர்! உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார் என்றார் பெருமாமுனிவராம் திருமூலர்! உணவீந்து, உடலோம் புதலே உயிரோம்புதல் ஆகலின் பகுத்துண்ணுதல் பிற அறங் களிலெல்லாம் தலையாய அறமாம். மற்றொன்று; மனிதன் எதைப் போதும் என்கிறான்? பொன், பொருள், நிலபுலம் போதும் என அமைகின்றனனோ? ஆடையும் வீடும் போதும் எனக் கருதுகின்றனனோ? இல்லை! இத்தகையனும் போதும் என்று சொல்வதும், வேண்டாம்; முடியாது என மறுப்பதும் உணவு ஒன்றற்கே! ஆதலால் உளம் நிறையப் போதும் என்னும் பொருள் உண்டியே ஆதலின் அன்ன தானத்திற்கு இணை என்ன தானமும் இல்லை என்னும் வழங்குமொழி ஏற்பட்டு விட்டது. முற்றுந் துறந்த முழுமணியாகத் திகழ்ந்த மணிமேகலையார் செய்த அறச் செயல்களை அறியார்யாரே? சிறைக் கோட்டத்தையே அறக்கோட்டம் ஆக்கிய செந்தண்மைச் செல்வி அவரே யல்லரோ? காணார் கேளார் கால்முடம் பட்டோர், பேணுதல் இல்லார் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என்று தேடித் தேடி உணவு தந்து வந்த, அறவோன் ஆபுத்திரன் தொண்டு எத்தகைய உயர் நலங் கனிந்தது. வற்றா வளமிக்க தன் அமுத சுரபி வறிதே பயன்படாமல் இருக்க, சாவக நாட்டினர் உணவின்றி உயிர்விடுகின்றனரே என்னும் ஏக்கத்தால் அல்லவோ உயிர் துறந்தான் உண்ணா நோன்பு கொண்டு! தன் உயிரினும் உயர்வாகக் கொண்டது அன்றோ பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு! இப்பண்பினை வலியுறுத்துவதே நூல்! நூலின் முடிந்த முடிவும் இதுவே! இதனை வருணனையால் காட்டுகின்றார் ஒரு புலவர். இயற்கைப் பொருள்களாம் கருமுகில் திரண்டு மழை பொழிகின்றது. அம் மழையால் கற்றவர் இதயமாம் நிலத்தில் கிடக்கும் கருத்து என்னும் வித்து முளைத்து வளர்ந்து, கவி என்னும் கவின் கதிர் ஈனுகின்றது. கவிக் கதிர் புலவர் அவை யென்னும் பொலிவு மிகு களம் அடைந்து பதரும் தூசியும் அகன்ற நன்மணியாகிக் களஞ்சியம் சேர்கின்றது. இக் களஞ்சியமாக இருப்பது யாது? நூலே! எத்தகைய அரிய வருணனை! உழைப்பின் பயன் ஒருங்கு தொகுக்கப்பட்டுள்ள இடம் நூல்! மாந்தர் விரும்பும் பொழுதெல்லாம் எடுத்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ள அமைந்தது நூல். பகுத்துண்ணும் பான்மையைத் தன்னகத்துக்கொண்டு வலியுறுத்துவது நூல்! இதனை நுண்ணியதாய் எண்ணி வருணித்த புலவர் பரிதிமால் கலைஞர் ஆவார்! பகுத்துண்டு வாழ்வதே நூன்முடிவு என்று கூறிய வள்ளுவரிடம் மீண்டும் கேட்டால், தமக்கென்று அமைந்த உரிமையான வீடு ஒன்று இருக்க வேண்டும்; நல்ல வாழ்க்கைத் துணை நலம் வாய்க்கப் பெறுதல் வேண்டும்; தம் உழைப்பால் குறைவின்றிப் பொருள் பெருக்குதல் வேண்டும்; அதனை உரிய காலத்துத் தொகுத்து வைத்துப் பகுத்துண்டல் வேண்டும் என்று சொல்லுகிறார்! தம்மில் இருந்து தமது பாத்துண்ணல் என்பது அவர் வாக்கு! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பது அவர் நூன் முடிவுரை!  32. எது வியப்பு? மூன்று வயதிலே திருஞானசம்பந்தர் மணிமணியான தேவாரத் தீந்தமிழ்ப் பாடல்கள் பாடினார். இஃது உண்மை தானா என வியப்படைகிறோம். ஐந்து வயதுவரை ஊமையாக இருந்த குமரகுருபரர், முருகன் அருளால் கந்தர் கலிவெண்பா என்னும் மெய்யுணர்வுப் பெருநூலை ஊமை நீங்கிய அந்த வேளையிலேயே பாடினார். இதனை நம்ப முடியுமா என ஐயமுறுகிறோம். ஏழு வயதுப் பாரதியார் எழுச்சிமிக்க நாட்டுப் பாடல்களும், தெய்வப் பாடல்களும் பாடினார். புலவர்களுக்குப் புலி என்று கூறப் பெறும் வெண்பாக்களைப் பாடி, இலக்கணப் புலவர்களெல்லாம் மூக்கிலே விரல்வைத்து இமைகொட்டாது பார்த்து நிற்கச் செய்தார். இதனை நம்பமுடியாவிட்டாலும் நம்புகிறோம். அண்மைக் காலத்தே இருந்ததாலும், அவருடன் இருந்தோர் இன்றும் இருந்து உண்மையை உரைத்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தாலும்! இளம் பருவத்திலே ஏற்படும் புலமை முதிர்ச்சியைக் கண்டு வியக்கிறோம்! முதுமையிலே ஏற்படும் எழுச்சி, இளமை உணர்ச்சி இவற்றையும் கண்டு வியக்கிறோம்; நயக்கிறோம். ‘எழுபதாம் அகவையில் இத் தகைய எழுச்சியா’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.-வைக் கண்டு நாடு வியக்க வில்லையா? இன்றும் இளையராய்த் திகழும் நேரு பெருமகனாரைக் கண்டு உலகம் வியக்கவில்லையா? இவ்வாறு வியப்பானேன்? இளமைக்குத் தொடக்க அறிவும், சுறுசுறுப்பும் இயல்பு. முதுமைக்கு விரிந்த அறிவும், சோர்வும் இயல்பு. இவை மாறி அமைவது அரிது. மாறி அமைந்தால் வியப்புக்குரியது ஆகின்றது. காணாததைக் காணும்போது தானே வியப்பு ஏற்படுகிறது. காற்றடைத்த பந்தைக் காண்கிறோம். ஒரு முள் குத்தினால் போதும். இருந்த காற்று முழுவதும் ஓட்டமெடுத்து விடும்! பந்தும் படுத்துவிடும்! ஓட்டை இருக்கும் அளவும், எவ்வளவு முயன்று அடைத்தாலும் காற்று நில்லாது! வாயை இறுக்கிக் கட்டிவிட்டாலும் காற்று நில்லாது! நின்றால் வியப்பு அல்லவா! பானையில் ஓட்டை விழுந்ததும் நீர் வெளிப்படாவண்ணம் இருந்தால் வியப்பே ஒழிய, வெளிப்படுவது வியப்பு ஆகாது. மனித உடம்பில் ஒன்பது ஓட்டைகள் உள. என்றாலும் இவ் ஓட்டைக் குடிசைக்குள் உள்ள காற்று வெளியேறாவண்ணம் தங்கியிருப்பது தான் வியப்பு. அதனினும் வியப்பு, மற்றைக் காற்றைப்போல் தடுத்த நிறுத்த வேண்டாமல் போகவும்வரவும் விட்டுக் கொண்டிருந்தால்தான் தங்கி நிற்பது! மேலும் ஒரு வியப்பு. இக்காற்று (உயிர்) தன் வேலைப்பாடு முடிந்த உடன் என்ன முயற்சி செய்து நிறுத்தினாலும் கட்டுப்படாது. தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்துகொண்டு ஓடிவிடுவது! இவ்வியப்பைக் கண்டார் சிவப்பிரகாசர். வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ? நிற்றல் வியப்பு! என்று பாடினார். அடுத்து இருந்தவர்களுக்குக் கேட்கும் அளவுக்குச் சத்தம் போட முடிகிறது. சற்றுத் தொலைவில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டுமானால் கூப்பாடு போடவேண்டியது உள்ளது. இத்தொலைவு கூப்பிடு தூரம் ஆயிற்று! என்ன கூப்பாடு போட்டாலும் எட்டாத் தொலை முற்காலத்தில் இருந்தது. ஆனால் இன்றோ, உலகின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு எளிதாகப் பேசவும், உடனுக்குடன் கேட்கவும் முடிகிறது! இது வியப்பு இல்லையா? ஒரு சிறு பொருள் மறைத்துக் கொண்டாலும் ஒரு பெருமலையைக் கூடக் காண முடிவது இல்லை. பனிமால் இமய முகட்டைக் கூட இங்கிருந்து பார்க்க முடிவது இல்லை. நம் உடலுக்குள் உள்ள உறுப்புக்களை காண முடிவது இல்லை. ஆனால் இன்று தொலை நோக்காடி வழியாகவும், நுண் கதிர்கள் வழியாகவும் நேரிடையாகக் கண்டு களிக்கிறோம்; வியக்கிறோம். குருவி பறக்கும் வீட்டின்மேல், கொக்கு பறக்கும் அதற்கு மேல்; காக்கை பறக்கும் அதற்குமேல்; பருந்து பறக்கும் அதற்குமேல் என்று பறப்பதைக் கண்டான் மனிதன். நெடுங் காலம் ஓரடி உயரத்தில் கூட எழும்பி நிற்கமுடியாமல் இருந்தான். இன்றோ, கதிரோனுக்குக் கறுப்புப்புள்ளி வைக்கக்கூடிய அளவுக்குப் பறக்கின்றான்! இதனைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியுமா? இவைபோலவே ஒரு வியப்பு உண்டு. அழியும் உடல் உடையோம் நாம்; அழியும் செல்வம் உடையோம் நாம்! என்றாலும் அழியும் செல்வத்தைக் கொண்டே அழியும் உடலை, அழியாத வாழ்வில் வைத்துவிட முடியும்! இது பெருவியப்புக்குரியதுதான்! நெருப்பால் நெருப்பை அணைக்க முடியும், நீரால் நீரைத் தடுக்க முடியும், என்றால் எவ்வளவு வியப்போ அவ்வளவு வியப்புக்குரியதாக இருக்கிறது. இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்கக் கூடியதே இது. நம் நாட்டையும் சரி, பிற நாடுகளையும் சரி ஆட்சி புரிந்து வந்த அரசர்கள் பலப்பலர். அவர்கள் அனைவரையும் நாம் இதுபோது அறிந்து கொண்டிருக்கவில்லை. அரசர்கள் நிலைமையே இத்தகையது என்றால் குடிமக்களை எந்த அளவில் அறிந்து கொள்ள முடியும்? என்றாலும், எல்லா அரசர்களையும் அறியாமல் போய் விட்டோமா? குடிமக்களுள் எவரையும் அறியாமல் போய்விட்டோமா? சிற்சில பேர்களை அறிந்து கொண்டிருக்கிறோம். எதனால்? வீரம், கொடை, அறிவு, முயற்சி, பண்பாடு, செயல் இவற்றில் தலைநின்ற காரணத்தால்! அவர்கள் மக்கள் மதிக்கும் பேறும், புலவர் பாடும் பேறும் எய்தினர். உலகில் நிலைத்தனர். முற்காலத்தில் புகழால் உலகில் மன்னியவர்களே (நிலைத் தவர்களே) மன்னர் ஆயினர். இதனை, மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே. என்னும் பெருந்தலைச் சாத்தனார் அருமொழி நினைவூட்டும். குமணன் கொடைச் சிறப்பால் உலகில் நிலைபெற்று விட வில்லையா? பிறரிடம்காணப்பெறாத திறம் உடையவர், பிறரால் செய்ய இயலாததைச் செய்தவர் உலகில் நிலைத்தனர்! அவர்களே, அழிந்தொழியும் இழியுடலை, அழியாப் புகழுடல் ஆக்கிய உரவோர்கள் ஆயினர்! மலைதேடி வனந்தேடி - வான்தேடி - ஓட வேண்டாத காய கற்பம் ஈதே! எளிய நடையில் அரிய கருத்துக்களை எத்துணை இனிய முறையில் கூறுகிறார் அரசப் புலவர் அதிவீரராம பாண்டியர். செல்வம் நிலையாமை பற்றி அச்செல்வ வேந்தன் கூறுவது வியப்பே. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர் குன்றத் தனைய இருநிதி படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர் எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும் இவை போதாவா? வள்ளல் அதியமான் கட்டிக்காத்த கோட்டை அதியமான் கோட்டையாக இருந்தது.இன்றோ, அதமன் கோட்டைப் பெயரொடும் சிதைந்து கிடக்கிறது! உத்தமன் அதியமான் எங்கே? இவ்வதமன் எங்கே? என்றாலும், ஔவையார் என்றும் அழியாக் கோட்டையும் அரணும் கட்டிக்காத்துவிட்டார் இல்லையா தம் பாட்டுத் திறத்தால்! வள்ளல் பச்சையப்பரும், அண்ணாமலை அரசரும் அழகப் பரும் போன்ற செல்வர்கள் நாட்டில் இல்லையா? அவர்களுக்கு இணையான அறிஞர்கள் இல்லையா? இருந்தார்கள்! இருக்கிறார்கள்! இருந்தாலும் இவர்களைப்போல் செல்வமும் அறிவும் சேர வாய்த்தவர்களும் செத்தொழிய - மக்கள் எண்ணத்திலிருந்து மறைந்துபோக - இவர்கள்மட்டும் ஏன் சாவா உடம்பு கொண்டு திகழ்கின்றனர்? ஒரே ஒரு நல்வழி கண்டு விட்டதனால்தானே! அழியும் செல்வத்தைக்கொண்டே அழியா வாழ்வு பெறும் வித்தையைத் தெரிந்துகொண்டதே அது! பச்சையப்பன் கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகமும், அழகப்பா கல்லூரித் தொகுதிகளும் இவர்கள் எழிலார்ந்த உடல்கள் அல்லவோ? இவ்வுடல்களகத்து எத் துணை எத்துணை ஆயிரம் ஆயிரம் வடிவங்கொண்டு பொலிவோடு திகழ்கின்றனர்! பல்லாயிரம் பல்லாயிரம் அறிஞர்களை, சான்றோர்களை பட்டதாரிகளை, பண்பாளிகளை உருவாக்கி இன்புறுத்தும் இனிய கனிச்சோலையாக இலங்குகின்றனர். இவர்களோ தமக்கென ஒன்றையும் கருதாது பிறர்க்கென அளித்து வாழ்ந்தனர். அதன் விளைவு என்ன? எல்லோர் இதயங்களையும் கொள்ளை கொண்டு விட்டனர்! இவர்களைக் கொள்ளைக்காரர்கள் என்பதா? இவர்கள் வழிபாட்டை ஏற்று எழிலோடு திகழும் கலைமகளே ஒரு கொள்ளைக்காரிதானே! கொள்ளை இன்பங் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பவள் அல்லளோ! இதோ இன்றும் நடமாடும் தெய்வமணிகளாகத் திகழ் கிறார்களே பாண்டியர்களும், சோழர்களும்! இவர்கள் கட்டி வைத்த கோவில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் அனைத்தும் அவர்கள் வடிவங்கள் அல்லவோ! இவர்களுக்கு அழிவும் உண்டா? நாடகத்திற்கு - படக்காட்சிக்கு - நடனத்திற்கு தெருக்கூத் திற்கு எப்படிக் கூட்டம் கூடுகிறது. ஒருவர் இருவராக! ஆனால் நிகழ்ச்சி முடிவுற்றதும் எப்படிக் கூட்டம் கலைகிறது? ஒரே மொத்தமாக. இப்படித்தானே செல்வம்அரிதாகச் சேர்ந்து எளிதாக ஒரே மொத்தமாக ஓடிவிடுகிறது. வெள்ளங் காக்கும் வீரனாலும் பணவெள்ளம் உடைத்துக்கொண்டு ஓடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை. நிறுத்திக் காக்கும் வலிமை பெற்றவர்களே உண்மையான வீரர்கள்! நல்லறிவு வாய்ந் தவர்கள். பிற வீரர்கள் நடிகர்கள்! செல்வம் நிலைக்காதது; வாழ்வோ அதனினும் நிலைக்காதது! பெருக்காறு ஒத்தது செல்வம்; பெருக்காற்று இடிகரை ஒத்தது இளமை; இடிகரை வாழ்மரம் ஒத்தது வாழ்வு - இப்படித் தெளிவு படுத்துகிறது ஒரு பாட்டு. இதனைத் தெளிவுப் படுத்துவானேன்? அதனையும் அப்பாடலே கூறுகின்றது. ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்; நன்றும் இன்றே செய்யவும் வேண்டும்; இன்றும் இன்னே செய்யவும் வேண்டும் இந்த மெய்யுணர்வு நம் நாட்டைப்போல் எந் நாட்டிலும் ஏற்பட்டது இல்லை. அதே நேரம், இம் மெய்யுணர்வுக்கு ஏற்பச் செயலாற்றிச் சிறக்காத ஒரு நாடும் நம் நாட்டைப்போல் இல்லை! காரணம் என்ன? மெய்யுணர்வுக் கொள்கை வாயோடு நின்று விட்டது. கைப்பகுதிக்கு வரவேயில்லை! செயலோடு ஒன்றாத வெறுஞ்சொல் பயன்படுமா? வாய்ச்சொல்லில் வீரரடி என்ற பாரதிக்கு ஒரு கும்பிடு போடுவோம்! ஆ! ஆ! எத்தகைய உண்மை என்று! அவன் குறிப்பை அறிந்து பின்பற்றிச் செல்ல மாட்டோம்! இது நம் பரம்பரையைப் பிடித்த தீவினை என்றாலும் குற்றமில்லை! விரல் விட்டு எண்ணத்தக்க ஒருவர் இருவர் செயலாற்றினர்; செல்வத்தை நல்வழிக்குச் செலவிட்டு என்றும் வாழும் உயிர்ச் செல்வர் ஆயினர்! பிறர் கள்ளியும், கற்றாழையும், முட்செடியும், நச்சுப் பாம்பும் பற்றிப் படர்ந்து சுற்றிக் கிடக்கும் கொடுங் காட்டின் இடையே பழுத்த பழ மரமாகினர்! பூதங்காக்கும் புதையலாகவோ, வைக்கோல் போரில் படுத்துக்கொண்ட நாயாகவோ இருந்து ஒழிந்தனர். அத்திப் பழத்தில் ஒரே இரவில் எத்தனை ஆயிரம் புழுக்கள் உண்டாகி விடுகின்றன. அது உண்டானது எவருக்குத் தெரியும்? வளர்ந்தும், வாழ்ந்ததும் இறந்ததும் எவருக்குத் தெரியும்? இப்படியே உலகில் பிறந்து இறந்து போகின்றோர் எத் துணையர்? இவர்கள் பிறந்தவர்கள் ஆவரோ? இவ்வாறு இறந்தொழியத்தான் இறைவன் மனிதனைப் படைத்தனனோ? அவனுக்கு மனத்தையும், அதன் விளைவாம் பகுத்தறிவையும், மொழியையும் படைத்தனனோ? அந்தோ! இறைவன் அறத்தின் காவலனாக (தரும கருத்தாவாக) நியமித்ததற்கு அன்றோ ஒருவனுக்குச் செல்வப் பேறு வழங்குகின்றான். இவன் கொடைக் கரத்தால் தான் பேச அன்றோ விரும்புகின்றான். இவன் வாயால் புன் முறுவல் பூக்கஅன்றோ விரும்புகின்றான்! இவற்றுக் கெல்லாம் தடைப் போட்டு ஈயாக் கருமியாக இவ்வுலகில் நிலையாமல் போகும் கயமை எக்கயமைக்கும் தலைமை தாங்கும் தகுதியுடையது எனலாம். நிலையிலா உலகில் நிலைக்க வழி அறிந்திருந்தும் - வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தும் - பயன்படுத்தாது புழுப் பூச்சிகள் போல் மடிந்துபோகும் அறிவின்மை மானிட இனத்தை விடுத்து நீங்கிச் செல்லும் நாளே நன்னாள்! அந்நாள் வருவதற்கு நாடு பாடுபடுமா? நாம் பாடுபடுவோமா? நிலைக்குமாறு செய்யும் செயல்கள் எவை? கல்விக் கூடங்கள் அமைத்தல், மருத்துவ நிலையங்கள் நடாத்துதல், இளைஞர், முதியர், ஆதரவற்றோர், ஆதரவு நிலையங்கள் நிறுவுதல், புதிய புதிய தொழிற்சாலைகள் நிறுவி வேலை வாய்ப்புச் செய்தல், வேலைக்குத்தக்க கூலி தருதல், நேரிய வணிகத்தில் பொருளை முடக்கிப் பொது நலங் கருதிப் பண்ட மாற்றுச் செய்தல், பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், கலைக்கூடங்கள், ஓய்வு மன்றங்கள், நூலகங்கள் ஏற்படுத்துதல், ஊர்ப்பொது, நகர்ப் பொதுமன்றங்கள் அமைத்தல் ஆகியன குறிப்பிடத் தக்கன. இவை போல்வன பிறவும் உள. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் நிலைத்து நிற்காத தன்மையுடையது செல்வம். இத்தகைய செல்வத்தை ஒருவன் கைவரப் பெறுவானானால் உடனே நிலையான காரியத்தைச் செய்துவிட வேண்டும். ஏனெனில் நிலைத்து அவனிடம் நிற்பது ஐயம்! ஒரு வேளை நில்லாது போகிவிட்டால் மீண்டு அவனிடம் வருமா என்பது அதனினும் ஐயம்!  33. ஆசை அறுமின்கள் மனித வாழ்வு பலப்பல துன்பங்களுக்கு இடனாக இருக்கிறது. துன்பத்திற்கு உறைவிடமே மனித வாழ்வு என்று கருதுபவர்களும் இல்லாமல் இல்லை. வாழ்வு இன்பந்தான் என்று பேயாட்டம் ஆடி, எல்லாம் போனபின் வாழ்வே சாக்காட்டுச் சதிராட்டம் என்று நொடிதோறும் ஏங்கி மடிபவர்களும் இல்லாமல் இல்லை! வாழ்வு துன்பமானது தானா? துன்பமே உருவானது தானா? இவற்றுக்கு விடை காண வேண்டுமாயின் துன்பத்தைப் பற்றி ஓரளவு அறிதல் வேண்டும். துன்பம் எவரையும் தானே தேடி வருவது இல்லை. துன்பத்தை நாமே தேடிக் கொள்கிறோம்! இது இல்லை என்ற ஏக்கம் எங்கு எங்கு ஏற்படுகின்றதோ அங்கு அங்கு எல்லாம் துன்பம் தலைகாட்டுகிறது; தங்கியும் விடுகிறது. இது வேண்டும் இது வேண்டும் என்று தேடி அலைந்தால் துன்பம்; இது வேண்டாம் இது வேண்டாம் என்று ஒதுங்கினால் -ஒதுக்கினால் - இன்பம்! பேராசிரியர் உரைக்கின்றார், வறுமை என்பதற்கு ஓர் விளக்கம்! அனுபவிக்க இது கிடைக்கவில்லையே என்று கருதிக்கிடக்கும் பேராசையுள்ளமே வறுமை என்பது அவர் தெளிவுரை. ஒன்றை விரும்பிச் சென்றால் துன்பம்; வெறுத்து ஒதுக்கினால் இன்பம்! துன்ப இன்பங்களுக்கு யார் காரணம்? இதனைத் தெளிவாக ஆராய்ந்த பெரியார் கணியன் பூங்குன்றன். அவர் கணக்கியல் மேதை; அன்றியும் வாழ்வியல் மேதை; வாழ்வியல் யாது? மெய்யுணர்வு எய்தித் தெளிவுடன் வாழ்பவரே வாழ்பவர்! வாழ்வதே - வாழ்வியல்! பிறரெல்லாம் தாழ்பவர் அவர்கள் இயலெல்லாம் தாழ்வியல்! தீதும் நன்றும் பிறர்கொடுக்க நமக்கு வருவன இல்லை; நாமே நமக்குத் தேடிக் கொண்டன; இது போலவே, துன் புறுதலும் இன்புறுதலும் பிறர் தந்து நமக்கு வருவன இல்லை; நாமே தேடிக் கொண்டனவே என்கிறார். இவர் உரை பொய்யா மெய்யா என்பதைப் பேசித் தீர்த்து விட முடியாது; நொடிப் பொழுதில் முடிவு கட்டிவிடவும் முடியாது! வாழ்ந்து பார்க்க வேண்டும்; காலம் பொறுத்திருந்தும் முடிவு காண வேண்டும்! செயற்கைச் சட்டம் எப்பொழுதும், உடனே வெளிப் பட்டு விடும். ஆனால் இயற்கைச் சட்டமோ பொறுத்திருந்து தான் தன் ஆற்றலைக் காட்டும். செயற்கைச் சட்டத்தின் விளைவுகளில் தவறுகள் நேரலாம். இயற்கைச் சட்டத்தில் அவ்வாறு ஒரு நாளும் நேர்வது இல்லை! காரணம் செயற்கைச் சட்டம் அறிவின் ஆட்சி மிக்கது; இயற்கைச் சட்டம் அறத்தின் ஆட்சி மிக்கது. இதனை தெளிவுறக் காண்பவன் மெய்யுணர்வு பெற்றவன்! துன்ப இன்பங்களுக்கு அப்பாற்பட்டவன்! துன்ப இன்பங்களை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம்! எப்படி? சிலர் வெற்றிலை பாக்குப் போடுகிறார்கள்; சிலர் புகையிலையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள்; இன்னும் சிலர் பொடியையும் கூட்டிக் கொள்கிறார்கள்; வேறு சிலர் சிகரெட்டு, சுருட்டு, பீடி என்னும் புகைகளில் புதைந்து கொள்ளுகிறார்கள். இத்தகையவர்களுக்கு இவர்கள் பயன்படுத்தும் இப் பொருள்கள் கிடைக்காவிட்டால் ஏற்படும் துன்பத்தைக் கண்ணாரக் காண வேண்டும்! எவ்வளவு அற்பமான பொருள்கள் இவை? இவற்றைப் பெற முடியாமைக்கு இவர்கள் பயன்படுத்தும் இப்பொருள்கள் கிடைக்காவிட்டால் ஏற்படும் துன்பத்தைக் கண்ணாரக் காண வேண்டும்! எவ்வளவு அற்பமான பொருள்கள் இவை? இவற்றைப் பெற முடியாமைக்கு இவர்கள் படும் அல்லல்கள் இவ்வளவு அவ்வளவா? என்று அவர்கள் நிலைமைக்காக வருந்தாமல் முடியாது. இப்பொருள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. அப்படிப் பழகிவிட்டேன் என்று பெருமைப்பட்டுக் கொள் பவர்களும் இருக்கிறார்கள். சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவேன் - வெற்றிலை போடாமல், புகை பிடிக்காமல் என்னால் இருக்க முடியாது என்றும் தங்கள் தகுதியை எடைபோட்டு இன்புறுகிறார்கள். இவர்கள் உரை இவர்களுக்குப் பெருமை தருகிறதா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நன்மையாவது தருகிறதா? என்றால் அதுவும் இல்லை! பதனீர்ப் புழு என ஒன்று உண்டு. அதற்கு அளவும் கிடையாது; அறிவும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. பதனீர்ப் புழு, பதனீர்ச் சட்டிக்குள் புகும்; வெளியேறாது. குடித்துக் குடித்து வயிறு புடைத்து வெளியேறா வண்ணம் அங்கேயே சாகும்! எத்தனையோ செத்து மிதப்பதைப் பார்த்துக் கொண்டும் தானும் அவ்வழியிலேயே நிலைத்துவிடும். அறிவிலாத அதற்கு அது தகுதியாகலாம்; அறிவுடைய - ஏன் - ஆறறிவுடைய மனிதனும் பதனீர்ப் பூச்சிக்கு மூத்த பூச்சியாக இருக்கலாமா? குடி குடியைக் கெடுக்கிறது என்பதைத் தெளிவாக அறியாதவர் முன்னும் இல்லை; பின்னும் இல்லை. கெடுப்பதைக் கண்ணாரக் கண்டறிந்தும் மதுவே மகேசன் மதுவே சுவர்க்கம் என்று மண்டிக் கிடப்பவர்கள் எத்துணைப் பேர்கள்! பழங்கால அரசர்களை விட்டதா சூது! சூதாடிய வேந்தர்கள் கதையை நாளெல்லாம் படிக்கிறோம். அவர்கள் சூதிலே கொண்ட பற்றால் குடியை அன்றி, நாடு நகரையும் இழந்து நலிந்ததையும், மனைவி மக்களைப் பிரிந்து மருகியதையும் அறிகிறோம்! என்றாலும் சூதாட்டம் ஒழிந்ததா? முன்னாவது ஒரு வகையில் சூதாட்டம்! இப்பொழுது நோக்குமிடமெங்கும் நீக்கமறச் சூதாட்டம் - பெயர் மட்டும் வெவ்வேறு! குதிரைப் பந்தயம், குறுக்கெழுத்துப் போட்டி, பரிசுத் திட்டம், குலுக்குச் சீட்டு, தரகுக்குடை, கள்ள வியாபாரம், பெண் மாப்பிள்ளை ஒப்பந்தம், கட்சிக் கூச்சல், அரசியல் - இப்படி எல்லாம் எல்லாம்! சூதாட்டம் ஒரு பங்கு மறைமுகச் சூதாட்டம் நூறு பங்கு! உண்மைச் சூதாட்டச் சங்கத்திற்கே வெட்கமின்றிப் படித்தவனும், பட்டம் பெற்றவனும், பேச்சாளியும், எழுத்தாளியும், அறிஞனும், கலைஞனும் வாணாள் உறுப்பினன் ஆகின்றான்! வெட்கம்! வெட்கம்! சூதாடி! - ஒரு நாளும் திருந்தி மனிதனாக வாழாத வாழ்நாள் சூதாடி! - என்று முத்திரை வைத்துக் கொண்டு செத்துமடிய வேண்டும் என்றால் அவர்கள் நிலைமைக்கு இணை அவர்கள் நிலைமைதான்! மது விற்காதே; மது குடிக்காதே; சூது ஆடாதே; என்று அரசு தடை விதித்திருக்கிறது. ஒரு பக்கம் அனுமதியும் வழங்கி இருக்கிறது அனுமதி பெற்றவர்களைக் கண்டு அனுமதி பெற முடியாத குடியர்களும், சூதர்களும் ஆத்திரம் கொள்கின்றனர். தங்களுக்கு அனுமதி இல்லாமல் சிலருக்கு அனுமதி வழங்கும் கொடுமையைக் குடியாட்சிக் காலத்தில் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போல் இருக்கிறது. பெறாத ஒன்றைப் பெற வழியென்ன? கை கண்டது கரவு வழி - ஒன்றே. மறைந்து மறைந்து குடிக்கின்றனர். சூதாடுகின்றனர். இவற்றால் இயற்கையாக ஏற்படும் உடற்கேடு, பொருட்கேடு ஒரு பக்கம் இருக்க, ஓரோர் வேளை ஊர் காவலர் கைகளில் சிக்கவும் நேர்ந்து விடுகிறது. விளைவு என்ன? குற்றக் கூண்டு ஏறுதல், சிறைக் கூடம் செல்லுதல், ஒறுப்புத் தொகை கட்டுதல் இப்படியாகின்றது. என்றாலும் தம் பழக்கத்தை விடுகின்றனரா? மறந்து விடுகின்றனர்! எதை? குடியை - சூதை அன்று! தண்டனைகளைத் தான் மறந்து விடுகின்றனர். தண்டனைகளை மறந்து; மரத்துப்போன உள்ளம் உயிர் அன்ன மானத்திற்கும் மரத்துப் போய்விடுகின்றது. அடுத்தவர்கள் இழிவாக நினைப்பார்களே. நான்கு பேர்களின் முன் தலை நிமிர்ந்து நடமாட முடியாதே என்றெல்லாம் நினைப்பது இல்லை. அற்பமான பற்று எத்தகைய நல்ல பண்புகளையெல்லாமோ கொன்று விடுகின்றது! புகை பிடிக்காதவர்களுக்கு, அது எவ்வளவு நாற்றமாக இருக்கிறது! பிறர் ஊதிவிடும் புகை மூக்கின் பக்கம் வரும்போதே அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டு விடுகின்றது. இருந்தாலும் குடித்துப் பழகியவர்களுக்கு அது எவ்வளவு நறுமணமும், இன்சுவையும் ஊட்டுவதாகக் கருதாவிட்டால் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு இருப்பார்களா? இதயத்தை அரிக்கும் காச நோய்க்கு ஆட்பட்டு இருப்பவர்களும் - புகையாலே தமக்கு அந்நோய் வரக் கண்டிருந்தும் - அதனை விட்டுத் தொலைப்பது இல்லையே! குடித்துக் குடித்து உயிரையாவது விடுவேனே அல்லாமல், குடியை விடமாட்டேன் என்றல்லவோ பிடிவாதம் செய்கின்றனர். இத்தகைய தீய பற்றுகளுக்கு அடிமையாகாத ஒருவனுக்கு இவை பற்றிய துன்பம் உண்டா? காபி குடிக்கும் பழக்கம் இல்லாத ஒருவனுக்கு அதனை எதிர்பார்த்திருக்கும் துன்பம் இல்லை; காசு கிடைக்கவில்லையே என்னும் ஏக்கம் இல்லை. காபி நன்றாக இல்லை என்னும் குறைபாடு இல்லை! ஆம்! காபி குடிக்காத ஒருவன் காபி பற்றிய துன்பத்திலிருந்து விடுதலை அடைந்து விடுகிறான். இப்படியே வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை எத்தனை பொருட்களை ஒதுக்குகிறானோ அவ்வளவுக்குத் துன்பத்திலிருந்து விலகுகிறான்; இன்பத்திற்கும் அணுகுகிறான். கால்பட்டவுடன் நீர்ப்பாசி அகலும்; காலை எடுத்தவுடன் நீர்ப்பாசி கூடிச்சேரும். அதுபோல் வேண்டாமை என்னும் உயர் எண்ணம் தலைதூக்கினால் துன்பப் பாசி அணுகிச் செறியும். இதனால் தான் மெய்யுணர்வுடைய வள்ளுவப் பெருமகனார். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை என்றார். பின் அதன் முடிவாக, அடுத்த அடியிலேயே யாண்டும் அஃதொப்ப தில் என்றார். முற்கால மனிதன் நம் அளவுக்குக் கவலைப்பட்டிருக்க வேண்டியது இல்லை. ஏனெனில் அவன் தேவை மிகமிகக் குறைவு. உண்ண உணவு, உடல் மறைக்க உடை, குடியிருக்க வீடு - வாய்ப்புக் கிடைத்தால் ஆடல் - பாடல்! இவ்வளவோடு அவன் தேவையை முடித்துக் கொண்டான். உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்பது பண்டையோர் மொழி! இன்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பார்க்க வேண்டும்! ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது இல்லை; மேலோட்ட மாகப் பார்த்தாலே போதும். வயிற்றுப் பாட்டுக்கு என்றும், மானங் காப்பதற்கென்றும் பயன்படும் பொருள்கள் தவிர எத்துணைப் பொருள்கள் குவிந்துள? பயன் பொருள்களைப் பார்க்கிலும் பகட்டுப் பொருள்கள் மிகுந்துவிட்டன அன்றோ! பயன் பொருள்களுக்குக் கொள்ளும் கவலையளவு பயன்படாப் பொருள்களுக்கும் கவலைப்பட்டு - கூடுமானால் மிகுதியாகவும் கவலைப்பட்டுப் பணத்தை வீணாக்குவதுடன், அஃதில்லா விட்டால் எவ்வளவு துன்பப்படுகின்றோம். காரணம் என்ன? இப்பொருள் இல்லாமல் வாழ முடியாது; வாழ்வதும் நாகரிகக் குறைவு என்று எண்ணும் அளவுக்கு இறங்கிவிட்டோம். இக் கொடிய பழக்கங்கள் நம் முதுகின் மீது ஏறிக்கொண்டு நம்மைச் சுமக்க வைத்துவிட்டது. தேவை மிகமிக நம் பாரத்தை மிகப் படுத்திக் கொண்டே போகின்றோம். அது அளவுக்கு மிஞ்சிய நிலையில் நம்மால் தேடிக்கொள்ள முடியாமல் அதன் இடுப்பு ஒடிப்புக்கு ஆளாகிறோம்; நிற்கவும் திறம் அற்றுத் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறோம் அல்லது படுத்து விடுகிறோம்! உணவும் உடையும், உயிர்வாழவும் மானங் காக்கவும் தேவை. உயிர் வளர்க்கும் உணவில் ஊட்டச்சத்து வேண்டும். விலைமதிப்பு வேண்டும் என்பது இல்லை; நறுமணமும் இன் சுவையுமே வேண்டும் என்பதும் இல்லை; நாக்குக்கு அடிமை யாகாத உணவே நல்லுணவு என்பர் உடல் நூல் வல்லாரும், உண்மை நூல் வல்லாரும் நாச் சுவை ஒன்றே கருதிப் பணத்தைப் பாழாக்கி, பண்டத்தை வீணாக்கி, உடலையும் கெடுத்துத் தொலைகிறோம். மற்றவர்களும் இதைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகிக் கெடுகின்றனர். முடிந்த அளவும் பிறரையும் கெடுக்கின்றனர். நாக்கின் தேவை எங்குபோய் நிற்குமோ தெரியவில்லை! யாகாவா ராயினும் நாகாக்க என்னும் வள்ளுவர் வாய் மொழியும், காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும், நாக்கல்ல தில்லை என்னும் வளையாபதியாரின் வாழ்வுரையும் சொல்லடக்கம் மட்டும் சொல்ல வந்தன அல்ல; சுவையடக்கம் பற்றியும் சொல்லவந்தனவே! மானம் உடையில் இருக்கிறதா? உடையின் விலையிலே இருக்கிறதா? உடல் வெளிப்படுமாறு மெல்லியதாய் இருப்பதும், தங்கக் கரை, வெள்ளிக் கரை, சரிகை போட்டு இருப்பதும்தான் உடையா? நூறாடைகளை ஓராடையின் விலையில் போட்டுப் பகட்டித் திரிவதுதான் நாகரிகம் என்றால் அந்நாகரிகம் ஒழிக என்று கூச்சல் போடவேண்டியதே அறிவுடையவர்கள் முதல் வேலை. ஏனெனில் அந்நாகரிகம் அநாகரிகமாகி எத்தனை துன்பங்களை உண்டாக்குகின்றன. துன்ப நீக்கம் வேண்டுமென்றால் நாட்டை விட்டுப் போலி நாகரிகத்தை ஓட்டியாகவேண்டும். ஒழித்தாகவேண்டும். அதற்கு முதற்படி மக்களிடம் ஆசை அகலுதலே! போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்னும் பழமொழி எத்தனையோ அரிய கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்! தேவைக்கு மேல் சேர்த்துவைப்பது திருட்டு என் கிறார்கள். அப்படியானால் தேவையற்றவைகளைக் கொள்வது திருட்டுக்கு மூத்தது என வேண்டும். ஏனென்றால், அவன் தேவையற்ற தேவைகள்தான் பொருட்களை நிரப்பிக் குவிக்கவும், பதுக்கி வைக்கவும் தூண்டுகின்றன. சேர்த்து வைப்பது குற்றம் என்றால், சேர்க்கத் தூண்டிய உணர்வே பெருங்குற்றம் ஆதல் வேண்டும். ஒரு பக்கம் தேவைக்கு இல்லாமை; இன்னொரு பக்கம் தேவைக்கு விஞ்சித் தேக்கம். இது என்ன செய்யும்? இதுதான் பொறாமை, போட்டி, களவு, வஞ்சம் அனைத்தையும் உரு வாக்கும். ஆசை - போலி ஆசை எங்குக் கொண்டுபோய் விடுகின்றது? முதலாவது, தேவையற்ற பற்றுக்களைக் கொண்டிருப்பது தனக்குத் துன்பம்; பின் அவன் வாழும் சமுதாயத்திற்கும் உலகுக்கும் துன்பம், இத்துன்பங்களை ஒழிக்க வழி தேவைகளைக் குறைப்பதே! தேவையைக் குறைக்க அனைவராலும் இயலுவது இல்லை. மன உரமும், மனநலமும், மெய்யுணர்வும் உடையவர்க்கே எளிதாம். இவையற்றவர்களோ, மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிக் கெடுகிறார்கள். துன்பப் பிடியுள் நீக்கமறப் பிணைந்தும் விடுகிறார்கள். பற்றறுத்து வாழ்பவர்களே தொண்டர்களாக, துறவர்களாக, துறவிகளாக, அருளாளராக ஆகின்றனர். உலகுக்கும் வழிகாட்டுகின்றனர். தன் தேவையைக் குறைத்து அடக்கி வாழ முடியாதவர் பிறருக்காகப் பாடுபடும் பெருநெறியைக் கடைப்பிடிக்க முடியுமோ? அவர்கள் ஆசையை நிறைவேற்றவே பொழுது இல்லையே பிறருக்கு உழைக்க ஆசைப்பட முடியுமோ? ஒன்றில் ஆசையை விடவேண்டுமானால் அதனினும் விஞ்சிய ஒன்றில் ஆசை செலுத்தவேண்டும். பொய் உணர்வின் ஆசையைத் தொலைக்கவேண்டுமாயின் மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். ஒரு புலவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயம்பினார். திருப்பரங்குன்றத் திருமுருகன் முன்னிலையில் இயம்பினார். கடம்பு மாலை அணிந்த பெரும! நின்னிடம் யான் வேண்டுவது பொன்னும் பொருளும் போகமும் அல்ல; அன்பும் அருளும் அறமும் ஆய இம் மூன்றுமே என்றார். அழியும் பொருள்களின் ஆசையை உதறினார்; அழியாப் பொருள்களின் மீது ஆர்வத்தைச் செலுத்தி, இப்புலவர் பெருமகனார் கடுவன் இளவெயினனார் என்னும் பெயருடையவர் ஆவர்! மதுவை ஒழிக்கச் சட்டம் உண்டாக்கிய அரசு என்ன செய்தது. வீடுதோறும் பாலும், காபியும், டீயும் கொடுக்கத் தலைப்பட்டது; ஒரு பற்றைத் தொலைக்க மற்றொரு பற்றில் ஊன்றினால் அன்றி இயலாது என்பதை இது காட்டும். நல்லதில் பொழுதைச் செலுத்தத் தொடங்கினால் கெட்டது தொலை தூரம் ஓட்டம் பிடிக்கும்! பருந்து வட்டமிட்டுப் பறக்கும் இடத்தே கோழியும் குஞ்சும் பதுங்கி விடுவது இல்லையா? வலியவர் ஆட்சி செய்தால் மெலியவர் தாமே அடங்கி விடுவர். போலியான பற்று ஒழிய, வேறு பற்றுகளும் உள. அவையும் துன்பம் தருவனவேயாம்: எந்த ஒன்றில் ஆசை கொண்டாலும் துன்பமே என்பதில் ஐயமில்லை. எனினும் பிறர் நலங்கருதி நாம் துன்பப்பட்டாலும் குற்றமில்லை என்ற காரணத்தால் நல்ல பற்றுகளை நாளும் கடைப்பிடிக்க வேண்டும்; கடைப்பிடித்தலை பெரியவர்கள் வரலாறும் வலியுறுத்துகின்றன. சாதிப்பற்று, மதப்பற்று இவையும் துன்புறுத்துவனவே! உலகுக்கும் கேடு செய்வனவே. இப்பற்றுகள் கெடுதலாயின் இன்பம் உண்டு. அதனைக் கெடுக்க, உலகெல்லாம் ஒன்றெனக் கருதும் தாயுள்ளம் தூயவுள்ளம் வேண்டும். அதற்கு முழு முதலாம் இறையன்பு வேண்டும். தன்பற்றைக் குடிப்பற்றும், குலப்பற்றும் ஒழிக்கும்; குலப்பற்றையும் மதப்பற்று ஒழிக்கும்; மதப்பற்றையும் பெருகி முதிர்ந்த இறைப்பற்று ஒழிக்கும்; இறைவனோடு ஒன்றும் நிலைமை ஒன்று ஏற்படக்கூடிய காலத்தில் இறைப்பற்று ஒழியும். இதனைத்தான், திருமூலர், ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே என்று இனிதுற இயம்புவர். அவரே, ஆசையும் அன்பும் அறுமின்; அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாமே என்றும் கூறுவர். உயிரின் அடையாளமாம் அன்பையும் விட்டு ஒழிக்க வேண்டிய நிலையே பற்றறுத்தல் எனின் அதன் அருமைப்பாடு பெரிதாம்! இந்நிலையுற்றார்க்கு இன்பம் ஏது? துன்பம் ஏது? ஆம்! அவரே இறைவனோடு இருந்தார்! வேண்டுதல் வேண்டாமை இல்லாமை கைக்கொண்டு, வேண்டுதல் வேண்டாமை இலான் அடியை எய்தினார்! பொய்யுணர்வு போக்கி மெய்யுணர்வில் தலைநின்றார்! கீழ்வரும் குறள்களை நினைக்க! நெஞ்சில் பதிக்க! யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.  34. கணையும் யாழும் அம்பு நேரானது; அன்றியும் கூரானது; பெயர் பெறுவது. எனினும் அதன் செயல் எத்தகையது? நேர் உடைமையால் விரைந்து செல்லும்; கூடா உடைமையால் ஊடுருவித் தாக்கும். கண்ணுக்கு இணையான காட்சி வழங்கியும், கண்ணோட்டம் (இரக்கம்) என்னும் ஒரு பொருளைத் தொலைக்கும். கணையின் தோற்றம் எப்படி? செயல் எப்படி? யாழ் வளைவானது; கம்பாலும் குச்சிகளாலும் அமைந்தது; நரம்பும் தோலும் குறுக்கும் நெடுக்கும் பின்னிக் கிடப்பது; கவரும் அழகு அற்றது! ஆனால், வல்லவன் ஒருவன் கையகப்பட்டு மீட்டப் படுமானால் கொடு விலங்கும் குளிரும்; நெடுந்தொலைப் பறவையும் நெருங்கும்; அறிவிலியும் தலையாட்டுவான்; அழுத பிள்ளையும் வாய் மூடும். இசை ஊற்றுப் பெருக்காகி உயிரகத்து இன்ப மதுவைப் பெருக்கும்! இத்தகைய, இசையே மாந்தரை இறைவனொடு இணைக்கும்! யாழின் வடிவு எத்தகையது? செயல் எத்தகையது? கணையும் யாழும் மட்டுமோ தோற்றம் ஒன்றாகத் தொழில் ஒன்றாக இருக்கின்றன? இப்படி எத்தனை எத்தனைப் பொருள்கள், கருவிகள், மனிதர்கள்! சான்றாகக் காட்டப் பெற்றவை இவை - அவ்வளவே! மனிதருள் கணையுண்டு; யாழ் உண்டு; மிகுதியாக உண்டு. வெளியே பார்த்தால் வெள்ளை; உள்ளே பார்த்தால் சொள்ளை ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே பார்த்தால் ஈரும் பேனும் இப்படியெல்லாம் வழங்கும் பழமொழிகள் எதைக் காட்டுகின்றன? கணையின் தோற்றத்திற்கும், அதன் வன்கொடுமைக்கும் எவ்வளவு இடைவெளி? யாழின் தோற்றத்திற்கும் அதன் இன்னிசைக்கும் எவ்வளவு வேற்றுமை? தோற்றத்தைக் கண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வந்தால் புகழ் எதற்கு? பழி எதற்கு? அழகு எதற்கு? அழகின்மை எதற்கு? தோற்றத்திற்கு முதன்மையா? தொழிலுக்கு முதன்மையா? தோற்றம் வேண்டுவது தான்! அதனினும் சிறப்பாக வேண்டுவது தொழிலே! ஒன்றன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடுவது தவறு. அதன் தொழிலைக் கொண்டு மதிப்பிடுவதே முறைமை. வேண்டுமானால் தொழிலுடன் தோற்றமும் சேர்ந்து இருக்கட்டும்; மிகமிகப் பாராட்டலாம். தோற்றம் தொழில் ஆய இரண்டினுள் ஒன்றைக் கொண்டு மதிப்பிட வேண்டுமானால் அந்த ஒன்று தொழிலாகவே இருக்கவேண்டும்; தோற்றமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. தங்கக் கடை ஒன்று; அதற்குள் மங்கையர் இருவர் புகுந்தனர்; இக்கால அணிகலங்களாக, பூச்சுகளாக எவை எவை உண்டோ அவ்வளவும் அம்மங்கையரிடம் இருந்தன. அவர்கள் தோற்றப் பொலிவும், நாகரிக முதிர்வும், செல்வச் சிறப்பும் பேச்சின் திறமும் அவர்களை மிகமிகச் செல்வராகக் காட்டின. கடைப் பணியாள் விதவிதமான சங்கிலிகள், வளையல்கள், தோடுகள் எடுத்து எடுத்துக் காட்டினான். நூற்றுக்கணக்கான எண்ணிக்கைகளை மாற்றி மாற்றிப் பார்த்தனர். பத்துப் பதினைந்து பொருள்களைப் பொறுக்கி எடுத்தனர். எடுத்ததை நிறுக்கச் சொல்லாமல் தாங்கள் கொண்டு வந்திருந்த தோல் பைகளிலே போட்டனர். அம்மா! அவற்றைக் கீழே வையுங்கள். நிறுக்க வேண்டும் என்றான் பணியாள். நிறுக்கவா? நாங்கள் கொண்டு வந்தவற்றை ஏன் நிறுக்க வேண்டும்? இல்லை! இல்லை! இங்கிருந்தவை அவை. நான் எடுத்துத் தந்தவை. நாங்கள் கொண்டு வந்தவை அவை; இங்கிருந் தவை அல்ல இல்லவே இல்லை; கீழே வையுங்கள் உனக்கு என்ன மூளைக் கோளாறா? நாங்கள் கொண்டு வந்தவற்றைக் கொள்ளை அடிக்கப் பார்க்கிறாயா? பணியாளுக்கு கோபம் வந்து விட்டது. மரியாதையாகக் கீழே வையுங்கள்; இல்லையேல் பறிக்க வேண்டியதிருக்கும். பறிப்பாயா? அப்படி செய்தால் நீ என்ன ஆவாய்? பேச்சு நீண்டு ஒன்றை மீறி ஒன்றாய் வளர்ந்தது. குரலும் ஓங்கியது. கடை முதலாளி வந்தார். முடிவு ஏற்படுவதாக இல்லை. உடனே காவல் நிலையத்திற்குத் தொலைபேசியில் பேசப் போவதாகக் கூறினார். அதற்கும் அஞ்சவில்லை. மங்கையர். காவல்காரர்களை அழையுங்கள்; யார் திருடர் என்பதை உறுதி செய்து விடுவோம் என்றனர். கடைக்காரர் தொலைபேசியில் பேசினார். சில நிமிடங்களில் ஒரு வண்டியில் காவலர் நால்வர் வந்து இறங்கினர். திருட்டுப் பெண்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, கடைக்காரரை அவர் வண்டியில் வந்து சேருமாறு கட்டளையிட்டு விரைந்தனர். அவர்கள் சென்ற சிறிது பொழுதில் கடைக்குக் காவல் நிலைய வண்டி ஒன்று வந்தது. அந்தத் திருடர்கள் எங்கே? என்னுங் குரலோடு காவலர் வந்தனர். இப்பொழுதுதானே காவல் நிலையத்திற்கு அப்பெண்களும் முதலாளியும் போயுள்ளனர் என்று நடந்ததைக் கூறினர். காவல் நிலையத்திலிருந்துதான் நாங்கள் வருகின்றோம். அப்பெண்களின் ஏமாற்றுச் செயல்தான் இதுவும்! திட்டமிட்டுக் கிளம்பிய திருட்டுக் கூட்டத்தினர் அவர்கள் என்ற சொல்லிக் கொண்டே அவர்களைத் தேடத் தொடங்கினர். முதலாளியும் வாடிய முகத்துடன் கடைக்கு வந்தார். தோற்றம் எப்படி? அவர்கள் தொழில் எப்படி? ஒருவன் அழகிய செருப்பு வைத்திருந்தான். அவை புத்தம் புதிதாக இருந்தன. அவன் நண்பன் கேட்டான். எவ்வளவு அழகாக இருக்கின்றன. இச் செருப்புகள்? இவற்றைப் பயன்படுத்தாமல் மூலையில் போட்டுவிட்டாயே ஏன்? அழகானவைதான்; விலையும் கூடியவைதான். இருந்தாலும் இவை செய்யும் கொடுமைகள் மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. என் கால்களுக்குதான் நன்றாகப் புலப்படுகின்றன. இவை கடித்துவிட்ட புண்களைப் பார் என்று பதில் உரைத்தான். வடிவழகுக்கும் செயலுக்கும் உள்ள தொலைவு எப்படி? கனிவுமிக்க இசையைக் காதல் மிகக்கொண்டு யாழில் மீட்டுவார்களாம். அவ்விசைகேட்டு அனுபவிக்க அசுணம் என்னும் பறவை நெருங்குமாம். இன்னிசையை அனுபவிப்பதே அசுணத்தின் வாழ்வாம். அது நெருங்கியவுடன் கனிந்த இசையை மாற்றிக் கடபடா இசையைப் பறையில் மீட்டுவார்களாம். அவ்விசை கேட்கப் பொறுக்காமல் செவிப் பறை வெடித்து வீழ்ந்துவிடுமாம். அதனைப் பிடித்துக் கொள்வார்களாம்! எவர்? வேடுவர்! என்ன கொடுமை! இசையைப் பறவை பிடிக்கக் கண்ணியாகப் பயன்படுத்துவது வேடிக்கையா? வேதனையா? இசையின் இனிமை எத்தகையது? எத்தகைய கொடுமைக்குப் பயன்படுத்தப்படுகிறது? உருவு அல்லது வடிவு வேறாகவும், செயல் அல்லது வினை வேறாகவும் இருப்பவர் பலர். அவர்கள் வலையில் எவரும் ஏமாந்துபோய் வீழ்ந்து விடக்கூடாது என்று வள்ளுவர் கருதினார். அதனை உலகத்தவர்க்கு எச்சரித்துக்காட்ட வேண்டுவது தம் கடமை எனக் கொண்டார். அதனால், கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு என்று பொதுவாகக் கூறினார். அவரே. கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன - வினைபடு பாலால் கொளல். என்று உவமையுடன் நிறுவிக்காட்டினார்.  