தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 10 தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 10 தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 16 + 432 = 448 படிகள் : 1000 விலை : உரு. 420/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030. பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் பொருளடக்கம் முதற் பகுதி தொல்காப்பியம் 1 மூன்று தமிழ்ச்சங்கங்கள் 3 இறையனா ரகப்பொருளும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் 9 தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெருமக்கள் 12 தொல்காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரே 14 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் 20 தொல்காப்பியனார் காலத் தமிழ்நாட்டெல்லை 21 தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் 31 வழக்கும் செய்யுளும் 32 தொல்காப்பியனாரும் அகத்தியனாரும் 36 புனைந்து வழங்கும் கதை 40 அகத்தியனார் 44 நிலந்தரு திருவிற் பாண்டியன் 51 பாண்டியன் அவையம் 56 அதங்கோட்டாசான் 60 தொல்காப்பியம் இயற்றமிழ் நூல் 63 ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் 64 படிமையோன் 72 தொல்காப்பியனார் காலம் 74 தொல்காப்பியத்தை யடியொற்றியது திருக்குறள் 75 தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் 77 தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது 83 தொல்காப்பியனார் சமயம் 109 இரண்டாம் பகுதி தொல்காப்பியம் நுதலிய பொருள் 149 எழுத்ததிகாரம் 150 நூன்மரபு 152 மொழிமரபு 154 பிறப்பியல் 155 புணரியல் 157 தொகைமரபு 161 உருபியல் 163 உயிர்மயங்கியல் 165 புள்ளிமயங்கியல் 168 குற்றியலுகரப் புணரியல் 172 சொல்லதிகாரம் 175 கிளவியாக்கம் 178 வேற்றுமையியல் 181 வேற்றுமை மயங்கியல் 184 விளிமரபு 190 பெயரியல் 191 வினையியல் 195 இடையியல் 201 உரியியல் 203 எச்சிவியல் 206 பொருளதிகாரம் 213 அகத்திணையியல் 215 புறத்திணையியல் 226 களவியல் 244 கற்பியல் 260 பொருளியல் 268 மெய்ப்பாட்டியல் 280 உவமவியல் 295 செய்யுளியல் 309 மரபியல் 391 பொருட் குறிப்பகராதி I 406 பொருட் குறிப்பகராதி II 411 தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிர மணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986) பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் பொருளடக்கம் முதற் பகுதி தொல்காப்பியம் 1 மூன்று தமிழ்ச்சங்கங்கள் 3 இறையனா ரகப்பொருளும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் 9 தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெருமக்கள் 12 தொல்காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரே 14 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் 20 தொல்காப்பியனார் காலத் தமிழ்நாட்டெல்லை 21 தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் 31 வழக்கும் செய்யுளும் 32 தொல்காப்பியனாரும் அகத்தியனாரும் 36 புனைந்து வழங்கும் கதை 40 அகத்தியனார் 44 நிலந்தரு திருவிற் பாண்டியன் 51 பாண்டியன் அவையம் 56 அதங்கோட்டாசான் 60 தொல்காப்பியம் இயற்றமிழ் நூல் 63 ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் 64 படிமையோன் 72 தொல்காப்பியனார் காலம் 74 தொல்காப்பியத்தை யடியொற்றியது திருக்குறள் 75 தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் 77 தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது 83 தொல்காப்பியனார் சமயம் 109 இரண்டாம் பகுதி தொல்காப்பியம் நுதலிய பொருள் 149 எழுத்ததிகாரம் 150 நூன்மரபு 152 மொழிமரபு 154 பிறப்பியல் 155 புணரியல் 157 தொகைமரபு 161 உருபியல் 163 உயிர்மயங்கியல் 165 புள்ளிமயங்கியல் 168 குற்றியலுகரப் புணரியல் 172 சொல்லதிகாரம் 175 கிளவியாக்கம் 178 வேற்றுமையியல் 181 வேற்றுமை மயங்கியல் 184 விளிமரபு 190 பெயரியல் 191 வினையியல் 195 இடையியல் 201 உரியியல் 203 எச்சிவியல் 206 பொருளதிகாரம் 213 அகத்திணையியல் 215 புறத்திணையியல் 226 களவியல் 244 கற்பியல் 260 பொருளியல் 268 மெய்ப்பாட்டியல் 280 உவமவியல் 295 செய்யுளியல் 309 மரபியல் 391 பொருட் குறிப்பகராதி I 406 பொருட் குறிப்பகராதி II 411 பேராசிரியர் க.வெள்ளைவாரணணார் உரைநடை: 1. சங்ககாலத் தமிழ் மக்கள் 1948 2. இசைத்தமிழ் 1979 3. தில்லைப்பெருங்கோயில் வரலாறு 1984 4. திருவருட்பாச் சிந்தனை 1986 5. சைவசித்தாந்த சாத்திர வரலாறு (முதல் பகுதி) 2002 6. சைவசித்தாந்த சாத்திர வரலாறு (2ம் பகுதி) உரை 7. திருவருட்பயன் 1965 8. திருமந்திர அருள்முறைத் திரட்டு 1973 9. திருவுந்தியார் திருக்களிற்றுப்பாடியார் 1982 இலக்கணம் 10. தமிழிலக்கிய வரலாறு- தொல்காப்பியம் 1957 11. தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் 1962 12.தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம் 1971 உரைவளப் பதிப்பு 13. தொல்காப்பியம் - புறத்திணைஇயல் 1983 14. தொல்காப்பியம் - களவியல் 1983 15. தொல்காப்பியம் - கற்பியல் 1983 15. தொல்காப்பியம் - பொருளியல் 1983 17. தொல்காப்பியம் - உவமையியல் 1985 18. தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் 1986 19. தொல்காப்பியம் - செய்யுளியல் 1989 20. தொல்காப்பியம் - மரபியல் 1994 தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் அணிந்துரை திருவாளர் T. M. நாராயணசாமி பிள்ளை அவர்கள் M.A.B.L., M.L.C முன்னாள் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உலகியல் வழக்கும் இலக்கியப் பழமையும் ஒரு சேரப் பெற்று விளங்குள் மொழிகளும் நம் தமிழ்மொழியும் ஒன்றாகும். இது, காலந்தோறும் ஏற்படும் சிதைவுகளுக்கு உள்ளாகாது எதிர்காலத்தில் அமையவேண்டிய புதிய புதிய ஆக்கங்களையும் பெற்று எக்காலத்தும் நிலைபெற்று வழங்கும் பண்புடையதாக நம் முன்னோர்களாற் போற்றி வளர்க்கப்பெற்றுள்ளது. இவ்வுண்மை கருதியே கவிச் சக்கரவர்த்தி கம்பரும் என்றுமுள தென் தமிழ் என இதனைப் பாராட்டிப் போற்றியுள்ளார். இவ்வாறு நம் தமிழ் மொழியை இனிய எளிய இலக்கண வரம்புகோலிப் போற்றி வளர்த்த பெரியோர்களுள் ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஒருவர். இவர்செய்த தொல்காப்பியம் என்ற நூல், தமிழுக்கு எக்காலத்தும் அமையவேண்டிய இயற்கை. வளர்ச்சி முறையை மனத்துட்கொண்டு இயற்றப்பட்டதாகும். எழுத்தின் திறனாலும் சொல்வளத்தாலும் பொருள்களைத் தெளிவாக அறிவிக்கும் வழக்கும் செய்யுளும் ஆகிய இருவகை நெறிகளாலும் தமிழ்மொழி முற்காலத்தில் எவ்வாறு இலக்கண வரம்பு கோலி வளர்க்கப்பெற்றது என்ற விவரத்தைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்வதற்கு வழிகாட்டியாக விளங்குவது இத்தொல்காப்பியமே. இதன்கண் தமிழ் எழுத்துக்களின் பிறப்பினை விளங்கக் கூறும் பிறப்பியல் என்ற பகுதி, இக்கால ஒலிநூல் முறைக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கும் அழகினை அத்துறையில் வல்ல அறிஞர்கள் வியந்து பாராட்டு கின்றார்கள். இந்நூல் தமிழின் பழங்கால இலக்கண அமைப்பை விளக்குவதாயினும், அப் பழமையினையொட்டிக் காலந்தோறும் இயல்பாக நிகழ்தற் குரிய புதிய மாற்றங்களுக்கும் இடந்தரும் நிலையில் அமைந்திருத்தலால், இனி எதிர்காலத் தமிழிலக்கியங்களுக்கும் இதுவே தமிழிலக்கணம் எனச் சொல்லம்படி புதுமைப் பொலிவுடைய தாகவும் விளங்குகிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கந்தரும் முறையில் அமைந்த தொல் காப்பியமாகிய இலக்கணத்தினை மாணவரும் பிறரும் ஆர்வத் துடன் படிக்கத் தூண்டும் முறையில் தமிழிலக்கிய வரலாற்றில் தொல்காப்பியம் என்ற முதற்பகுதி, இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறையின் சார்பில் வெளி வருகிறது. தொல்காப்பியம் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த அரிய செல்வம். அதனால் தமிழின் தொன்மை, எழுத்துத்திறன், சொல்வளம், பொருள்மாண்பு ஆகிய எல்லாம் நன்கு விளங்கும். அதுஒரு ஒப்பற்ற இலக்கணமென்று கற்றுணர்ந்தோரால் போற்றப்படுகிறது. இந்நாளில் பாஷைநூலில் காணப்படும் விதிகளெல்லாம் அதில் இருக்கின்றனவென்று இப்பொழுது மேல்நாட்டு சாதிர உதவிக்கொண்டு கற்றுணர்ந்தோர் கருதுகிறார்கள் Dr. சங்கரன் என்பவர் அது இலக்கணத்துறையில் ஓர் அரிய சுரங்கம் என்றும், அதை ஆராய்ச்சிசெய்து வேண்டிய கருத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் எழுதியிருக் கிறார். அப்படி ஆராய்ச்சிசெய்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவிய பெருங் கொடைவள்ளல் ராஜா சர். அண்ணமலைச் செட்டியார் அவர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கத்தை வெளியிட்டிருக்கிறார். அது என்னவெனில் தமிழினுடைய செல்வத்தை உலகத்திற்கு எடுத்து விளக்கி வழங்கவேண்டுமென்பது. இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதில் இந்நூலிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்நூலை ஆராய்ச்சிசெய்து வெளியிடுபவர் தமிழராய்ச்சித் துறை விரிவுரையாளர் வித்துவான் திரு க. வெள்ளைவாரணர் ஆவர். இவர் நல்ல தமிழ்ப் புலமையும் அடக்கம் முதலிய நற்பண்புகளும் வாய்க்கப்பெற்றவர். தமிழார்வத்துடன் பணிபுரியும் இவருக்கு எனது நல்வாழ்த்து என்றும் உரியதாகும். தொல்காப்பியமாகிய இந் நூலின் அருமை பெருமைபற்றி அறிஞர்கள் மேலும் ஆராய்ந்து கூறும் சிறந்த உண்மைகள் நம் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பெறும் என்பதனைத் தமிழ் அன்பர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாமலை நகர் தி. மு. நாராயணசாமி பிள்ளை 27.12.57 முதற் பதிப்பின் முகவுரை பேராசிரியர், வித்துவான் திரு G. சுப்பிரமணி பிள்ளை M.A. B.L. அவர்கள், முன்னாள் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அறிவு திரு. ஆற்றல் என்பவற்றாற் சிறந்து நாகரிகம் பெற்று விளங்கும் நாட்டினர் பலர் தம்முடைய நாட்டு வரலாறு, மொழி வரலாறு இலக்கிய வரலாறு முதலியவற்றை நன்கு ஆராய்ந்து தம்நாடும் மொழியும் இனமும் சிறப்புடன் திகழும்வண்ணம் உள்ளத்தை மிகழ்விக்கும் உயர்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு வருகின்றனர். சென்ற காலத்தில் தம் முன்னோர்கள் போற்றி வளர்த்த பேரறிவுச் செல்வங்களாகிய கலைகளின் பழுதிலாத் திறத்தையும் இனி எதிர்காலத்தில் அத்தகைய சிறப்புக்கள் பலவற்றை எய்தி மகிழவேண்டும் என்னும் பேரார்வத்தையும் வளர்க்கும் ஆராய்ச்சி நூல்கள் நம் தமிழ் மொழிக்கும் இன்றியமையாதன எனவுணர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் ஆராய்ச்சி நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட்டு வருவதனை யாவரும் அறிவர். பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் சார்பில் வெளியிடப் பெற்றுவரும் தமிழிலக்கிய வரலாறு பற்றிய தொகுதிகளுள் முதல் தொகுதியாக இப்பொழுது வெளியிடப் பெறுவது, செந்தமிழ்த் தொன்னூலாகிய தொல்காப்பியத்தைப் பற்றிய இலக்கிய வரலாறாகும். நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் காலத்தினாலும் பொருட் சிறப்பினாலும் தொன் மையும் சிறப்பும் பெற்று விளங்குவது தமிழியல் நூலாகிய தொல்காப்பியமே என்பது தமிழறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இந் நூல், தமிழ் மொழியின் இலக்கணத்தையும் தமிழர் வாழ்வியலின் சிறப்பினையும் ஒருங்குணர்த்தும் திட்பமும் தெளிவும் வாய்ந்த தென்பதும், இந் நூலிற் கூறப்பட்டுள்ள அரும்பொருள்களை உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டு மானால், இந்நூலாசிரியராகிய தொல்காப்பியனார் வாழ்ந்த காலம். இந் நூல் இயற்றப் பெற்றதன் நோக்கம், இந்நூலின் அமைப்பு ஆகியவற்றைச் சமயச் சார்பு முதலியன பற்றி நடுநிலை திறம்பாமல், கிடைக்குஞ் சான்றுகளை வைத்துக்கொண்டு உண்மையை யுணரும் உயர்ந்த நோக்கத்துடன் ஆராய்ந்து வரையறை செய்துகொள்ளுதல் வேண்டும் என்பதும் அறிஞர் பலர் நன்கறிந்தனவே. காய்தல் உவத்தலகற்றி ஆராயும் இம்முறையில் தொல்காப்பியமாகிய இந்நூலிற் கிடைக்கும் அகச்சான்றுகளையும், மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளத்தக்க புறச்சான்றுகளையும், தக்க ஆதாரங்களாகக் கொண்டு, ஆதாரமற்ற கற்பனைச் செய்திகளை அறவே களைந்து, ஆசிரியர் தொல் காப்பியனாரைப் பற்றியும், அவர் இயற்றித் தந்த அரும் பெறல் நூலாகிய தொல்காப்பியத்தைப் பற்றியும் உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்விலக்கிய வரலாறு அமைந்திருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இவ்வாராய்ச்சி நூலைச் செவ்வனே இயற்றித் தந்த பெருமை, தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர் திரு க. வெள்ளை வாரணனாரைச் சாரும். அவர்கள், பெரும்பாலும் இலக்கணம் என்றால் பலரும் விலக்க நினைக்கும் இக்காலத்திலே, அதில் பேரார்வம் காட்டிப் பெரிதும் முயன்று ஆராயத் துணிந்தார்கள். அன்னார் ஆராய்ச்சி மாணவராய் விளங்கிய நாளிலும், பின் ஆசிரியராய் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தபோதும் தொல்காப்பியத்தையே பாடமாக விரும்பி எடுத்துக் கொண்டார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மாணவராய்த் தொல்காப்பிய ஆராய்ச்சிக்கும் துணைபுரிந்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய தகுதியறிந்தே இப்பணி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இத்துறையிலே முயற்சி செய்து இவ்வரிய ஆராய்ச்சி நூலைத் திறம்பெற ஆக்கியுள்ளார்கள். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துளது. இதன் முதற்பகுதி, தொல்காப்பியத்தின் தோற்றம் பற்றியும், இந் நூலாசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலம், நூல் செய்த காரணம் முதலியன பற்றியும், இறையனார் களவியலுரையாசிரியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க் கினியர் முதலிய பண்டைச் சான்றோர் வெளியிட்டுள்ள அரிய கருத்துக்களையும் அவைபற்றி இக்கால ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்களையும் ஒப்பவைத்து ஆராய்ந்து விளக்கும் முறையில் அமைந்துளது. இதன்கண் தொல்காப்பியனார் காலம் சமயம் முதலியன பற்றி இக்காலத்தின் அறிஞர் சிலர் வேறுபடக் கூறிய முடிபுகள் சில தக்க காரணங்காட்டி மறுக்கப்பட்டிருத்தல் காணலாம். இதன் இரண்டாம் பகுதி, தொல்காப்பியம் நுதலிய பொருளைச் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்குவது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றதிகாரங்களிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இலக்கண விதிகளை முன்னொடுபின் மலைவற ஒரு நெறிப்படத் தொகுத்தும் வகுத்தும் விளக்கும் முறையில் எளிய உரைநடையாக எழுதப்பெற்றுள்ளது. இதன்கண் தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு உரைகாணும் முறையில் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய பண்டை யுரையாசிரியர்கள் எழுதிய உரைவிகற்பங்கள் பல இடையிடையே நூலகத்தும் அடிக் குறிப்பிலும் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. இப்பகுதி பல்கலைக் கழக மாணவர்களும் பிறரும், தொல்காப்பிய நூற்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைசெய்யும் என நம்பிகின்றேன். கோ.சுப்பிரமணியம் முன்னுரை உலக மக்களது வளமிக்க நல்வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்குவோர் புலவர் பெருமக்களாவர் அவர்களது புலமைத் திறத்துக்குரிய நிலைக்களமாக விளங்குவது அவர்களாற் பயிலப் பெற்று வழங்கும் மொழியாகும். நிலத்தினது வளத்தினை அதன் கண் தோன்றிவளரும் நெல் முதலிய பயிர்கள் நன்கு புலப்படுத்துவது போன்று, ஒரு நாட்டில் வாழும் மக்களது அறிவின் திறத்தை இனிது புலப்படுத்துவது அவர்களாற் போற்றிவளர்க்கப் பெறும் தாய்மொழியேயாகும்: மக்கட்குலத்தார் தமது உள்ளக் கருத்தை மற்றவர் உணர உணர்த்தியும், பிறரது மனக்கருத்தைத் தாம் தெளிய உணர்ந்தும் இவ்வாறு வாழ்க்கைத் துறையில் ஒருவர் மற்றவர்க்குத் துணை நின்று வளம் பெறுதற்குரிய சிறந்த கருவியாக விளங்குவது மொழி. மொழியின் வாயிலாக அறிவின் ஒட்பமும் அதன் பயனாக வினைத்திட்பமும் நற்பொருளாக்கமும் வளர்ந்து சிறத்தல் இயல்பு. இம்முறையால் மொழியின் துணை கொண்டு மக்களது நல்லறிவினையும் செயலாற்றலையும் நாட்டின் வளங்களையும் மேன்மேலும் வளர்க்க வல்ல பெரியோர்களே நல்லிசைப் புலவரெனச் சிறப்பித்துப் போற்றப்பெறுவர்: உலகியற் பொருள்களையும் மக்கள் வாழ்க்கை இடையறவின்றி நெடுங்காலம் தொடர்ந்து நிகழ்தற்குரிய நெறிமுறைகளையும் நுண்ணிதின் ஆராய்ந்து தாம் கண்டுணர்ந்த அரியஉண்மைகளைப் பாட்டாகவும் உரையாகவும் சுவைபெற அமைத்து மக்களுக்கு அறிவும் இன்பமும் வழங்குதல் இப்புலவர் பெருமக்ககளது தொழிலாதலின், இவர்களை அறிவுக்கொடைப் பெருவள்ளல்கள் எனப் போற்றுவர் பெரியோர். இத்தகைய புலமைச் செல்வர்களால் இயற்றப் பெற்றுக் கற்போரது அறிவினை விளங்கச் செய்யும் ஆற்றலும் அழகும் அமையப்பெற்ற அரிய நூல்களே நன்மக்களால் உயர்ந்த இலக்கியங்களாக மதித்துப் போற்றப் பெறுகின்றன. உலகவாழ்க்கையிற் காணப்படும் நலந்தீங்குகளைத் தெளிய உணர்த்தி மக்களைத் தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் ஒளிவளர் விளக்குகளாகத் திகழ்வன இலக்கியங்களாகும். சென்ற காலத்தில் தம்முன்னோர் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் அன்னோர்பெற்ற பெருநலங்களையும் தாம் இனி எதிர்காலத்தில் முயன்று பெறவேண்டிய பலவகைச் சிறப்புக்களையும் இப்பொழுதுள்ள நிகழ்கால வாழ்க்கையுடன் இணைத்து நோக்கி வாழ்க்கைத் துறையில் முன்னேறுதற்குரிய நல்லுணர்வை வழங்கி மக்கட்குலத்தாரை மேன்மேலும் உயர்ந்த வாழ்க்கையில் நிலை பெறச்செய்யும் பேராற்றல் இவ்விலக்கியங்களுக்கு உண்டு. இவ்வாறு மக்களது நல்வாழ்க்கையை விளக்கமுறச் செய்வன இலக்கியங்களாதலின் இவற்றை இலங்கு நூல் எனச் சிறப்பித்தார் திருவள்ளுவர். தொல்காப்பியம் முதலாக உள்ள சிறந்த இலக்கண நூல்கள் சிலவும், சங்கத்துச்சான்றோர் மக்களது வாழ்க்கையினைச் சொல்லோவியஞ்செய்து காட்டும் வகையில் இயற்றியுதவிய பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்பனவும், மக்கள் அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தற்குரிய நெறிமுறைகளை விரித்துரைக்கும் வாழ்வியல் நூலாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளும், அதனையடிபொற்றியமைந்த நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்களும், சேரமுனிவராகிய இளங்கோவடிகள் அருளிய இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலையாகிய சிலப்பதிகாரம் முதலாகவுள்ள அழகிய பெருங்காப்பியங்கள் சிலவும், எல்லாம் வல்ல இறைவனது திருவருளை நிரம்பப்பெற்ற நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள நூல்கள் பலவும், சமய நூல், ஒழுக்கநூல், சோதிடநூல் முதலிய பலவும், மருத்துவ நூல்கள் பலவும், புராணங்கள் பலவும், கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்கள் பலவும் ஒருங்கியைந்த தொகுதியே இக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூற்கருவூலமாகும். தமிழ் மக்களது பேரறிவுச் செல்வங்களாகிய இந்நூல்களின் தோற்றம். இவற்றை இயற்றித்தந்த ஆசிரியர்களது வரலாறு, அவர்கள் காலத்துத் தமிழ் நாட்டின் அரசியல் நிலை, மக்களது வாழ்க்கைமுறை, சமயநிலை, நூல் நுதலிய பொருள் ஆகியவற்றை நன்காராய்ந்த கால முறைப்படி தமிழிலக்கியங்களின் வரலாற்றினை எழுதி வெளியிடுதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த தமிழ்ப்பணியாயிற்று. இக்காலத்துள்ள பழைய தமிழ் நூல்களின் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் முற்காலத்திருந்த தமிழ்நூல் வகையினையும் செய்யுள் வகைகளையும் உலக வழக்காகிய நெறிமுறைகளையும் அறிதற்குச் சிறந்த கருவியாகவும் விளங்குவது தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியமே யென்பது தமிழறிஞர் பலர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். ஆகவே இத் தொல்காப்பியத்தைப் பற்றிய வரலாறு தமிழிலக்கிய வரலாற்று வரிசையில் முதற் பகுதியாகக் கொள்ளப்பெற்றது. ஒரு மொழி இலக்கண இலக்கியவரம்பின்றி நாளும் ஒருவகையாய்த் திரிபடைந்து மாறுபடுமானால் முன்னுள்ளோர் கருத்தைப் பின் வந்தவர்களும் இன்றுள்ளார் கருத்தை இனி வருவோர்களும் உணர்ந்து கொள்ளுதற்கு வழியின்றி அம்மொழியின் வழக்கியல் சிதைந்து கெடுதல் இயல்பே. பல்லாயிரம் ஆண்டுகளாக வளம்பெற்று வரும் நம் தாய்மொழியாகிய தமிழ், வேற்றுமொழிக் கலப்பாலும் மக்களது சோர்வினாலும் சிதைந்து கெடாதபடி அதற்கு வரம்புகோலிப் போற்றி வளர்ந்த பெருமை தமிழ் முதல் நூலாகிய இத்தொல் காப்பியத்திற்குரிய தனிச் சிறப்பாகும். இந்நூல், பெயரளவில் இலக்கணநூல் வகையிற் சேர்த்துக் கூறப்படினும் இதன்கண் எழுத்தும் சொல்லும் பொருளும் என வகைப்படுத்து விளக்கப்பெறும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய மொழிநடை பற்றிய தமிழ் இலக்கண விதிகளைக் கூர்ந்து நோக்குங்கால், அவற்றுக்கெல்லாம் நிலைக்களமாக எத்துணையோ சிறந்த பல இலக்கியங்களும் அவைபற்றிய விதிமுறைகளும் நம் தமிழ் மொழியில் நிலைபெற்று வழங்கி யிருத்தல் வேண்டுமென்பதும், இந் நூலாசிரியராகிய தொல்காப்பியனார் தம் காலத்திலும் தமக்கு முன்னும் இயற்றப் பெற்று வழங்கிய அந் நூல்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றின் இயல்பனைத்தும் விளங்கத் தொல்காப்பியமாகிய இந்நூலை இயற்றி உதவினார் என்பதும், எனவே இந்நூல் பழந்தமிழிலக்கியங்களின் இயல்பினையும் பிற் காலத்தில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத நல்லியல்புகளையும் தன்பாற்கொண்டு திகழும் சிறப்புடைய தென்பதும் நன்கு புலனாம். தமிழியல் நூலாகிய இத் தொல்காப்பியத்தைப் பற்றியும் இதனை இயற்றியுதவிய ஆசிரியர் தொல்காப்பியனாரது வரலாற்றைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலநிலைபற்றியும் உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால் இத் தொல் காப்பியம் முழுதினையும் இதற்கு இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய பண்டையுரையாசிரியப் பெருமக்கள் அரிதின் முயன்று எழுதியுள்ள உரைகளுடன் ஒப்புநோக்கிப் பயிலுதல் வேண்டும். இந் நூலைப் பற்றியும் இதன்பின் தோன்றிய சங்க இலக்கியங்களைப் பற்றியும் நெடுங்காலமாக வழங்கிவரும் செய்திகளையும் இறையனார் களவியலுரையாசிரிய ர், அடியார்க்குநல்லார் முதலிய பண்டைச் சான்றோர்கள் கூறியவற்றையும் இக்கால ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கூறும் கருத்துக்களையும் கூர்ந்து நோக்கித் தெளிதல் வேண்டும். சமயச்சார்பு இனச்சார்பு முதலியன பற்றாது காய்தலுவத்த லகற்றி ஆசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்தகாலம் இதுவென ஆராய்ந்து உண்மை காணுதல் வேண்டும். இவ்வகையால் தொல்காப்பியத்திற்குரிய அகச்சான்றுகளையும் சங்க இலக்கியங்கள் பிற்கால நூல்கள் உரைகள் முதலாகவுள்ள மதிப்பிற்குரிய புறச்சான்றுகளையும் தக்க ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பெற்றதே இவ்விலக்கிய வரலாறாகும். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. அவற்றுள் முதற்பகுதி, தொல்காப்பியமாகிய இந்நூல் தோன்றிய வரலாற்றைப்பற்றியும் இந் நூலை இயற்றிய அசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலம் சமயநிலை ஆகியவற்றைப் பற்றியும் விரித்துக் கூறுவதாகும். தொல்காப்பியனார் வாழ்ந்த காலம்பற்றியும் அவரது சமயம் பற்றியும் பண்டையுரையாசிரியர்கள் கூறியவற்றுக்கு மாறாக இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் கூறிய கொள்கைகளை ஆராய்ந்து துணிய வேண்டி யிருந்தமையால் இப்பகுதி சிறிது விரிவடைந்தது. தொல்காப்பியம் நுதலியபொருளை விளக்கும் நிலையில் அமைந்தது இதன் இரண்டாம் பகுதியாகும். இதன்கண் தொல் காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரமாகிய மூன்று அதிகாரங்களிலும் விரித்துரைக்கப் பெற்ற விதிகள் ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்நடையை அடியொற்றித் தொகுத்தும் வகுத்தும் விளக்கப்பெற்றன. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற் சொல்லப்பெறும் மெய்ப்பாடு, உவமம்பற்றிய விதிகளையும் யாப்பிலக்கண அமைப்பினையும் மரபினையும் இக்கால மாணவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவை பற்றிய கருத்துக்கள் இப் பிற்பகுதியில் கூடியவரை விடாது தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. இதன்கண் தரப்பெற்ற சூத்திர எண்கள் இளம்பூரணர் உரையை அடியொற்றி அமைந்தன. இந் நூலின் தொடர்பாக ஆராய்ந்துகண்ட குறிப்புக்கள் சில உள. இனி மேலும் ஆராய்ந்து காணவேண்டியன பலவாகும். அவை வாய்ப்பு நேருமானால் அடுத்த பதிப்பிற் சேர்க்கப்பெறும். இந்நூல் எழுதுதற்கு ஆதாரமாகவுள்ள ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுதவிய பெருமக்கள் எல்லோர்க்கும் எனது நன்றி உரியதாகும். ஒன்றிலும் பற்றாத எளியேனை இப் பல்கலைக்கழகத்தில் உண்டியும் உறையுளும் பெற்றுத் தமிழ் பயிலும் மாணவர்களுள் ஒருவனாக்கித் தமிழகமதிக்கும் தகைசான்ற பேராசிரியர்கள்பால் அரியபல நூல்களைப் பயிலச்செய்து இப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறையிற் பணிபுரியும் நல்வாய்ப்பினையும் உளமுவந்தளித்த பல்கலைக்கழகத் தந்தையும் பெருங்கொடை வள்ளலுமாகிய செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களது பேரன்பின் திறத்தை எழுமையும் மறவாது போற்றும் கடமையுடையேன். ‘jªija® x¥g® k¡fŸ’ vd MáÇa® bjhšfh¥ãadh® vL¤Jiu¤j gHbkhÊ¥ bghUS¡F ïy¡»akhŒ¤ j« jªijah® ÃWÉa brG§fiy Ãiyakh»a m©zhkiy¥ gšfiy¡fHf¤ij¤ j« f©bzd¥ ngÂ¥ ghJfh¤JtU« ïizntªj® br£oeh£lur® lh¡l® uh#hr® K¤ija br£oahut® fS¡F« gšfiy¡fHf¤ JizntªjU« ‘PhdK©lh¡ Fjš eykhF« eh£o‰nf’ v‹w bghUSiuia ís¤J£ bfh©L jÄœ ey« ts®¡F« brªjÄœ¥ bgUªjifí« M»a âUths® T.M. ehuhazrhÄ ãŸis M A., B.L., M.L.C. அவர்களுக்கு எனது அன்பு கனிந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியனவாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் தமிழிலக்கிய வரலாறு பற்றிய இம்முதற் பகுதியை எழுதுமாறு வகுத்துக் கொடுத்த பேராசிரியர் டாக்டர் A. áj«guehj¢ br£oah® M.A, Ph.D., அவர்களுக்கும் இந்நூல் சிறந்த முறையில் வெளி வருதற்கேற்ற ஆய்வுரைகளை அவ்வப்போது எடுத்துக்கூறி இதனைச் சிந்தித்து எழுதுதற்கேற்ற வாய்ப்பும் ஊக்கமும் வழங்கியதுடன் இந்நூலுக்குச் சிறந்ததொரு முகவுரையினையும் அன்புடன் எழுதி உதவிய பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் பேராசிரியர் வித்துவான் திரு G. சுப்பிரமணிய பிள்ளை, M.A., B.L., அவர்களுக்கும், யான் இந்நூலை எழுதி வருங்கால் ஆசிரியர் தொல்காப்பியனார் காலம் பற்றியும் பிற கொள்கைகள் பற்றியும் வேண்டும் திருத்தங்களை அவ்வப்பொழுது உடனிருந்து அன்புடன் கூறி உதவிய ஆராய்ச்சிப் பேரறிஞரும் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளரும் ஆகிய திரு T.V. சதாசிவ பண்டாரத்தார் அவர்களுக்கும் இந் நூல் விரைவில் வெளிவருவதற்கு வேண்டும் ஏற்பாடுகளை அன்புடன் செய்துதவிய பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத் துறைத் தலைவர் திரு J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலை விரைவில் வனப்புற அச்சியற்றி யுதவிய சென்னை ஸ்ரீ ராம பிரசாத் அச்சகத்தாரது பணி பாராட்டற்குரியதாகும். ஒல்காப் பெருமைத் தமிழின் சிறப்புணர்த்தும் தொல்காப் பியமெங்கே யானெங்கே -- பல்காலும் தோய்ந்தறியா தேன்சொல்லும் கொள்வர் துகள்தீர ஆய்ந்த அறிவினவர்; க.வெள்ளைவாரணன் முதற் பதிப்புரை தமிழ் நாட்டின் கண்ணெனத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழராய்ச்சித் துறையின் சார்பில் அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு வருவதனைத் தமிழ்மக்கள் நன்குணர்வர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழிலக்கிய வரலாறு என்னுந் தொகுதிகளுள் முதற்றொகுதி யாக அமைந்தது தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம் என்பதாகும். 1957-இலும் 1970-.இலும் வெளியிடப்பெற்ற இந்நூல், இப்பொழுது மூன்றாம் பதிப்பாக வெளிவருகின்றது. திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் 19-ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு காசிவாசி சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் தேவாரத் திருமுறைப் பரிசுக்கும் தமிழ் இலக்கண இலக்கிய வெளியீடுகட்கும் ஆக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவிய அறக்கட்டளையின் நிதியுதவி கொண்டு தமிழிலக்கிய வரலாறு தொல்காப்பியம் என்னும் இந்நூல் வெளியிடப் பெறுகின்றது. நல்ல தமிழ் நூல்கள் வெளிவருதற்கு அறக்கட்டளை வகுத்த திருப்பெருந்திரு சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகளையும், அவர்கள் நிறுவிய நல்லறங்களைப் பேணிக் காத்துச் செந்தமிழும் சிவநெறியும் இணைந்து வளம்பெறத் தாமே அறக்கட்டளைகள் பல நிறுவிப் புகழுருவெய்திய காசிவாசி திருப்பெருந்திரு. அருணந்தித் தம்பிரான் சுவாமிகளையும் பல்கலைக் கழகம் நன்றியொடு நினைவுகூர்கின்றது. தவப்பெருஞ் செல்வர்களாகிய அவ்விருவர் தம் திருப்பணி தமிழ்ப் பணிகள் மேலும் வளம்பெற்றோங்க வழிவகுத்து அருட்பணிபுரிந்துவரும் ஸ்ரீ காசி மடத்தின் தலைவரும் செந்தமிழ்ப் புலமை நலம் சிறக்கப் பெற்றவரும் தவச் செல்வரும் ஆகிய திருப்பெருந்திரு ஸ்ரீ காசிவாசி முத்துக் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கட்குப் பல்கலைக் கழகம் தன் நன்றியைப் புலப்படுத்துகின்றது. தமிழ்த் துறையின் சார்பில் இத்தகைய தமிழ்ப் பணிகள் பல தொடர்ந்து நிகழும் வண்ணம் ஆக்கமும் ஊக்கமும் உதவி ஆதரித்து வரும் பல்கலைக்கழக இணைவேந்தர் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் M.A. முத்தையா செட்டியார் Kt. B.A., D.Litt. அவர்களுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீதிபதி திரு B.S. சோமசுந்தரம், B.A. B.L., அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூல் விரைவில் வெளிவருவதற்கு வேண்டும் ஏற்பாடுகளை அன்புடன் செய்துதவிய பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பொறுப்பாளரும் தமிழ்த்துணைப் பேராசிரியரும் ஆகிய டாக்டர் ஆறு. அழகப்பன், எம்.ஏ. எம்.லிட் அவர்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும். இந்நூலை விரைவில் அழகுற அச்சிட்டு உதவிய அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தாரது பணி மகிழ்ந்து பாராட்டுதற் குரியதாகும். 1978 க.வெள்ளைவாரணன், தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் தமிழ்மக்களது பேரறிவின் கருவூலமாக இன்று காறும் நின்று நிலவுவது தொல்காப்பியம் என்னும் தமிழிலக்கண நூலாகும். இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் எனக் களவியலுரையாசிரியராகி ய நக்கீரனார் இந்நூலின் பழைமையையும் புலவர் போற்றும் வரம் புடைமையையும் குறித்துள்ளார்.1 இப்பொழுதுள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிற்கும் தொன்மையினாலும் ஆழ்ந்த பொருளுடைமையினாலும் மேம்பட்டுத் திகழ்வது தொல் காப்பியமாகிய இந்நூலேயாம். பின்வந்த தமிழிலக்கண ஆசிரியரெல்லோரும் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்துரைத்த ஆணையின் வழியே தம் நூல்களை யியற்றி யுள்ளார்கள். கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே2 எனப் பல்காப்பியனார் என்னும் பழம்புலவரொருவர் தாம் இயற்றிய பல்காப்பிய நூலிற் கூறிய புறனடைச் சூத்திரம் இவ்வுண்மையினைத் தெளிவுபடுத்துவதாகும். சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்படக்கிய பிண்டமாக இயற்றப்பெற்றது தொல்காப்பியமாகும்.1 இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது. ஒவ்வோரதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல் களால் இயன்றுள்ளன. எழுத்ததிகாரம் 483-நூற்பாக்களால் இயன்றது. சொல்லகதிகாரச் சூத்திரங்கள் 456; 463; 463, 453 என இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வ சிலையார் ஆகிய உரையாசிரியர்கள் முறையே வகுத்து உரை யெழுதியுள்ளார்கள். பொருளதிகாரச் சூத்திரங்கள் 656-ஆக இளம்பூரணர் பிரித்து உரை கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் கருத்துப்படி பொருளதிகாரத்தின் முதல் ஐந்தியல்களின் சூத்திரத் தொகை 248. பேராசிரியர் கருத்துப்படி பின்னுள்ள நான்கியல்களின் சூத்திரத் தொகை 417. முதல் ஐந்தியல்களின் சூத்திரங்களை 244-ஆகவும் பின் நான்கியல்களின் சூத்திரங்களை 412-ஆகவும் இளம்பூரணர் வகுத்துரைத்துள்ளார். தொல்காப்பியச் சூத்திரங்கள் இளம்பூரணருரைப்படி 1595-எனவும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரைப்படி1611-எனவும், கொள்ளவேண்டியுளது. சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர்கொண்ட தொகையினை ய நச்சினார்க்கினியருங் கொண்டார். தெய்வச்சிலையார் இம்மூவர்க்கும் வேறாகச் சொல்லதிகாரச் சூத்திரம் 453-எனக் கொண்டு உரை கூறியுள்ளார். எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம் ஒழுக்கிய வொன்பதோத் துள்ளும்-வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள் மேனூற்று வைத்தார் விரித்து தோடவிழ் பூங்கோ தாய் சொல்லதி காரத்துட் கூடிய வொன்பதியற் கூற்றிற்கும் -- பாடமாம் நானூற் றறுபத்து நான்கேநன் னூற்பாக்கள் கோனூற்று வைத்த குறி. பூமலிமென் கூந்தால் பொருளியலின் சூத்திரங்கள் ஆவவறு நூற்றறுபத் தைந்தாகும் -- மூவகையால் ஆயிரத்தின் மேலும் அறுநூற்றப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார். எனவரும் பழைய வெண்பாக்களில் மூன்றதிகாரங்களின் சூத்திரத் தொகைகள் முறையே குறிக்கப்பட்டன. மூன்றாவதாக வுள்ள வெண்பாவில் தொல்காப்பியச் சூத்திரங்களின் மொத்த எண்ணிக்கை 1610-எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவதாகவுள்ள வெண்பாவில் சொல்லதிகாரச் சூத்திரத்தொகை 464-எனக் குறிக்கப்பட்டதனைச் சேர்த்துப் பார்க்கச் சூத்திரத் தொகை 1612-ஆக உயர்கின்றது தொல்காப்பிய மூலத்தை அச்சிட்டவர்கள் ஒவ்வோரதிகாரத்திற்கும் ஒவ்வோருரை யாசிரியர் தொகையினை மேற்கொண்டு அச்சிட்டுள்ளார்கள். ஆகவே தொல்காப்பியச் சூத்திரத்தொகை கூடியுங் குறைந்தும் காணப்படுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தாம் விரும்பியவாறு சூத்திரங்களைப் பிரித்துங் கூட்டியும் பொருள் கூறியிருத்தலை நோக்குங்கால், இந்நூல் தெளிவாக வரையறுத்துக் கற்பிக்கும் மரபினை இடைக்காலத்தில் இழந்திருத்தல் வேண்டு மெனத் தோற்றுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்கள் பண்டைக் காலத்துப் பாண்டியர்கள் கல்வி வளர்ச்சி கருதிப் புலவர் பலரையும் ஒருங்கழைத்து மூன்றுமுறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்தார்கள் என்பது தமிழகத்தின் தொன்மை வரலாறாகும். முதற் சங்கம் கடல் கொள்ளப்பட்ட தென்மதுரையில் நிகழ்ந்தது. அதன்கண் அகத்தியனார், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகனார் நிதியின் கிழவன் முதலாக ஐஞ்ஞுற்று நாற்பத்தொன்பதின்மர் இருந்தனர். அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினர். அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் முதலாயின. இத் தலைச்சங்கம் 4440-ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இச்சங்கத்தினைத் தோற்று வித்துப் புரந்தவர்கள் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டியர் எண்பத்தொன்பதின்மராவர். அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர். அக்காலத்துப் புலவர் எல்லோரும் தமக்கு வரம்பாகக்கொண்ட தமிழிலக்கண நூல் அகத்தியம் என்பதாகும். இரண்டாவது சங்கம் கபாடபுரத்துத் தோற்றுவிக்கப் பெற்றது. இதனை நிறுவிப் புரந்த பாண்டியர்கள் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின் மராவர். அவருட் கவியரங்கேறினார் ஐவர். இதன்கண் இருந்து தமிழாராய்ந்தோர் அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தை யூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறுபாண்ட ரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரத்தை முதலிய ஐம்பத்தொன்பதின்மர். அவருள்ளிட்டு மூவாயிரத்தெழுநூற்றுவர் பாடினார். அவர்களாற் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலை யகவலும் முதலாயின. அவர்களால் தமிழிலக்கண நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகத்தியமுந் தொல்காப்பியமும் மாபுரணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் என இவை இச்சங்கம் 3700-ஆண்டுகள் நடைபெற்றது. இச் சங்கத்திறுதியிற் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது. கடல்கோளுக்குப்பின் உத்தரமதுரையாகிய கூடலிலே மூன்றாவது சங்கம் தொடங்கப் பெற்றது. இதனைத் தோற்று வித்துப் புரந்தோர் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத் திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன் பதின்மர். அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர். இதன் கண் அமர்ந்து தமிழாராய்ந்தோர் சேந்தம்பூதனார், அறிவுடை யரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை யாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலிய நாற்பத்தொன்பதின்மராவர். அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார். அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலாயின அவர்களால் தமிழிலக்கண நூல்களாக உடன்பட்டு வழங்கிய நூல்கள் அகத்தியமுந் தொல்காப்பியமுமாகும். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நடைபெற்றது. மேற்குறித்த மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றினையும் முதன்முதற் கூறியது இறையனார் களவியலுரையாகும். களவியலுரை கூறும் இவ்வரலாற்றினைத் தொல்காப்பிய வுரையாசிரியராகிய பேராசிரியரும் சிலப்பதிகார வுரையாசிரிய ராகிய அடியார்க்கு நல்லாரும் உடன்பட்டு வழங்கியுள்ளார்கள். ஆகவே களவியலுரை கூறுமாறு இடைச்சங்கமிருந்தார் தொல்காப்பியனார் என்பது எல்லா ஆசிரியர்க்கும் உடன்பாடாதல் இனிது பெறப்படும். இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாய் விளங்கிய தொல்காப்பியம் கடைச்சங்கத் திறுதியிலேயே சில பல ஆண்டுகள் பயிலப்படாது அருகியது. இறையனார் களவியல் தோன்றுதற்குக் களவிய லுரையில் காணப்படும் வரலாற்றால் இச்செய்தி உய்த்துணரப்படுகின்றது. பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. மக்கள் பசியாற் பெரிதும் வாட்டமுற்றனர். பாண்டியன் தன் அவைக்களப் புலவரையெல்லாம் அழைத்து, பெரியீர், இவ் வற்கட நாளில் உங்களைப் போற்றிக் காக்கும் ஆற்றலற்ற வனாயினேன். என் நாட்டு மக்கள் பஞ்சத்தால் பெரிதும் வருந்துகின்றனர். நீங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று மழைபெய்து நாடு செழித்தபின் வம்மின் என்று கூறினான். புலவர்களும் தாம்தாம் விரும்பிய ஊர்களிற் சென்று தங்கினார்கள் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. தனதுநாடு மழையால் வளம்பெற்றமை யறிந்து மகிழந்த பாண்டியன், மீண்டும் தமிழ் வளர்ச்சியிற் கருத்துடையனாகிப் புலவரையெல்லாம் அழைத்து வருக என எல்லாப் பக்கமும் ஆட்போக்கினான். பாண்டியனுடைய ஏவலாளர் தமிழ்நாடெங்கும் புலவர்களைத் தேடித் திரிந்து, எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் நிரம்பிய பயிற்சி யுடையாரைமட்டுங் கண்டு அழைத்து வந்து பொருளதிகாரம் வல்லாரைத் தாம் காணப்பெறாமையை அரசனுக்குத் தெரிவித்தனர். அதுகேட்ட பாண்டியன், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் ஆராய்வது பொருளதிகாரத்தையுணர்ந்து பயன் பெறுவதற்சன்றே? அத்தகைய பொருளதிகாரம் பெறேமே யெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனக் கவல்வானாயினன். அவனது கவற்சியை நீக்குதற்பொருட்டு ஆலவாயிற் பெருமானடி களாகிய இறைவன், தள்ளாப் பொருளியல்பாகிய அகனைந் திணையை விளக்கும் அறுபது சூத்திரங்களை இயற்றி, அவற்றை மூன்று செப்பேடுகளில் எழுதிப் பீடத்தின்கீழ் வைத்தருளினான். அவ்வேடுகள் திருவாலவாய்த் திருக்கோயில் இறைவற்கு வழிபாடு செய்யும் குருக்கள் கையில் அகப்பட்டன. ஏடுகளைப் படித்துப் பார்த்த அளவில் அவற்றில் எழுதப்பட்ட நூல் வாய்ப்புடைத் தாயதோர் பொருளதிகாரமாய்த் தோன்றியது. அதனையுணர்ந்த கோயிற் பூசகனாகிய பார்ப்பான், பொருளதிகாரம் பெறாது கவலும் மன்னனை யடைந்து அந்நூலைக் காட்டினான். மன்னனும் அந்நூலைப் பெற்று மகிழ்ந்து அந்நூலுக்குப் புலவர்களைக் கொண்டு உரைகாண முயன்றான். மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூலுக்கு1 நக்கீரனாரால் உரை கண்டு மதுரை உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன் மனாகிய குமாரசுவாமியால் மெய்யுரை கேட்கப்பட்டது2 என்னும் வரலாறு களவியல் உரைமுகத்திற் காணப்படுகின்றது. இச்செய்தியினை நோக்குங்கால், பாண்டியனாற் புரக்கப்பட்ட புலவர்கள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் கற்று வல்லராய்த் தமிழ் வளர்த்து வந்தார்கள் என்பதும், நெடுங்காலம் மழையில் லாமையாற் பாண்டி நாட்டிலேற்பட்ட கொடிய பஞ்சத்தின் காரணமாக அவர்கள் பாண்டி நாட்டைவிட்டு வேறுவேறிடங்களுக்குத் தனித்தனியே பிரிந்து சென்றனரென்பதும், மக்கள் பல்லாண்டுகளாகப் பசியால் வாடியநிலையில் கல்வியின்பால் உள்ள வேட்கை குறையவே உயர்ந்த கல்வியாகிய பொருளதிகாரத்தையறிவுறுத்தும் புலவர்களும் தம்பணியில் தளர்வுற்றனர் என்பதும், ஆகவே பாண்டியனுடைய ஏவலாளர் பொருளதிகாரம் வல்லாரைக் கண்டு அழைத்துச் செல்லுவதற் கியலவில்லை யென்பதும், களவியலுரை யாசிரியரால் எழுத்துஞ் சொல்லும் பொருளும் எனக் குறிக்கப்பட்ட அதிகாரங்கள் இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாகிய தொல்காப்பியத்தைச் சார்ந்தன என்பதும் நன்கு துணியப்படும். பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்பட்டிலோம் என்புழிப் பொருளதிகாரம் வல்லார் எனக் குறிக்கப்பட்டவர், தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்களை மனப்பாடமாக ஓதிப் பொருள் விரித்துரைக்க வல்ல ஆற்றலுடையோரேயாவர். பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்பட்டிலோம் எனவே பொருளதிகாரப் பகுதியும் கிடைக்கவில்லையென்பது நன்கு தெளியப்படும். தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரப்பகுதி கிடைத்திருக்குமானால் அறுபது சூத்திரத்தாற் சுருங்கிய நூலாக இயற்றப்பெற்ற இறையனார் களவியலுக்கு உரை காணவேண்டிய இன்றியமையாமை நேர்ந்திராது. கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் பாண்டி நாட்டில் தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதி திருத்தமாக வழங்கவில்லை யென்பது மேற்குறித்த இறையனாரகப் பொருள் வரலாற்றால் உய்த்துணரப்படும். இறையனாரகப் பொருளின் தோற்ற வரலாறு புனைந்துரையாக எழுதப்பட்டிருத்தல் கூடும் என அறிஞர் சிலர் எண்ணுவர். எனினும் அந்நூலின் உரையாசிரியரால் தம் காலத்து வழங்கியனவாகக் குறிக்கப்பட்ட முச்சங்கங்களின் வரலாறு மெய்ம்மையுடையதே யெனக் கொள்ள வேண்டியுளது. இவ்வரலாற்றிற் காணப்படும் பெயர்கள், ஆண்டுக் கணக்கு முதலியவற்றிற் காலப் பழமையாற் சில புனைந்துரைகள் இடம் பெற்றிருத்தல் கூடும். அதுகொண்டு பண்டை நாளில் தமிழ்ச் சங்கங்களே நடைபெறவில்லை யெனக் கூறுவது பொருந்தாது. இறையனார் களவியல் இயற்றப்பெற்றதற்கு ஒட்டக்கூத்தர் கூறும் மற்றொரு காரணம் இவண் ஆராய்வதற்குரியதொன்றாம். கூத்தர் தாம் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழிற் காப்புப் பருவத்தில், வடுவில் காப்பிய மதுர வாய்ப்பொருள் மரபு வீட்டியதால் வழுதி யாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடுநாள் அடைவுகோத்தன அமுத சூத்திரம் அறுபதாய்ச் சமைநூல் அமரர் கீழ்ப்பட அறிஞர் மேற்பட அருளு மூர்த்திகளே என இறைவனைப் போற்றுகின்றார். இப்பாடலில் வடுவில் காப்பியம் என்றது, குற்றமற்ற தொல்காப்பியத்தை. மதுரவாய்ப் பொருள் மரபு என்றது, இனிமையமைந்த பொருளிலக்கணத்தைக் கூறும் பொருளதிகாரப் பகுதியை. தொல்காப்பியப் பொருளதிகார மரபு பாண்டி நாட்டில் அரசியல் ஆட்சியின் மாறுபாடு காரணமாகச் சிதைந்ததென்பது, வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள் மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடும் நாள் என வருந் தொடராற் புலப்படுத்தப்பட்டது. தமிழுக்கே சிறப்பாக வுரிய பொருளதிகார மரபு சிதைந்து அழியும் நிலையிற் பாண்டி நாட்டு ஆட்சி முறை குழப்பமடைந்த தென்றும், அக்காலத்தில் நாட்டிலேற்பட்ட அரசியற் குழப்பத்தை மாற்றி அரசியலை ஒழுங்குபடுத்த வேண்டுமென மதுரை நகரப் பெருமக்கள் சோழமன்னனை யழைத்து முறையிட்டனரென்றும், அந்நிலையில் மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமான், கூடல் நகர மாந்தரது வேண்டுகோளை நிறைவேற்றித் தேவரமுதத்தை யொத்து அண்ணிக்கும் அறுபது சூத்திரங்களால் முறைப்பட அமைந்த களவியல் என்னும் பொருளிலக்கண நூலைப் புலவர் என்னும் பெயர்க்குரிய தேவர்கள் கீழ்ப்படவும் அத்தேவர்களினும் தமிழ் மக்கள் புலமைத் துறையில் மேற்பட்டு விளங்கவும் அருளிச் செய்தனன் என்றும் மேற்காட்டிய பாடலிற் கவிச் சக்கரவர்த்தி யாகிய கூத்தர் குறித்துப் போற்றுகின்றார். இக்குறிப்பு நுணுகி நோக்குதற்குரிய வரலாற்று நிகழ்ச்சியினைச் சுட்டுவதாகும். களவியலுரைத் தொடக்கத்திற் கூறப்பட்ட நிகழ்ச்சிக்கும் கூத்தர் குறித்தவற்றிற்கும் சிறிது வேறுபாடு காணப் பெறினும், தொல்காப்பியப் பொருளதிகாரம் வழக்கு வீழ்ந்ததும் இறையனார் களவியல் புதுவதாக இயற்றப்பெற்றதும் ஆகிய செய்திகள் ஒத்துக் காணப்படுகின்றன. பொருளதிகாரம் வல்லாரைக் காணப் பெறாமைக்குப் பாண்டி நாட்டிற் றோன்றிய பன்னீராண்டு வற்கடமே காரணம் என்பது களவியலுரையின் கருத்தாகும். பாண்டி நாட்டில் தொல்காப்பியப் பொருள் மரபு சிதைந்ததற்கு அந்நாட்டிற் றோன்றிய அரசியற் குழப்பமே காரணம் எனக் கூத்தர் குறிப்பிடுகின்றார். தம் பாடல்களில் தமிழ் நாட்டின் வரலாறுகளை உள்ளவாறு விரித்துரைக்கும் நோக்கத்தினை மேற்கொண்ட ஒட்டக்கூத்தர் இறையனார் களவியலின் தோற்றத்தைத் குறித்துக் கூறிய இச்செய்தியினை முழுதும் புனைந்துரையெனக் கொள்ளுதற்கு இடமில்லை. களவியலுரை யாசிரியரும் ஒட்டக் கூத்தரும் கூறிய இரு வேறு காரணங்களாலும் தொல்காப்பியப் பொருளதிகார மரபு பாண்டி நாட்டில் வழக்கொழிந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதல் நேரிதாகும்.. இங்ஙனம் பாண்டி நாட்டில் ஆட்சி மாறுபாடு காரணமாகப் பொருளதிகாரமரபு சில காலம் வழங்குதலொழியினும் தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளில் அறிஞர்களிடையே தொடர்ச்சியாகப் பயின்று பாடஞ் சொல்லப் பெற்று வழங்கி வந்தது என்னும் உண்மை அந்நூலுக்கு ஈடாக இயற்றப்பெற்ற இறையனார் களவியலால் இனி துணரப்படும். இறையனாரகப்பொருளும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் களவியல் நூல் இறைவனா லியற்றப்பெற்றதென்னும் கொள்கை இடைக்காலத்தில் வாழ்ந்த பெரியோர் எல்லாரானும் உடன்பட்டு வழங்கப்பட்டுளது.1 எனினும் இக்கொள்கையை உலகியலில் நின்று ஆராய்வார்க்கு இறையனார் களவியல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கற்றுவல்ல புலவரொரு வரால் அகப்பொரு ளிலக்கணத்தைக் சுருக்கமாகக் கூறுங் கருத்துடன் இயற்றப்பெற்றதே என்னும் மெய்ம்மை விளங்காமற் போகாது கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் (இறை -- சூத். 1) மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப ( ,, 6) முன்னுறு புணர்ச்சிக் குரிய என்ப ( ,, 12) அறியக்கிளந்த இடமென மொழிப ( ,, 18) ஆயிரண் டென்ப வரைத லாறே ( ,, 24) புரைவதென்ப கற்பாலான ( ,, 25) வரைதல் வேட்கைப் பொருள என்ப ( ,, 30) திங்க ளிரண்டின் அகமென மொழிப ( ,, 32) கழிந்து சேட்படூஉம் இயற்கைய என்ப ( ,, 52) சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர் ( ,, 54) எனக் களவியல் நூலாசிரியர் தாம் கூறும் கருத்துக்களை முன்னோர் மொழி பொருளாகக் கொண்டெடுத்து மொழி கின்றார்.1 தொல்காப்பியனார் மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்றாராக, இறையனார் அந்தணரருமறை மன்ற லெட்டனுள் எனச் சிறப்பித்துரைக்கின்றார். இயற்கைப் புணர்ச்சியைக் காமப் புணர்ச்சி எனத் தொல்காப்பியர் கூறியவாறே இவரும் கூறுகின்றார். இந்நூற் சூத்திரங்களிற் பெரும்பாலன, தொல்காப்பியத்தின் வழியே இயற்றப்பட்டனவாதலின், தொல்காப்பியச் சூத்திரங் களுக்குப் பொருள் விரிப்பன போன்று அமைந்துள்ளன. இந் நூலாசிரியராகிய இறையனார் தொல்காப்பியனார் கூறிய பொருளையேயன்றித் தொல்காப்பியச் சூத்திரங்களையும் சூத்திரப் பகுதிகளையும் தம் நூலில் ஆங்காங்கே இணைத்துக் கூறியுள்ளார்.2 தொல்காப்பியத்திற் கூறப்படாதனவும் கால நிலைமைக்கேற்ப ஒரு சில சூத்திரங்களில் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. இவை யெல்லாவற்றையும் உற்றுநோக்கி ஆராயும் வழி, களவியல் என்னும் இந்நூல், இறையனார் என்னும் பெயரினராகிய புலவரொருவரால் தொல்காப்பியத்தின் வழி நூலாக இயற்றப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இறையனார் களவியல் என்னும் இந்நூலுக்குக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைகண்டார் என்னும் செய்தியினைப் பண்டைப் பேராசிரியர் பலரும் உடன்பட்டு மொழிதலால்2 இந் நூலாசிரியராகிய இறையனார் கடைச்சங்கப் புலவராகிய நக்கீரனார்க்குக் காலத்தாற் சிறிது முற்பட்டவராதல் வேண்டும். குறுந்தொகையில் தொகுக்கப்பட்ட கொங்கு தேர் வாழ்க்கை என்னும் பாடலைப் பாடிய இறையனார் எனப் பெயரிய கடைச் சங்கப் புலவரே1 இந்நூலாசிரியராயிருத்தலுங்கூடும். இந்நூலின் உரைமுகப்பில் இதற்குத் தெய்வத்தன்மை கற்பித்துக் கூறிய உரைப்பகுதி பின் வந்தோரொருவரால்2 இந்நூலைச் சிறப்பித்தல் வேண்டிப் புனைந்தெழுதப் பெற்றதே என ஆராய்ச்சியாளர் துணிந்து கூறுவர். இந்நூலின் உரைப்பகுதியிற் சில, நூலாசிரியராகிய இறையனார் கருத்தொடு முரணுவனவாகவும் உள்ளன. களவு, கற்பு என்னும் ஒழுகலாறு இவ்வுலகில் நிகழும் உண்மை நிகழ்ச்சியையே குறிக்கும் என்பதனை. களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர் உளநிக ழன்பின் உயர்ச்சி மேன என இறையனார் தெரிவித்துள்ளார். களவியலுரை யாசிரியரோ இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது எனக் கூறுகின்றார். மக்கள் நுதலிய அகனைந்திணை என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுங் கருத்தினையே இறையனாரும் தம் நூலிற் குறித்துள்ளார். இங்ஙனமே இறையனார் தம் நூலகத்து எடுத்தாண்ட தொல்காப்பியச் சூத்திரப் பகுதிகளின் உரையிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை யீண்டு விரிப்பிற் பெருகுமாதலின் இருநூல்களையும் அறிஞர் ஒப்பு நோக்கியுணரற்பாலார். தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெருமக்கள் இறையனார் அகப்பொருளுக்கு முதல் நூலாக விளங்குந் தொல்காப்பியம் கடைச் சங்கத்திறுதிக் காலத்திற் பாண்டி நாட்டிற் பயிற்சி குன்றியதென்பதனையே மேற்காட்டிய களவியலுரையின் வரலாறு தெளிவுபடுத்துகின்றது. பிற வேந்தர் படையெடுப்பின் காரணமாகத் தோன்றிய அரசியற் குழப்பங் களாலும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வருத்திய பஞ்சக் கொடுமையினாலும் மக்கள் தமிழ் வளர்ச்சியிற் சோர்வுற்றமையால் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்தின் பயிற்சியும் நாளடைவில் குன்றுவதாயிற்று. அயலாரது கூட்டுறவால் உருத்திரியும் நிலையையும் எய்தியது. தமிழ் மக்களின் தொன்மை நாகரிகத்தொடு பொருந்தாத கருத்துக்கள் சிலவும் நூலுள் இடையிடையே ஏற்றியுரைக்கப்படுவன வாயின. இங்ஙனம் நூலின் பொருளமைதி பிற்காலத்தில் மாறுபட்டு முழுவதும் புலனாகாது மறைந்த இடர்நிலையில் தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதல் உரைகண்ட பெருமை உரை யாசிரியராகிய இளம்பூரண அடிகளுக்கே யுரியதாகும். இளம்பூரண அடிகளைப் போன்றே பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலிய பெருமக்களும் தொல்காப்பியத்தைப் பலமுறையும் பயின்று நுண்பொருள் கண்டு உணர்த்தியுள்ளார்கள். தொல்காப்பிய வுரையாசிரியர் களாகிய இப்பெரியோர்கள். ஆசிரியர் தொல்காப்பியனாரது கால நிலைமையை நன்குணரும் வாய்ப்பினைத் தம் காலத்துப் பெற்றவரல்லர்; எனினும் இழைத்துணர்ந்து ஈண்டிய தம்கூர்த்த மதியாலும், தொல்காப்பிய இலக்கண வரம்பினை நன்குணர்ந்து இயற்றப்பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய பழந்தமிழிலக்கியங்களைத் துறைபோகப் பயின்றுணர்ந்த தெளிவினாலும், தொல்காப்பியத்துக்கு மெய்ப்பொருள் காணுந்துறையில் எதிர்பாராத அளவுக்குப் பெரிதும் வெற்றி பெற்றார்களென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இடைக்காலத்தில் தமிழ் வேந்தரின் ஆட்சிநிலை தளரவே அரசியல், கல்வி, சமயம், நாகரிகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் இந்நாடு அயலார்க்கு அடிமைப்பட நேர்ந்தமையால், எத்துணைக்கூர்த்த மதியினரும் தம் தமிழ் நாட்டின் தொண்மைச் சிறப்பினை யறிந்துகொள்ளாத படி அயலவர் கூட்டுறவு தமிழ்மக்களறிவினைத் திரையிட்டு மறைத்துவிட்டதென்றே கூறலாம். இந்நிலையில் சீர்த்த நுண்மாணுழைபுலனமைந்த பேராசிரியர்களின் அறிவாற்றலையுங் கடந்து பிற்றைநாளில் ஒரு சில பிழைகள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருத்தல் இயல் பேயாம். மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தாற் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந்நாட்டிற் பிற்றைநாளிற் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப் பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற் காலத்தவரால் நுழைத்துரைக்கப்பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் பகுதியாக அமைந்தது தொல்காப்பிய மரபியலாகும். இவ்வியலில் 1-முதல் 70-வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86-முதல் 90-வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன ஒன்றற்கொன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களினிடையே, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய என்பது முதல், அந்த ணாளர்க் கரசு வரைவின்றே என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் சிறிதுந் தொடர் பற்ற நிலையிற் பின் வந்தவரொருவரால் நுழைக்கப்பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடையார்க்குந் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ்வியலிற் சேர்க்கப்பட்டனவாக ஐயுறு தற்குரியனவுஞ் சிலவுள. அவை எங்ஙனமாயினும் இங்கெடுத்துக் காட்டிய சூத்திரங்கள் தொல்காப்பியனார் கூறியன அல்ல என்பதே அறிஞர் பலரும் ஒருமித்துக்கூறும் முடிபாகும். இதன் விரிவினைத் தொல்காப்பியம் நுதலிய பொருள் என்னுந் தலைப்பிற் காண்க. இனி ஆசிரியர் தொல்காப்பியனாரது வரலாற்றினை ஆராய்வோம். தொல்காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரே பண்டை நாளிற் காப்பியன் என்னும் இயற்பெயர் தமிழ் மக்களிடையே பெருக வழங்கியதென்பது வெள்ளூர்க்காப்பியன், பல்காப்பியன், காப்பியாற்றுக்காப்பியன் எனவரும் பெயர்களால் இனிது புலனாம். ஓர் இயற்பெயருடையார் பலராயின் அவர் தம்முள் வேற்றுமை யறிய ஊரும் பண்பும் முதலிய ஏற்புடை யடைமொழிகளை இயைத்து ஒரு பெயராய் வழங்குதல் பண்டையோர் மரபாகும். தொல்காப்பியன் என்னும் பெயரும், இம் முறையால் இடப்பெற்று வழங்கியதேயாகும். காப்பியன் என்னுஞ் சொல் பண்டைநாளில் இயற்பெயராக வழங்கினமை காப்பியஞ் சேத்தன் என் வழங்கும் சங்கப் புலவர் பெயரால் நன்கு புலனாம். காப்பியனுக்கு மகன் சேந்தன் என்ற பொருளிலேயே காப்பியஞ் சேந்தன் என்னும் இத்தொடர் வழங்கப்பெற்றுளது. ஆதன், பூதன் முதலிய இயற்பெயர்களுள் ஒன்று தந்தை யென்னும் முறையில் நிலைமொழியாக நிற்க, மக்கள் முறைப்பெயராகப் பிறிதொருபெயர் வருமொழியாய் வந்து புணரும்வழி, நிலை மொழி யியற்பெயரின் இறுதியிலுள்ள அன் கெட்டு அம் சாரியை வரும் என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுவர்.1 அவ்விதிப்படி காப்பியன் என்னும் இயற்பெயர் தந்தை பெயராக நிற்க, அதன் முன் மகன் முறைப் பெயராகச் சேந்தன் என்னும் பெயர் வந்து புணர, நிலைமொழி யியற்பெயராகிய காப்பியன் என்பதன் ஈற்றிலுள்ள அன் கெட்டு அம் சாரியை வந்தது. இப்புணர்ச்சி முறையை யுற்று நோக்குங்கால் காப்பியன் என்னுஞ்சொல் இயற்பெயரே என்பது நன்கு துணியப்படும். எனவே தொல்காப்பியன் என்பது ஆசிரியர்க்கு வழங்கிய இயற்பெயராதல் இனிது பெறப்படும். பனம்பாரனாரும் தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றி எனப் பாயிரத்திற் கூறிப் போந்தார். தொல்காப்பியன் என வழங்குந் தனது பெயரையே தன்னால் இயற்றப்பெற்ற நூலுக்குந் தோற்றுவித்து என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். தொல்காப்பியன் என்னும் இயற்பெயருக்குப் பழமையான காப்பியக் குடியிற் பிறந்தோன் எனப் பிற்காலத்தவராகிய உரையாசிரியர்கள் பொருள் கூறினார்கள். வள்ளல்கள், புலவர்கள் முதலியவர்களின் இயற்பெயர்களால் அவர்தமக்கு உரிமையுடைய ஊர்கள் பெயர்பெற்று வழங்குதல் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். அம்முறைப்படியே பழந்தமிழ்ச் சான்றோர்களிற் காப்பியன் என்னும் இயற்பெயருடையார் சிலர் நினைவாகக் காப்பியாறு, காப்பியக்குடி, காப்பியாமூர் என்னும் ஊர்ப் பெயர்கள் தோன்றி வழங்கி வருகின்றன. பிள்ளைப்பூதன், பூதன், ஆதன் என்னும் இயற்பெயருடையார் நினைவாகப் பிள்ளைப் பூதங்குடி, பூதங்குடி, ஆதனூர் என்னும் ஊர்ப் பெயர்கள் இக் காலத்தும் பயின்று வழங்கக் காண்கிறோம். இவ்வாறே காப்பியன் என்னும் இயற்பெயருடையார் நினைவாகக் காப்பியாறு, காப்பியக் குடி என்னும் ஊர்ப்பெயர்கள் தோன்றி வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும். சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் வரந்தரு காதையில் வரும் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து என்ற தொடரிலுள்ள காப்பியத் தொல்குடி என்பது காப்பியன் என்னும் இயற்பெயரடியாகப் பிறந்த ஊர்ப் பெயராகவோ1 அன்றிக் காப்பியன் என்னுஞ் சான்றோரை முதல்வராகக் கொண்ட குடிப் பெயராகவோ கருதவேண்டியுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டு ஐந்தாம் தொகுதி 660-ஆம் எண்ணுள்ள முதல் இராசராசன் கல்வெட்டில், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் என்னும் பெயர் காணப்படுகின்றது. ஈண்டுக் காப்பியன் என்னுஞ்சொல் இயற்பெயராகவே வழங்கப்பெறுதல் காணலாம். காப்பியன் என்னும் இப்பெயர் காப்பியம் என்பதனடி யாகத் தோன்றியதென்னும், இச்சொல் பார்ப்பாரது பழைய குடிவகையுள் (கோத்திரங்களுள்) ஒன்றைக் குறிப்பதென்றும், அது, காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டதென்றும், கவியாகிய சுக்கிரனது மரபினைக் குறிக்கும் காவ்ய என்னும் வடசொல்லே தமிழிற் காப்பியம் எனத் திரிந்ததென்றும், காவ்ய கோத்திரத்தார் பிருகு முனிவரின் மரபினராதலாற் பார்க்கவர் எனவும் வழக்கப்படுவரென்றும், ஆகவே தொல்காப்பியனார், பல்காப்பியனார் முதலிய புலவர்களும் பார்க்கவ அல்லது காவ்ய கோத்திரத்தவராதல் வேண்டுமென்றும் கூறுவாருமுளர்.2 காவ்ய என்ற பெயரால் ஒரு கோத்திரம் வடநூல்கள் சிலவற்றிற் குறிக்கப்படுவது கொண்டு ஓசை யொற்றுமை சிறிதே கருதித் தமிழகத்திற் கோத்திரங்கள் தோன்றாத தொன்மைக் காலத்தவராகிய தொல்காப்பியனாரைக் காவிய கோத்திரத்த வரெனத் துணிந்து கூறுதல் ஏற்புடைய தன்றாம். நந்திவர்ம பல்லவமன்னன் வழங்கிய தண்டந் தோட்டம் பட்டயத்தில் பார்க்கவ கோத்திரம் வேறாகவும் காவிய கோத்திரமாகிய கபி கோத்திரம் வேறாகவும் குறிக்கப்பட்டதனை நோக்குங்கால் இவ்விரு பெயர்களும் வேறுவேறு கோத்திரத் தினையே குறிப்பன என்பது தெளியப்படும். தொல்காப்பியனார் அகத்திய முனிவரால் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வரப்பெற்றவர் என்னுங் கதையினை நச்சினார்க்கினியருரையில் தான் முதன்முதற் காண்கின்றோம். ஆசிரியர் தொல்காப்பியனாரைச் சமதக்கினியின் புதல்வரென்றும் திரணதூமாக்கினி யென்னும் இயற்பெயருடையாரென்றும் நச்சினர்க்கினியர் குறித்துள்ளார்.1 வரலாற்றாதரவின்றிப் பிற் காலத்தவராற் புனைந்துரைக்கப்பட்ட இக்கதையின்படி பார்த்தாலும் பார்க்கவ கோத்திரத்தவரான சமதக்கினியின் புதல்வரைக் காவிய கோத்திரத்தவரெனக் கூறுதல் பொருந்தாமை புலனாம். இனி, காவியகுலம் என்பதோர் பழைய குடிப்பெயர் வட நூல்களில் வழங்கப்பட்டுளதென்றும், காவியர் கவியின் (சுக்கிரனது) வழியினரென்றும், பிருகு மகாரிஷியின் பத்தினியைக் காவியமாதா என வான்மீகி முனிவர் வழங்குதலால் பிருகு வமிசத்திற் பிறந்த சமதக்கினியின் புதல்வரான திரணதூமாக் கினியாரும் காவிய குலத்தவராவரென்றும், இக்குலம் பழைமை பற்றி விருத்த காவியகுலம் என வழங்கப்படுமென்றும், இப் பெயரே தமிழில் தொல்காப்பியக்குடி யென மொழி பெயர்த்து வழங்கப்பெற்றதென்றும், இக்குடியிற் பிறந்து சிறந்ததனால் குடிப்பெயரே ஆசிரியர் பெயராக வழங்கப்பட்டதென்றும், சமதக் கினியார்க்குக் காவிய கோத்திரம் இயையாமையும் ஸ்ரீவத்ச கோத்திரமே இயைபுடைமையும் கோத்திர முணர்ந்தார்வாய்க் கேட்டுத் தெளியத் தக்கதென்றும், ஆகவே சமதக்கினியார் புதல்வராக நச்சினார்க்கினியராற் குறிக்கப்பட்ட தொல் காப்பியனார் காப்பிய கோத்திரத்தவராகார் காப்பியக்குடியினரே (காவ்ய குலத்தவரே) ஆவர் என்றும் அறிஞரொருவர் கூறியுள்ளார்.2 காவிய கோத்திரமும் காவ்யகுலமும் வேறு வேறென்பது அவரது கருத்தாகும். வான்மீகியார் பிருகு மாகரிஷியின் பத்தினியைக் காவ்யமாதா எனப் பாலகாண்டத்திற் கூறியது, கவியாகிய சுக்கிரனுக்குத் தாய் என்னும் பொருளிலன்றிக் கவி வமிசத் தவர்க்குத் தாய் என்னும் பொருளிலன்றாம். காவ்யமாதா என்னும் இவ்வொரு பெயரை வைத்துக்கொண்டு, காவ்ய கோத்திரத்தின் வேறாகக் காவியகுலம் என்பதொன்றுண்டேனவும் அது பழமை கருதி விருத்த காவியகுலம்1 என வழங்கப்படு மெனவும் அதன் மொழிபெயர்ப்பே தொல்காப்பியக்குடி யெனவும் வலிந்து பொருள் கொள்ளுதற்குக் காப்பியன் என்னுந் தமிழ்ச் சொல்லை வடசொல்லொன்றின் திரிபாகச் சொல்ல வேண்டும் என்னும் எண்ணமே காரணமாவதன்றிப் பிறிதில்லை. காவ்ய என்னுஞ் சொல் கோத்திரத்தைக் குறித்து வழங்கினும் அன்றிக் குலத்தைக் குறித்து வழங்கினும் வடசொல்லாகிய அதற்கும் தமிழில் இயற்பெயராய் வழங்கும் காப்பியன் என்னுஞ் சொல்லுக்கும் ஒரு சிறிதும் பொருளொற்றுமையில்லை யென்க. பராசரர் என்ற முனிவரினின்றும் வேறுபாடறிதற்கு விருத்த பராசரர் என வேறொருவர் வடநூலுள் வழங்கப்படுதல் போன்று காப்பியன் என்னும் பெயருடையார் பலரினின்றும் வேறுபாடறிதற்குத் தொல்காப்பியன் என இவ்வாசிரியர் அடைமொழியுடன் வழங்கப்பெற்றார் எனப் பெயர்க்காரணங் கூறுதலுமுண்டு2 இந் நூலாசிரியர் தம் காலத்திற்குப் பின் பல்லாண்டுகள் கழித்துப் பிறக்கவிருக்கும் காப்பியப் பெயருடையார் பிறரினின்றும் வேறு பாடறிதற் பொருட்டு முற்காலத்திலேயே தொல்காப்பியன் என அடைமொழியுடன் வழங்கப்பெற்றார் எனக் கூறுதல் பொருத்த முடையதன்றாம். தொல்காப்பியன் என்பதிலுள்ள தொல் என்னும் அடைமொழி ஆசிரியர் காலத்திற்குப் பின் சேர்த்து வழங்கப் பட்டிருக்குமானால், அவர் காலத்தில் காப்பியன் என்பதே அவர்க்கு இயற்பெயராய் வழங்கியிருத்தல் வேண்டும். அங்ஙனம் வழங்கியது உண்மையாயின் அவரால் இயற்றப்பெற்ற இந் நூலும் தொல் என்னும் அடைமொழி பெறாது காப்பியம் என்றோ காப்பியன் என்றோ பெயரெய்தியிருத்தலே முறையாகும். தொல் காப்பியன் என்பது ஆசிரியரது இயற்பெயரென்றும் அப்பெயரையே அவரால் இயற்றப்பட்ட நூலுக்குந் தோற்றுவித்தாரென்றும் ஆசிரியரோடு ஒரு காலத்தவராகிய பனம்பாரனார் பாயிரத்திற் கூறியுள்ளார். பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவரென்பது தொன்று தொட்டு வழங்கிவரும் வரலாறாகும். அங்ஙனமாதலின் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்னும் பொருள் படக் காப்பியன் என்னும் இயற்பெயருடன் தொல் என்னும் அடைமொழியைப் பனம்பாரனார் புதுவதாக இயைத்துரைத்தார் எனக் கொள்ளுவதற்கில்லை. ஆகவே தொல்காப்பியன் என்னும் இப்பெயர், நூலாசிரியர் காலத்திலேயே அவர்க்கு வழங்கியிருத்தல் வேண்டுமென்பது உறுதி. ஆசிரியர் காலத்திற் காப்பியன் என்னும் இயற்பெயர் பலர்க்கும் இடப்பெற்று வழங்கியதுணர்ந்த அவர்தம் பெற்றோர்கள், அப்பெயருடையார் பிறரினின்றும் வேறு பாடறிதல் கருதி, அப்பெயருடன் தொல் என்னும் அடை மொழியினை யிணைத்துத் தொல்காப்பியன் எனத் தம் பிள்ளைக்குப் பெயரிட்டார்கள் என்றே கருதவேண்டியுளது. ஆசிரியர்க்கு அவர் காலத்தில் வழங்கிய இயற்பெயர் தொல்காப்பியன் என்பதாதலின் அவரால் இயற்றப்பெற்ற நூலும் பாண்டியன் அவையத்தில் அரங்கேறும் நாளிலேயே தொல்காப்பியம் என வழங்கப்பெறுவ தாயிற்று. தொல்காப்பியன், பல்காப்பியன் என்னும் பெயர்களின் முன்னுள்ள அடைமொழிகள் அவர்கள் காலத்திலேயே அப்பெயருடையார் பிறரினின்று பிரித்துச் சுட்டுதற்கு இயைத்துரைக்கப்பட்டன என்று கொள்ளுதலே பொருந்துவதாகும் எனவே தொல்காப்பியன் என்னும் இப்பெயர் ஒரு சொற்றன்மையில் வழங்கிய இயற்பெயரென்றே கொள்ளப்படும். நல்லந்துவனார், நல்விளக்கனார், நல்வேட்டனார் எனவரும் பெயர்களில் நல் என்னும் குணமடுத்து நிற்றல்போலவும், நக்கீரனார், நச்செள்ளையார், நப்பாலத்தனார் எனவரும் பெயர்களில் ந என்னும் சிறப்பு அடுத்து நிற்றல் போலவும் தொல்காப்பியனார் என்னும் இப்பெயரிலும் தொல் என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்று அவர் காலத்திலேயே வழங்கியதென்பது துணியப்படும். தொல்கபிலர் என்பதும் இவ்வாறே வழங்கியிருத்தல் கூடும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வழங்கிய காப்பியன், ஆதன், பூதன் என்பவற்றின் பெயர்க் காரணம் இவையெனத் துணிதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் ஆசிரியர் தொல்காப்பியனாரது வரலாற்றை விளக்குதற்குரிய பழையநூற் சான்றாகக் கிடைத்திருப்பது, தொல்காப்பியனாருடன் ஒருசாலை மாணவராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமேயாகும். தொல்காப்பியனார் வரலாற்றை யுள்ளவாறு உணர்தற்கு இச்சிறப்புப் பாயிரமே பெருந்துணை செய்கின்றது. வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமாகும். வடக்கின் உளதாகிய வேங்கடமும் தெற்கின் உளதாகிய குமரியும் ஆகிய அவற்றை எல்லையாகவுடைய நாட்டின்கண் தமிழ் மொழியினைக் கூறும் நன்மக்கள் நிரம்பிய நல்ல நிலத்து வழங்கும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இரு காரணத்தானும், எழுத்திலக்கணத்தினையுஞ் சொல்லிலக் கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் மொழியின் இயல்போடு பொருந்திய முன்னைத் தமிழகத்திற்றோன்றி வழங்கும் முன்னை நூல்களிற் சொன்ன இலக்கணங்களைக்கண்டு, அவற்றை முறைப்பட ஆராய்ந்து நூலைத்தொகுத்துச் செய்தான்; அங்ஙனஞ் செய்த குற்றமற்ற நூலினை நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் கண்ணே, அறமே கூறும் நாவினால் நான்கு மறைகளையும் முற்றப் பயின்ற அதங்கோட்டாசான் என்னும் ஆசிரியர்க்குக் குற்றமறத் தெரிவித்து, முன்னை நூல்களிற்போல இயலும் இசையும் நாடகமும் ஆகிய மூன்று தமிழும் ஒன்றோடொன்று கலந்து மயங்காதபடி, இயற்றமிழை வேறுபிரித்து முறைப்பட அறிவித்துக் கடல்சூழ்ந்த நிலவெல்லையிலே ஐந்திரவியாகரணத் தினை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத்தன் பெயரைத் தோற்றுவித்தலால் பல புகழையும் இவ்வுலகத்தில் நிலைபெறுத்தின தவவொழுக்கத்தினை யுடையான் என்பது மேற்காட்டிய சிறப்புப் பாயிரத்தின் பொருளாகும். தொல்காப்பியனார் காலத் தமிழ் நாட்டெல்லை தொல்காப்பியனார் காலத்தில் வடக்கே வேங்கடமலைத் தொடரும் தெற்கே குமரியாறும் தமிழகத்தின் எல்லைகளாய் அமைந்திருந்தன வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறம் நல்லுலகத்து எனவரும் சிறப்புப் பாயிரத்தொடர் இவ்வுண்மையினை வலியுறுத்துவதாகும். தமிழகத்தின் வடதிசைக்குந் தென்திசைக்கும் எல்லை கூறிய பனம்பாரனார், அதன் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் எல்லைகூறாதுவிட்டதன் கருத்தினை ஊன்றி நோக்குதல் வேண்டும். தமிழ்நாட்டின் வடக்குந் தெற்கும் மொழி பெயர் தேயமாகிய பிறநாடுகள் உண்மையால் அவ்விருதிசைக்கும் எல்லைகூறிக் கிழக்கும் மேற்கும் பிறமொழி வழங்கும் நாடுகளின்றிக் கடலே எல்லையாக அமைதலின் அவற்றுக்குப் பனம்பாரனார் எல்லை கூறுதுவிட்டார் என இளம்பூரணர் கருதுவர். கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப் படாவாயின என்பது இளம்பூரணர் தரும் விளக்கவுரையாகும். பிறமொழி வழங்கும் எல்லையிலிருந்து தமிழ் வழங்கும் நிலத்தினைப் பிரித்துணர்த்துதற் பொருட்டே வடவேங்கடம் தென்குமரி என இவ்விரண்டெல்லைகளுங் குறிக்கப்பட்டன என்பது இவண் கருதற்குரியதாகும். ஒரு நாட்டிற்குக் கூறப்படும் எல்லை அகப்பாட்டெல்லை, புறப்பாட்டெல்லை என இருதிறப்படும். அவற்று அகப்பாட் டெல்லையாவது அந்நாட்டின் வரம்புக்கு உள்ளடங்கிய பகுதியாகும். புறப்பாட்டெல்லையாவது அந்நாட்டிற்கு வெளியே யமைந்த நிலப்பகுதியாம். இச்சிறப்புப் பாயிரத்திற் குறிக்கப்பட்ட வேங்கடமலையுங் குமரியாறும் தமிழ்நாட்டின் உட்பகுதியில் அமைந்திருந்தன ஆதலால் இவையிரண்டும் அகப்பாட்டெல்லை யென்பர் இளம்பூரணர். எனவே குமரியாற்றின் தெற்கிலும் வேங்கட மலையின் வடக்கிலும் தமிழகத்தைச் சேர்ந்த நிலப் பகுதிகள் அமைந்திருந்தன என்பது புலனாம். குமரியாற்றின் தென்பாலமைந்த தமிழ் நிலத்தைச் சார்ந்து தமிழ்திரி நிலமாகிய குறும்பனைநாடு இருந்த தென்றும் அக்குறும்பனை நாட்டினைத் தமிழ் கூறும் நல்லுலகம் அன்றென்று விலக்குதற் பொருட்டே பனம்பாரனார் தென் குமரி யெனக் குமரியாற்றைத் தென்றிசை யெல்லையாகக் குறித்தாரென்றும், தெற்கிலுள்ள குறும்பனை நாடும் குமரியாறும் கடல்கோளால் அழிவதற்கு முன்னமே இத்தொல்காப்பியம் இயற்றப்பெற்றதென்றும் அறிஞர் கூறுவர். அதுதானும் (அத்தொல்காப்பியமும்) பனம்பாரனார் வட வேங்கடந் தென்குமரி எனக் குமரியாற்றினை யெல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற் சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம் (தொல்-மரபு. 94-ஆம் சூத்திரம் உரை) என்பர் பேராசிரியர். வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான்கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின் எனக்கூறி, வடவேங்கடந் தென்குமரி எனப் பனம்பாரனார் கூறியவாறு தொல்காப்பியர்க்கு இளையரான காக்கைபாடினியார் எல்லை கொண்டார் என்றும், அவர்க்குக் காலத்தால் மிகப் பிற்பட்டவராகிய சிறுகாக்கைபாடினியார் என்னும் மற்றொரு புலவர் வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம் எனத் தென்றிசையுங் கடலெல்லையாகத் தமிழகத்திற்கு எல்லை கூறினாரென்றும், அவர் குமரியாறு உள்ள காலத்தாரல்லரென்றும். அவர் தொல்காப்பியனாரோடு ஒரு சாலை மாணாக்கர் அல்ல ரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்றும் பேராசிரியர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.1 அன்றியும் தொல்காப்பிய னாரும் அவர்க்கு இளையரான காக்கைபாடினியாரும் செய்யுளுக்குத் தளையென்பதோர் உறுப்பினை வகுத்துரைத்தில ரென்றும் தளை வேண்டினார் பிற்காலத்து ஓராசிரியரென்றும் பேராசிரியர் கூறுவர். தொல்காப்பியனார் காலத்தில் இயற்றமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளாகவே வகுத்துரைக்கப்பட்டது. சிறுகாக்கைபாடினியார் வாழ்ந்த பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் இவற்றின் வேறாக யாப்பு என்னும் இலக்கணம் நான்காவதாக வகுக்கப்பெற்று வழங்கியது. நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின் திலக்கணம் அறைகுவன் முறையே எனச் சிறுகாக்கைபாடினியார் தம்காலத்தில் இயற்றமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்காக வழங்கிய திறத்தை எடுத்துரைக்கின்றார். இவ்வாறே பிற்காலத்தவராகிய களவியலுரையாசிரியரும் தமிழ்தான் நான்கு வகைப்படும்; எழுத்துஞ் சொல்லும் பொருளும் யாப்புமென என்றுரைத்துத் தமிழிலக்கணத்தை நால்வகையாகப் பகுத்தமை ஈண்டு ஒப்பு நோக்குதற்குரியதாகும். மேல் எடுத்துக் காட்டிய குறிப்புக்களால், தமிழ்நாட்டின் தென்னெல்லையாகிய குமரியாறு கடல் கொள்ளப்படாத நாளில் வாழ்ந்த தொல்காப்பியனார்க்கு, அவ்வாறு கடல்கோளால் அழிந்து தென்னெல்லை கடலாய் விளங்கிய நாளில் வாழ்ந்தவராகிய சிறுகாக்கைபாடினியார், நெடுங்காலம் பிற்பட்டவரென்பது நன்கு துணியப்படும். எனவே சிறுகாக்கை பாடினியார் குறித்த தமிழ்நாட்டெல்லை. தொல்காப்பியர் காலத் தமிழகத்திற்கு எல்லையாகாமை நன்கு பெறப்படும். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரங் கூறிய பனம்பாரனார் என்னும் புலவர் தொல்காப்பியனாரோடு ஒருசாலை மாணாக்கர் என்பது தொன்றுதொட்டு வழங்கும் வரலாறாகும். வடவேங்கடந் தென்குமரி என்னுஞ் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பரனார் எனப் பேராசிரியரும் பாயிரஞ் செய்வார் தன்னாசிரியரும் தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாணாக்கரும் என இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார், தமக்கு (தொல்காப்பியனார்க்கு) ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் என நச்சினார்க்கினியரும் கூறுதல் காண்க. தொல்காப்பியனார் தமது நூலுக்குப் பனம்பாரனார் கூறிய சிறப்புப் பாயிரத்தை ஏற்றுக்கொண்டு தம் நூன்முகத்து வைத்தலின், அச்சிறப்புப் பாயிரத்திற் சொல்லப்பட்ட செய்திகள் யாவும் நூலாசிரியராகிய தொல்காப்பியனாரால் உடன்பட்டு ஏற்றுக்கொள்ளப் பெற்றனவேயென்பது திண்ணம். வடவேங்கடத் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறிய எல்லையைத் தொல்காப்பியனார் கூற்றாக இறையனார் களவியலுரை யாசிரியர் கூறியதன் கருத்தும் இதுவேயாகும்.1 தொல்காப்பியனார் காலத் தமிழகத்தின் தென்பாற் கொல்லையாகவே விளங்கிய குமரியாறு அவர்காலத்திற்குப் பின்னர் நிகழ்ந்த கடல்கோளால் அழிந்தது. இக்கடல்கோள், இடைச் சங்கத்தின் இறுதியில் முடத்திருமாறன் காலத்தில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக்காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது என இடைச்சங்க வரலாற்றின் இறுதியிலும். அவர்களைச் சங்கம் இரீ இயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்ம ரென்ப எனக் கடைச்சங்க வரலாற்றிலும் களவியலுரையாசிரியர் குறிப்பிடுதலால் இச்செய்தி புலனாதல் காண்க. இக்கடல் கோளுக்குப்பின் தமிழகத்தின் தெற்கெல்லையாகக் குமரிக்கடல் விளங்குவதாயிற்று. இளங்கோவடிகள், நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு எனத் தம் காலத் தமிழகத்திற்கு எல்லை கூறுகின்றார். தொடியோள் பௌவம் என்பது தமிழ்நாட்டின் தென் பாலமைந்த எல்லையாகும். தொடியோள் பௌவம் என்பதற்குச் சிலப்பதிகாரவுரை யாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம் இவண் ஆராய்தற் குரியதாகும்:- தொடியோள்- பெண்பாற் பெயராற் குமரியேன்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவர் உள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சினவழுதிமுதற் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீ இயினான்; அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக்காவத ஆறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரி யாகிய பௌவம் என்றார் என்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இறையனார் பொருளுரையானும் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும் என அடியார்க்குநல்லார் தரும் விளக்கம். தொல்காப்பியனார் காலத் தமிழகப் பரப்பையும் அஃது இடைச்சங்கத்து இறுதியிற் கடல் கோளால் சிதைந்து சுருங்கிய நிலையினையும் தெளிவு படுத்துதலறிக. தமிழ் நாட்டின் தென்பகுதியிற் பஃறுளியென்னும் பெயரினதாகிய ஆறும் குமரியாறும் ஓடினவென்பதும் அவ்விரு பேராறுகளின் இடையே எழுநூற்றுக் காவத அளவில் நாற்பத்தொன்பது நாடுகளும் குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் அமைந்திருந்தன வென்பதும் குமரியாற்றின் வடகரையளவும் கடல் கொண்டொழிதலால் இளங்கோவடிகள் காலத்துத் தமிழ்நாட்டின் தென்னெல்லை குமரிக்கடலாயிற்றென்பதும் மேற்காட்டிய அடியார்க்குநல்லார் உரையால் இனிது புலனா தலறிக. பாண்டியர்க்குரிய குமரி நாட்டைக் கடல்மீதூர்ந்து வந்து அழிந்த செய்தியினை விளக்கக் கருதிய இளங்கோவடிகள் அங்ஙனம் கடல்மீதூர்ந்து அழித்ததற்குப் புனைந்துரைவகையாற் காரணமுங் கூறுகின்றார். பாண்டி வேந்தனெருவன் தனது பெருமையினதளவை ஏனை மன்னர்க்கு உணர்த்தி முன்னொரு காலத்துக் கடலையடிப்படுத்துத் தன்கையிலுள்ள வேலால் எறிந்து வென்றான் என்றும், அவன்பால் தோல்வியெய்திய கடல் அப் பழம்பகையினை நெடுங்காலம் உளத்துட்கொண்டிருந்து பின்னொரு காலத்துப் பொறாதெழுந்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே பலவாகிய பக்க மலைகளை யுடைய குமரிமலையின் சிகரத்தையும் தன்வாய்ப்பெய்துகொண்ட தென்றும், அந்நிலையிற் பாண்டியன் தனது நாடழிவிற்கு உளந்தளராது வடதிசைக்கண்ணதாகிய கங்கையாற்றையும் இமயமலையையுங் கைக்கொண்டு, கடல்கோளால் தான் இழந்த நிலத்தின் எல்லையளவுக்கு வடபாலுள்ள நாடுகளைத் தனக்குரியவாக வெண்றுகொண்டான் என்றும், அத்தகைய பேராற்றல் மிக்க தென்னவன் வாழ்வானாக என்றும் மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்துகின்றான். அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி என்பது அம்மறையோன் கூறிய வாழ்த்தியற் பகுதியாகும் இத்தொடரிற் குமரிக்கோடு எனக் குறிக்கப்பட்டது குமரிமலைத் தொடரேயாகும். பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு என அடைமொழியுடன் கூறியதனை நோக்குங்கால் இத்தொடர் குமரிமலையினையன்றிக் குமரியாற்றினைக் குறிப்பதன்றென்பது உய்த்துணரப்படும். தென்றிசையாண்ட தென்னவர் பெருமான் ஈண்டுக்குறிக்கப்பட்ட கடல்கோளால் தன் நாட்டின் தென் பகுதியில் இழந்தவற்றையும், அங்ஙனம் இழந்த வற்றுக்கு ஈடாக அவன் வடபாற் சென்று தன் வெற்றித்திறத்தாற் பெற்றவற்றையும் மாங்காட்டு மறையோன் கூறிய வாழ்த்தியற் பகுதியில் அடிகள் நிரலே விளக்குகின்றார். பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள என்ற தொடர், கடல்கோளால் பாண்டியன் இழந்தன பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் எனக்குறிக்கின்றது. வடதிசைக் கங்கையும் இமயமுங்கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் என்னுந்தொடர், அவ்வேந்தன் தான் தெற்கே இழந்தனவற்றுக்கு ஈடாகத் தன் வெற்றித் திறத்தால் வடக்கே பெற்றவை முறையே கங்கையாறும் இமயமலையும் எனக் குறிக்கின்றது இழந்த பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும் குமரிமலைக்கு ஈடாக இமயத்தையும் வென்று கொண்டான் என்பது புலனாக, அடிகள் நிரல் நிறைப் பொருள்கோள் அமையக் கூறியுள்ளார். ஆகவே தென்பாற் பஃறுளியாறு முதலாகக் குமரிமலை யீறாகவுள்ள நிலப்பகுதியைமட்டும் கடல் விழுங்கிய வரலாறே மேற்காட்டிய சிலப்பதிகாரத் தொடரிற் சொல்லப்பட்ட தென்பது நன்கு துணியப்படும். எனவே குமரிமலையின் வடக்கேயமைந்த குமரியாறும் அவ்வாற்றிற்கும் குமரிமலைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியும் இக்கடல்கோளுக்குத் தப்பியிருந்தன என்பது நன்கு புலனாகும். இந்நிலையிலமைந்த எல்லையினையே வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகின்றார். அவர் காலத்தே குமரியாற்றின் தெற்கேயுள்ள தமிழ் வழங்கும் நிலத்தையடுத்துத் தமிழ்திரி நிலமாகிய குறும்பனைநாடு அமைந்திருந்தமையால் தமிழ்நாட்டின் தென்னெல்லையாகக் குமரியாற்றினைக் கூறவேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. கடல் கொள்ளப்படுவதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது எனவரும் இளம் பூரணர் கூற்று, குமரிமலை கடலிற் புக்க பின்னர் அம்மலையின் வடக்கே குறும்பனை நாட்டினையடுத்து எஞ்சியிருந்த தமிழ் நிலப் பகுதியும் அதனையொட்டிய குமரியாறும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்னே மீண்டும் ஒரு கடல்கோளால் கடலுள் மூழ்கியழிந்த செய்தியினைக் குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இங்ஙனம் இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல்கோளுக்குப் பின் எஞ்சியிருந்த தம் காலத் தமிழகத்தின் எல்லையினையே, நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு என இளங்கோவடிகள் வேனிற்காதையிற் கூறுகின்றார். தொல் காப்பியனார் காலத்துக்கு முன்னும் பின்னுமாக நிகழ்ந்த இவ்விரண்டு கடல் கோள்களினாலும் ஏற்பட்ட அழிவுகளை ஒன்றாகத் தொகுத்து, மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவென்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் என வரும் முல்லைக்கலியில் சோழன் நல்லுருத்திரனார் குறிப்பிடுகின்றார். பஃறுளியாற்றையும் குமரிமலையையும் வாய்ப்பெய்து கொண்ட முதற் கடல்கோளில் இழந்த நாடுகளுக்காகப் பாண்டியன் வடதிசையிற் கங்கையாற்றையும் இமயமலையையும் வென்று கொண்டான் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார். இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல்கோளில் பாண்டியன் தான் இழந்த நிலப்பகுதிக்கு ஈடாகத் தனக்கு இடமுண்டாக வேண்டிச் சோழன், சேரன் என்னும் இரு வேந்தர்களின் நாட்டெல்லையில் புகுந்து அவர்தம் புலிப்பொறியையும் விற்பொறியையும் அவ் விடங்களினின்றும் போக்கித் தனது அடையாளமாகிய இணைக்கயலிலச்சினையை அங்குப் பொறித்தான் என மேற்காட்டிய கலிப் பாடலிற் சோழன் நல்லுருத்திரனார் கூறுகின்றார். அவர் கூறு மாறு சோழ நாட்டினின்றும் சேரநாட்டினின்றும் பாண்டியனால் தன்னாட்டுடன் சேர்த்துக்கொள்ளப்பெற்ற நிலப்பகுதிகளாவன சோழநாட்டெல்லையில் முத்தூர்க்கூற்றமும் சேரமானாட்டில் குண்டூர்க்கூற்றமும் ஆகுமெனக் கருதுதல் பொருந்தும். அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லையிலே முத்தூர்க்கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க்கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் என அடியார்க்குநல்லார் கூறுங்குறிப்பு இரண்டாங் கடல்கோளைக் குறித்த இக் கலித்தொகைப் பாடற்கே பொருந்துவதாகும். தொல்காப்பியனார் காலத்து முன்னிகழ்ந்த கடல்கோளாலும் அவ்வாசிரியர்க்குப் பின் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளாலும் தமிழ் நாட்டிற்கு நேர்ந்த அழிவுகளையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து, காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றார் என அடியார்க்குநல்லார் இயைத்துரைப் பாராயினர். இங்ஙனம் தமிழ் நாட்டின் தென்பகுதியில் இருவேறு கடல்கோள் நிகழ்ந்தனவெனினும் இவற்றுள் தொல்காப்பியனார் காலத்து முன்னர் நிகழ்ந்த கடல்கோளே தமிழ்நாட்டிற்குப் பேரழிவினை உண்டாக்கியதாகும். தொல்காப்பியர் காலத்திற்குப் பின் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளால் நேர்ந்த இழப்பு தெரிபதன்று. குமரியாற்றின் தென்கரையில் எஞ்சியிருந்த நிலப்பகுதியும் குமரியாறும் இதனால் அழிந்திருத்தல் வேண்டும் பஃறுளியாறு என்பது குமரியாற்றிற்குத் தெற்கேயிருந்த குமரிமலைத் தொடராகிய பன்மலையடுக்கத்தின் தென்பால் ஓடியதோர் ஆறு. தென்பாலமைந்த கடல் மீதூர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளவரும் நிலையிற் பஃறுளியாற்றை முதலிற்கொண்டது என்பது புலனாக இளங்கோவடிகள் பஃறுளியாற்றை முதலிற் குறித்திருத்தல் காணலாம். பஃறுளியாற்றின் வடபகுதியிலே குமரி மலையும் குமரியாறும் அமைந்திருந்தமை தடநீர்க்குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலால் என வரும் உரைக்குறிப்பினாலும், குமரியாறு ஓடிய நிலம் கடலாற் கொள்ளப்பட்டு இக்காலத்தும் குமரித்துறையென வழங்கப் பெறுதலாலும் நன்கு துணியப்படும். இப்போது குமரிமுனைக்குத் தெற்கேயுலவும் இந்தியப் பெருங் கடல், பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் பெருநிலனாயிருந்த தென்றும், ஆப்பிரிக்காவின் கீழ்க்கரையிலிருந்து இந்தியப் பெருங்கடலின் இடையே நீளத் தொடர்ந்து சென்ற தீவுகளோ அன்றிப் பெரிய நிலமோ இருந்திருத்தல் வேண்டுமென்றும், இப்போது தமிழ் நாட்டின் தென்றிசையிற் காணப்படும் இந்தியப் பெருங்கடல் முன்னாளில் சகாரா பாலைநிலப் பகுதியில் நிலவியிருத்தல் வேண்டுமென்றும், கடல்கொள்ளப்படாத அந்நாளில் தென்றிசை யிலமைந்த பெருநிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கால்வழியினரே இக்காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியப் பெருங்கடலிடையே ஆங்காங்குள்ள தீவுகளிற் சிதர்ந்து காணப்படும் கரியமாந்தர் (நீகிரோவர்) என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இப்பெரு நிலப்பரப்பு முழுவதும் ஒரே காலத்திற் கடலாற் கொள்ளப்பட்டிருத்தல் இயலாது. நிலவுருண்டையின் மையத்தே காலங்கள் தோறுந் தோன்றும் அதிர்ச்சிகளின் அளவுக்குத் தக்கவறு சகாரா பாலை நிலத்தின்கண் நின்றகடல் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து குமரிநாட்டை மெல்லமெல்ல விழுங்கியிருத்தல் வேண்டுமென்பர். சகாராவின் நீளம் மூவாயிரம் மைல் என்றும் அகலம் ஆயிரம் மைல் என்றும் கணக்கிடப் பட்டிருத்தலால் அங்கு நின்ற கடலால் விழுங்கப்பட்ட குமரி நாட்டின் பரப்பும் ஏறக்குறைய அவ்வளவினதாதல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயமைந்து கடலாற் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளும் எழுநூறு காவதப் பரப்புள்ளனவென்பர் அடியார்க்கு நல்லார். ஒரு காவதம் என்பது எண்ணாயிரம் முழங்கொண்டது (2.25-மைலும் 80 முழங்களும்) என்பர். இவ்வளவுப்படி 700-காவதம் என்பது 1600-மைல்களாம். 3000-மைல் நீளமும் 1000 மைல் அகலமும் உள்ள சகாரா வெளியில் நின்ற கடல்நீர், 700-காவதம் (1600 மைல்) உள்ள குமரிநாட்டை விழுங்கிற்று என்னுங்கொள்கையில் முரண்பாடு தோன்றுதற்கில்லை. இக்குமரி நாட்டினும் நான்கு மடங்கு பெரியதாய் இதன் தெற்கிலிருந்த பெருநிலமானது, மக்கள் தோன்றுதற்குப் பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரே கடலுள் அமிழ்ந்து போயிற்றென்றும் மக்கள் தோன்றிய பின் பல்லாயிர ஆண்டுகள் கழித்துக் குமரிநாடு கடலுக்குள் மூழ்கிய தென்றும், குமரிநாடு கடலாலழிந்த தொன்மை வரலாற்றினையே களவியலுரை கூறுகின்றதென்றும் அறிஞர் மறைமலையடிகளார் கூறுவார்.1 இலங்கைத் தீவின் வரலாற்றில் முன்று கடல்கோள் நிகழ்ந்தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவது கி.மு. 2387-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இரண்டாவது கி. மு. 504-ஆம் ஆண்டிலும் மூன்றாவது கி. மு. 306-ம் ஆண்டிலும் நிகழ்ந்தனவாம்.2 இம்மூன்றனுள் முதலாவதாகக் குறிக்கப்படும் கடல் கோளே குமரிநாட்டின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது. இக் கடல்கோள் நிகழ்ச்சியினையடுத்தே தொல்காப்பியம் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மறைமலையடிகளார் கருத்தாகும். தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் தம் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் தமிழகத்தின் தென் பாலமைந்த பெரு நிலப்பரப்பும் தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்ட பேரிழப்பினையுணர்ந்து மனங்கவன்ற ஆசிரியர் தொல் காப்பியனார், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியிற் கருத்துடைய ராய்த் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்ய எண்ணினார். குமரிநாட்டின் தென்பால் தென்மதுரைத் தலைச் சங்கத்திற் சான்றோர் பலரும் போற்றி வளர்த்த தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளர்ச்சிபெற்றுத் திகழ்ந்தது. முத்தமிழ்த் துறையிலும் விரிந்த பல இலக்கியங்கள் தோன்றவே அவற்றின் அமைதியை விளக்கும் இலக்கண நூல்கள் பல தோன்றுவனவாயின. இங்ஙனம் விரிந்து பரந்த தமிழ் நூற்பரப்பின் அமைதியைக் குமரிநாடு கடல் வாய்ப்பட்ட பின்னர் வாழ்ந்த மக்கள் அறியும் ஆற்றலற்றவராயினர். வடநாட்டினராற் பேசப்படும் ஆரிய மொழியும் தமிழ் நாட்டில் சிறிது சிறிதாக இடம்பெறுவதாயிற்று. இரு மொழிகளுக்குமுரிய இயல்புகளுள் ஒன்று மற்றொன்றனோடு விரவும் வகையில் தென்தமிழ் மக்களும் வடவரும் அளவளாவும் நிலையேற்பட்டது. முத்தமிழுள் ஒன்றற் குரிய இயல்புகள் ஏனையவற்றுடன் இயைத்துரைக்கப்படுவன வாயின. பொதுமக்கள் தம் மொழித் திறத்தையும் பொருட்டிறத்தையும் பகுத்துணரும் ஆற்றலற்ற வராயினர். இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பில்பினை எல்லார்க்கும் விளங்க எடுத்துரைக்கும் இயற்றமிழிலக்கண நூலொன்று இன்றியமையாததாயிற்று. வழக்கும் செய்யுளும் ஒரு மொழிக்கு இலக்கணங் கூறப் புகுந்த நூலாசிரியன் வழக்கிலும் செய்யுளிலும் அம்மொழி நடைபெற்று வளருந் திறத்தினை ஆராய்ந்துணர்தல் வேண்டும். வழக்காவது கற்றார் கல்லாதார் ஆகிய எல்லா மக்களும் பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களாலாகிய மொழி நடையாகும். மக்களிடையே பலமுறையும் பழகிய சொற்களால் தெளிவாக விரிந்து இயலும் இவ்வழக்கியல் மொழியினைத் தொல்காப்பியனார் சேரிமொழி யென்பர். செய்யுளாவது மேற்கூறிய வழக்கு நடையினை யடிப் படையாகக் கொண்டு உணர்வினின் வல்ல புலவன் திருந்திய சொற்களால் சீர்வகையமையத் தான் கருதிய பொருளைத் திட்ப நுட்பம் செறியச் சுவைபெறப் பாடும் சொல்நடையாகும். கற்றோர் அரிதின் ஆராய்ந்து சுவையுணர்ந்து மகிழும் இவ்வழகிய மொழிநடையினைச் செய்யுள்மொழி யென்பர் தொல்காப்பியர். மக்கள் தாங்கள் எண்ணிய எண்ணங்களை மற்றவர்களுக்கு விளங்க உணர்த்தற்கும் பிறர் எண்ணங்களைத் தாங்கள் தெளிவாக வுணர்தற்கும் இடைநின்று துணை செய்வது அவர்களாற் பேசப்படும் தாய்மொழியேயாகும். உணர்தலும் உணர்த்தலுமே மொழியின் செயல்களாம். அவற்றுள் தன் உள்ளக் கருத்துக்களைப் பிறர்க்கு உணர்த்துந் திறமே மொழித் தோற்றத்திற்கும் மக்கள் மன வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். மக்கட் குலத்தார் தம் மனக் கருத்துக்களை முதன்முதல் உடற்குறிப்பினாலும் ஒலிக் குறிப்பினாலும் வெளியிட்டுப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பழகியதன் பயனாகத் தம் உயிர் முயற்சியால் ஒலியுருவாகிய மொழியைப் படைத்துக் கொண்டனர் என்ப. தம் உள்ளக் கருத்துக்களைப் பிறர்க்கு உணர்த்த வேண்டுமென்னும் அவாவும் பிறருள்ளத்து உணர்ச்சிகளைத் தான் தெளிய உணரவேண்டு மென்னும் ஆர்வமும் ஆகிய இருவகைத் தூண்டுதல்களே ஒரு மொழியை யுருவாக்குதற்குரிய துணைக் கருவிகளாம். இவ்விருவகைத் தூண்டுதல்களும் நம் முன்னோருள்ளத்தில் தோன்றா திருக்குமானால் நாம் மனனுணர்வில்லாத விலங்கு வாழ்க்கை யிலிருந்து விலகி மனனுணர்வுடைய உயர்திணை மக்களாய் வாழும் இவ்வுயர்வினை அடைந்திருத்தலியலாது. தாம் அறிந்த உண்மைகளைப் பிறர்க்கு எடுத்துணர்த்தலும் பிறர் உணர்த்திய உண்மைகளைத் தாம் உணர்தலும் ஆகிய இருவகைப் பயிற்சி யினாலேயே மக்களது அறிவு படிப்படியாக வளர்ச்சிபெற்றுத் திகழ்கின்றது. அறிவு வளர்ச்சிக்குரிய இவ்விருவகைப் பயிற்சி யினையும், எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு எனவருந் திருக்குறளில் ஆசிரியர் திருவள்ளுவனார் அழகு பெறக் கூறியுள்ளார். தான் சொல்லக் கருதிய பொருள் பிறரால் உணர்தற்கரியன வாயினும் கேட்பார்க்கு எளிய பொருளாய் விளங்கும் வண்ணம் அவர் மனங்கொளச் சொல்லுதலும், பிறர்கூறுஞ் சொற்கள் நுண்பொருளையுடையன வாய் உணர்தற்கு அருமையுடையனவாயினும் அவற்றின் பொருளை உய்த்துணர்தலும் ஆகிய இருவகையாற்றலும் ஒருங்குடையதே அறிவு எனப்படும் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும். தாம் கூறுங் கருத்துக்களைப் பிறர் எளிதில் உணர்ந்துகொள்ளும் படி சொல்வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் எண்பொருளவாகச் செலச் சொல்லி எனச் சொல் மேல் வைத்துக் கூறினாரெனவும், பிறர்கூறும் பொருள்கள் வழுவுடை யனவாயினும் கேட்பார்க்கு இனிது விளங்காதனவாயினும் அவர் கூறும் சொல்லளவில் நில்லாது அச்சொற்பொருளின் பயனை உய்த்துணர்ந்துகொள்க என்பார், தான் பிறர் வாய் நுண் பொருள் காண்பது எனப் பொருள்மேல் வைத்தோதினாரெனவும் இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் சிறப்புரை இவண் கருதத்தகுவதாகும். எனவே மனவுணர்வுடைய மக்களது ஆக்கப் பொருளாகிய மொழி, உணர உணர்த்தலும், உணர்த்த உணர்தலுமென இருவகை அறிவியக்கத்திற்கும் ஏற்ற சொல்லமைப் பினையுடையதாய் வளர்ச்சி பெறுதல் வேண்டுமென்பது திருவள்ளுவர் கருத்தாதல் இனிது புலனாம். எண்பொருளவாகச் செலச் சொல்லுந்திறம் சேரிமொழியாலும், தான் பிறர்வாய் நுண்பொருள் காணுந்திறன் செய்யுள் மொழியாலும் வளர்ந்து பெருகும். வழக்கும் செய்யுளுமாகிய இவ்விருவகை மொழிநடைகளும், கல்விப் பயிற்சிக்குரிய வாயிலாய் விளங்கும் மொழி வளர்ச்சிக்கும் அம்மொழி வாயிலாக மக்கள் எய்தும் அறிவு வளர்ச்சிக்கும் இன்றியமையாதன வாயின. ஆசிரியர் தொல்காப்பியனார், தம் காலத்தே செந்தமிழ் நாட்டில் வழங்கிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை மொழி நடையினையும் அடிப்படையாகக்கொண்டு அவ்விருவகை வழக்கிலும் பயின்றுவரும் எழுத்திலக்கணத் தினையும் சொல்லிலக்கணத்தினையும். பொருளிலக்கணத் தினையும் ஆராய்ந்தார். தம் கால இலக்கியங்களிற் காணப்படும் இவ் வியல்புகளுக்கும் தமக்கு முன் செந்தமிழ் மொழியின் இயல்பு முழுவதும் முற்றப்பொருந்திக் கடல்வாய்ப்படாத குமரி நாட்டோடு முற்பட்டுத் தோன்றிய செந்தமிழ்த் தொன்னூல்களாகிய இலக்கண நூல்களுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்புநோக்கி யறிந்து அவ்வாராய்ச்சியின் பயனாக இயற்றமிழிலக்கணங்களை எழுத்தும், சொல்லும், பொருளும் என முறைப்பட நிறுத்தி அவ்விலக்கணங்களைத் தம் நூலுள் தொகுத்தோதினார். இச்செய்தி, தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந் தொகுத் தோனே எனவரும் சிறப்புப் பாயிரத் தொடரால் புலனாதல் காண்க. இத்தொடரில் செந்தமிழியற்கை சிவணிய நிலம் எனப்பட்டது, தென்மதுரையிலே தலைச்சங்கத்தை தோற்றுவித்துப் புலவர் பலரையும் ஆதரித்துத் தமிழ் வளர்த்த காய்சினவழுதி முதலிய பாண்டியர்களால் ஆளப்பெற்ற பாண்டிய நாட்டின் தென்பகுதி யாய்ப் பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையேயமைந்த நிலப்பகுதியாகும். எழுநூற்றுக் காவதப் பரப்புடைய இந்நிலப்பகுதி நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்ததென அடியார்க்கு நல்லார் கூறினமை முன்னர் விளக்கப்பட்டது. செந்தமிழ் மொழியின் நல்லியல்பு பொருந்தி வளர்தற்கு நிலைக்களனாகிய குமரிநிலப்பகுதியில் முற்பட்டுத் தோன்றிய நூல்களையே முந்துநூல் எனப் பனம் பாரனார் குறித்தாராதல்வேண்டும் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் என அந்நூலினைச் சிறப்பித்துக் கூறுதலால் இவ்வுண்மை புலனாம். பாயிரத்தில் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் எனத் தம் காலத் தமிழகத்தின் எல்லையையும் அவ்வெல்லையுள் வழங்கிய தமிழ்நூல் வழக்கினையும் முதலிற் குறித்த பனம்பாரனார், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் என்ற தொடரால் மீண்டும் அவற்றையே குறிப்பிட்டார் எனக் கொள்ளுதற்கில்லை. குமரிநாட்டினைக் கடல்கொள்ளுவதற்கு முன் அமைந்த தெந்தமிழ் நாட்டினையும் ஆண்டு முற்பட்டுத் தோன்றி வழங்கிய தொன்னூல்களையும் மேற்காட்டிய தொடரிற் குறித்தாரெனக்கொள்வதே பொருத்த மாகும். ஆகவே சிறப்புப் பாயிரத்தில் வட வேங்கடந்தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகம் எனக் குறிக்கப்பட்டது தொல்காப்பியனார் காலத்தமிழக மென்றும், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் என்புழிக் கூறப்பட்ட நிலம், தொல்காப்பியனார் காலத்திற்குச் சிறிது முன்னர்க் கடல்வாய்ப்பட்டதென்றும் வேறுபிரித்துணர்தல் வேண்டும். செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முற்பட்டுத் தோன்றியநூல் இதுவுவெனப் பெயர் கூறாது முந்துநூல் எனப் பொதுப்படக்கூறியவதனால் இயல், இசை, நாடகம் என்னும் பல்வேறு துறைகளைத்தழுவி இயற்றப்பெற்றுத் தொல்காப்பியனார் காலத்தில் கிடைத்த எல்லா நூல்களும் முந்துநூல்களாகும். முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும் என்றும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பனவியலும் சோதிடமுங் காந்தருவ முங் கூத்தும் பிறவுமாம் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். இங்குக் குறிக்கப்பட்டவற்றுள் அகத்தியம் நீங்கலாக எஞ்சிய நூல்கள் யாவும் தொல்காப்பியனார் காலத்தில் வாழ்ந்த ஆசிரியர்களால் இயற்றப்பட்டனவாக இறையனார் களவியலுரையிற் கூறப்பட்டிருத்தலால் இவை தொல்காப்பி யனார்க்கு முன் குமரி நாட்டில் முற்பட்டுத் தோன்றிய தொன்மையுடைய முந்துநூல் ஆகா என்பது திண்ணம். அவர்க்குத் (தலைச் சங்கத்தார்க்கு) நூல் அகத்தியம் எனக் களவியலுரையாசிரியர் கூறுதலால் பாயிரத்தில் முந்துநூல் என்றது அகத்தியம் எனக் கொண்டார் பேராசிரியர். அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம் அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூ லென்பதூஉம் பெற்றாம் எனப் பேராசிரியர் கூறுகின்றார். தொல்காப்பியனாரும் அகத்தியனாரும் இங்ஙனம் பேராசிரியர் கூறுதற்குரிய ஆதாரத்தினை யாராய்தல் இன்றியமையாததாகும், தலைச்சங்கமிருந்தார் அகத்தியனார் எனவும் இடைச்சங்கத்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் எனவும் களவியலுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் என்பதற்குத் தமிழ்கூறும் நல்லாசிரியர் எனப் பொருள் கொண்டு நல்லாசிரி யராவார் அகத்தியனார் முதலாயினோர் என இளம்பூரணர் கூறியுள்ளார். வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை யகத்திய னென்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தினை முதனூலெனவும், அவர் வானோரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமையுடையா ரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூலைப் பொருந்தக் கற்றுப் புரைதபவுணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனாரெனவும் பன்னிருபடலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது. இனி, பன்னிரு படலத்தை முதல் நூலாகக்கொண்டு அதன் வழி நூலாகப் புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய ஐயனாரிதனாரும், மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன் எனத் தம்மைச் சிறப்பித்துப் பாயிரஞ் செய்தற்கு உடம்பட்டமையால் அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரியர் எல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவரென்பதனை அவரும் ஏற்று உடன் பட்டமை நன்கு புலனாம். இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதல் நூலென்பதூஉம் தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் இனிது புலனாம் என்பர் பேராசிரியர். ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் அகத்தியனார்க்கும் உள்ள தொடர்பைப்பற்றி பன்னிருபடலப் பாயிரமும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரமும் குறிப்பிடுஞ் செய்திகள், தொல்காப்பியனாரோடு ஒருசாலை மாணாக் கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் சொல்லப்படவில்லை. அகத்தியர் தென்னாடு போந்த வரலாற்றினைப்பற்றிப் பல்வேறு கொள்கைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் ஒன்றற்கேனும் தொல்காப்பியத்திலோ அன்றி அதன் பாயிரத்திலோ ஆதரவு காணப்படவில்லை. அகத்தியரைப் பற்றிய கதைகளின் ஒருபகுதி உண்மையாயிருக்கலாம். அவருக்கும் தொல்காப்பியனாருக்கும் உள்ள தொடர்பினைத் துணிதற்கேற்ற சான்றெதுவும் நூலிற் காணப்படவில்லை. அகத்தியனார் என ஆசிரியர் பெயரும், அகத்தியம் என நூற்பெயரும் இறையனார் களவியலுரையில் தான் முதன் முதலாகக் குறிக்கப்படுகின்றன. இவ்வுரைக் குறிப்பினைக் கொண்டு அகத்தியனார்க்குத் தொல்காப்பியனார் மாணவரென்றோ அகத்தியத்திற்குத் தொல்காப்பியம் வழிநூலென்றோ தெளிவாகச் சொல்லுதற்கு இடமில்லை. அகத்தியச் சூத்திரங்கள் எனப் பின்னுள்ளோராற் காட்டப்பெற்ற சூத்திரங்களை நோக்குங்கால் அவை தொல்காப்பியனார் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தே இயற்றப் பெற்றனவாதல் வேண்டுமென்பது பெறப்படும். பழமையுடைய நூலாகிய தொல்காப்பியத்தினும் பழமையும் பெருமையுமுடைய வேறொரு நூலுளது எனக் காட்டமுயன்ற பிற்காலத்தாரது புதுப் படைப்பாகவே இக்காலத்திற் கிடைத்த அகத்தியச் சூத்திரங்கள் அமைந்துள்ளன. தம்முடைய கொள்கைகள் எல்லாவற்றுக்கும் தொன்மை நூல்களில் ஆதரவுண்டெனக் காட்ட விரும்பினார் சிலர், தமக்கு முன்னுள்ள சான்றோர் பெயரால் புது நூல்களை இயற்றிப் பரப்புங் கருத்துடையராயினர். அக்கருத்துடையார் சிலரால் பிற்காலத்திற் புனைந்துரைக்கப்பட்டதே பன்னிருபடலம் என்னும் புறப் பொருளிலக்கண நூலாகும். அகத்தியனார்பால் தொல்காப்பியனார் முதலிய மாணவர் பன்னிருவர் தமிழ் பயின்றனரெனவும் அவர்கள் பன்னிருவரும் வெட்சிமுதலிய புறத்திணைகளுள் ஒவ்வொன்றின் இலக்கணத்தைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு படலமாக இயற்றி அவையனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பன்னிருபடலம் என்ற பெயரால் ஒரு நூலை வெளியிட்டார்கள் எனவும் அப்பன்னிரு படலத்தின் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரம் கூறினமை முன்னர் உணர்த்தப்பட்டது. இக் கூற்றின்படி நோக்கினால் பன்னிரு படலத்தில் முதற்படலம் தொல்காப்யியர் இயற்றியதாகக் கொள்ளல் வேண்டும். தொல் காப்பியத்தில் ஆசிரியர் கூறிய வெட்சித்திணையின் இலக்கணத் திற்கும் பன்னிருபடலத்தில் தொல்காப்பியர் இயற்றியதாகக் குறிக்கப்படும் வெட்சிப்படலத்திற் கூறப்பட்டவற்றிற்கும் முரண்பாடு காணப்படுகின்றது. இம்முரண்பாட்டினை தெளியவுணர்ந்த உரையாசிரியர் இளம்பூரணர் பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியனார் கூறினாரென்றல் பொருந்தாது எனக்கூறி மேற்குறித்த கதையின் பொருந்தாமையினை எடுத்துக் காட்டியுள்ளார். இங்ஙனம் பன்னிரு படலத்தின் புதுப்படைப்பினை எடுத்துக் காட்டியதுபோல அகத்தியச் சூத்திரங்களின் அமைப்பினை எடுத்துக் காட்டும் வாய்ப்பினை உரையாசிரியர் பெற்றாரல்லர். அவர் காலத்து வாழ்ந்த நான்கு வருணத்தொடுப் பட்ட சான்றோர் பலரும் அகத்தியமே முற்காலத்து முதனூலென்றும் அதன்வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்றும் கூறிவந்தார்கள். அங்ஙனங் கூறாக்கால் மரபு வழுவாமென்று அஞ்சி அகத்தியர்வழித் தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவர் என எல்லா ஆசிரியருங் கூறி வருவாராயினர். ஆதலால் அக் கொள்கையின் வன்மை மென்மைகளை ஆராய்தல் மரபு வழுவாமென்று அஞ்சி அக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர் பலரும் அவ்வாராய்ச்சி பற்றிய தம் முடிபினை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனினும், பனம்பாரனார் பாயிரத்தில் முந்துநூல் எனக் குறிக்கப்பட்டன. தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்டுத் தோன்றியவழக்கு வீழ்ந்தனவேயென்றும் (பிற்காலப் படைப் பாகிய) அகத்தியச் சூத்திரங்களுக்கு மாறுபட்ட விதிகளும் தொல்காப்பியத்திற் காணப்படுதலின் தொல்காப்பியம் அகத்தியத்தின் வழிநூலாதல் பொருந்தாதென்றும் கி. பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்த அறிஞர் சிலர் தம் கருத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள். அங்ஙனம் கூறி வந்த அவர்களை வேத வழக்கொடு மாறு கொள்வார் என அக்காலத்தவர் கருதினர். எனவே அவர்தம் கொள்கை பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்படா தாயிற்று. முந்து நூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தன எனக் கூறிக் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் நூல் செய்தார் என்றக்கால் என்னையெனின், அது வேதவழக்கொடு மாறு கொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிறபாசண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத் தொடுபட்ட சான்றோரும் அது கூறாரென்பது எனப் பேராசிரியர் கூறுதலால் இச்செய்தி யுய்த்துணரப்படும். தொல்காப்பியனாரை அகத்தியர்க்கு மாணவர் எனக் கொள்வாரை நான்கு வருணத் தொடுப்பட சான்றோர் எனவும் அக்கொள்கையை மறுப்பாரை வேதவழக்கொடு மாறுகொள்வார் எனவும் பேராசிரியர் குறிப்பிடுவதனால் அவர் காலத்தில் அகத்தியர்க்கு மாணவர் தொல்காப்பியர் என்னுங் கதையினை உடன்படுவாரும் மறுப்பாரும் என இரு திறத்தார் இருந்தமை புலனாம். தொல்காப்பியர் அகத்தியனார்க்கு மாணவரல்லர் என்னுங் கொள்கையினர் தம் காலத்தில் வழங்கிய அகத்தியச் சூத்திரங்களுக்கும் தொல்காப்பியத்திற்கு முள்ள முரண்பாடுகளைச் சான்றாகக் காட்டியிருத்தல் வேண்டும். இந்நிலையில் அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் என்னுங் கொள்கையுடையோர், அகத்தியர்க்கு மாணவராகத் தம்மாற் சொல்லப்படும் தொல் காப்பியனார் அகத்தியர்க்கு மாறுபட நூல் செய்வதற்குரிய காரணத்தினைப் படைத்துரைக்க வேண்டிய இன்றியமையாமை யேற்பட்டது. இந்நிலையிற் புனைந்து வழங்கப் பெற்ற கதையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிர வுரையில் நச்சினார்க்கினியரால் எடுத்துக்காட்டப்பெற்ற தாகும். புனைந்து வழங்கும் கதை தேவரெல்லாங்கூடி மேருமலையிற் சேர்ந்து தங்கினர். அவர்பாரம் பொறாது மேருமலை தாழத் தென்றிசை உயர்ந்தது. வடதிசை தாழத் தென்றிசை யுயரக்கண்ட தேவர்கள், இருதிசை யையும் சமப்படுத்துதற்குரிய ஆற்றலுடையவர் அகத்திய முனிவரேயெனத் தெளிந்து அவரைத் தென்றிசைக்கட் சென்று சமன் செய்யும்படி வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டு கோட்கிணங்கித் தென்றிசை நோக்கி வருகின்ற அகத்தியனார். கங்கையாரிடம் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டார். பின்னர் யமதக்கினியாரிடஞ்சென்று திரணதூமாக்கினியாரை அழைத்துக் கொண்டார். புலத்தியனாரிடஞ்சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்பத் திருமணஞ் செய்து அங்கிருக்கச்செய்து திரும்பித் துவாரபதிக்கு வந்து, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் அழைத்துக்கொண்டு வந்து தென்னாட்டிற் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியமலையில் தங்கினார். இராவணனை இசையால் வென்றார். இராக்கதரை அங்கு வராமல் தடுத்தார். பின்னர்த் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, நீசென்று குமரியாரைக்கொண்டு வருக எனக் கட்டளையிட்டார். அதுகேட்ட தொல்காப்பினார். எம்பெரு மாட்டியை எங்ஙனம் அழைத்து வருவேன் என வினவி நின்றார் முன்னும் பின்னும் நாற்கோல் நீளம் விலகி நின்று அழைத்து வருக என அகத்தியனார் கட்டளையிட்டார். அவர் பணித்தவாறே தொல்காப்பியனாருஞ்சென்று உலோபா முத்திரையாரை அழைத்து வந்தார். வரும் வழியில் வையை யாற்றில் இறங்கிய போது வெள்ளம் பெருகி உலோபாமுத்திரை யாரை இழுத்துச் சென்றது அதுகண்டு அஞ்சிய தொல்காப்பி யனார் மூங்கிற் கோலொன்றினை முரித்து விரைந்து நீட்டினார். அவ்வம்மையாரும் மூங்கிற்கோலைப் பற்றிக்கொண்டு கரையேறினார். நாற்கோல் நீளம் விலகி நின்று அழைத்து வருங் கடப்பாடுடைய தொல்காப்பியனார் வையை யாற்று வெள்ளம் உலோபாமுத்திரையாரை இழுத்துச் சென்றபொழுது ஒரு கோலளவு நெருங்கிச் சென்று தன்கையிலுள்ள மூங்கிற்கோலைக் கொண்டு அவ்வம்மையாரைக் கரையேற்றி உய்வித்த செயல், முனிவர் பெருமானாகிய அகத்தியனார்க்கு உய்தியில் குற்றமாகத்தோன்றியது. ஆகவே அகத்தியனார் உலோபாமுத்திரை யாரையும் தொல்காப்பியனாரையும் சுவர்க்கம் புகாப்பிர் (நற்கதியிற் செல்லாதொழிவீர்) எனச் சபித்துரைப் பாராயினர். யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர் எனத் தெல்காப்பியனாரும் அகத்தியனாரைச் சபித்துரைத்தார். அதனால் அகத்தியனார் தம் மாணவரை வெகுள்வாராயினர். அதங்கோட்டாசிரியரை நோக்கி நீ தொல்காப்பியன் செய்தநூலைக் கேளற்க என அகத்தியனார் கூறினார். தொல்காப்பியனார் அதங்கோட்டாசிரி யரை யடைந்து யான் செய்த நூலை நீவிர் கேட்டல் வேண்டும் எனப் பலமுறையும் வேண்டிக் கொண்டார். இருவர் வேண்டுகோளுள் எதனை மறுத்தாலும் இருவருள் ஒருவரது வெகுளிக்குத் தாம் ஆளாதல் வேண்டிவரும் எனவுணர்ந்த அதங்கோட்டாசிரியர், தொல்காப்பிய நூலரங்கேற்றத்திற்கு வந்து அந்நூலுக்குக் குற்றங்கூறுமுகமாக இருவர் வேண்டு கோளுக்கும் முரண்படாதபடி நடந்துகொள்ள எண்ணினார். தொல்காப்பிய அரங்கேற்றத்திற்கு வந்திருந்து அதங்கோட்டாசிரியர் வினாவிய வினாக்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியர் மயக்கமற விடை கூறினார். இக்கதை சிறப்புப்பாயிரவுரையில் அதங்கோட்டா சாற்கரில் தபத் தெரிந்து என வரும் தொடர்க்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்பெற்றதாகும். இதனைப் புனைந்து முதன்முதற் கூறியவர் நச்சினார்க்கினியரே எனச் சிலர் கருதுவர். தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழவும் அவற்று வழி நூல்செய்தார் என்றக்கால் இழுக்கென்னையெனின் எனப் பிறர் கேட்பதாகப் பேராசிரியர் தம் உரையிற் குறிப்பிடுதலால் இக்கதை நச்சினார்க்கினியர்க்கு முன் பேராசிரியர் காலத்திலேயே உருப்பெறத் தொடங்கியதென எண்ண இடமுண்டு. அகத்தியனார்க்கும் தொல்காப்பியனார்க்கும் பகைமையினை யுண்டாக்கிப் புனைந்த இப்பொய்க் கதையினைப் பேராசிரியர் முதலியோர் மெய்யென ஏற்றுக்கொள்ளவில்லையென்பது அவர் தம் உரைப் பகுதியால் நன்குவிளங்கும். இக்கதையின் பொய்ம்மையினை யுணராத நிலையிலேயே நச்சினார்க்கினியர் இதனைத் தம் உரையிற் குறிப்பிட்டாராதல்வேண்டும். அகத்தியனார் செய்தனவாக இக்கதையிற் குறிக்கப்பட்ட செய்திகளிற் சில பிற்காலப் புராணங்களிற் சிலசில மாற்றங்களுடன் பேசப்பட்டுள்ளன. தொல்காப்பியனார் யமதக்கினியாரின் புதல்வரென்பதும், திரணதூமாக்கினி யென்னும் இயற் பெயருடையா ரென்பதும். வடநாட்டிலிருந்து அகத்தியரால் தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவரென்பதும், தாம் இரு குற்றமும் செய்யாதிருக்கவும் தம்மை அகத்தியனார் சபித்தமைக்கு வருந்தி அம்முனிவர் பெருந்தகையைச் சபித்தவரென்பதும் ஆகிய செய்திகள் வேறு எந்த நூல்களிலுங் குறிக்கப்படவில்லை. இவ்வாறு ஒவ்வாக் கதைகளையும் முன்னோர் பெயராற் புது நூல்களையும் பிற்காலத்தில் தாமே படைத்துக்கொண்டு பொருந்தாக் கொள்கைகளைப் பரப்பித் திரிதலையே பொழுது போக்காகக்கொண்ட ஒருசிலர் இடைக் காலத்தில் நம் தமிழகத்தில் தோன்றித் தொல்காப்பியனார் முதலிய தொல்லாசிரியர் வரலாறுகளையெல்லாம் நம்மனோர் உள்ளவாறு உணராதபடி குழப்பிவிட்டார்கள் எனத்தெரிகிறது. இனித் தமிழ் நூலுள்ளும் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்து காட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறி வந்த வகையான் அறியப்படுமென்பதூஉம் எனப் பேராசிரியர் கூறுமாற்றால் அன்னோரது தீச்செயல் புலப்படுமாறு காண்க. ஆகவே நச்சினார்க்கினியர் சிறப்புப்பாயிர வுரையில் எடுத்துக் காட்டிய கதையினை அவர்க்கு முற்காலத்தவராகிய பேராசிரியர் முதலியோர் ஏற்றுக்கொள்ளவில்லை யென்பது நன்கு விளங்கும் தென்றமிழ் நாட்டவராகிய ஆசிரியர் தொல்காப்பியனாரை வட நாட்டிற் பிறந்த யமதக்கினியாரின் மகனாரெனவும் பரசுராமரின் உடன் பிறப்பாளரெனவும் அகத்தியனாரொடு மாறுகொண்டா ரெனவும் கூறும் இக்கதையினை நச்சினார்க்கினியர்க்கு முன்னுள்ள சான்றோரேயன்றிப் பின்வந்த சிவஞான முனிவர் முதலிய பெரு மக்களும் மறுத்துரைத்துள்ளார்கள். அங்ஙனமாகவும் இக்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் இப்பொய்க் கதையினை மெய்யெனக் கூறிக் தமிழ்க் குடியிற்பிறந்த தொல்காப்பியனாரைத் திரண தூமாக்கினியாக்கித் தமிழக வரலாற்றிற் புகை மூளச் செய்வது தகாது. தொல்காப்பியனார் வரலாற்றை உள்ளவாறு அறிதற்கு அவரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் முழுமுதல் நூலும், அந்நூன்முகத்துக் காணப்படும் சிறப்புப் பாயிரமுமே சான்றாவனவாம். இவற்றையடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால் அகத்தியனார்க்குந் தொல்காப்பியனார்க்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்பது தெளிவாம். தொல்காப்பி யனாரோடு உடன் பயின்றவராகிய பனம்பாரனார் கூறிய சிறப்புப் பாயிரத்தில் அகத்தியனாரைப் பற்றியோ அவரியற்றிய முத்தமிழிலக்கணமாகிய அகத்தியத்தைப் பற்றியோ யாதொரு குறிப்புங் கூறப்படவில்லை. மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவராகிய அகத்தியனார் பால் தமிழ் பயின்ற மாணவர் தொல்காப்பியர் என்பதும், அவ்வருந்தவ முனிவர் ஆக்கிய அகத்தியம் என்ற இலக்கண நூலைப் பொருந்தக் கற்று அதன் வழிநூல் செய்தவர் என்பதும் உண்மையாயிருக்கு மானால், ஆக்கியோன் பெருமையும் நூலின் பெருமையும் அதன் வழியும் விளக்குதற்குரிய இச்சிறப்புடைய நிகழ்ச்சிகளைப் பனம்பாரனார் தம் சிறப்புப் பாயிரத்திற் சொல்லியிருப்பர். அகத்தியனாரைப் பற்றியோ அவர் செய்த அகத்தியத்தைப்பற்றியோ அவ்வாசிரியர் ஒன்றும் கூறினாரல்லர். இன்றியமையாது குறித்தற்குரிய இச் செய்திகளைக் குறிப்பிடாமல் தொல்காப்பியம் பாண்டியன் அவையத்து அரங்கேறிய நாளில் அந்நூலைக் குற்றந்தீரக் கேட்டார் அதங்கோட்டாசான் என்பதும், தொல்காப்பியர் தமது நூலை முந்து நூல்கண்டு முறைப்படுத்தினார் என்பதும் ஆகியவற்றை மட்டுமே பனம்பாரனார் கூறுகின்றார். தொல்காப்பியனார்க்கு அகத்தியனார் ஆசிரியராயின் தொல்காப்பிய நூலரங்கேற்றத்தில் அவரே முதலிடம் பெறுதற்பாலார். அகத்தியனார் பெயர் பாயிரத்திலோ நூலிலோ யாண்டும் சுட்டப்படாமையால் அவர்க்கும் தொல்காப்பி யனார்க்கும் யாதொரு தொடர்புமில்லாமை புலனாம். தம். காலத்துக்கு முன் இயற்றப்பெற்ற தமிழ் நூல்கள் பலவற்றையும் நன்காராய்ந்து தொல்காப்பியனார் நூல்செய்தமை பற்றியே முந்நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன் எனப் பனம்பாரனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் தமக்கு முன்னிருந்த ஆசிரியரைச் சுட்டுமிடங்களிலெல்லாம் என்ப என்மனார் புலவர் மொழிப என்றாங்குப் பொதுப்படவே ஓதியுள்ளார். அகத்தியனார் தலைச்சங்கத்திலும் இடைச்சங்கத்திலும் இருந்து தமிழாராய்ந்தவராகக் களவியலுரை கூறும் அகத்தியனாரைப் பற்றியும் அவர் செய்த அகத்தியத்தைப் பற்றியும் பெயரளவிற் கேட்டுணர்வ தல்லது தெளிவாக அறிந்துகொள்ளுதற்குரிய பழைய நூற் சான்றுகள் இல்லை. அகத்தியர் என்பார் தமிழ் மொழிக்குச் சிறந்த இலக்கணமாக அகத்தியம் என்ற நூலை இயற்றினர் என்பதனைப் பின்வந்த உரையாசிரியர்களும் பிறரும் உடன்பட்டு வழங்கியுள்ளார்கள். உரையாசிரியர்கள் அகத்தியம் என்ற பெயரால் எடுத்துக்காட்டிய சில சூத்திரங்களும் பேரகத்தியம் என்ற பெயரால் இக்காலத்து வெளியிடப்பட்ட சூத்திரங்களும் பிற்காலச் சொன்னடையும் வடசொற்களும் விரவப்பெற்றுத் திட்ப நுட்பமின்றிக் காணப்படுகின்றன. இவற்றை ஊன்றி நோக்குவோர் இவை மிகமிகப் பிற்காலத்தே அகத்தியனார் பெயரால் இயற்றப்பட்டனவே என்னும் உண்மையினை நன்குணர்வர். எனவே இப்பொழுதுள்ள அகத்தியச் சூத்திரங்கள் தென்மதுரைத் தலைச் சங்கத்து வழங்கிய இலக்கண நூலாகக் களவியலுரையாசிரியர் கூறும் அகத்தியம் என்ற நூலைச் சார்ந்தன ஆகா என்பது வெளிப்படை. அகத்தியர் என்ற பெயருடைய முனிவர் பலர் வடநாட்டிலும் தென்னாட்டிலும் காலந்தோறும் பலராகப் பல இடங்களிற் பேசப்பட்டுள்ளார்கள். அவர்களுள் தலைச்சங்கத்து நூலாகிய அகத்தியத்தை இயற்றியவர் தென்னாட்டிலேயே பிறந்து செந்தமிழ் பயின்று சிறந்த புலவராதல் வேண்டும். இருக்கு வேதத்திற் பல பதிகங்களை இயற்றிய ஆசிரிய ரொருவர் அகத்தியர் என்ற பெயராற் பேசப்படுகின்றார். வட நாட்டிலிருந்து இராமபிரான் இலங்கைவேந்தன்மேற் படை யெடுத்து வந்தபொழுது அகத்தியர் வீற்றிருக்குந் தவப்பள்ளிக்குச் சென்று அவரால் வரவேற்று உபசரிக்கப்பெற்றான் என வான்மீக இராமாயணங் கூறும். இந்நூல் அகத்தியர் இருப்பினை நிகழ் காலத்தில் வைத்துப் பேசுவதுடன் ஒன்றற்கொன்று பெரிதுஞ் சேய்மையிலுள்ள அகத்தியர் தவச்சாலைகள் பலவற்றைக் குறிப்பிடுகின்றது. கோசல நாட்டின்கண் ஓடும் வேதசுருதியாற்றங் கரையிலும், விந்தியமலைக்குத் தெற்கே நெடுந்தூரத்திலமைந்த கோதாவிரி யாற்றங் கரையிலும், தெற்கே மலயமலையிலும், இலங்கைத்தீவின் தெற்கே குஞ்சரமலையிலும் அகத்தியர் என்ற பெயர் தாங்கிய முனிவர் பலர் இருந்தனர் என வான்மீக இராமாயணம் கூறுகின்றது. இக்குறிப்புக்களால் அகத்தியர் என்ற பெயருடையார் பலர் வடநாட்டிலுந் தென்னாட்டிலும் ஒரு காலத்தே பலவிடங்களில் தங்கியிருந்தமை உய்த்துணரப்படும். இவர்களுள் தமிழ்நாட்டில் மலயமலைக்கண் (பொதியமலையில்) தங்கியவராகக் குறிக்கப்படும் அகத்தியரே தன் சார்ந்தவராகப் பிற்காலத்துப் புலவர்களாற் பேசப்படுகின்றார் ஆனால் தலைச் சங்கத்தவராகிய அகத்தியனார் தென் மதுரையிலும் கபாடபுரத்திலும் தங்கியிருந்தார் எனக் களவியலுரை கூறுகின்றது. மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலையினை வலம் வந்து குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து மதுரைக்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறும். இங்கே மாதவ முனிவன் என்றது அகத்தியனை யெனவும் மலையென்றது அவனுக்குரிய பொதிய மலையை யெனவும் அடியார்க்கு நல்லார் கூறுவர். மழைபெய்யும் காலத்தைப் புலப்படுத்தும் அறிகுறியாக வானத்தில் விளங்கும் விண்மீனொன்று பொதியின் முனிவன் என்ற பெயராற் பதினோராம் பரிபாடலிற் குறிக்கப்பட்டுளது. இவ்வாறு பொதியின் முனிவன் என ஒருவிண்மீன் பெயர்பெற்றதை நோக்குங்கால் அப்பெயருடைய முனிவர் நம் தமிழகத்திற்கு மிகவும் பழையவர் என்பது உய்த்துணரப்படும். காந்தமன் என்னும் சோழன் பரசுராமனுக்கு அஞ்சி அகத்தியனாரைப் பணிந்து அவர் சொல்லியவண்ணம் தன் காதற்பரத்தை மகனாகிய ககந்தன் என்பானைப் புகார் நகரத்திற்கு அரசனாக்கி மறைந்தொழுகினன் என மணிமேகலை கூறுகின்றது. அமரமுனிவன் அகத்தியனது கரகங் கவிழ்த்தமையாலுண்டாகிய காவிரியாறு நேர் கிழக்கேயோடிவர, மேருமலையிலிருந்த சம்புத்தெய்வம் புகார் நகரத்தருகே சென்று நின்று அக்காவிரியை யெதிர்கொண்ட வரலாறு மணிமேகலை கதை பொதி பாட்டிற் குறிக்கப்படுகிறது. சிவபெருமானை நாடோறும் முப்பொழுதும் இலிங்க வடிவில் நிறுத்தி வழிபட்டுப் போற்றிய அகத்தியமுனிவர்க்கு அப்பெருமான் மணிகள் மிக்க அழகிய பொதிய மலையில் என்றும் வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பினை அருளிச்செய்தார் என்பதனைச், சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்து மாமணி யணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் என வருந் திருப்பாடலால் நம்பியாரூரர் குறித்துப் போற்றி யுள்ளார். தமிழ் வேந்தனாகிய பாண்டியன் கேட்பத் தவத்தால் மனத் தூய்மை பெற்ற அகத்திய முனிவர் தமிழுக்கு இலக்கணஞ் செய்தார் என்பதனைத், தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவி கானார் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல் என வருந் தொடரால் அமிதசாகரர் உணர்த்திப் போந்தார். வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரனார் அகத்தியரைப் பற்றிக் கூறும்கதை ஏனையோர் கருத்துடன் சிறிது வேறுபட்டுளது. அவலோகிதேசுவரரிடம் அகத்தியர் தமிழ் பயின்று தமிழுக்கு இலக்கணஞ் செய்தார் என்பார், ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் எனத் தமிழின் பெருமையைப் பாராட்டுகின்றார். அவலோகிதர் என்பார் புத்த சமயத்தவரால் வணங்கப்பெறுந் தெய்வமாவார். அவர் போதலகிரியில் தம் பத்தினி தாரையுடன் எழுந்தருளியுள்ளார் என்பர். அகத்தியர் சிவபெருமான்பால் தமிழ் பயின்று இலக்கணஞ் செய்தார் என்னுங் கதையே தமிழ்நாட்டிற் பல சமயத்தாராலும் உடன்பட்டு வழங்கப்பெற்று வருகிறது. படைப்புக் காலந்தொட்டுத் தென்னாட்டில் நிலவிரும் தமிழ் மொழியைச் சிவபெருமான் அகத்தியனார்க்கு அறிவுறுத்த, அம்முனிவர் உலக வழக்கினாலும் தம் மதி நுட்பத்தாலும் ஆராய்ந்து தமிழுக்கு இலக்கணஞ் செய்து புகழ்பெற்றார் என்பதனை. என்றுமுள தென்றமிழ் இயம்பி யிசை கொண்டான் எனவும், உழக்குமறை நாலினும் உயர்ந்துலகம் ஓதும் வழக்கினும் மதிக்கவினி னும்மரபின் நாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான் எனவும் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் பாராட்டிப் போற்றியுள்ளார். தமிழ் மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்லேற்றுப்பாகர் என்பர் சிவஞான முனிவர். தமிழ்க்கடவுளாகிய முருகப் பெருமானிடத்து அகத்தியர் தமிழ் பயின்றார் என்னுங் கதையும் தமிழ் நாட்டிற் பயின்று வழங்குகின்றது. தென்மதுரைத் தலைச் சங்கத்துத் திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் வீற்றிருந்து தமிழாராய்ந்தார்கள் எனக் களவியலுரை கூறுதலின் அவ்விருவர்பாலும் அகத்தியனார் தமிழ் பயின்றார் என்னுங் கதைகள் தோன்றுவனவாயின. தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிற வெல்லையுமுளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார், அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி யென்பது எனச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியிற் கூறியது இக்கதையின் பயிற்சியை நன்கு புலப்படுப்பதாகும். தலைவர்வழி நின்று தலைவனாகிய அகத்தியனாற் செய்யப்பட்டதும் முதனூலென்றும், அகத்தியமே முற்காலத்து முதனூல் என்றும், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்றும், அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரியர் எல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்றும், அகத்தியர் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழுக்கும் இலக்கணங் கூறினாரென்றும், செய்யுளிலக்கணம் அகத்தியத்திற் பரந்து கிடந்ததனைத் தொல்காப்பியனார் சுருங்கச் செய்தாரென்றும், அதனருமையை யுணர்ந்த பல்காப்பியனார் செய்யுளிலக்கணத்தைப் பகுத்தோதினாரென்றும் பிற்காலத்துக் காக்கைபாடினியாரும் தொல்காப்பியத்தொடு பொருந்தவே யாப்பிலக்கணம் இயற்றினாரென்றும், ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுங் கூற்றுப் பொருந்தாதென்றும் பேராசிரியர் விளக்கியுள்ளார். தென்மதுரைத் தலைச் சங்கத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியனாராற் செய்யப்பட்ட அகத்தியம் என்றதொரு தமிழிலக்கண நூல், இறையனார் களவியலுரையிலும் இளம்பூரணர் பேராசிரியர் உரைகளிலும் பெயரளவிற் சிறப்பித் துரைக்கப்படுவதனை நோக்குங்கால், அப் பெயருடையதொரு தமிழிலக்கண நூல் பண்டைநாளில் வழங்கியதென்பதனை முன்னுள்ளோர் உடன்பட்டுப் போற்றினமை உய்த்துணரப்படும். எனினும் அந்நூலில் ஒரு சிறு பகுதியும் உரையாசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே அந்நூல் கடல்கோள் முதலிய இடையூறுகளால் பண்டை நாளிலேயே வழக்கொழிந்திருத்தல் வேண்டுமெனவும் அந்நிலையிற் பிற்காலத்தார் சிலர் அகத்தியர் செய்தனவாகப் புதியன சிலவற்றைப் படைத்து வழங்கினரெனவும் கருதவேண்டியுளது. இங்ஙனம் அகத்தியனார் செய்யாதனவற்றை அவர் செய்தனவாகப் படைத்து வழங்கியது போன்றே தென்றமிழ் நாட்டிற்பிறந்து வளர்ந்த தமிழ் நூலாசிரியரை வடநாட்டிலிருந்து வந்தவராகக் கற்பித்துரைக்குங் கதைகளும் படைத்து வழங்கப் பெறுவனவாயின. குடதிசையிலமைந்த மலைத்தொடரைச் சேர்ந்த மலயமலையில் வாழ்ந்த முனிவர் குடமுனிவர் என வழங்கப்பெற்றார். பிற்றைநாளில் அப் பெயர் வடமொழியிற் கும்பமுனி எனத் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு, நான்முகனுக்குக் கும்பத்திற் பிறந்தவர் அம்முனிவர் எனப் பொருந்தாக் கதையொன்றும் புனையப்படுவதாயிற்று. கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவ ரென்றுணர்க என நச்சினார்க்கினியர் கூறுதலால், அகத்தியர் நான்முகனுக்குக் கும்பத்திற் பிறந்தார் என்னுங்கதை அவர் காலத்தே வழங்கத் தொடங்கினமை யறியலாம். அகத்தியர் மூன்று தமிழுக்கும் இலக்கணம் செய்தார் என்பதனைப் பண்டையுரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் எனவும் தோன்று மொழிப்புலவரது பிண்டமென்ப என்றதனால் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டமுள தென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின் எனவும் பேராசிரியரும், அகத்தியம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்றலின்அது பிண்டத்தினை யடக்கிய வேறோர் பிண்டம் என நச்சினார்க்கினியரும் கூறுதலால் அகத்தியம் என்பது முத்தமிழுக்கும் இலக்கணமென்பது பெறப்படும். நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னுல்களும் இறந்தன என அடியார்க்குநல்லார் கூறுதலால் முத்தமிழிலக்கண நூலாகிய அகத்தியம் அவர் காலத்திற்கு முன்னரே இறந்தொழிந்தைமை பெறப்படும். குறுமுனிவராகிய அகத்தியர்க்கு மாணவர் பன்னிருவரென்றும் அவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவ முனிவர், இடைச்சங்கத்தில் அநாகுலன் என்னும் பாண்டியன் மகனாகிய சாரகுமாரன் என்பான் இசையறிதற் பொருட்டு இசை நுணுக்கம் என்னும் இசைநூலை இயற்றினர் என்றும் ஒரு கதை வழங்குகின்றது. தேவ இருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னுந் தெய்வப் பாண்டியன்............Fku‹ இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும் எனவரும் அடியார்க்குநல்லார் கூற்று இக்கதையினைத் தழுவி யெழுந்த தாகும். இடைச்சங்க காலத்தவனாகிய பாண்டியனை அநாகுலனென்னுந் தெய்வப் பாண்டியனென்றும், அவன் தேரொடு விசும்பிற் செல்லுங்கால் திலோத்தமை யென்னுந் தெய்வமகளைக் கண்டு கூடிப் பெற்றமையால் அவன் மகன் சாரகுமாரன் எனப் பெயரிடப் பெற்றான் என்றும் பிற் காலத்து வடமொழிப் பெயரால் இக்கதை குறித்தலால் இது மிகப் பிற்காலத்தே புனைந்துரைக்கப்பட்ட தென்பது தெளிவாம். இருக்கு வேதத்தில் ஒரு சூக்தத்தை இயற்றியவராகச் சொல்லப்படும் அகத்தியர், லோபாமுத்திரையாரை மணந்தவ ராகப் போற்றப்பெறுகின்றார். வடநாட்டார் தென்னாடு புகுதற்குத் தடையாயிருந்த விந்தமலையை அடக்கித் தென்னாடு புகுந்த அகத்தியர் இவரேயென்பர். வடநாட்டிலிருந்து தென்னாட்டிற் குடியேறிய ஆரியருள் அகத்தியரே முதல்வராதல் பற்றி அவர் புகுந்து தங்கி தென்திசையை வடமொழியாளர் ஆகதியம் எனப் பெயரிட்டழைத்தனர் என்றும், தமிழர் உடன்பட்ட அகத்தியர் பொதியிற்கண் இருந்த முனிவரே என்றும் ஏழியன் முறையது என்னுஞ் சூத்திரத்தில் அகத்தியனார் பாணினியையும் இந்திரனையும் எடுத்தோதியுள்ளனர் என்று பிரயோக விவேக நூலார் கருதுவதால் அவர் கருத்துப்படி நோக்கின் இத்தமிழிலக்கணஞ் செய்த அகத்தியனார் அகத்தியர் வழியிற் பாணினிக்குப் பிற்பட்ட வராவரென்று துணியலா மென்றும், இச்சூத்திரத்தில் பாணினி மதத்தையுடம்படாது ஐந்திரமதத்தையுடன்பட்டனர் அகத்தியனார் என்றும், ஓதிய புலவனும் உளன் என நிகழ்காலத்தில் வைத்துப் பாணினியைக் குறிப்பிடுதலால் இவர் காலத்தே வடமொழியாசிரியர் பாணினி யென்பார் வாழ்ந்தாரெனத் துணியலா மென்றும், அகத்தியர் பாணினி மதத்தையுடன்படாது ஐந்திரமதத்தை யுடன்பட்டமையால் இவர் மாணாக்கராகிய தொல் காப்பியனாரும் ஐந்திரத்தையுடன்பட்டு ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனப் போற்றப்பெற்றாரென்றும் கூறுப.1 அன்னோர் காட்டும் அகத்தியச் சூத்திரம் மிகமிகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட தென்பது அதன் சொல்லமைதியால் நன்கு துணியப்படுதலானும் இதனை மேற்கோளாக முதன்முதல் எடுத்துக்காட்டிய மயிலைநாதர் அகத்தியச் சூத்திரங்கள் என்ற பெயராற் காட்டியன பலவும் இதுபோன்று பிற்காலச் சொன்னடையினை யுடையனவாகக் காணப்படுதலானும் இச்சூத்திரத்தில் ஓதிய புலவனும் உளன் எனக் குறிப்பிடுவதன்றி அங்ஙனம் ஓதியவன் பாணினியேயெனக் குறிப்பிடப் படாமையால் இதன்கண் புலவனும் உளன் என்றது பாணினியையே என உறுதியாகக் கொள்ளுதற்கு இடமின்மையானும் பிற்காலஅகத்தியச் சூத்திரங்களை யாதரவாகக்கொண்டு தலைச்சங்கப் புலவராகிய அகத்தியனார் காலத்தை அறுதியிட்டுரைத்தல் இயலாத தொன்றாம். ஆகவே தலைச்சங்கப் புலவராக இறையனார் களவியல் கூறும் அகத்தியனாரும் வடமொழி யிலக்கண ஆசிரியர் பாணினியாரும் ஒருகாலத்தவர் என்று கொள்ளுதற்கு ஒரு சிறிதும் இயைபில்லையென்க. நிலந்தரு திருவிற் பாண்டியன் ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் இயற்றிய தொல் காப்பியத்தை நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தே அதங் கோட்டாசிரியர் முன்னிலையில் அரங்கேற்றினார் எனப் பனம்பாரனார் கூறுதலால், தொல்காப்பியனாரை யாதரித்துத் தொல்காப்பியத்தைச் செய்வித்தவன் அவர் காலத்து வேந்தனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியனே என்பது நன்கு புலனாகும். இவ்வேந்தன் முதலூழியிறுதிக்கண் தென்மதுரையில் தலைச் சங்கத்தினை தோற்றுவித்துப் புரந்த பாண்டியர் எண்பத் தொன்பதின்மருள் இறுதியி லிருந்தவன். இவன் காலத்தில் பாண்டி நாட்டின் தென்பாற்கண்ணதாகிய பஃறுளியாறு முதல் அதன் வடபாற் குமரிமலைவரை யமைந்த நிலப்பகுதியைக் கடல் புகுந்து அழித்தது. இங்ஙனம் கடல்கோளால் தன்னாடு சுருங்கிய நிலையினையுணர்ந்த இவ்வேந்தன், தன் கீழ் வாழுங் குடிமக்களுக்கு வேண்டிய நிலப்பரப்பினைத் தேடித் தருதற்குரிய கடமையுடையவனாயினான். கடல்கோளால் தான் இழந்த பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் ஈடாக வடதிசையிற் படையெடுத்துச் சென்று அங்கு வாழும் வேந்தரொடு போர்புரிந்து கங்கையாற்றையும் இமயமலையையும் தன்பாற்கொண்ட நிலப்பரப்பை வென்று கைக்கொண்டான். தான் வென்று பெற்றநாடுகளைத் தன்கீழ் வாழ்வார்க்குத் தந்தான். இங்ஙனம் பகைவேந்தர் நிலத்தைத் தன் போர்த்திறத்தால் வென்று கைப்பற்றித் தன்கீழ் வாழ்வார்க்குத் தந்த வெற்றியும் ஈகையுங்கருதி இவ்வேந்தர் பெருமானை நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரால் தமிழ் மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். பனம்பாரனாரும் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனவே இம்மன்னனது பெயரைக் குறிப்பிடுகின்றார். எனவே இப்பெயர் சிறப்புப் பெயராதல் வேண்டும், இம் மன்னனது இயற்பெயர் இன்னதென விளங்கவில்லை. பாண்டியன் மாகீர்த்தி என்ற பெயரால் நச்சினார்க்கினியர் இவ்வேந்தனைக் குறிப்பிடுவார். சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என அடியார்க்கு நல்லார் இவ்வேந்தனது பெயரை விரித்துக் கூறியுள்ளார். இத்தொடரிற் சயமாகீர்த்தியென்பது நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் சிறப்புப் பெயரின் மொழி பெயர்ப்பாகும். இவ்வேந்தர் பெருமான் தென்மதுரையில் தலைச்சங்கத்தை நிறுவிப் போற்றிய பாண்டியருள் ஒருவன் என்றும் இவனே தொல்காப்பியத்தை ஆக்குவித்தோனென்றும் தெரிகிறது. முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம் இரீஇய காய்ச்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத் தொன்பதிமருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான் என அடியார்க்கு நல்லார் கூறியது இவ்வேந்தனது வரலாறேயாகும். இவன் கடல்கோளிற்படாது தன் குடிமக்களைக் காப்பாற்றி நெடு நாள் வாழச்செய்து ஆண்ட சிறப்புடைமை குறித்து நெடியோன் எனவும் வழங்கப்பெற்றான். இவன் இருபத்து நாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தானென்றும் அதனால் இவன் அவையிலுள்ளோர் அறிவுமிக்கிருந்தன ரென்றும் அவ்வவையினர் கேட்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற் கொல்லாம் தொல்காப்பியனார் குற்றந்தீர விடை கூறினாரென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.1 இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தான் என்பதன் கருத்து ஏனையோரைக் காட்டிலும் இவ்வேந்தன் நெடுங்காலம் வாழ்ந்தான் என்பதேயாகும். இவன் கல்வி வளர்ச்சியிற் கருத்துடையனாய் அறிஞர் பலரையும் பேணித் தன்னாட்டிற்கு இன்றியமையாத அரும்பொருள்களை பலவற்றையும் வேற்றுப்புலத்திலிருந்து கொண்டுவந்து தந்து தன் குடிமக்களைப் போற்றிச் சிறந்த முறையில் அரசியலை நிகழ்த்தினான். இவ்வேந்தனது அரசியல் நெறி சிறப்புடை மரபின் ஆட்சிபுரியும் பெருவேந்தர் பலர்க்கும் எடுத்துக் காட்டாக விளங்கியது. ஆகவே இவ்வேந்தர் பெருமானைப் பின் வந்த பெருவேந்தர்களுக்கு உவமையாக எடுத்துரைக்கும் வழக்கம் தமிழகத்தில் நிலவுவ தாயிற்று. வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி என மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்தியதாக இளங்கோவடிகள் கூறியது, நிலந்தரு திருவிற் பாண்டியன் வரலாற்றைக் கருதியதேயாகும். வடிம்பலம்ப நின்ற பாண்டியனே நிலந்திருவின் நெடியோன் என்பது நச்சினார்க்கினியரது கருத்தாகும். எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே என ஒன்பதாம் புறப்பாடலிற் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வாழ்த்தப் பெறுகின்றான். இத்தொடரில் முந்நீர் விழவின் நெடியோன் எனப் போற்றப்பெற்றவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியனே என்பது புறநானூற்றுரையாசிரியர் கருத்தாகும். முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றான் என்ற வியப்பால் நெடியோன் என்றார் என்ப என அவ்வாசிரியர் தமக்கு முன்னோர் கருத்தாகக் கூறுதலால், புறநானூற் றுரையாசிரியர்க்கு முன்னுள்ள சான்றோரும் இங்ஙனமே கருதினார்கள் என்பது பெறப்படும். எனவே வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பான் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குக் காலத்தால் முற்பட்டவனென்பதும், முந்நீர் விழவின் நெடியோன் என்ற பெயருடையவன் என்பதும் முன்னையோர் கருத்தாதல் நன்கு புலனாகும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்னரும் நெடியோன் என்ற பெயருடைய பான்டியனொருவன் இருந்தான் என்பது மதுரைக் காஞ்சியாற் புலனாகின்றது. பல்யாகசாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பும் நிலந்தந்த பேருதவியும் இந் நெடியோனுக்கு உளவாக மாங்குடி மருதனார் கூறுகின்றார். நெட்டிமையார், முதுகுடுமிப் பெருவழுதியின் வாழ்நாள் அளவுக்குப் பஃறுளியாற்றின் மணலை உவமை கூறி வாழ்த்தி யுள்ளார். அதனால் இப்புலவர் பஃறுளியாறுள்ள காலத்தில் வாழ்ந்தவரெனவும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் காலத்தால் முற்பட்டவரெனவும் கருதுவாரும் உளர். வியங்கோள் வினைச் சொல் முன்னிலை தன்மை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறா தென்பதனை முன்னிலை தன்மை ஆயீரிடத்தொடும், மன்னாதாகும் வியங்கோட் கிளவி என்ற சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறித்துள்ளார். இவ்விதிக்கு மாறாக எங்கோ வாழிய குடுமி என வியங்கோள் வினைச்சொல் நெட்டிமையார் பாடலிற் பயின்றுவரக் காண்கின்றோம். ஆவோடல்லது யகரமுதலாது என்ற தொல்காப்பிய விதிக்கு மாறாக யூபம்நட்ட வியன்களம் பலகொல் என இப்புலவர் 15-ம் புறப்பாடலிற் கூறியுள்ளார். எனவே இப்பாடலைப் பாடிய நெட்டிமையார், தொல்காப்பியனார் காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டவரென்பது தெளிவாதல் காண்க. பஃறுளியாறும் குமரிமலையும் தொல்காப்பியம் இயற்றப் பெறுவதற்கு முன்னர்க் கடல்கோளால் அழிந்தமை முன்னர் விளக்கப்பட்டது. இங்ஙனம் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னர்க் கடல்கோளால் அழிந்தொழிந்த பஃறுளியாற்றின் மணலை முதுகுடுமிப் பெருவழுதியின் வாழ்நாட் பெருக்கத்திற்கு நெட்டிமையார் உவமை கூறி வாழ்த்தினரென்றல் வாழ்த்தியல் முறைக்கு ஏற்புடையதன்றாம். அவர் காலத்திற் பழைய பஃறுளியாறு கடல்கோளால் அழியாதிருந்ததெனக் கருதுதற்கும் இடமில்லை, எனவே முந்நீர்விழவின் நெடியோன் நன்னீர்ப்பஃறுளி என நெட்டிமையாராற் கூறப்பட்ட பஃறுளியென்பது, தலைச்சங்க காலத்தில் தென்மதுரையின் பாங்கர்ஓடிய பஃறுளியாறு கடல் வாய்ப்பட்ட பின்னர் அதன் நினைவாக உள்நாட்டிற் புதுவதாக வெட்டப்பட்டதோர் ஆற்றினையே குறிப்பதாகுமெனத் துணிய வேண்டியுளது. திருவாங்கூர் நாட்டிற் பரளியென்னும் பெயருடன் இக்காலத்து விளங்கும் யாறு இப்பெயர் வழக்க நினைவினை வலியுறுத்துவதாதல் காணலாம். கடைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் முதல்வனாகக் களவியலுரை கூறும் முடத்திருமாறனே நிலந்தரு திருவிற் பாண்டியன் என மகாவித்துவான் இராகவையங்காரவர்கள் கூறி யுள்ளார்கள். அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது எனக் களவியலுரையிற் சொல்லப்பட்ட கடல்கோள் இடைச்சங்கத்திறுதியில் நிகழ்ந்ததாகும். நிலந்தரு திருவிற் பாண்டியனைத் தலைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் ஒருவன் என்றும் அவன் காலத்துப் பஃறுளியாறு குமரிமலை முதலிய நிலப்பகுதியைக் கடல்கொண்டதென்றும் அடியார்க்கு நல்லார் கூறுதலால் பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள என இளங்கோவடிகள் குறித்த கடல் கோள், தலைச்சங்கத் திறுதியில் நிகழ்ந்ததெனத் தெரிகிறது. அன்றியும் இடைச் சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் எனக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கூறிய கொள்கையைப் பேராசிரியர் விளக்குதலால், ஆசிரியர் தொல்காப்பியனார் காலம் இடைச்சங்கத் தொடக்கமும் தலைச்சங்கத் திறுதியுமெனவே கொள்ளப்படும். ஆகவே தலைச்சங்கத் திறுதியில் ஆசிரியர் தொல்காப்பியனாரைக் கொண்டு தொல்காப்பியம் என்னும் இயற்றமிழியல் நூலை இயற்றுவித்து அதனைத் தன் அரசவைப் புலவர் முன் அரங்கேற்றி வெளிப்படுத்திய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் தலைச்சங்கத் திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவன் என்பது தெளிவாம். முடத்திருமாறன் என்பான் இடைச் சங்கத்திறுதியில் நேர்ந்த கடல்கோளில் தப்பிப் பிழைத்து கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தவனாவன். எனவே வேறுவேறு காலத்தினராகிய இவ்விரு பெருவேந்தரையும் ஒருவராகக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்துவதன்றாம். தென்மதுரையில் காய்சின வழுதியால் தோற்றுவிக்கப்பெற்றுத் தொன்றுதொட்டுத் தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்த தமிழ்ச்சங்கம் இடைக்காலத்தே நேர்ந்த பெரிய இடையூறுகளால் இருமுறை இடையறவுபட்டமையால் ஒன்றெனக் கருதப்படாது தலை, இடை, கடை என மூன்றாகப் பேசப்படுவதாயிற்று. தலைச் சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் திறுதியிலும் ஆகஒருமுறை நிகழ்ந்த கடல்கோள்களே இவ்விடையறவுக்குரிய காரணமாகும். சிலப்பதிகாரத்தினையும் இறையனார் களவியலுரையினையும் பேராசிரியர் அடியார்க்கு நல்லார் முதலியோர் உரைக் குறிப்பினையும் ஒப்பு நோக்குங்கால் மேற்காட்டிய செய்திகள் இனிது புலனாதல் காணலாம். பாண்டியன் அவையம் நுண்ணிறிவுடைய சான்றோர் பலரும் தம்முள் இகலின்றி ஒருங்கு கூடி மக்களது வாழ்க்கை முறையினை மேன்மேல் உயர்த்துதற்குரிய வழக்குஞ் செய்யுளும் ஆகிய இருவகை நெறிமுறையினையும் ஆராயும் இடமே அவையம் என வழங்கப்பெறும் இத்தகைய அவையின் இயல்பினை எட்டுவகை நுதலிய அவையகத்தானும் என்ற தொடரால் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எண்வகை இயல்புகளையுடையராய் அவையின்கண் முந்தியிருப்போர் வெற்றியையே எட்டுவகை நுதலிய அவையகம் எனத் தொல்காப்பியம் பாராட்டிக் கூறுகின்றது. குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாவின்மை யென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை எனவரும் ஆசிரிய மாலைத்தொடர், இவ் அவையின் சிறப்பினை அழகுபெற விரித்துரைக்கின்றது. ஊர்கள்தோறும் நிகழுங் குற்றங்குறைகளை உசாவியறிந்து வழக்கு நெறியால் முறைவழங்கு தலும், மக்களது ஒழுகலாற்றினை மேலும் மேலும் உயரச்செய்தல் கருதி உரையும் பாட்டும் என இருதிறத்தாற் கல்வித்துறையை வளர்த்தலும் அவையத்தார்க்குரிய கடமைகளாய் அமைந்தன. மக்கள் அறியவேண்டுவனவற்றை அறிதற்குரிய மனப்பயிற்சியாகிய கல்விப் பயிற்சியும், கற்றவழியே நன்னெறியிலொழுகு தலாகிய நல்லொழுக்கப் பயிற்சியும் அவையத்தாரால் கண் காணித்தற் குரியனவாம். இக்கடமையினை யுளத்துட்கொண்ட பண்டைத் தமிழ் வேந்தர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் வாய்ந்த சான்றோர்களை ஒருங்கழைத்துத் தமிழ்கூறும் நல்லுகத்து வழக்குஞ் செய்யுளும் ஆராயும் பேரவையினை நிறுவிப்போற்றி வந்தார்கள். இங்ஙனம் பாண்டியர் முதலிய பண்டைத் தமிழ் வேந்தர்களால் தோற்றுவிக்கப்பெற்ற அவையமே பிற்காலத்தில் சங்கம் என்ற பெயரால் வழங்கப்பெறுவதாயிற்று. இதனை முன்னுள்ளோர் கூடல், தொகை என்ற பெயர்களாலும் வழங்கி யுள்ளார்கள். தாய்மொழி வாயிலாக எல்லாக் கலைகளையும் வளர்க்குங் கருத்துடன் புலவர் பேரவையைக் கூட்டி அறிவு நூல்களை வெளியிடும் முறை, மக்கள் நல்வாழ்வினைப் போற்றும் நாகரிக வளர்ச்சிக்கு அரண் செய்வதாகும். இங்ஙனம் கூர்த்த நல்லறிவினால் சீர்த்த நாகரிகத்தை வளர்க்கும் கல்வித் தொண்டினைப் பண்டைப் பாண்டியர்கள் தம் குலப் பணியாகக் கொண்டிருந்தார்கள் என்பது, களவியலுரையிற் கூறப்படும் முதல், இடை, கடையென்னும் மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றால் நன்கு விளங்கும். அவையம் என்பதே சங்கத்தைக் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயராகும். தலைச்சங்கத்து இறுதியில் நிகழ்ந்த கடல்கோளால் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்ட பஃறுளியாறுமுதல் குமரிமலை யீறாகவுள்ள பெருநிலப்பகுதி கடலுள் மூழ்கியதென்றும், அதனையாண்ட தென்னவன், தான் தென்னாட்டில் இழந்த நிலத்திற்கு ஈடாக வடநாட்டிற் கங்கை முதல் இமயம்வரையுள்ள பெருநிலப் பகுதியை வென்று தன் நாட்டுக் குடிகள் வாழத்தந்து நிலந்தரு திருவிற் பாண்டியன் எனச் சிறப்பிக்கப் பெற்றானென்று முன்னர்க் கண்டோம். கல்வியாலும் வீரத்தாலும் கொடைத் திறத்தாலும் புகழ்ச் செயலாலும் மேம்பட்டு விளங்கிய இவ்வேந்தர் பெருமான், தன் குடிமக்கள் யாவரும் தமிழர்க்குரிய பெருமிதப் பண்புகள் யாவும் ஒருங்கே பெற்றுத் திகழவேண்டுமெனக் கருதினான். தன்னாட்டில் நேர்ந்த கடல்கோளால் அழிந்து மறைந்த பேரறிவு நிதியமாகிய நூற்செல்வத்தை யெல்லாம் தேடித் தொகுக்க முயன்றான். ஆயுந்தொறும் தொறும் இனிதாந் தமிழ் பயின்று ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலரையும் அழைத்துப் போற்றி, நவில்தொறும் நூல் நயங்காணும் புலவர் பேரவையினை இரண்டாம் முறையாக நிலை நிறுத்தினான். இவனால் நிறுவப்பெற்ற இவ் அவையமே கபாட புரத்தில் நிகழ்ந்ததாகக் களவியலுரை கூறும் இடைச்சங்கமாகும். தென் மதுரைத் தலைச்சங்கம் கடல்வாய்ப்பட் டழிந்தமையால் அங்கு வாழ்ந்த அறிஞர்களால் இயற்றப்பெற்ற எத்துணையோ நூல்கள் அழிந்துபோயின. கடல்கோளில் அகப்பட்டு இறவாது எப்படியாவது தப்பிப் பிழைத்தல் வேண்டுமென எண்ணிய மக்கள், தாம் ஈட்டிய அரும் பொருள்களை யெல்லாம் உதறிவிட்டு வெறுங்கையராய்த் தம் முன்னோர் இயற்றிய பெறலரும் நூற் சுவடிகளிற் பலவற்றையும் மறைந்து வைத்துவிட்டு நடுக்கத்தால் விரைந்து ஓடிவர வேண்டிய துன்ப நிலையினராயினர். இங்ஙனம் பொருட் செல்வத்தையும் அறிவுச் செல்வத்தையும் இழந்து போந்து வறுமையுற்றுழலும் தன் குடிமக்களுக்கு அவ்விருவகைச் செல்வத்தையும் ஈட்டுதற்குரிய வழி துறைகளை வகுத்துத் தருவது மன்னனது கடமையாயிற்று. இக் கடமையினை மேற்கொண்டு வடதிசைக் கங்கையும் இமயமும் ஆகிய மாற்றாரது நிலத்தினை வென்று தன் நாட்டு மக்களைப் பொருட் செல்வமுடையாராகச் செய்த நிலந்தருதிருவிற் பாண்டியன், தன் அவையில் அறிஞர் பலரையும் ஒருங்கு கூட்டிச் சிறந்த அறிவு நூல்களை யியற்றப் பணித்துத் தமிழ்நாட்டின் அறிவுச் செல்வத்தையும் வளர்ப்பா னாயினன். மக்களிடையே எல்லாக் கலைகளும் திருத்தமாக வழங்கப் பெறவேண்டுமானால், கலைநூல்களெல்லாவற்றிற்கும் நிலைக் களமாகத் திகழும் அவர்களது மொழி, தெளிவும் ஒட்பமும் அமைந்த இலக்கண வரம்புடையதாதல் வேண்டும். ஒருவரது கருத்தினை ஏனையோர் தெளிவாக விளங்கிக் கொள்ளுதற்கு ஏற்றபடியும் அவரது சொல்வழக்கு இடத்தாலும் காலத்தாலும் மாறுபட்டுப் பிழைபாடுறாதபடியும் எழுத்தின் ஒலிமுறை, சொல்லமைப்பு பொருளுணர்த்தும் நெறி இவற்றால் ஒருமொழி இயற்கையாக வளர்தற்கேற்ற வரம்புடைமையினை விளக்குவது, அம் மொழியின் இலக்கண நூலாகும். இங்ஙனம் இலக்கண வரம்புக்கு உட்பட்டியங்கும் மொழியே இடத்தாலும் காலத்தாலும் மாறுபடாது பொருளியல்பினை உள்ளவாறு எல்லோர்க்குந் தெரிவிக்கும் ஆற்றலுடையதாகும். உலக வழக்கில் நிலைபெற்று வழங்கும் மொழியானது காலந்தோறும் மாறுபடுவதியல்பு. காலந்தோறும் நிகழும் மாறுபாடுகளால் மொழி தன் உருச்சிதைந்தழியாமல் அதனைக் கண்காணித்தலும், காலத்திற் கேற்பத் தோன்றிய இயற்கை மாற்றத்தை யுணர்ந்து பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற முறைப்படிப் புது வரம்பமைத்தலும் இலக்கண நூலார் கடனாகும். மக்களது மொழி வழக்கினை உலகியல் நெறிக்கேற்ப வரை யறுத்துக் காட்டும் இயல் நூலொன்று தன்காலத் தமிழகத்திற்கு இன்றியமையாதது என்பதை நிலந்தரு திருவிற்பாண்டியன் நன்குணர்ந்தான். தனது அவைக்களப் புலவருளொருவராகிய ஆசிரியர் தொல்காப்பியனாரை யழைத்து, எளிய இனிய இயற்றமிழ் நூலொன்று இயற்றித் தருதல் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அரசனது நற்கருத்தினையும் தமிழ் மொழிக்குத் தாம் செய்யவேண்டிய அரும்பணியின் திறத்தையும் சிந்தித்துணர்ந்த தொல்காப்பியனார், தம் வாழ்விற் பயின்றுணர்ந்த கலைத் திறங்களின் பயனாகவும், தம் காலம் வரையிலும் வளர்ந்து சிறந்த தமிழன்னையின் எழில்மிக்க ஓவியமாகவும் தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலை யியற்றித் தமிழ் மக்களுக்கு அளித்தருளினார். அதங்கோட்டாசான் நிலந்தரு திருவற் பாண்டியன் என்பான், தான் விரும்பியவாறு தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் நூலினைத் தன் பேரவையிற் குழுமிய புலவர் பெருமக்கள் முன்னிலையில் அரங்கேற்ற வெண்ணினான். அவனது அவைக் களத்தே தலைமைப்புலவராய்த் திகழ்ந்தவர், அதங்கோட்டாசான் என்னும் புலவர் பெருமானாவார். அவர் அறமே கூறும் நாவினையுடையார். தமிழ் நூல்களைத் துறைபோகக் கற்றுணர்ந்ததோடு நான்மறைகளையும் முற்றப் பயின்ற பெற்றியுடையார். தம் தாய் மொழியாகிய தமிழிற் பெரும் புலமைபெற்று விளங்கியதுடன், தம் காலத்தில் வடமொழிப் புலவர் சிலர் தமிழ் நாட்டிற் குடி புகுந்தமையாற் பரவத் தொடங்கிய வடமொழி நூல்களையும் நன்கு பயின்று, இவ்விரு மொழிகளின் பொதுவியல்பு சிறப்பியல்புகளையும் தெளிய வுணர்ந்திருந்தார். இங்ஙனம் தென்றமிழும் வட மொழியும் நன்கு தேர்ந்து மனத்துக்கண் மாசின்றி விளங்கிய அறவோராகிய இவ்வாசிரியப் பெருமானை அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் எனப் பனம்பாரனார் பாராட்டு கின்றார். இப்புலவர் பெருமானது இயற்பெயர் இஃதெனத் தெரிந்திலது. கல்வியறிவொழுக்கங்களில் தலை சிறந்து விளங்கும் பெரியோர்களை அவர் தம் இயற்பெயரால் அழைப்பதற்கு உளங் கூசிய மக்கள், அப்பெரியோர் வாழும் ஊர் முதலியவற்றோடு தொடர்பு படுத்திச் சிறப்புப் பெயராற் பாராட்டிப் போற்றுதல் மரபாகும். அம்மரபின்படியே இவ்வாசிரியரும் தம் இயற் பெயரால் அழைக்கப்பெறாது, அதங்கோடு என்னும் தம் ஊர்ப்பெயரால் அதங்கோட்டாசான் என அழைக்கப் பெற்றனர். அதங்கோடு என்னும் ஊரிற் பிறந்து செந்தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்தமை குறித்து இவ்வாசிரியர்க்கு அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் தமிழகத்தில் நிலைபெற்று வழங்கு வதாயிற்று. திருவாங்கூர் வட்டகையில் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பெருவழியில் கற்குளந் தாலுகாவில் அதங்கோடு எனப் பெயரியதோர் ஊர் உளது. இவ்வூர் பண்டைக் காலத்தில் சிறப்புடைய பேரூராய் விளங்கியது என்பதற்குரிய அடையாளமாகப் பழைய கோட்டைமதில் முதலியன இவ்வூரிற் சிதைந்த நிலையில் உள்ளன. அதங்கோடு என்பது திருவென்னும் அடைமொழி பெற்றுத் திருவதங்கோடு எனவும் வழங்குவதாயிற்று. பழமை மிக்க இவ்வூரின் பெயரே இக்காலத்தில் திருவிதாங்கோடு எனத் திரிந்து நாட்டின் பெயராகவும் வழங்குகின்றது. இவ்வூரின் தொன்மை யுணராதார் ஸ்ரீவாழுங்கோடு என்பதே திருவிதாங்கோடு எனச் சிதைந்த தென்பர். ஸ்ரீவாழுங்கோடு என்னும் மணிமிடை பவள மாகிய கலவைத் தொடர் பண்டை நாளில் வழங்காமையானும், இக் காலத்தும் அதங்கோடு என்னும் பெயரே எல்லா மக்களாலும் உடன்பட்டு வழங்கப் பெறுதலானும், திருவிதாங்கோடு என்பதைத் திருவதங்கோடு என்பதன் திரிபாகக் கொள்ளுதலே வரலாற்று முறைக்கு ஏற்புடையதாகும். பிற்காலத்தில் சேரநாட்டுடன் இணைக்கப்பட்ட வேணாடு, நாஞ்சில் நாடு முதலிய தென்திருவாங்கூர்ப் பகுதிகள், பண்டை நாளிற் பாண்டி நாட்டின் பகுதிகளாகவே விளங்கினவென்பது, தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் நன்கறியப்படும். ஆகவே பிற்காலத்தில் திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள அதங்கோடு என்னும் ஊரும் முன்னாளிற் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்த தென்பது இனிதுபுலனாம். பாண்டியர்க்குரிய இந்நிலப்பகுதி மிகமிகப் பிற்காலத்தே தான் மலையாளர் ஆட்சிக்கு உட்படுவதாயிற்று. இதனைச் சேர நாடெனவும், பனி மழை, வெயில் என்னுஞ் சொற்கள் தொல்காப்பியனார் கூறியவாறு அத்துச் சாரியை பெற்று பனியத்துப் போகருதே, மழையத்துப் போகருதே, வெயிலத்துப் போகருதே என இக்கால மலையாள மொழியில் வழங்குதல் கொண்டு தொல்காப்பியனாரும் அதங்கோட்டாசானும் பிறந்த நாட்டிலே தான் பிற்காலத்தில் தமிழ் மலையாளமாக உருத்திரிந்ததெனவும் கருதுவாருமுளர்.1 சேர மன்னர்களின் ஆட்சிக்குரிய குட்ட நாட்டிலும் குடநாட்டிலும் வழங்கிய தமிழே பிற்காலத்தில் அயல்மொழியாளர் கூட்டுறவால் மலையாளம் என வேறோர் மொழியாகத் திரிந்ததென்பதும், அம்மொழியினைப் பேசும் மக்கள் சில நூற்றாண்டுகளில் வேணாட்டிலும் நாஞ்சில் நாட்டிலும் பரவி வாழத் தலைப்பட்டமையால் இந்நாடுகள் மலையாளர் ஆட்சிக்கு உட்பட நேர்ந்ததென்பதும், தென் திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள நாஞ்சில் நாடும் வேணாட்டின் ஒரு பகுதியும் இன்றும் செந்தமிழ் நாடாகவே திகழ்கின்றன வென்பதும் ஆகிய வரலாற்று முறைமையினை நோக்குங்கால், அதங்கோடு என்னும் ஊரைச்சார்ந்த நிலப்பகுதியைத் தென்பாண்டி நாடெனக்கொள் வதல்லது மலையாள மொழியின் பிறப்பிடமாகக் கூறுதற்கு இடமில்லை. எனவே அதங்கோட்டாசிரியரது ஊராகக் கருதப்படும் அதங்கோடென்பது பாண்டிநாட்டின் பழைய பேரூர்களில் ஒன்றெனவே கொள்ளப்படுமென்க. முறைப்பட நூல்செய்யும் ஆசிரியன், தான் இயற்றிய நூலினைக் கற்றோர் குழுமிய பேரவைக்கண் எடுத்துரைத்து, அவர்கள் வினாவும் வினாக்களுக்கெல்லாம் பொருந்துமாறு விடை பகர்ந்து, தன் துணிபினை நிலைநிறுத்துங் கடமை யுடையவனாவன். இக்கடமையை நன்குணர்ந்த தொல் காப்பியனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையிலே செந்தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த அதங்கோட்டாசான் முன்னிலையிலே அவ்வாசிரியர் உள்ளத்தில் தோன்றிய ஐயங்களுக்கெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளத்தக்கவாறு அமைதிகூறித் தொல்காப்பியம் என்னும் இந்நூலைக் குற்றமற அரங்கேற்றினாரென்பது வரலாறு. நூலரங்கேற்றத்திற் கலந்துகொள்ளும் பேரறிஞர்கள், நூலிற் காணுங் குற்றங்களைக் களைந்து அந்நூலைப் பலரும் ஏற்றுப் பாராட்டத்தக்க பண்புடையதாகச் சீர்திருத்தி வெளிப்படுத்துங் கடமையுடை யோராவர். நூலரங்கேறும் அவைக்களத்து வீற்றிருந்து அறிவு நூல்களையாராயந்து குற்றமற வெளிப்படுத்தும் பொறுப்பினை மேற்கொண்ட அதங்கோட்டாசிரியர், தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியத்தைக் கூர்ந்துகேட்டு, அதன்கட் சொல்லப்பெற்ற இலக்கண மரபு பற்றித் தம் உள்ளத்திற்றோன்றிய ஐயங்களையெல்லாம் அறிஞர் முன்னிலையில் எடுத்துக்கூற, அவர்கேட்ட ஐயங்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் தம் காலத்துத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளுமாகிய இருவகை யியல்பினையும் நன்கு ஆராய்ந்து கேட்டோர் உள்ளத்தில் மயக்கந் தோன்றாதபடி இயற்றமிழியல்பு முறையினை விளங்க எடுத்துக்காட்டி விடை கூறினார். இச்செய்தியினை அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து, மயங்கா மரபின் எழுத்துமுறை சாட்டி எனவருஞ் சிறப்புப் பாயிரத் தொடரால் பனம்பாரனார் உய்த்துணர வைத்தல் அறியத்தக்கதாம். தொல்காப்பியம் இயற்றமிழ் நூல் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்புழி எழுத் தென்றது இயற்றமிழை. இயற்றமிழாவது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பகுத்தாராய்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு விளக்கும் மொழிநடையினை யுடையதாகும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு என வருந் திருக்குறளில் எழுத்து என்னுஞ் சொல் இயற்றமிழைக் குறித்து நிற்றல் இங்கு ஒப்பு நோக்குதற் குரியதாகும். முந்து நூல்களில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழுக்கும் பொதுவாக இலக்கணம் இயற்றப்பெற்றிருந்த தென்றும், ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழுள் இயற்றமிழுக்குரிய இலக்கணத்தைமட்டும் தனியே பகுத்தெடுத்துக் கொண்டு தாம் இயற்றிய தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூலின் ஏனைய இசை நாடக இலக்கணங்கள் கலந்து மங்காதவாறு தெளிவான முறையில் இலக்கணங்களை முறைப்படுத்தினா ரென்பார் மயங்கா மரபின் எழுத்துமுறைகட்டி என்றாரென்றும், இயற்றமிழுள்ளும் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றனுள் ஒன்றற்குரிய இலக்கணத்தை மற்றவற்றில் சேர்த்துக்கூறாது முன்னர் எழுத்திலக்கணத்தை யுணர்த்தி அதன் பின்னர்ச் சொல்லிலக்கணத்தைக் கூறி இறுதியிற் பொருளிலக் கணத்தை விரித்து விளக்கினாரென்பார், மயங்காமரபின் எழுத்து.... காட்டி யென்னாது, எழுத்து முறைகாட்டி எனப் பனம்பாரனார் கூறினாரென்றும் சிவஞானமுனிவர் கூறுவர். வடமொழிப் புலவர் சிலர் தமிழ் மக்களுடன் அளவளாவிப் பழகியதன் விளைவாக வடமொழி வழக்குகள் சில தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின அந்நிலையில் தமிழிற் பிறமொழி மரபு விரவித் தமிழின் தனி மாண்பினைச் சிதைக்காது பாதுகாக்கக் கருதிய தொல்காப்பியனார், வடமொழிமரபு தமிழிற் கலவாதபடி தமிழின் தனியியல்பினை விளக்குமுகமாக இயற்மிழ் நூலாகிய இத் தொல்காப்பியத்தை இயற்றினாரென்பார் மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி என்றாரெனினும் அமையும். தொல்காப்பியத்திற் கூறப்படும் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய இலக்கணங்கள் யாவும் தமிழுக்கே உரியனவாம். வடமொழிக்குரிய இயல் பெதுவும் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திற் சொல்லப்படவில்லை. இது தமிழுக்குரியதோ அன்றி வடமொழிக்குரியதோ என்னும் ஐயப்பாட்டிற் கிடனின்றித் தமிழுக்கேயுரிய இயல்புகளையே தொல்காப்பியனார் தம் நூலிற் கூறியுள்ளார். இம் முறையினை யுணராத பிற்காலத்தார் சிலர். தொல்காப்பியனார் தமிழாக எடுத்தாண்ட காலம் உலகம் முதலிய பழந் தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களெனப் பிறழக்கொண்டு மயங்கினர். காலம், உலகம் என்பன வடசொல் அன்று; ஆசிரியர் வடசொற்களையெடுத்தோதி இலக்கணங் கூறாராகலின் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் அன்னோரது மயக்கத்தை நீக்கு முகத்தான் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன யாவும் தமிழுக்கே யுரியன வென்பதை நன்கு தெளிவித்தமை இவண் கருதற்குரிய தாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் தொல்காப்பியத்தினை அரங்கேற்றுங்கால் அதங்கோட் டாசிரியர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் குற்றமற விடை கூறியதுகண்ட அவையத்தார், ஆசிரியரது தமிழ்ப் புலமையின் தெளிவினை யறிந்து மகிழ்ந்ததுடன் அவர்க்கு வாய்த்த ஐந்திர இலக்கணப் பயிற்சியின் நிறைவினையும் நன்குணர்ந்து ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் என அவரைப் பாராட்டிப் போற்றினார்கள். தவப்பெருஞ் செல்வராகிய ஆசிரியர், கடல்சூழ்ந்து விளங்கும் இவ்வுலகிலே ஐந்திர விலக்கணத்தை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத் தம்மைப் பலரும் பாராட்டத் தாம் இயற்றிய நூலையும் தம் பெயரால் தோற்றுவித்து வழங்கச்செய்து பல்வகைப் பெருங்குணங்களாலும் ஒன்றாக வுயர்ந்த பெரும்புகழை இவ்வுலகில் நிலைபெறச் செய்தார். இச்செய்தி, மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என வரும் சிறப்புப்பாயிரத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். சிறப்புப்பாயிரத்திற் சுட்டப்பட்ட ஐந்திரம் என்ற நூலைப் பற்றியும் படிமை என்னும் சொல்லின் பொருளைப்பற்றியும் ஆராய்ச்சியாளர்களிடையே வேறுபட்ட கொள்கைகள் நிலவி வருகின்றன. இவற்றின் உண்மையினைக் கண்டறிந்தாலல்லது ஆசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்தைப்பற்றியும் அவர் தம் சமயவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளைப்பற்றியும் பலரும் தாம் விரும்பியவாறு கூறிச் செல்லும் கொள்கைகளின் வன்மை மென்மையினைத் தெரிந்து தெளிதல் இயலாது. ஆகவே அவை பற்றிய கொள்கைள் இவண் சுருக்கமாக ஆராயப்படும். ஐந்திரம் என்பது ஐந்திர வியாகரணம் எனவும் இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திரமென்றாயிற்று எனவும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். ஆரியமொழியின் வளர்ச்சி கருதி இந்திரனாற் செய்யப்பட்டது ஐந்திர வியாகரணமாகும். வட மொழியினும் வல்லனாயினான் என்பார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனார் கூறினார் என்று சிவஞான முனிவர் கூறுவர். ஐந்திர வியாகரணம் என்பதொன்றுண்டோ என ஐயறு வாரும், இல்லையென மறுப்பாருமெனப் பல திறத்தர் ஆராய்ச்சி யாளர். போப தேவரது தாது பாடத்திலேயுள்ள சுலோக மொன்றில், வடமொழியிலக்கணஞ் செய்தார் இந்திரன் முதலிய எண்மரெனக் கூறப்பட்டுளது. ஆயினும் பாணினீயம் ஒழிந்த ஏனைய இலக்கண நூல்களில் ஒரு சில சூத்திரங்கள் தவிர நூல் முழுமையுங் காணப்படாமையின் அந்நூல்கள் இறந்துபோயின வெனவே எண்ண வேண்டியுளது. வாக் வை பராக் வ்யாக்ருதா என்ற ரிக் வேத சாயண பாடியத்திலே ஐந்திரத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுளது. கிருஷ்ண யஜுர்வேதம் தைத்திரீய சம்ஹிதை முதல் பிரபாடகம் முதல் அநுவாகம் சாயண பாடியத்தில் வியாகரணத்தை முதன் மையாகக் கொண்ட பொருளறிவு இன்றியமையாததாகலின் தேவர்களால் வேண்டப்பெற்ற இந்திரன் வியாகரணத்தை இயற் றினான் என்றும், இப்பொருள் ஆறாவது காண்டம் நான்காவது பிரபாடகத்திற் கூறப்பட்டுள்ளதென்றும் சாயணர் விளக்கி யுள்ளார். வடமொழி யிலக்கண நூலாசிரியர்களில் இந்திரனே முதலாசிரியன் என்பது மேற்காட்டிய தைத்திரீய சம்ஹிதையாற் புலனாதல் காணலாம். அநுமான் சூரியனிடமிருந்து வியாகரணத்தைக் கற்றதாகவும் சூத்திரம், விருத்தி, அவற்றின் பொருள்கள் முதலியவற்றுடன் நவ வியாகரணங்களையுங் கற்றுணர்ந்ததாகவும் வான்மீக ராமாயணம் உத்தர காண்டம் 35-ஆம் சர்க்கம் 43, 45,-ஆம் சுலோகங்களில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். கிஷ்கிந்தா காண்டம் 3-ஆவது சர்க்கத்தில் இவனது நீண்ட பேச்சினிடையே ஒரு சிறு பிழையுங் காணப்படாமையால் இவன் வியாகரணத்தைப் பலமுறையும் பயின்றிருக்கவேண்டும் என இராமபிரான் அநுமானை வியந்து பாராட்டுகின்றார். இப் பாராட்டுரை அநுமானது இலக்கணப் பயிற்சியை வலியுறுத்துவதாகும். எப்பொழுது இவனுக்குச் சாத்திரங்களைக் கற்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்பொழுது இவனுக்குச் சாத்திரத்தைக் கொடுக்கிறேன். அதைப் பெற்று மிகுந்த நாவன்மை யுடையவனாக ஆவான். சாத்திரங்களைக் கற்றுப்பெற்ற தேர்ச்சியில் இவனுக்கு ஒப்பாவான் ஒருவனுமிரான் என இந்திரன் அநுமானுக்கு வரந்தருவதாக வான்மீக ராமாயணம் உத்தரகாண்டம் 36-ஆம் சர்க்கம் 14-ஆம் சுலோகம் அமைந்துளது. இப்பகுதியில் சாத்ரம் என்பதற்குச் சாத்திரங்களின் பொருளுணர்ச்சி அஃதாவது ஐந்திர வியாகரணம் என்று பொருள் எனக் கோவிந்தராசர் என்பார் உரைகண்டுள்ளார். மேற்கூறியவற்றால் இந்திரனாற் செய்யப்பட்டதோர் வியாகரணம் ஒன்றுண்டெனவும் அதனை அநுமான் பயின்று தேர்ந்தன னெனவும் வான்மீக முனிவர் தம் இராமாயணத்திற் குறித்துள்ளமை இனிதுணரப்படும். வேதாந்த தேசிகரின் ரகயத்திரய சாரத்தின் முடிவில் ஐந்திர வியாகரண பண்டிதன் மகாராஜர்க்கு உபதேசித்தானிறே எனவருந் தொடரில் ஐந்திர வியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயரால் அநுமானைக் குறித்துள்ளமையும், அயிந்திரம் நிறைந்தவன் (யுத்த - விபீடணன் அடைக்கலப் படலம். 42) எனக் கம்பர் அனுமனைக் குறிப்பிட்டமையும் வியாகரணத்தில் தொன்மை வாய்ந்தது ஐந்திரவியாகரணமே யென்னும் உண்மையை விளக்குதல் காணலாம். வர்ஷர் என்ற ஆசிரியரின் மாணவர் பலருள் பாணினி யென்பார் மந்தமதியாயிருத்தல் கருதி வர்ஷரின் மனைவியார் பாணினியை வீட்டைவிட்டுத் துரத்திவிடவே, அதனால் வருத்த முற்ற பாணினி, சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து அவர்பால் இலக்கணங்களையறிந்து பின்னர்க் காத்தியாயனருடன் வாதுசெய்து அவர் ஓதிவந்த ஐந்திரவியாகரணத்தை யழித்தார் என்று சோமதேவரது கதாசரித் சாகரத்திலே ஒரு கதையுளது. வடமொழியிற் பாணினீயம் தோன்றியபிறகு ஐந்திரவியாகரணப் பயிற்சி அறவே இல்லாது போயிற்றென்பது இக்கதையாற் புலனாகின்றது. எல்லாம் வல்லவராகிய சிவபெருமான் முதலில் வியாகரணம் செய்தாரென்றும், அதனையொட்டி இந்திரன் வியாகரணம் செய்தானென்றும், அவன் செய்த ஐந்திரத்தைப் பிரகபதி கற்றாரென்றும், பின்னர்ப் பாணினி தோன்றித் தனது பாணினீயத்தைச் செய்ய, நாவலந்தீவிலே ஐந்திரம் அழிந்துவிட்ட தென்றும் பூ தோ (Bu-Stow) என்பார் கூறுவர். இந்திர வியாகரணம் பாணினிக்கு முற்பட்டதென்றும் தென்னாட்டுப் பார்ப்பன மரபினனான சப்தவர்மன் என்பான். முருகக்கடவுளை யிறைஞ்சி இந்திரவியாகரணம் தனக்குப் புலனாக வேண்டுமெனக் குறையிரந்து நின்றானாக, குமரக்கடவுள் ஸித்தோ வர்ண ஸமாம்நாய: என்று அடியெடுத்துக் கொடுத்ததாகவும் இத்தொடர் கலாபமான காதந்தரத்திலே முதல் சூத்திரமென்றும், இந்திரதுருவன் என்ற அந்தணன் ஐந்திரம் கற்றவனென்றும், அவ் ஐந்திரம் இருபத்தையாயிரம் சுலோகங்களை யுடையதென்றும் திபேத்திய லாமாவான தாரநாதர் என்பார் எழுதுவர். மேற்காட்டிய குறிப்புக்களால் ஐந்திரவியா கரணம் வைதிக சம்பந்தமுடையதெனக் குறிக்கப்படுதல் காண்க. ஹோய் லி (Hoei-Li) என்பார் எழுதிய ஹியுவான்த்ஸாங் சரிதையில் ஹியுவான்த்ஸாங் நாலந்தா பல்கலைக் கழகத்தில் பிரமநூல் (வேதம்) பயின்றாரெனவும், அதனைக் கற்ப ஆரம்பத்தில் பிரமதேவர் தேவர்களுக்குச் சொல்ல அதனை இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாகச் சுருக்கினானெனவும், சாலாத் துறையூரில் பிறந்த பாணினி யென்பவர் அந்நூலை எண்ணாயிரங் கிரந்தங்களில் அடக்கினானெனவும் தென்னாட்டிற் றோன்றிய பார்ப் பனனொருவன் அதனை இரண்டாயிரத்தைந்நூறு கிரந்தங் களில் அடக்கினாரெனவும் அந்நூலே இப்பொழுது வட நாடுகளிற் கற்கப் படுகிறதெனவும் கூறியுள்ளார். புத்தமத நூல்கள் பலவற்றில் ஐந்திர வியாகரணப் பெயர் காணப்படுகிறதென்றும், சாரிபுத்தன் தனது புதினாறாம் ஆண்டில் ஐந்திரம் படித்தான் என அவதான சதகத்திற் சொல்லப்பட்ட தென்றும் டாக்டர் பர்ணல் கூறியுள்ளார். சாகடாயண வியா கரணம் இந்திரனைக் குறிப்பிடுகின்றதெனச் சமணர் கூறுவர். இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் இந்திரனாற் செய்யப்பட்ட தோர் இலக்கணநூல் பாணினிக்கு முற்பட வழங்கியதென்பதும், அந்நூல் வைதிக சமயச் சார்புடையதென்பதும், அந்நூல் வழக்கொழிந்து இறந்துபோகவே வைதிக சமயத்தாரும் புத்தரும் சமணரும் பிற்காலத்தில் அப்பெயராற் பல சுருக்க நூல்களைச் செய்தனரென்பதும் உய்த்துணரப்படும். ஐந்திர இலக்கணமரபு எல்லோராலும் எளிதிலறியத் தக்க முறையில் மொழியின் இயற்கை யமைப்பினை யொட்டி யமைந்த தொன்மையுடையது. பாணினீயத்திற் காணப்படும் இலக்கண மரபு மிகவும் சிக்கலானது; பலகாலும் ஆழ்ந்து படித்தோர்க் கல்லது ஏனையோர்க்கு விளங்காதது. விளங்கத்தக்க குறியீடு களால் எளிய முறையில் இலக்கணங்கூறும் ஐந்திரமும் விளங்காத கடின குறியீடுகளால் அரிதிற் பயிலத்தக்க பாணினீயமும் அமைப்பு முறையில் வேறுபட்டனவாம். பாணினீயம் மற்றவற்றினின்று வேறுபட்டுப் புதிய பல குறியீடுகளைக் கூறினும், பழைய கோட்பாடுகளை ஆளும்போது பிராஞ்ச என்ற சொல்லால் ஆளுகிறது. முன்னாளிலிருந்த சில சொற்களை யாதொரு விளக்கமுமின்றி எடுத்தாண்டும் பண்டை நாளில் வழங்கிய சில பழஞ் சொற்களைத் தாம் கண்ட புதுப் பொருளில் வழங்கியும் பாணினியார் தம் நூலை அமைத்துள்ளார். கணபாதர் பதஞ்சலி முதலியோர் பாணினீயத்தில் விளங்காதவற்றை விளக்கும் பொருட்டு ஐந்திர முதலிய பழைய நூற் குறியீடுகளை அவ்வாறே வார்த்திகத்திலும் மாபாடியத்திலும் எடுத்துக்காட்டி யுள்ளனர். இவர்கள் ஐந்திரத்திலிருந்து ஆண்டவற்றையெல்லாம் பிராஞ்ச: என்ற சொல்லாற் காட்டியுள்ளார்கள். பாணினியும் அதே சொல்லாற் குறித்துள்ளார். தைத்திரீய ஆரண்யகத்திற் காணப்படும் ஒலிநூற் குறிப்புக்கள் சிலவும் சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும் ஐதரேயப் பிரமாணத்திலுள்ளன சிலவும் ஐந்திர வழக்குகளே எனவும், கோபதப்பிராமணம் 1-24-ல் வரும் சிறு வாக்கியத்தில் ஐந்திர வழக்குகள் பலவுள்ளன எனவும், வேதகற்ப சூத்திரங் களிலேயும் இவ்வழக்குகள் வந்துள்ளன எனவும், இவற்றால் வேதகாலத்திலே ஐந்திர வழக்குகள் உள்ளமை தெளியப்படு மெனவும், தைத்ரீயப் பிராதிசாக்கியம், காத்தியாயனப் பிராதிசாக்கியம், பாணினினீயம், பதஞ்சலி மாபாடியம் என்பன ஐந்திர இலக்கண மரபினை எடுத்தாண்ட நூல்கள் எனவும், இக்குறிப்புக்களால் ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத் தொகுதியிருந்தமை உறுதியாதல் புலனாமெனவும் டாக்டர் பர்ணல் என்னும் பேரறிஞர் ஆராய்ந்து விளக்கயுள்ளர்.1 இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவர் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920-ஆண்டுகளாம். பாணினியார் கி. மு. 700-ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் இயற்றிய இலக்கண நூலுக்குப் பேருரை எழுதிய பதஞ்சலி முனிவர் கி. மு. 150-ல் வாழ்ந்தனர் என ஆராய்ச்சியாளர் அறுதியிட்டுரைப்பர். ஆகவே கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது பாணினீயம் என்பது நன்கு புலனாம். ஆராய்ச்சியாளர் பலரும் கி. மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் பாணினி முனிவர் என முடிவு செய்துள்ளார்கள். தொல்காப்பியனாரது வடமொழி வியாகரணப் பயிற்சியைச் சிறப்பிக்கக் கருதிய பனம்பாரனார், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என அவ்வாசிரியரைப் போற்றுதலால் வடமொழியின் சிறந்த இலக்கண நூலாக அவர் காலத்து வழங்கியது ஐந்திர வியாகாரணமே என்பது நன்கு துணியப்படும் ஐந்திர வியா கரணத்தினும் திறம்பட அமைந்த இலக்கண நூல்பாணினி முனிவரால் இயற்றப்பெற்ற அஷ்டாத்தியாயி என்பதே வடமொழி வல்லார் கருத்தாகும். பாணினி முனிவரால் இயற்றப்பெற்ற அஷ்டாத்தியாயி என்னும் இந்நூல், தொல் காப்பியனார் காலத்தில் வழங்கியிருக்குமாயின், அவர் காலத்தவர் பாணினீயப் பயிற்சியையே சிறப்புடையதாகப் பாராட்டியிருப்பர். தொல்காப்பியனார் காலத்தில் ஐந்திரத்தைக் காட்டிலும் சிறப்புடைய வட மொழி வியாகரணம் வேறொன்றுமில்லையென்ற கருத்திலேயே ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனார் ஐந்திர நூற் பயிற்சியைச் சிறப்பித்து எடுத்துப் பேசுகின்றார். அன்றியும் பாணினீயம் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருக்குமாயின் ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்து அவ்வம் முதனிலைகளிற் கொணர்ந்து அடக்கும் பாணினியின் இலக்கண முறையினைத் தொல்காப்பியனார் தம் நூலுள் யாண்டேனும் சுட்டியிருப்பர். பின் வந்த நன்னூலார் இவ்விலக்கண முறையினைக் குறிப்பிடுதல் காண்க. அத்தகைய குறிப்பெதுவும் தொல்காப்பியத்திற் காணப்படாமையால் தொல்காப்பியனார் காலத்தில் பாணினீயம் போன்றதொரு வடமொழி இலக்கண மரபு தோன்றவில்லை யென்பது நன்கு தெளியப்படும். இனி ஐந்திர நூலைப்பற்றித் தமிழ் நூல்களிற் குறிக்கப்படும் செய்திகளை நோக்குவோம். இந்திரனாற் செய்யப்பட்ட நூலினை விண்ணவர் கோமான் விழுநூல் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இத்தொடரிற் குறிக்கப்பட்ட நூல் ஐந்திர வியாகரணமே என அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிட்டுள்ளார்கள். புண்ணிய சரவணம் பொருந்துவிராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் என மாங்காட்டு மறையோன் கூறியதைக் கேட்ட கவுந்தியடிகள், கப்பத்திந்திரன் காட்டிய நூலின் மெய்ப் பாட்டியற்கையின் விளங்கக் காணாய் என அவனுக்கு மறுமொழி கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். தேவர்களினும் வைத்து ஆயுக்கற்பத்தினை மிகவுடைய இந்திரன் தோற்றுவித்த வியாகரணத்தினை எம்முடைய அருக குமரன் அருளிச் செய்த பரமாகமகங்களிற் காண்கின்றிலையோ என்பது கவுந்தியடிகள் மறையோனை நோக்கிக் கூறிய மறுமொழியாகும். இதனால் விண்ணவர் கோமான் விழுநூல் என மறையோன் கூற்றில் வைத்துரைக்கப்படும் ஐந்திர நூலும் அதனில் வேறாகக் கவுந்தியடிகள் குறித்த பரமாகமமும் வேறுவேறென்பது போதரும். கவுந்தியடிகளின் சமண் சமயப் பற்றினைப் புலப்படுத்தும் முறையில் இளங்கோவடிகள் இம்மறுமொழியினைக் குறித்துள்ளமை இவண் சிந்தித்தற்குரியதாகும். இந்திரனது நூலிற் சொல்லப்பட்ட பொருள்களையெல்லாம் தம் சமய நூலாகிய பரமாகமத்திலேயே கண்டு மகிழலாம் என்பது கவுந்தியடிகளின் பற்றுதல் மொழியாகும். கற்பமென்றதனைப் பிராகிருதத்தாற் கப்பமென்றார். தேவர்களிடைச் சென்று கற்பிக்கும் இந்திரன் என்னுமாம். மெய்ப்பாட்டியற்கை-பராமாகமம். அதில் ஐந்திர வியாகரணம் காணலாம் என அடியார்க்குநல்லாரும், பரமாகமத்தில் இந்திரன் நூலினைக் காணலாம் என அரும்பதவுரையாசிரியரும் மேற்காட்டிய தொடர்ப் பொருளை விளக்கியுள்ளார்கள். இக்குறிப்புக்களை யெல்லாம் நுணுகியாராயுங்கால் தொல்காப்பியனார் காலத்திற் பெருவழக்கிலிருந்த ஐந்திரம், இளங்கோவடிகள் காலத்தில் வழக்கொழிந்து, மாங்காட்டு மறையோன் கூறியவாறு புண்ணிய சரவணம் படிந்து தெய்வத்தினிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் அருகி மறைந்து விட்டதென்பதும், வழக் கொழிந்த அந்நூற்பொருளை அறிந்து கொள்வதற்கு அக்காலத்தவர் பெரிதும் விரும்பினர்களென்பதும், மறைந்த ஐந்திரப் பொருள் தம் இறைவன் அருளிய பராமாகமத்திலும் சொல்லப்பட்டுளது எனச் சமண் சமயத்தினர் தமக்குள் சொல்லி மகிழ்ந்தனர் என்பதும் நன்கு புலனாம். மறைந்துபோன ஐந்திரப்பொருளைச் சிவபெருமான் பாணினி முனிவர்க்குப் புலனாக அருளிச்செய்தார் என்பது, பாணினி முனிவர் வரலாற்றிற் குறிக்கப்படும் செய்தியாகும். இந்திரத்தையினிதாக ஈந்தார் போலும் என திருநாவுக் கரசடிகளார் சிவ பெருமானைப் போற்றுதலால் ஐந்திர நூற்பொருள் இறைவன் திருவருளால் வெளிப்பட்டதென்னுஞ் செய்தி இனிதுணர்த்தப் படுதல் காண்க. காலப்பழமையாற் கற்றற்கியலாது அருகி மறைந்த ஐந்திர வியாகரணத்தைச் சிவபிரான் பணினி முனிவர்க்கு எளிதாக்கி வகுத்துரைத்தருளினார் என்பர். வைதிக சமயத்தவரால் வேதத் திற்கு அங்கமாக ஓதப்பட்டுவரும் பாணினீயத்திற்கு முதலாகச் சொல்லப்படும் ஐந்திரமும் வைதிக சமயச் சார்புடையதென்பதிற் சிறிதும் ஐயமில்லை வேதவேள்வியை வெறுத்தொழுகும் சமணர்களால் ஐந்திர வியாகரணப் பயிற்சி மதிக்கப்படாமை சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் மாங்காட்டு மறையோனை நோக்கிக் கூறிய மறுமொழியால் உய்த்துணரப்படும். கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணாய் எனவரும் கவுந்தியடிகள் மறுமொழியால் சமணர் ஐந்திர நூற் பயிற்சியைப் பொருட்படுத்தாமையை இளங்கோ வடிகள் குறிப்பித்தாராவர். இங்ஙனம் இளங்கோவடிகளும் திருநாவுக்கரசடிகளாரும் இந்திரன் செய்த நூலினை வேத வழக்கொடு பொருந்திய நூலாகவே குறிப்பிடுதலாலும், வடமொழி யாசிரியர்களும் அங்ஙனமே கருதினமை முன்னர்க் குறித்து விளக்கப்பட்டமை யாலும், ஐந்திர வியாகரணம் வைதிகசமயச் சார்புடையதென்பது நன்கு துணியப்படும். உண்மையிங்ஙனமாகவும், ஐந்திர நூற்பொருள் சமண சமயத்தார்க்கே சிறப்புரிமையுடையதென்றும், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தொல்காப்பியனார் பாராட்டப் பெறுதலால் அவர் பயின்ற ஐந்திரம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமணராற் செய்யப்பட்ட ஜைநேந்திரமென்றும், அந்நூலைப் பயின்ற தொல்காப்பியனாரும் சமண சமயத்தாராவ ரென்றும் ஆராய்ச்சியாளரொருவர் கூறியுள்ளார். அவர் கூற்று வரலாற்று முறைக்கு மாறுபட்டதென்பது ஐந்திரத்தைப்பற்றி முற்கூறிய செய்திகளால் நன்கு புலனாம். வேதகாலத்தை யொட்டிய வடமொழி யிலக்கியங்களிலமைந்த மொழிநடையினை யுளத்துட்கொண்டு எளிய முறையில் இயற்றப்பெற்ற வடமொழித் தொன்மை வியாகரணமே ஐந்திரம் எனப் பண்டைச் சான்றோர் பலருங் கூறியுள்ளார்கள். அக்கொள்கையே வரம்பின் வழிநின்று ஆராயும் ஆராய்ச்சி முறைக்குப் பொருந்துவதென்க. படிமையோன் பல்புகழ் நிறுத்த படிமையோன் எனவருஞ் சிறப்புப்பாயிரத் தொடர்க்குப் பல புகழ்களையும் இவ்வுலகின் கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தையுடையோன் என நச்சினார்க்கினியர் பொருள்கூறுவர். படிமை என்னுஞ்சொல் தவவொழுக்கத்தினை யுணர்த்துதல் சமண சமயத்தவர் நூல்களிலன்றி அவற்றிற்கு முற்பட்ட வடமொழி தென்மொழி நூல்களிற் காணப்படவில்லை யென்றும், ஆகவே படிமையோன் என இச்சொல்லாற் சிறப்பித்துப் போற்றப்பெற்ற தொல் காப்பியனாரும் சமண சமயத்தவராதல் வேண்டுமென்றும் அறிஞறொருவர் கூறியுள்ளார். படிமை என்பது படிமா என்ற பிராகிருதச் சொல்லின் திரிபென்பதும், அச்சொல் தவவொழுக்கம் என்ற பொருளில் சமண சமய நூல்களிலன்றி ஏனைய நூல்களில் வழங்கப்படவில்லை யென்பதும், தொல் காப்பியனார் சமண சமயத்தில் இல்லற நெறியில் நின்று சிறந்த தவவொழுக்கங்களை மேற்கொண்டவ ரென்பதும் அவர் தம் ஆராய்ச்சி முடியாகும். படிமை என்னுஞ் சொல் சமணரது தவவொழுக்கத்தையே சிறப்பாகக் குறித்து வழங்கியதாயின், அச்சொல்லை ஏனைச் சமயத்தார் தம் நூல்களில் உடன்பட்டு வழங்கியிருக்கமாட்டார்கள். படிமை என்னும் இச்சொல், கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோருவப்ப ........................................................................... கூறினை பெருமநின் படிமையானே எனப் பதிற்றுப்பத்து 74-ஆம் பாடலில் வைதிகவொழுக்கத் தினையுங் குறித்து வழங்குகின்றது. ஆகவே படிமையென்பது சமணரது தவவொழுக்கத்தையே குறிக்குமென்பார் கொள்கை பிழைபடுதல் காணலாம். படிமை என்பதிற் படியென்பது பகுதியாகும். படிமை, முறைமை என்பன ஒரு பொருட் சொற்களாம். படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது எனவருந் தொல்காப்பிய நூற்பாவில் படிமை என்னும் இச்சொல் நிலத்தின் தன்மையைக் குறித்துநின்றது. படியுடையார் பற்றமைந்தக்கண்ணும் எனவருந் திருக்குறளிற் படியென்னுஞ் சொல், நிலம் என்னும் பொருளில் வழங்கியுளது. நிலத்தியல்பால் நீர்மை திரிதலின் படி யென்பது தன்மை யென்னும் பொருளிலும் வழங்குவதாயிற்று. இப்படியன் இந்நிறத்தன் என்பது திருநாவுக் கரசர் தேவாரம். பணிலம் வெண்குடை அரசெழுந்ததோர் படி யெழுந்தன என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல். ஏசும்படியோரிளங் கொடியாய் என்புழிப் படி என்பதற்கு வடிவு என அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார். பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் எனச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் முறையே சாரணனது வடிவமும் விஞ்சையனின் வடிவமும் சிறப்பித்துரைக்கப்பட்டன. படிமை படிவம் எனவும் வழங்கும். தண்டோடு பிடித்த தாழ்கமண்டலத்துப், படிவவுண்டிப் பார்ப்பன மகனே என்பது குறுந்தொகை. இதுகாறுங் கூறியவாற்றால் படிமை என்னுஞ் சொல் நில மென்னும் பொருளுடைய படி யென்னுஞ் சொல்லினை முதனிலையாகக் கொண்டு தோற்றிய தனித் தமிழ்ச் சொல்லே யென்பதும், அச்சொல் தன்மை யென்னும் பொருளில் யாவரானும் பொதுவாக வழங்கப்பெற்று வருவதென்பதும், அதுவே பின்னர்ச் சிறப்புடைய தவ வேடத்தியல்பினையும் குறித்து வழங்கலாயிற் றென்பதும், அது படிமா என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபன் றென்பதும், படிமை யென்னும் பழந்தமிழ்ச் சொல்லே பிராகிருத மொழியிற் படிமா எனச் சிதைந்து வழங்கியிருத்தல் வேண்டு மென்பதும் நன்கு புலனாகும். எனவே தொல்காப்பியர் சமணரென்பார் கூற்றுக்குப் படிமை யென்னும் இச்சொல் வழக்கு சான்றாகா தென்பது தேற்றம். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியனார் கற்கப்படும் நூல்களைக் கசடறக் கற்றுக் காப்பன காத்துக் கடிவன கடிந்து அறநெறி நின்று இவ் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து செம்பொருளுணர்ந்த தெய்வப் பெற்றியராதலின் பல்புகழ் நிறுத்த படிமையோன் என அவ்வாசிரியரைப் பனம் பாரனார் பாராட்டியது மிகவும் பொருத்தமுடையதேயாகும். தொல்காப்பியனார் காலம் இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிற்கும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது. தொல்காப்பியமாகும். எட்டுத் தொகை நூல்களுளொன்றாகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற் பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிற்கும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலனாம். கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி. பி. 171 - 193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவ னென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுருவமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனாகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்றான் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது தெளிவாதல் காணலாம்.1 இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனார் காலம் கி. மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். தொல்காப்பியத்தை யடியொற்றியது திருக்குறள் தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூலினை வரம்பாகக் கொண்டே ஆசிரியர் திருவள்ளுவனார் உலகப் பொதுமறை யாகிய திருக்குறளை இயற்றியுள்ளார். அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருள் எனவருந் தொல்காப்பியச் சூத்திரம், அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றுமே உலகிற் கருதத்தக்க பொருள்கள் என வரையறுத்துக் கூறுகின்றது. இவ்வரையறையினை யடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறளை வகுத்தமைத்துள்ளார். அறத்தினாற் பொருள் செய்து அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பண்டைத் தமிழாசிரியர் கொள்கையாகும். இம் முப்பொருளின் வேறாக வீடு என்பதொரு பொருள் நான்காவதாக வுளதெனக் கொண்டு புருஷார்த்தம் நான்கென்பர் வடநூலார். அவ்வடமொழி மரபினைப் பின்பற்றாது அற முதலாகிய மும்முதற் பொருளென்னும் தொல்காப்பிய மரபே திருவள்ளுவராற் போற்றி ஏற்றுக்கொள்ளப் பெற்றதாகும். தொல்காப்பியர் வாய்மொழியினை அவ்வாறே எடுத்தாண்ட பகுதிகளும் திருக்குறளிற் காணப்படுகின்றன. எழுத்தெனப்படுப அகரமுதல் னகரவிறுவாய் எனத் தொல்காப்பியனார் தமது நூலைத் தொடங்கியுள்ளார். அகரமுதல வெழுத்தெல்லாம் எனத் தொடங்கிக் கூடி முயங்கப்பெறின் என னகர விறுவாய்த் திருக்குறளை முடித்தார் திருவள்ளுவர். நிலந்தீ நீர்வளி விசும்போடைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்றார் தொல்காப்பியர். சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின், வகைதெரிவான் கட்டேயுலகு என்றார் திருவள்ளுவர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப எனவருந் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி யமைந்ததே நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும் என வருந் திருக்குறளாகும். பெருங்காஞ்சி யென்னுந் துறையினை விளக்கக் கருதிய தொல்காப்பியனார், மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என அதன் இயல்பினைப் புலப்படுத்தியுள்ளார். மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சி என இத்தொடர்க்கு இளம்பூரணர் பொருள் கூறுவர். ஒருவராலும் விலக்குதற்கரிய கூற்றம் வரு மென அறிவுறுத்தலைப் பெருமை யென்ற சொல்லாற் குறிப்பிடுதல் தொல்காப்பியர் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக் கருத்தினை நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும், பெருமை யுடைத்திவ் வுலகு என்ற திருக்குறளால் திருவள்ளுவர் விளக்குகின்றார். இந்நிலையாமையே உலகின் மிக்கதாதல் பற்றிப் பெருமை யெனப்பட்டது என்பர் பரிமேலழகர் மாற்றருங் கூற்ற முண்மை தெரிந்தோர் பெருமிதமின்றி யடங்கியொழுகு வராதலின் அவ்வொழுக்க முடையார் வாய்மொழியைப் பெருமையென்றா ரெனினும் அமையும். மாற்றருங்கூற்றம் என்னுந் தொல்காப்பியத் தொடர் பொருளைக் கூற்றங் குதித்தலுங் கைகூடும், என்ற தொடரில் எதிர்மறையும்மையால் திருவள்ளுவர் குறிப்பாக உணரவைத்தமை ஈண்டு நினைத்தற் குரியதாம். அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி எனவருந் தொல் காப்பியத் தொடர்ப் பொருளை அருளென்னும் அன்பீன் குழவி எனவருந் திருக்குறள் இனிது புலப்படுத்து வதாகும். தான் கூற வெடுத்துக்கொண்ட பொருளைப் பிறர் உணரும் வாயிலறிந்து உணர்த்தவல்லனாயின் இச்சொல் இப்பொருளையுடையது எனத் தான் கூறக் கருதிய பொருள் திரிபின்றி இனிது விளங்கும் என்பதனை, பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின் என்ற சூத்திரத்தாலும், சொற்பொருளை உணர்த்தும் நெறி கேட்போரது உணர்வினைப் பற்றுக்கோடாகவுடையது என்பதனை உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே என்ற சூத்திரத்தாலும் தொல்காப்பியனார் விளக்குவர். தான் கருதியன அரிய பொருளாயினும் பிறர்க்கு எளிதிற் புலனாக எடுத்துரைக்கும் ஆற்றலும், பிறர் கூறுவன உணர்தற்கரியனவாயினும் அவற்றை எளியவாகக் கேட்டுணரும் ஆற்றலும் அறிவின் இரு திறன் களென்பது, மேற்கூறிய இரு சூத்திரங்களின் கருத்தாகும். இவ்விரு சூத்திரங்களின் கருத்தினையும் ஆசிரியர் திருவள்ளுவனார் எண் பொருளவாகச் செலச்சொல்லித்தான் பிறர்வாய், நுண் பொருள் காண்பதறிவு என அறிவினது இலக்கணம் கூறும் வழி எடுத்தாண்டுள்ளார். இதுகாறும் எடுத்துக்காட்டியவாற்றால் ஆசிரியர் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள், தொல் காப்பியக் கருத்துக்களையும் சொற்றொடர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றமை நன்கு புலனாதல் காணலாம். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தொல்காப்பிய விதிக்கு மாறான சொல் வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளோடு சிவணுமவ் வியற் பெயரே, கொள்வழியுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். பூரியர்கள் (919) மற்றைய வர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர் திணைப் பெயரை யடுத்துக்கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனக் தொல்காப்பியர் வரை யறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன்விகுதி தன்மை யொரு மையில் வழங்குகின்றது. இவ்வாறே கைவிடுகலனே (அகம்-193) உதவியோ வுடையன் (அகம்-186) நினக்கியான் கிளைஞனல்லனே (அகம்-343) யான் வாழலனே (அகம்-362) உள்ளாராயினு முளனே (அகம்-378) மிகுதி கண்டன்றோவிலனே (அகம்-379) நனியறிந்தன்றோவிலனே (அகம்-384) அமளிதை வந்தனனே அளியன் யானே (குறுந்-30) நீயலன் யானென (குறுந்-36) யான் இழந்தனனே (குறுந்-43) விடல் சூழிலன் யான் (குறுந்-300) யான்கண்டனனோவிலனே (குறுந்-311) உளனே (குறுந்-316) உரைத்தனன் யானாக (புறம்-136) அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே (புறம்-201) கூறுவன் வாழிதோழி (நற்-233) உள்ளினனல்லனோ யானே (நற்-326) யான் தொடங்கினனானிற் புரந்தரவே (ஐங்-428 என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன்விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.1 இவ்வாறே தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகள் சில சங்க நூல்களிலும் திருக்குறளிலும் காணப்படுகின்றன. அல்லால் (குறள்-377) சூழாமல் (1024) செய்யாமல் (101,343) அல்லனேல் (386) இன்றேல் (556) செய்வானேல் (655) வேபாக்கறிந்து (1128) எனத் திருக்குறளிலும், பொரு ளல்லாற் பொருளுமுண்டோ (14) கூறாமற் குறித்ததன் மேற் செல்லும், (1) முற்றாமல் (19) தீராமல், தெருளாமல் (38) காணாமல் (39) கேளாமை (108) காணாமையுண்ட கடுங்கள்ளை (115) நில்லாமை நனி வௌவி (138) எனக் கலித்தொகையிலும் ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியையுடைய வினையேச்சங்கள் பயில வழங்கப்பெற்றுள்ளன. இவை தொல் காப்பியத்திற் கூறப்படவில்லை மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக்கிளவியொடு முடியுமென்ப என்ற சூத்திரத்தால் பலர்பாற் படர்க்கையில் வழங்கும் மாரீற்று முற்றுச்சொல் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியுமெனத் தொல்காப்பியர் விதித்துள்ளார். இவ்விதிக்கு மாறாக உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே (புறம்-362) என மாரீறு பெயர் கொண்டு முடிந்துளது. நிலவன் மாரே புலவர் பாடன்மார் எமர் (புறம்-375) காணன்மார் எமர் (நற்-64) என எதிர்மறையாய் நின்று பெயர்கொண்டு முடிந்தமையும் இவண் கருதற்குரியதாம். அன்றியும் மார் என்னும் இவ்விகுதி தொல் காப்பியர் காலத்தில் வினை விகுதியாகவே வழங்கப்பெற்றுளது இவ்விகுதி தோழிமார் (அகம்-15) எனப்பெயர் மேல் விகுதியாக அகநானூற்றில் ஆளப்பெற்றுளது. இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இல்லை. வியங்கோள் வினை, முன்னிலை தன்மையாகிய இரண்டிடங் களிலும் நிலைபெறாதென்பது, தொல்காப்பிய விதி. இவ்விதிக்கு மாறான சொன்முடிபுகள் சில சங்கத்தொகை நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் முன்னிலை யசையாகக் குறிக்கப்பட்ட மதியென்பது திருமுருகாற்றுப்படையில் நல்குமதி எனப் படர்க்கையில் வழங்கப்பெற்றுளது. முன்னிலைக்குரிய தெனச் சொல்லப்பட்ட மோ என்னும் அசை, புறநானூற்றில் சென்மோ பெரும வெம் விழவுடை நாட்டென (புறம்-381) எனத் தன்மைக்கண் ஆளப்பெற்றது. வருக மாளவென்னுயிர் (அகன்-16) யாழநின் (அகம்-39,86) பாடித்தை (கலி. 131) பலரே தெய்ய வெம்மறை யாதீமே (ஐங்-64) நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ (ஐங்-236) நிலீஇயரத்தை நீ நிலமிசை யானே (புறம்-166) அஞ்சுவதோரும் அறனே (குறள்-366) காதல் நன்மரநீ மற்றிசினே (புறம்-272) பணியுமா மென்றும் பெருமை (குறள்-978) ஈங்காயினவால் என்றிசின் யானே (நச்சினார்க்கினியர் உரை மேற்கோள்) குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே (திருமருகு-217) என இத்தொடர்களில் வழங்கியுள்ளமாள, யாழ, இத்தை, தெய்ய (தெய்யோ) அத்தை, ஓரும், இசின், ஆம், ஆல், தொறு என்பன தொல்காப்பியத்திற் சொல்லப்படாத அசை நிலைகளாம். இவை தொல்காப்பியனார்க்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றி வழக்கில் இடம் பெற்றனவாகும். இவற்றை மேற்கொண்டு வழங்கிய சங்கச் செய்யுட்கள் தொல்காப்பியத்திற்கு நெடுங்காலத்திற்குப் பின் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும். ஒருவன், ஒருத்தி என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குகின்றன. இவை முறையே ஒத்தன் ஒத்தி, எனப் பிற் காலத்தில் திரிந்து வழங்கியுள்ளன. இஃதொத்தன் (கலி-103) இஃதொத்தி (கலி-143) என வழங்குதல் காண்க. சகரமெய் அ, ஐ, ஔ என்னும் மூன்றுயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வாராது என்பது தொல்காப்பிய விதி. சகடம் (புறம்-102, அகம்-136) சடை (புறம்-1) சதுக்கம் (முருகு-25) சந்து (மலைபடு-392) சமம் (புறம்-14, குறள்-99) சமன் (குறள்-118) சலம் (மதுரைக்காஞ்சி-112, குறள்-660) சவட்டி (பெரும்பாண்-217) சவட்டும் (பதிற்-84) எனச் சகரமெய் அகரத்துடன் முதலாகும் சொற்கள் சங்கச் செய்யுட்களில் பயின்று வழங்கியுள்ளன. யகரமெய் ஆகாரவுயிரோடல்லது ஏனைப் பதினோருயிர் களோடும் மொழிக்கு முதலாகாதெனத் தொல்காப்பியங் கூறும். இவ்வரையறைக்கு மாறாக யவனர் என்னும் சொல் சங்கச் செய்யுடகளிற் பெருக வழங்கியுளது. ஞகரமெய் ஆ, ஏ, ஓ என்னும் மூன்றுயிரோடு மட்டுமே மொழிக்கு முதலாம் என்பது விதி. இதற்கு மாறாக ஞமலி (புறம்-74, அகம்-140, 388, பட்டினப்-140), ஞரல (திருமுருகா-120, பதிற்-30) ஞமன் (புறம்-6) என ஞகரமெய் அகரத்தொடு முதலாகும் சொற்களும் ஞிமிறு (புறம்-93, அகம்-59) என இகரத்தோடு முதலாகிய சொல்லும் சங்க நூல்களில் வழங்கப் பெற்றுள்ளன. ஐகாரத்தின் பின் இயல்பாய் வரும் நகரத்துடன் ஞகரம் போலியாய் நிற்கும் மரபு, பைஞ்ஞிலம் (31) எனப் பதிற்றுப் பத்திலும் பைஞ்ஞிணம் என 177-ஆம் புறப்பாடலிலும் காணப் படுகின்றது. பிற்காலத்திற் பெருகி வழங்கும் இவ்வெழுத்துப் போலியைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இல்லை. நான்கு என்னும் சொல்104-ஆம் அகப்பாடலின் நால்கு எனத் திரிந்து வழங்கியுள்ளது.1 நான்கு, நால்கு எனவருந் திரிபு தொல் காப்பியத்திற் சொல்லப்படவில்லை. ஒன்று முதல் பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் வரையுள்ள எண்களுக்குத் தொல்காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நூறுநூறாயிரமாகிய கோடியென்னும் எண்ணினைக் குறித்த புணர்ச்சி விதியைப்பற்றி இகரவீற்றுப் புணர்ச்சியில் குறிப்பிடுதல் முறையாகும். அங்ஙனமாகவும் தொல்காப்பியனார் இவ் வெண்ணினைப்பற்றி யாண்டும் குறிப்பிடாது போயினார். எனவே கோடியென்னும் எண் அவர் காலத்தில் தோன்றி வழங்கவில்லையெனத் தெரிகிறது. ஒன்றுபத்தடுக்கிய கோடி கடையிரீஇய, பெருமைத்தாக நின் ஆயுள்தானே (புறம்-18) எனவும், கோடியாத்து நாடு பெரிது நந்தும் (புறம்-184) எனவும், கோடி தொகுத்தார்க்கும் (குறள்-377) எனவும் கருதப கோடியுமல்ல பல (குறள்-337) எனவும் கோடி என்னும் எண் கடைச்சங்க காலத்திற் பயின்று வழங்கக் காண்கின்றோம். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் கோடி என்னும் இகரவீற்று எண்ணுப்பெயர் வழங்கியிருக்குமானால் ஏனைய எண்ணுப் பெயர்களுக்குப் புணாச்சி விதி கூறியது போன்று இதற்கும் விதி கூறியிருப்பர். தொல்காப்பியனார் இவ்வெண்ணுப் பெயரினைக் குறிப்பிடாமையால் அவர் காலத்துக்குப் பின்வந்த தமிழறிஞர்களாலேயே இவ்வெண்ணுப் பெயர் படைத்து வழங்கப்பெற்றதென்பது உய்த்துணரப்படும். சங்கச் செய்யுட்களில் அருகிக் காணப்படும் சமய விகற் பங்களைப்பற்றிய குறிப்புக்கள், தொல்காப்பியத்தில் அறவே காணப்படவில்லை. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களுடன் வெற்றி விளைக்குங் கொற்றவையும், நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்திற்கும் உரிய தாகிய கடவுளும் தமிழர்களால் வழிபடப்பெற்ற தெய்வங்களாகத் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். கடைச் சங்க நாளில் காரியுண்டிக் கடவுள் எனவும், மாற்றருங்கணிச்சி மணிமிடற் றோன் எனவும், முக்கண்ணான் எனவும், எல்லாம்வல்ல இறைவனை உருவநிலையில் வைத்துப் போற்றும் வழிபாடு பெருகிக் காணப்படுகின்றது. திருமால் வழிபாட்டில் செங்கட்காரி (வாசுதேவன்), கருங்கண்வெள்ளை (சங்கருடணன்) பொன்கட் பச்சை (பிரத்தியும் நன்) பைங்கண்மால் (அநிருத்தன்) என வரும் நால்வகை வியூகமும் பரிபாடலிற் சொல்லப் பட்டுள்ளன. சிவன், பலதேவன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் ஞாலங்காக்கும் காலமுன்பின் தோலாநல்லிசை நால்வர் எனக் கடைச் சங்ககாலத் தமிழர் பரவிப்போற்றினர். இந்நாற்பெருந் தெய்வங்களுக்குரிய கோயில்கள் தமிழ்நாட்டுப் பேரூர்களில் அமைக்கப் பெற்றிருந்த இயல்பினை இளங்கோவடிகளும் சாத்தனாரும் தம் நூல்களில் விளக்கியுள்ளார்கள். பலதேவன், ஞாயிறு, காமன், சேயோன், சிவன் ஆகிய தெய்வங்களைத் தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் எனப் பெருங்கடுங்கோ பாராட்டு கின்றார். காமன் வழிபாடு கடைச்சங்க காலத்திற் சிறப்புற்று விளங்குகிறது காமன் தொல்காப்பியத்திற் சொல்லப்படாத புதுத் தெய்வமாவான். சமண புத்த சமயங்களைப் பற்றிய குறிப்புக்கள் கடைச்சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்குமுன் சமணர்களும் புத்தர்களும் தமிழ் நாட்டில் இடம்பெறவில்லை. எரிவலஞ் செய்தல் முதலிய ஆரிய நாகரிகத்தினை ஒரு சிலர் மேற்கொண் டொழுகினமை சங்கத் தொகை நூலில் விரித்துரைக்கப் பெறு கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் வடவர் நாகரிகம் தமிழ் மக்களால் அறிந்து மதிக்கப்பட்ட தேயன்றித் தமிழ்மக்களால் அது மேற்கொள்ளப்படவில்லை. எழுத்துஞ் சொல்லும் பொருளும் எனத் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் இலக்கணமெல்லாம் தமிழிலக்கணமே என நச்சினார்க்கினியர் கூறுதல்இவண் கருதத்தகுவதாகும். தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுப் பிற்றைநாளில் வழக் கொழிந்தனவும் சிலவுள. சுட்டு முதலாகிய இகர விறுதியும் எனத் தொடங்கும் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட அதோளி முதலிய சொற்கள், சங்கச் செய்யுட்களில் வழங்கப் பெறவில்லை. இரு திணைக்கும் பொதுவாய் வழங்கிய செய்ம்மன என்னும் வாய் பாட்டு வினைச்சொல் இப்பொழுது வழக்கரிது என இளம்பூரணர் கூறியுள்ளார். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள், நாடக வழக்கும் உலகியல் வழக்கும் விரவப் புலனெறி வழக்கஞ் செய்யுங்கால் கலியும், பரிபாடலும் ஆகிய இருவகைப் பாவினாலும் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய தெனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சங்கத் தொகை நூல்களில் அகப்பொருள்பற்றிய செய்யுட்கள் பெரும்பாலும் அகவல் நடையிலமைந்தனவாகவே காணப்படு கின்றன. தொல் காப்பியனார் காலத்துக்குப்பின் அகப்பொருட் பாடல்களுக்கு அகவல் நடையும் சிறப்புரிமை யுடையதாகக் கருதப்பட்டமை இதனாற் புலனாம். இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றால், ஆசிரியர் தொல் காப்பியனார் இயற்றிய இயற்றமிழிலக்கண நுலாகிய தொல்காப் பியம் சங்கச் செய்யுட்களுக்கும் திருக்குறளுக்கும் நெடுங் காலத் துக்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மை யுடையதென்பது இனிது புலனாதல் காணலாம். தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப் படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ் சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர்1 என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலாவதாகத் தொகுக்குப்பெற்றுளது. அப்பாடலில், அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என முடிநாகராயர் உதியஞ்சேரலாதனை முன்னின்று அழைத்துப் போற்றியுள்ளார். அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையினையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்கவுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பாரதப்போர் கி. மு. 1500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த தென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். உதியஞ்சேரல் என்பான் பாரதப்போரில் இருதிறத்துப்படை வீரர்களுக்கும் பெருஞ்சோறளித்தமையால் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பிக்கப்பெற்றான். எனவே இச் சேரமன்னன் பாரதப் போர் நிகழ்ந்தகாலை உடனிருந்து உதவிபுரிந்துவன் என்பது நன்கு புலனாம். சேரர் குடியினராகிய இளங்கோவடிகளும், பிரைவர் ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் (சிலப் வாழ்த்துக்-24) எனத் தம் குல முதல்வனாகிய இவ்வேந்தர் பெருமானது பெருங் கொடையை உளமுவந்து போற்றியுள்ளார். உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறளித்த நிகழ்ச்சி பாரதப்போர் நிகழ்ந்த நாளிலேயே உடன் நிகழ்ந்த தென்பது தெளிவாக விளங்குதல் காணலாம். இங்ஙனம் உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ் சோற்று நிகழ்ச்சி பாரத காலத்தில் நிகழ்ந்ததன்றெனவும், பிற்காலத்தில் பாரதக் கதையை நாடகமாக நடித்துக் காட்டிய விழாவின் முடிவில் நாடகப் பொருநர் முதலியோர்க்கு உதியஞ்சேரலா தன் அளித்த பெருஞ் சோற்று விழாவாகவோ அன்றிப் பாண்டவர் பொருட்டும் நூற்றுவர் பொருட்டும் அவ்வேந்தன் செய்த சிரார்த்தமாகவோ அதனைக்கொள்ளல் வேண்டுமெனவும் P.T. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்.1 உதியஞ்சேரலாதன் என்பான் பாரதப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கும் இன்னார் இனியா ரென்னாது நடுநின்று பெருஞ்சோறு வழங்கிய வரையாவண்மையினை இவன்காலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் முன்னின்று பராட்டுதலானும், இவ்வேந்தனது குடியிற்றோன்றிய இளங்கோவடிகள் தம் குல முதல்வனாகிய இவனது ஈகைத் திறத்தை யெடுத்துரைத்தலானும் இவ்வேந்தன் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து உதவியவன் என்பதிற் சிறிதும் ஐயமில்லையென்க.1 இனி, உதியஞ்சேரலென்பான் பாரதப்போரில் இறந்த வீரர்களைப் போற்றுமுகத்தான் அவர் பொருட்டுப் போர்க் களத்தில் பெரும் பலியாகிய பிண்டங்களை வழங்கினானெனவும், அது குறித்துப் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதனென்று அழைக்கப் பெற்றானெனவும், மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்க மெய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை யிரும்பல் கூளிச் சுற்றம் குழீஇ யிருந்தாங்கு (ஆகம்-233) எனவரும் மாமூலனார் பாடலைக்கொண்டு முன்னர்க் காட்டிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலுக்குப் பொருள் காணும்பொழுது, ஈரைம்பதின்மரும் பொருதுளகத் தொழிந்த அளவில், இவ்வுதியஞ் சேரலென்பான், ஆண்டு இருபடைபினும் இறந்தார், பொருட்டுப் பெருஞ்சோறு கொடுத்தான் என்று துணிவதே பொருந்திய தாகு மெனவும், இருபெரும் படையுங் கலகப்பட்டுத் தடுமாறு தற்குரிய பெரும்போர் நிலையில் அவ்விருபடைக்கும் நடுநின்று ஒருவன் சோறு வழங்கினன் எனக் கூறுவதில் முட்டுப்பாடு பலவாகுமெனவும் இம்முட்டுப்பாடு தீர்ந்து உள்ளவாறு இதுவென்று தெளிவிப்பது மாமூலனார் பாடிய 233-ஆம் அகப்பாட்டெனவும் மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்கள் கூறியுள்ளார்கள்.2 பாண்டவரும் நூற்றுவரும் பொருத போர்நிகழ்ச்சியிலேயே இருதிறத்தார்க்கும் உதியஞ் சேரல் பெருஞ்சோறளித்தானென்பது இளங்கோவடிகள் கருத்தாதலானும், முடிநாகனார் பாடலில் ஈரைம்பதின் மரும் பொருதுகளத் தொழிய எனவருந் தொடர்க்கு நூற்றுவர் பொருது இறக்குமளவும் என்றே புறநானூற்றுரையாசிரியர் உரை கூறியிருத்தலானும் உதியஞ்சேரலென்பான் பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கு மிடையே நடந்த போர்நிகழ்ச்சியில் நடுவாக நின்று பெருஞ்சோறளித்தான் எனக் கொள்ளுதலே முன்னோர் கருத்துக்கு ஏற்புடையதாகும். போர்க் காலத்தில் இருதிறத்தார்க்கும் நடுநிலையில் நின்று படையிற் புண்பட்டோர்க்கு மருந்து முதலியனவளித்து நலஞ்செய்யும் பெருந்தொண்டினைஒரு குழுவினர்1 மேற்கொண்டுழைத்தலை இக்காலத்துங் காண்கின் றோம். இவ்வாறே நம் தமிழ் வேந்தனாகிய உதியஞ்சேரலாதனும் பாரதப்போரில் பகைநட்பென்று பாராது இருதிறத்துப் படை வீரர்களுக்கும் பசிப்பிணி மருத்துவனாகி நடநின்று உதவிபுரிந்தான் எனக் கொள்வதிற் சிறிதும் தடை நிகழக் காரணமில்லை. முரஞ்சியூர் முடிநாகனாராற் பாடப்பெற்ற இவ்வேந்தனும் 233-ஆம் அகப்பாடலில் மாமூலனாராற் குறிக்கப்படும் மற்றொரு சேர வேந்தனும் உதியஞ்சேரல் என்னும் ஒரு பெயரினை யுடையராதலும் பெருஞ்சோறு வழங்கிய சிறப்பினை ஒருங்குடையராதலும் கருதி வெவ்வேறு காலத்தவராகிய, இவ்விரு வேந்தர்களையும் ஒருவர் என்று துணிதல் கூடாது. முன்னோர் பெயரைப் பின்னோர் புனைந்துகொள்ளும் வழக்கமுடைமைபற்றி ஒரு குடியில் ஒரு பெயருடையார் பலராதரியல்பு. உதியஞ்சேரல் என்னும் பெயர் வருமிடமெல்லாம் அப்பெயர் ஒருவனையே குறிக்குமெனக் கொள்ளுதற்கில்லை. இடமும் காலமும் பிற செயல் முறைகளும் ஆகியவற்றைக் கூர்ந்துநோக்கி இப்பெயர் இன்னாரைக் குறிக்கு மெனத் துணிதலே பொருத்தமுடையதாகும். 233-ஆம் அகப்பாடலில் மாமூலனாராற் குறிக்கப்பெற்ற உதியஞ்சேரல் என்பான் பகைவரை வென்று வீரசுவர்க்கமடைந்த தன் முன்னோரை நினைந்து வழிபடும் நிலையில் அம்முன்னோரைக் குறித்துப் பெருஞ்சோறு வழங்கினானென்றும், அவன் வழங்கிய சோற்றுத் திரளை வீரர் திரளாகிய கூளிச் சுற்றங்கள்1 கூடியிருந்து உண்டன வென்றும் அப்பாடலால் அறிகின்றோம். தமிழர்கள் தம் குடியிலிறந்த முன்னோரை வழிபடுதலை முதற்கடமையாகக் கொண்டொழு கினமை தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங், கைம்புலத்தா றோம்பல் தலை எனவும், தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும், பொன்போற் புதல்வர் எனவும், வருந் தொடர்களாற் புலனாம். சேரமன்னர்கள் தம் குடியில் இறந்த முன்னோரை வழிபடுதலை முதற் கடமையாகக் கருதிப் போற்றினமை இளந்துணைப் புதல்வரின் முதியோர்ப் பேணித் தொல்காடனிறுத்த வெல்போரண்ணல் (பதிற்-70) என வருந் தொடரால் நன்கு விளக்கப்பட்டது. இங்ஙனமே மாமூலனாராற் போற்றப்பெற்ற உதியஞ்சேரலும் தன்குடியிற் றோன்றிப் போர் வலியால் துறக்கம் எய்திய தன் முன்னோரை வழிபட்டுப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தினான் எனத் தெரிகிறது. உதியஞ்சேரன் என்னும் இவ்வேந்தனால் வணங்கப்பெற்ற மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கமெய்திய தொய்யா நல்லிசை முதியர் என்போர், இவ்வேந்தனது குடியிற் பிறந்து போர் வலியாற் பகைவரை வென்று வீரசுவர்க்கமெய்திய இவனுடைய குடிமுதல்வரேயாவர். இவர்களைப் பாரதப் போரில் இறந்த நூற்றுவர் முதலிய வடநாட்டு மன்னர்களாகக் கொள்ளுதற்கு மாமூலனார் பாடலில் எத்தகைப் சொற்குறிப்பும் இல்லை. தமிழ் மன்னனாகிய உதியஞ்சேரலென்பான் துரியோதனன் முதலிய வடவேந்தர்களைத் தன் குலமுதல்வராகக் கருதிப் பிண்டம் வழங்குதற்கு யாதொரு தொடர்புமில்லை. அன்றியும் துரியோதனன் முதலியோர்க்குப் பிண்டங் கொடுத்தற்குரிய உறவின் முறையினர் பாண்டவர்களேயாவர். அங்ஙனமாகவும் வடவேந்தர்களோடு குடிவகையால் தொடர் பில்லாத உதியஞ்சேரல் பிண்டங் கொடுத்தானென்றல் முறையாகாது. ஆகவே இரண்டாம் புறப்பாடலில் வாழ்த்தப்பெற்ற உதியஞ்சேரலும், அகம்-233-ஆம் பாடலிற் குறிக்கப்பட்ட உதியஞ்சேரலும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்தவர்களாகவே கொள்ளல் வேண்டும். இவ்விருவருள்ளும் முன்னவன் பாரத காலத்தவன்; பாரதப்போரில் இருதிறத்துப் படை வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி ஊக்குவித்தமை காரணமாகப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பித்துப் போற்றப் பெற்றவன். இனி, மாமூலனாராற் குறிக்கப்பட்ட உதியஞ் சேரலென்பான் பாரதப் போரில் தொடர்பு கொள்ளாதவன்; தன் குடியில் இறந்த முன்னோர்களைக் குறித்துப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தி வழிபட்டவன். இவன் பாரத காலத்தவன் அல்லன். இவ்வேந்தன் மாமூலனார் காலத்தை யொட்டிச் சிறிது முற்பட்டிருந்தவனாதல் வேண்டும். மாமூலனார் தம் காலத்தையடுத்து நிகழ்ந்த வரலாறுகளைக் குறித்துச் செல்லும் வழக்கமுடையவரென்பது அவர் பாடிய பாடல்களால் நன்கு விளங்கும். நாடுகண் ணகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ வினி வாழி தோழி (அகம்-65) என மாமூலனார் இவ்வுதியஞ் சேரலின் வண்மையை உவமை முகத்தாற் சிறப்பித்துப் போற்றுதலால் இவனது வண்மையா லுளதாம் பயனை இப்புலவர் நேரில் நன்கறிந்தவராதல் வேண்டும். இதனால் இவ்வேந்தன் மாமூலனார் காலத்தில் வாழ்ந்தவனெனத் தெளியலாம். உதியஞ்சேரல் என்னும் இவ்வேந்தன்1 பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாற் பாடப்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தையும் செங்குட்டு வனுக்குப் பாட்டனுமாவான். செங்குட்டுவன் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். ஆகவே செங்குட்டுவனுக்குப் பாட்டனாகிய இவ்வுதியஞ்சேரல் என்பான் கி. பி. முதல் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனாதல் வேண்டுமென்பது நன்கு தெளியப்படும். எனவே கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவனாகிய இவ்வுதியஞ்சேரலையும் பாரதகாலத்தவனாகிய பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனையும் ஒருவரெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை வெளிப்படை. பாரத காலத்தில் வாழ்ந்த சேரவேந்தனாகிய பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனை நோக்கி முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய புறப்பாடலில், நடுக்கின்றி நிலீ இயரோ என அவனை முன்னிலையாக்கி வாழ்த்துகின்றார். இத்தொடரில் முன்னிலை யிடத்தில் வியங்கோள்வினை ஆளப்பெற்றுளது. அவற்றுள் முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும் மன்னா தாகும் வியங்கோட் கிளவி (வினையியல்-29) என்பது தொல்காப்பிய விதி. வியங்கோள்வினை முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தோடும் நிலைபெறாது என்பது மேற் கூறிய தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருளாகும். முரஞ்சியூர் முடிநாகனார் பாடலில் இவ்விதிக்கு மாறாக வியங்கோள் வினை முன்னிலையிடத்தில் நிலைபெற்று வழங்கியுளது. தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் உள்ள சான்றோர் பாடல்களில் இச் சொல் வழக்கு நிலைபெற்று வழங்கியிருக்குமானால் தொல் காப்பியனார் இதனை வழுவென்று விலக்கியிருக்கமாட்டார். ஆசிரியர் இதனை வழுவென விலக்கியிருத்தலால் அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் முன்னிலை, தன்மை என்னும் ஈரிடங்களிலும் வியங்கோள்வினை நிலைபெற்று வழங்கவில்லையென்பது நன்கு பெறப்படும். தொல்காப்பியனார் காலத்தில் வழுவென்று விலக்கப்பட்ட சொல் வழக்கு அவர்க்குப் பின் வந்த முரஞ்சியூர் முடி நாகனார் காலத்தில் வழுவமைதியாக அமைத்துக்கொள்ளப்பட்ட தெனத் தெரிகிறது. எனவே முடிநாகனார் வாழந்த பாரத காலத்துக்குத் தொல்காப்பியர் மிகவும் முற்பட்டவரென்பது நன்கு புலனாதல் காண்க. பெரிபிள நூலாசிரியர் குறிப்பில் இக்காலத்திலுள்ள மதுரையுங் கொற்கையுமே பாண்டியர் தலைநகரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்திலும் சங்கச் செய்யுட்களிலும் இவ்விரு நகரங்களே பாண்டியர்க்குரிய தலைநகரங்களாகப் பேசப்படுகின்றன வியாசரியற்றிய மாபாரத நூலில் பாண்டியரது தலைநகர் மணலூர் எனக் குறிக்கப்பெற்றுளது. வடமொழி ஆதிகாவியம் எனப் போற்றப்பெறும் வான்மீக ராமாயணம் பாண்டியர்க்குரிய தலைநகரம் கபாடம் எனவும் அது தாமிரபரணிக்குத் தெற்கேயுள்ள தெனவும் கூறுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்பது முன்னர்ச் சிறப்புப் பாயிர ஆராய்ச்சியில் விளக்கப் பெற்றதாதலின், அவர் காலத்தில் பாண்டியர் தலைநகராகத் தோற்றுவிக்கப்பெற்ற கபாடபுரம், பிற்றைநாளிற் குமரியாற்றைக் கடல்கொண்ட பொழுது ஒருங்கழிந்ததென்பது நன்கு புலனாம். வியாசமுனிவர் பாண்டியர்க்குரிய தலைநகர் மணலூர் எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துக்கு முன்னரே பாண்டியர் கபாடபுரத்தின் சிதைவறிந்து மணலூர் என்னும் மற்றொரு பேருரினைத் தமக்குரிய தலைநகராகப் படைத்துக்கொண்டனர் எனத் தெரிகிறது. கபாடபுரமும் குமரியாறும் கடல்கோளால் அழிந்துபடுவதன் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர் என்பது தொன்று தொட்டு வழங்கும் வரலாறாதலால் அவ்வாசிரியர் பாரத காலத்துக்கு மிகவும் முற்பட்டவரென்பது நன்கு தெளியப்படும். வடவேங்கடந் தென்குமரி யெனத் தொடங்கும் பனம்பாரனார் பாயிரத்தில் நான்மறை யெனக் குறிக்கப்பட்டவை தைத்திரியமும் பௌடிகமுந் தலவகாரமும் சாமவேதமும் ஆம் எனவும், தொல்காப்பியனார் இந்நூல் (தொல்காப்பியம்) செய்த பின்னர், வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு இவற்றை இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என நான்கு கூறாகச் செய்தாராதலின், பனம்பாரனார் பாயிரத்தில் நான்மறையெனக் குறிக்கப்பட்டன இருக்கு முதலிய நான் கென்றல் பொருந்தாதெனவும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் சிறப்புப் பாயிரவுரையில் இனிது விளக்குகின்றார். எனவே வடமொழி வேதங்களை வகுத்த வேதவியாதர் காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் ஆசிரியர் தொல்காப்பியனார் என்னும் உண்மையினை நச்சினார்க்கினியரும் உடன்பட்டு விளக்கினாராவர். தமிழரது பழைய வரலாற்றினைப்பற்றிய முடிபுகள் சில, இறையனார் களவியலுரையிலும் தொல்காப்பியத்திற்கு இளம் பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் எழுதிய உரைப் பகுதிகளிலும், சிலப்பதிகாரம் அடியார்க்குநல்லா ருரையிலும் காணப்படுகின்றன. இம்முடிபுகள் வரலாற்றாராய்ச்சி யாளர் ஆராய்ந்து கண்ட முடிபுகளோடு ஒருபுடையொத்து நிற்கின்றன. எனவே இவையெல்லாவற்றையும் கட்டுக் கதைகளெனத் தள்ளிவிடுதற்கில்லை. ஆசிரியர் தொல்காப்பியனார் காலம் இஃதெனத் துணிதற்கு இவ்வுரைநூன் முடிபுகள் பெரிதும் பயன்படுமென்பது உறுதி. பாண்டிய மன்னர்கள் கல்வி வளர்ச்சி குறித்து மூன்று முறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு, இறையனார் களவியலுரையினுள்ளே விரித்துக் கூறப்பெற்றது. தென்மதுரையில் நிறுவப்பெற்ற முதற் சங்கம் 4440-ஆண்டுகளும் கபாடபுரத்தில் நிறுவப்பெற்ற இடைச்சங்கம் 3700-ஆண்டுகளும் இப்பொழுதுள்ள மதுரையாகிய கூடல் நகரத்தில் நிறுவப் பெற்ற கடைச்சங்கம் 1850-ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன வெனக் களவியலுரை கூறுகின்றது. களவியலுரைகூறும் இக் கொள்கையினைப் பின்வந்த உரையாசிரியரெல்லாரும் உடன்பட்டு ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கடைச்சங்கம் கி. பி. 