சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 9 இலக்கியச் சோலை பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 9 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 272 = 280 படிகள் : 1000 விலை : உரு. 175/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்தர் வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்தர் வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்தர் வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்தர் வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை இலக்கியச் சோலை முன்னுரை 3 1. தமிழரின் தலைசிறந்த கொள்கை 7 2. எலிமனிதரும் புலிமனிதரும் 12 3. நன்றி மறப்பது நன்றன்று 16 4. துணிவு கொள் 22 5. இரத்தலும் ஈதலும் 27 6. புலவர் பெருந்தன்மை 33 7. தமிழ்ப் புலவர் தன்மானம் 38 8. அச்சமற்ற அருந்தமிழ்ப் புலவர் 43 9. பொறுப்புணர்ந்த புலவர்கள் 50 10. நயமுறப் பேசும் நற்றமிழ்ப் புலவர் 55 11. வறுமையில் செம்மை 60 12. தமிழ் மன்னர்களின் தளரா உறுதி 65 13. மானங் காத்த மன்னவன் 69 14. முதுகுடுமி 74 15. பாரியும் பறம்பும் 79 16. மயிலுக்குப் போர்வை தந்த மன்னவன் 84 17. கபிலரும் கடுங்கோவும் 89 18. புலவரும் புரவலனும் 95 19. புலவர்க்குப் பணி செய்த புரவலன் 101 20. தலைகொடுக்க முன்வந்த தமிழ் வள்ளல் 106 21. புலவர் போற்றிய புரவலன் 110 22. புகழ் விரும்பாப் புரவலன் 115 23. அவ்வையும் அதியமானும் 123 24. அவ்வையாரின் அஞ்சாமை 128 25. அரசுக்கு அறிவுரை 133 26. படைபலத்தால் மட்டும் பயனில்லை 138 27. உழவரைக் காத்தலே உயர்ந்த கடமை 143 28. உழவும் சமாதானமும் 149 29. நீர்ப்பாசன வசதி 155 30. பெண்கொலையால் பெரும் பழி 160 31. இதுவா போர்? வெட்கம்! வெட்கம்! 167 32. மைந்தர்க்கும் தந்தைக்கும் போரா? 172 33. ஒற்றுமையின் உயர்வு 177 34. உணவும் உயிரும் 183 பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை மதிப்புரை 189 1. நூலின் சிறப்பு 191 2. காவிரியின் சிறப்பு 197 3. பாக்கத்தின் செல்வம் 203 4. சோறு சமைக்கும் இடங்கள் 209 5. செம்படவர் விளையாட்டு 214 6. சங்கமுகத்தின் சிறப்பு 219 7. உண்மை ஊழியர்கள் 226 8. கடைவீதி 232 9. கொடிநாட்டும் வழக்கம் 237 10. வீதிகளில் விளங்கும் செல்வம் 242 11. வேளாளர்கள் 248 12. கரிகாலன் வரலாறு 254 13. பாருலகைப் பாழாக்கும் போர் 259 14. கரிகாற் சோழன்ஆ வீர வாழ்வு 266 இலக்கியச் சோலை (1958) முன்னுரை இலட்சியம், நோக்கம், குறிக்கோள் இவைகளைக் கொண்டதே இலக்கியம். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியம். பழைய வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டிப் புதிய வாழ்க்கைக்கு வழிவகுப்பது இலக்கியம். ஒரு சமுதாயத்தின் - தேசத்தின் - பழமையான பண்பாட்டைக் காண்பதற்குத் துணை செய்வது இலக்கியம். இலக்கியம் என்பதற்கு இவ்வாறுதான் பொருள் கொள்ளவேண்டும். இப்பொருள்தான் உண்மைப் பொருள் என்பதில் ஐயம் இல்லை. ஒரு நாட்டின் வரலாற்றை உருவாக்கவேண்டுமானால் - ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டு வளர்ச்சியைக் கண்டறிய வேண்டுமானால் - அதற்குப் பழைய இலக்கியங்களையும் ஆராயவேண்டும். அதற்குப் பழைய இலக்கியங்கள் துணை செய்யும். பழைய இலக்கியங்களைப் பார்க்காமல் - அவைகளில் உள்ள உண்மைகளை உணராமல் - எழுதப்படும் எந்த நாட்டு வரலாறுகளும் உண்மையான வரலாறுகளாக இருக்க முடியாது. இலக்கியச் செல்வம் பெற்றுள்ள ஒரு நாட்டின் வரலாற்றை - ஒரு சமூகத்தின் வரலாற்றை - இலக்கியத்தையும் கருவியாக வைத்துக் கொண்டுதான் எழுதியாக வேண்டும். தமிழகத்துக்குப் பழைய இலக்கியங்கள் உண்டு; தமிழர் சமுதாயத்துக்குப் பழைய இலக்கியங்கள் உண்டு. பாரத நாட்டில் உள்ள பேச்சு மொழிகளிலே தமிழ்மொழியைப் போல் புராதன இலக்கியம் படைத்த மொழி வேறொன்றும் இல்லை. வட மொழியைப் போன்ற புராதனமான மொழி தமிழ்மொழி ஒன்றேதான். இவ்விரண்டு மொழிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து - சொற்களையும் இலக்கியங்களையும் பரிவர்த்தனை செய்துகொண்டு - வாழ்ந்து வருகின்றன. தமிழகத்துப் பழைய இலக்கியங்கள், தமிழர்களின் அரசியல் கொள்கைகளை எடுத்துக் காட்டுகின்றன; அவர்களின் ஆட்சிமுறைகளை விளக்குகின்றன; மக்கள் நன்மைக்காகவே அரசாட்சி என்ற உண்மையை உரைக்கின்றன; அரசியல் தர்மங் களையும் எடுத்துக் கூறுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, தமிழ்நாட்டுப் புராதன சமுதாய அமைப்பை அறியலாம்; தமிழகத்தில் நடை பெற்ற தொழில்கள், வாணிகம் முதலியவற்றைக் காணலாம்; தமிழகத்து மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் இருந்த தொடர்பை உணரலாம். தமிழர்களின் நடை - உடைகள், அவர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள், அவர்களுடைய நம்பிக்கைகள், அவர் களுடைய குடும்பவாழ்வு முறைகள் இவைகளையெல்லாம் தமிழ் இலக்கியங்களிலே காண முடிகின்றது. 2 இலக்கியம் என்பது ஒரு நல்ல செழிப்புள்ள சோலை போன்றது. வளம் பொருந்திய சோலைக்குள் புகுந்தால் ஐம்புலன் களாலும் இன்பத்தை அனுபவிக்கலாம். நல்ல நிழலிலே அமர்ந்து களைப்புத் தீரக் காற்று வாங்கலாம்; நாவுக்கினிய காய்கனிகளைப் பறித்துச் சுவைக்கலாம்; கண்ணுக்கினிய பல காட்சிகளைக் காணலாம். பலவகை மலர்களின் நறுமணங்களை நுகரலாம்; நல்ல பறவைகளின் இனிய ஒலிகளைக் காதாரக் கேட்டு இன்புறலாம். நல்லதொரு இலக்கியமும், இத்தகைய சோலைபோலவே இன்பந்தரும் இயல்புள்ளதாகும். இலக்கியத்தின் இனிமையை அறிந்து சுவைக்கும் அறிவு பெற்றவர்கள் அதனை ஒரு சோலையாகவே கருதுவர்; பொழுது போக்குப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்ளுவர்; உழைத்து ஓய்ந்து சோர்ந்துபோன உள்ளத்திற்கு ஊக்கம் ஊட்டும் சக்தி இலக்கியங்களுக்கு உண்டு. அறவுரைகள், வீர உரைகள், இயற்கைக் காட்சிகள், மனத்தைக் கவரும் வரலாறுகள், சொல்நயம் - பொருள்நயம் இவைகள் எல்லாம் இலக்கியங்களிலே நிரம்பிக் கிடக்கும். சிறந்த இலக்கியங்கள், படிப்போரின் நுண்ணறிவுக்கேற்பப் பலப்பல புதுப்புதுப் பொருள்களைப் பரிமாறிக் கொண்டே யிருக்கும். இறைக்க இறைக்க வற்றாமல் நீர் சுரக்கும் நல்ல நீர்க்கேணியைப் போன்றது இலக்கியம். நல்ல இலக்கியங்களிலே இந்த இயல்பை நாம் காணலாம். 3 பழந்தமிழ் இலக்கியங்களிலே, தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் சிறந்த இலக்கியம் புறநானூறு, இதற்கு இணையான வரலாற்று இலக்கியம் வேறு எதுவும் இல்லை. புறநானூற்றை ஒரு தனிப்பாடல் திரட்டு என்று கூறிவிடலாம். இது 157-க்கு மேற்பட்ட புலவர்களால் பாடப்பட்ட நானூறு பாடல்களின் தொகுப்பாகும். ஆனால் இன்று புறநானூற்றில் காணப்படும் பாடல்கள் 398 ஆகும். இரண்டு பாட்டுக்கள் மறைந்துவிட்டன. இநத் 398 பாடல்களிலும் சுமார் 45 பாடல்கள் சிதைந்து போயிருக்கின்றன. புறநானூற்றுப் பாடல்களிலே பெரும்பாலானவை. பேரரசர்களையும், சிற்றரசர்களையும் புகழ்ந்து பாடியவை. வறுமையால் வாடித் திரிந்த புலவர்கள் தங்கள் வாழ்க்கைக்குப் பொருள் வேண்டிச் செல்வம் படைத்தோரைப் பாராட்டிப் பாடிய பாடல்கள். இப்பாடல்களை யெல்லாம், வறுமைக் கழனியிலே துன்பநீரின் துணைகொண்டு வளர்ந்த பயிர்கள் என்று கூறிவிடலாம். வறுமைத் தேவி பெற்றெடுத்த புறநானூற்றுப் பாடல்களிலே பல உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன. தமிழர் வீரம், தமிழர் அறம், தமிழர் சமுதாய நிலைமை, புலவர்கள் வாழ்வு, புலவர்கள் தன்மை, அவர்கள் தேசப்பற்று, அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மை, பல வரலாற்றுக் குறிப்புகள் இவைகளையெல்லாம் புறநானூற்றுச் செய்யுட்களிலே காணலாம். புறநானூறு என்னும் பழந்தமிழ்ச் செல்வம் நமக்குக் கிடைத்திராவிட்டால், தமிழர் வரலாற்று உண்மைகள் பலவற்றை நாம் தெரிந்துகொண்டிருக்க முடியாது. 4 இலக்கியச்சோலை என்னும் பெயரைப் புறநானூற்றின் மாற்றுப் பெயராகக் கொள்ளலாம். புறநானூறு, கதைத் தொடர்ச்சி யைக்கொண்ட ஒரு காவியம் அல்ல என்பது உண்மைதான்; ஆயினும் அதிலே காவியச் சுவைகள் பலவற்றைக் காணலாம். புறநானூறு, தமிழக வரலாற்றைக் காலக் குறிப்புடன் தெளிவாகக் கூறும் ஒரு சரித்திரம் அல்ல என்பதும் உண்மை; ஆயினும், தமிழ்நாட்டு மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் பலருடைய வரலாற்றுக் குறிப்புக்களை அதிலே காணலாம். புறநானூறு, கற்பனை நிறைந்த கவிதைத் தொகுதி அல்ல என்பதும் உண்மை தான்; ஆயினும், புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலே கருத்தும், கற்பனையும், கவிச்சுவையும் நிரம்பியிருப்பதைப் படித்துச் சுவைக்கலாம். இத்தகைய புறநானூற்றுப் பாடல்களின் விமர்சனந்தான் இந்த இலக்கியச் சோலை. சுமார் 34 பாடல்களை வைத்துக் கொண்டு கட்டுரைகளாக எழுதப்பட்டதே இப் புத்தகம். பழந்தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டை அறிய இக் கட்டுரைகள் ஓரளவா வது துணை செய்யக் கூடும். சென்னை. 2-6-1958 சாமி. சிதம்பரன் தமிழரின் தலைசிறந்த கொள்கை 1 மக்கள் வாழ்க்கை பலவகையாக மாறுபட்டுக் கிடக்கின்றது. சிலர் இன்புற்று வாழ்கின்றனர்; அவர்கள் இன்புற்று வாழ்வதற் கான எல்லா வசதிகளையும் பெற்றிருக்கின்றனர். பலர் துன்புற்று வாழ்கின்றனர். தங்கள் துன்பத்தைத் துடைத்துக்கொள்ள எண்ணாதவர்கள் எவருமில்லை. நிலையான உயர்வு தாழ்வுள்ள இவ்வுலகத்தில் நாம் இக்காட்சியைக் காணுகின்றோம். மக்களுடைய எண்ணம், சிந்தனை, செயல் ஆகியவைகள் பலவாறாயினும் வாழ்க்கையைப் பொறுத்தவரையிலும் அவர் களுடைய குறிக்கோள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் நமக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் தேடிக்கொள்ள வேண்டும்; எந்நாளும் இன்பத்தில் மூழ்கித் திளைக்க வேண்டும். இவ்வெண்ணம் எல்லோர் உள்ளத்திலும் இயற்கையாகவே குடிகொண்டிருக் கின்றது. இதுவே எல்லோருடைய குறிக்கோளும். இந்த எண்ணம் - குறிக்கோள்தான் அவர்களை உழைக்கச் செய்கின்றது: ஏதேனும் ஒரு தொழிலிலே ஈடுபடச் செய்கின்றது. உயிர்வாழவேண்டும் என்னும் ஆசைக்கே இவ்வெண்ணந்தான் அடிப்படை. இவ்வெண்ணம் எல்லா மக்களிடமும் இருந்தாலும் எல்லாரும், இவ்வெண்ணத்தில் வெற்றிபெறக் காணோம். ஒருசிலர்தான் வெற்றி பெற்றுத் தங்கள் ஆவலை நிறைவேற்றிக் கொண்டு அளவுகடந்த இன்பம் பெற்று வாழ்கின்றனர். பலர் வாழ்நாள் முழுதும் ஓய்வின்றி உழைத்தும் ஒருசிறிதும் இன்பங் காணாமல், உலர்ந்த மரம்போல் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்தவர்களிலே பலர் மிக எளிதாக முடிவுகட்டிவிட்டனர். மனிதன் சிற்றறிவு டையவன், சிறுவல்லமையுடையவன்; கடவுளே பேரறிவாளர். பேராற்றலுடையவர். ஆதலால், மக்களுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் கடவுள் தான்; அவனன்றி ஓரணுவும் அசையாது: அன்றெழுதினவன் அழித்தெழுதப்போவதில்லை; ஒவ்வொரு உயிரும் பிறக்கும்பொழுதே இவ்வுயிரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அதன் தலையிலே கடவுள் எழுதிவிடுகிறார்; அவ்வெழுத்தின்படியே அவ்வுயிரின் வாழ்க்கை அமைந்து விடுகின்றது. இதுவே மக்களுடைய இன்ப - துன்ப வாழ்வுபற்றிப் பலர் கூறும் காரணம். பெரும்பாலும் மதங்கள் கூறும் முடிவு இதுதான்; கடவுள் பக்தர்கள் காட்டும் காரணம் இதுதான்; மதத் தலைவர்கள். அவதார புருஷர்கள். புராண ஆசிரியர்கள். வேதாந்த சித்தாந்த தத்துவ ஆசிரியர்கள் எல்லோரும் இந்த முடிவுக்குத் தான் வருகின்றனர். இன்றும் இந்த முடிவே உண்மையானது என்று ஏற்றுக்கொள்வோர் பலருண்டு. மனிதன் வல்லமையற்றவன்; ஆண்டவன் கட்டளைப்படி தான் அவன் ஆடுகின்றான்; அவனுக்கென்ற தனியறிவோ தனியாற்றலோ ஒன்றுமில்லை என்ற இந்த முடிவு எந்தக் காலத்தில் எழுந்ததென்று தீர்மானிக்க முடியாது. மனிதன் எப்பொழுது அநாகரிகமான மிருகவாழ்க்கையைத் தாண்டி, நாகரிக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினானோ அந்தக் காலத்தில்தான் இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் உண்டாகியிருக்கவேண்டும். அப்பொழுது அவன் தன்னைப் பற்றி சிந்திக்கக் தொடங்கினான். தன்னைப் படைத்த ஒரு தலைவன் - இவ்வுலகத்தை, இவ்வுலகத்தில் உள்ள பொருள்களை உண்டாக்கிய ஒரு தலைவன் - இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். இந்த முடிவே மனிதன் முழு வல்லமையற்றவன் என்ற தீர்மானத்திற்கு காரணமாகும். ஆயினும் மக்கள் இத்தகைய முடிவை நம்பிச் சும்மா இருந்துவிடவில்லை. எல்லாம் தலைவிதியின்படிதான் நடக்கும். நாமேன் ஓடியாடி உழைக்க வேண்டும் என்று நினைத்து உறங்கி விடவில்லை. உழைத்தார்கள்: சிந்தித்தார்கள்; பல உண்மை களைக் கண்டறிந்தார்கள். இந்த உழைப்பும் சிந்தனையும் தாம் இன்று நாம் வாழும் நாகரிக உலகத்தை அமைத்திருக்கின்றது. ஆண்டவன் ஒருபுறம் இருந்தாலும், மக்களால் - மக்கள் உழைப் பால் - எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணமும் வளர்ந்து கொண்டே வந்தது. மக்கள் முயற்சிக்கு ஆண்டவன் குறுக்கே நிற்கமாட்டான் என்பதை மதவாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் தந்நம்பிக்கை உடையவர்களாய் வாழ்ந்தனர். மக்களுடைய வாழ்க்கையை மக்களாலேயே மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் அவர்களிடம் நிலைபெற்றிருந்தது. மக்களுடைய இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம் மக்களே தான் என்ற உண்மையை உணர்ந்திருந்தனர். இதை விளக்கும் புறநானூற்றுப் பாட்டு ஒன்று உண்டு. அதனைக் காண்போம். 2 கணியன் பூங்குன்றனார் என்பவர் ஒரு புலவர். இவருடைய வரலாற்றை அறிவதற்கான வழி ஒன்றும் இல்லை. இவருடைய பெயரைக் கொண்டு. இவர் சோதிடம் அறிந்தவர். பூங்குன்றம் என்ற ஊரிலே வாழ்ந்தவர் என்று மட்டும் தெரிகின்றது. கணிதம் என்றால் சோதிடம். கணிதத்திலே வல்லவன் கணியன். பூங்குன்றத்தை உடையவர் பூங்குன்றனார். பூங்குன்றம் என்பது ஊர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இவரால் பாடப்பட்டது. இப்பாடல் தமிழரின் தலைசிறந்த அறிவுக்கு ஒர் எடுத்துக்காட்டு: ஈடிணையற்ற நாகரிகத்திற்கு ஓர் நல்விளக்கு; தமிழரின் பரந்த நோக்கத்தையும் பண்பாட்டையும் பலர்க்கும் பறைசாற்றும் ஓர்பழந்தமிழ்க் கருவூலம். இப்பாடலின் பொருள் கீழ்வருவது: 3 எந்தக் குறிப்பிட்ட ஊரையும் எம்முடைய ஊர் என்று சொல்ல மாட்டோம்: குறிப்பிட்ட ஊரைத் தவிர ஏனைய ஊர்களை வேற்றூர் என்று எண்ணமாட்டோம். இவ்வுலகில் மக்கள் வாழும் எல்லா ஊர்களும் எம்முடைய ஊர்கள்தாம். இவ்வுலகில் வாழும் மக்களிலே இன்னார்தாம் எமது சுற்றத்தார்: அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் எமக்கும் எத்தகைய உறவுமில்லை என்று கூறமாட்டோம்: இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் எமது சுற்றத்தார்தாம். எமக்கு உண்டாகும் தீமையும், நன்மையும் பிறரால் உண்டா வனவல்ல: எமது சிந்தனை, எமது செய்கை இவற்றால் வருவன: துன்பமடைவதும், துன்பந்தீர்ந்து இன்புற்று வாழ்வதும் அவற்றைப் போன்றதுதான். அதாவது பிறரால் நாம் துன்புறுவ தில்லை: பிறரால் நாம் இன்புறுவதும் இல்லை. நம்முடைய எண்ணமும் நடத்தையுந்தான் இவைகளுக்குக் காரணம். இறத்தல் ஒரு அதிசயமன்று: பிறந்தவர் இறப்பது உண்மை யென்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்: ஆதலால் இறப்பு வருமோ என்று அஞ்சமாட்டோம். இதைப் போலவே வாழ்வு என்றும் நிலையுடையது, இன்பமுடையது என்று மகிழவும் மாட்டோம்: ஏதேனும் வெறுப்பு வந்தபோது, இதுவா வாழ்க்கை யென்று வெறுத்து, வாழ்க்கையைத் துன்பமுடைய தாகத் தீர்மானித்துச் சும்மாவிருக்கவும் மாட்டோம். மலைகளிலே மேகம் மின்னி மழை பெய்யும்போது, அந்த மழைத்துளிகள் ஒன்றுசேர்ந்து வெள்ளமாகிக் கற்பாறைகளைப் புரட்டித் தள்ளிக்கொண்டு ஆறாக நிலத்திலே ஓடும். அந்த வளம் கொழிக்கும் பேராற்றிலே ஓர் தெப்பத்தை - மிதவையை - மிதக்கவிட்டால், அது நீர் போகும் போக்கிலேயே செல்வதைக் காணுகின்றோம். இதைப் போலவே நமது உயிரும் நமது செயல்முறைப்படியே இன்பத்தையோ, துன்பத்தையோ அடையும், இந்த உண்மையைத் திறமை உடையவர்களின் செயல்களைக் கொண்டு கண்கூடாகக் கண்டறிந்திருக்கிறோம். ஆதலால் சிறந்த செயல்களைச் செய்கின்ற பெரியோர் களைக் கண்டு வியந்து புகழவும் மாட்டோம். அற்பச் செயல்களைச் செய்கின்ற சிறியவர்களைக் கண்டு இகழவும் மாட்டோம். அவரவர் சிந்தனை - செயலுக்கேற்ற பலனை அவரவர்கள் அநுபவிக்கின்றனர் என்ற எண்ணியிருப்போம். இதுவே கணியன் பூங்குன்றனார் பாடலில் அடங்கியுள்ள அரிய உண்மை. அந்தப் பாடல் கீழ்வருவது: யாதும் ஊரே: யாவரும் கேளிர்: தீதும் நன்றும் பிறர் தர வாரா: நோதலும் தணிதலும் அவற்றோ அன்ன: சாதலும் புதுவது அன்றே: வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே: மின்னொடு வானம் தன்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்: ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே: சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறநா.192) எலிமனிதரும் புலிமனிதரும் 1 முருங்கைக் கொம்பு மிகவும் மெல்லியது. காற்றடித்தால் கூடத் தானே முறிந்துவிடும். இத்தகைய முருங்கைக் கொம்பைப் பிடித்துக்கொண்டு மேலே தாவ முயற்சிப்பது ஆபத்து: கொம்பு மளமளவென்று முறிந்து மண்ணிலே வீழ்ந்து மண்டை நொறுங்கிவிடும். புளியங்கொம்பு சிறியதானாலும் பலமுடையது: பாரத்தைத் தாங்கும்: மடக்கென்று முறிந்துவிடாது: வளைந்து கொடுக்கும். ஆதலால் புளியங்கொம்பைப் பிடித்துக் கொண்டு மேலேதாவினால் ஆபத்தில்லை. ஆகையால், பிடித்தால் புளியங்கொம்பைப் பிடி என்ற பழமொழி வழங்குகிறது. மண் குதிரையை நம்பி ஆற்றிலிறங்காதே என்ற மற்றொரு பழமொழியும் உண்டு. ஆற்று வெள்ளத்தைக் கடக்க நீந்தத் தெரிந்த நல்ல குதிரையைத் துணைக்கொண்டால் வெள்ளத்தைக் கடக்க முடியும்: வெற்றியுடன் கரை சேர முடியும். நல்ல வண்ணந் தீட்டி அழகாக வைக்கப்பட்டிருக்கும் மண்குதிரையைப் பிடித்துக் கொண்டு ஆற்றிலிறங்கினால் அவன் கதியென்ன? ஆற்று வெள்ளத்தின் அடிவயிற்றுக்கு உணவாகவேண்டியதுதான். இவை எல்லாம் பழைய காலத்துப் பழமொழிகள். இப்பழமொழிகள் ஏன் ஏற்பட்டன? இவற்றின் கருத்தென்ன? வலியாரைத் துணைக்கொள். உள்ளத்திலே உரமும், செயலிலே உறுதியும் உடையவர்களைத் துணையாகக் கொள். வாழ்விலே வெற்றி பெறுவதற்கு இதுதான் வழி. உறுதியுள்ள துணைவர்களின் ஒத்தாசை யிருந்தால் தான் உயர்ந்த காரியங்களைச் சாதிக்க முடியும்; எடுத்துக்கொண்ட எச்செயல்களையும் தோல்வியின்றி முற்றுப்பெற முடிக்க முடியும். கோழைகளைத் துணைக்கொள் வதிலே பயனில்லை: கோழைகளின் நட்பால் கொஞ்சமும் பயன் பெறமுடியாது: ஆபத்துக் காலத்தில் அவர்களால் ஒரு பயனும் கிட்டாது. இந்த உண்மைகளை விளக்குவதற்கே மேலே கண்ட பழமொழிகள் எழுந்தன. இதுபோன்ற உண்மைகளை விளக்கிக் கூறும் பாடல்கள் பல உண்டு. இக் கட்டுரையிலே அத்தகைய பாடல்களில் ஒரு பாடலைக் காண்போம். 2 சோழன் நல்லுருத்திரன் என்பவன் ஒரு சிறந்த புலவன். இவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னவனாக இருந்திருக்க வேண்டும். இவன் ஒரு சிறந்த புலவன் என்ற அளவிலேதான் இவன் பெயர் தெரிகின்றது. கலித்தொகையிலே உள்ள முல்லைக் கலி இவனால் பாடப்பட்டது. அது பதினேழு பாடல்களைக் கொண்டது. இவனால் பாடப்பட்ட மற்றொரு பாடல் புறநானூற்றின் நூற்றுத் தொண்ணூறாவது பாடல். அப்பாடல் சிறந்த அனுபவ முதிர்ச்சி வாய்ந்த பாடல். எப்படிப் பட்டவருடன் நட்புக்கொள்ள வேண்டும்? எப்படிப் பட்டவருடன் நட்புக் கொள்ளக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லுகிறது அப்பாடல். இந்தப் பாடலின் ஆசிரியராகிய சோழன் நல்லுருத்திரன் உவமை கூறுவதில் வல்லவர். இவர் கூறும் உவமைகள் நகைச்சுவை பொருந்தியதாக இருக்கும். இப்பாட்டில் தள்ளத் தக்க நட்பிற்கும், கொள்ளத்தக்க நட்பிற்கும் கொடுத்திருக்கும் உதாரணம் மிகவும் அழகானது. மக்களை இருவகையினராகப் பிரித்து ஒரு வகை யினரைத் தள்ளத்தக்கவர் என்று காட்டுகிறார். மற்றொரு வகையினரைக் கொள்ளத்தக்கவர் என்று கூறுகிறார். இந்த இரு வகையினருக்கும் இட்டிருக்கும் பெயர்தான் வேடிக்கையானது. ஒரு வகையினர் எலிமனிதர்; மற்றொரு வகையினர் புலிமனிதர். எலிமனிதர்களின் நட்பு நன்மை தராது; தள்ளத்தக்து. புலிமனிதரின் நட்பே புகழும் பெருமையும் தரக் கூடியது; இவர்களுடைய நட்பே கொள்ளத் தக்கது. எலி, சிறுமுயற்சி யுடையது: பதுங்கியுறையும் வாழ்க்கையை யுடையது. அது தன் சிறுமுயற்சியால் பெற்ற பொருளையும் பிறருக்கு உதவாது: மறைத்து வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக உண்ணும். புலியோ எலிக்கு மாறுபட்ட வாழ்க்கையுடையது. புலி தன் உணவுக்காக வேட்டையாடும் போது அதன் வேட்டைப் பிராணி இடது பக்கத்திலே வீழ்ந்தால் அதை உண்ணாமல் பட்டினி கிடக்கும். அதனால் உள்ளம் சோர்வடையாமல் அடுத்த நாள் ஒரு ஆண் யானையை அடித்துத் தனது வலப்பக்கத்திலே வீழ்த்தி அதை உண்ணும். திருடியாவது, பதுக்கி வைத்தாவது வயிறு வளர்க்கும் தன்மையுடையது எலி: மானங்கெடாமல், வீரத்திற்கு இழுக்கு வராமல் வாழ்வு நடத்துவது புலி, ஆதலால், எலி போன்ற மனிதர் நட்பை ஒருநாளும் நாடக்கூடாது: புலி போன்ற மக்களின் நட்பையே எந்நாளும் நாடி நிற்கவேண்டும். இந்தக் கருத்தையே நல்லுருத்திரன் பாடல் நவில்கின்றது. அந்தப் பாடலின் பொருள் கீழ்வருவதாகும். 3 வயற்புறத்திலே வாழும் எலி நன்றாக விளைந்திருக்கும் இடத்தைத் தேடிப் பிடிக்கும். நன்றாக விளைந்திருக்கும் இடம் சிறிய இடமா? பெரிய இடமா? என்பதைப்பற்றி அதற்குக் கவலையில்லை. சிறிய இடமாயிருந்தாலும் அந்த நெல்வயலிலே முற்றித் தலைசாய்ந்திருக்கும் நெற்கதிரைக் கண்டால் விடாது. அதையே தனக்கு உணவாகக் கொள்ளும். அக்கதிரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொய்துகொண்டுபோய்த் தனது வளையிலே நிறையச் சேர்த்து வைக்கும்: பிறர் காணாதபடி பதுக்கி வைக்கும். அப்படிப் பதுக்கி வைக்கும் நெற்கதிர்கள் மண்னோடு மண்ணாய் மக்கி மறைந்து போனாலும் போகுமே யன்றிப் பிறர்க்குப் பயன்படாது. இந்த எலியைப் போன்ற சிறிய முயற்சியை உடைய மக்களுண்டு. அவர்கள் தமது சிறுமுயற்சியால் சேர்க்கும் செல்வத்தைத் தாமும் நுகரமாட்டார்: பிறர்க்கும் உதவமாட்டார். கெட்டியாகத் தமது செல்வதைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். பிறருக்கு உதவவேண்டுமென்ற உள்ளம் இவரிடம் இராது. இத்தகைய எலிமனிதர்களிடம் எவ்வகையிலும் நட்பே கூடாது. இவ்வினத்தாரின் நட்பு எனக்கு நேராமல் இருக்க விரும்புகிறேன். உணவை விரும்பி வேட்டையாடச் சென்ற புலி தன்னெதிரிலே சென்ற ஆண்பன்றியைச் சந்திக்கின்றது. அந்தப் பன்றி அஞ்சாத ஆண்மையுடையது: அடங்காத முரட்டுத் தனமுடையது. புலி அப் பன்றியை அடித்துச் சாய்க்கும்போது அது அப் புலியின் இடது பக்கத்திலே வீழ்ந்து விட்டது. புலி தனது இடது பக்கத்திலே வீழ்ந்த பிராணியைத் தின்னாது: அடிப்பட்டுத் தனது வலது பக்கத்தில் விழுந்த பிராணியைத்தான் தின்னும். இது புலியின் வீரத் தன்மை யென்று இலக்கியங்களிலே சொல்லப்படுகின்றது. ஆதலின் பசியோடிருந்த அப் புலி தன் இடது பக்கத்திலே வீழ்ந்த பன்றியைத் தின்னாமல் தனது குகைக்குத் திரும்பிவிடுகின்றது. அன்று வேறு உணவே உட்கொள்ளாமல் பட்டினி கிடக்கின்றது. இரவு முழுவதும் பட்டினிதான். அப்புலி அடுத்தநாள் எழுந்து. குகையைவிட்டுப் புறப்பட்டு இரைதேடச் செல்லும், பெரிய ஆண்யானையைத் தனது வலது பக்கத்திலே சாயும்படி அடித்து வீழ்த்தி அதைத்தான் உணவாக உட்கொள்ளும். தான் உண்டது போக மற்ற மாமிசப் பகுதியை நாய், நரி, கழுகுகள் உண்ணும்படி விட்டுவிட்டு வந்துவிடும். எவ்வளவுதான் பசித்தாலும் புலி தனது மானத்தை யிழக்காது: வீரத்தை விடாது. இதனால் தான் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று புலியின் வீரத்தைப் புகழ்ந்து பேசினர். இத்தகைய புலி போன்ற உள்ளமும், உரனும் உடையவர் களின் நட்பே சிறந்தது: இத்தகையவர்களின் நட்புத்தான் எனக்குக் கிடைக்கவேண்டும். இவர்களுடைய நட்பு எந்நாளும் தொடர்ந்திருக்க வேண்டும். என்னை விட்டுப் பிரியாமலிருக்க வேண்டும். இதுவே எனது ஆவலாகும். இது 12 வரிகள் கொண்ட அந்தச் சிறிய பாடலில் அடங்கி யிருக்கும் பொருள். 4 விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டு, அளைமல்க வைக்கும் எலி முயன் றனையர் ஆகி, உள்ள தம் வளன்வலி யுறுக்கும் உளம் இலாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ கடும்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றுஅவண் உண்ணாது ஆகி, வழிநாள் பெருமலை விடர் அகம் புலம்ப, வேட்டெழுந்து இரும்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ (புறநா.190) நன்றி மறப்பது நன்றன்று 1 உறையூரிலே வாழ்ந்து அரசாண்ட சோழ மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவன் ஒருவன். இவன் சிறந்த வீரன். கல்வியிற் சிறந்தவன். கவி பாடும் ஆற்றலும் உள்ளவன். இவன் காலத்தில் கருவூரிலே ஒரு சேர மன்னன் அரசாட்சி செய்துவந்தான். அவனுடன் இவன் போர் செய்து வெற்றி பெற்றான். இக் கிள்ளிவளவன் தமிழ்ப் புலவர்களிடம் பேரன்பு படைத்தவன். தன்னிடம் வந்த புலவர்களையெல்லாம் தளர்ச்சி யடையாமல் ஆதரித்துவந்தான். சிறந்த கொடைவள்ளல், பாணர்கள், கூத்தர்கள் போன்ற கலைஞர்களையும் காப்பாற்றி வந்தான். பாணர்கள் தங்கள் சுற்றமுடன் அமர்ந்து சோறுண்ணும் போது இக் கிள்ளிவளவன் புகழைப் பாடிக்கொண்டே சோறுண் பார்களாம். ஆலத்தூர் கிழார், மறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார். ஐயூர் முடவனார், கோவூர் கிழார், நல்லிறையினார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார். வெள்ளைக்குடி நாகனார் என்ற பத்துப் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். இவர் களுடைய பாடல்களிலே இம்மன்னனுடைய அறிவு, ஆற்றல், இரக்கம், ஈகை வள்ளல்தன்மை ஆகியவற்றை விரிவாகக் காணலாம். இறுதியாக இவன் குளமுற்றம் என்ற ஊரிலே இறந்து போனான். ஆதலால் இவனைப் பிற்காலத்தினர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் வைத்து அழைத்தனர். இவன் இறந்தபின் இவன் பிரிவைப் பொறுக்க மாட்டாமல் மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்ற மூன்று புலவர்களும் வருந்திப் பாடினார். இப்பெரும்புகழ் பெற்ற கிள்ளிவளவனைப்பற்றி ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடிய பாட்டு ஒன்று மிகவும் அருமை யானது. மனிதத் தன்மையைப்பற்றி அப்பாடல் விரித்துக் கூறுகிறது. ஒரு சமயம் ஆலத்தூர் கிழார் கிள்ளிவளவனைச் சந்தித்து உள்ளம் ஒன்றுபட்டு அளவளாவியிருந்தார். பின்னர் அவனிடம் விடைபெற்றுப் பிரிந்து செல்லத் தொடங்கினார். புலவர் பிரிவைப் பொறுக்கமாட்டாத மன்னன் கிள்ளிவளவன் மனங் கலங்கினான். புலவரை நோக்கி, மீண்டும் என்னைப் பார்க்க வருவீரோ என்னைப் பற்றிய நினைவு உமக்கு வருமா? என்று கேட்டான். அச்சமயத்தில் தான், புலவர், மனிதப் பண்பை விளக்கும் ஒரு பாடலைப் பாடினார். எந்த நன்றியை மறந்தாலும் தீமையடையாமல் தப்பித்துக் கொள்ளலாம்: ஆனால் பிறர் செய்த நன்றியை மறந்தால் அதனால் வரும் தீமைக்குப் பரிகாரமே இல்லை என்ற கருத்துள்ள பாடலைப் பாடினார். செய்நன்றி மறப்பது மனிதத் தன்மை யன்று என்ற கருத்தை அப்பாடலிலே வலியுறுத்திக் கூறினார். இவ்வாறு கூறியதன்மூலம் அரசே நீ செய்த நன்றியை என்றும் மறவேன். மீண்டும் வருவேன்: அளவளாவி அகமகிழ்வேன் என்று தெரிவித்தார். 2 செய்ந்நன்றியறிதல் என்பது தமிழர் பண்பாட்டினுள் சிறந்ததொரு பகுதி, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வு இல்லை, செய்நன்றி கொன்ற மகற்கு என்பது திருக்குறள். எந்த நன்றியை மறந்தவர்க்கும் தப்பித்துக் கொள்ள வழியுண்டு, ஆனால் பிறர்செய்த நன்றியை மறந்த மனிதனுக்கு உய்யும் வழி ஒன்றுமேயில்லை என்பதே இக் குறளின் பொருள். பிறர் செய்த நன்றியை ஏன் மறக்கக் கூடாது என்பதைச் சிறிது சிந்தனை செய்து பார்த்தால் உண்மை விளங்கும். பிறர் நன்றி செய்தார் என்பதற்காக அவரை எண்ணி வணங்கி வாழ்வது மட்டும் போதாது : அல்லது அவருக்குப் பணிவிடை செய்து கைகட்டி நின்று வாழ்ந்துவிடுவதால் மட்டும் கடமை தீர்ந்து விடாது. நன்றி செய்த அவர் இறந்தபின் நாம் அவருக்குச் செய்யும் உதவி ஒன்றும் இல்லை. பிறர் தமக்கு நன்றி செய்தது போலத் தாமும் பிறர்க்கு நன்றி செய்யவேண்டும். இதுதான் நன்றி மறவாமையால் ஏற்படும் நன்மை. ஒவ்வொரு மனிதனும் பிறர்க்கு நன்றி செய்வதே நம் கடமை என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருவார்களானால் இவ்வுலகில் எந்தத் தீமைகளும் தலைநீட்ட முடியாது. மனித சமுதாயம் ஒன்றுபட்டு அன்பினாற் பினைந்து ஆறுதல் பெற்று வாழும். நன்றியை மறப்பது - பிறர் செய்யும் உதவியை, நன்மையை மறந்துவிடுவது - நன்றாகாது: பிறர் செய்த தீமையை - நன்மைக்கு மாறானதை - அப்பொழுதே மறந்து விடுவது நன்று என்று வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகின்றார். நன்றி மறப்பது நன்று அன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று என்பதே அக்குறள். பிறர் செய்த நன்றியை மறவாமல் சிந்தித்தால் அச் சிந்தனை நம்மையும் நன்மை செய்யத் தூண்டும், பிறர் செய்த தீமையை மறந்துவிடாமல் அதைப் பற்றியே சிந்தித்தால் அச் சிந்தனை நம்மைத் தீமையைத்தான் செய்யத் தூண்டும். ஆகையால் தான் நன்றியை மறந்துவிடாதே: தீமையை உடனே மறந்துவிடு என்று கூறினார் வள்ளுவர். இந்த நன்றியறிதலைப்பற்றித் திருக்குறளில் ஒரு தனி அதிகாரமே கூறப்பட்டுள்ளது. நன்றியறிதலின் சிறப்பை விளக்கிக் கூறும் ஆலத்தூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலுக்குத் திருக்குறளில் உள்ள செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தை ஒரு விரிவுரையாகக் கொள்ளலாம். எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையிலே இந்தப் புறநானூற்றுப் பாடல் - ஆலத்தூர் கிழார் பாடலே மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சிறந்த பாடல் புறநானூற்றின் முப்பத்துநான்காவது பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலில் பொதிந்துள்ள பொருளைக் கீழே காண்போம். 3 மனித சமுதாயத்திற்குச் சிறந்த நன்மையைச் செய்யும் பிராணிகளுக்குள்ளே பசு தலைசிறந்தது. அது தனது பாலினால் குழந்தைகளையும், மாந்தரையும் வளம்பெற்று வாழச் செய்கின்றது. இப்படிப்பட்ட பசுவின் பால்கொடுக்கும் காம்பை அறுக்கும் ஒருவன் கொடும்பழி செய்தவனாவான். இத்தகைய பழியைச் செய்தவர்களும் தப்பித்துக்கொள்ள முடியும். பெண் களின் கருவைச் சிதைப்போர் பெரும்பழிக்கு ஆளாவார்கள். அத்தகைய பெரும்பழியைச் செய்தவர்களும் தப்பிப் பிழைக்க வழியுண்டு. கல்வி யறிவுடையவர்களாய் - தந்நலமற்றவர்களாய் - மக்கள் அனைவரும் முன்னேறும் வழிகளை ஆராய்ந்து பார்ப் பவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர். மக்கள் முன்னேறுவதற்கு வழிகாட்டும் தமிழர் சமூகத் தலைவர்களையே பண்டைத் தமிழர்கள் பார்ப்பார். அந்தணர், ஐயர் என்ற பெயர்களால் குறிப்பிட்டனர். இத்தகைய பார்ப்பார்க்குத் துன்பம் செய்த கொடியவர்களும் குற்றத்தினின்றும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த நிலமே தலைகீழாகப் புரண்டாலும் சரி, பிறர் செய்த நன்றியை மறத்தல் கூடாது. அப்படி மறக்கின்ற வனுக்கு எக்காலத்திலும் உய்யும் வழியே கிடையாது. அவன் எக்காலத்திலும் இன்பத்தை எட்டிப் பார்க்கமாட்டான். துன்பமாகிய நரக வேதனையால் நாசமடைவான். இவ்வாறு அறநூல்கள் எல்லாம் முழங்கியிருக்கின்றன. பாணர்கள் தங்கள் சுற்றமுடன் இலந்தை மரங்கள் நிறைந்த மன்றங்களின் கீழே தங்கியிருக்கின்றனர். அவர்கள் காலையிலும் மாலையிலும் தங்கள் உணவைச் சமைக்கின்றனர். செழிப்பற்ற நிலைத்திலே விளைந்த வரகுடன் பாலும் ஊற்றிச் சமைக்கின்றனர். அவ்வாறு சமைத்த சோற்றைத் தேனோடு கலந்து சிறிய கொழுத்த முயற்கறியுடன் சேர்த்து உண்ணுகின்றனர். அவர்கள் உண்ணும் போது வஞ்சகமற்ற உள்ளத்துடன் தாங்கள் விரும்பிய மொழிகளை யெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஆரவாரத்துடன் நல்ல சோற்றை அவர்கள் உண்ணும்படி உன்னுடைய குறையாத செல்வம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து இருக்கிறாய் நீ. இத்தகைய சிறந்த கொடையாளன் எமது மன்னவனாகிய சோழன் என்று நான் பாடாமலிருப்பேனா எமது சுற்றத்தாரை யும் எம்மையும் பாதுகாக்கும் சோழன் வாழ்க! வாழ்க! என்று எந்நாளும் இசை பாடுவேன். உன்னுடைய பெருமையும் வலிமையும் நிறைந்த முயற்சியை நான் பாடாமலிருப்பேனாயின் என்னைப் பொறுத்த வரையிலும் சூரியன் உதிக்காதவனாகவே கருதப்படுவான். உன்னைப்பற்றிப் பேசாத நாளெல்லாம் எனக்குப் பிறவாத நாளாகவேயிருக்கும், யான் உன்னையே தஞ்சமாக அடைந்திருக்கிறேன். பெருமையுடையவனே நீ நீடுழி காலம் உயிர்வாழ வேண்டும். உனது புகழ் நின்று நிலவவேண்டும். அறிவும் ஒழுக்கமு முடைய பெரியோர்கள் செய்த நன்மை இவ்வுலகில் நிலைத் திருப்பது உண்மையானால் நீ நீடூழி காலம் வாழவேண்டும இமயமலையின் உச்சியிலே மேகங்கள் கூடிநின்று இனிதாக ஓசையிட்டுப் பொழிந்த நுண்மையான மழைத்துளிகளைக் காட்டிலும் எண்ணற்ற காலம் நீ நிலைத்து வாழ்க! ஆலத்தூர் கிழார் பாடலில் அமைந்துள்ள பொருள் இது தான். நன்றியறிதலின் சிறப்பைத் தமிழ் நூல்கள் - அறநூல்கள் - சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கின்றன என்பதைப் புலவர் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். இத்தகைய பாடலைக் பாருங்கள். 4 ஆன்முலை அறுத்த அறன்இல் லோர்க்கும், மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என அறம் பாடிற்றே; ஆயிழை கணவ! காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருஅன்ன புன்புல வரகின் பால்பெய் புன்கம் தேனோடு மயக்கிக் குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு இரத்தி நீடிய அகன்றலை மன்றத்துக் கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் எம்கோன் வளவன் வாழ்க! என்றுநின் பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின் படுபு அறியலனே பல்கதிர்ச் செல்வன்; யானோ தஞ்சம்! பெரும! இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றி கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே. (புறநா.34) துணிவு கொள் 1 பழந் தமிழ்ப் புலவர்கள் நீதிவழியை மறவாதவர்கள்: உண்மைக்குப் போர்புரியும் உள்ளமும், உரமும் கொண்டவர்கள்; அறம் இது, மறம் இது என்பதை ஆராய்ந்தறியும் அறிவுள்ளவர்கள்: மறத்தை வெறுத்துத் தள்ளி, அறத்தின் வழியிலே நடக்கும் ஆற்றல் உள்ளவர்கள். இதனை விளக்குகிறது இக் கட்டுரை. பண்டைப் புலவர்கள், அரசர்கள் ஆதரவிலே வாழ்ந் தார்கள்; வள்ளல்கள் உதவியால் வாழ்ந்தார்கள். ஆயினும் அவ்வரசர்கள், அவ்வள்ளல்கள் தவறு செய்யும்போது பொறுத் திருக்க மாட்டார்கள். தம்மை ஆதரிப்பவர்களுக்கு வெறுப்பு வரும்படி நடந்து கொண்டால் அவர்களால் கிடைக்கும் நன்மை கிடைக்காமற் போய்விடுமே என்று கவலைப் படமாட்டார்கள். உண்மையென்று எண்ணியதை உரைக்காமலிருக்க மாட்டார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இன்புற்று வாழவேண்டு மென்பதே அவர்களுடைய குறிக்கோள். பொதுமக்கள் துன்புறும் படியான செயல்களிலே யார் தலையிட்டிருந்தாலும் சரி. அவர்களுக்கு அறிவுரை கூறி, நல்வழியிலே நடத்துவதே அக்காலப் புலவர்களின் நோக்கம். இதைச் செய்ய அவர்கள் பின்வாங்குவதே யில்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைப் பண்டைத் தமிழ்ப் பாடல்கள் விளக்கிக் கூறுகின்றன. அவற்றுள் ஒரு நிகழ்ச்சியை இப்போது காண்போம். நெடுங்கிள்ளி என்பவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவன். ஆவூரும், உறையூரும் இவனுடைய தலைநகரங்களாயிருந்தன. காரியாற்றுத் துஞ்சி நெடுங்கிள்ளி என்ற பெயரும் இவனுக் குண்டு. இப்பெயர் இவன் இறந்தபின் ஏற்பட்ட பெயர். காரியாறு என்ற இடத்திலே இவன் இறந்து போனான்: ஆதலால் இவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று குறிப்பிட்டனர். சோழன் நலங்கிள்ளி என்பவன் இவனுக்கு விரோதி, பங்காளி என்ற முறையிலே பகைவன். நெடுங்கிள்ளி உறையூரில் வாழ்ந்த போது அந்த நகரை நலங்கிள்ளி முற்றுகை யிட்டான். அப்போது நெடுங்கிள்ளி நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வில்லை. கோட்டைக்குள் பதுங்கியிருந்தான். கோட்டைவாயில் அடை பட்டிருந்தது. அச் சமயம் கோவூர் கிழார் என்னும் புலவர் சென்று கோட்டைவாயிலைத் திறக்கும்படி செய்தார். நெடுங்கிள்ளி ஆவூரில் வாழ்ந்தபோதும், நலங்கிள்ளி அவ்வூரை முற்றுகையிட்டான். அப்பொழுதும் அவன் கோட்டை வாயிற்கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளேயே இருந்தான். முற்றுகை நீடித்தது. நலங்கிள்ளியின் படைகள் கோட்டைக்கு வெளியிலே நிற்கின்றன. கோட்டைக்கு உள்ளே வாழும் மக்களுக்கும் வெளியில் வாழும் மக்களுக்கும் தொடர்பு விட்டுப்போயிற்று. உண்ணும் உணவின்றி, அருந்தும் நீரின்றிக் கோட்டைக்குள்ளிருந்தோர் வருந்தினர். அங்கிருந்த யானை போன்ற விலங்குகளும் உணவு கிடைக்காமல் பசிப்பிணியால் வருந்தி அலறிக்கொண்டிருந்தன. மகளிரும், குழந்தைகளும் சோர்ந்து விட்டனர். வீடுதோறும் உணவில்லை: நீரில்லை. பசி பசி என்ற புலம்பல்கள் பெருக்கெடுத்தன. இந்த நிலையிலும் நெடுங்கிள்ளி அசைந்து கொடுக்க வில்லை. அவன் அரண்மனையை விட்டு வெளியேறவில்லை. அடைத்த கோட்டைவாயில் அடைத்தபடியே கிடந்தது. கோவூர் கிழார் என்னும் புலவர் இச்செய்தியை அறிந்தார். விரைந்தோடி வந்தார் கோட்டைக்குள் புகுந்தார். நெடுங்கிள்ளியைக் கண்டார். அவனுக்கு அறிவுரை தெளித்தார். நலங்கிள்ளியின் முற்றுகைக்கு முடிவு கட்டினார். ஆவூர் பொதுமக்களின் துயரத்தைப் போக்கினார். அவர்கள் எப்பொழுதும் போல் எல்லாச் செல்வங்களும் பெற்று இன்பவாழ்வு நடத்தும்படி செய்தார். இவ்வரலாற்றைப் புறநானூற்றின் நாற்பத்து நான்காவது பாடலால் அறியலாம். 2 நலங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்கு வெளியே முற்றுகை யிட்டிருக்கின்றான். நெடுங்கிள்ளியோ பேசாமல் தனது அரண் மனையில் பதுங்கிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு பல நாட்கள் கடந்துவிட்டன. இச் சமயத்தில் கோட்டைக்குள் நுழைந்தார் கோவூர் கிழார் என்னும் புலவர். அவர் நெடுங்கிள்ளியைப் பார்த்துச் சொல்லுகிறார். நெடுங்கிள்ளியே! நீ மட்டும் கோட்டைக் கதவையும் தாளிட்டுவிட்டு அரண்மனைக்குள் துன்பமில்லாமல் வாழ்கின்றாய். இந்த ஆவூர் மக்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைக் கூடப் பார்க்காமல் பதுங்கி வாழ்கின்றாய். உன்னுடைய ஊரில் உள்ள யானைகள் வழக்கம்போல் பெண்யானைகளுடன் சென்று நீராடவில்லை. அவை எப்போதும் உண்ணும் நெற்கவளத்தையும் உட்கொள்ளவில்லை. நெய் சேர்த்துச் செய்யப்பட்ட சோற்றுக் கவளத்தையும் உட்கொள்ள வில்லை. குளிக்காமையாலும், உணவுண்ணா மையாலும் உண்டான துன்பத்தைத் தாங்க முடியாமல் அவை தம்மைப் பிணித்திருந்த வலிமையுள்ள கம்பங்களை முறித்து விட்டன: அவற்றைக் கீழே சாய்த்துவிட்டன. நிலத்திலே வீழ்ந்து புரளும் கைகளையுடைய அந்த யானைகளின், துயரம் அளவற்றது. அவை பெருமூச்சு விட்டுக் கொண்டு, இடிபோல் முழங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அழுகின்றன. தாய்மார்கள் நன்றாக உண்டு உடல்நலம் பெற்றிருந்தால்தானே குழந்தை களுக்குப் பால் கிடைக்கும்? தாய்மார்கள் எல்லாம் உணவின்றி உடல் வற்றிக் கிடக்கும்போது குழந்தைகளுக்குப் பாலேது? மாடுகள் வெளியிலே போய் மேய்ந்து திரும்புவதற்கு வழியில்லை: இக்காரணத்தால் பசுக்களும் பால் கொடுக்கவில்லை. ஆகையால் குழந்தைகள் பசிநோய் தாங்காமல் அழுது துடிக்கின்றன. பெண்கள் வழக்கப்படி தங்களை அலங்கரித்துக் கொள்ள முடியவில்லை. தலையில் வைத்து முடிப்பதற்கேற்ற மலர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் பூவில்லாமல் வெறுங் கூந்தலையே அள்ளி முடித்துக் கொள்ளுகின்றனர். நல்ல வேலைப்பாடமைந்த வீடுகளிலே வாழ்வோர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்; அதனால் வருந்திக் கதறுகின்றனர்; தண்ணீர்! தண்ணீர்! என்று அலறுகின்றனர்: அழைக்கின்றனர். இந்த அழைப்பு - கூப்பாடு - உன் காதில் விழாமல் இல்லை: விழுந்தும், நீ இங்கே சேவிடன்போல இருக்கிறாய்! நீ மட்டும் உண்டு மகிழ்ந்து வாழ்கின்றாய்! உனது செய்கை மிகவும் கொடுமையானது: பொதுமக்களால் வெறுக்கக் கூடியது, நீ இப்படிப் பதுங்கியிருப்பது அறமா என்பதை ஆலோசித்துப் பார்! நீ வலிமையற்றவனும் அல்லன், பகைவர்கள் உன்னுடன் போர் செய்ய அஞ்சும் உடல்வலிமையுள்ளவன்: வெற்றியைத் தரும் குதிரையையும் உடையவன்: வீரன் என்ற புகழும் பெற்றவன். இப்படிப்பட்ட நீ, ஏன் கோழையைப்போல் கோட்டைமதிலை அடைத்துவிட்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய்! இந்தப் போரை நாம் நடத்த வேண்டாம். போர் நடத்திப் பொருளுக்கும், மக்களுயிர்க்கும் அழிவை ஏற்படுத்துவதை விடச் சமாதான வழியை நாடுவதே நலம். நாம் ஆண்டால் என்ன நமது குடியிலே பிறந்த மற்றொருவன் ஆண்டால் என்ன? நலங் கிள்ளியே இந்த ஆவுரில் இருந்து ஆளட்டும். எப்படியாவது மக்கள் துன்பமின்றி இன்பமுற்றிருந்தால் போதும் என்று நினைப்பா யானால், இத்தகைய அறச்சிந்தை யுள்ளவனாயின், இவ்வூர்க் கோட்டைவாயிலை இப்பொழுதே திறந்துவிடு. இந்த ஆவூர் உனக்கே உரியது: எடுத்துக் கொள் என்று சொல்லித் திறந்துவிடு. அல்லது வீரமுள்ளவனாயிருந்தால், நீயும் உன் படை களுடன் கோட்டைவாயிலுக்குப் போ. கோட்டைக் கதவைத் திறந்து நெடுங் கிள்ளியுடன் எதிர்நின்று போர் செய்! இந்த இரண்டில் ஒன்றுதான் நீ செய்ய வேண்டிய வேலை. அறங் கருதியும் கோட்டைவாயிலைத் திறக்கவில்லை: வீரமாகிய மறங் கருதியும் போர் செய்வதற்கும் கோட்டை வாயிலைத் திறக்கவில்லை. அறத்தையும் பின்பற்றாமல் மறத்தை யும் மேற்கொள்ளாமல் வலிமையான கோட்டைக் கதவைக் கெட்டியாக மூடிவிட்டாய். உயர்ந்த மதில் சூழ்ந்த கோட்டைக் குள்ளே ஒரு புறத்திலே பதுங்கிக் கிடக்கின்றாய்! இச்செயலை எண்ணிப்பார்த்தால் இது உனக்கு நாணத்தைத் தரவில்லையா? இது மிகவும் நாணமுள்ள செயல் உன் போன்ற வீரர்கள் செய்யக் கூடியதன்று: வீரர் பரம்பரையிலே வந்தவர்களுக்கு ஏற்ற செயலும் அன்று. இதுவே கோவூர் கிழார் பாட்டில் அடங்கியிருக்கும் பொருள். 3 இரும்பிடித் தொழுதியொடு பெரும்கயம் படியா நெல்உடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்து அரை நோன்வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து அலமரல் யானை உரும்என முழங்கவும், பால்இல் குழவி அலறவும், மகளிர் பூஇல் வறும்தலை முடிப்பவும், நீர்இல் வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம! ஈங்குஇனிது இருத்தல்: துன்அரும் துப்பின் வயமான் தோன்றல்! அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்: மறவை ஆயின் போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்நிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவு உடைத்துஇது, காணுங் காலே. (புறம் 44) இரத்தலும் ஈதலும் 1 இவ்வுலகில் நன்மை செய்வோர், இறந்தபின் சுவர்க்கம் பெறுவர்: அந்தச் சுவர்க்கத்திலே அவர்கள் விரும்பிய இன்பங் களையெல்லாம் அடைவார்கள். சுவர்க்கத்தில் ஏழைகள் இருக்க மாட்டார்கள். பணக்காரர்கள் இருக்கமாட்டார்கள்: கொடுப்போர் இருக்க மாட்டார்கள். கொள்வோரும் இருக்கமாட்டார்கள்; இரப்போரும் இல்லை, ஈவோரும் இல்லை: உயர்ந்தோரும் இல்லை, தாழ்ந்தோரும் இல்லை, எல்லோரும் எல்லாச் செல்வங் களையும் பெற்று இன்பம் அடைந்திருப்பார்கள். இதுவே சுவர்க்கத்தைப் பற்றிக் கூறப்படும் புனைந்துரை. உயர்வு தாழ்வுள்ள சமுதாயத்திலே - ஏழை பணக்காரர்கள் நிறைந்த சமுதாயத்திலே - இத்தகைய சுவர்க்கம் இன்பம் அற்றது என்று எண்ணினர், இரப்போரும், ஈவோரும் உள்ள இவ் வுலகந்தான் இன்பம் உள்ளது. இரத்தலிலும் இன்பம் உண்டு: ஈவதிலும் இன்பம் உண்டு. இவை இரண்டும் இல்லாத ஒரு உலகத்தில் இன்பம் ஏது என்று எண்ணியவர்கள் உண்டு. இவ்வெண்ணம் அவர்களுடைய உண்மையான உள்ளக் கருத்தன்று. அவர்கள் இப்படி எண்ணியதற்குக் காரணம் உண்டு. அக்காரணந்தான் என்ன? செல்வர்களும், ஏழைகளும் நிறைந்த சமுதாயத்தில், ஏழைகள் சிறிதாவது உலக இன்பத்தை நுகரவேண்டுமானால் செல்வர்கள் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். செல்வர்கள் அவர்களுக்கு உதவி செய்தால்தான் ஏழைகளுக்கும் நன்மை யுண்டு: செல்வர்களும் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இரத்தலும் ஏற்றலும், கொடுப்பதும் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றால்தான் இல்லாதவரும், உள்ளவரும் அமைந்த சமுதாயம் நிலைத்து நிற்கும். இந்தக் கருத்துடன்தான் ஈதலும் இரத்தலும் உள்ள உலகமே இன்பம் நிறைந்த உலகம் என்று சொல்லிவந்தனர். உயர்வு தாழ்வுள்ள சமுதாய அமைப்பில் இப்படிச் சொல்லவேண்டிய நிலைமை புலவர்களுக்கும், அறிஞர் களுக்கும் இருந்தது. துறக்கத்தைப் போன்ற நிலைமை - அங்குள்ள சமத்துவமாக சமுதாய நிலைமை - இவ்வுலகத்திலும் ஏற்படவேண்டும் என்ற கிளர்ச்சியிலே பொதுமக்கள் இறங்கிவிட்டால் நாட்டில் சமாதானம் நிலவாது. கலகமும் குழப்பமுந்தான் குடிகொள்ளும். ஆதலால் அத்தகைய கலகமும் குழப்பமும் தோன்றாமலிருக்கவே சமத்துவம் உள்ள சுவர்க்கத்தைவிட, இரப்போரும் ஈவோரும் உள்ள இவ்வுலகமே இன்பமுடையது என்று சொல்லி ஏழைகளின் வாயை அடைத்துவந்தனர் என்றும் கருலாம். இத்தகைய பாட்டு ஒன்று புறநானூற்றில் உண்டு. புறநானூற்றின் முப்பத்தெட்டாவது பாடல் இக் கருத்துடன் காணப்படுகின்றது. அப்பாடலின் வரலாற்றையும் கருத்தையும் காண்போம். 2 கிள்ளிவளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். அவன் பெயர் கிள்ளி, வளவன் என்பது குடிப்பெயர். அவன் குளமுற்றம் என்ற ஊரிலே இறந்துபோனான், சோழர்களிலே கிள்ளி என்ற பெயர் பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்கள் வெவ்வேறு கிள்ளிகள் என்பதை விளக்க அவர்கள் பெயர்களுடன் வெவ்வேறு அடைமொழிச் சொற்களைச் சேர்த்து வழங்கினர். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற பெயர்கள் இதற்குச் சான்று. இக் கட்டுரையிலே குறிப்பிடும் கிள்ளிவளவன் வேறு. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பெயரே இவன் வேறொரு கிள்ளிவளவன் என்பதைக் காட்டும். இவன் சிறந்த வீரன்: எண்ணியவற்றை எளிதிலே முடிக்கும் திண்ணியன்: முடியாது என்ற நினைப்பே இவன் உள்ளத்தில் ஒருபொழுதும் பிறந்ததில்லை: அச்சொல்லை இவன் கேட்டும் அறியாதவன், பெற்றி பெறும் வீரன்மட்டும் அல்லன்: இரப் போரைப் புரக்கும் இரக்கமுள்ளவன்: வறியோர் வேதனையைப் போக்கும் வள்ளல். இவன் ஆண்ட சோழ நாட்டில் இவன் காலத்தில் மூலங் கிழார் என்ற ஒரு புலவர் இருந்தார். அவர் பிறந்த ஊர் ஆவூர். வேளாளர் குடியிலே பிறந்தவர். கிழார் என்பது வேளாளரைக் குறிக்கும் பட்டப் பெயர். பழந்தமிழ்நாட்டிற் பிறந்த நாளை யொட்டிப் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. இன்றும் திருவாங்கூர் அரச குடும்பத்தினர் இவ்வாறே பெயர் வைத்துக் கொள்கின்றனர். சித்திரை நட்சத்திரத்திலே பிறந்த குழந்தைக்குச் சித்திரைத் திருநாள்: கார்த்திகை நட்சத்திரத்திலே பிறந்த பிள்ளையானால் கார்த்திகைத் திருநாள்: விசாக நட்சத்திரத்திலே பிறந்த மகவானால் விசாகத் திருநாள் - இவ்வாறு பெயர் வைக்கின்றனர். இது பண்டைத் தமிழர் வழக்கம். மூல நட்சத்திரத்திலே பிறந்தவர்: வேளாளர் குடியிலே பிறந்தவர்: ஆவூரிலே வாழ்ந்தவர் என்ற பொருளிலேதான் ஆவூர் மூலம்கிழார் என்ற பெயர் வழங்குகின்றது. மூலங்கிழாருக்கும், கிள்ளிவளவனுக்கும் முன்பின் பழக்கம் இல்லை. தனது நாட்டிலே இப்படி ஒரு புலவர் இருக்கிறார் என்ற செய்தி வளவனுக்குத் தெரியாது: கிழாருக்கு வளவனுடைய பெருமையைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் நேரில் பார்த்துப் பேசிப் பழகியவர் அல்லர். அறிவிலும் வீரத்திலும் சிறந்த கிள்ளிவளவனைக் கண்டு பேசிப் பழக வேண்டும் என்பது புலவர் ஆவல். புலவரும் கிள்ளிவளவனுடைய உறைவிடத்திற்குப் போனார். கிள்ளிவளவனைக் கண்டார். வளவனும் புலவரை வரவேற்று உபசரித்தான். ஆனால் அவர் இருக்கும் இடம், அவர் பிறந்த நாடு இவைபற்றி அவனுக்குத் தெரியாது, இவற்றை உணர்ந்து கொள்ள விரும்பினான். புலவரையே பார்த்து எம்மை நினைத்து வந்த நீர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்று கேட்டான். இக்கேள்விக்கு விடையாக அவர் கூறிய பாடல் தான் இங்குக் குறிப்பிடும் பாடல் எம்முள்ளீர் எந்நாட்டீர் என்ற கேள்விக்குப் புலவரல்லாத ஒருவர், நான் சோழநாடு, நான் சேரநாடு, நான் பாண்டிய நாடு என்று அப்பட்டமாக விடை சொல்லுவார். இவர் கிள்ளிவளவன் புகழ்கேட்டு அவனைப் பாராட்டுவதற்கென்றே வந்த புலவரா தலின் தன் புலமைத் திறம் தோன்ற விடை கூறினார். இப் பாடலில் சுவர்க்கத்தின் இயல்பு, இவ்வுலகத்தின் இன்பம், சோழனுடைய வீரம் இவை அமைந்து கிடப்பதைக் காணலாம். 3 வெற்றி பொருந்திய வேந்தனே! நீ சிறந்த படைபலம் உள்ளவன். உன்னிடம் யானைப்படை மிகுந்திருக்கின்றது. உன்னுடைய படையில் உள்ள யானைகள் மலைபோல் உயர்ந்தவை: போரிலே புறமிடாத வீரம் உள்ளவை. யானைமீது ஏறியிருக்கும் வீரர்கள் பல நிறமுள்ள வெற்றிக் கொடிகளை உயர்த்திப் பிடித்திருக்கின்றனர். அக்கொடிகள் வானத்தில் உள்ள மாசுமறுக்களைத் துடைப்பனபோல் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பெரிய படை உன்னிடம் இருக்கின்றது. படைபலம் மட்டும் அல்லாமல் நீயும் அசையாத ஆற்றல் உள்ளவன். நீ சினந்து நோக்கும் திசையெல்லாம் தீப்பற்றி எரியும்; நீ அன்புடன் - அருளுடன் - பார்க்கும் திசைகளில் எல்லாம் பொன் பொலியும். உன் பகையைப் பெற்றவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விடுவார்கள்; உன் அன்பைப் பெற்றவர்கள் பொன் பெற்றுச் சிறந்து வாழ்வார்கள். சூரியனுடைய சுடுகதிரை யாராலும் மாற்ற முடியாது: சுடுவதுதான் சூரியஒளியின் இயற்கைத் தன்மை. சந்திரனுடைய குளிர்ந்த நிலவின் தன்மையையும் யாராலும் மாற்ற முடியாது: குளிச்சி தருவதுதான் நிலவின் இயற்கை. இந்த இயற்கையைக் கூட மாற்றும் வல்லமை உனக்கு உண்டு. சிவந்த சூரியனிடத்திலிருந்து நிலவு பிறக்கவேண்டும் என்று நினைத்தாலும், வெண்மையான சந்திரனிடத்திலிருந்து வெயில் பிறக்கவேண்டும் என்று நினைத்தாலும் அப்படியே செய்வாய். செஞ்ஞாயிற்றை வெண்திங்களாக மாற்றுவாய். வெண்திங்களைச் செஞ்ஞாயிறாகச் செய்துவிடுவாய். இத்தகைய ஒப்பற்ற ஆற்றல் உள்ளவன். உன்னுடைய குடைநிழலிலே இன்புற்றிருப்பது இந்தச் சோழநாடு. இந்த நாட்டிலேதான் நான் பிறந்தேன். உன்னுடைய ஆட்சியின் நிழலிலேதான் நான் வளர்ந்தேன். என்னுடைய நிலைமை இவ்வளவு என்று இதற்குமேல் நான் சொல்ல வேண்டு வதில்லை. சுவர்க்கந்தான் பேரின்பந்தருவது என்று பேசுகின்றனர். அவ்வுலகம் தன்னைச் சேர்ந்தவர்க்கு இன்பத்தைத் தரும் நிலையில் உள்ளது. எண்ணியவற்றை யெல்லாம் எஞ்சாது கொடுக்கும் கற்பகச் சோலை சுவர்க்கத்தில் உண்டு: அச்சோலையில் உள்ள மலர்கள் எல்லாம் பொன்னாக மலர்ந்திருக்கும். அந்தச் செல்வம் நிறைந்த நாட்டை அடைந்தவர்களும் இவ்வுலகில் செய்த நல்வினைக்கு ஏற்ற அளவில் தான் இன்பம் அடைவார்கள். தங்கள் நல்வினையின் அளவில் குறைவாகவோ அல்லது மிகுதி யாகவோ, எதையும் துய்க்க முடியாது. அன்றியும் இவ்வுலகிலே செல்வம் உள்ளவர்கள் இல்லா தவர்களுக்குக் கொடுத்து இன்பம் அடைகின்றனர். ஈத்துவக்கும் இன்பம் பெரிது. இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் போய்த் தங்கள் குறைகளைக் கூறி இரந்து பொருள் பெற்று நன்மை யடைகின்றனர். இந்த நிலைமை அந்தச் சுவர்க்கத்தில் இல்லை. உள்ளவர்களுக்குக் கொடுக்கும் உரிமையும் இல்லை: இல்லா தவர்களுக்கு இரக்கும் உரிமையும் இல்லை. ஆதலால் பரிசிலர்கள் அந்தச் சுவர்க்கத்தை விரும்புவதில்லை. யாரேனும் அந்தச் சுவர்க்கத்திற்கு அனுப்புகிறோம். வாருங்கள் என்று வலிந்து அழைத்தாலும் அதைவேண்டாம் என்று வெறுக்கின்றனர். ஈவோரும் இரப்போரும் இல்லாத நாட்டிலே எங்களுக்கு இன்பம் இல்லை. துன்பம்தான் உண்டு என்று சொல்லி அதை மறுத்து விடுகின்றனர். நீ உன்னுடைய நாட்டிலிருந்து போய்ப் பகைவர் நாட்டிலே தங்கியிருந்தாலும் உன்னுடைய நாடு உன்னுடைய நாடுதான். நீ இல்லாத சமயத்தில் உன்னுடைய நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று பகைவர்கள் எண்ணிவிட முடியாது, இப்படிப்பட்ட படைபலமும், அரசியல் அமைப்பும் உள்ளது உன்னுடைய நாடு. அமைதியும், செல்வமும் உனது நாட்டிலே எப்பொழுதும் குடிகொண்டிருக்கின்றன. அந்தச் சுவர்க்கத்திலே அனுபவிக்கும் இன்பம் உனது நாட்டிலும் உண்டு என்பது புலவர்களுக்குத் தெரியும். உனது நாட்டிலே. சுவர்க்கத்திலே உள்ள அத்தனை இன்பங்களும் உண்டு. இவற்றுடன் கூட ஒவ்வொருவரும் உரிமையுடன் நடந்து கொள்ளவும் இடமுண்டு. தங்கள் முயற்சிக் கேற்றபடி - விருப்பத்திற்கேற்றபடி - இன்பத்தை நுகரவோ, துன்பத்தை நுகரவோ உரிமையுண்டு. ஆகையால் பரிசிலர்கள் எல்லோரும் உனது நாட்டை நினைத்து இங்கு வந்து குவிகின்றனர். இதுதான் ஆவூர் மூலங்கிழார் கிள்ளிவளவனுக்குத் தந்த விடை. 4 வரை புரையும் மழகளிற் றின்மிசை வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ உடன்று நோக்கும் வாய்எரி தவழ நீ, நயந்து நோக்கும் வாய்பொன் பூப்பச் செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை: ஆகலின் நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ? மற்றே இன்னிலைப் பொலம்பூங் காவின் நல்நாட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும் இல்லார் இரத்தலும் கடவது அன்மையின் கையறவு உடைத்துஎன, ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் நின்நாடு உள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்தும் நின் உடைத்து எனவே (புறம் 38) புலவர் பெருந்தன்மை 1 பண்டைத் தமிழ்ப் புலவர்கள் உண்மையை உரைக்க ஒருபொழுதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்கள் அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். அரசர்களும் புலவர்களும் அன்புள்ள நண்பர்களாய் அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். அரசர்கள் தவறு செய்யத் துணிந்தால் புலவர்கள் சும்மா விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை, அறிவில் பதியும்படி எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாகக் கீழ்வரும் வரலாறு ஒன்றைக் காணலாம். மலையமான் திருமுடிக்காரி யென்பவன் ஒரு சிற்றரசன், இவன் கோவலூரைத் தலைநகராகக் கொண்டவன். மலையமா நாட்டின் மன்னன். இவன் சிற்றரசனாயினும் கொடைவள்ளல், கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன், முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் இவனுடைய நட்பினராக வாழ்ந்தனர். அவர்கள் இவனைப் பகைத்துக்கொள்ள அஞ்சினர். ஒவ்வொரு மன்னரும் தங்களுக்குப் பகைவரால் ஆபத்து வந்தபோது மலையமானைச் சரணடைவர். அவன் அவர்களுக்குத் துணை செய்து அவர்களைக் காப்பாற்றுவான். இவன் காலத்தில்தான் பாரி என்னும் கொடைவள்ளல் பறம்புமலையில் வாழ்ந்தான். அவன் புகழையும், பெருமையை யும் கண்டு பொறாமை கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள் வஞ்சனையால் அவனைக் கொன்றனர். அந்தப் பாரியினுடைய இரண்டு பெண்கள் அனாதைகளாயினர். பாரியின் உயிர் நண்பரான கபிலரென்னும் புலவர் அப்பெண்களை, யாரேனும் அரசர்களுக்கு மணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வை நல்வாழ்வாக்க வேண்டுமென்று விரும்பினார். எந்த அரசரும் மூவேந்தர்களின் பகைவனான பாரியின் மகளிரை மணக்க அஞ்சினர். கபிலர் எவ்வளவு வேண்டியும் பாரி மகளிரை மணக்க ஒருவரும் முன்வரவில்லை. இறுதியாக மலையமான் திருமுடிக்காரி ஒருவனே அவர்களை மணக்க முன்வந்தான். மூவேந்தர்களின் விரோதத்தைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. தன்போன்ற கொடைவள்ளல் பாரியின் மகளிரை வாழ்விக்கவேண்டுமென்பதே அவன் எண்ணம். இது ஒன்றே அவன் வீரத்தை விளக்கப் போதுமானதாகும். மலையமான் திருமுடிக்காரி, மலையமான், காரி, மலையன் என்பவை இவனுடைய பெயர்கள். 2 காரி கொடைவள்ளலாக வாழ்ந்து, வீரத்துடன் விளங்கி இறந்துபோனான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். காரி இறக்கும்போது அவ்விரு பிள்ளைகளும் பால்மணம் மாறாப் பச்சிளம் குழவிகள். காரியின் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களிலே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன். இவனும் சிறந்தவீரன். எதிரிகளுக்குப் பணியாத இணையற்ற வீரன்தான். ஆனால் காரியைமட்டும் இவனால் பணியவைக்க முடியவில்லை. காரியின் வீரப் புகழைக் கண்டு இவன் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது. அவனுடைய கொடைப் புகழும் இவன் நெஞ்சத்தைக் கொதிப்படையச் செய்தது. ஆகையால் மலையமான் திருமுடிக்காரியின் வீரத்தையும் புகழையும் கண்டு நெஞ்சம் புழுங்கிக் கொண்டிருந்தான். மலையமான் மாண்ட செய்தியைக் கேட்டுத் தமிழ்நாடு வருந்திற்று. ஆனால் கிள்ளிவளவன் மட்டும் துள்ளிக் குதித்தான்: துக்கப்படவில்லை. தன் பகைவன் மாண்டான் என்றெண்ணிப் பரவசமடைந்தான். தன் பழியைத் தீர்த்துக் கொள்ள இதுவே பருவம் என்றும் நினைத்தான். காரியின் மேல் கிள்ளிவளவனுக்கிருந்த கடுஞ் சினம் அவன் அறிவை மறைத்தது. அவன்பால் கொண்டிருந்த பொறாமை அவன் புத்தியைப் போக்கடித்துவிட்டது. காரியின் பச்சிளம் குழந்தைகளைப் பழிவாங்கி அவன் மீது கொண்டிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளத் துணிந்தான். உடனே தனது படைவீரர்களைக் கோவலூர்க்கு அனுப் பினான். மலையமான் மக்களைப் பிடித்துக்கொண்டு வரும்படி செய்தான். மலையமான்மீது தான் கொண்டிருந்த கோபம் அவ்வளவையும் அச்சிறுவர்கள்மேல் உமிழ்ந்தான். அவர்களைக் கொலை செய்யவும் துணிந்தான். அக்காலத்தில் பகைவர்களைப் பழிவாங்குவதற்குப் பல முறைகளைக் கையாண்டனர். அவை எல்லாம் இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநாகரிக முறைகள். பகைவர்களைக் கழுத்தும் தலையும்மட்டும் வெளியில் தெரியும்படி பூமியில் புதைத்து விடுவார்கள். யானையை விட்டு அதன் காலால் அவர்கள் தலையை இடறிக் கொல்லுவார்கள். அக்காலக் கொடூர முறைகளிலே இதுவும் ஒன்று. கிள்ளிவளவனும் இந்த முறையிலேயே மலையமான் மக்களைப் பழிவாங்க முடிவு செய்தான். அப் பிள்ளைகளின் உடம்பைப் பூமிக்குள் புதைக்கச் செய்தான். தலைகள் மட்டும் வெளியில் இருக்கின்றன. அவர்கள் தலையை இடறிப் பறிப்பதற்கு ஆண்யானை ஒன்று தயாராக நிற்கின்றது. மலையமான் குழந்தைகள் அச்சம் என்பதை அறியாதவர்கள். தங்கள் உயிர் போக்கப்படும் என்பதை அவர்கள் அறியவில்லை. யானையைக் கண்டுதான் அவர்கள் பயந்து அழுது கொண்டி ருந்தனர். அங்கே கூடியிருந்த பொதுமக்கள் கிள்ளிவளவன் செய் கையை வெறுத்தனர். மலையமானுடன் போர் செய்ய முடியாத பேடி, அவனுடைய பிள்ளைகளைப் பழிவாங்கத் துணிந்ததைக் கண்டு பெரிதும் வருந்தினர். ஆனால் அவர்கள் அரசனுடைய அறிவீனத்தை எடுத்துக் காட்டி அவன் செயலைத் தடுக்க முன்வரவில்லை. இத்தகைய அஞ்சாமை அவர்களிடம் இல்லை. அரசன் குழந்தைகளைக் கொல்லும்படி யானையை ஏவுதற்குக் காத்துக் கொண்டிருக்கிறான். பொதுமக்கள் துக்கத்துடன் ஒன்றும் பேசாமல் மவுனமாகப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். 