இளங்குமரனார் தமிழ்வளம் 3 உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மைவிளக்கம் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் -3 தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 272 = 288 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 180/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் சொற்பொருள் நுண்மைவிளக்கம் தொகுப்பாசிரியர் முன்னுரை 1 மேற்கோள் நூல்கள் 9 குறுக்க விளக்கம் 14 சொற்பொருள் நுண்மை விளக்கம் 15 பிற்சேர்க்கை 270 உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகரவரிசை) தொகுப்பாசிரியர் முன்னுரை தமிழ்ச்சொல் இயற்கையில் கருக்கொண்டது; இயற்கை ஒலியில் பிறந்தது; இயற்கை வடிவில் அமைந்தது; இயற்கைப் பொருளமைதியும் இயைந்த பொருட் பொருத்தமும் செறிந்தது; உள்ளுவார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு இன்ப வெள்ளத்தில் திளைக்க வைப்பது. இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்தது என்பது தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தேன்மொழி. உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகரவரிசை) என்பது இத்தொகை நூற்பெயர். இப்பெயரே இதன் உள்ளுறையைத் தெள்ளிதில் விளக்க வல்லதாம். இந் நன் முயற்சியில் என்னை ஊக்கிய அன்னைத் தமிழின், திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துகிறேன். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது முழுமுதல் இலக்கணப் பேராசான் உரை. அவ்வுரையைச் செவ்விதின் உணர்ந்த நுண்மாண் நுழைபுல நூலாசிரிய - உரையாசிரிய பெருமக்கள் தத்தம் நூலகத்துத் தாம்தாம் எடுத்துக் கொண்ட பொருள்களுக்கேற்ப, ஆங்காங்குச் சொற்பொருள் விளக்கம் காட்டியுள்ளனர். அவர்கள் தம் நூலகத்துச் செறித்து வைத்துள்ள அருவிலைப் பெருமணிக் கலன்களுள் என் கைக்கு எட்டிய ஒரு சிலவற்றை ஒருங்கு தொகுத்து மணிமாலை ஆக்கிவைத்த ஒன்றே என் பணியாம். ஆங்காங்குக் கிட்டிய சிற்பங்களைத் தொகுத்து வைத்து எழிலும் ஏற்றமும் மிக்க கலைக்கோயிலைத் தஞ்சையில் உருவாக்கி விடவில்லையா! அத்தகைய இனிய - பயன்மிக்க - பணியே இது. முற்றுமுடிந்த பணியன்று; தொடக்கப் பணியே! அன்றித், தூண்டற் பணியும் ஆம். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக நூன் மலர்களை நாடினேன். நோக்கிய இடமெல்லாம் பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய, மாமலை பயந்த காமரு மணியும் தொகுத்து வைத்தாற்போல் அமைந்த நூல்களையும் கண்டேன். பன்னூறு பக்கங்களைப் புரட்டியும் ஓரிரு சொற்பொருள் விளக்கமும் காட்டப் பெறாத நூல்களைக் கண்டும் அயர்வின்றித் தொடர்ந்தேன். பற்பல நூல்களைச் சொற்பொருள் விளக்கம் கருதிப் புரட்டிய காலையில் அப்பயன் காணாது வேறுபயன் வெளிப்படக் கண்டும் வியந்தேன். நோக்கத்தை வரையறுத்துக் கொண்டு நூலாய்தலின் பயன் நன்கு விளங்கியது. விளங்க விளங்க, ஒரு நூலை மீண்டும் மீண்டும் - திருப்பித் திருப்பிப் - பயில்வதால் மட்டும் பயன் இல்லை. புதுப்புது நோக்கங்களைப் படைத்துக் கொணடு ஈடுபடின், அந்நூலும் புதுப்புது நலங் களைக் காட்டித் தானும் பொலிவடைந்து, கற்பவனுக்கும் ஒளி கூட்டுவது கண்கூடாயிற்று. இந்நூலில் காட்டப் பெறும் சொற்களில் பெரும் பாலனவும் பொருளும், விளக்கமுங், கொண்டு திகழ்கின்றன; ஏதுவும், எடுத்துக்காட்டும் கொண்டு மிளிர்கின்றன; கருத்து வளர்ச்சியும் கால வளர்ச்சியின் தடமும் அமைந்து மின்னலிடு கின்றன; வேர்ச் சொல்லும், வேர்வழிச் சொல்லுங்கூட விளக்கு கின்றன! எங்கெங்கும் சுவைமிக்க விருந்தாகித் தமிழ்ச் சொற் களின் உயர்வற உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகின்றன! ஆம்! காமம் செப்பவில்லை! கண்டது மொழி ந்தேன்! இற்றைக்கு இருபதுயாண்டுகளின் முன்னர்த் தொல்காப்பியப் பேராசிரியத்தில் என் உள்ளம் ஈடுபட்டது. அந்நாளில் அந்நூல் இத்தமிழகத் தெல்லையில் கிட்டாது ஈழத்தில் இருந்து தருவித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரிதிற் பெற்ற பொருள், ஆர்வத்திற்கும் உரியது என்பது வெளிப்படை. அன்றியும், அரிதில் அரிய வளனும் உடையதாக அஃது இருக்குமாயின் அதன் சிறப்பை உரைக்க வேண்டுவதில்லை. மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப் பேராசிரியர் தரும்சொற்பொருள் விளக்கம் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே சொற்பொருள் விளக்க வித்து என் நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது. பேராசிரியரின் சொற்பொருள் விளக்கத்தில் யான் பேருவகையுற்ற போழ்திலே, மற்றொரு துயர் என்னை நலிப்பதாயிற்று. எளிய - இனிய - இயற்கையுடன் இயைந்த - தண்டமிழ்ச் சொற்களையும், வெளிப்படையாக வேர்கண்டு விளக்கத் தக்க சொற்களையும், வட சொல்லே என்று வரிந்து கட்டிக் கொண்டு உரையாசிரியர் சிலர் செப்பந்தவறித் தம் மனவொப்பம் ஒன்றே குறியாகி மொழிக் கேடு புரிந்ததையும், புரிந்துகொண்டு வருவதையும் உன்ன உன்ன உள்ளம் நைந்தது. பலகற்றும், பைந்தமிழ்க் குடியிலே பிறந்து வளர்ந்து, அத் தமிழாலேயே வாழ்வு நடாத்தி வரும் தமிழருட் சிலரும், அக்கேடர்க்கு அரணாகி அன்னையின் அழகு முகத்திற்கு ஆறா வடுக்களை ஆக்கிப் படைத்து அகங்களித்து வந்த நிலைமையோ மிகமிகப் புண்படுத்திற்று. இந்நிலை, என் செயல் எண்ணத்தைத் திண்ணிதாக்கிற்று. என் நெஞ்சத்தூன்றி யிருந்த சொற்பொருள் விளக்க வித்து முளையாயிற்று! பயிரும் ஆயிற்று! இந்நிலையில், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், தண்டமிழ் அன்னையைப் பற்றி நலித்துக் கொண்டிருந்த பிறமொழிக் கலப்பென்னும் பெருநோயைப் போக்க வல்ல தனித்திற மருத்துவராகிப் காலத்தாற் செய்த செயற்கருஞ் செயல் செந்தமிழர் உள்ள அளவும் போற்றத்தக்கதாம். தனித்தமிழ்ப் பற்றாளரே எம் நண்பர் என ஒளிவு மறைவு இன்றி முழங்கிய அக்கோளரியின் வழியிலே இந்நாளில் ஏறு நடையிட்டு வீறுமிக்க ஆற்றலால் தமிழ்ப் பகையை வெற்றி கண்டு வரும் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ஆவர். இவ்விரு பெரு மக்களும் படைத்துள்ள தனித்தமிழ் நூற்கள், சொற்பொருள் விளக்கப் பயிர்க்கு உரமிட்டு வளர்த்தன! நீர் பெருக்கிச் செழிப்பாக்கின! பல்கலைக் கழகப் பயிற்றுமொழி பைந்தமிழாக வேண்டும் என்று பறையறைந்து, நடைப்பயணத்தை மேற்கொண்ட காலையில், அந்நாளைய அரசால் சிறைக்கொடுமைக்கு ஆளாக்கப் பெற்ற செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார் அவர்கள் தலைமைக் கீழ் இயங்கிய தமிழ்க்காப்புக் கழகப் பொதுச் செயலாளனாகப் பணியாற்றும் பேறு எனக்கு வாய்த்தமை, சொற்பொருள் விளக்கப் பயிர்க்குச் சீரிய காவலாயிற்று! சிவநெறியையும், செந்தமிழையும் தம்மிரு கண்களெனக் கொண்டு எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது பணியாற்றுவதுடன், குமரகுருபரர் குழந்தைப்பள்ளி, சிவஞான முனிவர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் ஆகிய சீரிய நிறுவனங்களை உருவாக்கித் தமிழ் கூறும் உலகமெல்லாம் தண்டமிழ் தனிக் கோலோச்சுமாறு தமிழகத் தலைநகர்களில் கிளை நிலையங்களைப் பெருக்கிச் செம்மையாக ஆட்சிசெலுத்திவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ.சுப்பையா பிள்ளை அவர்கள், உரையாசிரியர்கள் புதுப்பொருள் விளக்கங் கொடுத்துள்ள சொற்பட்டி மிகவும் அரிய இன்றியமையாத தொகுப்பாகும் என்றும், தங்கள் முயற்சி பெரும்பயன் தரும் என்றும், காலத்தால் வரவேண்டிய கருவிநூல் என்றும் பல்காலும் ஊக்கி உதவியமை, பன்னரிய பயன் விளைவாயிற்று! இத்தொகுப்பு நூல் தோன்றி வளர்ந்த வரலாறு இது! இந்நூற்கண் விளக்கப் பெற்றுள்ள சொற்கள் 1159ஆம். இவற்றுள் தமிழ் என்னும் ஒரு சொல் பதின்மூன்று விளக்கங் களையும், அன்பு என்னும் ஒரு சொல் எட்டு விளக்கங்களையும், அந்தணர், அறம், நிறை என்னும் மூன்று சொற்களும் அவ்வாறு விளக்கங்களையும், தூக்கு, மறை என்னும் இரண்டு சொற்களும் ஐந்தைந்து விளக்கங்களையும் பெற்றுள்ளன. மேலும், 11 சொற்கள் நான்கு விளக்கங்களையும், 37 சொற்கள் மூன்று விளக்கங்களையும், 118 சொற்கள் இரண்டு விளக்கங்களையும் தனித்தனி பெற்றுள்ளன. எஞ்சிய 986 சொற்களும் ஒவ்வொரு விளக்கம் பெற்றனவாம். ஆகச் சொல் அளவால் 1159 சொற்களும், விளக்க அளவால் 1416 சொற்களும் இந்நூற்கண் அடங்கியுள்ளன. ஆ என்பது பெற்றத்தினை உணர்த்தும்வழிப் பெயர்ச் சொல் எனவும், இரக்கக் குறிப்பினை உணர்த்தும் வழி இடைச் சொல் எனவும், ஏவற் பொருண்மையை உணர்த்தும்வழி வினைச் சொல் எனவும், ஆதற் புடைபெயர்ச்சியை உணர்த்தும்வழி உரிச்சொல் எனவும் கோடல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையின் எழுத்தொப்புமை பற்றி உபசாரத்தால் பலபொருள் ஒரு சொல் எனப்படினும் உண்மையான் வேறுவேறு சொல்லேயாம் என்று மாதவச் சிவஞானமுனிவர் கூறியாங்கு வேறுவேறு சொல்லாகக் கொள்ளாது ஒரு சொல்லாகக் கொண்டு எண்ணியது இத் தொகைச் சொல்லாம்! (ஆ என்பது காண்க.) இனி, மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும் பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல் பிறங்கல் பொருப்பு வெற்பு என்றும்; ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் சிலம்பு என்றும்; மூங்கிற் காடுகள் உள்ள மலையை வரை என்றும்; காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும்; சிறிய மலையைக் குன்று குவடு குறும்பொறை என்றும்; மண்மிகுந்த மலையைப் பொற்றை பொச்சை என்றும்; மலைப்பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும் என மறைத் திரு.மறைமலையடிகளார் கூறும் விளக்கத்தில் 16 சொற்களும் 17 விளக்கங்களும் அமைந்திருந்தாலும் சொல் ஒன்றாகவும் விளக்கம் ஒன்றாகவுமே இந் நூற்கண் எண்ணப் பெற்றதாம். (மலை - காண்க.) இனி, இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே காலவகையில் அந்தி எனப்பட்டது. காலையில் நிகழ்வது காலை அந்தி என்றும், மாலையில் நிகழ்வது மாலை அந்தி என்றும் சொல்லப்பெறும். காலை அந்தியும் மாலை அந்தியும் -புறம்.34 காலை அந்திக்கு முன்னந்தி, வெள்ளந்தி என்றும், மாலை அந்திக்குப் பின்னந்தி, செவ்வந்தி என்றும் பெயருண்டு. அந்தி என்னும் பொதுச் சொல் சிறப்பாக ஆளப்பெறும் போது மாலை அந்தியையே குறிக்கும் என்பது அந்திக்கடை. அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்தி வண்ணன், அந்திவேளை முதலிய சொல்வழக்கால் அறியப்பெறும். இட வகையல் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும். அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் - சிலப். 14: 213. பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகர மெய் முன்னிடப் பெற்றுச் சந்தி என்றாயிற்று...... சந்து - பொருத்து. தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். இருவருக்குஞ் சந்துசொல்ல சிலப். 8:101 உரை. சந்து - சந்தை; பலகடைகள் கூடுமிடம் என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் அந்தி என்னும் ஒரு சொல்லை 15 தொடர்ச் சொற்களாலும் எடுத்துக் காட்டுக் களாலும் விளக்கியுள்ளது போன்றவற்றைச் சொல்லும் விளக்கமும் ஒவ்வொன்றாகவே இந்நூற்கண் கொள்ளப் பெற்றதாம். (அந்தி - காண்க.) இனி, அமிழ்தம் என்னும் வள்ளுவச் சொல்லை எடுத்துக் கொண்டு, மிருத என்னும் வடமொழி மரணத்தைக் குறிக்கும் ஆதலால் மரணத்தைத் தடுப்பதற்கு வடமொழியில் அமிருத எனப் பெயராகி, அப் பெயரே தமிழில் அமிழ்தம் எனத் திரிந்து வழங்குகிறது என்பர். அது நிற்க. அமிழ்தம் மரணநோயைத் தீர்த்தலினாலே மருந்து எனவும், உண்ணப்படுதலின் உணவு எனவும், இன்சுவைத்தாதலின் இனியது எனவும் கொள்ளப்படு கின்றது. இம் மூவகைப் பண்புகளும் அதற்குளவாதல் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா, மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள்.82) அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள், சிறுகை அளாவிய கூழ் (குறள்.64) என்னும் குறள்களிலே நன்குணரக் கிடக்கின்றது. அமிழ்தம் என்னும் சொல்லொடு ஒற்றுமையுடைய அவிழ்தம், அவிழ், தமிழ் என்னும் தூய தமிழ்ச் சொற்கள் மூன்றும் அம்முப் பண்புகளையும் முறையே உணர்த்துவனவாம். நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக் கட்டை அகற்றுவது அஃதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அஃதாவது மருந்து; மகரமும் வகரமும் ஒத்து நடப்பதுண்டு, மிஞ்சுதல் - விஞ்சுதல், மேய்தல் - வேய்தல் மீறுதல் - வீறுதல் என்பவற்றிற்போல; அவ்வாறே ஈண்டும் அவிழ்தம் என்பதும் அமிழ்தம் என்றாயது. இனி, அவிழ் என்னும் சொல் உணவுப் பொருளாகிய சோற்றைக் குறித்தல் குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி (மலைபடுகடாம்.183) என்னும் பத்துப் பாட்டடிலும், பிறாண்டும் காணலாகும். இச் சொல் வகரம் மகரமாகி விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. அமிழ்தம் என்பதின் திரிபாகிய அமுது என்பது உணவைக் குறித்தல் பெருவரவிற்றாதலும் உணர்க. இனி, தமிழ் என்பது இனிமைப் பொருட்டாதல் சிந்தாமணி முதலிய நூல்களில் காணலாம். மலர் - அலர், தாய் - ஆய், புலர் - உலர் என்பவற்றிற் போல மொழி முதல் ஒற்றொழிந்து தமிழ்ச் சொற்கள் உண்டாதலால் இனிமை என்னும் பொருட்டாய தமிழ், மொழிமுதல் ஒற்றொழிந்து அமிழ் என்றாய் விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. இவ்வாறு அமிழ்தம் என்னும் சொல் தனக்குரிய முப்பண்புகளையும் தமிழ்ச் சொற்களால் தானே காட்டி நின்றதாகலின் அதனை வடமொழித் திரிபென்பதினும் தமிழ்ச் சொல்லே எனக் கொண்டு வடமொழி அமிர்தம் இத் தமிழ்ச் சொல்லின் திரிபெனக் கோட பொருத்தமுடைத்தாம் என்று நாகை சொ.தண்டபாணிப் பிள்ளை அவர்கள் தருக்கமென்னும் தகவுடைய சம்மட்டி கொண்டு பொருளையே அன்றிப் பொருள் வைக்கப்பெற்ற பட்டடையையும் சேர நையச் செய்த வல்லாண்மை எண்ணி இன்புறுவதுடன், தொடர்ந்து பற்றிச் செல்லத்தக்க வழிகாட்டியுமாம். (திருக்குறள்.11) தண்டபாணி விருத்தியுரை காண்க.) இதே பொழுதில், சேனாவரையர் தமிழ்ச் சொல் வட பாடைக் கண் செல்லாது என்றும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது என்றும் (தொல். சொல். 401) கூறுவதையும், தமிழ் இனத்தவரான மலையாளிகள் இன்றும் பழைய உவா என்னும் சொல்லை மறந்து விடவில்லை. கறுத்த உவா, வெளுத்த உவா என்று அவர்கள் இன்றும் வழங்கி வருகிறார்கள். ஆனால் திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த தமிழைப் பேசுகிற தமிழரோ, பழைய தமிழ்ச் சொற்களை மறைத்துவிட்டு, அமாவாசை, பௌர்ணமி என்னுஞ் சொற்களை வழங்கு கிறார்கள். சொந்தக் காசைப் பெட்டியில் வைத்து மறந்துவிட்டு அயலான் காசைக் கடன் வாங்கிச் செலவு செய்கிறவன் செயல் போல இருக்கிறது இவர்கள் செய்கை. பெட்டியில் உள்ள சொந்தக் காசை எப்போது வெளியில் எடுக்கப் போகிறார்கள்? பழைய காசு செல்லாக் காசாவதற்கு முன்பே வழங்குவதுதான் அறிவுடைமையமாகும் (அஞ்சிறைத் தும்பி.48) என்றும், குறவ என்னும் திராவிட மொழிச் சொல்லை வடமொழியாளர் கடனாகக் கொண்டு வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சொல்லை அப்படியே உச்சரிக்க முடியாமல் கிராத என்று திரித்து வழங்குகிறார்கள். சம்கிருதக்காரர் கொறவ என்னுஞ் சொல்லைத் தெலுங்கில் இருந்தோ கன்னடத்தில் இருந்தோ எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கொறவ என்னுஞ் சொல்லே வடமொழியில் கிராத என்றாயிற்று. வடமொழியின் கிராத என்றால் வேடன் என்பது பொருள். கொறவ என்னுஞ் சொல் சம்கிருதத்தில் கிராத என்றாயிற்று என்று கூறினால் சம்கிருத மொழிப் பண்டிதர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கிராத என்னுஞ் சொல்லில் இருந்து தான் கொறவ, குறவன் முதலிய சொற்கள் உண்டாயின என்று சண்டித்தனம் செய்வார்கள். ஆனால் ஆராய்ச்சி, உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றது (அஞ்சிறைத் தும்பி.140) என்றும் அறிஞர் மயிலை.சீனி. வேங்கடசாமி கூறுவதையும் ஒப்பிட்டுணர்ந்து கொண்டு இச்சொல் வரிசையைப் பயன்படுத்துதல் பெருநலம் பயக்கும். பாவாணர் இயற்றியுள்ள வடமொழி வரலாறு என்னும் நூல் சேனாவரையரின் வடமொழிக் கருத்தைத் தவிடு பொடியாக்கிக் காற்றில் பறத்துதல் காண்க! இனி, முந்நீர், யாற்று நீரும், ஊற்று நீரும், மழை நீரும், உடைமையால் கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று என்று ஓர் உரையாசிரியரும், நிலத்திறகு முன்னாகிய நீர் என்று மற்றோர் உரையாசிரியரும், நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய மூன்று தொழிலும் உடைமையின் முந்நீர் என்று வேறோர் உரையாசிரியரும், முந்நீர் - கடல். ஆகுபெயர். ஆற்று நீர், ஊற்று நீர், மேனீர், என இவை என்பார்க்கு அற்றன்று. ஆற்றுநீர் மேனீர் ஆதலானும், இவ்விரண்டும் இல்வழி ஊற்று நீரும் இன்றாம் ஆகலானும் இவற்றை முந்நீர் என்றல் பொருந்தியதன்று. முதிய நீர் எனின் நெடுங் கடலுந் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது. ஆனால், முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின் முச்செய்கை உடைய நீர் முந்நீர் என்பது. முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம் என்று இன்னோர் உரையாசிரியரும், இச்சொல் முப்புறமும் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒருபெரும் நீர்ப் பரப்பைக் குறிப்பது என்பதனையும்; தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதனையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை என முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் கூறியுள்ள சொற்பொருள் விளக்க ஆய்வு கற்குந்தோறும் கழிபேரின்பம் நல்குவதாம். இத்தகைய தொடர் ஆய்வால் சொல்லகத்துக் கால - இட - இன - நோக்க - வரலாறுகளும் உள்ளடங்கிக் கிடப்பதைக் கண்டறிதல் எளிதாம். இத் தொகுப்புப் பணியைத் தூண்டியதுடன் துலங்கு மாறும் செய்த பேராசிரியர் முதலான செந்தமிழ்ச் செல்வர்கள் அனைவருக்கும், அவர்கள் வழங்கிய மணிப்பேழையை நூல் வடிவில் உலவவிட்ட பதிப்பாளர்கள் அனைவருக்கும் பெருநன்றியுடையேன். இதனை அழகொழுக அச்சிட்டுத் தமிழ் வளமாக்கிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு உள்ளார்ந்த அன்பும் நன்றியும் உடையேன். இப்பணியில் யான் ஈடுபட்ட காலையில் படியெடுத்தல் முதலாய பணிகளில் ஒல்லும் வகைகளில் எல்லாம் உதவிய என் இனிய அன்புச் செல்வி புலவர் கலைமணிக்கு அன்பான வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் வெல்க! மேற்கோள் நூல்கள் அகத்திணத் தெளிவு - வீ.ப.கா.சுந்தரம் அகநானூறு-வேங்கடவிளக்கு - ந.மு.வேங்கடசாமி நாட்டார், அரங்க வேங்கடாசலம் பிள்ளை அஞ்சிறைத்தும்பி - மயிலை சீனி.வேங்கடசாமி இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் - சி.இலக்குவனார். இளைஞர்க்கான இன்றமிழ் - மறைமலையடிகள் இறையனார் களவியல் - நக்கீரனார் உரை உயர்தரக் கட்டுரை இலக்கணம் - பாவாணர் ஊரும் பேரும் - இரா.பி.சேதுப்பிள்ளை ஐங்குறு நூறு - ஔவை சு.துரைசாமி உரை ஐங்குறு நூறு - பழைய உரை ஐங்குறு நூறு - பெருமழைப் புலவர் விளக்கவுரை ஒற்றியூர் முருகர் மும்மணிக் கோவை - மறைமலையடிகள் உரை கட்டுரைப் பொழில் - அ.மு.சரவண முதலியார் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - மறைமலையடிகள் கல்லாடம் - பெருமழைப்புலவர் உரை கலித்தொகை - இளவழகனார் குறிப்புரை கலித்தொகை - நச்சினர்க்கினியர் உரை கலைக்களஞ்சியத் தொகுதிகள் - தமிழ் வளர்ச்சிக் கழகம் கலைபயில் கட்டுரைகள் - கழகம் கழகப் பொன்விழா மலர் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் குறிஞ்சிப்பாட்டு - மார்க்கபந்து சர்மா உரை குறுந்தொகை - உ.வே.சாமிநாதையர் உரை குறுந்தொகை - சௌரிப் பெருமாளரங்கன் உரை குறுந்தொகை விளக்கம் - இரா. இராகவ ஐயங்கார் உரை கொங்குநாடு - புலவர் குழந்தை சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெயர் விளக்கம் - மொ.அ.துரையரங்கனார் சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம் - பி.எல்.சாமி சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் - பி.எல்.சாமி சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - உ.வே.சாமிநாதையர் சங்கநூற் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்) - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சிந்தாமணி - நச்சினார்க்கினியர் உரை சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை சிலப்பதிகாரம் - அரும்பதவுரை சிலப்பதிகாரம் - ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை சிவஞானபோதம் - சிவஞானமுனிவர் உரை சிறுபாணாற்றுப்படை - நச்சினார்க்கினியர் உரை சிறுவர்க்கான செந்தமிழ் - மறைமலையடிகள் செட்டிநாடும் தமிழும் - சோம.இலக்குமணஞ் செட்டியார் செந்தமிழ்ச் செல்வித் தொகுதிகள் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் செந்தமிழ்த் தொகுதிகள் - மதுரைத் தமிழ்ச் சங்கம் சேரமன்னர் வரலாறு - ஔவை சு.துரைசாமி சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - பாவாணர் சொல்லின் கதை - மு.வரதராசனார் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் - மறைமலையடிகள் தண்டியலங்காரம் - சுப்பிரமணிய தேசிகர் உரை தமிழ்க்காதல் - வ.சுப.மாணிக்கனார் தமிழ் காட்டும் உலகு - அ.சிதம்பரநாதனார் தமிழ் மொழிச் செல்வம் - மா.இராசமாணிக்கனார் தமிழ் மொழி வரலாறு - இராமசுப்பிரமணிய நாவலர் தமிழ் வரலாறு - பாவாணர் தமிழ் வியாசங்கள் - பரிதிமாற் கலைஞர் தமிழ் விருந்து - இரா.பி.சேதுப்பிள்ளை தமிழகம் அலையும் கலையும் - இரா.பி.சேதுப்பிள்ளை தமிழர் நாகரிகமும் பண்பாடும் - மா.இராசமாணிக்கனார் தமிழர் மதம் - மறைமலையடிகள் தமிழர் வீரம் - இரா.பி.சேதுப்பிள்ளை தமிழுள்ளம் - கோ.சுப்பிரமணிய பிள்ளை தாலாட்டு - தமிழண்ணல் திருக்குறள் உரை - அப்பாத்துரையார் திருக்குறள் உரை - இலக்குவனார் திருக்குறள் உரை - காலிங்கர் திருக்குறள் உரை - தண்டபாணி (விருத்தியுரை) திருக்குறள் உரை - திரு.வி.க. (விரிவுரை) திருக்குறள் உரை - பரிதியார் திருக்குறள் உரை - பரிப்பெருமாள் திருக்குறள் உரை - பரிமேலழகர் திருக்குறள் உரை - பழைய உரை. (உ.வே.சா.பதிப்பு) திருக்குறள் உரை - பாவாணர் (மரபுரை) திருக்குறள் உரை - புலவர் குழந்தை திருக்குறள் உரை - மணக்குடவர் திருக்குறள் அழகும் அமைப்பும் - தண்டபாணி தேசிகர் திருக்குறள் அறம் - அழகரடிகள் (இளவழகனார்) திருக்கோவையார் - பேராசிரியர் உரை திருமுருகாற்றுப்படை - நச்சினார்க்கினியர் உரை திருவருட்பா விரிவுரை - இரசபதி அடிகள் திருவள்ளுவர் நினைவுநாள் மலர் - கழகம் திருவள்ளுவரைப் பற்றி - ஆ.சிவலிங்கனார் திருவாசக விரிவுரை - மறைமலையடிகள் திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் - திரு.வி.க. திருவிளையாடற் புராணம் - ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை துளுமொழியும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி தொல்காப்பியம் - எழுத்து - இளம்பூரணர் உரை தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் - எழுத்து - பாவாணர் குறிப்புரை தொல்காப்பியம் - எழுத்து - அ.கணேசையர் குறிப்புரை தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கல்லாடனார் உரை தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பாவாணர் குறிப்புரை தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - அ.கணேசையர் குறிப்புரை தொல்காப்பியம் - பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் - பொருளதிகாரம் - பேராசிரியர் உரை தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அ.கணேசையர் குறிப்புரை தொல்காப்பியம் - பொருட்படலம் - ச.சோமசுந்தரபாரதியார் உரை தொல்காப்பிய ஆராய்ச்சி - சி.இலக்குவனார் தொல்காப்பியப் புதுமை - வ.சுப.மாணிக்கனார் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - m.கி.guªjhkdh® நற்றிணை - பின்னத்தூர் அ.நாராயணசாமி உரை நன்னூல் - சங்கர நமச்சிவாயர் உரை நன்னூல் - மயிலைநாதர் உரை நாலடியார் - தருமர் உரை நாலடியார் - பதுமர் உரை நாலடியார் - விளக்கவுரை நெடுநல்வாடை - நச்சினார்க்கினியர் உரை நெடுநல்வாடை - பாநலன் - கோதண்டபாணிப் பிள்ளை பட்டினப்பாலை - நச்சினார்க்கினியர் உரை பட்டினப்பாலை - ஆராய்ச்சி - மறைமலையடிகள் பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா.இராசமாணிக்கனார் பதிற்றுப்பத்து - ஔவை சு.துரைசாமி பதிற்றுப்பத்து - பழைய உரை பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள் - கழகம் பரிபாடல் - பரிமேலழகர் உரை பழந்தமிழ் - சி.இலக்குவனார் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை - மு.வரதராசனார் பாணர் கைவழி - ஆ.அ.வரகுணபாண்டியன் பாண்டியர் செப்பேடுகள் பத்து - தமிழ் வளர்ச்சிக் கழகம் பிற்காலச் சோழர் வரலாறு (முதலிரு பாகங்கள்) - டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் புறநானூறு - பழைய உரை புறநானூறு - ஔவை சு.துரைசாமி புறநானூற்றுச் சொற்பொழிவுகள் - கழகம் புறப்பொருள் வெண்பாமாலை - உ.வே.சாமிநாதையர் குறிப்புரை பெரும்பாணாற்றுப்படை - நச்சினார்க்கினியர் உரை பொருநர் ஆற்றுப்படை - நச்சினார்க்கினியர் உரை மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - கழகம் மதுரைக் காஞ்சி - நச்சினார்க்கினியர் உரை மலைபடுகடாம் - நச்சினார்க்கினியர் உரை முதல்தாய்மொழி - பாவாணர் முதற்குறள் உவமை - கோதண்டபாணிப் பிள்ளை முதற்குலோத்துங்க சோழன் - டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் முருகன் அல்லது அழகு - திரு.வி.கலியாணசுந்தரனார் முல்லைப்பாட்டு - நச்சினாக்கினியர் உரை முல்லைப்பாட்டு - மறைமலையடிகள் ஆராய்ச்சியுரை மொழிநூல் - கார்த்திகேய முதலியார் மொழிநூல் - மு.வரதராசனார் மொழியியல் - இரா.சீனிவாசன் மொழி வரலாறு - மு.வரதராசனார் யாப்பருங்கலக் காரிகை - பழைய உரை யாப்பருங்கலம் - விருத்தியுரை வடசொற்றமிழ் அகரவரிசை - நீலாம்பிகை அம்மையார் வடமொழி வரலாறு - பாவாணர் வள்ளுவர் வகுத்த அரசியல் - சி.இலக்குவனார் வள்ளுவர் வழங்கும் மொழிநூல் - வீ.ப.கா.சுந்தரம் வேளாளர் நாகரிகம் - மறைமலையடிகள் குறுக்க விளக்கம் அகம் - அகநானூறு இறையனார் - இறையனார் களவியல் ஐங்குறு. - ஐங்குறுநூறு கலி. - கலித்தொகை குறிஞ்சி - குறிஞ்சிப்பாட்டு குறுந். - குறுந்தொகை சிந். - சிந்தாமணி சிலப். - சிலப்பதிகாரம் சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை சொல்.கட் - சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தண்டி - தண்டியலங்காரம் திருக் - திருக்குறள் திருக்கோ - திருக்கோவையார் திருமுருகு - திருமுருகாற்றுப்படை திருவிளை - திருவிளையாடற்புராணம் தொல். - தொல்காப்பியம் நற் - நற்றிணை நன் - நன்னூல் நாலடி - நாலடியார் நெடுநல் - நெடுநல்வாடை ப.உ. - பழைய உரை பட் - பட்டினப்பாலை பட்.ஆரா. - பட்டினப்பாலை ஆராய்ச்சி பத்து - பத்துப்பாட்டு பதிற்று - பதிற்றுப்பத்து பரி - பரிபாடல் புறம் - புறநானூறு புறப்பொருள் - புறப்பொருள் வெண்பாமலை பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை பொருநர் - பொருநர் ஆற்றுப்படை மதுரைக் - மதுரைக்காஞ்சி மலைபடு - மலைபடுகடாம் முல்லை - முல்லைப்பாட்டு முல்லை.ஆரா - முல்லைப்பாட்டு ஆராய்ச்சி யா.வி. - யாப்பருங்கல விருத்தி வி.உ. - விளக்க உரை உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் அ அஃறிணை : உயர்திணை அல்லாத திணை அஃறிணை; இழிதிணை என்றவாறு. இது பண்புத் தொகை. (அல்+திணை) (நன். 260. மயிலை.) அக்காள் : உடன் பிறந்தோருள் வயதால் மூத்த பெண்ணை அக்காள் என்பது மரபு. துயரக் கடவுளாம் மூதேவி, செல்வக் கடவுளாம் சீதேவிக்கு மூத்தவள் என்ற புராணக் கதை பரவிய பிறகு அக்காள் என்றால் மூதேவி என்னும் பொருளைத் தரத் தொடங்கிவிட்டது. அவன் வீட்டில் அக்காள் குடியிருக்கி றாள் என்றால் அவன் வறியன் என்று பொருள். அக்காள் என்ற சொல் இழிபொருளைப் பெற்று விட்டது. தமக்கை என்ற சொல் அதன் இடத்தைப் பற்றிக் கொண்டது. (பழந்தமிழ். 71) அகத்திணை : அகத்திணை என்ற தொடரில் அகம் என்னும் சொல்லுக்கு இயல்பான பொருள் வீடு என்பது. அகம் புகல் மரபின் வாயில்கள் என்பது தொல்காப்பியம் (1097). வீடு அல்லது குடும்பம் ஆகும் காதலே, அகத்திணை நுதலுவது. அகத்திணை மாந்தரெல்லாம் ஒரு வீட்டுறுப்பினர்களே. ஆத லின் அகம் என்னும் சொல் வீடு என்பதனையே முதலாவதாகக் குறிக்கும். எனினும் இல், மனை, வீடு என்ற பல சொற்கள் இருக்கவும் இச் சொல்லைக் குறியீடாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? அகத்திணை சங்கப் படைப்பு... சங்கத்தார் தாம் வடித்த புதிய காதல் இலக்கியத்தின் கூறுகள் எல்லாம் தோன்றத் தக்கதொரு சொல்லை ஆராய்ந்தனர். காதலர் தம் உள்ளப் புணர்ச்சி அவ்விலக்கியத்தின் உயிர்க்கூறு. உள்ளம் என்னும் பொருளும் அகச்சொல்லுக்கு இயல்பாக இருத்தலின் அகத்திணை என்று இலக்கியக் குறியீடு வைத்தனர். (தமிழ்க் காதல். 327) அகத்தியம் : தலைக் கழகத்து இலக்கணமாய் இருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழு இலக்கணமாய் இருந்ததினால் தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கே இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வரவேண்டுமாயின். அவரைத் தாங்கள் அகத்தியமாய் வர வேண்டும் என்று அழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. (சொல். கட். 15.) அகநாழிகை : கர்ப்பக் கிரகத்திற்கு, அகநாழிகை என்றும் உண்ணாழி (உள்+நாழி) என்றும் தமிழ்ப்பெயர் உண்டு. அக` நாழிகை என்றும் திருவுண்ணாழிகை என்றும் சாசனங் களில் இச்சொல் காணப்படுகிறது. (துளுமொழியும் தமிழும். கட்.) அகப்பட்டி : அகப்பட்டி, தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டி மாடு. பட்டி மாடு போற் கட்டுக்காவலின்றித் திரிபவனைப் பட்டி என்றது உவம ஆகு பெயர். நோதக்க செய்யும் சிறுபட்டி (திருக்குறள் மரபுரை. 1074.) அகம் : அகம் என்பது உயிர்களின் உணர்ச்சி இன்பம்; உயிர்கள் என்றால் ஆண் பெண் இருவகையே. அவ்விருவகை உயிர்களின் உள்ளத்துணர்ச்சி புறங்கூற இயலாத அளவுக்கு நுட்பமாய் அகத்தளவில் நிகழ்வதால் அது மட்டும் அவ்வியல்பு கருதி அகம் என வகுத்துக் கொள்ளப்பட்டது. (திருக்குறள் அறம். 29.) அகம்படியர் : நம்பூதிரி மணமகன், மணமகள் இல்லத் துக்கு முதன் முதல் செல்லும் பொழுது போர்க் கருவிகள் தாங்கிய விரர்கள் மணமகனுக்கு முன் செல்வர். அவர்கள் மணமகனுக்கு மெய்க்காவலர். இம் மெய்க்காவலர் அந்நாட்டில் அகம்படியர் என்று அழைக்கப் பெறுவர். (தமிழ்மொழிச் செல்வம். 87.) அகரம் : (1) அகரம் தனியே நிற்றலானும், பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல. அது அ என்ற வழியும், மூவினங்களில் ஏறினவழியும் ஓசை வேறுபட்ட வாற்றான் உணர்க. (தொல். எழுத்து. 8. நச்.) (2) மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறார் ஆயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாக லானும் என்று உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. (தொல். எழுத்து. 46. நச்.) (3) அகரம் தானே நடந்தும், நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒரு முதலாயும், அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற் பொருட்கும் அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் அகரம் முன் வைக்கப்பட்டது. (நன். 72. மயிலை.) (4) அகரம் மருத நிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருத நிலத்தில் தங்கினதினாலேயே அவர் குடி யிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது. அக்கிர அகரம் = அக் கிராகரம். அக்கிரம் - நுனி, முதல், தலைமை. (ஒப்பியன் மொழிநூல். 146-147.) அகலவுரை : சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய் தற்குக் கடாவிடை உள்ளுறுத்து உரைக்கும் உரையெல்லாம் அகலவுரை எனக் கொள்க. (இறையனார். 1. நக்.) அகவர் : அழைத்துப் பாடுவோர். அகவல் - அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர். (மதுரைக் காஞ்சி. 223. நச்.) அகவல் : அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதிய வாறெல்லாம் வரையாது சொல்வதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கின் உள்ளார் அழைத்தல் என்றும் சொல்லுப; அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும்; அவை: தச்சுவினைமாக்கள் கண்ணும், களம்பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங்கழங்கு மிட்டு உரைப் பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசல் இசைப்பார்கண்ணும் கேட்கப்படும். கழங்கிட்டு உரைப்பார் அங்ஙனமே வழக்கின் உள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. (தொல். பொருள். 393. பேரா.) அகழ் : அகழப்படுதலின் அகழ் என்றது ஆகுபெயர். (பெரும்பாண். 107-8. நச்.) அங்கதம் : அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றால் கூறுக என்பான் இதுகூறினான்... வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும்... வசைப் பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பு அங்கதம். மாற்றரசனையும், அவன் இளங்கோவினையும் வசை கூறுமாறு போலாது தம் கோனையும் அவன் இளங்கோனையும் வசை கூறுங்கால் தாங்கி உரைப்பர்; அவை போலப் பழிப்பன என்றவாறு. (தொல். பொருள். 437-8. பேரா.) அங்காடி பாரித்தல் : ஒரு கடைக்காரன் பேரூதியங் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு வந்து நிறைத்தலுக்கு அங்காடி பாரித்தல் என்று பெயர். அவனைப் போலப் பேராசையினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவதும் அங்காடி பாரித்தல் எனப்படும். (சொல். கட். 12.) அச்சம் : (1) அச்சம் என்பது குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம். (இறையனார். 30. நக்.) (2) அச்சம் என்பது பெண்மையின் தான் காணப் படாததோர் பொருள் கண்ட இடத்து அஞ்சுவது. (இறையனார். 2. நக்.) அச்சாணி : அச்சு-உருள் கோத்த மரம்; ஆணி - உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவால் சிறிதாய் இருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. (திருக். 667. பரி.) அச்சிரம் : அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக் காலம் என்பது பொருள்... இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில் வழங்கி வருகிறது. வாயில் உண்டாகிற ஒருவித புண்ணுக்கு அச்சிரம் என்று பெயர் கூறப்படுகிறது... பனிக் காலத்தைக் குறிக்கும் அச்சிரம் என்னும் சொல் பனிக் காலத்தில் உண்டாகிய வாய்ப்புண் நோய்க்குப் பெயராயிற்று என்று தோன்றுகிறது. (அஞ்சிறைத்தும்பி. 130-131) அசுணமா : இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) அசும்பு : சிறு திவலை. (திருக்கோ. 149. பேரா.) அசை : எழுத்து, அசைத்து இசை கோடலின் அசையே. (யா.வி. 1.) அசைவு : அசைவு என்பது பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். (தொல். பொருள். 253. பேரா.) அட்டில் : அடுக்களை, வீட்டில் அடுப்புள்ள இடம்; சமையலறை, சமைப்பதற்கென்று தனியாயுள்ள அறை; அட்டில், சமையலுக்குத் தனியாயுள்ள சிறுவீடு; ஆக்குப்புரை, விழாப் பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம்; மடைப்பள்ளி, கோயிலை அல்லது மடத்தைச் சேர்ந்த சமையல் வீடு. (சொல். கட். 50.) அட்டைக்குழி : அட்டைக்குழி, இருளுலகம், அளறு என நரகிற்குப் பெயரிருப்பதால், அட்டையிட்ட குழியிலும், இருட் டறையிலும், உளையிலும், பண்டைக் காலத்தில் குற்றவாளிகள் தள்ளப்பட்டனர் என்பது வெளியாகும். (சொல். கட். 24.) அடக்கம் : (1) அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 250. பேரா.) (2) அடக்கமாவது, பிறர் தன்னை வியந்து உரைக்கத்தான் அடங்கி இருத்தல். (நாலடி. 170. தருமர்.) அடக்கியல் : உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கும் இயல்பிற்று ஆகலின் அடக்கியல். (தொல். பொருள். 444. பேரா.) அடங்குதல் : மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். (திருக். 130. பரி.) அடார் : கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து உள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல் வீழ்ந்து கொல்லும் பொறி. (நற்றிணை. 119. அ. நாராயண.) அடி : (1) தளை அடுத்து நடத்தலின் அடியே. (யா.வி.1.) (2) அடி என்பது, சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு. (தொல். பொருள். 313. பேரா.) (3) தாள்; நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி; தண்டு; கீரை வாழை முதலியவற்றின் அடி; கோல்; நெட்டி மிளகாய்ச் செடி முதலிய வற்றின் அடி; தூறு; குத்துச்செடி புதர் முதலியவற்றின் அடி; தட்டு; அல்லது தட்டை கம்பு சோளம் முதலிய வற்றின் அடி; கழி; கரும்பின் அடி; கழை, மூங்கிலின் அடி; அடி; புளி வேம்பு முதலியவற்றின் அடி. (சொல். கட். 65) அடிமை : அடிமை என்னும் பண்புச் சொல் ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக் கின்றது. தொண்டு செய்யும் தன்மையில் இருந்து பின் உலக வழக்கில் தொண்டு செய்யும் ஆள் என்னும் பொருள்பட அது வந்தது. வேலையாள், தொண்டன், தொழும்பன், பணியாளன் என்பன ஒருபொருட் சொற்கள். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 128.) அடை : அடை என்றால் இலை என்பது பொருள். இலைகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப்பட்ட அடை என்னும் சொல் வெற்றிலைக்குச் சிறப்புப் பெயராகவும் வழங்கப் பட்டது. அடை (வெற்றிலை) அருந்தும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வெறும் வெற்றிலையை மட்டும் உண்பது வழக்கம் இல்லை. வெற்றிலையாகிய அடையோடு கமுகின் காயாகிய பாக்கையும் சேர்த்து உண்பது வழக்க மல்லவா! ஆகவே பாக்குக்கு அடைக்காய் என்று பெயர் உண்டாயிற்று. அடைக்காய் என்றால் அடையுடன் சேர்த்து உண்ணப்படும் காய் என்பது பொருள். கோவலன் உணவு கொண்ட பிறகு கண்ணகி வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் என்பதை அம்மென் திரைய லொடு அடைக்காய் கொடுத் தாள் என்று சிலப்பதிகாரம் (16:55) கூறுகிறது. திரையல் - வெற்றிலைச் சுருள். அடைக்காய் - பாக்கு. வெற்றிலை பாக்கு வைக்கும் பைக்கு அடைப்பை என்பது பெயர். தமனிய அடைப்பை. (சிலப். 14: 128) (அடைப்பை வைத்திருந்தவன் அடைப்பைக்காரன் என்று கூறப் பெற்றான்) (அஞ்சிறைத்தும்பி. 134-136) அடைநிலை : அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிறஉறுப்புக்களை அடைந்தன்றி வாராது. அது தனிநின்று சீராதலின் தனிச் சொல் எனவும் படும். (தொல். பொருள். 444. பேரா.) அண்ணல் : பெருமையிற் சிறந்தோன். இச்சொல் விளி யேற்றக்கால் அண்ணால் என அயல் நீண்டு பின்னர்க் கடைக் குறைந்து அண்ணா என நின்றது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 397.) அணங்கு : (1) அணங் கென்பன, பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும், நிரயப் பாலரும், பிறரும் அணங்கு தல் தொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும், உருமிசைத் தொடக்கத்தனவும் எனப்படும். (தொல். பொருள். 256. பேரா) (2) அணங்கு - பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி - தன்பால் தோன்றும் நோய். (குறுந்தொகை. 136. உ.வே.சா.) அணல் : மோவாயின் கீழுள்ள தாடி. (நற்றிணை. 179. அ. நாராயண.) அணி : அணியப் பெறும் காரணம் பற்றி வந்த பெயர். இது சட்டை அணிதல், ஆடை அணிதல் போல எளிய முறையில் மாலைபோல அணியப் பெறும் கழுத்தணிகளைக் குறிக்க வந்த தாகலாம்; பின்னர்க் காலப் போக்கில் இவ்வொரு குறிப்பை ஒழித்து எல்லா நகைகட்கும் பொதுவான பெயராய் அமைந் திருக்கலாம். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 526.) அணி, ஆணி : இச் சொற்கள் வடமொழியில் வண்டியின் அச்சாணியைக் குறிக்கும். வடமொழி அறிஞர்கள் அண் என்ப தனைப் பகுதி என்பர். அப்பகுதிக்கு ஒலித்தல் என்பது பொரு ளாகும். திராவிட மொழிகளில் அண் என்பது சேர், தொடு, கட்டு, அருகே, மேல், அணிந்து கொள் (அணை, அணி, அணுகு, அணவு) என்னும் பொருளில் வழங்குகின்றது. எனவே ஆணியைத் திராவிடச் சொல்லாகக் கொள்வர் கால்டுவெல். (மு.வ.மொழிவரலாறு. 112-3.) அந்தகன் : அந்தகன் - கூற்றுவன். அந்தத்தைச் செய்பவன் என்பது பொருள். (கல்லாடம். 27. பெருமழை.) அந்தணர் : (1) அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார். (மதுரைக் காஞ்சி. 474. நச்.) (2) அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத் தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு. (கலி. கடவுள். நச்.) (3) அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின் அஃது அவ் அருளுடையார் மேல் அன்றிச் செல்லாது என்பது கருத்து. (திருக். 30. பரி.) (4) அந்தணர் என்னுஞ் சொல் அழகிய குளிர்ந்த அருளை உடையவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பு செய்தல். (திருக்குறள். மரபுரை. 30.) (5) அம் - அழகு. தண் - குளிர்ச்சி. குளிர்ச்சியில் அழகிய குளிர்ச்சியாவது அருள். எனவே அந்தணர் என்பதற்கு அருள் ஒழுக்கமுடையார் என்பது இனிய செம்பொருள். (கலி. கடவுள். உரைவிளக்கம். இளவழ.) (6) அந்தணர் என்ற சொல்லைத் திருவள்ளுவர் இல்லறத் தாரினும் துறவறத்தாரினும் எவ்வளவோ மேம்பட்ட மதிப் புடைய மேலோரைக் குறிக்கவே வழங்குகிறார் என்பது தெளிவு. ஏனெனில் அவர் கடவுளையே அந்தணன் என்று சுட்டத் தயங்கவில்லை. (குறள் : 8) இல்லறத்தாராகவோ, துறவறத் தாராகவோ வாழும் நிலையுடைய எவரையும், எச்சாதியினரை யும் எந்தப் பொது நிலை சிறப்பு நிலை மனிதரையும்கூட அது குறிக்க முடியாது என்று கூறத் தேவையில்லை. கிட்டத் தட்டக் கடவுள் நிலையையே சென்று எட்டிக் கடவுள் பண்பையே அடைந்து விட்ட உச்ச உயர்நிலை வாய்ந்த இனத்தலைவர் களையே அது குறிப்பது ஆகும். நோன்பு நிலையும் தவநிலையும் துறவு நிலையும் தாண்டிக் கடவுளின் அன்பருள் திருவுருவேயாகி எவ்வுயிர்க்கும் தாயாகி நின்ற தண்ணளிப் பண்புடையாரே அந்தணர் (குறள் : 30) என்று திருவள்ளுவர் இச்சொல்லுக்குத் தாமே விளக்கம் தருகிறார். அவர் இத்தகைய உயர் பொருள் குறித்து வழங்கிய சொல்லை வேறு பொருளில் வழங்கும் உரிமை எவருக்கும் கிடையாது. (திருக்குறள் மணிவிளக்கவுரை. 80.) அந்தணன் : அந்தணன் என்பதை அந்தம் + அணன் என்று பிரித்து மறை முடிபுகளைப் பொருத்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழியாளர். அம்+தன்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங் கூட அணவு என்னுஞ் சொல் அண் என்னும் வேரிற் பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின் அந்தணன் என்பது இருபிறப்பி (Hybrid) யாகும். அந்தணன் என்ற பெயர் அந்தணாளன் என்ற வடிவிலும் வழங்கும். (ஒப்பியன் மொழிநூல். முன்னுரை. 34.) அந்தி : இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே காலவகையில் அந்தி எனப்பட்டது. காலை யில் நிகழ்வது காலை அந்தி என்றும், மாலையில் நிகழ்வது மாலை அந்தி என்றும் சொல்லப் பெறும். காலை அந்தியும் மாலை அந்தியும் (புறம். 34.) காலை அந்திக்கு முன்னந்தி வெள்ளந்தி என்றும் மாலை அந்திக்குப் பின்னந்தி செவ்வந்தி என்றும் பெயருண்டு. அந்தி என்னும் பொதுச் சொல் சிறப்பாக ஆளப் பெறும் போது மாலை அந்தியையே குறிக்குமென்பது, அந்திக் கடை, அந்திக் காப்பு, அந்தி மல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல் வழக்கால் அறியப் பெறும். இடவகையில் அந்தி என்பது முத்தெருக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும். அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் (சிலப். 14 : 213.) பிற்காலத்தில் அந்தி என்னும் சொல் சகரமெய் முன்னிடப் பெற்றுச் சந்தி என்றாயிற்று........... சந்து - பொருத்து. தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். இருவருக்குஞ் சந்து சொல்ல (சிலப். 8. 101. அடியார்.) சந்து - சந்தை: பல கடைகள் கூடும் இடம். (வடமொழி வரலாறு. 70-71.) அம்பணம் : அம்பணம் - மரக்கால். ஓர் அளவு கருவி. அம்பணத் தன்ன ஆமை என்பதால் பண்டைக் காலத்தே மரக்கால் யாமை போன்ற உருவமுடையதாயிருந்தது என்றுணர லாம். இதனைப் பறைக் கட் பராரையர் அம்பண அளவையர் எனவரும் சிலப்பதிகாரத்தினாலும் (14. 209-10) இதற்கு அரும்பத உரைகாரர், பறைக்கட் பராரை அம்பணம் என்றது பட்ட மணிந்த வாயையும், பரிய அரையையும் உடைய அம்பண அளவை; ஆவது, அளக்கும் பறை முதலியன என்று கூறும் விளக்கத்தானும் அடியார்க்கு நல்லார் தரகர் அளக்கும் மரக்கால் என்று உரை கூறுவதானும் அறிக. (ஐங்குறு. 43. விளக்கம். பெருமழை.) அம்பலம் : அம்பலம் - பலரும் கூத்துக் காணும் இடம்; அரங்கம் - நாடகம் ஆடும் இடம். (சீவக. 2112.நச்.) அம்பல் : (1) பரவாத களவு; என்னை? அம்பலும் அலரும் களவு (இறையனார் அகப்பொருள். 22) என்றார் ஆகலின். (திருக்கோ. 180. பேரா.) (2) ஒரு குமரியின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் எனவும், வெளிப் படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும். (தமிழ்க்காதல். 71.) அம்பல் அலர் :(1) அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல், அலர் என்பது சொல் நிகழ்தல்; அம்பல் என்பது சொல் நிகழ்தல், அலர் என்பது இல் அறிதல்; அம்பல் என்பது இல் அறிதல், அலர் என்பது அயல் அறிதல்; அம்பல் என்பது அயல் அறிதல், அலர் என்பது சேரி அறிதல்; அம்பல் என்பது சேரி அழிதல் அலர் என்பது ஊர் அறிதல்; அம்பல் என்பது ஊர் அறிதல், அலர் என்பது நாடு அறிதல்; அம்பல் என்பது நாடு அறிதல், அலர் என்பது தேசம் அறிதல்; (இறையனார்.22. நக்.) (2) ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப் படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் /அரும்பு; அலர் / விரிந்த மலர். (சொல். கட். 8.) அம்போதரங்கம் : நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம். (தொல். பொருள். 452 பேரா.) அம்மாயி : அம்மை (தாய்)யின் உடன் பிறந்தவன் அம்மான் எனப்படுதல் வழக்கம். அம்மான் என்பதற்கு ஏற்ற பெண் பாற்சொல் வழக்கில் இல்லை. ஆயின் மலையாளத்தில் இச் சொல் இன்றளவும் வழக்கில் இருக்கின்றது. அங்குத் தாய் மாமன் மனைவி அம்மாயி என்று அழைக்கப்படுகிறாள். (தமிழ்மொழிச் செல்வம். 89.) அமரர் : (1) அமரர் என்பார் அடங்கியவர். அடக்க முடையவரை அமரிக்கை உள்ளவர் என்ப. (கலி. 1. உரைவிளக்கம். இளவழ.) (2) அமரர் என்பது அமர் என்பதன் அடியாகப் பிறந்த குறிப்பு வினைப் பெயர். அமர் என்பது போட்டி - போர் எனும் பொருளில் வரும். அதனால் அமரர் என்பதும் வீரர் அல்லது பொருதுவோர் எனப் பொருள்படல் இயல்பாம். (தொல். பொருள். புறத்திணை. 26. ச.சோ.) அமரன் : அமரினால் தேவர் உலகை அடைந்தவன். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 347) அமிழ்தம் : (1) எல்லாரையும் இன்பத்தில் அமிழ்த்தலின் அமிழ்தம். (சாமி வேலாயுதனார்) (திருக்குறள். மணிவிளக்கவுரை ஐ. 408.) (2) அமிழ்தம் மரண நோயைத் தீர்த்தலினாலே மருந்து எனவும், உண்ணப்படுதலின் உணவு எனவும், இன்சுவைத்தாதலின் இனியது எனவும் கொள்ளப்படுகின்றது. இம் மூவகைப் பண்பு களும் அதற்குளவாதல், விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள் 32) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (குறள் 64) என்னும் குறள்களிலே நன்குணரக் கிடக்கின்றது. அமிழ்தம் என்னும் சொல்லொடு ஒற்றுமையுடைய அவிழ்தம், அவிழ், தமிழ் என்னும் தூய தமிழ்ச் சொற்கள் மூன்றும் அம் முப் பண்புகளையும் முறையே உணர்த்துவனவாம். நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக்கட்டை அகற்றுவது அதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அதாவது மருந்து. மகர மும் வகரமும் ஒத்து நடப்பதுண்டு, மிஞ்சுதல் - விஞ்சுதல், மேய்தல் - வேய்தல், மீறுதல் - வீறுதல் என்பவற்றிற்போல; அவ்வாறே ஈண்டும் அவிழ்தம், அமிழ்தம் என்று ஆயது. இனி, அவிழ் என்னும் சொல் உணவுப் பொருளாகிய சோற்றைக் குறித்தல் குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி (மலைபடு. 183) என்னும் பத்துப் பாட்டடியிலும் பிறாண்டும் காணலாகும். இச்சொல் வகரம் மகரமாகி விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. அவிழ்தம் என்பதின் திரிபாகிய அமுது என்பது உணவைக் குறித்தல் பெருவரவிற்றாதலும் உணர்க. இனி, தமிழ் என்பது இனிமைப் பொருட்டாதல் சிந்தாமணி முதலிய நூல்களிற் காணலாம். மலர் - அலர், தாய் - ஆய், புலர் - உலர், என்பவற்றிற்போல மொழி முதல் ஒற்றொழிந்து தமிழ்ச் சொற்கள் உண்டாதலால் இனிமை என்னும் பொருட்டாய தமிழ்மொழி முதல் ஒற்றழிந்து அமிழ் என்றாய் விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. இவ்வாறு அமிழ்தம் என்னும் சொல் தனக்குரிய முப்பண்புகளையும் தமிழ்ச் சொற்களால் தானே காட்டி நின்றது. (திருக்குறள். தண்ட. 11.) அமிழ்து : (1) அமிழ்து என்றது நீர். (பதிற்று. 17. ப. உ.) (2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதி பயத்தல் உடைமையான். (திருக்கோ. 5. பேரா.) (3) அவிழ் - அவிழ்து - அவிழ்து - அமுது = சோறு. மருமம் - மம்மம் - அம்மம் - அம்முது - அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும் சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி அமிழ்து என்னும் வடிவங் கொள்ளும். (திருக்குறள் மரபுரை. உரையெச்சம். 64.) அமை : அமை என்பது மூங்கிலின் மறு பெயராயினும் அதனுள் ஒரு சாதி என்று அறியப்படுகிறது. அமையொடு வேய்கலாம் வெற்ப என்று பழமொழி நானூறு பேசுகிறது. அதன் பழைய உரை அமை என்பது முள்ளில்லா மூங்கில் என்று அறிவிக்கிறது. (திருக்குறள் அழகும் அமைப்பும். 97.) அமைச்சன் : அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை+சு=அமைச்சு. ஒ.நோ: விழை - விழைச்சு. (வடமொழி வரலாறு. 75.) அயிரை : அயிர் - நுண் மணல். அயிரை நீர்க்குள் அடி மட்டத்திலுள்ள மணலின் அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒரு வகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தான் இருக்கும். (ஒப்பியன் மொழி நூல். 40.) அரண் : அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ் சூழ்ந்து இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்று அமைந்த வாயிற் கோபுரமும் பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். (தொல். புறத். 65. நச்.) அரமங்கையர் : தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். (திருக்கோ. 371. பேரா.) அரவணைத்தல் : பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தழுவும் தொழிலில் சிறந்தவை. இதனால் முதலாவது ஒருவரை ஒருவர் உடலால் கட்டித் தழுவுவதையும் பின்னர் உள்ளத்தால் ஒன்றித் தழுவுவதையும் அன்பாகப் பேணிக் காத்தலையும் குறிக்க அரவணைத்தல் என்னும் வழக்கு எழுந்தது. அரவு - பாம்பு, அணைத்தல், தழுவுதல். மாசுண மகிழ்ச்சி என்றார் திருத்தக்க தேவரும். (மாசுணம் - பாம்பு) (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். 6.) அரற்று : அரற்று என்பது அழுகை அன்றிப் பலவும் சொல்லித் தன் குறை கூறுதல். அது காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல் போல வழக்கினுள்ளோர் கூறுவன. (தொல். பொருள். 260. பேரா.) அரன் : (1) அரன் தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 92.) (2) அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. தமிழில் இருந்து வட மொழிக்கட்சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 390.) அராகம் : (1) அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்; பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டுந்துணைச் செய்வதாகிய பொன்னினை அராகித்தது என்ப ஆகலின் அதுவும் ஒப்பின் ஆகிய பெயராயிற்று. என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின். (தொல். பொருள். 464. பேரா.) (2) அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். அரங்கன் என்பது ரங்கன் இரங்கன் என்று வழங்கினாற் போல அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்ற தென்க. (ஒப்பியன் மொழிநூல். 110.) அரி : (கள்) பன்னாடையால் அரிக்கப்பட்டது. (அகம். 157. வேங்கட விளக்கு.) அரிசி : பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்று மதி செய்த கிரேக்கர்கள் அதனை அருஸா என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயி (rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழைமை வாய்ந்ததாயினும் பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் அரி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை அரி என்றே குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பதே அரிசியின் ஆதிவடிவம் போலும். (தமிழ் விருந்து. 96.) அரிதல் : அரிதல் - வெட்டுதல் அல்லது அறுத்தல். வாழைக்காய் அரிந்தாள்; பழத்தை அரிந்து கொடு எனுஞ் சொற்றொடர்களில் அப்பொருள் தெற்றென நிற்றல் காண்க. செல்லரித்த ஏடு; பூச்சி அரித்த பயிர்; அரிசி அரித்தல் (கல் பிரித்து ஒழுக்குதல்) அரிக்குதல் (வருத்துதல்) என்பனவும் அஃதே உணர்த்தும். ஆதலின் அரிதல், அறுத்தல் ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களாம் என்பது பெற்றாம். நெல் புல் முதலியவற்றை அறுக்கும் வாளை அரிவாள் என்பதும், அறுத்து ஒன்றாகத் திரட்டப்பட்ட நெற்கதிர்களை அரிகள் என்பதும் நாம் மேலே விளக்க முயன்றதைத் தெளிவாக்கு கின்றதன்றோ! அங்ஙனமாயின் ஒரே அடியினின்றும் பிறந்த சொற்கள். (அரி, அறி) நாளாவட்டத்தில் தோற்றப் பொருளி னின்றும் விரிந்த வேற்றுமை உடையனவாய் வழங்கத் தலைப் பட்டபோது பொருளுக்கு இடையூறு நேராவண்ணம் தமிழ்ப் பெரியார் அச்சொற்களை ஏற்றவாறு திருத்தி அமைத்திருக்க வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி - சிலம்பு. 2: 155 - 156.) அரிதாள் : இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரி தாள். கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள். தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள். முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள். (சொல். கட். 65.) அரிமாநோக்கு : அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்கு மிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது. (நன். 18. மயிலை.) (இறையனார். 4. நக்.) அரும்பு : அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது: மொட்டு, அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரிதாயும் மொட்டையாயுமிருப்பது; முகை, தாமரை சதுரக் கள்ளி முதலியவற்றின் அரும்புபோல் பெரிதாயிருப்பது. (சொல். கட். 67.) அருள் : (1) தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள். (திருக். 757. பரி.) (2) அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித் தோன்றும் இரக்கம். (புறம். 5. ப.உ.) (தொல். பொருள். 53. நச்.) அருளுடைமை : (1) அருளுடைமையாவது யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரம் உடைமை. (திருக். அருளுடைமை. மணக்.) (2) அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. (திருக். அருளுடைமை. பரி.) அருவி : அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர் தமிழறிஞர். ஆர்த்தல் ஒலித்தல் என்னும் பொருட்டு. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3 : 310) அரையம் : அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை என்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப்பெற்ற அம்முச் சாரியையை இறுதி யாகக் கொண்டு வழங்குவதாயிற்று. பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும் (தொல். 284) என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை ஆவிரம் என நின்று ஆவாரம் என மருவிவிட்டது. (ஐங்குறு. 325. ஔவை சு.து.) அலக்கண் : அலக்கண் = கலங்கிய கண். துன்பத்துக்குக் காரணக் குறி - இலக்கணையால் வந்தது. அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம் உண்டுகந்த அம்மானை சுந்தரர்தேவாரம்.) (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 78) அலமரல் தெருமரல் உழலுதல் என்னுஞ் சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். (சொல். கட். 25.) அலை : அலை என்பது கோல் கொண்டு அலைத்தல் முதலாயின. (அலை - துன்புறுத்தல்.) (தொல். பொருள். 258. பேரா.) அவா : (1) அவா - கொடுத்த பொருள்மேல் ஆசை. (திருக். 35. ப. உ.) (2) வாயினால் பற்றுதல்போல் மனத்தினாற் பற்றும்ஆசை. (முதல் தாய்மொழி. 