35. நோயெல்லாம் நோய் செய்தவருக்கே மாடுகள் பெருஞ்செல்வம்! மாடு என்றால் செல்வம் என்பது இலக்கியப் பொருள். மாடுகள் வளர்ப்பவருக்கும் பிறருக்கும் பயன்படுகின்றன; பால், தயிர், மோர், நெய் இவற்றுக்குக் குறைவு இல்லை. நிலத்திற்கு ஊட்டமாம் உரத்திற்குப் பஞ்சமில்லை. வேண்டியபொழுதில் விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். கன்றுகள் உழவுக்கும், கவலைக்கும், வண்டிக்கும் பயன்படும். நன்றாக உழைத்து வைக்கோலைத் தின்றுகொண்டு, மணிகளைத் தன்னைப் பேணுபவருக்குத் தருகின்ற அளவு அதன் உபகார வாழ்வு அமைந்துள்ளது. இப்படியே ஆடு, பூனை, நாய், ஆய உயிர்களும் மக்களுக்கு நல்லுதவி புரிகின்றன. இவற்றை வளர்ப்பவர்கள் பலப்பல நலங்கள் எய்துகின்றனர். மாடு முதலான வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்களுக்கு நன்மை செய்கின்றனவே அன்றித் தீமை புரிவது இல்லை. நல்ல உயிர்களை வளர்க்கிறார்கள். அவையும் தம்மை வளர்ப்பவர்களுக்கு நன்மையே செய்கின்றன. நல்ல விதமாகவும் வாழ வைக்கின்றன. இனிக், காட்டு விலங்குகளாம் சிங்கம், புலி, கரடி, இவற்றையும் பாம்பையும் பிடித்து ஒருவன் வளர்க்கிறான்; அவை விரும்பும் சுவைமிக்க உணவை வேளையறிந்து ஊட்டுகின்றான்; எவ்வளவு தான் உதவி செய்தும் என்ன? அவற்றின் தீய குணங்களை ஒழிக்க முடிகின்றதா? வளர்ப்பவன் எப்பொழுதும் அஞ்சி அஞ்சியே நெருங்க வேண்டும். எந்த வேளையிலும் அவன் தன் அழிவை எதிர்நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு நொடியளவேனும் அமைதி கொள்ள முடிவது இல்லை. கொடும் விலங்கை அடக்கி ஒடுக்கும் திறம் என்னிடம் இருக்கிறது என்று சாட்டை, தடி, குத்துக்கோல், மின்சாரக்கம்பி இவற்றைக்கொண்டு செறுக்கி நெருங்குபவர்களும் அச்சமின்றிச் செல்ல முடிகிறதா? ஒரு நொடி வேளை அவன் சோர்ந்திருந்தால் அவன் குடி அழிந்தது; அவ்வளவே! இது போகட்டும். இக்கொடு விலங்குகளைப் பேணியவர், பால் கறந்துகொள்ள முடியுமா? வண்டியிலும் உழவிலும் இவற்றைப் பூட்டியடிக்க முடியுமா? துணை நின்றாவது உதவுமா? கட்டி வைத்துக் காக்கவாவது முடியுமா? அடுத்துச் சென்று அன்புக்காட்டி தழுவ முடியுமா? எவையும் இல்லை. அச்சத்தையும் அழிவையும் நொடிதோறும் எதிர்நோக்கிச் செய்ததே மீதம்; வேறொன்றும் இல்லை. கெட்ட குணம் உடையவற்றை வளர்ப்பவன் அவற்றின் கேடுகளுக்கு இரையாகப் போகின்றான்: நல்லவற்றை வளர்த்தவன் அவற்றின் நன்மையை அனுபவிக்கிறான்! இவற்றில் இருந்து தப்பமுடியாது. இதுபோலவே நற்பண்புகளை வளர்ப்பவன் நன்மைக்கு இடமாக இருக்கின்றான். தீய பண்புகளை வளர்ப்பவன் தீமைக்கு இடமாகவே இருக்கின்றான்! வளர்க்கும் ஒன்று அவனை விடுத்து அகலுமா? வளர்க்கப்படும் நாய் வளர்ப்பவனைக்கண்டு வாலாட்டி மகிழ்வது காண்பது தானே! குழந்தையும் தெய்வமும் கொண்டு அணைத்த இடம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். தெய்வத்தை நினைந்து போற்றிப் புகழ்ந்து வழிபட்டவர்களுக்குத் தெய்வ அருள் கிடைக்கவே செய்கின்றது; அமைதி மழை பொழிந்து இன்பப் பயிரை வளர்க்கவே செய்கின்றது தெய்வ அருள்! குழந்தையும் அவ்வாறே கொஞ்சி வளர்க்கின்றோர் இடத்துக்குழைந்து விளையாடி இன்பம் நல்குகின்றது. தந்தை, பிள்ளையை எடுத்து வைத்து இருக்கும் வேளையில் தாய் அவ்விடம் வந்தால், பிள்ளை தாயை நோக்கித் தாவிச் செல்கின்றது; தடுத்தாலும் வீறிட்டழுது விம்மித் தாயினிடமே சேர்கின்றது. குழந்தை தாயினிடம் இருக்கும்போது பாட்டி வந்தால் அவளைத் தேடியடைகின்றது. அம்மாவின் அன்பிலும் பாட்டியின் அன்பு மிகுதியாகத் தோன்றுகின்றது குழந்தைக்கு. தந்தையார் தம் ஓய்வு ஒழிவு நேரங்களில் சிறிதே எடுத்து இன்புறுத்தி மகிழ்கின்றார். தாய் தன் வேலைகளுக்கு இடையே சிலச்சில வேளைகளில் எடுத்து உச்சி முகர்ந்து உவகை கொள்ளுகிறார். உறக்கம், விழிப்பு, விளையாட்டு எல்லா வேளைகளிலும் பாட்டியே பக்கத்திருந்து அன்பு மழை பொழிகின்றார். அதில் நன்றாக நனைந்து நனைந்து குளிர்ந்துவிட்டது குழந்தை! அப் பற்றுதல் அகலுமா? தெய்வம், தாய்மை, இனிமை, அழகு, தூய்மை அனைத்தும் திரண்டு உருண்டு ஒன்றான வடிவம் குழந்தை! அதனை அணைத்தவர் இவ்வனைத்தையும் அணைத்து இன்புற்றவர் ஆகின்றனர். இவற்றுக்கு மாறான பேய்மை, நோய்மை, கொடுமை, கீழ்மை இவற்றைத் தழுவி நின்றோர் அவற்றையே கைம்மாற்றாகப் பெறுவது உறுதி. இதுகாறும் நாம் கண்டவற்றின் பொதுக் கருத்து என்ன? இன்பமெலாம் இன்பம் செய்தவருக்கே உண்டு. துன்பமெலாம் துன்பம் செய்தவருக்கே வரும். எதை நாம் உண்டாக்குகிறோமோ அது நம்மைத் தொடர்கிறது; ஆள்கிறது. பிறருக்கு இன்பமே செய்துவரும் பெருந்தன்மையாளர்கள் துன்புற்றது இல்லையோ? பிறருக்குக் கேடே செய்து வந்த தீமையாளர்கள் இன்புற்றது இல்லையோ? என்னும் எண்ணங்கள் ஏற்பட முடியும். அஃது இயல்பு! நாம் நினைக்கிறோம். இன்பஞ் செய்தவர்கள் துன்பம் அடைந்தார்கள் என்று. அவர்கள் தாம் அடைந்ததைத் துன்பம் என்று கருதினார்களா? நாம் னைக்கிறோம், துன்பஞ் செய்தவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்று. அவர்கள் தாம் அடைந்ததை இன்பம் என்று கருதினார்களா? இல்லவே இல்லை! அவர்கள் எண்ண நிலைமை மாறாகவே இருந்திருக்கிறது. ஏழைகளுக்குத் தோழராகவும், நோயாளர்க்கு மருத்துவராகவும், சீடர்களுக்குக் குருவாகவும், பொதுமக்களுக்குப் தகராகவும், மெய்யுணர்வாளருக்குத் தேவகுமாரனாகவும், ஆற்றாமை யாளர்களுக்குத் தேற்றுதல் அளிக்கும் பூஞ்சோலையாகவும் எதிர்த்து நின்றோர்க்குப் பொறுமை லையாகவும் திகழ்ந்த இயேசு பெருமகனாரை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக்கொடுத்தான் யூதாசு! புகழ் வளருவதையும், தூய்மை பெருகுவதையும், மனந் திரும்புதலையும் கண்டு கண்டு உள்ளம் வெதும்பி நல்லோனை ஒழித்துக்கட்ட நாட்பார்த்துக் கொண்டிருந்த பொல்லாத மாக்களிடம் சென்று நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன்; நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றான். இயேசு பெருமானின் பன்னிரு சீடர்களுள் ஒருவனாக இருந்து, செய்துவரும் நற்பணிகள் அனைத்தையும் உடனிருந்து அறிந்து இருந்த அந்தப் பொல்லாத யூதாசு! என் வேளை அண்மையில் இருக்கிறது; என்னுயிர் இறப்புக்கு ஏதுவான பெருந்துயர் கொண்டு இருக்கிறது; மேய்ப்பன் வெட்டப்படுவான்; மந்தை ஆடுகள் சிதறப்படும் மனித குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்தது இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான் என்று பின்வருவதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்த அப்பெருமகனார் தமக்கு நேரே இருக்கும் சிலுவைப்பாடு கருதிச் சிறிதும் துன்புற்றார் அல்லர்! உனக்கு இத்தனாம் நாள் இறப்பு என்று ஒரு சோதிடன் ஒருவனுக்குச் சொல்லிவிட்டால் அதனைக் கேட்டவன் அந்நாள் வரை உயிரோடு இருப்பானா? எண்ணி எண்ணி நொடி நொடியாகச் செத்துக் கொண்டே வரமாட்டானா? சோதிடன் கூறியது பொய்யாகவே இருந்தாலும், இவனது நம்பிக்கையின் விளைவாம் துன்பத்தால் குறித்த நாளுக்கு முன்னாகச் செத்துவிடுவது ஏற்படக்கூடியதே. இவ்வாறு உயிரச்சம் உலகத்துள்ளோரிடத்து ஊறிக்கிடக்க இயேசு பெருமான் புன்முறுவலுடன் வரவேற்கின்றாரே! தாம் அடைய இருக்கும் சிலுவைப்பாடு துன்புக்குரியது என்று கருதியிருந்தால் அவ்வாறு பொறுத்துப் புன்முறுவலுடன் திகழ்வாரா? இறைவனால் அனுப்பப் பெற்று, இறைவன் தொண்டொன்று கருதியே வாழ்ந்த அப்பெருமகனார் மேல், இறைவனை இகழ்ந்தார் என்னும் குற்றச்சாட்டுச் சுமத்தப் படுகிறது; சிலுவையும் சுமத்தப்படுகிறது; அன்னை மரியாளுக்கும் அன்பர்களுக்கும் நகரோருக்கும் அழுகையும் கண்ணீரும் அன்பளிப்புக்களாகச் சுமத்தப்படுகின்றன என்றாலும், இயேசு பெருமகனாருக்குத் துன்பத்தைச் சுமத்திவிட முடிந்ததோ? இல்லையே! பிறருக்காக இறப்பதே பேரின்பம் எனக் கொண்டு சிலுவையில் நின்ற அச்செம்மலுக்கு அது துன்பமாக இருந்திருக்க எக்காரணமும் இல்லை! பழி சூட்டியவர்களும், போர் வீரர்களும், கேலி செய்தனர்; முள்ளால் முடிசூட்டி வைத்து அழுத்தினர்; காறி உமிழ்ந்தனர்; காடியைக் குடிக்குமாறு ஏவினர்; குற்றவாளிகள், இருவர் இடையே வைத்துச் சிலுவையில் அறைந்தனர் என்றாலும், அவ்வேளையில் பிதாவே தாம் செய்வது இன்னதென அறியாது செய்கின்றார்கள்; இவர்களை மன்னியும் என்று வேண்டிக் கொண்டார்! துன்பமாகக் கருதித் துடிக்கும் ஒருவர் உரை இவ்வாறு இருக்குமோ? எத்துணை அலறல்; ஏச்சு, ஏக்கம் கலந்திருக்க வேண்டும்? இன்பம் துன்பம் இரண்டும் வெளியே இருந்து வருவன வல்ல! உள்ளேயே கிடக்கின்றன. இன்பத்தையும் துன்பமாகக் கருதி ஏங்கித் துடிப்பவர்களும் உண்டு. துன்பத்தையும் இன்ப மாகக் கருதி மகிழ்பவர்களும் உண்டு! உலகுய்யவே உயிர் வாழ்ந்தார் இயேசு பெருமான்! உலகுய்யவே உதிரமும் கொட்டினார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசு என்ன பேறு பெற்றான்! பெற்ற பொருளோடு இன்பமாக வாழ்ந்தானா? வாழவிட்டதா நெஞ்சம்? அறவோர் ஆட்சி செலுத்தியிருப்பாரானால் அக் கொடுமையாளனுக்கு உயிர்த் தண்டனை தந்திருப்பர். ஆனால் ஆட்சி அறவோர் கையில் இல்லை! யூதாசின் காட்டிக் கொடுத்தலைக் கொண்டு குற்றம் சாட்டிய கொடுமையாளர்கள் கூட்டணியும், குற்றம் இன்னதெனத் தீர்மானிக்கு முன்னரே கொலைத் தண்டனை வழங்கவேண்டும் என்று பிடிவாதத்தில் இருந்த மதத் தலைவர்களும், அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பவே ஆடிக்கொண்டிருந்த ஆட்சி பீடச் சுமைதாங்கிகளும் பெருகிக் கிடந்த அந்நிலைமையில் யூதாசுக்குத் தூக்குத் தண்டம் விதிப் போர் இருந்திருக்க முடியாது; இருப்பர் என எதிர்நோக்கவும் கூடாது. இந்நிலைமையிலும் யூதாசின் நெஞ்சம் விட்டுவைத்ததா? இயேசு பெருமானுக்கு மரண தண்டனை கொடுக்கப் பட்டது அறிந்து மனம் வருந்தித், தன்னை ஏவிவிட்ட இழிவுடைத் தலைவர்களிடத்து விரைகின்றான் யூதாசு. குற்றமில்லா இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததனால் பாவஞ் செய்தேன் என்று மனம் அழுங்கிக் கூறினான். பதில் என்ன கூறினார்கள்? மரத்துப்போன அந்தப் பெருந்தலைகள், எங்களுக்கு என்ன; உன்பாடு! என்றன. என்றாலும் நான் செய்தது கீழான காரியம்; பாவம் எதுவும் செய்யாமல் உலகோர் பாவம் துடைக்க வந்த பரமனைக் காட்டிக்கொடுத்த கயவன் யான் என்று அவன் நெஞ்சம் இடைவிடாது இடித்துரைக்க நான்றுகொண்டு செத்தான்; அவனைச் சாகப் பண்ணினோர் யாவர்? இழுத்துச் சென்று தூக்கில் மாட்டினரோ? அவனே சாவை வரவேற்றுக்கொண்டான். தனக்கு வரும் இன்ப துன்பங்களைப் பிறர் ஆக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது! தொலைதேய, எருசலேம் நகரில் நடந்தது இந்நிகழ்ச்சி! தமிழகத்து மண்ணிலே இதற்கு இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது! வகுத்துக்காட்டிய பெருந்தகை வள்ளுவர்! உலகப் பொதுமையை உள்ளடக்கியது அவர் கொள்கை! ஆகலின் எங்கெங்கு நோக்கினும் குறளுக்குச் சான்றுகள் கிட்டும்! காரணம். மாறாக் கொள்கைகளையே வலியுறுத்திச் செல்லு வதே குறளின் இயல்பாக இருத்தல். நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் துன்பமெல்லாம் துன்பம் செய்தவருக்கே வந்துசேரும். ஆதலால் தமக்குத் துன்பம் வேண்டாதவர் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யார்; அதாவது, தமக்கு இன்பம் வருதலைக் கருதிப் பிற உயிர்களுக்கு இன்பம் செய்வர்! தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் கலந்து, பாலும் பருப்பும் நெய்யும் விட்டுப் பாகு காய்ச்சுபவன் அதன் நறுமணம் தன்னை உவப்புறுத்தப் பெறாமல் போகான்! வேப்ப எண்ணையைக் காய்ச்சி எடுப்பவன் அதன் குமட்டலுக்கு இரையாகாமல் போகான்! நாள்தோறும் கண்டறியும் நிகழ்ச்சி இது! நோயின்மை வேண்டுமா? நோய் செய்யற்க!  36. வகுத்தான் வகுத்த வகை ஆறு ஓடுகிறது; அவ்வோட்டத்தின் இழுப்புக்கு ஆட்படும் பொருள்களும் ஓடுகின்றன. ஓட்டத்தோடு ஓட்டமாகப் போவது மிக எளிது; எதிர்த்துப் போவது அரிது; நீரோட்ட ஆற்றலினும் மிகுதியான ஆற்றல் உண்டாயின் எதிரோடலாம். என்ன முயன்றும் எதிர்த்துச் செல்ல முடியாத கடுமையான வெள்ளப்பெருக்கும் உண்டு! காலமும் இத்தகைய நீரோட்டமாகவே உள்ளது. கால வெள்ளத்தில் உயிர்கள் இழுபட்டுச் செல்லும் பொருள்களாக இருக்கின்றன. காலத்தின் இழுவைப் போக்கிலே இசைந்து போவது எளிது. அதனை எதிர்த்துச் செல்லுவது அரிது; எதிர்த்து வெற்றி காண்பது அரிதினும் அரிது. அரிய அதனைச் செய்பவர்கள்தான் உயர்ந்தவர்கள் ஆகின்றனர். அவர்களையே உலகம் என்று பெரியவர்கள் மதிக்கின்றனர். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது முந்தையோர் மொழி! துரும்பும் வெள்ளத்தால் இழுக்கப்படுகிறது; பெரிய கட்டையும் இழுக்கப்படுகிறது; சிறியவர்களும் கால வெள்ளத்தால் இழுக்கப்படுகின்றனர்; பெரியவர்களும் இடம், பொருள், ஏவல் வாய்ப்பு உடையவர்களும் கால வெள்ளத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கின்றனர். காலவெள்ளத்தின் ஆற்றலை இது காட்டும்! எனினும், மீன் மட்டும் என்ன வெள்ளப் பெருக்கு ஆயினும் எதிர்நீச்சல் அடிக்கும். இது மீனின் திறத்தைக் காட்டும்! கால வெள்ளத்தை நீந்திக் கரையேறுபவர்கள் உளர் என்பதை மீன்கள் காட்டும்! மீனுக்கு எதிர் நீந்தல் இயல்பு போல, உரம்படைத்த பெரியவர்களுக்கும் கால வெள்ளத்தை எதிர் நீந்திச் செல்லுதல் இயல்பு! கால வெள்ளம் ஓர் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட அமைப்பு உடையது. ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்ட அமைப்பை ஊழ் என்பர். முறைமை, விதி, வினைப்பயன், வகுத்த வகை, இன்னவாறெல்லாம் கூறுவர். பெயர்கள் பல! பொருள் ஒன்றே! உயிர்கள் தோன்றுவதும், வளர்வதும், வாழ்வதும், மறைவதும் தனித்தனியே பலப்பல செய்வதும், இன்புறுவதும் துன்புறுவதும் அவற்றின் எண்ணம்போல் இல்லை! முன்னமே வல்லான் ஒருவனால் வகுக்கப்பட்டுள்ளபடியே நடக்கின்றன. அவ்வவை செய்த முன்வினைப்படியே அவை அவ்வாறு வல்லவனால் வகுக்கப்பட்டுள்ளன என்பதே ஊழ்பற்றிய பொதுவான கருத்து! ஊழ் பற்றிய எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும்? ஒரு குழந்தை தாய் வயிற்றில் இருந்து வெளிவருகிறது. இன்னொன்று பிறந்தவுடனே இறந்துவிடுகின்றது; வேறொன்று சற்றே வளர்ந்து வாலிப வயதில் சாகின்றது; மற்றொன்று முதுமையுற்று நெடுநாள் நோய்க்கு ஆளாகி அழுந்தியும், அழுந்தாமலும் சாகின்றது. இவற்றைக் கண்டவர்களுக்குச் சிந்தனை உண்டாயிற்று. ஒன்றுபோல் நடக்காத இத்தன்மை ஏதோ ஓர் ஆற்றலால் நிகழ்த்தப்பெறுகிறது என்ற முடிவு கொண்டனர். ஒருசிலர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றித் திண்டாடுவதும் அதற்கும் உழைத்து உழைத்து ஒடுங்கியும் நிலைமையில் சற்றும் மாற்றமில்லாது இருப்பதும், மற்றும் சிலர் கோடி கோடியாகக் குவித்து வைத்திருப்பதும், அவர்கள் இருந்த இடத்தைவிட்டு எழும்பாமலே மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கி குவிப்பதும், செல்வம் இல்லாதவன்கூட வாய்ப்பாக அனுபவித்து மகிழ்வதும், செல்வம் மிகுந்துள்ளவன்கூட அனுபவிக்க முடியாமல் போவதும் கண்டு கண்டு நம் நினைவுக்கும், விருப்புக்கும், தெளிவு செய்தனர். இப்படியே பலப்பல நிகழ்ச்சிகளையும் நோக்கி நோக்கி ஊழ் என ஒன்று உண்டு என உறுதி கொண்டனர், அவ்வுறுதி, மக்களுக்கு நலம் பயத்தல் வேண்டிப் பெரியோர்களால் பிறருக்குத் தெளிவாக எடுத்து விளக்கப் பெற்றது. ஊழ் கண்டு அஞ்ச வேண்டும், சோர்ந்துவிடவேண்டும் என்பது ஊழைக்கண்டு பரப்பியோர் நோக்கம் அல்ல. அஞ்சாமையும், முயற்சியும் கொள்ளவேண்டும் என்பதே அவர்கள் விருப்பு! குயவன் பிசையும் மண்போல உயிர்கள் இருக்கின்றன. காலமே குயவன் சக்கரமாக உள்ளது. குயவன் பானையாக வனையலாம்; சட்டியாக, குடமாக மூடியாக வனையலாம்! அவற்றின் வன்மை, மென்மை வாழ்வு, உடைவு, பயன்படுதல், பயன்படாமை அதன் ஊழ் ஆகின்றது. ஊழ் வகுத்த வகை ஆகின்றது; அதனை வகுத்தவன் வகுத்தான் ஆகின்றான்! அவனே இறைவன். இறைவனால் வகுக்கப்பட்ட ஊழ் காலம், இடம், சூழ்நிலை, ஆகியவற்றைக்கொண்டு திருவிளையாடல் நடத்துகின்றது. அதனை, ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று குறிப்பிட்டு அமைதியடைய வேண்டியதுதான்! ஒருகாடு; காட்டில் சிறிது முன் பின்னாக நால்வர் தனித் தனியே வருகின்றனர். முதல்வன் வரும்போது எதிரே கள்வன் ஒருவன் வந்து இருக்கும் பொருளைப் பறித்துச் செல்லுகிறான். அடுத்து வந்தவன் முன் புலி ஒன்று தோன்றுகின்றது; அவனை அடித்துக் கொன்று தீர்க்கின்றது. அடுத்து வருபவனுக்கும் புலி தோன்றுகின்றது. ஆனால் புலி அவனைக் காணவில்லை. அச்சத்தால் கால்பிடர்பட ஓடித் தப்புகிறான். இறுதியில் காட்சிகளைக் கண்டு கண்டு இன்புற்றுக்கொண்டே காட்டைக் கடந்துவிடுகிறான். நால்வரும் ஒரே பாதை வழியே வந்தனர். எனினும் ஒரே வகை இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டார்கள் அல்லர். இதனை எவ்வாறு முடிவு செய்வோம். அவர்கள் நேரம் என்போம்; முன்வினை என்போம் - என்ன சொன்னாலும் சரி - அதன் பொருள் ஊழ் என்பதே யாம்! ஊழின் தன்மையைச் சான்றுகளால் காட்டுவது உண்டு! ஒருவன் எங்கெங்கு ஓடினாலும் அவனை விடாது தொடர்வது எது? நிழல்! அந்நிழலைப் போல் தொடரும் ஊழ்! ஆயிரக்கணக்கான பசுக்கள் கூடிய மந்தை ஒன்று நிற்கிறது. இளம் பசுக்கன்று ஒன்று அவிழ்த்து விடப்படுகிறது. எத்துணைக் கூட்டம் ஆயினும் கண்டுவிடுகின்றது அல்லவா! இளங்கன்று தன் தாய் அல்லாத வேறொன்றை அணுகுவதும் இல்லை. வேறு பசுவும் கன்றை ஏற்றுக்கொள்வதும் இல்லை. உரியதை உரியது அடைகின்றது. அதுபோல் ஊழும் எங்கு எங்குச் சென்றாலும் உரியவனை விடாமல் தொடர்ந்து சென்று பற்றிக்கொள்ளும். ஊழ் கண்ணுக்குத் தெரிகின்றதா? இல்லை. எனினும் தன் வலிமையை நிலைநாட்டத் தவறிவிடுவதும் இல்லை. ஊழ், காலம், இடம், சூழ்நிலை கொண்டு கடனாற்றுகின்றது. காலம், இடம், சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் ஆற்றல் கைவரப் பெற்றால் ஊழையும் மாற்றியமைத்துவிடலாம்! அவ்வாறு மாற்றி யமைத்தவர்களே உரவோர்கள்! ஊழையும் புறங்கண்ட வல்லவர்கள்! அனைவராலும் ஊழைக் கடக்க இயலுமா? இயல்வது இல்லை! இயலுமென்றால் நினைத்தன அனைத்தும் நடந்தே ஆகவேண்டும். ஒன்றை நினைக்கின் அது ஒழிந்து ஒன்று ஆவதும், ஒன்றை நினையாது இருக்க அது முன் வந்து நிற்பதும் காண்கிறோமே! உலகெல்லாம் என் ஒரு குடைக் கீழ்க்கொண்டு வருவேன் என்று முனைந்து நின்றவர்களுக்கும் முடியவில்லையே! சிலச்சில வெற்றிகள்! சிலச்சில வாய்ப்புகள்! அவ்வளவே! அவ்வளவு ஆற்றல் கிளர்ந்ததும், வளர்ந்ததும், முடியாமல் தளர்ந்ததும் ஊழாலேயே! வாழ வைக்கும் ஓர் ஊழ்! தாழவைக்கும் ஓர் ஊழ்! அனுபவிக்க வைக்கும் ஓர் ஊழ்! அனுபவிப்பதைத் தடுத்து வைக்கும் ஓர் ஊழ்! அவ்வவற்றின் வேலையை அவ்வவை செய்யவேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய விதத்தில் செய்தே தீரும். இதனைக் கடப்பது எளிதோ? இணையிலா, ஊக்கமும் உறுதியும் உழைப்பும் உடையவர்க்கே முடியும்! புத்தர் பிறந்த வேளையிலே புகுந்த பெரியோர்கள் உலக முழுமையும் ஆளும் வேந்தனாவான் இவன்! இல்லையேல் உலகம் போற்றும் துறவியாகாமல் இருக்க வேண்டுமானால் எத்தகைய சிறிய துன்ப நிகழ்ச்சியையும் இவன் காணுதல் கூடாது என்றனர். புத்தரின் தந்தையான சுத்தோதனர், கபிலவத்து நாட்டு மன்னர். மகனை, மன்னர்மன்னன் ஆக்க விரும்பினவர். எல்லா வற்றையும் துறந்து, தம் மகன் திருவோடு கொண்டு பிச்சைக் கோலத்துடன் சென்றுவிடுவதை விரும்புவாரோ? துன்ப நிகழ்ச்சிகளைக் காணாமல் இருக்க அன்று, கேளாமல் இருக்கவும் வழி வகைகள் செய்து வந்தார். இனிய சூழல் அமைந்த மாளிகையை விடுத்து வெளிச் செல்லா வண்ணம் காத்தார். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளின் இடையே பெரிதும் பொழுதினைக் கழிக்க வாய்ப்புக் கண்டார். என்ன ஆயிற்று! விழாப் பொழுதில் ஊர்வலம் வரவிழைகின்றார் புத்தர். தடுக்கின்றார் சுத்தோதனர்; முடியவில்லை! இன்ப விழாவின் இடையிலே, பிணத்தைக் காண நேர்கின்றது; முதுமைத் துயரைக் காண நேர்கின்றது; நோய்த்துயரை நோக்க நேர்கின்றது! உலகமே துன்பப் போர்வையால் போர்த்தப்பட்ட காட்சியை வழங்கிக் கலங்கச் செய்கின்றது புத்தரை! வானில் பறந்து செல்லும் அன்னத்தை அம்பால் அடிக்கிறான் புத்தரின் உறவினனும் நண்பனுமான தேவதத்தன் அவ்வன்னம் வேறெங்கும் விழக் கூடாதோ? இரத்தம் வழிந்தோ, புத்தர் உறையும் மாளிகைச் சோலையின் வேலிப் புறமாகவோ வீழ வேண்டும்? இவை என்ன செய்தன? சுத்தோதனரை வெற்றி கொண்டன! ஊழைத் தடுத்து நிறுத்த உறுதிகொண்டு ஊக்கமுடன் நின்றார் சுத்தோதனர். ஊழ் அவரை வென்றுவிட்டது. இத்தகைய ஊழாற்றலை அறிந்தவர்கள் அதனை வகுத்து உரைக்க வேண்டுவது அவசியம் அல்லவா! அக் காரியத்தைத் தான் அருமையாகச் செய்தார் வள்ளுவப் பெருமகனார். ஊழ் அதிகாரம் வகுத்துப் பத்துப் பாடல்கள் பாடினார். ஊழ்கள்இரண்டுவகைப்படும்; ஒன்று ஆகூழ் (நல்லூழ்); மற்றொன்று போகூழ் (தீயூழ்); ஆகூழ் ஒருவற்கு உண்டாயின் முயற்சி மிகும். தீயுழ் உண்டாயின் சோம்பல் மிகும். ஆகூழ் உண்டாயின் அறிவு மிகும்; போகூழ் உண்டாயின் அறிவின்மை உண்டாகும். எவ்வளவு தான் முயன்று முயன்று காத்தாலும் போக வேண்டியது போயே தீரும்; எவ்வளவு, அள்ளி அள்ளி வெளியே கொட்டினாலும் போகாதவை போகவே போகா! கோடிக்கணக்கான செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும் ஊழால் அனுபவிக்கும் வகை இல்லாவிடின் எதையும் ஒருவன் அனுபவிக்க முடியாது. பொருள் இல்லாதவனுங் கூட ஊழ் உண்டாயின் எப்படியேனும் நன்றாக அனுபவிப்பான். ஊழ் மிக வலிமையானது; எவ்வளவு முயன்று தடுத்தாலும் அது வெற்றி கண்டுவிடும் இக்கருத்துக்களை அழகுற அடுக்கி வைத்துள்ளனர். இவ்வளவும் கேட்டறிந்த ஒருவனுக்கு என்ன தோன்றும்? ஊழ் என ஒன்று உண்டு. அதனை எவ்வாறு முயன்றாலும் வெற்றிகொள்ள முடியாது என்று உறுதிசெய்யப் பெற்றுள்ள ஒன்றனுடன் எதிரிடுவானேன். நடப்பது நடக்கட்டும்; நடக்கும் விதத்திலே நடக்கும் என்று சோர்ந்துவிடுவர். சோர்ந்து விடுவதற்கோ ஊழ் அதிகாரம் வகுக்கப்பட்டது. சோர்ந்து விடுவது வள்ளுவர் கருத்துக்கு முரண்பட்டது மட்டுமன்றி, அவனுடைய ஆற்றலுக்கும், அறிவுடைமைக்கும், முயற்சிக்கும் சிறப்பு ஆகாது! இயன்ற அளவு முயன்று பார்க்க வேண்டும். முயற்சிக்குப் பயன் இல்லையாயின் ஊழ் என ஓய்வதில் - அமைதி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. முயற்சியளவுக்குக் கூலியுண்டு என்பது வள்ளுவர் கருத்து. அதனைத் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்னும் ஊக்கமுறுத்தும் குறள்மணி வலியுறுத்தும். காட்டும்வழி இருவர் செல்கின்றனர்; புலி ஒன்று குறுக்கிடுகின்றது. ஒருவர் கடவுளே நீர்தான் காப்பாற்ற வேண்டும் என்று சோர்ந்துவிடுகிறார். மற்றொருவர், நம்மால் முடிந்த அளவு எதிர்த்துத் தாக்கவோ தப்பிச் செல்லவோ முயல்வோம்! முடியாது போனால் கடவுள் மேல் பாரத்தைப் போடுவோம் என்று ஊக்கப்படுத்தினார். முயற்சி இல்லாமல் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தலைமேல் கை வைத்துச் சோர்ந்து விடுவது கையாலாகாத்தனம் என்பது அவர் கருத்து. இந்த அளவில் தான் ஊழையும் எண்ணவேண்டும். ஒரு வீர வேந்தன் சொல்கின்றான் என் குதிரை மேல், தன்னம்பிக்கையை நினைத்து ஒரு காலையும் கடவுளை நினைத்து ஒரு காலையும் எடுத்து வைப்பேன் இதனை நினைக்க வேண்டும்! மனிதன் சோர்ந்து மடிவதற்காக ஊழ் உரைக்கப்பட வில்லை; ஊக்கம் கொண்டு ஊழை வெல்ல வேண்டும் என்பதற்காக மாட்டும் சாட்டையடியே அது! ஊழ் வலியது ஆகலாம்; வெல்ல முடியாது அமையலாம்; வித விதமாகத் தோன்றி வருத்தலாம் என்றாலும் ஊழை வென்றவர்களும் உளர்; ஊழுக்குத் தோற்றவர்களும் உளர். ஒவ்வொரு சான்று காணலாம். மலை போன்ற செல்வக் குவியல் உடைய கோவலன், சிலம்பையே முதற் பொருளாகக் கொண்டு வணிகம் செய்வதற்குப் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகின்றான். வெயில் இன்னதென அறியாத மென்பூங் கொடியாம் கண்ணகியும் கால் கொப்புளம் கிளம்பக் காட்டுவழி வருகின்றாள். திருடுதல் என்பதைக் கனவினும் அறியாத கோவலன் கொல்லர் தலைவனால் காவலன் அரண்மனையில் களவாடிய கள்வன் என்னுங் குற்றச்சாட்டுக்கு உரியவன் ஆகின்றான். அவன் கள்வன் அல்லன் என்பதைக் காவலன் முன் சென்று நிறுவிக் காட்ட வேண்டிய கடமை கண்ணகியாருக்கு ஏற்படுகின்றது. இவ்வனைத்தும் ஊழின் திருவிளையாடல் இல்லையா? ஊழின் திருவிளையாடல் இல்லையேல், கோவலன் புகாரிலிருந்து யாரும் அறியாவகை வைகறைப்பொழுதில் மதுரைக்குப் புறப்பட வேண்டியது இல்லை. செல்வம் அனைத்தும் இழக்காத, கப்பல் வணிக வளமும், மாடகூட வாய்ப்பும், மாநாய்கண் பெருஞ் செல்வமும் மலை போல் கிடக்க - கண்ணகியார் காற் சிலம்பே முதலாகக் கொண்டு பொருளீட்ட வேண்டியது இல்லை. இனி மதுரைக் காவலன் மாளிகையில் களவு போயதும் காற்சிலம்பு; கோவலன் விற்க வந்ததும் காற்சிலம்பு; மாட மதுரை மன்னவன் மனைவிக்கு மதுரைக் கொல்லர் செய்து தந்த சிலம்பும் பூம்புகார்ப் பெரு வணிகன் மாநாய்கன் மகளுக்குப் புகார் நகரப் பொற் கொல்லர் செய்து தந்த சிலம்பும் வேலைப்பாட்டில் வேறுபாடற விளங்குகின்றன! களவு போயதும் ஒரு சிலம்பு; விற்கக் கொண்டு சென்றதும் ஒரு சிலம்பு. இப்படி நடைபெறுவது உண்டா? களவு செய்பவனுக்கும் கருணையா? இரண்டுள் ஒன்றை எடுத்துவர! எடுத்ததனால் பயன் என்ன? இருந்ததனால் பயன் என்ன? - ஒன்றாக அணிந்து மகிழ முடியாதே. சரி, விற்பவனும் ஒற்றையாகச் சிலம்பை விற்பது உண்டா? வாங்குபவர்களும் ஒற்றையாகி வாங்கி யாது செய்வர்? நடவாதவெல்லாம் நடக்கின்றது மட்டும் உண்மை! இதனை நடத்திக்காட்டும் திருத் தொண்டினை ஊழ் ஏற்றுக்கொண்டு விட்டது. இனி அதற்கு அரியது ஏது? எண்ணிக்கையாலும், தோற்றத்தாலும், தொழிலாலும் ஒன்றுபட்ட பூம்புகார்ச் சிலம்பும், மதுரைச் சிலம்பும் ஒரே ஓர் வேற்றுமைகொண்டு இருக்கின்றன - அவற்றின் உள்ளிடு பரல்களால்! பாண்டிமா தேவியார் சிலம்பில் முத்து இடப் பட்டுள்ளது! கண்ணகியார் சிலம்பில் மணி இடப்பட்டுள்ளது! இந்த வேற்றுமையும் எதற்காக? அதனைக் கொண்டே பாண்டியனையும் அவன் மனைவியையும் வீழ்த்தி வளைந்த கொடுங்கோலைச் செங்கோலாக்கி நிமிரச் செய்கிறது. குற்றஞ் சாட்டப்பெற்ற கோவலன் குற்றமற்றவன் ஆகின்றான். ஊழ் என்னுங் கூத்தன் எத்தனை எத்தனையோ நயங்களால் நாடகம் ஆடி வெற்றி கண்டுவிட்டான் இல்லையா? ஆனால், இந்நிகழ்ச்சியைக் கூறும் சிலப்பதிகாரக் காவியஞ் செய்ய செந்தமிழ் இளங்கோவடிகளிடத்து ஊழ் செல்ல முடிந்ததா? வெல்ல முடிந்ததா? நெடுஞ்சேரலாதன் சிங்காதனத்து வீற்றிருக்கின்றான். மூத்தவன் செங்குட்டுவனும், இளைய இளங்கோவும் உடன் இருக்கின்றனர். முக்காலமும் முறையாகத் தெளிந்த சோதிடன் ஒருவன் புகுந்து உரையாடுகின்றான். வேந்தே! நின்மக்கள் இருவருள் மூத்தவன் இருக்க இளையவனே ஆட்சி உரிமை ஏற்றற்கு உரியவன் என்கின்றான். இதனைக் கேட்ட வேந்தன் திகைப்புற, செங்குட்டுவன் வருத்தமுற, அவையோர் அமைதியுற, இளங்கோ எழுந்து காலமுணர்ந்த கணித! நீ கூறிய முறைமை யற்ற நியதியை முறியடிக்கிறேன் பார்; நாடாளும் வேந்தனாக அண்ணன் இருக்கட்டும்; காடாளும் வேந்தனாக (துறவியாக) யான் போகிறேன்; எப்பொழுதோ இல்லை - இப்பொழுதே! என்று துறவுக்கோலத்துடன் வெளியேறினார். அரண்மனையில் இருந்தால், நாட்கள் சென்றால் ஊழின் ஆட்சிக்கு ஒருவேளை அடிபணிய நேரிட்டாலும் நேரிடலாம் என்று கூறிக்கொண்டே வெளியேறினார். ஊழை வென்ற உரவோர் ஆயினார். ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு வேறொரு சான்றும், வேண்டுமோ? ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் என்பதற்கு இலக்கியம் யாத்த இளங்கோவடிகளே, ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றிழ் தாழாது உஞற்று பவர் என்னுங் குறளுக்குச் சான்றாக இலங்குகிறார் என்றால் மிக வியப்புக் குரியதேயாம். இதுகாறும் அறிந்தவற்றால் ஒரு தெளிவினை நாம் கொள்ளலாம். ஊழ் என ஒன்று உண்டு; அதனைக் கண்டு சோர்ந்துவிட வேண்டியது இல்லை; அதனை மாற்றியமைக்க இயன்ற அளவும் முயலுதல் சிறப்பு; முயன்று முடித்து விடுவது பெருஞ்சிறப்பு முடியாது போயின் ஊழ் வலிமை மிக்கது என அமைதி கொள்வது நன்று  37. உலகு புகழ் உயர்நூல் புகழ் வாய்ந்த தமிழர் உலலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம்; எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை. இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு கீர்த்தி வெளி உலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன்; ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை; நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள் — இவ்வுரை மணிகள் பாரதியார் எழுதியவை. தமிழன் புகழ் பாரெல்லாம் பரவும் என்பதில் எவ்வளவு உறுதி கொண்டிருக்கிறார் அவர். தாம் கொண்டிருக்கும் உறுதிக்குக் காரணம் காட்டாமலா சென்றுவிட்டார்? வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது, அவர் கண்டறிந்து காட்டியுள்ள காரணம்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என வேண்டினார். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்று மன்றாடினார். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை என்று இடித்துரைத்தார்! திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று உலகு புகழ் வேட்கை நிலையை வெளியிட்டார். தமிழர்கள் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தல் வேண்டும். அவ்வளவுடன் நின்றால் பயன் இல்லை; ஊராக, நகராக, நாடாக வளர வேண்டும். பின் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். இவ்வாறு உலகெலாம் பரவுதற்கும், பரப்புதற்கும் வழிவகைகள் வேண்டும். முதற்கண் செய்ய வேண்டுவது என்ன? கட்டளையிடுகிறார் பாரதியார்: சென்றிடுவீர் எட்டு திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்த்திங்குச் சேர்ப்பீர். வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கம் கவிப்பெருக்கும் பெருகச் செய்க! திறமான புலமையாக இருக்குமாயின் வெளிநாட்டோர் வணக்கம் செய்வர். — திறமான புலமையின் விளைவாகத் திகழ்வது யாது? அது திருக்குறளேயாம்! திறமான புலமைத் திருவள்ளுவனார் திருக்குறள், உலக அன்னையின் ஒளிர்மணி முடிக்கண் திகழும் தலைமணியாகக் கருதக் கிடக்கும்காலம் நெடுந்தொலைவில் இல்லை - மிக அணித்தேயாம்! உலகப் போட்டி திருக்குறள் புலவர்களைக் கவர்கின்றது; பொது மக்களைக் கவர்கின்றது; இந்நாட்டவரைக் கவர்கின்றது; அயல் நாட்டவரைக் கவர்கின்றது; மனிதகுலம் அனைத்தையுமே கவர்ந்து நிற்கின்றது. இதனால் நாகரிகமும் அறவேட்கையும் மிக்க நாடுகள் அனைத்தும் தங்கள் தங்கள் மறை நூல்களுக்கு ஒப்பாக வைத்துப் போற்றும் பேற்றை எய்துகின்றது; ஏறத்தாழ, இந்நாள் நூறு மொழிகளில் திருக்குறள் பெயர்க்கப் பெற்றுள்ளது! தமிழன் பேறா? தமிழின் பேறா? வள்ளுவன் தமிழகத்துப் பிறந்த பேறு! அதனால் தானே, வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. என்று விம்மிதமுறுகிறார் பாரதியார். தமிழர் இன்று உலகோடு எவ்வழியில் போட்டி போட்டு பெருமிதம் காட்டமுடியும்? பிச்சை யெடுப்பதையும் பிழைப்புத் தொழிலாகக் கொண்ட, மக்கள் பல்லாயிரம் பல்லாயிரமாய் இருக்கும் நாடு செல்வச் சிறப்பால் பெருமிதம் கொள்ள முடியுமா? நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது, நூற்றுக்கு நூறு என்று கற்றவர்கள் எண்ணிக்கை பெருகியுள்ள நாடுகளுடன், நூற்றுக்கு இருபத்து மூன்று, இருபத்தைந்து எனக் கற்றோர் எண்ணிக்கை வைத்துக்கொண்டு போட்டியிட்டுச் சிறப்படைய முடியுமா? ஞாயிறு திங்கள் மண்டிலங்களுக்குச் செல்லும் அளவுக்கு விரிந்துள்ள அறிவியல் உலகுடன், தொடக்க நிலையில் உள்ள நாம் போட்டி போட முடியுமா? போட்டிக்கு நம்மைத் தயார் செய்யும் நிலையில் நாம் இந்நாள் இருக்கின்றோம். வளர்ந்துவிட்ட சில நாடுகளோ போட்டியின் முன்னணியில் நின்று முழு மூச்சாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமையில், எந்தப் போட்டியில் உலகை எதிர்நோக்குவது? நமக்குரிய வாய்ப்பு இந்நிலைமையில் நமக்கொரு வாய்ப்பு - வெற்றி வாய்ப்பு - இல்லாமல் போகவில்லை. அது நல்ல வெற்றிப் பேறுதரும் என்பதை நாம் உணர்ந்தபாடில்லை. இந்த ஒன்று நமக்குள்ள பெருங்குறையேயாம். வள்ளுவத்தை உலகெல்லாம் பரவும் வகை செய்து விட்டோமானால் உலகப் புகழ் நாம் எய்துவதில் எத்தகைய ஐயப்பாடும் இல்லை. இந்தத் துணிவும் செயலாற்றும் திறமும் நமக்கு வேண்டும். வள்ளுவன் குறளை வாரி இறையடா தமிழா என்கிறார் நாமக்கல் கவிஞர். இப்பணியைத் தமிழர் அனைவரும் தலைமேல் தாங்கிச் செயல்பட வேண்டும். இது நம் தலையாய கடமை! வள்ளுவம் பரவின் வையகப் புகழ் நம்மைத் தேடிவருதல் உறுதி. இதற்குப் புதிதாக நாம் அரும்பாடுபட வேண்டியது இல்லை. முடியர் முயற்சி செய்து அல்லல் அடைய வேண்டியது இல்லை. புதிய ஒன்றைக் கண்டுபிடிப்பது அரிது, அதனை இயக்கிக்காட்டித் தொழிற்படுத்துவது கடினம்; அதன் வழியாகப் பொருள்களைப் படைப்பது அரிய முயற்சி. ஆனால் படைத்து வைத்த பொருள்களை எடுத்து அழகுற அடுக்கி வைத்துக் கண்காட்சியாக்கிக் காண்பவர்கள் கண்ணைக்கவர்ந்து கைத் தட்டைப் பெறுவது எளிதும் இன்பமும் இல்லையா? கண் காட்சிப் பொருட்களை உண்டாக்க வேண்டிய கடமைக்கு நாம் ஆட்பட வேண்டியது இல்லை; அழகுற அடுக்கி வைக்கும் தொண்டு செய்தால் போதும்! இத் தொண்டு போல்வதுதான், பெறலரும் அற நூலாம் திருக்குறளை உலக மேடையில் ஏற்றுவது! எளிய முயற்சியால் அரும்பெரும் பயன் எய்த வழியிருக்கும் போது, அதனைச் செய்யவும் முடியாதவர்களாக நாம் இருப் போமாயின் அரும்பணி எதுவும் செய்வோமோ? இருக்கும் வீட்டில் ஒளிவிளக்கேற்ற இயலாதவன் புது வீடு கட்டி முடிப்பானோ? பிறநாட்டார் பேச்சு திருக்குறள் பிறந்த நாட்டிலே போய் ஒழுக்க நெறி இன்னது என்று ஓதுவது பொருந்தாச் செயலாகும் என்றும், திருக்குறள் போல் ஒரு நூல் மலர வேண்டுமாயின் அந் நாட்டின் ஒழுக்கச் சிறப்பும் நாகரிகமும் தன்னிகரற்றதாகவே இருந்திருக்க வேண்டும் என்றும் மேல் நாட்டுப் பேராசிரியர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நாம் பெற்ற பேறு - திருவள்ளுவரைப் பெற்றதே - என்று கூறிப் பெருமை அடையலாம் அல்லவா! பொதுவாக, அறநூல்கள் சட்டம் போன்றவை. சட்டங்களைப் பொது மக்கள் விரும்பி மகிழ்ந்து படிப்பது இல்லை. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் சட்டங்களை மனனம் செய்து அதன் நுணுக்கங்களை ஆராய்வதைக் காண்கிறோம். அது அவர்கள் தொழிலின் தேர்ச்சிக்காகச் செய்யும் கடமையாகும். ஆனால் திருக்குறள் அறச் சட்டமாக மட்டும் இல்லாமல், இன்சுவை பயக்கும் இலக்கியமாகவும், அள்ள அள்ளக் குறையாத மணிக்குவியலாகவும் இருக்கும் காரணத்தால், இன்னார் என இல்லாது எல்லாரும் விரும்பிக் கற்கின்றனர். மேடையிலும் சரி எழுத்திலும் சரி, உரையாடலிலும் சரி, திருக்குறள் கருத்துக்கள் இடம் பெறத் தவறுவது இல்லை. இறவா நூல் நாள் இதழ்களின் வாழ்வு நிமிடக் கணக்கில் முடிந்து விடுகின்றது. வார, திங்கள் இதழ்களின் வாழ்வு மணிக் கணக்கில் முடிந்து விடுகின்றது. சில நூல்களின் வாழ்வும் ஒருமுறை திருப்பியதுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் திருக்குறளை இவ்வாறு ஒதுக்குவது இல்லை. 1330 அருங்குறளையும் மனத்தகத்து அடக்கி, அசையாக ஆராய்ந்து வரும் ஆன்றோர்களும், மீண்டும் மீண்டும் எண்ணி எண்ணிக் கற்கின்றனர். திளைக்கின்றனர்; பிறரையும் திளைக்கச் செய்கின்றனர். படித்து முடித்து விட்டேன் மனனம் செய்து வைத்துவிட்டேன் என்று அமைந்து விடுவது இல்லை. திருக்குறள் வாழ்வு நூலாக, உயிர்நதி போன்ற, உயிர் நூலாக இருக்கும் காரணத்தால்! கலை கட்டாயம் செய்தாக வேண்டும் எனச் சில காரியங்கள் உள. அவற்றை எவரும் வற்புறுத்தாமலே செய்கின்றோம். நம்மை வற்புறுத்தாமலே உண்ணவில்லையா? பருக வில்லையா? வற்புறுத்துவோர் இல்லையே எனச் செய்யத் தவறுகின்றோமா? கட்டாயம் செய்தே தீர வேண்டும் என்று சட்டங்களால் சில காரியங்களை வற்புறுத்தப் பெற்று இருக்கிறோம். அவற்றைத் தவறின் தண்டனை ஏற்க நேரிடும். அரசுக்கு வரி செலுத்தாமல் உழவர், நிலம் வைத்திருக்க முடியுமா? கட்டாயப் படுத்தாமலே சில காரியங்களை நாமே விரும்பிச் செய்கின்றோம். இசை நிகழ்ச்சிக்கும், படக் காட்சிக்கும் நாடகத்திற்கும் பிறர் வற்புறுத்தாமலே போக வில்லையா? கலைகள் அனைத்தையும் விரும்பி நாமே தேடி அனுபவிக்கிறோம். இக்கலையுள் ஒருவகைதான் இலக்கியக்கலை! இலக்கியச் செல்வத்திற்காக எச் செல்வத்தையும் இழக்கத் துணிந்து நிற்கும் ஏற்ற மிக்கவர்களும் உண்டு. அத்தகையவர்கள் தானே கன்னல் பாகில் கோல் தேனில், கனியில் கனிந்த கவி என்று அனுபவித்து இன்புறுகின்றனர். இலக்கிய நூல்கள் பலப்பலவே, அவைதரும் இன்பம் அனைத்தும் ஒன்றாக இருக்குமோ? படக்காட்சிகளிலே கூட ஒரு படம் தரும் இன்பத்தையும் பயனையும் இன்னொரு படம் தருவது இல்லையே! இந் நிலைமையில் இலக்கிய நூல்கள் தரும் இன்பம் ஒன்றாக இருக்க முடியாது. கலைகளை இரண்டாகக் காரணங் கருதிப் பிரிப்பர். அவை: பயன் கலை. கவின் கலை; பயனைத் தலைமையாகக் கொண்டு செய்யப் பெறுபவை பயன் கலைகள்; இன்பமே தலைமையாகக் கொண்டு செய்யப் பெறுபவை கவின்கலைகள். இவ்விரண்டும் அமைந்த கவின்மிகு பயன்கலைச் செல்வமாக இருக்கிறது குறள் எனின் புனைந்துரையன்று. திருக்குறள், தமிழன்னையின் திருமுடியில் இலங்கும் வாடாத நறுமண மாலையாக உள்ளது. இது சிறிய அளவில் கூட உயர்த்திச் சொல்லுவது ஆகாது. திருக்குறள், பயனும் கவினும் கனிந்திருக்கும் காரணத்தால் தான் எத்துணையோ அற நூல்களும் காலவெள்ளத்திற்கு ஆட்பட்டுச் சென்றும் தான் செல்லாத் தனி நிலை பெற்று ஓங்குகிறது. கற்றவர் பழம் பெரு நூல்களிலே பலப்பல சொல் மாற்றங்கள் (பாடபேதங்கள்) காணப்படுகின்றன. இடை இடையே பலப்பல பாடல்கள் செருகி வைக்கப் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டு மாற்றங்களும் இல்லாமல் இலங்கும் நூல்கள் இரண்டே இரண்டு என்றால், அவ்விரண்டுள்ளும் ஒன்று திருக்குறள் என்றால், அதன் சிறப்பு சொல்லாமலே விளங்கும். திருக்குறள் தவிர்த்த இன்னொரு நூல், தமிழன் பெருமைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் தொல்காப்பியமாகும். கற்றவர் என்பவர் திருக்குறளும் தொல்காப்பியமும் கற்றவரே என்றும், காத்தவர் என்பவர் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் காத்தவரே என்பதும் சான்றோர்கள் கொள்கையாக இருந்தது என்பது உறுதியாகின்றது. திருவள்ளுவமாலை சங்கச் சான்றோர்களும், சங்கம் சார்ந்த சான்றோர்களும், பிற்காலப் பெருமக்களும் திருக்குறளைப் பற்றி என்ன என்ன கருதியிருந்தனர் என நாம் அறிந்து கொள்வோம் ஆயின் நாம் பின்பற்றிச் செல்லத் துணையாக இருக்கும். சங்கச் சான்றோர்கள் பாடியனவாகக் கருதப் பெறும் பாடல்களின் தொகுப்பு ஒன்று ஐம்பத்தைந்து பாக்களுடன் உளது. திருவள்ளுவ மாலை என்பது அதன் பெயர். அதனைப் பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சிகள் பலப்பல. சங்கப் புலவர்களே பாடினர் என்பதும், சங்கப் புலவர்கள் பாடவில்லை, அவர்கள் பெயரால் எவரோ ஒருவர் பாடியுள்ளார் என்பதும், ஒருவர் அல்லர் பலர் பாடியுள்ளனர் என்பதும், ஆக