230-க்குள் முடிந்துவிட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும். இக்குறிப் பின்படி நோக்கினால் தலைச் சங்கம் இற்றைக்கு 11,716-ஆண்டு களுக்கு முன்னே தொடங்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது புலப்படும். தொல்காப்பியனார் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. களவியலுரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்கினால் இடைச்சங்கம் கி. மு. 5320-இல் தொடங்கியதெனக் கொள்ளலாம். எனவே ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தின் மேலெல்லை கி. மு. 5320-என்பது தெளிவாதல் காணலாம். அறிஞர் M. சீனிவாசையங்காரவர்கள் தாம் எழுதிய ‘Tamil Studies’ என்னும் நூலில் நிலந்தரு திருவிற் பாண்டியன் கி. மு. 350-ல் இருந்தவனென்றும் அக்காலமே தொல்காப்பியனார் வாழ்ந்த காலமென்றும் குறிப்பிடுவார். அறிஞர் T. R. சேஷையங்காரவர்கள் பாணினி முனிவர் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டென்றும் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவரே தொல்காப்பியனா ரென்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பிற்காலத்தே செய்து சேர்க்கப்பட்டதென்றும் கூறுவர். மேற்குறித்த அறிஞர்கள் தம் கொள்கையினை நிறுவுவதற்குத்தக்க சான்றுகளைக் காட்டவில்லை. எனவே அவர் தம் கொள்கைகளை ஊகமாகவே கருதுவதன்றி உண்மையெனக் கொள்ளுதற்கு இடமில்லை. பாணினீயம் என்னும் வடமொழி இலக்கணம் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவிற் பழமை கூறப்படுகின்றது. பாணினி முனிவர் காலம் கி.மு. 900-என சி. வி. வைத்தியா என்பவர் வேத கால சமகிருத இலக்கிய வரலாறு என்னும் நுலிற் கூறியுள்ளார். பாணினியார் வினைகளே எல்லாச் சொற்கும் முதுனிலை (தாது) என விளக்கி ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகின்றார். இம்முறை தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. தொல்காப்பியனாரது வடமொழி யிலக்கணப் பயிற்சியைப் பாராட்டப் போந்த ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார், தொல்காப்பியர் பாணினிக்குக் காலத்தாற் பிற்பட்டவராயின் வடமொழி வியாகரணங்களில் தலைசிறந்து விளங்கும் பாணினீயத்தைக் கற்று வல்லவர் தொல்காப்பிய ரென்றே அவரைப் பாராட்டியிருப்பர் அங்ஙனங் கூறாது1 ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்ற தொடரால் ஆசிரியரது ஐந்திர நூற் பயிற்சி யொன்றினையே சிறப்பித்துப் போற்றுதலால், வடமொழியிற் பாணினி முனிவர் வியாகரத்தினை இயற்றுதற்கு முன்பு தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூல் இயற்றப்பெற்றதென்பது பெறப்படும்; என்னை? மதித்தற்குரிய பெருநூலாகிய பாணினி வியாகரணம் வட மொழியிற்றோன்றிய பின் அந்நூற் பயிற்சியை புலமைக்குரிய சாதனமாகப் பாராட்டாது அதற்குமுன் வழக்கிழந்துபோன ஐந்திர வியாகரணப் பயிற்சியைப் பாராட்டுதல் மரபன்மையின் என்க. எனவே பாணினி முனிவர்க்குத் தொல்காப்பியர் முற்பட்ட காலத்தவரென்பது நன்கு துணியப்படும். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் என்பது கொண்டு தொல்காப்பியரைப் பாணினிக்கு முற்பட்டவரெனக் கூறுதல் பொருந்தாதென்றும், இத்தொடரில் ஐந்திரமெனக் குறிக்கப்பட்ட வியாகரணம் வைதிக சமயத்தாரால் பூர்வ காலந்தொட்டு மேற்கொள்ளப்படாததென்றும், அது புறச்சமயத்தாரால் பாராட்டப் பெற்று வந்த இலக்கண முறையாகுமென்றும், புறச் சமயிகளுள் ஜைனர்கள் இவ்வியாகரணத்தைப் போற்றி வந்தனரென்றும், ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்படுவதனாலே தொல்காப்பியரும் ஜைன சமயத்தைச் சார்ந்தவரென உய்த்துணரலாமென்றும் பாணினியின் பேரிலக்கணத்தைத் தொல்காப்பியனார் கையாண்டுள்ளா ரென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்.1 வேத காலத்தை யொட்டிய வடமொழி இலக்கியங்களி லமைந்த மொழி நடையினை யுளத்துட்கொண்டு எளிய முறையி லியற்றப்பெற்ற வட மொழித் தொன்மை வியாகரணமே ஐந்திர மென்பது வடமொழி தென்மொழிகளில் வல்ல பண்டைச் சான்றோர்களின் துணிபாதல் முன்னர் விளக்கப்பட்டது. இந்திர னாற் செய்யப்பட்ட ஐந்திர நூற் பயிற்சியைப் பராசரன் என்னும் வேதியன் பாராட்டிப் போற்றினனெனவும் கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி ஐந்திர நூற் பயிற்சியைப் புறக்கணித்துத் தம் சமயநூலாகிய பரமாகம நூற்பொருளைப் பாராட்டி யுரைத்தன ரெனவும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டு அவ்விருவர் மன நிலையையும் இனிது புலப்படுத்து கின்றார். ஆகவே ஐந்திர வியாகரணம் வைதிகரல்லாத சமணர் முதலிய புறச் சமயத்தாராற் போற்றிப் பயிலப்பெற்ற பிற்காலத்து நூலென்னுங் கொள்கை பொருந்தாமை காணலாம். யாகரது நிருத்தத்தில், சத்வாரி பதஜாதாநி நாமாக்யா தோசோபசர்க்க நிபாதச்ச எனச் சொற்களின் பாகுபாடு வரையறுக்கப்பட்டுளது. நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பது இதன் கருத்து. ஆனால் பாணினீயத்தில் ஸுப்திங்-அந்தம் பதம் (1, 4, 14) என வருகின்றது. இச்சூத்திரப் பொருளையே தொல்காப்பியனார் சொல்லெனப்படுப பெயரே வினையென், றாயிரண்டென்ப அறிந்திசினோரே என்ற சூத்திரத்தாற் கூறினாரென்றும் இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்று வழி மருங்கிற் றோன்றும் மென்ப என அடுத்து வருஞ் சூத்திரத்தால் முற்கூறிய யாகரது நிருத்தம் கூறிய பொருளையும் தொல்காப்பியர் உடன்பட்டன ரென்றும், பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் சிக்ஷையில், அஷ்டௌ தாநாநி வர்ணாநாம் உர : கண்ட : சிரததா : ஜிஹ்வா மூலஞ்ச தந்தாச நாசி கோஷ்டௌ சதாலுச என வரும் சூத்திரப் பொருளையே உந்தி முதலா முந்து வளிதோன்றி எனத் தொடங்கும் சூத்திரத்தால் தொல்காப்பியர் கூறியுள்ளாரென்றும், ஆகவே பாணினிக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்னும் கொள்கை சிறிதும் ஒப்புக்கொள்ளத் தக்கதன்றென்றும் அறிஞர் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்.1 ஸுப்திங் அந்தம் பதம் என அவர்கள் எடுத்துக்காட்டிய பாணினீயச் சூத்திரம், பதமாவது இதுவென அதன் இலக்கணங் கூறவதாகும். வேற்றுமை யுருபுகளையும் வினையுருபுகளையும் ஈற்றின்கட்கொண்டவை பதமாம் என்பது இதன் பொருளாகும். சொல்லெனப்படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப அறிந்திசினோரே எனவருந் தொல்காப்பியச் சூத்திரம் சொற் பாகுபாடு உணர்த்தவெழுந்ததாகும். சொல்லென்று சிறப்பித் துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என அவ்விரண்டென்று கூறுவர் அறிந்தோர், என்பது முற்கூறிய சூத்திரத்தின் பொருளாகும். ஆகவே கருத்தினால் வேறுபட்ட இவ்விரு சூத்தரப் பொருள்களையும் ஒன்றெனக் கோடல் பொருந்தாமை வெளிப்படை, அன்றியும் யாகரது நிருத்தத்தில் நாமம், ஆக்யாதம். உபஸர்க்கம் நிபாதம் எனக் கூறப்பட்ட நால்வகைச் சொற்பாகுபாட்டிற்கும் தொல்காப்பியத்தில் பெயர், வினை, இடை, உரி எனக் கூறப்பட்ட நால்வகைச் சொற்பாகுபாட்டிற்கும் பெரிதும் வேற்றுமையுளது. நாமம் என்பது பெயர். ஆக்யாதம் என்பது வினைவிகுதி. உபசர்க்க மென்பது வினையின் முன் அடைமொழியாய் ஒட்டிநின்று அதன் பொருளை மாற்றுவது. ஹாரம் என்ற வினை, விஹாரம், பிரஹாரம் சம்ஹாரம், ஆகாரம் எனமுறையே உபசர்க்கத்தைப் பெற்று விளையாட்டு, அடித்தல், அழித்தல், மாற்றுதல், உணவு என வேறு வேறு பொருள்களைத் தருதல் இவண் கருத்தகுவதாகும். நிபாதம் என்பது நமது தமிழிலுள்ள இடைச் சொல்லையொத்து வழங்குவது. எனவே தொல்காப்பியர் கூறிய நால்வகைச் சொற்களும் நிருத்தம்கூறும் நால்வகைச்சொற்களும் பொருளான் வேறுபாடுடைய என்பது இவற்றின் இயல்புகளை ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது புலனாம். நான்கென்னும் எண்ணிக்கை யொன்றனையே விடாப்பிடியாகக்கொண்டு இவற்றை ஒன்றெனக் காட்ட முயலுதல் ஏற்புடையதன்றாம். நாவின் அடிப்பகுதி, பல், மூக்கு, உதடு, வாயின் உட்புற இருமருங்கு; மார்பு, மிடறு, தலை ஆகிய எண்வகையிடங்களும் எழுத்துக்களின் பிறப்பிடமெனப் பாணினி முனிவரியற்றிய சிக்ஷையிலுள்ள சூத்திரம் கூறுகின்றது. எழுத்துக்கள் பிறக்குமிடம்பற்றிய வரையறை எல்லா மொழிக்குமுரிய பிறப்பிலக்கணமாதலின் அதனை முதன் முதற்கண்டு உலகிற் குணர்த்தியவர் இன்னாரென்று துணிந்துரைத்தலியலாது. அன்றியும் பாணினி சிக்ஷையிற் கூறப்படும் எழுத்தின் பிறப்பு முறைக்கும் தொல்காப்பியத்திற் கூறப்படும் எழுத்தின் பிறப்பு முறைக்கும் எத்தகைய தொடர்புமில்லை. சிக்ஷையிலிருந்து எடுத்துக்காட்டிய சூத்திரம் எழுத்துக்கள் ஓறத்தற்குரிய எண்வகையிடங்களைமட்டும் கூறுகின்றது எழுத்தின் ஒலித் தோற்றத்திற்கு இன்றியமையாத உந்தி முதலா முந்துவளியினையும், அது தலையிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலை பெறுமியல் பினையும், அக்காற்று தலை, மிடறு, நெஞ்சு, பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் ஆகிய எண்வகை யுறுப்புக்களோடும் ஒன்றி எழுத்தாய் வெளிப்படும் இயல்பினையும் விரிவாக விளக்குவது, உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறு வேறியல திறப்படத் தெரியுங் காட்சியான என வருந் தொல்காப்பிச் சூத்திரமாகும். இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் விரித்து விளக்கப்பெற்ற எழுத்தின் பிறப்புமுறை பாணினி முனிவர் சிக்ஷையிற் சொல்லப் படவில்லை. அன்றியும் பாணினி முனிவர் தமது வியாகரணத்தில் எழுத்திலக்கணத்தைத் தனியே பிரித்துக் கூறவில்லை. பின்வந்த உரையாசிரியர்களே எழுத்தின் பிறப்பு முதலியவற்றை விளக்கும் பகுதிகளைத் தந்து விரித்துக் கூறியுள்ளார்கள். தொல்காப்பியர் விரித்துரைக்கும் பொருளிலக்கணப் பகுதி தமிழுக்கேயுரியதாகலின் அதனைப் பாணினீயம் போன்ற பிறமொழி இலக்கண நூல்களிற் காண முடியாது. எனவே பாணினிக்குக் காலத்தாற் பிற்பட்டவர் தொல்காப்பியர் என்னுந் தமது கொள்கைக்கு அறிஞர் பிள்ளையவர்கள் கூறும் சான்றுகள் வலியற்றொழிதல் காண்க. பதஞ்சலி முனிவர் தமது மாபாடியத்தைக் கி.மு. 150-இல் இயற்றினர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு, இஹ கசித் ஸமாஸா : பூர்வ பாதார்த்த ப்ரதாந: கசித் உத்தர பதார்த்த ப்ரதாந: கசித் அந்ய பதார்த்த ப்ரதாந: கசித் உபய பதார்த்த ப்ரதாந: எனவரும் பகுதி பதஞ்சலி மாபாடியத்திற் காணப்படும் வாக்கியமாகும். இவ்வாக்கியத்தைப் பின்பற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார். அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழிமேலும் ஒருங்குடன் நிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் அந்நான் கென்ப பொருள்நிலை மரபே எனத் தொகைச் சொற்களின் பொருள்நில மரபினைக் கூறி யுள்ளாரென்றும், இப்பாகுபாட்டினை முதன்முதலாக எடுத்துக் கூறியவர் பதஞ்சலி முனிவரே யென்றும், இலக்கணம் என்பது லக்ஷண என்ற வடமொழியின் பிராகிருதத் திரிபென்றும், ஸப்தோ லக்ஷ்ய சூத்ரம் லக்ஷணம்1 எனவும், நலக்ஷணே பதகாரா அநுவர்த்யா, பதகாரை: நாமலக்ஷணம் அநுவர்த்யம்2 எனவும், பதஞ்சலி முனிவர் லக்ஷணம் என்பதனை வியாகரணம் என்ற பொருளில் முதன்முதல் வழங்கியுள்ளாரென்றும், இவருக்கு முற்பட்ட காத்தியாயனரும் தமது வார்த்திகத்தில் லக்ஷ்ய லக்ஷணே வியாகரணம்3 என இப்பொருளை ஒருவாறு குறிப்பித் துள்ளாரென்றும், லக்ஷ்ணம் என்பது வடமொழியிற் குறியெனவும் பொருள்படுமாதலின் தொல்காப்பியனார் உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனத் கொள்ளுமென்ப குறியறிந்தோரே என்ற சூத்திரத்தில் குறி யென்னும் சொல்லால் இப்பொருளை வழங்கியுள்ளாரென்றும், இவ்வாறாகத் தொல்காப்பியர் பதஞ்சாலி முனிவர் கருத்துக் களை யெடுத்தாண்டுள்ளமையால் இவர் பதஞ்சலியின் கால மாகிய கி. மு. 150-க்குப்பின் வாழ்ந்தவ ரென்பது அறுதியான முடிபாகுமென்றும் அறிஞர் பிள்ளை யவர்கள் துணிந்துரைத் துள்ளார்கள். பதஞ்சலி முனிவர் கி. மு. 150-இல் வாழ்ந்தவரென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாதல்கூடும். ஆனால் தொல்காப்பியனார் பதஞ்சலிக்கு முற்பட்டவரா பிற்பட்டவரா என்பதே இங்கு ஆராயந்து துணிய வேண்டிய செய்தியாகும். பதஞ்சலி மாபாடியத்திலும் தொல்காப்பியத்திலும் ஒத்த கருத்துக்கள் சில காணப்படுமாயின் அவற்றின் ஒப்புமையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. என்னை? இவ் வொப்புமைகளைக் காட்டிப் பதஞ்சலி முனிவர் சொல்லிய வற்றையே தொல்காப்பியனாரும் சொன்னார் என அறிஞர் பிள்ளையவர்கள் துணியுமாறுபோன்றே தொல்காப்பியனா கருத்துக்களையே பதஞ்சலியும் தமது மாபாடியத்தில் எடுத்தாண்டுள்ளார் எனத் துணிதற்கும் இவ்வொப்புமையிடந் தருமாதலின் என்க. முன்மொழி நிலையல், பின்மொழி நிலையல், இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல், அம்மொழி நிலையாது அன்மொழி நிலையல் எனத் தொகைச் சொற்களின் பொருள் நிலைகளை நெடுங் காலத்திற்கு முன் வகைப்படுத்தியவர் ஆசிரியர் தொல்காப்பியனாரேயாவர். மோரியர் ஆட்சிக் காலத்தும் அவர்க்கு முன்னும் தோன்றிய தமிழ்ச் செய்யுட்கள் யாவும் தொல்காப்பியத்திற்குக் காலத்தாற் பிற்பட்டனவென்பது நன்கு புலனாதலின் தொல்காப்பியனார்க்கு நெடுங்காலம் பிற்பட்டவர் பதஞ்சலி முனிவர் என்பது நன்கு விளங்கும். பதஞ்சலியார் தென்னாட்டில் வாழ்ந்தவரென்பது அவர்தம் வரலாறாக வழங்கும் செய்திகளாற் பெறப்படும். தென்னாட்டில் வாழ்ந்த பதஞ்சலியார் தென்றமிழ்த் தொன்னூலாகிய தொல்காப்பிய மரபினையறிந்து அந்நூலிற் சொல்லப்பட்ட இலக்கணங்களுள் வடமொழி இலக்கண மரபுக்கு ஏற்பன சிலவற்றை உய்த்துணர்ந்தெடுத்துத் தமது மாபாடியத்திற் குறிப்பிட்டிருத்தல் பொறுத்தமுடையதேயாம் மேலெடுத்துக் காட்டிய தொகைகளின் பொருள் நிலைபற்றிய பதஞ்சலிவாக்கியம் அவைதாம் முன்மொழி நிலையிலும், எனத் தொடங்கும் சூத்திரப் பொருளைக்கொண்டு கூறியதெனக் கோடல் தவறாகாது. இச் சூத்திரத்தில் என்ப எனத் தொல்காப்பியனாராற் குறிக்கப்பட்டோர் பண்டைத்தமிழ் நூற்புலவர் எனக் கொள்ளுதல் வேண்டும். இலக்கணம் என்றசொல்லை முதன்முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரேயாவர். இவ்வாசிரியர் வழங்கிய இலக்கணம் என்ற சொல் லக்ஷண என்ற வடசொல்லின் திரிபன்றாம், கொள்ளுமென்ப குறியறிந்தோரே என்புழிக் குறியென்ற சொல்லை லக்ஷண என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பாக ஆசிரியர் குறித்திலர். குறி என்பது நூல் என்னும் பொருளில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். ஒரு குறிகேட்போன் இரு காற் கேட்பின் பெருக நூலிற் பிழைபாடிலனே என்புழிக் குறியென்னும் சொல் நூல் எனப் பொருள் தருதல் காண்க. வியாகரணம் என்னும் சொல், பகுத்துணர்த்தும் சொல் லிலக்கணம் என்ற பொருளில் வழங்குவதாகும். இலக்கணம் என்ற சொல், பல பொருளை யுய்த்துணர்ந்து அவற்றின் இயல் பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை என்ற பொருளிலேயே தொல்காப்பியனாரால் ஆளப்பெற்றுளது. இத்தமிழ்ச் சொல்லோடு ஒருபுடை ஓசையொற்றுமையுடைய லக்ஷணம் என்ற வடசொல்லைப் பாணினி முதலிய வடமொழி வியாகரண ஆசிரியர்கள் இப்பொருளில் வழங்கிற்றிலர். தொல்காப்பியனார் வழங்கிய இலக்கணம் என்னும் சொல்லுக் குரிய பொருளை லக்ஷணம் என்னும் சொல்லுக்கும் ஏற்றி வழங்கியவர் தென்னாட்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரேயாவர். எனவே பதஞ்சலியார்க்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் என்னுங் கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதன்றாம். பனையின் முன்னர் கொடிமுன் வரினே என்ற முதற் குறிப்புடைய சூத்திரங்களால் பனைக்கொடி என்ற தொடர்க்குப் புணர்ச்சி விதி கூறிய தொல்காப்பியனார், பனைக்கொடியினை உரிமையாகப்பெற்ற பலதேவரும் வீடுமரும் வாழ்ந்த பாரத காலத்துக்குப் பிற்பட்டவரென்றும், எனவே அவரை ஆதியூழியின் அந்தத்தில் வாழ்ந்தவராக நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாதென்றும், பாண்டி நாட்டைக் கடல்கொண்ட காலம் கி.பி. 145-என்பது இலங்கைப் பௌத்த சரிதத்தால் அறியப்படுதலின் தொல்காப்பியனார் கி.மு. 145-க்குச் சிறிது முற்பட்டவரே யாவரென்றும் மகா வித்துவான் ரா. இராகவையங் காரவர்கள் கூறியுள்ளார்.1 அவர்கள் கருதுமாறு பனைக்கொடி பாரத காலத்தவராகிய வீடுமன் பலராமன் என்பவர்களுக்கு மட்டுமே யுரியதெனக் கொள்ளுதற்கில்லை. தாலத்துவசம் (பனைக்கொடி) ஆதிசேடனால் கிழக்குத் திசையில் நாட்டப்பட்டுள்ளது (சர்க்கம் 40, 35) என வான்மீகிராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்துக் கூறப்பட்டதென்பதனை மகா வித்துவான் அவர்களே தெளிவாக ஒப்புக் கொள்கின்றார்கள். எனவே பனைக்கொடியானது இராமாயண காலத்திலேயே அடையாளமாகக் கொள்ளப்பட்ட செய்தி வலியுறுதல் காணலாம். ஆகவே பனைக்கொடி நன்கு என்றதன் புணர்ச்சி விதியையெடுத்துக் காட்டித் தொல்காப்பியம் பாரத காலத்துக்குப்பின்றோன்றியதெனத் துணிதல் பொருந்தாது. அன்றியும் தொல்காப்பியனார் கூறிய பனைக்கொடி என்பதன் புணர்ச்சிவிதி தென்னாட்டில் வழங்கிய அக்கொடியின் அடையாளத்தைச் சுட்டுவதல்லது வடவேந்தர்க்குரிய வழக்கத்தினைக் குறிப்பதன்றாம். குமரியாறு கடலாற்கொள்ளப் பட்டு அழிவதன்முன் அதன் தென்பகுதியிலே பஃறுளியாற்றுக்கும் குமரியாற்றுக்கும் நடுவே எழுநூற்றுக் காவதப் பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன வென்றும், அவற்றுள் குறும்பனைநாடு என்ற பெயரால் எழுவகைப்பட்ட நாடுகள் அமைந்திருந்தனவென்றும் அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். பனைகள் மிகுதியாக வளர்தற்கு இடனாதல் கருதி அந்நிலப்பகுதிகள் குறும்பனை நாடுகள் எனப் பண்டைச் சான்றோரால் பெயரிடப்பெற்றன என அறிகின்றோம். குறும்பனை நாடுகளின் தொகுதியினைக் குறித்து வழங்கிய அடையாளமே பனைக்கொடியாகும். தம்காலத்தே தென்னாட்டில் அடையாளமாக வழங்கிய பனைக்கொடி யென்னுஞ் சொற்றொடர்க்கே ஆசிரியர் தொல்காப்பியனார் புணர்ச்சிவிதி கூறினரென்பது வெளிப்படையாதலின் ஆசிரியர் தொல்காப்பி யனார் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தார் என்னும் நச்சினார்க்கினியர் கொள்கையில் ஒரு சிறிதும் தவறு காணுதற்கு இடமில்லையென்க. தொல்காப்பியனார் காலத்தில் தமிழ் நாட்டில் ஓடிய குமரியாறு,பிற்றை நாளிற் கடல்கோளால் அழிந்தபின்னரே இலங்கை தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்து தனித்தீவாக மாறியது. இலங்கைச் சரிதம் கூறும் மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி. மு. 2387-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்பர்.1 எனவே குமரியாறு கடல்வாய்ப்பட்ட காலம் கி. மு. 2387-ஆம் ஆண்டிற்கு முன்னென்பது துணியப்படும். இங்ஙனமாகவும் குமரியாறு கடல்கொண்ட காலம் கி.மு. 145-என மகாவித்துவான் அவர்கள் துணிதற்கு எத்தகைய தொடர்புமில்லை யென்க. எண்வகை மெய்ப்பாடுகளையும் சுவையென்று தொகை யிட்டு விரித்து விளக்கியவர் வடமொழியில் நாட்டிய நூல் செய்த பரத முனிவரென்றும், மெய்ப்பாடுகள் முப்பத்து மூன்றென அவரே தொகை கூறியுள்ளாரென்றும், அவர் கூறிய மிருதியையும் விபோதத்தையும் நினைதல் என ஒன்றாக அடக்கித் தொல்காப்பி யனார் முப்பத்திரண்டாகக் கொண்டா ரென்றும், இங்ஙனம் நாட்டிய நூல் முறையினைத் தொல்காப்பியர் தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டமை நாட்டியமரபின் நெஞ்சுகொளி னல்லது, காட்டலாகாப் பொருளவென்ப என வரும் பொருளியிற் சூத்திரத்தாலும் அதற்கு நச்சினார்க்கினியரெழுதிய உரையாலும் நன்கு புலனாமென்றும் பரத நாட்டிய நூல் கூறிய பத்துவித அவத்தைகளுள் சக்ஷுப்ரீதி என்னுங் காண்டல் வேட்கையை நாட்ட மிரண்டும் என்ற சூத்திரத்தாலும் அதன்மேல் நிகழும் அவத்தைகள் ஒன்பதனையும் வேட்கையொருதலை என்ற சூத்திரத்தாலும் தொல்காப்பியர் கூறினாரென்றும் மகாவித்து வான் அவர்கள் கூறியுள்ளார்கள்.1 நகை முதலிய எட்டு மெய்ப்பாடகளுக்குமுரிய வடமொழிப் பெயர்களை இளம் பூரணரும் பேராசிரியரும் தம் முரையிற் குறிப்பிட்டிருத்தலால் வடமொழிப் பெயர்களே பெரு வழக்கென்பதும் இக்கருத்துக்கள் வடமொழியிலுள்ளனவே யென்பதும் ஊகிக்கத்தகுமென்றும், இப்பொருளைக் குறித்து முதன் முதல் நூலியற்றியவர் பரதமுனிவரென்றும், வேட்கையொருதலை என்ற சூத்திரத்தில் தொல்காப்பியர் கூறும் அவத்தைகள் கி.பி. நான்காம் நூற்றாண்டிலெழுதப்பட்ட வாத்யாயனரது காம சூத்திரத்தில் ஐந்தாம் அதிகரணத்தில் காணப்படுவதால் இவற்றைத் தொல்காப்பியர் தாமே முதன் முதல் படைத்து வழங்கினா ரெனக்கோடல் பொருந்தாதென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கூறிய ரா. இராகவையங்காரவர்கள் கொள்கையினைப் பின்பற்றித் தமது புதுக் கொள்கையொன்றி னையும் வெளியிட்டுள்ளார்கள்.2 தொல்காப்பியனார்க்கு முன்னமே நாடக வழக்கு தமிழ் நாட்டில் உருப்பெற்று வளர்ந்துவந்ததென்பது நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் என வருந் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனாம், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளையும் மொழி வளர்ச்சியின் வகைகளாகக்கொண்டு வளர்த்தபெருமை பண்டைத் தமிழ் மக்களுக்கு உரியதாகும். கூத்த நூல்பற்றியும் செய்யுளியல் பற்றியும் எண்வகை மெய்ப்பாடுகளும் விளக்குதற் குரியனவாம். ஆகவே எண்வகை மெய்ப்பாடுகளைப்பற்றி இயற்றமிழ் நூல்களும் நாடகத்தமிழ் நூல்களும் ஒப்ப விரித்துரைப்பனவாயின. இத்துறையில் பரதம் என்ற பெயருடன் இயற்றப்பட்ட நாடகத் தமிழ் நூலொன்று பண்டை நாளில் தமிழகத்து வழங்கியுளது. இடைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் முன்னோர் தேடிய அறிவுச் செல்வங்களைப்பேணாது சோம்பியிருந்தமையால் பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் பலவும் வழக்கிறந்து மறைந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களிறந்தன என அடியார்க்குநல்லார் கூறுதலால் இச்செய்தியுணரப்படும். சங்க காலத்திலேயே பரதம் என்னும் பெயரினதாகிய நாடகத் தமிழ் நூலும் சுவைகளையும் மெய்ப்பாட்டினையும் தனித் தனியே விரித்துரைக்கும் ஏனைய தொன்னூல்களும் வழங்கிய வரலாற்றினை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுதலால் எண்வகை மெய்ப்பாடுகளை வடமொழி நாட்டிய சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் உணர்ந்து சொல்லினாரென்பார் கூற்று ஒரு சிறிதும் பொருந்தாமை புலனாம். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் எண்வகை மெய்ப்பாடுகளைக் குறித்து வழங்கும் பெயர்கள் யாவும் தனித் தமிழ்ச்சொற்களாகவே அமைந்துள்ளன. ஆசிரியர் எண்வகை மெய்ப்பாடுகளையும் செய்யுளின் உறுப்பாகவேகொண்டு விளக்குவதல்லது நாடகத்தின் உறுப்பாக வைத்து உரைத்திலர். பரத முனிவர் கூறிய வழிநிலை யவிநயங்கள் முப்பத்து மூன்றிற்கும் உடைமையினபுறல் என்னுஞ் சூத்திரத்துத் தொல் காப்பியர் கூறிய உடைமை முதலிய முப்பத்திரண்டற்கும் தொடர்பு காட்டமுயன்ற அறிஞர் ரா. இராகவையங்காரவர்கள் தொல்காப்பியனார் கூற்றுக்கும் இளம்பூரணர் பேராசிரியர் ஆகிய உரையாசிரியர் கருத்துக்களுக்கும் முரண்படக் கூறியுள்ளார்கள். தொல்காப்பியனார் கூறிய நடுநிலையைத் த்ருதி என்றும் அருளலை விஷாதம் என்றும் வரைதலை அவகித்தம் என்றும் அன்பினைச் சபலதை யென்றும் சூழ்ச்சியை மதம் என்றும் அரற்றினைக் கிலானி யென்றும் உயிர்ப்பினை ஜடதை யென்றும் கையாற்றினை மரணம் என்றும் இடுக்கணைச் சிரமம் என்றும் பொச்சாப்பினை அபமாரம் என்றும் இன்புறல் என்பதன்கண் உறல் என்பதனைத் தனியே ஒன்றாகக்கொண்டு அதனை வியோதம் என்றும் கூறுதல்1 அவ்வம்மெய்ப்பாடுகளுக்கு வடமொழியாசிரியர் கூறும் வரைவிலக்கணங்களோடு அறவேமாறுபட்டதாகும். தொல்காப்பியனார் கூறிய வியர்த்தல் என்பதனோடொத்த வடமொழி மெய்ப்பாட்டின் பெயரை மகா வித்துவான் அவர்கள் சொல்லாது விட்டனர். பரத முனிவர் தம் நூற் கருத்து உலகு படைத்த பிரமன் முதலாக வருவதாக நூன்முகத்துக் கூறுதலின் அவரும் காந்தருவ வேதத்தை நோக்கி நூல் செய்தனரென்றும் துணியத்தகுமென்றும், இம்மெய்ப்பாடுகள் பரத முனிவராற் படைக்கப்பட்டனவென்று கொள்ளுதலும் பொருந்தாதென்றும் பரத முனிவர்க்குந் தொல்காப்பியனார்க்கும் பொதுவாக ஒரு முதனூலிருந்து அதன் கருத்துக்களையே அவ்விருவருங்கைக் கொண்டனரென்று துணிவதே பொருந்திற்றாகுமென்றும் மகா வித்துவான் அவர்கள் தம் முடிபினைப் புலப்படுத்தியுள்ளார்கள்.2 இசையொடு சிவணிய நரம்பின்மறை எனத் தொல்காப்பியனார் கூறியது, இசைத்தமிழ் நூலாகிய யாழ்நூலையே யென்பது இளம் பூரணர் கருத்தாகும். மறையென்று வருமிடமெல்லாம் வேதமெனப் பொருள்கூறுதல் பிற்கால வழக்கமாகும். வேதம் என்னுஞ்சொல் அறிவுறுத்துவது என்னும் பொருளிலும் மறையென்னுஞ்சொல் மறைந்த நுண்பொருள்களைத் தன்னகத்தேகொண்டுள்ளது என்னும் பொருளிலும் வழங்குதலால் அவ்விரு சொற்களுள் ஒன்று மற்றொன்றின் மொழிபெயர்ப்பாதல் இயலாது. ஆகவே நரம்பின் மறையென்பது யாழ்நூலாகிய இசைத்தமிழ் நூல் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். எனவே ஆசிரியர் தொல்காப்பியனார் காந்தர்வ வேதத்தை நோக்கி நூல்செய்தார் என்னுங்கூற்று1 ஏற்புடையதன் றென்க. தொல்காப்பியனார் கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளுக்கும் பரத முனிவர் கூறிய முப்பத்துமூன்று மெய்ப்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பின்மை முன்னர் எடுத்துக் காட்டப்பெற்றமையால் பரதமுனிவரும் தொல்காப்பியரும் ஒரு முதனூலையே பின்பற்றியிருத்தல் வேண்டும் என்னும் ஊகத்திற்கே இடமில்லாதொழிதல்காண்க. இனி, தொல்காப்பியனார் பொருளியலிறுதியில் ஒப்பும் உருவும் எனத் தொடங்கும் சூத்திரத்தில் பாகுபடுத்திக் காட்டலாகாதன சில பொருள்களை தொகுத்துணர்த்துகின்றார். ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என அவ்வழி வருஞ் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத பொருளையுடைய என இளம்பூரண அடிகள் இச்சூத்தரப் பொருளை இனிது விளக்கியுள்ளார்கள். இச்சூத்திரத்தில் நாட்டியன் மரபின் நெஞ்சுகொளினல்லது, காட்டலாகாப் பொருளவென்ப என இளம்பூரணர் கொண்ட பாடமே பழைய பாடமாகும். இதற்கு மாறாக நாட்டிய மரபின் நெஞ்சுகொளினல்லாது காட்டலாகாப் பொருள என்ப என நச்சினர்க்கினியர் பாடங்கொண்டு நாடக வழக்கத்தாற் புலனெறிவழக்கஞ்செய்த முறைமையானேநெஞ்சு உணர்ந்து கொள்ளினன்றி உலகியல்வழக்கான் ஒருவர்க்கொருவர் கட்புலனாகக்காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய எனப் பொருள் கூறியுள்ளார். நாட்டிய மரபின் என நச்சினார்க்கினியர் தாம்கொண்ட பாடத்திற்கு நாடக வழக்கத்தார் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே எனப் பொருள் கொண்டமை இச்சூத்திரத்தில் தொல்காப்பியனார் அறிவுறுத்தக் கருதிய பொருளுக்கு ஏற்புடயதன்றாம். உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்புணர்த்தப்படாத பொருள்களையே இச்சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைக்கின்றார். இவை பெயரளவிற் பேசப்படுவன வாகவும் இன்ன உரு இன்ன நிறம் எனச் சுட்டிக் காட்டுதற்கேற்ற கட்புலனாம் வடிவமில்லாதன வாகவும் இருத்தல் பற்றி, இவற்றை நாட்டில் இயலும் வழக்குப் பயிற்சியின் துணை கொண்டு மனத்தால் உணர்ந்து கொள்ள வேண்டுமேயன்றி, இவ்வுருவினது இஃதுஎனக் கட்புலனாகச் சுட்டிக் காட்டுதல் இயலாது என்பதே இச்சூத்திரத்தின் கருத்தாகும். இப் பொருளிலேயே இறையனார் களவியலுரை யாசிரியரும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தினை அன்பினைந் திணை யெனத் தொடங்கும் களவியல் முதற் சூத்திர வுரையில் மேற்கோளாக எடுத்தாள்கின்றார்.1 எனவே இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய பொருளே பண்டை யுரையாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்ற தொன்மை யுடைய தென்பது நன்கு பெறப்படும். இனி நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தில் வந்துள்ள நாட்டியம் என்பது தொல்காப்பியனார் காலச் சொல்லன்றாம். அச்சொல்லின் காலம் எதுவாயினும் நாட்டிய மரபினை இச் சூத்திரத்தில் ஆசிரியர் எடுத்தாளுதற்கு எத்தகைய தொடர்பு மில்லையென்க. அன்பாவது இதுவென அறியவிரும்பும் ஒருவன், அதன் இயல்பினைத் தாய் தந்தை முதலிய சுற்றத்தார்கண்ணும் நண்புடையார்கண்ணும் உலகவாழ்க்கை நெறியாற் கண்டுணர்வ தல்லது நாட்டிய இலக்கணத்தைக் கற்று அதன் துணையானே மனத்தின்கண் உணர வேண்டுமென்னும் யாப்புறவில்லை. அன்றியும் நாட்டிய முறையினால் ஒப்பு, உறவு, கற்பு முதலியவற்றை ஒருவன் தெரிந்துகொள்ள முயல்வதென்பது அத்துணை எளிய செயலன்றாம். கருத்துப் பொருளைப் பற்றிய இவ்வாராய்ச்சியை உலகியல் வழக்கில் வைத்துணர்த்துவதே தொல்காப்பியனார் கருத்தாகும். எனவே இச்சூத்திரத்தால் நாட்டியநூல் முறையினைத் தொல்காப்பியனார் தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டாரென்றல் பொருந்தாமை காண்க. வேட்கை யொருதலை எனத் தொடங்கும் சூத்திரத்தில் அவத்தையென்னும் சொல்லையோ அதன் மொழிபெயர்ப்பாகப் பிறிதொரு சொல்லையோ அவ்வவத்தைகள் பத்தென்னும் தொகையினையோ தொல்காப்பியனார் குறிப்பிடவேயில்லை அங்ஙனமாகவும் பிற்காலத்தவராகிய உரையாசிரியர் இளம்பூரணர் தம் காலத்திற் பெருகி வழங்கிய வடநூற் கருத்தினாற் கவரப்பட்டுப் பத்தவத்தைகளும் இச்சூத்திரத்திற் கூறப்பட்டன வெனக் கொண்டு உரையெழுதியுள்ளார். இச்சூத்திரத்தில் களவொழுக்க மெனச் சிறப்பித்தற்குரியனவாக வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணு வரையிறத்தல். நோக்குவ வெல்லம் அவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்னும் ஒன்பதுமே கூறப்பட்டுள்ளன. அஃதேல் அவை (அவத்தை) பத்துளவன்றே, ஈண்டுரைத்தன ஒன்பதாலெனின், காட்சி விகற்பமுங் கூறினார், அஃதுட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவ தென்று கொள்க எனத் தாம் பததெனக் கொண்டதற்கு அமைதி கூறுவர் இளம்பூரணர் களவியல் தொடக்கத்தில் தொல்காப்பியர் கூறிய காட்சி, ஐயம், துணிவு என்னும் மூன்றனுள் முதலாவதாகிய காட்சியை விடுத்து ஐயமுந்துணிவுமாகிய இரண்டையும் ஒன்றென எண்ணி அதனை வேட்கை முதலாகப் பின்னர்ச் சொல்லப்படும் ஒன்பதனோடும் கூட்டிப் பத்தெனத் தொகை செய்து அவற்றைப் பத்தவத்தைக ளெனக் கொள்ளுதற்குத் தொல்காப்பியச் சூத்திர அமைப்பிற் சிறிதும் இடமில்லை. இங்ஙனமாகவும் உரையாசிரியர் இச்சூத்திரத்திற் பத்தவத்தையுங் கூறப்பட்டன எனக் கூறுதல் தொல்காப்பியனார் கருத்துக்கு முற்றிலும் முரணாகும். இம்முரண்பாட்டினை யுணர்ந்த நச்சினார்க்கினியர், இச்சூத்திரத் திற்கு இளம்பூரணர் உரையைத் தழுவாது வேறு பொருள் கூறினமை இவண் கருதத் தகுவதாகும். காட்சி முதலிய மூன்றனையும் ஆசிரியர் தொல்காப்பியனார் வேறுவேறு சூத்திரங்களில் தனித்தனியே விரித்துரைக்கின்றார். அவை மூன்றினையும் வேட்கை முதலிய ஒன்பதோடுங் கூட்டி அவை பத்தெனத் தொகை செய்தற்கேற்ப ஆசிரியர் இயைத்துக் கூறாமையானும், பண்டைப் பிறப்பின் தொடர்பால் அன்புற்றார் இருவர் ஒன்றியுயர்ந்த பாலது ஆணையினாற்கூடும் இயற்கைப் புணர்ச்சியில், காட்சி முதலிய மூன்றும் குறிப்பறிதற்கு முன்னர் நிகழ, வேட்கை முதலிய ஒன்பதும் குறிப்பறிதலின் பயனாய்ச் சிறப்புடை மரபிற் களவில் பின்னர் நிகழும் நிமித்தங்களாதலானும், வடமொழி நூல்களிற் சொல்லப்படும் பத்தவத்தையினை இவற்றோடு தொடர்புபடுத்தல் இயைவதன்றென்க. வேட்கை யொருதலை எனத் தொடங்கும் இச்சூத்திரத் திற்கும் இதனோடு தொடர்புடையதாய்ப் பின்னர் வந்துள்ள பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப என்ற சூத்திரத்திற்கும் முன்னை யுரையாசிரியரிருவரும் ஆசிரியர் கருத்துக்கு முரணாகப் பொருள் கூறியுள்ளார்கள். குறிப்பறிதற்கு முன்னர் நிகழும் காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்ப் பின்னர்த் தோன்றும் வேட்கை முதல் காக்காடீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் ஆக இப்பன்னிரண்டும், அன்புற்றாரிருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தமாவன என்னுங் கருத்துடன் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப எனத் தொல்காப்பியனார் சூத்திரஞ் செய்தனர். இச்சூத்திரத்திற்கு இதுவே பொருளென்பது இதற்கு முன்னும் பின்னுமுள்ள சூத்திரங்களை ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும். தொல்காப்பியப் பொருளதிகாரத் திறுதியிற் சொல்லப்பட்ட முப்பித்திரண்டு உத்திகளிற் பெரும்பாலான கௌடலியர் கூறிய முப்பத்திரண்டு உத்திகளோடு ஒத்துக் காணப்படுகின்றன வென்றும், கௌடலியர் அவ்வுத்திகளை நூற்கிறுதியில் வைத்திருத்தல் போலத் தொல்காப்பியனாரும் இவ்வுத்திகளை நூலிறுதியில் வைத்துள்ளாரென்றும் இவ்விருவர்க்கும் ஒத்த முதனூல் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லையென்றும் ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனப் பாயிரங் கூறுதலால் அவ்வைந்திரத்தேனும் அன்றி அதன் வழித்தாகிய பிறிதொரு நூலிலேனும் இவ்வுத்திகள் உள்ளனவோ என்று நினைக்கப்படு மென்றும் அறிஞர் ரா. இராகவையங்காரவர்கள் ஐயுறுவர்.1 பொருளதிகாரத்தின் இறுதியிற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டுத் திகளும் கௌடலியரியற்றிய அர்த்தசாத்திரத்தி லுள்ளனவே யென்றும் கௌடலியரது காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண் டென்றும் ஆகவே தொல்காப்பியனார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவரென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் துணிந்து கூறியுள்ளார்கள்.2 தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய மரபியல் பிற்காலத்திற் பல மாற்றங்களைப் பெற்றுளதென்பது முன்னர் விளக்கப்பட்டது. இம்மரபியலிற் சொல்லப்படுகின்ற முப்பத்திரண்டு உத்திகளுக்கும் அர்த்தசாத்திரத்திலுள்ள முப்பத்திரண்டு உத்திகளுக்கும் சொல்வகையாலும் கருத்துவகை யாலும் வேறுபாடுகள் உள. மகாவித்துவான் ரா. இராகவையங் காரவர்கள் தொல்காப்பியத்திலுள்ளவற்றிற்கும் அர்த்தசாத்திரத் திலுள்ள வற்றிற்கும் வலிந்து ஒப்புமைகாட்ட முயன்றாராயினும் அவ்வுத்திகளுள் இறந்தது காத்தல், எதிரதுபோற்றல், மொழிவாமென்றல், அறியாதுடம்படல் எனத் தொல்காப்பியத் திலுள்ளவற்றுக்கு ஒத்த வடமொழிப் பெயர்களைத் தேடிக் காணமுடியவில்லை. முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம் என்றதனை அபவர்க்கம் என்றும், கூறிற்றென்றலைப் பிரதேசம் என்றும், பல்பொருட்கேற்பின் நல்லது கோடலை விகற்பமென்றும், பிறன் கோட் கூறலைப் பூருவபக்கமென்றும், எதிர்பொருளுணர்த் தலை விபர்யயம் என்றும், ஞாபகங் கூறலை அபதேசம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, அவ்வுத்திகளின், பொருளியைபுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. எனவே இவ்வுத்திகளிற் பெரும்பாலன் ஒத்திருப்பதாகக் கூறியது உண்மையல்ல வென்பது தேற்றம். அன்றியும் அவர்கள் இங்ஙனம் இருநூல்களுக்கும் ஒவ்வா நிலைமையினை நன்குணர்ந்தே இவ்வட நூலார்க்கும் இத்தமிழ் நூலார்க்கு உத்திவகையுள் ஒத்த முதனூல் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லை1 என முடிவாகக் கூறிவிட்டார்கள். எனவே தொல்காப்பியப் பொருளதிகார விறுதியிற் காணப்படும் உத்திவகை பற்றிய சூத்திரம், கௌடலியரது அர்த்தசாதிரத் தையோ அன்றிச் சுசுருதம் முதலிய நூல்களையோ பின்பற்றிய தன்றென்பது புலனாதலின், தொல்காப்பியர் கௌடலியருக்குப் பிற்பட்டவரென்னும் கொள்கை வலியற்றொழிதல் காணலாம். மறைந்த வொழுக்கத்தோரையும் நாளும், துறந்த வொழுக்கம் கிழவோற்கில்லை எனவருங் களவியற் சூத்திரத்தி லுள்ள ஓரை யென்னுஞ் சொல் கிரேக்க மொழியைச் சார்ந்த தென்றும் இது வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்ததென்றும் இதனை வழங்கிய தொல்காப்பியம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளாரென்றும் இங்ஙனமாக எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப்பியர் கி. பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதலே பொருந்துமென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் முடித்துக் கூறியுள்ளார்கள்.2 ஓரை யென்னும் சொல், விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் தனித் தமிழ் சொல்லாகும். கோதையாயமொடு ஓரை தழீஇ (அகம்-49) எனவும், ஓரையாயம் (அகம்-219), (குறுந்-48) எனவும், ஓரை மகளிர் (குறுந்-401) எனவும், ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறம்-176) எனவும், விளையாடாயத்து ஓரையாடாது (நற்றிணை-2) எனவும் ஓரையென்னுஞ்சொல் விளையாட்டு என்னும் பொருளிற் பயின்று வழங்கியுளது. மேலெடுத்துக்காட்டிய களவியற் சூத்திரத்தில் வந்துள்ள ஓரை யென்னுஞ் சொல்லும் விளையாட்டு என்னும் பொருளிலேயே ஆசிரியரால் ஆளப்படுகின்றது. விளையாட்டென்னும் பொருளினதாகிய ஓரை என்னும் இத்தமிழ்ச் சொல்லுக்குப் பிற்காலத்தவராகிய உரையாசிரியர்கள் முகூர்த்தமெனப்பிறழ உரை கூறியுள்ளார்கள். ஓரையென்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய பொருள் இதுவெனவுணராத ஆராய்ச்சியாளர் சிலர், ஹோரா என்ற யவன மொழியே வடமொழி வழியாகத் தமிழிற்புகுந்து ஓரையெனத் திரிந்ததெனப் பிழைபடப் கருதிய தோடன்றி. அக்கருத்தினை யடிப்படையாகக்கொண்டு ஓரையென்னுஞ் சொல்லை வழங்கிய தொல்காப்பியம் பிற்காலத்து நூலே என மற்றொரு பிழைபட்ட முடிபினையும் வெளியிடுவாராயினர், அன்னோரது பிழை கொள்கைக்குரிய சான்றென எடுத்துக் கொண்டமை ஏற்புடையதன்றாம். பூப்பின் புறப்பாடீராறு நாளும் நீத்தகன்றுறையார் என் மனார் புலவர் என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் கருத்து மனு தர்ம சாத்திரத்திற் காணப்படுகின்றதென்றும், இந்த மிருதியின் காலத்திற்குப் பின்னெல்லை கி.பி. 200-என ஆசிரியர் P.V. Kane கூறுவரென்றும், எனவே தொல்காப்பியனார் காலம் கி. பி. 200-க்குப் பிற்பட்டதென்றும் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்.1 வாழ்க்கைக்கு இன்றியமையாத செயல்முறை விதிகள் சில, எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திற்கும் பொதுவாக ஒத்து வழங்குதல் இயல்பு. இப்பொதுவியல்பினையுணராது ஒரு நாட்டவர் கருத்தையொட்டியே ஏனை நாட்டவரும் செயல் மேற்கொண்டனரெனத் துணிதல் பொருந்தாது. ஆரியர்கள் தென்னாட்டிற் குடிபுகுந்து நிலைப்பதன் முன் இயற்றப்பட்டது தொல்காப்பியம். அவர்கள் தென்னாட்டவருடன் மிகவும் நெருங்கிப் பழகநேர்ந்த பிற்காலத்தில் தம் நாகரிகத்தினைப் பரப்புங் கருத்துடன் இயற்றியவை மிருதி நூல்கள். பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திற்கும் பிற்காலத்தனவாகிய இம்மிருதி நூல்களுக்கும் எள்ளளவுந் தொடர்பில்லையென்க. இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பியனார் பாணி னிக்குக் காலத்தாற் பிற்பட்டவரல்லர் என்பதும், பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்னும் நச்சினார்க்கினியர் முதலிய தொல்லாசிரியர் கொள்கையே வலியுறுமென்பதும், மாபாரத காலம் கி. மு. ஆயிரத்தைந்நூறாண்டுகளுக்குமுன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபாதலால் அக்காலத்திற்குமுன் வாழ்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்தைந்நூறாண்டு களுக்குப் பிற்பட்டவராதல் இயலாதென்பதும், களவியலுரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்குங்கால் இடைச்சங்கம் கி.மு. 5320-இல் தொடங்கப்பெற்றமை புலனாதலின் தலைச் சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்த வராகிய தொல்காப்பியனார் காலமும் அதுவேயென்பதும் நன்கு துணியப்படுமென்க. தொல்காப்பியனார் சமயம் மக்களால் மதிக்கத்தகும் பொருள்களெல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று திறமாகப் பண்டைத் தமிழாசிரியர் பகுத்து ஆராய்ந்தனர். உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாயமைந்தன நிலமும் காலமும் ஆதலின் அவை முதற்பொருள் என வழங்கப்பட்டன. புல் முதல் மக்களீறாகிய உயிர்ப்பொருள்களும் உயிரல் பொருள்களும், நிலமுங் காலமுமாகிய முதற்பொருளின் சார்பாகக் கருக்கொண்டு தோற்றுவனதாதலின் கருப்பொருள் என வழங்கப்பட்டன. மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள் உரிப்பொருள் எனப்படும். மக்கள் வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப அவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளும் செயல் முறைகளும் உருப்பெறுவனவாம் இந்நுட்பத்தினைத் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச்சான்றோர் நன்குணர்ந்து வெளியிட்டுள்ளார்கள். மக்கள்வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங் கொள்கையும் வழிபாட்டு முறைகளுந்தோன்றி நிலை பெறுவனவாதலின் தெய்வங்கொள்கையினையும் கருப்பொருள் களுள் ஒன்றாகவே பண்டைத் தமிழாசிரியர் வகுத்துரைப் பாராயினர். தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப எனவரும் நூற்பாவினால் தெய்வங் கொள்கையினைக் கருப் பொருள்களுள் முதலாவதாக வைத்தெண்ணிய தம் முன்னோர் கொள்கையினை ஆசிரியர் தொல்காப்பியனார் அறியுறுத்துதல் காண்க: காடுறையுலகமாகிய முல்லை நிலத்தில் மாயோன் வழிபாடும், மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் வழிபாடும், தீம்புனலுலகமாகிய மருத நிலத்தில் வேந்தனைத் தெய்வமாகக் கருதி வழிபடும் முறையும், பெருமணலுலகமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும்தோன்றி நிலைபெற்றன. நிலத்திற் கேற்பத் தோன்றிய இத்தெய்வ வழிபாடுகளை, மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே எனவருஞ் சூத்திரத்தால் தொல்காப்பியனார் வகுத்துரைத் துள்ளார். நானிலத்தவர்களும் தாம் தாம் வாழும் சூழ்நிலைக் கேற்பத் தம் உள்ளத்தில் வகுத்தமைத்துக் கொண்டனவே இந் நிலத் தெய்வ வழிபாடுகளென்பதும். இவற்றுள் உயர்வு, தாழ்வு கற்பித்தல் பண்டையோர் கருத்தன்றென்பதும் மேல்எடுத்துக் காட்டிய தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது புலனாம். மாயோன் சேயோன் எனத் தெய்வங்களுக்கு நிறம்பற்றிப் பெயர் கூறப்படுதலால் இத்தெய்வங்களுக்குத் திருவுருவமைத்து வழி படும் வழக்கமும் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடையதென்பதும் நன்கு பெறப்படும். முல்லை நிலத்துக் கோவலர், தம்மால் மேய்க்கப்பெறும் ஆனிரைகள் பாற்பயன் தருதல்வேண்டி காயாம்பூ வண்ணனாகிய திருமாலைப் பரவிக் குரவையாடுதலும், குறிஞ்சி நிலத்துக் குறவர், நறுமலரெழுதரு நன்மணம்போன்று உயிர்க்குயிராய் விளங்குந் தெய்வமணமாகிய வெறியினையறியுஞ் சிறப்புடைய வேலனையழைத்து வெறியாடச்செய்து, செங்காந்தள் நிறவண்ணனாகிய சேயோனை வழிபடுதல், மருத நிலத்து வாழும் உழவர், மலர் தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த வேந்தனை வழிபட்டு விழவயர்தலும், நெய்தல் நிலத்துப் பரதவர், விலைவளஞ் சுரக்கவேண்டி வருணனைப் பரவுதலும் தமிழகத்துப் பண்டை நாளில் நிகழ்ந்த நானில மக்களின் தெய்வ வழிபாடுகளாகும். இவ்வழிபாடுகளேயன்றி, வெற்றி விளைக்குங் கொற்றவையாகிய பழையோள் வழிபாடும் தறுகண்மைமிக்க தமிழ் மறவர்களால் மேற்கொள்ளப் பெற்றது. முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்ற தொடராலும், காயாமலர்வண்ணனாகிய மாயோன் சிறப்பினை மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை என்ற தொடராலும், கொற்றவை வழிபாட்டின் பயனாகவுளதாம் தறுகண் உணர்வினைச் சிறந்த கொற்றவைநிலை என்ற தொடராலும் ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலிற் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். தெய்வத்தினை நிலவகையால் வகுத்துக்கூறிய தொல்காப் பியனார், நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்துக்கும் உரியநிலையில் எங்கும் நீக்கமற நிறைந்த முழுமுதற் பொருளைக் கடவுள் என்ற பொதுப்பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளார். நிலந்தோறும் வேறுவேறு பெயர்களால் உருவமைத்து வழிபடப் பெறும் எல்லாத் தெய்வங்களும் பொருளால் ஒன்றேயென்பது பண்டைத் தமிழ்ச் சான்றோரது துணிபாகும். இங்ஙனம் தெய்வ வழிபாட்டு முறையில் ஒற்றுமையுணர்வு நிலவிய காலத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியனாராதலின், அவர் தம் காலத்தில் நிலந்தோறும் நிகழ்ந்த தெய்வ வழிபாடுகளெல்லாவற்றையும் ஒத்த மதிப்புடன் தமது நூலிற் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும் எனவரும் மரபியற் சூத்திரத்திலே தூய மெய்யுணர்வே இறைவனது திருமேனியென்றும், அவன் ஒருவனேயென்றும் தொல்காப்பியர் கூறுவர். இவ்வாறே ஆசிரியர் திருவள்ளுவனாரும் வாலறிவன் என்ற தொடரால் கடவுளின் இயல்பை விளங்கவுரைத்தமை இவண் ஒப்புநோக்கத்தகுவதாகும். கடவுள் என்னுஞ்சொல், இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவொண்ணாத நிலையில் எல்லாத் தத்துவங்களையுங் கடந்து விளங்கும் முழுமுதற் பொருளைக் குறித்து வழங்கும் காரணப் பெயராகும். எல்லாப் பொருள்களையும் உள்நின்று இயக்குபவன் இறைவனாதலின் இயவுள் என்ற பெயரும் அவனுக்குரியதாயிற்று! இறைவன் என்னுஞ்சொல், யாண்டும் பொருள்கள் தோறும் நீக்கமற நிறைந்து விளங்குபவன் என்னும் பொருளுடையதாய்க் கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயராகும். எனவே எல்லாப்பொருள்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இயக்கி நின்று எல்லாத் தத்துவங்கனையும் கடந்து விளங்கும் முழுமுதற் பொருளையே கடவுள், இயவுள், இறைவன் எனப் பல பெயர்களாலும் நம் தமிழ் முன்னோர் போற்றி யுள்ளார்களென்பது நன்கு துணியப்படும். கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயராகிய இறைவன் என்னும் சொல், வேண்டுதல் வேண்டாமை யிலானாகிய அப்பெருமானைப் போன்று யாவர் மாட்டும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலை யுடையவனாகி அறவோர்க்கு அருளியும் அறமிலாதாரை யொறுத்தும் ஆளவல்ல வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப்பெறுவதாயிற்று. இச்சொல்லின் பொருட்டன்மை முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட், கிறையென்று வைக்கப்படும் எனவரும் திருக்குறளால் இனிது புலனாதல் காண்க. தான் அறநெறியிற் சிறிதும் பிழையாது நடந்து தன் குடிமக்களைப் பிறர் நலியாமற் பாதுகாத்தலையுஞ் செய்யும் அரசன், பிறப்பினால் மகனேயாயினும் அவனது செயலின் உயர்வினாலே கண்கண்ட கடவுள் என மாந்தராற் சிறப்பித்துப் போற்றப் பெறுவான் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும். இறைவேறு மன்னன்வேறு என்பதும் மன்னனுக்கு இறையென வழங்கும் பெயர் உபசார வழக்கேயென்பதும் இக்குறளால் நன்கு புலனாதல் காண்க இங்ஙனம் மன்னனைக் கடவுளாக மதித்துப் போற்றும் வழக்கம் தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கிய தொன்மை யுடையதாகும். மக்களாற் செய்யப்படும் உழவுக்கும் பிற தொழிலுக்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். மன்னன் என்னும் பெயர் நிலை பெறுதல் என்னும் பொருளுடைய மன் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த காரணப்பெயராகும். மக்களது நல்வாழ்வு நிலைபெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித் தலைவன், மன்னன் என நன்குமதித்துப் போற்றப் பெறுவானாயினன். அதனால் அவனது குடும்பமும் நாட்டில் வழிவழியாக நிலைப்பெற்று வருவதாயிற்று. உடம்பை வளர்ப்பனவாகிய நெல் முதலிய உணவுப் பொருள்களோ அவை விளைதற்கு உறுதுணையாகிய நீரோ இவ்வுலகில் உயிர் வாழ்வினை நிலைபெறச் செய்யும் ஆற்றலுடையனவாகா. மக்களை ஒரு நெறிப்படுத்தித் தம்முள் வேற்றுமையின்றி அன்பினாற் கலந்து வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே மலர்தலையுலகிற்கு உயிராவான் எனத் தமிழ் முன்னோர் எண்ணினார்கள். அவர்கள் எண்ணிய வண்ணமே அக்காலத்தமிழ் வேந்தர்களும் தம் நாட்டு மக்களின் இன்னுயிரென இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சி புரிந்தனர். நாகரிகம் உருப்பெறுதற்கிடனாகிய மருதநில மக்கள் தம் நாட்டு வேந்தனையே தெய்வமென மதித்துப் போற்றி அவனது ஆணைவழி ஒழுகினமையால் வேந்தன் மேய தீம்புனலுலகம் என்ற தொடரால் மருதநிலத்துக்குத் தெய்வமாவான் வேந்தனே எனத் தொல்காப்பியனார் குறிப்பிடு வாராயினர். வேந்தனைக் காத்தற் கடவுளாகிய திருமாலாகக் கருதிப் போற்றும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கியுளது. இவ்வழி பாட்டு முறையினை, மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற றாவா விழுப்புகழ்ப் பூவைநிலை என்ற தொடரால் தொல்காப்பியனார் உய்த்துணர வைத்தமை இவண் கருதற்குரியதாகும். ஆனிரையைக்காத்த மாயவன் திருவுருவோடு உவமித்துக் காட்டிடத்து அலரும் காயாம்பூவைப் புகழ்வது பூவைநிலையென்னுந் துறையாகும். இத்துறையின் இயல்பினை, கறவை காவலன் நிறனொடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று எனவருந் தொடரால் ஐயனாரிதனார் இனிது விளக்கினர். மாயோன்மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை எனவருந் தொல்காப்பியத் தொடர்க்கு மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவைநிலையைக் கூறுதல் எனப்பொருள் கூறி, பூவை (காயாம்பூ) மலர்ச்சியைக்கண்டு மாயோன் நிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக் காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக்கண்டு கூறுதல். உன்னங்கண்டு கூறினாற்போல இதுவும் ஓர் வழக்கு என விளக்கமுங் கூறிய இளம்பூரண அடிகள், இஃது உரையன்றென்பார் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலையென்ப என மற்றொரு சாரார் கருத்தினையும் எடுத்துக்காட்டி வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவைநிலையாகக் கொள்க என்னை? ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும் ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண் என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க என்று தம் கொள்கையையும் எடுத்துரைத்துள்ளார். இளம்பூரணருரையினை யுளங்கொண்ட நச்சினார்க்கினியர், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலை யென்னுந் தொடரை மாயோன் விழுப்புகழ், மேய பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ் மன்பூவைநிலை எனக் கொண்டு கூட்டி மாயவனுடைய காத்தற் புகழையும் ஏனோர்க்கும் உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தல் என்னும் புகழ்களையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலை என உரை கூறித் தமது கருத்துக்கு ஆதரவாக ஏற்றுவலனுயரிய எனத் தொடங்கும் 56-ஆம் புறப்பாடலை உதாரணமாகக் காட்டியுள்ளார். காட்டிடத்து அலருங் காயாம்பூ. நீலமேனி நெடியோனாகிய மாயோனது திருமேனியினை நினைவுபடுத்துவதாகலின், பூவை யாகிய அப்பூவினைப் புகழ்தல் மாயோனைப் புகழ்தலாய் அப்பெருமானது காத்தற்றொழிலைத் தனக்குரிய கடமையாகக் கொண்ட மன்னனது பெருஞ்சிறப்பினை விரித்துரைக்குந் துறையாயிற்று. மாயோனாகிய தெய்வத்தொடு மன்னனை யுவமித்தலே பூவைநிலையென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். அவர்க்குப்பின் தோன்றிய கடைச்சங்கத் தொகை நூல்களில் முக்கண்ணான் முருகன் முதலிய எல்லாத் தெய்வங்களையும் மன்னனுக்கு உவமையாக எடுத்துரைத்துச் சிறப்பிக்கும் வழக்க முண்மையையறிந்த இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மாயோனை மன்னனுக்கு உவமித்தலேயன்றி ஏனைத் தெய்வங்களை அவனுக்கு உவமித்தலும் பூவை நிலையேயாம் என இலக்கியங் கண்டதற்கேற்ப இலக்கணமும் அமைத்துக்கொண்டார்கள். இச்செய்தி மாயோனிறம்போலும் பூவைப்பூநிறமென்று பொருவுதல் பூவைநிலையென்றால் ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல்வேண்டும். ஆசிரியர் அவை கூறாமையின் அது புலனெறி வழக்க மன்மையுணர்க என நச்சினார்க்கினியர், ஐயனாரிதனார் கொள்கையினை மறுத்துரைத்தலால் நன்குபுலனாம். காலம் உலகம் உயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன எனவரும் சொல்லதிகாரச் சூத்திரம், இருதிணை, ஐம்பால்களுள் இன்ன பால்என விளங்காதன சிலவற்றை யெடுத்துரைத்து உயர்திணைப்பாற்படுத்துவதாகும். காலதத்துவமும் உலகப் பகுதியும் உயிரும் உடம்பும் பால்வரை தெய்வமும் வினையும் பூதமும் ஞாயிறும் திங்களும் சொல்லும் ஆகிய இப்பத்துடனே இவை போன்று வருவன பிறவுமாகிய சொற்களெல்லாம் ஐம்பாலுள் இன்ன பால் என்று இசையாதனவாய் உயர்திணைப் பொருண்மேல் நிகழ்வனவாம் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இச்சூத்திரத்துச் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தனவெல்லாந் தெய்வத்தையே உணர்த்தினவாதலின் தெய்வமென்பதனைத் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பதனான் உயர்திணையென்பது பெற்றாம். இவையெல்லாந் தெய்வமென்னும் உயர்திணைப் பொருளை யுணர்த்தினவேனுந் தெய்வமென்னுஞ்சொல் அஃறிணை வாசகமாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளு மென்றார். இச்சொற்கள் கூறுகின்ற பொழுதே தத்தம் உயர்திணைப் பாற் பொருளே தோற்றுவித்து நிற்றலின் ஆகுபெயரன்மையுணர்க. காலமென்றது காலக்கடவுளை உலக மென்றது உலகத்தாரை. அறஞ்செய்து துறக்கம் புக்கான், உயிர்நீத் தொருமகன் கிடந்தான் என உயிரும் உடம்பும்வரின் வேறன்றி அவராகவுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களேயாயின. இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின் பால்வரை தெய்வமென்றார். வினை இருவினைத் தெய்வம் சொல் - நாமகளாகிய தெய்வம் என நச்சினார்க்கினியர் இச்சூத்திரப் பொருளை விளக்கியுள்ளார். வினையென்பது அறத்தெய்வம் என்பர் சேனாவரையர். காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லா வுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன், உடம்பு என்பது மனம்புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு இதனை மூலப்பகுதி எனினும் ஆம், பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய தன்மையை வரைந்து நிற்கும் பரம் பொருள். வினையென்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள்செய்வது, சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம் விட முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று என்பது தெய்வச் சிலையார் கூறும் விளக்கமாகும். இச்சூத்திரத்துள் வந்துள்ள உலகம், உயிர், உடம்பு என்பனவும் தெய்வத் தொடர்பினையே யுணர்த்தி நின்றன என்பது தெய்வச்சிலையார் கருத்தாகும் பூதம், ஞாயிறு, திங்கள் என்பன தெய்வஆற்றலைப் புலப்படுத்துவனவாக மக்களால் மதித்து வழிபடப் பெறுவனவாம். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்களைந்து மகத்தே நகும் எனத் திருவள்ளுவரும் ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும் என இளங்கோவடிகளும் கூறுவன இச்சூத்திரப் பொருளை வலியுறுத்து வனவாம். இதன்கண் பால்வரை தெய்வம் எனவும் வினை எனவும் அடுத்தடுத்துச் சொல்லப்பட்டன இவையென அறிதல்வேண்டும். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள் எனத் தெய்வச் சிலையாரும், எல்லோர்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமான இருவினையையும் வகுப்பது எனச் சேனாவரை யாரும் நச்சினார்க்கினியரும் பொருள் கூறியுள்ளார்கள். எனவே பால்வரை தெய்வம் என வழங்கும் இச்சொல், இறைவனாகிய முழுமுதற் பொருளையே குறித்து நின்றமை உரையாசிரிய ரெல்லார்க்கும் உடன்படாதல் பெற்றாம். இதனையடுத்து வினையெனச் சுட்டப்பட்டது ஊழ் என்பது எல்லாவுரை யாசிரியர்க்கும் ஒத்த முடிபாதலால் முன்னுள்ள பால்வரை தெய்வம் என்னுஞ் சொல்லுக்கு ஊழ்வினையெனப் பொருள் கூறுதல் பொருந்தாதென்பது துணியப்படும். ஒன்றே வேறே யென்றிரு பால்வாயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே எனவருங் களவியற் சூத்திரத்தில் பாலின் இயல்பினையும் அதன் வகையினையும் அதனைப் பற்றுக் கோடாகக்கொண்டு நிகழும் தெய்வத்தின் ஆணையினையும் தொல்காப்பியனார் விரித்துரைத் துள்ளார். ஒன்றுவிப்பதும் வேறுப்படுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படுமென்றும், அவற்றுள் ஒன்றுவித்தலால் உயர்ந்த பாலின்வழி நிகழும் இறைவனது ஆணையால் உருவுந்திருவு முதலிய நலங்களால் ஒத்த தலைவனுந் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்படுவரென்றும் மேற்காட்டிய களவியற் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. ஆசிரியர் கூறிய இருவகைப் பாலினுள் ஒன்றுவிக்கும் பாலினை ஆகூழ் என்றும் வேறுபடுத்தும் பாலினைப் போகூழ் என்றும் ஊழென்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர் குறிப்பிட்டு விளக்கியுள்ளார், இக்குறிப்பினை ஒப்பிட்டு நோக்குங்கால் இச்சூத்திரத்தில் ஒன்றே வேறே யென்றிருபால் என்றது இருவகை யூழினையேயென்பது இனிது விளங்கும். எனவே பால் வரை தெய்வம் என்ற தொடர்க்கு எல்லார்க்கும் இன்பத்துன்பத்திற்குக் காரணமாகிய இருவினை யையும் வகுப்பது எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கூறிய பொருளே தொல்காப்பியனார் கருத்தினை இனிது புலப்படுப்பதாதல் நன்கு துணியப்படும். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுந்தன்மைய தன்றென்பதும், உயிர்கள் செய்யும் நலந் தீங்குகளாகிய இரு வினைகளுக்கேற்ப அவற்றின் பயன்களை வகுத்து நுகர்விக்கும் முதல்வனொருவன் உளனென்பதும் தொல்காப்பியனார் துணிபாகும். தொல்காப்பியனார் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கண்டு அறிவுறுத்திய இவ்வுண்மையை, செய்வினையுஞ் செய்வானும் அதன் பயனுஞ் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் (பெரிய-3645) எனவருந் தொடரால் சேக்கிழார் பெருமான் தெளிவாக விரித்துரைத்தமை இவண் ஒப்புநோக்கத் தகுவதாகும். பால்வரை தெய்வம் என்னுந் தொடர், பால்வேறு அதனை வரைந்து நுகர்விக்குந் தெய்வம் வேறு என்னும் மெய்மையினை விளக்குவதாகும். தெய்வத்தால் வகுக்கப்பெறும் முறையே பால் எனவும் வகையெனவும் ஊழ் எனவும் வழங்கப்படுவதாம், இந் நுட்பத்தினை வகுத்தான் வகுத்த வகையல்லாற்கோடி, தொகுத் தார்க்குந் துய்த்த லரிது எனவருங் குறளால் திருவள்ளுவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். ஊழ்வினை தானே யுருவெடுத்து வந்து செய்தானைப் பற்றும் ஆற்றலுடையதன்றென்றும், எல்லாப் பொருள்களையும் ஒழுங்குபெற வகுத்து இயக்கி நிற்கும் இறைவன் வகுத்த முறைதானே ஊழ் எனப்படுமென்றும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார்.1 இத்தொடரில் வகுத்தான் என்னும் சொல் இறைவனைக் குறிப்பதாகும். வகுத்தவகை யென்றது அவ்விறைவனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற்போல வகுத்தது வகையென்றாயிற்று. தெய்வத்தின் இயல்பினை விரித்துரைக்கக் கருதிய தொல் காப்பியனார், பால்வரை தெய்வம் என்ற தொடரால் தெய்வத்தைக் குறிப்பிட்டார். அவ்வாசிரியர் கருத்தின்படி ஊழின் இயல்பினை விளக்கக் கருதிய திருவள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை என அதனை விரித்துரைத்தார். ஆகவே பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியனார் கூறியதும், வகுத்தான் எனத் திருவள்ளுவர் கூறியதும் இறைவனையே யென்பது இனிது புலனாதல் காண்க. ஓருயிர் செய்த வினையின்பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் செய்தவுயிரையே வினை சென்று சேரும்படி வகுத்து நுகர்வித்தல் இறைவனது இயல்பாதலின் வகுத்தான் என்ற பெயரால் கடவுளைக் குறித்தார். ஈண்டு வகையென்றது கடவுளால் வகுக்கப்பட்ட வினைப்பயனாகிய ஊழினை. விழைவு, அறிவு, தொழில் என்னும் மூவகையாற்றலும் விளங்கப்பெற்று உலக நுகர்ச்சியிற் செல்லும் உயிர்கள், இன்ப நுகர்ச்சியில் விருப்பும், துன்ப நுகர்ச்சியில் வெறுப்பும் உடைமையால் பிறிதோருயிரால் ஈட்டப்படும் நல்வினைப் பயன்களைத் தாம் கவர்ந்து கொள்ளவும் தாம்செய்த தீவினைப் பயன்கள் தம்மைப்பற்றி வருத்தாதபடி விலகியொழுகவும் முயலுதலை இவ்வுலகியலிற் காண்கின்றோம். இங்ஙனம் ஒருவர் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை மற்றொருவர் கவராதபடியும் தாம் நுகர்தற்குரிய தீவினைப்பயனாகிய துன்பத்தை நெகிழவிட்டு ஓடாத படியும் அவரவர்களால் ஈட்டப்படும் வினைப்பயன்களை அவரவரே நுகருமாறு அரசன் ஆணைபோல் வரையறுத்துச் செலுத்துவது இறைவனது ஆணையாகும். இறைவனது ஆற்றலாகிய ஆணை, அவ்வவ்வுயிர்களின் இருவினைப் பயன்களை முன்னிட்டு அவ்வச் செயல்களைச் செய்வதாகலின், ஊழினைக் கருவியாகக் கொண்டு செயல்புரியும் இறைவனது ஆற்றலைப் பாலது ஆணை என்றார். தொல்காப்பியனார். பால் ஊழ் வகை நியதி விதியென்பன ஒரு பொருட்கிளவி. ஒருபாற் கோடாது நடுநின்று செங்கோல் செலுத்தும் அரசனது ஆணை இல்வழி எளியோர் பொருளை வலியோர் கவர்ந்து கொள்வர். அதுபோல எல்லாப் பொருளையும் வகுத்து இயக்குபவனாகிய முதல்வனது ஆணையாகிய முறை நிகழாக்கால் ஒருவர் செய்த வினைப்பயனை மற்றொருவர் கவர்வதாய் முடியும். இருவினையும் உணர்வற்றனவாதலின் அவை போகத்தைப் பயத்தல் மாத்திரையேயன்றி அப்போகம் வினை செய்தானைச் சென்றடையுமாறு செய்விக்கும் ஆற்றலுடையனவல்ல. எனவே உயிர்களுக்கு இருவினைப்பயன் இறைவனது ஆணையினால் வருமென்பதே பொருந்துவதாகும். வேந்தன் தன் ஆணையை ஏனைய அதிகாரிகள்மாட்டு வைத்து அவர்களைக் கொண்டு அவ்வத்தொழில் செய்விக்குமாறுபோல, இறைவனும் தன் ஆணையை இருவினையின்மாட்டு வைத்து அவற்றைக் கொண்டு வினைப்பயன்களை நுகர்விப்பன். இக்கருத்தினை யுளத்துட் கொண்டே பால்வரை தெய்வம் என்ற தொடரால் தொல்காப்பியர் இறைவனைக் குறிப்பிடுவாராயினர். உழவர் செய்யந் தொழிலுக்குத்தக்க பயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அவ்வுழவு தொழில் தானே விளைவிக்கமாட்டாது. அதுபோலவே உணவும் வித்துமாகத் தொன்றுதொட்டு வரும் வினைப்பயன்களை உயிர் கட்குக் கூட்டுவிப்பவன் இறைவனேயன்றி வினைதானே கூட்டுவிக்கும் ஆற்றலுடையதன்றென்பது பண்டைத் தமிழர் துணிபாகும். தெய்வத்தைக் குறித்தும் வினையினைக் குறித்தும் தொல்காப்பியனார் காலத் தமிழ் மக்கள்கொண்ட இத்துணி பினைப் பால்வரை தெய்வம் எனவரும் தொல்காப்பியச் சொற்றொடர் உய்த்துணர வைத்தல் உணர்தற்குரியதாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் இறைவன் என்பதும். அவன் முற்றுணர்வினன் என்பதும் ஆகிய உண்மையினை வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவன் என்னுந்தொடர் நன்கு விளக்குவதாகும். வினையின்நீங்கி விளங்கிய அறிவினை யுடையான் முதல்வன் எனவே, வினையின் நீக்கி விளக்கப்பெறும் அறிவினையுடையன உயிர்கள் என்பதும் உய்த்துணர வைத்தவாறாம். வினையின் நீங்கியவன் முனைவன் எனவே வினை காரணமாகவுளவாம் வேண்டுதல் வேண்டாமையென்பன அவனுக்கு இலவென்பதும் அவையில்லை யாகவே தூயமெய் யுணர்வினனாகிய அவ்விறைவன் பிறப் பிறப்பில்லாதவன் என்பதும் தானே பெறப்படும். கடவுளை வழிபடுதல் மக்களது முதற்கடமை என்பதும் தமக்குரிய வழிபடுதெய்வத்தின் திருவருளால் குற்றமற்ற பெருஞ் செல்வத்துடன் தம் குடும்பம் வாழையடி வாழையாக இவ்வுலகில் நிலைபெற்று வளர இன்புற்று வாழலாமென்பதும் ஆகிய வுண்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மக்களுக்கு அறுவுறுத்தினார்கள். நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறங்காப்ப இல்லற முதலிய நல்லறங்களாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு புதல்வர்ப்பயந்து புதல்வரும் இப்பெற்றியராகி நீடு வாழ்மின் என்று தம்பால் அன்புடையாரை வாழ்த்தினார்கள். இவ்வாறு தெய்வத்தைப் புறம் நிறுத்தி அத்தெய்வத்தின் நல்லருளால் நீடுவாழ்வீராக என வாழ்த்தும் வாழ்த்தியல், புறநிலை வாழ்த்து என வழங்கப்பெறும். எடுத்துக்கொண்ட செயல் இனிது நிறைவேறுதற்கு ஏதுவாகிய கடவுள் தோன்றாத் துணையாய் நின்று நின்னைப் புறங்காப்பக் குற்றந்தீர்த்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்துதலால் இது புறநிலை வாழ்த்தாயிற்று. இவ்வாழ்த்தியல் கலிப்பாவகையினும் வஞ்சிப்பாவினும் வரப்பெறாது இவையொழிந்த பாவினுள் வருமென்பதனை, வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா என்பதனால் தொல்காப்பியனார் வரையறுத்துள்ளார். எனவே இப் புறநிலைவாழ்த்துப் பொருண்மை வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் புணர்ந்த மருட்பாவினும் தொல்காப்பியனார் காலத்துப் பாடப்பெற்றதென்பது பெறப்படும். இச்சூத்திரத்தில் நிற்புறங்காப்ப என வாழ்த்தப் பெறுவோனை ஒருமையாற்கூறி, வாழ்த்தியல் முடிபில் பொலிமின் எனப் பன்மையாற்கூறியதன் நோக்கம், வாழ்த்தப் பெறுவோனை அவன் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரோடுங்கூட்டி நீடுவாழ்மின் என வாழ்த்திப் பாடுதல்வேண்டும் என்னும் புலமை நெறியினை அறிவுறுத்தற் பொருட்டாம். புறநிலை வாழ்த்தின் இயல்புரைக்கு முகமாகக் கடவுள் வழிபாட்டால் உளவாகும் நற்பயன்களை ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தினா ராயிற்று. தெய்வத்திற்குத் திருவுருவமைத்து முன்னின்று பரவி வழிபடும் முறையினையும், அங்ஙனம் பரவிப் போற்றுதற்குரிய செய்யுள் ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்றாக அடங்குமென்ப தனையும், அதுதான் வண்ணகமெனவும் ஒருபோகெனவும் இருவகைப்படு மென்பதனையும், ஏனையொன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே எனவும். அதுவே வண்ணகமொரு போகெனவிரு வகைத்தே எனவும் வருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துரைத்தார். தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்து தம் உள்ளத் துறுதியைப் பிறர்க்குத் தெளிவுபடுத்தும் உலகியல் வழக்கினை முன்தேற்று (சொல்-383) என்ற சொல்லாலும், தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்வோர் தாம் சொல்லிய உறுதிமொழியிலிருந்து தவறுவராயின் அவர்தம் சூளுறவே அன்னோர்க்குத் துன்பம் விளைப்பதாகும் என்பதனை இன்னாத்தொல்சூள் (கற்-6) என்ற தொடராலும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இயற்கைப் புணர்ச்சியிற் கூடிய தலைவன், தெய்வத்தின் முன்னிலையில் நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குச் சொல்லிய சூளுறவில் தவறினானாக, அதனையறிந்த தலைவி அவனது தவறால் பெருந்தீங்கு விளையும் என வருந்திய காலத்துத் தோழி, தலைவனையடைந்து நீ சூளுறவில் தவறியதால் யாம் பெரிதும் வருந்துகிறோம் எனக் கூறுவதும் உண்டு. தோழி கூற்று நிகழுமிடங்களைத் தொகுத்துரைக்கும் வழி சூள் வயிற்றிறத்தால் சோர்வு கண்டழியினும் என்ற தொடரால் இச்செய்தியினை ஆசிரியர் புலப்படுத்துகின்றார். தலைமகனோடு தலைவி உடன்போகிய காலத்துத் தன் மகளது பிரிவினால் வருந்திய நற்றாய், தன்னையும் தலைவியையும் தலைவனையுங் குறித்துத் தனக்கும் அவர்க்கும் உளவாகிய நன்மையும் தீமையும் அச்சமும் அவர் தன்னை வந்து சார்தலும் ஆகியவற்றை நிலைபெற்ற நிமித்தம் நற்சொல் தெய்வம் என்பவற்றோடு கூட்டி, முன் இத் தன்மையர், இப்பொழுது இத்தன்மையராகின்றார் இனி இத்தன்மையராவர் எனத் தோழியை நோக்கியும் கண்டோரை நோக்கியும் புலம்புதலுண்டு. இச்செய்தியினைத் தன்னும் அவனும் அவளும் சுட்டி எனத் தொடங்கும் அகத்திணையியற் சூத்திரம் விரித்துரைக்கின்றது. இதனால் துன்பம் நேர்ந்துழித் தெய்வத்தை யெண்ணிப் புலம்பும் வழக்கம் புலனாதல் காணலாம். நெல்லினாற் கட்டுப் பார்த்தும் கழங்கு பார்த்தும் முருகனை வழிபடும் வேலனைக்கொண்டு வெறியாடச் செய்து அவ்விழாவில் வேலன்மேல் தெய்வமுற்று நிகழ்ந்தனவுரைக்க உற்றன அறியும் முறை மலைவாணர் வழக்கமாகும். வெறியென்பதும் மணம் என்னும் பொருளுடைய சொல்லாகும். அச்சொல் தெய்வமணமாகிய முருகு, என்னும் சிறப்புப் பொருளில் தொன்னூல்களில் வழங்கப் பெற்றுளது. தெய்வமணமாகிய முருகு வழிபடுவார்மேல் ஆவேசித்து நிற்கும் இயல்பினை வெறியென்பர். தம்மால் வழிபடப்பெறும் முருகன் வேலேந்தி யாடும் வேலன்மேல் ஆவேசித்து நின்று முக்காலத்தும் நிகழ்வனவற்றை யறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்துடன் செய்யப்படும் வழிபாடு வெறியாட்டெனப்படும். இவ்வழிபாட்டின் பயனாக மறைவில் நிகழ்ந்தனவும் தெய்வத்தால் வெளியாகி விடுதலுண்டு. கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் (கள-25) எனவும், வெறியாட்டிடத்து வெரு வின்கண்ணும் (கள-21) எனவும் வருந் தொடர்களால் இவ்வழக்கத்தின் தன்மையினைத் தொல் காப்பியனார் குறிப்பிடுகின்றார். இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தே, ஒருவனும் ஒருத்தியுமாகிய அன்புடையாரிருவர் நண்புசெய் தொழுகுங்கால், அவர்கள் வருந்தா வண்ணந் தோன்றாத் துணையாய்நின்று அருள் புரிவதோர் கடவுள் உண்டெனவுணர்ந்த தோழி அவ்விருவர்க்கும் திருமணம் நிறைவேறுவதாக எனக் கடவுளை ஏத்திவழிபடு மியல்பினை நாமக்காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் எத்திய மருங்கினும் என்ற தொடராலும், மனைமாட்சியிற் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் மணந்துகொள்ளுதல் வேண்டித் தெய்வத்தைப் பரவிய தோழி தான் வேண்டிய வண்ணமே அவ்விருவர்க்குந் திருமணம் நிறைவேறியவழித் தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமென விரும்புந் திறத்தினை அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் என்ற தொடராலும், தலைவனை மணந்து கற்புக்கடம்பூண்ட தலைகள் தன் கணவற்குத் தொழு குலமாகிய தெய்வத்தினை அஞ்சியொழுகு மியல்பினைத் தெய்வ மஞ்சல் என்னும் மெய்ப்பாட்டினாலும், தலைவனுடன் போகிய தலைவிக்கு வழியில் தீங்கு நேராதவாறு அருள்புரிதல் வேண்டு மெனச் செவிலித்தாய் தெய்வத்தை வழிபடும் திறத்தினைத் தெய்வம் வாழ்த்தல் என்பதனாலும் தொல்காப்பியனார் அறிவுறுத்துகின்றார். மேலெத்துக் காட்டிய குறிப்புக்களால் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டிற்கு அமைந்த சிறப்புரிமை இனிது புலனாதல் காணலாம். இனி, அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாட்டிற்கமைந்த சிறப்பினைக் காண்போம். அரசனது வெற்றிக்கு அடையாளமாகிய கொடியானது பிறவேந்தர் கொடியினும் சிறப்புற்று விளங்குதலும் வேந்தன் பகைவரது அரணையழித்தலும் மன்னன் தன்னைச் சார்ந்தோரனைவர்க்கும் வரையாது வழங்குதலும் எனக் குற்றமற்ற சிறப்பினால் முற்படப் புகழ்தற்குரிய புறத்துறைகள் மூன்றையுங் குறித்து நல்லிசைப் புலவர் பாடுதற்குரிய பாடாண்திணை பற்றிய பாடல்கள் எல்லாவுயிர்க்குந் தோன்றாத் துணையாய் நின்று இன்னருள் சுரக்கும் முழுமுதற் கடவுளை வாழ்த்திய குறிப்புடன் விரவிவரும். இம்முறையினை, கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே எனவரும் சூத்திரத்தால் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். அரசியல் வாழ்விலுண்டாகும் வெற்றிகளுக்கெல்லாம் உயிர்க்குயிராய் விளங்கும் கடவுளின் திருவருளே உறுதுணையாய் நின்று உதவுந்திறத்தைப் புலத்துறை முற்றிய சான்றோர் வேந்தர் முதலியோர்க்கு நன்கனம் அறிவுறுத்தி அவர்களுடைய உள்ளத்தைத் திருத்துதல்வேண்டுமென்பது தொல்காப்பியனார் கருத்தாதல் மேற்காட்டிய சூத்திரப் பொருளால் இனிது பெறப்படும். எல்லாம் வல்ல கடவுளை நாயகனாகவும்தம்மைத் தலைவியாகவும் கருதி இன்றியமையாத அன்புரிமையினால் கடவுளை விரும்பி வழிபடும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இச்செய்தி, காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் எனவரும் புறத்திணையியற் சூத்திரத்தால் உய்த்துணரப்படும். இத்துறைப் பொருளாகக் கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்பர் இளம்பூரணர். நிலம், நீர், தீ, காற்று, ஆகயாம் என்னும் ஐம்பெரும் பூதங்களால் ஆகியதே இவ்வுலகம் என்பார், நிலந்தீ நீர் வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்றார். பலவேறு அவயவப்பகுப்புடையதாய்ப் பொறிவாயிலாகச் சுட்டியறியப்படுந் தன்மை இவ்வுலகின்பாற் காணப்படுதலின் இவ்வுலகம் என்றும் ஒரு நிலையில் நிற்பதன்றாம். இதனியல்பினைப் பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும், நில்லாவுலகம் புல்லிய நெறித்தே எனவருங் காஞ்சித்திணைச் சூத்திரத்து நில்லாவுலகம் என்பதனால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். காணப்படும் இவ்வுலகம் முதலிய எல்லா அண்டங்களுக்கும் மூலமாகிய நுண்பொருளை உலகம் எனவும், இவற்றின் இயக்கத்திற்கு உறுதுணையாகிய காலதத்துவத்தைக் காலம் எனவும், காலம் உலகம் உயிரே யுடம்பே என்னுஞ் சூத்திரத்தில் ஆசிரியர் கூறினமை முன்னர் விளக்கப்பட்டது. நிலமுங் காலமும் ஆகிய இவை உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாகிய முதற்பொருள் என்பதனை முதலெனப்படுவது நிலம் பொழு திரண்டின், இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே என்பதனால் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் உலகம் என்பது இல்பொருளன்று, அடிக்கடி நிலைமாறுமியல்பிற்றாகிய உள்பொருளே யென்பது தொல் காப்பியனார் கொள்கையாதல் நன்கு பெறப்படும். கடவுள், உலகம் என்பவற்றின் வேறாக உயிர் என்பதனைத் தனிப்பொருளாகக்கொண்டு அவ்வுயிர்கள் பலவெனத் தொல் காப்பியனார் தம் நூலுள் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். உயிர்கள் என்றும் அழிவில்லன என்பது தமிழர்கொள்கை. உயிர்கள் என்றும் நிலைபேறுடையவாதலின் அவற்றை மன்னுயிர் என வழங்குதல் தமிழ் வழக்கு, இப்பழைய வழக்கினைத் தொல்லுயிர் என்ற தொடரால் தொல்காப்பியரும் உடன்பட்டு வழங்கியுள்ளார். உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி, உணர்தல் தன்மைத்து என்றல் செவ்வன் இறையாம் என்பர் சேனாவரையர். இதனால் உணருந்தன்மையுடையது எதுவோ அதுவே உயிர் என வழங்கப் பெறும் என்பது நன்கு விளங்கும். எல்லாவுயிர்க்கும் அறியுந் தன்மை பொதுவியல்பாகும். உயிர்களது உடம்பின்கண் அமைந்த உறுப்புக்களின் குறைவு மிகுதிகளுக்கேற்ப அவற்றின் உணர்ச்சி வாயில்கள் வேறுபடும் நீர்மையனவாம். புல் முதல் மக்களீறாகவுள்ள அறிவுடைப் பொருள்கள் யாவும் உயிர்களேயாம். அவற்றின் அறிவு அவைபெற்ற பொறிகளின் குறைவு மிகுதிகளுக்கேற்பக் குறைந்தும் வளர்ந்தும் அமைந்த இயல்பினைத் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் நுணுகி ஆராய்ந்து கண்டார்கள், அவ்வாராய்ச்சியின் பயனாக எல்லாவுயிர்களையும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயர் ஈறாகப் பகுத்துணரும் தெளிவு பெற்றார்கள். புல், மரம் என்று சொல்லப்படும் தாவரவுயிர்கள் தொட்டால் அறியும் ஊற்றுணர்வொன்றேயுடையன. ஆதலின் அவை ஓரறி வுயிர்களெனப்படும். நத்தை, சங்கு, இப்பி முதலியன பிறிதொன்று தாக்கியவழி உடம்பினால் உற்றறியும் ஊற்றுணர்வும் இரை முதலியனவற்றைச் சுவைத்தறியும் நாவுணர்வும் ஆகிய ஈரறிவுடையன. கரையான் எறும்பு முதலியன முற்கூறிய ஊற்றுணர்வும், சுவையுணர்வும் என்னும் இரண்டுடன் மோந்தறிதலாகிய முக்குணர்வும் ஒருங்குடையன. ஆகவே அவை மூவறிவுயிர் எனப்படும். நண்டு, தும்பி என்பன முற்கூறிய மூவறிவுடன் கண்ணுணர்வும் ஒருங்குடையனவாதலின் நாலறி வுயிர்கள் எனப்படும். நாற்கால் விலங்கும் பறவையும் முற்கூறிய நாலறிவுடன் ஓசையறிவாகிய செவியுணர்வும் என ஐம்பொறி யுணர்வும் ஒருங்குடையன. முற்கூறிய ஐம்பொறியுணர்வுடனே நன்றுந்தீதும் பகுத்துணரும் மனவுணர்வும் பெற்றமையால் மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர். ஆறாவதறிவாகிய மனவுணர்வு மக்களுயிர்க்கேயுரிய சிறப்பியல்பாகும். இங்கு வகைப்படுத் துணர்த்திய அறுவகையுயிர்களுள் எடுத்துரைக்கப்பட்டன வேயன்றி அவற்றின் கிளையினவாகவும் ஒத்த பிறப்பினவாகவும் வருவன பிறவும் உள. அவை இன்னவெனவுணர்ந்து அவையெல்லா வற்றையும் இங்கு எடுத்துக் கூறிய அறுவகையுயிர்களுள் இன்னதன் பாற்படுமென முன்னையோர் அறிந்து அடக்கினர். இங்ஙனம் காணா மரபினவாகிய உயிர்களைக் காணப்படும் உடம்பினாற் கண்டுணர்ந்து உடம்பின் கண் அமைந்த அறிகருவிகளின் வாயிலாக அவற்றை ஆறுவகையாக முன்னுள்ளோர் பகுத்த முறையினை, ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே எனவரும் மரபியற் சூத்திரங்களால் தொல்காப்பியனார் விரித்துரைத்துள்ளார்; இங்ஙனம் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர்களுக்கும் இன்பத்தின்பால் வேட்கை நிகழும். இவ்வுண்மையினை எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது, தான் அமர்ந்து வரூஉ மேவற்றாகும் எனவருஞ் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்களே ஒருவனும் ஒருத்தியுமாய் இன்ப நுகர்ந்தாரெனப்படாது; அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பதூஉம் அவை ஆண் பெண் இருபாலாய்ப் புணர்ந்து இன்புறுமென்பதூஉம் கூறினாராயிற்று. உயிர் வேறு உடம்பு வேறு என்பதனைக் காலம் உலகம் உயிரே உடம்பே எனவும் உடம்பும் உயிரும் வாடியக் காலும் எனவும் வருந் தொடர்களாலும், உயிர் தான் நின்ற உடம்பினை விட்டுப் பிரிந்து செல்லுமியல்பின தென்பதனைச் சென்றவுயிரின் நின்ற யாக்கை எனவருந் தொடராலும், உடம்பினின்றும் உயிரைப் பிரிப்பதொரு தெய்வ ஆற்றல் உண்டென்பதும் அதனை மாற்றும் ஆற்றல் உயிர்கட்கு இல்லையென்பதும் ஆகியவுண்மை யினை மாற்றருங் கூற்றஞ்சாற்றிய பெருமை என்ற தொடராலும், இவ்வுலகிற் பலரும் மாய்ந்தொழியத் தான்மட்டும் மறையாது நின்று யாக்கை நிலையாமையை விளக்கும் அடையாளமாக எஞ்சி நிற்பது புறங்காடு மட்டுமே என்பதனை மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடுவாழ்த்து என வருந் துறைப்பொருளாலும் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தி யுள்ளார். இவ்வாறே மன்னாப் பொருட் பிணி என்பதனால் செல்வ நிலையாமையையும், நாளது சின்மை என்பதனால் யாக்கை நிலையாமையையும், இளமைய தருமை என்பதனால் இளமை நிலையாமையையும் ஆசிரியர் அறிவுறுத்தினமை உணர்தற்குரியதாம். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை எனப் பல்லாற்றானும் இவ்வுலகம் நிலையா தென்பதனை நன்குணர்ந்தவர் இவ்வுலகியல் வாழ்வினை விலையற்றதெனக் கருதி விலகியொழுகுதல் கூடாதென்பதும், இவ்வாறு ஒருநிலையில் நில்லாத இவ்வுலகியற் கூறுகளைப் பற்றுக்கோடாகப் பற்றி நின்றே உயிர்க்குறுதி பயக்கும் நிலையுடைய நற்பொருள்களைத் தேடிக்கொள்ளுதல் வேண்டு மென்பதும், உலகியல் வாழ்வில் நேரும் பலவகைத் தடைகளை எதிர்த்து நின்று, நில்லாதவற்றால் நிலையுடையனவற்றை யெய்துதலே காஞ்சித்திணையாகிய ஒழுகலாறென்பதும் தொல்காப்பியனார் கொள்கையாகும். காஞ்சிதானே பெருந்திணைப்புறனே பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே எனவருங் காஞ்சித்திணைச் சூத்திரத்தால் தொல்காப்பியனார் கொள்கை இனிது புலனாதல் காண்க. எதிருன்றல் காஞ்சி என்னும் பன்னிருபடல நூலாசிரியர் கொள்கையும் இவ்வாசிரியரது கருத்தினை யடியொற்றியதேயாகும். மக்களது நல்லறிவின் பயனாய் அமைவது ஒழுக்கம். வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ச்சியடைதற்குக் கருவியாகிய ஒழுக்கவுணர்வுடைய மக்கட் குழவினர் உயர்திணையெனச் சிறப்பிக்கப் பெற்றார்கள். ஒழுக்கவுணர்ச்சி யில்லாத விலங்கு முதலிய தாழ்ந்த உயிர்களும் கல், மண் முதலிய உயிரல் பொருள்களும் அஃறிணையெனப் பிரித்து விலக்கப்பட்டன. இங்ஙனம் உலகப் பொருகள்ளெல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணையெனச் சொல் வகையால் இரு திறமாக வகுத்துரைத்தலும் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என ஐம்பாலாகப் பகுத்து வழங்குதலும் தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழிகளிலுங் காணப்படாத சிறப்பியல்புகளாம். மக்கட் குலத்தாரை உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாகும். மேன்மேலும் உயர்வைத் தருவது ஒழுக்கமேயாதலின் அதனைத் தம் உயிரினும் சிறந்ததாகத் தமிழ் முன்னோர் கடைப்பிடித்தொழுகினர். ஒழுக்க நெறியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் குடும்ப வாழ்வும் அரசியல் வாழ்வும் உருப்பெற்று வளர்ந்தன. இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாச் சிறப்புடையதாக வலியுறுத்துரைக்கப்பட்டதே ஒழுக்க நெறியென்பார் கட்டமை யொழுக்கம் என்றும், அவ்வொழுக்க நெறியிற் சிறிதும் வழுவாது வாழும் சான்றோர் தம் சால்பினது வெற்றி எல்லாராலும் கண்டு பாராட்டிப் போற்றுதற்கேற்ற நல்ல காட்சியாகும் என்பார் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை என்றும் ஒழுக்கத்தினது விழுப்பத்தினை ஆசிரியர் வற்புறுத் துரைத்தார். அறவோராகிய அந்தணர்பாலும் சான்றோர்கண்ணும் அழியாச் சிறப்பினையுடைய ஏனைப் பெரியோர்கண்ணும் இவ்வாறு ஒழுகுதல் வேண்டுமென ஒருவர் ஒருவர்க்கு அறிவிக்கும் முறைமையினை அந்தணர் திறத்தும் சான்றோர் திறத்தும், அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு என்பர் ஆசிரியர். ஒழுக்கத்தைப் பேணாது தலைவன் வழுவியது கண்ட தலைவி, தன் கணவனது பழி நிலைக்கு நாணுந் திறத்தைப் பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் என்ற தொடராலும் பெரியோர்க்கு ஒழுக்கமே பெரிது எனத் தோழி அறிவுறுத்து மியல்பினைப் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து என்ற தொடராலும் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்த தென்பது ஆசிரியர் துணிபாதல் பெறப்படும். ஒழுக்க நெறியினைக் குறிக்கொண்டு போற்றாது ஒருவர் பிறர்க்குச் செய்த கொடுஞ்செயல், செய்த அவரையே பற்றி வருத்தும் என்பர். இவ்வுண்மையினை கொடியோர் கொடுமை சுடும் எனத் தம் காலத்து வழங்கிய பழமொழியின் வாயிலாக ஆசிரியர் அறிவுறுத்துந் திறம் நினைக்கத் தகுவதாம். எல்லா வுயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம். அவ்வின்பத்திற்குக் காரணமாக அறிவுடைய மக்களால் ஈட்டப் படுவது பொருள். பிறர்க்குத் தீங்கு நினையாத மாசற்ற மனத்தால் பொருள் செய்தொழுகும் முறை அறம் நுகர்தல் வேட்கை முறை பற்றி இன்பம், பொருள், அறம் எனவும், செய்கை முறை பற்றி அறம், பொருள், இன்பம் எனவும் இம்மூன்றையும் எண்ணுதல் மரபு. இன்பமும் பொருளும் அறனுமென்றாங், கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டம் என நுகர்ச்சி முறையிலும், அந்நிலைமருங்கின் அறமுதலாகிய மும் முதற் பொருட்கும் உரிய என்ப எனச் செய்கைமுறையிலும் வைத்து ஆசிரியர் எண்ணியுள்ளார். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றைத்தவிர அறிவுடைய மக்களால் விரும்பி மதித்தற் குரியன பிற இன்மையின் இம் மூன்றையும் மும்முதற்பொருள் என ஆசிரியர் சிறப்பித்துப் போற்றினார். அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தலே மக்களது நல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு மூன்று பகுதிகளாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் இயல்பினை மூன்றன்பகுதி எனத் தொல்காப்பியர் தொகுத்துரைத்தார். உலகியல் நூலாகிய திருக்குறளை இயற்றிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் தொல்காப்பியனார் வகுத்த முறையே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களாக வகுத்தருளிச் செய்தமை இவண் ஒப்பு நோக்கத்தகுவதாகும். இப்பிறப்பிற் குரியனவாகிய இம்மைச் செல்வமும் வரும் பிறப்புக்களிலும் துணை செய்வனவாகிய அறச் செயல்களும் பிறப்பற முயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் மக்கள் வாழ்க்கையில் திறங்களென முன்னைத் தமிழ்ச் சான்றோர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். கணவனும் மனைவியுமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மக்களொடு மகிழ்ந்து மனையறம் பேணிச் சுற்றத்தாரைப் போற்றி விருந்தோம்பி எல்லோர்க்கும் ஆதரவாக வாழ்வதே இம்மை வாழ்வெனப்படும். கணவனும் மனைவியுமாக இல்லறம் நிகழ்த்துவோர் தாம் நுகர வேண்டிய இன்பங்களை யெல்லாம் நுகர்ந்து முடித்து முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இவ்வாறு ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத் தீர்தலாகிய இத்தூய வொழுகலாற்றினைக் காமம் நீத்த பால் என ஆசிரியர் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையா எனத் தெளிந்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்க முடையவராய் உலக வாழ்விற் பற்றற ஒழுகுதல் துறவு நிலையாகும். இத் துறவினை அருளொடு புணர்ந்த அகற்சி யென்பர் ஆசிரியர். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை என்பன அறுவகைக் குற்றங்கள். வெல்லுதற்கரிய உட்பகையாகிய இவ்வறுவகைக் குற்றங்களையும் சான்றோர் தம் உள்ளத்துறுதியால் வென்று மேம்படும் திறம் அரும்பகை தாங்கும் ஆற்றல் எனப்படும். உட்பகையாகிய இக்குற்றங்களை அரும்பகை எனத் தொல்காப்பியனார் கூறியது போலவே குற்றமே அற்றந் தரூஉம்பகை எனத் திருவள்ளுவரும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். மக்களது நல்வாழ்வினைச் சிதைப்பன மனத்தின்கண் உண்டாகும் தீய நினைவுகளேயென்பதும் அத்தகைய மனமாசுகளைக் களைய வல்ல நல்லுணர்வுடையவர்களே ஆற்றல்மிக்க நன்மக்கள் என்பதும் தொல்காப்பியனார் கருத்தாதல் அரும்பகை தாங்கும் ஆற்றலானும் எனவருந் தொடரால் நன்கு துணியப்படும். ஒருவனும் ஒருத்தியும் மணந்து மனையறம் நிகழ்த்தி ஒருங்கு வாழ்ந்ததின் பயனாக மறுபிறப்பில் அவ்விருவரையும் கணவனும் மனைவியுமாக ஒன்றுவித்தலும் அன்றி அவ்விருவரையும் பிரித்து வேறாக்குதலும் என ஊழ் இரு வகைப்படும். கணவன் மனைவி ஆகிய அவ்விருவருள்ளமும் அன்பினாற் சிறந்து பிறப்புத்தோறும் நல்வினைக்கண்ணே ஒற்றித்து நிற்றலால் உயர்ந்ததன்மேற் செல்லும் மனநிகழ்ச்சி அவ்விருவர்க்கும் உண்டாகி மறுமையினும் அவ்விருவரையும் புணர்க்கும் பாலாய் ஆகூழ் எனப்படும். கணவனும் மனைவியுமாக வாழ்வோர் தம்முள் அன்பின்றிப் பிணங்கி யொழுகுவராயின், அவர்தம் மன வேறுபாடு அவ்விருவரையும் மறுபிறப்பிற் கூடாதவண்ணம் பிரிக்கும் பாலாய் வேறுபடுத்துவ தாம். ஆகவே அன்புடையார் இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றிய நல்வினையின் உயர்ச்சியினாலே அவ்விருவரையும் மறுபிறப்பினுங் கூட்டுவதாகிய உயர்ந்த பாலின் ஆணையினாலே ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்படுவர் என்பது முன்னைத் தமிழாசிரியர் துணிபாகும். இவ்வுண்மையினை, ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப என்பதனாலும், பொறியின் யாத்த புணர்ச்சி என்பதனாலும் தொல்காப்பியனார் விரித்துரைத்துள்ளார். தொல்காப்பியனார் ஊழின இயல்பினை எடுத்துரைத்தலால் அவ்வூழுக்குக் காரணமாகிய மறுபிறப்புண்டென்பதும் அவர் தமக்குடன் பாடாதல் நன்கு பெறப்படும். இல்வாழ்க்கையினைக் களவும் கற்பும் என இருவகைப் படுத்துணர்த்திய ஆசிரியர், கணவனும் மனைவியுமாக இல்லறம் நிகழ்த்திய இருவரும் இன்பநுகர்ச்சியெல்லாம் குறைவறநுகர்ந்து மனவமைதிபெற்ற நிலைமைக்கண் மனையறத்திற்குப் பாதுகாவ லாகிய மக்களால் நிறைந்து அறத்தையே புரியும் சுற்றத்தாருடன் உயிரினுஞ் சிறந்த செம்பொருளின் இயல்பினை அறிஞர்பாற் கேட்டு ஒருநெறியமனம் வைத்து உணர்ந்து போற்றுதலே இதுவரையும் தாம் அன்பினால் நிகழ்த்திப்போந்த இல்லறத்தின் முடிந்த பயனாம் என்பதனைக், காமஞ்சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே எனவருங் கற்பியற் சூத்திரத்தால் முடிபொருளாக அறிவுறுத்துவா ராயினர். என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்று பெரியோர் கூறியவாறு எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங்குதல் இறைவனது இயல்பாதலின் உயிர்கட்குத் தோன்றாத் துணையாய் நின்றுதவும் சிறப்புடைய கடவுளைச் சிறந்தது என்ற பெயரால் தொல்காப்பியனார் அழைத்தார். தோற்றக்கேடுகளின்றி என்றும் உள்ளதாய்த் தன்பால் ஒன்றும் ஊடுருவ இயலாமையால் தூய்மையுடையதாய்த் தனக்கு எத்தகைய விகாரமும் இன்றி என்றும் ஒரு பெற்றியதாய் நிற்றல் முழுமுதற் பொருளின் இயல்பாதல்பற்றி அதனைச் செம்பொருள், என்ற சொல்லால் திருவள்ளுவர் வழங்கியுள்ளார், சிறந்தது எனத் தொல்காப்பியனார் கூறியதனையே திருவள்ளுவரும் செம்பொருள் என வழங்கினாரென்பதற்குப் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்பதறிவு என்புழிச் சிறப் பென்னும் செம்பொருள் என அடைபுணர்த் தோதியதே சான்றாதலறிக. சிறந்தது எனச் சான்றோராற் போற்றியுரைக்கப்படும் முழுமுதற் பொருள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இல்லற வாழ்வில் நுகரவேண்டிய இன்பங்களை யெல்லாம் எஞ்சாது நுகர்ந்து உள்ளத்தமைதியுற்ற நன்மக்கள் என்றும் அழியாத பேரின்பப் பொருளாய்ச் சிறந்து விளங்குஞ் செம்பொருளை இடைவிடாது சிந்தித்து மீண்டும் பிறவிச் சூழலிற்றிரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன்னெறியினைத் தலைப்படுதலே அன்பினைந்திணை யொழுகலாற்றின் முடிந்த பயனாம் என்பது தமிழ் முன்னோர் கொள்கையாகும். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி ஒர்த்துள்ள முள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு எனவருந் திருவள்ளுவர் வாய்மொழிகள் தொல்காப்பியனார் கூறியவாறு சிறந்தது பயிற்றும் இயல்பினை விரித்துரைப்பனவாம். அன்பினால் மனையறம் நிகழ்த்தி வாழ்ந்தவர்கள் மெய் யுணர்ந்து வீடுபெறுங் கருத்துடையராய் இவ்வுலகியற் பற்றினை விட்டொழித்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்கமுடையராய்த் துறவற நெறியாகிய அருள் வாழ்வினை மேற்கொள்வர். இதனை அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் ஆசிரியர். இத்தகைய அருள் வாழ்வினை விரும்பி வேந்தர்களும் தங்கள் அரச பதவியினைத் துறத்தலுண்டு. அங்ஙனம் அரசு துறக்குமியல்பினைக் கட்டில் நீத்த பால் எனத் தொல்காப்பியம் கூறும். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தன் அரச பதவியினைத் துறந்து காடுபோந்த வரலாறு பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தின் பதிகத்திற் குறிப்பிடப்பட்டுள்ளமை இவண் ஒப்பு நோக்கத் தகுவதாம். நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், காட்டிலுள்ள உணவுகோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பல் எனத்தவஞ் செய்வோர்க்குரிய இயல்புகள் எட்டு வகையாகச் சொல்லப்பட்டன. இவற்றை நாலிரு வழக்கிற் றாபதப்பக்கம் என்பர் தொல்காப்பியர். தெய்வம் அவ்வந் நிலத்துக் கருப்பொருள்களுளொன்றாகக் கூறப்படினும் எல்லாப் பொருள்களினும் மிக்கது தெய்வம் என்னும் மெய்ம்மையினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மறந்திலர். கருப்பொருள்பற்றிய நிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாக உய்த்துணரவைத்தல் உள்ளுறையுவமமெனப்படும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன் புலப்படக் கூறாத பொருளும் ஒத்துப் புலப்படுவதாக எனக் கருதிய புலவன் தன் கருத்துப் படிப்போர்க்குப் புலனாகும் வண்ணம் உணர்த்துதற் குறுப்பாகிய சொல்லமையத் தான் பாடிய செய்யுளில் உய்த்துணர வைப்பது உள்ளுறையுவமையின் சிறப்பியல்பாகும். கருப்பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு இவ்வுவமை பிறக்குங்கால் அவற்றின்பால் அமைந்த நலந்தீங்குகளாகிய செயல்களை உள்ளுறையாற் புலப்படுத்தக் கருதிய நிகழ்ச்சிகளுக்கு ஒப்புமை கூறும் நிலையுண்டாகும். கருப்பொருளிலொன்றாகிய தெய்வத்தின் இயல்பினை உவமையாக எடுத்துரைப்பின் மக்களால் வழிபடப் பெறும் தெய்வத்தின் மாண்புகள் இவ்வொப்புமை வாயிலாகச் சிதைவுறுதல்கூடும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்த சான்றோர். தெய்வத்தை நிலனாகவைத்து உள்ளுறை கூறுதல் கூடாதென்றும், தெய்வமொழிந்த ஏனைய கருப்பொருளையிடனாகக் கொண்டே உள்ளுறை யுவமையினைக் கூறுதல் வேண்டுமென்றும் வரையறை செய்தார்கள். இவ்வரையறையினை, உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே எனவருஞ் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். இதனால் தொல்காப்பியனாரது தெய்வங் கொள்கையின் உறுதிப்பாடு நன்கு புலனாதல் காண்க. போர்க்களத்துப்பட்ட வீரரைத் தெய்வமாக வழிபடுதற் பொருட்டுக் கற்காண்டலும், அவ்வாறு காணப்பட்ட கல்லை ஒழுங்கு செய்துகொள்ளுதலும், அதனை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், அக்கல்லினை நிலைப்பட நடுதலும், அதன்கண் வீரருடைய பெயரும் பீடும் பொறித்துத் தெய்வமாக்கிப் படைத்தலும் அதனை வாழ்த்திப் போற்றுதலும் ஆகிய கற்கோள்நிலை ஆறும் வெட்சித்திணைப் பாற்படுந் துறைப்பகுதி களாமெனத் தொல்காப்பியனார் கூறுவர். தன் உயிரைப் பொருட்படுத்தாது செயற்கருஞ் செயல்களைச்செய்து உயிர்நீத்த வீரனை வாழ்க்கைக்கு வழி காட்டும் குலமுதல்வனாக்ககொண்டு வழிபடுந் தமிழ்மரபினை இத்துறைப் பகுதிகள் இனிது புலப்படுத்தல் காண்க. வேலால் வீரர்க்கு வெற்றியுளதாகுக என வேலினைக் குறித்து விளக்கேற்றி வழிபடுதல் மரபு. இவ்விளக்கீடு கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் நிகழும் என்பர். இங்ஙனம் வெற்றி கருதியேற்றிய விளக்கு நாற்புறமும் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட்டெரிந்ததென்று அவ்விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக்காட்டி ஆக்கங்கூறி வாழ்த்துவர் அறிவோர். இந்நிகழ்ச்சியினை வேலை நோக்கிய விளக்கு நிலை எனப் பாடாண்திணைக்குரிய துறைகளுளொன்றாக வைத்துத் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய வழிபாட்டு முறைகளையும் சான்றோர் கொள்கைகளையும் தம் நூலில் ஒத்த மதிப்புடன் எடுத்துரைத்து விளக்குதலால் அவ்வாசிரியர் பல்வேறு வகையில் நிகழும் எல்லா வழிபாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் முழுமுதற்பொருள் ஒன்றே என்னுந் தெளிவுடைய கொள்கையினரென்பது நன்கு தெளியப்படும். தொல்காப்பியத்திற் சுட்டப்படும் மாயோன், சேயோன் கொற்றவை முதலிய தெய்வ வகையினுள் தொல்காப்பியனார் இன்ன தெய்வத்தைச் சிறப்பு முறையில் வழிபட்டார் எனத் துணிந்து கூறுதற்கு இயலவில்லை. இத்தெய்வங்களுள் மாயோனை இவ்வாசிரியர் தலைமையாகக்கொள்வர் என்றும், புணர்தல் முதலிய உரிப்பொருட்குரிய முறையில் வையாது மாயோன் மேய காடுறை யுலகம் என முல்லை நிலத்தை முதலிற் கூறியது மாயோன் மேவிய தன்மையாலென்று துணியலாமென்றும், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை என்பதனால் மன்பெருஞ் சிறப்பினையும் தாவா விழுப்புகழினையும் மாயோற்கு ஏற்றிக் கூறுதலால் இவ்வியல்பு நன்கு புலனாமென்றும் அறிஞரொருவர் கூறியுள்ளார்.1 மாயோன் முதலாக எண்ணப்பட்ட நிலத் தெய்வங்களின் வேறாக எல்லா நிலத்திற்கும் பொதுவாகிய நிலையில் வழிபடுதற்குரிய முழுமுதற் பொருளைக் கடவுள் என்ற பொதுச் சொல்லால் ஆசிரியர் குறிப்பிடுதலானும் மாயோன் முதலிய தெய்வ வழிபாடுகளை ஒவ்வொரு நிலத்திற்கேயுரிய கருப்பொருள்களுள் ஒன்றாக ஆசிரியர் அடக்கிக் கூறுதலானும், முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை வெறியறி சிறப்பு என்றும் கொற்றவை வழிபாட்டின் பயனாகவுளதாம் தறுகண் உணர்வினைச் சிறந்த கொற்றவைநிலை என்றும் மாயோன் வழிபாட்டுடன் இவற்றையும் ஒத்த மதிப்புடன் ஆசிரியர் குறிப்பிட்டு விளக்குதலானும் நானிலத்தவர்களும் தாம்தாம் வாழும் நிலத்தியல்புக்கேற்ப வகுத்தமைத்துக் கொண்டன இந்நிலத்தெய்வ வழிபாடுகளாதலானும் இவற்றுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன் பாடன்றென்க. நிலந்தோறும் வேறுவேறு பெயர்களால் உருவமைத்து வழிபடப்படும் எல்லாத் தெய்வங்களும் பொருளால் ஒன்றேயென்பது தொல்காப்பியனார் துணிபாதலின் முல்லை, குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்துக்கும் உரிய நிலையில் எங்கும் நீக்கமற நிறைந்த முழுமுதற் பொருளாகிய கடவுள் வழிபாட்டினையே அவ்வாசிரியர் மேற்கொண்டொழுகினாரெனக் கோடல் பெரிதும் பொருத்த முடையதாகும். இனி, ஆசிரியர் தொல்காப்பியனாரைச் சமணசமயத்தவர் எனத்துணிந்து கூறுவாருமுளர்.1 இக்கொள்கையை நிலை நிறுத்துதற்கு அன்னோர் கூறுங் காரணங்கள் பின்வருவனவாம். 1. பனம்பாரனார் பாயிரத்தில் பல்புகழ் நிறுத்த படிமையோன் எனத் தொல்காப்பியனார் சிறப்பிக்கப் பெற்றுள்ளார், படிமை என்பது சமண சமய வழக்குச்சொல், அச்சொல் தவவொழுக்கம் என்ற பொருளிற் பிற சமய நூல்களில் வழங்கப்பெறவில்லை. ஆகவே படிமையோன் எனச் சிறப்பிக்கப்பெற்ற தொல்காப்பியனார் சமண சமயத்தவர் என்பது தெளியப்படும். 2. அகத்தியனார் மாணாக்கருள் ஒருவராகிய அவிநயனார் சமண சமயத்தவராவரென மகாமகோபாத்தியாய உ.வே. சாமி நாத ஐயரவர்கள் மயிலைநாதருரை முகவுரையிற் குறித்துள்ளார்கள். ஆதலால் அகத்தியர் மாணவருள் ஒருவராகிய தொல்காப்பியரையும் சமணரெனக் கொள்வதில் தடுமாற்றம் உண்டாதற் கில்லை. 3. மகாவீரர் என்பார் ஐம்பெரு விரதங்கள் அவற்றின் உட்பிரிவுகள், அறுவகையுயிர்கள் என்னுமிவற்றைக் குறித்துச் சமணர்களுக்கும் நிக்கந்தர்களுக்கும் கௌதமர் முதலாயி னோர்க்கும் உபதேசித்தருளினார் என்பர். இதனால் உயிர்களை அறுவகையாகப் பிரிக்கும் முறை சமண சமயம் ஒன்றற்கே பண்டைநாளில் உரியதாயிருந்தமை பெறப்படும். தொல்காப்பியர் ஒன்றறிவதுவே என்பது முதலாகக்கூறும் உயிர்ப்பாகுபாடு சமண் சமயக் கொள்கையொடு முற்றும் பொருந்துதல் காணலாம். இவ்வுயிர்ப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் தாமே அமைத்துக்கொண்டாரல்லரென்பதும் சமணசமயக் கோட்பாட்டினைத் தழுவியே இங்ஙனங் கூறினாரென்பதும் நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என ஆசிரியர் தமக்கு முன்னோர் கொள்கையாகக் கூறுதலால் நன்கு விளங்கும். 4. சமண சமயத்தவராகிய பட்டாஹளங்கர் என்பார் தாம் எழுதிய கன்னட சப்த தாநூ சாசனத்தில் நிமேஷோன் மேஷ காலேந ஸமம் மாத்ராது ஸ ஸம்ருதா: அங்குலீ போடநம் யாவத்காலே மாத்ரேதி ஸோச்யதே என மாத்திரை யிலக்கணங் கூறும் பழைய சுலோகமொன்றை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். இதன்கண் கண்ணிமையும் கைந்நொடியுந் தனித் தனியே மாத்திரைக்குரிய அளவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். சமணரால் மேற்கோளாகக் காட்டப்பெற்ற இச்சுலோகமும் பழைய சமணாசிரியரொருவராலி யற்றப் பெற்றதாதல்வேண்டும். எனவே மாத்திரைக்குரிய இலக்கணம் சமணர் கண்டுணர்த்தியதென்பது விளங்கும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் கண்ணிமை கைந்நொடியவ்வே மாத்திரை, நுண்ணிதி ணுணர்ந்தோர் கண்டவாறே என மாத்திரைக்கு இலக்கணம் வகுத்துரைத்தலால் சமண் சமயத்தவ ரென்பது எளிதில் ஊகிக்கத்தகும். 5. ஐ அம்பல் என வரூஉம் இறுதி என்பதனால் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் மூன்று எண்களையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இவற்றுள் தாமரை என்பது கமலம் எனப்பரிபாடலிற் குறிக்கப்பெற்றுளது. எனவே தாமரை முதலிய குறியீடுகள் வடசொற்களின் மொழிபெயர்ப்பென்று ஊகிக்கலாம். வடநூல்களில் பத்மம் என்பதே பெரும்பாலும் வழங்குகின்றது. வெள்ளம் என்பது சமுத்திரம் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் ஆம்பல் என்பது குமுதம் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் இருத்தல் வேண்டும். itâf EšfËš Vf«, jr«, rj«, [AÞu«, Míj«, Ãíj«., ப்ரயுதம், அர்புதம், நாயர்புதம், ஸமுத்ரம், மத்யம், அந்தம் என்ற எண்கள் உள்ளன. வைதிக நூல்களொன்றிலேனும் குமுதம் என்ற பேரெண் காணப்பட வில்லை. சமணர்களுக்குரிய தத்வார்த்தாதிகம சூத்திரத்திற்கு (IX-15) உமாவாதி இயற்றிய வோபஜ்ஞ பாஷ்யத்தில் குமுதம் என்பது எண்ணுக்குரிய பெயராக வழங்கப்பட்டுளது. இதனையே ஆம்பல் என்று தொல்காப்பியர் மொழிபெயர்த்து ஆண்டிருத்தல் வேண்டும். 