12.) (3) அ என்னும் எழுத்தை ஒலிப்பதற்குச் சிறிது வாய் திறக்க நேர்கிறது. பின்னும் பெருக வாய் திறக்கும் அளவுக்கு ஏற்ப ஆ என்னும் எழுத்து நீண்டு ஒலிக்கிறது. அ, ஆ என்னும் இரண்டெழுத்துக்களும் சேர்ந்தால் போதும், அவா என்னும் ஓரசைச் சிறு சொல் உருவாகிவிடும். பெருக வாயைத் திறத்தல், திறந்த வாயை மூடாதிருத்தல் என்னும் செய்கைகளைக் கொண்டதாய் அவா என்னும் சொல் பிறக்கின்றது. நிறைவு கொள்ளாத இயல்பை ஆ என வாய் திறத்தலாகக் கூறுவது வழக்கம். செய்கையும் கருத்தும் சொற்பிறப்பும் வடிவும் எல்லாம் ஒருங்கு இழைந்ததாய்த் தோற்றுகிறது அவா என்னுந் தமிழ்ச் சொல். (திருக்குறள் அறம். 41.) அவித்தல் : அவித்தல் என்பது அழித்தல் அன்று. (புலன் களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள் வதையே அது குறிக்கும். காய்கறிகளை நாம் அவிப்பது அவற்றை அழிப்பதற்கோ, சுட்டுக் கருக்குவதற்கோ சுவை கெடுப்பதற்கோ அன்று. அவற்றின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவதற்கேயாம். (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 310) அவிநயம் : (1) கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து. (சிலம்பு. 3 : 12. அடியார்.) (2) அவிநயமாவது, கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகொட்டியவிநயிப்பது. (சீவக. 6722. நச்.) அவை : (1) அவை என்பது அவற்றினும் (முன்னின்ற வற்றினும்) சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா.) (2) அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம். அமை = அவை. ஒ. நோ : அம்மை - அவ்வை. குமி - குவி. (வடமொழி வரலாறு. 80.) அவை அடக்கியல் : அவையை வாழ்த்துதல். அவை அடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக் கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதல் ஆயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது, அவையத்தார் அடங்குமாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல். (தொல். பொருள். 423. பேரா.) அழகு : அழகு என்ற பொருளில் அணி என்ற சொல் அழகு, அந்தம், அம், ஏர், வனப்பு, மாதர், மயல் முதலிய பல சொற் களுடன் பொருள் தொடர்புடையது. இவற்றுள் அம், அந்தம், ஏர் ஆகியவை கணநேரக் கவர்ச்சி மட்டுமே தருவது. கணநேரக் கவர்ச்சியைப் புதிது புதிதாகத் தருவது. மாதர் என்பது கவர்ச்சி யுடன் செயலற்ற மயக்கம் தருவது. மயல் என்பதும் அது. அழகு என்பது பலருக்குக் கணக் கவர்ச்சியும் சிலர்க்கு நிலைக் கவர்ச்சி யும், ஒருவர்க்கே நிலையான கவர்ச்சி எதிர் கவர்ச்சியும் தருவது. அழகு ஒன்றே சமுதாயங் கடந்த இனக்கவர்ச்சி என்பதை இது காட்டுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை III. 484.) அழல்தடம் : தீக்காய் கலம். (திருக்கோ. 202. பேரா.) அழுக்காறாமை : (1) அழுக்காறாமையாவது பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய்யாமை. (திருக்குறள் அழுக்காறாமை. மணக்.) (2) அழுக்காறாமையாவது பிறர் செல்வங்கண்டு இவ னுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே என்று சொல்லும் மன அழுக்கை விடுக என்றவாறு. (திருக். அழுக்காறாமை. பரிதி.) அழுக்காறு : (1) அறு என்பது வகு என்னும் பொருட்டு. வகுக்கப்பட்டது வழி. அறுக்கப்பட்டது ஆறு. ஆறு எனினும் வழி எனினும் ஒக்கும். அழுக்கான ஆற்றில் உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. (திருக். தண்ட. அதி. 17.) (2) அழுக்காறு என்பதை அழுக்கு வழி என்று பொதுவாகப் பொருள் செய்யத் தோன்றும். ஆனால் பேணாது அழுக்கறுப்பான் கொடுப்பது அழுக்கறுப்பான் அழுக்கற்றகன்றாரும் இல்லை என்னும் தொடர்களால் அழுக்கறு என்னும் பகுதி கொண்டது இச் சொல்லமைப்பு என்று தெரிகிறது. அழுக்கு அறு என்னும் இரு பகுதிகள் சேர்ந்து இரண்டும் ஒரு சொல்லாகி அழுக்கறு என வந்தது. அழுக்கறு என்பதற்கு அழுக்கடை எனவும், அழுக்காறு என்பதற்கு அழுக்கடைவு எனவும் அழுக்காறாமை என்பதற்கு அழுக்கடையாமை எனவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆறுதல் என்னுஞ் சொல் பொருந்தல், தங்கல், அடைதல் என்னும் பொருளும் உடையது. அற்றதோர் கோதை (சீவக. 226) என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையால் இதனை அறியலாம். அழுக்காறு என்பதற்கு அழுக்கு வழி என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு அழுக்கு வழிக் கொள்ளாமை என்று பொருள் செய்ய நேர்ந்து ஒரு சொல்லியல்பிலும் தன் வினைச் சிறப்பிலும் உரை அமையாமற் போகும். அழுக்காறு என்பதற்கு அழுக்கடைவு என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு அழுக் கடையாமை என்னும் நேர்ப் பொருள் கிடைக்கும். (திருக். அறம். 126-7.) அழுகை : அழுகை என்பது அவலம்; அஃது இருவகைப் படும். தானே அவலித்தலும், பிறர் அவலங் கண்டு அவலித்தலும் என. இவற்றுள் ஒன்று (பிறர் அவலங்கண்டு அவலித்தல்) கருணை எனவும், ஒன்று (தானே அவலித்தல்) அவலம் எனவும் படும். (தொல். பொருள். 251. பேரா.) அழைப்பு : பொருள் புணரா ஓசை. (திருக்கோ. 102. பேரா.) அள்ளல் : அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு. (நற்றிணை. 199. அ. நாராயண.) அளபெடை : கோட்டு நூறும் (சுண்ணாம்பு) மஞ்சளும் கூடிய வழிப்பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவு படா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்து அல்லது புலப்படா, எள்ளாட்டிய வழி யல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என உணர்க. (தொல். எழுத்து. 6. நச்.) அளவர் : அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுதல் காண்க. (சொல். கட். 22.) அளவி : துறவு, துறவி என நின்றாற் போல அளவு அளவி என நின்றது. (திருக்கோ. 10. பேரா.) அளறு : பண்டைத் தமிழர் சேற்றினை அளறு என்றே குறித்துள்ளனர். திருவள்ளுவர் வழக்கில் நரகம் அளறு என்றே குறிக்கப்படுகிறது. நரகம் என்ற சொற்கூட, சாக்கடைக் குழி என்று பொருள்படும், நரகல் என்பதை நினைவூட்டுவதேயாகும். (திருக்குறள். மணிவிளக்கவுரை. I; 839.) அளாவுதல் : அளாவுதல் என்ற சொல் இன்று ஒரு பொருள் மற்றொரு பொருளுடன், ஒருவர் இன்னொருவருடன் அல்லது ஒரு பண்பு இன்னொரு பண்புடன் சென்று தழுவுதல், முற்றிலும் பொருந்தி விரவுதல் என்ற பொருளே தருகிறது. இஃது இச் சொல்லின் ஒரு திசைத் தன்மையை நன்கு விளக்குகிறது. நீர் வளாவுதல் என்பது வெந்நீருடன் தண்ணீரைக் கலத்தல் குறிக்கும். வெந்நீரின் மிகுவெம்மை தண்ணீரின் மிகு தன்மையுடன் கலந்து வெம்மை வெந்நீரில் இருந்து தண்ணீருக்குச் செல்கிறது. தண்ணீரின் தண்மையும், வெந்நீரின் வெம்மையும் இரண்டும் இதனால் மட்டுப் பட்டு மட்டு வெம்மை அல்லது மட்டுத்தண்மை அஃதாவது இள வெதுவெதுப்பு அல்லது கதகதப்புத் தன்மை அடைகின்றன. வளாவுதல் இவ்வாறு ஒருதிசைச் செயலானாலும் அஃது உண்மையில் இருதிசைப் பண்பாய் விடுகிறது. அளாவுதல் என்பதன் மற்றொரு வடிவம் அதன் இரட்டுறு தொகையான அளவளாவுதல் ஆகும். இஃது இறுதிப் பண்பே, இருதிசைப் பண்பே காட்டுகிறது. ஏனெனில் அளவளாவுதல் எனபது ஒருவருடன் ஒருவர் உரையாடுதல், அன்புணர்ச்சி பரிமாறி நட்பாடல், பண்பில் கலந்து ஒரு வயப்படுதல் என்பதே ஆகும். அளைதல் என்ற சொல் அளாவுதல் என்பதனுடன் தொடர்பு உடைய சொல்லே ஆகும். மிகத் தொல் பழந்தமிழில் இரண்டும் ஒரே மூலச் சொல்லின் இருவடிவங்களாக மலர்ந்த சொற்களே என்னலாம். ஆயினும் அளைதல் பொருள்கள் விரவும்படி கருத்தற்ற குழந்தைச் செயலையும், அளாவுதல், வளாவுதல், அளவளாவுதல் என்பன படிப்படியாகப் பொருள் விரவுதலில் இருந்து பண்பு விரவுதல், உயிர்களும் மனிதர்களும் உடல் உளம் விரவக் கலந்து பண்பிற் கலத்தல் ஆகியவை குறித்தல் காணலாம். (குறள். மணிவிளக்கவுரை II; 391. அளிகுலம் : கழுநீர் மலரல்லது ஊதாமை உடையது. (திருக்கோ. 123: பேரா.) அறக்கண்: அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். அறக்கண் என்னத் தகும் அடிகள் (சுந்தரர் தேவாரம் - செந்தமிழ்ச் செல்வி. 2: 78) அறங்கூறு அவையம்: தருமாசனத்தார் வழக்குரைக்கும் இடம். (சிலம்பு. 5: 135 அடியார்.) அறங்கூறு அவையத்தார்: தலைநகரிலிருந்து வழக் காராய்ந்து நீதி செலுத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) அறம்: (1) அறமாவது, உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம். (நாலடி. அறன் வலியுறுத்தல். விளக்கவுரை). (2) அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள் படும். அம் மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்றார். (திருக்குறள் 34. தண்ட.) (3) அறம் என்பது எதுவாக இருந்தாலும், அஃது உலக வாழ்விற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு உகந்த தாக இருத்தல் வேண்டும். வாழ்விற்கு வளம் அளிப்பதாக அஃது அமைதல் வேண்டும். (குறள் கூறும் சட்டநெறி. 6.) (4) அறு + அம்: அறுக்கப்பட்டது; மனுமுதலிய நூல் களால் இன்னன செய்க இன்னன தவிர்க என வரையறுத்துக் கூறப்பட்டமைபற்றி அறம் என்பது அங்ஙனம் அறுத்துரைக்கப் பட்ட தருமத்திற்காயிற்று. ஈண்டு அம் செயப்படுபொருண்மை விகுதி. தொழிலாகு பெயர். (தமிழ் வியாசங்கள் 52). (5) அறம் என்பது தமிழ்ச்சொல். இதனை வடி நூலார் தர்மம் என்பர். அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே ஒருவனுடைய நினைவு சொற் செயல் களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும். (இளைஞர்க்கான இன்றமிழ். 130). (6) அறம் அறு என்னும் முதனிலையிற்றோன்றி அறி யாமையினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம். (திருவாசக விரிவுரை. 78). அறல் : (1) அறல் - அற்று விழுகின்ற நீர். (அகம். 19. வேங்கடவிளக்கு.) (2) நீர் வற்றிய காலத்து மணல் அற்று அற்று இருப்பது. (அகம். 25. வேங்கடவிளக்கு) (3) ஆற்றில் நீர் அற்றற்றுச் செல்லும் இடத்துள்ள கரு மணல். (புறம். 25. குறிப்புரை.) (4) அறு + அல் = அறல் = கருமணல், சிறுதூறு, நீர், விழவு முதலிய பலபொருளுந் தருவதும், ஒருங்கு சேர்ந்து கருங் கட்டியாயிருந்தது, அற்று வேறுபட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து நின்று கருமணலாயிற்று; தரையினுள்ளிட்ட விரையானது தன்மீதுள மண்ணையறுத்துக்கொண்டு வெளிக்கிளம்புதலிற் சிறு தூறாயிற்று. கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களி னின்றும் அடியினின்றும் மண்ணையும் பாறையையும் அறுத்துக் கரைத்துக்கொண்டு வெளிப்படுதலின் நீராயிற்று; கடவுட்பூசை முதலிய காலங்களில் மக்களாவார் செயலற்று ஒரு மனத்தின ராகியிருத்தலின் விழவாயிற்று. (தமிழ் வியாசங்கள். 52) அறவு: அறு+அ+வ்+உ: அறவு = அறுபட்ட இடம், ஒடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்ஙனம் அறுபட்ட இடத்தையும், அறுதல் ஒடிதலுமாதலின் ஒடிவையும் வேலி நாற்புறமும் வேய்ந்துழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேறற்கு அவ்வேலியுட் சிறிது அறுத்து வாயில் செய்து கோடலிற் கடவையையுமுணர்த்திற்று. (தமிழ் வியாசங்கள். 53.) mwit: அறு+அ+வ்+ஐ: அறவை= அநாதி உறவற்றவன் ஆதலின் இப்பொருள் தருவதாயிற்று. (தமிழ் வியாசங்கள். 53.) அறன் கடை: (பாவம்) அறத்தின் நீக்கப் பட்டமையின் பாவம் ஆயிற்று என்பது பரிமேலழகர் உரை. (குறள். 142) (அகம். 155. வேங்கட விளக்கு) அறிவு: (1) அறிவு என்னோ எனின், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள். 355) என்றார் ஆகலின் எப்பொருள் ஆயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. (இறையனார். 2. நக்.) (2) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல். (கலி 133) அறு: (1) அறு என்னும் பகுதியினடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை, அறை, அற்றம், அற்றை, ஆறு, முதலிய, பலசொற்கள் பிறக்கின்றன. (தமிழ் வியாசங்கள். 52.) (2) குறு என்பதில் இருந்து குறிது குறியன் என்றும், சிறு என்பதில் இருந்து சிறியர் என்றும் சொற்கள் தோன்றுமாறு அறு என்பதில் இருந்து அறிதல் பிறந்தது எனக் கொள்க.... அறு என்ற முன்னிலை அறி என்று நின்றபின், அறிவு, அறிகை, அறிக்கை, அறிவிப்பு, அறிஞர் என்ற பல பெயர்கள் அதனி னின்றும் தோன்றின. (செந்தமிழ்ச் செல்வி. 2:141.) அறுகால்: அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் - பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ் வியாசங்கள். 54.) அறுகோட்டிரலை: அறுப்பறுப்பான கொம்புள்ள கலை மான். (பட்டினப். ஆரா. 94.) அறுதல்: கைம்பெண், மங்கலியமிழந்தார் தாலியறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம் பெண்ணையுணர்த்துவதாயிற்று. இஃது இகர விகுதி பெற்று அறுதலி யென நிற்றலுமுண்டு. இவ்வாறாகவுஞ் சிலர் இதனை அறுதாலி யென்றதன் குறுக்கலாகக் கூறுவாராயினார். (தமிழ்வியா. 53.) அறுதி: இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலிய பலபொருளையுந் தாராநின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், பிறருக்கு உரிமையறுதலிற் சொந்தமும், அறும் நிலையாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத் தீர்ந்த விலையாதலின் முடிந்த விலை யும், ஒருவனுக்குரித்தாய பொருள் விற்கப் பெற்றமையின் அவனது உரிமையற்று வாங்கினானிடஞ் சேர்தலின் அங்ஙனம் விற்றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய விலைச்சீட்டுமாகிய பலவற்றையுமுணர்த்துவதாயிற்று. (தமிழ்வியா. 53.) அறுப்பு: (1) அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று. (தமிழ்வியா. 54.) (2) அறுப்பு என்பதில் அறு முதனிலை; அறுவை, அறம், அற்றல், அறுதி, அற்றம் என்பன வெல்லாம் அறுவால் தோன்று வனவே. அற்றம் = முடிவு. (குறள், குற்றங்களைதல்.4) அறுவை = துணி, அறுக்கப்பட்டது: (சிறுபாண். 236) அறம் = வரையறுக்கப் பட்டது. அறல், அறுத்தல், அறுகை முதலியவற்றையும் ஆராய்க. ஆறு, அறை என்பவையின் தோற்றம் உணர எளிதே. அறுத்தல் என்பது பிரித்தல். துணித்தல் என்பதன் பொருளும் அஃதே. உள நிகழ்ச்சியைக் காட்டும். பொருட்டுத் துணித்தல் என்பது துணிதல் என்று நின்றவாறு அறுத்தல் என்பது அறிதல் என்று நிற்கும். ஆதலின் அறிதல் - உணர்தல். ( பகுத்துணர்தல் - பிரித்துப் பார்த்தல்) (செந்தமிழ்ச் செல்வி. 2: 140 -141.) அறும்பு: கொடுமை, பஞ்சகாலம்; அறுப்பு என்பது மெலித்தல் விகாரம் பெற்று அறும்பு என நின்றது. நன்மை யற்றுக் கொடுமையையும் நாட்டின்கண் உணவுப் பொருட் களெல்லாம் அறுங்காலமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்ப தாயிற்று. (தமிழ் வியா. 54) அறுவை: துகில் அல்லது வதிரம். நீளமாக ஒரே நிலை யாய் நெய்ததனை இடையிடையே யறுத்துத் தனித்தனி வதிர மாக்குதலின் துகிலை யுணர்த்துவதாயிற்று. அறுக்கப் பட்டது அறுவை; ஈண்டு ஐ செயப்படு பொருண்மை விகுதி முன் காலத்தில், (இக்காலத்திலும் பலவிடங்களில்), சாலியர் தறியின் கண் ஆடைநெய்கையில் ஒரே நிரையாய் நீளநெய்து கொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் நெய்த பின்னர் அறுத்தற்கென இடம் விட்டிருந்த இடங்களில் அறுத்துத் தனித்தனியுடையாக்கு வார்கள். இவ்வழக்கத்தையநுசரித்தே நம் தமிழ்மொழியின் கண்ணே பிறசொற்களும் பிறந்திருக்கின்றன. உதாரணமாகத் துணி, துண்டு, கூறை முதலிய சொற்களின் பொருட் காரணத்தையுமுய்த்துணர்க. துணிக்கப் படுதலிற் றுணியும், துண்டிக்கப்படுதலிற் றுண்டும், கூறுபடுத்தப்படுதலிற் கூறையு மாயின. (தமிழ் வியா. 54). அறை: இஃது உள், மலை, முழைஞ்சு, குறை, திரை, பாத்தி, பாறை முதலிய பலபொருள் பயப்பதோர் சொல் நான்கு பக்கங் களினும் மதிலெழுப்பி ஏனைய இடங்களினின்றும் அறுக்கப் படுதலின் உள்ளாம்; மலையின்கண் அறுத்த குடைந்து குகை செய்யப்படுதலின் முழைஞ்சாம்; அற்றது குறைந்ததா மாதலிற் குறையாம்; கடலின் நீர்ப்பரப்பினின்றும் அற்று எழுந்து மறிந்து வீழ்தலில் திரையாம்; நிலத்தின்கட் கரை கோலப்பட்டு மற்றையவற்றினின்றும் அறுபட்டு நிற்றலிற் பாத்தியாம்; நிலப் பரப்பினை யறுத்துக் கொண்டு மேலெழும்பித் துறுத்து நிற்ற லிற் பாறையாம். (தமிழ் வியா. 55) அற்றம்: அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை முதலிய பலபொருள் பயப்பது. தைரிய மறுதலின் அச்சமும், வாழ்வறுதலின் அழிவும், தன்னொடு மிடைந்த பொய் முதலியவற்றினின்றும் அறுதலின் உண்மையும், பொருள் முதலாயின அற்ற சமயமும் வலியற்ற சோர்வும் மெலிவும் கண்கூடற்ற மறைவும், பொருளறுதலின் வறுமையு மாம். (தமிழ் வியா. 55.) அற்றை: சிறுமை. மேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று. (தமிழ் வியா. 55.) அன்பு: (1) அன்பு எனப்படுவது தன் கிளை செறாமை. (கலி. 133.) (2) அன்பாவது தன்னால் புரக்கப்படுவார் மேல் உளதாகிய காதல். (புறம். 5. ப, 2.) (தொல். பொருள். 53. நச்) (3) அன்பு எனப்பட்டது, தான் வேண்டப்பட்ட பொரு ளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி.... அது குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல இது காண் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்பு உடையரான குணங் கண்ட விடத்து இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற் பாற்று. (இறையனார். 1. நச்.) (4) அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். அஃது உடையார்க்குப் பிறன்கண் துன்பம் கண்டுழிக் கண்ணீர் விழுமாதலின் அவ் அருளானே அன்புடைமை விளங்கும் என்பது. (தொல். பொருள். 260. பேரா.) (5) தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு. (திருக். 757.பரி.) (6) ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. (அகம். 94. வேங்கடவிளக்கு) (7) அன்பு என்பதற்கு அன்று என்பது சொற்பொருள். தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தமக்கல்ல; (அன்பு - அருள்) தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டே என்பது கருத்து. (திருக்குறள். அறம். 66.) (8) அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில் நிகழ்தலாகிய ஒருவகை நெகிழ்ச்சிப் பண்பு. (திருக்குறள் அறம். 96) அன்பு - அருள்: (1) அன்பு காதலில் இருந்தே பிறப்பது அருளாக மலர்வது. பற்று நேசம் ஆகிய பண்புகளாக விரிவது. ஆனால் அஃது அருளுக்கே மிகவும் அணிமையுடையது அதற்குக் கிட்டத்தட்ட ஒப்புடையது. ஏனெனில் காதலும், பற்றும், பாசமும், நேசமும், ஏதேனும் ஒரு ஏதுவைப் பற்றுக் கோடாகக் கொண்டே நிகழ் பவை. அன்போ, அருள்போல ஏதுவும் பற்றுக்கோடும் இன்றி யாவர் மாட்டும் செல்வது. அருளுக்கும் இதற்கும் உள்ள ஒரே வேற்றுமை-அருள் இனத்தினின்று சமுதாயம், சமுதாயத்தில் இருந்து குடும்பம் என அகம் நோக்கிய பண்பு. ஆனால் அன்பு குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து இனம் எனப் புறம் நோக்கியபண்பு அருள் இன வாழ்வில் செயலாற்றும் அன்பு சமுதாய வாழ்வில் செயலாற்றும். (திருக்குறள். மணிவிளக்கவுரை II.591) (2) தொடர்புபற்றாதே வருத்தமுற்றார் மேற்செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவது. அன்புடைமை: அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல். (திருக். அன்புடைமை. மணக்.) ஆ ஆ: ஆ, என்பது பெற்றத்தினை உணர்த்தும்வழிப் பெயர்ச் சொல் எனவும், இரக்கக் குறிப்பினை உணர்த்தும்வழி இடைச் சொல் எனவும் ஏவற் பொருண்மையை உணர்த்தும்வழி வினைச் சொல் எனவும், ஆதற் புடை பெயர்ச்சியை உணர்த்தும் வழி உரிச்சொல் எனவும் கோடல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமை யின் எழுத்தொப்புமை பற்றி உபசாரத்தால் பல பொருள் ஒரு சொல் எனப்படினும் உண்மையான் வேறுவேறு சொல்லே யாம் ..... புணர்ச்சிக்கட் பெற்றத்தினை உணர்த்தும்வழி ஆன் கோடெனச் சாரியை பெறுதலும், மரவிசேடத்தை உணர்த்தும் வழி ஆங்கோடென மெல்லெழுத்துப் பெறுதலும் ஆகிய செய்கை வேறுபாடுஞ் சொல்வேறுபாட்டானன்றிப் பெறப் படாமையின் அவை வேறுவேறு சொல்லென்பது பெற்றாம். (சிவஞானபாடியம். 2:4) ஆக்கம்: (1) ஆக்கம் தருவதனை ஆக்கம் என்றார். ஆக்கம் மேல்மேல் உயர்தல். (திருக்குறள். 31. பரிமே.) (2) ஆக்கம் -செல்வம். ஆக்கப்படுவதும் ஆக்குவதும் ஆகலின். மேல்மேல் உயர்தல் என்றார் பரிமேலழகர். (திருக்குறள். 31. பரிமே.) ஆசிரியப்பா: சீரினானும் பொருளினானும் ஓசை யினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்று ஆகலா னும், புற நிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பதும் காரணக் குறி. ஆசு எனினும் சிறிது எனினும் நுண்ணிது எனினும் ஒக்கும். (யா. வி. 55.) ஆசிரியர்: ஆசு - பற்றுக்கோடு. மாணாக்கர்க்குப் பற்றுக் கோடானவர். (வடசொற்றமிழ் அகரவரிசை. 306.) ஆசினி: ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் உளர். (புறம் 158. ப. 2) ஆசை: ஆசை என்பது தமிழில் வழங்கும் பெருவழக்காகிய வடசொல் என்ப, ஆசு என்பது குற்றமெனக்கொண்டு, பற்று வைத்தல் குற்றமாம் என்ற கருத்தில் ஆசை என்பது தமிழ் என்பாரும் உளர். அனைய மொழிகளைத் தமிழ் எனவே கொள்வோமாக. (செந்தமிழ்ச் செல்வி. 12: 565) ஆடவர்: ஆடவர்-வீரர் என்னும் பொருட்டு. ஆடவன் கொன்றான் அச்சோ என்பது பெரிய புராணம். (திருவிளை. சுந்தரப்போர். 26. ந. மு. வே.) ஆண்: ஆண்மக்கள் தம்மையும் தம் இந்திரியங்களையும் பிறரையும் ஆளும் வன்மையினாலேயே இப் பெயர் பெறுவர். (திருக்குறள். அழகும் அமைப்பும். 102) ஆண்கடன்: ஆண்களாய் உள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர் செய்யும் கடன். (பதிற்று. 31. ப. உ) ஆண்டலை: கோட்டான் போல்வதொரு பறவை; இதன் தலை ஆண்மக்கள் தலைபோல் இருத்தலின் இப்பெயர் பெறுவ தாயிற்று என்க. (பட். ஆரா. 95.) ஆண்டான்: ஆண்டான் என்னும் மொழி ஆள் என்னும் பகுதி அடியாகப் பிறந்த இறந்தகால வினையாலணையும் பெயர். ஆள் என்பது ஆண்மை என்னும் பண்புப் பெயரடியாகப் பிறந்த வினை. ஆண்மை என்பது ஆளுந்தன்மை என்று பொருள்படும். ஆண்டான் என்பது உயிர்களை எல்லாம் ஆளுந்தன்மையை உடைய கடவுளைக் குறிக்கின்றது. உயிர்களை எல்லாம் ஆளும் தன்மை உடையவன் ஆதலின் அவன் முழுமுதற் கடவுள் எனப் படுவான். முற்றறிவுடைமை முதலிய எண் குணங்களும் உயிர்களை ஆளும் தன்மைக்கு அவனுக்கு வேண்டப்படுவனவாகும். (செந்தமிழ்ச் செல்வி. 2: 127.) ஆணவம்: ஆளுதல் என்பதன் அடியாக உயிரைத் தன் வழிபடுத்தி ஆளுதல் பற்றி ஆணவம் என்னும் சொல் எழுவ தாயிற்று. ஆட்சி, ஆளுதல், ஆண்மை, ஆட்கொளல், ஆகிய இச்சொற்களின் உறவாகவே ஆணவம் தமிழ்ச் சொல்லாதல் காண்க. (வடசொற்றமிழ் அகரவரிசை. 308). ஆணை: ஆக்ஞை என்னும் வடசொல் ஆணை எனத் திரிந்தது என்பர். பொருள்நிலை நோக்கி இது தமிழ்ச் சொல்லே ஆதல் தெளிந்து கொள்க. ஆண்மை, ஆண், ஆட்சி என்பன போல ஆணை என்பதும் ஆள் என்னும் முதனிலை வினை அடியாகப் பிறந்ததால் கூர்ந்து நோக்கப் புலப்படும். (திருக்குறள். 28.தண்ட.) ஆத்தாள்: தாயாரை ஆத்தாள் என அழைக்கின்றனர். இது ஆய் +ஆள் என்பதாகும். ஆய் என்பது தாய் என்றும் யாய் என்றும் வழங்கப்பெறும். இங்கு ஆய் என்ற முறைப் பெயர் பகுதியாகி ஆள் என்னும் பெண்பால் விகுதிபெற்று ஆத்தாள் என மருவி வழங்கப் பெறுகிறது. (செட்டிநாடும் தமிழும். 186.) ஆதிபகவன்: (1) பகவன் என்பது பகு என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும். பகுத்தவன் பகவன் எனப்பட்டான். தன்னுடம்பில் பாதியைப் பகுத்தவன் பகவன் ஆனான். எனவே உமையொரு பாகனாகிய சிவனே ஆதிபகவன் என்னலாம். அன்றியும் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் என்றும், ஆதிக்கு - சக்திக்குத் - தன் உடம்பைப் பகுத்தவன் ஆதிபகவன் ஆவான் என்றும் கூறலாம். (வள்ளுவரைப் பற்றி. 21.) (2) தனக்கோர் ஆதி இன்றி, எல்லா உலகும் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தானே ஆதியாய் நிற்றலால் இறைவன் ஆதி பகவன் எனப்படுகிறான். (திருக்குறள் விரிவுரை. 1) ஆமா: ஆபோன்று, (பசுமாட்டைப் போன்று) இன்றும் காட்டில் காணப்படும் விலங்கை விலங்கு நூலார் the bison என்பர். இது மாட்டினத்தைச் (oxen) சார்ந்த காட்டில் வாழும் மாடு (wild oxen) என்பர். உரையாசிரியர்களும் காட்டுப்பசு, காட்டு எருது, காட்டா என்று பொருள் கூறி இருப்பதைக் காணலாம். ஆபோலும் ஆமா என்ற உவமையைப் புரியாத இன்றைய ஆசிரியர்கள் ஒருவகை மான் என்றும் ஏதோ ஒரு விலங்கு என்றும் கூறினர். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 67 - 68.) ஆய்தல்: நுணுகுதல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய் ஆவயி னான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றார் தொல் காப்பியனாரும். (சிவஞான பாடியம். 7:3) ஆயர்: ஆயரிற் கோட்டினத்தாயர், கோவினத்தாயர், மெல்லினத்தாயர் என மூவகையார் உண்டு. முறையே எருமை இனத்தவர், ஆன் இனத்தவர், ஆட்டினத்தவர் என்க. கோவினத் தாயரை நல்லினத்தாயர் என்பது வழக்கு. (கலி. 111. உரைவிளக்கம். இளவழ) ஆயிரம்: அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்றுமணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால் மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. (வடமொழி வரலாறு. 84.) ஆர்வம்: தம் நெஞ்சு கருதின பொருள்கள் மேல் தோன்றிய பற்றுள்ளம். (மதுரைக். 489. நச்.) ஆராய்: ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive) ஆர (நிரம்ப)+ஆய்=ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க. (ஒப்பியன் மொழிநூல். முன்னுரை.66) ஆராய்ச்சி: ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல், (தொல். பொருள். 260. பேரா.) ஆரிடை: அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்கும் உடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாய் இருப்பது. (சிலம்பு. 11: 68. அடியார்.) ஆல்: ஆல் அல்லது ஆலம் என்னும் சொல்லுக்கு தண்ணீர் என்னும் பொருள் உண்டு என்பதைத் திட்டமாக அறிகிறோம். சில சமயங்களில் மேகத்தில் இருந்து நீர் துளிகள் கட்டி கட்டியாக நிலத்தில் விழுவது உண்டு. இந்த நீர்க்கட்டி களை ஆலங்கட்டி என்று தமிழில் கூறுகிறோம். ஆல், ஆலம் = நீர். ஆலங்கட்டி- நீர்க்கட்டி. கன்னடம். தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆலங்கட்டியை ஆலி என்று கூறுகிறார்கள். தமிழர் ஆலங்கட்டி என்றும், தெலுங்கரும் கன்னடத்தாரும் ஆலிகல் என்றும், மலையாளத்தார் ஆலிப்பழம் என்றும் கூறு கிறார்கள். ஆலங்கட்டியைத் தமிழில் ஆலி என்றுங் கூறுவ துண்டு. மரங்களுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப்படும் பாத்திக்கு ஆலவால என்று கன்னட மொழியில் பெயர் கூறுகிறார்கள். நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்திக்கும் ஆலாலம் என்னும் பெயர் தமிழில் உண்டு என்பதை அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய இலக்கியச் சொல் அகராதியில் காணலாம். எனவே, ஆலவால, ஆலாலம் என்னும் பெயர்கள் ஆல் (நீர்) என்னும் சொல்லடி யாகப் பிறந்த சொற்கள் என்பதில் ஐயமில்லை. (அஞ்சிறைத் தும்பி. 119, 124) ஆலவட்டம்: தாலவட்டம் - ஆலவட்டம் = விசிறி. தாலம்- பனை. பனைமட்டையால் ஆய வட்டமாயதோர் கருவி. (மொழிநூல். கார்த்தி இலக்கணவியல். 122.) ஆலவாய் : ஆலவாய் என்பது மதுரையின் பழைய பெயர். ஆலவாயில் (மதுரையில்) கோயில் கொண்டவராகிய சிவ பெருமானுக்கு ஆலவாய் அண்ணல், ஆலவாயான் ஆலவாய் அரன் என்னும் பெயர்கள் தேவாரம் முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. மதுரை மாநகக்கு ஆலவாய் என்று ஏன் பெயர் வந்தது? நீர் சூழ்ந்த இடத்திலே இருந்த படியினாலே ஆலவாய் என்று பெயர் உண்டாயிற்று. (அஞ்சிறைத் தும்பி. 124) ஆலறு: ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு. ஆல் அறுத்துக்கொண்டு பாய்ந்த இடம் ஆல் அறு என்று கூறப்பட்டதுபோலும். ஆலறு என்னும் சொல் பிற்காலத்தில் ஆறு என்று திரிந்து வழங்கியது போலும். நீர் தாழ்ந்த இடத்தை நோக்கி ஓடும் இயல்புள்ளது. ஆகவே ஆல் (நீர்) அறுத்துச் சென்ற வழி ஆலறு என்று வழங்கப்பட்டது என்பதில் என்ன தடை? பிறகு ஆலறு என்னுஞ்சொல் ஆறு என்று மருவியதில் என்ன ஐயம்? ஆறு என்னுஞ் சொல் இடு குறிப் பெயர் என்று கருதி வந்தது தவறு என்பதும் அது ஆல் (நீர்) என்னும் சொல்லடியாகப் பிறந்த காரணப் பெயர் என்பதும் தெளிவாகிறது. (அஞ்சிறைத் தும்பி. 126) ஆவஞ்சி: ஆவஞ்சி எனினும் குடுக்கை எனினும், இடக்கை எனினும் ஒக்கும். அதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலைப் போர்த்தலால் ஆவஞ்சி என்று பெயராயிற்று; குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்று பெயராயிற்று; வினைக் கிரியைகள் இடக்கையால் செய்தலின் இடக்கை என்று பெயராயிற்று. (சிலம்பு. 3: 26. அடியார்.) ஆவி: ஆவி என்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினும் சிறந்தமையான். (ஆவி - உயிர்) (திருக்கோ. 5: பேரா.) ஆவினன்குடி: சித்தன் வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றது. (முருகு. 175 - 6. நச்) ஆழ்துயர்: ஆழ்தற்கு இடமாம் துயர். (திருக்கோ. 89. பேரா.) ஆழி: ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்) (ஒப்பியன் மொழிநூல். 157.) ஆளத்தி: பண்ணைப் பாடும்போது ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி எனப்படும். அஃது இக்காலத்தில் ஆலாபனை, ஆலாபனம் எனப்படுகிறது. இவற்றுக் கெல்லாம் வேர், ஆல் என்னும் தமிழ்ச் சொல்லே. ஆலுதல் சுற்றுதல் ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக. (ஒப்பியன் மொழி நூல். 113 - 114) ஆற்றுதல்: ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல். (கலி. 133..) ஆற்றொழுக்கு: ஆற்றொழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர் வறாது ஒழுகுமதுபோலச் சூத்திரங்களும் தம்முள் இயைபு பட்டு ஒழுகுவது. (நன். 18. மயிலை.). (இறை. 54. நச்) ஆறாட்டு: (ஆற்றில் நீராடி இன்புறுதல்) ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும் பண்டை நாளைய செல்வ வேந்தர் வழக்கமாகும். யாறும் குளனும் காவும் ஆடிப்பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப என்பதனால் (தொல். பொருள். கற்பு. 50) இது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வரும் வழக்காறு என்பது தெளிவாம். ஆறாடி மகிழும் திறத்தை இப்போதும் கேரள நாட்டார் ஆறாட்டு என வழங்குகின்றனர். நார்முடிச் சேரல் சேர நாட்டில் அரசு புரிந்த காலத்தில் நிகழ்ந்த ஆறாட்டு ஒன்றைக் காப்பியனார் கண்டு வியந்து பாடியுள்ளார். (காப்பியனார்- காப்பியாற்றுக் காப்பியனார்) (சேரமன்னர் வரலாறு. 147.) ஆறு: (1) நிலமெங்கும் ஒரே சோலையாயிருந்த காலத்தில் இடையிடை யோடும் ஆறுகளே, ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ஆறு எனப் பட்டது. (சொல். கட். 18) (2) நதி, வழி. இது முதனிலை நீண்ட தொழிலாகு பெயர். நதியானது தரையை அறுத்துக்கொண்டும் காடு முதலா யினவற்றை ஊடறுத்துக் கொண்டும் செல்லுதலின் இப் பெயர்த்து ஆயிற்று. கல்லுங் கரடுமா யிருந்த நிலத்தை வெட்டி யறுத்துத் திருத்தி மக்கள் நடப்பதற்கு ஏற்றதாக்குதலின் வழி யாயிற்று. (தமிழ் விய. 56) சொற்பொருள் நுண்மை விளக்கம் (ஆன்றவிந்தடங்கிய சான்றோர்). (3) வழி ; பலர் நடந்து நடந்து அறுபட்டுப் பண்பட்ட வழி. (திருக்குறள் விரிவுரை. 413.) (4) நீர் நிறைந்து மண்ணை அறுத்து ஓடுவதைக் கண்டு ஆறு எனப் பெயர் வைத்தது எளியது; நிலத்தில் அறுத்தால் போல் அமைந்த பாதையைக் கண்டு வழி எனப் பெயர் வைத்த தும் எளிதே. ஆயின் ஒருவன் வாழும் வாழ்க்கையின் போக்கை உணர்ந்து அதனை (நல்லவழி என்னும் பொருளில்) நல்ல ஆறு என்று வழங்குமிடத்தில் அருமை புலனாகின்றது. (மு. வ. மொழிவரலாறு. 92.) ஆறெழுத்துமறை : ந மோ குமாராய என்பதாம். (முருகு. 186. நச்.) ஆன்: (பசு) ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது மா எனப்பட்டது. மா - மான்- மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று ஆவிற்கு இனமான மானை உணர்த் திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப் பெயராய் இருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா (ஆ) ஆதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ என்பது னகர ஈறு பெற்று ஆன் என்றாயிற்று. (ஒப்பியன் மொழிநூல். 193.) ஆன்மா: இத்தொகைப் பெயரில் ஆன் என்பது கடவுள். இது அகன் அகத்தே அலர்ந்தவன் என்று பொருள்படுவது ஆகும். மா என்பது விலங்கு நிலை உயிர். கடவுள் தங்குவத னாலேயே இந்த விலங்கு நிலை உயிராகிய ஐயறிவுயிர் ஆறறிவுயி ராகிய உயர் அறிவுயிர் ஆகி விடுவதனால் அது ஆன்மா எனப்படுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. I. 254) ஆன்றவிந்தடங்கிய சான்றோர்: நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர். கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவு அவிந்து மனமொழி மெய்களால் அடங்கிய (சான்றோர் ) எனினும் அமையும். (புறம். 191. ப.உ) ஆனந்தக்குற்றம்: ஆனந்தம் என்னும் சொல் சாக்காடு என்னும் பொருட்டாம். ஆனந்தக் குற்றம் என்பது இறந்து பாடு உறுவித்தற்கு ஏதுவாகிய குற்றம் என்பதாம். (சோமசுந்தரக் காஞ்சியாக்கம். 39.) இ இகணை: ஒரு மரம்; இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும். என்பது, துன்னிய, ஈர நெஞ்சத் தார்வலாளர், பாரந்தாங்கும் பழைமை போல, இலைக் கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய, கணைக்கால் இகணை என்னும் பெருங்கதையால் பெறப்படும். (அகம். 131. வேங்கட விளக்கு.) இகழ்ச்சி: எள்ளுதல், மனத்தால் இகழுதல்; இகழ்தல் சொல்லால் இகழுதல்; பழித்தல் சொல்லால் அல்லது செய லால் இகழுதல். (சொல். கட். 57.) இசும்பு: வழுக்குதல்; இசும்பு ஏற்று இழிவு முதலாயின குற்றம் என்பாரும் உளர். (திருக்கோ. 149. பேரா.) இசை: (1) பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை என்று பெயராம். (சிலம்பு. 3.26. அடியார்.) (2) இசை என்னும் சொல்லுக்கு வயப்படுத்துவது இசைவிப்பது என்பது பொருள். மரம், செடி, கொடிகள் என்னும் ஓரறிவு உயிர்கள் முதல் மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையில் எல்லா உயிர்களையும் இசையானது வசப் படுத்தும்... உயிரில்லாத கல், மண், காற்று, நீர் முதலான பருப்பொருள்களையும் பாடுகின்றவர்களின் எண்ணத்தோடு இசைத்து இயங்கச் செய்கின்ற ஆற்றல் அந்த இசைக்கு உண்டு. (சங்க நூற் கட்டுரைகள். I. 80.) (3) சான்றோர்களின் இசைப் பாட்டாலும், இசைப்பாலும் புகழ் எக்காலத்தும் நிலைபெறுதலால் புகழுக்கு இசை என்றே ஒரு பெயரும் உண்டு. இசை என்னும் எச்சம் என்பார் திரு வள்ளுவர். (திருக்குறள் அறம். 145.) (4) இசையைப் பாட்டு என்றும் பண் என்றும் கூறுவர். ஓர் பண்ணின் பாலைகளைக்கொண்டு - அஃதாவது ஓர் இராகத்தின் சுரத்தானங்களைக் கொண்டு - இசைப்பாக்களை (சாகித்தி யங்களை) இசைத்தலால் இதற்கு இசை என்றும் பெயராகும். (பாணர் கைவழி. 5) இசைமை: இசைமை என்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. (தொல். பொருள். 257. பேரா.) இஞ்சி: இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு = நீர்வற்றியது. (வடமொழி வரலாறு. 87) இடம்: இடம் - அறுவகைப் பொருளில் ஒன்றான இடம்; தரவு - ஒரு கூட்டத்தில் ஒருவன் இருக்குமிடம்; இருக்கை - இருக்கும் ஆசனம்; வைப்பு - வைத்திருக்கும் நிலம்; வரைப்பு - எல்லையோடு சேர்ந்த இடம்; நிலை நிற்குமிடம்; நிலையம் நிற்கும் பெரிய இடம்; நிலைக் களம் - ஆதாரமான இடம். வயின் குறிப்பிட்ட சிற்றிடம்; அகம் - உள்ளிடம்; புறம் - வெளியிடம்; இடை - பல பொருளுக்கு இடையிலுள்ள இடம்; நடு - பல பொருளுக்குச் சரி நடுவிலுள்ள இடம்; அகடு - ஒரே பொருளின் உள் நடுவிடம்; தலை - மேலிடம் ; கண் - மேற்பரப்பிடம்; சூழல் - சூழ்ந்திருக்குமிடம்; புடை - சூழலில் ஒரு திசைப்பகுதி; மருங்கு - ஒட்டியுள்ள ஒருபுறம்; ஞாலம் - பூமியாகிய கோள்; உலகம் - ஞாலத்திலுள்ள உயிர்த்தொகுதி; நிலம் - தரை; மண் - நிலப் புழுதி; மாநிலம் - முழுத்தரை; நானிலம் - நால்வகை நிலத் தொகுதி; வையம் அல்லது வையகம் படைக்கப்பட்ட உலகு. (சொல். கட். 48) இடாகினி: இடுகாடினி - இடாகினி = பிணந்தின்னும் பேய். இடுகாடாவது பிணத்தைக் குடத்திலிட்டுப் புதைத்திடுங் காடு. இடுபிணந் தின்னும் இடாகினிப்பேய் சிலம்பு. (மொழிநூல் (கார்த்) இலக்கணவியல். 125.) இடுக்கண் : (1) இடுக்கண் என்பது மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம். (தொல். பொருள். 260. பேரா.) (2) இடுக்கண் = இடுங்குகண்; விகாரம். மலர்ந்த முகம் ஒழிந்து கண் இடுங்கும்படி உறுவது எனத் துன்பத்துக்குக் காரணக்குறி. இடுக்கண் களைவதாம் நட்பு திருக்குறள் (செந்தமிழ்ச் செல்வி. 2: 79.) இடுதேளிடுதல்: ஒருவனது முதுகில் அல்லது தலையில் தேள் போன்றதோர் உருவை விட்டு தேள்! njŸ! என்று கத்தி அவனை அச்சுறுத்தி மகிழ்வது குறும்பர் வழக்கம். இதற்கு இடுதேளிடுதல் என்று பெயர். இங்ஙனம் பொய்க் காரணம் காட்டி வேறு வகைகளில் ஒருவனைக் கலங்கப் பண்ணவ தெல்லாம் இடுதேளிடுதல் எனவேபடும். (சொல். கட். 12.) இடும்பை: இடும்பை என்ற சொல்லின் முதற் பகுதி இடுக்கண், இடுக்கம் ஆகிய சொற்களின் முற்பகுதியான இடு என்பதே. இது தவிர்க்க முடியாத, தப்ப முடியாத கடுந் துன்பப் பொறியைக் குறிப்பதாகும். சொல்லின் பிற்பகுதியான பை நஞ்சைக் குறிக்கும். தவிர்க்க முடியாத நச்சுத்துயர் என்பதே இதன் சொற்பொருள் ஆகும். (திருக்குறள். மணிவிளக்கவுரை. I. 276 - 177.) இடியுண்டது: அடிக்கப்பட்டதனை அடியுண்டது என்றால் போல இடிக்கப்பட்டதனை இடியுண்டது என்றார். உண்டல் - உறுதல். (சிலம்பு 9. 22. அடியார்.) இடைகழி: (1) தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி. (சிலம்பு 10:27. அரும்பத... அடியார்.) (2) இடையிற் கழிந்து செல்லும் நடை. இடை கழி - ரேழி (கொச்சைத்திரிபு). (வடமொழி வரலாறு.89.) இடைநாழி: அகநாழிகையாகிய கர்ப்பக் கிரகத்திற்கும் வாயிலுக்கும் இடையில் உள்ள இடம் இப்போது அர்த்த மண்டபம் என்று கூறப்படுகிறது. அர்த்த மண்டபத்துக்குத் தமிழ்ப் பெயர் இடைநாழி அல்லது இடை நாழிகை என்பது. இச்சொற்கள் சாசனங்களில் கூறப்படுகின்றன. இடை நாழிகை என்னும் சொல் துளுவமொழியிலும் வழங்கப்படுகிறது. துளுவ மொழியில் இடெநாளி என்றும் எடெநாளி என்றும் இச் சொல் வழங்கப்படுகிறது. (துளுமொழியும் தமிழும்.) இடையர்: (1) நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனை இரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்பர். (ஐங்குறு. முல்லை. ஔவை. சு.து) (2) தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் இடைப்பட்டது முல்லை நிலம். அந்நிலத்தில் பசும் புல்வெளிகள் உண்டு. அங்கு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு பால் தயிர் முதலியவற்றை விற்பனை செய்து வாழ்ந்து வந்த மக்கள் முல்லை நிலத்தார் - இடை நிலத்தார் - இடையர் எனப்பட்டனர். இது நிலம் பற்றிய பெயர். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 12.) இடையீடு: இடையில் இடுவது ; தடை. (தொல். சொல். 62. சி. கணேச.) இடை எழுத்து: இடை நிகர்த்ததாய் ஒலித்தலானும், இடை நிகர்த்ததாய மிடற்று வளியால் பிறத்தலானும் இடை யெழுத்தாயிற்று. (தொல். எழுத்து. 21. நச்.) இணர்: இணர் என்பது பல பூக்கள் ஒரே காம்பில் சேர்ந் திருக்கும் தொகுதியை (மஞ்சரியைக்) குறிக்கும். (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 102) இதழி: இதழி - கொன்றை. அழகான இதழ்களுடன் காணப்படுவதால் கொன்றைக்கு இதழி என்றும் பெயர் உண்டு. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.) இம்மி: (1) மத்தங்காய்ப் புல் அரிசி; குறைந்ததோர் எண்ணுமாம். (சீவக. 495. நச்) (2) இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி, அது எள், தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையையுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று இம்மி என்னும் பெயர் தோன்றியிருக்கலாம். (தமிழ் வரலாறு. 145.) இமயவர்: இமய மலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர். அமச்சு - அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலி ஆனாற் போல் இமயவர் என்பது இமையவர் என்றாயது. (திருக்குறள். குழந்தையுரை. முன்னுரை. 21.) இயல்பு: இயல்பாவது பொருட்குப் பின் தோன்றாது உடன் நிகழும் தன்மை (தொல். சொல் 19. சேனா.) இயவுள்: இயவுள் என்பது இயக்கும் பொருள். கடவுள் என்பது கடவும் பொருள். அஃதாவது செலுத்தும் பொருள். (சங்க நூற்காட்டுரைகள் . I. 107) இரக்கம்: இரக்கம் ஈர் என்னும் பகுதியின் அடியாகத் தோன்றியது. ஈர் - இரண்டு. தனக்கு வேறான, தன்னின் இரண் டாவதான பிறிதோர் உயிரின் துன்பங் கண்டவழி உயிரி னிடத்துத் தோன்றும் நெகிழ்ந்த ஈரம், இரக்கம் எனப் படும். (திருக்குறள் அறம். 68.) இரட்டைக்கிளவி: இரட்டைக்கிளவி என்றது மக்கள் இரட்டை விலங்கு இரட்டை போல வேற்றுமை உடையன வற்றை அன்றி இலை இரட்டையும், பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை. (தொல். சொல். 48. சேனா.) இரத்தல்: ஈ என்று இரத்தல், இழிந்தோன் செயல்; தா என்று கேட்டல், ஒத்தோன் செயல்; கொடு என்று கட்டளை இடுதல், உயர்ந்தோன் செயல். (சொல். கட். 55.) இரலை-கலை: இரலைஇன மான்களின் கொம்புகள் உள் துளை அற்றவை. துளையற்று உள்ளே கெட்டியாக இருக்கும். மற்றும் இரலைஇன மான்களின் கொம்பு கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைப்பதில்லை. கலைமானினத்தின் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இரலை இன மான்களின் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. இந்த அடிப்படை வேற்றுமையைக் கொண்டு மான் வகைகளை இரலை இனமா கலையினமா என்று எளிதில் பிரித்துவிடலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 85.) இரவச்சம்: அஃதாவது ஒருவர் வறுமையுற்ற காலத்து அவ்வறுமைதானே அவரைத் தள்ளிக்கொண்டு போய் இரப் பிக்கும்பொழுது, தமது ஒளி அடங்கிப் பொலிவழிந்து, கடுக வுரை கூடாது நின்று, தம் வறுமையை ஒருவற்குப் பல காலும் மதுரமாகச் சொல்லில் அது அவர் செவியில் ஏறாது சொல்லிய வரை எளியராக நினைந்து, கடைக்கணித்துப் பார்க்கும் பார்வையையும், கொடுப்பார் போலிருந்து பின்பு அவர் இல்லை என்றுவிட மனந்தடுமாறிச் செயலற்றுப்போம் போக்கையும் கண்டு அவ்விரப்பினை அஞ்சுதலாம். (நாலடி இரவச்சம். தருமர்.) இருகரையன்: ஆற்றின் நடுவில் இருந்து கொண்டு அதன் இரு கரைகளில் எதனை அடைவது என்று துணியாது இடர்ப் படுவனைப்போல ஒரு காரியத்தைச் செய்வதா தவிர்வதா என இருமனமாயிருப்பவனுக்கு இருகரையன் என்று பெயர். (சொல். கட். 12.) இருதலைப்புள்: இருதலைப் புள்ளைச் சிம்புள் என்னும் ஒருவகைப் பறவை எனவும், எட்டுக் கால்களும், இரண்டு தலையும், வட்டக் கண்ணும், வளைந்த எயிறும் உடைய தெனவுங் கூறுப. (கலி. 89. உரைவிளக்கம். இளவழ.) இருதலைமணியன்: பாம்பு வகைகளுள் மங்குணி, மழுங் குணி என்பதொன்று, அதற்குத் தலையும் வாலும் வேறுபாடு இல்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும் தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்லமுடியும் ஆதலாலும் அதற்கு இரு தலை மணியன் என்று பெயர். பகை நட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று இருசாரார்க்கும் நல்லவனாக நடிப்பவன் இரு தலை மணியனை ஒத்திருத்தலால் அவனையும் அப்பெயரால் அழைப்பர். (சொல். கட். 12.) இரும்பு: இரும்பு என்ற செந்தமிழ்ச் சொல் இரு என்ற தமிழ் முதலடிப் பிறந்ததென்றும், அம்முதற்குக் கருமை என்னும் பொருள் என்றும் கருநிறமுடைய உலோகம் இரும்பு எனக் காரணப் பெயர் பெற்றது என்றும் அம்முதல் அடியாக இருள், இருட்டு, இரவு, இரந்தை (கரி) முதலிய சொற்கள் பிறந்துள்ளன என்றும் கூறிக் கரும்பொன் என இரும்புக்கு மற்றொரு பெயர் இருத்தலையும் சுட்டி இரும்பின் உண்மை வடிவைக் காட்டுவர் செந்தமிழ் அறிஞர். (செந்தமிழ்ச் செல்வி. 3: 310.) இரும்புலி: இரும்புலி - பெரும்புலி. சிறுபுலி (சிறுத்தை) யினின்று பிரித்துணரவே பெரும்புலி என்ற பொருளில் இரும் புலி என்று பல பாடல்களில் வழங்கினர். இன்றும் பேச்சு வழக்கிலும் கன்னட மொழியிலும், கொலாமி, கடபர் மொழிகளிலும் பெரும் புலி என்றும் பெத்தபுலி என்றும், தெலுங்கில் பெப்புலி என்றும் வரிப்புலிக்குப் பெயர்கள் வழங்கி வருவது சங்ககாலப் பெயரான இரும்புலியுடன் ஒத்து வருவது வியப்பைத் தருகின்றது. மலையாளத்தில் பொறியுடைய புலியைக் குறிக்கப் புள்ளிப்புலி என்றே வழங்குகின்றனர். வரிப்புலியைக் கடுவாய் என்று வழங்குவது போல் அழைக்கின்றனர். கொலாமி மொழியிலும் கெடியாக் என்று வரிப்புலியை அழைப்பதும் கவனிக்கத் தக்கது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 259) இரை: (1) பறவைகளின் உணவு வித்து வகையாதலின், விரை இரையாயிற்று. விரைத்தல் - இரைத்தல் = சிந்தல். விதைத்தல் போல்வது. (மொழிநூல் (கார்த்). இலக்கணவியல். 121.) (2) இரை என்பது இரைதல், இரைந்து, இரைக்க முதலியன வாய் வருதலன்றி ஈறுபோய் வேறுபட்டு இரற்றல், இரற்று, இரட்டல், இரட்டு, இரங்கல், இரங்கு முதலியனவாயும் வரும். இரட்டு, இரற்று முதலியன பெயராயும் நிற்கும். இரையும் வேறே, இரற்று முதலியனவும் வேறே என்பாரும் உளர். (அ. குமாரசாமிப்பிள்ளை. செந்தமிழ். 11:120.) இல்லறம்: இல்லறமாவது இல்லின்கண் இருந்து தான முதலாயின செய்தல். (திருக். இல்லறவியல். மணக்.) இல்வாழ்க்கை: (1) அஃதாவது இல்லாளோட கூடிவாழ் தலினது சிறப்பு. (திருக். 41. பரி.) (2) இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன். (திருக். 41. மணக்.) இலக்கம்: இலக்கு- குறி. இலக்கு- இலக்கம். போர் மறவர் வேல் எறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும். (திருக்குறள் மரபுரை. 627) இலக்கு: (1) இலக்கு = இலை, எய்யுங்குறி. விற்பயிற்சியிலும் விற்போட்டியிலும் பெரும்பாலும் ஒரு மரத்து உச்சியில் உள்ள இலையே இலக்காக வைத்து எய்வதே பண்டை வழக்கம். இலக்கு - ஒரு குறித்த இடம் (நெல்லை வழக்கு) (வடமொழி வரலாறு. 89) (2) இலையை இலக்கு என்பது இன்றும் தென்பாண்டி வழக்காகும். சிறு நுண்மைக்குப் பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால் இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள் தோன்றிற்று. இலக்கணமும் மொழியின் அல்லது இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும் எடுத்துக் கூறுவதையே குறிக் கோளாகக் கொண்டமையின் அப்பெயர் பெற்றது. இலக்கு + அணம் = இலக்கணம். உள்ளுரை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே என்னுந் தொல்காப்பிய நூற்பாவில் (993) குறி என்னுஞ் சொல் இலக்கணத்தைக் குறித்தல் காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும் இருசொல்லுக்கும் ஒரு முதனிலையே. பொருள் வேறுபாடுபற்றி ஈறுவேறுபட்டன. இவை இரண்டும் முதனிலை யினாலும் ஈற்றினாலும் தூய தென் சொல்லே என்று தெளிக. (தமிழ் வரலாறு. 107) இலக்கியம்: இலக்கியம் என்பது தூய தமிழ் சொல். இதனை இலக்கு + இயம் எனப் பிரிக்கலாம். இது குறிக்கோளை இயம்புவது என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக் கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 1.) இலை: (1) இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை; தாள், நெல் புல் முதலியவற்றின் இலை; தோகை, சோளம் கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை, தென்னை பனை முதலியவற்றின் இலை. (சொல் கட். 66.) (2) இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழை யும் போல மெல்லிதாய் இருப்பதை இலை என்றும், நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை) ஒட்டி, நீண்டு சுரசுரப்பாக இருப்பதைத் தாள் என்றும், சோளமும் கரும்பும், போலப் பெருந்தாளாக இருப்பதைத் தோகை என்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமாய் இருப்பதை ஓலை என்றும் வழங்கினர். (கழகப் பொன்விழா மலர். 49.) இலைப்புரை கிளைத்தல்: இலை விழுந்து மோதிக் கிடக்கும் சிறு குழிகளை எல்லாம் கிண்டிக் கிளைத்து ஒரு பொருளைத் தேடிப் பார்த்தலுக்கு இலைப்புரை கிளைத்தல் என்று பெயர். இவ்வழக்கு, ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த் தலையும் குறிக்கும் (சொல். கட். 12.) இலைமறைகாய்: இலைக்குள் மறைந்து கிடந்த சிலர் கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு மட்டும் தோன்றும் காய் இலைமறைகாய். முந்தின ஆசிரியர்க்குத் தோன்றாது பிந்தின ஆசிரியர்க்குத் தோன்றும் மொழியியல்புகளை இலை மறை காய் என்பது இலக்கண ஆசிரியர் வழக்கம். (சொல். கட். 14.) இவை: இவை என்பது தன் முன் உள்ளவற்றை. (திருக்கோ: 223. போகிய) இழவு: இழவென்பது, தந்தையும் தாயும் முதலான சுற்றத் தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயனவற்றையும் இழத்தல். (தொல். பொருள் 253. பேரா.) இழுக்குதல்: மேல் நோக்கில் நல்ல நிலத்துக்கும் புதை மணல் அல்லது புதை சேற்று மண்ணுக்கும் வேற்றுமை காண முடியாது. தவறி அதில் சறுக்கியவன் புற உதவி கிட்டினாலன்றி மெல்ல மெல்ல, படிப்படியாகவே ஆனால், மீளாவகையில் அழிவு நோக்கிச் செல்வது போலப் போலிப் பண்புகளான அடிப்படைப் பண்புக் கேடுகளில் ஒரு சிறிது சறுக்கியவர்கூட மெல்ல மெல்ல, படிப்படியாகவே, ஆனால் மீளா வகையில் கேடு நோக்கிச் சென்றழிவர் என்பதை இழுக்குதல் என்ற இத்தமிழ்ச்சொல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. I. 839.) இழை: (1) காக்கும் தெய்வமாகிய திருமாலின் ஐந்து படைக்கலங்களும் எழுதி நூலிலே கோத்துக் கழுத்திலே அணிந் தால் பீடை அணுகாது என்பது பண்டையோர் கொள்கை. இதனாலேயே இழை என்னும் பெயர் நகைக்கு அமைந்தது. நூலின் பெயராகிய இழை என்பது நகையின் பெயராயிற்று. (தமிழகம் அலையும் கலையும். 177.) (2) இழைப்பு வேலைப்பாடு கொண்ட நகை, இழை எனப் பெயர் பெற்றது. பொன்னைக் கம்பிகளாக இழைத்துச் செய்யப் பட்ட நகை இழை எனப்பட்டது போலும் ! கல்லிழைத்த நகை என்பது இக்கால வழக்கிலும் உள்ளதேயாகும். எனவே பொன் வடங்களும், கல் இழைத்துச் செய்யப்பட்ட நகைகளும் இழை எனப் பெயர் பெற்றிருக்கலாம். பின்பு காலப்போக்கில் இழை என்பது எல்லா நகைகளையும் குறிக்கலாயிற்று போலும் ! (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 527) (3) பொன் வேறாகவும் மணிகள் வேறாகவும் எளிதில் பிரிந்து சிதறாதபடி இணைப்பாக இழைக்கப்பட்ட அணி கலன்களை இழை என்பது உணர்த்தும். (சங்க நூற் கட்டுரைகள். 56) இளங்காடு: பசுக்கள் முதலியன மேயாமல் காக்கின்ற இளங்காடு. (பெரும்பாண். 184 - 5. நச்) இளிவு: இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளிய னாதல். (தொல். பொருள். 253. பேரா.) இற்றி: இச்சிமரமென இக்காலத்து வழங்குகிறது. (நற்றிணை. 162. அ. நாராயண.) இறகு: தூவு, அல்லது தூவி பறவையின் உடம்பிலுள்ள சிறு தூவு; இறகு சிறகிலும் வாலிலுமுள்ள பெருந்தூவு. (சொல். கட். 52.) இறத்தல்: இறத்தல் என்பது கடத்தல். இறந்த வெகுளியில் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு இக்குறளில் இறந்த என்பதன் பொருளை நோக்குக. இறந்த காலம் என்பதிலும் அதுவே பொருள். வீட்டுக் கூரையில் ஒரு பகுதியை இறப்பு என்று சொல்வதுண்டு. இறப்பென்றால் இழவன்று. கூரையில் சுவரைக் கடந்து நிற்கும் பகுதிக்கு அது பெயர். இறையுயர் மாடம் எங்கணும் போர்த்து (சிலம்பு. நாடுகாண். 145.) இவண் இறை - இறப்பு என்று அருஞ்சொல் உரையில் கண்டிருப்பது கருதத் தக்கது. இறை என்றால் கடவுள் என்றொரு பொருளுமுண்டு; கடவுள் - கடந்து நிற்பவன் அல்லது கடத்தல். இற - கட. இறை- கடந்தவன். (புதிதாய்ப் பிறக்கும் நிலா பிறை எனப்படுவது போல் என்க) உடலைவிட்டு உயிர் நீங்கும் நிகழ்ச்சியைப் பற்றித் தமிழ ருக்கிருந்த எண்ணம் இதனால் புலப்படும். பிறமக்களைப் போல் அவர்கள் அதை நினைத்துத் திடுக்கிட்டு நடுக்கந்தரும் பெயர் களை அதற்கிடவில்லை. அதை வாழ்க்கையின் இறுதி என அவர்கள் துணியவில்லை.... யாவற்றிற்கும் உறைவிடமாகிய முதல்வனிடத்திற்கு உயிர்கள் கடந்து போதலை சாதல் எனக் காட்டுவான் இறத்தல் என்று அதை விளம்பினர். இறை: உயர்ச்சி, பெருமை, வேந்தன் என்பவற்றையும் குறிக்குமாற்றால் உயிர்துறத்தல் ஒருவகையில் மேன்மை அடைதல் என்றும் கருதப்பட்டது என்பது விளங்கும். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 85 -6) இறுமாத்தல்: தாழாத உள்ளத்தராய்ச் செம்மாத்தல். (திருக்கோ. 242. பேரா.) இறுவி: இறுவி என்பது கதிர் கொய்த தட்டை. (திருக்கோ. 144. பேரா.) இறை: (1) இறை எனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொல். பொருள். 256. பேரா.) (2) தமிழில் இறை என்பது இறைவன் நிலத்தின் பேரில் வாங்கும் ஆறில் ஒரு கடமைக்குப் பெயராகும். அதனால் தான் இறைவனுக்கும் (அரசன்) அப்பெயர் வந்தது. இறை வாங்குபவன் இறைவன் அல்லவா ! இவ்விதக் கடமையை இறைவனுக்குச் செலுத்தாத நிலங்கள் ஆலயங்களுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டிருந்தால் இறையிலி தேவதானம் என்று பெயர் பெறும். (செந்தமிழ்ச் செல்வி. 12: 80 -81.) (3) இறை அல்லது இறைவன் என்பது, அரசனுக்கும் கடவுட்கும் பொதுப்பெயர். கடவுள் எங்கும் தங்கியிருப்பது போல, அரசனுடைய ஆணை, அவனுடைய நாடெங்கும் தங்கியிருக்கிறது என்பது கருத்து, இறுத்தல் - தங்குதல். (சொல். கட். 24.) இறைச்சி: இறைச்சி என்பதற்குத் தங்கியது என்பது பொருள். கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள் எனக் கொள்க. அவை, சொல்லுவார் கருத்துக்கு ஓரளவு உவமை போல் பயன்படினும் படும். (கலி. 2. உரைவிளக்கம். இளவழ.) இறையிலி: வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும். சைவ வைணவத் திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்தக் கோயில்களுக்கு அளிக்கப் பெற்றவை பற்றிச் சந்தம் எனவும், பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரமதேயம் பட்ட விருத்தி எனவும், அறிநிலையங்கட்கு விடப் பெற்றவை சாலா போகம் எனவும் வழங்கப்பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும். (முதற் குலோத்துங்க சோழன். 89 - 90.) இறைவன்: எப்பொருளினும் தங்குகின்றவன் என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு. நாடுகாண். 184) இறுத்தல் தங்குதல் என்னும் பொருட்டாதல் மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென என்பதனுள்ளும் (சிலம்பு. அந்திமாலை. 20) காண்க. (திருவாசக விரிவுரை. சிவபு. 1-5. மறைமலை.) இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். (திருக். 387. பரி.) ஈ ஈ: ஈ என்ற தமிழ்ச் சொல்லைப் பல்லை வெளியே திறந்து காட்டாமல் உச்சரிக்க முடியாது. ஈ என்பவன் உடையவன் முன்னர் ஒரு முறைதான் பல்லைக் காட்டுகிறான். ஆனால் ஈயேன் என்பவனோ இல்லாதவன் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை ஈ என்றும் யேன் என்றும் பல்லைக்காட்டி ஆக வேண்டியிருக்கிறது. ஆகவே இது மிகமிக இழிந்த நிலை யாயிற்று. (தமிழ் உள்ளம். 120.) ஈகை: (1) அஃதாவது புகழைக் கருதியாயினும் மறுமைக்கு உறுதி வேண்டி ஆயினும் ஏற்கின்ற பேர் முகங்கண்டு மகிழ்ச்சி யாகக் குளிர்ந்த சொல்லுடனே தனக்கு இயன்ற மாத்திரம் மாறாமற் கொடுப்பதாம். (நாலடி. ஈகை. தருமர்.) (2) வறியராயினார் யாவராயினும் யாதானும் ஒன்றை வேண்டி வந்தால் அவர் தம் வறுமை கூறுவதன் முன்னே அறிந்து தமக்கு இயன்றபடி கிருபையினாலே உவந்து கடுகக் கொடுத்தலும், அறம் புகழ் என்பது கருதிக் கொடுத்தலும் ஆகிய கொடை. (நாலடி. ஈகை. பதுமனார்.) ஈதல்: (1) அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலை யும், இடுதல் என்பத கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதலையும் ; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருள்தல் என்பது அருளிக் கொடுத்தல். (சொல். கட். 56.) (2) ஈவு (வகுத்து வந்த எண்) ஈ (ஆயிரக்கணக்கில் மொய்க்கும் சிற்றுயிர்) ஈட்டு (சிறுக உழைத்துத் திரட்டு) ஈண்டு (திரள்வுறு) ஈடு (சரிக்குச்சரி) ஆகிய தொடர்புச் சொற்கள் ஈதலின் பொருட்பண்பு சுட்டுகிறது. பலகாலம் பல தடவை சிறுகச் சிறுக உழைத்துத் திரட்டிய பொருளை ஒருவர் பலருக்குப் பலகாலம் பல தடவை தேவை அறிந்தும் தகுதி அறிந்தும் பகிர்ந்து கொடுத்தலையே இச்சொல் குறிக்கிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. III. 388.) ஈதா: ஈதா என்பது ஒரு மரூஉ முடிபு; அஃது இக் காலத்து இந்தா என்று வழங்கப்படும். (பரிபாடல். 6: 60. பரி.) ஈமம்: ஈமம் என்பது பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. (புறம். 231. ப. உ) ஈழம்பூட்சி: ஈழம்பூட்சி என்பது கள் இறக்குவதற்குச் செலுத்த வேண்டிய வரியாகும். (முதற்குலோத்துங்க சோழன். 88.) ஈழவர்: மக்கள் பற்பல சமயங்களில் தமிழ் நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ் நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். கரிகால் வளவன் ஈழத்தின் மேற்படையெடுத்துப் பன்னீராயிரம் குடிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து, காவிரிக்குக் கரை கட்டு வித்ததாக அவர் மெய்க்கீர்த்தி கூறும். இங்ஙனம் கொண்டு வரப்பட்டவரும் குடியேறியவருமே ஈழவர் எனப்பட்டனர். மலையாள நாட்டில் இவரைத் தீவார் அல்லது தீயார் என்பர். (சொல். கட். 