இப்படிக் கருத்துக்கள் உள. சங்கத்தவர் பாடினாலும் சரி, சங்கஞ் சார்ந்தவர் பாடினாலும் சரி, பிற்காலத்தவர் பாடினாலும் சரி. ஒருவர் பாடினாலும் சரி, பலர் பாடினாலும் சரி, வள்ளுவர் நூலுக்கும், வள்ளுவருக்கும் பெருமை தருவதற்கு அன்றி வேறு நோக்கில் அப் பாடல்கள் இயற்றப் பெறவில்லை! ஆதலால் ஆசிரியர் எவராயினும், அவர் கருத்து நற் கருத்து, அவர் மொழி நன்மொழி என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகலின் அவர்கள் பாக்களில் கண்ட பகுதியை ஒருவாறு தொகுத்துக் காண்போம். பொதுமறை திருக்குறள் தமிழ்த் தண் சோலையில் முகிழ்த்த நறுமலர்; எனினும் அதன் உரிமை மணம் தமிழ்நாட்டின் அளவில் கட்டுப் பட்டது அன்று; தமிழர் அளவில் கட்டுப்பட்டது அன்று. உலகெல்லாம் விரிந்து நிற்கும் உரிமை உடையது; ஆம்! மன்பதைப் பொது நூல் அது. பொது மறை என்னும் பெயர் உண்மை அதற்கு மிகத் தகும். உலகம் முழுமையும் திரண்டு கூடி உண்ணத் தக்க உயர் நூல் அது; உலகடைய உண்ணுமால் வண்டமிழ் முப்பால் மகிழ்ந்து என்பது ஆலங்குடி வங்கனார் வாக்கு. அவரே காரணமும் காட்டுகிறார். வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாது தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாத காரணத்தால் திருக் குறளை உலகு அடைய உண்ணுகிறது. பொது நலம் பேணிய நன் மக்கள் அவ்வக் காலங்களில் ஆங்காங்கு வாழ்ந்துளர். அவர்கள் மக்கள் நலங் கருதித்தாம் கண்டறிந்த நல்ல பல கொள்கைகளை உலகு அறிந்து நலமுறக் கூறியுள்ளனர். எவ்வளவோ துன்பங்கள் ஒருசேர எதிர் வந்து அவர்களைத் தாக்கியும், சிறிதும் அஞ்சாமல் கண்ட உண்மையைக் கடுகளவும் மறைக்காமல் கூறி வாழ்ந்து சென்றனர். அத்தகைய சீரியர் வழியில் சிந்தை ஒன்றிய நல்லன்பர்கள் ஒன்று சேர்ந்து, அச் சான்றோர் பெயரால் சில அமைப்புக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய அமைப்புக்களே சமயங்கள் மதங்கள் என்னும் பெயரால் இலங்கி இன்றும் ஆங்காங்கு கடனாற்றி வருகின்றன. சமயங்கள் அனைத்தும் மாந்தர்க்கு நலம் பயப்பனவற்றையே கூறுகின்றன என்றாலும், பின்பற்றுபவர்கள் சொல்லும் புதிய புதிய விளக்கங்களாலும், முரண்களாலும் நடைமுறைகளாலும் அச் சமயத்தினர் அன்றிப் பிற சமயத்தினர் மனம் புண்படவும், அது வளர்ந்து எதிர்ப்பாகவும், பகையாகவும் ஏற்பட்டு விடுகின்றன. இது மதங்களை உருவாக்கிய சான்றோர்களுக்கு உடன்பாடு அன்று என்றாலும், பின்பற்றிச் செல்பவர்களால் விளைந்துவிட்ட தீமையாகும். அதனால் நன்மை விளைக்குமாறே தோன்றிய சமயங்களும், ஓரொரு கால் தீமை விளைக்கும் இழி நிலைக்கு இறங்கிவிட்டதை, உலக வரலாற்றை ஒருமுறை சமய ஒருமை நோக்குபவரும் எளிதில் அறிவர். சமயப் பிணக்குடைய சில பேர்களை அழைத்து விருந்து வைத்தான் செல்வன் ஒருவன். விருந்து முடிந்தது; அதன் முடிவிலே அனைவருக்கும் பாயசம் வழங்கப் பெற்றபாத்திரங்களோ தங்கம், வெள்ளி, வெண்கலம், ஈயம், மண் இப்படிப் பலவாக இருந்தன. அச் செல்வன் விரும்பினால் அனைவருக்கும் தங்கப் பாத்திரமாகவே தந்திருக்கலாம்; அவ்வாறு தராமைக்குக் காரணமென்ன? என்று விருந்துக்குச் சென்றவர்கள் மயங்கினர். செல்வனிடம் வினவினர். அவன் சொன்னான்: சமயப் பிணக்கில் நீங்கள் உழல்கிறீர்கள். என் சமயம் உயர்ந்தது. நல்லது என்கிறீர்கள். உண்மை அது அன்று. சமயங்களுக்கு பெயர் வேறு. வேறாக இருக்கலாம். அதன் பயனும் தன்மையும் ஒன்றேதான். பாத்திரங்கள் பலவாக இருக்கின்றன. என்றாலும் அதனுள் இருக்கும் பாயசம் ஒன்றே. பாத்திரத்தைக் கண்டு மயங்குவது போலவே, சமயப் பெயரைக் கேட்ட அளவிலேயே மயங்குகின்றனர். உண்மையை ஆராய்ந்து காணும் ஒருமைப்பாடு வருவது இல்லை மக்களிடம் என்று விளக்கினான். கேட்டவர்களுக்கு விளக்கம் ஆயிற்று. என்றாலும் பின்பற்றிச் சென்றால் தானே! இந்நாளிலும் சமயப் பிணக்கும் பகையும் நின்றபாடு இல்லை. ஒரே கடவுளை வழிபடுவோர்களிடையேயும், செய்யும் வழிபாட்டு முறையான புற நிகழ்ச்சி ஒன்றே காரணமாய் மாறுபட்டு நிற்பதை நினைக்கும்பொழுது சமயம் தோன்றியும், பின்பற்றியும் மக்கள் அதன் உண்மையை உணரவில்லை என்று தான் ஆகின்றது. ஆனால், திருக்குறள் இந்தச் சமயத்தார்க்கு உரியது என்பது இல்லை. அனைவருக்கும் உரியது; எல்லாச் சமயத்தினரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய உயர் நலங் கனிந்த கொள்கைகளையே உரைக்கின்றது. கொள்கைச் சமயம் ஒன்றே அதன் குறிப்பாக இருப்பதால் பொது மறை என்னும் தகுதியைப் பெறுகின்றது. சமயத்தின் அகக் கோட்பாடுகள் வற்புறுத்தப் பெறும் நூலுக்கு உரியர் இன்னார் என உண்டா? அன்பு, அருள், அறம், பணிவு, நடுவுநிலைமை, கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை, வாய்மை இன்னவாறான கோட்பாடுகள் எச்சமயத்திற்குச் சொந்தம்? இவற்றை வேண்டாச் சமயமும் உண்டோ? வேண்டா ஒன்று சமயமும் ஆமோ? இவற்றை வலியுறுத்தித்தானே சமயங்கள் கிளர்ந்தன. இவற்றுக்கு உலைவைத்துவிட்டுப் புறக் கோட்பாடுகளைப் போற்றிவரும் சமயம் சமயம் அன்று; சமயப் பெயருக்கும் இழுக்கு! சமயத்தைத் தோற்றுவித்தவர் நோக்கத் திற்கும், வளர்த்துவிட்டவர் நோக்கங்களுக்கும் முரண்! பொதுமறையெனத் தகும் புகழ்மிகு திருக்குறள் உலகமெலாம் பரவிற்றோ - பொதுமை நலங்கனித்துள்ளதாயின் பூவுலகளவும் வளையமிட வேண்டுமே என்னுங் கருத்து சிலருள்ளத்து எழலாம். உலக மேடையில் ஒரு சிறிதே திருக்குறள் காட்சி அளித்து இருக்கலாம்;சிறிய கதிர் ஒன்றையே காட்டி ஒளிவிட்டு இருக்கலாம். அது குறள் நூலின் தகுதிக்குக் குறைவு தருவது ஆகாது. குறள் நூல் எழுந்த மொழியின் தகுதிக்குக் குறைவு தருவதும் ஆகாது. குறள் நூலைப்பெற்ற மொழியினரின் தகுதிக் குறைபாடே ஆகும். ஆங்கிலம் உலகமொழியாயது. ஆங்கிலேயர் தகுதியாலேயே! ஆங்கிலத்தின் தகுதியால் அன்று தகுதிமிக்க தமிழும், தமிழில் முகிழ்த்த திருக்குறளும் உலகச் செல்வம் ஆகாமை தமிழர் தகுதிக் குறைவாலேஅன்றி வேறன்று. உலக நூல் திருக்குறள் குறுகியுள்ள தமிழ் நாட்டில் தோன்றியது என்றாலும், உலக அளவிலே விரிந்து நின்றே முழங்குகிறது. அதன் தொடக்கமே உலகக் கண்ணோட்டத்தில் உள்ளதை அறியார் யார்? உலகில் தொடங்கும் அது உலகாகவே வளர்ந்து முதிர்ந்து நிலைபெறுவதை ஒருமுறை மேலோட்டமாகப் பார்ப் பவர்களும் அறிவர். உலகப் பெருநிலை அளவிலிருந்து குறுகிய அளவில் இறங்குதல் குறளகத்து இல்லை. ஒருநூல் உலகத்தோர் அனைவரையும் உட்கொண்டு செல்லுவது ஆயின் அதன் விரிந்த பாங்கு எவ்வாறாக இருத்தல் வேண்டும்! வையத்தார் உள்ளுவ வெல்லாம் அளந்தார் என்கிறார் புலவர் பரணர். எல்லாப் பொருளும் இதன்பால் உள என்கிறார் மதுரைத் தமிழ் நாகனார். வேறு நூல்கள் கற்கவேண்டா; இந்நூல் ஒன்றே போதும் என்று தெளிந்து கூறுகிறார் நத்தத்தனார். பிற நூல்களின் பயன் அனைத்தும் ஒருங்கு தொகுக்கப்பட்டுள்ள இடம் திருக்குறள் என்கிறார் களத்தூர் கிழார். திருக்குறள் நூல் ஒன்றைக் கற்றால் போதும். மக்கட்கு வேண்டுவது; வேண்டாதது இது; என்று அறிதல் எவருக்கும் எளிதாக முடியும் என்கிறார் செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார். புலவர் திருவள்ளுவர் இத்தகைய சிறப்புடன் ஒரு நூல், அமைந்து கிடக்குமாயின், அதனை அமைத்தோன் எத்தகையனாதல் வேண்டும்; அவன் புலமை எத்தகைத்தாதல் வேண்டும் என்று இறும்பூதுடன் எண்ணுகிறார் ஒரு புலவர். ஒரு முடிவுக்கும் வருகின்றார். எந்தப் புலவர்க்கும் வாராத் திறம் வள்ளுவர்க்கே அமைந்துள்ளது; அவரே புலவர் - புலவர் தலைவர்! உலகில் புலமையுடையோர் அனைவரும் புலவர்களே எனினும் புலவர் என்றால் திருவள்ளுவர் ஒருவரையே குறிக்கும் என்கிறார். இப்படிக் கூறியபுலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார். முதற் பாவலர் திருவள்ளுவர் புலவர்களைப் பாவலர்கள் என்றும் கூறுவர்; பிற புலவர்களெல்லாரும் பாவலர்கள் என்றால், திருவள்ளுவர் முதற் பாவலர் ஆவர் இவ்வாறு உரைக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். இன்னொருவர் வள்ளுவரை மன் புலவர் என்கிறார்; புலவர்களுக்கு மன்னர் என்பது அவர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவர் வள்ளுவர் தம் புலமைத் திறத்தால் திருவள்ளுவர் ஆனார். அவர் ஆக்கிய குறளும் திருக்குறள் ஆயிற்று. இத்தகைய அளவில் சிறப்புத் தருவதும் கூட ஒருவருக்கு மன நிறைவு அளிக்கவில்லை. அவருக்குத் தெய்வப் புலவராகவே திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். அவரைத் தெய்வப் புலவர் என்றே பிறர் அழைக்கவேண்டும் என்று தணியா வேட்கை கொள்கிறார். அவ்வேட்கையால் கூறுகிறார்; தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் வள்ளுவப் புலவர் திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் வள்ளுவன் என்பவன் அறவே அறிவில்லாதவன் ஆவான். அவன் சொற்களை அறிவு ஆராய்வு உடையவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன் வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார் இவ்வரிய பாடலைப் பாடிய பெருமகனார் மாமூலனார். பா என்பது வள்ளுவர் வெண்பா பாக்களுள் முதன்மையும் சீர்மையும் உடையது வெண்பா. என்றாலும் வெண்பாக்கள் அனைத்தும் சிறப்புற்றனவோ? இடைக்காலத்தில் வெண்பாவில் புகழேந்தி என்று நளவெண்பா இயற்றிய புலவர் பெருமகனார் போற்றப்பெற்றது போல் பிறிதொருவர் போற்றப்பெற்றுள்ளாரோ? இல்லையே! இதேபோல், பழங்காலத்தில் பா என்றால் வெண்பாவே முன்னின்றது. வெண்பாவுள்ளும் வள்ளுவனார் அருளிய குறள் வெண்பாவே முந்தி நின்றது. இதனைப் பாவிற்கு வள்ளுவர் வெண்பா என்று பகர்கிறார் கவிசாகரப் பெருந்தேவனார். தெளிவும் விரிவும் வள்ளுவர் பா புலவர்கள் உள்ளத்தைத் தொட்டிருந்த காரணத்தால்தான் இவ்வாறு சிறப்புப்பேசினர். கேட்பவர்க்கு நன்கு விளங்குவதே, சொல்பவரின் வெற்றிக்கு அறிகுறி அவ் வெற்றியைத் திருவள்ளுவர் எளிதில் என்தினார். எப்பொருளும் எவரும் எளிதில் முறையாக அறியுமாறு கூறிய வள்ளுவருக்கு நிகரொருவர் உண்டோ? என்று வினவுகிறார். பாரதம் பாடிய பெருந்தேவனார். பலப்பல நூல்களில் தோய்ந்து நின்று முடிவறிந்த முடிவு இது! தெளிவாக விளங்குதல் மட்டும் நூலின் சிறப்பு ஆகுமோ? ஆராயுந்தோறும், ஆராயுந்தோறும் புதுப் புதுக் கருத்துக்கள் தோன்றச் செய்துஇன்புறுத்துதல் வேண்டும்; இப் பணியை இனிதாக நிறைவேற்றுகின்றது திருக்குறள். நவில் தொறும் நூல்நயம் போல என்றும், கற்றனைத் தூறும் அறிவு என்றும் கூறியுள்ள வள்ளுவனார் மொழிகட்கு அவர் நூலே சான்றாக விளங்குதலைக் கண்டார் உருத்திரசன்மர். அதனால், மணற் கிளைக்க நீர் ஊறுவதுபோல. வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு. என்கிறார். இத்தகைய சிறப்புடைய காரணத்தால் வள்ளுவர் நூலில் தோய்ந்தவர்கள் அதனை விட்டு விலக ஒருப்படுவது இல்லை. ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ என்று பாரதியார் பாடுவது போன்று நாகன் தேவனார் பாடுகின்றார். எழில் மலர்ப் பொய்கையின் நறுமண நன்னீரில் இன்புறத் திளைத்து ஆடுபவர் வேறு நீரை விரும்புவரோ? வள்ளுவர் முப்பால் மொழியில் மூழ்கினார், பிறிதொன்றில் மூழ்குவரோ? என்று எண்ணிய அவர் எண்ணம், தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதாம் அப்பா லொருபாவை ஆய்பவோ வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார். என்னும் பாட்டாக உருவெடுத்தது. அறிவுக்கு விருந்து வள்ளுவர் நூலை விடுத்துப் பிறிது நூலைத் தம் மனம் நாடாமைக்குரிய காரணத்தைக் காட்டுகின்றார் கொடி ஞாழன் மணிபூதனார் என்னும் புலவர். அழகுற, இறுமாப்புடன் பாடு கின்றார். அறன் அறிந்தேம் ஆன்ற பொருள்அறிந்தேம் இன்பின் திறன்அறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு. அறத்தை அறிந்தாராம்; பொருளைஅறிந்தாராம்; இன்பத்தை அறிந்தாராம்; வீட்டையும் அறிந்தாராம்; கேளாதன வெல்லாம் கேட்டு அறிந்தாராம். இன்னும் என்னதான் அறிய வேண்டும்? பொய்யும் மெய்யும் தேனீக் குடிக்கீரனார் என்பவர் ஒரு புலவர். அவருக்குப் பொய்மை எது? மெய்ம்மை எது என்பதில் தெளிவு ஏறப்படவில்லை. அதனால் புத்தகக் குவியலில் புகுந்து தேடித்தேடி அலுத்தார். அவர் கேள்விகட்கு விடை திருக்குறளை படிக்குங்கால் கிடைத்தது. அதனால் பொய்யை - இது பொய்யெனத் தெளிவு செய்ததும், மெய்யை - இது மெய்யென நிறுவிக்காட்டியதும், திருக்குறள் தான். இனி பொய், மெய், மயக்கம் ஏற்படக் காரணம் இல்லை என்று தெளிவுறக் கண்டு நமக்கும் உரைத்தார். இனிமை ஏவாமக்கள் மூவா மருந்து என்பது பெரியோர் மொழி. நன்மக்களை அருமருந்தன்ன புதல்வர் என்பது வழக்கு. உயிர் காக்கும் உயர்நலங் கனிந்தது மருந்து ஆகலின் அதனை ஆருயிர் மருந்து என்பர். அமுதம் என்றும் கூறுவர். இத்தகைய மருந்தினைத் தேனில் குழைத்துக் கொடுப்பது நம் பண்டையோர் கண்ட முறை. இதுபோலவே திருவள்ளுவர் நூலும் இன்சுவை கெழுமியதாய்ப் பன்னோயும் போக்குவதாய் அமைந்துள்ளமை கண்டார் கவுணியன் என்னும் கவிஞர் பெருமான். சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து. என்பது