6. சமணர்கள் இயற்றிய பூர்வீகச் செய்யுள் வகையொன்றின் பெயராகப் பண்ணத்தி என்னுஞ்சொல் வழங்கி வந்துளது. பகவதி வ்யாக பண்ணத்தி, சூர்ய பண்ணத்தி, சந்த பண்ணத்தி என்பவற்றை உதாரணமாகக் காட்டலாம். சமண நூல்களில் தவிர இவ் அரிய பெயர் வேறோரிடத்துங் காணப்பெறவில்லை. விஜ்ஞாபனம் விண்ணாணம் எனப் பாகதச் சிதைவானாற்போல ப்ரக்ஞப்தி என்பது பண்ணத்தி என வந்துளது. பாகத நூல்களிற் காணப்படும் செய்யுள் வகையில் இலக்கணத்தைத் தமிழ்ச் செய்யுள் வகைக்குச் சார்த்தித் தொல்காப்பியனார் கூறுதலால் அவரும் சமணர் என்பது போதரும். 7. வைதிக சமயத்தவரால் தொன்றுதொட்டு மேற் கொள்ளப்படாதது ஐந்திர வியாகரணமாகும். புறச்சமயத்தவருள் சமணர் இவ்வியாகரணத்தைப் பெரிதும் போற்றி வந்தனர். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன், எனக் கூறப்படுதலால் தொல்காப்பியரும் சமண சமயத்தைச் சார்ந்தவரென உய்த் துணரலாகும். இனி, இக்காரணங்களை முறையே ஆராய்வோம். (1) படிமா என்பது சமணச்சமயச் சொல்லேயென்ப தற்குப் பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் மேற்கோள் இல்லை. கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சமண் சமய நூல்களே இப்பொழுதுள்ளன என ஆராய்ச்சியாளர் கூறுவர். பிற்காலத்து நூல்களில் எங்கேயோ அருகி வழங்கும் படிமா என்னும் பாகதச் சொல்லைச் சமண் சமயத்தவர்க்கே உரிமை செய்தல் கூடாது. வடநாட்டிலே கௌதம சாக்கியர் காலத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரும் சமண சமயத்தவரும் தம் காலத்துக்கு முற்பட்ட தவ முனிவர்களின் ஒழுகலாற்றையே அடிப்படையாகக் கொண்டு தமக்குரிய ஒழுகலாறுகளை வரையறுத்துக் கொண்டனர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும்.1 அன்றியும் சமண புத்த மதங்கள் இந்நாட்டில் தோன்றுதற்குப் பன்னூறாண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றியவர் ஆசிரியர் தொல்காப்பியனாராவர். அவ்வாசிரியரைக் குறித்துப் பனம்பாரனார் கூறிய படிமையோன் என்னும் சொல் தன்மையெனப் பொருள்தரும் படியென்னும் முதனிலையடியாகத் தோன்றிய தனித்தமிழ்ச் சொல்லாகும். இதனைப் ப்ரதிமா என்னும் வடசொல்லின் திரிபென்றல் பொருந்தாது. படிமை என்னும் இத்தனித் தமிழ்ச்சொல் தெய்வ வடிவத்தினையும் அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் முதலிய பெருமக்களது தவ வேடத்தினையும் உணர்த்தி நிற்றல் முன்னர் விளக்கப்பெற்றது. ஆகவே படிமையோன்2 எனத் தொல்காப்பியனார் சிறப்பிக்கப்படுதல் கொண்டு அவரது சமயம் சமணமே எனத் துணிதற்கு வழியில்லை யென்க. (2) மயிலை நாதருரையிற் குறிக்கப்படும் அகத்தியச் சூத்திரங்களும் அவிநயச் சூத்திரங்களும் காலத்தாற் பிற்பட்டன வென்பது அவற்றின் சொல் நடையால் நன்கு விளங்கும். இச்சூத்திரங்களை இயற்றிய அகத்தியனாரும் அவிநயனாரும் தொல்காப்பியனார்க்குக் காலத்தாற் மிகமிகப் பிற்பட்டவராவர். இவர்கள் இயற்றிய சூத்திரங்களைக் கொண்டு இவர்களது சமயம் இதுவெனத் துணிதற்கும் இடமில்லை. ஆகவே தொல்காப்பியனார் சமயம் இஃதெனத் துணிதற்கு மயிலைநாதருரையில் மேற்கோளாகக் காட்டப்பட்ட அகத்தியச் சூத்திரங்களும் அவிநயச் சூத்திரங்களும் ஒரு சிறிதும் சான்றாதலில்லையென்க. (3) இப்பொழுதுள்ள சமண் சமய நூல்களில் ஆசாரங்க சூத்திரம், சுருதி கந்தம் இரண்டு, மூன்று, நான்கு, ஏழாம் அத்தியயனங்களில் உயிர்கள் உலவு தற்கிடமாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் இடவகையால் உயிர்களை நால்வகைப் படுத்து அவ்வுயிர்களுக்கு ஒருசிறிதும் துன்பம் நேராதபடி மக்கள் ஒழுகவேண்டிய முறை விரித்துரைக்கப் பெற்றுளது. அந்நூலின் ஆறாம் அத்தியயனத்தில் ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு எனப் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர்களுக்கும் இன்ப துன்பங்களும் அச்சமும் உளவாகலின் அவ்வுயிர்களுக்கு எத்தகைய தீங்கும் செய்தலாகாது என்ற அளவே அறிவுறுத்தப்பட்டுளது. அறிவின் ஏற்றத் தாழ்வு கருதாது எல்லா வுயிர்களையும் ஒப்பநோக்கிப் பாதுகாத்தல் வேண்டுமென்பதும், நிலன், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கிடங்களிலும் உயிர்கள் விரவி வாழ்தலால் அவற்றின் இருப்பினை நன்கறிந்து எவ்வுயிர்க்குந் தீங்கின்றி இயங்குதல் வேண்டுமென்பதும் சமண் சமயக் கோட்பாடுகளாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டினதாகிய ஆசாரங்க சூத்திரம் உயிர்களை இடவகையாற் பகுத்துரைத்ததாக. இதற்குப் பின் தோன்றிய உத்தராத்தியயனம் என்னும் நூல் உயிர்களின் பொறியுணர்வு பற்றி அவற்றை ஐந்து வகையாகப் பகுத்துரைக் கின்றது. இந் நூல்களெல்லாவற்றுக்கும் காலத்தால் மிகமிக முற்பட்டது தொல்காப்பியமாகும். பிற்காலத்துச் சமணர் வகுத்த உயிர்ப் பாகுபாடுகளின் நோக்கமும் தொல்காப்பியனார் உயிர்களை அறுவகையாகப் பகுத்தற்குரிய நோக்கமும் வேறு வேறாகும். ஆசாரங்க சூத்திரத்திற் சொல்லியபடி உயிர்களை இடவகையாற் பகுத்துரைக்கும் முறை தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. தொல்காப்பியனார் கூறியபடி அறிவு வகையால் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துரைக்கும் முறை பண்டைச் சமண் சமய நூல்களில் காணப்படவில்லை.1 இயற்றமிழுக்கு இலக்கணங் கூறத் தொடங்கிய தொல்காப்பியனார் சொற்பொருளாராய்ச்சியின் துறை நின்று உலகிலுள்ள உயிர்த் தொகுதிகளின் உடம்புகளையும் அவ்வுடம்புகளின் வைகிய உயிர்கள் மெய், வாய், மூக்கு, கண், செவி மனம் என்னும் வாயில்களைப் படிப்படியாக முறையே பெற்றமையால் தாம் பெற்ற அப்பொறிகளின் வாயிலாக முறையே ஊற்றுணர்வு, சுவையுணர்வு, நாற்றவுணர்வு, ஒளியுணர்வு, ஓசையுணர்வு, உயத்துணர்வு என்பவற்றைப் படிப்படியே பெற்றுச் சிறக்கும் இயல்பினையும் நன்கு கண்டு, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக உயிர்கட்கு அமைந்த வளர்ச்சியினை ஆறு வகையாகப் பகுத்து விளக்கியுள்ளார். இப்பாகுபாடு தமிழுக்கேயுரிய பொருளிலக் கணத்தின் பாற்படுவதல்லது ஒரு சாரார்க்குரிய சமயக் கோட்பாட்டின் பாற்பட்டதன்றென்க. சமண் சமய நூலாசிரியர்கள் மனவுணர்வுடைய மக்களையும், தேவர் நரகர் என்பவர்களையும், விலங்கு பறவை முதலிய ஐயறிவுடைய உயிர் வகையுள் அடக்குவர். வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் ஆதி செவியறிவோ டையறி வுயிரே (நன்-உயிரியல்.8) எனப் பவணந்தியார் கூறுதல் காண்க. உத்தராத்திய யனம் என்னும் சமண்நூலும் இங்ஙனமே உயிர்களைப் பொறியுணர்வு காரணமாக ஐவகையாகப் பகுத்துரைக்கின்றது. இவ்வைந்தறிவின் வேறாக ஆறாவதறிவாகிய மன அறிவு ஒன்றுண்டென்பது பழைய சமண் நூல்களில் தெளிவாகக் குறிக்கப்படவில்லை. மாவும் புள்ளும் ஐயறி வினவே மக்கள் தாமே ஆறறி வுயிரே எனவரும் சூத்திரங்களால் நாற்கால் விலங்கும் பறவை முதலியனவும் ஐயறிவுயிர்களென்றும் மக்கள் ஆறறிவுயிரெனப் படுவரென்றும் தொல்காப்பியனார் பகுத்துரைத்துள்ளார். தொல்காப்பியத்தை நன்கு பயின்று வழிநூல்செய்த பவணந் தியார், முதனூலாசிரியராகிய தொல்காப்பியனார் கூறியவாறு ஐயறிவுயிரின் வேறாக மக்களை ஆறறிவுயிராகத் தம் நூலில் எடுத்துரைத்திலர். நன்னூலார் சமண சமயத்தவராதலின் தம் சமயச் சான்றோர் கூறிய ஐவகையுயிர்ப் பாகுபாட்டினையே விடாப்பிடியாகக் கொண்டு அதனையே தமது நூலுள்ளும் விளக்கிப்போந்தா ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறு மக்களை ஆறறிவுயிரெனப் பிரித்துரைத்தல் சமணரது பழங்கொள்கையாக இருந்திருக்குமானால் பிற்காலத்தவராகிய நன்னூலாசிரியர் தொல்காப்பியனார் கொள்கையைத் தம்நூலிற் கூறாது புறக்கணித்து விடுதற்கு ஒரு சிறிதும் இடமில்லையென்க. உணர்ச்சிவாயில்களின் குறைவு மிகுதிகாரணமாக உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாகப் பகுத்துரைக்கும் முறை தமக்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோரது ஆராய்ச்சியின் பயனாக வகுத்தமைக்கப்பெற்ற தென்பதனை நேரிதினுணர்ந்தோர் நெறிப்படுததினரே எனவருந் தொடரால் தொல்காப்பியனார் தெளிவு படுத்தினமை காண்க. (4) பட்டாஹளங்கர் எழுதிய கன்னட சப்தாநு சாசனத்தில் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற வடமொழிச் சுலோகம் மாத்திரையின் இயல்புரைப்பதாகும். இதனை மேற்கோளாக எடுத்தாண்ட ஆசிரியர் பிற்காலத்தவர். இவரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட இச்சுலோகம் இந்நூலாசிரியர்க்குக் காலத்தால் முற்பட்டது எனக் கூறுதல் பொருத்தமுடையதேயன்றித் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட தொன்மையுடையதென்று கூறுதல் பொருந்தாது. வடமொழிவாணர்களால் மதிக்கத்தக்க பழைய வியாகரண நூலைச் சேர்ந்தது இச்சுலோகம் எனக் கூறுதற் கிடமில்லாமை யொன்றே இச்சுலோகம் மிகமிகத் தொன்மையுடையதன்றென் பதனை வலியுறுத்தும். இச்சுலோகத் தினைச் சமண சமய ஆசிரியரொருவர்தம் நூலில் மேற்கோளாக எடுத்தாண்டமையால் இச்சுலோகத்தை இயற்றிய ஆசிரியரும் சமணராகவே இருத்தல்வேண்டும் எனத்துணிந்துரைத்தல் வியப்பாகவுளது. தெளிந்த சைவசமயச் சான்றோராகிய திருவாரூர் வைத்தியநாத நாவலரும் சிவஞான சுவாமிகளும் தத்தம் நூலுரைகளில் நன்னூற் சூத்திரங்களை மேற்கோளாக எடுத்துக்காட்டினமை கொண்டு அப்பெருமக்களால் எடுத்தாளப் பெற்ற நன்னூற் சூத்திரங்களும் சைவசமய ஆசிரியரால் இயற்றப்பட்டனவே எனத் துணிந்து கூறுதல் பொருந்துமா? (5) இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்திற் கூறப்படும் விதிகள்யாவும் தமிழ்மொழிக்கேயுரியவன்றி வடமொழி முதலிய பிறமொழிகளை நோக்கியெழுந்தன அல்ல. ஆகவே தொல் காப்பியத்தில் நிலைமொழி வருமொழிகளாக வைத்துப் புணர்க்கப்படும் எண்கள்யாவும் தமிழ் எண்களே எனத் தெளிதல்வேண்டும். இக்கருத்தினை உளங்கொளாது தொல்காப்பியப் பொருளை ஆராய முற்படுதலால் உளவாம் வழுக்கள் பல. ஆம்பல், தாமரை, வெள்ளம் என்னும் எண்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துக்கு முன்னர்த்தோன்றி அவ்வாசிரியர் காலத்திற் பயின்று வழங்கிய தமிழெண்களாகும். ஐ அம் பல் என வரூஉம் இறுதி எனவருஞ் சூத்திரத்தால் இவ்வெண்களுக்குத் தொல்காப்பியனார் புணர்ச்சிவிதி கூறியுள்ளார். ஆசிரியர் வட சொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார்1 என்ப ஆகலின், ஆசிரியரால் எடுத்துரைக் கப்பட்ட இவ்வெண்கள் தமிழெண்களே என்பது நன்கு தெளியப்படும். ஆம்பல், தாமரை என்னும் இவ்வெண்களையே பின்வந்தோர் குமுதம், பதுமம் என முறையே மொழிபெயர்த்துக் கொண்டனர். தொன்றுதொட்டு வழங்கிய தமிழெண்களையும் இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலந்தை யென்னும் நூல் பின்வருமாறு வரிசைப்படுத்துத் தொகுத்துரைக்கின்றது. ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி கோடி எண்மடங்கு கொண்டது சங்கம் சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம் விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம் குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம் பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு நாடெண் மடங்கு கொண்டது சமுத்திரம் சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம் இம்முறைப்படி நோக்குங்கால் எட்டாந் தானத்தது கோடி, பதினைந்தாந் தானத்தது சங்கம், இருபத்திரண்டாந் தானத்தது விந்தம், இருபத்தொன்பதாம் தானத்தது குமுதம் (ஆம்பல்), முப்பத்தாறாந் தானத்தது பதுமம் (தாமரை), நாற்பத்துமூன்றாத் தானத்தது நாடு (குவளை), ஐம்பதாம் தானத்தது சமுத்திரம் (நெய்தல்), ஐம்பத்தேழாந் தானத்தது வெள்ளம் என்பன புலனாம். சங்கினது உருவம் இருகோணம். ஆதலின் கோடி கோடியைச் சங்கம் என்றனர். விந்தத்தின் உருவம் முக்கோணம். ஆதலின் கோடி கோடி கோடியை விந்தம் என்றனர். ஆம்பலின் உருவம் நாளிதழ். ஆதலின் கோடி கோடி கோடி கோடியை ஆம்பல் என்றனர். தாமரையின் உருவம் ஐயிதழ். ஆகவே கோடி கோடி கோடி கோடி கோடியைத் தாமரை யென்றனர். குவளையின் உருவம் ஆறிதழ் ஆதலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடியைக் குவளை யென்றனர். சமுத்திரம் ஏழு என்பவாகலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியைச் சமுத்திரம் என்றனர். வெள்ளம் எட்டுத் திசையிலும் பரவும் இயல்பினதாதலின் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியை வெள்ளம் என்றனர்.1 பிங்கலந்தை நூலாசிரியர் கூறியவாறு சமுத்திரம் எண் மடங்கு கொண்ட பேரெண் வெள்ளமாகும். இவ்வெள்ளம் என்னும் பேரெண்ணினை, இதனின் எண் மடங்கு தாழ்ந்த சிற்றெண்ணாகிய சமுத்திரம் என்பதன் மொழி பெயர்ப்பாகக் கூறுதல் முன்னோர் நூலின் முரண்பட மொழிதலென்னுங் குற்றமாம். பாகராசாரியர் இயற்றிய லீலாவதியிற் குறிக்கப்படும் அப்ஜம் என்னும் எண்நூறு கோடியைக் குறிப்பதாகும். தமிழெண்ணாகிய தாமரை யென்பது கோடி கோடி கோடி கோடி கோடியாகிய முப்பத்தாறாந் தானத்து எண்ணாகும். இதனைப் பதுமம் என்ற சொல்லால் பிங்கலந்தை கூறும். பத்தாந்தானத்து எண்ணாகிய அப்ஜம் என்பதனையும் முப்பத்தாறந் தானத்து எண்ணாகிய பதுமம் (தாமரை) என்பதனையும் ஒன்றென்றல் மாறுகொளக் கூறலாமென்க. திருமாலைப் பரவிய 2-ஆம் பரிபாடலில் ஆம்பல் என்னும் எண் எண்ணப்பட்டிருக்கவும் அதனைச் சமணர் கண்டதாகச் சொல்வது ஏற்புடைத்தன்று. சமணர்க்களுக்குரிய தத்துவார்த்திகம் சூத்திரத்திற்கு உபாவாதி இயற்றிய வோபஜ்ஞ பாஷ்யம் தொல்காப்பியத்தை நோக்க நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றியதாகும். சமண புத்த சமயங்கள் இந்நாட்டில் தோன்றுவதற்கு முன்னிருந்தவர் தொல்காப்பியனார் என்பத தமிழகத் தொன்மை வரலாறறிந்தார் அனைவருக்கும் உடன் பாடாகும். அங்ஙனமாகவும் தொல்காப்பியனார்க்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய தத்துவார்த்திக சூத்திர பாஷ்யத்தைத் தொல்காப்பியத்தினும் பழமையுடையதாகப் பிறழக்கொண்டு அந்நூலுரையிற் குறிக்கப்பட்ட குமுதம் என்பதனையே தொல் காப்பியனார் ஆம்பல் என மொழி பெயர்த்தாரென்றும் அதனால் அவரும் சமண சமயத்தவரே யென்றும் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாதென்க. (6) பண்ணைத் தோற்றுவிக்கும் செய்யுட்களைப் பண்ணத்தியென வழங்குவர். பாட்டின்கண் கலந்த பொருளை யுடையதாகிப் பாட்டுக்களின் இயல்பையுடையன பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட்கள் என்பார், பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத் திய்யே என்றார் தொல்காப்பியனார். பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தியெனப் பெயராயிற்றென்றும் பண்ணத்தியாவன இசைத் தமிழில் ஓதப்படும் சிற்றிசையும் பேரிசையு முதலாயின என்றும் இவை இசை நூலின் பாவினம் என்றும் இளம்பூரணர் தெளிவாக விளக்கியுள்ளார். அங்ஙனமாகவும் ப்ரக்ஞப்தி என்னும் வடசொல்லே பண்ணத்தியெனப் பாகதச் சிதைவாயிற் றென்பது, இவ்விருவேறு சொற்களுக்கும் அமைந்த பொருள் வேறுபாட்டினை ஊன்றி நினையாமையால் வந்த பிழையாகும். ப்ரக்ஞப்தி என்பதற்குப் புத்தி, சங்கேதம், ஒருவகைப் பெண் தெய்வம் என்பன பொருள்களாம். இவை தவிர இப்பெயரினதாகிய செய்யுள் வகை யொன்றில்லை யென்பது வடநூல் வல்லார் அனைவர்க்கும் தெரிந்த செய்தி, சமண நூல்களில் வழங்கும் பண்ணத்தி யென்னும் சொல் ப்ரக்ஞப்தி என்னும் ஆரிய மொழியின் பாகதச் சிதைவாகும். தொல்காப்பியத்திற் குறிக்கப்படும் பண்ணத்தியென்னும் சொல் இசைத்தமிழ்ச் செய்யுள்களைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும் இவ்விருவேறு சொற்களின் பொருள் வேற்றுமையினைச் சிறிதும் எண்ணிப்பாராது எழுத்தொப்புமை யொன்றே கொண்டு இரண்டும் ஒன்றெனத் துணிதல் கூடாது. சமணர்களால் பாகதச் சிதைவாக வழங்கப்பட்ட பண்ணத்தி யென்னும் சொல்தானும் பூர்வீகச் செய்யுள் வகையொன்றின் பெயராக வழங்கியதென்ப தற்குச் சிறிதும் ஆதரவில்லை. அஃது எங்ஙனமாயினும் சமணர்கள் வழங்கிய பண்ணத்தி யென்னும் பாகதச் சொல்லும் தொல்காப்பியத்தில் வரும் பண்ணத்தி என்னுந் தனித் தமிழ்ச் சொல்லும் வெவ்வேறு மொழியைச் சார்ந்தன என்றே துணிதல் வேண்டும். (7) ஐந்திர வியாகரணம் வைதிக சாயத்தவரால் தொன்று தொட்டு மேற்கொள்ளப் பெற்றதென்பதும், புறச் சமயத்தவராகிய சமணர் இவ்வியாகரணப் பயிற்சியை வெறுத்தொதுக்கினமை சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் வாய்மொழியால் நன்கு தெளியப்படுமென்பதும் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்னுந் தொடர்ப் பொருளை ஆராயும் வழி விரித்துரைக்கப்பட்டன. ஆகவே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது கொண்டு தொல்காப்பி யனாரது சமயம் சமணமே என்று கோடற்கு எள்ளளவும் தெரடர்பில்லை யென்க. இதுகாறும் கூறியவற்றால் சமண புத்த சமயங்கள் இந் நாட்டில் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட தொன்மைக் காலத்தவர் தொல்காப்பியர் என்பதும், தொல்காப்பியத்துள் சமண சமயத்தைப் பற்றிய குறிப்புக்கள் சிறிதும் இல்லையென்பதும், மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நிலத் தெய்வ வழிபாடுகளையுங் கொற்றவை வழிபாட்டினையும் சிறப்பாக எடுத்தோதிய தொல்காப்பியனார், சமணம், புத்தம் முதலிய புறச் சமயக் கோட்பாடுகளைத் தம் நூலுள் யாண்டுங் குறிப்பிடவில்லை யென்பதும், அவ்வாசிரியர் தம் காலத்தில் நிலவிய தமிழ்நாட்டு வழிபாட்டு முறைகளையும் சான்றோர் கொள்கைகளையும் ஒத்த மதிப்புடன் எடுத்துரைத்து விளக்குதலால் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றே யென்னுந் தெளிவுடைய கொள்கையினரென்பதும் நன்கு புலனாகும். உலகம், உயிர் என்பவற்றிற்கு வேறாகக் கடவுள் என்னும் பேரறிவுப் பொருள் ஒன்று உண்டென்பதும், கடவுளை வழிபடும் வாயிலாகப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறக்கும் நல்வாழ்வினை மக்கள் பெறலாம் என்பதும், தெய்வ வழி பாட்டினால் வினைப் பயன்களை வென்று மேன்மேற் சிறத்தல்கூடுமென்பதும் தொல்காப்பியனார் கொண்டொழுகிய கடவுட் கொள்கையாகிய ஒழுக்க நெறியின் முடிந்த பொருளாகும். இம்முடிபினைத் தெளிவாக ஏற்றுக் கொள்ளா சமயம் எதுவாயினும் அது தொல்காப்பியத்துக்கு முற்பட்ட தொன்மை யுடையதாயினும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்றதன்றென உணர்தல்வேண்டும். தமிழ் மக்கள் அனைவர்க்கும் பயன்பட இயற்றமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் தொல் காப்பியனார், தம்மால் இயற்றப்பெறும் தொல்காப்பியம் என்ற நூல் எல்லார்க்கும் பொதுவாகப் பயன்படுதல் வேண்டுமென்ற கருத்தினாலேயே அந்நூன்முகத்தில் தமது வழிபடு தெய்வத்திற்கு வணக்கம் எதுவுமே கூறாது விட்டார். தெய்வப் புலமைத் திருவள்ளுவரும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தை நன்கு உணர்ந்தவராகலின் அவரைப் பின்பற்றியே தாம் எச்சமயத்தார்க்கும் பொதுவாக இயற்றிய திருக்குறள் நூலின்கண் தமது வழிபடு தெய்வத்திற்கு வாழ்த்துக் கூறாமல் எல்லாச் சமயத்தாரும் ஏற்றுக்கோடற்குரிய பொது நிலையில் வைத்துக் கடவுள் வாழ்த்துக் கூறியுள்ளார். இவ்விருவரது உளக்கருத்தையும் நன்குணர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோரும் திருக்குறளுரையாசிரியர் பரிமேலழகர் முதலியோரும் எச்சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளும் பொது நிலையில் நின்று உரையெழுதி யிருப்பது அறிஞர்களால் வியந்து பாராட்டத் தக்கதாகும். தொல்காப்பியம் நுதலிய பொருள் வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பிலே வழங்கும் செந்தமிழ்மொழியின் உலகவழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக்கொண்டு எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகையிலக்கணங்களையும் முறைப்பட ஆராய்ந்து இவற்றின் இயல்புகளையெல்லாம் தொல்காப்பியனார் தாம் இயற்றிய தொல்காப்பிய நூலின் கண்ணே தொகுத்துக் கூறியுள்ளார். இந்நூல் சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக் களையுடைய பிண்டமாக அமைந்துளது. ஆசிரியப்பாவைப் போன்ற யாப்பிலமைந்த நூற்பா சூத்திரமெனப்படும். ஆசிரியப்பாவுக்கு அடிவரையறையுண்டு. இந்நூற்பாவுக்கு அடிவரையறையில்லை. அடிவரையறை இல்லாத செய்யுள்வகை ஆறு என்பர் தொல்காப்பியர். அவற்றுள் நூற்பாவும் ஒன்று. கண்ணாடியினகத்தே எதிர்ப்பட்ட பொருள் இனிது விளங்குமாறு போன்று படித்த அளவிலேயே ஆராயாமற் பொருள் எளிதில் விளங்க இயற்றப்படுவதே நூற்பாவாகிய சூத்திரமாகும். அவற்றுள், சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே(162) எனவரும் செய்யுளியற் சூத்திரம் சூத்திரத்தியல்பினை நன்கு விளக்குதல் காண்க. ஒத்த இனத்தனவாகிய மணிகளை ஒரு மாலையாகக் கோத்தமைப்பதுபோன்று ஓரினமாக வரும் பொருள்களை ஒருசேர இயைத்துரைத்தற்கு இடமாக அமைவது ஓத்து எனப்படும். இதனை இயல் என்ற பெயராலும் வழங்குதலுண்டு. பல்வேறு வகைப்படவரும் பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங் கூறுவதாய் அவையெல்லாவற்றையும் தன்னுள்ளே யடக்கி நிற்பது படலம் எனப்படும். சூத்திரம், ஓத்து, படலம் என்னும் இம் மூன்றுறுப் பினையும் அடக்கி நிற்பது பிண்டம் எனப்படும். இவ்வாறு மூன்றுறுப்படக்கிய பிண்டமாக அமைந்ததே இத்தொல் காப்பியமாகும். இதன்கண்ணுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்புக்களாம். படலத்தின் உள்ளுறுப்பாக அமைந்தவை ஓத்துக்கள். ஓத்தின் உள்ளுறுப்பாக விளங்குவன சூத்திரங்கள், சூத்திரமாகிய உறுப்பொன்றேயுடையநூல் இறையனார்களவியல். சூத்திரம், ஓத்து ஆகிய இரண்டுறுப்புடைய நூல் பன்னிருபடலம், சூத்திரம், ஓத்து. படலம் ஆகிய மூன்றுறுப்பும் ஒருங்குடையநூல் தொல்காப்பியம். இம்மூவகை நூல்களையும் முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் எனவும் வழங்குதலுண்டு. (தொல்-செய்-இளம் - 165) தொல்காப்பியம் என்னும் இந்நூல் எழுத்து, சொல் பொருள் ஆகிய மூன்றதிகாரங்களையுடையதாய் ஒவ்வோ ரதிகாரங் களுக்கும் ஒன்பதொன்பது இயல்களாக இருபத் தேழியல்களால் இயன்றது. இந்நூற் சூத்திரங்கள் 1595-என இளம்பூரணரும், 1611-என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளார்கள். எழுத்ததிகாரம் எழுத்தினது அதிகாரத்தையுடையது எழுத்ததிகாரம் எனக் காரணப்பெயராயிற்று. அதிகாரம்-முறைமை. எழுத்துக்களின் இலக்கணத்தை முறைமைப்பட விரித்துரைக்கும் படலம் எழுத்ததிகாரம் என வழங்கப் பெறுவதாயிற்று. எழுத்தாவது மக்களாற் பேசப்படும் மொழிக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். தொல்காப்பியனாரால் எழுத்தெனச் சொல்லப்பட்டவை அகர முதல் னகர மீறாகவுள்ள முப்பதும் குற்றியலிகரம், குற்றியலுகாம், ஆய்தம் என்னும் மூன்றும் ஆக முப்பத்து மூன்றாகும். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னே தோன்றி வழங்கியதென்பதனை எழுத்தெனப்படுப, அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். விலங்கு முதலிய அஃறிணையுயிர்களின்றும் மக்களை வேறு பிரித்து உயர்திணை மாந்தராக உயர்த்தும் அறிதற் கருவியாக விளங்குவது மொழி. அத்தகைய மொழிகளுள் பேச்சு வழக்கொன்றே பெற்று எழுத்துருப் பெறாதனவும் உள்ளன. பேச்சு மொழி ஓரிடத்தும் ஒருகாலத்துமே பயன்படும். எழுத்துமொழியோ தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடத்தும் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தும் ஒப்பப் பயன் தருவதாகும். பனையோலைகளிலும் கல்லிலும் பிற பொருள்களிலும் எண்ணங்களை எழுத்தாற் பொறித்துவைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்களால் கைக்கொள்ளப்பெற்று வருகின்றது. செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார், கல்லேறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவுளோங்கிய காடேசு கவலை (மலைபடு - 394-395) எனவும், பெயரும் பீடும் எழுதி யதர்தொறும், பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் - 131) எனவும் பெறிகண்டழிக்கும் ஆவணமாக்களின் (அகம் - 77) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் இச்செய்தி புலனாதல் காணலாம். மக்கள் தம்மாற் பேசப்படும் மொழியிலமைந்த ஒலிகளைத் தனித்தனியாகப் பிரித்தறியும் உணர்வுபெற்ற பின்னர்த்தான் கருத்துருவாகிய அவ்வொலிகளைக் கட்புலனாக வரிவடிவில் எழுதுதல்கூடும். அறிஞர்களது நன்முயற்சியால் ஒலிகளுக்குரிய வரிவடிவங்க ளமைந்த பின்புதான் அவ்வொலிகளுக்கு எழுத் தென்னுங் காரணப்பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இவ் வுண்மை எழுதப்படுதலின் எழுத்தே1 எனவரும் பழைய சூத்திரத் தொடரால் அறிவுறுத்தப்பட்டமை காண்க. மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறுதலும் எகர ஒகரக் குறில்கள் புள்ளிபெறுதலும் குற்றியலுகரம் புள்ளிபெறுதலும் மகரக்குறுக்கம் மெய்க்குரிய மேற்புள்ளியோடு உள்ளேயொரு புள்ளிபெறுதலும் ஆகிய எழுத்து வடிவங்களிற் சிலவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலகத்து விளக்கியுள்ளார். ஆகவே தொல்காப்பியனார்க்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ் முன்னோர் அகர முதல் னகர விறுவாயுள்ள எழுத்துக்களுக்குரிய வரிவடிவங்களை யமைத்துத் தமிழ் நெடுங்கணக்கினை ஒழுங்கு செய்துள்ளமை நன்கு தெளியப்படும். எழுத்திலக்கண வகை தொல்காப்பியனார் தாம் கூற எடுத்துக்கொண்ட எழுத் திலக்கணத்தினை நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பதியல்களான் உணர்த்து கின்றார். எழுத்து இனைத்தென்றலும், அவை இன்ன பெயரின என்றலும் இன்ன முறைமையவென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பினவென்றலும், இன்ன புணர்ச்சிய வென்றலும், இன்ன வடிவினவென்றலும், இன்ன தன்மைய வென்றலும் என எட்டு வகையாகவும், எழுத்தினது உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம். நிலை இனம், நிலையிற்றென்றல், நிலையாதென்றல், நிலையிற்றும் நிலை யாதுமென்றல் என இன்னோரன்ன எட்டிறந்த பலவகையாகவும் எழுத்திலக்கணத்தினை ஆசிரியர் வகைப் படுத்துணர்த்தினாரெனவும் இவ்வதிகாரத்திற் கூறப்படும் இவ்விலக்கணங்கள் யாவும் கருவியும் செய்கையும் என இரு வகையாய் அடங்குமெனவும் அவ்விரண்டனுட் கருவியை நூன்மரபு முதலிய நான்கியல்களாலும் செய்கையைத் தொகை மரபு முதலிய ஐந்தியல்களாலும் தொல்காப்பியனார் உணர்த்தினா ரெனவும் உரையாசிரியர் இளம்பூரண அடிகள் வகைப்படுத்து விளக்கியுள்ளார். 1. நூன்மரபு இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றாற் றொகுத்துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயர்த்து என இளம்பூரணரும், இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத் துணர்த்துதலின் நூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியரும், அஃதாவது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்..................... மலைகடல்யாறு என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றிய பெயர் போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூலாசிரியனாற் செய்துகொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின எனச் சிவஞானமுனிவரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினார். இவ்வியலுட் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலியன அனைத்தும் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் இந்நூலில் ஆசிரியரால் எடுத்தாளப் பட்டனவாம். என்ப, புலவர், மொழிப, என்மனார் புலவர் என்றாங்கு முன்னையோர் கருத்தாக இவ்வியலில் வருங் குறியீடுகளை ஆசிரியர் எடுத்துரைத்தலால் இவ்வுண்மை விளங்கும். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனிநின்ற எழுத்திற்குரியதாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் யாதாயினும் ஒரு சொல்லைச் சார்ந்துவரினல்லது தனியெழுத்தாக ஒலித்து நிற்கும் இயல்புடையன அல்ல. இவற்றின் இயல்பினை நன்கறிந்த தமிழ் முன்னோர் இம்மூன்றினையும் சார்பெழுத்தெனப் பெயரிட்டு வழங்கினார்கள். சார்ந்துவரன் மரபின்மூன்று எனவும், சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் எனவும் வருந் தொடர்களால் தொல்காப்பியனார் இவற்றின் இயல்பினைத் தெளிவாக விளக்குகின்றார். தனித்தியங்கும் இயல்புடையது உயிர். அவ்வியல்பின்றி உயிரினால் இயக்கப்படுவது மெய். அகர முதல் ஔகார மீறாக வுள்ள பன்னிரண்டெழுத்தும் தனித்தியங்கும் ஆற்றலுடைமையால் உயிரெனப்பட்டன. ககர முதல் னகர மீறாகவுள்ள பதினெட் டெழுத்துக்களும் தனித்தியங்கு மியல்பின்றி அகர முதலிய உயிர்களால் இயக்கப்படுதலின் மெய்யெனப்பட்டன. உயிர்வழியாயடங்கி அதனது விளக்கம் பெற்று நிற்கும் உடம்பைப் போன்று மெய்யெழுத்துக்களும் தம்மேல் ஏறிய உயிரெழுத்தின் மாத்திரைக்குள் அடங்கி அதன் ஒலியோடு ஒத்திசைப்பனவாகும். இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடியொலிக்கும் எழுத்தொலியினை உயிர்மெய் என்ற நிறையுவமப் பெயரால் வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். இவ்வியலில் 33 சூத்திரங்கள் உள்ளன. எழுத்தின்ன தென்பதும், அதன் வகையும், எழுத்துக்கள் பெறும் மாத்திரையும், அவற்றுட் சிலவற்றின் வடிவம், குற்றெழுத்து, நெட்டெழுத்து, உயிர், மெய், உயிர்மெய், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, என அவை பெறும் பெயர்களும், மெய் தன்னொடும் பிறிதொடும் கூடியொலிக்கும் மெய்மயக்கமும், குற்றெழுத்துக்களுள் அ இ உ என்பவற்றுக்குச் சுட்டென்னுங் குறியும் நெட்டெழுத்துக்களுள் ஆ ஏ ஓ என்பவற்றுக்கு வினாவென்னுங் குறியும், எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டொலிக்கு மிடமும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. 2. மொழி மரபு மொழிகளுக்கு எழுத்தான்வரும் மரபுணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என இளம்பூரணரும் எழுத்தானாம் மொழியது மரபுணர்த்தினமையின் இவ்வோத்து மொழிமரபெனக் காரணப்பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணங் கூறினர். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கு என இளம்பூரணர் கூறுவர். எனவே எழுத்துக்களை மொழிப்படுத் திசைக்குங்கால் மொழியில் நின்ற எழுத்துக்களுக்கு உளவாம் இயல்பினை யுணர்த்துவது இவ்வியலென்பது பெறப்படும். இவ்வியலின் சூத்திரங்கள் 49. மொழியினைச் சார்ந்து ஒலித்தலையே இயல்பாகவுடைய சார்பெழுத்து மூன்றிற்கும் அவைதாம் குற்றியலிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என முன்னருரைத்த முறையே இவ்வியலில் இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய ஈரிடத்தும் வருமெனக்கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒரு மொழியாய்தம், புணர் மொழியாய்தம் என ஆறாகப்பிரித்து முறையே 1-முதல் 6-வரை யுள்ள சூத்திரங்களில் உணர்த்தி 7-ஆம் சூத்திரத்தில் அவ்வொரு மொழி யாய்தத்திற்கு ஓர் இலக்கணமுங் கூறியுள்ளார். இவை மொழியிடைச் சார்த்தியுணரப்படுவன ஆகலானும் ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் நூன் மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. இவற்றையடுத்து உயிரளபெடை, மொழி யாக்கம், மெய்களின் இயக்கம், ஈரொற் றுடனிலை, மகரக் குறுக்கம், எழுத்துப்போலி, ஐகாரக் குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கீறாமெழுத்துக்கள், என்பன உணர்த்தப்பட்டன. இவையெல்லாம் தனி யெழுத்துக்களிலன்றி மொழிகளில் வைத்து அறிந்துகொள்ளுதற்குரியனவாதலின் இவ்வியலிற் கூறப்பட்டன. 3. பிறப்பியல் அகர முதல் னகரவிறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும் சார்பெழுத்து மூன்றையும் மொழி மரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர். அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலால் உணர்த்துகின்றார். அதனால் இவ்வியல் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. உந்தியிலிருந்தெழுகின்ற காற்றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றடங்களிலும் நிலைபெற்று அவற்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய உறுப்புக்கள் தம்மிற் பொருந்தி அமைதிபெற வேறுவேறுருவாகிய எழுத்துக்களாய்ப் பிறந்து புலப்பட வழங்குதலே எழுத்துக்களுக் குரிய பொதுவாகிய பிறப்பு முறையாகும் இதனை இவ்வியலின் முதற் சூத்திரத்து ஆசிரியர் விரித்துரைக்கின்றார். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் தத்தம் நிலைதிரியாது மிடற்று வளியாற் பிறக்கும். எனவே உயிரெழுத்துக்களின் பிறப்பிடம் மிடறு என்பது புலனாம். ஓரிடத்தே ஒரு முயற்சியாற் பலவெழுத்துக்கள் பிறக்குமெனப் பொதுவகையாற் கூறினும் அவ்வெழுத்துக் களிடையே நுண்ணிய வேறுபாடுகள் உள்ளனவென ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வியலின்கண் 7-முதல் 11-வரையுள்ள சூத்திரங்களில் கங, சஞ, டண, தந, ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு நெடுங் கணக்கு முறை பற்றிப் பிறப்புக் கூறுகின்றார். 12 முதல் நாவதிகாரம் பற்றிப் பிறப்புக்கூறத் தொடங்கி றன, ரழ, லள, பம, வய, என்னும் மெய்யெழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறியுள்ளார். இங்குப் பிறப்புக்கூறிய மெய்யெழுத்துக்களுள் மெல்லெழுத் தாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றனவாயினும் அவை மூக்கின்கண் உளதாகிய காற்றோசையால் இயைபுபெறத் தோன்றியொலிப்பனவாம். இவ்வாறு மெல்லெழுத்தாறுக்கும் மூக்குவளியின் தொடர்புடைமையினைச் சொல்லவே இடையெழுத்தாறும் மிடற்றுவளியையும் வல்லெழுத்தாறும் தலைவளியையும் பெற்று ஒலிப்பனவெனக் கொண்டார் இளம்பூரணர். முதலெழுத்துக்களைச் சார்ந்துதோற்றினல்லது தனித் தொலிக்கும் இயல்பில்லாதன என ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட சார்பெழுத்துக்கள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய முத லெழுத்துக்களின் பிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகப் பொருந்தி இசைப்பனவாம். இவ்வாறு எழுத்துக்களின் பிறப் புணர்த்திய தொல்காப்பியனார் அவ்வெழுத்துக்கள் பெறும் மாத்திரையினைக் குறித்துக்கூறும் விளக்கம் இவண் கருதத்தகுவ தாகும். எல்லாவெழுத்துக்களையும் வெளிப்படச் சொல்லப்பட்ட இடத்தின்கண் எழுங்காற்றினாலே ஒலிக்குமிடத்து அவ்வெழுத்துக்கள் யாவும் கொப்பூழடியிலிருந்தெழுங் காற்றானது தலையளவுஞ் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலாகிய திரிதருங் கூறு பாட்டினையுடையன. இவ்வெழுத்துக்களுக்கு இங்ஙனம் உறழ்ச்சி வாரத்தினால் உளதாம் அகத்தெழுவளியிசையினை நுட்பமாக ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்தே வெளிப்பட்டிசைக்கும் மெய்தெரிவளியிசையாகிய எழுத்துக் களுக்கே யான் இங்கு மாத்திரை கூறினேன் என்பது ஆசிரியர் கூறிய விளக்கமாகும். உந்தியில் எழுந்தகாற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலேவந்து அதன்பின்னர் நெஞ்சிலே நிற்றல் உறழ்ச்சிவாரம் எனப்படும். மூலாதாரத்திலிருந் தெழுங் காற்றோசை அகத்தெழுவளியிசை யெனப்பட்டது. எல்லார்க்கும் எழுத்துருவம் நன்கு புலனாக வாயிலிருந்து புறத்தே வெளிப்பட் டிசைக்கும் காற்றினாலாகிய எழுத்தோசையே மெய்தெரிவளி யிசை யெனப்படும். அந்தணர் மறையிற் கூறுமாறு அகத் தெழுவளியிசையாகிய எழுத்துக்களுக்கு அளபுகூறின் அஃது எல்லார்க்கும் நன்றாக விளங்காதெனக் கருதிய தொல்காப்பியனார் புறத்தெழுந்திசைக்கும் மெய்தெரிவளி யிசையாகிய எழுத்துக்களுக்கே மாத்திரை கூறுவாராயினர். உந்துயிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கொள்ளுதலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறுதலும், அந்தணர் மறைக்கு உளதென்று கூறிய இவ்வாசிரியர், அவர் மதம் பற்றிப் பெறுவதோர் பயனின்றென இச் சூத்திரத்தால் உய்த்துணர வைத்தலின், இச்சூத்திரம் பிறன் கோட்கூறல் என்னும் உத்திக்கினம் என்றார் நச்சினார்க்கினியர். 4. புணரியல் மொழிகள் தம்மிற் புணர்தற்குரிய கருவியின் இயல்பினைக் கூறுதலின் இது புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிற் கூறப்படும் விதிகள் பின்வரும் இயல்களிற் கூறப்படும் செய்கைபற்றிய விதிகளுக்குப் பயன்படுதலின் கருவிகளெனப் பட்டன. தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பத்து மூன்றெழுத்துக்களுள் இருபத்திரண்டெழுத்துக்கள் மொழிக்கு முதலாமெனவும், இருபத்து நான்கெழுத்துக்கள் மொழிக்கு ஈறாமெனவும், எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய், உயிர் என்னும் இவ்விருவகையெழுத்துக்களெனவும், மொழியிறுதியில் நின்ற மெய்யெல்லாம் புள்ளிபெற்று நிற்குமெனவும், மொழியிறுதியி லுள்ள குற்றியலுகரமும் மெய்யின் தன்மையையுடையதா மெனவும், மொழியீறாய் நின்ற உயிர்மெய் உயிரீற்றின் தன்மையையுடையதா மெனவும் இவ்வியலில் 1-முதல் 4-வரையுள்ள சூத்திரங்கள் கூறுகின்றன. நிலைமொழியை நிறுத்தசொல் என்றும் வருமொழியைக் குறித்துவருகிளவியென்றும் தொல்காப்பியனார் வழங்குவர். நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தோடு குறித்துவருகிளவியின் முதலலெழுத்துப் பொருந்த அவ்விருமொழிகளும் இயைந்து வருதலே புணர்ச்சியெனப்படும். அப்புணர்ச்சி உயிரீற்றுச் சொல் முன் உயிர் வருமிடம், உயிரீற்றுச் சொல்முன் மெய்வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் உயிர் வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் மெய் வருமிடம் என எழுத்துவகையால் நான்கு வகைப்படும்; பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர், தொழிலொடு தொழில் எனச் சொல் வகையால் நான்காகும். மொழிகள் புணருங்கால் இடைநின்ற எழுத்துக்கள் ஒன்று மற்றென்றாகத் திரிதலை மெய்பிறிதாதல் என்றும், அவ்விடத்துப் புதியவெழுத்துத் தொன்றுதலை மிகுதல் என்றும், அங்கு முன்னிருந்த எழுத்துக் கெடுதலைக் குன்றல் என்றும், இவ்வேறு பாடெதுவுமின்றி அவ்விருமொழிகளும் முன்னுள்ளவாறு புணர்ந்து நிற்றலை இயல்பென்றும், இந்நான்கினையும் மொழிபுணரியல்பு என்றும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியும் தனித்தனியே அடைமொழி பெற்றுவரினும் நிலைமொழி வருமொழியாகப் புணர்தற்கு உரியனவாம். முன் பின்னாக மாறி நின்ற மரூஉ மொழிகளும் நிலைமொழி வருமொழியாகப் புணர்க்கப்படுதலுண்டு. மொழிப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சியெனவும் அல்வழிப் புணர்ச்சியெனவும் பொருள் வகையால் இருதிறப்படும் இவற்றுள் வேற்றுமைப் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையென்றும் அல்வழிப் புணர்ச்சியை வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலையென்று ஆசிரியர் வழங்கியுள்ளார். இவ்விருவகைப் புணர்மொழிகளும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலும் ஆகிய இருதிறத்தாலும் நடப்பன. வேற்றுமை யுருபாவன ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் ஆறாம் எனத் தொல்காப்பியனர்க்கு முற்பட்ட தமிழிய னூலார் வகைப்படுத்தியுள்ளார்கள். வேற்றுமையுருபுகள் புணரும் நிலைமைக்கண் பெயரின் பின்னிடத்தே நிற்றற்குரியன. உருபேற்கும் பெயர்கள் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என இருவகைப்படும். அவை வேற்றுமையுருபோடு பொருந்துங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்குமிடையே சாரியை மிகும். சாரியைகளாவன இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் எனவரும் இவ்வொன்பதும் இவைபோல்வன பிறவும் ஆம். இன் சாரியை இகரங்கெட்டு னகரமெய் மட்டும் நிற்றலும், னகரங் கெட்டு இகரவுயிர் மட்டும் நிற்றலும், னகரம் றகரமாகத் திரிந்து நிற்றலும் ஆகிய மூன்று திரிபுடையதென்றும், வற்றுச் சாரியை முதற்கணுள்ள வகரமெய் கெட அற்று எனத்திரியுமென்றும், இன், ஒன், ஆன், அன் என்னும் இச்சாரியைகளின் னகரம் றகரமாய்த் திரிதலுண்டென்றும், அகரவீற்றுச் சொல்முன் வரும் அத்துச்சாரியை அகரங்கெட த்து என நிற்குமென்றும், இகர ஐகார வீற்றுச் சொல்முன்வரும் இக்குச் சாரியை இகரங்கெட க்கு என நிற்குமென்றும், வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் அக்குச் சாரியை இறுதிக் குற்றியலுகரமும் அதனாலூரப்பட்ட ககரமெய்யும் அக்ககர மெய்யின்மேல் நின்ற ககரமெய்யும் ஒருசேரக்கெட அ எனத் திரிந்து நிற்குமென்றும், கசத வரு மொழியாய் வருங்காலத்து அம் சாரியையின் மகரம் முறையே ங ஞ ந எனத் திரிதலும், மெல்லெழுத்தும் இடையெழுத்தும் வருமொழியாய் வருங்காலத்துக் கெடுதலுமாகிய நிலைமைத் தென்றும், சொற்கள் பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க்கூடியும் இசைப்ப வேற்றுமையுருபு விரிந்து நிற்கு மிடத்தும் மறைந்து நிற்குமிடத்தும் மொழிகளைப் பிரித்துக் காணுங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்கு மிடையே வந்து நிற்றல் சாரியையின் இயல்பென்றும் சாரியையின் இலக்கணத் தினை ஆசிரியர் தெளிவாக வரையறுத்துக் காட்டியுள்ளர். சொற்களை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக் காணும் முறையினைத் சொற்சிதர் மருங்கு எனவும் பெயர் சாரியை உருபு முதலிய சொல்லுறுப்புக்கள் ஒன்றன்பின்னொன்றாக ஒட்டி நடத்தற்குரிய மொழிவழக்கினை ஒட்டுதற்கொழுகிய வழக்கு எனவும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்த சொல்லுங் குறித்து வருகிளவியுமாகப் பிரித்தற்கேற்றவாறு ஒட்டி நில்லாது, நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றாற் போல உடங்கியைந்து நிற்கும் புணர்மொழிகள் ஒட்டுதற்கொழுகிய வழக்கின அல்லவெனவுங் ஆகவே அவை சாரியை பெறா வெனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் இவண் சிந்தித்துணரத் தகுவதாம். காரம், கரம், கான் என்பன எழுத்தின் சாரியைகளாம். அவற்றுள் கரம், கான் என்னும் இரு சாரியைகளையும் நெட்டெழுத்துப் பெறுதலில்லை. குற்றெழுத்து மேற்கூறிய மூன்று சாரியைகளையும் பெறும். நெட்டெழுத்துக்களில் ஐ, ஔ என்னுமிரண்டும் கான் சாரியையும் பெறும். என இவ்வியலில் இயைபுடைமை கருதி எழுத்துக் சாரியைகளும் உடன் கூறப்பட்டன. மெய்யீற்றின்முன் உயிர்முதன் மொழி வருங்கால் வருமொழி முதலிலுள்ள உயிர் தனித்து நில்லாது; மெய்களுக்குரிய புள்ளி பெறுதலாகிய அவ்வியல்பினைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யுடன் கூடி நிற்கும். இங்ஙனம் கூடிய உயிர் பிரிந்து நீங்கியவழி நிலைமொழியீற்றிலுள்ள மெய் மீண்டும் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும். இவ்வியல்பினை இவ்வியலின் 36, 37-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் குறிப்பிடுவர். குற்றியலுகரமும் மெய்யீறுபோலுந் தன்மையத்து என இவ்வியலின் மூன்றாம் சூத்திரத்தால் ஆசிரியர் மாட்டேற்றிக் கூறியுள்ளார். இம்மாட்டேறு புள்ளி பெறுதலும் உயிரேற இடங்கொடுத்தலுமாகிய மெய்யின் தன்மைகளுள் புள்ளி பெறுதலை விலக்கி உயிரேற இடங்கொடுத்தலாகிய அவ்வளவுக்குச் செல்லுதலின் இம்மாட்டேறு ஒருபுடைச்சேற லெனவுணர்க என உரையாசிரியர் விளக்கங் கூறுவர். குற்றியலுகரமும் அற்றென மொழிப என முன்னர் மாட்டேறு கூறினமையால் மெய்யீற்றின்முன் உயிர் தனித்து நில்லாதவாறு போன்று குற்றியலுகரவீற்றின் முன்னும் உயிர் தனித்து நில்லாது அக்குற்றியலுகரத்தோடு பொருந்தி நிற்கும் எனத் தொல் காப்பியனார் உய்த்துணர வைத்தமை பெறப்படும். உயிரீற்றின்முன் உயிர்முதன்மொழி வருமிடத்து உயிரோடு உயிர்க்குக் கலந்து நிற்கும் இயல்பின்மையால் இரு மொழிகளும் ஒட்டி நில்லாது விட்டிசைப்பனவாம். நிலைமொழியீற்றிலும் வரு மொழி முதலிலும் நிற்கும் அவ்விரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு அவற்றிடையே யகர வகரங்களுள் ஒன்று உடம்படு மெய்யாய் வரும். உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங் கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது வருமுயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப்பொருள் கோடலுமுண்டு. எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் உயிர் வரும்வழி அவற்றிடையே உடம்படுமெய் பெறுதலை விலக்கார் எனத் தொல்காப்பியனார் கூறுதலால் அவர் காலத்து உயிரீற்றின் முன் உயிர்முதன்மொழி வந்து புணருங்கால் உடம்படுமெய் பெற்றே வரவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது நன்கு புலனாகும். உடம்படுமெய்யாக வருதற்குரிய எழுத்துக்கள் இவையெனத் தொல்காப்பியனார் கூறாது போயினும் அவரியற்றிய இயற்றமிழ் நூலாகிய இத் தொல்காப்பியத்திலும் இதற்குப்பின் தோன்றிய தமிழ் நூல்களெல்லாவற்றிலும் யகர வகரங்களே உடம்படுமெய்யாக ஆளப்பெற்றுள்ளமை காணலாம். உடம்படு மெய்யே யகார வகாரம், உயிர் முதன் மொழி வரூஉங்காலையான என நச்சினார்க்கினியர் காட்டிய பழஞ்சூத்திரம் யகர வகரங்களே உடம்படுமெய்யாய் வருதற்குரியன என்பதைத் தெளிவாக விளக்குதல் காண்க. உயிர்களுள் இகர ஈகார ஐகார வீறுகள் யகர வுடம்படுமெய் கொள்ளும் எனவும், ஏகாரவீறு யகர வகரங்களுள் ஒன்றை உடம்படுமெய்யாகப் பெற்றுவரும் எனவும், ஏனைய வுயிரீறுகள் யாவும் வகர வுடம்படு மெய்யே பெறும் எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வகைபெற விளக்கியுள்ளார்கள். எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறு பட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள் ஓசை வேறு பாட்டற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் சொல்நடையின் நிலை பெற்ற பண்பாகும். இவ்வாறு வரும் புணர்மொழிகள் குறிப்பினாலுணரும் பொருளையுடையன. எழுத்து வகையால் இத்தன்மைய எனத் தெளிவாக வுணரும் முறைமையை யுடையன அல்ல. எடுத்துக்காட்டாகச் செம்பொன் பதின்றொடி என்னும் புணர் மொழி பொன்னைப்பற்றிப் பேச்சின்கண் எடுத்தாளப் பட்டால் செம்பொன் + பதின்றொடி எனப் பிரிந்தும், செம்பைக் குறித்து நிகழும் பேச்சில் எடுத்தாளப்பட்டால் செம்பு + ஒன்பதின்றொடி எனப் பிரிந்தும் ஓசை வேறுபட்டு வேறுவேறு பொருளுணர்த்தி நிற்றல் காணலாம். இவற்றின் இயல்பினை இவ்வியலின் ஈற்றிலுள்ள இரண்டு சூத்திரங்களாலும் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். எனவே அவர் காலத்து இங்ஙனம் நுண்ணிதாகப் பொருளுணர்த்தும் புணர்மொழிகள் பெருக வழங்கினமை நன்கு புலனாகும். 5. தொகை மரபு உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய சொற்களைப் பின்வரும் இயல்களில் ஈறுகள்தோறும் தனித்தனியே விரித்தோதி முடிக்கக் கருதிய ஆசிரியர், பல வீறுகளுக்கும் பொதுவான விதிகளை இவ்வியலில் ஒவ்வோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுகின்றார். அதனால் இவ்வியல் தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகட்படும் இலக்கணங்களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கண மரபுகளைத் தொகுத்துணர்த்துதலின் தொகைமர பெனப் பட்டது எனினுமமையும். நிலைமொழியும் வருமொழியும் மேல் புணரியலிற் கூறிய கருவிகளால் தொக்குப்புணரும் செய்கை கூறுவது இவ்வியலாதலின் இது புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. இவ்வியல் முப்பது சூத்திரங்களையுடையது. இதன்கண் அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழியிலும் கசதப என்னும் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் மிகுதற்குரிய மெல்லெழுத்துக்கள் முறையே ங ஞ ந ம என்பனவாம் என்னும் வருமொழிக் கருவியும், இருபத்துநான்கீற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்களுக்கு இருவழியும் வருமொழிமுடிபும், ணகர னகர வீற்றுச் சொற்களுக்கு இருவழியும் நிலைமொழி முடிபும், லகர, னகர வீறுகளின் முன்னும் ணகர ளகர வீறுகளின் முன்னும் வரும் தகர நகரங்கள் முறையே றகர னகரங்களாகவும் டகர ணகரங்களாகவும் திரியு மென்னும் வருமொழிக் கருவியும், உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய முன்னிலை வினைச் சொற்கள் வல்லின முதன்மொழி வருங்கால் இயல்பும் உறழ்ச்சியு மாகிய இருநிலைமையையுடையன வென்பதும், ஔகாரத்தையும் ஞநமவ என்னும் மெய்களையும் குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய முன்னிலை வினைச்சொற்கள் முற்கூறிய முடிபிற்கு முற்றும் பொருந்துவன அல்ல என்பதும், உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய உயர் திணைப் பெயர்கள் நான்குகணத்தும் இருவழியும் இயல்பாய் முடியுமென்பதும், அவற்றுள் இகரவீற்று உயர்திணைப் பெயர் திரிந்து முடியுமிடனுமுண் டென்பதும், அஃறிணை விரவு பெயர் இயல்பாய் முடிவனவுமுள வென்பதும், மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் உளவாகுந் திரிபுகளும், இகர ஐகாரவீற்றுப் பெயர்களுக்கு அல்வழி முடிபும், இகர ஐகாரவீற்றுள் ஏழாம் வேற்றுமையிடப் பொருளுணர நின்ற இடைச்சொல் முடிபும், நெட்டெழுத்தின் பின்னின்ற மெய்யீறு கெடுதல் குற்றெழுத்தின் பின்னின்ற இறுதிமெய் இரட்டித்தல் ஆகிய நிலைமொழிக்கரு வியும், இவற்றிற்கு உருபியலை நோக்கியதோர், வருமொழிக் கருவியும், உகரமொடு புணரும் மெய்யீற்றுச் சொற்கள் யகரமும் உயிரும் வருமொழியாய் வரின் அவ்வுகரம் பெறாது இயல்பாம் என்னும் வருமொழிச் செய்கையும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறும், அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாதற்குரிய வெழுத்துக்கள் க ச த ப ந ம வ அ உ என்னுமிவ் வொன்பதுமே யென்னம் வரையறையும், மேலே கூறப்பட்டன வற்றிற்குப் புறனடையும், யாவர் என்பது யார் எனவும் யாது என்பது யாவது எனவும் வரும் மரூஉ முடிபும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. 6. உருபியல் வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்தும் முறைமை யினை யுணர்த்துவது உருபியலாகும். இதன்கண் முப்பது சூத்திரங்கள் உள்ளன. பெயரும் அதனால் ஏற்கப்படும் வேற்றுமையுருபும் ஆகிய அவ்விரண்டிற்கும் இடையே வரும் சாரியைகள் இவையென்பதும், வேற்றுமையுருபினை யேற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை யென்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப்பெற்றுள்ளன. உயிர்களுள் அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் ஆறினையும் ஈறாகவுடைய பெயர்களும், மெய்களுள் ஞகர நகரவீற்றுப் பெயர்களும், தெவ் என்னும் வகரவீற்றுப் பெயரும், மகரவீற்றுப் பெயர்கள் சிலவும், குற்றியலுகர வீற்றுப் பெயர்களும் உருபேற் குங்கால் இடையே இன்சாரியை பெறுவன. பன்மைப் பொருளைக் கருதின அகர வீற்றுப் பெயர்களும், யா என்னும் ஆகாரவீற்று வினாப்பெயரும், அவை, இவை, உவை, யாவை, அவ், இவ், உவ் என்பனவும் வற்றுச்சாரியை பெற்று உருபேற்பன. யாவை என்னும் வினாப்பெயர் வற்றுச் சாரியை பெறுங்கால் அப்பெயரின் ஈற்றில் நின்ற ஐகாரமும் அதனாலூரப்பட்ட வகரமெய்யும் கெட்டு முடியும். எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணைக்கண்வரின் வற்றுச்சாரியையும், உயர் திணைக்கண்வரின் நம் சாரியையும் பெறுவதுடன் வேற்றுமை யுருபின் இறுதியில் உம் சாரியையும் பெற்றுமுடியும். அது, இது, உது எனவரும் உகரவீற்றுச் சுட்டுப்பெயரும், ஏழ் என்னும் ழகரவீற்று எண்ணுப்பெயரும், குற்றியலுகரவீற்றுள் வரும் எல்லா எண்ணுப்பெயர்களும், யாது என்னும் வினாப் பெயரும், அஃது, இஃது, உஃது எனவரும் சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்பனவாம். அன்சாரியை பெறுங்கால் அது, இது, உது என்பன இறுதியுகரங் கெட்டு முடிவன; அஃது, இஃது, உஃது என்பன ஆய்தங்கெட்டு முடிவன. பஃதென்பதனை யிறுதியாகவுடைய ஒருபதுமுதல் எண்பது வரையுள்ள எண்ணுப்பெயர்கள் எட்டும், அன்சாரியையேயன்றி ஆன்சாரியை பெறுதலும் உண்டு. ஆன்சாரியை பெறுங்கால் நிலைமொழியிலுள்ள பஃதென்பதன் கண் பகரமெய்மட்டும் நிற்க அஃதென்பது கெடும். ஓகார வீற்றுப்பெயர் உருபேற்குங்கால் ஒன்சாரியைபெறும். அகர ஆகார வீற்று மரப்பெயர்கள் ஏழாமுருபு பெறும்வழி அத்துச்சாரியைபெறும். மகரவீற்றுப் பெயர்கள் உருபேற்குங்கால் அத்துச்சாரியை பெறுவன. அழன், புழன் என்பன அத்தும் இன்னும் பெற்று உறழ்வன. நீ என்னும் பெயர் நின் எனத்திரிந்து உருபேற்கும். மகர வீற்றுள் நும் என்பதும் தாம், நாம், யாம் என்பனவும் அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடிவன. யாம் என்னும் பெயரில் யகரத்தின்மேலேறிய ஆகாரம் எகரமாகத் திரிய அங்கு நின்ற யகரம் கெடும். தாம், நாம் என்பன முதல்குறுகி முறையே தம் நம் என நிற்கும். எல்லாரும் என்னும் படர்க்கைச் சொல்லிடத்தும் எல்லீரும் என்னும் முன்னிலைச் சொல்லிடத்தும் இறுதியில் நின்ற உம் என்பது கெட, அவ்விருபெயரும் முறையே தம் சாரியையும் நம் சாரியையும் பெற்று உருபேற்கும். அவைபெறும் உருபின் பின்னர் உம் சாரியை வந்து பொருந்தும் னகர வீற்றுள் தான் என்பது முதல்குறுகித் தன் என்றும் யான் என்பது முதற்கண் நின்ற யகரங்கெட்டு அதனையூர்ந்து நின்ற ஆகாரம் எகரமாகி என் என்றும் திரிந்து உருபேற்கும். நெடிற்றொடர்க் குற்றியலுகரங்களுள் (டற) ஒற்றி ரட்டிக்குஞ் சொற்கள் உருபேற்குங்கால் இன்சாரியைபெறாது இயல்பாவன. குற்றுகரவீற்றுத் திசைப்பெயர்கள் கண்ணுருபினை ஏற்குங் கால் இன்சாரியை பெறாது இயல்பாதலுமுண்டு. இவ்வாறு இயல்பாயவழி இறுதியிலுள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யோடு சேரக்கெடும். இங்கு எடுத்துரைக்கப்பட்ட பெயர்களல்லாத ஏனைய பெயர்கள் சாரியை பெற்றே உருபேற்றல் வேண்டுமென்னும் வரையறையில்லாதனவாம். அவை சாரியை பெற்றும் பெறாதும் முடிவனவாம். 7. உயிர் மயங்கியல் உயிரீறு நின்று வல்லெழுத்தோடும் சிறுபான்மை ஏனை யெழுத்துக்களோடும் புணருமாறு கூறுவது உயிர் மயங்கிய லாகும். மயங்குதல் - கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய இரு வழியிலும் இயல்பாமெனவும், ஒரு சில விடங்களில் அஃறிணை விரவுப் பெயர் இயல்பாதலுமுண்டெனவும் தொகை மரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர்களையும் ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச் சங்களையும் அகரவீறுமுதல் ஔகாரவீறுமுடிய நெடுங்கணக்கு முறையில் வைத்து உணர்த்துகின்றார். இவ்வியலில் 93-சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள் யாவும் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன குறுகிவருவன, சாரியைபெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகையுள் அடங்குவனவாகும். அ, இ, உ. என்னும் மூன்று சுட்டின் முன்னும் உயிரும் யகரமும்வரின் வகரவொற்றும் கசதபஞநமவ என்பனவரின் வந்த ஒற்றெழுத்துக்களும் மிகுமென்பதும் செய்யுளுள் சுட்டு நீண்டு முடியுமென்பதும் 3-6, 34, 35, 53-ஆம் சூத்திரங்களிற் சொல்லப் பட்டன. ஆ, ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஓள என்பவற்றை ஈறாகவுடைய பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்றும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்றும் 1, 14, 19, 22, 33, 47, 57, 62, 64, 72, 74, 78, 87, 90, 93-ஆம், சூத்திரங்களில் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். அல்வழிக்கண் அகரவீற்றுள் அன்னவென்னும் உவமவுருபும், அண்மைசுட்டிய உயர்திணை விளிப்பெயரும், செய்ம்மன என்னும் வினைச்சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோள் வினையும், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அம்ம என்னும் உரையசையும், அகர வீற்றுப் பலவறிசொல்லும், ஆகாரவீற்றுள் ஆ, மா என்னும் பெயர்ச் சொல்லும், உயர்திணை விளிப்பெயரும், யா வினாவும் முற்றுவினையும், மியா என்னும் அசைச் சொல்லும், தன் தொழிலைக் குறித்துவரும் ஆகார வினாவையுடைய வினைச்சொல்லும், ஈகார வீற்றுள் நீ, மீ என்பனவும் பகரவீகாரமும், உகரவீற்றுச் சுட்டுப் பெயர்களும், தேற்றப் பொருளில் வரும் எகரவீறும், சிறப்புப் பொருளில் வரும் ஒகரவீறும், மாறுகோளெச்சப் பொருளிலும் வினாப் பொருண்மையிலும் எண்ணுப்பொருண்மையிலும் ஐயப் பொருண்மையிலும் வரும் ஏகார ஓகார வீற்றிடைச் சொற்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அகரவீற்று மரப்பெயரும் ஆ, இ, உ, ஏ, ஐ ஆகிய ஈறுகளில் எடுத்தோதிய பிடா, தளா, மா (மரம்) ஆ, மா, (விலங்கு) உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழிவரின் மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம். யா, பிடா, தளா, புளி (சுவை) என்பன வல்லெழுத்துப் பெறுதலுமுண்டு. உம்மைத்தொகைக்கண்வரும் ஆகாரவீற்றுப்பெயரும் வேற்றுமைக்கண் குறிற்கீழ் நின்ற ஆகாரவீற்றுப்பெயரும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார வீற்றுப்பெயரும் அகரம் மிக்கு முடியும். இரா என்னுஞ் சொல்லுக்கு அகரமிகுதல் இல்லை. குறிற்கீழ் நின்ற ஊகாரவீறும் ஓரெழுத்துத்தொரு மொழியாகிய ஊகார வீறும் வேற்றுமைக்கண் உகரம் மிக்குமுடியும். ஏ யென்னும் பெயர் வேற்றுமைக்கண் எகரம் மிக்கு முடியும். ஓகாரவீறு வேற்றுமைக் கண் ஒகரம் மிகும். ஔகாரவீற்றுப் பெயர் இருவழியிலும் உகரம்மிகும். செய்யுட்கண்வரும் அகரச்சுட்டும், அம்ம என்னும் இடைச் சொல்லிறுதியும், பல சில என்னுஞ் சொற்களின் இறுதி அகரமும், ழகரமெய்யையூர்ந்த இறுதி உகரமும் நீண்டு முடிவனவாம். ஆ முன்வரும் பகர வீகாரம் குறுகும். குறிற்கீழ் நின்ற இறுதி ஆகாரம் குறுகி உகரம் பெறும். மக, ஆடூஉ, மகடூஉ சே என்பன இன்சாரியைபெறும். நிலா அத்துச்சாரியைபெறும். பனி (காலம்), வளி (பூதம்), மழை என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும் பெறுவன. புளி, எரு, செரு, பனை, அரை, ஆவிரை என்பன அம்சாரியைபெறுவன. இகர ஐகார வீற்று நாட் பெயர்முன் தொழிற்சொல்வரின் இடையே ஆன்சாரியை வரும். அவ்விரண்டீற்றுத் திங்கட் பெயர் முன் தொழிற்சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும். ஊவென்னும் ஓரெழுத்தொருமொழி னகரவொற்றும் அக்குச் சாரியையும் பெறும். அ, ஈ, உ, ஐ, ஓ என்னும் ஈறுகளுக்கு உருபியலிற் கூறப்பட்ட சாரியைகளை இவ்வியலிலுள்ள 18, 51, 61, 79, 92-ஆம் சூத்திரங்களால் அவ்வீற்றுப் பொருட் புணர்ச்சிக்கும் மாட்டெறிந்து விதி கூறுவர் ஆசிரியர். சாவ என்பதன் வகரவுயிர்மெய்யும் வாழிய என்பதன் யகரவுயிர்மெய்யும் கெட்டு முடியும். நாழி என்பதன்முன் உரி யென்னுஞ்சொல் வந்துபுணரின் நிலைமொழியீற்றின் இகரம் தான் ஏறிய ழகர மெய்யுடன்கெட அவ்விடத்து டகரமெய் தோன்றி முடியும். செரு என்பதன் முன்வரும் அம்சாரியையின் மகரங்கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். பனை, ஆவிரை என்பன அம்சாரியை பெறுங்கால் இறுதி ஐகாரங்கெட்டு முடிவன. பனை என்னுஞ்சொல்முன் அட்டு என்பது வருமொழியாய்வரின் நிலை மொழியிறுதி ஐகாரங்கெட அவ்விடத்து ஆகாரம் தோன்றும். பல சில என்பவை தம் முன்னர்த் தாம்வரின் இறுதி நின்ற லகர வுயிர்மெய் லகரவொற்றாகத் திரியும். இன்றியென்பதன் இறுதியிகரம் செய்யுளுள் உகரமாகத்திரியும். சுட்டுப் பெயரீற்று உகரம் அன்று என்பதனோடு புணருங்கால் ஆகாரமாகத் திரிதலும் ஐயென்பதனோடு புணருங்கால் கெடுதலும் செய்யுளிடத் துண் டாகுந் திரிபுகளாம். வேட்கை யென்னுஞ்சொல்முன் அவா என்பது வந்து புணரின் நிலைமொழியீற்றிலுள்ள ஐகாரம் தான் ஊர்ந்து நின்ற ககரமெய்யொடுங்கெட அங்குள்ள டகரம் ணகர மாய்த் திரிதல் செய்யுட்கண்வருந் திரிபாகும். 8. புள்ளி மயங்கியல் மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறுவது புள்ளி மயங்கியலாகும். மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிற்குமாதலின் புள்ளியென்றார். மெய்யீற்றுள் உகரம்பெறுவன, இறுதி கெட்டு வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, திரிந்து முடிவன என்னும் இவ்வகையினுள் இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள்யாவும் அடங்கு வனவாம். ஞ, ந, ண, ம, ல, ள என்னும் மெய்களை இறுதியாகவுடைய தொழிற்பெயர் முன்னர் வல்லெழுந்து முதன்மொழி வரின் இரு வழியும் வருமொழி வல்லெழுத்து மிக நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும். நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக்கண் உகரம்பெறாது அகரம்பெற்று முடியும், ஈம், கம், உரும், மின், பின், கன், வல், தெவ், புள், வள் என எடுத்தோதிய பெயர்களும் தொழிற்பெயர்போல இருவழியும் உகரம்பெற்று வல்லெழுத்து மிகுவனவாம். அவற்றுள் கன் என்னுஞ்சொல் வேற்றுமைக்கண் அகரம் பெற்று வல்லெழுத்து மிகப்பெறும். வல் என்னுஞ் சொல்லின்முன் நாய், பலகை என்பன வருமொழியாய்வரின் அவ்வழி உகரமின்றி அகரம்பெற்று முடியும். வெரிந் என்ற சொல், இறுதி நகரவொற்றும் அச்சொல் பெற்ற அகரமும்கெட வல்லெழுத்து வரும்வழி அவ்வல்லெழுத் தாயினும் அதன் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்தாயினும் மிக்கு முடியும், மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் இறுதி மகரம்கெட வல்லெழுத்து மிக்கு முடியும். இங்ஙனம் மகர வீறுகெட்ட விடத்து வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும் மொழிகளும் சில உள. ஆயிரம் என்பதன்முன் அளவுப்பெயர் வந்து புணருமிடத்து வேற்றுமையிற்போல இறுதி மகரங்கெட்டு வல்லெழுத்து மிகும். இல்லம் என்னும் மரப்பெயர் இறுதி மகரங்கெட்டு மெல்லெழுத்து மிகும். அழன் என்பதன் இறுதிகெட வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும். வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்வரும் யரழ வீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடிவன. தாய் என்னுஞ்சொல்முன் மகன் வினைவரின் வல்லெழுத்து மிகும். ஆர், வெதிர், சார், பீர், குமிழ் என்னுஞ் சொற்கள் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கு முடிவன. வேற்றுமைக்கண் யகர வீற்றுட் சிலவும் சார், பாழ் என்பனவும் வல்லெழுத்தோடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்வனவாம். கீழ் என்னுஞ்சொல் வல்லெழுத்துப்பெற்றும் பெறாதும் உறழும். ஆண், பெண், உமண், முரண், குயின், எகின், தான், பேன், கோன் என்பனவும் நெட்டழுத்தின் பின்வரும் லகார, ளகார வீற்றுப்பெயர்கள் சிலவும் திரியாது இயல்பாவனவாம். தாய் என்னும் பெயரும் அல்வழிக்கண்வரும் யகார வீற்றுப் பெயர்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அல்வழிக் கண்வரும் எல்லாரும், தாம், நாம், யாம், தான் என்பன குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவன. நூறாயிரம், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவற்றோடும் ஏனை உயிர் முதன்மொழிகளோடும் புணரும் ஏழ் என்னும் எண்ணுப்பெயரும், உயிர் முதன் மொழிகளோடும் யகர வகர முதன்மொழிகளோடும் புணரும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களும் குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவனவாம். ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் என்பன அம்சாரியையும், வேற்றுமைக்கண்வரும் ஈம், கம் என்பனவும் கோல் என்பதனோடு புணரும் தாழ் என்னுஞ் சொல்லும், தமிழ் என்னும் சொல்லும் அக்குச்சாரியையும், வெயில், இருள் என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும், மகரவீற்று நாட்பெயர் இகர வீற்று நாட்பெயர்போல ஆன்சாரியையும் அதன்மேல் அத்துச் சாரியையும், செய்யுளிடத்துவரும் விண் என்னுஞ்சொல் வினைச் சொல் வருமொழியாக வருமிடத்து அத்துச்சாரியையும், தனித்தும் அடையடுத்தும் வரும் ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் பிற எண்களோடு புணருமிடத்து அத்துச்சாரியையும் பெறுவன என்பர் ஆசிரியர். எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப்பெயரும், நெடுமுதல் குறுகி முடியுமியல் புடைய தாம், நாம், யாம் என்னும் பெயர்களும், னகர வீற்றுள் தான், யான் என்னும் பெயர்களும் சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியைபெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும், உருபு புணர்ச்சிக்கண் முடிந்தவாறே வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் முடியும்என ஆசிரியர் மாட்டேற்று முறையான் விதிகூறியுள்ளார். எல்லாம் என்னும் விரவுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் இடையே வற்றுச்சாரியையும் இறுதியில் உம்சாரியையும் பெறும். அப்பெயர் அல்வழிக்கண் சாரியை பெறாது. உயர்திணைக்கண் இடையே நம் சாரியையும் இறுதியில் உம்சாரியையும்பெறும். வகர வீற்றுச் சுட்டுப்பெயர் வற்றுச்சாரியைபெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும். ணகர ளகர வீறுகள் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் டகரமாகவும், னகர லகர வீறுகள் றகரமாகவும் திரிவன. எள்ளை யுணர்த்தும் எண் என்னும் பெயரின் ணகரம் அல்வழியிலும் டகர மாகத்திரியும். நெல், செல், கொல், சொல் என்பவற்றின் லகரம் அல்வழியிலும் றகரமாய்த்திரியும். அல்வழிக்கண்வரும் ளகரவீறு திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடியும். வேற்றுமையிற்போல அல்வழியிலும் டகரமாகத்திரியும் ளகர வீறுகள் சிலவுள. மன், சின், ஆன், ஈன், பின், முன் என்பனவும் செயின் என்னும் வினையெச்சமும் அவ்வயின், இவ்வயின், உவ்வயின் எவ்வயின் எனவரும் ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தும் இடைச் சொற்களும் ஆகியவற்றின் னகரம் றகரமாகத்திரியும். மீன் என்பதன் னகரம் றகரமாகத்திரிந்தும் திரியாதும் உறழும். லகர ளகர வீற்றுச்சொற்கள் தகரமுதன்மொழி வருமிடத்து லகர ளகரங்கள் ஆய்தமாகத்திரியும். மெல்லெழுத்து முதன்மொழி வருங்கால் முறையே லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரிவன. மகரவீறு அல்வழிக்கண் வலிவரின் ஏற்றமெல்லெழுத்தாகத் திரியும். அகம் என்னுஞ் சொல்லின்முன் கை என்பது வருமொழியாய்வரின் நிலைமொழியின் நடுவெழுத்தாகிய ககரவுயிர் மெய்கெட மெல்லெழுத்து மிக்கு முடியும். நும் என்பதனை அல்வழிக்கண் கூறுங்கால் நகரவொற்றின்மேல் நின்ற உகரம் கெட அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீ என்றாகி ஓர் இகரம் இடையில்வர இறுதி மகரங்கெட்டு ரகர வொற்றுத் தோன்றி நீயிர் எனத்திரியுமென்பர் தொல்காப்பியர். எனவே நும் என்பதே திரிபில் சொல்லென்றும் நீயிர் என்பது அதன் திரிபென்றுங் கொள்ளுதல்வேண்டும். தேன் என்னுஞ்சொல், வலிவரின் னகரம் றகரமாகத் திரிந்தும் திரியாதும் உறழ்தலும், இறுதி னகரங்கெட்டு வலிமெலி மிகுதலும், மெலிவரின் இறுதிகெட்டும் கெடாதும் உறழ்தலும் பெறும். இறால் என்பது வருமொழியாகவரின் தேன் என்பதன் னகரம் கெட்டுத் தகரம் இரட்டித்து முடியும். சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர் முன்னர்த் தந்தையென்பது வருமொழியாய்வரின், தந்தை யென்பதன் முதலிலுள்ள தகரங்கெட்டு, அதன்மேலேறிய அகரங்கெடாது நிற்ப, நிலைமொழியியற்பெயரிலுள்ள அன்கெட்டு, அங்கு நின்ற மெய்யின்மேல் வருமொழி முதலிலுள்ள அகரம் ஏறிமுடியும். முற்கூறிய இயற்பெயருள் ஆதன், பூதன் என்னும் இருபெயர்களும் வருமொழியாகிய தந்தையென்னும் முறைப்பெயரொடு புணருங்கால் இவ்வியற் பெயர்களின் இறுதிநின்ற அன்கெட எஞ்சிய தகரவொற்றும், தந்தை என்பதில் முன்கூறியபடி தகரங்கெட எஞ்சிய அகரவுயிரும் சேரக்கெட்டு, ஆந்தை, பூந்தை என முடிவனவாம். இப்பெயர்கள் சிறப்புப் பண்படுத்துவருங்கால் அங்ஙனந்திரிதலின்றி இயல்பாவன என்பர். மேற்கூறிய இயற்பெயர்கள் இன்னாற்கு மகன் இன்னான் என்னும் முறையில் ஒட்டி நிற்குங்கால் நிலைமொழிப் பெயரீற்றின் அன்கெட்டு அம்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு. முன் என்னும் சொல்முன் இல் என்னுஞ்சொல் வந்து புணரின் இடையே றகரவொற்றுத் தோன்றி முன்றில் எனமுடிதல் தொன்று தொட்டு மருவிவழங்கும் இலக்கண முடிபாம். பொன் என்னுஞ்சொல், ஈற்றில் னகரம்கெட லகரவுயிர்மெய்யும் மகர மெய்யும்பெற்றுப் பொலம் எனத் திரிந்துவழங்கும். இல் என்னும் சொல், வீட்டை யுணர்த்தாது இல்லாமையென்னும் பொருளை யுணர்த்துங்கால், ஐகாரம் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகுதலும், மிகாமையும், இயல்பாதலும், ஆகாரம்பெற்று வல்லெழுத்து மிகுதலும் ஆகிய நான்குமுடிபினை யுடையதாகும். 9. குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகரவீறு நின்று வருமொழியோடு புணரும் இயல் பினை யுணர்த்துவது இவ்வியலாகும். நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழியீற்றும் குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். தொடர்மொழியீற்றுக் குற்றுகரத்தை அயலிலுள்ள எழுத்து வகையால் உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்தாகப்பகுத்து, அவற்றொடு நெட்டெழுத்தின் பின்வருங் குற்றுகரத்தையுங் கூட்டி அறுவகைப்படுத்து விளக்குகின்றார். யரழமுன்னர்க் கசதபஙஞநம ஈரொற்றாகிவருங் குற்றுகரங்க ள் ஒருவாற்றான் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் குற்றியலுகரத்தையடுத்து நேரே தொடர்ந்தன அல்லவாதலின் அவை இடைத்தொடராகக் கொள்ளப்படாவென்றும், ஆறீற்றுக் குற்றியலுகரமும் இருவழியிலும் கெடாது நிறைந்தே நிற்குமென்றும், வன்றொடர்க்குற்றியலுகரம் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து முன்கூறிய (அரைமாத்திரையினுங் குறுகும்) இயல்பில் நிற்றலுமுரித்தென்றும், குற்றியலுகர வீற்றின்முன் யகர முதன்மொழி வருமிடத்து ஈற்றிற் குற்றியலுகரங்கெட அங்கு ஓர் இகரம் வந்து குறுகி நிற்குமென்றும் இவ்வியலின் முதல் ஐந்து சூத்திரத்தானும் குற்றியலுகரத்தியல் பினை ஆசிரியர் பொதுவகையாற் கூறிப்போந்தார். 6-முதல் 17-வரையுள்ள சூத்திரங்களால் குற்றுகரவீற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறினார். 18-முதல் குற்றுகரவீற்று அல்வழிப்புணர்ச்சியினைத் தொடங்கிக் கூறுகின்றார். உண்மைத் தன்மையை யுணர்த்தும் உண்டு என்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழிவரின் இறுதிநின்ற உகரம் மெய் யொடுங்கெட ணகரம் ளகரமாகத் திரியுமென்றும், குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற் புணருமிடத்து ஏயென்னுஞ்சாரியை இடையே வந்துமுடியு மென்றும், குற்றுகரவீற்றுப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணருமிடத்து இறுதியுகரம் மெய்யொடுங் கெடுமென்றும் அவ்வழி தெற்கு என்பதன் றகரம் னகரமாகத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். குற்றுகர வீற்று எண்ணுப் பெயரியல்பினை 28-ஆம் சூத்திர முதலாகத் தொடங்கிக் கூறுகின்றார். பத்து என்னும் எண்ணின் முன் ஒன்றுமுதல் எட்டுவரையுள்ள எண்களும் ஆயிரமென்னும் எண்ணும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வந்து புணரு முறையினை 28-முதல் 30-வரையுள்ள சூத்திரங்கள் உணர்த்துவன ஒன்று முதல் எட்டுவரையுள்ள குற்றுகர வீற்று எண்ணும் பெயர்களின்முன் பத்து வந்து புணர்தலை 31-முதல் 38-வரையுள்ள சூத்திரங்கள் குறிப்பிடுவன. ஒன்பது என்னும் சொல்லின்முன் பத்து வந்து புணருங்கால் நிலைமொழியாகிய ஒன்பதில் ஒகரத்திற்கு மேலாகத் தகர மெய்தோன்றித் தொன்பது என்றாகிப் பது கெட்டு னகரம் ணகரமாகத் திரிந்து இரட்டித்துத் தொண்ண் என நிற்குமென்றும், வருமொழியாகிய பஃதென்பதில் பகரவுயிர்மெய்யும் ஆய்தமும்கெட்டு ஊகாரம் தோன்றி இறுதியிலுள்ள து என்பதன் தகரம் றகரமாகத் திரிந்து ஊறு என்றாகித் தொண்ணுறு என முடியுமென்றும், இவ்வியல் 39-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைப்பர். மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப்பெயர்களோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்து புணரு முறையினை 40-முதல் 53-வரையுள்ள சூத்திரங்களாலும், நூறென்னுஞ்சொல் வருமொழியாய் வந்து புணர்வதனை 54, 55, 56, 57-ஆம் சூத்திரங்களாலும், ஆயிரம் என்னும் எண் தனித்தும் நூறென்னும் அடையடுத்தும் புணர்தலை 58-முதல் 65-வரையுள்ள சூத்திரங்களாலும் கூறுவர் ஆசிரியர். ஒன்பது என்னும் எண்ணின்முன் நூறு என்னும் எண் வந்துபுணரின் முற்கூறியவாறு நிலைமொழியாய் நின்ற ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்தின் முன்னே தகரமெய் ஒன்று தோன்றித் தொன்பது என்றாகிப் பதுகெட்டு னகரமெய் ளகர மெய்யாக இரட்டித்துத் தொள்ள் என நிற்குமென்றும், வருமொழியாகிய நூறென்பதன் முதலில் நின்ற நகரமெய் கெட அம்மெய்யின் மேலேறிய ஊகாரம் ஆகாரமாகத்திரிந்து அதனை யடுத்து இகரவுயிரும் ரகரவுயிர் மெய்யும் இடையேதோன்றி ஈற்றிலுள்ள றகர வுகரங்கெட்டு மகரமெய்தோன்றி ஆயிரம் என்றாகித் தொள்ளாயிரம் என முடியுமென்றும் 57-ஆம் சூத்திரத்தால் தொல்காப்பியனார் விரித்துக்கூறியுள்ளார். தொண்ணுறு, தொள்ளாயிரம் என்னும் புணர்மொழிகளுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் புணர்ச்சி முறைகள் வலிந்து கூறுவனவாகவே அமைந்துள்ளன வென்றும் ஒன்பது என்னும் பொருள்படத் தொல்காப்பியரே தொண்டு என்னும் எண்ணுப்பெயரைத் தம் நூலில் ஆண்டிருத்தலால் தொண்டு+பத்து = தொண்ணுறு என்றும், தொண்டு+ஆயிரம் = தொள்ளாயிரம் என்றும் நிலைமொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறுவதே மொழியியல்புக்கு ஒத்ததாகுமென்றும் பரிதிமாற்கலைஞர் கூறும் கொள்கை இங்கு சிந்திக்கத் தக்கதாகும். நூறு என்பது நிலைமொழியாக அதன் முன் ஒன்று முதல் ஒன்பதும் அவையூர் பத்தும் அளவும் நிறையும் வந்து புணரும் முறையினை 66-முதல் 68-வரையுள்ள சூத்திரங்கள் விளக்கு வனவாம். ஓன்று முதல் எட்டினையூர்ந்த பஃதென்னும் எண்ணுப் பெயருடன் ஒன்று முதல் ஒன்பதெண்களும் ஆயிரமும் அளவும் நிறையும் புணரு முறையினை 69, 70, 71-ஆம் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட் பெயர்கள் புணருமியல்பினை 72, 73-ஆம் சூத்திரங்களாலும் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எண்களின்முன் அளவு, நிறை, எண் என்பவற்றுக்குரிய மா என்னுஞ்சொல் புணர்தலை 74-ஆம் சூத்திரத்தாலும் ஆசிரியர் குறிப்பிடுவர். எண்ணுப்பெயர் களுள் மிக்க எண்ணோடு குறைந்த எண் வந்து புணர்தலை உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்க எண் வருதலைப் பண்புத் தொகையாகவும்கொண்டு ஆசிரியர் விதி கூறியுள்ளமை இவண் கருதற்குரியதாகும். லகார னகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுவது 75-ஆம் சூத்திரம். இவ் வதிகாரத்து நிலைமொழி வருமொழிசெய்து புணர்க்கப்படா மொழிகள் இவையெனத் தொகுத்துரைப்பது 76-ஆம் சூத்திரமாகும். இவ்வியலின் இறுதியிலுள்ள 77-ஆம் சூத்திரம் எழுத்ததிகாரத்தின் புறனடையாகும். சொல்லதிகாரம் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என மேற்பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய ஆசிரியர் இப்படலத்தால் சொல்லிலக்கணங் கூறுகின்றார். அதனால் இது சொல்லதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. சொல்லாவது முற்கூடிய எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாம். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினாலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடியொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாம் இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தினாலக்கப்பட்டு இருதிணைப் பொருள்களையும் அறிவிக்கும் ஓசை யென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிறபொருளை யுணர்த்தியவழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் உரையாசிரியர் கூறுவர். ஒருவர் பொருளை உணர்தற்கும் உணர்த்தற்கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதியுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளையுணர்த்துவானொருவன் சொல்லின் துணைகொண்டன்றிப் பொருளை யறிவுறுத்தலா காமையின் அவனது தொழிலைச் சொல்லாகிய கருவிமேலேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தாவாகக் கூறுவர் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர் இருதிணை, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறு வகைத் தொகை, மூன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்தினாரென்பர் இளம்பூரணர். இவ்வெட்டினோடு சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள் கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங்கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந் துணர்த்தினா ரென்பர் நச்சினார்க்கினியர். சொல் தனிமொழி, தொடர்மொழி என இரு வகைப்படும். மொழிகள் யாங்கணுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக்கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்துநிற்றலுண்டு. அதனால் தனிமொழியென்ற பிரிவும் கொள்ளப்படுவதாயிற்று. தனிமொழி பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கு ஒரு பயன்பட நிற்பதன்றாம். கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர்மொழிகளேயாம். ஆகவே தொடர்மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம் முறையினை யுளத்துட்கொண்டு இப்படலத்துள் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி அத்தொடர்மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக்கணங்களைப் பின்னர் உணர்த்துவர் ஆசிரியர். சொற்கள் ஒன்றோடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும், தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகை யானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்றாற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது பயனிலைவகை யெனப்படும். வேற்றுமை யுருபும் உவம வுருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச்சொல்லீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல்லும் மறைந்து நிற்கத்தொடரும் சொல்லினது தொடர்ச்சி தொகை நிலைவகை, யெனப்படும். பொருள்களை ஒன்றோடொன்று சேர்த்து எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி எண்ணுநிலைவகை யெனப்படும். இவ்வாறு மூவகையால் தொடரும் தொடர்மொழிகளெல்லா வற்றையும் பொருள்நிலைமை நோக்கி அல்வழித் தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இரு வகையாகப் பகுத்துரைப்பர் தொல்லாசிரியர். பொருளையிடமாகக்கொண்டு நிகழ்வது சொல்லாகும் சொல்லிலக்கணங்கூறக் கருதிய ஆசிரியர் அச்சொல் நிகழ்ச்சிக்கு நிலைக்களனாகிய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை யெனவும் அஃறிணையெனவும் இருதிறனாக வரையறுத்து, அப்பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திணைச் சொல்லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இரு வகையாகப் பகுத்துரைத்தார். திணையென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனாயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் மக்கட் குலத்தாரை உயர்திணையெனச் சிறப்பித்துஉயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சி யடைதற்குக் காரணமாகிய இவ்வொழுக்க வுணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களை உயர்திணையெனத் தனிச் சிறப்புடைய தொகுதியாகவும், நன்றுந்தீதும் பகுத்துணர்ந்தொழுகும் நல்லறிவு வாய்க்கப்பெறாத மற்றைய வுயிர்களையும் உயிரல் பொருள் களையும் ஒழுக்க வுணர்ச்சிக்குரியவல்லாத அஃறிணை யெனச் சிறப்பில்தொகுதியாகவும் முன்னைத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ஙனம் உலகப் பொருள்களெல்லா வற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள் வேறுபாட்டினை விளங்க அறிந்து கொள்ளுதற்குரிய சொல்லமைப் பினையுடையதாக நம் முன்னோர் தம் தாய்மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத் திணைபால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். சொல்லிலக்கண வகை முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியனார், சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி, தனி மொழியென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல் வழித்தொடர், வேற்றுமைத்தொடர் என இரு வகைப்படுத்து, அவ்விருவகைத்தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலால் அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை, அஃறிணையென இரு வகைப்படுத்தார். அவற்றுள் உயர்திணையுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ் சொல், ஒருத்தியை யறியுஞ்சொல், பலரை யறியுஞ்சொல் என மூவகைப்படுத்து, அஃறிணை யுணர்த்துஞ் சொற்களை ஒன்றனை யறியுஞ்சொல், பலவற்றையறியுஞ்சொல் என இருவகைப்படுத்து, அமைக்கவேண்டுஞ் சொற்களை யெடுத் தோதினார். அதன்பின் வேற்றுமைத்தொடர் கூறுவார் மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமையுணர்த்தி, அதன்பின் அவ்வேற்றுமைக்கண் மயங்குமாறுணர்த்தி, அதன்பின் எட்டாவதாகிய விளிவேற்றுமை யுணர்த்தி, அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றின் பாகுபாடும் உணர்த்தி, அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்துகின்றார். எழுத்ததிகாரத்துள் எழுவாய் வேற்றுமையையும் அதன் திரிபாகிய விளிவேற்றுமை யையும் அல்வழிக்கண்ணே முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தே வேற்றுமைகளுடன் இயைத்து இலக்கணங் கூறுகின்றார். இச்சொல்லதிகாரம் ஒன்பது இயல்களால் இயன்றதாகும். கிளவியாக்கத்துள் அல்வழித் தொடரும், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் மூன்றியல்களிலும். வேற்றுமைத் தொடரும், பெயரியலில் பெயரிலக்கணமும், வினையியலில் வினையிலக்கணமும், இடையியலில் இடைச்சொல் லிலக்கணமும், உரியியலில் உரிச்சொல்லிலக்கணமும், எச்சவியலுள் எஞ்சியன பிறவும் உணர்த்தப்பட்டுள்ளன. இவ்வகையினால் இவ்வதிகாரத்தின் இயல்களும் ஒன்பதாயின. கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாரென்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்றரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ஙனம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் கக-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், வேற்றுமைதாமே ஏழெனமொழிப விளிகொள்வதன்கண் விளியோடெட்டே என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் யாதனுருபிற் கூறிற்றாயினும் என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே கருமமல்லாச் சார்பென் கிளவி (1) என்பது முதல் அச்சக் கிளவிக்கு (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி அன்னபிறவும் (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட காப்பின் ஒப்பின் எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல் காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும் என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலை களைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடையவேறொ ரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க என நச்சினார்க்கினியரும், முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப்பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம் எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத் தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் பொற்றொடி யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். பொற்றொடி யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகுபெயராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினார்க்கினியர் இருபெயரொட்டென்பதற்கு அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி பொற்றொடி என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங்காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினாப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல்: இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல்: லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல்: ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல்: இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாக வுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன வென்றும் கூறுவர் ஆசிரியர். பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இத பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச் சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்டதென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கம் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை அஃறிணையியற்பெயர் எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவயும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்கமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையம் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலுமாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர்திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களையுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே (தொல்-சொல். 181) ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார் எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனைபொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட அவற்றுள் ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும் என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பையுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபேலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழல் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டு வனவற்றை Éidba‹W« இவற்றைக் குறிப்பாக உணர்த்துவன வற்றைக் குறிப்பு என்றும் கூறுவர், தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகை. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள இறப்பின் நிகழ்வின், எவ்வயின் வினையும், அவைதாம் தத்தங்கிளவி எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன: உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண் மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபடாது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைச்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன: ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்பச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன: முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றொருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய் செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையேனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. வினை செயல் மருங்கிற் காலமொடு வருந என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும் என்றார் சேனாவரையர். உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஔகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுடையனவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென் பாருமுளரென்றும் கூறுவர் சேனாவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனாமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஓதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள்யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றனவென்றும், தொழிலாவது வினையங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்கு மென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப் பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர். சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்புமாகிய சொற்களுக் கொல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென்பதும் குறைச் சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலனாதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத்தோதிப் பொருளுணர்த்தப்படு மென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினார் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களை எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். மேற்சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு மெனவும் மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்ட வற்றோடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் வெளிப்பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொளுணர்த்துங்கால் அங்ஙனம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானாயின் அவ்வினா எல்லையின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாணாக்கன் உணர்தற்குரிய வழிமுறை யறிந்து உணர்த்தவல்லனாயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரிபின்றி விளங்குமெனவும், சொற்பொருளை உணர்தற்குரிய வாயில் இதனை யுணர்வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்றானும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், ஆவனுக்குப் பைருளுணர்த்தும் வழியில்லை யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொருளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்றாவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்றா என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலை யென்பார் எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியில் பின்றே என்றார். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நின்றாங்கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தா வென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச் சொல்லிடத்தில்லையேனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்தக்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள்ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப் பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த் தாமையின் பிரிதலும் பிரியாமையும் அதற்கில்லையென்பர் நச்சினார்க்கினியர். எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமையாகிய பொருளாகவோ பெரும்பான்மை யாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள இறப்பின் நிகழ்வின் (31) எவ்வயின் வினையும், (32) அவைதாந்தத்தங்கிளவி (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்றாம். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்றார் 16-முதல் 25-வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்றார். 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்றார். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்றார். 34-முதல் 45-வரை மேல் வினையியலுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்றார். 46- முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபுவழுக்காத்தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கணமும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள்ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழிபும், புதியன புகுதலும், தலைக் குறை, இடைக்குறை; கடைக்குறையாகிய விகாரமும், வேறு படுத்தலும் வேறு பகுக்கப்படுதலுமாகிய சொல்வகையுள் இடைச் சொல் லெல்லாம் பொருளை வேறுபடுத்தும் சொல்லா தலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறு படுத்துஞ் சொல்லாதலும், வினையெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும் குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச்சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப்படுகின்றன. இவ்வியலிறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத்திற்குப் புறனடையாக அமைந்துளது. செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச்சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொதுவாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தாலாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால்வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென்பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டும் மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூறாமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத்தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உளவென்பது வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத்தானமைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ் திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண் டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலாமையின் வடவெழுத்தொரீ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வடசொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்கொள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுதலால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழி யொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனாதல் காண்க. செந்தமிழ் நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணாமையானும் வையையாற்றின் தெற்காசிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காரிய காஞ்சியும் ஆன்னோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் தமிழ்கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தென்குமரியெனத் தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும் (எச்ச-ச) என அவ்வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்ற தொடர்க்குச் செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும் எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகவும் கூறுப. தென்பாண்டிகுட்டம் எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே. இப்பன்னிரண்டின்வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப் படுமென்றார் தொல்காப்பியனார். பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளைமறிபாப்புப் பொருள் கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னொருசொல் வருவிக்க வேண்டுதலின் அது பிரிநிலைவினையே என்னுஞ் சூத்திரத்துளடங்குமென்றுங் கூறுவர் தெய்வச்சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபாடது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் எனவும் செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும் எனவும் உருபுதொக வருதலும் எனவும் மெய்யுருபுதொகா விறுதியான எனவும் பண்புதொக வரூஉங்கிளவியானும் எனவும் உம்மைதொக்க பெயர்வயினானும் எனவும் வேற்றுமை தொக்க பெயர்வயிறானும் எனவும் உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத்தாயிற்று என நச்சினார்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக்காவாய்ச் செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்றாயின எனக் காரணங் கூறுவர் உரையாசிரியர். பின் பிரிநிலை வினையே பெயரே (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுதலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ்சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவையேழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சமென்றும், தொடரா யெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனாகும். பொருளதிகாரம் மேல் எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் உணர்த்திய ஆசிரியர், அவ்விருவகை யிலக்கணங்களையுங் கருவியாகக் கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளுதற்குரிய பொருள்நெறி மரபினை இவ்வதிகாரத்தில் வகுத்து விளக்குகின்றார். அதனால் இது பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வுலகிலுள்ள காட்சிப்பொருள் கருத்துப்பொருள் ஆகிய எல்லாவற்றையும் நன்காராய்ந்து அவற்றை முதல், கரு, உரி யென மூவகைப்படுத்துணர்த்தி, இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறையினை வகுத்துரைப்பது பொருளிலக்கண மெனப்படும் இப்பகுதி தமிழுக்கே சிறப்புரிமை யுடையதாகும். நிலமுங் காலமும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப்படைப் பொருள்கள். எனவே அவை முதற் பொருளெனப் பட்டன. நிலமெனவே நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றுக்குக் காரணமாகிய ஆகாயமும் அடங்கும். காலமாவது உலக நிகழ்ச்சிக்குத் துணையாய் முன்னும் பின்னும் நடுவுமாகி என்றுமுள்ளதோர் அருவப்பொருள் அது ஞாயிறு, திங்கள் முதலிய அளவைகளால் காலை, நண்பகல், எற்பாடு, யாமம், வைகறையென அறுவகைச் சிறு பொழுதுகளாகவும்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும் பொழுதுகளாகவும்; மாத்திரை, நாழிகை, நாள், திங்கள், ஆண்டு முதலிய கூறுகளாகவும் பகுக்கப்படும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின் சார்பினாலுண்டாகும் புல் முதல் மக்களீறாக வுள்ள உயிர்ப் பொருள்களும் ஏனை உயிரல் பொருள்களும் கருப்பொருள்களாம். இவை முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலின் கருப்பொருளெனப் பட்டன. அறஞ்செய்தலும் பொருளீட்டலும் இன்பம் நுகர்தலுமாகிய ஒழுகலாறுகள் உரிப் பொருள்களாம். இவை மக்களுக்கே யுரிய பொருள்களாதலின் உரிப்பொருளெனப் பட்டன. கணவனும் மனைவியும் அன்பினாற் கலந்து வாழுங் குடும்ப வாழ்வினை அகமென்றும், இவ்வாறு பல்லாயிரங் குடும்பங்கள் இகலின்றி ஒத்து வாழ்வதற்கு அரணாகிய அரசியல் வாழ்வினைப் புறமென்றும் கூறுதல் தமிழ்மரபாகும். அகமாவது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடி நுகரும் போக நுகர்ச்சியாகலான் அதனாலாய பயன் அதனைத் துய்த்த அவ்விருவர் உள்ளத்திற்கே புலனாதலின் அதனை அகம் என்றார். புறப் பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாதலால் அவற்றாலாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறமென்றார். இவ்வாறு உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல், கரு, உரி யென மூன்றாகப் பகுத்து அவற்றை அகம், புறமென இருவகையாக வகுத்து விளக்குதல் பண்டைத் தமிழர் கண்டுணர்ந்த பொருள்நூற் றுணிபாதலின் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய ஆசிரியர் தொல்காப்பியனாரும் முன்னைத் தமிழாசிரியர் கூறிய முறையே பொருளிலக்கண வரம்பினை இவ்வதிகாரத்து விரித்துணர்த்துகின்றார். அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத் தோருங் கூறுகின்ற பொருள்கள் யாவும் முதல், கரு, உரியென்னும் இம்மூன்றனுள் உரிப்பொருளாய் அடங்குமென்றும், தொல் காப்பியமாகிய இந்நூலகத்துக் காமப்பகுதியும், வீரப்பகுதியும் விரித்துக் கூறப்பட்டன, ஏனைய தொகுத்துரைக்கப்பட்டன வென்றும், இன்பங் காரணமாகப் பொருள் தேடுவராதலானும் பொருளாலே அறஞ் செய்வராகலானும் இந்நூலாசிரியர் (தொல்காப்பியனார்) இன்பமும் பொருளும் அறமுமென ஓதினாரென்றும் இளம்பூரணர் கூறுகின்றார். பொருளதிகாரப் பாகுபாடு இவ்வதிகாரத்துள் முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை யீறாக அகப்பொரு ளிலக்கண முணர்த்தினார், அதன்பின் புறப்பொருட் பகுதியாகிய வெட்சி முதல் பாடாண்டிணை யீறாகப் புறப் பொருளிலக்கண முணர்த்தனார். அதன்பின் அகப்பொருட் பகுதியாகிய களவு, கற்பு என்னும் இருவகை யொழுகலாறுகளையும் விரித்துக் கூறினார். அதன்பின் அகமும் புறமுமாகிய இவ்வொழுகலாறு களைப்பற்றி வரும் பொருளியல்பு உணர்த்தினார். அதன்பின் அவ்விரு பொருட்கண்ணும் குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தினார். பின்னர் வினை, பயன், மெய், உரு என்னும் இவைபற்றி உவமிக்கப்படும் உவமையின் இயல்புரைத்தார். அதன்பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துரைத்தார். அதனையடுத்து வழக்கிலக் கணமாக எஞ்சிநின்ற மரபிலக்கணம் உணர்த்தினார். இம்முறையானே இப்பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களையுடையதாயிற்று. அகத்திணை, புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன்கண் கைக்கிளைமுதல் பெருந்திணை யிறுதியாக ஏழும் வெட்சிமுதல் பாடாண்டிணை யிறுதியாக ஏழும் ஆகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம், வஞ்சி வெண்பா, கலி, பரிபாடல், மருட்பா என அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், என நால்வகை நிலன் இயற்றி, சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிடமும் செய்யுளிடமுமென இரண்டிடத்தான் ஆராய்ந்தார். ஆதலின் இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தாரென்பாரும், இவ்வெட்டுடன் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇயபெயரும் திணைநிலப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டு வகை மெய்ப்பாடும் நால்வகை உவமமும் ஐவகை மரபும் கூறுதலின் எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தா ரென்பாரும் என இருதிறத்தர் ஆசிரியர். அகத்திணையியல் அகத்திணைக்கெல்லாம் பொதுவிலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. ஒத்த அன்பினால் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்த தெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகமென்றார். அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர், இதனையொழிந்தன அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும் இவை இவ்வாறிருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவே படும் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகத்திணையியற் சூத்திரங்களை 58-ஆக இளம்பூரணரும் 54-ஆக நச்சினார்க்கினிரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எழுவகை அகத்திணையுள் உரிமை வகையான் நிலம்பெறு வன முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன. அந்நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை, பெருந்திணை, பாலை யென்பன. அவற்றுட் பாலைத்திணை நடுவணது எனப்பட்டு நால்வகை யொழுக்கமும் நிகழுங்கால் அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய் நிற்கும். முதல், கரு, உரிப் பொருளும் உவமங்களும் மரபும் இத்தன்மையவென்பதும் இவைபோன்ற அகத்திணைக்குரிய பொதுப் பொருண்மைகளும் இவ்வியலில் உணர்த்தப்படுகின்றன. அகத்திணைக்குரிய சிறப்பிலக்கணம் களவியல், கற்பியல், பொருளியல் முதலாகப் பின்வரும் இயல்களில் விரித்துரைக்கப்படும். கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகச் சொல்லப்படும் அகத்திணை யேழனுள் நடுவே வைத்து எண்ணப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தலென்னும் ஐந்தையும் ஐந்திணையென ஒன்றாக அடக்கி, கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணையென மூவகையாகப் பகுத்து விளக்குவர் ஆசிரியர். ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கை யுடையராயொழுக, மற்றவர் அவரது அன்பின் திறத்தை யுணர்ந்து கொள்ள முடியாத நிலை ஒருபக்கத்து உறவு. ஆதலின் கைக்கிளையெனப்படும். கை-பக்கம். கிளை-உறவு. கைக்கிளை யென்பது ஒருதலைக் காமம். ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் நிலை பெருந்திணையெனப்படும். இத்தகைய உளம் பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் இதற்குப் பெருந்திணையெனப் பெயரிட்டனர் முன்னையோர். பெருந்திணை - உலகிற் பெரும்பான்மையாக நிகழும் ஒழுகலாறு. பல பிறவிகள் தோறும் கணவனும் மனைவியுமாக ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையாரிருவர் வேறுவேறிடங்களிற் பிறந்து வளர்ந்தராயினும் நல்லூழின் செயலால் ஒரிடத்தெதிர்ப் பட்டு நெஞ்சு கலந்து அன்பினால் அளவளாவுதலும், அவ்விருவருள் கணவன் உலகியற் கடமை கருதிச் சிலநாள் மனைவியைப் பிரிந்து சேறலும், மனைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் பிரிந்த கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் அவள் ஆற்றாமை மிக்கு இரங்குதலும், பின் அவன் வந்தபோது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக ஒத்த அன்புடையா ரிருவரது ஒழுகலாறு விரித்து விளக்கப் பெறுதலின் அஃது ஐந்திணையெனப் பெயர் பெறுவதாயிற்று. இவ்வைந்திணையொழுகலாறுகள் எல்லா நிலத்தும் எல்லாக் காலத்தும் பொதுவாக நிகழ்தற்குரியனவே, எனினும் இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புரிமையுடைய நிலமும் பொழுதும் இவையெனப் பண்டைத் தமிழாசிரியர் வரம்பு செய்து இலக்கணம் வகுத்துள்ளார்கள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி. செவ்வேள் எழுந்தருளிய மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்ப்பருவமும் மார்கழியுந் தையுமாகிய பின்பனிப் பருவமும் இவற்றின் நள்ளிரவும் இதற்குரிய காலமாகும். இந்நிலமுங் காலமுமாகிய முதற் பொருள் காரணமாக, இவற்றிற் கருக்கொண்டு தோன்றிய கருப்பொருள் நிகழ்ச்சிகள் துணையாக, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவருள்ளத்திலும் புணர்தலுணர்வு தோன்றுமென்ப. இவ்வாறே மாயோன் எழுந்தருளிய காடுறை யுலகமும் கார்காலமும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருள்களும் ஏதுவாக இருத்தலுணர்வும், வருணன்மேய பெருமணற் பகுதியாகிய கடற்பரப்பும் ஞாயிறு மறையும் பொழுதாகிய எற்பாடும் அங்குத் தோன்றுங் கருப்பொருளும் ஏதுவாக இரங்கலுணர்வும், வேந்தன் ஆட்சிபுரியும் வயல் சார்ந்த நிலமும் வைகறை விடியலும் அங்குள்ள கருப்பொருள்களும் காரணமாக ஊடலுணர்வும், வேனிற் காலத்து நண்பகற் பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் நல்லியல்பிழந்து பாலையாய் மாறிய நடத்தற்கரிய வழிகளும் அங்குள்ள கருப்பொருள்களுந் துணையாகப் பிரிதலுணர்வும் மேற்பட்டுத் தோன்றுமெனத் தமிழ்ப்பொருளிலக்கண ஆசிரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமது கூர்ந்த நுண்ணுணர்வால் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறு தொல்லாசிரியர் கண்டுணர்த்திய முதற்பொருள் கருப்பொருள்-உரிப்பொருள் என்பவற்றின் இயல்புகள், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளின் சார்பாலும் அச்சூழலிற் றோன்றிய கருப்பொருள்களின் துணையாலும் மக்களின் மனவுணர்வாகிய உரிப்பொருளொழுகலாறுகள் மாண்புற்றுச் சிறத்தலை இனிது விளக்குவனவாம். மக்களது உணர்வு அவர்கள் பிறந்து வாழும் இடத்தின் வன்மை மென்மை வெப்பதட்பம் முதலிய நிலத்தியல்புக் கேற்பவும் காலவியல்புக் கேற்பவும் வேறுபடும் நீர்மையதென்பதனை இக்கால அறிவியல் நூலாரும் ஏற்று வற்புறுத்துவர். நீரானது தான் சேர்ந்த நிலத்தின் தன்மையினாலே நிறம் சுவை முதலிய பண்புகள் மாறுபடுதலை தாம் வெளிப்படையாக அறிகின்றோம். நீரேயன்றி மக்களது மன நீர்மையும் நிலத்திற்கும் காலத்திற்கும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருளாகிய சுற்றுச்சார்பிற்கும் ஏற்ப மாறுபடுமென்பதனைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மன நூற் பயிற்சியால் நன்கு தெளிந்திருந்தார்கள். நிலத்தியல்பால் மக்களது மனநீர்மை திரிதலும் மக்களது மனத்தியல்பால் நிலத்தியல்பு மாறுபடுதலும் வித்தும் மரமும்போன்று ஒன்றற்கொன்று காரணகாரியங்களாம். நிலம் முதலிய புறப்பொருள்களின் தொடர்பால் மக்களது மனத்தகத்தே அன்பென்னும் உயிர்ப்பண்பு வளர்ந்து சிறத்தல் அகத்திணை வளர்ச்சியாகும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் வாய்மொழிக்கேற்ப அமைந்த மக்களது மனத்தின் ஆற்றலால், புறப்பொருளாகிய நிலத்தியல்பு வளர்ந்து சிறத்தல் புறத்திணை வளர்ச்சியாகும். இவ்விருவகை வளர்ச்சியினையும் முறையே அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பவற்றிலும் புறத்திணையியலிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணர வைத்துள்ளார். முதல், கரு, உரி யென்னும் மூவகைப் பொருளையுந் திணை யென்ற சொல்லால் வழங்குவர் ஆசிரியர். காட்டில் முல்லையும் மலையிற் குறிஞ்சியும் வயலருகே மருதமும் கடலருகே நெய்தலும் பெருக வளர்தல்பற்றி அந்நிலங்களை முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பூக்களாற் பெயரிட்டு வழங்கினர். பாலை யென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம்பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டார். கைக்கிளை பெருந்திணை யென்பனவற்றுக்கு நிலமும் காலமும் பகுத்தோதா மையின் பிறிதோர் காரணம்பற்றிப் பெயரிட்டார். காடும் மலையும் ஊருங் கடலுமாகிய நானிலப் பகுதிகளும் அவற்றின் திரிபாகிய பாலையும், தம்பாற் சிறந்து வளரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை யென்னும் பூக்களாற் பெயர் பெறுதலால் அவ்வந் நிலத்திற்குச் சிறந்தியைந்த இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என அவ்வந் நிலத்திற்குரிய பூவின்பெயர்களே கொள்வனவாயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன முறையே இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல் என்னும் ஒழுக்கத்தைக் குறித்த பெயர்களென்றும் இவ்வொழுக்கத்தின் பெயர்களே இவைநிகழும் நிலத்திற்மாயின வென்றுங் கருதுவர் நச்சினார்க்கினியர். அவ்வந்நிலங்களிற் சிறப்பாக வளரும் பூவின் பெயர்களே அவை தோன்றி வளரும் நிலத்திற்கும் அந்நிலத்திற் சிறப்புரிமையுடையதாய் நிகழும் ஒழுக்கத்திற்கும் ஆகு பெயராய் வழங்கின எனக் கொள்வதே பொருத்தமுடையதாகும். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றியனவாதலாலும் மகளிர், கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல் லிருந்து நல்லறஞ் செய்தலே முல்லையாதலாலும் அது முற்கூறப் பட்டது. புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதத்திற்குரிய பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவின்கண் நிகழ்வது இரங்கலாகிய நெய்தலாதலின் நெய்தலை ஈற்றின்கண் வைத்தார். என இவ்வாறு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறைக்குக் காரணங் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறே முல்லைக்குக் காரும் மாலையும் குறிஞ்சிக்குக் கூதிர்யாமமும், மருதத்திற்கு வைகறை விடியலும், நெய்தலுக்கு எற்பாடும், பாலைக்கு நண்பகலும் வேனிலும் சிறந்தனவாதற்கு அவ்வாசிரியர் உய்த்துணர்ந்து கூறுங் காரணங்கள் உணர்ந்து மகிழத்தக்கனவாம். குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத் தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும். முல்லையுங் குறிஞ்சியும் முறைமை யிற்றிரிந்து, நல்லியில்பிழந்து, நடுங்குதுயருத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்காலை என இளங்கோவடிகள் கூறுதலால் இவ்வழக்கின் உண்மை துணியப்படும். இளங்கோ வடிகளுக்கு நெடுங்காலம் முற்பட்டவராகிய ஆசிரியர் தொல் காப்பியனார் காலத்துப் பாலையென்னுஞ்சொல் பிரிவொழுக்க மாகிய திணையைக் குறித்து வழங்கியதேயன்றி நிலத்தைக்குறித்து வழங்கவில்லை. அவர் காலத்துக் காடுறையுலகமும் மைவரை யுலகமும் தீம்புனலுலகமும் பெருமணலுலகமும் என இவ்வுலகத்தை நான்கு நிலமாகப் பிரித்துரைக்கும் வழக்கமே நிலவியதென்பது இவ்வியல் ரு-ஆம் சூத்திரத்தால் இனிது புலனாம். தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர் எனக் களவியலுரையாசிரியர் கூறுங் கூற்று இதனை வலியுறுத்தல் காணலாம். காலிற்பிரிவு கலத்திற்பிரிவு என்னும் இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றுதலும் பாலைத் திணைக்கு ஏற்புடையதாகும். ஐந்திணையொழுக்கங்கள் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய நிலத்தினுங் காலத்தினும் நிகழ்வதுடன் பிற நிலங்களிலும் காலங்களிலும் கலந்து நிற்றல் விலக்கப்படாது. அங்ஙனம் கலக்குங்கால் இரண்டு நிலம் ஒருங்கு நிற்றலில்லை. உரிப்பொருளல்லாத கருப்பொருளும் காலமுதற் பொருளும் மற்றைத் திணைகளிற் சேர நிற்றலுண்டு. தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துக் கொண்டு பெயர்தலும், தலைமகளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திலே தடுத்து நிறுத்துதலால் தலைவனைப் பிரிந்த தலைவி இரங்குதலுமாகிய இருவகை யொழுக்கங்களும் இடைச்சுரமாகிய ஓரிடத்திலேயே நிகழ்தலுண்டு. இவ்வாறே தலைவன் தலைவியை யெதிர்ப்படும் முதற்காட்சியும் அக்காட்சிக்குப்பின் தலைமகளுளக் குறிப்பறிந்து கூடும் உள்ளப்புணர்ச்சியும் ஓரிடத்தே நிகழ்வனவாம். முதற்பொருள் நிலமுங் காலமுமாகிய இவ்விருவகையாலும் உரிப்பொருளுக்கு இடனாய் நிற்பதாகும். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ்வகை என்பவற்றுடன் அத்தன்மைய பிறவும் கருப்பொருள்களெனப்படும். ஒரு நிலத்திற்குரிய கருப்பொருளாகிய பூவும் பறவையும் அந்நிலத்தொடும் பொழுதொடும் வந்திலவாயினும் வந்த நிலத்தின் தன்மையுடைய னவாகக் கொள்ளப்படும், என இவ்வியல் 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களாற் கூறுவர் ஆசிரியர். ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் எனவரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர்களாகும். இவர்களுள் அகத்திணை யொழுகலாற்றிற்குரியராய் வரும் தலைவரும் உளர். இவ்வாறே ஏனை நிலங்களில் வாழும் மக்கள் பாலும் அகவொழுக்கத்திற்குரியராய் வழங்கு பெயர்கள் நீக்கப்படாவாம்; என நானில மக்களும் அகவொழுக்கத்திற் குரியராதலை 22, 23, 24-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். தாமே பொருளீட்டி வாழ்க்கை நடத்துதற்குரிய வினைத் திறமின்றிப் பிறர்பால் தாழ்ந்து தம்முணர்வின்றித் தொண்டு செய்தொழுகுவோர் அடியோர். தம் உணர்வு மிகுதியால் தாமே ஒரு தொழிலைச் செய்து முடிக்கவல்லவர் வினைவலர். தாமாக ஒன்றைச் செய்யாது பிறர் இத்தொழிலை இவ்வாறு செய்க என ஏவினால் அவர் ஏவியவண்ணம் செய்யுமியல்புடையோர் ஏவல் மரபின் ஏனோர். இவரனைவரும் பிறர்க்கு அடங்கி அவர் சொல்வழியொழுகு மியல்பினராதலின், அறம்பொருளின் பங்களில் வழுவா தொழுகும் அகனைந்திணையொழுகலாற்றிற்கு உரியரல்லரென்றும் அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கேயுரிய ரென்றும் கூறுவர் தொல்காப்பியர் (அகத்-25, 26) ஓதல், பகை, தூது என்பன பிரிவுக்குரிய நிமித்தங்களாம். ஓதற்குப் பிரியும் பிரிவும் தூதாகிப் பிரியும் பிரிவும் ஒழுக்கத்தாலும் பண்பினாலும் உணர்வு மிகுதியாலும் ஏனையோரினும் உயர்வுடையார்க்கே யுரியனவாம். பகைவரை வெல்லுதற் பொருட்டு வேந்தன் தானே படையொடு செல்லுதலும் அவனொடு பொருந்திய ஏனைக் குறுநிலத் தலைவர் படையொடு செல்லுதலும் வேந்தனது ஆணைவழி நிகழ்தற்குரியனவேயாம். வேந்தனாற் சிறப்பளித்துப் பாராட்டப்பெற்ற ஏனையோர், முல்லை முதலாகச் சொல்லிய நிலப்பகுதிகளுள் அலைத்தல் பெற்றுச் சிதைவுற்றதனைச் சிதைவு நீக்கிக் காத்தல் வேண்டியும், அரசிறையாக இயற்றப்பெற்ற பொருளை ஈட்டுதல் கருதியும் பிரிந்து செல்வர். மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறத்தலின் எல்லா மக்களினும் மேலோராகிய வேந்தர்க்குரிய முறை செய்தற்றன்மை நானிலத் தலைவர்க்கும் ஒப்பவுரியதாகும். மன்னர்க்குரிய ஆட்சியுரிமையில் அவரது குடியிற் பிறந்த பின்னோர்கள் இயல்பாக உரிமையுடையராவர்; அவ்வுரிமை உயர்ந்தோர்க் குரியதாக நூலிற் சொல்லப்பட்ட முறைமையான் வந்தெய்தும். முடிவேந்தர்க்கு இயல்பாகவுரிய ஆட்சியுரிமை, அவர் குடியிற் பிறந்தோர்க்கேயன்றி, வேந்தர்குடியின் வேறுபட்ட ஏனையோர் பாலும் எய்துமிடமுடைத்து. வேந்து வினையியற்கை யெய்திய ஏனோர்க்குப் பொருள்வயிற் பிரிவும் உரியதாகும். அங்ஙனம் அவர் சென்று ஈட்டும் பொருள் உயர்ந்தோரால் மதிக்கப்படும் சிறப்புடைய ஒழுக்கத்தோடு பொருந்தியதாதல் வேண்டும். அன்பினைந்திணையே யன்றிக் கைக்கிளை பெருந்திணையாகிய எத்திணைக் கண்ணும் பெண்ணொருத்தி நாணிறந்து மடலேறினாள் என்றல் பொலிவுமிக்க வாழ்க்கை நெறியன்று; ஆதலால் தலைவன் தலைமகளையுடன்கொண்டு கடல்கடந்து செல்லும் வழக்கம் இல்லை. என 27-முதல் 38-வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்கங்களிற் பெருவர விற்றாய பாலைத்திணைக்குரிய நோக்கமும் செயல்முறைகளும் அவற்றுக்கு உரிமையுடையோர் இன்னின்னாரென்பதும் உணர்த்துவர் ஆசிரியர். தலைமகள் தலைவனுடன் போகியவழி நற்றாய் கூறவனவும், செவிலிக்குரிய திறமும், தலைமகளைத் தலைவனுடன் அனுப்புங்கால் தோழி கூறுவனவும், உடன்போக்கிற் கண்டோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழுமிடங்களும், ஏனையோர் கூற்றிற்கு உரியராதலும் 39-முதல் 45-வரையுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்டன. முன்னர் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாதலும், முன்பு நிகழ்ந்ததொன்றினைக் கூறி நிற்றல் ஒருதிணையாயடங்குதலும், அகத்திணை மரபு மாறுபடாதனவாய்க் கலத்தற்குரிய பொருள் நிகழ்ச்சிகள் கலத்தலுண்டென்பதும் முறையே 46, 47, 48-ஆம் சூத்திரங்களிற் சொல்லப்பட்டன. அகப்பொருளொழுகளாற்றில் சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்குரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுதற்பொருட்டு அமைத்துக்கொண்ட உரையாடல் முறையே உள்ளுறையுவமமாகும். பொருள் புலப்பாட்டிற்கு இன்றியமையாத ஏனையுவமம் போன்று அகப்பொருளை யுணர்த்தும் நிலையில் தள்ளாது கருதுதற்குரியது இவ்வுள்ளுறை யுவமமாகும். தெய்வமல்லாத ஏனைக் கருப்பொருள்களின் நிகழ்ச்சியினை வெளியிட்டுரைக்கு முகத்தால் அந்நிகழ்ச்சியினை யுவமையாகக் கொண்டு தலைவன் தலைவியாகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளை உய்த்துணர்ந்துகொள்ளச் செய்தல் உள்ளுறையின் நோக்கமாகும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியாகிய இவ்வுவமத்தோடு புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருளும் ஒத்த முடிவதாகவெனத் தன்னுள்ளத்தே கருதி, அக்கருத்தினைக் கருதியுணர்தற்கேற்ற சொல்லெல்லாம் தன்னகத்தே யமையக்கொண்டு கூறப்படுவதே உள்ளுறை யுவம மெனப்படும். வண்ணம், வடிவு, பயன், தொழில் என்னும் இவற்றால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறப்பட்டு வெளிப்படையாகப் பொருள் விளக்குவது ஏனையுவமமாகும். இவ்விரு வகையுவமைகளும் அகத்திணைப் பொருளுணர்ச்சிக்கு உபகாரப்படு மியல்பினை 49-முதல் 52-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார். காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளம்பருவப் பெண்ணைக் கண்டு அவளை மனைக்கிழத்தியாகப் பெறவேண்டு மென விரும்பிய ஒருவன், மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தித் தான் அவள்பாற்செலுத்தும் அன்பின் திறமாகிய நன்மையும் அவள் அதனையுணராமையால் தனக்கிழைக்குந் தீமையும் என்னும் இருதிறத்தால் மிகப்பெருக்கிய சொற்களைத் தன்னோடும் அவளோடுங் கூட்டிச் சொல்லி, அச்சொற்களுக்கு அவளிடமிருந்து எதிர் மொழி பெறாது தானே தனக்குள் சொல்லி யின்புறும் நிலை கைக்கிளையாதற்குப் பொருந்தித் தோன்றுங் குறிப்பாம் என 53 ஆம் சூத்திரம் கூறும். எனவே, இத்தகைய கைக்கிளைக் குறிப்பு ஆடவர்க்கன்றி மகளிர்க்கு ஏலாதென்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். மடலேறுவேனெனக் கூறுதலோடமையாது மடலேறுதலும், இளமை நீங்கிய பருவத்தும் மெய்யுறுதலில் விருப்பமுடையவ ராதலும், தெளிவிக்கத் தெளியாத காமவுணர்வால் அறவழிந்து மயங்குதலும், கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிந்து புணரும் வன்கண்மையும் ஆக இங்குச் சொல்லப்பட்ட நான்கும் பொருந்தாவொழுக்கமாகிய பெருந்திணைக் குறிப்புக்களாம் என 54-ஆம் சூத்திரம் கூறும் மேற்கூறிய பெருந்திணைக் குறிப்புக்கள் நான்கின் முற்பட்ட நிலைகளாகிய ஏறாமடற்றிறமும், இளமை நீங்காத் திறமும், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறமும், மிக்க காமத்தின் மாறகாத்திறமும் ஆகிய நான்கும் முன்னர்க் கூறப்பட்ட கைக்கிளைக்குரியன வென்பது 55-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இங்குக் கைக்கிளைக்குரியனவாகக் கூறப்பட்ட நான்கினையும் முறையே வெளிப்பட இரத்தல், நலம் பாராட்டல், புணரா விரக்கம், நயப்புறுத்தல் என விளக்குவர் இளம்பூரணர். நாடக வழக்காகிய புனைந்துரை வகையாலும் உண்மையான் நிகழும் உலகியல் வழக்காலும் புலவராற் பாடுதற் கமைந்த அகத்திணை யொழுகலாறாகிய புலனெறி வழக்கம், கலியும் பரிபாடலுமாகிய இருவகைப் பாவினும் நடத்தற்குரிமை யுடையது என 56-ஆம் சூத்திரம் கூறும். உலகியலில் அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றினைச் சொல்லோவியமாகப் புனைந்து காட்ட எண்ணிய நல்லிசைப் புலவர்கள், அவ்வொழுக்கவுணர்வுகள் மக்களுள்ளத்தே தோன்றுதற்குரிய சார்பாகப் புறத்தே தோன்றும் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களையும் அவற்றுக்கு நிலைக் களனாய் விளங்கும் நிலமுங் காலமுமாகிய முதற்பொருள்களையும் புனைந்து காட்டி, அவை சார்பாகத் தாம் அறிவுறுத்த எண்ணிய இன்ப துன்ப வுணர்வுகளைத் தெளிய விளக்குவர். மனத்தால் எண்ணியுணர்தற்குரிய வாழ்க்கை யுணர்வுகளைச் சொல்லாற் புனைந்துரைத்து ஐம்பொறி வாயிலாகக் காணும் உருவாக்கிக் காட்டுதல் நாடக வழக்கின் பாற்பட்டதாம். பல்வேறிடங்களிலும் பல்வேறு காலத்தும் நிகழ்பவற்றையெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்துத்தொகுத்துத் தொடர்புபட்ட கதையாக நிகழ்த்திக் காட்டுதல் நாடகத்தின் இயல்பாகும். இதன்கண் புனைந்து காட்டப்படுவனவும் நிகழாதன அல்ல, உலகியலில் நிகழும் உண்மை நிகழ்ச்சியே யென்பது நாடகம் என்னாது நாடகவழக்கு என்றதனாற் புலனாம். செய்யுள் செய்யும் புலவன் உலகில் வழங்கும் உண்மை நிகழ்ச்சியையே தான்கூறக் கருதினானெனினும், அதனை இனிது விளக்குதற்குரிய இடமுங் காலமுந் தந்து புனைந்துரைத்தால்தான் அப்பொருள் கேட் போருணர்வில் நன்கு பதியும். இவ்வுண்மை கருதியே நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கம் எனத் தொல்காப்பியனார் இச்செய்யுள் வழக்கிற்கு இலக்கணங் கூறுவாராயினர். சொல்லாலும் செயலாலும் விளங்கித் தோன்றுதற்குரிய புறப் பொருட்பாடலைக் காட்டிலும் மனத் தாலுணரத்தக்க அகப்பொருட் பாடலுக்கே இப்புனைந்துரை மரபு பெரிதும் இன்றியமையாததாகும். ஒருவரையொருவர் காணும் முதற் காட்சியிலேயே தொன்மையன்பின் தொடர்புணர்ந்து கணவனும் மனைவியுமாக இன்றியமை யாதொழுகும் இயல்புடையார் உலகத்து மிகவும் அரியர். ஆகலின் உலகில் அருகித் தோன்றும் சிறப்புடைய அவர்களை நல்வாழ்விற் சிறந்த தலைமக்கள் எனப் பண்டைத் தமிழியல் நூலார் பாராட்டிப் போற்றினர். அத் தலைமக்கள் வாழ்வில் மிக்குத்தோன்றும் பேரன்பின் செயலை வெளிப்படுத் துணர்த்து முகத்தால் ஏனைப் பொதுமக்கள் வாழ்க்கையினையும் அன்பு நெறியிற் பயிற்றுதல் கூடுமெனக் கருதினர். மேற்காட்டிய தலைமக்கள் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வாராயினர். தலைமக்க ளாதற்குரிய முழுப் பெற்றியும் அமைந்தார் சிலரைக் கண்ட பின்னரே இத்தகைய செய்யுளைப் பாடுதல் வேண்டுமென்னும் வரையறையில்லை. அவ்வியல்புடையார் தம் காலத்திற் காணப்படாது போயினும் பொதுமக்கள் வாழ்க்கையில் தலைமக்களுக் குரிய இயல்புகளாக ஒவ்வொருவர்பால் தனித்தனியமைந்து விளங்குந் தலைமைப் பண்புகளெல்லாம் தம்மாற் கூறப்படுந் தலைமக்களிடத்து உள்ளனவாக ஒருங்கு தொகுத்து இவ்வியல்புடையார் இத்தலைவனுந் தலைவியும் என இவ்வாறு செய்யுள் செய்தலும் இல்லதெனப்படாது உண்மையான் நிகழும் உலகியல் வழக்கேயாம் என்பது பண்டைத் தமிழாசிரியர் துணிபாகும். இக் கருத்திற்கு மாறாக இவ்வகத்திணை யொழுகலாற்றை இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது எனக் கூறினார் களவியலுரையாசிரியர். இல்லாத ஒன்றினை நாட்டிச் செய்யுள் செய்தல் ஆகாயப்பூ நாறிற்றென்பது போல மயங்கக் கூறியதாக இகழப்படுமாதலாலும், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யாதாகலானும் ஆசிரியர் தொல்காப்பியனார் இப்புலனெறி வழக்கத்திற்கு அடிப்படை யாயமைவது உலகியல் வழக்கம் என இச்சூத்திரத்துக் கூறினமையானும் ஐந்திணையாகிய இவ்வொழுக்கம் மக்கள் வாழ்க்கையாகிய உலகியல் நிகழ்ச்சியையே பொருளாகக் கொண்டதென்பதனை மக்கள் நுதலிய அகனைந்திணையும் என்ற தொடரால் ஆசிரியர் அறிவுறுத்தலானும் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்கவென்று மறுத்தார் நச்சினார்க்கினியர். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அகனைந் திணைச் செய்யுளின்கண்ணே அவ்வொழுக்கத்திற்குரியராகச் சொல்லப்படும் தலைமக்கள், நிலப்பெயரும் தொழிற்பெயருமாகிய திணைநிலைப் பெயராற் கூறப்படுதவதல்லது இயற்பெயராற் சுட்டிக் கூறப்பெறாரென்றும், புறத்திணை யொழுகலாற்றில் அதற்குரிய தலைமக்களது இயற்பெயர் கூறப்படுவதல்லது அகத்திணைக்கண் கூறப்படுதலில்லையென்றும் 57, 58-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். புறத்திணையியல் புறப்பொருளுணர்த்துதலால் புறத்திணை யியலென்னும் பெயர்த்தாயிற்று புறமாவது அகம்போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் உய்த்துணரப்படுவதும் இஃது இவ் வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதுமாகிய ஒழுகலாறாம். அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புற மென்றது ஆகுபெயர். அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றை எழுதிணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழிப்பட்டனவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழுஞ் செயல் முறைகளையும் எழுதிணையாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாம். இவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என வரும் அகத்திணையேழிற்கும் புறமாவன. அகத்திணை யொழுகலாறுகள் தத்தம் நலத்திற்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சி முல்லை முதலிய பூக்களாற் பெயர் பெற்றாற் போன்று, அவற்றின் புறத்தவாகிய புறத்திணை யொழுகலாறுகளும் அவற்றை மேற்கொள்வோர் அடையாளமாகச் சூடுதற்குரிய வெட்சி, வஞ்சி முதலிய பூக்களாற் பெயர்பெறு வனவாயின. அகத்திணைகளின் இயல் புணர்ந்தார்க்கன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகளும் அவற்றின் துறை வகைகளும் இனிது விளங்காவாதலின் அகத்திணைகளின் பொது விலக்கண முணர்த்திய பின்னர்ப் புறத்திணை யிலக்கணம் உணர்த்துகின்றார். அதனால் இஃது அகத்திணை யியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பதாக இளம்பூரணரும் முப்பத்தாறாக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன், அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத் தகாத மக்களைப் போரால் விளையுந் துன்பங்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நுமது நாட்டிற் புகுகின்றோம், நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுமின் என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ்வறிவிப்பினை யுணர்ந்து வெளிச்செல்லும் பகுத்துணர் வில்லாத பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படை வீரார்களையனுப்பிக் களவிற் கவர்ந்து வரச்செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற்கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர்முறையாகும். அம்முறைப்படி வேந்தனால் அனுப்பப்பட்ட படை மறவர்கள், பகைவர் நாட்டிற் புகுந்து அங்குள்ள ஆனிரைகளைக் களவிற் கவர்ந்து வந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சியென்னும் புறத்திணையாகும். ஆனிரைகளைக் கவர்தலை மேற்கொண்ட வீரர் தமது போர் முறையைப் பகை வேந்தர்க்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப்பூவைச் சூடிச்செல்லுதல் மரபு. அதனால் இச்செயல் வெட்சியெனப் பெயர் பெறுவதாயிற்று. வெட்சித்திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறனாகும். வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைநிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தில் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற்கோடல் ஒருபுடை குறிஞ்சிக்குரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்றென்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம் என இளம்பூரணரும், களவொழுக்கமும் கங்குற்காலமும் காவலர் கடுகினுந் தாம் செய்யக் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார் என நச்சினார்க்கினியரும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாதற்குரிய இயைபினை விளக்கினர். நிரை கவர்தலாகிய வெட்சியொழுக்கம் வேந்தனது ஆணை வழியே நிகழ்தற்குரியதென்பதும், அரசனது, ஆணையின்றி அவனுடைய படைவீரர் முதலியோர் தனித்துச் செய்தற்குரிய தன்றென்பதும் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்தோம்பல் என ஆசிரியர் கூறுதலாற் புலனாம். வேந்துறு தொழிலாய் நிகழ்தற்குரிய நிரைகவர்தலை வேந்தன் ஆணையின்றிப் படைவீரர் தன்னுறு தொழிலாய் நிகழ்த்துதற்கும் உரியர் என்பது பன்னிரு படல நூற்கருத்தாகும். தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்னவிருவகைத்தே வெட்சி யென்பது பன்னிரு படலம். அரசனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தன்னாட்டிலும் பிறநாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்து கொள்ளுதற்குரியர் என அரசியல் நெறிக்கு மாறுபட்ட கருத்தினைக் கூறுவது பன்னிரு படலமாதலின் பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது என்றார் இளம்பூரணர். நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவாரமும், புறப்பட்ட படைவீரர் ஊர்ப்புறத்தே நற்சொற் கேட்டலும், பகைவர் பக்கத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவரறியாதபடி அவர் நாட்டின் நிலைமைகளை ஒற்றரால் ஆராய்ந்தறிதலும், பின்னர்ப் பகைவரது ஊர்ப் புறத்தே சூழ்ந்து தங்குதலும் தம்மை வளைத்துக்கொண்ட மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரையைக் கைப்பற்றிக் கொள்ளுதலும், அந்நிரையை மீட்டற்கு வந்தவர்கள் செய்யும் போர்த் தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்த பசு நிரையை வருந்தாமற் செலுத்துதலும், வழியிடையே எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உளமகிழத் தோன்றுதலும், பசுக்களைத் தம்மூரிற் கொண்டு நிறுத்துதலும், அவற்றைக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்குப் பகுத்திடுதலும் வினைமுடிந்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க் குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித்திணை பதினான்கு துறைகளை யுடையதாகும். இப்பதினான்கிற்கும் நிரை கோடல் நிரை மீட்டல் என்னும் இரண்டிற்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத் துறைகளாக விரிப்பர் நச்சினார்க்கினியர். மறத்தொழிலை முடிக்கவல்ல வீரக்குடியிற் பிறந்தாரது நிலைமையைக் கூறுதலும்1, அவர்களது தறுகண்மையினை வளர்க்குந் தெய்வமாகிய வெற்றி வேற்றடக்கைக் கொற்றவையின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவை மேற்கூறிய குறிஞ்சித் திணையின் புறனாகிய வெட்சித் திணையின் பாற்படும். தெய்வத்திற்குச் செய்யும் வெறியென்னும் வழிபாட்டினை யறிந்த வேலனென்பான் தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், மாறுகொண்டு பொரும் போர்க்களத்திலே பகைவேந்தர் இன்னவேந்தன் படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து பொருதற்கு வாய்ப்பாகப் படைவீரர் சூடுதற்குரிய அடையாளப் பூவாகிய சேரரதுபனை, பாண்டியரது வேம்பு, சோழரது ஆத்தி யென்னும் உயர்ந்த புகழினையுடைய மூவகைப் பூக்களும், தம் நாட்டில் வெற்றி வேண்டி மகளிர் முருகனைப் பரவியாடும் வள்ளிக்கூத்தும், புற முதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணியும் கழலின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந்தனது வெற்றியை யுளத்தெண்ணி நன்மையுந் தீமையுங் காட்டுமியல்புடைய உன்னம் என்னும் மரத்தோடு நிமித்தங் கொள்ளுதலும், காயாம்பூ மலர்ச்சியைக் கண்டோர் பூவைப்பூ மேனியானாகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது பெருஞ் சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலும், நிரைகவர்ந்த படை மறவரைப் போரிற் புறங்கொடுத்தோடச் செய்தலும், அவராற் கொள்ளப்பட்ட பசுக்களை மீட்டுத் தன்னாட்டிற் கொண்டு வந்து தருதலும், இவ்வாறு மீட்டுக் கொணர்தற்குரிய தறுகண்மையாலுளவாம் புகழமைந்த தம் வேந்தனது சிறப்பைப் படைமறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தன்பாலமைந்த தறு கண்மையினாலே தன்னோடு சார்த்தி வஞ்சினங் கூறுதலும், நிரைமீட்டலை மேற்கொள்வோர் போர்ப்பூவாக அணிதற்குரிய கரந்தையின் சிறப்புரைதலும், எதிர்த்துவரும் படையின் முன்னணியைத் தானொருவனுமே தனித்து நின்று தடுத்தலும் பகைவரது வாளாற்பட்டு வீழ்தலும் ஆகப் பின்விளைவறியாது மேற் கொள்ளும் போர்ச் செயல்களாகிய இருவகைப்பட்ட பிள்ளை நிலையும், வாளாற் பொருது பகைவரைவென்று திரும்பிய இளைஞனை அந்நாட்டவர் கண்டு மகிழ்ந்து முரசு முழங்க அவனுக்கு நாட்டைப் பரிசிலாக வழங்கும் பிள்ளையாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற் பொருட்டு அதற்குரிய கல்லைக் காணுதலும், அக்கல்லினைக் கைக்கொள்ளுதலும், அங்ஙனம் எடுத்த கல்லினை நீர்ப்படுத்திக் தூய்மை செய்தலும், அதனை நடுதலும், அங்ஙனம் நட்ட கல்லிற்குக் கோயிலெடுத்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதலும் என்று சொல்லப்பட்ட கற்கோள்நிலை ஆறும் ஆக இங்குச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைகளும் போர்த் தொடக்கமாகிய வெட்சித்திணையுள் அடங்குவனவாம். தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தன் படைமறவர் களவிற் கவர்ந்து சென்றதையறிந்த மன்னன், தன் படைவீரர்களையனுப்பி அப்பசுக்களை மீட்டுவருதற்குரிய செயல் முறைகள் வெட்சித்திணையின் இடையே நிகழ்வனவாதலின், அவற்றை வேறுதிணை யாக்காமல் வெட்சித் திணைக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல்காப்பியனார். நிரை மீட்டலைக் கருதிய வீரர்கள் தமது செயலுக்கு அடையாளமாகக் கரந்தைப் பூவினைச் சூடிச்செல்லும் வழக்கமுண்டென்பது அனைக்குரிமரபினது கரந்தை எனவரும் தொல்காப்பியத் தொடராலும், நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து (புறநா-261) என வரும் புறப்பாட்டடிகளாலும் நன்கு விளங்கும். குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலு மாகிய வேறுபாடு குறித்து வெட்சியெனவும் கரந்தையெனவும் இரண்டு குறிபெறுமென்றும் வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் புறத்திணையியற் சூத்திரம் வெட்சித்திணைக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துகின்றதென்றும் அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாதலின் வெட்சிப்பாற்பட்டுச் குறிஞ்சிப் புறனாயிற் றென்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்கொல்லாம் பொதுவாகிய வழுவேழுமுணர்த்துவது இச்சூத்திரமெனக் கொண்டு அக்கருத்திற்கேற்ப வலிந்தும் நலிந்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மண்ணாசையால் பிறரது சோர்வு நோக்கியிருக்கும் வேந்த னொருவன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே தான் அவனை வெல்லுதற்கேற்ற காலம், இடம், வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர் கருதிப் புறப்பட்டுச் சேறல் நாடாள் வேந்தனது கடமையாகும். இக்கடமையினை உளத்துட்கொண்டு, ஒழியாத மண்ணாசையுடைய பகை வேந்தனைப் பொருதழித்தல் கருதி அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித்திணையாகும். அது முல்லையாகிய அகத்திணைக்கும் புறனாகும். காடுறையுலகாகிய முல்லை நிலமும் கார் காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், வேந்தன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்திருத்தலும் தலைவி அவனைப் பிரிந்திருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒத்தலால் வஞ்சியென்னும் புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விரு பெருவேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி என ஒரு குறிபெறும் என இளம்பூரணரும், ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென்றுணர்க என நச்சினார்க்கினியரும் கூறுங் கொள்கை தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வஞ்சித்திணைக்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தினை நோக்குங்கால் இருபெருவேந்தருள் ஒருவனே மேற்சேறற்குரியா னென்பது நன்கு விளங்கும். வஞ்சித்திணையை இயங்குபடையரவம் முதலாகத் தழிஞ்சியீறாகப் பதின்மூன்று துறைகளாக விரித்துரைப்பர் ஆசிரியர். படையெடுத்துவந்த வேந்தன் பகைவனது அரணைச்சுற்றி வளைத்துக்கொள்ளுதலும் உள்ளேயிருந்த வேந்தன் அவ்வரணை நெகிழவிடாது பாதுகாத்துலுமாகிய அவ்வியல்பினையுடையது உழிஞைத்திணையாம். இது மருதமென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்டவழி எதிர்த்துச் செல்லும் ஆற்றலின்றி மதிலகத்தே அடைத்துக் கொண்டிருந்த அரசனது அரண் பெரும்பாலும் மருதநிலத்தில் அமைந்திருப்பதாதலாலும் அம்மதிலை வளைத்துக்கொள்ளுதற்கு வந்த வேந்தனும் அந்நிலத்தில் இருத்தலாலும், தலைவன் வாயில் வேண்டத் தலைவி அதற்குடம்படாது கதவடைத்துக்கொண்டு வீட்டினுள்ளே யிருத்தலாகிய மருதத்திணை யொழுகலாற்றைப் போன்று புறத்தே மதிலை வளைத்துக்கொண்ட வேந்தன் அரணுள் நுழைதலை விரும்ப உள்ளிருந்த வேந்தன் அதற்குடம்படாது அரண் கதவினையடைத் திருத்தலாலும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையாலும், அதற்குரிய விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலாலும், புலத்தலும் ஊடலும் மருதத்திணையாதல்போல அரணை முற்றியும் விடாது பற்றியும் அகப்புறப்படைகள் தம்முட் பொருதலே உழிஞைத்திணையாதலாலும் உழிஞை மருதமாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமென்னும் வேறுபாடு குறித்து உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறும் என்பர் இளம்பூரணர். உழிஞைத்துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறையாகத் தொல் காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சியைத் தனித்ததொரு திணையாகக்கொள்ளுதல் அவர் கருத்தன்றென்பது நன்கு விளங்கும். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க... இக் கருத்தானே நொச்சி வேலித்தித்தன் உறந்தை (அகநா-122) என்றார் சான்றோரும் எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத்தகுவதாம். உழிஞைத்திணைக்குரிய செயல்முறைகள் எட்டுவகைப்படும். அவையாவன: பகைவரது தேயத்தைத் தான் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டியவர்களுக்குக் கொடுத்தலையெண்ணிய வெற்றித்திறமும், அங்ஙனம் தான் நினைத்தது முடிக்கவல்ல வேந்தனது வலியின் சிறப்பும், அழிவில்லாத மதில்மேலேறிப் போர் செய்தலும், மாற்றார் எய்யும் அம்புகளைத் தடுத்தற்குரிய தோற்படையின் மிகுதியும், அரணகத்துள்ள வேந்தனது செல்வமிகுதியும், அம்மிகுதியால் தன்னொடு மாறுபட்ட புறத்தோனைப் பொருதுவருத்திய கூறுபாடும், வலி மிக்குத்தானொருவனுமேயாகிப் புறத்தேபோந்து போர் செய்யும் குற்றுழிஞையும், வெகுண்டு வரும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற்கேற்ற அரிய மதிலின் வன்மையும் ஆகிய இவையாம். இவற்றுள் முன்னைய நான்கும் மதிலை வளைத்துக்கொண்ட வேந்தனாகிய புறத்தோனுக்குரியன; பின்னுள்ள நான்கும் மதிலழியாமற் காக்கும் அகத்தோனுக்குரிய செயல் முறைகளாம். குடைநாட்கோள் முதல் தொகைநிலையீறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் உழிஞைத்திணைக்குரிய துறைகளாகும். தனது வலியினை உலகம் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக்கருதிப் போர்மேற்கொண்டுவந்த வேந்தனை மாற்று வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் நிலையில் அவ்விருபெருவேந்தரும் ஒரு களத்துப் போர்செய்தல் தும்பைத்திணை யெனப்படும். தும்பையென்னும் இத்திணை நெய்தலென்னும் அகத்திணைக்குப் புறனாகும். தும்பையென்பது சூடும் பூவினாற்பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையும் கழனியுமல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பெரும்பான்மை யுளதாயவாறுபோலக் கணவனையிழந்தார்க் கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள்பற்றி ஒருவரையொருவர் நோக்கிப் போரின்கண் இரங்குபவாகலானும், ஒருவரும் ஒழியாமற்பட்டுழிக் கண்டோர் இரங்குபவாகலானும், பிற காரணங்களாலும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். போர் வீரரது உளத்திண்மையைப் பலரும் அறிய விளக்குஞ் சிறப்புடையது இத்தும்பைத்திணையாம். பலரும் ஒரு வீரனை நெருங்கிப் பொருதற்கு அஞ்சிச் சேய்மையின் நின்று அம்பினால் எய்தும் வேலால் எறிந்தும் போர்செய்ய, அவர்கள் செலுத்தும் அம்பும் வேலும் அவ்வீரனது உடம்பில் செறிவாகத் தைத்தமையால் உயிர் நீங்கிய அவனது உடம்பு, நிலத்திற் சாயாது நேர் நிற்றலும், வாள்முதலியவற்றால் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது தறுகண்மை விளங்கும் தலையேயாயினும் உடலேயாயினும் நிலத்தைத் தீண்டாது எழுந்து ஆடுதலும் ஆக இவ்வாறு வியந்து போற்றுதற்குரிய இருவகைப்பட்ட சிறப்பியல்பினையுடையது தும் பைத்திணையென இதன் சிறப்பினை விரித்துரைப்பர் ஆசிரியர். இத்தும்பைத்திணைக் குரியனவாகத் தானைநிலை முதலாக நூழில் ஈறாகப் பன்னிரண்டு துறைகள் கூறப்பட்டுள்ளன. இத்துறைகள் யாவும் ஒரு களத்துப் பொருது நிற்கும் இருதிறத்துப் படையாளர்க்கும் பொதுவாக அமைந்தவை. குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு, ஆண்மை, பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினும் வேறு பட மிகுத்து மேம்படுதல் வாகைத் திணையாகிய ஒழுகலாறாம். வாகைத்திணை பாலை யென்னும் அகத்திணைக்குப் புறனாகும். பாலையாவது தனக்கென ஒரு நிலனுமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினங் காலம்பற்றி நிகழ்வதாதலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழ்ப்படுதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று என்பர் இளம்பூரணர். அவரவர்க்குரிய துறையில் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பின்றி இயல்பாக மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இரு திறமும் வாகைத்திணை யேயாம். இவற்றுள் உறழ்ச்சி வகையாற்பெற்ற வென்றியை வாகை யெனவும் இயல்பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலுடையோராகிய பார்ப்பார்க்குரிய பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழிலினராகிய அரசர் பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுவகைத் தொழிலினராகிய ஏனை நிலமக்கள் பகுதியும், குற்றமற்ற ஒழுகலாற்றினை இறப்பு நிகழ்வு எதிர் வென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியாலமைந்த முழுதுணர் வுடைய அறிவர் பகுதியும், நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பால் என எட்டு வகைப்பட்ட தவஞ்செய்வார் கூறுபாடும், முன்னர்ப் பல கூறுபாடுகளாகப் பகுத்துரைத்த போர்த் துறைகளை யறிந்த பொருநராகிய வீரர்க்குரிய கூறுபாடும், அத்தன்மைத்தாகிய நிலைமையையுடைய பிறதொழில் வகையானுளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து வாகைத் திணையை எழுவகையாகப் பகுத்துரைப்பர் ஆசிரியர். இவ்வெழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனைநிலை வகையென்பது, முற்கூறிய ஆறுவகையினும் அடங்காத எவ்வகை வென்றியையும் உள்ளடக்கிய தொகுப்பாகும். ஈண்டு இரு மூன்று மரபின் ஏனோர் எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்து விதந் துரைக்கப்பட்ட பார்ப்பாரும் அரசரும் அறிவரும் தாபதரும் பொருநரும் அல்லாத ஏனை நிலமக்களாவர். இத்தொடரிற் குறிக்கப்பட்ட ஏனோராவார் வணிகரும் வேளாளரும் என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரை கூறியுள்ளார்கள். நால்வகை வருணப் பிரிவு ஆரியர்களிடையிலன்றிப் பண்டைத் தமிழ் மக்களிடையே தோன்றியதில்லை. வண்புகழ் மூவர் தண்பொழிலிடையே வழங்குந் தமிழ் வழக்கே நுதலிய தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பிற்காலத்தாரால் மேற் கொள்ளப்பட்ட வடநூல் மரபினைத் தழுவிப் பொருள் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. உரையாசிரியர்கள் கருதுமாறு வணிகரையும் வேளாளரையும் ஏனோரென அடக்குதல் ஆசிரியர் கருத்தாயின், அவ்விரு திறத்தார்க்கும் இங்குச் சொல்லப்பட்ட அறுவகைத் தொழில்களும் ஒப்புவுரிய வாதலின்றி அவ்விருவ ரிடையே அவ்வாறாய் வேறு படுதற்கு இடமில்லை. மேற்கூறிய வாகைத்திணை கூதிர்ப்பாசறை முதல் காமம் நீத்தபால் ஈறாகப் பதினெட்டுத் துறைகளையுடையதாகும். அவற்றுள் முன்னர்க் கூறப்பட்ட ஒன்பது துறைகளும் மறத்துறை பற்றியும் பிற்கூறிய ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார், இருபாற்பட்ட ஒன்பதின்றுறைத்தே என்றார் ஆசிரியர். காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதனால் உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியனார் கருத்தாகும். காஞ்சியென்னும் திணை பெருந்திணையென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஏறியமடற்றிறம் முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறுபோல, இக் காஞ்சித் திணையும் பல்வேறு நிலையாமையாகிய நோந்திறம்பற்றி வருதலால் அதற்கு இது புறனாயிற்றென்பர் இளம்பூரணர். உலகியலில் நேரும் பலவகைத் துன்பங்களையும் எதிர்த்து நிற்றல் காஞ்சி என்னும் இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே எதிரூன்றல் காஞ்சி யென்னுங் கொள்கையும் பிற்காலத்து உருப்பெருவதாயிற்று. எல்லாப் பொருளினுஞ் சிறந்த சிறப் பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் வேண்டி நில்லாத உலகியல்பில் நேரும் பல்வகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றல் காஞ்சித்திணை யாதல்பேல, ஒன்றாவுலகத்துயர்ந்த புகழைப்பெற விரும்பிப் பலவகையின்னல்களுக்கிடையே பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய போர்ச் செயலும் காஞ்சித்திணையெனவே கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச் செயல்களாகப் பண்டைநாளிற் கொள்ளப்பட்ட செய்தி வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே எனவரும் பன்னிரு படலச் சூத்திரத்தாலும் தென்றிசை யென்றன்வஞ்சியொடு வடதிசை, நின்றெதிரூன்றிய நீள்பெருங்காஞ்சியும் எனச் செங்குட்டுவன் கூற்றாக இளங்கோவடிகள் கூறந் தொடராலும் இனிது விளங்கும். இங்ஙனமாகவும் காஞ்சித்திணையென்பதற்குப் பல்வேறு நிலையாமையினைக் கூறுங் குறிப்பு எனத் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் கூறும் விளக்கம், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்திற்கும் அவர்க்குப் பின்வந்த இளங்கோவடிகள் முதலியோர் கருத்திற்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையென்னும் பெருங் காஞ்சி முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்தநிலை யென்பதீறாகவுள்ள பத்துத் துறைகளும் பாங்கருஞ் சிறப்பினைப் பெறுதல் வேண்டுமென்னும் விருப்பத்தைப் புலப்படுத்துவன. மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்தென்பதீறாகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியல்பைப் பல்லாற்றானும் பற்றியொழுகும் துன்பியலைப் புலப்படுத்துவன. இங்ஙனம் காஞ்சித்திணைத் துறைகள் இருவகை நிலைகளைக் குறித்தலால் நிறையருஞ் சிறப்பிற்றுறையிரண்டுடைத்து என்றார் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத்தும் ஆண்பாற்றுறை. பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைத்தார் நச்சினார்க்கினியர். இவ்விருவகைத் துறைகளையும் விழுப்பவகை யெனவும் விழுமவகை யெனவும் இருதிறமாகப் பகுத்துரைப்பாருமுளர். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவராற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற்றென்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். பாடாண் திணைப்பகுதி கைக்கிளை யென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஒருநிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளையாகிய அகத்திணை. அதுபோல ஒருபாற் குரித்தன்றி ஒருவனையொருவன் யாதானுமோர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாத செந்திறத்தால் வருதலும் இரண்டற்கும் ஒக்கும். தலைவன், பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவன் பரிசில் வேண்டுதலின், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோடொத்தலால் பாடாண்திணை க்கிளைக்குப் புறனாயிற்று. குடும்ப வாழ்விலே மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல் வாழ்விலே மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை யடிப்படையாகக்கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை யொழுகாலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத் துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வன. பாடாண் திணையிலோபாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ் செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய ஆறும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக்கொண்டு தோன்றும் தனிநிலைத் திணைகள். பாடாண்திணையோ தலைமகன்பால் நிகழும் மேற்கூறியதிணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களன்களாகக்கொண்டு தோற்றும் சார்பு நிலைத்திணையாம். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற மனை வாழ்க்கை யாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த் தலை மக்களுக்குரிய கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணை யென்பது பெறப்படும். பாடாணல்லாத பிறவும் புலவராற் பாடப்படுவன வாயினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டு மென்னும் மனக்குறிப்பின்றி ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் அவை வெட்சி முதலிய திணைகளின்பாற்படுவனவென்றும், அச்செயல்களைக் கருவாகக் கொண்டு புலவன் பாடும்போது அவற்றாலுளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவன்பால் தோற்றும் உயர்ந்த உள்ளக் குறிப்பு பாடாண்திணை யென்றும் பகுத்துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த் துறையிலும் அன்பின்மிக்க மனை வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையே பாடாண்திணை யெனப்படும். அமரகத்து அஞ்சாது போர்புரியம் வீரர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்பவற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறுவகைப் பகுதிகளும், குற்றமற்ற அகத்திணை யொழுகலாற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் உலகியலிற் பல்வேறு செயல்வகையினை யுளத்துட்கொண்டு ஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக்கண் பரவிப் போற்றுதலும் முன்னோர் தம் உள்ளத்தே சிந்தித்துணர்த்திய நற்பொருள்களை யறிவுறுத்தலும் என இங்ஙனம் இயல்பு வகையாற் பாடப்பெறும் செந்துறை வண்ணப்பகுதியும் ஆகிய இவையெட்டும் பாடாண்திணையின் வகைகளாம். கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளை வகை, வசை வகை எனவரும் எட்டும் பாடாண்டிணை வகையென இளம்பூரணரும், பாடாண்திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும் நிரை கவர்தல் நிரை ட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவ்வெட்டும் பாடாண்திணை வகையென நச்சினார்க்கினியரும் வேறுவேறு வகுத்துக் காட்டியுள்ளார்கள். இனிப் புறத்திணை ஆறும் அன்பினைந்திணை கைக்கிளையாகிய அகத்திணை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடாண்டிணையின் வகையென்பாருமுளர். அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர்செய்தலையே தமக்குரிய தொழிலாகக்கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாம். இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்டு, அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை புகழ்தல், பரவல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை நூலாசிரியராகிய ஐயனாரிதனாரும் இளம்பூரணரும், பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்தென நச்சினார்க்கினியரும், வானவர், அந்தணர், ஆனினம் மழை, அரசன், உலகம் என்னும் இவ்வாறு பொருளையும் வாழ்த்துதல் எனப் பிறரும் விளக்கங் கூறுவர். போர்மறவர்பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார். இக்கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத் தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக்கொண்டு பாடினும் நீக்காது ஏற்றுக்கொள்வர். கடவுளை ஏனைமக்கள் விரும்பியதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது. இவ்விரு வகையினையும் முறையே கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம் எனவும் வழங்குவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் அமைத்துக்கொள்வர் நச்சினார்க்கினியர். மக்கள் குழந்தைகளாக வளரும் பருவத்தும் அவர்களைக் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் உண்டு. இப்பாடாண்திணையில் உலகியல் வழக்கத்தை யொட்டித் தலைமக்களுடைய ஊரும் உயர்குடிப் பிறப்பும் இயற்பெயரும் குறித்துப் பாராட்டப் பெறுதலுண்டு. வேந்தரது கொடியின் வெற்றியைப் பாராட்டிப் போற்றும் கொடிநிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக்கோடாயுள்ள அரணையழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு, வெற்றிவேண்டி யாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த்துறையிலே முதலிற் சொல்லத்தக்க குற்றமற்ற சிறப்பினையுடைய இம்மூன்று செயல்களும் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்து முன்னர்க் குறித்த செந்துறை வண்ணப் பகுதியாகிய கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருமென்பர் ஆசிரியர். கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் எனத் தொல்காப் பியனார் கூறியது கொண்டு, அரி, அயன், அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து அரசன் கொடியைப் புகழ்வது கொடிநிலை யெனவும், திருமால் சோவென்னும் அரணத்தையழித்த வெற்றியைச் சிறப்பித்தது கந்தழியெனவும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியெனவும் துறை விளக்கங்கூறினார் ஐயனாரிதனார். இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவர் பாடிய வெண்பாமாலைப் பாடல்களை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர். கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறென்றும், கந்தழியென்பது ஒரு பற்றுக்கோடுமின்றித் தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருளென்றும், வள்ளியென்பது தேவர்க்கு அமிர்தம் வழங்கும் தண்கதிர் மண்டிலமாகிய திங்களென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழியென்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடையதாதலால் அது கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் வேறொரு துறையெனக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே ஆசிரியரது கருத்தாயின் அவற்றை ஞாயிறு திங்கள் என எல்லார்க்கும் விளங்கும் இயற்சொல்லால் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளி யென வருங்சொற்களால் மறைத்துக் கூறமாட்டார். நச்சினார்க்கினியர் பொருள் கூறிய முறையினை யொட்டிக் கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறு தலுடைய மேகத்தையுணர்த்து மென்றும் கந்தழி யென்பது பற்றழிந்தாராகிய நீத்தார் தன்மையைக் குறிக்கு மென்றும் வள்ளி யென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தைக் குறிக்குமென்னும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் மூன்றும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என வரும் மூன்றதிகாரங்களில் முறையே கூறப்பட்டுள்ளன. வென்றும் விளக்கங் கூறவாரும், கொடிநிலை யென்பது ஞாயிறு; கந்தழியென்பது தீ; வள்ளியென்பது திங்கள்; இம்முத்தீ வழிபாடு கடவுள்வாழ்த்தொடு பொருந்தி வருமெனக் கூறுவாரும், கந்தழியென்னுஞ்சொல் இத்தொல்காப்பியத்தில் கொடிநிலை வள்ளியென்பவற்றையடுத்து முதலில் கூறப்படாமையாலும் இச்சொல் வேறு பழைய தமிழ் நூல்களில் யாண்டும் குறிக்கப்படாமையாலும், வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என ஆசிரியர் முன்னர் வெட்சித்திணையிற் குறித்த காந்தள் என்னும் சொல்லே ஏடெழுது வோரால் கந்தழியெனத் தவறாகத் திரித்தெழுதப்பட்டதென் பாரும் எனப் பல திறத்தர் உரைகொள்வோர். இங்கெடுத்துக் காட்டிய விளக்கங்கள் அவரவரது அறிவின் திறத்தால் நலிந்தும் வலிந்தும் திரித்துங் கூறப்பட்டனவாதலின் இவை தொல் காப்பியனார் கருதிய பொருளை விளக்குவனவெனக் கொள்ளு தற்கில்லை. குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை யென முன் வஞ்சித்திணைக் குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளை யென்னுந் துறையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண்பாட்டாய் வருதலுண்டு. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாக வேலை நோக்கிய விளக்குநிலை யீறாகச் சொல்லப்பட்டனவும், வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து கைக்கிளைவகை என்பனவும் துயிலெடை நிலை முதலாகப் பரிசில்விடையீறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட உலக வழக்கின்கண்ணே மூன்றுகாலமும் பற்றி வருவனவும் பாடாண்திணைக்குரிய துறைகளாமென இவ்வியல் 29, 30-ஆம் சூத்திரங்களில் தொகுத்துரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். இங்ஙனம் அகத்திணையேழற்கும் புறமாய் நிகழும் புறத்திணைகள் வெட்சி முதல் பாடாண் இறுதியாக ஏழெனக் கூறியிருக்கவும், பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களையியற்றிய பிற்காலத்து ஆசிரியர்கள் பகைவருடைய பசுக்களைக் கவர்தல் வெட்சி, அங்ஙனம் கவரப்பட்ட பசுக்களை மீட்டல் கரந்தை, பகைவர் நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, அங்ஙனம் தம்நாட்டை நோக்கிவரும் படையை எதிர் சென்று தடுத்து நிறுத்துதல் காஞ்சி, தம்முடைய மதிலைக் காத்தல் நொச்சி, பகைவருடைய மதிலைவளைத்தல் உழிஞை, பகைவரொடு பொருதல் தும்பை, பகைவரை வெல்லுதல் வாகை, ஒருவனுடைய புகழ், கொடை, தண்ணளி முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல் பாடாண், மேற்கூறிய புறத்திணைக் கெல்லாம் பொதுவாயுள்ள செயல் முறைகள் பொதுவியல், ஒருதலைக் காமம் கைக்கிளை, ஒவ்வாக்காமம் பெருந்திணை எனப் பன்னிரண்டு திணைகளாகப் பகுத்தும், இவற்றுள் முதலன ஏழும் புறம் எனவும் இறுதியிலுள்ள கைக்கிளை பெருந்திணை அகப்புற மெனவும் இடையிலுள்ள மூன்றும் புறப்புறமெனவும் வகைப்படுத்தியும், இலக்கணங் கூறியுள்ளார்கள். இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலுரைப் பகுதிகளில் ஆங்காங்கே மறுத்துள்ளார்கள். எனினும் இத்தகைய வேறுபாடுகளை முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்தலும் திரிபு வேறுடைத்தாதலும் என இருவேறு வகைப்பட நிகழும் வழிநூல் சார்பு நூல்களில் மரபு நிலை திரியாது விரவும் பொருள்களாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும். அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை, உழிஞைத்திணைகளின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடுபற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன எனவும் இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇ வென்றிகழ்ந்து....jk¡F வேண்டியவாறே கூறுப எனவும் வரும் சிவஞானமுனிவர் கூற்று இக்கருத்தினைப் புலப்படுத்துவதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகவுள்ள ஏழுதிணைகளையும் அகமெனக் கொண்டாராயினும் அவற்றுள் அகமெனச் சிறப்பித்தற்குரியன நடுவே எண்ணப்பட்ட ஐந்திணைகளுமே எனவும், அவ்வைந்தின் முன்னும் பின்னுமாக அடுத்தெண்ணப்பட்ட கைக்கிளை பெருந்திணையென்பன ஒருவாற்றான் அவற்றின் புறத்தவாகக் கொள்ளதக்கன எனவுங் கருதினாரென்பதற்கு, மக்கள் நுதலிய அகனைந்திணையுஞ், சுட்டியொருவர் பெயர் கொளப்பெறார், புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதலிலவே எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களே சான்றாதலின் அவ்விருதிணைகளையும் அகப்புறமெனப் பின்னுள்ளோர் பகுத்தமை தொல்லாசிரியர் கருத்துக்கு முரணாகாமை காண்க. களவியல் களவொழுக்கம் உணர்த்தினமையால் களவியலென்னும் பெயர்த்தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு, குடிப்பிறப்பு முதலியவற்றால் ஒத்து விளங்குந் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, உலகத்தாரறியாது மறைந்தொழுகுதல். ஐம்பெரும் பாதகங்களு ளொன்றாகப் பேசப்படுங் களவென்பது பிறர்க்குரிய பொருளை வஞ்சனையாற் கவர்ந்துகொள்ளுதலாகிய குற்றமாகும். இஃது அத்தன்மையதன்றி ஒத்த அன்புடைய கன்னியரை அவர்தம் இசைவறிந்து சுற்றத்தாரறியாது காதலால் உளங்கலந்து பழகும் பெருங்கேண்மை யாதலால் சிறப்புடைய அறமெனவே கொள்ளப்படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரும் தமது நெஞ்சக் கலப்பினைப் பிறரறியாதபடி உலகர் முன் முறைந் தொழுகினராகலின், கரந்தவுள்ளத்தராகிய அவ்விருவரது ஒழுகலாறு, களவென்ற சொல்லால் வழங்கப்படு வதாயிற்று. இக்களவினை மறைந்தவொழுக்கம், மறை, அருமறை யென்ற சொற்களால் வழங்குவர் ஆசிரியர். மேல் கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாயாக எழு திணையோதி அவற்றின் புறத்து நிகழும் திணைகளும் ஓதிப்போந் தார். அவ்வெழுதிணையினும் ஒருதலைவேட்கையாகிய கைக்கிளையும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவணைந்திணைக் கண்ணும் புணர்ப்பும், பிரிதலும் இருத்தலும், இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின் அவ்விருவகைக் கைக்கோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின்பின் கூறப்பட்டது என முன்னுள்ள இயல்களோடு இவ்வியலுக்குள்ள தொடர்பினை விளக்கினார் இளம்பூரணர். இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறனும் கூறும் புறத்திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட்கூறி, ஈண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணம் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று என்றார் நச்சினார்க்கினியர். இவ்வியற் சூத்திரங்களை 51-ஆக இளம்பூரணரும் 50-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். அன்பினைந்திணையாகிய இக் களவொழுக்கத்தினைக் காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர். அன்புடையார் இருவர் முற்பிறப்பின் நல்வினையால் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் அன்பினால் உளமொத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப் புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனாகத் தன்னியல்பில் நிகழும் இவ்வுறவினை இயற்கைப் புணர்ச்சி, தெய்வப்புணர்ச்சியென்ற பெயர்களால் வழங்குவர் முன்னையோர். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைநாளும் அவ்விடத்திற் சென்று எதிர்ப்படுதல் இடந்தலைப்பாடாகும். தலைவியோடு தனக்குள்ள உறவினைத் தலைவன் தன் உயிர்தோழனாகிய பாங்கனுக்குச் சொல்லி, நீ எனக்குத்துணையாக வேண்டுமென வேண்ட, அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்ந்து வந்துணர்த்தியபின் சென்று கூடுதல் பாங்கற்கூட்ட மெனப்படும். இக்களவொழுக்கம் நீண்ட நாளைக்குத் தொடர்ந்து நிகழவேண்டுமென விரும்பிய தலைவன். தலைவிக்குச் சிறந்தாளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கூடல் தோழியிற் கூட்டமாகும். இவை நான்கும் இம்முறையே நிகழும். இனி, இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைமகளை யெதிர்ப்பட்ட காலத்து அன்புடையா ரெல்லார்க்கும் இயற்கைப்புணர்ச்சி தடையின்றி நிகழுமென்பதற் கில்லை. தலைமகளை யாதானுமோரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்புணர்ந்து கூட்டத்திற்கு இடையீடு உண்டாயவழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, நேற்றுக் கண்டாற்போல் போல இன்றுங் காணலாகுமோ என எண்ணி அங்கே மறுநாளுஞ் செல்லுதலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப்புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு பட்டவிடத்துத் தலைவன் தன் வருத்தத்தினைப் பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நின்ற நிலையறிந்துவந்துகூற அங்கே சென்றும் கூடுவன். அவ் விடத்தும் இடையீடுபடின் தோழிவாயிலாக முயன்றெய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது அங்குண்டாகிய வேட்கை இருவர்க்குந் தணியாது நின்று மணஞ்செய்த பின்னர்க் கூடுதலும் உரியன். இவ்வகையினால் இக்களவொழுக்கம் மூவகைப் படுமென்றார் இயம்பூரணர். எல்லாவுயிர்க்கும் உரிய இன்பவுணர்வும், அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினை யீட்டுதற்குரிய வரம்பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பினால் நிகழும் ஐந்திணைக்கண் நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்கால், மறையோரிடத்து ஓதப்பட்ட எண்வகை மணத்துள்ளும் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது ஒழுகலற்றினை யொக்கும் என்பர் ஆசிரியர். கந்தருவராவார் நல்ல யாழமைத்து இசை பாடுதலில் வல்லவரென்றும் அவர்தாம் எக்காலத்தும் ஆணும் பெண்ணுமாக இணைந்தே செல்லும் இயல்பினரென்றும் கூறுபவாதலின், அவர்களைத் துறையமை நல்யாழ்த்துணைமை யோர் என்றார் தொல் காப்பியனார். அவர்காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர்தே எத்து மணமுறைக்கும் தென்றமிழ்நாட்டு மணமுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கவுணர்த்தல் அவரது கடனாயிற்று. ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மையாகிய கைக்கிளை. ஒத்த கேண்மையாகிய அன்பினைந்திணை ஒவ்வாக்கேண்மையாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தால் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டுவகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும் நாற்பத்தெட்டாண்டு பிரமசாரியங் காத்த இளைஞனுக்குப் பன்னிரண்டு வயதுடைய கன்னியை அணிகல னணிந்து கொடுப்பது பிரமம். மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுப்பது பிரசாபத்தியம். தகுதியுடையானொருவனுக்குப் பொன்னினாற் பசுவும் எருதுஞ் செய்து அவற்றிடையே பெண்ணை நிறுத்தி அணிகலன் அணிந்து நீங்களும் இவைபோற் பொலிந்து வாழ்மின் என நீர்வார்த்துக் கொடுப்பது ஆரிடம். வேள்வி செய்த ஆசிரியனுக்கு வேள்வித் தீமுன் கன்னியைத் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வம். கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடினாற்போன்று ஒருவனும் ஒருத்தியும் தாமே யெதிர்ப்பட்டுக் கூடுவது கந்தருவம். கொல்லுமியல்புடைய எருதினை அடக்கியவன் இப்பெண்ணை மணத்தற்குரியன், வில்லேற்றினான் இவளை மணத்தற் குரியவன், இன்னதொரு பொருள் தந்தான் இவளை மணத்தற்குரியன் என இவ்வாறு சொல்லி, சொல்லியவண்ணஞ் செய்தாற்குப் பெண்ணைக் கொடுப்பது அசுரமெனப்படும். தன்னால் விரும்பப்பட்ட பெண்ணை, அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிதிற் கவர்ந்து செல்வது இராக்கதம் எனப்படும். மூத்தாள், துயின்றாள் களித்தாள் ஆகிய மகளிரைக் கூடுதல் பைசாசம் எனப்படும். மறையோர்க்குரிய நூலிற் சொல்லப்பட்ட இவ்வெட்டு மணங்களையும் முறையே அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள் வினைநிலை, இராக்கதம், பேய்நிலை என மொழிபெயர்த்து வழங்குவர் தமிழர். இவையெட்டும் வடமொழியாளர்க்கே யுரியன வென்பார் மறையோர்தேஎத்து மன்றல் எட்டு என்றார் தொல்காப்பியனார். எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க்குரியன அல்ல என்பது பெறப்படும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும், தமிழர் கூறிய கைக்கிளைப்பாற்படுவன வென்றும், பிரமம், பிரசாபத்தயம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையாயடங்குமென்றும், கந்தருவமென்ற ஒன்றும் ஐந்திணையின்பாற்படுமென்றும் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் வகுத்துரைத்துள்ளார்கள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம், மறையோர்தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினை யுடையதெனவே, கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது இக்களவொழுக்கமாகுமெனக் கந்தருவத்திற்கும் களவொழுக் கத்திற்குமிடையே யமைந்த ஒற்றுமையினை நச்சினார்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார். ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர், புனலோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மணமாகும். இங்ஙனம் கூடினோர் தம் வாழ்நாள் முழுதுங் கூடி வாழ்வரென்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இக் கந்தருவத்திற்கு உண்டு. தமிழர் கூறும் களவொழுக்கமோ இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், தான் அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சியேயாகும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரையொருவர் இன்றியமையா தொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தபின் ஒருவரையொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந் திண்மை, தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் உளவாகும் பலவகை இடையூறுகளால் ஒருவரை யொருவர் மணந்துகொள்ள இயலாமல் உள்ளப்புணர்ச்சி யளவே கூடி வாழ்ந்து பின்னர் இறந்த காதலரும் இத்தமிழகத்து இருந்தனர். மணிமேகலையிற் கூறப்படும் தருமதத்தன் விசாகை யென்னும் இருவரும் யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறிய பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும். கந்தருவ வழக்கில் மெய்யறு புணர்ச்சி முதற்கண் தோற்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாகுமளவும் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது தம்மெதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு, என்றும் பிரியா நிலையில் நினற கடவாது அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்குமுள்ள உயிர் நிலையாய வேறுபாடாகும். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் எனத் தொல்காப்பியனாரும் அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே எனப் பிறசான்றோரும் உள்ளப் புணர்ச்சி யொன்றையே களவுக்குரிய சிறப்பியல்பாக விரித்துரைத்துள்ளார்கள். ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்திற்கும் உள்ள வேற்றுமையினையும் தமிழியல் வழக்கமெனச் சிறப்பித்துரைக்கப்படும் களவொழுக்கத்தின் தூய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்துனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்குமுள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்தே கந்தருவர்க்குக் கற்பின்றி யமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என இவ்விரண்டற்கு முள்ள வேற்றுமையினை விளக்கினார் நச்சினார்க்கினியர். மகளிரை அஃறிணைப் பொருளாகிய உடைமைபோலக் கருதிப் பிறர்பாற் கேட்டுப் பெறுதலும் கொடராயின் சுற்றத் தார்க்குத் தெரிந்தோ தெரியாமலோ வன்மையினாற் கவர்ந்து சேறலுமாகிய செயல் முறைகளை மணமெனக் கூறும் வழக்கம் தமிழர்க்கில்லை. ஆகவே இத்தகைய பொருந்தா மண முறை களுக்கு வடநூல்களிற்போலத் தமிழ் நூல்களில் இலக்கியங் காணுதலரிது. அன்பொடு புணர்ந்த ஐந்திணை யெனவே அதன் முன்னும்பின்னுங் கூறப்பட்ட ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர்பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத கூட்டுறவுகள் எந்நாட்டிலும் எக்காலத்தும் காணப்படுவனவேயாம். பொருந்தாத செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும் பொருத்தமுடைய நற்செயல்களை வெளிப்படையாக எடுத்துரைத்து விளக்கியும் மக்களை நல்வழிப்படுத்துவதே சிறப்புடைய நூலின் மரபாகும். இம்மரபினை யுளத்துட்கொண்டு கைக்கிளை பெருந்திணைகளைக் குறிப்பாகவும் அன்பினை ந்திணையை விரிவாகவும் கூறுவர் ஆசிரியர். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் மனையறத்தின பயனாக அவ்விருரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் என்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லூழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். அன்பு முதலியவற்றால் தலைவன் மிக்கவனாயினுங் குற்றமில்லை. இச்செய்தி, ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழந்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே என வரும் களவியற் சூத்திரத்தாலுணரப்படும். இங்ஙனம் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற் காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரணமென்பார் உயர்ந்த பால தாணையின் என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது அவ்விருவரும் பண்டைப் பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென்பார் ஒன்றியுயர்ந்த பாலதாணை யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையாதவராகக்காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார், ஒத்தகிழவனுங் கிழத்தியுங்காண்ப வென்றும் கூறினார் தொல்காப்பியனார். தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டஅளவே வேட்கையைத்தூண்டி நிற்றற்கும் அவ்விருவரும் பண்டைப் பிறப்பிற் பயிலியது கெழீஇய நட்பன்றிப் பிறிது காரணமில்லையென்பதே தொல்லாசிரியர் கருத்தாகும். ஓத்த பருவத்தார் ஒருவரையொருவர் கண்டுழி யெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையின் ஒன்றியுயர்ந்த பாலதாணையிற் காண்ப என்றார் ஆசிரியர். ஈண்டுக்காணுதல் என்றது தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றியவழி இவள் மக்களுள்ளாள்கொல்லோ தெய்வமோ எனத் தலைவனுள்ளத்தே ஐயம் தோன்றும் ஒப்புமையிற் குறைவுடையளாயின் அவ்விழிபே அவளை இன்னாளெனத் தெளிவிக்குமாதலின், அந்நிலையில், ஐயந்தோன்றுதற்கிடமில்லை. தலைவி தன்னினும் உயர்ந்த தலைவனை நோக்கி இவன் தெய்வமோ மகனோ என ஐயுற்றால் அவளுள்ளத்தில் அச்சந்தோன்றுமேயன்றிக் காமவுணர்வு தோன்றாது. ஆகவே இங்ஙனம் ஐயப்படுவான் தலைமகனே யென்பர். தலைமகளை நோக்கி இவள் தெய்வமகளோ எனத் தலைவன் ஐயுற்ற காலத்து, அவள் கூந்தலிலணிந்த மாலையிடத்தே மொய்த்த வண்டுகளும் அவளணிந்த அணிகலன்களும் நறுமலரும் அவள் பால் தோன்றும் தடுமாற்றமும் கண்ணிமைப்பும் அச்சமும் அத்தன்மைப் பிறவும் ஐயத்தினைக் களைதற்குரிய கருவியாகும். இங்கெடுத்துக் காட்டிய அடையாளங்களைக் கொண்டு தலைமகளை இன்னாளெனத் துணிந்த தலைமகன், அவளது கருத்தறியாது அவளை யணுகுவானாயின், அச்செயல் பொருந்தா வொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும் ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உளக் கருத்தைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதலே முதற்கண் வேண்டப்படுவதாகும். அங்கே ஒருவரோடொருவர் உரையாடுதலும் முறையன்றாம். ஒருவர் வேட்கைபோல மற்றவர்க்கும் வேட்கையுளதாகுங் கொல்லோ என ஐயுற்று நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு அவ்விருவர் கண்களும் வேட்கையினால் ஒருவர் ஒருவர்க்குரைக்குங் காமக்குறிப்புரையாம், கண்ட அளவிலேயே வேட்கைதோன்றி ஒருவரது உள்ளக் குறிப்பினை மற்றவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேதான் கண்ணினால் வரும் இக்குறிப்பு நிகழும். தன்னைத்தான் கொண்டொழுகும் பெருமையும், சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையின் நீக்கி நன்றின் பாலுய்க்கும் நல்லறிவும் ஆடவரது சிறப்பியல்பாகும். தனது நிறை காவலுக்கு இடையூறு நேருமோ வென்னும் அச்சமும், பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழவிடாமையாகிய மடனும் மகளிரது சிறப்பியல்பாகும். இவ்விரு திறத்தாரும் தம்மைக் காவாது வேட்கை மீதூர்ந்த நிலையிற்புன லோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தமக்குரிய இக்குணங்களை நெகிழவிடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற்காட்சிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது உள்ளப் புணர்ச்சி யளவே யொழுகி மணந்துகொண்ட பின்னரே கூடுதல் முறையாகும். ஒருவரையொருவர் பெறல் வேண்டுமென்னும் உள்ள நிகழ்ச்சியும் இடைவிடாது நினைத்தலும் உண்ணாமையாலுள தாம் உடல் மெலிவும், தனக்கு ஆக்கமாவன இவையெனத் தனக் குள்ளே சொல்லிக் கொள்ளுதலும், நாணத்தின் எல்லை கடத்த லும், காண்பனவெல்லாம் அன்புடையார் உருவாகவே தோற்று தலும், தம்மை மறத்தலும், மன மயக்கமுறுதலும், உயிர் நீங்கி னாற்போன்று உயிர்ப் படங்குதலும் ஆகிய இவை யொன்பதும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பாகிய காமவுணர்வினைச் சிறப்பிப் பனவாதலின், இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தனவாகச் கூறுவர் முன்னையோர். வேட்கை முதல் சாக்காடீறாக இங்குச் சொல்லப்பட்டவை நிகழ்ந்த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழுமென்பர். தனியிடத்தே தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன், தனது பெருமையும் உரைனும் நீங்க வேட்கை மீதூர்தலால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினானாயினும் தலைமகள்பால் தோன்றும் அச்சமும் நாணும் மடனும் அதற்குத் தடையாய் நிற்பனவாம். அத்தடை நீங்குதற் பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில கூறுதலும், தான் சொல்லும் சொல்லின்வழி அவள் நிற்கும் படி சில கூறுதலும், அவளது, நலத்தினை யெடுத்துரைத்தலும், அது கேட்டதலைமகள்பால் முறுவற் குறிப்புத் தோன்றி நிற்றலையறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதூர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகள் உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். பெருமையும் உரனுமுடைய தலைவன், காதல் வெள்ளம் புரண்டோடத் தனக்குச் சிறந்தாளெனத் தெளிந்த தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத்தைப் பாராட்டி யுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கி நின்று அன்பொடு தழீஇய சொற்களைச் சொல்லுதலும், தலைவனது ஊற்றுணர்வு என்றும் பயிலாத தன் மெல்லியல் மெய்யிற் பட நாணமுடையளாகிய தலைவி, அங்குள்ள கொம்பும் கொடியுமாகியவற்றைத் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நிற்க, அதுகண்ட தலைவன், இவ்வூற்றின்பத்திற்கு இடையூறாய் நின் மனத்து நிகழ்ந்தவை யாவையென வினவி நிற்றலும், அவளை மெய்யுறுதற்கியலும் காலம் வாய்க்காமையை யெண்ணி வருந்துதலும், பின்னர் அவளை மெய்யுறுதலும், மேற்கூறியவற்றுடன் இன்பந் திளைத்தலையும் விரைவாகப் பெற்றவிடத்து, நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குத் தெளிவுரை பகர்தலும் ஆகிய எட்டுவகைக் கூற்றும், முன்கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்த வழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலை நிற்பதாகிய இல்லறத்தை மேற்கொள்ள நினைந்து மேல் நிகழ்வனவற்றை யெடுத்துரைக்கு மிடத்தும் தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேர்வுற்ற பழிபாவங்களை யெடுத்துக்காட்டி இடித்துரைக்கும் உயிர்த் தோழனாகிய பாங்கன் தனது களவொழுக்கத்தையேற்று உடன்பட்டவிடத்தும் தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப் பெற்று அவளை இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அவ்விரத்தலை மேற்கொள்ளுமிடத்தும் ஊரும் பேரும் தான் இழந்தன பிறவும் ஆகியவற்றை வினவு முகத்தால் தன் மனக் கருத்துப் புலனாகத் தோழியைக் குறையிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியைக் குறித்ததாக விருந்ததென்று அவள்மேல் சேர்த்தெண்ணும் நிலையிற் சில கூறலும், பலகாலுஞ் சென்று இரத்தலும் மற்றையவழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினைத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறு புணர்ச்சி முறையேயடைக வெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும் இவ்வாறு ஒழுகுதலாற் கேடுளதாம் எனவும் இவ்வொழுக்கம் நின் பெருமைக்கு ஏலாது எனவும் கூறித் தோழி தலைவனை அவ்விடத்தினின்றும் அஞ்சி நீக்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறுதலும் ஆகிய கூற்றுக்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். தலைமகளது இளமைப் பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவன் அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத்ததினால் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகன் குறையை மறுக்குந் தோழி அன்புதோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடம்பாட்டினைப்பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழியிடை இடையூறுண்டாயவிடத்தும் எனத்தோழியிற் கூட்டத்திடத்தே தலைவன் கூற்று நிகழ்தல் இயல்பாகும். அன்புற்றாரிருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தமாகவன பன்னிரண்டாம். அவையாவன. காட்சி, ஐயம், துணிவு என முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டத்திற்கு நிமித்தமாவனவாம். இவற்றுள் முற்கூறிய காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந்திணைக்குரிய தாதலேயன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குரிய குறிப்புக்களாகவும் அமையும். நோக்குவவெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க்கூறிய நான்கு நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும் வழி ஐந்திணை யாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும்வழிப் பெருந்திணைக் குரிய பொருந்தா நிலைகளாகவும் கருதப்பெறும். முதல், கரு, உரியென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியினையொத்த காமக்கூட்டம் வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல் என்னும் ஐந்து நிலைகளையுந் தனக்குரிய சிறப்பு நிலைக்களனாகக் கொள்ளும் என்பர் ஆசிரியர். தோழியின் உடம்பாடுபெற்றுத் தலைமகளைக் கூடிய தலைமகன் அவளை மணந்துகொள்ளும்வரையும் கூறும் பொருள்களைத் தொகுத்துக் கூறுவது இருவகைக் குறிபிழைப்பாகியவிடத்தும் எனத் தொடங்கும் இவ்வியற் சூத்திரமாகும். இதனைத் தலைவி கூற்றாகக்கொண்டு பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தலைவியின்பால் நிலைபெற்றுள்ள நாணமும் மடனும் பெண்மைக்கு அங்க மாதலால் காமவொழுக்கத்தின்கண் குறிப்பினாலும் இடத்தினலு மல்லது அவள்பால் வேட்கை புலப்படுதலில்லை. வேட்கை யுரையாத கண்கள் யாண்டுமின்மையால் வேட்கை காரணமாக அச்சம் நீங்கினாலும் நாணமும் மடனுமாகிய இரண்டும் தலைவியிடத்து என்றும் நீங்காதுளவாம். தலைவன் புணர்ச்சி கருதிக் கூறுஞ்சொல்லின் எதிரே இசைவில்லாதாரைப்போன்று கூறுதலே தலைவிக்கு இயல்பாகும். இன்னின்ன இடங்களில் தலைவி உரையாடுதற்குரியள் என்பதை இவ்வியல் 21-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தவைன் இன்ன நாளில் நின்னை மணந்துகொள்வேன் எனச் சொல்லிவிட்டுத் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது நீங்கிய நிலையில், தன்னைக் கண்டு தோழி ஐயுறுதற்கேற்ற குறிப்பு தன்கண் தோன்றாதபடி மறைத்தொழுகிய தலைவி, தலைவன் வருமளவும் ஆற்றாது வருத்த முற்ற நிலையிலும், களவொழுக்கத்தில் வந்தொழுகுந் தலைவன் செவிலித்தாய் முதலியோரை எதிர்ப்பட்டபொழுதும், இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்குச் சொல்லுக என அவன் தனக்குச் சொல்லிய நிலையிலும் தானே தோழிக்குக் கூறுதலுண்டு. உயிரைக்காட்டிலும் நாணம் சிறந்தது; அத்தகைய நாணத்தினுங் கற்புச் சிறப்புடையது என்னும் முன்னோர் மொழியை யுளத்துட்கொண்டு, தலைவன் உள்ளவிடத்தையடைய நினைத்தலும் இவ்வாறு குற்றந்தீர்ந்த நற்சொற்களைக் கூறுதலுமாகிய இவை, தலைவி தானேகூறுங் கூற்றினுள் அமைதற்குரிய பொருள்வகையென்பர் ஆசிரியர். களவொழுக்கத்தின்கண் தலைவிக்கு இன்றியமையாத வளாகிய தோழி உரையாடுதற்குரிய பொருள்வகை யெல்லா வற்றையுந் தொகுத்துக் கூறுவது, நாற்றமும் தோற்றமும் (களவு-24) எனத் தொடங்குஞ் சூத்திரமாகும். இதன்கண் தோழி கூறுதற்குரியனவாக முப்பத்திரண்டு பொருண்மைகள் விரித் துரைக்கப்பெற்றுள்ளன. இங்கே தோழி கூறுவனவாக ஆசிரியர் எடுத்தோதிப் பொருட்பகுதிகளை உற்றுநோக்குங்கால், மக்கள் மன நிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கமுதலியவற்றால் உய்த் துணரும் மனப்பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் நல்லறிவும், உள்ளக் கருத்தறிதலருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறரறியாது ஒழுகும் அடக்கமும், மறைபுலப்படாமல் நிறுத்தும் நல்லுள்ளமும், மாசற்ற அறவுணர்ச்சியும், செய்யத் தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக்குணங்கள் முழுவதும் தோழியினிடத்து ஒருங்கமைத்திருத்தல் புலனாம். இவ்வாறு பொறுத்தற்கரிய பெருங் குணங்கள் யாவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவளே தோழியெனப் பாராட்டுதற்குரியவ ளென்பார், தாங்கருஞ்சிறப்பின் தோழி என்றார் தொல் காப்பியனார். தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகிய நிலையில் ஊரார் அலர் கூறிய காலத்தும், தலைவியின் வேட்கை அளவிறந்த நிலையிலும், அவளது வனப்புமிக்குத் தோன்றிய காலத்தும், தலைவனொடு தலைவியை ஒருசேரக் கண்ட காலத்தும் தலைவியின் மெலிவுக்குரிய காரணங்களைக் கட்டுவைப்பித்தும் கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது நோய்தீர வேலனையழைத்து வெறியாடிய பொழுதும், வெறியாடுதலைத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும், காதல் மிகுதியால் தலைவனை நினைந்து தலைவி கனவில் அரற்றிய பொழுதும் செவிலித்தாய் தோழியை வினவுதலுண்டு. இன்னவாறு நிகழ்ந்ததெனத் தோழி கூறியவழி இவ்விருவரது ஒழுகலாற்றினால் குடிக்குப் பழி விளைதலாகாதெனத் தெய்வத்தை வேண்டுதலும் தலைவி தலைவனுடன் போயினாளென்றறிந்த நிலையில் தோழியொடு ஆராய்ந்து அவ்விருவரையும் மனையறத்தின்கண் நிறுத்தற்கு முயலுதலும் அவள் செயல். தலைவன் மணந்துகொள்ளாது தலைமகளைப் பிரிந்த காலத்து அவள் கற்புவழிப்பட்டு மனைக்கண் அமைதியாக அடங்கியிருக்கும் நிலையினை யெண்ணிய நிலையிலும் தலைவனது குடிப்பிறப்பு தம் குடிப்பிறப்பினோடு ஒக்கும் என ஆராய்தற்கண்ணும் இவைபோன்ற பிறவிடங்களிலும் செவிலி உரையாடுதற்குரியள். செவிலியுணர்வுடன் ஒத்த கருத்துடையளாயின் நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்ட கூற்றுக்கள் உரியனவாம். தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றாயும், குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து நின்று இவளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பர். அது கேட்ட பெரியோர், முக்கால நிகழ்ச்சியினையும் தாம் ஒருங்குணரும் நுண்ணுணர்வுடை யோராதலின், தலைவியொடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும் நிகழ்ந்ததை மறைத்தல் வாய்மைக்கு மாறாதலானும் நும்மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள் என ஐயக் கிளவியால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணத்தற்குரிய கணவனாலும் அறியப்படாத பேரறிவினையுடையாள் நும்மகள் என ஒரு பொருளும், தன் கணவனாகியொழுகும் தலைவனாலும் அறியப்படாத அறிவுரிமைபூண்டு மயங்குகின்றாள். இவள் தன்னறிவிற் சிறிதும் மயக்கமிலள், அவன் பொருட்டு மயங்குகின்றாள் என மற்றொரு பொருளும் தரும் நிலையில் இங்ஙனம் ஐயுறக்கூறிய அறிவரது சொற்பொருளை யுய்த்துணர்ந்து தலைவன் தலைவியாகிய இருவரிடையே யமைந்த தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்துகொள்ளுதலும் உண்டு. வேறு வேறாகத் தம்முள் காதல் செய்தொழுகும் அறிவில்லா தாரைப்போலத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்பு சொல்லுஞ் சொல், தலைவியிடத்து நிகழ்தலில்லை. அங்ஙனம் சொல் நிகழாதொழியினும் தலைவியது வேட்கை புதுக்கலத்துப் பெய்தநீர் புறத்தே பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை யுடைத்தென்று கூறுவர். இயற்கைப் புணர்ச்சியாகிய களவு, கூட்டிவைப்பார் பிறரின்றித் தனிமையிற் பொலிவது. ஆதலின் தலைவன் தலைவி யிருவரும் தத்தமது உளக்கருத்தைப் புலப்படுத்துந் தூதுவராகத் தாமே நின்று கூடுதலும் உண்டு அந்நிலை மெய்ப்பாட்டியலுள் புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடு பன்னிரண்டானும் நன்கறியப்படும். எனவே தலைவன் பாங்கனது உதவிபெற்றுக் கூடுதலும் தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடுதலுமாகிய இவை யாவர் மாட்டும் நிகழவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது பெறப்படும். இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவனது சொல்லின் எல்லையைக் கடத்தல் தலைமகளுக்கு அறனன்றாகலானும் தான் செல்லுதற்குரிய இடத்தைத் தானே யுணர்வளாதலானும் தாங்கள் மீண்டும் கண்டு அளவளாவுதற்குரிய ஓரிடத்தை யறிவிக்கும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும். தோழியால் அறிவிக்கப்பட்டுப் பொருந்துமிடமும் உண்டு. களவிற்புணர்ச்சி தோழியின் துணையின்றி மூன்று நாளைக்குமேல் நிகழ்தலில்லை. அம்மூன்று நாளைக்குள்ளும் தோழியின்துணை விலக்கப்படுதலில்லையென்பர் ஆசிரியர். எனவே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்றுநாளெல்லையளவும் தலைவன் தோழியின் உதவியின்றி அவளறியாது தலைமகளைக்கண்டு அளவளாவுதல் கூடுமென்பதும், அம்மூன்று நாளைக்குமேலாயின் தோழியின் உதவியின்றித் தலைவி எதிர்ப்படுதற்கு அரியளென்பதும், அம்மூன்று நாளைக்குள்ளேயே தோழியின் உடன்பாட்டைப் பெறுதலுமுண்டென்பதும் ஆசிரியர் கருத்தாதல் உய்த்துணரப் படும். பலவகையானும் தலைமகள்பாலுளவாம் நன்மைகளை நாடுவார் பக்கத்தினை ஆராயும் ஆராய்ச்சி தலைவனுக்கு வேண்டு மாதலானும், தாங்கள் மேற்கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தாரறியாது நிலைபெற்று நிகழ்தல் வேண்டுமாதலானும், தனக்குத் துணையாவாள் இன்னாளெனத் தலைவனுக்குச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவிக்குரியதாகும் என்பர் ஆசிரியர். களவொழுக்கத்தில் நணுகியாராய்ந்தறிதற்கரிய மறைப் பொருளெல்லாவற்றையும் கேட்டற்கும் சொல்லுதற்கும் உரிய தாயாகச் சிறப்பித்துரைக்கப்படுபவள் செவிலியேயாம். தனக்கு இன்றியமையாத உயிர்த்தோழியாகத் தலைவியால் விரும்பப்பட்ட தோழியென்பாள் மேற்கூறிய சிறப்புடைய செவிலியின் மகளாவாள். தலைவியின் களவொழுக்கம்பற்றித் தன் மனத்துள்ளே ஆராய்தலும் தலைவியின் சூழ்ச்சிக்குத் தான் உசாத்துணையாகி நிற்றலுமாகிய பெருங்கேண்மையுடையாள் இத் தோழியேயென்பர். தலைவன் தன்பால்வந்து குறையுற்று நிற்க அவனுள்ளக் கருத்தினை யுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும், தலைவியும் தானும் ஒருங்கிருந்த நிலையில் தலைவன்வர அந்நிலையில் அவ்விருவரது உள்ளக்கருத்தினை யுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத்தினையும் வைத்து ஒன்றுபடுத்துணரும் உணர்ச்சி மூவகைப்படும். இவ்வாறு மூவர் மதியினையும் ஒன்றுபடுத் துணர்தலின் இது மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று. இங்ஙனம் தலைவன் தலைவியென்னும் இருவர்பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்தபினல்லது தலைவன் தன்னை இரந்து பின்னிற்கும் முயற்சிக்குத் தோழி இடந்தரமாட்டாள். தன்னை இரந்து பின்னிற்குந் தலைவனது நினைவின்கட்படும் மாசற்ற அன்பின் திறத்தையுணர்ந்து அவனைத் தலைவியோடு கூட்டுவித்தலும் அத்தோழியின் செயலேயாம். தலைவன் தலைவி யிருவரும் பிறரறியாது பகலிலும் இரவிலும் அளவளாவுதற்கெனக் குறிக்கப்பட்ட இடமே குறியென வழங்கப்படும். மனையுனுட்புகாது அங்குள்ளோர் கூறுஞ்சொற்கள் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறியாகும். ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர்தற்குத் தகுதியுடையதாகிய இடம் பகற்குறியாகும். தலைவன் செய்த அடையாளமென மயங்தற்குரியன இயற்கையாக நிகழின் குறியல்லாதவற்றைக் குறியெனக் கொள்ளுதலும் தலைமகளுக்குரிய இயல்பாகும். கற்புடை மகளிர்க்குரிய சிறப்பிற் குன்றாவாறு மேற்கூறிய இருவகைக் குறியிடங்களிலும் பிறரறியாதபடி தலைவனொடுகூடி யொழுகும் ஒழுக்கமும் தலைமகளுக்கு உண்டு. இங்ஙனம் களவொழுக்கத்தில் வந்தொழுகுதல் காரணமாக என்றும் தன் தோழர்களுடன் கலந்துகொள்ளுதற் குரிய விளையாட்டினையும் திருவிழாச் செயல்முறைகளையும் விலகியொழுகும் ஒழுக்கம் தலைவனுக்கில்லை. யாவராலும் விரும்பி நோக்கப்படுந் தலைவன் களவொழுக்கம் காரணமாக இவற்றை விலகியொழுகு வானாயின் அவன் வாரமைபற்றி அவனைப் பலரும் வினவ, அது காரணமாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாமாதலின், இவற்றை நீங்கியொழுகுதல் கூடாதென விலக்குவர் ஆசிரியர். இவ்வாறே வழியருமையும் நெஞ்சழிதலும் அஞ்சுதலும் இடையூறும் ஆகிய இவை தலைவன்பால் நிகழ்தல்கூடாதென்பர். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் இக்களவொழுக் கத்தைக் குறிப்பினால் உணர்வர். நற்றாய், செவிலியுணரும் முறைமையால் அறிந்துகொள்வாள். இரவினும் பகலினும் அவ்வழி வந்து செல்லுந் தலைமகனையறிந்து அவனது வருகை காரணமாக மகளிர் சிலரும் பலரும் தம்முகக் குறிப்பினாற் புலப்படுத்தும் அம்பலும், இன்னானோடு இன்னாளிடையது நட்பு எனச் சொல்லால் விரித்துரைப்பதாய அலரும் தோன்றிய பின்னரல்லது இம்மறை வெளிப்படாதாதலின், இக்களவு வெளிப்படுதற்குத் தலைவனே காரணமாவன், களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை மணந்துகொள்ளுதலும் அது வெளிப்படுதற்கு முன்னரே மணம் செய்துகொள்ளுதலும் என மணந்துகொள்ளும் முறை இருதிறப்படும். களவு வெளிப்பாடே கற்பியல் வாழ்க்கையாகக் கருதப் படுமாயினும் உலகத்தாரறியத் தலைவியை மணந்துகொள்ளாத நிலையில் ஓதல், பகை, தூது என்பன காரணமாகத் தலைவன் நெட்டிடைப் பிரிந்து சேறல் கூடாதென்பர் ஆசிரியர். கற்பியல் கற்பினது இலக்கணம் உணர்த்தினமையால் இது கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. அன்புரிமை பூண்ட தலைமகன் தன்பால் அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்துரைக்கப் பெறுவதாகும். முன் களவியலிற் கூறியவாறு ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடியொழுகின ராயினும் தலைமகனுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ளுதல் இயலாது. ஆகவே ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத் துறுதியை உலகத்தாரறிய வெளிப்படுத்தும் நியதியாகியவதுவைச் சடங்குடன் தலைவன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சியாயிற்று. உள்ளப் புணர்ச்சியளவில் உரிமை பூண்டொழுகிய தலைவனும் தலைவியும் உலகத்தாரறிய மனையறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்குஞ் செயல் முறையே பண்டைத் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்காகும். இதனைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியனார். கணவனிற் சிறந்த தெய்வம் இல்லையெனவும் அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும் தலைமகளுக்குப் பெற்றோர் கற்பித்தலானும், அந்தணர் சான்றோர் அருந்தவத் தோர் விருந்தினர் முதலியோர்பால் இன்னவாறு நடந்துகொள்ளுதல் வேண்டுமெனத் தலைமகன் தலைமகளுக்குக் கற்பித்தலானும், நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பபாயாக எனத் தலைவனுக்கும் நின் கணவனுக்கு இவ்வாறு பணி செய்தொழுகு வாயாக எனத் தலைவிக்கும் சான்றோர் கற்பித்தலானும் இவ்வதுவைச் சடங்காகிய கரணமும் கற்பெனப்படுவதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். தலைவன் தலைவி யிருவரும் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலை மகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலைமையாகிய திண்மையே கற்பெனப்படும். கற்பென்னுந்திண்மை என்றார் திருவள்ளுவர். இத்தகைய மனவுறுதியை உலகத்தாரறியப் புலப்படுத்துவது திருமணச் சடங்காகிய கரணமேயாகும். காதலர் இருவரும் பிரிவின்றியியைந்த நட்புடையார் என்பதனை வலியுறுத்துவது வதுவைச் சடங்காகிய இக்கரணமே யாதலின் இந்நியதி பிழைபடுமேல் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த பெருந் துன்பம் நேருமென்பது திண்ணம். கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும் என நம் நாட்டில் வழங்கும் பழமொழி இதனை வலியுறுத்தல் காணலாம். தலைவன், தலைமகளைப் பெற்றோரறியாது உடன்போக்கில் அழைத்துச் சென்றவழி, அவளுடைய பெற்றோரது உடன்பாடின்றியும் கரணம் நிகழ்தலுண்டென்பர் ஆசிரியர். எனவே மகட்கொடைக்குரிய பெற்றோரது இசைவில்லாது போயினும் காதலரிருவரது உள்ளத்துறுதியைப் புலப்படுத்து வதாகிய திருமணச் சடங்கு உலகத்தாரறிய நிகழ்தல் இன்றியமையாததென்பது நன்கு புலனாம். இத்திருமணச் சடங்கு மிகப்பழைய காலத்தில் நாட்டில் எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டிலது. படைப்புக் காலந்தொட்டு நிலைபெற்று வரும் மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் வகுக்கப்பட்டிருந்தது. அரசியலாட்சியில் பட்டத்தரசி முதன்மை பெறுதல் காரணமாகவே இவ்வரையறை விதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வண்புகழ் மூவராகிய மேலோர் மூவர்க்கும் வகுத்த கரணம் அவர்கீழ் வாழும் குடிமக்களுக்கும் உரியதாயிற்று. இச்செய்தி, மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம், கீழோர்க்காகிய காலமும் உண்டே எனவரும் இவ்வியற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். ஒருவன், ஒருத்தியை அன்பினாற் கூடியொழுகிப் பின்னர் அவளை யறியேன் எனப் பொய் கூறுதலும், நின்னைப் பிரியேன் எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதிகூறிப் பின் அதனை வழுவிக் கடைப்பிடியின்றி யொழுகுதலுமாகிய தீய வழக்கங்கள் இந்நாட்டில் தோன்றிய பின்னரே சான்றோராகிய குடும்பத் தலைவர்கள், கணவனும் மனைவியும் பிரிவின்றி வாழ்தற்குரிய மணச் சடங்காகிய கரணத்தை வகுத்தமைத்தார்கள். இச் செய்தி, பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று என்பர் இளம்பூரணர். ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை ஆர்ய என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். என்னைமுன் னில்லன்மின் தெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர் (திருக்குறள்-771) எனவும், என்னைபுற்கை யுண்டும் பெருந்தோளன்னே (புறம்-84) எனவும் வரும் தொடர்களின் என்-ஐ என்பது என் தலைவன் என்ற பொருளில் வழங்கக் காண்கின்றோம். ஐ என்பதன் அடியாகப் பிறந்தததே ஐயர் என்னுந் தமிழ்ச் சொல்லாகும். ஐ வியப்பாகும் (உரி-88) என்பது தொல்காப்பியம். தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறி வுடைமையாற் பலரும் வியந்து பாராட்டத் தக்க தலைமைச் சிறப்புடையாரை ஐயர் என வழங்கும் மரபுண்மை இதனாற் புலனாகும். புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் (கற்-5) என்புழித்தலைவன், புதல்வனைப் பயந்து வாலாமை நீங்கிய தலைவியைக் கருதி, அறனாற்றி மூத்த அறிவுடையோர்களாகிய தன் குல முதல்வரைத் துணையாகக் கொண்டும் அமரகத்தஞ்சா மறவர்களாய்த் துறக்கம் புக்க வீரர்களை எண்ணியுஞ் சிறப்புச் செய்தலுண்டென்பதனை ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆசறு காட்சியையர் (குறிஞ்சிப்-17) எனக் கபிலரும், விண்செலன் மரபின் ஐயர் (திருமரு-107) என நக்கீரரும் முற்றத்துறந்த தவச்செல்வர்களை ஐயர் என வழங்கியுள்ளார்கள். சமணரில் இல்லறத்தாராகிய உலக நோன்பிகளைப் பெரும் பெயர் ஐயர் என்பர் இளங்கோவடிகள். தமையன்மார்களை ஐயர் என வழங்குதலும் உண்டு. அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட, என் ஐயர்க்குய்த்துரைத்தாள் யாய் என்பது குறிஞ்சிக்கலி. இளமா வெயிற்றி இவைகாண் நின்ஐயர், தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆனிரைகள் என்பது சிலப்பதிகாரம். திருநாளைப்போவார், திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகிய தலைமைப் பண்புடைய பெரியோர்களை ஐயர் என்ற சொல்லாற் சிறப்பு முறையிற் சேக்கிழாரடிகள் வழங்குதலால் இச்சொல் இக்காலத்திற்போல முற்காலத்திற் சாதிப்பெயராக வழங்கியதில்லையென்பது நன்கு துணியப்படும். பலநூறாண்டு கட்கு முற்பட்ட தமிழ் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் ஐயரென்னும் இச்சொல் சாதிப்பெயராக வழங்கப்பெற்றிலது. அங்ஙனமாகவும் மிகப் பழைய தமிழ் நூலாசிய தொல் காப்பியத்தில் வழங்கிய ஐயரென்னுஞ் சொல்லுக்கு இக் காலச் சாதிப்பெயர் வழக்கத்தை யுளத்துட் கொண்டு ஆரியமேலோர் எனப் பொருள் கூறுதல் வரலாற்று முறைக்கு ஒவ்வாத பிழையுரையாதல் திண்ணம். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தன ரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்திய தென்பதும் அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ஐயர் யாத்தனர் கரணம் என்ப எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்ட தென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவுந் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன், ஒருவரும் அறியாத படி தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுங்கால், அவளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திடையெய்தி அவ்விரு வரையுந் தடுத்து நிறுத்த முயலுவர். அவரது வருகையைக் கண்டு அஞ்சிய தலைமகள், தன்னுயிரினுஞ் சிறந்த தலைவனைப் பிரிதற்கு மனமின்றி நிற்பள். இந்நிலையினை இடைச்சுர மருங்கின் அவள் தமரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை என்பர் ஆசிரியர். தலைவியின் கற்பு நிலையைக் கண்ட சுற்றத்தார் அவ்விருவரும் மணந்து வாழும் நெறிமுறையினை வகுத்தமைப்பர். மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு பலரறிய வெளிப் படுதலும் பின்னர் தலைவியின்சுற்றத்தார் கொடுப்பத் தலை மகளைத் தலைவன் மணந்து கொள்ளுதலுமாகிய இவை முதலாகிய வழக்கு நெறியில் மாறுபடாது, மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவ்வைந் தியல்களோடுங்கூடி நிகழ்வது கற்பென்னும் ஒழுகலாறாகும் என்பர் ஆசிரியர். இல்வாழ்க்கையும் புணர்ச்சியும் முதலியவற்றால் தலைவன் தலைவி யென்னும் இருவருள்ளத்துந் தோன்றும் மகிழ்ச்சியே மலிவெனப்படும். புணர்ச்சியாலுண்டாகிய மகிழ்ச்சி குறைபடாமல் காலங் கருதியிருக்கும் உள்ள நிகழச்சியே புலவியாகும். அங்ஙனம் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பினாலன்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை ஊடல் எனப்படும். அவ்வாறு தலைவிக்கு ஊடல் நிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய செயல் என்பால் நிகழவில்லையேயெனத் தலைவனும் அவன்சார்பாக வாயில்களும் தலைமகளுக்கு உணர்த்துதலே உணர்வெனப்படும். பொருளீட்டுதலும் போர்மேற் சேறலும் கலை பயிலுதலும் முதலிய இன்றியமையாத உலகியற் கடமை கருதித் தலைவன் தன் மனையாளைப் பிரிந்துசேறல் பற்றிய நிகழ்ச்சி பிரிவெனப்படும். தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவை யென்பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலால் அவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலில் விரித்துக் கூறவில்லை. தொன்று தொட்டுத் தமிழ்மக்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அகநானூற்றில் -66, 86-ஆம் பாடல்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். வேள்வியாசான் காட்டியமுறையே அங்கிசான்றாக நிகழும் சடங்குமுறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங் களிலும் கூறப்படாமையால் ஆரியர்மேற்கொண்ட அவ்விவாக முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்குமுறைக் கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளியலாம். கலித் தொகையில் ஓத்துடையந்தணன் எரிவலங்கொள்வான்போல் எனவரும் தொடரில் புரிநூலந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தொடர்ப் பொருளை ஊன்றிநோக்குங்கால் இங்ஙனம் எரிவலம் வருதல் ஓத்துடையந்தணராலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற் கொள்ளப்படாத சடங்கென்பது நன்கு புலனாம். இனி, இக்கற்பியலிற் கூறப்படும் ஏனைய பொருள்களை நோக்குவோம். தலைவன் தலைவி ஆகிய இருவரும் உலகத் தாரறிய மணம் புரிந்து வாழும் கற்பியல் வாழ்விலே தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், அகம்புகல் மரபின் வாயில்கள், செவிலி, அறிவர், பாணர், கூத்தர், இளையோர், பார்ப்பார் என்போர் உரையாடுதற்குரிய இடங்களையும் பொருள்வகை யினையும் அவர்தம் செயல் முறைகளையும் இவ்வியல் 5-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களாலும், 24-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களாலும், 36-ம் சூத்திரத்தாலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தலைவன் தேற்றத் தெளியும் எல்லையினைத் தலைவி கடந் தனளாயினும் களவின்கண் தலைவி செய்த குறியைத் தப்பினாலும் தலைவன், மனம் சிறிது வேறுபட்டுப் புலத்தலும் அவ்வேறுபாடு நிலைத்து நிற்ப ஊடுதலும் உண்டு. அங்ஙனம் தலைவன் புலந்து ஊடிய நிலையில் அவனுள்ளம் அமைதியடைதற்குரிய பணிந்த மொழிகளைத் தோழி கூறுவாள். பரத்தையரை விரும்பியொழுகும் தலைவனது புறத்தொழுக்கத்தை நீக்குதல் கருதியும் தலைவி மடனென்னுங் குணத்தால் அடங்கியொழுகும் எளிமையுடை யளாதல் கருதியும் தலைவனை நோக்கி அன்பிலை கொடியை யெனத் தோழி இடித்துரைத்தற்கும் உரியள். தலைவனது உள்ளக் குறிப்பை யறிதல் வேண்டியும் தன்மனத்து ஊடல் நீங்குமிடத்தும் தலைவனொடு உறவல்லாதாள்போன்று தலைவி வேறுபடப் பேசுதற்கு உரியள். கணவனை எஞ்ஞான்றும் வழிபட்டொகுதல் மனைவிக்கு இயல்பாகலால். காமவுணர்வு மிக்குத் தோன்றிய நிலையில் தலைவியைத் தலைவன் பணிந்து கூறுதல் தவறாகாது. பிறர் துன்பங்கண்டு உளமிரங்கும் அருளுணர்வைத் தோற்றுவித்த அன்பு பொதிந்த சொற்களை மெய்யே கூறுதல் தலைவிக்குரிய இயல்பாகும். முற்கூறிய களவொழுக்கத்தினும் அது வெளிப்பட்ட கற்பியல் வாழ்வினும் அலர் தோன்றும். அவ்வலர் மொழியால் தலைவன் தலைவி யிருவருள்ளத்துங் காமவுணர்வு மிக்குத் தோன்றும். இவ்வாறே தலைவனது விளையாட்டும் காமவுணர்வை மிகுதிப்படுத்தும். கணவனும் மனைவியும் சிறிது மனம் வேறுபட்டு ஊடிய காலத்து அவர்தம் பிணக்கத்தைத் தீர்த்து வைத்தற்குரியவர்கள் வாயில்கள் எனப்படுவர். பாணர், கூத்தர் முதலியோர் தலை மகனை எக்காலும் அகலாது நின்று தலைவியினது பிணக்கத்தைத் தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வந்து பழகும் இயல்பினராகலின், இவர்களை அகம்புகல் மரபின் வாயில்கள் என்பர் ஆசிரியர். இவ்வாயில்கள் முன்னிலைப் புறமொழியாகப் பேசுதலும் உண்டு. பின்முறை வதுவையாக மற்றொருத்தியை மணந்த காலத்தும் தன் புதல்வனை வாயிலாகக் கொண்டு செல்லினும் தான் பரத்தமை செய்து ஒழுகியதை நினைந்து தலைவன் நிலைகுலைந்து கலங்குதலும் உரியன். தலைவனைக் கூடிமகிழுங் காலத்தில் தாயைப்போன்று அவனை இடித்துரைத்துத் திருத்தி அவனது மனக் கவலையை மாற்றுதலும் மனைவிக்குரிய கடமையாகும். தலைவனது ஒழுக்கத்திற் சோர்வு பிறவாமற் காத்தல் தலைவியின் கடமையாக நூல்களிற் சொல்லப்படுதலால், மகனைப் பெற்ற தாயாகிய தலைவி இங்ஙனம் இடித்துரைக்கும் உயர்வுடையளாதலும் தலைவனது உயர்வாகவே கருதப்படும். எல்லாச் செல்வங்களுக்கும் உரிய தலைவன் இவ்வாறு அன்புடையார்கண் பணிந்தொழுகுதல் இயல்பேயாகும். போர் செய்து பகைவரை வெல்லுதற்குரிய வழி துறைகளை ஆராய்தற்கு இடமாகிய பாசறையின்கண் மகளிரொடு உடனுறைதல் கூடாது. போர்த்தொழிலுதவியிற் பழகிப் புண்பட்ட வீரரை யுபசரித்தலும், இசைபாடி மகிழ்வித்தலும் முதலிய புறத்தொழில் புரியும் புறப்பெண்டிராயின் பாசறையில் இருத்தல் பொருந்துவதாகும். மனைவாழ்க்கைக்கண் கணவன் மனைவி ஆகிய இருவர்க்கு மிடையே பழகும் எல்லா வாயில்களும் அவ்விருவர்பாலும் அமைதற்குரிய மகிழ்ச்சி நிலையைப் பொருளாகக் கொண்டே உரையாடுதற்குரியர், அவ்விருவரிடத்தும் அன்பு நீங்கிய கடுஞ் சொற்களைக் கூறவேண்டிய செவ்வி நேர்ந்தால் நேர் நின்று கூறாது சிறைப்புறமாக ஒதுங்கி நின்று கூறுதல் வேண்டும். தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என்னும் இரண்டிடமுமல்லாத ஏனையிடங்களில் தலைவன் முன்னர்த் தலைவி தன்னைப் புகழ்தல் கூடாது. தலைவன் வினைவயிற் பிரியுங்கால் தலைவி முன்னர்க் தன்னைப் புகழ்ந்துரைத்தல் பொருந்தும். தலைவன் கூற்றினை எதிர்த்துக் கூறும் உரிமை பாங்கனுக்கு உண்டு. இங்ஙனம் எதிர்த்துக்கூறும் சொல் எல்லாக் காலத்திலும் நிகழ்வதில்லை; அருகியே நிகழும். துன்பக்காலத்தும் தலைவியை வற்புறுத்தியல்லது தலைவன் பிரிந்து செல்லுதல் இல்லை. வினைமேற்செல்லுங் காலத்துத் தலைவி தன் பிரிவினைப் பொறுத்திருக்கமாட்டாள் என்ற நிலையில் தனது பயணத்தை நீங்குதல் இல்லை; அவளை வற்புறுத்தல் கருதிச் சிறிதுபொழுது தாமதித்துச் செல்வன். தலைவன் வினை மேற்கொண்டு சென்ற இடத்தில் அவன்பாற் சென்று தலைவியின் ஆற்றாத்தன்மையை யாவரும் சொல்வதில்லை. தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றிபெற்ற நிலையிலேதான் தலைவியைப்பற்றிய நினைவு அவனுள்ளத்தே விளங்கித் தோன்றும். தலைவிக்குப் பூப்புத்தோன்றி மூன்றுநாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் கருத்தோன்றுங் காலமாதலின், தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்துப் பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் தலைவினைப் பிரிந்துறைதல் கூடாதென்பர் ஆசிரியர். யாவராலும் விரும்பத்தக்க கல்வி கருதிப் பிரியுங்காலம் மூன்றண்டுகளுக்கு மேற்படாது. பகை தணிவினையாகிய வேந்தற்குற்றுழிப் பிரியும் பிரிவும், அதனைச்சார்ந்த தூது, காவல் என்பனவும், ஒழிந்த பொருள்வயிற் பிரிவும் ஓராண்டிற்குட்பட்ட காலவெல்லையினையுடையன. யாறு குளங்களிலும் சோலைகளிலும் விளையாடி உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சி யெய்துதல் தலைவன் தலைவி யிருவர்க்கும் உரியதாகும். இங்ஙனம் காமநுகர்ச்சி யெல்லாம் நுகர்ந்தமைந்த பிற்காலத்தே, பாதுகாவலமைந்த பிள்ளைகளுடனே நெருங்கி, அறத்தினை விரும்பும் சுற்றத் தாருடனே தலைவனும் தலைவியும், வீடுபேறாகிய சிறப்பினை யருளும் முழுமுதற்பொருளை இடைவிடாது எண்ணிப் போற்றும் நன்னெறியிற் பழகுதல், மேற்கூறிய மனைவாழ்க்கையின் முடிந்த பயனாகும். தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய இப் பன்னிருவரும் மனைவாழ்க்கையின்கண்ணே கணவன் மனைவி யென்போரிடையேயுளதாம் பிணக்கத்தினைத் தீர்த்து வைக்கும் நிறைந்த சிறப்பினையுடைய வாயில்களாவர். வினைகருதிப் பிரிந்த தலைமகன், தன் உள்ளம்போன்று உற்றுழியுதவும் பறவையின் வேகத்தையுடைய குதிரையையுடைய னாதலின், தான் வினைமுற்றி மீளுங் காலத்து இடைவழியிற் றங்காது விரைந்து வருதலையுடையனாவன் என அவன் தலைவி யின்பால் வைத்த பெருவிருப்பினைப் புலப்படுத்துவர் ஆசிரியர். பொருளியல் மேற்சொல்லப்பட்ட இயல்களிலும் இனிச் சொல்லும் இயல்களிலும் வரும் பொருளினது தன்மையினை யுணர்த்துதலின் இது பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள், புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின் இதனை ஒழிபியலென்னினுங் குற்றமில்லை யென்பர் இளம்பூரணர். சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாமைத் திரிபில் சொல் என்ப ராதலின் அவை ஈண்டுத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்றார் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வியலிற் கூறப்பட்டன யாவும் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப்படுமென்பதும், புறத்திணையியலுட் புறத்திணைவழுக் கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்பதும் அவர் கருத்து. அகப்பொருள் ஒழுகலாற்றில் தலைவன், தலைவி, தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொல்லமைதியினையும் அவர் தம் கூற்றில் அமைத்தற்குரிய பொருள் வகையினையும் சிறப்பு முறையிற் கூறுவது இப்பொருளியலாகும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 52-ஆக இளம்பூரணரும், 54-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும், சொல்லக் கருதிய பொருள் இயைபு பெறப் புலப்படும். அவ்வழிச் சொற்களுக்கு அங்கமாகிய அசைச் சொற்கள் மாறி நிற்றலில்லை. உலகியலில் எல்லோர்க்கும் உரியதாய்ப் பயின்றதாகாது ஒரு திறத்தார்க்கே யுரியதாய்ப் பயிலும் சொல்வகையினைப் பாற்கிளவி என வழங்குவர் ஆசிரியர். பால்-பக்கம். பாற்கிளவி-ஒரு திறத்தார்க்கே உரியதாய்ப் பயிலும் சொல். துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் கருதிய இயல்பு புலனாக எண்வகை மெய்பாடும் விளங்கப் பொருந்திய உறுப்புடையதுபோலவும், உணர்வுடையதுபோலவும், தனது கூற்றினை மறுத்துரைப்பது போலவும், நெஞ்சொடு சேர்த்துக் கூறியும், பேசும் ஆற்றலில்லாத பறவை, விலங்கு முதலியவற்றோடு பொருந்தி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறியும், பிறருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும், அறிவையும் அறிதற்கு வாயிலாகிய பொறி புலன்களையும் வேறுபட நிறுத்தி உவமைப் பெயரும், உவமிக்கும் பெயரும், தொழிலும் பண்பும் பயனுமாகிய மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்துமிடத்து உவமங் கூறுதலும், தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் உரிய ஒரு கூற்றுச் சொல்லாம். காமம் இடையீடுபட்ட காலத்து கனாக்கண்டு கூறுதலும் அவ்விருவர்க்கும் உரியதாகும். அவ்விருவரும் உடன்போகிய காலத்துத் தாய் கனாக்கண்டு கூறுதலும் உண்டு. தம்முள் அன்புடையராய்ப் பழகும் இன்ப நிலையில்லாத ஏனைத் துன்பக் காலத்துத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வர்க்கும் மேற்கூறியவாறு அறிவும் புலனும் வேறுபடக் கூறும் ஒரு கூற்றுச் சொல் உரியதாகும். அன்பொருமையும் உயிரினுஞ் சிறந்த நாணமும் மடனும், குற்றமற்ற சிறப்பினையுடைய பெண்பாலார் நால்வர்க்கும் உரியவாகும். எனவே இவர் நால்வரும் இக்குணங்களுக்கு இழுக்கு நேராவண்ணம் உரையாடுதல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். தலைமகள், தனது உடல் வனப்பு வேறுபட்டுத் தனிமை யுறுங்கால் தலைமகனது பிரிவைத் தன் அவயங்கள் முன்னமே உணர்ந்தனபோலப் பொருந்திய வகையாற் கூறுதலும் உண்டு. j‹ cl«ò« cÆU« bkȪj ÃiyÆY« ‘ïit v‹d tU¤j K‰wd? எனத் தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறுவதல்லது, தலைவனைத் தானே சென்று சேர்தல் தலைமகளின் இயல்பன்றாம். தன் நெஞ்சுடன் தனித்து ஆராயுங் காலத்துத் தலைமகன் இருக்குமிடத்தை யடைதல் வேண்டுமெனத் தலைவி கூறுதலும் உண்டு. தலைவன் புறத்தொழுக்கத்தை மறைக்குமிடனும் தான் அவன்பால் பெரு விருப்புற்ற நிலையும் அல்லாத ஏனையிடங்களிலெல்லாம் மடன் நீங்காதபடி நிற்றல் தலைவியின் கடனாகும். தலைவன் தலைவி என்னும் இருவரும் இயற்கைப் புணர்ச்சி யாகிய முதற் காட்சியில் ஒருவரையொருவர் சந்தித்த முறைமை தூய அன்பொடு பொருந்திய அறத்தின் வழிப்பட்ட நற்செயலே யென்பதனை அறிவுறுத்துதல் களவு வெளிப்படுத்தலின் கருத் தாகும். ஆதலால் அங்ஙனம் வெளிப்படுத்தும் முறையினை அறத்தொடு நிற்றல் என்பர் ஆசிரியர். தலைவி தலைவனொடு தனக்குண்டாகிய தொடர்பினைத் தம் பெற்றோர்க்கு அறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் முறைமையிலள். அங்ஙனம் அறத்தொடு நிற் குங்கால் தலைவியின் குடிப்பிறப்பிற்கும் செவிலியின் அறிவிற்கும் தலைவியின் நாணம், கற்பு முதலிய பெருமைக்கும் தனது காவலுக்கும் தலைவனுக்குரிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடியென்னும் பெருந்தன்மைக்கும் தவறு நேராதபடி இக்களவொழுக்கம் நிகழ்ந்த முறையினை முரண்பாடில்லா மொழிகளால் தோழி செவிலிக்கு அறிவுறுத்தல் மரபாகும் என்பர் களவியலுரையாசிரியர். செவிலிக்குத்தோழி அறத்தொடு நிற்குங்கால், தன்னிகரற்ற தலைவன் இளையோராகிய எங்கள்பால் எளியனாக நடந்து கொண்டான் என்று கூறுதலும், இத்தகைய அருளும் சிறப்பு முடையான் அத்தோன்றல் எனத் தலைவனை உயர்த்துப் புகழ்தலும், தலைவன் தலைவியென்னும் இருவரும் அன்பினால் நிரம்பிய வேட்கையுடையாரெனக் கூறுதலும், அத்தகைய தலைவனுக்கே நம் தலைவியை மணஞ்செய்து கொடுத்தல் வேண்டுமென்னும் குறிப்புத் தோன்றக்கூறுதலும், தலைவியினது நோயினைத் தணித்தல் வேண்டி வேலன் முதலியோரைக் கொண்டு வெறியாடல் முதலியன நிகழ்த்தியபொழுது அவை தலைவியின் நோயைத் தணித்தற்குரியன அல்ல எனத் தெரிவித்துத் தடுக்குமுகமாக அவர்கள்பால் சிலவற்றை வினாவுதலும், தலைவன் யாதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு வருங்கால் தன் கருத்தின்றித் தலைமகளை எதிர்ப்பட்டானெனக் கூறுதலும், தலைமகனும் தலைமகளும் ஒருவரை யொருவர் சந்தித்தபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிகழ்ந்த முறையே உண்மையாக எடுத்துரைத்தலும் என இவ்வேழு வகையாலும் களவொழுக்கத்தை வெளிப்படுத்தல் முறையென்பர் தொல்காப்பியர். காமவுணர்வு மிக்குத்தோன்றிய காலத்தல்லது சொல் நிகழ்ச்சி யில்லாமையால் தலைமகளது வேட்கையை அவளது தோற்ற முதலியவற்றைக்கொண்டு செவிலி முதலியோர் குறிப் பினால் உணர்வர். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, தீதொரீஇ நன்றின்பாலுய்க்கும் நல்லறிவு, பிறர்பாற் காணுதற்கரிய அருமை என்பன பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகும். ஆகவே மேற்சொல்லிய அறத்தொடு நிலைவகையும் இனிக்கூறும் வரைவுகடாதற் பகுதியும் ஆகியவற்றை உண்மைவகையானும் புனைந்துரை வகையானும் கூறும் ஆற்றல் தோழி முதலிய பெண்பாலார்க்குண்மை இனிது புலனாம். தலைமகன் வரும் காலமும் வழியும் ஊரிடையுளதாங் காலலும் ஆகியவற்றைத் தப்பியொழுகுதலால் உளவாம் தீமைகளை எடுத்துக்காட்டலும், தான் நெஞ்சழிந்து கூறுதலும், தலைமகனுக்குளவாம் இடையூறு கூறுதலும், அவனைப் பகற்குறி விலக்கி இரவில் வருகவென்றலும், இரவும் பகலும் இங்கு வாராதொழிக வெனக் கூறுதலும், நன்மையாகவும் தீமையாகவும் பிறபொருளையெடுத்துக் காட்டலும், பிறவுமாக இங்ஙனம் தலைவனது உயர்ச்சி கெடத் தோழி கூறுஞ் சொற்கள்யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பமின்மை யாற் கூறப்பட்டன அல்ல; தலைமகளை அவன் விரைவில் மணந்துகொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாம். தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப்பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத்தலும் உண்டு. களவொழுக்கத்தில் தலைவன் தனியே வந்து போவதன்றித் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து செல்லுதலும் இயல்பேயாகும். உண்ணுதற்றொழிதலை நிகழ்த்துதற்குரியன அல்லாத உணர்வற்ற பொருள்களை அத்தொழிலை நிகழ்த்தினவாக ஏறிட்டுக் கூறுதலும் இவ்வகத்திணைக்கண் வழங்கும் மரபாகும். தலைமகளைப் புறத்தே செல்லவொட்டாது காக்கும் காவல் மிகுதியான நிலையில், எங்கள் சுற்றத்தார் தலைமகளைக் கொடுக்க இசையாமைக்குக் காரணம் பரிசப்பொருளை வேண்டி நிற்றலே எனத் தோழி தலைமகனை நோக்கிக் கூறுதலும் விலக்கத்தக்கதன்று. காவல் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நேர்ந்தபொழுது, தலைவன்பால் உளவாம் அன்பும், அன்பின் வழிப்பட்ட மனை யறமும், மனையறத்தின்கண் இருந்து நுகர்தற்குரிய இன்பமும், பெண்ணியல்பாகிய நாணமும் ஆகிய இவற்றிற் கருத்தின்றி அடங்கியொழுகும் நிலை, பழியுடையதன்றாதலால் இற்செறிக் கப்பட்ட காலத்தில் இவற்றைப்பற்றி எண்ணுதற்கு இடமில்லை என்பர் ஆசிரியர். பொருளீட்டுதல் கருதிப் பிரிந்து செல்லுந் தலைமகன், தன்னோடு உடன்வரக் கருதிய தலைமகளுக்கு யான் போகும் வழி வெம்மைமிக்க பாலை நிலமாம் எனக் கூறி விலக்குதலும் தவறகாது. முன்னைய நூல்களில் அகப்பொருளாகவும் புறப் பொருளாகவும் எடுத்தோதப்பட்டனவன்றித் தம் காலத்து வாழும் சான்றோர் தமது அநுபவத்தால் தெளிந்து கூறுவனவும் உயர்த்தோர் வழக்கென ஏற்றுக்கொள்ளத் தக்கனவாதலின், உயர்தோர் வழக்கொடு பொருத்தி வருவனவெல்லாம் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்கப்படும். உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப்பொருளொழுகலாற்றிற்குப் பயனுடையனவாக வருமாயின், அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும் பழியுடையதன்றாம். அவ்வாறு உலக வழக்கினைக் கடந்து வருவனவாகிய பொருட்பகுதிகளைச் செய்யுளில் அமைத்துக் கூறுங்கால், நாணம் நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறிப்படுத்துக் கூறுதல் வேண்டும். முறைப்பெயரிடத்து இருபாலுக்கும் பொருந்தின தகுதி யுடைய எல்லா என்னும் பொதுச் சொல், ஆண்பால் பெண் பால் ஆகிய அவ்விரண்டற்கும் ஒப்ப வுரியதாய் வழங்கும். தந்தைக்குரிய பொருள்களாய் மக்கள் எய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய், அறமும் புகழுங் கருதி ஒருவர் கொடுப்ப மற்றையோர்பாற் செல்லாதனவுமாய், உழவு முதலிய தொழில் முயற்சியால் வாராதனவுமாய், வேறுபட்ட பிறரால் வலிந்து கொள்ளப்படாதனவுமாய் வரும் பொருளுரிமை முறை, இவ்வகப்பொருள் ஒழுகலாற்றிற் பொருந்தி வருதல் உண்டு என்பர் ஆசிரியர். சங்கத்தொகை நூல்களில் தலைவியின் அங்கங்களைத் தோழி தன்னுடையனவாக உரிமை பாராட்டிக் கூறுவனவாக அமைந்த கூற்றுக்கள்யாவும் இத்தகைய உரிமை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கிழவன், கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணொரு மையும் பெண்ணொருமையும் உணர்த்தி நிற்கும் ஒருமைச் சொற் கள், நானிலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண்ணே நின்று பன்மைப் பொருளையுணர்த்தும் முறை, உலக வழக்கில் நிலைபெற்றது என்பர் அறிஞர். இன்பம் என்று சொல்லப்படும் உணர்வானது எல்லாவுயிர் களுக்கும் மனத்தொடு பொருந்திவரும் விருப்பத்தை அடிப்படை யாகக்கொண்டு தோற்றுவது என்பர் ஆசிரியர். எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர்மாட்டும் இன்பம் உளதாமெனவும் மனம் பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றா மெனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். எல்லாவுயிர்க்கும் இன்பம் பொது எனவே ஒழிந்த அறனும் பொருளும் எல்லாவுயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வரும் எனக் கருத்துரைப்பர் நச்சினார்க்கினியர். பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலியோரை ஊடல் தீர்க்கும் வாயிலாகஅனுப்புதல், மருதநிலத் தலைவர்க்கே சிறப்புரிமையுடையதாயினும் நானிலத்தலைவர்க்கும் பொதுவாக உரியதாகும். அவ்வழிப் பிரியும் பிரிவு தம் ஊரைக் கடந்து நிகழ்வதில்லை. ïilÉlhJ ï‹g« Ef®jnyhL kidaw« Ãfœ¤J« cÇikia cWâahf ÉU«òjyhD«, ÉidbrŒjÈš ÉU¥òila M©k¡fŸ ãÇt® vd¡fUâ mŠR« m¢r« kfË®¡F ïašghjyhD«, fsbthG¡f¤ij¥ òw¤jh®¡F btË¥gL¤Jbk‹W mŠR«go njh‹¿a m«gY« myU« M»a ïUtif¡ F¿¥ãdhY«, jiykfdJ tuÉid vâ® neh¡»ÆUªj ÃiyÆš tªj mtDl‹ mstshîj‰F ïayhjgo ïilôW ne®jyhD« jiytndhL cl‹ngh j‰F¿¥ò« ‘V‹ ï‹D« kzŠbrŒJ bfhŸsÉšiy? என அவனை வினவுங் குறிப்பும் தலைமகளிடத்தே தோன்றும். வருத்த மிகுதியைக் குறித்த நிலையில் மனைவாழ்க்கையில் இரக்கம் தோன்றுதலும் உரித்தாம். தலைவன் பணிந்துழி அச்சமும் நாணமுமின்றித் தலைவி அப்பணிவினை யேற்றுக் கொள்ளுதலும், தலைவன் தன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும் புலவிக்காலத்து உரியனவாம். களவுக்காலத்துத் தலைவியின் நலம் பாராட்டிய தலைவன், கற்புக்காலத்தும் அவளது எழில் நலம் பாராட்டுதற்கு உரியன். வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளை இறைச்சியென வழங்குவது தமிழ்மரபு, இறைச்சிப் பொருள் என்பது உரிப் பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள். அஃதாவது கருப்பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது என்பர் இளம் பூரணர். இத்தகைய இறைச்சிப்பொருள் பெரும்பான்மையும் அகப்பொரு ளொழுகலாற்றில் தலைவனது கொடுமைகூறும் வழிப் பிறப்பதென்றும், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அப்பொருட்கு உபகாரப்படும் பொருட்டன்மையினை யுடையதென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இறைச்சிதானே யுரிப்புறத்துவே என இளம்பூரணரும், இறைச்சிதானே பொருட்புறத்ததுவே என நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டனர். இறைச்சிப் பொருளாகிய இதன் கூறுபாட்டினை ஆழ்ந்து உணரவல்லார்க்கு வெளிப்படக் கூறப்படும் பொருளின் புறத்த தாகி வரும் அவ்விறைச்சியினுள்ளே உட்பொருளாகத் தோன்றும் வேறுபொருள்களும் உள என்பர் ஆசிரியர். எனவே இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக்கிடப்பனவும் கிடவா தனவும் என இருவகைப்படும் என்பர் இளம்பூரணர். கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலேயன்றி, அக்கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; அஃது உள்ளுறை யுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து, அவ்வுள்ளுறையுவமம் அன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு என இறைச்சிப் பொருளின் கூறுபாட்டினைச் சிறிது விரித்து விளக்குவர் நச்சினார்க்கினியர்.1 தலைவி, தலைவனது பிரிவாற்றாது வருந்தியகாலத்து, பிரிந்து சென்ற தலைவனால் வழியிடைக் காணப்பட்ட கருப்பொருள்களுள் அவன் தலைவியை நினைந்து அன்பு செய்தற்குத் தகுவனவாக அமைந்த சிலவற்றின் நிகழ்ச்சிகளைச் சுட்டி இறைச்சிப் பொருள் படத் தோழி கூறுதலும் தலைவியை வற்புறுத்தும் குறிப்பினதாகும். தலைவியை நோக்கித் தலைவன் பாராட்டிய பாராட்டானது, யான் செய்யக் கருதிய பொருளுக்கு இவள் இடையூறாவாள் கொல்லோ எனத் தலைவன் தன் மனத்துட்கொண்ட அச்சத்தையும் தான் பொருள் ஈட்டுதற் பொருட்டுப் பிரிகின்ற செய்தியினையும் தலைவிக்கு உறுதியாகப் புலப்படுத்துவதாகும். கற்பின் வழிப்பட்ட தலைமகள் பரத்தையைப் புகழ்ந்து பாராட்டினாளாயினும், அவள் மனத்தகத்தே தலைவனோடு ஊடினதன்மை யுண்டென்பர் நுண்ணுணர்வினோர். மற்றொருத் தியைக் குறித்து இவள் இத்தன்மையள் எனத் தலைவனுக்குச் சொல்லி, அவளிடத்தில் இவன் எத்தன்மையனாயிருக்கின்றான் என அவனது உள்ளக் குறிப்பினை யுணர்தலும் தலைவிக்குரிய இயல்பாகும். தலைவனால் தாம் அடைந்த துன்பத்தினைப் பரத்தையர் தனக்குக் கூறிய வழியும், தான் அவரது துன்பத்தினை உள்ளவாறு உணர்ந்த நிலையிலும் தலைவியானவள், மகிழ்ச்சியும் புலவியுமாகிய காலத்தன்றி ஏனைக்காலத்துத் தலைவனது முன்னிலையில் நின்று இடித்துரைத்தல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே தலைவனுடன் மகிழ்ந்து அளவளாவும் நேரத்தில் அம்மகிழ்ச்சியொடு கூட்டி அவனை இடித்துரைத்தலும், தலைவன்பால் தவறுகண்டு புலக்குங்காலத்து அத்தவறுகளோடு கூட்டி இடித்துரைத்தலும் நுண்ணுணர்வுடைய தலைமகளின் இயல்புகளாம் என ஆசிரியர் அறிவுறுத்தினாராயிற்று. மகிழ்ச்சியும் புலவியும் என இவ்விரு நிலையும் அல்லாத ஏனைக் காலங்களில் தலைவனைக் கழறுதல், தசைசான்ற சொற்காக்குந் தலைவியின் கடமைக்கு ஊறுவிளைப்ப தாகலின் அங்ஙனம் இடித்துரைத்தல் கூடாதெனத் தொல்காப்பியனார் விலக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். தலைவன் யாதேனும் ஒரு பருவத்தை யெல்லையாகக் குறித்துப் பிரிந்தானாக, இருதிங்களை யெல்லையாகவுடைய அப்பருவம் தோன்றிய பொழுதே, அப் பருவம் கழிந்தது போலத் தலைவி கூறுதலும் உண்டு. அவ்வாறு கூறுதல், அறியாமை யாலாவது வருத்தத்தினாலாவது மயக்கத்தாலாவது அப் பருவத்திற்குரிய பொருள்கள் மிகுந்து காணப்படுதலாலாவது என இந்நான்கு காரணங்களாலும் நிகழும் என்பர் ஆசிரியர். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதல்ல என இதற்கு விளக்கந்தருவர் இளம்பூரணர். தோழி, தன்னை இரந்து குறைவேண்டிய தலைமகனைச் சேட்படுத்து விலக்கிநிறுத்துதலேயன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயவுரைகளைக் கூறுதலும் என இவ்வாறு பலவகையாலும் படைத்து மொழிதலுண்டு. ஒருவரை யொருவர் உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் ஒக்கும். ஐயுற்றுக் கூறுஞ் சொல் தலைமகனுக்கே யுரியதாகும். தலைமகளுக்கு உற்ற துன்பத்தைத் துடைத்தல், அவளோடு ஓன்றித்தோன்றும் பேரன்பினளாகிய தோழியின் இயல்பாதலின், எதிரதாக் காக்கும் அறிவாகிய உள்ளத்திண்மை அவள்பால் நன்கு அமைத்திருத்தல் வேண்டும். தலைவியையும் தலைவனையும் உயர்த்துக் கூறும் கூற்றும் தோழியாகிய அவளுக்கே ஒப்பவுரிய தாகும். அகப்பொருள் ஒழுகலாற்றில் உரையாடுதற்குரிய வாயில் களாகிய பாணர் கூத்தர் முதலியோர், தாம் தாம் சொல்லத் தகுவனவற்றைத் தவறின்றி வெளிப்படையாகக் கூறுதல் வேண்டும் என இவ்வியல் 45-ம் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். ஆகவே மேற்குறித்த வாயில்கள் அல்லாத தலைமகளும் நற்றாயும் தாம் கூறக் கருதியவற்றை மறைத்துச் சொல்லப் பெறுவர் எனவும், வருகின்ற (46-ம்) சூத்திரம் மறைத்துச் சொல்லுதலாகிய உள்ளுறை கூறுவதா தலின், அத்தகைய உள்ளுறை பாணர் கூத்தர் முதலிய வாயில் களுக்கு இல்லையென இச்சூத்திரத்தால் விலக்கப்பட்ட தெனவும், வாயில்களாவார் குற்றேவல் முறையினரா தலானும், தலைமக்களாகிய கேட்போர் பெரியோராதலானும், வெளிப்படக் கூறாக்கால் பொருள் விளங் காமையானும், பொருள் விளங்காதாயின் இவர்களது கூற்றிற்குப் பயனின்மை யானும் வாயில்களாவார் மறைத்துக் கூறாது வெளிப்படவே கூறுதல் வேண்டுமெனவும் உரையாசிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என உள்ளுறை ஐந்து வகைப்படும் என்பர் ஆசிரியர். உடனுறையாவது உடை னுறைவதொன்றைச் சொல்ல அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக் கப்படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். நகையாவது நகையினாற் பிறிதொரு பொருள் உணர நிற்றல். சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இதுவெனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் கொளக்கிடப்பது என விளக்கங்கூறுவர் இளம்பூரணர். உடனுறையாவது, நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடன் உறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சி. உவமமாவது அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும். நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும், அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டி வருவனவும் சுட்டெனப்படும். நகையாவது ஒன்று நினைந்து ஒன்று கூறுதல். ஏனையுவமம் நின்று, உள்ளுறையுவ மத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நிற்பது சிறப்பு என்னும் உள்ளுறையாம். இவை ஐந்தும் ஒன்றனை உள்ளுறுத்தி அதனை வெளிப்படாமற் கூறுதலின் உள்ளுறை யெனப்பட்டன என்பர் நச்சினார்க்கினியர். முடிவில்லாத சிறப்பினையுடைய அகப்பொருள் ஒழுகலாற்றால் ஆகிய இன்பமனைத்தும் இத்தகைய உள்ளுறைப் பொருண்மையிலே விளங்கித் தோன்றும்படி செய்த சிறப்பும் முன்னைச் சான்றோர் வகுத்துரைத்த பண்புடைய சொல்லாடல் முறையால் விளைந்ததே என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். தலைவன் தன்தன்மை யென்பதொன்றின்றி நந்தன்மை யெனக் கருதுதலின், யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பமெனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் நிலையிற் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் இவை இன்பந்தரும் என்றே ஏற்றுக் கொள்வானாதலால்1 இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் தலைமக்களது இன்பவுணர்வு வளர்ந்து சிறத்தல் காணலாம். மங்கலத்தாற் கூறுஞ் சொல்லும், இடக்கரடக்கிக் கூறுஞ் சொல்லும், குற்றமற்ற ஆண்மை காரணமாகச் சொல்லிய மொழியும் ஆகிய இவையெல்லாம் சொல்லாற் பொருள் படாமையால் முற்கூறிய உள்ளுறையின்கண் அடங்கும் என்பர் ஆசிரியர். தலைமக்களுக்கு ஆகாதனவென்று மெய்ப்பாட்டியலில் விலக்கப்படும் சினம், பேதைமை, பொறாமை, வறுமை ஆகிய நான்கும் யாதானு மொரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக அவர்பாற் சார்த்தியுரைக்கப்படும். அன்னை என்ற சொல்லால் தோழி தலைவியையும் தலைவி தோழியையும் அழைத்தலும், என்னை என்ற சொல்லால் அவ்விருவரும் தலைவனை அழைத்தலும் உள. இச்சொல் வழக்குகள் சொல்லினாலும் அதற்குறுப்பாகிய எழுத்தினாலும் பொருள் தோன்றாத மரபினையுடையன என்பர் ஆசிரியர். ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என இங்ஙனம் வரும் சொல்லெல்லாம், நாட்டில் வழங்குகின்ற வழக்கியல் மரபினாலே பொருளை மனத்தினால் உணரினல்லது இதனது வடிவம் இதுவெனப் பொறிகளால் தானும் உணர்ந்து பிறர்க்கும் தெரியக் காட்ட முடியாதனவாகிய பிழம்பில்பொருள்களை உணர்த்துவனவாகும். இமையாக் கண்களையுடைய தேவருலகிலும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்திலும் மேற்குறித்தனவாகிய அப்பொருள்கள் இல்லாத காலம் என்பது இல்லாமையால் (எக்காலத்தும் உள்ளமையால்) ஒப்பு முதல் நுகர்வு ஈறாகச் சொல்லப்பட்ட அவை யாவும் கட்புலனாகிய வடிவமில்லாதனவாயினும் என்றும் உள்பொருள்களெனவே கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரால் ஒப்பு முதலாக எடுத்துரைக்கப்பட்ட இப்பொருள்களை உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன என்ற பகுப்பினுள் இறையனார் களவியலுரையாசிரியர் அடக்கிக் காட்டினமை இங்கு நினைக்கத் தகுவதாகும். மெய்ப்பாட்டியல் மனத்தினால் உய்த்துணரினல்லது ஐம்பொறிகளால் உணர்ந்துகொள்ள முடியாத பொருள்கள் சிலவற்றை மேல் பொருளியலில் இறுதியில் தொகுத்தோதினார். வடிவமில்லா தனவாகிய அப்பொருள்களையும் பொறி வாயிலாக மனங்கொள்ளுதற்கு ஏதுவாவன மெய்ப்பாடுகளாகும். உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணீரரும்பல், மெம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந்தன்மை மெய்ப்பாடெனப்படும். ஒருவன் புலி முதலிய கொடிய விலங்குகளைக்கண்டு அஞ்சிய நிலையில், அவனுள்ளத்திலே இன்னது செய்வரென்று ஒன்றுந் தோன்றாது கலங்கும் கலக்கமும், பின் எவ்வாறேனும் தப்பி மறைதல் வேண்டுமென்ற கருத்தும், அவனது உடம்பின் கண்ணே நடுக்கமும், வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலி முதலியன சுவைப்படு பொருள் எனப்படும். அவற்றைக் கண்டதுமுதல் அவனுள்ளத்திலே நீங்காது நின்ற அச்சம் சுவையெப்படும். அதுகாரணமாக அவனுள்ளத்திலே தோன்றும் கலக்கமும் மறைதற்கருத்தும் குறிப்பெனப்படும், அக்குறிப்பின்வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப்படும். விறலை வடநூலார் சத்துவம் என வழங்குவார். நடுக்கமும் வியர்ப்பும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்றானாகிய அவனுக்கேயன்றி, அஞ்சி ஓடி வரும் அவனைக்கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகிய ஏனையவை அவன் மன நிகழ்ச்சிகளாகும். அச்சமுற்றான் மனத்தே நிகழும் அச்சம், அவனுடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்பர் இளம் பூரணர். மெய் - உடம்பு. படுதல் - தோன்றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது. இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை எனப் பொருள்கொண்டு,1 மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப் பொருள் விரித்தலும் உண்டு. மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படு வதோராற்றான் வெளிப்படுதல் அதனது இலக்கணங்கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டிய லென்றாயிற்று எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். மக்களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம்மெய்ப்பாடுகளைப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கிற்கும் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக்கொள்ளுதல் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம்மரபினை உளங்கொண்ட தொல்காப்பியனார், இம்மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டு இவ்வியலில் விரித்து விளக்குகின்றார். இவ்வியல் இருபத்தேழு சூத்திரங்களால் இயன்றதாகும். பண்ணைத்தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதினாறென்று சொல்லுவர். மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டாகியடங்கும் பகுதியும் உண்டு என மெய்ப்பாடுகளைக் குறித்து நாடக நூலார் கொண்ட பாகுபாட்டினை இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறிப் பிட்டுள்ளார், பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச் சொல்லாகும்.1 அச்சொல் விளையாட்டினை யுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றுள்ளது. பண்ணையையுடையது பண்ணையென்றாயிற்று என்பர் இளம்பூரணர். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப விளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப்படு பொருள்களும், அவற்றை நுகர்ந்தவழி உளவாம் சுவையும், அச்சுவை பற்றித் தோன்றும் மனக்குறிப்பும், அக்குறிப்பின்வழி மெய்யின்கண் வெளிப்படும் சத்துவமும் ஆகிய இவை சிறந்து தோன்றுதல் இயல்பாதலின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் எனக் குறித்தார் ஆசிரியர். விளையாட்டாயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டாவன, நகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகப் பின்னர்க் கூறப்படும் எள்ளல் முதல் விளையாட் டீறாகவுள்ள சுவைப்படு பொருள்கள் எனவும், அவற்றைக் குறித்த புறனாவன வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவு நிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக்குறிப்பு, இழிப்புக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக்குறிப்பு, உருத்திரக்குறிப்பு, நகைக்குறிப்பு, நடுவுநிலைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவு நிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம் எனவும், இவை பதினாறினையும் சுவையுள் அடக்கிச் சுவையெட்டும் ஆக்கி நிகழ்தல் உண்டு எனவும் கூறுவர் இளம்பூரணர்.2 ஒன்பது சுவையுள் உருத்திரம்1 ஒழித்து எட்டனையுங் கூறுங்கால், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறு பாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச் சுவை யெட்டோடுங் கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்தி ரண்டாம் என்பதும், எனவே சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலும் என நான்கு வகைப்பட்டு நிகழும் இம்முப்பத்திரண்டு பொருள்களையே பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் என இச்சூத்திரத்தில் தொல்காப்பி யனார் குறித்தனர் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். இனி, சூத்திரத்திலுள்ள பண்ணை என்ற சொல்லுக்குத் தொகுதி எனப் பொருள்கொண்டு, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்றாற்போல நந்நான்காய்ப் பண்ணைகூடி வரும் முப்பத்திரண்டு பொருளும் என விளக்கங் கூறுதலும் உண்டு.2 நகை, அழுகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள்களை நாடக அரங்கிலே நிறுத்தி, அவற்றைக் கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுத்தி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமை யெல்லாம் நாடக வழக்கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதியெல்லாம் இயற்றமிழ் நூலில் உணர்த்தத்தக்கன அல்ல எனக் கருதிய தொல்காப்பியனார் மெய்ப்பாடு பற்றிய நாடகநூற்கோட்பாடு களைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொகுத்துச் சுட்டினார்.3 நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடுதற்கமைந்த புலனெறி வழக்குப் பற்றித் தாம் உணர்த்த எடுத்துக்கொண்ட மெய்ப் பாடுகளை இவ்வியலிலுள்ள ஏனைய சூத்திரங்களால் விரித்து விளக்குகின்றார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் ஆசிரியர். இங்கே கூற எடுத்துக்கொண்ட எண்வகை மெய்ப்பாடுகளும் முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் முதலியோர் நிகழ்த்தும் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒருவாற்றால் தொடர்புடை யானவே ? என்பார், விளையாட்டுப் பொருளினதாகிய நகையென்னும் மெய்ப்பாட்டை முதற்கண்வைத்தார். நகைக்கு மறுதலையாவது அழுகையாதலின் அதனை அதன்பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத்தார். தாம் இளிவந்த நிலையில் தம்மினும் உயர்ந்தவற்றை யெண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின்பின் மருட்கை வைத்தார். வியப்பாகிய மருட்கை பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தார். அச்சத்திற்கு மறுதலை வீரமாதலின் அச்சத்தின்பின் வீரத்தை வைத்தார். வீரத்தின் பயனாகப் பிறப்பது வெகுளியாதலின் வீரத்தின்பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லாச் சுவைகளினும் சிறந்ததாதலானும் முதலிற் கூறிய நகை யுடன் தொடர்புடை யதாதலானும் உவகையை இறுதிக்கண் வைத்தார் என நகைமுதல் உவகையீறகவுள்ள எண்வகை மெய்ப்பாடுகளின் வைப்பு முறைக்குப் பேராசிரியர் கூறும் காரணங்கள் நினைக்கத் தக்கனவாகும். எண்வகை மெய்ப்பாடுகளுள் நகையென்பது எள்ளல், இளமை, பேதமை, மடன் என இந் நான்கும் பற்றி நிகழும் என்பர் ஆசிரியர். எள்ளல்-இகழ்தற் குறிப்பு. இளமை-விளைவறியாத இளம்பருவ இயல்பு. பேதமை அறிவின்மை. மடன்- பெரும் பான்மையும் பிறர் அறிவிக்க அறிந்து அறிந்தவற்றை நெகிழ விடாமை. மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல் என்றும், பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாஈக் கோடல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறுவர் இனம்பூரணர். மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகையொன்றே, தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக் குறிப்புக்களும் புலப்படுதற் குரிய நிலையில் நால்வகைப்பட்டுத்தோன்றும் என்பார், உள்ளப்பட்ட நகை நான்கென்ப என்றார் ஆசிரியர். இவ்வாறே அழகை முதல் உவகையீறாகவுள்ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத்தம் தோற்றத் திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப்பொருள்களுக் கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழும் என்ற நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப்படுத்தி யுள்ளார். இனி, எள்ளல் பற்றிய நகையென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் இகழப்பட்ட நிலையில் தான் நகுதலும் என இரண்டாம். இளமை பற்றிய நகையென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக்கண்டு நகுதலும் பிறரது இளமைகண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். தன் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் பிறர் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் எனப் பேதைமை பற்றிய நகை இருவகைப்படும். இவ்வாறே தன்கண் தோன்றிய மடமை காரண மாகவும் பிறர் கண்தோன்றிய மடமை காரணமாகவும் நகை தோன்றுமாதலின் மடமை பற்றிய நகையும் இருவகைப்படும் என்பர். இளிவு, இழவு. அசைவு, வறுமை என இந்நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றும். இவற்றுள் இளிவு என்பது பிறரால் இகழப்படடு எளியராதல். இழவு என்பது தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை யென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம் ஆதலின் இவையும் எட்டாயின என்பர் பேராசிரியர். தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகையென்றும் பிறர்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணையென்றும் கூறுதல் மரபு.1 மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இந்நான்கு பொருள் பற்றி இளிவரல் தோன்றும். மூப்பு-முதுமை காரணமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி-நோய். வருத்தம்-பயன் விளையாத வீண் முயற்சி. மென்மை-ஆற்றலும் பொருளும் இன்றி எளியராம் நிலைமை. இவை நான்கும் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாதலுடைய. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என இந்நான்கு பொருள்பற்றி மருட்கை தோன்றும். புதுமை-புதிதாகக் கண்டது. பெருமை-மிகப் பெரியது. சிறுமை-மிக நுண்ணியது. ஆக்கம்- ஒன்று திரிந்து ஒன்றாகியது. இந்நான்கும் முற்கூறியன போலத் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டா வன. உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் அறிவினைத் திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் மெய்ப்பாடாதலின் அதனை மதிமை சாலா மருட்கை என அடைபுணர்த்தோனார் ஆசிரியர். எனவே திரிபின்றி இயல்பாகிய அறிவுடன் கூடிய நிலையில் மருட்கை தோன்றுதற்கு இடமில்லை யென்பது புலனாம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என இந்நான்கு பொருள் பற்றி அச்சம் தோன்றும். அணங்காவன எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய் பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முதலாகவுள்ள கொடிய விலங்குகள். கள்வராவார் சோர்வு பார்த்து வஞ்சித்துக் கொடுந்தொழில் புரிவோர். தம் இறையென்றது தந்தை ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற் பணிகொண்டு தம்மை ஆளும் தலைவரை அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இங்ஙனம் நடுங்காது பிணங்கி நிற்பாரது மனத்தில் அச்சம் தோன்றுவதில்லை யென்பார் பிணங்கல் சாலா அச்சம் என்றார். அச்சத்திற்குக் காரணமாகிய இவை நான்கும் தன்கண் தோன்றுவன பிறர்கண் தோன்றுவன என இருபாற்படாது பிறிது பொருளென ஒருபாற்பட்டே நிற்பனவாம். கல்வி, தறுகண், இசைமை கொடை என்ற இந் நான்கும் காரணமாகப் பெருமிதம் தோன்றும். பெருமிதமாவது எல்லா ரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் என்பர் பேராசிரியர். எனவே அறிவு ஆண்மை பொருள் முதலிய சிறப்புக்களால் மக்கள் எல்லாரோடும் ஒப்பநில்லாது உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக் கொள்ளுதல் பொருந்தும். கல்வி என்பது தவம் முதலாகிய செயலின் திறம். தறுகண் என்பது உள்ளத்து உறுதியாகிய வீரம். இசைமை என்பது எக்காலத்தும் பழியொடு வருவன செய்யாமையாகிய புகழ்த்திறம். கொடை என்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளுங் கொடுத்தலாகிய வண்மைத் திறம். இவைநான்கும் ஒருவர்பால் அமைந்த நிலையில் அவரிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்றார் பேராசிரியர். உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற இந்நான்கும் பற்றி வெகுளி தோன்றும். உறுப்பறையாவது கையை வெட்டுதலும் கண்ணைத் தோண்டுதலும் போன்ற கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் உயர்வுக்கும் அவருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல். அலை என்பது அரசியல் நெறிக்கு மாறாகக் கோல்கொண்டு அலைத்தல் முதலிய தீத்தொழில்கள். கொலை என்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைளை அழித்துப் பேசுதல். இங்ஙனம் நால்வகைப்படக் கூறப்பெற்ற இக் கொடுந்தொழில்கள் காரணமாக மக்களது மனத்தே வெகுளி தோன்றுதல் இயல்பு. இவ்வெகுளி பிறர்கண் தோன்றிய பொருள்பற்றி வருவதாகும். செல்வம், புலன், புணர்வு விளையாட்டு என்ற இந்நான்கும் காரணமாக உவகை தோன்றும், செல்வம் என்றது செல்வத்தால் உண்டாகும் நுகர்ச்சியினை. புலன் என்றது கல்விப் பயனாகிய அறிவுடைமை. புணர்வு என்றது அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமப் புணர்ச்சியினை. விளையாட்டென்றது யாறும் குளமும் சோலையும் முதலாகிய வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணையொடு விளையாடி மகிழும் விளையாட்டினை. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை பிறக்கும். உலகியல் வாழ்விற் பிறரது துன்பத்தினைக் கண்டு கீழ் மக்களடையும் போலி மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது என அறிவுறுத்தும் நோக்கத்துடன் அல்லல் நீத்த உவகை என அடைபுணர்த்தோதிய ஆசிரியரது புலமைத்திறன் உணர்த்து பாராட்டத் தகுவதாகும். மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டும் ஒரு பக்கமாக, மற்றொருபக்கம் உடைமை, இன்புறல், நடுவுநிலை அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என வரும் இம்முப்பத்திரண்டும் உளவாவன. இவை மேற்கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளுள் அடங்காத நிலையிலேதான் தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர்.1 இங்ஙனம் இவ்வியலில் 3 முதல் 12 வரையுள்ள சூத்திரங் களால் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடுகளை வகுத்துரைத்த ஆசிரியர் 13 முதல் 25 முடிய வுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கே சிறப்புரிமையுடைய மெய்ப்பாடுகளை விரத்து விளக்குகின்றார். அகத்திணையுள் களவெண்ணும் ஒழுகலாற்றிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடுகளைக் கூறத் தொடங்கிய தொல்காப்பியனார், புணர்க்கும் பாலாகிய நல்லூழின் ஆணையால் அன்பிற் சிறந்தாராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழி, அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சியளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும், அவ்விருவரும் மெய்யுற்றுக் கூடிய புணர்ச்சிக்குப் பின் மறைவில் நிகழும் ஒழுகலாறாகிய அக்களவு வெளிப்படுமளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளா மெனவும், இவையாறும் ஒவ்வொன்றும் நந்நான்கு பகுதிகளையுடையவாகி ஒன்றன்பின் ஒன்றாய முறையே தோன்றுமெனவும் விரித்துரைக்கின்றார். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குதற்கண் தலைவி மாறுபடாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி புகுமுகம் புரிதல் எனப்படும். இவ்வாறு தலைவன் தன்னை நோக்கிய நிலையில் அச்சமும் நாணும் ஒருங்கு வந்தடைதலால் வியர்வை யரும்பிய நெற்றியையுடையளாதல் பொறிநுதல் வியர்த்தல் என்னும் மெய்ப்பாடாம். அதன் பின்னர்த் தலைவனிடத்தே தோன்றிய குறிப்புக்களால் அவனுடன் அளவளாவி மகிழவேண்டு மென்ற விருப்பம் தன்னுள்ளத்தே தோன்றிய நிலையிலும் அவ்விருப்பம் புறத்தே வெளிப்படாதபடி மறைத்தல் நகுநய மறைத்தல் எனப்படும். இங்ஙனம் தலைமகள் தனது விருப்பத்தினை மறைத் தாளாயினும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாதலால் தன் சிதைவு புறத்தார்க்குப் புலனாகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயல்பாம். அத்தகையமுயற்சி சிதைவு பிறர்க்கின்மை, என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட இந்நான்கு மெய்ப்பாடுகளும் களவிற்குரிய முதற்கூறாகும் என்பர் ஆசிரியர். மேற்குறித்த வண்ணம் தலைமகள் தனது மனச்சிதை வினைப் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்த வழியும், உள்ள நெழ்ச்சியாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன் வயத்ததன்றி நெகிழ்ந்து தாழ்தல் கூழை விரித்தல், எனப்படும். கூந்தலைப்போலன்றிக் காதிடைப் பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல் காதொன்று களைதல் என்னும் மெய்ப்பாடாகும். தனது உடம்பின் வேறுபாடுணர்ந்த தலைமகள் தோடுபோல நெகிழப் பெய்யப்படு முறைமையின வன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய கைவளை, மோதிரம் முதலிய அணிகலன் களைக் கழன்று விழாதபடி இறுகச் செறித்துக் கொள்ளுதல் ஊழணிதைவரல் எனப்படும். தனது உடம்பின் நெகிழ்ச்சியையுணர்ந்த தலைமகள் தான் உடுத்த உடையினைப் பல முறையும் இறுக உடுத்துக் கொள்ளுதல் உடைபெயர்த்துடுத்தல் என்னும் மெய்ப்பாடாம். இம் மெய்ப்பாடுகள் நான்கும் களவிற் குரிய இரண்டாங்கூறென்பர் ஆசிரியர். தலைவியின் உள்ளச் சிதைவறிந்து தலைவன் அவளை மெய்யுற அணுகிய நிலையில் நிகழ்வன இம்மெய்ப்பாடுகளாதலின் இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப்பட்டன. முற்கூறியவாறு உடை பெயர்த்துடுத்த தலைமகள், உடை பெரிதும் நெகிழ்ந்த நிலையில் தன்கையால் அற்றம் மறைத்தல் அல்குல் தைவரல் எனப்படும். அதனைச்சார இடையில் அணிந்த கடி சூத்திர முதலியவற்றை நெகிழாது திருத்திப் போற்றிக் கொள்ளுதல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறுதன் வலியற்ற நிலையிலும் தலைமகள் தான் புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மையை மேற்கொண்டு நிற்றல் இல்வலியுறுத்தல் எனப்படும். (இல்லாத வன்மையை மிகுத்தல் என்பது இத்தொடரின் பொருளாகும்.) இங்ஙனம் தலைமகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் தடுக்கப்படாது நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இருகைகளும் தலைவனை முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவன போல்வதோர் குறிப்புடையளாதல் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இவை நான்கும் களவின் மூன்றாம் கூறென்பர் ஆசிரியர். மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டும் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்திற்கு முன்னே நிகழ்வனவாம். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி தனது மனக்கருத்தினை நாணும் நிறையுமாகிய குணங்களால் புறத் தார்க்குப் புலனாகாது மறைக்கும் நிகழ்ச்சி பெண்மையின் இயல்பாதலால் இங்கே கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெருபான்மையும் தலைமகள் கண்ணே சிறந்து நிகழும் என்பர் பேராசிரியர். புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையை நினைந்து தலைவி பாராட்டும் உள்ளக் குறிப்பினளாதல் பாராட் டெடுத்தல் எனப்படும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடமை நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்ற உரையாடுங் குறிப்பினளாதல் மடந்தப வுரைத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவ்வொழுக்கம் சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறும் கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக் கொண்டு இது புறத்தார்க்குப் புலனாகுமோ என நாணும் உள்ளக் குறிப்பினளாதல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் எனப்படும். தலைமகன் அன்பினாற் கொடுத்த கையுறைப் பொருள்களை மறுக்காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ளமுடையளாதல் கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடாம். இங்ஙனம் முறையே ஒன்றன்பினொன் றாகத் தோன்றுதற்குரிய இவை நான்கும் களவின் நான்காம் கூறென்பர் ஆசிரியர். உயிரினுஞ் சிறந்த நாணுடையளாகிய தலைமகள், தன்னைக் குறித்து அயலார் கூறும் பழிச்சொற்களுக்கு நாணி, இவ்வொழுகலாற்றினை நம் பெற்றோர்க்குத் தெரிவிப்போமா அன்றித் தெரிவியாதிருப்போமா எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து, தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்தன்மைக்கும் ஏற்றவகையால் சொல்ல வேண்டுவனவற்றைத் தெரிந்து கொண்டு இன்னவாறு நிகழ்ந்ததென்று தன்தோழிக்கு உடம்படுதலும் அவள் வழியாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் தெரிந்துடம்படுதல் எனப்படும். தலைவனுடன் முன்னர்ப் பலநாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாறு போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பாகிய அச்சமும் நாணமும் மடனும் காரணமாக மறுக்கும் குறிப்பின ளாதல் திளைப்பு வினை மறுத்தல் என்னும் மெய்ப்பாடாம். தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவன் முன்னர் வெளிப்படாது மனையகத்தே மறைந்தொழுகுங் கருத்துடையளாதல் கரந்திடத் தொழிதல் எனப்படும். இங்ஙனம் தலைவன் முன்னர்த் தோன்றாது மறைந்தொழுகுவாள் ஒருநாள் எதிர்பாராத நிலையில் அவனைக் காணலுற்றபொழுது எல்லையற்ற பெருமகிழ்ச்சி யுடைளாதல் கண்டவழி யுவத்தல் என்னும் மெய்ப்பாடாம். இவை நான்கும் களவினது ஐந்தாங் கூறெனப்படும். பூவுஞ் சாந்தும் பூணுந் துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அலங்கரித்த நிலையிலும் தலைமகள் தன் அன் பிற்கினிய தலைவனைக் கூடப் பெறாமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோர்தல் புறஞ் செயச் சிதைதல் எனப்படும். சுற்றத்தார் பலரும் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணையின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தினளாதல் புலம்பித் தோன்றல் எனப்படும். தனிமையுள்ளத்தளாகிய தலைவி கையுங்களவுமாகப் பிடிப்பட்ட கள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத் தடுமாற்றந்தோன்றச் சொல்லுதல் கலங்கி மொழிதல் எனப்படும். தனது மனக்கலக்கத்தை யடக்கிக் கொண்டு பேசும் நிலையிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் கையறவுரைத்தல் எனப்படும். தனிமை விகற்பமாகிய இவை நான்கும் களவின் ஆறாம் கூறென்பர் ஆசிரியர். கையறவுரை தோன்றியதன் பின்னர் நிகழ்வன ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவனவன்றி நடுவணைந் திணை யெனப்பட்ட நற் காமத்துக்கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் கையறவுரைத்தல் என்ற எல்லையின் மீறிய மெய்ப்பாடுகள் கூறப் படாவெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், சையறவுரைத்தல் என்ற மெய்ப்பாட்டினைக் களவொழுக்கத்தின் இறுதிக்கண் வைத்தார். தலைமகன்பால் தோன்றும் குறிப்புச் சில பற்றித் தலைமகள்பால் பல குறிப்புத் தோன்றுமாதலால் தலைமகளிடத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளே சிறந்தனவென்று இங்கு வரையறுத் துரைக்கப்பட்டன. மேற்சொல்லப்பட்ட அறுவகைக் கூற்றினவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும் நிலைப்பட்ட அவை தமது உட்பகுதியாகி வருவன பிறவும் நிலைபெற்ற ஒழுகலாறாகிய நடுவணைந் திணைக்கேயுரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகளாகும் என்பர் ஆசிரியர். மன்னிய வினை எனப்பட்ட புணர்ச்சி, தலைமகளுக்கு ஆற்றாமை நேர்ந்தவிடத்து மேல் அறுவகைப்படக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளை முறையே நிமித்தமாகக் கொண்டு வாராமையும் உரித்து என்பர் ஆசிரியர். களவிற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலாங்கூறு முதல் ஆறாங்கூறு முடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் எனவும், அவற்றின் பின் உளவாம் உன்மத்தம், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு எட்டு ஒன்பது பத்தாம் அவத்தைகள் எனவும் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பிற்கூறிய நான்கும் அகனைந்திணை யின்பத்திற்கு உரியன அன்மையில் இவற்றையுஞ் சேர்த்துப் பத்தவத்தைகளென ஆசிரியர் வரையறை கூறாதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாகும். மேற்கூறிய இருபத்து நான்கு அல்லாதவழி இனிக் கூறு கின்ற மெய்ப்பாடுகளும் உளவாம். இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்களைக் கண்டநிலையில் அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதலும், தானொருத்தியே துன்புறுகின்றாளாகச் சொல்லுதலும், தலைவனும் அவனுடைய தேர் முதலாயினவும் தன்னெதிர் தோன்றுவனவாக முன்னிறுத்திக்கொண்டு வருந்துதலும், கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவற்றையும் ஆராய்தலும், பசிநோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உணவூட்டிய பொழுதும் முன்போலாது உணவினைக் குறைத்துக் கொள்ளுதலும், உணவின்மை காரணமாக உடம்பு பெரிதும் இளைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உறக்கத்தை மேற்கொள்ளாமையும், சிறிது உறக்கம் வந்த நிலையில் தலைவனைக் கனவிற்கண்டு மயங்குதலும், மெய்யைப் பொய்யாகக் கொள்ளுதலும், பொய்யை மெய்யென்று துணிதலும், தலைவர் நம்மைத் துறப்பரோ என ஐயுறுதலும், தலைவனுக்கு உறவாயினாரைக் கண்டு மகிழ்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றிப் பரவுதலும், அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்து கூறுதலும், யாதாயினும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத் தலை மகனோடு ஒப்புமை கொள்ளுதலும், அவ்வழி ஒப்புமையுண்டாகிய நிலையில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழ்தலும் கலக்கமுற்றுரைத்தலும் என வரும் இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகா தன போன்று காட்டினும் இவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சி நிமித்தமேயாகும் என்பர் ஆசிரியர். இவை யெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவர் உள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி யுணரப்படுமென்றும், இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள்ளத்து நிகழ்ந்தவற்றை வெளிப்படுப்பன ஆகலான் மெய்ப்பாடெனப்பட்டன என்றும் கூறுவர் பேராசிரியர். களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடாகியவழி இடித்துரைத் தலும், மனத்திலே வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமையும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனாம் என்ற அச்சம் காரணமாகத் தலைவன் நீங்கியொழுகலும், இரவும் பகலும் தலைவனொடு அளவளாவுதலை மறுக்குங் குறிப்புடையளாதலும், புள்ளும், மேகமும் போல்வனவற்றை நோக்கித் தலைவர்பால் என் பொருட்டுத் தூது சொல்லுமின் என இரந்துரைத்தலும், மனையகத்திற் பொய்த்துயிலொடு மடிந்துவைகுதலும், காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பும், உரையாடாது வாளா இருத்தலும் என எண்ணப்பட்ட இவை எட்டும் திருமணம் முடித்து எய்துதலால் என்றும் அழியா நிலைமைத்தாகிய கற்புக் கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப் பாடுகளாகும். தலைமகனுக்குத் தொழுகுலமாகிய தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சியொழுகும் ஒழுக்கமும், தனக்கு ஒத்த இல்லறம் இன்னதென்று தலைமகளது உள்ளத்தே படுதலும், களவொழுக் கத்திற் போலன்றித் தலைமகன்பால் இல்லாத குற்றத்தை ஏறிட்டுக் கொண்டு வெகுளலும், தலைமகனாற் பெற்ற தலையளி உண்மையேயாயினும் அதனை உண்மையென்று தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சியும், புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சியும், களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் என வரையறுத்தாற் போல்வதோர் வரையறை கற்புக்கு வேண்டாமையால் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமும், களவுக்காலத்துத் துன்பமுற்றாற் போலன்றி அருள்மிகத் தோன்றிய நெஞ்சினளாதலும், களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் மனையறத்தின்மேற் பெருகிய விருப்பினாலே ஒருசேரத் தொகநிற்றலும், களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமையும், தலைவனது மறைந்த ஒழுக்கத்தைப்பற்றி அயலார் கூறிய புறஞ்சொல்லின் தீமை குறித்து எழுந்த சொல்லுடன் சேர இங்கு எடுத்துரைத்த பத்தும் ஆழிவில் கூட்டம் என மேற்கூறிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடுகளாகும். காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதற்குரிய தலைவனும் தலைவியும் ஆகிய இவ்விருவர்பாலும் குடிப்பிறப்பு, அதற்குத்தக்க நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம் வடிவம், வடிவ வனப்பினை வாயிலாகக்கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதல், எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராதல், அறிவு, எக்காலத்தும் திருத்தகவிற்றாகிய உள்ளம் உடைமை என இப்பத்தும் ஒத்திருத்தல் வேண்டும் என்பர் ஆசிரியர். எனவே இவையெல்லாம் தலைவன் தலைவி இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைக் குணங்களெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவும் உணர்த்தினாராயிற்று. பொறாமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத்தல் புறங்கூறுதல், கடுஞ்சொற்கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந் திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினால் தம்மை உயர்ந்தாராக நினைத்தல், ஒருவர் ஒருவரைவிட இன்புறுவதாக நினைத்தல், நுண்ணுணர்வின்றி வரும் வெள்ளறிவு, மறதி, இன்னாரை யொப்பர் இன்னார் என்றெண்ணி ஒருவரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் தலைமக்கள் பால் இல்லா தொழிதல் வேண்டுமென விலக்குவர் பெரியோர். இக்குற்றங்கள்யாவும் இன்றித் தலைமகன்பால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைவன்பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இவையிவையென வரையறுத்துக் கூறாது, அவன்பால் நிகழத்தகாதன இவையென இச்சூத்திரத்தால் ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரெனவும் கருதுவர் பேராசிரியர். இங்குக் கூறப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடு களின் நுட்பமனைத்தும், கண்ணாலும், செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கல்லது ஏனை யோர்க்கு ஆராய்ந்துணர்தற்கரியது என்பர் ஆசிரியர். மனத் தளவில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணாலும் செவியாலும் அறிந்துகொள்ளுதல் எவ்வாறெனின், ஒருவரது மனக்குறிப்பின்வழி அவர்தம் முகம் வேறுபடுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலால் அவ்வேறுபாடுகளுக்கு ஏதுவாயமைந்த அவற்றை முறையே கண்ணாலுஞ் செவியாலும் உணர்ந்துகொள்ளுதல் அவ்வத் துறைபோயினாரது ஆற்றல் என இதனால் ஆசிரியர் உய்த்துணர வைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். உவமவியல் உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். காட்டகத்தே திரியும் ஆமா என்ற விலங்கினைக் கண்டறியாதா னொருவன், அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினானாயின, ஆவினைப் போன்றது ஆமா என அவனுக்குத் தெரிந்த பசுவை ஒப்புமையாகக் காட்டி உணர்த்துதல் மரபு. அவ்வொப்புமையைக் கேட்டறிந்த அவன், பின்னொரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை நேரிற் கண்டானாயின் ஆமா இதுவே என உணர்ந்து கொள்வான். இவ்வாறு பிறிதொன்றை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக் கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமையெனப்படும். இவ்வுவமையினைக் கருவியாகக் கொண்டே இரு திணைப் பொருள்களும் வழக்கினுள் நன்கறியப்படுவன. ஆதலால் இருவகை வழக்கினும் நிலைபெற்று வழங்கும் உவமையின் இலக்கணத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விரித்துக் கூறுகின்றார். அதனால் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று. மேல், குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந்தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது என இளம்பூரணரும், உவமத்தாலும் பொருள் புலப்பாடே யுணர்த்துகின்றாராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபு உடைத்தாயிற்று எனப் பேராசிரியரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பத்தெட்டாக இளம்பூரணரும் முப்பத்தேழாகப் பேராசிரியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். மேல், அகத்திணையியலுள் உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஓதிய ஆசிரியர், அவ்விரண்டனுள் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனையுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யுளுக்கேயுரிய உள்ளுறை யுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யுளியலுடன் இயையும்படி இவ்வியலின் இறுதிக்கண்ணும் வைத்து விளக்குகின்றார் இதன்கண் 1 முதல் 22 வரையுள்ள சூத்திரங்களால் ஏனையுவமத்தின் இலக்கணமும். 23 முதல் 31 வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், 32 முதல் 37 முடியவுள்ள சூத்திரங்களால் உள்ளுறை யுவமம் போன்று மனத்தாற் கருதியுணர்தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும், அதனது இயல்பினை விளக்க வேண்டி ஒப்புமையாக எடுத்துக் காட்டப்படும் பிறபொருளை உவமையென்றும் கூறுவர் தொல்காப்பியர். இவ்விரண்டினையும் முறையே உபமேயம் என்றும் உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவமையும் பொருளும் ஆகிய இவ்விரு பொருளின்கண்ணும் ஒத்தமைந்த வண்ணம் வடிவு, தொழில், பயன் என்பன பற்றியமைந்தத ஒப்புமைத்தன்மை பொதுத்தன்மை யெனப்படும். அத்தன்மையினை விளக்குதற் பொருட்டு அன்ன, ஆங்க, போல, புரைய என்பன முதலாக அவற்றைச் சார்ந்துவரும் இடைச் சொற்கள் உவமவுருபெனப்படும். இங்ஙனம் உவமையும் பொருளும் அவற்றிடையே அமைந்த பொதுத்துன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப்படையாக உணர்தற்கேற்ற சொல் நடையினை உடையது ஏனையுவமம் எனப்படும். ஒருபொருட்கு ஒருபொருளை உவமையாகக் கூறுமிடத்து, அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரணமாகவும், அத்தொழிலாற்பெறும் பயன் காரணமாகவும், மெய்யாகிய வடிவு காரணமாகவும், மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய வண்ணங் காரணமாகவும் ஒப்பித்துரைக்கப்படுமா தலின், உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்பர் ஆசிரியர். வினையாற் கிடைப்பது பயனாதலின் வினையின் பின்னர்ப் பயனும், மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின் பின்னர் உருவும் முறையே வைக்கப்பட்டன. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். மெய்யாகிய வடிவினை இருட்பொழுதிலும் கையினால் தொட்டறிதல் கூடும். வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்து கொள்ளுதல் இயலாது. புலியன்ன மறவன் என்பது, புலி பாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின், வினை உவமம் எனப்படும். மாரியன்ன வண்கை என்பது, மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும். துடியிடை என்பது, மேலுங்கீழும் அகன்ற பரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கி வடிவொத்தமையின், மெய்யுவமம் எனப்படும். பொன்மேனி என்பது, பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் எனப்படும். வினை, பயன், மெய், உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்குமாதலின், உவமப்பகுதி இந்நான்கே என வரையறுத்தார் ஆசிரியர். ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை சொல்லுங்கால் வினை முதலிய இந்நான்கனுள் ஒரோ வொன்றே யன்றி இரண்டும் மூன்றும் பொருந்தி ஒத்துவருதலும் உவமையின் இலக்கணம் என்பர் அறிஞர். செவ்வான் அன்ன மேனி என்பது நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. அவ்வான்-இலங்கு பிறை அன்னவிலங்கு வால் வையெயிற்று என்புழி வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் ஒத்து வந்தன. காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி, கையாடு வட்டிற்றோன்றும் என்புழி, ஆடுதற்றொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும வண்டிற்கு வட்டுக்காய் உவமையாய் வந்தமை காணலாம். உள்ளத்தாற் கருதியுணருமிடத்து, உவமிக்கப்படும் பொரு ளாகிய உபமேயத்தைவிட அதனியல்பினைப் புலப்படுத்தற் பொருட்டு எடுத்துக் கூறப்பெறும் உவமை, உயர்ந்த பொருளாக அமைதல் வேண்டும் என்பர் ஆசிரியர். இங்கு உயர்ச்சியென்றது வினை பயன் மெய் உரு எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மை களால் உபமேயத்தினும் உபமானம் உயர்வுடையதாதலை இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளுக்கும் இழிந்த தொன்றினை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உபமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதனோடு ஒரு பகுதியொத்தலாகிய பொதுத் தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்படும் பொருளை உவமையாக எடுத்தாளவேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த வழியும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக் கொண்டு உயர்ந்த குறிப்புப்பட உவமஞ் செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம். மேற்கூறியவாறு ஒரு பொருட்கு அதனின் உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறினும் அவ்வுவமையானது, சிறப்பு நலன், காதல், வலி என்ற இந்நான்கனுள் ஒன்றை நிலைக்களமாகக்கொண்டு தோற்றுதல் வேண்டும் என்பர் அறிஞர். அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது ஒருபொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளனவாகக் கொண்டு கூறுவது. வலி என்பது ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். முரசு முழங்குதானை மூவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியர் தலைவ (பொருந-54-7) என்புழி, பெருமைமிக்க தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தம்மிற் பகைமை நீங்கி ஒன்றுகூடி அரசவை யில் வீற்றிருந்த தோற்றம்போல நிருத்த கீதவாத்தியம் என்னும் இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி பேசப்படுதலால் இவ்வுவமைச் சிறப்பினை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். ஓவத்தன இடனுடை வரைப்பின் (புறம்-251) என்புழி, சித்திரம் போலும் வனப்பமைந்த இடத்தினையுடைய நகரம் என அதன் நலம்தோன்ற உவமை கூறினமையின் இவ் வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். பாவையன்ன பலராய் மாண்கவின் (அகம்-98) என்பது பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பு அமைந்த என்மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலைக்களம் காதல் என்பது நன்கு புலனாம். அரிமா வன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் (பட்டினப்-298, 299) என்பது, திருமாவளவனாகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறிய தாகலின் இவ்வுமைக்கு நிலைக்களம் வலி என்பது இனிது விளங்கும். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறவே, இவற்றை ஆதாரமாகக் கொண்டன்றி எத்தகைய உவமும் பிறவாதென்பது கருத்தாயிற்று. ஒரு பொருளின் இழிபு கூறுவார், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடு பொருள் எனப்படும் அவ்விழிபும் உவமத்தின் நிலைக்களங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். கிழக்கிடு பொருள்-கீழ்ப்படுக்கப்படும் பொருள். அரவு நுங்கு மதியின் நுதலொளி கரப்ப (அகம்-313) என்புழி, பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலைமகளது நுதல் ஒளியிழந்த நிலையினைக் கூறுவார், இராகு வென்னும் பாம்பினால் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறின மையின், இது கிழக்கிடுபொருள் நிலைக்களமாகப் பிறந்த உவமையாகும். சிறப்பு, நலன், காதல், வலி என் முற்கூறிய நான்கினோடு கிழக்கிடு பொருளாகிய இதனையும் சேர்த்து, உமவத்தின் நிலைக்களம் ஐந்தெனக் கொள்ளுதலும் பொருந்தும் என்பர் ஆசிரியர். முதலும் சினையும் எனக்கூறப்படும் இருவகைப் பொருள் களுக்கும் கருதிய மரபினால் அவற்றிற்கு ஏற்றவை உவமையாய் வருவதற்கு உரியன. எனவே, வரை புரையும் மழகளிற்றின் மிசை (புறம்-38) என முதற் பொருளோடு முதற்பொருளும், தாமரை புரையுங்காமர் சேவடி (குறுந்-கடவுள்) எனச் சினைப்பொருளோடு சினைப்பொருளும், அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடை நிழற் றோன்றுநின் செம்மல் (கலித்-84) என முதற்பொருளோடு சினைப்பொருளும், நெருப்பி னன்ன சிறுகட்பன்றி (அகம்-84) எனச் சினைப்பொருளோடு முதற்பொருளும் வேண்டியவாறு உவமஞ் செய்தற்குரியன எனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். பவளம்போற் செந்துவர்வாய் என்பது உவமையும் பொருளும் ஆகிய அவ்விரண்டிற்கும் பொதுவாயமைந்த செம்மைக் குணத்தினைச் சுட்டிக்கூறி உவமஞ் செய்தமையால் சுட்டிக்கூறிய உவமம் எனப்படும். இங்ஙனம் உவமையுடன் பொருளுக்கு அமைந்த ஒப்புமைக் குணத்தினைச் சுட்டிக்கூறாது பவளவாய் என்றாற் போன்று வரும் உவமம் எனப்படும். இங்ஙனம் சுட்டிக் கூறாவுவமம் வருமாயின், அதன்கண் அமைந்த உவமத்தினையும் பொருளினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைக் குணம் பற்றி வினை பயன் மெய் உரு என்னும் நான்கினுள் இஃது இன்ன உவமையென்று துணியப்படும் என்பர் ஆசிரியர். பவளவாய் என உவமை கூறிய நிலையில், வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மை பற்றி இங்கு உவமை கொள்ளுதல் பொருந்தாது, அவ்விரண்டினும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்பு நோக்கியறிந்து கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இவண் நினைக்கத் தகுவதாகும். உவமானமும் பொருளும் தம்மின் ஒத்துள்ளன என உலகத் தார் ஏற்று மகிழும் வகையில் உவமை யமைதல் வேண்டு மென்றும், இனி, உபமேயமாகிய பொருளினை உவமையாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுமிடத்தும் அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படு மென்றும், பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால் உலக வழக்கினைக் கடந்து இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் நீங்காது கேட்டோர் மனங்கொள்ளும்படி செய்தல் வேண்டு மென்றும் இவ்வியல் 8முதல் 10வரையுள்ள சூத்திரங்களில் உணர்த்தப்பட்டன. உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றின் இடையே வருஞ் சொல்லாகிய உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய எனவரும் முப்பத் தாறும் அவை போல்வன பிறவுமாகிய பல்வேறு குறிப்பினவாய் வரும் என்பது இவ்வியல் 11-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இதன்கண், அன்னபிறவும் என்றதனால், இங்குச் சொல்லப் படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும் ஆகிய உவமவுருபுகளெல்லாம் தழுவிக்கொள்ளப்பட்டன. புலி போன்ற சாத்தன் எனப் பெயரெச்சமாகவும், புலி போலப் பாய்ந்தான் என வினையெச்சமாகவும், சாத்தன் புலி போலும் என வினைமுற்றாகவும், அன்ன, இன்ன என இடைச் சொல்லாகவும் இங்ஙனம், பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் கூறுங் காலைப் பல்குறிப்பின என அவ்வுருபுகள் குறிக்கப்பட்டன. அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க என்னும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபுகளாகும். இவற்றுள் அன்ன என்பது ஏனைய உவமைகளுக்கும் உரியதாய் வருதல் உண்டு. எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ என்னும் எட்டுருபுகளும் பயனிலை யுவமைக்குச் சிறந்தனவாகும். கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்ற எட்டும் மெய்யுவமத்திற்குரிய உருபுகளாகும். போல, மறுப்ப, ஒப்ப, காய்ந்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்னும் எட்டுருபுகளும் உருவுவமத்திற்குச் சிறந்துரியனவாகும். இவ்வாறு நால்வகை உவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமை யுடையன எனத் தொல்காப் பியனார் வரையறுத்துக் கூறுதலால் இக்காலத்துப்போல அவர் காலத்தில் எல்லாவுருபுகளும் எல்லாவுவமைகட்கும் வழங்கவில்லை யென்பதும், ஆசிரியர் மேற்குறித்தவாறு நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்த உருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை முதலிய பொருகள்மேற் பயின்று வழங்கினமையே காரணமென்பதும் நன்கு புலனாம். மேற்குறித்த வண்ணம் இவ்வுருபுகள் வினையுவமம் முதலாகத் தத்தமக்குரிய பொருள்கள் மேற்பயின்று வழங்குந்திறத்தைத் தொன்று தொட்டுவரும் சொற்பொருள் மரபு பற்றி யுணர்தல் வேண்டுமென்பது தத்த மரபிற்றோன்றுமன் பொருளே எனவரும் சூத்திரத்தால் நன்கறியப்படும். மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு என்பர் ஆசிரியர். வினையுவமம் வினையும் குறிப்பும் எனஇருவகையாகவும், பயனுவமம் நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம் நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகையுவமமும் உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினை முதலிய நான்குவமை களுக்கும் எவ்வெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் இரண்டு கூறாகி நாலிரண்டு எட்டுப் பகுதிகளாக வரும் எனக் கருத்துரைத்தலும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர். பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமைகள், மேல் நகை முதல் உவகையீறாகச் சொல்லப் பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்று மென்று கூறுவர் அறிஞர் எனவே எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படு மென்பதாயிற்று. உவமை யெனப்பட்ட பொருளால் உபமேயமாகிய பொருளுக்கு ஒத்தனவெல்லாம் அறிந்து துணியும் பொருட் பகுதியும் உள்ளன; பலவாகி வரும் அப்பொருட் பகுதிகளின் இலக்கண வகையைக் கருவியாகக்கொண்டு அவை நன்கு துணியப்படும். இவ்வாறு உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே அவை அறியப்படுவனவாம். அடையும் அடையடுத்த பொருளும் என இரண்டாய் ஒன்றிய உவமேயப் பொருள், அடையும் அடையடுத்த பொருளும் என இவ்வாறு இரண்டாய் நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப்படும் என்பர் ஆசிரியர். பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாண்-220-1) என்புழிச் சண்பங்கோரையின் பூந்துகள் படிந்த செஞ்சுவட்டினை யும் அச்சுவட்டினைப் பொருந்திய உழவர் சிறாரது கரிய மார்பினையும் இணைத்து ஒன்றாக உவமிக்கக் கருதிய புலவர், அவ்விரண்டினையும் முறையே பொன்னின் உரையோடும் அதனைப்பொருந்திய உரைகல்லோடும் இணைத்து உவமை கூறினமையின், இரட்டைக் கிளவியாகிய உவமேயம் இரட்டைக் கிளவியாகிய உவமானத்தின் பின் வந்தமை காண்க. புலவன் தான் வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன், அதனை உவமையாகக் கொண்டு உய்த்துணரப் படும் உவமேயப் பொருள் இதுவென வேறு நிறுத்திக் கூறாமல், உவம நிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக் கருத்தினால் இதற்கு இது உவமையென்று கொள்ளவைத்த முறையினால், இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்று நல்லுணர்வுடை யோர் துணிந்து கொள்ள வருவது மேற்கூறிய உள்ளுறையுவமமாகும் என்பர் ஆசிரியர். எனவே இது நல்லுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா தென்பதும், உணர்வுடையோர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இஃது அமைதல் வேண்டுமென்பதும், இதனால் இவ்வுவமை செய்யுளுட் பயின்று வருமென்பதும் கூறினாராயிற்று. உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக ஒருங்கு வைத்துக் கூறப்படாத நிலையிலும் உள்ளுறையாகிய இஃது உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின் இதனை உவமையென்றார். உவமை என்பது ஒப்பினாலாய பெயர். உவமம் போலப் பொருள் கொள்ளப்படுதலின் இதனை உவமப் போலியென வழங்குவர் ஆசிரியர். உவமைப் போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்துவகைப்படு மென்பர். அவையாவன வினை, பயன், மெய், உரு பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றி வருவனவாம். பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர எந்நலந் தொலைவ தாயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே (ஐங்குறு-63) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன்கண், பொய்கை யாகிய தூய இடத்திற் பிறந்த நீர் நாயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் பின்னை நாளிலும் அதனையே விரும்பிப்பெறும் ஊரனே எனத் தலைவனை அழைக்கு முகமாக, அத்தலைவன் நல்ல குலத்திற் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப்பற்றி வந்த உள்ளுறையுவமமாகும். இவையெல்லாம் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாதலும், இக்கருத்தின்றி நீர் நாய் வாளை பெறூ உம் ஊரன் என வறிதே கூறின் ஒருபயனும் இல்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் இவ்வுள்ளுறை யுவமத்தால் திணையுணரு முறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும் உள்ளுறைகளும் இவ்வாறே கருதியுணரப்படும். தலைமகள் உள்ளுறை யுவமங் கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும் எனவும், தோழி கூறுவாளாயின் தான்பயின்ற நிலத்துள்ளன அன்றிப் பிறநிலத்துள்ளன உவமை கூறப்பெறாள் எனவும் கூறுவர் ஆசிரியர். எனவே, தலைவி தான் வாழும் நிலத் துள்ளன எல்லாம் அறியுமளவுக்குப் பயிற்சியில்லாதவள் எனவும், அவளுடைய தோழி முதலிய ஆயத்தாராயின் தம் நிலத்துள்ளன எல்லாம் அறிந்திருத்தலால் எத்தகைய தவறுமில்லை யெனவும் கூறியவாறு. தலைமகன் உள்ளுறை யுவமை கூறுங்கால் தனது உரனுடைமை தோன்றச் சொல்லப்படும். பாங்கன், பாணன் முதலிய ஏனையோர் கூறுங்கால் இடம் வரையப்படாது தாம் தாம் அறிந்த சொல்லாலும் நிலம் பெயர்ந்துரையாத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறையுவமை சொல்லுதற் குரியர். மகிழ்ச்சி விளைக்குஞ் சொல்லும் புலவியாகிய துன்பத் தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றுமென்றும், மேற்கூறிய மகிழ்ச்சி, புலவி என்னும் இரண்டிடத்தும் தலைமகள் உள்ளுறை கூறுதற்கு உரியள் என்றும் கூறுவர் ஆசிரியர். எனவே இவ்விரண்டுமல்லாத ஏனைய இடங்களில் தலைமகள் உள்ளுறை கூறப்பெறாள் என்றவாறு. இத்தகைய இடவரையறை யெதுவும் தலைமகனுக்கு இல்லை. ஆகவே அவன் கூறும் உள்ளுறை எப்பொருட்கண்ணும் வரும் என்பது கருத்து. தோழியும் செவிலியும் உள்ளுறையுவமம் கூறுங்கால், காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு நோக்கிக் கேட்டோர் எளிதில் உய்த்துணர்ந்து கொள்ளுதற்குரிய நெறியால் கூறுதற்குரியராவர். இவ்வாறு அகத்திணை யொழுகலாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற்குரியார் இன்னின்னார் என விதந்து கூறவே, இவர்களல்லாத தலைமகளது நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்பெறார் என்பதும், இங்ஙனம் உள்ளுறை கொள்ளுதல் அகத்திணை யொழுகலாற்றிற் போலப் புறத்திணை யொழுக லாற்றில் அத்துணை இன்றியமையாத தன்றாதலின் இவ்வுள்ளுறையுவமத்தினை அகத்திணைக்கே சிறப்புரிமை யுடையதாக ஆசிரியர் எடுத்தோதினாரென்பதும் நன்கு பெறப்படும். எடுத்தோதப்பட்ட இலக்கணங்களில் வேறுபாடு தோன்ற வந்த உவமப் பகுதிகளை அங்ஙனம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியால் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருத்துக என்பர் ஆசிரியர். உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர் முதலியன கூறும் அளவால் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமை நாட்டுதலும், உவமை யும் பொருளும் முற்கூறி நிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வா வென்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்து வறிதே கூறு மிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை மொழி ஒன்றற்குக் கூறாது கூறுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினால் ஒப்புமை கொள்ளுதலும், உவமத்திற்கன்றி உவமத் திற்கேதுவாகிய பொருள்களுக்குச் சில அடைகூறி அவ் அடை மொழியானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதலும், இரண்டு பொருளாலே வேறுவேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்துலும் ஆகிய இவைபோல்வன வெல்லாம் வேறுபட வந்த உவமப் பகுதிகள் என்றும், இவற்றைவினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் பற்றி ஏனையுவமத்தின்பாலும், உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்கவாராது குறிப்பினாற்கொள்ள வருதல் பற்றி உள்ளுறை யுவமத்தின் பாலும்படுத்து உணரப்படுமென்றும் கூறுவர் பேராசிரியர். உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் மரபாகும் என்றும், உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி உவமையது தன்மை கூறுதலும் உவமையாதற்கு உரியதென்றும் உவமையும் பொருளும் வேறு வேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூறாது அவ்விரண்டினையும் ஐயுறச் சொல்லுதலும் உவமையைப் பொருளாக்கிப் பொருளை உவமையாக்கிச் சொல்லுதலும் என இங்ஙனம் தடுமாறி வரும் உவமம் தவறென்று விலக்கப்படாதென்றும், ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறுத்தி அப்பொருளோடு பிறிதொரு பொருளை உவமித்தலும் உவமையெனப்படுமாயினும் அதனாற் பொருள் விளங்காமையின் அடுக்கிவரலுவமையாகிய அது கொள்ளப்படாதென்றும், சுண்ணமாகிய துகள்போலச் செய்யுளிற் பலவிடங்களிலும் சிதர்ந்து கிடக்கும் பொருள்கோள் வகையாகிய சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் மூன்றுமல்லாத நிலையில் உவமையையும் நிரலே நிறுத்திப் பொருளையும் நிரலே நிறுத்தி ஒப்புமை கூறின் அது நிரல் நிறையுவமம் என ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இவ்வியலின் இறுதிக்கண் உவமை பற்றிய சில மரபுகள் தொகுத்துரைக்கப் பட்டன. அசிரியர் தொல்காப்பியனார், பொருள் புலப்பாட்டினைச் செய்யும் கருவியென்ற முறையிலேயே உவமையின் பகுதிகளை இவ்வியலில் விரித்துக் கூறியுள்ளார். பிற்காலத்தில் வந்த தண்டியாசிரியர் முதலியோர் உவமையாகிய இதனைச் செய்யுட்கு அலங்காரமாகக் கொண்டு தாம் இயற்றிய அணியிலக்கண நூலில் இதனையும் ஓரலங்காரமாக்கி இலக்கணங் கூறியுள்ளார்கள் தாமரை போலும் முகம் எனவரும் உவமத்தொடர் முகம் போலுந் தாமரை என மாறி இடைநின்ற உவமவுருபு தொக்கு முகத்தாமரை எனவரின் அஃது உருவகம் எனவேறோர் அணியாய் விடும் என்பது அன்னோர் துணிபாகும். இவ்வாறே தன்மை, வேற்றுமை, வேற்றுப்பொருள் வைப்பு, ஒட்டு முதலிய அலங்காரங்கள் பலவும் தொல்காப்பியனார் கூறிய உவமப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றன என்பது நுண்ணுணர்வினாற் கூர்ந்து நோக்கும் வழி இனிது புலனாகும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டியாசிரியர் வடமொழியில் இயற்றிய காவியா தரிசம் என்னும் அலங்கார நூலிலும் அதன் தமிழ்மொழி பெயர்ப்பாகிய தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய பிற்கால நூல்களிலும் வகுத்துரைக் கப்படும் அணிவிகற்பங்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் வெவ்வேறணிகளாக வழங்கின அல்ல என்பதும், தொல்காப்பியனார் கூறும் உவமப் பகுதிகளைச் செய்யுளிற் பிரிப்பின்றி ஒன்றாகிய பொருளுறுப்பெனக் கொள்வதன்றிச் செய்யுளுக்கு வேறாகி நின்று அதற்கு அழகு செய்யும் வேறோர் அலங்காரமாகக் கூறுதல் பொருந்தாதென்பதும் தொல்காப்பிய வுரையாசிரியராகிய பேராசிரியர் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் துணிபாகும். இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுங் கூறுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுடகண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப்படா; என்னை? தாம் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியும் வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன் றாகியும் வரும். அல்லதூஉம் பொருளதிகாரத்துட் பொருட்பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான்... அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறுசிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாம்.... அவற்றைப் பொருளுறுப்பு என்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல, அவ்வணியுஞ் செய்யுட்கு வேறாதல் வேண்டும். செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலாம். எனவரும் பேராசிரியர் உரைப்பகுதி, ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய உவமப் பகுதிகளின் நுட்பத்தையும் அந்நுட்பம் இனிது விளங்காத பிற்காலத்தில் வேறு காரணமுணரப்பெறாது இடர்ப்பட்டுச் செய்தனவாகிய அணியிலக்கணங்களின் அமைதியையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். செய்யுளியல் மேலுணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாய் விளங்கும் செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையின் இது செய்யுளியலென்னும் பெயர்த்தாயிற்று எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விரவிக்கூறிப் பொருளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண்டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள் பற்றிச் செய்யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கக் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத் துணர்த்துகின்றார். எனவே பொருளதிகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொது வென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கே யுரித்தென்பதும் பெறப்படும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 235-ஆக இளம்பூர்ணரும், 243-ஆகப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர்.1 அங்ஙனங் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறொன்று கூறுதல் வேண்டுமாதலானும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகார மாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் நூல்செய்த முறையோடு மாறுகொள்ளுமாதலானும் அது பொருந்தாதென மறுப்பர் பேராசிரியர். மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் எனவரும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும். அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டுமாக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப் புலவர் கூறும் செய்யுளுக்கு உறுப்பாம் என இவ்வியல் முதற்சூத்தரம் கூறும். இதன் கண் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் தனிநிலைச் செய்யுள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைக்கே பெரும்பான்மையும் உறுப்பாயும் தனி நிலைக்கண் ஒரோவென்றாயும் வருவன எனவும் பேராசிரியர் நச்சினர்க்கினியர் உரைப் பகுதிகளால் நன்குணரலாம். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையுந்தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தல் தளையென்பது தனியுறுப்பாகக் குறிக்கப்படவில்லை. தளையாவது, நின்றசீரின் ஈற்றசையுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் வர இருசீர்கள் தம்முள் தளைத்து (கட்டப்பட்டு) நிற்றல். சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகச் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவேகொண்டு இலக்கணங் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். தளையென்ப தனைத் தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது தொல்காப்பியனார்க்கும் பிற்காலத்தில் வாழ்ந்த யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்து நிற்றல் தளையென்னுந் தனி யுறுப்பா மெனக் கொள்ளின் இவ்விருசீர் இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் தளை பல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்வார்க்கு அத்தளையால் அடி வகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும் ஆதலால் சீரது தொழிலாகிய தளையென்பதனைத் தனி வேறு உறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர் முதலி யோர் துணிபாகும். இவ்வாசிரியர் (தொல்காப்பியனார்) தளையை உறுப்பாகக் கொள்ளாதது என்னையெனின், - தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத் தட்டு (தளைத்து) இருசீர் இணைந்ததாகும். அவ்வாறு இணைந்த இருசீரினையும் அசிரியரெல்லம் இருசீர்க் குறளடி என அடியாகவே வகுத்துக் கொண்டாராதலின் தளையென வேறோர் உறுப்பின்றாம்; அன்றியும் தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ள வேண்டுவது? அங்ஙனம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன்றென்றே கொண்டார். அதனை உறுப்பென்பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம் எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இதனை வலியுறுத்தல் காண்க. இனி, செய்யுளுக்குரிய முப்பத்துநான்கு உறுப்புக்களையும் பற்றி இவ்வியலிற் கூறப்படும் இலக்கணங்களைச் சுருக்கமாக உணர்ந்துகொள்ளுதல் நலமாகும். 1. மாத்திரை:- எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு. மாத்திரையினது அளவு மாத்திரை யெனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் செய்யுளில் ஓசை நலம் சிதையாதபடி தத்தம் ஓசைகளைப் புலப் படுத்தி அளவுபெற நிற்றலே மாத்திரை யென்னும் உறுப்பாகும். மாத்திரை யளவாகிய இதனாலல்லது செய்யுட்களின் வேறுபாடு உணரலாகாமையின் ஏனை யுறுப்புக்களினும் இதனைச் சிறப்புறுப்பாக முற்கூறினார். 2. எழுத்தியல் வகை:- மேல் எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்களைச் செய்யுளுக்கமைய இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு அஃதாவது மேல் எழுத்ததிகாரத்தில் முப்பத்து மூன்றெழுத் துக்களையும் உயிர், குறில், நெடில், மெய், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்பு வகையாற் பத்தும், உயிர்மெய், உயிரளபெடை எனக் கூட்டவகையால் இரண்டும், ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் எனப் போலி வகையால் இரண்டும், யாழ்நூலாகிய இசைநூல் முறையான் வரும் ஒற்றிசை நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெயரவாய்ப் பகுத்துரைத்த வகையாம். இவற்றோடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. மாத்திரை யளவும் எழுத்தியல் வகையும் ஆகிய இரண்டும் மேல் எழுத்ததிகாரத்திற் கூறிய இலக்கணத்திற் பிறழாமற் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் ஆசிரியர். 3. அசை வகை:- முற்கூறிய எழுத்தாலாகிய அசைகளின் கூறுபாடு. அவை இயலசையும் உரியசையும் என இரு திறப்படும். இவற்றின் கூறுபாடுகளை இவ்வியலில் 3முதல் 10வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். குறிலும் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் நேரசை யெனப்படும். குறிலிணையும் குறில் நெடிலும் தனியேவரினும் ஒற்றடுத்துவரினும் நிரையசை யெனப்படும். கோ, ழி, வேந், தன்-என நேரசை நான்கும், வெறி, சுறா, நிறம், குரால் என நிரையசை நான்கும் வந்தன. இரண்டெழுத் தானாகாது ஓரெழுத் தானாதலின் நேரிய அசை நேரசை யென்றாயிற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசை யென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று என நேர், நிரை என்பவற்றின் பெயர்க்காரணங் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வசைகளுக்கு உறுப்பாய் நின்ற குறிலும் நெடிலும், மாத்திரையாகிய ஓசையளவினால் தம்முள் ஒவ்வா வாயினும், எழுத்தாந் தன்மையில் ஒன்றெனவே கொண்டு எண்ணப்படும் தகுதி நோக்கி அவ்விரண்டும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கப்பட்டன. மேற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டசையும், குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றை இறுதியிற் பெற்றுப் பிளவுபடாது ஒருசொற்றன்மை எய்திவரின், அவை முறையே நேர்பு, நிரைபு என்னும் இருவகை அசைகளாகும். தனிக் குற்றெழுத்தாகிய நேரசையின் பின் இங்ஙனம் இருவகை யுகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை. உதாரணம்: வண்டு, நாகு, பாம்பு, மின்னு, நாணு, தீர்வு என நேரசை மூன்றின் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயின. வரகு, குரங்கு, மலாடு, பனாட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்று கரமும் நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரை பசையாயின. நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு; நிரையின் பின் உகரம் வருதலின் நிரைபு என இவையிரண்டும் காரணப் பெயராயின. மேற்கூறிய நால்வகை அசைகளுள் நேர், நிரை என்னும் இரண்டும் இயலசை எனப் பெயர் பெறும். நேர்பு, நிரைபு என்னும் ஏனைய இரண்டும் உரியசை எனப் பெயர்பெறும் என்பர் ஆசிரியர். நேர் நிரை என்பன செயற்கை வகையால் இயற்றிச் சேர்க்கப்படாது இயற்கை வகையால் நின்றாங்குநிற்ப வரும் அசைகளாதலின் அவ்விரண்டும் இயலசையெனப்பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரிய வகையில் அமைந்தவை நேர்பும் நிரைபும் ஆதலின் அவ்விரண்டும் உரியசை எனப்பட்டன. குற்றியலுகரமும் அற்றெனமொழிப (புணரியல்-3) என்ற நூற்பாவில் ஒற்றுப்போன்று புள்ளி பெறுமெனப்பட்ட குற்றுகரம், தன்னால் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரை மாத்திரைத்தாய் நின்றதேனும் ஒற்றுப்போன்று ஒடுங்கியிசையாது அகன்றிசைக்கும். அதனால் அதனை ஒற்றெனஅடக்கி அலகுபெறாதென விலக்குதற்கு இயலாது. இனி, குற்றியலுகரம் ஒரு மாத்திரையுடையதாய் அகன்றிசையாமையின் அதனை உயிரிற் குற்றெழுத்தெனக் கொண்டு அலகு கொள்ளுதற்கும் இடமில்லை. இந்நிலையில் இதனை வேறோர் அசையாக்குதலே செய்யத்தகுவது எனத் துணிந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர், இவ்வுகரத்தினைக் கருவி யாகக் கொண்டு நேர்பு, நிரைபு என்னும் இருவகை உரியசைகளை வகுத்துரைத்தனர். வண்டு வண்டு வண்டு வண்டு என நின்ற வழிப் பிறந்த அகலலோசை, மின்னு மின்னு மின்னு மின்னு என நின்றவழியும் பெறப்படுதலானும். வெண்பாவின் ஈற்றடி வண்டு எனக் குற்றுகர வீறாக நின்றுழியும் கோலு என முற்றுகர வீறாக நின்றுழியும் ஒத்த ஓசையவாமாதலானும், குற்று கரம் சார்ந்து தோன்றுமாறுபோல அம்முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதல் ஒப்புமை நோக்கியும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி அதனைக் குற்றுகரம்போல நேர்பு, நிரைபு என்னும் அசைக்கு உறுப்பாகக் கொண்டனர். இங்ஙனம் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர் எழுத்தாலாகிய அசைகளின் இயல்புணர்ந்து அவற்றை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நால்வகையாகப் பகுத்துரைத்தனராக, பிற்கால யாப்பிலக்கண நுலாசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் அசைகளின் இறுதிக்கண் நின்ற குற்றுகர முற்றுகரங்களைத் தனியசையாகப் பிரித்து அவற்றை நேரசை யென அடக்கி, நேரும் நிரையும் என இருவகை அசைகளே கொண்டனர். அன்னோர் தாம் ஈரசைச் சீர்களாகக்கொண்ட நேர்பு, நிரைபு என்பவற்றுக்குத் தேமா, புளிமா என்னும் வாய்ப்பாட்டால் ஓசையூட்டின் செப்பலோசை குன்றுமென்றஞ்சி அவற்றுக்கு முறையே காசு, பிறப்பு எனக் குற்றுகரவீற்றால் உதாரணம் காட்டியும், சீரும் தளையும் சிதையவருமிடத்துக் குற்றியலுகரம் அலகுபெறாதென விதித்தும், வெண்பாவீற்றில் சிறுபான்மை முற்றுகரம் வரும் என உடன்பட்டும் இவ்வாறு பல்வேறு வரையறைகளைச் செய்துகொள்வர். அசைக்கு உறுப்பாம் நிலையில் குற்றியலிகரம் ஒற்றெழுத் தின் இயல்பிற்றாம் என்பர் தொல்காப்பியர். எனவே சார்பெழுத் தாகிய அது, ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும், ஒற்றுப்போல எழுத்தெண்ணப் படாமையும் ஆகிய இரு நிலைமையும் ஒருங்குடைத்தென்பது பேராசிரியர் கருத்தாகும் குற்றியலிகரம், குழலினி தியாழினி தென்ப (திருக்குறள்-66) என ஒற்றியல்பிற்றாய் நின்று அலகு பெறாமையும், ஏனை உயிரெழுத்தின் இயல்பிற்றாய், மற்றியா னென்னுளேன் கொல்லோ (திருக்குறள்-1206) என அலகு பெறுதலும் என இரு நிலைமையுமுடையதாய் இலக்கியங்களிற் பயிலக்கண்ட நச்சினார்க்கினியர், குற்றியலிகரம் ஒற்றியல்பிற்றாயும் ஒற்றல்லா உயிரெழுத்தின் இயல்பிற்றாயும் வரும் எனப் புதியதோர் விளக்கங் கூறினமை இவண் நினைக்கத் தகுவதாகும். முற்றியலுகரமும் மொழி சிதைந்து நேர்பசை நிரைபசை யென்று உரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கின் தனியசையாகி நிற்றலும் இல்லை என்பது இவ்வியல் எட்டாம் சூத்திரத்திற் கூறப்பட்ட விதியாகும். அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென என்றவழி அரவு என்பது மொழி சிதையாமையின் நிரைபசை யாயிற்று எனவும், பெருமத் தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி-200) என்றவழிப் பெரு-முத்தரையர் என்ற தொடரைப் பெருமுத்-தரையர் எனப் பிரித்துச் சீராக்கின் மொழி சிதைதலின் நிரைபசை யாகாதாயிற்று எனவும் உதாரணங்காட்டி விளக்குவர் இளம்பூரணர். இருவகை யுகரமோடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபும் ஆம் என்றார் ஆசிரியர். அவற்றுள் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ்சொல் உலகத்து அரியவாயின ஆதலின் புணர்ச்சி வகையால் ஈற்றின்கண் தோன்றிய உகரமே ஈண்டு நேர்பும் நிரைபும் ஆவன எனவும், அப்புணர்ச்சிக்கண்ணும் நாணு என்றாங்கு வரும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும் விழவு என்றாங்கு வரும் நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப்படுவன எனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று நாணுத்தளையாக விழவுத் தலைக்கொண்ட என்றாங்கு நேர்பு நிரைபிற்கு உறுப்பாதல் போன்று நாண்+உடையரிவை என்றாங்கு வரும் வருமொழி முதலுகரம் இவ்வசைகட்கு உறுப்பாகாதெனவும், நீர்க்கு நிழற்கு என வரும் வேற்றுமையுருபு நிலைமொழித் தொழிலாதலால் அவ்வுருபும் நேர்பசை நிரைபசைகட்கு உறுப்பாமென்பது இதனாற் பெறப்படுமெனவும், குற்றுகரமாயின் ஆட்டுத்தாள் சேற்றுக்கால் எய்போற் கிடந்தானென் னேறு வேலாண் முகத்த களிறு என இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபும் ஆம் எனவும் இச்சூத்திர வுரையிற் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நினைவுகூரத் தக்கதாகும். மேற்கூறிய குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும்; அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாதல் வேண்டும் என்பது விதி. எனவே நடக்கும் எனவும் உண்ணும் எனவும் நிலைமொழி ஒற்றுடையவாயின் தேமாவும் புளிமாவாகவும் ஆவதல்லது அவை நேர்பும் நிரைபும் ஆகா எனவும் சேற்றுக்கா னீலம் உரவுச்சின வேந்தன் என்றாங்கு வருமொழி வல்லெழுத்து மிகின் நேர்பும் நிரைபும் ஆம் எனவும், உம்மை எதிர்மறை யாதலால் இவ்வசைகள் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை எனவும் கருதுவர் பேராசிரியர். அசையையும் சீரையும் ஓசையொடு சேர்த்திப் பாகுபடுத்து உணர்த்துதல் செய்யுளிலக்கணத் துறையில் வல்லவர்களது நெறியாகும் என்பர் ஆசிரியர். எனவே பொருளுக்கேற்பச் சொற்களைப் பிரித்தவழித் தளையும் சீரும் சிதையுமானால் அவ்விடத்து ஓசையை நோக்கி அதன்படி சேர்த்தல் வேண்டு மென்பது கருத்தாயிற்று. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் என்றவழி வாழ்வார் என்பதனைப் பொருள் நோக்கி ஒரு சீராக்கின் ஓசைகெடும். அதன்கண் வாழ் என்பதனைப் பிரித்து முதல் நின்ற சீருடன் இணைத்தவழி ஓசை கெடாதாம். இங்ஙனம் பொருள் நோக்காது ஓசையே நோக்கிச் சீர்வகுக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் வகையுளி என வழங்குவர். 4. சீர்:- இரண்டசை கொண்டு புணர்த்தும் மூன்றசை கொண்டு புணர்த்தும் ஓசை பொருந்தித் தாளவறுதிப்பட நிற்பது சீரெனப்படும். சீரியைந் திறுதல் என்பது, வழக்கியல் செய்யுளாமாற்றால் யாப்பினுட் பொருள் பெறப் பகுத்துப் பதமாகியவற்றிற் செல்லுதல். சாத்தன் எனவும் உண்டான் எனவும் இரண்டசை கொண்டு சீராயின. கானப்பேர் எனவும் உண்ணாதன எனவும் மூவசை புணர்ந்து சீராயின. இனிச்செய்யுளுள். தாமரை புரையுங் காமர் சேவடி என்றவழி ஈரசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஓசையற்று நின்றவாறும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை என்றவழி மூன்றசையினாற் சீராகி அவ்வளவினால் ஓசையற்று நின்றவாறும் காணலாம். ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ் சீரியைந்து இற்றது சீர் என்றமையால், ஒருசீர் பலசொல் தொடர்ந்து வரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டு மென்பதும், எனவே உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவகையானுமன்றி வாரா என்பதும் பெறப்படும். ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றால் வேறு சீராக்கிய வழியும் அச்சீர்வகையான் வேறு சொல்லிலக்கணம் பெறுதும். மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே என்புழி நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து வேறொரு சீராக்க, முற்றுகரமாகி வேறுபடுதல் காணலாம். சீரெனப்படுமே எனச் சிறப்பித்தவதனால் ஈரசைச் சீரும் மூவகைச் சீரும் ஆகிய இவை சிறப்புடைய என்பதும் ஓரசைச் சீர் இவை போலச் சிறப்பில என்பதும் பெறப்படும். ஈண்டு எனப்படும் என்பதே பற்றி இத்துணைச் சிறப்பிலதாய நாலசைச் சீரும் கொள்ளப்படும் என்ற கருத்தால் நாலசைச்சீர் கொண்டாரும் உளர். அன்னோர் நாலசைச்சீர்க்கு உதாரணமாக வழக்கினுள் காட்டும் உண்ணா நின்றன முதலிய சொற்கள் இரண்டு சொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும், அவை சீராகவருஞ் செய்யுள் இன்மையானும், நாலசைச் சீர் காட்டல் வேண்டுவோர் வஞ்சிப்பாவினுள் வந்த நேரிழை மகளிருணங்குணாக் கவரும் என்ற ஆசிரிய அடியினை இரு சீரடியாக உரைப்பினும் அதற்குத் தூங்கலோசையின்றாகலானும், வஞ்சிச் சீர் அறுபது காட்டுகின்ற வழி நேர்பசை நிரைபசைகள் யாண்டும் அலகு பெறாமையானும் நாலசைச்சீர் கொள்ளுதல் தொல் காப்பியனார்க்கு உடன்பாடன் றென மறுப்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீரெனப்படும். உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச் சீரெனப்படும் என்பர் ஆசிரியர். நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கசைகளையும் ஒன்றோடொன்று கூட்டிப்பெருக்க ஈரசைச்சீர் பதினாறாம். நேர், நிரை என்னும் இயலசை இரண்டினையும் பெருக்கப் பிறந்த ஈரசைச்சீர் நான்கும் இயற் சீரெனப்படும், அவைதேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன. நேர்பு, நிரைபு என்னும் உரியசை யிரண்டினையும் உறழ வரும் ஈரசைச் சீர் நான்கும் ஆசிரியவுரிச் சீரெனப்படும் அவை ஆற்று நோக்கு ஆற்றுவரவு, வரகுசோறு. வரகுதவிடு என்பனவாம். நேர் பசை நிரைபசையின்பின் நிரையிறுதியும் ஆசிரியவுரிச் சீராம். உதாரணம்; யாற்றுமடை, குளத்துமடை, நேர்பசை நிரைபசையின் பின்னர் நேரசை நிற்பின் இயற்சீராம். (உ-ம்) ஆற்றுக்கால், குளத்துக்கால், இயலசைப் பின்னர் உரியசைவரின் நிரையசை வந்தாற்போல (இயற்சீரென)க் கொள்ளப்படும். (உ-ம்) மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு, இத்துணையும் இயற்சீர்பத்தும் உரிச்சீர் ஆறும் ஆகிய ஈரசைச்சீர் பதினாறும் கூறப்பட்டன. உயிரளபெடை அசைநிலையாக நிற்கவும் பெறும் எனவும், ஒற்று அளபெடுத்து வரினும் முற்கூறியவாறு அசை நிலையாகலும் உரித்து எனவும் கூறுவர் ஆசிரியர். உம்மை எதிர்மறையாகலான் சீர்நிலையாதலே வலியுடைத்தென்பது புலனாம். கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று என்புழி, கடாஅ என்பது புளிமா என அலகுபெற்றும், உப்போஒ வெனவுரைத்து மீள்வாள் ஓளிமுறுவல் என்புழி அசைநிலையாகி யலகுபெறாதும் உயிரளபெடை வந்தன. அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவும், செய்யுட்கே யுரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்து கொள்ளப்படுவனவும் என இருவகைய. அவற்றுள் வழக்குக்கும் செய்யுட்கும் பொதுவாகியதனை இயற்கை யளபெடை யென்றும், செய்யுட்குப் புலவர் செய்து கொண்டதனைச் செயற்கை யளபெடையென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ்விரண்டனுள்ளும் ஈண்டு அளபெடை யசைநிலையாகலு முரித்து எனப்பட்டது, இயற்கை யளபெடை யென்று பெயரிட்டு வழங்கப்படும். செயற்கை யளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறு போல இயற்கை யளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே யுரியது என்பர் பேராசிரியர். இனி, ஒற்றளபெடைக்கண் கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும் என்புழிக் கண்ண் என்பது சீர்நிலை யெய்தித் தேமாவாயிற்று தண்ண்ணென என்றவழித் தட்பத்தின் சிறப்புக் கூடுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்யப்பட்டது. அது, மாசெல்சுரம் என வஞ்சிச் சீராவதனை ஆகற்க; பாதிரி என முன்னின்ற இயற்சீரேயாக என இதனால் வழுவமைத்தாராயிற்று. மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நான்கசையுங் கூட்டிப்பெருக்க மூவசைச்சீர் அறுபத்து நான்காம் மா, புலி, பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும்; வாழ், வரு, போகு, வழங்கு என்பவற்றை இடையிலும்; கான், நெறி, காடு, பொருப்பு என்பவற்றை இறுதியிலும் கூட்டி உறழ மூவகைச்சீர் அறுபத்து நான்காம்.1 இவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீர் எனப்படும். உதாரணம்; மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான் என வரும். வெண்பாவுரிச் சீராகிய இவை நான்குமல்லாத ஏனைய மூவசைச்சீர் அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனப்படும். வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினுளல்லது ஏனைய பாவினுள் வரப்பெறா, வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர்கள் வரப்பெறும். வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும்1 இன்பா நேரடிக்கண்2 ஒருங்கு நிற்றல் இல்லை. கலித்தளை3 வரும்வழி மேற்சொல்லப் பட்ட இருவகைச் சீரும் ஒருங்கு நிற்பவும் பெறும். கலிப்பாவிற் குரிய கலித்தளைக் கண் நேரீற்றியற்சீர்4 நிற்றற்குரித்தன்று. மேற் கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும் இறுதற்றொழில்பட நில்லா5 என இவ்வியல் 20 முதல் 25 முடியவுள்ள நூற்பாக்களில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஓசை நிலைமையால் நிறைந்து நிற்குமாயின், அசையும் சீராந்தன்மை பெற்று நிற்றலை விலக்கார். தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து ஓரசைச் சீரை இயற்சீரே போலக் கொள்க என்பர் ஆசிரியர். ஓரசைச் சீராவன நாள், மலர், காசு, பிறப்பு என்பன. இவை சீராந்தன்மை பெற நிற்குமெனக் கொள்ளாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடியெனக் கொள்ளுதற்கு இடமில்லாது போய்விடும். இவற்றுள் நேர்பு, நிரைபு, என்னும் உரியசையிரண்டும் சீர்வகையான் அசைச்சீர் என வேறாய் நிற்பினும் தளைவகை சிதையாத் தன்மைநோக்கித் தேமா, புளிமா என்னும் இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கிக் கொள்ளப்படும் எனவும், இவை இயற்சீர்ப்பாற் படுமெனவே இவையும் கலிப்பாவிற்கு விலக்குண்டன எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். வெண்சீரீற்றசை நிரையீறு போலும் என்பர் ஆசிரியர். வெண்சீரீற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரிறுதி நிரையசை போலும் என இதற்கு விளக்கங் கூறுவர் இளம்பூரணர். மேல் கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (செய்-23) என்புழி, அவ்வாசிரிய வுரிச்சீராற் கலித்தளையாம் எனக் கூறிய ஆசிரியர், கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் என்பதன் தொடர் பாக. வஞ்சி மருங்கினும் (செய்-25), இசைநிலை நிறைய (செய்-26), இயற் சீர்ப் பாற்படுத்து (செய்-27) என மூன்று சூத்திரத்தால் இடை புகுந்ததனைக் கூறி முடித்து முற்கூறிய கலித்தளை யதிகாரம் பற்றி வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே (செய்-28) என வரும் இச்சூத்திரத்தாற் கூறுகின்றார் எனவும், வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீருள் ஈற்று நின்றசீரின் முதல்வந்த நேரசை மற்றை நிரை முதல் வெண்சீர் வந்து முன்னைய இரண்டுங் கலித்தளையாயவாறு போல கலித்தளையாம் என்பதே இச்சூத்திரத்தின் பொரு ளெனவும், மேல் நின்ற தளைவகை சிதையாத் தன்மைக்கண் என்பது மீண்டும் கூட்டியுரைக்கப்பட்டதெனவும், எனவே வெண்சீர்ப் பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்றும், நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒரு நிகர்த்தா மென்றும் அவ்வாறாங் காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவதென்றும் ஆசிரியர் கூறினாரெனவும், கலிப்பாவிற்கு வெண்சீர் ஒன்றாது வருதல் உரிமையுடையதெனவே வெண்பாவிற்கு ஒன்றிவரி னல்லது ஒன்றாது வருதல் யாண்டுமில்லை யென்பது உடம்படப் பட்ட தெனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கமுரைப்பர் பேராசிரியர். இனிய ஓசை பொருந்திவருமாயின் ஆசிரியவடிக்கண் வெண்சீரும் வரப்பெறும்.1 வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய வடிக்கண் வரும் என்பர் ஆசிரியர். ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைசீர் அறுபத்து நான்கு, ஆகச்சீர் எண்பத்து நான்கில் அசைச்சீர் நான்கெனவும், அது தளைவழங்கும்வழி இயற்சீர் ஒக்குமெனவும், ஈரசைச்சீர் பதினாறினும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பி லியற்சீர் ஆறும் எனப் பத்தாமெனவும் ஆசிரியவுரீச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிசீர் நான்கெனவும் ஏனைய அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனவும் இவ்வியல் 11-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களிற் கூறப்பட்டமை காணலாம். 5. அடி :- மேற்கூறப்பட்ட சீர் இரண்டும் பலவும் தொடர்ந் து ஆவதோர் உறுப்பு அடியெனப்படும் இதன் இலக்கணத்தினை இவ்வியலில் 31-முதல் 73-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துரைப்பர். அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற் சீரடியே என்பர் ஆசிரியர். இருசீராலும் முச்சீராலும் ஐஞ்சீராலும் அறுசீர் முதலியவற்றலும் இயன்றுவரும் அடிகள் பலவுளவாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பதும், இவ்வியலில் எழுத்து வகையாற் பகுத்துரைக்கப்படும் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே ஏற்புடையன என்பதும் தொல்காப்பியனார் கருத்தாகும். மேற்கூறிய அடியின்கண் உள்ளனவே தளையும் தொடையும்; அவை நாற்சீரடியின்கண் வருதலன்றி அவ்வடியின் நீங்க வருதலில்லை என்பர் ஆசிரியர். எனவே இவ்வியலில் தளைப்பகுதியாற் கட்டளையடி யெனவைத்து உறழ்ந்து கூறப்படுதலும் அறு நூற்றிருபத்தைந் தென்னும் வரையறையும் நாற்சீரடியாகிய அளவடிக்கேயுரியன வென்பது நன்கு பெறப்படும். அடியின் சிறப்பே பாட்டென்று சொல்லப்படும் என்பர் ஆசிரியர். இங்ஙனங் கூறவே இத்துணை மாத்திரைகொண்டது இன்ன செய்யுளென்றோ இத்துணை அசையுஞ் சீருந் தளையுங் கொண்டது இன்ன செய்யுளென்றோ அளவியல் முதலிய ஏனையுறுப்புக்களால் செய்யுட்களை வரையறுத்துரைத்தல் இயலா தென்பதும் அடியென்னும் இவ்வுறுப்பொன்றே கூற இன்ன செய்யுளென்பது நன்கு விளங்குமென்பதும் ஆசிரியர் கருத்தாதல் இனிது புலனாம். அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே என்பதற்கு, அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு என்ற வாறு எனவும், தலை இடை கடைச் சங்கத்தாரும் பிறசான்றோரும் நாற்சீரான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே செய்தார்; வஞ்சிப்பா சிறு வரவிற்றெனக் கொள்க எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். நாற்சீரடியுள், நான்கெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந்த மூன்றடியும் குறளடி யென்றும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தளவும் வந்த மூன்றடியும் சிந்தடியென்றும், பத் தெழுத்து முதல் பதினான்கெழுத்தளவும் வந்த ஐந்தடியும் நேரடி யென்றும்,1 பதினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த மூன்றடியும், நெடிலடியென்றும், பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்தளவும் உயர்ந்து மூன்றடியும் கழிநெடிலடி யென்றும் எழுத்தளவினாற் பெயர் கூறி2 வழங்குவர் தொல் காப்பியர். இப்பெயர் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட யாப்பியல் மரபென்பது, இவ்வியலில் 35 முதல் 39 வரையுள்ள நூற்பாக்களில் என்ப, மொழிப என அவ்வாசிரியர் தம் முன்னோர் கூற்றாகக் கொண்டெடுத்து மொழிதலால் இனிது விளங்கும். மேல், எழுத்தெண்ணி வகுத்துரைக்கப்பட்ட கட்டளையடிக் கண் உள்ள சீரினது நிலைமை ஐந்தெழுத்தின் மேற்பட அமைதல் இல்லையெனவும், நேர் நிரையென்னும் இயலசைகளால் இயன்ற வஞ்சிச் சீராயின் ஆறெழுத்தளவினதாய் நிற்றலும் உண்டெனவும் இவ்வியல் 40-ஆம் சூத்திரம் கூறும். வஞ்சிச்சீர் முச்சீரடியாக வல்லது நாற்சீரடியாக வருதல் இலக்கணமன்றாதலின் இருப தெழுத்தின் மிக்க நாற் சீரடிப்பா இல்லையென்பது இச்சூத்திரத் தால் உய்த்துணரப்படும். நாலெழுத்து முதல் இருபதெழுத்தளவும் வகுத்துரைக்கப் பட்ட பதினேழ் நிலத்தினவாகிய ஐவகையடிகளும் ஓரடிக்கோரடி எழுத்தளவு குறைந்தும் மிகுந்தும் வருவனவாயினும், அவ்வடிகளில் அமைந்த சீரது நிலை ஒசையாற் குறைதலும் மிகுதலும் இல்லையென்பர் ஆசிரியர். தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்றொழிலில்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் சொற்கு உறுப்பாதல் நோக்கி எழுத்தெனக் கொண்டு எண்ணத்தக்கன வாயினும், அவை உயிரெழுத்துக்களைப் போன்று விரிந் திசைத்தலும் தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதனவாதலின், மேல் ஐவகையவாகப் பகுத்துரைக்கப்பட்ட கட்டளையடிக்கண் எழுத்தெனக்கொண்டு எண்ணப்படுதல் இல்லை. இந்நுட்பம் உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ, உயிர்த்திறமியக்கம் இன்மையான (செய்-42) எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப் பட்டமை காண்க. வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடையதாகும். வஞ்சியுரிச் சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப்படும். வஞ்சியடி மூன்று சீராலும் வருதலுண்டு. மேற்குறித்த இருவகை வஞ்சியடியிலும் அசை கூனாகி1 வரும் சீர் முழுதும் கூனாகி வருதல் நேரடியாகிய அளவடிக்குரியதாகும் என இவ்வியல் 43 முதல் 47 வரையுள்ள சூத்திரங்களில் ஆசிரியர் குறித்துள்ளார். நாற் சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐவகை யடிகளையும் விரித்துணர்த்துங் காலத்து, அசையுஞ் சீரும் தோற்றுதற்கிடமா யமைந்த நாலெழுத்து முதல் இருபதெழுத் தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி அறுநூற் றிருபத்தைந்தாகும் என இவ்வியல் 48-ஆம் சூத்திரம் கூறும். இங்கு எழுபதுவகை என்பது, இரண்டு சீர் தம்முட் புணரும் புணர்ச்சியை என்பர் இளம்பூரணர். இது பற்றி அவர் கூறும் விளக்கம் பின் வருமாறு:- மேற்சொல்லப்பட்ட எண்பத்து நான்கு சீரினும் இயற் சீரான் வருவது இயற்சீரடி, ஆசிரியவுரிச் சீரான் வருவது ஆசிரிய வுரிச்சீரடி, இயற்சீர் விகற்பித்து வருவது இயற்சீர் வெள்ளடி, வெண்சீரான் வருவது வெண்சீரடி, நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவது நிரையீற்று வஞ்சியடி, உரியசையீற்றான் வருவது உரியசையீற்று வஞ்சியடி, ஓரசைச் சீரான் வருவது அசைச் சீரடி என வழங்கப்படும். அவற்றுள் இயற்சீரடி நேரீற் றியற்சீரடி யெனவும், நிரை யீற்றியற் சீரடி யெனவும் இருவகைப்படும். நேரீற்றியற் சீரடி, 1. நேரீற்றின் முன் நேர்முதலாகிய இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதலாகிய ஆசிரியவுரிச் சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச் சீர் 5. ,, ,, நேர்முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய ஐந்து வகைப்படும். இவ்வாறே 1. நிரையீற்றின் முன் நிரை முதலாகிய இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதலாகிய ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச் சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய நிரையீற் றியற்சீரடியும் ஐந்து வகைப்படும். ஆசிரியவுரிச் சீரடி நேர்பீறும் நிரைபீறும் என இருவகைப் படும். 1. நேர்பீற்றின் முன் நேர்முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரிய வுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பா வுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சி யுரிச்சீர் 5. ,, ,, நேர்முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய நேர்பீற்று ஆசிரிய வுரிச்சீரடி ஐந்து வகைப்படும். இவ்வாறே 1. நிரைபீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரிய வுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பா வுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சி யுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து பொருந்த நிரைபீற்று ஆசிரியவுரிச் சீரடியும் ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடி நேரீறும் நிரையீறும் என இருவகைப் படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் என்பன வந்தியைய நேரீற்றியற்சீர் வெள்ளடி ஐந்து வகைப்படும். இவ்வாறே, 1. நிரையீற்றின் முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர் முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் என்பன வந்து பொருந்த நிரையீற்றியற்சீர் வெள்ளடியும் ஐந்து வகைப்படும். வெண்சீர் நேர் முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலும் என இருவகைப்படும். 1. நேரீற்றின் முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர் முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் என நேர் முதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் என நிரைமுதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். 1. நிரை முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்றுவன. 1. நிரை முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்றாதன. உரியசை யீற்று வஞ்சியடியும் இவ்வாறே, 1. நிரைபு முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் 6. ,, ,, நேர் முதல் இயச்சீர் 7. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 8. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 9. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 10 ,, ,, நேர் முதல் ஓரசைச் சீர் என உறழப் பத்து வகைப்படும். 1. நேர் (நேர்பு) முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் 6. நிரை(நிரைபு) முன் நிரை முதல் இயற்சீர் 7. நிரை(நிரைபு) முன் நிரை முதல் ஆசிரியவுரிச் சீர் 8. ,, ,, நிரை முதல் வெண் சீர் 9. ,, ,, நிரை முதல் வஞ்சிச்சீர் 10. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என இவ்வாறு இயைத்து நோக்க அசைச் சீரடி பத்து வகைப்படும். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரிய வுரிச் சீரும் அதுவேயாம். மூவசைச் சீருள் வெண்பாவுரிச்சீர் ஒழிந்தன வெல்லாம் வஞ்சியுரிச் சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன்றாசிரியத் தளையாம்; மா முன் நிரையும் விளமுன் நேரும் என மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம். வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம். நிரைவரிற் கலித்தளையாம். வஞ்சியுரிச் சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்றாதது ஒன்றாவஞ்சித் தளையாம், இவ்வகையால் தளை ஏழாயின. இனி, அடி, அறுநூற்றிருபத்தைந்தாமாறு; அசைச் சீர், இயற்சீர், ஆசிரியவுரிச் சீர், வெண்சீர், வஞ்சியுரிச் சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி இவ்வைந்து சீரும் வருஞ் சீராக உறழும் வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந் நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிருபத்தைந்தாம் என்பது இளம்பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, எழுபது வகையின் வழுவிலவாகி வரும் அறுநூற்றிருபத் தைந்து என்னுந் தொகைக்குப் பேராசிரியர் பின்வருமாறு வகை கூறி விளக்கியுள்ளார் :- ஆசிரியத்துள் இயற்சீர் 19, ஆசிரியவுரிச் சீர் 4 அசைச் சீர் 4 என இருபத்தேழாகி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்த சீர் இருபத்துமூன்றும் வெண்சீர் நான்கினொடுந் தலைப்பெய்ய அவையும் அவ்வாறே இருபத்தேழாகி வரும். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற்சீர் பதினாறும் ஆசிரியவுரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் என இருபத்துநான்காம். இவை மூன்று பகுதியுந் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள் ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கினையும் இயற்சீர்ப்பாற்படுத்து அடக்குக என்று ஆண்டுக் கூறினமையின், ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும் அங்ஙனங் கொள்ளப்பட்ட சீர் ஒன்று ஒன்றனோடு தட்குங்கால் அவ்வெழுபது வகையானுமன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி எழுபது வகையின் வழுவிலவாகி என்றான். அங்ஙனம் தளைசிதையா அடி, ஆசிரிய அடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றும், கலியடி நூற்றிருபதும் என அறுநூற்றிருபத்தைந்தாம். இவற்றின் விரிவெல்லாம் பேராசிரியருரையிற் கண்டு தெளியத் தக்கனவாகும். இனி இச்சூத்திரத்திலுள்ள எழுபது வகையின் வழுவிலவாகி என்ற தொடர்க்கு எழுபது தளைவழுவின் நீங்கி எனப் பொருள் கொண்டு, எழுபது தளை வழுவாவன: ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழும், கலித்தளை தட்பப் பதினேழுமாய், ஆசிரியப்பாவிற்கு முப்பத்துநான்கு தளைவழுவாம் வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத் தளைதட்பப் பத்தும், கலித்தளை தட்பப் பத்துமாய், வெண்பாவிற்கு இருபது தளைவழுவாம். கலிநிலம் எட்டினுள்ளும் வெண்டளை தட்ப எட்டும், ஆசிரியத் தளைதட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறு தளைவழுவாம். இவை யெல்லாந் தொகுப்ப எழுபது தளைவழுவாம். எனக் கூறுவர் ஒரு சாராசிரியர்.1 அளவடி ஐந்தும் சிந்தடி மூன்றுமாக வெண்பா எட்டு நிலமே பெறும் என்பது, அளவும் சிந்தும் வெள்ளைக்குரிய (செய்-58) எனவரும் சிறப்பு விதியால் எடுத்துரைக்கப்படுதலின், அதற்குமேல் இரண்டு நிலன் ஏற்றி வெள்ளைநிலம் பத்து எனக் கொண்டு கூறும் இவ்வுரை பொருந்தாதென்பது பேராசிரியர் கருத்தாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் இந்நூல் செய்த காலத்தில் இவ்வாறு எழுத்தளவினாலமைந்த கட்டளையடிகளும் சீர் வகையடிகளும் ஆகிய இரு திறமும் அமையச் செய்யுள் இயற்றப்பெற்றன வென்றும் அவர்க்குப் பின் கடைச் சங்க காலத்திற் கட்டளையடிகளாற் செய்யுளியற்றும் பழக்கம் அருகி மறைந்த தென்றும் கருதவேண்டியுளது. இந்நூல் செய்த காலத்தில் தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுதும். பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃது அரிதாகலிற் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க என வரும் நச்சினார்க்கினிய ருரைப்பகுதி இங்கு நினைக்கத் தகுவதாகும். அடிகளின் பாகுபாட்டினை நன்குணர்ந்தோர் நாற்சீரடிகளை விரித்தாற் போன்று ஐஞ்சீரடி முதலாக வரும் ஏனையடிகளையும் பெருக்கிக் காணுமிடத்து அவை வரம்பிலவாம் என்பர் தொல் காப்பியர். அஃதாவது நாற்சீரடி அறுநூற்றிருபத்தைந்தொடும் ஐந்தாம் சீராக ஐஞ்சீரையும் உறழ 3125 விகற்பமாம். அவற்றுடன் ஆறாஞ்சீராக ஐஞ்சீரையும் உறழ 15625 விகற்பமாம் அவற்றுடன் ஏழாஞ் சீராக ஐஞ்சீரையும் உறழ 78125 விகற்பமாம். இவ்வகையினால் உறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும் இச்சொல்லப்பட்ட அடியினை அசையானும் எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம் என்பர் இளம்பூரணர். பதினேழ் நிலத்தனவாக மேல் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற்கு உரியன. அவை தனித்தனியுரியதாகி வருதலே யன்றி விரவிவரினும் விலக்கப்படுதலில்லை யென்பர் ஆசிரியர். குறளடி பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து 4-6 தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு வீங்கி சிந்தடி நீர்வாய் கொண்டு நீண்ட நீல 7-9 மூர்வா யூதை வீச வூர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நேரடி நன்மணங் கமழும் பன்னெல் லூர 10-14 வமையேர் மென்றோ ளம்பரி நெடுங்க ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு நெடிலடி லணிநடை யசைஇய வரியமை சிலம்பின் 15-17 மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு கழிநெடிலடி நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை 18-20 கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழுகுவ தன்றே.1 எனவரும் ஆசிரியப்பாவினுள் பதினேழ் நிலத்து ஐவகையடியும் ஒருங்கு வந்தவாறு காணலாம். தத்தம் சீர்நிலை வகையாலும் தளைநிலை வகையாலும் இனிய ஓசை வேறுப்பாட்டினை யுடையனவாகிய ஐவகை யடியினும் ஏற்றவழி நிலைபெறுதற்குரிய தன் தன் சீர் உள்ளவழித் தளை வேறுபாடு கோடல் வேண்டா2 என்பர் ஆசிரியர். எனவே சீர் தானே ஓசையைத்தரும் என்ற வாறாம் எனவும், ஐந்தடியினும் தன் சீர் ஏற்றவழி நிலைபெறுதலாவது, குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீரும் வருதலன்றி மூவகைச் சீர்வாராமை எனவும் விளக்குவர் இளம்பூரணர். சீர்கள் தம்முட் பொருந்தும் வழி நிலைமொழியாகிய இயற்சீரின் ஈற்றசையும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையாம்.2 குறளடி முதலாக அளவடியளவும் வஞ்சியுரிச்சீர் வந்து உறழும் நிலை இல.1 அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரியன; (அவை உரியவாதல்) தளைவகை ஒன்றாத் ஒன்றாத் தன்மைக்கண் என்பர் ஆசிரியர்.2 எனவே ஒன்றுந்தன்மைக்கண் நெடிலடியும் சில வருமென்று கொள்க எனவும். தளைவகை ஒன்றாமையாவது நிலைமொழியும் வரு மொழியுமாகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையா யொன்றுவதுமன்றி மாறுபட வருவது; அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற்றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளையாம் எனவும், ஒன்றுந் தன்மையாவது வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்டளையாம் எனவும் இவ்விரண்டும் வெண்பா விற்குத் தளையாம் எனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின் காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாகும்.3 வெண்பாவுரிச்சீர் நிற்ப நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு விலக்கத்தக்க தன்றாம்.4 பிறவாகிய தளையும் (ஆசிரியத்தளையும் வெண்டளையும்) நீக்குதலில்லை5 என்பர் ஆசிரியர். இயற்சீர் வெண்டளையானாகிய வெண்பாவடி ஆசிரியப் பாவாவின்கண் நிற்றற்குரிய மரபினால் நிற்பனவும் உள. (இயற்சீர்) வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவனவுள. அறுசீரடி ஆசிரியத்தளையொடு பொருந்தி (ஆசிரியப்பாவின்கண்) நேரடிக்கு முன்னாக நடை பெற்று வரும். எழுசீரால் வரும் அடி முடுகியற்கண் நடக்கும். மேற்சொல்லப்பட்ட ஐஞ்சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் வாராதென்று விலக்கார் அறிஞர். முடுகியலாகி வரும் மூவகையடியும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் நிற்றல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்ற வாறாயிற்று. நாற் சீர் கொண்டது அடி (செய். 31) என ஓதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஓதி, ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான், அடியாவது இரண்டு (சீர்) முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும் அறுசீர் முதலாக வரும் அடியெல்லாம் கழிநெடிலடியாம் எனவும் பிற நூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு (தொல்காப்பியனார்க்கு) உடம் பாடென்று கொள்க. அறுசீர் முதலான அடிகளுள் எழுசீர் எண் சீர் சிறப்புடையன எனவும் எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரியர் உரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை ஆங்ஙனம் விரிப்ப அளவிறந்தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங்காலை (செய்யுளியல்-49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அவ்வடியினால் வருதலின் என்று கொள்க எனவரும் உரையாசிரியர் உரைப் பகுதியினைக் கூர்ந்து நோக்குங்கால், ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்தளவு பற்றி வகுக்கப்படும் கட்டளை யடிக்கேயன்றி இக்காலத்திற் பெரு வழக்கின தாயுள்ள சீர்வகை யடிக்கும் இவ்வியலில் இலக்கணங் கூறியுள்ளமை நன்கு புலனாம. ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரடியாக வருதல் உண்டு. மேற்கூறிய முச்சீரடி ஆசிரியப்பாவினிடையிலும் வரப்பெறும். முச்சீரடி கலிப்பாவினுள் நிரம்பவும் நிற்கும். வஞ்சிப்பாவின் இறுதி, ஆசிரியப்பாவின் இறுதி போன்று முடியும் என இவ்வியல் 65 முதல் 68 வரையுள்ள சூத்திரங்களில் விரித்துரைப்பர் ஆசிரியர். வஞ்சிப்பாவின் இறுதிப்பகுதி ஆசிரியப்பாவிற்குரிய சீருந்தளையும் பெற்று அதன் இயல்பினால் முடியும் எனவே அதன் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலும் கொள்ளப்படும். வெண்பாவின் ஈற்றடி மூன்று சீரையுடையதாகும். அதன்கண் இறுதிச்சீர் அசைச் சீராய் வரும். வெண்பாவின் இறுதிச் சீரின் அயற்சீர் நேரீற் றியற்சீராயின் நிரையசையும் நிரைபு அசையும் தண்மையைப் பெற்று முடியும்; ஈற்றயற்சீர் நிரையீற் றியற் சீராயின் நேரசையும் நேர்பு அசையும் சீராந் தன்மை யெய்தி முடியும் என இவ்வியல் 69 முதல் 71 வரையுள்ள சூத்திரங்களாற் குறிப்பிடுவர் ஆசிரியர். வெண்சீரின் இறுதியிலுள்ள நேரசை யானது, இயற்சீரிறுதி நிரையசை போலும்1 என முன்னர்க் கூறினமையால் வெண்பாவுரிச்சீர் ஈற்றயற் சீராய் நிற்ப, அதன் முன் நேரசையும் நேர்பு அசையும் அசைச் சீராய் வந்து முடிதலும் கொள்ளப்படும். ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரிய முடிபே கலிப்பாவிற்கும் முடிபாகும்.2 கலிப்பா, வெண்பாவின் இயல்பினாலும் பண்புற முடிதல் உண்டு3 என்பர் ஆசிரியர். எழுசீரிறுதியாசிரியம் எனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராகவே வருமென்பதூஉம், வெண்பாவியல் எனவே கட்டளை வெண்பா வானும் சீர்வகை வெண்பாவானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருமென்பதூஉம் பெற்றாம் என்பர் நச்சினார்க்கினியர். 6. யாப்பு:- யாப்பு என்பது மேற்கூறிய அடிதோறும் பொருள் ஏற்று நிற்பச் செய்வதோர் செய்கையாகும். எழுத்து முதலாக அசை சீர் அடி எனத் தொடர்புற்று இயன்ற அடியினால் புலவன் தான் சொல்லக் கருதிய பொருளைச் சொற்கள் மிகாமலும் குறையாமலும் இறுதியளவும் முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பு என்று சொல்லுவர் செய்யுள் செய்யவல்ல புலவர்; அத்தகையயாப்பாவது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனச் சொல்லப்பட்ட ஏழு நிலத்தினும் வளவிய புகழையுடைய மூவேந்தராகிய சேர சோழ பாண்டியரது ஆட்சியுபட்ட குளிர்ந்த தமிழகத்தில் (வடக்கே வேங்கடமும்) தெற்கே குமரியாறும் மேற்கும் கிழக்கும் கடலும் ஆகிய) நான்கு பேரெல்லைக்கு உட்பட்ட நிலப்பகுதியிலே வாழும் தமிழ் மக்கள்1 வழங்கும் தொடர் மொழியமைப்பின்வழி நடைபெறுவதாகும் என இவ்வியல் 74, 75-ஆம் சூத்திரங்கள் கூறும். 7. மரபு:- மரபு என்பது காலம் இடம் முதலியன பற்றி வழக்கு மாறுபடினும் அத் திரிபுக்கு ஏற்ப வழுப்படாமற் செய்வ தோர் செய்கை. மரபாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நாற்சொல்லின் இயற்கையானே யாப்பின் வழிப் பொருந்தி யமைவது என்பர் ஆசிரியர். குறித்த பொருளை முடியச் சொல்தொடுக்குங்கால், பெயர், வினை, இடை, உரி ஆகிய இயற்சொல்லானும், ஏனைத் திரிசொல் திசைச்சொல் வட சொல்லானும் ஏழுவகை வழுவும் படாமற் புணர்ப்பது மரபு எனவும், அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ் நாட்டகத்தும் பலவகை நாட்டினும்1 தத்தமக் குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொல் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொல் மரபாவது திரிந்த வகையாகிய சொல்மரபு எனவும் விளக்குவர் இளம்பூரணர். மரபாவது, வழக்கெனவுஞ் செய்யுளெனவும் இடை தெரியாமல் (வேறு பிரித்துணர வொண்ணாதபடி) ஒரு வாய்பாட்டான் வழக்குஞ் செய்யுளுமாகி, ஒரு சொற்றொடரினைச் சொல்லியது போலச் செய்யுள் செய்தல் எனவும், இங்ஙனம் வழக்கியலை யாப்பு வழிப்படுத்தல் மரபாம் எனவே சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்குமாற்றானே செய்யுள் செய்வது என்பதாயிற்று எனவும், ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய, இனி, பொருளும் இவ்வாறே காலத்தானும் இடத்தானும் வேறுபடுதலுடைய, ஒரு காலத்து அணியும் கோலமும் ஒரு காலத்து வழங்காதனவுள. ஓரிடத்து நிகழும் பொருள் மற்றோரிடத்து நிகழா தனவுமுள. அவ்வக் காலமும் இடனும்பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்ய வேண்டுமென்பது இதனது பயன் எனவும், மற்று, பாட்டுரை நூலே என ஏழுவகை வகுத்த பகுதியையுஞ் செய்யுட்கு மரபென மேற்கூறினான்; அதனானே இவ்வேழு வகையானன்றி ஆரியர்2 வேண்டு மாற்றானும் பிறபாடைமாக்கள் வேண்டுங் கட்டளையானும் தமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்று எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் நுண்ணுதின் உணர்ந்து கொள்ளத்தக்க சிறப்புடை யதாகும். 8. தூக்கு:- தூக்கென்பது, பாக்களை அடிதோறுந் துணித்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பமாகும். தூக்கு என்னும் இச்சொல், துணித்தல் நிறுத்தல் பாடுதல் என்ற பொருளில் வழங்குவதாகலின், பாக்களை அடிதோறும் துணித்து நிறுத்தி இசைத்தலாகிய ஓசை விகற்பத்தைக் குறிக்கும் பெயராயிற்று. நிறுத்தற்குரிய பொருள்களாகிய பொன், வெள்ளி முதலியவற்றுள் ஒன்றைப் பெற்றாலல்லது, அப்பொருளைத் தொடியும் துலாமும் எனத் துலைக் கோலால் தூக்கி அளந்து அறுதியிடுதல் இயலாது; அதுபோலவே அளக்கப்படு பொருளாகிய பாக்களை யின்றி அவற்றை யளந்து நிறுத்துதலாகிய தூக்கென்னும் ஓசையினை அறுதியிட்டு உணர்த்தலும் இயலாத செயலாம். எனவேபாவொடு புணர்த்தே தூக்கென்னும் ஓசை விகற்பத்தினை ஆசிரியர் ஈண்டு உணர்த்துகின்றார். அகவல் என்று வழங்கப்படும் ஓசை ஆசிரியப்பாவிற்கு உரியதாகும். அகவிக் கூறுதலால் அகவல் எனக் கூறப்பட்டது. ஒருவன் ஒன்றைக் கூறுதலும் அதுகேட்டு மற்றொருவன் அதற்கு மறு மொழி சொல்லுதலுமாகிய இம்முறையிலன்றி, ஒருவன் தான் கருதியன வெல்லாவற்றையும் விடாது தொடர்ந்து சொல்லுத லாகிய உரையாடல் முறையை உலகியலிற் காண்கின்றோம். அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கணெல்லாந் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும் என்பர் பேராசிரியர். வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசை யன்று என்பர் ஆசிரியர். எனவே அகவுதலில்லாத ஓசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பலோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் அஃதன்று என்றார் என இளம்பூரணரும், அழைத்துக் கூறாது ஒருவற்கு ஒருவன் இயல்புவகையான் ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங் கால் எழுந்த ஓசை செப்பலோசை யெனப்படும். (அகவலும் செப்பலுமாகிய) அவ்விரண்டு மல்லது வழக்கினுள் (பிறிது) இன்மையின் அதா அன்று என அவைகளின் இலக்கணம் பெறலாயிற்று என நச்சினார்க்கினியரும் கூறும் விளக்கம் அறியத்தக்கனவாகும். துள்ளலோசை கலிப்பாவிற்கு உரியதாகும். துள்ளுதலாவது, ஒழுகு நடையின்றி இடையிடை உயர்ந்து வருதல். செப்பலோசைத் தாகிய வெண்சீர்ப்பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு புணராது ஆண்டு எழுந்த ஓசை துள்ளித்துள்ளி வந்தமையால் துள்ளலோசையாயிற்று. தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியதாகும். அடியிறுதியில் தூங்காது சீர்தொறுந் தூங்கப்படும் ஓசை தூங்கலோசை யெனப்படும் என்ப. துள்ளலும் தூங்கலும் வழக்கினும் செய்யுளினும் ஒப்ப வருவன அல்ல என்பர் பேராசிரியர். மருட்பாவிற்குரிய ஓசை, மேற்கூறிய தூங்கலும் துள்ளலும் ஒழிந்த ஏனைச்செப்பலும் அகவலும் ஆகிய இருகூறுமல்லது, தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டும் தனி நிலையில்லை என்பர் ஆசிரியர். அகவல் முதலாகத் தூங்கல் இறுதியாக மேற் கூறப்பட்ட நால்வகை யோசைகளையும் எதிர்சென்று எண்ணுங் கால் தூங்கல், துள்ளல், செப்பல், அகவல் என எண்ணுதல் முறையாதலின், அவற்றுள் பிற்கூறிய தூங்கலும் துள்ளலும் நீங்க ஏனையிருசார் எனக் குறிக்கப்பட்டவை முறையே செப்பலும் அகவலும் ஆதலால், செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவது மருட்பாவாயிற்று என விளக்குவர் பேராசிரியர். மேற்கூறப்பட்ட ஓசைவகையாலல்லது அவ்வோசை யொழித்துச் சீரும் தளையும் அடியும் பெறப் பாடல் செய்யார் அறிஞர் என்பர் ஆசிரியர் எனவே பாவிற்குரிய சீர் தளை அடி முதலிய இலக்கண முடையனவாயினும் பாட்டிற்கு இன்றியமையா தனவாக, மேற்கூறப்பட்ட ஓசையமையாதன நூல் (சூத்திரம்) எனவும் உரையெனவும் கூறப்படுதலன்றிப் பாட்டெனச் சிறப்பித்துரைக்கப்படா என்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். தூக்கென்னும் உறுப்பு இயலும் வகை மேற்சொல்லப்பட்ட நாலுமே எனபர் ஆசிரியர். எனவே இந்நான்கினடங்காத ஓசை விகற்பம் எதுவுமில்லை யென்பது அவர்கருத்தாதல் புலனாம். 9. தொடை:- தொடைவகை யென்பது எழுத்துச் சொற் பொருள்களை எதிரெதிர் நிறுத்தித் தொடுக்கப்படுவனவாகிய தொடைவிகற்பம். இவை பூத்தொடை போலச் செய்யுட்குப் பொலிவு செய்வனவாதலின் தொடையெனப்பட்டன. தொடைவகையாகிய அவை மோனை, எதுகை, முரண், இயைபு என நான்கு நெறிப்பட்ட மரபினை யுடையனவாம்; அளபெடைத் தொடையொடு கூட ஐந்தெனவும் சொல்லப்படும். பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை என அமைந்தவற்றை ஆராயின் அவையும் தொடைப்பாகுபாடாம். நிரல் நிறுத்தமைத்தலும்1 இரட்டையாப்பும்2 மேற்கூறிய தொடையியல்பினவாய் முடியும். அடிதொறும் முதலெழுத்து ஒத்துமைவது மோனைத் தொடையாகும். (முதலெழுத்து அளவொத்து நிற்க) இரண்டா மெழுத்து ஒன்றின் எதுகையாகும். மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலன்றி வருக்கவெழுத்தும் உரியனவாகும். சொல்லினாலாவது பொருளினாலாவது மாறுபடத் தொடுப்பது முரண்தொடை எனப்படும். ஈற்றெழுத்து ஒன்றிவரின் இயைபுத் தொடையாம். அளபெடை வரத் தொடுப்பது அளபெடைத் தொடையாகும். இவ்வைந்தும் பாட்டின் அடிதொறும் வருதற்குரிய தொடை களாகும். ஒருசீர் இடையிட்டு (முதற்சீரும் மூன்றாஞ்சீரும்) எதுகையாய்வரின்3 அதனைப் பொழிப்புத் தொடையெனக் கூறுவர் புலவர். இரண்டு சீர் இடையிட்டு (முதற் சீரிலும் நான்காஞ்சீரிலும் மோனை முதலாயின வர)த் தொடுப்பது ஒரூஉத் தொடையாம், மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம்4 என்பர். முற்கூறிப்பட்ட தொடையெல்லாம் விரிவகையால் இவ்வளவின எனத் தொகை கூறுவது, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞுற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூ றொன்று மென்ப வுணர்ந்திசி னோரே1 எனவரும் சூத்திரமாகும். வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணுற் றொன்பது என்றவாறு என இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறினார் இளம்பூரணர். இதன்கண் ஐயீராயிரத்து ஆறைஞ்ஞுறு என்ற தொடர், பதின்மூவாயிரம் எனப்பொருள் படும். தொண்டு தலையிட்ட-ஒன்பதைத் தலையிலே கொண்ட. பத்துக்குறை எழுநூறு-அறுநூற்றுத்தொண்ணுறு. ஒன்பதைத் தலையிலேகொண்ட அறுநூற்றுத் தொண்ணுறென்றது, அறுநூற்றுத் தொண்ணுற் றொன்பது என்றவாறு. ஒன்றும், என்றது, பொருந்தும் என்னும் பொருள்பட வந்த முற்றுவினை. ஐயீராயிரத்தாறைஞ் ஞுற்றொடு (பதின் மூவாயிரத்துடன்) தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூறு (அறுநூற்றுத் தொண்ணுற்றொன்பது) ஒன்றும் (பொருந்தும்) என இயைத்துப் பொருளுரைக்குமிடத்துத் தொடைவகை பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணுற்றொன்பதாதல் காண்க. மோனை மொழிமுதல் உயிர் 12 இவை ஒவ்வொன்றிற்கும் கிளையெழுத்துப் பதினொன்றுள வாகலின், பன்னீருயிருடன் கிளையெழுத்துப் பதினொன்றையும் உறழ 132 க, த, ந, ப, ம என்னும் ஐந்தையும் பன்னீருயிரோடு உறழ 60 மேற்கூறிய அறுபதையும் முதற்றெடையாக்கி, அவற்றின் கிளையெழுத்துப் பதினொன்றுடன் உறழ 660 சகரத்தின் முதலாகெழுத்து 9 அவ்வொன்பதை அவற்றின் கிளையெழுத் தெட்டுடன் உறழ 72 வகரத்தின் முதலாகெழுத்து 8 அவற்றை அவைதமக்குக் கிளையாகிய ஏழெழுத்துடன் உறழ 56 யகரத்தின் முதலாகெழுத்து 1 (இதற்குக் கிளை யெழுத்தில்லை) ஞகரத்தின் முதலாகெழுத்து 3 ஒவ்வொன்றிற்கும் கிளையெழுத் திரண்டாக வைத்து உறழ 6 இவ்வகையால் முதலாகெழுத்து 93, ---- கிளையெழுத்து 926 ஆக மோனைத் தொடை 1019 ---- எதுகை உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர்மெய்யெழுத்து இருநூற்றுப் பதினாறில் ஙவ் வருக்கம் பன்னிரண்டெழுத்தும் ஒழிந்து எதுகையாதற்குரியவை 204 இருநூற்று நாலினையும் கிளையெழுத்துப் பதினொன்றோடு உறழ 2244 ஆய்தம் உள்பட ஒற்று 19 குற்றுகரம் 6 ----- ஆக எதுகைத் தொடை 2473 ----- முரண் சொல் முரண், பொருள் முரண் என இரண்டாம். இயைபு உயிரெழுத்துக்கள் மொழியீற்றில் உயிர்மெய்யாகியே வருதலின் அவை இயைபுத் தொடைக்கு ஆகா. உயிர் மெய் இருநூற்றுப் பதினாறில் இறுதிக்கண் வாராத ஙகர வுயிர் மெய் 12, அகரம் 17, இகரம் 14, உகரம் 2, எகரம் 1, ஒகரம் 1, ஆகிய இவை யொழிந்து நின்ற எழுத்து 165 ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் புள்ளியிறுதி 11 குற்றுகர வீறு 6 ---- ஆக இயைபுத் தொடை 182 ---- அளபெடை மொழி முதலாகும் உயிரளபெடை 7 க, த, ந, ப, ம என்னும் உயிர்மெய் யளபெடை 35, சகர வுயிர்மெய் யளபெடை 5, வகர வுயர்மெய் யளபெடை 5, யகர வுயிர்மெய் யளபெடை 2, ஆக இவை நாற்பத்தேழையும் முதனிலை இடைநிலை, இறுதிநிலை, என மூன்றாக வைத்து உறழ உயிர்மெய் யளபெடை 141 ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் ரகர ழகரமும் ஒழிந்த பத்தொற்றும் ஆய்தமும் அளபெடுக்க ஒற்றளபெடை 11 ---- ஆக அளபெடைத் தொடை 159 ---- பொழிப்பு பொழிப்புத் தொடையில் கிளையெழுத்து வாராது மோனைப் பொழிப்பு 93 எதுகைப் பொழிப்பு 229 முரண் பொழிப்பு 2 இயைபுப் பொழிப்பு 182 அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாக வாராமையின் அவை யொழிந்து உயிரளபெடைப் பொழிப்பு 148 ---- ஆகப் பொழிப்புத் தொடை 654 ---- ஒரூஉ மேல் பொழிப்புத் தொடைக்குக் காட்டிய வகைப்படியே ஒரூஉத் தொடையும் அறுநூற்றைம்பத்து நான்காம். செந்தொடை மொழிமுதலாம் எழுத்துத் தொண்ணூற்று மூன்றும் மற்றையடியினும் ஒத்துவருங்கால், அவைமோனையுள் அடங்குதலின், ஒத்தனவாகிய அவற்றை யொழித்து ஒவ்வாதன வாகிய ஏனைய தொண்ணூற்றிரண்டெழுத்தொடும் உறழச் செந்தொடை எண்ணாயிரத் தைந்நூற்றைம்பத்தாறு வகையாம். இவ்வகையினால் தொடை விகற்பம் பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணூற் றொன்பதாம் என அறிக என்பது இளம் பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட 13699 என்ற தொகைக்கு இளம்பூரணர் கூறிய வகையிலன்றி வேறொரு வகையால் விளக்கங் கூறுவதும் உண்டு. நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி1 விரிந்த அறுநூற்றிருபத் தைந்தடியும்2 அவற்றொரோவடி இருபத்திரண்டு தொடையும்3 பெறப் பதின்மூவாயிரத் தெழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப்4 பதின் மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றுறொன்பது தொடையாம் என்பது யாப்பருங்கல விருந்தியாசிரியர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற்குத் தொண்டுதலையிட்ட பத்துக் குறை யெழுநூற் றொன்பஃது1 எனப் பாடங்கொண்டு பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வேறுவேறு பொருளுரைப்பர். தொண்டு தலையிட்ட-ஒன்பதுடன் கூடிய. பத்துக்குறை யெழுநூற்றொன் பஃது என்றது அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது. ஒன்பதுடன் கூடிய அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது எனவே எழுநூற்றெட்டு என்பது பொருள். ஆகவே தொடைவகை பதின் மூவாயிரத் தெழுநூற்றெட்டு என்பது பேராசிரியர் கொள்கையாகும். தொண்டு தலையிட்ட என்ற தொடர், ஒன்பதாலே பெருக்கின எனப் பொருள்படுமெனவும், பத்துக் குறை யெழு நூற்றொன்பது (அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது) என்ற தொகையை ஒன்பதாலே பெருக்கின், ஆறாயிரத்திருநூற்றுத் தொண்ணூற் றொன்றாம் எனவும், அத்தொகையை முற்கூறிய பதின்மூவாயிரத்துடன் கூட்டத் தொடைவகை பத்தொன் பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற் றொன்றாம் எனவும் கொள்வர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வெவ்வேறு வகையிற் பொருள் கொண்டு கூறிய தொடைவகை விரிபற்றிய விளக்கங்கள் அனைத்தும் ஈண்டுக் காட்டப்புகின் மிக விரியுமாதலின் அவரவருரைகளிற் கண்டு தெளியத் தக்கனவாம். முற்கூறப்பட்ட தொடையினை ஆராய்ந்து மேலும் விரிப்பின் வரம்பிலவாம் எனவும், தொடைநிலைவகை மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவன எனவும் கூறுவர் ஆசிரியர். மேல், அடியெனச் சிறப்பித்துரைக்கப்பட்ட நாற்சீரடிக்கண் பெருக்கிப் பெற்ற தொடை பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பதெனப்பட்டன. இவ்வாறே நாற்சீரடி யொழிந்த இருசீரடி முதலாக எண்சீரடி யீறாகக் கிடந்த ஏனை அடிவேறுபாட்டின்கணெல்லாம் இத்தொடைகளைக் கூட்ட வரும் தொடைப் பகுதி வரையறையின்றிப் பலவாம் என்பதும், இங்ஙனம் எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் பலவேறு வகைப்பட விரித்துணர்த்தப்படும் தொடை விகற்பங்கள் யாவும் மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவனவென்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். இனி, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்பனவற்றின்கண், இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க் கதுவாய், கடை, கடையிணை, பின் கடைக்கூழை, இடைப்புணர் என வேறுபடுத்து உறழ்ந்து, எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி எனவும், உயிர்மோனை உயிரெதுகை, நெடில்மோனை நெடிலெதுகை, வருக்கமோனை வருக்கவெதுகை, இனமோனை இனவெதுகை எனவும், மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட்டெதுகை ஆசெதுகை எனவும் இவ்வாறு வருவனவற்றை மேற் கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினான் உறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப் பாரக்களானும் உறழவும் வரம்பிலவாகி விரியும் என்பர் இளம்பூரணர். 10. நோக்கு:- நோக்காவது, ஒரு செய்யுளைக் கேட்டோர் அதன்கண் மாத்திரை முதலாக அடிநிரம்புந் துணையும் பாடற் பகுதியை மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கி அதனகத் தமைந்த பொருள் நலங்களை உய்த்துணர்தற்குக் கருவியாகியதோர் உறுப்பாகும். இதன் இயல்பினை, மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே (செய்-100) எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விளங்க அறிவுறுத்தியுள்ளமை காணலாம். நோக்காவது, யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை எனவும், அடிநிலை காறும் என்றதனால் ஓரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க எனவும், அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூவகைப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். நாற் சொல்லாலாய உலகியல் வழக்கினைப் பாவின்கண் அமைப்பது மரபென மேற்கூறிய ஆசிரியர், அங்ஙனம் அமைக் குங்கால் வழக்கியல் போன்று வெள்ளைமை கலவாது, அரும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, அப்பொருளை உய்த் துணர்தற்குக் கருவியாகிய நோக்கென்னும் உறுப்புடையதாய் வருவதே செய்யுள் என்பது விளங்க நோக்கென்னும் உறுப்பினை ஈண்டுக் கூறினார் என்பர் பேராசிரியர். இவ்வாறு மாத்திரை முதலாக அடி நிரம்புந் துணையும் நோக்கியுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் அமைய வந்த நோக்கென்னும் உறுப்பினை முல்லை வைந்நுனை தோன்ற எனவரும் அகநானூற்றுப் பாடலிற் பேராசிரியர் விளக்கிக் காட்டிய திறம் அறிந்து மகிழத்தக்கதாகும். 11. பா:- பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இஃது இன்ன செய்யுளென்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் 101 முதல் 149 முடியவுள்ள நூற்பாக்களால் பாவின் இலக்கணத்தை விரித்துக் கூறிரிள்ளார். பாவினது வகையை விரிக்குங்காலத்து ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நான்கியல்பினை யுடைத்தென்பர். அப்பாக்கள் நான்கும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருட்கும் உரியன மேல் நால் வகையாக விரிந்த பாவினது பகுதியை உண்மைத் தன்மை நோக்கித்1 தொகுத் துரைப்பின் ஆசிரியப்பா. வெண்பா என இரண்டாயடங்கும். அவற்றுள் ஆசிரியத்தின் நடையினை யுடையதாய் வஞ்சிப்பா அடங்கும். வெண்பாவின் நடையினை யுடையதாய்க் கலிப்பா அடங்கும். வாழ்த்தியல் வகை2 மேற்கூறிய நான்கு பாவிற்கும் உரியதாகும் நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங் காப்பக் குற்றந்தீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்தும் புறநிலை வாழ்த்து1 கலிப்பா வகையினும் வஞ்சிப்பாவினும் வருதல் இல்லை. வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும் செவியறிவுறுத்தற் பொருளும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வரப்பெறா.2 வாயுறை3 வாழ்த்தாவது வேம்பினையும் கடுவினையும் போன்ற கடுஞ்சொற்களைத் தன்னகத்துக் கொள்ளாது, வருங்காலத்திற் பெரும்பயன் விளைக்குமென்ற நல்ல நோக்கத் துடன் பாதுகாவற் சொல்லால் மெய்யறிவித்தலாகும். அவையடக்கியல்1 என்பது விளங்க அறிவிக்குந் திற மில்லாதனவற்றைச் சொல்லினும் அவற்றை வகைப்படுத்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்வீராக என இவ்வாறு எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறுதல். செவியுறையாவது, பெரியோர் நடுவண் பெருக்கமின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்தலாகும்.2 ஒத்தாழ்ந்த ஓசையும். மண்டலித்துவரும் யாப்பும், (இரு சீரும் முச்சீருமாகிக் குறைந்து வரும்) குட்டமும்3 நாற்சீரடிக்குப் பொருந்தின என்பர். எருத்தடி4 குட்டமாய் (குறைந்து முச்சீராய்) வருதலும் உண்டு. மண்டிலம், குட்டம் என மேற்கூறியவை இரண்டும் ஆசிரியப்பாவின் கண்ணே பயில நடக்குந் தன்மை யனவாம். ஆசிரியப்பாவாவது, பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரியவுரிச் சீரானும் ஆசிரியத் தளையானும் அகவலோசை யானும், நாற் சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானுந் தளையானும் அடியானும் வருவது. ஈற்றயலடி முச்சீரான் வருவது நேரிசையாசிரியம் எனவும், இடையிடை முச்சீர்வரின் இணைக்குறளாசிரியம் எனவும், எல்லாவடியும் நாற்சீரடியாகி ஒத்து வருவது நிலைமண்டில வாசிரியம் எனவும், யாதானும் ஓரடியை முதலும் முடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது எல்லாவடியும் ஒத்துவரும் பாட்டினை அடிமறி மண்டிலவாசிரியம் எனவும் அடி நிலையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பர் இளம்பூரணர். இனி, முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடி மயங்காசிரியம் எனவும், வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியம் எனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசிரியம் எனவும் வழங்கப்படும். இவற்றுக்குரிய இலக்கணமாக இவ்வியல் 59, 60, 61, 104-ஆம் சூத்திரப் பொருள்களைக் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் கருத்தாகும். நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள் எனச் சொல்லப்பட்டவையும் அளவு ஒத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பின் என்பர் தொல் காப்பியர். வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடியானும் வருவது. இவையெல்லாம் ஓசையான் ஓக்கு மாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார். இவ்வாசிரியர், நான்கினை அளவென்றும், நான்கின் மிக்கவற்றை நெடில் என்றும், குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகலின், இவற்றுள் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத வெண்பாக்கள் நெடுவெண் பாட்டும் குறுவெண் பாட்டும் ஒத்தவையும் (சமனிலை வெண் பாட்டும்) என மூவகையாம். நெடுவெண் பாட்டு என்பது, நான்கின் மிக்க அடிகளை யுடையதாய் வரும் வெண்பாவாகிய பாட்டாகும். ஐந்தடி முதல் பன்னிரண்டடி யளவும் வரும் நெடுவெண் பாட்டைப் பிற்காலத் தார் பஃறொடை வெண்பா என வழங்குவர். ஒரூஉத் தொடை பெற்றுவரும் பஃறொடை வெண்பாவினை நேரிசைப் பஃறொடை யெனவும், ஒரூஉத் தொடையின்றிவரும் பஃறொடையினை இன்னிசைப் பஃறொடை யெனவும் வழங்குதல் உண்டு. குறுவெண் பாட்டாவது அளவிற்குறிய பாட்டு, இஃது இரண்டடியாலும் மூன்றடியாலும் வரும். இரண்டடியும் ஒருதொடையான் வருவன குறள்வெண்பா எனவும், விகற்பத் தொடையான் வருவன விகற்பக்குறள் வெண்பா எனவும் கூறுவர். மூன்றடியும் ஒருதொடையான் ஒத்து வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வேறுபட்ட தொடையான் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. கைக்கிளைப் பொருண்மைத்தாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனவும் அங்கதப் பொருண்மைத்தாக வரும் வெண்பா அங்கத வெண்பா எனவும் வழங்கப்படும். பரிபாட்டாவது பரிந்து (பல வடிகளும் ஏற்று) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பல வுறுப்புக்களோடு தொடர்ந்து முற்றுப்பெறுவது. அங்கதம் என்பது வசை. அங்கதச் செய்யுள் அங்கதமாகிய செய்யுள் எனப் பண்புத் தொகையாம். ஒத்தவை என்பன, அளவாலும் பொருளாலும் இனத்தாலும் வேறு படுக்கப்படாத சமனிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியால் வருவன. இவை அளவியல் வெண்பா எனவும் வழங்கப்படுவன. ஒரு பொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே (செய்யுளியல்-147) என ஆசிரியர் ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானுமொரு பொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக்கலிக்கு உறுப்பாய்வரின் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய்வரின் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். இனி ஒரு பொருள் நுதலாது திரிந்து வருங் கலிவெண் பாட்டும் ஈண்டுக்கூறிய நெடுவெண் பாட்டோடு ஒரு புடை யொப்புமை யுடைமையின், அக் கலிவெண்பாட்டாக இக் காலத்தார் கூறுகின்ற உலாச் செய்யுளும் புறப் பறக்கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ் வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக்கூறுதும். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச்செய்து செப்பலோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்குமாறுணர்க என வரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். கைக்கிளைப் பொருண்மைதான் வெண்பாவாக வருதலே யன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரவும் பெறும்.1 பரிபாடல் முற்கூறியவாறே வெண்பா வுறுப்பான் வருதலே யன்றித் தொகை நிலையும் விரியுமாகக்கூறிய பாநான்கனுள் இன்னபா வென்றறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரியதாகும் என்பர்.1 மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டானது, பொதுவாய் நிற்றலே யன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்கும் தனக்குறுப்பாகக் காமப்பொருள் குறித்து வரும் நிலையினதாகும்.2 கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வெண்பாவியலாற் புலப்படத் தோன்றுவது எனவும், இதனுட் சொற்சீரடியும் முடுகியலடியும் அப் பா நிலைமைக்குரியவாகும் என வேறு ஓதலின் ஏனை நான்கும் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். கொச்சகம் என்பது ஒப்பினாகிய பெயர்; ஓர் ஆடையுள் ஒரு வழி யடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். பல கோடுபட அடுக்கி யுடுக்கும் உடையினைக் கொச்சகம்1 என்பவாகலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ் செய்யுளைக் கொச்சக மென்றார் என்பர் நச்சினார்க்கினியர். அராகம் என்பது, ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத்தொடுப்பது என இளம்பூரணரும், குறிலிணை பயின்ற அடி அராக மெனப்படும் எனப் பேராசிரியரும் கூறப. சுரிதகம் என்பது, ஆசிரிய வியலினாலாவது வெண்பா வியலினாலாவது பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பதாகும். இதனை அடக்கியல் எனவும் வழங்குவர். எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும், கால் சுரிதகமாதலானும், இடைநிலைப் பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமும் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். எருத்து என்பது தரவு என்பர் பேராசிரியர். சொற்சீரடியும் முடுகியலடியும்1 பரிபாடற்கு உரியவாகும். பாட்டின்றித் தொடுக்கப்படும் கட்டுரைக்கண் சொல்லுமாறு போல எண்ணோடு2 கூடியும் முற்றிய நாற்சீரடியின்றி முச்சீரடி யானும் இருசீரடியானும் குறைவாகிய சீரை யுடைத்தாகியும். ஒழிந்த அசையினை யுடைத்தாகியும், ஒரு சீரின் பின்னே பிறி தொருசீர் வரத் தொடுக்கப்படாது ஓரசை வரத் தொடுத்தும் சொல்தானே சீராந் தன்மையைப் பெற்று நிற்றல் சொற்சீரடியின் இயல்பாகும். அங்கதமாகிய வசைச் செய்யுளைக் குற்றமற ஆராயின் செம்பொருளங்கதமும், பழிகரப்பு அங்கதமும் என இருவகையினை யுடையதாகும். வாய்காவாது கூறப்படும் செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும். தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின், அது பழிகரப்பெனப் பெயர்பெறும். ஈண்டு தம்மால் வேண்டப்பட்ட செய்யுள் இரண்டு வகையென்று சொல்லுவர் புலவர். புகழொடும்3 பொருளொடும் புணரவரின் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர். வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப்பெயர் பெறும். இனி, கலிப்பா ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும். மேற்கூறிய ஒத்தாழிசைக் கலி யிரண்டனுள் ஒன்று,இடை நிலைப் பாட்டு(தாழிசை), தரவு, போக்கு(சுரிதகம்), அடைநிலைக் கிளவி (தனிச்சொல்) என்னும் நான்குறுப்புடையதாகப் பயின்று வரும்.2 அவற்றுள், தரவாவது1 நாலடி இழிபாகப் பன்னிரண்டு அடி உயர்பாக இடைவரும் அடியெல்லாவற்றானும் வரப்பெறும். தாழிசைகள் தரவிற் சுருங்கி வருவன.2 அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல்3 தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்று வரும். போக்கியல் வகையாகிய சுரிதகம் வைப்பு எனவும் வழங்கப்படும்.4 அது. தரவோடு ஒத்த அளவினதாகியும்5 அதனிற் குறைந்த அளவினதாகியும்6 குற்றந்தீர்ந்த பாட்டின் இறுதி நிலையை யுரைத்துவரும். ஒத்தாழிசைக் கலிவகை யிரண்டனுள், இரண்டாம் வகையினதாகிய செய்யுள். முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து.1 தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான், வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரு வகைப்படும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா2 தரவு, தாழிசை, எண் வாரம் எனச் சொல்லப்பட்ட நான்குறுப்பினை யுடையதாகும். அதற்குத் தரவு, நான்கும் ஆறும் எட்டுமாகிய நேரடி3யினால் வரும். அடக்கியல் வாரம்,1 தரவோடு ஒத்த இலக்கணத்தது, எண் என்பது, முதல் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வருவது.2 மேற் சொல்லப்பட்ட எண், ஒரோவொன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது; சின்னம் என்பதொன்றும் ஒழிந்து நில்லாத பொழுது3 என்பர் ஆசிரியர். ஒரு போகு என்பதன் இயல்பும் இரண்டு வகைப்படும்; கொச்சக வொருபோகு எனவும் அம்போதரங்க வொருபோகு எனவும் இருவகையாகப் பகுத்துணர்தல் வேண்டும்.1 தரவு முதலாயின வுறுப்புக்களுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலியன வுடைத்தாகியும், எண்ணாகிய வுறுப்புக்களை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக் குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவுதானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக்குரிய யாப்பினும் பொருளினும் வேறுபாடுடைத்தாகி வருவது கொச்சக வொரு போகாகும் என்பர் ஆசிரியர்.1 இனி, கொச்சக வொரு போகாகிய இதன் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தை யொட்டி நச்சினார்க்கினியர் கூறிய விளக்கங்கள் இங்கு நோக்கத் தக்கனவாம். 1. தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி2 முதலியன. இது தரவொடுபட்ட தாழிசை யிலக்கணமின்றி வேறாய் வரும் என்றற்குத் தரவின்றாகி எனத் தரவை விலக்கினார். எனவே, இவை ஒத்து மூன்றாதலும், தரவிற் சுருங்கி நான்கும் மூன்றும் அடிபெறுதலும், ஒருபொருள்மேல் வருதலும், தாழம்பட்ட ஓசையவேயாதலும் கடப்பாடின்று என்றவாறாம் அங்ஙனங் கூறியவதனானே பரணியுளெல்லாம் ஈடியானே வருதலும், தாழம்பட்ட வோசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும், இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வருவழி ஈரடி முதலிய பலவடியான் வருதலும், இனி, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாது வருதலும்,1 அங்ஙனம் வருங்கால் தாழ்ந்தவோசை பெற்றும் பெறாதும் வருதலும், அவை இருசீர்முதல் எண்சீரளவும் வருதலும் என்று இன்னோரன்ன பல பகுதி யெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட்டன. இவ் வேறுபாடெல்லாம் உளவேனும் தாழம்பட்ட வோசை பெரும்பான்மைய வாதலின் தாழிசை யென்றார். இங்ஙனம் தாழிசைப்பேறு விதந்தோதவே ஒழிந்த வுறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்றாம். ஆகி யென்றதனான் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதலும், தேவபாணி யன்றி யாப்பினும் வேறுபட்டு வருவனவற்றின் கூறாய் அங்ஙனம் மூன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்குமுதற் பலவும் அடுக்கி வருதலும், தனிச்சொற் பெற்று வருதலும், தாழம்பட்ட வோசையின்றி மூன்றடுக்கி வருதலும், சுட்டியொருவர் பெயர் கொண்டு அவர்களையும் தெய்வ மென்றே பரவலும், அடுக்கி வந்து அடக்கியலான் முடிதலும், பிறவும் கொள்க.... இன்னுஞ் சிலப்பதிகாரத்துள் வரும் வேறுபாடெல்லாம் இவ்விலேசான் முடித்துக் கொள்க. 2. தாழிசை யின்றித் தரவுடைத்தாகியும் என்பது மேற் கூறிய தாழிசையின்றித் தரவே பெற்று வருதலும் என்றவாறு, தர வென்னும் உறுப்பைச் செய்யுளுடைத் தெனவே ஒழிந்த வுறுப்பு விலக்குண்டன. ஆகியும் என்றதனால் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்றும் பெறாதும் வருதலும், பெரும்பான்மை இரண்டிணைதலுங் கொள்க. அவை தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவுகொச்சகம் தரவிணைக் கொச்சகம் எனப் பெயர் கூறப்படும். 3. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது வண்ணகத்திற்கு ஓதிய எண்ணும் சின்னமும் இன்றி, ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் நான்குறுப்புடையதும் கொச்சக வொருபோகாம் என்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பையே கூறிற்று; உள்ளது நிற்றலை வேண்டி. 4. அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது, அடக்கியல் தனித்து வருதலின்றி அவ்வடக்கியலோடு ஒரு செய்யுளாய் அடிபரந் தொழுகியும்; அடக்குமியல்பு இன்றென்றது முற்கூறிய உறுப்புக்களைத் தனியே வந்து அடக்கி நிற்கும் இலக்கணமின்றியே வரும் என்றவாறு எனவே ஏழுசீரிறுதி யாசிரியங் கலியே (செய்-76) வெண்பா வியலினும் பண்புற முடியும் (செய்-77) என்ற விதியாற் பெற்ற இறுதி ஒரு தொடராய் இற்று நிற்றலும், அடிநிமிரும் என்றதனான் முற்கூறியவற்றின் அடிவரையறையை இகத்தலும், ஒழுகும் என்றதனான் எழுசீரிறுதி யல்லாத எல்லா அடியும் கலியேயாய் ஒழுகிவருதலும் பெற்றாம். இக்கருத்தறியாதார், வெண்பாவியலாற் பண்புற முடியும் கலியடி யுடையதனை வெண்கலிப்பா என்பர்.1 யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது, மேற்கூறியவாறும் இனி வருகின்றவாறும் இன்றியாப்பின் வேறு படுதலும் பொருளின் வேறுபடுதலும் என்றவாறு. அவை, இருசீர் முதல் எண்சீர் காறும் வந்த அடி மேற்கூறியவாறன்றி நந் நான்கே பெற்று வருவனவும். அவற்றுட்பிறவடி விரவி வருவனவும், பலவடி வந்தும் நான்கடி வந்தும் பா மயங்கிவருவனவும், இனி, ஈரடியான் வருவனவற்றுள் ஈற்றடி மிக்கும் குறைந்தும் குறையாதும் வந்து இயலசைச்சீர் பெற்று வருவனவும், ஓசையும் பொருளும் இனிதாகாது வருவனவும் இரண்டடிச் செய்யுள் முடிந்து நிற்கவும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும், பிறவாறாய் வருவனவும், இனி, மூவடியான் வருவனவற்றுள் ஈற்றடிகுறைந்தும் முதலடிமிக்கும் இடையடி குறைந்தும் இறுதியடி மிக்கும் மூன்றடியிற் குறையாதும் பிறவாறாயும் வருவனவும், இம் மூவடி இற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும் பிறவாறாய் வருவனவும், இனி. நான்கடியாய் வருவனவற்றுள் முதல் இடை கடையிற் குறைந்து வருவனவும், முதல் இடை கடைக்கண்ணே ஓரடியும் ஈரடியும் சீர்மிக்கு வருவனவும் பிறவாறாய் வருவனவும், நான்கடி யிற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்மிக்கு வருவனவும், இங்ஙனம்மிக்கு பத்தடுக்கி ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவனவும்.1 அளவியலின் வேறுபடுவனவும் இனி ஐந்து அடியான் வருவன வற்றுள் ஈற்றடி குறைந்து வருவனவும் ஐந்தடியிற்ற பின் ஓரடியும் ஈரடியும் மிக்கு வருவனவும். முச்சீரான் இற்றுச்சீர் சிலமிக்கு வருவனவும், இனி ஆறுமுதலிய அடிகளான் வருவனவும் இவ்விலக் கண மெல்லாம் பெற்று வருதலும்.2 கடவுட்டொடர் நிலைகள் பலதரவும் தாழிசையுமாகி இடைமிடையச் செய்வனவும் அடக்கியலின்றி அடி நிமிர்ந்து அடக்கியல் பெற்று வருதலும் இன்னோரன்ன பல பகுதிகளும் கொள்ளப்படும். இனி, பொருள் வேறுபடுதலாவன தேவரைப் படர்க்கையாக்கிக் கூறலும், சுட்டியொருவர் பெயர் கொளப்படுதலும், புறப் பொருளொடு தொடர்தலும், முற்கூறிய பொருள்கள் பிறவாறு வருதலுமாம் இங்ஙனம் யாப்பினும் பொருளினும் வேறுபட வந்த கொச்சக வகைகளைச் செய்யுளியல் 149-ஆம் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள்களாக எடுத்துக்காட்டி விளக்கி யிருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். இனி, இவ்வாறு வந்த கொச்சகங்களை யெல்லாம் ஒருவரையறைப் படுத்துத் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின்வந்த யாப்பிலக்கண நூலாசிரியர்கள். ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்துரைத்த செய்யுளிலக்கணத்தினையும் அதன் வழியமைந்த பழந்தமிழ்ச் செய்யுட்களாகிய இலக்கியங்களையும் ஒப்பு நோக்கி புணர்ந்த பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரை யாசிரியர்கள் பாத்தோறும் தாழிசை துறை விருத்தம் எனப் பிற் காலத்தார் பகுத்துரைத்த இப்பகுப்பு முறை பொருந்தாதெனக் காரணங்காட்டி மறுத்துள்ளார்கள். ஒழுகிய ஓசையுடன் ஒத்த அடி இரண்டாய் விழுமிய பொருளினதாய் வரும் செய்யுளை வெண்பாவிற்கு இனமாக்கி வெண் செந்துறையென வழங்குதல் பிற்கால யாப்பியல் மரபாகும். கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோம் யாமே என்பது வெண் செந்துறைக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட செய்யுளாகும். இஃது இரண்டடியாய் வருதலின் அடியளவு நோக்கி வெண்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் கலிப்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் இனமெனப்படும். இனி, சீருந்தளையும் நோக்க ஆசிரியப்பாவிற்கு இனமெனவும் கூறுதல் பொருந்தும். எனவே இதனை மேற்காட்டிய பாக்களுள் ஒன்றற்கு மட்டும் இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் இவ்வாறு இரண்டடியால் வருவனவற்றுள் ஒழுகிய வோசையின்றிச் சந்தம் சிதைந்தனவும் விழுமிய பொருளின்றி வருவனவும் ஆகியவற்றைத் தாழிசையென வேறோர் இனமாக்கி யுரைப்பர். தாழம்பட்ட ஓசையும் விழுமிய பொருளும் இல்லாதனவாகிய அவற்றுக்குத் தாழிசையெனும் பெயர் கூறின் முற்கூறிய தாழிசைகளும் சந்தஞ் சிதைந்து புன் பொருளவாய் வருவதற்குரியன எனத் தவறாகக் கருத வேண்டிய நிலையேற்படும். ஆகவே அவற்றுக்குத் தாழிசை யென்னும் பெயர் பொருந்தாது. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப்-ஆய்ச்சியர் குரவை) என இவ்வாறு மூன்றடியாய், ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவனவற்றை ஆசிரியத் தாழிசை யென்றும், இனி இதுவே நான்கடியாய் வரிற் கலிவிருத்த மென்றும் கூறுவர் பின்வந்தோர். கன்று குணிலா என்ற பாடலில் வெண்டளை அமைந்திருத்தலால் இதனை வெண்டாழிசையெனக் கூறுதற்கும் இடமுண்டு எனவே இதனை ஒரு தலையாக ஆசிரியத்திற்கு இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன் அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே என நான்கடியான் வருவதனைக் கலிவிருத்த மெனின், இதன் கண் வெண்டளை அமைந்திருத்தலால் இதனை வெண்டாழிசை யெனினும் குற்றமாகாது. அன்றியும் கலித்தளையே யில்லாத இப்பாடல் கலிப்பாவிற்கு இனமாதல் பொருந்தாது. இனி, குறளடியானும் சிந்தடியானும் வருவனவற்றைச் சீரளவு பற்றி வஞ்சிப்பாவிற்கு இனமாக்கியுரைப்பர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். அவை சீரளவால் ஒப்பினும்அடி நான்காய் வருதலானும் பா என்னும் ஒசை வேறுபடுதலானும் அவற்றை வஞ்சிப்பாவிற்கு இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் குறளடிச் செய்யுள் மூன்றுவரின் வஞ்சித் தாழிசை யெனவும் சிந்தடிச் செய்யுள் மூன்று வாரா எனவும் கூறின், அங்ஙனம் அவை மூன்றடுக்கி வருதற்கும் வாராமைக்கும் தக்க காரணம் காட்டல் அரிது. பிறவும் இவ்வாறு ஒரு பாவிற்கு இனமென வகுக்கப்பட்டவை மற்றொரு பாவிற்கும் இனமாம் எனக் கொள்ளுமாறு அமைந்திருத்தலால் இவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரையறைப் படுத்துதல் பொருந்தா தெனவும், இங்ஙனம் இனஞ் சேர்த்துதற்கு அரியனவாயினும், இவை பெரும்பான்மையும் கலிப்பாவிற்கு ஏற்ற ஓசையே பெற்று வருவனவாதலின், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனார் இவை யெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங் கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினார் எனவும் அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள். அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகும் என மேற்சொல்லப் பட்ட கொச்சக வொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும். அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமக்கு எல்லையாகும். அதன் செம்பாதியிற்பாதி (பதினைந்தடி) சிறுமைக்கு எல்லையாம். அம்போதரங்க வொருபோகாகிய ஆச்செய்யுள் எருத்து. கொச்சகம், அராகம்,2 சிற்றெண்3 அடக்கியல் வாரம்4 என்னும் இவ்வுறுப்புக்களையுடையது5 என்பர் தொல்காப்பியர். ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப்பட்ட வெள்ளடி யியலால் திரிவின்றி முடிவது கலிவெண் பாட்டாகும்1 என்பர் தொல்காப்பியர்: வெள்ளடியால் என்னாது வெள்ளடியியலான் என்றமை யால், வெண்டளையால் வந்து ஈற்றடிமுச்சீராய் வருவனவும், பிறதளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்.2 ஒரு பொருள் நுதலிய எனவே சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைத் தென்பது பெற்றாம். இயல் என்றதனான் வெண்பாவிலக்கணஞ் சிதையாத வற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவதெனவும், அவ்வாறன்றித் திரிந்து வருவன வெல்லாம் ஒருபொருள் நுதலாக் கலிவெண்பாவாம் எனவும் கூறியவாறு எனப் பேராசிரியரும், இதனான் ஒரு பொருள் நுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும், ஒரு பொருள் நுதலாதது சீர் வகையாய்த் திரிவுடைத்தாய் வருமெனவும், கூறிற்றாம்... வெண்பாவாயின் குறித்த பொருளை மறைத்துக் கூறாது செப்பிக்கூறல் வேண்டும்; இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானும் துள்ளிவரு தலானும் கலிவெண்பாட்டாயிற்று என நச்சினார்க்கினியரும் கூறிய விளக்கங்கள் இங்குக் கருதத்தக்கனவாம். புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும் கைக்கிளை பெருந்திணை எனவும் சொல்லப்பட்ட பொருள ஏழனுள்ளும் யாதானும் ஒரு பொருளைக் குறித்து ஏனைக் கலிப் பாக்கள் போலத் தரவும் தாழிசையும் தனித்தனி பொருளாக்கிச் சுரிதகத்தால் தொகுத்து வரும் நிலைமைத்தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலிவெண்பா எனவும், புறப்பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடை வெண்பா எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாடல் எனவும், கொச்சகச் கலிப்பாவிற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாவைக் கொச்சகக் கலிப்பா எனவும் கூறுதல் இவ்வாசிரியர் (தொல்காப்பியனார்) கருத்தென்று கொள்க என இளம் பூரண அடிகள் விளக்குதலால், முற்கூறிய நெடுவெண்பாட்டாகிய பஃறொடை வெண்பாவிற்கும் இக்கலி வெண்பாட்டிற்கும் இடையேயமைந்த வேறுபாடு இனிது புலனாதல் காண்க. தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண் பாவின் இயல்பினாற் புலப்படத் தோன்றும் பா நிலைவகை சொச்சகச் கலிப்பாவாகும். இதன் இயல்பினை, தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும்1 ஐஞ்சீரடுக்கியும்2 ஆறுமெய்3 பெற்றும்4 வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே எனவரும் நுற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். ஒத்தாழிசைக் (கலிக்)குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற்போலக் சொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க என இளம்பூரணர் கூறுதலால், ஒத்தாழிசைக் கலியின் வகையாய்க் கலியோசை தழுவிய கொச்சக வொருபோகும் வெண்பாவியலால் வெளிப்பட முடியும் கொச்சகக் கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்தல் வேண்டும். இனி, இதற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது இதன் முதல் மூன்றடிளும் ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடியும் மற்றொரு சூத்திரமாகவும் கொண்டு, அவற்றுள் முன்னையது, வெளிப்படு பொருளினதாய் விரவுறுப்புடைய வெண்கலியின் இயல்புணர்த்திற்றென்றும், பின்னையது மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப்பாநிலைவகையான அகநிலைக் கொச்சகக் கலியின் இயல்புணர்த்திற்றென்றும் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பகுத்து உரைகூறி விளக்கியுள்ளார்கள். அன்னோர் கருதுமாறு வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்னும் பயனிலைக்கு வெளிப்படு பொருட்டாகிய வெண்கலிப்பா என்பது எழுவாயாக வந்து இயைதற்கு இடமின்மையானும், பாநிலைவகையே கொச்சகக் கலி என்புழிப் பாநிலைவகை யென்றது, இன்ன பாவினது நிலையும் வகையும் என்பது விளங்கும் வகையில் அத்தொடர்ப் பொருளை அறிந்து கொள்ளுதல் இயலாதாகலானும் இளம்பூரணர் கருதுமாறு இதனை ஒரு சூத்திரமாகக்கொண்டு, கொச்சகக் கலியின் இலக்கணம் உணர்த்திற்றாக உரை கூறுவதே தெல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். இனி, யாப்பின் வேறுபட்ட கொச்சக வொருபோகு ஒப்பன வற்றுள், இருசீர் நான்கடித் தரவு கொச்சகம், முச்சீர் நான்கடித்தரவு கொச்சகம், நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம் என்பனவும் அடங்குமெனவும், இனி, கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற் படுத்துச் செப்பினும் அவையேயாம் எனவும் கூறுவர் பேராசிரியர். முன்னைச் சூத்திரத்தில் ஒரு பொருள் நுதலி வருவது கலி வெண்பாட்டு எனவே, ஒரு பொருள் நுதலாது வெளிப்படத் தோன்றும் கலிப்பாட்டின் உறுப்பொத்துத் தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாயும் அவை ஐஞ்சீரும் அறுசீரும் அடுக்கி வருதலும் எல்லாங் கொள்ளப்படும். இவ்வாறு வந்தன வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொருளும் வேறாகலிற் கொச்சக மென்றார் எனவும். இனி பலவடுக்கிப் பொருட்டொடராய் அறம், பொருள், இன்பம், வீடு என்பன விராய்ப் பொருள்வேறுபட வரும் தரவுகொச்சகம் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம் எனவும், திருச்சிற்றம்பலக் கோவையுள் திருவளர் தாமரை, போதோ விசும்போ என்பன பதினேழெழுத்தும் பதினாறெழுத்துமாய் வந்த தரவு கொச்சகம் எனவும், குயிலைச் சிலம்படி காரணி கற்பகம் என வரும் இவை ஒரோவெழுத்து மிக்க தரவுகொச்சகம் எனவும் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். கூற்றும் மாற்றமும் விரவிவந்து சுரிதகமின்றி முடிவது உறழ்கலிப்பா என்பர் தொல்காப்பியர். எனவே ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச்சென்று பின்னர் அவற்றைத் தொகுத்து முடிப்பதோர் சுரிதகமின்றி முடிதல் உறழ் கலியின் இலக்கணம் என்பது இனிது புலனாம். இதனைக் கொச்சகக் கலியின் பின் வைத்தமையான் அக்கொச்சகவுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். உறழ்கலியாகிய இது, நாடகச் செய்யுட் போல வேறுவேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும், இது பொருளதிகார மாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் இதனைக் கொச்சகக் கலியுள் அடக்காது வேறு செய்யுளாகப் பிரித்து இலக்கணங் கூறினார் ஆசிரியர். ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடியாகும்; சுருக்கத்திற்கு எல்லை மூன்றடியாம் என்பர் ஆசிரியர். ஆசிரிய நடைத்தே வஞ்சி என்பதனால் வஞ்சிப்பா விற்கும் ஆயிரம் அடிபேரெல்லையாகக் கொள்ளப்படும். நெடுவெண் பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறு வெண்பாட்டிற்கு அளவு, அளவடியுஞ் சிந்தடியுமாகிய எழுசீராம் என்பர் தொல்காப்பியர். குறுமையும் நெடுமையும் அளவியலொடுபடுத்துக் கொள்ளப் படுமாதலின், அளவியல் வெண்பாட்டும் உளவென்பதும், அதுவே சிறப்புடைய தென்பதும் பெறப்படும். நெடுவெண் பாட்டிற்குப் பேரெல்லை பன்னிரண்டடி யெனவே, அதனிற் பாதியாகிய ஆறடி அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லை யெனவும், நெடுவெண்பாட்டின் சிற்றெல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவின் சிற்றெல்லை நான்கடியெனவும் கொள்ள வைத்தாராயிற்று. அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத் துள்ளும் ஆறடியின் ஏறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோரும். இக்கருத்தினால் அம்மை யென்னும் வனப்புடைய செய்யுளுக்கு நெடுவெண் பாட்டு ஆகாதென விலக்குவார், அம்மை தானே அடி நிமிர் பின்று (செய்-227) என்றார் தொல் காப்பியனார். செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனவும், சிறப்புடைப் பொருளைப் பிற்படக்கிளத்தல் என்பதனால் குறுவெண் பாட்டும் (குறள் வெண்பாவும்) சிறப்புடைமை பெறுதும் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி, கலிவெண் பாட்டும் கைக்கிளைப் பொருள்1 பற்றிய பாவும் செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலைவாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா; பொருள் முடியு மளவும் வேண்டிய அடி வரப்பெறும். புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வந்து முடியும் பாவின் கண் வருவதற்குரியன1 என்பர் ஆசிரியர். பரிபாடல் என்னுஞ் செய்யுள், நானூறடி உயர்ந்த எல்லை யாகவும் இருபத்தைந்தடி குறைந்த எல்லையாகவும் வரும். செய்யுட்களின் அளவியல் வகை மேற்கூறிய கூறுபாட்டினதாகும். எழுவகை நிலத்தும்2 தோன்றிய செய்யுளை ஆராயின், அடி வரையறை யில்லாதன ஆறாகும். அவையாவன நூல், உரை, நொடியொடு புணர்ந்த பிசி,3 ஏது நுதலிய முதுமொழி, மறை மொழி கிளந்த மந்திரம், கூற்றிடை வைத்த குறிப்பு என்பனவாம்.4 அவற்றுள், நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடிவுரை மாறுபடின்றியமையத் தொகுத்தும் வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருளை விரித்துரைத்தற்கேற்ற சொல்லமைப்பொடு பொருந்தி, நுண் பொருள்களை விளக்கும் பண்பினதாகும். அந்நூல்தான் நால் வகைப்படும்; ஒரு பொருளையே நுதலிவரும் சூத்திரமும், ஓரினப் பொருள்களையே தொகுத்துரைப்பதாகிய ஓத்தும், பல பொருட்கும் பொதுவாகிய இலக்கணங் கூறும் படலமும், இம்மூன்று உறுப்பினையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்ட பிண்டமும் என இந் நால்வகையால்1 நடக்கும் என்பர் ஆசிரியர். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட் குறிப்பினால் வருவனவும்,2 பாட்டின்றி வழக்கின்கண் உரையளவாய் வருவனவும்,3 பொருள்மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றிப் பொய்யே புனைந்துரைக்குமளவில் வருவனவும்,4 பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாய் வருவனவும்5 என உரைவகைநடை நான்காகும். அவ்வுரைதானும் மற்றொரு திறத்தால் இரண்டாகப் பகுத்துரைக்கப்படும். அவற்றுள் ஒன்றே செவிலிக்கு உரியது; மற்றொன்று எல்லார்க்கும் உரியதாகும்.1 ஒப்புமைத் தன்மையொடு பொருந்திய உவமப் பொருளும்,2 ஒன்று சொல்ல மற்றொன்று தோன்றுந் துணிவுபடவரும் சொல் நிலையும்3 எனப் பசி இரு வகைப்படும். அறிவின் நுட்பத்தைப் புலப்படுத்தும் நிலையில் சுருங்கிய சொல்லால் அமைந்த, புகழ் பயக்கும் உயர்ந்த கருத்தினைத் தன்னகத்தே கொண்டு, யாவரும் எளிதில் உணருமாறு கருதிய பொருளை முடித்தற்கு வரும் காரணத்துடன் பொருந்தி விளங்குவது முதுமொழி யென்பர் ஆசிரியர்.1 தாம் சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயன்தரச் சொல்லும் ஆற்றலுடைய நிறைமொழி மாந்தராகிய பெரியோர், இவ்வாறு ஆகுக எனத் தமது ஆணையாற் சொல்லப்பட்டு, அவ்வாற்றலனைத்தையும் தன்கண் பொதிந்து வைத்தள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் எனப்படும். இதன் இயல்பினை, நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (செய்-171) என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். இக்கருத்தே பற்றி ஆசிரியர் திருவள்ளுவனாரும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்றார். நிறைமொழி யென்பது, அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி என்பர் பரிமேலழகர். நிறைமொழி மாந்தராவார், இருவகைப் பற்றுக் களையும் நீக்கி ஐம்புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் பெரியோர். ஆணையிற் கிளத்தலாவது, இஃது இவ் வாறாகுக எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல்1 மறைமொழி-புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர் என்பர் பேராசிரியர். இனி, மறைமொழி யென்பதற்கு, நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும் இங்ஙனம் சான்றோர் எண்ணிய வண்ணம் செயற்படுதற்குரிய ஆற்றல் முழுவதும் தன்கண் வாய்க்கப்பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார், அதனை வாய்மொழி (செய்-75) என்ற பெயரால் முன்னர்க் கூறிப் போந்தார்.2 இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந் தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள,3 அங்கதப் பாட்டு அல்லாத மறைமொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித் துரைக்கப்படும் என்றற்கும் மறைமொழி தானே எனப் பரித்துரைத்தார். எனவே சபித்தற் பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப் பாட்டெனவும், வசைப் பொருட்டாகாது உலக நலங்குறித்து வரும் மறை மொழியினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு புலனாம். திருமூலநாயனர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலை தொல்காப்பியனார் கூறிய இவ்விலக்கணத்தின்படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகும். எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சியாலும் புலப்படாது, சொல்லினால் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்புமொழி என்பர்.1 கவியாற் பொருள் தோன்றாது, பின்னர் இன்னது இது எனக் குறிப்பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின், இது குறிப்பு மொழியெனப் பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக் கொண்டு உணரினல்லது இக்குறிப்புப் புலனாகாதென்பார், இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு (செய்யுளியல்-158) என்றார் தொல்காப்பியனார். இதனைப் பொருளிசை யென வழங்குவர் ஒருசார் ஆசிரியர். குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கினராகும் எனவரும் இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும், கொம் பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட மூக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பில வாதலும் குறிப்பினான் அதனைக் குஞ்சரம் எனக் கொண்டவாறும் கண்டுகொள்க எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கனவாகும். இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலும் ஆகாது; குறித்த பொருளை நாட்டி நாற்சொல் லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவும் குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று. அதனால் இது அடி வரையறை யின்றாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். அடிவரையறை யில்லாதனவாகிய அறுவகைச் செய்யுட் களின் இயல்பினை விரித்துரைத்த தொல்காப்பியனார், இவ்வியல் 173 முதல் 175 முடியவுள்ள சூத்திரங்களால் இசைநூலின் பாவினமாகிய பண்ணத்தி யென்பதன் இயல்பு கூறி, 176-ஆம் சூத்திரத்தால் அளவியல் பற்றி முற்கூறிய இலக்கணங்களைத் தொகுத்து முடிக்கின்றார்.1 பாட்டின்கண் கலந்த பொருளை யுடையனவாகிப் பாட்டுக் களின் இயல்பை யுடையன பண்ணத்தி யெனப்படும் என்பது, பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டினியல பண்ணத் திய்யே (செய்-173) எனவரும் நூற்பாவால் இனிது விளங்கும். பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்றார்; அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஓதப்படுவன என்பர் இளம்பூரணர். பாட்டிடைக் கலந்த பொருளவாகி என ஆசிரியர் கூறுதலால் இயற்றமிழ்ப் பாடல் களுக்கு உரியனவாகச் சொல்லப்பட்ட பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுளாகிய இவ்விசைப் பாடல்களுக்கும் உரியன என்பதும், பாட்டு எனக் கூறாது பாட்டின் இயல் என்றமையால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாக முற் கூறப்பட்ட நோக்கு முதலிய செய்யுளுறுப்புக்கள் சிலவற்றை இவ் விசைப்பாடல்கள் பெற்றே வருதல் வேண்டுமென்னும் நியதியில்லை யென்பதும் நன்கு விளங்கும். மேற் சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல் பினது என்பர் தொல்காப்பியர். பிசி யென்பது இரண்டடி யளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வரு மென்று கொள்ளப்படும் எனவும், கொன்றை வேய்ந்த செல்வ னடியை என்று மேத்தித் தொழுவோம் யாமே என்பது, பிசியோடு ஒத்த அளவினதாகிப் பாலையா ழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமையிற் பண்ணத்தி யாயிற்று எனவும் இளம்பூரண அடிகள் கூறிய விளக்கம் இங்கு நோக்கத் தகுவதாகும். பண்ணத்தியென்னும் இவ் விசைப்பாடல்களின் அடியளவு பன்னிரண்டடி பேரெல்லை யென்பதும், இவற்றிலுள்ள அடிகள் நாற்சீர் கொண்டது அடியெனப்படும் என்னும் அவ்வரையறை யின் இகந்து நாற்சீரின்மிக்கும் குறைந்தும் வரினும் நீக்கப்படா என்பதும், அடிநிமிர் கிளவி யீரா றாகும் அடியிகந்து வரினுங் கடிவரையின்றே (செய்-175) எனவரும் சூத்திரத்தால் தெளிவாக உணர்த்தப்பட்டன. இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, நாற் சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவும் கொள்ளப்படும் எனப் பொருள் கொண்டு, இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா அடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறு எனவும். பன்னிரண்டாவன: ஆசிரியம். வஞ்சி, வெண்பா, கலி எனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடும் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம் எனவும், இவையெல்லாம் உரையிற் கோடல் என்பதனாலும் பிறநூல் முடிந்தது தானுடம்படுதல் என்பதனாலும் கொள்க எனவும் விளக்கங் கூறுவர் இளம்பூரணர். அவ்வாசிரியர், அடியிகந்து (நாற்சீரடியின்மிக்கு) வருவனவாகக் கூறிய பாவினங்கள் பன்னிரண்டனுள், வெள்ளொத் தாழிசை, கலித்தாழிசை என்பன பெரும்பாலும் நாற்சீரடியால் இயன்று வருதலாலும், கலிவிருத்தம் யாண்டும் நாற்சீரடியேயாய் வருதலாலும், அவை அவர் கருத்துப்படி அடி நிமிர்கிளவி யெனப்படா ஆதலாலும், நான்கு பாவினோடும் தாழிசை துறை, விருத்தம் என்பவற்றை உறழ்ந்து காணப் பாவினம் பன்னிரண்டாம் என்ற குறிப்பு இச் சூத்திரத்தில் இடம் பெறாமையாலும், இம் மூன்றனுள் தாழிசையென்பதொன்றே கலியுறுப்புக்களுள் ஒன்றாக வைத்துரைக்கப்படுவதன்றித் துறை, விருத்தம் என்பன செய்யுள் வகையாகத் தொல்காப்பியத்தில் குறிக்கப்படாமை யாலும் இச்சூத்திர வுரையுள் இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டிய பாவினப்பாகுபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 13. திணை:- செய்யுளிற் கூறப்படும் ஒழுகலாறுகளை அகத்திணையும் புறத்திணையும் என இவ்வாறு பாகுபடுத்து அறிதற்குரிய கருவி திணை யெனப்படும். கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்னும் ஏழு திணைகளும் முறையே மேற்சொல்லப் பட்டன என்பர் ஆசிரியர். முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண் பாட்டினைக் கைக்கிளைப் புறமெனவும், வஞ்சியை முல்லைப்புற மெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற்புற மெனவும், காஞ்சியைப் பெருந்திணைப் புறமெனவும் ஓதியநெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகியடங்குமாயின என்பர் இளம்பூரணர். 14. கைகோள்:- அவ்வத் திணையொழுக்க விகற்பமாகிய களவும் கற்பும் என்னும் இப்பாகுபாடுகளை அறியச் செய்தல் கைகோள் எனப்படும். காமப்புணர்ச்சி (இயற்கைப் புணர்ச்சி), இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் எனச் சொல்லப்பட்ட அந் நான்கு வகையாலும் அவற்றைச் சார்ந்து வருகிற கிளவியாலும் வருவன களவென்னும் கைகோளாகும். காமப் புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந் தலைப்பாடு நிகழா தெனவும், அவ் இடந்தலைப்பாடு பிற்பயத்தலரிதென்பது அவள் ஆயத்தொடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன், பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலும், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலும் என இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம் என்பர் பேராசிரியர். மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு வெளிப்படுதாலும், தலைவியின் சுற்றத்தார் கொடுப்பக் கரணவகையாற் பெறுதலும் என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தப்பாது மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவற்றோடு கூடிவருவது கற்பென்னும் கைகோளாகும். மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும் என முற்கூறிய இரண்டும் ஆசான் முதலியோர் செய்வித்தலின், பிறரொடு பட்ட ஒழுகலாறெனப்படும், மலிவு முதலிய ஐந்தும் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனும் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். மலிதல் என்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய வற்றால் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங் கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழி யாலன்றிக் கூற்றுமொழியால் உரைப்பது. உணர்வு என்பது, அங்ஙனம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய பொருளின்மை உணர்வித்தல், இல்லாததனை உண்டோவென ஐயுற்ற மயக்கந்தீர உணர்த்துதலால் உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப்படும். புலவியாயின் குளிர்ப்பக்கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின் அதற்கு உணர்த்துதல் வேண்டா என்பர். பிரிவு என்பது, இவை நான்கினொடும் வேறுபடுதலின் பிற்கூறினார். இதனை ஊடலொடு வைக்கவே ஊடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற்படுமென்பதும் கொள்ளப்படும். துனித்தல் என்பது வெறுத்தல், அது, காட்டக்காணாது கரந்து மாறு மியல்பினதென்பர். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும். மேற் சொல்லப்பட்ட களவு கற்பு என்னும் இருவகையே கைகோளாவன என்பர் ஆசிரியர். எனவே அகத்திற்குப் புறனாயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறுவகைப் படக் கூறப்படா, பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி அடங்கும் என்பர் பேராசிரியர். 15. கூற்று:- செய்யுள் கேட்டாரை இது கூறுகின்றார் இன்னார் என உணர்வித்தல் கூற்று எனப்படும். இதன் கூறுபாடு இவ்வியல் 181-முதல் 187-முடியவுள்ள சூத்திரங்களால் விரித்துரைக்கப் பெறுகின்றது. பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி எனச் சொல்லப்பட்ட கலந்தொழுகும் மரபினையுடைய அறுவகையோரும் களவென்னும் ஒழுகலாற்றிற் கூற்று நிகழ்த்தற்கு உரியராவர். நன்றுந்தீதும் ஆராய்ந்து தலைமகற்கு உறுதிகூறுவான் பார்ப்பான் எனவும், அவ்வாறன்றித் தலைமகன்வழி ஒழுகுவான் பாங்கன் எனவும் கூறுவர் பேராசிரியர். பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவரும் ஆக இப்பன்னிருவரும் கற்பின்கண் கூற்று நிகர்த்தற்கு உரியவராவர். தலைமகள் வாழும் ஒரே ஊரில் உள்ளவர்கள், அவளது அயல் மனையில் உள்ளார், சேரியில் உள்ளார், அவளது நோயின் கூறுபாட்டினைக் குறிப்பினால் அறிவோர், தந்தை, தமையன் ஆகிய இன்னோர் கூற்றாகப் பிறர் கொண்டு கூறினல்லது இவர் தாமே கூறினாராகச் செய்யுள் செய்தல் இல்லை. தலைவனொடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற) நற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கமில்லை. எனவே நற்றாய் ஏனையோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். நற்றாய். செவிலி, தோழி என்னும் இவர்களோடும் தலைவ னொடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலிற்கண்ட வழக்கமாகும். தலைவியை உடன் கொண்டுபோகும் இடைச் சுரத்தின் கண்ணே தலைமகன் உலகியல் நெறியை உளங்கொண்டு தனது ஆற்றல் தோன்ற ஆணை மொழியினை எடுத்துரைத்தற்கும் உரியன் என்பர் ஆசிரியர். எனவே, மெல்லிய காமம் நிகழுமிடத்து வன்மொழியாகிய ஆணையினைத் தலைமகளிடம் கூறுதல் பொருந்தாதாயினும் உலகியல் கருதி அவ்விடத்துக் கூறுதல் தவறாகாது என அறிவுறுத்தாராயிற்று. தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைப் பதின்மரும் தலைமகனும் தலைமகளுமாகிய இருவரோடும் மேற்கூறிப் போந்த மரபினால் இடமும் காலமும் கருதி உரை நிகழ்த்துதற்கு உரியராவர். 16. கேட்போர்:- இன்னார்க்குச் சொல்லுகின்றது இது எனத் தெரிவித்தல் கேட்போர் என்பதாம். தலைவியும் தலைவனும் கூறக் கேட்போர் மேற் சொல்லப் பட்ட பதின்மருமே.1 பார்ப்பார், அறிவர் என்னும் இருவர் கூற்றும் எல்லோரும் கேட்கப் பெறுவர்.2 பரத்தையும் வாயில் களும் என்னும் ஈரிடத்தும் நிகழும் கூற்றுக்கள், தலைமகள் கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்கால் பயன்படுவன அல்ல.1 வாயில்கள் தம்முள் உசாவுமிடத்துத் தலைமகளை நோக்காது தமக்குள்ளும் உசாவுதலுரித்து2 ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், தனிமை யுணர்வை மிகுதிப்படுத்தும் பொழுது, பறவை, நெஞ்சம் எனச் சொல்லப்பட்ட பதினொன்றும் ஒன்றைக் கூறுதலும் கேட்டலும் இல்லாத அவை போல்வன பிறவும் தாம் கருதிய நெறியினால் ஒன்றைச் சொல்லுவனபோலவும் கேட்பன போலவும் சொல்லி அமையப்பெறும் என்பர் அறிஞர். 17. இடம்:- ஒரு செய்யுளைக் கேட்டால் இதன்கண் கூறப்படும் பொருள் நிகழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது என அறிதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும். ஒரு நெறிப்பட்டு ஓரியல்பாக முடியுங் கரும நிகழ்ச்சி இடமெனப்படும் என்பர் தொல்காப்பியர். ஒரு நெறிப்படுதலாவது, அகமாயினும் புறமாயினும் ஒரு பொருள்மேல் வருதல். ஓரியல் முடிதலாவது, அகத்தின்கண் களவு, கற்பு என்பவற்றுள் ஒன்றைப்பற்றியோ அல்லது அவற்றின் வரியாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ, புறத்தின்கண் நிரைகோடல், மீட்டல், மேற்சேறல் முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ வருதல். கரும நிகழ்ச்சியாவது, மேற்கூறிய அகமும் புறமுமாகிய பொருட் பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப் பற்றி நிகழும் வினை நிகழ்ச்சி. இது வினைசெய்யிடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற்சொல்லப்பட்ட நிலப்பகுதிகள், முன்னர்த் திணையென அடக்கப்பட்டன வாதலால், ஈண்டு இடமென்றது வினை செய்யிடத்தையே யென்பது நன்குபுலனாம். கரும நிகழ்ச்சியென்றதனால் அந் நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை, முன்னிலை, படர்க்கை யென்பனவும் இடமெனக் கொள்ளப்படும். 18. காலம்:- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஆராய்ந்துணருமாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அதுகாலம் என்னும் உறுப்பாகும். பெரும் பொழுதும் சிறு பொழுதும் முதல், கரு, உரிப் பொருள் என்பவற்றோடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேறாகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுக் காலம் என்றார். 19. பயன்:- சொல்லிய சொல்லாற் பிறிதொன்று பயப்பச் செய்தல் பயன் என்னும் உறுப்பாகும். யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதனாற்போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணரவைத்தல் பயன் எனப்படும் என்பர் ஆசிரியர். இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன் படக் கூறல் வேண்டும் என்பது கருதிப் பயன் என ஒரு பொருள் கூறினார் என்பர் இளம்பூரணர். 20. மெய்ப்பாடு:- யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்ந்துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்து அப் பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்று கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்று மாற்றால் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாகும் அது, நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டு நெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடையதாம் என்பர் ஆசிரியர். கவிப்பொருள் உணர்ந்தால், அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடு என்றான். அது, தேவருலகம் கூறினும் அதனைக் கண்டாங்கு அறியச்செய்தல்செய்யுளுறுப்பாம்....neh¡FW¥ghš உணர்ந்த பொருட் பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்திற் கவி கண்காட்டும் எனவுஞ் சொல்லுப எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறிந்து மகிழத்தக்கதாகும். 21. எச்சம்:- கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி நின்று பின் கொணர்ந்து முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந்தியது எச்சமென்னும் உறுப்பாகும். எனவே கூற்றெச்சம், குறிப்பெச்சம் என எச்சம் இரு வகைப்படும் என்பதாயிற்று. செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானை கழறொடிச் சேஎய் குன்றம் கருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந்-1) எனச் செய்யுள் முடிந்தவழியும், இவற்றான் யாம் குறையுடையே மல்லேம் என்று தலைவற்குச் சொன்னாளேல் அது கூற்றெச் சமாம்; என்னை? அவ்வாறு கூறவும் சிதைந்ததின்மையின். தலை மகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? அது காண்பாயாகிற் காண் எனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகி அதுதான் கூறாளாகலின். எனப் பேராசியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் இவண் நோக்கத்தக்கனவாகும். 22. முன்னம்:- செய்யுளைக் கேட்போன், இவ்விடத்துத் தோன்றிய இம்மொழியைச் சொல்லுதற்குரியாரும் கேட்டற் குரியாரும் இன்னார் என்று அறியுமாற்றால் அங்ஙனம் அறிதற்கு ஓர் இடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் என்ற உறுப்பாம் என்பர் ஆசிரியர். யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித்-89) என்றக்கால், இது கூறுகின்றாள் தலைவியென்பதும் இங்ஙனம் கூறப்பட்டான் தலைவன் என்பதும் குறிப்பினால் அறியவைத்தலின் இது முன்னம் என்ற உறுப்பாயிற்று. 23. பொருள்வகை:- பொருள் என்றது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மையை. இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத நெறியால் இத்திணைக்கு இது பொருள் என ஓதிய உரிப்பொருளன்றி எல்லா உரிப்பொருட்கும் ஏற்பப் (புலவனால் புதுவதாகத் தோற்றிக் கொள்ளப்பட்டுப்) பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகை யென்பர் ஆசிரியர். கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டிக் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றவென் னெஞ்சே (அகம்-9) என்றாற் போன்று, செய்யுள்செய்த புலவன் தன் புலமைத் திறத்தால் தானே வகுத்துரைக்கும் பொருட்கூறு அனைத்தும் பொருள்வகை யென்னும் இவ் வுறுப்பின் பாற்பட்டு அடங்கும் என்பர் பேராசிரியர். 24. துறை:- முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன் பாற்படும் என்று ஒரு துறைப்பட வகுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்கு உளதாக அமைத்தல் துறையெனப்படும். ஐவகை நிலத்திற்கும் உரிய வெனப்படும் பல்வேறு வகைப் பட்ட மக்களும் விலங்கும் பறவை முதலிய பிறவும் தம்மில் மயங்கிவரினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல் ஒரு துறையின் பாற்படச் செய்தல் துறையென்னும் உறுப்பாம் என்பர் ஆசிரியர். 25. மாட்டு:- செய்யுளிடத்தே அகன்றும் அணுகியும் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து ஒரு தொடராகக் கூட்டி முடித்தல் மாட்டெனப்படும். மாட்டுதலாவது, தனித்து நிற்பதனைப் கொண்டுவந்து கூட்டி முடித்தல். செய்யுளிடத்தே கூறப்படும் பொருள் சேய்மைக் கண்ணே கிடப்பினும் அன்றி அணுகிய நிலையில் நிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும்படி கொண்டுவந்து இயைத்துணர்த்துதல் மாட்டென்னும் உறுப்பென்று சொல்வர் செய்யுள் வழக்குணர்ந்த அறிஞர். இது, பலபொருட் டொடராற் பலவடியான் வரும் ஒரு செய்யுட் கண்ணும், பல செய்யுளைப் பல பொருட்டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும் எனவும், அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்த சொல் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றோர் இம் மாட்டிலக்கண மேயாண்டும் பெரும்பான்மை வரச் செய்யுள் செய்தலின், பின் தொடர்நிலைச் செய்யுள் செய்தவர்களும் இம் மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார் எனவும் கூறுவர் நச்சினார்க் கினியர் மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் பொருள் தொடர்ந்தவாறே அமைய வெளிப்படச் செய்யுள் செய்தலும் அமையும் என்பர் ஆசிரியர். எனவே, மாட்டும் எச்சமும் ஆகிய இவ்வுறுப்புக்கள் மேற்கூறியவை போன்று அத்துணை இன்றியமையாதன அல்ல என்பது பெறப்படும். 26. வண்ணம்:- பாவின் கண்ணே நிகழும் ஒசை விகற்ப மாகிய சந்தவேறுபாடு வண்ணம் எனப்படும். வண்ணமாவன, பாஅ வண்ணம் முதல் முடுகு வண்ணம் ஈறாக இருபது வகைப்படும் என்பர். அவற்றுள், பாஅ வண்ணம் என்பது, சொற்சீரடியினை யுடையதாகி நூலின்கண் பயின்றுவரும் நூற்பாவினது ஓசை விகற்பமாகும். தாஅ வண்ணம் என்பது எதுகை இடையிட்டமையத் தொடுக்கப்படுவதாம். வல்லெழுத்துப் பயின்று வருவது, வல்லிசை வண்ணம் எனப்படும். மெல்லெழுத்துப் பயின்று வருவது மெல்லிசை வண்ணம். இடையேழுத்துப் பயின்று வருவது இயைபு வண்ணமாகும். அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாகும். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும். குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம். நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவது சித்திர வண்ணம் எனப்படும். ஆய்தம் பயின்று வருவது நலிபு வண்ணமாகும். அகப்பாட்டு வண்ணம் என்பது, முடியாத தன்மையின் முடிந்ததன் மேலது.1 புறப்பாட்டு வண்ணமாவது, முடிந்ததுபோன்று முடியாதாகி வருவது1. ஒழுகிய ஓசையால் இயன்றது ஒழுகு வண்ணமெனப்படும். நீங்கின தொடையாகி அமைந்தது ஒரூஉ வண்ணமாகும்.2 எண் பயின்று வருவது எண்ணு வண்ணமாகும். அறுத்தறுத்தொழுகும்3 ஓசையினதாய் வருவது அகைப்பு வண்ணம் எனப்படும். தூங்கலோசைத் தாய் வருவது தூங்கல் வண்ணமெனப்படும். சொல்லிய சொல்லினலே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது எந்தல் வண்ணமாகும்.4 அராகந்தொடுப்பது உருட்டு வண்ணமெனப்படும்.5 நாற்சீரடியின் மிக்கு ஓடி உருட்டு வண்ணத்தை யொத்து அராகந்தொடுத்து வருவது முடுகுவண்ண மெனப்படும். வண்ணங்களாவன இவையேயாம்6 என்பர் தொல்காப்பியர். குறில், நெடில். வல்லினம், மெல்லினம் இடையினம் என நிறுத்து, அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனோடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடு உறழ நூறாம் அவற்றைக் குறி லகவற்றூங்கிசை வண்ணம் நெடி லகவற் றூங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டுவழங்குப என இளம்பூரணர் கூறும் விளக்கம் பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றியமைந்ததாகும்.1 நான்கு பாவினோடும் இவற்றை வைத்து உறழவும், அவை மயங்கிய பொதுப்பா இரண்டினோடு உறழவும் நூற்றிருபதாகலும் உயிர்மெய் வருக்கம் எல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிய பிறவாற்றாற் சில பெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயினும் இவ் இருபது வகையானல்லது சந்தவேற்றுமை விளங்காதென்பது கருத்து எனப் பேராசிரியர் கூறிய விளக்கமே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தினை நன்கு புலப்படுத்து வதாகும். எண்வகை வனப்பு:- செய்யுளுறுப்புக்கள் பலவும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகினை ஈண்டு வனப்பு என்றார். அஃது அம்மை, அழகு, தொன்மை, தோல் விருந்து, இயைபு, புலன், இழைபு என எண்வகைப்படும். செய்யுட்கள் பலவுந் திரண்டவழி அவற்றின்கண் அமைந்த சொற்பொருள் அழகினை இவ் எட்டுறுப்பும் பற்றி வகுத்துணர்த்துதல் மரபாதலின் இவை வனப்பெனப்பட்டன. மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். அம்மை முதலிய எட்டும் செய்யுட்கள் பலவாய்த் தொடர்ந்து பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கே பெரும்பான்மையும் வருவன சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ள வேண்டும். இங்ஙனம் வகுப்பவே, தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இரண்டாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். 27. அம்மை:- சிலவாய் மெல்லியவாய் சொற்களால் தொடுக்கப்பட்ட அடிநிமிர்வு இல்லாத செய்யுள் அம்மை என்னும் வனப்புடையதாகும். சின்மென் மொழியாற் றாயபனுவலோ டம்மை தானே அடிநிமிர் பின்றே என்றார் தொல்காப்பியனார். அம்மை என்பது குணப்பெயர் அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்றாயிற்று என்பர் பேராசிரியர். அடிநிமிராமை-ஆறடியின் மேற்படாமை. சிலவாதல் சுருங்கிய எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல். மெல்லியவாதல், சிலவாகிய அச்சொற்களும் பல எழுத்துக்களாலியன்று விரிந்தனவாகாமல் சிலவெழுத்துக்களாலமைந்து சுருங்கி நிற்றல். அறம், பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணங் கூறுவன போன்றும் அன்றாகியும் இடையிட்டு நிற்கும் இயல்பினது என்பார், தாயபனுவல் என்றார். தாவுதல்-இடையிடுதல். அம்மை என்னும் இவ்வனப்பிற்கு, அறிவினா னாகுவ துண்டோ பிறதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை (315) எனத் திருக்குறளை உதாரணமாகக் காட்டினார் இளம்பூரணர் அங்ஙனம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு. அதனுள் இரண்டடி யாயினும் ஐந்தடியாயினும் சிறுபான்மை ஆறடியாயினும் ஒரோ செய்யுள் வந்தவாறும் அவை சின்மென் மொழியால் வந்தவாறும் அறம் பொருளின்பத்திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார்நாற்பது, களவழி நாற்பது முதலியன வந்தவாறும் காண்க என நச்சினார்க்கினியர் விளக்குதலால், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அம்மையென்னும் வனப்பமைந்த இலக்கியங்க ளென்பது நன்கு புலனாம். 28. அழகு:- செய்யுளுட் பயின்றுவரும் சிறந்தசொற் காளல் ஓசை யினிதாகச் சீர்பெற யாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகெனப்படும். இவ் விலக்கணத்தால் அமைந்தவை, அகநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களாகும். 29. தொன்மை:- உரையொடு புணர்ந்த பழமை பொரு ளாக வருவது தொன்மை யென்னும் வனப்பாகும். உரையொடு புணர்தல் நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல்.1 பழமை-பழங்கதை. பழமைத்தாகிய பொருள்மேல் வருவன, இராம சரிதை பாண்டவ சரிதை முதலாயினவற்றின்மேல் வருஞ் செய்யுள் என்பர் இளம்பூரணர். இனி, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையொடு புணர்ந்த என்ற தொடர்க்கு உரை நடையுடன் விரவிய எனப் பொருள்கொண்டு, பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல அமைந்த உரையிடையிட்ட செய்யுட்களைக் தொன்மை என்னும் வனப்புக்கு உதாரணமாகக் குறித்துள்ளார்கள். 30. தோல்:- இழுமென்னும் ஓசையையுடைய மெல் லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடி நிமிர்ந்துவரத் தொடுப்பினும் தோல் என்னுஞ் செய்யுளாம். எனவே, தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்ப தாயிற்று. பாயிரும் பரப்பகம் என்ற முதற் குறிப்புடைய செய்யுள்1 இழுமென்மொழியால் விழுமியது நுவன்றது எனவும், திருமழைதலைஇய விருணிறவிசும்பின் என்னும் கூத்தராற்றுப் படை1 பரந்த மொழியால் அடி நிமிர்ந்து வந்தது எனவும் உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சீவக சிந்தாமணி போன்ற தொடர் நிலைச் செய்யுட்கள் இழுமென்மொழியால் விழுமியது நுவன்ற தோல் என்னும் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப்பாட்டால் ஒருகதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் பரந்த மொழியால் அடி நிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வகையின்பாற் படுவன எனவும் நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் கூறிய விளக்கம் இங்கு நோக்கற்பாலனவாம். செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமும் என நான்கினீக்கிய பாவினைத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கண மென்று கூறியவர், இழுமென்மொழியான் விழுமியது நுவனினும், பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகினும் (செய்-230) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமியபொருள் பயப்ப ஒருகதைமேற் கொச்சகத் தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண் கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத்தொடர் நிலைச் செய்யுள் அங்ஙனங் கூறிய தொடர்நிலை எனச் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே அடியார்க்கு நல்லார் கூறியவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், தொல்காப்பியனார் கூறிய தோல் என்னும் வனப்பினது இருவகையியல்பும் ஒருசேரப் பெற்றது சிலப்பதிகாரம் என்பது நன்கு புலனாம். 31. விருந்து:- விருந்தென்பன்பது, பதிதகாகச் சொன்ன யாப்பின் மேலதாம். புதிதாகப் புனைதலாவது, ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல் என்பர் இளம்பூரணர். புதுவதுகிளந்த யாப்பின்மேற்று என்றது - புதிதாகத் தாம் வேண்டிய வாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப என விளக்குவர் பேராசிரியர். முற்கூறிய தோல் என்பது, பழயை கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருந்தென்பது பழையதும் புதியது மாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர் நிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விரண்டற்குமுள்ள வேறுபாட்டினை விளக்குவர் நச்சினார்க்கினியர். 32. இயைபு:- ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ்செய்யுள் இயைபு எனப்படும். இயைபு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்துவரும் என்பது கருத்து. சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன அவை னகார வீற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. பரந்தமொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்றவாய் வருதலும் இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்றதாய் வருதலும் தம்முள் வேற்றுமை. சொற்றொடர் என்பன அந்தாதி. எனப்படுவது என்றதனால் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடருங் கொள்க என்பர் நச்சினார்க் கினியர். 33. புலன்:- பலருக்கும் தெரிந்த வழக்கச் சொல்லி னாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இது வென ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பர் பேராசிரியர். 34. இழைபு:- ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல்ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது இழைபு என்னும் வனப்பாகும் என்பர் ஆசிரியர். நாலெழுத்து முதல் இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தின் ஐவகையடியும் முறையானே வரத் தொடுக்கப்பட்ட போந்து போந்து என்ற முதற் குறிப்புடைய ஆசிரியப்பாவினை இழைபென்னும் வனப்புக்கு இலக்கியமாகக் காட்டினர் இளம்பூரணர். இழைபாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட் டாகிய செந்துறை மார்க்கத்தன எனவும், இவை தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் பேராசிரியர் கூறிய விளக்கம் கூர்ந்து நோக்கத் தக்கதாகும். செய்யுளிடத்துப் பொருள் பெற ஆராய்ந்து நுண்ணிதின் வகுத்துரைக்கப்பட்ட இலக்கணத்தின் வழுவியன போன்று தோன்றுவன உளவாயின் அவற்றையும் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு மாறுபடாமல் முடித்துக்கொள்ளுதல் தெளிந்த அறிஞர்களது கடனாகும் என ஆசிரியர் இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்துள்ளார். இதனைக்கூர்ந்து நோக்குங்கால் இவ்வியலிற் கூறப்பட்டு உள்ள செய்யுளிலக்கண நுட்பங்கள் காலந்தோறும் புதியனவாகத் தோன்றக் கூடிய செய்யுள்வகை யனைத்திற்கும் அடிப்படையா யமையும் வண்ணம் தொல்காப்பி யனாரால் நுண்ணிதின் ஆராய்ந்து வகுத்துணர்த்தப்பட்டன வாதல் நன்குபுலனாம். மரபியல் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபு உணர்த்தினமையின் இது மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து என்பர் இளம்பூரணர். கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமின்றி, இருதிணைப் பொருட் குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும்; அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும்; அவை பற்றிவரும் உலகியல் மரபும் நூன் மரபும் என இவை யெல்லாம் மரபெனப்படும் எனவும், முன்னர் வழக்கிலக்கணங் கூறி யதன்பின் செய்யுளிலக்கணம் செய்யளியலுட் கூறினான், அவ் விரண்டிற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயையுடைத்தாயிற்று எனவும், வழக்குஞ் செய்யுளுமென்று இரண்டு மல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது எனவும் கூறுவர் பேராசிரியர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 112-ஆக இளம்பூரணரும், 110-ஆகப் பேராசிரியரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி எனவரும் இவ்வொன்பதும் இளமைப் பண்பு பற்றிய மரபுப் பெயர்களாகும். ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் ஆண்பால் பற்றிய மரபுப் பெயர்களாகும். பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்களாம் - என இம்மூவகைப் பெயர்களையும் இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார். இளமைப் பெயர் - இளமைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்ன வற்றுக்கு உரியன என்பன இவ்வியலில் 4-முதல் 26-வரையுள்ள நூற்பாக்களால் விரித்து விளக்கப் பெற்றுள்ளன. பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் பறப்பவற்றின் இளமைப் பெயர்களாம். இவை ஊர்வனவற்றிற்கும் உரியனவாம். மூங்கா,1 வெருகு,2 எலி, அணில் என்னும் இவை நான்கும் குட்டி என்ற பெயர்க்குரியன இவற்றைப் பறழ் என்ற பெயரால் வழங்கினும் குற்றமில்லை, நாய், பன்றி, புலி, முயல், நரி என்பவற்றின் இளமைப் பெயர் குருளை என்பதாகும். இவ்வைந்தினையும் குட்டி பறழ் என்ற பெயர்களால் வழங்குதலும் பொருந்தும். மேற்கூறிய ஐந்தனுள் நாயல்லாத ஏனை நான்கிற்கும் பிள்ளை என்ற பெயரும் உரியதாகும். யாடு, குதிரை, நவ்வி,1 உழை,2 புல்வாய் எனச் சொல்லப் பட்ட ஐந்தும் மறி என்னும் இளமைப் பெயர் பெறுவன. மரக்கிளையினையே வாழுமிடமாகக் கொண்ட குரங்கும்3 குட்டி என்று கூறப்படும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்ற இந்நான்கு பெயர்களும் குட்டி என்பது போல அக் குரங்கின் பகுதிக்கு உரியவாகும். கன்று என்னும் பெயர்க்குரியன; யானை, குதிரை, கழுதை, கடமை, மான்,4 எருமை, மரை, கவரி, கராகம்5 ஒட்டகம் என்பனவாம். குழவி என்ற பெயர்க்குரியவை: யானை, ஆ, எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் என்பனவாம். மேற்குறித்தவற்றுள் குழவி, மக, என்ற இரு பெயர்களைத் தவிர ஏனைய பெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப்பெறா.1 பிள்ளை, குழவி, கன்று, போத்து2 என்னும் இந்நான்கும் ஓரறிவுயிர்கட் குரியனவாய் வழங்கும் இளமைப் பெயர்களாம். இப்பெயர்களால் நெல்லும் புல்லும்3 குறிக்கப்பெறுதல் இல்லை. பயின்று வழங்கும் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து மேற்கூறியவை யன்றி வேறில்லை என்பர்4 தொல்காப்பியர். அறுவகை உயிர்ப்பாகுபாடு:- மேல் இளமைப் பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடு அதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாக இவ்வியல் 27-முதல் 34-வரை யுள்ள சூத்திரங்களால் வகைப்படுத்திக் கூறியுள்ளார். உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றேயுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனோடு சுவையறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈறறிவுயிர். இவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய நாற்ற வுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர். இம்மூவகையுணர்வுடன் கண்களாற் கண்டறிதலாகிய ஒளி யுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர். இந்நால்வகை யுணர்வுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப் பெற்றது ஐயறி வுயிராகும். மேற்கூறிய ஐம்பொறி யுணர்வோடு உய்த்துணர் வாகிய மனவுணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிரெனப்படும். புல்லும் மரனும் ஓரறிஉடையன. அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம்.1 நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள.2 சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள.3 நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள.4 மாவும் புள்ளும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள.5 மக்கள் தாம் ஆறறிவுடைய உயிர்களாவர்; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம்1 என்பர் ஆசிரியர். உலகிலுள்ள உயிர்த்தொகுதிகளின் உடம்புகளையும் அவ் வுடம்புகளில் வைகிய உயிர்கள், மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய அறுவகை வாயில்களையும் படிப்படியாகப் பெற்று அறிவினாற் சிறந்து விளங்கும் இயல்பினையும் நன்கு கண்டு. அவற்றை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறவகையாகப் பகுத்துரைக்கும் இம்முறை, தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே நுண்ணறிவுடைய புலவர்களால் ஆராய்ந்து வகுக்கப்பெற்று வழங்கிவரும் தொன்மை வாய்ந்ததென்பதனை நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்-மரபு-27) என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் விளங்குவது மன வுணர்வாயினும், மனமாகிய கருவியினை வாயிலாகக்கொண்டு நன்றுந்தீதும் பகுத்துணரும் ஆற்றல் மக்களாகிய ஒருசார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்படப் புலனாதலின் மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றார் ஆசிரியர். ஒரு பொருளைக் குறித்து மனம் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பொருள் கண்ணெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனம் திரிந்து அக்காட்சியில் அறிவித்தது பொறியுணர்வாதலால் மனவுணர்வும் பொறி யுணர்வும் தம்முள் வேற்றுமையுடையன என்பது புலனாம். அன்றியும் தேனாகிய சுவைப்பொருளை நாவென்னும் பொறி யுணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த வழித் துன்புறுதலும், கத்தூரியாகிய மணப் பொருளை மூக்கு உணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள்ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர் வெனப்படும். மனமானது, கனவு நிலையிற்போன்று நனவு நிலையிலும் ஐம்பொறிகளின் உதவி வேண்டாது பொருள்களின் நலந்தீங்குகளைப் பகுத்துணரும் ஆற்றலுடையதென்பர் அறிஞர். அங்ஙனம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம்தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர் வெனப்படும். இவற்றுள் ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் முற்பிறந்தது மனவுணர்வாமாகவே, பொறியுணர் வென்பது, இதனை நுகர்கின்றோம் என்று எண்ணும் உய்த்துணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகளுக்கு அமைந்த பழக்க மெனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப் பேராசிரியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத் தகுவதாகும். ஆண்பாற் பெயர்:-இவ்வியல் 35 முதல் 51 வரையுள்ள சூத்திரங்களால் ஆண்மைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்கு உரியன என்பது விரித்துரைக் கப்படுகின்றது. களிறு என்ற ஆண்பாற் பெயரால் விதந்து பேசப்படுதல் யானைக்கு உரியதாகும்.1 பன்றியும் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கத் தக்கதன்றாம். ஒருத்தல் என்னும் பெயர் பெறுவன: புல்வாய், புலி, உழை, மறை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்பனவாம். ஏறு என வழங்கப்படுவன: பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, சுறவு என்பனவாம். போத்து என்ற பெயர் பெறுவன: பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்சாதி,2 மயில், எழால்3 என்பனவாம். இரலை, கலை என்ற பெயர்கள் இரண்டும் புல்வாய் என்னும் இனத்துள் ஆண்பாற்கு உரியன. இவற்றுள் கலை என்னும் பெயர் உழை, முசு என்பவற்றிற்கும் உரியதாகும். மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற பெயர்கள் ஆடுகளில் ஆண்பாற் குரியனவாய் வழங்கும். சேவல் என்ற பெயர், தோகையையுடைய மயிலல்லாத ஏனைப் பறவையினத்துள் ஆண்பாற்கொல்லாம் ஒப்பவுரியதாகும்.4 ஏற்றை என்ற பெயர், ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் பொதுவாக வழங்குதற்குரியதாம். ஆண்என்றுசொல் இருதிணை ஆண்பாற்கும், பெண் என்றசொல் இருதிணைப் பெண்பாற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்படும். பெண்பாற் பெயர்:- பெண்மைப்பண்பு பற்றிய பெயர் களுள் இவையிவை இன்னின்னவற்றுக்குரியன என்பதனை இவ்வியல் 52-முதல் 68-முடியவுள்ள சூத்திரங்களாலும் இம் மரபுபற்றிய அதிகாரப் புறனடையினை 69, 70-ஆம் சூத்திரங்களாலும் எடுத்துரைப்பர் ஆசிரியர். பிடி என்னும் பெண்பாற் பெயர், யானையினத்துக்கு உரியதாகும். பெட்டை என்ற பெண்பாற் பெயர் பெறுதற்குரியவை. ஒட்டகம், குதிரை, கழுதை, மரை என்பனவும் பறவைகளும் ஆகும். பேடை, பெடை என்ற பெண்மைப் பெயர்கள் பறவை யினத்துக்குப் பொருந்துவன. அளகு என்னும் பெண்மைப் பெயர், கோழி, கூகை என்ற இவ்விரண்டிற்கல்லது ஏனையவற்றுக்கு ஏலாததொன்றாம். இப் பெயர் ஒரோவழி மயிலுக்குரியதாய் வருதலும் உண்டு. பிணை என்னும் பெண்மைப் பெயர்க்குரியன: புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்குமாம்.1 பிணவு, பிணவல் என்னும் பெண்மைப் பெயர்கள் பன்றி புல்வாய், நாய் என்பவற்றுக்கு உரியன. ஆ என்னும் பெண்மைப்பெயர், பெற்றம், எருமை, மரை என்ற மூன்றிற்கும் உரியதாகும். பெண், பிணவு என்ற பெயர்கள், மக்களிற் பெண் பாலுக்கு உரியனவாம். நாகு என்னும் பெண்பாற்பெயர், எருமை மரை, பெற்றம், நீர்வாழுயிராகிய நந்து என்பவற்றுக்கு உரியதாகும். மூடு, கடமை என்ற பெண்மைப் பெயர்கள் ஆட்டினத் துக்கே உரியனவாம். மந்தி என்னும் பெண்மைப் பெயர், குரங்கு, முசு, ஊகம் என்ற மூன்றற்கும் உரியதாகும். ஆண் குரங்கினைக் கடுவன் என்றும், மரப் பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்றும், கிளியைத் தத்தை என்றும், வெருகினைப் பூசை என்றும், ஆண் குதிரையைச் சேவல் என்றும், பன்றியை ஏனம் என்றும், ஆண் எருமையினைக் கண்டி என்றும் இவ்வாறு வழங்கும் பெயர்கள் வழக்கினுள் நிலைபெற்று விட்டமையால் இவை கற்றறிந்தோரால் விலக்கப்படா எனவும், பெண் ஆண் பிள்ளை என்ற பெயர்களும் மேற் கூறியவாறு வழக்கினுள் நிலைபெற்றன எனவும் கூறுவர் ஆசிரியர். இவ்வியலில் 71 முதல் 85 முடியவுள்ள சூத்திரங்கள் பதினைந்தும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூல், கரகம், முக்கோல், மணை என்பன அந்தணர்க்கு உரியனவாம். படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி முதலாகப் பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியனவாம். அந்தணாளர்க்கு உரியனவாக ஓதப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்துவனவும் சில உள.1 பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வனவும் பாடாண்திணைக்குரிய துறைப்பொருள் பற்றிவரும் கிழமைப் பெயர்களும் நெடுந்தொகை, செம்மல் என்பன முதலாகவரும் பிறவும் சாதிவகையாற் பொருந்தச் சொல்லப் பெறுதல் அந்தணர்க்கு உரியதன்றாம். ஊரும், இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஆகிய பெயர்களும் தத்தமது தொழிலுக்கேற்ற கருவியும் ஆகிய அவை அவரவர்களைச் சார்த்திச் சொல்லப்பெறும். தலைமைக்குணமுடையாராகக் கூறுஞ்சொல்லும் அவரவர் நிலைமைக்குப் பொருந்துமாறு கூறப்படும். இடையிருவகையோராகிய அரசரும் வணிகரும் அல்லது ஏனையோர் படைப்பகுதி பெறார். வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறு வான். எட்டுவகைக் கூலங்களாகிய கூலங்களைப் பெருக்குதலும் வணிகரது கடமையாகும். கண்ணியும் தாரும்1 அவர்க்குச் சொல்லப்பெறும். வேளாண் மாந்தர்க்கு உழுதுண்டு வாழ்தல் அல்லது வேறு தொழில் இல்லை யென்பர். வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினால் படையும் கண்ணியும் அவர்க்கு உளவாம் என்று கூறுவர். அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் நீக்கத் தக்கதன்று. வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் எனச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனால் ஏவப்படும் மரபுடைய ஏனோர்க்கும்2 உரியவாகும். அன்னராயினும் இழிந்தோர்க்கு3 இவை கூறப்படுதல் இல்லை. உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபுகளைக் கூறுவன வாக 71 முதல் 85 முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் பிற்காலத்தாரால் இவ்வியலிற் புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்பது முன்னர்4 விளக்கப்பட்டது. மக்களை நிலைவகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகை யாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களது ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத் துணர்த்தும் முறையிலேயே அசிரியர் இம்மரபியலை அமைத்துள்ளார். இதன் கண் 1-முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந் துள்ளன. இயல்பாக அமைந்த இத்தொடர்பு இடையுறவு பட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் 71-முதல் 85-வரையுள்ள எண்ணுடை யனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப் படுத்துக்கூறிய நிலையிலும் புறத்திணை யொழுகலாற்றில் வாகைத் திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி அவர்களை வேளாண் மாந்தரென்றோ வைசியரென்றோ இவ்வாறு வருணம் பற்றி ஆசிரியர் யாண்டும் குறிப்பிடவேயில்லை. வைசிகன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்பெற்றிலது. வருணம் நான்கு என்ற தொகையினை ஆசிரியர் முன் தெளிவாகச்சொல்லாத நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் இடையிரு வகையோர் என இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும் இவ்விருதிறத்தோரல்லாத பிறாக்குப் படைப்பகுதி கூறுதல் இல்லையெனக்கூறும் இவ்வியல் 77-ஆம் சூத்திர விதி, பின்னுள்ள 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்க நூல்களிற் காணப்படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும். வேளாண் மாந்தர் என்றதொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னர்க் குறிக்கப்பெறவில்லை. உரிப்பொருளாகிய ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட் பகுதிகளை விளக்க அகத்திணையியல். புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் கூறத்தக்கனவேயன்றி, மரபுச் சொற்களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற்கமைந்த இம் மரபியலில் இடம் பெறத்தக்கன அல்ல. ஆகவே, 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் பதினைந்தும் நால்வகை வருணப் பாகுபாடு இத்தமிழ் நாட்டில் உலக வழக்கில் வேரூன்றத் தொடங்கிய மிகப் பிற்காலத்திலே தான் இம்மரபியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், பிற்றைநாளில் களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லற்பட்ட நிலையிலே தமிழரது உரிமை யுணர்வினைச் சிதைத்தற்குரிய இத்தகைய அடிமைக் கருத்துக்கள் சில தமிழ்முதல்நூலாகிய தொல்காப்பியத்திலும் அயலாரால் மெல்லமெல்ல நுழைக்கப்பட்டமை வியப்பிற்குரிய தன்றென்பதும், மனு முதலிய வடமொழி நூல்களால் வளர்க்கப்பட்ட நால்வகை வருணத்தைப் பற்றிய நம்பிக்கை தமிழ் மக்கள் உள்ளத்தில் வேரூன்றி நிலைபெற்றுவிட்ட பிற்காலத்திலே வாழ்ந்தவர்கள் இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்களாதலின் அன்னோர் தொல்காப்பியத்திற்கு உரைகாணும் நிலையில் தம் காலச் சூழ்நிலையில் அகப்பட்டு இடைச் செருகலாகிய இச்சூத்திரங்களைத் தொல்காப்பியனார் வாக்கெனவே உண்மையாக நம்பி உரையெழுத நேர்ந்ததென்பதும் ஆழ்ந்துணரத் தக்கனவாகும். இவ்வியல் 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களால் ஓரறி வுயிர்களுக்குரிய சொல்மரபுகள் உணர்த்தப்படுகின்றன. உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரமுடையவற்றைப் புல் எனவும், உள்ளே வயிரமுடையனவற்றை மரன் எனவும் வழங்குவர்.1 தோடு, மடல், ஒலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்த பிறவும் புல் என்ற வகையைச் சார்ந்துவரும்.2 இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அனையவை பிறவும் மரன் என்ற வகையைச் சார்ந்து வரும் உறுப்பின் பெயர்களாகும்.1 காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல், மரம் என்னும் அவ்விருவகைக்கும் உரியனவாகும்.2 நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலால் இருதிணையும் ஐம்பாலும் வழுவாமல் திரிபின்றிப் பொருந்திய சொற்களால் உலகத்துப் பொருள்களை வழங்குதல் வேண்டும். உலக வழக்காவது வரலாற்று முறைமை பிறழாது வருதலே தக்கதாதலின் அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட்களும் மேற்குறித்த மரபு நிலையில் திரியாது அமைதல் வேண்டும். மரபுநிலை திரிந்து வேறுபடுமானால் உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து வேறுபட்டுச் சிதைவனவாம். உலக நிகழ்ச்சி யெல்லாம் உயர்ந்தோரையே சார்பாகக்கொண்டு நிகழ்தலால் செய்யுட்கு அடிப்படையாகிய வழக்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, உயர்ந்தோர் வழங்கிய வழக்கேயாகும் என இவ்வியல் 91 முதல் 94 வரையுள்ள சூத்திரங்களால் மரபு பற்றிய இலக்கணத்தை ஆசிரியர் நிறைவு செய்துள்ளார். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் நெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருளகளின் இளமைத் தன்மை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தன எனவும் இருதிணைப்பொருள்களின் இயல்புகளை நுண்ணிதின் விளக்குவனவாகிய இம்மரபுச் சொற்களின் பொருள்நிலை மாறுபடாதபடி உலக வழக்கினையும் செய்யுள் வழக்கினையும் போற்றிக்காத்தல் வேண்டுமெனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விளக்கிய திறம் அறிந்து போற்றத் தக்கதாகும். இவ்வியலின் இறுதியில் 95 முதல் 112 வரையுள்ள சூத்திரங்கள் நூலினது இலக்கணம் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூலுக்கு இன்றியமையாத மரபிற் பிறழாதனவாகி உரைக் கப்படும் நூல்கள் முதனூல், வழிநூல் என இருவகைப்படும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வனாற் செய்யப் பெற்றது முதனூலாகும். முதல்வன் செய்த நூலின் வழியே இயற்றப் பெறுவது வழிநூல் எனப்படும். விரிந்து பரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்வை விரித்து விளக்குவதும், தொகையும் விரியும் ஆகிய அவ்விருதிறமும் ஒருங்கு அமைந்ததும், பிறமொழி நூல்களை அடியொற்றி மொழி பெயர்க்கப் பெறுவதும் என வழி நூல் நான்கு வகைப்படும். சூத்திரத்தின் பொருளை விரித்துரைகும் நிலையில் அமைந்த காண்டிகையுரையும் அதனையும் விளங்கக்கூறும் உரை விகற்பமும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமுமின்றி நுண் பொருளினவாகிய முப்பத்திரண்டு உத்திகளோடும் பொருந்தி வருவது நூல் என சிறப்பித்துரைக்கப்படுவதாம். சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்குமிடத்தும் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகையுரையினை இயைத் துரைக்குமிடத்தும் இப்பொருளை இவ்வாறு கூறல் வேண்டுமென விதித்தலும், இப்பொருளை இவ்வாறு கூறலாகாது என விலக்குதலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவன கூட்டியுரைக்கப்படும். மேல், தொகுத்தல் முதலாக நால்வகையாற் சொல்லப்பட்ட பொருளோடு சிலவெழுத்தினால் இயன்ற யாப்பினதாய், விரித்துரைத்தற்கேற்ற பொருளனைத்தையும் தன்னகத்து அடக்கி நுட்பமும் விளக்கமும் உடையதாகிப் பல்லாற்றானும் பொருளை ஆராய்தற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இயல்பாகும். சூத்திரத்தில் அமைந்த சொற்பொருள்களை விட்டு நீங்காத விரிவுடன் பொருந்தி அதன் பொருளை முடித்தற்கேற்ற ஏதுவும் எடுத்துக்காட்டும் வாய்ந்த உரை காண்டிகையெனப்படும். சூத்திரத்தினது உட்பொருளேயன்றி அதற்கு இன்றியமை யாது பொருந்துவனவெல்லாம் அதனொடுகூட்டிச் சொல்லுதல் உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும்.1 மாறுபட்ட கொள்கையை இடையே கொணர்ந்துரைத்து வினாவுதலும், அதற்கு மறு மாற்றமாகிய விடைகூறுதலும் உடையதாய்த் தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும் அதன் பொருள் முடிபினை யுணர்த்தும் பிற நூலானும் தெளிய ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து இதுவே பொருளாகும் எனத் துணிதல் உரையினது இயல்பாகும். மேற்கூறிய இலக்கணமெல்லாம் சிதையாது மாட்சிமைப் படினும் முதனூலொடு பொருள் மாறுகொள்ளின் அந்நூல் சிதைவுடைய தெனவேபடும். முதல்வன் செய்த நூலின் கண்ணே இத்தகைய சிதைவுகள் உளவாகா. முதனூலையே அடியொற்றி ஒருவன் நூல் செய்யினும், வல்லவனாற் புணர்க்கப்படாதவார இசைபோன்று அவ்வழி நூலமைப்பில் குற்றம் நேர்தல் இயல்பேயாம். குற்றங்களாவன: கூறியது கூறல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னாயாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கங்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல். என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் இவை போல்வன பிறவுமாகும். மேற்கூறிய குற்றங்களின்றி அவற்றுக்கு மாறுபட்ட குணங்களையடையதாதல் நூலிற்கு அழகென்பர். சூத்திரத்தில் அமைந்த பொருளமைப்பினைப் புலப்படுத்து தற்குக் கருவியாகிய நூற்புணர்ப்பு உத்தியெனப்படும். நுதலிய தறிதல் முதல் உய்த்துக் கொண்டுணர்தல் ஈறாக உத்தி முப்பத்திரண்டாகும். சொல்லிய அல்ல பிற அவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்கநாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே என இவ்வியல் நிறைவு பெறுகின்றது. செய்யுளியலுள் நூலைப் பற்றியும் அதன் பகுதிகளாகிய சூத்திரம், ஓத்து, படலம் என்பவற்றைப் பற்றியும் உரைவகை நடையைப் பற்றியும் விளக்கிய ஆகிரியர், மீண்டும் அவற்றின் இயல்பினை ஈண்டுக் கூறுதல் கூறியது கூறலாமாதலானும், இப்பொருள் பற்றிச் செய்யுளியலில் அமைந்த சூத்திரங்களையும் இவ்வியலில் உள்ள சூத்திரங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால் இவ் விருவகைச் சூத்திரங்களும் சொல் நடையாலும் பொருளமைப்பாலும் தம்முள் வேறுபாடுடையவாதல் நன்கு புலனாமாதலானும், நூன்மரபு பற்றிய இச் சூத்திரங்கள், தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்பு இயற்றப்பெற்று வழங்கியவை, பிற்காலத்தவரால் எல்லாநூற்கும் உரிய பொதுப் பாயிர மரபாக இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டுமெனவும், அதனால் பின்வந்த உரையாசிரியர்கள் இச்சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழியெனவே கொண்டு உரையெழுத நேர்ந்த தெனவும் எண்ணுதற்கும் இடமுளது.1 நூலின் இலக்கண முணர்த்துவனவாக அமைந்த இச் சூத்திரங்களின் சொற் பொருளமைதியினைக் கூர்ந்து நோக்குங் கால் இவை காலத்தாற் பிற்பட்டன அல்ல என்பதும் தொல் காப்பிய நூலுடன் அடுத்து வைத்து எண்ணத்தக்க பழமை யுடையன என்பதும் நன்கு விளங்கும். பொருட் குறிப்பகராதி I தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம் (எண்-பக்கவெண்) அ அகத்தியம் 50,51,52,57,62 அகத்தியனார் 49,52,53,62,64 அகத்தியர் மாணவர் பன்னிருவர் 63 அகநானூறு 98,101 அகப்பாட்டெல்லை 35 அடியார்க்கு நல்லார் 38,39,63,69,84 அதங்கோட்டாசான் 34,73,75 அதங்கோடு 73 அமிதசாகரர் 60 அயிந்திரம் நிறைந்தவன் (அநுமன்) 79 அரும்பகை தாங்கும் ஆற்றல் 144 அருளொடு புணர்ந்த அகற்சி 144 அவலோகிதன் 60 அறுவகை யுயிர்ப்பாகுபாடு 140,154,155 ஆ ஆசிரிய மாலை 70 இ இசை நுணுக்கம் 17,63 இந்திரன் 63 இராகவையங்கார், ரா. 30,64,98,113 இராவணனை இசையால் வென்றது 54 இலக்கண நூலின் இன்றியமையாமை 72 இளங்கோவடிகள் 68 இளங்கோவடிகள் காலம் 88 இளம்பூரணர் 26,35,52 இறையனார் 26 இறையனாரகப் பொருள் 20 இறையனார் களவியல் தோன்றுதற்குக் காரணம் 18 இறையனார் களவியலுரை 18,20,263 உ உக்கிரப் பெருவழுதி 17 உணர்தலும் உணர்த்தலும் 46 உத்தர மதுரை 17 உதியஞ் சேரலாதன் 96 உலோபா முத்திரையார் 54 எ எதிரூன்றல் காஞ்சி 142 எழுத்துமுறை காட்டி யென்றதன் கருத்து 76 ஐ ஐந்திரம் 77-85 ஐந்திர வியாகரண பண்டிதன் (அநுமன்) 79 ஒ ஒட்டக்கூத்தர் 22 ஓ ஓரையென்னுஞ் சொல் வழக்கு! க கங்கையார் 53 கட்டில் நீத்தபால் 147 கடல்கோள்37 கடவுட் கொள்கை 124-140 கடுங்கோன் 16 கணக்காயனார் மகனார் நக்கீரனார் 17 கதாசரித் சாகரம் 80 கந்தழி 137 கபாடபுரம் 17 கம்பர் 61 கயவாகு 87 கல்லாடம் 19,24 கல்லாடர் 24,26+ கலசயோனி 62 களவியலுரையாசிரியர் நக்கீரனார் 14 கா காக்கை பாடினியார் 35 காட்டலாகாப் பொருள் 116 காப்பியத் தொல்குடி 29 காமம் நீத்தபால் 144 காய்சின வழுதி 16 காவிரியார் 53 கு குடமுனி 61 கும்பமுனி 62 குமரிக்கோடு 40 குமரிப்பௌவம் 39 குமரியாறு 39 குறும்பனை நாடு 39 கொ கொடிநிலை 137 கொற்கை 102 கொற்றவை நிலை 150 ச சங்க நூல் 91 சதாசிவபண்டாரத்தார் 88 சயமா கீர்த்தி 65 சி சிகண்டி 63 சிலப்பதிகாரம் 38 சிலப்பதிகாரப் பதிப்பாசிரியர் 29 சிவஞான முனிவர் 61 சிறந்தது பயிற்றல் 146 சிறு காக்கைபாடினியார் 35,36 சீ சீனிவாச ஐயங்கார், M. 104 சீனிவாச ஐயங்கார், P.T. 97 செ செய்யுள் மொழி 46 சே சேரிமொழி 45 சேனாவரையர் 26 சேஷையங்கார், T.R. 104 டா டாக்டர் பர்ணல் 81 த தமிழ்இலக்கணம் நால்வகை 36 தமிழ் இலக்கிய வரலாறு 88 தமிழ்ச் சுடர்மணிகள் 74,104, 106,113 தமிழ் வரலாறு 64,113,115,119 தா தாபதப் பக்கம் தாரநாதர் தி திரண தூமாக்கினியார் 53,55 திருக்குறள் 46,91,92 திருக்கோவையார் 132 திருநாவுக்கரசடிகள் 24,85 திருவள்ளுவனார் காலம் 88 து துவராபதி 54 தெ தெய்வச்சிலையார் 26 தென் மதுரை 16 தொல்காப்பியச் சூத்திரத் தொகை 15 தொல்காப்பியன் 17 தொல்காப்பியத்தை அடியொற்றியது திருக்குறள் 88 தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் 90 தொல்காப்பியப் பாயிர விருத்தி 61 தொல்காப்பிய வுரை யாசிரியர்கள் 26 தொல்காப்பியப் பொருளதி கார ஆராய்ச்சி 29,31 தொல்காப்பிய விதிக்கு மாறான சொல் வழக்குகள் 90-91 தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகள் 91 தொல்காப்பியத்திற் காணப் பட்டுப் பிற்றை நாளில் வழக்கொழிந்தவை 95 தொல்லுயிர் 139 ந நச்சினார்க்கினியர் 26,111 நம்பியாரூரர் 59 நன்னீர்ப் பஃறுளி 67 நன்னூல் 155 நா நாடகத் தமிழ் நூலாகிய பரதம் 114 நாட்டியம் என்பது தொல்காப்பியனார் காலச் சொல்லன்று 116 நான்மறை 103 நி நில்லாவுலகம் 141 நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் 54 நிலந்தரு திருவிற் பாண்டியன் 64-69 நெ நெட்டிமையார் 67 ப படிமையோன் 85-87 பண்ணத்தி 159 பதஞ்சலி முனிவர் 111 பதிற்றுப்பத்து 86 பதினெண்குடி வேளிர் 54 பரதமுனிவர் 114 பரிபாடல் 94 பல்காப்பியனார் 14 பல்காப்பியப் புறனடை 14 பன்னிருபடலம் 50 பனம்பாரனார் 87 பனைக்கொடி 111,112 பனைநாடு 35 பஃறுளியாறு 39 பா பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு 118 பாண்டின் மாகீர்த்தி 65 பாணினி 81 பாணினீயம் 81 பால் (ஊழ்) 130 பால்வரை தெய்வம் 130-134 பாலதாணை 130 பி பிரயோக விவேகம் 63 பு புத்தமித்திரனார் 60 புலத்தியனார் 53 புறப்பாட்டெல்லை 35 புறப்பொருள் வெண்பா மாலை 50 பூ பூத புராணம் 17 பூவை நிலை 126-127 பூதோ 80 பெ பெரிய புராணம் 131 பெரிபிள 102 பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் 97-100 பெருமானடிகள் 22 பே பேராசிரியர் 26 பொ பொதியின் முனிவன் 59 ம மகாவீரர் 150 மணலூர் 102 மணிமேகலை 59 மதுரை 103 மயிலைநாதர் 64 மறைமலையடிகள் 44 மா மாங்காட்டு மறையோன் 66 மாங்குடி மருதனார் 67 மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும் 44,97,112 மாபாரதம் 102 மாபுராணம் 17 மாமூலனார் 98-102 மு முடத்திருமாறன் 17 முதியர்ப்பேணிய உதியஞ் சேரல் 96-100 முந்து நூல் 48,49 முந்நீர் விழவின் நெடியோன் 67 மும்முதற் பொருள் 143 முரஞ்சியூர் முடிநாகராயர் 96 முல்லைக்கலி 42 முன்தேற்று 135 மூ மூன்றாம் பகுதி 144 மூன்று தமிழ் 62 மூன்று தமிழ்ச் சங்கங்கள் 17 மூன்றுறுப்படக்கிய பிண்டம் 15 ய யமதக்கினியார் 53 யா யாழ் நூல் 158 யாகர் 106 வ வடிம்பலம்ப நின்ற பாண்டியன் 67 வள்ளி 137 வா வான்மீகி ராமாயணம் 102 வி விண்ணவர் கோமான் விழு நூல் 83 வீ வீரர் வழிபாடு148 வெ வெண்டேர்ச் செழியன் 17 வெறியறி சிறப்பு 149 வே வேத வியாதர் 103 வை வையாபுரிப்பிள்ளை 74 வையை யாறு 54 ஹோய்லி 80 History of the Tamils 97 Redcross Society 98 பொருட் குறிப்பகராதி II தமிழிலக்கிய வரலாறு - தெல்காப்பியம் நுதலியபொருள் (எண் - பக்கவெண்) அகத்தெழுவளியிசை 169 அகநானூறு 164 அகப்புறம் 256 அகம் 256 அங்கதச் செய்யுள் 366 அங்கதப் பாட்டு 381 அசைநிலை 215 அசைவகை 325 அடக்கியல் வாரம் 368 அடி 334 அடியார்க்கு நல்லார் 400 அடியோர் 234 அணிந்தவை திருத்தல் 303 அடைநிலைக் கிளவி (தனிச்சொல்) 367 அந்தணர் மறை 169 அந்தாதி 403 அம்போதரங்க ஒருபோகு 369 அம்மை 399 அமரர்கண் முடியும் அறுவகை 252 அல்வழிப் புணர்ச்சி 171 அழகு 400 அளபெடை 355 அளவியல் 381 அளவியல் வெண்பா 381 அற்றம் மறைத்தல் 302 அறத்தொடு நிலை 284 அறுமுறை வாழ்த்து 252 அறுவகை உயிர்ப் பாகுபாடு 406-410 அறுவகைச் செய்யுள் 253 அனைநிலை வகை 248 அஃறிணைச் சொல் 190,192 அஃறிணைப் பெயர் 205,206 அஃறிணையியற் பெயர் 206 அஃறிணை வினைச்சொல் 211 ஆ ஆகு பெயர் 200 ஆகு பெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு 201 ஆண்பாற் பெயர் 409 ஆண்மை சுட்டியபெயர் 207 ஆய்தத் தொடர் 185 ஆய்தம் 167 ஆரிய அரசன் பிரகத்தன் 262 இ இசைநிறை 215 இடந்தலைப்பாடு 258 இடம் 392 இடைச்சொல் 204 இடைத்தொடர் 185 இடையெழுத்து 169 இடைநிலை 365 இடைநிலைப் பாட்டு 365 இயல்பாதல் 204 இயல்பாவன 179 இயற்கைப் புணர்ச்சி 258 இயற்சொல் 221 இயற்பெயர் 206 இயைபு 402, 353 இருகையும் எடுத்தல் 303 இருதிணைக் குரியவை (வினை) 211 இருவகை ஊழ் 263 இருவகைப் பிரிவு 233 இவ்வலியுறுத்தல் 303 இலக்கண விளக்கவுரை 295 இழைபு 403 இளங்கோவடிகள் 250 இளமைப்பெயர் 406 இறைச்சி 288 இறையனார் களவியல் 322 ஈ ஈரமில்கூற்றம் ஏற்றலர் நாணல் 303 ஈரொற்றுடனிலை 167 ஈற்றயல் நீடல் 203 ஈறுதிரிதல் 203 உ உடம்படுமெய் 173 உடைபெயர்த்துடுத்தல் 302 உணர்வு 389 உம்மைத் தொகை 220 உயர்திணை 192 உயர்திணைப் பெயர் 205 உயர்திணைக்குரியன (வினை) 210 உயிர்த்தொடர் 185 உயிர்மிக வருவன 178 உயிரளபெடை 167 உயிரெழுத்து 166 உரிச்சொல் 204 உருபு மயக்கம் 197, 198 உருபேற்கும் பெயர்க ள் 172 உரைநடை வகை 383 உலகியல் வழக்கம் 238 உவமப்போலி 317 உவமம் 308 உவமவுருபுகள் 314, 315 உவமத்தொகை 220 உவமையின் நிலைக்களன் 313 உழிஞைத்திணை 245, 246 உள்ளுறை ஐந்து 317 உள்ளுறையுவமம் 317, 309 உறழ்ச்சிவாரம் உறழ்கலி366 உறழ்கலிப்பா 380 ஊ ஊடல் 389 ஊழணிதைவரல் 302 எ எச்சம் 394 எட்டுவகையான் ஆராய்தல் எட்டிறந்த பலவகை எண் 368 எண்வகை மணம் 260 என்வகை மெய்ப்பாடுகள் 297 எண்வகை வனப்பு 399 எதுகை 354 எருத்து 365 எழுத்ததிகாரம் 163 எழுத்தியல்வகை 324 எழுத்திலக்கண வகை 165 எழுத்துக்களின் பிறப்புமுறை எழுத்துப் புணர்ச்சி 168 எழுத்துப் போலி 168 எழுநிலம் 382 எழுவகை வழு 194 ஏ ஏவல் மரபின் ஏனோர் 234 ஏனை உவமம் 316 ஐ ஐகாரக் குறுக்கம் 168 ஐந்திணை 229 ஐயர் 275 ஒ ஒட்டுதற்கொழுகிய வழக்கு 172 ஒத்தாழிசைக்கலி 366 ஒருபோகு 369 ஒருமை சுட்டியபெயர் 207 ஒரூஉ 356 ஓ ஓத்து 163 க கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம் 253 கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் 253 கடவுள் வாழ்த்து வகை கண்டவழி உவத்தல் 253 கந்தருவத்திற்கும் களவிற்கும் உள்ள வேற்றுமை 262 கந்தருவ மணம் 262 கந்தழி 253 கபிலர் 262 கரந்திடத்தொழிதல் 304 கரந்தை 244 கலங்கி மொழிதல் 304 கலித்தொகை 313 கலிவெண்பா 377 கலிவெண்பாட்டு 366 களவியலுரையாசிரியர் 233 களவிற்கூற்று நிகழ்த்தற் குரியோர் 391 களவு 257 களவொழுக்கம் 257 கற்கோள் நிலை கற்பிற் கூற்றுநிகழ்த்தற் குரியோர் 391 கற்பு 273 கா காஞ்சித்திணை 289 காண்டிகையுரை 416 காதொன்றுகளைதல் 302 காந்தள் 242 காமப்பகுதி 252 காமப்புணர்ச்சி 258 காலம் 393 கீ கீழ்க்கணக்கு நூல்கள் 400 கு குட்டம் 361 குணசாகரர் 377 குற்றங்கள் 416 குற்றுகரவீற்று எண்ணுப் பெயர் 186 குற்றுகரவீற்றுத் திசைப் பெயர்கள் 186 குற்றியலிகரம் 167 குற்றியலுகரம் 167 குறிஞ்சித்திணைப்புறம் 244 குறிஞ்சிப்பாட்டு 262 குறித்துவருகிளவி 170 குறிப்புமொழி 386 குறுகிவருவன 178 குறுவெண்பாட்டு 381 குன்றல் 171 கூ கூத்தநூலார் 367 கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) 401 கூழைவிரித்தல் 302 கூற்று 390 கே கேட்போர் 392 கை கைக்கிளை 229 கைக்கிளைக் குறிப்பு 237 கைகோள் 389 கையறவுரைத்தல் 304 கொ கொங்குவேள் 383 கொடிநிலை 253 கொடுப்பவை கோடல் 303 கொச்சகம் 365, 366 கொச்சக ஒருபோகு 369 கொச்சகக் கலிப்பா 379 கொற்றவள்ளை 255 ச சங்கர நமச்சிவாயப் புலவர் 208 சா சார்பெழுத்து 167 சாரியைகள் 171 சாரியை பெறுவன 178 சி சிதைவு பிறர்க்கின்மை 302 சிவஞானமுனிவர் 202, 208, 214, 217 சினைப்பெயர் 206 சினை முதற்பெயர் 206 சின்னம் 369 சீ சீர் 329 சீவகசிந்தாமணி 401 சு சுரிதகம் 366 சூ சூத்திரத்தினியல்பு 416 செ செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் 223 செந்தமிழ் நாடு 222 செந்துறை மார்க்கத்தன 403 செந்துறை வண்ணப்பகுதி 254 செந்தொடை 356 செம்பொருள் அங்கதம் 366 செய்யுட்குரிய சொல் 220 செய்யுட் பொருள்கோள் 220 செய்யுள் விகாரம் 220 செய்யுளியல் 322 செவியறியுறூஉ 361 செவியுறைச் செய்யுள் 366 சே சேனாவரையர் 201 சொ சொல்லதிகாரம் 188 சொற்சிதர்மருங்கு 172 சொற்புணர்ச்சி 170 த தண்டியாசிரியர் 320 தத்தங்குறிப்பிற் பொருள் செய்வன 215 தரவு 367 தமிழ் மந்திரம் 385 தமிழ் மூவேந்தர் 348 தளை 323 தன்னுறு தொழில் 241 தனிமொழி 189 தா தாழிசை 367 தாழிசை, துறை, விருத்தம் 374 தி திணை 389 திசைச்சொல் 221 திருஞானசம்பந்தப் பிள்ளையார் 385 திருமந்திரமாலை 386 திருமூலநாயனார் 386 திருப்பாட்டு 371 திருவள்ளுவனார் 384 திருவாசகம் 371 திருவாய்மொழி 371 திருவெம்பாவை 373 திரிசொல் 221 திளைப்பு வினைமறுத்தல் 304 து தும்பைத்திணை 247 துறை 395 தூ தூக்கு 348 தெ தெய்வச்சிலையார் 202 தெய்வப் புணர்ச்சி 258 தெரிந்துடம்படுதல் 304 தே தேவபாணி 371 தொ தொகைச்சொற்களின் இலக்கணம் 223 தொடர்மொழி 189 தொடைவகை 351 தொல்காப்பியப் பொருட் படலம் 296 தொழிற் பெயர் 234 தொன்மை 400 தோ தோல் 401 தோழியிற் கூட்டம் 258 ந நக்கீரர் 383 நகுநய மறைத்தல் 302 நன்னூல் 418 நா நாடக வழக்கம் 238 நாவலர் சோமசுந்தர பாரதியார் 296 நாற்பெயரெல்லை 348 நான்கு சாதியும் பற்றிய மரபு 412-414 நானிலமக்கள் 234 நி நிலப்பெயர் 234 நிறுத்தசொல் 170 நீ நீடவருவன 178 நூ நூல் 382 நூன்மரபு 165 நூலினது இலக்கணம் 416-418 நெ நெடுவெண்பாட்டு 381 நொ நொச்சி 246 நொடி 382 நோ நோக்கு 359 ப பட்டினப்பாலை 312 படலம் 163 பண்ணத்தி 387 பண்புத்தொகை 220 பத்தவத்தைகள் 305 பத்துவகை ஒப்புமை 307 பத்துவகை யெச்சங்கள் 220 பதின்னெண்கீழ்க் கணக்கு 381 பதினேழ் நிலத்தின் ஐவகையடி 344 பயன் 393 பரணி 371 பரிபாடல் 381 பழமொழி நானூறு 3847 பழிகரப்பு அங்கதம் 366 பன்மைசுட்டிய பெயர் 207 பன்னிருபடலம் 255 பஃறொடை வெண்பா 378 பா பா 360 பாங்கற்கூட்டம் 258 பாடாண்திணை 250 பாராட்டெடுத்தல் 303 பாலை 232 பாவினம் 388 பி பிண்டம் 163 பிசி 384, 348 பிரிவு 389 பிரிவிற்குரிய நிமித்தங்கள் 235 பிழம்புணர்த்தப்படாதன 293 பிறன்கோட் கூறல் 170 பிறிது வந்தடைதல் 203 பின்மொழியாகுபெயர் 201 பு புகுமுகம் புரிதல் 301 புல் 414 புலம்பித்தோன்றல் 304 புலவி 389 புலன் 403 புலனெறி வழக்கம் 237 புறஞ்செயச்சிதைதல் 304 புறத்திணைப்பாகுபாடு 240 புறநிலைவாழ்த்து 381 புறப்புறம் 256 புறப்பொருள் வெண்பா மாலை 255 புறம் 256 பெ பெண்பாற்பெயர் 410 பெண்மை சுட்டியபெயர் 207 பெயர்ச்சொல் 204 பெயரெச்சம் 220 பெருந்திணை 229 பெருந்திணைக் குறிப்பு 237 பே பேராசிரியர் 305,294,296 பொ பொருநராற்றுப்படை 312 பொருள்மயக்கம் 197, 198 பொருள்வகை 395 பொருளதிகாரம் 226 பொருளதிகாரப் பாகுபாடு 227 பொழிப்பு 356 பொறி நுதல் வியர்த்தல் 301 போ போக்கு (சுரிதகம்) 367 ம மகரக்குறுக்கம் 167 மடந்தபவுரைத்தல் 303 மந்திரம் 385 மயிலைநாதர் 418 மயேச்சுவரர் 370 மரபு 348, 349 மரன் 415 மருட்பா 380 மருதத்துப்புறம் மலிவு 389 மலைபடுகடாம் 401 மா மாட்டு 396 மாத்திரை 324 மார்க்கண்டேயனார் காஞ்சி 401 மி மிகுதல் 171 மு முகம் (தரவு) 365 முத்தொள்ளாயிரம் 381 முதல் கரு உரிப் பொருள்கள் 226 முதல் நூல் 416 முதுமொழி 384 முப்பத்திரண்டு உத்தி 416 முரண் 355 முரிநிலை 367 முல்லை 232 முல்லைப்புறம் 245 முற்று 209 முற்றுச்சொற்கு இலக் கணம் 224 முறைப்பெயர் 206 முன்னம் 394 மூ மூவகைக் களவொழுக்கம் 284 மெ மெய்களின் இயக்கம் 167 மெய்தெரி வளியிசை 169 மெய்ப்பாடு 393 மெய்ப்பாட்டியல் 293 மெய்பிறிதாதல் 171 மெய்யெழுத்து 167 மெல்லெழுத்து 168 மெல்லெழுத்து மிகுவன 178 மென்றொடர் 185 மொழிக்கீறா மெழுத்துக்கள் 168 மொழி மரபு 167 மொழி முதலெழுத்துக்கள் 168 மொழியாக்கம் 167 மோ மோனை 353 யா யாப்பதிகாரம் 322 யாப்பருங்கல ஆசிரியர் 377 யாப்பருங்கலம் 377 யாப்பருங்கல விருத்தி யாசிரியர் 377 யாப்பருங்கல விருத்தியுரை 398 யாப்பு 348 வ வஞ்சித்திணை 244, 245 வடசொல் 221 வண்ணம் 396 வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா 368 வண்புகழ் மூவர் 162 வல்லெழுத்து 168 வல்லெழுத்து மிகுவன 178 வழிநூல் 416 வள்ளி 253 வள்ளிக்கூத்து 254 வன்றொடர் 185 வா வாகைத்திணை 249 வாயுறை வாழ்த்து 361 வி விரவுப்பெயர் 206 விருந்து 402 விளக்கத்தார் கூத்து 403 வினை 209 வினைக்குறிப்பு 209 வினைத்தொகை 220 வினைப்பயன் மெய்உரு 320 வினையெச்சம் 220 வினைவலர் 403 வெ வெட்சித்திணை 241 வெண் கலிப்பா 373 வெண்டுறைச் செய்யுள் 403 வெண்செந்துறை 374 வே வேந்துறு தொழில் 241 வேற்றுமை எட்டு 197 வேற்றுமைத் தொகை 220 வேற்றுமைப் புணர்ச்சி 171 வேற்றுமையுருபு 171, 172 வை வைப்பு (சுரிதகம்) 367 1. கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார், இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும் பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினா ராகலானும் அவர் புலவுத் துறந்த நோன்புடையாராகலாற் பொய் கூறாராகலானும் என்பது. (தொல். மரபு 94-ஆம் சூத்திரவுரை, பேராசிரியர்), இறையனார் களவியல் உரைப்பாயிரம், 2. தொல். மரபு 94-ஆம் சூத்திரம் பேராசிரியர் உரைமேற்கோள். 1. ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமுங் கூறிய அதிகாரத்தானே அம்மூன்றனையும் அடக்கி நிற்பது பிண்டமென்கின்றானென்பது தொல்காப்பியம் என்பது பிண்டம், அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலமெனப்படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும், ஒழிந்த இருகூறுமெனப்படும். (தொல்-செய் சூ. 484 பேராசிரியர் உரை). 1. உலகியல் நிறுத்தும் பொருண்மர பொடுங்க மாறனும் புலவரும் மயங்குறு காலை முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கால் அன்பினைந் திணையென் றறுபது சூத்திரம் கடலமு தெ த்துக் கரையில் வைத்ததுபோற் பரப்பின் றமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள் எனக் கல்லாடம் மூன்றாம் பாடலில் இவ்வரலாறு குறிக்கப் பெற்றமை காண்க. 2. கல்லாடம் முருகவேள் வாழ்த்தில், மணிக்கா லறிஞர் பெருங்குடித் தோன்றி இறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்பப் பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் பாய்பா ரறிய நீயே யாதலின் என வருந் தொடரால், முருகன் உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திரசன்மனாகத் தோன்றி இறையனார் களவியலுக்கு மெய்யுரை கேட்ட செய்தி குறிக்கப்படுதலறிக. 1. வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும் என்ற மரபியற் சூத்திர வுரையில், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவ தென்பதறிவித்தற்கும் எனப் பேராசிரியர் இக்கொள்கையை வலியுறுத்தல் காண்க. 1. தன்மதம் உணர்ந்தாரையும் புலவரென்றான்; அறிபொருளுக்கு ஏனோரும் புலவராகலின் எனக் களவியலுரையாசிரியர் அமைதி கூறுகின்றார். இறையனார் களவியல் முதற்சூத்திரவுரை நோக்குக. 2. இறையனார் களவியலிலுள்ள 12, 17, 18, 19, 21, 22, 24, 29, 30, 36, 37, 41, 42, 43, 47, 50, 54, 56, 59 - ஆம் சூத்திரங்கள். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வரும் 112, 134, 128, 129, 130, 137, 138, 112, 207, 28, 34, 186, 188, 221, 185, 178, 154, 177, 311, சொல்லதிகாரம் 293-ஆகிய சூத்திரங்களை முறையே பின்பற்றி யெழுந்தனவாகும். 2. கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் (தொல்-மரபு. 94 உரை) என்பர் பேராசிரியர். 1. கடைச்சங்கப் புலவராகிய இறையனாரை மதுரைத் திரு வாலவாயில் எழுந்தருளிய சிவபெருமானாகவே முன்னையோர் கருதிப் போற்றியுள்ளனர். பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக் கற்புட னுதவி என்னுளங் குடிகொண் டிரும்பயனளிக்கும் கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான் (கல்லாடம்-செய். 1) எனக் கல்லாடனாரும், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் (திருப்புத்தூர்த் திருத்தாண்டகம்) எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் இறைவனைப் போற்றுதல் இவண் கருதற்குரியதாம். 2. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கண்டவுரை அவர் மகனார் கீரங்கொற்றனார் முதல் முசிறியாசிரியர் நீலகண்டனார் வரை ஒருவர்பின் னொருவராகப் பாடஞ் சொல்லப்பெற்று வந்து பின்னர் எழுதப்பட்டதெனக் களவியலுரையின் முகவுரையால் உய்த்துணரலாம். முசிரியாசிரியர் நீலகண்டனாரோ அன்றி அவர் தம் மாணவரொருவரோ இறையனார் களவியலுரையினை எழுத்துருவில் அமைத்திருத்தல் வேண்டும். இப்பொழுது வழங்கும் உரைநடை நக்கீரனார்க்குப் பல தலைமுறை பிற்பட்டு வந்த தவச் செல்வராகிய துறவியொருவரால் எழுத்துருவமைந்ததென்பது, தொல்காப்பிய மரபியல் 94-ஆம் சூத்திரத்திற்குப் பேராசிரியரெழுதிய உரைப்பகுதியால் உய்த்துணரப்படும். 1. தொல்காப்பியம், புள்ளி மயங்கியல், சூத்திரம் 55. 1. சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய ஐயரவர்கள் காப்பியக் குடியென்பது சீகாழிக்குத் தென்கிழக்கிலுள்ளதோர் ஊர் என அடிக் குறிப்பில் விளக்கியுள்ளார்கள். 2. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, பக்கம் 1. 1. தொல், எழுத்து, நச்சினாக்கினியம், சிறப்புப்பாயிரவுரை. 2. மகாவித்துவான் ரா. இராகவையங்கார் எழுதிய தமிழ் வரலாறு பக்கம், 255 - 57. 1. பல்காப்பியனாரைப் பஹுகாவ்ய கோத்திரத்தவர் என்றோ தந்தகாவ்ய கோத்திரத்தவரென்றோ மொழிபெயர்ப்பர் போலும். 2. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. பக்கம். 2 1. தொல்-செய்யுளியல், சூத்திரம் 1, பேராசிரியர் உரை. 1. வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் எனவும், வட வேங்கடந் தென்குமரி யாயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து எனவும் காக்கைபாடினியாருந் தொல்காப்பியனாருஞ் சொன்னாராகலின் (இறையனார் களவியல் முதற் சூத்திரவுரை). 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம். 565-570 2. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம். 564-565 1. மகாவித்வான் ரா. இராகவையங்காரவர்கள். (தமிழ் வரலாறு - பக்கங்கள் 192 - 217). 1. “gh©oa‹ khÑ®¤â ïUg¤JehyhÆu« ah©L muR 剿Uª jhdhjÈ‹ mtD« mt‹ mitÆYŸnshU« m¿î Ä¡»U¤jÈ‹ mt®fŸ nf£oU¥g mj§nfh£lháÇa® T¿a flhɉbfšyh« F‰wªÔu Éil TWjÈ‹ ‘mÇwg¤ bjǪJ’ v‹wh®.”- தொல் - சிறப்புப் பாயிரவுரை. 1. ராவ்சாகிப் S. வையாபுரிப் பிள்ளையவர்கள், தமிழ்சுடர் மணிகள் பக்கம், 4 , 5. 1. செந்தமிழ், இருபத்தாறாந்தொகுதி, பக்கம் 87-96,199-210. 1. திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (கி. பி. 250-600) பக்கம் 2, 3. 1. எதிர்காலம் பற்றி வரும் அல்விகுதியினையே பிற்காலத்தார் அன்ஈறாக வழங்குவார் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார் எனவே தொல்காப்பியனார் காலத்தில் அன்விகுதி தன்மைக்கண் வழங்கப்பெறவில்லை யென்பதும் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே அன்னீறு தன்மையொருமையில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டு மென்பதும் தெளிவாதல் காண்க. 1. நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் (அகம்104). 1. முடிநாகனார் என்னும் பெயரே ஏடெழுதுவோரால் முடி நாகராயர் எனப் பிற்றைநாளில் திரித்து எழுதப்பட்டிருத்தல் வேண்டும். புறத்திணை நன்னாகனார். கண்ணனாகனார், நன்னாகனார் பெட்டனாகனார் என வழங்கும் பண்டை இயலிசைப் புலவர் பெயர்கள் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியன. 1. History of the Tamils, P. 492 2. மாணிக்கவாசகர் காலம், பக்கம். 79 1. தமிழ் வரலாறு, (முதற் பதிப்பு) பக்கம், 231, 232. 2. Red Cross Society 1. கூளிச் சுற்றம்-ஏவல் செய்யும் போர் வீரர் குழு. சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் (புறம்-23) எனக் கல்லாடனார் கூறுதல் இவண் ஒப்புநோக்குதற்குரியதாம். 1. இந்நாளிற் கிடைக்காத பதிற்றுப்பதின் முதற்பத்து இவ்வுதியஞ்சேரலாதன்மீது பாடப்பட்டதாதல் வேண்டுமென்பது, திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் கருத்தாகும். 1. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 27-32. 1. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம், 31-32. 1. சொல் இலக்கியம் சூத்திரம் இலக்கணம் என்பது இதன் பொருளாகும். 2. லக்ஷணத்தைத் துணியும் வகையில் சொற்களைப் பகுப்போர் பின்பற்றுதற் குரியரல்லர். (ஆனால்) சொல்லிலக்கணம் சொற்களைப் பகுப்போரால் பின்பற்றுதற்குரியதாம். 3. இலக்கிய இலக்கணங்கள் கொண்டது. வியாகரணம் என்பது இதன் பொருளாகும். 1. தமிழ் வரலாறு பக்கம். 259. 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம். 564-565. 1. தமிழ் வரலாறு பக்கம் 260-266. 2. தமிழ்ச் சுடர்மணிகள், பக்கம் 37-38. 1. தமிழ் வரலாறு. பக்கம் 263-265 2. தமிழ் வரலாறு. பக்கம் 262. 3. தமிழ் வரலாறு. பக்கம், 262. 1. இறையனார் களவியல் முதற் குத்திரவுரை. 1. தமிழ் வரலாறு. பக்கம் 318. 2. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 36. 1. தமிழ் வரலாறு. பக்கம் 318. 2. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 39. 1. தமிழ்ச் சுடர்மணிகள். பக்கம் 36. 1. திருவள்ளுவர் ஊழைப்பற்றிக் கூறிய இக்கருத்தினை யாழின் மொழி மங்கை பங்கன் சிற்றம்பலத்தா னமைத்த ஊழின் வலியதொன் றென்னை? (திருக்கோவையார்-350) எனவரும் தொடரால் மணிவாசகப் பெருமான் விளக்கினமை காண்க. 1. தமிழ் வரலாறு. பக்கம், 279. 1. தமிழ்ச்சுடர் மணிகள். பக்கம், 7-26. 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், பக்கம் 543 2. இந்நூல் 86-87-ஆம் பக்கம் 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும். பக்கம் 548-551. 1. தொல், சொல், சூத்திரம், நச்சினார்க்கினியருரை. 1. யாழ் நூல், பக்கம் 292-294. 1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள், பக், 18. 1. மறங்கடைக்கூட்டியே குடி நிலை என இளம்பூரணர் கொண்ட பாடமே பொருத்தமுடையது. 1. இறைச்சிப் பொருளைக்குறித்து இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரை விளக்கத்தினையும் மேற்கோளாகக் காட்டிய பாடல்களின் பொருளமைதியினையும் கூர்ந்து நோக்குங்கால், இறைச்சிதான் வெளிப்படக்கூறிய பொருட்கு உபகாரப்படும் அளவில் பொருட் புறத்ததாகி வருவதும், அவ்வளவிலன்றிப் பிறிது மோர் உட்பொருள் கொள்ளும் வண்ணம் உள்ளுறைபோன்று வருவதும் என இருவகைப் படுமென்பதும், இவ்விருவகை இறைச்சிகளுள் உட்பொருள் தரும் இறைச்சி உள்ளுறையுவமம் போன்று பொருள் தருவதாயினும் அதற்கும் உள்ளுறையுவமத்துக்கும் பெரிதும் வேறுபாடுண்டென்பதும், ஆராய்ந்துணரும் நல்லறிவுடையார்க்கு இவற்றிடையமைந்த வேறுபாடு இனிது புலனா மென்பதும் நன்கு விளங்கும். 1. தொல்-பொருளியல் 49-ம் சூத்திரம், நச்சினார்க்கினியர் உரை. 1. மெய்யெனப்படுவது பொருளாதலின் (தொல்-உவம இயல். மூதற்சூத்திரம். பேராசிரியர் உரை). 1. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு (தொல்-உரியியல்-23) 2. மெய்ப்பாட்டுறுப்புத் தான் வகையானே நகை முதலாக உவகை ஈறாகக் கிடந்த அப்பகுதி யெட்டாம்; அப்பகுதியெட்டும் விரியானே எள்ளல் முதலாக விளையாட்டு ஈறாக இயைபு படல் தோன்றா நின்ற பொருட் பகுதிகளான் ஒன்றை நான்காகச் செய்து மாற மூப்பத்திரண்டாம் (அகத்திணையியல்-206) என வரும் இலக்கண விளக்கவுரைப் பகுதி, மேற்காட்டிய இளம்பூரணருரையை அடியொற்றியதாகும். 1. உருத்திரம்-வெகுளி; கோபம் 2. நாவலர் திரு. ச. சோமகதரபாரதியார் எழுதிய தொல் காப்பியப் பொருட்படலம், மெய்ப்பாட்டியல், முதற் சூத்திரவுரை. 3. தொல்-மெய்ப்பாட்டியல் 2-ம் சூத்திரம் பேராசிரியர் உரை. 1. தொல். மெய்ப்பாடு, 5-ம் சூத்திரம், பேராசிரியர் உரை நோக்குக. 1. எனவே, இவை அம் முப்பத்திரண்டுள் அடங்கியவழி அவற்றின் அங்கமாகக் கொள்ளத்தக்கன என்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு புலனாம். 1. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பப்பட்டிலேம் என்றும் வந்தார் (இறையனார் களவியல் பாயிரவுரைப் பகுதி) என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். 1. மா, புலி, பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும்; சேர், வரு, போகு, வழங்கு என்பவற்றை இடையிலும்; வாய், சுரம், காடு, கடறு என்பவற்றை இறுதியிலும் வைத்து உறழ்ந்து அறுபத்து நான்கு மூவசைச் சீர்க்கு வாய்ப்பாடு கூறுதலும் உண்டு. 1. ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரியவுரிச்சீரென்றார் என்பர் பேராசிரியர். 2. இன்பா நேரடி என்றது வெண்பாவினது நேரடியை என இளம்பூரணரும், ஆசிரிய அடியாகிய கட்டளையடியினை எனப் பேராசிரியரும் கூறுவர். வெண்பாவின்கண் ஆசிரியவுரிச் சீரேயன்றிப் பிறசீர்களும் மயங்குதல் கூடாதென்பது மரபாதலால் ஈண்டு இன்பா நேரடி என்றது ஆசிரிய அடியினை எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாகும் வெண்சீரும் ஆசிரியவுரிச் சீரும் கட்டளை யாசிரியப்பாவில் வரும் அளவடிக்குப் பொருந்தி நிற்றல் இல்லை. எனவே நீடுகொடி. உரறுபுலி என முன்னிரை யீற்ற (நிரையீற்று ஆசிரியவுரிச்சீர்) இரண்டும் உறழும் என்பது ஈண்டுக் கொள்க வென்றும் கட்டளையடி இங்ஙனம் வருமெனவே சீர்வகை யடிக்கு வெண்சீரும் ஆசுரியவுரிச்சீரும் பொருந்த வருமென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். கட்டளையடியாவது எழுத்தெண்ணிச் சீர்வகுத்துரைக்கப்படும் அடி. எழுத்தெண்ணாது சீர் வகையாற் கொள்ளப்படும் அடி சீர் வகையடி எனப்படும். 3. தளை என்று ஓதுவன வெல்லாம் கட்டளையடியே நோக்கும் என்பர் பேராசிரியர். 4. நேரீற்றியற் சீராவன தேமா, புளிமா என்னும் இரண்டும். 5. இறுதற்றொழில்பட நில்லா எனவே தூங்கலோசைப்பட வஞ்சிப்பாவின் முதற்கண் வாராஎனக் கருத்துரைப்பர் பேராசிரியர் நேரீற்றியற்சீர் வஞ்சிப்பாவின் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யென்பது, மண்டிணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும் (புறம்-2) என ஓரே செய்யுட்கண் பல வந்தமையால் இனிது புலனாம். இரு சீரான் வருமியல்புடைய நேர்நிலை வஞ்சிப் பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படுமென்பதும்; முச்சீரான் வருமியல் புடைய வியநிலை வஞ்சிக்கு இவ்வரையறை இன்றென்பதும் பேராசிரியர் கருத்தாகும். 1. முன்னர் வெண்சீரினை இன்பா நேரடிக்கு ஒருங்கு நிலையில, (செய்யுளியல்-22) என விலக்கியது கட்டளையடிக்கென்பதும், இங்கு (செய்யுளியல்-29) வெண்சீர் வருமென்றது கட்டளையடிக்கு அன்றென்பதும் பேராசிரியர் கருத்தாகும். 1. நேரடியை அளவடியென வழங்குவர் உரையாசிரியர். 2. மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும், அவனின் நெடியானைக் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற் பட்டானென்றும், அவனின் நெடியானை நெடியானென்றும், அவனின் நெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவைபோல் இப்பெயர்களைக் கொள்க எனக் குறளடி முதலிய இப்பெயர்கள் காரணப் பெயர்களாதலைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். 1. அடிமுதற்கண் பாவினது பொருளைத் தழுவித் தனியே நிற்கும் அசையும் சீரும் கூன் எனப்படும். 1. யாப்பருங்கல விருத்தி (பவானந்தர் பதிப்பு) பக்கம் 430, 431. 1. தொல்-செய்யுள் 36, 40. ஆம் சூத்திரவுரைப் பகுதியில் பேராசிரியர் காட்டிய உதாரணச் செய்யுள். 2. தொல்-செய்யுள் 52-ஆம் சூத்திரம். இதனைப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் இரண்டு சூத்திரங்களாகப் பிரித்து வேறு பொருள் கூறுவர். 3. தொல்-செய்யுள்-53. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா என்னும் மூவகைப் பாக்களுக்கும் உரிய நாற்சீரடியின்கண்ணேயே ஐவகையடியும் வந்து உறழக் கட்டளை கூறியது கண்ட மாணவன். நாற்சீரடி பெறாத வஞ்சிப்பாவிற்குரிய குறளடி சிந்தடி என்பவற்றிலும் இவ்வாறு எழுத்தளவு பற்றிச் சீர்களை உறழ்ந்து காணுதலுண்டோ என வினவினாற்கு, அவை அங்ஙனம் உறழும் நிலையில் என இச்சூத்திரத்தால் ஐயமகற்றினார் ஆசிரியர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 1. தொல்-செய்யுள்-54 2. தொல்-செய்-55 3. தொல்-செய்யுள்-56 4. தொல்-செய்யுள்-57 5. தொல்-செய்யுள்-58 1. செய்யுளியல் 28-ஆம் சூத்திரம். 2.-3. ஆசிரியவீறும் வெண்பாவீறுமாகிக் கலிப்பாவினை முடிக்க வரும் இவ்வுறுப்பினை முறையே ஆசிரியச் சுரிதகம் எனவும் வெள்ளைச் சுரிதகம் எனவும் வழங்குதல் மரபு. 1. நாற் பெயரெல்லை யகத்தவர் என்ற தொடர்க்கு மலை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ் நாட்டார் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் தமிழகம் சேர சோழ பாண்டியராகிய வண்புகழ் மூவரது ஆட்சிக்கே உட்பட்டிருந்ததென்பது வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு எனவரும் இச்சூத்திரத் தொடரால் நன்கு புலனாமாத லானும், தொண்டை மண்டலம் என்ற பிரிவு சோழருடைய கிளையினராய்த் தொண்டையர் என்பார் தோன்றிய கடைச்சங்க காலத்திலே ஏற்பட்டதாதலானும் இத்தொடர்க்கு நச்சினார்க் கினியர் கொண்ட பொருள் பொருத்தமுடையதெனக் கருதுதற்கில்லை. 1. தமிழ் நாட்டெல்லையுள் அடங்கிய பலவகை உள்நாடுகளிலும் என்பது இத்தொடரில் பொருளாகும். 2. அச்சிடப்பெற்று வழங்கும் பேராசிரியர் உரைப் புத்தகத்தில் இச்சொல் ஆசிரியர் என்றிருத்தல் பிழையென்பதும், இஃது ஆரியர் என்றே இருத்தல் வேண்டுமென்பதும், இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி ஆரியரும் பிற பாடைமாக்களும் வேண்டுமாற்றாற் றமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்றென் றுணர்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப் பகுதியால் நன்கு விளங்கும். 1. நிரனிறைத் தொடையாவது, பொருளை நிரலே நிறுத்தி அம்முறையே பயனையுஞ் சேர நிறுத்துதல். 2. இரட்டைத் தொடையாவது, ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது. 3. எதுகையென ஓதினாராயினும் வந்ததுகொண்டு வாராதது முடித்தல் என்பதனால் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பெரழிப்புத் தொடையாமென்று கொள்க என இளம் பூரணரும், இங்ஙனம் எதுகையைப் புலப்பட வைத்து ஏனைய அருத்தா பத்தியாற் கூறியது, எல்லாவற்றினும் எதுகை சிறந்து தோன்றுதல் பற்றி என நச்சினார்க்கினியரும் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கனவாம். 4. செயற்கை வகையானன்றி இயற்கையிலே பூந்துணராற் பொலிந்து தோன்றும் கொன்றையும் கடம்பும் போல நின்றவாறே நின்று இயற்கை வகையால் தொடைப்பொலிவு செய்தல்பற்றிச் செத்தொடை யென்னும் பெயர்த்தாயிற் றென்பது பேராசிரியர் உரையால் நன்கு புலனாம். 1. தொல்-செய்யுளியல்-97, 1. ஐம்பத்தொரு நிலமாவன : நாற்சீரடியுள், எழெழுத்து முதல் பதினாறெழுத்து முடியவுள்ள வெள்ளைநிலம் 10; நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடியவுள்ள ஆசிரிய நிலம் 17, பதின்மூன்றெழுத்து முதல் இருபதெழுத்து முடியக் கலிநிலம் 8; நாலெழுத்து முதல் பதினேழெழுத்து முடிய வஞ்சிநிலம் 10; அளவடியல்லாதனவாகிய இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறு சீரடி, எழுசீரடி, எண்சீரடி ஆகிய சீர்வகையடி நிலங்கள் 6; ஆக 51. (யா-வி-ப-177.) 2. ஆசிரியவடி 261. வெண்பாவடி 232, கலியடி 131, ஆக 625 அடியாம். (யா-வி-ப. 176) 3. மோனை 2, எதுகை 8, முரண் 5, இயைபு 1. பொழிப்பு. ஒரூஉ, செந்தொடை, இரட்டை, நிரனிறை என்பன 5, குறிப்புத் தொடை 1, ஆகத்தொடை 22. (யா-வி-ப 176) 4. அடியிரண்டு இயைந்தவழித் தொடையாமென்பதாகலின் (அவ்வாறு இரண்டாகத் தொடுக்கப்படாது ஓரடியாகவுள்ள) ஐம்பத்தொரு நிலம் களையப்பட்டன. (யா-வி-ப 175.) 4. தொல்காப்பிய வுரையாசிரிய ரெல்லார்க்கும் முற்பட்டவராகிய இளம்பூரண ருரையிலும் அவர் காலத்தை யொட்டியமைந்த யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரத்திற்கு எழு நூற்றொன்பஃது என்ற பாடம் கொள்ளபடவில்லை. எனவே இப்பாடம் பேராசிரியர் கூறுமாறு பழம்பாடம் எனத் துணிந்துரைத்தற்கு இடமில்லை.அன்றியும் எழுநூற்றெட்டு எனச் சொல்ல வேண்டிய தொகையினைத் தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்றொன் பஃது என இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திரஞ் செய்யவேண்டிய இன்றியாமையும் இல்லை. ஆசிரியர் தொல்காப்பியனார். எழுத்துக்கள் முப்பத்து மூன்று என்று பொருள் பட மூன்று தலையிட்ட முப்பத்திற்றெழுத்தின் எனவும் மொழி முதலாம் எழுத்துக்கள் இருபத்திரண்டு என்ற பொருள்பட இரண்டு தலையிட்ட முதலாகிருபஃது எனவும் புணரியல் முதற் சூத்திரத்திற் கூறிய தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால். தொண்டு தலையிட்ட எனவரும் இத்தொடர், ஒன்பது என்னும் எண்ணினை முடியும் எண்ணாகவுடைய என்ற பொருளிலேயே இங்கு ஆளப்பட்டிருத்தல் வேண்டுமென்பதும் பேராசிரியர் கருதுமாறு ஒன்பதுடன் கூட்டிய என்ற பொருளிலோ நச்சினார்க்கினியர் கருதுமாறு ஒன்பதாலே பெருக்கின என்ற பொருளிலோ இங்கு ஆளப்பட்டதன்று என்பதும் நன்கு புலனாம். 1. பண்புற என்றதனால் ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும் ஒழிந்தன விகாரமெனவும் கொள்க என்பர் பேராசிரியர். 2. வாழ்த்தியல் வகையென்றது, தேவரை வாழ்த்துதலும் முனிவரை வாழ்த்துதலும் ஏனையோரை வாழ்த்துதலும் ஆகிய பாகுபாட்டினைக் குறிக்கும் என்பர் இளம்பூரணர். வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இரு வகையான வாழ்த்து மென்பதூஉம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இரு வகைப்படு மென்பதூஉம் எல்லாங் கொள்க. அங்ஙனம் வாழ்த்தப்படும் பொருளாவன :- கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் நாடும் மழையும் என்பன. அவற்றுள் கடவுளை வாழ்த்துஞ் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த்தெனப் படுமென்பது, வாழ்த்தியல் என்றதனான், இயற்கை வாழ்த்தெனப்படுவன இவையெனவும், இனி வரும் புறநிலை வாழ்த்து முதலிய ஒரு வகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுதலல்லது இயற்கை வாழ்த்தெனப் படா எனவுங் கொள்க என்பர் பேராசிரியர். 1. தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்துதலின் புறநிலை வாழ்த்தாயிற்று. புதல்வரொடும் சுற்றத்தார் நண்பர் முதலியவர்களோடும் கூட்டி வாழ்த்துதல் மரபென்றற்கு நிற்புறங் காப்ப என ஒருமை கூறிப் பொலிமின் எனப் பன்மை கூறினார். 2. எனவே வெண்பாவிலும் ஆசிரியப்பாவிலும் வரப்பெறும் என்பதாம். 3. வாய்-வாய்மொழி, உறை-மருத்து; வாயுறை யென்பது சொன் மருந்து (சொல்லாகிய மருந்து) எனப் பண்புத் தொகையாம் இனி, வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம். மருந்து போறலின் மருந்தாயிற்று. 1. அவையடக்கியல்-அவையை வாழ்த்துதல். அவையடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக்கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதலாயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது அவையத்தார்...ml§Fkh‰whš அவரைப் புகழ்தல் என்பர் பேராசிரியர். 2. செவியறிவுறுஉ-செவிக்கண் அறிவுறுத்துவது. இது செவியுறை எனவும் கூறப்படும். செவியுறை-செவி மருந்து; இஃது ஒப்பினாகிய பெயர். செவியறி வுறுத்த வண்ணம் அடங்கி யொழுகுவோர் புகழொடும் நெடுங்காலம் நிலைபெற்று வாழ்தல் இயல்பாதலின் இது வாழ்த்தின் பாற்பட்டது. 3. குட்டம் என்பதற்குத் தரவு எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இருசீரடியும் முச்சீரடியுமாய்க் குறைந்து வருவன வற்றையே குட்டம் என வழங்குதல் ஆசிரியர் கருத்தாமென்பது பின்வரும் சூத்திரங்களால் இனிது விளங்கும். 4. ஈண்டு, எருத்து என்றது தரவை; அஃது எருத்தே கொச்சகம் (செய்.146) என்பதனானுணர்க என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் எருத்து என்னாது எருத்தடி யெனக் கூறுதலால் ஈற்றயலடி எனப் பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும். 1. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல் மருட்பாவேனை யிருசாரல்லது, தானிது வென்னுந் தன்மையின்றே (செய்-81) என ஓதினாரென்று கொள்க. 1. பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது, ஆசிரியம், வஞ்சி வெண்பா, கலி, மருட்பா என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடையதாதல். 2. காமப் பொருள் குறித்து வருவது பரிபாடல் எனவே அறத்தினும் பொருளினும் அத்துணைப் பயின்று வாராதென்பது கருத்தாயிற்று. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே எனச் சிறப்பு விதியோதினமையால், நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலின், கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும் என்பர் இளம்பூரணர். 1. இக்காலத்து இது மகளிர்க் குரியதாய்க் கொய்சகம் என்று வழங்குவதாயிற்று. 1. முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். முடுகியலடி யென்பது, முடுகியலோடு விராஅய்த் தொடர்ந் தொன்றாகிய வெண்பாவடி யென்பர் பேராசிரியர். 2. எண்ணெண்பது, ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பலவாகியும் வருதல் என இளம்பூரணரும், எண்ணுதற் பொருள் எனப் பேராசிரியரும் கொள்வர். 3. புகழொடும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். துகளொடும் எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டனர். துகள்-குற்றம். துகளொடு புணர்ந்தது செவியுறைச் செய்யுளாகாமை தெளிக. 1. இங்குச் சிறப்புடைமை கருதித் தாழிசையை முற்கூறினாரேனும், தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என இம்முறையால் வருதலே ஒத்தாழிசைக் கலியின் அமைப்பென அறிக. 2. பாட்டின் முகத்துத் தரப்படுதலின் தரவு என்பது பெயராயிற்று. இதனை எருத்து என வழங்குவதும் உண்டு. முகத்திற் படுந்தரவினை முகம் எனவும், இடை நிற்பனவற்றை இடைநிலை யெனவும், இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரிநிலை யெனவும் வழங்குவர் கூத்த நூலார். 3. தாழிசை தரவகப்பட்ட மரபின என்றதனால், தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாது என்பதும், மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதும், ஒத்து மூன்றாகும் ஒத்தாழிசையே எனப் பின்னர்க் கூறுதலானும் இப்பாவினை ஒத்தாழிசைக் கலியெனக் கூறுதலானும் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் என்பதும் கொள்க என்பர் இளம்பூரணர். 4. அடைநிலை யென்பது, முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை அடைந்தன்றி வாராது; அது தனி நின்று சீராதலின் தனிச்சொல் லெனவும்படும். 5. சுரிதகமாவது, உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கிக் கூறுதலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், அவை யெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பு எனவும், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் வழங்கப்படும். 6. தரவியலொத்தலாவது சிறுமை நான்கடி பெருமை பன்னிரண்டடியாகி வருதல். 7. அதனகப் படுதலாவது, சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல். 1. எனவே, இஃது அகநிலைச் செய்யுள் ஆகாதென்றான்; இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை யெனப்படும் என்பர் பேராசிரியர். தேவரைப் பரவுதலாகிய இது, முன்னிலைக் கண் வருமெனவே, முன் வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே என்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கும் எய்திற்றேனும் அவை தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டன அன்மையின் தேவபாணி ஆகாவாயின. யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி, நின்னைக் காப்பேன்; நீ வாழிய எனத் தெய்வம் சொல்லியதாகச் செய்யுள் செய்தலும் ஆகாது. தெய்வம் படர்க்கையாயவழிப் புற நிலை வாழ்த்தாவதன்றித் தேவர்ப் பராயிற்றாகாது. இங்ஙனம் கூறவே அகநிலை யொத்தாழிசைக்கலி யல்லாத ஒழிந்தஒத் தாழிசைக்கலி முன்னிலைக்கண் வருவதாயின் தேவரைப் பரவுதலாகிய பொருளிலேயே வரும் என்பது நன்கு பெறப்படும். 2. வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும்; என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப்பின்னர் அத் தெய்வத்தினை தாழிசையாலே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின். ஒழிந்த வுறுப்பான் வண்ணிப்பினும் சிறந்த வுறுப்பு இதுவென்க... எண்ணுறுப்புத் தான் நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அமபோதரங்க மெனவும் அமையுமாதலின் அதனை அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா எனவுஞ் சொல்லுப. இனி, வண்ணகமென்பது, அராகமென உரைத்து அவ்வுறுப்புடையன வண்ணக ஒத்தாழிசை எனவுஞ் சொல்வாருமுளர். எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது முதனூலாதலின் இவரோடு மாறுபடுதல் மரபன்றென மறுக்க... மற்றிதற்குத் தனிச்சொல் ஒதியதில்லையாலெனின் அதனை அதிகாரத்தாற் கொள்க என்பர் பேராசிரியர். 3. நேரடி பற்றிய நிலைமைத்தாகும் என்பதற்கு, அளவடியால் வரும் எனப் பொருளுரைத்தார் இளம்பூரணர்; சமநிலையானன்றி வியனிலையான் வாராது எனப் பொருள் கொண்டார் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். எனவே வண்ணக ஒத்தாழிசைக்குரிய தரவு. நான்கும் ஆறும் எட்டும் ஆக இவ்வாறு இரட்டைபட்ட அடிகளால் வருதலன்றி, ஐந்தும் ஏழும் ஒன்பதும் ஆக இவ்வாறு ஒற்றைப்பட்ட அடிகளால் வாராதென்பது பேராசிரியர் முதலியோர் கருத்தாகும். 1. அடக்கும் இயல்பிற்றாகிய வாரம்; என்றது, சுரிதகத்தினை. முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் எனவும், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலின் வாரம் எனவும் சுரிதகத்திற்குப் பெயர் கூறினார் என்பர் பேராசிரியர். 2. எனவே இரண்டடி யிரண்டும், ஓரடி நான்கும், இருசீர் எட்டும், ஒருசீர் பதினாறும் ஆகி எண்பல்கும் என்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்; ஆகவே, ஒழிந்த எண் மூன்றும் தலையெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணும் என மூன்றுங் கூடியே எண்ணென்றற்குரியவாயின. இது நோக்கிப் போலும், எண்ணென்று அடக்காது, சின்னம் அல்லாக்காலை என ஒரு சீரினை (ச்சின் னம் என்று) வேறுபடுத்து மேற்கூறுகின்றது என்பது. இனி அளவடியினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்கும் என்றமையின் அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்னமெனப்படும் என்பர் பேராசிரியர். இனி, ஈரடி யிரண்டினைப் பேரெண் எனவும், ஓரடி அதனிற் குறைதலின் சிற்றெண் எனவும் இவற்றிற்கும் பின்வரும் சின்னத்திற்கும் இடையே நிற்றலின் இருசீரை இடையெண் எனவும் பெயர் கூறினும் அமையும் என்பர் நச்சினார்க்கினியர். 3. சின்னம் என்பதனைத் தனிச் சொல் எனக் கொண்டார் இளம்பூரணர்; சிற்றெண் எனக் கொண்டனர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். எண்ணொழிதல் என்னாது எண் இடை யொழிதல் என்றதனால், தலையெண்ணும் இடையெண்ணும் அல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியும் குறைந்து வருமென்பதும் கொள்க. மூவகையெண்ணும் சின்னமும்பெற்று வருதல் சிறப்புடைமை ஏதமின்று என்றதனாற் பெறுதும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறியத்தக்கதாகும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் எண் என்ற உறுப்பினையடுத்துச் சின்னம் என்ப தோருறுப்பு இல்லா தொழியின் வண்ணக வொத்தாழிசையெனப் படாதென்பதும். எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றியும் எனப் பின்னர்க்கூறுமாறு அஃது ஒருபோகு எனப் பெயர் பெறுமென்பதும் இதனாற் புலனாதல் காண்க. 1. மேல் , ஒத்தாழிசைக் கலியிரண்டனுள் ஒன்றாய், ஏனையொன்று எனச்சொல்லப்பட்ட தேவபாணிச் செய்யுள், வண்ணகம் ஒருபோகு என இருவகையாகக் கூறப்பட்டது. அவற்றுள் ஒன்றாகிய ஒருபோகு என்பதும்; கொச்சக வொருபோகு, அம்போதரங்க வொருபோகு என இருவகைப்படும் என்பதாம். ஒருபோகு என்ற தொடர், ஓர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள் படுவதாகும். ஒத்தாழிசைக் கலிக்கு ஓதிய உறுப்புக்களுள் ஒருறுப்பு இழந்தமையால் ஒருபோகு எனப் பெயராயிற்று. ஓருறுப்பு இழத்தலின் ஒரு போகாதல் ஒக்குமாயினும் எனப் பேராசிரியர் கூறுதலால் இப்பெயர்க் காரணம் ஒருவாறு புலனாதல் காணலாம். கொச்சகம் ஒருவழி வாராதது கொச்சக வொருபோகு எனவும். வண்ணகப் பகுதிக்குரிய எண்ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒருவழி யில்லாதது அம்போதரங்க வொருபோகு எனவும் பெயர் எய்தின. கொச்சக வுடைபோலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சக மெனவும், பலவுறுப்புக்களும் முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்க மெனவும் கூறினார் என நச்சினார்க்கினியர் கூறுதலால் கொச்சகம், அம்போதரங்கம் என்பவற்றின் பெயர்க் காரணம் இனிது புலனாதல் காண்க. 1. எனவே, ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர் பெறுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். இனி, ஒருபோகு என்றது குறித்து யாப்பருங்கல விருத்தி யாசிரியர் பின்வருமாறு கூறுவர்: இனி ஒரு சார் கொச்சகங்களை ஒருபோகு என்று வழங்கு வாருமுளர். மயேச்சுவராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவபாணியுந் திரிந்து, தரவொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், தாழிசை யொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்டமூவகை யெண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை யெண்ணும் நீங்கினும், நீங்கிய வுறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒருபோகு எனப்படும். அவை, அம்போதரங்க வுறுப்புத் தழீஇயின அம்போதரங்க வொருபோகு எனவும், வண்ணக வுறுப்புத் தழீஇயின வண்ணக வொருபோகு எனவும்படும். என்னை? கூறிய வுறுப்பிற் குறைபாடின்றித் தேறிய விரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை யொழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப வுணர்ந்திசி னோரே என்றார் மயேச்சுவரர். 2. பரணியாவது, காடுகெழு செல்விக்கு (காளிக்கு)ப் பரணி நாட்கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராஅயிற்றேனும் தேவபாணியேயாம் என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய பண்டை யுரையாசிரியர் களது துணிபாகும். 1. பதிகப் பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற சொச்சக வொருபோகுகளிற் காண்க. அவை உலக வழக்கன்மையிற் காட்டா மாயினாம் என நச்சினார்க்கினியர் குறிப்பிடுதலால், இறைவனருள் பெற்ற பெரியோர்கள் அருளிச்செய்த திருப்பாடல்களாகிய அவை, தொல்காப்பிய இலக்கணத்தின்படி கொச்சக வொருபோ கென்னும் பாவின்பாற்படுவன என்பதும் அங்ஙனமாயினும் திருப்பாடல் களாகிய அவற்றை ஏனைச் செய்யுட்களைப் போல இங்கு யாப்பியலமைதிக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுதல் மரபன்றென்பதும் நன்கு தெளியப்படும். 1. தன்றளையோசை தழுவிநின் றீற்றிடி வெண்பா வியலது கலிவெண் பாவே (யாப்பருங்கலம்-செய்-85) எனவும், வெண்டளை தன்றளை யென்றிரு தண்மையின் வெண்பா வியலது வெண் கலியாகும் (யாப்-செய்-85-மேற்கோள்) எனவும் வருவன இங்கு நினைக்கத் தக்கன. 1. பத்தடுக்கி ஒரு பொருள்மேற் பதிகப் பாட்டாய் வரும் தேவாரம் திவ்வியப் பிரபந்தம் ஆகிய அருள் நூல்களில் அமைந்த திருப்பாடல்கள் இவ்வகையில் அடங்குவனவாம். 2. திருவெம்பாவைப் பாடல்கள் எட்டடியான் வந்து இவ்வாறு முடிந்தன. 1. ஈண்டு, எருத்து என்பது தரவு, என்பர் இளம்பூரணர். 2. அராகம் என்பது அறாது (இடையறவு பாடாது) கடுகிச் செல்லுதல். மாத்திரை நீண்டும் இடையறவு பட்டும் வராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது அராகம் என்னும் உறுப்பாகும். 3. அம்போதரங்கச் செய்யுளுக்குரிய நால்வகை எண்ணுறுப்புக்களுள் இறுதி யெண்ணாய்ச் சிறுகிவரும் எண் சிற்றெண் எனப்படும். இது சின்னம், எனவும் கூறப்படும். 4. அடக்கியல் வாரம் என்பது, தரவு முதலாகச் சொல்லப்பட்ட வுறுப்புக்களில் விரித்துக் கூறிய பொருளை அடக்கும் (முடித்துக் கூறும்) இயல்பினதாகிய சுரிதகம் என்னும் உறுப்பாகும். சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப் பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது என்பர் இளம்பூரணர். 5. எருத்து முதலாகச் சொல்லப்பட்ட இவ்வுறுப்புக்களே பரிபாடற்கும் உறுப்பா மாயினும், இவை இம்முறையேவரின் அம்போதரங்க வொரு போகாம் எனவும், அறுபதடியிற் குறைந்து முறை பிறழ்ந்து வருவனவும், ஒத்து அறபதடியின் மிக்கு வருவனவும் பரிபாடல் எனக் கொள்ளத் தக்கனவாம் எனவும் இவற்றிடையேயமைந்த வேறுபாட்டினை உரையாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். 1. செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள்மேல் வெள்ளடியால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் சிறப்புடையன என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். (யா. வி. பக். 310) இனி, கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடையடி வெண்பா முடியுமாறு போல முச்சீரடியால் முடிவது கலிவெண்பா என்பர் யாப்பருங்கல ஆசிரியர் தன்றளை யோசை தழுவிநின் றீற்றடி வெண்பா வியலது கலிவெண் பாவே என்பது யாப்பருங்கலம் (செய்யுளியல் 85-ம் சூத்திரம்). 2. இவற்றுள் வெண்டளையால் வந்த செய்யுள் வெண்கலிப்பா எனவும், அயற்றளை யால் வந்த செய்யுள் கலிவெண்பா எனவும் இளம்பூரணர் உரையிற் குறிப்பிடப் பெற்றுள்ளன. கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி முச்சீரான் முடிவதனை வெண் கலிப்பா எனவும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வருவதனைக் கலிவெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் குணசாகரர். (யா-காரிகை. 32-ம் செய்யுளுரை). வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா வென்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் என்பர் யாப்பருங்கல விருத்தி யாசிரியர் இவ்வுரைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் வெண்டளையல் வந்ததனைக் கலிவெண்பா எனவும் பிறதளையால் வந்ததனை வெண் கலிப்பா எனவும் வழங்கும் பெயர் வழக்கே பொருத்தமுடைய தெனத் தெரிகிறது. 1. பாட்டை மிடைந்தும் என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம், மிடைந்தும் என்ற உம்மையால் தரவும் சுரிதகமும் இயற்கை வழாமல் முதலும் முடிவும் வருதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 2. 3. ஐஞ்சீரடுக்குதல் என்றது, ஐஞ்சீரடி பல வருதல் எனவும், ஆறுமெய் பெறுதல் என்றது, தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம், சொற்சீரடி, முடிகியலடி அல்லது அராகம் என்னும் ஆறு உறுப்பினையும் பெற்று வருதல் எனவும் கூறுவர் இளம்பூரணர். இனி, ஐங்சீரடுக்குதல் என்றது, வேறு நின்ற தொரு சீரினை அளவடியுடன் அடுக்கிச் சொல்ல ஐஞ்சீராகி வருதல் என்றும், ஆறுமெய் பெறுதல் என்றது, அளவடியுடன் இருசீர் அடுக்க ஆறுசீர்பெற்று வருதல் என்றும், மேல் கூன் எனவும் சொற்சீர் எனவும் கூறப்பட்டனவே ஈண்டு ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்தன வென்றும் கொள்வர் பேராசிரியர். 4. பெற்றும் என்ற உம்மையால் பெறாது வருதலும் கொள்க என்பர் இளம்பூரணர். 1. கைக்கிளைச் செய்யுள் என்பது, கைக்கிளைப் பொருட்கு உரித்தாய் வரும் மருட்பா என்றவாறு. 1. எனவே மருட்பா மேற்குறித்த நான்கு பொருளினல்லது வரப்பெறாதாயிற்று. 2. எழுநிலமாவன: பாட்டு உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்; அகமும் புறமுமாகிய எழுவகைத் திணைகள் என்பர் பேராசிரியர். 3. இத்தொடர்க்கு நொடிதல் மாத்திரையாகிய பிசி எனப் பொருள் கொள்வர் பேராசிரியர், நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படுவதாகும். நொடியொடு புணர்ந்த பிசியெனவே பிசிக்கு நிலைக்களம் நொடியென்பது பெறப்படும். 4. பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்பும் என நான்கும் வழக்கு மொழி யாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் ஈண்டு அவற்றுட் செய்யுளையே கோடற்கு அவற்றுக்கு அளவில் என்றார். 1. சூத்திரம் என்னும் ஒருறுப்படக்கிய பிண்டம் இறையனார் களவியல்; சூத்திரமும் ஓத்தும் என்னும் இரண்டு உறுப்படக்கிய பிண்டம் பன்னிருபடலம்; சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்று உறுப்படக்கிய பிண்டம் தொல்காப்பியம். இவை முறையே சிறு நூல், இடைநூல், பெருநூல் எனப்படும். இவை முறையே சிறு நூல், இடைநூல், பெருநூல் எனப்படும். இனி, அகத்தியம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று உறுப்பினையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினை யடக்கிய வேறோர் பிண்டம் என்பர் நச்சினார்க்கினியர். 2. உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் இடையிடையே வரும் உரைநடை இவ்வகையைச் சார்ந்தாகும். 3. உலக வழக்கில் பாட்டின்றித் தனியே வழங்கும் வசனடை பாவின் றெழுந்த கிளவி எனப்படும். 4. யானையும் குருவியும் தம்முள் நண்புகொண்டு இன்னவிடத்தில் இன்னவாறு செய்தன என்றாங்கு அவற்றின் இயல்புக்கு ஒவ்வாத வகையில் இயைத்துரைக்கப்பட்டுக் கதையளவாய் வழங்கும் உரைநடை பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யெனப்படும். 5. முழுவதும் பொய்யென்று தள்ளப்படும் நிலையிலமையாது உலகியலாகிய உண்மை நிலையை ஒருவாற்றான் அறிவுறுத்துவன வாய்க் கேட்போர்க்கு நகைச்சுவையை விளைக்கும் பஞ்ச தந்திரக் கதை போலும் உரைநடை பொருளோடு புணர்ந்த நகைமொழி எனப்படும். 6. அவையாவன : மைந்தர்க்கு உரைப்பன. மகளிர்க்கு உரைப்பன என்னும் இருவகையாம் என்பர் இளம்பூரணர்.இனி முற்கூறிய உரைவகை நடை நான்கினுள், பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின் றெழுந்த கிளவி என்னும் முன்னைய இரண்டும் ஒரு தொகுதியாகவும், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்னும் பின்னைய இரண்டும் மற்றொரு தொகுதியாகவும் கொள்வர் பேராசிரியர் முதலியோர். 1. அவற்றுள், பொருள் மரப்பில்லாப் பொய்ம்மொழியும் பொருளொடு புணர்ந்த நகைமொழியும் ஆகிய பிற்கூறு செவிலிக்கு உரியதெனவும். பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் ஆகிய முற்கூறு வரையறையின்றி எல்லார்க்கும் உரித்தெனவும் கொள்ளுதல்வேண்டும். இங்ஙனம் கொள்ளவே, தலை மகளை வளர்க்குஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது நன்கு புலனாம். இக்கருத்தினால், செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி (நெடுநல்-153-4) என நக்கீரனாரும், செம்முது செவிலியர்............................... தன்னிணையாம் பன்னொடிபகர (பெருங்-1-54-25-32) எனக் கொங்குவேளும் இவ் வுரைவகையினைச் செவிலிக்கு உரியனவாக இயைத் துரைத்துள்ளமை காணலாம். 2. யானை செல்லும் என வெளிப்படச் சொல்லாது, பிறை கவ்வி மலை நடக்கும் என உவமானத்தாற் குறிப்பிற் புலப்பட வைத்தல், ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாம். 1. நீராடான் பார்ப்பான் நிறஞ் செய்யான் நீராடின் ஊராடும் நீரிற் காக்கை என்பது நெருப்பு என்னும் பொருள் குறிப்பில் தோன்ற அமைந்த சொற்றொடர் நிலையாகும். இது தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசி வகைக்கு உதாரணமாகும். மேற்குறித்த பிசி வகையாகிய இவற்றை இக்காலத்தார் பிதிர் (புதிர்) எனவும் விடுகதை யெனவும் வழங்குவர். 1. முதுசொல், முதுமொழி, மூதுரை, பழமொழி என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். சென்ற காலத்திற் புகழுடன் வாழ்ந்த பெருமக்களிடத்தமைந்த நுண்ணறிவு, சொல்வன்மை, உயர்ந்த நோக்கம், நல்வாழ்க்கை முறையில் அன்னோர் பெற்றிருந்த சிறந்த அனுபவங்கள் ஆகிய இவை யெல்லாவற்றையுந் திரட்டித் தருதல் இம் முதுமொழியின் இயல்பென்பது, முதுமொழி யென்னும் செய்யுள் வகைபற்றிய இவ்விலக்கணத்தால் இனிது விளங்கும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி நானூறு முதுசொல் என்னும் இச் செய்யுள் வகையின் பாற்படும். 1. இறைவன் திருவருள் பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளையார். எந்தை நனியள்ளியுள்க வினைகெடுதல் ஆணை நமதே (2-84-11) எனவும், ஆனசொன் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே (2-85-11) எனவும் தம் மேல் ஆணையிட்டும், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் (1-116-1) என இறைவனது திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டும் ஓதிய திருப்பதிகங்கள், நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றலை நன்கு புலப்படுத்தி நிற்றல் காணலாம். 2. திருவாய்மொழி திருமொழி என்ற பெயர்கள், வாய்மொழி என்னும் இப்பெயர் வழக்கத்தை அடியொற்றி அமைந்தனவாகும். 3. ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையாற் செந்தமிழே தீர்க்க சுவா எனவும், முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடயன் ஆனந்தஞ் சேர்க சுவா எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்) சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின எனப் பேராசிரியர் காட்டிய அங்கதப் பாடல்கள் ஆணையிற் கிளந்த மறைமொழியின் பாற்படுவன. 1. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி என்றதனான் இச்சொல் வசை குறித்து வருமென்று கொள்க என்பர் இளம்பூரணர். 1. அளவியல் வகையே யனைவகை படுமே (செய்யு-156) என்னும் சூத்திரம், பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது. இது (செய்யுள்-176-ம் சூத்திரம்) செய்யுள் இனைத்தென வரையறுத்துணர்த்திற்று என்பர் இளம்பூரணர். 1. தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் கூறுவன, தம் கூற்றே யாதலின் தாம் கேட்டல் விதந்து கூறவேண்டுவதில்லை 2. அகத்திணையோர், புறத்திணையோர் ஆகிய யாவரும் கேட்கப் பெறுவர் என்பதாம். 1. எனவே, தலைமகள் பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையும் என்பதாயிற்று. 2. உம்மை எதிர்மறையாகலான் தம்முள் தாம்கேட்டல் சிறுபான்மை எனக் கொள்க. 1. பாட்டினது முடிபினை விளக்கிவரும் ஈற்றசை யேகாரம் முதலியவற்றால் முடியாது, இடையடிகள் போன்று முடியாத தன்மையால் முடிந்து நிற்பது அகப்பாட்டு வண்ணமாகும். 1. பாட்டின் முடிபினை யுணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்கவும் அதற்குமுன் உள்ள இடையடி முடிந்தது போன்று நிற்பது புறப்பாட்டு வண்ணமாகும். 2. யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறி தொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒருஉ வண்ணம், எனப் பொருள் கொள்வர் பேராசிரியர். 3. அறுத்தறுத் தொழுகுதலாவது, விட்டுவிட்டுச்செல்லுதல். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பாகும். 4. ஏந்தல்-மிகுதல்-ஒருசொல்லே மிக்கு வருதலின் ஏந்தல் வண்ணம் எனப்பட்டது. 5. நெகிழாது உருண்ட வோசையாகலிற், குறுஞ்சீர் வண்ண மெனப்படாது உருட்டு வண்ணம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். 6. வண்ணம் என்பன சந்தஓசையாதலால் அவ்வோசை வேற்றுமை செய்வன மேற்கூறிய வண்ணங்கள் இருபதுமேயன்றி வேறு இல்லை என்பதாம். 1. தூங்கேந் தடுக்கல் பிரிதல் மயங்கிசை வைத்துப் பின்னும் ஆங்கே யகவ லொழுகிசை வன்மையு மென்மையுமா ஆங்கே குறில் நெடில் வல்லிசை மெல்லிசையோ டிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே எனவரும் யாப்பருங்கலக் காரிகையும், தூங்கிசை வண்ணம் ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம் மயங்கிசை வண்ணம், என இவ் வைந்தினையும்; அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், என்று இந் நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என இவ் வைந்தினையுங்கூட்டிக் குறிலகவற்றூங்கிசை வண்ணம், நெடிலகவற்றூங்கிசை வண்ணம், வலியகவற்றூங்கிசை வண்ணம், மெலியகவற்றூங்கிசை வண்ணம். இடையகவற்றூங்கிசை வண்ணம், என்று இவ்வாறெல்லாம் உறழ்ந்துகொள்ள நூறு வண்ண விகற்பமாம் என வரும் யாப்பருங்கல விருந்தியுரையும் இங்கு நோக்கத் தக்கனவாம். 1. தொன்றுபட உரூஉந் தொன்மைத்தாதலின் (சிலப்-ஊர்காண்-45) எனவும், நீ யறிந்திலையோ நெடுமொழியன்றோ (சிலப்- ஊர்காண்-49) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களும் தொன்றுபட உரூஉத் தொன்மைத்து-அடிப்பற்றி வருகின்ற பழமைத்து எனவும், நெடுமொழி-பெருவார்த்தை. பழைதாகப் போதுகின்ற வார்த்தை என்றுமாம் எனவரும் அரும் பதவுரையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 2. மார்க்கண்டேயனார் காஞ்சி. 1. மலைபடுகடாம். 1. மூங்கா-கீரி. 2. வெருகு-காட்டுப்பூனை. 1. நவ்வி-புள்ளிமான் மடனுடையன நவ்வி எனவும் இடை நிகரன உழை எனவும் கொள்க என்பர் பேராசிரியர். 2. முழை எனப் பாடங்கொண்டு, முழா எனப் பொருளுரைப்பர் இளம்பூரணர். அப்பெயருடைய உயிர்வகை இதுவென விளங்கவில்லை. 3. கோடு வாழ் குரங்கு எனவே அதன் இனமாகிய ஊகமும் முசுவும் குட்டி என்ற பெயர் பெறும் எனக் கொண்டார் இளம்பூரணர். குரங்கும் என்ற உம்மையை இறந்தது தழீஇ யிற்றாகக் கொண்டு, முற்கூறிய யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என்னும் ஐந்து சாதிக்குங் குட்டி யென்னும் பெயர் கூறப்படும் என்பர் பேராசிரியர். 4. ஆன் என்பது பேராசிரியர் கொண்ட பாடம், ஆன் கன்று என்பது உதாரணம். 5. கராகம்-கரடி, கராம் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 1. ஆண் பிள்ளை, பெண் பிள்ளை எனப் பிள்ளைப் பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க என எதிரது போற்றிக்கொள்வர் பேராசிரியர். 2. ஓரறிவுயிர்க்குரிய இளமைப் பெயராகிய போத்து என்பதும் ஆண்பாற் பெயராகிய போத்து என்பதும் பொருள் வகையால் வேறென வுணர்க. 3. புல் என்பது, இங்கு நெல்லைச் சார்த்திக் கூறப்பட்டமையால் உணவு வகையாகிய கூலப் பயிர்களைக் குறித்த பெயரெனவும் புறத்தே வயிர முடையவற்றுக்கு வழங்கும் புல் என்ற பெயர் இதனின் வேறெனவும் உய்த்துணர்தல் வேண்டும். 4. அவை யல்லது பிறவில்லை யென்றமையின் ஒன்றற் குரியவற்றை ஒன்றற்குரிய வாக்கி வழங்குவனவும் கொள்ளப்படும். இனி எடுத்தோதாதனவற்றுள் சிங்கத்திற்குப் புலிக் குரியனவும், உடும்பு, ஓந்தி, பல்லி என்பவற்றுக்கு அணிலுக் குரியதும், நாவிக்கு மூங்காவிற் குரியதும் இவ்வாறே பிறவும் இவ்வகையின் ஏற்பனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். சொல்லுங்காலை என்றதனால், சொல்லாத நாகு முதலிய இளமைப் பெயரும் தழுவிக் கொள்ளப்படும் என்பர் பேராசிரியர். 1. பிறவாவன: புறக்காழும் அகக்காழும் இன்றிப் புதலும் கொடியும் போல்வன. இவை தொட்டால் அறியும் பரிசவுணர்ச்சி யொன்றே யுடைமையால் ஓரறிவுயிரெனப் பட்டன. 2. நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என் பனவும், முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பனவும் கொள்க என்பர் இளம்பூரணர். இவை பரிசவுணர்வும் சுவை யுணர்வுமாகிய இரண்டேயுடையன வாதலால் ஈரறிவுயிரெனப் பட்டன. 3. சிதல்-கறையான் ஒன்றுதாக்கிய வழியன்றி யறியாமையல் இவற்றுக்குக் கண்ணில்லை யென்பதும் அதட்டியோசைப் படுத்திய நிலையில் அறிந்து விலகாமையால் செவியில்லை யென்பதும் நன்கு புலனாகும். 4. வடிவமுடைமையால் ஊற்றுணர்வும், இரை கோடலால் நாவுணர்வும், நாற்றத்தின் வழிச் சொல்லுதலால் மூக்குணர்வும் பொருளின் நிறங்கண்டு பற்றலாற் கண்ணுணர்வும் புலனாமாதலின் இவை நாலறிவுயிரெனப்பட்டன. 5. மா-விலங்கு. புள்-பறவை. மாவும் மாக்களும் எனப் பாடங் கொள்வர் பேராசிரியர். மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சி யில்லாதார். 1. விலங்கும் பறவையும் என மேற்கூறப்பட்ட ஐயறிவுயிர்களுள் குரங்கு, யானை, கிளி முதலியவற்றுள் மனவுணர்வுடைய உளவாயின், அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பார். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்றார். எனவே இவ்வியல் இளம்பூரணருரையில் மட்டும் 34-ஆம் சூத்திரமாகக் காணப்படும். ஒருசார் விலங்கும் உளவெனமொழிப என்ற தொடர். பிற்காலத்தில் நுழைந்த இடைச் செருகலெனவே கொள்ளத் தக்கதாகும். 1. களிறு என்ற பெயர், ஒரு சாதிக்குரிய பெயர் போன்று யானை யினத்துக் கேயுரியதாய் வழங்கும் சிறப்புரிமை யுடையமையால் வேழக்குரித்தே விதந்துகளி றென்றல் எனச் சூத்திரஞ் செய்தார் ஆசிரியர். 2. நீருள்வாழும் முதலை முதலியனவற்றுள் ஆண்பால் போத்து என வழங்குதற் குரியன என்பார், நீர்வாழ் சாதியும் அது பெற்ற குரிய (மரபு-44) எனப் பாடங்கொண்டார் இளம்பூரணர் அறு பிறப்புரி ய எனப்பாடங்கொண்டு, அறுபிறப்பென்பன: சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என இவை எனப் பொருளுரைத்தார் பேராசிரியர். நாரையுள் ஆணும் போத்து என வழங்கப்படுதல் உண்டு. 3. எழால் - புல்லுறு என்ற பறவை. 4. மாயிருந்தூவி மயில் என்றதனான், அவை தோகை யுடையவாகிப் பெண் போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இல என்பது கொள்க என்பர் பேராசிரியர். எனவே, தோகையையுடைய ஆண்மயில்கள் சேவல் என்ற ஆண்பாற் சொல்லால் வழங்கப் பெறாவாயின. செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அது (சேவல் என்ற பெயர்) நேரவும்படும் எனப் பேராசிரியர் கூறும் அமைதி பிற்கால இலக்கிய வழக்கினைத் தழுவிக் கொள்ளும் கருத்தினதாம். 1. பிணை என்னுஞ் சொற்பொருளின் உண்மை நோக்கின் பிரியாது பிணையும் பிறசாதிக்குஞ் செல்லுமாயினும் மரபு நோக்கப் பிணையென்றற்குச் சிறப்புடையன இவை நான்கும் என்றவாறு. 1. அவை ஈதல், வேட்டல், வேட்பித்தல், ஓதல் என்னும் நாலுதொழில் என்பர் இளம்பூரணர். 1. கண்ணி என்பது, சூடும்பூ தார் என்பது, ஒரு குடிப் பிறந்தார்க்குரித்தென வரையறுக்கப்படுவது என விளக்குவர் பேராசிரியர். 2. ஏனோர் என்பதறகு, வைசியர், வேளாளர் என இளம் பூரணரும், குறுநிலமன்னர் எனப் பேராசிரியரும் பொருள் கொண்டனர். 3. ஈண்டு இழிந்தோர் என்றது, நான்கு குலத்தினும் இழிந்த மாந்தரை எனக் கொள்வர் இளம்பூரணர். 4. இந்நூல் முற்பகுதி, பக்கம் 16, 1. புல் என்ற வகையைச் சார்ந்தவை தெங்கு, பனை, கமுகு மூங்கில் முதலாயின. மரமெனப்படுவன விள, பலா முதலியன. புறத்தும். அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பு (வயிரம்) இன்றியும் அகில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் (புரையுடையதாகியும்) வரினும் சிறுபான்மை அவையும் புல்லும் மரனும் என அடங்கும் என்பர் பேராசிரியர். 2. புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதவற்றுள் வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் முதலிய ஒரு சாரன இவ்வகைப்பட்ட உறுப்புப் பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் என்பர் இளம்பூரணர். பிறவும் என்றதனால், குரும்பை, நுங்கு, நுகும்பு, போந்தை யென்றற் றொடக்கத்தனவும் புல்லின் உறுப்பாகக் கொள்ளப்படும். நுகும்பு-மடல் விரியாத குருத்து (புறம்-249), போந்தை-கருக்கு. 1. புறவயிர்ப்பும் உள் வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் முருக்கு தணக்கு முதலிய ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயருடையன மர மெனப்படும். புல்லினுள் ஒரு சாரன இலை. பூ முதலிய உறுப்பின் பெயர்களைப் பெறுவனவும். புல்லிற்குச் சொல்லப்பட்ட ஈர்க்கு முதலிய உறுப்புக்கள் சில மரத்திற்கு வருவனவும் வழக்கு நோக்கி உணர்ந்து கொள்ளத் தக்கனவாம். 2. தாழை பூவுடைத்தாகலானும் கோடுடைத்தாகலானும் புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்பது இளம்பூரணர். 1. இவ்விரிவுரையினைப் பிற்காலத்தார் விருத்தியென்ற பெயரால் வழங்குவர். 1. நன்னூலிற் பொதுப்பாயிரமாக அமைந்த சூத்திரங்கள் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டன அல்ல என்பது, நன்னூலுரையாசிரியர்களுள் முதல்வராகிய மயிலைநாதர் மலர் தலையுலகின் என்னுஞ் சிறப்புப்பாயிர வுரையின்முன் தோற்றுவாயாக அச்சூத்திரங்களைத் தந்த, பின் சிறப்புப் பாயிரத்திற்கு உரை யெழுதி முடித்திருத்தலால் உய்த்துணரப்படும். இங்ஙனமாகவும் பின்வந்த உரையாசிரியர்களாகிய சங்கர நமச்சிவாயப் புலவர் முதலிய பெருமக்கள் இப்பொதுப் பாயிரமும் பவணந்தி முனிவரால் இயற்றப் பெற்றதெனவே கொண்டு உரை யெழுதியுள்ளார்கள். நூலாசிரியராவார் ஒவ்வொருவரும் எல்லா நூற்கும் உரிய பொதுப் பாயிர இலக்கணத்தைத் தம் நூலிற் சொல்ல வேண்டுமென்னும் இன்றியமையாமையில்லை. ஆகவே அப்பகுதி பவணந்தி முனிவர் வாக்கென உறுதியாகக் கொள்ளுதற்கில்லை. அதுபோலவே இம் மரபியலிலுள்ள நூன்மரபு பற்றிய பகுதியும் பண்டை நாளில் மேற்கோளாக வழங்கிய பழஞ் சூத்திரங்களின் தொகுதியாய் இவ்வியலின் இறுதியில் இணைக்கப் பெற்றிருத்தலும் கூடும். . இந்நூல், பக்கம் 77-85