27) ஈற்றா: ஈற்றா என்றது, கடுஞ்சூல் நாகு அன்றிப் பலகால் ஈன்ற ஆவை. (திருக்கோ. 382. பேரா) உ உகிர்நுதி: உகிர்நுதி - விரல். உகிரை நுதியிலே உடையது என்னும் காரணம் பற்றியது. (குறுந். 16. சௌரி.) உட்கொள்ளும் வகைகள்: அசைத்தல் - விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல் - அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்; அரித்தல் - பூச்சி புழுப் போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்ததுதல் - சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்; ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்; உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்; உதப்புதல் - (குதப்புதல்) வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத் தல்; உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்; ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்; கடித்தல் - கடின மானதைப் பல்லால் உடைத்தல்; கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்; கறித்தல் - மெல்லக் கடித்தல்; குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல். குதட்டுதல் - கால்நடை போல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்; கொறித்தல், ஒவ்வொரு கூல மணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்: சப்புதல் - சுவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல் சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்; சாப்பிடு தல் - சோறுண்ணல்; சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்; சூப்புதல். கடினமானதைச் சப்புதல்; தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்; நக்குதல் - நாவினால் தொடுதல்; பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக்குடித்தல்; மாந்துதல் - ஒரே விடுக்கில் அல்லது பெரு மடக்காய்க் குடித்தல்; முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறை ஒன்றையிட்டுத் தின்னுதல்; மெல்லுதல் - பல்லால் அரைத்தல்; மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல் ; விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்; மிசைதல் - மிச்சில் உண்ணுதல். (சொல். கட். 54) உட்பகை: அஃதாவது புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகை. (திருக். உட்பகை. பரி.) உடல்: (1) உடல் என்ற சொல்லும் உடு என்ற முதனிலை யடியாகப் பிறந்தது. அந்த உயிருக்கு உடைபோலுள்ளது என்பது அதன் பொருள். உடையானது நைந்து போய் விட்டால் அதனை எறிந்துவிட்டுப் புதிய உடையை ஒருவன் உடுத்துக் கொள்வது போலவே, ஓருயிரானது தனது உடையாகிய உடலுக்கு மூப்புப்பருவம் என்னும் நைதல் ஏற்படுமானால் அதைநீக்கி வேறு புதிய உடலையெடுத்துக் கொள்கிறது. இவ்வாறு விதுரன் என்பான், தனது தமையனாகிய திருதராட்டிரன் தன் மைந்தர்களாகிய துரியோதனன் முதலி யோரை இழந்து துன்புறுங்காலை, அத்துன்பத்தைப் போக்கு முகத்தால். நைந்த தூசினை நீக்கியோர் கோடிநண் ணியபோல் வந்த மூப்பினை நீக்கியோர் சனனத்தில் மருவும் இந்த வாறுமூப் பொரிந்தொழிந் தெடுத்திடும் சனனம் அந்த மாதியை அறிந்தவ னேதன்னை அறிந்தோன் என்று கூறியதாக, அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர், தாம் பாடிய பாரதத்தில் கூறுகின்றார். (கட்டுரைப் பொழில். 144.) (2) உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடன் இருப்பது உடல் அல்லது உடம்பு; குஞ்சு பொரித்தபின் தொடர்பு நீங்கும் முட்டைக் கூடுபோல உயிரை விட்டு நீங்குவது குடம்பை அல்லது கூடு. உயிரை மேலாகப் பொதிந்திருப்பது மெய்; தோல் நரம்பு எலும்பு தசை அரத்தம் முதலிய ஏழுவகைத் தாதுக்களால் யாக்கப்பெற்றிருப்பது அல்லது முடையப்பட் டிருப்பது யாக்கை அல்லது முடை; உயிர் நீங்கியபின் கட்டை போலக் கிடந்து எரிவது அல்லது மண்ணொடு போவது கட்டை. (சொல். கட். 31.) (3) உடல் உடம்பிற் கைகால் தலையற்ற நடுப்பகுதி; உடம்பு முழுவுடம்பு; உடக்கு உள்ளீடற்ற உடம்புக்கூடு; யாக்கை எழு வகைத் தாதுக்களாற் கட்டப்பட்டது. மெய் உயிரை மேலாகப் பொதிந்திருப்பது; மேனி உடம்பின் மேற்புறம். (சொல். கட். 40.) உடன் கூட்டம்: அரசன், தான் விரும்பியவாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவன் எனினும் பல அதிகாரிகள் உடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம் இவ் வதிகாரிகளை உடன் கூட்டத்ததிகாரிகள் என்று கல்வெட்டுக் களும், செப்பேடுகளும் கூறுகின்றன. (முதற் குலோத்துங்க சோழன். 83 - 84.) உடை: (1) உடம்பைச் சூழ்ந்திருக்கும் உடை எனப்படுவது புறப்பற்றுக்களின் துவக்கம் ஆகின்றது. இதிலிருந்தே உடைமை என்னும் ஏனைப்புறப்பற்றுக்களாகிய செல்வங்கள் எல்லாம் முறையே கிளைத்துச் சூழலிட்டுச் செல்லுதலும் அறியப்படும். (சங்க நூற்கட்டுரைகள். II. 44.) (2) சூழக்கட்டுதல் என்னும் பொருளில் உடை எனவும் அலை அலையாக அசையக் கட்டுதல் என்னும் பொருளில் ஆடை எனவும் நம்முன்னோர் முறையே பெயரமைத்து வழங்கி யிருக்கின்றனர். (சங்க நூற் கட்டுரைகள். II. 55) உடைமை: உடைமை என்ற சொல் தமிழில் உடை என்பதி னின்றும், அவ் உடை என்பதும் உடு என்பதினின்றும் பிறந் துள்ளதனைக் காணலாம். உடை என்பது உடலுக்குப் புறம்பாக அதனொடு சார அணியப்படும் ஆடை. உடுத்தல் சூழ்வரச் சுற்றி வரிதல். உடைமை இதனால் சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின. உடை என்பது பேல உடல் என்பது உடு என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததே. உண்மையில் உடு என்ற வினைப் பகுதியுடன் ஐ, அல் ஆகிய தொழிற் பெயர் விகுதிகள் சேர்ந்த வடிவங்களே இவ்விரு சொற்களும். உடலும் உடையும் ஒரு வர்க்குச் சார் பொருள்கள். முன்னது அகச் சார்பு. பின்னது புறச் சார்பு. ஆனால் உடல் அகச் சார்பானால் உடை புறச் சார் பானால், உடைமை புறப்புறச் சார்பு என்பது தெளிவு. (திருக்குறள். மணிவிளக்கவுரை. III. 248.) உடுக்கை: உடுக்கின்ற ஆடையை உடுக்கை என்றார் திருவள்ளுவர்.... உடுக்கை என்பதும் உடுப்பு என்பதும் ஒரே அடிச் சொல்லினின்றும் பிறந்தனவே ஆயினும் அவற்றின் இடையே பொருள் வேற்றுமை உண்டு. இடுப்பில் உடுத்தும் உடை உடுக்கை என்றும், மேலே அணியும் சட்டை உடுப்பு என்றும் இக்காலத்தில் வழங்கப் பெறுகின்றன. (தமிழகம் அலையும் கலையும். 174.) உண்கண்: உண்கண் - கண்டோர் நெஞ்சத்தை உண்ணும் கண். மையுண்ட கண்ணுமாம். (கலி. 108. விளக்கம். பெருமழை.) உண்டை: உண்டை திரள் வடிவினை உணர்த்தல் திவாகரத்துள் காண்க. உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய உருண்டை என்னுஞ் சொல் இடைக்குறைந்து உண்டை என்றாயிற்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 193) உண்மை: உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். (தொல். எழுத்து. 256. சி. கணேச.) உணர்வு: உணர்வு என்பது அறிவுடைமை. அஃதாவது உலகியலால் செய்யத் தகுவது அறிதல். (தொல். பொருள். 273. பேரா.) உத்தரம் தக்கணம்: ஒரு காலத்தில் பனிமலை கடலுக்குள் முழுகியும் தென்பெருங் கடல் குமரிமலையைக் கொண்ட உயர் நிலமாயுமிருந்ததினால், நாவலந்தேயத்தில் வடபால் தாழ்ந்தும் தென்பால் உயர்ந்தும் இருந்தது. பனிமலை எழுந்து குமரிமலை முழுகியபின், வடபால் உயர்ந்தும் தென்பால் தாழ்ந்தும் இருக் கின்றது. இதனால் வடதிசைக்கு உத்தரம் என்றும், தென் திசைக்குத் தக்கணம் என்றும் பெயர். உ = உயர்வு; தக்கு= தாழ்வு; தரம் அணம் என்பன ஈறுகள். உகப்பு, உச்சி, உம்பர், உயரம், உன்னு, உன்னதம் முதலிய சொற்களில் உகரவடி உயர்வு குறித்தலையும், தக்குத் தொண்டை என்னும் உலக வழக்கில், தக்கு என்பது தாழ்வு குறித்தலையுங் காண்க. தரம் என்பது நிலை எனினும் ஒக்கும். (சொல். கட். 18.) உப்பாடு: (துளுமொழியில்) உப்பாடு - ஊறுகாய். உப்பு + ஆடு = உப்பாடு. நீருப்பு - ஊறவைத்த காய் (ஊறுகாய்) இவை துளுமொழியா தமிழ் மொழியா என்னும் வேறுபாடு இல்லாமல் இருக்கின்றன. (மயிலை. சீனி. வேங். துளுமொழியும் தமிழ்மொழியும். கட்) உப்பு: உப்புணா எல்லா வளர்ச்சிக்கும் முதற்காரணமாய் இருக்கும் செந்நீரையும் எலும்பையும் செழுமை செய்து வலு வூட்டி வருகின்றது. பருத்தல் என்னும் பொருளில் வரும் உப்பு தல் என்னும் சொல் இதன் செழுமைப் பயனை நமக்கு நினை வூட்டும். சுவையுள்ளும் இதனை முதன்மைச் சுவையாக நம்ம னோர் கருதி வந்தனர் என்பது சுவைபார்த்தல் என்னும் பொருளில் உப்புப் பார்த்தல் என்னும் தொடரை வழங்கி வருதல் கொண்டுந் தெளியலாம். மேலும் விரும்பத்தக்க இனிமை இயல்புகட்கெல்லாம் பண்டைக்கால முன்னோர் உப்பென்னும் மொழியை மிக அழகாக வழங்கி வந்திருக்கின்றனர். கூடலிற் றோன்றிய உப்பு எனத் திருவள்ளுவரிலும், உயங்காக்கால் உப்பின்றாம் காமம் என நாலடியாரிலும், அமைத்தோளாய் நின்மெய்வாழ் உப்பு என அக நானூற்றிலும் வாராநின்ற வழக்குகள் அறிந்து இன்புறற்பாலன. இம்முதன்மை கருதியே நம் நாட்டவர் உணவிடுதலை உப்பிடுதல் என்றே வழங்குகின்றனர். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் முதுமொழியே இதற்கு உறு பெருஞ் சான்றாம். (சங்க நூற் கட்டுரைகள். II. 13.) உம்பற்காடு: உம்பற் காடென்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும். (அகம் 357. வேங்கடவிளக்கு) உய்த்துணர்வோர்: வெளிப்படாத பொருளை ஏதுக்களால் உணர்வோர். (திருக்கோ. 236. பேரா.) உய்யானம்: அரசர் விளையாடும் காவற் சோலை. (சிலம்பு. 14: 127. அடியார்.) உயர்திணை: உயர் என்பது மிகுதி ; திணை என்பது பொருள், உயர்ந்த திணை உயர்திணை என வினைத்தொகை. (நன். 260. மயிலை.) உயிர்: (1) மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. (தொல். எழுத்து. 8. நச்) (2) உடம்பை உய்ப்பது அல்லது செலுத்துவது உயிர். (சொல். கட். 31.) (3) தானும் இயங்கி, மெய்க்குள்ளே புகுந்து அதனையும் உய்க்கும் இயல்பினையறிந்த நம்முடைய முன்னோர்களாகிய தமிழர்கள், தாமும் தனித்து இயங்கி, மெய்யெழுத்துக்களுட் புகுந்து அவற்றையும் இயக்கும் எழுத்துக்களை உயிர் எழுத்து என்னும் பெயரிட்டுக் கூறியது வியத்தற்குரியது. இன்னும் அந்த ஆன்மாவுக்கு உயிர் என்று பெயர்வைத்ததும், அதனைத் தாங்கி நிற்கும் மெய்க்கு உடல் என்று பெயர் வைத்ததும் நினைக்குந் தோறும் நினைக்குந்தோறும் வியப்பைத் தருகின்றது. உயிர்ப்பை உடையதால் அதற்கு உயிர் என்று பெயர் வந்தது, என மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான மாபாடிய த்துள் கூறியருளினார்கள். ஆனால், தத்துவ ஞானம் கைவரப்பெற்ற பின்னரே எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயரிட்ட முன்னோர்கள், இறைவன் இந்த உயிரை உடலோடு சேர்த்து இயங்குமாறு செய்ததன் நோக்கம், அந்த ஆன்மாவானது உய்தி பெறுதற்கு, அதாவது ஈடேறுவதற்குத்தான் என்றறிந்த அவர் உய் என்ற பகுதியின் அடியாக அந்த உயிர் என்ற பெயர் கொடுத்திருக்க வேண்டுமென்று கருதினால், அது தவறாகாதன்றோ? (கட்டுரைப் பொழில். 143.) உயிர்க்குறுக்கம்: சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோல் ஆகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். (உயிர் குறுகிய எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை.) (தொல். எழுத்து: 2.நச்) உயிர்மெய்: (1) மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெறநிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும். (தொல். எழுத்து. 28. இளம்.) (2) உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (உயிர் மெய்க்கு) மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமேயாயவாறு போல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க. (தொல் எழுத்து 18. நச்) உயிர்மெய்க்கு அளவு: அ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்று என்னும் எண்ணும் க என நின்ற இடத்தும் ஒக்கும். ஆ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்றென்னும் எண்ணும் கா என நின்ற இடத்தும் ஒக்கும்.... ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின் நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி உப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட் பெற்றி என்று கொள்வதல்லது காரணம் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர். (தொல். எழுத்து 10. நச்) உயிர்ப்பு: உயிர்ப்பு என்பது வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றான் என்பது. (தொல். பொருள். 260. பேரா.) உரம்: உரம் என்பது அறிவாதல் உரன் என்னும் தோட்டி யான் (குறள். 24) என்பதனானும் அறிக. (திருக். 600. பரி.) உரிச்சொல்: காய் என்ற வேர்ச்சொல் நீவெறு சூடாகு சூடாக்கு என்ற பொருளைத் தரும் முன்னிலை ஏவலாக வரும். அச்சொல்லே பெயர்ச் சொல்லாக நின்று, ஒன்றின் காய் (மாங்காய்) என்ற பொருளிலும் வரும். காய் கொம்பு என்றால் காய்கின்ற, காய்ந்த, காயும் - கொம்பு என்று பொருள் தரும். காய்ந்தது, காய்த்தது என்ற சொற்களில் பகுதியாகவும் வந் துள்ளது. இனி, காய்தல், காய்ச்சல், காயல் என விகுதிகள் பெற்ற பெயர்களாகவும் வரும். இவ்வாறு ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தார் போலும். அதன் இயல்பைப் பற்றிக் கூறுங்கால், பெயரினும் வினையினும் மெய்தடுமாறி வரும் என்று கூறி யிருப்பது உண்மை நிலையை அறிவிக்கும் பொருட் செறிவு மிக்க கூற்றாகும். (பழந்தமிழ். 191.) உருபும் சாரியையும்: ஆன் உருபிற்கும் ஆன் சாரியைக்கும் இன் உருபிற்கும் இன் சாரியைக்கும் வேற்றுமை யாது எனின், அவை சாரியை யான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும். உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலாவென்று உணர்க. (தொல். எழுத்து. நச். 119.) உருவகம்: உவமையும் பொருளும் ஒன்றுபட ஒன்றுள் ஒன்று மறைய உருவாக்கிய உவமை உருவகம் எனப்படும். (முதற்குறள். உவமை. 135.) உருள் இழை: உருள் இழை என்றது தலையில் கிடந் துருளும் தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலம், என்பது (நச்.) உரையாற் பெற்றாம். இதனைத் தொய்யகம் என்பர் இளங்கோ. அடியார்க்கு நல்லார் பூரப்பாளை என்பர். (சிலப். 6: 107). (கலி. 59. விளக்கம். பெருமழை.) உரைப்பாட்டு மடை: உரையாகிய பாட்டை இடைப் படுத்தது. (சிலப். 17:2. அரும்பத.) உரையசை: உரையசையாவது பொருட்பேறு குறியாது கட்டுரைச் சுவைபட வருவது. என்னே, அசைத்தலே பொருளாக வருவதாம். (திருக்குறள். தண்ட. 235.) உலகம்: (1) உலகம் என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும். (முருகு. 1. நச்.) (2) உலகம் என்றால் மக்கள் மேலும், நிலத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் நிற்கும் பலபொருள் ஒருசொல். (தண்டி. 122. சுப். தே.) (3) உலகம் = வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம். 51) = சுழல்வோர். உலா - நகரை வலமாகச் சுற்றி வருதல். (புறநானுற்றுச் சொற்பொழிவுகள். 349.) உலகு: உல என்பது வேர்ச் சொல். அதற்கு உருண்டை என்பது பொருள். இவ்வேர்ச் சொல்லினின்றும் பிறக்கும் தமிழ்ச் சொற்கள் உலக்கை, உலம், உலண்டு முதலியனவாகும். ஆதியிற் கற்பாறைக்குக் குழியாகிய உரல்களில் உருண்டைக் கல்லையே உலக்கையாகப் பயன்படுத்தினர் சீவகன் உலங்கலந்த உயர்ந்த தோளான் எனத் திருத்தக்கதேவர் குறித்தனர். உருண்டைக் கல்லை ஒத்த தோளான் என்பது இதன் பொருள். உலண்டு என்பது உருண்டை வடிவான ஒருவகைப் புழு. எனவே உருண்டை வடி வானது எனும் பொருளில் தோன்றியது உலகு என்னும் தமிழ்ச் சொல். (வள்ளுவர் வழங்கும் மொழிநூல். வீ. ப. கா. சுந்தரம்.) உலமரல்: உலமரலும், அலமரல் போல்வதோர் உரிச் சொல். (புறம். 207. ப.உ.) உவமம்: உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொரு ளினை ஒப்புமை கூறுதல். (தொல். பொருள். 276. பேரா.) உவர்ப்பு: வெறுப்பு; அஃதாவது பொருள்கண்மேற் சென்ற பற்றுள்ளத்தை விடுதல். (சீவக. 2987.நச்.) உவரி: (1) உவர் + இ; உப்புச் சுவையை உடைய கடலைக் குறித்தது. உலகு சூழ் உவரி (கம்ப. ஊர்தே. 15) என்பதும் காண்க. (நாலடி. 146. குறிப்பு.) (2) உவரி - உவர் நீர் உடையது. இ வினைமுதற் பொருள் விகுதி. (திருவிளை. வாதவூரடிகளுக்கு. 2. ந. மு. வே.) உவா: திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு வாவு என்ற ஒருசொல் வழக்கு உண்டு. பதினைந்து நாட்கு ஒரு முறை - நிறை நாளும் மறைநாளும் - விடுமுறையளிப்பது பண்டை வழக்கம். ஆதலின் பதினைந்து என்று பொருள் தரும் உவாச்சொல் விடுமுறையைக் குறிப்பதாயிற்று. உவாஅப் பதினான்கு என்பது இலக்கணத்து வரும் ஒரு தொடர். உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை (புறம். 3) என்பது நிறைமதியைக் குறிக்கின்றது. (தொல்காப்பியப் புதுமை. 79.) உவை: உவை என்பது முன்னின்றவற்றில் சிறிது சேய வற்றை. (திருக்கோ. 223. பேரா. உழப்பு: உழப்பு என்பது முயற்சி. இஃது உழ என்னும் முதனிலை அடியாகப் பிறந்த தொழிற்பெயர். உழவு என்பதும் அத்தகையதே. நம் முன்னோர் முயற்சிகள் அனைத்தினும் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் விளைக்கும் முயற்சியே சிறந்த தெனக் கொண்டோர் ஆதலின் அம்முயற்சியே முயற்சி என்பது தோன்ற அதனை உழவு (முயற்சி) என்றனர். பின்னர்ப் பிற முயற்சிகளை அதனின்று வேறுபடுத்தற் பொருட்டு அப்பிற வற்றை உழப்பு எனப் பிறிதொரு தொழிற் பெயர் விகுதி புணர்ந்து வழங்கினர். ஆகவே உழப்பு, உழவு என இவ்விரு சொற்களும் இருவேறு பொருளில் வழங்கி வருவன ஆயினும், தொடக்கத்தில் ஒரே முதனிலை அடியாகப் பிறந்து ஒரு பொருளே குறித்தனவாம் என்பது புலப்படும். உழைப்பு, உழை, உழு, ஊழ், உழல் முதலிய பிறசொற்களும் உழ என்னும் முத னிலை அடியாகப் பிறந்தனவே. (திருக்குறள் தண்ட. 14.) உழலை: உழலுங் கட்டை உழலை எனப்பட்டது. மாடுகள் நுழையாமல் தடுப்பதற்காக வழியில் இவ்வுழலைகள் கோத்து வைப்பர். இவை கோப்பதற்காகத் துளைத்து இரு புறமும் மரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். (கலி. 106. உரைவிளக்கம். இளவழ) உழவு: உழவுத்தொழில் கடினமாயினும் மேற்கொள்ளத் தக்கது. அத்தொழிலின் கடுமை உழவு என்ற சொல்லாலே விளங்குகின்றது. உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது. (தமிழ் காட்டும் உலகு - உலகத்தார்க்கு ஆணி - 82.) உழிஞை: உழிஞை - கொற்றான் ; அது குடநாட்டார் வழக்கு. (புறம். 50. ப. உ.) உழு: உழு, எழு, முழு, முதலிய சில பகுதிகள் உழால், எழால், முழால், தழால் முதலியனவாய் வந்து தொழிற் பெய ராயும், பெயராயும் நிற்கும். உழால் - உழுதல்; எழால். எழுதல், யாழின் இசை; முழால் - தழுவுதல்; தழால் - தழுவுதல் இவை அளபெடையோடு வருதலும் உண்டு. (செந்தமிழ் 11: 44.) உழையர்: உழையர் - பக்கத்தில் உள்ளவர். உழை - பக்கம். என்றது நெருங்கிப்பழகும் நிலையினர் என்றவாறு. தழையினும் உழையிற் போகான். (குறுந். 294) (குறுந்தொகை. 41. உ. வே. சா.) உளது: உளது என்பது உண்டு எனவும் வரும். அதிலும் உள் என்பதே முதனிலையாகும். ஒன்று இருப்பதும் இல்லா ததும் மக்கள் நெஞ்சில் அது தோன்றுவதும் தோன்றாமை யுமே ஆகலின் இருத்தலும் உளதாதலும் ஒன்றேயாம். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 33.) உளவு: உள் என்பது நெஞ்சைக் குறிக்கும்; அஃது அம் ஈறுபெற்று உளம், உள்ளம் எனப்படும்... உள்ளிருக்கும் கொட்டைக்கு இசைய அதை மூடியிருக்கும் பழம் அமைப்புப் பெறுமாறு அகத்தில் எழும் உணர்வு நினைவுகளுக்கு இசையச் சொல்லும் செயலும் அமைதி பெறும். பழத்தை அறுத்துக் கொட்டையை வெளிப்படுத்துமாறு செய்கை யைப் பகுத்துப் பார்த்து உண்மை அறியப்படும். ஒருவன் யாது நோக்கத்தைக் கொண்ட ஒன்றைச் செய்தான் என்று புலப்படாவிடின் அவனது செயலின் தன்மை இன்ன தெனத்துணிய இடமில்லை. MjÈ‹ ‘mj‹ msî ahJ? என்ற கேள்வி பிறக்கிறது. உளவு - உள்ளிருப்பது, உண்மை, உளவன் - உள்ளதை அறிந்து சொல்வோன் - ஒற்றன். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 33.) உளியம்: உளியம் - கரடி. உளியம் என்ற சொல் உளி போன்று நிலத்தைத் தோண்டுதற்கேற்ப அமைந்த நகத்தைக் குறித்துக் கரடிக்கு வழங்கியது தெளிவாகின்றது. நிலத்தைத் தோண்டும் உளியை உடையவனாய்க் கன்னமிடும் திருடனைக் குறித்துச் சிலப்பதிகாரத்திலும் மதுரைக் காஞ்சியிலும் உளியன் என்ற சொல் வழங்கியது. இதிலிருந்து உளியம் என்று கரடிக்கு வழங்கியதன் பொருத்தம் நன்கு விளங்குகின்றது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 211.) உளைப்பூ: மகரந்தத் தூள்கள் நிறைந்து வெளியே துய் போல் இருப்பதையே உளைப்பூ என்ற சொல் உணர்த்துகிறது. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 45.) உறுகண்: உறுகண் = துன்பம். உறல் என்னும் சொல் துக்கத்தை அடைதற்குரிய வினை. இதன் எதிர்மொழியாகிய பெறல் என்பது சுகத்தை அடைதற்குரிய வினை. இஃது இவ்வாறு என்பதை உறு, பெறு எனும் பகுதியடியாகப் பிறந்த ஊறு. வேறு என்னும் பெயர்கள் முறையே துன்பம் இன்பம் என்னும் பொரு ளிலே வழங்குதல் நோக்கித் தெளிக. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 2- 79) உறுப்பறை: உறுப்பறை என்பது கைகுறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 258. பேரா.) உறைக்கிணறு: உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்குமேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு எடுப்பது. இவ்வாறு சமைத்த உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு என்று சொல்லப்படும். (பட். ஆரா. 86. மறைமலை.) ஊ ஊக்கம்: ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு. (திருக். 382. காலிங்) ஊக்கமுடைமை: அஃதாவது மனம் மெலிதல் இன்றி வினை செய்வதற்கண் கிளர்ச்சி உடைத்தாதல். (திருக். ஊக்கமுடைமை. பரி.) ஊகம்: செம்முகக் குரங்கையும் (குரங்கு) கருமுகக் குரங்கையும் (முசு) கூறிய சங்கப் புலவர்கள் அவற்றினின்றும் பிரித்துக் காட்டவே அழகாக, பொருத்தமாக, நுட்பமாக - நரைமுக ஊகம் என்று ஊகக்குரங்கை விளக்கினர்...... இதன் முகத்தைச் சுற்றி நரைமயிர்க் கற்றை தொங்குவதால் இதை நரைமுக ஊகம் என்று கூறினர். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 21.) ஊசிமுறி: ஊசிமுறி என்னும் பெயர், எழுதுங்காலத்தில் எழுத்தாணியால் எழுத முடியாத ஓசையையுடைய செய்யுட் களையுடைமையாற் பெற்ற காரணப்பெயர். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். 39.) ஊடல்: (1) ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது. (தொல். பொருள். 499. பேரா.) (2) காதலர் இருவருடைய உட் கருவிகளும் உயிர்களும் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டு உள்ளங்கள் சிறத்தலையே ஊடல் என்னும் பெயரால் முன்னோர் வழங்கி வந்தனர். ஊடல் என்பது ஊடுதல், ஊடுருவுதல். உயிர் உணர்வுகள் மேன்மேலும் நுண்ணிய அகக் கருவிகளூடு ஊடுருவி, அவ்வூடலில் இன்பம் மாட்சிமைப்படுகிறது. (திருக்குறள் அறம். 16.) ஊர்கோடல்: குறைவின்றி மண்டலமாக ஒளிபரத்தல்; அல்லதூஉம் பரிவேடித்தல் எனினும் அமையும். (திருக்கோ. 262. பேரா.) ஊரணி: ஊருக்கு அணித்தானமையின் பொய்கையை ஊரணி என்று கூறுதலும், ஊரினரால் உண்ணப்படும் தகுதி யுடைய நீர்நிலையை ஊருணி என்று கூறுதலும் வழக்கென்று கொள்ளுதலும் பொருந்தும். ஊர்க்கும் அணித்தே பொய்கை என்னும் குறுந்தொகையையும் (113) உற்றவர்க்குச் சேர் ஊரணி என்னும் திருக்கோவையார் (400) அடிக்கு, சுற்றத்தார்க்கு அவர் வேண்டிய செய்ய இருத்தலின் அணித்தாய ஊரணியோடு ஒக்கும் என்ற பேராசிரியர் உரையையும் அறிக. (குறுந். 113. உ. வே. சா.) ஊரல்: குளுவை. நீர் மேல் ஊர்தலினால் ஆகுபெயர். (சிலப் 10 - 117) ஊராண்மை: உபகாரியாந் தன்மை; அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும் படத்தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறைமேற் செல்லாது இன்று போய் நாளை நின் தானையோடு வா என விட்டாற் போல்வது. (திருக். 773. பரி.) ஊருணி: உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர். ஊருணி நீர் நிறைந் தற்றே என்னும் திருக்குறளால் அச் சொல்லின் பழைமை விளங்கும். (ஊரும் பேரும். 24-44.) ஊழ்: செயல்கள் பின்னொரு காலத்தில் பயன் கூட்டுவ தற்காக உருத்துவரும் நிலையில் செய்தவனைச் செய்த முறையே தாக்குதலால் அம்முறைமை கருதி அவை ஊழ் எனப் பெயர் பெற்றன. ஊழ்த்துதல், முற்றுதல். ஊழ், முறைமை. ஊழ் என்னும் சொல்லுக்கு இந்த பொருளும் உண்டு. திட்டப்படி ஊழ் நடந்து வருதலால் விதி என்றும் அதற்குப் பெயர் மற்றொன்று சூழினும் தான் முந்துறுகின்ற எதிரற்ற வலிமை படைத்ததாதலால், அந்த விதி தலைமையான விதி என்னுங் கருத்தில் தலைவிதி என்றும் சொல்லப்படும். (திருக்குறள் அறம். 255.) ஊறு: உறுதல் உடையதனை ஊறு என்றமை. (திருக். 662. பரி) ஊனம்: இறைச்சி கொத்தும் அடைகுறடு (ஊனைத் துண்டமிட வெட்டும்போது அடியில் வைக்கும் அடைமுண்டு.) (பதிற்று: 21. ப.உ) எ எக்கர்: நீர் கொணர்ந்து குவித்த மணற்றிடர். (ஐங்குறு. 19. விளக்கம். பெருமழை.) எங்கை: என் தங்கை என்றவாறு. (திருக்கோ. 373. பேரா.) எச்சம்: எச்சம் - சந்ததி. தான் இறந்தொழிய எஞ்சி நிற்பது சந்ததி ஆதலால் சந்ததி எச்சம் எனப்பட்டது. (திருக்குறள். தண்டி. 112.) (2) தம்மால் ஆக்கப்பட்டுத் தமக்குப்பின் தம்பெயர் விளக்கி நிற்கும் புகழும் எச்சம் ஆகும். (திருக்குறள். தண்டி. 238.) எச்சவகை: எச்சவகை என்பது, சொல்லப்படாத மொழி களைக் குறித்துக் கொள்ளச் செய்தல். அது கூற்றினும் குறிப் பினும் வருதலின் வகை என்றான். (தொல். பொருள். 313. பேரா.) எட்டி, காவிதி: எட்டி காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர். (தொல். எழுத்து. 154. நச்.) எண்கு: கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது ... தெலுங்கு மொழியில் கரடியை எலுகு என்று வழங்குகின்றனர். இச்சொல் சங்க காலச் சொல்லான எண்கு என்பதன் மறு உருவமே. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 211.) எந்திரம்: எந்திரம் என்ற சொல் பொறி (‘machine’) ஐக் குறித் துள்ளது. இயன் திறம் (இயங்கும் தன்மையது) என்பதுவே எந்திரம் என்று மாறியுள்ளது. (புறம். 322.) (பழந்தமிழ். 240.) எய்யாமை: தெரியாமை என்பது ஒற்றின் நீக்கமாய் எய்யாமை ஆயிற்று. எய்யாமை - அறியாமை. இதன் உடன் பாடு தெரிதல் என்பது. இங்ஙனம் இருப்ப எய்த்தல் உடன் பாடு என்பர். குறவன் என்பதற்குப் பெண்பால் குறத்தி; குறத்தியின் திரிபு கொடிச்சி ; கொடிச்சி என்பதற்கு ஆண்பால் கொடியன் ஆகாது போல, எய்யாமை என்பதற்கு உடன்பாடு எய்தல் ஆகாது. கொடிச்சி என்பதற்கு ஆண்பால் குறவன் ஆதல் போல எய் யாமை என்பதற்கு உடன்பாடு தெரிதல் ஆகும். எய்யாமையே அறியாமையே என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் கீழ் அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட் கண் வாராமையின் எய்யாமை என்பது எதிர்மறை அன்மை அறிக என்பர் சேனாவரையர். மறைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். எய்த்தல் என்னுஞ்சொல் அறிதற் பொருளில் அக்காலத் திருப்பின் தொல்காப்பியர் அச்சொல்லையே கூறியிருப்பர். (மொழி நூல். (கார்த்) இலக்கணவியல். 143.) எருது: எருது என்ற தமிழ்ப் பதம் பழங் கன்னடத்தில் `ஏர்து என்று வழங்குகின்றது. அது ஏர் என்ற தாதுவின் அடியாகப் பிறந்த சொல். ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை `ஏர்து என்று கன்னடத்திலும், எருது என்று தமிழிலும் வழங்கலாயினர் என்பது நன்கு விளங்குகின்றது. (தமிழ் விருந்து. 107.) எருவை: தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து, கழுகு எனினும் அமையும். (புறம் 64. ப. உ) எல்லா: எல்லா; கெழுதகைப் பொதுச்சொல். (அகம். 114. வேங்கட விளக்கு.) எவ்வை: எவ்வை - தமக்கை. அன்னை என்னை எனவும், தந்தை எந்தை எனவும், வருதல் போன்று தவ்வை எவ்வை என வந்தது. (ஐங்குறு. 88. விளக்கம். பெருமழை) எழிலி: எழிலி என்பது அழகு. எழில்வாய்ந்த பொருள் எழிலியாகும். (தமிழ் விருந்து. 4.) எழு: எழு - தடை மரம். அகத்தே நுழையுங் காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. சீப்புள் ளுறுத்துத் திண்ணெழுப் போக்கி என்றார் உஞ்சைக் காண் டத்தும். எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும் என்றார் இளங்கோவடிகளாரும். (15: 215) (பெருங் இலாவண. 5. 38. பெருமழை.) எழுங்குலை: இளங்குலை. செழுங்குலை - முதிர்ந்தகுலை. (திருக்கோ. 250. பேரா) எழுத்து: (1) எழுத்து என்றது யாதனை எனின், கட்புலன் ஆகா உருவும், கட்புலன் ஆகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம். (தொல். சிறப்புப்பாயிரம். நச்.) (2) எழுதப்படுதலின் எழுத்தே. (யா. வி. 1.) (3) எழு என்பதன் அடியாகப் பிறந்த எழுதல் என்பது ஓசை எழுதலுக்கும் எழுப்புதலுக்கும் பொருந்தும் கிளத்தல் (ஓசை எழுப்புதல்) என்பதற்குக் கிள என்பது பகுதி. இதில் நின்றும் கிளவி என்னும் சொல் பிறந்து சொல்லையும் ஒரோவழி எழுத்தையும் உணர்த்தும். (தமிழ்மொழி வரலாறு; 28. கவிராசர்.) எழுதெழில்: ஓவியர் பார்த்து எழுதுதற்கு ஏதுவாகிய அழகு. (அகம். 176. வேங்கட விளக்கு) எழுவுஞ்சீப்பு: கதவுக்கு வலியாக உள்வாயிற்படியிலே வீழாது எடுக்கவிடும் மரங்கள் கதவோடு பொருந்தின மேலில் தாழுமாம்; நிரைத்த கதவுமாம்; திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ்சீப்பு என்றார். (சிலப். 15-215. அரும்பத.) எற்பாடு: (1) எல்படும் பொழுதை எற்பாடு என்பது தமிழ் வழக்கு. இன்றும், தமிழ்வழக்கு அழியா மேல்கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் படுஞாயிறு என வழங்குதல் உலகறிந்த செய்தி. (தொல்காப்பியர் பொருட்படலம்.18.) (2) எற்பாடு என்னும் சொல்லுக்கு ஞாயிற்றின் உதய காலம் எனப் பொருள் கொண்டாரும் உளர் (முதல் சூத்திர விருத்தி) எனினும் கதிரவன் மறையும். (எல் - கதிரவன்; படுதல் - மறைதல்) மாலைக்காலம் எனக் கொள்ளுதலே சிறப்புடையது. நச்சினார்க் கினியர், சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், நாற்கவிராச நம்பி முதலோரும், தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்துக்குப் புத்துரை வகுத்த டாக்டர் சோம சுந்தர பாரதியாரும் மாலை என்றே பொருள் கொண்டனர். டாக்டர் பாரதியாரவர்களின் அகத்திணையியல் உரை நூலுள் 18 - 24 பக்கங்களில், இதுபற்றிய விளக்கம் காணலாம். ஐங்குறு நூற்றின் பழைய உரையாசிரியரும் எற்பாடு என்பதை மாலை எனவே கொண்டார். (ஐங். 116. உரைக் குறிப்பு) என்பு: எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச்சொல் என்பு என வழங்குகின்றது....... கன்னடத்தில் எலும்பை எலு என்கிறார்கள். எலும்பின் ஆதிநிலையினை நாடும்பொழுது மலையாளம் வந்து உதவு கின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் எலு என்றாயிற்று. தமிழில் விகுதி பெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது. (தமிழ் விருந்து. 96.) என்மனார்: என்மனார் என்பது செய்யுள் முடிபு எய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல். (தொல். சொல். 1. சேனா.) ஏ ஏடா: கீழோனை முன்னிலைப்படுத்தும் விளி. (சீவக. 1236.) (பெருந்தொகை. 224. மு. இராகவ.) ஏமம்: V>V«>Vk« = பாதுகாப்பு, இன்பம். ஏ= உயர்ச்சி, ஏ பெற்றாகும் என்பது தொல்காப்பியம். விலங்குகளாலும் பகைவ ராலும் வெள்ளத்தாலும் துன்பம் நேரும் போது உயர்ந்த இடம் பாதுகாப்பிற்கு ஏதுவானது. பாதுகாப்பால் இன்பம் உண் டாகும். ஏமம் > சேமம். ஒ. நோ: V©> சேண். சேம அச்சு (புறம். 102) (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 349.) ஏமார்த்தல்: ஏமம் ஆர்த்தல் என்பது ஏமார்த்தல் என் றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. (திருக். 660. பரி.) ஏமாறி: ஏமம் + மாறி = ஏமாறி. பாதுகாவலான நிலையில் இருந்து மாறி என்பது கருத்து. (நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. 137.) ஏரகம்: ஏரகம் - மலை நாட்டகத்து ஒரு திருப்பதி. (முருகு. 188 -9. நச்) ஏரணம்: ஏரணம்- தருக்கம். ஏர் + அணம். ஏரணம் - எழுச்சி. (ஒப்பியன் மொழிநூல். 143.) ஏரி: ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ஏரி என்று பெயர் பெற்றது. (தமிழ் விருந்து. 87.) ஏர்: தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு இட்டபேர்களுள் ஒன்று ஏர். அவர்க்குச் சிறந்த தொழிலாக அமைந்த தொன்றை ஏர் எனவே செப்பினர். அதனால், ஏர் என்பது அழகு என்னும் பொருளை நாளடைவிற் பெறுவதாயிற்று. ஏரின் உழாஅர் உழவர் என்ற இடத்தில், ஏர் என்பது கலப்பை என்னும் பொருளில் உள்ளது. ஏரினும் நன்றால் எது விடுதல் என்ற விடத்து அஃது உழுதல் என்னும் பொருளில் அமைந் துள்ளது. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்று, இரப்பும் ஓர் ஏர் உடைத்து என்ற திருக்குறளில், ஏர் என்பது அழகு என்னும் பொருளில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து ஏர்த்தொழில் எத்துணைச் சிறப்புடைத்தாக மதிக்கப்பட்டது என்பது அறியப்படும். மேலும் ஏர் என்னும் சொல் எருது என்னும் பொரு ளிலும் வழங்கப்பட்டிருத்தலைக் காண்கின்றோம். நல்லேர் நடந்த நசை சால் விளைவயல் என்ற மதுரைக் காஞ்சியடியில், ஏர் என்பது எருது என்னும் பொருள் உடையது. உழவர் ஏரோர் எனப்பட்டனர். நெற்களம் ஏர்க்களம் எனப்பட்டது. ஏர்த் தொழிலுக்குத் தொடர்புடைய உரம் எரு எனப்பட்டது. அது குவிக்கப்பட்டிருந்த பொதுவிடம் எருமன்றம் எனப் பட்டது. ஏர்த் தொழில் செய்வதற்கு உதவுவதாலும், எருவினைத் தருவதாலும் ஒரு விலங்கு எருது எனப்பட்டது. இக் காரணங் களால் உழுதொழிலைத் தமிழர் சிறப்புடையதாகக் கருதினர் என்பது போதரும். (தமிழ் காட்டும் உலகு. 84.) ஏழடி வருதல்: ஏழடி வருதல் ஒரு மரபு; ஏழிசைக்கும் வழிபாடு செய்தானாகக் கருதுதலின். (பொருந. 166. நச்.) ஏழில்: ஏழில் என்பது, தமிழ் இசைக் கருவிகளில் ஒன்று. அதுபோன்ற தோற்றமுடைமையால் அம்மலை - ஏழில் மலை எனப் பெயர் பெற்றது. வடவர் அம்மலையைச் சப்த சைலம் என்பர். பிற்காலத்தே அவ்வேழில் மலை - எலிமலை எனத் திரிந்து வழங்கப்பட்டது. அதனால் அவ்வேழில் மலை சூழ்ந்த பகுதியை வடமொழியாளர் மூஷிக நாடு v‹wd®.மூÎf« - எலி. (கொங்குநாடு. 127) ஏழைமை: நுழைந்த உணர்வினர் அன்றி வரும் வெண்மை. (தொல். பொருள். 274. பேரா.) ஏறுநடை: அசைவும் தலை எடுப்பும் பொருந்திய நடை. (திருக். 59. மணக்.) ஐ ஐந்தொகை: ஐந்து தொகை. விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம் என்னும் ஐவகை விவரம் காட்டும் கணக்கு. (செட்டி நாடும் தமிழும். 205.) ஐயம்: (1) ஐயம் என்பது, ஒரு பொருள்மேல், இரு பொருள் தன்மை கருதி வரும் மனத் தடுமாற்றம். (தொல். பொருள். 260. பேரா.) (2) ஐயமாவது, பல தலையாய உணர்வு; அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; பேய்த்தேரோ, புனலோ, கயிறோ, அரவோ எனத் துணியாது நிற்பதும் அது. (திருக். 353. பரி) ஐயர்: ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு ஐ என்பது பகுதி. ஐ என்பது வியப்புப் பொருள் பற்றிய ஓர் ஒலிக் குறிப்பு இடைச்சொல். இன்னும் வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து ஐ என்பது, தமிழர்க்கு - சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு. ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம். (உரி. 89) ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன். வியக்கப்படத் தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரியதாகவே இருக்கும். ஒருவனுக்குப் பெரியோராய் இருப்ப வர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன், என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும். (ஒப்பியன் மொழி நூல். முன்னுரை. 31-32.) ஐயவி: ஐயவி என்றது கதவிற்குக் காவலாகப் புற வாயிலிலே தூக்கப்படும் துலாமரத்தை. (பதிற்று. 16. ப.உ.) ஒ ஒக்கிடுதல்: ஒக்க + இடுதல். ஒழுங்கு படுத்துதல்; பழுது பார்த்தல். (செட்டிநாடும் தமிழும். 205.) ஒடுக்கல் - அடக்கல்: (ஒடுக்கல் அடக்கல் என்னும்) இரண் டுக்கும் ஒரே பொருளே ஆயினும் தலையாய ஒரு வேறு பாடுளது. ஒருவன் தன்பால் எழும் ஆசையை வேண்டாம் என்று தடுத்துக் கொண்டு அவ்வாறு தடுத்துக் கொள்வதையும் அறிந் திருப்பானானால் அப்பொழுது நிகழ்வது ஒடுக்கல். ஆகவே ஒடுக்கல் என்பது ஒருவன் முயன்று அற நெறி நிற்பது. அடக்கல் என்பது அவன் அறியாமலே நிகழ்வது. (கலைக்களஞ்சியம். 1:42.) ஒட்டகம்: ஒட்டகம் என்பது அக்கால மரபுப்படி தமிழ்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டும். ஒருமாதம் வரை பட்டினி இருக்கும் திறம் ஒட்டகத்தின் சிறப்பியல்பாம். ஒட்டப் போடுதல் - பட்டினியிருத்தல். ஆதலால், அத்திறம் பற்றி அதற்கு அப்பெயர் இடப்பட்டிருக்கலாம். (தமிழ் வரலாறு. 237.) ஒட்டுப்புதவம்: இரட்டைக் கதவம். (சிலப். 11 : 120. அடியார்) ஒப்புரவறிதல்: அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல். உலக நடையினை அறிதலாவது உலகம் நடை பெறு வது மக்கள் பலர்கூடி ஒருவர்க் கொருவர் உதவி செய்து வாழ்வதால்தான் என்னும் உண்மையினை அறிதல். அவ் வுண்மை யாங்ஙனம் பெறப்பட்டதோ என்னின், யாம் நாள் தோறும் கண்கூடாகக் கண்டும் கொண்டும் வருதலால் பெறப் பட்டது என்க. என்னை? நாம் உண்ணும் ஊணும், உடுக்கும் உடையும், இருக்கும் இல்லமும், துய்க்கும் இன்பமும் இவற்றின் தொகுப்பாக வாழும் வாழ்க்கையும் நம்மில் ஒவ்வொருவரும் பிறர் உதவியின்றித் தாமே அமைத்துக்கொண்டன ஆகாது, பலர் உதவியும் கூடி அமைந்தவாகலின் என்பது. ஒருவன் உண்ணும் ஒரு பிடி சோறுதானும், உழுவாரும் விதைப்பாரும் அறுப்பாரும் தெழிப்பாரும் குவிப்பாரும் காப்பாரும் விற்பாரும் இன்றி அவனுக்கு எய்துமாறு இல்லை. இன்னும் நிலத்தில் விளையும் நெல் இலையிற் சோறாவதற்கு எத்துணை மக்கள் உதவியை நாடிற்றென்று ஊடுருவி நோக்கிக் கணிப்பின் அத்தொகை இறும்பூது பயக்கும். அவரெல்லாம் பண்டமும் ஏவலும் கொள்வாரும் கொடுப்பாருமாய்க் கருதப்படினும் ஊன்றி நோக்குவார்க்கு அவரெல்லாம் ஒப்புரவு என்னும் கடப்பாடு பற்றி ஒழுகின் அல்லது உலக நடை இடையூறுபடும் என்பது தெள்ளிதின் விளங்கும். (திருக்குறள். தண்ட. அதி. 22.) ஒப்புரவு: ஒப்புரவு என்னும் சொல்லை ஒப்பு, உரவு எனப் பிரிக்கலாம். உரவு என்பது விகுதி. நல்குரவு, துப்புரவு எனும் சொற்களில் உரவு என்பது விகுதி. அதுபோலவே ஒப்புரவிலும் ஒப்பு என்பது பகுதி. ஒப்புரவு. என்பதன் பொருள், பொருந்தி வாழ்தலாகும். (வள்ளுவர் வழங்கும் மொழிநூல் (கட்டுரை) - வீ. ப. கா. சுந்தரம்.) ஒருத்தல்: ஒருத்தல் - யானை. ஒரு என்ற சொல் தனிமை என்ற பொருளிலும் ஒன்று என்ற பொருளிலும் வழங்குகின்றது. ஒருத்தல் என்ற சொல் இந்தப்பொருள் அடிப்படையில் தோன்றி யிருக்கலாம். மற்றும், ஒரீஇ என்ற தனியே விலகும் நிகழ்ச்சியைக் குறிக்கும். ஒருத்தல் என்ற சொல்லே அரிய பொருளுடைய சொல். இனத்தில் காணாது தனித்தேயிருக்கும் யானைக்குச் சங்க நூலார் வழங்கிய அழகிய ஆழம் பொதிந்த சொல் ஒருத்த லாகும். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 336.) ஒலியற்கண்ணி: தழைத்த கண்ணி: தளிர்மாலை எனினும் அமையும். (புறம். 202. ப.உ.) ஒழுக்கம்: (1) ஒழுக்கமாவது உயர்ந்தோர் ஒழுகின நெறியில் ஒழுகுதல். (திருக். 140. மணக்) (2) ஒழுக்கம் என்பது தொடர்ந்த நடை. அல்லது கடைப் பிடி என்னும் பொருட்டாம். ஆசிரியர் தொல்காப்பியனார், வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்வும் நெடுமையும் செய்யும் பொருள என உரியியலில் ஓதியிருக்கும் நூற்பாவினால் தொடர்ந்து செல்லும் இந் நெடுமைப் பொருளே அன்றி இணைந்தமைந்து இனிதாகும் நேர்மைக் கருத்தும் ஒழுகல் என்னும் மொழிக்கு உரித்தாதல் பெறப்படும். (சங்க நூற் கட்டுரைகள். II. 109.) (3) ஒழுக்கம் என்னும் மொழிக்கு நயப்பாடு அதனால் தொடர்ப்பாடு என்னும் அரிய இருபெரும் பொருள்கள் உளவாதல் அவ் விருவகைக் கருத்தினும் தமிழ் மொழியில் பற் பல வகையாக வழங்கி வந்திருத்தல் கொண்டுந் தெளிந்து கொள்ளலாம். நீர் இளக்கமாய் இருத்தலால் அது மேடுகளிலும் பள்ளங்களிலும் இணைந்தமைந்து நிறைதலும் மேலும் தொடர்ந்து செல்லலும் உடையதாய் ஒழுகு நீரெனப் படு கின்றது. கட்டிப்பட்ட இயல்பினவான பொருள்கள் தந்நிலை நெகிழ்ந்து உருகி இளக்கங் கொள்ளலை ஒழுகுதல் என்ற லானும், பொற்கட்டி முதலியன நீளக் கம்பியாக நீட்டுதற்குரிய மென்பதனுற்று வருதலை ஒழுகு நீட்சி என்றலானும், இனி தான செய்யுளோசையை ஒழுகிசை என்றலானும், மெதுவாக நகர்ந்து தொடரும் உப்பு வண்டிகளை ஒழுகை என்றலானும், ஒருவருக் கொருவர் அழகு காட்டி விளையாடுதலை ஒழுங்கு காட்டல் என்றலானும், நேரொன்றாசிரியத் தளையும், நிரை யொன்றாசிரியத்தளையும் விரவி அமையும் செய்யுளோசையை ஒழுகிசையகவல் என்றலானும் இரண்டறக் கலந்து ஒன்றாய் விடும் இணக்கத்தை ஒழுகு நட்பு என்றலானும் பிறவாற்றானும் ஒழுகுதல் என்னும் மொழியில் இளக்கம், மென்மை, இனிமை, அமைதி, அழகு, விரவல், பிரிவறல் முதலிய இணைந்தமைந்து மாண்புறுதற் கேதுவான நேர்மைப் பண்புகளெல்லாம் ஒக்கக் கனிந்தொழுகுதல் கண்டு கொள்ளப்படும். நேர்மையின் அடியாகவே அது நீளத் தொடர்ந் தொழுகும் ஆற்றலும் உற்று, நெடுமைப் பொருள் உணர்த்தி வருதலும் தமிழிற் பலவாகும். பொருள்களை வரிசையாக நீள வைத் தலையும், கம்பி முதலியவற்றை நீட்டுதலையும் ஒழுக்கல் என்ப. தொடர்ந்து நீளச் செல்லும் எறும்பினை ஒழுக்கெறும்பு எனவும் வழங்குப. இறைவற்குத் தொடர்பாக நாடோறும் படைக்கும் அவித்த உணவினைத் திருக் கோயிலில் ஒழுக்கவி எனலும், நீளத் தொடர்ந்தோடிப் பயிர்கட்குப் பாயும் வாய்க் கால் நீரை ஒழுக்கு நீர் எனலும், தொடர்ந்த விளை நிலங்களின் பயிர்க் கணக்கை நடை ஒழுங்கு எனலும் வழக்காம். (சங்க நூற் கட்டுரைகள் II. 110 - 113.) ஒழுகுதல் : மன மொழி மெய்களை ஒடுக்கி ஒப்புரவு முதலிய செய்து போதல். (திருக். 974. பரி.) ஒழுக்காறு: ஒழுக்கமாவது செலவு; நடக்கை எனினும் ஆம். ஓரிடத்தை நாடி நடந்து செல்வோர் ஆறலை கள்வரும், நஞ்சுடை அரவமும், நெஞ்சுடை உருவின் அஞ்சுவர மண்டும் விலங்கின மும், திரிதரக் கல்லும் முள்ளும் செறிதரு சாரற் சிறு வழி செல்லின், ஏதமுறுதல் ஒரு தலை. அன்றிக் குறித்த விடஞ் சேர்தல் அரிது. ஆதலால் நடக்கும் நெறி குற்றமற்ற தன்மைத்தாக வேண்டும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் ஒழுக்க ஆறு, அழுக்காறு இல்லாத இயல் பிற்று. (திருக்குறள். தண்ட. 161.) ஒளி: (1) ஒளி என்பது தான் உளதாகிய காலத்து விளங்குதல். (நாலடி. 9. விளக். உ.) (2) ஒளி என்பது தான் உள காலத்து ஒப்புரவு. (நாலடி. 9. பது) (3) தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல். (திருக்.பரி. 653) (4) (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதல் உடைமை. ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் (நாலடி) என்றார் பிறரும். (திருக்.பரி. 971) ஒளியார்: (1) ஒளியார் என்பது ஒள்ளிய அறிவுடையார். (திருக். 714.காலிங்.) (2) ஒள்ளியார் என்றது மிக்காரையும், ஒத்தாரையும்; அது விகாரத்தால் ஒளியார் என நின்றது. (திருக்.ப.உ714.) (3) ஒள்ளியார் என்பது ஒளியார் எனக் குறைந்து நின்றது. நல்லறிவும் சொல்வன்மையும் உடையார் ஒள்ளியார் என்க. (திருக்.ப.உ.714) ஒற்று: ஒற்றனை ஒற்று என்றார்; வேந்தனை வேந்து என்றாற் போல. (âU¡.gÇ. 581) ஒன்று மொழி: இரண்டு படாத ஒரு சொல் (குறுந்தொகை விளக்கம்: 73.) ஒன்று மொழிந்து : ஒருவர் துணிந்ததே காரியமாக அனை வரும் துணிந்து சொல்லி. (பதிற்று. 30. ப.உ.) ஓ ஓ: (1) ஓ வென்பது மதகு நீர் தாங்கும் பலகை. (தொல். எழுத்து. 180. நச்.) (2) தூம்பிற் கதவு. ஓவுதல், விகாரத்தால் ஓவென நின்றது எனவும் ஆம். (சிலப். 10: 109. அடியார்.) ஓத்து: (1) ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப் பட வைப்பது. (யா. வி. பாயிரம்.) (2) ஓத்து - வேதம். எழுதப்படாது ஓதப்பட்டே வந்தமை யால் வேதம் ஓத்தெனப்பட்டது. எழுதாக் கிளவி எனவுங் கூறுவர். (திருக்குறள். தண்ட 134.) ஓத ஞானியர்: வெள்ளம் போன்ற ஞானப் பெருக்கர். (ஓதம் - வெள்ளம்) (குறுந்தொகை விளக்கம். 71.) ஓதி: ஓந்திக்கு ஒரு பெயர். இடைக்குறை விகாரம் அன்று. குறைக்க வேண்டாத வழியும் (ஓதி என) வருதலின். (நற்றிணை. 92. அ. நாராயண.) ஓம்: (1) ஓம் என்ற சொல் ஓம்பு (பாதுகாத்தல்) என்ற சொல்லின் பகுதியாய தமிழே. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 4; 570.) (2) ஓங்காரம் என்பது எல்லா எழுத்தொலிகட்கும் முத லாய் அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை; ஒருவர் தமது காதைக் கையால் அடைத்து நோக்கும் வழி அதன் அகத்தே அஃது ஓவென்று இரைதலையும், புறத்தே கடலினும் அஃது அங்ஙனமே இசைத்தலையும் காணலாம். செயற்கையாக எழும் ஏனை ஓசைகளையெல்லாம் அடக்கி, உட்குடைவாக எப்பொருளைக் காதில் வைத்துக் கேட்பினும் இவ் ஓங்கார ஓசை இயற்கையாக ஒலித்தல் கேட்கப்படும். உலகம் எங்கணும் ஓவாது ஒலிக்கும் இவ்வோசையினால் உந்தப்பட்டே உலகங் களும், உலகத்துள்ள பல்வகை யுடம்புகளும் இயங்குகின்றன. இவ்வோசையானது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றவல்லதொன்றாம். ஓசை இயங்கும் முறையாலும், இயக்கப்படும் முறையாலும், அணுக்களைக் கூட்டுதலும் கூட்டி நிலைப்பித்தலும்; கூட்டியவற்றை பிரித்த லும் செய்து போதருதலை இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் ஆராய்ந்து விளக்கியிருத்தலின்; இவ்வோங்கார ஒலி உலகங்களையும், உடம்புகளையும், தோற்றுவித்தும் நிலைப் பித்தும், அழிப்பித்தும் நடைபெறுதல் மறுக்கப்படாத உண்மை யாம். இவ்வோங்கார ஒலியைப் பகுத்துக் காணுமிடத்து அஃது அ உ ம் என்னும் மூன்று ஒலிகளாய்ப் பிரியும். இவற்றுள் அகர ஒலி எல்லாச் செயற்கை ஒலிகட்கும் முதற் பிறந்து படைத்தற் றொழிலைப் புரிவதாம். உகர ஒலி அதன் பின்னே தோன்றிச் சிறிது நேரம் நிற்பதாகலின், அது படைக்கப்பட்ட பொருள் களைத் தத்தங் கால எல்லையளவும் நிலைபெறச் செய்யும். மகர ஒலி இதழ் இரண்டும் பொருந்தி முடிவதாகலின் அஃது அங்ஙனம் நிலைபெற்ற பொருள்களை அழிந்துபோகச் செய்யும். இவ்வாறு இம்மூன்றொலிகளையும் இம்மூன் றொலிகளால் செய்யப்படும் முத்தொழில்களையும் அடக்கி நிற்கும் இயற்கை ஓசையாயிருத்தலின் ஓங்காரம் எவற்றினும் சிறப்புடைத்தாம். (திருவாசக விரிவுரை. மறைமலை. பக். 53 - 54.) (3) ஓம் என்னும் ஒலியில் இனிய மெல்லோசையே நிறைந் திருத்தலும், வல்லோசை இல்லாமையும், சிறுமகாரும் உணர்வர்; உலகம் யாங்கணும் உள்ள மொழிகளின் ஓசை முறைகளை ஒரு சிறிது ஆராய்ந்து காண்பார்க்கும், தமிழல்லாத மற்ற மொழிகளெல்லாம் உரத்த ஓசைகளும், கனைக்கும், ஒலிகளும், நிரம்பி இன்னிசையிற் பழகிய செவியுடையார்க்கு வெறுப்பினைத் தோற்றுவித்தலும் தமிழ்மொழி அத்தகைய உரத்த ஓசைகளும் கனைக்கும் ஒலிகளும் சிறிதும் இன்றி எல்லாம் இனிய மெல்லிய இயற்கை ஒலிகளே நிறைந்து எல்லார்க்கும் இன்பம் பயக்கும் நீரதாய், ஓங்கார உருவினதாய் இருத்தலும் தெற்றென விளங்கும். அல்லதூஉம், ஓங்காரம் தமிழிற்குரிய ஓ வடிவினதாக ஏனை மொழிகளில் எழுதப்படுதலானும் ஓசையைக் குறிக்கும் ஓசை ஒலி என்னும் தமிழ்ச் சொற்களின் முதலில் ஓகாரம் நிற்றல்போல ஏனை மொழிகளில் ஓசையைக் குறிக்குஞ் சொற்களில் அங்ஙனம் ஓகாரம் நிற்பக் காணா மையானும்; ஓசையைக் கவரும் மக்களின் நிற்பக் காணாமை உற்று நோக்கிப் பண்டைத்தமிழர் ஓங்காரத்திற்கு வடிவு கண்டறிந்தாற்போல, ஏனைமக்கள் கண்டறிந்தார் என்பது புலப்படாமையானும்; காத்தல் என்னும் பொருள் ஓம் என் பதற்கு உண்டு என்பது வடமொழியிற் கூறப்படினும்; காத்த லெனப் பொருள்படும் ஓம்பு என்னும் முதனிலை தமிழின் கட் காணப்படுதல் போல வடமொழியிற் காணப்படாமை யானும், ஓங்காரம் தமிழிற்கே பண்டுதொட்டு உரிமையுடைய தென்பது பெற்றாம். (திருவாசக விரிவுரை. மறைமலை. பக். 60-61) ஓர்ப்பு: ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது. (இறையனார். 2. நச்.) ஓரி: ஓரி என்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம். (புறம். 109. ப.உ) ஓரை: (1) பஞ்சாய்ப் பாவைகொண்டு மகளிர் ஆடும் விளையாட்டு. (நற்றிணை. 68. அ. நாராயண.) (2) ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியைச் சார்ந்த தென்றும் வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்ததென்றும் கூறுவர். (தமிழ்ச் சுடர்மணிகள். பக். 39.) (3) ஓரை என்னும் சொல் விளையாட்டு என்னும் பொரு ளில் வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும். கோதை ஆயமொடு ஓரை தழீஇ (அகம். 49) எனவும், ஓரை ஆயம் (அகம். 219), (குறுந். 48.) எனவும், ஓரை மகளிர் (குறுந். 401) எனவும், ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர் (புறம். 176) எனவும், விளையாடு ஆயத்து ஓரை ஆடாது (நற்.2) எனவும், ஓரை என்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளில் பயின்று வழங்கியுள்ளது..... விளையாட்டென்னும் பொருளினதாகிய ஓரை என்னும் இத்தமிழ்ச் சொல்லுக்குப் பிற்காலத்தவராகிய உரையா சிரியர்கள் முகூர்த்தமெனப் பிறழ உரை கூறியுள்ளார்கள். ஓரை என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருள் இது வென உணராத ஆராய்சிசியாளர் சிலர், ஹோரா என்ற யவன மொழியே வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்து ஓரை யெனத் திரிந்ததெனப் பிழைபடக் கருதியதோடு அன்றி அக் கருத்தினை அடிப்படையாகக்கொண்டு ஓரை என்னுஞ் சொல்லை வழங்கிய தொல்காப்பியம் பிற்காலத்து நூலோ என மற்றொரு பிழைபட்ட முடிவினையும் வெளியிடு வாராயினர். (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 125-126) க கங்கு: நெருப்போடு கூடிய கரிக்கட்டி. இதற்குப் பொருள் எவ்வகராதியிலும் இல்லை. இச்சொல்லை எடுத்தாண்டவர் களும் பொரும்பாலும் கிடையாது. ஆனால் அணுக்க காலத்தில் ஒரு நூலில், மனமே நீ தீண்டக் கூடாத தீக் கங்கு என்று பயந்தவள், மகிழ்ந்து வனைந்து கொள்ளும் மாணிக்க மாயுள்ளாள் என உயர்திரு. வெ. ப. சுப்பிரமணிய முதலியார் எடுத்தாண்டிருக்கின்றார். (செந்தமிழ்ச் செல்வி. 19:273-3.) கச்சம், தேவகோடி: கச்சம், தேவகோடி என்பன சில எண்ணுப் பெயர்கள். (சீவக. 2219. நச்.) கச்சை: ஆடை நெகிழாமல் இருக்கக் கட்டிக் கொள்ளும் சுற்றுப்பட்டை. (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 70.) கட்டாயம்: ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீரவேண்டு வதைக் கட்டாயம் என்பர். கட்டவேண்டிய ஆயம் கட்டாயம். கட்டுதல், செலுத்துதல்; ஆயம், வரி, வரிகட்டுவது பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம் வரிகட்டுவது போன்ற கண்டிப்பு கட்டாயம். (சொல். கட்: 15.) கட்டு: (1) கட்டாவது முறத்திலே நெல்லை இட்டுக் குறிசொல்லுதல். (அகம். 98. வேங்கடவிளக்கு.) (2) சேரியின் முதுபெண்டாகிக் குறி சொல்லு மாதரை மனையகத்துக் கொணர்ந்து வைத்து முறத்திலே பிடி நெல்லை யிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரப் பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகணங்கெனவும், நான்காயின் பிறிதொரு நோயெனவும் கூறப்படுவது. முருகணங்கு என்று கூறின் உடனே வேலனை (முருகனுக்குப் பூசை நடத்தும் பூசாரியை) அழைத்து வெறிக்களந்திருத்தி முருக வேளுக்குச் சிறப்பெடுத்து ஆண்டுக் கழங்குக் குறிப்பார்ப்பது. (கழங்கு காண்க) (நற்றிணை. 288. அ. நாராயண.) கட்டுரை: பொருள் பொதிந்த சொல்; உறுதியை உடைய சொல்லும் ஆம். (சிலப் - பதிகம்: 54. அடியார்.) கடகம்: கங்கணம், தொடி, வளை; இவ்வணிகலன் ஆண் மக்களும் அணிதல் உண்டு என்பது கண்ணெரி தவழ வண்கை மணி நகு கடகம் ஏற்றா என்னும் சீவக சிந்தாமணிச் செய்யு ளிலும் காண்க. (முல்லை. ஆரா. :74.) கடமை: கடமையைக் காப்பது என்பது கடுமைதான். கடுமை என்னும் சொல்லில் இருந்து கடமை என்பது தோன்றிய வகையில் இருந்தே ஈது அறியப்படும். (திருக்குறள் அறம் 81) கடல்: கடல் என்னுஞ் சொல், கட்பார்வையினைக் கடந்து நிற்பது என்னும் பொருளைத் தரும். கடலினது எல்லை அதனை நோக்குவாரது கண்ணுக்குப் புலனாகாமையின் அஃது அங் ஙனம் பெயர் பெறலாயிற்று. இனிக், கடலானது எந்நேரமும் பேர் இரைச்சல் இடுவது பற்றி ஆர்கலி நரலை குரவை அழுவம் என்றும், பரந் திருப்பது பற்றிப் பரவை என்றும், ஆழ்ந்திருப்பது பற்றி ஆழி என்றும், உப்பு நீர் உடைமை பற்றி அளக்கர் பௌவம் உவரி என்றும், மழை முகிலே உண்டாக்குதல் பற்றிக் கார்கோள் என்றும், மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் மூன்றுக்கும் காரண மாதல் பற்றி முந்நீர் என்றும் பல சொற்களால் வழங்கப் படுகின்றது. (சிறுவர்க்கான செந்தமிழ். 27) கடவுள்: (1) கடவுள் என்னும் சொல்லைக் கேட்ட அள வானே அஃது எப்பொருளையும் கடந்து நிற்பது என்னும் பொருள் புலனாகா நின்றது. இனிக் கடவுள் எப்பொருளைக் கடந்து நிற்கின்றார் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ் வுலகத்தையும், இவ்வுலகத்தில் வாழும் உயிர்களையும் கடந்து நிற்கின்றார் என்றே நாம் சொல்லுதல் வேண்டும். (கடவுள் நிலைக்குமாறான கொள்கைகள் சைவம் ஆகா: 4) (2) உலகத்துப் பொருள்கள் எதனுள்ளும் அப்பொருள் களைப் பற்றிய நினைவுகள் எதனுள்ளும் கடவுள் அடங்காமல் அவற்றை யெல்லாம் அவர் கடந்து நிற்பவர் என்பதே எல்லா மக்கட்கும் உடன்பாடான பொது உண்மையாம். கடத்தல் என்பதை மூன்று வகையாகப் பாகுபடுத்தல் வேண்டும். அவை இடத்தைக் கடப்பதும், காலத்தைக் கடப் பதும், பொருட்டன்மைகளைக் கடப்பதும் என்பனவாம். அவற் றுள் இடத்தைக் கடப்பதாவது பொருள்கள் எல்லாம் இருக்கும் எல்லா இடத்தையும் கடந்து நிற்பதேயாம். (3) காலத்தைக் கடந்தவர் என்பது முக்காலத்தையும் கடந்து நிற்பவர் என்பதேயாம். பொருள்களின் தன்மையைக் கடந்தவர் என்பது அவ்வப் பொருள்களின் இயல்புகளிலும் தம்மியல்பு அடங்காமல் அவ் வெல்லாவற்றின் இயல்புகளையும் முற்றுங் கடந்து நிற்பவர் என்பதேயாம். (கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. 8-19) கடு, கடுகு: வடமொழியில் காரத்தையும் கொடுமையையும் குறிப்பனவாம். அங்குக் கட் என்னும் பகுதி போ என்னும் பொருளது. தமிழில் கடு என்பது மிகுதி முதலான பலபொருள் உடையது. வடமொழி அறிஞர் சிலர் கிரிட் பகுதி என்றும் வெட்டு என்பது பொருள் என்றும் கருதுவர். எனினும் அதுவும் பொருந்தாததே. திராவிட மொழிகளில் கடு என்னும் பகுதியில் இருந்து பிறந்த சொற்கள் மிகப் பலவாகவும் நேரிய பொருள் உடையனவாகவும் இருத்தலாலும், வடமொழியில் இதற்கு இனச் சொல் இன்மையாலும், இதனைத் திராவிடச் சொல் என்றே கொள்ளலாம். (கடுகு, கடி, கடுகடுத்தல், கடறு என்னும் தமிழ்ச் சொற்களையும் நோக்குக.) மு. வ. மொழிவரலாறு. 113.) கடுக்கை: கடுக்கை - கொன்றை. இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதில் - அகம் 393. ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ - அகம் 399. மேற் காட்டிய அகப் பாடல்களில் கடுக்கை என்றே கொன்றை அழைக்கப்படுகிறது. கடுக்கன் என்று காதில் அணியும் அணி ஒன்றுளது. அது கொன்றையின் மலரும் பருவத்து அரும்புபோல் இருப்பதால் கடுக்கை கடுக்கன் ஆனதாகத் தெரிகிறது. ஓலை, குழை என்ற செடிகளின் பாகங்கள் அணிகளுக்குப் பின்னால் பெயர் பெற்றவகை தெரிந்ததே. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 109.) கடுஞ்சூல்: முதற்கரு. நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன் (ஐங்குறு:309) என்பது காண்க. (அகம். 78. வேங்கடவிளக்கு) கடுத்தல்: மிகுதல், கடி என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது (குறள் 706 பரிமேல்) (குறுந்தொகை 136.உ. வே.சா.) கடுந்தோட் காவீரன் : தோளின் கடுமையால் எத்தகைய காவையும் ஏந்த வல்ல வீரன். (குறுந்தொகை விளக்கம் 69..) கடுவன்: குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்ற மரபியல் வரிக்கு உரை கூறுங்கால் பேராசிரியர், கடுவன் ஆண் குரங் கென்றும் இதனைக் கடியலாகா தெனப்பட்ட இழுக்கென்னை எனின் மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றன போலுமாகலின் என்று எழுதினார். கடுவன் என்ற பெயர் சங்க காலத்தில் புலவர்களுக்குக் கூட வழங்கியது. இக் காலத்தில் ஆண்பூனைக்கு வழங்குகின்றது. கடுவன் பூனை என்று பெரிய வளர்ந்த அச்சம் தரும் பூனைக்குத்தான் பெரும் பாலும் இக் காலத்தில் வழங்குவர். கண்டாம் புலி என்றும் கண்டாம் பூனை என்றும் அழைப்பர். சங்க காலத்தில் மனிதருக்கு அவர்களின் கடுமையான பார்வையாலும் தோற்றத்தாலும் வழங்கி இருக்க லாம் எனத் தெரிகின்றது. கடுவன் பூனைபோல இருக்கிறான் என்று இன்றும் வழங்குவர். காட்டுப் பூனை என்று பட்டப் பெயரிட்டுக் கூப்பிடுவதுண்டு. கடுமையான தோற்ற முடைய வர்க்கும் திருடர்க்கும் காட்டுப் பூனை என்று பெயர்கள் வழங்கக் காண்கிறோம். ஆதலின் கடுவன் என்ற சங்கநூல் வழக்கும் வெருவரு தோற்றத்தினால் காட்டுப் பூனையை ஒப்பிட்டுக் கூறி வழங்கினதாக இருக்கலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 223) கடைக்கணித்தல்: கடைக்கண்ணால் நோக்குதல் (கடைக் கண் - கண்ணினது கடை) இச்சொல் நோக்குவான் உயர்வும், நோக்கப்படுவான் தாழ்வும் விளக்கிக் கொண்டே வருகின்றமை யால் அருளுக்கு உரியவனாக்குதல் என்ற அரும் பொருளையே உடைத்து. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2:81. நச்) கடைப்பிடி: கடைப்பிடி என்பது கொண்டபொருள் மறவாமை. (இறையனார்: 2. நச்.) கண்டல்: கண்டல்-கடல் முள்ளிச்செடி. கண்டலைச் செந்தாழை என்றும், கைதையை வெண்டாழை என்றும் கூறு வாரும் உளர். (திருவிளை. வலைவீசின. 48. ந.மு. வே.) கண்டிகை: தோலிலே மூன்று நிரையாகப் பலநிறத்து மணியை வைத்துத் தைத்துக் கழுத்திற் கட்டுவது. (கலி. 96. நச்) கண்டீர்: கண்டீர் என்றது வினாவொடு சிவணாது நின்ற தோர் அசை. (சீவக. 2626. நச்) கண்ணன்: கரியோன் என்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. (திருக்கோ. 53. பேரா.) கண்ணழித்தல்: கண்ணழித்தல் என்பது பதப்பொருள் சொல்லுதல். (இறையனார். 1. நச்) கண்ணாலக் காணம்: கண்ணாலக் காணம் என்பது கல்யாண வரி என்றும், அது திருமண நாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக் கால் பணமேயாம் என்றும் ஈரோட்டிலுள்ள முதற் பராந்தக சோழன் கல்வெட்டொன்று உணர்த்துகிறது. (முதற்குலோத்துங்க சோழன். 88.) கண்ணி: (1) கண்ணி என்பது சூடும்பூ. (தொல். பொருள். 634. பேரா.) (2) ஆடவர் தலையில் சூடுதற்குரிய மாலை. (புறம். 1. ப.உ) (3) கண்ணி = கண் கண்ணாய்ப் பூவைத் தொடுத்துத் தலையிற் சூடும் தொடை (புறம். 1). தார் = மார்பில் அணியும் கட்டிமாலை (புறம். 1.) கோதை = பூமாலைப் பொதுப்பெயர் (புறம். 48.) தொடலை = தழை மாலை (புறம். 271.) ஆரம் = முத்துமாலை (புறம். 19) மாலை = மாலைப் பொதுப்பெயர் (புறம். 95.) (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 337-8) கண்ணுமை: கண்ணுமை, கண்ணுதல் அடியாகப் பிறந்த பண்புப்பெயர். கண்ணுதல் - கருதல். ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது. (தொல். பொருள். புறத்திணை. 21. ச.சோ) கண்ணுள் வினைஞர்: நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்தலில் கண்ணுள் வினைஞர் (சித்திரகாரிகள்) என்றார். (மதுரை. 517. நச்.) கண்ணோட்டம்: (1) கண்ணோட்டமாவது கண்ணால் காணப்பட்டாரை அருள் செய்தல். (திருக். கண்ணோட்டம். மணக். பரிப்.) (2) தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமை. (திருக். கண்ணோட்டம். பரி.) கணக்கலை: கணக்கலை என்ற சொல் ஆண்முசுக்களின் திரளையே - கூட்டத்தையே - குறிக்கின்றது. இதுவே குறுந் தொகையில் இனக்கலை என்று அழைக்கப்பட்டது. நாலடியார் கலைக்கணம் என்று அழைத்தது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 18) கணநரி: ஊளையிடும் நரியையே சங்க நூல்கள் கணநரி எனக் குறிப்பிடுகின்றன. இந்நரிகள் பெரும்பாலும் கூட்டமாகக் காணப்படும். கூட்டமாக மாறிமாறி ஊளையிடும். கூட்டமாகவே வேட்டையாடுவதும் உண்டு. இம்முறையாகக் கூட்டமாகவே பெரும்பாலும் கண்டதால் சங்க காலத்தில் இந்நரி இனத்தைக் கணநரி என அழைத்தனர் எனத் தெளிவாகின்றது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 163.) கணி: (1) ஆசான் பெருங்கணி எனவரும் சிலப்பதிகாரத் தொடரில் கணி என்பது சோதிடனைக் குறிக்கும் சொல். கோள் நிலைகளைக் கணிக்கின்ற காரணத்தால் சோதிடன் கணியன் எனப் பெயர் பெற்றான். (தமிழ் மொழிச் செல்வம். 88.) (2) (வேங்கைமரம்) வேங்கைமரம் குறிப்பிட்ட நல்ல நாளில் மலரும் ஆதலின், அந் நன்னாளில் தலைவன் வரைந்து கொள்வதற்கு ஏற்பாடு நடைபெறும். குறித்த நன்னாளில் மலர்ந்து ஒரு கோள்நூல் வல்லான் போல் திகழ்தலால் வேங்கையைக் கணி எனவுங் கூறுப. பன்னாளு நின்ற விடத்துங் கணி வேங்கை நன்னாளே நாடி மலர்தலால் (பழமொழி. 120) மன்ற வேங்கை மணநாட் பூத்த (அகநா. 2) என்பவை இங்கு நினைவுகூரற் பாலன. (கலி. 37. உரைவிளக்கம். இளவழ.) கணியன்: கணியன் கணக்கு வல்ல புலவன்; இவனே கணி எனவும் பெயர் பெறுவான். விளைவெல்லாம் கண்ணி யுரைப் பான் கணி என்பது புறப்பொருள் வெண்பாமாலை. பூங் குன்றத்தில் இருந்த புலவர் பெருமான் பின்வருவன வெல்லாம் கண்ணி உரைக்கும் பெருமையுடைமையால் கணியன் பூங் குன்றன் என்னப் பெயர் பெற்றார். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 242.) கணையம்: சீப்பு அகப்படக் குறுக்கே போடக்கடவ மரம். (சிலப். 15: 215. அரும்பத) கந்தழி: (1) கந்தழி என்ற சொல் பற்றிலான், சுட்டிறந்தவன் என்னும் பொருளையுடையது, கந்து என்பது முதலில் தறி என்பதை உணர்த்திப் பின் பற்றும் ஒரு பொருளைக் குறிப்ப தாய்ப் பின் பற்றுக்கோடாக உள்ளதை உருவகிக்கப் பயன் பட்டது. பழமை கந்தாக என்ற இடத்து அப்பொருள் காண்க. கடவுளை வணங்கும் நிலையத்திற்கும் அப்பெயர் வருவதைக் கந்துடை நிலை யினும், கலிகெழு கந்தக் கடவுள் கைவிட என்ற விடத்தும் காண்க. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2:58) (2) கந்தழி என்றது தீப்பிழம்பினையேயாம். அஃது அப் பொருள் தருமாறு யாங்ஙனம் எனிற், கந்து எனுஞ் சொல் பற்றுக்கோடு என்னும் பொருட்டாதல் மறங்கந்தாக நல்லமர் வீழ்ந்த (புறநானூறு. 93.) என்பதனாலும் அதன் உரையாலும் அறியப்படும். அழி என்பது அழிப்பது; எனவே கந்தழி என்பது தான் கொண்ட பற்றுக்கோட்டினைத் தானே அழிப்பது என்னும் பொருள் தருவதாகும்,. இனித், தீயானது தான் பற்றிய விறகினையும், திரி நெய்யினையும் அழித்து விடுதல் எவரும் அறிந்ததேயாம். அதனால் கந்தழி என்பது தீப்பிழம்பே ஆயிற்று. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 5; 78) கந்து: தெய்வம் உறையும் தறி. (பட்டினப். 249. நச்) கப்பணம்: இரும்பால் ஆனை நெருஞ்சி முள்ளாகப் பண்ணியது. (சீவக. 285. நச்.) கயந்தலை: யானையின் தலையைக் கயந்தலை என்று சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. யானையின் கன்றையும் கயந் தலை என்று கூறுவது தொல்காப்பியத்தில் காணப்படுவது....... யானையின் தலை மிகப் பெரியதாகினும் உள்ளே கடற்பஞ்சு போன்று மெல்லிய எலும்புகளும் வறிதான அறைகளும் உள்ள தாகலின் இதன் தலை மிக மென்மையானது. யானையின் பெரிய தலை கனமானதாக இருந்தால் அதன் தலையைத் தூக்கவோ அசைக்கவோ முடியாதென்று விலங்கு நூலார் கூறுவர். சங்க இலக்கியத்தில் யானைக் குட்டியின் தலை மிக மெல்லியது என்று கருதிக் கயந்தலை என்றழைத்தனர். கயமுனி, கயமுனிக் குழவி என்றும் அழைத்தனர். கயவென்ற சொல் மென்மை என்ற பொருள் தரும் என்று தொல்காப்பியம் கூறும். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்: 286 - 287.) கரடி: கரடி என்ற பிற்காலச் சொல் அது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய பெயராகத் தோன்று கின்றது. கரடு என்ற சொல் பாறைகளும் பெருங்கற்களும் நிறைந்த வறட்சியான நிலத்திற்கு வழங்கும். அத்தகைய கரடு நிலத்தில் வாழும் விலங்கை, கரடு நிலத்திற்கு உரியதாகக் கருதிய விலங்கைக் கரடி எனப் பெயரிட்டழைத்ததாகத் தெரிகின்றது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்: 213.) கரடிகை: கரடி கத்தினாற் போலும் ஓசையை உடைத்து ஆதலால் கரடிகை என்று பெயராயிற்று. (சிலப். 3: 26. அடியார்.) கரணம்: கன்னிமை கழியாக் குமரியொடு, கன்னிமை அகன்ற இளமனைவிக்குத் தோற்றரவில் பண்டு எவ்வேறு பாடும் இல்லை. இவ்வேமாற்ற நிலையைப் பொய் எனத் தொல்காப்பியர் குறிப்பர். புறவேறுபாடின்மை பலர்க்கு மயக்கம் செய்தலின் பொய் எனப்பட்டது. மண அடையாளம் இல்லா மனைவியை இளந்தோற்றத்தால் குமரி எனக் கொண்டு உள்ளம் போக்கிய நல்லிளைஞன், அவளை நோக்கவும், களிக்கவும், உரையாடவும், செயல் காணவும் முற்படுவான். ஏமாறு தோற்றத் தால் மேற்கொள்ளும் இக்காதல் முயற்சிகளை வழு எனத் தொல்காப்பியர் குறிப்பர். மேற்கூறிய பொய்யும் வழுவும் தோன்றிய பிற்பாடே சமுதாயத்தின் திருமணமுறைக் குறை பாடு இனச் சான்றோர்கட்குப் புலனாயிற்று. வழுவிற்குக் காரணம் பொய், வழுவகல வேண்டின் பொய் அகல வேண்டும். மணப்பக்குவம் எய்தியிருக்கும் பெண்ணுக்கும், பக்குவம் வந்து மணம் எய்திய பெண்ணுக்கும் புறத்தோற்றத்தில் யாரும் காண அடையாளம் வேண்டும் என்று சான்றோர்கட்குப் பட்டது. வேறுபாடு காட்டும் கரணம் - சடங்கு - வகுத்தனர். காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம், கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ்விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த காரணங் கள் என்று தெளிகின்றோம். (தமிழ்க்காதல். 150- 165.) கராம்: கராம் - முதலையுள் ஒருசாதி. (புறம். 37. ப.உ) கரு: கரு - கருப்பு - கருப்பம். மேகம் சூல் கொண்ட போது கருத்திருத்தலால் சூல் கருவெனப்பட்டது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 351.) கருதல்: கருதல் என்பது மறந்ததனை நினைத்தல். (தொல். பொருள். 260. பேரா.) கரும்பு: கரும்பு என்பது கரும் பயிர் என்பதன் மரூஉவே. (திருக்குறள் மணிவிளக்கவுரை. I. 396.) கருமமாராயம்: அரச காரியங்களை முட்டின்றி நடத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) கருவி: கருவியாவது வினைமுதற்றொழிற் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது. (தொல். சொல்: 73. சேனா.) கரைதல்: பழந்தமிழில் கரைதல் என்றால் அழைத்தல் காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்ணும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார். கரை என்ற சொல் மற்றொரு பெயரிலும் ஆளப்பட்டுள்ளது. கடலிற் செல்லும் கப்பல் களுக்குக் கரையிருக்கும் இடத்தைக் காட்டுவதற்காகக் கடற் கரையில் அமைக்கப்பட்டுள்ள விளைக்கைக் கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதிகாரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப் பட்டுள்ளது. (தமிழ் விருந்து. 105.) கல்லறை: கல்லால் கட்டப்பட்ட அறையெல்லாம் கல்லறை என்று சொல்லுதற்குறியன என்றாலும் பிணத்தை வைத்துக் கட்டப்பட்ட அறையையே குறித்தலைக் காண்கிறோம். ஆதலின், கல்லறை என்றசொல் தன் பொருளில் சுருங்கி விட்டது. (பழந்தமிழ். 70.) கல்லாமை: தனக்குரிய தொழிலைக் கல்லாமை. (மலை. 312. நச்) கல்லால்: கற்கத் தக்கவற்றைக் கற்பிக்க இடமாக இருந்தது பற்றி அத்தரு (மரம்) கல்லால் எனும் பெயரில் கவினுறுகின்றது. (திருவருட்பா. விரிவுரை. நெஞ்சறி. 58.) கல்வி: (1) கல்வி என்பது தவம் முதலாகிய விச்சை. (தொல் பொருள். 257. பேரா.) (2) கல்வி என்னும் தமிழ்ச் சொல் ஆழ்ந்து தெளிதல் என்னும் உயர்ந்த கருத்தையும், புலமை என்னும் தமிழ் மொழி புறத்தே காணும் உலகியற்கைகளைப் புலனறிவுகளாலும் ஆய்ந்து பயிலல் என்னும் முதிர்ந்த பொருளையும் உட்கொண்டுள்ளன. (சங்க நூற்கட்டுரைகள். II. 65.) கலங்கரை விளக்கம்: (1) திக்குக் குறி காட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம். (சிலப். 6: 141. அரும்பத.) (2) நிலையறியாத ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு. (சிலப். 6: 141. அடியார்.) கலம்: கலம் (கலன்) எங்ஙனம் நகையைக் குறித்தது என்பது இப்போது அறிய இயலவில்லை. இது, கல் என்னும் ஓசை யுண்டாக்கும் சதங்கை, சிலம்பு போன்ற காலணிகளுக்கு முதலிற் பெயராகிப் பின்பு காலப் போக்கில் நகைகளுக்குப் பொதுப் பெயராய் அமைந்ததோ என்னவோ தெரியவில்லை. (பத்துப் பாட்டு ஆராய்ச்சி. 527.) கலன்: கலன் என்பது மணிக் கற்களால் ஆனது என்னும் பொருள் உடையது. (சங்கநூற் கட்டுரைகள். I. 56.) கலி: (1) புகழால் வரும் ஆரவாரம். தழைத்த எனினும் அமையும். (திருக்கோ. 20. பேரா.) (2) சீர், பொருள், இசைகளால் எழுச்சியும் பொலிவும் கடுப்பும் உடைமைத்தாகலின் கலி என்பதும் காரணக்குறி. கலித்தல், கன்றல், கஞறல், பம்மல், எழுச்சியும் பொலிவும் எய்தும் என்ப எனவும் கம்பலை சும்மை அழுங்கல். கலிமுழக் கென்றிவை எல்லாம் அரவப் பெயரே எனவும் சொன்னார் ஆகலின். (யா. வி: 55) கலிநடம்: கலிநடம் என்றது கழாய்க் கூத்து (கழைக் கூத்து) (சிலப். 3:12. அடியார்.) கவ்வை: செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார். (திருக். 1144. பரி; மணக்.) கவரி: கவரியில் இருந்துதான் சவரி மயிர் தோன்றியது. கவரி என்ற சொல்லே சவரி ஆயிற்று. கவரி மயிரினால் செய்த சாமரம் கவரி என்று அழைக்கப்பட்டது. கவரி என்ற சொல் முதலில் அழகிய மயிர்க் கற்றையைக் குறித்துப் பின்னர் அந்த மயிர்க் கற்றையைத் தரும் விலங்கிற்குப் பெயராயிற்று. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 463.) கவலை: (1) நாற்சந்தி கூடும் இடம். (முல்லைப் - ஆரா. 67.) (2) (ஒருவகைக் கிழங்கு; கவலை - வளைவு) கவலைக் கிழங்கு நிலத்தடியில் முற்றி வருங்கால் மடங்கியே வளைந்து காணப்படும். நேராக வளராது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 285) கவளம்: பவளம் பவழமென வழங்கினாற் போலக் கவளம் என்பதும் கவழமென வழங்கிற்று. இவ்விருசொல் வழக்காறும் திணைமாலை நூற்றைம்பதிலும் (42) வருதல் காண்க. (கலி. 80. உரை விளக்கம். இளவழ.) கவி: கவி என்பது குரங்கைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லே யாகும். மனிதனைப் போன்று வடிவம் பெற்றுள்ள குரங்கு கவிழ்ந்து நடக்கின்ற காரணத்தால் கவி என்று தமிழர் அழைத் துள்ளனார். கவிதல் என்னும் சொல்லானது முதனிலைத் தொழிற்பெயர் கவி என்பதாகும். (பழந்தமிழ். 173.) கவிகை: கொடுத்தற்குக் கவிந்த கை. (பத்துப். மலைபடு, 399. நச்) கவைக்கோல்: கொடிற்றுக்கோல்; ஆவது படைக்கல், இட்டிகை முதலியவற்றைப் பறிக்கும் கருவி; குத்துக்கோல் என்பாரும் உளர். (சிலப். 16- 142. அடியார்.) கழங்கு: கழற்சி வித்துப் பலவற்றை முருகன் முன் போகட்டு வேலன் (வெறியாடுபவன்) தன் தலையில் ஆடை சூடிக் கையிற் பல தலைகளிற் சிறு பைகளைக் கட்டிய கோலொன்றேந்தி அக்கோலால் கழங்கு வித்துக்களை வாரியெடுப்புழிக் குறிப்புக் காணுகின்ற ஒருவகைக் குறி. இதனை அருஞ்சுரம் என்ற (அகம். 195) செய்யுளான் அறிக. (நற்றிணை. 47. அ. நாராயண.) கழறுதல்: கழறுதல் என்பது அன்புடையார்மாட்டுத் தீயன கண்டால் அவ்வன்பில் தலைப்பிரியாத சொற்களால் நெருங்குவது. (இறையனார். 3. நச்.) கழி: கழி - நெய்தல் நிலத்து நீரோடை. (திருவிளை. வலைவீசின. 12. ந. மு. வே) கள்: கள் என்பது திருடு என்றும் பொருள் தருவது. இதனால் கள் என்ற பொருளை உட்கொள்ளுவதால் ஒருவன் தன்னையே திருடிக்கொள்கிறான் என்ற உயர்ந்த தத்துவப் பொருளை உட்கொண்டிருக்கிறது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 - 512.) கள்ளாமை: (1) கள்ளாமையாவது கபடபுத்தியை விடுதல் என்றவாறு. (திருக். கள்ளாமை. பரிதி.) (2) கள்ளாமையாவது யாதொரு பொருளையும் களவிற் கொள்ளாராதல். (திருக். கள்ளாமை. மணக்.) (3) அஃதாவது பிறர் உடைமையாய் இருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாமை. கருதுதலும் செய்தலோடு ஒத்தலின் கள்ளாமை என்றார். (திருக். கள்ளாமை. பரி.) கள்ளுதல்: கள்ளக் கருதுதல். (திருக். 281. பரி.) கள்வர்: எஞ்ஞான்றும் மனத்தது ஒன்றாகத் தாம் ஒன்றாக மொழிந்தார் என்னும் கருத்தால் கள்வர் என்றார். (திருக்கோ. 177. பேரா.) களவு: (1) களவும் என்பது செய்தாரே அறிந்து மற் றொருவர் அறியாதது. (இறையனார். 22. நச்.) (2) களவாவது பிணி மூப்பு இறப்புக்கள் இன்றி எஞ் ஞான்றும் ஒரு தன்மையராய் உரு திரு பருவ குலம் குணம் அன்பு முதலியவற்றால் தம்முள் ஒப்புமையுடையராய்த் தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால்வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது. (திருக். களவியல். பரி.) களித்தல்: இச்சொல் முதலில் கள்ளுண்டு களித்தலையே குறித்தது. கள்ளுண்டு களித்திருப்போனைக் களி என்றே அழைத்தனர். பின்னர், களித்தல் என்ற சொல் பொதுவாக நல்வகை மகிழ்ச்சிகளைக் குறிக்கத் தொடங்கிவிட்டது. திருவள்ளுவர் காலத்திலேயே இவ்வுயர் மாற்றத்தை இச்சொல் பெற்றுள்ளது. உள்ளக் களித்தலும் (குறள்1201)என்பதைநோக்குக.) (பழந்தமிழ்.70.) களிற்றுயிர்: களிற்றுயிர் என்பது ஆகுபெயரால் களிற் றினது கைபோலும் வடிவையுடைய பெருவங்கியத்தை. (புறம். 152. ப.உ.) களை: களை, தளை, கனை முதலியன ஈறுபோய்க் கட்டல் கட்டு, கட்ப, கட்டும், தட்டல், தட்ப, தட்டும், கன்றல், கன்றி, கன்ற, கன்றும் முதலியனவாயும் வரும். அடாத வான்களைக் கட்டனர் (கந்த புராணம்) . Ét£l£nlhரே-தள்ளாjÇவட்டள்ளாதோnர (புறம்).ïங்கேஉufhu® தட்டோர் என்பதற்குத் தளையாதோர் என்றும் உரை கூறுவர். வான்தளை தட்டிசை தனதாகியும் என்ற காரிகையையும் நோக்குக. களை, தளை என்பன பெயராயும் நிற்கும். கனை என்பதனின்று கன்னல், கமை முதலிய பெயர்கள் பிறக்கும். கன்னல் - சருக்கரை. செறிந்திடு கன்னல் (கந்த புராணம்). (செந்தமிழ். 11- 120.) களைகண்: களைகண் = புகல்; பற்றுக்கோடு. துன்பத்தைக் களையும் இடம் எனக் காரணக்குறி, வினைத்தொகை. கற்றிலேன்; களைகண் இல்லேன்; கடவூர் வீரட்ட னாரே - அப்பர் தேவாரம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-79) கறி: கருனை என்னும் பொருளில் வரும் கறி என்னும் சொல் நாவிற்குச் சுவை உறுத்தி உறைத்தலை விளக்கும் ஆதலின் அச்சொல்லையே தனக்குப் பெயராக உடைய மிளகு காயின் விழுப்பமும் அதனால் அதுவே கறிக்கு முதன்மை ஆதலும் தாமே பெறப்படும் அன்றோ? கறிவளர் சிலம்பு எனவும், கறிவளர் அடுக்கம், எனவும், கறிவளர் சாரல் எனவு மெல்லாம் மலைக்கே அடைமொழியாகவும் கொள்ளப்படும். (சங்கநூற் கட்டுரைகள். II - 38.) கறித்தல்: மெல்லக். கடித்தல் வலுவாய்க் கடித்தல் மடப் பிணை...... வேளை வெண்பூக் கறிக்கும் புறம். 23. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 337.) கன்னம்: கன்னம் என்பது நோய் தணித்தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம் (ஐங்குறு. பழையவுரை) இக் காலத்துத் தாயத்துப் போல்வதொரு பொருள். (ஐங்குறு. 245. விளக்கம். பெருமழை.) கன்னல்: நாழிகைவட்டில்; இஃதிப் பொருட் டாதல் கன்னலுங் கிண்ணமும் நாழிகைவட்டில் என்னும் பிங் கலந்தைச் சூத்திரத்திற் காண்க. குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் என்றார் மணிமேகலையிலும் (7 - 64). ஒரு கடாரத் திலே நீரை நிரப்பி அடியிற் சிறு தொளையுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப்புழை வழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரின் அளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். (முல்லைப். ஆரா. 72.) கா காகம்: பெரும்பாலும் குளிர்மிகுந்த நாடுகளில் உறை வோரின் குரலொலிகள் உரைத்த ஓசை வாய்ந்தனவாய் இருக் கின்றன. வெம்மைமிக்க இடங்களில் உள்ளாரின் குரலொலிகளோ மெல்லியவாய் இருக்கின்றன. இரண்டிற்கும் நடுத்தரமான நிலங்களில் இருப்பவர் ஒலிகள் எடுத்த ஓசைக்கும், படுத்த ஓசைக்கும் நடுவாய் அமைகின்றன. இவ்வுண்மை அவ்வந்நிலத் தின்கண் உள்ள பறவைகள் செய்யும் ஒலிகளின் வேற்றுமை யாலும் நன்கு அறியப்படும். பனிமிகுந்த இங்கிலந்து நாட்டில் உள்ள காக்கைகள் கிரா, கிரா என்று கரையும்; சூடுங் குளிரும் ஒத்த நிலைமையில் அமைந்த இத் தமிழ் நாட்டுக் காக்கைகளோ கா, கா என்று கரைகின்றன. ஆனதனால் ஆங்கில மொழியில் காக்கைக்குக் குரோ என்னும் பெயரும், நமது செந்தமிழ் மொழியில் காக்கை, காகம் என்னும் பெயர்களும் வழங்கி வருகின்றன. (மறைமலையடிகளார் அறிவுரைக் கோவை. 49.) காட்சியவர்: அறிவினால் புண்ணிய பாவம் இவை எனக் கண்டவர். (திருக். 174. ப.உ) காடி: புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் காடி என்றார். (பெரும்பாண். 56 - 7. நச்.) காடு: மரங்கள் அடர்ந்த நிலப் பகுதியே பெரும்பாலும் காடு என வழங்கப்பட்டு வருகின்றது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப் பெயர் பெறும் என்று தமிழ்நூல்கள் கூறா நிற்கும். பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும்; சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு குறுங்காடு என்றும்; சிறு தூறுகள் பம்பிய காட்டை அரில், அறல், பதுக்கை என்றும்; மிக முதிர்ந்து முற்றிப்போன மரங்களை யுடைய காட்டை பொச்சை, சுரம், பொதி என்றும்; அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம் மிளை, அரண் என்றும் பண்டு தொட்டுத் தமிழ்மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர். (சிறுவர்க்கான செந்தமிழ். 44.) காடு கிழாள்: காடு கிழாள் என்பது இக்காலத்துக் காடு காள் என மருவிற்று. (முருகு : 259. நச்) காணிக் கடன்: சோழர் காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்தி வந்த நிலவரி காணிக் கடன் என்று வழங்கப் பெற்றது. (முதற் குலோத்துங்க சோழன். 86.) காத்தல்: காத்தலாவது தன்வினை செய்வாரானும், கள்வ ரானும், பகைவரானும் உயிர்கட்கு வரும் அச்சத்தை நீக்குதல். (திருக்கோ. 312. பேரா.) காதல்: எல்லாப் பொருளையும் நுகர்தற்குச் செல்லும் வேட்கை. (சீவக. 189. நச்) காதை: கதையை உடையது காதை. (சிலப். பதிகம்: 62 - 3. அடியார்.) காப்பியம்: (1) பெருங்காப்பியம் என்று ஆசிரியர் அடை சொற் புணர்த்தமையின், காப்பியம் என்பது சிறிதெனப் பெறப் பட்டது. இஃது உய்த்துக் கொண்டுணர்த்தல். இதனைச் சிறு காப்பியம் எனினும் இழுக்காது. கவியால் பாடப் படுவன எல்லாம் காப்பியம் அன்றோ? பொருள் தொடர் நிலையைக் காப்பியம் என்றது என்னை? எனின், சேற்றுள் தோன்றுவன எல்லாம் பங்கயம் எனப் பெயர் பெறுமாயினும் அப்பெயர் தாமரை ஒன்றன் மேற்றே ஆயினவாறு போல இப்பெயர், பொருள் தொடர் நிலைக்கே ஆயிற்று. (தண்டி. 7. சுப். தே.) (2) ஒரு மொழியைச் சிதையாது காப்பது காப்பியம். காப்பு இயன்றது காப்பியம். ஓவு இயன்றது ஓவியம். ஒவ்வுதல் (ஒப்புதல்) உடையது ஓவு என ஆகும். தவ்வுதல் தாவு; கவ்வுதல் காவு என ஆனாற்போல ஓவு அல்லது ஒப்புமை இயன்றது ஓவியம் எனப் பொருள்படும். இலக்கியம், பண்ணியம், இன்னியம் பல்லியம் முதலிய சொற்களும் இவற்றை ஒத்த ஆக்கமுறை கொண்டவை. இலக்கு இயன்றது இலக்கியம். பண்பை அல்லது பண்ணுதல் இயன்றது பண்ணியம் இனிமை இயன்றது இன்னியம்; பல் இசை இயந்தது பல்லியம் ஆமாறு காண்க. (முதற் குறள் உவமை. 101.) (3) ஒரு மொழியின் மரபு வழாமல் காப்பதே அதன் (இலக்கணத்தின்) கடன் எனக் கொண்டனர் தமிழர். காப்பு நூல் என்று அதற்குப் பெயரிட்டனர். காப்பு இயன்றது காப்பியம் என்றனர். தமிழர் நூல்கள் இலக்கியம் காப்பியம் என இருவேறு வகையின. இலக்கு இயன்றது வாழ்க்கையின் இலக்கு அல்லது கலைகளின் இலக்கு இயன்றது - இவற்றின் இயல்பை உணர்த்து வது இலக்கியம். மொழியின் காப்பு இயன்றது காப்பியம் என்பது பொருந்தும். இவை ஓவியம், பண்ணியம், கம்மியம் முதலியன போல் இயம் என்னும் ஈறு ஏற்றவை. (நெடுநல்வாடை, பா நலன். 102.) காப்பு: திருமணம் முதலிய நற்செயல்களைத் தொடங்கும் பொழுது காப்புக் கட்டிக் கொள்ளும் வழக்கம் இன்றும் உண்டு. அதன் கருத்தென்ன? இடையூறு வாராமல் எடுத்த காரியம் இனிது நிறைவேறுதற்குக் கையில் கட்டும் நூலே காப்பாகும். பீடைகளைத் தடுத்துப் பாதுகாத்தலாலேயே அது காப்பு என்று பெயர் பெற்றது. ஆதியில் நூலாகக் கட்டிய காப்பு இப்பொழுது தங்கம் முதலிய விலை உயர்ந்த பொருள்களால் செய்யப்படும் ஒரு நகையின் பெயராயிற்று. (தமிழகம் - அலையும்கலையும். 176.) காமம்: காமம் என்பது தனித் தமிழ்ச் சொல்லே. இது மக்கள் உள்ள வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் பெற்று நிறைந்த நிலையில் விளைவது. ஆகவே இது கம நிறைவாகும் என்று தொல்காப்பியனாரால் உணர்த்தப் பெறும் உரிச் சொல்லின் அடியாகப் பிறந்தது எனலாம். (திருக்குறள் அழகும் அமைப்பும். 90.) (2) காமம் என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் விருப்பம் என்பதே. காம் என்பது அதன் வேர்ச்சொல். காமுறுதல் என்றால் விரும்புதல் என்று பொருள். (கல்லாதான் சொற் காமுறுதல். குறள் 402) பின்னர், காமம் என்ற சொல் காதல் என்னும் பொருளில் வழங்கியது. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் (குறள். 1109) இப்பொழுது காமம் என்பது விரும்பத் தகாத பெண் விருப்பம் என்னும் பொருளைத் தருகின்றது. இவன் காமப் பேய் என்று கூறிடக் கேட்கின்றோம். (பழந்தமிழ். 71.) காய்: காய் நிலைகளை நால்வகையாகக் கண்டு தோன்றிய நிலையில் பிஞ்சு என்றும், சற்றுப் பருத்த நிலையில் பிருக்கு என்றும், முற்றும் பருத்த நிலையில் காய் என்றும், பழுத்த நிலையில் பழம் (மஞ்சள் நிறமானது) அல்லது கனி (கனிவா யிருப்பது) என்றும் பெயரிட்டனர். (கழகப் பொன்விழா மலர். 49.) காரிகை: காரிகை - அழகு; அஃது அதனை உடைய பெண்ணிற்கு ஆயிற்று. (தண்டி. 67. சுப். தே.) கால்: உடம்பின் உறுப்புக்களுள் ஒன்றனுக்குக் கால் எனப் பெயர் வைத்து வழங்குவது எளிது. ஒன்றை நான்கு பகுதியாகப் பிரித்து அந்த நான்கில் ஒரு பகுதியைக் கால் என வழங்கும் நுண் கருத்தே அருமையுடையது. (மு. வ. மொழி வரலாறு: 92) கால்வாய்: கால்வாய் - மூங்கிற் குழலால் ஆவது. மலை ஊற்றில் இருந்து மூங்கில்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி அரண்மனை முதலியவற்றுக்கு நீர் கொண்டு வந்தமை யின் கால்வாய் எனப் பெயர் வந்தது. வாய் - வாய்ப்பச் செய்வது. இங்ஙனம் சீனதேயத்தாரும் செய்வர். நீலகிரித் தொதவர்களும் ஒருசார் இங்ஙனமே செய்வர். (மொழிநூல் (கார்த்) இலக்கணவியல். 154) காலதர்: கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பழைய நூல்களில் காணலாம். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை என்றார் திருவள்ளுவர். (தமிழ் விருந்து. 90.) காவலன்: அரசனைக் காவலன் எனக் கூறுவதும், ஒரு வகையான் நோக்கினால் உழவின் அடியாகப் பிறந்தது எனத் தோற்றும். நீரினும் நன்றதன் காப்பு என்றவிடத்துத் திரு வள்ளுவர் வயல்களை நன்றாகப் பாதுகாக்கும் கடமை யுடையவன் உழவன் என்றார். வயல்களிற் பயிர்களை உழவன் பாதுகாத்தலைப் போல அரசன் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உடையவன். வயல்களில் உள்ள பயிர்களுக்குத் தன்னாலும், தன் சுற்றத்தாராலும் பகைஞர்களாலும், திருட ராலும், பிறஉயிர்களாலும், வரக்கூடிய தீமை இல்லாமல் பாதுகாக்கும் கடமை உடையவன் உழவன். அவனைப் போலவே அரசனும் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் பொழுது இவ் விடை யூறுகள் நிகழாதவாறு பாதுக்கும் கடமையுடையவன். இக் கருத்து, மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ என சேக்கிழாராற் கூறப்பெற்றுள்ளது. கம்பரும் தசரதனைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் வறிஞன் ஓம்பும் ஓர் செய்யென வையக முழுவதம் காத்தினிதரசு செய்கின்றான் என்றார். ஒரே வயலையுடைய வறிய உழவன் ஒருவன் எத்துணைக் கவலை யொடு தனது வயலைப் பாதுகாத்து வருவானோ அத்துணைக் கவலையொடு அரசன் தனது நாட்டைப் பாதுகாத்து வருதல் வேண்டும் என்ற கம்பர் கருத்தை அறிக. (தமிழ் காட்டும் உலகு. 87.) கி கிழக்கு: கிழக்கு என்றது கீழான பள்ளங்களை. (பதிற்று. 36. ப.உ.) கிளத்தல்: கிளிபோல் மழலை மொழியாகப் பேசுதல். (கிளத்தல்) (திருவருட்பா விரிவுரை. நெஞ்சறி. 3.) கிளவியாக்கம்: (1) கிளவியது ஆக்கம் என விரியும், அதற்குப் பொருள் சொல்லினது தொடர்ச்சி என்றவாறு. சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலை மையைக் கிளவி ஆக்கம் என்றார். (தொல். சொல். 1. தெய்வ. ச்) (2) வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமை யான் கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசி ஆக்கினார் என்ப ஆகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். (தொல். சொல்: 1. சேனா.) கிளிகடிகருவி: தழல், தட்டை, குளிர் என்பன. (தழல் - கிளியோட்டும் கருவி) சுற்றுவதனால் ஓசை உண்டாகும்படி பிரம்பினால் அல்லது சூரற்கொடியினால் பின்னப் பெறுவது. தட்டை: தட்டுவதனால் ஓசை உண்டாகும்படி மூங்கிற் பிளவுகளால் செய்யப்பெறுவது. குளிர்: இழுத்துவிடின் ஓசை உண்டாகும்படி மூங்கிற் பத்தைகளால் செய்யப் பெற்ற கருவி. இவையனைத்தும் கிளி கடி மரபின. (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 54) கிளை: கிளை என்பது முதன் முதல் மரத்தின் கோடு களுக்கே பெயராக வழங்கப்பட்டதாகும். ஒரு மரமும் அம் மரத்தினின்று பல கவர்களாகப் பிரியுங் கிளைகளும் ஒன்றை விட்டொன்று வேறாகாமற் பெரிதும் இயைந்து நிற்கின்றன. இங்ஙனமே ஒருவனுக்குக் கிளைகள் போல் நெருங்கிய தொடர் புடையராதற்குரியார் அவன் தான் பிறத்தற்கு இடமான தாய் தந்தையரும், தம்மினின்று பிறக்கும் மக்களும், அம் மக்களினின்று பிறக்கும் மக்களும் தன்னோடு உடன் பிறந்தாரினின்று பிறக்கும் மக்களும், அம்மக்களுக்கு மக்களும் என அவனோடு நெருங்கிய உறவு வாய்ந்தவரே ஆவர். மற்றச் சுற்றத்தார் உறவினர் கேளிர் என்பவரெல்லாம் அவனுக்கு அத்துணை நெருக்கம் உடையவரல்லர். (கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. 17.) கிளைஞர்: கிளைஞர் என்பார் ஒருவருக்கொருவர் உதவி யும் துணையுமாய் இருக்குந் தன்மையர் ஆவர். இது கிளை என்னும் சொல்லின் முதற் பொருளினாலேயே இனிது விளங்கா நிற்கும் எங்ஙனமெனில், மரத்தாற் கிளையும், கிளையால் மரமும் உயிர் வாழ்கின்றன. அடிமரத்தை வெட்டினால் கிளைகள்பட்டுப் போம். கிளைகளை யெல்லாம் வெட்டினால் மரமும் பட்டுப்போம். இது பெரும்பாலும் எல்லா மரங்களிடத்தும் காணப்படும் உண்மை நிகழ்ச்சியாம். இதுபோலவே தாய் தந்தையர் தம் மக்கள் இளைஞராய் இருக்கும்பொழுது அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரைப் பாதுகாத்து உயிர் வாழச் செய்கின்றனர். மக்கள் வளர்ந்து பெரியராம் பொழுது தம் தாய் தந்தையர் ஆண்டில் முதிர்ந்து வலிவு குன்றப்பெறுதலால் மக்கள் அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவரை உயிர்வாழச் செய்கின்றனர். இங்ஙனமே உடன் பிறந்தாரும் ஒருவருக்கொருவர் உதவியுந் துணையுமாய் நின்று உயிர் வாழ்தலே நேரே காண்கிறோம். ஆகவே, கிளைஞராவார் எல்லாரும் ஒருவருக்கொருவர் உதவியும் துணையுமாய் நின்று ஒழுகினால் மட்டும் அவர் கிளைஞர் என்று பெயர் பெறுதற்கு உரியார் என்பது பெறப்படும். (கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. 18- 9) கீ கீரன்: கீரன் என்ற சொல் கீர் என்பதைப் பகுதியாக உடையது. கீர் என்பது தோண்டுதல், பிளத்தல், பகுத்தல் என்னும் பல பொருள் களைத் தரும். சொற்களைப் பகுத்துக் காண்போன் தொடர்களைப் பகுத்துக் காண்போன் மெய்யையும் பொய்யையும் பகுத்துக் காண்போன் என்னும் பொருள்களில் கீரன் என்னும் சொல் தோன்றியிருக்கலாம். கீரன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்துள்ளது. ஆதலின் தமிழ்ச் சொல் என்பதில் ஐயமின்று. (பழந்தமிழ். 131.) கு குட்டம்: குட்டை - குட்டம். ஒ. நோ. பட்டை - பட்டம். தட்டை - தட்டம் செய்யுள் அடிகள் குறளும் சிந்துமாய்க் குறுகி வருவது குட்டம்படுதல் என்றும் கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழுநோயும் குரங்குக் குட்டியும் குட்டமென்றும் கூறப்படுதல் காண்க. குட்டத்தைக் குஷ்டம் என்பர் வடநூலார். ஒ. நோ. கோட்டம் - கோஷ்டம் (வ) முட்டி - முஷ்டி (வ) (ஒப்பியன் மொழிநூல். 161) குட: குட என்பது தட என்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல். (முருகு. 229. நச்.) குடங்கை: ஐந்து விரலுங்கூட்டி உட்குழிப்பது. என்னை? குடங்கை என்பது கூறுங் காலை உடங்கு விரல்கூட்டி உட்குழிப் பதுவே (சிலம்பு. 10-85. அடியார்.) குடச்சூல்: சூல் உற்றதுபோல் புடைப்பட்டிருக்கும் சிலம்பு. (அகம். 198. வேங்கட விளக்கு) குடாவடி: குடாவடி என்பது சிலப்பதிகாரத்திலும், மலை படுகடாத்திலும் கரடியின் குட்டியைக் குறித்தே வழங்கி யிருப்பதைக் கவனித்தால் இது கரடிக்குட்டிக்கு வழங்கிய திசைச் சொல் என்றே தெரிகின்றது. கரடிக்குட்டிக்குத் தெலுங்கு மொழியில் குட்டெலுகு என்று பெயர் வழங்குகின்றது. குடா எலுகு என்பது குட்டெலுகு என மாறி இருக்கலாம். எலு என்ற சொல் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளது. ஆகலின் குடாவடி என்ற சொல் கரடியின் குட்டியைக் குறிக்கும் திசைச் சொல் என்பது பொருத்தமானதாகும். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 212.) குடி: (1) குடி என்பது குடும்பம்; அஃதாவது ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம். குலம் என்பது புறச்சுற்றம். (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 78.) (2) வட மொழியில் வீடு என்னும் பொருள் தருகின்றது. குடிர, குடீர, குடேர, குடும்ப என்பவை இனச்சொற்கள். குட் என்பது கோணியிருத்தல் என்னும் பொருள் தரும் பகுதியாம். இப்பகுதியில் இருந்தே குடம் என்னும் வட சொல்லும் பிறந்த தாம். தமிழில் குடி என்பது ஒன்றாய் வாழ்தல், வீட்டில் வாழ்தல், ஒன்றாய் வாழும் மக்கள் என்னும் பொருள் தருகின்றது. கூடு என்பதன் அடிச்சொல் குடு என்று கொள்ளின் இப்பொருள் இயல்பாகின்றது. குடில் குடிசை என்பன அதிலிருந்து பிறந்தவை. தெலுங்கிலும் கன்னடத்திலும் குடி (gudi) கோயிலைக் குறிக்கும். கன்னடத்தில் குடாலு குடிசையைக் குறிக்கும். பின்னிசு முத லான சித்திய மொழிகளிலும் இப்பகுதி இப்பொருளில் உள்ளது. ஆதலின் இது திராவிடச் சொல்லேயாம். (மு. t., மொழி வரலாறு. 114.) குடிகோள்: குடிகோள் என்பது தாரமும் சுற்றமும் குடிப் பிறப்பும் முதலாயவற்றுக்கண் கேடு சூழ்தல். (தொல். பொருள். 258. பேரா.) குடிமை: குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பு என்பது குடிப் பிறத்தல்; அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும். குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமை என்றான் என்பது. அதனை ஊராண்மை (உபகாரியாந் தன்மை) எனவும் சொல்லுப. (தொல். பொருள். 273. பேரா.) குடை: (1) குடை உள்வளைவாகச் செய்யப்படும் கருவி. வழிச்செல்வோர் தாம் உண்பதற்குப் பனை ஓலையால் உள் வளைவாகச் செய்துகொள்ளும் உண்கலத்துக்கும் அது பெய ராயிற்று. ஏழைமக்கள் தாம் உண்ணுமுன் வெயிலுக்கு அதனைத் தம் தலைமேல் கவித்துக்கொள்ளுதலும் உண்டு. ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடை (அகம். 121) இரும்பனங் குடையின் மிசையும் (புறம். 177) என்பவை நினைவு கூர்க. (கலி. 22. உரை விளக்கம். இளவழ.) (2) குளிர்: குளிர்வித்தலில் குடை குளிர் எனப்பட்டது. தொங்கல்: தூக்கங்களை உடைமையினால் தொங்கல் எனப்பட்டது. கவிப்பு: கவிக்கப்படுதலின் கவிப்பு எனப்பட்டது. பிச்சம் : பிச்சம் என்பது முடி; அதனை உடைமையிற் பிச்சம் எனப்பட்டது. கவிகை: வளைந்து மூடலிற் கவிகை எனப்பட்டது. (செந்தமிழ் - தொகுதி. 4 - 112) குணம்: பொருட்குப் பண்பாய்த் தனக்கு வேறு பொரு ளின்றிப் பொருளை நீங்காது நிற்பது. (தண்டி. 40. சுப். தே.) குணவாயில்: திருக்குணவாயில் என்பதோர் ஊர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ளது. அஃது ஆகுபெயர் அது குணக்கண்வாயில் குணவாயில்; குணக்கன்கண்வாயில் குண வாயில் எனச் சாரியை பெறாதும் பெற்றும் வரினும் அமையும். (சிலப் - பதகம். 1-2. அடியார்.) குதலைமை: விளங்காமை. (திருக்கோ. 104. பேரா.) குமரன்: குமரன் என்பதும் தமிழ்ச்சொல்லே. குமரி பெண்பால். குமரிமுனையும், குமரிநாடும், குமரிமலையும், குமரியாறும், குமரிக்கண்டமும் ஆரியர் வருகைக்கு முன்னே, ஏன் அவர்கள் தோன்றுவதற்கு முன்னே தமிழ் பெற்றிருந்தவை களாம். குமரியைத் தமிழ்ச்சொல் அன்று என்று எவரும் கூறார். அதன் ஆண்பாற் சொல்லே குமரன் என்பதாம் இவையிரண்டும் பின்னர் வடமொழிக்கண் சென்று குமாரி என்றும் குமாரன் என்றும் உருப்பெற்றன. (பழந்தமிழ். 131.) குயவரி: குயம்போலும் வரிகளையுடைய புலி; குயம் - அரிவாள். (அகம். 398. வேங்கட விளக்கு.) குயில்: குயில் கூவுகிற ஒலிக்கும், குயில் என்ற பெயருக்கும் இப்போது பொருத்தம் நன்றாக விளங்கவில்லை. கூஊ இல் என்பது போன்ற அதன் ஒலியே நாளடைவில் குயில் என்று சுருக்கமாகத் திருந்திய வடிவு பெற்றிருக்கலாம். (சொல்லின் கதை. 8.) குய், வறை: குய் - தாளிக்குங்கறி; வறைகள் - துவட்டின கறிகள். (சீவக. 2971. நச்) குரங்குதல்: வளைதல். மாரியங் குருகின் ஈரிய குரங்க. (அகம். 235. வேங்கட விளக்கு.) குரவை: குரவை என்றது காமமும் வென்றியும் பொரு ளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்ம ரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்து ஆடுவது. (சிலப் -3:12. அடியார்.) குரு: (1) குரு என்பது பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள்படும் குரிசில் என்னுந் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து ஆசிரியன் என்னும் பொருளில் வழங்குவது; குருவன், குரவன் என்பவையும் அன்ன. இஃதுணராதார் இவற்றையும் வடசொல் லென்றுரைப்பர். (திருவாசக விரிவுரை. மறைமலை. 371) (2) குருவுங் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம். குருதி, குருதிக் காந்தள் (செங்காந்தள்) குருதி வாரம் (செவ்வாய்க்கிழமை) முதலிய சொல்லையும் வாழ்க்கையும் நோக்குமிடத்து, குரு என்பது செந்நிறம் என அறியப்படும். சிவபெருமான் நிறம் செம்மை என்றும், அவன் ஆசிரிய வடிவில் ஆன்மாக்களை ஆட்கொள்வான் என்றும் நூல்கள் கூறுவதாலும் ஆசிரியனுக்கு, குரு, குரவன் என்னும் பெயர்கள் உண்மையாலும், குரு என்னும் நிறங் குறித்த சொல்லே குரவன் என்று திரிந்து ஆசிரியன் பெரியோன் என்று பொருள் பட்டதெனத் தோன்றுகின்றது. குரு என்னும் சொல்லும் ஆசிரி யனைக் குறித்தலால், அது பண்புப் பெயராகும்போது பெருமை என்று பொருள்படும். பெருமை என்பது பருப்பொருளும் நுண்பொருளுமாகிய வடிவு நிலை இரண்டற்கும் பொது வாதலின் கனம் என்னும் சொல் மதிப்பையும் நிறையையும் குறித்தாற்போலக் குரு என்னும் சொல்லும் பெருமையையும் நிறையையும் குறிக்கும் என்க. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 353.) குருவன்: குருவன் - ஆசிரியன். வானோர் குருவனே போற்றி எனத் திருவாசகத்தில் (5: 68) இச்சொல் இப் பொருட்டாய் வந்தது குருசில் என்னும் சொல்லும் குரு வென் னும் முதனிலையில் தோன்றியதாகும். குரு - ஒளி. அறி வொளியை உடையவன், அதனைத் தருபவன் குருவெனப் பட்டான். வடமொழிக்கண் சென்ற பல தமிழ்ச் சொற்களுள் இதுவும் ஒன்று. (திருவொற்றி முருகர்மும். 186.) குலந்தருதல்: புதல்வற் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல் (சீவக. 1074. நச்) குழவி: பதினாறு அளவும் கலை நிரம்பா ஆதலின் குழவி என்று பெயர். (நாலடி. 11. விளக். உ) குழறுதல்: பொருளற்ற ஒலியைச் செய்தல். கூகை ஒலித் தலைக் குழறல் என்றல் மரபு. (குறுந்தொகை. 153. உ.வே.சா) குழை: குழை - மகர மீன் வடிவமாக வட்டமாகச் செய்த தொரு காதணி. அஃதாவது மகரமீன் வளைந்து தன் வாலை வாயில் கௌவி இருப்பது போன்ற வட்ட வடிவமாகச் செய்யப் பட்ட அணிகலன். (கலி. விளக்கம். பெருமழை.) குளம்: குளிப்பதற்காக அமைந்தது குளம். வானத்தி னின்றும் பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வானமாரிக் குளம் என்பர். (தமிழ் விருந்து. 87.) குற்றியலுகரம், குற்றியலிகரம்: சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகின இடத்தும் அவை உயிர் ஆகற்பாலன. (தொல். எழுத்து. 2. இளம்.) குறவன்: குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர் குறவர். அவர் களில் ஆண்மகன் குறவன் என்றும் பெண்மகள் குறத்தி என்றும் பெயர் பெற்றனர். இச் சொற்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகிய திராவிட மொழிகளில் வழங்குகிற படியால், இந்த இனத்தார் பிரிந்து போவதற்கு முன்னே மூலத்திராவிட மொழியில் தோன்றியிருக்கவேண்டும். குறவ என்னும் திராவிடச் சொல்லை வடமொழியாளர் கடனாகக் கொண்டு வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சொல்லை அப்படியே உச்சரிக்க முடியாமல் கிராத என்று திரித்து வழங்குகிறார்கள். (அஞ்சிறைத்தும்பி. 139-140) குறிச்சி: குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று பெயர் பெற்றனர். அன்னார் குடியிருந்த இடம் குறிச்சி என்று குறிக்கப்பட்டது. குறிச்சி எங்கள் குறச்சாதி இருப்பதம்மே என்று ஒரு குறவஞ்சி கூறுமாற்றால் இவ்வுண்மை விளங்கும். (ஊரும் பேரும். 6) குறிஞ்சி: தழுவுகின்ற செயலே தழிஞ்சி எனப் பெயர் பெற்றது என நச்சினார்க்கினியர் விளக்கினார். கொழுமையை ஊட்டுவதால் கொழிஞ்சி என ஒருவகை உரச்செடி பெயர் பெற்றது. நெரிப்பதால் (குத்துவதால்) நெரிஞ்சி என ஒரு வகை முள் பெயர் பெற்றது. தழுவுதல் தழிஞ்சி எனவும், நெரிப்பது நெரிஞ்சி எனவும் ஆவது போலக் குறுகுதல் குறிஞ்சியாகும். குறுகுதல் என்பதற்கு நெருங்குதல், அணைதல், சேர்தல், இணைதல், புணர்தல் எனப் பொருள் கூறலாம். குறுகுதல் என்பது நெருங்குதல் எனப் பொருள்படுவதை வள்ளுவர் குறளாலும் அறியலாம். நீங்கில் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104) இக்குறளில் குறுகுங்கால் என்பது நெருங்கிச் சேருங்கால் அஃதாவது புணருங்கால் - எனப் பொருள்படும். எனவே குறுகுதல் (நெருங்கிப் புணர்தல்) எனும் பொருள் கொண்ட தொழிற் சொல் குறிஞ்சி. இது காரணத் தொழிற் பெயர். (அகத்திணைத் தெளிவு - குறிஞ்சிச் செடி. வீ. ப. கா. சுந்தரம்) குறி எதிர்ப்பு: (1) ஒருவரால் வரும் பயனைக் குறித்துக் கொடுப்பது. (திருக். 221. ப.உ) (2) அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே கொடுத்தல். (திருக்குறள். தண்டி. 221.) குறி எதிர்ப்பை: ஒருவரிடம் ஓரளவில் வாங்கிய பொருளை அதே அளவில் திருப்பிக் கொடுத்தல் குறியாப்பு எனப்படும். வறியார்க் கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறிஎதிர்ப்பை நீர துடைத்து என்னும் திருக்குறளில் உள்ள குறி எதிர்ப்பை என்பதுவே குறியாப்பு என மருவி வழங்குகின்றது. குறி எதிர்ப்பையாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது என்பது பரிமேலழகர் விளக்கம். (தமிழ்மொழிச் செல்வம். 74.) குறும்பர்: குறும்பர் என்பது நெறிமுறை இல்லாது மக்களை வருத்துவோரைக் குறிப்பிடும். குறும்பு + அர் = குறும்பர். குறும்பு என்ற சொல் சில இடங்களில் குசும்பு என்று வழங்குகின்றது. விளையாட்டு வகையில் செய்யும் சிறு தொல்லைகளைக் குறிக் கின்றது. (வள்ளுவர் வகுத்த அரசியர். 8. ) குறும்பொறை: குறும் பொறை என்றது பொறையை (வரையை) அணைந்த சிறு பொறைகளை. (பதிற்று. 74. ப. உ) குன்று: குன்று என்றது சிறுமலைகளை. (புறம். 17. ப.உ) கூ கூ: கூ என்பது வகரவுகரம் விரியப் பெற்று கூவு, கூவுதல், கூவல், கூவி, கூவ, கூவின முதலியவாயும், யகர மெய் விரியப் பெற்றுக் கூய், கூயின முதலியனவாயும் வரும். கூய் என்பதனைக் கூவி என்பதன் விகாரம் என்பாரும் உளர். அன்றிக் கூப்பிடல், கூப்பிடு, கூப்பிட்டு, கூப்பிட முதலியனவாயும் வரும். திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம் பெதிர் கூய் (திருக்கோவை) கூ என்பதினின்று கூகை. கூத்து, கூப்பீடு, கூவிடை முதலிய பெயர்கள் பிறக்கும். கூவிடை கூப்பீடு. ஐயிரண்டமைந்த, கூவிடைப் பொழிற்கப் புறங் கழிந்தபின் (இராமாயணம்). (செந்தமிழ். 11: 113.) கூடம்: கூடம் என்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவ கோட்டத்தை. (திருக்கோ. 129. பேரா.) கூடல்: புலவர்கள் கூட்டத்துக்குக் கூடல் என்றும் ஒரு பெயருண்டு. அதனால், சங்கம் இருந்த மதுரைக்குக் கூடல் என்பதே பெயராயிற்று. தேன் போன்ற தமிழை அங்கே ஆராய்ந்து வந்தமையால் அந்த இடம் மதுரை என்னும் பெயருக்கும் உரியதாயிற்று. இனிமையான ஊர் என்பது அதன் கருத்து. (சங்க நூற் கட்டுரைகள் I : 2) கூடாரம்: கூடகாரம்; நெற் கூடுகள். (சீவக. 2328.நச்) கூடு: குச்சியும் கோலும் இணைத்து நாரிற் பின்னியாக்கப் பட்டது புட் கூடு. என்பினை நரம்பிற் பின்னி யாக்கப்பட்ட யாக்கையும் கூடு. (திருக்குறள். தண்டி. 338) கூர்தல்: உடல் வாயிலாக உயிர் பெற்றுவரும் விளக்கம் (வளர்ச்சி) உள்ளது சிறத்தல் என்பது. உள்ளது சிறத்தலைக் கூர்தல் என்பர் தொல்காப்பியனார். (கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். தொல. உரி.16.) (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள். 3.) கூழை: முடியுள் அகப்படாத தலைமயிர். (கலி. 107. விளக்கம். பெருமழை.) கெ கெடிறு: bகடிறு- xருவகைÛன்.br⟠மருங்கே நஞ்சுடைய இரண்டு Kட்களைíடையதாம்.ïjid விழுங்கிய பறவைகள் இதன் முள் வயிற்றிலே தைத்தலால் பெரிதும் துன்புறுதல் இயல்பு. சனியன் பிடித்த நாரை கெடிறு மீனை விழுங்கிற்றாம் என்பது ஒரு பழமொழி. இதனை இக் காலத்தார் கெளுத்தி மீன் என்று வழங்குப. (ஐங்குறு. 167. விளக்கம். பெருமழை.) கெண்டுதல்: கெண்டுதல் - கல்லுதல். இச்சொல் இக் காலத்தில் கிண்டுதல் என வழங்கும். கெண்டிய - தோண்டி எடுத்த. (குறுந்தொகை. 233. உ. வே. சா) கே கேண்மை: (1) கேளாந் தன்மை. (கேள் - உறவு) (திருக். 106. பரி.) (2) கேண்மை - கேளாந்தன்மை. கேள் - உறவு, நட்பு. பகைவரைக் கேளார் எனலுங் காண்க. கேள், கேண்மை என்னும் இவை எல்லாம் கெழு என்னும் உரிச் சொல் அடியாகப் பிறந்தன போலும். (திருக்குறள். தண்ட. 106.) கேளிர்: கேளிராவார் பழைமையாய் வந்த நட்புரிமையால் கிளைஞர் ஆயினோர்...... கெழுதகைமையொடு வந்த நட்பாவது கேண்மை. இவ் வாற்றான் ஒரு பொருள் இரு சொற்போலத் தோன்றும் நட்புக்கும் கேண்மைக்கும் வேறுபாடு காண்க. (திருக்குறள். தண்ட. 187.) கை கைக்கிளை: கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிய உறவு என்பது பொருள். சிறிய என்றால் இழிந்த என்னும் பொரு ளன்று. அவ்வுறவு நிற்கும் காலம் சிறியது என்பது கருத்து. கிளை என்பது ஓர் உருவகச் சொல். இச் சொல்லாலும் விரிவற்ற வளராத நிலை பெறப்படும். கை என்பதற்குத் தனிமைப் பொரு ளும் உண்டு; கைம்பெண் என்ற தொடரிற் காண்க. ஆதலின், கைக்கிளை சிறிய தனித்த உறவு என்று கொள்ளலாம். கைக்கிளை என்னும் குறியீடு இருபாலருக்கும் சொல்லத் தக்க பொது நிலையிற்றான் அமைந்துள்ளது. எனினும் ஆண்பாற் படுத்துவதே, இளையவன் காதலைக் கூறுவதே, இலக்கண மரபாம். சொல் லெதிர் பெறாஅன் என்பது தொல்காப்பியம். (தமிழ்க் காதல். 220.) கைகோள்: கைகோள் என்பது ஒழுக்கம் கோடல். (தொல். பொருள். 500. பேரா.) கைத்து: கையில் உள்ளதான பொருள்: (நாலடி. 206. விள. உ) கைம்மா: கையையுடைய விலங்கு ; அஃது யானை. (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. பக்: 51.) கைம்மிகல்: கைம்மிகல் என்பது ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல். (தொல். பொருள் : 260. பேரா.) கையறு நிலை: கையறுதல் என்பது செயலறுதல் என்னும் பொருட்டாம். எனவே, செயலறுதற்கு ஏற்ற காரணம் தோன்றியவழி ஒருவன் கையற்று நின்ற தன்மை கையறு நிலை யாம். (சோமசுந்தரக் காஞ்சியாக்கம். பக். 27.) கையாறு: கையாறு என்பது அவ்வுயிர்ப்பும் (நெட்டுயிர்ப் பும் ) இன்றி வினை ஒழிந்து அயர்தல். (தொல். பொருள் 260. பேரா.) கைவழி: (1) பாணர் என்பவர் சீறியாழ் என்னும் சிறிய யாழைச் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்றனர். சிறிய யாழ் எப்பொழுதும் அவர்கள் கையகத்து இருந்தமையால் கைவழி என்னும் பெயர் பெற்றது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள் 20) (2) கையகத்து எப்பொழுதும் இருத்தலான் யாழைக் கைவழி என்றார். (புறம். 149. ப.உ.) கொ கொச்சகம்: கொச்சகம் என்பது ஒப்பின் ஆகிய பெயர்; என்னை? பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டுக் களைக் கொச்சகம் என்றான். (தொல். பொருள். 433, 464. பேரா.) கொட்டகாரம்: அரசன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் அரண்மனை இல்லாத ஊர்களில் தங்குவதற்கு அமைக்கப் பெற்றிருந்த மண்டபங்கள் அந்நாளில் (சோழர் நாளில்) கொட்டகாரங்கள் என்று வழங்கப்பட்டுள்ளன. (பிற்காலச் சோழர் சரித்திரம் II. 78) கொட்டில்: நெடுகக் கட்டி ஒரு பக்கத்திலே அடுப்பு எரித்து ஒரு பக்கத்திலே தொழில் ஒழிந்த நாளில் சகடையில் உருளையை யும் கலப்பையையும் சார்த்தி எருதுகளும் கட்டி நிற்றலில் கொட்டில் என்றார். (பெரும்பாண். 189-90 நச்.) கொடிநிலை: கொடிநிலை என்னும் இருமொழித் தொடரில் கொடி என்பது கிழக்குத் திசையினை உணர்த்துதல், பொய்தீர் உலகம் எடுத்த கொடிமிசை மையறு மண்டிலம் வேட்டனல் (கலித்தொகை. 141) என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் ஆண்டெடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு விளங்கும். விளங்கவே, கீழ்த்திசைக் கண்ணே வந்து நிற்கும் கதிரொளியை அஃதுணர்த்துதல் புலனாம். (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 5 - 79) கொடிப்பிணையல்: நீளிதாகப் புனையும் ஒரு மாலை வகை. (ஐங்குறு. 91. விளக்கம். பெருமழை.) கொடிறு: குறடு என்று வழங்குவது. (பற்றுக்குறடு என்பதும் அது) (நற்றிணை. 107.அ. நாராயண.) கொடுகொட்டி: கொடுங்கொட்டி, கொடுகொடி என விகாரம் ஆயிற்று. கொடுங்கொட்டி என்றார் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுதலின். (கலி. கடவுள். நச்) கொடுஞ்சி: தாமரைப்பூவாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது. (மதுரைக். 752. நச்) கொடும்பு: கொடுமுறுக்கு (கொடி முறுக்கு என வழங்கு கிறது). (மலைபடு. 24. நச்) கொடுமை: கேடு சூழ நினையும் தீவினை உள்ளம். (தொல். பொருள். 274. பேரா.) கொடை: கொடை என்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல். (தொல். பொருள். 257. பேரா.) கொண்டி: கொள்ளப்படுதலின் உணவு ஆயிற்று. கொள்ளையும் என்ப. (மதுரைக். 137. நச்.) கொத்துமாலை: பலவாய் ஒன்றாகிய மாலை. (திருக்கோ. 391. பேரா.) கொலை: கொலை என்பது அறிவும் புகழும் முதலாயின வற்றைக் கொன்று உரைத்தல். (தொல். பொருள். 258. பேரா.) கொழுநன்: கொள்கொம்பு, கொள்நன் என்ற இரு பெயர்களும் கொள் என்னும் சொல்லையே முதனிலையாகக் கொண்டு இருப்பதும், முறையே கொழுகொம்பு, கொழுநன் என மருவித் திரிவதும் கவனிக்கத்தக்கன. கொள்கொம்பு என்பதில் கொள்ளுதல் தொழில் கொடியினதாகவும் கொள்நன் என்பதில் அத்தொழில் கணவனது ஆகவும் கொள்ளப்படும். (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். 3.) கொழுவல்சி: ஊனைக்கூட இட்டு ஆக்குதலில் கொழு வல்சி என்றார். கொழுவல்சி - கொழுவினால் ஆகிய வல்சி என்றுமாம். இஃது ஆகுபெயர். (கொழுவினால் ஆகிய வேளாண்மைகக்குஆகியமையால்.) (மதுரைக். 147. நச்) கொள்ளை: உலக வழக்கில் இச்சொல் திருடுதல், பறித்தல் என்ற பொருளில் வரும். அங்ஙனம் பறித்த பொருள் மிகுதி காட்டற்கண் கொள்ளை கொள்ளையாய்க் கொண்டு போதல் என்னும் அடுக்கு ஏற்பட்டது. பலவுயிரைப் பறிக்கும் நோய்க்குக் கொள்ளை என்றும், கொள்ளை நோய் என்றும் பெயர்கள் உள. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6 - 267) கொளல்: கொள் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல் விகுதியோடு கூடி மகனெனல் (குறள். 196) என்பதுபோல் நின்றது. (திருக். 720. பரி.) கொற்றவை: கொற்றம் என்றால் வெற்றி. கொற்றத்திற்கு உரியவள் கொற்றவையானாள். (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 64.) கோ கோட்டி: இச்சொல் இப்பொழுது கோஷ்டி என்று வழங்குகின்றது. கோட்டி என்ற தமிழ்ச் சொல் கோஷ்டி என்ற வட சொல்லாக மாறியுள்ளது. கோட்டுதல் வளைத்தல். கூட்டத்தை ஓரிடத்தில் வளைத்துக்கொள்ளுதலால் அவ்விதம் வளைத்துக்கொள்ளப்ட்ட அவைக்குக் கோட்டி எனப் பெயர் வந்தது. பித்துக்கொண்டவனைக் கோட்டிக்காரன் என்பர் தென்பாண்டி நாட்டில். பித்துற்றவன் கூட்டத்தைத் தன் பக்கம் வளைத்துக் கொள்ளுதலால் அவன் அப்பெயர் பெற்றுள்ளான். (வள்ளுவர் வகுத்த அரசியல். 86) கோட்புலி: புலியின் பிடியில் அகப்பட்ட விலங்கு தப்புவது அரிது என்பதை அறிந்தே சங்கப் புலவர்கள் புலிக்கு கோள்வல் என்ற அடைமொழி கொடுத்து வழங்கினார் மற்றும் புலிக் கோள் கோட்புலி என்றும் வழங்கினர். கொண்டதை விடாத புலி என்பதைக் குறித்தே கோள்வல் ஏற்றை (குறுந். 141, அகம். 171, ஐங்குறு. 216, நற். 36) கோள்வல் வேங்கை (ஐங்குறு. 385) இருங்கோள் வயப்புலி (நற். 237) என்றெல்லாம் சங்க நூல்களில் வருகின்றன. சிலப்பதிகாரத்தில் கலனசை வேட்கையிற் கடும் புலி போன்று என்றுவரும் கொலைக்களக் காதை வரிக்குக் கூறிய உரையில், கடும்பசியால் ஊனைக் கவ்விவிடாத புலி போன்று என்று கூறியிருப்பதைக் காணலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 234.) கோட்டான் : மரக்கோடு விடாமையின் கோட்டான் என்னும் பெயர் பெற்றது. (தொல். பொருள். 623. பேரா.) nfhlf«: jhk«, KFl«., பதுமம், கோடகம், கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாகச் செய்த முடி. (சீவக. 2989. நச்) கோடல்: கொம்பு கோடு இல்லாத கொடியைக் கோடு + அல்= கோடல் எனக் கூப்பிட்டனர் என்று தெரிகின்றது. கோடல் என்றால் வளையலுக்கும் பெயர். வளையல்போல் இருப்பதால் கோடல் என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம். (கோடல் - காந்தள், தோன்றி) (சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம். 74) கோடி : கோடு - கோடி = கடைசி, கடைசி எண். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 354.) கோடியர்: கூத்தர், கோடு - ஊது கொம்பு. அதனை யுடைமையிற் கோடியர் எனவுமாம். (நற். 212. அ. நாராயண.) கோலாகலம்: முறை பிறழ்ந்த நிலை; இச்சொல் கோலாலம் எனத் திருவாசகத்தில் வந்துள்ளது. கோலாலமாகிக் குரைகடல் வாய் அன்றெழுந்த ஆலால முண்டான் (திருச்சாழல் - 8) இஃது ஒலிக்குறிப்பு. வடசொல் அன்று. (திருவொற்றி முருகர்: 141.) கோவன்: ஆயன் ஆக்களைக் காப்பதுபோல அரசன் மக்களைக் காத்தலால் அரசனுக்குக் கோவன் என்று பெயர் கோவன் என்பது முறையே கோன் - கோ எனத் திரியும். கோ - பசு. கோக்களை மேய்ப்பது பற்றி ஆயனுக்குக் கோன் கோனார் என்னும் ஒருமைப் பெயரும், உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகட்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே கோன் என்னும் சொல்லால் குறிக்கப்படும் கருத்தாம். அரசன் கையிலுள்ள கோலும் ஆயன் கைக்கோல் போன்றதே. கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும், கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். இனிச் சிவபெருமானும் உயிர்களை எல்லாம் காப்பதில் ஆயனை அல்லது அரசனை ஒப்பவராதலின் கோவன் எனப் படுவர். உயிர்களை அல்லது ஆன்மாக்களைப் பொதுப்படப் பசு வென்பதும், சிவபெருமானைப் பசுபதி என்பதும் வட மொழி வழக்கு. (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். 4,5.) கோழரை: வழுவழுப்பான அரை. அரை, அடிமரம் கோழரை, பொரியரை, பொகுட்டரை, முள்ளரை என்னும் நால்வகை மரவகைகளுட் கோழரையும் ஒன்று. (திருவொற்றி முருகர் மும். 143.) கோளி: கோளி என்றது பூவாது காய்க்கும் மரம். (புறம். 58. ப.உ) ச சடை: சடசட என்றிருப்பது சடை. சடசட என்பது ஒரு விறப்புக் குறிப்பு, சடையன் சடைமுனி என்பன தொன்று தொட்டு வழங்குந் தமிழ்ப் பெயர்கள். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 354.) சத்துவம்: சத்துவம் என்பன வெண் பளிங்கிற் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறம்பே தோன்றுமாறு போல உள்ளங் கருதியது புலனாக்குங் குணங்கள்; அவை: சொற்றளர்வு, மெய் வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய் விதிர்ப்பு, மெய் வெதும்பல், மெய்ம்மயிர் அரும்பல் முதலியன. சத்துவம் உள்ள தன் தன்மை. (தண்டி 65. சுப். தே.) சதுக்கம்: நாற்சந்தி. (சிலப். 5: 134. அடியார்) சம்பளம்: பழங்காலத்தில் கூலமும் உப்புமாகக் கொடுக்கப் பட்டது. கூலம் தானியம். கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல் வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும் சம்பளம் எனும் பெயருண்டாயிற்று. சம்பு என்பது சிறந்த நெல் வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப் பெயர். (சொல். கட். 22.) சல்லிகை: சல்லிகை என்றது சல் என்ற ஓசையை உடைத்து ஆதலால் பெற்ற பெயர். (சிலப். 3: 26. அடியார்.) சலம்: (1) சட்டி, சமழ்ப்பு என்பன தமிழ்ச் சொல்லாம். ஆதலின் சகரம் மொழிக்கு முதலல் வராதென்று கொள்ள இந்நாளில் இடம் இல்லை. தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரைமணி ததும்ப என்ற இடத்தில் நீர் வீழ்ச்சியின் ஓசையைச் சலசல என்பது குறிக்குங்காலை, அச்சொற்களைத் தமிழ் என்றல் தவறாகுமா? அவ்வோசையினின்று சலம் என்ற சொல் வந்த தாயின் அது தமிழ்ச் சொல்லே. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12:565.) சலம்: சலசல வென்று ஓடுவது பற்றி நீருக்கு வந்த பெயர். (வடிசொற்றமிழ் அகரவரிசை. 305.) சன்னவீரம்: மார்பிலும் முதுகிலும் மாறியணியும் ஒரு வகை வெற்றிமாலை. சன்னவீரம் திருமார்பில் வில்லிலக என்பது திருக்கைலாய ஞான உலா. (திருவிளை. திருவாலவாயான. 20. ந. மு. வே.) சா சாமம்: சாமம், இனிதாகக் கூறுதல்; பேதம், மென்மை யாலும் வன்மையாலும் மனத்தைப் பேதித்தல்; தானம், பகைவர் மனமகிழக் கொடுத்தல்; தண்டம், பின்பு அவராகாமல் அழித்தே விடுதல். (சீவக. 747. நச்.) சாயல்: சாயல் - ஐம்பொறியான் நுகரும் மென்மை. இதனை நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்ட லாகாப் பொருள் என்று கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். (ஐங்குறு. 