3 இச்சமயத்தில் கோவூர் கிழார் என்னும் புலவர் விரைந்து அக் கூட்டத்திற்குள் புகுந்தார். மலையமான் குழந்தைகள் பூமிக்குள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர்கள் எதிரிலே யானை நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்தக் குழந்தைகள் அந்த யானையைக் கண்டு தேம்பித் தேம்பி அழுவதையும் மனவேதனையுடன் நோக்கினார். பொது மக்கள் இந்த அநீதியைப் பார்த்தும் வாய்பேசாமல் பதுமைகளைப் போல் நிற்பதையும் பார்த்தார். கிள்ளிவளவனுடைய எக்களிப் பையும் கோழைத் தனத்தையும் கண்டு நெஞ்சம் குழுறினார். உடனே சோழனிடம் சென்று சிறிதும் அஞ்சாமல் அவனுக்கு அறிவுரை கூறத் தொடங்கினார். கிள்ளிவளவனே நீ செய்யத் துணிந்த காரியம் உனது சோழர் குடிக்குத் தகுந்ததன்று. இதுவரையில் மாசற்ற புகழுக்கு ஆளாகி வந்த சோழர் குடிக்கு நீ இன்று மங்காத பழி தேடி வைப்பதற்குத் துணிந்துவிட்டாய். நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். நீ செய்ய வேண்டியதை உன்னுடைய விருப்பப்படி செய். நீ பிறர்க்கு உதவி செய்யாதவனாயினும், உன்னுடைய பரம்பரை பிறர்க்கு உதவி செய்வதையே தொழிலாகக் கொண்ட பரம்பரை. ஒரு புறாவுக்காகத் தன் உடற்சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் உனது பாட்டன். அவன் இன்னும் பல வகையிலே பலருடைய துன்பங்களைத் தீர்த்தவன். இத்தகைய சோழன் மரபிலே பிறந்தவன் நீ. உன்னால் கொல்லப்படப்போகும் இந்த பச்சிளம் பாலகர்களோ கொடைவள்ளல்களின் மரபிலே பிறந்தவர்கள். இவர்களுடைய தாய்வழிப் பாட்டனாகிய பாரியும் கொடை வள்ளல். இவர்களை ஈன்றெடுத்த தந்தையாகிய மலையமானும் கொடைவள்ளல். அவர்கள், தமது புலமையையே கருவியாகக் கொண்டு உழுதுண்ணும் புலவர்களின் வறுமையைக் கண்டால் அஞ்சுவார்கள். தமது செல்வத்தை அவர்களுக்கும் பகுத்துக் கொடுப்பார்கள். அதன் பிறகே தாமும் உண்பார்கள். இவ்வாறு அரசு செய்த குளிர்ந்த கொடைநிழலின் கீழே வாழ்ந்தவர்கள் இச்சிறுவர்கள். இத்தகைய மரபிலே வந்த இச் சிறுவர்கள் இந்த ஆண் யானையைக் கண்டே அழுகின்றனர். அச்சத்தால் அழும் தங்கள் இயற்கை அழுகையை மறந்துவிட்டனர். இவர்கள் இளந்தலைச் சிறுவர்கள். இந்தச் சபையைப் பார்த்து விழிக்கின்றனர். இந்தச் சபை அவர்களுக்குப் புதிதாக இருப்ப தனால் அவர்களுடைய வருத்தமும் புதிதாகவே இருக்கின்றது. நான் கூறிய இவ்வுண் மையை நீ கேட்ட பிறகு நீ விரும்பியதை உன் விருப்பபடியே செய். நீ செய்யப்போகும் காரியம் உனக்குத் தகுதியுடைய தாயிருந்தாலும் உன் குடிப்பெருமைக்குத் தகுதியுடையதல்ல. இவ்வாறு புலவர் கூறினார். இதைக் கேட்டவுடன் கிள்ளி வளவன் தலை குனிந்துவிட்டது. தன் செய்கையை எண்ணி வெட்கமடைந்தான். பச்சிளங் குழந்தைகளைப் பழி வாங்க எண்ணியதற்கு மனம் நொந்தான். உடனே தான் செய்யத் துணிந்த காரியம் தவறு என்று புலவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். குழந்தைகளையும் விடுதலை செய்து அவர்களை யானைமீதேற்றிக் கோவலூர்க்கு அனுப்பி விட்டான். இச் செயல்களைக் கண்டு கோவூர் கிழாரும் குதூகலம் அடைந்தார். பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 4 இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 46-வது பாடல் நமக்குக் காட்டுகின்றது. நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை இவரே. புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்: களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன்றலைச் சிறாஅர், மன்றுமருண்டு நோக்கி விருந்தின் புன்கணோ வுடையர்: கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே கிள்ளி வளவன் தான் செய்வது குற்றம், கோழைத்தனம், பரம்பரைக்கு இழிவான செயல் என்பதை உணரும்படி, கோவூர் கிழார் எவ்வளவு நயம்பட எடுத்துக் கூறியிருக்கிறார் என்பதை இச் செய்யுளால் அறியலாம். புலவரின் பெருந்தன்மையையும் இதனாற் காணலாம். தமிழ்ப் புலவர் தன்மானம் 1 சங்ககாலத் தமிழ்ப் புலவர்களிலே பலர் தமிழை ஆராய்வதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழைப் படிப்பார்கள்: தமிழ்நூல்கள் எழுதுவார்கள்: தமிழ்நாடெங்கும் சுற்றி வருவார்கள். தமிழ் மக்களுக்கு நல்லுரை கூறுவார்கள். அரசர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லுவார்கள். தமிழ் மன்னர்களையும், வள்ளல்களையும் பாடுவார்கள். அவர் களுடைய வீரச் செயல்களையும், கொடைத்தன்மைகளையும் புகழ்ந்து போற்றுவார்கள். அரசர்களும், வள்ளல்களும் அளிக்கும் நன்கொடைகளைக்கொண்டு தாமும் சுற்றமும் உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள். இதுதான் பண்டைத் தமிழ்ப் புலவர்களிலே பலருடைய வாழ்க்கை. ஓரிடத்திலே நிலைத்திருந்து தொழில் செய்து, ஓய்வு நேரத்திலே தமிழ் கற்றுப் பாடி வாழ்ந்த பெரும்புலவர்கள் சிலரும் உண்டு. இத்தகைய வாழ்க்கை நடத்திய புலவர்கள் ஒருசிலர் தாம். உறையூர் இளம்பொன் வாணிகனார் என்பவர் ஒரு புலவர். இவர் பொன் வியாபாரம் செய்துவந்தார். அதாவது காசுக் கடை நடத்திவந்தார். இவருடைய பேரே இவர் தொழிலைக் காட்டுகின்றது. உறையூர் மருத்துவன் தாமோதரனார் என்பவர் மற்றொரு புலவர், வைத்தியம் செய்பவர்க்கு மருத்துவர் என்று பெயர். இவர் உறையூர்க்காரர். மருத்துவத் தொழில் செய்து வந்தார். தாமோதரனார் என்பது இயற்பெயர். இவர் வைத்தியத் தொழில் செய்து வாழ்ந்த புலவர். மற்றொரு புலவர் இளவேட்டனார் என்பவர். இவர் மதுரையிலே வாழ்ந்தவர். துணி வியாபாரம் செய்துவந்தார். ஆதலால் இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்று அழைத்தனர். மதுரைக் கணக்காயனார் என்பவர் ஒரு புலவர். இவர் ஆசிரியர் வேலை பார்த்துவந்தார். அதனால் இப்பெயர் பெற்றார். இவருடைய பிள்ளைதான் நக்கீரனார் என்னும் புலவர். கூலவாணிகன் சாத்தனார் என்பவர் ஒரு புலவர்: அவரு டைய பெயர் சாத்தனார். அவர் மதுரையிலே தானியக் கடை வைத்திருந்தார். அதனால் அவரை மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்று அழைத்தனர். இவர்தான் ஐம்பெருங்காப் பியங்களுள் ஒன்றான மணிமேகலையைப் பாடிய மாபெரும் புலவர் என்று கருதப்படுகின்றார். பெரும்பாலான தமிழ்ப் புலவர்கள். செல்வர்களின் பரிசை நம்பி வாழ்ந்தாலும் அவர்கள் தன்மானத்துடன் வாழ்ந்தனர். தம்மை மதிக்காத அரசர்களையும், செல்வர்களையும் அவர்களும் மதிப்ப தில்லை. அவர்கள் தங்கள் பிழைப்புக்காக வேண்டி, கெட்டவர்களை நல்லவர்களென்று புகழமாட்டார்கள். நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று தூற்றமாட்டார்கள். இது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் தன்மை. இதை விளக்கும் வரலாறுகள் பல உண்டு. அவைகளில் ஒன்று தான் கீழ்வருவது: 2 தமிழ்நாட்டிலே ஒரு பகுதி கோனாடு என்பது. அந்த நாட்டிலே எறிச்சலூர் என்ற ஊரிலே பிறந்த ஒரு புலவர் உண்டு. அவருக்கு மாடலன் மதுரைக் குமரனார் என்று பெயர். இவர் பெயரைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்று நீளமாகச் சொல்லுவார்கள். இவர் ஒரு சமயம் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் என்னும் சோழ மன்னனிடம் பரிசில் பெறச் சென்றார். இவர் போன சமயத்தில் சோழன் வேறு வேலையில் கருத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான். புலவரைப் போதுமான மதிப்புடன் வரவேற்கவில்லை. அன்புடன் பரிசளிக்கவும் இல்லை. இவரைப் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தான். பரிசளிக்கவும் காலங் கடத்திக்கொண்டே யிருந்தான். மதுரைக் குமரனார் வளவன் செய்கையைக் கண்டார். அவன் தன்னைப் பொருட்படுத்தவில்லை என்பதையும் அறிந்தார். அவன் தன்னை மதிக்காமல் இருப்பதற்கு அவனுடைய செல்வச் செருக்கே காரணம்: படைச் செருக்கும், அதிகாரச் செருக்கே காரணம்: படைச் செருக்கும், அதிகாரச் செருக்கும் காரணம் என்று எண்ணினார். உடனே அவர் வளவனைப் பார்த்துத் தன் உள்ளத்தில் உதித்த உணர்ச்சியை வெளியிட்டார். 3 அரசே! நாம் யாருக்கும் அஞ்சமாட்டோம். யாரையும் பொய்யாகப் பாராட்டமாட்டோம். காற்றைப்போலக் கடுகியோடும் குதிரை பூட்டிய தேர்ப் படைகளை மிகுதியாக உடையவர்கள் என்பதற்காகப் புகழ மாட்டோம். கடல் போன்ற பெரிய காலாட்படைகளையும், மலை களையும் பெயர்க்கும் யானைப் படைகளையும் உடை யவர்கள் என்பதற்காகவும் புகழமாட்டோம். இடி இடிப்பதைப் போலப் பகைவர்களுடைய நெஞ்சைக் கலக்கும்படி முழங்குகின்ற போர் முரசத்துடன், பகைவர்களை வெற்றி கொள்கின்றவர்கள் என்பதற்காகவும் புகழமாட்டோம். படைபலம் கொண்டவர்கள் என்ற இந்தக் காரணத்திற்காக எந்த வேந்தர்களையும் பாராட்டமாட்டோம். அவர்கள் நிறைந்த செல்வம் உடையவர்கள் என்பதற்காகவும் பாராட்ட மாட்டோம். எம்மால் பாராட்டப்படுகின்றவர்கள் யார் என்பதைக் கேள். ஆடு மேய்ந்தது போக மீதியிருக்கின்ற மூஞ்ஞைக் கீரையைப் பறித்துக் கொண்டு வந்து, வளமில்லாத நிலத்திலே விளைந்த வரகுச் சோற்றுடன் கலந்து உண்ணும் சிறிய ஊர்களிலே வாழும் குறுநில மன்னர்களானாலும், எமது பெருமையை யறிந்து மதித்து நடக்கும் பண்பினராயிருந்தால் அவர்களைத் தான் பாராட்டுவோம். நாங்கள் எவ்வளவு துன்பமடைந்தாலும் சரி, எங்கள் மானத்தை இழக்க மாட்டோம். அறிவில்லாதவர்களிடம் செல்ல மாட்டோம்: அவர்களிடம் நன்கொடை பெறவும் மாட்டோம். அறிவில்லாதாரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதைப் பற்றிச் சிறிதும் நினைக்கவே மாட்டோம். நல்லறிவுடையவர்கள் - எம்போன்ற புலவர்களை மதிப் பவர்கள் - எவ்வளவு வறுமையுடையவர்களா யிருந்தாலும் சரி, அவர்களையே பெரிதாக எண்ணிப் பாராட்டுவோம். யாம் அவர்களுடைய நல்ல குணங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் பாராட்டுவோம். இதுவே தமிழ்ப் புலவர்களின் தன்மை. சோழர் பெருமானே! இந்த உண்மையை நீ தெரிந்துகொள். இவ்வாறு அஞ்சாமற் கூறினார் மதுரைக் குமரனார். இதனைப் புறநானூற்றின் 197- வது பாடலால் காணலாம். 4 வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக் கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ உரும்உரற்று அன்ன உட்குவரும் முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனஅ மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடுஅறிந் தொழுகும் பண்பி னாரே; மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்: நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் பெரும யாம் உவந்துநனி பெரிதே. அறிஞர்களாகிய புலவர்களை மதிப்போர் வறிஞர் களாயினும் அவர்கள் புலவர்களால் மதிக்கப்படுவார்கள். மூவேந்தர்களாயினும், எவ்வளவு படைவலிமை படைத்தவர் களானும், செல்வம் நிறைந்தவர்களானாலும் அவர்கள் புலவர் களை மதிக்காவிட்டால், அவர்களைப் புலவர்களும் மதிக்க மாட்டார்கள். இதுவே பண்டைத் தமிழ்ப் புலவர்களின் பண்பு. இக்கருத்தை இப்பாடல் விளக்குவதைக் காணலாம். அச்சமற்ற அருந்தமிழ்ப் புலவர் 1 ஆத்திரங் கொண்டு அடித்துக் கொள்வது ஆண்மை யாகாது. குருட்டுத்தனமாகக் குத்துச்சண்டையிலே குதிப்பது வீரமன்று. உடல் வன்மையாற் செய்யும் செயல்களை மட்டும் வீரத்தனம் என்று உயர்த்திக் கூறுவதிலே உண்மையில்லை. அநீதியை எதிர்ப்பது: அக்கிரமத்தைத் தலையெடுக்க வொட்டாமல் நசுக்குவது; அறத்தைப் பாதுகாப்பது: தனக்கு எத்தகைய ஆபத்து வருவதா யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாடு நன்மையடைய உழைப்பது: நாட்டின் அமைதிக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க ஆண்மையுடன் உழைப்பது - இவை சிறந்த வீரத்தின் சின்னங்களாகும். தன் உள்ளத்தில் உண்மையெனப் பட்டவற்றை ஒருவருக்கும் அஞ்சாமல் உரைப்பது; அவ்வுரையைச் செயலிலே காட்ட முயற்சிப்பது இவையும் வீரத்தின் விதைகள். உடல் வன்மையைக் காட்டிலும் உள்ளத்தில் உரம் பெற்றவர்களே ஒப்பற்ற வீரர்கள், உள்ளத்திலே உரமற்றவர்கள் கோழைகளாகத்தான் - பயங்காளி களாகத்தான் - எடுத்த செயல்களை வெற்றியுடன் முடிக்கும் திறமையற்றவர்களாகத்தான் காணப்படுவார்கள். ஆராய்ச்சியும், உண்மையறிவும், அஞ்சாமையும் உடையவர்களே மனோவலிமை பெற்றவர்கள், அவர்களால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை: ஒருவன் உயர்ந்த மனிதத்தன்மையுடன் வாழ்வதற்கு மனவுறுதியே சிறந்த அடிப்படை, பணமோ, பதவியோ மனிதத் தன்மையை உண்டாக்கிவிட முடியாது. மனவலிமை அற்றவர் களைப் பணமும், பதவியும் ஆட்டிவைத்து அல்லற்படுத்தி மனிதத்தன்மையைக் கொள்ளைகொள்வதையும் பார்க்கிறோம். மனவுறுதி படைத்தவன் பணத்தையும் பதவியையும் தன் விருப்பப்படி ஆட்டிவைப்பான்: கோழையை - மனவலிமை இல்லாதவனைப் பணமும் பதவியும் தமது வழியிலே இழுத்துச் செல்லும்: மனிதத்தன்மைக்கு மாறான வழிகளிலே அழைத்துச் செல்லும்: அவனை அவதிக்கும், அவமதிப்புக்கும் ஆளாக்கி விடும். இவை கோழைத்தனத்துக்கும் குன்றாத வீரத்தனத்துக்கும் உள்ள வேற்றுமை. பழந்தமிழ்ப் புலவர்கள் பலரும் - அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சங்கப் புலவர்கள் பலரும் - மன்னர் களின் ஆதரவிலே உயிர்வாழ்ந்தார்கள்: பெருநிலம் படைத்த குறுநில வேந்தர்களின் உதவியால் உயிர் வாழ்ந்தார்கள். செல்வம் படைத்த மக்கள் உதவியால் வாழ்க்கை நடத்தினார்கள், பிறரிடம் யாசகம் வாங்கிய பொருள்களைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கை நடந்தது. தங்கள் உடலையும் தங்கள் சுற்றத்தாரின் உயிரையும் வளர்க்க அவர்கள் செல்வம் படைத்தவர்களிடம் பரிசில் பெற்றார்கள்: அல்லது யாசகம் வாங்கினார்கள்: அல்லது இரந்து பொருள் பெற்றார்கள், சுருக்கமாகச் சொன்னால், பெரிய மனிதர்களிடம் பிச்சை வாங்கி வாழ்ந்தார்கள் என்று கூடச் சொல்லிவிடலாம். பழந்தமிழ்ப் புலவர்கள் இவ்வாறு வறுமையிலே வாழ்ந்தவர் களானாலும், அறிவிலே வறியவர்கள் அல்லர்: அறிவிலே நிறைந்தவர்கள், அறிவில்மட்டும் அல்ல, வீரத்திலும் சிறந்தவர்கள். தம் மனத்திலே உண்மையென்று தோன்றியவற்றை உறுதியுடன் உரைப்பவர்கள். உண்மையை அஞ்சாமல் உரைக்கும் இத்தகைய ஒரே காரணத்தால்தான் அவர்கள் அக்காலத்து மக்கள் அனை வராலும் போற்றப்பட்டனர். மதிக்கப்பட்டனர். அவர்கள் சொல்லுக்கு மன்னர்களும், மக்களும் மதிப்புக் கொடுத்தனர். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி, வறியோர் வார்த்தை செல்வர் சபையிலே செல்லாது என்று இதற்குப் பொருள் சொல்லுகின்றனர். இது இக்காலத்தார் இயம்பும் பொருள். பண்டைக் காலத்திலே இதன் பொருள் வேறு. அறிவற்றவனுக்கே ஏழையென்று பெயர். அறிவற்றவன் சொல். அறிவுடையோர் சபையிலே செல்லாது என்பதே இதன் பொருள். ஆதலால் பண்டைக் காலத்திலே, அறிவுடைய புலவர் களை யாரும் வறியவர்களாக எண்ணியதில்லை. இந்த உண்மையை விளக்குவதற்குச் சங்க நூல்களிலே பல வரலாறுகள் உண்டு. புலவர்கள் பலரின் நடத்தைகளைக் கொண்டு அவர்களுடைய வீரத்தையும், ஆண்மையையும் காணலாம். 2 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி. ஆனால் ஆபத்துக்கு இடமான பெரிய நிகழ்ச்சிக்கு அணைபோட்ட ஒரு சிறு நிகழ்ச்சி அது. அக்காலத்திலே உறையூர் சோழனுடைய தலைநகரம். கருவூர் சேர மன்னனுடைய தலைநகரம். இரண்டு தலைநகரங் களும் அடுத்தடுத்து உள்ளவை. சோழநாட்டின் எல்லை கருவூரை அடுத்திருந்தது. கருவூரிலே உயர்ந்த மாடமாளிகைகளிலே அமர்ந்திருந்து சோழநாட்டின் எல்லையிலே நடக்கும் நிகழ்ச்சி களைக் காணலாம். கருவூரும் சோழநாட்டின் எல்லையும் இவ்வளவு அண்மையில் இருந்தன. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்பவன் சோழ நாட்டு மன்னன்: உறையூரிலே வாழ்ந்து ஆட்சி புரிந்தவன். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் கருவூரிலே வாழ்ந்தவன். இச்சேரனுக்கும், சோழனுக்கும் சரியான நட்புற வில்லை. இருவரும் இணைந்த மனமுடையவர்களாக வாழ வில்லை: ஒருவர் மீது ஒருவர் பகைகொண்டு வாழ்ந்தனர். ஒருவ ரோடு ஒருவர் போர் செய்வதற்கும் தக்க சமயத்தை எதிர்நோக்கி யிருந்தனர். சேரமான் கருவூருக்குப் புறத்திலே வேண்மாடம் என்றொரு மாளிகையை அமைத்திருந்தான். அது தோட்டந்துறவுகளுடன் கூடியது: தொல்லையின்றி உல்லாசமாக அமைதியுடன் வாழ் வதற்கேற்ற அமைப்புக்களையுடையது. சேரன் ஓய்வுக்காலத்திலே அந்த மாளிகையிலே வந்து தங்கியிருப்பான்: தன் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்திருப்பான். அக்காலத்திலே உறையூரைச் சேர்ந்த ஏணிச்சேரி என்ற ஊரிலே மோசியார் என்ற ஒரு புலவர் இருந்தார். இவருக்கு ஒரு கை ஊனம். ஆதலால் இவரை முடமோசியார் என்று அழைத்தனர். இவருடைய நாடு, ஊர், உருவம், பெயர் எல்லாம் விளங்கும்படி இவரை எல்லோரும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்று அழைத்துவந்தனர். இவர் சோழ நாட்டுப் புலவர்தான். ஆயினும் சேர மன்னனுக்கும் நண்பர்: சோழமன்னனுக்கும் நண்பர். அக்காலத்து மன்னர்கள் தங்களுக்குள் பகைத்துக் கொண்டாலும் புலவர் களைப் பகைத்துக் கொள்ளுவதில்லை. தம் நாட்டுப் புலவர் களையும், பகைநாட்டுப் புலவர்களையும் ஒரு தன்மையாகவே மதித்து உயர்வு செய்தனர். புலவர்கள் நடுநிலைமை தவறாதவர்கள் என்ற நம்பிக்கை அந்த மன்னர்களிடம் குடி கொண்டிருந்தது. ஆதலால் தான் அவர்கள் புலவர்களைப் பகைத்துக் கொள்ள வில்லை. ஒரு நாள் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையும், மோசியாரும் வேண்மாடத்திலே வீற்றிருந்தனர். அவர்கள் அருந்தமிழைபற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர். அமைதியோடு உரையாடி அகமகிழ்ந்திருந்தனர். அச்சமயத்தில் அவர்களுடைய அமைதிக்கு ஆபத்தாகக் கிழக்குத் திசையி லிருந்து ஒரு ஆரவாரம் எழுந்து வந்தது. அந்த ஆரவாரம் அவர்களுடைய உரையாடலைக் கலைத்தது: அவர்களுடைய உள்ளத்தையும், கண்களையும் கிழக்குத் திசையிலே திருப்பி விட்டது. இருவரும் கிழக்கே நோக்கினர். இருவர் மனத்திலும் எழுந்தது வியப்பு. ஆனால் புலவர் மட்டும் சிறிது நேரத்தில் உற்று நோக்கி உண்மையை உணர்ந்துகொண்டார். அரசன் உள்ளத்தில் அமைதி குலைந்தது: ஆத்திரம் பெருக்கெடுத்தது. சோழனுடைய பட்டத்து யானை: அதன்மேல் சோழ மன்னன்: யானையைச் சுற்றிலும் வாட்படைவீரர்கள்: யானைப் பாகர்களின் கூட்டம்: மற்றும் பல மக்களும் யானையைத் தொடர்ந்து வருகின்றனர். இதைப் பார்த்தவுடன் சேரன் உள்ளத்திலே பதுங்கிக் கிடந்த பகைமை உணர்ச்சிதலை நிமிர்ந்தது. தன்னுடன் போர் செய்வதற்காக, சோழன் யானை மீதேறி வருவதாக எண்ணிக்கொண்டான். சோழன் எந்த நிலையிலே வருகிறான்: அவன் ஏறியுள்ள யானை எந்த நிலையில் இருக்கிறது? யானையைச் சூழ்ந்து வருகின்றவர்கள் யார்? எதற்காக வருகின்றனர்? என்பனவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பதற்கு இடந்தரவில்லை, ஆதலால் அவன் அமைதி குலைந்தான்: ஆத்திரத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டான். ஆனால் முடமோசியார் உண்மையை உணர்ந்து கொண் டார். சோழனையும், யானையையும் சூழ்ந்து வருபவர்களையும் உற்று நோக்கியவுடன் உண்மையைத் தெரிந்து கொண்டார். சோழன் உல்லாசப் பொழுதுபோக்கின் பொருட்டு தனது பட்டத்து யானையின் மீதேறிப் பவனி வந்துகொண்டிருந்தான். அந்த யானை, பஞ்சம் அறியாதது: நன்றாகத் தின்று கொழுத்தது. அதன் கொழுப்பைக் குறைப்பதற்குப் பாகர்கள் மறந்து விட்டனர். இதிலே கருத்தூன்றாமல் கவலையின்றி இருந்துவிட்டனர். இதனால் அந்த யானைக்குத் திடீரென்று மதம் பிடித்துவிட்டது. அரசன் அதன் முதுகின்மேல், அம்பாரியில், ஆனந்தத்துடன் அமர்ந்து உலாவி வரும்போது மதம் பிடித்துவிட்டது. இதனால் அது திக்குத் திசை தெரியாமல் ஓடி வருகின்றது. அந்த யானையை அடக்குவதற்காக அதைச் சுற்றிலும் வாட்படை வீரர்கள் சூழ்ந்து வருகின்றனர். அரசனுக்கு ஆபத்துண்டாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையுடன் மக்கள் பலர் மன்னனைச் சூழ்ந்து வருகின்றனர். அங்குசம் தாங்கிய பாகர்களும் யானையை அடக்க அதனைச் சுற்றி ஒடிவருகின்றனர். யானையின் மீது அங்குசக் குத்துகள், வாள் வடுக்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு புலவர் உண்மையை யறிந்தார். சோழன் போருக்குப் புறப்படவில்லை யென்பதைத் தெரிந்துகொண்டார். உடனே தான் கண்டறிந்த உண்மையை ஆத்திரம் கொண்ட சேர மன்னனிடம் கூறினார். அவனை அமைதிக்குத் திருப்பினார். சேரனுக்கும் சோழனுக்கும் இருந்த பகைமையுணர்ச்சியை நீக்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் முடமோசியார். புலவர் சேரனிடம் கூறிய இனிய மொழிகளைப் பார்த்தால் இவ்வுமை விளங்கும். 3 சேரர் குல வேந்தனே! இதோ நம் கண்முன்னே காணப் படும் இவன் யார் என்று கேட்பாயானால் சொல்லுகிறேன் கேள். இவன் புலியின் தோல் செய்யப்பட்ட கவசத்தை மார்பிலே பூண்டவன். அந்தக் கவசத்தின் அழகிய புள்ளிகள் சிதையும்படி பகைவர்கள் அம்புகளை எறிந்தனர். அந்த அம்பு களால் பிளக்கப்பட்ட பரந்த உயர்ந்த மார்பை உடையவன். எமனைப் போன்ற அஞ்சாத வல்லமையுள்ள யானையின்மேல் காணப்படுகின்றான். வயல்களிலே மயில்களின் பீலிகள் உதிர்ந்து கிடக்கின்றன. வயலிலே உழுது பயிர்செய்த உழவர்கள் நெல்லரிகளையும் அந்த மயிற்பீலிகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தொகுக்கின்றனர். சோழநாடு, கொழுமையான மீன்கள் நிறைந்த நீர்வளமுடையது: அருந்தி மகிழ்வதற்கான நிறைந்த கள்ளையும் உடையது: சிறந்த நீர் நிறைந்த நிலத்தையுடையது. அந்தச் சோழ நாட்டின் தலைவனே அந்த யானையின் மேல் காணப்படுகின்றான். அந்த யானைக்கு மதம்பிடித்து விட்டது: சுறாமீனைப் போல வாள் பிடித்த வீரர்கள் தன்னைச் சூழ்ந்து வருவதை அது தெரிந்து கொள்ளவில்லை: தன்னை அடக்கி நடத்தும் பாகர்கள் தன்னை நெருங்கி வருவதையும் அது உணரவில்லை: கடலிலே விரைந்து செல்லும் மரக்கலத்தைப்போல - பல நட்சத்திரங் களின் நடுவிலே காணப்படும் சந்திரனைப்போல - சுற்றிச் சுழன்று ஒடி வருகின்றது. இந்த அளவுக்கு மதம் பிடித்த யானை அது. அதுதான் சோழனுடைய பட்டத்து யானை. ஆதலால் அந்தச் சோழமன்னன் யாதொரு துன்பத்திற்கும் ஆளாகாமல் தனது நாட்டிற்குச்செல்வானாக. இதுவே முடமோசியார் மொழிந்த இனிய சொற்கள், சேரனுடைய உள்ளத்திலே எழுந்த சீற்றத்தைத் தணிப்பதற்காக உரைத்த சொற்கள். சோழன் உன்மேல் படையெடுத்து வரவில்லை, அவன் படையெடுப்பதா யிருந்தால் இப்படித் திடீரென்று முன்னறி விப்பில்லாமல் படையெடுத்து வரமாட்டான். அவனும் உன்னைப் போலவே ஒரு வீரன்: ஆகையால் அவனைப் பற்றித் தவறாக எண்ணாதே. பட்டத்து யானை மதங்கொண்டதனால் நேர்ந்த செயல் இது, மதயானையின் முதுகிலே அகப்பட்டுக் கொண்டிருக்கும் அவனுக்குத் துன்பம் உண்டாகக் கூடாது என்று வாழ்த்துவதே நமது கடமை. இப்படி ஆபத்தில் அகப் பட்டு வந்தவனைப் பகைவனாக நினைப்பதோ, அவன் மீது பழி தீர்த்துக் கொள்ள நினைப்பதோ அறிவுடைமையன்று: ஆண்மையும் அன்று: மனிதத் தன்மையும் அன்று என்ற கருத்து முடமோசியாரின் மொழிகளிலே பளிச்சிடுவதைப் பார்க்கலாம். புலவர் இச்சமயத்தில் இவ்வாறு சொல்லிச் சேரனை அடக்கி யிராவிட்டால் சேரனுக்கும் சோழனுக்கும் போர் மூண்டிருக்கும். போரால் சேரநாட்டு மக்களும் சோழநாட்டு மக்களும் பல அவதிக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுத்தவர் முடமோசியார். அவருடைய அறிவும் ஆண்மையும் பாராட்டுவதற்குரியதன்றோ? இவ்வுண்மையைப் புறநானூற்றின் பதின்மூன்றாவது பாட்டு நமக்குக் காட்டுகின்றது. 4 இவன்யார் என்குவை ஆயின்: இவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டுஎழின் மார்பின் மறலி அன்ன களிற்று மிசையோனே: களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது மைந்துபட்டு அன்றே: நோய்இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடு கிழவோனே (புறநா. 13) பொறுப்புணர்ந்த புலவர்கள் 1 பண்டைத் தமிழ்ப் புலவர்களிலே பலர் செல்வம் படைத் தவர்களிடத்திலே சென்று பரிசு பெற்று வாழ்ந்துவந்தனர். அவர்கள் குறுநில மன்னர்களையும், பெருநில வேந்தர்களையும் பாடிப் பரிசு பெற்றனர். அவர்கள் பரிசு பெறுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தங்களுக்குப் பரிசளிப்போரின் வாழ்வு நல்வாழ்வாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினர். பரிசு பெறும் புலவர்கள், பெருநில வேந்தர்கள் அரசு முறை தவறுங்காலத்தில், அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப் படுத்தப் பின்வாங்குவதில்லை. குறுநில மன்னர்கள் தவறு செய்யும் காலத்திலும், அவர்கள் தவறை எடுத்துக் காட்டி நேர்வழியில் நடக்கச் செய்தனர். இவ்வளவோடு அவர்கள் நிற்பதில்லை. தங்களுக்குப் பரிசளிக்கும் வள்ளல்களின் குடும்பங்களிலே ஏற்படும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவைத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்வதிலும் பங்கெடுத்துக் கொண்டனர். தங்களுக்கு உதவி செய்வோரின் வாழ்விலே மகிழ்ச்சி யிருக்கவேண்டும். ஊக்கமிருக்கவேண்டும். சாந்தியிருக்க வேண்டும். சமாதனம் இருக்க வேண்டும் என்பதே அப்புலவர்களின் கருத்து, அவர்கள் வாழ்வு எப்படியானால் என்ன? நமக்குப் பணம் கிடைத்தல் போதும் என்ற பொறுப்பற்ற தன்மை பண்டைப் புலவர்களிடம் இருந்ததில்லை. பரிசு கொடுக்கும் வள்ளல்களுக்கும், பரிசு பெறும் புலவர் களுக்கும் ஒரு தொடர்பு இருந்தது. நீங்காத அன்பு - முறிவுபடாத நட்பு - இருந்தது. இந்த உண்மையை விளக்க வேள்பேகன் என்ற வள்ளலுடைய வரலாறு ஒரு உதாரணமாகும். வேள்பேகன் மயிலுக்குப் போர்வை தந்த சிறந்த வள்ளல். அவன் மனைவியின் பெயர் கண்ணகி. சிலப்பதிகாரத்திலே வரும் கண்ணகி வேறு: இந்தக் கண்ணகி வேறு. இந்தக் கண்ணகியும் பேகனும் இணைபிரியாத அன்புடன் இல்லறத்திலே வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் ஆண்கள் தான் அதிக ஆதிக்கம் பெற்றிருந் தனர். பெண் ஒருவனைத்தான் மணந்து வாழவேண்டும். ஆண்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம். மணந்துகொண்ட மனைவிமார்களை வீட்டில் வைத்து விட்டுக் கணிகையர்களையும் காதலித்துத் திரியலாம். இத்தகைய உரிமை ஆணுக்கு இருந்தது. ஆனால் பெண்கள் ஆண்களின் இந்த அடாத செயலை விரும்பவில்லை. ஆண்களின் நடவடிக்கை களை வெறுத்தனர். ஆயினும் அவர்களால் ஆண்களின் இந்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு முடியவில்லை. கணவன் விலைமாது வீட்டுக்குச் சென்றுவந்த செய்தியை அறிந்தால் காதலி ஊடுவாள்: அவனுடன் பேசமாட்டாள்: உடுக்காமலும், உண்ணாமலும் இருந்து தன் மனவெறுப்பைக் காட்டுவாள். கணவன் அவளைச் சமாதானம் செய்வான், தோழிகள், பாணர்கள், புலவர்கள் சமாதானம் செய்து, கணவனையும் மனைவியையும் காதலித்து வாழச் செய்வார்கள். கணவன், தான் முதலிலே காதலித்து மணந்த மனைவி யிருக்க வேறொரு பெண்ணை விரும்பி மணந்தாலும் முதல் மனைவி இவ்வாறுதான் செய்வாள். அப்பொழுதும் மேலே குறிப்பிட்டவர்கள் தாம் சமாதானம் செய்துவைப்பார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழரின் சமூக வாழ்க்கையில் இது ஒரு பகுதியாக இருந்தது. வள்ளல் பேகன், எவ்வளவோ சிறந்த குணம் படைத்த வனாயிருந்தும், அவன், கண்ணகி இருக்கும்போதே வேறொரு மாதின்மேல் காதல் கொண்டான். இதையறிந்தாள் கண்ணகி. கணவனைத் திருந்த முயன்றாள். ஊடினாள்: பிணங்கினாள்: என்றாலும் அவனைத் திருத்த முடியவில்லை. இறுதியில் அவள் கணவன் மீது சினந்து தன் தாயகத்திற்குச் சென்றுவிட்டாள். கண்ணகியின் தாயகம், நல்ல சாலையும், நல்ல சோலையும், நீர்வளமும் நிறைந்த இடத்திலே இருந்தது. பேகனைப் பாடிவரும் புலவர்கள் பலரும் அந்த வழியிலேதான் வந்தாக வேண்டும். பேகனிடம் பரிசில் பெற வரும் புலவர்கள் பலர், கண்ணகியிருந்த வீட்டின் அருகே தங்கி இளைப்பாறுவார்கள். அவர்கள் இளைப் பாறிக் கொண்டிருக்கும் போது. பேகனுடைய பெருமையைப் பற்றியும் பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். கண்ணகி அவர்கள் பேச்சைக் கேட்டு, அவர்களைப் பற்றி விசாரிப்பாள். அவர்கள் பேகனைப்பற்றிப் பேசினால் அவள் கண்ணீர் சிந்துவாள்: மிகவும் துன்பப்படுவாள். அவள் நிலையைக் கண்டு அப்புலவர்கள் அம்மா பேகனுக்கு நீ என்ன உறவு? ஏன் வருந்துகிறாய்? என்று கேட்டால் அவள் வாயால் நேரடியாக விடைகூறமாட்டாள். அவன் யாரோ, நான் யாரோ மற்றொரு பெண்ணின் மையலிலே வீழ்ந்து கிடக்கும் அவனுக்கும் எனக்கும் எவ்வுறவும் இல்லை என்று மறைமுகமாகத் தனக்கும் அவனுக்கும் உள்ள உறவைத் தெரிவித்துக் கொள்ளுவாள். கண்ணகி கணவனைப் பிரிந்து வந்த நாள்முதல் கவலை யிலே மூழ்கியிருந்தாள். குளிக்கவில்லை: அழுக்குப் படிந்த அங்கம், வேறு ஆடை தரிக்கவில்லை. அன்று உடுத்தியிருந்த மாசுபடிந்த உடை; தலைமயிரைச் சீவி மலர்வைத்து முடிக்க வில்லை; சிக்கல் பிடித்துப் பேன் புழுத்து சீண்டைநாற்றமெடுக்கும் தலைமயிர், கண்களிலே பொலிவில்லை; கலங்கி நிற்கும்; நீரை வடிக்கும், முகத்திலே தெளிவில்லை; துக்கச் சாயலே படர்ந்திருந்தது. இக்கோலத்தில் உள்ள கண்ணகியைக் கண்ட புலவர்கள் அனைவரும் அவளை இன்னாள் என்று அறிந்து கொண்டனர். அவர்கள் பேகனிடம் வந்து பேசும்போது - பாடும்போது - அவன் கொடுக்க வரும் பரிசிலைப் பெறுவதில்லை. கண்ணகியின் துயரத்தை எடுத்துக்கூறி, அவளுடைய வேதனையை வீழ்த்து வதற்கு விரைந்து புறப்படு; அந்த உத்தமியின் உள்ளத்தை மகிழச் செய்; உன் காதல் மனைவியாகிய கண்ணகியைக் களிப்பூட்டு; எமக்குத் தரும் பரிசில் இதுதான் என்று புலவர்கள் கூறினர். இவ்வாறு பல புலவர்களும் இடித்துரைப்பதைக் கேட்ட பேகன், தன் குற்றத்தை உணர்ந்தான். தானே கண்ணகியின் தாயகத்திற்கு வலியச் சென்றான். அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லித் தன் இல்லத்திற்கு அழைத்துவந்தான். இதுதான் வரலாறு. இவ்வாறு கண்ணகியையும், பேகனையும் ஒன்றுசேர்த்து வைக்க முயன்ற புலவர்களிலே கபிலர், பரணர், அரிசில்கிழார் முதலிய புலவர்கள் தலைசிறந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவர் பாடலிலும் கண்ணகியின் துயரத்தைக் கூறி, அவள் துன்பத்தைத் துடைக்கும்படி பேகனை வற்புறுத்துவதைக் காணலாம். புறநானூற்றில் முறையே 143,144,145,146,147 ஆகிய பாடல்களின் வழியாக இவ் வரலாற்றை அறியலாம். இந்நிகழ்ச்சியைக் கொண்டு பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தங்களை ஆதரிப்போரின் நல்வாழ்க்கையிலே எவ்வளவு கவலை கொண்டிருந்தார்கள் என்பதைக் காணலாம். மேலே குறித்த பாடல்களிலே, அரிசில் கிழார் என்னும் புலவர் பாடியுள்ள ஒரு பாடலை மட்டும் இங்கே காண்போம். 3 அரிசில் கிழார் என்னும் புலவர் பேகனிடம் சென்றார். அவனைப் பாராட்டினார். புலவர் பாராட்டு முடிவதற்குள் ளேயே அவன். நல்ல ஆபரணங்களையும் செல்வங்களையும் அவருக்குப் பரிசளிக்க முன்வந்தான். அப்பொழுது புலவர் அந்தப் பரிசிலைப் பெறாமல் அவனிடம் சொல்லிய செய்தியே இப்பாடலில் அடங்கியுள்ளது. நீ கொடுக்கும் பரிசில் அவ்வளவோடு நிற்கட்டும். உன்னுடைய சிறந்த ஆபரணங்களும், செல்வங்களும் அப்படியே இருக்கட்டும்; அவற்றை நாம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, போர்வீரனாகிய சிறந்த பேகனே இந்தப் பரிசிலைப் பெற்றுச் செல்வதற்காக யாம் உன்னிடம் வரவில்லை. ஆதலால் இவை எனக்கு வேண்டாம். நான் எந்தப் பரிசிலை விரும்பி உன்னிடம் வந்தேன் என்பதைச் சொல்லுகிறேன் கேள்! சிறந்த யாழை, இசையோடு பொருந்தும்படி சீர்செய்து, உனது மலைகள் நிறைந்த சிறந்த நாட்டைப் புகழ்ந்து பாடுவேன்: இதனால் என்னிடம் அன்புகொண்டு, நீ எனக்குப் பரிசில் தர முன்வருவாயானால் நான் சொல்லுவதைக் கேள்! பெருமையையுடையவனே! உன் இரக்கத்தை - கனிந்த சிந்தையை - கருணையைப் பெறாமையால் சோர்ந்து வருந்தி நிற்கின்றாள் உன் கண்ணகி. அவளைக் கண்டவர்கள் எல்லாரும் பரிதாபப்படுகின்றனர். அழுக்கேறிச் சிக்கல் பிடித்துக் கிடக்கும் அவள் கூந்தல், மயிலின் தோகை ஒன்றுபட்டது போல் தோன்றும் படி செய்ய வேண்டும்: வாசனைப் புகையைப் பெறும்படியும், நல்ல நறுமணமலர்மாலையைச் சூடும்படியும் செய்யவேண்டும். நீ இப்போழுதே விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரில் ஏறிப் புறப்பட முன்வரவேண்டும். இதுவே நீ எனக்குத் தரும் பரிசிலாகும். 4 அன்ன வாகநின் அரும்கலம் வெறுக்கை; அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புலம் நன்னாடு பாட, என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின்: குரிசில்நீ நல்காமையின் நைவரச் சாஅய் அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை. கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடும்தேர் பூண்கநின் மாவே (புறநா.146) நயமுறப் பேசும் நற்றமிழ்ப் புலவர் 1 எல்லோரும் பேசலாம். ஆனால் கேட்போர் உள்ளங் கவரப் பேசுதல் ஒருசிலரால் தான் முடியும். நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவோ பேசுகிறோம்: எத்தனையோ பேருடைய பேச்சைக் கேட்கிறோம். நாம் கேட்கும் அத்தனை பேருடைய பேச்சும் நம்முடைய உள்ளத்திலே நிலைப்பதில்லை. நம்முடன் உரையாடிய அத்தனை பேருடனும் மீண்டும் உரையாடவேண்டும் என்ற ஆசையும் நமக்கு உண்டாவதில்லை. ஆனால் நம்முடன் பேசும் ஒருசிலரை நாம் மறப்பதில்லை. அவர்களுடன் அடிக்கடி பேசவும் விரும்புகிறோம். இதற்குக் காரணம் அவர்கள் பேச்சில் உள்ள நயம். உள்ளத்தைக் கவரும் வன்மை. பிறர் உள்ளம் உவகையடையும்படி உரையாடும் தன்மை. இவைகளை எல்லோரும் பெற்றுவிட முடியாது. பேச்சு ஒரு கலை. அக்கலை பிறவியிலேயே ஏற்படுவது என்பது சிலர் கொள்கை. இதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. உருவ அமைப்பு ஒன்றுதான் பிறவியில் அமைவது. குணம், செயல்,திறமை முதலியன பழக்கத்தைப் பொறுத்தவை: சூழ் நிலையைப் பொறுத்தவை: சுற்றுச் சார்பை ஒட்டி வருவன. இதுவே நமது கொள்கை. ஆகையால் பேசுந்திறமையை ஒரு கலையாகத்தான் நாம் கொள்ளவேண்டும். கலையென்றால் என்ன? இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? கற்றுக் கொள்வது எதுவோ அதுதான் கலை. கலை என்ற சொல்லுக்குக் கற்றுக் கொள்வது என்பதே பொருள். இப்பொருளை மறந்தவர்கள்தான் சங்கீதமா? அதுபிறவியிலேயே அமையவேண்டும்: நடிப்பா? அதற்கென்றே பிறக்கவேண்டும்: பேச்சா? கற்றுக்கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு நிற்கும்? பிறப்பிலேயே பேசுந் திறமை அமையவேண்டும் என்றெல்லாம் இயம்புவார்கள். நாம் கற்றுக்கொள்வதன் மூலம் - பழகிக் கொள்வதன் மூலம் - பேசுந் திறமையைப் பெறமுடியும். மேடையிலே ஆரவாரமாகப் பொதுமக்கள் கைதட்டும்படி பேசும் திறமையை விடத் தனிப்பட்டவர்களுடன் உரையாடும்போது, அவர்களின் உள்ளத்தைத் தன்வசமாக்கும்படி பேசுவதுதான் சிறந்தகலை, இத்தகைய பேச்சுத்திறமை யுடையவர்கள் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளிலும் வெற்றியையே காண்பார்கள். தோல்வி என்பது இவர்களைக் கண்டு அஞ்சி அப்பால் ஓடும். அவன் பேசுவதைப் பார்! வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதைப்போல் அவ்வளவு நயமாகப் பேசுகிறான்! என்று சிலரைப்பற்றி நாம் சொல்லுவது உண்டு. இப்படி நயமாகப் பேசும் நாவன்மை படைத்தவர்கள், நமக்குப் பிடிக்காத செய்தி களைக்கூட, நாம் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருக்கும் படி சொல்லிவிடுவார்கள். இத்தகைய இனிய பேசுந்திறமையைப் பழந்தமிழ்ப் புலவர்களின் பாடல்களிலே காணலாம். அப்பாடலகளைப் பயின்றால் நாமும் அத்தகைய பேச்சு வன்மையைப் பெற முடியும். இதற்கு உதாரணமாக ஒரு பழந்தமிழ்ப் புலவரின் பாடலைக் காண்போம். 2 மோசிகீரனார் என்பவர் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர். சொல் நயமும் பொருள் நயமும் பொருந்தப் பாடுவதிலே தேர்ந்தவர். சிறந்த பொருளைச் சிந்தித்துச் செய்யுள் செய்வதிலே வல்லவர். இவருடைய சிறப்பை விளக்கக் கீழ்வரும் ஒரு சிறுபாடலே போதுமானதாகும். நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்: அதனால் யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே. (புறநா.186) நான்கு வரிகள் கொண்ட இச்சிறுபாடலில் எத்துணை சிறந்த நல்ல பொருள் அடங்கியிருக்கிறது பாருங்கள். நெல்லும் உலகத்துக்கு உயிர் அன்று; நீரும் உலகத்துக்கு உயிர் அன்று; அரசனையே - அரசாட்சியையே - இவ்வுலகம் உயிராகக் கொண்டிருக்கிறது. ஆதலால், நான்தான் இவ்வுலகத்திற்கு உயிர் என்ற உண்மையை அறிதல் அரசனுடைய கடமையாகும் என்பதே இப்பாடலில் அமைந்துள்ள பொருள். குடிமக்களின் குறையுணர்ந்து ஆளாத எந்த அரசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் அரசேயாகும். நல்ல திறமையுள்ள அரசால்தான் நாடு வளம் பெறமுடியும்; குடிகள் குறைகள் நீங்கிக் குதூகலமாக வாழமுடியும். எவ்வளவுதான் இயற்கைச் செல்வம் நிறைந்த நாடாயிருந்தாலும், நல்லரசின்றேல் அந்நாடு நாசப் படுகுழியில் வீழ்ந்து நலிவடையும். இந்த உண்மையை மோசிகீரனார் பாடலிலே காணலாம். இது எக்காலத்தும் இறவாமல் உயிரோடு நிற்கும் உண்மைப்பொருள். இப்பாடல் சாவாத உயிருள்ள பாடல். இப்புலவர் சொல்நயத்திலும் சிறந்தவர் என்பதற்கு மற்றொரு பாடலைப் பார்ப்போம். கொண்கானங் கிழான் என்பவன் மீது பாடப்பட்டது அப்பாட்டு கொங்கண தேசத்தில் கொண்கானம் என்பது ஒரு மலை. கொங்கணம் என்பது கொங்குநாட்டை ஒட்டிய ஒரு நாடு. இன்றுள்ள நீலகிரி மலையை அடுத்துள்ள ஒரு பகுதியைக் கொங்கண தேசம் என்று வழங்கியிருக்க வேண்டும். இதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான். கொண்கானம் என்ற மலையின் தலைவன் தான் கொண்கானங் கிழான் என்பவன். இவனைப் பற்றி மோசிகீரனார் பாடிய பாட்டு, சொல்நயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அப்பாடலில் அமைந்திக்கும் பொருளைப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். 3 இவ்வுலகத்தில் பெரிய நீர்நிலை கடல்தான். அது தன் அலைக் கரங்களால் கரையைத் தட்டி எனக்கு நிகர் யாரும் இல்லை என்று கண்கவரக் காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய கடலின் அருகே நடந்து செல்வோர் நீர்வேட்கை கொண்டபோது, தன்னெதிரில் வருவோரைக் கண்டால் உண்ணுதற்குரிய நன்னீர் உள்ள சின்னீர் நிலை எங்குண்டு? என்று கேட்பார்கள். இது உலக மக்களின் இயல்பு இதைப்போலவே புலவர்களும், தம் பக்கத்தில் எவ்வளவு செல்வம் படைத்த அரசர்களிருந்தாலும் அவர்களை விட்டுவிடு வார்கள்: அவர்களைப் பாடமாட்டார்கள். சிறந்த வள்ளல்கள் - குறுநில வேந்தர்களானாலும். அவர்கள் வாழுமிடம் தொலை தூரமானாலும் அவர்களை நாடிச் செல்லுவார்கள். அவர் களைப் பாடிப் புகழ்வார்கள். இது புலவர்களின் தன்மை. யான் வறுமையுடையவன். யான் பெற்ற செல்வம் கொஞ்சமானாலும் மகிழ்ச்சியடைவேன். இவ்வளவுதானா கிடைத்ததென்று அலட்சியமாக எண்ணமாட்டேன்; ஆதலால் உன்னைத் தேடி வந்தேன். யான் வறுமையால் வாடி வதங்குகின்றேன். ஆயினும் என் இன்னல் தீர எனக்குப் பொருள் கொடு என்று நான் வாய்விட்டுக் கேட்க மாட்டேன். நீ எனக்குப் பொருள் கொடுத்தாலும் சரி, அல்லது கொடுக்காவிட்டாலும் சரி, நான் வெறுப்படைய மாட்டேன். உன்னைப்பற்றிய என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன். எதிரிகள் வீசுகின்ற படைக்கலத்தைக் கண்டு பின்னடையாத உனது ஆண்மையைப் பாராட்டிப் பாடுவேன்; வெண்மையான துணியை விரித்திருப்பது போன்ற பல அருவிகளை யுடையது உனது மலை. இத்தகைய குளிர்ந்த அருவிகள் உச்சியிலிருந்து வீழ்ந்துகொண்டிருக்கின்ற உனது கொண்கான மலையையும் நான் பாடுவேன். இப்படிப் பாடுவது எனக்கு எளிதான காரிய மாகும். எனக்கெளிதான காரியத்தை நான் செய்யாமலிருக்க மாட்டேன். இதுவே அப் பாடலில் உள்ள பொருள். திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும், அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர் மாந்தர்; அதுபோல் அரசர் உழையர் ஆகவும், புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர்: அதனால் யானும், பெற்றது ஊதியம்: பேறுயாது என்னேன்: உற்றனென் ஆதலின்: உள்ளிவந் தனனே: ஈயென இரத்தலோ அரிதே: நீஅது நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர் எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசைத் தண்பல இழிதரும் அருவிநின் கொண்பெரும் கானம் பாடல்எனக்கு எளிதே. (புறநா.154) இப்பாடலிலே உள்ள சிறந்த சொல்நயத்தைப் பாருங்கள். கடல் பெரிதாயினும் அதன் நீர் தாகத்தைத் தணிக்காது. சிறு குழியில் உள்ள நன்னீரால் எனது தாகம் தணியும். எனது நாட்டில் பெரிய அரசர்களிருந்தாலும் அவர்கள் கொடையாளர்கள் அல்லர்; ஆதலால் உன்னை நாடி வந்தேன். நீ கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. உனது ஆண்மையையும், உனது மலையையும் நான் புகழ்ந்து பாடுவேன். இவை கேட்போர் உள்ளதைக் கொள்ளைகொள்ளும் இனிய சொற்கள் அல்லவா? வறுமையில் செம்மை 1 யாரையா நீர்? எங்கே யிருந்து வருகிறீர்? யாரைப் பார்க்க வேண்டும்? பாவம்! மிகவும் களைத்துப்போயிருக்கிறீர் நீண்ட தூரம் நடந்து வந்தவரைப் போலக் காணப்படுகிறீர்? என்று கேட்டான் உறையூர் அரண்மனை வாசற்காவலன் அங்கு வந்த புலவன் இளந்தத்தனிடம் ஐயா! நான் ஒரு தமிழ்ப் புலவன். என் பெயர் இளந்தத்தன். மன்னர் நெடுங்கிள்ளியைக் காண வந்தேன். கீழைக்கடற்கரை யினின்றும் வருகின்றேன். நீண்ட வழி நடப்பால் களைத்திருக் கிறேன். புலவர்களுக்கு ஆதரவு தரும் புரவலனைக் காண வேண்டும் என்பதே என் ஆவல். என் வருகையை அன்புகூர்ந்து அரசர்க்கு அறிவிக்கவேண்டுகின்றேன் என்றான் புலவன் இளந்தத்தன். ஓகோ, தமிழ்ப் புலவரா நீர்! கீழக்கடற்கரையிலிருந்தா வருகிறீர்? கீழக்கடற்கரையில் எவ்வூரில் இருந்து வருகின்றீர்? ஊரைச் சொல்லக்கூடாதோ! என்றான் மீண்டும் காவலன். கீழக் கடற்கரையில் உள்ள சோழர் தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வருகிறேன். காவிரிப்பூம் பட்டினத்தின் மன்னன் சோழன் நலங்கிள்ளியிடம் பரிசில் வேண்டிச் சென்றேன். அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்க வில்லை: ஆதலின் அதே சோழர்குடிப் பெருந்தகையான நெடுங் கிள்ளியிடம் என் வறுமையைக் கூறிப் பரிசில் வாங்கிச் செல்ல வந்தேன் என்றான் இளந்தத்தன். ஓகோ! அப்படியா? காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தா வருகின்றீர்? நலங்கிள்ளி மன்னரிடமிருந்து வருகிறீரோ? உறை யூரில் உளவு காண்பதற்கு வந்திருக்கிறீர்போலும்! இதற்காகப் புலவர் வேடம் புனைந்து வந்திருக்கிறீர்! உமது தந்திரத்தை எமது அரசன் அறிந்தால் உம்மைச் சும்மாவிடமாட்டான். இங்கு நிற்காதீர்! இப்பொழுதே இந்த நகரை விட்டு வெளியேறிவிடும். உம், விரைவில் போம்! நில்லாதீர்! என்று கடிந்து கூறினான். காவலன் மொழியைக் கேட்டவுடன் புலவனுக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு பாவமும் அறியாத நம்மை இவன் ஒற்றன் என்று ஐயுறுகின்றானே என்று எண்ணி எண்ணி அவர் நெஞ்சம் புண்ணாகிவிட்டது. அவரால் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. காவலனே! உனக்குப் புலவர் தன்மை தெரியாது. நாங்கள் சமாதானத்தில் நம்பிக்கையுடையவர்கள். உளவறிந்து சண்டை மூட்டிவிடும் வழக்கம் எங்களுக்கில்லை. வீணாகத் தமிழ்ப் புலவனைப் பழிக்காதே, உன்னிடம் எனக்குப் பேச்சில்லை. என் வருகையை உன் அரசரிடம் போய்ச் சொல்: நான் அவரிடம் பேசிக் கொள்ளுகிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டான் இளந்தத்தன். சரி, நில்லும்! இதோ அரசர் கருத்தறிந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் காவலன் உள்ளே சென்றுவிட்டான். புலவன் அரசனுடைய ஆணையை எதிர்பார்த்துக் காத்து நின்றான். 2 நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் தீராப் பகையுண் டென்பது அந்தக் காவலனுக்குத் தெரியும். தன்னிடம் மிடுக்காகப் பேசிய புலவனை நலங்கிள்ளியின் ஒற்றனாகவே ஆக்கி அவனைத் தண்டிக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்துவிட்டான். காவலன், நெடுங்கிள்ளி மன்னனை நெருங்கினான்; வணங்கினான். அரசே, காவிரிப்பூம்பட்டினத்து ஒற்றன் ஒருவன் நமது கையில் சிக்கியிருக்கின்றான். யாரோ ஒருஆள் புலவர் வேடம் பூண்டு வந்திருக்கின்றான். அவன் நலங்கிள்ளி மன்னரு டைய உளவாளி என்பதிலே ஐயமில்லை. அவனை என்ன செய்யலாம்? தங்கள் ஆணையின்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான் காவலன். காவலா, நம்மை நாடி வந்திருப்பவன் உண்மையிலேயே ஒற்றன்தானா? உனக்கு நன்றாகத் தெரியுமா? நீ அவனை எப்படி ஒற்றன் என்று கண்டுபிடித்தாய்? ஒற்றனாக இருந்தால் இவ்வளவு எளிதாக அவன் அகப்பட்டுக் கொள்ளுவானா? என்றான் அரசன். மன்னர் மன்னா! எனக்குச் சிறிதும் சந்தேகமேயில்லை. புலவர் வேடத்தில் வந்திருப்பவன் ஒற்றன் என்பது உறுதி தான். அவன் பேச்சு, பார்வை, முகத்தோற்றம் எல்லாம் அவன் ஒரு ஒற்றன் என்பதற்கே சாட்சி சொல்கின்றன. நான் திரும்பிச் செல்வதற்கு முன் அவன் ஓடிப்போனாலும் போய்விடுவான். விரைவில், அவனை என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி ஆணையிட வேண்டுகிறேன். நான் கண்டறிந்த உண்மையை உரைத்துவிட்டேன். தங்கள் விருப்பம் என்று கூறி நின்றான் காவலன். அரசன் சிறிது நேரம் சிந்தனை செய்தான். இருக்கலாம்! வந்தவன் ஒற்றனாக இருக்கலாம். நலங்கிள்ளி நம்மை வீழ்த்து வதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நம்முடைய படை வலிமை, நமது நகரத்தின் நிலைமை, நமது நகர மக்களின் மனப்பான்மை இவைகளை எல்லாம் அறிந்து கொள்ளுவதற்கு அந்த நலங்கிள்ளியே உளவுக்காரனை அனுப்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். உடனே நெடுங்கிள்ளி சரி, அவனைப் பிடித்துச் சிறையில டையுங்கள். அவனை விசாரித்து மரணதண்டனை விதிப்போம் என்று உத்தரவிட்டான். காவற்காரனும் உடனே விரைந்து புலவரண்டை வந்தான். இன்னும் இருகாவற்காரர்களையும் சேர்த்துக் கொண்டான். புலவரைக் கொண்டுபோய்ச் சிறையில் தள்ளிவிட்டான். பிறகு இளந்தத்தன், சோழன் நலங்கிள்ளியின் ஒற்றன் தான் என்று தீர்மானிக்கப்பட்டான். இளந்தத்தன் கூறிய எந்தச் சமாதானத்தையும் நெடுங்கிள்ளி ஏற்றுக் கொள்ளவில்லை. அவனுக்குத் கொலைத்தண்டனை விதித்தான். அந்தக் கொலைத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு நாளும் குறிப்பிடப் பட்டது. 3 இளந்தத்தன் என்னும் புலவன் உறையூர்க் கோட்டைக் குட் புகுந்தான், மன்னன் நெடுங்கிள்ளியைக் காணச் சென்றான். நெடுங்கிள்ளி அப்புலவனை நலங்கிள்ளியின் ஒற்றனென்று முடிவுகட்டி அவனைக் கொலை செய்யும்படி ஆணையிட்டு விட்டான் என்ற செய்தி ஊரெங்கும் பரவி விட்டது. மக்கள் இளந்தத்தனிடம் இரக்கம் காட்டினர். இளந்தத்தன் இளம் புலவன். உலக அநுபவம் அற்றவன். எப்படியோ போய் நெடுங்கிள்ளியிடம் அகப்பட்டுக்கொண்டான் என்று எல்லோரும் பரிதவித்தனர். இந்தச் செய்தி எப்படியோ கோவூர்கிழார் என்ற புலவர் பெருமானுக்குத் தெரிந்துவிட்டது. புலவர் இளந்தத்தனை அவருக்குத் தெரியும். இளந்தத்தன் குற்றமற்றவன் என்பதையும் அவர் அறிவார். ஆகையால் இளந்தத்தன் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தார். உடனே புறப்பட்டு உறையூரை அடைந்தார். நெடுங்கிள்ளி யைக் கண்டார். கண்டவுடன் அவர் அவனிடம் கூறியது இதுதான். செந்தமிழ்ச் சுவையுணர்ந்த நெடுங்கிள்ளியே! அப்பழுக் கற்ற அந்த இளந்தத்தனை அநியாயமாகக் கொலைசெய்யத் துணிந்துவிட்டாய். அந்த இளந்தத்தன் குற்றவாளியல்லன். அவன் உன்னிடம் பரிசில் பெற வந்த வறுமையால் வாடிய ஒரு புலவன். அவனை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று நீ ஐயுறவேண்டாம். தமிழ்ப் புலவர்களின் தன்மை உனக்குத் தெரியாததன்று. அவர்கள் எங்கே கொடையாளிகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் செல்வார்கள். பழங்கனிந்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப் போல ஓடுவார்கள். நீண்ட தூரம் என்று கவலைப்பட மாட்டார்கள். எத்தகைய வழிகளையும் கடந்து செல்லுவார்கள். சிறந்த நாவன்மையால் தங்களால் முடிந்தவரையில் பாடுவார்கள். தமிழறிந்த வள்ளல் எவ்வளவு தந்தாலும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்ளுவார்கள். அப் பொருளைக் கொண்டு தங்கள் சுற்றத்தார்க்கும் உணவிடுவார்கள். எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள். தாமும் உண்பார்கள், தம்மிடத்தில் உள்ளதை மனங்கோணாமல் பிறர்க்கும் கொடுப்பார்கள். மீண்டும் பரிசில் பெறுவதற்காக வருந்தித் திரிவார்கள். இத்தகைய பரிசு பெற்று வாழும் வாழ்க்கையை உடையவர்கள் புலவர்கள். இவர்கள் வறிஞர்களானாலும் பிறர்க்குத் தீங்கு செய்வதைப் பற்றி எண்ணவே மாட்டார்கள். தூய்மையான வாழ்க்கையை யுடையவர்கள். கல்வியிலே தம்மை எதிர்த்து எவர் வாதிட்டாலும் அவர் களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எதிர்வாதம் புரிந்து வெற்றி பெற்றுத் தலைநிமிர்ந்து நடப்பார்கள். இதைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்யமாட்டார்கள். மிகுந்த புகழுடன், இந்த உலகத்தை ஆளுகின்ற உம் போன்ற தலைமைத் தன்மையும் அவர்களிடம் உண்டு என்று இவ்வாறு புலவர்களின் தன்மையை எடுத்துரைத்தார் கோவூர் கிழார். உடனே நெடுங்கிள்ளியும் உண்மையுணர்ந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தினான். புலவர் இளந்தத்தனை விடுதலை செய்தான். இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 47-வது பாட்டால் அறியலாம். இப்பாடலில், பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வறிஞராயினும் நன்னெறி தவறாமல் வாழ்ந்தனர்; வறுமையில் செம்மை அவர் களிடம் குடிகொண்டிருந்தது என்பதைக் காணலாம். 4 வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, நெடிய என்னாது சுரம்பல கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்நது, சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றே: இன்றே திறப்பட நண்ணார் நாண அண்ணாந்து ஏகி ஆங்கு இனிது ஓழுகின் அல்லது, ஓங்குபுகழ் மண்ஆள் செல்வம் எய்திய நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே. (புற.நா.47) தமிழ் மன்னர்களின் தளரா உறுதி 1 என்னுடைய குடையின் கீழ் வாழும் குடிமக்கள் என்றும் இன்புற்று வாழவேண்டும்: எத்தகைய துன்பமும் எய்தவே கூடாது. அவர்கள் எமது அரசன் கொடுங்கோலன் என்று கூறும் நிலைமை எக்காலத்தும் ஏற்படவே கூடாது. அவர்கள் கண்ணீர் விட்டுக் கலங்கும் நிலைமை தோன்றவே கூடாது. என்னுடைய ஆளுகைக்கு அடங்கிய நாட்டைப் புலவர்கள் போற்றிப் புகழவேண்டும். புலவர்கள் பாடத்தக்கவாறு நாட்டிலே நல்ல வளங்கள் சிறந்திருக்கவேண்டும். நாட்டுக் குடிமக்களும் நல்லவர்களாயிருக்கவேண்டும். நானும், என்றும் வறியோர்கள் துன்பந் தீர அவர்களுக்குச் செல்வங்களை வாரி வழங்குவேன்; இரப்போர்க்கு இல்லை யென்று சொல்லாமல் நல்லறம் புரிவேன். இவ்வாறு பண்டைத் தமிழரசர்கள் ஒவ்வொருவரும் எண்ணினர். இவைகளை அவர்கள் தங்கள் வாழ்நாளிற் பின்பற்றி நடந்தனர். இத்தகைய முப்பெருங் கொள்கைகளையுடைய மன்னர்களே இன்றும் தமிழ் இலக்கியங்களிலே தலைநிமிர்ந்து உலவிக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மையை நெடுஞ்செழியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் பாடலால் அறியலாம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது இவனுடைய பெயர். தலையாலங்கானம் என்ற இடத்திலே நடந்த போரில் இவன் வெற்றி பெற்றான். பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி வெற்றிபெற்றான். ஆதலால் தான் இவன் மேலே காட்டப்பட்ட பெயர் பெற்றான். எதிரிகள் போர்க்களத்திலே குவிந்திருக்கின்றனர். நெடுஞ் செழியன் போருக்குப் புறப்படுகின்றான். அப்பொழுது அவன் தனது குடிமக்களையும், படைவீரர்களையும் பார்த்துச் சூளுரைக் கின்றான். பாண்டியனுடைய நாட்டைப் புகழ்ந்து கூறுகின்றவர்கள் பரிகசிக்கத்தக்கவர்கள். பாண்டியன் வீரனல்லன்: போரிலே தோற்றோடத்தக்க மெலியவன் என்று இவ்வாறு என் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சியது போல் என் பகைவர்கள் கூறினார் களாம். அன்றியும் தம்மிடத்தில் யானைப்படை. தேர்ப்படை, குதிரைப் படை, காலாட்படை ஆகியவை ஏராளமாக இருக்கின்றன என்று அவர்கள் கர்வம் கொண்டிருக்கின்றனர். இந்தக் கர்வம் அவர்கள் அறிவை மறைத்துவிட்டது. என்னுடைய ஆற்றலைப் பற்றிச் சிறிதும் எண்ணிப்பார்க்கவும் இல்லை. அஞ்சவும் இல்லை. சினத்தாலும் செருக்காலும் என்னை இகழ்ந்து பேசிவிட்டனர். என்மீது சினங்கொண்டு போருக்கும் புறப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு நல்லபுத்தி புகட்டுகிறேன். அவர்களைச் சும்மா விட்டுவிட மாட்டேன். அரிய போர்க்களத்திலே அவர் களுடைய இறுமாப்புக்குக் காரணமான படைகள் பல திசை களிலும் சிதறி ஓடும்படி தாக்குவேன்: அந்த மன்னர்களையும் அவர்களுடைய வெற்றி முரசங்களுடன் சிறைபிடிப்பேன். இப்படி நான் செய்யத் தவறினால் நான் கொடுங்கோனாகுக. என்னுடைய குடைநிழற்கீழ் வாழும் குடிகள், தாங்கள் போய் வாழ்வதற்கு வேறு நிழல் காணாமல், எமது அரசன் கொடியவன் என்று கண்ணீர் விட்டு என்னைப் பழிப்பாராக! உலகம் புகழும் சிறப்பும், கல்வி கேள்விகளும் உடைய மாங்குடி மருதன் என்பவரைத் தலைவராகக் கொண்ட புலவர்கள் கூட்டமும் என்னை வெறுப்பதாக. உலகம் இருக்கும் வரையிலும் அழியாது நிலைத்திருக்கின்ற அவ்வளவு சிறப்பினையுடைய அப் புலவர்கள் எனது நாட்டைப் புகழ்ந்து பாடாமல் இருப்பராக. என்னால் காப்பாற்றப்படுவோர் அனைவரும் துன்பம் அடையும்படி, என்னிடம் வந்து இரக்கின்ற ஏழைகளுக்கு ஒன்றும் உதவி செய்ய முடியாத வறுமையை யானும் அடைவேனாக! இதுதான் பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்குப் புறப்படுமுன் உரைத்த சூளுரை. என்னுடைய இன்பத்திற்காக நான் இந்த நாட்டை ஆள வில்லை. மக்களை அடக்கி ஆளவேண்டும் என்ற அதிகார வெறியும் என்னிடம் இல்லை. இந்த நாட்டுக் குடிமக்களைக் காப்பாற்றுவதே எனது கடமை. இதற்காகவே நான் அரசாளு கிறேன் என்ற கருத்து மன்னன் மொழிந்த சூளுரையிலே பொதிந்து கிடப்பதைக் காணலாம். போருக்குப் புறப்படுமுன் இத்தகைய சூளுரை புகல்வது பண்டைப் போர்வீரர்களின் வழக்கமாகவும் இருந்துவந்தது. 3 இப்பொருளுடைய பாடல் புறநானூற்றின் 72-வது பாடல். இதைப் பாடியவனும் அந்தப் பாண்டியன் நெடுஞ்செழியனே தான். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளையன் இவன்: என உளையக் கூறிப், படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படைஅமை மறவரும் உடையம்யாம்; என்று உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினம் கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்குஅகப் படேன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன்நம் இறை; எனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ;ஓங்கிய சிறப்பின், உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை; புரப்போர் புன்கண்கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே. இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்த புலவர்களிலே சிறந்தவர், மாங்குடி மருதனர் என்று இப்பாடலால் தெரிகின்றது. மாங்குடி மருதன் தலைவனாக என்ற அடி இவ்வுண்மையை விளக்குகின்றது. இம்மன்னவனும் செய்யுளியற்றும் ஆற்றலுடைய அருந் தமிழ்ப் புலவன்; ஆயினும், மற்றப் புலவர்கள் தனது நாட்டைப் புகழ்ந்து பாடுவதையே பெருமையாக எண்ணினான். இதனால் இவன் புலவர்கள்பாற் கொண்டிருந்த மதிப்பையும், அன்பையும் அறியலாம். மானங் காத்த மன்னவன் 1 அரசன் என்றால் போர் செய்யவேண்டும்; போரிலே வெற்றி பெறவேண்டும்; அல்லது போர்க்களத்திலேயே சாக வேண்டும். போர்க்களத்திலே உயிரைப் போக்கிக் கொள்கிற வனுக்கே சுவர்க்கம் உண்டு இப்படி ஒரு கொள்கை பண்டைத் தமிழரிடையிலே நிலைபெற்றிருந்தது. மக்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் எழுந்த கொள்கை இது. ஆங்காங்கே மக்கள் கும்பல் கும்பலாகத் தங்கியிருந்தனர். அக்கும்பல்கள் தாங்கள் தங்யிருந்த இடத்தை வளம் செய்து, செழிப்பாக்கி, உழவுத் தொழிலையும், பண்ட மாற்றுதலையும் பெருக்கி, உறுதியாக நிலைத்து வாழ முயன்று கொண்டிருந்தனர். இச்சமயத்தில் நாடோடிக் கும்பல்கள், நிலைத்து வாழ முயற்சிக்கும் இக் கும்பல்களுடன் அடிக்கடி போர் செய்து அவர்கள் சமாதான வாழ்வைக் குலைக்க முயன்றனர். இப்படி ஒரு காலம் இருந்தது. இந்த நிலை பல நூற்றாண்டுகள் நீடித்திருந்தது. இந்தக் காலத்தில்தான் மக்களைக் காப்பாற்றுவோம் என்று கடமை பூண்ட காவலர்கள் போர்வீரர்களாகி, எதிர்ப் போரை விரட்டியடிக்கும் விரதத்தைப் பூண்டனர். இவ்விரதம் பூண்ட வீரர்களே அரசர்களாயினர். இந்த அரச பரம்பரை யினரே நாகரிகம் வளர்ச்சியடைந்த பிற்காலத்தில் போர் செய்தல் தங்கள் கடமை எனக் கருதிவந்தனர். மக்கள் நாகரிகமடைந்து அரசியலிலும், கலைகளிலும், வளர்ச்சியடைந்து நிலையான வாழ்க்கை நடத்திய காலத்திலும் போரையும், அதிலே கிடைக்கும் வெற்றியையும் போற்றிவந்தனர். இவைகளே புகழுக்குக் காரணம் என்று பாராட்டி வந்தனர். போர் செய்து வெற்றி பெற்று வீரனாக வாழவேண்டுமென்று எழுந்த கொள்கை பண்டைய மூடக் கொள்கையின் வாசனைதான். நாளடைவில்தான் போர் அநாகரிமானது: மக்கள் நாகரிகத்தைச் சீர்குலைக்கக் கூடியது: சமாதான வாழ்வே சிறந்தது என்ற கொள்கை தோன்றியது. புறநானூற்றுப் பாடல் களிலே இந்த இரண்டு கொள்கையுள்ள பாடல்களையும் காணலாம். போர் செய்து வெற்றி பெற்று வீரனாக விளங்குவதே அரசர் கடமை என்று வலியுறுத்தும் பாடல்களையும் காணலாம். தமிழர்கள் தங்களுக்குள் போர் செய்வது தவறு: போரினால் மக்கள் ஒற்றுமை உடைபட்டு உதிர்ந்துவிடும்: செல்வமும் சிறந்த வாழ்வும் சீர்குலைந்துவிடும்: ஆதலால் சமாதான வாழ்வே சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்குச் சாதனமாகும்: என்ற கருத்துக்களை வலியுறுத்தும் பாடல்களையும் புறநானூற்றிலே காணலாம். போரிலே வெற்றி பெற்று வீரர்களாய் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் வயதுமுதிர்ந்தோ, நோய்வாய்ப்பட்டோ மற்ற மக்களைப்போல் இறந்துவிடுவார்களானால் அவர்கள் உடலைச் சும்மா அடக்கம் செய்வதில்லை. அவர்கள் பிணத்தைத் தர்ப்பைப் புல்லின்மேல் கிடத்தி, வாளால் பிளப்பார்கள். பிளக்கும் போது போரிலே மாண்டோர் நிலையை இவர் அடைக என்று கடவுளை வேண்டிக்கொண்டபின், அவ்வுடம்பை அடக்கம் செய்வார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் போர்வெறி பிடித்தவர் களாய் இருந்தனர் என்பதற்கு இது உதாரணமாகும். 