அவர் மொழி. திருக்குறளை நினைக்கச் சிந்தை இனித்தது; கேட்கச் செவி இனித்தது; சொல்ல வாய் இனித்தது; இத்தனை இனிப்புச் சேர்ந்து புகுந்தால் நோய் செய்யுமல்லவா! நோய் செய்யவில்லை! திருக்குறளே மருந்தாயிற்றே! சாதாரண நோய் மருந்தா? பெரிய வினைக்கே மருந்தாயிற்றே! நோயை ஒழிக்காதா? செயலூர் செங்கண்ணனார் என்னும் புலவர் திருவள்ளுவத்தில் மிகத் தோய்ந்தவர். அவருக்கு திருக்குறள் படிக்குந்தோறும் புதுப்புதுப் பொருள்களைத் தந்து இன்பஞ் செய்தது. குறளின் அடிச் சிறுமையையும், பொருட் பெருமையையும் எண்ணினார். ஆராய்வோர் ஆராய்ச்சித் திறம் எவ்வளவோ அவ்வளவு ஆராய்வுப் பெருக்கம் குறளில் அமைந்துள்ளது என்று முடிவு செய்தார். உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டு என்பது அவர் உண்மை மொழி. கற்க; நிற்க; முகையலூர் சிறுகருந்தும்பியார் மக்கள் வாழும் விதத்தைத் தெளிவுறுத்தினார். பொழுதை வீணாக்காமல் திருக்குறளை ஆராய்தல் வேண்டும்; ஆராய்ந்ததனைப் பிறருக்கு உரைத்தல் வேண்டும்; பிறர் ஆராய்ந்து கூறுவதைத் தெளிவாக அறிதல் வேண்டும்; நன்முறையில் ஆய்ந்து தெளிந்ததைச் செயலாற்ற வேண்டும். ஆம்; கற்கவேண்டும்; கசடறக் கற்க வேண்டும்; கற்றபடி நிற்க வேண்டும்! இதுவே தும்பியார் கருத்து. திருக்குறளை ஓதுதலும் ஆராய்தலும் அரிது இல்லை; எளிது; இன்பமான ஒன்றை விரும்புதல் இயற்கை. விளையாட்டு எவ்வளவு இன்பம் தருகிறது! வேலையை நினைக்கப் பெரு மூச்சு வாங்குகிறது இல்லையா? ஓட்டப் போட்டியில் பங்கு எடுக்க உவகை கொள்பவன், நடந்து போய் ஒரு வேலையைச் செய்து வரத் துன்பப்படுதலைக் கண்ணாரக் காண்கிறோமே! திருவள்ளுவர் நூல் ஓதற்கு எளிது என்றார், மாங்குடி மருதனார். உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. என்று எளிமையாதற்குக் காரணமும் காட்டினார். இன்பம் நல்கும் திருக்குறள் ஒளிமிக்கது. இதனைக் காட்ட விரும்பிய புலவர் நப்பாலத்தனார். அவர் திருக்குறளை விளக்குடன் இணைத்துப் பேசுகின்றார். விளக்கு திருக்குறள் விளக்குக்கு இணையானது என்ற அளவில் நின்று விடவில்லை அவர். விளக்கினை உறுப்பு உறுப்பாக உவமைப்படுத்திக் காட்டுகின்றார். அறத்துப்பால் - அகல் (எண்ணெய் நிற்கும் பகுதி) பொருட்பால் - திரி இன்பத்துப்பால் - நெய் தீஞ்சொற்கள் - தீ குறட்பா - விளக்கின் தண்டு ஏற்றுபவர் - திருவள்ளுவர் ஒளிபெற உரிய இடம் - இருள் மல்கிய உள்ளம் ஒளிபெற உரியோர் - உலகோர் அனைவரும். திருவள்ளுவர் ஏற்றிய விளக்கைத் தெள்ளிதின் விளக்கி விட்டார் புலவர் நப்பாலத்தனார். செங்கதிர் குலபதியார் என்னும் புலவர் திருக்குறளை விளக்குடன் இணைக்க விரும்பினார் அல்லர். கதிரோனுடன் இணைத்துப் பேசினார். கதிரோன் தாமரை மலரை மலர்த்துகின்றது; உலக இருளை ஓட்டுகின்றது. திருக்குறள் கற்பவர் இதயத் தாமரை மலரை மலர்த்துகின்றது; உள்ளத்து இருளை ஓட்டுகின்றது. இது குலபதியார் காட்டும் உவமைப் பொருத்தம். தினையும் பனையும் சில பெரியோர்கள் குறட்பாக்களின் அடிச் சுருக்கத்தையும், பொருட் பெருக்கத்தையும் சான்றுகளால் நிறுவியுள்ளனர். அத்தகையவருள் ஒருவர் கபிலர். அவர் புல்லின் நுனியிலே ஒளியோடு திகழும் பனித்துளிக்கு இணையாகத் திருக்குறளைக் குறிக்கின்றார். பனித்துளிக்கும் உவமை காட்டி விளக்குகின்றார். தானிய வகைகளில் மிகச் சிறியது தினை; அத் தினையினும் சிறிதானது பனித் துளி; அப் பனித்துளிக்கு இணையான வடிவு உடையது குறள். வடிவால் மட்டுமோ குறளும் பனித்துளியும் ஒப்பாக உள்ளன. இல்லை; உள்ளடக்கியுள்ள பொருளிலும் ஒப்பானவையே. தினையளவில் சிறிதான பனித்துளி என்றாலும், அதன் முன் பனையொன்று நின்றால் அதன் உயரம், மட்டை, ஓலை, ஆகிய அனைத்தையும் சரியாக காட்டும். அத்தன்மை குறளுக்கும் உண்டு. குறள் குறுகிய வடிவு உடையதே என்றாலும் அதன் கண் அடங்கியுள்ள பொருள் பெரிதாம்! அப்பொருளும் தெளிவின்றி மயங்கச் செய்கிறதோ என்றால் அதுவும் இல்லை. பனித்துளி முன்னிற்கும் மலையைக்கூட வடிவு மாறாமல் காட்டுவதுடன், வண்ணமும் மாறாமல் காட்டுமே! அதுபோலவே குறளும் மயக்க மூட்டாத சிறப்பு உடையதாம் என்பது கபிலர் உட்கொண்ட பொருளாம். தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவன் வெள்ளைக் குறட்பா விரி. என்பது அவர் அருளிய அருமையான பாட்டு. சாத்தனார் என்னும் புலவர் மன்னரும் மதிக்க வாழ்ந்த பெருந்தகை. அவர் சேரனது கொல்லிமலையையும், சோழனது நேரி மலையையும், பாண்டியனது பொதிய மலையையும் நன்கு அறிந்தவர்; குடநாடாம் சேர நாட்டையும், புனல் நாடாம் சோழநாட்டையும், தென்னாடாம் பாண்டி நாட்டையும் பல்கால் கண்டு களித்தவர்; சேர நாட்டுப் பொருநை நதியும், சோழ நாட்டுக் காவிரி நதியும், பாண்டி நாட்டு வையை நதியும் அவர் நீராடிக் களிப்புற்றவை; சேரன் கரூரும், சோழன் உறையூரும், பாண்டியன் மதுரையும் அவர் இனிது உறையும் நலம் பெற்றவை; மூவேந்தர்களது மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு ஆய மும்முரசங்களும் ஆரவாரிக்கப் கேட்டு மகிழ்ந்தவர்; இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆயமுத்தமிழும் கற்றுத் துறை போயவர்; விற்கொடியும், புலிக் கொடியும், மீன் கொடியும் விண்ணளாவிப் பறப்பது கண்டு விம்மிதமுற்றவர்; மூவேந்தர்களும் உலாவரும் பட்டக் குதிரைகளின் அழகுமிகு கோலத்திலே உள்ளம் தோய்ந்தவர். அதே போல் வள்ளுவனார் முப்பாலிலும் ஊனுருக, உள்ளுருகத் தோய்ந்தவர். திருக்குறள் முப்பால்களையும் எண்ணும் பொழுதெல்லாம் அவருக்கு மூன்று மூன்றாகத் தொகுதி பெற்ற முற்காட்டியவை நினைவுக்கு வந்தன. இவ் வனைத்தும் சிறப்புக்குரியவை என்றாலும் திருக்குறளின் சிறப்புக்கு இணையாகா எனக் கண்டார். இணையாகும் தகுதி ஒன்றே ஒன்றற்கே உண்டு. அதுவும் மூவேந்தர் மணிமுடியன்று; அம்மணி முடிகளில் நறுமணத்துடன் விளங்கும் நல்ல ஆரமேயாகும். என்னும் முடிவுக்கு வந்தார். மாலைக்குத் தனிச் சிறப்பு உண்டு; மன்னர் மாலைக்கோ மிகச் சிறப்பு; அதிலும் அவர் முடி மாலையைக் கேட்க வேண்டுமா? திருக்குறளின் இனிமை, தெளிவு, சுருக்கம் இவற்றைக் கண்டோம். சில புலவர் அதன் செறிவினைச் செவ்விதின் விளக்கியுள்ளனர். கடுகும் அணுவும் இடைக்காடர் என்னும் புலவர் பெருமகனாருக்குக் குறளை நினைத்தவுடன், கடுகு முன்னின்றது. கடுகு இன்னும் சிறுமைக்கு அளவாகவே இருக்கின்றது. கடுகளவு கடுகத்தனை எனப் பேச்சு வழக்கில் உள்ளதை அறிவோம். இச்சிறிய கடுகைத் துளைக்கவேண்டும். துளைப்பது அரிதுதான். அரும்பாடுபட்டுத் துளைத்தாலும் போதாது. அத்துளை வழியே கடலைப் புகுத்த வேண்டும். ஒரு கடலையா? இரு கடல்களையா? உலகிலுள்ள கடல்களை யெல்லாம். முடியுமா? முடியாதுதான்! முடித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது திருக்குறள். குறள் கடுகு; அதனுள் புகுந்துள்ள ஏழு சீர்களும் ஏழு கடல்கள். திருக்குறளின் பொருட் செறிவுக்கு இதனினும் எடுத்துக் காட்டு வேண்டுமா? வேண்டுவது இல்லை! என்றாலும் ஔவையார் கூறினார். கடுகு கூடப் பெரிது! கடுகினும் நுண்மையானது அணு! அவ்வணுவைத் துளையிட வேண்டும். அதனுள் ஏழு கடல்களையும் புகுத்திவிட வேண்டும். அப்படியானால்தான் குறளுக்குச் சரியான சான்றாகும். அணுவுக்கு அளவு உண்டா? அளவு காட்டினர் முன்னோர். ஓர் எள்ளை 512 பங்காகப் பிரித்து வைத்து, ஒரு பங்கு எடுத்தால் அதுவே அணு அளவு! அதைத் துளைக்க வேண்டுமாம்? கடல்களையும் புகுத்த வேண்டுமாம்? கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - இடைக்காடர் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள். - ஔவையார். கல்விப்பயன் எல்லாப் பொருளும் தன்னகத்துக் கொண்டது திருக்குறள் என்றோ, தனி மாண்புடைய அறநூல் என்றோ, இன்சுவை சொட்டும் இலக்கிய நூல் என்றோ நாம் சொல்லிக் கொண் டிருப்பதால் எத்தகைய பயனும் இல்லை. திருக்குறள் படிக்க வேண்டிய நூல் அன்று; கற்க வேண்டிய நூல்; அதனால்தான் வாழ நூல் செய்த வள்ளுவரும் என்று ஆராய்ந்தோர் கூறுவர். வள்ளுவரும் தம் நூல் கற்போர் கொள்ள வேண்டியதைக் காட்டத் தவறினார் அல்லர். கல்வியைப் பற்றி ஓர் அதிகாரம் வகுத்தார்; அதனுள் தம் கருத்துக்கள் அடங்காமை கருதிக் கல்லாமை என்றோர் அதிகாரம் வகுத்தார்; கல்வி போலவே நற்பயன்அளிப்பதும், கல்வி வல்லோர் வாய்க்கேட்டுப் பயன் பெறுவதுமான கேள்வியை அதன்பின் வைத்தார். அறிவின் இலக்கணம் இன்னதெனத் தெளியுமாறு அறிவுடைமை என்றோர் அதிகாரம் அதன்பின் வைத்தார். இந் நான்கு அதிகாரங்களும் கல்வியின் தொடர்புடையனவாக, இவற்றின் பயனாக, குற்றங் கடிதலை அவற்றின்பின் வைத்துள்ளார். இவ்வரன்முறையே கற்பது நிற்பதற்கே என்பதைத் தெளிவுறுத்தும் என்றாலும் அவர் நேரிடையாகக் கூறாமலும் போனார் அல்லர். கல்வி அதிகாரத் தொடக்கத்திலேயே முதற் பாடலிலேயே காட்டுகின்றார். அக்குறள் இந் நாற்பது பாடல்களுக்கும் தனி மணியாக இலங்குகின்றது என்பதில் ஐயமில்லை. திருக்குறள் நூலின் பயன்மிக்க முடிவு தேங்கிக் கிடக்கும் இடம் இதுவே என்றாலும் தகும். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்பது அத்திருப்பாடல். கற்க என்று வேண்டினார், எவ்வாறு கற்க வேண்டும்? என்று ஒருவர் வினவுவதாகத் தம்மைத் தாமே வினவிக்கொண்டு கசடற என்று விடையளித்தார். நூல்களோ விரிந்துள; அவற்றுள் கருத்துக்களோ பல்கியுள; கற்பவர் வாழ்நாளோ சுருங்கியுள்ளது! கற்குங் காலத்தும் ஐயமும், மயக்கமும் ஆங் காங்கு ஏற்படுகின்றன. சூழ்நிலைகளும், அலுவல்களும் தடை போடுகின்றன. இவற்றை யெல்லாம் விரிவாக ஆராய்ந்தார். அதன் முடிவாகப் பழைய இரண்டு சொற்களுடன் கற்பவை என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக் கொண்டார். அப்பொழுது கற்க கசடறக் கற்பவை என்ற அளவில் நின்றது. கற்பதும் - குற்றமில்லாமல் கற்பதும் - கற்க வேண்டியவற்றைத் தேடி ஆராய்ந்து கற்பது எதற்காக என்னுங் கேள்வி அவர்களுக்கு உளதாயிற்று. அதற்கு விடையாக நிற்க அதற்குத் தக என்னும் முடிவுக்கு வந்தார். அவர் வந்த முடிவுக்குக் கற்போர் வருவதே நலம்பயப்பதாம். கற்றவர் கடன் இன்னது எனக் காட்டிய வள்ளுவர், தம் நூலையோ பிற நூல்களையோ கற்றதன் பயனைக் கூறாமல் ஒதுங்கிச் செல்லவில்லை. ஏனெனில், பயன் கருதி வாழ்வோரே உலகில் மிகுதியானவர்கள். பயன் எதுவும் இல்லை என்றால் அந்தப் பக்கம் தலையெடுத்துப் பார்க்கவே மாட்டாதவர்களும் உளர் என்பதை அறிவார். இத்தகையவர்களையும் இழுக்க வேண்டும். ஆனால் உண்மையாகவும் இருக்கவேண்டும். ஆதலால், ஒரு கேள்வி போடுகின்றார்: கற்றதனால் ஆய பயனென் கொல்? தம் கேள்வியை நூலின் தொடக்கத்திலேயே போடு கின்றார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்முதற்றே உலகு என்று நூல் தொடங்கிய அந்த அறிஞர் பெருமகனார் அடுத்த பாடலிலேயே, கற்றதனால் ஆய பயனென் கொல் என்கிறார். கல்வியின் பயன்இன்னது என்று ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதினும், கற்றதினால் பயன் உண்டோ? என்று நெஞ்சில் பதியுமாறு இடித்து வினவுவது வள்ளுவரின் உளவியல் ஆராய்வுக்கு எடுத்துக்காட்டாக இலங்குகின்றது. ‘கற்றதனால் பயன் என்ன? என்று உந்தும் உணர்ச்சியை முந்தியெழச் செய்து சிந்தனைத் திறத்தை மிகுவித்து, வாலறிவன் (இறைவன்) நற்றாள் தொழாஅர் எனின் என்று முடிப்பது - உளவியலை ஆராய்ந்து, கேட்போர் நெஞ்சில் நிலைக்குமாறு அழுத்திக் கூறும் பெருந்திறத்தைக் காட்டுவதாம். கடவுளை வணங்குதல் கற்பவர்கடன்; கடவுளை வணங்குதலின் பயன்? இவ்வினாவுக்கும் விடை அளிக்கின்றார் அடுத்த பாடல் தொடங்கி: நிலமிசை நீடு வாழ்வார் யாண்டும் இடும்பை இல இருவினையும் சேரா பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இவ்வாறாக அடுக்கி யுரைக்கின்றார். வள்ளுவர் நூல் மாண்பு மிகுநூல்; அது இனிக்கும் நூல்; இலக்கிய வளம் செறிந்தது; எளிமையும் தெளிவும் இலங்குவது; ஆராயுந்தோறும், ஆராயுந்தோறும் புதுப் புதுப் பொருள்களை நல்குவது; அறத்தின் அச்சாணியாக இலங்குவது எல்லாப் பொருளையும் தன்னகத்து அடக்கியது; சமயப் பொதுமையானது; காலவெள்ளம் கடந்தது; கல்விப்பேற்றை நல்குவது; கல்வியின் முடிந்த பயனையும் காட்டுவது; வாழப் பிறந்தோர்க்கு என்றே வகுக்கப் பெற்றது. ஆதலின் திருக்குறள் தெய்வ நூலேயாம்.! தெய்வ நூலாம் திருக்குறளை ஓதாதவர்கள் நாவிற்கு உயல் இல்லை; சொற்சுவை ஓர்வில்லை; மற்றுஞ் செயலில்லை: என்றார் உறையூர் முதுகூற்றனார். நா, இன்சொல் வழங்கி இன்புறாது; நெஞ்சம், நல்லன நினைந்து இன்புறாது; உடல், பணிபுரிந்து மகிழாது என்பது அவர்தம் கருத்தாம். இக்கருத்தில் ஊன்றினார் இன்னொருவர் புலவர்; அவர் அரசர்; உக்கிரப்பெருவழுதியார் என்பது அவர் பெயர். உலகை நோக்கி அறைகூவுகின்றார். கட்டளையிடுகின்றார்; மன்னர் அல்லவா! திருக்குறளை வணங்கட்டும் தலை; வாழ்த்தட்டும் வாய்; நினைக்கட்டும் நெஞ்சு; கேட்கட்டும் செவி. வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி என்பது அவர்தம் அன்புக் கட்டளை! திருக்குறளைக் கற்போம்; வந்திப்போம். வாழ்த்துவோம்; நிற்போம்! வாழ்க வள்ளுவம்! 