14. விளக்கம். பெருமழை.) சாரியை: சாரியையவாது சொல் தொடர்ந்து செல்லும் நெறிக்கண் நின்று அதற்குப் பற்றுக்கோடாகச் சிறிது பொருள் பயந்ததும் பயவாததுமாய் நிற்பது. (சிலப். பதிகம். 61 - 2 அடியார்.) சால்: ஒருசால் இருசால் என்றல் உழவுத் தொழிற்கு மரபு. (பெரும்பாண். 197.நச்) சான்றாண்மை: அஃதாவது பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆடல் தன்மை. (திருக். சான்றாண்மை. பரி.) சான்றோர்: சான்றோர் என்றது போரில் அமைதியுடைய வீரரை. (பதிற்று. 14. ப.உ) சி சிமிழ்த்தல்: சிமிழ்த்தல் என்றது அவன் வாய்மேல் விரல் எற்றி அதுபட விளித்தல். (திருக். 274. காலிங்) சிரந்தை: சிரந்தை - துடி. சிரற்பறவையின் சிறகு அசை வதுபோலத் துடி கொட்டுமிடத்துக் கைவிரல்கள் அசைய விளங்கும் இசைநலம் தோன்றத் துடி, சிரந்தை எனப் பெற்றது. (பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து. ஔவை. சு. து.) சிலம்பு: சிலம்பு என்றது வெற்பின் ஒருபக்கத்து உளதாகிய சிறு குவட்டை. (திருக்கோ. 99. பேரா) சிவம்: சிவம் என்ற சொல் செம்மை அடியாகப் பிறந்தது. செம்மை என்பது நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம் என்கின்ற பண்பினையும் செந்நிறம் என்ற நிறத்தையும் குறிக்கும் ஒரு சொல். செந்நிறம் என்ற பொருளில் அச்சொல் வழங்குமிடத்து அதினின்று சிவ என்ற சொல் எழுந்து வழங்குதல் கண்கள் இரண்டும் சிவந்தன என்பதில் சிவந்தன என்பதன் பகுதியாக அமைதலால் விளங்கும். கடவுளை ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் செம்பொருள் என்றார். செம் பொருள் என்னும் சொற்றொடரின் பொருளே சிவம் என்பதற்கும் கொள்ளப்படும். (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு. 2. 59.60) சிவன்: சிவன் என்னும் சொல் முருகப்பிரான் பெயராகப் பண்டைத் தொல்காப்பிய நூலுள் ஓதப்பட்ட சேயோன் என்னும் சொல்லின் திரிபே ஆகும். (தமிழர் மதம். 136.) சிறங்கணித்தல்: சிறங்கணித்தல் - அரைக்கண்ணால் நோக்குதல். ஒருகண், சிறக்கணித்தாள் போல நகும் சிறக் கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல் சுருங்குதல் என்றார் பரிமேலழகர். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-82.) சிறுசிரல்: சிறிய சிச்சிலிக்குருவி. சிச்சிலி - (மீன்கொத்திக் (குத்திக்) குருவி. (நாலடி. 395. தருமர்) சிறுநோக்கு: சிறியராக நினைத்துப் பார்க்குங் கீழ்நோக்கு. (நாலடி. 298. பதுமனார்.) சிறுமாவையம்: குதிரையொடு செய்யப்பட்ட சிறுதேர். (குறுந்தொகை விளக்கம். 61.) சிறுமுதுக்குறைவி: சிறிய பிராயத்தே பெரிய அறிவை யுடையாள். (சிலப். 16- 68. அடியார்.) சினம்: (1) கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம். (முருகு. 134- 5. நச்) (2) கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம். (சிறுபாண். 210. நச்) சினமின்மை: (1) சினம் இன்மையாவது சினத்தைக் கருதாமை. யாவன் ஒருவன் தம்மை இழிவாகச் சொன்னவை தம்மாட்டுளவாயின், உண்மை சொன்னான் அதனை விலக்கு வாம் எனவும், அவை இல்லையாயிற் பொய் சொன்னான் நமக்கென் என்றும் மெய்தூர்ந்ததனைத் தாம் முட்டினதோடும், தம் மேல் யாதானும் ஒன்றுபட்டதனோடு வாசியற்றிருத்தலும் ஆகிய சினமின்மைகளைக் கூறப்பட்டது. (நாலடி. சினமின்மை. பதுமனார்.) (2) அஃதாவது தம்மை மற்றொருவர் இழிவாகச் சொன்ன இடத்தும் மெய்தூர்ந்து அடித்த இடத்தும் இது நாம் முன்பு செய்த தீவினையால் வந்தது அல்லாமல், தீவினை செய்யாது இருக்கில் இது நமக்கு வருவது அல்ல என்றும் ஒருவர் மெய் தூர்ந்து தடிந்ததனைத் தம்மேல் ஒரு மரம் இடுவதுபோலும், முள்தைத்தல்போலும் கருதி மரத்தினோடும் முள்ளினோடும் வாசியற்றால்போலத் தமக்குப் பொல்லாங்கு செய்தவர் மேலும் கோபம் எழாமல் தம் அறிவினால் அதனை மீட்டல். (நாலடி. சினமின்மை. தருமர்.) சினை: உயிர்ப்பொருளின் உறுப்பு. (சொல். கட். 52.) சீ சீ: ஈகார ஈற்றுப் பகுதிகளுள்ளே சீ என்பது வெறுத்தல் என்னும் பொருளிலே ரகரம் விரியப்பெற்றுச் சீர்த்தல் முதலியனவாய் வரும். தூர்த்ததொரு காலைதனிற் சுந்தரி பொருளாய்ச் சீர்த் திடலும் (கந்த புராணம்). சீத்தை, சீக்கு முதலியன சீ என்பதி னின்று தோன்றிய பெயர்கள். சீத்தை = கீழ்மகன். சீக்கு = துரால். (செந்தமிழ். 11-43.) சீர்: (1) அசை இசைந்து சீர்கொள நிற்றலில் சீரே. (யா. வி. 1.) (2) சீரென்ற தென்னை எனின், பாணி (தாளம்) போன்று இலயம்பட (தாள அறுதி) நிற்றலான் அது சீரெனத் தொழிற் பெயராம். என்னை? சொற்சீர்த்து இறுதல் என்புழித் தொழிற் படுத்து ஓதினமையின். (தொல். பொருள். 324. பேரா.) சீர்மை: பெருமை, கனம் அல்லது புகழ் எனினும் ஒக்கும். இப்பொருண்மையினைச் சிறுமை பலசெய்து சீரழிக்கும் (குறள். 934) என்புழி விளங்கக் காணலாம். பெரியாரைப் பிழையாமை கூறும் இடத்துப் பெரியாரைச் சீரார் என்றதும் (குறள். 900) காண்க. (திருக்குறள். தண்டி. 195.) சீரை: துலாக்கோல் தட்டு. (புறம். 44. ப.உ) சு சுக்கு: சுக்கு - சுண்டி என்ற சொற்கள் நீர் சுருங்கிய அல்லது சுண்டிய இஞ்சிக்குப் பெயர்கள். சுப்பி, சுப்பல், சுள்ளி (நீர் சுருங்கிய சிறுகிளை) முதலியவற்றிற்போலச் சுருங்கு என்பது ருகரம் கெட்டு வலித்தல் விகாரம் பெற்று சுக்கு என்று நின்றது. சுண்டு + இ = சுண்டி; இகரம் வினைமுதற் பொருளை உணர்த் தும் விகுதி. வடமொழியால் சுடீ (suthee) சேரஷணேர சுடீ என்ற பகுதி உலர்தற்பொருளில் என்கின்றனர். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6-177.) சுங்கம்: கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறை யாயது. (திருக். 756. பரி.) சுத்தி: பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பி வடிவாகத் தலை ஓட்டால் அமைக்கப்படுவது ஒன்று. (திருக்கோ. 242. பேரா.) சுதை: சுதை என்பது மணலும் நீறும்கூடிய சுண்ணாம்பு. (திருக். 714. காலிங்) சுமடு: சுமடு - இஃது இப்பொழுது சும்மாடு எனப்படுகிறது. (பெரும்பாண். 155.) சுருங்கை: கரந்துறை; ஒழுகு நீர் புகுகையை ஒருத்தரும் அறியாதபடி மறைத்துப்படுத்த வீதி வாய்த்தலை. (சிலப். 14 - 65. அரும்பத.) சுரை: கோல் செருகப்படுகின்ற சுரையை உடைமையில் சுரை என்றார்; ஆகுபெயர் ; சுரை - குழைச்சு. (மண்வெட்டி) (பெரும்பாண். 90 - 2. நச்) சுவடி: சுவடி என்பது சுவடு என்பதினின்றும் பிறந்ததாகும். சுவடு என்பது குறி அல்லது அடையாளம் எனப் பொருள்படும். அடிச்சுவடு என்பதை நோக்குக. தமிழில் “book” என்பதற்கு இச்சுவடி என்ற விழுமிய பொருள் பொதிந்த பெயரைத் தேடி அளித்த நம் முன்னோர் தம் பெருமை போற்றுதற்குரியதன்றோ! ஆங்கிலத்தில் ஒருவன் அவனுடைய முன்னோர்களின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுகிறான் என்று கூறுவதுண்டு. அரிய பெரிய கருத்துக்களின் அடிச்சுவடுகளை விட்டுவைப்பதற்கே நூல்கள் எழுந்தனவாகும். எனவே சுவடி என்ற பெயர்ப் பொருத்தம் ஓர்க. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12: 60 - 61.) சூ சூத்திரம்: சூத்திரமாவது கருதிய பொருளைக் கைக் கொண்டு கண்ணாடியில் நிழல்போலத் தெரிவுறத் தோன்றச் செய்யப்படுவது. (யா. வி. பாயிரம்.) சூலி: சூலி - கொற்றவை. சூலத்தை உடைமையின் கொற்ற வையைச் சூலி என்றார். (குறுந்தொகை. 218. உ. வே. சா.) சூழ்ச்சி: (1) சூழ்ச்சி என்பது சுழற்சி; சூழ்வருவானைச் சுழல்வரும் என்ப ஆகலின்.......... அஃதாவது மனத்தடுமாற்றம். (தொல். பொருள். 260. பேரா.) (2) சூழ்ச்சி என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பழைய பொருள் சூழ்ந்து நிற்றல் ஆராய்தல் என்பவை. இன்று வழங்கும் பொருள் தீய எண்ணம் வஞ்சக யோசனை என்பவை. அச்சொல்லின் பிறப்பைக் காட்டும் சூழ் என்னும் அடிச் சொல் தெளிவாக அமைந்திருந்தும் இவ்வாறு பொருள் மாறு வதை தடுக்க இயலவில்லை. (மு. t., மொழி வரலாறு. 59.) செ செங்கோல்: (1) செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது. (திருக். 390 பரி) (2) செங்கோல் - அம்பு. அஞ்சிப் புறம் கொடுத்தார், அடைக்கலம் என்றார், முதலியவர்பாற் செல்லாமைச் சிறப்பால். (குறுந். 1. சௌரி.) செங்கோன்மை: (1) செங்கோன்மையாவது செவ்விதாகிய முறை செய்தல் உடைமை. குற்றமும் குணம் தூக்கி ஆராய் தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. (திருக். செங்கோண்மை. மணக்.) (2) ஒருபால் கோடாது கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது. (திருக். செங்கோண்மை. பரி.) செஞ்சாந்து: செஞ்சாந்து என்பது குங்குமப்பூ முதலான சிவந்த மணப்பண்டங்களால் கூட்டப்படும் கூட்டு. (திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 117) செதும்பு: சிறுகி ஒழுகும் புனல். (நாலடி. 128. பது. விள. உ) செந்தமிழ்: செந்தமிழ் - செவ்விய புனல். (நாலடி. 128. பது. பிள. உ) செந்நா: பொய் கூறாமையிற் செந்நா என்றார். (புறம். 148. ப.உ) செப்பம்: சொல்லும் கருத்தும் செயலும் மாறுபடாமை. (திருக். 951. ப. உ.) செப்பு: செப்பு என்பது உத்தரம் என்பதனோடு ஒரு பொருட் கிளவி ஆகலானும், வினாய பொருளை அறிவுறுத் தலே இலக்கணமாம். (தொல். சொல். 13. சேனா.) செம்பு: செம்பு என்பது உலோகங்களில் ஒன்று. செந் நிறமாயிருத்தலின் அஃது அப்பெயர் பெற்றது. அதனால் செய்யப்பட்ட கலனைச் செம்பு என்றே அழைத்தனர். (பழந்தமிழ். 69.) செம்பொருள்: செம்பொருள் - அறம். அறமானது மெய் யுணர்ந்தார் நெஞ்சிற் கெல்லாம் செம்மையுடையதாய்த் தோன்றலின். (திருக்குறள். தண்டி. 91.) செம்மாத்தல்: மகிழ்ச்சியால் இறுமாந்திருத்தல். (நாலடி. 331. தருமர்) செம்மை: கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறா காமை. (திருக். 951. பரி.) செய்: செய், விளைநிலம், இது பொதுப்பெயர். புன்மை சிறுமை ஆதலின், விளைச்சலில் சிறுமையுடைய புலம் புன் செய் ஆயிற்று. விளைச்சலில் பெருமையுடையது நன்செய். இதன்கண் நன்மை பெருமைப் பொருளது. (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 59.) செய்யுளும் பாவும்: அறமுதல்நான் கென்றும் அகமுதல் நான்கென்றும் திறனமைந்த செம்மைப் பொருள்மேல் - குறைவின்றிச் செய்யப் படுதலால் செய்யுள் செயிர்தீரப் பையத்தாம் பாவுதலால் பா. (யா. வி. 55.) செருப்பாழி: மேல்கடற்கரையை அடுத்துள்ள பாழிச் சிலம்பு என்ற மலைக்குச் செருப்பு என்ற பெயரும் உண்டு. செருப்புப் போன்ற தோற்றமுடையதுபோலும். புலவர்கள் அதை மிதியாச்செருப்பு என்றனர். அம்மலையை அடுத்துள்ள வளைகுடாவுக்கு - செருப்பாழி என்று பெயர். செருப்பு + ஆழி - செருப்பாழி. அங்கு, பாழி அல்லது செருப்பாழி என்ற ஊரும் இருந்தது. அது பாதுகாப்பு மிக்க வலிய அரணை உடைய நகராகும். அச் செருப்பாழியில் தங்கியிருந்த மோரியார் படையை வென்று துரத்தியே, இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்று பெயர் பெற்றான். (கொங்குநாடு. 127.) செல்வம்: செல்வம் என்பது நுகர்ச்சி. (தொல். பொருள். 259. பேரா.) செலவு: இருமுது குரவரால் கொண்டாடப்படுதல். (திருக்கோ. 268. பேரா.) செவ்வழி: செவ்வழி என்ற இசையின் பழைய பெயர் முல்லைப்பண் ஆகும். இஃது இக்காலத்தில் பாடப்பெறும் மோகன இராகம் என்பர்..... இராகங்களைப் பெருக்க இது (செவ்வழி) சரியான வழிகாட்டியதால் இது செவ்வழி, செம்மை யான வழி (correct path) எனப் பெயர் பெற்றது. (கழகப் பொன்விழா மலர். 23.) செவியறிவுறூஉ: ஒருசாத்தற்குச் செவி அறிவுபடுத்து அவனை வாழ்த்துதல். (தொல். பொருள். 423. பேரா.) செறிவு: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை. (கலி. 133.) சே சேக்கை: சேக்கப்படும் இடத்தைச் சேக்கை என்றார். (மதுரை. 487. நச்.) சேம அச்சு: ஏற்ற இழிவு உடைய வழி அச்சு முறிந்துழி (உதவுவது) சேம அச்சு) (புறம். 102. ப. உ) சேரநாடு: கடல் சேர்ந்த நிலத்தைச் சேர்ப்பு என்றும், அந்நிலத்துத் தலைவர்களைச் சேர்ப்பர் என்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. அவ்வழியே நோக்கின் சேரநாடும் தொடக்கத்தில் சேர்ப்பு நாடென விளங்கிப் பின் சேரநாடெனத் திரிந்துவிட்டது. சேர்ப்பர் சேரர் ஆயினர். சேர்ப்புத்தலை சேர்த்தலை எனவும், சேர்ப்புவாய் சேர்த்துவாய் எனவும் வழங்குவது காண்க. (சேர மன்னர் வரலாறு. 57 - 58.) சேரலன்: சேரல் சேரலன் ஆயது. தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்) செருமா உகைக்கும் சேரலன் காண்க (திருமுகப் பாசுரம்) என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன், கேரலன் ஆகிப் பின்னர்க் கேரளன் ஆகியது. ஆதலின் கேரளன் என்ற சொல்லின் தோற்றத்திற்கு வேறு மூலம் தேடி உரைப்பது உண்மை நிலைக்கு மாறுபட்டதாம். (பழந்தமிழ். 101.) சேரி: (1) பலர் சேர்ந்திருக்கும் இடம் சேரி எனப்பட்டது. பார்ப்பனச் சேரி என்னும் வழக்கம் இருந்தள்ளது. பின்னர், தெருவைக் குறித்துள்ளது. ஓரூர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் (குறுந். 23) இவ்வாறு பொதுவாகப் பலரும் சேர்ந்து வாழும் பகுதியைக் குறித்த இச்சொல், காலப்போக்கில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படும் தமிழ்மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கப் பயன்பட்டுவிட்டது. பறச்சேரி, பள்ளச்சேரி. பறையரும் பள்ள ரும் நல்ல தமிழர்களே. அவர்கள் தாழ்ந்ததைப்போல் தமிழ்ச் சொல்லும் தன்பொருளில் தாழ்ந்துவிட்டது. (பழந்தமிழ். 72.) (2) பண்டைக்காலத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த ஒரு குலத்தார் வீட்டுத் தொகுதிக்குச் சேரி என்று பெயர். (தொல். சொல். 49. கந்தசாமியார். பாவாணர்.) சொ சொல்: (1) சொல் என்றது யாதனை எனின், எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள் தன்மையையும் ஒருவன் உணர்தற்கு நிமித்தமாம் ஓசையை. (தொல். சிறப்புப் பாயிரம். நச்) (2) சொல்லாவது எழுத்தொடு ஒருபுடையான் ஒற்றுமை உடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. (தொல். சொல். ஐ. சேனா.) சொல்லுதல்: சொல்லுதல் ஒருவனிடம் பொதுவாக ஒன்றைத் தெரிவித்தல். பேசுதல்: ஒரு மொழியைக் கையாளுதல். கூறுதல்: ஒன்றைக் கூறுபடுத்தி அல்லது வகைப்படுத்திச் சொல்லுதல். சாற்றுதல்: முக்கியமான செய்தியைப் பொதுமக்கட்கு அறிவித்தல். மொழிதல்: ஒவ்வொரு சொல்லையும் தெளிவாய்ச் சொல்லுதல். என்னுதல்: ஒருவன் கூற்றைத் தெரிவித்தல். கிளத்தல்: ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்லுதல். பன்னுதல்: பலபொருள்களுள் ஒவ்வொன்றையும் தனித் தனி குறித்துச் சொல்லுதல். நுவலுதல்: நூற்பொருளை நுணுக்கமாகச் சொல்லுதல். உரைத்தல்: நூலுக்கு உரை கூறுதல் அல்லது ஒன்றை விளக்கிச் சொல்லுதல். நவிலுதல்: ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பலகாலும் ஓதிப் பயிலுதல். பகர்தல்: ஒரு பொருளின் விலையைச் சொல்லுதல். நொடித்தல்: கதை அல்லது வரலாறு சொல்லுதல். செப்புதல்: ஒரு வினாவிற்கு விடை சொல்லுதல். அறைதல்: ஒன்றை உரக்க அல்லது வலியுறச் சொல்லுதல் மாறுதல்: உரையாட்டில் மாறிமாறிச் சொல்லுதல் விள்ளுதல்: ஒன்றை வெளியிட்டுச் சொல்லுதல். விளம்புதல்: ஒன்றைப் பலர்க்கு அறிவித்தல். புகலுதல்: ஒன்றை விரும்பிச் சொல்லுதல். இசைத்தல்: ஒன்றைக் கோவைபட அல்லது ஒழுங்கு படச் சொல்லுதல். கழறுதல்: கடிந்து சொல்லுதல். இயம்புதல்: இன்னிசையுடன் சொல்லுதல். கரைதல்: அழுது கொண்டு அல்லது இரங்கிச் சொல்லுதல். (உயர் தரக் கட்டுரை இலக்கணம் II, 23 - 4) சொற்குற்றம்: சொல்லின்கண் தோன்றும் குற்றம். (திருக். 127. பரி.) சொன்மலர்: சொல்மலர் எவ் விடத்துப் பெறுதும் எனின் குரவர் முதலான அரசர் சொல், திருவாய் மலர்ந்தார் என்னும் வழக்கத்தால் கண்டு கொள்க. (திருக். 650. காலிங்) சோ சோகாப்பர்: அல்லாப்பர், செம்மாப்பர் என்பனபோலச் சோகாப்பர் என்பது ஒரு சொல். (திருக். 127. பரி) சோங்கு: (ஒருவகை மிதவை) படகினும் தோணியும், தோணியினும் சோங்கும் பெரியனவாம். (திருவிளை. வலைவீசின. 39. ந. மு. வே) சோணாடு: சோழன் நாடு என்பது சோணாடு என மரூஉ முடிபு. (பட்டினப். 28. நச்) சோத்தம்: இழிந்தார் செய்யும் அஞ்சலி. (திருக்கோ: 173. பேரா.) சோர்பு: மனமொழி மெய்கள் தன் வயத்த அல்ல ஆதல். (திருக். 930. பரி) ஞா ஞாயில்: (1) ஞாயில், ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு. (சீவக. 104. நச்.) (2) (சூட்டு) அஃது எய்தால் மறைதற்கு உயரப்படுப்பது. (மதுரைக். 66. நச்.) (3) அம்பு எய்வதற்கு மதின்மேல் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் குருவித்தலை என்பர். (மறைமலை. பட். ஆரா. 95.) ஞாலம்: உலகத்தை ஞாலம் என்ற சொல்லால் அழைத் துள்ளனர். ஞாலம் என்றால் தொங்குவது என்று பொருள். உலகம் வான வெளியில் ஒரு பற்றின்றித் தொங்கிக் கொண் டிருக்கின்றது என்று அறிந்திருந்தனர் போலும். (பழந்தமிழ். 240) ஞெ ஞெமிடுதல்: கயக்குதல் (கசக்குதல் என வழங்குகிறது.) ஞெமிடுதல் நிமிண்டுதல் என இக்காலத்துத் திரிந்து வழங்கப் படுவது. (நற்றிணை. 22. அ. நாராயண.) த தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதி உடையார் (திருக். 446. பரி.) தகப்பன் : பிதாவை நாம் தந்தை என்றும் தகப்பன் என்றும் கூறுவோம். அண்ணனைத் தமையன் என்போம்; இளையவனைத் தம்பி என்போம். மூத்த சகோதரியைத் தமக்கை என்றும், இளைய சகோதரியைத் தங்கை என்றும் வழங்குவோம். தந்தை, தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை - இற் சொற்களின் பிறப்பு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கக் காண் கின்றோம் அல்லவா ! தம் என்ற சொல்லின் அடியாக இப் பதங்கள் பிறந்தனவாகத் தோன்றுகின்றன. ஆனால், தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் ககரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக்கின்றோம். மலையாளம் அம்மயக்கத்தைத் தீர்க்கும் தமப்பன் என்கிறார்கள். ஆகவே அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்து கொள் கிறோம். (தமிழ்விருந்து. 97.) தகு: தகு, மிகு, அறு, உறு, இறு முதலிய பகுதிகள் தகவு, மிகவு, அறவு, உறவு, இறவு முதலியனவாய் நின்று பெயராகும். தகவு - நடு நிலைமை. மிகவு - மேம்பாடு. அறவு - அற்றம்; உறவு - சுற்றம். இறவு - மரணம். தகு, நகு, படு, பகு முதலிய சிலபகுதிகள் அல், ஐ முதலிய விகுதிகள் பெற்றுத் தகல், தகை, நகல், நகை, படல், படை, பகல், பகை முதலியனவாய்ப் பெயராகும். (செந்தமிழ். 11: 43) தகுதி: தகுதி என்பது அப்பொருட்குரிய சொல்லால் சொல்லுதல் நீர்மை அன்று என்று அது களைந்து தக்கதோர் வாய்பாட்டால் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினார். என்றலும், சுடுகாட்டை நன்காடென்றலும், ஓலையைத் திரு முகமென்றலும், கெட்டதனைப் பெருகிற்றென்றலுமென இத் தொடக்கத்தன. (தொல். சொல். 17. சேனா) தட்டை: (1) தட்டப்படுதலின் தட்டை என்றார். (மதுரைக். 305. நச்) (2) தட்டையாவது மூங்கிலைக் கணுக்கள் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டுவ தோர் கருவி. (குறிஞ்சிப்பாட்டு. 43. நச்) தடம்: (1) தடம் - அகலமுடையது. தடவும் கயவும் நளியும் பெருமை - தொல்காப்பியம். (வடசொற்றமிழ் அகரவரிசை. 303.) (2) தடம் - உயர்ந்த இடம். (திருக்கோ. 4. பேரா) தண்டாரணியம்: தண்டகாரணியம் என்பதன் சிதைவு. தண்டாரணித்துத் தாபதப் பள்ளி (சீவக. 337) (பதிற்று. பதிகம். 6. ப.உ ) தண்டை: கையில் காப்புக்கட்டியதுபோலவே காலிலும் தடை கட்டினார்கள். அத்தடைதான் தண்டை என்று பெயர் பெற்றது. பூடு என்பது பூண்டு என்றும், அடு என்பது அண்டு என்றும் வழங்குதல் போலவே தடை என்பது தண்டை ஆயிற்று. (தமிழகம் அலையும் கலையும். 177.) தண்ணுமை: மிருதங்கம் எனக் கூறப்பெறும் தோற் கருவியே தண்ணுமை என நம் பண்டையோரால் வழங்கப் பெற்றதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். (பாணர் கைவழி. 36.) தபலா: வடஇந்திய இசைப்பாட்டுக்களில் தபலா முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தபலா என்னும் பெயரே தமிழ்ச் சொல்லின் திரிபு. பதலை என்னும் தமிழ்ப்பெயர் தபலா என்று திரிந்து வழங்குகிறது. பதலை என்பது சங்ககாலத்தில் வாசிக்கப்பட்ட ஓர் இசைக் கருவி (தோற்கருவி) தபலாவுக்கு ஒருபக்கம் மட்டும் தோல் மூடிக் கட்டப் பட்டிருப்பதுபோலவே பதலையும் ஒரேபக்கம் தோல் மூடிக் கட்டப்பட்டிருந்தது. இதனை பதலை ஒருகண் பையென இயக்கு மின் (புறம். 152) என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம். புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் பதலை என்பது ஒரு தலை முகமுடையதோர் தோற்கருவி என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் எழுதியிருப்பது காண்க. (அஞ்சிறைத்தும்பி. 113 - 117) தபு: (1) இது படுத்துச் சொல்ல நீ சா எனத் தன் வினையாம். எடுத்துச் சொல்ல, நீ ஒன்றனைச் சாவி எனப் பிறவினையாம். (தொல். எழுத்து. 77. இளம்.) (2) இது படுத்துக் கூற நீ சாவெனத் தன்வினையாம். எடுத்துக் கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிற வினையாம். (தொல். எழுத்து. 76. நச்) தமிழ்: (1) தமிழ் என்றது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயல், இசை, நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழ்களும். (சிலப். 3-45. அரும். அடியார்.) (2) தமிழ் என்பதற்குத் தமிழ் நாடு எனினும் அமையும். (புறம். 50. ப.உ) (3) தமிழ் மொழிக்குத் திராவிடம் என்ற பெயர் பிற் காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனங் கூறினர். இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரோடட்டசு (Horodatus) முதலிய பழைய கிரேக்க ஆசிரியர், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது தமிழ் என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர். (சங்கநூற் கட்டுரைகள். I. 14-5.) (4) தமிழ் என்னும் பெயர் முதலில் எப்படி வந்தது என்ப தும் இங்கே சிறிது நினைவு கூர்வது நல்லது. தமி என்னும் சொல்லுக்குத் தனிமை என்பது பொருள்.தமிழுக்குச் சிறப் பெழுத்தாக உள்ள ழ் என்னும் ஓர் இடையின எழுத்தைத் தமி என்பதனோடு சேர்த்துத் தமிழ் என்று முன்னோர் வழங்கின ரென்று தெரிகின்றது. வேறொரு மொழியில் இருந்து தோன்றா மல் தனித்துத் தோன்றியது என்பது அதற்குப் பொருள். (சங்க நூற் கட்டுரைகள். I 12.) (5) தமிழ் எது? மொழியா? அன்று; நாடா? அன்று. பின்னை எது? வாழ்க்கை. தமிழ் வாழ்க்கை இயற்கையோடு இயைந்து ஒழுகுவது. இயற்கையோடு இயைந்து ஒழுகுவோர் எவராயினும் ஆக. அவர் தமிழ் வாழ்க்கையினரே ஆவர். திருவள்ளுவர். ஷெல்லி, தாகூர் முதலியோர் தமிழ் வாழ்க்கையினர் என்று கூறல் மிகை யாகாது. (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள். 125.) (6) தமிழில் வல்லோசையும் மெல்லோசையும் இடைப் பட்ட ஓசையும் சிறந்திருத்தலின் அம்மூவினத்தால் தமிழ் எனப் பட்டது எனலுமாம். த - வல்லினம். மி. மெல்லினம். ழ்- இடை யினம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2 -388) (7) திரவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் தமிழ் என உருத் திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர். அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின் வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அய லாராகக் கருதப்பட்டவரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டி னார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்? அன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்தும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும். அங்ஙனம் கொள்ளல் சாலுமா? தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர் தம்மை திராவிடம் தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினாவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கும் உண்மையின் நழுவி வீழ்ந்த தாகக் காணப்படும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3- 9) (8) தம் மொழிஎனும் இரண்டு சொற்களால் ஆய சொற்றொடர் காலச்செலவில் தமொழி தமிழி என்றாயிற் றென்று கொள்ளல் சாலும். ஆகவே தமிழர் தம் மொழியே தமிழாம் எனலே சிறப்புடைத்தெனத் தோன்றுகிறது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3 - 10) (9) தமிழ் மக்கள் வழங்கும் முறைப்பெயர்கள் பலவற்றை நுனித்து நோக்கின் அப்பெயர்களுட் பெரும்பான்மையன தன்மைப்பெயரும் வேறுபெயரும் சேர்ந்து இரண்டும் ஒன்றாய் ஒரு சொன்னீர்மையாய் வழங்குவதைக் காணலாம். எங்ஙன மெனிற் காட்டுதும்: தம் + ஐயன் = தமையன் தன் + ஐயன் = தனையன் தம் + முன் = தம்முன் தம் + பின் = தம்பின் > தம்பி(ன்) > தம்பி. இச்சொல் முதலில், தம்பின், என்றிருந்து, பின் தம் என்ற சொல்லை எடுத்து மிக்கொலித்தலான் ன் நலிந்து கேடுற்றுப் பின் தம்பி ஆயிற்று. எம் + பின் னும், உம்+பின் னும் அங்ஙனமே எம்பி, உம்பி ஆயின. அங்ஙனம் அன்றி எம் + தம்பி எம்பி ஆயிற்றெனக்கோடல் சாலாது அப்படிக் கோடல் தம்பி யின் உண்மை வடிவினைக் காணாதார் செய்கையாம். தெலுங் கில் தம்பினுகி என்று வேற்றுமை உருபேற்றவிடத்து வழக்கில் இருப்பதைக் காண்க. தம் + ஐ = தம்மை: அம்மை; தன் + ஐ = தன்னை: அன்னை. ஐ சிறப்பையும், சிறப்பினை உடையவரையும் சுட்டுகின்றது. ஐயை என்ற பண்டையோர் கூற்றுமிங்கு நோக்கத்தக்கது. தமக்கை தங்கை தம்மோய் முதலிய சொற்களிலும் தன்மைப் பெயரின் புணர்ச்சியைக் காணலாம். ஆதலின் தான் உண்ணும் உணவினும், போற்றும் உயிரினும் தம்மொழியைச் சிறப்புடைய தாகக் கருதிய தமிழ் நன்மக்கள் தாம் வழங்கு மொழிக்கு உரிமையான் தம்மொழி எனப் பெயரிட்டார்கள் என்றும், தம்மொழியே காலச்செலவில் தமிழ் என்று ஆயிற்றென்றும் கூறுதல் தகும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3: 10 -11) (10) அமிழ்தினும் இனிய தமிழ் மொழியைத் தமிழர் அமிழ்து எனப் பெயரிட்டார் என்றும் அமிழ்து காலச் செலவில் தமிழ் ஆயிற்றென்றும் அமிழ்து அமிழ்து எனப் பன்முறை அடுக்கிக் கூறின் இயல்பாகவே அமிழ்து தமிழ் ஆகின்றது என்றும் கூறி மகிழ்கின்றார். இக்கொள்கை தானும் தோற்றத்தில் காணப்படுவதுபோல் அத்துணை உண்மை உடையதில்லை, அமிழ்தும் அமிர்தம் என்ற வடசொல்லின் திரிபு எனக்கோடல் பொருந்தும் ஆகலானும், மீட்டும் வடசொற் பேராலேயே வடிமொழியாளர் கலப்பின் பின்னே தம் மொழிக்குப் பேரிட் டார் எனக் கோடல் வேண்டு மாகலானும் அங்ஙனம் கோடல் பொருந்தாது ஆகலானும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3: 9-10) (11) தமிழ் என்ற சொல் தம் + இழு (ம்) என்ற இரண்டு தமிழ்ச் சொற்களின் சேர்க்கையாற் பிறந்த சொற்றொடராம் எனக் கருத இடம் உண்டு. இனிய ஓசை தழுவிய சொற்களும், இயல்புகளும் உடைய தம்மொழிக்குத் தமிழு எனப் பெய ரிட்டனர் என்றும் அது தம் எனும் சொல்லை எடுத்து ஒலித்த லினால் இறுதிக் கண்ணுள்ள உகரம் நலிந்து கேடுற்றுத் தமிழ், என்றாயிற் றென்றும் கொள்ளினும் இழுக்கில்லை. இழுமென் மொழியான் எனப் பண்டையோர் கூற்றும் இங்கு நோக்கத் தக்கது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3; 10) (12) தமிழ் என்பது இனிமை என்னும் பொருட்டு என்றும் இனிமை உடையதாந் தன்மை பற்றித் தமிழ் எனத் தம் மொழிக்குப் பெயரிட்டனர் தமிழர் என்றும் கூறுவர். தம் மொழியாந் தமிழ்மொழியின் இனிமை கண்டு உவந்து இனி மைக்கே தமிழ் எனப் பெயரிட்டனர் எனவே சாலப் பொருத்த முடைத்து. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3:9.) (13) தானே தமியள் இங்கெய்திய துரை தானே தமியள் நின்றோள் என்பனவற்றுள் தமி என்பது தனிமைப் பொரு ளில் வழங்கப்பட்டுள்ளமை காண்க. கவி, குமி, அவி, கலி என்பன ஈற்றில் ழ கரம் பெற்றுக் கவிழ், குமிழ், அவிழ், கலிழ் என்றாயது போலத் தமி என்பது தமிழ் என்றாயிற்று. ழ கரம் பகுதியைப் பெயர்த் தன்மைப்படுத்த வந்த எழுத்து. (தமிழ்மொழி வரலாறு. 70 - 71. கவிராசர்.) தமிழின் துறை: தமிழின் துறைகளாவன ஈண்டு அகமும் புறமும் ஆகிய பொருட்கூறு. (திருக்கோ. 20. பேரா.) தயை: தாய் என்ற சொல்லுடன் தொடர்புடைய தமிழ்ச் சொல்லே தாயாகி நின்ற தண்ணளி குறித்த தயா என்பது நறா (தேன்) என்ற சொல் நறை, நறவு என வழங்குவது போல் தயா என்பதன் திசை வடிவங்களாகத் தயை தயவு என்ற வடிவங்கள் தோன்றின. (மணிவிளக்கவுரை. 0) தரவு: தரவு என்ற பொருண்மை என்னை எனின் - முகத்துத் தரப்படுவது என்ப. அதனை எருத்தெனவும் சொல்லுப; என்னை? உடம்பும் தலையும் என வேறுபடுத்து வழங்கும் வழக்கு வகையான் உடம்பிற்கு முதல் எருத்தென்பது ஆகலின். (தொல். பொருள். 444. பேரா.) தவம்: (1) தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கல் முதலாயின. (திருக். 19. பரி.) (2) தபு + அம்: தபம் > தவம் = கெடுத்தல், நீக்குதல் பற்றறுத்தல். நீத்தார், துறவு என்னுஞ் சொற்களின் பொருளை நோக்குக. தவிர், தவத்து (நீக்கு) என்பன தவம் என்பதோடு தொடர்புடைய சொற்கள். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 354.) தவளைப்பாய்த்து: தவளைப்பாய்த்து என்பது, தவளை பாய்கின்றுழி இடைநிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபு கொள்வது. (நன். 18. மயிலை.) (இறையனார். 4. நச்)ஷ தள்ளாவிளையுள்: மழையில்லாத காலத்தினும் சாவி போகாத நிலம். (திருக். 731. மணக்.) தளம்பு: தளம்பு என்றது சேறு குத்தியை. (புறம். 61. ப. உ.) தளை: சீரிரண்டு தட்டு நிற்றலில் (தளைந்து நிற்றலில்) தளையே. (யா. வி. 1.) தற்றுதல்: (ஆடையை) இறுக உடுத்தல். (திருக். 1023. பரி.) தறுகண்: தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. (தொல். பொருள். 257. பேரா.) தனிநிலை: அஃகேநம் தமிழில் தனிநிலை என்று அழைக்கப்படும். இது நெஞ்சில் இருந்து வருங்காற்று இதழாலும், நாவாலும் அடைபடாமல் வெளிப்போவதால் தோன்றும் உயிரெழுத்து அனையதும் அன்று; அக்காற்று அடைபட்டு வெளிப்படுவதால் பிறக்கும் மெய்யெழுத்தைப் போன்றதும் அன்று. இரண்டிற்கும் இடையே உயிருடன் சேராமலும் மெய் யுடன் சாராமலும் தனியே நிற்றலின் தனிநிலை எனப்பட்டது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3 - 226) தா தாக்கணங்கு: தீண்டி வருத்தம் செய்யும் தெய்வம். (சிலப். 14 - 160. அரும்பத) தார்: (1) மார்பில் அணியும் மாலை. (புறம். 1. ப. உ) (2) தார் என்பது ஒரு குடிப்பிறந்தார்க்கு உரித்தென வரையறுக்கப்படுவது. (தொல். பொருள். 634. பேரா.) தாலாட்டு: தாலாட்டு என்ற சொற்றொடர் தால்+ஆட்டு எனப் பிரியும். தால் என்றால் நாக்கு. குழந்தையின் அழுகை ஒலியை அடக்கத் தாய் இதழ்களைக் குவித்து நாவினை ஆட்டிக் குரவையிடுகிறாளே அதற்குத்தான் தாலாட்டுதல் என்று பெயர். (தாலாட்டு. 13 - 14.) தாழை: தமிழிலே தென்னைமரத்துக்குத் தாழை என்னும் பெயரும் உண்டு. பழைய சங்க நூல்களில் தாழை என்னுஞ் சொல் தென்னை என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது. துளுமொழியிலும் தென்னைமரத்துக்குத் தாழை என்னும் பெயர் வழங்குகிறது. துளுவில் தாறெ (தாழை) என்றால் தென்னை மரம் என்பது பொருள். என்ன வியப்பு. சங்ககாலத்தில் வழங்கிய தாழை (தென்னை) என்னுஞ் சொல் பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மறைந்து போய்விட்டது. ஆனால் அச்சொல் துளுவ மொழியில் பேச்சு வழக்கில் இன்றும் இருக்கிறது. (துளுமொழியும் தமிழும்.) தாள்: தாள் என்பது கதிர்கொய்யாத முன்னும் சொல்வ தோர் பெயர். (திருக்கோ. 144. பேரா.) தானம்: தானமாவது அறநெறியான் வந்த பொருட் களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல். (திருக். 19. பரி.) தி திணை: ஒழுக்கமே திணை எனப்படும். குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பட்டது; என்னை? விளக்காகிய சுடர் இருந்த இடனும் விளக்கு எனப்பட்டது போல என்பது. (இறையனார். 1. நச்) தித்தி: (தேமல்) தித்தி - வயிற்றின்மேலே தோன்றுவது தேமல் - கொங்கை முதலியவற்றிலே தோன்றுவது. (நற்றிணை. 160. அ. நாராயண.) திப்பிலி: திப்பி + இல்லி. திப்பி - சக்கை; இல்லி - இல்லா தது. சக்கை இன்றி விதைகள் ஒருவகைப் பசையால் ஒட்டி இருக்கிறது. ஆதலால் திப்பிலி எனப்படுகிறது. வடமொழியார் பிப்பிலி - ப்ருபால நபூர்ணயோ; ப்ரூ என்ற பகுதி காத்தல் நிறைத்தல் என்ற பொருளில் வரும் ஆதலால் ப்ரூ என்ற பகுதி பியர்த்தி என்றாகிக் காத்தற் பொருளில் பிப்பிலி என்றாயதாய்ப் பொருந்தா விகாரங் கூறுகின்றனர். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6. 117.) திரு: திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. இஃதென் சொல்லியவாறோ எனின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப்பொருள்மேல் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல் அதனில் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிது ஒன்றற்கு இல்லாமையால் திரு என்றது அழகுக்கே பெயர் ஆயிற்று. அங்ஙனம் ஆயின் இது செய்யுளின் ஒழிய வழக்கினும் வருவது உண்டோ எனின், உண்டு; கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும், அலகைத் திருஅலகு என்றும், பாதுகையைத் திரு வடிநிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது. ஆத லானும் திரு என்பது அழகென்றே அறிக. அதனால் திரு வென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே. (திருக்கோ. 1. பேரா.) (2) திருவென்பது பொருள் உடைமையும், பொருள் கொணர்ந்து துய்த்தலும் இன்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி. அது வினையுள் உடைமை (தீவினைக் காலத்தும் செல்வம் உடையர் போல் இருத்தல்) எனப்படும். (தொல். பொருள். 273. பேரா.) திருமந்திர ஓலை: திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராக இருப் போர் திருமந்திர ஓலை நாயகம் எனப்படுவார். (முதற் குலோத்துங்க சோழன். 85.) திருமாவளவன்: திருவின் பெருமையை உடைய கரிகாற் பெருவளத்தான். (பட்டின. 299. நச்) திருவாய்க் கேள்வி: திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளியவற்றைக் கேட்டு வந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) தினை, பனை : தினை, பனை என்பன சிறுமை, பெருமை கட்குக் காட்டுவன. சில அளவை. (திருக். 104. பரி) தீ தீமை: தீ என்பது எதையும் சுட்டெரித்து அழித்தலால் தீமை என்பது கெட்டு ஒழிதலாகிய அழிவை உணர்த்துகிறது. (திருக்குறள் அறம். 80.) தீனி: ஒரு நாட்டில் உணவு என்பதை தின்தின் என்றே பெயர் சொல்கிறார்கள். சில உணவுப் பொருள்களைத் தின்னும் போது, தின் தின் என்ற ஒலி கேட்பதால் பொதுவாக உண வுக்கே, தின்தின் என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த நாட்டில் மட்டும் அல்ல, நம் நாட்டிலும் அப்படிப் பெயர் அமைந்திருக்கும் போல் தோன்றுகிறது. நாமும் தமிழில் தின் என்றும் தீனி என்றும் சொல்கிறோம். (சொல்லின் கதை. 8.) து து: து என்பது யகரம் விரியப் பெற்றுத் துய்த்தல், துய்த்து, துய்க்க முதலியனவாய் வரலன்றித் துவ்வல், துற்றல், துற்று, துற்றிய முதலியனவாயும் வரும். துற்றிய - தின்ற. துராய் துற்றிய துருவையும் (பொருந) துற்று என்பது பெயராயும் நிற்கும். துற்று - உணவு. முற்றுற்றுந் துற்றினை (நாலடி) துப்பு, துப்புரவு, துவ்வு, துற்றி முதலிய பெயர்களும் இதினின்று தோன்றும். (செந்தமிழ். 11 :120) துகில்: துகில் என்பது மாதர் அணியும் மெல்லிய ஆடை கடற்கரைக்குத் தன் காதலனாகிய கோவலனோடு சென்ற மாதவி நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடுத்திருந்தாள் என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. தஞ்சை மாவட்டத்திலே துயிலி என்ற ஊர் ஒன்று உண்டு. அவ்வூரில் நெய்யப்படும் மெல்லிய ஆடையும் துயிலி என்றே வழங்குகின்றது. நேர்த்தியான துகில் நெய்யப்பட்டதனால் அவ்வூர் துகிலி என்ற பெயர் பெற்று, அப் பெயர் நாளடைவில் துயிலி என்று மருவியதோ என்பது ஆராய்தற்குரியதாம். (தமிழகம் அலையும் கலையும். 175.) துண்டம்: ஒரு பொருளினது கூறு. (திருக்கோ. 132. பேரா.) துணி: துணித்தான் துணிந்தான் இவை இரண்டும் துணி என்ற ஒரே முன்னிலையாற் பிறந்து பொருள் வேற்றுமை உடையனவாய் வழங்கி வருதல் தெளிவாகிறது. இவற்றுக்குள்ள வேற்றுமை, காணப்படும் நிகழ்ச்சிக்கும் காணப்படா நிகழ்ச் சிக்கும் உள்ள வேற்றுமையே அன்றி வேறன்று. துணி - வெட்டு. துணித்தான்: வெட்டினான், அஃதாவது ஒன்றை மற்றொன்றி னின்றும் பிரித்தான். (துணி என்பது பெயராயின் துணிக்கப் பட்டதைக் குறிக்கும்; துண்டு என்பதற்கும் பொருள் அதுவே) துணிந்தான்: உள்ளத்தால் ஒன்றை மற்றவற்றினின்றும் பிரித்து உணர்ந்தான். அல்லது எண்ணங்கள் பலவற்றால் எழும் ஐயங் களை அறுத்து முடிபிற்கு வந்தான். இவண் வெட்டுதல் என்று புறத்தொழில் அகத்தின் மேல் ஏற்றப்பட்டது. துணிந்தான் என்பதே இவ்விரண்டில் முந்தியது; அஃது அகத்தில் நிகழும் செய்தியை உணர்த்தி நிற்குமிடத்தை ஐயமறக் காட்டுவதற்குத் தகர ஒற்று நகர ஒற்றாயிற்று. (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 2: 139) துதிக்கை: யானையின் கையைத் துதிக்கை என்றும் வழங்குவர். துகி என்ற சொல் சங்க நூல்களில் நீர்ப்பறவைகளின் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுத் தோலைக் குறித்து வழங்கும். யானைக்கும் தும்பிக்கையின் நுனியில் தோலுடன் ஒருவிரல் போன்ற உறுப்புக் காணப்படுவதால் அதைத் துதிக்கை என்றனர். (சங்க இலக்கியத்தில் விலங்கிண விளக்கம். 282) தும்பி: ஊன்தேர் வாழ்க்கை யுடையது, புறஞ்சிறை யுடையது. தேன் தேர் வாழ்க்கைத் தும்பி அகஞ் சிறையுடையது. (குறுந்தொகை விளக்கம். 2) துலாக்கோல்: துலா+கோல் = துலாக்கோல். துலா - துலாக்கோல் போன்ற ஏற்றம். கைத்துலா, ஆள் ஏறுந் துலா என்பன தொன்று தொட்ட வழக்கு. (புறநானுற்றுச் சொற்பொழிவுகள். 355.) துவலை: துவலை, தூவ விழும் நீர்; பெருந்துளி. திவலை சிறுதுளி. (ஐங்குறு. 141. ஔவை. சு. து.) துளை: தொள் என்னும் முதனிலையிற் பிறந்த தொளை என்னுஞ் சொல் துளை எனத் திரிந்தது. (திருவாசக விரிவுரை. மறைமலை. 313.) துளைப்பொன்: காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப் பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப் பெற்றது துளைப் பொன். (இது சோழர் காலத்தில் வழங்கியது) (முதற் குலோத்துங்க சோழன். 90.) துறந்தார்: பிறர் நலம் பேணுவதற்காகத் தன்னலத்தை விட்டவர். (திருக். 42. சி. இலக்.) துறைவகை: துறைவகை என்பது, முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன் பாற்படும் என்ற ஓரு துறைப் படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்கு உளதாகச் செய்தல். அவையும் பலவாதலின் வகை என்றான் என்பது. (தொல். பொருள். 313. பேரா.) துனி: பெரும் பிணக்கு. (திருக். 1306. ப. உ) தூ தூக்கு: (1) தூக்கு- நூறுபலம். அஃதாவது ஒரு நிறை ஒன்றின் நிறை இதுவெனக் காண வேண்டுமாயின் அது மண்ணில் இருந்து மேலே தூக்கப்படும். மண்ணில் இருக்கும் வரையில் அதன் எடை விளங்காது. எடை - இது எடு என்ற முதனிலை யடியாகப் பிறந்தது. எடுத்தலளவை - இதில் எடு என்பதை நோக்குக. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 88.) (2) தொடை தூங்கித் தொடர்ந்து இசைத்தலின் தூக்கு எனப்படுமே. (தூங்குதல் - செறிதல் ; தூக்கு - பா). (யா. வி. 1) (3) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்துதல். (தொல். பொருள். 313. பேரா.) (4) தூக்கு - செய்யுள். அஃதாவது இயல்பாய் நாம் பேசும் பேச்சில் இருந்து உயர்த்தப்பட்டு விளங்குவது. மேம்பட்டது. தூக்கு - கூத்து. கால் தூக்கி ஆடிய அம்பலக் கூத்து. கழையின் நுனியில் நின்றாடுங் கழைக் கூத்து முதலியவற்றான் உணர்ந்து கொள்க. (5) தூக்கு - ஆராய்தல். இது முன் பொருளில் இருந்து இயற்கையாய்ப் பிறப்பது. நிறுத்துப் பார்த்ததில் இருந்து ஏற்றத் தாழ்ச்சியை உற்று நோக்கும் ஆராய்ச்சி என்ற பொருள் தோன்று வது வியப்பன்று. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83.) தூக்கு: கொலையாளி தூக்குண்டான் என்பதில் பொருள் வெளிப்படை. ஆனால் தூக்கம் - உறக்கம் என்பதின் குறிப்பு யாது? ஆழ்ந்த உறக்கம் சாவைப் போன்றது. அஃது உயிர்த்தலும் அன்று. சாதலும் அன்று. விசும்பிற்கும் மண்ணிற் கும் இடையே மரக்கிளை ஒன்றில் அல்லல் படுபவன் தொங்கு கிறான். உயிருக்குஞ் சாவிற்குமிடையிலுள்ள நிலையில் இருப்ப வன் தூங்குகிறான். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83.) தூண்: துண் - தூண் = துணிக்கப்பட்ட கல். தூண்+அம் = தூணம்- தூணம் (வடசொல்) (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 355) தூணி: தானியம் முதலியவற்றை அளக்குங் கருவி; மரக் கால். (நற்றிணை. 16. அ. நாராயண.) தூதுணம் புறவு: தூது உண் அம் புறவு எனப் பிரித்துச் சிறு கல்லைத் தின்னும் அழகிய புறா எனப் பொருள் உரைக்க. (மறைமலை. பட். ஆரா: 104) தூற்றுதல்: பலரும் அறியப் பழியாயினவற்றைக் கூறிப் பரப்புதல். (திருக்குறள். தண்ட. 188.) தெ தெங்கு: தெற்கில் இருந்து, பெரும்பான்மையாக இலங்கை யில் இருந்துதான், மலையாள நாட்டிற்குத் தென்னை கொண்டு வரப்பட்டதெனத் தெரிகிறது. தெற்கிலிருந்து வந்ததால்தான் அதற்குத் தென்கு. தெங்கு (தென் - தெற்கு; கு- பொருட் சிறப்புணர்த்தும் உறுப்பு) தென்னை எனப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். கடற்கரையில் தாழைபோல் மிகுதியாய்ப் பயி ராகும் காரணத்தால் தென்னைக்குத் தாழை என்ற பெயரும் கடற்கரையில் தழைத்து வளர்வதென்னும் பொருள் பட ஏற் பட்டிருக்கலாம். (சங்ககாலச் சிறப்புப் பெயர்கள். 233 - 34) தெய்வம்: மலையில் மூங்கில் ஒன்றோடு ஒன்று தேய்வ தனால் தீ உண்டாகிறது. கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுகிறது. இவற்றிலிருந்தே முதன் மாந்தர் தீக்கடை கோலும் சக்கி முக்கிக் கல்லும் கண்டுபிடித்திருக்கவேண்டும். பொருள்கள் ஒன்றோடு ஒன்று தேய்வதனால் தீ உண்டாவதால் பழங்காலத் தமிழ் மக்கள் அதைத் தேய் என்றனர்..... தேய் என்பதே நாளடைவில் தேய்-தே-தீ எனத் திரிந்தது...... தேய் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தவையே தேவன், தேவி, தேவர், தெய்வம் என்னும் சொற்கள். (திருக்குறள். குழந்தையுரை. முன்னுரை. 22.) தெற்றி: வேதிகை; தெற்றி என்பதனைக் கைகோத்தாடும் குரவை என்பாரும் உளர். (புறம். 53 ப. உ.) தெறுள்: தெறுள் என்றது காட்டகத்து ஒரு கொடி; புளிமா என்று உரைப்பாரும் உளர். (புறம் 119. ப. உ) தே தேசிகம்: தேசிகம் என்றது இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்று சொல்லப்படாநின்ற சொற் பிரயோகம். ( சிலப். 3 : 47. அரும்.) தேயம்: தனித் தமிழ்ச்சொல். தேம் என்பது தேஎம் என்று ஆகிப் பிறகு, தேயம் என்று ஆகியது. பின்னர், தேசம் ஆகிவிட்டது. இப்பொழுது தேசம் என்பதுதான் வழக்கில் உள்ளது. வடசொல் என்று கருதுகின்றனர். அது தவறு. (வள்ளுவர் வகுத்த அரசியல். 39) தேவாங்கர்: பலவகை ஆடைகளுள் தேவாங்கு என்பது ஒருவகை ஆடை. அதனை நெய்தவர் தேவாங்கர் எனப்பட்டனர். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 13.) தேவாரம்: தே+வாரம்=தேவாரம் ஆயிற்று. தே = கடவுள். வாரம் = வாரப்பாடல். அஃதாவது, தேவனைப் போற்றும் வார நடையினையுடைய பாடல் எனப் பொருள்படும். இத்தேவாரப் பாக்களை நாம் பிறர்பாடக் கேட்கும்போது கவனித்தால் பாடப்பட்ட பாக்களில் ஒவ்வொரு சொல்லையும் நாம் நன்கு காதால் உட்கொள்வதோடும் அவற்றின் நற் பொருள்களை நம் உள்ளத்தில் உணர்ந்து களிக்கப் போதுமான கால அளவை யோடும் கூடிய தகுந்த நடையாகவே இருக்கின்றன என்பதை அறிவோம். இதற்குக் காரணம் அவ்வார நடையேயாம். (பாணர் கைவழி. 11.) தை தையல்: தைஇய என்பதற்குக் கோலஞ் செய்தலை யுடைய என நச். உரைப்பர். தையல் எனப் பெண்ணை உணர்த்திவருஞ் சொல்லுக்கும் கோலஞ் செய்தலை யுடையார். என்னும் அப்பொருளே பொருந்தும். (கலி, 26. உரைவிளக்கம். இளவழ.) தொ தொடர்பு: தொடர்பு என்பது தொழிற்பெயர். தொடர் என்பது பகுதி. பு என்பது தொழிற்பெயர் விகுதி. தொடர் என்னும் பகுதியில் இருந்து தொடர்வு, தொடர்ச்சி, தொடர்தல், தொடர்ப்பாடு என்னும் தொழிற்பெயர்களும் வந்தன. அவை எல்லாம் ஒரு பொருளைக் குறிப்பனவாகும். தொடர்பு என்பது பின்போதல், பிடித்தல், பற்றுதல், சேர்தல், தழுவுதல், கலத்தல் என்னும் கருத்துக்களை உணர்த்துகின்றன. இக்கருத்துக்கள் முறையே ஒன்றன்பின் ஒன்று, இருபொருள்களுக்குமுள்ள நெருக்கத்தை அதிகமாய்க் காட்டுகின்றன. பகுதி மாத்திரையாய் நிற்கும் தொடர் என்னும் முதனிலைமொழி ஆகுபெயரான ஒன்றனை ஒன்று பற்றியிருக்கிற பல வளையங்களால் ஆகிய சங்கிலியைக் குறிக்கின்றது. இவ்வாறாகத் தொடர்பு என்பது முதலில் வெளிப்படக் காணும் உருவப் பருப்பொருள்களுக் குளதாகிய பற்றுதலைக் குறித்துப் பின் அகத்தில் நிகழும் அருவப் பொருள்களின் பற்றுதல் என்னும் உறவு, நட்பு என்னும் பொருளினும் வந்தது. (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 2- 129) தொடலை: தொடலை தொழில் அடியாகப் பிறந்த பெயர் தொடுக்கப்பட்டது தொடலை. ஐ செயப்படு பொருள் விகுதி. இச்சொல் மாலை என்னும் பொருட்டாதல் தொடலைக்குற்ற சிலபூவினரே என்னும் ஐங்குறு நூற்றடி யானும் (நெய்தற் பத்து 7) தெளியப்படும். (திருவொற்றி முருகர்) தொடி: தொடி, வளை முதலியவற்றிற்கு முன் அணிவது. வளைநெகிழா வகை முன்கையில் அணிவது. (ஐங்குறு. 196; 314. ஔவை. சு. து.) தொடு: தொடு - தொழு. ழகரம் டகரம் ஆகலும் உண்டு ஆகலின். (கலி. 116. உரைவிளக்கம். இளவழ.) தொடை: அடி இரண்டு தொடுத்தல் முதலாயின தொடையே. (யா. வி. 1.) தொண்டர்: பிறருக்குத் தொண்டு - அடிமை வேலை - செய்வோர் எல்லாரும் தொண்டர் எனப்படுவர். ஆனால் இன்று தம் நலம் கருதாது உழைப்போரையே தொண்டர் என்று அழைக்கிறோம். தொண்டர் என்ற சொல் இன்று பெருமைக்குரியதாக உயர்ந்துவிட்டது. (பழந்தமிழ். 70) தொல்காப்பியம்: தொல்காப்பியம் எனும் பெயர் நூலுக்கு இடப்பட்டதேயாகும். இப்பெயர் பழமையானவற்றைக் காப்பது எனும் பொருளைத் தருவதாகும். தமிழரின் வாழ்வியல் மரபு களையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்கெனவே இந் நூல் எழுதப்பட்டதெனத் தெளிதல் வேண்டும். தொல்காப்பியத்தை இயற்றியதனால் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் எனப் பட்டார். பின்னர் அவரின் இயற்பெயர் மறக்கப்பட்டு மறைந்து விட்டது. தொல்காப்பியம் எனும் நூலின் பெயரிலிருந்து தொல்காப்பியர் எனும் ஆசிரியரின் பெயர் தோன்றியுள்ளதே யன்றித் தொல்காப்பியர் எனும் ஆசிரியர் பெயரில் இருந்து தொல்காப்பியம் எனும் நூலின் பெயர் தோன்றிலது. இவ்வாறு ஆசிரியர் பெயரிலிருந்து நூலின் பெயர் தோன்றுவது தமிழ் மரபு அன்று; வடமொழி மரபாகும். வடமொழி மரபை அறிந்த பிற்காலத்தார் தொல்காப்பியம் எனும் பெயர் தொல்காப்பியர் எனும் பெயரில் இருந்து தோன்றியது எனப் பிறழ நினைந்தனர். (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 3.) தொலை: இது தொன்மை, தொன்று இவற்றுடன் ஒற்றுமை உடையதாகிச் சேய்மை என்னும் பொருளில்வரும். கலை, விலை, நிலை என்பன கல், வில், நில் என்ற முதனிலைகளாற் பிறக்குமாறு தொலை என்பதும் தொல் என்னும் முளையி னின்றும் தோன்றுவது. தொல்வரவு, தொல்வினை தொல்காப்பியம் இவற்றை நோக்குக. தொலிநே ஜேசின பூஜா பலமோ எனவரும் தியாகராசர் பாடலில் தொலி என்பது பழைமை. தமிழில் தொலி என்ற சொல் உமி அல்லது தோலைக் குறிக்கும். இவற்றிற்குரிய தொடர்பு விளங்கவில்லை. தொலித்தல் - உமி போக்கல். தோலுரித்தல். தொலித்தல் என்பது தெலுங்கில் ஒழித்தல் என வருமென்று திரு. கார்த்திகேய முதலியார் தனது மொழி நூலில் குறித்துள்ளார். தொல்லை என்னுஞ் சொல் பழைமையைக் காட்டுவதுடன் தொந்தரவு என்ற பொருளையும் தரும். தொலைதல் - ஒழிதல், கெடுதல், சாதல், நீங்குதல். தொலை - சேய்மை. தொலைதல் - சேய்மைப்படுதல். அஃதாவது நீங்குதல். நம்மால் வெறுக்கப்படும் ஒருவன் நம்மைவிட்டு நீங்குவானாயின் அவன் தொலைந்தான் என்று சொல்வது வழக்கம். ஒரு பொருள் தொலைந்தது என்று சொல்லும்போது அப்பொருள் அண்மை நீங்கிச் சேய்மை அடைந்தது என்பது தான் கருத்து. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 92) தொலைதல்: முன்பு உண்டாய்ப் பின்பு இல்லையாதல். (பாலைக்கலி. 1. நச்) தொழில்: (1) தொழில் என்பது பொருளது புடை பெயர்ச்சி. (தண்டி. 40. சுப். தே.) (2) புடைப்பெயர்ச்சியாய்க் காலம் புணர்ந்து நிற்பது. (தண்டி. 31. சுப். தே.) (3) bjhæï-bjhÊiyíilatŸ. தோழி என்பதும் இப்பொருட்டு. தொழு - முதனிலை. தொழுது செய்யும் செயல் கள் என்பது பொருள். பின்பு, லகரமெய் அடுத்துத் தொழில் எனப்பட்டது. மதுரைக் காஞ்சியில் வரும் (122) தொழுவர் என்னுஞ் சொல்லுக்கு நச். தொழில் செய்வார் என்று பொருள் எழுதி இருத்தலும் காண்க. (கலி. 104. உரை விளக்கம். இளவழ) தோ தோகை: தோகை என்னும் சொல் தொகை என்பதில் இருந்து தோன்றியது. தொகுத்தல் தொகையாகும். பகுதியுடன் ஐ விகுதி சேர்ந்து பெயராவது தமிழில் சொல் தோன்றும் முறையாகும். பகு+ஐ= பகை; வகு+ஐ=வகை; நகு+ஐ= நகை; முகு+ ஐ= முகை; இவ்வாறு பல சொற்கள் மிகமிகப் பழங் காலத்திலேயே உருவாகியுள்ளன. அங்ஙனமே தொகு+ஐ= தொகை என்றாகியுள்ளது. மயிலிறகுகள் வாலின் பகுதியில் தொகுத்து வீழ்வதால் மயிலிறகின் தொகுப்பு, தொகையாகிப் பின்னர் தோகையாகியது. பின்னர், ஆகுபெயரால் அத் தோகையையுடைய மயிலுக்குப் பெயராக ஆகியுள்ளது. இவ் வாறு ஆவதை, சினையிற் கூறும் முதலறி கிளவி என்பர். தொல்காப்பியர். பிற்காலத்தார் சினையாகுபெயர் என்பர். மயிலுக்குச் சிறப்பு அதன் தோகையால் தான். ஆதலின் அப் பெயர் அதற்கு மிகவும் ஏற்றதாக இலக்கியங்களில் அமைந்து விட்டது. தோகை எனும் இச்சொல் வெளிநாட்டில் துகி என்றும் தூகி என்றும் உருமாறி வழங்கியுள்ளது. (பழந்தமிழ். 170-1) தோட்கோப்பு: (1) ஆற்றுணவு. தோளின் கண்ணே கோக் கலால் தோட்கோப்பு என்று பொதிசோற்றுக்குப் பெயராயிற்று. (நாலடி. 20. பதுமனார்.) (2) கோப்பு என்பது சுழலுதல் பேர்; தோளிலே கொண்ட கட்டுச்சோறு நடக்குந்தோறும் சுழலும் அதனால் தோட் கோப்பு என்றார். (நாலடி. 20. தருமர்) (3) பொதிசோறு முடிந்த முடிச்சு, நடக்குந்தோறும் தோளின்கண்ணே சூழ்தலால் தோட்கோப்பும் என்றார் பிறரும். (நாலடி. 20. விள. உ.) தோட்டி: தோட்டி - அங்குசம். சரணங் கணிச்சி அங்குசந் தோட்டி என்பது பிங்கலந்தை. தொடுத்தல் - வளைதல்; அங்குசம் முளை வளைந்திருத்தலின் தோட்டி எனப்பட்டது. தொடு என்பதற்கு முதனிலை தொள்; இதனடியாகவே தொளை, தோள், துவள், தோணி, துணை, தூண், தொய்வு, தொன்னை, தோல், தொம்பை, தூம்பு, துலை, துரட்டு, துறட்டி, தொடு, தொடி, தோடு, தோண்டு, தொண்டு, தொண்டை தோண்டி என்னும் இவை முதலாய பல சொற்கள் தோன்றி யவாறு ஆய்ந்துணரப் புலனாம். (திருக்குறள். தண்ட. 24.) தோப்பு: தொகுப்பு என்பது தோப்பு என்றாயிற்று. (ஊரும் பேரும். 40.) (2) மரங்கள் பெரும்பாலும் பட்டிக்காடுகளுக்குப் பக்கத்தே ஒரு தொகுப்பாக வைத்துப் பழைய நாட்களிலேயே பயிராக்கப் பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு தொகுப்பாக வைக்கப் பட்ட மரச்செறிவே தோப்பு என வழங்கப்படலாயிற்று. தொகுப்பு எனுஞ் சொல்லே தோப்பு எனத் திரிபுற்றது. (இளைஞர்க்கான இன்றமிழ். 86) தோரணம்: மாவிலை பனங்குருத்து முதலியவற்றால் இயற்றுமொரு மாலை. அது மாலையினைக் கழிநட்டுக் கட்டுவர். (பெருங். இலாவாண. 1: 7. பெருமழை) தோளி: மகளிர் விளையாட்டுள் ஒன்று. இது பல்வரிக் கூத்துள் ஒன்றாதலைச் சிலப்பதிகார அரங்கேற்று காதை உரையான் அறிக. தோளை வீசி ஆடுதலின் தோளி எனப் பட்டது.... திருவாசகத்தில் கூறப்பட்ட தோணோக்கம் என்பதும் இதுவே போலும். (அகம். 344. வேங்கடவிளக்கு.) தோற்பாவை: தோற்பாவை என்றது தோலால் பாவை செய்து ஆட்டுவது. (சிலப். 3: 12. அடியார்) தோன்றி: மலையாளத்தில் மழைக் காலத் தொடக்கத்தை உணர்த்தும் பூ இதுவேயாகும். தான் தோன்றி என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் உணர்ந்தவர்கள் மேல் தோன்றி தோன்றி என்ற சொற்கள் தோன்றிய காரணத்தை நன்கு புரிந்து கொள்வர். (சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் 74.) ந e:‘e’- சிறப்புப் பொருள் உணர்த்துவதோர் இடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல. (சீவக. 482. நச்) நக்கத்திரம்: மிகுதியாக ஒளியுடையது. நகு+அம்+திரம்= நக்கத்திரம். பிறரால் நட்சத்திரம் என்று திரித்து வழங்கப் பெறுகின்றது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 244.) நக்கீரன்: கீரன் என்பது பெயர். அது செந்தமிழ் வழக்கிற் சிறப்பு நோக்கி வரும் நகரம் ஆகிய இடைச்சொல்லோடு சேர்ந்து நப்பூதன் என்றற் றொடக்கத்தன போல் நக்கீரன் என வழங்குவது. கீர் - சொல் (திவாகரம்) நக்கீரன் நல்ல சொல்லன் அல்லது சொல்வன்மை யுடையன். (திருவொற்றி முருகர். 183.) நகர்: (1) பெரிய வீடு நகர் என அன்று அழைக்கப்பட்டது. பெரிய வீட்டைக் குறித்த நகர் என்ற சொல், பின்னர் பெரிய வீடுகள் நிறைந்த பேரூரைக் குறிக்கப் பயன்பட்டது. அப் பொழுது அம் எனும் ஆக்கவிகுதி சேர்ந்து நகரம் எனல் ஆயது. இந்நகர் என்ற சொல் இன்று இந்திய மொழிகளில் எல்லாம் இடம் பெற்றுள்ளது. நகர வாழ்வு நாகரிக வாழ்வாக மதிக்கப் பட்டு நாகரிகம் என்னும் சொல் தோன்றியது. நாகரிகம் என்னும் சொல்லுக்கு மூலம் நகர் என்னும் சொல்லே. (பழந்தமிழ். 233.) (2) ஊர்; இல் எனினும் அமையும் (திருக்கோ. 329. பேரா.) நகரம்: வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் நகர் என்னும் சொல்லே நகரம் என்பதன் அடியாகும். நகரம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதை இச்சொல்லின் அடிச் சொல்லே நன்கு விளக்கும். பெரிய மாட மாளிகைகள் நிறைந்த இடமே நகரம் ஆகும் என்று அடிச் சொல் அறிவியா நிற்கின்றது. (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 19.) நகை: (1) நகை என்பது சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று என்ப. (தொல். பொருள். 251. பேரா.) (2) அணிகலன் தமக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சியை அளித்த தனால் அதனை நகை என்றும் அழைத்தனர் போலும். (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 96.) நட்டுவக்காணி: நிருத்தம் வல்லார்க்குக் கோயில்களில் அளிக்கப்பெறும் இறையிலி நிலங்கள் நட்டுவக் காணி எனவும் நிருத்தபோகம் எனவும் அக்காலத்தில் (சோழர் காலத்தில்) வழங்கியுள்ளமை அறிக. (பிற்காலச் சோழர் rǤâu«.II. 165.) நட்பு: நட்பு என்பது நள் என்னும் பகுதி அடியாகப் பிறந்த பெயர். நள் - நெருங்கு, கூடு. இக்கூட்டம் மனத்தானும், மொழி யானும், மெய்யானும் ஆம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 3: 318.) நடுக்கம்: நடுக்கம் என்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பில் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல். புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம். அச்சம் என்னும் சுவை பிறந்த பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தால் தோன்றிய நடுக்கமாம் என்பது. (தொல். பொருள். 260. பேரா.) நடுவுநிலை: நடுவுநிலை என்பது ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை. அஃதாவது, செஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந்து ஓடா நிலைமை அது, காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது. (தொல். பொருள். 260. பேரா.) நடுவுநிலைமை: (1) காரணம் பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின் அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம். எனவே அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமையன்று. (திருக். 119. பரி.) (2) பகை, உறவு, பொது, நட்பு - இவற்றைச் சார்ந்து நில்லாமல் நடு நிற்றல் நடுவு நிலைமையாம். (திருக். 119. ப. உ) நத்தம்: நந்து என்பது உயர் என்னும் பொருட்டாய தனிவினைப் பெயர். அஃதப் பொருட்டாதலை பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் - வரிசை வரிசையாய் நந்தும் (நாலடி. 125) என்புழிக் காண்க. அது நத்து என வலித்தலாய் அம் இறுதி பெற்ற வினைப்பெயராய் நத்தம் என்றாயது. எனவே நத்தமாவது உயர்வாயிற்று. உயர்வு ஆக்கமாதல் கண்டு கொள்க. நந்து அடியாக நத்தம் பிறந்தாற்போலப் பொருந்து, திருந்து, தியங்கு, மயங்கு, உறங்கு, அடங்கு, அஞ்சு, எஞ்சு, ஈண்டு, தோண்டு முதலியவற்றடியாய்ப் பொருத்தம், திருத்தம், தியக்கம், மயக்கம், உறக்கம், அடக்கம், அச்சம், எச்சம், ஈட்டம், தோட்டம் முதலிய பெயர்கள் பிறந்தவாறு காண்க. (திருக்குறள். தண்டி. 235.) நந்த: நந்த - தழைக்க. இச்சொல் பழைய இலக்கியங்களில் விளங்குதல், தழைத்தல், அழகுபெறுதல், மிகுதல், நிறைதல் முதலான ஆக்கக் கருத்திலேயே பெரும்பான்மையும் பயின்று வருகின்றன. பெரும்புனல் பல நந்த, நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த வந்தன்று வையைப் புனல் என்னும் அழகிய பரிபாடல் அடிகளுக்கு (7. 8 -10) உரையாசிரியர் பரிமேலழகர் இச்சொல்லின் பல்வேறு பொருள் வழக்குகளும் விளங்கும்படி, சேரும் புனல் பலவற்றோடும் கூடிப் பெருகுதலால் வையைப் புனல் உயிர்கட்கு நன்மைமிக மென் புலங்கள் அழகுபெற, வன்புலங்கள் விளைய வந்தது எனத் திறந்தோன்ற உரைத்து விளக்கினமை இங்குப் பெரிதும் நினைவு கூர்தற்குரியது. (கலி. 