2 போர் வெறியின் காரணமாகவே தமிழரிடம் தன்மான உணர்ச்சி தோன்றியது என்று கூறலாம். போரிலே வெற்றி பெற வேண்டும் அல்லது ஆருயிரைத் துறக்கவேண்டும்: தோல்வி யடைந்து உயிர்வாழ்தல் கோழைத்தனம், மானங்கெட்ட வாழ்வு என்று தமிழர்கள் நினைத்தனர். பெரும்பாலும் போரில் தோல்வி யடைந்து மாற்றனுக்குப் பணிந்து வாழ்வதையே அவர்கள் மானங்கெட்ட வாழ்வென்று மதித்தனர். இதை விளக்கும் வரலாறு ஒன்று புறநானூற்றிலே உண்டு. அவ்வரலாற்றைக் காண்போம்: சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன் சேரர் குலத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன். சேரநாட்டின் ஒரு பகுதியிலே உறைந்து அரசாண்டவன், இவன் காலத்திலே சோழன் செங்கணான் என்ற ஒரு சோழ மன்னவன் சோழ நாட்டை ஆண்டுவந்தான். இருவருக்கும் போர் மூண்டது. திருப்போர்ப்புறம் என்ற இடத்திலே இந்தச் சேரனும் சோழனும் சண்டையிட்டனர். முடிவில் சேரமான் தோற்றான். சோழமன்னனால் சிறை பிடிக்கப்பட்டான். சோழன் மிகத் திறமையாகப் போர் செய்து சேரன் கணைக்காலிரும்பொறையைப் பிடித்துக் கட்டிவிட்டான். குடவாயிற் கோட்டம் என்ற இடத்திலே சேரமானைச் சிறைப்படுத்தினான் சோழன். சேரமானைச் சிறைக்குள்ளே அடைத்துவைத்து. அவனுக்கு வேண்டுவனவற்றை அவ்வப் போது உதவுவதற்காகக் காவலர்களையும் வைத்திருந்தான். ஆனால் சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறை வாழ்க்கையை விரும்பவில்லை. நாய்போலச் சங்கிலியாற் பிணைத்துக் கொண்டுவரப்பட்டு, மாற்றான்சிறையிலே கிடந்து, மானமின்றி அவனுடைய உணவை உண்டு உயிர்வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டதைப் பற்றி எண்ணி எண்ணி ஏக்கமடைந்து கிடந்தான். இப்படியிருக்கும் நாளில், ஒருநாள் சேரமானுக்கு அடங்காத தண்ணீர்த்தாகம் எடுத்தது. எவ்வளவு பொறுத்தும் அடக்கியும் - தாகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னைக் காத்துவந்த காவலர்களைப் பார்த்துச் சிறிது உண்ணீர் வேண்டும் என்று உள்ளமும் உடலும் சோர்ந்து கேட்டு விட்டான். காவலர்கள் கணைக்காலிரும்பொறையைச் சிறிதும் மதிக்காமல் அலட்சிய புத்தியுடன் ஏறிட்டுப் பார்த்தனர். பிறகு சென்று தண்ணீர் கொண்டுவந்தனர். இந்நிலையைச் சேரமான் கண்டான். காவலர்கள் என்னை மதிக்கவில்லை: அடிமைப் பட்ட கைதியாகவே என்னைக் கருதுகின்றனர்: போரிலே தோல்வி யடைந்த கோழை என்றே மதிக்கின்றனர்: மானமிழந்து மாற்றான் சிறையிலே கிடந்து வயிறு வளர்க்கும் வறியவனென்று எண்ணி இகழ்ச்சியாக நினைக்கின்றனர் என்ற எண்ணம் - சிந்தனை - கணைக்காலிரும்பொறையின் உள்ளத்திலே காலூன்றிப் படர்ந்தது. உடனே ஒரு செய்யுளை எழுதி வைத்தான். தாகத்தால் தளர்ந்து தரையிலே வீழ்ந்தான். உயிர்விட்டுத் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான். காவலர்கள் தண்ணீர் கொண்டு வந்த போது சேரமான் தரையிலே சோர்ந்து கிடந்ததைக் கண்டனர் அவனை வாரி அணைத்துத் தூக்கியபோது அவன் வாழ்வு முடிந்துபோனதைப் பார்த்தனர். மன்னனை அவமதித்த தங்கள் குற்றத்தை உணர்ந்து அந்தக் காவலர்களும் கண் கலங்கிவிட்டனர். இச்செய்தியைச் சோழன் செங்கணான் அறிந்தான். அவன் ஓடோடியும் வந்து, மானம் பறிபோகாமல் மாண்ட மன்னவன் உடலுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து அடக்கம் செய்தான். அவன் எழுதிவைத்திருந்த செந்தமிழ்ப் பாடலைக் கண்டு சிந்தை வருந்தினான். இந்தத் தன்மானமுடைய தமிழ் மன்னனை வீணாகச் சிறையிலிட்டு வேதனைப்படுத்தினோமே என்று எண்ணி உள்ளம் வருந்தினான். இந்த வரலாற்றை விளக்குவதற்கு ஆதரவான சேரமான் கணைக்காலிரும்பொறையின் பாடல் புறநானூற்றின் 74-வது பாடலாகும். அப் பாடலில் நிரம்பியுள்ள பொருள் கீழ்வருவது, இதன்மூலம் தமிழர்களின் போர்வெறியையும், மானவுணர்ச்சி யையும் காணலாம். 3 போர்க்கோலங் கொண்டவர்கள், போர்க்களத்திலே இன்னார் இனியார் என்று பார்க்கமாட்டார்கள். எதிரிகள் எல்லோரையும் வெட்டிச் சாய்ப்பார்கள். எதிரிகளின் நாட்டை அடியோடு நாசமாக்குவார்கள். பிறந்த குழந்தைகளைக்கூட உயிரோடு விடமாட்டார்கள். செத்துப் பிறக்கும் குழந்தை களைக் கூடச் சிதறும்படி வெட்டி வீழ்த்துவார்கள். பிறக்கும் காலத்திற்கு முன்னாகவே பிறக்கும் குழந்தை உருக்கொள்ளாத தசைப் பிண்டங்களைக் கூட வாளால் பிளந்தெறிவார்கள். செத்த குழந்தையும், தசைப்பிண்டமும் எதிரிகளாக நிற்கும் ஆட்கள் அல்ல என்று எண்ணுவதற்கான பொறுமைகூட அவர்களிடம் இராது. இத்தகைய மன்னர் மரபிலே பிறந்தவர்கள் வாளால் மடியாமல் சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போலப் பகைவர்களால் கட்டப்பட்டுச் சிறையிலே வைக்கப்படுவதற்குச் சம்மதிப்பார்களா? சிறிதும் கருணை காட்டாத மாற்றார்களின் முயற்சியால் சேகரிக்கப்படும் உணவை வீரமும் மானமும் இல்லாமல், வயிற்றுப் பசி தணிவதற்காக இரந்து வாங்கி உண்டு உயிர்வாழ்வார்களா? மானமின்றிப் பகைவன் சிறையிலே கிடந்து, மாற்றன் கொடுக்கும் உணவை வாங்கியுண்டு வாழும் மன்னரை இவ்வுலத்தில் மன்னர்குலம் பெற்றெடுப்பது உண்டோ? ஒருக்காலும் இல்லை. இதுவே சேரமான் கணைக்காலிரும்பொறையின் பாடலில் அடங்கியுள்ள பொருள். 4 குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத்து இரீ இய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. (புறம் . 74) இப்பாடலிலே, போர்வெறி கொண்டவர்கள், செத்துப் பிறக்கும் குழந்தைகளையும், தசைப்பிண்டங்களாகப் பிறக்கும் குழந்தைகளையும் கூட வெட்டி வீசுவார்கள் என்று கூறப்பட்டி ருப்பதைக் காணலாம். ஆத்திரங்கொண்டவர்கள், அறிவையிழந்து எதையும் செய்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். எதிரிகளைக் கொல்லவேண்டும் அல்லது எதிரிகளால் மடியவேண்டும்; இரண்டுமில்லாமல் எதிரியின் கையிலே சிக்கி, அவனிடம் இரந்துண்டு வாழ்தல் ஈனவாழ்வு என்ற கருத்து இப் பாடலிலே அமைந்திருப்பதைக் காணலாம். முதுகுடுமி 1 நீளமான பெயர்: ஒரு தடவை படித்தவுடன் அல்லது பார்த்தவுடன் அப்படியே நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அவ்வளவு நீளமான பெயர். அந்தப் பெயர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பது. இப்பெயரைத் தான் சுருக்கமாக முதுகுடுமி என்று குறித்துள்ளோம். இவன் ஒரு பாண்டிய மன்னன். குடுமி என்பது தான் அவன் இயற்பெயர். இப்பெயருடைய பாண்டியர்கள் பிற்காலத்திலும் இருந்தனர். இவன் மிகப் பழங்காலத்தில் இருந்தவன். குடுமி என்ற பெயர் படைத்தவர்களிலே காலத்தால் முற்பட்டவன். முற்பட்டவன் என்பதைக் குறிக்கவே முது என்ற அடைமொழி குடுமி என்ற பெயருடன் சேர்க்கப்பட்டது. இதனால் குடுமி முதுகுடுமி ஆனான். பாண்டியன் என்பது குடிப் பெயர். பல்யாகசாலை என்பது இவன் பெருமையைக் குறிப்பது. பெருவழுதி என்பது பட்டப் பெயர். சிறந்த வழுதி என்பதே இதன் பொருள். பாண்டியர் குடியிலே பிறந்தவன்; சிறந்த பல யாகங்களைச் செய்தவன்; காலத்திலே முற்பட்டவன்: குடுமி என்னும் பெயரு டையவன்: பெருவழுதி என்னும் பட்டமுள்ளவன்: இந்தப் பொருள்களைக் கொண்ட ஒரே பெயர்தான் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பது. இவன் சிறந்த போர்வீரன்: தோல்வி என்பதே இவனுக்குத் தெரியாது. எந்தப் போரிலும் வெற்றியைத்தான் காண்பான். தன்னை எதிர்ப்பவர்களைத்தான் இவனும் எதிர்ப்பான். எதிர்த்து நிற்கும் வீரமற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டான். அறப்போர் செய்வதே இவன் கொள்கை; அக்கிரமப் போரில் அடியெடுத்து வைக்கமாட்டான். போர் தொடங்குவதற்கு முன்பே எதிர்த்துநிற்கும் வல்லமையற்றவர்களை எங்கேனும் குடிபெயர்ந்து போகுமாறு அறிவித்துவிடுவான். பசுக்கள் வாயில்லாப் பிராணிகள்: அவைகளுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடாது. பசுக்கள் குறைந்தால் மக்களுக்குப் போது மான பால் கிடைக்காது: தாய்ப்பாலற்ற குழந்தைகளையும், நலிவுற்ற மக்களையும் நன்றாக ஊட்டி வளர்ப்பது பசுக்கள்தாம். ஆகையால் அவைகளை வளர்க்க வேண்டியதும், காப்பற்ற வேண்டியதும் மக்கள் கடமை. இது முதுகுடுமியின் கொள்கை. பசுக்களைப் போன்ற அப்பாவிகள் பார்ப்பனர்கள் அவர்களாலும் போரிலே எதிர்த்துநிற்க முடியாது: தம்மைத் தாம் பாதுகாத்துக் கொள்ளும் திறமையும் அவர்களுக்கில்லை. இத்தகைய ஆற்றாதவர்களுக்கு ஆபத்தை உண்டாக்குவது வீரத்தன மன்று. இதுவும் அவன் எண்ணம். இதுவே பண்டைக் காலப் பார்ப்பனர்களின் தன்மை. பெண்களும் செயலற்றவர்கள். போர் நடக்கும் இடத்தி லிருந்து தப்பித்துக் கொண்டு போக அவர்களாலும் ஆகாது. தற்காப்புப் போர் செய்வதற்கும் தகுதியற்றவர்கள். இவர்களுக்கும் போரால் துன்பம் உண்டாகக் கூடாது. நோய்வாய்ப்பட்டு நொந்துகிடக்கும் மக்களுக்கும் சண்டையால் துன்பம் நேரக் கூடாது. பிதிர்க்கடன் செய்வதற்குரிய பிள்ளைகளைப் பெறாதவர் களுக்கும் சண்டையால் அபாயம் உண்டாகக்கூடாது. இவை களும் இப்பாண்டியன் கொள்கை. ஆகவே, பசுக்கள், பசுக்களைப் போன்ற பார்ப்பனர்கள், பெண்கள், நோயாளிகள், பிள்ளை பெறதவர்கள் இவர்களுக் கெல்லாம் போரினால் தீங்குண்டாகாமல் காப்பாற்ற வேண்டும். போர் நடக்கும் இடத்திலிருந்து இவர்களை அப்புறப்படுத்திய பிறகே சண்டையைத் தொடங்கவேண்டும். இதுவே இப் பாண்டியன் கொள்கை. ஆகையால் இவன் போர் தொடுப்பதற்கு முன்பே இவர் களை யெல்லாம் ஊரைவிட்டுப் போய்விடும்படி பறையடித்துத் தெரிவித்துவிடுவான். இவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொள்ளுவதற்குப் போதுமான காலம் கொடுப்பான். இதன் பிறகுதான் சண்டை தொடங்குவான். இதுதான் தமிழரின் அறப்போர் முறை. இம்முறையை என்றும் தவறாமல் பின்பற்றியவன் இப் பாண்டியன். இதனை, ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை---- ---- --- எங்கோ வாழிய! குடுமி என்ற பாடலால் அறியலாம். இது நெட்டிமையார் என்னும் புலவரால் முதுகுடுமியின் மேல் பாடப்பட்ட பாடல். புற நானூற்றின் ஒன்பதாவது பாட்டு. 2 இந்த முதுகுடுமியிடம் மற்றொரு சிறந்தகுணம் உண்டு. இவன் பகைவர்களிடம் பறித்த பொருளைத் தந்நலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள மாட்டான். எதிரிகளின் கோட்டைகளை அழித்துக் கொள்ளைக் கொண்ட எல்லாச் செல்வங்களையும் இரவலர்களுக்கே இனாமாக வழங்கிவிடுவான். ஆகவே இவனுடைய போர் மண்ணாசை கொண்ட மறப்போர் அன்று. பொன்னாசை கொண்ட போரும் அன்று. இவனுடைய போர் புகழ் கருதிய போர்; அறங்கருதிய போர்; மறநெறியிலே புகுந்து மக்களை வாட்டும் கொடுங்கோல் மன்னர்களை அடக்கும் போரே இவனுடைய போர். குடிமக் களின் நலத்தைக் கொஞ்சமும் பாதுகாக்காமல், அவர்களை அல்லற்படுத்தும் அரசர்களின் மேல் போர் தொடுத்து அவர்களை அடக்குவதுதான் பண்டைத் தமிழர்களின் பரம்பரை வழக்கம். தமிழர் பாண்பாடு. இதைத் தவறாமல் பின் பற்றியவன் இப் பாண்டியன். இவன் ஒருபோதும் பகைவர்களுக்குத் தலைவணங்கியதே யில்லை. தன்னிகர் அற்ற தனிப்பெரும் வீரன். இவனுடைய வெற்றிக்கு அடையாளமான குடை எப்பொழுதும் இவன் தலைக்குமேல் உயர்ந்தே நிற்கும். அவன் முக்கண் மூர்த்தியின் கோயிலை வலம் வரும்போது மட்டும் தான் அந்தக் குடை தாழும். அவன் யாருக்கும் ஒருபோதும் தலைவணங்கமாட்டான். நான்கு வேதங்களையும் கற்றறிந்த முனிவர்களுக்குத் தானம் வழங்கும் ஒரே சமயத்தில்தான் அவன் தலை வணங்கும். அவன் மார்பிலே எப்பொழுதும் வாடாத மலர்மாலை வாசனை வீசிக்கொண்டே கிடக்கும். அடங்காத எதிரிகளின் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துவான். அப்பொழுது உண்டாகும் பெரும் புகையினால் மட்டுமே அவன் அணிந்துள்ள மலர் மாலை வாடும். மற்ற எச்சமயத்திலும் அவன் மலர்மாலை வாடுவதில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டால் அதைத் தணிக்கவே முடியாது. அவனுடைய காதல் மங்கையர்களால் மட்டும் தான் அவன் கோபத்தைத் தணிக்க முடியும். அவர்கள் உள்ளத்திலே ஊடல் பிறந்து, அவ்வூடல் அவர்கள் முகத்திலே தவழும்போது தான் அவன் கோபம் தணியும், அவன் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட மலர்முகத்துடன் உரையாடி ஊடலைத் தவிர்க்க முயலுவான். இத்தகைய சிறந்த கொடையும், வீரமும், புகழும் உடையவன் அந்தக் குடுமி, இதனை, அவ் வெயில் கொண்ட செய்வுறு நன்கலம். பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே: இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே: வாடுக இறைவநின் கண்ணி, ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே: செலியியர் அத்தைநின் வெகுளி வால்இழை மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே என்று காரிகிழார் என்னும் புலவரால் பாடப்பட்ட பாடலால் அறியலாம். இது புறநானூற்றின் ஆறாவது பாடலின் பகுதி. 3 இது விஞ்ஞான வளர்ச்சிக் காலம். பண்டைக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியில்லை. இன்று ஒருவருக்கும் தீமை செய்ய வேண்டாம். பலரும் நல்வாழ்வில் வாழ வழிவகுக்க முடியும். எல்லோரும் இன்புற்று வாழும்படி இன்றைய விஞ்ஞான முறையால் செய்ய முடியும். பண்டைக் காலத்தில் இப்படி யில்லை. ஒருவர் வாழ வேண்டுமானால் மற்றொருவர் தாழவேண்டும். ஒருவர் இன்புற வேண்டுமானால் மற்றொருவர் துன்புறவேண்டும். இதுவே விஞ்ஞானந் தெரியாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த எண்ணம். இவ்வுண்மையை இந்த முதுகுடுமியைப் பற்றி நெட்டிமையார் என்னும் புலவர் பாடியிருக்கும் மற்றொரு பாடலால் அறியலாம். பிறர் நாட்டை நீ உன்னுடையதாக்கிக் கொள்ளுகின்றாய். இதனால் நாடிழந்த அவர்கள் நலிந்து துன்புறுகின்றனர். உனக்குப் பிரியமுள்ள பரிசிலர்களுக்கு நீ நன்மை செய்கின்றாய். உன்னுடைய பகைவர்கள் துன்புறும்படி அவர்கள் நாட்டிலே கவர்ந்த செல்வத்தைப் பாணர்கள் பொற்றாமரைப் பூவைச் சூடும்படி அவர்களுக்கு வழங்குகின்றாய். உன்னைப் புகழ்ந்து பாடும் புலவர்கள், யானைமீதும், தேர்மீதும் ஏறிச் செல்லும் அளவுக்குக் கொடை வழங்குகின்றாய். வெற்றியும், பெருமையும் உடைய குடுமியே இவ்வாறு ஒரு சார்பாரைத் துன்புறுத்தி மற்றெரு சாராரை இன்புறச் செய்யும் உனது செய்கை அறச் செய்கையா! மறச் செய்கையா! இதுவே அப்பாடலின் பொருள். இது குடுமியை இகழ்வது போல அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடப்பட்டது. இது புறநானூற்றின் பன்னிரண்டாவது பாட்டு. இப்பாடலில் பண்டைக்கால நீதி அடங்கியிருப்பதைக் காணலாம். இந்தப் பாண்டியன் பெருமையைப் பற்றி மூன்று புலவர்கள் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். அவர்கள் காரிகிழார், நெட்டி மையார், நெடும்பல்லியத்தனார் என்பவர்கள். பண்டைக்காலத்தில் சிவன் கோயில்கள் தமிழ் நாட்டில் இருந்தன. வேள்விகள் செய்யும் பழக்கம் தமிழர்களிடமும் இருந்தது. வேதங்களை அறிந்த முனிவர்கள் தமிழ்நாட்டிலிருந்தனர். இவ்வுண்மைகளை இந்தப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்கள் காட்டுகின்றன. பாரியும் பறம்பும் 1 பாரியின் புகழைப் பற்றி இன்றும் தமிழ்நாட்டிலே பலர் பேசுகின்றனர். கொடையிலே சிறந்தவன் பாரி, கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை என்று பிற்காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் பாராட்டிக் கூறினார். வாடுவோர் யாராயினும் அவர்களைக் காப்பாற்றப் பின் வாங்கமாட்டான். இதுவே இவன் குறிக்கோள். இதற்காகவே இவன் வாழ்ந்தான். இவன் காலத்திலே இவனைப் போன்ற வள்ளல்கள் இன்னும் பலர் வாழ்ந்தனர். ஆயினும் அவர்களில் பாரியின் புகழ் தான் தமிழ்நாடெங்கும் தலை தூக்கி நின்றது. இவனுடைய இரக்கம், அன்பு, கருணை மக்களிடம் மட்டும் பாய்வதோடு நின்றுவிடுவதில்லை. மக்களினும் தாழ்ந்த மற்ற உயிர்களிடமும் இவனுடைய இரக்கம் சென்றது. வள்ளல்களைக் கொடைமடம் பட்டவர்கள் என்று தமிழர்கள் கூறுவார்கள். கொடுப்பதிலே அறியாமை உடை யவர்கள் - தகுதியறிந்து கொடுத்தல் என்னும் தன்மையை அறியாதவர்கள் - யார் எது கேட்டாலும் வரையாது அள்ளி வழங்குவோர்கள் - இவர்களையே கொடைமடம் பட்டோர் என்று வழங்கிவந்தனர். இந்தப் பாரியும் கொடைமடம் பட்டவர் களிலே ஒருவன். ஒருசமயம் தேரிலே வந்து கொண்டிருந்தான். வரும் வழியிலே ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது. அது படர் வதற்குப் பக்கத்திலே கொழுகொம்பு ஒன்றுமில்லை. அதைக் கண்டான் பாரி. உடனே தான் ஏறிவந்த தேரை அக்கொடியின் பக்கத்திலே நிறுத்தினான். அக்கொடியைத் தேரின்மேல் படர விட்டான். குதிரையை ஓட்டிக்கொண்டு நடந்து தன் இல்லத்திற்கு வந்துவிட்டான். பாரியின் தந்நலம் கருதாக் கொடைக்கு இதையே உதாரணமாகப் பாராட்டிக் கூறுவர். இந்தப் பாரியின் நாடு பறம்பு நாடு. அது பாண்டிநாட்டின் ஒரு பகுதி. இவனுடைய மலை. பறம்புமலை. அக்காலத்தில் அது சுரக்கும் வளம் அளவற்றது. அந்த மலைப்பகுதியில் இவன் வாழ்ந்துவந்தான். இவனுடைய உயிர்த்தோழர் கபிலர் என்னும் புலவர். இவர் தமிழ்நாட்டு அந்தணர், பாரியின் வரலாறு முழுவதையும் கூறவேண்டுமானால் அது நீண்டுவிடும். இங்கே அவனுடைய புகழை விளக்கும் வரலாறு ஒன்றைமட்டும் காண்போம். 2 பாரி காலத்தில் அவனைப் பற்றியே தமிழ்நாடு முழுவதும் பேச்சு. அவன் வீரன்: வள்ளல்: தமிழ்ப் புலவரைத் தாங்கும் கற்பகத்தரு என்று எல்லோரும் அடிக்கடி பேசுவார்கள். இந்தப் பேச்சு மூவேந்தர்களின் காதுகளிலும் விழுந்தது. அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார் யாருமே இல்லை. இது அந்த சேர, சோழ, பாண்டியர்களின் உள்ளங்களிலே பொறாமைக் கனலை மூட்டிவிட்டது. மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்தனர். பாரியைக் கொன்று போட்டுவிட்டால் அவனைப்பற்றிப் பிறகு யாரும் பேச மாட்டார்கள். தங்கள் புகழும் மறைந்து கிடக்காது என்று முடிவு செய்தனர். உடனே படைதிரட்டிக்கொண்டு வந்து பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இச்செய்தியை அறிந்த பாரி போருக்கு ஆயத்தமானான். கபிலர் அவனைத் தடுத்தார். நான் அந்த மூவேந்தர்களையும் அடக்கிவிட்டு வருகிறேன். நீ சும்மா இரு என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் கபிலர். மூவேந்தர்களும் படையிறங்கியிருக்கும் இடத்திற்குக் கபிலர் வந்தார், மூவேந்தர்களும் பெரும் படைகளுடன் வந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் ஏராளமான யானைப்படைகள் இருந்தன. யானைகளை மரங்கள்தோறும் கட்டியிருந்தனர். எண்ணற்ற தேர்ப்படைகளும் இருந்தன. கண்ணுக்குத் தெரியும் வரையிலும் தேர்ப்படைகளே எங்கும் நிறைந்து பரவலாகக் காணப்பட்டன. இவைகளையெல்லாம் கண்ட கபிலர் சிறிதும் கலக்கமடைய வில்லை. மூவேந்தர்களின் பொறாமையையும், மூடத்தனத்தையும் கண்டு அவர்கள் பால் இரக்கங்கொண்டார். அவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்கள் செயலைத் தடுக்க நினைத்தார். பாரியின் வீரத்தையும் பறம்புமலையின் வளத்தையும் அந்த வேந்தர்கள் அறியும்படி விளக்கிக் கூறினார். பாரியுடன் போர் செய்தாலும் நீங்கள் வெற்றி பெற முடியாது. எவ்வளவு நாள் நீங்கள் பறம்புமலையை முற்றுகையிட்டிருந்தாலும் அவனைப் பணிய வைக்க முடியாது என்ற உண்மையை அவர்களிடம் கூறினார் கபிலர். 3 மூவேந்தர்களே உங்கள் செய்கை மிகவும் இரங்கத்தக்கது. பாரியின் பறம்புமலை நாக்கு வகையான இயற்கைச் செல்வங் களை உடையது. அச் செல்வங்கள் உழவரால் உழுது பயிர் செய்யப்படாத இயற்கைச் செல்வங்கள் ஆகையால் நீங்கள் மூவரும் எவ்வளவு காலம் முற்றுகையிட்டாலும், பாரியையும், அவன் சுற்றத்தாரையும் பட்டினிபோட்டுப் பணியவைக்க முடியாது. அந்த நான்கு வகைச் செல்வங்களையும் சொல்லுகிறேன் கேளுங்கள்: மூங்கில் நெல் ஏராளமாக விளைந்திருக்கின்றன; இது ஒன்று. இனிய சுவையுடைய பலாப்பழங்கள் தாமே கனிந்து வீழ்ந்து கிடக்கின்றன. அவை கொம்பிலே பழுத்த கொழுங் கனிகள், பறித்து எடுக்கவேண்டிய துன்பம் கூட இல்லை, இது இரண்டு. வள்ளிக்கொடிகள் செழிப்புடன் படர்ந்திருக்கின்றன. அவைகள் நன்றாகப் பருத்த கிழங்குகளைத் தருவன. இது மூன்று. அங்கே, தேன் அடைகள் நிறைந்திருக்கின்றன. நரிகள் பாய்ந்து விளையாடுவதால் அந்தத் தேனடைகள் சிதைந்து தேனைச் சிந்துகின்றன. இக்காட்சியை அந்த மலையில் எங்கும் காணலாம். இது நான்கு. இந்த நான்கு செல்வங்களையும் கொண்ட அந்தப் பாரியின் பறம்புமலை வானத்தைப் போன்ற குணமுடையது. அந்த மலையிலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல எண்ணற்ற நல்ல நீர்ச்சுனைகளும் இருக்கின்றன. நீங்கள் இங்கே மரங்கள்தோறும் கட்டியிருக்கின்ற யானைப் படையை உடையவர்களாயிருந்தாலும் சரி, இங்குள்ள எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்ற எண்ணற்ற தேர்ப்படை களை உடையவர்களாயிருந்தாலும் சரி, உங்கள் முயற்சியால் அவனுடைய பறம்புமலையைக் கைப்பற்ற முடியாது. உங்கள் வாள் வலிமையைக் கண்டு பயந்தும் அவன் பறம்புமலையைக் கொடுத்துவிடமாட்டான். அவனுடைய பறம்புமலையைக் கைப்பற்றி அவனை அழிக்க ஒரே வழிதான் உண்டு. அது எனக்குத் தெரியும் அதை நான் கூறுகிறேன் கேளுங்கள்: வடித்து முறுக்கிய நரம்பையுடைய யாழைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். சரியான சுதி இருக்கும்படி சீர் பண்ணுங்கள். உங்களுடைய பாடல் மகளிரையும் உங்களுடன் அழைத்துக் கொள்ளுங்கள். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் அவனிடம் செல்லுங்கள். அப்பொழுது அவன் மனமிரங்கி, அவனுடைய நாட்டையும், பறம்பு மலையையும் சேர்த்து உங்களுக்குப் பரிசாகத் தந்துவிடுவான். இதைத் தவிர வேறு வழியில்லை. மூவேந்தர்களும் தலைகவிழும்படி, தமிழ்ப் புலவர் கபிலர் இவ்வாறு கூறினார். இதைக் கேட்டு அவர்கள் அச் சமயம் நாணத்துடன் திரும்பினர். இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 109-வது பாடலிலே காணலாம். அளிதோ தானே, பாரியது பறம்பே; நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; மூன்றே, கொழும்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே; நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடும் குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து மீன்கண் அற்றுஅதன் சுனையே; யாங்கும் மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளிற் கொள்ளலிர்; வாளில் தாரலன்; யான்அறி குவன்அது கொள்ளும் ஆறே; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. மயிலுக்குப் போர்வை தந்த மன்னவன் 1 வையாவிக்கோப் பெரும் பேகன் என்பவன் ஒரு வள்ளல். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் கொடை களிலே சிறந்ததாகப் பாராட்டப்படுவது மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதுதான். குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த தாகக் காணப்படும் ஒரு மயிலுக்குத், தான் போர்த்தியிருந்த போர்வையைப் போர்த்தினான். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல புலவர்கள் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். மயிலுக்கு இயற்கையில் உடம்பு முழுவதும் மயிர் அடர்ந் திருக்கின்றது. வெயிலைத் தாங்கிக் கொள்ளவும் அதனால் முடியும்; குளிரைப் பொறுத்துக்கொள்ளவும் அதனால் முடியும். இத்தகைய இயற்கைப் பாதுகாப்புடைய மயிலுக்குப் போர்வை யளித்தது அறிவுடைய செயலா? என்று கேட்போர் உள்ளனர். மயிலால் உடை உடுத்திக் கொள்ள முடியுமா? போர்வை போர்த்திக்கொள்ள முடியுமா? அப்படியிருந்தும் அதற்குப் போர்வையளித்தவன் அறிவு ஆராய்ச்சி உடையவனாக இருக்க முடியுமா? என்று கேட்போரும் உள்ளனர். இக் கேள்விக்குப் பதில் சொல்லும் முறையிலே பரணர் என்னும் புலவர் ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள பாடலிலே, மயிலுக்குத் தட்பத்தையும், வெப்பத்தையும் தடுத்துக் கொள்ளக் கூடிய இயற்கைப் பாதுகாப்பு உண்டு. அதனால் உடை உடுத்திக்கொள்ள முடியாது: போர்வை போர்த்திக் கொள்ளவும் முடியாது என்ற உண்மை, வையாவிக்கோப் பெரும் பேகனுக்குத் தெரியும்: தெரிந்தவனாயிருந்தும் அது குளிரால் நடுங்குவதைக் கண்டதும் உடனே தனது போர்வையால் அதனைப் போர்த்தினான். இதற்குக் காரணம் யாதாயிருந்தாலும் துன்புறுத்தப் படுவோரின் துயரத்தைத் துடைக்கவேண்டும் என்ற எண்ணந் தான். துன்புறுவோரை உடனே இன்புறச் செய்ய வேண்டும் என்னும் கொள்கைதான். பிறர் துன்பத்தை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்படிப்பட்ட இயல்புடையவன் அவன். துன்புறுவோரைக் கண்டதும் அவர் யார்? துன்புறு வதற்குக் காரணமென்ன? அவர் அடைந்திருக்கும் துன்பம் இயற்கையா? செயற்கையா? என்ற கேள்விகளை யெல்லாம் அவனால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய இளகிய மனமுடையவன். அன்றியும் பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்யும் பண்புடையவன் அவன். ஆதலால்தான் போர்வை வேண்டாத மயிலுக்குப் போர்வையளித்தான் அவன் என்ற கருத்தைப் பரணர் தனது பாடலிலே அமைத்திருக்கிறார். இம்மன்னவன் வையாவி என்ற ஊரிலே இருந்து அரசாட்சி செய்தவன். இவன் ஒரு சிற்றரசன். இப்போதுள்ள பழனியம் பதியை வையாவி என்று கூறுவோர் உண்டு. வையாவிக்கு மன்னன் ஆதலால் வையாவிக்கோ என்று அழைக்கப்பட்டான். இவன் இயற்பெயர் பெரும் பேகன், பேகன் என்றும் கூறுவர். 2 ஒரு பாணனும், அவனுடைய விறலியும் வறுமையால் வாடி வதங்கினர். அவர்கள் தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்ளப் பெரும்பேகனை அணுகிப் பாடிப் புகழ்ந்தனர். பெரும்பேகன் அவர்கள் பசி நீக்கினான். அவர்களைப் பாராட்டினான். பசும்பொன்னாற் செய்த தாமரைப் பூவை அளித்துப் பாணனுடைய திறமையை மெச்சிப் பேசினான். விறலியின் ஆடல் பாடலைப் புகழ்ந்து அவளுக்குப் பொன் மாலையைப் பரிசாக வழங்கினான். அவர்கள் ஏறிச் செல்வதற்கு விரைந்து செல்லும் குதிரைப் பூட்டிய தேர் ஒன்றையும் பரிசளித் தான். அவர்கள் மீண்டும் வறுமைப் பேய்க்கு வாழ்க்கைப் பட வேண்டாத அளவுக்குப் போதுமான செல்வங் களையும் தந்தான். இவ்வாறு பரிசுபெற்ற அவர்கள், தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியிலே ஓரிடத்தில், தங்கள் தேரை நிறுத்திவிட்டுத் தேரில் பூட்டிய குதிரைகளையும் அவிழ்த்து விட்டுக் களைப்பாறி யிருந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் எவ்வாறு மகிழ்ந்திருப்பார் களோ அவ்வாறே அந்த இடத்திலே கவலையின்றிக் களித்திருந்தனர். இச்சமயத்தில் மற்றொரு பாணன், வறுமையால் வாடியவன், தனது சுற்றத்துடன் அவ்வழியே போகின்றான், அவனைப் பெரும்பேகனிடம் பரிசு பெற்று வந்த பாணன் பார்க்கிறான், பார்த்ததும் அவனுடைய ஏழ்மையைக் கண்டறிந்து அவனுக்குப் பெரும்பேகனுடைய பெருமையைக் கூறுகின்றான். தன் வறுமை தீர்ந்ததற்குப் பெரும்பேகனுடைய கொடையே காரணம் என்று சொல்லுகிறான்: பெரும் பேகனுடைய வள்ளல்தன்மையைப் பாராட்டிப் பேசுகிறான்; நீயும் அவனிடம் போய் உனது வறுமையைப் போக்கிக் கொள் என்று கூறுகின்றான். இப்படிக் கூறும்போது, பெரும்பேகன் மயிலுக்குப் போர்வை தந்த மாண்பைப் போற்றியுரைக்கின்றான். இவ்வாறு பெரும்பேகனிடம் பரிசு பெற்றுவந்த ஒருவன். பரிசுபெறாத ஒருவனுக்குக் கூறுவது போன்ற முறையில் அமைந்திருக்கிறது இந்தப் பாட்டு. இதைப் பாடிய புலவர் பரணர் என்பவர்; மிகவும் புகழ்பெற்ற புலவர். இவர் கபிலர் காலத்திலே வாழ்ந்தவர். ஆதலால் கபிலர் பரணர் என்று ஒரு தொடராகக் கூறுவர். கபிலரைப் போலவே இவரும் சிறந்த புலவர். இப்பாடலின் பொருள் கீழ்வருவது. 3 சுற்றத்தாருடன் கடும்பசியாற் கலங்கி வழி நடக்கும் இரவலனே! பொற்றாமரை சூடியிருக்கின்ற என்னையும், பொன் மணி மாலையை அணிந்த என் விறலியையும் பார்க்கின்றாய். விரைவாக ஓடிவந்து தேரிலிருந்து குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு நாங்கள் இந்த வழிப்புறத்திலே மகிழ்ச்சியுடன் களைப்பாறி யிருக்கிறோம். எவ்விதமான வேற்றுமையும் இல்லாமல் எங்கள் ஊரில் இருப்பது போலவே குதூகலத்துடன் இருக்கின்றோம். இப்படியுள்ள எங்களைப் பார்த்து நீங்கள் யாரோ என்று கேட்கலாம் என்று நினைக்கின்றாய். ஆனால் கேட்கமுடியாமல் தயங்கி நிற்கின்றாய். ஆகையால் நானே எங்கள் வரலாற்றைச் சொல்கிறேன் கேள்: நாங்கள் வையாவிக்கோப் பெரும்பேகனைக் கண்டு திரும்பி வருகின்றோம். அவனைக் காண்பதற்கு முன்பு உன்னைக் காட்டிலும் ஏழ்மை நிலையில் இருந்தோம். உணவில்லாமல், உடையில்லாமல், பொற்றாமரைப் பூவோ பொன்மணி மாலையோ இல்லாமல், குதிரை பூட்டிய தேரும் இல்லாமல் நடையால் மெலிந்து நலிந்து திரிந்தோம். அவனைக் கண்ட பிறகுதான், இப்பொழுது இந்த நிலையிலே காணப்படுகின்றோம். அந்தப் பெரும்பேகனுடைய உயர்ந்த கொடைத் தன்மையை உரைக்கின்றேன். கேள்: அவன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைப் பார்த்தபோது மனம் உருகி விட்டான். மயில் உடை உடுக்காது, போத்திக்கொள்ளாது என்பது அவனுக்குத் தெரியும், தெரிந்தும் தனது போர்வைத் துணியை அதற்குப் போர்த்தி விட்டான். இவ்வளவு இளகிய நெஞ்சமுடையவன் எமது அரசன். இப் பெரும்பேகன் நிறைந்த செல்வமுள்ளவன். ஏராளமான யானைகள் அவனிடம் உண்டு. எண்ணற்ற குதிரைகளும் அவனிடம் உண்டு. எவ்வளவாயினும் வறியோர்க்கு வழங்கி அவர்கள் துன்பத்தைத் துடைப்பது போன்ற கொள்கையுள்ளவன். இப்போது அறம் செய்தால் பின்னர் அவ் அறத்தின் பயனை அனுபவிக்கலாம் என்ற எண்ணம் அவனிடம் இல்லை. பிறர் வறுமையைக் கண்டால் அதை ஒழிக்கவேண்டும். வறுமைத் துயரால் இவ்வுலகில் யாரும் வாடக்கூடாது என்பதே அவனுடைய நோக்கம். இந்த ஒரே நோக்கத்துடன் தான் அவன் கொடை வள்ளலாக விளங்குகின்றான். இவ்வாறு பரிசு பெற்ற பாணன், பரிசு பெறாத பாணனுக்குக் கூறினான். 4 பாணன் சூடிய பசும்பொன் தாமரை, மாண்இழை விறலி மாலையொடு விளங்க, கடும்பரி, நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ, ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தீர்; யாரீ ரோஎன வினவல் ஆனாக் கார்என் ஒக்கல் கடும்பசி இரவல! வெலவேல் அண்ணல் காணா ஊங்கே நின்னினும் புல்லியேம்; மன்னே யினியே யின்னேம் ஆயினேம்; மன்ன என்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்ததும்; படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்; எத்துணை யாயினும், ஈத்தல் நன்றென மறுமை நோக்கின்றோ அன்றே; பிறர் வறுமை நோக்கின்று அவன்கை வண்மையே. (புறநா.141) கபிலரும் கடுங்கோவும் 1 அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகின்றோம்; புன்சிரிப்புடன் புகழ்மொழி கூறுகின்றோம். பெரியோராயிருந் தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கின்றோம். வரவேற்பதிலே இன்றுங்கூடப் பலவகையுண்டு. கைகூப்பிக் கும்பிட்டு வரவேற்பது: கைகொடுத்துச் சமத்துவமாக வரவேற்பது; ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்பது; இப்படிப் பலவகையில் வரவேற்கின்றோம். இவற்றுள் கைகுலுக்கி வரவேற்பது தமிழர் நாகரிகம் அன்று: இந்த முறை மேல் நாட்டாரிடம் நாம் கற்றுக்கொண்டது என்போர் உண்டு. உயர்ந்தவர்களை - பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து வணங்கி வரவேற்கவேண்டும்; சமமுள்ளவரைக் கண்டால் கும்பிட்டு வரவேற்கவேண்டும்; தன்னிலும் தாழ்ந்தவரை - இளையவரைக் கண்டால் தழுவிக் கொண்டு வரவேற்க வேண்டும். இதுவே தமிழரின் வரவேற்பு முறை: இந்திய நாட்டு நாகரிகம் என்று கூறுகின்றனர். இவை தமிழர் நாகரிகமாக இருக்கட்டும்: இந்தியர் நாகரிக மாகவும் இருக்கட்டும்: இந்த நாகரிகத்தைப்பற்றி நாம் ஆராய்ச்சி யிலிறங்க வேண்டாம். கைகொடுத்து வரவேற்பது மேல்நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான் நமது கேள்வி. அன்புடையவனைக் கண்டால் எதிர்சென்று கைகுலுக்கி வரவேற்கும் வழக்கம் பண்டைத் தமிழரிடம் இருந்த பழக்கம். பழந்தமிழர் நாகரிகம். அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்லவே அல்ல: இது உண்மை. இதைக் கேட்கும்போது நமக்கு வியப்பாகக்கூட இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டு விளக்கிக் காட்டுகின்றது. இதைத் தவிர நமக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? சேரர் பரம்பரையைச் சேர்ந்த வேந்தன் ஒருவன்: அவன் பெயர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பது: நீண்ட பெயர். இப்பெயரைத்தான் சுருக்கமாகக் கடுங்கோ என்று தலைப்பிலே குறிப்பிடப்பட்டது. இவனைப்பற்றிப் புகழ்பெற்ற பெரும்புலவர் கபிலர் பாடிய பாட்டு ஒன்று உண்டு. அது புறநானூற்றின் பதினான்காவது பாட்டாக அமைந்திருக்கின்றது. அந்தப் பாடலிலிருந்து தெரிந்து கொள்ளும் பல உண்மை களிலே, கைகுலுக்கி வரவேற்கும் வழக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களிடம் இருந்தது என்பது ஒன்று. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் அரச பரம்பரை யிலே பிறந்தவன். செல்வத்திலே சிறந்தவன்: முடியுடை வேந்தன் அல்லன்; சிற்றரசன்; வீரம் செறிந்த இளவரசன்; கடுங்கோ என்னும் பெயரே இதனைக் காட்டும். கடற்பிரயாணம் செய்வதிலே வல்லவனாயிருந்திருக்க வேண்டும். அதனால்தான் கடுங்கோவை ஒட்டி ஆழி என்ற சொல் அமைந்திருக்கின்றது. ஆதன் என்பதே இயற்பெயர். கபிலரோ அந்தணர் குலத்திலே பிறந்தவர்: தமிழ்நாட்டு அந்தணர் மரபைச் சேர்ந்தவர். வள்ளல் பாரியின் உயிர்த்தோழர். இந்தக் கபிலர், கடுங்கோ இருவர்க்கும் நடந்த ஒரு உரையாடல் நம்முடைய உள்ளத்தைக் கவர்கின்றது. 2 பாரி மறைந்தபின் கபிலர் தமிழ்நாட்டில் பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார்: பல சிற்றரசர்களையும், பேரரசர்களையும் சந்தித்தார்; இதுவே அவருடைய பொழுதுபோக்காகவும் வாழ்க்கையாகவும் இருந்தது. கபிலர் தமது சுற்றுப்பிரயாணத்திலே ஒருநாள் சேரநாட்டைச் சேர்ந்தார். கடுங்கோ ஆழி ஆதனைக் காணச் சென்றார். ஆதன் கபிலர் புலமையை அறிந்தவன்: அவருடைய கல்வித்திறத்தைக் கேள்விப்பட்டவன். கபிலர் வருகையை அறிந்த கடுங்கோ ஆழி ஆதன் அவரை எதிர்கொண்டு வரவேற்றான். நிலத்தில் வீழ்ந்து வணங்கியோ, கும்பிட்டோ, தழுவிக்கொண்டோ வரவேற்கவில்லை. தன் கையை நீட்டிப் புலவர் கையைப் பிடித்து வரவேற்றான். புலவர் கையைப் பிடித்து வரவேற்றபோது கடுங்கோவின் உள்ளத்திலே ஒர் உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வுணர்ச்சியை அவன் உடனே வெளியிட்டு விடவில்லை. கபிலரை வரவேற்று. அவருக்கு விருந்து முதலியன கொடுத்து உபசரித்தான். அவருடன் உட்கார்ந்து பல செய்திகளைப் பற்றி அகமகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருந்தான். அச் சமயத்தில் தான், புலவர் கையைப் பிடித்துக் குலுக்கியபோது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சியையும் ஐயத்தையும் வெளியிட்டான். அருந்தமிழ்ப் புலவர் பெருமானே! என்உள்ளத்தில் ஒர் ஐயம். அதனைத் தெளிவிக்க வேண்டும் என்றான் கடுங்கோ. ஐயம் யாது? அதைத் தெளிவிக்கும் ஆற்றல் - அறிவு - எனக்கிருந்தால் தெளிவிக்கின்றேன்; தாராளமாக உன் ஐயத்தை வெளியிடலாம் என்றார் புலவர். என் ஐயம் தீர்க்க முடியாதது அல்ல: அவ்வளவு பெரிய சந்தேகமும் அன்று: மிகவும் சிறிதானது. உம்கையை நான் பிடித்தபோது அந்தக் கையின் தன்மை பஞ்சினும் மெல்லியதாக இருந்தது. வழவழப்பாகவும் கடினமின்றியும் இருந்தது. என் கையோ கரடுமுரடாக இருக்கின்றது: காய்ச்சிப் போயிருக்கின்றது. சொரசொரப்பாக இருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன? இதுதான் எனக்குண்டான ஐயம். இதை அப்பொழுதே கேட்பதற்கு என் உள்ளம் முன்வந்தது. உண்டு, ஓய்வு பெற்று, உரையாடிக் கொண்டிருக்கும் போது கேட்கலாம் என்று அடக்கிக் கொண்டிருந்தேன் என்றான் கடுங்கோ. உடனே புலவர் புன்சிரிப்புக் கொண்டார். அவன் சந்தேகத் தைத் தெளிவுபடுத்தினார். இளவரசே! நீ உழைப்பாளி! ஒரு பொழுதும் சும்மாவிருக்க மாட்டாய்: உன் கைகளும் சும்மா விருப்பதில்லை: எப்பொழுதும் ஏதாவது பணி செய்து கொண்டு தான் இருக்கும்: அந்தப் பணியும் கடுமையான பணிகள், யானையை அடக்கியாளும் இரும்பாலான அங்குசம், குதிரையின் கடிவாளம், அம்பு, வில் மற்றும் பல ஆயுதங்கள் இவற்றையெல்லாம் அடிக்கடி பிடித்துப் பழகிக் கொண்டிருப்பது உனது கை. எனது கையோ அப்படியில்லை. சுவையுள்ள ஊன்கலந்த சோற்றை உண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பது தான் அதன் வேலை, என் கை மட்டும் அல்ல: உன்னைப் புகழ்ந்து பாடிவரும் புலவர் கைகளுக்கெல்லாம் இதுதான் வேலை. ஆதலால்தான் என் கை மென்மையுள்ளதாகக் காணப்படுகின்றது: உன் கை வன்மை யுள்ளதாகக் காணப்படுகின்றது என்றார் புலவர். உடனே கடுங்கோ ஐயந் தெளிந்தான். கடுங்கோவுக்கும் கபிலருக்கும் நடந்த பேச்சிலே இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று அன்பர்களைக் கைகொடுத்து வரவேற்கும் வழக்கம், தமிழகத்து வழக்கம் என்பது, இரண்டு தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் புலால் உணவு விலக்கப்பட வில்லை; தமிழ்நாட்டு அந்தணர்களும் புலால் புசித்தார்கள்; புலால் உணவு பொது உணவாக இருந்தது என்பதாகும். இவ்வுண்மையைக் கூறும் பாடலின் பொருள் கீழ்வருமாறு: 3 போரிலே அஞ்சிப் புறங்கொடாத யானைகளால் மிகுந்த பாதுகாப்பையுடைய எதிரிகளின் கோட்டைகளை அழிப்பாய். அக் கோட்டைக்கதவின் உட்புறத்திலே தாழ்போடப்பட்டிருக்கும் எழு என்னும் கணைய மரத்தைச் சிதைப்பாய். இரும்பால் செய்யப்பட்ட அங்குசத்தைத் தாங்கி யானைகளைப் போர் முகத்திலே செலுத்துவாய். எத்தகைய போரானாலும் அஞ்சாமல் போர்க்களம் புகுந்து அதைத் தாங்கி நிற்பாய். குந்தாலியால் கற்பாறைகளை உடைத்தெடுத்த குழிகளிலே நீர் தேங்கி நிற்கும். அந்தக் குழிகள் ஆழமுடையன. அதில் தண்ணீர் தரைமட்டத்திற்கு உயர்ந்து நிற்கும். இந்தக் குழிகளிலே வீழ்ந்து விடாமல் குதிரைகளைக் கடிவாளத்தால் இழுத்துப் பிடித்து நீ குறித்த வழியிலே நடத்திச் செல்லுவாய். உன் முதுகிலே அம்புப் புட்டிலைச் சுமந்திருப்பாய்! தேரின் மேல் அமர்ந்து செல்வாய்! வில்லின் நாணை இழுத்துப் பிடித்து எதிரிகளின் மேல் அம்புகளைச் சொரிவாய்! உன்னைத் தேடிவரும் பரிசிலர்க்கு ஒரு பொழுதும் இல்லை என்று சொல்லமாட்டாய்! அவர்களுக்கு வேண்டிய சிறந்த அணிகலன்களை யெல்லாம் அள்ளியள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருப்பாய். உன் கைகள் எப்பொழுதும் ஓய்வு ஒழிவு இல்லாமல் இந்த வேலைகளைச் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆதலால் தான் உனது நீண்ட கைகள் - முழந்தாழ் வரையிலும் நீண்டிருக்கும் கைகள் - வன்மை பொருந்தியிருக்கின்றன. பெருமை மிகுந்த மன்னனே உனது மார்பு பெண்களுக்கு - உன்னைத் தழுவ விரும்பி அது கிடைக்காமலிருக்கும் பெண் களுக்கு - மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது. உன்னுடன் போர் செய்கின்றவர்க்குப் பெரிய நிலத்தைப் போன்ற வலிமையுடன் காணப்படுவது: நிலம் அசையாமல் நிற்பது போலப் பகைவர் களைக் கண்டால் நடுங்காமல் போர் செய்ய உறுதியுடன் நிற்பது: இத்தகைய ஒப்பற்ற போர்த் திறமுள்ளவன் நீ. உன்னைப் புகழ்ந்து பாடுவோர்களின் கை உன் கைக்கு நேர்மாறானது. அதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்! புலால் நாற்றம் வீசும் பச்சை மாமிசத்தைப் பூமணம் கமழும் புகைசூழ்ந்த நெருப்பிலே சமைப்பர். இப்படிச் சமைத்துப் பக்குவம் செய்த மாமிசம், துவையல், கறி, சோறு இவற்றை வேண்டுமளவு உண்பார்கள். உண்ட அவ்வுணவு இன்னும் செரிக்கவில்லையே என்று வருந்தி வயிற்றைத் தடவிக் கொண்டி ருப்பார்கள். இதுதான் உன்னைப் பாடும் புலவர்களின் கைவேலை. இதைத்தவிர வேறு தொழிலை அவர்கள் செய்வதில்லை. ஆகையால்தான், அவர்கள் கைகள் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. என் கையின் மென்மைக்கும் இதுதான் காரணம். இதுவே கபிலர் தன் கை மென்மை பொருந்தியிருப்பதற்குக் கூறிய காரணம். கடும் கண்ண கொல் களிற்றால் காப்பு உடைய எழு முருக்கிப், பொன் இயல் புனை தோட்டியால் முன்பு துரந்து சமம் தாங்கவும் பார் உடைத்த குண்டு அகழி நீர் அழுவம் நிவப்புக் குறித்து நிமிர் பரிய மாதாங்கவும் ஆவம் சேர்ந்த புறத்தை! தேர்மிசைச் சாவம் நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க்கு அரும்கலம் நல்கவும், குரிசில் வலிய ஆகுக! நின் தாள்தோய் தடக்கை! புலவு நாற்றத்த பைம்தடி பூநாற் றத்த புகைகொளீ இ ஊன், துவை, களி, சோறு, உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு ஆர்அணங் காகிய மார்பின், பொருநர்க்கு இருநிலத்து அன்ன நோன்மைச் செருமிகு சேஎய்! நின் பாடுநர் கையே. புலவரும் புரவலனும் 1 நண்பனுக்கு வந்த அவமானம் எனக்கு வந்த அவமானம்: நண்பனுக்கு வந்த புகழ் எனக்கு வந்த புகழ்: நண்பன் தவறான வழியிலே நடக்கத் துணியும்போது அவனுக்கு இடித்துப் புத்திபு கட்டவேண்டும். அவன் தவறான வழியில் செல்வதைப் பார்த்துக் கொண்டு சும்மாவிருந்தால் அது நட்புக்கு ஏற்றதாகாது: நண்பன் என்னைப் போற்றினாலும் சரி. அல்லது தூற்றினாலும் சரி: என் கடமையை நான் செய்தே தீருவேன். இக்கொள்கையை மேற்கொள்ளுகின்றவனே உண்மை நண்பன் ஆவான். முகத்திலே மட்டும் மகிழ்ச்சி உண்டாகும்படி நட்புக் கொள்ளுவது நட்பாகாது: உள்ளத்திலே மகிழ்ச்சியுண்டாகும்படி நட்புக்கொள்ளுவதே உயர்ந்த நட்பாகும் என்று கூறுகிறார் வள்ளுவர். அக் குறள். முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. வெறும் உதட்டுச் சிரிப்பு நட்பாகாது. உள்ளத்திலே உவகை கொள்ளும்படி நடந்துகொள்ளும் நட்பே நட்பாகும் என்பதே இதன் கருத்து. ஒருவர்க்கொருவர் உள்ளன்புடன் உதவி செய்துகொள்ளும் நட்பினர்கள் இக்காலத்தில் குறைந்துவிட்டனர்; உதட்டுச் சிரிப்பு நட்பினர்களே மிகுதியாகக் காணப்படுகின்றனர். சினிமாவுக்குச் செல்லும் நட்பினர். நாடகத்திற்குப் போகும் நட்பினர். சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லும் நட்பினர், குதிரைப் பந்தயத்திற்குப் போகும் நட்பினர். சூதாட்டங்களில் கலந்துகொள்ளும் நட்பினர், இன்னும் எத்தனையோ செயல்களிலே சேர்ந்து பொழுது போக்கும் நட்பினர்கள் தான் பெருகிவருகின்றனர். இவர்களையெல்லாம் நட்பினர் கூட்டம் என்று நவில்வது பொருந்தாது. உண்மை நட்பினர் ஒருவர் கூட இக்காலத்தில் இல்லை யென்று நாம் முடிவுகட்ட வேண்டாம். எங்கோ சிலர் இருக்கலாம்: யாரோ சிலர் உண்மை நட்பினராக வாழ்ந்திருக்கலாம். உண்மை யான நட்புமுறை மக்களிடையிலே பரவி நிற்குமாயின் - நிலைத்து நிற்குமாயின் - சமுதாயத்திற்கு அதனால் பல நன்மைகள் உண்டாகும். ஒவ்வொருவர்க்கும் உண்மையான - அறிவுடைய - நட்பினர் இருந்தால் ஒவ்வொருவரும் நேர்மையான வழியிலே நடப்பர். குற்றங்குறைகள் நடைபெறுவதற்கு இடமிருக்காது. இதை எண்ணித்தான் அறநூல்களிலே - நீதிநூல்களிலே - நட்பைப் பற்றி எழுதி வைத்திருக்கின்றனர். நல்லவருடன் நட்புக்கொள்ள வேண்டும்: உயர்ந்த ஒழுக்கமுள்ள சான்றோர்களுடன் நட்புக் கொள்ளவேண்டும்: நட்புக்கொள்ளுமுன் நன்றாக ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும்: தீயவர் நட்புக் கூடாது: கெட்டவர்கள் நட்புக் கெடுதியை விளைவிக்கும் என்றெல்லாம் எல்லா நீதி நூல்களும் இயம்புகின்றன. உண்மை நட்பை விளக்கும் பல வரலாறுகளும் இலக்கியங் களிலே காணப்படுகின்றன. மக்கள் உண்மையான நட்புமுறையை உணர்ந்து ஒழுகவேண்டும் என்பதற்காகவே அவ்வரலாறுகள் ஏடுகளிலே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையார் என்னும் புலவரும் கொண்டிருந்த நட்பே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு. இருவரும் இறக்கும் வரையிலும் ஒருவரையொருவர் முகக்கண்ணால் கண்டறியாதவர்கள். இவர்கள் அகக்கண்ணால் - அறிவுக் கண்ணால் - குணக்கண்ணால் - ஒருவருடன் ஒருவர் இணையா நட்புக் கொண்டிருந்தவர்கள். இவ்வரலாற்றைத் தமிழறிந்தார் அனைவரும் அறிவர். இந்தக் கோப்பெருஞ் சோழனுடன் நட்புக் கொண்டிருந்த மற்றொரு புலவர் பொத்தியார் என்பவர். இந்தப் பொத்தியாரும் கோப்பெருஞ் சோழனும் முகத்தால் மட்டும் நட்பினராயிராமல் அகத்தாலும் எவ்வளவு அருமையான நட்புக்கொண்டிருந்தனர் என்பதைக் காண்போம் பொத்தியார் உறையூரிலே வாழ்ந்தார். அந்நகரத்திலே யிருந்து அரசு புரிந்த கோப்பெருஞ்சோழனும் இவரும் உற்ற துணைவர்கள்: உயிர்த்தோழர்கள்: நட்புக்கு எடுத்துக்காட்டா யிருந்தனர். ஒவ்வொரு நாளும் பொத்தியாரும் சோழனும் சந்திக்காமலிருக்க மாட்டார்கள். பொத்தியார் சோழனுக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்: அரசவைப் புலவராகவும் இருந்தார். இருவர் உள்ளமும் ஒரே உள்ளம். பிசிராந்தையார்க்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் உள்ள நட்பின் உறவும் பொத்தியாருக்குத் தெரியும். கோப்பெருஞ்சோழனுடைய பிள்ளைகளுக்கும், அவனுக்கும் சரியான உறவில்லை. அவர்கள் கூடா நட்பினர் வசமாகித் தந்தைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். இறுதிக்காலத்தில் அவன் போரிலே தோல்வியும் அடைந்தான். இவைபோன்ற பல காரணங்களால் அவன் அரசைத் துறந்தான். வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். போரிலே இரக்காத மன்னர்கள் இறுதியிலே வடக்கு நோக்கி உண்ணாவிரதமிருந்து உயிர்விடுதல் அக்கால வழக்கம். அப்படி உயிர் நீத்தவர்களுக்கு உருவச் சிலை செய்து வைத்துக் கொண்டாடுவார்கள். இவ் வழக்கத்தையே பின்பற்றத் துணிந்தான் கோப்பெருஞ்சோழன். புலவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்; பொறுத் திருக்கும்படி வேண்டிக்கொண்டார்; சோழனுடைய உற்றார் உறவினர்களும் அவன் வடக்கிருப்பதைத் தடுப்பதற்கு முயன்றனர்: அவர்கள் முயற்சி பலன்தரவில்லை. இறுதியில் வடக்கிருந்தான் சோழன். அப்பொழுது என் ஆருயிர் நண்பர் பிசிராந்தையார் என்னுடன் வடக்கிருந்து உயிர் நீப்பதற்காக வருவார்: அவருக்கும் என் பக்கத்தில் இடம் ஒழித்து வையுங்கள் என்று கூறி உயிர் விட்டான். சோழன் இதைச் சொல்லியபோது பலர் அதை நம்ப வில்லை. பரிகாசம்கூடச் செய்தனர். ஆனால் சோழன் சொல்லிய படியே பிசிராந்தையார் வந்து அரசன் பக்கத்தில் அமர்ந்து உயிர்நீத்தார். இந் நிகழ்ச்சியைப் பலரும் கண்டு வியப்புற்றனர். சோழன் வடக்கிருந்தபொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட விரும்பினார். அப்பொழுது பொத்தி யாரின் மனைவி கருவுற்றிருந்தாள். இந்த உண்மை சோழனுக்குத் தெரியும். அவன் புலவரை இப்பொழுது வடக்கிருக்க வேண்டாம் என்று தடுத்தான். புலவர் பிடிவாதமாக வடக்கிருக்கவே விரும்பினார். நீ உயிர்நீத்த பின் நான் உயிர்வாழ விரும்பவே மாட்டேன். ஈருடல் ஓர்உயிர் என்றிருந்த நாம் அதனை உண்மை யாக்க வேண்டுமாயின் நான் எப்படி உயிர்வாழ்ந்திருக்க முடியும்? நீ இறந்த பின்னும் நான் உயிர்வாழ்ந்தால் ஈருடல் ஒர் உயிர் என்பது பொய்த்துப் போகும் அன்றோ? நம்முடைய நட்பைப் பொய்ந்நட்பென்றல்லவா ஊரார் உரைத்து நகையாடுவர்? இதற்கு இடங்கொடுக்க நான் விரும்பவில்லை. நானும் உன்னுடன் வடக்கிருந்தே மாய்வேன் என்று பிடிவாதம் பிடித்தார் புலவர். புலவரே! நீ சொல்லுவது உண்மைதான். ஆனால் ஒன்றை நீர் மறந்துவிட்டீர்! உமது மனைவி கருவுற்றிருப்பதை மறந்து விட்டீர்! உமது மனைவி கருவுற்றிருப்பது உண்மையானால் நீர் இப்பொழுது வடக்கிருக்கத் துணிதல் நன்றன்று: அவள் கருவு யிர்த்த பின்பு தான் இதனைச் செய்ய வேண்டும். நீர் பிள்ளை யில்லாமல் இறக்கிறீர் என்பது பெரிதன்று. உலகம் பலவிதம் என்பதை மறந்துவிடவேண்டாம். உலைவாய்க்கு மூடியுண்டு: ஊர்வாய்க்கு மூடியில்லை யென்பதை நினைவூட்டுகின்றேன். நீர் இறந்த பின் உமது மனைவி கருவுயிர்த்தால் உண்மை யறியாதவர்கள் உமது மனைவியைப்பற்றிப் பழி, கூறலாம். கொண்டான் இறந்தபின் குழந்தைபெற்றாள் என்று குறை கூறலாம். நல்ல செய்தி நாட்டில் பரவும் வேகத்தைவிடக் கெட்ட செய்தி-பழிச்சொல்-அவதூறுமொழி-அதிவேகமாக நாட்டிலே பரவும். இந்த உண்மை உமக்குத் தெரியாததன்று. உமது குடும்பத்திற்கு வரும் இழிவு எனது குடும்பத்திற்கும் வந்ததாகும். ஆதலால்தான் இப்பொழுது வடக்கிருக்கவேண்டாம் என்று கூறுகின்றேன். உமது மனைவியின் கருவுயிர்ப்புக்குப் பின்-பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு - வடக்கிருப்பதே சிறப்பாகும். என்று கூறினான் சோழன், சோழன் சொற்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா யிருந்தன; நீதியை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆதலால் புலவரும் அதை ஏற்றுக் கொண்டார். தம் மனைவி பிள்ளை பெறும்வரையிலும் துக்கத்துடன் உயிர் வாழ்ந்திருந்தார். மனைவி பிள்ளை பெற்றபின். உயிர் நீத்த சோழன் சிலையருகே வந்து நின்று தனக்கும் வடக்கிருக்க இடந்தர வேண்டினார். சோழன்சிலை நகர்ந்து இடந்தந்தது. புலவரும் அதன் அருகிருந்து வடக்கு நோக்கி உண்ணாவிரத மிருந்து உயிர்நீத்தார். கோப்பெருஞ் சோழன், இப்பொழுது வடக்கிருக்க வேண்டாம்: உம் மனைவி கருவுயிர்த்தபின் வந்து வடக்கிருக் கலாம் என்று சொல்லிய செய்தியைப் பொத்தியார் பாடலில் இருந்தே காணலாம். அவர் பாடல் கூறும் இச்செய்தி கீழ்வருமாறு; 3 பொத்தியார் மனைவி குறித்த காலத்தில் பிள்ளை பெற்றாள். பெற்ற தாயும் பிள்ளையும் நோயின்றி நன்மை பெற்றனர். மனைவியின் பிள்ளைப் பேற்றை எதிர் பார்த்திருந்த பொத்தியார் உடனே கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருக்கப் புறப்பட்டார். அவருடைய உற்றார்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. கோப்பெருஞ் சோழன் நடுகல்லாக நின்ற இடத்திற்கு வந்தார். நெருப்பைப் போல் தகதகவென்று ஒளிவீசும் அணிகலன் களை அணிந்தவள்; சிறந்த அழகையும் உடையவள்; நிழலைப் போல் உன்னைவிட்டு என்றும் பிரியாது வாழ்கின்றவள்; உன்னால் அன்புடன் விரும்பப்படுகின்றவள்; இத்தகைய உன் மனைவி பெறப்போகும் புதல்வன் உன் புகழை நிலைநாட்டக் கூடியவனாகவே யிருப்பான். அவன் பிறக்கும், வரையிலும் நீ பொறுத்திருக்க வேண்டும். அதற்கு முன் வடக்கிருந்து உயிர்நீத்தல் ஏற்றதன்று. உன் மனைவி அரும்பெறற் புதல்வனை யீன்றபின் என்னுடன் வடக்கிருக்க வரலாம் என்று சொல்லி என்னை இங்கே உயிருடன் இருக்கும்படி விட்டுவிட்டாய். நீ மட்டும் வடக்கிருந்து உயிர் நீத்தாய். என்னிடம் சிறிதும் அன்பில்லாத வனாக நடந்து கொண்டாய்; ஆயினும் உன்னுடன் நான் கொண்டிருந்த நட்பை மறந்துவிட்டிருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. உன்னுடைய நட்பு என் உள்ளத்தில் நீங்காமல் பதிந்திருப்பது போலவே என்னுடைய நட்பும் உன் உள்ளத்தை விட்டு ஓடாமல் இருக்கும் என்றே நினைக்கின்றேன். எப்போழுதும் புகழிலே விருப்பமுற்றுச் சிறந்த செயல்களையே செய்து புகழ் பெற்றவனே நான் வடக்கிருக்க வேண்டிய இடம் யாது? அதனை இப்பொழுதே எனக்குக் காட்டு என்று பாடினார். உடனே கோப்பெருஞ் சோழனுடைய சிலை நகர்ந்து இடந்தந்தது. அதன் அருகிலே பொத்தியாரும் அமர்ந்து உயிர் நீத்தார். 4 அழல் அவிர் வயங்கு இழைப்பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என என்இவண் ஒழித்த அன்பின் ஆள! எண்ணாது இருக்குவை அல்லை; என் இடம் யாது? மற்றுஇசை வெய்யோயே (புறநா. 222) இப்பாடல் ஆறே வரிகளைக் கொண்ட சிறிய பாட்டு, இதில் அடங்கி இருக்கும் வரலாறு மிகவும் சிறந்த கருத்துள்ளது. நட்பின் சிறப்பை விளக்குவது. தான் இறந்த பின்னும் தன்னுடைய நட்பாளனுக்குப் பழி வரக்கூடாது என்று கருதும் உயர்ந்த நட்புள்ளவரின் தன்மையைக் காட்டுகின்றது. புலவர்க்குப் பணி செய்த புரவலன் 1 பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் புகழ்பெற்ற ஒரு சேர மன்னன். பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலின் எட்டாம் பத்தின் தலைவன் இவன். அந்த எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இவன் அதியமான் ஆண்ட நகரமான தகடூரின்மேல் படையெடுத்து வெற்றிகொண்டான். இன்று சேலம் ஜில்லாவில் உள்ள தருமபுரி என்னும் நகரமே அக்காலத்தில் தகடூர் என்று வழங்கப்பட்டது. தகடூரை வெற்றிகொண்டதனால் இவன் பெயர் தகடூர் எறிந்த இரும்பொறை என்று வழங்குவதாயிற்று. இவன்தான் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை என்பவன் இவன் பகைவர்களுக்குக் காலன்; நண்பர்களுக்கு நல்லவன், புலவர்களுக்குத் தோழன்; தோழன் மட்டுமல்லன்; சில சமயங் களில் பணியாளாகக்கூட இருப்பான். தமிழின் மேல் அளவு கடந்த ஆவல்; ஆதலால் தமிழறிந்தாரை என்றும் போற்றிப் புரந்துவந்தான், இவன் காலத்தில் மோசிகீரனார் என்னும் பெரும்புலவர் ஒருவர் வாழ்ந்தார். இவர் ஒரு சமயம் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணுவதற்காக வந்தார். இம் மன்னனுடைய தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் புலவர்களை அவன் ஆதரிக்கும் வள்ளன்மையையும் கேள்விப்பட்டே அவனிடம் வந்தார் புலவர். புலவர் அரண்மனை வாசலை அடைந்தார். அவரை யாரும் தடுக்கவில்லை. புலவர்கள் யார் வந்தாலும் அவர்களைத் தடுக்கக் கூடாது; அரண்மனைக்குள் தாராளமாக விட்டுவிட வேண்டும். இது அரசரின் ஆணை, ஆகையால் அவரை யாரும் தடுக்காமல் விட்டுவிட்டார்கள். அரண்மனை வாயிற்புறத்திலே ஒரு அறை இருந்தது. அதில் ஒரு கட்டில்; அந்தக் கட்டிலின்மேல் எண்ணெயின் நுரையைப்போன்ற மெதுவான மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டார் புலவர். வழி நடந்துவந்த களைப்பு. அரசனும் அரண்மனையில் இல்லை. வெளியில் போயிருக்கிறான். அவன் வரும்வரை இந்தக் கட்டிலிற் படுத்திருப்போம் என்று நினைத்து அந்தக் கட்டிலின்மேல் படுத்தார் புலவர். அப்படியே நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டார், அங்கிருந்த காவற்காரர்களில் ஒருவரும், புலவர் படுத்ததையோ, உறங்குவதையோ பார்க்கவில்லை. 2 புலவர் படுத்துறங்கும் கட்டில் அரசனுடைய போர் முரசம் வைக்கப்பட்டிருக்கும் கட்டில். அதில் யாரும் ஏறக் கூடாது; படுக்கக் கூடாது. ஏறினால் - படுத்தால் - அவர்களுக்கு மரணதண்டனைதான். புலவர் வந்த சமயத்தில் நீராட்ட விழாவுக்காக அந்தப் போர்முரசம் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அரசனும், அவனுடைய பரிவாரங்களு அந்த விழாவுக்காகச் சென்றிருந்தார்கள். புலவர் மோசிகீரனாருக்கு அது முரசுகட்டில் என்று தெரியாது. ஆகையால் படுத்து உறங்கிவிட்டார். அயர்ந்து பிணம் போல் கிடந்து உறங்கிவிட்டார். நீராட்டு விழாவுக்காகச் சென்றிருந்த அரசனும், அவனுடைய பரிவாரங்களும் வெற்றிமுரசத்துடன் திரும்பிவந்தனர். முரசத்தை அதன் இடத்திலே வைப்பதற்காக அந்த இடத்திற்கு வந்தனர். முரசு கட்டிலில் புலவர் படுத்துக் கொண்டு குறட்டை விட்டு உறங்குவதைக் கண்டனர். அவர்கள், யாரோ பகைவன் நம்மை அவமானப்படுத்த நமது முரசுகட்டிலின்மேல் படுத்திருக்கின்றான்: இவனை விடாதீர்கள்: அப்படியே அடக்கிப் பிடியுங்கள்; கட்டுங்கள்; குத்துங்கள்; கொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். இந்த ஆரவாரத்தைக் கேட்ட சேரமான் முரசுக்கட்டிலின் பக்கம் ஓடிவந்தான். கூச்சல் போட்டவர்களைக் கையமர்த்தினான். அமைதியாக இருக்கும்படி குறிப்புக் காட்டிவிட்டுக் கட்டிலின் பக்கம் அணுகினான். படுத்திருந்த மனிதரை உற்ற நோக்கினான். அவர் ஒரு புலவர் என்று தெரிந்துகொண்டான். உடனே அங்கிருந்த தனது பரிவாரங்களை யெல்லாம் அமைதியாகக் கலைந்து போகும்படி கூறி அனுப்பிவிட்டான். கையில் சாமரத்தை எடுத்துக் கொண்டான். புலவரின் களை தீர நன்றாய் உறங்கும்படி விசிறிக் கொண்டே பக்கத்தில் நின்றான். பாவம்! நீண்ட தூரம் வழிநடந்த களைப்பு. முரசுக்கட்டில் என்று அறியாமல் ஏறிப் படுத்துவிட்டார். புலவர் படுத்ததனால் கட்டிலின் தூய்மை சிதைந்துவிடாது. அதுவும் தமிழ் மணம் பெற்றுப் புகழ் வீசும். இவர் உறக்கத்திற்கு ஏதும் இடையூறு நேரக் கூடாது. புலவர் நன்றாக உறங்கட்டும்: களைதீர உறங்கட்டும்; அவர் தாமே விழித்து எழட்டும்; அதுவரையிலும் விசிறிக் கெண்டிருப்போம்; இதைவிடத் தமிழுக்குச் செய்யும் திருப்பணி வேறில்லை என்று எண்ணிக் கொண்டே மன்னன் சாமரத்தால் விசிறிக் கொண்டே நின்றான். மோசிகீரனார் அதற்குமுன் அத்தகைய மெல்லிய படுக்கை யில் படுத்தவரேயல்லர். வேலை செய்தோ, வழி நடந்தோ களைத்தவர்க்குப் படுக்கைச் சுகம் வேண்டும் என்ற நிலைமையே இல்லை. எப்படியாவது உடம்பைக் கீழே போட்டால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் தோன்றும். எத்தகைய கரடு முரடான இடமாயினும் படுத்துக் கண்ணயர்ந்து விடுவார்கள். உடலுழைப்பற்ற சுகவாசிகளுக்கே மெத்தென்று படுக்கை வேண்டும். புலவர் வழிநடந்துவந்த சோர்வால் நன்றாக அடித்துப் போட்டதுபோல் உறங்குகிறார். சேரமானும் சிறிதும் சலிப்பின்றி விசிறிக் கொண்டேயிருக்கிறான். 