26. உரைவிளக்கம். இளவழ.) நம்பு: நம்பு - விருப்பம். நம்பும் மேவும் நசையா கும்மே என்பது தொல்காப்பியம். இச்சொல் இக்காலத்து நம்பகம், நம்பிக்கை என உருத்திரிந்து பொருள் வேறுபட்டு வழங்குகிறது. (திருவிளை. கீரனைக்கரை. 27. ந. மு. வே.) நயவன்: இசை நயம் தெரிந்து பாடுபவன். (அகம். 212. வேங்கட விளக்கு.) நரந்தம்: நரந்தம்- கத்தூரி. கத்தூரி மணம் கமழும் மல ருடைய ஒரு புல்லும் உள்ளது. அதனை நரந்தம்புல் என்ப. (கலி. 54. விளக்கம். பெருமழை.) நல்குரவு: அஃதாவது நுகரப்படுவன யாவும் இல்லாமை. (திருக். நல்குரவு - பரி.) நலிதல்: நலிதல் என்பது பிறர்க்கு இன்னா செய்து நெருங்குதல்; அது தீவினை மாக்கட்கண் நிகழும். (தொல். பொருள். 260. பேரா.) நள்: நள் என்னும் ஒலியை உடையதான இரவின் நடு யாமம். நள்ளென யாமத்தும் பள்ளி கொள்ளான் (நெடு நல், 186) என்றதனாலும் அதனுரையாலும் இப்பொருளாதல் அறிக. (குறுந். 6. சௌரி.) நள்ளெனல்: உயிரினத்தின் ஒலியெல்லாம் அடங்கிக் காற்று முதலியவற்றான் உண்டாகும் ஒலி மாத்திரையாய் இருக்கும் ஒருநிலை. அங்ஙனம் இருப்பது இரவின் இடையாமம் ஆதலால் அதனை நள்ளியமாம் என்பதுமுண்டு. நள் - நடுவு ஆதலால் அதனை நள்ளியாமம் என்பதுமுண்டு. நள் - நடுவு மரம். (ஐங்குறு. 104. விளக்கம். பெருமழை.) நறைக்காய்: நறு நாற்றத்தையுடைய காய்; அது சாதிக் காய். (முருகு. 190. நச்) நன்மை: மென்மை, வன்மை முதலிய பண்புப் பெயர்கள், மெல், வல் எனும் அடிகளாற் பிறக்குமாறே நன்மையும் நல் எனும் முன்னிலையினின்று பிறப்பது. நன்மை என்பது இன்ன தென இங்கு ஆராய்வோம். எண்ணெய் என்பது முதலில் எள்ளின் நெய்யைக் குறித்தது நாளாவட்டத்தில் இப்பெயர் வேம்பு ஆமணக்கு முதலியவற்றின் கொட்டையினின்று எடுக்கப் படும் நெய்களுக்கும் பெயராயிற்று. வேம்பினின்று ஆக்கப்படும் நெய் வேப்பநெய் எனப் படாது வேப்பெண்ணெய் எனப்பட்டது. ஆமணக்கு நெய் விளக்கெண்ணெய் எனப்பட்டது. இங்ஙனம் எண்ணெய் எனும் சொல் தன் முதற் பொருளை இழந்து வேறு பொருளில் வழங்கத் தொடங்கினதால் அம்முதற் பொருளைக் குறிப்பதற்கு வேறு சொல் வேண்டியதாயிற்று. ஆதலின் நல்லெண்ணெய் எனுஞ் சொற்றொடர் தோன்றிற்று. நல்லெண்ணெய் சரியான எள் நெய், இவ்வாறே பாம்பு எனும் மொழி முதலில் தலை விரித் தாடும் பாம்பையே காட்டிற்று. சாரை, கொம்பேறி முதலியவை யும் பாம்பெனப் பட்டமையால் தலைவிரித்தாடும் பாம்பு நல்லபாம்பு எனப் பெயர் பெற்றது. நல்ல பாம்பு - சரியான பாம்பு. அன்றியும் உழுது பயிரிடப்படும் நிலம் இருவகைப்படும். ஒன்று நெற்பயிர் விளையும் நிலம். மற்றொன்று புல்லு (கம்பு), கொள்ளு, வரகு முதலியன விளையும் நிலம். முந்தியது நன்செய் என்றும் பிந்தியது புன்செய் என்றும் பெயர் பெறும். நன்செய் என்பது புன்செய் என்பதற்கு எதிர்மறையாயின் அது நாம் முற்காட்டிய பொருளையே தருவது காண்க. பின்வரும் பேச்சை நோக்குக: ஒருவன், உன்னுடைய செய்கையை நான் மிகவும் வெறுக்கிறேன் மற்றவன், நல்லது; என்னை என்ன செய்யச் சொல்லு கிறாய்? இதில் நல்லது என்பதன் பொருள் என்ன? சரி என்று பொருள் கொள்ளாவிடின் வேறு எப்பொருள் இவ்விடத்தில் பொருந்தும்? பெண் நன்மை அடைந்தாள் பெண் நம்மை யானாள் என்று வருஞ் சொற்றொடர்களில் நன்மை என்னுங் கிளவி திரட்சியைக் காட்டும். திரட்சி என்பது ஒரு நிலை; அது சரியான நிலையாதலின் நன்மை எனப்பட்டது. நல்ல தண்ணீர் நல்ல முள்கு என்பவை நாம் குறித்த பொருளை உறுதிப் படுத்துகின்றன. நெடுநல் வாடை என்பதை ஆராய்க. ஆதலின் முன்னாளில், எது சரியானதோ அதுவே நல்ல தாயிற்று. சரியானது எது வெனின், மிகைபடாமலும் குறைவு படாமலும் இருப்பதே. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுமரைகள். 93 -4.) நன்றியில் செல்வம்: அஃதாவது செல்வத்தான் உள்ள அனுபவங்களை அறியாதார் இடத்தும் தன் உறவின் முறையார் துன்பம் உறுவதனைக் கண்டும் கண்ணோடாது இருப்பார் இடத்தும், ஒன்றினை வேண்டி இரந்தார்க்குக் கொடாது துன்முகராய் இருப்பார் இடத்தும் செல்வத்தைக் கொண்டு பிறர்க்குக் கேடு செய்வார் இடத்தும் நிற்கும் செல்வம். (நாலடி. நன்றியில் செல்வம். தருமர்.) நன்னர்: நன்னர் பண்புப் பெயர். நல் பகுதி. நர் விகுதி. (திருவிளை. தருமிக்குப் பொற்கிழி. 46. ந. மு. வே.) நா நாகரிகம்: (1) அறம் பொருள் இன்பத்தின்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. (திருக். 580. மணக்.) (2) நாகரிகம் என்பது கண்ணோட்டம் ஆதல் முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் (நற். 355.) என்பதானும் அறிக. (திருக். 580. பரி.) (3) நாகரிகம் என்னும் சொல் நகர் அகம் என்னும் சொற்றொடரின் திரிபாகும். நகர் என்பது பேரூர் அல்லது பட்டினம். அகம் என்பது இடம் அல்லது இடத்திலுள்ள ஒழுக்கம். நாகரிகமானது. நகரங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சி யடைந்தது. நகரகம் என்னும் சொல் நகரிகம் நாகரிகம் நாகரீகம் என மருவிவரும். ஆங்கிலத்திலும் நாகரீகத்தைக் குறிக்கும் civilisation என்னும் சொல் இதே காரணத்தால் தான் உண்டாயிருக்கிறது. (civitas) என்பது இலத்தீன் மொழியில் நகர் அல்லது பட்டினம் (city) என்று பொருள்படும். அதில் இருந்தே civilise என்னும் வினை உண்டாகும். மரியாதையை அல்லது திருந்திய ஒழுக் கத்தை உணர்த்தும் civility என்னும் சொல்லும் அதி னின்றும் திரிந்ததே. (கலைபயில் கட்டுரைகள். 105: 107) நாடகம்: (1) கதை தழுவி வரும் கூத்து. (சிலப். 3: 12 அடியார். சீவக. 672. நச்.) (2) கண்டார்க்கு இன்பம் செய்தலின் நாடகம் என்றார். (திருக்கோ. 219. பேரா.) (3) நாடகம் என்னும் சொல்லுக்கு விளையாட்டு என்பது பொருள். அஃதாவது ஒழுங்கான விளையாட்டு. இதனை ஆட்டம் என்றும் உலகம் வழங்குகின்றது. தமிழ்ச்சுவை செறிந்த திருவாசகம் என்னும் அருள்நூலில், நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து என்று மணிவாசகப் பெருமான் ஒரு தொடர் அருளிச் செய் திருக்கிறார். இதில், நாடகம் என்னும் சொல் விளையாட்டு என்னும் பொருளில் வந்திருக்கின்றது. நடித்தல் என்பதே அதன் செயல் என்பதும் அத் தொடரில் இருந்தே தெரிகின்றது. நடிப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கருத்துக்களை நடித்தல். இன்னொன்று கதைகளை நடித்தல். கருத்துக்களை நடித்துக் காட்டுவதற்கு நாட்டியம் என்றும், கதைகளை நடித்துக் காட்டுவதற்கு நாடகம் என்றும் பெயர் சொல்வதுண்டு. சங்க காலத்தில் இவ்விரண்டுமே கூத்து என்னும் பெயராலும் வழங்கி வந்தது. (சங்க நூற் கட்டுரைகள். I. 94.) நாடு: நாடு என்னும் சொல்லுக்கு விரும்பு, தேடியடை என்னும் பொருள்கள் உள. ஆதலின் மக்கள் விரும்புவதற்குரிய இடம், தேடிவந்து தங்குவதற்குரிய இடம் எதுவோ அதுவே நாடாகும். வளமற்ற வறண்ட வெற்றிடம் நாடாகும் தகுதியினை உடையதாகாது. (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 13.) நாடுகாவல்: நாடுகாவல் என்னும் வரி பாடிகாவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனி வரியாகும். (முதற் குலோத்துங்க சோழன். 88.) நாடுதல்: நாடுதல் - மனத்தால் ஆராய்தல். (திருக்கோ. 253. பேரா.) நாண்: (1) பழி பாவங்களின் மடங்குதல். (திருக். 951. பரி.) (2) இழி தொழில்களில் மனம் செல்லாமை. (திருக். 502. பரி.) (3) நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை. (இறையனார். 2. நக்.) நாய்: நாய் என்ற சொல் நா என்பதன் அடியாகப் பிறந்தது என்று காரணம் காணும்போது அழகுபட உள்ளது. (மு. வ; மொழிவரலாறு. 56.) நால்கு: (1) நான்கு நால்கெனப் பெயர்த் திரிசொல். (பெரும்பாண். 489. நச்.) (2) நான்கு, பெயர்த் திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர் (பொருநர். 165.) பால்வுரை புரவி நால்குடன் பூட்டி என்பதன் உரை காண்க. (அகம். 104. வேங்கட விளக்கு.) நாவாய்: (1) நால்வாய் (யானை) - நாவாய். நால்வாய் போல் அசைவதால் கப்பல் நால்வாய் எனப்பட்டது (உவமை ஆகு பெயர்). நாவாய் - களிகள்போற் றூங்கும் கடற்சேர்ப்ப என்றார் முன்றுறை யரையனார். (ஒப்பியன் மொழிநூல். 155.) (2) நால்வாய் > நாவாய்= யானைபோல் அசையும் கப்பல். நாவாய், களிகள்போற் றூங்கும் கடற் சேர்ப்ப என்பது பழமொழி. வெளிலிளக்கும் களிறுபோலத், தீம் புகார்த் திரை முன்றுறைத், தூங்கு நாவாய்த் துவன்றிருக்கை என்பது பட்டினப்பாலை. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 356.) நாழிகைக் கணக்கர்: கடிகையார், அவர் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவி சொல்லுவார்; பூ மென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு காமன் திரியும், கருவூரா - யாமங்கள், ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும், ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்று என நாழிகை வட்டில் இடுவாரும் என்ப. (சிலப். 5: 49. அடியார்.) நான்மறை: நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். (தொல். சிறப்புப் பாயிரம். நச்) நான்மாடக் கூடல்: நான்கு மாடம் கூடலின் நான்மாடக் கூடல் என்றாயிற்று; அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர். இனிக் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றுமாம். (கலி. 92. நச்.) நானான்கு: நானான்கு என்பதே பண்டையோர் கொண் டது. நந்நான்கு என்பது இலக்கண நூல் ஆதரவற்ற பிற்கால வழக்கு. (தொல். பொருள். மெய்ப். 1. ச. சோ.) நானிலம்: புலவர்கள் நில இயற்கை வகையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகத்தை நான்கு வகையாகப் பிரித்தனர். தமிழகத்தை நான்கு நிலமாகக் கொண்டு ஆராய்ந்த கண்ணோட்டத்துடன் உலகத்தையும் நோக்கினர். ஆதலின் உலகத்தை நானிலம் என அழைத்தனர். (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 12.) நி நிச்ச நிரப்பு: நாடோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். (திருக். 532. பரி.) நிச்சல்: நிச்ச என்னும் சொல் நாள்தோறும் என்னும் பொருட்டாதல் நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப என்னும் தொல்காப்பியக் களவியற் சூத்திரத்திற் (8) காண்க. நிச்ச நிச்சல் எனத் திரிந்தது. நிச்சல் ஏத்து நெல்வாயினர் எனத் தேவாரத்துப் போந்தது. இச்சொல் வடமொழியிற் சென்று நித்யங், என வழங்கும். (திருவொற்றி முருகர். 185.) நிமலன்: மலம் இல்லாதவன். அவன் சிவபெருமான்; இச் சொல்லின் முதலில் இன்மைப் பொருளை உணர்த்தும் நிர் என்னும் வடமொழி, இடைச்சொல் ஈறுகெட்டுப் புணர்ந்தது. (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 58.) நிரப்பு: (1) வயிறு காய் பெரும் பசியால் அவ்வயிற்றை நிரப்பும் பொருட்டு இரந்து செல்லும் இன்னல் நிலையே நிரப்பு. (சங்க நூற் கட்டுரைகள். II. 6.) (2) நிரப்பு என்றது நாள்தோறும் தன்னுடைய நடைக்கு வேண்டுவன இரந்து கொண்டு வந்து நிரப்புதல். (நாலடி. 289. விள. உ.) நிரை: நிரை என்பது நிரைத்தல் நிரைந்து முதலியனவாய் வரலன்றி நிரல், நிரந்து, நிரம்பி, நிரம்பிய முதலியனவாயும் வரும். நிரம்பிய - நிரையான. நிரம்பிய மாடம் இராமாயணம். (செந்தமிழ். 11: 120) நிலம்: தன்கட் டோன்றுவனவெல்லாம் அழிதல் மாலைய ஆதலின் அவற்றை நோக்கத் தான் நிலைபேறுடைய தென்பது பற்றி இவ்வுலகம் நிலம் எனவும் வையம் எனவும் கூறப்படும். நிலைப்பது நிலம்; வைகுவது வையம். வைகுதல் - தங்குதல். (திருக்குறள். தண்டி. 22.) நிலவு: குளிர்ந்த ஒளியினை நிலவு எனத் தமிழ் நூலார் கூறக் காண்டலாற், குளிர்ந்த ஒளியினைத் தருந் திங்களும் நிலவு எனப் பெயர் பெறுவதாயிற்று. அம்புலி என்னும் சொல் சிறு மகாரால் இடப்பட்டதாகும். பிறை என்பது மறை நிலா நாளின் பிற் பிறந்த சிறு திங்களுக்குப் பெயராக வழங்குகின்றது; புதிது பிறத்தலிற் பிறை எனப்பட்டது. உயிர்கள் உடம்புகளில் நிலை பெற்று வளர்தற்குரிய அமிழ்து நிலவொளியிலிருந்து வருத லாலும், அவ்வமிழ்து தமிழிற் கள் எனப்பெயர் பெறுத லாலும், இனிமை எனப் பொருள் தரும் தீம் என்னுஞ் சொற் குறுகித் திம் என நின்று கள் என்னுஞ் சொல்லோடு கூடித் திங்கள் என அதற்குப் பெயராயிற்று. தண்கதிர் என்பது அது குளிர்ந்த ஒளியினைத் தருதலால் வந்த பெயராகும். கலையோன் என்பதிற் கலையென்பது நிலவொளியின் ஒரு பகுதியைக் குறிக்கும்; நாளுக்கு ஒரு கலையாக வளர்தலுந் தேய்தலுமாகிய தோற்றந் திங்களிற் காணப்படுதலால் அதற்குக் கலையோன் எனும் பெயர் போந்தது. இராப் பொழுதில் விளங்குதல் பற்றி அஃது இரவோன், அலவன், அல்லோன் எனும் பெயர்களைப் பெற்றது; அலவன், அல்லோன் என்பவற்றின் முதல்நின்ற அல் என்னும் சொல் இராக்காலத்துக்குப் பெயராகும். இனி, அது பதினான்கு நாள் வளர்ந்தும், பதினான்கு நாள் தேய்ந்தும் இருபத்தெட்டு நாள் கொண்ட ஒரு காலத்தை வரையறுத்தலால். இங்ஙனம் திங்களால் வரையறுக்கப் படுதல் பற்றி இருபத் தெட்டு நாள் கொண்ட ஒருகாலவளவுந் (Lunar Month) திங்களெனச் சொல்லப்படும். திங்களை வடநூலார் மாசம் என்பர். இன்னும் அஃது இடையிடையே கறையுடையதுபோற் காணப்படுதலாற் களங்கன் என வழங்கப்படுகின்றது. குரங்கு என்னுஞ் சொல் வளைவு எனப் பொருடருதலால் வளைந்து தோன்றும் பிறை குரங்கு எனப் பெயர் பெற்றது. இனித் திங்களிற் காணப்படும் கறை சிறுமகார் கண்களுக்கு முயல் வடிவாகத் தோன்றுதலிலிருந்து அவர் அதனை முயல் உறையுங் கூடாக வழங்க, அதனால் முயற்கூடு என்னும் பெயரும் அதற்கு உள தாயிற்று. (இளைஞர்க்கான இன்றமிழ். 1 -2.) நிறை: (1) நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை. (கலி. 133.) (2) நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல். (திருக். 57. பரி.) (3) காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். (திருக். 155. மணக்.) (இறை. 2. நச்.) (4) நிறை என்பது தனிவினைப்பெயர். நிறைவு, நிறைதல், நிறைய, நிறைந்த முதலிய வினைவிகற்பங்கள் எல்லாம் இதனடி யாகப் பிறக்கும். குறைக்கு மறுதலையான இந்நிறையும் வேறே, நிறு என்னும் பகுதியடியாகப் பிறந்த நிறை என்னும் பண்புப் பெயரும் வேறே. பிற்கூறிய நிறை ஆண்மைக் குணத்தின் ஒன்று. (திருக்குறள். தண்ட. 154.) (5) ஐம்பொறிகளையும் அடக்குதல். (திருக்கோ. 31. பேரா.) (6) நிறை என்பது மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்தல். (தொல். பொருள். 273. பேரா.) நிறை நில்லாமை: நிறை நில்லாமை யாவது பொறுத்தல் அருமையால் அந்நோய் புறத்தார்க்குப் புலனாதல். (திருக்கோ. 278. பேரா.) நிறைமொழி: நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. (திருக். 29. பரி.) நிறைவு: அறிவொடு கூடிய ஒழுக்கம். (திருக்கோ. 268.பேரா) நினைதல்: நினைதல் என்பது விருப்புற்று நினைத்தல்; நின்னை மிகவும் நினைத்தேன் என்பது வழக்காதலின். (தொல். பொருள். 260. பேரா.) நீ நீட்டிப்பு: செய்யுங் காலத்துச் செய்யாமை. (திருக். 671. பரி.) நீதி: உள்ளப் பொருத்தம் உள்வழி மறாது கொடுத்தல். (திருக்கோ. 268. பேரா.) நீர்: வடமொழியில் நீரைக் குறிப்பது. வழிகாட்டு என்னும் பொருளுடைய நீ என்பது பகுதியாம். நாரா என்பது பகுதி என்றும் அது நா (குளி) என்பதில் இருந்து எழுந்தது என்றும் கூறுவாரும் உளர். இச்சொல் வடமொழியில் அருகி வழங்குவ தேயாம். ஜல என்பதே பயின்று வழங்கும் சொல். அதுவும் வடமொழிக்கு முன் வடநாட்டில் வழங்கியிருந்த பழைய மொழி யில் இருந்து புகுந்தது என்பர். ஆனால் நீர் என்பது தமிழ் முதலான திராவிட மொழிகளில் பயின்று வழங்கும் சொல் லாகும். அப்பொருளில் வேறு சொல் பயின்று வழங்குதல் இல்லை. (தெலுங்கு: ÚS<Ú®Y. கோண்டு : ஈர் < நீர். பிராகுவி: தீர் < நீர். மலையாளம்: வெள்ளம் ஆகுபெயர். மலையாளத்தில் நீர் என்பதும் உண்டு. தமிழில் பேச்சு மொழியில் தண்ணி < தண்+நீர். தண் - பொருள் இழந்தது) நீந்து என்பதும் நீர் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே. ஆதலின் இதுவும் திராவிடச் சொல்லே. (மொழிவரலாறு. 114.) நீருருள்: சகட மாகப் பண்ணித் தண்ணீரேற்றி யுருட்டுவ தொன்று. (சீவக. 1831. நச்.) நீருள்ளி: வெங்காயத்தைத் தமிழில் உள்ளி என்பர். உள்ளி என்னும் பதம் கன்னடத்திலும் உண்டு. ஈருள்ளி, வெள்ளுள்ளி என உள்ளி இருவகைப்படும். ஈருள்ளியை ஈர வெங்காயம் என்றும், வெள்ளுள்ளியை வெள்ளை வெங்காயம் என்றும் பொதுமக்கள் வழங்குவர். கன்னடத்தில் ஈருள்ளியை நீருள்ளி என்கின்றார்கள். சாறு நிறைந்த வெங்காயத்தை நீருள்ளி என்று குறித்தல் பொருத்தமாகத் தோன்றுகின்றது. நீருள்ளி நாளடை வில் ஈருள்ளி யாயிருத்தல் கூடும். (தமிழ் விருந்து. 108.) நீலம்: நீர் - நீல் - நீலம். நீர் நிலைகட்குள் கடலே பெரிதாகவும், ஏனையவற்றிற் கெல்லாம் மூலமாகவும் இருப்பதால் நீர் என்னும் சொல் சிறப்பாகக் கடலையே குறிக்கும். கடல் நிறம் நீலமாயிருப்பதால் நீர் என்னும் சொல்லினின்றும் நீலக்கருத்தும் நீல் என்னும் சொல்லும் பிறந்தன. கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் (சிலப். 10: 116.) கடல் வண்ணம் (சிலப். 17: 126.) (வடமொழி வரலாறு. 191.) நீறு: நீறு என்பது தூளைக் குறிக்கும். நெருப்பின் துணை யால் பொடியாவன எல்லாம் நீறு என்னும் சொல்லுக்குரியன. ஆனால் காலப் போக்கில் நெற்றியில் அணியும் சிவ அடையாள மாகிய விபூதியையே குறிக்கத் தொடங்கி விட்டது. நீறு இல்லா நெற்றி பாழ். இங்கு நீறு என்பது விபூதியே. பின்னர் அதன் உயர்நிலைக்கு ஏற்பத் திரு என்ற அடை சொல்லும் சேர்த்துத் திருநீறு என்றே அழைக்கும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. (பழந்தமிழ். 70.) நு நுணவம்: நுணவம் - நுணாமரம். நுணா - ஈற்று ஆகாரம் குறுகி அம் சாரியை பெற்றது. அரா - அரவம் எனவும், நறா - நறவம் எனவும் வருதலுங் காண்க. (ஐங்குறு. 342. விளக்கம். பெருமழை.) நுந்தை: நுந்தை முன்னிலை முறைப்பெயர்; தை முறைப் பெயர் ஈறு; நும்தந்தை என்பது திரிந்ததன்று; குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் என்னும் சூத்திரத்தை நோக்குக. (தொல். எழுத்து. 34.) (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 119.) நூ நூல்: (1) நூல் என்ற சொற்குப் பொருள் உரைக்கு மாறு: நூல் போறலின் நூல் எனப்படும். என்னை? பாவை போல் வாளைப் பாவை என்றாற்போல. (யா. வி. பாயிரம்.) (2) நூல் என்பது நூல் போறலின் ஒப்பின் ஆயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னை எனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளை எல்லாம் கைவன் மகடூஉ தூய்மையும் நுண்மையும் உடையவாக ஓர் இழைப் படுத்தினாற்போல வினையின் நீங்கி விளங்கிய அறிவனாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்கைள யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோள் இன்றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையும் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற முப்பத்தி ரண்டு தந்திர உத்தியொட புணரவும், ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும். இனமொழி கிளந்த ஓத்தினானும், பொது மொழி கிளர்ந்த படலத்தானும், மூன்றுறுப்படக்கிய பிண்டத் தானும் ஒரு நெறிப்படப் புணர்க்கப் படூஉம் தன்மை உடைமை யான் என்க. (தொல். எழு. 1. நச்.) (3) நூல் போறலின் நூல் என்ப, பாவை போல் வாளைப் பாவை என்றாற்போல. நூல் போறல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளால் கைவல் மகடூஉத் தனது செய்கை நலந்தோன்ற ஓர் இழைப்படுத்தல் ஆம் உலகத்து நூல் நூற்றல் என்பது. அவ்வாறே, சுகிர்ந்து பரந்த சொற் பாவையால் பெரும் புலவன் தனது உணர்வு மாட்சியில் பிண்டம், படலம், ஓத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தல் ஆயிற்று, நூல் செய்தலாவது, அவ்வகை நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது. (இறையனார். 1. நச்.) நூல்நடை: நடை என்பது தமிழிலே ஒழுக்கத்துக்குப் பேர், செல்லும் செலவிற்குப் பேர்....... நூல் நடையாவது நூல் செல்லும் செலவு, நூற்பொருள் செல்லும் செலவு என்பதாம். கால் நடையின் நோக்கமாவது ஒருவன் ஓரிடத்திருந்து பிறி தோரிடத்துச் சென்று சேர்தல். நூல் நடையின் நோக்கமாவது ஒரு கருத்து ஒருவன் மனத்திருந்து பிறனொருவன் மனத்துச் சென்று சேர்தல். (செந்தமிழ். 5-13.) நெ நெடுநல்வாடை: (1) தலைவனைப் பிரிந்திருந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிபோல நெடிதாகிய வாடை யாய்ப் பாலையாகிய உரிப்பொருள் உணர்த்திற்று. அகத்து ஒடுங்கிப் போகம் நுகர்வதற்குச் சிறந்த காலமாயினும் அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய் அப்போகத்தில் மனமற்று வேற்றுப் புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின், அவற்கு நல்லதாகிய வாடையாயிற்று. (நெடுநல்வாடை. நச். உரையின் முன்னுரை.) நெடுவரை: நெடுவரை என்றது உச்சிமலையை. (புறம். 117. ப. உ.) நெய்தல்: நெய்தல் என்பது உருகுதல். உழுதல், அழுதல் என்பனபோலத் தல் விகுதிபெற்ற தொழிற்பெயராக நெய் தலையும் கொள்ளல் வேண்டும். பிழிந்தெடுத்த நீர் தன்மை யுடைய இளகுபொருளை நெய் என்று பண்டையோர் வழங்கி னர். உருகுதலால் வரும் பொருள் நெய் என்று இன்றும் பொருள் படுகிறது. நெய் என்னும் சொல்லுடன் தொடர்புபட்ட சொற் களே நை, நொய் நோய் எனும் சொற்கள். உருக்கம் என்பதும் இரக்கம் என்பதும் ஒன்றே. எனவே இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தலாகும். நெய்தற்பறை என்பது இரங்கற்பறை எனப் பொருள்படுவதால் நெய்தல் இரங்கலாகும். (அகத்திணைத் தெளிவு.) நொ நொ: நொ என்னும் பகுதி நொவ்வு, நோதல் எனத் தொழிற்பெயராகும். இறந்தகாலத்திலே நொந்து, நொந்த, நொந்தான் முதலியனவாய் வரும். மற்றைக் காலங்களிலே நோகின்ற, நோக, நோவ முதலியனவாய் வரும். நோ எனப் பெயர் தோன்றும். (செந்தமிழ். 11- 120.) நொடுத்து: நொடுத்து - விற்று. நொடை - விலை. கொடை என்பதன் அடியாகக் கொடுத்து வருதல்போல நொடை என் பதன் அடியாக நொடுத்து என வந்தது. (குறுந். 100. சௌரி.) நொடி: நொடி என்றது நொடியிற் பிறந்த ஓசையை. (தொல். எழுத்து. 7. இளம்.) நோ நோக்கு: (1) நோக்கு அல் நோக்கம். கண்ணால் நோக்கும் நோக்கம் அன்றி மனத்தால் நோக்கும் நோக்கம். அஃதாவது கருதுதல். (தொல். சொல். 93. நச்.) (2) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். (தொல். பொருள். 313. பேரா.) (3) நோக்கு என்பது பார்வை என்று பொருள்படும். ஒருபாட்டை அல்லது இலக்கியத்தைப் படிப்போன் படிக்கும் பொருள் தன் மனக்கண் முன்னால் நிற்க அல்லது நிகழக் காண்பானாயின் அதுவே நோக்கு எனப்படும். அத்தகு இலக்கியம் நோக்கைத் தரும் இலக்கியம் ஆகும். பழந் தமிழர் இத்தகு நோக்கைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டனர். (நெடுநல்வாடை. பாநலம். 106.) நோய்: நோய் என்பது தளர்ச்சி, மெலிவு; நொய்ம்மையைச் செய்வது நோய் என்க. உள்ளம் எதனையும் சரியாக ஆராய விடாமல் பிணிப்பது பிணி. அப்பிணியை அவிழ்ப்பது அவிழ்தம். (மருந்து) (பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 212.) ப பகவன்: பக் என்னும் வேர்ச்சொல்லினின்றே பகவன் எனும் தமிழ்ச்சொல் பிறந்துளது. பகவன் என்பதைப் பகு+ வ்+ அன் எனப் பகுக்கலாம். பகுத்து அருள்பவன் பகவன். பக் என்னும் ஆணிவேர்ச் சொல்லடியாகப் பிறந்த சொற்கள் பக, பகவு, பகுதி, பகல், பகை, பகுத்து, பக்கு, பக்கம் முதலியன. பகு முதல் நீண்டு பாகு ஆகும். பாகு = பாதி. (வள்ளுவர் வழங்கும் மொழி நூல்.) பகுதி: பகுதி என்பது பாதி என்று நூலினும் வழக்கினும் வருவது பலரும் அறிந்த ஒன்றேயாகும். நிகர் - நேர், அகழி - ஆழி, முகப்ப - மோப்ப என்று ஆன்றோர் வழங்கிய சொற்களை, அகமுடையான்- ஆமுடையான், அகப்பை - ஆப்பை, புகுந்த - பூந்த மிகுந்த - மீந்த எனப் பேச்சில் வருவனவற்றையும் காண்க. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 3- 227.) பகை: பகை என்னும் சொல்லில் பகுப்பு அல்லது பிரிவு என்றுதான் பொருள்கொள்ள இடம் இருக்கிறதே அன்றி ஒருவருக்கொருவர் கெடுதி செய்துகொள்வதைப் பற்றிக் கருத்து இல்லை. பகைகொண்டவர் என்றால் ஒருவருக்கொருவர் நீங்கி யிருக்கின்றார் என்று மட்டும்தான் கருத்தாகும். ஒன்றார் என்னும் சொல்லாலும் இவ்வுண்மை தெளிவாகிறது. பொருந் தார் என்பது மட்டுந்தான் அதற்குக் கருத்து. தீங்கு செய்வார் என்னுங் கருத்து அச்சொல்லில் இல்லை. ஒன்றார் என்னும் சொல்லே ஒன்னார் எனக் கொச்சையாக மருவி நெடுங்காலமாக அஃது இலக்கிய வழக்கும் பெற்று விட்டது. ஒன்னார் வழுக்கி யும் என்று திருவள்ளுவப் பெருமானே இவ்வழக்கைக் கையாள் வர். ஆதலால், பகைவர் ஒன்றாமல் இருப்பரே அன்றித் தீங்கும் செய்வர் என்று திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை. ஒன்றாத செயல் ஒரோ ஒருகால் தீங்கு செய்யும் நிலையில் முற்றி விடுதலும் உண்டு அந்நிலையில் பகைமை என்பது செற்றம் என்று வழங்கப்படும். மாறுபட்டோர் ஆகிய மாற் றாரை, அது, செறுகின்ற நிலையை அடைந்து விடுகின்றது. (திருக்குறள் அறம். 128.) பச்சிலை: எல்லாவற்றினும் பசுத் திருத்தலில் பச்சிலை என்று பெயர் பெற்றது. (முருகு. 190. நச்.) பசும்பதம்: புதிது வந்த அரிசியால் ஆக்கிய சோறு. (மறைமலை. பட். ஆரா. 93.) பட்டடை: பட்டுதல் - அடித்தல். பட்டுதற்கு அடை பட்டடை. (திருக்குறள் மரபுரை. 821.) பட்டி: (1) பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின் பட்டி என்றார். நோதக்க செய்யும் சிறுபட்டி (கலி - குறிஞ் - 15.) என்றார் பிறரும். (திருக். 1074. பரி.) (2) மனையினின்றும் புறப்பட்டால் பட்டி புக்குப் பயிர் அழிக்கும் பட்டி மாட்டினை ஒத்தார். (திருக். 1074. காலிங்.) (3) கட்டுப்பாடு இல்லாதவன். கட்டுப் பாடின்றித் திரியும் மாடுகளைப் பட்டி மாடு என்னும் வழக்கு இக்காலத்தும் உண்மை உணர்க. (கலி. 51. விளக்கம். பெருமழை.) பட்டோலைப் பெருமான்: பட்டோலைப் பெருமான் நாள் தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்போன். (முதற் குலோத்துங்க சோழன். 85.) படப்பை: தம் பொருளாகிய ஆனிரைகட் குரிய உணவுப் பொருள்களைத் தொகுத்து வைத்தற்கும், தம் உணவுக்கு வேண் டிய காய்கறிகளைப் படைத்துக் கோடற்கும் மனைப்புறத்தே அமைத்துள்ள தோட்டக்கால் படப்பை எனப்படும். இக் காலத்தும் வைக்கோற் படப்பை என வழங்குவர். படப்பை, படைப்பை என்பதன் மரூஉ. (ஐங்குறு. 203. ஔவை. சு. து.) படர்தல்: ஓரிடத்தில் கால்கொண்டு பலபக்கங்களிலும் ஒருசேரப் பரவிச் செல்லுதலே படர்தல் எனப்படும். கொடி படர்தலைக் கொண்டு இதனை அறியலாம். (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 35.) படலம்: வேற்றுமை உடைய பல பொருள்களால் தோற்றம் உடைத்தாகத் தொடர வைப்பது. (யா. வி. பாயிரம்.) படலை: (1) படலை - தளிர் விரவித் தொடுத்த மாலை. (பெருங். இலாவாண. 9: 94. பெருமழை.) (2) தழை விரவின மாலை. (பெரும்பாண். 60. நச்.) படார்: படார் - படர் கொடி. பாம்புச் செடியைப் பாந்தட் படார் என்று அழைக்கின்றார் ஊட்டியார் என்ற சங்கப் புலவர். படர்வது படார்; பாந்தட்படார் என்பது ஒரு கொடி எனத் தெரிகின்றது. அகநானூற்றில் 288ஆம் பாடலில் வரும் வெருவரு படா அர் என்ற தொடரும், படாஅர் வெரூஉம் என்று வரும் 309 ஆம் பாடற்றொடரும் இந்தப் பாந்தட் படாரையே குறிப்பிடு கின்றன. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 77.) படிச்சந்தம்: படிச்சந்தம் என்பது ஒன்றன் வடிவை யுடைத் தாய் அது என்றே கருதப்படும் இயல்பை உடையது. படிச்சந்தம் என்பது பிரதிச் சந்தம் என்னும் வடமொழிச் சிதைவு. (திருக்கோ. 78. பேரா.) படிமை: (1) மிக்குச் சிறப்பெய்த விரும்பும் இல்லறத் தோர் பதினொரு தவவொழுக்கங்களை மேற் கொள்வர். இவ் வொழுக்கங்கள் படிமா என்று பிராகிருதத்தால் பெயர் பெறும். படிமை என்பது சைன சமய வழக்குச் சொல்லென்றும் அச்சொல் தவவொழுக்கம் என்றதளை உணர்த்துதல் அவ் வொரு சமய நூலின்கண் அன்றிப் பிற சமய நூல்களில் இல்லை. என்றும் தெளியக் கிடக்கின்றன. (செந்தமிழ். 18: 339.) (2) படிமை என்ற பதத்தை படி+மை என்று பிரித்துமை தொழிற் பெயர் விகுதியாகக் கொண்டு அம்மொழிக்குப் படிப்பு என்று பொருள் கோடல் தவறாமோ? மடிமை, மிடிமை போன்ற மையீற்று மொழிகளையும் இங்குக் கவனிக்க. படிமை அல்லது படிப்பு எல்லாவகைப் படிப்பையும் உணர்த்துமாயினும், முற் காலத்தில் வேதாந்த ஞானம் பெறுவதையே மெய்ப் படிப்பாகக் கருதினர். (செந்தமிழ். 19:19.) (3) படி என்பதே பகுதியாய் இருக்கிறது; இப்பகுதியே பெயராய் நின்று நிறுக்கும் எடைக் கல்லையும் அளக்கும் நாழியையும் உணர்த்துதலால் அப்பகுதிக்கு ஒரு பொருளை வரையறுத்துக் காட்டும் பிரகாரமாகிய பண்புடைமையே செம் பொருளாம் என்று அறியத் தக்கது. படி எடுத்துரைத்துக் காட்டும் படிவத் தன்று படிவம் என்றார் கம்பரும் (உருக்காட்டு :38) குடியாம் தன்மையைக் குடிமை என்பது போலப் படியாம் தன்மை படிமை எனப்படும். படிமை என்றது அவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருத்தலாகிய அவரது சொரூபம் என்றும் வெளியாய் விட்டது. (செந்தமிழ் - தொகுதி. 18: 399.) (4) பல்புகழ் நிறுத்த படிமையோன் எனவரும் (தொல் காப்பியச்) சிறப்புப் பாயிரத் தொடர்க்குப் பல புகழ்களையும் இவ்வுலகின் கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை யுடையோன் என நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். படிமை என்னுஞ் சொல் தவவொழுக்கத்தினை உணர்த்துதல் சமண சமயத்தவர் நூல்களிலன்றி அவற்றிற்கு முற்பட்ட வடமொழி, தென்மொழி நூல்களிற் காணப்படவில்லை என்றும், ஆகவே படிமையோன் என இச்சொல்லாற் சிறப்பித்துப் போற்றப்பெற்ற தொல்காப்பியனாரும் சமண சமயத்தவராதல் வேண்டு மென்றும் அறிஞரொருவர் கூறியுள்ளார். படிமை என்பது படிமா என்ற பிராகிருதச் சொல்லின் திரிபென்பதும், அச்சொல் தவவொழுக்கம் என்ற பொருளில் சமண சமய நூல்களிலன்றி ஏனைய நூல்களில் வழங்கப்படவில்லை என்பதும் தொல் காப்பியனார் சமணசமயத்தில் இல்லற நெறியில் நின்று சிறந்த தவவொழுக்கங்களை மேற்கொண்டவரென்பதும் அவர்தம் ஆராய்ச்சி முடிவாகும். படிமை என்னுஞ் சொல் சமணரது தவவொழுக்கத்தையே சிறப்பாகக் குறித்து வழங்கியதாயின், அச்சொல்லை ஏனைச் சமயத்தார் தம் நூல்களில் உடன்பட்டு வழங்கியிருக்கமாட்டார்கள். படிமை என்னும் இச்சொல், கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர்வப்ப. .......................................................................... .T¿id பெருமநின் படிமை யானே எனப் பதிற்றுப் பத்து 74ஆம் பாடலில் வைதிக ஒழுக்கத் தினையுங் குறித்து வழங்குகின்றது. ஆகவே படிமை என்பது சமணரது தவவொழுக்கத்தையே குறிக்கும் என்பார் bகாள்கைãழைபடுதல்fணலாம்.goik என்பதிற் படி என்பது பகுதியாகும். படிமை, முறைமை என்பன ஒரு பொருட் சொற்களாம். படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது எனவருந் தொல்காப்பிய நூற்பாவில் படிமை என்னும் இச்சொல் நிலத் தின் தன்மையைக் குறித்து நின்றது. படியுடையார் பற்றமைந் தக் கண்ணும் எனவருந் திருக்குளிற் படி என்னுஞ் சொல், நிலம் என்னும் பொருளில் வழங்கியுள்ளது. நிலத்தியல்பால் நீர்மை திரிதலின் படி என்பது தன்மை என்னும் பொருளிலும் வழங் குவதாயிற்று. இப்படியன் இந் நிறத்தன் என்பது திரு நாவுக்கரசர் தேவாரம். பணிலம் வெண்குடை அரசெழுந்த தோர் படியெழுந்தன என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல். ஏசும் படியோர் இளங்கொடியாய் என்புழிப் படி என்பதற்கு வடிவு என அடியார்க்கு நல்லார் பொருள் கூறி யுள்ளார். பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எனச் சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் முறையே சார ணனது வடிவமும், விஞ்சையனின் வடிவமும் சிறப்பித்துரைக்கப் பட்டன. படிமை, படிவம் எனவும் வழங்கும். தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்துப், படிவ வுண்டிப் பார்ப்பன மகனே என்பது குறுந்தொகை. இதுகாறுங் கூறியவாற்றாற் படிமை என்னுங் சொல் நிலம் என்னும் பொருளுடைய படி என்னுஞ் சொல்லினை முதனிலை யாகக் கொண்டு தோன்றிய தனித்தமிழ்ச் சொல்லே என்பதும் அச்சொல் தன்மை என்னும் பொருளில் யாவரானும் பொது வாக வழங்கப்பெற்று வருவதென்பதும், அதுவே பின்னர்ச் சிறப்புடைய தவவேடத்தியல்பினையும் குறித்து வழங்கலாயிற் றென்பதும், அது படிமா என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபன்று என்பதும், படிமை என்னும் பழந்தமிழ்ச் சொல்லே பிராகிருத மொழியிற் படிமா எனச் சிதைந்து வழங்கியிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகும். (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 84-85.) படிவம்: படிவு > வடிவு, படிவம் > வடிவம். படிதல் - விழுதல், பதிதல். படிவு = ஒன்றின்மேல் ஒன்று பதிதல். படிவம் = பதிந்த உருவம். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 356.) படைமடம்: படைமடம் என்றது வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளை யார் மேலும் செல்லுதல். (புறம்: 142. ப. உ.) பண்: (1) பண் என்றது நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப்படாநின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும் திறத்திறமும். (சிலப் - 3: 46. அரும், அடியார்.) (2) பாவை நன்கு பண்ணி உயர்த்தித் தாழ்த்தி மட்டஞ் செய்து பாடும்போது உண்டாகின்ற அலங்காரங்கள் பண். பண் என்பது செவிக்கினிமையாகப் பண்ணப்படுவது என்பது வெளிப்படை. (திருக்குறள் அமைப்பும் அழகும். 119) பண்ணத்தி: மெய் வழக்கு அல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சி இல்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவை யாவன: நாடகச் செய்யுள் ஆகிய பாட்டுமடையும், வஞ்சி பாட்டும், மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. (தொல் பொருள். 492. பேரா.) பண்ணியம்: தின்பண்டங்கள் வட்டம், உருண்டை, தட்டை முதலிய பலவேறு வடிவங்களில் விரல்களை இயக்கிப் பண்ணப் படுதலின் அவை பண்ணியம் எனப்பட்டன. (திருவொற்றி முருகர். 143.) பண்ணை: பண்ணை என்பது தொகுதி. இஃது இப் பொருட்டாதல் ஒலித்தன முரசின் பண்ணை என்னும் கம்ப ரின் செய்யுளடியாற் றெளிக. பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும் உறவினர் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பி னர் நிறைந்த ஒரு கழகமும் தொகுதிபற்றிப் பண்ணை எனப் படுதலானும் அறிக. (தொல். பொருள். மெய்ப். 1. ச. சோ.) பண்பு: (1) பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் (கலி. 133.) (2) பண்பு என்பது குறிப்பின்றி நிகழும் குணம். (தொல். பொருள். 276. பேரா.) பண்புடைமை: அஃதாவது பெருமை, சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல். பண்பு எனப்படுவது பாடறிந்தொழுகல் (கலி. நெய். 16.) என்றார் பிறரும். (திருக். பண்புடைமை. பரி.) பணிந்தமொழி: பணிவைப் புலப்படுத்திய மொழி. (திருக். 419. பரி.) பணியாமை: தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக் கண்ணே நிற்றல். (திருக். 963. பரி.) பதடி: பதடியாவது பதர். பதடி பதரே பொல்லுமாகும் என்பது பிங்கலம். உள்ளீடு இன்றி இலேசானதைப் பதர் என்ப. சீர்மை - கனம் ; பதர் - இலேசு. (திருக்குறள். தண்ட. 196.) பதலை: பதலை என்றது ஒரு தலைமுகம் உடையதொரு தோற்கருவி. (புறம். 103. ப. உ.) பதுக்கை: (1) பாலைப்பரப்பிலே ஆறலை கள்வர் தம்மாற் கொல்லப்பட்டோர் உடலைக் கற்கொண்டு மூடிய கற் குவியல்கள். (ஐங்குறு. 362. விளக்கம். பெருமழை.) (2) பதுக்கை மறைப்பிடம்; பதுக்கி வைத்தலின் வந்த தொழிலாகுபெயர். வழிப்பறிகாரர் தம்மால் கொல்லப் பட்டார்மேற் கற்களைக் குவித்து அக்குவியல்மேல் தழைபெய்து மூடிவைக்கும் உண்மை. செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புபட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை .என்னும் புறநானூற்றினாலும் (3) பெறப்படும். (திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 88.) பம்பை: பம்பம் என்று ஒலிப்பது பம்பை. (தமிழர் வீரம். 16.) பயிர்ப்பு: பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு. (திருக்கோ. 12. பேரா. இறையனார். 2. நச்.) பயிற்றல்: பலகால் சொல்லல். (அகம். 6. வேங்கட விளக்கு.) பரந்தமை: அயலாந்தன்மை. தன்னின்வேறாய் ஒழுகுந் தன்மை. (நற்றிணை. 280. அ. நாராயண.) பரத்தன்: பரத்தையை நுகர்வானும் பரத்தன். (சிலப் . 16. - 63. அடியார்.) பரத்தை: (1) ஆடவர் பலர்பால் பரந்து சென்று ஒழுகியவர் பரத்தையர் எனப்பட்டனர். (ஐங்குறு - பதிப்புரை- 21. ஔவை. சு) (2) பரத்தையராவர் யாரெனின் ஆடலும் பாடலும் வல்லராகி அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி, ஒருவர் மாட்டும் தங்காதார். (தொல். 149. இளம்பூரணர்.) (3) பர என்னும் சொற்கு விரிந்துசெல், பரவிச்செல் நீண்டுசெல் என்பது பொருள். இதன் ஆணிவேர்ச்சொல் பர் என்பது. இச்சொல்லடியாகப் பிறக்கும் சொற்கள் சில வருமாறு: பரப்பு, பரவை = கடல்; பரம்பு அடித்தல் = உழுத நிலத்தை பரவும்படி செய்தல். பரத்தை என்பவள் ஒருவனுக்கென இல்லா மல் பரந்துபட்ட வாழ்க்கையினள். பர் என்ற வேர்ச்சொல் அடியாகப் பிறந்தவைகளே பரப்பு, பரத்த, பரத்தை, பரவை, பரம்பு, பாரி, பார், பார்வை, பாரித்தல் முதலிய சொற்கள். (வள்ளுவர் வழங்கும் மொழிநூல்.) பரதவர்: தென்திசைக்கண் குறுநில மன்னர். அது, தென் பரதவர் மிடல்சாய, வடவடுகர் வாளோட்டிய (புறம். 378) என்னும் புறப்பாட்டானும் உணர்க். (மதுரைக். 144. நச்.) பரவன்: பரவை- கடல். பரவன் - கடலன். கடலருகில் வாழ்பவன், கடலில் வாழ்பவன், கடலைக்கொண்டு வாழ்பவன் பரவன் எனப் பெயர் பெற்றான். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 13.) பரவுதல்: (1) பரத்தில் உணர்வு பயிலும் நிலையில் வழி படுதல். (திருவருட்பா விரிவுரை. நெஞ்சறி. 4.) (2) பரவுதல், இறைவன் புகழை வாயாற் பாடுதல். தொழு தல், அவனை உடலால் வணங்குதல். பேணுதல், மனத்தால் விரும்புதல். ஆவது அவனை இடையறாது நினைத்தல். (குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 25.) பரவை: கடலின் பரப்பு இந்நிலத்தின் பரப்பைவிட மும் மடங்கு பெரிதாயிருக்கின்றது. ஆனதனால் தமிழ் மக்கள் அதனைப் பரவை என்று வழங்கி வருகின்றனர். (சிறுவர்க்கான செந்தமிழ். 31.) பராரை: பரு அரை மரம்; இயல்பான பேச்சுமுறையில் பேசும் சொல் போன்று இதன் ஓசை அமைந்துள்ளது. இதற்கு மனத்தை இழுக்கும் ஆற்றல் இல்லை. ஒரு தோற்றத்தைத் தரும் ஆற்றலும் இல்லை. இதே பொருளைப் பராரை என்று சொல்லும்போது இதற்கு மனத்தை இழுக்கும் அல்லது தன்னைக் கருதச் செய்யும் ஆற்றல் ஏற்படுகிறது. இது மட்டுமா? ஒரு பருமை பெற்ற தோற்றத்தையும் மனத்திற்குக் காட்டுகின்றது. பராரை என்ற சொற்றொடர் தருகிற தோற்றம் வேறு. பரூஉ அரை என்ற சொற்றொடர் தருகிற தோற்றம் வேறு. ஆகார ஓசை அகன்ற பருமைத் தோற்றத்தைத் தருகின்றது. உகர ஒலி ஒருவாறு குறுகிக் கூர்ந்த பருமைத் தோற்றத்தைத் தருகின்றது. ஏன் இவ்வாறு ஓசை மாறத் தோற்றம் மாறுகின்றது? இதுவே ஓசைக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவது. அப்பொருளை எண்ணும் அல்லது நினைக்கும் மனத்திற்கும் ஓசைக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவது. அப்பொருளை எண்ணும் அல்லது நினைக்கும் மனத்திற்கும் ஓசைக்கும் உள்ள தொடர்பையும் உணர்த்தவல்லது. (நெடுநல்வாடை பா நலன். 104.) பரி: (1) இகர வீற்றுப்பெயர்களுள்ளே சில பொருள் நோக்கியும் சில பிறவினை நோக்கியும் விகுதிகள் இரட்டலாலே தாமும் வேறுபாடு புலப்படுத்தி நிற்கும். பொருள் நோக்கி இரட்டுவன: பரி, அரி, படி, எறி, துணி, வழி முதலியன. இவற்றி னின்று பரிதல், பரித்தல், அரிதல், அரித்தல், படிதல், படித்தல், எறிதல், எறித்தல், துணிதல், துணித்தல், வழிதல், வழித்தல் முதலிய தொழிற்பெயர்களும், பரிந்து, பரித்து, பரிய, பரிக்க, பரிந்த, பரித்த முதலிய எச்சங்களும் பரித்தான், பரிந்தான் முதலிய முற்றுக்களும் தோன்றும். இங்கே விகுதியின் வலி இரட்டலால் பகுதிப்பொருள்வேறாயிற்று. பரிதல் - அறுதல், வருந்தல். பரித்தல் - தாங்குதல். எறித்தல் - ஒளிவிடல். துணித்தல் - வெட்டல். வழித்தல் - மெழுகல். மங்கல வெள்ளை வழித்து (தணிகை) தெளி, பிரி, நெரி, கவி முதலியன தன்வினையிலே தெளிதல், பிரிதல், நெரிதல், கவிதல் தெளிந்து, தெளிய முதலியன வாகவும், பிறவினையிலே தெளித்தல், பிரித்தல், நெரித்தல், கவித்தல், தெளித்து, தெளிக்க முதலியனவாயும் வரும். (செந்தமிழ். 11: 41-42.) (2) பரி, அழி முதலிய சில பகுதிகள் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திலே பழீஇ, அழீஇ முதலியன வாயும் வரும். இவை பிறவினையாயும் கொள்ளப்படும். அறனழீஇ அல்லவை செய்தலின் (திருவள்ளுவர்) இவ்வீறுகளுள்ளே சில. அல் என்னும் விகுதிபெற்றுப் பெயராகும்; அவை அரியல், நெரியல், ஒலியல், துணியல் முதலியன. அரியல் - மது. அரியல் ஆர்ந்த அனந்தர் உளத்தினான் (தணிகை) நெரியல் - மிளகு. நெரியற் புணர்ப்பொறை தாங்கிய (பெரும்பாண்) ஒலியல் - யாறு. அவ்வொலியற்கு ஒப்பாவகுவதோ உவராழி (கந்தபுராணம்) துணியல் - துண்டம். கொழுமீன் குறைஇய துடிக்கட் டுணியல் (மதுரைக்காஞ்சி) சில பு என்னும் விகுதிபெற்றுப் பெயராகும். அவை பொழிப்பு, கவிப்பு, குறிப்பு, பொடிப்பு முதலியன. பொழிப்பு - பொலிவுடையது. லகரம் ழகரம் ஆயிற்று. பொழிந்தெழு காதல் என்னும் இராமாயணத்தையம் நோக்குக. பொழிந்து - பொலிந்து. கவிப்பு - குடை. குறிப்பு - கருத்து. பொடிப்பு - புளகம். சில சை என்னும் விகுதிபற்றுப் பெயராகும். அவை வரிசை, பொலிசை, பரிசை முதலியன. வரிசை - பட்டம். பொலிசை - இலாபம். பரிசை - தாங்குவது. (செந்தமிழ். 11: 42-43.) பரிப்பு: பரிப்பு என்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லும் என்னும் இயக்கத்தை. (புறம். 30. ப. உ.) பரிவட்டம்: அலுவல் ஏற்பார்க்கு அடையாளமாக அரச னால் அளிக்கப்படும் அங்கிகள் பரிவட்டம் எனப்படும். அரசன் கோயிலிற் றொடர்பு கொள்வோரேயன்றி எல்லாம் வல்ல ஆண்டவன் திருக்கோயிலிற் றொடர்பு கொள்ளும் அருட் பணி வல்லார்க்கும் இங்ஙனம் பரிவட்டம் என்னும் கடவுள் ஆடைகள் வழங்கப்படுதலும் உண்டு. (சங்கநூற் கட்டுரைகள் II. 64.) பருதி: பருதி என்றது வட்டம். அதனை உடைமையால் தேர் உருளை பருதி எனப்பட்டது. (பதிற்று. 47. ப. உ.) பருந்தின் விழுக்காடு: பருந்தின் விழுக்காடு என்பது பருந்து நடுவே விழுந்து தான் கருதும் பொருளை எடுத்துக் கொண்டு போவதுபோல இதுவும் முடிக்கப்படும் பொருளை முடித்துப் போம் இயைபினது. (நன். 18. மயிலை.) பருந்தின் வீழ்க்காடு: பருந்தின் வீழ்க்காடு என்பது, பருந்து வீழ்கின்றுழி நடுவே வீழ்ந்து தான் கருதின பொருள் கொண்டு போம், அதுபோல இதுவும் தான் கருதி முடிக்கின்ற பொருளை முடித்துப் போம் இயைபின்றியே என்பது. (இறையனார். 4. நக்.) பருவம்: ஒரு பொருள் நுகர்ச்சிக்கு ஏற்ற அளவு பருத் திருக்கும் நிலை பருவம். (ஒப்பியன் மொழிநூல். 266.) பல்லி: பல் இருப்பதனால் பன்றி என்று பெயர் இருப்பதை அறிந்தோம் இதேபோல் பல்லின் காரணமாகப் பெயர் பெற்ற மற்றோர் உயிரும் உண்டு. அதுதான் பல்லி. பன்றி பல்லி ஆகிய இரண்டு சொற்கள் பிறப்பதற்கும் பல்லே காரணமாக இருக் கிறது. (சொல்லின் கதை. 16.) பல்லியம்: வாத்தியங்களுக்கு இயம் என்பதும் பெயர். பல வாத்தியங்கள், பல்லியம் எனப்படும். மிகப் பல வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தமை பற்றி நெடும் பல்லியத்தனார் என்று ஒரு புலவர் பெயர் பெற்றிருக்கிறார். (சங்கநூற் கட்டுரைகள். I. 92.) பழக்கம்: முதலிற் பயன் கண்டு பழகிய பழக்கங்கள், பின்னர்ப் பலராலும் பல காலத்தவராலும் பின்பற்றப்படும் மேன்மை வாய்ந்தனவாய் விளங்கினால் நாளடைவில் அவை வழக்கங்களாய்மாறி இயற்கை யாற்றலொடு நிகழத் தொடங்கி விடுகின்றன. இச் செயற்கை இயற்கைகளின் இயைபையும் ஆற்றலையும் நன்கறிந்த மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப் பிடியாய்த் தழீஇ நடக்கு மிடத்து அந் நடக்கையே ஒழுக்கமென நுவலப்பட்ட தென்க. பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என்னும் இச் செயற்கையும், இயற்கையும், செயற்கை இயற்கையுமான வாழ்வியல் முறை மூன்றையும் ஆசிரியர் தொல்காப்பியர், தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே என்னும் ஆற்றல் சான்ற நூற்பாவில் முறையே அழகாக நுவன்று நிறுத்தி யிருக்கின்றனர். இவற்றுள் தகுதி என்பதனாற் பழக்கமும், வழக்கு என்பதனால் வழக்கமும் இவை தழீஇயன ஒழுகும் என்பதனால் ஒழுக்கமும் ஆசிரியரால் புலப்படுத்தப்பட் டுள்ளன. (சங்கநூற் கட்டுரைகள் II. 91.) பழகுதல்: பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். (திருக். 785. பரி.) பழமை: பழமை என்பது தொன்மை; தொன்மை எனுஞ் சொல் தொன்று என வருதலைத் தொன்று தொட்டு என்ற சொற்றொடரிற் காணலாம். இங்ஙனமே பழமை என்பது பண்டு என வரும். பண்டு என்பதற்குத் தெலுங்கில் பழம் என்று பொருள். பழுக்கவில்லை என்பதைத் தெலுங்கர் பண்டலேது என்பர். இதனால் பழமை, பண்டு, பழம் என்ற முச்சொற்களும் தொடர்புடையன என்பது புலனாகிறது. பழம் என்ற கிளவி பழு என்ற முளையால் தோன்றுவ தாகலின் பண்டு என்பதிலும் பழு என்பதே முளையாகும் எனல் பொருந்தும். இஃது எங்ஙனம் ஆகும் என்பதைக் காண்போம். ழகரத்தை வாயிற் கூட்டுவது எவருக்குஞ் சிறிது அரிது. இதனால் கல்லார் பலவாறு அதைத் திரித்து வழங்குவர். தமிழ் நாட்டின் தென்பகுதியில் அது ளகரமாகும். வடபாதியில் யகரமாகும். மேல் நாட்டார் அவ்வெழுத்தை அமைக்க முயல் வது நகைச் சுவைக்கு இடம் தரும். தெலுங்கில் ழகரம் டகரமாய் மாறும்; சிறுபான்மை வேறு எழுத்துக்களாயத் திரிவதும் உண்டு. கோழி, ஏழு, இழு, கழுவு, என்ற தமிழ்மொழிகள் முறையே கோடி, ஏடு, ஈடு, கடுகு என வருதல் காண்க. இவ்வாறு பழு என்பது படு என நின்று, பின் டகரத்திற்கு இனமாகிய ணகரத்தை இடையில் ஒற்றாய்ப் பெற்றுப் பண்டு என்றாகி இருக்க வேண்டும். இதற்குப் பிற சான்றுமுண்டு. படுத்துக்கொள் என்பதைத் தெலுங்கில் பண்டுகோ என்பர். இதில் படு என்பது பண்டு என நிற்றல் கருதத்தக்கது. அன்றியும், கூடு, பூடு என்ற தமிழ்மொழிகள் இடையில் ணகரத்தைப் பெற்றுக் கூண்டு, பூண்டு என வருதலும் இவ்வாராய்ச்சிக்கு இயைபுடையதே. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 89-90.) பழுத்தல்: பழுத்தல் - முற்றல். பழமை - முற்றிய தன்மை. பண்டு - முற்றிய அல்லது இறந்த பொழுது. பழு என்பது இறந்த காலத்தைக் காட்டும் என்பதைப் பழுமரம் தொன்மரம் என்பன ஒரு பொருளனவாய் ஆலமரத்தைக் குறிப்பதால் அறிக. ஒரு நாள் அட்ட உணவு மறுநாள் இருந்தால் அதைப் பழயது என்று நாம் சொல்வதும் மேற் குறித்ததையே வற்புறுத்தும். பழம் - முற்றியது; நிறைவடைந்தது. தமிழ் ழகரம் நாக்கில் வராமையால் பழம் என்பதை பலம் என்பாரும் உளர். பழமொழி என்பதை முன்னாள் மொழி என்றாவது, முதிர்ந்து நிறைந்த மொழி என்றாவது பொருள் படுத்தலாம். இரண்டும் கூடியே பொது வாய்ப் பழமொழிகள் ஏற்படும். வீட்டில் ஆடுகின்ற (சொக்கட் டான்) ஆட்டங்களில் பழம் பழுத்தல் என்பது ஆட்டம் நிறைவு பெறுதலைக் காட்டும். எதாவது ஒன்று முடிந்ததோ இல்லையோ என்பதை வழக்கத்தில் காயா? பழமா? என்று கேட்கிறோம். பழுக்கா அல்லது பழுக்கை என்பது பொன் னிறத்திற்கு ஒரு பெயர். இந்நிறம் பழுத்தலாகிய நிகழ்ச்சி யாலாவது கண்டு அப்பெயர் பெற்றது போலும். பழுப்பு என்ற சொல்லும் இத்தகையதே. மஞ்சள் நிறத்தைத் தெலுங்கர் பசப்பு என்று சொல்வர். இது பழுப்பு என்பதுடன் ஒற்றுமை யுடையதே. மேனி பசத்தல் என்பதை ஒப்பிடுக. பழகல் - அறிமுகம், முதிர்தல், பயிலல். முதிர்ந்து நிலை பெற்ற நட்பை நிறைமொழி வள்ளலாகிய வள்ளுவர் பழைமை என்று இனிதாய்ச் சொல்வர். பழக்கம் - இணக்கம். தென்னாட்டு மக்கள், பழக்கம் என்பதை ஓர் அரிய பொருளில் வழங்கு கிறார்கள். நான் நேற்று அவனுடன் பழக்கமிட்டுக் கொண் டிருந்தேன் என்று பேசுவதைத் திருநெல்வேலியில் பல இடங் களில் பெரும்பான்மையும் கேட்கலாம். பழக்கமிடுதல் - பேசுதல். பாட்டுக்களால் அமைந்த நந்தனார் வரலாற்றின்கண் ஒரு நொண்டிச் சிந்தில் சேரியில், வழக்கமில்லாதபடி பழக்க மிட்டான் என்று வருகிறது. இப்பொருள் மிகவும் அருமை யானது. ஏனெனில், பேச்சென்பது பழக்கத்தினாலாகிய ஒன்றே என்ற உண்மையைத் தமிழர் தொன்று தொட்டு அறிந்தவர்கள் என்று இதனால் அறியலாகிறது. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 90-91.) பழைமை: (1) பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். (திருக். பழைமை. மணக்; பரிப்.) (2) பழைமையாவது காலஞ் சென்றது அன்று ; இப் பெற்றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது. (திருக். 801. பரி.) (3) அஃதாவது பழைய ராம்தன்மை பற்றி அவர் பிழைத் தன பொறுத்தல். காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று. (திருக். பழைமை. பரி.) பள்ளிச்சந்தம்: சமண பௌத்த கோயில்களுக்க விடப் பட்ட இறையிலி நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்படும். (பிற்காலச் சோழர் சரித்திரம். I. 136.) பள்ளிப்படை: அரசனது சமாதிக் கோயில் பள்ளிப்படை என்று அக்காலத்தில் (சோழர் காலத்தில்) வழங்கப்பட்டது. (பிற்காலச் சோழர் சரித்திரம். I. 37.) பற்று: இசையில் இன்பத்தையும் பாடுவோர்க்கு நலனை யும் பயக்கும் அவ்வொலியை அவர்கள் சதா பற்றிக் கொண்டே இருத்தலால்தான் நம்மூதாதையர் அதனைப் பற்று என்றே வழங்கினர். நாம் நடைமுறையில் அவ்வொலியைச் சுதி என்ற வடமொழிப் பெயரால் வழங்குகிறோம். (பாணர் கைவழி. 21.) பற்று, ஆர்வம்: பற்று - பெற்றதன் மேல் நிகழும் ஆசை. ஆர்வம் - பெறாததன் மேல் நிகழும் ஆசை. (சீவக. 3039. நச்.) பறவைப் பெயர்படு அத்தம்: பறவையினது பெயரைப் பெறு நெல்லு, என்றது இராசான்னம் என்னும் பெயர் பெறு கின்ற நெல் என்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்தது. என்று இதனைக் கூறினார். (பெரும்பாண் . 305. நச்.) பறி: மழையைத் தடுப்பதற்கு ஓலைப்பாயால் வளைத்து இயற்றிய குடலை. (அகம். 94. வேங்கட விளக்கு.) பறையலகு: பறையலகு இக்காலத்துப் பலகறை என மருவிற்று. (சீவக. 2773. நச்.) பன்றி: கோரைப்பல் இருப்பதனால் பல்+தி= பன்றி. (சொல்லின் கதை 15.) பனை: காயாப் பனையை ஆண்பனை என்றும், காய்ப்பன வற்றைப் பெண்பனை என்றும் வழங்குப. (தொல். பொருள். 58. பேரா.) பா பா: (1) பா என்பது, சேட்புலத்து இருந்த காலத்தும், ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கு ஏதுவாகிய பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை. (தொல். பொருள். 313. பேரா.) (2) அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் பா என்பதூஉம் காரணக் குறி. (யா. வி. 54.) (3) பா - பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். பா என்ற சொற்குப் பரப்பு என்னும் பொருளைச் சிறுமியர் உடையாம் பாவாடையிலும் பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி என்ற சங்கத் தொடரிலும் பார்க்கலாம். (தொல்காப்பிய புதுமை. 77.) பாக்கம்: பாக்கம் - கடற்பக்கத்து ஊர். (திருவிளை. வலைவீசின. 12. ந. மு. வே.) பாக்கன்: பாக்கன் - காட்டுப் பூனை. படப்பை என்பது வேலி. படப்பையில் (காட்டுப்பூனை) காணப்பட்டது போலப் படப்பை சூழ்ந்த பாகத்தில் காணப்பட்டதால் பாக்கன் என்றும், கற்பிளப்பிலும் மரப்பொந்திலும் வாழ்வதால் விடருகம் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. குறவர்கள் இன்றும் காட்டுப் பூனையைப் பாக்கன் என்றும் போக்கன் என்றும் கூப்பிடுகின்றனர். குழந்தையைப் பயமுறுத்தப் பாக்கன் வருவதாகக் கூறுவர். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 225.) பாசவல்: பாசவல்- நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல். (குறுந்தொகை. 238. உ. வே. சா.) பாட்டங்கால்: பாடுபட்டுப் பயிரிடுதற்கு உரியதாகலின், தோட்டக்கால் பாட்டங்கால் எனப்பட்டது. (கலி. 111. உரைவிளக்கம். இளவழ.) பாட்டுடைச் செய்யுள்: பல பாக்களோடு உரைப்பாட்டை யும் இசைப்பாட்டையும் உடைய இயல் இசை நாடகப் பொருட் டொடர் நிலைச் செய்யுள். (சிலப். பதிகம். 60. அடியார்.) பாடி காவல்: பாடி காவல் என்பது நெறியின் வழீஇ யினாரை வழக்குவினாய் ஒப்பநாடிச் செய்யும் தண்டத்தொழில் உணர்த்துவதொரு சொல். கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் பாடி காவலிற் பட்டுக் கழிதிரே (அப்பர்) கோடி காவனைக் கூறாத நாளெல்லாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே (அப்பர்) எனத் திருப்பாட்டு ஓதியதூஉம் அது. (சிவஞான பாடியம். 2-2.) பாடுகிடத்தல்: நோன்பு மேற்கொண்டு ஓரிடத்தே கிடத்தல். இதனை பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு (சிலப். 9-15) எனவரும் சிலப்பதிகாரத்தானும் உரையானும் உணர்க. (கல்லாடம். 27. பெருமழை.) பாண்: சொற்றொடராகிய பாவும் (சாகித்தியமும்) சுரம், சுருதிகளின் சேர்க்கையால் வந்த வன்னமாகிய பண்ணும் (இராக மும்) இவை இரண்டும் நிகழும் போதுண்டாகும் கால அள வாகிய பாணியும் (தாளமும்) சேர்ந்து பாண் ஆயிற்று. அஃதாவது பாணி என்ற இசைப்பாட்டிற்கு பா, பண், பாணி என்று மூன்று அங்கங்கள் உண்டு. (பாணர் கைவழி. 6.) பாண்டரங்கம்: வெள்ளையரங்கம். அது சாம்பல் நிறைந்த இடுகாடு. சாம்பற்பூசி அங்கு ஆடும் கூத்துக்கு அதுவே பெய ராயிற்று. பாண்டு வெண்மைப் பொருளில் வருதல் பாண்டு கம்பளம் துளக்கிய தாகலின் (மணிமே. 14-29) என்பதிற் காண்க. (கலி. கடவுள். உரை. விளக்கம். இளவழ.) பாண்டியர்: (1) பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது. கொள் + இ - கோடி; செல்+இ - சேறி-என, கொள், செல் என்னும் முதனிலைகளுடன் இகர விகுதி சேர பகுதி முதல் நீண்டு புணர்ந்தது போலவே பண்டு என்னும் பண்புப் பகுதியுடன் இகர விகுதி சேரப் பண்டு என்பது பாண்டு என முதல் நீண்டு புணர்ந்தது. பாண்டி + அன் - பாண்டியன். பாண்டி+அர் - பாண்டியர். இது அன்னார்க்குப் பிற்காலத்தே ஏற்பட்ட பெயராகும். (கொங்குநாடு. 10.) (2) பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்ததென்றும், பழமையானவன் என்னும் பொருள் கொண் தென்றும் சொல்வதுண்டு, பாண்டியன் மூவேந்தருள் மட்டு மன்றிப் பிறவரசரை நோக்கியும் பழமையானவனே. மோகூர்த் தலைவனும் பாண்டியன் படைத்தலைவனும் ஆகிய ஒரு சிற்றரச னும் பழையன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆயினும், இப் பொருட் கரணியம் அத்துணைப் பொருத்தமாய்த் தோன்ற வில்லை. பாண்டி என்பது காளையைக் குறிக்கும் சொல். அது பாண்டில், பாண்டியம் என்றும் வடிவங்கொள்ளும். ஒரு மற வனைக் காளை என்பது மரபு. அதனால், அது சிலர்க்கு இயற் பெயராகவும் இடப்படும். வலிமை, மறம் உழைப்பு, பொறுப்பு முதலிய அருந்திறங்கள் வாய்ந்த காளை போன்றவனைக் காளை என்றல் உவமை ஆகுபெயர். ஒரு நாட்டைக் காக்கும் அரசனுக்கு இக்குணங்கள் இன்றியமையாதவை. ஆதலால் பொருட்பாலில் அரசியற் பகுதியில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில், மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து என்றார் திருவள்ளுவர். காளை என்பது ஆண்மகன், கட்டிளமையோன், பாலை நிலைத்தலைவன் ஆகிய மூவரையும் குறிக்குமென்று திவாகரம் கூறும். ஆதலால், காளையைக் குறிக்கும் பாண்டி ஏன்னும் சொல்லினின்றே பாண்டியன் என்னும் பெயர் தோன்றியிருத்தல் வேண்டும். (தமிழ் வரலாறு. 42.) பாண்டில்: (1) இரண்டு உருளையை உடைய சகடம். (சிலப். 14: 168. அரும்பர.) (2) பாண்டில் பொன்னால் வட்டமாகச் செய்யப்படுவ தோர் அணிவகை. இதனைச் சுற்றி மணிகள் கோத்து மேகலை யோடு அணிதல் பண்டை மரபு. (ஐங்குறு. 310. ஔவை. சு. து.) (3) பாண்டில் பண்டியெனவும் வண்டி எனவும் இக் காலத்து வழங்கப்படுகின்றது. (நற்றிணை. 183. அ. நாராயண.) பாப்பா: பார்ப்பு (பறவைக்குஞ்சு) என்ற சொல் பாப்பா எனக் குழந்தையை உணர்த்தி அது ஒரு சிலரின் இயற்பெய ராகவும் வழங்கத் தொடங்கிவிட்டது. (மொழியியல். 279. மு.வ.) பாம்புரி: (1) கீழே புறப்படப்படுத்தது. (சீவக. 1250. நச்.) (2) மதிலின் அடியில் உள்ள ஆளோடிகள். (சீவக. 1444. நச்.) பாயிரம்: (1) பாயிரம் என்றது புறவுரையை. நூல் கேட் கின்றான், புறவுரை கேட்கிற் கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல, அந்நூல் இனிது விளங்குதலில் புறவுரை கேட்டல் வேண்டும். (தொல். சிறப்புப்பாயிரம். நச்.) (2) பாயிரம் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின் புறவுரை என்றவாறு. ஆயின் நூல்கேட்பான் புகுந்தே நூல் கேளாது புறவுரை கேட்டு என்பயன் எனின், நூற்குப் புறனாக வைத்தும் நூற்கு இன்றியமையாதது ஆதலின் என்க. என் போலவோ எனின், கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில் மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், தகைமாண்ட நெடுஞ் சுவர்க்கு வகைமாண்ட பாவை போலவும் என்பது. (இறையனார். 1. நச்.) பார்ப்பார்: பார்ப்பார் என்பது குலம்பற்றி வந்தது அன்று. தொழில்பற்றி வந்தது. பார்ப்பார் என்றால் ஆராய்வார் என்று பொருள்படும். நூல்களை ஆராயும் தொழிலில் ஈடுபட்ட அறிஞர்கள் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். (தொல்காப்பிய ஆராய்ச்சி. 188.) பார்ப்பான்: பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். (தொல். பொருள். 501. பேரா.) பார்வல்: பார்வல் - அரசர், தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியை உடைய அரண் ஆகுபெயர். (மதுரைக். 231. நச்.) பாலை: பாலை என்பது பிரிவு. பாலையில் பால் என்பதே வேர்ச்சொல். பால் என்றாலு பகுப்பு, பிரிவு எனப் பொருள்படும். ஆண்பால், பெண்பால் என்ற சொல்லதிகாரச் சொற்கள் ஆண் பிரிவு, பெண் பிரிவு என்று பொருள்படுவன. ஆவின்பால் அப்பூதியடிகளாரின் மூத்த திருமகன் நாகந்தீண்டி இறந்தபோது திருநாவுக்கரசு நாயனார் பாம்பின் விடத்தை நீங்கும்படி செய் தார். சேக்கிழார், பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார் எனப் பாடினார். இங்குப் பால் என்ற சொல்லைச் சேக்கிழார் வினைச்சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். விடம் பாற்றுவித்தார் என்பது நஞ்சைப் பிரியும்படி செய்தார் எனும் பொருள் கொண்டது. செல்வம் தேடுதல் முதலிய காரணமாகத் தலைவன் பிரிவது பாலைத்திணை ஆயிற்று. (கட்டுரை. அகத்திணைத் தெளிவு.) பாவினம்: (1) ஒருபுடையாற் பாவினோடு ஒத்த இனத் தவாய் நடத்தலின் பாவினம் என்பதூஉம் காரணக் குறி. (யா. வி. 54.) (2) தாழிசை: ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்த தாழத்தால் இசைத்தலானும் ஒத்த பொருள்மேல் பெரும் பான்மையும் மூன்றாய்த் தாழ்ந்து இசைத்தலானும் தாழிசை என்பதூஉம் காரணக் குறி. துறை: ஒரு புடையால் தத்தம் பாவிற்குத் துறை போன்று நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும் எல்லாத் துறை மேலும் இனிது நடத்தலானும் துறை என்பதூஉம் காரணக்குறி. விருத்தம்: ஒரு புடையால் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தாகலானும், எல்லா அடியும் ஒத்து நடத்தலானும் புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும் விருத்தம் என்பதூஉம் காரணக் குறி. (யா. வி. 56.) பாவை: (1) இஞ்சிக் கிழங்கைப் பாவை என்றல் மரபு. (மலைபடு. 125. நச்) (2) அறுகு, இஞ்சி முதலியவற்றின் கிழங்கைப் பாவை என்றல் மரபு. செய்யாப் பாவை என்புழி, இஞ்சிக் கிழங்கைப் பாவை என்றல் மரபென நச்சினார்க்கினியர் கூறியதும் காண்க. (மலைபடு.125.) (அகம். 23. வேங்கட விளக்கு.) பாவை நோன்பு: (பாவையைக்) குழமகள் என்கின்றார் நச்சினார்க்கினியர். நீலகேசி ஆசிரியர் குழமணர் என்றும் இப்பாவைக்குக் கை கால் முதலியன இரா என்றும் ஓதுவர். (நீலகேசி. 408.) எனவே ஒரு மரக்கட்டையைக் குழந்தையாகப் பாவனை செய்தல் vன்றுணர்க.ï¡ காரணத்தால் இந்த நோன்பு பாவை நோன்பு எனப் பெயர் பெற்றது. (கலி. 59. விளக்கம். பெருமழை.) பானாள்: பானாள் (பால்+நாள்) என்பது நள்ளிரவு அல்லது நண்பகல் என்று பொருள்படும். பண்டை உரை யாசிரியர்கள் பானாள் வருமிட மெல்லாம் நள்ளிரவு என்று மட்டுமே பொருள் கொண்டனர். குறுந்தொகை 311 ஆம் பாட்டு, பானாளில் தலைவியும் ஆயமும் புன்னைமலர் கொய்வதைக் குறிக்கின்றது. ஆயம் பூக்கொய்தல் நள்ளிரவில் நிகழ்வதன்று. புன்னைமலர் கொய்தல் நண்பகலில் உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து அண்மையில் நிகழ்வதைக் குறிஞ்சிப் பாட்டும் குறிக்கும். அங்கு ஆயம் கொய்த மலர்களில் கடிஇரும் புன்னை யும் காணலாம். குறுந்தொகை 219 ஆம் பாட்டு, சிறுவெண் காக்கை பானாளில் பனிக்கழி துழவுதல் குறிக்கும். இச் செயலும் நண்பகலில் நிகழ்வதென்பதே பொருந்தும். இப் பாட்டிலும் (கூதிர்ப்பானாள் - நெடுநல் வாடை - 12) நண்பகல் என்னும் பொருள் பொருந்துவது காண்க. (நெடுநல்வாடை. பா நலன். 163.) பி பிச்சம்: பீலியாற் கட்டுவன. (சீவக. 416. நச்.) பிச்சு: பிச்சு என்பது கள்ளைக் குறிக்கும் மற்றொரு சொல். இத் தமிழ்ச் சொல் பைத்தியம் என்ற கோட்ட நிலையைக் குறிப்பதும் உணரற்பாற்று. இதனால் கள்ளை எத்துணை வெறுத்தார்கள் என்பது புலனாம். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 :512.) பிச்சை: பிச்சை என்ற சொல் வடசொல் என்று கருதுவர் சிலர். பிச்சை என்பது தமிழ்ச் சொல்லே. பிச்சை என்பது பலரிடமிருந்தும் ஒன்றினைப் பிரிப்பது தானே. பிரிப்பது என்ற சொல் நாஞ்சில் நாட்டில் வசூலித்தல் என்ற பொருளில் வழங்கு கின்றது. பிரித்தல், பிய்த்தல் என்பன ஒரு பொருள் சொற்கள். பிய்த்தல் > பிச்சல் > பிச்சை என்று வந்துள்ளது. இன்றும் பிரித்துக் கொண்டு போதலைப் பிச்சிக் கொண்டு போதல் என்று வழங்கக் காண்கிறோம். ஆதலின் பிச்சை என்ற சொல் தமிழ்ச் சொல்லே. இது வடமொழியில் சென்று பிக்ஷா என்று உருமாற்றம் அடைந்துள்ளது. (பழந்தமிழ். 234.) பிஞ்சு: பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் கச்சல் என்றும், மாவிற்கு வடு என்றும், தென்னை பனைக்குக் குரும்பை என்றும் பிறவற்றிற்குப் பிறவாறும் சிறப்புப் பெயர் குறித்தனர். (கழகப் பொன்விழா மலர். 49.) பிடா: பிடா வென்பது முட் காலையுடைய தொரு புதல். நீண்ட காம்போடு கூடிய வெண்ணிறப் பூக் குலையாகப் பூப்பது. (கலி. 101. விளக்கம். பெருமழை.) பிண்டம் : (1) பிண்டம் என்பது மணை போலப் பிறக்கும் அது. (புறம். 28. ப. உ.) (2) பிண்டம் பல பொருள் தொகுதி. (தொல். சொல். 90. சேனா.) பிண்டிபாலம்: தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை. (சீவக. 2269. நச்.) பிணி: (1) நோய், பிறவிப்பிணி, பசிப்பிணி, பிணித்தல் - கட்டுதல். பிணித்த புன்சடையன் என்றனர் திருஞான சம்பந்தர். சுந்தரரும் பிணியார் சடையர் மயானத்து என்றுளார். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6: 239.) (2) பிணியாவது நோய்; உடம்பின் உறுப்புக்களைத் துன்பமின்றி இயங்க வொட்டாமல் கட்டிவைத்தாற் போலச் செய்தலின் அஃது அப்பெயர் ஆயிற்று. (திருக்குறள். தண்ட. 227.) பிணையல்: மலர் நெருங்கு மார்பின் மாலை; சூட்டு - நெற்றிக் கட்டு. கண்ணி- முடிக்கு மாலை. (சீவக. 193. நச்.) பித்திகம்: பித்திகம் மாரிக் காலத்தே தழைத்து அக் காலத்து அந்தியில் மலர்வது. அதன் மலரின் புறம் சிவப்பா யிருக்கும். இதுவே பிச்சி என்று வழங்கப் பெறுவது. (அகம். 42. வேங்கட விளக்கு.) பிரப்பு: அரிசி, தினை முதலியவற்றைப் பல பகுதியாகக் கூடையிலாதல், முறத்திலாதல் பலியாக இட்டு வைத்தல். பல்பிரப் பிரீஇ என அகத்திலும் (242) தினைப் பிரப் பிரீஇ எனக் குறுந்தொகையிலும் (293) குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி, சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇ எனத் திருமுருகாற்றுப் படையிலும் (233-234) வருதல் காண்க. (அகம். 98. வேங்கட விளக்கு.) பிழி: கள், பிழியப் படுவது என்னும் பொருட்டு. (அகம். 102. வேங்கட விளக்கு.) பிழைத்தல்: பிழைத்தல் - இத் தொழிற் பெயர் தப்பித்துக் கொள்ளல், தப்பிதஞ் செய்தல் என்ற இயைபுடைய இரண்டு பொருள்களுடன் உயிர் வாழ்தலையும் குறிக்கும். உயிர் வாழ் தலுக்கும் தப்பித்துக் கொள்ளலுக்கும் ஏதாயினும் ஒற்றுமை யுண்டோ என்ற வினா இதனால் பிறக்கிறது. இதுவே இங்கு நாம் தூக்க வேண்டியது. மிகக் கொடிய பிணிவாய்ப் பட்டான் ஒருவன் அதிலிருந்து மீள்வானாயின் அவன் பிழைத்துக் கொண்டான் என்று மக்கள் கூறுவதை எப்போதுங் கேட்கிறோம். இது வழக்கமாய் பேசும் பேச்சானமையின் இடத்திற்கேற்ற மொழி இடரின்றி அமைந்து நிற்கிறது. ஆனால் பொருள் தெளிவாய்த் தோன்றவில்லை. பிழைத்துக் கொண்டான் என்றால் தப்பித்துக் கொண்டான் என்பதுவே கருத்து. நிலத்தறைந்தான் கைபிழையாதற்று பிழையா விளையுள் என வருதல் காண்க. ஆனால், பிழைப்பு, பிழைத்தல் என்ற சொற்களை நாம் ஆளும்போது வாழ்தல் என்ற எண்ணம் ஒன்றே நமக்குளது. இது பழக்கத்தின் பயன். பாரிற் பிறந்து வாழும் உயிர்களுக்கு நேரிடும் இன்னல் களுக்கும் இடையூறுகளுக்கும் கணக்கில்லை; உயிர்களை அழிக்கக் காத்திருக்கும் வல்வினைகளுக்கு அளவே இல்லை. பகை, பசி, பிணி முதலியவற்றிற்கு நாடோறும் அவை இரை யாய்ப் போகின்றன. இவற்றிற்கு எஞ்சி நிற்பவையே வாழ்வன. இவற்றிற்குத் தப்புவதே பிழைப்பு...... ஆதலின் சாவினின்றுந் தவறி நிற்றலே வாழ்க்கையாகும். மாண்டொழியாது தப்புதலே உயிருடனிருத்தல். தவறு, தப்பு, பிழை என்பன ஒருபொருட் பன்மொழி. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83-84.) பிறங்கல்: விளக்கம்; பிறங்கு கல், பிறங்கலென விகாரம். (அகம். 13. ப. உரை.) பீ பீடம்: பீடம் என்பது தமிழிலே உயர்ந்த இருக்கையைக் குறிப்பதால், அதனைப் பீடு + அம் எனப் பிரித்துப் பொருள் கொள்ளுதல் தமிழ் முறைக்கு ஒத்ததே. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12 : 565.) பு புக்கில்: புக்குப் போகின்ற இல்லம். (திருக். 340. காலிங்) புகரி: புகரி - மான். புகர் - புள்ளி. அதனை உடையது புகரி. புகருழை ஒருத்தல் (அகம். 98( என வருதல் காண்க. (குறுந்தொகை. 391. உ. வே. சா.) புகழ்: (1) புகழ் என்னுஞ் சொல், புகலுதலால் வந்தது. புகலுதல் என்றால் விரும்பிச் சொல்லுதல்; மனமார அவரவரே விரும்பிப் புகழும்படி அறச் செயல்கள் நிகழ வேண்டும். புகழ் பரப்புதற்கு இந்தச் சொல்லமைப்பு ஓர் அருமையான முறை மையை உட்கொண்டதாய் இருக்கிறது. (திருக்குறள் அறம். 141-142.) (2) புகழ் என்பது தான் இறந்த காலத்தும் உளதாம் உரை. (நாலடி. 9. பது ; விள. உ.) புகா: புகா என்னுஞ் சொல்லின் பொருள் உணவு என்பது. புகர்வு என்பதும் புகவு என்பதும் புகா என்னும் சொல்லின் திரிபு, புகா என்பதே சரியான சொல். இந்தச் சொல் பிற்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் வழங்கப்படவில்லை ஆயினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கி வருகிறது. ஆனால் இச்சொல் இப்போது குழந்தைகளின் உணவுக்கு மட்டும் பெயராக வழங்கப் படுகிறது. FHªijfis¥ gh®¤J ‘Ú ò›th rh¥ã£lhah? என்றும் புவ்வா சாப்பிடு என்றும் கூறுவதை இன்னும் பேச்சு வழக்கில் கேட்டு வருகிறோம். புவ்வா என்பது புகா என்பதன் திரிபு என்பது நன்கு தெரிகிறது. தமிழில் வழங்குவது போலவே கன்னட மொழியிலும் புவ்வா (buvva) என்னும் சொல் குழந்தைகளின் பேச்சில் உணவு என்னும் பொருளில் வழங்கி வருகிறது. தெலுங்கு மொழியிலும் புவ்வா என்னுஞ் சொல் சோற்றுக்கும் உணவுக்கும் பெயராக வழங்கப்படுகிறது. (அஞ்சிறைத் தும்பி. 129.) புகாக்காலை: புகா உணவு (புகாக்காலை - உண்டிக் காலம்) உண்ணு நேரத்தில் எவரும் புகாராகலானும் அது புகாக் காலை ஆயிற்று. (கலி. 51. உரை விளக்கம். இளவழ.) புணர்வு: புணர்வு என்பது காமப்புணர்ச்சி முதலாயின. (தொல். பொருள். 259. பேரா.) புய்த்தல்: புய்த்தல் - பறித்தல். கோடு புய்க்கல்லாது உழக்கும் நாடகேள் (38) எனக் கலித் தொகையில் இஃது இப்பொருளில் வருதல் கண்டு கொள்க. இச் சொல் இக் காலத்தில் பிய்த்தல் என வழங்குகின்றது. (திருவொற்றி முருகர். 217.) புரவு: (புரவு-வரி) புரவு என்பது காப்பது என்ற பொருள் தரும். அது செய்பவனாகிய அரசனுக்குப் புரவலன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. காக்கும் தொழிலை அரசனே அன்றி ஊர்ச் சபைகளும் தொழிற் சபைகளும் செய்யும். ஆகவே, அவ்விதம் காக்கும் செயலுக்காக ஒரு கடமை (வரி) ஏறப்டுத்தி இருப் பார்கள். அக் கடமைக்குப் புரவு என்று பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12: 81-82.) புரவுவரி: அரசிறை நீங்கிய ஊர்களினின்றும் வருதற்குரிய பிறவரிகளுக்குக் கணக்கு வைத்திருப்பவன். (பாண்டியர் செப்பேடுகள். 182.) புரவுவரித் திணைக்களம்: புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்த முடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக் கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத் திற்கும் தனித் தனியாக அமைக்கப் பட்டிருந்தது. (முதற் குலோத்துங்க சோழன். 85.) புருவை: மறியாடு. இதனைச் சில விலங்குகளின் பெண் பாற் பெயரென்று நினைத்தற்கும் இடனுளது. தகர் - ஆட்டுக் கிடாய். (ஐங்குறு. 238. விளக்கம். பெருமழை.) புரை: புரை என்பது, பருப் பொருள் அறிவினார்க்கு உண்மைபோல் மேல் தோன்றிச் சிறிது நுண்ணறிவுடையராய் உள்நோக்குவார்க்கும் அங்ஙனம் ஏதோர் உண்மையும் உடைய தன்றாய்ப் புரை படுதலாம். (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 99.) புல்லறிவாண்மை: அஃதாவது புல்லிதான அறிவை ஆளும் ஆட்சி. ஏதேனும் சிறிது அறிந்தது கொண்டு எல்லாம் அறிந் தானாகவும், எல்லாரினும் தான் பெரியன் ஆகவும் தன்னைத் தானே மதித்து வியந்து கூறலும் பிறர் பெருமைகளை அறியாது தான் இகழ்ந்து கூறலுமாம். (நாலடி. புல்லறிவாண்மை. பதுமனார்.) புலவர்: (1) பல திறப்பட்ட அறிவை ஒருங்கே கொண்ட பேரறிவுடைமை புலமை. அதனை உடையவர் புலவர். (திருக்குறள் அழகும் அமைப்பும். 156.) (2) புலவர் - புலம் என்பதன் அடியாகப் பிறந்த சொல். புலம் - புல - அர் - புலவர். (திருக்குறள். குழந்தையுரை. முன்னுரை. 23.) (3) அகத்தே கல்லிக் கல்லி ஆழ்ந்து பயிலும் கல்வி யுடையோர் புறத்தே புலன் அறிவின் துணையுடன் அது செய் தற்குரிய ராகலின் புலவர் என்னும் பெயரால் என்றும் ஒரே பெயராக அவர் அழைக்கப்படுகின்றார். திருவள்ளுவர் தம் அரும் பெறல் நூலிற் கல்வி என்னும் அதிகாரத்தில், உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனக் கற்றார்க்குப் பெயராகப் புலவர் என்னும் இவ்வொரு பெயரையே தக்க கருத்துக்களோடு வழங்குதல் பெரிதும் கருத்திற் பதிக்கற் பாற்று. (சங்கநூற் கட்டுரைகள். II. 69.) புலவன்: அறிவுடையவன். (முருகு. 261. நச்.) புலவி: (1) புலவி என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமல் காலங் கருதிக் கொண்டு உய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. (தொல். பொருள். 499. பேரா.) (2) சிறு பிணக்கு. (திருக். 1306. ப. உ.) புலன்: புலன் என்பது கல்விப் பயனாகிய அறிவுடைமை. (தொல். பொருள். 2.9. பேரா.) புலி: புலி என்ற சொல்லே முதலில் புள்ளி என்ற சொல்லில் இருந்து தோன்றி, புள்ளி யுடைய புலியை அஃதாவது சிறுத்தைப் புலியைக் குறித்து வழங்கி யிருக்க வேண்டும். புள்ளி யுடைய புறாவைப் புலிப்புறா என்று நாட்டு மக்கள் அழைப்பதைக் காணலாம். புள்ளிப் புலியைக் குறித்த புலியென்ற சொல் பின்னர்ப் புலியின விலங்குகளுக்குப் பொதுவாக வழங்க லாயிற்று. (சங்க இலக்கியத்தில் விலங்கின. விளக்கம். 259.) புழுக்கல்: புழுங்க வெந்த பருப்பு புழுக்கல் எனப்பட்டது. அவரை வான் புழுக்கு என்றார் பெரும்பாணாற்றுப்படையிலும். (திருவொற்றி முருகர். 143.) புழுக்கு: புழுங்க வெந்தது; கும்மாயமும் ஆம்; பருப்புச் சோறும் என்ப. (பெரும்பாண். 194-195. நச்.) புழுகு: அம்பின் தலையில் செறிக்கும் குப்பி; இது மல்லிகை மொட்டு எனவும் படும். (அகம். 9. வேங்கடவிளக்கு.) புள்ளடிக்கல்: நிலத்தை அளந்து எல்லை அறிந்து நடும்கல் புள்ளடிக்கல் எனப்படும். (முதற் குலோத்துங்க சோழன். 89.) புள்ளுவமகன்: புள்ளின் ஓசையைத் தன்னிடத்தே உடைய மகன். (சீவக. 2039. நச்.) புறங் கூற்று: நிகரல்லார் தம் பொறாமையான் அவர் இல்வழி இகழ்ந்து கூறுதல். (சிலப். 8: 65. அடியார்.) புறம்: வாழ்க்கை என்பது ஆண்மை பெண்மையின் கூட்டுற வில் தொடங்கி, அதன் நடைமுறைக்காகப் புறத்திற் செல்வந் திரட்டல் நிகழ்தலின் புறம் என்பது சிறப்பாகப் பொரு ளீட்டலையே குறிக்கும். (திருக்குறள் அறம். 30. ) புன்கண்: புன்கண் = வாட்டமுற்ற கண் எனத் துன்பத் துக்குக் காரணக்குறி. புன்கண் அஞ்சும் பண்பு நற்றிணை. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2: 80.) புனிதம்: புனிதம் - புனலால் (நீரால்) கழுவித் தூய் தாக்கப்படுவது. புனல்ங் முதனிலை. (வடசொற்றமிழ் அகரவரிசை. 304.) புனைதல்: புனைதல் சொற்களையும் கருத்துக்களையும் இடம்நோக்கிச் சுருக்கியும் பெருக்கியும் உவமித்தும் உருவகித்து மெல்லாம் அழகுபடுத்திக் கேட்பார்க்கு இன்பம் விழைவு வேட்கை முதலான மெய்ப்பாடு உண்டாகச் சொல்லுதல்; இங்ஙனம் அழகுபடுத்திச் சொல்லப்பட்டனவே பண்டைக் காலத்தில் இலக்கியம் எனவும் நூல்நயம் எனவும் கூறப்பட்டு வந்தன, நவில் தொறும் நூல் நயம் போலும் எனத் திருவள்ளுவரும் இதனைச் சிறந்தெடுத்துப் பாராட்டுவார். ஆனால் இடைக்காலத்தோ அவ்வழகுபடுத்தும் உரை கற்பனை எனக் கூறப்பட்டுப் பிற்காலத்தே அதுவும் நிலைமாறி இயற்கைக்கு மாறாகப் பொய்யுரை புனைதல் என்னும் இழிவு பொருளில் வந்து வழங்கிப் பெருமை குன்றுவதாயிற்று. (திருவொற்றி முருகர். 236.) பூ பூ: பூ நிலைகளை ஐவகையாகக் கண்டு, தோன்றிய நிலையில் அரும்பு என்றும், மலரத் தொடங்கிய நிலையில் போது என்றும், மலர்ந்த நிலையில் மலர் என்றும், உதிர்ந்து விழுந்த நிலையில் வீ என்றும், வாடிச்சிவந்த நிலையில் செம்மல் என்றும் சொல்லினர். (கழகப் பொன் விழாமலர். 49.) பூசை: பூசல் - ஒருவகை ஒலி. அதனைச் செய்வது பூனை, பூசை, பூஞை எனவும் வரும். (வடசொற்றமிழ் அகரவரிசை. 306.) பூண்: உலக்கைப் பூண், தடிப்பூண் என்பன. உலக்கையின் தலையிலும் தடியின் தலையிலும் செறிந்த வளையங்களை உணர்த்தும். அவ்வாறே கைகளில் செறிந்த முறையில் அணியப் பட்டது முதலில் பூண் எனப்பட்டது போலும் ! காப்பு, கொலுசு, கடகம், கங்கணம், மோதிரம் என்பவை கை, விரல் போன்ற உறுப்புக்களில் இறுகிய நிலையில் அணியப் பெறுவன ஆதலால் பூண்கள் என முதலிற் பெயர் பெற்றிருக்கலாம். பின்னர்க் காலப் போக்கில் இக்காரணச் சிறப்புப் பெயர் பல அணி களையும் காரணப் பொதுப் பெயர் நிலையில் நின்று குறிக்கத் தொடங்கின போலும். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 526-7) பூந்தொடை விழவு: படைக்கலம் பயின்ற இளைய வீரரை அரங்கேற்றுவிக்கும் விழா. (அகம். 187. வேங்கட விளக்கு.) பூ, மூ: பூ, மூ என்பன பூத்தல், பூத்து, பூத்த, மூத்து, மூத்த முதலியனவாய் வரும். பூ என்பன தன்வினை பிறவினை என்னும் இருவினைக்கும் பொது. புதல், முதல் என்பன பெயர் எனலும் அமையும். முதல் - தலைவன். மறைமுதலோர் தனிமாவின் நிழற்கீழ் - கந்தபு. (செந்தமிழ். 11: 118.) பூரியார்: பூரியார் - கீழ்மக்கள். பூரியம் என்னுஞ் சொல் பல் கோடியின் மிக்கதோர் எண்ணைக் குறிப்பதாய் வழங்குகிறது. பலகோடி மக்களில் மேன்மக்கள் சிலராயும் கீழ்மக்கள் பல ராயும் இருப்பது கருதிக் கீழ்மக்களை எண்மிகுதி குறிக்கும் பூரியம் என்னும் சொல்லடியாகப் பூரியர் என வழங்கினர் போலும். (திருக்குறள். தண்ட. 241.) பெ பெண்மை: அமைதித் தன்மை. (சீவக. 356. நச்.) பெருந்திணை: எல்லாவற்றினும் பெரிய திணை ஆதலின் பெருந்திணை ஆயிற்று. என்னை? எண்வகை மணத்துள் கைக் கிளை முதல் ஆறுதிணையும் நான்கு மணம் பெறத் தான் ஒன்று மட்டும் நான்கு மணம் பெற்று நடத்தலின். (தொல். பொருள் அகத்திணை. 1. நச்.) (2) தாலி பெருகிற்று, விளக்கைப் பெருக்கு என்பவற்றுள் பெருமைச் சொல் மறுதலைப் பொருளில் வருவது போலவே பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்பதிலும் பெருமை அடை, ஒழுக்கச் சிறுமையைச் சுட்டுவதாகும். (தொல்காப்பியப் பொருட்படலம். 189.) (3) பெருந்திணை என்பது பெருமை மிக்கதிணை என்று தவறாக பண்டை உரையாசிரியர் எண்ணினர். பொருந்தாத இழிந்த ஒழுக்கம் என்றே இது பொருள்படும். இவன் பெரிய ஆள் இவன் பெரிய ஆசாமி என்று இன்று பேச்சு நடையிலே வழங்குவதைக் கேட்கலாம். இதன் பொருள் பல தீமைகளைத் திறமையுடன் செய்பவன் என்பதே. இங்கே பெருமை என்பது எதிர்மறைப் பொருள்பட்டு இழிந்த தன்மையைக் குறிக்கின்றது. (கட்டுரை. அகத்திணைத் தெளிவு.) (4) தலைவன் தலைவியர் சில காதல்களை உள்ளத் தளவிலும் சொல்லளவிலும் காத்தோம்பிக் கொள்ளும்போது அக்காதற் பாங்குகள் ஐந்திணைப் படுகின்றன. அவ்வளவுகளுள் காத்தோம்ப மாட்டாது சிலர் காதல் மிகுவர்; மிகுதியால் சில காதற் செயல்களை மேற்கொள்வர்; அதனால் ஊரறியும் இக்காதல் மிகைகளே பெருந்திணைப் பொருளாவன. ஐந்திணை யாவது அளவுக்காதல்; பெருந்திணையவாது மிகுதிக் காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை, மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று. பெருமழை, பெருமிதம், பெரும் பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக. (தமிழ்க்காதல். 235.) பெருமிதம்: வீரத்தினைப் பெருமிதம் என்று எண்ணி னான்; என்னை? எல்லாரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கு என்க. (தொல். பொருள். 257. பேரா.) பெருவிலை: பெருவிலை என்பது இந்நாளில் ஏலம் என்று வழங்கப்படுகிறது. இத்தொடர் அவ்வப்போது ஆட்சி புரிந்த அரசன் இயற்பெயரோடு இணைந்து இராசராசப் பெருவிலை என்று அந்நாளில் வழங்கப் பெற்றுள்ளமை கல் வெட்டுக்களால் அறியப்படுகிறது. (பிற்காலச் சோழர் சரித்திரம். II. 197.) பே பேடி: பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பும் உடையவள். (திருக். 727. பரி.) பேதைமை: பேதைமை என்பது அறிவின்மை. (தொல். பொருள். 252. பேரா.) பேய்: (1) ஒருவன் இருண்டவேளையில் ஒரு தோற்றத்தைக் கண்டு அரண்டு குழறும் ஒலியினின்று பே (பேபே) என்னும் ஒலிக்குறிப்புத் தோன்றியுள்ளது. பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. பே-பேம்-அச்சம். பே-பேய்= அஞ்சப்படும் ஆவி அல்லது தோற்றம். (முதல் தாய்மொழி. 9.) (2) நுண்ணுடம்பில் நிற்கும் ஒருவகை உயிர். இது கண் டார்க்கு அச்சத்தைத் தருதலின் அப்பெயர் பெற்றது. பேம் - அச்சம். (திருவாசக விரிவுரை. சிவபுராணம். 26-31. மறைமலை.) பேராண்மை: எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மை யான் உளதாதல் பற்றிப் பேராண்மை எனப்பட்டது. (திருக். 962. பரி.) பேழ்கணித்தல்: பேழ்கணித்தல் = விழித்தல். இச்சொல் ஓர் அரியபொருளைக் காலத்தே கொள்ளாது கையிழந்தவன் அடையும் மெய்ப்பாட்டைத் தெரிவிப்பது. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-82.) பை பை: பை என்பது வரல், எனல் என்னுந் துணை வினைகள் பெற்றுப் பைவரல், பைவந்து, பைவரா, பையெனல், பையென முதலியனவாய் வரும். பையென என்னை வினவுதியாயின் (புறநானூறு) பை என்பதினின்று பையல், பைதல், பையுள் முதலிய பெயர்கள் பிறக்கும். பைவிரல் - மென்மை யாதல், வருந்தல். பையுள் - துயர். (செந்தமிழ். 11-119.) பொ பொங்கடி: யானை; யாவற்றினும் பெரிய அடியை யுடையது. (அகம். 44. வேங்கட விளக்கு.) பொச்சம்: கவர்+பு= கப்பு எனவும், உவர்+பு= உப்பு எனவும் விகாரப்பட்டு முடிந்ததுபோலப் பொய்+சு என்பனவும் விகாரப் பட்டுப் பொச்சு என முடிந்து பின்னர் அம்முப் பெற்றுப் பொச்சம் என நிற்பது ஆயிற்று. கப்பு-பிளவு, கவருடையது. கப்புடை நாவின் நாகர் உலகமும் (கம்பர்) உப்பு - உவர்ப்புடையது. (செந்தமிழ். 11-80.) பொச்சாப்பு: (1) கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல். (தொல். பொருள். 274. பேரா.) (2) பொச்சாப்பு என்பது அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓர் இகழ்ச்சி யான் இடையறவு படுதல். (தொல். பொருள். 260. பேரா.) (3) பொச்சாப்பு என்பதற்குச் சூடாமணி நிகண்டுக் காரர் மறத்தல் என்பர். பிங்கல நிகண்டுக்காரர் குற்றம் என்பர். தொல் காப்பியர் பொச்சாப்பு என்பது அற்றப்படுதல்; அஃதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஒரு நிகழ்ச்சி யான் இடையறவு படுதல் (மெய்ப்பாட். 12.) பொச்சாப்பு - கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல் (மெய்ப்பாட். 26.) என்பர். (செந்தமிழ். 11. 79.) (4) விம்மல்+ஆப்பு= விம்மாப்பு எனவும், ஏமம்+ஆப்பு= ஏமாப்பு எனவும் புணர்ந்து நின்றதுபோலப் பொச்சம்+ ஆப்பு=பொச்சாப்பு எனப் புணர்தல் ஆயிற்று......... பொச்சம்- பொய்யுடையது. பொய் - உள்ளீடு இல்லது, பொந்து போன் றிருப்பது. பிங்கல நூலாரும் பொய் என்பதனை மரப்பொந்தின் பெயர்களுள் ஒன்றாக வைப்பர். ஆப்பு - ஆதல். சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்புடைத்து (திருக்குறள்) என்புழி ஆப்பு என்பது ஆதல் என்னும் பொருட்டாதல் அறிக. பொச்சாப்பு, உள்ளீடு இலதாதல். (செந்தமிழ். 11: 80.) பொடிதல்: பொடிதல், தீய்தற் பொருட்டாதல் தங்கண் பொடிவ தெவன் (கலி. 105: 60) என்பதன் உரையாற் பெறப்படும். நீறானமையின், திருநீறுக்கும் பொடி யென்பது ஒரு பெய ராயிருத்தல் காண்க. (கலி. 54. உரை விளக்கம். இளவழ.) பொதி: பல பண்டங்களையும் பொதிந்தனவற்றைப் பொதி என்றது ஆகுபெயர். (சிலப். 5: 112. அடியார்.) பொதியறை: துவாரம் இல்லாத கீழ் அறை. (சிலப். 10: 192. அடியார்.) பொதியில்: (1) பொதியில் என்பது எல்லாத் தேவர் களுக்கும் பொதுவாகிய இல். (இறையனார். 2. நச்.) (2) பொது இல் என்பது பொதியில் என உகரம் திரிந்து இகரமாய் யகர உடம்படு மெய் பெற்று முடிந்தது. (தொல். எழுத்து. 483. நச்.) பொதினி: புளிப்படைதலைத் தடுப்பதற்காகச் சுண் ணாம்பு தடவிய மொந்தையில் அல்லது குடுவையில் இறக்கப் பட்ட தென்னஞ் சாற்றிற்குப் பதனி என்று பெயர். அஃது இனிப்பச் சுவை உடையது. பதநீர் என்பதன் மரூஉவே அது எனத் தமிழ் பேரகராதி கூறுகிறது. அதுபோலப் பொதி நீர் என்னும் சொல்லே பொதினி என மருவி இருக்க வேண்டும். பொதினி என்பது பழனி என மருவி இருக்க வேண்டும். பொதினி என்பது பழனி மலையைக் குறிப்பதாயின், பொதினி பழனி என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் குறிப்பன எனலாம். பொதி நீர் என்பது பொதினி எனவும், பதநீர் என்பது பதனி எனவும் மரூஉவாயின எனலாம். பொதி நீர் எனின் பழத்தினுள் பொதிந்த சாறு என்றும், பழநீர் எனின் பழச்சாறு என்றும் பொருள். சாறு நிறைந்த பழங்களும், கள் வகைகளும் நிறையக் கிடைத்தமையால் அம்மலைக்கு அப்பெயர்கள் ஏற்பட்டனவாகக் கொள்ளல் வேண்டும். வேளிர் வாழ்ந்த இடம் கள் வகைக்கும் கள் குடிக்கும் மொந்தைகளுக்கும் புகழ் பெற்றது எனப் புனைந்துரைக்கப் பட்டிருத்தலின் நமது கருத்து பொருத்தமானதே. (சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள். 281- 2) பொதும்பர்: மரம் செறிந்த இடம். (திருக்கோ. 39. பேரா.) பொதுவர்: முல்லை நிலத்து வாழும் ஆனிரைகளின் பாற்பயன் ஏனை எல்லா நிலத்தவர்க்கும் பொதுவாய்ப் பயன் படும் சிறப்புப்பற்றி அதனை நல்கும் ஆயரைப் பொதுவர் என்று குறிப்பதுண்டு. (ஐங்குறு. முல்லை. ஔவை. சு.து.) பொதுவியல்: எல்லார்க்கும் ஒப்ப ஆடும் கூத்து. (சிலப். 14: 148. அரும்பத.) பொய்: (1) பொய்யாவது உள்ளீடு இன்மை. அஃதாவது யானை உண்ட விளங்கனி போல்வது. அஃது இல்லாமையோடு ஒக்கும். (திருக்குறள். தண்ட. 183.) (2) பொய் என்பது பொந்து எனப் பொருள்படும். அஃதாவது வெளியே ஒரு பொருள்போல் தோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது; இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லும் செயலும் ஆராய்ந்து காண்போர்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படுமாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப்புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல்களும் பயன்படாமையே அன்றித் தீவினையையும் பயப்பனவாம். இனி, பரிமே லழகியார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கருத்துப் பற்றி நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை என உரைப்பர். நன்மை பயவாதது உண்மையேயாயினும் பயன்படாமையின் அஃது உள்ளீடு இல்லாததே யாம்; நன்மை பயப்பது உண்மை அன்றா யினும் அது பயன்படுதலின் அஃது உள்ளீடு உடையதேயாம், நாயனார் பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பதிற் புரை என்னுஞ் சொல்லையும் உடம் பொடு புணர்த்து ஓதினாராகலின் பொய்யென்பது பயன் படுதலாகிய உள்ளீடு இல்லாத புரையேயாம் என்று உணர்ந்து கொள்க. புரை, பொய், புழை, பொந்து என்பன உட் டொளையினை உணர்த்தும் ஒரு பொருட் பெயர்கள். (திருவாசக விரிவுரை. மறைமலை. 65-66.) பொய்கை: மானிடர் ஆக்காத நீர்நிலை. (சீவக. 337. நச்.) பொருநன்: பொருவப்படும் அவன் பொருநன் என நின்றது. (முருகு. 275-6. நச்.) பொருப்பு: பொருப்பு - பக்கமலை. (திருக்கோ. 293. பேரா.) பொலம்: பொன் பொலிவு ஆதல் அன்றிப் பொலம் பொலிவு ஆகாது. (சிலப். 10: 21. அடியார்.) பொழில்: மாந்தன் தோன்று முன்பும் மக்கள் பெருகு முன்பும் ஞாலத்திலுள்ள நிலமெல்லாம் மரஞ் செடி கொடி படர்ந்து ஒரே சோலையாய்த் தோன்றிற்று. பெருநிலப் பகுதி களும் சிறுநிலப் பகுதிகளும் தனித்தனி பெருஞ் சோலையும் சிறு சோலையுமாக விருந்தன. இதனால், மண்ணுலகமும் அதன் கண்டங்களும் நாடுகளும் பொழில் என்னும் பொதுப்பெயர் பெற்றன. பொழில் என்பது சோலை; பொழிதல் திரளுதல்; பொழித்தல் திரட்டுதல். மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்பு பொழில். ஒரு பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறும் உரையைப் பொழிப்புரை யென்றல் காண்க. தொழில் காவல் மலிந்தியலும் பொழில் காவலன் புகழ் விளம்பின்று என்னும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவில் (சா. சா) பொழில் என்பது ஞாலத்தை (பூமியை)க் குறித்தது. நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குற என்னும் மணிமேகலை யடியில் (உஉ. உகூ) பொழில் என்பது (இந்து) தேயத்தைக் குறித்தது. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் என்னும் தொல்காப்பிய அடியில் (செய்யுளியல், எகூ) அச் சொல் (தமிழ்) நாட்டைக் குறித்தது. பரதகண்ட மெனப்படும் இந்து தேயம், பழங்காலத்தில் நாவல் மரத்தாற் சிறப்புற்றிருந்தமையால் நாவலம் பொழில் எனப்பட்டது. ஒரு காலத்தில் குமரிமலை முதல் பனிமலை (இமயம்) வரையும் முத்தமிழ் வேந்தர் ஆட்சி செலுத்தி யமையால், நாவலந் தண்பொழிற்க மூவர் தண்பொழில் என்றும் பெயர். பிற்காலத்தில் தமிழ் வழக்கும் தமிழாட்சியும் தெற்கே ஒடுங்கிவர, மூவர் தண்பொழில் என்பது தென்னாட்டை அல்லது தமிழ் நாட்டை மட்டும் குறித்தது. (சொல். கட். 17.) பொறாமை: பொறாமை என்பது அழுக்காறு; அஃதாவது, பிறர் செல்வங் கண்ட வழி வேண்டாது இருத்தல். (தொல். பொருள். 260. பேரா.) பொறியறை: பொறியறை- பொறியற்றது. காதறை மூக்கறை என்பனவும் அன்ன. (தொல். சொல். 56. சி. கணேச.) பொறை: (1) பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல். (கலி. 133.) (2) பொத்தை மலை; சிறுமலை. (சிலப். 11:68 அரும்பத.) (3) பொறையைப் பொத்தை என்பாரும் உளர். ஆவது; மட்சிறுமலை. (சிலப். 11: 68. அடியார்.) பொறையன்: பொறையன் என்பதைச் சேரர்குடி அல்லது குடும்பத்தின் ஒரு பகுதிக்கு அரசனாயிருந்தவனின் பெயராகக் கொள்ளலாம். பொறை என்பது பாறை அல்லது பொற்றை அல்லது குன்று என்று பொருள்படும். எனவே பொறையர் என்ற சொல் மலையும் குன்றும் நிறைந்த மலைநாட்டில் வாழும் மக்களையும் மன்னர்களையும் குறிக்கும். (சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள். 235.) பொறையுடைமை: (1) பொறையுடைமையாவது பிறர் செய்த குற்றம் பொறுத்தல். (திருக். பொறையுடைமை. பரிதி.) (2) பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய் தாரைத் தாமும் துன்பம் செய்யாது அவர்மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல். (திருக். பொறையுடைமை. மணக்.) (3) அஃதாவது காரணம் பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலை உடையர் ஆதல். (திருக். பொறையுடைமை. பரி.) (4) பொறை என்னும் விரதத்தையே தமக்கு உறுதியாகக் கொள்ளுதல். மெய், வாய், கண், மூக்கு, செவிகளுக்கு இத மானவை ஒழிந்து பிறிதொன்றினால் அந்தப் புலன்களுக்குத் தகாத குற்றங்கள் வந்ததாகில் பூவுக்கு மணமும் கரும்புக்கு இரசமும் போலப் பாவிக்கப்படாமற் சுபாவமாகப் படிமம் போல் இருத்தலும் விரதத்துக்கு இடையூறாகிய பசி தண்ணீர்த் தாகத்தைப் பொறுத்தலுமாம். (நாலடி. பொறையுடைமை. விள. உ.) போ போ: போ என்பது போகல், போதரல், போய், போந்து, போதர, போத, போன, போந்த, போயின முதலியனவாய் வரும். போ என்பதினின்று போகல் போக்கு முதலிய பெயர் பிறக்கும். போக்கு - குற்றம். (செந்தமிழ். 11: 121.) போட்டி: இகல் பகையால் இடும் போட்டி; இசல் விளை யாட்டாக இடும் போட்டி; வீம்பு வம்பிற்கு இடும்போட்டி. (சொல். கட். 59.) போது: பேரரும்பு. (திருக்கோ. 174. பேரா.) போர்: போர் என்னும் பெயர்ச் சொல் காரண இடு குறிப் பெயராக வழங்கப்படுகிறது. பிறமொழிகளில் போரைக் குறிக்கும் பெயர்களுக்குச் சிறப்பாக வேறு ஒரு பொருளும் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் போர் என்னும் சொல் பொரு என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த பெயர்ச் சொல். பொரு அல்லது பொருவுதல் என்பதற்கு ஒப்புதல் ஒத்திருத்தல் என்று பொருள். அதனால் பொருநன் என்பதற்கு, தனக்குப் பிறர் உவமம் ஆவதன்றித் தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான் என்று நச்சினார்க்கினியர் உரை எழுதி யிருக்கிறார். ஆகவே போர் என்னும் சொல் ஒத்திருத்தல் என்னும் பொருளைத் தன்னகத்து அடக்கி நிற்கிறது. இதில் இருந்து தமிழர்களுடைய போர் துறையைப் பற்றிய ஓர் அரிய செய்தி வெளியாகலாம். தமிழ்மக்கள் ஒத்த திறல் உடையாரையும் ஒத்த படை உடையாரையும் எதிர்த்துப் பொருவதே போராகும் என்ற கொள்கையுடையார். (தமிழ் உள்ளம். 42.) போற்றுதல்: போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரி யாமை. (கலி. 133.) ம மகன்றில்: எப்போதும் ஆணும் பெண்ணும் இணை பிரியா தனவும், சிறிது பிரிந்தது போலக் காணப்படினும் துயராற்ற மாட்டாதனவும் ஆகிய நீர்வாழ் பறவை. இணைபிரி மகன்றிலிற் பேர்தலாற்றான் (பெருங் 1: 53: 96) எனவும், துணைபிரி மகன்றி லொத்தாள் (சிந். 302) எனவும் வருவன கண்டு கொள்க. (குறுந்தொகை விளக்கம். 57.) மஞ்சிகை: கொட்டகாரமுமாம் (கொட்டாரம் என வழங்கும்) (பட்டின. 163. நச்.) மடம்: மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. (சிலப். 16: 86 அடியார். (இறையனார். 2. நச்.) (சீவக. 356. நச்.) (தொல். பொருள். 252. பேரா.) மடவரல்: மடம் வருதலையுடைய ஒருத்தி (ஐங்குறு. 76. விளக்கம். பெருமழை.) மடன்: ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமை. (அகம். 255. வேங்கட விளக்கு.) மண்டலம்: (1) மண்டிலம் என மருவிற்று. (மதுரைக். 190. நச்.) (2) மண்டலித்தல், வட்டமாதல். அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லில் பிறந்தவினை. மண்டலம், மண்டிலம் என மருவியும் வரும். மண்டலிப் பாம்பு, சுரமண்டலம், திங்கள் மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச் சாரி) முதலியன வட்டம் என்னும் வடிவுப் பொருளில் வந்தன. மண்டலம், வட்டம் என்னும் சொற்கள் circle என்னும் ஆங்கிலச் சொற்போல இடப் பகுதிகளையும் குறிக்கும். ஜயங்கொண்ட சோழமண்டலம் இந்த வட்டத்திற்குள் அவற்கெதிரில்லை வட்டம் என்பது, வட்டகை வட்டாரம் என்றும் திரியும். தமிழ் மருத்துவ முறையில் நாற்பத் தெண்ணாள் பகுதி ஒரு மண்டலம் எனப்படும். காலமும் இடத்தோடு ஒக்கும். இனி, மண்டலம் வட்டம் என்னும் சொற்கள் முழுமைப் பொருளினும் வழங்கும். திங்கள் வட்டமாய் இருக்குங்கால் பதினாறு கலைகளும் நிரம்பியிருத்தல் காண்க. ஆங்கிலத்தில் Round என்னும் சொல் whole, complte எனப் பொருள்படும். உலக வழக்கில் முழுமைப் பொருளில் வள்ளிது என்றோர் சொல் வழங்கி வருகின்றது. அது வட்டம் என்னும் சொல்போல வள் என்னும் பகுதியினின்று பிறந்த தாகும். வள்ளிதாய்ச் செல வாயிற்று என்றால் முழுதும் செலவாயிற்று என்பது பொருள். வள்ளிசாய் என்பது கொச்சைப் போலி. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 12 : 15; 64-64.) (3) மண்டலம் என்னும் தொகைச் சொல், மண் + தலம் என விரியும். பண்டைத் தமிழர் கடற் செலவில் தேர்ந்திருந்தனர் ஆதலின் உலகெங்கும் கலத்தில் சென்று நிலம் வட்டமாய் இருத்தலை நன்கு அறிந்திருந்தனர். பண்டை உலகத்தை ஏழ் தீவாகப் பகுத்துக் கூறினதும் இதை வற்புறுத்தும். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12: 65.) மண்ணீட்டாளர்: சுதையால் பாவை உள்ளிட்டன பண்ணு வார் ; மண் - சுதை; மண்ணோடு இயைந்த மரத்தனையர் (குறள் 576) என்றார் ஆகலின் குயவருமாம். (சிலப். 5: 30. அரும்பத ; அடியார்.) மண்டை: (கலம்) மண்டை இக் காலத்து மொந்தை என வழங்கப்படுகின்றது. (அகம். 96. வேங்கட விளக்கு.) மணம்: (1) தமிழ் மொழியில் மணம் என்று ஒரு சொல் வழங்கக் காண்கின்றோம். அதன் சொற்பொருளை ஆராய்ந் தால் மண்ணில் இருந்து மணம் தோன்றுகின்றது என்னும் உண்மை வெளிப்படுகின்றது. (சங்கநூற் கட்டுரைகள். I. 74.) (2) மண் என்ற வேர்ச் சொல்லில் இருந்து மணம் பிறக் கிறது. மண்+அம்=மணம். மண் என்ற வேர்ச்சொற்குப் பல பொருள்கள் உண்டு. (க) மண் = நல்ல நாற்றம். (எ-டு) முல்லை மணமிகுந்தது; முல்லை மணக்கின்றது. (உ) மண் = கழுவு. (எ-டு) வாள் மண்ணு மங்கலம். மண்ணி னான் = கழுவினான். (ஙு) மண் = ஒப்பனை. மண்ணிய கோலம் = புனைந்த கோலம். (ச) மண் = பொருந்து; இணை ; கலந்துகொள். -இப் பொருளின் அடிப்படையில் தான் திருமணம் எனும் சொல் பிறக்கின்றது. (வள்ளுவர் வழங்கும் மொழிநூல்.) மணி: மணி கழுவுதல் எனப் பொருள்படும். மண் என்னும் முதனிலையிற் றோன்றிய தமிழ்ச் சொல்; கழுவுத லாவது சாணைக் கல்லிற் றேய்த்து மாசுபோக்கித் தூய்மை செய்தல். (திருவாசக விரிவுரை. சிவபு. 1-5. மறைமலை.) மத்தளம்: மத்து ஓசைப் பெயர்; இசை இடன் ஆகிய கருவிகட்கு எல்லாம் தளம் ஆதலின் மத்தளம் என்று பெய ராயிற்று. (சிலப். 3: 26. அடியார்.) மதம்: மதம் என்றது காமக் களிப்பால் உண்டாகிய கதிர்ப்பை. (திருக்கோ. 69. பேரா.) மதி: kj>kj®>kâ = மயக்கஞ் செய்வதாய்க் கருதப் பட்ட நிலா. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 357.) மது: (1) இது மயக்கந் தரும் கள் வகையைச் சேர்ந்த தன்று. மற்று அதற்கு மாறாகத் தெளிவும் ஊக்கமும் தரும் இன்னீர் வகையைச் சார்ந்தது. இவ்வேறுபாட்டினை, மட்டு நீக்கி மது மகிழ்ந்து என ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் தமது விழுமிய பட்டினப் பாலைச் செய்யுளில் தெளிவாக விளக்கி இருக்கின்றார். மட்டென்னும் மொழி இங்கே கள்ளென்னும் பொருளில் வந்தது. (சங்க நூற் கட்டுரைகள். II. 25.) (2) kj®>kJ - மயக்கந் தருவது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 357.) மயில்: மை = கருப்பு. மயில் = கரியது, பச்சையானது, கருமை, நீலம், பச்சை என்பன இருவகை வழக்கிலும் ஒன்றாகக் கூறப்படுவதுண்டு. பச்சைமயில் நீலக் கலாபம் என்னும் வழக்கு களை நோக்குக. காளி, நீலி என்பன கொற்றவையின் பெயர்கள். திருமாலின் நிறம் கருமை, நீலம், பசுமை என முத்திறத்திற் கூறப்படும். நீலச் சேலையைக் கருப்புச் சேலை என்பது உலக வழக்கு. சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் என்னும் தமிழ்ச் சொல்லே மயூர என்று வட சொல்லில் வழங்குகின்ற தென்க. (ஒப்பியன் மொழிநூல். 309.) மரபு: (1) மரபு என்பது, காலமும் இடனும் பற்றி வழக்குத் திரிந்தக் காலும் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வ தோர் முறைமை. (தொல். பொருள் 313. பேரா.) (2) மரம் - மரபு. அடியுங் கவையுங் கிளையும் உடைய மரம் போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின் குலவழி மரபெனப் பட்டது. (ஒப்பியன் மொழிநூல். 249.) மருதம்: (1) பழைய காலத்தில் நெற்பயிரிடுதற்கேற்றவை களாகத் திருத்தப்பட்ட நிலங்கள், மருத மரங்களின் அருகே இருந்தமையாற் போலும் அவற்றிற்கு மருதநிலம் என அவர் பெயர் அமைத்தனர். (சிறுவர்க்கான செந்தமிழ். 63.) (2) மருவுவது மருதமாகும். மருவுதல் என்பது கலத்தல், கிட்டுதல், தழுவுதல் எனும் பொருட்டது. இப்பொருளை நடைமுறைச் சொற்களாலும் அறியலாம். மருமகன். வீட்டில் புதிதாக வந்து கலந்த மகன். பத்துப்பாட்டிலே இப்பொருள் பட்டு நிற்கும் சொற்களைக் காண்போம். மருவரல் = சேர்தல். மருவல் = கிட்டுதல். மருவழி = மருவின இடம். மருவூட்டுதல் = மருவுதலை உணர்த்துதல். மருவலர் = தம்மைத் தழுவாதவர், அஃதாவது பகைவர்; எனவே இச்சொற்களின் மூலவேர்ச் சொல் மரு என்பதே. மரு+து+அம்= மருதம் மருதம் சான்ற மருதத் தண்பணை என்ற மதுரைக் காஞ்சி வரியிலே மருதம் என்பது ஊடியும் கூடியும் போகம் நுகர்தல் என்று நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவதும் இங்குக் காணற்குரியது. ஊடல் என்பது பிரிவும் அன்று; புணர்தலும் அன்று; பிரிவுக்கும் புணர்வுக்கும் இடைப்பட்டநிலை. தலைவியின் அன்பைப் பெற அவளைக் கிட்டுகின்ற (மருவுகின்ற) நிலை. அவளது பிணக்கைத் தவிர்க்க அவளண்டை மருவி (சார்ந்து) நிற்கும் நிலையே மருதம். (அகத்திணைத் தெளிவு.) மருந்து: (1) மரு < மருந்து = நோயை நீக்கும் வாசனைத் தழை. மருந்துச் சரக்கு. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 357.) (2) உடம்பு நொந்துபோகும்படி செய்யும் நோயை வராமல் மறுப்பதுதான் மருந்து. நோயினால் உடம்பு கெட நாற்றத்தை அடையும். அக்கெடு நாற்றத்தை மறுத்து மருவினை (மரு- மணம்) அஃதாவது உடம்புக்கு இயற்கையாக உள்ள மணத் தினைப் பெறும்படி அருள்வது மருந்து எனப் பெற்றது. வந்த நோயை மறுத்து, வரும் நோயினையும் மறுத்து, இயல்பாக வந்து சேரும் சாவினையும் மறுத்து நிலையான இன்பத்தை அருள்வதே மருந்து என்று திருமூலநாயனார் திருவாய் மலர்ந் தருள்கின்றார். (பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 213.) மருள்: மருள் என்பது அறிவு இன்றியே மயங்கி இருக்கும் அது. (புறம். 28. ப. உ) மலங்கு: மலங்கு என்பது விலாங்கு என்னும் மீன். (நாலடி. 375. விள. உ.) மலிதல்: மலிதல் என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றான் மகிழ்தல். (தொல். பொருள். 499. பேரா.) மலை: மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமை யினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கற்களால் ஆக்கப்பட்டிருக் கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல் பிறங்கல் பொருப்பு வெற்பு என்றும்; ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் சிலம்பு என்றும்; மூங்கிற் காடுகள் உள்ள மலையை வரை என்றும்; காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும்; சிறிய மலையைக் குன்று, குவடு குறும்பொறை என்றும்; மண் மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும் மலைப் பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும். (சிறுவர்க்கான செந்தமிழ். 4.) மலைபடுகடாம் : மலைக்கு யானையை உவமித்து அதன் கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்த அதனால், இப் பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் கூறினார். (பத்து. மலைபடுகடாம்: நச்.) மலையாளம்: இடைக்காலத்தே தோன்றிய கல்வெட்டுக்கள் பலவும் சேரநாட்டை மலை நாடு எனவும் மலைமண்டலம் எனவும் குறிக்கின்றன. அது வழியே நோக்கின் மலைநாடு, மலைவள நாடு எனவும் மலைப்பால் நாடு எனவும் கூறப்படும் இயைபு பெறுவதாயிற்று. அப்பெயர்கள் பின்னர் வேற்று மொழியாளரால் மலையாளம் என்றும் மலபார் என்றும் சிதைந்து வழங்கப் படுவவாயின. அவரது மொழி மலையாளம் ஆயிற்று. (சேரமன்னர் வரலாறு. 58.) மழலை: இளஞ்சொல். (திருக்கோ. 104. பேரா.) மழவர்: சிலவீரர். உருவக் குதிரை மழவர் ஓட்டிய (அமகம். 1) என்றார் பிறரும். (மதுரைக். 395; 687. நச்.) மழு: மழு வென்றது வாய்ச்சியை; தறிகையும் ஆம். (புறம். 206. ப. உ) மள்ளன்: இளமைப் பருவத்தன். (முருகு. 262. நச்.) மறவன்: மறம் - வீரம். மறவன் - வீரன். இது பண்பு பற்றி வந்த பெயர். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 12.) மறை: (1) வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். (திருக். 1076. பரி) (2) உலகில் வாழும் உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிற்கும் தோற்றமும் முடிவும் இவ்வுலகமே அன்றி இதன்மேல் வேறொன்று மில்லை என எல்லாராலும் எளிதில் உரைக்கப்படும் கருத்தை மறுத்து உயிர்ப் பொருளின் வேறாய் உயர்ந்த பேருயிராகிய இறைவன் உண்டென்றும், இவ்வுலகு உயிர் பொருட் கெல்லாம் வேறாய்த் துன்பமே இல்லாத இன்ப அருளுலகு ஒன்று உண்டு என்றும் வற்புறுத்துவது பற்றி அந்த அறநூல் மறை என்று வழங்கப்பட்டது. (ஐங்குறு. 387. ஔவை. சு. து.) (3) நுட்பம். பருப் பொருள் அறிவினார்க்கு எளிதின் விளங்காதது என்பது பொருள். (கலி. கடவுள். உரைவிளக்கம். இளவழ.) (4) பகைவரால் எய்யப் படுகின்ற அம்புகளும் எறியப் படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாவாறு உடல் முழுதும் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை மெய்ம்மறை என்று வழங்குவது தமிழ் மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை என்ற பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக் கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் மறை என்ற பெயர் பெறும் அரண்போல் நின்று காத்து உதவும் நூல் ஆரணம் என்று பெயர் பெறும். மறை வேதம் என்று பெயர் பெறும். நூல்கள் ஆரணம் என்றும் பெயர் பெறும். அருமை ஆகிய அரணம் என்பதே ஆரணம் என்று ஆயிற்று, ஆருயிர் என்பது போல. ஆகவே ஆரணம் மறை என்பன ஒரு பொருள் குறித்த காரணச் சொற்களாகும். தீய நினைவுகளும், தீய சொற் களும், தீய செயல்களும் ஆகிய படைக்கலங்கள் வந்து பாய்ந்து கொல்லாதவாறு தடுத்து நின்று மறைத்து உயிரைக் காப்பதே மறை என்க. (பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள். 1-2) (5) மறை என்று வருமிடமெல்லாம் வேதம் எனப் பொருள் கூறுதல் பிற்கால வழக்கமாகும். வேதம் என்னுஞ் சொல் அறிவுறுத்துவது என்னும் பொருளிலும், மறை யென்னுஞ் சொல் மறைந்த நுண் பொருள்களைத் தன்னகத்தே கொண் டுள்ளது என்னும் பொருளிலும் வழங்குதலால் அவ்விரு சொற் களுள் ஒன்று மற்றொன்றின் மொழி பெயர்ப்பாதல் இயலாது. (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 119.) மறைமொழி: மறைமொழி - புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர் என்பார் பேராசிரியர். இனி, மறைமொழி என்பதற்கு நிறைமொழி மாந்தரது ஆணை யின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண் டுள்ள மொழி எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். (தொல்காப்பியம் நுதலிய பொருள். 264.) மன்றம்: (1) அரண் இல்லாத வீடு. (சிலப். 23: 46. அரும்பத.) (2) ஊர்க்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி. (முருகு. 226. நச்.) மன்றாடுதல்: நீதி மன்றத்திற் சென்று வழக்காடுதலை மன்றாடுதல் என்பர். இப்பொழுதும் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் என்ற வாசகம் வழங்கக் காணலாம். (தமிழ் விருந்து. 126.) மன்னர்: மக்களாற் செய்யப்படும் உழவுக்கும், பிற தொழிலுக்கும் காவல் செய்யும் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் பெயர் நிலைபெறுதல் என்னும் பொரு ளுடைய மன் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த காரணப் பெயராகும். மக்களது நல்வாழ்வு நிலைபெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப் பெறு வானாயினான். அதனால் அவனது குடும்பமும் நாட்டில் வழி வழியாக நிலை பெற்று வருவதாயிற்று. (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 131.) மன்னுயிர்: இறைவனும் உலக முதற் காரணமும் உயிர் களும் என்றும் அழியா நிலைபேறுடைய வாதலின் மன்னுயிர் ஆயிற்று. யாக்கை ஒழிய அதனோடு ஒழியும் உயிரன்று ஆதலின் அஃது அவ் யாக்கையினின்று செய்யும் வினைப்பயன் யாக்கை ஒழித்துச் செல்லுழியும் தொடரும் என்பது அறிவித்தற்கும் மன்னுயிர் என்பார். (திருக். தண்ட. 190.) மனையாட்டி: மனையாட்டி, அயலில்லாட்டி, பெண் டாட்டி, வினையாட்டி என்பவற்றால் பெண்பாலார் ஆட்சி யுண்மை துணியப்படும். (தொல். பொருள். மெய்ப். 25. ச. சோ.) மா மா: மா வென்பன விலங்கு. (தொல். பொருள். 587.பேரா.) மாக்கள்: (1) மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமை யின் ஐயறிவுடையர் என்று மாக்கள் என்றார். (சீவக. 1278. நச்.) (2) மாக்கள் எனப் படுவார் மன உணர்ச்சி இல்லாதார். (தொல். பொருள். 587. பேரா.) (3) மா என்பது விலங்கு; மாக்கள் என்றது, அவ்விலங்குப் பிறப்பினும் உயர்ந்து ஏனை மக்கட் பிறப்பில் தாழ்ந்து அவ் விரண்டின் நடுவணதாய் அவற்றிற்கு வேறானதொரு பிறப்பாம். இப் பிறவியுட்படும் மாக்கள் என்னும் உயிர்கள் விலங்கின் உருவமும் மக்கள் உருவமும் கலந்ததோர் உருவத்தை உடைய வாய் இருக்கும் என்ப. இங்ஙனமொரு படைப்பு விலங்குப் பிறப்பிற்கும் மக்கட் பிறப்பிற்கும் இடையே ஆண்டவனால் படைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென இக் காலத்து உயிர் நூல் வல்லாரும் உய்த்துணர்ந்து அங்ஙனம் உணர்ந்தவாறே இருப்பதொரு படைப்பினை ஆத்திரேலியா என்னும் நாட்டில் நேரில் கண்டு, தமது துணிபினை மெய்ப் படுத்துவ ராயினர். இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்கு முன்னரே நம் முதுதமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய தொல்காப்பியனார் இவ்வுண்மையை நன்கு தெளிந்து, அவ் வினத்தவராம் உயிர்கட்கு ஐந்து அறிவுகள் உண்டு என அறிவு வரையறை காட்டி மாவும் மாக்களும் ஐயறி வினவே (மரபியல் 32) எனத் தமது அரும் பெறல் நூலில் நூற்பா யாத்து உரைத்தது பெரிதும் நினைவு கூர்ந்து மகிழற்பாலதாகும். (திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 127-128) மாட்டி: மூள்வித்தற்கண் மூட்டி என நின்றவாறு போல மாள்வித்தற்கண் மாட்டி என நின்றது. (திருக்கோ. 284. பேரா.) மாட்டு: மாட்டு என்பது, பல்வேறு பொருள் பரப்பிற்று ஆயினும், அன்று ஆயினும் நின்றதனோடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (தொல். பொருள். 313. பேரா.) மாடகம்: (1) பாலிகை வடிவான விசிக்குங் கருவி. (சீவக. 1697. நச்.) (2) இஃதொரு யாழ் உறுப்பு. மாடம் +அகம் = மாடகம் என ஆயிற்று. இதன் பெயரில் இருந்தே இவ்வுறுப்பு ஓர் சிற்றகத்தை அஃதாவது ஒரு சிறு உள்ளிடத்தைத் தன்னில் அமையப் பெற் றுள்ள ஒரு மாடம் போன்ற உருவினைக் கொண்டிருத்தல் வேண்டுமென நாம் அறிகிறோம். (பாணர் கைவழி. 105.) மாடு: (1) மாடு= செல்வம். இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை - பொற்கட்டி. மாழை- மாடை (மாஷ- வடசொல்) பண்டைக் காலத்தில் உலக மெங்கும் கால் நடையே செல்வமாகக் கருதப் பட்டதினால் மாடு என்னும் விலங்குப் பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். (2) மாடு நின்ற அம்மணி மலர்ச்சோலை புக்கான் அநுமன் என்பர் கம்பர். பசுமாடு, காளைமாடு என்று பொருள் செய்தால் எளிய சொல் என்பீர்கள். கால்மாடு தலைமாடு என வழங்குகின்றோமே காற்பக்கம், தலைப்பக்கம் என்பதன்றோ உரை. மாடு - பக்கம். எனவே கம்பர் தொடருக்குப் பக்கத்து வானளவு உயர்ந்து நின்ற சோலை என்பது பொருள். மாடல்ல மற்றையவை என்ற திருக்குறளுக்குப் பிற செல்வங்கள் கல்விச் செல்வத்தின் பக்கம் இருப்பத் தகுதிஅற்றன எனப் பொருள் செய்யலாம். (தொல்காப்பியப் புதுமை. 77.) மாண்டார்: மாண்டார் என்ற வினையாலணையும் பெயர் இறந்தாரையே பெரும்பாலும் குறிக்கும். ஆனால் மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் என்ற திருக்குறள் மொழியில் அதற்கு மாட்சிமை உடையவர் எனப் பொருள் காண வேண்டி யிருத்தலின் மாள் என்ற அடியாகப் பிறக்கும் மாட்சி, மாண்பு முதலியவற்றுடன் மாளுதலையும் சேர்த்துணர்த்தலே தகுதி. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 86.) மாதம்: மாதம் என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான். மதி என்பதில் இருந்து தோன்றியது. (பழந்தமிழ். 233.) மாதர்க்கோலம்: கண்டு எவரும் காதலிக்கப் படும் ஒப்பனை. (சிலப். 5: 74. அடியார்.) மாப்பிள்ளை: மாப்பிள்ளை என்று வழங்கும் தொடர் மணம் பிள்ளை என்னும் இரு சொற்களால் ஆகியது. மணம்+ பிள்ளை= மணப்பிள்ளை. மகாநாடு என்பது மாநாடு என வழங்கப்படுதல் போல மணப்பிள்ளை மாப்பிள்ளை என்று மருவி வழங்கப்படுகிறது. (தமிழ்மொழிச் செல்வம். 88.) மாமை: மாந்தளிரின் தன்மை. (ஐங்குறு. 134. ஔவை. சு.து.) மாயோள்: (1) வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடையவள். (மறைமலை. முல்லை - ஆரா. 66) (2) மாயோள்- மாமை நிறத்தை உடையவள் மாமை நிறம் என்பது மாந்தளிர் போன்ற அழகிய நிறம். (குறுந்தொகை. 9. உ. வே. சா.) மாலை: இண்டை - தண்ட வடிவமாகத் தொடுத்த மாலை. தொடை - சதுரமாகத் தொடுத்த மாலை. தாமம் - கோத்த மாலை. கண்ணி - வட்ட வடிவமாகத் தொடுத்த மாலை. தொடை - தொடுக்கப்படுவது ; மாலை. (திருவிளை. தருமிக்குப பொறிகிழி. 6. ந. மு. வே.) மாற்றம்: மாற்றம் என்றால் சொல். வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் என்றார் மாணிக்க வாசகர். மாற்றம் என்பது தமிழிலே ஏட்டு வழக்கில் உண்டு. நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே மாட்ட என்பது பெருவழக்காக உள்ளது. (தமிழ் விருந்து. 92..) மானம்பு: புரட்டாதித் திங்களில் குழந்தைகள் அம் பெடுத்து வாழை மரத்தைக் குத்தும் விழா இன்றும் நடை பெறுகின்றது. மானம்பு (மகார் நோன்பு என்பதன் மரூஉ) என்றும் கிலுகிலுப்பை எடுத்தல் என்றும் இவ் விழாவினை அழைக்கின்றனர். (தொல்காப்பியப் புதுமை. 78.) மி மிகை: மிகை என்பது, கல்லாமையும், செல்வமும், இளமை யும் முதலாக வரும் உள்ள மிகுதி. (தொல். பொருள். 260. பேரா.) மிச்சில்: மிகுந்தது மிச்சில்; இது மிச்சம் எனவும் வரும். இப்பொருள்பட வரும் பிறிதொரு சொல் எச்சம்; எஞ்சியது, எச்சம். எஞ்சுதல் - குறைதல். மிகுதல் குறைதல் என்னும் நேர் மாறான இருவினைகள் ஒரே பொருளைக் குறித்தல் இரு வேறு வகைப்பட்ட கருத்து நோக்கத்தால். வேண்டும் அளவு போக அவ்வளவிற்கு மிகையாய் நின்றது மிச்சம் அல்லது மிச்சில்; மிகுதியுமாம். உள்ள பொருளில் கொள்வது கொள்ளக் குறைந்தது எச்சம் அல்லது எச்சில். மிச்சில் என்பது கொள்ளப்ட்ட பகுதி நோக்கி நின்றது. எச்சில் என்பது முழுப் பொருளை நோக்கி நின்றது. (திருக்குறள். தண்ட. 85.) மிசை: மிசை - உணவு. மிசையப் படுதலின் உணவிற்கு மிசை என்பது பெயராயிற்று. (ஐங்குறு. 81. விளக்கம். பெருமழை.) மிஞிறு: மிஞிறு (வண்டு) என்பது ஞிமிறு என்றாயிற்று. (அகம். 78. வேங்கட விளக்கு.) மிலேச்சர்: ஆரியர், பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; பெலுச்சி என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சி தானத்தின் வழியாகப் பரத நாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சர் என அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் மிலேச்சர் ஆரியர் எனப் போந்தமை காண்க. (மறைமலை. முல்லை. ஆரா. 73.) மிளகு: மிள - கார்ப்பு. கு - பண்புப் பெயர் விகுதி. மிள - காரம். மிளகாய் - மிளப்பு (கிராம்பு) மிளகரணை (கார்க்கின்ற அரணைப் பூண்டு) வடமொழியார் - ம்ருங் பிராணத்யாகே, ருங் என்ற பகுதி உயிர் விடுதல் (சாதல்) பொருளில் வரும். நாவின் நுனி இதனால் பாதிக்கப்படுகிறது என்று (மிரியதே) சாதல் என்ற பொருளுடைய ம்ருங், பகுதியினின்றும் மரீச என்ற சொல் தோன்றிய தென் கின்றனர். பொருந்தாப் பகுதியில் தோன்றியதாய் இதுவும் கூறப்படு கின்றது. உயிரைக் காக்கும் மிளகு உயிரைப் போக்கும் ம்ருங் பகுதியினின்றும் வந்ததாய்க் கூறுவது கொள்ளத் தக்கதன்று. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6: 117.) மீ மீளி: மருடல், வெகுடல் என்பன மருளி வெகுளி என நின்றாற்போல மீடல் என்பது மீளி என நின்றது. (திருக்கோ. 151. பேரா.) மீன்: வடமொழியில் மீனைக் குறிப்பது மீ (துன்புறுத்து) என்னும் அடிச்சொல் உடையது. திராவிட மொழிகளில் மீன் என்பது அப் பொருளில் வழங்கும் ஒரே சொல்லாகவும் தமிழ் முதலான எல்லா மொழிகளிலும் வழங்குவதாகவும் உள்ளது. ராஜமஹால் மொழியிலும் மீன் உள்ளது. கோண்டு மொழி யில் மீந்த் என உள்ளது. தவிர, வடமொழியில் கூறப்படும் அடிச்சொல் பொருந்தாததாய்த் தோன்ற, திராவிட அடிச் சொல்லோ மிக்க பொருத்த முடையதாய் விளங்குகின்றது. மின் என்னும் திராவிட அடிச்சொல் முதல் நீண்டு மீன் என் றாயிற்று. இதே அடிச்சொல் விண்மீன் என்ற தொடரில் நட்சத்திரத்தைக் குறித்தலும் காணத் தகும். மின்மினி என்ற உயிர் வகையும் உள்ளது. நீர் நிலைகளில் அலைகளுக்கு இடை இடையே மின்னி ஒளிரும் உயிர்களை இப் பெயரால் குறித்தல் இயற்கையானது. (மொழிவரலாறு. 115) மு முக்கோல்: இறை, உயிர், உலகு என்னும் மூன்றும் மயங்கிய மயக்கமே உலகம் என்பதற்கு அறிகுறியாக மூன்று கோலை முறுக்கிச் செய்ததொரு கோல். இது துறவோர்க்குரியது. இனி, அறம், பொருள், இன்பம் மூன்றற்கும் அறிகுறியாகிய கோல் எனலுமாம். (கலி. 9. விளக்கம். பெருமழை.) முகம்: முனைமுகம் வினைமுகம் என்னும் இடங்களில் முகம் என்னும் சொல் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந் துள்ளது. வேற்றுமை உருபாகப் பயின்றுள்ள இச்சொல்லை ஆரிய மொழியினின்றும் வந்ததாகக் கூறுவது தவறு. முகம் என்பது தனித் தமிழ்ச் சொல்லே. (வள்ளுவர் வகுத்த அரசியல். 20-1.) முகவை பாடுதல்: பொலி பாடுதல்; முகவை என்றார், நெல்லு முகந்து கொடுக்கப் படுதலாலே; புகர் முக முகவை (புறம். 371.) போல. (சிலப். 10: 137. அரும்பத.) முட்டுதல்: முட்டுதல், உடம்பால் தீண்டுதல். தாக்குதல், கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல். (குறுந்தொகை. 28. உ. வே. சா.) முடங்கர்: முடக்கமான இடம். (அகம். 