3 பல நாழிகை உறங்கினார் மோசிகீரனார். இறுதியில் களைப்புத் தீர்ந்து கண்விழித்துப் பார்த்தார். யாரோ ஒருவர் பக்கத்தில் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டார். கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு பார்த்தார். சாமரம் கொண்டு வீசி நிற்பவன் சேரமன்னன். உடனே துடித்துப் புடைத்துக் கொண்டு எழுந்தார் புலவர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை, அவரைப் புன்முறு வலுடன் நோக்கினான். புலவர்க்கு வணக்கம் செய்தான். புலவரே! அஞ்ச வேண்டாம். நீங்கள் தவறு செய்யவில்லை. உங்களுக்கு இத்தகைய ஊழியம் செய்வதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றி நான் பெருமகிழ்ச்சி யடைகின்றேன் என்றான். பின்னர், புலவர்க்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தான். அவர் மனம் நிறையும் அளவுக்குப் பரிசிலும் தந்தான். இதைக் கண்ட மோசிகீரனார் அந்த மன்னனைப் பாராட்டிக் கூறியதாவது: பெருஞ்சேரல் இரும்பொறையே! உன்னுடைய முரசம் நல்ல ஓசையுண்டாகும்படி நீண்ட வாரினால் நன்றாக ஒரு குற்றமும் இல்லாமல் இழுத்துக் கட்டப்பட்டதாகும். அது கருமரத்தால் செய்யப்பட்டது. அதன் கருமையான பக்கம் நன்றாக விளங்கும்படி, மயிற்பீலியும், மணிமாலையும், இளந்தளிர்களும், உழிஞைமலர் மாலையும் சூட்டப்பட்டது. அது இரத்தபலியை விரும்பும் முரசம்: பகைவர்களுக்குப் பயத்தை யூட்டும் முரசம். இத்தகைய முரசம் நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தது. அது திரும்பி வருவதற்குள் அதன் இருப்பிடமாகிய எண்ணெயின் நுரையைப் போன்ற மெல்லிய அழகிய கட்டிலின் மேல் நான் அறியாமல் ஏறிப் படுத்துவிட்டேன். முரசுகட்டிலின் மேல் ஏறியவர்கள் யாராயினும் அவர் களை இரு துண்டாகச் செய்துவிடும் உனது வாள். உன் வாளின் கூர்மையை என்மேல் திருப்பாமல் அதை மாற்றிக் கொண்டாய். இது ஒன்றே உன் தமிழ்ப் பற்றுக்குப் போதுமான சான்றாகும். பெருங்குற்றம் செய்த என்னை மன்னித்ததே உன் பெருந் தன்மையைக் காட்டும். இவ்வளவோடு நீ நீற்கவில்லை. என்னிடம் நெருங்கி வந்து என் உறக்கத்திற்குக் கேடுவராமல் சாமரத்தால் விசிறிக் கொண்டு நின்றாய். பகைவர்களிடம் காட்டுகின்ற உன் தோள்வலிமையை எனக்கு விசிறுவதற்குப் பயன் படுத்தினாய். இதற்குக் காரணம் என்ன? இவ்வுலகம் முழுதும் பரவும் படியான புகழ் இவ்வுலகில் வாழ்வோருக்கு இல்லை. இத்தகைய புகழை விரும்புவோருக்கு அங்கு இடமுமில்லை. இந்தச் செய்தியை நீ தெரிந்து கொண்டிருக்கின்றாய். இதனால் தான் நீ இவ்வாறு செய்தனையோ என்று மோசிகீரனார் சேரமன்னனைப் பாராட்டிக் கூறிப் புகழ்ந்தார். பண்டைத் தமிழ்மன்னர்கள், தமிழறிந்த புலவர்களை அவ்வளவு அருமையாகப் போற்றினார்கள்; அவர்கள் வாயிலாகத் தமிழை வளர்த்தார்கள் என்பதற்கு இந்த வரலாறே ஒரு எடுத்துக் காட்டாகும். இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 50-வது பாட்டிலே காணலாம். இந்தப் பாடல் சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையின் மீது மோசிகீரனாரால் பாடப்பட்டது. 4 மாசற விசித்த வார்புறு வள்பின், மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலிநெடும் பீலி, ஒண்பொறி மணித்தார், பொலங்குழை, உழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூம் சேக்கை அறியா தேறிய என்னைத், தெறுவர இருபால் படுக்கும்நின் வாய்வாய் ஒழித்ததை அதூஉம் சாலும்நல் தமிழ்முழு தறிதல்; அதனொடும் அமையாது அணுக வந்து நின் மதனுடைய முழவுத்தோள் ஓச்சித் தண்என வீசி யோயே, வியலிடம் கமழ இவண் இசை யுடையோர்க்கு அல்லது, அவனது உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல்? வலம்படு குரிசில்நீ இங்கிது செயலே, இப்பாடல் மூலம் சேரனுடைய பெருந்தன்மையை அறியலாம்; இவ்வாறு தமிழறிந் தோரைப் போற்றுவதே அவன் செய்கை யென்பதையும் காணலாம். தலைகொடுக்க முன்வந்த தமிழ் வள்ளல் 1 குமணன் என்பவன், பாரி முதலிய கடையெழு வள்ளல் களுக்குப் பிற்காலத்திலே வாழ்ந்தவன், முதியமலை யென்பது இவனுடையது. இவன் தமிழ்ச்சுவை யறிந்தவன்; தமிழ்ப் புலவர் களைப் பாதுகாத்து வந்தவன். ஏதோ காரணத்தால் இவனுக்கும், இவன் தம்பிக்கும் பகைமை நேர்ந்துவிட்டது. இவன் தம்பி இளங்குமணன். நாட்டைத் தன்வசமாக்கிக் கொண்டுவிட்டான். குமணனைக் காட்டிற்கு அனுப்பி விட்டான். குமணன் மீது பொறாமைகொண்ட சிலர் இளங்குமணனுக்கு நண்பர்களாயிருந்தனர். அவர்கள் இளங்குமணனுக்கு நல்லவை சொல்வது போல் நடித்து அவனைத் தீநெறியில் நடத்தினர். குமணன் உயிரோடிருக்கும்வரையில் உனக்கு ஆபத்து தான். எப்படியும் அவன் உனது நாட்டைப் பறித்துக் கொண்டு உன்னை விரட்டிவிடுவான். ஆதலால் குமணனை எப்படியாவது கொன்று விட்டால்தான் நீ ஆளும் அரசு உனக்கு நிலைக்கும் என்று இளங்குமணனை அவனுடைய துட்ட நண்பர்கள் தூண்டி விட்டனர். இளங்குமணனும், நாடாளும் ஆசையால் அந்த நயவஞ்சகர் களின் சொற்களுக்குச் செவிசாய்த்தான். உடனே, குமணன் தலையைக் கொய்து வருவோருக்குத் தக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இச்செய்தியைக் கேட்டு தமிழுலகம் வருந்திற்று. தமிழ்ப் புலவர்கள் துக்கமடைந்தனர். தறுதலை இளங்குமணைனுடைய தகாத செயலுக்கு வருந்தினர். 2 ஒருநாள் பெருந்தலைச் சாத்தனார் என்னும் தமிழ்ப் புலவர் ஒரு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார். யாரேனும் வள்ளல்களிடம் சென்று நம் வறுமையைக் கூறுவோம்; வழங்கு வதைப் பெற்று வருவோம் என்று எண்ணிக் கொண்டே வழிநடந்தார் அவர். அவர் நடந்து சென்ற வழியிலே திடீரென்று வள்ளல் குமணனைக் கண்டுவிட்டார். அவன் தன் உடைவாளுடன் காட்சியளித்தான். குமணனைக் கண்ட புலவர் அவனை வாயாரப் பாராட்டிப் பாடினார். புலவரின் வறுமையைக் கண்டுகொண்டான் குமணன். அவருக்குக் கொடுக்க அவனிடம் ஒரு பொருளும் இல்லை. என்னைப் பாடிய இப்புலவர் வெறுங்கையுடன் திரும்புவதா? இவருடைய வறுமையைத் தணிக்க வழி யில்லையே! என் செய்வேன்! என்று வருந்தினான் குமணன். இளங்குமணன் தன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பரிசு தருவதாக அறிவித்திருக்கும் செய்தி குமணனுடைய நினைவுக்கு வந்தது. உடனே குமணன் தனது உடையவாளைப் புலவர் கையிலே நீட்டினான். புவர் அதைப் பெற்றுக்கொள்ளத் திகைத்தார்; பின்வாங்கினார். சாத்தனாரே! அஞ்சவேண்டாம். இந்த வாளை உமது கையில் வாங்கிக் கொள்ளும். அதன்பிறகு உண்மையைக் கூறுகிறேன் என்றான் குமணன். பெருந்தலைச் சாத்தனாரும் அந்த வாளைத் தன் கையில் வாங்கிக் கொண்டார். புலவரே! என்னைப் பாடிய நீர் வெறுங்கையுடன் திரும்பக் கூடாது. என்னுடைய நாட்டை இழந்ததைக்காட்டிலும் இது எனக்கு வேதனை தரும் செய்கை. இந்த வாளினும் என் தலையை வெட்டிக்கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடும். அவன் ஏராளமான பொருளைத் தருவான். இது தான் நான் மனமுவந்து சொல்லும் வார்த்தை என்றான் குமணன். அப்பொழுது தான் புலவர்க்கு உண்மை தெரிந்தது. எப்படியேனும் இளங்குமணன் உள்ளத்தை மாற்றவேண்டும். குமணனும் இளங்குமணனும் ஒன்றுபட்டு வாழும்படி செய்ய வேண்டும். இதுதான் கடமை என்று உறுதி செய்துகொண்டார் புலவர். வள்ளலே! தங்கள் தலை எனக்கு வேண்டாம். இந்த வாளே என் வறுமையைத் தீர்த்துவிடும். இதுவே எனக்குப் போதும். உங்களை மீண்டும் நாடாளும் மன்னராகப் பார்க்காமல் நான் சாகமாட்டேன். உங்களைப் போன்ற கொடைவள்ளல்கள் உள்ளம் நைந்து காட்டில் திரிந்து கலங்குவதா? இது கொடுமை! கொடுமை! என்று கூறினார் புலவர். அவர் குமணனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். நேரே இளங்குமணனிடம் சென்று அவன் உள்ளத்தைத் திருப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் விரைந்து வழிநடந்தார். காட்டைக் கடந்தார். நாட்டையடைந்து இளங்குமணனையும் கண்டார். வாளுடன் வந்து நின்ற புலவரைக் கண்ட இளங்குமணன் ஐயா, நீர் யார்? எங்கே வந்தீர்? உமது கையில் வாள் ஏது? அது யாரோ அரசருடைய வாள்போல்க் காணப்படுகின்றதே. அது யாருடைய வாள்? என்று கேட்டான். புலவர் இளங்குமணனுக்குக் கீழ்வருமாறு விடையளித்தார். என் வரலாற்றைச் சொல்லுகிறேன் கேள்: இந்த உலகம் நிலையற்றது. இந்த நிலையற்ற உலகத்திலும் சிலர் நிலைபெற்று அழியாமல் வாழ்கின்றனர். அவர்கள் யாரென்றால் தங்கள் புகழை நிலைநாட்டியவர்களே இவ்வுலகில் அழியாமல் வாழ்பவர்கள். எத்தனையோ நிறைந்த செல்வம் உள்ளவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் வறுமையால் வந்து இரந்தவர்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. புகழ்பெற்ற முன்னோர் வழியைப் பின்பற்றாமல் மறைந்துபோயினர். இருந்த இடந் தெரியாமல் மறைந்து விட்டனர். தன்னைப் பாடிவரும் பரிசிலர்க்கு மணி கட்டிய யானை களையும், அவைகளை வைத்து வாழக்கூடிய செல்வங்களையும் பரிசிலாகக் கொடுக்கும் பண்புடையவன் - புலவர்களுக்கு எப்பொழுதும் இல்லையென்னாமல் கொடை கொடுக்கும் ஏந்தல் - என்றும் வற்றாத சிறந்த புகழுடையவன் - இத்தகைய குமணனைக் கண்டு பாடினேன். என்னைப் பாடிய புலவன் வீணே செல்லுதல் எனக்குத் துன்பந்தரும் செய்தி. என்னுடைய நாட்டை இழந்ததைக் காட்டிலும் இது எனக்கு வேதனையைத் தருவது என்று அக்குமணன் எண்ணினான். உடனே என் தலையைக் கொண்டு போ என்று சொல்லி, அவன் கையிலிருந்த வாளை என்கையிற் கொடுத்தான். தன்னுயிரைக்காட்டினும் சிறந்தது வேறென்றும் இல்லை: ஆகையால் அவன் உயிரையே எனக்குப் பரிசாகத் தரத் துணிந் தான். அவனன்றோ வள்ளல்! நானும் குமணன் செய்கையைக் கண்டு வெற்றி நிறைந்த மகிழ்ச்சியுடன் வருகின்றேன். உனது அண்ணனுடைய இச் சிறந்த உதாரணத்தை நேரே கண்டு வருகின்றேன். புலவரின் நல்லுரை இளங்குமணன் உள்ளத்திலே ஓடிப் பாய்ந்தது. குமணனுடைய இரக்க சிந்தையைக் கேட்டு இளகினான். குமணனுடைய நாட்டைப் பறித்ததும், அவனைக் காட்டிற் கோட்டியதும், அவன் தலையைக் கொண்டுவர முயற்சித்ததும் தன் அறியாமை என்று அறிந்து வருந்தினான். இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 165-வது பாட்டால் அறியலாம். 4 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே: துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே: தாள் தாழ் படுமணி இரட்டும் பூநுதல் ஆடுஇயல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடுஇல் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக், கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர் தல்என் நாடுஇழந்த ததனிலும் நனிஇன் னாது என வாள்தந் தனனே தலையெனக்கு ஈயத் தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின், ஆடுமலி உவகையொடு வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. பழந்தமிழ்ப் புலவர் பண்பாட்டை இப்பாடலிலே காணலாம். இக்காலத்தில் இக்குமணன் வரலாறு பலவேறு விதங்களாக வழங்குகின்றன. புலவர் போற்றிய புரவலன் 1 வெற்றி வீரனாக வாழ்ந்த கோப்பெருஞ் சோழன், இறுதியில் சேர மன்னனால் தோற்கடிக்கப்பட்டான். இவனைப் போரிலே வென்ற சேரன் பெயர் இளஞ்சேரல் இரும்பொறை என்பது. கோப்பெருஞ்சோழன் - சேரனிடம் தோல்வியடைந்தவன் - உயிர்வாழ விரும்பவில்லை. தோல்வியால் சுமந்து பழியைத் தொலைத்துப் புகழுடம்பு பெற விரும்பினான். அக்காலத்து மன்னர்கள் போரிலே தோல்வியடைவார் களானால், மீண்டும் போர் செய்து எதிரியை வெல்ல முடியாது என்ற நிலைமை ஏற்படுமானால் அவர்கள் வடக்கிருப்பார்கள்; வடக்கிருப்பதன் வாயிலாக மாண்ட புகழை மீண்டும் பெறுவார்கள். வடக்கிருத்தல் என்பது இரு வகை, ஒன்று மன்னவன்தன் அரசுரிமையைத் துறந்துவிட்டுத் தவக்கோலம் பூண்டு வடதிசை நோக்கித் தனியாகச் சென்றுவிடுதல்; இரண்டு, ஊருக்குப் புறத்தே சென்று வடக்கு நோக்கி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தல். இவ்வாறு உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் களுக்குக் கல் நாட்டி, அக்கல்லையே வீரனாக மதித்து அதற்குச் சிறப்பும் பூசனையும் செய்வார்கள். இந்த இரண்டு முறை களுக்கும் வடக்கிருத்தல் என்பது பெயர். கோப்பெருஞ்சோழன் வடக்குத்திசை நோக்கி உண்ணா விரதமிருந்து உயிர்விடத் துணிந்தான். அப்பொழுது அவனுடைய உறவினர்களும், நண்பர்களும் அவன் செயலைத் தடுத்தனர்: அவ்வாறு செய்யவேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். அப்பொழுது சோழன் அவர்களுக்குச் சொல்லிய அரும் பொருள் பாராட்டக்கூடியது. உள்ளத்திலே உரமற்றவர்கள் - மாசுள்ளவர்கள் - நல்வினை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். மீண்டும் பிறவி உண்டு என்ற நம்பிக்கையுடையவர்கள் நல்வினை செய்து தேவருலகத்தை அடைந்து இன்பந் துய்ப்பார்கள். நல்வினை செய்தவர்கள் வறியவர்களாகப் பிறந்து வாடி நிற்பார்கள். மறுபிறவியிலே நம்பிக்கையற்றவர்களும் இவ்வுலகிலே தமது புகழை நிலை நாட்டுவதற்காக நல்லறம் புரிவார்கள். ஆகையால் நல்லறம் புரிதல் எல்லோருக்கும் கடமையாகும் என்று எடுத்துரைத்தான். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. தமிழ் நாட்டில் மறுபிறவி உண்டு என்ற கொள்கையும், இல்லையென்ற கொள்கையும் நிலவியிருந்ததைக் காணலாம். இக்கருத்து புறநானூற்றின் 214-வது பாடலிலே காணப்படுகிறது. இதன்பின் அவன் வடக்கிருக்கத் துணிந்ததை எவரும் வாய்திறந்து தடுத்துரைக்கவில்லை. 2 சோழன் வடக்கிருக்கும் சமயத்தில் அவன் தன் சுற்றத்தாரிடம் ஒரு உண்மையைக் கூறினான். என் பக்கத்திலே மற்றோர் இடத்தை மாசுமறுவற்றதாகச் செய்து வையுங்கள். ஒரு மனப்பட்ட எனபது பெரு நண்பர் பிசிராந்தையார். நான் வடக்கிருப்பதை அறிவார். அறிந்தபின் அவர் இத் தரணியிலே தனித்துயிர் வாழ விரும்ப மாட்டார். என்னுடன் வடக்கிருந்து உயிர்விட விரைந்து வருவார் என்று கூறினான். இதைக் கேட்டவர்கள் நகைத்தனர்; சோழனுடைய மனப்பான்மையைக் கண்டு மனதுக்குள்ளே இரக்கப்பட்டனர். மன்னனே, நீ சொல்லுவது விந்தை. நீயோ சோழ நாட்டில் வாழ்பவன்; அந்த பிசிராந்தையாரோ பிற நாடாகிய பாண்டிய நாட்டில் வாழ்பவர். அவருக்கும் உனக்கும் இதுவரையில் சந்திப்பே ஏற்பட்டதில்லை. அவராவது, வருகிறதாவது: நீ காண்பது வீண் கனவு என்று ஏளனம் செய்தனர். நீங்கள் பிசிராந்தையாரைப் பற்றி இப்படிப் பிழைபட எண்ணாதீர்கள். அவர் எனது உயிர்த்தோழர். செல்வம் சிறந்திருந்த காலத்தில் அவர் என்னிடம் வராவிட்டாலும் அல்லற்படும் காலத்தில் அவர் என்னிடம் வராமலிருக்கமாட்டார்; நிச்சயம் வந்தே தீருவார். நீங்கள், அவர் வருவாரோ வரமாட்டாரோ என்று ஐயமுறாதீர்கள். அவர் மிகவும் நல்லவர்; என்னோடு ஒன்றுபட்ட உள்ளமுடைய நட்பினர். அவரை யாரேனும் உங்கள் பெயர் என்னவென்று கேட்டால் உடனே தன் பெயரைக் கோப்பெருஞ் சோழன் என்று கூறிக் கொள்ளுவார். இத்தகைய உள்ளன்பு படைத்த உத்தமர் அவர் என்று பிசிராந்தையரின் பேரன்பைப் பற்றி விளக்கிக் கூறினான். கோப்பெருஞ்சோழன். இக்கருத்துக் களைப் புறநானூற்றின் 215,216 ஆகிய இரண்டு பாடல்களிலே காணலாம். பின்னர் சோழன் சொற்களை நம்பிப் பிசிராந்தையார்க்கும் வடக்கிருக்க இடம் ஒழித்து வைத்திருந்தனர். பிசிராந்தையாரும் சோழன் வடக்கிருந்ததை அறிந்து விரைந்து வந்தார். இவ்வாறு விரைந்து வந்த பிசிராந்தையாரைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் மிகவும் வியப்படைந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் வியப்புடையது நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது. புகழ் கேட்டு நட்புக் கொண்ட துணைவன் துன்புறுங் காலத்து அவனுடன் சேர்ந்து துன்புற வருவது அரசன் கூறியதும், அரசன் கூறிய உரை பழுதாகாமல் பிசிராந்தையார் வந்ததும் அளவில்லாத வியப்பைத் தருகின்றது என்று கூறிப் புகழ்ந்தார் அவர் 217-வது பாடலிலே இக் கருத்தைக் காணலாம். கோப்பெருஞ் சோழனுக்காக நாட்டப்பட்ட கல்லினருகே பிசிராந்தையாரும் வடக்கிருந்து உயிர்துறந்தார். இதைக் கண்டு புலவர்களும், பொதுமக்களும் புகழ்ந்தனர். சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் இருந்த உயிர்நட்பைக் கண்டு உள்ளத்திலே வியப்படைந்தனர். புலவர்கள். இவ்வாறு நட்புக் கொள்ளு வதற்குரிய நற்பண்புகள் நிரம்பியிருந்த கோப்பெருஞ் சோழனைக் கொண்டாடினர். கோப்பெருஞ்சோழன் இவ்வாறு புலவர்கள் பலரால் பாராட்டப்படுவதற்குக் காரணம் என்ன? அவனிடம் இருந்த அரிய பண்புகள் யாவை? இவைகளைப் பொத்தியார் என்னும் புலவர் ஒரு பாடலில் அமைத்துப் பாடியிருக்கின்றார். கோப் பெருஞ் சோழனுடைய நடுக்கல்லைக் கண்டு, அவர் பாடிய நாவன்மை பொருந்திய பாடல் அது. அப்பாடலின் பொருளே கீழ்வருவது: 3 என் முன்னே நடுக்கல்லாக நின்று காட்சியளிக்கும் இந்த நற்குணச் செம்மல்-கோப்பெருஞ்சோழன்-தன்னைப் புகழ்ந்து பாடிக் கொண்டு வந்த புலவர் களுக்குகெல்லாம் பொருளை வாரிவாரி வழங்கியவன்; இதனால் இணையற்ற புகழைப் பெற்றவன். தன் முன்னே வந்து. இசையும் தாளமும் பொருந்த இனிது நடம்புரிந்த கூத்தர்களின் குறை தீரப் பொருள் கொடுத்தவன்; அந்தக் கலைஞர்களிடம் அளவற்ற அன்புடையவன். அறத்துறை உணர்ந்தோர் அனைவரும் புகழும்படி அரச நீதியை அறிந்து அதன் வழியே கோலோச்சிய குரிசில். சான்றோர்களால் - பிசிராந்தையார் போன்ற பெரும்புலமை படைத்த அறிஞர்களால் - பாராட்டப்பட்ட உறுதியான நட்புடையவன் பெண்கள்பால் இரக்கங்காட்டும் பேரன்புடையவன்; வலிமையுடையோர்க்குக் கீழ்ப்படியாமல் தன் வலிமையைக் காட்டும் வல்லமையுடையவன். மாசறக் கற்ற கல்வி கேள்விகளை யுடைய மக்களுக்கு உறைவிடமாக இருந்த உத்தமன். இப்படிப்பட்ட உயர்ந்த குணமுடையவன் இந் கோப் பெருஞ்சோழன் என்று எண்ணாமல் - இச் சிறந்தவனைப் பற்றிச் சிந்திக்காமல் - கூற்றுவன் இவனுடைய இன்னுயிரையும் கவர்ந்து சென்றான். அவன் கொடியவன். இக்கூற்றுவன் இழைத்த கொடுமையால் இவ்வுலகமெல்லாம் துன்பம் பரவிவிட்டது. எமது அரசன் அழியாத பெரும்புகழ் பெற்று நடுக்கல்லாக நிற்கின்றான். அவன் மறைந்ததனால் துன்புறுகின்ற சுற்றத்தார் எல்லோரும் ஒன்றுகூடுவோம் உண்மையை உரைக்கப் பின்வாங்காத புலவர்களே ஒன்று கூடுவோம். அந்தக் கொடுங்கூற்றுவனை வாய்கொண்ட மட்டும் வைவோம் வாருங்கள். இதுவே பொத்தியார் பாடிய அப் பாடலில் உள்ள பொருள். 4 பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே; ஆடுநர்க் கீத்த பேரன் பினனே; அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே; திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில், அனையன் என்னாது, அத்தக் கோனை நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று; பைதல் ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ, வாய்மொழிப் புலவீர்; நனந்தலை உலகம் அரந்தை தூங்கக் கடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே. (புறநா.221) புகழ் விரும்பாப் புரவலன் 1 அம்மா! பசி தாங்க முடியவில்லையே! கண்கள் இருட்டு கின்றன: காதுகள் கேட்கவில்லை; கால்கள் நடக்க மறுக்கின்றன; வயிற்றைக் கிள்ளுகிறது பசி; தின்பதற்கு ஏதாவது கொடுக்க மாட்டாயா அம்மா? என்று குழந்தைகள் கூச்சலிடுகின்றன. தாயின் கிழிந்த சேலையைப் பற்றி இழுக்கின்றன: சில குழந்தைகள் தரையில் விழுந்து புரளுகின்றன: அடித்துக் கொண்டு அழுகின்றன. தாயும் தன் குழந்தைகளின் பசிப்புலம்பலைக் கேட்டுத் தவிக்கின்றாள். வேகவைத்த வெறும் கீரையைத் தின்று எத்தனை நாளைக்குதான் வாழமுடியும்? தண்ணீரை மட்டும் குடித்துப் பசியைத் தணித்துக் கொள்ள முடியுமா? பெரியவர்களானலும் எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம். சிறிய குழந்தைகள் என்ன செய்வார்கள்? ஓடியாடி விளையாடும் குழந்தைகள்: வளர்ச்சி அடையவேண்டிய நிலையில் உள்ளவர்கள்: அவர் களால் எப்படி பசியைப் பொறுத்துக் கொள்ள முடியும்? இந்த உண்மையை உணராதவள் அல்ல அந்தத் தாய். கண்ணீர் விட்டு அழும் குழந்தைகளின் கதறலைக் கேட்டுக் கண் கலங்குகின்றாள் அன்னை. அவளால் என்ன செய்ய முடியும்? தன் கணவன் முகத்தைப் பார்த்துக் கலங்குகின்றாள்; குழந்தை களுக்கும் ஏதோ சமாதானம் சொல்லுகிறாள். தன் கணவன், தமிழ்ப் பெரும்புலவர்; பலராலும் பாராட்டப்படும் உயர்ந்த பண்புடையவர்; ஆனால் வறுமைப்பிணிக்கு ஆளாகி வருந்துகின்றார். அவருடைய நிலையைக் கண்டு அவள் இரக்கம் அடைகின்றாள். எத்தனையோ நாட்களாகப் பசியைத் தாங்கிக் கொண்டிருந்த அவள் இன்று பொறுமையிழந்தாள். தன் குறையை ஒருநாளாவது கொழுநனிடம் கூறி அறியாத அவள் இன்று வாய்திறந்து பேசத் துணிவு கொண்டாள். குழந்தைகளின் கூக்குரலை அவளால் தாங்க முடியவில்லை; கணவனுடைய பரிதாப நிலையையும் அவளால் காண முடியவில்லை. எத்தனை நாளைக்கு தான் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டல்லவா? புலவர் வன்பரணர், புலம்பித் தவிக்கும் குழந்தைகளின் கோலத்தைக் கண்டார்; அவர்களை அமைதியுடன் வைத்திருக்க வழியறியாது அல்லற்படும் தன் அருமை மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அவள் முகம் கருகிய தாமரையாகக் காட்சி தருகின்றது. கண்களிலிருந்து வெந்நீர் சொட்டுச் சொட்டாகச் சிந்துகின்றன. எண்ணெய் கண்டு எத்தனை நாள் என்று கணக்கிட முடியாமல் சிக்கல் பிடித்துக் காணப்படும் தலைமயிர். இந்தக் கோலத்துடன் காணப்படுகின்றாள் அவள். அவளுடைய உதடுகள் மட்டும் ஏதோ சொல்லத் துடிக்கின்றன. அகத்திலிருந்து புறப்படும் சொற்களை வெளியில் விடாமல் அடக்கிக்கொண்டு நின்றாள் அவள். அன்புடையவளே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலையில் வாழ்வது? இத்தனை நாள் நமது வறுமை வெளிக்குத் தெரியாமல் வாழ்ந்துவிட்டோம். பிறந்த ஊரிலே பிறர் நகைக்க வாழ்வதைவிட இறந்துபோவது எவ்வளவோ மேல், அக்கம் பக்கத்தார் நம்மை அவமதிப்பதற்முன் நாம் இவ்வூரை விட்டு வெளியேறிவிட வேண்டும். அப்பொழுதுதான் நமது மானத்தைக் காப்ற்றிக் கொள்ளலாம். ‘பெற்ற குழந்தைகளைப் பேணத் தெரியாத பேதைகள், பன்றியைப் போல் குழந்தைகளைக் குட்டிபோட்டுவிட்டார்கள்; அவர்களைப் பாதுகாக்க வழி தெரியாமல் பரிதவிக்கிறார்கள்; இப்படிப் பட்ட ஏழைகள் ஏன் குழந்தைகளைப் பெறவேண்டும்? இவ்வாறு நம்மைப் பற்றி இவ்வூரார் உரையாடுவதற்குமுன் நாம் எங்காவது புறப்பட்டுவிட வேண்டும். உனது உள்ளக் கருத்து என்ன? என்றார் வன்பரணர். இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்; இப்பொழுதே புறப்படுவதுதான் நல்லது என்றாள் அவர் மனைவி. புலவரும் அவர் மனைவியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உடனே தங்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்ட காலம் விடியற்காலம். ஊரில் உள்ளவர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை; அவ்வளவு விடியற்காலத்திலேயே, பழந்துணிகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினர். குழந்தைகளுக்கு நல்ல தின்பண்டங்களும், உணவுகளும் அடுத்த ஊரில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். வன்பரணர், அவர் மனைவி அவர்கள் ஈன்றெடுத்த ஏழெட்டுக் குழந்தைகள் எல்லோரும் காட்டு வழியிலே கலக்கத்துடன் நடந்தனர். கையிலிருந்த சிறு உணவைக் குழந்தை களுக்குக் கொடுத்து, கல்லிலும் முள்ளிலும் கால்கடுக்க அழைத்துச் சென்றனர். இன்னும் சிறிது தொலை நடந்தால் போதும்; நல்ல உணவு கிடைக்கும், இனிமையான தின்பண்டங்கள் கிடைக்கும். வயிறார உண்ணலாம்; பசி தீர்ந்து மகிழ்ச்சியுடன் உறங்கலாம்; விளையாடலாம்; புத்தாடைகள் கிடைக்கும்; புத்தணிகள் கிடைக்கும்; அவற்றையணிந்து அகமகிழலாம் என்று குழந்தை களுக்கு ஆசை காட்டிக் கொண்டே நடந்தனர். இவ்வாறு பல காதம் நடந்துவிட்டனர். இறுதியில் வன்பரணராலேயே நடக்க முடியவில்லை. குழந்தைகளும், நீரிலிருந்து வெளியிலே எடுத்து வெயிலிலே போடப்பட்ட அல்லிக் கொடிகள்போல் ஆயின. நல்ல நடுப்பகலிலே அப்படியே சோர்ந்து விழுந்துவிட்டார் வன்பரணர். அவரைச் சுற்றி அவருடைய மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்து விட்டனர். அவர்களுக்கு அழுவதற்குக்கூட ஆற்றல் இல்லை. அவர்களும் துக்கம் தொண்டையை அடைக்கச் சிறிது நேரம் திகைத்திருந்தனர். பசியும், வழிநடை வருத்தமும் அவர்களையும் ஆட்டி அலைத்து நிலத்திலே வீழ்த்திவிட்டன, அவர்களும் கண்மூடி மயங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் கிடந்த இடம் ஒரு பலாமரத்தின் அடி இச் சமயத்தில் கண்டீரக்கோ பெருநற்கள்ளி என்னும் வள்ளல் அவ்வழியே வந்தான். இவன் கடையெழு வள்ளல்களிலே ஒருவன். தோட்டியென்னும் வளம் பொருந்திய மலைக்குத் தலைவன்; அந்த மலையைச் சேர்ந்த நாடும் இவனுக்கு உரிமை யானது; காட்டு நாட்டுக்கும் இவனே தலைவன் மலை, மலையைச் சேர்ந்த நாடு, காட்டு நாடு எல்லாம் அடுத்தடுத்துள்ளவை. வன்பரணரும், அவருடைய மனைவியும், குழந்தைகளும் சோர்ந்து வீழ்ந்துகிடந்த காடு, அந்தப் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்குள் அடங்கிய இடம். அவனுடைய நாட்டின் ஒரு பகுதிதான் அந்த இடம். வீழ்ந்து கிடக்கு புலவரையும், அவர் சுற்றத்தாரையும் கண்டவுடன் அவர்கள் அண்டையிலே விரைந்து வந்தான் கண்டீரக்கோ பெருநற்கிள்ளி. புலவர் முகத்திலே இளங் காற்று வீசும்படி கொழுந்தழையால் வீசினான். புலவரும்களை தெளிந்தார். அவனை வணங்கி எழுவதற்கு முயன்றார். நள்ளி கையமர்த்தி அவரை எழாமல் தடுத்தான். அவர் பக்கத்திலே சோர்ந்து கிடந்த அவருடைய மனைவி மக்களும் கண்விழித்து எழுந்தனர். அவர்களைப் பார்த்தவுடனேயை வறுமையால் வாடி வழிநடப்போர் என்பதை அறிந்துகொண்டான்; அவர் களுடைய கிழிந்த உடைகளையும், எலும்புந் தோலுமான வற்றிப்போன உடம்புகளையும் கண்டவுடனே அவர்கள் நீண்ட நாட்களாக வறுமைப்பேயால் வருத்தப் பட்டவர்கள் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டான். உடனே நல்ல நெய்வடியும் கொழுப்புள்ள மாமிசத்தைத் தானே தீ வளர்த்துச் சுட்டான். அதனைப் புலவருக்கும், அவர் சுற்றத்தாருக்கும் உண்ணக் கொடுத்தான். அவர்களும் சுவைத்து உண்டனர். அந்த உணவு அவர்களுக்கு அமுதமாக இருந்தது. வயிறார உண்டபின் அவர்கள் நல்ல தெளிந்த அருவிநீரை அருந்தி மகிழ்ந்தனர். புலவர் அவனிடம் விடைபெற்று நடக்க முயன்றார். பெருநற்கிள்ளி, புலவரை இன்னார் என்று தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் முகப்பொலிவையும், அவர் சுற்றத்தையும் கண்டவுடனேயே, இவர் ஒரு புலவராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான். புலவராயிருந்தால் என்ன, அல்லது வேறு யாராயிருந்தால்தான் என்ன, வறுமையால் வருந்துவோர்களின் வாட்டந் தீர்ப்பதே அவனுடைய கொள்கை. இதன் பிறகுதான் வேட்டையிலே வழிமயங்கிச் சென்ற அவனுடைய ஏவலர்கள் அவனுடன் வந்து சேர்ந்தனர். யாருடைய உதவியும் இல்லாமல் தானேதான் இவ்வாறு புலவருக்கு உணவளித்தான். உணவளித்ததோடு மட்டும் நிற்கவில்லை. புலவரை நோக்கி நாங்கள் காட்டு நாட்டில் வாழ்பவர்கள்; எங்களிடம் வேறு பொன்னோ பொருளோ இல்லை; இதோ முத்துமாலை; இதோ கையிலுள்ள கடகங்கள் என்ற கூறித் தன் மார்பிலணிந்திருந்த முத்துமாலையைக் கொடுத்தான்: முன்கை களில் இருந்த காப்புகளைக் கழற்றிக் கொடுத்தான். வன்பரணர்க்கு அவன் இன்னான் என்று தெரியவில்லை. அவனைப் பார்த்தார். அவனுடைய வந்து சேர்ந்த அவனுடைய வேட்டை வீரர்களையும் பார்த்தார். யாரோ வேடர்களின் தலைவனாக இருக்க வேண்டுமென்று எண்ணினார். அனால் அவன் செய்த அளவற்ற - எந்த நன்மையையும் எதிர்நோக்காத - பேருதவியைக் கண்டார்: கருணைவழியும் அவன் முகத் தோற்றத் தையும் பார்த்தார். இல்லை; இவன் வேடர் தலைவனல்லன்; யாரோ வள்ளலாக இருக்கவேண்டும்; குறுநில வேந்தனாக இருக்க வேண்டும் என்று ஐயுற்றார். உனது நாடு எது? உனது பெயர் யாது? உன்னைப் பற்றி இன்னார் என்ற தெரிவிக்கமாட்டாயா? என்று புலவர் கேட்டார் அவன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. புலவரிடம் ஏதோ சொல்லிவிட்டுத் தன்வழியே போய்விட்டான். அதன் பிறகு புலவர் வழிச் செல்வோரை விசாரித்து, அவன் யார் என்று அறிந்துகொண்டார். 2 கண்டீரக்கோ பெருநற்கிள்ளி யென்னும் வள்ளல், புகழுக்கு ஆசைப்படாத புரவலன்; தான் செய்யும் உதவிக்கு எத்தகைய எதிர் உதவியையும் விரும்பாதவன். தான் உயிர் வாழ்வது ஏனைய மக்களின் கூட்டுறவால்; ஒத்துழைப்பால். ஆதலால் இன்னற் சுழலிலே சிக்கித் தவிக்கும் எல்லோருக்கும் உதவி புரிவது தனது கடமை என்ற உயர்ந்த கொள்கையைக் கொண்டவன். இதுவே பண்டைத் தமிழ்நாட்டுப் புலவர்கள். குறுநில வேந்தர்கள். பெருநிலக்கிழவர்கள் பண்பாடாக இருந்தது. இதற்கு எடுத்துக் காட்டு இந்தப் பெருநற்கிள்ளியின் வரலாறகும். இவ்வரலாற்றை வன்பரணர் என்னும் புலவர் பாட்டால் அறியலாம். புறநானூற்றின் 150-வது பாடல் வன்பரணர் பாடியது. அப்பாடல் இவ் வரலாற்றைக் கூறுகிறது. அப்பாடலின் அடங்கிய பொருள் கீழ்வருவது. 3 குளிர் காலத்துப் பருந்தின் ஈரமான சிறகைப்போன்ற கிழிந்த உடையை உடுத்தியிருந்தேன். பலாமரத்தின் அடிநிழலிலே மயங்கிக் கிடந்தேன். என்னைப் பற்றிய உணர்வை யிழந்தே. வேற்று நிலத்திற்கு வந்தேன். எனது வழிநடை வருத்தத்தையும் வறுமையின் கொடுமையையும் கண்டான். அவன் மான் கணத்தை வேட்டையாடி அழித்தவன்; இரத்தம் படிந்த வீர கண்டாமணியைக் கால்களிலே தரித்தவன்; ஒளி பொருந்திய அழகிய மணிகளைச் சென்னியிலே சூடியவன்; செல்வக் குடியிலே தோன்றியவன்; வலிமையான வில்லையுடைய வேட்டுவன். அவன் என்னிடம் வந்து என்னை எழுப்பினான். நான் அவனைக் கண்டதும் வணங்கி எழுந்திருக்க முயன்றேன். அவன் தன் கையைக் காட்டி என்னை உட்காரும்படி செய்தான். உடனே நெய்போன்ற வெண்மையான கொழுத்த மாமிசத்தைத் தீக்கடைக் கோலால் உண்டாக்கிய தீயிலே காய்ச்சிச் சுட்டெடுத் தான்; காட்டிலே வழி தவறிச் சென்ற அவனுடைய வேட்டை வீரர்கள் அவனிடம் வருவதற்குமுன் தானாகவே இக்காரியத்தைச் செய்தான். என்னுடைய பசிப் பிணியைப் போக்க-என்சுற்றத் தாரின் பசிப்பிணியை நீக்க மிகமிக விரைந்து இச்செயலைச் செய்தான். இவ்வாறு பக்குவப்படுத்திய உணவைக் கொண்டு வந்து என்னிடம் தந்தான். நீவிரும் உம்முடைய சுற்றத்தாரும் உண்டு பசி தணியுங்கள் என்று சொல்ல உபசரித்தான். யாமும் அவ்வுணவை உண்டோம்; அமிழ்தம்போல் சுவைத்து உண்டோம். எங்களைத் துன்புறுத்திய பசியை நீக்கினோம். நல்ல மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான மலைச் சாரலிலே, மலையிலிருந்து வரும் அருவிநீரை அருந்தியபின் அவனிடம் விடைபெற்று அவனை விட்டுப் பிரியத் தொடங்கினோம். உடனே அவன் என்னைப் பார்த்து, சிறந்து அணிகலன்கள் என்னிடம் வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் காட்டு நாட்டில் வாழ்பவர்கள். ஆதலால், பொன்னும் பொருளும் எங்களிடம் ஏராளமாக இருப்பதற்கு இடமில்லை என்று சொன்னான். தன் மார்பிலே பூண்டிருந்த முத்துமாலையைக் கழற்றினான்: முன்கை களிலே தரித்திருந்த கடகங்களையும் கழற்றினான். அவற்றை என்னிடம் அளித்து வறுமை நீங்கி வாழ்க என்று வாழ்த்தினான். யான் அவனை இன்னான் என்று தெரிந்து கொள்ள வில்லை. அவனைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். உனது நாடு எதுவென்று கேட்டேன்; எதுவும் மறுமொழி சொல்ல வில்லை. நீங்கள் யார் உங்கள் பெயரையாவது சொல்லக் கூடாதா என்று கேட்டேன்; அவன் பெயரையும் உரைக்கவில்லை. அவன் பாட்டுக்குப் போய்விட்டான். இரும்பால் செய்யப்படாதது: ஆனால் தோட்டியென்னும் பெயருடையது. இத்தகைய வளம் பொருந்திய மலைக்குத் தலைவன்; அந்த மலையின் பக்கமலைகளையும், பளிங்குபோன்ற அருவிநீரையும் உடைய மலைநாட்டின் தலைவன்; நள்ளி என்ற பெயருடையவன். அவன்தான் எனக்கு இவ்வாறு செய்தவன் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டு தெரிந்து கொண்டேன். இதுவே வன்பரணர் பாட்டில் அடங்கியுள்ள பொருள். 4 கூதிர்ப் பருந்தின் இரும்சிறகு அன்ன பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித் தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்தஎன் உயங்குபடர் வருத்தமும் உலையும் நோக்கி, மான்கணம் தொலைச்சிய குருதிஅம் கழல்கால், வான்கதிர்த் திருமணி வயங்கும் சென்னிச் செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன், தொழுதனன் எழுவேன் கைகவித்து இரீஇ, இழுதின் அன்ன வால்நிணக் கொழும்குறை கான்அதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு,நின் இரும்போர் ஒக்கலோடு தினம்எனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி, நன்மரன் நளிய நறும்தண் சாரல் கன்மிசை அருவி தண்எனப் பருகி விடுத்தல் தொடங்கினேன்; ஆக; வல்லே பெறுதற்கு அரிய வீறுசால் நன்கலம் பிறிதொன்றும் இல்லைக் காட்டுநாட் டேம்; என மார்பில் பூண்ட வயங்குகாழ் ஆரம் மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; எந்நாடோ என, நாடும் சொல்லான்; யாரீரோ எனப், பேரும் சொல்லான்; பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே இரும்புபுனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடும் குன்றில் பளிங்குவகுத்து அன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே (புறம் 150) அவ்வையும் அதியமானும் 1 அவ்வையும் அதியமானும் ஒருகாலத்தவர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்கள். அதியமான் தகடூரை ஆண்டவன். சேரர் மரபைச் சேர்ந்த ஒரு சிற்றரசன். வீரத்திலும், கொடையிலும் பேரரசன். அவ்வையார் ஒரு நாடோடிப் புலவர். அவரிடம் அதிய மானுக்கு அளவுகடந்த அன்பு. அவ்வையார் வெறும் தமிழ்ப் புலவராக மட்டும் இல்லை. அதியமானுக்கு ஒரு அரசியல் ஆலோசகராகக்கூட இருந்திருக்கிறார். தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் ஒருசமயம் போர் நடக்க இருந்தது. அப்பொழுது அவ்வையார் அதியமானுடைய தூதாகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுடைய வீரத்தை விளக்கிக் கூறித் தொண்டைமானைப் போரில் புகாதபடி தடுத்தார். புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்களிலே 20-க்கு மேற்பட்ட பாடல்கள் அதியமானைப் பற்றிப் பாடியவை. இதிலிருந்தே அவ்வையார்க்கும், அதியமானுக்கும் எத்தகைய அன்பும் நட்பும் வளர்ந்திருந்ததென்பதைக் காணலாம். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இணைபிரியா நட்பினராயினர். ஒருநாட் செல்லலம்; இருநாட் செல்லலம்; பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ (புறநா-101) இது அதியமானைக் குறித்து அவ்வையார் கூறியது ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; நாம்அவனிடம் சென்ற நாட்கள் பல. பல நாட்கள் அவனோடு பழகினாலும், பலரோடு அவனிடம் சென்றாலும் அவன் முகம் சுளிப்பதில்லை. முதல் நாள்-அவனைச் சந்தித்த அந்த முதல்நாளில்-அவன் எவ்வாறு வரவேற்று விருந்தளித்தானே, அவ்வாறே எந்நாளும் வரவேற்றான்: விருந்தளித்தான்: பரிசில் தந்தான். இது மேலே காட்டிய பாடலின் பொருள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதற்கு விலக்கானவன் அதியமான். அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி, அஞ்சி என்பன இவனுடைய பெயர்கள். இவன் அவ்வையாரிடம் எவ்வளவு அன்புகொண்டிருந் தான் என்பதற்கு மற்றொரு வரலாறு வழங்குகின்றது. அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த வரலாறு அது. 2 குதிரைமலை யென்பது இந்த அதியமான் ஆட்சியிருந்த வளம் பொருந்திய மலை. அந்த மலையிலே எல்லாச் செல்வங் களுமிருந்தன. அதியமானும் ஓய்வுக்காலத்தில் உல்லாசப் பொழுது போக்க அந்த மலைக்குப் போய் வருவான். ஒரு சமயம் அந்த மலையிலே போய் அதியமான் தங்கியிருந்தான். ஒருநாள் மாலைப்பொழுதில் அந்த மலையின் காட்சியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு நீர் அருவியையும் அதனை அடுத்த ஒரு உயர்ந்த பாறையின் பிளப்பிலே ஒரு நெல்லி மரமும் இருப்பதைக் கண்டான். அதே சமயத்தில் அங்கே மலைவாசிகள் பலர் கூடி நின்றனர். அந்த நெல்லிமரத்தை உற்று நோக்கி ஏதோ பேசிக் கொண்டி ருந்தனர். அவர்கள் அதியமானைக் கண்டவுடன் ஒடிவந்து, வணக்கம் கூறி, அந்த நெல்லிமரத்தைப்பற்றிய செய்தியைச் சொல்லத் தொடங்கினர். அரசே இதோ இந்த மலைப்பாறைப் பிளவிலே வளர்ந்திருக்கும் நெல்லிமரம் ஒரு அதிசய மரம். அது அடிக்கடி காய்ப்பதில்லை. எப்போதாவது காய்க்கும். அது பழுத்தால் கருநிறமாகக் காணப்படும். எப்போதாவது அதிசயமாகக் காய்த்துப் பழுத்தாலும் ஒரே பழந்தான் பழுக்கும். இத்தகைய அருமை நெல்லிமரம் அது. அந்தக் கருநெல்லிக்கனியை உண்டவர்கள் என்று இறக்காமல் வாழ்வர். இப்பொழுது அதில் ஒரு கனி பழுத்திருக்கிறது. தங்களுக்கென்றே அது பழுத்திருக்கிறதென்று நினைக்கிறோம் என்றனர். அப்படியா? ஆனால் அக்கனியைப் பறிக்க முடியுமா? முடியுமானால் பறித்துக் கொண்டு வாருங்கள் என்றான் அதியமான். அந்த மலைவாசிகள் அந்தக் கருநெல்லியைப் பறிக்க எவ்வளவோ முயன்றனர். அவர்களால் ஆகவில்லை. இறுதியில் அதியமானே தன் உயிரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அந்தப் பாறை வெடிப்புக்குள் இறக்கினான். அந்தக் கனியைப் பறித்துக் கொண்டு வந்தான். அதைக் கண்ட மலைவாசிகள் அரசனை வாழ்த்தினர். அக்கனியை அருந்தும்படி வலியுறுத்தினர். அவன் நான் அரண்மனைக்குச் சென்றபின் அருந்துகிறேன் என்று சொல்லி விட்டு, அக்கனியை மிகவும் பாதுகாப்புடன் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். இக் கனியை உண்டவர்கள் இவ்வுலகில் நெடுங்காலம் உயிர்வாழலாம். இறப்பென்பது அவர்களை நெருங்காது. என்று மலைவாசிகள் கூறிய சொல்லைக் கேட்டவுடன் அதியமானுக்கு அவ்வையாரின் நினைப்பு வந்துவிட்டது. அந்தக் கனியை தானுண்டு நீண்டநாள் வாழவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு எழவில்லை. எப்படியேனும் அந்தக் கனியை அவ்வையாருக்கு அளிக்க வேண்டும். அவரை அருந்தும்படி செய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் இவ்வுலகில் வாழ்ந்து தமிழ்த் தொண்டு செய்ய வேண்டும். என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதித்தது. ஆதலால் அவன் அந்தக் கனியை மிகவும் அருமையாகப் போற்றிப் பாதுகாத்து வைத்திருந்தான்: அவ்வையாரின் வருகையை எதிர்பார்த்து நின்றான். அதியமான் எதிர்பார்த்தபடி அவ்வையார் வந்துவிட்டார். அரசனைக் கண்டு அளவளாவினார். அச் சமயத்தில் அரசன் அந்த நெல்லிக்கனியைக் கொண்டுவந்து அவ்வையாரிடம் கொடுத்தான். அன்னையே, நீங்கள் வழி நடப்பால் களைப்படைந் திருக்கிறீர்கள். இந்த அரிய நெல்லிக்கனியை அருந்திக்களைப் பாறுங்கள் என்று சொல்லி அன்புடன் அளித்தான். அவ்வையும் அதனை வாங்கி அருந்திவிட்டார். அவருக் கிருந்த தண்ணீர்த்தாகம், வழி நடந்துவந்த களைப்பு இவைகள் அக் கனியின் வரலாற்றை விசாரிக்கத் தூண்டவில்லை. அரசனைச் சூழ்ந்திருந்தவர்களின் முகத்திலே வியப்புக் குறிகள் தாண்டவ மாடுவதை அவ்வையார் பார்த்தார். அதியமானுடைய முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சி இன்று பொலிவுறுவதைக் கண்டார். அவ்வையாரும். தான் உண்ட நெல்லிக்கனி மிகவும் சுவை பொருந்தியிருந்தையும் அதற்குமுன் அத்தகைய கனியைத் தான் அருந்தியதே இல்லை என்பதையும் உணர்ந்தார். உடனே அவர் உள்ளத்திலும் ஐயம் தோன்றியது. அரசே! ஏது இந்தக் கருநெல்லிக் கனி? மிகவும் இனிப்பாய் இருக்கிறதே. இதற்குமுன் இதுபோன்ற கனியை நான் கண்டது மில்லை உண்டதுமில்லையே என்றார் அவ்வையார். அதன் பிறகு தான் அதியமான் அந்தக் கனியின் பெருமையைக் கூறினான். நான் இந்தக் கனியையருந்தி நீண்ட நாள் வாழ்வதால் உலகிற்கு என்ன பயன்? நீங்கள் அருந்தி நீண்ட நாள் வாழவேண்டும். உங்களால் தமிழன்னை வளம் பெற வேண்டும். அதற்காகவே இக் கனியைத் தங்களிடம் தந்தேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னான். அதியமானுடைய அன்பைக் கண்டு அவ்வையாருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. அதியமானுடைய தியாகத்தைப் பாராட்டி அவனை வாழ்த்தினார். 3 வெற்றியைத் தருகின்ற கூர்மையான வாளைக் கையில் ஏந்திப் பகைவர்கள் போர்க்களத்திலே வீழும்படி அவர்களைக் கொன்று குவித்து, வீரக் காப்பணிந்த அதியமானே! கடல் போன்ற மதுச் செல்வத்தையுடைய அதியர் தலைவனே! மாற்றாரைப் போரிலே புறமுதுகிடச் செய்யும் வீரச் செல்வத்தையுடையவனே! அழகிய மாலையை அணிந்த அஞ்சியே! நீ, பால் போன்ற பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியையும் பிரகாசிக்கும் தலையையும், நீலநிறமுள்ள அழகிய கழுத்தையும் உடைய சிவபெருமானைப் போல நீடுழி வாழ்வாயாக! பழமையான பெருமலையின் பாறைப் பிளவிலே வளர்ந்துள்ள மரத்திலே பறித்த கனியை - சிறிய இலைகளை யுடைய நெல்லிமரத்தின் இனிமையான கனியை - அதன் பெருமையை வெளியிடாமல் உன் உள்ளத்திலேயே அடக்கிக் கொண்டு எமக்குக் கொடுத்தனை; நான் சாவின்றி நீண்டநாள் வாழ்ந்திருக்க எண்ணி எனக்குக் கொடுத்தாய், உன்னுடைய இத்தகைய அன்பை நான் எப்படிப் புகழ்வேன்! என்று புகழ்ந்து பாடினார். இந்த வரலாற்றைப் புறநானூற்றின் 91-வது பாடலிலே காணலாம் 4 வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான் போர் அடு திருவில் பொலந்தார் அஞ்சி, பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே! தொல்நிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே. நெல்லிக் கனியின் பெருமையைச் சொல்லிவிட்டால் அவ்வையார் அதனை உண்ணமாட்டார்; அதியமானையே உண்ணும்படி வலியுறுத்துவார். ஆதலால் அதன் சிறப்பை அதியமான் சொல்லாமல் அவ்வையாரிடம் அளித்தான். இக்கருத்து, தீங்கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கி என்ற தொடரிலே அமைந்து கிடப்பதைக் காணலாம். அவ்வையாரின் அஞ்சாமை 1 அவ்வையாரைப் பற்றி வழங்கும் கதைகளுக்கு அளவில்லை. தமிழ்நாட்டிலே அவ்வையாரைப்பற்றிப் பேசாதவர்கள் இல்லை. பழைய பாட்டிகள்கூட ஏதாவது பேசும்போது. அவ்வையார் இதைச் சொன்னார் என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வளவு புகழுண்டு அவ்வையாருக்கு. அவ்வையார் பாடியதாக வழங்கும் பாடல்கள் பல; நூல்கள் பல சங்க நூல்களிலே அவ்வைப் பாடல்கள் பல காணப்பபடுகின்றன. ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல் போன்ற நூல்களும் அவ்வையார் பாடியனவென்று கொள்ளப்படுகின்றன. அவ்வையார் பெயரில் சில தனிப் பாடல் களும் காணப்படுகின்றன. அவ்வையாரைப்பற்றி வழங்கும் வரலாற்றிலே மற்றொரு சிறப்பு அமைந்து கிடக்கின்றது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து அவ்வையாரைப்பற்றிப் பேசப்படுகிறது. ஒரே அவ்வையார் ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்ததாகவும் நம்புகின்றனர். சங்க காலத்தில் வாழ்ந்தஅவ்வையார் ஒருவர். அவரைப் பற்றிய வரலாற்றை ஓரளவு புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். தொடர்ச்சியாக அவரைப் பற்றிய பிறப்பு-வளர்ப்புக் கதைகளைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவருடைய நட்பினர்கள் யார் யார்? அவர் மக்களுக்குச் செய்த நன்மையென்ன? அவர்காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள், அரசர்கள், புலவர்கள் யார்? யார்? என்ற வரலாறு களை அவ்வையாரின் பாடல்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சங்க நூல்களைக் கொண்டு நாம் தெரிந்துகொள்ளும் அவ்வையார். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தவராகக் கருதப்படுகிறார். இவ் அவ்வையார் ஒரு சிறந்த அரசியல் வாதியுமாவார். இதன் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் ஓர் அவ்வையார் இருந்ததாகக் கதை வழங்குகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் காலம் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாகும் . பின்னும், கம்பர் காலத்தில் ஒர் அவ்வையார் இருந்ததாகக் கதைகள் வழங்குகின்றன. இவர் காலம் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மூன்கும். சங்க காலத்திலிருந்து கம்பர் காலம் வரையிலும் ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆயிரம் ஆண்டும் ஒரே அவ்வைதான் உயிர்வாழ்ந் திருந்தாள் என்று கூறுவோரும் உண்டு. இவர்கள் அதியமான் கொடுத்த நெல்லிக்கனியைத் தின்ற அவ்வைஆயிரங்காலம் வாழ்ந்தாள் என்றும் கூறுவர். இது இயற்கைக்கு விரோதமானது. ஒருவரே ஆயிரம் ஆண்டுகள் எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும்? சங்க காலத்து அவ்வைக்கும், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்து அவ்வைக்கும் ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகள் இடையில் உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் காலத்து அவ்வைக்கும் கம்பர் காலத்து அவ்வைக்கும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் இடைவெளியுண்டு. ஆகையால் சங்க காலத்து அவ்வை வேறு. சந்தரமூர்த்தி நாயனார் காலத்து அவ்வை வேறு கம்பர் காலத்து அவ்வை வேறு என்று ஆராய்ச்சியாளார் கூறுவர். சங்க காலத்து அவ்வையார் மிகவும் பெரும்புகழ் பெற்றவர். அரசர்களாலும், மக்களாலும் மதித்துப் பாராட்டப் பெற்றவர். ஆதலால், பிற்காலத்தில் இருந்த சில பெண்புலவர்கள் அந்த அவ்வையாரின் பெயரைத் தாங்கியிருக்க வேண்டும். அல்லது பழங்காலத்து அவ்வையாரைப் போன்ற புலமை வாய்ந்த சில பெண்புலவர்களை அவ்வையார் என்ற பெயரிட்டு மக்கள் அழைத்திருக்கவேண்டும். இதுதான் உண்மையாக இருக்க முடியும். 2 நாம் இங்கே குறிப்பிடும் அவ்வையார் சங்க காலத்து அவ்வையார்; அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர்: அல்லது முதல் அவ்வை. இந்த அவ்வை அதியமான் நெடுமான் அஞ்சியென்னும் மழவர் தலைவனிடம் மிகுந்த அன்புடையவர். அவனும் இவரைத் தனது அன்னையாக - நண்பராக - அரசியல் ஆலோசனையளிக்கும் அமைச்சராக-வைத்துப் பாராட்டிவந்தான். அதியமானுடைய வீரத்தையும் கொடையையும் பாராட்டி அவ்வையார் பல பாடல்கள் பாடியிருக்கின்றார். அதியமான் இறக்கும் வரையிலும் அவனுடைய உயிர்த்தோழராக வாழ்ந்தார் அவ்வையார். அவன் இறந்தபின்னும் அவனைக் குறித்துப் பாடினார். இந்த அவ்வையார் முதல்முதல் அதியமானைப் பார்ப் பதற்காகச் சென்றபோது இருவருக்கும் உடனே சந்திப்பு ஏற்படவில்லை; அதியமானைக் காண்பதற்காக அவர் நீண்ட நேரம் காத்திருந்தார். இறுதியில் பொறுமையிழந்தார். உடனே அதியமான் அரண்மனையின் வாயில் காவலனைப் பார்த்து, ஏ, காவலனே! உன்னுடைய அரசன் எப்பொழுதும் பரிசிலர்க்கு எளியன்! எந்த நேரத்திலும் பரிசிலர்கள் அவனைச் சந்திக்கலாம் என்று கேள்வியுற்றே நான் பரிசில் பெற வந்தேன். ஆனால் அவனே என்னை மதிக்கவில்லை! எனக்கு இவ்வுலகில் சோறு கிடைக்காமலில்லை. எத்திசைக்கு நான் போனாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்று கூறி விட்டுப் புறப்பட்டார். இக்கருத்தை அவள் ஒரு பாடல் மூலம் தெரிவித்தாள். இச்சமயத்தில் அதியமான் ஓடிவந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அவ்வையாரின் சிறந்த புலமையை அறிந்து அவரைத் தன் உண்மை ஆசிரியையாக ஏற்றுக் கொண்டான். இதுமுதல்தான் அவ்வையார்க்கும் அதியமானுக்கும் இடை விடாது நட்பு வளர்ந்து வந்தது. இப்படி அவ்வையார்க்கும் அதியமானுக்கும் நட்பு வளர்ந்து பெருகுவதற்குக் காரணமாக இருந்த இப்பாடலின் பொருள்தான் கீழ்வருவது. 3 வாயில் காவலோனே! வாயில் காவலோனே! பரிசிலர்க்கு அடைக்காமல் எப்பொழுதும் திறந்திருக்கின்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் வாயில்காவலனே! வள்ளல்களில் காது களிலே சிறந்த மொழிகளை விதைப்பார்கள்: தாம் நினைப்பதை எவ்வகையினும் முயன்று முடிக்கும் நெஞ்சுரம் உடையவர்கள்; வள்ளல்களிடம் பரிசில் பெறுவதற்காக வருந்தித் திரிவார்கள்; இவ்வாறு வருந்தித் திரிந்து பரிசில் பெறுவதையே வாழ்க்கை யாகக் கொண்டவர்கள் புலவர்கள். இத்தகைய புலவர் மரபைச் சேர்ந்தவள் நான். உன்னுடைய அரசனோ, விரைந்து செல்லும் குதிரையை யுடைய சிறந்தவன்; நெடுமான் அஞ்சி என்னும் பெயரை உடை யவன். அவன் தன் தரத்தை எண்ணாமல் மறந்து விட்டானே! அல்லது என்னையும் என்னுடைய தன்மையையும் அறியாமல் போய்விட்டானோ! இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இல்லாமற் போய்விடவில்லை; அவர்கள் அடியோடு மாண்டு மடிந்துபோய்விடவில்லை; உலகமும் பாழாகிவிடவில்லை. எமக்குப் பரிசளிக்க இவ்வுலகில், புகழும் அறிவும் உடையோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் எமது யாழை எமது தோளிலே சுமந்துகொண் டோம்; வாத்தியங்கள் வைக்கும் எமது பையைச் சுருக்கிக் கொண்டோம். மரங்களை வெட்டி வேலை செய்யும் தச்சனுடைய சிறுவர்கள் - மழு அதாவது வாய்ச்சியைப் பெற்ற வல்லமையையுடையவர்கள் - காட்டிலிருந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் கைக்குத் தகுந்த வேலையை அந்தக் காடு அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்குமல்லவா? அவர்கள் விரும்பியதைத் தங்கள் கையிலிருக்கும் மழுவின் மூலம் அந்தக் காட்டிலே பெற்றுக் கொள்ள முடியும். அதுபோல்தான் எனது நிலைமையும், நான் எத்திசைக்குப் போனாலும் சென்ற திசைகளில் எல்லாம் எனக்குச் சோறு கிடைக்கும். இதுவே அவ்வையார் கூறிய பாடலில் அடங்கிய பொருள். 4 வாயிலோயே! வாயிலோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம் உள்ளியது முடிக்கும் உரன்உடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு, அடையா வாயிலோயே! கடுமான் தோன்றல! நெடுமான் அஞ்சி தன்னறியலன் கொல்! என்னறியலன் கொல்! அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே: அதனல் காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே; எத்திசைக் செலினும் அத்திசைச் சோறே. (புறநா.206) உனது தலைவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசிலால்தான் நான் வாழவேண்டுமென்ற அவசியம் இல்லை. எனக்குப் பரிசில் அளிப்போர் இந்த நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றனர் என்பதே இப்பாட்டில் அமைந்துள்ள கருத்து. இதன்மூலம் அவ்வையாரின் வீரத் தன்மையைக் காணலாம். இதுவே அவ்வையார்க்கும் அதியமானுக்கும் முதல்முதல் நட்பினை விளைவித்த பாடல் எனக் கருதலாம். அரசுக்கு அறிவுரை 1 உழைப்பவர் குடிமக்கள்; உயிர்வாழ்வதற்கு வேண்டிய பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் குடிமக்கள். இவர் களுக்குத் துணையாக நின்று ஊக்கப்படுத்துவதே அரசாங்கத்தின் கடமை. உழைப்பவர்கள் தங்கள் பொருள்களைக் கொள்ளை கொடுத்துவிட்டு, உடலும் உள்ளமும் சோர்வடையாமல் வாழும்படி பாதுகாப்பதற்கே அரசாங்கம் வேண்டும். இத்தகைய அரசாங்கம், மக்களால் மக்கள் நன்மைக்காக மக்கள் நாகரிக வாழ்வு சிறந்து மேலோங்கி வளர்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதுதான். இந்த அரசாங்கம் நடை பெறுவதற்கு உதவி செய்பவர்களும் குடிமக்கள்தாம். குடிமக்கள் கொடுக்கும் வரியைக்கொண்டுதான் அரசாங்கம் நடைபெற்றாக வேண்டும் அரசாங்கத்தை நடத்துவோர் குடிமக்களின் குறைகளைப் பற்றிச் சிந்திக்காமல், தங்கள் இன்பத்தையும், தங்கள் அதிகாரத் தையுமே பெரிதாக எண்ணுவார்களானால், அவர்களால் நடத்தப்படும் அரசாங்கம் நிலைத்து நிற்காது. குடி மக்கள் வெறுப்புக்கும், அவமதிப்புக்கும் ஆளான எந்த அரசாங்கமும் இவ்வுலகத்தில் நிலைத்திருந்ததில்லை. குடிமக்கள் கொடுக்கும் வரிப் பொருள்தான் எந்த அரசாங்கத்துக்கும் முதன்மையான வருமானம். மக்களிடம் வரி வாங்கும்போது அவர்கள் மனங்கோணாமல் - அவர்கள் சக்திக் கேற்றவகையில் - வரி வாங்கவேண்டும். மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெருவாரியான வரிகளை அவர்களிடமிருந்து வாங்கும் அரசாங்கம் நீண்டநாள் நடைபெறாது. வரி கொடுக்கும் மக்களும் கொஞ்சநாள்தான் கொடுப்பார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் உடைமைகளை இழப்பார்கள்; உற்பத்தி செய்யமுடியாமல் போய்விடுவார்கள்; வறுமையிலே ஆழ்ந்து விடுவார்கள். இப்படிக் குடிமக்கள் கெட்டுப்போவதனால் அரசாங்கத்திற்கு வரும் வருமானமும் குறைந்து போய்விடும். இந்த உண்மையை உள்ளத்திற் கொண்டுதான் எந்த அரசாங்கமும் வரி விதிக்க வேண்டும். பண்டைத் தமிழரசர்கள் குறைந்த வரி வாங்கிக் குடிகள் துன்புறாமல் பாதுகாத்து வந்தனர். இந்த மன்னர்களை மக்களும் மதித்துப் போற்றிப் புகழ்ந்துவந்தனர். சில மன்னர்கள் அறிவின்மை காரணமாக - அல்லது அவர்களுக்குத் துணை செய்யும் அதிகாரிகளின் தந்நலங் காரணமாக - குடிமக்கள் மனம் கோணும்படி வரி வாங்க முனைவார்களாயின். அப்பொழுது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை கூறித் திருத்துவார்கள். இத்தகைய நிகழ்ச்சியை விளக்கும் பல பாடல்களைப் பண்டைச் சங்க இலக்கியங்களிலே பார்க்கலாம். அதிக வரி வாங்கிய ஒரு மன்னனுக்கு ஒரு புலவர் அறிவுரை சொல்லிய நிகழ்ச்சியை விளக்கும் பாடல் ஒன்றை இக் கட்டுரையிலே விளக்குவோம். 2 பாண்டியன் அறிவுடை நம்பி என்பவன் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். அவன் சிறந்த அறிவுடையவன்தான்; ஆனால் அவனுக்கு மந்திரிமார்களா யிருந்தவர்கள் அவனை நேர்மையான வழியிலே நடக்க விடவில்லை, அவர்கள் தந்நலக் காரர்களாகவும், அதிகார வெறியர்களாகவும் இருந்தனர். அவர்கள் குடிமக்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக அவர் களிடமிருந்து அளவுக்கு மீறி வரி வாங்கி வந்தனர். இதனால் குடிமக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழுது பரிதவித்தனர். இந்த அறிவுடை நம்பியைப் பற்றியும், இவனுடைய அரசாங்கத்தைப் பற்றியும், இவனுடைய அதிகாரிகளைப் பற்றியும் பலரும் பழி சொல்லித் தூற்றினார்கள். நாளுக்குநாள் அறிவுடை நம்பியின் மீதும், அவனுடைய அரசாங்கத்தின் மீதும் குடி மக்களுக்கு வெறுப்புணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. குடிமக்களும் தங்களால் தாங்கமுடியாத வரிகளை வாரிக்கொடுத்து வறுமைக்கு ஆளாகி வாடிவந்தனர். இச்செய்தியை அக்காலத்திலிருந்த பிசிராந்தையார் என்னும் பெரும்புலவர் அறிந்தார். அவர் சிறந்த அரசியல் அறிஞர். சோழ மன்னனுக்குச் சிறந்த நண்பர். பாண்டிய நாடுதான் அவர் பிறப்பிடம். பிசிர் என்னும் ஊர் பாண்டிய நாட்டைச் சேர்ந்ததுதான். அந்த ஊரிலே வாழ்ந்தவர் தான் பிசிராந்தையார். தனது நாட்டு மன்னன் இவ்வாறு குடிமக்களால் தூற்றப்படு வதைக் கண்டு அவர் மனம் வருந்தினார். பாண்டியன் அறிவுடை நம்பிக்கு நல்லுரை கூறி அவனைத் திருத்தவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டார். பிசிராந்தையார் உடனே பாண்டியனிடம் சென்றார். அவனைக் கண்டார். பாண்டியன் அறிவுடைய நம்பியும் புலவரை வரவேற்று மரியாதை செய்தான். புலவர் தன்னிடம் பரிசு பெற வந்திருப்பதாகக் கருதி அவருக்குப் பரிசில் தர முன்வந்தான் பாண்டியன் புலவர், நான் உன்னிடம் பரிசில் வேண்டி வரவில்லை, உன்னைப் பற்றி உன் குடிமக்கள் குறை கூறுகின்றனர். அறிவுடை நம்பி என்ற பெயருக்கு ஏற்ற முறையிலே நடந்துகொள்ளவில்லை. உன் துணைவர்கள் உனக்கு இழுக்கு வரும்படி நடந்து வருகின்றனர். நீ உன்னுடைய அரசியலிலே தக்க கவனம் செலுத் தாமையால் தான் இந்தத் தவறு நேர்ந்தது. இந்த உண்மையை உனக்கு எடுத்துக்காட்டத்தான் உன்னைத் தேடி நான் வந்தேன். உண்மையான அரசியல் தத்துவத்தை நீ மறந்துவிட்டாய். அதை உனக்கு நினைவூட்டுகிறேன் கேள் என்று கூறினார். அவன் கொடுக்க வந்த பரிசிலைப் பெற்றுக் கொள்ளவில்லை. பாண்டியனுக்குக் கீழ்வரும் அரசியல் தத்துவத்தை எடுத்துக் கூறினார் பிசிராந்தையார். 3 அறிவுடை நம்பியே உனது குடிமக்கள் வரி கொடுக்க முடியாமல் வாடி நிற்கின்றனர்; அவர்கள் தலைமீது தாங்க முடியாத வரிச்சுமை ஏறிவிட்டது. உனது சுற்றமாகிய அதிகாரிகள் இரக்கமற்றவர்கள்; குடிமக்களின் குறைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதவர்கள்; குடிமக்களை வாட்டி வதைத்து வரி வாங்குவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்கின்றனர். ஒரு உண்மையை நான் சொல்கிறேன் கேள்; ஒரு மாவிற்குக் குறைந்த நிலமாக இருந்தாலும் குற்றமில்லை. அதில் விளைந் திருக்கும் நெல்லைச் சேதமாகாதபடி அறுத்துக் களத்திலே சேர்க்க வேண்டும். அதை அடித்துத் தூற்றிக் காயவைத்துக் களஞ்சியத்திலே சேர்த்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால் பல நாட்களுக்குப் பசியாறச் சாப்பிடலாம். நூறு வயல்கள் இருந்தாலும் சரி, அந்த வயல்களிலே நெற்பயிர்கள் நன்றாகச் செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றியிருந் தாலும் சரி; ஒரு யானை அந்த வயல்களிலே புகுந்து விட்டால் ஒன்றும் உருப்படாது: விளைந்த அவ்வளவும் அடியோடு பாழாகும். அந்த யானையின் வாயிலே புகும் நெல்லைக்காட்டினும், அதன் கால்களால் மிதிபட்டுப் பாழாகும் நெல்லே மிகுதியாக இருக்கும். இந்த உண்மை உனக்குத் தெரியாதது அன்று. இதை நீ நன்றாகச் சிந்தித்துப் பார். அறிவுள்ள அரசன் இந்த உதாரணத்தை உள்ளத்திலே கொண்டு நடக்க வேண்டும். வரி வாங்கும் முறையை அறிந்து குடிகளிடம் வரி வாங்கவேண்டும். குடிகளால் எவ்வளவு வரி கொடுக்க முடியுமோ அவ்வளவு வரியைத்தான் அவர்களிடம் வாங்கவேண்டும். எவ்வளவு குறைவாக வரிவிதித்து வாங்க முடியுமோ அவ்வளவு குறைவாக வரிவிதித்து வாங்கினால்தான் குடிமக்கள் குறைப்படாமல் வரி கொடுப்பார்கள். குறைவாக வரி விதிக்கும் அரசனுக்குக் குடிமக்களிடமிருந்து கோடிக்கணக்கான பொருள் வந்து குவியும். அவனுடைய நாடும் செல்வத்திலே சிறந்து விளங்கும். அரசன் அறிவற்றவனாய் உறுதியற்ற உள்ளமுடையவனாய் இருந்தால் அவன் நாடும் சீரழியும். அரசனுடைய போக்கறிந்து அவன் தவறு செய்யும்போது அதைத் தடுக்கும் துணைவர்கள் அரசனுக்கு இருக்க வேண்டும். இப்படியில்லாமல், அரசன் எண்ணுகிறபடியே, அவன் மனங்கோணாமல் நடக்கின்ற சுற்றத்தாரால் அரசுக்கு ஆபத்துதான். குடிமக்களின் அன்பும் ஆதரவும் அழியும்படி, அவர் களிடத்திலே அதிகமான பொருளைக் கொள்ளைகொள்ள விரும்பும் அரசு அழிந்துவிடும். இந்த அரசின் தலைவன், யானை புகுந்த வயலைப்போலப் பயனின்றிக் கெடுவான். தானும் உண்டு இன்புற்று வாழமாட்டான்; அவனால் ஆளப்படும் நாடும் கெட்டுப் போகும். இந்த உண்மையை உணர்ந்து உனது அரசாங்கத்தை நடத்து. உன் குடிமக்கள் குறையற்று வாழும்படி அரசாட்சி செய். அறிவுடைய நம்பி என்ற பெயருக்கேற்றபடி நடந்து கொள். இதுவே நீ எனக்குக் கொடுக்கும் பரிசு என்று கூறினார் புலவர். இதைக் கேட்ட அறிவுடை நம்பி உண்மையறிந்து, உயர்ந்த முறையில் அரசாண்டு. குடிகளின் உள்ளன்பையும் பாராட்டு தலையும் பெற்றான். இப்பொருளடங்கிய பாடல் கீழ்வருவதுதான். 4 காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே. (புறநா-184) இப்பாடற் கருத்து இக்காலத்து அரசுக்கும் ஏற்றதாக இருப்பதைக் காணலாம் இத்தகைய பாடல்களே உயிருள்ள பாடல்கள். படைபலத்தால் மட்டும் பயனில்லை 1 இன்று பல நாடுகள் தங்கள் படைபலத்தைப் பெருக்கு வதிலே முனைந்திருக்கின்றன. ஆளுவோர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக்கொள்வதற்குப் படைபலத்தையே நம்பியிருக் கின்றனர். உலகில் பெரும்பாலான அரசுகளுக்கு இத்தகைய நம்பிக்கையுண்டு. ஆகையால் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை மக்களைக் கொன்று குவிக்கும் போர்க்கருவிகளைச் செய்வதிலே செலவழித்து வருகின்றனர். எந்த நாடும் தற்பாதுகாப்புக்கான படைகளைக் கொண்டி ருக்கவேண்டியது அவசியந்தான். எல்லா நாடுகளும் இந்த நிலையிலே விளங்கினால் போர் மூள்வதைத் தடுக்க முடியும், எளியவரை வலியவர் எதிர்ப்பது இயற்கை. எளியவர் வலியவர் என்ற நிலை மாறி, ஒத்த பலமுடையவர் என்ற நிலை ஏற்பட்டால் ஒருவரை ஒருவர் எதிர்க்கமாட்டார்கள். ஒருவரோ டொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒற்றுமையுடன் வாழ்வார்கள். எந்த நாடாயிருந்தாலும் சரி, உள்நாட்டு மக்களின் வாழ்வைப் பாதுகாக்காவிட்டால் - உள்நாட்டு மக்களின் உள்ளம் மகிழும்படி அறநெறியிலே நடந்து கொள்ளாவிட்டால் - அந்நாடு எவ்வளவு படைபலத்தைப் பெற்றிருந்தாலும் பயனில்லை. உள்நாட்டு மக்களை வறுமையிலே வாடி வதங்கவிட்டு விட்டு உள்நாட்டு மக்களின் உரிமையை அடியோடு அடக்கி நசுக்கிவிட்டுப் போரிலே ஈடுபட்ட அரசாங்கங்கள் இருந்த இடந்தெரியாமல் மறைந்துபோன கதைகளை நாம் கேட்டிருக்கின்றோம். குடிமக்களிடம் வேற்றுமை பாராட்டாமல் நடுநிலைமை யுடன் நடந்துகொள்ளவேண்டும். திறமையுடன் ஆளவேண்டும். இல்லாமையால் துன்புறும் ஏழைகளின் இன்னலைப் போக்க வேண்டும். எல்லா மக்களின் அன்பையும், ஆதரவையும் அடைந்திருக்க வேண்டும். இம்முறையிலே ஆளும் ரசாங்கமே வெற்றியுடன் வாழும்: பகைவரால் பாதகமடையாமல் பலமுடன் வாழும். உண்மையில் மக்கள் நன்மைக்காக, மக்களால் ஆளப்படும் எந்த அரசாங்கமும் இம்முறையைப் பின்பற்றித்தான் நடந்து கொள்ளும். இந்த உண்மையை படைபலத்தைக்காட்டிலும் அறநெறியைக் காப்பாற்றுவதே அரசுக்கு வெற்றி தரும் என்ற கருத்தைப் புறநானூற்றுப் பாடல ஒன்றிலே காணலாம். 2 நன்மாறன் என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவன் இலவந்திகைப் பள்ளி என்ற இடத்திலே இறந்துபோனான். ஆதலால் அவனுக்குப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்ற பெயர் ஏற்பட்டது. இவன் தன் படைபலத்தைப் பெருக்குவதிலே முனைந் திருந்தான். இதற்காக ஏராளமான பொருளைச் செலவழித்து வந்தான். இச்செயலிலேயே இவன் தன் உள்ள முழுவதையும் ஈடுபடுத்தியிருந்தமையால் அரசுமுறையைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. குடிமக்களின் நன்மை புறக்கணிக்கப்பட்டது. இவர்களுக்கு நீதி வழங்குவதிலேகூடத் தவறுகள் தோன்றத் தொடங்கின. படைபலமே பெரிது: அதுவே தன் அரசை நிலைக்கவைக்கும் என்ற எண்ணம் இவன் உள்ளத்தில் குடிபு குந்ததனால் அரசுமுறையிலே இவனுக்கு இம்மாதிரியான அலட்சிய புத்தி உண்டாயிற்று. மதுரையிலே அக்காலத்திலே மருதன் இளநாகனர் என்ற ஒரு புலவர் இருந்தார். அவர் அரசன் மனப்பான்மையைக் கண்டார். அதனால் விளையும் ஆபத்தை அறிந்தார். அரசனுடைய மனப்பான்மையை மாற்றவேண்டியது தன் கடமை என்று கண்டார். அரசனுடைய மனப்போக்கு மாறாவிட்டால் அதனால் குடிமக்கள் துன்புறுவார்கள்: அரசை மதிக்க மாட்டார்கள்: பலர் ஆட்சியை மாற்றியமைக்கவே முயல்வார்கள். இந்த நிலையில் அயல்நாட்டுப் படையெடுப்பு ஏற்பட்டால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி; நாட்டின் சுதந்திரம் பறிபோகும் என்பது திண்ணம் என்ற உண்மையையும் உணர்ந்தார். ஆதலால் உடனே அரசனை அணுகி அவனுக்கு அறிவுரை கூறினார். இந்த மதுரை மருதன் இளநாகனர் பாண்டியனுக்கு அறிவுரை கூறியதாக அமைந்துள்ள பாடல் புறநானூற்றில் ஐம்பதைந்தாவது பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் இரண்டு சரித்திர உண்மைகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் புராணக் கதைகள் வழங்கத் தொடங்கி விட்டன. அக் கதைகளுக்குள்ளே பரமசிவன் திரிபுரத்தை எரித்தார் என்ற கதை தமிழ்நாட்டிலே பலராலும் பேசப்பட்டது. இது ஒரு சரித்திர உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருச்செந்தூர் என்னும் முருகன் வாழும் ஊர் இன்றுபோலச் சிறந்து விளங்கிற்று. இன்று மக்கள் திருச்செந்தூருக்கு யாத்திரை போவதுபோலவே அக்காலத்திலும் யாத்திரை போயினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய திருச்செந்தூரில் முருகன் கோயில் அலைவீசும் கடற்கரையி லேயே அமைந்திருந்தது. இது இரண்டாவது சரித்திர உண்மை. இந்த இரண்டு உண்மைகளையும் மருதன் இளநாகனர் தனது பாடலிலே அமைத்துப் பாடியுள்ளார். அந்தப் பாடலில் அமைந்துள்ள பொருள் கீழ்வருவதாகும். 3 திரிபுரத்திலே வாழ்ந்து தேவர்களைத் துன்புறுத்திவந்த அவுணர்களை அழிப்பதற்காகப் பரமசிவன் முன்வந்தார். உயர்ந்த மலையைப் பெரிய வில்லாக வளைத்துக் கொண்டார். பாம்பை அதன் நாணாகப் பூட்டினார். அவ்வில்லிலே அம்பைத் தொடுத்து எய்து திரிபுரத்தின் மூன்று மதில்களையும் அழித்தார். இதன் மூலம் தேவர்களுக்கு வெற்றியைத் தந்தார். கறைமிடற்றை அதாவது கருமையான கழுத்தையுடைய இச்சிவபெருமான் தனது திருமுடியின் பக்கத்தே பிறைச்சந்திரனை அணிந்திருக் கின்றார். இவருடைய நெற்றியிலே அழகாகச் சிறந்து விளங்குகிறது ஒரு கண். அந்த நெற்றிகண்ணைப் போன்றவன் நீ. மூவேந்தருள் சிறந்தவன் நீ. பூமாலையை அணிந்து பாண்டிய மன்னவன் நீ. உனக்கோர் உண்மையைச் சொல்லுகிறேன். கடுங்கோபத்துடன் எதிரிகளைக் கொல்லுகின்ற யனைப் படை எவ்வளவு மிகுதியாயிருந்தாலும் சரி, விரைந்து ஓடும் தன்மையையும் செருக்கும் கொண்ட குதிரைப்படை எவ்வளவு நிறைந்திருந்தாலும் சரி, நீண்ட கொடிகளைத் தாங்கியிருக்கின்ற உயரமான தேர்களைக் கொண்ட படை எவ்வளவு திரண்டிருந் தாலும் சரி, ஆண்மையும் வலிமையும் நிறைந்த வீரர்களைக் கொண்ட காலாட்படைகள் எண்ணற்றுத் திரண்டிருந்தாலும் சரி: இவை களால் பயனில்லை. இந்த நால்வகைப் படைகளால் மட்டும் அரசாட்சி வெற்றிபெற முடியாது. சிறந்த அறநெறயின் அடிப்படையிலேயே அரசின் வெற்றி அமைந்திருக்கிறது. ஆகையால் யாராயிருந்தாலும் நடுநிலைமையில் நின்று நீதி வழங்க வேண்டும். கொடுந் தொழில் செய்தவர் - அறத்தைச் சிதைத்து, அதற்கு மாறாக நடந்தவர் - நண்பர்களானாலும் சரி, உறவினர்களானாலும் சரி, தன் அரசுக்குத் துணைசெய்யும் அதிகாரிகளானாலும் சரி, செங்கோல்முறை தவறாமல் அவர் களைத் தண்டிக்கவேண்டும். நேர்மையாக நடந்து கொண்டவர் யாராயிருந்தாலும் சரி. அவர்கள் அக்கிரமக் காரர்களால் பொய்க்குற்றம் சுமத்தப்படுவார்களானால் அயலார் என்பதற்காக அவர்களிடம் நீமுறை தவறி நடந்துகொள்ளக் கூடாது. செங்கோல் நிமிர்ந்து நிற்கும்படி நீதி வழங்கவேண்டும். நீ செங்கதிரோனைப் போல் சிறந்த வலிமையும் வீரமும் உடையவனாக வாழ்க! சந்திரனைப் போல் குளிர்ச்சியும் பெரிய மெல்லிய தன்மையும் உள்ளவனாக வாழ்க! மழையைப்போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் வள்ளன்மையுடையவனாக வாழ்க! இம்மூன்று தன்மையும் பெற்று நீடூழி காலம் வாழ்க! இவ்வுலகில் வறியோர் அதாவது இல்லாதவர் என்போரை இல்லாமற்செய்து நீ நீண்டகாலம்வாழ்க! பரந்த பெருமையுடைய பாண்டியனே! உயர்ந்த முருகவேள் வீற்றிருக்கின்ற திருச்செந்தூரை நீ அறிவாய். அந் நகரம் அழகிய கடற்கரையிலே அமைந்துள்ளது உனக்குத் தெரியாததன்று, ஆழமான அக்கடலிலே வெண்மையான அலைகள் அழகாக அசைவதையும் நீ கண்டிருக்கின்றாய். அந்த அழகிய கடற்கரை யிலே பெருங்காற்று வீசுவதால் திட்டுத் திட்டாக மணல் குவியல்கள் காணப்படுகின்றன. அந்த மணற்குவியல்களிலே ஏறிச் செல்வோரின் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன. இவ்வாறு காற்றால் எக்கர் அடிக்கப் பட்டிருக்கும் மணற்குவியல்களை ஒவ்வொரு மணலாக எண்ணிக் கணக்கிட்டால் எவ்வளவு எண்ணிக்கை வருமோ அவ்வளவு எண்ணிக்கையைக் காட்டினும் பன்னெடுங்காலம் நீ வாழ்வாயாக! இதுவே பாண்டியன் நன்மாறனைப் பற்றி மருதன் இளநாகனார் பாடிய பாடலில் அமைந்துள்ள பொருள். நடுநிலைமை தவறாமல் - வேண்டியவர் வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பில்லாமல் - நீதி வழங்க வேண்டும். நாட்டிலே வறுமையால் வாடுவோரே இருக்கக்கூடாது. இல்லாதவர், உள்ளவர் என்ற வேற்றுமையின்றி எல்லாரும் இன்புற்று வாழும்படி செய்யவேண்டும். இந்த இரண்டுமே ஒரு அரசாங்கம் வெற்றியுடன் விளங்கு வதற்கு வழி. இவை இல்லாமல் படைபலத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது என்ற சிறந்த கருத்தைப் பண்டைத் தமிழர் பாராட்டிப் போற்றி வந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு எடுத்துக்காட்டாகும். 4 ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல், காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல வேந்துமேம் பட்ட பூந்தார் மாற! கடும்சினத்த கொள்களிறும், கதழ்பரிய கலிமாவும், நெடுங்கொடியநிமிர்தேரும், நெஞ்சுடைய புகலமறவரும் என நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதனால், நமர்எனக் கோல் கோடாது, பிறர்எனக் குணம் கொள்ளாது. ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெரு சாயலும், வானத்து அன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி, யில்லோர் கையற நீ நீடுவாழிய! பெருந்தகை! தாழ்நீர் வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவே. (புறநா.55) உழவரைக் காத்தலே உயர்ந்த கடமை 1 நிலம் விளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி, நில வரியைச் செலுத்தியே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கும் அதிகாரிகள் இன்றும் உண்டு. நிலம் விளையாமல் பாழாகி, வருமானம் குறைந்து, உழவன் உயிர்வாழ்வதற்கே முடியாமல் தத்தளிக்கும் காலத்தில் இவ்வாறு தடபுடல் செய்து இறை வாங்குவோர் எவராயினும் அவர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படுவர். தூற்றப்படுவர். இத்தகைய அதிகாரி வர்க்கம், அரசுக்குக் கேடுசூழும் கும்பலாகும். மழையின்மையால் விளைநிலம் பாழாகும்; வெள்ளத்தால் விளைநிலம் பாழாகும். வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் நட்ட பயிர் நாசமாகும். இதனால் உழவன் தன் உழைப்பிற்கேற்ற பலன் பெறாமல் உள்ளங் குமுறுவான். அரசாங்க வரி கொடுக்க அவனால் ஆகாது. இச்சமயத்தில இறையைக் கொடு என்று அவனை இன்னல் செய்தால் அவனால் என்ன செய்ய முடியும்; வரிக்காகத் தன் உயிரினும் உயர்வாக எண்ணி உழுது வாழும் நிலத்தை இழக்கவேண்டியதுதான். இந்த நிலையை இன்றும் மக்கள் நலத்தைப்பற்றிச் சிந்திக்காத மடையர்கள் ஆளும் நாடுகளிலே காண்கிறோம். ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை, உழவனுக்கு வருமானம் இல்லாதபோது அவனிடமிருந்து வரி தண்டாமல் இருப்பது தான். எத்தனை ஆண்டுகள் விளையாவிட்டாலும் அத்தனை ஆண்டுகளுக்கும் தண்ட வேண்டிய நில வரியைத் தள்ளிக் கொடுக்க வேண்டும். இதுதான் முறை. ஒழுக்கு நீதி, உழவுத் தொழில் வளம் பெற்று உணவுப்பண்டம் பெருகும் வழி, உழவர்க்கு நன்மை செய்வது போல் நடிக்கும் பல அரசாங்கங்களிலே இன்று வேறு ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். நிலம் விளையாத ஆண்டில் வரியைத் தண்டாமல் நிறுத்திவிடுகின்றனர். அடுத்த ஆண்டில் நிலம் விளையும் போது, நிலம் விளையாத ஆண்டுக்கான வரியையும் சேர்த்து வாங்கிவிடுகின்றனர். இதுதான் இன்று நடைபெறுவது. இதனால் உழவனுக்கு எத்தகைய நலனும் இல்லை. பண்டைத் தமிழகத்தில் உழவனுக்கு வரி செலுத்த முடியா விட்டால் - அவன் நிலம் விளையாவிட்டால் - அவனிடம் வரி வாங்குவதில்லை.எனது நிலம் விளையவில்லை. எனக்கு நிலத்திலிருந்து எந்த வருமானமும் இல்லை. என்னால் வரி கொடுக்க இயலாது. ஆகையால் நிலவரியை அடியோடு கொடுக்க இயலாது. ஆகையால் நிலவரியை அடியோடு தள்ளிக் கொடுக்க வேண்டும் என்று முறையிடும் ஒவ்வொரு உழவனுக்கும் நிலவரி தள்ளிக் கொடுக்கப்பட்டது. இந்த உண்மையைப் புறநானூற்றப் பாட்டொன்றால் அறியலாம். புறநானூற்றின் முப்பத்து ஐந்தாவது பாடலில் அரசன் நிலவரியை அடியோடு தள்ளிக் கொடுத்த செய்தியைக் காணலாம். 2 வெள்ளைக்குடி நாகனார் என்பவர் ஒரு தமிழ்ப் புலவர். இவர் பெயர் நாகனார். இவருடைய ஊர் வெள்ளைக்குடி. ஆதலால் இவருக்கு இயப்பெயர். இவ்வூர் சோழநாட்டின் ஒரு பகுதி. சோழ நாட்டிலும் காவிரி பாயாத நிலப்பகுதி உண்டு. வானத்தைப் பார்த்து வாழும் வளமற்ற நிலப்பகுதியும் உண்டு. அந்தப் பகுதியிலே இந்த ஊர் அமைந்திருக்க வேண்டும். இந்த வெள்ளைக்குடி உறையூரில் இருந்து அரசு செலுத்திய சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆளுகைக்குள் இருந்தது. நாகனார் தமிழ்ப்புலவர்; ஆயினும் உழவுத் தொழில் செய்துவந்தார். வெள்ளைக்குடியில் அவருக்குச் சொந்த நிலமிருந்தது. அதைப் பயிர்செய்துவந்தார். அதுவே அவருடைய வாழ்வு ஒரு சமயம் மழையில்லை. சில ஆண்டுகள் மழையின்மை நீடித்தது. இதனால் நாகனாரின் உழவுத்தொழில் நாசமாயிற்று. நிலத்திலிருந்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியை அவரால் செலுத்த முடியவில்லை; நிலவரி ஒரு கடனாகச் சுமந்திருந்தது. நிலத்திற்குச் செலுத்தவேண்டிய பழையவரி பாக்கியிருந் தால் அதற்குப் பழஞ்செய் கடன் என்று பெயர். நிலவரி பாக்கியைக் குறிக்கும் பண்டைத் தமிழ்ப் பெயர் இது. இந்தப் பழஞ்செய் கடனைத் தீர்த்துக் கட்டிவிடப் புலவர் முடிவு செய்தார். உடனே அவர் உறையூரை அடைந்து கிள்ளிவளவனைக் கண்டார். அவனிடம் தனது நிலையை விளக்கமாகச் சொன்னார். மழை பெய்யவில்லை: நிலம் விளையவில்லை : வரி செலுத்த முடிய வில்லை: பழஞ்செய்கடன் அப்படியே ,ருக்கிறது; அதைத் தள்ளிக் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். கிள்ளி வளவனும் புலவரின் வேண்டுகோளுக்கிணங்கினான். பழைய வரிகள் அனைத்தையும் தள்ளிவிட்டான். அதுமட்டுமா? அவன் தமிழ்மொழியிடத்தும், தமிழ்ப் புலவரிடத்தும் கொண்ட அன்பு காரணமாக அவருடைய நிலத்தை அவருக்கு முற்றூட்டாகக் கொடுத்துவிட்டான். முற்றூட்டு என்பதை இப்பொழுது சர்வமான்யம் என்பர். எந்த வகையான வரியும் செலுத்தாமல் நிலத்தை முழுஉரிமை யுடன் அனுபவிப்பதே முற்றூட்டு இதுவே சர்வமான்யம். இவ்வாறு அரசனிடம் பரிசு பெற்ற புலவர் வெள்ளைக் குடி நாகனார் பாடியுள்ள புறநானூற்று பாடல் மிகச் சிறந்ததொரு பாடல். அப்பாடலிலே அரசனுடைய கடமையையும் அரசன் உழவர்க்குச் செய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். அப்பாடலில் உள்ள அரிய செய்திகள் கீழ்வருவன: 3 அரசனே உலகத்திலே நீர்வளமும் நிலவளமும் நிறைந்த சிறந்த நாடு தமிழ்நாடுதான். இந்தத் தமிழ்நாட்டை ஆளும் படைபலம் பொருந்திய மூவேந்தர்களுக்குள்ளும் உன்னுடைய அரசே சிறந்த அரசு. என்று சிறப்பித்துச் சொல்லக் கூடிய எல்லா அங்கங்களையும் உடையது உன்னுடைய அரசு ஒன்றுதான். பெருமையை உடையவனே செங்கதிர் திசைமாறி நாற்றிசை களிலும் தோன்றினாலும் சரி. வெள்ளியென்னும் நட்சத்திரம் தன் வழியை விட்டுவிட்டுத் தென்திசையாகச் செல்லத் தொடங் கினாலும் சரி: உனது நாட்டிலே பாயும் காவிரியின் நீர் வற்றுவதில்லை. பல கால்வாய்களாகப் பிரிந்தோடி நாட்டிலே பாயும். இதனால் வயல்களில் எல்லாம் கரும்புப் பயிர் செழித்து வளர்ந்து காட்சி தரும். பல கணுக்களையுடைய அக் கரும்புப் பயிர்கள் பூத்துக் குலுங்கியிருப்பது வேற்படைகளைக் கும்பலாக நட்டுவைத்தது போல் காணப்படுகின்றது. இத்தகைய கண்ணுக் கினிய சிறந்த காட்சியை உடையது உன்னுடைய நாடு ஒன்றுதான். இத்தகைய சோழ நாட்டிலே கொழிக்கும் பெருஞ் செல்வத்திற்கு உரிய தலைவனே! புகழ்பெற்ற வேந்தே! உனக்கு குரிய - உன்னுடைய கடமையான - சில செய்திகளைச் சொல்லு கின்றேன். என்னுடைய கடமையாக நான் சொல்ல வேண்டிய சில மொழிகளைக் கூறுகின்றேன். இவற்றைக் கேட்பாயாக! நீதியை வேண்டி முறையிட வருவோர்க்கு எளிதிற் காட்சி தரவேண்டும். செங்கோலைப் பின்பற்றி அறக்கடவுள் போல் நடுநிலையிலே நின்று நீதி செய்ய வேண்டும். இத்தகைய காட்சிக்கெளியனாய். கடுஞ்சொல் அற்றவனாய் நீதி செய்யும் மன்னன் நாட்டிலே மழைவளம் குறையாது. மழை வேண்டிய பருவகாலங்களில் எல்லாம் மாறாமல் பெய்து நன்மை தரும். வானத்தின் நடுவிலே மேகங்கள் திரண்டு நின்று உச்சியிலே உள்ள சூரியனை மறைத்தது போன்ற உனது வெண்கொற்றக் குடை, வெயிலை மறைப்பதற்காகப் பிடிப்பதன்று: துன்பத்தால் வேதனைப்படும் குடிமக்களுக்கு இன்பமாகிய நிழலைத் தருவேன் என்பதற்கு அடையாளமாகப் பிடிக்கப் பட்டது. கூர்மையான வேற்படையை உடைய சோழனே! உனது போர்படைகள் போர்க்களத்திலே எதிர்த்து நின்று வீரத்துடன் போர் செய்கின்றன. எதிரிகளின் யானைப்படைகளைத் துண்டந் துண்டமாக வெட்டிச் சாய்க்கின்றன. வெட்டுண்ட யானைகள் சிறிய பனைமரத் துண்டுகளைப்போலப் போர்க்களத்திலே சிதறித் கிடக்கின்றன. எதிர்த்து வருகின்ற படைகளை வரவேற்று, அவைகள் நிலைகுலைந்து புறமிட்டோடும் படி போர் செய்து ஆரவாரம் செய்கின்றன உனது படைகள். இவ்வாறு உனது படை வெற்றி பெறுவதற்கும், ஆரவாரம் செய்கின்றதற்கும் காரணம் என்ன? உழுகின்ற படையான கலப்பையின் காரணமாக விளைந்த நெல் தான் இந்த வெற்றிக்குக் காரணம். உணவின்றி வாடும் எந்தப் படைகளும் எதிரிகளுடன் எதிர்த்து நிற்க முடியாது, இந்த உண்மையை மறந்துவிடாதே. இவ்வுலக நிலையைச் சிறிது சிந்தித்துப்பார். அரசாட்சி யென்பது அற்பமான செயலன்று; பெரும் பொறுப்பான செயல். மழைபெய்யவேண்டிய பருவ காலத்திலே மழை பெய்யாமல் தவறிப்போனாலும் சரி, நிலங்கள் வளங்குறைந்து, பயிர் பாழ்பட்டு விளைவு குறைந்தாலும் சரி, மக்கள் ஒழுக்கங்குன்றி இயற்கைக்கு மாறான செயல்களைச் செய்தாலும் சரி, இவ்வுலகத்தார், இவை களுக்கெல்லாம் அரசாட்சியே காரணம் என்று ஆளுவோரைப் பழிகூறுவர். இந்த உண்மையை நீ நன்றாக அறிந்திருப்பாயானால், நீ மிகவும் திறமையுடன் நடந்துகொள்ள வேண்டும். குற்றம் சொல்லிக் குடிகெடுப்போரின் சொற்களுக்குச் செவி சாய்க்காதே. நீயே எதையும் நேர்மையுடன் ஆராய்ந்து செய். ஏரைப் பாதுகாக்கும் உழவர்களுக்கு ஒரு குறையும் உண்டாகாமல் அவர்களைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்றி உழுதொழிலை வளர்த்து உணவுப் பொருளைப் பெருக்குவதன் மூலம் ஏனைய குடி மக்களையும் காப்பாற்றுவாயாக. இவ்வாறு செய்வாயானால் உன்னுடைய பகைவர் அனைவரும் உன்னைப் பணிவார்கள்; உன்னைப் போற்றுவார்கள். உனக்குப் பகைவர் இவ்வுலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இதுவே வெள்ளைக்குடி நாகனார் பாடலில் அமைந்துள்ள பொருள். 4 நளியிரு முந்நீர் ஏணி யாக வளியிடை வழங்கா வானம் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசு முழங்குதானை மூவருள்ளும் அரசெனப் படுவது நினதே! பெரும! அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும், அம்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத், தோடுகொள் வேலின் தோற்றம் போல ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்; நாடெனப் படுவது நினதே! அத்தைஆங்கு நாடுகெடு செல்வத்துப் பீடுகெழு வேந்தே! நினவ கூறுவல்; எனவ கேண்மதி! அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து முறைவேண்டு பொழுதில் பதன்எளியோர், ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல்பெற்றேரே; ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பின் நடுவுநின் றாங்குக் கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ, அன்றே; வருந்திய குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ! வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம்பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும், உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும்இக் கண்ணக ஞாலம்; அதுநன்கு அறிந்தனை யாயின், நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது, பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறந் தருகுவை ஆயின்,நின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே. (புறநா.35) உழவும் சமாதானமும் 1 பண்டைத் தமிழகத்திலே அடிக்கடி போர் நடந்துவந்தது. அரசர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த காலம் அதிகம் இல்லை. பண்டைச் சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. சிற்றரசர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையின்றிப் போர் செய்தனர். முடியுடை வேந்தர்களும் தங்களுக்குள் முரண்பட்டு அடிக்கடி அமர் செய்தனர். போரிலும் அறத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை அவர்களிடமிருந்தது. போரினால் பொதுமக்கள் துன்புறாமலிருக்க எவ்வளவோ முன் நடவடிக் கைகளை எடுத்துக் கொண்டனர். பசுக்கள், பெண்கள், வயதேறி யவர்கள், பிள்ளை பெறதோர், பார்ப்பனர்கள் இவர்களை யெல்லாம் வெளியேறும்படி அறிவித்த பின்னரே போர் தொடுப்பார்கள். இதுவே பழந்தமிழர்களின் போர்முறை. இவர்கள் வெளியேறிய பின்னரே போர் தொடுப்பார்கள். ஆயினும் போரால் நாட்டுக்குத் தீமைதான் விளைந்தது. போரால் விளையும் நாசத்தைத் தடுக்கப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர் முயன்றிருக்கின்றனர். பண்டைத் தமிழரசர்கள் பலர் முயன்றிருக்கின்றனர். போர் உண்டாகாமல் இருப்பதற்கு அவர்கள் பின்பற்றிய முறை பாராட்டத்தக்கது. இன்னும் உலகில் போர் மூளாமல் இருக்க வேண்டுமானால் பண்டைத் தமிழர்கள் கண்ட முறையைத்தான் பின்பற்றவேண்டும். இச் சிறந்த முறையைத் தவிர வேறு வழியைக் காணமுடியாது. ஒரு நாடு மற்றெரு நாட்டின்மேல் படையெடுப்பதற்கு முதற்காரணம் வறுமையும் பற்றாகக்குறையுந்தான். வறுமை குடிகொண்டிருக்கும் நாட்டை ஆளும் வர்க்கத்தார் வறுமையைத் தீர்க்கச் சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியாத போது - மக்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கான மார்க்கத்தை ஆராய்ந்தறியத் திறமையற்றபோது - செழிப்புள்ள நாட்டின்மீது படையெடுக்க நினைக்கின்றனர். செழித்த நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிக்க நினைக்கின்றனர். இதன்மூலம் நாட்டு மக்களை நலிவடையச் செய்யும் பஞ்சத்தையும், வறுமையையும் பாழ் பண்ணிவிட முடியும் என்று மக்களுக்குக் கூறுகின்றனர். அவர்களுக்குப் போர் வெறியூட்டி அவர்களைத் தவறான வழியில் திருப்புகின்றனர். பண்டைக் காலத்திலும் இந்த நிலைமை யிருந்தது. இன்னும் இந்த முறை போர் வெறியர்களால் பின்பற்றப்படுகின்றது. 2 பண்டைத் தமிழ்ப் பேரறிஞர்கள் போரைத் தடுக்க, சமாதானம் என்றும் நிலைத்து வாழ இரண்டு சிறந்த முறை களைப் பின்பற்றினர். ஒன்று ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டை ஆளுவோரும் தற்பாதுகாப்புடன் விளங்குதல்; அதாவது எதிரி படையெடுத்தாலும் பின்வாங்காமல் எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறக்கூடிய பலத்துடன் விளங்குதல், இரண்டு தனது நாட்டின் உணவுப்பொருள் உற்பத்தியைப் பெருக்குதல்; நாட்டு மக்கள் வறுமையால் - பசியால் - நலியாதபடி நன்றாக உண்டு மகிழ்ந்து வாழ்வதற்கான வழியிலே நாட்டை பாதுகாத்தல். எல்லா நாடுகளிலும் இந்த இரண்டும் - அதாவது தற்காப்புக்கான பலம், உணவுப் பஞ்சம் இல்லாமை ஆகிய இந்த இரண்டும் - நிலைத்திருந்தால் எந்த நாடும் போர் வெறி கொள்ளவேண்டிய நிலைமையே ஏற்படாது. உலக சமாதானம் ஓங்குவதற்கு இன்றும் இந்த இரண்டு முறைகளைத் தான் பின்பற்றவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பண்டைத் தமிழ் அறிஞர்கள், இந்த இரண்டையுமே சமாதானம் வாழ்ந்து வளருவதற்கு அடிப்படையாக்கிக் கொண்டனர். சேர மன்னர் மரபைச் சேர்ந்த ஒர் மன்னன். இவனுக்கு யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று பெயர் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற பெயர்களும் உண்டு. இவன் சிறந்த தமிழ்ப் புலவன். குறுகிய ஐந்நூறு பாடல் களைத் தொகுத்து அதற்கு ஐங்குறுநூறு என்று பெயர் கொடுத்தவன் இவனே. இது சங்க நூல்களாகிய எட்டுத் தொகையினுள் ஒன்று. இவன் தொண்டி என்னும் கடற்கரை நகரத்திலிருந்து அரசாண்டவன். கொல்லிமலைக்குத் தலைவன். வீரத்திலே சிறந்தவன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனுடன் போர் செய்து இவனைக் கட்டி கொண்டு போனான். அப்போழுது இவன் யாருடைய உதவியும் இன்றி, தானே கட்டவிழ்த்துக் கொண்டு வெளிவந்தவன். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்னும் சோழ மன்னனோடும் போர் செய்திருக்கிறான். ஆகவே பாண்டியன், சோழன் ஆகிய இருவரோடும் போர் செய்தவன். அவர்களால் தோற்கடிக்கப்படாதவன். இவனுடைய பெயரைச் சுருக்கமாக யானைக்கண்சேய் என்று அழைப்பர். இவனுடைய கண்கள் யானையின் கண்கள் போல இருந்தன. ஆதலால் இவனைக் குழந்தைப் பருவத்திலேயே யானைக்கண் குழந்தை என்ற பொருளில் யானைக்கண்சேய் என்று அழைத்தனர். இவனுடைய பெருமையைப்பற்றி - வீரத்தைப்பற்றி - மூன்று புலவர்கள் பாடியுள்ளனர். அவர்கள் குறுங்கோழியூர் கிழார், கூடலூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்பவர்கள். இவர்களிலே குறுங்கோழியூர் கிழர் இவனைப்பற்றிப் பாடியிருக்கும் பாட்டு மிகச் சிறந்தது. இது புறநானூற்றின் இருபதாவது பாடல். அப்பாட்டில் உள்ள கருத்து சமாதானம் நிலவுவதற்கு வழிகாட்டுவதாகும். 1. ஐம்பூதங்களை அளந்தறியலாம்; ஆனால் உன்னுடைய அறிவாற்றல்களை அளந்தறிய முடியாது. (தற்காப்புக்கான பலம்) 2. உன்னுடைய நாட்டிலே வாழ்வோருக்கு தீ, வெயில் இவைகள்தாம் வெம்மையைத் தரும். வேறு எதனாலும் கொடுமை இல்லை. 3. உன் குடிமக்கள் கொலை செய்யும் வில்லைப் பார்த்தே யிருக்கமாட்டார்கள். அவர்கள் பார்க்கும் வில் வானத்தில் காணப்படும் இந்திரவில் ஒன்றுதான். நிலத்தை உழும் கலப்பை ஒன்றுதான் அவர்கள் காணும் படைக்கருவி. வேறு எந்தப் படைக்கருவிகளையும் அவர்கள் பார்த்ததேயில்லை. இச்சிறந்த கருத்துக்களை அந்தப் புறநானூற்று இருபதாம் பாட்டிலே காணலாம். நாட்டை ஆளுவோன் பகைவரால் தோற்கடிக்க முடியாத பலசாலி. நாட்டிலே உள்ள குடிமக்கள் எந்தத் துன்பமும் இல்லாமல் இன்பத்துடன் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் போர்க் கருவிகளைக் கைக்கொள்ளாமல் உழுபடையாகிய கலப்பையைக் கைக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் உணவுப் பஞ்சமே அந்நாட்டில் தலைகாட்டவில்லை என்ற செய்திகள் மேலே காட்டிய கருத்துக்களிலே அடங்கிக் கிடப்பதைக் காணலாம். அச் சிறந்த பாடலின் பொருள் கீழ்வருவது; 3 அரசே! பெரிய கடலின் ஆழத்தையும் அளந்தறியலாம். அகலமான உலகப் பரப்பையும் அளந்து காணலாம். காற்று வீசும் திசைகளின் அளவையும் கண்டறியலாம். உருவமின்றி நிலைபெற்ற வானத்தின் பரப்பையும் வரையறுத்துக் காணலாம். ஆனால் உன்னுடைய அறிவின் எல்லையைக் காண முடியாது. அன்பின் பெருக்கத்தைக் கண்டறிய முடியாதது. கண்ணோட் டத்தின் அளவைக் கணக்கிடவே முடியாது. இத்தகைய அறிவும், அன்பும் கண்ணோட்டமும் உள்ள உனது ஆளுகையின் கீழே வாழும் குடிமக்கள் ஒரு குறையையும் அறியமாட்டார்கள். அவர்கள் ஒரு கொடுமையையும் அடைந்த தேயில்லை. சோறு சமைக்கும் போது எரியும் நெருப்பும் செங்கதிரோன் வீசும் வெயிலும் தான் அவர்களைச் சுடும். வேறு வெம்மையை அவர்கள் அறியமாட்டார்கள். வானத்திலே மாரிகாலத்திலே காணப்படும் இந்திரவில் ஒன்றைத்தான் அவர்கள் அறிவார்கள். அம்பு தொடுத்துப் பகைவர்கள்மேல் விடுத்துக் கொல்லும் கொலைவில்லை அவர்கள் கண்டதேயில்லை. உனது குடிமக்கள் அறிந்த படைக்கலம் ஒன்றேயொன்று தான். அது நிலத்தை உழுது பயிர் செய்யும் கலப்பை என்னும் படைக்கலமாகும். இதைத் தவிர வேறு எந்தப் போர்க் கருவி களையும் பிடித்தறியமாட்டார்கள். நீயோ, போர் செய்யும் முறையை அறிந்த உனக்குச் சமமான பகைவர்களும் மட்டுமே எதிர்த்துப் போர் செய்வாய். போர்வெறி கொண்டு அவர்களைப் புறமிட்டோடச் செய்வாய். அந்தப் பகைவர்களின் மண்ணிலிருந்த செல்வங்களைக் கொண்டு வந்து உண்பாய். உன்னுடைய நாட்டின் மண்ணைக் கூடப் பகைவர்கள் கொண்டுபோய் உண்ணமுடியாது. உன்னுடைய நாட்டில் உள்ள கருக்கொண்ட மகளிர் விரும்பினால் உன் நாட்டின் மண்ணைத் தின்னலாமேயன்றிப் பகைவர்களால் ஒரு பிடி மண்ணைக் கொண்டுபோகவும் முடியாது. இத்தகைய சிறந்த நாட்டையுடையவன் நீ. பகைவர்களை எதிர்த்து விரட்டும் அம்பு நிறைந்த சிறந்த காவல் உன்னிடம் உண்டு. அறந்தழைக்கும் செங்கோலும் உன்னிடம் உண்டு. புதிய பறவைகள் குடியேறினாலும் சரி, குடியிருந்த பழைய பறவைகள் குடிபெயர்ந்தாலும் சரி, சிறிதும் அஞ்சாத நல்ல பாதுகாப்பை உடையவன் நீ. இத்தகைய சிறந்த உன்னை உலகத்து உயிரெல்லாம் நேசிக்கும். இவனுக்கு எத்தகைய கவலைப்படும் ஏதேனும் துன்பம் இவனுக்கு ஏற்படுமோ என்று அஞ்சும் இதுவே அந்தப் பாடலில் அடங்கியுள்ள அரிய பொருள். 4 இருமுந்நீர்க் குட்டமும், வியன்ஞாலத்து அகலமும், வளிவழக்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவைஅளந் தறியினும், அளத்தற் கரியை: அறிவும் ஈரமும் பெரும்கண் ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு, செஞ்ஞா யிற்றுத் தெறல் அல்லது பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வாரே; திருவில் அல்லது கொலையில் அறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறன் அறி வயவரோடு தெவ்வர் தேயஅப் பிறர்மண் உண்ணும் செம்மல்! நின்னாட்டு வயவுறு மகளிர் வேண்டுணின் அல்லது, பகைவர் உண்ணா அருமண் ணினையே! அம்பு துஞ்சும் கடி அரணால்; அறந் துஞ்சு செங்கோலையே! புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை! அணையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே! (புறநா.20) குறிப்பு: கருவுற்ற பெண்டிர் சிலர் மண்ணைத் தின்பர். போர் மூளுவதற்கு அறிகுறி புதுப்பறவைகள் வரும், பழம் பறவைகள் குடிபெயரும், இவை பண்டைக்கால வழக்கம். நீர்ப்பாசன வசதி 1 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய செய்தி, தமிழ் நாட்டுப் புலவர்களின் பேரறிவைக் காட்டும் பெரும் செய்தி. பண்டைத் தமிழ்ப்புலவர்கள் வெறும் புத்தகப் பூச்சிகளாக மட்டும் தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டு வாழவில்லை. இவ்வுலக மக்கள் இன்ப வாழ்விலே நீந்துவதற்கு என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும் என்ற நுண்ணறிவு படைத்தவர் களாக இருந்தனர். இதற்கு ஒரு நிகழ்ச்சியை இங்குக் கூறுகின்றோம் பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரை நகரத்து மன்னன். பாண்டிய நாடு முழுவதற்கும் அவனேதான் அரசனாக விளங்கினான். அவன் காலத்தில பாண்டிய நாட்டில் மழைவளம் குறையவில்லை. பருவமழை தாராளமாகப் பெய்தது. ஆயினும் பஞ்சம் தலைவிரித்தாடியது. நாட்டிலே விளைநிலமிருந்தும் உணவுப்பொருள் உற்பத்தி ஒடுங்கிவிட்டது. பற்றாக் குறை உணவு காரணமாக மக்கள் பசியோ பசியென்று பரிதவித்துக் கிடந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன் தான். ஆனால் கொஞ்சம் அசதியுடையவன். சிந்தித்துப்பார்க்கும் அறிவு மட்டும் சிறிது குறைவு. குடிமக்கள் எல்லோரும் குறையொன்றுமில்லாமல் குதூகலமாக வாழவேண்டுமென்பது தான் அவனுடைய ஆசை. குடிகளைக் கொடுமைக்காளாக்கும் எண்ணம் கொஞ்சங்கூட அவனுக்கில்லை. என்னுடைய முன்னோர்களைப்போல நானும் எல்லோ ராலும் கொண்டாடப்பட வேண்டும். வீரத்திலே சிறந்தவனாக விளங்கவேண்டும். எல்லா அரசர்களும் எனக்குத் தலைவணங்க வேண்டும். என்னுடைய புகழ் தமிழ்நாடு முழுவதும், தமிழ் நாட்டுக்கு அப்பாலும் பரவவேண்டும். என்னுடைய குடிமக்கள் எல்லோரும் என்னைத் தங்கள் குலதெய்வமாகப் போற்றி புகழவேண்டும். இவ்வாறு அடிக்கடி எண்ணினான் பாண்டியன். இச் சமயத்திலேதான் உணவுப் பஞ்சம் என்ற மக்களுடைய கூக்குரல் அவன் உள்ளத்தைப் பிடித்து உலுக்கியது. இப் பஞ்சத்தை எப்படிப் போக்குவது என்ற ஏக்கம் அவனைப் பிடித்து ஆட்டி வரைத்தது. பஞ்சத்திற்கும் முடிவு காணவேண்டும். நம்முடைய ஆவலும் நிறைவேற வேண்டும். இதற்கு நமது சபையைக் கூட்டுவோம். குடிமக்களையும், புலவர்களையும் ஆலோசனை கேட்போம் என்ற முடிவுக்கு வந்தான் பாண்டியன். 2 பாண்டியன் அரியாசனத்தின் அமர்ந்திருக்கின்றான். அவன் பக்கத்தில் மந்திரிமார்கள் துக்கம் படிந்த முகத்துடன் பொம்மைகள் மாதிரி உட்கார்ந்திருக்கின்றனர். ஒருபக்கத்திலே புலவர்களும் மறுபக்கத்திலே குடிமக்கள் தலைவர்களும் கூடியிருக்கின்றனர். மந்திரிமார்களே! பொதுமக்கள் தலைவர்களே! நமது நாட்டிலே உணவுப்பஞ்சம் பெருகிவிட்டது. இந்த உண்மை உங்களுக்கும் தெரியும். பருவமழை பெய்யாவிட்டால்தான் பயிர்த்தொழில் சுருங்கும்; உணவுப் பொருள் உற்பத்தி குறையும் பஞ்சம் தோன்றும் என்பார்கள். பருவமழை பெய்யாமல் இல்லை; பெய்கின்றது. நாடெங்கும் பசுங் கம்பளம் விரித்தாற் போன்ற புல்வெளிகள் காட்சியளிக்கின்றன; மரங்கள் எல்லாம் செழித்துத் தழைத்து மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. செடிகளும் கொடிகளும் சிறந்து வளர்ந்திருக்கின்றன. கண்ணுக் கெட்டிய தூரம் பச்சைப் பசேலென்ற தோற்றந்தான். இப்படி யிருந்தும். உணவுப்பொருள் உற்பத்தி குறைவதற்குக் காரணம் என்ன? என்றான் பாண்டியன். அரசே! நீங்கள் சொல்லுவது உண்மைதான். வானம் பெய்தும் வளம் பெருகவில்லை என்றால் அதற்குக் குடிமக்கள் தாம் காரணம். அவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். பயிர்த்தொழில் செய்வதிலே கவலை காட்டவில்லை. உழுவோர் ஊக்கமுடன் நிலத்திலே பயிரிடுவார்களானால் உணவுப் பஞ்சம் தலைக் காட்டவே முடியாது. ஆகையால் நிலத்தைப் பண்படுத் தாமல் - பயிர் செய்யாமல் - தரிசு போட்டிருக்கும் உழவர்களைத் தண்டிக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் படிந்து வேலை செய்வார்கள்; பயிர்ச் செலவு நடைபெறும்; உணவுப் பொருள் விளையும்; பஞ்சம் பறக்கும். இதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினான் அந்தப் பண்டைய அரசாங்கத்தின் முதல்மந்திரி. மந்திரியின் இந்த ஆலோசனைக்கு சபையிலே மதிப்பில்லை. சபையினரில் ஒருவரும் இந்த ஆலோசனையை வரவேற்க வில்லை. எல்லோரும் பேசாமடைந்தைகளாக. ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தனர். இந்த நிலையைக் கண்டான் அரசன். மந்திரியின் மாற்றம் சரியல்ல. அதிலே ஏதோ கோளாறு குடிகொண்டிருக்கின்றது. உழவர்களின் முயற்சிக் குறைவு, சோம்பேறித் தனம் இவைகளே உணவுப் பொருள் உற்பத்திக் குறைவுக்கு காரணம் என்பது நம்பத்தகாத செய்தி. இதற்கு உண்மைக் காரணம் ஏதோ இருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மன்னவன். புலவர்களே! குடிமக்கள் தலைவர்களே! அமைச்சர், குடிமக்களின்மேல் குறைகூறினார். பஞ்சத்திற்குக் காரணம் உழவர்களே என்று பழி சுமத்தினர். இதை நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை உணர்கிறேன். உண்மைக் காரணத்தை நீங்கள் உரைக்கவேண்டும் என்று சபையோரைப் பார்த்துக் கூறினான். உடனே குடபுலவியனார் என்ற புலவர் எழுந்து உணவுப் பஞ்சத்திற்கான உண்மை நிலையை உரைக்கத் தொடங்கினர். 3 நிறைந்த செல்வங்களையும், பழமையான ஊரையும் வெற்றியையும் உடைய அரசனே! நான் சொல்லும் செய்தியைச் சிறிது பொறுமையுடன் கேட்க வேண்டுகின்றேன். நீ சிறந்த குணமுடையவன், மந்திரியின் ஆலோசனை சரியல்ல என்பதை உணர்ந்தாய்; மக்களின் ஆலோசனையைக் கேட்கத் துணிந்தாய். இது ஒன்றே உனது உயர்ந்த குணத்திற்கு அடையாளம். இறந்தபின் செல்லும் மறு உலகத்திலே நீ இன்பந்துய்க்க எண்ணினாலும், அல்லது இவ்வுலகத்திலே உள்ள அரசர்களின் பலத்தை ஒடுக்கி நீ ஒருவனே இவ்வுலகத்தை ஆளவேண்டும் என்று நினைத்தாலும், அல்லது என்றும்அழியாத புகழை இவ்வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும் இதற்கேற்ற தகுதி உனக்கு வேண்டும். அத் தகுதி என்னவென்பதை எடுத்துரைக் கின்றேன் கேள். தண்ணீரில்லாவிட்டால் உடல்கள் இல்லை; உணவில்லா விட்டால் அந்த உடல்களிலே உயிர் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. ஆகையால் உணவு கொடுப்பவர்கள்தாம் உயிரைக் கொடுப்பவர்கள். உணவு காரணமாகத்தான் உடல் நிலைத்து நிற்க முடியும். உணவென்று சொல்லப்படுவது நிலமும், நீருந்தான், ஆகவே, நிலத்தையும் நீரையும் ஒன்றாக இணைந்திருக்கும்படி செய்பவர்களே இவ்வுலகில் உடம்பையும் உயிரையும் இணைந் திருக்கச் செய்பவர்களாவார்கள். உழவர்கள் நிலத்திலே விதையை விதைத்துவிட்டு மழை பெய்கிறதா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலம் ஏராளமாக இருந்தும் என்ன பயன்? இத்தகைய நிலம் எவ்வளவு பரந்ததாயிருந்தாலும் அதனை ஆளும் அரசனுடைய முயற்சிக்கு அது சிறிதும் பயன்படாது. ஆகையால் போர்த்திறம் மிகுந்த பாண்டியனே! நான் கூறுவதை அலட்சியம் பண்ணாமல் விரைந்து செய் குழியான நிலங்களிலே நீர் நிறைந்து தேங்கியிருக்கும்படி கரை போட்டுத் தடுத்து நிறுத்தவேண்டும். மழைநீர் வீணாக்காமல் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டால்தான் அதை வேண்டும்போது வயல் களுக்குப் பாய்ச்சிப் பயிர் செய்யலாம். இவ்வாறு மழை நீரைத் தேக்கி வைத்து அந்நீர் வயல்களுக்குப் பாயும் படியான பாசன வசதிகளைச் செய்பவர்கள் தாம் இந் நாட்டில் பசிப்பிணி பரவாமல் தடுப்பவராவர். நீரைத் தடுத்து நிறுத்தி வைக்க முடியாதவர்கள் பசிப்பிணியையும் தடுக்க முடியாதவராவர். உழவர்களுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்தால் தான் அவர்களால் பயிரிட முடியும். நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்காமல் குடிமக்களைக் குறைகூறுவதில் பயனில்லை. இவ்வுண்மையைக் குடபுலவியனார் என்னும் புலவர் எடுத்துக்காட்டினார். அவையோர் அனைவரும் புலவர் மொழியை வரவேற்றனர். பாண்டியன் நெடுஞ்செழியனும் உண்மையுணர்ந்தான். உடனே சீரழிந்துகிடக்கும் ஏரிகளையும், வாய்க்கால்களையும் செப்பனிடும்படி உத்தரவு பிறப்பித்தான். புலவரின் உண்மை உரையையும் போற்றிப் புகழ்தான். இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 18-வது பாடல் நமக்குக் கூறுகின்றது. 4 -------------------------- மல்லல் ழூதூர் வயவேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும். ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ அகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதி கேள்இனி, மிகுதி யாள! நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே வித்தி வானோக்கும் புன்புலம் கண்ணகல் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே; அதனால் அடுபோர்ச் செழிய; இகழாது வல்லே; நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே: தள்ளா தோர்இவண் தள்ளா தோரே. ஒரு நாட்டின் செழிப்புக்குக் காரணம் நீர்ப்பாசன வசதி நீர்ப்பாசன வசதியைச் செய்து கொடுப்பதே ஒரு அரசாங்கத்தின் முதற்கடமை. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்கள் அறிந்திருந்தனர். இவ்வுண்மையை இப்பாடலால் அறியலாம். பெண்கொலையால் பெரும் பழி 1 என்ன இருந்தாலும் இப்படியா அநீதி செய்வது? தெரிந்து குற்றஞ் செய்தவர்களைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் பாதகம் இல்லை. அறியாமற் செய்த குற்றத்திற்காக ஆத்திரப்படுவது அறமாகுமா? அதிலும் ஒரு பெண் செய்த அறியாத குற்றத்திற்கா இந்தக் கொலைத் தண்டனை? நன்னன் குலத்திற்கே பெரும்பழி தேடிவிட்டான் இவன். செல்வச் செருக்கு இவன் அறிவைச் சிதைத்துவிட்டது. இவன் செய்த காரியம் இந்தத் தமிநாட்டுக்கே அவமானம்! தாங்க முடியாத அவமானம்! என்று சொன்னான் கண்ணப்பன். என்னப்பா! என்னமோ சொல்லுகின்றாய்! எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே! இப்பொழுது நன்னனுடைய அரண்மனை வேலையில் இல்லையா நீ? இப்படி ஏன் ஏதேதோ உளறிக்கொண்டு வருகின்றாய்? உண்மையை எனக்கும் உரைக்க மாட்டாயா? என்றான் அவனுடைய நண்பன் செல்லப்பன். செல்லப்பா! நீ என்னைவிடத் திறமைசாலி! நல்ல வேளையாக இரண்டு மாதங்களுக்கு முன்பே வேலையைவிட்டு விலகிவிட்டாய். நீயும் வேலையில் இருந்திருந்தால் என்னைப் போல் அந்த அக்கிரமத்தைக் கண்டு அகம் நொந்திருப்பாய். இனி நன்னனை நமது தலைவன் என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கமாயிருக்கிறது. நீயும் இதை நினைவில் வைத்துக் கொள். நம்முடைய ஊர் செங்கண்மா என்பதைச் சொல்லிக் கொள்ளக் கூடாது. நாம் நன்னனிடம் ஊழியம் புரிந்தவர்கள் என்ற உண்மையும் ஒருவருக்கும் தெரியக் கூடாது. அப்படி யானால் தான் நம்மை மக்கள் மதிப்பார்கள். நாம் வேறு எங்கேயாவது, யாரிடமாவது வேலை செய்து மானத்துடன் வாழலாம். இதை மறந்து விடாதே . என்றான் கண்ணப்பன். கண்ணப்பா நீ சொல்லுவது ஒரு பெரிய புதிராக இருக்கிறதே; விடுகதைபோலக் காணப்படுகிறதே! என்ன நடந்தது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக் கூடாதா? செய்தியைச் சொல்லி முடித்தபின் நீ எவ்வளவு வேண்டுமானாலும் ஆத்திரப் படு: உன் ஆத்திரத்தில் நான் குறுக்கிடவில்லை. இப்பொழுது சிறிது பொறுமையை வருவித்துக் கொள்; நடந்த நிகழ்ச்சியைச் சொல் என்றான் மீண்டும் செல்லப்பன். அந்த அக்கிரமத்தைச் சொல்லவே எனது நாக்கு நடுங்குகிறது; என் உள்ளம் உருக்குலைகிறது. அதை நினைத் தாலே என் நெஞ்சம் படீர் என்று வெடிக்கும் போலிருக்கிறது. ஆயினும் சொல்லுகிறேன் கேள்: நமது நன்னன் ஒரு மாமரம் வளர்த்துவரும் செய்திதான் உனக்குத் தெரியுமே! அந்த மாமரத்தின் பிஞ்சையோ, காயையோ, பழத்தையோ, வேறு யாரும் எடுத்துத் தின்று விடக் கூடாது என்பதும் உனக்குத் தெரியும். நேற்று முன் தினம் அந்த மாமரத்தி லிருந்து ஒரு பழம் ஆற்றில் விழுந்து விட்டது. காவலர்கள் அந்தப் பழத்தைத் தேடிக் கொண்டு ஆற்றோரமாக நடந்து போய்க்கொண்டேயிருந்தனர். அவர்களால் அந்தப் பழத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொலைதூரத்திலே அந்த ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தாள் ஒரு பருவமங்கை. மணமாகாத கன்னிப்பெண். அவள் காலிலே ஏதோ உருண்டையாகத் தட்டிற்று. குனிந்து அதைக் கையால் எடுத்தாள். அது ஒரு பழுத்த நல்ல மாங்கனி. நல்ல மணம் வீசிற்று. அவள் அதைக் கடித்துத் தின்று கொண்டிருந்தாள். மாங்கனியைத் தேடி சென்ற காவலர் அவளைப் பிடித்துக் கொண்டனர். எமது தலைவனைத் தவிர வேறு யாரும் உண்ணக் கூடாது என்ற பாதுகாப்புக்கு உட்பட்ட மாமரத்தின் பழத்தை நீ ஏன் தின்றாய்? என்று கடிந்தனர். அவளைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, அரசன் நன்னன் எதிரில் கொண்டு வந்து விட்டனர். நன்னன் அவளைப் பார்த்து,ஏன் அப்பழத்தைத் தின்றாய்? என் உத்தரவு உனக்குத் தெரியாதா? என்று அதட்டினான். அரசே! எனக்கு உண்மை தெரியாது. ஆற்றின் அடியிலே உருண்டு வந்தது பழம்; என் கால்களிலே பட்டுத் தடைப்பட்டது; அதை எடுத்தேன்; தின்றேன். அது உங்கள் மரத்துக் கனியென்று உணர்ந்தால் தின்றேயிருக்கமாட்டேன். அறியாமல் நேர்ந்த தவறுக்கு அருள் கூர்ந்து மன்னிக்வேண்டும் என்ற மன்றாடினாள் அந்த மங்கை. அந்த மங்கையின் பெற்றோர்களும் மன்னனிடம் மன்றாடி அவளை மன்னிக்கும்படி வேண்டினர். நன்னனுடைய நண்பர் களும் அவளைத் தண்டிப்பது அறமாகாது: நன்னன் குடிக்கு ஏற்ற செயலாகாது: பெருந்தன்மையுடன் அவளை மன்னித்து விட வேண்டும் என்று கூறினர். நன்னன் யார் சொல்லையும் மதிக்கவில்லை. என் கட்டளையை மதிக்காதவர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனைதான்: மன்னிப்புக்கு இடமேயில்லை என்று சொல்லி அப்பெண்ணுக்கு மரணதண்டனை விதித்தான். இதைக் கண்டு அரண்மனையே கலங்கிவிட்டது. செங்கண்மாநகர மக்கள் சிந்தை அழிந்துவிட்டனர். இந்தப் பல்குன்றக் கோட்டம் முழுதும் மன்னன் செய்த பழிச் செயல் பரவி விட்டது. இந்தப் பெரும்பழிக்கு ஆளான அந்த நன்னனிடம் ஊழியம் செய்ய எனக்குப் பிடிக்கவேயில்லை. அதனால்தான் நானும் உன்னுடன் சேர்ந்து புறப்பட்டுவிட்டேன் என்றான் கண்ணப்பன். இத்தகைய பேச்சு பல்குன்ற நாட்டின் பல பகுதிகளிலும் நடந்துகொண்டிருந்தது. பல ஆண்டுகள் வரையிலும் தமிழ் நாட்டில் இக்கதை பலராலும் பேசப்பட்டு வந்தது. 2 பல்குன்றக் கோட்டம் என்பது தொண்டைநாட்டின் ஒரு பகுதி. திருவேங்கட மலையும் இந்தப் பல்குன்ற நாட்டைச் சேர்ந்ததாகும். செங்கண்மா நகரத்தில் நன்னன் வேன்மான் என்ற வேளிர்குலத் தலைவன் ஒருவன் அரசு வீற்றிருந்தான். இவன் பத்துப்பாட்டுள் ஒன்றன மலைபடுகடாம் அல்லது கூத்தர் ஆற்றுப்படை என்னும் நூலுக்கு தலைவன், சிறந்த கொடை வள்ளல்; ஒப்பற்ற வீரன். வேண்மான் என்பது இவன் பெயர்; இவனுடைய தந்தையின் பெயரையும் இணைத்து நன்னன் வேண்மான் என்று வழங்கினர். பெண்பழிக்கு ஆளானவன் இந்த வேண்மான் என்பவனுடைய தந்தை என்று சொல்வதற்கு இடமில்லை. பத்துப் பாட்டிலே இக்குறிப்புக் காணப்படவில்லை. இந்த வேண்மானுக்குப் பின்னே தோன்றியவர்களுள் யாரோ ஒருவன் மேலே காட்டிய பெண்பழியைச் செய்திருக்க வேண்டும். புகழ்பெற்ற வேளிர்குலத்திலே - கொடைவள்ளலாகிய நன்னன் வேண்மான் பிறந்த குடியில் - தோன்றிய ஒரு அறியிலி. ஒரு சிறிய மாம்பழத்திற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்தான் என்றால் அதை உலகம் பொறுத்துக் கொண்டிருக்குமா? உலைவாயை மூடினாலும் ஊர்வாய்க்கு மூடியேது? நன்னன் வேண்மான் குடியிலே பிறந்த ஒருவன் இந்தப் பெண்பழியைச் சுமந்தபின் புலவர்கள் யாரும் நன்னன் குடியில் பிறந்தவர்களை மதிப்பதேயில்லை. வறுமையால் வாடும் புலவர்களும் பரிசில் வேண்டி அவனண்டை செல்வதேயில்லை. அவனைப் புகழ்வதும், பார்ப்பதும், பரிசில் எற்பதும் அறமன்று என்று புலவர்கள் அனைவரும் நன்னன் குடியை ஒதுக்கி விட்டனர். ஒரு குடியிலே ஒருவன் ஒன்றுக்கும் அஞ்சாத பழிகாரனாக இருந்தால், அவன் வழியிலே தோன்றியவர்கள் அனைவரும் பழிகாரர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவனுடைய அறிவையும் நன்னடத்தையையும் பொறுத்தே ஒவ்வொரு வனுக்கும் பெருமையும் புகழும் உண்டாகின்றது. இதுதான் இயற்கை உண்மை. இது இக்காலத்தில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படும் உண்மை. ஆனால் பண்டைக் காலத்தில் பல மக்கள் இவ்வுண்மையை உணரவில்லை. ஒருவன் செய்த பழி அவனுடைய குடிக்கே எந்நாளும் நீங்காத இழுக்கை உண்டாக்கிவிடும் என்று நம்பி வந்தனர். இதனால்தான் நற்குடியில் பிறந்தவர்கள் நல்லொழுக்கந் தவறாமல் நடக்கவேண்டும். தங்கள் குடிப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். குடிப் பெருமைக்கு மாறாக நடப்பார்களாயின் அவர்கள் குடியே தாழ்ந்தகுடியென்ற பழிக்கு ஆளாகிவிடும் என்றெல்லாம் நீதி நூல்களிலே எழுதி வைத்தனர். பெண்ணைப் பழிவாங்கிய ஒரு போதையாகிய நன்னன் பிறந்த குடி பெரும்புகழ்பெற்ற குடிதான்: புலவர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட குடிதான்; பத்துப் பாட்டுள் அழியாது நிலை பெற்ற குடிதான். ஆயினும் அக்குடியிலே தோன்றிய அறிவற்ற பழிகாரன் ஒருவனால் அக்குடியினரை அறிஞர்கள் - புலவர்கள் - தமிழ் மக்கள் - அவமதிக்கும்படியான ஒரு அவலநிலை ஏற்பட்டது. இந்த உண்மையைத் தமிழ்மக்கள் உணரவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடியின் பழம்பெருமைக்குப் பாதகம் நேராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தங்கள் குடிக்குப் பழியுண்டாகும் தன்மையுள்ள மறச் செயல்களைச் செய்து மானமழியக் கூடாது என்ற கொள்கையைத் தமிழ் மக்களிடம் நிலைநிறுத்துவதற்கே இவ்வரலாறு வழங்கி வருகின்றது. தங்கள் குடிக்குப் பழிதேடும் செயலைச் செய்யும் ஒருவன் முன்னோர் தேடிவைத்த புகழைப் புதைப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தன் பின்னோர்க்கும் பழி தேடி வைக்கின்றான். தன் வழிவந்தவர்களையும் பழியொடு பட்ட பாழுங்குடியிலே பிறந்தவர்கள் என்று அறிஞர்கள் இழிவாக நினைப்பதற்கும் ஆளாக்கி வைக்கின்றான். இவ்வுண்மையையும் இவ்வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இவ்வரலாற்றைப் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலின் மூலம் அறியலாம். பெருந்தலைச் சாத்தனார் என்பவர் பாடிய பாடல் அது. இது புறநானூற்றின் 151-வது பாடலாக அமைந்திருக் கின்றது. அப் பாடலில் உள்ள வரலாற்றைக் காண்போம். 3 இளக்கண்டீரக்கோ ஒரு சிற்றரசன்: சோழர் குலத்திலே பிறந்தவன். இளவிச்சிக்கோ என்பவனும் ஒரு சிற்றரசன் வீச்சியென்னும் மலைக்குத் தலைவன் இவன், நன்னன் குடியிலே பிறந்தவன், இந்த இளங்கண்டிரக்கோவும், இளவிச்சிக்கோவும் நண்பர்கள். இருவரும் நல்லவர்கள்; அறிவுடையவர்கள்; தமிழ்ப் பற்றும், தமிழ்ப் புலவர்கள்பால் அன்பும் அமைந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் சமயத்திலே பெருந்தலைச்சாத்தனார் என்னும் தமிழ்ப் புலவர் வந்து சேர்ந்தார். புலவர் வருகையைக் கண்டு இரண்டு குறுநில வேந்தர்களும் குதூகலத்துடன் வரவேற்றனர்; வணக்கங் கூறினர். புலவரும் எதிர் வணக்கம் கூறினார். வாயினால் வணக்கம் சொல்லியதோடு நிற்கவில்லை. அவர்கள் இருவரையும் வாழ்த்தினார். அவ்வள வோடு அவர் அமையவில்லை. இளங்கண்டீரக்கோவைத் தன் மார்பாரத் தழுவிக் கொண்டார். தனக்கு ஒத்தவர்களையும். அன்புடையவர்களையும் இவ்வாறு தழுவிக்கொள்ளும் வழக்கம். இக்காலத்தில் இருப்பது போலவே அக்காலத்திலும் இருந்தது. அன்பைக் காட்ட ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது பழங்கால வழக்கம். இந்த வழக்கம் ஒரு நாட்டில் இருந்தது. ஒரு நாட்டில் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் இருந்த பொதுவான வழக்கமாகும் இது. பெருந்தலைச்சாத்தனார் இளங்கண்டீரக்கோவைத் தழுவிக்கொண்டதோடு நின்றுவிட்டார். பக்கத்திலிருந்த இளவிச்சிக்கோவைத் தழுவிக் கொள்ளவில்லை. இச் செய்கை இளவிச்சிச்கோவின் உள்ளத்திலே சுருக்கென்று தைத்தது. அவன் முகம் சோர்ந்துவிட்டது. புலவர் செய்கைக்குக் காரணம் உணராமல் அவன் உள்ளம் குழப்பம் அடைந்தது. அகத்திலிருந்து ஆத்திரமும் அழுகையும் பொத்துக் கொண்டு கிளம்பின. புலவர் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று எண்ணி அவன் நெஞ்சம் துன்பந் தீயால் துடிதுடித்தது. அவனால் ஆத்திரததை அடக்கிக் கொள்ள முடியவில்லை. இறுதியில் இச்செய்கைக்கு என்ன காரணம் என்று புலவரிடமே கேட்டு விடுவது என்ற துணிவு கொண்டான். புலவரே எங்களுக்குள் என்ன வேற்றுமையைக் கண்டீர்? இவரும் ஒத்தவர்கள். உம்மிடமும் ஒத்த அன்புடையவர்கள். இளங்கண்டீரக்கோ உம்மை எவ்வளவு உயர்வாக மதிக்கின்றானோ அவ்வளவு உயர்வாக நானும் மதிக்கின்றேன். நான் உம்மிடம் அவனைவிடக் குறைந்த அன்பு காட்ட வில்லை. அப்படியிருந்தும் நீர்மட்டும் அவனிடம் ஒரு விதமாகவும், என்னிடம் ஒருவிதமாகவும் நடந்துகொண்டீர்; நான் உமக்குச் செய்த குற்றம் என்? ஏன் அவனை மட்டும் அன்புடன் தழுவிக்கொண்டீர்? என்னைமட்டும் தழுவிக் கொள்ளவில்லை? என்று கேட்டான் இளவிச்சிக்கோ. தன் கணவன் வானளாவிய மலையிலே ஏறி நெடுந் தூரம் சென்றிருந்தாலும் அவன் கடமையை மனைவிமார்கள் மறுக்க மாட்டார்கள். பாடிக்கொண்டு வரும் புலவர்கள் மகிழும்படி அவர்களுக்கு ஆபரணங்களைப் பூட்டுவாகள், பெண்யானை யைப் பரிசிலாக அளிப்பார்கள். இப்படிச் செய்வது அவர்கள் பரம்பரை வழக்கம். ஆண்மகன் இல்லையென்று கூறி வந்த பரிசிலரை வெறுங்கையோடு வழியனுப்பமாட்டார்கள். பெண் களும் இத்தகைய வயர்ந்த கொடைத்தன்மையை உடையவர்கள். இச்சிறந்த குடியிலே தோன்றியவன் இளங்கண்டீரக்கோ. ஆதலால் அவனைத் தழுவிக்கொண்டேன். நீயோ, அந்தப் பழிகார நன்னன் குடியிலே பிறந்தவன்: உன் குடியிலே செல்வக் குறைவில்லை. உன் முன்னோனாகிய நன்னன் பொன்னால் செய்யப்பட்ட தேரிலே சென்ற செல்வமுடைய வன்தான் ஆயினும் பழி புரிந்தவன். தனிப்பட்ட முறையிலே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை. நீ நல்லவன்; அறிவுடையவன்; குற்றமற்றவன்; இளங்கண்டீரக்கோவைப் போலவே தழுவிக் கொள்ளத் தகுந்தவன் தான். ஆனால் கண்டீரக்கோவைப் போலப் புலவர்க்கு வழங்கும் புகழுடையவன் அல்ல. புகழ்ந்து பாடி வருவோர்க்கு உன் மாளிகை யின் கதவு திறந்திருப்பதில்லை. பாடுவோர் வரும் போதெல்லாம் உன் கதவு எப்பொழுதும் அடைத்தே கிடக்கும். ஆதலால் எவ்வளவு செல்வம் பொருந்தியிருப்ப தாயினும், உனது மலையை என்போன்ற புலவர்கள் புகழ்ந்து பாடுவதில்லை. பாடுவதிலே பயனில்லை என்றே நிறுத்திக் கொண்டனர். பழியொடு பட்ட குடியிலே பிறந்த வனையும் ஈகையற்றவனையும் பாடுதலோ போற்றுதலோ புலவர் வழக்கம் அன்று. ஆதலால் உன்னைத் தழுவிக் கொள்ள வில்லைஎன்று பட்டென்று பதிலளித்தார் பெருந்தலைச் சாத்தனார். இளவிச்சிக்கோ உண்மையுணர்ந்து, உள்ளங்குறுகித் தலை குனிந்தான். இக் கருத்தடங்கிய பாடல் கீழ் வருவது. 4 பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப விண்தோய் இமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து புன்தலை மடப்பிடி பரிசி லாகப் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீ ரக்கோன் ஆகலின், நன்று முயங்க லான்றிசின் யானே: பொலந்தேர் நன்னன் மருகன், அன்றியும் நீயும் முயங்கற்கு ஒத்தனை மன்னே வழங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடுமழை அணங்குசால் அடுக்கம் பொடிழியும்நும் மணம்கமம் மால்வரை வரைந்தனர் எமரே (புறநா-151) இதுவா போர்? வெட்கம்! வெட்கம்! 1 கிள்ளிவளவன் என்பவன் ஒரு சோழ மன்னன், இவன் அரசாட்சி செய்தவிடம் உறையூர். இவனுடைய அரசாங்கத்தின் தலைநகரம் அதுதான். இவன் சிறந்த தமிழ்ப் புலமையுடையவன். புலவர்களிடத்தில் மதிப்பு மரியாதையும் உள்ளவன். இவனுடைய வீரத்தையும் கொடையையும், புகழையும் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கின்றனர். இவனுடைய முழுப்பெயர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவன் உயிரோடு உறைந்த காலத்தில் கிள்ளிவளவன் என்று மட்டுமே வழங்கப்பட்டான் சோழன் கிள்ளிவளவன் என்று சொல்லிவந்தனர். இவன் செல்வமும் புகழும் பெற்றுச் சிறக்க வாழ்ந்திருந்தபின் குளமுற்றம் என்ற ஊரிலே இறந்துபோனான். இதன் பிறகு தான் இவன் பெயர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்று வழங்குவதாயிற்று. இவன் காலத்தில் கருவூரில் ஒரு சேர மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் வீரத்திற் சிறந்த சேர மன்னர் மரபுக்கே மாசுண்டாகும்படி வாழ்ந்தான். குடிகளின் நலத்தைக் கவனிப்ப தில்லை. தன்னலமே குறிக்கொண்டு வாழ்ந்தவன். வீரமற்ற கோழை. எதிரிகளுடன் முன் நின்று போர் செய்யும் ஆண்மை யற்றவன். அந்தச் சேர மன்னனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிள்ளவளவன் உள்ளத்திலே உதித்தது. தூதுவர் மூலம் சேரனுக்கு நன்மதிகள் கூறியனுப்பினான். பல தடவை கூறி யனுப்பினான். எத்தனை தரம் நன்மதியுரைத்தும் சேரன் சீர்பட வில்லை; திருந்தவில்லை; அவன் மனம்போன போக்கிலேயே நடந்துவந்தான். இதனால் கருவூர் மக்கள் கடும் வேதனைக்கு ஆளாயினர். சேரனுடைய செயலைக் கேட்கக் கிள்ளிவளவனுக்கு கோபந்தான் வந்தது. இறுதியாகச் சேரனுக்கு போர்செய்து அவனை நல்வழிப்படுத்துவது என்று துணிந்தான். உடனே தனது படைகளைத் திரட்டிக் கொண்டு கருவூரின் பக்கத்தையடைந் தான். கருவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். சோழனுடைய படைகள் கருவூரின் கோட்டையை முற்றுகையிட்டான். சோழனுடைய படைகள் கருவூரின் பக்கத்தில் ஓடும் அமராவதி நதிக்கரையில் இறங்கியிருந்தன. சோழன் படைகள் சேரனைப் போருக்கழைத்தன. சேரன் கோட்டையைவிட்டு வெளியேறவேயில்லை. கோட்டைவாயில் இறுக்கித் தாழிடப்பட்டுக் கிடந்தது. கோட்டைக்குள்ளிருந்து யாரும் வெளிவரவேயில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. சோழன் படைகள் அமராவதி என்னும் ஆன்பொருநைக் கரையில் அட்டகாசம் புரிந்து கொண்டிருக்கின்றன. சேரனோ ஒன்றும் பதில் பேசாமல் கோட்டைக்குள் அடைந்து கிடக்கிறான். இத்தகைய முற்றுகை யினை நீடித்துக் கொண்டேயிருந்தது. 2 இந்தச் செய்தி ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் காதுக்கு எட்டியது, வீரம் என்றால் எதிர்ப்பவனுடன் போர் செய்வதுதான் வீரம். ஓடுபவனை விரட்டுவது வீரமன்று. வீட்டுக்குள் புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொள்பவனை வெளியில் நின்று கொண்டு சண்டைக்கழைப்பதும் வீரமன்று. சேரனோ கோழை. கதவைச் சாத்திக் கொண்டு கோட்டைக்குள் பதுங்கிக் கிடக்கிறான். இந்த நிலையில் சோழன் கோட்டையை முற்றுகையிட்டிருப்பது நேர்மையல்ல, என்று நினைத்தார் ஆலந்தூர் கிழார். போர் நடந்தாலாவது விரைவில் வெற்றியிலோ, தோல்வி யிலோ, சமாதானமாகவோ போர் முடிந்துவிடலாம். ஒன்று மில்லாமல் ஒரு கட்சி கோட்டைக்குள் புகுந்துகொண்டிருக்க, மற்றொரு கட்சி கோட்டைக்குள் புகுந்து கொண்டிருக்க மற்றொரு கட்சி கோட்டைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தால் பொதுமக்களுக்குத்தான் தொல்லையுண்டாகும். கோட்டைக்குள் அடைந்துகிடக்கும் மக்களும் அல்லற்படுவார்கள். வெளியிலே காத்துக் கொண்டிருக்கும் படைகளும், தங்கள் நாட்டுக்கான நல்ல காரியங்களிலே ஈடுபடமுடியாமல் வீண்காலம் போக்கிக் கொண்டிருக்கும் ஆகையினால் இந்த முற்றுகையினால இருந்திறத்தார்க்கும் இலாபமில்லை; பெருந்தொல்லையேதான் என்று எண்ணினார் ஆலத்தூர் கிழார். கோழையை எதிர்த்துநிற்கும் கிள்ளிவளவனுடைய புகழுக்கும் மாசுண்டாகும். தனது நண்பனாகிய கிள்ளிவளவன் பலருடைய பழிப்புக்கு ஆளாகக்கூடாது. அவனுக்குப் புகழ் பெருகவேண்டும். இகழ் வரக்கூடாது என்றும் எண்ணினார் புலவர். உடனே புலவர் ஆலத்தூர் கிழார் கருவூருக்கு விரைந்து வந்தார். கருவூரை முற்றுகையிட்டு அமராவதிக் கரையிலே இறங்கியிருந்த கிள்ளி வளவனைக் கண்டார். 3 புலவர் வந்த சமயத்திலே சோழன் படைகள் சும்மா விருக்கவில்லை. கோட்டைக்குக் காவலாகவும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் வளர்ந்திருந்த மரங்களையெல்லாம் சோழன் படைகள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தன. சோழன் படைகள் கையிலே கோடரியைக் கொண்டு, அந்த மரங்களை வெட்டி வீழ்த்துவதனால் அவைகள் அடியோடு அமராவதி ஆற்றின் மணல்திட்டுகளிலே வீழ்ந்தன. அவைகள் வீழ்ந்த வேகத்தில் பெண்கள் அடிக்கடி வந்து விளையாடும் மணல் திட்டுகள் சிதைந்தன. இந்தக் காட்சியைப் புலவர் பார்த்துக் கொண்டே சோழன் கிள்ளி வளவனிடம் வந்தார். புலவரைச் சோழன் வரவேற்று உபசரித்தான். படை வீட்டுக்கு இவ்வளவு அவசரமாகப் புலவர் வரவேண்டிய காரணம் என்னவென்று தெரியாமல் திகைத்தான் சோழன். சோழனுடைய உள்ளக் குறிப்பை உணர்ந்த புலவர் சொல்லுகிறார்; உன் எதிரியை நீ கொன்றாலும் சரி, அல்லது கொல்லாமல் விட்டுவிட்டாலும் சரி, அதனால் உனக்கு வரும் புகழைப் பற்றி நான் சொல்லவேண்டுவதில்லை. அது உனக்கே தெரியும் இந்த அமராவதிக்கரையில் உள்ள மணல் தட்டுகளிலே காலிலே சிலம்பையும் கையிலே வளையல்களையும் அணிந்த மகளிர் கழங்காடிக் களிப்பார்கள். இத்தகைய மணல்திட்டுகள் சிதையும் படி கோடரியால் வெட்டப்பட்ட மரங்கள் திடீர் திடீரென்று விழுகின்றன. பூக்கள் மலர்ந்திருக்கும் நீண்ட கிளைகள் மளமள வென்று முறியும்படி சோலைகள் தோறும் இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டு விழுகின்றன. இந்த ஓசை, கோட்டைக்குள்ளேயிருக்கும் அரசனுடைய அரண்மனையிலும் கேட்கின்றது. தனது காடுகளும், சோலை களும் எதிரியால் அழிக்கப்படுகின்றன என்பதை அறிந்தும் சேரன் கதவைச் சாத்திக் கொண்டு பதுங்கிக் கிடக்கிறான். இத்தகைய கோழையுடன் நீ, இங்கு நின்று கொண்டு உன்னுடைய போர் முரசு ஒலிக்கும்படி போர் செய்தாய் என்று சொல்லுவது உனக்குப் புகழ் தராது. உனக்கு இகழ்தான் உண்டாகும். இந்தச் செய்தியைக் கேட்பவர்களும் வெட்கித் தலைகுனிவார்கள். ஆகையால் போரை நிறுத்திவிட்டு, உனது படைகளைத் திருப்பி அழைத்துக் கொண்டு உனது நகருக்குத் திரும்புதல்தான் நலம். இவ்வாறு அறிவுரை கூறினார் புலவர். உடனே சோழனும் புலவர் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்தான். தன் செய்கையைக் கண்டு நாணமடைந்தான். உறையூருக்குத் திரும்பினான். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் போர் நிறுத்தம் செய்வதிலே எவ்வளவு ஊக்கம் காட்டினார்கள்என்பதை இதன் மூலம் உணரலாம். இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சிகள் உண்டு. இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 36-வது பாட்டிலே காணலாம். 4 அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை; வார்கோல் செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கில் தெற்றி யாடும் தண்ஆன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து வீகமழ் நெடும்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை, தன்ஊர் நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனோடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்தே இப்பாடலின் பணடைத் தமிழ்ப் புலவரின் அறிவைக் காணலாம். அரசர்கள் புலவர்களின் சொற்களை எவ்வளவு அருமையாகப் போற்றிப் பாதுகாத்தனர். புலவர்களின் அறிவுரை களுக்கு எவ்வளவு தூரம் கீழ்ப்படிந்து நடந்தனர் என்பதையும் காணலாம். மைந்தர்க்கும் தந்தைக்கும் போரா? 1 உறையூரை ஆண்ட கோப்பெருஞ் சோழன் உயர்ந்த பண்புடையவன்; உள்ளத்திலே தூய்மையும் வீரமும் உடையவன்; புலவர் பலரும்புகழ்ந்து பாடும் புரவலன்; நட்புச் செய்வதிலே நிகரற்றவன்; பிசிராந்தையாருடன் இவன் கொண்டிருந்த நட்பைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். இன்னது அறம், இன்னது மறம் என்பதை என்றும் மறவாதவன்; அறவழியைச் சிதைக்காமல்-மறக்காமல் - அதன் வழியே நடப்பவன்; இவன் அறியாத அறம் எதுவும் இல்லை. மக்கள் எவ்வளவு நேர்மையானவர்களா யிருந்தாலும் - நீதி தவறாதவர்களா யிருந்தாலும் - பொறுமையும் புலமும் உடை யவர்களா யிருந்தாலும் சில சமயங்களில் தம்மை மறந்து தவறான வழியிலே செல்லத் தொடங்கிவிடுவார்கள். அடக்கம் அவிந்து ஆத்திரம் மேலோங்கும்போது அறிவு பயன்படுவ தில்லை. அடக்கமின்மையும். ஆத்திரமும் அறிவுத் திரையைக் கிழித்தெறிந்து விடும். இந்த உண்மையை நாம் பலரிடத்திலே காணலாம்; பாடல் களிலும் காவியங்களிலும், வரலாறுகளிலும் பார்க்கலாம். எவ்வளவு உயர்ந்த குணம் படைத்த மக்களும் பொறுமை யிழப்பின் காரணமாகப் பொருந்தாதனவற்றைச் செய்யப் புகுவர். இதற்குக் கோப்பெருஞ் சோழனுடைய வரலாற்றில் ஒரு உதாரணம் உண்டு. ஒருவன் தவறு செய்யத் துணிவது இயற்கை. ஆனால் தக்க சமயத்தில் நண்பர்கள் அவனைத் திருத்தவேண்டும்; அறிஞர்கள் அறிவுரை கூறித் தடுக்கவேண்டும். தம் நண்பர்கள் செய்யத் தொடங்கும் தவறைத் திருத்துவதே நண்பர்கள் கடமை; அறிஞர்கள் கடமை, இதற்கோர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது கோப் பெருங் சோழனுடைய வரலாறு. 2 கோப்பெருஞ் சோழனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கோப்பெருஞ் சோழனைப் போன்ற பேரறிவும் பெருங்குணமும் வாய்ந்திருக்கவில்லை. அவர்களுக்குக் கூடா நட்பினர் பலர் இருந்தனர். பிள்ளைகள் இருவரும் நல்ல வாலிபப் பருவம் அடைந்தவர்கள். ஆகையால் அவர்கள் கெட்ட குணம் படைத்தவர்களின் இனிய மொழி களுக்குச் செவி சாய்த்தனர். நாட்டுக்கும் ,குடும்பத்துக்கும் கோப்பெருஞ் சோழனே தலைவன்; அவன் தன் செல்வத்தைப் புலவர்களுக்கும் கலைஞர் களுக்கும் வாரி இறைத்துக்கொண்டிருந்தான். கோப்பெருஞ் சோழனுடைய மக்களுக்கு, அவர்களுடைய தீய நண்பர்கள் இந்நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினர். இவ்வாறு அரசாங்கச் செல்வத்தை அளவுக்குமேல் அறிஞர்களுக்கும், புலவர்களுக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆவது? அரசாங்கச் செல்வம் அனைத்தும் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? செல்வம் இருந்தால்தானே நாம் சிறுமையின்றி வாழ முடியும்? உங்கள் தந்தையின் இந்தச் செய்கையைத் தடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் சொல்லி அவர்கள் உள்ளத்தைக் கலைத்து வந்தனர். இவ்வளவோடு அவர்கள் நிற்கவில்லை. உங்கள் தந்தைக்கு வயதும் ஆகிவிட்டது. இனி அவரால் அரசியற் காரியங்களைத் திறம்பட நடத்தவும் முடியாது. அவர் கையிலே அரசியல் இருந்தால் இன்னும் சிறிது நாளில் எல்லாச் செல்வமும் இருந்த இடந் தெரியாமல் மறைந்துவிடும். ஆதலால் அவரைச் சும்மா உட்கார வைத்துவிட்டு நீங்களே ஆட்சியைக் கைப்பற்றி ஆளவேண்டும். என்றும் அவர்கள் உள்ளத்திலே ஆசைப்பயிரை வளர்த்தனர். நண்பர்களின் இந்த நாசவுரைகளைக் கேட்டு மயங்கிய அப்பிள்ளைகள் தம் தந்தையாகிய கோப்பெருஞ் சோழனுடைய அரசியலைக் கைப்பற்றிக் கொள்ள விரும்பினர். இதன் பொருட்டுப் படை திரட்டிக் கொண்டு போர் செய்யவும் முன்வந்தனர். இதைக் கண்ட கோப்பெருஞ் சோழனுடைய இரண்டு கண்களும் சிவந்தன. அடங்காத சினம் அவனை ஆட்கொண்டு விட்டது. தனது மக்களே தனக்கு எதிராகப் படையெடுத்தார்கள் என்பதை எண்ணும்போதெல்லாம் அவன் இதயத்திலே கோபக்கனல் கொழுந்துவிட்டெரிந்தது. கோப்பெருஞ் சோழனும் தனது மைந்தர்களின்மேல் படையெடுத்துச் செல்லத் தொடங்கினான். நம்மீது படை யெடுத்திருப்பவர்கள் யார்? நாம் யார்? நமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு என்ன? அவர்கள் சிறுபிள்ளைகள். தம் மதியின்றித் தறுதலைகளின் தூண்டுதலால் இந்தத் தகாத செயலில் தலையிட்டிருக்கின்றனர். வயதேறிய நாம் இந்த வழிதவறிய காரியத்தில் இறங்கலாமா? என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழவேயில்லை. ஆதலால் அவனும் மைந்தர்களை மாற்றலர் களாகவே எண்ணிப் போர் செய்யப் புறப்பட்டான். இந்த நிலையைக் கண்டார் எயிற்றியனார் என்னும் புலவர். இவர் கோப்பெருஞ் சோழனுக்கு உற்ற நண்பர். அவனுடைய உயர்ந்த புகழுக்கு ஒர் இழுக்கும் உண்டாகக் கூடாது என்ற உண்மை நோக்கம் உடையவர், இவர் உடனே அரசனுடைய செயலைத் தடுத்து அவனுக்கு அறிவுரை கூறினார். தந்தைக்கும் தநயர்களுக்கும் நேரவிருந்த சண்டையைத் தடுத்தார். தமிழரசன் ஒருவன் தன் பிள்ளைகளுடன் போர் செய்து மடிந்தான். அல்லது தன் பிள்ளைகளையே போர்க்களத்தில் கொன்றான் என்ற பழிச் சொல் பரவாமல் காப்பாற்றினார். இப்புலவரின் முழுப் பெயர் புல்லாற்றூர் எயிற்றியனார் என்பது. இவர் பெயர் எயிற்றியனர். இவன் ஊர் புல்லாற்றூர் ஆதலால் புல்லாற்றூர் எயிற்றியனார் என்று வழங்கப்பட்டார். இவர், கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் மேற் படை யெடுத்துபோது அவனுக்குக் கூறிய அறிவுரையைக் கீழே காண்போம். 3 பல போர்களிலே பகைவர்களைக் கொன்று புகழ் பெற்ற வலிமை யுடையவனே! என்றும் தளராத முயற்சி யுடையவனே! உனது வெண்கொற்றக் குடையின் நிழலால் மக்களைப் பாதுகாக்கும் வெற்றி பொருந்தியவனே! கடல் சூழ்ந்த இந்தப் பரந்த உலகிலே உன்னிடம் போர் செய்யப் படை திரட்டிக் கொண்டு வந்த அந்த இருவரைப் பற்றியும் நினைத்துப்பார். போர் செய்ய விரும்பும் தோற்றத்துடன் உனக்கு எதிராக எழுந்த அந்த இருவரும், உன்னுடைய பழமையான பரம்பரை விரோதிகள் அல்லர். அவர்கள் தாம் அப்படி யென்றால் உன்னைப்பற்றி நினைத்துப் பார்த்தால், நீயும் அப்படித்தான் நீயும் அந்த இருவர்க்கும் பரம்பரப் பகைவன் அல்லன். பகைவரைக் கொல்லும் யானையையுடைய தலைவனே! நீ இவ்வுலகிலே பரந்து நிலைக்கும் படியான நல்ல புகழை நாட்டிவிட்டு உன் முன்னோர்கள் சென்ற இடத்திற்கு நீயும் செல்லப்போகிறாய். நீ சென்றபின் உன்னால் இவ்வுலகின் கைவிடப்பட்ட அரசுரிமை, நீ இன்று படையெடுத்துச் செல்லும் அந்த இருவர்க்குமே உரியதாகும். ஆதலால் இந்த உண்மையையும் நீ அறிவாய். புகழிலே ஆர்வமுடைய புரவலனே! இன்னும் சில சொல்லு கிறேன் கேள்: இப்பொழுதிருக்கின்ற வலிமை காரணமாக அந்த இருவரும் உன்னுடன் போர் செய்யப் புறப்பட்டனர். அவர்கள் எதையும் எண்ணிப்பார்த்து முடிவு செய்யும அறிவில்லாத இளைஞர்கள்; பிறர்சொல்லுக்கு இணங்கிய பேதைகள்; அவர்கள் இந்தப் போரிலே தோற்று மடிவார்களானால், பிறகு உனது செல்வத்தை நீ யாருக்குக் கொடுப்பாய்? போர் செய்ய விரும்பிப் புறப்பட்ட செல்வனே! போர்க் களத்திலே, நீ உன் பிள்ளைகளிடம் தோற்றுவிட்டால் உனது நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப்பார்! உன் பகைவர் எல்லோரும் உள்ளத்திலே உவகையடைவார்கள்; துள்ளிக் குதித்து உன்னைத் தூற்றுவார்கள்; இவ்வுலகிலே நீ தேடிய புகழ் மறையும்; பழியைத்தான் தேடிக்கொள்ளுவாய்; அந்தப் பழி என்றும் அழியாமல் நிலைநிற்கும். ஆகையால் இப்பொழுது நீ தொடங்கவிருக்கும் அறத்திற்கு மாறான மறச் செயலை விட்டுவிடு. விரைந்து புறப்படு! உன் நல்ல உள்ளம் என்றும் நல்ல உள்ளமாகவே வாழ்வதாக! விண்ணுலகிலே உள்ளவர்கள் உன்னை எதிர்கொண்டு விருந்தாக ஏற்றுக் கொள்ளும் வகையிலே, இங்கு நல்வினைகளை உடனே செய்க. உன் உதவியை நாடி உன் பாதத்தை அடைந்தவர்களை அவர்கள் துன்புறாத படி காப்பாற்று; அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய். இதுவே உன் கடமையாகும். இதுவே புல்லாற்றூர் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழனுக்குக் கூறிய அறிவுரை. 4 மண்டமர் அட்ட மதன்உடை நோன்தாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர் அமர்வெம் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்; நினையும் காலை நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை; அடுமான் தோன்றல்; பரந்துபடு நல்இசை எய்தி மற்றுநீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே; அதனால், அன்ன தாதலும் அறிவோய்! நன்றும் இன்னும் கேண்மதி! இசை வெய்யோயே நின்ற துப்பொடு நிற்குறித்து எழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெரும் செல்வம் யார்க்குஎஞ் சுவையே அமர்வெம் செல்வ! நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே! அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே, வல்விரைந்து எழுமதி! வாழ்கநின் உள்ளம் அறிந்தோர்க்கு ஏம மாகும்நின் தான்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே; வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு வியப்பொடு விருந்தெதிர் கொளற்கே (புறநா -213) ஒற்றுமையின் உயர்வு 1 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழ்நாட்டில் அந்நியர்கள் புகுந்துவிட்டனர். அவர்களிலே பல திறத்தினர் உண்டு. பிழைப்புக்காகத் தமிழ்நாட்டைத் தஞ்சமடைந்தவர்கள் பலர். அரசியல் ஒற்றர்களாகத் தமிழ்நாட்டில் புகுந்தவர்கள் சிலர். தமிழ்நாட்டில் புகுந்த பிற நாட்டினரை இவ்வாறு இரு பிரிவினாராகப் பிரிக்கலாம். பிழைப்புக்காகத் தமிழ்நாட்டைத் தஞ்சமடைந்தவர்களால் எத்தகைய ஆபத்தும் உண்டாகவில்லை. இவர்களிலே பலர் தமிழ்நாட்டையே தாயகமாகக் கொண்டனர். வாணிகர்களாகவும். உழவர்களாகவும், தொழிலாளர்களாவும் இவர்கள் பல தொழில் களைச் செய்து வாழ்ந்தனர். தமிழர்கள் சமுதாயத்துடன் ஒன்றுபட்டுவிட்டனர். அரசியல் ஒற்றர்களாகத் தமிழ் நாட்டில் நுழைந்தவர்களால் தான் தமிழர்களுக்குத் தாங்கமுடியாத தொல்லைகள் உண்டாயின. இவர்கள் பலவித வேடங்களுடன் தமிழரசர்களிடம் ஒட்டிக் கொண்டனர்; அவர்களிடம் செல்வாக்குப் பெற்றனர். அரசர்களோடு அரசர்களை மோதவிட்டுத் தமிழர்களின் ஒற்றுமை வாழ்வுக்கு உலைவைத்தனர். இந்த அந்நிய அரசியல் ஒற்றர்களாலேயே அடிக்கடி மூவேந்தர்களுக்குள் சண்டைகள் நடைபெற்று வந்தன. சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்குள் அரசியல் உடன்பாடுகள் செய்து கொள்ளாமல் அடிக்கடி சச்சரவுகள் செய்து கொண்டனர். புலிக்கொடியும் கயற்கொடியும், விற்கொடியும் ஒன்றாக விளங்கிய தமிழகத்திலே இவைகள் தனித் தனியே பறக்கத் தொடங்கின முடியுடைய மூவேந்தர்களும் தாங்கள் தமிழ்க் குடியினர் என்பதை மறந்தனர். ஒருவர் நாட்டின்மீது ஒருவர் மாற்றி மாற்றிப் படையெடுத்தனர். இவ்வாறு தமிழ் வேந்தர்கள் வஞ்சகர்களின் வார்த்தை களால் மயங்கித் தமிழ்நாட்டின் ஒற்றுமை சிதறும் வகையில் கலகமிட்டு வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டுப் புலவர்கள் பெருந்தொண்டு புரிந்தனர். அவர்கள் அடிக்கடி மூவ்வேந்தர் களையும் சந்திப்பார்கள், சோழநாட்டுப் புலவர் சேரநாட்டு மன்னனைக் காண்பார்; சேரநாட்டுப் புலவர் சோழமன்னனைக் காண்பார்; பாண்டியநாட்டுப் புலவர் சோழமன்னனைக் காண்பார். சேரமன்னனையும் காண்பார். தமிழ்நாட்டுப் புலவர்கள் இவ்வாறு ஒற்றுமை உள்ளமுடையவர்களாய் மூவேந்தர்களையும் ஒன்றாகவே எண்ணிவந்தனர். ஒரு சிறிதும் நாட்டு வேற்றுமை பாராட்ட வில்லை. எல்லாரும் தமிழ் வேந்தர்கள்; சேர, சோழ, பாண்டியநாடு மூன்றும் தமிழ்நாடு; மூன்று நாட்டின் மக்களும் தமிழ் மக்கள் என்ற உணர்ச்சியுடன் அவர்கள் பணிபுரிந்து வந்தனர். மூவேந்தர்களையும் ஒற்றுமைப் படுத்த அக்காலத் தமிழ்ப் புலவர்கள் செய்த முயற்சிகள் பல. அம்முயற்சி வீண் போக வில்லை; ஓரளவு பலனளித்துத்தான் வந்தது. தமிழரசர்களே அந்நியர்களின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி, ஒற்றுமை குலையாதீர்கள் என்பதுதான் அக்காலத்துத் தமிழ்ப்புலவர்கள் செய்துவந்த முதல் முயற்சி. இதற்கு உதாரணமாகப் புறநானூற்றில் ஒரு வரலாறு உண்டு. 2 பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழமன்னன். இவன் உயிரோடு வாழ்ந்தகாலத்தில் இவன் பெயர் சோழன் பெருந்திருமா வளவன் என்று வழங்கிற்று. இவன் சூராப்பள்ளி என்ற ஊரிலே இறந்துபோனான். இவன் இறந்தபின் இவன் பெயர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்று வழங்குவதாயிற்று. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். இவன் காலத்தில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட அரசன் பெருவழுதி என்பவன். பெருவழுதி இறந்தபின் அவன் பெயர் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்று வழங்குவதாயிற்று. இவன் வெள்ளியம்பலம் என்ற இடத்திலே இறந்து போனான். ஆதலால், பிற்காலத்தார் இவனுக்கு இப்பெயரிட்டனர். இக்காலத்தில் சோழநாட்டிற்கும், பாண்டியநாட்டிற்கும் ஒற்றுமையில்லை. அடிக்கடி சோழர்களும் பாண்டியர்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். நீண்டகாலமாகச் சோழ பாண்டியர்களுக்குள் நிலவிவந்த பகை பெருந்திருமா வளவன் பெருவழுதி காலத்தில் குறைந்தது. பெருந்திருமா வளவனும், பெருவழுதியும் ஒற்றுமையடைந்தனர்; நட்பினராயினர். பண்டைத் தமிழர் பண்பாடான ஒற்றுமையை நிலைநாட்ட உறுதிகொண்டனர். இவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்திப்பதும், கலந்து உரையாடிக் களித்துக் காலங்கழிப்பதுமாக இருந்தனர். ஒரு சமயம் சோழன் பெருந்திருமா வளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒன்றாக அமர்ந்து ஒன்றுபட்ட உள்ளத்துடன் பேசி மகிழ்ந்திருந்த காட்சியை ஒரு புலவர் பார்த்து விட்டார். அவர் உள்ளத்திலே அந்தக் காட்சி அளவற்ற மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டது. தமிழரசர்கள் ஒன்று கூடியிருப்பதைக் கண்டவுடன், தமிழரசர்கள் ஒன்றுபட்டு வாழ்வதை என்று காண்போம் என ஏங்கியிருந்த அவர் உள்ளம் துள்ளிக் குதித்தது. இப்புலவர் பெயர் காரிக்கண்ணனார். இவர் சோழ நாட்டுப் புலவர் காவிரிப் பூம்பட்டினம் இவருடைய ஊர் ஆகையால் இவரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்று அழைத்து வந்தனர். இரு பேரரசர்கள் இணையாக அமர்ந்து இன்னுரையாடி யிருப்பதைக் கண்டவுடன் இவர் சும்மா இருக்கவில்லை. இந்த வாய்ப்பை ஒரு நல்வாய்ப்பாகக் கருதினார். அவர்களுடைய இந்த இணைப்பு என்றும் நீங்காத இணைப்பாக இருக்கவேண்டும்; எவராலும் நீக்க முடியாத இணைப்பாக இருக்கவேண்டும் என்று நினைந்தார். உடனே அவர்களை அணுகி, அவர்கள் என்றும் ஒன்றுபட்டிருக்கவேண்டும் என்றும், ஒன்றுபட்டிருப்பதால் வரும் உயர்வைப் பற்றியும் உரைக்கத் தொடங்கினார். 3 பெருந்திருமாவளவனே நீயோ, குளிர்ந்த நீரை என்றும் வற்றாமல் தந்து வளங்கொழிக்கின்ற காவிரியாற்றின் தலைவன். உன்னுடன் அமர்ந்திருக்கின்ற இப்பெருவழுதியோ, செழுங் கிளை தாங்கும் செல்வப் பண்புடைய பாண்டியர் மரபிலே பிறந்தவன். கிளைகளைத் தாங்கி நிற்கும் ஆலமரத்தின் விழுது நிலத்திலே வேரூன்றி நின்று அதன் கிளைகளைத் தாங்கிவரும். அதுபோலவே இவன் - குடியினரைக் காத்து வந்த முன்னோர்கள் மறைந்துவிட்டாலும், அவர்களுடைய வழித்தோன்றலாகிய இவன் - அவர்களால் காப்பாற்றப்பட்ட சுற்றத்தினரையெல்லாம் காப்பாற்றி வருகின்றான். அன்றியும் இடி சிறியதாயினும் பாம்புகளை அதன் சுற்றத்துடன் பயமுறுத்திவிடும். அதுபோல் இவன் இளமைப் பருவத்திலிருந்தே தன் பகைவர்களுக்கு அச்சந் தரும்படி போர் செய்யும் திறமுடைய பாண்டியர்குலத் தலைவன். நீயோ, அறம் தனது உறைவிடமாகப் புகுந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற உறையூருக்குத் தலைவன். இந்தப் பெருவழுதியோ, நெல்லும் நீரும் எங்கும் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய பொருள், மலைச்சந்தனமும், அலைகடல் முத்தும் அனைவர்க்கும் எளிதில் கிடைக்க முடியா தவை. ஆகையால் இவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வீரமுரசு, நீதிமுரசு, தியாகமுரசு என்ற மூன்று முரசுகளையும் முழங்குகின்றவன். செந்தமிழ்மொழி சிறந்து வளர்கின்ற மதுரையிலிருந்து மக்கள் மனமகிழ அரசாள்கின்ற வேந்தன். நீங்கள் இருவரும், பனைக் கொடியையுடைய வெள்ளை நிறத்தோனாகிய பலராமனும், சக்கராயுதத்தையுடைய நீல நிறத்தோனாகிய திருமாலும் ஆகிய இரண்டு தெய்வங்களும் ஒக்கவிருந்தாற்போலக் காணப்படுகின்றீர்கள். உங்கள் பகைவர் களுக்கு அச்சம் விளைவிக்கத்தக்க தோற்றமுடன் விளங்கு கின்றீர்கள். இதே நிலைமையில் எப்பொழுதும் ஒன்றுபட்டிருப்பீர் களாயின் இதைவிடத் தமிழ்நாட்டிற்கு வேறு நம்மையுமுண்டோ? உம்முடைய புகழ் நீடூழி வாழ்க இன்னும் சில சொல்லு கின்றேன் கேளுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்வீர்களானால் - நீங்கள் இப்பொழுது ஒன்று பட்டிருப்பதுபோல் என்றும் மாறாமல் ஒன்றுபட்டிருப்பீர் களானால் - கடல்சூழ்ந்த இவ்வுலக முழுவதும் உங்கள் கைவசந்தான் இருக்கும். இது பொய்யல்ல; உண்மை. ஆதலால் நன்மைகளைப் போல் நீங்கள் வாழுங்கள்; நீதிகளைப்போல நீங்கள் வாழுங்கள்; முன்னோர்கள் பின் பற்றிய ஒழுக்க நெறிகளைப் போல நீங்கள் ஒன்றுபட்டிருங்கள். அன்பு கலந்து அகமகிழ்ந்திருக்கும் உங்களிடம் வந்து, உங்களைப் பிரித்துப் பகைவர்களாக்குவதற்காகக் காலம் பார்த்துத் திரிந்து கொண்டிருக்கும் விரோதிகளிடம் ஏமாறாதீர்கள். அவர்கள் கூறும் கலகச் சொற்களைக் கேட்காதீர்கள். இன்று போல் என்றும் உங்கள் நட்பு வளரவேண்டும். உங்களுடைய வேற்படை போர்களத்திலே வெற்றி மேல் வெற்றிபெற்று உயர்வு பெறுக பிறர் நாட்டு மலைகளின் உச்சிகளில் எல்லாம். புலியும். கயலும் சேர்ந்த உங்கள் முத்திரைகள் விளங்குவதாக என்று இவ்வாறு பாராட்டிக் கூறினார் புலவர் காரிக் கண்ணனார். இவர் சோழநாட்டுப் புலவராதலின் சோழ மன்னனைச் சில மொழிகளாலும், பாண்டிய மன்னனைப் பல மொழிகளாலும் பாராட்டினார். பாண்டியன் இவர்க்கு விருந்தினன். விருந்தினரைப் புகழ்வதே தமிழர் சிறப்பு. தனது நாட்டு மன்னனை இச்சமயத்தில் மிகுதியாகப் பாராட்டுதல் தற்புகழ்ச்சியாகவே முடியும். ஆதலின் இவ்வாறு கூறினார். இது புறநானூற்றில் 58-வது பாட்டாக அமைந்துள்ளது. 4 நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை; இவனே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ. இளையது ஆயினும் கிளைஅரா எறியும் அருநடை உறுமீன் பொருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே! நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பொருநனை! இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கு எளியவென, வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே; பால்நிற உருவின் பனைக் கொடி யோனும் நீல்நிற உருவின் நேமியோனும் என்று இருபெருந் தெய்வமும் உடன்நின்று ஆங்கு உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி இன்னீர் ஆகலின் இனியவும் உளவோ; இன்னும் கேண்மின்! நும் இசை வாழியவே! ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர், இருவீரும் உடன்நிலை திரியீ ராயின் இமிழ்திரைப் பௌவம் உடுத்தஇப் பயம்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்ஆ காதே அதனால், நல்ல போலவும், நயவ போலவும். தொல்லோர் சென்ற நெறிய போலவும். காதல நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும் ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்கநும் புணர்ச்சி, வென்றுவென்று அடுகளத்து உயர்கநும் வேலே, கொடுவரிக் கோண்டாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக,பிறர் குன்றுகெழு நாடே. தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ்ந்தால் உலகம் அவர்கள் கையில் தான் இருக்கும் என்ற கருத்தை இப்பாடலில் காணலாம். உணவும் உயிரும் 1 உணவின்றேல் உலகம் இல்லை. உயிர்கள் இல்லை; உயிர் களிடம் முயற்சியும் இராது. எல்லாப்பாடும் வயிற்றுப் பாட்டுக் காகத்தான். பட்டினியின்றி வாழும் மக்களிடம் தான் நாகரிகம் குடி கொண்டிருக்கும். அமைதி நிலைத்திருக்கும், அன்பும் இன்பமும் ஆறாகப் பெருகிநிற்கும். உணவளிப்பவர்கள் தாம் உயிரைக் காப்பாற்றுகிறவர்கள். போகிற உயிரைப் பிடித்து நிறுத்து கிறவர்கள் உணவளிப்பவர்கள்தாம். இந்த உண்மையைத் தமிழ்நாட்டினர் என்றும் மறந்தவர்கள் அல்லர். இதற்குச் சரித்திரச் சான்றுகள் பலவுண்டு. சேரமன்னன் ஒருவனுடைய வரலாற்றை இதற்கு உதாரணமாகக் காண்போம். 2 சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்பவன் ஒரு சேர மன்னன். சேரமான் என்பது குடிப் பெயர். பெருஞ் சோறு என்பது சிறப்புப் பெயர். உதியன் என்பது இயற்பெயர். சேரலாதன் என்பது பட்டப்பெயர். எல்லோர்க்கும் சோறிட்டவன். ஆதலால் உதியன் என்ற பெயர் செஞ்சோற்று உதியன் என்று ஆயிற்று. இவனுடைய தலைநகரம் வஞ்சிமாநகரம். இணையற்ற வலிமை வாய்ந்தவன். பகைவர்கள் செய்யும் சிறு பிழைகளை யெல்லாம் பொறுத்துக்கொள்ளும் பண்புடையவன். சிறந்த அறிஞன். நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடக்கப்போகும் செயல்களை நன்றாக அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வுடை யவன், வலிமை, ஆண்மை, இரக்கம் ஆகிய சிறந்த குணங்களை யுடையவன். இவன் காலத்தில் பாண்டியநாடும், சோழநாடும், சேரநாடும் இவனுடைய ஆட்சியிலே அடங்கியிருந்தன. இவனே தமிழ் நாட்டின் தனிப்பெரும் மன்னனாக விளங்கினான். பாண்டியன் சோழன் இருவரும் இவன் ஆணைக்கு அடங்கி நடந்தனர். இந்தப் பெருஞ்சோற்றுதியன் காலத்தில் தமிழ் நாட்டில் பஞ்சமில்லை. பட்டினியில்லை; வறுமையில்லை. உணவுப் பொருள்களும் ஏனைய உதவிப்பொருள்களும் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டேயிருந்தன. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். நாடு முழுவதும் அமைதியும் இன்பமும் நடனம் புரிந்தன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர். இந்தச் சேரலாதன் காலத்தில் இத்தகைய சிறந்த நிலையிலே தமிழகம் தழைத்திருந்தது. 3 இக்காலத்தில் வடநாட்டில் பாண்டவர்களுக்கும், கவுரவர் களுக்கும் பகை முற்றியிருந்தது. இருவரும் போர் தொடுக்கத் துணிந்துவிட்டனர். மகாபாரதயுத்தம் தொடங்கப் போகிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் படை சேர்க்கத் தொடங்கி விட்டனர். வட நாட்டு அரசர்கள் அனைவரும் போரிலே ஈடுபட்டனர். சிலர் பாண்டவர் பக்கம்; சிலர் கவுரவர் பக்கம் போரிலே தலை யிடாமல் நடுநிலைமை வகித்த அரசாங்கம் ஒன்றேனும் வட நாட்டில் இல்லை. இச்சமயத்தில் பாண்டவர்களும் உதியஞ்சேரலாதன் உதவியை நாடினர், கவுரவர்களும் அவனுடைய துணையைத் தேடினர். ஆனால் சேரலாதனே ஒரு பக்கமும் சேரவில்லை. நேரடியாகப் போரிலே தலையிட மறுத்துவிட்டான். தமிழ் நாடு போரிலே தலையிடாது. தமிழர்கள் போர்க்களத்திற்கு வரமாட்டார் கள்; நடுநிலைமை வகிப்பதே தமிழர் கொள்கை என்று திட்டமாகக் கூறிவிட்டான். தமிழர்கள் வீணாகப் போரிலே தலையிடும் வெறிகொண் டவர்கள் அல்லர். ஆக்கிரமிப்புப் போர் தமிழர்கள் பண்பாடன்று. தற்காப்புப் போர்தான் தமிழர் போர் முறை. வரும் ஆக்கிரமிப் பாளரை அடித்து நொறுக்கும் ஆண்மை படைத்தவர்கள் தமிழர். தமிழர்களின் இத்தகைய பரம்பரைப் பண்பாட்டைப் பெருஞ் சோற்றுதியன் பாரத யுத்தகாலத்தில் மெய்ப்பித்துக் காட்டினான். பாரதயுத்தம் தொடங்கிவிட்டது. வடநாட்டு அரசாங்கங்கள் அனைத்தும் போரிலே தலையிட்டுவிட்டன. வடநாடு முழுவதும் ஒரே குழப்பம். மகா பாரதப் போர் மிகவும் மும்முரமாக நடக்கின்றது. சமாதானத்திற்கு வழியே இல்லை. இரு தரப்பில் ஒரு தரப்புத் தோற்றல்தான் போர் முடியும் இந்த நிலையில் போர் முடியும் வரையில் பாண்டவர், கவுரவர் ஆகிய இரு பக்கத்துச் சேனைகளுக்கும் வேற்றுமை பாராட்டாமல் சோறிடுவது என்று துணிந்தான் பெருங்சோற்று உதியன். இவ்வாறே இரு பக்கத்துச் சேனைகளுக்கும் சோறிட்டான். இதன்மூலம் பொதுமக்கள் சுரண்டப்படுவதிலிருந்து தப்பினார்கள். சேரன் நடுநிலைமை யிலிருந்து தவறவும் இல்லை. இதன் பிறகுதான் இவன் பெயர் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று உலகப் புகழ் பெற்றது. முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் இவ்வரலாற்றைப் பாடியிருக் கின்றார். பாரதயுத்தம் முடிந்தபின் பாடிய பாடல் இது. இப்புலவரும் இச்சேரன் காலத்தில இருந்தவர். 4 ஓ, சேரர்குல மணியே ஐம்பெரும் பூதங்களின் தன்மையும் ஆற்றலும் உன்னிடம் உண்டு. பகைவர்களின் சிறு பிழைகளை யெல்லாம் பொறுத்து க்கொள்ளுவாய்; பெரும்பிழை செய்வா ராயின் அதனை நீ அறிந்து கொள்ளுவாய். உன்னிடம் பகைவர் களை எதிர்க்கும் வலிமையும் உண்டு. அவர்களை அழிக்கும் திறமையும் உண்டு. அண்டினவர்களைக் காக்கும் இரக்கமும் உன்னிடம் உண்டு. உன்னுடைய கிழக்குக் கடலிலே தோன்றிய கதிரோன் உன்னுடைய மேற்குக்கடலிலேயே மறைவான். ஒவ்வொரு நாளும் புதிய புதிய செல்வம் பெருகிக் கொண்டிருக்கின்ற சிறந்த நாடு உனது நாடு. நீ பாண்டவர்களும், கவுரவர்களும் ஒருவரோடு ஒருவர் போர் செய்து இருவர் சேனைகளும் போர்க்களத்தில் மடியும் வரையிலும் இருவர் சேனைக்கும் சோறளித்தாய். பாண்டவர், கவுரவர் என்ற வேற்றுமையில்லாமல் நடுநிலையிலிருந்து இரண்டு பக்கத்துப் படைகளுக்கும் வேண்டுமளவு ஏராளமாகச் சோறு கொடுத்தாய். இத்தகைய பெருங் கொடையாளியாகிய நீயும் நின் சுற்றமும் நீடூழி வாழ்க. பால் புளித்தாலும், சூரியன் இருண்டாலும் நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்கங்கள் ஒழிந்து போனாலும் நீயும் நின் சுற்றமும் அழியாமல் வாழ்வீர்களாக. இமயமலையும் பொதிய மலையும்போல என்றும் நிலைத்து வாழ்வீர்களாக. இவ்வாறு வாழ்த்துரைகூறிப் பாடியிருக்கின்றார் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர். மண்திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும் ,தீமுரணிய நீரும்என்று ஆங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின் வெண்தலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நல்நாட்டுப் பொருந! வான வரம்பனை நீயோ! பெரும! அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேதம் நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ! அத்தை அடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெரும்கண் மாப்பிணை அந்தி அந்தணர் அரும்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புற 35). பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை (1967) மதிப்புரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர், உயர்திரு. டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள், எம்.ஏ., எம்.ஓ.எல., பிஎச்.டி., பெரும்புலவர் சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதியுள்ள பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை என்னும் நூலைப் படிக்கும் பேறு பெற்றேன். பட்டினப்பாலை என்பது கரிகாலன்மீது பாடப்பெற்ற 301 அடிகளைக் கொண்ட நெடும் பாடலாகும். அப்பாட்டில் சோழநாட்டுச் சிறப்பு, சோழநாட்டுத் தலைநகரான காவிரிப்பூம் பட்டினச் சிறப்பு, கரிகாலனுடைய வீரச்செயல்கள் முதலியன விரிவாக இடம் பெற் றுள்ளன. ஆதலால் அப்பாடல் முழுமையையும் படிப்பவரே இப்பிரிவுகளை உணர்தல் கூடும். ஏறத்தாழ ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடப் பெற்ற இப்பாடலில் கற்றவர்க்கே பொருள் விளங்கும் சொற்களும் இடம் பெற்றுள்ளன. ஆதலின், பொதுமக்கள் இப்பாட்டைப் படித்துத் தாமே பொருள் உணர்தல் எளிதன்று. பொதுமக்கள் நலத்தை உளங்கொண்ட சாமி. சிதம்பரனார், பாட்டில் அமைந் துள்ள ஒவ்வொரு செய்தியையும் - காவிரியின் சிறப்பு, சோழநாட்டின் வளம், பாக்கத்தின் செல்வம் எனப் பல தலைப்புகளில் பிரித்துள்ளார்; ஒவ்வொரு தலைப்புக்கும்-முதலில் அத்தலைப்புக்குரிய அடிகள் குறிக்கும். பொருளைத் தெளி வுற எழுதியுள்ளார்; பின்பு செய்யுள் அடிகளைக் கொடுத்து, அவற்றின் கீழ்த் தெளி வான பதவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ளார். இம்முறை பெரிதும் வர வேற்கத்தகும்.நடைமிகவும்எளிமைவாய்ந்தது;சிறியவாக்கியங்களைக்கொண்து. இந்நூல் சங்ககாலச் சோழநாட்டுப் பேரரசனான கரிகாலன் சிறப்பையும் அவனது கோநகரமான காவிரிப் பூம்பட்டினத்து சிறப்புற்ற வளத்தையும் சோணாட்டவர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் நன்கு விளக்கவல்லது. அவ்விளக்கம், சாமி. சிதம்பரனார் கையாண்டுள்ள எளிய நடையாலும் விளக்கும் முறையாலும் மேலும் நன்கு புலனாகும் என்பது உறுதி. சாமி.சிதம்பரனார் தமிழ்ப்பெரும் புலவர்; பண்டைத் தமிழ் நூல்களைப் பழுதறப் படித்தவர்; காலத்திற்கு ஏற்ற முறையில் அரிய செய்திகளை எளிய முறையில் தெளிவுறக் கூறுவதில் திறமை மிக்கவர். அப்பெரியார் எழுதியுள்ள இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். அவை அனைத்தையும் படித்துப் பயன்பெறுதல் தமிழ் மக்களது கடமையாகும். சென்னை 12.12.66 மா.இராசமாணிக்கனார் நூலின் சிறப்பு சங்க நூலாகிய பத்துப்பாட்டுள் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலை. இது 301 வரிகளைக் கொண்ட ஒரே பாட்டு. தமிழிலே முதற் பாக்கள் நான்கு வகை. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. வெண்பாவில் பலவகையுண்டு. ஆசிரியப்பாவில் பலவகையுண்டு. கலிப்பாவில் பலவகையுண்டு. வஞ்சிப்பாவில் இருவகையுண்டு. இந்த ஒவ்வொரு பாக்களுக்கும் இனப் பாக்கள் உண்டு. அவை தாழிசை, துறை, விருத்தம் என்பன. வெண்பாவின் இனங்களுக்கு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்று சொல்லப்படும். இவ்வாறே கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா ஆகியவைகளுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்ற இனங்கள் உண்டு. இந்த இனப் பாக்களும் பலவகையாக விரியும். இவ்வாறு தமிழ்ப் பாடல் வகைகளை விரித்து நோக்கினால் அவை நூற்றுக்கு மேற்பட்டவை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு பாக்களும் இரண்டே வகையில் அடங்கிவிடும் என்பது தொல்காப்பியர் கொள்கை. வெண்பாவின் ஓசையும், கலிப்பாவின் ஓசையும் ஏறக்குறைய ஒன்று ஆதலால் கலிப்பா வெண்பாவினுள் அடங்கும். ஆசிரியப்பாவின் ஓசையும், வஞ்சிப்பாவின் ஓசையில் ஒத்து வருவன. ஆதலால் வஞ்சிப்பா ஆசிரியப்பாவினுள் அடங்கும். பா-பாட்டு. பட்டினப்பாலையின் செய்யுள் ஆசிரியப்பா. ஆனால் அதன் வரிகளில் பெரும்பாலானவை வஞ்சிப்பாவின் அடிகளாக இருக்கின்றன. வஞ்சிப்பாவின் அடிகள் விரவி யிருந்தாலும் ஆசிரியப்பாவின் ஓசைகொண்டதே இந்தப் பாட்டு. பட்டினம்; காவிரிப்பூம்பட்டினம். இது சோழ நாட்டின் பழம்பெரும் நகரம். தலைநகரம் துறைமுகப் பட்டினம். இது சென்னை மாகாணத்தில், தஞ்சை வட்டாரத்தின் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்பொழுது இது ஒரு சிறிய ஊர். ஏறக்குறைய ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கிவிட்டதாகச் சொல்லப் படுகிறது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது. பாலை என்பது பாலைத்திணை. பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணை. கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்துபோக வேண்டுமே என்று எண்ணி வருந்துவது. இவை பாலைத்திணையில் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும். பட்டினப்பாலை என்பது பட்டினம் - பாலை என்ற இரண்டு சொற்களைக் கொண்ட ஒரு தொடர். பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது என்பது இதன் பொருள். பாட்டின் அமைப்பு பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றான் ஒரு தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலைமை என்ன ஆகும்? அவள் தன் பிரிவைப் பொறுத்துக் கொண்டிருப்பாளா? தான் திரும்பும் வரையிலும் அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயங்கள் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனையோடுதான் செயலாற்ற வேண்டும்; வேதனையுடன் செய்யும் செயலிலே வெற்றி காண முடியாது. ஆகையால் பிரிந்து சென்றால் தன் காதலிக்குத் துன்பந் தருவதோடு தானும் துன்புற வேண்டியது தான் என்று நினைக்கின்றான். இதனால் அத்தலைவன் கீழ்வரும் முடிவுக்கு வருகின்றான். நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின்மேல் வீசிய வேற்படையைக் காட்டினும் கொடுமையானது. என் காதலியின் பெரிய மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற் சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் தருவன. (நன்மையை, இன்பத்தை தருவன) ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம் பட்டினமே கிடைப்பதா யிருந்தால்கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வர மாட்டேன். என் மனமே! பிரிந்து போக வேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடு. இதுதான் அந்தத் தலைவன் செய்யும் முடிவு. இதுதான் பட்டினப்பாலையில் உள்ள அகப்பொருட்கருத்து. இதனை - திருமா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்; அவன், கோலினும் தண்ணிய தடம்மெல் தோளே. (ஆகையால்) முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார்இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே. என்று வரும் பட்டினப்பாலை அடிகளால் அறியலாம். நூலின் பொருள் காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நில வளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித் துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுது போக்கு இவைகளை இந்நூலிலே விரிவாகக் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வியாபாரம்; அந்நகரத் திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி - இறக்குமதி வாணிகம்; வாணிகரின் நடுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவை களையெல்லாம் இந் நூலிலே காணலாம். இந்த நகரத்தின் தலைவனாகிய கரிகாற் சோழனுடைய பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பின்பற்றியதாயினும் புறப்பொருட் செய்திகளே இதில் மிகுதி யாகக் காணப்படுகின்றன. பட்டினப் பாலையை மேலெழுந்த வாரியாகப் படிப்போரும் காவிரிப்பூம் பட்டினத்தின் பெருமையைக் கூறுவதற்கும், கரிகாற் சோழனுடைய மாண்பை விளக்குவதற்குமே இந்நூல் எழுதப்பட்டது என்று உணர்வர். கரிகாற்சோழன் பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற் சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப்பூம் பட்டினமே இவனுடைய தலைநகரம். இவன் இளைஞனாயிருந்தபோது பகைவரால் பிடிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எப்படியோ இவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டான். தனக்குரிய அரசாட்சி யையும் கைப்பற்றிவிட்டான். பிறகு தன் பகைவர் களின்மேல் படை திரட்டிச்சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றி பெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதிப் பகுதியிலே கூறப்படுகின்றது. இவனைப்பற்றி இன்னும் பல செய்திகள் வழங்குகின்றன. அவைகள் வருமாறு:- கரிகால் சோழன் சிறுவனாயிருந்த போது அவனைக் கொல்ல அவனுடைய பகைவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவனிருந்த இல்லத்திற்குத் தீ வைத்துவிட்டனர். கரிகாலன் அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக் கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போயிற்று. இதனால்தான் இவனுக்குக் கரிகாற் சோழன் என்று பெயர் வந்தது. இவன் வெண்ணி யென்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்தான். அவனை வென்றான். அதே போர்க் களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த ஒரு பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயமலை வரையிலும் படையெடுத்துச் சென்றான். இடையில் உள்ள மன்னர்களையெல்லாம் வென்றான். இமய மலையிலே புலி முத்திரை யிட்டான்; புலிக் கொடியையும் நாட்டினான். இவன் இளைஞனாயிருக்கும் போது இருவர் இவனிடம் தங்கள் வழக்கை முறையிட்டுக் கொள்ள வந்தனர். அவர்கள் இவனைப் பார்த்ததும் இந்தச் சிறுவன் எப்படி உண்மை தெரிந்து நீதி கூறுவான் என்று ஐயுற்றனர். உடனே இவன் வயதானவனைப் போல வேடம் பூண்டு வந்து அவர்கள் வழக்கைக் கேட்டுத் தீர்ப்புக் கூறினான். இவன் தீர்ப்பு ஒழுங்கானதுதான் என்று அவர்கள் ஒப்புக் கொண்டதும் தன் வேடத்தைக் கலைத் தான். வழக்குறைத்தோர் இவன் அறிவைக் கண்டு வியந்தனர். இவ்வாறு கரிகாற் சோழனைப் பற்றிப் பலகதைகள் வழங்குகின்றன. பழமொழி, பொருநர்ஆற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலியவைகளிலே இவ் வரலாறுகளைக் காணலாம். இந்தக் கரிகாற்சோழன் தமிழன்பன், தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் இவனுக்குத் தாய் மாமன். பட்டினப்பாலையைப் பாடிய புலவருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப் பற்றை விளக்குவதாகும். ஆசிரியர் வரலாறு இந்தப் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; பத்துப்பாட்டில் உள்ள பெரும் பாணாற்றுப்படை என்னும் பாட்டின் ஆசிரியரும் இவர்தான். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகாற் சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இப்புலவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்கும் உரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இப்புலவரின் வரலாற்றை அறிவதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எது என்பது விளங்கவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழநாட்டிலோ, அல்லது தொண்டை நாட்டிலோதான் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். உருத்திரன் என்பது இவருடைய தந்தை பெயராக இருக்கலாம். பண்டை காலத்தில் தந்தை பெயரையும் தன் பெயரோடு ஒட்டி வைத்துக் கொள்வது வழக்கம். அதை ஒட்டியே இவரும் கண்ணனார் என்னும் தன் பெயருடன் உருத்திரன் என்னும் தந்தை பெயரையும் இணைத்து வைத்துக் கொண்டார் என்று எண்ணுவதில் தவறில்லை. இப் புலவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும், உவமைகளும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல் காணப்படும். தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம் பண்பாடு இவைகளையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையிலே காணலாம். மறைந்துபோன காவிரிப்பூம்பட்டினத்தை நம் மனக் கண்ணால் இந்தப் பட்டினப்பாலையிலே பார்க்கலாம். இனி கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாட்டிலே புகுந்து அந்தப் பட்டினத்தைப் பார்ப்போம். காவிரியின் சிறப்பு சோழ நாட்டின் சிறப்பிற்குக் காரணம் காவிரி ஆறுதான். காவிரிநாடு என்பதே சோழ நாட்டிற்கு ஒரு பெயர். காவிரி புரக்கும் நாடு என்பது புலவர் புகழ்மொழி. காவிரிக்குப் பொன்னி என்பது ஒரு பெயர். காவிரியாற்று மணலிலே பொன் மின்னுவதை இன்றும் காணலாம். பொன்னி பாயும் நாட்டுக்குப் பொன்னி நாடு என்றே பெயர் சொல்லி விட்டனர். பொன்னியின் செல்வன், காவிரி புரக்கும் நாடு கிழவோன் என்பவை சோழனைக் குறிக்கும் பெயர்கள். காவிரி பாயாவிட்டால் சோணாட்டிற்குச் சிறப்பில்லை சோணாடு சோறுடைத்து என்று புகழ்பெற முடியாது. தஞ்சை மாவட்டம் தென்னாட்டின் நெற்களஞ்சியமாக விளங்க முடியாது. தஞ்சை மாவட்டத்தில் தவழ்ந்தோடும் அத்தனை ஆறுகளும் காவிரியின் கிளைகள்தான். ஆறுகளுக்குப் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவைகளில் ஓடும் நீர் காவிரியின் நீரேதான். ஒரு நாட்டைப் பற்றிக் கூற வேண்டுமானால் அந்நாட்டின் உயர்வுக்குக் காரணமாயிருப்பதையே முதலிற் கூறவேண்டும்,. இதுவே மரபு. காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றிச் சொல்லப் புகுந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலில் சோழநாட்டைக் குறிப்பிடுகிறார். சோழநாட்டைக் குறிப்பிடும் போது அதன் செல்வச் செழிப்புக்குக் காரணமான காவிரியாற்றின் பெருமையைப் பேசுகிறார். பட்டினப்பாலையின் முதல் எடுப்பே காவிரியாற்றின் மாண்புதான். அதன் வற்றாத நீரோட்டத்தைப் பற்றி வாயாரப் புகழ்கிறார் ஆசிரியர். வெள்ளி யென்னும் நட்சத்திரம் கீழ்த்திசையிலிருந்து மேற்றிசைக்குச் செல்லும் இயல்புடையது. இது தன் இயல்பு மாறி, திசை கெட்டு, வடக்கேயிருந்து தெற்கே போகுமானால் மழை பெய்யாது. வானம் வறண்டு போகும். மழை பெய்யா விட்டால் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் வானம் பாடிப் புள்ளும் வாட்ட மடையும்; பாடாது ஒழியும். இத்தகைய வானம் பொழியாத வறட்சிக் காலத்திலும் காவிரியாறு நீர் வற்றாது. மேற்றிசைக் குடகு மலையிலே பிறந்து கீழ்த்திசைக் கடலிலே பாயும். அந்தக் காவிரியின் நீர் சோழ நாடெங்கும் பரவி வயல்களிலே பாய்ந்து அங்கே பொன்னைக் குவிக்கும். 1 முதல் 7 வரையுள்ள வரிகளிலே இப் பொருளைக் கூறுகிறார் ஆசிரியர். முதலில் காவிரியாற்றைக் கூறியிருப்பதற்குக் காரணம் நீர் வற்றாத நதிக் கரைகளில் உள்ள நகரங்களே சிறந்தவை; நாகரீகம் வாய்ந்தவை; அவைகள் பழமையானவை; என்பதை நினைவூட்டுவதற்கே போலும். வசையில் புகழ் வயங்கு வெண் மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும், தற் பாடிய தளி யுணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும், தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் வசை இல் புகழ் - குற்றமில்லாத புகழுடன், வயங்கு வெண் மீன் - விளங்குகின்ற வெள்ளி (சுக்கிரன்) என்னும் நட்சத்திரம். திசை திரிந்து - தான் வழக்கமாகச் செல்லும் திசைமாறி. தெற்கு ஏகினும் - வடக்கிலிருந்து தெற்கே சென்றாலும். தன்பாடிய - தானே பாடிக்கொண்டு திரியும். தளி உணவின் புள் - மழைத்துளி யினை உணவாகக் கொள்ளும் வானம்பாடிப் பறவை தேம்ப - வருந்தும்படி. புயல் மாறி - மேகம் மறைந்து வான் பொய்ப்பினும் - மழை பெய்யாமல் வறண்டு போனாலும். தான் பொய்யா - காவிரியாறுதான் நீர் வற்றாது. மலைத் தலைய - மேற்கில் உள்ள குடகு மலையிடத்திலே பிறந்து கடல் காவிரி - கிழக்குக் கடலிலே பாயும் காவிரியாறு. புனல் பரந்து - அதன் நீர் கழனிகளிலே நிறைந்து. பொன் கொழிக்கும் - பொன்னைக் குவித்துக் கொண்டிருக்கும். இதனால் காவிரியாறு என்றும் வற்றாத நீர்ப் பெருக்குடைய ஜீவநதி என்பதையும், சுக்கிரன் என்னும் கிரகம் திசை மாறினால் மழை பெய்யாது என்பது பண்டை வானநூலார் கொள்கை என்பதையும் அறியலாம். பண்டைத் தமிழர்கள் வானநூல் அறிந்தவர்கள் என்பதையும் காணலாம். சோழ நாட்டின் வளம் அடுத்து 8 முதல் 19 வரையிலும் உள்ள 12 வரிகளிலே அந்தக் காவிரி நீர் பாய்வதனால் விளைந்திருக்கும் பலனைக் காணலாம். நீர் பாயும் நிலத்திற்கு மருதநிலம் என்று பெயர். சோழ நாடே பெரும்பாலும் மருத நிலந்தான். ஆகவே இந்தப் பன்னிரண்டு வரிகளும் சோணாட்டு மருத நிலச் செழிப்பைச் சொல்லுவதாகவே கொள்ளலாம். பன்னிரண்டு வரிகளிலேயே சோழநாட்டு நீர் வளத்தையும், நில வளத்தையும் பட்டினப்பாலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அங்கே வயல்கள் தரிசாகக் கிடக்கவில்லை; என்றும் விளைந்து கொண்டே யிருக்கின்றன. பயிர்த்தொழில் எப்பொழுதும் முட்டின்றி முறையாக நடந்து கொண்டேயிருக்கிறது. அங்கே, கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறு பிழிந்து, காய்ச்சுகின்ற கொட்டில்கள் பல இருக்கின்றன. கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற கொட்டில்களிலிருந்து வரும் தீப் புகையின் வெப்பத்தினால், பக்கத்து வயல்களிலே மலர்ந்திருக்கும் நெய்தற் பூக்கள் அழகு கெட்டு வாடிப் போகின்றன. எங்கும் நெற்கூடுகள் உயரமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. வயல்களிலே விளைந்திருக்கும் நெற் கதிரை மேய்ந்து வயிறு பெருத்த எருமைக் கன்றுகள் அந்த நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்குகின்றன. குலை குலையாய்க் காய்த்திருக்கும் தென்னை மரங்கள்; தார் போட்டிருக்கும் வாழை மரங்கள்; நிறையக் காய்த்திருக்கும் பாக்கு மரங்கள்; மாமரங்கள்; பனை மரங்கள்; மஞ்சள், சேம்பு, இஞ்சி முதலிய செடிகள்; இவைகள் செழிப்பாக வளர்ந் திருக்கின்றன. 8. விளைவு அறா வியன் கழனிக், கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவில் கவின் வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண் காய்ச் செந்நெல் கதிர் அருந்தும் மோட்டெருமை முழுக் குழவி கூட்டு நிழல் துயில் வதியும் கோட்டெங்கின் குலை வாழைக் காய்க் கமுகின் கமழ் மஞ்சள் 19. முதற் சேம்பின்முளை யிஞ்சி விளைவு அறா - எப்பொழுதும் விளைந்து கொண்டேயிருக்கும். வியன் கழனி - பெரிய வயல்கள் நிறைந்திருக்கின்றன. கார்க் கரும்பின் கமழ் - கருமையான கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுவதனால் வாசனை வீசுகின்ற. ஆலைத்தீ - கரும்பாலைக் களத்தில் உள்ள கொட்டில்களி லிருந்து வரும் தீயின். தெறுவின் - சூட்டினால். கவின் வாடி - அழகு கெட்டு. நீர்ச் செறுவின் - நீர் நிறைந்த வயல்களில் உள்ள. நீள் நெய்தல் பூ சாம்பும் - நீண்ட நெய்தல் மலர்கள் வாடும். புலத்து ஆங்கண் - அவ்விடத்திலே. காய்ச் செந்நெல் கதிர் அருந்தும் - விளைந்திருக்கும் செந் நெற்கதிர்களை மேயும். மோட்டு - பெரிய வயிற்றை யுடைய எருமை முழுக் குழவி - எருமையின் முதிர்ந்த கன்றுகள். கூட்டு நிழல் துயில் வதியும் - நெற் கூட்டின் நிழல்களில் தூங்கிக் கொண்டிருக்கும். கோள் தெங்கின் - குலைகளைக் கொண்டிருக்கும் தென்னை மரங்களையும். குலை வாழை - தார்போட்டி ருக்கும் வாழை களையும். காய் கமுகின் - காய்த்திருக்கும் பாக்கு மரங்களையும். கமழ் மஞ்சள் - வாசனை வீசும் மஞ்சட் செடிகளையும். இனமாவின் - பல வகையான மாமரங்களையும். இணர் பெண்ணை கொத்தாகக் காய்த்திருக்கும் பனை மரங்களையும். முதல் சேம்பின் அடியிலே கிழங்கையுடைய சேப்பஞ் செடிகளையும், முளை இஞ்சி - முளைத்திருக்கும் இஞ்சிச் செடிகளையும் அங்கே காணலாம். காவிரியாறு பாய்வதனால்தான் இத்தகைய வளங்கள் நிறைந்திருக்கின்றன என்பதே ஆசிரியர் கருத்து. நீரில்லா விடத்தில் இந்த வளங்களைக் காண்பது அரிது. சோழ நாட்டிலே எப்பொழுதும் தான்யம் விளையும். அங்கே கரும்பாலைகள் உண்டு. செந்நெல் சத்து நிறைந்த நெல்லாகும். சோழ நாட்டில் சோற்றுப் பஞ்சமே யில்லை. எங்கு பார்த்தாலும் நெற்கூடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. நெற்கூடுகளை இக் காலத்தில் சேர் என்று சொல்லுவர். வைக்கோலினாலேயே வட்ட வடிவமாய் - உயரமாய்க் கட்டி அதனுள் நெல்லைக் கொட்டி வைப்பது வழக்கம். இதற்கே சேர் என்றும் கூடு என்றும் பெயர். தென்னை, வாழை, பாக்கு, மா, பனை முதலிய மரங்களும்; மஞ்சள், சேம்பு, இஞ்சி முதலிய செடிகளும் சோழ நாடெங்கும் நிறைந்திருக்கின்றன. அந்த நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமேயில்லை. வயல்கள் எல்லாம் நீர் நிறைந்து நெய்தல் மலர்ந்திருக்கின்றன. இந்த இயற்கை உண்மைகளை பட்டினப்பாலை ஆசிரியர் பன்னிரண்டு வரிகளிலே அழகாக எடுத்துக் காட்டியிருப்பது வியக்கத் தக்கது. இவ்வாறு முதல் 19 வரிகளிலே காவிரியின் பெருமை, சோழ நாட்டின் சிறப்பு இவைகளை விளக்கிக் கூறிய புலவர் இதற்கு மேல் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார். பட்டினப்பாலை தோன்றிய காலத்தில் - அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப்பூம் பட்டினம் மிகப் பெரிய நகரமாக இருந்தது. கடற்கரை யோரத்திலே பாக்கங்கள் என்ற பெயருடன் பல தெருக்கள் இருந்தன. செம்படவர் வாழும் சேரிகள் இருந்தன. ஏழைகளுக்குச் சோறிடும் பல அன்னசாலைகள் இருந்தன. கடைத்தெரு, பண்டசாலைத் தெரு என்று தனித்தனியே இருந்தன. அந்த நகரத்தின் இடை யிடையே பல தோட்டங்கள் இருந்தன. பூஞ்சோலைகள் இருந்தன. பல பெரிய குளங்கள் இருந்தன. ஏரிகள் இருந்தன. உயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்திருந்தன. இவைகளைப் பட்டினப் பாலை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. நகரத்தில் ஆங்காங்கே பல வெட்டவெளிகள் (மைதானங்கள்) இருக்க வேண்டும். தோட்டங்களும் இளமரக்காவும் நிறைந் திருக்க வேண்டும். நகரங்களின் இடையிடையே நீரோடைகளோ ஏரிகளோ இருக்க வேண்டும். இத்தகைய நகரங்களைத்தான் நலம் கொழிக்கும் நகரமென்று கருதுகின்றனர். இத்தகைய நகரங்களிலேதான் நல்ல காற்றும் வெளிச்சமும் குடி கொண்டி ருக்கும். இன்று புதிய நகரங்களை அமைப்போர் - அல்லது நகரங்களைச் சீர்திருத்துவோர் நகரின் பல இடங்களிலும் விளையாட்டு வெளிகளும், இள மரக்காக்களும் (பார்க்) அமைக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காவிரிப் பூம்பட்டினம், சுகாதாரம் நிலவுவதற்கான எல்லா அமைப்புக் களையும் கொண்டிருந்ததென்ற உண்மையைப் பட்டினப் பாலை யால் நாம் அறியலாம். இனி அந்த நகரத்தின் அமைப்பையும், அங்குள்ள செல்வத்தையும் பற்றி பட்டினப் பாலை கூறுவதைப் பார்ப்போம். ஆற்றுச் சிறப்பும் நாட்டுச் சிறப்பும் 19 வரிகளில் முடிந்தன. இனிவருவன நகரச் சிறப்பு. பாக்கத்தின் செல்வம் கடற்கரையோரத்திலே செல்வத்திலே சிறந்த பலர் பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். இந்தப் பகுதி களுக்குப் பாக்கம் என்று பெயர். இந்தப் பாக்கங்கள் எல்லாம் காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்தவைகளே. இந்தப் பாக்கங்களின் இயல்பைப் பட்டினப்பாலை ஆசிரியர் எடுத்துக் கூறுவதைப் பாருங்கள். வரி 20 முதல் 27 வரையில் உள்ள 8 வரிகளிலே பாக்கங் களிலே வாழ்கின்ற மக்களின் செல்வச் சிறப்புக் கூறப்படுகின்றது. பெரிய வீடுகள். அந்த வீடுகளின் முற்றங்களிலே நெல் முதலிய உணவுப் பொருள்கள் காய வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உணவுப் பொருள்களைப் பறவைகள் விலங்குகள் முதலியன சேதப்படுத்தாமல் இளம் பெண்கள் காவல் காத்துக் கொண்டிருக் கின்றனர். அந்தப் பெண்கள் அழகான நெற்றியையும், கள்ளம் கபடமற்ற பார்வையையும் உடையவர்கள். சிறந்த பொன்னா பரணங்களையும் அணிந்திருக்கின்றனர். கோழிகள், காய்ந்து கொண்டிருக்கும் உணவுப் பொருள் களைக் கொத்தித் தின்ன வருகின்றன. அது கண்ட சிறுமிகள் அக் கோழிகளை அதட்டி விரட்டுகின்றனர். அவர்களின் அதட்டலுக்கு அவைகள் அஞ்சாமல் உணவுப் பொருள்களைக் கொத்திக் கொத்தி உண்ணுகின்றன. உடனே அச் சிறுமிகள் தங்கள் காதிலே அணிந்திருக்கும் கொடுங்குழை என்னும் காதணிகளைக் கழற்றி அக் கோழிகளின் மேல் வீசியெறிந்து விரட்டுகின்றனர். இவ்வாறு கோழிகளை விரட்டுவதற்காக வீசியெறியப்பட்ட பொற் குழைகள் வீடுகளின் முற்றங்களிலே குவிந்து கிடக்கின்றன. அந்த முற்றங்களிலே சிறுவர்கள் சிறு தேர் உருட்டி விளையாடுகின்றனர். அந்தச் சிறு தேர்கள் மூன்று சக்கரங் களையுடையவை. குதிரை பூட்டப்படாத தேர்கள் அவை. இக்காலத்தில் சிறுவர்கள் நடை பழகுவதற்காகச் செய்து கொடுக்கும் நடைவண்டி போல்வன. சிறுவர்கள் ஓட்டி விளையாடும் இந்தச் சிறுதேர்களை ஓடவிடாமல் அங்கே குவிந்து கிடக்கின்ற காதணிகள் - அதாவது பொற் குழைகள் தடுக்கின்றன. இப்படிச் சிறுவர்களின், சிறுதேர் ஓட்டத்தைத் தடுக்கும் பகை ஒன்றுதான் அங்குண்டு. அங்கே வாழ்கின்றவர் வேறு எந்தப் பகையையும் அறியாதவர்கள். அவர்கள் மனங் கலங்கு வதற்கான தீமைகள் எதுவுமே அங்கில்லை. இத்தகைய செல்வம் நிறைந்த பல குடும்பத்தினர் வாழ்கின்ற செழிப்புள்ள பாக்கங்கள் பல அந்தக் காவிரிப்பூம் பட்டினத்திலே இருக்கின்றன. எட்டு வரிகளிலே இவ்வளவு சிறந்த பொருளை அமைத்துக் கூறுகிறார் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 20 அகல் நகர் வியன் முற்றத்துச் சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும் கோழி எறிந்த கொடும்கால் கனங்குழை பொற்கால் புதல்வர் புரவி யின்று உருட்டும் முக்கால் சிறுதேர் முன் வழி விலக்கும் விலங்கு பகையல்லது கலங்கு பகை அறியாக் 27 கொழும் பல்குடிச் செழும்பாக்கத்து. இவைகளே அந்த வரிகள். இவற்றின் பதவுரை வருமாறு: அகல் நகர் - பெரிய வீடுகளின், வியன் முற்றத்து - பெரிய முன் வாசலிலே. சுடர்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையும். மடம் நோக்கின் - கபடற்ற பார்வையினையும் உடைய. நேர் இழை மகளிர் - அழகான ஆபரணங்களை அணிந்த இளம் பெண்கள். உணங்கு உணா கவரும் கோழி - காய்கின்ற உணவுப் பொருள் களைத் தின்னும் கோழிகளை விரட்டுவதற்காக. எறிந்த - வீசியெறிந்த. கொடும் கால் - வளைந்த கால்களையுடைய. கனம் குழை - கனமான காதணிகள். பொன்கால் புதல்வர் - அழகிய கால்களையுடைய சிறுவர்கள். புரவி இன்று உருட்டும் - குதிரையில்லாமல் கையினால் உருட்டிச் செல்லுகின்ற. முக்கால் சிறுதேர் - மூன்று சக்கரங்களையுடைய சிறிய தேர்கள். முன் வழி விலக்கும் - ஓடும் முன் வழியைத் தடுத்து நிற்கும். விலங்கு பகை அல்லது - இத்தகைய தடையான பகையைத் தவிர. கலங்கு பகை அறியா - மனங் கலங்குவதற்கான வேறு பகைமையை அறியாத. கொழும் பல் குடி - செல்வம் நிறைந்த பல குடும்பங்கள் நிறைந்த. செழும் பாக்கத்து - செழிப்பான பாக்கத்தினை யுடையது அந்தக் காவிரிப்பூம்பட்டினம். கோழிகளை விரட்டப் பெண்கள் தங்கள் காதில் அணிந்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றி வீசுகின்றனர். அந்தக் குழைகள் குவிந்து கிடக்கின்றன; அவைகள் சிறுவர்கள் உருட்டிச் செல்லும் சிறுதேர்களைத் தடுக்கின்றன; என்றதனால் பாக்கத்திலே வாழ்கின்ற மக்களின் செல்வச் சிறப்பையறியலாம். முற்றங்களிலே உணவுப் பொருள்கள் காய்கின்றன என்று கூறியிருப்பது பாக்கத்து மக்களிடம் உணவுப் பொருளும் ஏராளமாக இருந்தன என்பதைக் காட்டுகின்றது. பொன்னையும், உணவுப் பொருள்களையும் பெற்றிருக்கும் மக்களுக்குக் கவலையேது? பகையேது? அவர்கள் வாழும் பகுதியும் செழிப்பாகத்தானே இருக்கும்? பாக்கத்தில் வாழும் மக்கள் செல்வக் குடியினர் என்பதை விளக்கவே, வாசலிலே உணவுப் பொருள்கள் காய்வதையும், அவைகளைத் தின்னும் கோழிகளைப், பெண்கள் தங்கள் காதணிகளைக் கழற்றி வீசி ஓட்டுவதையும் குறிப்பிட்டார். சோலைகளும் நீர் நிலைகளும் 28 வது வரியிலிருந்து 39வது வரி வரையில் உள்ள 12 வரிகளிலே காவிரிப்பூம் பட்டினத்தின் சில சோலைகளைப் பற்றியும் நீர்நிலைகளைப் பற்றியும் காணலாம். கடற்கரைச்சோலை, பழத்தோட்டம், பூஞ்சோலை, மலர் பூத்த பல பொய்கைகள், மக்களுக்கு இன்பத்தைத் தரும் இரண்டு ஏரிகள் ஆகியவை காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்தன. இவ் வுண்மையை இந்தப் பன்னிரண்டு வரிகளிலே பார்க்கலாம். சிறிய பல கிராமங்களைக் கொண்டது சோழ நாடு. காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையிலே உப்பு விளைத்து வாழும் மக்கள், தாங்கள் விளைத்த உப்பை சிறிய ஊர்களுக்குக் கொண்டுபோய் விற்பனை செய்கின்றனர். உப்பைக் கொடுத்து அதற்குப் பதிலாக நெல்லை வாங்கிக் கொள்ளுகின்றனர். அந்த நெல்லை படகுகளிலே ஏற்றிக்கொண்டு, உப்பங்கழிகளின் வழியே வந்து, அந்தப் படகுகளை கழிகளின் கரைகளிலே வளர்ந்திருக்கும் மரங்களில் வரிசையாகக் கட்டியிருக்கின்றனர். இவ்வாறு வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் படகுகள், பந்தியிலே - அதாவது குதிரை லாயத்திலே கட்டுத் தறிகளில் வரிசையாகக் கட்டப் பட்டிருக்கும் குதிரைகளைப் போலக் காட்சியளிக்கின்றன. உப்பங்கழிகளின் கரையில் உள்ள படப்பை என்னும் சோலைகள் இவ்வாறு காட்சியளிக்கின்றன. பல தோட்டங்கள் இருக்கின்றன. அவை பார்ப்பவர் களுக்கு மன மகிழ்ச்சியை அளிப்பன. அத் தோட்டங்களிலே வளர்ந்திருக்கும், மா, பலா, வாழை, தென்னை, பாக்கு முதலிய மரங்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய பலன் கொடுத்து வருகின்றன. இந்தத் தோட்டங்களின் பக்கத்திலே பல பூஞ்சோலை களும் இருக்கின்றன. அங்கே பல பொய்கைகள் - அதாவது மலர் பூத்த தடாகங்கள் இருக்கின்றன. அத்தடாகங்களின் உயர்ந்த கரைகள் மாசு மருவற்ற வானத்திலே சந்திரனுடன் மகம் என்னும் நட்சத்திரம் சேர்ந்து விளங்குவது போலக் காணப்படுகின்றன. அந்தப் பொய்கைகளிலே பலவித வாசனை பொருந்திய பலநிற மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. இதனால் அந்தப் பொய்கைகளும் பலவித நிறங்களிலே காட்சி யளிக்கின்றன. அங்கே இரண்டு ஏரிகள் இருக்கின்றள. அவற்றில் மூழ்குவோர், இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் பெறுவார்கள்.. இவைகளைக் கூறும் அந்தப் பன்னிரண்டு வரிகளையும் பார்ப்போம். 