147. வேங்கட விளக்கு.) முடங்கு இறை: கூடல்வாய் ; கூரையின் இரு பகுதிகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் மூட்டுவாய். (மறைமலை. முல்லை. ஆரா. 75.) முத்தம்: முட்டு > முத்து > முத்தம். (முக்த - வடமொழி) ஆமணக்கு குருக்கு முதலியவற்றின் விதைகள் முட்டி வெடிப்ப தால் முதலாவது முத்தெனப் பட்டன. அவ் விதைகள் போற் சிப்பிக்குள்ளிருக்கும் மணியும் முத்து எனப்பட்டது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 358.) முத்தி: முத்தியாவது எங்கும் ஒக்க வியாத்தியை (நிறைந் திருத்தலை) அடைந்திருத்தல். (திருக்கோ. 197. பேரா.) முத்து: முத்து என்பது, தமிழில் சிறிதாய் உருண்டு திரண் டிருக்கும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும். (1) கிளிஞ்சலில் விளையும் மணி வகை. முறிமேனி முத்தம் முறுவல். (2) உருண்டு திரண்ட விதை. எ-டு; ஆமணக்கு விதை. (3) உருண்டு திரண்ட ஆட்டக்காய். (4) பெரியம்மைக் கொப்புளம். (5) கண்ணீர்த் துளி பருமுத்துறையும் (சீவக. 1318) (6) பனிநீர்த் துளி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய். (பரிபா. 10,13) உருண்டு திரண்டிருக்கும் எண்ணெயுள்ள விதைகள் முத்தென்றே பெயர் பெற்றுள்ளன. எ-டு: ஆமணக்கு முத்து (முத்துக் கொட்டை, கொட்டை முத்து) குருக்கு முத்து, வேப்ப முத்து. முத்துச் சம்பா, முத்துச் சோளம் என்பன உருண்டு திரண்டு முத்துப்போலிருப்பன. உருண்டு திரண்டுள்ள கோரைக் கிழங்கு முத்துக் காசு எனப்படுகிறது. முத்து பெரிதாயிருப்பின் முத்தம் எனப்படும். அம் என்பது ஒரு பெருமைப் பொருள் ஈறு. ஒ. நோ : மதி = நிலா. மதியம் = முழுநிலா. நிலை = தேர் நிலைபோற் சிறிய இடம். நிலையம் = புகைவண்டி நிலையம் பெரிய இடம். விளக்கு: வீட்டு விளக்குப் போல் சிறியது. விளக்கம்; கலங்கரை விளக்கம்போற் பெரியது. (தமிழ் வரலாறு. 16.17.) முதுகண்: முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞரா யுள்ள இளைஞர்க்கும் பெண்டிர்க்கும் அவர்கள் பொருள் களுக்கும் பாதுகாவலாக நிலவிய ஆண்டில் முதிர்ந்த ஆண் மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. இதனை இச் சுந்தர பட்டனையே முதுகண்ணாக வுடைய இப் பொன்னார்மேனி பட்டன் மாதா உமையாண்டாளும் (S. I. I. vol. v. No. 649.) எனவும், இவனையே முதுகண்ணாக வுடைய இவன் பேரன் சொக்கன் ஆராவமுதும் (S. I. I. Vol. Vi. No. 34) எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர்களால் உணரலாம். பிறர்க்கு முதுகண்ணாக இருப்பவன் முதுகண்ணன் என்பது வெளிப் படை (உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் ஒரு சங்கச் சான்றோர்.) (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 132-133.) முதுவாய்க் கோடியர்: அறிவையும் அதற்கேற்ற வாயையும் உடைய கூத்தர். (குறுந்தொகை விளக்கம். 78.) முந்நீர்: (1) யாற்றுநீரும், ஊற்றுநீரும், மழைநீரும் உடைமை யால் கடற்கு முந்நீர் என்று பெயர் ஆயிற்று; அன்றி முன்னீர் என்று ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர் என்றும் உரைப்ப. (புறம். 9. ப.உ.) (2) நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய மூன்று தொழிலும் உடைமையின் முந்நீர்: ஆகுபெயர். (சீவக. 5. நச்.) (3) முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்று நீர் மேனீர் என இவை என்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீர் ஆத லானும் இவ்விரண்டும் இல்வழி ஊற்றுநீரும் இன்றாம் ஆத லானும் இவற்றை முந்நீர் என்றல் பொருந்திய தன்று முதியநீர் எனின் நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின் முச்செய்கையை உடைய நீர் முந்நீர் என்பது. முச்செய்கை யாவன மண்ணைப் படைத் தலும், மண்ணை அழித்தலும், மண்ணைக் காத்தலுமாம். (சிலப். 17. அடியார்.) (4) இச்சொல் முப்புறமும் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெரும் நீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும் தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதனையும் இடைக் கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை. (தமிழ்க்காதல். 183.) மும்முரம்: முவ்வுரம் என்பதே மும்முரம் என்று வழங்கு கின்றது. முவ்வுரமாவது மூன்று உரம். உரம் என்பதற்குப் பொதுவாக வலிமை என்று பொருள் சொல்லுகிறார்கள். மூன்று வலிமைகள் ஒன்று சேரும்போது காரியம் மும்முரமாக நடக்கிறது என்று சொல்வது நேரக்கூடியதுதான். அறிவுத் திறமை, காரியத்திறமை, விருப்பம் என்பவையே அம்மூன்று வலிமைகளாம். இந்த மூன்று வலிமைகளையும் இச்சா ஞானா கிரியா சக்திகள் என்பர். (செந்தமிழ்ச் செல்வி. 18 :3) முரசு: முரண் > முரடு > முரசு. உருட்டுக்கட்டையில் கடைந்து செய்த மத்தளம். முரடு > முருடு. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 358.) முரம்பு: கல் விரவி உயர்ந்து இருக்கும் நிலம். (திருக்கோ. 202. பேரா. குறுந். 400. சௌரி.) முரவை: அரிசியிற் காணப்படும் வரி. மிக்க வேக்காட்டி னாலும் காய்ச்சலாலும் அரிசியின்கண் கட்டுவிட்டுக் காட்டும் வரிகளும் முரவை எனப்படும் என்பாரும் உளர். (திருவொற்றி முருகர். 143.) முருகன்: மலையிடை வாழ்ந்த தமிழ்மக்கள் தங்கட்குக் கண்கூடாகக் காட்சியளித்த இயற்கையை அடிக்கடி கண்ணாற் கண்டு உளத்தால் முகந்து, அதை இடையறாது நினைந்து நினைந்து அதன்கண் படிந்த வாழ்வு நடாத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் இயற்கையினுள் பிரிவின்றி விராவி நிற்கும் அழகையும் அழகின் மாறாத இளமையையும் இளமையிலூரும் அழியா மணத்தையும் இவையுடைய ஒன்று எல்லாவற்றையுங் கடந்து மாறுதலின்றி ஒளிருந் தன்மையையுங் கண்டார்கள். இவ்வழகு, இளமை, மணம், கடவுட்டன்மை ஆகிய இயல்பு களைக்கொண்ட ஒன்றைப் பண்டைத்தமிழ்மக்கள் முருகு என்னுஞ் சொல்லால் அழைத்துப் போற்றினார்கள். முருகு என்பது பொருள் பதிந்த ஒரு சொல். அம்முருகை உடையவன் முருகன். (முருகின் தொன்மை. திரு. வி.க.) முருகு: (1) முருகு என்னும் முதல்நிலை அன் என்னும் ஆண்பால் இறுதிநிலை ஏற்று முருகன் ஆயிற்று. ஆகவே முருகினின்றும் முருகன் பிறந்தான் என்க. முருகுக்கும் முருக னுக்கும் பொருளில் வேற்றுமையுண்டா எனின் இல்லை என்க. இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன. முருகே முருகன். முருகனே முருகு. (முருகின் தொன்மை. திரு.வி.க) (2) தெய்வத் தன்மை. (மதுரைக். 181. நச்.) முல்லை: (1) இயல்பு, நிலை, தன்மை என்பது முல்லைச் சொல்லின் பொருள் தன்னிலை மாறியவனை மொல்லைமாறி (முல்லைமாறி) என வழக்கில் வையக் கேட்கின்றோம் (அறிவன் முல்லை, கணிவன் முல்லை, இல்லாண் முல்லை, மூதின் முல்லைஎன்பனபுறத்துறைகள்.) (தொல்காப்பிய புதுமை. 77.) (2) கல் - கலை; தொல் - தொலை; கொல், கொலை, என்றாயது போன்று முல் - முலை என்றாயிற்று. பெண்ணின் அழகு, உயர்வு, இயல்புகளை மிகுதிப்படுத்தும் உறுப்பாதலால் முலை எனப் பெயரிட்டனர். முலையிலாள் பெண் காமுற்றற்று என்ற வள்ளுவர் வரியும் இதனை வற்புறுத்தும். எனவே முல் என்பதே வேர்ச்சொல். பெருங்கதையில் முல் எனும் சொல்லடியாக முல்லான் என்று சொல்லாக்கி யுள்ளதைக் காணலாம். அகப்பொருளிலே முல்லை என்பது அன்பு, கற்பு முதிர்ந்து மிகுதிப்பட்டிருத்தல் எனப் பொருள்படும். முல்லைத்திணை இல்லறத்தின் தனிப்பெருஞ் சிறப்பை எடுத்துக்காட்டுவதாகும். மணமக்கள் பிரிவால் உளதாகும். வருத்தத்தைத் தாங்கி ஒருவரை ஒருவர் நினைத்து ஏங்கி அன்பு மிகுதிப்பட்டிருத்தலும் அதன் நிமித்தமும் முல்லையாகும். (அகத்திணைத் தெளிவு. முழுத்தம்: பொருத்தங்கள் முழுதும் பொருந்திய பொழுது தான் முழுத்தம். பிறரால் முகூர்த்தம் எனத் திரித்து வழங்கப் பெறுகின்றது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 244.) முழுமை: இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்றமுதிர்தல். (ஐங்குறு. 5. ஔவை. சு. து.) முளமா: (1) முளமா - முட்பன்றி. இது பெரும்பான்மையும் முளவுமா என்றே வழங்கப்படுதலின் முளமா என்புழி நிலை மொழி ஈறுகெட்டதென்றே கொள்ளல் வேண்டும். இதனை முள்ளம்பன்றி என்று இக்காலத்தார் வழங்குப. (ஐங்குறு. 364. விளக்கம். பெருமழை.) (2) முள்ளையுடைய விலங்கு முளவுமா என்றழைக்கப் பட்டது. எய் என்றும் எய்மான் என்றும் சங்க நூல்களில் அழைக்கப்படும். முள்ளம்பன்றியின் மேற்புறத்தில் கழுத்தில் இருந்து தொடங்கி நீண்ட முட்கள் உள்ளன. இதை எய்ம்முள் என்று சங்க நூல்களில் அழைப்பர். நீண்ட கோலின் நுனியில் இரும்பு முள்ளைச்செருகி எறிவதற்காகப் பயன்படும் ஊசியை எறியூசி என்பர். இந்த எறியூசியை எய் என்றும் அழைப்பர். இந்த எறியூசி போன்ற எய்களை உடலில் நிறைய உடையதால் எய்மான் என்றழைக்கப்பெற்றது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 402.) முறை: (1) அண்ணன் அம்மான் என்றாற்போல்வன முறை. (மலைபடு. 185. நச்.) (2) முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல். (கலி. 133.) முன்தேற்று: (1) தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்து தம் உள்ளத்துறுதியைப் பிறர்க்குத் தெளிவுபடுத்தும் உலகியல் வழக்கினை முன்தேற்று (சொல். 383) என்ற சொல் லால் ஆசிரியர் (தொல்காப்பியர்) குறிப்பிடுகின்றார். (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 142.) (2) தெய்வத்தின் முன்நின்று சத்தியம் செய்து தெளிதல். (தொல். சொல். 383. சி. கணேச.) முன்றுறை: துறைமுகம். இது துறைமுன் எனற்பாலது முன்றுறை என முன்பின்னாக மாறி நின்றது. (ஐங்குறு. 185. விளக்கம். பெருமழை.) முன்னம்: முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப் படச் செய்தல். (தொல். பொருள். 313. பேரா.) முன்னீர்: முற்பட்ட நீர்மை; அஃதாவது உதிரம் உற வறியும் என்னும் பழமொழி. (சீவக. 1910. நச்) முனிதல்: முனிதல் என்பது வெறுத்தல். அஃது அருளும் சினமும் இன்றி இடைநிகர்த்ததாதல். (தொல். பொருள். 260. பேரா.) மூ மூலப்படை: படையுள் சாலச் சிறந்தது மூலப்படையே. அப்படைவீரர் வாழையடி வாழைபோல் மன்னர்க்குப் படைத் தொழிலாற்றும் மறக்குலத்தினர். பரம்பரையாற் பெற்ற பேராண்மையும் மனத் திண்மையும் உடையவர்; பகைவரது வெம்மையைத் தாங்கி நிலைகுலையாது நின்று போரிடும் தன்மையர். இத்தகைய மூலப்படையைத் தொல்படை என்றார் திருவள்ளுவர்(762.) (தமிழர் வீரம். 13.) மூலர்: மூலத்தைக் கண்டவர் மூலர். மூலம் என்பது மூலமாக முதன்மையாக ஆதாரமாக இருப்பது; அதுதான் வேர். அது அடி, கிழங்கு என்றும் பெயர்பெறும். (பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 215.) மூழிவாய்: பூவிடு பெட்டி. (சீவக. 833. நச்.) மெ மெய்: (1) மெய் என்பதூஉம் அறிவு என்பதூஉம் ஒன்று. என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழி யாது நிற்றலின் மெய்யாயிற்று. (திருக். 355. பரி.) (2) ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீ ருயிர்க்கும் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்கும் தன்மை பெற்ற உடம்பாய் (மெய்யாய்) நிற்றலின். (தொல். எழுத்து. 9. நச்.) மெய்ப்பாடு: (1) மெய்ப்பாடு என்பது சொற்கேட் டோர்க்குப் பொருள் கண்கூடாதல். (தொல். பொருள். 313. பேரா.) (2) மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத் தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல். (தொல். பொருள். 249. பேரா.) (3) மெய்ப்பாடு என்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின்கண் தோன்றிய விகாரத்தின் விளைவு. (திருக்கோ. 1. பேரா.) (4) மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் புறவுடல் இயற்குறியாம். மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப்பாடு என்றது ஆகுபெயர். (தொல். பொருள். மெய்ப். முன்னுரை. ச. சோ.) மெய்ம்மறை: மெய்புகு கருவி (கவசம்) (பதிற்று. 14. ப. உ.) மெல்லியல்: மெல்லியல் என்பது மென்மையைத் தனக்கு இயல்பாக உடையாள் என்றவாறு; மென்மை என்பது பெண் டிர்க்கு மிக இயல்பு; அதனைத் தனக்குச் செய்துகோள் அன்றி இயல்பாக உடையாள் என்றவாறு. (இறையனார். 2. நச்.) மெல்லெழுத்து: மெல்லென்று இசைத்தலானும் மெல் லென்று மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத் தாயிற்று. (தொல். எழுத்து. 20. நச்.) மென்புலம்: மருதமும், நெய்தலும். (புறம். 42. ப. உ.) மே மே: மே என்பது வகரவுகரம் விரியப் பெற்று மேவு, மேவுதல், மேவி, மேவ, மேவினன் முதலியனவாயும் யகரம் விரியப்பெற்று மேய, மேயின முதலியனவாயும் வரும். மே என்பதினின்று மேவினர், மேவார் முதலிய பெயர்கள் பிறக்கும். மேவு என்பதே இயற்கை முதனிலை என்றும் மேய என்பது மேவிய என்பதன் விகாரம் என்றும் கூறுவாரும் உளர். தொல் காப்பியச் சொல்லதிகார உரையிலே நச்சினார்க்கினியர் உயி ரீற்று வினைப்பகுதி பதினொன்றெனக் கூறி ஏகார ஈற்றுக்கு மே என்பதனைக் காட்டி மேவினான் என உதாரணமுங் காட்டினார். (செந்தமிழ். 11: 119.) மேகலை: கலையின் மேல் அணி மேகலை. (கலை - ஆடை) (தொல். பொருள். மெய்ப். 15. ச. சோ.) மை மையாத்தி: மயங்கா நின்றாய். (மையாத்தல்) இறுமாத்தல், செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். (திருக். 1112. பரி.) மொ மொக்கணி: மொக்குதல் - குதட்டித் தின்னுதல். கொக்கு மொக்கிக் கக்கி விக்கும் அச்சோலைக் குறுங்குடியே என்னும் ஒட்டக்கூத்தர் பாடலிலும் இப்பிரயோகம் காணலாம். குதிரைகள் தம் இச்சையில் உண்ணும்படி கொள்நிரப்பியணிந்து (கட்டி) விடுதல்பற்றி இக்கொள்ளுப்பைகள் மொக்கணி எனப் படும். (செந்தமிழ்ச் செல்வி. 4: 160.) மோ மோரியர்: மோரியர் ஆவார் சக்கரவாள சக்கரவர்த்திகள்; விச்சாதரரும் நாகரும் என்ப. (புறம். 175. ப. உ.) ய யவனிகா: திரைச் சீலை என்னும் பொருள் உடைய எழினி என்னும் சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழைய தமிழ் நூல்களிலே வழங்கப்பட்டுள்ளது. சம்கிருத மொழியில் ழ கர எழுத்து இல்லாதபடியால் சம்கிருதக்காரர்கள் எழினியில் உள்ள ழகரத்தை உச்சரிக்க முடியாமல் ழகரத்தை வகரமாக்கி உச்சரித்தார்கள். அஃதாவது எழினியை எவினி என உச்சரித்தார்கள். பிறகு எவினி, யவனியாகி அதன் பின்னர் யவனி, யவனிகா ஆயிற்று. எழினி பரம்பரையைச் சேர்ந்த அரசன் ஒருவன் வட ஆர்க்காடு மாவட்டம் போளூருக்கு அடுத்த திருமலை என்னும் ஊரிலே குன்றின் மேலேயுள்ள சிகாமணிநாதர் கோவிலில் இயக்கன் இயக்கியர் திருமேனியைப் புதுப்பித்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. இச் சாசனம் தமிழிலும் சம்கிருதத் திலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதி சாசனம் இந்த அரசனை எழினி என்று கூறுகிறது. சம்கிருதப் பகுதிச் சாசனம் எழினியை யவனிகா என்று கூறுகிறது. அஃதாவது தமிழ் எழினி சம்கிருதத்தில் யவனிகா என்று அமையும் என்பதை உள்ளங் கை நெல்லிக்கனிபோல் விளக்குகிறது. (அஞ்சிறைத்தும்பி. 103 -112.) யா யா: யானையைக் காட்டும் உருவ எழுத்துக்கள் மொகஞ் சதரோ அரப்பா நாகரிகத்தில் காணப்படுகின்றன. சீனாவில் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்ட உருவ எழுத்துக்களில் யானையை நமது தமிழ் எழுத்தான யா வைத் தலைகீழாக எழுதினாற்போல் எழுதினர். அதில் நான்கு கால்களும் துதிக் கையும் வாலும் காட்டப்பட ஆறு கோடுகள் ஓர் உடலுடன் சேர்க்கப்பட்டு எழுதப்பட்டன. யானையைக் குறிக்கும் உருவ எழுத்துப் பின்னர்ச் சீன மொழியில் முதல் அமைச்சரைக் குறித்து வழங்கிற்று. தமிழிலும் யா என்ற எழுத்து தலைகீழாக எழுதப்பட்டால் யானையின் உருவெழுத்துப் போலத் தோன்று வதைக் காணலாம். யானைக்கும் ஆண், ஆண்டவன் என்று சொற்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதலாம். ஆதலின் யானையைக் குறிக்கும் எகிப்தியச் சொல்லாகிய (Abu) அப் (Aub) என்பதும் யானை என்ற தமிழ்ச் சொல்லும் மிக பழங்காலத்திலே தொடர்புடைய வரலாறுடையவை என்று கருதலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 317 - 372.) யாக்கை: (1) யாக்கை - எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டது. அஃது ஆக்கை என மருவிற்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 288.) (2) யாக்கை என்பது பிணிப்பு. ஆன்மாவைச் சுக்கில சுரோணிதங்களிலே கூட்டிக் கட்டிவிக்கையினால் உடம்பிற்கு யாக்கை என்று பெயராயிற்று. (நாலடி. யாக்கை நிலையாமை. தருமர்; விள. உ.) யாப்பு: யாப்பு என்பது, அடிதோறும் பொருள்பெறச் செய்வதோர் செய்கை. (தொல். பொருள். 313. பேரா.) யாமம்: (1) யா - கட்டு. உயிர்களை உறக்கத்திற் பிணிப்பது. (வடசொற்றமிழ் அகரவரிசை. 307.) (2) யாமம் என்பது நள்ளிரவு (இரவின் நடுக்கூறு) குறிக்கும் தமிழ்ச்சொல். ஏழரை நாழிகைகொண்ட நாளின் எட்டில் ஒரு பகுதி சுட்டும் ஜாமம் வடசொல். இவற்றை ஒன்றெனக் கருதி மயங்குதல் தவறு. (தொல்காப்பியர் பொருட்பலம். 14-15.) யாழ: யாழ - அசை. அசை மொழிகளிலும் இது போன்ற இன்னோசை மொழிகள் கண்டு அவற்றைப் பயன்படுத்துந் தமிழ்ச் சான்றோரின் இனிமையுணர்வு பெரிதும் உணர்ந்து மகிழற்பாலது. (கலி. 61. உரைவிளக்கம். இளவழ.) யானை: உம்பல் உயர்ந்தது; உவா திரண்டது; ஓங்கல் மலைபோன்றது; கரி கரியது; கள்வன் கரியது; கறையடி உரல் போன்ற பாதத்தையுடையது; குஞ்சரம் திரண்டது; கைம்மா துதிக்கையுடைய விலங்கு; கைம்மலை கையையுடைய மலை போன்றது; தும்பி துளையுள்ள கையையுடையது; நால்வாய் தொங்குகின்ற வாயையுடையது; புகர்முகம் முகத்தில் புள்ளி உள்ளது; புழைக்கை (பூட்கை) துளையுள்ள கையையுடையது; பெருமா பெரிய விலங்கு; பொங்கடி பெரிய பாதத்தையுடையது; யானை (ஏனை) கரியது; வழுவை உருண்டு திரண்டது; வாரணம் சங்கு போன்ற தலையுடையது, அல்லது புல்லை வாரிப் போடுவது. (சொல். கட். 63.) யானைக்குருகு: யானைபோலும் குரல் உடைமையான யானையங்குருகு எனப்படும் பறவை....... இதற்கு வண்டாங்குருகு எனவும் பெயருண்டென்பது நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படுவது. (அகம். 145. வேங்கட விளக்கு.) வ வகுத்தல்: வகுத்தல் என்பது பிரித்தல் என்று பொருள் படுவதால் பகுத்தல் என்னுஞ் சொல்லுடன் நெருங்கிய கேண்மையுடையது. வகுத்தலும் பகுத்தலும் வகு, பகு என்னும் அடிகளாற் பிறப்பன; இவ் அடிகள் இரண்டும் ஒன்றே என்று கருத இடம் உண்டு. பகர வகரங்கள் உதட்டில் பிறக்கும் ஓசைகள் ஆனமையின் ஒன்று மற்றொன்றாய்த் திரியும். வண்டி என்னுந் தமிழ்மொழி தெலுங்கில் பண்டி என்றும் ஆங்கிலத்தில் bandy என்றும் வருவது உணரத்தக்கது. பகர வகரங்களே அன்றி மகரமும் இதழிற் பிறக்குமாதலின் இம்மூன்றும் விரவி வருவ துண்டு. செம்மை, செவ்வை, செப்பம் முதலியவற்றையும் கும்பல், குப்பல், குவியல் என வருபவற்றையும் சேர்த்தறிய இது நன்கு புலப்படும். ஆதலால் பகு, வகு எனுமிவற்றுள் எது முந்தியது என்று ஐயமறக் கூற இயலாதேனும் அவை இரண்டும் ஒன்றே என்பது வெளிப்படை. பகு என்னும் முதல் நிலையிலிருந்து பகிர், பகிர்தல் என்ற சொற்கள் தோன்றும் வண்ணம் வகு என்பதிலிருந்து வகிர், வகிர்தல் என்ற மொழிகள் பிறக்கும். வகிர் - பிளவு, வழி. வகிர்தல் - பிளத்தல். அன்றியும் வகுதி என்றொரு சொல்லும் உண்டு. இது, பகுதி என்பதைப்போல் தி ஈறுபெற்றுவரும் ஒரு பெயர். பகுதி - பகுப்பு. வகுதி - வகுப்பு. தொகுதி. தகுதி மிகுதி என வருவனவும் இத்தகையவே. இனி பகுதி என்பது பாதி என்று நின்று அதற்குமேல் பாதித்தல் - கூறுசெய்தல் என வருமாறு, வகுதி என்பது வாதி என நின்று அதன்மேல் வாதித் தல் என்றும் வரலாம். அங்ஙனம் ஆயின் வாதை என்பதும் மேற்கூறியவற்றுடன் ஒற்றுமையுடையதாகும். வகிர் என்ற சொல்லிற்கு வழி என்ற பொருளும் வாதித்தல் என்பதற்குப் பேசுதல் என்ற பொருளும் பொருந்துமோ எனின் சொல்லுதும். அறு என்னும் முதனிலையின் பொருள் பிரி என்பது. இது ஆறு என்று நின்று வழி என்று பொருள்தரும். ஆறு - அறுக்கப்பட்டது. அங்ஙனமே வகிர் - வகுக்கப்பட்டது. மேலும் அறு என்னும் அடியாக அறை என்ற மொழி பிறக்கும். இதற்குச் சொல் என்ற பொருளுண்டு. அறைந்தான் - சொன்னான். ஆதலின், வாதித்தல் - பேசுதல். வகுத்தல் என்ற தொழிற்பெயரும் பேசுதல் என்னும் குறிப்பில் வரும். இது கூறுதல் என்பதை ஒத்தது. கூறுதல் - சொல்லல். கூறு- பிரிவு. இஃதன்றி வகுந்து என்றோர் அருஞ்சொல்லும் உளது. வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க (சிலம்பு. அடைக்கல. 17.) வரை சேர் வகுந்திற் கானத்துப் படினே (மலைபடு. 242.) இவற்றில் வகுந்து என்னுஞ் சொல் வழி என்ற பொரு ளுடன் வந்தது. இதை ஆராய்ந்து அமைத்துக்கொள்க. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 86-8.) வகை: வகை என்னுஞ் சொல் வகு என்ற அடியாற் பிறந்து இனம், கூறுபாடு, பகுப்பு, முறை, வழி என்ற நெருங்கிய ஒற்றுமை யுடைய பல பொருட்களைத் தரும் இதனின்றும் வகைப்படுதல், வகைப்படுத்தல் என்ற தொழிற் பெயர்களும் பிறக்கும். வகைப் படுத்தல் - பிரித்தல், பங்கிடுதல். அன்றியும் வகை என்பது தொகை என்பதற்கு எதிர்மொழி ஆதலால் அது தமிழ்ச்சொல் என்பதை எவரும் மறுக்கத் துணியார். பகை, மிகை, நகை முதலியன பகு, மிகு, தகு, நகு எனும் முன்னிலைகளினின்றும் தோன்றுவது காண்க. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 88-9.) வஞ்சிப்பா: குறளும், சிந்தும் அல்லாத அடிகளை எல்லாம் வஞ்சித்து வருதலானும், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த் தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்று இப் பொருள்களை வஞ்சித்து வருதலாலும் வஞ்சி என்னும் திறமே போலும் வனப்பும் ஏற்புடைத்து ஆகலானும் வஞ்சி என்பதும் காரணக் குறி. (யா. வி. 55.) வஞ்சினம்: வஞ்சினமாவது மேற்கோள். (சிலப். பதிகம். 80. அடியார்.) வட்டுடை: முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை விசேடம். (சீவக. 468. நச்.) வடி: வடு வகிருக்கோர் பெயர். (திருக்கோ. 32. பேரா.) வடிம்பு: வடிம்பு - கால் விளிம்பு. வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. (கலி. 103. விளக்கம். பெருமழை.) வடியாக்கிளவி: ஒரு கல்லினின்றும் சிற்ப நூல் வல்லா னால் வடித்து எடுக்கப்பட்டு அழகுற இலங்கும் உருவமே வடிவு என்று பெயர் பெறும். இத்தன்மையே கவிஞனிடத்தும் அமைந் திருப்பதைக் காணலாம். கவிஞன் ஒரு மொழியினின்றும் செஞ் சொற்களை வடித்தெடுத்துப் படிப்போருள்ளத்தில் ஒரு வடிவை எழுதி அமைக்கிறான். இத்தகைய செஞ் சொற்களை வடித்த சொற்கள் என்று நம் முன்னோர் வழங்கினார்கள். வடித்த சொற்கள் எனவே வடியாச் சொற்களும் உள்ளன என்பது சொல்லாமலே அமையும். உலக வழக்கில் வடித்த சோறு, வடித்த தங்கம், வடித்த எண்ணெய் என்று வழங்கக் காண்கிறோம். இச்சொற்களை ஆராயும்பொழுது வடி என்னும் சொல்லின் உண்மைத்தன்மை நன்குணரப்படும். கஞ்சி முதலிய வேண்டாத பொருளாகும். அவ்வாறே மாசுமறுவோடு கலந்து நிற்கும் பொன்னைப் புடம்வைத்துப் பிரித்தெடுக்கும் செயலே வடித்தல் என்று சொல்லப்படும் அதுபோலவே கடுகு முதலிய மாசினின்றும் வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் வடி எண் ணெய் என்று வழங்கப்பெறும். உலக வழக்கில் வடி என்னும் பதம் இவ்வாறு அமைந்து இருப்பதுபோலவே நூல் வழக்கிலும் வடித்த நூலோர் என்றும், வடியாக்கிளவி என்றும் வழங்கக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு மாதவி எழுதிய திருமுகத்தில், என் வடியாக் கிளவி மனம் கொளல் வேண்டும் என்றும் ஆசிரியர் அமைத்திருப்பது சிந்தித்ததற்குரியதாம். வடியாக் கிளவி என்னும் சொற்றொடருக்கு உரை எழுதப் போந்த அடியார்க்கு நல்லார் குற்றமறாத சொல் என்று பொருள் கூறி இருப்பதும் ஈண்டு கருதற்கு உரியதாகும். ஆகவே குற்றமற்ற சொல் வடித்த சொல் என்றும், குற்றமறாத சொல் வடியாச் சொல் என்றும் அடியார்க்கு நல்லார் கருதுவதாகத் தெரிகின்றது. (செந்தமிழ்ச் செல்வி. 3: 42-43.) வடிவு: கல்லினின்றும் வடித்தெடுத்த உருவமே வடிவம் (form) எனப்படும். அவ்வடிவம் அழகுற அமைந்திருக்குமே. ஆயின் அவ்வழகு வடிவு என்று வழங்கப்பெறும். (செந்தமிழ்ச் செல்வி. ( 3: 42.) வண்டல்: மெல்லிய வண்டற் புழுதியாற் சிற்றில் புனைந்து விளையாடுதல். (நற்றிணை. 9. அ. நாராயண.) வண்டு: வண்டு என்பது மறவருள் ஒரு சாதி என்பாரும் உளர். (புறம். 263. ப. உ) வண்ணகம்: வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப் படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின். (தொல். பொருள். 452. பேரா.) வண்ணம்: (1) வண்ணம் என்பது சந்த வேறுபாடு. (தொல். பொருள். 524. பேரா.) (2) வண்ணம் என்பது, ஒருபாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம். (தொல். பொருள். 313. பேரா.) வணிகர்: இப்பர், கவிப்பர், பெருங்குடியர் மூன்று பாலார். (சீவக. 1756. நச்.) வதுவைமணம்: வரைவு என்பது இன்னானுக்கு இன்னவள் உரியவள் என்று பெற்றோரும் சான்றோரும் கூடிப் பலரும் அறிய உறுதி செய்வது. அதன் பின்னரே கடிமணம் நடை பெறும். அதனைப் பழந்தமிழ் நூல்கள் வதுவைமணம் என்று குறிக்கின்றன. (சேரமன்னர் வரலாறு. 329.) வம்பு: காலம் அல்லாத காலத்து மழை. (திருக்கோ. 159. பேரா.) வயவர்: வலிமைப் பொருட்டாய உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயர். எனவே, இவர் தமது வலியாற் பல போர்களைச் செய்து வெற்றிபெற்ற வீறுடையராதல் பெற்றாம். (பதிற்றுப்பத்து. 12. ஔவை. சு. து.) வயவு: சூல் முதிர்ந்த விடத்தும் ஈன்ற விடத்தும் உணவு முதலிய பற்றியுண்டாம் ஆசைப் பெருக்கம் (அகம் 238. வேங்கட விளக்கு..) வயா: வேட்கைப் பெருக்கம், பெரும்பாலும், இது கருவுற்ற காலத்து உயிரினம் எய்தும் வேட்கை மேற்று. வீழ்பிடிக் குற்ற கடுஞ்சூல் வயா (கலி 40) என்பதனாலும் அறியப்படும். (ஐங்குறு. 51. ஔவை. சு. து.) வர்ணம்: (சாதி) நிற வேறுபாடு பற்றி வந்தமையினா லேயே முதன் முதற் சாதியானது வர்ணம் என்னும் பெயரால் வழங்கப்பட்டது. (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும். 41.) வரலாறு: வருதல் வழி: தொன்றுதொட்டு வழங்கி வந்த முறை. (தொல். சொல். 389. சி. கணேச.) வரிப்புத்தகர்: வரிப்புத்தகர் என்போர் அரசனுக்கு ஒவ் வோர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப்பட்டனவும் ஆகிய அரசிறைக்குக் கணக்கு வைப்போர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) வருத்தம்: வருத்தம் எனினும் முயற்சி எனினும் ஒக்கும். (தொல். பொருள். 254. பேரா.) வரை: வரை என்பது பெருமலையை. (பதிற்று. 74. ப. உ.) வரைதல்: வரைதல் என்பது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். (தொல். பொருள். 260. பேரா.) வரையாது கொடுத்தல்: தனக்கென ஒன்றும் வரைந்து வையாமல் கொடுத்தல். (சிறுபாண். 217. நச்.) வரைவு: வரைவு என்பது தலைமகள் தலைமகனுக்கே உரியவள் எனச் சான்றோரும் தமரும் அறிய வரையறை செய்தல். (ஐங்குறு - பதிப்புரை. பக் 14. ஔவை. சு. து.) வல்லெழுத்து: ஒழிந்த மெல்லெழுத்தையும் இடை யெழுத்தையும் நோக்கித் தாம் வல்லென்று இசைத்தலானும், வல்லெனத் தலைவளியால் பிறத்தலானும் வல்லெழுத்து ஆயிற்று. (தொல். எழுத்து. 19. நச்.) வலன் ஏர்பு: வலன் ஏர்பு என்பதற்கு வலமாக எழுந்து என்று பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். இதற்கு வன்மை எழுந்து அல்லது வலிமை ஏறி அல்லது வன்மை உற்று எனப் பொருள் கொள்ளலும் கூடும். பத்துப்பாட்டில் பல விடங்களில் வலன் ஏர்பு என்ற தொடர் ஆளப்பட்டுள்ளது. வலமாக எழுந்து என்ற பொருளை நச்சினார்க்கினியர் அவ் விடங்களில் எல்லாம் ஒரேவிதமாகப் பொருத்திக் காட்டினார் இலர். திருமுகாற்றுப்படையில் மகாமேரு மலையை வலமாகத் திரிதரும், என்று கொண்டார். அங்கு எழுந்தது, ஞாயிறு. இங்கு எழுந்ததோ (வலனேர்பு பொழிந்தென. நெடுநல்வாடை) மேகம். இது மேருமலையை வலமாய் எழுந்தது என்பது பொருந்த வில்லை. தான் கிடந்த மலையை வலமாக வளைந்து எழுந்து என்று கொண்டார். மலையில் இருந்தோ மேகங்கள் எழுவன? எழுவனவே எனினும் ஏன் அம்மலையை வலமாக வளைந்து எழவேண்டும்? பட்டினப்பாலை அடி 67- இல் நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு கோள்மீன் விராய நாள்மீன் என்ற விடத்து மேருவும் பொருந்தவில்லை, கிடந்த தலையும் பொருந்தவில்லை. ஆகாயத்தே வலமாக எழுந்து எனக் கொண்டார். முல்லைப் பாட்டு அடி 91இல் வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப என்ற இடத்து மகாமேருவோ, மலையோ, ஆகாயமோ ஒன்றும் பொருந்தவில்லை. வலன் = வெற்றி எனக் கொண்டார். இவ் வெல்லா இடங்களிலும் அல்லது மேகங்களைக் குறிக்கும் இடங்களிலேனும் வலன் என்பதற்கு வன்மை என்று கொள்ளத் தகும். வலனேர்பு = வலன் + ஏர்பு. (அல்லது) வலன் + நேர்பு எனப் பிரிக்கத்தகும். வலன் = வலம், வன்மை, வலிமை. ஏர்பு = எழுந்து, ஏறி. நேர்பு = நேர்ந்து, உற்று. (நெடுநல்வாடை, பாநலன். 25-26.) வவ்வுதல்: வாய்ப்பற்றுதல் போல் கைப்பற்றுதல், பறித்தல். (முதல் தாய்மொழி. 13.) வழக்கு: (1) உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். (திருக். 795. பரி.) (2) வழக்கு என்பது காரணமின்றி வழங்கற்பாடே பற்றி வருவது பண்புகொள் பெயராயினும், பண்பு குறியாது சாதிப் பெயராய் வெள்யாடு, வெண்களமர், கருங்களமர் என வரு வனவும், குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிது என்னாது சில வென்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப் பென்றலும் பிறவும் வழக்காறாம். (தொல். சொல். 17. சேனா.) (3) வழக்காவது சில சொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று. இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது. (தொல். சிறப்புப் பாயிரம். நச்.) வழிநூல்: வழிநூல் எனப்படுவது நான்கு வகையாற் செய்யப் படும். தொகுத்தல் என்பது, முதல் நூலுள் விரிந்ததனைச் சில் வாழ்நாள் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறுதல்; விரித்தல் என்பது, முதல் நூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்றதனை விளங்கும் ஆற்றான் விரித்துக் கூறல்; தொகைவிரி என்பது, அவ்விரு ஆறும் பற்றித் தொகுத்து முன் நிறீஇ அந்நிறுத்த முறையானே பின்விரித்துக் கூறுதல்; மொழிபெயர்த்து என்பது, பிறபாடையால் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வது. எனவே பொருள் பிறழாமை பெற்றாம். (தொல். பொருள். 652. பேரா.) வள்ளி: கதிரொளி வெம்மை கலந்த ஆற்றலை உயிர் களுக்குத் தரா நிற்ப, நிலவொளி தண்மை கலந்த ஆற்றலை அவற்றிற்கு வழங்கி அவற்றைப் பேணி வளர்த்தலின் வள்ளி எனப்படுவதாயிற்று. அற்றேற் கதிரவனும் வெம்மை கலந்த ஆற்றலை வழங்கும் வண்மையுடையனாகலின் அவனையும் வள்ளி எனக் கூறல் வேண்டுமாம் பிறவெனின், அற்றன்று; கொடுமையோடடு கொடுக்கும் கொடையினைக் கொடை என்று எவரும் உயர்த்துக் கூறார். அஃது இன்றியமையாக் கொடையே ஆயினும், மற்று அகங்கனிந்து முகம்மலர்ந்து குளிர்ப்பக் கூறிக் கொடுக்கும் கொடையினையே எவரும் மகிழ்ந்து புகழா நிற்பர். அங்ஙனமே, ஞாயிறு கொடுக்கும் மின்னாற்றல் இன்றியமையாத ஒன்றே ஆயினும் அது வெம்மையோடு கூடி இருத்தலின் அதனை வண்மை என ஆசிரியன் கொண்டிலன்; மற்றுத்திங்கள் வழங்கும் தண்மை கலந்த மின்னொளி எவரானும் விரும்பி ஏற்கப்படும் குளிர்ச்சியுடைமையின் அதனையே ஆசிரியன் வண்மை என வேண்டினான். அதுவேயு மன்றிக் கதிரொளி வெய்யதாகலின் அஃது ஆண்டன்மைப் பாற்படும். நிலவொளி தண்ணிதாகலின் அது பெண்டன்மைப் பாற்படும். அப்பெண்பாற்றன்மையினை வள்ளி என்னுஞ் சொல் இகர விகுதியால் நன்குணர்த்துதலின் அது திங்கள் மண்டிலத்தின் வண்மைத் தன்மையினை அறி விக்கும் பெயராதற்குப் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க. (செந்தமிழ்ச் செல்வி. 5 : 81 - 82.) வள்ளுவர்: (1) வளமையோன் எனல் ஓராரே என்ற புலவர் புராணப் பாடலை எண்ணி, வளப்பம் உடையவர் வள்ளண்மை உடையவர் எனப் பொருள் காண்பர். திருவள்ளுவமாலைக்கு முதன் முதல் உரை இயற்றிய திருத்தணிகைச் சரவணப் பெரு மாளையர், வள்ளுவர் என்பது வண்மையுடையவர் என்பதை விளக்கி நின்றதாகலின் அது வேதத்தில் இலைமறை காய்போல் பல இடங்களில் மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள் களை எல்லாம் தொகுத்து உலகத்தார்க்குக் கொடுத்து அருள் செய்தவர் என்னும் காரணம் பற்றி வந்த பெயர் என்பர். (திருக்குறள் அழகும் அமைப்பும். 151-2) (2) வள் என்பது தோல் என்ற பொருள் உடையது. தோல் சம்பந்தமான தொழில் புரிபவர் வள்ளுவர் எனப்பட்டார். பண்கொண்டு பிழைப்பவன் பாணன்; கூத்துக் கொண்டு பிழைப் பவன் கூத்தன்; இவர்போல் வள்ளைக்கொண்டு பிழைப்பவன் வள்ளுவன் ஆனான். மாசற விசித்த வார்புறு வள்வின் (புறம். 50) வள்வார்ச் சிறுபறை கறங்க (சீவக. 458.) வள்வார்க் குளிறிடி முரசம் (சீவக. 2150.) என்ற இடங்களில் வள் என்பது தோல் என்ற பொருளாதலைக் காண்க. தோல் தொழிலாவது பறையறைதல். (வள்ளுவரைப்பற்றி. 12.) வறும்கை காட்டல்: கையில் ஒன்று உளது போலப் பிடித்துப் பின் வறுங்கை காட்டுதல். (அகம். 39. வேங்கட விளக்கு.) வறுமை: வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம். (தொல். பொருள். 253. பேரா.) வன்கண்: வன்கண் = மறம். இரக்கம் இன்மை. இதன் எதிர்மொழியாகிய மென்கண்ணுக்குக் கண்ணோட்டம் என்பது பொருள். வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு (செந்தமிழ்ச் செல்வி. 2:80.) வன்கண்மை: ஈதல் இரக்கம் இல்லாத தறுகண்மை. (திருக். 228. கோ. ப.உ) வன்பாடு: வன்பாடு முருட்டுத்தன்மை; அஃதாவது ஓராது செய்தல். (திருக். 1063. பரி.) வன்புலம்: குறிஞ்சியும், முல்லையும். (புறம். 42. ப. உ.) வனப்பு: வனப்பு - பல உறுப்புக்களிலும் காணப்படும் அழகு. வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. (தொல். செய். 235. பேரா.) (குறுந்தொகை. 132. உ.வே. சா.) வா வாடூன்: வாடு ஊன் உப்புக்கண்டம்; உலர்த்தப்பட்ட இறைச்சி. (பெரும்பாண். 100.) வாணிகம்: நாட்டுக்கும் வளப்பத்தை உண்டாக்கி, அங் ஙனம் உண்டாக்குவாரும் பெருஞ்செல்வராய் விளங்குதற்கு உரியது வாணிகம். இதனால் அன்றோ இத்தொழிலுக்கு வணிகம் என்னும் சிறந்த பெயர் அமைவதாயிற்று. வண்மை செய்தல் என்பது அதன் சொற்பொருள். வண்மை வளப்பம் எனப்படும். (சங்கநூற் கட்டுரைகள். I. 64.) வாய்: இதழ் போறலான் வாய் இதழ் எனப்பட்டது. (தொல். எழுத்து. 83. இளம்.) வாயுறை: வாய் = வாய்மொழி; உறைமருந்து; எனவே, வாயுறை என்பது சொல்லாகிய மருந்து எனப் பொருள் பட்டுப் பண்புத்தொகையாகவும், வாயின்கண் தோன்றிய மருந்து என விரிந்து ஏழாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ள இடந் தருவதொன்று. இந்த இலக்கணத்தோடு பொருந்தி இருத்தலை அறிந்துதான் திருக்குறளுக்கு வாயுறை வாழ்த்து என்னும் பெயரை இளவேட்டனார் என்னும் புலவர் வழங்கியிருக்க வேண்டும். (கட்டுரைப்பொழில் - வாயுறை வாழ்த்து. 2.) வாயுறை வாழ்த்து: வாய் - வாய்மொழி; உறை - மருந்து ; வாயுறை என்பது சொன் மருந்தனெப் பண்புத்தொகையாம். இனி, வாய்க்கண் தோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையு மாம். மருந்து போறலின் மருந்து ஆயிற்று. அவன் சிறப்புக் கூறி வழுத்தி ஒரு சாத்தற்குப் பயன்படச் சொல்லினமையின் வாயுறை வாழ்த்து எனப்படுவது ஆயிற்று. (தொல். பொருள் 423. பேரா.) வாரம்: கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம். (தொல். பொருள். 444. பேரா.) வாவல்: (1) வாவிப் பறத்தலின் வாவல் எனப் பெயர் பெறுவதாயிற்று. இது வௌவால் எனவும் வழங்கப்பெறும். (அகம். 57. வேங்கட விளக்கு.) (2) வாவல் (வௌவால்) என்பது மரங்களில் தொங்கிக் கொண்டிருந்து கனிகளை உண்டு வாழும் பெருவௌவால். (உயர்தரக் கட்டுரை இலக்கணம். II. 23.) வாவி: யாற்றில் ஓடை. (சீவக. 337. நச்.) வாழ்க்கை: தம் உயிரைப் பாதுகாக்கின்ற வாழ்க்கைத் தொழிலே வாழ்க்கை என்றார். (மதுரைக். 576. நச்.) வாழை: வாழ்வதென்பது வாழை ஒன்றே. வாழ் என்னும் முதனிலையில் இருந்து வாழை என்னும் அழகிய பெயரை வேறு எது பெற்றிருக்கிறது? வாழ்வது வாழை என்பதனால் அன்றோ குலைதள்ளிய வாழை மரங்களை வாழும் வகைக்குத் திருமணம் கூட்டும் இல்வாழ்க்கை மணவிழாக்களிலும், திரு வருள் கூட்டும் இல்வாழ்க்கை மணவிழாக்களிலும், திருவருள் கூட்டும் ஞான வாழ்க்கைக் கடவுள் விழாக்களிலும் மங்கலமாக நிறுத்தி அணி செய்விக்கும் மரபு நமது நாட்டில் எங்கும் காணப்படுகிறது. (திருக்குறள் அறம். 60.) வாளா வருவர்: பயன் கருதாது வருவர். (திருக்கோ. 82. பேரா.) வான்: மழை; அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறு தலின் உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க என்றார். (திருக். 11. பரி.) வானர மங்கையர்: அவரின் (தேவப் பெண்களின்) மேலா கிய உருப்பசி திலோத்தமை முதலாயினாரை. (திருக்கோ. 371. பேரா.) வி விட்டுரைத்தல்: வெளிப்பட உரைத்தல். (திருக்கோ. 391. பேரா.) விடு: விடு, அடு, இடு முதலிய பகுதிகள் சில இறந்த காலத்திலே விட்டு, அட்டு, இட்டு முதலியனவாய் வலி இரட்டி வரும். உடு, எடு, தடு முதலிய சில இரட்டா. அடு என்பது சமீபத்தல் பொருளிலே இரட்டாது அடுத்து அடுக்க, அடுத்த, அடுத்தான் முதலியனவாய் வரும். (செந்தமிழ். 11-43.) விடியல்: பழம்புலவர் பாட்டுக்களால் பொழுதுபுலர்ந்து கதிர்விரியும் இளவெயிற் காலையாய பகற்பொழுதின் முதற் பகுதியே விடியல் என்றும், இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறை என்றும், சுடர்படும் பகல் இறுதிக்காலமே எற்பாடு என்றும் மயக்கத்திற்கு இடனின்றித் தெளியக் கிடக்கின்றது. (தொல்காப்பியர் பொருட்படலம். 24.) விடையிலதிகாரி: விடையிலதிகாரி என்போர் கிராம சபைகளினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலை களைப் படித்துப் பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடை எழுதி அனுப்புவோர். அன்றியும், அரசனது ஆணைத் திருமுகத்தை ஊர்ச் சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணி மக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களே ஆவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.) விண்டு: விண்டு என்பது பிளந்து என்பது போலச் செய் தவன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. (திருக்கோ. 24. பேரா.) விதி: விதியாவது செயப்படும் வினையினது நியதி. (திருக்கோ. 7. பேரா.) விநாயகர்: வி+நாயகர் = விநாயகர். தமக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள். (நல்ல தமிழ் எழுதவேண்டுமா? 137.) வியர்த்தல்: வியர்த்தல் என்பது பொறாமை முதலாயின பற்றி மனம் புழுங்குதல். (தொல். பொருள். 260. பேரா.) வியன்மலை: வியன்மலை என்றது அரைமலையை. (புறம். 117. ப. உ.) விரிச்சி: விரிச்சி - நற்சொல். இக்காலத்து அசரீரி வாக் கென்று வழங்கப்படுவது இதுவே. (சரீரி - உடலையுடையது. அசரீரி - உடல் தோன்றாமல் ஒலி மட்டும் கேட்பது) (புறப். வெண்பா. பொருளமைப்பு. உ. வே. சா.) விருந்து: விருந்தென்பது புதுமை; அஃது ஈண்டு ஆகு பெயராய்ப் புதியராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்; பண்டறி உண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மை யிற் குறியாது வந்தாரும் என. (திருக். 44. பரி.) விரைவு: விரைவு என்பது இயற்கை வகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ள நிகழுங் கருத்து (தொல். பொருள். 260 பேரா.)விளரி: இரங்கினார் (வருந்தினார்) பாடும் பண். (சிலப். 7: 48 அரும்பத.) விளையாட்டு: விளையாட்டு என்பது, யாறும் குளனும் மாவும் ஆடிப் பதி இகந்து வருதல் (தொல். பொருள். 191.) முதலாயின. (தொல். பொருள். 259. பேரா.) வினா: வினாவாவது அறியலுறவு வெளிப்படுப்பது. (தொல். சொல். 13. சேனா.) வினை: நன்மையோ தீமையோ ஏதாவது செய்தால் முதலில் அதற்குச் செயல் என்று பெயர் ஒரு காலத்தில் நிகழ்ந்துவிட்ட அச்செயல் பின்னொரு காலம் வரையில் முற்றி வளர்ந்து பயன் கொடுக்கத் தொடங்கினால் அப்போது அச் செயலுக்கு வினை என்று பெயர். ஆதலால் தீயசெயல் வேறு; தீயவினை வேறு. அப்படியே நற்செயல் வேறு; நல்வினை வேறு. (திருக்குறள் அறம். 137.) வினை முதல்: வினை முதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழிற்படுத்துவது. (தொல். சொல். 73. சேனா.) வீ வீரகண்டை: (கழல்) அஃதாவது வெற்றிபெற்ற வீரர்க்குக் காலிற் பொருத்தப்படுகின்ற வெண்டையம். (திருவாசக விரிவுரை. சிவபு. 6- 10 மறைமலை.) வீவு: விய்யுஞ் சமயத்துக்கூட உதவாதவன் என்று ஒருவர் சினந்து உரைத்தபோது இதன் கருத்து என்ன என்று எண்ண லானேன். காதலன் தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் என்பது சிலப்பதிகாரம். வீவு - திடீரெனச் சாதல். வாழ்வரசி என்பதனை வாவரசி என ழகரமின்றிச் சொல்லுகின்றனர். அதுபோல் தமிழ் தொன்மை மொழியாதலின் வீழ்வு என்பது வீவு என இளங்கோ வின் காலத்தே மரூஉ ஆயிற்றுப்போலும். திடீரென இறக்குங் காலத்துக்கூட உதவாத கொடியன் என்ற கருத்தை விய்யும் (வீயும்) சமயம் என்னும் தொடர் குறிக்கின்றது என்று சிலப்பதி காரத்தால் அறிந்தேன். (தொல்காப்பியப் புதுமை. 78.) வீளை: வீளை - சீழ்க்கை. உதட்டை மடித்துச் செய்யும் ஒலி. இதனை இக்காலத்தில் சீட்டி என்பர். (குறுந்தொகை. 272. உ. வே. சா.) வீறு: வேறொன்றற் கில்லாத அழகு. (சிந்தாமணி. 489. நச்.) வெ வெஃகுதல்: வெஃகுதலாவது விரும்புதல். விருப்பத் திற்குப் பிறிதொரு பெயராகிய காமம் என்பது தனது பொதுப் பொருளின் நீங்கி மகளிர்பால் இணைவிழைச்சுக் கருதிச் செல் லும் விருப்பத்தைக் குறித்தல் வழக்காயினாற்போல, இவ் வெஃகலும் பிறர் பொருளை வௌவச்செல்லும் விருப்பத்தைக் குறித்தல் வழக்காயிற்று. இதற்கு முதனிலை வெஃகு என்னும் குகர ஈற்றுச்சொல். இஃது எதிர்மறை ஆகாரமும், பண்பிறுதி மையும் பெற்று வெஃகாமை என எதிர்மறைப் பண்புப்பெயர் ஆயிற்று. (திருக்குறள். தண்ட. அதி. 18.) வெண்சாந்து: வெண்சாந்து பச்சைக்கருப்பூரமும் பனி நீரும் முதலான நறுமணப் பொருள்களாலான கலவை. (திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 118.) வெண்பா: வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே வேற்றுத்தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின் வெள்ளை என்பது காரணக்குறி; திருவேபோலச் சிறப்புடை யாளைத் திரு என்றாற்போலக் கொள்க. (யா. வி. 55.) வெண்மை: வெண்மையாவது அறிவு முதிராமை. (திருக். 841. பரி.) வெப்பு: தொழுநோய்; இது வெதுப்பு எனினும் அமையும். (சிலப்; உரைபெறு கட்டுரை. 1. அடியார்.) வெய்யவன்: சூரியன்; இதற்கு வெப்பத்தை உடையவன் என்பது பொருள். (தண்டி. 57. சுப். தே.) வெருகு: வெருகு என்ற பெயரே காட்டுப்பூனையின் வெருள் நோக்கினால் தோன்றிற்று என்பது தெளிவாகின்றது. இஃது இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் இருந்து விளங்குகின்றது. வெரூஉதல் என்ற மெய்ப்பாட்டை விளக்க வந்த இளம்பூரணர் அஃது அச்சம்போல நீடு நில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு. அதனைத் துணுக்கு என்றான் என்பது என்று கூறினார். வெரூஉதலைத் தரும் விலங்கை வெருகு என்று இயற்கையறிவோடு வழங்கினர். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 220.) வெரூஉதல்: வெரூஉதல் என்பது விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது அஞ்ச வேண்டா தன கண்ட வழியும் கடிதில் பிறந்து மாறுவதோர் வெளி. (தொல். பொருள். 260. பேரா.) வெள்ளாங்குருகு: வெள்ளைக்கொக்கு. இது நாரையின் இனமாகிய ஒருவகைப் பறவை. தோற்றத்திற் பெரும்பான்மை யும் நாரையையே ஒக்கும். நிறம்மட்டும் தூயவெண்மையாக இருக்கும். (ஐங்குறு. 151 விளக்கம். பெருமழை.) வெள்ளைநோக்கு: உள்ளே ஒன்றும் கொள்ளாத நோக்கு. (சீவக. 1099. நச்.) வெளிநிலம்: முதன் முதல் செயற்கைப்பயிர் செய்தற்கு வெளிநிலங்களே பயன்பட்டமையின் அவை வயல், புலம் என்று பெயர் பெறலாயின. வயல் என்னும் சொல்லுக்கு முதற் பொருள் வெளி என்பதே ஆகும். புலம் என்னும் சொல்லும் எவை தம்மாலும் மறைக்கப்படாமல் கண்ணுக்குப் புலப்பட்டுக் கிடக்கும் வெளியிடத்தையே உணர்த்தும். மேலும், இயற்கையில் வறிதாய்க்கிடந்த வெளிநிலம் அறிவர் சிலரால் முதல்முதல் கிண்டிக் கிளறிப் பயிர் செய்தற்கு ஏற்றபடியாகச் செய்யப் பட்டமையிற் பின்னர் அது செய் என்றும், பண்ணப்பட்டமை யிற் பண்ணை பணை என்றுஞ் செறப்பட்டமையின் அஃதா வது கீறப்பட்டமையின் செறு என்றும் வழங்கப் படலாயிற்று. கிளறுதலாலும் தண்ணீர் பாய்ச்சுதலாலும் இறுகிய மண்கழன்று நிலம் மென்பதம் அடைதலின் அங்ஙனம் கழன்ற வயல் நிலம் கழனி எனப்பட்டது. பண்படுத்தப்பட்ட அக்கழனியில் வித்திய நெல் ஒன்று பல்லாயிரமாய்ப் பயன் தந்ததாகலிற் பின்னர் அது பழனம், விளையுள், எனப் பெயர் பெறலாயிற்று. பயன், பழம், பழன், விளைவு முதலியனவெல்லாம் ஒரே பொருளைத் தரும் சொற் களாம். பலர்க்கும் பொதுவாய்க்கிடந்த நிலப்பரப்பு பின்பு ஒருவர்க்கோ அல்லது ஒவ்வொரு குடியினர்க்கோ உரியவாம் பல பகுதிகளாகப் பங்கிடப்பட்டு இடை இடையே வரம்பு உயர்த்தப்பட்டமையின் அவ்வாறு வரம்புக்கு உள்ளடங்கிய வயல்கள் வரப்புள் என்று வழங்கப்படுவன ஆயின. (சிறுவர்க்கான செந்தமிழ். 65-66.) வெளியார்: (1) அறியாத புல்லரை வெளியார் என்றது வயிரமில் மரத்தை வெளிறு என்னும் வழக்குப்பற்றி. (திருக். 714. பரி.) (2) வெளியார் என்பது வெள்ளியார்; அறிவுக் கேடர். (திருக். 714. காலிங்.) வெறுக்கை: செல்வம், யாவும் வந்த செறிதலின் வெறுக்கை எனப்பட்டது. வெறுத்தல் - செறிதல். (திருவிளை. வாதவூரடிகளுக்கு. 83. ந. மு. வே.) வே வே: வே என்னும் பகுதி ககர வுகரம் விரியப்பெற்று வேகுதல் வேகுகை எனத் தொழிற் பெயராகும். இறந்த காலத் திலே முதல் குறுகி வெந்து, வெந்த, வெந்தான் முதலியனவாயும் மற்றைக்காலங்களிலே வேகின்ற, வேகுது, வே, வேவ முதலியன வாயும் வரும். வே என்பதினின்று வேங்கை, வேது, வேவை, வேனல், வெப்பர், வெய்யோன் முதலிய பெயர்கள் பிறக்கும். வேகுது - வேகின்றது. வேகுதே தீயதனில் (பட்டண) வேங்கை - பொன். வேது - வெம்மை வேதுகொண்டு விழையுநெறி விரும்பி (சேது புராணம்) வேவை- வெந்தது. பராரை வேவை பருகெனத் தண்டி (பொருந) வேனல் - கோடை. வேனன் மல்கி வெண்டேர் சென்ற (சிந்தா.) வெப்பர் - வெம்மை. வெப்பராற் றட்பமாற்றி (சிந்தா.) அர்-போலி என்பாரும் உளர். அன்றி வெச்செனவு என்பதும் இதன்பாற்று. வெச்செனவு - வெம்மை. தண்ணெனவும் வெச்செனவும் தந்து சேது புராணம். (செந்தமிழ். 11: 118-119.) வேகம்:வேகு + அம் = வேகம். கொதிப்பு, கடுமை, கடுஞ் செலவு. சுறுசுறுப்பு, சூட்டிக்கை என்பனவும் நெருப்புக் குறித்த சொல்லினின்று பிறந்தவையே. தீப்பற்றிய பொருள்கள் விரை வாய் வெந்துவிடுவதால் விரைவு வேகம் எனப்பட்டது. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 359.) வேங்கை: வேங்கை என்ற சொல்லும் செம்மையான கை என்ற பொருளில் புலியினுடைய வலிய கையைக் குறித்து வழங்கியதாகத் தெரிகின்றது. புலி பிற விலங்குகளை வேட்டை யாட அதன் முன்கால்களையே, அஃதாவது, கைகளையே பெரிதும் பயன்படுத்துகின்றது. புலியின் கையும் வாயும் கொடி யவை எனக் கருதினமையால் வேங்கை, கடுவாய் என்ற பெயர்கள் தோன்றின. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 259-260) வேணவா: (1) வேட்கையாவது பொருள்கள் மேல் தோன் றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெற வேண்டும் என்று மேல்மேல் நிகழும் ஆசை. எனவே வேட் கையால் உண்டாகிய அவாவென மூன்றன் உருபு விரிந்தது. (தொல். எழுத்து. 248. நச்.) (2) வேட்கையால் உண்டாகிய அவா. வேட்கை அவா என்னும் இருசொல்லும் செய்யுண் மருங்கின் (தொல்.எழு. 288.) என்ற சூத்திர விதிப்படி கெட்டு மருவி முடிந்தது. (நற்றிணை. 61. அ. நாராயண.) வேத்தியல்: அரசர்க்கு ஆடும் கூத்து. (சிலப். 14: 148. அரும்பத.) வேந்தன்: வேய்தல் முடியணிதல். வேய்ந்தான் - வேந்தன். (திருக்குறள். மரபுரை. 382.) வேயாமாடம்: (1) தட்டோடு இட்டுச் சாந்து வாரப் பட்டன; நிலாமுற்றமும் ஆம். (சிலப். 5:7 அரும்பத.) (2) கற்றை முதலியவற்றால் வேயாது சாந்து இட்ட மாடம். (பெரும்பாண். 348. நச்.) வேலன்: வேல் என்பது பகுதி; அன் என்பது விகுதியாகும். வேல் என்பது வெல் என்ற பகுதியின் அடியாய்த் தோன்றி வேல் என நீண்டது. வெல் என்ற மொழியின் பொருள் வெற்றிக்குரியது. வெற்றி வீரனுக்குரியது. வீரம் முருகனுக்கே உரியது. (செந்தமிழ்ச் செல்வி. 19 : 218.) வேலி: கருவேலமுள்ளால் அடைப்பது வேலி. வேலி ஓர் இடத்தின் எல்லை. வேலை - ஒருகால எல்லை. வேலை என்பதின் திரிபு வேளை என்பது. வேலை செய்யுள் வழக்கு. (ஒப்பியன் மொழி நூல். 266.) வேழம்: தேரை போயிற்று என்றாற் போல்வதொரு நோயென்க. (சிவக. 1024. நச்.) வேளாண்மை: ஈகைக்குப் பெயரான வேளாண்மை என்னுஞ் சொல் அவ்வீகைக்குக் கருவியான பயிர்த் தொழிலுக்கும் பெயராயிற்று. பின்னர் அவ்விரண்டு தொழில்களையும் ஆள் வாரான வேளாளர்க்கும் அது பெயராயிற்று. (வேளாளர் நாகரிகம். 3.) வேளாப்பார்ப்பான்: (வேள்வி செய்யாத பார்ப்பான்) வேள்வி செய்யாமையால் தாழ்நிலை அடைந்த பார்ப்பனருக்குச் சங்கறுக்கை முதலிய தொழில்கள் உளவென்பது பெறப்பட்டது. (அகம். 24. வேங்கட விளக்கு.) வேளாளர்: வேளாளர் ஏனைமக்களை நோக்கிச் செய்யும் ஈகையும் விருந்தோம்பலும் மக்கள் வேள்வி எனவும், ஏனைச் சிற்றுயிர்களைப் பாதுகாத்தற் பொருட்டு அவர் மேற்கொண்டு ஒழுகும் கொல்லா அறம் உயிர்வேள்வி எனவும், இறந்துபட்டதம் முன்னோரை நோக்கிச் செய்யும் நன்றிக் கடன் தென்புலத்தார் வேள்வி எனவும் இவ்வாறு பிறர்க்காற்றும் உதவி பயன்தரற் பொருட்டு இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடு கடவுள் வேள்வி எனவும் தமக்கும் பிறர்க்கும் அறிவை விளக்கி முயற்சியைப் பயன் பெறுவிக்கும் நூலோது முறை கலைவேள்வி எனவும் ஆன்றோரால் வகுத்துரைக்கப்பட்டன. இங்ஙனமாக ஐவகை வேள்விகளையும் ஆள்பவராகலின் பண்டைத் தமிழரில் நன்மக்கள் வேளாளர் எனப்படுவார் ஆயினர். (வேளாளர் நாகரிகம். 3 -4.) வேளைக்காரர்: கண்ணினைக் காக்கும் இமைபோல் அரசற்குக் காலத்தில் உதவிபுரியும் வீரரும் முற்காலத்தில் இருந்தனர். அன்னார் அணுக்கப் படையினர்; உற்றவிடத்து உயிர் வழங்கும் பெற்றியர். உடுக்கை இழந்தவன் கைபோல் இடுக்கண் வந்த வேளையில் ஏன்று உதவிய அவ்வீரர் வேளைக் காரர் என்று அழைக்கப்பெற்றார். தஞ்சைச் சோழ மன்னர் சேனையில் வேளைக்காரப் பட்டாளம் ஒன்று சிறந்து விளங் கிற்று. ஆபத்துவேளையில் அஞ்சல் என்று அருள்புரியும் முருகவேளை வேளைக்கார பெருமாள் என்றார் அருணகிரி நாதர். (தமிழர் வீரம். 11.) வேற்றுமை: வேற்றுமை என்னும் பொருண்மை என்னை எனின் பொருள்களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்னும் பெயர் ஆயிற்று. (தொல். சொல். 63. கல்.) வை வை: வை என்பது சபித்தற் பொருளிலே விகுதி இரட் டாது வைதல், வைது, வைய, வைதான் முதலியவாயும், செறித்தற் பொருளிலே விகுதி இரட்டி வைத்தல்,வைத்து, வைக்க, வைக்கிய முதலியனவாயும் வரும். ஒருமேல் ஒண்மணிச் சூட்டு வைக்கிய சிந்தாமணி. (செந்தமிழ். 11 : 119.) வைகுசுடர்: விடியும் அளவும் எரியும் விளக்கு; விடி விளக்கு எனப்படும். (அகம். 87. வேங்கட விளக்கு.) வைத்தியம்: உடம்பினை அழியாது வைத்து இயங்கச் செய்யும் மருந்து முறையே வைத்தியம் எனப் பெறும். (பதினெண்கீழ்க் கணக்குச் சொற்பொழிவுகள். 214.) வைப்பு: (1) வைப்பு - பொருள். எய்ப்பினில் உதவ ஈட்டி வைப்பது பொருள். அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென்பது (பழமொழி) காண்க. (குறுந். 71. சௌரி.) (2) அவை எல்லாம் (குறித்த பொருள்) போதந்து வைத் தலின் வைப்பு. (தொல். பொருள். 444. பேரா.) (3) வைப்பு - உலகம். அளவறியாப் பல பண்டம் வைத்து நிறைந்த பண்டசாலை போல்வதாகலின் வைப்பாயிற்று. (திருக்குறள். தண்ட. 149.) வையகம்: வை+அகம் என இச்சொல் பகுக்கப்படும். வை என்பது நிந்தி அல்லது நிந்தனை செய் என்று பொருள்படும். மக்கள் அன்றும் வைத அகம், இன்று வைகின்ற அகம், இனியும் வையும் அகம் என்று புதுமை உலகு அதன் வேரைக் கல்லிப் பொருள் காணும். அம்மம்ம! துன்பம் அன்றி இவ்வுலகிற்கு வேறு இயல்பும் உண்டோ? தூற்றாதார் யாருளரோ இத்தொல்லு லகை? இத்துன்ப உலகிற்கு இதை விடப் பொருத்தமான பெயரும் அமையுமோ? (நெடுநல்வாடை பா நலன். 34.) வையம்: வை என்பது வையம் என்ற சொல்லின் முதல் நிலையாகும். வையம் என்பதற்கு ஆதாரம் என்பது பொருள். எல்லாப் பொருள்களும் வைப்பதற்கு இடமாவது என்பது பொருள். இதனால்தான் வையம் என்பது உலகு என்ற பொருளை உணர்த்துகிறது. பைம்பொழில் என்பது போன்ற சொற்றொடர்களில் உள்ள பை என்பது பசுமை, பசி என்ற சொற்களோடு தொடர்பு படுத்தப்படுதல் போல வை என்பதை யும் மழை என்னும் பொருளுடைய வசி என்ற சொல்லோடு தொடர்பு படுத்தலாம். வசியும் வளனும் சுரக்க- சிலப். 5 : 73. மணி. 1 : 71. (சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள். 283.) பிற்சேர்க்கை ஆய்தம்: ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றாராகலின் இச்சொல் ஆய்தல் என்ற உரிச்சொல் அடி யாகப் பிறந்து ஆய்தம் என்றாகி நுணுகிய ஓசையையுடைய எழுத்தென்ற பொருளில் வழங்கியிருத்தல் கூடும் என உய்த் துணரலாம். (தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம். 31.) காமம் - காதல்: காமம் என்பது உயிரோடு ஒருமித்து நிற்கும் மலைவயத்தால் தோன்றுவது; காதல் என்பது உயிரின் உள்ளொளியாய் வயங்கும் அன்பின் வயத்தால் தோன்றுவ தாகும். மலவயத்தால் தோன்றும் காமம் பிறிதோர் உடம்போடு இயைந்து இன்பம் நுகர்தற் பயத்ததாம் வினைவினை விரைவில் தோற்றி விரைந்து அழிவெய்தும்; அன்பு வயத்தால் தோன்றும் காதல் பிறிதோர் உயிரின்கண் உள்ளொளியாய் அசையும் அன்பினோடு இயைந்து நிற்றற் பயத்ததாம். பெரு வேட்கை யினைத் தோற்றி ஊழிபெயரினும் தான்பெயராது பேரின்ப உருவாய் நிலைபெறும். ஒருத்திமேற் காமுற்றான் ஒருவனும் ஒருத்திமேற் காதலுற்றான் ஒருவனும் எப்பெற்றியராய் இருப்ப ரெனத் தெளிய அறியின் இதன் உண்மை இனிது புலப்படும். ஒருத்திமேற் காதலுற்றான் ஒருவனும் எப்பெற்றியராய் இருப்ப ரெனத் தெளிய அறியின் இதன் உண்மை இனிது புலப்படும். ஒருத்திமேற் காமங்கொண்டான் ஒருவன் அவளைப் புணர்ந்து இன்ப நுகர்ந்தொழிதலையே குறிப்பாய்க் கொண்டொழுகு வான். அவ்வின்பம் நுகர்தற் பொருட்டு வேண்டப்படும் வினைக ளெல்லாம் விரைவிற்செய்து அவளைக் கூடியபின் அவ்வள வோடு அவள்மேற் பற்றறுந்து பிறளொருத்தியையும் அங்ஙனமே விழைந்து ஒரு வரைதுறையின்றிப் போவன். இனி ஒருத்திமேற் காதல்கொண்ட ஆண் மகனோ அவள் உயிர் உள்ளொளியான அன்பு தன் விழைந்து உடம்போண்டாம் புணர்ச்சியை ஏனை யோன்போல் விழையானாய் அவளோ தானாய் உருகி அவளைக் காணினும் காணவிடினும் அவள் தேமொழியைக் கேட்பினுங் கேளாவிடினும் அவளைப் புணரினும் புணரா விடினும் என்றும் ஒரு பெற்றிப்பட்ட வேட்கையோனாய் அவள் உணர்வெல்லாம் தன் உணர்வாய் அவளுயிரெல்லாம் தன் னுயிராய்க் கொண்டு நிற்கும். (மறைமலையடிகளாற் அறிவுரைக்கோவை. 131-132.) அம்மா - அப்பா: பிள்ளைகள் வாயைத் திறக்குங்கால் அகர ஒலி இயல்பாற் பிறக்கப் பிறகு திறந்த வாயின் இதழ்களை ஒன்று பொருத்துங்கால் மகர ஒலி பிறக்க இவ்வாறு வாயைத் திறந்து மூடுதலால் அம்மா என்னுஞ் சொற்றோன்றித் தாய்க்குப் பெயராய் வழங்குதல் காண்கின்றோம்; இங்ஙனமே, திறந்த வாயின் இதழ்களைச் சிறிது அழுந்தப் பொருத்துதலால் அப்பா என்னுஞ் சொல் பிறந்து தந்தைக்குப் பெயராய் வழங்கப்படுகின்றது. இந்நிலவுலகத்தின்கண் உயிர் வாழும் எல்லா மக்களின் பிள்ளைகளும், அவர் ஒன்றோடொன்று வேறு பட்ட எத்தனை வகையான மொழிகளைப் பேசுவராயினும், முதலில் இயல்பாகத் தோற்றுவிக்கஞ் சொற்கள் அம்மா அப்பா என்பனவேயாம். இவ்விரண்டு சொற்களும் முதற் பிறக்கும் ஒலிகளாய் இருத்தலின் இவை எல்லா மொழிகளிலும் தாய் தந்தையரைக் குறிக்குஞ் சொற்களாகவே அமைவனவாயின. (சான்று: மதர் பாதர் - ஆங்கிலம்; மாத்ரு பித்ரு - ஆரியம்) (மறைமலையடிகளாற் அறிவுரைக் கோவை. 49 - 50.) இலக்கணம்: இலக்கணம் என்ற சொல்லை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரேயாவர். இவ் வாசிரியர் வழங்கிய இலக்கணம் என்ற சொல் லக்ஷண என்ற வட சொல்லின் திரிபன்றாம். கொள்ளுமென்ப குறியறிந்தோரே என்புழிக் குறி என்ற சொல்லை லக்ஷண என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பாக ஆசிரியர் குறித்திலர். குறி என்பது நூல் என்னும் பொருளில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின் பெருகநூலிற் பிழைபா டிலனே என்புழிக் குறி என்னும் சொல் நூல் எனப் பொருள் தருதல் காண்க....... இலக்கணம் என்ற சொல் பல பொருளை யுய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித் தற்குக் காட்டப்படும் வரையறை என்ற பொருளிலேயே தொல் காப்பியனாரால் ஆளப்பெற்றது. இத்தமிழ்ச் சொல்லோடு ஒருபுடை ஓசையொற்றுமையுடைய லக்ஷண என்ற வடசொல்லைப் பாணினி முதலிய வடமொழி வியாகரண ஆசிரியர்கள் இப் பொருளில் வழங்கிற்றிலர். தொல்காப்பியனார் வழங்கிய இலக்கணம் என்னும் சொல்லுக்குரிய பொருளை லக்ஷணம் என்னும் சொல்லுக்கு ஏற்றி வழங்கியவர் தென்னாட்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரேயாவர். (தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 113 - 114.) 