28. குறும் பல்லூர் நெடுஞ் சோணாட்டு வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணை நிலைப் புரவியின் அணைமுதல் பிணிக்கும் கழிசூழ் படப்பைக் கலி யாணர்ப் பொழில்; புறவில் பூந்தண்டலை; மழை நீங்கிய மாவிசும்பின் மதி சேர்ந்த மக வெண்மீன் உருகெழுதிறல் உயர் கோட்டத்து முருகமர்பூ முரண் கிடக்கை வரியணி சுடர் வான் பொய்கை; 39. இருகாமத்து இணையேறி; இவைகள்தாம் அந்தப் பன்னிரண்டு வரிகள். இவற்றின் பதப் பொருளைப் பார்ப்போம். நெடும் சோணாட்டு - பெரிய சோழ நாட்டிலே உள்ள. குறும் பல் ஊர் - சிறிய பல ஊர்களுக்கும் சென்று வெள்ளை உப்பின் - வெண்மையான உப்பின். கொள்ளை சாற்றி - விலையைக் கூறிக் கொடுத்து (அதற்குப் பதிலாகப் பெற்ற) நெல்லொடுவந்த - நெல்லை ஏற்றிக் கொண்டு வந்த. வல்வாய்ப் பஃறி - வலிமை பொருந்திய படகுகள், பணை நிலைப் புரவியின் - லாயத்திலே கட்டப்பட்டு நிற்கின்ற குதிரைகளைப் போல. அணை முதல் பிணிக்கும் - கரையிடத்திலே உள்ள மரங்களிலே கட்டப்பட்டிருக்கும். கழிசூழ் படப்பை - உப்பங்கழிகளைச் சுற்றி வளர்ந்திருக்கும் சோலைகளும். கலி - பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியும். யாணர் - புதிய வருமானமும் கொடுக்கின்ற. பொழில் - தோட்டங்களும். புறவில் - அவைகளில் பக்கங்களிலே. பூ தண்டலை - பல பூஞ்சோலைகளும். மழை நீங்கிய - மேக சஞ்சாரமற்ற. மா விசும்பின் - பெரிய வானத்திலே. மதிசேர்ந்த மக வெண்மீன் - சந்திரனுடன் சேர்ந்திருக்கும் மக நட்சத்திரத்தின். உரு கெழு - தோற்றத்தை ஒத்த. திறல்உயர் கோட்டத்து - வலிமையும் உயர்வும் உள்ள கரையினையும். முருகு அமர் பூ - வாசனை பொருந்திய மலர்கள். முரண் கிடக்கை - பலவகையாகப் பூத்துக் கிடப்பதனால். வரி அணி சுடர் - பல அழகுடைய நிறங்களுடன் காணப்படும். வான் பொய்கை - பெரிய தடாகங்களும். இரு காமத்து - இம்மை மறுமையாகிய இரண்டு இன்பங் களையும் தரும். இணை ஏரி - இரண்டு ஏரிகளும் அங்கேயிருந்தன. உப்பைக் கொடுத்து அதற்கு மாறாக நெல்லைப் பெற்றனர் என்பதனால் பண்டைக் காலத்தில் பண்டமாற்று வியாபாரமே நடைபெற்றதென்பதை அறியலாம். ஒரு பண்டத்தைக் கொடுத்து அதற்கு மாற்றாக மற்றொரு பண்டத்தைப் பெறுவதே பண்ட மாற்றுதலாகும். பழத் தோட்டங்கள் பயிர் செய்து அவைகளின் மூலம் வருமானம் பெறும் வழக்கம் பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. நகரங்களின் நடுவிலே வளர்க்கப்படும் தோட்டங்கள் பெரும்பாலும் வருமானம் தரும் மரங்களைக் கொண்டதாகவே இருந்தன. இந்த உண்மையை யாணர்ப் பொழில் என்ற பட்டினப்பாலைச் சொற்றொடர் விளக்கிக் காட்டுகின்றது. யாணர்ப்பொழில் - புதிய வருவாய்களையுடைய தோட்டங்கள். மலர்ப்பொய்கைதான் மகிழ்ச்சியளிக்கக் கூடியவை. ஆதலால் நகரின் உள்ள பொய்கைகளில் பல மலர்களையும் வளரும்படிச் செய்தனர் மக்கள். இந்த மலர்கள் வாசனை வீசி மனதிற்கு மகிழ்ச்சியையும் பல நிறங்களைக் காட்டிக் கண்ணுக்குக் காட்சி யையும் தந்தன. இத்தகைய பெரிய தடாகங்கள் நகரங்களின் நடுவிலே ஆங்காங்கே அமைந்திருந்தால் அந்த நகரங்களின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமோ! காவிரிப்பூம்பட்டினத்திலே, சோம குண்டம், சூரிய குண்டம் என்ற இரண்டு பெரிய நீர் நிலைகள் இருந்தனவாம். அவற்றிலே மூழ்கி அவற்றின் கரையிலே உள்ள காமவேல் (மன்மதன்) கோட்டத்தை வணங்கும் தம்பதிகள் இம்மை யின்பத்தைத் தவறாமல் துய்ப்பார்களாம். இறந்த பின்னும் சுவர்க்கத்திலே போய் இன்பந்துய்ப்பார்களாம். இது சிலப்பதி காரத்திலே காணப்படுகின்றது. பட்டினப்பாலையிலே குறிப்பிட்டுள்ள இரு காமத்து இணையேறி என்பதும் இந்த இரண்டு குண்டங் களைத்தான் குறிக்கின்றன என்று எண்ண இடம் உண்டு. சோறு சமைக்கும் இடங்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே சோற்றுப் பஞ்சம் இல்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் சோறிட்டுப் பசி தணிக்கும் இடங்கள் பல இருக்கின்றன. அவைகள் இலவசமாகச் சோறிடும் இடங்கள். சோறிடுவோர் புகழையும், புண்ணியத்தையும் அடை கின்றனர். காவிரிப்பூம்பட்டினத்தில் ஓய்வில்லாமல் ஏராளமாகச் சோறு சமைத்துப் போடுவோர் பலர் உண்டு. சோறு சமைக்கும் இடங்கள் பல இருக்கின்றன. இதனைப் பதினோரு வரிகளிலே கடியலூர் உருத்திரங் கண்ணனார் எழுதிக் காட்டுகிறார். 40 முதல் 50 வரையில் உள்ள 11 வரிகளிலே காவிரிப்பூம் பட்டினத்தில் நடைபெறும் அன்னதானச் சிறப்புக் கூறப்படுகின்றது. மிகப் பெரிய சமையல் வீடுகள். சமையல் வீடுகளை அட்டிற் சாலைகள் என்று கூறுவர். இந்தச் சமையல் வீடுகளைச் சுற்றிலும் மதிற் சுவர் உண்டு. அந்தச் சுவர்களிலே இலக்குமியின் உருவங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த மதிற் சுவரின் வாசற்கதவுகள் பல பலகைகளை இணைத்துப் பலமுடையதாகச் செய்யப்பட்டவை. அந்தக் கதவுகளிலே புலியுருவம் செதுக்கப் பட்டிருக்கின்றன. இத்தகைய சுற்றுப்புறச் சுவர்களுக்குள்ளே தான் பலர் புகழ்ந்து பேசுவதற்கும், தருமந் தழைப்பதற்கும் இடமான அட்டிற் சாலைகள் அமைந்திருக்கின்றன. அங்கே சமைக்கும் சோற்றிலிருந்து வடிக்கப்பட்ட கஞ்சி ஆறு போலத் தெருவிலே ஓடுகின்றது. அந்த இடத்திலே காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகள் அந்தக் கஞ்சியாற்றிலே ஒன்றையொன்று முட்டியும் தள்ளியும், முன்னும் பின்னும் ஓடியும் சண்டை போடுவதனால் அந்தக் கஞ்சி மண்ணோடு கலந்து சேறாகி விடுகின்றது. அந்தச் சேற்றிலே குதிரை பூட்டிய தேர்கள் ஓடுகின்றன. அதனால் சேறு காய்ந்து புழுதியாகி விடுகின்றது. அந்தப் புழுதி மேலே பறந்து, பலவேறு வகையான சித்திரங்கள் எழுதப் பட்டிருக்கும் வெண்மையான அரண்மனையின்மேல் படிந்து அழுக்கடையச் செய்கிறது. இப்படி அழுக்கடைந்து நிற்கும் அரண்மனை சாம்பலில் படுத்துப் புரண்டு எழுந்து நிற்கும் யானையைப் போல் காணப்படுகின்றது. இது அந்தப் பதினோரு வரிகளிலே அடங்கியுள்ள செய்தி. அந்த வரிகள் கீழ் வருவன:- 40. புலிப் பொறிப் போர்க் கதவின் திருத்துஞ்சும் திண் காப்பின், புகழ் நிலைஇய மொழி வளர அறம் நிலைஇய அகன் அட்டில், சோறு வாக்கிய கொழும் கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி, ஏறு பொரச் சேறு ஆகி தேர் ஓடத் துகள் கெழுமி நீறாடிய களிறு போல வேறு பட்டவினை ஓவத்து 50. வெண் கோயில் மாசு ஊட்டும். புலிப்பொறி - புலியின் அடையாளம் செதுக்கப்பட்டு. போர்க் கதவின் - பலகை களை இணைத்துச் செய்யப்பட்ட கதவினையும். திரு துஞ்சும் - இலக்குமியின் உருவம் எழுதப் பட்டிருக்கும். திண் காப்பின் - உறுதியான காவலையுடைய மதிற் சுவரையும் பெற்று. புகழ் நிலைய மொழி வளர - புகழ் பெருகி அறம் நிலைய - அறந்தழைத்த. அகன் அட்டில் - பெரிய சமையலிடங்களிலே. சோறுவாக்கிய - சோற்றிலிருந்து வடித்த. கொழும் கஞ்சி- நிறைந்த கஞ்சி. யாறு போலப் பரந்து ஒழுகி - ஆற்றைப் போலத் தெருவிலே பரவி ஓடியிருக்கும். ஏறு பொர - அங்கே காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டை செய்வதனால். சேறு ஆகி - அந்தக் கஞ்சி மண்ணோடு கலந்து சேறாகிவிட. தேர் ஓட - அந்தச் சேற்றின் மேல் தேர்கள் ஓடுவதனால். துகள் கெழுமி - அது புழுதியாகி நிறைந்து. நீறு ஆடிய களிறு போல - சாம்பலைப் பூசிய யானையைப் போல் காணப்படும்படி. வேறுபட்ட - பலவேறு வகையான. வினை ஓவத்து - சிறந்த சித்திரங்கள் அமைந்த. வெண் கோயில் - வெண்மை நிறமுள்ள அரண்மனையை. மாசு ஊட்டும் - அழுக்கடையச் செய்யும். இந்தப் பதினோரு வரிகளிலிருந்து பல செய்திகளை நாம் அறியலாம். கதவுகளிலே புலி உருவம் செதுக்கும் வழக்கம் உண்டு. மதிற் சுவர்களில் இலக்குமியின் உருவம் எழுதி வைப்பார்கள். அன்னதானத்தினால் இம்மையில் புகழ் உண்டு. அது சிறந்த அறமும் ஆகும். உழவுக்கும், வண்டியில் பூட்டி ஓட்டுவதற்கும் பயன்படும் காளைகள் பல உண்டு. குதிரை பூட்டி ஓட்டும் தேர்கள் ஏராளமாக இருந்தன. அரண்மனைச் சுவர்களில் எங்கும் சிறந்த ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. இத்தகைய ஓவியங்கள் உட்புறமும் உண்டு. வெளிப்புறமும் உண்டு. மாட்டுக் கொட்டில் அந்த நகரத்தில் பல மாட்டுக் கொட்டில்கள் இருந்தன. இதனை இரண்டு வரிகளில் காணலாம். காளை மாடுகளையும், பசுக்களையும் பெருஞ் செல்வமாகக் கருதினர் பண்டை மக்கள். பசு உணவுச் சத்துள்ள பாலைத் தந்து மக்களை பாதுகாக்க உதவி செய்வன. காளைகளோ ஏரில் பூட்டி உழவும், வண்டியிற் பூட்டி ஓட்டவும்; ஏறிச் சவாரி செய்யவும், வாணிகம் செய்வதற்கான பண்டங்களை ஏற்றிக் கொண்டு செல்லவும் பயன்பட்டன. பண்டங்களைச் சுமந்து செல்லும் மாடுகளுக்குப் பொதி மாடுகள் என்று பெயர். ஆகையால் காளை மாடுகளைக் கவனிப்புடன் வளர்த்து வந்தனர் முன்னோர். பெரிய எருதுகள் - காளைகள் - கட்டப்பட்டிருக்கும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டிடங்களின் முற்றங்கள் அகலமானவை. அந்த முற்றங்களிலே நல்ல தண்ணீருள்ள கிணறுகளும் அமைந்திருக்கின்றன. இச் செய்தி 51, 52 ஆகிய இரண்டு வரிகளிலே சொல்லப் படுவது. 51. தண் கேணித் தகை முற்றத்து 52. பகட் டெருத்தின் பல சாலை தண்கேணி தகை - குளிர்ந்த கிணறுகள் பொருந்திய. முற்றத்து - முற்றங் களையுடைய. பகடு எருத்தின் - பெரிய காளைகள் கட்டப்பட்டிருக்கின்ற. பல சாலை - பல கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. மாடுகள் அருந்துவதற்கு நன்னீர் வேண்டும். இதற்காகவே மாடு கட்டும் இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்கும் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வேண்டும். ஆகையால் மாடு கட்டும் இடங்களில் விசாலமான முற்றங்கள் இருந்தன. தவப்பள்ளியும், வேள்விச் சாலைகளும் இன்னும் அந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே சமணர்கள்- புத்தர்கள் தவம் செய்யும் இடங்கள் பல இருந்தன. வேத முறைப்படி யாகங்கள் செய்யும் முனிவர்களின் ஆசிரமங்கள் பல இருந்தன. இதனை 53 முதல் 58 வரையில் உள்ள 6 வரிகளிலே காணலாம். சமணர்களும், புத்தர்களும் தங்கியிருந்து தவம் செய்யும் இடங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தங்கித் தவம் புரியும் இடங்களுக்குப் பள்ளிகள் என்று பெயர். பல சோலைகளிலே தங்கியிருக்கும் முனிவர்கள் தீ மூட்டி வேள்வி செய்கின்றனர். அந்த வேள்விக் குண்டத்திலிருந்து எழும்பும் புகையைக் கண்டு ஆண் குயில்கள் பயந்தன. அந்தப் பயம் காரணமாக அவைகள் தம் பெடைகளுடன் அந்தச் சோலைகளை விட்டுப் புறப்பட்டு விட்டன. அவைகள் வேறு புகலிடங் காணாமல் பூதங்கள் காத்துக் கொண்டிருக்கும் பாழடைந்த கட்டிடத்தை அடைந்தன. அந்தக் கட்டிடத்திற்குள் வேறு யாரும் போக முடியாது. அதற்குள்ளே தூதுணம் புறாக்கள் இருந்தன. அவைகளுடன் இந்தக் குயில்களும் ஒரு புறத்திலே தங்கியிருந்தன. 53. தவப்பள்ளித்; தாழ் காவின் அவிர் சடைமுனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை முனைஇ குயில் தம் மாயிரும் பெடையொடு இரியல் போகிப் பூதம் காக்கும் புகல் அரும் கடிநகர்த் 58. தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும். இவைகளே மேலே கண்ட பொருளடங்கிய வரிகள். இவற்றின் பதப்பொருள் வருமாறு:- தவம் பள்ளி - சமணர்களும், புத்தர்களும் தவம் செய்யும் பள்ளிகள் பல இருந்தன. தாழ்காவின் - தாம் தங்கியிருக்கும் சோலைகளிலே. அவிர்சடை முனிவர் - ஒளி விடுகின்ற சடையையுடைய முனிவர்கள். அங்கி வேட்கும் - நெருப்பிலே யாகம் செய்கின்ற. ஆவுதி நறும்புகை - பலியினால் மேலெழும்பும் வெண்மையான புகையை. முனைஇ - முன்னே கண்டு அஞ்சி. குயில்தம் மாயிரும் பெடையொடு - ஆண் குயில்கள் தமது கூட்டமான பெண் குயில்களுடன், இரியல் போகி - அந்தச் சோலையைவிட்டுப் பறந்தோடி. பூதம் காக்கும் - பூதங்கள் காத்துக் கொண்டிருப்ப தனால். புகல் அரும் - மற்றவர்கள் புகுவதற்கு முடியாத. கடி நகர் - பாதுகாப்புள்ள பாழும் கட்டிடத்துள் புகுந்து. தூதுணம் புறவொடு - அங்கே தங்கியிருக்கின்ற தூதுணம் புறாக்களுடன். துச்சில் சேக்கும் - ஒரு பக்கத்திலே தாமும் வசிக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப்பூம் பட்டினத்தில், சமண மதத்தினர், புத்த மதத்தினர், இந்து மதத்தினர் ஆகியோர் வாழ்ந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததில்லை. மத ஒற்றுமை நிலவியிருந்தது. மத வெறுப்பும், மதக் கொடுமையும் அந்நாளில் இருந்ததில்லை. இந்த உண்மையை இந்த ஆறு வரிகளின் மூலம் அறியலாம். பாழடைந்த கட்டிடங்களிலே பேய் உண்டு; பூதம் உண்டு; அங்கே போனால் ஆபத்து என்று நம்பும் மூட நம்பிக்கை அக்கால மக்களிடமும் உண்டு என்பதையும் இவ் வரிகள் நமக்குக் கூறுகின்றன. சமண சந்நியாசிகள், புத்த சந்நியாசிகள் தங்கியிருக்கும் இடங்களுக்குப் பள்ளிகள் என்று பெயர். அவர்கள் அங்கிருந்து கொண்டு மக்களுக்குத் தங்கள் மதக் கொள்கைகளை எடுத்துரைப் பார்கள். இதை ஒட்டித்தான் இப்பொழுது கல்வி போதிக்கும் இடங்களுக்கும் பள்ளி என்ற பெயர் வழங்குகின்றது. வடமொழி வேத முறைப்படி வேள்விச் செய்யும் ரிஷிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் குடியேறியிருந்தனர். அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் உறைந்து வேள்விகள் செய்து கொண்டிருந்தனர். இந்த உண்மையையும் பட்டினப்பாலையால் அறியலாம். செம்படவர் விளையாட்டு காவிரிப்பூம்பட்டினத்திலே, குப்பங்களிலே வாழ்கின்ற செம்படவர்கள் வறுமையறியாதவர்கள்; கவலையறியாதவர் கள்; உண்டு, உடுத்து உள்ளக் களிப்புடன் ஓய்வு நேரங்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் குதூகலமாகப் பொழுதுபோக்கும் குண முடையவர்கள். இதனை 59 முதல் 74 வரையில் உள்ள 16 வரிகளிலே காணலாம். செம்படவர்கள் வாழும் குப்பங்களை அடுத்துப் போர்க் களங்கள் இருக்கின்றன. அந்தப் போர்க்களங்களிலே நெடு நாட் பட்ட முது மரங்கள் இருக்கின்றன. செம்படவர்கள் குடியிருக்கும் குப்பங்கள், நீரோடி யதனால் வரிவரியாகக் கருமணல்கள் படிந்திருக்கின்ற பெரிய திட்டுக்களிலே அமைந்திருக்கின்றன. அங்கு வசிக்கும் செம்படவர்களுக்கு உறவினர்கள் நிறைய உண்டு; சுற்றத்தினரும் ஏராளமாக உள்ளனர். அவர்கள் சோம்பேறிகள் அல்லர். பாடுபட்டு வேலை செய்யக்கூடிய பாட்டாளிகள். அவர்கள் கடலிலே பிடித்த இறாமீனைச் சுட்டுத் தின்றும், வயலிலே பிடித்த ஆமையை வேகவைத்துத் தின்றும் மகிழ்ச்சி யடைகின்றனர். இதன் பிறகு வறண்ட நிலத்திலே தோன்றிய அடப்ப மலர் மாலைகளைத் தரித்துக் கொண்டும், நீரிலே மலர்ந்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்துச் சூடியும் அவர்கள் அந்த இடங்களிலே கூடியிருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் பலர் ஒன்று கூடியிருக்கும் தோற்றம், வானத்திலே வலப்புறமாகத் திரியும் நட்சத்திரங்களோடு கூடிய கிரகங்களைப் போலக் காணப்படுகின்றது. அவர்கள் கையோடு கை பிணைந்தும், ஆயுதங் கொண்டு தாக்கியும், உடம்போடு உடம்பு தழுவியும் மிகவும் கோபத்துடன் ஒருவர்க்கொருவர் சளைக்காமல் பெரிய சண்டை செய்கின்றனர். அவர்கள் எல்லோரும் பலசாலிகள்; ஒருவரை ஒருவர் வெல்ல முடியவில்லை. ஆகையால் விலகி நின்று கவண் கல் வீசி அடித்துக் கொள்ளுகின்றனர். இந்தக் கவண் கல் வீச்சைக் கண்டு, பசுமையான பனைமரங்களின் மேலிருந்த பறவைகள் அஞ்சிப் பறந்தோடுகின்றன. 59. முது மரத்த முரண் களரி வரி மணல் அகன் திட்டை இரும்கிளை இனன் ஒக்கல் கருந் தொழில் கலி மாக்கள், கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும் வறள் அடும்பின் மலர் மலைந்தும் புனல் ஆம்பல் பூச்சூடியும், நீல்நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு நாண் மீன் விராய கோண் மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇப், கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப் பெரும் சினத்தால் புறக் கொடாது இரும் செருவின் இகல் மொய்ம்பினோர், கல் எறியும் கவண் வெரீஇப் 74. புள் கிரியும் புகர்ப் போந்தை; முது மரத்த முரண் களரி - பழைய மரங்கள் அமைந்த போர்க்களங்களின் பக்கத்திலே. வரி மணல் - வரியாகக் கருமணல் படிந்திருக்கின்ற. அகன் திட்டை - அகலமான திட்டுக்களிலே (வாழ்கின்ற) இரும்கிளை - மிகுந்த உறவினர் களையும். இனன் ஒக்கல் - கூட்டமான சுற்றத்தினரையும் உடைய. கரும் தொழில் - வலிமையுடன் தொழில் செய்யும். கலி மாக்கள் - செம்படவர்கள். கடல் இறவின் - கடல் இறாமீனின். சூடு தின்றும் - சுட்ட மாமிசத்தைத் தின்றும். வயல் ஆமை - வயல் ஆமையின். புழுக்கு உண்டும் - வேக வைத்த இறைச்சியை உண்டும். வறள் அடும்பின் - வறண்ட நிலத்திலே வளர்ந்திருக்கும் அடம்பின். மலர் மலைந்தும் - மலரைச் சூடியும். புனல் ஆம்பல் பூ சூடியும்- நீரிலே மலர்ந்திருக்கும் அல்லி மலரைப் பறித்து அணிந்தும். நீல்நிற விசும்பின் - நீலநிறமுள்ள வானத்திலே. வலன் ஏர்பு திரிதரும் - வலமாக எழுந்து சுற்றி வருகின்ற. நாண்மீன் விராய - நட்சத்திரங்களோடு கலந்த. கோள்மீன்போல - கிரகங்களைப் போல, மலர்தலை மன்றத்து - பெரிய இடமான மன்றத்திலே. பலர் உடன் குழீஇ - பலர் ஒன்று சேர்ந்து (நின்றனர்) கையினும் - அவர்கள் கையோடு கை பிணைத்தும், கலத்தினும் - ஆயுதத்தோடு ஆயுதந் தாக்கியும். மெய் உறத் தீண்டி - உடம்போடு உடம்பு பொருந்தக் கட்டிப் புரண்டும். இரும் சினத்தால் - பெரிய கோபத்துடன், புறம் கொடாது - தோல்வி யில்லாமல். இரும் செருவில் - பெரிய சண்டையில். இகல் மொய்ம்பினோர் - மிகுந்த வலிமையைக் காட்டு வாராயினர். கல்எறியும் - அவர்கள் கல் வீசுகின்ற. கவண் வெரீஇ - கவுண்டியைக் கண்டு பயந்து. புள் இரியும் - பறவைகள் நீங்குகின்ற. புகர்ப் போந்தை - பசுமையான பனை மரங்களும் அங்கே இருந்தன. செம்படவர்களுக்கு இறாமீனும், ஆமையும் முக்கியமான உணவு. அவர்கள் அடப்ப மலரையும், அல்லி மலரையும் பறித்துச் சூட்டிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் உடல் பலத்தை வளர்த்துக் கொள்ள அடிக்கடி சண்டை செய்து பழகுவார்கள். ஆயுதங் கொண்டு போர் செய்யவும் அவர்களுக்குத் தெரியும். ஆயுதமின்றி உடல் வலிமையால் யுத்தம் செய்யவும் அவர்களுக்குத் தெரியும். ஆயுதமின்றிச் செய்யும் போருக்கு முஷ்டியுத்தம் என்று பெயர். இப்பொழுது அதை குதி என்று கூறுகின்றனர். புறச்சேரி செம்படவர் குப்பங்களைத் தவிர வேறு பல சேரிகளும் இருக்கின்றன. சேரி என்பது சேர்ந்து வாழும் இடம். பலர் சேர்ந்து வசிக்கும் இடத்திற்குச் சேரி என்று வழங்கினர் முன்னோர். திட்டச்சேரி, பெருஞ்சேரி, புதுச்சேரி என்ற பெயர் களுடன் இன்னும் தமிழ்நாட்டிலே பல ஊர்கள் இருக்கின்றன. வேளாளர்கள் வாழும் இடத்தை வேளாளர் சேரி என்றும், அந்தணர்கள் வாழும் இடத்தை அந்தணர்சேரி என்றும், பாணர்கள் வாழும் இடத்தைப் பாணர்சேரி என்றும் பெயரிட்டு வழங்கினர். இக் காலத்தில் தமிழ் நாட்டில் சேரி என்று தனியாகக் கூறினால் அது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடத்தைக் குறிப்பிடுகின்றது. சேரி என்ற பெயர் எப்படி இவ்வாறு ஒரு சாதியினர் வாழும் இடத்திற்கு மட்டும் பெயராக வழங்கிற்று என்பதற்கான காரணத்தை ஒருவாறு நாம் தெரிந்து கொள்ளலாம். நகருக்கு - அல்லது ஊருக்குப் புறமாக ஒரு சிலர் சேர்ந்து வாழும் இடங்களைப் புறஞ்சேரி, புறச்சேரி என்ற சொற்களைச் சங்க நூல்கள் பலவற்றிலே காணலாம். பட்டினப்பாலையிலும் புறச்சேரி என்ற சொல் வழங்கியிருக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பழங்குடி மக்கள் பலர் தமிழ் நாட்டிலே ஊருக்குப் புறத்திலே ஒதுக்கப்பட்டுத் தனித்து வாழ்கின்றனர். இவர்களைப் பள்ளர்கள் - பறையர்கள் - என்ற பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இவர்கள் வாழும் இடங் களைப் பொதுவாகப் பறைச் சேரி என்று கூறி வருகின்றனர். ஊருக்குப் புறங்களிலே இருக்கின்ற காரணத்தால் முதலில் புறச்சேரி என்ற பெயர் வழங்கியிருக்க வேண்டும். இதன் பிறகு நாளடைவில் புறம் என்பது மாறி சேரி என்ற பெயரால் மட்டும் இந்த இடங்களை அழைத்திருக்க வேண்டும். ஊருக்குப் புறத்திலே வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். ஆகையால் அவர்கள் வாழும் இடங்களுக் கெல்லாம் சேரி என்ற பெயரே பொதுப் பெயராக வழங்கத் தொடங்கிவிட்டது. புறச்சேரியின் சிறப்பை மூன்று வரிகளிலே மொழிந் திருக்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர். குப்பங்களின் பக்கத்திலே இந்தச் சேரிகள் இருக் கின்றன. 75 முதல் 77 வரையில் உள்ள மூன்று வரிகளும் சேரியின் இயல்பைக் கூறுகின்றன. புறச்சேரியிலே குட்டிகளுடன் பன்றிகள் பல திரிந்து கொண்டிருக்கின்றன. பல கோழிகள் மேய்ந்து கொண்டிருக் கின்றன. அங்கே பெரிய கிணறுகள் இல்லை. சிறிய உறை கிணறுகள்தான் இருக்கின்றன. அங்கே செம்மறி ஆட்டுக் கிடாய்களும், கௌதாரிப் பறவைகளும் விளையாடிக் கொண்டி ருக்கின்றன. 75. பறழ்ப் பன்றிப், பல் கோழி உறை கிணற்றுப் புறச் சேரி, 77. மேழகத் தகரொடு சிவல் விளையாட; பறழ்ப் பன்றி - குட்டிகளோடு கூடிய பன்றிகளும், பல் கோழி - பல வகையான கோழிகளும். உறை கிணற்று - உறை கிணறுகள் உள்ள. புறச்சேரி - புறச்சேரியிலே திரிந்து கொண்டிருக்கும். மேழகத் தகரொடு - செம்மறி ஆட்டுக் கடாக்களுடன். சிவல் - கௌதாரிப் பறவைகளும். விளையாட - அங்கே விளையாடும்படி இருந்தன. உறை என்பது வட்டமாகத் தொட்டிபோல் குயவனால் செய்யப்பட்டுச் சூளையிலே வைத்துச் சுட்டு எடுக்கப் பட்டது. மண்ணால் செய்து சுடப்பட்ட இந்த உறைகளை, அடியிலிருந்து மேல் மட்டம் வரையிலும் அடுக்கிக் கட்டப்பட்டிருக்கும் கிணறுகளுக்கு உறை கிணறுகள் என்பது பெயர். தமிழ் நாட்டிலே இத்தகைய உறை கிணறுகள் ஒவ்வொரு ஊர்களிலும் உண்டு. இன்றும் இத்தகைய உறை கிணறு கட்டுவோர் உண்டு. கல்லால் கிணறு கட்டுவதைவிட இவ்வித உறைகளைக் கொண்டு கட்டும் கிணறு குறைந்த செலவில் முடியும். கிராமங்களில் ஏழைகள் குடி தண்ணீருக்காக இவ்வித உறை கிணறு கட்டும் வழக்கம் இன்னும் உண்டு. இத்தகைய உறை கிணறுகளும் சோழ நாட்டில்தான் அதிகம். பெரும்பாலும் ஏழை மக்கள் வாழும் இடங்களில்தான் பன்றி, கோழி, ஆடு முதலியவைகளைக் காணலாம். இங்கே கூறப்பட்டிருக்கும் புறச்சேரியின் இயல்பைக் கொண்டே அவைகள் ஏழை மக்கள் வாழும் இடங்கள் என்பதை அறியலாம். ஆகவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேரி என்னும் பெயர் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வாழும் பகுதி களைக் குறிக்கும் பெயராக மாறிவிட்டது என்பதற்குப் பட்டினப் பாலையே சான்றாகும். சங்கமுகத்தின் சிறப்பு காவிரி கடலோடு கலக்கும் இடத்திற்கு சங்கமுகத் துறை என்று பெயர். சங்கமுகம் என்றால் கலக்கும் இடம் என்று பொருள். இந்த இடத்திலே நீராடுவதனால் பாபம் கழியும்; புண்ணியம் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கை. இன்றும் சங்கமுக நானம் என்று சொல்லி அமாவாசை தினங்களில் மக்கள் காவிரிப்பூம்பட்டினத்திற்கு யாத்திரை போகின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் காவிரி கடலொடு கலக்குமிடத்திலே திரளான மக்கள் சென்று நீராடுகின்றனர். சித்திரை மாதப் பௌர்ணமியிலும் இவ்வாறு செய்கின்றனர். இந்தக் காவிரித் துறையின் அமைப்பையும் சிறப்பையும் பட்டினப்பாலை ஆசிரியர் பாராட்டிக் கூறியிருக்கிறார். அதனைக் கீழே காண்போம். காவிரித் துறையின் பக்கத்திலே பல சிறிய குடிசைகள் இருக்கின்றன. அந்தக் குடிசைகளில் நீண்ட தூண்டில் கோல்கள் சார்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சி, வீரர்களின் பொருட்டு நடப்பட்டிருக்கும் கல்லுக்குக் காவலாக வேற்படைகளை வரிசையாக ஊன்றி அவைகளின் தலைகளிலே கேடயங் களைக் கவிழ்த்து வைத்திருப்பது போல் காணப்படுகின்றது. இந்தக் குறுங் குடிசைகளுக்கு இடையிலே வெண் மணல் நிறைந்த இடத்திலே மீன் பிடிக்கும் வலைகள் காய்கின்றன. அவை களங்கமுடைய சந்திரனைப் போல் காட்சியளிக்கின்றன. இந்த இடத்திலே, விழுதுடைய தாழஞ் செடிகளின் கீழே மலர்ந்திருக்கின்ற வெண் கூதாள மலரால் கட்டப்பட்ட மாலையை அணிந்த செம்படவர்கள் சுறாமீனின் கொம்பை நட்டனர். அந்தச் சுறாமீனின் கொம்பிலே கடற் தெய்வமாகிய வருணன் வந்திருப்பதாக எண்ணினர். அவர்கள் தாழை மலர்களை அணிந்து கொண்டும், பனங்கள்ளை அருந்தியும், தங்கள் பெண்டிருடன் மகிழ்ந்து கூத்தாடினர். அவர்கள் மீன் பிடிக்கும் பொருட்டுக் கடல் மேற்செல்லாமல் முழு நிலவுள்ள பௌர்ணமி நாளிலே உண்டும் விளையாடியும் மகிழ்ந்தனர். அந்த இடத்திலே புலால் நாற்றம் வீசும் மணல் வெளி உண்டு. காவிரி கடலோடு ஒன்றுபட்டுக் கலக்கும் தோற்றம், மலையைத் தழுவிய மேகத்தைப் போலவும் தாயின் மார்பைத் தழுவிய குழந்தையைப் போலவும் காணப்படுகின்றது. ஓவென்ற கடலோசையும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கே மக்கள் தங்கள் தீமைகளைப் போக்கிக் கொள்ளக் கடலாடுவர். கடலாடிய அழுக்கை நீக்கிக் கொள்ள வேற்று நீரில் குளிப்பர். பின்னர் நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், அலை கடலிலே விளையாடியும், மணலிலே பதுமை செய்து விளை யாடியும், ஐம்பொறிகளும் மயங்கி அன்பு தணியாதவராய்ப் பகற்பொழுதிலே விளையாடுவர். இத்தகைய காவிரித்துறை பார்ப்பதற்கு அருமையான சுவர்க்கத்தைப் போல இருக்கின்றது. 78 முதல் 105 வரையுள்ள 28 வரிகளிலே இச் செய்திகள் கூறப்படுகின்றன. 78. கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண்போல நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய, குறும் கூரைக் குடிநாப்பண், நிலவடைந்த இருள் போல 83. வலை உணங்கும் மணல் முன்றில். எஃகு ஊன்றி - வேல்களை நட்டு. கிடுகு நிரைத்து - அந்த வேல்களின் தலையிலே கேடயங்களை வரிசையாக வைத்து. நடுகல்லின் - வீரர்களின் நினைவாக நட்டிருக்கும் கல்லுக்கு. அரண்போல - காவல் ஏற்படுத்தியிருப்பதுபோல. நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய - நீண்ட தூண்டி முள்ளோடு கூடிய கோலைச் சார்த்தியிருக்கின்ற. குறும் கூரை குடி நாப்பண் - சிறிய கூரை வேய்ந்த குடிசைகளின் நடுவிலே. நிலவு அடைந்த இருள் போல - சந்திரனைச் சேர்ந்திருக்கின்ற களங்கத்தைப் போல. வலைஉணங்கும் - மீன் பிடிக்கும் வலை காய்ந்து கொண்டிருக் கின்ற. மணல் முன்றில் - மணல் நிறைந்த வீட்டின் முன்னிடங்கள் இருக்கின்றன. வெண்மையான மணலின் மேல் அழுக்கேறிய வலைகள் காய்கின்றன. இதனை மாசு நிறைந்த மதிக்கு ஒப்பிட்டிருக்கும் இயற்கை உவமை பாராட்டத் தக்கது. 84. வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர் சினைச் சுறவின் கோடு நட்டு 87. மனைச் சேர்த்திய வல் அணங்கினான். வீழ்த்தாழைத்தாள் - விழுது பொருந்திய தாழையின் அடியிலே. தாழ்ந்த வெண்கூதாளத்து - கீழே மலர்ந்திருக்கின்ற வெண் கூதாள மலரின். தண் பூங்கோதையர் - குளிர்ந்த பூமாலை அணிந்தவர்கள். சினைச்சுறவின் கோடு நட்டு - சினை பொருந்திய சுறா மீனின் கொம்பை நட்டு - மனைச் சேர்த்திய - அந்தச் சுறாக் கொம்பை மனையாக ஆக்கி அதிலே சேர்க்கப்பட்ட. வல் அணங்கினான் - வலிய தெய்வத்தன்மை பொருந்திய வருணன் பொருட்டு. 88. மடல்தாழை மலர் மலைந்தும், பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும், புன்தலை இரும்பரதவர் பைம்தழை மாமகளி ரொடு, பாயிரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது 93. உவவு மடிந்து உண்டாடியும். மடல் தாழை மலர் மலைந்தும் - மடலையுடைய தாழை மலரைச் சூடியும். பிணர் பெண்ணை - கரடு முரடாக இருக்கின்ற பனை மரத்தின். பிழி மாந்தியும் - கள்ளை அருந்தியும். புன்தலை - சிவந்த தலை மயிரையுடைய. இரும்பரதவர் - கூட்டமான செம்படவர்கள். பைம்தழை - பசுமையான தழைகளை யணிந்த. மாமகளிரொடு - அழகிய பெண்களுடன் கூடியிருந்து. பாயிரும் பனிகடல் - பரந்த பெரிய குளிர்ந்த கடலின் மேல். வேட்டம் செல்லாது - மீன் பிடிக்கப் போகாமல். உவவு மடிந்து - முழுமதி நாளிலே தங்கியிருந்து உண்டு ஆடியும் - உண்டு விளையாடியும். (பொழுது போக்குவர்.) 94. புலவ மணல் பூங்கானல், மாமலை அணைந்த கொண்மூப் போலவும், தாய் முலை தழுவிய குழவி போலவும், தேறு நீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும் 98. மலி ஓதத்து ஒலி கூடல். புலவு மணல் - புலால் நாற்றம் வீசும் மணல்வெளியும். பூ கானல் - கடற்கரைச் சோலையும். (உள்ள அந்த இடத்திலே.) மாமலை அணைந்த - பெரிய மலையைத் தழுவிய. கொண்மூ போலவும் - மேகத்தைப் போலவும். தாய் முலை தழுவிய - தாயின் மார்பைத் தழுவிய. குழவி போலவும் - குழந்தையைப் போலவும். தேறு நீர்ப் புணரியொடு - தெளிந்த நீரையுடைய கடலுடன். யாறு தலை மணக்கும் - காவிரியாறு ஒன்றுபடுகின்ற. மலி ஓதத்து - நிறைந்த கடலின். ஒலி கூடல் - ஒலி நிறைந்த சங்கமுகத்துறை. 99. தீது நீங்கக் கடல் ஆடியும் மாசு போகப் புனல் படிந்தும் அலவன் ஆட்டியும், உரவுத்திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் 103. அகலாக் காதலொடு பகல் விளையாடி. தீது நீங்க - (இந்தச் சங்கமுகத் துறையிலே) பாவம் போக. கடல் ஆடியும் - கடலிலே குளித்தும். மாசு போக - அழுக்குப் போக. புனல் படிந்தும் - வேறு நல்ல நீரிலே மூழ்கியும். அலவன் ஆட்டியும் - நண்டுகளைப் பிடித்து ஆட்டங் காட்டியும். உரவுத் திரை - வலிமையுடன் வீசும் கடல் அலைகளிலே. உழக்கியும் - விளை யாடியும். பாவை சூழ்ந்தும் - பெண்கள் சுற்றியிருந்தும். பல்பொறி மருண்டும் - ஐம்பொறிகளும் இன்புற்று மயங்கியும். அகலாக் காதலொடு - நீங்காத அன்புடன். பகல் விளையாடி - பகலிலே விளையாடிப் பொழுது போக்குவர். 104. பெறற்கு அரும்தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் 105. பொய்யா மரபின் பூமலி பெருந்துறை. பொய்யா மரபின் - நீர் வற்றாத பழமையான. பூமலி பெருந்துறை - பூக்கள் நிறைந்த அந்தச் சங்கமுகத்துறை. (அங்குள்ளோர்க்கு) பெறற்கு அரும் - பெறுவதற்கு அருமையான. தொல்சீர் - பழமையான. துறக்கம் ஏய்க்கும் - சுவர்க்கத்தை ஒத்திருக்கும். காவிரித் துறையின் சிறப்பைக் கூறும் இப்பகுதியிலே தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கூறியுள்ளார் ஆசிரியர். போரிலே மாண்ட வீரர்களின் நினைவாகக் கல்நட்டு அந்தக் கற்களை மாண்டுபோன போர் வீரர்களாகவே எண்ணி வணங்குவது தமிழ்நாட்டு வழக்கம். கடலும் கடல் சேர்ந்த நிலமும் நெய்தல் நிலம். நெய்தல் நிலத்திலே வாழும் மக்கள் செம்படவர்; பரதவர் என்பவர்கள். அந்த நிலத்தின் தெய்வம் வருணன். வருணனையே கடற்றெய்வ மாக அந்நில மக்கள் கருதி வந்தனர். சுறாமீனின் கொம்பை நட்டு, அதிலே கடற் றெய்வமாகிய வருணன் இருப்பதாகக் கருதி அதனை வணங்குவது நெய்தல் நிலமக்களின் வழக்கம். முழுமதி நாளிலே - அதாவது பூரணச் சந்திரன் உள்ள பௌர்ணமி நாளிலே செம்படவர்கள் மீன் பிடிக்கக் கடல் மேற் செல்வதில்லை. அன்று அவர்கள் தங்கள் பெண்டு பிள்ளை களுடன் உண்டு, களித்து மகிழ்ந்து, வருணனுக்குப் பூசை போட்டு விளையாடிக் குதூகலிப்பர். முழுமதி நாளில் கடலின் கொந்தளிப்பு அதிகமா யிருக்கும். ஆதலால் மீன் பிடிக்கப் படகில் செல்வது ஆபத்து. இதனால் இன்றும் செம்படவர்கள் பௌர்ணமி நாளில் ஓய்வு பெற்றிருப்பது கண்கூடு. மனதிலே கவலையின்றி மகிழ்ந்து வாழ்வதே சுவர்க்கம். காவிரித் துறையில் மக்கள் மனக் கவலையின்றி வாழ்வதனால் அதனைத் துறக்கத்திற்கு ஒப்பிட்டுரைத்தார் ஆசிரியர். இரவுப்பொழுது பகற்பொழுதிலே காவிரித்துறையின் காட்சியைக் கூறிய புலவர், அடுத்தாற்போல் இரவிலே - அதுவும் நல்ல நிலவெறிக்கும் இரவிலே அந்நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களைக் கூறுகிறார். மாடமாளிகைகளிலே வாழும் செல்வர்கள், கடலிலே செல்லும் செம்படவர்கள், ஏனைய பொது மக்கள் அந்த முழு மதி நிலவிலே செய்யும் காரியங்களைப் பத்து வரிகளிலே பாடியிருக்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர். 106 முதல் 115 வரையில் உள்ள 10 வரிகளிலே இவைகள் கூறப்படுகின்றன. மாடமாளிகைகளிலே தங்கள் காதலரைத் தழுவிய மங்கைமார்கள் தாங்கள் அணிந்திருக்கும் பட்டாடைகளைக் களைந்து வெண்துகில் உடுத்திக் கொண்டிருக்கின்றனர். தேனை மறந்துவிட்டுக் காதல் மதுவை அருந்தி மகிழ்கின்றனர். ஆடவர் களின் மாலைகளை மகளிர் சூடுகின்றனர். மகளிர் அணிந்த மாலைகளை மைந்தர்கள் தரித்துக் கொள்ளுகின்றனர். இவ்வித நிகழ்ச்சிகள் மாளிகைகளிலே இரவிலே கடைசிச் சாமம் வரையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. பெரிய மாளிகைகளிலே காணப்படும் ஒளிநிறைந்த விளக்கைப் பார்த்துக் கொண்டு கடலில் ஓடத்தை நடத்திச் செல்லும் பரதவர்கள் சூரியன் புறப்படுவதை எதிர்பார்த்துச் செல்கின்றனர். பாடல்களைக் கேட்டும், நாடகங்களைப் பார்த்தும், வெண்மையான நிலவின் பயனை அனுபவித்தும் இரவுப் பொழுதைக் கழித்தும் விடியற் காலத்தில் உறங்குகின்றனர் பலர். 106. துணைப் புணர்ந்த மட மங்கையர் பட்டு நீக்கித் துகில் உடுத்து மட்டு நீக்கி மது மகிழ்ந்து மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் 110. மகளிர் கோதை மைந்தர் மலையவும் துணைப்புணர்ந்த - (மாளிகைகளிலே) தங்கள் காதலரைத் தழுவிய. மடமங்கையர் - அழகிய மங்கைமார்கள். மட்டுநீக்கி - தேனைமறந்து. மதுமகிழ்ந்தும் - காதல் மதுவை உண்டு மகிழ்ந்தும். மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - ஆடவர்கள் அணிந்த மாலைகளைப் பெண்கள் சூடியும். மகளிர் கோதை மைந்தர் மலையவும் - மகளிர் அணிந்திருந்த மாலையை மைந்தர் சூடியும் (இவ்வாறு பொழுது போக்குவர்.) 111. நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கி 112. கொடுந்திமில் பரதவர் குரூச்சுடர் எண்ணவும். கொடும் - வளைந்திருக்கின்ற முகப்பையுடைய. திமில் பரதவர் - தெப்பங்களைக் கடலில் ஓட்டும் பரதவர்கள். நெடுங் கால் மாடத்து - உயரமான மாளிகைகளிலே காணப்படும். ஒள் எரி நோக்கி - ஒளியுள்ள விளக்குகளைப் பார்த்து. குரூச்சுடர் எண்ணவும் - மிகவும் ஒளி பொருந்திய சூரியன் புறப்பாட்டைப் பற்றி நினைத்தனர். 113. பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் வெள்நிலவின் பயன் துய்த்தும் 115. கண் அடைஇய கடைக் கங்குலான். பாடல் ஓர்த்தும் - பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தும். நாடகம் நயந்தும் - நாடகங்களை விரும்பிப் பார்த்தும். வெள்நிலவின் பயன் துய்த்தும் - வெண்மையான நிலவின் பயனை அனுபவித்தும். கண் அடைஇய - (இறுதியிலே) கண்மூடி உறங்குகின்ற கடைக் கங்குலான் - கடைசிச் சாமம். காவிரிப்பூம்பட்டினத்திலே வாழும் மக்கள் இரவு நேரத்தை இன்பத்துடன் கழிக்கின்றனர். மங்கைமார்களும் மைந்தர்களும் மாளிகைகளிலே இன்பந் துய்த்து மகிழ்கின்றனர். பொதுமக்கள் பொழுது போக்குவதற்காகச் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. நாடகச் சாலைகளும் உண்டு. அவைகளில் நாடகங்களும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழ்நாட்டில் சங்கீதம், நாடகம் ஆகிய கலைகள் வளர்ந்திருந்தன என்ற உண்மையை அறியலாம். உண்மை ஊழியர்கள் வெளியிலிருந்து நகருக்குள் வரும் பண்டங்களுக்கு வரி வாங்கும் வழக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது. தரை வழியாக வரும் பொருள்களுக்கும் வரி வாங்கினர். கடல் மார்க்கமாக வந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கும் வரி வாங்கினார்கள். இதனைப் பட்டினப் பாலையிலே காணலாம். உல்கு என்பது வரி. அதனையே பின்னாளில் சுங்கம் என வழங்கினர். அரசனுடைய ஆட்களே சுங்கம் தண்டுவார்கள். அந்த ஊழியர்கள் உண்மை ஊழியர்கள். நடுநிலையிலிருந்து சுங்கம் வாங்குவார்கள். கையுறை (லெஞ்சம்) வாங்க மாட்டார்கள். தங்கள் வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்வார்கள். யாரும் அவர்களை ஏமாற்றி விட முடியாது. இவர்களைப்பற்றிப் பட்டினப்பாலையிலே கூறியிருப் பதைப் பாருங்கள். சுங்கம் வாங்குவோர் நள்ளிரவிலே, காவிரியாற்று வெள்ளம் குவித்திருக்கும் மணல் மேட்டிலே உறங்குவார்கள். அந்த மணல் மேட்டில் காவிரி நீரிலே மிதந்து வந்த மலர்கள் படிந்து நறுமணம் கமழும் தூய்மையான வெண்மணல் குவிந்திருக்கும் மணல் மேடு அது. வெள்ளத்தால் ஒதுக்கப்பட்ட மணல்மேட்டுக்கு எக்கர் என்று பெயர். அவர்கள் உறங்கும்போதுகூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்து மாயிருப்பர். அரசனுடைய பண்டக சாலைத் தெரு தாழைகள் மலர்ந்திருக்கும் கடற்கரை ஓரத்திலே அமைந்திருப்பது, பண்டகசாலையிலே பண்டங்களும் குவிந்திருக்கும். அப்பண்டங் களைப் பிறர் கவராமல் பாதுகாப்பதிலே அவர்கள் வல்லவர்கள்; புகழ் பெற்றவர்கள். அவர்கள் கதிரவன் தேரிற்பூட்டிய குதிரைகள் போல அயராது சுற்றி வருவார்கள். ஒரு நொடி நேரங் கூடச் சோர்ந் திருக்க மாட்டார்கள். சளைக்காமல் வாங்க வேண்டிய சுங்கங்களை வாங்கிக் கொண்டே யிருப்பார்கள். இச்செய்தியைப் பட்டினப்பாலையிலே 116 முதல் 125 வரையில் உள்ள 10 வரிகளிலே காணலாம். 116. மாஅகாவிரி மணம் கூட்டும் தூஉ எக்கர்த் துயில் மடிந்து வால் இணர் மடல் தாழை வேல்ஆழி வியன் தெருவில் நல்லிறைவன் பொருள் காக்கும் தொல்லிசைத் தொழில் மாக்கள் காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர் பூண்ட மாஅ போல வைகல் தொறும் அசைவின்றி 125. உல்கு செய... மாஅ காவிரி - சிறந்த காவிரியாறு. மணம் கூட்டும் - தனது வெள்ளத்தால் மலர்களைக் கொண்டு வந்து குவித்து நறுமணத் தைக் கூட்டியிருக்கின்ற. தூஎக்கர் - தூய்மையான மணல் திட்டிலே, துயில் மடிந்து - நள்ளிரவில் தூங்கிவிட்டு. வால் இணர் - வெண்மையான மகரந்தக் கொத்துக் களையும். மடல் - மடலையும் உடைய. தாழை - தாழஞ் செடிகள் நிறைந்த. வேல் ஆழி - கடற்கரை யில் அமைந்த. வியன் தெருவில் - பெரிய பண்டகசாலைத் தெருவில். நல் இறைவன் - நல்ல அரசனுடைய. பொருள் காக்கும் - பொருள்கள் பண்டகசாலை களிலிருந்து திருட்டுப் போகாமல் பாதுகாக்கின்ற. தொல்லிசை - பழமையான புகழையுடைய. தொழில் மாக்கள் - காவல் செய்யும் தொழிலையுடையவர்கள். (எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே யிருப்பார்கள்.) காய் சினத்த - சுடுகின்ற கோபத்தையுடைய. கதிர்ச்செல்வன் - சூரியனுடைய. தேர்பூண்ட மாபோல - தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைப் போல. வைகல்தொறும் - நாள்தோறும். அசைவு இன்றி - சோம்பலே இல்லாமல். உல்குசெய - வரி வாங்கும் தொழிலைச் செய்துகொண்டே யிருப்பார்கள். இவ்வரிகளிலே வரி தண்டுவோரின் இயல்பைப் பற்றிக் கூறியிருப்பதைக் காணலாம். இத்தகைய உண்மையான ஊழியர் களைக் கொண்ட அரசாங்கந்தான் சிறப்படைய முடியும் என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கின்றது. காய் சினத்த கதிர்ச் செல்வன் என்ற வரியில் உள்ள சிறந்த பொருள் பாராட்டத்தக்கது. சூரியனை சுடுகின்ற கோபத்தையுடைய கதிரவன் என்றார். அடுத்த சொல்லைச் செல்வன் என்று அமைத்தார். அவனுடைய சுடுகின்ற வெய்யில் தான் உலகிற்குச் செல்வத்தை யளிப்பது. சூரிய வெப்பத்தின் பெருமையை உலகமெல்லாம் உணரும். அவன் காய் சினத்த கதிரவன் ஆனாலும் உலகிற்குச் செல்வத்தை அளிப்பவன்; உலகிற்கு உதவி செய்யும் செல்வனாக விளங்குகிறவன்; இந்தக் கருத்துடன் இவ்வரி அமைந்திருப்பது அருமையினும் அருமை. ஏற்றுமதி - இறக்குமதிகள் பண்டகசாலைக் காவலர்களின் சிறப்பைப் பற்றிக் கூறிய ஆசிரியர், பண்டங்கள் பண்டகசாலைகளிலே எப்படிக் குவிகின்றன என்பதைப் பற்றிக் கூறுகிறார். அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக வந்து காவிரிப் பூம்பட்டினத்திலே இறக்குமதி செய்யப்படு கின்றன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்ட மூட்டைகளின் மேல் சோழனுடைய புலிமுத்திரையிடப் பட்டுக் கிடக்கின்றன. புலிமுத்திரையிடப்பட்ட பண்டங்கள் தான் வெளியேற முடியும். முத்திரை யிடப்படாத பண்டங்கள் வெளி யேற முடியாது. ஏற்றுமதியும், இறக்குமதியும் இவ்வளவு கட்டுக் காவலுடன் அக்காலத்திலே தமிழ்நாட்டில் நடந்திருக் கின்றன என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். இந்த ஏற்றுமதி - இறக்குமதிகளைப் பற்றி எவ்வளவு அழகாக உவமானத்துடன் பட்டினப்பாலை உரைத்திருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள். மாரிக் காலத்திலே மேகங்கள் கடலிலே முகந்த நீரைக் கொண்டுபோய் மலைகளிலே பெய்கின்றன. மலைகளிலே பெய்த நீர் அம்மலைகளிலேயே தங்கிவிடுவதில்லை. அந்த நீரை ஆறுகளும் கால்வாய்களும் கொண்டுவந்து கடலிலே பரப்பிவிடுகின்றன. இவ்வாறு கடல்நீர் மலையேறுதலும், மலைநீர் கடற்பாய்தலும் மாரிக்காலத்தில் நடைபெறும் காட்சி. இதுபோல் காவிரிப்பூம் பட்டினத்திலே எப்பொழுதும் கடல் வழியாகப் பண்டங்கள் வந்து நிலத்திலே இறங்கிக் கொண்டிருக் கின்றன. நிலத்தின் வழியாகப் பல பண்டங்கள் வந்து நீரில் மிதக்கும் கப்பல்களிலே ஏறிக் கொண்டிருக்கின்றன. அளவு சொல்ல முடியாத பல பண்டங்கள் சுங்கச் சாவடியிலே வந்து குவிந்து கிடக்கின்றன. அந்தச் சுங்கச் சாவடியி லிருந்து பண்டங்களை யாரும் காவலர்களுக்குத் தெரியாமல் கொண்டுபோய் விட முடியாது; அவ்வளவு சிறந்த பாதுகாவலும், ஏராளமான காவலர்களையும் கொண்டது அந்தச் சுங்கச்சாவடி. அந்தச் சுங்கச்சாவடியிலே பண்டங்களைப் பரிசோதனை செய்து அப்பண்டங் களின் மேல் சோழனுடைய முத்திரையான புலி முத்திரையை இடுகின்றனர். இம்முத்திரை வைக்கப்பட்ட பின்னரே அப்பண்டங்கள் வெளியேற்றப் படுகின்றன. இப்படி முத்திரையிடப்பட்டு வெளியேற்றப்பட்ட பண்டங்கள், அவைகள் கிடப்பதற்கான இடத்திலே மலை போல குவிந்து கிடக்கின்றன. ஆண் நாய்களும், ஆட்டுக் கடாக்களும் அந்த மூட்டைக் குவியல்களின் மேல் ஏறிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தால் மேகங்கள் தவழும் சிகரத்தையுடைய பெரிய மலைப் பக்கங்களிலே வருடை மான்கள் விளையாடு வதைப் போலக் காணப்படுகின்றது. பட்டினப்பாலையின் 125-வது வரிமுதல் 141-வது வரி வரையில் உள்ள 17 வரிகளில் இச் செய்திகள் காணப்படுகின்றன. 125. ... ... ... ... குறைபடாது வான்முகந்த நீர் மலைப் பொழியவும், மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பவும், மாரி பெய்யும் பருவம்போல, நீரினின்றும் நிலத்தேறவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்; அளந்தறியாப் பல பண்டம் வரம்பறியாமை வந்தீண்டி, அரும்கடிப் பெரும்காப்பின் வலியுடை வல்அணங்கினோன் புலி பொறித்துப் புறம்போக்கி, மதி நிறைந்த பல பண்டம் பொதி மூடைப் போர்ஏறி மழையாடு சிமய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூருகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை 141. ஏழகத் தகரோடு உகளும் முன்றில். குறைபடாது - என்றும் குறைவில்லாமல். வான் முகந்த நீர் - மேகங் கடலிலே முகந்த நீரைக் கொண்டு போய். மலை பொழியவும் - மலையிலே பெய்யவும். மலைபொழிந்த நீர் - மலையிலே பெய்த அந்த நீர். கடல் பரப்பவும் - கடலிலே மீண்டும் வந்து விழவும். மாரி பெய்யும் - மழை பெய்கின்ற. பருவம்போல - காலத்தைப் போல. நீரின் நின்றும் - (பல நாடுகளிலிருந்து கடல் வழியாக வந்த பண்டங்கள்) கடலிருந்து. நிலத்து ஏறவும் - நிலத்திலே ஏறவும். நிலத்தினின்றும் - (தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வந்த பண்டங்கள்) நிலத்திலிருந்து. நீர்ப்பரப்பவும் - நீரிலே இறங்கவும். அளந்து அறியாப் பல பண்டம் - அளந்து கணக்கிட முடியாத பல பண்டங்கள். வரம்பு அறியாமை - எல்லை காணமுடியாதபடி. வந்து ஈண்டி - வந்து நிறைந்து. அரும்கடி - சிறந்த பாதுகாப்பும். பெரும்காப்பின் - பெரிய காவற்காரர் களையும் உடைய சுங்கச் சாவடியிலே. வலியுடை - வலிமையுடைய பகைவர்களை. வல் அணங்கினோன் - வலிமையால் வருத்தும் தன்மையுடையவனாகிய கரிகாற் சோழனது. புலி பொறித்து - புலி முத்திரையைப் போட்டு. புறம்போக்கி - வெளியிலே அனுப்பிய. மதி நிறைந்த - மதிப்பு நிறைந்த. பல பண்டம் பொதி - பல பண்டங்கள் பொதிந்த. மூடைப்போர் - மூட்டைப்போரின் மேல் ஏறி - ஏறி மழையாடு சிமய - மேகம் படிந்த உச்சியையுடைய. மால்வரை - பெரிய மலையின். கவாஅன் வரையாடும் - பக்கத்து மலையிலே விளையாடுகின்ற. வருடைத் தோற்றம் போல - வருடைமான் காணப்படுவது போல. கூர்உகிர் ஞமலி - கூர்மை யான நகங்களை யுடைய நாயினத்தைச் சேர்ந்த. கொடுந்தாள் ஏற்றை - வளைந்த பாதத்தையுடைய ஆண் நாய். ஏழகத் தகரோடு - ஆட்டுக்கடாக்களோடு. உகளும் முன்றில் - குதித்து விளையாடும் முற்றம். மேலே கூறியவற்றைக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னே காவிரிப்பூம்பட்டினம் ஒரு வாணிக நகரமாக விளங்கியது என்று அறியலாம். பெருவாரியான இறக்குமதி - ஏற்றுமதி வாணிகம் நடைபெற்றதென்று காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே கடற்கரையிலே, துறை முகத்திலே அமைந்திருந்த சுங்கச்சாவடியை அருங்கடிப் பெரும் காப்பின் என்று குறிப்பிடுகிறார் பட்டினப்பாலை ஆசிரியர். அந்தச் சுங்கச் சாவடிக்குள் காவலர்களின் உத்தரவின்றி யாரும் புகமுடியாது. அது மிகவும் கட்டுக்கோப்பான கட்டிடம். திருடர்கள் உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு பாதுகாப்பை யுடையது. கட்டிடத்தில் உள்ள பண்டங்களுக்குக் காற்றாலோ, மழையாலோ, வெய்யிலாலோ, நீராலோ, நெருப்பாலோ எத்தகைய சேதமும் உண்டாகாது. பண்டங்கள் பத்திரமாக இருக்கும் வகையிலே அந்தச் சுங்கச்சாவடி அமைந்திருந்தது. அருங்கடி கட்டிடத்தின் இயற்கைப் பாதுகாப்பைக் குறிப்பது. பெருங்காப்பு என்பது காவலர்களின் விழிப் பாதுகாப்பைக் குறிப்பது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த நவீன காலத்தில் கூட, கடல் துறைமுகங் களிலும், இருப்புப்பாதை நிலையங்களிலும் ஏற்றுமதிக்காக வைத்திருக்கும் பண்டங்கள் சேதமாவதைக் காண்கின்றோம். இறக்குமதியாகும் பண்டங்களும் சேதமா வதைக் காண்கிறோம். பண்டங்கள் திருட்டுப் போவதையும் பார்க்கிறோம். நிர்வாகிகளின் பொறுப்பற்ற தன்மையே இதற்குக் காரணம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப்பூம் பட்டினத்திலே பண்டங்களை எவ்வளவு அருமையாகப் பாதுகாத்தனர்; பண்டங்கள் சேதமாகக் கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதை நாம் காணும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. தமிழரின் வாணிகத்திறனும், அரசியல் திறனும் நமக்குப் பெருமை அளிக்கின்றன. தமிழர்களின் வியாபாரத் திறமையையும், அரசியல் திறமை யையும் விளக்க, சுங்க காவலர்களைப் பற்றிக் கூறியிருப்பதும், ஏற்றுமதி - இறக்குமதி வாணிகத்தை பற்றிக் கூறியிருப்பதுமாகிய இந்த இரண்டு செய்திகளே போதுமானவை. கடைவீதி கடைத்தெருவுக்கு ஆவணம் என்று ஒரு பெயர். அங்காடி என்பது மற்றொரு பெயர். பண்டகசாலை என்பது பண்டங் களைப் பத்திரமாகச் சேமித்து வைத்திருக்குமிடம். இதை இக்காலத்தினர் கிடங்கு என்பர். ஆவணம் அல்லது அங்காடி என்பது பண்டகங்களை வைத்துச் சில்லறையாக வாணிகம் செய்யும் இடம். இக்காலத்தில் கடை வீதிகளிலே வாணிகர்கள் பலர் குடியிருப்பதையும், அங்கேயே வாணிகம் செய்வதையும் காண் கிறோம். குடியிருப்பும், வாணிகம் செய்யும் கடையும் ஒரேயிடத்தில் இருப்பது எந்நாட்டிலும் உண்டு. பெரிய வியாபாரிகள் தாம் இவ்வாறு இரண்டையும் ஒன்றாக அமைத்துக் கொள்ள முடியும். சிறிய வியாபாரிகளுக்கு இந்த வசதி கிடைக்காது. இன்றும் பெரிய நகரங்களில் உள்ள கடை வீதிகளிலே சுற்றுக் கட்டமைந்த பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன. அக்கட்டிடங்கள் வானுயர்ந்த மாடிகளாகவும் அமைந்திருக் கின்றன. இத்தகைய மாடிக் கட்டிடங்களிலே கீழ்க் கட்டிடங் களை வாணிக மனைகளாகப் பயன்படுத்துகின்றனர். மேலே குடியிருந்து வருகின்றனர். இவ்வாறு வாணிக மனையும், குடியிருப்பும் ஒன்றாயிருப் பதிலே வாணிகத்தைப் பொருத்த வரையிலும் பல நன்மைகள் உண்டு. காவிரிப் பூம்பட்டினத்தின் கடைத் தெருவில் பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தன. பெரிய பெரிய வாணிகர்கள் இருந்தனர். அவர்கள் மாடியிலேயே - அதாவது மேல் வீட்டி லேயே குடியிருந்து வந்தனர். கீழ் வீட்டில் வியாபாரம் செய்து வந்தனர். தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் கடைத் தெருக்களில் பல கோயில்கள் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். இக் கோயில்களுக்கு அடிக்கடி விழாக்கள் நடைபெறுவதையும் பார்க்கலாம். கடைத்தெருக்களில் அமைந்துள்ள கோயில்கள் பெரும்பாலும் வியாபாரிகளின் ஆதரவிலேயே வாழ்ந்து வருகின்றன. கடைத்தெருக்களிலே கோயில்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பல திருவிழாக்கள் கடை வீதிகளிலே நடைபெறுவதைக் காணலாம். கடை வீதிகள் எப்பொழுதும் விழாமயமாகத்தான் காட்சியளிக்கும். இதுபோலவே காவிரிப்பூம்பட்டினத்துக் கடை வீதியும் எப்பொழுதும் விழா மயமாகவே காட்சியளித்ததாம். முருகனுக்காக நடைபெறும் வெறியாட்டு விழாவிலே பல வாத்தியங்கள் முழங்கிக் கொண்டேயிருக்கும். புல்லாங் குழல், யாழ், மத்தளம், முரசு ஆகிய வாத்தியங்கள் அந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக் கடை வீதியிலே இடையறாமல் இசைத்துக் கொண்டேயிருக்குமாம். பெரிய மாளிகைகளிலே, சாளரத்தின் ஓரத்திலே பெண்கள் நின்றுகொண்டு விழாவினைக் காண்பார்களாம். முருகனைத் தொழுவார்களாம். காவிரிப்பூம்பட்டினத்துக் கடைவீதியைப் பற்றிக் கூறும் போது, மூன்று செய்திகளைத்தான் பட்டினப்பாலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். 1. அங்கே உயர்ந்த பரந்த பல கட்டிடங்கள் இருக்கின்றன. 2. அக் கட்டிடங்களில் உள்ள அழகிய பெண்கள் - சிறந்த அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்த பெண்கள் சாளரத்தண்டை நின்று முருகனைக் கைகூப்பி வணங்குகின்றனர். 3. முருகனுக்கு விழா நடைபெறுகின்றது. அதன் பொருட்டுப் பல வாத்தியங்கள் முழங்குகின்றன. இந்த மூன்று செய்திகளும்தான் கடைவீதியில் உள்ளதாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. பட்டினப்பாலையில் 142-வது வரி முதல், 158 -வது வரி வரையில் உள்ள 17 வரிகளிலே இச் செய்திகளைக் காணலாம். அவ்வரிகளில் கூறப்படும் பொருள் கீழ் வருவது. பெரிய கட்டிடங்களுக்கு நெருக்கமாக அமைக்கப்பட்ட நீண்ட படிகள் இருந்தன. சுற்றுத் திண்ணைகள் பல இருந்தன. அந்தப் படிக்கட்டுகளின் வழியாகத்தான் அத்திண்ணைகளின் மேல் ஏறமுடியும். ஒன்றாங்கட்டு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்று சொல்லும்படி பல சுற்றுக் கட்டுகள் அமைந்திருந்தன. சிறிதும் பெரிதுமான பல வாயில்களும் இருந்தன. உள்ளே போகின்ற பல இடைவெளிகளும் இருந்தன. அந்த மாளிகைகள் மேகங்கள் படியக் கூடிய உயர்ந்த கட்டிடங்கள். அந்த மாளிகைகளிலே பல பெண்கள் இருந்தனர். அவர்கள் சிவந்த அடிகளை உடையவர்கள். நெருங்கிய துடைகளை யுடையவர்கள். பசும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன் களை அணிந்தவர்கள். இடையிலே மெல்லிய உடைகளை அணிந்தவர்கள். பவளம் போன்ற உடம்பினை உடையவர்கள். மயில் போன்ற சாயலை யுடையவர்கள். மான் போன்ற பார்வையை உடையவர்கள். கிளிபோன்ற இனிய மழலைச் சொல்லையுடையவர்கள். மெல்லிய தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் காற்று வீசுகின்ற சாளரத்தின் அருகிலே வந்து நின்றார்கள். அவர்கள் உயர்ந்த மலைச் சாரலிலே நுண்ணிய மகரந்தப் பொடிகளைச் சிந்துகின்ற காந்தட் செடிகளின் கணுக்களிலே நிறைந்திருக்கின்ற மொட்டுகளைப் போல நிறைந்த வளையல் களையுடைய முன்கையைக் கூப்பி முருகனை வணங்கினர். முருகனுக்காக விழாச் செய்கின்ற மகளிரொடு பொருத்த முடையதாய் அமைந்து பல வாத்தியங்கள் முழங்கின. புல்லாங் குழல் ஒலித்தது. யாழ் இசைத்தது. மத்தளம் அதிர்ந்தது. முரசம் இயம்பிற்று. இவ்வாறு எப்பொழுதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும் கடைவீதி அது. 142. குறுந்தொடை, நெடும்படிக்கால், கொடும் திண்ணைப், பல்தகைப்பின் புழை, வாயில், போகு இடைகழி, 145. மழைதோயும் உயர்மாடத்துச்; சேவடிச், செறிகுறங்கின், பாசிழைப் பகட்டு, அல்குல் தூசுடைத், துகிர் மேனி, மயில் இயல், மான் நோக்கின், கிளி மழலை, மென்சாயலோர், 151. வளி நுழையும் வாய் பொருந்தி; ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும் காந்தள் அம் துடுப்பில் கவிகுலை அன்ன, 154. செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள், வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க், குழல் அகவ, யாழ் முரல முழவதிர, முரசியம்ப, 158. விழவு அறா வியல் ஆவணத்து; குறுந்தொடை - நெருக்கமாக அமைக்கப்பட்ட. நெடும் படிக்கால் - நீண்டபடி வழிகளையுடைய. கொடும் திண்ணை - உயர்ந்த திண்ணைகளையும். பல்தகைப்பின் - பல சுற்றுக் கட்டுகளையும். புழை - சிறிய வாயில்களையும். வாயில் - பெரிய வாயில்களையும். போகு இடை கழி - உள்ளே போகின்ற பல இடைவெளிகளையும் உடைய. மழைதோயும் - மேகங்கள் படியும். உயர்மாடத்து - உயர்ந்த மாளிகைகளின் மேல். சேஅடி - சிவந்த அடிகளையும். செறி குறங்கின் - நெருங்கிய துடைகளையும். பாசிழை - பசும்பொன்னாலாகிய ஆபரணங் களின். பகட்டு - ஒளியினையும். அல்குல் - இடையிலே. தூசு உடை - மெல்லிய உடையினையும். துகிர்மேனி - பவனம் போன்ற மேனியையும். மயில் இயல் - மயில் போன்ற சாயலினையும். மான் நோக்கின் - மான் போன்ற பார்வையினையும். கிளி மழலை - கிளிபோன்ற மழலைச் சொல்லையும் உடைய. மென்சாயலோர் - மெல்லிய தன்மையை உடையவர்கள். வளி நுழையும் - காற்று நுழைந்து வரும். வாய் பொருந்தி - சாளரத்தின் அருகிலே வந்து நின்று. ஓங்குவரை மருங்கின் - உயர்ந்த மலையின் பக்கத்திலே. நுண்தாது - நுண்ணிய மகரந்தப் பொடிகளை. உறைக்கும் - சிந்துகின்ற. காந்தள் - காந்தட் செடியின். அம்துடிப்பில் - அழகிய கணுக்களிலே. கவிகுலையன்ன - நிறைந்த மொட்டின் கொத்தைப் போல. செறிதொடி - நெருங்கிய வளையல் களையுடைய. முன்கை கூப்பி - முன் கையைக் கூப்பி வணங்கி நின்றார்கள். செவ்வேள் - முருகனுக்காக. வெறியாடும் - விழாச் செய்யும். மகளிரொடு - பெண்களோடு. தாய் - பொருந்தி. குழல் அகறு - புல்லாங்குழல் ஒலியிட. யாழ் முரல - யாழ் இசைக்க. முழவு அதிர - மத்தளம் ஓசையிட. முரசு இயம்ப - முரசம் முழங்க. விழவு அறா - எப்பொழுதும் திருவிழா நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்ற. வியல் ஆவணத்து - பெரிய கடைவீதியிலே. மேலே கூறியதைக் கொண்டு, காவிரிப்பூம் பட்டினத்திலே பெரிய பெரிய மாளிகைகள் இருந்தன. பெரிய செல்வம் படைத்தவர்கள் இருந்தனர்; பெண்கள், அணிகலன்களையும், மெல்லிய ஆடைகளையும் அணிந்திருந்தனர்; இடைவிடாமல் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன என்பதை அறியலாம். இன்றுள்ள பெரிய நகரங்களின் கடைவீதிகளைப் போலவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப் பூம்பட்டினத்துக் கடைவீதிக் காட்சியளித்ததென்பதைக் காணலாம். கொடிநாட்டும் வழக்கம் பண்டைக் காலத்திலே தமிழ்நாட்டிலே கொடி கட்டிப் பறக்கவிடும் வழக்கம் இருந்தது. கோயில்களிலே கொடியேற்றி வைத்திருந்தனர்; திருவிழாக் காலங்களிலே பலவிடங்களிலும் கொடி கட்டிப் பறக்க விடுவார்கள்; அறிஞர்கள் கூடி விவாதிக்கும் கழகங்களில் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். வாணிகம் செய்யும் இடங்களில் இன்ன வியாபாரந்தான் இங்கு நடைபெறு கின்றது என்பதை அறிவிக்கும் அடையாளக் கொடிகள் அசைந்து கொண்டிருக்கும். கப்பல்களிலும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். கொடிகளின் அடையாளத்தைக் கொண்டுதான், இது இன்னாருடைய கப்பல் - இன்ன நாட்டுக் கப்பல் என்று அறிந்து வந்தனர். இந்த வழக்கத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் தெளிவாகக் கூறுகின்றார். காவிரிப்பூம்பட்டினத்திலே எங்கு பார்த்தாலும் பல வகையான கொடிகள் பறந்து கொண்டிருந்தனவாம். கதிரவன் கிரணம் நகரத்தில் நுழைய முடியாதபடி அவ்வளவு நெருக்கமாக அக்கொடிகள் வானத்தையளாவிப் பறந்து கொண்டிருந்தனவாம். அக்கொடிகளில் ஒரு சிலவற்றை மட்டும் பட்டினப்பாலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கோயில் வாசலிலே கொடி பறந்து கொண்டிருக்கின்றது. அக்கொடியைக் கண்டோர் வணங்கிச் செல்லுகின்றனர். திருவிழாக்களை அறிவிப்பதற்காக அரிசிப்பலியிட்டு வணங்கி நீண்டமரச் சட்டங்களில் கொடியைக் கட்டி உயரத்தில் பறக்கும்படி நாட்டியிருக்கின்றனர். அவை வெள்ளைத் துணி யாலான கொடிகள். கரும்பு பூத்தது போலக் காணப்படுகின்றன. நெருக்கமாகவும் பறந்து கொண்டிருக்கின்றன. கல்வியிலே வல்லவர்கள் நாங்கள் எதைப்பற்றியும் விவாதிக்க வல்லோம்; உண்மையை நிலைநாட்டப் பின் வாங்க மாட்டோம்; யாரும் எங்களிடம் வழக்கிட வரலாம் என்பதை அறிவிக்கக் கொடிகளை நாட்டியிருக்கின்றனர். பட்டிமண்டபங் களிலே இக்கொடிகள் பறந்து கொண்டி ருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்தின் கடல் துறைமுகத்திலே கப்பல்கள் பல நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருக்கின்றன. அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றிலும் கொடி பறந்து கொண்டிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினத்திலே கள்ளுக் கடைகள் பலவிருந்தன. அந்தக் கள்ளுக் கடைகளின் முற்றத்திலே மீனையும், இறைச்சி யையும், நெய்யிலே வறுத்துப் பக்குவம் செய்து வாணிகம் செய்து வந்தனர். கள்ளுண்ண வருவோர் இந்த உணவுகளையும் வாங்கி உண்பர். மது மாமிசம் இரண்டும் இணைபிரியா நண்பர்கள். மாமிசத்தையும் வாங்கி வைத்துக் கொண்டுதான் கள்ளருந்து வார்கள். இன்றும் கள்ளுக் கடைகளின் பக்கத்திலே மாமிசப் பண்டங்கள் விற்பனை செய்வதைக் காணலாம். இது போலவே தான் காவிரிப் பூம்பட்டினத்திலே மதுபானக் கடையும், மாமிச உணவுக் கடையும் இணைந்திருந்தன. இந்தக் கள்ளுக் கடைகள் ஒவ்வொன்றிலும்கள் விற்பனையைத் தெரிவிப்பதற்கு அறிகுறியான கொடிகள் பறந்து கொண்டிருந்தன. இவைகளைத் தவிர இன்னும் பல கொடிகளும் நகரின் பல பகுதிகளிலும் வானத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அவை பலதிறப்பட்ட உருவமுடைய கொடிகள். மிகப்பெரிய கொடிகள். இப்படி எங்கு பார்த்தாலும் கொடிகள் ஆடி அசைந்து கொண்டிருந்தமையால் சூரியனுடைய ஒளிக் கிரணங்கள்கூட அந்த நகரில் நுழைய முடியவில்லையாம். இவ்வாறு கொடிகளின் சிறப்பைக் கூறுகின்றது பட்டினப்பாலை. இதனைப் பட்டினப் பாலையில் உள்ள 159 முதல் 182 வரையில் உள்ள 25 வரிகளிலே காணலாம். அவ்வரிகளையும், அவற்றின் பொருளையும் கீழே படியுங்கள். 159. மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய 160. மலர் அணி வாயில் பலர்தொழு கொடியும்; மைஅறு சிறப்பின் - குற்றமற்ற பெருமை யினையுடைய. தெய்வம் சேர்த்திய - தெய்வத்தை ஆவாகனம் செய்திருக்கின்ற. மலர் அணிவாயில் - மலர்களால் அலங்கரித்திருக்கின்ற கோயில் வாயிலிலே. பலர் தொழுகொடியும் - பலரும் வணங்கிச் செல்லு வதற்காக உயர்த்தியிருக்கின்ற கொடியும். இது கோயில்கள் இருக்கும் இடத்தைக் குறிப்பதற்காக ஏற்றியிருக்கும் கொடி. கொடியிலே தெய்வம் குடியிருப்பதாக அக்கால மக்கள் கருதினர். 161. வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று உருகெழு கரும்பின் ஒண்பூப்போல, கூழ் உடைக் கொழு மஞ்சிகைத், தாழ் உடைத் தண் பணியத்து, வால் அரிசிப் பலி சிதறிப், பாகு உகுத்த பசுமெழுக்கின் காழ் ஊன்றிய, கவி கிடுகின் 168. மேல் ஊன்றிய துகில் கொடியும் வருபுனல் தந்த - உருண்டோடிவருகின்ற நீரின் மூலம் வந்த. வெண்மணல் - வெண்மையான மணல் பரந்த. கான்யாற்று - காட்டாற்றின் கரையிலே. உருகெழு - அழகாக வளர்ந்து நிற்கும். கரும்பின் - கரும்பினுடைய. ஒண்பூப் போல - ஒளிபொருந்திய வெண்மையான பூக்களைப் போல ( பல கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அவைகள்) கூழ் உடை - உணவுப் பொருள்களுடைய. கொழு மஞ்சிகை - நல்ல பெட்டியிலே. தாழ் உடை - தாழ்போட்டுப் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த. தண்பணியத்து - குளிர்ந்த பண்டங்களான தானியங்களைப் பரப்பி அதன்மேல். வால் அரிசிப்பலி சிதறி - வெண்மையான அரிசியைப் பலியாகச் சிந்தி. பாகு உகுத்த - பாகாகக் காய்ச்சி ஊற்றிய. பசுமெழுக்கின் - பசுமையான மெழுகால் பூசப்பட்டு. காழ் ஊன்றிய - உறுதியான. கவி கிடுகின்மேல் - அமைந்திருக்கின்ற கட்டத்தின் மேல். ஊன்றிய துகில் கொடியும் - ஊன்றி உயரப்பறந்து கொண்டிருக்கின்ற துணிக்கொடிகளும். இக்கொடி விழாவுக்காக ஏற்றப்பட்டிருக்கும் கொடிகள். பலியிட்டுப் பூசை செய்து கொடியேற்றுவது வழக்கம். இக் கொடிகள் கரும்புப் பூவைப் போன்ற வெண்மையான கொடிகள். தான்யங்களைப் பெட்டியிலே பத்திரமாகப் பூட்டி வைத்துக் காப்பாற்றுவது வழக்கம். பண்டைத் தமிழகத்தில் இருந்தது. கொழுமஞ்சிகை - நல்ல பெட்டி. பணியம் - பண்டம். காழ் - வலிமை. கவி - பொருந்திய . கிடுகு - சட்டம். 169. பல்கேள்வித் துறைபோகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும். பல்கேள்வி - பல நூல்களையும் கற்றும் கேட்டறிந்தும். துறைபோகிய - வல்லவர்களான. தொல் ஆணை - முன்னோரின் கட்டளைப்படி நடக்கின்ற. நல்லாசிரியர் - சிறந்த ஆசிரியர்கள். உறழ் குறித்து - சொற்போர் செய்வதற்குப் பின்னிடோம் என்பதைக் காட்டி. எடுத்த - உயர்த்திக் கட்டியிருக்கின்ற. உருகெழு கொடியும் - அழகிய சிறந்த கொடியும். இவ்வாறு புலவர்கள் வழக்கிடும் - சொற்போர் செய்யும் இடங்களுக்குப் பட்டிமண்டபம் என்று பெயர். இத்தகைய பட்டிமண்டபங்களைத் தெரிவிப்பதற் கான கொடிகளும் பறந்தன. உறழ் - முரண். மாறுபாடு - இது சொற்போரைக் குறித்தது. உரு - அழகிய. கெழு - சிறந்த. 172. வெளில் இளக்கும் களிறு போலத், தீம் புகார்த் திரைமுன் துறைத் தூங்கு நாவாய், துவன் றிருக்கை 175. மிசைக் கூம்பின், அசைக் கொடியும் வெளில் - கட்டுத்தறியை. இளக்கும் - அசைக்கின்ற. களிறு போல - யானைகளைப் போல. தீம் புகார் - காண்பார் கண்ணுக்கு இனிய காட்சியைத் தருகின்ற காவிரிப்பூம் பட்டினத்தின். திரைமுன்துறை - அலைகள் முன்வந்து மோதிக் கொண்டிருக் கின்ற கடல் துறைமுகத்திலே. தூங்கும் நாவாய் - அசைந்து கொண்டிருக்கின்ற கப்பல்கள். துவன்ற இருக்கை - நெருங்கியிருக் கின்ற இடத்திலே. மிசைக் கூம்பின் - கப்பல்களின் மேல் உள்ள பாய்மரத்தின் மீது. அசைக் கொடியும் - காற்றிலே அசைந்து கொண்டிருக்கின்ற கொடிகளும். இது கப்பல் துறைமுகத்திலே காணப்படும் கொடியைக் குறித்தது. கடல் துறைமுகத்தில் காற்றினால் - அலைகளால் அசைந்து கொண்டிருக்கும் கப்பல்கள், தமது கட்டை அவிழ்த்துக் கொள்ளுவதற்கு அசைந்து கொண்டிருக்கின்ற யானைகளைப் போலக் காணப்படுகின்றனவாம். வெளில் - கட்டுத்தறி. இளக்குதல் - அசைத்தல். தூங்குதல் - அசைதல். கூம்பு - பாய்மரம். 176. மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில், மணல் குவைஇ மலர் சிதறிப் பலர் புகுமனைப் பலிப் புதவின், 180. நறவு நொடைக் கொடியோடு. மீன் தடிந்து - மீனைத் துண்டு செய்து. விடக்கு அறுத்து - மாமிசத்தை அறுத்து. ஊன் பொறிக்கும் - இந்தப் புலாலைப் பொறித்து வைத்திருக்கின்ற. ஒலி முன்றில் - ஓசை நிறைந்த முற்றத்திலே. மணல் குவைஇ - மணலைக்குவித்து. மலர் சிதறி - அதன் மேல் மலர்களைச் சிந்தி. பலர் புகுமனை - பலரும் நுழை கின்ற அந்த மனையின். பலிப் புதவின் - பலியிடப்பட்ட வாசலின் அருகே. நறவு நொடை - கள் விற்பனை செய்யும் இடம் என்பதைக் காட்டுவதற்காக உயர்த்திய. கொடி யோடு - கொடிகளுடன். இது கள்ளுக்கடை வாயிலில் உயர்த்தியிருக்கும் கொடியைக் குறித்தது. கள்ளுக்கடை வாசலில் மாமிச உணவு விற்பனை செய்வார்கள். கடைக்காரர், மணல்மேல் மலரிட்டுக் கடைக் கதவுக்கும் பலியிடுவார்கள். விடக்கு - புலால். புதவு - வாசல். நொடை - விலை கூறல். 181. பிற பிறவும் நனி விரைஇப் பல்வேறு உருவின் பதாகை நீழல் 183. செல்கதிர் நுழையாச் செழு நகர்; வரைப்பில் பிற பிறவும் - இன்னும் பல கொடிகளும். நனிவிரைஇ - ஏராளமாகக் கலந்து. பல்வேறு உருவின் - பலவேறு தோற்றங் களுடன் காணப்படுகின்ற. பதாகை நீழல் - பெரிய கொடிகளின் நிழல் காரணமாக. செல்கதிர் நுழையா - எங்கும் நுழைந்து செல்லுகின்ற சூரிய கிரணமும் உள்ளே நுழைய முடியாத. செழு நகர் - செழித்த நகரமாக விளங்குகின்றது காவிரிப்பூம்பட்டினம். வரைப்பின் - அந்த நகரத்திலே. இன்னும் ஏராளமான கொடிகள் காவிரிப்பூம் பட்டினத்திலே பறந்து கொண்டிருந்தன என்பதைக் குறிக்கும் பகுதி இது. நகரில் வெய்யில் விழாதபடி, வானத்தில் பந்தல் போட்டது போல, அவ்வளவு ஏராளமான கொடிகள் அந்நகரத்தில் பறந்து கொண்டிருந்தனவாம். விரைஇ - கலந்து. இ, உயிர் அளபெடை. பதாகை - கொடி. வீதிகளில் விளங்கும் செல்வம் காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் பல செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன; பல நாட்டிலிருந்து வந்த பண்டங்கள் நிறைந்து கிடக்கின்றன. இதனை 183ஆம் வரி முதல் 193ஆம் வரி வரையில் உள்ள 11 வரிகளிலே காணலாம். அங்கே குதிரைகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகள் மிகச் சிறந்த குதிரைகள். விரைவாக நிமிர்ந்து ஓடக் கூடியன. வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாக வந்தவை அவை. தரை மார்க்கமாக வண்டிகளிலே ஏற்றிக்கொண்டு வந்த மிளகு மூட்டைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. பலதிறப்பட்ட இரத்தினங்களும், பொன் கட்டிகளும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் இமயமலை போன்ற வடநாட்டு மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை. குடகு மலையிலிருந்து சந்தனக் கட்டைகளும் அகிற் கட்டைகளும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றன. பாண்டி நாட்டுத் தென் கடலிலே மூழ்கி எடுத்த சிறந்த முத்துக் குவியல்கள் காணப்படுகின்றன. கீழைக் கடலிலே பிறந்த பவளங்களும் அங்கே காணப் படுகின்றன. கங்கை நதி பாயும் வட்டாரங்களிலே விளைந்த செல்வங்களும், காவிரியாறு பாயும் பகுதிகளிலே விளைந்த செல்வங்களும் அங்கே நிறைந்து கிடக்கின்றன. இலங்கைத் தீவிலே உண்டான உணவுப் பொருள்கள் ஏராளமாக வந்து குவிந்து கிடக்கின்றன. பட்டினப்பாலை காலத்திலே இலங்கைத் தீவிலிருந்து தமிழ்நாட்டுக்கு உணவுப் பொருள்கள் வந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கதாகும். காழகத் தீவு என்று பெயர் பெற்ற பர்மாவிலிருந்து பல செல்வப்பொருள்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. அவைகள் எல்லாம் இன்ப வாழ்வுக்கேற்ற சிறந்த செல்வப்பொருள்கள். இவைகளைத் தவிர இன்னும் பல சிறந்த பண்டங்களும் குவிந்து கிடக்கின்றன. இத்தகைய பல செல்வங்களுடன் சிறந்து விளங்கின காவிரிப்பூம் பட்டினத்துத் தெருக்கள். செழிப்புள்ள நகரமான காவிரிப்பூம்பட்டினத்தின் எல்லையிலே அழியாத சிறந்த புகழையுடைய தேவர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடல் வழியாக வந்த நிமிர்ந்து விரைந்து ஓடும் குதிரைகளும், வண்டிகளின் வழியே வந்த கருமையான மிளகு மூட்டைகளும், வடநாட்டு மலைகளிலே பிறந்த மணிகளும், பொன்னும், குடகு மலையிலே பிறந்த சந்தனக் கட்டைகளும், அகிற்கட்டைகளும், தெற்குக் கடலிலே பிறந்த முத்தும், கீழ்க் கடலிலே உண்டான பவளமும், கங்கை யாற்றுச் செல்வமும், காவிரி யாற்றுச் செல்வமும், இலங்கைத் தீவிலிருந்து வந்த உணவுப் பொருள்களும், பர்மாவிலிருந்து வந்த செல்வப் பொருள்களும், இன்னும் பல அரிய பெரிய பண்டங்களும் நிலந் தாங்க முடியாமல் நெளியும்படி நிறைந்து, செல்வங்கள் ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்ற மிகப் பெரிய வீதிகள். இதுவே அந்தப் பதினோரு வரிகளில் அமைந்த பொருள். அந்த வரிகள் கீழ்வருவன:- 183. .. ... ... ... செழு நகர் வரைப்பின், செல்லா நல்லிசை அமரர் காப்பின், நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கரும்பரி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த வாரமும், அகிலும், தென்கடல் முத்தும், குணகடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி, வளம்தலை மயங்கிய நனம்தலை மறுகின்; பதவுரை செழுநகர் வரையின் - செழிப்புள்ள அந்நகரத்தின் எல்லை யிலே. செல்லா நல்இசை - அழியாத சிறந்த புகழையுடைய. அமரர் - தேவர்களின். காப்பின் - பாதுகாவலின் கீழ். நீரின் வந்த - கடல் வழியாகக் கப்பலிலே வந்த. நிமிர்பரி - நிமிர்ந்து விரைந்து ஓடும். புரவியும் - குதிரைகளும். காலின்வந்த - தரைவழியாக வண்டிகளிலே ஏற்றிக் கொண்டு வந்த. கரும்கரி மூடையும் - கருமை நிறமுள்ள மிளகு மூட்டைகளும். வடமலை - இமயம் போன்ற வடக்கில் உள்ள மலை களிலே. பிறந்த - விளைந்த. மணியும் - இரத்தினங்களும். பொன்னும் - பொன்கட்டிகளும். குடமலைப் பிறந்த - குடகு மலையிலே உண்டான. வாரமும் - சந்தனக் கட்டைகளும். அகிலும் - அகிற் கட்டைகளும். பாண்டிநாட்டுத் தென் கடலிலே மூழ்கி எடுத்த சிறந்த முத்துக் குவியல்களும் கீழைக் கடலிலே பிறந்த பவளங்களும் காணப்படுகின்றன. கங்கைவாரியும் - கங்கைநதிப்புறத்துச் செல்வங்களும், காவிரிப் பயனும் - காவிரியாற்றால் உண்டான செல்வங் களும். ஈழத்து உணவும் - இலங்கைத் தீவிலே விளைந்த உணவுப் பொருள்களும். காழகத்து - பர்மாவிலே தோன்றிய. ஆக்கமும் - செல்வப் பொருளும். அரியவும் - இன்னும் பல சிறந்தவைகளும். பெரியவும் - உயர்ந்தவைகளும் ஆன பண்டங்கள். நெரிய - பூமி நெளியும்படி, ஈண்டி - நிறைந்து. வளம் தலை மயங்கிய - இவ்வாறு செல்வங்கள் கலந்து கிடக்கின்ற. நனம்தலை - மிகப் பெரிய. மறுகின் - வீதிகளையுடையது காவிரிப்பூம் பட்டினம். மேலே கூறியவைகளைக் கொண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பு இருந்ததைக் காணலாம்; தமிழர் வெளி நாட்டினருடன் கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் வாணிபம் செய்ததை அறியலாம். அரேபியாவுடன், குடகுமலைப் பகுதியாருடன், வட நாட்டினருடன், இலங்கையருடன், பர்மியருடன் தமிழர்கள் வாணிபம் செய்து வந்தனர் என்பதனைப் பட்டினப்பாலை உணர்த்துகின்றது. பொதுமக்கள் வாழ்வு இத்தகைய செல்வப் பொருள்கள் நிறைந்து கிடக்கின்ற காவிரிப்பூம் பட்டினத்துப் பொதுமக்கள் கவலையறியாது வாழ்கின்றனர். அவர்களிலே பலர் கடற்கரையிலே களிப்புற்று வாழ்கின்றனர்; பலர் நகர் நடுவிலே நலம்பெற்று வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் சுற்றத்தாருடன் மகிழ்ந்து வாழ்கின்றனர். அவர்களுக்குப் பகைவர்களைப் பற்றிய பயமே இல்லை. அவர்களுக்குப் பகைவர்களும் யாரும் இல்லை. ஆதலால் பகைவர்களால் ஆபத்துண்டாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இல்லை. இதனை 194 முதல் 196 வரையில் உள்ள மூன்று வரிகளிலே காணலாம். கடல் துறைமுகத்திலே நீரின் நடுவிலேயும், நிலத்திலேயும், மகிழ்ச்சியுடன் நன்றாக உறங்கி. சுற்றத்தாருடன் மகிழ்ந்திருந்து, பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இல்லாமல் வாழ்கின்றனர். 194. நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும், ஏமாப்ப இனிது துஞ்சிக், கிளை கலித்துப், பகை பேணாது பதவுரை நீர் நாப்பண்ணும் - (அவ்வூர் பொதுமக்கள்) நீர் சூழ்ந்த கடற்கரை நடுவிலும். நிலத்தின் மேலும் - ஊருக்குள் உயர்ந்த நிலப்பகுதியிலும். ஏமாப்ப - மகிழ்ச்சியோடு. இனிது துஞ்சி - இனிமையுடன் உண்டு உறங்கி. கிளை கலித்து - சுற்றத்தாருடன் மகிழ்ந்திருந்து. பகை பேணாது - பகைவரிட மிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் வாழ்கின்றனர். இதிலிருந்து காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள எல்லாமக் களும் இன்புற்று வாழ்வதைக் காணலாம். வலைஞர்களும் ஊன்விற்போரும் காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்ந்த வலைஞர்கள் - அதாவது மீன் பிடிப்போர் என்றும் வறுமையே அறியாதவர்கள். கட்டுமரத்திலே ஏறிக் கடலிலே தொலை தூரம் சென்று மீன் பிடிக்க வேண்டிய தொல்லைகூட அவர்களுக்கில்லையாம். அவர்களுடைய வீட்டின் வாசலிலேயே பெரிய கடல்மீன்கள் துள்ளிக் குதித்துப் புரளுகின்றனவாம். இதைப் போலவே ஊன் விற்போருக்கும் வறுமையில்லை யாம். அவர்கள் குடிசைகளிலே உணவுக்குப் பயன்படும் ஆடு முதலிய விலங்குகள் நிறைந்து கிடக்கின்றனவாம். இவ்வுண்மையை 197, 198 ஆகிய இரண்டு வரிகளிலே காணலாம். வலைஞர்களின் குடிசை வாயில்களிலே மீன்கள் துள்ளிக் குதித்துப் புரளவும், ஊன்விலைஞர்களின் குடிசைகளிலே ஆடு முதலிய விலங்குகள் நிறைந்திருக்கவும் ஆன செல்வங்களும் உண்டு. 197. வலைஞர் முன்றின் மீன் பிறழவும் விலைஞர் குரம்பை மா ஈண்டவும் பதவுரை வலைஞர் - மீன் பிடிப்போரின். முன்றின் - வீட்டு முன்னிலையிலே. மீன் - கடல் மீன்கள். பிறழவும் - துள்ளிக் குதித்துப் புரளவும். விலைஞர் - ஊன்விற்போரின். குரம்பை - குடிசைகளிலே. மா - ஆடு முதலிய மிருகங்கள். ஈண்டவும் - நிறைந்திருக்கவும். இதனால் தமிழர்கள் மீன் உணவு உண்பதை வெறுக்க வில்லை என்பதையும், ஆடு போன்ற விலங்குகளின் ஊனை யுண்பதையும் வெறுக்கவில்லை யென்பதையும் அறியலாம். மீன் ஒரு விற்பனைப் பண்டமாக இருந்தது. இறைச்சியும் ஒரு வியாபாரமாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே பல நாட்டிலிருந்து வந்த பல செல்வங்கள் குவிந்து கிடந்தன. அந்நகரத்தில் உள்ள பொது மக்கள் வறுமையறியாமல் வளமுடன் வாழ்ந்தனர். பகைவர் களுக்கு அஞ்சாமல் வாழ்ந்தனர். மீன் பிடிப்போரும், ஊன் விற்போரும் செல்வத்துடன் சிறந்து வாழ்ந்தனர். .இவைகளைப் பட்டினப்பாலையிலே படித்துணரலாம். வேளாளர்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே உழவுத் தொழில் செய்யும் வேளாளர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களுடைய சிறப்பைப் பற்றி ஏழு வரிகளிலே சொல்லப்படு கின்றது. அந்த வேளாளர்கள் கொலையைக் கடிந்தவர்கள். கொல்லாவிரதத்தை மேற்கொண்டவர்கள். புலால் உணவு உட்கொள்ளாதவர்கள். களவை நீக்கியவர் கள். மற்றவர்கள் களவாடுவதற்கும் இடந்தராதவர்கள். தேவர்களை வழிபாடு செய்பவர்கள். பல திருவிழாக் கள் நடைபெறுவதற்கு அவர்களே காரணமாயிருப்பவர்கள். பல வேள்விகளைச் செய்து அவைகளின் மூலம் தேவர்களுக்கு அவிர்ப்பாகம் அளிப்பார்கள். அவர்கள் நல்ல பசுக்களையும், நல்ல காளைகளையும் வைத்துப் பாதுகாத்து வந்தனர். பசுக்கள் மக்களுக்குப் பாலுணவு கொடுப்பதற்கும், காளைகள் ஏருழுது தானியங்களை விளைப்பதற்கும் பயன்பட்டன. நான்கு மறைகளையும் கற்று அவைகளின் அறங்களைப் பின்பற்றுவோரைப் பாதுகாத்து வந்தனர். அந்த மறையவர்கள் ஒழுக்கங் குன்றாமல் உயர் நெறியிலே வாழ்ந்து புகழ் பெறுவதற்கு இந்த வேளாளர்களே காரணமாயிருந்தனர். இவர்கள் வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் அன்புடையவர்கள். நல்ல பலகாரங்களைச் செய்து வைத்தும், நல்ல பதமான உணவைக் கொடுத்தும் விருந்தினரைப் போற்று வார்கள். இவர்கள் எக்காலத்திலும் அறநெறி தவறாதவர்கள். தமக்கும் பிறர்க்கும் நல்வாழ்வளிக்கும் குளிர்ந்த நிழலிலே வாழ்ந்திருப்பவர்கள். வளைந்த கலப்பையினால் உழுது பயிர் செய்யும் தொழில் ஒன்றையே சிறந்ததென்று நினைப்பவர்கள். எப்பொழுதும் இத்தொழிலையே விரும்புகிறவர்கள். இவைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வேளாளரின் சிறந்த குணங்கள். இவைகளை 199 முதல் 205 வரையில் உள்ள 7 வரிகளிலே காணலாம். கொலையை வெறுத்தும், களவை வெறுத்தும், தேவர் களைப் போற்றியும், வேள்விகளின் மூலம் தேவர்களுக்குப் பலிகொடுத்தும், நல்ல பசுக்களோடு எருதுகளைக் காப்பாற்றியும், நான்மறையாளர்களின் புகழைப் பரவச் செய்தும், பலகாரங்கள் செய்தும், நல்ல உணவு கொடுத்தும் விருந்தினரை வரவேற்றும், அறநெறியில் தவறாமல் குளிர்ந்த நிழலிலே வாழும் வாழ்க்கையை யுடையவர்கள். இவர்கள் வளைந்த கலப்பையால் உழுது பயிர் செய்யும் தொழிலையே விரும்புகிறவர்கள். இப்பொருளமைந்த வரிகள் கீழ் வருவன:- கொலை கடிந்தும், களவு நீக்கியும், அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும் நல்ஆனொடு பகடுஓம்பியும், நான் மறையோர் புகழ் பரப்பியும், பண்ணியம் அட்டியும், பசும்பதம் கொடுத்தும், புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கைக், கொடு மேழி நசை உழவர். பதவுரை கொலை கடிந்தும் - கொலைத் தொழிலை வெறுத்தும். களவு நீக்கியும் - களவுத் தொழிலை ஒழித்தும். அமரர் பேணியும் - தேவர்களைப் போற்றியும். ஆவுதி அருத்தியும் - யாகங்களின் மூலம் தேவர்களுக்குப் பலியிட்டும். நல் ஆனொடு - நல்ல பசுக்களோடு. பகடு ஓம்பியும் - எருதுகளைக் காப்பாற்றியும். நான் மறையோர் - நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்களின். புகழ் பரப்பியும் - புகழைப் பரவும்படி செய்தும். பண்ணியம் அட்டியும் - (விருந்தோம்பி களுக்குப்) பலகாரங்கள் செய்து வைத்தும். பசும்பதம் கொடுத்தும் - நல்ல உணவைக் கொடுத்தும். புண்ணியம் முட்டா - அறநெறியிலிருந்து தவறாத. தண் நிழல் வாழ்க்கை - குளிர்ந்த நிழலிலே வாழ்பவர்கள். கொடுமேழி - வளைந்த கலப்பையினால் உழுந்தொழிலையே. நசை உழவர் - விரும்புகின்ற உழவர் களாகிய வேளாளர்கள். வணிகர் சிறப்பு இத்தகைய வேளாளர்கள் வாழ்கின்ற இடங்களிலே சிறந்த வணிகர்களும் வாழ்ந்திருந்தனர். அந்த வணிகர்கள் நேர்மை யுடையவர்கள். நடுநிலைமையுடையவர்கள். பேராசை கொண்டவர்கள் அல்லர்; பிறர் பொருளைக் கொள்ளையிடும் எண்ணம் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் நுகத்தடியின் நடுவின் அமைந்த பகலாணி போன்ற நடுநிலைமை யுடையவர்கள். உள்ளத்திலே கள்ளங் கபடமற்ற நல்ல மனம் படைத்தவர்கள். பழிக்கு அஞ்சுவோர். தம்மைப் பிறர் பழிக்காமல் - குறை கூறாமல் இருக்க வேண்டுமென்பதே அவர்கள் கவலை. ஆதலால், அவர்கள் எப்பொழுதும் உண்மையையே உரைப்பார்கள். ஒருபோதும் பொய் புகலத் துணிய மாட்டார்கள். அவர்கள் தமது பொருளை எவ்வளவு அருமையாகக் கருதுகிறார்களோ அதைப்போலவே பிறர் பொருளையும் அருமையாகக் கருதுவார்கள். பிறரிடத்திலிருந்து பண்டங்களை வாங்கிக் கொள்ளும்போது அவர்களை ஏமாற்ற மாட்டார்கள். அளவிலோ, நிறையிலோ அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தாம் பிறர்க்குப் பண்டங்களைக் கொடுக்கும் போதும் அளவிலும் நிறையிலும் குறைவில்லாமலே கொடுப் பார்கள். இவ்வாறு நாணயத்துடன் - நேர்மையுடன் பல பண்டங் களைக் கொள்முதல் செய்வார்கள். இத்தகைய வணிகர்களும் மேலே கூறப்பட்ட வேளாளர்களும் நெருங்கி வாழும் இருக்கை களும் அந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்தன. இதனை 206- வது வரி முதல் 212- வது வரி வரையில் உள்ள 7 வரிகளிலே காணலாம். இந்த ஏழு வரிகளும் வணிகர்களின் - தமிழ் நாட்டு வாணிகர்களின் சிறப்பைக் கூறுவன. நீண்ட நுகத்தடியிலே உள்ள நடு ஆணி போல நடுநிலை யிலே நின்ற நல்ல மனமுடையவர்கள்; பழிச் சொல்லுக்கு அஞ்சி உண்மையையே பேசி, தம்முடைய பொருளையும், பிறருடைய பொருளையும் ஒன்றாகவே எண்ணி, கொள்ளுவதையும் அளவுக்கு மேல் கொள்ளாமல், கொடுப்பதையும் குறைத்துக் கொடுக்காமல் பல பண்டங்களையும் விலைகூறிக் கொடுப்பவர்கள்; பழமையான முறையில் நேர்மையுடன் கொள்முதல் செய்பவர்கள். இவர்களும், வேளாளர்களும் நெருங்கி வாழ்கின்ற இடங்கள் அந்நகரில் உண்டு. 206. நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நல்நெஞ்சினோர்; வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடி, கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடா அது, பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித்; துவன்றிருக்கை. பதவுரை நெடுநுகத்து - நீண்ட நுகத்தடியிலே உள்ள. பகல்ஆணி போல் - நடு ஆணியைப் போல. நடுவுநின்ற - நடுவு நிலைமையிலே நின்ற நல்நெஞ்சினோர் - நல்ல நெஞ்சத்தை உடையவர்கள். வடு அஞ்சி - பழிக்குப் பயந்து. வாய் மொழிந்து - உண்மையைச் சொல்லி. தமவும் பிறவும் - தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும். ஒப்பநாடி - ஒன்றாகவே எண்ணி. கொள்வதும் - வாங்கிக் கொள்ளுவதையும். மிகை கொள்ளாது - அதிகமாகக் கொள்ளாமல். கொடுப்பதும் - கொடுப்பதையும். குறை கொடாது - குறைத்துக் கொடுக்காமல். பல்பண்டம் - பல பண்டங்களையும். பகர்ந்து - நியாயமான விலைகூறி. வீசும் - கொடுக்கின்ற . தொல் - பழமையாகவே. கொண்டி - நியாயமான முறையில் கொள்முதல் செய்கின்றவர்கள். துவன்று இருக்கை - இவர்கள் மேலே கூறிய வேளாளர்களுடன் நெருங்கியிருக்கின்ற இடங்களையுடையது காவிரிப்பூம்பட்டினம். பல நாட்டு மக்கள் இந்த நகரத்திலே, இன்னும் பல நாட்டு மக்களும், பல மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். திருவிழா நடக்கும் ஊரிலே பல அறிவுடைய மக்கள் கூடியிருப்பதுபோல இந்நகரிலே பல மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் பல மொழியினர். அவர்கள் பகை நாட்டினர் அல்லர். தமிழ் நாட்டோடு நட்புக் கொண்ட வெளிநாட்டினர். இந்த வெளிநாட்டினரும், வேற்று மொழியினரும், சிறிதும் வேற்றுமையின்றித் தமிழ் நாட்டினருடன் கலந்து வாழ்ந்தனர். இதனை 213-ஆவது வரி முதல் 218-ஆவது வரி வரையில் உள்ள 6 வரிகளிலே காணலாம். அவ்வரிகளும் அவற்றின் பொருளும் கீழ் வருவன: 213. பல்லாயமொடு பதி பழகி, வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல், சாறு அயர்மூதூர் சென்று தொக்காங்கு; மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள், கலந்து இனிது உறையும், முட்டாச் சிறப்பின் பட்டினம்... ... பதவுரை பல் ஆயமொடு - பல கூட்டத்தாருடன். பதிபழகி - பல ஊர்களுக்கும் சென்று பழகிய. வேறு வேறு உயர்ந்த - வேறு வேறு துறைகளிலே தேர்ச்சி பெற்று உயர்ந்த. முதுவாய் - அறிவு நிறைந்த. ஒக்கல் - கூட்டத்தினர். சாறு அயர் - திருவிழாச் செய்கின்ற. மூதூர் சென்று - பழமையான ஊருக்குள் சென்று. தொக்கு ஆங்கு - கூடியிருந்தாற் போல. மொழி பல பெருகிய - மொழிகள் பல நிறைந்த. பழிதீர்தேத்து - குற்றமற்ற தேசத்தி லிருந்து வந்த. புலம்பெயர் மாக்கள் - பிரயாணிகள் பலரும். கலந்து இனிது உறையும் - காவிரிப் பூம்பட்டினத்து மக்களுடன் கலந்து சுகமாக வாழ்கின்ற. முட்டாச்சிறப்பின் - தடையற்ற சிறப்பினையுடைய. பட்டினம் - காவிரிப் பூம்பட்டினம். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பலமொழியினருடனும், பல நாட்டினருடன் கலந்து ஒன்றுபட்டு வாழ்ந்தனர் என்ற உண்மையைக் காணலாம். இதற்கு அடுத்த 219, 220 ஆகிய இரண்டு வரிகளும் பட்டினப்பாலையைப் பாடிய ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளது. இத்தகைய சிறந்த காவிரிப்பூம்பட்டினத்தைப் பரிசாகப் பெறுவதாயினும், என் காதலியை விட்டு நான் பிரிந்து செல்ல மாட்டேன். அவளுடனே கூடியிருந்து வாழ்க நெஞ்சமே என்பதே அந்த இரண்டு வரிகளிலும் அமைந்த பொருள். அந்த வரிகளும், அவற்றின் பொருளும் கீழ் வருவன: ... ... ... ... ... ... பட்டினம் பெறினும்219. வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன்; வாழிய நெஞ்சே! பட்டினம் பெறினும் - இத்தகைய சிறந்த காவிரிப்பூம் பட்டினத்தைப் பெறுவதாயிருந்தாலும். வார் இரும் கூந்தல் - நீண்டகரியகூந்தலையும்.வயங்கு இழை - விளங்குகின்ற ஆபரணங்களையும் உடைய என் காதலி. ஒழிய - என்னை நீங்கித் தனித்திருக்கும்படி விட்டுப் பிரிந்து. வாரேன் - பொருள் தேட வரமாட்டேன். வாழிய நெஞ்சே! - வாழ்க என் மனமே. இவ்வாறு பட்டினப்பாலையிலே 220 - ஆவது வரிகளில் காவிரிப் பூம்பட்டினத்தின் அமைப்புக் கூறப்பட்டது. அந்த நகரிலே வாழ்கின்ற மக்களைப் பற்றியும், அவர்களுடைய தொழில் ஒழுக்கங்களைப் பற்றியும் கூறப்பட்டன. அங்கு நடை பெறும் வியாபாரங்களைப் பற்றியும், குவிந்து கிடக்கும் செல்வங்களைப் பற்றியும் கூறப்பட்டன. காவிரிப்பூம் பட்டினத்திற்கும் வேறு பல நாடுகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் கூறப்பட்டன. இதற்கு மேல் கரிகாற்சோழன் பெருமை கூறப்படுகின்றது. கரிகாலன் வரலாறு இதுவரையில் 220 வரிகளிலே காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றிக் கூறினார் உருத்திரங்கண்ணனார். இதற்கு மேலுள்ள 81 வரிகளிலே காவிரிப்பூம்பட்டினத்தின் தலைவன் - உறையூருக்கும் தலைவன் - சோழநாட்டு முடியுடை வேந்தன் - கரிகாற் சோழனுடைய பெருமையைப் பற்றிக் கூறுகிறார். கரிகாலனுடைய வரலாற்றைச் சுருக்கமாக 19 வரிகளிலே பாடிவிட்டார். அதனை 221 முதல் 239 வரையில் உள்ளவரி களிலே காணலாம். கரிகாற்சோழன் இளமைப் பருவத்திலேயே அவனுடைய பகைவர்களால் சிறைப்படுத்தப்பட்டான். சிறைப்படுத்தப் பட்டதனால் அவன் உள்ளம் சோர்ந்து விடவில்லை. பகைவர்க்குப் பணிந்துவிடவில்லை. அவன் பிறவி வீரன்; பிறவியிலேயே அஞ்சாமை யுடையவன். புலியைக் கூண்டுக்குள் அடைத்து விடுவதனால் அதன் வீரமும், பலமும் குன்றிவிடுவதில்லை. மேலும் வளர்ந்து கொண்டுதான் வரும். இதுபோல கரிகாலன் சிறைப்பட்டதனால் அவனுடைய இயற்கையான வீரமும், மனவுறுதியும் வயிரமேறி வளர்ந்தே வந்தன. யானை பிடிப்போர் யானைகளைப் பிடிப்பதற்குக் குழி பறித்து வைப்பார்கள். அக்குழியின் மேல் யானை தின்னும் தழை செடிகளை நட்டுவைப்பார்கள். அவைகளைத் தின்னப்போகும் யானை அக்குழியிலே வீழ்ந்து விடும். இவ்வாறு குழியிலே வீழ்ந்த ஒரு ஆண் யானை தன் அறிவைப் பயன்படுத்தித் தன் கொம்புகளால் அந்தக் குழியின் கங்குகளைக் குற்றித் தகர்த்து விட்டது. குழியினின்று வெளியேறித் தன் பெண் யானையுடன் கூடிக் களித்தது. இதைப் போலக் கரிகாலன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்திச் சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டான். தன்னைச் சிறையிலே வைத்துக் காத்து நின்ற வாட்படை வீரர்களையெல்லாம் போர் செய்து விரட்டினான். பகைவர் களின் கையிலே சிக்கியிருந்த, தனது அரச உரிமை யைப் பெற்றான். இது இவனுடைய இளம் பருவத்து வீரச் செயல். தன்னுடைய அரச உரிமையைப் பகைவர்களிடமிருந்து வீரத்துடன் பெற்ற கரிகாலன் அவ்வளவோடு நிற்கவில்லை. தன்னை வஞ்சித்த பகைவரைப் பழிக்குப் பழி வாங்க எண்ணங் கொண்டான். அந்தப் பகைவர்களுடைய நாடுகளைத் தன் ஆட்சிக்குள்ளே கொண்டுவரத் தீர்மானித்தான். உடனே பகைவர்களின் கோட்டைகளைக் கொம்புகளால் குத்தித் தகர்க்கும் வலிமையுடைய யானைப் படைகளைத் திரட்டினான். அந்த யானைகள் எதிரிகளான மன்னர்களின் முடித்தலைகளைத் தம் கால்களிலே பொருந்திக் கூர்மையான நகங்களால் ஏற்றும் ஆற்றல் அமைந்தவை. இவைகளுடன் குதிரைப் படைகளையும் சேர்த்துக் கொண்டான். கருங்கற் பாறைகளின் மேல் புதர் முளைத்தாற் போல் பூளைப் பூவையும், உழிஞைப் பூவையும் சூடிக் கொண்டான். போர்க்களத்திலே புகுந்தான். பகைவர்கள் உடல் சிதைந்து விழவும், பருந்துகள். போர்க்களத்தின் மேல் வட்டமிடவும் வன்மையுடன் போர் புரிந்தான். போர் முரசத்தை முழக்கினான். பகைவருடைய இடங்கள் பாழாகும்படி போர் செய்து முதற் போரிலேயே அவர்களைத் தோற்கடித்தான். அப்படியும் அவனுடைய சினம் தணியவில்லை. மேலும் பகைவர்களின் நாட்டுக்குள்ளே புகுந்தான். அவர்களுடைய பாதுகாவல்களையெல்லாம் தகர்த்தான். குளிர்ந்த மருத நிலத்திலே வாழும் குடிமக்களையும் அவ்விடத்தி லிருந்து துரத்தியடித்தான். இவ் வரலாற்றைக் கூறும் வரிகளையும், அவற்றின் பொருளையும் கீழே காண்போம். 221. …………...கூர் உகிர்க் 222. கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப், பிறர் பிணி அகத்திருந்து, பீடு காழ்முற்றி; அரும்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கையானை பிடிபுக்காங்கு; நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் செறிவுடைத் திண்காப்பு ஏற் வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்திப்; பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடிஅரண்தொலைத்தகதவுகொல்மருப்பின்; முடியுடைக்கருந்தலைபுரட்டும்முன்தான், உகிர்உடைஅடிய,ஓங்கெழில்யனை, வடிமணிப்புரவியொடு,வயவர்வீழப், பருநல்வனத்துப்பருந்துஉலாய்நடப்பத் தூறுஇவர்துறுகல்பாலப்பார்வேட்டு வறுபல்பூளையொடுஉழிஞைசூடிப்; பய்க்கண்அன்னபிளிறுகடிமுரசம் மக்கண்அகல்அறைஅதிர்வனமுழங்க முனைகெடச்சன்று,முன்சமம்முருக்கித்; தலைதவச்சன்றுதண்பணைஎடுப்பி; பதவுரை கூர்உகிர்க் குருளை - கூர்மையானநகத்தினையுடைய புலிக்குட்டி யானது. கூட்டுள் - கூட்டுக்குள்ளே அடைப்பட்டு. வளர்ந்த ஆங்கு - வளர்ந்ததைப் பால.பிறர்பிணி - கரிகாலன் பகைவரால் பிணிக்கப்பட்டு. அகத்திலிருந்து - அவர்களுடைய சிறைக்கூடத்திலே இருந்து. பீடு - அவனுடைய பெருமையான வீரம். காழ்முற்றி - வயிரமேறி வளர்ச்சியடைந்து. அரும்கரை - ஆண்யானை தான் வீழ்ந்த குழியின் உயர்ந்த கரையை. கவியக்குத்தி - கவிழ்ந்து விழும்படி தந்தங்களால் குத்தி இடித்து. குழிகொன்று - குழியை அழித்து வெளியேறி. பெரும் கையானை - அந்த நீண்ட துதிக்கையுடைய யானை. பிடிபுக்கு ஆங்கு - தன் பெண் யானையுடன் போய்ச் சேர்ந்ததைப்போல. நுண்ணுதின் - கரிகாலன் மிக நுண்ணறிவுடன். உணரநாடி - ஆராய்ந்து தெளிந்து. நண்ணார் - பகைவர்களின். செறிவு உடை - நெருங்கிய சிறையின். திண்காப்பு ஏறி - வலிமையுள்ள காவலான மதிலின்மேல் ஏறி. வாள்கழித்து - அங்கே காவல் காத்துநின்ற வாள் வீரர்களை ஓடச் செய்து (தப்பித்துச் சென்று). உருகெழு - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருகின்ற. தாயம் - தனது அரசுரிமையை. ஊழின் எய்தி - முறைப்படி அடைந்து (முறைப்படி பெற்றான்.) பெற்றவை - வெற்றியையும் , தனது அரசுரிமையையும் பெற்றமைக்காக. மகிழ்தல் செய்யான் - மகிழ்ச்சியடையாத வனாய். செற்றோர் - எதிரிகளின். கடி அரண் - சிறந்த காவலை. தொலைத்த - அழித்த. கதவுகொல் - கோட்டைக் கதவைத் தகர்த்து அதனை ஏந்திய. மருப்பின் - கொம்புகளையும். முடிஉடை - முடியை அணிந்த. கரும்தலை - மன்னர்களின் கரிய தலைகளை. புரட்டும் - அவர்களின் உடம்பிலிருந்து புரட்டித் தள்ளும். முன்தாள் - முன்கால்களையும். உகிர்உடை - நகங்களை யுடைய. அடிய - பாதங்களையும் உடைய. ஓங்கு எழில் யானை - சிறந்த அழகுடைய யானைப் படைகளோடும். வடிமணி - வார்த்து எடுத்த மணிகளைக் கட்டிய. புரவியொடு - குதிரைப் படைகளோடும் சென்று. (இவ்வாறு பகைவர்களின்மேல் படை திரட்டிச் சென்று.) வயவர் வீழ - பகைவர்களின் படைவீரர்கள் போர்க் களத்திலே வீழ்ந்து மடிய. பெருநல்வானத்து - பெரிய நல்ல வானத்திலே. பருந்து உலாய் நடப்ப - பருந்து உலவித் திரிய. தூறுஇவர் - புதர்கள் படர்ந்த. துறுகள் போல - கருங்கற் பாறையைப் போல. போர்வேட்டு - போர் செய்ய விரும்பி. வேறுபல் பூளையொடு - பல வேறான பூளைப் பூக்களுடன். உழிஞைசூடி - உழிஞைப் பூவையும் தரித்துக் கொண்டு (போர்க்குப் புறப்பட்டான்.) பேய்க்கண் அன்ன - பேயின் கண்ணைப் போன்ற வட்டமான முகப்பை யுடைய. பிளிறு - யானையைப் போல் பிளிறுகின்ற. கடிமுரசம் - சிறந்த போர் முரசு. மாகண் - சிறந்த இடமான. அகல்அறை - பெரிய பாசறை முழுவதும். அதிர்வன முழங்க - அதிரும்படி முழங்க. முனை - பகைவர்களின் போர்முனை. கெட - தோற்றோடும்படி. சென்று - ஆர்ப்பாட்டத்துடன் போய். முன் சமம் - முதல் யுத்தத்திலேயே. முருக்கி - பகைவர் சேனையை அழித்து. தலைதவ - அதன்மேலும் மிகவும். சென்று - முன்னேறி அவர்கள் நாட்டுக்குள் புகுந்து. தண்பணை - குளிர்ந்த மருத நிலத்தில் வாழ் வோரை. எடுப்பி - விரட்டி. (மருத நிலத்தில் வாழ்வோரை அவ்விடத்திலிருந்து ஓடும்படி செய்தான்.) இந்த 19 வரிகளிலே கரிகாற் சோழனுடைய வரலாறு சுருக்கமாக அமைந் திருப்பதைக் காணலாம். இதில் கரிகாலன் மூன்று இடங்களில் மூன்று விதமாக உவமிக்கப்பட்டிருக் கின்றான். அவன் சிறையில் வாழும்போது புலிக்குட்டி போலச் சிறிதும் வீர உணர்ச்சி குறையாமல் வளர்ந்து வந்தான். அவன் சிறையிலிருந்து தப்பித்து வெளியேறியதை, குழியில் விழுந்த ஆண்யானை தப்பித்து வெளியேறியதற்கு ஒப்புக் கூறுகிறார். ஆண் யானை தனக்குரிய பெண் யானையிடம் சேர்ந்ததைப் போல இவனும் தனக்குரிய அரசாட்சியைப் பெற்றான். இவன் பூளைப் பூக்களையும், உழிஞைப் பூக்களையும் தரித்துக் கொண்டு போருக்குச் சென்றபோது, புதர் படர்ந்த கருங்கற் பாறையைப் போல் காணப் பட்டானாம். கருங் கல்லைப் போன்ற உடலையும் உள்ளத்தையும் உடையவன் என்பதற்கே இந்த உவமையைக் கூறினார் புலவர். இவன் இளம் பருவத்திலேயே சிறைப்படுத்தப்பட்ட தனால், பகைவர்களின் மேல் இவன் கோபம் வளர்ந்து கொண்டே வந்தது. அவர்களோடு அடிக்கடி போர் செய்து அவர்களை நடுநடுங்கச் செய்து வந்தான். இளம் பருவத்தில் ஒருவர் உள்ளத்தில் வேரூன்றுகின்ற எண்ணம் எப்பொழுதும் அழியாமல் நிற்கும். அவ்வெண்ணம் தனக்கேற்ற செயல்களைச் செய்து கொண்டே இருக்கும். இக்கருத்தையும் பட்டினப்பாலை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். பாருலகைப் பாழாக்கும் போர் போரின் கொடுமையைப் பற்றி உருத்திரங்கண்ணனார் 240 முதல் 268 வரையில் உள்ள 29 வரிகளிலே விளக்கிக் கூறுகிறார். கரிகாற்சோழன் தன் பகைவர்கள் மீது கடுங் கோபங் கொண்டு செய்த போரினால் பகைவர் நாடுகளிலே ஏற்பட்ட சேதங் களைப் பற்றி விரித்துரைக்கிறது பட்டினப் பாலை. முதலிலே செழிப்பான மருதநிலம் அடைந்த மாறுதலைப் பற்றிப் பார்ப்போம். மருத நிலம் கரிகாலன் பகைவர்களின் நாட்டில் புகுவதற்கு முன்னே அந்த நாட்டின் மருத நிலம் மிகவும் செழிப்பாக இருந்தது. எங்கே பார்த்தாலும் கரும்புகள் வளர்ந்து காட்சியளித்தன. அவைகள் வெண்மையான பூக்களுடன் காற்றிலே அசைந்து கொண்டிருந்தன. வயல்களில் செந்நெற் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. குவளை மலர்களும், நெய்தல் மலர்களும் எங்கு பார்த்தாலும் மலர்ந்து கண்ணைக் கவர்ந்தன. இவைகள் கழனிகளிலே காணப்பட்ட காட்சி; குளங்களில் முதலைகள் களித்து வாழ்ந்து வந்தன; முதலைகள் வாழத் தகுந்த ஆழமான பொய்கைகள் பல ஆங்கே காணப்பட்டன. இப்பொழுது அந்த இடங்கள் எல்லாம் கொழுத்த வேர்களையுடைய அருகம் புல்லும், கோரைகளும் முளைத்துக் கிடக்கும் பாழ்நிலமாகிவிட்டன. வயல்களும் குளங்களும் நீர் வறண்டு ஒன்றுபோலக் காணப்பட்டன. அங்கெல்லாம் கொம்புகளையுடைய கலைமான்களும், பெண் மான்களும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. இவ்வாறு போரினால் விளைநிலம் பாழாகி விட்டது; விலங்குகள் வாழும் புதர் அடர்ந்த பாழ்நிலமாக அவைகள் காட்சியளித்தன; இதனை, 240. வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி மா இதழக் குவளையொடு நெய்தலும் மயங்கிக், கராஅம் கலித்த கண்அகன் பொய்கைக் கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச், செறுவும் வாவியும் மயங்கி, நீர் அற்று அறு கோட்டு இரலையொடு மான்பிணை உகளவும் என்ற வரிகளால் காணலாம். இதன் பொருள் கீழ் வருமாறு: வெண்பூகரும்பொடு - வெண்மையான பூக்களை யுடைய கரும்புகளுடன், செந்நெல் நீடி - செந்நெற் பயிர்களும் நிலைத்து. மாஇதழ் - பெரிய இதழ்களை யுடைய. குவளையொடு - குவளைமலர்களோடு. நெய்தலும் மயங்கி - நெய்தல் மலர்களும் கலந்து மலர்ந்திருந்த. கராம் - முதலைகள். களித்த - மகிழ்ந்து வாழ்ந்திருந்த. கண்அகல் பொய்கை - பெரிய குளங்களிலும் வயல்களிலும். கொழும்கால் - கொழுத்த வேர்களையுடைய. புதவமொடு - அருகம் புற்களுடன். செருந்தி - கோரைகளும் நிலைத்து வளர்ந்து. செறுவும் - வயல்களும், வாவியும் - குளங் களும், மயங்கி - வேற்றுமையில்லாமல் ஒன்றாகி. நீர் அற்று - நீர் வறண்டு. அறுகோட்டு - அறுப்புக்கள் அமைந்த கொம்பினை யுடைய. இரலையொடு - கலைமான்களோடு. மான்பிணை - பெண்மான்கள். உகளவும் - துள்ளித் திரிந்து கொண்டிருக்கவும். இது போரினால் மருத நிலத்திற்கு விளைந்த சேதம். இனி ஊரில் உள்ள அம்பலங்கள் - அதாவது பெண்கள் வணங்கும் கோயில் மண்டபங்கள் எவ்வாறு பாழ் அடைந்தன என்பதைக் கூறுகிறார் ஆசிரியர். அம்பலங்கள் ஊர் நடுவிலே உள்ள தெய்வம் உறையும் மண்டபத்திற்கு அம்பலம் என்று பெயர். பகைவர் நாட்டிலிருந்து சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட பெண்கள் நல்ல நீர்த்துறைகளிலே நீராடு வார்கள். அம்பலத்துள் புகுந்து தரையை மெழுகுவார்கள். விளக்கேற்றி மலர் சிந்தி வைப்பார்கள். மாலைக் காலத்திலே இவ்வாறு கோலம் செய்து வைப்பார்கள். இந்த மண்டபங் களிலே தூண்களில் தெய்வத்தின் உருவம் காணப்படும். அத்தெய்வத்தை உள்ளூர்க்காரர்களும், வெளியூர்க்காரர்களும் வந்து வணங்கிச் செல்வார்கள். இத்தகைய அம்பலங்கள் பல, பகைவர்களின் ஊர்களிலே இருந்தன. அவைகள் எல்லாம் கரிகாற் சோழனுடைய போரினால் பாழ்பட்டன. அங்கே ஆண் யானைகளும் பெண் யானைகளும் கட்டப்பட்டன. அந்த யானைகள் அந்த மண்டபங்களின் தூண்களிலே உரஞ்சுவதனால், தூண்கள் சாய்ந்து விடுமோ, மண்டபம் விழுந்து விடுமோ என்று அஞ்சத்தக்க நிலையில் இருந்தன. இதனை, 246. கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி, அந்தி மாட்டிய நந்தா விளக்கின், மலர் அணி, மெழுக்கம், ஏறிப் பலர் தொழ, வம்பலர் சேக்கும், கந்துடைப் பொதியில், பருநிலை நெடுந்தூண் ஒல்கத், தீண்டிப் பெருநல் யானை யொடு, பிடிபுணர்ந்து உறையவும்; என்பதனால் காணலாம். இதன் பொருள் வருமாறு: கொண்டி மகளிர் - பகைவர் நாட்டிலிருந்து சிறை பிடித்துக் கொண்டு வரப்பட்ட பெண்கள். உண்துறை மூழ்கி - நீருண்ணும் துறைகளிலே குளித்து. அந்தி மாட்டிய - மாலைக் காலத்திலே ஏற்றிமாட்டப்பட்டிருக்கும். நந்தா விளக்கின் - ஒளி குறையாத விளக்கையும். மலர் அணி - மலர்கள் அணிந்திருத் தலையும், மெழுக்கம் - மெழுகப்பட்ட இடத்தையும் உடைய. ஏறி - இடத்திலே புகுந்து. பலர் தொழ - உள்ளூரார் பலரும் வணங்கவும். வம்பலர் - வெளியூரார்கள் பலரும். சேக்கும் - கூடி வணங்கவும் அமைந்துள்ள. பொதியில் - அம்பலங்களிலே உள்ள. பருநிலை - பருமனாக நிற்கின்ற. நெடும் தூண் - உயரமான தூண்கள். ஒல்க தீண்டி - சாயும்படி உரசிக் கொண்டு. பெருநல்யானையொடு - பெரிய நல்ல ஆண் யானையொடு. பிடிபுணர்ந்து - பெண் யானையும் சேர்ந்து. உறையவும் - வசிக்கவும். இதனால் பொதுவான - மக்கள் சென்று வழிபாடு செய்யும் - கோவில்கள் யுத்தத்தால் பாழான செய்தியைக் காணலாம். கலை மன்றங்கள் நகரிலே விழாக்கள் நடைபெறும்போது கலை மன்றங் களிலே, நாடகங்களும், நடனங்களும் நடைபெறும். கரிகாலன் படையெடுத்துச் சென்ற நகரங்களிலே விழாக் களெல்லாம் ஒழிந்து போய்விட்டன. திருவிழாக் காலங்களிலே சிறந்த மலர்களைத் தெருவெல்லாம் தூவுவார்கள். கலையறிவிலே சிறந்த கூத்தர்கள் தெருவிலே நின்று முழவென்னும் வாத்தியத்தை முழக்குவார்கள். அந்த முழவோசைக்கு ஏற்றார்போல யாழை இசை கூட்டி வாசிப் பார்கள். இத்தகைய திருவிழாக்கள் நின்றுவிட்டமையால் கலை மன்றங்களும் பாழ்பட்டன. கலை மன்றங்களுக்குள் யாரும் நுழைவதற்கு அஞ்சுவார்கள். அங்கே சிறிய பூக்களையுடைய நெருஞ்சிப் பூண்டுகளும், அருகம்புல்லுகளும் முளைத்துக் காடாக மண்டிக் கிடந்தன. அந்த மன்றங்களுக்குள் நரிகள் புகுந்து குடியிருந்து ஊளையிட்டு கொண்டிருந்தன. அழுகுரலெடுக்கும் கோட்டான் களும், ஆந்தைகளும் அலறிக் கொண்டிருந்தன. கூட்டமான ஆண் பேய்களும், தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு பிணங்களைத் தின்னும் பெண் பேய்களும் கூடியிருந்தன. இத்தகைய மன்றங்களுக்குள் மக்களில் யார்தான் துணிந்து நுழைவார்கள். இதனை. 252. அருவிலை நறும்பூத் தூஉய்த், தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த, திரிபுரி நரம்பின் தீம்தொடை ஓர்க்கும் பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச், சிறுபூ நெறிஞ்சியோடு அறுகை பம்பி அழல் வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்; அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்; கணம்கொள் கூளியொடு கதுப்பு இருத்து அசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும். என்பதனால் அறியலாம். இதன் பொருள் வருமாறு:- அருவிலை - சிறந்த விலையையுடைய. நறும்பூ - நல்ல மலர்களை. தூய் - தூவி. தெருவின் - தெருவிலே நின்று. முதுவாய்க் கோடியர் - அறிவு நிரம்பிய கூத்தர்கள். முழவொடு புணர்ந்த - முழவு வாத்தியத்துடன் சேர்ந்து வாசிக்கப்படும். திரிபுரி - முறுக்கேறின நரம்பமைந்த. தீம் தொடை - யாழின் இனிய பண்ணுடன். ஓர்க்கும் - உணர்ந்து பாடும். பெருவிழா - பெரிய திருவிழாக்கள். கழிந்த - அற்றுப்போன. பேமுதிர் - அச்சம் நிறைந்த. மன்றத்து - கலைமன்றங்களிலே. அழல்வாய் ஓரி - சூடான வாயையுடைய நரிகள் கூடியிருந்து. அஞ்சுவர - கேட்போர் அஞ்சும்படி. கதிர்ப்பவும் - ஊளையிடவும். அழுகுரல் கூகையொடு - அழுகின்ற குரலமைந்த கோட்டான்களுடன். ஆண் தலை விளிப்பவும் - ஆந்தைகளும் கூடி அலறவும். கணம் கொள் - கூட்டமாகக் கூடிக்கொண்டிருக் கின்ற. கூளியொடு - ஆண் பேய்களுடன். கதுப்பு இகுத்து அசைஇ - தலைமயிரை விரித்து ஆடிக் கொண்டு. பிணம்தின் - பிணங்களைத் தின்று கொழுத்த . யாக்கை - உடம்பையுடைய. பேய்மகள் - பெண் பேய்கள். துவன்றவும் - கூடி ஆடவும் (ஆகிய இந்த நிலையிலிருந்தன). கரிகாற் சோழனுடைய போரால் கலைமன்றங்களெல்லாம் இவ்வாறு பாழ்பட்டுக் கிடந்தன. நகரங்கள் கரிகாலனுடைய பகைவர்களின் நகரங்கள் எவ்வாறு பாழ்பட்டன என்பதை அடுத்தபடியாகக் கூறுகிறார் ஆசிரியர். கரிகாலன் படையெடுப்பதற்கு முன்னே பகைவர்களின் நகரங்கள் செல்வம் நிறைந்து செழித்திருந்தன. நகரங்களில் வளைந்த தூண்களையுடைய உயர்ந்த மாளிகைகள் இருந்தன. அந்த மாளிகைகளின் வாயில்களிலே விருந்தினர்கள் நிறைந் திருப்பார்கள். விருந்தினர் எவ்வளவு பேர் வந்து சாப்பிட்டாலும் குறையாமல் சோறு நிரம்பியுள்ள சமையற் கட்டுக்கள் இருந்தன. அந்த மாளிகைகளின் சுவர்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தன. அந்த மாளிகைகளின் உயர்ந்த திண்ணைகளின் மேல் பச்சைக் கிளிகள் உட்கார்ந்து இனிமையாகப் பேசிக்கொண்டி ருக்கும். இத்தகைய தன்மை யுள்ள செழித்த நகரங்கள் இப்பொழுது பாழாகி விட்டன. வில்லுடைய வேடர்கள் அந்த நகரங்களைக் கொள்ளையிட்டு விட்டனர். அவர்கள் கால்களிலே செருப்பணிந்து, துடியென்னும் வாத்தியத்தை ஒலித்துக் கொண்டு அந்த நகரங்களிலே நுழைந்து கொள்ளையிட்டனர். அந்த நகரங்களிலே சேமிக்கப்பட்டிருந்த நெற்கூடுகளில் உள்ள தானியங்களையெல்லாம் கொள்ளை கொண்டுபோய் உண்டு விட்டனர். இதனால் அந்த நெற் கூடுகளெல்லாம் வெறுங் கூடாயின. கூடுகளின் உள்ளே கோட்டான்கள் குடியிருந்து நடுப்பகற் காலத்தில் கூட, இரவுதானோ என்று மயங்கும்படி கூவிக் கொண்டிருந்தன. கரிகாற்சோழன் செய்த போரினால், செல்வர்க்கும் விருந்தினர்க்கும் உறைவிட மாயிருந்த நகரங்கள், கோட்டான்கள் குடியிருக்கும் பாழூராயின. இதனை. 261. கொடுங்கால் மாடத்து நெடும்கடைத் துவன்றி விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் ஒண்சுவர் நல்இல் உயர்திணையிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்; தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக் கொடுவில் எயினர் கொள்ளையுண்ட உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும். என்ற வரிகளால் காணலாம். இவ்வரிகளின் பொருள் கீழ் வருமாறு:- கொடுங்கால் மாடத்து - வளைந்த தூண்களையுடைய மாளிகைகளின். நெடும் கடை - பெரிய வாசல்களிலே. துவன்றி - கூடி. விருந்து உண்டு - விருந்தினர்கள் ஏராளமாகச் சாப்பிட்டுங் கூட. ஆனா - குறையாத. பெரும் சோற்று - மிகுந்த சோற்றை யுடைய. அட்டில் - சமையல்கட்டினையும். ஒண்சுவர் - ஒளிபொருந்திய சுவரினையும் உடைய. நல் இல் - நல்ல மாளிகை களின். உயர்திணையிருந்து - உயரமான திண்ணைகளிலே வீற்றிருந்து. பைம் கிளி மிழற்றும் - பச்சைக் கிளிகள் இனிமையாகப் பேசிக் கொண்டிருக்கின்ற. பால்ஆர் செழுநகர் - தன்மை பொருந்திய செழிப்புள்ள நகரங்கள். (இது கரிகாலன் படையெடுப்பதற்கு முன்னிருந்த நிலைமை.) தொடுதோல் அடியர் - செருப்பையணிந்த பாதங்களை யுடையவராய். துடிபடக் - துடியென்னும் வாத்தியங்களை ஒலித்துக் கொண்டு. குழீஇ - கூடி. கொடுவில் எயினர் - வளைந்த வில்லையுடைய வேடர்கள். கொள்ளை உண்ட - கொள்ளை யிட்டு உண்டுவிட்டமையால். உணவுஇல் - உணவுப் பொருள் இல்லாமற் போன. வரும் கூட்டு - வெறும் நெற்கூட்டின். உள் அகத்து இருந்து - உள்ளிடத்தே குடியிருந்து கொண்டு. வளைவாய்க் கூகை - வளைந்த வாயை யுடைய கோட்டான். நன் பகல் குழறவும் - நடுப்பகலிலேயே இது இரவோ பகலோ வென்று கேட்டோர் மயங்கும்படி கூவவும். இவ்வாறு நகரங்கள் பாழ்பட்டன. போரினால் இவ்வாறு நகரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுப் பாழாயின. மேலே காட்டிய 29 வரிகளிலே உள்ள பொருள்களில் ஆராய்ந்தால் போரின் கொடுமையை உணர்ந்து கொள்ளலாம். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டிற்கும் போர் நடைபெற்றால் தோற்ற நாடே அதிக சேதமடைவது வழக்கம். ஆனால் இக்கால நிலைவேறு. போரில் தலையிட்ட எல்லா நாடுகளிலும் பொருட் சேதமும், துன்பமும் ஏற்படுவதே இக்கால நிலை. போர் மூண்டால் விளை நிலங்கள் பாழ்நிலங்களாகும்; இதனால் வறுமையும், பஞ்சமும், பிணியும் வளரும். பொதுமக்கள் போற்றும் கோயில்களும் பாழாகும். கலைகள் வளர்வதற்குக் காரணமாக உள்ள மன்றங்கள் எல்லாம் பாழாகும்; இதனால் கலைவளர்ச்சி குன்றும். செழித்த நகரங்கள் எல்லாம், போர் வீரர்களாலும் குண்டர்களாலும் கொள்ளையடிக்கப்படும்; நகரங்களும் பாழ்பட்டு விடும். இவைகளெல்லாம் போரினால் உண்டாகும் இழிவுகள். இவைகள் பட்டினப்பாலையிலே எவ்வளவு அழகாக விளக்கப் பட்டிருக்கின்றன என்பதை இதனைப் படிப்போர் அறியலாம். கரிகாற் சோழன்ஆ வீர வாழ்வு கரிகாற் சோழனுடைய வீரவாழ்வைப் பற்றி, 269 முதல் 299 வரையில் உள்ள 31 வரிகளிலே விளக்கிக் கூறுகிறது பட்டினப் பாலை. அவன் அழிவு வேலை செய்யும் வெறும் வீரனாக மட்டும் வாழவில்லை. எதிர்த்த பகைவர்களையும், அந்தப் பகைவர் களுக்கு ஆதரவாயிருந்த நாட்டையும் நாசமாக்கினான். தன்னுடைய நாட்டிலும் தன்னை ஆதரித்தவர்கள் நாட்டிலும் மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்கான ஆக்க வேலை களையும் செய்தான். காடு திருத்தி நாடாக்கினான்; நீர்ப்பாசனங் களை ஏற்படுத்தினான். பாழடைந்த நகரங்களைச் சீர்படுத்தினான். இவைகளையெல்லாம் பட்டினப் பாலை ஆசிரியர் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்ப வைகளைப் படிப்போம். யாரும் எளிதில் நுழைய முடியாமல் அவ்வளவு கட்டுக் காவலுடன் பகைவர்கள் தங்கள் ஊர்களைச் சுற்றிக் கோட்டை கொத்தளங்களை அமைத்திருந்தனர். அந்தக் கோட்டை கொத்தளங்களையெல்லாம் இடித்துத் தகர்த்து அந்த ஊர்களை யெல்லாம் பாழ்படுத்தினான். அப்படியும் கரிகாலனுக்குப் பகைவர்கள் மேலிருந்த சினம் தணியவில்லை. கரிகாலன் இணையற்ற வீரன். மலைகளை யெல்லாம் இருந்த இடம் தெரியாமல் கல்லியெறிந்து விடுவான். கடலையும் நிலமாகும்படி தூர்த்திவிடுவான்; வானத்தையும் நிலத்தில் விழும்படி செய்வான்; காற்றையும் வீசாமல் தடுத்துவிடுவான் என்று இவ்வாறெல்லாம் உலகினர் அவனைப் பற்றிப் புகழ்ந்து கொண்டாடினர். கரிகாலன், தான் நினைத்தவைகளை நினைத்த வாறே நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவன்; ஆதலால் தான் அவனைப் பற்றி மக்கள் இவ்வாறு எண்ணினர். கரிகாலனுடைய வீரத்திற்கு அஞ்சி ஒளி நாட்டை ஆண்டவர் பலரும் வந்து அவனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கி அடங்கி வாழ்ந்தனர். பழமையான அருவாள நாட்டின் அரசர்கள் பலரும் அவன் இட்ட கட்டளையை நிறைவேற்று வதற்குக் காத்து நின்றனர். அவனை எதிர்த்த வடநாட்டு மன்னர்கள் வாட்டமடைந்தனர்; குடகு நாட்டு வேந்தர் ஊக்கம் குன்றினர்; பாண்டியன் கரிகாலனை எதிர்க்க முடியாமல் வலிமை குன்றிப்போனான். இடைக்குலத்து மன்னர்களும், இருங்கோவேள் என்னும் மன்னன் குலத்தைச் சேர்ந்த வேளிர்களும் கரிகாலனை எதிர்த்தனர். கரிகாலன் பகைவர்களின் வலிமையான கோட்டை களை எளிதிலே கைப்பற்றும் ஆற்றல் வாய்ந்த யானைப் படைகளையும், தன்னுடைய வீரவலிமையையும் கொண்டு அவர்களை எதிர்த்து அழித்தான். இவ்வாறு பகைவர்களையும் அவர்களுடைய நாடுகளையும் நாசம் செய்ததோடு அவன் நின்றுவிட வில்லை. காடும் கரம்புமாகக் கிடந்த நிலங்களையெல்லாம் பண்படுத்தினான். அங்கே மக்களைக் குடியேற்றி அதன் மூலம் பல புதிய ஊர்களை உண்டாக்கினான். காடு என்ற பெயருடன் விளங்கிய பல இடங்களை இவ்வாறு செய்து நாடு என்று பெயர் பெறும்படி செய்தான். பல இடங்களிலே குளங்கள் - ஏரிகள் தோண்டினான். அவைகளிலே நீரை நிலை பெறச் செய்து, அந்த நீரை நிலங் களுக்குப் பாய்ச்சிப் பல வகைப் பண்டங்களைப் பயிர் செய்து செல்வத்தைப் பெருக்கினான். கரிகாற் சோழன் காலத்தில் தொடக்கத்தில் உறையூரே சோழநாட்டின் தலைநகரமாக இருந்தது. உறையூரிலே உயர்ந்த, சிறந்த, பல மாளிகைகள் நிலைபெற்றிருந்தன. அத்தகைய சிறந்த உறையூரை விட்டுக் காவிரிப்பூம் பட்டினத்திலே புகுந்து அதைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டான். ஆகவே கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினமே சோழ நாட்டின் சிறந்த தலைநகரமாக விளங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள கோயில்களை யெல்லாம் புதுக்கினான். நகரத்தையும் விரிவுபடுத்தி இன்னும் பல மக்களையும் அங்கு குடியேற்றினான். பழுதுபட்டுக் கிடந்த கோட்டை மதில்களைச் சீர்திருத்தினான். அந்த மதில்களின் இடையிலே நகருள் புகுவதற்கான சிறுவாயில்களையும், பெரும் வாயில்களையும் அமைத்தான். மதில்மேல் மறைந்து நின்று, பகைவர்களின் மேல் அம்பெய்வதற்கான, அம்புக் கட்டுகளை குருவித்தலையென்று சொல்லப்படும் சிறுசிறு தடைகள் தோறும் பொருந்த வைத்தான். பகைவர் யாராயிருந்தாலும் சரி; அவர்களோடு போர் செய்வதற்குப் பின் வாங்கமாட்டேன். நான் வஞ்சினங் கூறியபின் எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டேன்; பகைவர் களுக்குப் பயந்து புறங்காட்டவும் மாட்டேன் என்பதற்கு அடையாளமாகக் கரிகாலனுடைய கோட்டைமதில் ஒளி பெற்று விளங்கிற்று. அந்த மதிலிலே வீரலட்சுமி வீற்றிருந்தாள். முழவு முதலிய வாத்தியங்கள் முழக்கிக் கொண்டு கரிகாலனைப் பணிவதற்காக மற்ற அரசர்கள் தங்கள் ஒளியை இழந்தனர். இவனுடைய கடைக்கண் நோக்கத்தைப் பெறு வதற்காக இவனுடைய கால்களிலே வீழ்ந்து வணங்கினர். வணங்கிய மன்னர்களின் மணிமுடிகள் உரசும் படியான வீரகண்டா மணிகளை இவன் கால்களிலே அணிந்திருந்தான். இக்கரிகாலன் எதிரிலே அவனுடைய பொன்காப் பணிந்த புதல்வர்கள் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தனர். நல்ல வேலைப்பாடமைந்த ஆபரணங்களை அணிந்த அவனுடைய மனைவிமார்கள் அவனைத் தழுவி அவனுக்கு மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருந்தனர். இதனால் அவனுடைய மார்பிலே பூசியிருந்த சந்தனக் குழம்பு கலைந்திருந்தது. கரிகாலனும் ஒளிவீசும் நகைகளைத் தரித்திருந்தான். பகைவர்கள் கண்டாலே பயந்து நடுநடுங்கும்படியான ஆண் சிங்கத்தைப் போன்ற ஆற்றலுடை யவனாய் வீற்றிருந்தான். இப்பொருளை விளக்கும் வரிகளும், அவற்றின் பொருளும் கீழ் வருவன. 269. அரும்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய பெரும்பாழ் செய்தும் அமையான்; மருங்கு அற அரும்கடி - சிறந்த காவலரான. வரைப்பின் - மதில்களை யுடைய. ஊர்கவின் அழிய - ஊர்களின் அழகு அழியும்படி. பெரும்பாழ் செய்தும் -பெரிய நாசத்தைச் செய்தும். அமையான் - பகைவர்கள் மீது கொண்ட சினந்தணியான். மருங்கு அற - அடையாளமே இல்லாமற் போகும்படி. 271. மலை அகழ்க்குவனே, கடல் தூர்க் குவனே, வான் வீழ்க்குவனே, வளிமாற்றுவன் எனத் தான் முன்னி துறைபோகலின். மலை அகழ்க்குவன்ஏ - மலையைக் கல்வி எறிவான். கடல் தூர்க்குவன்ஏ - கடலையும் நிலமாகும்படி தூர்த்து விடுவான். வான்வீழ்க்குவன்ஏ - வானத்தைக் கீழே வீழ்த்தி விடுவான். வளி மாற்றுவன் - காற்றையும் தடுத்து விடுவான். என - என்று உலகினர் அவனைப் பற்றிப் பேசும்படி. தான் முன்னிய - அவன்தான் எண்ணிய. துறைபோகலின் - துறைகளையெல்லாம் வெற்றியுடன் முடித்தலில் வல்லவனா யிருத்தலின். (வல்லவனா யிருந்தான்.) 274. பல்ஒளியர் பணிபு ஒடுங்கத், தொல் அருவாளர் தொழில்கேட்ப, வடதுர் வாடக், குடவர் கூம்ப, தென்னவன் திறல்கெடச் சீறி; பல்ஒளியர் - பல ஒளிநாட்டினரும், பணிபு ஒடுங்க - பணிந்து அடங்கவும், தொல்அருவாளர் - பழமையான அருவாள நாட்டினர். தொழில் கேட்ப - ஏவிய தொழில்களைக் கேட்டுச் செய்து நிற்கவும். வடவர்வாட - வட நாட்டு வேந்தர்கள் வருந்தவும். குடவர் கூம்ப - குட நாட்டு வேந்தர் சோர்வடையவும். தென்னவன் - பாண்டியன். திறல்கெடச் சீறி - வலிமை கெடும்படி அவனையும் கோபித்தான். ... ... ... ... ... மன்னர் 278 மன்எயில் கதுவும், மதன்உடை நோன்தாள் மாத்தானை , மறமொய்ம்பின், செம்கண்ணால் செயிர்த்து நோக்கி புன் பொதுவர் வழி போன்ற இருங்கோவேள் மருங்கு சாய. மன்னர் - அரசர்களின். மன்எயில் கதுவும் - நிலையான வலிமை பொருந்திய மதில்களைப் பற்றிக் கொள்ளும். மதன் உடை - வலிமையுடைய. நோன்தாள் - பலமான பாதத்தையுடைய. மாதானை - யானைப் படைகளையும். மறம் மொய்ம்பின் - வீரத்தன்மையான வலிமையையுங் கொண்டு. செம்கண்ணால் - சிவந்த கண்களால். செயிர்த்து நோக்கி - கோபத்துடன் பார்த்து. புன்பொதுவர் - வலிமையற்ற இடை மன்னர்களின். வழிபொன்ற - மரபு அழியும்படியும். இருங்கோவேள் - இருங்கோவேள் என்னும் மன்னனுடைய. மருங்குசாய - சுற்றத்தார் அழியும்படியும் (போர் செய்து வெற்றி பெற்றான்) 283. காடுகொன்று நாடாக்குக், குளம் தொட்டு வளம் பெருக்கி, காடுகொன்று - காடுகளை அழித்து. நாடு ஆக்கி அவைகளை நாடுகளாகச் செய்து. குளம் தொட்டு - குளங் களைத் தாண்டி. வளம் பெருக்கி - நாட்டின் செல்வத்தைப் பெருக்கி (இவ்வாறு ஆக்க வேலைகளைச் செய்து நாட்டையும் மக்களையும் நன்றாக வாழச் செய்தான்) 285. பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி. பிறங்கு - எட்டியுள்ளார்க்கும் காணப்படுகின்ற. நிலை - உயர்ந்து நிற்கின்ற. மாடத்து - பல மாளிகைகளையுடைய. உறந்தை போக்கி - சோழ நாட்டின் தலை நகரமான உறையூரை விட்டு நீங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறினான். 286. கோயிலொடு, குடிநிறீஇ, வாயிலொடு புழை அமைத்து, ஞாயில் தொறும் புதை நிறீஇப், பொருவேம். எனப் பெயர் கொடுத்து ஒருவேம் எனப் புறக்கொடாது, திருநிலைய பெருமன் எயில். கோயிலொடு குடிநிறீ - காவிரிப்பூம்பட்டினத்திலே ஏற்கனவேயிருந்த கோயில்களைப் புதுக்கிப் புதிய குடிகளையும் வாழும்படி செய்து. வாயிலொடு - மதில்களிலே பெரிய வாயில் களையும். புழை - சிறிய வாயில்களையும். அமைத்து - ஏற்படுத்தி. ஞாயில்தொறும் - மதிலின்மேல் உள்ள ஞாயில் என்னும் குருவித் தலைகளில் எல்லாம். புதைநிறீ - அம்புக் கூடுகளை அமைத்து. பொருவேம்என - பகைவர்களுடன் போர் செய்வோம் என்று. பெயர் சொல்லி - வஞ்சினம் கூறி. ஒருவேம் என - பின்னர் நீங்கமாட்டோம் என்று. புறம் கொடாது - பின்வாங்காமல் இருப்பதற்கு அடையாளமாக. திருநிலைய - வீரச்செல்வம் நிலைத்திருக்கின்ற. பெருமன் எயில் - பெரிய அழியாத மதில் களையும் அமைத்தான். 291. மின்ஒளி எறிப்பத் தம்ஒளி மழுங்கி, விசுபிணி முழவின், வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேர் எறுழ்க் கழற்கால் மின்ஒளி எறிப்ப - அந்த மதில் மின்னல் போன்ற ஒளியை வீசுவதனால். தம் ஒளி மழுங்கி - தமது ஒளி மறைந்து. விசுபிணி - வார் இழுத்துக் கட்டப்பட்ட. முழவின் - முழவு என்னும் வாத்தியத்தையுடைய. வேந்தர் சூடிய - வேந்தர்கள் தலையிலே சூடியிருக்கின்ற முடியின். பசுமணி பொருத - பசுமையான இரத்தினங்கள் உரசிய. பரேர் எறுழ் - மிகுந்த வலிமை பொருந்திய. கழல்கால் - வீரமணிகளைத் தரித்த கால்களையுடையவன். 295. பொற்றொடிப் புதல்வர் ஓடி ஆடவும், முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும், செம்சாந்து சிதைந்த மார்பின்; எண்பூண், அரிமாஅன்ன அணங்குடைத் தும்பின் திருமாவளவன்...... பொன்தொடிப் புதல்வர் - அவனுடைய பொன் காப்புகளை அணிந்த பிள்ளைகள். ஓடி ஆடவும் - அவன் எதிரிலே ஓடி விளையாடிக் கொண்டிருக்கவும். முற்று இழை மகளிர் - நிறைந்த வேலைப்பாடமைந்த ஆபரணங்களை அணிந்த மனைவிமார்கள். முகிழ்முலை திளைப்பவும் - எடுப்பார் மார்பினால் தழுவிக் கொள்ளவும். செம்சாந்து சிதைந்த - அதனால் செஞ்சந்தனம் கலைந்து போன. மார்பின் - மார்பினை உடையவனாய். ஒண்பூண் - ஒளி பொருந்திய ஆபரணங்களையும் அணிந்த வனாய். அரிமாஅன்ன - ஆண் சிங்கம் போன்ற. அணங்கு உடை - பகைவர்க்குத் துன்பத்தைத் தரும் தன்மையுள்ள. துப்பின் - வலிமையையும் உடையவனாகிய. திருமாவளவன் - திருமாவளவன் என்னும் பெயரையுடைய கரிகாற்சோழன் வீற்றிருந்தான். இவ்வாறு 299 வரிகளிலே சோழநாட்டின் சிறப்பையும், காவிரிப் பூம்பட்டினத்தின் உயர்வையும், கரிகாற்சோழனுடைய பெருமையையும் பாடிய புலவர் உருத்திரங்கண்ணனார் இறுதி இரண்டடியிலே பாலைத் திணையின் பொருளை முடித்து விடுகிறார். என் மனைவியை விட்டு நான் பிரிந்து செல்ல நினைத்த பாலைநிலம், மிகவும் கொடுமையானது. கரிகாற்சோழன் தன் பகைவர்களின்மேல் வீசிய வேலைக்காட்டினும் கொடுமை யானது. என் காதலியின் தோள்களே மிகவும் குளிர்ச்சியானவை; அந்தக் கரிகாலனுடைய செங்கோலைக் காட்டினும் - ஆட்சியைக் காட்டினும் மிகவும் குளிர்ச்சியானவை. ஆதலால் என் காதலியை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கூறி முடிக்கிறார். 300. .. .. .. தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்; அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே. தெவ்வர்க்கு - அக்கரிகாற்சோழன் தன் பகைவர்க்காக. ஓக்கிய - வீசி எறிந்த. வேலினும் - வேலாயுதத்தைக் காட்டினும். வெய்ய - கொடுமையானது. கானம் - நான் என் காதலியைப் பிரிந்து செல்ல நினைத்த பாலைவனம். அவன் - அந்தக் கரிகாலனுடைய. கோலினும் - செங்கோலைக் காட்டினும். தண்ணிய - குளிர்ச்சி யுடையன. தடம்மென் தோள்ஏ - என் காதலியின் அகன்ற மெல்லிய தோள்கள். இந்த இறுதியடிகளிலும் கரிகாற் சோழனுடைய வீரத்தையும், செங்கோற் சிறப்பையும் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது