சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 5 நாலடியார் (பாட்டும் உரையும்) நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 5 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 296 = 304 படிகள் : 1000 விலை : உரு. 190/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. உள்ளுறை நாலடியார் (பாட்டும் உரையும்) முன்னுரை 3 கடவுள் வாழ்த்து 7 1. அறத்துப்பால் துறவற இயல் 9 இல்லறவியல் 44 2. பொருட்பால் அரசியல் 75 நட்பியல் 111 இன்பவியல் 132 துன்பவியல் 148 பொதுவியல் 168 பகை இயல் 174 பன்னெறியியல் 194 3. காமத்துப் பால் இன்ப துன்ப இயல் 200 இன்பவியல் 206 பாட்டு முதற்குறிப்பு 217 நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) முன்னுரை 225 நான்மணிக்கடிகை பாட்டும்- உரையும் 227 தமிழறிஞர்சாமி.சிதம்பரனார் (1900- 1961) 290 நாலடியார் (பாட்டும்உரையும்)(1959) முன்னுரை பண்டைத் தமிழ் நூல்களைப் பிற்காலத்தினர் மேற்கணக்கு நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரண்டு வகையாகப் பிரித்தனர். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை, 1. நாலடியார்; 2. நான்மணிக்கடிகை; 3. கார் நாற்பது; 4. களவழி நாற்பது; 5. இன்னா நாற்பது; 6. இனியவை நாற்பது; 7. திணைமொழி ஐம்பது; 8. ஐந்திணை ஐம்பது; 9. ஐந்திணை அறுபது (கைந் நிலை); 10. ஐந்திணை எழுபது; 11. திணைமாலை நூற்றைம்பது; 12. முப்பால் (திருக்குறள்); 13. திரிகடுகம்; 14. ஆசாரக்கோவை; 15. பழமொழி; 16. சிறு பஞ்சமூலம்; 17. முதுமொழிக் காஞ்சி; 18. ஏலாதி என்பவை. நீண்ட செய்யுட்களால் ஆகிய நூல்களை மேற்கணக்கு நூல்கள் என்றும் குறுகிய செய்யுட்களால் ஆகிய நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வகுத்தனர். இவ்வாறு பாடல்களின் நீளம் கருதி மேற்கணக்கு என்றும், சுருக்கம் கருதிக் கீழ்க்கணக்கு என்றும் வகுக்கப்பட்டன. நூல்களின் உயர்வு, தாழ்வு குறித்து மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று பிரிக்கப்படவில்லை. இது கருத்தில் கொள்ளத்தக்கது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்று சொல்லும் வெண்பா ஒன்றுண்டு. நாலடி, நான்மணி, நால்நாற்பது, ஐந்திணை, முப்பால், கடுகம், கோவை, பழமொழி, - மாமூலம்இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு இதுவே அந்த வெண்பா. இந்த வெண்பாவில் நாலடியார் முதலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாலடியார், நானூறு வெண்பாக்களைக் கொண்டது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களாக அமைந்திருக்கின்றது. அறத்துப்பாலில் 13 அதிகாரங் களும், பொருட்பாலில் 24 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 3 அதிகாரங்களும் அமைந்திருக்கின்றன. அதிகாரம் ஒன்றுக்குப் பத்து வெண்பாக்கள். ஒவ்வொரு பாலிலும் இயல்களும் அமைந்திருக் கின்றன. நாலடியாருக்குப் பால், இயல், அதிகாரங்கள் வகுத்தவர் பழைய உரையாசிரியராகிய பதுமனார் என்று கூறுகின்றனர். நாலடியாரைப் பற்றி வழங்கும் கதை ஒன்று உண்டு. ஒரு காலத்தில், வடநாட்டில் பஞ்சம் உண்டானதால் எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாண்டிய நாட்டையடைந்தனர். பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி என்பவன் அவர்களை வரவேற்றான். மதுரையில் வைத்து ஆதரித்து வந்தான். வடநாட்டிலே பஞ்சம் ஒழிந்தபின், அவர்கள் தங்கள் நாடு செல்ல விரும்பினர்; பாண்டியனிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவன், கற்றறிந்த அவர்களை விட்டுப் பிரிய விரும்பவில்லை. ஆதலால் அவர்களுக்கு விடை தராமல் காலம் கடத்திக்கொண்டே வந்தான். ஒருநாள் அம்முனிவர்கள் எண்ணாயிரம் பேரும் இரவோடு இரவாக மதுரையை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டனர். விடிந்தபின், முனிவர்களைக் காணாத மன்னன் வருந்தினான். அவர்களுடைய இருக்கைகளைப் பரிசோதிக்கும்படி செய்தான். ஒவ்வொரு இருக்கையிலும், அவர்களால் எழுதிவைக்கப் பட்டிருந்த ஒவ்வொரு வெண்பாக்கள் கிடைத்தன. அவைகள் பனையோலைகளில் எழுதப்பட்டிருந்தன. பாண்டியன், அவைகளையெல்லாம் வைகை வெள்ளத்திலே விட்டுவிடும்படி உத்தரவிட்டான். அவ்வாறே விடப்பட்டது. அவைகளில் நானூறு வெண்பாக்கள் வெள்ளத்தில் செல்லாமல் எதிர்த்து நீந்தி வந்தன. அவைகளைத் திரட்டியே நாலடியார் என்ற பெயருடன் வெளியிடப்பட்டது. இக்கதையிலே சில கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. நாலடிப் பாடல்கள் சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. அவை எட்டாயிரம் வெண்பாக்களிலிருந்து பொறுக்கி எடுக்கப் பட்டவை. வடநாட்டு முனிவர்களால் தமிழில் பாடப்பட்டவை. ஆதலின் பாரதநாட்டு மக்களுக்கு ஏற்ற பொதுவான அறநெறி களை உரைப்பவை. இக்கருத்துக்கள் மேலே காட்டிய கதையிலே அமைந்திருக்கின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையெல்லாம் சங்க நூல்கள் என்று கூறுவோர் உண்டு. இதற்கு ஆதரவு ஒன்றுமே யில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியவை என்பதே ஆராய்ச்சி யாளர்களின் கருத்து. பெருமுத் தரையர் பெரிதுஉவந்து ஈயும்கருனைச்சோறு ஆர்வர் கயவர் (200) என்றும், நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரேசெல்வரைச் சென்று இரவாதார் (206) என்றும் நாலடியாரில் காணப்படுகின்றன. முத்தரையர் என்பவர்கள் குறுநில மன்னர் மரபைச் சேர்ந்தவர்கள். இம்மரபினர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல், சிறந்த செல்வர்களாகவும் கொடையாளிகளாகவும் வாழ்ந்தனர் என்பது வரலாறு. இவைகளைப்பற்றிக் குறிப்பிடும் நாலடியார் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியதாகத்தான் இருக்க வேண்டும். இதுவே பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர் களின் கருத்து. நாலடியார் ஒரு சிறந்த நூல்; திருக்குறளோடு ஒன்றாக வைத்து மதிக்கப்பட்டு வரும் நூல். திருக்குறளில் உள்ள சிறந்த கருத்துக்கள் பலவற்றை நாலடி வெண்பாக்களிலே காணலாம். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. என்ற பழமொழியே இவ்வுண்மையை விளக்கும். நாலு - நாலடியார்; இரண்டு - திருக்குறள். நாலடி வெண்பாக்கள் இனிமையானவை. படிப்பதற்கு எளியவை. கருத்துக்களை உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லுவதிலே நாலடி வெண்பாக்கள் இணையற்று விளங்கு கின்றன. நாலடியாரிலே நகைச்சுவை அளிக்கும் உதாரணங்கள் - உவமானங்கள் - பலவற்றைக் காணலாம். திருக்குறளைப் போலவே நாலடியார்க்கும் பலர் உரை யெழுதியிருக் கின்றனர். தமிழ் கற்கத் தொடங்குவோர் பிறர் உதவியின்றித் தாமே படித்துப் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் கருத்துடனேயே இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. ஆதலால் இது - இவ்வுரை - மாணவர்க்கும் பிறர்க்கும் நல்ல பயன் தரும் என்று நம்புகிறேன். இவ்வுரையை வெளியிட முன்வந்த சென்னை, தமிழ்ப் புத்தகாலய உரிமையாளருக்கு எனது நன்றி. சென்னை சாமி. சிதம்பரன் 1. 7. 1960 கடவுள் வாழ்த்து வான்இடு வில்லின் வரவுஅறியா, வாய்மையால், கால்நிலம் தோயாக் கடவுளை, - யாம்நிலம் சென்னிஉற வணங்கிச் சேர்தும்; எம்உள்ளத்து முன்னியவை முடிக என்று. (பதவுரை) வான் இடு வில்லின் - மேகத்தில் தோன்று கின்ற வில்லைப் போன்ற. வரவு -அவன் இயல்பை. அறியா -அறிந்து. கால் நிலம் தோயா - கால் நிலத்திலே படாத. கடவுளை - மலர்மேல் நடந்த அருகக் கடவுளை. எம்உள்ளத்து - எமது மனத்திலே. முன்னியவை - நினைத்தவைகள். முடிக என்று - நிறைவேறவேண்டும் என்று. வாய்மையால் - உண்மையுடன். யாம் நிலம் - யாம் நிலத்திலே. சென்னி உற வணங்கி - தலை படியும்படி வணங்கி. சேர்தும் - சரணாக அடைவோம். (கருத்து) நாம் நினைத்த காரியம் முடியும் பொருட்டு அருகக் கடவுளை வணங்குவோம். (விளக்கம்) வான் இடு வில்லின் வரவு அறியா, கால் நிலம் தோயாக் கடவுளை,எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று வாய்மையால், யாம் நிலம் சென்னிஉற வணங்கிச் சேர்தும் என்று மாற்றிப் பொருள் சொல்லப்பட்டது. வானவில் அருகக் கடவுளுக்கு உவமை. அருகக்கடவுளின் பாதங்கள் நிலத்தில் பட்டவையால் என்பது அவருக்குரிய சிறப்பு. பூமேல் நடந்தான், மலர்மிசை ஏகினான் என்பவை அருகக் கடவுளின் பெயர்கள். அவர் தாமரை மலர்மேல் நடந்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. இக்கடவுள் வாழ்த்து, நாலடியார் தொகுக்கப்பட்ட பின் யாரோ ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டதாகும். நாலடியாரின் பழைய உரையாசிரியருள் ஒருவரான பதுமனார் என்பவரால் பாடப்பட்டதென்று எண்ணுவோர் உண்டு. பதுமனார்க்கு முன்பே நாலடியாருக்கு எழுதப்பட்ட பழைய உரைகளும் உண்டு என்று தெரிகின்றது. அவ்வுரைகளிலும் இக்கடவுள் வாழ்த்துப் பாட்டுக்கு உரை எழுதியிருக்கின்றனர். ஆதலால் இது பதுமனாரால் இயற்றப்பட்ட பாடல் அல்ல என்பது தெளிவு. வான் -மேகம். அறியா - அறிந்து. வரவு - இயல்பு; தன்மை. நாலடிப் பாடல்களைப் பாடிய ஆசிரியர்கள் பலர். ஆதலின் இக்கடவுள் வாழ்த்தும், யாம் வணங்கிச் சேர்தும் என்று பன்மையில் அமைத்துப் பாடப்பட்டது; பலர் சேர்ந்து அருகக் கடவுளை வணங்குவதுபோலப் பாடப்பட்டது. நாலடிப் பாடல்களின் ஆசிரியர்கள் சமண முனிவர்கள். இவ் வணக்கமும் அருகக்கடவுள் வணக்கமாக அமைந்திருப்பது பொருத்தமாகும். இக் கடவுள் வாழ்த்தைப் பாடியவரும் சமணராகத்தான் இருக்கவேண்டும். (1) அறத்துப்பால் துறவற இயல் 1. செல்வம் நிலையாமை செல்வம் நிலையற்றது என்பதைக் கூறுவது 1. அறுசுவை உண்டி அமர்ந்துஇல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கிஉண் டாரும் - வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓரிடத்தில் கூழ்எனில்; செல்வம் ஒன்று உண்டாக வைக்கல்பாற்று அன்று. (1) பதவுரை : அறுசுவை -ஆறுவகைச் சுவைகளையுடைய. உண்டி - உணவை. அமர்ந்து - விரும்பி. (அன்புடன்) இல்லாள் - மனைவி. ஊட்ட - உண்பிக்க. மறுசிகை - ஆறிப்போன வேறு பிடியை. நீக்கி - தள்ளி. உண்டாரும் - பக்குவமுள்ள உணவையே உண்ட செல்வர்களும். வறிஞராய் - ஏழைகளாகி. சென்று - வெளியூருக்குப் போய். ஓர் இடத்தில் - ஓர் வீட்டில். கூழ் - உணவை. இரப்பர் - பிச்சை கேட்பர். எனில் - என்றால். செல்வம் ஒன்று - செல்வம் என்னும் ஒரு பொருள். உண்டு ஆக - நிலைத்திருப்பது உண்டு என்பதாக. வைக்கல்பாற்று - எண்ணும் தன்மையுடையது. அன்று - அன்றாம். கருத்து : எவ்வளவு நிறைந்த செல்வமும் அழிந்து விடும்; எவ்வளவு பெரிய செல்வர்களானாலும் ஏழைகளாகி விடுவர். குறிப்பு : அறுவகைச் சுவை: காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு என்பன. 2. துகள்நீர் பெரும்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ், பல்லாரோடு உண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்; சகடக்கால் போல வரும். (2) (ப-ரை) : துகள் தீர் - குற்றம் அற்ற. பெரும் செல்வம் - நிறைந்த செல்வம். தோன்றியக்கால் - உண்டான காலம். தொட்டு -முதலே. பகடு - எருமைக் கடாக்களைப் பூட்டி. நடந்த - ஏர்த் தொழில் நடைபெற்றதன் மூலம் உண்டான. கூழ் - உணவை. பல்லாரோடு - பலருடனும் சேர்ந்து. உண்க - உண்ணுக (ஏனென்றால்). அகடு உற - நடு நிலைமையுடன். யார்மாட்டும் - யாரிடத்தும். நில்லாது செல்வம் - நிலைத்து நிற்காது செல்வம். சகடக்கால் போல - வண்டிச் சக்கரத்தைப் போல. வரும் - சுற்றிக் கொண்டே வரும். (க-து) : செல்வம் இருக்கும்போதே அதன் பயனைத் தாமும் அடைய வேண்டும்; பிறரும் அடையும்படி செய்ய வேண்டும். குறிப்பு : செல்வத்துக்குச் சக்கரம் உவமை. 3. யானை எருத்தம் பொலியக், குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. (3) (ப-ரை) : யானை எருத்தம் - யானையின் பிடரியிலே உட்கார்ந்து. பொலிய - எல்லாரும் காணும்படி. குடை நிழல் கீழ் - பூச் சக்கரக் குடை நிழலின் கீழே. சேனைத்தலைவராய் - சேனைகளுக்கெல்லாம் தலைவராக. சென்றோரும் - சென்ற அரசர்களும். ஏனை வினை - முன் செய்த தீவினை. உலப்ப - கெடுக்க. வேறாகி - தாமிருந்த நிலையிலிருந்து மாறி. தாம் கொண்ட மனையாளை - தாம் மணந்துகொண்ட மனைவியை. மாற்றார் கொள - பகைவர்கள் கவர்ந்துகொள்ள; விட்டுவிட்டு. வீழ்வர் - வறுமையிலே வீழ்ந்து வருந்துவார்கள். (க-து) : செல்வமும் அதிகாரமும் படைத்த அரசர்களும் ஆண்டிகளாய் விடுவார்கள். 4. நின்றன நின்றன நில்லா என உணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க; சென்றன! சென்றன! வாழ்நாள்; செறுத்துடன் வந்தது! வந்தது! கூற்று. (4) (ப-ரை) : நின்றன - நிலைத்து நின்றன. நின்றன - நிலைத்து நின்றன என்று எண்ணும் செல்வங்கள். நில்லா - நிலைத்து நிற்க மாட்டா. என உணர்ந்து - என்று அறிந்து. ஒன்றின ஒன்றின - முடிந்தவற்றை முடிந்தவற்றை. வல்லே - விரைவில். செயின் செய்க - செய்ய நினைத்தால் செய்க. சென்றன சென்றன - போய் விட்டன போய்விட்டன. வாழ்நாள் - ஆயுள். செறுத்து உடன் - கோபித்து இப்பொழுதே. வந்தது வந்தது - வந்துவிட்டான் வந்துவிட்டான். கூற்று - எமன். (க-து): நீ வாழ்வது நிச்சயம் அன்று. இப்பொழுதே நன்மை செய். குறிப்பு : `சென்றன சென்றனஎன்பதும், வந்தது வந்தது என்பதும் நிச்சயத்தைக் குறித்தன. 5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின் ஆவது என்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர்; கோடில்தீக் கூற்றம் தொடுத்து ஆறு செல்லும் சுரம். (5) (ப-ரை) : என்னானும் ஒன்று - ஏதேனும் ஒரு பொருளை. தம் கை உற - தம் கையில் பொருந்த. பெற்றக்கால் - அடைந்த போது. பின் ஆவது என்று - பின்னால் அப்பொருள் பயன்படுவ தாகும் என்று. பிடித்து இரா - பிடித்துக் கொண்டு இராமல். முன்னே -அப்பொருள் அழிவதற்கு முன்பே. கொடுத்தார் - ஏழைகளுக்குக் கொடுத்தவர்கள். கோடு இல் - நிலைமை தவறாத. தீக்கூற்றம் - கொடிய எமன். தொடுத்து - தன் பாசக்கயிற்றால் கட்டி. செல்லும் - இழுத்துச் செல்லும். சுரம் ஆறு - பாலைவன வழியிலே போகாமல். உயப்போவர் - தப்பித்துப் போவார்கள். (க-து): செல்வம் கிடைத்தபோதே அதனால் வறியோர்க்கு உதவி செய்ய வேண்டும். 6. இழைத்தாள் எல்லை இகவா, பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர்! வழங்குமின்! நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். (6) (ப-ரை) : இழைத்த நாள் - குறிப்பிட்ட நாளின். எல்லை - எல்லையை. இகவா - கடந்து. பிழைத்து - தப்பித்து. ஒரீ - நீங்கி. கூற்றம் குதித்து - எமன் கையில் அகப்படாமல் குதித்தோடி. உய்ந்தார் - பிழைத்தவர்கள். ஈங்கு இல்லை -இங்கு ஒருவரும் இல்லை; ஆதலால். ஆற்ற - மிகவும். பெரும் பொருள் - நிறைந்த செல்வத்தை. வைத்தீர் - சேர்த்து வைத்திருக்கின்றவர்களே. வழங்குமின் - நல்ல காரியங்களுக்கு உங்கள் பொருளைக் கொடுங்கள் (ஏனென்றால்). நாளை - நாளைக்கு. தழீம் தழீம்-தழீம் தழீம் என்ற ஓசையுடன் அடிக்கப்படும். தண்ணம் - சாப்பறை. படும் - உங்களுக்கும் அடிக்கப்படும். (க-து) : எவ்வளவு தந்திரம் செய்தாலும் நீங்கள் சாகாம லிருக்க முடியாது. ஆதலால், உயிருள்ளபோதே நல்லறம் செய்யுங்கள். குறிப்பு : ஒரீஇ, தழீஇம்- உயிர் அளபெடைகள். 7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்தும் நும் நாள்உண்ணும்; - ஆற்ற அறம் செய்து அருள்உடையீர் ஆகுமின்! யாரும் பிறந்தும் பிறவாதா ரில். (7) (ப-ரை) : தோற்றம் சால் - காணப்படுதல் அமைந்த. ஞாயிறு -சூரியனையே. நாழியா - நாழியென்னும் அளவு கருவியாகக் கொண்டு. வைகலும் - நாள்தோறும். கூற்றா - எமன். அளந்து - உமது ஆயுளை அளந்து. நும் நாள் - உங்கள் வாழ் நாளின் இறுதியிலே. உண்ணும் - உங்கள் உயிரை உண்ணும். (ஆதலால்). ஆற்ற- மிகவும். அறம் செய்து - நல்ல செயல்களைச் செய்து. அருள் உடையீர் - இரக்கமுள்ளவர் களாக. ஆகுமின் - ஆகிவிடுங்கள். யாரும் - இப்படிச் செய்யாதவர்கள் யாரும். பிறந்தும் - மனிதராய்ப் பிறந்திருப்பதும். பிறவாதாரில் - பிறவாதவரைப் போலவே எண்ணப்படுவார்கள். (க-து) : அறமும் அருளும் அற்றவர்கள் மக்களாக மதிக்கப் படமாட்டார்கள். குறிப்பு : எண்ணப்படுவார்கள் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. 8. செல்வர்யாம், என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெரும்செல்வம், -எல்லில் கரும்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். (8) (ப-ரை) : செல்வர்யாம் - பெரும் செல்வமுடையவர் நாம். என்று - என்று கர்வம் கொண்டு. தாம் செல்வுழி - தாம் போகும் இடத்தைப்பற்றி. எண்ணாத- நினைக்காத. புல் அறிவாளர் - அற்பபுத்தி படைத்தவர்களின். பெரும் செல்வம் - பெரிய செல்வம். எல்லில் - இரவில். கரும்கொண்மூ - கருமையான மேகம். வாய் திறந்த - வாய் திறந்ததனால் உண்டான. மின்னுப்போல் - மின்னலைப் போல். தோன்றி - காணப்பட்டு. மருங்கு அற - பின்னர் அது இருந்த இடமே தெரியாமல். கெட்டுவிடும் -மறைந்து விடும். (க-து) : அற்பபுத்தி படைத்தவர்களே செல்வம் நிலையுள்ள தென்று கருதி நன்மை செய்யாதிருப்பார்கள். குறிப்பு : செல்வத்திற்கு மின்னல் உவமை. 9. உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான், துன்னரும் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான், பொருள்காத் திருப்பானேல், அஆ! இழந்தான் என்று எண்ணப் படும். (9) (ப-ரை) : உண்ணான் - உண்ணாதவனாய். ஒளி நிறான் - கீர்த்தியை நிலை நிறுத்தாதவனாய். ஓங்கு - தனக்குப் பின்னும் நிலைத்திருக்கின்ற. புகழ் செய்யான் - புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய். துன் அரும் - நெருங்கிய சிறந்த. கேளிர் - சுற்றத்தார்களின். துயர்களையான் - துன்பங்களை நீக்காதவனாய். வழங்கான் - இல்லார்க்குக் கொடுக்காதவனாய். கொன்னே - வீணாக. பொருள் - செல்வத்தைப் பூட்டிவைத்துக்கொண்டு. காத்து இருப்பானேல் - அதைக் காவல் காத்துக்கொண்டிருப் பானாயின். அஆ இழந்தான் என்று - அஆ! அவன்அந்தச் செல்வத்தை இழந்து விட்டான் என்றே. எண்ணப்படும் - எண்ணப்படுவான். (க-து): செல்வத்தின் பயனை நுகராமல் அதைப் பாது காத்துக் கொண்டிருப்பவன் அச்செல்வத்தை இழந்தவனாகவே எண்ணப்படுவான். 10. உடா அதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்துஈட்டி னார் இழப்பர்; வான்தோய் மலைநாட! உய்த்துஈட்டும் தேன்ஈக் கரி. (10) (ப-ரை) : உடாஅதும் - நல்ல உடை உடுக்காமலும். உண்ணாதும் - நல்ல உணவுகளை உண்ணாமலும். தம் உடம்பு - தமது உடம்பு. செற்றும் - நோயுற்ற போதுகூட. கெடாத - அழியாத. நல்அறமும் - நல்ல அறத்தையும். செய்யார் - செய்யாத வராய். கொடாது - யாருக்கும் கொடுக்காமல். வைத்து - செல்வத்தைச் சேமித்து வைத்து விட்டு. ஈட்டினார் - மேலும் சேர்த்துக்கொண்டே இருப்பவர்கள். இழப்பர் - அச்செல்வத்தை இழந்துவிடுவார்கள். வான்தோய் - வானத்தை அளாவிய. மலைநாட - மலைகள் நிறைந்த நாட்டையுடைய பாண்டியனே. உய்த்து ஈட்டும் - கொண்டுவந்து சேர்க்கின்ற. தேன்ஈ - தேனீக்களே. கரி - இவர்களுக்குச் சாட்சியாகும். (க-து) : தேனீக்கள் சேர்த்து வைக்கும் தேனைப் பிறர் கவர்ந்து செல்வதுபோல, கருமிகள் சேர்த்து வைக்கும் செல்வத்தையும் திடீரென்று கள்வர் முதலியவர்கள் கவர்ந்து செல்வார்கள். குறிப்பு : உடா அதும், கெடா அத, கொடா அது -இவை உயிரளபெடைகள். 2. இளமை நிலையாமை இளமைப் பருவம் நிலையற்றது 1. நரைவரும் என்றெண்ணி, நல்அறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்;- புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங்கு எழுந்திருப் பார். (11) (ப-ரை) : நரை வரும் - கிழப் பருவம் வரும். என்று எண்ணி- என்று நினைத்து. நல்அறிவாளர் - நல்ல அறிவுடையவர்கள். குழவி யிடத்தே - இளமைப் பருவத்திலேயே. துறந்தார் - துறவறத்தை மேற்கொண்டார்கள். புரைதீரா - குற்றம் செய்யக் கூடியதும். மன்னா - நிலையாததும் ஆன. இளமை - இளமைப் பருவம். மகிழ்ந்தாரே - சிறந்ததென்று எண்ணி மகிழ்ச்சியடைந் தவர்களே. கோல் ஊன்றி - வயதேறியவுடன் கோலை ஊன்றிக் கொண்டு. இன்னாங்கு - துன்பத்துடன். எழுந்திருப்பார் - எழுந்து நடப்பார்கள். (க-து) : வாலிபப் பருவம் நிலைத்ததன்று. ஆகையால், கிழப்பருவம் வரு வதற்குமுன் பேராசைகளைத் துறந்து நன்மை செய்ய வேண்டும். 2. நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்; அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்! வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. (12) (ப-ரை) : உள் காணாய் - உன் மனத்தால் ஆராய்ந்து பார். நட்பு நார் - நட்புத் தொடர்பும். அற்றன - அறுந்து விட்டன. நல்லாரும் - பெண்களும். அஃகினார் - அன்பில் குறைந்தார்கள். அன்புத் தளையும் - சுற்றத்தாரின் அன்புக் கயிறும். அவிழ்ந்தன - அவிழ்ந்து போய்விட்டன. ஆழ்கலத்து அன்ன - கடலில் மூழ்குகின்ற கப்பலில் உள்ளோர்க்கு வந்தது போன்ற. கலி - துன்பம். வந்ததுஏ - வந்து விட்டது. வாழ்தலின் - ஆதலால் இனி உயிர் வாழ்வதால். ஊதியம் - பயன். என் உண்டாம் - என்ன உண்டு? (ஒன்றுமில்லை). (க-து) : வயதேறியவர்களிடம் யாரும் அன்பும் ஆதரவும் காட்ட மாட்டார்கள். அவர்கள் வாழ்வதில் பயனில்லை. 3. சொல்தளர்ந்து, கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று, பண்டம் பழிகாறும் -இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏக நெறிபடரும் ஆறு. (13) (ப-ரை) : சொல் தளர்ந்து - பேச முடியாமல் சொல்லும் தடுமாறி. கோல் ஊன்றி - தடியூன்றி. சோர்ந்த - தள்ளாடிய. நடையினராய் - நடையை உடைய வராய். பல் கழன்று - பற்களும் கழன்று வீழ்ந்து. பண்டம் - தமது உடம்பை. பழி காறும் - பிறர் பார்த்துப் பரிகசிக்கும் வரையிலும். இல் செறிந்து - இல்லத்திலேயே படிந்து கிடந்து. காம நெறி படரும் - ஆசை வழியிலேயே நடந்து கொள்ளும். கண்ணினார்க்கு - நோக்க முடையவர்க்கு. ஏம நெறி - பாதுகாப்பான வீட்டு நெறியிலே. படரும் ஆறு - செல்வதற்கான வழி. இல்லையே - இல்லை. (க-து) : வயதேறிய பின்னும் ஆசையை விடாதார்க்கு, இறந்த பின்னும் நற்கதியில்லை. 4. தாழாத், தளராத், தலைநடுங்காத் தண்டூன்றா, வீழா இறக்கும்; இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று (14) (ப-ரை) : காழ் இலா - மன உறுதியில்லாத. மம்மர் கொள் - மயக்கமடைகின்ற. மாந்தர்க்கு - மக்களுக்கு. அணங்கு ஆகும் - தெய்வப் பெண்ணைப்போல் உருக்கொண்டு நிற்கின்ற. இவள் மாட்டும் - இவளிடத்திலும் அழகும் இளமையும் நிலைத்திருக்கா. அம்மனைக் கோல். இவள் அன்னை வயதான காலத்திலே பிடித்திருந்த கோல். தன்கைக்கோல் - தன் கையிற் பிடிக்கும் கோலாக. ஆகிய ஞான்று - ஆகியபொழுதில். தாழா - வளைந்து கூனியாகி. தளரா - தளர்ந்து. தலை நடுங்கா - தலை நடுங்கி. தண்டூன்றா - தடியை ஊன்றி நடந்து. வீழா - தள்ளாடி வீழ்ந்து. இறக்கும் - இறந்து விடுவாள். (க-து) : இன்று குமரியாகக் காணப்படுகிறவள் நாளை கிழவியாகி இறப்பாள் என்பது உண்மை. 5. எனக்குத்தா யாகியாள் என்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய் ஆகி அவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு ஏகும் அளித்துஇவ் வுலகு. (15) (ப-ரை) : எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாக இருந்தவள். என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகில் வைத்து விட்டு. தனக்குத்தாய் - தனக்கு வேறொரு தாயை. நாடியே - தேடிக் கொண்டு. சென்றாள் - போய்விட்டாள் (இறந்து போனாள்). தனக்குத் தாயாகியவளும் - அவள் தனக்குத் தாயாக இருந்த என் பாட்டியும். அது ஆனால் - அதைப்போலவே தனக்குத் தாயைத் தேடிக் கொண்டே போனாள் என்றால். தாய் தாய்க் கொண்டு - இவ்வாறே ஒவ்வொரு தாயும் தனக்குத் தாயைத் தேடிக்கொண்டு. ஏகும் - போய்க்கொண்டேயிருக்கும். அளித்து இவ்வுலகு - தன்மையை உடையது இவ்வுலகம். (க-து) : எவ்வளவு அழகுடைய பெண்களும் இறந்து விடுவார்கள். 6. வெறிஅயர் வெம்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன, மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். (16) (ப-ரை) : வெறி அயர் - ஆவேசம் கொண்டு ஆடுகின்ற. வெம் களத்து - கொடிய பலிக்களத்தில். வேல்மகன் - ஆவேசங் கொண்டு ஆடுவோன். பாணி - கையில். முறிஆர் - இளந்தளிர் பொருந்திய. நறும் கண்ணி - வாசனை பொருந்திய மாலை. முன்னர்த் தயங்க - தன் முன்னே விளங்குவதைக் கண்டு. மறி - இன்னும் சிறிது நேரத்தில் பலியாகப் போகும் ஆடு. குளகு உண்டு அன்ன - அந்த இளந்தழையை உண்டது போன்ற. மன்னா மகிழ்ச்சி - நிலையற்ற இளமையின்பத்தால் மகிழ்ச்சி அடைதல். அறிவுடையாளர்கண் -அறிவுள்ளவர்களிடத்தில். இல்லை - இல்லை. (க-து) : நிலையற்ற இளமையின்பத்தை அறிவுடையவர்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பு : உலக இன்பத்தை விரும்புவோருக்கு, பலியாடு, தழையைத் தின்ன விரும்புவது உவமை. 7. பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் கனிஉதிர்ந்து வீழ்ந்தற்று இளமை; - நனிபெரிதும் வேற்கண்ணள் என்றுஇவளை வெஃகன்மின்! மற்றிவளும் கோற்கண்ணள் ஆகும் குனிந்து. (17) (ப-ரை) : பனிபடு - குளிர்ச்சி பொருந்திய. சோலை - சோலையிலே உள்ள. பயன்மரம் எல்லாம் - பலன் தரும் மரங்கள் எல்லாம். கனி உதிர்ந்து - பழங்கள் உதிர்ந்து. வீழ்ந்து அற்று - வீழ்ந்தது போல ஆகும். இளமை - இளமைப்பருவம். (ஆதலால்) நனி பெரிதும் - மிகவும் அதிகமாக. வேல் கண்ணள் - வேல் போன்ற கண்ணை யுடையவள். என்று - என்று எண்ணி. இவளை - இந்த இளம் பெண்ணை. வெஃகன்மின் - விரும்பாதீர்கள். மற்றும் இவளும் - பிறகு இந்த இளம்பெண்ணும். குனிந்து - கூனியாகி. கோல் கண்ணள் - கோலையே கண்ணாகக் கொண்டு நடக்கக் கூடியவள். ஆகும் - ஆவாள். (க-து) : இளமை நிலையற்றது; பழுத்த மரம் போன்றது. ஆதலால் அழகைக் கண்டு ஆசைப்பட வேண்டாம். 8. பருவம் எனைத்துள? பல்லின்பால் ஏனை? இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால் உள்நாட்டம் கொள்ளப் படுதலால், யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (18) (ப-ரை) : பருவம் எனைத்து உள - வயது எத்தனை ஆயின? பல்லின் - பற்களின். பால் - தன்மை. ஏனை - எப்படியிருக்கிறது? இரு சிகையும் - இரண்டு பிடியாவது. உண்டீரோ - சாப்பிட்டீர் களா? என்று வரிசையால் - என்று வரிசையாக. உள் - வயதேறிய வர்களின் உள்ளத்தை. நாட்டம் கொள்ளப் படுதலால் - ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்படுவதால். அறிவுடையார் - அறிவுடை யவர்கள். யாக்கைக் கோள் - உடம்பின் இளமை வலிமையானது என்று. எண்ணார் - கருதமாட்டார்கள். (க-து): அறிவுடையவர்கள் இளமைப் பருவம் நிலையானது என்று நினைக்கமாட்டார்கள். 9. மற்றறிவாம் நல்வினை; யாம்இளையம், என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்! முற்றி யிருந்த கனிஒழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு (19) (ப-ரை) : மற்று - பிறகு. அறிவாம் - ஆலோசிப்போம். நல்வினை - நல்லறங்கள் செய்வதைப்பற்றி. யாம் இளையம் - இப்பொழுது நாம் இளைஞர் களாயிருக் கிறோம். என்னாது - என்று எண்ணிச் சும்மாயிராமல். கைத்து - கையில். உண்டாம் போழ்தே - பொருள் இருக்கும்பொழுதே. கரவாது - அப் பொருளை ஒளித்து வைக்காமல். அறம்செய்மின் - அப்பொருளைக் கொண்டு நல் வினைகளைச் செய்யுங்கள் (ஏனென்றால்). முற்றியிருந்த - முற்றிப் பழுத்திருந்த. கனிஒழிய - கனியைத் தவிர. தீவளியால் - கொடுங்காற்றால். நல்காய் - நல்லகாய். உதிர்தலும் உண்டு - உதிர்ந்துவிடுவதும் உண்டு. (க-து) : இளமைப் பருவத்திலும் சாவு வருவதுண்டு. ஆதலால், கையில் பொருள் கிடைத்தபோதே அதனால் நல்ல செயல்களைச் செய்யுங்கள். குறிப்பு : முதுமைக்குக் கனியும், இளமைக்குக் காயும் உவமைகள். 10. ஆட்பார்த்து உழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின்!-பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. (20) (ப-ரை) : ஆள்பார்த்து - ஒவ்வொரு ஆளின் ஆயுளையும் கணக்குப் பார்த்துக்கொண்டு. உழலும் - அவர்கள் உயிரைக் கவரத் திரியும். அருள் இல் - இரக்கம் அற்ற. கூற்று - எமன். உண்மையால் - ஒருவன் இருப்பதால். தோள் கோப்பு - வழித் துணையாகிய கட்டுச் சோற்றை. காலத்தால் கொண்டு - தக்க காலத்திலே தேடிக்கொண்டு. உய்மின் - தப்பித்துக்கொள்ளுங்கள். பீள்பிதுக்கி - கர்ப்பத்தைப் பிதுக்கி. பிள்ளையை - அக் குழந்தையை. தாய் அலற - தாய் கதறும்படி. கோடலால் - கொண்டுபோவதால். மற்றும் அதன் - அந்தக் கூற்றுவனுடைய. கள்ளம் - வஞ்சனையை. கடைப்பிடித்தல் - மறவாதிருந்தல். நன்று - நலமாகும். (க-து) : சாவதற்குமுன் நல்வினைகளைச் செய்ய வேண்டும். குறிப்பு : தோள்கோப்பு நல்வினைக்கு உவமை. 3. யாக்கை நிலையாமை உடம்பின்நிலையற்ற தன்மையைக் கூறுவது 1. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டார்அல்லால், எஞ்சினார் இவ்வுலகத்து இல். (21) (ப-ரை) : மலைமிசை - மலையின்மேல். தோன்றும் - காணப்படும். மதியம்போல் - சந்திரனைப்போல. யானைத் தலைமிசை - யானையின் தலை மேல். கொண்ட - பிடித்துக் கொண்டிருக்கின்ற. குடையர் - வெண் பட்டுக் குடையுடைய மன்னர்களும். நிலமிசை - உலகில். துஞ்சினார் - இறந்து விட்டார். என்றெடுத்து - என்று எடுத்துச் சொல்ல. தூற்றப்பட்டார் அல்லால் - இகழப் பட்டார் அல்லாமல். எஞ்சினார் - இறவாமல் மீதமாக நின்றவர்கள். இவ்வுலகத்து - இவ்வுலகத்தில். இல் - ஒருவரும் இல்லை. (க-து) : எத்தகைய பெரிய மனிதர்களும் இறுதியில் இறந்து தான் போவார்கள். குறிப்பு : வெண்பட்டுக்குடைக்கு மதியம் உவமை. 2. வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்! யாரும் நிலவார் நிலமிசை மேல். (22) (ப-ரை) : வாழ்நாட்கு - உங்களுடைய ஆயுளுக்கு. அலகா- அளவு கருவியாக உள்ள. வயங்கு - விளங்குகின்ற. ஒளிமண்டிலம் - ஒளியையுடைய சூரியன். வீழ்நாள்படாது - தவறாமல். எழுதலால் -தோன்றுவதால். வாழ்நாள் - உங்கள் ஆயுள்நாள். உலவாமுன் -அழிவதற்குமுன். ஒப்புரவு - உதவியை. ஆற்றுமின் - செய்யுங்கள். யாரும் நிலமிசை மேல் -யாருமே உலகில். நிலவார் - சாகாமலிருக்க மாட்டார்கள். (க-து) : இறப்பதற்குமுன் பிறருக்கு உதவி செய்யுங்கள். 3. மன்றம் கறங்க மணப்பறை யாயின, அன்றுஅவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலும் உண்டாம்; என்றுஉய்ந்து போமாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (23) (ப-ரை) : மன்றம் கறங்க - கலியாண மண்டபம் முழுவதும் ஒலிக்கும்படி. மணப்பறை ஆயின - மணவாத்தியங்களாக முழங்கி நின்றவை. அன்று - அன்றைக்கே. அவர்க்கு - யாருக்காக மணப் பறைகள் முழங்கினவோ அவர்க்காகவே. ஆங்கே - அந்தக் கல்யாண மண்டபத்திலேயே. பிணப்பறையாய் - சாவுப் பறையாய். பின்றை - பிறகு. ஒலித்தலும் உண்டாம் -முழங்குவதும் உண்டு. என்று - என்று எண்ணி. உய்ந்து போமாறு - இவ்வுலகத் துன்பத்திலிருந்து தப்பித்துக்கொண்டு போகும்படி. மாண்டார் மனம் - மாட்சிமைப்பட்டவர்களின் மனம். வலிக்கும் ஆம் - உறுதியாக நிற்குமாம். (க-து) : மணமகன் பிணமாதலும் உண்டு. ஆதலால், அறிவுடையவர்கள் உலகத்துத் துன்பத்திலிருந்து விடுபட உறுதி கொள்வர். 4. சென்றே எறிப ஒருகால், சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண்! முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டு எழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து (24) (ப-ரை) : சென்றே - பிணம் கிடக்கும் இடத்திற்குச் சென்று. எறிப ஒரு கால் - பறையடிப்பார்கள் ஒருமுறை. சிறுவரை - சிறிது நேரம். நின்றே - பொறுத்திருந்த பின். எறிப பறையினை - மீண்டும் அடிப்பார்கள் பறையை. நன்றே காண் - நன்றாகப் பார். முக்காலை - மூன்றாந் தடவை. கொட்டினுள் - பறையடிக்கும் போது. மூடி - பிணத்தை மூடி. தீக்கொண்டு - பிணத்தைச் சுடுவதற்கான நெருப்பையும் எடுத்துக்கொண்டு. செத்தாரை - செத்துப் போன அவரை. சாவார் - சாகப்போகும் மக்கள். சுமந்து - தூக்கிக்கொண்டு. எழுவர் - சுடுகாட்டிற்குப் புறப்படுவர். (க-து) : செத்தாரைப் பார்த்தாலே, நாமும் சாவது உறுதி என்று தெரிந்து கொள்வோம். 5. கணம்கொண்டு சுற்றத்தார் கல்என்று அலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டு ஈண்டு உண்டுஉண்டு உண்டுஎன்னும் உணர்வினான் சாற்றுமே டொண்டொண் டொண்என்னும் பறை. (25) (ப-ரை) : கணம்கொண்டு - கூட்டம் கூடிக்கொண்டு. சுற்றத் தார் - உற வினர்கள். கல் என்றுஅலற - கல் என்று அலறியழ. பிணம்கொண்டு - பிணத்தைத் தூக்கிக் கொண்டு. காட்டு உய்ப்பார் - சுடுகாட்டுக்குக் கொண்டு போவாரை. கண்டும் - பார்த்திருந்தும். மணங்கொண்டு - மணம்புரிந்து கொண்டு. ஈண்டு - இவ்வுலகில். உண்டு உண்டு உண்டு - இன்பம் உண்டு உண்டு உண்டு. என்னும் உணர்வினான் - என்னும் உணர்ச்சியை உடையவனுக்கு. டொண் டொண் டொண் என்னும் - டொண் டொண் டொண் என்று முழங்குகின்ற. பறை - சாப்பறை. சாற்றும் - உண்மையைக் கூறும். (க-து) : இருப்போர்க்கு இறப்பின் உண்மை கூறவே இறந்தோர்க்காகப் பறையடிப்பார்கள். 6. நார்த்தொடுத்து ஈர்க்கில்என்? நன்றுஆய்ந்து அடக்கில்என்? பார்த்துழிப் பெய்யில்என்? பல்லோர் பழிக்கில்என்? தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்துஊட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். (26) (ப-ரை) : தோற்பையுள் நின்று -நமது உடம்புக்குள் இருந்து. தொழில் அறச் செய்து - நாம் விரும்பும் தொழில்கள் முழுவதை யும் செய்து. ஊட்டும் - நம்மை உண்பிக்கின்ற. கூத்தன் - உயிர். புறப்பட்டக் கால் - நமது உடம்பிலிருந்து வெளியே புறப்பட்டு விட்டால் (அதன் பிறகு நமது உடம்பாகிய பிணத்தை). நார்த் தொடுத்து - காலிலே கயிற்றைக் கட்டி. ஈர்க்கின் என் - இழுத்தால் தான் என்ன? நன்று ஆய்ந்து - நன்றாகச் சுத்தம் பண்ணி. அடக்கில் என் - புதைத்தால்தான் என்ன? பார்த்துழீ - கண்ட இடத்தில். பெய்யில் என் - போட்டுவிட்டால்தான் என்ன? பல்லோர் பழிக்கில் என் - பலரும் பழித்தால்தான் என்ன? (க-து) : உயிர் உள்ளபோதுதான் மதிப்பு; இறந்தால் மதிப்பில்லை. ஆதலால் இருக்கும்போதே நன்மை செய்யுங்கள். 7. படுமழை மொக்குளில் பல்காலும் தோன்றிக் கெடுமிதுஓர் யாக்கைஎன் றெண்ணித் -தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீள்நிலத்தின் மேல். (27) (ப-ரை) : மழைபடு மொக்குளில் - மழை நீரிலே தோன்று கின்ற குமிழியைப் போல. பல்காலும் - பல தடவையும். தோன்றி - உண்டாகி. கெடும் ஓர் யாக்கை இது என்று எண்ணி - கெடுகின்ற ஒரு உடம்பு இது என்று நினைத்து. தடுமாற்றம் - பிறவித் துன்பத்தை. தீர்ப்பேம்யாம் - தீர்த்துக்கொள்வோம் நாம். என்று உணரும் - என்று உணர்ந்து அதற்கு வேண்டியவற்றைச் செய்கின்ற. திண் அறிவாளரை - உறுதியான அறிவுடையவரை. நேர்ப்பார் - ஒத்தவர். நீண் நிலத்தின் மேல் - இவ்வுலகில். யார் - எவர்? (ஒருவரும் இல்லை). (க-து) : உடல் நீர்மேற் குமிழி போன்றது என்று அறிந்து பிறவா நெறியை நாடுவோரே அறிஞர்கள். குறிப்பு : உடம்புக்கு நீர்க்குமிழி உவமை. 8. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையால் ஆய பயன்கொள்க; - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றி, மற்றுஆங்கே நிலையாது நீத்து விடும். (28) (ப-ரை) : யாக்கையை - உடம்பை. யாப்பு உடைத்தா - கட்டுடையதாக. பெற்றவர் - அடைந்தவர். தாம்பெற்ற - தாம் அடைந்த. யாக்கையால் ஆய - உடம்பினால் உண்டாகிய. பயன் கொள்க - பயனைப் பெற்றுக்கொள்க. யாக்கை - உடம்பானது. மலைஆடு - மலையின் மேல் அசைகின்ற. மஞ்சுபோல - மேகத்தைப் போல. தோன்றி - காணப்பட்டு. மற்று ஆங்கே - அப்பொழுதே. நிலையாது - நிலைத்திராமல். நீத்துவிடும் - அழிந்துவிடும். (க-து) : உடம்பு விரைவில் மறையக்கூடியது. ஆதலால் உடம்பிருக்கும் போதே நல்லறங்களைச் செய்ய வேண்டும். குறிப்பு : உடம்புக்கு மேகம் உவமை. 9. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை:- இன்னினியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான் எனப்படுத லால் (29) (ப-ரை) : இன் இனியே - இப்பொழுதுதான். நின்றான் - நின்று கொண்டிருந் தான். இருந்தான் - உட்கார்ந்திருந்தான். கிடந்தான் - படுத்துக் கிடந்தான். தன் கேள் அலற - தன் உறவினர் அலறி அழும்படி. சென்றான் - இறந்து விட்டான். எனப்படு தலால் - என்று சொல்லப்படுவதால். புல் நுனி மேல் - புல்நுனியின்மேல். படிந்த நீர்ப்போல் - நீரைப் போல. நிலையாமை - நிலையாமையை உடையது உடம்பு. என்று எண்ணி - என்று நினைத்து. இன்னினியே - இப்பொழுதே. செய்க அறவினை - செய்க நல்ல காரியங்களை. (க-து) : புல்நுனியின் நீர்போல் உடம்பு மறையும். ஆதலால் உடனே நல்லறம் புரியுங்கள். குறிப்பு : உடம்புக்குப் புல்நுனியில் உள்ள பனிநீர் உவமானம். 10. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள்; - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து (30) (ப-ரை) : கேளாதே வந்து - நம்மைக் கேட்காமலே வந்து. கிளைகளாய் - நமது உறவினர்களாய். இல்தோன்றி - நம்முடைய வீட்டிலேயே பிறந்து. வாளாதே - நம்மிடம் சொல்லாமலே. போவர் ஆல் - மறைந்துவிடுவார்கள். மாந்தர்கள் - மனிதர்கள் இயல்பு இது. வாளாதே - சும்மா. சேக்கை - கூடு. மரன் ஒழிய - மரத்திலேயே இருக்கும்படி விட்டுவிட்டு. சேண் நீங்கு - தூரத்தில் பறந்து போகின்ற. புள் போல - பறவைகளைப் போல. யாக்கை - உடம்பை. தமர்க்கு ஒழிய - சுற்றத்தாரிடம் தங்கியிருக்கும்படி. நீத்து - விட்டுவிட்டு மறைவார்கள். (க-து) : இறப்பும் பிறப்பும் இயல்பு. ஆதலால் இருக்கும் போதே நல்ல செயல்களைச் செய்யவேண்டும். குறிப்பு : உயிருக்குப் பறவையும், உடம்புக்குக் கூடும் உவமைகள். 4. அறன் வலியுறுத்தல் அறத்தின் பெருமையை வற்புறுத்துவது 1. அகத்தாரே வாழ்வார்என்று அண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர்; புறக்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பரே; மேலைத் தவத்தால் தவம்செய்யா தார். (31) (ப-ரை) : அகத்தாரே - இவ்வீட்டில் உள்ளவர்களே. வாழ்வார் - சிறந்து வாழ்கின்றவர்கள். என்று - என்று நினைத்து. அண்ணாந்து நோக்கி - அந்த வீட்டின் உயரத்தை அண்ணாந்து பார்த்து. (தாம்) புகப் பெறார் - அவ்வீட்டிற்குள் நுழைய முடியாதவராய். புறம் கடை பற்றி - வெளியிடத்தையே இடமாகப் பிடித்துக் கொண்டு. மிக(தாம்) வருந்தி இருப்பர் -மிகவும் வருந்திக்கொண்டு நின்றிருப்பார்கள். மேலை - முன்பு. தவத்தால் - தவத்தின் காரணமாக. தவம் செய்யாதார் - தவம் செய்யாதவர்கள். (க-து) : தவம் செய்யாதவர்கள் செல்வர்களின் வீட்டு வாசலில் சிந்தை வருந்தி நிற்பார்கள்; தவம்செய்தவர்கள் செல்வ முடையவராய்ச் சிறந்த வீட்டில் வாழ்வார்கள். குறிப்பு : தாம்,என்னை: அசைச் சொற்கள். 2. ஆவாம்நாம், ஆக்கம் நசைஇ அறமறந்து போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே! - ஓவாது நின்றுஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் சென்றன; செய்வது உரை? (32) (ப-ரை) : அறமறந்து - இவ்வுலகச் செல்வங்கள் முழு வதையும் மறந்து. போவாம் நாம் - மாண்டுபோவோம் நாம். என்னா - என்று நினைக்காத. புலைநெஞ்சே - அற்ப மனமே. ஆவாம்நாம் - செல்வமுடையவராவோம் நாம் என்று ஆசைப் பட்டு. ஆக்கம் நசைஇ - செல்வத்தை விரும்பி. ஓவாது - ஓய்வு இல்லாமல். நின்று உஞற்றி - நின்று உழைத்து. வாழ்தி எனினும் - வாழ்கின்றாய் ஆனாலும். நின் வாழ்நாள்கள் - உன்னுடைய வாழ்நாள்கள். சென்றன - போய்விட்டன. செய்வது - இனி நீ செய்யப் போவதுதான் என்ன? உரை - சொல். (க-து) : இறப்பதற்குமுன் தவம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தவமாகிய முயற்சி நீடித்து நின்றால்தான் செல்வமும் நீடித்து நிற்கும். 3. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத் தொல்லையது என்றுஉணர் வாரே தடுமாற்றத்து எல்லை இகந்துஒருவு வார். (33) (ப-ரை) : பேதை - அறிவற்றவன். வினைப் பயன் - முன் செய்த தீவினையின் பயன். வந்தக்கால் - இப்பொழுது வந்து துன்புறுத்தும் போது. வெய்ய - சூடாக. உயிரா - மூச்சு விட்டு. மனத்தின் - உள்ளத்தில். அழியும் ஆம் - வருந்துவான். நினைத்து அதனை- அத் துன்பத்தை நினைத்துப் பார்த்து. தொல்லையது - இது பழவினையின் பயன். என்று உணர்வாரே - என்று தெரிந்து கொண்டு வருந்தாமல் அதை அநுபவிப்பவரே. தடுமாற்றத்து எல்லை - பிறவித்துன்பத்தின் எல்லையை. இகந்து ஒருவுவார் - விட்டு நீங்குவார். (க-து) : அறிவிலி தீவினையால் துன்புறும்போது வருந்து வான். நாம் அடை யும் துன்பம் பழவினையின் பயன் என்று எண்ணுவோர் துன்புறமாட்டார்கள். 4. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. (34) (ப-ரை) : அரும் பெறல் யாக்கையை - அருமையாகப் பெற்ற மனித உடம்பை. பெற்ற பயத்தால் - அடைந்த பயனால். பெரும் பயனும் - அடையக் கூடிய பெரிய பயனையும். ஆற்றவே கொள்க - மிகுதியாகப் பெற்றுக்கொள்க. கரும்பு ஊர்ந்த - கரும்பை ஆலையில் இட்டு ஆட்டியதனால் உண்டான. சாறு போல் - சாற்றைப் போல. சாலவும் பின்உதவி - மிகவும் மறுபிறப்புக்கான நன்மையைக் கொடுத்து. மற்று அதன் - அக் கரும்பின். கோது போல் - சக்கையைப் போல. போகும் உடம்பு - கழிந்துபோகும் தன்மையுள்ளது இவ்வுடம்பு. (க-து) : அருமையாகப் பெற்ற இவ்வுடம்பு கரும்பு போன்றது. ஆதலால் இவ்வுடம்பால் அடையும் பயனை விரைவில் அடைய வேண்டும். 5. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார். துரும்பெழுந்து வேம்கால் துயர்ஆண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். (35) (ப-ரை) : கரும்பு ஆட்டி - கரும்பை ஆலையில் ஆட்டி. கட்டி - அதைக் காய்ச்சிய வெல்லக் கட்டியை. சிறு காலை - நல்ல பதத்திலேயே. கொண்டார் -எடுத்துக்கொண்டவர்கள். துரும்பு - அந்தக் கரும்பின் சக்கை. எழுந்து வேம்கால் - தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு வேகும்போது. ஆண்டு துயர் உழவார் - அங்கே அதைப்பார்த்துத் துன்பம் அடைய மாட்டார்கள். வருந்தி - மிகவும் முயன்று. உடம்பின் பயன் கொண்டார் - உடம்பினால் பெறக்கூடிய பயனைப் பெற்றவர்கள். கூற்றம் - உடம்பும் உயிரும் வேறாகும் நிலைமை. வரும் கால் - வரும்போது. பரிவது - துன்ப மடையும் தன்மை. இலர் - இல்லாமல் சாவார்கள். (க-து) : பிறவியின் பயனைப் பெற்றவர்களே இறக்கும் போது வருந்த மாட்டார்கள். குறிப்பு : உடம்பின் பயனைப் பெறுவதற்கு, கரும்பின் பயனை அடைவது உவமை. 6. இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். (36) (ப-ரை) : இன்றுகொல் - இன்று இறப்பு வருமோ. அன்று கொல் - இல்லையோ. என்றுகொல் - என்றைக்குத் தான் இறப்பு வருமோ. என்னாது - என்று நினைக்காமல். கூற்றம் - எமன். பின்றையே நின்றது - பின்னாலேயே நின்றுகொண்டிருக்கிறது. என்று எண்ணி - என்று நினைத்து. தீயவை ஒருவுமின் - தீமைகள் செய்வதை விட்டுவிடுங்கள். ஒல்லும் வகையால் - முடிந்த வழி களில் எல்லாம். மாண்டார் - பெரியோர் செய்துவந்த. அறம் - அறச்செயல்களை அறிந்து. மருவுமின் - அவ்வழியிலே செல்லுங்கள். (க-து) : இறப்பு வருவது உண்மை. ஆதலால் நல்ல செயல் களை உடனேயே செய்யுங்கள். 7. மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். (37) (ப-ரை) : மக்களால் - மக்கட்பிறவி எடுத்தவர்களால். ஆய - உண்டாகிய. பெரும்பயனும் - பெரிய பலனைப் பற்றியும். ஆயும்கால் - ஆராய்ந்து பார்க்கும் பொழுது. எத்துணையும் - எந்த அளவிற் பார்த்தாலும். ஆற்றப் பல - மிகப்பலவாகும். ஆனால் -இது உண்மையானால். தொக்க - எலும்பு தோல் சதைகூடிய. உடம்பிற்கே - நிலையற்ற இந்த உடம்புக்கே. ஒப்புரவு செய்து - உதவி செய்து கொண்டு. ஒழுகாது - வாழாமல். உம்பர் - இறந்த பின்செல்லும் மேலுலகில். கிடந்து -இருந்து. உண்ண - இன்பம் நுகர்வதற்கான செய்கைகளே. பண்ணப்படும் - செய்யத் தகுந்தனவாகும். (க-து) : மறுமையில் நன்மையடைவதற்குரிய நற் செயல் களைச் செய்வதே மக்கட் பிறவியின் பயனாகும். 8. உறக்கும் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி இறப்ப நிழல்பயந் தாஅங்கு -அறப்பயனும் தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால், வான்சிறிதாப் போர்த்து விடும். (38) (ப-ரை) : உறக்கும் - கண்ணைச் சுருக்கிப் பார்க்கும். துணையது - அளவினதாகிய. ஓர் ஆலம் வித்து - ஒரு ஆலம்விதை. ஈண்டி - முளைத்து வளர்ந்து செழித்து நெருங்கி. இறப்ப - அளவு கடந்த. நிழல் பயந்து ஆங்கு - நிழலைக் கொடுப்பதைப்போல. அறப் பயனும் - அறம் செய்வதால் உண்டாகிய பலனும். தான்சிறிது ஆயினும் - தான் மிகக் குறைந்ததாயிருந்தாலும். தக்கார் -தகுதியுடைய பெரியோர்களின். கைப்பட்டக்கால் - கையில் படுமானால். வான் சிறிதுஆ - அந்தப் பயன் வானத்தின் பரப்பு சிறிது என்று சொல்லும்படி. போர்த்துவிடும் - பெரிதாகப் பரவி வானத்தை மறைத்து விடும். (க-து) : பெரியோர்களுக்கும் நல்லவர்களுக்கும் உதவி செய்வதே சிறந்த அறமாகும். அவ்வுதவி சிறிதாயினும் பெரிதாக வளர்ந்து நிற்கும். குறிப்பு : அறத்திற்கு ஆலம் விதை உவமை. 9. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகும்என்று இன்புறுவர்; வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். (39) (ப-ரை) : வைகலும் - ஒவ்வொரு நாளும். வைகல் - பொழுது கழிதல். வரக் கண்டும் - வருவதைப் பார்த்தும். அஃது - பொழுது கழியும் அதனை. உணரார் - அறியாதவர்கள். வைகலும் - நாள்தோறும். வைகலை - நாள் கழிவதை. வைகும் என்று - நாள் நிலைத்திருக்கும் என்று எண்ணி. இன்புறுவர் - மகிழ்ச்சியடைவார்கள். வைகலும் - நாள்தோறும். வைகல் - நாள் கழிவதை. தம் வாழ்நாள் மேல் - தம் ஆயுள்மீது. வைகுதல் - உள்ள நாள்கள் கழிவது என்ற உண்மையை. வைகலை வைத்து - நாள் கழிவதை ஒரு அடையாளமாக வைத்து. உணராதார் - அறியாதவர்களே மேற்கண்டவாறு எண்ணி இன்புறுவார்கள். (க-து) : ஒவ்வொரு நாளும் தம் ஆயுள் நாள் குறைகின்றது என்பதை உணர்ந்தவர்களே விரைவில் நல்லறங்களைச் செய்ய முற்படுவார்கள். 10. மானம்அரும்கலம் நீக்கி இரவென்னும் ஈன இழிவினால் வாழ்வேன்மன்; -ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். (40) (ப-ரை) : மானம் - மானம் என்று சொல்லப்படும். அரும்கலம் நீக்கி - சிறந்த ஆபரணத்தையும் களைந்து விட்டு. இரவு என்னும் - பிச்சை யெடுத்தல் என்று சொல்லப்படுகின்ற. ஈனஇழிவினால் - தாழ்ந்த இழிவான காரியத்தைச் செய்தும். வாழ்வேன் - உயிர் வாழ்வேன். ஈனத்தால் - இவ்வாறு இழிந்த தொழிலைச் செய்வதன் மூலம். ஊட்டியக் கண்ணும் - உணவூட்டி வளர்த்தபோதும். உறுதி சேர்ந்து - நல்ல அழியாத பலம் பெற்று. இவ்வுடம்பு - இந்த உடம்பானது. நீட்டித்து - நிலைபெற்று. நிற்கும் எனின் - நிற்கும் என்பது உண்மையானால் அவ்வாறு வாழ்வேன். (க-து) : எவ்வளவுதான் ஊட்டி வளர்த்தாலும் உடம்பு நிலைத்திராது. ஆதலால், உடல் உள்ளபோதே நல்லறங்களைச் செய்ய வேண்டும். 5. தூய்தன்மை தூயது அன்மை; பரிசுத்தம் அல்லாதவைகளைப் பற்றிக் கூறுவது 1. மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை; - யாக்கைக்குஓர் ஈச்சிறகு அன்னதோர் தோல் அறினும் வேண்டுமே காக்கை கடிவதுஓர் கோல். (41) (ப-ரை) : மாகேழ் - மாமரத்தின் தளிர் போன்ற நிறமுடைய. மடம் நல்லாய் - இளமையும் அழகும் உடையவளே. என்று அரற்றும் - என்று பிதற்றுகின்ற. சான்றவர் - புத்திசாலிகள். நொய்யது ஓர் - அற்பமான ஒரு. துச்சிலை - உடம்பை. நோக்கார் கொல் - உற்றுப் பார்க்க மாட்டார்களோ? யாக்கைக்கு - இந்த உடம்புக்கு. ஈசிறகுஅன்னது ஓர் - ஈயின் சிறகு போன்ற ஓர் சிறிய. தோல் அறினும் - தோல் அறுந்துவிட்டாலும் அதையீடு செய்ய. காக்கை கடிவது - காக்கையை ஓட்டுவதற்குப் பயன்படுவது போன்ற. ஓர்கோல் வேண்டும் - ஒரு கோல் தேவையாக இருக்கும். (க-து): உடம்பு நிலையற்றது. சிறிது காயம் ஏற்பட்டாலும் பெரிய வைத்தியம் செய்தாக வேண்டும். குறிப்பு : சிறிய அளவுக்கு ஈயின் சிறகு உவமை. ஏ அசை. 2. தோற்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்மறைக்கும் மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை பொய்ம் மறையா காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும். (42) (ப-ரை) : தோல்போர்வை மேலும் - தோல்போர்வையின் மீதும். துளை பலவாய் - துளைகள் பலவாகி. பொய் மறைக்கும் - உள்ளே உள்ள அசுத்தத்தை மறைத்துக் கொண்டிருக்கின்ற. மீப்போர்வை - மேற் போர்வையினால். மாட்சித்து உடம்பு - பெருமையுடையதாகக் காணப்படுகின்றது உடம்பு. ஆனால் - இப்படி இருக்குமானால். மீப்போர்வை - மேற்போர்வையைக் கொண்டு. பொய்ம் மறையா - உள்ளிருக்கும் அசுத்தத்தை மறைக்காமலும். காமம் புகலாது - ஆசையால் புகழ்ந்து பேசாமலும். மற்று அதனை - இவ்வுடலை. பைமறியா - பையைத் திருப்பிப் பார்ப்பதுபோல. பார்க்கப்படும் - பார்க்கத்தக்கதாகும். (க-து) : உடம்பின் உள்ளிருக்கும் அசுத்தத்தை உணர்ந்த வரே உள்ளத்தைத் தீய வழியில் போக விடமாட்டார்கள். 3. தக்கோலம் தின்று, தலைநிறையப் பூச்சூடி, பொய்க்கோலம் செய்ய ஒழியுமோ? -எக்காலும் உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல். (43) (ப-ரை) : எக்காலும் - எப்பொழுதும். உண்டி வினையுள் - நல்ல உணவை உண்ணும் காரியத்தினாலேயே. உறைக்கும் - உடல் வலிமையுடன் வாழ்கின்றது. என - என்று எண்ணி. பெரியோர் கண்டு - பெரியோர்கள் உண்மையை உணர்ந்து. கைவிட்ட - கைவிடப்பட்ட. மயல் - ஆசை மயக்கத்தைத் தரும் உடம்பின் அசுத்தம். தக்கோலம் தின்று - வால்மிளகு முதலிய வாசனைத் திரவியங்களுடன் வெற்றிலை பாக்கை மென்று தின்று. தலை நிறைய - தலை மயிர் நிறைய. பூச்சூடி - நறுமண மலர்களைத் தரித்து. பொய்க் கோலம் செய்ய - உடம்பையும் பொய்யாக அலங்கரித்துக் கொள்வதனால். ஒழியுமோ - அந்த அசுத்தம் ஒழிந்து போய்விடுமோ? (க-து) : உடம்பின் வெளிப்புறத்தை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொண்டாலும் உள் அசுத்தம் ஒழியாது. 4. தெண்ணீர்க் குவளை, பொருகயல்,வேல் என்று கண்ணில் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ? உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகு வேன். (44) (ப-ரை) : தெள்நீர் - தெளிந்த நீரிலே மலர்ந்திருக்கின்ற. குவளை - குவளை மலரோ. பொருகயல் -ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளுகின்ற கயல்மீன்கள் தாமோ. வேல் - அல்லது வேற்படையோ. என்று - என்று கற்பனை செய்து. கண்இல் - அறிவுக்கண்ணற்ற. புன்மாக்கள் - அற்ப மனிதர்கள். கவற்ற - துன்பத்தால் பிதற்றுவதைக் கண்டு. விடுவெனோ - என் உள்ளத்தைச் சிதறவிடுவேனோ? (விடமாட்டேன்). உள்நீர் - கண்ணின் உள் அமைந்த அழகுள்ள பகுதியை. களைந்தக்கால் - தோண்டி எடுத்துவிட்டால். நுங்கு - பனை நுங்கிலுள்ள. சூன்று இட்டு அன்ன - சுளையைத் தோண்டி எடுத்து வெளியிலே வைத்து விட்டதைப் போலக் காணப்படும். கண்நீர்மை - கண்ணின் உண்மையான தன்மையை. கண்டு - கண்டுணர்ந்து. ஒழுகுவேன் - ஏமாறாமல் நடந்து கொள்ளுகின்றேன். (க-து) : பெண்களின் அவயவங்களை அழகாகக் கற்பனை செய்வதைக் கண்டு ஏமாற மாட்டேன். 5. முல்லை முகை, முறுவல் முத்தென்று இவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ, எல்லாரும் காணப் புறம்காட்டு உதிர்ந்துஉக்க பல்என்பு கண்டொழுகு வேன்? (45) (ப-ரை) : முறுவல் - பற்கள். முல்லை முகை - முல்லை அரும்புகளைப் போன்றவை. முத்து - முத்துக்களைப் போன்றவை. என்று இவை பிதற்றும் - என்று இவை போன்ற உவமானங் களைச் சொல்லி உளறுகின்ற. கல்லா - உண்மைக் கல்வியைக் கற்காத. புன்மாக்கள் - அற்பர்கள். கவற்ற - என் உள்ளத்தைத் துன்புறுத்து வதைக் கண்டு. விடுவெனோ - என் அறிவை இழந்து விடுவேனோ? (இழந்துவிடமாட்டேன்). எல்லாரும் காண - எல்லோரும் பார்க்கும்படி. புறம் காட்டு - சுடுகாட்டில். உதிர்ந்து - சிதறிக் கிடக்கின்ற. பல் என்பு - பற்களையும் எலும்புகளையும். கண்டு - பார்த்து அழகின் நிலையாமையை உணர்ந்து. ஒழுகுவேன் - நன்னெறியிலே நடந்து கொள்வேன். (க-து) : அறிவற்றவர்களே பெண்களின் உறுப்புக்களை வர்ணித்து உளறிக்கொண்டு திரிவார்கள். 6. குடரும், கொழுவும், குருதியும், என்பும், தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம்: மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்? (46) (ப-ரை) : குடரும் - குடலும். கொழுவும் - கொழுப்பும். குருதியும் - இரத்தமும். என்பும் - எலும்பும். தொடரும் - இவை களோடு பொருந்தியிருக்கின்ற. நரம்பொடு தோலும் - நரம்புடன் தோலும். இடையிடையே - இவைகளின் நடுவில் நடுவில் இடை வெளியில்லாதபடி. வைத்த தடியும் - வைத்திருக்கின்ற தசையும். வழும்பும் - மாமிசமும். ஆம் மற்று இவற்றுள் - ஆகிய இவைகளில். ஈர்ங்கோதையாள் - குளிர்ந்த மலர்மாலையை யணிந்த இம்மங்கை. எத்திறத்தாள் - எவ்வகையைச் சேர்ந்தவள்? (க-து) : அழிந்து போகக்கூடிய பண்டங்களின் சேர்க்கையே பெண்ணுருவம். ஆதலால் அவ்வுருவம் கண்டு மயங்காதீர்கள். 7. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை! பெரும்தோளி! பெய்வளாய்! என்னும்; மீப்போர்த்த கரும்தோலால் கண்விளக்கப் பட்டு. (47) (ப-ரை) : ஊறி - நாற்றம் ஊற்றெடுத்து. உவர்த்தக்க - அருவருக்கத்தக்க. ஒன்பது வாய் - ஒன்பது தொளைகளை யுடைய. புலனும் - புலன்கள் வழியாகவும். கோதி - சிதறி. குழம்பு - உள்ளிருக்கும் அசுத்தம் குழம்பு வடிவாக. அலைக்கும் - வெளியில் வந்து நாற்றம் வீசும். கும்பத்தை - இந்த உடம்பைப் பார்த்து. மீபோர்த்த - இந்த உடம்பின் மேல் மூடியிருக்கின்ற. கரும்தோலால் - பெரிய தோலின் அழகினால். கண் விளக்கப் பட்டு - கண் கவரப்பட்டு (கண்ணைப் பறிகொடுத்து). பேதை - வஞ்சகமற்றவளே. பெரும் தோளி - அழகிய பெரிய தோளை யுடையவளே. பெய்வளாய் - அணிந்த வளையலை உடையவளே. என்னும் - என்று புலம்பும் அறிவற்ற பிறவிகள். (க-து) : அறிவற்றார், உடம்பின் மேல்மினுக்கைப் பார்த்து மயங்குவார். 8. பண்டம் அறியார், படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார், கண்டிலர்கொல், - மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல் முடைச்சாகாடு அச்சிற் றுழி? (48) (ப-ரை) : பண்டம் அறியார் - உடம்பின் உண்மையை அறியாதவர்கள். படுசாந்தும் - பூசியிருக்கின்ற வாசனைச் சாந்தையும். கோதையும் - மலர் மாலையையும். கண்டு - பார்த்து. பாராட்டுவார் - பெண்களின் அழகைப் புகழ்வார்கள். முடை சாகாடு - நாற்றமுள்ள இந்த உடம்பாகிய வண்டி. அச்சு இற்றுழி - உயிராகிய அச்சு ஒடிந்த பின். பெடைச் சேவல் - பெண்ணுடன் ஆணும் சேர்ந்த. வன் கழுகு - வலிமையான கழுகுக்கூட்டம். மண்டி - கூடி. பேர்த்து இட்டு - உடம்பில் உள்ள சதைகளைப் பெயர்த்து எடுத்துவைத்து. குத்தல் - குத்தித் தின்னுவதை. கண்டிலர் கொல் - பார்க்கவில்லையோ? (க-து) : அழிந்து போகும் உடலைப் புகழ்வது அறியாமை. 9. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ்சு உட்கக் குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின்! இற்றுஇதன் பண்பு என்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து? (49) (ப-ரை) : கழிந்தார் - இறந்தவர்களின். இடுதலை - இடுகாட்டில் சிதறிக் கிடக்கின்ற தலைகள். கண்டார் நெஞ்சு - அவற்றைப் பார்த்தவர்களின் மனம். உட்க - அஞ்சும்படி. குழிந்து ஆழ்ந்த - குழி விழுந்த. கண்ண ஆய் - கண்களையுடையனவாகி. தோன்றி - காணப்பட்டு. ஒழிந்தாரை - சாவாமல் இருக்கின்றவர் களைப் பார்த்து. சாலச்சிரித்து - மிகவும் சிரித்து. போற்றி - உங்கள் உள்ளத்தைத் தீய வழியிலே செல்லவிடாமல் பாதுகாத்து. நெறி நின்மின் - நன்னெறியிலே நடந்து கொள்ளுங்கள். இற்றுஇதன் பண்பு - இதுதான் இவ்வுடம்பின் தன்மை. என்று சாற்றும் கொல் - என்று கூறுகின்றன போலும். (க-து) : இடுகாட்டில் கிடக்கும் தலைகள் உயிருடன் இருப்பவர்களைப் பார்த்து, எமது கதியே உங்களுக்கும் நேரும். ஆதலால், உயிருள்ள வரையிலும் நன்னெறியிலே நடந்து கொள்ளுங்கள் என்று கூறுவதுபோல் காணப்படுகின்றன. 10. உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்து செயிர்தீர்க்கும் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார் கண்டுஇற்று இதன்வண்ணம் என்பதனால் தம்மைஓர் பண்டத்துள் வைப்பது இலர். (50) (ப-ரை) : உயிர் போயார் - உயிர் நீங்கினவர்களின். வெண்தலை - வெண்மையான தலை. உட்கச் சிரித்து - பயங்கரமாகச் சிரித்து. செம்மாப்பவரை - அறிவிழந்து மயங்கிக் கிடப்பவரை. செயிர் தீர்க்கும் - அவரிடம் உள்ள குற்றமாகிய மயக்கம் நீங்கச் செய்யும். செயிர் தீர்ந்தார் - மயக்கமாகிய அறியாமை நீங்கியவர்கள். கண்டு - உண்மையைக் கண்டு. இற்று இதன் வண்ணம் - இத் தகையதுதான் இந்த உடம்பின் தன்மை. என்பதனால் - என்று அறிவதனால். தம்மை - தமது உடம்பை. ஓர் பண்டத்துள் - ஒரு பொருளாக. வைப்பது இலர் - வைத்து மதிக்க மாட்டார்கள். (க-து) : உலக வாழ்வில் மயங்கியிருப்பவர், உயிர் போன தலையைப் பார்த்து அறிவு பெறுவர்; தமது உடம்பைப் பெரிதாக மதிக்கமாட்டார்கள்; மறுமைக்கான அறம்புரிவர். 6. துறவு உள்ளத்தில் உள்ள ஆசைகளை விட்டுவிடுதல் 1. விளக்குப் புகவிருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றுஇருள் பாய்ந்தாங்கு, நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. (51) (ப-ரை) : விளக்குப் புக - விளக்குப் புகுந்தவுடன். இருள் மாய்ந்த ஆங்கு - இருள் அழிந்ததைப் போல. ஒருவன் தவத்தின் முன்- ஒருவன் செய்யும் தவத்தின் முன்னே. நில்லாதுஆம் பாவம் - நிலைத்து நிற்காதாம் பாவம். விளக்குநெய் தேய்வுஇடத்து - விளக்கின் எண்ணெய் வற்றி விளக்கும் அணைந்து போனபோது. சென்று இருள் - மறைந்த இருள் மீண்டும் புகுந்து. பாயந்த ஆங்கு- பரவியதைப் போல. நல்வினை - நல்வினையாகிய தவம். தீர்வு இடத்து - இல்லாதபோது. தீது நிற்குமாம் - பாவம் நிலைத்து நிற்குமாம். (க-து) : நல்வினையாகிய தவத்தைச் செய்யாதவர்கள் தீமைகளைச் செய்து பழிகளுக்கு ஆளாவர். 2. நிலையாமை, நோய், மூப்புச், சாக்காடு என்றெண்ணித் தலையாயார் தம்கருமம் செய்வார்; - தொலைவில்லாச் சத்தமும், சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும் பித்தரில் பேதையர் இல். (52) (ப-ரை) : நிலையாமை - செல்வம் நிலையாமையை உடையது. நோய் - நமது உடல் நோய்க்கு ஆளாவது. மூப்பு - மூப்புக்கும் ஆளாவது. சாக்காடு - இறுதியில் சாவும் நமக்குண்டு. என்று எண்ணி - என்று நினைத்து. தலை ஆயார் - அறிவில் சிறந்தவர்கள். தம் கருமம் செய்வார் - தம் தொழிலாகிய தவத்தைச் செய்வார். தொலைவு இல்லா - முடிவு இல்லாத. சத்தமும் - இலக்கண நூலும். சோதிடமும் - சோதிட நூலும். என்றுஆங்கு - என்பவை போன்ற. இவை பிதற்றும் - இவை களைப் படித்துப் பிதற்றிக் கொண்டிருக்கின்ற. பித்தரில் - பைத்தியக்காரர்களைப் போன்ற. பேதையார் - அறிவில்லா தவர்கள். இல் - வேறு எவரும் இல்லை. (க-து) : தவஞ் செய்வோரே அறிவுடையார். இலக்கணங் களையும் சோதிட நூல்களையும் படித்துத் திரிபவர்கள் அறிவற்றவர்கள். 3. இல்லம்,இளமை, எழில்வனப்பு, மீக்கூற்றம், செல்வம், வலியென்று இவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு, நெடியார் துறப்பர்; தலையாயார் தாம்உய்யக் கொண்டு (53) (ப-ரை) : இல்லம் -இல்லற வாழ்வும். இளமை - இளமைப் பருவமும். எழில் வனப்பு - மிகுந்த அழகும். மீகூற்றம் - மிகுந்த செல்வாக்கும். செல்வம் - செல்வமும். வலிமை - வலிமையும். என்றுஇவை யெல்லாம் - என்று கூறப்படும் இவைகள் எல்லாம். நிலையாமை - நிலைக்காதவை என்பதை. மெல்ல கண்டு - பொறுமையுடன் ஆராய்ந்தறிந்து. தலை ஆயார் - சிறந்த அறிவுடையவர். தாம் உய்யக்கொண்டு - தாம் பிழைப்பதற்கான தவத்தை மேற்கொண்டு. நெடியார் - காலந் தாழ்த்தாமல். துறப்பர் - துறவறத்தை மேற்கொள்ளுவார்கள். (க-து) : இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்பதை அறிந் தவர்கள் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை மேற்கொள்ளுவார்கள். 4. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை இன்பமே காமுறுவர் ஏழையார்; - இன்பம் இடைதெரிந்து இன்னாமை நோக்கி மனைஆறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். (54) (ப-ரை) : ஏழையார் - அறிவில்லாதவர்கள். துன்பம் - துன்பத்தையே. பலநாள் உழந்தும் - பல நாட்கள் அனுபவித் தாலும்கூட. ஒரு நாளை - ஒருநாளில் கிடைக்கின்ற. இன்பமே - இன்பத்தையே. காம் உறுவர் - விரும்பி வாழ்வார்கள். ஆன்று - கல்வியும் அறிவும் நிரம்பி. அமைந்தார் - ஒழுக்கத்திற்குக் கட்டுப் பட்டு நடக்கும் அறிவுடையவர்கள். இன்பம் - இன்பத்தைப்பற்றி. இடைதெரிந்து - நடுநிலையில் நின்று ஆராய்ந்து (அதன் நிலையாமையை அறிந்து). இன்னாமை நோக்கி - துன்பத்தின் கொடுமையையும் உணர்ந்து. மனை ஆறு - இல்லற நெறியில். அடைவு - செல்வத்தை. ஒழிந்தார் - விட்டுவிட்டார்கள். (க-து) : அறிவில்லாதார் நிலையாத இன்பத்தைப் பெரி தென்று நினைப்பர்; அறிவுள்ளார் இன்பத்தின் நிலையாமையை அறிந்து துறவறத்தை ஏற்பர். 5. கொன்னே கழிந்தன்று இளமையும்; இன்னே பிணியொடு மூப்பும் வருமால் - துணிவுஒன்றி என்னொடு சூழாது எழுநெஞ்சே! போதியோ! நன்னெறி சேர நமக்கு. (55) (ப-ரை) : கொன்னே - வீணாக. கழிந்தன்று - கழிந்து விட்டது. இளமையும் - இளமைப் பருவமும். இன்னே - இப்பொழுதே. பிணியொடு - நோய்களுடன். மூப்பும் - கிழப் பருவமும். வரும்ஆல் - வந்துவிடும். துணிவு ஒன்றி - துணிந்து ஒன்றுபட்டு. என்னொடு - என்னுடன் இணங்காமலும். சூழாது - எண்ணிப் பார்க்காமலும். எழும் - தனியே பிரிந்து செல்லும். நெஞ்சே - மனமே. நமக்கு நன்னெறி - நமக்கு நல்ல வழி. சேர - கிடைக்கும்படியான நெறியில். போதியோ - என்னுடன் வருவாயோ. (க-து) : நன்மை பெறும் வழி துறவறமேயாகும். 6. மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்எனினும் பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட மிடிஎன்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடி என்றார் கற்றறிந் தார். (56) (ப-ரை) : மாண்ட - மாட்சிமைப்பட்ட (சிறந்த). குணத்தொடு -குணங்களோடு. மக்கட்பேறு - புத்திர செல்வமும். இல்எனினும் - இல்லை யானாலும். பூண்டான்மணம் - பூண்டவன் அந்த மனைவியை. கழித்தற்கு - விடுதற்கு. அருமைஆல் - முடியாது (ஆகையால் மனம் என்பது) பூண்ட - ஒருவன் தானே மேற் கொண்ட. மிடி - துன்பமாகும். என்னும் காரணத்தின் - என்னும் காரணத்தால்தான். மேல் முறைக் கண்ணே - முன்னுள்ள நூல்களிலே. கற்றறிந்தார் - கற்றறிந்த பெரியோர்கள். கடி என்றார் - அந்த மணத்தை நீக்கு என்று கூறினார்கள். (க-து): மணம் பூண்டோர் மனைவியைத் துறத்தல் அரிது. ஆதலால், துறவறத்தை விரும்புவோர் மணம் பூணாதிருத்தலே நன்று. 7. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்உடையத் தாக்கருந் துன்பங்கள் தாம்தலை வந்தக்கால், நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர், (57) (ப-ரை) : ஊக்கி - உத்சாகத்துடன். தாம்கொண்ட - தாம் செய்யத் துணிந்த. விரதங்கள் - உறுதியான செயல்களும். உள் - உள்ளமும். உடைய - சிதையும்படி. தாக்க அரும் - எதிர்த்துத் தாக்க முடியாத. துன்பங்கள் தாம் - துன்பங்கள். தலை வந்தக்கால் - முன்வந்த போது. நீக்கின் - அத்துன்பங்களை ஒழித்துக்கட்டி. நிறூஉம் - தன் செயலை அழியாமல் நிறைவேற்றி வெற்றியடையும். உரவோரே - நெஞ்சுரம் படைத்தவர்களே. நல்லொழுக்கம் - நல்லொழுக்கமாகிய துறவறத்தை. காக்கும் - காப்பாற்றும். திருவத்தவர் - செல்வமுடையவர்கள். (க-து) : ஒன்றுக்கும் கலங்காத உள்ளம் படைத்தவரே துறவறத்தை மேற்கொள்ளத் தகுதியுடையவர். குறிப்பு : விரதம் - இன்னது செய்வேன் என்று உறுதி பூணுதல். 8. தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்பது அன்றி,மற்று எம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வார்கொல்! என்று பரிவதூஉம் சான்றோர் கடன். (58) (ப-ரை) : தம்மை - தங்களை. இகழ்ந்தமை - பழித்துப் பேசியதை. தாம் பொறுப்பது அன்றி - தாம் பொறுத்துக் கொள்ளுவதும் அல்லாமல். எம்மை இகழ்ந்த - எம்மைப் பழித்துப் பேசிய. வினைப்பயத்தால் - இத் தீவினையின் பயனால். உம்மை - பின்னும். எரிவாய் - எரிகின்ற இடமாகிய. நிரயத்து - நரகத்தில். வீழ்வர்கொல் - வீழ்ந்து துன்புறுவரே. என்று - என்று நினைத்து. பரிவதூஉம் - மனம் வருந்துவதும். சான்றோர் கடன் - அறிவுடையோர் கடமையாகும். (க-து) : பொறுமையுடையவர்களே துறவறம் பூணத் தகுந்தவர்கள். குறிப்பு : உம்மை- பின்னர். மறுபிறப்பு என்றும் பொருள் கூறலாம். 9. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க் கலங்காமல் காத்துஉய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காமல் வீடு பெறும். (59) (ப-ரை) : மெய் வாய் கண் மூக்கு செவி - உடம்பு, வாய், கண், மூக்கு, காது. எனப் பேர்பெற்ற - என்று பெயர் பெற்ற பொறிகளின். ஐவாய - ஐந்து வகையான. வேட்கை - பற்றையும். அவாவினை - ஆசையையும். கைவாய் - ஒழுக்க நெறியை விட்டு. கலங்காமல் - தவறாமல். காத்து - காப்பாற்றி. உய்க்கும் - நன்னெறியிலே செலுத்தும். ஆற்றல் உடையான் - அறிவும் ஆற்றலும் உடையவனே. விலங்காமல் - தவறாமல். வீடுபெறும் - மோட்சத்தை அடைவான். அதாவது இன்புற்று வாழ்வான். (க-து) : ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலுடை யவனே இன்புற்று வாழும் வீடு பெறுவான். 10. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இசைதொறும் மற்றுஅதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். (60) (ப-ரை) : ஏழையார் - அறிவில்லாதார். துன்பமே - தம் வாழ்வில் துன்பமே. மீதுஊரக் கண்டும் -மிகுதியாகத் தொடர்ந்து வருவதை நேரே பார்த்தும். துறவு - இன்னாததையடையும் துறவறத்தை. உள்ளார் - மேற்கொள்ள நினைக்கமாட்டார்கள். இன்பமே - அழிந்து போகும் இன்பத்தையே. காமுறுவர் - விரும்புவார்கள். மேலும் - உயர்ந்த அறிவுடையவர்கள். இன்பம் இசைதொறும் - இன்பம் கிடைக்கும்போதெல்லாம். மற்று அதன் - இசை இன்பத்தைத் தொடர்ந்து வரும். இன்னாமை - துன்பத்தைப் பற்றி. நோக்கி - எண்ணிப் பார்த்து. பசைதல் - அந்த இன்பத்தை விரும்புதலாகிய காரியத்தை. பரியாதாம் - செய்ய மாட்டார்களாம். (க-து) : அறிவற்றவரே நிலையாத இன்பத்தை விரும்புவார். அறிவுள்ளார் அழிந்து போகும் இன்பத்தை விரும்பமாட்டார். 7. சினம் இன்மை கோபம் இல்லாமல் இருத்தல் வேண்டும் என்பதைப்பற்றிக் கூறுவது 1. மதித்திறப் பாரும் இறக்க; மதியா மிதித்திறப் பாரும் இறக்க; மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதம்இன்மை நன்று. (61) (ப-ரை) : மதித்து - பெருமையாக எண்ணி. இறப்பாரும் - செல்வாரும். இறக்க - செல்க. மதியா - சிறிதும் மதிக்காமல். மிதித்து - அவமதித்து. இறப்பாரும் - செல்வாரும். இறக்க - செல்க. மிதித்து ஏறி - கால்களால் மிதித்து ஏறி. ஈயும் -அற்பமான ஈயும். தலைமேல் இருத்தலால் - தலையின்மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் ஆதலால். அஃது அறிவார் - அந்த நிகழ்ச்சியை அறிந்தவர்கள். காயும் - தம்மை அவமதிக்கும் அற்பர்களின்மேல் சீறி விழும். கதம் - கோபம். இன்மை - இல்லாமலிருத்தல். நன்று - நலமாகும். (க-து) : நம்மை அவமதிப்போரை அற்பர்கள் என்றெண்ணி அவர்கள் மீது சினங்கொள்ளாமலிருத்தலே சிறப்பு. குறிப்பு : ஈ நம்மை அவமதிக்கும் எண்ணத்துடன் நம் மீது உட்காருவதில்லை. அதுபோலச் சிலர் பிறரை அவமதிப்பதையே இயற்கையாகக் கொண்டிருத்தல் கூடும். 2. தண்டாச் சிறப்பில்தம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். (62) (ப-ரை) : அடி பெயராது - ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல். ஆற்ற - மிகவும். மண்டி - நிறைந்து. இளிவந்த போழ்தின் - அவமானம் வந்த காலத்திலும். முடிகிற்கும் - சலிக்காமல் தாம் மேற்கொண்ட செயல்களைச் செய்து முடிக்கும். உள்ளத்தவர் - கலங்காத உறுதியான உள்ளமுடையவர்கள். தண்டாச் சிறப்பில் - நீங்காச் சிறப்பினையுடைய. தம் இன்உயிரை - தமது அருமையான உயிரை. தாங்காது - தங்கும்படி செய்து காப்பாற்றிக் கொள்ளாமல். கண்ட உழிஎல்லாம் - கண்ட இடங்களில் எல்லாம் கோபங்கொண்டு அதன் காரணமாக. துறப்பவோ - தம் உயிரைத் துறப்பார்களா? துறக்கமாட்டார்கள். (க-து) : நெஞ்சுரம் படைத்தவர்கள் கோபத்தினர்களாகி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிக்கொள்ள மாட்டார்கள். 3. காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து. (63) (ப-ரை) : காவாது - தன் சினத்தை அடக்கிக் காத்துக் கொள்ளாமல். ஒருவன் தன் வாய்திறந்து - ஒருவன் தன் வாயைத் திறந்து. சொல்லும் சொல் - சொல்லுகின்ற சொற்கள். ஓவாதுஏ - இடைவிடாமல் எப்பொழுதும். தன்னைச் சுடுதலால் - தன்னையே சுடும் ஆதலால். ஓவாதே ஆய்ந்து - எப்பொழுதும் பல நூல்களை ஆராய்ந்து. அமைந்து - அந்நூல்கள் நுவலும் வழியில் நின்று வாழ்கின்ற. கேள்விஅறிவு உடையார் - உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்த அறிவை உடையவர்கள். எஞ்ஞான்றும் - எந்நாளும். கறுத்து - கோபங் கொண்டு. காய்ந்து அமைந்த - கோபத்தோடு பொருந்திய சொற்களை. சொல்லார் - கூறமாட்டார்கள். (க-து) : பிறர்மீது வீசும் கடுஞ்சொற்கள் தம்மைத் திருப்பித் தாக்கும். ஆதலால், கற்றவர்கள் ஒருபொழுதும் சினந்து கடுஞ்சொற் கூற மாட்டார்கள். 4. நேர்த்து நிகர்அல்லார் நீர்அல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்; - ஓர்த்து அதனை உள்ளத்தால் உள்ளி உரைத்துஉராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம்கீழ். (64) (ப-ரை) : விழுமியோர் - பெரியோர்கள். நேர்த்து - தம்மை எதிர்த்து நின்று. நிகர் அல்லார் - தமக்கு நிகரில்லாத கீழோர். நீர் அல்ல - நலமற்ற தீய சொற்களை. சொல்லியக்கால் - சொல்லிய பொழுது. வேர்த்து - அதற்காக உடல் வியர்த்து. வெகுளார் - கோபம் கொள்ள மாட்டார்கள். கீழ் - கீழ்த்தர மானவர்கள். அதனை ஓர்த்து - சிறியோர்கள் சொல்லிய அச் சொல்லை அறிந்து. உள்ளத்தால் உள்ளி - உள்ளத்தால் அச்சொற்களைப் பற்றிச் சிந்தித்து. ஊர் கேட்ப - ஊரார் கேட்கும்படி. உரைத்து - அவர்கள் சொல்லிய சொல்லைத் திருப்பிக் கூறி. உராய் - தேய்த்துக்கொண்டு. துள்ளி - துள்ளிக் குதித்து. தூண்முட்டுமாம் - தூணிலே முட்டிக்கொள்ளு வார்களாம். (க-து) : பெரியோர்கள் சிறியோர் சொல்லுக்காகச் சினந்து கொள்ள மாட்டார்கள்; கீழ்மக்களே சிறியோரை எதிர்த்து நின்று துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். 5. இளையான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்; - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. (65) (ப-ரை) : இளையான் - வாலிபன் ஒருவனுடைய. அடக்கம் - புலனடக்கமே. அடக்கம் - சிறந்த உண்மையான அடக்கமாகும். கிளைபொருள் - நிறைந்த பொருள். இல்லான் - இல்லாதவன். கொடையே - பிறருக்குக் கொடுக்கும் ஈகையே. கொடைப்பயன் - சிறந்த கொடையின் பயனைத் தருவதாகும். எல்லாம் ஒறுக்கும் - எல்லா எதிர்ப்புக்களையும் நேர்நின்று அடித்து வீழ்த்தும். மதுகை - உடல் வலிமையும். உரன் - அறிவும். உடையாளன் - உள்ளவன். பொறுக்கும் - பொறுத்துக் கொள்ளும். பொறையே - பொறுமை தான். பொறை - சிறந்த பொறுமையாகும். (க-து) : எதிரிகளை அழிக்கும் வலிமை உள்ளவன் காட்டும் பொறுமைதான் உண்மையான பொறுமையாகும். 6. கல்எறிந்து அன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துஉய்ப்பர் - ஒல்லை, இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையால் வாதிக்கப் பட்டு. (66) (ப-ரை) : இடுநீற்றால் - மந்திரித்துப் போட்ட திருநீற்றின் முன்னே. ஒல்லை - உடனே. பை அவிந்த - படப்பு ஒடுங்கிய. நாகம்போல் - நாகப்பாம்பைப்போல். தம்தம் - அறிவுடையோர் தங்கள் தங்கள். குடிமையால் - குடிப்பிறப்பின் காரணமாக. வாதிக்கப்பட்டு - பொறுமையிழக்காமல் தடுக்கப்பட்டு. கல் எறிந்து அன்ன - கல்லை எடுத்து வீசி எறிந்தது போன்ற. கயவர் வாய் - கீழோர் வாயிலிருந்து புறப்படும். இன்னாச்சொல் - கடுஞ் சொல்லால். எல்லாரும் காண - எல்லோரும் காணும்படி. பொறுத்து - பொறுத்துக் கொண்டு. உய்ப்பர் - தனது அறிவைத் தான் மேற்கொண்ட விரதங்களை முடிப்பதிலே செலுத்துவார்கள். (க-து) : நல்லொழுக்கமுள்ள குடியிலே பிறந்தவர்கள் பொறுமையிழக்க மாட்டார்கள்; சினங்கொள்ளமாட்டார்கள். 7. மாற்றாராய் நின்றுதம் மாறுஏற்பார்க்கு ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை நேர்த்து இன்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று. (67) (ப-ரை) : மாற்றாராய் நின்று - எதிரிகளாய்த் தம் முன்னே வந்து நின்று. தம்மாறு - தம் எதிர்ப்பை. ஏற்பார்க்கு - ஏற்றுக் கொள்ளத் துடிக்கின்றவர்களுக்கு. ஏலாமை - அவர்களுடைய எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தலை. ஆற்றாமை - முடியாமையாகிய பலவீனம். என்னார் அறிவுடையார் - என்று சொல்லமாட்டார்கள் அறிவுடையவர்கள். ஆற்றாமை - தாம் அவரை எதிர்த்துத் தீமை செய்யாமையை. நேர்த்து - முன்னிட்டு. மற்று அவர்கள் - அப்பகைவர்கள். இன்னா செய்தக்கால் - தமக்குத் தீங்கு செய்தாலும். பேர்த்து - அதற்குப் பதிலாக. தாம் அவரை - தாம் அவர்களைக் குறித்து. இன்னா செய்யாமை - துன்பம் செய்யாமை. நன்று - நல்லதாகும். (க-து) : பகைவர்களைப் பொருட்படுத்தாமலிருத்தல் பலவீனம் அன்று; சிறந்த பொறுமையாகும். தீமை செய்வோருக் குத் திருப்பித் தீங்கு செய்யாமையே சிறந்த குணம். 8. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடும்காலம் இன்றிப் பரக்கும்; - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். (68) (ப-ரை) : நெடுங்காலம் - நீண்டகாலம் (அதிக நாள்). ஓடினும் - கழிந்தாலும். நீசர் - மனிதத் தன்மையற்றவர்களின். வெகுளி - கோபம். கெடும் காலம் இன்றி - அழியும் காலம் வராமலே. பரக்கும் - மேலும் வளர்ந்துகொண்டேயிருக்கும். சீர்கொண்ட - சிறந்த குணங்களுடைய. சான்றோர் சினம் - அறிவுடையார்களின் கோபம். அடும்காலை - சுடவைக்கும்போது. நீர் கொண்ட - தண்ணீர் ஏற்றுக்கொண்ட. வெப்பம்போல் - வெப்பம் சுடவைப் பதை நிறுத்தியவுடன் ஆறிவிடுவதைப்போல. தானே தணியும் - தானாகவே தணியும். (க-து) : நீசர்களின் கோபம் ஒருபொழுதும் ஆறாது; அறிவுடையவர்களின் கோபம் தானே தணிந்துவிடும். குறிப்பு : சான்றோர் சினத்துக்கு வெந்நீர் உவமானம். 9. உபகாரம் செய்ததனை ஓராதே தம்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வது அல்லால் தவற்றினால் தீங்குஊக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல். (69) (ப-ரை): உபகாரம் செய்ததனை - தாம் செய்த உதவியைப் பற்றி அந்த உதவியைப் பெற்றவர். ஓராது - நினைத்துப் பார்க்காமலே. தம் கண் - தமக்கு. அபகாரம் - தீமையை. ஆற்றச் செயினும் - மிகுதியாகச் செய்தாலும். தாம் உபகாரம் செய்வது அல்லால் - தாம் அவ்வாறு அபகாரம் செய்பவர்க்கு மீண்டும் உபகாரத்தையே செய்வார்களேயல்லாமல். தவற்றினால் - சோர்வினால்கூட. தீங்கு ஊக்கல் - தீமை செய்ய முயலுதல். வான் தோய் - வானை முட்டும் படி உயர்ந்த. குடிப்பிறந்தார்க்கு -ஒழுக்கமுடைய குடியிலே பிறந்தார்க்கு. இல் - இல்லை. (க-து): தம் உதவியைப் பெற்றவர் அதை மறந்து தீங்கு செய்தாலும், உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் மீண்டும் அவர்க்கு நன்மைதான் செய்வார்கள். குறிப்பு: குடி என்பது ஒரு குடும்பம்; அதாவது ஒரு பரம்பரை. இது சாதியைக் குறிக்கும் சொல்லன்று. 10. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை; - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (70) (ப-ரை): கூர்த்து - கோபித்து. நாய்கௌவிக்கொள - நாய் கடித்து இழுப்பதை, கண்டும் - பார்த்தும். பேர்த்து - அதற்குப் பதிலாக. தம் வாயால் - தம் வாயினால். நாய் கௌவினார் - நாயைக் கடித்தவர்கள். ஈங்கு இல்லை - இவ்வுலகில் ஒருவரும் இல்லை (ஆகையால்). கீழ்மக்கள் - அற்பர்கள். நீர்த்து அன்றி - தகுதியுடைய சொற்களைக் கூறாமல். கீழ் ஆய - கீழ்த்தரமான சொற்களை. சொல்லியக்கால் - சொல்லியபோது அதற்கு எதிராக. மேன்மக்கள் - உயர்ந்தவர்கள். தம் வாயால் - தம் வாயினால். மீட்டு - அவர்கள் சொல்லிய கீழ்த்தரமான சொற் களைத் திருப்பி. சொல்பவோ - சொல்வார்களோ? சொல்ல மாட்டார்கள். (க-து): அற்பர்கள் கூறும் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பதிலாக அவ்வார்த்தைகளையே திருப்பிச் சொல்லமாட்டார்கள் உயர்ந்தவர்கள். குறிப்பு: அற்பர்களை எதிர்த்துப் பேசுவது நாயைத் திருப்பிக் கடிப்பது போலாகும். அற்பர்களுக்கு நாய் உவமானம். நாலடியார் அறத்துப்பாலில் துறவறத்தைப்பற்றிச் சொல்லும் அதிகாரங்கள் ஏழு. இந்த ஏழு அதிகாரங்களும் சேர்ந்தது துறவறவியல். நாலடியார் சமண நூல் ஆதலால் முதலில் துறவறத்தைப்பற்றியே சிறப்பித்துப் பாடினர். இல்லறத்தைக் காட்டிலும் துறவறமே சிறந்தது என்பது சமணர்களின் கொள்கை. பண்டைத் தமிழர்களின் கொள்கை இதற்கு மாறானது. இல்லற வாழ்வே சிறந்தது என்பதுதான் பழந்தமிழர் கொள்கை. இல்லறவியல் 8. பொறைஉடைமை பொறுமையின் அவசியத்தைப் பற்றிக் கூறுவது 1. கோதை அருவிக் குளிர்வரை நன்னாட! பேதையோடு யாதும் உரையற்க; - பேதை உரைப்பின் சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையால் வழுக்கிக் கழிதலே நன்று (71) (ப-ரை): கோதை - மலர் மாலையைப் போன்ற. அருவி - அருவிநீர் வீழ்ச்சியையுடைய. குளிர் வரை - குளிர்ந்த மலைகளை யுடைய. நல் நாட - சிறந்த நாட்டையுடைய பாண்டியனே. பேதையோடு - அறிவில்லாதவனோடு. யாதும் - ஒன்றும். உரையற்க - பேசாமலிருப்பாயாக. பேதை - அறிவில்லாதவனுடன். உரைப்பின் - அளவுக்கு மேல் பேசினால். சிதைந்து உரைக்கும் - அவன் வரம்பு கடந்து பேசுவான்(ஆதலால்). ஒல்லும் வகையால் - முடிந்த வரையிலும். வழுக்கிக் கழிதலே - பேதையைக் காணும் போது நழுவி விடுவதே. நன்று - நலமாகும். (க-து): மூடர்களைக் காண நேர்ந்தால் அவர்களுடன் பேச்சு வைத்துக் கொள்ளாமல் நழுவிவிடுவதே நலம். குறிப்பு: மலையிலிருந்து விழுந்து வரும் அருவிநீரைச் சூரிய ஒளியிலே பார்த்தால் அந்த நீரில் சூரிய ஒளியின் பல நிறங்களைக் காணலாம். ஆதலால் அருவி மலர் மாலைக்கு ஒப்பிடப் பட்டது. 2. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி; மற்று - ஓரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். (72) (ப-ரை): நேர் அல்லார் - நல்ல குணமில்லாதவர்கள். நீர் அல்ல - நன்மையற்ற சொற்களை. சொல்லியக்கால் - சொல்லிய போது. மற்று அது - அச் சொற்களை. தாரித்து இருத்தல் - பொறுத்துக் கொண்டிருப்பதே. தகுதி - ஏற்றதாகும். மற்றுஓரும் - அச்சொல்லை நினைத்துப் பதில் கூறத் தொடங்கினால். பொங்கு நீர் ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம். புகழ்மையாக் கொள்ளாது - அதனைப் புகழுடைய செயலாகக் கொள்ளாது. சமழ்மையா - பழிக்குக் காரணமான செயலாக. கொண்டுவிடும் - கொள்ளும். (க-து): கெட்டவர்கள் தகாத சொற்களைப் பேசும்போது அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். 3. காதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ? - போதெலாம் மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப ஆவது அறிவார்ப் பெறின். (73) (ப-ரை): போது எலாம் - மலர்களில் எல்லாம். மாதர் -அழகான. வண்டு ஆர்க்கும் -வண்டுகள் உட்கார்ந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கின்ற. மலிகடல் - ஓசை நிறைந்த கடலின். தண் சேர்ப்ப - குளிர்ந்த கரையையுடைய பாண்டியனே. ஆவது அறிவார் - நன்மையாவதை அறிந்துசொல்லுகின்ற அறிஞரை. பெறின் - உற்ற துணைவராகப் பெறுவாயானால். காதலார் - அந்த அன்புடையவர்கள். சொல்லும் கடுஞ்சொல் - சொல்லு கின்ற கடுமையான சொல். உவந்து உரைக்கும் - மகிழ்ந்து பேசுகின்ற. ஏதிலார் - பகைவருடைய. இன்சொல்லின்- இனிமை யான சொல்லைக் காட்டிலும். தீதுஆமோ - தீமை தருவதாகி விடுமோ? (ஆகாது). (க-து): பகைவர்களின் இன்சொல்லைக் காட்டினும் அன்பர்களின் கடுஞ்சொல்லே நன்மைதரும். குறிப்பு : காதலார் - அன்புடையவர். ஏதிலார் - பகைவர் 4. அறிவது அறிந்து அடங்கி,அஞ்சுவது அஞ்சி, உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. (74) (ப-ரை): அறிவது அறிந்து - தெரிந்துகொள்ளவேண்டி யதைத் தெரிந்து கொண்டு. அடங்கி - அடக்கமுடையவராகி. அஞ்சுவது அஞ்சி - பயப்பட வேண்டியதற்குப் பயந்து. உறுவது - செய்வதை. உலகு உவப்பச்செய்து - உலகம் மகிழும்படி செய்து. பெறுவதனால் - கிடைக்கும் பொருளைக் கொண்டு. இன்புற்று வாழும் - இன்பம் அடைந்து வாழுகின்ற. இயல்பு உடையார் - குணமுள்ளவர்கள். எஞ்ஞான்றும் - ஒரு பொழுதும். துன்புற்று வாழ்தல் -துன்பமடைந்து வாழ்தல். அரிது - இல்லை. (க-து): அறிவும் நல்லொழுக்கமும் அமைந்து, போது மென்ற உள்ளத்துடன் வாழ்பவரே துன்பமில்லாமல் வாழ்வார்கள். 5. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்ககால், தேற்றலா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின், ஆற்றுந் துணையும் பொறுக்க; பொறான் ஆயின் தூற்றாதே தூர விடல். (75) (ப-ரை): வேற்றுமையின்றி - மனவேற்றுமை சிறிதும் இல்லாமல். கலந்து - ஒன்றுபட்டு. இருவர் நட்டக்கால் - இரண்டு பேர் நட்பினரான பிறகு. தேற்றா ஒழுக்கம் - அறியாமையால் வரும் கூடாவொழுக்கம். ஒருவன் கண் உண்டாயின் - ஒருவனிடம் தோன்றினால். ஆற்றும் துணையும் - அதனை மற்றொருவன். தன்னால் முடியும் வரையிலும். பொறுக்க - பொறுத்துக் கொள்ளுவானாக. பொறான் ஆயின் - பொறுத்துக் கொள்ள முடியாமற் போவானாயின். தூற்றாதே - தன் நண்பனுடைய கூடாவொழுக்கத்தைப் பற்றிப் பிறர் அறியத் தூற்றாமல். தூரவிடல் - அவனைத் தூரத்தில் விட்டு விடுக (அவன் நட்பைத் துண்டித்துக் கொள்ளுக). (க-து): ஒருமனப்பட்ட நண்பர்களுக்குள் மீண்டும் ஒன்று சேர முடியாத பிளவு ஏற்பட்டால் ஒருவரைப்பற்றி ஒருவர் குறைசொல்லாமல் விலகிக்கொள்வதே நலம். 8. இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல், கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது. (76) (ப-ரை): கானக நாட - சோலைகள் நிறைந்த நாட்டை யுடைய பாண்டியனே. இன்னா செயினும் - ஒருமனப்பட்ட நண்பர்கள் தமக்குத் தீமை செய்தாலும். இனியஒழிக என்று - அவை நன்மையாகக் கடவது என்று எண்ணிக்கொண்டு. தன்னையே - முன்பு ஆராயாமல் நட்புச் செய்த தன்னைப் பற்றியே. தான் நோவின் அல்லது - தான் நொந்து கொள்ள வேண்டுமேயல்லாமல். துன்னி - தன்னை நெருங்கி. கலந்தாரை - ஒன்றுபட்டு நட்பாயினாரை. கைவிடுதல் -கைவிடுதல் என்பது. விலங்கிற்கும் - விலங்கினிடங்கூட உண்டு என்று. விள்ளல் அரிது - சொல்ல முடியாது. (க-து): கலந்து பழகியபின் விட்டுப் பிரியும் குணம் மிருகத் தினிடங்கூட இல்லை. ஆதலால், நண்பர் என்ன சொன்னாலும் சரி, பொறுத்துக் கொள்வதே கடமை. 7. பெரியார் பெருநட்புக் கோடல், தாம்செய்த அரிய பொறுப்பவன்று அன்றோ?- அரியரோ ஒல்என் அருவி உயர்வரை நன்னாட! நல்ல செய்வார்க்குத் தமர்? (77) (ப-ரை): ஒல்என் அருவி - ஒல்லென்று ஒலித்துக் கொண்டு வீழும்அருவி களையுடைய. உயர்வரை - உயர்ந்த மலைகள் அமைந்த. நல்நாட - நல்ல நாட்டையுடைய பாண்டியனே. பெரியார் - பெரியோர்களுடைய. பெருநட்புக் கோடல் - பெரிய சினேகத்தைத் தேடிக்கொள்ளுதல். தாம் செய்த - சில சமயங் களில் தாம் செய்த. அரிய - பொறுத்தற்கரிய குற்றங்களை. பொறுப்ப என்று அன்றோ - பொறுத்துக்கொள்ளுவார்கள் என்பதற்காக அல்லவா? நல்ல செய்வார்க்கு- எப்பொழுதும் நல்ல காரியங்களைச் செய்வார்க்கு. தமர் அரியரோ - நல்ல சுற்றத்தார் கிடைக்காமலிருப்பார்களா? (கிடைப்பார்கள்). (க-து): பெரியோர்களுடன் நட்புக்கொள்ளுதலே தாம் நன்மையடைவதற்கு வழி. 8. வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க; - அற்றம் மறைக்கும் துணையார்க்கும் உரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார். (78) (ப-ரை): வற்றி - உடல் வற்றி. மற்று ஆற்ற -இன்னும் மிகுதியாக. பசிப்பினும் - பசித்தாலும். பண்பு இலார்க்கு - உதவி செய்யும் நற்குணம் இல்லாதவர்களிடம். அற்றம் - தமது வறுமையைப்பற்றி. அறிய - அவர்கள் தெரிந்துகொள்ளும்படி. உரையற்க - சொல்லாதீர்கள். தம்மைத் துறக்கும் - தம்முடைய உயிரைத் துறக்கின்ற. துணிவு இலாதார் - துணிவற்றவர்கள். அற்றம் - தமது வறுமையை. மறைக்கும் துணையார்க்கு- போக்கும் தன்மையுடையவர்களிடம் மட்டும். உரைப்ப - தமது வறுமையைப் பற்றி வாய்விட்டு உரைப்பார்கள். ஏ: அசை. (க-து): உயிர் விடத் துணிவற்றவர்கள் தமது வறுமையைப் பற்றி உதவி செய்யும் நல்லவர்களிடம் மட்டும் சொல்லலாம். 9. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம் ஒழியாமை கண்டாலும், ஓங்கருவி நாட! பழியாகா வாறே தலை. (79) (ப-ரை): ஓங்கு அருவி நாட - உயர்ந்த அருவிநீர் வீழ்ச்சிகள் அமைந்த நாட்டையுடைய பாண்டியனே. இன்பம் பயந்த ஆங்கு - இன்பம் நன்மையைத் தந்த அந்த வழியிலேயே. இழிவு தலைவரினும் - இழிவு வந்து சேர்ந்தாலும். இன்பத்தின் பக்கம் - இன்பத்தின் சார்பில். இருந்தைக்க - இருந்த உனக்கு. இன்பம் - இன்பமானது. ஒழியாமை கண்டாலும் - என்றும் ஒழியா மலிருக்க வேண்டும் என்பதை எண்ணினாலும். பழி ஆகா ஆறு - பழிச்சொல் உண்டாகாத வழியிலே நடந்துகொள்வதுதான். தலை - சிறந்ததாகும். இதை நினைவில் வைத்துக்கொள். (க-து): பிறர் பழிச் சொல்லுக்கு ஆளாகாத வகையில் இன்புற்று வாழ முயற்சி செய்வதே அறிவுடமையாகும். 10. தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க; தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க;- வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல். (80) (ப-ரை): தான் கெடினும்- தான் கெட்டுப் போனாலும். தக்கார் - பெரியோர்க்கு. கேடு எண்ணற்க - கெடுதி உண்டாக வேண்டும் என்று நினையாதிருப்பாயாக. தன் உடம்பின் - தனது உடம்பில் உள்ள. ஊன் கெடினும் - சதை முழுவதும் வற்றி உடம்பு வெறும் எலும்புக்கூடாகக் காட்சியளித்தாலும். உண்ணார் கைத்து - உண்ணத் தகாத விரோதிகள் கையிலே உள்ள உணவைப் பெற்று. உண்ணற்க - உண்டு உயிர் வாழாதே. வான் கவிந்த - வானம் மூடியிருக்கின்ற. வையகம் எல்லாம் - இந்த உலகம் முழுவதையும். பெறினும் - பரிசாகப் பெற்றாலும். பொய்யோடு இடைமிடைந்த - பொய்யோடு கலந்த. சொல் உரையற்க - சொற்களைப் பேசாதே. (க-து): பெரியோர்க்குக் கேடு நினைத்தல், எதிரிகளிடம் உதவி பெறுதல், பொய் கூறல் இவைகளைப் பின்பற்றக்கூடாது. குறிப்பு: எண்ணற்க! உண்ணற்க! உரையற்க! என்ற சொற்கள் கட்டளையிடும் பாணியில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கட்டளைப் பொருளில் வருவனவற்றை வியங்கோள் வினையென்பர் இலக்கண நூலார். 9. பிறர்மனை நயவாமை பிறர் மனைவியை விரும்புதல் பெருங்குற்றம் என்பதைப் பற்றிக் கூறுவது. 1. அச்சம் பெரிதால் அதற்குஇன்பம் சிற்றளவால்; நிச்சம் நினையுங்கால் கோர்க்கொலையால்; - நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால்; பிறன்தாரம் நம்பற்க நாண்உடை யார். (81) (ப-ரை): அச்சம் பெரிதுஆல் - பயம் பெரிதாகும். அதற்கு - அந்த அச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இன்பம் சிறுஅளவு ஆல்- இன்பம் சிறிய அளவுதான். நிச்சம் - உண்மையாக. நினையும் கால் - நினைத்துப் பார்த்தால். கோக் கொலையால் - அரச தண்டனையும் கிடைக்கும். நிச்சலும் - எந்நாளும். கும்பிக்கே - நரகத்தை அடைவதற்குக் காரணமாகிய. கூர்த்த வினை ஆல் - மிகுந்த பாவச் செயலாகும் (ஆதலால்). பிறன்தாரம் - பிறன் மனைவியை. நாண்உடையார் - நாணம் உள்ளவர்கள். நம்பற்க - விரும்பாமலிருக்க வேண்டும். (க-து): பிறர் மனைவியை விரும்புவோர், இம்மையில் பயத்தையும் அரச தண்டனையையும், மறுமையில் நரகத்தையும் பெறுவர். 2. அறம், புகழ், கேண்மை, பெருமையிந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா; - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகை, பழி, பாவம் என்று அச்சத்தோடு இந்நால் பொருள். (82) (ப-ரை): அறம் புகழ் கேண்மை பெருமை - அறம், புகழ், நட்பு, உயர்வு. இந்நான்கும் - என்னும்இந்த நான்கும். பிறன்தாரம் - பிறன் மனைவியை. நச்சுவார் - விரும்புகின்றவரை. சேரா - அடையமாட்டா. பிறன்தாரம்நச்சுவார் - பிறன் மனைவியை விரும்புகின்றவரை. பகை பழி பாவம் என்று - பகை, பழிச் சொல், பாவம் என்று சொல்லப்படும் மூன்றும். அச்சத்தோடு - அச்சத் துடன் ஆகிய. இந்நால் பொருள் - இந்த நான்கு பொருளுமே. சேரும் - அடையும். (க-து): பிறர் மனைவியை விரும்புவோர், பிறர் பகைக்கும். பழிப்புக்கும், பாவத்திற்கும், பயத்துக்குமே ஆளாவார்கள். 3. புக்க இடத்தச்சம்; போதரும் போது அச்சம்; துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமல் காப்பு அச்சம்; எக்காலும் அச்சம்தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல்? (83) (ப-ரை): புக்க இடத்து அச்சம் - பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டுக்குள் புகுந்தபோதும் பயம். போதரும் போது அச்சம் - அவன் வீட்டுக்குள்ளிருந்து திரும்பி வரும்போதும் பயந்தான். துய்க்கும் இடத்து அச்சம் - பிறன் மனைவியிடம் இன்பத்தை அனுபவிக்கும்போதும் பயந்தான். தோன்றாமல் - தான் செய்த கெட்ட காரியத்தைப் பிறர்க்குத் தெரியாமல். காப்பு அச்சம் - காப்பதும் பயந்தான். எக்காலும் - பிறர் மனைவியை விரும்பும் செயல் இவ்வாறு எப்பொழுதும். அச்சம் தருதலால் - பயத்தையே தருமாதலால். உட்கான் - அஞ்சாமல். பிறன் இல் புகல் - பிறன் மனைக்குள் புகுவது. எவன்கொல் - எதற்காக? (க-து): பிறன் மனைவியை விரும்புகின்றவன் எப்பொழுதும் பயத்துடனேயே வாழ்வான். 4. காணில் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையாம்; ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீணிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி நீகண்ட இன்பம் எனக்குஎனைத்தால் கூறு. (84) (ப-ரை): காணில் - கண்டுவிட்டால். குடிப்பழியாம் - தான் பிறந்த குடும்பத்திற்குப் பழிப்புண்டாகுமாம். கை உறில் - அச்சமயத்தில் பிறர் கையில் அகப்பட்டுக்கொண்டால். கால் குறையும் - கால் முதலிய அங்கங்கள் குறைந்து விடும். ஆண் இன்மை - ஆண் தன்மையற்ற செயலை. செய்யுங்கால் - செய்யும் போதும். அச்சம்ஆம் - அச்சமே உண்டாகும். நீள்நிரயம் - பெரிய நரகமாகிய. துன்பம் பயக்கும் ஆல் - துன்பத்தைத் தரும். துச்சாரி - தீயொழுக்கம் உடையவனே. நீ கண்ட இன்பம் - பிறன் மனைவியை நாடுவதனால் நீ கண்ட இன்பந்தான். எனைத்துஆல் - எவ்வளவு தான் என்று. எனக்குக் கூறு - என்னிடம் சொல். (ஆல்: அசைகள்.) (க-து): தீயொழுக்கமுடையவனே! பிறர் மனைவியை விரும்புவதால் பழியேயன்றிப் பயனில்லை. ஆதலால் அதை விட்டுவிடு. 5. செம்மைஒன் றின்றிச் சிறியார் இனத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ,-உம்மை வலியால் பிறர்மனைமேல் சென்றாரே, இம்மை அலியாகி ஆடிஉண் பார், (85) (ப-ரை): செம்மை - நடுநிலைமை என்னும். ஒன்று இன்றி - ஒப்பற்ற சிறந்த குணம் இல்லாமல். சிறியார் இனத்தராய் - அற்பர்களையே சுற்றமாகவும் நட்பாகவும் கொண்டு. கொம்மை - அழகிய. வரிமுலையாள் - கோலம் எழுதப்பட்ட முலையை யுடையவளின். தோள்மரீஇ - தோளைத் தழுவி. உம்மை - முன்பிறவியிலே. வலியால் - தமது உடம்பின் வலிமையினால். பிறர்மனைமேல் - பிறர் மனைவியிடம். சென்றாரே - விரும்பிச் சென்று கற்பழித்தவர்களே. இம்மை - இப்பிறப்பிலே. அலியாகி - அலிகளாகப் பிறந்து. ஆடி உண்பார் - வேடிக்கைக் கூத்தாடிப் பொருள் பெற்று உண்டு வாழ்வார்கள். (க-து): முன்பிறவியில் பிறர் மனைவியின் கற்பைக் கெடுத்தவர்களே இப்பிறவியிலே அலிகளாகப் பிறந்து அல்லல் அடைகின்றனர். குறிப்பு: அலி, பேடி இருவர்க்கும் வேற்றுமையுண்டு. பெண் தன்மையுள்ள ஆண்கள் - அதாவது ஆண் தன்மையற்ற ஆணுருவமுடையவர்களுக்கு அலிகள் என்று பெயர். ஆண் தன்மையுள்ள பெண்கள் - அதாவது பெண்தன்மையற்ற பெண்ணுருவமுடையவர்கள் பேடிகள் ஆவார்கள். 6. பல்லார் அறியப் பறையறைந்து, நாள்கேட்டுக் கல்யாணம் செய்து, கடிபுக்க - மெல்லியல் காதல் மனையாளும் இல்லாளா என்ஒருவன் ஏதின் மனையாளை நோக்கு? (86) (ப-ரை): பல்லார் அறிய - பலரும் அறியும்படி. பறையறைந்து - பறைசாற்றித் தெரிவித்து. நாள்கேட்டு - சோதிடர்களிடம் நல்லநாள் கேட்டு. கல்யாணம் செய்து - அந்த நல்ல நாளிலே கல்யாணம் செய்துகொண்டு. கடிபுக்க - வீட்டிலே புகுந்த. மெல்இயல் - மெல்லிய தன்மையுள்ள. காதல் மனையாளும் -அன்புடைய மனைவியும். இல்லாள்ஆ - வீட்டில் இருக்கவும். என் ஒருவன் - எதற்காக ஒருவன். ஏதின் மனையாளை - பிறன் மனைவியை. நோக்கு - கெட்ட எண்ணத்துடன் பார்க்கிறான்? (இவ்வாறு பார்த்தல் தவறாகும்). (க-து): மணம் செய்துகொண்டு இல்லறத்தில் வாழ்வோன் மற்றவன் மனைவியின்மேல் ஆசைப்படுவது அறிவீனம்; தன் மனைவிக்கும் துரோகம் செய்வதாகும். குறிப்பு: நல்ல நாளில் பலரும் அறிய விளம்பரம் செய்து மணம் புரியும் வழக்கம் ஏறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டு களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்ததென்று தெரிகிறது. 7. அம்பல் அயலெடுப்ப, அஞ்சித் தமர்பரீஇ, வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும் நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு, பாம்பின் தலைநக்கி யன்னது உடைத்து. (87) (ப-ரை): அயல் அம்பல் எடுப்ப- பக்கத்தார் அனைவரும் பழித்துப் பேச. அஞ்சி - பயந்து. தமர் பரீஇ - சுற்றத்தார்கள் வருந்தி நிற்க. வம்பலன் - அயலானுடைய. பெண் மரீஇ - மனைவி யைத் தழுவி. மைந்து உற்று - மகிழ்ச்சியடைந்து. நம்பும் - அதை நிலையான இன்பம் என்று நம்பும். நிலைமைஇல் - உறுதியற்ற. நெஞ்சத்தான் - நெஞ்சமுள்ளவனுடைய. துப்புரவு - நெஞ்சத் துணிவு. பாம்பின் - ஒரு விஷப்பாம்பின். தலைநக்கி அன்னது - தலையை நாக்கினால் நக்கியது போன்ற. உடைத்து -பலனை உடையதாகும். (க-து): பிறன்மனைவியை விரும்புகின்றவன் தன் செய்கை யைத் துணிவானது என்று கருதினால் அது ஆபத்தாக முடியும். குறிப்பு: ஒருவன் விஷப் பாம்பின் தலையை நக்கினால் அது சும்மாவிராது; அவனைக் கடித்து உயிரை வாங்கிவிடும். ஆகையால் விஷப் பாம்பின் தலையை நக்கும் செயலும், பிறன் மனைவியை விரும்பும் செயலும் ஒரு தன்மையாகும். 8. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா, உரவோர்கண் காமநோய் ஓஓ கொடிதே! விரவாருள் நாணுப் படல்அஞ்சி, யாதும் உரையாதுள் ஆறி விடும். (88) (ப-ரை): உரவோர்கண் காமநோய் - வலிமையுடையவர் களிடம் உண்டாகும் காமநோய். பரவா - வளர்ச்சியடையாது. பல்லோர்கண் தங்கா - பலரும் அறியும்படி அவர்களிடம் சென்று தங்காது. விரவாருள் - பகைவர்களிடம். நாணுப் படல் அஞ்சி - வெட்கம் கெடுவதற்குப் பயந்து. யாதும் உரையாது - ஒன்றும் சொல்லாமல். உள்ஆறிவிடும் - உள்ளத்திலேயே அடங்கிவிடும். ஓ கொடிதுஏ - அக் காமநோய் ஓ கொடிது! கொடிது! (க-து): காமநோய் மிகவும் கொடுமையானதாயிருந்தாலும், நெஞ்சுரமுடை யவர்களிடம் அது வாலாட்டுவதில்லை; அவர் களின் நெஞ்சிலேயே அடங்கிவிடும். 9. அம்பும், அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறம்சுடும்; - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும். (89) (ப-ரை): அம்பும் - பாணமும். அழலும் - நெருப்பும். அவிர் கதிர் ஞாயிறும் - விரிந்த கிரணங்களையுடைய சூரியனும். வெம்பிச் சுடினும் - மிகுதியான வெப்பத்துடன் சுட்டாலும். புறம்சுடும் - உடம்பை மட்டுந்தான் சுட்டுப் பொசுக்கும். வெம்பி - கொதித்து. கவற்றி - துன்புறுத்தி. மனதைச் சுடுதலால் - உள்ளத்தையே சுடுவதால். காமம் - காமத்திற்கு. அவற்றினும் - அம்பு, தீ, ஞாயிறு இவைகளைக் கண்டு அஞ்சுவதைவிட அதிக மாக. அஞ்சப்படும் - அஞ்ச வேண்டியதாகும். (க-து): காம உணர்ச்சி உள்ளத்தைச் சுட்டெரிக்குமாதலால், அவ்வுணர்ச்சி தோன்றாமல் அடக்கிக்கொள்ள வேண்டும். 10. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள் குளிப்பினும் காமம் சுடுமே; குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும். (90) (ப-ரை): ஊர் உள் எழுந்த - ஊர் நடுவிலே பிடித்துப் பரவிய. உருகெழு - அச்சத்தைத் தரக்கூடிய. செம்தீக்கு - சிவந்த நெருப்புக்கும். நீருள் குளித்தும் - தண்ணீருள் மூழ்கியும். உயல் ஆகும் - தப்பித்துக் கொள்ள முடியும். நீருள் குளிப்பினும் - தண்ணீருக்குள்ளே முழுகினாலும். காமம் சுடும் - காமம் விடாது பற்றிச் சுடும். குன்று ஏறி ஒளிப்பினும் - மலையின்மீது ஏறி ஒளிந்துகொண்டாலும். காமம் சுடும் - காமம் விடாமல் நின்று சுடும். (க-து): நெருப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்; காமத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுவது அரிது. ஆதலால், காமவுணர்ச்சி உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும். 10. ஈகை வறியவர் துயர் கண்டபோது மனமிரங்கி உதவுதல் 1. இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணன்உடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. (91) (ப-ரை): இல்லாவிடத்தும் - பொருள் இல்லாதபோதும். இயைந்த அளவினால் - தம்மால் முடிந்த அளவில். உள்ள இடம்போல் - பொருள் உள்ள காலத்தைப் போலவே. பெரிது உவந்து - மிகவும் மகிழ்ச்சியுடன். மெல்ல - இயற்கையாக. கொடையொடு பட்ட - கொடைத் தன்மையோடு பொருந்திய. குணன்உடை மாந்தர்க்கு - உயர்ந்த குணமுடைய மக்களுக்கு. ஆண்டைக் கதவு - அவ்வுலகில் உள்ள சொர்க்க வாசலின் கதவு. அடையாஆம் - அடைக்கப்படாமல் திறந்தே இருக்கும். (க-து): எக்காலத்திலும் விடாமல், முடிந்த அளவில் கொடையளிப்போர் சுவர்க்கம் பெறுவர். குறிப்பு: கொடுக்கும் தன்மையைப் பிறவிக்குணம் என்பர். கொடையொடு பட்ட குணன் என்ற தொடர் இக்கருத் துடையதே. 2. முன்னரே சாம்நாள்; முனிதக்க மூப்புள; பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே பரவன்மின் பற்றன்மின்! பாத்துண்மின்! யாதும் கரவன்மின், கைத்துண்டாம் போழ்து. (92) (ப-ரை): முன்னரே - நம் கண்ணெதிரிலே. சாம்நாள் - நமக்குச் சாவு வரும் நாள் உண்டென்பதைப் பார்க்கின்றோம். முனிதக்க - வெறுக்கத்தக்க. மூப்பு உள - கிழப்பருவமும் வருவது உறுதி. பின்னரும் - பின்னும். பீடு அழிக்கும் - வலிமையாகிய பெருமையைக் கெடுக்கும். நோய் உள - நோய்கள் பல வருதலும் உண்டு. கொன்னே - வீணாக. பரவன்மின் - செல்வம் தேடுவதற்கு அலையாதீர்கள். பற்றன்மின் - செல்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராதீர்கள். கைத்து உண்டாம்போழ்து - செல்வம் கையிலிருக்கும்பொழுதே. பாத்து உண்மின் - பலருக்கும் பகுத்துக் கொடுத்து நீங்களும் உண்ணுங்கள். யாதும் கரவன்மின் - ஒன்றையும் ஒளிக்காதீர்கள். (க-து): கையில் பொருள் இருக்கும்போது கஞ்சத்தனம் செய்யவேண்டாம். பிறருக்கு உதவி செய்யுங்கள்; நீங்களும் சாப்பிடுங்கள். 3. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார், கொடுத்துத்தான் துய்ப்பினும், ஈண்டுங்கால் ஈண்டும்; மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்; விடுக்கும் வினை உலந்தக் கால். (93) (ப-ரை): நடுக்குற்று - வறுமையால் உடலும் உள்ளமும் நடுக்கமடைந்து. தன் சேர்ந்தார் - உதவி நாடித் தன்னையடைந் தவர்களின். துன்பம் துடையார் - துன்பத்தைப் போக்காத வருடைய. செல்வம் நில்லாது - செல்வம் நிலைத் திருக்காது (அழிந்துவிடும்). கொடுத்து - பிறருக்குக் கொடுத்து. தான் துய்ப்பினும் - தானும் அனுபவித்தாலும். ஈண்டுங்கால் - சேரும் காலம் வந்தால்தான். ஈண்டும் - செல்வம் சேரும். மிடுக்குற்று - வலிமையுடன். பற்றினும் - செல்வத்தைப் பாதுகாப்புடன் வைத்துக் கொண்டிருந்தாலும். வினை உலந்தக்கால் - நல்வினை யின் அளவு அழிந்தவுடன். விடுக்கும் - செல்வம் தன்னை விட்டுப் பிரிந்துவிடும். (க-து): நல்வினையுள்ளவர்களிடமே செல்வம் நிலைத் திருக்கும்; தீவினை யுள்ளவர்களிடமும் வறியோர்க்கு உதவாத வரிடமும் செல்வம் நிலைத்திராது. 4. இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின்;- உம்மைக் கொடாஅ தவர்என்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். (94) (ப-ரை): இம்மி அரிசி - சிறிய அரிசியின். துணையானும் - அளவா யினும். வைகலும் - நாள்தோறும். நும்மில் இயைவ - உம்மால் முடிந்த அளவு. கொடுத்து - பிறருக்குக் கொடுத்தபின். உண்மின் - நீங்களும் உண்ணுங்கள். உம்மை - முன்பு. கொடாதவர் என்பர் - பிறருக்குக் கொடுக் காமல் கஞ்சத்தனமாக வாழ்ந்தார்கள் என்பவர்களே. குண்டுநீர் - ஆழமான நீர் சூழ்ந்த. வையத்து - உலகில். அடா - இன்று சமைக்காத. அடுப்பினவர் - அடுப்பினை யுடையவர்களாயிருக்கின்றனர். கொடாஅ, அடா அ: உயிர் அளபெடை. (க-து): இன்று வறியவர்களாயிருப்பவர்கள் முன்பு அறம் புரியாத வர்கள். 5. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டி உறும். (95) (ப-ரை): ஒருவர்க்கு - ஒருவர்க்குரிய கடமையாவது. மறுமை யும் - மறுமையிலே கிடைக்கப்போகும் பலனையும். இம்மையும் - இம்மை யிலே கிடைக்கப்போகும் பலனையும். நோக்கி - எண்ணிப் பார்த்து. உறும்ஆறு - ஏற்ற வகையிலே.இயைவ - தம்மால் முடிந்தவற்றை. கொடுத்தல் - இல்லார்க்குக் கொடுப்ப தாகும். வறுமையால் - வறுமை காரணமாக. ஈதல் - பிறருக்குப் பொருள் கொடுப்பது என்பது. இசையாது எனினும் - முடியாத காரியமானாலும். இரவாமை - பிறரிடம் சென்று இரக்காம லிருத்தல். ஈதல் - கொடுப்பதைக்காட்டிலும். இரட்டி உறும் - இரண்டு பங்கு பலனைத் தரும். (க-து): பிறருக்கு உதவிசெய்ய முடியாவிட்டாலும், வறுமை காரண மாக மற்றவரிடம் பிச்சை கேட்காமலிருத்தல் பெரும் பயனைத் தரும். 6. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. (96) (ப-ரை): பலர் நச்ச வாழ்வார் - பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள். நடுஊருள் - ஊரின் நடுவிலே. வேதிகை - மேடை யினால். சுற்றுக்கோள் புக்க - சூழ்ந்து கொள்ளுதலைப் பொருந்திய. படு பனை அன்னர் - பயன்தரும் பெண் பனைமரத்தைப் போன்றவர்கள். குடி கொழுத்தக் கண்ணும் - குடும்பத்தில் கொழுத்த செல்வமிருந்த போதி லும். கொடுத்து உண்ணா - பிறருக்குக் கொடுத்து உண்ணாத. மாக்கள் - மிருகத்தனமுடையவர்கள். இடுகாட்டுள் - சுடுகாட்டின் நடுவிலே வளர்ந் திருக்கின்ற. ஏற்றைப் பனை - ஆண்பனையைப் போன்றவர்கள். (க-து): பிறருக்கு உதவிசெய்வோர் பெண்பனையை ஒப்பார்; உதவிசெய்யாதவர் ஆண்பனையை ஒப்பார். குறிப்பு: பூத்துக் காய்த்துப் பழுப்பது பெண்பனை. ஆண்பனையில் பூமட்டுமே உண்டாகும்; காய்க்காது. 7. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும், உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யு மாறு? (97) (ப-ரை): கயல்புலால் - கயல்மீனின் புலால் நாற்றத்தை. புன்னை -புன்னையின் பூக்கள். கடியும் - ஓட்டுகின்ற. பொருகடல் - அலை மோது கின்ற கடலின். தண்சேர்ப்ப -குளிர்ந்த கரையை யுடைய பாண்டியனே. பெயல் பால் - மழை பெய்யக்கூடிய பருவ காலத்திலே. மழை பெய்யாக் கண்ணும் - மழை பெய்யாத போதும். உலகம் - உலகில் உள்ளவர்கள். செயல்பால - செய்வதற்குரிய கடமைகளை. செய்யாவிடினும் - செய்யா விட்டாலும். உலகு உய்யும் ஆறு - இவ்வுலகம் பிழைக்கும் வழிதான். என்ன - எப்படி? (க-து): மழை பெய்யாவிட்டாலும், மக்கள் தங்கள் கடமையைச் செய்யாவிட்டாலும் உலகம் வாழாது. 8. ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம்வரையார் ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்; - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப! மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து (98) (ப-ரை): மலிகடல் - நீர் நிறைந்த கடலின். தண் சேர்ப்ப - குளிர்ந்த கரையையுடைய பாண்டியனே. ஏற்ற கை - பிச்சை ஏற்கும் பொருட்டு ஏந்திய கையை. மாற்றாமை - மாற்றாம லிருக்கும்படி. என்ஆனும் - எதுவாயினும். தாம்வரையார் - தமக்கென்று பிடித்து வைத்துக் கொள்ளாமல். ஆற்றாதார்க்கு - மீண்டும் பதில் உதவி செய்ய முடியாதவர்க்கு. ஈவது ஆண் கடன் ஆம் - ஈவதே ஆண்மையுள்ள கடமையாம். மாறுஈவார்க்கு - மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு. ஈதல் ஆற்றின் - ஈதலைச் செய்தால் அது. பொலிகடன் - கொழுத்த கடன். என்னும் பெயர்த்து - என்னும் பெயரையுடையதாகும். (க-து): வறியார்க்குக் கொடுப்பதே ஈகை. மீண்டும் உதவு வோர்க்குக் கொடுப்பது - கடன். 9. இறப்பச் சிறிதென்னாது இல்என்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க; - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். (99) (ப-ரை): இறப்பச் சிறிது - நம் கையிலிருக்கும் பொருள் மிகவும் குறைவானது. என்னாது -என்று நினைக்காமல். இல் என்னாது - இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமல். அறப்பயன் - அறஞ் செய்வதனால் பயன் உண்டு என்று கருதி. யார்மட்டும் செய்க - யார் உதவி தேடி வந்தாலும் உதவி செய்க. முறை புதவின் - வரிசையாக வீடுதோறும். ஐயம் புகும் - பிச்சை யெடுக்கின்ற. தவசி - தவசியின். கடிஞைபோல் - பிச்சைப் பாத்திரம் நிரம்புவதைப் போல. பைய - மெதுவாக. நிறைத்து விடும் -அச் சிறிய தருமம் ஒன்றுகூடிப் பெரிய தருமமாக நிரம்பி விடும். (க-து): செய்யும் தருமம் சிறிதாயினும் அது இறுதியில் பெரிய தருமம் செய்ததன் பலனைத் தந்துவிடும். 10. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல். (100) (ப-ரை): கடிப்புஇடு - குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற. கண் முரசம் - முன்புறத்தையுடைய முரச வாத்தியத்தின் ஓசையை. காதத்தோர் கேட்பர் - காததூரத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். இடித்து முழங்கியது - இடித்து முழங்குவதாகிய இடியோசையை. ஓர் யோசனையோர் கேட்பர் - ஒரு யோசனை தூரத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். சான்றோர் - பெரியோர் களால். கொடுத்தார் - ஒருவரைக் குறித்து இவர் கொடை யாளி. எனப்படும் சொல் - என்று புகழ்ந்து கூறப்படும் சொல்லை. அடுக்கிய -அடுக்காக இருக்கின்ற. மூவுலகும் கேட்கும் - மூன்று உலகமும் கேட்கும்.(ஏ: அசைச்சொல்.) (க-து): பெரியோர்களால் கொடையாளி என்று பாராட்டப்படும் சொல் உலக முழுதும் பரவிப் புகழை நிலை நிறுத்தும். குறிப்பு: காதம்: சுமார் பத்து மைல் தூரம். யோசனை: சுமார் நூறு மைல் தூரம். அடுக்காக மூன்று உலகம் உண்டு என்பதும், பதினான்கு உலகம் உண்டு என்பதும் புராணிகர் கொள்கை. 11. பழவினை முன்செய்த வினையின் தன்மையைப் பற்றிக் கூறுவது 1, பல்ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை; - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே, தன்செய்த கிழவனை நாடிக் கொளற்கு. (101) (ப-ரை): பல் ஆவுள் - பல பசுக்கள் கூட்டத்தில். உய்த்து விடினும் - கொண்டுபோய் விட்டாலும். குழக்கன்று - இளங்கன்று. தாய் - தாய்ப் பசுவை. நாடிக் கோடலை - தேடிக் கொள்ளுவதிலே. வல்லது ஆம் - வல்லமை யுடையதாகும். தொல்லைப் பழவினையும் - முன் செய்த பழவினையும். தன் செய்த - தன்னை உண்டாக்கிய. கிழவனை - தலைவனை. நாடிக்கொளற்கு - தேடிக்கொள்ளுவதிலே. அன்னதகைத்து - அப் பசுங்கன்று போன்ற தன்மையுள்ளதாம். (க-து): பச்சிளங் கன்று. பசுமந்தையில் புகுந்தால் தன் தாயைக் கண்டு பிடித்து விடும். அதுபோல் முன் செய்த வினை, அவ்வினை செய்தவனை எப்பிறப்பி லிருந்தாலும் தேடி அடையும். 2. உருவும், இளமையும், ஒண்பொருளும், உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்கது உடைத்து. (102) (ப-ரை): உருவும் - அழகும். இளமையும் - இளமைப் பருவமும். ஒண்பொருளும் - சிறந்த செல்வமும். உட்கும் - பிறர் தன்னைக் கண்டு அஞ்சி மதிக்கும் பெருமையும். ஒருவழி - ஓரிடத்தில். நில்லாமை கண்டும் - நிலைத்திராமை கண்டும். ஒருவழி - யாதேனும் ஒரு வழியிலே. ஒன்றேயும் - ஒரு நல்லறமும். இல்லாதான் - செய்வதில்லாதான். வாழ்க்கை - வாழ்வானது. உடம்பு இட்டு நின்று - உடம்பைச் சிலநாள் பெற்று நின்று. வீழ்ந்தக்கது உடைத்து - பிறகு விழுந்துவிடுந் தன்மையுள்ள தாகும். (க-து): நல்வினைகளைச் செய்யாமல் வாழ்கின்றவன் மனிதனாகப் பிறந்து பயன் இல்லை. 3. வளம்பட வேண்டாதார் யார்?யாரும் இல்லை; அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்; விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக் கார்எனச் செய்தாரும் இல். (103) (ப-ரை): வளம்பட வேண்டாதார் - செல்வத்திலே சிறந்து வாழ விரும்பாதார். யார் - எவர்? யாரும் இல்லை - ஒருவரும் இல்லை (ஆனால்). அவர் அவர் ஆற்றால் - அவரவர் பழவினை யினால். போகம் -அவர்களுடைய செல்வம். அளந்தன -அவர்கள் விரும்புகிறபடி இல்லாமல் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன. விளம்காய் - விளாங்காயை. திரட்டினார் இல்லை - உருண்டை யாக்கினார் யாரும் இல்லை. களம் கனியை - களாப் பழத்தை. கார் எனச் செய்தாரும் இல் - கருமையாகச் செய்தவரும் இல்லை. (இவைகளின் தோற்றம் இயற்கை). (க-து): ஒவ்வொருவர்க்கும் அவரவர்கள் பழவினையின் அளவாகவே செல்வமும் இன்பமும் அளந்து கொடுக்கப்பட் டிருக்கின்றன. ஆகையால் அளவுக்குமேல் ஆசைப்படுவதில் பயனில்லை. 4. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா; பெறற்பால் அனையவும் அன்னவாம்; - மாரி வறப்பின் தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். (104) (ப-ரை): உறற்பால -வரக்கூடிய தீமைகளை. நீக்கல் - விலக்கி விடுதல் என்பது.உறுவர்க்கும் - முனிவர்களுக்கும். ஆகாத காரியம். பெறற்பால் - பெறத்தக்க தன்மையுடைய. அனையவும் -இன்பங்களும். அன்ன ஆம் - நீக்க முடியாத அத்தன்மை யுடையனவாம். மாரி - மழை. வறப்பின் - வறண்டு விட்டால். தருவாரும் இல்லை - அதைத் தருவிப்பாரும் இல்லை. சிறப்பின் - அதிகமாகப் பெய்தால். அதனை - அம் மழையை. தணிப்பாரும் இல் - நிறுத்துகிறவர்களும் இல்லை. (க-து): நன்மையும் தீமையும் ஊழால் வருவன. 5. தினைத்துணையர் ஆகித் தம்தேசு உள்ளடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்ததெவன் உண்டாம், மேலை வினைப்பயன் அல்லால் பிற? (105) (ப-ரை): பனைத்துணையார் - பனையளவு உயர்ந்தவர்கள் கூட. தினைத் துணையர் ஆகி- தினையளவு சிறியவர்களாக மாறி. தம்தேசு- தம் பெருமையை. உள் அடக்கி - மனத்திலே அடக்கிக் கொண்டு. வைகலும் - ஒவ்வொரு நாளும். பாடு அழிந்து - பெருமை குன்றி. வாழ்வர் - துன்பத்துடன் உயிர் வாழ்வர். மேலை வினைப்பயன் அல்லால் - இதற்குக் காரணம் முன் செய்த வினைப் பயனைத் தவிர. பிற - வேறு உண்டு என்று. நினைப்ப - நினைக்கும்படி. கிடந்தது எவன் உண்டாம் - இருந்தது என்ன உண்டு? (ஒன்றுமில்லை). (க-து): பெரியோர், பெருமையின்றிச் சிறுமையுற்று வருந்து வதற்குக் காரணம் வினைப்பயனைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை. 6. பல்லான்ற கேள்விப் பயன்உணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வது அறிதிரேல், - கல்லாதார் சேதனம் என்னும்அச் சேறுஅகத் தின்மையால், கோது என்றுகொள்ளாதாம் கூற்று (106) (ப-ரை): பல்ஆன்ற - பல சிறந்த. கேள்வி- நூற் கேள்விகளின் காரணமாக. பயன் உணர்வார் - பிறவியின் பயனை உணர்ந்தவர் கள். வீயவும் - விரைவிலே இறந்து போகவும். கல்லாதார் - படிக்காதவர்கள். வாழ்வது - நீண்ட நாள் உயிர் வாழ்வதையும். அறிதிரேல் - கண்டு இதற்குக் காரணம் என்னவென்று நினைப் பீர்களாயின் (கூறுகிறேன் கேளுங்கள்:). சேதனம் - அறிவு. என்னும் அச்சேறு - என்னும் அந்தச் சத்து. கல்லாதார் அகத்து இன்மையால் - கல்லாதார் உள்ளத்திலே இல்லாமையால். கூற்று - கூற்றுவன். கோது என்று -அவர்களைச் சக்கை என்று கருதி. கொள்ளாதுஆம் - அவர்கள் உயிரைக் கொள்ளாதாம். (க-து): கற்றறிந்தோர் சாறு நிறைந்த கரும்பு; கல்லாதார் வெறும் சக்கை. ஆதலால், கூற்றுவன் கல்லாரை விட்டுக் கற்றார் உயிரைக் கவர்கின்றான். குறிப்பு:- கல்லாதாரைக் கோது என்று குறித்தமையால், கற்றாரைக் கரும்பு என்று கொள்ளப்பட்டது. 7. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடும்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பம்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப! முன்னை வினையாய் விடும். (107) (ப-ரை): அடம்பம்பூ - அடம்பம் பூவை. அன்னம் - அன்னப் பறவைகள். கிழிக்கும் - கிழிக்கின்ற. அலைகடல் - அலை வீசுகின்ற கடலையும். தண்சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரைச் சோலையையும் உடைய பாண்டியனே. இடும்பை கூர் - துன்பம் நிறைந்த. நெஞ்சத்தார் - நெஞ்சமுடையவர்கள். எல்லாரும் காண - தம்மை எல்லோரும் கண்டு பரிகசிக்கும்படி. நெடும் கடை - செல்வர்களின் பெரும் வீட்டு வாசலிலே. நின்று உழல்வது -நின்று வருந்துவதற்கு. எல்லாம் - எல்லாம் காரணம். முன்னை - முன் செய்த. வினை ஆய்விடும் - தீவினையே ஆகும். (க-து): முன்செய்த தீவினையே எல்லாத் துன்பத்துக்கும் காரணம். 8. அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும் பழியொடு பட்டவை செய்தல் - வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். (108) (ப-ரை): வளி ஓடி - காற்று வீசி. நெய்தல் நறவு உயிர்க்கும் - நெய்தல் மலர்களின் தேனைச்சிந்தும். நீள் கடல் தண் சேர்ப்ப - நீண்ட கடற்கரையின் குளிர்ந்த சோலையையுடைய பாண்டியனே. அறியாரும் அல்லர் - நன்மை தீமைகளை அறியாதவர்களும் அல்லர். அறிவது அறிந்தும் - அறிய வேண்டியதை அறிந் திருந்தும். பழியொடு பட்டவை - சிலர் பழியோடு கூடிய செயலை. செய்தல் - செய்வதற்குக் காரணம். செய்த வினையால் - முன்செய்த தீவினையால். வரும் - வந்த அறிவாகும் அது. (க-து): பழவினை, நல்லறிவையும் தீநெறியிலே செலுத்தித் தீமை செய்யத் தூண்டும் திறமையுடையது. 9. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும் வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை; வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. (109) (ப-ரை): ஈண்டு நீர் - நிறைந்த நீர் சூழ்ந்த. வையத்துள் - இவ் வுலகத்திலே. எல்லாரும் - வாழ்கின்ற எல்லோரும். எத்துணையும் - எந்த அளவும். தீய வேண்டார்மன் - தீமையடைய விரும்ப மாட்டார்கள். விழைபயன் - அவர்கள் விரும்பும் பயன். நல்லவை - நன்மைகளேயாகும். வேண்டினும் - அவர்கள் விரும்பினாலும். வேண்டா விடினும் - விரும்பாவிட்டாலும். உறற்பால -முன்வினையால் வந்து சேரக்கூடியன. தீண்டா விடுதல் -அவர்களை வந்து அடையாமல் இருத்தல். அரிது - இல்லை. (க-து): நாம் நினைப்பதன்படி எதுவும் நடப்பதில்லை. எல்லாம் முன் வினைப்படியே நடக்கும். 10. சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும்; சிறுகாலைப்பட்ட பொறியும்; அதனால் இறுகாலத்து என்னை பரிவு? (110) (ப-ரை): சிறு காலை - கருவிலமைந்த சிறு பொழுதிலேயே. பட்ட - பிடித்துக் கொண்ட. பொறியும் - பழவினையும். சிறுகா - பிறகு தான் பலன் தரும் அளவில் குறையாது. பெருகா - பெரிதாகவும் வளராது. முறை பிறழ்ந்து வாரா - முறை தவறியும் வராது. உறு காலத்து - துன்பம் வருகின்ற காலத்தில். ஊற்று ஆகா - அதைத் தாண்டுவதற்கான ஊன்றுகோலாகவும் ஆகாது. ஆம் இடத்தே - இன்பமோ துன்பமோ உண்டாகும்போது. ஆகும் - அவை உண்டாகியே தீரும். அதனால் - ஆகையால். இறுகாலத்து - தீவினையால் துன்புறுங் காலத்தில். என்னை பரிவு - ஏன் வருந்த வேண்டும்? (வருந்துவது அறியாமை). (க-து): துன்பத்திற்குக் காரணம் பழவினை. ஆதலால் துன்புறும்போது வருந்துவது அறிவீனம். 12. மெய்ம்மை பொய் பேசாமல் உண்மை பேசவேண்டும் என்பதை வலியுறுத்துவது 1. இசையா ஒருபொருள் இல்என்றல், யார்க்கும் வசை அன்று;வையத்து இயற்கை; - நசை அழுங்க நின்றுஓடிப் பொய்த்தல், நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து. (111) (ப-ரை): நிரைதொடீஇ -வரிசையாக வளையலை அணிந்த பெண்ணே. இசையா ஒரு பொருள் - தன்னால் கொடுக்க முடியாத ஒரு பொருளை. இல் என்றல் - இல்லையென்று சொல்லுதல். வசை அன்று -பழிக்கத் தக்கது அன்று. வையத்து இயற்கை - உலகத்தாரின் இயல்பாகும். நசை அழுங்க - ஆசை கெடும்படி. நின்று - கொடுப்போர் போலப் பேசி நின்று. ஓடி - நெடுங்காலம் கழிந்தபின். பொய்த்தல் - இல்லையென்று மறுத்தல். செய்ந்நன்றி - செய்த நன்றியை. கொன்றாரின் - மறந்தவர் செய்த குற்றத்தைவிட. குற்றம் உடைத்து - பெரிய குற்றமுள்ள செயலாகும். (க-து): பொருள் இல்லாதபோது, கேட்டவர்க்கு இல்லை யென்று சொல்லுதல் குற்றம் அன்று. கொடுக்கிறேன் என்று சொல்லி, பலகால் அலையவைத்தபின் இல்லையென்று கூறுவது நன்றிகெட்ட செயலாகும். 2. தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை எக்காலும் குன்றல் இலர்ஆவர்;-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்கும் ஆம் தேவரே தின்னினும் வேம்பு. (112) (ப-ரை): தக்காரும் - அறிவு ஒழுக்கங்களிலே சிறந்தவரும். தக்கவர் அல்லாரும் - அவைகள் அற்ற சிறப்பில்லாதவர்களும். தம் நீர்மை - தமது தன்மைகளிலே. எக்காலும் - எப்பொழுதும். குன்றல் இலர் ஆவர் - குறையாமல் இருப்பார்கள். அக்காரம் - வெல்லக் கட்டி. யாவரே தின்னினும் - யார் தின்றாலும். கையாது ஆம் - கசக்காமலிருக்குமாம். வேம்பு - வேம்பை. தேவரே தின்னினும் - உயர்ந்த தேவர்கள் தின்றாலும். கைக்கும் ஆம் - கசக்குமாம். (க-து): உயர்ந்தவரும் தங்கள் குணத்தில் மாறுபட மாட்டார் கள்; இழிந்தவரும் தங்கள் குணத்தில் மாறுபட மாட்டார்கள். குறிப்பு:- சிறந்தவர்க்கு அக்காரமும், இழிந்தவர்க்கு வேம்பும் உவமைகள். 3. காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலர்ஆவர்;- ஏலா இடர்ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர். (113) (ப-ரை): ஈர்ங்குன்ற நாட -குளிர்ந்த குன்றுகள் அமைந்த நாட்டின் தலைவனாகிய பாண்டியனே. ஒருவர்கால் ஆடு போழ்தில் - ஒருவர் ஓடியாடித் திரிந்து செல்வமுடையவராய் வாழுங் காலத்தில். கழி கிளைஞர் - அவருடைய ஏராளமான சுற்றத்தார். வானத்து மேல் - ஆகாயத்தில். ஆடு மீனின் - வாழுகின்ற நட்சத்திரங்களைக் காட்டினும். பலர் ஆவர் - மிகுதியாக இருப்பார்கள். ஏலா - தாங்கமுடியாத. இடர் - வறுமைத் துன்பத்தை. உற்றக் கால் - அடைந்தபோது. தொடர்பு உடையேம் - அவருடன் உறவுடையேம். என்பார் - என்று சொல்லிக் கொள்பவர். சிலர் - ஒரு சிலர்தான் இருப்பர். (க-து): செல்வமுள்ள காலத்தில் பலர் உறவினர் என்று சொல்லிக்கொண்டு பிடுங்கித் தின்பர்; வறுமையடைந்தபோது ஒருசிலரே உறவினராக நின்று உதவுவர். 4. வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் எய்தும்; நடுவணது எய்தாதான் எய்தும், உலைப்பெய்து அடுவது போலும் துயர். (114) (ப-ரை): வடுஇலா வையத்து - குற்றமற்ற இவ்வுலகத்திலே. மன்னிய - நிலைத்திருக்கின்ற. மூன்றின் - அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள். நடுவண் அது எய்த - நடுவில் உள்ள பொருளைப் பெற. இருதலையும் எய்தும் - அதன் இருபுறத்திலும் உள்ள அறமும் இன்பமும் உண்டாம். நடுவண் அது - நடுவில் உள்ள அப் பொருளை. எய்தாதான் - அடையாதவன். உலைப் பெய்து - உலைக்களத்தில் போட்டு. அடுவன போலும் - சுடுவது போன்ற. துயர் எய்தும் - துன்பத்தை அடைவான். (க-து): செல்வத்தைப் பெற்றவன் அறத்தையும் இன்பத்தை யும் எய்துவான். குறிப்பு: மக்கள் இவ்வுலகில் அடையவேண்டிய பயன் மூன்று அறம், பொருள், இன்பம். இம்மூன்றில் முதன்மை வகிப்பது பொருள். 5. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்; கல்லாரே ஆயினும் செல்வர்வாய்ச் சொல்செல்லும்; புல்ஈரப் போழ்தின் உழவேபோல்; மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (115) (ப-ரை): நல்ஆவின் கன்றுஆயின் - நல்லசாதிப் பசுவின் கன்றாக இருந்தால். நாகும் - இளங் கன்றும். விலைபெறும் - நல்ல விலைபெறும் (அதுபோல). கல்லாரே ஆயினும் - படிக்காத வராயிருந்தாலும். செல்வர் வாய் - செல்வமுடையவர் வாயி லிருந்து வருகின்ற. சொல் செல்லும் - சொல் எல்லாரிடத்திலும் மதிப்படையும். புல் ஈரப் போழ்தில் - குறைந்த ஈரமுள்ள காலத்தில். உழவேபோல் - உழுவதைப்போல. நல்கூர்ந்தார் சொல் - வறியவர்கள் கூறும் வார்த்தை. மீதுஆடி - கேட்போர் காதின்மேல் மட்டும் பட்டு. செல்லாஆம் - அவர் உள்ளத்தில் புகமாட்டாவாம். (க-து): செல்வர்கள் சொல்லுக்குச் செல்வாக்குண்டு; ஏழைகள் பேச்சு அம்பலம் ஏறாது. 6. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார்; - தடங்கண்ணாய், உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்துஅடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். (116) (ப-ரை): தடம் கண்ணாய் - விசாலமான கண்களை யுடையே பெண்ணே. என்றும் - எப்பொழுதும். அடங்காதார் - நல் வழியிலே அடங்கி நடக்கும் குணமற்றவர். இடம்பட - ஏராள மாக. மெய்ஞானம் கற்பினும் - உண்மை அறிவை உணர்த்தும் நூல்களைப் படித்தாலும். என்றும் அடங்கார் -ஒரு பொழுதும் அடங்கி நடக்கமாட்டார்கள். பேய்ச்சுரையின் காய் - பேய்ச் சுரைக்காயை. உப்பொடு - உப்புடன். நெய் பால் தயிர்க் காயம் பெய்து - நெய், தயிர், பால், பெருங்காயம் முதலியவற்றைப் போட்டு. அடினும் - சமைத்தாலும். கைப்பு அறா - அதன் கசப்பு நீங்காது. (க-து): பேய்ச்சுரைக்காயை எவ்வளவு பண்பாடுகளுடன் சேர்த்துச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, அடங்காதார் எவ்வளவு உண்மை நூல்களைக் கற்றாலும் அடங்கி நடவார். 7. தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன்இகழ்க; என்னை அவரொடு பட்டது? - புன்னை விறல்பூங் கமர்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப! உறற்பால யார்க்கும் உறும். (117) (ப-ரை): புன்னை - புன்னை மரத்தின். விறல் - சிறந்த. பூகமழ் கானல் - பூமணம் வீசுகின்ற சோலையையும். வீங்குநீர்ச் சேர்ப்ப - கடற்கரையையும் உடைய பாண்டியனோடு. தம்மை இகழ் வாரை - காரணமில்லாமல் தம்மை இகழ்ந்து பேசுகின்றவர் களை. தாம் அவரின் முன் - தாமும் அவரோடு இகழ்ந்து பேசும்போதே அவர் எதிரிலேயே. இகழ்ந்து - இகழ்ந்து பேசி அவர் தொடர்பைக் கைவிடுக. அவரொடு பட்டது - அவருடன் ஏற்பட்ட தொடர்பால். என்னை - என்ன பயன்? (ஒன்றுமில்லை). உறல்பால - வரக்கூடிய நன்மை, தீமைகள். யார்க்கும் உறும் - யாருக்கும் தாமாகவே வந்து சேரும். (அவை பிறரால் தருவனவோ தருவிப்பனவோ அல்ல). (க-து): காரணமின்றித் தம்முடன் வம்புக்கு வருகின்றவர் களை அவர் எதிரிலேயே அவரை வெறுத்து ஒதுக்கிட வேண்டும். புறம் பேசுவதைவிட இது சிறந்த செயல். 8. ஆவேறு உருவின; ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு (118) (ப-ரை): ஈங்கு - இவ்வுலகிலே. ஆ வேறு உருவின - பசுக்கள் வெவ்வேறு தோற்றங்களை யுடையனவாயிருக்கின்றன. ஆயினும் - ஆனாலும். ஆ பயந்த பால் - பசுக்கள் தந்த பால். வேறு உருவின அல்லஆம் - வெவ்வேறு உருவமுடையன அல்ல (ஒரே உருவமுடையது). பால்போல் - அந்தப் பாலைப்போல. அறநெறி - அறத்தின் வழி. ஒரு தன்மைத்து ஆகும் - ஒரே தன்மையுடைய தாகும். ஆ போல் - பசுவைப்போல. உருவுபல - உருவத்தில் மட்டும் பலவாக இருக்கும் என்று. கொளல் - கொள்ளுக. (க-து): அறத்துறைகள் பல; அவற்றின் நெறியும் பலனும் ஒன்றே. 9. யாஅர் உலகத்துஓர் சொல்இல்லார்? தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர் கடைபோகச் செல்வம் உய்த்தார்? (119) (ப-ரை): யார் உலகத்து - யார்தான் இவ்வுலகத்திலே. ஓர் சொல் இல்லார் - ஒரு பழிச்சொல் பெறாமல் வாழ்ந்தவர்? தேரும்கால் - ஆராயும்போது. யார் - யார்தான். உபாயத்தின் - துணையால். வாழாதார் - இவ்வுலகில் வாழாதவர்? யார் - யார்தான். இடையாக - வாழ்வின் நடுவில். இன்னாதது - துன்பத்தை. எய்தாதார் - அடையாதவர்? யார் - யார்தான். கடை போக - இறுதி வரையிலும். செல்வம் உய்த்தார் - செல்வத்தை அனுபவித்தவர்? (க-து): இவ்வுலகத்தில் நிலையான நல்வாழ்வைப் பெற்றவர் ஒருவரும் இல்லை. குறிப்பு: உபாயம் - துணை; தந்திரம், சாம, பேத, தான, தண்டங்களை உபாயம் என்பர்; உழவு, பசுக்காதல், வாணிகம், உத்தியோகம் முதலியவற்றையும் உபாயம் என்பர். யாஅர், உயிரளபெடை. 10. தாம்செய் வினைஅல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயம்இன்றே கூற்றம்கொண்டு ஓடும் பொழுது (120) (ப-ரை): தாம்செய் வினை அல்லால் - தாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தவிர. தம்மொடு செல்வது -இறந்தபின் தம்முடன் வருவது. மற்றும் யாங்கணும் -வேறு எல்லா வகையிலும். தேரின் - ஆராய்ந்தாலும். பிறிது இல்லை - வேறு ஒன்றும் இல்லை. யாங்குத் தாம் - எவ்வாறுதாம். போற்றி - பாதுகாத்து. புனைந்த - ஆடை அணிகளால் அலங்கரித்த. உடம்பும் - உடலும். கூற்றம் கொண்டு - எமன் உயிரைக் கவர்ந்துகொண்டு. ஓடும் பொழுது - ஓடும்போது. பயம் இன்று - பயன் இல்லை. (க-து): உயிர் போகும்போது, நாம் செய்த வினைப் பயன் தான் நம்முடன் தொடரும்; வேறு எந்தப் பொருளும் தொடராது. 13. தீவினை அச்சம் தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் 1. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு; - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட புல்லறி வாளர் வயிறு. (121) (ப-ரை): சுடுகாடு - சுடுகாடானது. துக்கத்துள் தூங்கி - இல்வாழ்வாகிய துக்கத்திலே கிடந்து. துறவின் கண் சேர்கலா - நல்லறமாகிய துறவறத்தை யடையாத. மக்கள் பிணத்த - மக்களின் பிணங்களுக்கு இருப்பிடமாகும். புலம் கெட்ட - அறிவு கெட்ட. புல் அறிவாளர் - அற்ப அறிவுடையவர்களின். வயிறு - வயிறானது. தொக்க - கூட்டமான. விலங்கிற்கும் - மிருகங் களுக்கும். புள்ளிற்கும் - பறவைகளுக்கும். காடு - சுடுகாடாகும். (ஏ: அசை.) (க-து): புலால் உண்பது தீச்செயல். புலால் உண்போர் அறிவற்றவர்கள். 2. இரும்பார்க்கும் காலராய், ஏதிலார்க்கு ஆளாய்க் கரும்பார் கழனியுள் சேர்வர்; - சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார் (122) (ப-ரை): சுரும்பு ஆர்க்கும் - வண்டுகள் ஆரவாரஞ் செய்து கொண்டிருக்கும். காட்டுள் ஆய் -காட்டிலே பொருந்தி. வாழும் - உயிர் வாழ்கின்ற. சிவலும் - கௌதாரியையும். குறும்பூழும் - காடையையும். கூட்டுள் ஆய் - கூட்டிலே பொருந்தியிருக்கும்படி. கொண்டு வைப்பார் - பிடித்துக் கொண்டுபோய் வைப்பவர்கள். (மறுபிறவியில்) இரும்பு ஆர்க்கும் - விலங்காகிய இரும்பு அமைந்த. காலர் ஆய் - கால்களையுடையவர்களாகி. ஏதிலார்க்கு - பகைவர்களுக்கு. ஆள் ஆய் - அடிமையாகி. கரும்புஆர் - கரும்புப் பயிர் நிறைந்த. கழனியுள் சேர்வர் - வயலினுள் இறங்கி வேலை செய்வார்கள். (க-து): பறவைகளைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைப்பது பாவம். அப்படிச் செய்பவர் பின்னர் தாமும் அடிமை யாவார். குறிப்பு: அடிமைகளைக் கரும்புத் தோட்டத்தில் கொண்டு போய் விட்டு வேலை வாங்குவது பண்டைக் காலத்தில் உள்ள வழக்கம். 3. அக்கேபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்து அடைந்தக் கால் . (123) (ப-ரை): அக்கால் - முன்பிறப்பிலே. அலவனை - நண்டை. காதலித்து - விரும்பி. கால் முரித்துத் தின்ற -அதன் காலை முரித்துத் தின்றதனால் பிறந்த. பழவினை - முன் செய்த தீவினை. வந்து அடைந்தக்கால் - இப்பிறப்பிலே தம்மைத் தேடி வந்த போது. அக்கே போல் - சங்கு மணியைப்போல வெண்மையாக. அங்கை ஒழிய - அகங்கை மட்டும் நிற்க. விரல் அழுகி -விரல்கள் எல்லாம் அழுகி. துக்கம் - துன்பத்தைத் தரும். தொழுநோய் எழுப - குட்ட நோய் தோன்றி வருந்துவர். (ஏ: அசை.) (க-து): முன்பிறப்பில் உயிர்களைச் சித்திரவதை செய்து தின்றவர், இப்பிறப்பிலே குட்டநோயால் வருந்துவர். 4. நெருப்புஅழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட்டு எவ்வநோய் ஆக்கும் - பரப்பக் கொடுவினையர் ஆகுவர் கோடாரும் கோடிக் கடுவினையர் ஆகியார்ச் சார்ந்து. (124) (ப-ரை): நெருப்பு அழல் சேர்ந்தக்கால் - நெருப்பாகிய தீயுடன் சேர்ந்தபோது. நெய்போல்வதூஉம் - புண்களை ஆற்றும் நெய்போன்ற பொருளும். எரிப்பச் சுட்டு - உடல் வேகும்படி சுட்டு. எவ்வம் நோய் - துன்பந் தரும் நோயை. ஆக்கும் - உண்டாக்கும். கோடாரும் - நடுநிலை தவறாதவர்களும். கடுவினையர் ஆகியார் - கொடிய பாவச் செயல் உடையாரை. சார்ந்து - சேர்ந்து. கோடி -நடுநிலைமை தவறி. பரப்ப - மிகவும். கொடுவினையர் ஆகுவர் - கொடுமையான காரியங்களைச் செய்பவராக ஆகிவிடுவார்கள். (க-து): பாவம் செய்யும் கொடியவருடன் சேரும் நல்லவர் களும், ஒழுக்கங் கெட்டுத் தீவினைகளைச் செய்வார்கள். குறிப்பு: கோடாருக்கு நெய்யும் கடுவினையர்க்கு நெருப்பும் உவமைகள். கோடுதல் - நடுநிலை தவறுதல். 5. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்;- வரிசையால் வான்ஊர் மதியம்போல் வைகலு ம் தேயுமே தானே சிறியார் தொடர்பு. (125) (ப-ரை): பெரியவர் - பெரியவர்களுடன் கொள்ளும். கேண்மை-நட்பு. நாளும் - ஒவ்வொருநாளும். பிறை போல - வளர்ந்து வரும் பிறைச் சந்திரனைப்போல. வரிசை வரிசையா - படிப்படியாக. நந்தும் -சிறந்து வளரும். சிறியார் தொடர்பு - சிறியவர்களுடன் கொண்ட நட்பு. வான் ஊர் மதியம் போல் - வானத்திலே தவழும் பூரணச் சந்திரனைப் போல. வைகலும் - தினந்தோறும். வரிசையால் - படிப்படியாக. தானே தேயும் - தானே தேய்ந்து குறைந்து போகும்.(ஏ: அசை). (க-து): நல்லோருடன் நட்புக் கொள்ள வேண்டும்; கெட்ட வருடன் நட்புக் கொள்ளக்கூடாது. குறிப்பு: பெரியோருக்குப் பிறைச் சந்திரனும், சிறியோருக்கு முழுமதியும் உவமானம். 6. சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன், சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின், சார்ந்தோய் கேள்; சாந்து அகத்து உண்டுஎன்று செப்புத் திறந்துஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து. (126) (ப-ரை): சான்றோர் - அறிவு ஒழுக்கத்தால் நிறைந்தவர். என மதித்து - என்று எண்ணி. சார்ந்தாய் - ஒருவரை நட்புக் கொண்டாய். சார்ந்தாய்க்கு - இப்படி எண்ணி நட்புக் கொண்ட உனக்கு. சான்றாண்மை - அறிவும் ஒழுக்கமும் ஆகிய நிறைந்த குணங்கள். சார்ந்தார்கண் - நீ நட்பாகக் கொண்டவர் களிடத்தில். இல்ஆயின் - இல்லாவிட்டால் ஏமாறுவாய். சார்ந்தோய் - அறிவொழுக்கமற்றவரை நட்புக்கொண்டவனே. கேள் - இதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேள். சாந்து - சந்தனம். அகத்து உண்டு என்று - உள்ளேயிருக்கிறது என்று எண்ணி. செப்புத் திறந்த ஒருவன் - வெள்ளிச் சிமிழைத் திறந்த ஒருவன். பாம்பு - சாந்தைக் காணாமல் பாம்பு ஒன்றை. அகத்துக் கண்டது- அதனுள்ளே கண்டபோது என்ன நிலையுண்டாகுமோ அந்நிலையை. உடைத்து - உடையது உன்னிலைமை. (க-து): ஆராய்ந்து தெளிந்த பிறகே ஆருடனும் நட்புக் கொள்ள வேண்டும். நட்புக் கொண்டபின் ஆராய்வதால் ஏமாற்றமுண்டாகும். குறிப்பு: நட்பினரின் கெட்ட குணங்களுக்குப் பாம்பு உவமை; நல்ல குணங்களுக்குச் சந்தனம் உவமை. சந்தனம் இருக்கவேண்டிய இடத்தில் பாம்பிருந்தால் திடுக்கிடுவது இயற்கை. 7. யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர்? - சாரல் கனமணி நின்றுஇமைக்கும் நாடகேள்! மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு. (127) (ப-ரை): சாரல் - மலைச்சாரல்களிலே. கனம்மணி - சிறந்த இரத்தினங்கள். நின்று இமைக்கும் - கிடந்து மின்னுகின்ற. நாடகேள் - நாட்டையுடைய பாண்டியனே கேள். ஒருவர் தம் - மற்றொருவருடைய. உள்ளத்தை - மனத்தில் உள்ள கருத்துக்கள் முழுவதையும். தேரும் - தெரிந்து கொள்ளுகின்ற. துணைமை உடையவர் - வல்லமை உடையவர். யார் ஒருவர் - யார் ஒருவர்? (ஒருவரும் இல்லை). மக்கள் -மக்களுடைய. மனம் வேறு - எண்ணம் வேறு. செய்கையும் வேறு - அவர்கள் செய்கையும் வேறு. (க-து): பெரும்பாலான மக்கள் எண்ணமும் செய்கையும் வேறுபட்டிருப்பர். அத்தகையாரிடம் முன் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். 8. உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப் புனல்செதும்பு நின்றுஅலைக்கும் பூங்குன்ற நாட மனத்துக்கண் மாசாய்விடும். (128) (ப-ரை): தெள்ளி - தெளிந்து விழுகின்ற. புனல் -அருவி நீர். செதும்பு - சேற்றை. நின்று அலைக்கும் - நிலையாக அலசுகின்ற. பூம் குன்ற நாட - பூமணம் கமழும் குன்றுகளையுடைய நாட்டு மன்னவனே. உள்ளத்தால் - மனப்பூர்வ மாக. நள்ளாது - நட்புக் கொள்ளாமல். உறுதித்தொழிலராய் - தனக்கு நன்மை நாடும் செய்கையுடையவராய். கள்ளத்தால் - வஞ்சகத்துடன். நட்டார் - நட்புக் கொண்டவர்களின். கழிகேண்மை - மிகுந்த நட்பைப் பற்றி. மனத்துக்கண் - உள்ளத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால். மாசு ஆய்விடும் - இறுதியில் அது குற்றமாகவே முடிந்துவிடும் என்பது விளங்கும். (க-து): தந்நலங் கருதும் வஞ்சகர் நட்பால் நன்மையில்லை: தீமைதான் உண்டு. 9. ஓக்கிய ஒள்வாள், தன் ஒன்னார்கைப் பட்டக்கால், ஊக்கம் அழிப்பதூஉம் மெய்ஆகும்;- ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு. (129) (ப-ரை): ஓக்கிய - பகைவனைக் கொல்வதற்கு ஓங்கிய. ஒள் வாள் - ஒளி பொருந்திய கூர்மையான வாள். தன் ஒன்னார் கை - தன் பகைவர் கையிலே. பட்டக்கால் - அகப்பட்டுக் கொண்டால். ஊக்கம் அழிப்பதும் - அது தனக்குத் தோல்வியைத் தருவதோடு தன் உற்சாகத்தைக் கெடுப்பதும். மெய் ஆகும் - உண்மையாகும். (இதுபோல) ஆக்கம் - கெட்டவர்களின் சேர்க்கை. இருமையும் சென்று - இம்மை, மறுமை இரண்டு காலத்திலும் வந்து. சுடுதலால் - தீமை தரும் ஆதலால். கல்லார் கண் தீர்வு - கல்லாதவர்களிடம் கொண்ட நட்பை அறுத்துக் கொள்வது. நல்ல கருமம் - நல்ல செயலாகும். (க-து): கல்லாதார் நட்பு துன்பந்தரும். ஆதலால் அதைக் கைவிடுதல் நன்று. குறிப்பு: கல்லாதார் சேர்க்கையைத் தீயாக உருவகம் செய்யப்பட்டது. பகைவர் கையிலே மாட்டிய வாள், கெட்டவர் களின் சேர்க்கைக்கு உவமானம். 10. மனைப்பாசம் கைவிடாய், மக்கட்கு என்று ஏங்கி எனைத்துஊழி வாழ்தியோ நெஞ்சே;-எனைத்தும் சிறுவரையே ஆயினும்; செய்தநன்று அல்லால், உறுபயனோ இல்லை உயிர்க்கு. (130) (ப-ரை): மனைப் பாசம் - எவ்வளவு வயதேறினாலும் மனைவியிடம் கொண்ட ஆசையை. கைவிடாய் -கைவிட மாட்டாய். மக்கட்கு என்று - பெற்ற பிள்ளை களுக்குச் செல்வம் சேர்ப்பதற்காக என்று. ஏங்கி - மனம் இரங்கி. எனைத்து ஊழி - எவ்வளவு காலம். வாழ்தியோ நெஞ்சே - இப்படி வாழ்வாயோ மனமே. எனைத்தும் - எவ்வளவும். சிறுவரையே ஆயினும் - சிறிய அளவுள்ளதாக இருந்தாலும். செய்த நன்று அல்லால் - நீ செய்த நல்லறத்தைத் தவிர. உயிர்க்கு - நமது உயிருக்கு. உறுபயன் - வேறு செய்கையால் கிடைக்கும் பயன். இல்லை - ஒன்றும் இல்லை. (க-து): நாம் செய்யும் நன்மையின் பயன் மட்டுந்தான் நம் உயிர்க்குத் துணை செய்யும். குறிப்பு: சமணர்கள் துறவறத்தையே உயர்ந்தது என்று கருதுகின்றவர்கள். ஆயினும், இல்லறத்தில் இருந்து கொண்டும் நன்மை செய்ய முடியும் என்ற உண்மையையும் அவர்கள் மறுக்க வில்லை. (2) பொருட்பால் அரசியல் 14. கல்வி கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறுவது பொருட்பால்: பொருளைப் பற்றிக் கூறும் பகுதி. பொருள் என்பது கையில் எடுத்து வழங்கும் செல்வம் மட்டும் அன்று. பொருளுக்குக் காரணமாகிய கல்வி, அறிவு, நற்செயல்,நட்பு,புகழ் முதலியவையும் பொருளாகும். அரசியல்: அரசியலுக்கு வேண்டியவை இன்னின்னவை என்பனவற்றை விளக்கிச் சொல்வது அரசியலாகும். (1) குஞ்சி அழகும், கொடும்தானைக் கோட்டு அழகும் மஞ்சள் அழகும் அழகுஅல்ல; - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு (131) (ப-ரை): குஞ்சி அழகும் - தலைமயிரால் வரும் அழகும். கொடும் தானைக் கோட்டு அழகும் - வளையும் முந்தானையில் உள்ள கரையினால் வரும் அழகும். மஞ்சள் அழகும் -மஞ்சள் பூசிக் கொள்வதனால் ஏற்படும் அழகும். அழகு அல்ல - உண்மை யான அழகல்ல. நெஞ்சத்து - உள்ளத்திலே. நல்லம் யாம் - நல்லனவற்றைச் செய்து வாழ்கின்றோம் நாம். என்னும் நடுவு நிலைமையால் - என்னும் நடுநிலைமையான அறிவை உண்டாக்கு வதற்குக் காரணமாயிருப்பதனால். கல்வி அழகே அழகு - கல்வியினால் உண்டாகும் அழகே சிறந்த அழகாகும். (க-து): கல்வி கற்பதனால் வரும் அழகே நிலைத்த அழகாகும். குறிப்பு:- குஞ்சி - ஆண்மயிர். மஞ்சள் பூசிக்கொள்வது பெண்கள் வழக்கம். உடையில் அழகான கரையிருக்க வேண்டும் என்று விரும்புவது ஆண் - பெண் இருவர்க்கும் பொது. இச் செய்யுளால் ஆண் - பெண் இருவர்க்கும் கல்வி அவசியமானது என்பதைக் காணலாம். 2. இம்மை பயக்கும்ஆல், ஈயக் குறைவுஇன்றால், தம்மை விளக்கும்ஆல், தாம்உளராக் கேடுஇன்றால், எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. (132) (ப-ரை): இம்மை பயக்கும் - இப்போது எல்லா நன்மை களையும் கொடுக்கும். ஈயக் குறைவு இன்று - எவ்வளவுதான் பிறருக்குக் கற்றுக் கொடுத்தாலும் குறையாது. தம்மைவிளக்கும் - தம்மைப் பலரும் அறியும் படியான பெருமையை உண்டாக்கும். தாம் உளர் ஆ-தாம் உயிரோடு வாழும் வரையிலும். கேடு இன்று - அழிவதில்லை. கல்வி போல் - கல்வியைப்போல். மம்மர் -அறியாமை என்னும் நோயை. அறுக்கும் மருந்து - தீர்க்கும் மருந்து ஒன்றை. எம்மை உலகத்தும் - வேறு எந்த உலகத்திலும். யாம் காணேம் - இருப்பதாக நாம் அறிய மாட்டோம். (ஆல்: அசைகள்.) (க-து): அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து கல்வியைத் தவிர ஒன்றுமேயில்லை. 3. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோர் ஆயினும் கற்றுஅறிந் தோரைத் தலை நிலத்து வைக்கப் படும். (133) (ப-ரை): களர் நிலத்துப் பிறந்த உப்பினை - களர் நிலத்திலே விளைந்த உப்பை. சான்றோர் - அறிவுள்ளவர்கள். விளைநிலத்து நெல்லின் - நல்ல நஞ்சையிலே விளைந்த நெல்லைவிட. விழுமிது ஆக் கொள்வர் - சிறந்ததாகக் கொள்ளுவார்கள். (அதுபோல) கடைநிலத்தோர் ஆயினும் - கீழ்ப்பட்ட குடியிலே பிறந்தவர்கள் ஆனாலும். கற்று அறிந்தோரை - பல நூல்களையும் கற்று உண்மைப் பொருள்களை உணர்ந்தவர்களை. தலை நிலத்து வைக்கப்படும் - உயர்ந்த இடத்திலே வைத்துக் கொண்டாடத் தகும். (க-து): கற்றவர்கள் கீழ்க்குடியிலே பிறந்தவராயினும் மேலிடத்திலே வைத்துக் கொண்டாடப்படுவார்கள். குறிப்பு: கீழ்ப்பட்ட குடிக்குக் களர்நிலம் உவமானம். கற்றறிந்தோர்க்கு உப்பு உவமானம். பிறப்பிலே உள்ள உயர்வு - தாழ்வு கல்வியறிவால் மறைந்தொழியும். 4. வைப்புழிக் கோள்படா, வாய்த்துஈயின் கேடுஇல்லை, மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார். எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற. (134) (ப-ரை): வைப்பு உழி - வைத்த இடத்திலிருந்து. கோள்படா -யாராலும் கவர்ந்துகொள்ள முடியாது. வாய்த்து ஈயின் - தானே சம்மதித்துக் கொடுத் தாலும். கேடுஇல்லை -அழிவதோ குறைந்து விடுவதோ இல்லை. மிக்க சிறப்பின் - மிகுந்த வலிமையுள்ள. அரசர் செறின் - அரசர் சினங் கொண்டாலும். வவ்வார் - கவர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடுவார். எச்சம் என - ஆதலால் சேர்த்து வைக்கும் பொருள் என்று. ஒருவன் மக்கட்குச் செய்வன - ஒரு தந்தை தன் மக்களுக்குச் செய்யும் கடமை களிலே. விச்சை - கல்வியைக் கற்றுக் கொடுப்பதே சிறந்த கடமையாகும். பிற அல்ல - வேறு எவையும் இதற்கு இணையல்ல. (க-து): ஒரு தந்தை தன் மக்களுக்குச் சேர்த்து வைக்கும் செல்வம் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதேயாகும். குறிப்பு: அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிக் காரர்களின் செல்வத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் வழக்கம் பண்டைக் காலத்திலும் இருந்தது. 5. கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல;- தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர்ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து. (135) (ப-ரை): கல்வி கரை இல - கல்விக்கு எல்லை இல்லை. கற்பவர் நாள் சில - கற்பவர்களுக்குக் கற்கக் கிடைக்கும் நாட்களோ கொஞ்சம்தான். மெல்ல நினைக்கின் - மெதுவாக ஆராய்ந்து பார்த்தால். பிணி பல - நோயினால் கற்க முடியாமல் கழியும் நாட்களும் பல.(ஆதலால்) நீர் ஒழிய -தண்ணீரைத் தனியாக ஒதுக்கிவிட்டு. பால் உண் - பாலை மட்டும் பிரித்து உண்ணுகின்ற. குருகின் - அன்னப் பறவையைப் போல. தெரிந்து - நல்ல நூல்கள் இவை, கெட்ட நூல்கள் இவை என்று கண்டறிந்து. தெள்ளிதின் ஆராய்ந்து - தெளிவாக ஆராய்ந்து. அமைவு உடைய - அறியாமையைப் போக்கும் தகுதியுள்ள நூல்களையே. கற்பவே - அறிவுள்ளவர்கள் கற்பார்கள். (க-து): பயன் அற்ற நூல்களை விலக்கிப் பயன் அளிக்கும் நூல்களைப் படிக்கவேண்டும். குறிப்பு: நல்ல நூல்களை ஆராய்ந்து கற்பதற்கு உவமானம் அன்னப் பறவையின் செய்கை. 6. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார்;-காணாய்! அவன்துணையா ஆறுபோய் அற்றே நூல் கற்ற மகன்துணையா நல்ல கொளல். (136) (ப-ரை): தோணி இயக்குவான் - தோணியை ஓட்டுகிறவன். தொல்லை வருணத்து - பழமையான நான்கு சாதிகளிலே. காணின் - எந்த வருணத்தைச் சேர்ந்தவன் என்று ஆராய்ந்தால். கடைப் பட்டான் - நான்கு வருணத்திலும் அடங்காத கடைப் பட்ட சாதியைச் சேர்ந்தவன். என்றுஇகழார் - என்று நினைத்து அத் தோணியில் ஏறாமல் விட்டுவிட மாட்டார். காணாய் - இவ்வுண்மையை எண்ணிப்பார். அவன் துணையா - அவனைத் துணையாகக் கொண்டு. ஆறு போய்அற்றே - ஆற்று வெள்ளத் தைக் கடப்பதுபோல. நூல் கற்ற - நல்ல நூல்களைக் கற்ற. மகன் துணையா - மகன் எக்குடியில் பிறந்தவனாயினும் அவன் பிறப்பைப் பொருட் படுத்தாமல் அவனை ஆசிரியனாகக் கொண்டு. நல்ல கொளல் - நல்ல நூல்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். (க-து): கற்றவர் எக்குலத்தவராயினும் அவரிடம் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கீழ்க்குடியில் பிறந்தவரே பண்டைக் காலத்தில் தோணிகள் ஓட்டிவந்தனர். 7. தவல்அரும் தொல்கேள்வித் தன்மை உடையார், இகல்இலர், எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின், இனிதுஆயின் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி. (137) (ப-ரை): தவல் அரும் - குற்றம் இல்லாத. தொல்கேள்வி - பழமையான நூற்கேள்விகளை அறிந்த. தன்மை உடையார் - நல்ல தன்மை உடையவர்கள். இகல் இலர் - பகைமைத் தன்மை இல்லாதவர்கள். எஃகு உடையார் - கூர்மையான அறிவுள்ள வர்கள். தம்முள் குழீஇ - ஆகியவர்கள் தம் கூட்டத்துள்ளேயே கூடி. நகலின் - அளவளாவி மகிழ்வதைக் காட்டிலும். அகல் வானத்து - பெரிய வானத்திலே. உம்பர் உறை - தேவர்கள் வாழ்கின்ற. வார் பதி -பெரிய நகரமாகிய சுவர்க்கம். இனிது ஆயின் - இன்பந் தரக்கூடியதாக இருக்குமானால். காண்பாம் -பிறகு அதைப் பற்றி எண்ணிப் பார்ப்போம். (க-து): சுவர்க்க இன்பத்தைவிட இவ்வுலகில் நல்ல அறிஞர்களுடன் சேர்ந்து மகிழ்வதே சிறந்த இன்பமாகும். 8. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றுஅறிந்தார் கேண்மை நுனியில் கரும்புதின்று அற்றே; -நுனிநீக்கித் தூரில் தின்றுஅன்ன தகைத்துஅரோ பண்புஇலா ஈரம் இலாளர் தொடர்பு. (138) (ப-ரை): கனைகடல் - முழங்குகின்ற கடலின். தண்சேர்ப்ப -குளிர்ந்த கரையையுடைய பாண்டியனே. கற்று அறிந்தார் - நூல் களைக் கற்று உண்மைகளை அறிந்தவர்களுடன் கொள்ளும். கேண்மை - உறவு. நுனியில்- நுனியிலிருந்து. கரும்பு தின்று அன்ன - கரும்பைத் தின்ற அத்தன்மையாகும். பண்புஇலா - நற்குணங்கள் இல்லாத. ஈரம் இல் ஆளர் - இரக்கம் இல்லாதவர் களுடன். தொடர்பு - கொள்ளும் உறவு. நுனி நீக்கி - கரும்பை நுனியிலிருந்து தின்னாமல். தூரில் - வேரிலிருந்து (அடியி லிருந்து). தின்றுஅன்ன - தின்பதைப் போன்ற. தகைத்து - தன்மை யுள்ளதாகும். (க-து): கற்றவர்களின் தொடர்பே சிறந்தது; மேலும் வலுப்பெற்று நன்மையளிக்கும். குறிப்பு: கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவரச் சுவையாக இருக்கும்; அடியிலிருந்து தின்றால் வரவரச் சுவை குறையும். இவை நல்லவர் உறவுக்கும், கெட்டவர் உறவுக்கும் உவமானம். 9. கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்துஒழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர்; - தொல்சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (139) (ப-ரை): தொல் சிறப்பின் - பழமையான சிறப்புள்ள. ஒள் நிறப் பாதிரிப்பூ - ஒளி பொருந்திய நிறமுள்ள பாதிரி மலர்கள். சேர்தலால் - சேர்ந்திருப்பதனால். புத்து ஓடு - புதிய பானையில் உள்ள. தண்ணீர்க்கு -மணமற்ற தண்ணீருக்கு. தான் பயந்த ஆங்கு - தன் வாசனையைக் கொடுத்து அந்தத் தண்ணீரையும் வாசனையுள்ளதாக்குவது போல. கல்லாரே ஆயினும் - கல்வி கற்காதவர்களாயிருந்தாலும். கற்றாரைச் சேர்ந்து - கற்றவர் களுடன்கூடி. ஒழுகின் - அவர்களைப் பின்பற்றி நடப்பார்களாயின். நல் அறிவு - நல்ல அறிவுள்ளவற்றைத் தெரிந்து கொள்வதிலே. நாளும் - ஒவ்வொரு நாளும். தலைப்படுவர் - சிறந்து நிற்பார்கள். (க-து): கல்லாதவராயினும் கற்றவருடன் சேர்ந்து வாழ்ந் தால் கற்றவர்போல் ஆவார். 10. அலகுசால் கற்பின்அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவது எல்லாம் - கலகல கூஉம் துணை அல்லால்கொண்டு தடுமாற்றம் போஓம் துணைஅறிவார் இல். (140) (ப-ரை): அலகு சால் - பலவகையான அளவு நிறைந்த. கற்பின் - கல்வியில். அறிவுநூல் கல்லாது - சிறந்த ஞான நூல் களைக் கற்காமல். உலகநூல் - வெறும் உலக ஞானத்தை மட்டும் தருகின்ற நூல்களை. ஓதுவது எல்லாம் - படிப்பது போன்ற கல்விகளினால் எல்லாம் பயனில்லை. கலகல கூஉம் துணை யல்லால் - இக்கல்வி கலகலவென்று சத்தம் போடும் கல்வியே அல்லாமல். கொண்டு - இத்தகைய உலக நூல் கல்வியைக் கொண்டு. தடுமாற்றம் -உள்ளத்திலே ஊறும் குழப்பம். போம் துணை - போகும் வழியை. அறிவார் இல் - அறிகின்றவர்கள் ஒருவரும் இல்லை. (கூஉம், போஓம்; உயிர் அளபெடைகள்.) (க-து): அறிவு தரும் நூல்களைக் கற்பதே சிறந்த கல்வி யாகும். 15. குடிப் பிறப்பு நல்ல குடியிலே பிறந்தவர்களின் சிறப்பைக் கூறுவது 1. உடுக்கை உலறி உடம்புஅழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்; இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று (141) (ப-ரை): உடுக்கை உலறி - ஆடைகள் கிழிந்து. உடம்பு அழிந்தக் கண்ணும் - உடம்பின் வன்மை குறைந்து இளைத்த வறுமைக் காலத்திலும். குடிப் பிறப்பாளர் - நல்லொழுக்கமுள்ள குடியிலே பிறந்தவர்கள். தம் கொள்கை யில் - நல்லொழுக்க மாகிய தமது உயர்ந்த கொள்கையிலிருந்து. குன்றார் - சிறிதும் குறையமாட்டார். இடுக்கண் - பசித் துன்பம். தலை வந்தக் கண்ணும் - எவ்வளவு மிகுந்து வந்தாலும். அரிமா - சிங்கம். கொடிப்புல் - அருகம்புல்லை. கறிக்குமோ - கடித்துத் தின்னுமோ! (தின்னாது; வழக்கமாக உண்ணும் மாமிசத்தைத்தான் தின்னும்.) (க-து): நல்ல குடியிலே பிறந்தவர்கள் எக்காலத்திலும் தமது ஒழுக்கத்தைக் கைவிடமாட்டார்கள். 2. சான்றாண்மை, சாயல், ஒழுக்கம் இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது, - வான்தோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெரும்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (142) (ப-ரை): வான் தோயும் - வானத்தை முட்டிக்கொண்டிருக் கின்ற. மை தவழ் - மேகங்கள் தவழ்ந்துகொண்டிருக்கின்ற. வெற்ப - உயர்ந்த மலைகளை யுடைய பாண்டியனே. சான்றாண்மை - அறிவு நிரம்பிய தன்மை. சாயல் - மெல்லிய தன்மை. ஒழுக்கம் - நல்லொழுக்கம். இவை மூன்றும் -ஆகிய இந்த மூன்று சிறந்த குணங்களும். வான்தோய்- வான் அளாவியது போன்ற. குடிப் பிறந்தார்க்கு அல்லது - உயர்ந்த குடியிலே பிறந்து வளர்ந்தவர் களிடம் காணப்படுமே அல்லாமல். பிறர்க்கு- உயர்ந்த குடியிலே பிறக்காத பிறரிடம். பெரும் செல்வம் எய்தியக்கண்ணும் - நிறைந்த செல்வம் உண்டான காலத்திலும். படா - இக்குணங்கள் தோன்ற மாட்டா. (க-து): ஒழுக்கமற்ற குடியிலே பிறந்தவர், செல்வமுள்ள வராயினும் நற்குணமுள்ளவராக மாட்டார். 3. இருக்கை எழலும், எதிர் செலவும், ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு ஒன்றா உணரற்பாற்று அன்று. (143) (க-து): இருக்கை எழலும் - விருந்தாக வரும் பெரியோரைக் காணும்போது தமது ஆசனத்தை விட்டு எழுந்திருப்பதும். எதிர் செலவும் - எதிரே போய்ப் புன்சிரிப்புடன் வரவேற்பதும். ஏனை - மற்றைய உபசாரங்களைச் செய்வதும். விடுப்ப - அவர்களை வழியனுப்ப. ஒழிதலோடு - இருக்கையை விட்டு எழுந்து பின் செல்லுவதோடு. இன்ன - இவை போன்ற செயல்களை. குடிப் பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்தவர்கள். குன்றா ஒழுக்கம்ஆக் கொண்டார் - தமது அழியாத ஒழுக்கமாகக் கொண்டிருக் கின்றனர். கயவரோடு - ஆதலால் அவர்களைக் கீழ்மக்களுடன். ஒன்றா - ஒன்றாக வைத்து. உணரல்பாற்று அன்று - எண்ணும் தன்மை சரியன்று. (க-து): தம்மை நாடி வந்த விருந்தினர்கள் யாராயினும் அவர்களை மனமுவந்து உபசரித்து வரவேற்று வழியனுப்புவது நல்ல குடியிலே பிறந்தவர்களின் செய்கை. குறிப்பு: கயவர் தன்மை வேறு, குடிப் பிறந்தார் குணம் வேறு என்பதை விளக்கிக் கூறியது இப் பாடல். 4. நல்லவை செய்யின் இயல்பாகும்; தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ? புணரும் ஒருவர்க்கு எனின். (144) (ப-ரை): நல்லவை செய்யின் - உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் நல்ல செயல்களைச் செய்வார்களாயின். இயல்பு ஆகும் - அது அவர்கள் குடும்பத்தின் இயல்பாகும். தீயவை - தீமைகளைச் செய்வார்களாயின். பல்லவர் தூற்றும் - அது அவர்களுக்குப் பலரும் பழிக்கக்கூடிய. பழியாகும் - வசையாக முடியும். ஒருவர்க்குப் புணரும் எனின் - ஆதலால் ஒருவர்க்கு நல்ல குடிப்பிறப்பு வாய்க்குமானால். எல்லாம் உணரும் - எல்லா வற்றையும் அறியும் பெருமையுள்ள. குடிப்பிறப்பின் - அந்த உயர் குடிப்பிறப்பினால். ஊதியம் என்னோ - இலாபந்தான் என்ன? (ஒன்றும் இல்லை). (க-து): உயர்குடிப் பிறப்பால் இலாபம் ஒன்றும் இல்லை யாயினும் அதுவே சிறந்ததாம். 5. கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்; சொல்லாமை யுள்ளும்ஓர் சோர்வு அச்சம்; - எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார் இம் மாணாக் குடிப்பிறந் தார். (145) (ப-ரை): கல்லாமை அச்சம் - கல்லாமை காரணமாக வரும் அறியாமைக்கு அஞ்சவேண்டும். கயவர் தொழில் அச்சம் -கீழானவர் செய்யும் தொழில் களைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும். சொல்லாமையுள்ளும் - பொய், கோள், கடுஞ்சொல் போன்றவைகளைச் சொல்லாமல் வாழ்வதிலும். ஓர் சோர்வு அச்சம் - ஒரு சமயம் சோர்வு காரணமாக அச்சொற்களில் ஒன்றைச் சொல்லும்படி நேர்ந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டும். எல்லாம் - தமக்கு வேண்டியவைகளையெல்லாம். இரப்பார்க்கு - வந்து கேட்கின்றவர்களுக்கு. ஒன்று ஈயாமை - ஒன்றேனும் கொடுக்காமலிருப்பது. அச்சம் - அச்சமாகும்; ஆதலால். இம் மாணாக் குடிப்பிறந்தார் - இந்த மாட்சிமையற்ற உயர்குடி யிலே பிறந்தவர். மரத்தார் - மரக்கலத்தில் மாட்டிக் கொண்டவர்களைப் போலாவர். (க-து): அறிவு, நற்செயல், ஈகை இவைகள் எல்லாம் நற்குடியில் பிறந்தவர்களின் பிறப்புரிமையாகும். 6. இனநன்மை, இன்சொல், ஒன்றுஈதல், மற்றுஏனை மனநன்மை என்றிவை எல்லாம், - கனமணி முத்தோடு இமைக்கும் முழங்குஉவரித் தண்சேர்ப்ப! இற்பிறந்தார் கண்ணே யுள. (146) (ப-ரை): கனமணி - சிறந்த இரத்தினங்கள். முத்தோடு - முத்துக்களுடன் சேர்ந்து. இமைக்கும் - பளிச்சிட்டுக் கொண் டிருக்கின்ற. முழங்கு உவரி - அலை வீசி முழங்கும் கடலின். தண் சேர்ப்ப - குளிர்ச்சியான துறையை யுடைய பாண்டியனே. இனம் நன்மை - நற்குணமுள்ளவர்களோடு சேர்ந்து வாழும் நன்மை. இன்சொல் - இனிய சொற்களையே பேசுதல். ஒன்று ஈதல் - இரந்தார்க்கு ஒன்று கொடுத்தல். மற்று ஏனை மன நன்மை - மற்றைய மனநலம். என்று இவை யெல்லாம் - என்று சொல்லப் படும் இச் சிறந்த தன்மைகள் எல்லாம். இல் பிறந்தார் கண்ணே - உயர்ந்த குடியிலே பிறந்தவர்களிடம். உள - இருக்கின்ற சிறந்த குணங்களாம். (க-து): உயர்ந்த குடியிலே பிறந்தவர்களிடம்தான் பல சிறந்த குணங்களும் குடிகொண்டிருக்கும். 7. செய்கை அழிந்து சிதல்மண்டிற்று ஆயினும் பெய்யா ஒருசிறை பேர்இல் உடைத்தாகும்; எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பால வை. (147) (ப-ரை): பேர் இல் - பெரிய வீடு. செய்கை அழிந்து - கட்டுக்கோப்புக் குலைந்து. சிதல் மண்டிற்று ஆயினும் - கரையான் பிடித்துப் பழுதுபட்டுப் போனாலும். பெய்யா ஒரு சிறை - மழை பெய்து ஒழுகாத ஒரு பக்கத்தை. உடைத்து ஆகும் - உடையதாகும் (அதுபோல). குடிப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்தவர். எவ்வம் - வறுமைத் துன்பத்தினால். உழந்தக் கடைத்தும் - வருந்திய காலத்திலும். செயற்பாலவை - தாங்கள் செய்யக் கூடிய நல்ல செயல்களையெல்லாம். செய்வர் - தவறாமல் செய்வார்கள். (க-து): நல்ல குடியிலே பிறந்தவர்கள் வறுமைக் காலத்திலும் தங்கள் கடமைகளைத் தவறாமல் செய்வார்கள். குறிப்பு: நல்ல குடியிலே பிறந்தவர்க்குப் பெரிய வீடு உவமானம். கட்டுக்கோப்புக் குலைதல் வறுமைத் துன்பத்திற்கு உவமானம். 8. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉம் -திங்கள்போல் செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார். (148) (ப-ரை): ஒருபுடை - ஒரு பக்கத்தை. பாம்பு கொளினும் - இராகு என்னும் பாம்பு கவ்விக்கொண்டாலும். ஒருபுடை - மற்றொரு பக்கத்தில். அம்கண் - அழகிய இடமுள்ள. மாஞாலம் - பெரிய உலகத்திற்கு. விளக்குஉறும் - விளக்காக இருக்கின்ற. திங்கள்போல் - சந்திரனைப்போல. செல்லாமை - வறுமை. செவ்வன் நேர் நிற்பினும் - முழுவதும் நேராக நிறைந்து நின்றாலும். குடிப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்தவர்கள். ஒப்புரவிற்கு - உதவி செய்வதிலே. ஒல்கார் - தளர்ச்சியடைய மாட்டார்கள். (க-து): நல்ல குடியிலே பிறந்தவர்கள் எவ்வளவு வறுமைக் காளானாலும் உதவி செய்யப் பின்வாங்கமாட்டார்கள். குறிப்பு: குடிப் பிறந்தார்க்கு இராகுவால் பிடிக்கப்பட்ட சந்திரன் உவமானம். 9. செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன, செல்லிடத்தும் செய்யார் சிறியவர்; - புல்வாய் பருமம் பொறுப்பினும், பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று. (149) (ப-ரை): செல்லா இடத்தும் - செல்வம் குறைந்து தங்கள் வாக்குச் செல்லாத காலத்திலும். குடிப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்தவர்கள். செய்வன - செய்வன போன்ற நல்ல செயல்களைச் செய்வர். செல் இடத்தும் - செல்வம் பெற்றுச் செல்வாக்குடன் இருக்கும் காலத்திலும். சிறியவர் - கீழ்க் குடியிலே பிறந்த கீழான குணமுள்ளவர்கள். செய்யார் - செய்யமாட்டார்கள். புல்வாய் - மான். பருமம் பொறுப்பினும் - குதிரையின் முதுகில் போடும் சேணத்தைத் தாங்கினாலும். பாய் பரிமாபோல் - பாய்ந்து விரைந்து செல்லும் குதிரையைப் போல. பொரு முரண் - போர் செய்யும் வலிமையை. ஆற்றுதல் இன்று - தாங்கியிருக்காது. (க-து): வறுமைக் காலத்திலும் நற்குடிப் பிறந்தார் நல்ல செயல்களைச் செய்வர். கீழ்க்குடியிலே பிறந்தவர்கள் செல்வ முள்ள காலத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள். குறிப்பு: நல்ல குடியிலே பிறந்தவர்க்குக் குதிரையும், கீழ்க்குடியிலே பிறந்தவர்க்கு மானும் உவமைகள். 10. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுஆவர், அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால் தெற்றெனத் தெள்நீர் பாடும். (150) (ப-ரை): அகல் யாறு - அகலமான ஆறு. அற்றக் கடைத்தும் - தண்ணீர் வறண்ட காலத்திலும். அகழ்ந்தக் கால் - தண்ணீர் வேண்டுவோர் அதனைத் தோண்டினால். தெற்றென - உடனே. தெள்நீர் படும் - தெளிந்த நீர் ஊறும் (அதுபோல). குடிப் பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்தவர்கள். எற்று ஒன்றும் - எத்தகைய ஒரு பொருளும். இல்லா இடத்தும் - இல்லாமல் வறுமை யடைந்த காலத்திலும். அற்று- செல்வம் இல்லாமல். தன் சேர்ந்தார்க்கு - தன்னிடம் உதவி தேடி வந்தவர்க்கு. அசைவு இடத்து - தளர்ச்சி வந்த காலத்தில். ஊற்று ஆவர் - ஊன்று கோல் உதவுவது போல் உதவி செய்வார்கள். (க-து): நல்ல குடியிலே பிறந்தவர்கள் தாம் எந்நிலை யிலிருந்தாலும் தம்மையடைந்த வறியோர்க்கு உதவாமலிருக்க மாட்டார்கள். குறிப்பு: நல்ல குடியிலே பிறந்து வறுமையடைந்தவர் களுக்கு நீர் வறண்ட பெரிய ஆறு உவமானம். 16. மேன்மக்கள் மேலான குணம் படைத்தவர்களின் சிறப்பு 1. அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்;- திங்கள் மறுஆற்றும்; சான்றோர் அஃது ஆற்றார்; தெருமந்து தேய்வர் ஒருமாசு உறின். (151) (ப-ரை): அம்கண் விசும்பின் - அழகிய இடமகன்ற வானத்தில் நின்று. அகல் நிலா - பெரிய நிலவை. பாரிக்கும் -வீசுகின்ற. திங்களும் - சந்திரனும். சான்றோரும் - உயர்ந்த குடியிலே பிறந்த அறிஞர்களும். ஒப்பர்மன் - பெரும்பாலும் ஒத்திருப்பார்கள். திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் கறையைத் தாங்கிக் கொண்டிருக்கும். சான்றோர் அஃது ஆற்றார் - அறிவுள்ளோர் அத்தகைய கறையைத் தாங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு மாசு உறின்- ஒரு குற்றம் வந்தால்கூட. தெருமந்து - அதற்காக மனம் வருந்தி. தேய்வர் - அழிவார்கள். (மன்: அசை.) (க-து): திங்கள் கறையைத் தாங்கிக்கொண்டிருக்கும்; அறிஞர்கள் குற்றத் துடன் வாழமாட்டார்கள். 2. இசையும் எனினும், இசையாது எனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ? அரிமாப் பிழைப்பெய்த கோல். (152) (ப-ரை): இசையும் எனினும் - தம்மால் முடியும் ஆயினும். இசையாது எனினும் - தம்மால் முடியாது ஆயினும். சான்றோர் - அறிவு நிரம்பி யவர்கள். வசைதீர - குற்றம் தீருவதற்கான செயல்களைச் செய்யவே. எண்ணுவர் - எப்பொழுதும் நினைப் பார்கள். விசையின் - விரைவாகப் பாய்ந்து. நரிமா - நரியின். உளம்கிழித்த - நெஞ்சைப் பிளந்து கொன்ற. அம்பின் - கணையை விட. அரிமா - சிங்கம். பிழைப்பு எய்த - தப்பிக்கும்படி குறிதவறி எய்த. கோல் தீதோ - அம்பு கெட்டதாகுமோ? (இல்லை). (க-து): சான்றோர்கள் எப்பொழுதும் உயர்ந்த செயல் களைச் செய்வதற்கே நினைப்பார்கள். 3. நரம்புஎழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர் குரம்புஎழுந்து குற்றங்கொண்டு ஏறார்:- உரம்கவறா உள்ளம் எனும் நாரினால் கட்டி,உளவரையால் செய்வர் செயற்பா லவை. (153) (ப-ரை): சான்றோர் -அறிவு நிரம்பியவர்கள். நரம்பு எழுந்து - நரம்புகள் எல்லாம் வெளியில் தோன்றி. நல்கூர்ந்தார் ஆயினும் -வறுமையால் உடல் இளைத்தார் ஆயினும். குரம்பு எழுந்து - நன்மையின் வரம்பைக் கடந்து. குற்றம் கொண்டு - குற்றத்தைத் துணையாகக் கொண்டு. ஏறார் - முன்செல்ல மாட்டார்கள். உரம்கவறுஆ - அறிவைக் கருவியாகக் கொண்டு. உள்ளம் எனும் நாரினால்- முயற்சி என்னும் கயிற்றினால். கட்டி -நல்ல செயல் களைக் கட்டியிழுத்து. உளவரையால் - தம் வலிமையின் அளவுக்கு ஏற்றபடி. செயற்பாலவை - செய்யத்தகுந்த நல்ல செயல்களையெல்லாம். செய்வர் - செய்வார்கள். (க-து): அறிவுள்ளவர் பொல்லாத வறுமைக்காலத்திலும் நல்ல செயல்களையே செய்வார்கள். 4. செல்வுழிக் கண் ஒருநாள் காணினும், சான்றவர் தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்துயாப்பர் நல்வரை நாட! சிலநாள் அடிப்படின் கல்வரையும் உண்டாம் நெறி. (154) (ப-ரை): நல்வரை நாட - நல்ல மலைகள் அமைந்த நாட்டையுடைய பாண்டியனே. சான்றோர் - அறிவுள்ளவர்கள். செல்வுழிக்கண் -நாம் சென்ற இடத்திலே. ஒரு நாள் காணினும்-தற்செயலாக ஒருநாள் நம்மைச் சந்தித்துப் பழகினாலும். தொல்வழி - பழமையான வழியிலே வந்த. கேண்மையின் - உறவைப்போல. தோன்ற புரிந்து -தம்முடைய சிறந்த குணங்கள் வெளிப்படும்படி நமக்கு நன்மை செய்து. யாப்பர் - நம்மைப் பிணிப்பார்கள். சில நாள் - சிலநாட்கள் தொடர்ந்து.அடிப்படின் - பாதங்கள் படுமாயின். கல்வரையும் - கல்மலையிலும். நெறி உண்டு ஆம் - வழியுண்டாகிவிடும். (க-து): ஒருநாள் பழகினாலும் அறிவுள்ளவர் சிறந்த நண்பராகிவிடுவார்; நன்மை செய்வார். 5. புல்லா எழுத்தின் பொருள்இல் வறும்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பவரே, மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து. (155) (ப-ரை): பொருள்இல் - பொருள் உணர்ச்சியில்லாத. வறும் கோட்டி - வீண் பேச்சுக்காரர்களின் கும்பலிலே. எழுத்தின் புல்லா - இலக்கணத்தோடு பொருந்தாத பிழையுள்ள மொழிகளை. கல்லா ஒருவன் - படிக்காத ஒருவன். உரைப்பவும் - சொல்லிக் கொண்டிருக்கவும். நல்லோர் - நல்ல அறிவுள்ளவர் அங்கிருந்தால். அவன் - குற்றங்களை எடுத்துக்காட்டினால் அவன். பல்லாருள் நாணல் - பலரிடையிலே நாணமடைவதற்காக. பரிந்து - இரங்கி. கண்ணோடி - தயவுடன். வருந்தியும் கேட்பரே - மனம் வருந்தியும் அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப் பார்கள். (க-து): எல்லோரிடத்திலும் இரக்கங் காட்டுவதே நல்லவர் களின் பண்பு. 6. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி, இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்; வடுப்பட வைதுஇறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயின் சிதைந்து. (156) (ப-ரை): கரும்பினை - கரும்பை. கடித்து - பல்லினால் கடித்து. கண் தகர - கணுக்கள் சிதையும்படி. நூறி - கல்லினால் நொறுக்கி. இடித்து - உலக்கை யால் இடித்து. நீர் கொளினும் - வேறு எந்த வகையால் அதன் சாற்றை எடுத்துக் கொண்டாலும். இன்சுவைத்தே ஆகும் -அச் சாறு இனிய சுவை யுள்ளதாகவே இருக்கும் (அதுபோல). குடிப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்த அறிவுள்ளவர்களை. வடுப்பட - அவர்கள் உள்ளம் புண்ணாகும் படி. வைது இறந்தக் கண்ணும் - வைதுவிட்டபோதிலும். தம்வாயின் - தமது வாயினால். சிதைந்து - அறிவு கெட்டதனால் வரும் சொற்களை. கூறார் - சொல்லமாட்டார்கள். (க-து): பிறர் வைதாலும் பொறுத்துக் கொள்ளுவதே நல்ல குடியில் பிறந்தவர்களின் சிறந்த குணம். குறிப்பு:- குடிப் பிறந்தவர்க்கு - உயர்ந்த குணம் உள்ளவர் களுக்குக் கரும்பு உவமானம். தம்மைத் துன்புறுத்துவோர்க்கும், தம்மை வைவோர்க்கும் சுவை தரும் கரும்பைப் போல நன்மை செய்வது நற்குடிப் பிறந்தார் பண்பு. 7. கள்ளார் கள்உண்ணார்; கடிவ கடிந்துஒரீஇ எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும் வாயின்பொய் கூறார்; வடுவறு காட்சியார்; சாயின் பரிவது இலர். (157) (ப-ரை): வடு அறு-குற்றம் இல்லாத. காட்சியவர் - சிறந்த அறிவுள்ளவர். கள்ளார் - பிறர் பொருளைத் திருடமாட்டார்கள். உண்ணார் - கள்ளருந்த மாட்டார். கடிவ - விலக்கத் தகுந்த வீண்செயல்களையெல்லாம். கடிந்து ஒரீஇ - விலக்கி அதிலிருந்து நீங்கியிருப்பார்கள். பிறரை எள்ளி - பிறரை ஏளனம் பண்ணி. இகழ்ந்து உரையார் - இகழ்ந்து பேசமாட்டார்கள். தள்ளி யும் - தவறிக்கூட. வாயின் - தம்வாயினால். பொய் கூறார் - பொய் சொல்லமாட்டார்கள். சாயின் - மிகுந்த தளர்ச்சி அல்லது சோர்வு வந்த காலத்திலும். பரிவது இலர் - வருந்தும் குணமும் இல்லாமல் இருப்பார். (க-து): நல்லறிவுள்ளவர்கள் எப்பொழுதும் நல்லொழுக்கங் களையே பின்பற்றி நடப்பார்கள். 8. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறன் அறிந்து ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல், யாதும் அறம்கூற வேண்டா அவற்கு (158) (ப-ரை): பிறர் மறையின் கண் - ஒருவன் பிறர் பேசும் இரகசியங்களைக் கேட்காமல். செவிடாய் - செவிடனாகவும். திறன் அறிந்து -அறத்தின் தன்மையை உணர்ந்து. ஏதிலார் இல்கண் - பிறர் மனைவியிடம். குருடனாய் - குருடனாகவும். தீய - பிறர் தீமைகளை. புறம்கூற்றின் - எடுத்துப் புறத்திலே கூறுவதில். மூங்கையாய் - ஊமையாகவும். நிற்பானேல் - ஒழுகுவானாயின். அவற்கு -அவனுக்கு. யாதும் - சிறிதும். அறம் கூற வேண்டா - அற நூல்களில் உள்ள உண்மைகளை எடுத்துக் கூற வேண்டிய தில்லை. (க-து): பிறர் இரகசியத்தை விரும்பாமை, பிறர் மனைவியை விரும்பாமை,புறங்கூறாமை இம்மூன்றையும் பின்பற்றுவோர் நீதிநூல் முறைகளைப் பின்பற்றி நடப்போராவர். 9. பல்நாளும் சென்றக்கால் பண்புஇலார் தம்உழை என்னானும் வேண்டுப என்றுஇகழ்ப; - என்னானும் வேண்டினானும் நன்றுமற்று என்று, விழுமியோர் காண்தொறும் செய்வர் சிறப்பு. (159) (ப-ரை): பண்பு இலார் தம் உழை - நற்குணமற்ற கீழ் மக்களிடம். பல் நாளும் சென்றக்கால் - பல நாட்கள் சென்றோ மானால். என்னானும் வேண்டுப என்று - நாம் எதையோ வேண்டி அவர்களிடம் வருவதாக எண்ணிக் கொண்டு. இகழ்ப -நம்முடைய வருகையை எதிர்ப்பார்கள். விழுமியோர் - உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள். என்னானும் வேண்டினும் - எதையாவது வேண்டி அவர்களிடத்திலே சென்றாலும். நன்று - அதை நன்மையாகக் கொண்டு. காண்தொறும் - நம்மைக் காணும் போதெல்லாம். சிறப்பு செய்வர் - பெருமையாகக் கொண்டாடு வார்கள். (க-து): உயர்ந்த குடியிலே பிறந்தாருடன் பழகுவதே சிறந்ததாகும். 10. உடையார் இவர்என்று ஒருதலையாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய பிலம்தலைப் பட்டது போலாதோ? நல்ல குலம்தலைப் பட்ட இடத்து. (160) (ப-ரை): கடைஆயர் - கீழ்த்தரமான அறிவுள்ளார். உடையார் இவர் என்று - கீழ்மக்களைச் செல்வம் உள்ளவர் இவர் என்று எண்ணி. ஒருதலையாப்பற்றி - உறுதியாகப் பின்பற்றி. பின்சென்று வாழ்ப - அவர்கள் பின்னே போய் வயிறு வளர்ப்பார்கள். நல்ல குலம் - உயர்ந்த குலத்திலே பிறந்தவர் களுடன். தலைப்பட்ட இடத்து -கூடியிருந்தபோது. உடைய - செல்வங்களையெல்லாம் உடைய. பிலம் - சுரங்கம் ஒன்றை. தலைப்பட்டது போலாதோ - சந்தித்தது போல் ஆகாதோ? (க-து): நல்ல குலத்திலே பிறந்தவர்களுடன் கொள்ளும் நட்பு எல்லாச் செல்வங்களும் நிறைந்த ஒரு சுரங்கத்தைப் பெற்றது போலாகும். 17. பெரியாரைப் பிழையாமை பெரியாரிடம் குற்றம் செய்யாமல் நடந்துகொள்ளுதல் 1. பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்:- வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட! போக்குதல் யார்க்கும் அரிது. (161) (ப-ரை): ஆர்க்கும் அருவி - ஆரவாரித்து வீழ்கின்ற அருவியுடன் காணப் படும். அணிமலை -அழகிய மலைகள் பொருந்திய. நல்நாட - நல்ல நாட்டையுடைய பாண்டியனே. புரை தீர்ந்தார் மாட்டும் - குற்றமற்ற பெரியோர்களிடத்திலும். பொறுப்பர் என்றுஎண்ணி - பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைத்து. வெறுப்பன -அவர்கள் வெறுக்கத்தக்க தீமைகளை. செய்யாமை வேண்டும் - செய்யாமலிருக்க வேண்டும். வெறுத்தபின் - அவர்கள் கோபங்கொண்டார்களானால் அதன்பின். போக்குதல் - அவர் கோபத்தை நீக்குதல். யார்க்கும் அரிது - யாராலும் முடியாத செயல். (க-து): பெரியோர்கள் வெறுக்கத் தகுந்த செயல்களைச் செய்யக்கூடாது. 2. பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக் கொன்னே தலைகூடப் பெற்றிருந்தும் -அன்னோ! பயன்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல நயம்இல் அறிவின் அவர் (162) (ப-ரை): நல்ல நயம் இல் -நல்ல தன்மையற்ற. அறவின் அவர் - அறி வுள்ளவர் (அறிவற்றவர்). பொன்னே கொடுத்தும் -பொன்னைக் கொடுத்தாலும். புணர்தற்கு அரியாரை - கிடைப் பதற்கரிய பெரியோரை. தலைக்கூடப் பெற்றிருந்தும் - சேர்ந்திருக்கும் செல்வத்தையடைந் திருந்தும். கொன்னே - வீணாக. பயன் இல் - இன்பமற்ற. பொழுதுஆ கழிப்பர்ஏ - வீண்பொழுதாகப் போக்குவார்கள். அன்னோ - மிகவும் இரங்கத்தக்கது. (ஏ: அசை.) (க-து): அறிவற்றவர்கள் பெரியோரைச் சேர்ந்திருந்தாலும் அவரால் அடையக்கூடிய நன்மையை அடையமாட்டார்கள். 3. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளால்மதிக்கற் பால; - நயம் உணராக் கைஅறியா மாக்கள் இழிப்பும் எடுத்துஏத்தும் வையார் வடித்தநூ லார். (163) (ப-ரை): அவமதிப்பும் - இழிவாக மதித்தலும். ஆன்ற மதிப்பும் - உயர்வாக மதித்தலும். இரண்டும் - இவ்விரு வகையான மதிப்பும். மிகை மக்களால் - பெரியோர்களால். மதிக்கற்பால - மதிக்கத்தக்கவையாகும். நயம் உணரா - நன்மை இன்னதென்று அறியாத. கை அறியா - ஒழுக்கத்தையும் உணராத. மாக்கள் - மிருகங்கள் போன்ற கீழ்மக்களின். இழிப்பும் - அவமதிப்பையும். எடுத்து ஏத்தும் - புகழ்ச்சியையும். வடித்த நூலார் -சிறந்த நூல்களைக் கற்றவர்கள். வையார் - ஒரு பொருளாக வைத்து மதிக்க மாட்டார்கள். (க-து): பெரியோர்கள் நன்மதிப்பைப் பெறும்வழியில் நடந்து கொள்ளுவதே அறிவுள்ளோர் கடமை. 4. விரிநிற நாகம் விடர்உளது ஏனும், உருமின் கடும்சினம் சேண்நின்றும் உட்கும் அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை உடையார் செறின். (164) (ப-ரை): விரிநிற நாகம் - விரிந்த படத்தையுடைய ஒளியுள்ள நாகப்பாம்பு. விடர் உளது ஏனும் - புற்றுக்குள்ளே பதுங்கி யிருப்பதாயினும். உருமின் கடுஞ்சினம் - இடியின் கடுஞ்சின மாகிய ஒலி. சேண் நின்றும் - தொலைவில் இருந்தாலும். உட்கும் -அதைக்கேட்டு அஞ்சும். பெருமை உடையார் - பெருமையுள்ள பெரியோர்கள். செறின் - கோபித்தால். அருமைஉடைய - சிறந்த. அரண் சேர்ந்தும் - பாதுகாப்பைச் சேர்ந்தாலும். உய்யார் - தப்பமாட்டார்கள். (க-து): பெரியோர்களின் சினத்திற்கு ஆளானவர்கள் எவ்வகையிலும் தப்பிப் பிழைக்கமாட்டார்கள். குறிப்பு: பெரியோர்களின் சினத்திற்கு ஆளானவர் பாம்புக்குச் சமமாவர். அவருக்குப் பாம்பு உவமானம். 5. எம்மை அறிந்திலிர்; எம்போல்வார் இல், என்று தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று;- தம்மை அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர் பெரியராக் கொள்வது கோள். (165) (ப-ரை): எம்மை அறிந்திலிர் - எம்மைப் பற்றி அறிய மாட்டீர்கள். எம்போல்வார் இல் - எம்மைப் போன்றவர்கள் யாரும் இல்லை. என்று - என்று சொல்லி. தம்மைத் தாம் - தம்மைத்தாமே பெருமையாகப் புகழ்ந்துகொள்வது. கோள் அன்று - உயர்ந்த கொள்கை ஆகாது. அறன் அறியும் - அறத்தின் மேன்மையை அறிந்த. சான்றோர் - அறிவு நிறைந்த பெரியோர்கள். தம்மை அரியர் ஆ நோக்கி - தம்மைச் சிறந்தவராகக் கண்டறிந்து. பெரியர் ஆ - பெரியவர் ஆக. கொள்வது கோள் - ஒப்புக் கொள்வதே சிறந்த கொள்கையாகும். (க-து): நம்மை நாமே பெரியவராக மதித்துக் கொள்வதில் பெருமையில்லை. பெரியோர்கள் நம்மைப் பெரியவராக மதிக்க வேண்டும். 6. நளிகடல் தண்சேர்ப்ப! நாள்நிழல் போல விளியும் சிறியவர் கேண்மை; - விளிவுஇன்றி அல்கு நிழல்போல் அகன்று அகன்று ஓடுமே தொல்புகழ் ஆளர் தொடர்பு. (166) (ப-ரை): நளிகடல் தண்சேர்ப்ப - பெருமையுள்ள கடலின் குளிர்ந்த துறையையுடைய பாண்டியனே. சிறியவர் கேண்மை - கீழ்மக்களுடன் கொண்ட தொடர்பு. நாள் நிழல் போல - முற்பகலிலே தோன்றும் நிழலைப்போல. விளியும்- விரைவில் அழியும். தொல் புகழ் ஆளர் தொடர்பு - பழமையான பெருமை யுள்ளவர்களிடம் கொள்ளும் கூட்டுறவு. அல்கு நிழல் போல் - நடுப்பகலில் தங்கிய நிழலைப்போல (பிற்பகல் நிழலைப் போல). விளிவு இன்றி - அழியாமல். அகன்று அகன்று ஓடும் - விரிந்து விரிந்து உயர்ந்து வளரும். (க-து): கீழ்மக்களிடம் கொள்ளும் தொடர்பு நிலைக்காது; பெரியோர் தொடர்பே நிலைத்து நிற்கும். குறிப்பு: கீழோருக்கு முற்பகல் உவமானம். பெரியோருக்குப் பிற்பகல் உவமானம். காலைநிழல் நேரம் ஆக ஆகச் சுருங்கு வதையும், நடுப்பகலிலிருந்து தொடங்கும் நிழல் நேரம் ஆகஆக வளர்வதையும் காண்கின்றோம். 7. மன்னர் திருவும் மகளிர் எழில்நலமும் துன்னியார் துய்ப்பர்; தகல்வேண்டா;-துன்னிக் குழைகோண்கு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம் உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு. (167) (ப-ரை): மன்னர் திருவும் -அரசர்களின் செல்வமும். மகளிர் - பெண்களின். எழில் நலமும் -அழகின் இன்பத்தையும். துன்னியார் துய்ப்பர் - அவர்களை நெருங்கி வாழ்வோர் அனுபவிப்பார்கள். தகல் வேண்டா - தகுதியுடையவர்கள் இவர்கள் தாம் என்று குறிப்பிட வேண்டியதில்லை. துன்னி குழைகொண்டு - நெருங்கிய இலைகளைக் கொண்டு. தாழ்ந்த - தாழ்ந்திருக்கின்ற. குளிர் மரம் எல்லாம் - குளிர்ச்சி தரும் மரங்கள் எல்லாம். தம்கண் சென்றார்க்கு - தம்மிடம் வந்தவர்களுக் கெல்லாம். ஒருங்கு உழை - வேற்றுமையின்றி நிழல் தரும் இடமாக இருக்கும். (க-து): பெரியோர்கள் தம்மைச் சேர்ந்தவர்கள் யாரா யிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் நன்மை செய்வார்கள். குறிப்பு: மன்னர், மகளிர், மரம் இம் மூன்றும் பெரியோர்க்கு உவமானம். 8. தெரியத் தெரியும் தெரிவுஇலார் கண்ணும் பிரியப் பெரும்படர் நோய் செய்யும்; - பெரிய உலவா இருமகழிச் சேர்ப்ப; யார்மாட்டும் கலவாமை கோடி உறும். (168) (ப-ரை): பெரிய உலவா - பெரிய நீர் வற்றாத. இரும்கழி சேர்ப்ப - நீண்ட உப்பங்கழித் துறையையுடைய பாண்டியனே. தெரியத் தெரியும் - உண்மை விளங்கும்படி ஆராயும். தெளிவு இலார்கண்ணும் - அறிவில்லாதவரிடத் திலும். பிரிய - நட்புச் செய்தபிறகு பிரிய நேரிடுமானால். பெரும்படர் நோய் செய்யும் - அது பெரிய துன்பமாகிய நோயைத் தரும் (ஆதலால்). யார் மாட்டும் - யாரிடத்தும். கலவாமை - நட்புச் செய்து பிரிவதைக் காட்டிலும் நட்புக் கொள்ளாமலிருப்பதே. கோடிஉறும் - கோடி நன்மையைத் தருவதாகும். (க-து) ஒருவருடன் சேர்ந்திருந்து பிரிவதைக் காட்டிலும் சேராமலிருப்பதே சிறந்ததாகும். 9. கல்லாது போகிய நாளும், பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ கொடாஅது ஒழிந்த பகலும், உரைப்பின் படாஅஆம் பண்புடையார் கண். (169) (ப-ரை): உரைப்பின் - சொல்லத் தொடங்கில். பண்புடை யார் கண் - நல்ல குணங்கள் உள்ள பெரியோர்களிடம். கல்லாது - கல்வி கற்காமல். போகிய நாளும் - வீணாகக் கழிந்த நாளும். பெரியவர்கண் - தம்மைவிடப் பெரியவரிடம். செல்லாது வைகிய வைகலும் -போகாமல் தங்கிய நாளும். ஒல்வ -தம்மால் முடிந்த வற்றை. கொடாது ஒழிந்த பகலும் - வறியவர்க்குக் கொடுக்காமல் கழிந்த நாளும். படா ஆம் - உண்டாகாதாம். (க-து): நற்பண்புள்ளவர்கள் ஒவ்வொரு நாளையும் பயனுள்ள பொழு தாகவே போக்குவர். 10. பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்கு உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால் செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப எனில். (170) (ப-ரை): சிறு தகைமை - செருக்கில்லாமல் அடங்கியிருக்கும் சிறப்பே. பெரியார் பெருமை - பெரியாருக்குரிய பெருமையாகும். ஒன்றிற்கு - கல்வி, செல்வம், வீரம் இவற்றுள்ளே ஒன்றுக்கு. உரியார் உரிமை - உரியவர்க் குள்ள சிறந்த குணமாவது. அடக்கம் - அடக்கமாகும். தெரியுங்கால் - ஆராயுங்கால். செல்வம் உடையாரும் - செல்வம் உள்ளவரும். தன்சேர்ந்தார் - தன்னைச் சேர்ந்தவர்களின். அல்லல் களைப எனின் -துன்பத்தை நீக்குவார் களாயின். செல்வரே - உண்மையான செல்வமுள்ளவராவார். (க-து): அடக்கமும் பிறர்க்கு உதவி செய்வதுமே பெரியார் குணங்களாகும். 18. நல்லினம் சேர்தல் நல்லவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மை 1. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்து ஒழுகி யவ்வும் - நெறி அறிந்த நற்சார்வு சாரக் கெடுமே: வெயில்முறுகப் புல்பனி பற்றுவிட்ட ஆங்கு. (171) (ப-ரை): அறியாப் பருவத்து - அறியாத வயதிலே. அடங்கார் ஓடு - நல்வழியில் அடங்கி நடக்காதவர்களுடன். ஒன்றி-சேர்ந்து. நெறி அல்ல - ஒழுங்கற்ற செயல்களை. செய்து ஒழுகியவும் - செய்து நடந்த தீய செயல்களும். நெறிஅறிந்த - நல்ல வழிகளை அறிந்த. நல்சார்வு சார - நல்லினத்தாருடன் சேர்ந்து வாழ்வதனால். வெயின் முறுக - வெயில் சூடேறியவுடன். புல் பனி - புல்லின் நுனியிலே உள்ள பனித் துளிகள். பற்றுவிட்ட ஆங்கு - அப்புல்லின் தொடர்பின்றி அழிவதுபோல். கெடும் - அவர்களுடைய தீய செயல்களும் மறைந்துவிடும். (க-து): கெட்ட செயல்களிலே பழகியவர்களும் நல்லவர் களுடன் சேர்ந்தால், கெட்ட செயல்களை விட்டு நல்ல செயல் களை மேற்கொள்ளுவார்கள். குறிப்பு:- வெயில் நல்லவர்க்கும் பனி கெட்ட செய்கைக்கும் உவமைகளாக வந்தன. வெயில் இருந்தால் பனித்துளி மறைத்து விடும். நல்லவர் சேர்க்கையால் கெட்ட செயல் ஒழிந்துவிடும். 2. அறிமின் அறநெறி! அஞ்சுமின் கூற்றம்! பொறுமின் பிறர் கடும்சொல்! போற்றுமின் வஞ்சம்! வெறுமின் வினைத்தீயார் கேண்மை; எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். (172) (ப-ரை): அறநெறி அறிமின் - அறநெறிகள் இன்னவை யென்று தெரிந்து கொள்ளுங்கள். கூற்றம் அஞ்சுமின் - எமனுக்கு அஞ்சுங்கள். பிறர் கடும்சொல் பொறுமின் - அறியாதார் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள். வஞ்சம் போற்றுமின் - வஞ்சகச் செயல்களிலே ஈடுபடாமல் உங்கள் நெஞ்சத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். தீவினையார் கேண்மை வெறுமின் - தீவினையே செய்து வாழும் கெட்டவர் களின் நட்பை வெறுத்துத் தள்ளுங்கள். எஞ்ஞான்றும் - ஒவ்வொரு நாளும். பெரியார் வாய்ச்சொல் - பெரியோர் கூறும் நல்ல சொற்களை. பெறுமின் -கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். (க-து): செய்யக்கூடிய நல்ல செயல்களைச் செய்யுங்கள்; செய்யத் தகாத கெட்ட செயல்களைச் செய்யாமல் விட்டு விடுங்கள். 3. அடைந்தார்ப் பிரிவும், அரும்பிணியும், கேடும் உடங்குஉடம்பு கொண்டார்க்கு உறலால்; - தொடங்கிப் பிறப்புஇன்னாது என்றுஉணரும் பேர்அறிவி னாரை உறப்புணர்க! அம்மாஎன் நெஞ்சு. (173) (ப-ரை): அடைந்தார்ப் பிரிவும் - அன்புடன் என்னைச் சேர்ந்திருப்பவரைப் பிரிவதும். அரும்பிணியும் - துன்பந்தரும் நோயும். கேடும் - தீமைகளும். உடம்பு கொண்டார்க்கு - உடம்பைப் பெற்றவர்களுக்கு. உடங்கு உறலால் - ஒன்றாக வருவதனால். தொடங்கி - பிறந்தது முதல். பிறப்பு இன்னாது - இப்பிறப்புத் துன்பம் தருவது. என்று உணரும் - என்று உண்மையை அறியும். பேர் அறிவினாரை - சிறந்த அறிவுள்ள நல்லவர்களை. என் நெஞ்சு - என் மனம். உறப்புணர்க - நண்பர்களாய்ப் பொருந்தும்படி தேடிப் பெறவேண்டும். (க-து): நல்லவர்கள் துணையினால் பிறவித் துன்பம் நீங்கும்; நன்மை பெறலாம். 4. இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும், பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள் பண்புஆற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும் நண்புஆற்றி நட்கப் பெறின். (174) (ப-ரை): இறப்ப நினையுங்கால் - மிகவும் ஆராய்ந்து பார்க்கும்போது. இன்னாது எனினும் - இப்பிறப்பு துன்பந் தருவதாயிருந்தாலும். பிறப்பினுள் - இந்தப் பிறப்பிலேயே. பண்பு ஆற்றும் - நன்மைகளை அறிந்து அவைகளைச் செயல்களிலே நடத்திக் காட்டும். நெஞ்சத்தவர்களோடு - நல்ல மனம் உள்ளவர் களுடன். எஞ்ஞான்றும் - எந்நாளும் விடாமல். நண்பு ஆற்றி - நண்பினராயிருப்பதற்குரிய காரியங்களைச் செய்து. நட்கப் பெறின் - அவர்களுடன் நண்பினராயிருக்கும் தன்மையைப் பெறுவார்களானால். யாரும் - இத்தகையவர்கள் யாராயிருந் தாலும் சரி. அவர்கள் பிறப்பினை முனியார் - துன்பந் தரும் இப்பிறப்பைத் துன்பந் தருவது என்று வெறுக்க மாட்டார்கள். (க-து): யாராயிருந்தாலும் நல்லொழுக்கமுள்ளவர்களின் நட்பைப் பெற்றிருந்தால், அவர்கள் இப்பிறப்பை வெறுக்க மாட்டார்கள். 5. ஊர்அங் கணநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிதுஆகித் தீர்த்தம் ஆம்;- ஓரும் குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. (175) (ப-ரை): ஊர் அங்கண நீர் - ஊரிலே ஓடும் நாற்றம் பிடித்த சாக்கடைத் தண்ணீர். உரவு நீர் - சிறந்த தீர்த்தம் என்று பெயர் பெற்ற குளத்தையோ ஆற்றையோ. சேர்ந்தக்கால் - அடைந்து விட்டால். பேரும் பிறிது ஆகி - அதன் பெயரும் வேறு ஆகி. தீர்த்தம்ஆம் - புண்ணிய தீர்த்தம் என்று பெயர் பெற்றுவிடும் (அதுபோல). ஓரும் - எல்லோரும் அறியும்படியான. குலம் மாட்சி இல்லாரும் - குடியிலே பிறந்த பெருமையில்லாதவர்களும். நலம் மாட்சி - நல்ல சிறந்த குணங்கள் பொருந்திய. நல்லாரைச் சார்ந்து - நல்லவர்களுடன் சேர்ந்து. குன்றுபோல்நிற்பர் - யாவரும் காணும் மலையைப் போல உயர்ந்து புகழுடன் வாழ்வார்கள். (க-து): இழிவாக எண்ணப்படும் குடியிலே பிறந்தவர்களும் நல்லவர் களுடன் கூடினால் புகழ் பெறுவார்கள். குறிப்பு: இழிந்த பிறப்புள்ளவர்க்குச் சாக்கடை நீர் உவமானம்; நற்குணம் உள்ளவர்க்குச் சிறந்த தீர்த்தம் உவமானம். புகழுக்குக் குன்று உவமானம். 6. ஒண்கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் குன்றிய சீர்மையர் ஆயினும் சீர்பெறுவார், குன்றுஅன்னார் கேண்மை கொளின். (176) (ப-ரை): ஒள்கதிர் - விளக்கமான கதிர்களையுடைய. வாள்மதியம் - ஒளி பொருந்திய சந்திரனை. சேர்தலால் -சேர்ந்து நிற்பதனால். ஓங்கிய -உயர்ந்த. அம்கண் விசும்பின் -அழகிய அகலமான வானத்திலே உள்ள. முயலும் - சந்திரனோடுள்ள முயற் கறையும். தொழப்படும் - சந்திரனை வணங்கும் போது சேர்த்து வணங்கப்படும் (அதுபோல). குன்றிய சீர்மையர் ஆயினும் - அழிந்த புகழுள்ளவர் ஆனாலும். குன்று அன்னார் - மலைபோல் உயர்ந்து நிற்கும் பெரியோர்களின். கேண்மை கொளின்- நட்பைக் கொள்வார் களானாலும். சீர் பெறுவர் -பெருமை பெற்று விளங்குவார்கள். (க-து): புகழில்லாதவர்களும், புகழுள்ள நல்லவர்களுடன் சேர்ந்து வாழ்வார்களானால் புகழ் பெறுவார்கள். குறிப்பு: புகழ் உள்ள உயர்ந்தவர்களுக்குச் சந்திரன் உவமானம்: புகழ் அற்றவர்க்கு முயற்கறை உவமானம். 7. பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறம்தெரிந்து தோன்றாதாம்; - தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. (177) (ப-ரை): பாலோடு அளாய நீர் - பாலுடன் ஒன்றாகக் கலந்த தண்ணீர். பால் ஆகும்அல்லது - பாலாகவே மாறி விடுமே அல்லாமல். நீராய் - தண்ணீராக. நிறம் தெரிந்து - தனி நிறமாகத் தெரிந்து. தோன்றாது ஆம் - காணப்படாது (இதுபோல). தேரின் - ஆராய்ந்து பார்த்தால். சிறியார் சிறுமையும் - கீழோர்களின் இழிந்த குணமும். நல்ல பெரியார் - அவர்கள் சிறந்த பெரியவர் களுடன் சேர்ந்து வாழ்வார்களாயின். பெருமையைச் சார்ந்து - அவர்கள் பெருமையோடு சேர்ந்து நின்று. தோன்றாது ஆம் - காணப்படாமல் மறையும். (க-து): கீழோர்கள் பெரியோர்களுடன் சேர்ந்து வாழ்வார் களாயின் அவர்களுடைய இழிவு மறைந்து விடும். குறிப்பு: பெரியோர்க்குப் பால் உவமானம்; சிறியோர்க்கு நீர் உவமானம். 8. கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல் ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு; மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்றார் சினம். (178) (ப-ரை): கொல்லை - புன்செய்யிலும். இரும்புனத்து - பெரிய நன்செய்யிலும். குற்றி அடைந்தபுல் - மரக்கட்டையைப் பற்றிப் படர்ந்திருக்கும் புல். உழவர் உழு படைக்கு - உழவர்களின் உழுகின்ற ஆயுதமாகிய கலப்பைக்கு. ஒல்காவே ஆகும் - சிறிதும் தளர்ச்சியடையாமல் நிற்கும் (அதுபோல). மெல்லியரே ஆயினும் - மிகவும் வலிமையற்ற வராயிருந்தாலும். நல்சார்வு - நல்ல வலிமையும் குணமும் உள்ள பெரியோர்களின் துணையை. சார்ந்தார் மேல் -சேர்ந்து நிற்பவர்களின் மேல். செற்றார் சினம் - பகைவர்களின் கோபம். செல்லாஆம் - சிறிதும் செல்லாது. (க-து): மெலியவராயினும் வலியாரைத் துணைக் கொண்டு நிற்பார்களாயின், அவர்களைப் பகைவரால் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பு: மெலியவருக்கு உவமானம் புல்: நல்ல வலிமை யுள்ளவர்க்கு உவமானம் குற்றி; பகைவருக்கு உவமானம் உழவர்; பகைவர் சினத்துக்கு உவமானம் உழுபடை. 9. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர்;- கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும். (179) (ப-ரை): நில நலத்தால் - நிலத்தின் வளத்தினால். நந்திய - பெருகிய. நெல்லேபோல் -நெல்லைப்போல். தம் தம் - தம்முடைய. குலநலத்தால் - இனத்தாரின் சிறப்பினால். ஆகுவர் சான்றோர் - ஒழுக்கமும் உயர்வும் உள்ளவராக வாழ்வர் அறிவுள்ளவர்கள். கல நலத்தை - கப்பலின் வலிமையை. தீவளி சென்று - கொடிய புயற்காற்றுப் போய். சிதைத்த ஆங்கு - அழித்ததைப்போல. சான்றாண்மை -ஒருவருடைய நிறைந்த குணங்கள். தீயினம் சேர - கெட்டவர்களுடன் சேர்ந்து. நிற்பதனால் கெடும் - அழிந்துவிடும். (க-து): எவ்வளவுதான் சிறந்த அறிவும், ஒழுக்கமும் உள்ளவராயினும், கெட்டவர்களுடன் கூடி வாழ்வார்களாயின் அவர்களுடைய அறிவும் ஒழுக்கமும் கெட்டுப் போய்விடும். குறிப்பு: நல்லினத்திற்கு நிலம் உவமானம்; தீயினத்துக்குக் கொடியபுயல் உவமானம். 10. மனத்தால் மறுவிலர் ஏனும்தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்; - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால். (180) (ப-ரை): மனத்தால் - உள்ளத்தால். மறு இலர் ஏனும் - குற்றம் இல்லாத வராயினும். தாம்சேர்ந்த இனத்தால் -தாம் கூடியிருக்கும் தீயினத்தின் காரணமாக. இகழப்படுவர் - அவர் பிறரால் பழிக்கப்படுவார். புனத்து - காட்டிலே. எறிபுனம் - வெட்டிக்கிடக்கின்ற மரங்களிலே. தீ பட்டக் கால் -நெருப்புப் பற்றிக்கொண்டால். வெறிகமழ் -நறுமணம் வீசுகின்ற. சந்தனமும் - சந்தனக்கட்டையும். வேங்கையும் - வேங்கை மரத்துடன் சேர்ந்து. வேம் - வெந்து போகும். (க-து): கெட்டவர்களுடன் கூடியிருந்தால் நல்லவர்களுக்கும் கெட்ட பெயர் தான் உண்டாகும். கெட்டவர்களுக்கு அழிவு வரும் போது அவர்களுடன் சேர்ந்து நல்லவர்களுக்கும் அழிவு வரும். குறிப்பு: மனத்தால் மறுவற்றவர்க்கு சந்தன மரம் உவமானம்; தீயினத்திற்கு வேங்கை மரம் உவமானம். 19. பெருமை பெருமை தரும் செயல் இவை, இழிவு தரும் செயல் இவை என்று கூறுவது 1. ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால் காதல் அவரும் கருத்தல்லர்; - காதலித்து ஆதும்நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள். (181) (ப-ரை): ஈதல் இசையாது - வறியார்க்கு ஈதலாகிய பெருமை யுள்ள செய்கையைச் செய்யத் துணியாமல். சேண் நீங்குதலால் -அச்செயலை விட்டு ஒதுங்கி நிற்பதனால். காதல் அவரும் - தம்மால் காதலிக்கப்பட்ட பெண்களும். கருத்து அல்லர் - பின்னால் தம்மைப்பற்றி நினைக்க மாட்டார்கள். காதலித்து - ஆதலால் இல்லறத்திலே காதல் வைத்து. ஆதும் நாம் - அதனால் இன்பம் அடைவோம் நாம். என்னும் அவாவினை - என்னும் ஆசையை. கைவிட்டு - விட்டுவிட்டு. போவதே - அறநெறியில் செல்வதே. பொருள் போலும் - சிறந்த பொருளாக இருக்கும் போலும். (க-து): இளமைப் பருவத்திலே நல்லறங்களைச் செய்ய முயல்வதே சிறந்ததாகும். 2. இல்சார்வின் ஏம்ஆர்ந்தேம் ஈங்கு அமைந்தேம் என்றெண்ணிப் பொச்சாந்து ஒழுகுவர் பேதையார்;- அச்சார்வு நின்றன போன்று நிலையா எனஉணர்ந்தார் என்றும் பரிவது இலர் (182) (ப-ரை): இல் சார்வின் - இல்லறத்தில் சார்ந்து நிற்பதனா லேயே. ஏம்ஆர்ந்தேம் - இன்பமெல்லாம் பெற்றோம். ஈங்கு - இவ்வுலகில். அமைந்தேம் - எல்லா இன்பங்களும் பெற்று வாழ்கின்றோம். என்று எண்ணி - என்று நினைத்து. பொச்சாந்து - அழியாத அறநெறியை மறந்து. ஒழுகுவர் பேதையார் - வாழ்வார் அறிவற்றவர். அச்சார்வு - அந்த இல்லறத்தின் சார்பாக வரும் இன்பங்கள். நின்றன போன்று - நிலைத்திருப்பவை போலக் காணப்பட்டு. நிலையா - இறுதியில் நிற்காமல் அழிந்து விடுவன. என உணர்ந்தார் - என்று அறிந்தவர்களே. என்றும் - எந்த நாளும். பரிவது இலர் - துன்பம் அடையமாட்டார்கள். (க-து): இல்லறத்தால் வரும் இன்பம் நிலையற்றவை என்று அறிந்தவர்களே எந்நாளும் இன்புற்று வாழ்வார்கள். 3. மறுமைக்கு வித்து மயல்இன்றிச் செய்து சிறுமைப் படாதேநீர் வாழ்மின்! - அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேறுஆம்! காரணம் இன்றிப் பலவும் உள. (183) (ப-ரை): நின்றுழி நின்றே - உடம்பு நின்ற நிலையில் இருந்தபடியே. நிறம்வேறு ஆம் - அதன் தன்மை இளமை மூப்பு முதலிய பருவங்களால் வேறுபடும். காரணம் இன்றி - காரணம் இல்லாமலே திடீரென்று. பலவும்உள - நோய்கள் பலவும் உண்டாகும். மறுமைக்கு - ஆதலால் மறுமைக்கு. வித்து - காரணமான காரியங்களை. மயல் இன்றிச் செய்து - மயக்க மில்லாமல் தெளிவுடன் செய்து. சிறுமைப்படாதே - துன்பப் படாமல். நீர் அறிஞராய் வாழ்மின் - நீங்கள் அறிவுள்ளவர்களாய் வாழுங்கள். (க-து): நல்ல உடம்புடன் வாழும்போதே மறுமையில் நன்மை பெறுதற்கான செயல்களைச் செய்து அறிவுள்ளவராய் வாழுங்கள். 4. உறைப்புஅரும் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி, இறைத்து உணினும் ஊர்ஆற்றும் என்பர்; கொடைக் கடனும் சாஅஅயக் கண்ணும் பெரியோர்போல் மற்றையார் ஆஅஅயக் கண்ணும் அரிது. (184) (ப-ரை): உறைப்புஅரும் காலத்தும் - மழைத் துளி அரிதாகி விட்ட காலத்திலும். ஊற்றுநீர்க் கேணி - நன்றாக ஊறுகின்ற நீரையுடைய கேணி. இறைத்து உணினும் - தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக இறைத்து உண்டாலும். ஊர் ஆற்றும் -ஊர் முழுவதுக்கும் உதவி செய்யும். என்பர் - என்று கூறுவர். கொடைக் கடனும் - வறியார்க்குக் கொடுப்பது என்னும் கடமை யையும். சாயக்கண்ணும் - வறுமையால் தளர்ந்த காலத்திலும். பெரியோர் - பெருமையுள்ள செயல் இன்னதென்று அறிந்தவர்கள் செய்வார்கள். போல் - அவர்களைப் போல. மற்றையார் - பெருமையை அறியாத சிறியவர்கள். ஆயக்கண்ணும் - செல்வம் உண்டாகிய காலத்தும். அரிது - செய்யமாட்டார்கள். (க-து): வறுமைக்காலத்திலும் பெருமையுள்ள செயல் இன்னதென்று உணர்ந்தவர்கள் ஈதலைச் செய்வார்கள். குறிப்பு: ஊற்றுநீர்க்கேணி பெரியோருக்கு உவமானம். 5. உறுபுனல் தந்துஉலகு ஊட்டி, அறும்இடத்தும், கல்ஊற் றுழிஊறும் ஆறேபோல் - செல்வம் பலர்க்குஆற்றிக் கெட்டுஉலந்தக் கண்ணும், சிலர்க்கு ஆற்றிச் செய்வர் செயற்பா லவை. (185) (ப-ரை): உறுபுனல் தந்து - மிகுந்த தண்ணீரைக் கொடுத்து. உலகுஊட்டி - உலகத்தாரை உண்ணச்செய்து, அறும் இடத்தும் - தண்ணீர் வறண்ட போதும். கல்ஊற்றுழி தோண்டுகின்ற ஊற்றிலே. ஊறும் - தண்ணீர் ஊற்றெடுத்து - உண்பிக்கின்ற. ஆறேபோல் - ஆற்றைப்போல. செல்வம் - தம்மிடத்திலிருந்த செல்வத்தை. பலர்க்கு ஆற்றி - பலர்க்கும் உதவி. கெட்டு உலந்தக்கண்ணும் - அதனால் செல்வம் கெட்டழிந்து வறியரான போதும். சிலர்க்கு ஆற்றி - சிலர்க்காவது உதவி செய்து. செயல் பாலவை செய்வர் - தம்மால் செய்யக்கூடிய உதவிகளைச் செய்வார்கள். (க-து): பெருந்தன்மையுள்ளவர்கள் வறுமையால் வாடுங் காலத்திலும் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். குறிப்பு: வறுமை வந்தாலும் தன்னை அடைந்தவருக்கு உதவுவோர்க்கு நீர் வற்றிய ஆறு உவமானம். 6. பெருவரை நாட! பெரியார்கண் தீமை கருநரைமேல் சூடேபோல் தோன்றும் - கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் (186) (ப-ரை): பெருவரை நாட - பெரிய மலைகள் அமைந்த நாட்டையுடைய பாண்டியனே. பெரியார் கண் - பெரியவர் களிடம் உண்டான. தீமை - குற்றம். கருநரைமேல் - பெரிய வெள்ளைக் காளையின் மேல். சூடேபோல் தோன்றும் - போடப்பட்ட சூடுபோல் எல்லார்க்கும் காணப்படும். கருநரையை - சிறியவர்கள் பெரிய பசுவை. கொன்று அன்ன - கொன்றதைப் போன்ற. இன்னா செயினும் - கொடுங்குற்றங் களைச் செய்வார் களானாலும். சிறியார் மேல் - அந்தச் சிறியவர்கள் மேல். ஒன்றானும் - ஒரு குற்றமாவது. தோன்றாக் கெடும் - காணாமல் ஒழிந்துவிடும். (க-து): பெரியோர்கள் தீமை செய்தால் அதை எல்லோரும் கண்டு இகழ் வார்கள். சிறியோர் தீமை செய்தால் அதை யாரும் பொருட் படுத்தமாட்டார்கள். குறிப்பு: பெரிய வெள்ளைக் காளை பெரியாருக்கு உவமானம். 7. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண் பசைந்த துணையும் பரிவாம்- அசைந்த நகையேயும் வேண்டாத நல்அறிவி னார்கண் பகையேயும் பாடு பெறும். (187) (ப-ரை): சிறுமை இசைந்த - இழிந்த குணங்கள் பொருந்திய. இயல்பு - நல்ல குணங்கள். இலாதார்கண் - இல்லாதவர்களிடம். பசைந்ததுணையும் - நட்புக் கொண்டிருக்கும் வரையிலும். பரிவுஆம் - துன்பமே உண்டாகும். அசைந்த - அஞ்சி நடுங்கத் தகுந்த கெட்ட செயல்களை. நகையேயும் - விளையாட்டிற் காகக்கூட. வேண்டாத - செய்ய விரும்பாத. நல் அறிவினார்கண் - நல்ல அறிவுள்ளவர்களிடம் கொள்வது. பகைஏயும் - பகைமை யானாலும். பாடுபெறும் - அது பெருமையடையும். (க-து): கெட்டவர் நட்பு கெடுதி தரும். நல்லறிவுள்ளவர் களுடன் பகை கொண்டாலும் தீமையில்லை. 8. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து ஒன்னாருள் கூற்றுஉட்கும் உட்குஉடைமை;-எல்லாம் சலவருள் சாலச் சலமே; நலவருள் நன்மை வரம்பாய் விடல். (188) (ப-ரை): மெல்லிய - பலமற்ற. நல்லாருள் - நல்லவர் கூட்டத்தில் பழகும்போது. மென்மை -பலமற்றவர்களைப் போலவே பழக வேண்டும். ஒன்னாருள் - பகைவர் கூட்டத்தில் பழகும்போது. அது இறந்து - அந்த பலமற்ற தன்மையை விட்டு விட்டு. கூற்று உட்கும் - கூற்றவனும் கண்டு அஞ்சத் தகுந்த. உட்கு உடைமை - பயங்கரக் குணம் உள்ளவராய்ப் பழக வேண்டும். எல்லாம் - எல்லாவற்றைப் பற்றியும். சலவருள் - பொய் பேசும் கூட்டத்தில் பழகும்போது. சாலச் சலமே - மிகவும் பொய்யுடைய வராகவே பழக வேண்டும். நலவருள் - நல்லவர்கள் கூட்டத்தில் பழகும்போது. நன்மை -நன்மைகளுக்கெல்லாம். வரம்பு ஆய்விடல் - ஒரு எல்லையாக இருப்பவர்களைப் போலவே பழக வேண்டும். (க-து): எந்தக் கூட்டத்தார் எந்தத் தன்மையுள்ளவர்களா யிருக்கின்றனர் என்பதை அறிந்து அவர்களுக்குத் தகுந்தாற் போல் நாமும் நடக்க வேண்டும். 9. கடுக்கி ஒருவன் கடும்குறளை பேசி மயக்கி விடினும் மனப்பிரிப்பு ஒன்றுஇன்றி துளக்கம் இலாதவர் தூய மனத்தார் விளக்கினுள் ஒண்சுடரே போன்று. (189) (ப-ரை): கடுக்கி - தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு. ஒருவன் - ஒருவன் மற்றொருவன் மீது. கடும் குறளை பேசி - கடுமையான புறஞ் சொற்களைப் பேசி. மயக்கிவிடினும் - தன் அறிவை மயக்கிவிட்டாலும். மனப் பிரிப்பு -மனவேறுபாடு. ஒன்று இன்றி - ஒன்றும் இல்லாமல். துளக்கம் இல்லாதவர் -அசைவு இல்லாமல் ஒரு நிலையில் நிற்பவரே. விளக்கினுள் - விளக்கில் உள்ள. ஒண்சுடரே போன்று - ஒளிவீசும் சுடரைப் போல. தூய மனத்தார் - குற்றமற்ற உள்ளமுடையவராயிருப்பர். (க-து): பிறர் கூறும் புறஞ் சொற்களுக்குச் செவி கொடாத வர்கள் குற்றமற்ற நெஞ்சமுள்ளவர்களாய் வாழ முடியும். 10. முன்துத்தும் துத்தினை நாளும் அறஞ்செய்து பின்துத்துத் துத்துவர் சான்றவர்; அத்துத்து முக்கூற்றம் நீக்கி, முடியும் அளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும். (190) (ப-ரை): முன்துத்தும் துத்தினை - முன்னால் உண்ணும் உணவை. நாளும் ஒவ்வொரு நாளும். அறம் செய்து - தருமம் செய்துவிட்டு. பின் துத்து - பிறகு மிஞ்சியிருக்கும் உணவை. துத்துவர் சான்றவர் - உண்பார்கள் அறிவும் நற்பண்பும் உள்ள வர்கள். அத்துத்து - அந்த உணவு. முக்குற்றம் நீக்கி - மூன்று குற்றங்களையும் நீக்கி. முடியும் அளவு எல்லாம் - இறக்கும் காலம் வரும் வரையிலும். துக்கத்துள் - துன்பத்தில் அகப்பட்டு வருந்தாமல். நீக்கிவிடும் - நீக்கிக் காப்பாற்றிவிடும். (க-து): முதலில் தருமம் செய்த பின்னரே, அறிவுடை யவர்கள் உணவு கொள்ளுவார்கள். குறிப்பு: உணவு தருமமாவது:- உண்பதற்கு முன் காக்கைக்குச் சோறிடல், குழந்தைகளுக்குச் சோறு கொடுத்தல், வறிஞர்களுக்கு உணவு கொடுத்தல் போன்ற அறமாகும். 20. தாளாண்மை முயற்சியின் பெருமை, அதனால் அடையும் இலாபம் இவற்றைப் பற்றிக் கூறுவது 1. கோள்ஆற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல் கேள்ஈவது உண்டு, கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்கு உண்டோ தவறு? (191) (ப-ரை): கோள் ஆற்ற - கொள்ளும் நீரை மிகுதியாக. கொள்ளா - ஏற்றுக்கொள்ளாத. குளத்தின்கீழ் - குளத்தின் ஆதரவிலே வாழ்கின்ற. பைம்கூழ்போல் - பயிரைப்போல். கேள் ஈவது உண்டு - தம் உறவினர் கொடுப்பதை வாங்கி உண்டு வாழ்கின்ற. கிளைகளோ - உறவினர்களோ. துஞ்சுப - அவ்வுற வினரிடம் பொருளற்றபோது தாம் பட்டினி கிடந்து இறப்பர். வாள் ஆடு - வாள் பிடித்து ஆடுகின்ற. கூத்தியர் கண்போல் - நடன மாதர்களின் கண்களைப்போல. தடுமாறும் - பல முயற்சிகளிலும் ஈடுபடுகின்ற. தாள் ஆளர்க்கு - முயற்சியுள்ள வர்களுக்கு. தவறு உண்டோ - கெடுவதால் வரும் துன்பம் உண்டாகுமோ? (உண்டாகாது; அவர்கள் முயற்சி வெற்றி பெறும்). (க-து): பிறரை நம்பி வாழ்வோர் இறுதியில் துன்புறுவர். நம்பிக்கையுடன் முயல்வோர் இன்புறுவர். குறிப்பு: உதவும் கேளிர்க்குக் குளம் உவமை. நடனமாதர் கண்கள் முயற்சி செய்வோர்க்கு உவமை. 2. ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம், காழ்கொண்ட கண்ணே களிறுஅணைக்கும் கந்துஆகும்; வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின். (192) (ப-ரை): ஆடு கோடுஆகி - காற்றினால் அசைகின்ற சிறிய கொம்பாகி. அதர் இடை - வழியிலே. நின்றதும் - நின்ற இளங் கொம்பும். காழ் கொண்ட கண்ணே - தானே வளர்ந்து வயிரம் பாய்ந்தபோது. களிறு அணைக்கும் - ஆண் யானையைக் கட்டி வைக்கின்ற. கந்து ஆகும் - பலமுள்ள கட்டுத் தறியாகப் பயன் படும். ஒருவன்தான் - ஒருவன் தானாகவே. தன்னைத் தாழ்வின்றி - தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல். செயின் - தன் முயற்சி யினால் உயர்த்திக் கொள்ளுவானாயின். வாழ்தலும் - அவன் வாழ்வதும். அன்ன தகைத்தே - அந்த வயிரம் பாய்ந்த கொம்பு போலாகும். (க-து): தன் முயற்சியினால் சிறந்து வாழ்கின்றவனை யாரும் கெடுக்க முடியாது. குறிப்பு: தன் முயற்சியால் சிறந்து வாழ்கின்றவனுக்குத் தானே வளர்ந்து வயிரம் பெற்ற கொம்பு உவமை. 3. உறுபுலி ஊன்இரை இன்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்;- அறிவினால் கால்தொழில் என்று கருதற்க; கையினால் மேல்தொழிலும் ஆங்கே மிகும். (193) (ப-ரை): உறுபுலி - வலிமையுள்ள புலியானது. ஊன் இரையின்றி - பெரிய மாமிசமாகிய இரை கிடைக்காமல். ஒருநாள் - ஒரு நாளில். சிறுதேரை பற்றியும் - சிறிய தேரையைப் பிடித்தும். தின்னும் - உணவாக உட்கொள்ளும். கால்தொழில் என்று - ஆதலால் எத்தொழிலையும் காலால் செய்து முடிக்கக் கூடிய இழிந்த தொழில் என்று. அறிவினால் கருதற்க - அலட்சிய புத்தியினால் நினைக்காதே. ஆங்கே - அந்தக் காலால் செய்யக் கூடிய தொழில் அப்பொழுதே. கையினால் - கையினால் வருந்திச் செய்யக்கூடிய. மேல் தொழிலும் - மேலான தொழிலாகவும் மிகும் - சிறந்து நிற்கும். (க-து): எளிதிலே செய்து முடிக்கக்கூடிய சிறிய தொழிலா னாலும் கருத்தூன்றி முயற்சியுடன் செய்து முடிக்க வேண்டும். 4. இசையாது எனினும்இயற்றி ஓர் ஆற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால் கண்டல் திரை அலைக்கும் கானல்அம் தண்சேர்ப்ப! பெண்டிரும் வாழாரோ மற்று. (194) (ப-ரை): கண்டல் - கரையில் உள்ள தாழையை. திரை அலைக்கும் -அலைகள் வீசி அசைக்கின்ற. கானல் - கடற்கரைச் சோலையையுடைய. அம்தண் சேர்ப்ப - அழகிய குளிர்ந்த கடல் துறையையுடைய பாண்டியனே. இசையாது எனினும் - எடுத்துக் கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற முடியாததாயிருந் தாலும். இயற்றி - முயன்று முடித்து. ஓர் ஆற்றால் - ஒரு வழியாலும். அசையாது நிற்பது ஆண்மை ஆம் - தளர்ச்சியின்றி வாழ்வதே ஆண்மையாம். இசையும் கால் - எளிதில் முடியு மானால். பெண்டிரும் வாழாரோ - பெண்களும் அதைச் செய்து வாழ மாட்டார்களோ? (க-து): தொடங்கிய செயலை விடாமல் செய்து முடிப்பதே ஆண்மையும் முயற்சியுமாகும். 5. நல்ல குலம்என்றும் தீய குலம்என்றும் சொல்அளவு அல்லால் பொருள்இல்லை;- தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ,தவம், கல்வி,ஆள்வினை என்றுஇவற்றான் ஆகும் குலம் (195) (ப-ரை): நல்ல குலம் என்றும் - ஒரு குடியை நல்ல குடியென்றும். தீய குலம் என்றும் - கெட்ட குடி என்றும். சொல் அளவு அல்லால் - கூறினால். அது சொல்லின் அளவிலேயே நிற்குமே அன்றி. பொருள் இல்லை - அச்சொல்லுக்கு ஏற்பப் பொருள் இராது. தொல் சிறப்பின் - பழமையான பெருமை யுள்ள. ஒண் பொருள் ஒன்றோ - ஒளி பொருந்திய செல்வம் ஒன்றினால் மட்டுமா உயர்ந்த குடி? தவம் கல்வி ஆள்வினை - உண்மையான உயர்ந்த குடி என்பது தவம், கல்வி, முயற்சி. என்று இவற்றான் - என்ற இவற்றால். குலம் ஆகும் - உண்மையான உயர்ந்த குடியாகும். (இவையில்லாத குடி தாழ்ந்த குடியாகும்). (க-து): செல்வத்தால் மட்டும் ஒரு குடி உயர்ந்த குடியாகாது; தவம், கல்வி, முயற்சி இவற்றாலேயே உயர்ந்த குடியாகும். 6. ஆற்றும் துணையும் அறிவினை உள்அடக்கி ஊக்கம் உரையார் உணர்வுஉடையார்; - ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு. (196) (ப-ரை): உணர்வு உடையார் - அறிவுள்ளவர்கள். ஆற்றுந் துணையும் - தாம் எடுத்துக்கொண்ட காரியத்தைச் செய்து முடிக்கும் வரையிலும். அறி வினை - அறிவை. உள் அடக்கி - உள்ளத்திலே அடக்கி வைத்துக்கொண்டு. ஊக்கம் உரையார் - தமது முயற்சியை வெளிப்படையாக உரைக்க மாட்டார்கள். ஊக்கம் - பிறர் உள்ளத்தில் உள்ளதை. உறுப்பினால் ஆராயும் - அவர்களுடைய முகம், கண் முதலிய உறுப்புக்களால் தெரிந்து கொள்ளும். ஒண்மை உடையார் - கூர்மையான அறிவுள்ளவர் களின். குறிப்பின் கீழ் - எண்ணத்தின் கீழேயே. உலகு பட்டது - உலகம் அடங்கிக் கிடந்தது. (க-து): அறிவுடையவர் பிறரிடம் கூறாமலே தாம் எடுத்துக் கொண்ட செயல்களைச் செய்து முடிப்பார்கள். 7. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றுஅதன் வீழ்ஊன்றி ஆங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின், தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். (197) (ப-ரை): சிதலை - கறையானால். தினப்பட்ட - தின்னப் பட்டு வலிமை யிழந்த. ஆலமரத்தை - ஆலமரத்தை. மதலையாய் - தூணாக நின்று. அதன் வீழ் - அதனுடைய விழுது. ஊன்றி யாங்கு - நிலத்திலே ஊன்றி நின்று காப்பாற்றுவது போல. தந்தைகண் - தந்தையினிடம். குதலைமை - அவன் செய்யும் செயலிலே சோர்வு. தோன்றின் - உண்டாகுமானால். தான்பெற்ற புதல்வன் - அவன் பெற்றெடுத்த மகன் முன்வந்து. மறைப்ப - தந்தையின் சோர்வை மறைப்பதனால். கெடும் - அவனுக்கு வர விருந்த அவமானம் அழியும். (க-து): தந்தைக்கு அவமானம் வராமல் காப்பாற்ற வேண்டியது மகன் கடமை. குறிப்பு: புதல்வனுக்கு ஆலமரத்தின் விழுது உவமை. 8. ஈனமாய் இல்லிருந்து இன்றி விளியினும் மானம் தலைவருவ செய்பவோ;- யானை வரிமுகம் புண்படுக்கும் வள்உகிர் நோன்தாள் அரிமா மதுகை யவர். (198) (ப-ரை): யானை - யானையைக் கண்டபோது அதன் மத்தகத்திலே பாய்ந்து. வரிமுகம் - வரி படர்ந்த அதன் முகத்தை. புண் படுக்கும் - புண்படச் செய் கின்ற. வள் உகிர் - கூர்மையான நகங்களையும். நோன்தாள் - வலிமை யையும் உடைய. அரிமா - சிங்கத்தைப் போன்ற. மதுகையவர் - வலிமை யுள்ளவர்கள். ஈனமாய் - மற்றவர்களால் இகழத்தகுந்த பலவீனராய். இல் இருந்து - வீட்டிற்குள்ளேயே அடங்கியிருந்து. இன்றிவிளியினும் - உண வின்றி இறந்தாலும்கூட. மானம் தலை வருவ - அவமானம் உண்டாகக் கூடிய செயல்களை. செய்பவோ - துணிந்து செய்வார்களோ? (செய்ய மாட்டார்கள்). (க-து): நல்ல அறிவும் ஆற்றலும் உடையவர்கள் எவ்வளவு தான் துன்புற்றாலும் இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள். குறிப்பு: சிறந்த அறிவும் வலிமையும் உள்ளவர்களுக்குச் சிம்மம் உவமானம். 9. தீங்கரும்பு ஈன்ற திரள்கால் உளைஅலரி தேம்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும் உயர்குடி உள்பிறப்பின் என்ஆம், பெயர்பொறிக்கும் பேர்ஆண்மை இல்லாக் கடை? (199) (ப-ரை): பெயர் பொறிக்கும் - ஒருவன்தன் பெயரைக் கல்லிலே எழுதக் கூடிய சிறந்த செயல்களைச் செய்யும். பேர் ஆண்மை - சிறந்த ஆண்மை யுடையவனாக. இல்லாக்கடை - இல்லாதபோது. ஓங்கும் - அவன் மிகவும் சிறந்த. உயர் குடியுள் பிறப்பின் - உயர்ந்த குடியிலே பிறந்திருப்பதனால் மட்டும். என் ஆம் - என்ன பயனுண்டாகும்? தீம் கரும்பு ஈன்ற - இனிய கரும்பிலே பிறந்த. திரள்கால் - திரண்ட அடியை உடைய. உளை -குதிரை யின் பிடரி மயிரைப் போன்ற. அலரி - மலர். தேம்கமழ் நாற்றம் - தேன் மணம் கமழும் நறுமணத்தை. இழந்த - இழந்து நிற்கின்ற. ஆங்கு - அத் தன்மைபோலக் காணப்படுவர். (க-து): சிறந்த செயல்களைச் செய்து புகழ் பெறும் திறமை யற்றவர் உயர்ந்த குடியில் பிறந்தும் பயன் இல்லை. குறிப்பு: புகழ்பெறும் செயலைச் செய்யத் திறமையற்ற உயர்குடியிலே பிறந்தவர், மணமற்ற கரும்பின் மலரைப் போன்றவர். 10. பெருமுத் தரையர் பெரிதுஉவந்து ஈயும் கருனைச்சோறு ஆர்வர் கயவர்; - கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். (200) (ப-ரை): பெருமுத்தரையர் - பெருமையுள்ள முத்தரையர் என்னும் வள்ளல். பெரிது உவந்து ஈயும் - மிகவும் மகிழ்ந்து கொடுக்கும். கருனைச் சோறு - பொரிக்கறியோடு கூடிய உணவை. கயவர் ஆர்வர் - கீழானவர்கள் தாம் வாங்கி உண்டு மகிழ்வார்கள். கருனையை - பொரிக் கறியைப் பற்றி. பேரும் அறியார் - அதன் பெயரைக்கூட அறியமாட்டார். நனி விரும்பு - மிகவும் விரும்புகின்ற. தாளாண்மை - முயற்சியினால் பெற்ற. நீரும் - நீர் வடிவான உணவும். அமிழ்து ஆய்விடும் - அந்த முயற்சியுள்ளவர்க்கு அமிழ்தம்போல் இனிமையாக இருக்கும். (க-து): முயற்சியுள்ளவர்கள், தங்கள் உழைப்பால் பெற்ற உணவையே சுவையுடன் உண்பர். குறிப்பு: ‘பெருமுத்தரையர்’ என்பதற்குச் சிறந்த முத்துக் களையுடைய பாண்டிய மன்னர் என்றும் பொருள் கூறுவர். முத்தரையர் என்பவர் ஒரு சிற்றரசர், வள்ளல் என்பது வரலாறு. நட்பியல் 21. சுற்றந் தழால் உறவினரை ஆதரித்து உதவி செய்தல் 1. வயாவும், வருத்தமும், ஈன்றக்கால் நோவும், கவா அன் மகற்கண்டு தாய்மறந்த ஆங்கு; அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். (201) (ப-ரை): வயாவும் - மசக்கையின் துன்பமும். வருத்தமும் - கருவடைந் திருந்த காலத்தில் பட்ட துன்பமும். ஈன்றக்கால் நோவும் - கருவுயிர்த்த போது அடைந்த துன்பமும். கவான் மகன் கண்டு - தன் துடையிலே மகனைக் கண்டபோது. தாய்மறந்து ஆங்கு - ஈன்ற தாயின் உள்ளத்தி லிருந்து மறைந்துவிடுவதைப் போல். அசா - பலவகையான சோர் வினாலும். தான் உற்ற வருத்தம் - தான் அடைந்த துன்பமானது. உசா - அதைப் பற்றிக் கேட்டு உதவி செய்கின்ற. தன் கேளிரைக் காண - தன் உறவினரைக் காணும்போது. கெடும் - அழியும். (கவஅன், அசாஅ, உசாஅ: உயிர் அளபெடைகள்.) (க-து): அன்புள்ள உறவினரைக் காணும்போது தான் அடைந்த துன்பமெல்லாம் மறையும். 2. அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்ஆண் மகற்குக் கடன் (202) (ப-ரை): அழல்மண்டு போழ்தின் - வெய்யில் நிறைந்த காலத்தில். அடைந்த வர்கட்கு எல்லாம் - தன் அடியைச் சேர்த்தவர்களுக்கெல்லாம். நிழல் மரம் போல் - நிழலைத் தரும் மரத்தைப்போல. நேர் ஒப்பத் தாங்கி - நேரே ஒத்து நின்று தன்னை அடைந்தவர்களைக் காப்பாற்றி. பழுமரம் போல் - ஊரின் நடுவிலே பழுத்திருக்கும் மரத்தைப் போல. பல்லார் பயன் துய்ப்ப - பலரும் தன்னால் நல்ல பயன் அடையும்படி செய்து. தான் வருந்தி வாழ்வதே - தான் துன்புற்று வாழ்வதே. நல் ஆண்மகற்கு கடன் - நல்ல ஆண்மகனுடைய கடமையாகும். (க-து): தான் துன்புற்றாலும் பிறருக்கு உதவி செய்யப் பின்வாங்கா மலிருப்பதே ஆண்மகனுடைய கடமையாகும். குறிப்பு: நிழல் தரும் மரம், பழுத்த மரம் இரண்டும் சிறந்த ஆண்மகனுக்கு உவமானம். 3. அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னர் பெரியோர்;-அடுத்து அடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. (203) (ப-ரை): அடுக்கல் மலைநாட - தொடர்ந்த மலைகளை யுடைய நாட்டின் தலைவனாகிய பாண்டியனே. பெரியோர் - அறிவும் நற்குணமும் அமைந்தவர்கள். தன் சேர்ந்தவரை - துன்பந் தாங்காமல் உதவி தேடித் தன்னை அடைந்தவர்களை. எடுக்கலம் என்னார் - பாதுகாக்க மாட்டோம் என்று ஒரு பொழுதும் சொல்ல மாட்டார்கள். அடுத்து அடுத்து - வரிசை வரிசையாக. வன்காய் - கனமுள்ள காய்கள். பலப்பல காய்ப்பினும் - மிகப் பல காய்த்தாலும். தன்காய் - தான் ஈன்ற அந்தக் காய்களை. பொறுக்கலா - பொறுக்க முடியாத. கொம்பு - கிளை. இல்லையே - ஒன்றுகூட இல்லை. (க-து): பெரியோர்கள், வருந்தி உதவி தேடி வந்தவர்களைக் கைவிட மாட்டார்கள்; காப்பாற்றுவார்கள். குறிப்பு: பெரியோருக்குக் காய்களைத் தாங்கும் சிறிய கொம்பு உவமானம். 4. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா, சிலபகலாம், சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்றனைத்தால் ஒற்கம் இலாளர் தொடர்பு. (204) (ப-ரை): சிற்றினத்தார் கேண்மை - அற்பர்களிடம் கொள்ளும் நட்பு. உலகு அறிய - உலகத்தார் உணரும்படி. தீரக் கலப்பினும் - மிகவும் ஒன்று பட்டாலும். நில்லா - நீண்ட நாளைக்கு நிலைத் திருக்காது. சில பகலாம் - சில நாட்கள்தான் நிலைத்திருக்கும். ஒற்கம் இலாளர் - எவ்விதத் துன்பத்திலும் தளராமல் இருக்கும் பெரியோர்களின். தொடர்பு - நட்பு. நிலைதிரியா நிற்கும் - தமது நிலையிலிருந்து மாறாமலிருக்கின்ற. பெரியோர் - பெரியோர்கள். நெறி அடைய - தாம் எப்பொழுதும் நன்னெறியிலேயே நடப்பதற்கு. நின்ற அனைத்து ஆல் - உறுதியுடன் நிற்கும் அத்தன்மை போலாகும். (க-து): சிறியோர் நட்பு நிலைக்காது; பெரியோர் நட்பே நிலைக்கும். குறிப்பு: தளர்ச்சியற்றவர்களுடன் செய்யும் நட்புக்கு நன்னெறியில் உறுதியுடன் நிற்பவர்கள் உவமானம். 5. இன்னர், இனையர், எமர்,பிறர் என்னும் சொல் என்னும் இலராம் இயல்பினால் -துன்னித் தொலைமக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார். (205) (ப-ரை): இன்னர் - நம்மிடம் உதவி தேடி வந்திருக்கும் இவர். இனையர் - இத்தன்மையுள்ளவர். எமர் - எமது உறவினர். பிறர் - எமக்கு உறவினர் அல்லர். என்னும் சொல் - என்ற சொற்கள். என்னும் இலர் ஆம் - சிறிதும் இல்லாதவராகின்ற. இயல்பினால் -சிறந்த தன்மையினால். துன்னி - தன்னையடைந்து. தொலை மக்கள் -துன்பத்தால் வாடுகின்ற மக்களின். துன்பம் தீர்ப்பாரே -துன்பத்தை நீக்கி அவர்களைக் காக்கின்றவர்களே. யார் மாட்டும் - யாவரிடத்திலும். தலை மக்கள் - சிறந்த மக்கள். ஆகல் பாலார் - என்று கொண்டாடும்படி நிற்பார்கள். (க-து): துன்புறுவோர் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தை நீக்குவோரே எல்லோராலும் சிறந்தவராகக் கொண்டாடப்படுவர். 6. பொற்கலத்துப் பெய்த புலிஉகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு எக்கலத் தானும் இனிது. (206) (ப-ரை): அமரார் கைத்து - தன்னிடம் அன்பில்லாதவர் கையிலிருந்து வாங்கி. பொற்கலத்துப் பெய்த - பொன் பாண்டத்திலே போட்ட. புலி உகிர் - புலிநகம் போன்ற. வான் புழுக்கல் - வெண்மையான சோற்றை. அக்காரம் - சர்க்கரை கலந்த. பாலோடு - பாலுடன் சேர்த்து. உண்டலின் - சாப்பிடு வதனால் அடையும் இன்பத்தைவிட. உயிர்போல் கிளைஞர் மாட்டு - தன்னை உயிரைப்போல் நேசிக்கின்ற உறவினரிடம். உப்புஇலி - உப்பில்லாத. புற்கை - புல்லரிசியால் ஆன கூழை. எக்கலத்தானும் - எந்தப் பண்டத்தில் கிடைப்பதாயினும். இனிது - அவ்வுணவே இனிமையாகும். (க-து): அன்பில்லாதார் இடும் பாற் சோற்றைவிட அன்புள்ளவர் இடும் உப்பற்ற கூழே இனிமை தரும். 7. நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம்கருனை வேம்பாகும்;- கேளாய் அபரானப் போழ்தில் அடகுஇடுவ ரேனும் தமராயார் மாட்டே இனிது. (207) (ப-ரை): நாள்வாய்ப் பெறினும் - தக்க பொழுதில் கிடைப்ப தாயினும். தம் நள்ளாதார் - நம்மிடம் நட்புக்கொள்ளாத அந்நியருடைய. இல்லத்து - வீட்டிலே கிடைக்கும். வேளாண்மை - உதவியுள்ள. வெம் கருனை - சூடான பொரிக் கறியோடு கூடிய உணவு. வேம்பு ஆகும் - வேம்பைப் போலக் கசப்பைத் தருவதாகும். கேளாய் - கேட்பாயாக. அபரானப் போழ்தில் - முற்பகலில் உணவிடாமல் பிற்பகலில். அடகு இடுவர்ஏனும் - வெறும் கீரைக்கறியை மட்டும் உணவாகக் கொடுப்பாராயினும். தமர் ஆயார்மாட்டு - அன்பினராக உள்ளவர்களிடம் பெறும் அவ்வுணவே. இனிது - இனிமை தருவதாகும். (க-து): அந்நியர் கொடுக்கும் சுவையுள்ள உணவை விட உறவினர் தரும் அற்ப உணவே இனிமையானது. 8. முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டிஉண் பாரும் குறடுபோல் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார். (208) (ப-ரை): முனியாது - வெறுப்பில்லாமல். வைகலும் - நாள்தோறும். முட்டிகைபோல - சம்மட்டியைப்போல. கொட்டி உண்பாரும் - நம்மை வற்புறுத்திப் பொருள் பெற்று உண்ணு கின்றவர்களும். குறடுபோல் - சமயத்தில் குறட்டைப்போல. கைவிடுவர் - நம்மை விட்டுவிலகி விடுவார்கள். (இவர்கள் நட்பினர் அல்லர்). நட்டார் எனப்படுவார் - உண்மையான நட்பினர் என்பவர்கள். சுட்டுக்கோல் போல - சூட்டுக் கோலைப் போல. எரியும் புகுவர் - நம்முடனே துன்பத்திலும் ஒன்றாக இருப்பர். (க-து): உண்மையான நண்பர்கள் துன்பம் வந்த காலத்தில் நம்மைக் கைவிட மாட்டார்கள். குறிப்பு: கைவிடும் நண்பர்க்குக் குறடு உவமை. கை விடாத நண்பர்க்குச் சூட்டுக்கோல் உவமை. 9. நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதுஒன்று உண்டோ? - இறும் அளவும் இன்புறுவ இன்புற்று, எழீஇ அவரோடு, துன்புறுவ துன்புறாக் கால். (209) (ப-ரை): நறுமலர் - மணமுள்ள மலர்களால் தொடுக்கப் பட்ட. தண்கோதாய் - குளிர்ந்த மாலையை அணிந்தவளே. நட்டார்க்கு - தம்முடன் நட்புக் கொண்டவருக்கு. நட்டார் - நண்பர். இறும் அளவும் - அவர் இறக்கும் வரையிலும். இன்புறுவ இன்புற்று - அவர் இன்பமடையும் காரியங்களிலே தாமும் இன்புற்று. அவரோடு எழீஇ - அவருடன் கூடவே இருந்து. துன்புறுவ - அவர் துன்புறும்போது. துன்புறாக்கால் - தாமும் துன்புறாவிட்டால். மறுமையும் - அவர்கள் மறுமையிலே. செய்வது ஒன்று உண்டோ - தாம் செய்யும் உதவி ஒன்றேனும் உண்டோ? (ஒன்றும் இல்லை). (க-து): நண்பர்களின் துன்பங்களிலே தாமும் பங்கு கொள்கின்றவரே நல்ல நண்பர். 10. விருப்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும் வெருக்குக்கண் வெம்கருனை வேம்பாம்;-விருப்புடைத் தன்போல்வார் இல்லுள் தயங்குநீர் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து. (210) (ப-ரை): விருப்பு இலார் - தன்னிடம் அன்பில்லாத அந்நியரின். இல்லத்து - வீட்டிலே. வேறு இருந்து உண்ணும் - தனியாக இருந்து உண்ணுகின்ற. வெருக்குக்கண் - பூனைக் கண்ணைப் போன்ற. வெம்கருனை - சூடான பொரிக்கறியோடு கூடிய உணவும். வேம்பாம் - வேப்பங் காய்போலக் கசப்பைத் தரும். விருப்பு உடை - அன்புள்ள. தன்போல்வார் - தன்னைப் போன்றவர்களின். இல்உள் - வீட்டிலே கிடைக்கும். தயங்கு நீர் - நிறைந்த நீர்மயமான. தண்புற்கை -ஆறிப்போன புல்லரிசிக் கூழானாலும் அதுவே. என்போடு இயைந்த - உடம்புக்கு ஏற்ற. அமிழ்து -அமுதம் போன்ற உணவாகும். (க-து): அன்புள்ளார் வீட்டில் உண்பது, கூழாயினும் அமுதம் போலாகும். 22. நட்பாராய்தல் ஒருவரைப்பற்றி ஆராய்ந்த பின்பே நட்பாகக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கூறுவது 1. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும் குருத்தில் கரும்புதின்று அற்றே; - குருத்திற்கு எதிர்செலத் தின் றுஅன்ன தகைத்து,அரோ என்று மதுரம் இலாளர் தொடர்பு. (211) (ப-ரை): கருத்துணர்ந்து - தாம் படிக்கும் நூல்களின் கருத்தைக் கண்டறிந்து. கற்று அறிந்தார் - படித்து உண்மைப் பொருள்களை அறிந்தவர்களுடன் செய்யும். கேண்மை - நட்பானது. எஞ்ஞான்றும் - எந்நாளும். குருத்தில் - கொழுத் தாடையிலிருந்து. கரும்பு தின்று அற்றுஏ- கரும்பைத் தின்பது போல வரவர இனிக்கும். என்றும் - எந்நாளும். மதுரம் - இனிய குணங்கள். இல்ஆளர் - இல்லாதவர்களுடன் கொள்ளும். தொடர்பு - நட்பானது. குருத் திற்கு எதிர் செல - கரும்பை அடியிலிருந்து குருத்திற்கு எதிராக. தின்று அன்ன -தின்றதைப் போன்ற. தகைத்து - தன்மையாகும். (ஏ, அரோ: அசைச் சொற்கள்.) (க-து): கற்றறிந்தாருடன் செய்யும் நட்பே சிறந்ததாகும். குறிப்பு: நல்லவர் நட்புக்குக் கரும்பை நுனியிலிருந்து தின்பது உவமை: கெட்டவர் நட்புக்குக் கரும்பை அடியிலிருந்து தின்பது உவமை. 2. இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதுஓர் நல்புடைக் கொண்டமை அல்லது - பொற்கேழ் புனல் ஒழுகப் புள்இரியும் பூங்குன்ற நாட! மனம் அறியப் பட்டது ஒன் றன்று (212) (ப-ரை): பொன் கேழ் - பொன்போல் ஒளி வீசிக் கொண்டு. புனல் ஒழுக - அருவிநீர் விழுவதைக் கண்டு. புள் இரியும் - அதன் ஓசைக்குப் பயந்து பறவைகள்ஓடுகின்ற. பூங்குன்ற நாட - பூக்கள் நிறைந்த மலை நாட்டை யுடைய பாண்டியனே. இல்பிறப்பு எண்ணி - ஒருவருடைய குடிப்பிறப்பைக் கருதி. இடைதிரியார் - அவருடன் நட்புக் கொண்டால் நடுவிலே மாறுபட மாட்டார்கள். என்பது ஓர் - என்று ஒரு. நல்புடை கொண்டமை அல்லது - நல்ல தன்மையைக்கொண்டு நட்புக்கொள்வதே அல்லாமல். மனம் அறியப் பட்டது - அவர்கள் உள்ளம் முழுவதையும் அறிந்தபின். ஒன்று இன்று - கொள்ளக்கூடிய நட்பு ஒன்றுமேயில்லை. (க-து): ஒருவருடைய குடிப்பிறப்பைக் கொண்டே அவரை நல்லவராக எண்ணி நட்புக் கொள்ளவேண்டும். 3. யானை அனையார் நண்புஒரீஇ நாய்அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் (213) (ப-ரை): யானை- யானையானது. அறிந்து அறிந்தும் - எவ்வளவு பழகி அறிந்திருந்தும். பாகனையே - தன்னுடைய பாகனையே. கொல்லும் - சமயம் பார்த்துக் கொன்றுவிடும். நாய் - நாயானது. எறிந்தவேல் - அதன் மேல் வீசிய வேற்படை. மெய். அதா - அதன் மேல் பாய்ந்திருக்கும்போது. வால்குழைக்கும் - வாலை ஆட்டி நன்றி தெரிவிக்கும். (ஆதலால்) யானை அனையார் - யானை போன்ற கபடர்களின். நட்புஒரீஇ - நட்பை விட்டொழித்து. நாய்அனையார் - நாய் போன்றவர்களின். கேண்மை - நட்பை. கெழீஇக்கொளல் வேண்டும் - தழுவிக் கொள்ள வேண்டும். (க-து): நன்றியுள்ளவர்களுடன் நட்புக்கொள்ளுதலே சிறந்ததாகும். குறிப்பு: ஒரீஇ: உயிரளபெடை. யானை கெட்டவர்க்கு உவமானம்: நாய் நல்லோர்க்கு உவமானம். 4. பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்;- பலநாளும் நீத்தார் எனக்கை விடல்உண்டோ? தம்நெஞ்சத்து யாத்தாரோடு யாத்த தொடர்பு. (214) (ப-ரை): பல நாளும் - பல நாட்களிலும். பக்கத்தார் ஆயினும் - தன் பக்கத் திலே வசிப்பவர்களானாலும். நெஞ்சில் - மனத்தில். சில நாளும் - சில நாளாவது. ஒட்டாரோடு - ஒன்று பட்டு வாழாதவருடன். ஒட்டார் - நட்புக் கொள்ளமாட்டார். தம்நெஞ்சத்து - தன் உள்ளத்தினால். யாத்தாரோடு - ஒன்று பட்டவருடன். யாத்த தொடர்பு - கொண்ட நட்பை. பலநாளும் நீத்தார் - அவர் பலநாளும் பிரிந்திருக்கின்றார். என - என்று எண்ணி. கைவிடல் உண்டோ - கைவிடும் குணம் அறிவுள்ளவர் களிடம் உண்டோ? (இல்லை). (க-து): உதட்டோடு பேசி மகிழும் நட்பு நட்பாகாது; உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழும் நட்பே உயர்ந்த நட்பு. 5. கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பின்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல் (215) (ப-ரை): கோட்டுப்பூப் போல - மரக்கிளையிலே மலர்ந்த மலரைப் போல. மலர்ந்து - மலர்ந்தபடியே இருந்து. பின்கூம்பாது - பின்னர்க் குவியா மலிருக்கின்றது போல. வேட்டதே -தாம் விரும்பியபடியே. வேட்ட தாம் - இறுதி வரையிலும் விருப்பத்துடன் இருக்கும் தன்மையுடையதே. நட்பு ஆட்சி- நட்பின் சிறப்பாகும். தோட்ட - இதழ்களையுடைய. கயப்பூப்போல் - குளத்திலே மலரும் தாமரைப் பூவைப்போலே. முன் மலர்ந்து - காலைப் பொழுதிலே மலர்ந்து. பின்கூம்புவாரை - மாலையிலே குவிவது போன்ற தன்மையுள்ளவர்களை. நயப்பாரும் - விரும்புகின்றவரும். நட்பாரும் - நட்பாகக் கொள்ளுகின்றவர்களும். இல் - ஒருவரும் இல்லை. (க-து): என்றும் ஒரே தன்மையுடன் பழகும் பண்புள்ள வர்களையே நட்பாகக் கொள்ள வேண்டும். குறிப்பு: மலர்களை நான்கு வகையாகப் பிரித்தனர். அவை கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்பவை. பிரியாத நட்புக்குக் கோட்டுப்பூ உவமை; பிரியும் நட்புக்கு நீர்ப்பூ உவமை. 6. கடைஆயார் நட்பில் கமுகுஅனையர்; ஏனை இடையாயர் தெங்கின் அனையர்; -தலைஆயார் எண்ணரும் பெண்ணை போன்று,இட்டஞான்று இட்டதே தொன்மை உடையார் தொடர்பு (216) (ப-ரை): நட்பில் கடைஆயார் - நட்பிலே கடைப்பட்டவர். கமுகு அனையர் - பாக்கு மரத்தைப் போன்றவர். ஏனை - மற்ற. இடை ஆயார் -நடுத்தரமான நட்புள்ளவர். தெங்கின் அனையர் - தென்னையின் குணத்தை ஒத்தவர். தலைஆயார் -நட்பிலே முதன்மையானவர். எண்ண அரும் - அளவற்ற பயனைத் தரும். பெண்ணை போன்று - பனை மரத்தைப் போல. இட்ட ஞான்று - நட்புச் செய்த நாளில். இட்டதே - செய்த உதவியோடு திருப்தி யடைவர். தொன்மையுடையார் - பழமையான நற்குணங்களை உடையவர் களின். தொடர்பு - நட்பே சிறந்ததாம். (க-து): பனை போன்றவரின் நட்பே சிறந்ததாகும். பழமை யான நற் குணங்கள் உள்ளவரே பனை போன்றவர். 7. கழுநீருள் கார்அட கேனும், ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;- விழுமிய குய்த்துவைஆர் வெண்சோறே ஆயினும், மேவாதார் கைத்துஉண்டல் காஞ்சிரங் காய். (217) (ப-ரை): ஒருவன்விழுமிதாக் கொள்ளின் - ஒருவன் நம்மைச் சிறந்த நட்பினனாகக் கொள்வானாயின். கழுநீருள் - அவன் இடும் உணவு கழுநீரால் சமைக்கப்பட்ட. கார் அடகேனும் - பசுமையான கீரைக் கறியாயினும். அமிழ்துஆம் - அதை உண்பது அமுதம்போல இனிமை தரும். மேவாதார் கைத்து - நம்மை விரும்பாதவர் கையிலிருந்து கிடைப்பது. விழுமிய - சிறந்த. குய் - பொரிக்கறியும். துவை ஆர் - துவை யலும் பொருந்திய. வெண் சோறே யாயினும் - வெண்மையான சோற்றுணவாயினும். உண்டல் -அதைப் பெற்று உண்பது. காஞ்சிரங்காய் - எட்டிக் காயை உண்பதற்கு ஒப்பாகும். (க-து): நம்மிடம் அன்பும் மதிப்பும் உள்ள நண்பர்கள் தரும் உணவை உண்பதே சிறந்தது.; மதியாதார் தரும் உணவு விஷமாகும். குறிப்பு: அன்புள்ளவர் இடும் உணவுக்கு அமிழ்தம் உவமை; அன்பிலார் தரும் உணவுக்குக் காஞ்சிரங்காய் உவமானம். 8. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்குஅணியர் ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்புஎன்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையர் தொடர்பு. (218) (ப-ரை): நாய் கால் சிறு விரல்போல் - நாயின் கால்களிலே உள்ள சிறிய விரல்களைப்போல. நன்கு அணியர் ஆயினும் - நன்றாக நெருங்கிப் பழகுவோராயினும். ஈ கால் துணையும் - சமயம் வந்தபோது ஈயின் கால் அளவுகூட. உதவாதார் - உதவி செய்யாதவருடைய. நட்புஎன் ஆம் - நட்பினால் என்ன பயன் உண்டாகும்? செய்விளைக்கும் -வயல்களில் பாய்ந்து தானியத்தை விளைவிக்கும். வாய்க்கால் அனையார் - தண்ணீர் தரும் வாய்க் காலைப் போன்றவரின். தொடர்பு - நட்பை. சேய்த்து ஆனும் - அவர்கள் தொலைவில் இருப்பாராயினும். சென்றுகொளல் வேண்டும் - நாமே வலியச் சென்று அவர் நட்பைக் கொள்ள வேண்டும். (க-து): உதவி செய்கின்றவர்களின் நட்பே சிறந்தது. குறிப்பு: நெருங்கிப் பழகுவதற்கு நாய்க்கால் சிறுவிரல் உவமை. உதவி செய்வோர் நட்புக்கு வாய்க்கால் உவமானம். சிறிய அளவுக்கு ஈயின் கால் உவமை. 9. தெளிவுஇலார் நட்பின் பகைநன்று; சாதல் விளியா அருநோயின் நன்றால்;- அளிய இகழ்தலின் கோறல் இனிதே;மற்று இல்ல புகழ்தலின் வைதலே நன்று. (219) (ப-ரை): தெளிவு இலார் - தெளிந்த அறிவில்லாதவர் களுடன் கொள்ளு கின்ற. நட்பின் - நட்பைவிட. பகை நன்று- பகைத்துக் கொள்ளுதலே நன்மை தரும். விளியா - நீங்காத. அருநோயின் - துன்பமான நோயைவிட. சாதல் நன்று - இறத்தலே நன்மையாகும். அளிய - பிறர் மனம் புண்படும்படி. இகழ்தலின் - வெறுத்து வசைமொழிகளைக் கூறுவதைவிட. கோறல் இனிது - அவர்களைக் கொன்று விடுதல் நன்றாகும். மற்று இல்ல புகழ்தலின் - ஒருவரிடத்தில் இல்லாத குணங்களை இருப்பதாகச் சொல்லிப் புகழ்வதைவிட. வைதலே நன்று - அவரை நேரடியாக வைதலே நன்றாகும் (ஆல், ஏ, மற்று: அசைச் சொற்கள்). (க-து): மூடர் நட்பு கூடாது; நீங்காத நோயைவிடச் சாவு நன்று; மனத்தைப் புண்படுத்துவதைவிடக் கொல்லுதல் நலம்; பொய்ப் புகழ்ச்சியைவிட வைவதே மேல். 10. பரீஇப் பலரோடு பல்நாள் முயங்கிப் பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்; பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. (220) (ப-ரை): மரீஇ - சேர்ந்து. பலரோடு பல்நாள் - பலரோடும் பலநாட்கள். முயங்கி பொரீஇ - நெருங்கி ஒன்றாக இருந்து பார்த்து. பொருள் தக்கார் - சிறந்த பொருள்களையறிந்த உயர்ந்தவர்களையே. கோடல் வேண்டும் - நட்பினராகக் கொள்ள வேண்டும். பரீஇ - விரைந்து. உயிர் செகுக்கும் - உயிரைப் போக்கும். பாம்பொடும் - பாம்போடாயினும். மரீஇஇ - பழகிவிட்டு. பின்னைப் பிரிவு - பின்பு பிரிவது என்பது. இன்னா - மனத்திற்குத் துன்பந் தருவதாகும். (பரீஇ, பொரீஇ, பரீஇ, மரீஇஇ: உயிர் அளபெடைகள்.) (க-து): ஒருவருடன் நட்புக் கொள்ளுவதற்கு முன் அவரைப் பற்றி நன்றாக ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். 23. நட்பில் பிழைபொறுத்தல் நட்பினர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் 1. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்; நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரை உண்டு; புல்இதழ் பூவிற்கும் உண்டு. (221) (ப-ரை): நல்லார்என - நல்லவர் என்று. தாம் நனி விரும்பி -தாம் ஒருவரை மிகவும் அன்புடன். கொண்டாரை - நட்பாக ஏற்றுக்கொண்டவரை. அல்லார் எனினும் - பிறகு நல்லவர் அல்லர் என்று கண்டபோதிலும். அடக்கி - அவருடைய குற்றங் களை அறியாமல் மறைத்து. கொளல் வேண்டும் - அவரை நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும் (ஏனென்றால்). நெல்லுக்கு உமி உண்டு - நெல்லுக்கு உமியென்னும் குறையுண்டு. நீருக்கு நுரை உண்டு -தண்ணீருக்கு நுரையென்னும் அழுக்கு உண்டு. பூவிற்கும் - சிறந்த மலருக்கும். புல்இதழ் உண்டு - மணமற்ற அற்பமான காம்பிதழ் உண்டு. (க-து): குற்றம் இயற்கை. ஆதலால், நண்பரிடம் குற்றங்கள் கண்டால் அவரைத் தூற்றக்கூடாது. 2. செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்; மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்; வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு. (222) (ப-ரை): நீர் நசை வாழ்நர் - தண்ணீரை விரும்பி வாழ் கின்றவர்கள். செறுதோறும் - அத்தண்ணீரைத் தடுக்குந்தோறும். உடைப்பினும் - தடுப்பை உடைத்துக் கொண்டு போனாலும். மறுத்தும் - மீண்டும். சிறைசெய்வர் - அடைத்துத் தடுப்பார்கள் (அதேபோல). தாம் வேண்டி - தாமே விரும்பி. கொண்டார் - நட்பாகக் கொண்டவர்கள். வெறுப்ப - வெறுக்கத்தக்க கெட்ட செயல்களை. வெறுப்பச்செயினும் - மனம் வெறுக்கும் அளவுக்கு மிகுதியாகச் செய்தாராயினும். தொடர்பு - நட்பின் பெருமை யைக் கருதி. பொறுப்பர் - அவர் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுவார்கள். (க-து): நட்பினர் வெறுக்கத்தக்க செயல்களை மிகுதியாகச் செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். 3. இறப்பவே தீய செயினும்தன் நட்டார். பொறுத்தல் தகுவதுஒன்று அன்றோ? நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு. (223) (ப-ரை): நிறம் கோங்கு - நல்ல நிறம் பொருந்திய கோங்க மலர்களிலே. உருவ வண்டு - அழகிய வண்டுகள். ஆர்க்கும் - ஆரவாரத்துடன் மொய்த்துக் கொண்டிருக்கின்ற. உயர்வரை நாட - உயர்ந்த மலைநாட்டையுடைய பாண்டியனே. தன் நட்டார் - தன்னால் தேர்ந்து நட்புச் செய்யப்பட்டவர். இறப்பவே - அளவுக்கு மீறிய. தீய செயினும் - தீமைகளைச் செய்தாரா யினும். பொறுத்தல் - அவற்றைப் பொறுத்துக்கொள்வதே. தகுவது ஒன்று - சிறந்த ஒரு தன்மையாகும். அன்றோ - அல்லவா? ஒருவர் பொறை - ஒருவருடைய பொறுமையினால்தான். இருவர் நட்பு - இருவர் நட்பாக வாழ முடியும். (க-து): நட்பினர் இருவருள் ஒருவரிடமாவது பொறுமை யிருந்தால்தான் அவர்கள் நட்பு நிலைத்திருக்கும். 4. மடுதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப விடுதற்கு அரியார் இயல்புஇலரேல், நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ. (224) (ப-ரை): மடி திரை - மடிந்து விழுகின்ற அலைகள். தந்து இட்ட - கடலின் மேலே கொண்டுவந்து போடுகின்ற. வான்கதிர் முத்தம் - மிகுந்த ஒளி பொருந்திய முத்துக்களை. கடுவிசை - விரைந்துசெல்லும். நாவாய் - கப்பல்கள். கரை அலைக்கும் - கரையிலே கொண்டுவந்து குவிக்கும். சேர்ப்ப - கடற்கரையை யுடைய பாண்டியனே. விடுதற்கு அரியார் - கைவிடு வதற்கு முடியாதவர் ஆகிய நட்பினர். இயல்பு இலரேல் - நற்குணம் இல்லாதவராயின். அவர்கள் நெஞ்சம் - நமது உள்ளத்தை. சுடுதற்கு மூட்டிய தீ - சுடுவதற்காக நம்மாலேயே மூட்டிக் கொள்ளப்பட்ட நெருப்பாவார்கள். (க-து): கெட்ட நண்பர்கள் நமது உள்ளத்தைச் சுடுவதற்கு நாமே மூட்டிக்கொண்ட நெருப்பாவார்கள். 5. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்;- பொன்னொடு நல்இல் சிதைத்ததீ நாள்தொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். (225) (ப-ரை): பொன்னோடு - பொன்னுடன். நல்இல் - நல்ல வீட்டையும். சிதைத்த தீ - அழித்த நெருப்பு கொடுமையுள்ள தாயினும். நாள்தொறும் நாடி - ஒவ்வொரு நாளும் அதைத் தேடி. தம்இல்லத்தில் - தமது வீட்டில். ஆக்குதலால் - சேர்த்துக் கொள்கின்றனர் ஆதலால். இன்னா செயினும் - துன்பத்தையே செய்தாலும். விடற்பாலர் அல்லாரை - நண்பர்களை. பொன்னாக - பொன்னாகவே எண்ணி. போற்றிக்கொளல் வேண்டும் - பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (க-து): துன்பம் செய்யும் நட்பினரையும் பொன் போல் பாதுகாக்க வேண்டும். குறிப்பு: தீமை செய்யும் நண்பரும் தீயும் ஒப்பாவர். தீ உவமானம்; நண்பர் உவமேயம். 6. இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ? - துன்னரும்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப! - களைபவோ கண்குத்திற்று என்றுதம் கை. (226) (ப-ரை): துன்ன அரும்சீர் - ஏறிச் செல்ல முடியாத உயரத்தையும். விண் குத்து - வானத்தை முட்டுகின்ற. நீள்வரை - நீண்ட மூங்கிலையும் உடைய. வெற்ப - பொதிய மலையையுடைய பாண்டியனே. கண் குத்திற்று என்று - கண்ணைக் குத்திவிட்டது என்று குற்றம் சாற்றி. தம் கை - தம் கையில் உள்ள விரலை. களைபவோ - வெட்டுவார் உண்டோ? இல்லை. இன்னா செயினும் - துன்பத்தையே செய்தாலும். விடுதற்கு அரியாரை - நண்பர் களை. துன்னாத் துறத்தல் - தன்னுடன் சேராமல் பிரித்துவிடுதல். தகுவதோ - சிறந்த செயலாகுமா? ஆகாது. (க-து): நண்பர்கள் என்ன குற்றம் செய்தாலும் அவர் களைத் தம் உடம்பில் உள்ள உறுப்புக்களில் ஒன்றாகவே கொள்ள வேண்டும். 7. இலங்குநீர்த் தண்சேர்ப்ப; இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்அறிவு இல்லாதார் தாமும் அவரின் கடை. (227) (ப-ரை): இலங்கு - விளங்குகின்ற. நீர்த்தண் சேர்ப்ப - நீர் நிறைந்த குளிர்ந்த கடல்துறையையுடைய பாண்டியனே. கலந்த பின் - ஒருவருடன் நட்புக் கொண்ட பின். தீமை எடுத்துரைக்கும் - அவருடைய குற்றங்களை எடுத்துக் கூறுகின்ற. திண்அறிவு இலாதார் - உறுதியற்ற அறிவுடையவர்கள். தாமும் அவரின் - தாமும் அந்த நண்பரைக் காட்டினும். கடை - கீழ்ப்பட்ட வராவார். இன்னா செயினும் - ஆதலால் தம் நண்பர் துன்பத்தையே செய்தாலும். கலந்து - நட்புச் செய்தபின். சான்றோர் - அறிவுள்ளவர்கள். பழி காணார் - தம் நண்பருடைய குற்றத்தைப் பற்றிச் சிறிதும் நினைக்கவே மாட்டார்கள். (க-து): நண்பராகக் கொண்ட பின் அவருடைய குற்றங் களைப் பொருட்படுத்தாமல் இருப்பதே அறிவுள்ளோர் குணம். 8. ஏதிலார் செய்தது இறப்பவே தீதுஎனினும் நோதக்கது என்உண்டாம்! நோக்குங்கால் - காதல் கழுமியார் செய்த, கறங்குஅருவி நாட! விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று. (228) (ப-ரை): கறங்கு - சுழன்றுவிழுகின்ற. அருவி நாட - அருவி களையுடைய மலைகள் நிறைந்த நாட்டையுடைய பாண்டியனே. ஏதிலார் - பகைவர்கள். செய்தது - செய்த தீமை. இறப்பவே - அளவுக்கு மிஞ்சின. தீது எனினும் - தீமையானாலும். நோதக்கது - அதற்காக வருந்தத்தக்க காரணம். என் உண்டாம் - என்ன உண்டு? (ஒன்றும் இல்லை). நோக்குங்கால் - ஆராய்ந்து பார்த்தால். காதல் கழுமியார் - அன்பு நிறைந்த நண்பர்கள். செய்த - அன்புடன் செய்த காரியங்கள் தீமையாக முடிந்தாலும். நெஞ்சத்துள் நின்று - அவர்கள் அன்பு நம் மனத்திலே நிலைத்து நின்று. விழுமிதுஆம் - சிறப்படையும். (க-து): நண்பர்கள் அன்புடன் செய்தது தீமையாக முடியினும், அவருடைய அன்பை மறத்தல் கூடாது. 9. தமர்என்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமர்அன்மை தாம்அறிந்தார் ஆயின், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமர்அன்மை தம்முள் அடக்கிக் கொளல். (229) (ப-ரை): தமர் என்று - நண்பர். என்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மை - தம்மால் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் களை. தமர் அன்மை - பின்பு அவர்கள் நண்பர்களாக இல்லாமலிருப்பதை. தாம் அறிந்தார் ஆயின் - அவர்கள் செய்கையைக் கொண்டு தாம் தெரிந்து கொண்டாரானால். அவரை - பின்பு அவர்களை. தமரினும் நன்கு மதித்து - நண்பர் களைக் காட்டிலும் சிறப்பாக நினைத்து. தமர் அன்மை - அவர் நண்பர் அல்லாமலிருப்பதை வெளியில் சொல்லாமல். தம்உள் அடக்கிக் கொளல் - தமது மனத்திலேயே அடக்கிக்கொள்ள வேண்டும். (க-து): நண்பர் விரோதமாயிருப்பதைக் கண்டால், அதை வெளியிற் சொல்லாமல் தம் மனத்திலேயே அடக்கிக் கொள்ள வேண்டும். 10. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க! அறைகடல்சூழ் வையம் நக. (230) (ப-ரை): குற்றமும் - குற்றத்தையும். ஏனைக் குணமும் - மற்றைய குணத்தையும். ஒருவனை - ஒருவனிடம். நட்டபின் - அவரை நண்பனாகக் கொண்டபின். நாடித் திரிவேனேல் - ஆராய்ந்து திரிவேனாயின். அறைகடல் சூழ் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட. வையம் நக - இவ்வுலகம் என்னைப் பார்த்துச் சிரித்து இகழும்படி. நட்டான் - நண்பனுடைய. மறை - இரகசியங் களை. காவா விட்டவன் - காப்பாற்றாமல் வெளி யிட்ட துரோகி. செல்வு உழி - செல்கின்ற இழிவான இடத்திற்கு. செல்க - நானும் செல்வேனாக. (க-து): நண்பனிடம் குற்றம் காண்பவன் உலகினரால் இகழப்பட்டு இழிவடைவான்.24. கூடா நட்பு நட்புச் செய்வதற்குத் தகுதியற்றவர்களைப் பற்றிக் கூறுவது 1. செறிப்புஇல் பழங்கூரை, சேறுஅணை யாக இறைத்து;நீர் ஏற்றும் கிடப்பர்; - கறைக்குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல்நாட! தங்கருமம் முற்றும் துணை. (231) (ப-ரை): கறைக் குன்றம் - கருமையான மலைகளிலிருந்து. பொங்கு அருவி - மிகுந்த அருவிநீர். தாழும் - நிலத்திலே எப்பொழுதும் விழுந்து கொண்டிருக் கின்ற. புனல்வரை - நீர்வளம் நிறைந்த மலைகளையுடைய. நல்நாட - சிறந்த நாட்டின் தலைவனாகிய பாண்டியனே. தம் கருமம் -தந்நல வாதிகள்தமது காரியம். முற்றும் துணை - முடியும் வரையிலும். செறிப்பு இல் - கட்டுக்கோப்பில்லாத. பழம் கூரை - பழைய கூரையுள்ள வீட்டிலே. சேறு அணையாக - மழை பெய்யும்போது தண்ணீர் உள்ளே நுழையாதபடி சேற்றால் அணைகட்டி. இறைத்து - உள்ளே நுழைந்த நீரை வெளியிலே இறைத்து. நீர் ஏற்றும் -மேலேயிருந்து ஒழுகும் மழையைத் தம் தலை யிலே தாங்கியும். கிடப்பர் - தந்நலம் இல்லாதவர்கள் போல நம்மிடம் கிடப்பர். (க-து): சுயநலக்காரர்கள் தமது காரியம் முடியும் வரையிலும் எதுவும் செய்வார்கள். 2. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம்;- மாரி வறந்தக்கால் போலுமே; வால்அருவி நாட! சிறந்தக்கால் சீர்இலார் நட்பு. (232) (ப-ரை): வால் அருவி நாட - ஒளி பொருந்திய அருவி நீர் வளமுள்ள நாட்டை யுடைய பாண்டியனே. சீரியார் கேண்மை- சிறந்த பண்புள்ளவர்களின் நட்பு. சிறந்த சிறப்பிற்றுஆய் - சிறந்த பெருமையுடையதாய். மாரிபோல் - மழையைப்போல. மாண்ட -சிறந்த. பயத்ததுஆம் - பயன் உள்ளதாக இருக்கும். சீர்இலார் நட்பு - நற்குணமற்ற கெட்டவர்களின் நட்பு. சிறந்தக் கால் - அதிகமானால். மாரி - மழையானது. வறந்தக்கால் போலும்ஏ - வறண்டு விட்டால் என்னென்ன துன்பங்கள் உண்டாகுமோ அதைப் போலத் துன்பங்கள் உண்டாகும். (க-து): நல்லோர் நட்பு நன்மை தரும்; தீயோர் நட்பு தீமை தரும். குறிப்பு: நல்லவர்க்கு மழை உவமை; கெட்டவர்க்கு மழையின்மை உவமை. 3. நுண்உணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை விண்உலகே ஒக்கும் விழைவிற்றுஆல்; - நுண்நூல் உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. (233) (ப-ரை): நுண் - சிறந்த நூல்களைக் கற்ற. உணர்வினார்ஓடு - சிறந்த அறிஞர்களுடன். கூடி - நண்பர்களாகச் சேர்ந்து. நுகர்வு உடைமை - மகிழ்ந்து இன்பத்தை அடைவதாகிய செல்வமே. விண்உலகே ஒக்கும் - வானுலகில் அனுபவிக்கும் இன்பத்தைப் போன்றதாகும். விழை விற்றுஆல் - இதுவே விரும்பத்தக்க நட்புமாகும். நுண்நூல் உணர்விலர் ஆகிய - சிறந்த நூலறி வற்றவர்களான. ஊதியம் இலார் - பயனற்றவர்களுடன். புணர்தல் - நட்புக் கொள்ளுதல். நிரயத்துள் - நரகத்தில் விழுந்து அனுபவிக்கும். ஒன்று - ஒப்பற்ற துன்பமாகும். (ஆல்:அசை.) (க-து): கற்றவர்களுடைய நட்பு இன்பந் தரும்; கல்லாதவர் களின் நட்புத் துன்பந் தரும். குறிப்பு: அறிஞர் நட்பால் அடையும் இன்பத்திற்கு வானுலக இன்பம் உவமானம்; மூடர்களின் நட்பால் அடையும் துன்பத்திற்கு நரகத் துன்பம் உவமானம். 4. பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல் ஒருபொழுதும் சொல்லாதே நந்தும்; - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட! பந்தம் இலாளர் தொடர்பு. (234) (ப-ரை): அருகு எல்லாம் - பக்கங்களில் எல்லாம். சந்தன நீள் சோலை - சந்தன மரங்கள் அடர்ந்த பெரிய சோலைகள் நிறைந்த. சாரல் - பக்கங்களையுடைய. மலைநாட -மலை நாட்டையுடைய தலைவனே. பந்தம் இல்ஆளர் - அன்பு இல்லாதவர்களின். தொடர்பு - நட்பானது. பெருகுவது போல -ஆரம்பத்தில் வளர்வது போல. தோன்றி - காணப்பட்டு. வைத்தீப்போல் - விரைவில் வைக்கோலில் பற்றிய நெருப்பைப் போல. ஒருபொழுதும் - ஒருநாள் கூட. செல்லாதுஏ - நிலைத்திருக்காமல். நந்தும் - அழிந்துபோய்விடும். (ஏ: அசை.) (க-து): அன்பில்லாதவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாது. கொண்டால் அது நிலைக்காது; அழிந்துவிடும். குறிப்பு: அன்பற்றவர் நட்புக்கு, வைக்கோலிற் பிடித்த நெருப்பு உவமானம். 5. செய்யாத செய்தும்நாம் என்றலும், செய்வதனைச் செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் -மெய்யாக இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும். (235) (ப-ரை): செய்யாத - செய்ய முடியாத காரியங்களை. செய்தும் நாம் - செய்வோம் நாம். என்றலும் - என்று சொல்லிக் கொண்டிருப்பதும். செய்வதனை - செய்ய முடியும் காரியங்களை. செய்யாது - செய்து முடிக்காமல். காலந் தாழ்த்துக்கொண்டு - காலங் கடத்திக் கொண்டு. ஓட்டலும் - நாளை ஓட்டிக் கொண்டிருப்பதும். மெய்யாக - உண்மையாகவே. இன்புஉறும் பெற்றி - இன்பந் தரும் தன்மையுள்ள பொருள்களையெல்லாம். இகழ்ந்தார்க்கும் - வேண்டாம் என்று வெறுத்த துறவிகளுக்கும். அந்நிலையே - அப்பொழுதே. துன்புஉறும் -துன்பம் உண்டாகும். பெற்றி தரும் - தன்மையைக் கொடுக்கும். (இன்புறூஉம், துன்புறூஉம்: உயிர் அளபெடைகள்.) (க-து): நட்புக்குத் தகுதியற்றவருடன் சிநேகம் பண்ணாம லிருப்பது எளிதான காரியந்தான். ஆதலால் அதை உடனே செய்யவேண்டும். 6. ஒருநீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா; பெருநீரார் கேண்மை கொளினும், நீரல்லார் கருமங்கள் வேறு படும். (236) (ப-ரை): ஒருநீர்ப் பிறந்த - ஒரு நீர்நிலையிலே தோன்றி. ஒருங்கு நீண்டக் கடைத்தும் - ஒன்றாகவே நீண்டு வளர்ந்த போதிலும். விரிநீர்க் குவளையை - மலர்ந்த தன்மையுள்ள நீல மலரை. ஆம்பல் ஒக்கல்லா - அல்லி மலர் ஒத்திருக்கமாட்டா (அதுபோல). பெருநீரார் - சிறந்த குணங்கள் உள்ளவர் களின். கேண்மை - நட்பை. கொளினும் - பெற்றிருந்தாலும். நீர்அல்லார் - நல்ல குணமற்றவர். கருமங்கள்- செய்யும் காரியங்கள். வேறுபடும் - வேறாகத்தான் இருக்கும். (க-து): கெட்டவர்கள் நல்லவருடன் நட்புக் கொண்டாலும் திருந்த மாட்டார்கள். குறிப்பு: குவளை மலர்ந்தபடியே இருக்கும்; மீண்டும் குவியாது. ஆம்பல் பகலில் குவிந்திருக்கும்; இரவில் மலரும். இதுபோல், நல்லோர் ஒரு நிலையில் இருப்பர்; கெட்டவர் அடிக்கடி மாறுவர். 7. முற்றல் சிறுமந்தி, முற்பட்ட தந்தையை, நெற்றுக் கண்டன்ன விரலால், ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. (237) (ப-ரை): முற்றுஅல் - வயதேறாத. சிறு மந்தி - இளைய பெண்குரங்கு. முன்பட்ட தந்தையை -தன்னெதிரில் காணப்பட்ட தந்தையாகிய கிழக் குரங்கை. நெற்றுக் கண்டுஅன்ன - பயற்றம் நெற்றைப் பார்த்தது போன்ற. விரலால் - தன் விரல்களினால். ஞெமிர்த்திட்டுக் குற்றி - நிமிர்த்துக் குற்றி. பறிக்கும் -அதன் கையில் உள்ள கனியைப் பறித்துக் கொள்ளுகின்ற. மலைநாட - இயற்கைக் காட்சிகள் அமைந்த மலைநாட்டையுடைய பாண்டி யனே. ஒற்றுமை கொள்ளாதார் - சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபட்டு வாழாதவருடன். நட்பு - கொள்ளும் நட்பு. இன்னாதுஏ - துன்பந் தருவதாகும். (ஏ: அசை.) (க-து): மன ஒற்றுமையில்லாதாருடன் நட்புக் கொள்ள லாகாது. 8. முட்டுற்ற போழ்தின் முடுகிஎன் ஆருயிரை நட்டான் ஒருவன்கை நீட்டேனே - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வையம் நக. (238) (ப-ரை): முட்டுஉற்றபோழ்தின் - நண்பன் துன்பம் அடைந்த காலத்திலே. முடுகி - விரைந்து சென்று. என் ஆருயிரை - என்னுடைய அருமையான உயிரை. நட்பின் ஒருவன் கை - நண்பன் ஒருவன் கையில். நீட்டேனேல் - கொடுத்தாவது அவன் துன்பத்தை நீக்கேனாயின். வையம் -இவ்வுலகம். நெடுமொழி - பெரிய வசைமொழியைச் சொல்லி. நக - சிரிக்கும்படி. நட்பின் - நண்பனுடைய. கடிமனை - காவலில் உள்ள மனைவியின். கட்டுஅழித் தான்- கற்பு என்னும் கட்டுப்பாட்டை அழித்தவன். செல்வுஉழி - செல்லு கின்ற நரகம் என்னும் இடத்திற்கு. செல்க - நானும் செல்லுவேனாக. (க-து): நண்பனுக்கு ஒரு துன்பம் வந்தால் உயிரைக் கொடுத்தாவது அவன் துன்பத்தைப் போக்கவேண்டும். இதுவே உண்மையான நட்பாகும். 9. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்படு நெய்பெய்து அனைத்தரோ! - தேம்படு நல்வரை நாட! நயம்உணர்வார் நண்புஒரீஇ புல்அறிவி னாரொடு நட்பு. (239) (ப-ரை): தேம்படு - தேன் விளைகின்ற. நல்வரை நாட - நல்ல மலை நாட்டை யுடைய பாண்டியனே. நயம் உணர்வார் -நன்மை இன்னதென்று அறி கின்றவர்களின். நண்புஒரீஇ - நட்பைக் கொள்ளாமல் நீங்கி. புல்அறி வினொடு - அற்ப மதி படைத்தவர்களோடு. நட்பு - சினேகம் செய்வது. ஆன்படு - பசுவினிடம் உண்டான. நெய் பெய் - நெய்யை ஊற்றி வைத்திருக் கின்ற. கலன்உள் - பாத்திரத்தில். அது களைந்து - அந்தப் பசுநெய்யை எடுத்துவிட்டு. வேம்படு நெய் - வேப்ப விதையின் நெய்யை. பெய்து அனைத்து அரோ - ஊற்றி வைத்தது போல் ஆகும். (க-து): நல்லவர் நட்பு பசுநெய் போன்றது; கெட்டவர் நட்பு வேப்பெண்ணெய் போன்றது. குறிப்பு: நல்லவர்க்குப் பசுநெய் உவமை; கெட்டவர்க்கு வேப்பெண்ணெய் உவமை; பாத்திரம் நட்புக் கொள்ளுகின்ற வர்க்கு உவமை. 10. உருவிற்கு அமைந்தான்கண் ஊர்ஆண்மை இன்மை பருகற்கு அமைந்தபால் நீர்அளாய் அற்றே; தெரிவுஉடையார் தீயினத்தார் ஆகுதல், நாகம் விரிபெடையோடு அடிவிட் டற்று. (240) (ப-ரை): உருவிற்கு - அழகிய வடிவத்திற்கு. அமைந்தான்கண் - ஒரு உதாரணமாக இருக்கின்றவனிடம். ஊர் ஆண்மை இன்மை - ஊருக்கு உதவி செய்யும் குணம் இல்லாமை. பருகற்கு - குடிப் பதற்கு. அமைந்த பால் - இருக்கின்ற பாலில். நீர் அளாய் அற்றுஏ - நிறையத் தண்ணீர் கலந்தது போன்றதாகும். தெரிவு உடையார் - நன்மை தீமைகளை ஆராயும் அறிவுள்ளவர். தீயினத்தார் ஆகுதல் - கெட்டவர்களுடன் நண்பராதல். நாகம் - நாகப் பாம்பு. விரிபெடையோடு - விரியன் பெட்டையுடன் சேர்ந்து. ஆடி-உறவாடி. விட்டுஅற்று - அதனால் உயிரை விட்டது போலாம். (க-து): தீயோருடன் நட்புக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும். குறிப்பு: நல்ல நாகப்பாம்பு விரியன் பெட்டையுடன் கூடிப் பிரிந்தபின் உயிர் விடும் என்பர். இன்பவியல் 25. அறிவுடைமை அறிவுடன் நடந்து இன்பமடையும் தன்மை 1. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார்; காணாய், இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது அணங்கரும் துப்பின் அரா. (241) (ப-ரை): இளம்பிறை ஆயக்கால் - முழுமதி இளம்பிறை யாகத் தேய்ந்து போய்விட்டால். அணங்க அரும் - பிறரால் துன்புறுத்த முடியாது. துப்பின் அரா - வலிமையுள்ள இராகு வென்னும் பாம்பு. திங்களைச் சேராது -அந்த இளம்பிறையைப் பிடிப்பதற்காகச் செல்லாது. காணாய் - இதைத் தெரிந்துகொள். பகைவர் - பகைவர்கள். பணிவு இடம் நோக்கி - தாழ்ந் திருக்கும் சமயம் பார்த்து. தகவு உடையார் - பெருமையும் அறிவும் உள்ளவர்கள். தாமேயும் நாணி - தாமாகவே வெட்கம் அடைந்து. தலைச் செல்லார் - அவரிடம் நெருங்கமாட்டார்கள். (க-து): அறிவுள்ளோர், தம் பகைவர் மிகவும் மெலிந்திருக்கும் போது அவரைத் துன்புறுத்த மாட்டார்கள். குறிப்பு: இராகுவென்னும் பாம்பு சந்திரனைப் பிடிப்பதால் சந்திர கிரகணம் உண்டாகின்றது; சூரியனைப் பிடிப்பதால் சூரிய கிரகணம் உண்டாகின்றது என்பது பழைய நம்பிக்கை. சந்திரன் முழுமதியாக இருக்கும் பௌர்ணமியில்தான் சந்திர கிரகணம் உண்டாகும். 2. நளிகடல் தண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு அணிகலம் ஆவது அடக்கம்;-பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூறப் படும். (242) (ப-ரை): நளிகடல் - குளிர்ந்த கடலின். தண்சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரையின் தலைவனே. நல்கூர்ந்த மக்கட்கு - தரித்திரம் அடைந்த மக்களுக்கு. அணிகலம் ஆவது - ஆபரண மாக இருப்பது. அடக்கம் - அடங்கி நடக்கும் குணமேயாகும். பணிவுஇல் சீர் - பணிவில்லாத தன்மையுடன். மாத்திரை யின்றி -அளவின்றி. நடக்குமேல் - நடப்பார்களாயின். வாழும் ஊர்-அவர்கள் வாழும் ஊரிலே உள்ளவர்களால். கோத்திரம்-அவர்கள் பிறந்த குடியைத் தெரிந்துகொண்டு. கூறப்படும்-அவர்கள் பிறந்த குடி பழிக்கப்படும். (க-து): நல்ல குடியிலே பிறந்தவர்கள் வறுமையடைந் தாலும் அடக்க மாகவே வாழ்வர்; கெட்ட குடியில் பிறந்தவர்கள் தாம் வறுமை வந்தபோது ஒழுங்கு தவறி நடப்பார்கள். 3. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரம்காழ் தெங்குஆக; தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்ஆற்றான் ஆகும் மறுமை வடதிசையும் கொன்ஆளர் சாலப் பலர். (243) (ப-ரை): என்நிலத்து - எந்த நிலத்திலே. வித்து இடினும் - எந்த விதையைப் போட்டாலும் போட்ட விதைதான் முளைக்கும். காஞ்சிரம் காழ் - காஞ்சிரத்தின் விதை. தெங்கு ஆகா-தென்னங் கன்றாக முளைக்காது. தென் நாட்டவரும்-தென்னாட்டில் உள்ளவர்களும். சுவர்க்கம் புகுதலால் -தமது நற்செயல் காரணமாகச் சுவர்க்கத்தை அடைகின்றனர் ஆதலால். தன் ஆற்றால்-ஒவ்வொருவருக்கும் தமது செய்கையினாலேயே. மறுமை ஆகும் - மறுமைப் பயன் உண்டாகும். வட திசையும்-வட திசையிலும். கொன்ஆளர் சாலப் பலர்-வீணர்கள் மிகப் பலர் உள்ளனர். (க-து): ஒவ்வொருவரும் தத்தம் செய்கை காரணமாகவே நன்மை - தீமைகளைப் பெறுவார்கள். 4. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீம்சுவை யாதும் திரியாதாம்;-ஆங்கே இனம்தீது எனினும், இயல்புடையார், கேண்மை மனம்தீதாம் பக்கம் அரிது. (244) (ப-ரை): வாழை-வாழைக்காய். வேம்பின் இலையுள்-வேப்பம் இலைக் குள்ளேயிருந்து. கனியினும்-பழுத்தாலும். தன் தீம்சுவை - தனது இனிய சுவையிலே. யாதும் - சிறிதும். திரியாது ஆம் - மாறுபடாது. ஆங்கே - அதுபோல. இயல்பு உடையார்-நல்ல அறிவும் குணமும் உள்ளவருடன். இனம் தீது எனினும்-சேர்ந்திருக்கும் கூட்டம் கெட்டதானாலும். கேண்மை-அந்தக் கெட்டவர்களின் நட்பால். மனம்-அந்த நல்லவர்களின் மனம். தீதுஆம் பக்கம்-தீமைகளின் பக்கத்திலே. அரிது-சேர்வதில்லை. (க-து): நல்லவர்கள் கெட்டவர்களுடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் மனம் தீமைகளை விரும்பாது. குறிப்பு: இயல்புடையார்க்கு வாழை உவமானம். வேம்பின் இலை தீய இனத்திற்கு உவமானம். 5. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும்; மலைசார்ந்தும் உப்புஈண்டு உவரி பிறத்தலால் தத்தம் இனத்துஅனையர் அல்லர், எறிகடல் தண்சேர்ப்ப! மனத்து அனையர் மக்கள்என் பார். (245) (ப-ரை): எறிகடல்-அலை வீசுகின்ற கடலின். தண் சேர்ப்ப-குளிர்ந்த கரைக்குத் தலைவனாகிய பாண்டியனே. கடல் சார்ந்தும் - கடலின் ஓரத்திலும். இன்நீர் பிறக்கும் - இனிய சுவையுள்ள நல்ல நீர் ஊறும். மலைசார்ந்தும் - மலையின் பக்கத்திலும். உப்பு ஈண்டு-உப்புச் சுவை நிறைந்த. உவரி பிறத்தலால் - கைப்புத் தண்ணீர் ஊறுதலால். மக்கள் என்பார்-மக்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள். தம் தம் - தங்களுடன் சேர்ந்திருக்கும். இனத்து அனையர் அல்லர்-இனத்தைப் போன்ற குணமுள்ளவர்களாகிவிட மாட்டார்கள். மனத்து அனையர்-தங்கள் மனத்தின் இயல்புக்கேற்றவர்களாயிருப்பர். (க-து): உள்ளத்திலே மாசற்ற அறிவுடையவர்களை யாரும் கெடுத்துவிட முடியாது. 6. பராஅரைப் புன்னைப் படுகடல் தண்சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் விரா அஅய்ச் செய்யாமை நன்று. (246) (ப-ரை): பராஅரை புன்னை - பருத்த அடியையுடைய புன்னை மரங்கள். படு-பொருந்தியிருக்கின்ற. கடல் தண்சேர்ப்ப-குளிர்ந்த கடற்கரையின் தலை வனாகிய பாண்டியனே. ஒராலும் - நட்பினரை விட்டுப் பிரிவதும். ஒட்டலும் - மீண்டும் அவர்களுடன் ஒட்டிக்கொள்வதும் ஆகிய செயல்களை. செய்பவோ-நல்லவர்கள் செய்வார்களா? (மாட்டார்கள்). நல்ல மரூஉச் செய்து-நல்ல முறையிலே கூடியிருந்தது. யார் மாட்டும் - யாரிடத்தும் தங்கும் மனத்தார் - நட்பினராகக் கூடியிருக்கும் உள்ளமுடை யவர்கள். விராய்ச் செய்யாமை-ஆராயாமல் ஒருவருடன் சேர்ந்து நம்பச் செய்யாமையே. நன்று-நல்ல குணமாகும். (பரா, அரை முதலியன உயிர் அளபெடைகள்). (க.து): ஒருவரை நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ந்து தெளிவதற்கு முன் நட்புச் செய்யக்கூடாது. இதுவே அறிவுடைமை. 7. உணர உணரும் உணர்வுஉடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம்;-புணரின் தெரியத் தெரியும் தெரிவுஇலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். (247) (ப-ரை): உணர உணரும்-நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்து கொள்ளும். உணர்வு உடையாரை -அறிவுள்ளவரை. புணர - நண்பர்களாகச் சேர்த்துக் கொள்வ தனால்தான். இன்பம் புணரும்-இன்பம் உண்டாகும். தெரியத் தெரியும்-நூலின் உண்மைப் பொருளை நன்றாகத் தெரிந்து கொள்ளும். தெரிவு இலாதாரை-அறிவில்லாதவரை. புணரின் நண்பராகக் கொண்டால் இன்பமில்லை. பிரிய - அவர்களை விட்டுப் பிரிந்தால்தான். நோய் பிரியும் ஆம்-துன்பம் பிரிந்து போகுமாம். (க-து): கற்றவருடன் நட்புக்கொண்டால் இன்பம்; கல்லாதார் நட்புத் துன்பந்தான் தரும். 8. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழ்இடு வானும்-நிலையினும் மேல்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான். (248) (ப-ரை): நல்நிலைக்கண்-நல்ல நிலைமையிலே. தன்னை நிறுப்பானும்- தன்னை வைத்துக் கொள்ளுகின்றவனும். தன்னை நிலை கலக்கி-தன்னைத் தன்னுடைய நல்ல நிலையிலிருந்து சிதைத்து. கீழ் இடுவானும்-கீழ் நிலையிலே போட்டுக் கொள்கின்றவனும். நிலையினும்-தான் இருக்கும் நிலையைவிட. மேல் மேல் உயர்த்து - மேலும் மேலும் உயர்ந்த நிலையிலே கொண்டு போய். நிறுப்பானும் - தன்னை வைத்துக் கொள்ளுகின்றவனும். தன்னைத் தலையாகச் செய்வானும்-தன்னைச் சிறந்தவனாகச் செய்து கொள்ளுகின்றவனும். தான்-அவனேதான். (க-து): ஒவ்வொருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் அறிவும் அறிவின்மையுந்தான். 9. கரும வரிசையால் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாரும் சேரல்-அருமரபின், ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப பேதைமை யன்று; அது அறிவு. (249) (ப-ரை): ஓதம் அரற்றும்-அலைகள் இரைகின்ற. ஒலிகடல்-ஓசையை யுடைய கடலின். தண்சேர்ப்ப - குளிர்ந்த கரையை யுடைய பாண்டியனே. கரும வரிசையால்-காரியம் முறைப்படி நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன். கல்லாதார் பின்னும் - படிக்காதவர்களின் பின்னேயும். பெருமை உடையாரும் - கல்விச் சிறப்புடையவர்களும். சேறல்-செல்லுதல். பேதமையன்று - அறியாமை அன்று. அது-அவ்வாறு செல்லும் செய்கை. அருமரபின் - சிறந்த முறையுள்ள. அறிவு-அறிவுடைமையாகும். (க-து): ஒரு காரியத்தை எண்ணிக் கல்லாதார் பின்னே கற்றார் செல்லுதல் அறியாமையன்று; அறிவுடைமையே ஆகும். 10. கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா;-ஒருநிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃது, என்ப பட்டினம் பெற்ற கலம். (250) (ப-ரை): கருமமும் - தொழிலையும். உள்படா - உடன் பட்டுச் செய்து பொருள் சேர்த்து. போகமும் - அதனால் இன்பத்தையும். துவ்வா - அனுபவித்து. தருமமும் - தருமத்தையும். தக்கார்க்கே - கல்வி அறிவு ஒழுக்கத்தால் சிறந்தவர்களுக்கே. செய்யா - செய்து. ஒரு நிலையே-ஒரே நிலையில் உறுதியாக நின்று. முட்டு இன்றி - தடை இல்லாமல். மூன்றும் - இந்த மூன்று செயல்களையும். முடியுமேல் - ஒருவனால் செய்ய முடியு மானால். அஃது -அச்செய்கை. பட்டினம் பெற்றகலம்-தான் சேர வேண்டிய பட்டினத்தின் துறைமுகத்தையடைந்த கப்பல் போலாம். என்ப-என்பார்கள். (க-து): உழைத்து, இன்புற்று, அறம் புரிகின்றவரே பிறவிப் பயனைப் பெற்றவர். குறிப்பு: மூன்று காரியங்களையும் விடாமல் செய்பவர், துறைமுகத்தை யடைந்த கப்பலைப் போலாவார்கள். இவர் களுக்குக் கலம் - கப்பல் - உவமை. 26. அறிவின்மை அறிவில்லாத தன்மையைப் பற்றிக் கூறுவது 1. நுண்உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங்கால் பெண்அவாய் ஆணிழந்த பேடி அணியாளோ கண்அவாத் தக்க கலம். (251) (ப-ரை): பெண் அவாய் - பெண்தன்மையை விரும்பி. ஆண்-ஆண் இயல்பை. இழந்த பேடி-இழந்ததனால் பேடி என்னும் பெயர் பெற்றவன் தன் பெண் இயல்பைக் காட்ட. கண் அவாத் தக்க - கண்கள் விரும்பிப் பார்க்கத்தகுந்த. கலம் - அழகிய ஆபரணங்களை. அணியாளோ - அணிந்து கொள்ள மாட்டாளோ (அணிந்து கொள்வாள். அதுபோல). எண்ணும்கால்-ஆராய்ந்து பார்க்கும்போது. நுண் உணர்வு இன்மை-நுட்பமான அறிவில்லாமையே (அதாவது பகுத்தறிவின்மையே). வறுமை-அறியாமையாகும். அஃது உடைமை - அப்பகுத்தறிவுடைமையே. பண்ணப் பணைத்த-மிகவும் நெருங்கியிருக்கின்ற. பெரும் செல்வம் - பெரிய செல்வமாகும். (க-து): எவ்வளவு படித்திருந்தாலும் பகுத்தறிவில்லாதார் அறிவில்லாதவர் ஆவர். 2. பல்ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல் உழப்பது அறிதிரேல்,-தொல்சிறப்பின் நாவின் கிழத்தி உறைதலால் சேரானே பூவின் கிழத்தி புலந்து. (252) (ப-ரை): பல் ஆன்ற - பல நிறைந்த. கேள்விப் பயன் -நூல்களைக் கேட்டறிந்து அவற்றின் பயனை. உணர்வார்-அறிந்தவர்கள். பாடு அழிந்து-துன்பத்தால் நிலை கலங்கி. அல்லல் உழப்பது- துக்கத்திலே கிடந்து துடிப்பதற்கான காரணத்தை. அறிதிரேல்-தெரிந்து கொள்ள விரும்புவீரானால் கூறுகிறேன் கேளுங்கள். தொல்சிறப்பின்-பழமையான பெருமை யுள்ள. நாவின் கிழத்தி-நாவிற்குரிய கலைமகள். உறைதலால்-வாழ்வதால். பூவின் கிழத்தி-செந்தாமரையில் வாழும் திருமகள். புலந்து-கோபித்துக் கொண்டு. சேராள்-அந்த அறிவினரிடம் சேரமாட்டாள். (ஏ-அசை) (க-து): அறிவுச் செல்வம் உள்ளவர்களிடம் பொருட் செல்வம் சேருவ தில்லை. 3. கல்என்று தந்தை கழற, அதனைஓர் சொல்என்று கொள்ளாது இகழ்ந்தவன்-மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட, விளியா, வழுக்கோலைக் கொண்டு விடும். (253) (ப-ரை): கல் என்று-இளமைப் பருவத்திலே படித்துக் கொள் என்று. தந்தை கழற-தந்தை அடிக்கடி சொல்லியும். அதனை-அச்சொல்லை. ஓர் சொல் என்று-நமது நன்மைக்காகச் சொல்லும் ஓர் சொல் என்று. கொள்ளாது-எண்ணிக் கொள்ளாமல். இகழ்ந்தவன் - தந்தையின் சொல்லைக் கேட் காதவன் பிற்காலத்தில். மெல்ல-மெதுவாக. எழுத்து ஓலை-எழுதப் பட்ட ஓலை ஒன்றை. பல்லார் முன்-கற்றவர் பலருக்கு எதிரில். நீட்ட-ஒருவன் கொடுக்க அதைக் கண்டு. விளியா-கோபித்துக்கொண்டு. வழுக்கோலை-குற்றத்தை உண்டாக்கும் அடிக்கும் கோலை. கொண்டு விடும்-கையிலே எடுத்துக்கொள்வான். (க-து): இளமையிற் கல்வி கற்றவனே பின்னாளில் பெருமையுடன் வாழ்வான். 4. கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல இருப்பினும் நாய்இருந்து அற்றே; இராஅது உரைப்பினும் நாய்குரைத்து அற்று. (254) (ப-ரை): கல்லாது-படிக்காமல். நீண்ட ஒருவன் - உயரமாக வளர்ந் திருக் கின்ற ஒருவன். உலகத்து - இவ்வுலகிலே. நல் அறிவாளர் இடை - நல்ல அறிவுள்ளவர்கள் கூடியிருக்கும் சபையிலே. புக்கு-நுழைந்து. மெல்ல இருப்பினும் - பேசாமல் உட்கார்ந்திருந்தாலும். நாய் இருந்து அற்றுஏ - ஒரு நாய் உட்கார்ந் திருப்பது போலவே ஆகும். இராது - சும்மாவிருக்காமல். உரைப்பினும் - ஏதேனும் சொல்லுவானாயினும். நாய் குரைத்து அற்று - ஒரு நாய் குரைப்பதுபோலவே கருதப்படுவான். (க-து): கல்வி கற்காதவனை நாய்க்குச் சமமாகவே நினைப்பார்கள் கற்றவர்கள். குறிப்பு: நாயை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அது மலந் தின்னாமலிருக்காது. கல்லாதவர்களும் எந்த நன்மை களைக் கேட்டாலும் தன் மனம் போன போக்கிலேயே நடந்து கொள்வார்கள். இதை விளக்கவே, கல்லாதவர்க்கு நாய் உவமானம் கூறப்பட்டது. 5. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக் கல்லாத சொல்லும் கடையெல்லாம்; கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார், பொருள்மேல் படாஅ விடுபாக்கு அறிந்து. (255) (ப-ரை): கடையெல்லாம் - படிக்காத கடைப்பட்டவர்களெல்லாம். புன் கோட்டி - அற்பர்கள் கூட்டத்தை புல்லா-சேராத. புலவர் இடை-நல்ல அறி வுள்ளவர். கூட்டத்திலே. புக்கு-நுழைந்து. கல்லாத- தாம் படித்துத் தெரிந்து கொள்ளாத செய்திகளைப் பற்றியெல்லாம். சொல்லும் - சொல்லு வார்கள். சான்றவர் - அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் நிறைந் தவர்கள். கற்ற - அவர் கற்றிருக்கும் செய்திகளை. கடாயினும் - சொல்லும் படி கேட்டாலும். பொருள்மேல்-தாம் சொல்லுவது பொருளோடு. படாவிடு பாக்கு - பொருந்தாமல் போய்விடுமோ என்று. அறிந்து - எண்ணி. சொல்லார் - உடனே சொல்லமாட்டார்கள். (ஆராய்ந்து மெதுவாகத்தான் பேசுவார்கள்). (க-து): கற்றவர்கள் ஆராய்ந்து பேசுவார்கள்; கல்லாத வர்கள் உளறிக் கொட்டுவார்கள். 6. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வு அஞ்சி; மற்றையர் ஆவார் பகர்வார், பனையின் மேல் வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ்ஞான்றும் பச்சோலைக்கு இல்லை ஒலி. (256) (ப-ரை): கற்று அறிந்த - நூல்களைக் கற்று உண்மைப் பொருளை அறிந்த. நாவினார் - அடக்கமான சொல்லையுடை யவர்கள். தம் சோர்வு அஞ்சி-தாம் சொல்வதில் குற்றம் உண்டாகிவிடுமோ என்று பயந்து. சொல்லார்- கண்டபடி யெல்லாம் பேசமாட்டார்கள். மற்றையர் ஆவார் - கல்வி கற்காத மற்றவர்கள். பகர்வார் - வாயில் வந்தவைகளையெல்லாம் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பனையின் மேல்-பனைமரத்தின்மேல் உள்ள. வற்றிய ஓலை-காய்ந்து போன ஓலை. கலகலக்கும்-காற்றினால் கலகல வென்று ஒலித்துக் கொண்டேயிருக்கும். எஞ்ஞான்றும் - எந்நாளிலும். பச்சோலைக்கு ஒலி இல்லை -பச்சை ஓலைக்கு ஓசையில்லை. (க-து): கற்றவர்கள் அடக்கமுடன் பேசுவார்கள்; கல்லாத வர்கள் எப் பொழுதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பு: கற்றவர்க்குப் பச்சோலையும், கல்லாதவர்க்குக் காய்ந்த ஓலையும் உவமானங்கள். 7. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்துஅற்றால் நன்றுஅறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்; குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்றுஇசையா வாகும் செவிக்கு. (257) (ப-ரை): நன்று அறியா-நன்மையின்னதென்று தெரிந்து கொள்ளாத. மாந்தர்க்கு - மூடமக்களுக்கு. அறத்து ஆறு -அறநெறிகளைப் பற்றி. உரைக்குங்கால் - சொல்லும்போது. பன்றிக் கூழ் - பன்றிக்கு உணவாகிய கூழ் ஊற்றும். பத்தரில் -தொட்டியிலே. தேமா-இனிய மாம்பழச்சாற்றை. வடித்து அற்றுஆல்-ஊற்றியது போல் ஆகும் (அன்றியும்). குன்றின்மேல்-மலையின்மேல். கொட்டும் -வைத்து அடிக்கின்ற. தறிபோல்- கூர்மையுள்ள மர முளையைப் போல. தலை தகர்ந்து - முளையின் கூர் சிதைந்து. செவிக்கு-அவர்கள் காதிலே. சென்று இசையா ஆகும்-போய்ச் சேராமல் போய்விடும். (க-து): நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில்லா தார்க்கு நல்லுரை கூறுவதனால் பயனில்லை. குறிப்பு: பன்றிக்குக் கூழ் ஊற்றி வளர்த்தல் பண்டை வழக்கம். நன்மையை அறியாத மூடர்களுக்குச் சொல்லும் நல்லுரைக்குப் பன்றித் தொட்டியில் மாம்பழச் சாற்றை ஊற்றுவது ஒரு உவமை; மலையின்மேல் கூர்மையான முளையை அடிப்பது மற்றொரு உவமானம். 8. பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்; வாலிதுஆம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று; கோலால் கடாஅய்க் குறினும், புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு. (258) (ப-ரை): பாலால் கழீஇ-பாலினாலே கழுவி. பல நாள் உணக்கினும் - பல நாட்கள் காய வைத்தாலும். இருந்தைக்கு-கரிக்கு. வாலிதாம் பக்கம்-வெண்ணிறமாகும் தன்மை. இருந்தன்று - இருப்பதில்லை (அதுபோல்). கோலால்-அடிக்கின்ற கோலினால். கடாய்-அசைத்துக் கேட்டு. குறினும்- அடித்தாலும். நோலா உடம்பிற்கு-முன் பிறப்பில் தவம் செய்யாத உடம் புள்ளவர்க்கு. அறிவு புகல் - அறிவுரைகளைக் கூறுதல். ஒல்லா - பொருந்தாதாகும் (கழீஇ, கடாஅய்; உயிர் அளபெடை). (க-து): முன்பிறப்பில் தவம் புரிந்தவர் உள்ளத்தில்தான் அறிவுரைகள் ஏறும். குறிப்பு: முன் பிறப்பில் தவம் செய்தோரே இப்பிறப்பில் அறிவும் செல்வமும் பெறுவர் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. 9. பொழிந்துஇனிது நாறினும் பூமிசைதல் செல்லாது, இழிந்தவை காம்உறூஉம் ஈப்போல்,-இழிந்தவை தாம்கலந்த நெஞ்சினார்க்கு என்ஆகும், தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. (259) (ப-ரை): பொழிந்து-தேனைப் பொழிந்து. இனிது நாறினும்-இனிமையாக நறுமணம் வீசினாலும். பூ-பூவில் உள்ள தேனை. மிசைதல் செல்லாது-அருந்துவதற்குப் போகாமல். இழிந்தவை-மலம் போன்ற இழிவான பொருள்களை. காம்உறும் -விரும்புகின்ற. ஈ போல் - ஈயைப்போல. இழிந்தவைதாம் - அற்பமான எண்ணங்களே. கலந்த-நிறைந்திருக்கின்ற. நெஞ் சினார்க்கு -உள்ளமுடையவர்க்கு. தக்கார் வாய்-பெரியோர் வாயிலிருந்து வரும். தேன் கலந்த-இனிமை நிறைந்த. தேற்றச் சொல்-தெளிவான சொற்களின் மூலம் கிடைக்கும். தேர்வு-முடிவினால். என் ஆகும்-என்ன பயனுண்டாகும்? (ஒரு பயனும் இல்லை). (க-து): மாசு நிறைந்த மனத்தினர்க்கு அறிஞர்களின் நல்லுரைகளால் ஒரு பயனும் உண்டாகாது. 10. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி வற்றாது தன்நெஞ்சு உதைத்தலான்-மற்றுமோர், தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானும்ஓர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். (260) (ப-ரை): கற்றார் உரைக்கும்-படித்தவர்கள் சொல்லுகின்ற. கசடுஅறு-குற்ற மற்ற. நுண்கேள்வி-அருமையான கேட்பதற்குரிய செய்திகளை. பற்றாது-பிடித்து வைத்துக் கொள்ளாமல். தன் நெஞ்சு - தன் மனம். உதைத்தலான்-உதைத்து வெளியே தள்ளி விடுவதால். கீழ்-கீழ் மகன். மற்றும் ஓர்-வேறு ஒரு. தன்போல் ஒருவன்-தன்னைப் போன்ற ஒரு கீழ்மகனுடைய. முகம் நோக்கி-முகத்தைப் பார்த்து. தானும் ஓர்-தானும் ஒரு. புன்கோட்டி-அற்பமான சொல்லை. கொள்ளுமாம்-ஏற்றுக் கொள்ளுவான். (க-து): கீழ்மகனாக இருப்பவன் உள்ளத்திலே அறிவுடை யவர் சொல் ஏறாது; அவனைப் போன்ற கீழ்மகனுடைய சொல்லே ஏறி நிலைக்கும். 27. நன்றியில் செல்வம் நன்மையில்லாத செல்வத்தின் தன்மையைக் கூறுவது 1. அருகல்அது ஆகிப் பலபழுத்தக் கண்ணும், பொரிதாள் விளவினை, வாவல் குறுகா; பெரிதுஅணியர் ஆயினும் பீடிலார் செல்வம் கருதும் கடப்பாட்டது அன்று. (261) (ப-ரை): அருகல் அது ஆகி-அருகிலே அது இருப்பதாகி. பல பழுத்த கண்ணும்-பல பழங்களைப் பழுத்திருந்தாலும். பொரி தாள்-பொரிந்த அடிப்பாகத்தையுடைய. விளவினை-விளா மரத்தை நாடி. வாவால் குறுகா - வெளவால்கள் நெருங்க மாட்டா (அதுபோல). பெரிது- மிகவும். அணியர் ஆயினும்-அண்மையிலிருப்பாராயினும். பீடு இலார்-பெருமைக் குணம் இல்லாதவர்களின். செல்வம்-நிறைந்த செல்வமானது. கருதும் - ஏழைகளால் நமக்கு உதவும் என்று எண்ணப்படும். கடப் பாட்டது - முறையையுடையது. அன்று-அன்றாம் (க-து): கெட்டவர்கள் செல்வம் அவர் அருகில் இருப்ப வர்க்கும் உதவி செய்யாது. குறிப்பு: நற்குணமற்றவர்கள் செல்வத்திற்கு விளாம்பழம் உவமை. விளாமரத்தில் உள்ள பழம் வெளவாலுக்குப் பயன் படாது. அதேபோல், கெட்டவர்கள் செல்வம் ஏழைகளுக்கு உதவாது. 2. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ ஆயினும் கள்ளிமேல் கைநீட்டார். சூடும்பூ அன்மையால்; செல்வம் பெரிதுடையர் ஆயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார். (262) (ப-ரை): அள்ளிக் கொள்வ அன்ன-நம் உள்ளத்தைக் கவர்ந்துகொள்வன போன்ற. குறுமுகிழ ஆயினும்-அழகிய சிறு அரும்புகளாயிருந்தாலும். சூடும் பூ அன்மையால்-அணிந்து கொள்ளக்கூடிய பூவாகாமையால். கள்ளி மேல் - கள்ளிச் செடியின் மேல். கைநீட்டார்-உள்ள அரும்பைப் பறிப்பதற்குக் கையை நீட்டமாட்டார்கள் (அதுபோல). செல்வம் பெரிது உடையார் ஆயினும் - செல்வத்தை ஏராளமாக உடையவரா யிருந்தாலும். கீழ்களை-கெட்ட குணம் நிரம்பிய கீழானவர்களை. அறிவுடையார் - அறிவுள்ளவர்கள். நள்ளார் - நட்பாகக் கொள்ள மாட்டார்கள். (க-து): கீழ்மக்கள் எவ்வளவு செல்வமுள்ளவராயிருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்புச் செய்யமாட்டார்கள். குறிப்பு: கீழ்மக்களிடம் உள்ள செல்வத்திற்குக் கள்ளி அரும்பு உவமானம். 3. மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல் கிணற்றின்கண் சென்றுண்பர்; செல்வம் பெரிதுஉடையர் ஆயினும் சேண்சென்றும் நல்குவார் கட்டே நசை. (263) (ப-ரை): மல்கு திரைய-நிறைந்த அலைகளையுடைய. கடல் கோட்டு - கடற்கரையிலே. இருப்பினும் - வாழ்ந்தாலும். வல்ஊற்று - விரைந்து நீர் ஊறுகின்ற. உவர்இல் - உப்பில்லாத. கிணற்றின்கண் - கிணற்றிடத்தே. சென்று உண்பர் - தேடிச் சென்று தண்ணீர் குடிப்பார்கள் (அதுபோல). செல்வம் -கெட்டவர் செல்வத்தை. பெரிது உடையார் ஆயினும் -மிகுதியாக உடையவர்களாக இருந்தாலும். சேண் சென்றும்-அவரிடம் செல்லாமல் தூரத்திலே சென்றாவது. நல்குவார் கட்டே - விரும்பிக் கொடுக்கின்றவர் களிடந்தான். நசை - தமது விருப்பத்தைக் கூறி உதவி பெறுவார்கள். (க-து): கெட்டவர்கள் செல்வமுள்ளவராய் அருகில் இருந்தாலும் அவர்கள் உதவியை அறிவுள்ளவர்கள் நாட மாட்டார்கள். குறிப்பு: பிறருக்கு உதவும் செல்வர்க்கு, உவர்ப்பில்லாத கிணறு உவமானம்; உதவாத செல்வர்க்குக் கடல் நீர் உவமானம். 4. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே; உணர்வது உடையார் இருப்ப-உணர்வுஇலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே பட்டும் துகிலும் உடுத்து. (264) (ப-ரை): உணர்வுஅது உடையார் - அறிவாகிய அப்புண்ணி யத்தை உடையவர்கள். இருப்ப-வறுமையால் வாடி மறைந் திருக்க. உணர்வு இலா - அறிவு இல்லாத. வட்டும் வழுதுணையும் போல்வாரும் - சூதாடு கருவியையும் வழுதுணம் செடியையும் போன்றவர்களும். பட்டும் துகிலும் உடுத்து - பட்டாடை களையும் பருத்தியாடைகளையும் ஆடம்பரமாக அணிந்து கொண்டு. வாழ்வார்ஏ - நன்றாக வாழ்வார்கள் (ஆதலால்). புணர் கடல் சூழ்-நெருங்கிய கடல் சூழ்ந்த. வையத்து- இவ்வுலகிலே. புண்ணியமோ - புண்ணியம் என்பதோ. வேறே - நாம் நினைப்பது போல் இல்லை; வேறுவிதமாகத்தான் இருக்கின்றது. (ஏ: அசை.) (க-து): நல்லவர்கள் துண்புறுகின்றனர்; கெட்டவர்கள் இன்புறுகின்றனர். இதுதான் இவ்வுலகில் நாம் காணும் காட்சி. குறிப்பு: அறிவற்றவர்களுக்கு வட்டும், வழுதுணையும் உவமைகளாகக் கூறப்பட்டன. 5. நல்லார் நயவர் இருப்ப, நயம்இலாக் கல்லார்க்குஒன்று ஆகிய காரணம்;-தொல்லை வினைப்பயன் அல்லது, வேல்நெடும் கண்ணாய்! நினைப்ப வருவதொன்று இல். (265) (ப-ரை): வேல் நெடும் கண்ணாய்-வேல் போல் நீண்ட கண்களை யுடையவளே. நல்லார்-நல்ல பண்புள்ளவர்களிலே பலர். நயவர் இருப்ப - வறுமையாளர்களாய் வாழ. நயம் இலா-நற்குணமில்லாத. கல்லார்க்கு-மூடர்களுக்கு. ஒன்று - ஒப்பற்ற செல்வம். ஆகிய காரணம் - உண்டாகியிருப்பதற்கான காரணம். தொல்லை - பழமையான. வினைப்பயன் அல்லது - வினையின் பயனைத் தவிர. நினைப்ப - ஆராய்ந்து பார்க்க. வருவது ஒன்று இல்-தெரியவருவது வேறொன்றும் இல்லை. (க-து): இன்பமும் துன்பமும் முன்வினைப் பயனால் வருவன. 6. நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்! நீறாய் நிலத்து விளியரோ!-வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ; பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து (266) (ப-ரை): நாறா - மணம் வீசாத. தகடேபோல் - பொன் தகடுபோல் காணப்படுகின்ற. நல் மலர்மேல் - நல்ல செந்தாமரை மலரின் மீது வாழ்கின்ற. பொன் பாவாய்-அழகிய பதுமை போன்ற திருமகளே. நிலத்து - இவ்வுலகிலே நீ வாழவேண்டாம். நீறுஆய்-சாம்பலாகி. விளியர்ஓ - அழிந்துபோ. நீ பொன் போலும் - நீ தங்கம் போன்ற. நன்மக்கள் பக்கம் - நல்லவர்கள் பக்கத்தை விட்டு. துறந்து - நீங்கி. வேறாய - நன்மைக்கு விரோத மாக இருக்கின்ற. புன்மக்கள் பக்கம் - அற்பர்களிடத்திலே. புகுவாய் - புகுந்து வாழ்வதே உன் குணம். (ஓ: அசை.) (க-து): தீயவர்களை நாடும் திருமகளே! நீ அழிந்து சாம்ப லாகிப் போ! 7. நயவார்கண் நல்குரவு நாண்இன்று கொல்லோ! பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்! வியவாய்காண்! வேற்கண்ணாய்! இவ்விரண்டும் ஆங்கே நயவாது நிற்கும் நிலை (267) (ப-ரை): நயவார்கண் - நல்ல குணங்களை உள்ளவர் களிடத்தே நிற்கும். நல்குரவு-வறுமைக்கு. நாண் இன்று கொல்ஓ - வெட்கம் இல்லையோ. பயவார்கண் - நன்மை செய்யாதவர் களிடம் உள்ள. செல்வம் - செல்வமானது. பரம்ப - விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். பயின்கொல் - பிசினோ. வேல்கண்ணாய் - வேல் போன்ற கண்ணையுடையவளே. இவ்விரண்டும் - இந்த வறுமையும் செல்வமும். ஆங்கே -அந்த இருவரிடத்திலும். நயவாது-நன்மை தராமல். நிற்கும் நிலை - நிற்கின்ற நிலைமையை. வியவாய் காண் - வியந்து காண்பாயாக. (க-து): நல்லவர்களின் வறுமையும் கெட்டவர்களின் செல்வமும் பயன் படமாட்டா. 8. வலவைகள் அல்லாதார் காலாறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர்;-வலவைகள் காலாறும் செல்லார்; கருனையால் துய்ப்பவே மேல்ஆறு பாய விருந்து. (268) (ப-ரை): வலவைகள் அல்லாதார் - நாணமற்றவர்கள் அல்லாதவர்கள்(நாணம் உள்ளவர்கள்). கால்ஆறு சென்று-வறுமையடைந்தபோது காலால் வழி நடந்து சென்று. கலவை கள் - பிச்சைச் சோற்றை. உண்டு - சாப்பிட்டு. கழிப்பர் -காலங் கழிப்பார்கள். வலவைகள் - நாணமற்றவர்கள். கால்ஆறும் செல்லார் - காலால் நடந்து வழியையும் கடக்கமாட்டார்கள். மேல்ஆறு பாய - மேலும் நெய்யாறு பாலாறு பாயும்படி. இருந்தது - வீட்டுக்குள்ளேயே கதவடைத்துக்கொண்டிருந்து. கருணையால்-பொரிக்கறியோடு கூடிய உணவை. துய்ப்பவே-உண்டு களிப்பார்கள். (க-து): நாணமற்றவர் பழிச் சொல்லுக்கு அஞ்சார்; தாமே உண்டு மகிழ்வார். 9. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட மின்ஒளிர் வானம் கடல்உள்ளும் கான்றுஉகுக்கும்; வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து. (269) (ப-ரை): பொன்னிறச் செந்நெல் - பொன்னிற முள்ள கதிர் களை ஈனக்கூடிய செற்நெற் பயிர்கள். பொதியொடு-உள்ளே பொதிந்திருக்கின்ற. பீள் வாட - கருவானது வாடும்படி. மின் ஒளிர் வானம் - மின்னலோடு விளங்குகின்ற மேகம். கடல் உள்ளும் - பயிருக்குப் பெய்யாமல் நீர் நிறைந்த கடற்குள்ளும். கான்று உகுக்கும் - நீரை வெளியிட்டுச் சிந்தும். வெண்மை யுடையார் - அறிவற்றவர்கள். விழுச் செல்வம் எய்தியக்கால் - பெரிய செல்வத்தைப் பெற்றபோது. வண்மையும் - அவர் செய்யும் வள்ளல் தன்மையும். அன்ன தகைத்து - அதுபோன்ற தன்மையுள்ளதாக இருக்கும் (க-து): அறிவற்றவர் பயன் தரும் வழியறிந்து அறம் புரிய மாட்டார்கள். 10. ஓதியும் ஓதார் உணர்விலார், ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார்;-தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும் நல்கூர்ந்தார் ஈயார் எனின். (270) (ப-ரை): உணர்வு இல்லார் - பகுத்தறிவில்லாதவர். ஓதியும் -படித்திருந் தாலும். ஓதார் - படிக்காதவர்களாவர். உணர்வுடை யார் - பகுத்தறிவுள்ளவர். ஓதாதும் - படிக்காதிருந்தாலும். ஓதி அனையார் - படித்தவர்களுக்கு ஒப்பாவார். நல்கூர்ந்தும்-வறுமை யடைந்தாலும். தூய்தாக - குற்றமற்றவராய் இருந்து. இரவாதார்-பிறரிடம் யாசகம் செய்யாமல் வாழ்கின்றவர். செல்வர்- செல்வ முள்ளவர்களைப் போன்றவர். செல்வரும் - செல்வமுள்ளவர் களும். ஈயார் எனின்-வறியோர்க்கு உதவார் ஆயின். நல்கூர்ந்தார்-வறியவர்களைப் போலாவார். (க-து): அறிவுள்ளவரே படித்தவர்; உதவி செய்கின்றவரே செல்வர். துன்பவியல் 28. ஈயாமை பிறருக்கு உதவாமையால் வரும் இழிவு 1. நட்டார்க்கும் நள்ள தவர்க்கும், உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;- அட்டது அடைத்திருந்து உண்டுஒழுகும் ஆவதுஇல் மாக்கட்கு, அடைக்குமாம் ஆண்டைக் கதவு. (271) (ப-ரை): நட்டார்க்கும்-சுற்றத்தார்க்கும். நள்ளாதவர்க்கும் - விருந்தினர்க்கும். உளவரையால்-தம்மிடம் உள்ள பண்டத்தைக் கொண்டு. அட்டது - சமைத்த உணவை. பாத்து உண்டல் -பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பதுதான். அட்டு உண்டல் -உண்மையில் சமைத்து உண்பதாகும். அட்டது - மிகுதியாகச் சமைத்திருக்கும் உணவை. அடைத்து இருந்து - கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயிருந்து. உண்டு ஒழுகும் - தாம் மட்டும் தின்று வாழ்கின்ற. ஆவதுஇல் - பயனற்ற. மாக்கட்கு - மிருகம் போன்ற தந்நலக்காரர்களுக்கு. ஆண்டைக் கதவு-அவ்வுலகத்தின் கதவு. அடைக்கும் ஆம் - உள்ளே போக முடியாமல் சாத்தப்படும். (க-து): உள்ள உணவைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்பவரே நற்கதியடைவார்கள். 2. எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; -மற்றைப் பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார், அழிந்தார் பழிகடலத் துள். (272) (ப-ரை): எத்துணையானும் - எவ்வளவு சிறிதாயினும். இயைந்த அளவினால்-தம்மால் முடிந்த அளவு. சிறு அறம் செய்தார் - சிறிய அறத்தைச் செய்தார். தலைப்படுவர்-உயர்வடை வார்கள். மற்றை - வேறு. பெறும் செல்வம்-மிகுந்த செல்வத்தை. எய்தியக்கால் - பெற்ற பொழுதும் நன்மை செய்யாமல். பின் அறிதும் - வயதேறிய பின் அதைப்பற்றி ஆலோசிப்போம். என்பார் - என்று சொல்லி அறம் புரியாமலிருப்பவர். பழி கடலத்துள் - பழிப்பு என்னும் சமுத்திரத்தில். அழிந்தார்-விழுந்து அழிந்தவராவார். (க-து): தம்மால் முடிந்த அளவு நன்மை செய்பவரே உயர்ந்த வராவார். 3. துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான், வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த பொருளும் அவனை நகுமே; உலகத்து அருளும் அவனை நகும். (273) (ப-ரை): துய்த்து - செல்வத்தால் இன்பம் நுகர்ந்து. கழியான் - தன் காலத்தைக் கழிக்கமாட்டான். துறவோர்க்கு-வறியவர்களுக்கு. ஒன்று ஈகலான் - அவர்கள் வேண்டியது ஒன்றைக் கொடுக்க மாட்டான். வைத்துக் கழியும்-செல்வத்தைச் சேர்த்து வைத்து இறக்கின்ற. மடவோனை - அறிவற்ற மடையனை (அவன் இறக்கும் போது). வைத்த பொருளும்-அவன் சேர்த்து வைத்த செல்வமும். அவனை நகும்ஏ - அவனைப் பார்த்துச் சிரிக்கும். உலகத்து அருளும் - உலகிலேயே உள்ள இரக்கமும். அவனை நகும் - அவனைப் பார்த்துப் பரிகசித்துச் சிரிக்கும். (க-து): செல்வத்தின் பயனைத் தானும் அனுபவிக்காமல் அதைப் பிறருக்கும் உதவாமல் சேர்த்து வைப்பவன் மடையன். 4. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெரும் செல்வம் - இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும். (274) (ப-ரை): கொடுத்தலும் - வறியோர்க்குக் கொடுப்பதையும். துய்த்தலும் - தான் அனுபவிப்பதையும். தேற்றா - அறியாத. இடுக்குஉடை உள்ளத்தான் - கஞ்சத்தனம் படைத்த மனமுள்ளவன். பெற்ற பெரும் செல்வம் - அடைந்திருக்கின்ற பெரிய செல்வமானது. இல்லத்து - ஒரு குடும்பத்திலே பிறந்த. உருவுடைக் கன்னியரைப்போல - அழகுள்ள பெண்களைப் போல அக் குடும்பத்தினர்க்குப் பயன்படாமல். பருவத்தால் - தக்க பருவம் வந்த காலத்திலே. ஏதிலான் துய்க்கப்படும் - அயலானால் அச்செல்வம் அனுபவிக்கப்படும். (க-து): அறஞ்செய்யாமல், அனுபவிக்காமல் சேர்த்து வைத்த செல்வம் அவன் குடும்பத்தார்க்குப் பயன்படாது. குறிப்பு: ஒரு வீட்டிலே பிறந்த பெண்ணை, அவ்வீட்டிலே பிறந்தவர் அனுபவிப்பதில்லை. இரத்தக் கலப்பற்ற அந்நியருக்குத் தான் மணம் புரிந்து கொடுப்பார்கள். 5. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்; மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர் கழிநல் குரவே தலை. (275) (ப-ரை): எறி நீர் - அலை வீசுகின்ற நீர் நிறைந்த. பெரும் கடல் - பெரிய கடற்கரையிலே. எய்தியிருந்தும் - அடைந்திருந் தாலும். அறுநீர் - அடிக்கடி நீர் வற்றிப் போகின்ற. சிறு கிணற்று - சிறிய கிணற்றின். ஊறல் பார்த்து - நீரைத் தேடிப்பார்த்து. உண்பர் -அருந்துவர் (ஆதலால்). மறுமை அறியாதார் -மறுமையைப்பற்றி¬¬ நினைக்காதவர்களின். ஆக்கத்தின் - செல்வத்தைக்காட்டிலும். சான்றோர் - நல்லவர்களின். கழி நல்குரவே - மிகுந்த வறுமையே. தலை - சிறந்ததாகும். (க-து): கெட்டவர்களின் செல்வத்தைவிட, நல்லவர்களின் வறுமையே உயர்ந்தது. 6. எனது எனது என்றிருக்கும் ஏழை பொருளை; எனதுஎனது என்றிருப்பன் யானும்; தனதுஆயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்; யானும் அதனை அது. (276) (ப-ரை): ஏழை பொருளை - அறிவில்லாதவன் ஒருவன் தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை. எனது எனது என்று இருக்கும் - எனது எனது என்று நினைத்துக்கொண்டிருப்பான். யானும் -நானும் அப்பொருளை. எனது எனது என்று இருப்பன் - எனது எனது என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தனது ஆயின் - அது அவனுடைய பொருளாக இருக்குமாயின் அதை அவன் அனுபவிக்க வேண்டும். தானும் - அப்படியில்லாமல் அவனும். அதனை - அச்செல்வத்தை. வழங்கான் - அச் செல்வத் தால் அடையும் பயனையும் நுகரமாட்டான். யானும் - நானும். அதனை -அச் செல்வத்தை. அது - அவனைப்போலவே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். (க-து): செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவனும், வறியவனும் ஒன்றேதான். 7. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்; இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்:- உழந்துஅதனைக் காப்புய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் கைந்நோவ யாப்புஉய்ந்தார்; உய்ந்த பல. (277) (ப-ரை): வழங்காத - வறியோர்க்கு ஒன்றும் ஈயாத. செல்வரின் - செல்வமுள்ளவரைவிட. நல்கூர்ந்தார் - வறுமை யுள்ளவர்களே. உய்ந்தார் - துன்பப்படாமல் பிழைத்தவர் ஆவர். இழந்தார் - சேர்த்து வைத்த செல்வத்தைப் பறி கொடுத்து விட்டார். எனப் படுதல் - என்று சொல்லப்படும் துன்பத்தி லிருந்து. உய்ந்தார் - தப்பித்துக் கொண்டார். உழந்து அதனை - வருந்தி அச் செல்வத்தை. காப்பு உய்ந்தார் - காப்பாற்றும் துன்பத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். கல்லுதலும் - அச் செல்வத்தைப் புதைத்து வைக்க நிலத்தைத் தோண்டுவதாகிய துன்பத்திலிருந்தும். உய்ந்தார் - தப்பித்துக் கொண்டார். உய்ந்த பல - இன்னும் பல துன்பங்களிலிருந்தும் தப்பித்துக்கொண்டார். (க-து): வழங்காத செல்வரைவிட வறியவரே துன்பமின்றி வாழ்கின்றவர். 8. தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும் தமதாய போழ்தே கொடாஅர்;- தனதாக முன்னே கொடுப்பன் அவர்கடியார்; தான்கடியான் பின்னை அவர்கொடுக்கும் போழ்து (278) (ப-ரை): தனதுஆக - செல்வம் தன்னுடையதாக இருக்கும் போதே. தான் கொடான் - அவன் பிறருக்குக் கொடுத்துதவ மாட்டான். தாயத்தவரும் - அவனுடைய தாயாதிகளும். தமதுஆய போழ்தே - அச் செல்வம் தம்முடையதாகிய காலத்தில். கொடார் - பிறருக்குக் கொடுத்து உதவமாட்டார். தனதுஆக - செல்வம் தன்னுடையதாக இருக்கும்போதே. முன்னே கொடுப்பின் -தான் இறப்பதற்கு முன்பே அச் செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத் தால். அவர் கடியார் - அத் தாயத்தார் விலக்கமாட்டார்கள். பின்னை - அச் செல்வம் தமதாகிய பிறகு. அவர் கொடுக்கும் போழ்து - அத் தாயத்தார் பிறருக்குக் கொடுக்கும்போது. தான் கடியான் - இறந்துபோன அவன் வந்து விலக்க மாட்டான். (க-து): செல்வம் உள்ளவர்கள் அறம் புரிவதை யாரும் தடுக்க முடியாது. 9. இரவலர் கன்றாக ஈவார் ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - விரகின்றி வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ். (279) (ப-ரை): இரவலர் - யாசிப்பவர். கன்றாக - கன்றாகவும். ஈவார் - கொடுப்பவர். ஆவாக - பசுவாகவும் அமைந்து. விரகின் - உற்சாகத்துடன். சுரப்பது - கொடுப்பதே. வண்மைஆம் - சிறந்த ஈகையாகும். விரகு இன்றி - உற்சாகம் இல்லாமல். வல்லவர் ஊன்ற - வலியவர் அழுத்திக் கறக்க. வடிஆபோல் - பாலை வடிக்கின்ற பசுவைப்போல. வாய்வைத்து - தந்திரம் செய்து. கொல்ல - வருத்துவதனால். சுரப்பது - கொடுப்பது. கீழ்ஆம் - கீழ்மக்கள் தன்மையாகும். (க-து): தாமே மனமிரங்கிக் கொடுப்பதே சிறந்த ஈகை யாகும். 10. ஈட்டலும் துன்பம்;மற்று ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்;-காத்தல் குறைபடின் துன்பம்; கெடின் துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள். (280) (ப-ரை): ஈட்டலும் - செல்வத்தைத் தேடுவதும். துன்பம் - துன்பமாகும். ஈட்டிய ஒண்பொருளை - சேர்த்த சிறந்த செல்வத்தை. காத்தலும் - வைத்துக் காப்பாற்றுவதும். ஆங்கே - தேடுவது போன்ற. கடுந்துன்பம் - மிகுந்த துன்பமாகும். காத்தல் குறைபடின் துன்பம் - காப்பதிலே குற்றம் உண்டானாலும் துன்பமாகும். கெடின் துன்பம் - பொருள் அழிந்தாலும் துன்ப மாகும். பொருள் - செல்வ மானது. துன்பக்கு - துன்பத்துக்கு. உறைபதி - இருப்பிடமாகும். (க-து): செல்வத்தால் வரும் இன்பத்தைவிட, துன்பமே மிகுதியாக உண்டாகும். 29. இன்மை வறுமையால் அடையும் துன்பத்தைக் கூறுவது 1. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும், பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடுஎய்தும்; ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார் செத்த பிணத்தின் கடை. (281) (ப-ரை): அத்து இட்ட - தையல் போடப்பட்ட. கூறை - உடையை. அரைச் சுற்றி - இடையிலே தரித்துக் கொண்டு. வாழினும் - பார்வைக்கு எளியராக வாழ்ந்தாலும். பத்து எட்டு உடைமை - கையிலே பத்தோ எட்டோ காசுடையவராயிருந் தால். பலர் உள்ளும் - அவர்கள் பலர் இடையிலும். பாடு எய்தும் - பெருமை அடைவார்கள். ஒத்த குடிப் பிறந்தக்கண்ணும் - அற நூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும். ஒன்றுஇல்லாதார் - ஒரு பொருளும் இல்லாதவர். செத்த பிணத்தின் - செத்த பிணத்தைக்காட்டினும். கடை - கடைப்பட்டவராக எண்ணப்படுவார்கள். (க-து): பணமில்லாதவர் பிணத்தினும் இழிவாக எண்ணப் படுவர். 2. நீரினும் நுண்ணிது நெய்யென்பர்; நெய்யினும் யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின் நிரப்புஇடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. (282) (ப-ரை): நீரினும் - தண்ணீரைக்காட்டினும். நுண்ணிது - நுட்பமானது, நெய் என்பர் - எண்ணெய் என்று கூறுவார்கள். நெய்யினும் - எண்ணெய்யைக்காட்டினும். புகை நுட்பம் - புகை நுட்பமானது என்பதை. யாரும் அறிவர் - அனைவரும் அறிவார் கள். தேரின் - ஆராய்ந்து பார்த்தால். நிரப்புஇடும்பையாளன் - வறுமையால் வருந்துகின்றவன். புகையும் புகல்கு அரிய - புகை யினாலும் நுழைய முடியாத. பூழை நுழைந்து - சிறிய துளை வழியாகப் புகுந்து. புகும்ஏ - செல்வமுள்ளவன் இருக்கும் இடத்தை அடைவான். (க-து): வறுமையால் வருந்துவோன் எல்லாக் கட்டுக் காவல்களையும் கடந்து விடுவான். 3. கல்ஓங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால், செல்லாவாம் செம்பொறி வண்டினம் - கொல்லைக் கலாஅல் கிளிகடியும் கானக நாட! இலாஅஅர்க்கு இல்லைத் தமர். (283) (ப-ரை): கொல்லை - தினைப்புனத்திலே. கல்லால் - கல்லை வீசி. கிளி கடியும் - தினைக் கதிரைத் தின்ன வரும் கிளிகளை ஓட்டுகின்ற. கானகம் நாட - சோலைகள் நிறைந்த நாட்டை யுடையவனே. கல்ஓங்கு - கல்லால் உயர்ந்திருக்கின்ற. உயர் வரைமேல் - பெரிய மலையின் மேல். காந்தள் மலராக்கால் - காந்தட் செடிகள் மலர்ந்திராவிட்டால். செம்பொறி வண்டினம் - சிவந்த புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டம். செல்லாஆம் - அந்த மலையின் மேல் பறந்து செல்லமாட்டவாம் (அதுபோல). இல்லார்க்கு - செல்வமில்லாத வறியர்களுக்கு. தமர் இல்லை - உறவினர்களும் இல்லை. (க-து): வறியோர்க்கு உற்றாரும் இல்லை; உறவினர்களும் இல்லை. 4. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல், தொண்டு ஆயிரவர் தொகுபவே; - வண்டாய்த் திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல். (284) (ப-ரை): உண்டாய போழ்தின் - ஒருவருக்குச் செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில். உடைந்துழி - உடல் உயிர் நீங்கிச் சிதைந்து பிணமானபோது. காகம்போல் -அதைப் பிடுங்கித் தின்பதற்காகக் கூடியிருக்கின்ற காக்கைக் கூட்டத்தைப்போல. தொண்டு - செல்வருக்குத் தொண்டு செய்து பொருளைப் பிடுங்குவதற்காக. ஆயிரவர் - ஆயிரக்கணக்கான மக்கள். தொகுபஏ - கூடியிருப்பார்கள். வண்டாய் - அச்செல்வர் வறுமையுற்று வண்டுபோல. திரிதரும் காலத்து - உணவை நாடித் திரிகின்ற காலத்தில். தீது இலிரோ - அவரைப் பார்த்து நலமுடன் வாழ்கின்றீரா? என்பார் - என்று வாயளவில் கேட்பவர்கள் கூட. இவ்வுலகத்து - இவ்வுலகில். ஒருவரும் இல் - ஒருவரும் இல்லை. (க-து): வறியோரைக் கண்டால் வாய் வார்த்தை கூடப் பேசமாட்டார்கள். குறிப்பு: செல்வர் பணத்தைப் பறிக்கச் சுற்றித் திரிவோர்க்குப் பிணம் பிடுங்கும் காகங்களை உவமானமாகக் கூறப்பட்டது. மனிதனுடைய பண்புக்கு மதிப்பில்லை. செல்வத்திற்கே மதிப்புண்டு. 5. பிறந்த குலம்மாயும், பேராண்மை மாயும், சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கு அருவி கன்மேல் கழூஉம் கணமலை நன்னாட! இன்மை தழுவப்பட் டார்க்கு. (285) (ப-ரை): கறங்கு அருவி - ஒலித்துக்கொண்டு ஓடி வரும் அருவிநீர். கல்மேல் கழூஉம் - கல்லின்மேல் உள்ள அழுக்கைக் கழுவிக்கொண்டு விழுகின்ற. கணம் மலை நல் நாட - கூட்டமான மலைகள்நிறைந்த நல்ல நாட்டையுடைய பாண்டியனே. இன்மை- வறுமையால். தழுவப்பட்டார்க்கு - பிடித்துக் கொள்ளப்பட்ட வர்க்கு. பிறந்த குலம் -தாம் பிறந்த குலத்தின் பெருமையும். மாயும் - அழியும். பேர்ஆண்மை மாயும் -அவர்களிடம் இருந்த பெரிய ஆண்மையும் அழிந்துவிடும். சிறந்த - அழியாது என்று சொல்லும்படி சிறந்து நின்ற. தம் கல்வியும் மாயும் - தமது கல்வியும் அழிந்துவிடும். (க-து): வறுமையால் அழியாத நன்மைகள் ஒன்றும் இல்லை. 6. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு, உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான், - உள்ளூர் இருந்துஉயிர் கொன்னே கழியாது தான்போய், விருந்தினன் ஆதலே நன்று. (286) (ப-ரை): உள்கூர் - வயிற்றின் உள்ளே தோன்றிய மிகுந்த. பசியால் - பசியின் காரணமாக. உழை நசை இச்சென்றார்கட்கு - தன்னிடம் உணவை விரும்பி வந்தவர்களுக்கு. உள்ளூர் இருந்தும் - உள்ளூரிலே இருந்துங்கூட. ஒன்று ஆற்றாதான் - ஒன்றும் உதவி செய்யாதவன். உள்ளூர் இருந்து - உள்ளூரிலே குடியிருந்து கொண்டு. உயிர் கொன்னே கழியாது - உயிர் வாழ்க்கையை வீண் போக்காமல். தான் போய் - தான் எங்கேயாவது போய். விருந்தினன் ஆதலே - விருந்தாளியாக வாழ்வதே. நன்று - சிறந்ததாகும். (க-து): பிறருக்கு உதவாமல் உள்ளூரில் வாழ்வதைவிட வெளியூருக்குப் போய்விடுவதே சிறந்ததாகும். 7. நீர்மையே அன்றி நிரம்பி எழுந்ததம் கூர்மையும் எல்லாம் ஒருங்குஇழப்பர்:- கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்புஎன்னும் அல்லல் அடையப்பட் டார். (287) (ப-ரை): கூர்மையின் - கூர்மையினால். முல்லை அலைக்கும் - முல்லை அரும்புகளையும் வருந்தச் செய்கின்ற. எயிற்றாய் - பற்களையுடைய பெண்ணே. நிரப்பு என்னும் - வறுமை என்று சொல்லப்படுகின்ற. அல்லல் - துன்பத்தை. அடையப்பட்டார் - அடையப் பெற்றவர்கள். நீர்மையே அன்றி - தங்கள் சிறந்த குணத்தை இழப்பது மட்டும் அன்றி. நிரம்பி எழுந்த - நிரம்பி நிற்கின்ற. தம் கூர்மையும் - தமது நுண்ணறிவையும். எல்லாம் ஒருங்கு - எல்லாவற்றையும் ஒரே அடியாக. இழப்பர் - இழந்து விடுவார்கள். (க-து): வறுமை நற்குணத்தையும், நுண்ணறிவையும் அழித்துவிடும். 8. இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது, முட்டாற்றுப் பட்டு, முயன்றுஉள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று, நிரைமனையில் கைநீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. (288) (ப-ரை): இட்டு ஆற்றுப்பட்டு - அற்பமான வறுமை நெறி யிலே அகப்பட்டுக்கொண்டு. ஒன்று - ஒருபொருளை. இரந்த வர்க்கு ஆற்றாது - வேண்டியவர்களுக்கு அதைக் கொடுத்து உதவ முடியாமல். முட்டு ஆற்றுப்பட்டு - எதுவும் கிடைக்காமல் முட்டுப்படுகின்ற நெறியிலே நின்று. முயன்று - ஏதேனும் செய்து கொண்டு. உள்ளூர் வாழ்தலின் - உள்ளூரிலே வாழ்வதைவிட. நெட்டு ஆற்றுச் சென்று - நீண்ட வழியிலே நடந்து சென்று. நிரை மனையில் - செல்வம் நிரம்பிய வீட்டிலே. கை நீட்டும் - கையை நீட்டிப் பிச்சையேற்று வாழும். கெட்ட ஆற்று வாழ்க்கையே - கெட்ட வழியாகிய வாழ்க்கையே. நன்று - சிறந்ததாகும். (க-து): உள்ளூரில் மதிப்பின்றி வாழ்வதைவிட வெளியூரில் சென்று பிச்சையெடுத்து வாழ்வதே சிறந்ததாகும். 9. கடகம் சறிந்ததம் கைகளால், வாங்கி அடகு பறித்துக்கொண்டு அட்டுக் - குடைகலனா உப்புஇலி வெந்தைதின்று உள்அற்று, வாழ்பவே துப்புரவு சென்றுஉலந்தக் கால். (289) (ப-ரை): துப்புரவு - இன்பந் துய்க்கும் செல்வப் பொருள். சென்று உலந்தக்கால் - சென்று அழிந்தபோதிலும். கடகம் சறிந்த - அக்குடியிலே வாழ்கின்ற பெண்கள் காப்பு அணிந்த. தம் கைகளால் வாங்கி - தம் கைகளால் வளைத்து. அடகு பறித்துக் கொண்டு - இலையைப் பறித்துக் கொண்டு வந்து. அட்டு - அதைச் சமைத்து. குடைகலன்ஆ - பனையோலையால் குடைவாகச் செய்யப்பட்டதைப் பாத்திரமாக வைத்துக் கொண்டு. உப்பிலி வெந்தை - உப்பில்லாமல் வெந்த அந்த இலையுணவை. தின்று -உண்டு. உள்அற்று - உள்ளத்திலே கவலையில்லாமல். வாழ்பவே - வாழ்வார்கள். (க-து): நற்குடியில் பிறந்த மகளிர், வறுமை வந்தாலும் மானம் கெடாமல் வாழ்க்கை நடத்துவர். 10. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்துஒழி கொம்பின்மேல் செல்லாவாம்;- நீர்த்து அருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட! வாழாதார்க்கு இல்லை தமர். (290) (ப-ரை): நீர்த்து அருவி - குளிர்ந்த தன்மையுள்ள அருவி யானது. தாழா - வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற. உயர் சிறப்பின் - உயர்ந்த சிறப்பினையுடைய. தண்குன்றம் - குளிர்ந்த மலையையுடைய. நல் நாட - நல்ல நாட்டையுடைய பாண்டியனே. ஆர்த்த பொறிய - நிறைந்த புள்ளிகளையுடைய. அணிகிளர் - அழகு விளங்குகின்ற. வண்டினம் - வண்டுக் கூட்டங்கள். பூத்து ஒழி காம்பின் மேல் - பூத்து உதிர்ந்து மரத்துப்போன கிளையின் மேல். செல்லா ஆம் - அது பூத்திருந்த காலத்தில் பறந்து சென்று தங்கியிருந்ததுபோல இப்பொழுது போகாதாம் (அதுபோல). வாழாதார்க்கு - முன்பு செல்வத்துடன் இருந்தவராயினும் இப்பொழுது செல்வத்தை இழந்திருப்ப வருக்கு. தமர் இல்லை -உறவினர் ஒருவரும் இல்லை. (க-து) வறியோர்க்கு உறவினர் இல்லை. குறிப்பு: வறியவர்க்குப் பூவற்ற கிளை உவமானம். வண்டு கள் உறவினர்களுக்கு உவமானம். 30. மானம் தனக்குத் தாழ்வுவராமல் பாதுகாத்துக்கொள்ளும் தன்மை 1. திருமதுகை யாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே மானம் உடையார் மனம். (291) (ப-ரை): திரு மதுகையாக - செல்வத்தையே வலிமையாகக் கொண்டு செருக்கடைந்து. திறன் இலார்செய்யும் - நற்குணம் இல்லாதவர்கள் செய்கின்ற. பெருமிதம் - வரம்பு கடந்த தீய செயல்களை. கண்டக் கடைத்தும் - நேரே கண்டபோதும். மானம் உடையார் மனம் - மானம் உள்ளவர்களின் உள்ளம். எரிமண்டி -வேதனை என்னும் நெருப்பு நிறைந்து. கானம் தலைப்பட்ட - காட்டிலே பற்றிய. தீப்போல் - நெருப்பைப் போல. கனலும் -வேகும். (க-து): செருக்குற்ற செல்வர்களின் தீமையைக் கண்டு மானமுள்ளவர்கள் மனம் வெதும்புவார்கள். 2. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்உடையார்;-தம்பாடு உரையாமை முன்உணரும் ஒண்மை உடையார்க்கு உரையாரோ தாம்உற்ற நோய்? (292) (ப-ரை): தம் உடையார் - தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் மானம் உள்ளவர்கள். என்புஆய் - வறுமையால் உணவின்றித்தம் உடம்பு வெறும் எலும்புக்கூடாகி. உகினும் - உதிர்ந்து போகக் கூடிய நிலையை அடைந்தாலும். இயல்பு இலார் பின்சென்று - நற்குணம், நற்செயல்கள் இல்லாதவர்களின் பின்னே போய். தம்பாடு - தமது துன்பத்தை. உரைப்பரோ - சொல்லுவார்களோ? (சொல்ல மாட்டார்கள்). உரையாமை முன் உணரும் - தாம் சொல்வதற்கு முன்பே குறிப்பால் தெரிந்து கொள்கின்ற. ஒண்மை உடையார்க்கு - அறிவும் பெருமையும் உடையவர்களிடம். தாம் உற்ற நோய் - தாம் அடைந்த துன்பத்தை. உரையாரோ - சொல்லாமல் இருப்பார் களோ? (சொல்லுவார்கள்). (க-து): மானமுள்ளவர் தம் துன்பத்தைக் கெட்டவர் களிடம் கூற மாட்டார்கள்; நல்லவர்களிடமே உரைப்பார்கள். 3. யாம்ஆயின் எம்இல்லம் காட்டுதும்; தாம்ஆயின் காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப், புறம்கடை வைத்துஈவர் சோறும்; அதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு. (293) (ப-ரை): யாம் ஆயின் - நாம் ஆனால். எம் இல்லம் காட்டுதும் - நம் மனையாளையும் அறிமுகம் செய்து வைப்போம். தாம் ஆயின் - அவரானால். காணவே - அவர் மனைவியை நாம் பார்த்தாலே. கற்பு அழியும் - அவள் கற்பு அழிந்துவிடும். என்பார்போல் - என்று நினைப்பவரைப் போல. நாணி - வெட்கம் அடைந்து. புறம்கடை வைத்து - நம்மை வீட்டின் புறத்திலே ஒரு மூலையிலே உட்கார வைத்து. சோறும் ஈவர் - சோறும் போடச் செய்வார்கள் அதனால். செல்வர் தொடர்பு - செல்வர்களின் சேர்க்கையை. மறந்திடுக - மறந்து வாழ்க. (க-து): தம்மை இழிவாகக் கருதுகின்ற செல்வர்களின் தொடர்பை விட்டுவிட வேண்டும். 4. இம்மையும் நன்றாம்; இயல்நெறியும் கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால், - செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய்; நன்றேகாண்! மானம் உடையார் மதிப்பு (294) (ப-ரை): செம்மையின் - நன்றாக. நானம் கமழும் - கஸ்தூரி மணம் வீசுகின்ற. கதுப்பினாய் - தலைமயிரை உடையவளே. இம்மையும் - இப்பிறப்பில் இவ்வுலகத்திலும். நன்றாம் - நன்மையே உண்டாகும். இயல் நெறியும் - ஒழுக்க நெறியையும். கைவிடாது - உதறித் தள்ளிவிடாமல் பின்பற்று வதனால். உம்மையும் - மறுமையிலும். நல்ல பயத்தலால் - நன்மையைத் தருவதனால். மானம் உடையார் - மானம் உள்ளவர்களின் பிடிவாதமான. மதிப்பு - கொள்கை. நன்றே காண் -சிறந்ததே என்று அறிவாயாக. (க-து): மானம் உள்ளவர்கள் இம்மையும் மறுமையும் நன்மையடைவார்கள். 5. பாவமும். ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார்; சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்; அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று. (295) (ப-ரை): சான்றவர் -அறிவு நிரம்பிய மானமுள்ளவர். சாயினும் - செத்துப் போவதாயிருந்தாலும். பாவமும் -இறந் தாலும் தன்னைத் தொடரும் பாவமும். ஏனைப் பழியும் - இவ்வுலகில் அவமானம் உண்டாகும் மற்றைப் பழிச் செயல் களும். படவருவ - உண்டாகும்படியான செயல்களை. செய்கலார் - செய்யமாட்டார்கள். சாதல் - சாவானது. ஒருநாள் ஒரு பொழுதைத் துன்பம் - ஒரு நாளில் ஒரு சில நேரந்தான் துன்பந் தரும். அவை போல் -அந்தப் பழியையும் பாவத்தையும் போல். அருநவை - என்றும் நிலைத்திருந்து கொடிய துன்பத்தை. ஆற்றுதல் இன்று - செய்வதில்லை. (க-து): அறிவுள்ளவர்கள் சாவதாயினும் பாவத்தையும், பழிப்பையும் தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். 6. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செல்வர் எனினும், கொடாதவர் - நல்கூர்ந்தார்; நல்கூர்ந்தக் கண்ணும், பெருமுத் தரையரே, செல்வரைச் சென்றுஇரவா தார். (296) (ப-ரை): மல்லல் - செழிப்புள்ள. மாஞாலத்து - இப்பெரிய உலகில். வாழ்பவருள் எல்லாம் - வாழ்கின்றவர்கள் எல்லாரையும் விட. செல்வர் எனினும் -மிகுந்த செல்வம் உள்ளவராயிருந்தாலும். கொடாதவர் - வறியோர்க்கு ஒரு பொருளும் கொடுக்காதவர்கள். நல்கூர்ந்தார் - வறுமையுள்ளவர் தாம் என்பதில் ஐயம் இல்லை. நல்கூர்ந்தக் கண்ணும் - வறுமை வந்து வளைத்துக்கொண்ட போதும். செல்வரைச் சென்று - செல்வரிடம் போய்நின்று. இரவாதார் -ஒன்றையும் ஏற்காதவர். பெருமுத்தரையரே - பெரிய செல்வம் படைத்த முத்தரையர் ஆவார். (க-து): ஈயாத செல்வர் வறியவர்; இரக்காத வறியவர் செல்வமுள்ளவர். குறிப்பு: முத்தரையர்: கொடையிற் சிறந்த சிற்றரசர். இதற்கு முன்னும் இந்நூலில் இவர் பாராட்டப்பட்டுள்ளார். இவர் பெயரால் உள்ள ஊர் முத்தரசநல்லூர். 7. கடையெலாம் காய்பசி அஞ்சும்; மற்றுஏனை இடையெலாம் இன்னாமை அஞ்சும்;-புடைபரந்த விற்புருவ வேல்நெடும் கண்ணாய்! தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும். (297) (ப-ரை): புடை பரந்த - காதின் பக்கம் வரையிலும் வளர்ந் திருக்கின்ற. வில் புருவம் - வில்போல் வளைந்த புருவத்தையும். வேல்நெடும் கண்ணாய் -வேல்போல் நீண்ட கண்களையும் உடையவளே. கடைஎல்லாம் - கடைப்பட்டவர்கள் எல்லாம். காய்பசி - தம்மை வருத்தும் பசியைக் கண்டு. அஞ்சும் - பயந்து கீழான செயல்களைச் செய்யும். மற்று ஏனை - மற்றைய. இடை யெலாம் - நடுத்தரமானவர்கள் எல்லாம். இன்னாமை - துன்பப் படுவதற்கு. அஞ்சும் - பயப்படுவார்கள். தலை எல்லாம் - சிறந்த குணம் உள்ள முதன்மையானவர்கள் எல்லோரும். சொல் பழி - பிறர் சொல்லும் பழிகளுக்கு. அஞ்சிவிடும் - பயந்து தீமை செய்வதைக் கைவிடுவார்கள். (க-து): அறிவுள்ளவர் பழிச் செயல்களைப் புரிய அஞ்சு வார்கள். 8. நல்லர் பெரிதுஅளியர், நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால், - கொல்லன் உலைஊதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ, தலையாய சான்றோர் மனம்? (298) (ப-ரை): நல்லர் - உத்தமர். பெரிது அளியர் - மிகவும் இரக்கம் உள்ளவர். நல்கூர்ந்தார் - இப்பொழுது வறுமை யடைந்துவிட்டார். என்று எள்ளி - என்று இகழ்ந்து. செல்வர் - செல்வம் படைத்தவர்கள். சிறுநோக்கு நோக்குங்கால் - சிறு நோக்காகிய கடைக்கண் பார்வையால் பார்க்கும்போது. தலை ஆய - சிறந்த. சான்றோர் மனம் - அறிவுள்ளவர்களின் உள்ளம். கொல்லன் உலை ஊதும் - கொல்லன் உலையிலே துருத்தியால் ஊதப்டும். தீயேபோல் - நெருப்பைப்போல. உள்கனலும் - உள்ளேயே கொதிக்கும். (கொல்ஓ: அசைச் சொற்கள்.) (க-து): அறிவுள்ள வறிஞர், செல்வரின் இகழ்ச்சியான பார்வையைக் கண்டு மனம் வருந்துவார். குறிப்பு: உள்ளத்தின் துயருக்குக் கொல்லன் உலையில் உள்ள தீ உவமானம். 9. நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று; நாள்நாளும் அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம்;- எச்சத்தின் மெல்லியர் ஆகித்,தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண். (299) (ப-ரை): நச்சியார்க்கு - ஒரு பொருளை விரும்பி வந்தவர்க்கு. ஈயாமை நாண் அன்று - அதைக் கொடாமை நாணந் தரும் செய்கையன்று. நாள் நாளும் - ஒவ்வொரு நாளும். அச்சத்தால் - இதை நம்மால் செய்யமுடியுமா என்ற பயத்தால். நாணுதல் - நல்ல செயல்களைச் செய்ய வெட்கமடைதலும். நாண் அன்றாம் -நாணந் தரத்தக்க குணம் அன்றாம். எச்சத்தின் - செல்வம் குறைந்த காலத்தில். மெல்லியர் ஆகி - மிகவும் மெலிந்து வாழ்ந்த போது. தம் மேலாயார் - தம்மைவிட உயர்ந்தவர். செய்தது - தமக்குச் செய்ததாகிய உதவியைப்பற்றி. சொல்லாதிருப்பது - பிறருக்குச் சொல்லாமல் ஒளித்து வைத்திருப்பதுதான். நாண் - நாணந்தரும் செய்தியாகும். (க-து): பிறர் செய்த நன்மையை மறைப்பதுதான் நாணமற்ற செயல். 10. கடமா தொலைச்சிய கான்உறை வேங்கை, இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும்;- இடம்உடைய வானகம் கையுறினும் வேண்டார், விழுமியோர் மானம் அழுங்க வரின். (300) (ப-ரை): கடம்மா - மதங் கொண்ட யானையை. தொலைச்சிய - அடித்து வீழ்த்திய. கான் உறை - காட்டிலே வாழ்கின்ற. வேங்கை - புலியானது. இடம் வீழ்ந்தது - அந்த யானை தனக்கு இடது பக்கத்தில் வீழ்ந்தது ஆயின். உண்ணாது - அதை உண்ணாமல். இறக்கும் - பட்டினி கிடந்தாவது இறந்துவிடும் (அதுபோல). விழுமியோர் - உள்ளத்தில் உறுதி படைத்த சிறந்தவர்கள். மானம் அழுங்க வரின் - மானம் கெடும்படியான நிலைமை ஏற்படுமாயின். இடம் உடைய - பெரிய. வான் அகம் - வானுலகம். கையுறினும் - கிடைப்பதாயினும். வேண்டார் - இழிவான செயல்களைச் செய்ய விரும்பவே மாட்டார்கள். (க-து): நெஞ்சத்தில் உரன் உடையவர்கள் தம் கொள்கையை விட்டுக்கொடுத்து இழிவான செயல்களைச் செய்யமாட் டார்கள். 31. இரவு அச்சம் பிறரிடம் யாசகம் கேட்பதற்கு அஞ்சுதல் 1. தம்மாலே ஆவர்இந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும், தம்மால்ஆம் ஆக்கம் இலர்என்று - தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் தெருண்ட அறிவின் அவர். (301) (ப-ரை): இந் நல்கூர்ந்தார் - இந்த வறியவர். எஞ்ஞான்றும் - எந்நாளும். தம்மாலே ஆவர் - தம்மாலேயே உயிர் வாழ்கின்றவர் ஆவார். தம்மால்ஆம் - தம்மால் சேர்க்கப்பட்ட. ஆக்கம் இலர் - செல்வத்தை உடையவர் அல்லர். என்று - என்று நினைத்து. தம்மை மருண்ட - தம்மைப் பற்றிப் பெரிதாக மதித்து மயங்கிய. மனத்தார் பின் - மனமுள்ளவர் பின்னே. தெருண்ட - தெளிந்த. அறிவின் அவர் தாமும் - அறிவுடையவர்களும். செல்பவோ - போவார்களோ? (போகமாட்டார்கள்). (க-து): தம்மையே பெரிதாக எண்ணும் செல்வர் பின்னே அறிஞர்கள் போகமாட்டார்கள். 2. இழித்தக்க செய்துஒருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. (302) (ப-ரை): ஒருவன் இழித்தக்க செய்து - பசித்த ஒருவன் பிறர் இகழத்தக்க செயல்களைச் செய்து. ஆர உணவின் - அவற்றால் வயிறார உண்டு வாழ்வதைவிட. பழித்தக்க - பழிக்கத்தக்க ஈனச் செயல்களை. செய்யான்- செய்யாதவனாய். பசித்தல் - பசித்து வருந்துதல். தவறோ - குற்றம் ஆகுமோ? (ஆகாது). ஒருவன் அழித்து - ஒருவன் செத்துப் போய். பிறக்கும் பிறப்பு - மீண்டும் பிறக்கின்ற பிறப்பு என்பது. விழித்து - தூக்கத்திலிருந்து விழித்து. இமைக்கும் மாத்திரை அன்றோ - மீண்டும் கண்மூடித் தூங்கும் அளவுள்ளதன்றோ? (க-து): ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற உண்மையை உணர்ந்தவன் வயிற்றுப்பாட்டுக்காக இழிதொழில்களைச் செய்யத் துணியமாட்டான். 3. இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி; - புல்லா அகம்புகுமின்! உண்ணுமின்! என்பவர் மாட்டு அல்லால் முகம்புகுதல் ஆற்றுமோ மேல். (303) (ப-ரை): இல்லாமைகந்தா - வறுமை காரணமாக. இரவு துணிந்து - யாசிப்பதற்குத் துணிந்து. ஒருவர் சிறு நெறி - ஒருவர் அற்பமான வழியிலே. செல்லாரும் அல்லர் - போகாமல் இருக்க மாட்டார். மேல் - ஆனால் மேலோர்கள் வறுமையடைந்தாலும். புல்லா - ஆதரித்து. அகம்புகுமின் - வீட்டுக்குள் வாருங்கள். உண்ணுமின் - சாப்பிடுங்கள். என்பவர்மாட்டு அல்லால் - என்பவரிடம் செல்வார்களே அல்லாமல். முகம் புகுதல் - முகம் சுளித்தவரைக் கண்டு. ஆற்றுமோ - பொறுப்பார்களோ? (பொறுக்க மாட்டார்கள்). (க-து): வறுமை தீமை செய்யத் தூண்டுமாயினும், உயர்ந்த வர்கள் தம்மை அழைத்து உபசரிப்பவரிடந்தான் உதவிக்குச் செல்வார்கள். 4. திருத்தன்னை நீப்பினும்; தெய்வம் செறினும், உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால், அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல். (304) (ப-ரை): மேல் - உயர்ந்தவர்கள். திரு தன்னை நீப்பினும் - செல்வம் தன்னை விட்டுப் பிரிந்தாலும். தெய்வம் செறினும் - தெய்வம் கோபித்தாலும். உருத்த மனத்தோடு - ஊக்கம் பொருந்திய உள்ளத்துடன். உயர்வு உள்ளின் அல்லால் - உயர்ந்த செயல்களையே செய்ய நினைப்பார்களே அல்லாமல். அருத்தம் செறிக்கும் - செல்வத்தைச் சேர்த்து வைக்கும். அறிவிலார்பின் சென்று - அறிவற்ற உலோபிகள் பின்னே போய். எருத்து இறைஞ்சி - தலைகுனிந்து. நில்லாதுஆம் - நிற்கமாட்டார்களாம். (க-து): உயர்ந்தவர்கள் எவ்வளவுதான் வறுமையால் வாடி னாலும் உலோபிகளிடம் உதவி வேண்டிச் செல்ல மாட்டார்கள். 5. கரவாத திண்அன்பின் கண்அன்னார் கண்ணும், இரவாது வாழ்வதாம் வாழ்க்கை;- இரவினை உள்ளும்கால் உள்ளம் உருகும்ஆல்! என்கொலோ கொள்ளும்கால் கொள்வார் குறிப்பு? (305) (ப-ரை): கரவாத - ஒன்றையும் ஒளிக்காத. திண் அன்பின் - உறுதியான அன்புள்ள. கண்அன்னார் கண்ணும் - கண்ணைப் போன்ற அருமையுள்ளவர்களிடத்திலும். இரவாது - ஒன்றையும் இரந்து பெற்றுக்கொள்ளாமல். வாழ்வது வாழ்க்கைஆம் - வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை ஆகும். இரவினை - இரப்பதைப் பற்றி. உள்ளும்கால் - நினைக்கும்பொழுதே. உள்ளம் - நெஞ்சம். உருகும்ஆல் - அப்படியே உருகிவிடுகின்றது. கொள்ளும்கால் - இரக்க நினைத்துக் கொடுப்பதையும் வாங்கிக்கொள்ளும்போது. கொள்வார் - வாங்கிக்கொள்ளுகின்றவர்களின். குறிப்பு - எண்ணம். என்கொல்ஓ - எப்படித்தான் இருக்குமோ! (அறியேன்). (க-து): பிறரிடம் ஒன்றை யாசிப்பதைவிடத்துணிவுள்ள செயல் ஒன்றும் இல்லை. 6. இன்னா இயைக, இனிய ஒழிகென்று, தன்னையே தான்இரப்பத் தீர்வதற்கு - என்னைகொல் காதல் கவற்றும் மனத்தினால், கண்பாழ்பட்டு ஏதில் அவரை இரவு. (306) (ப-ரை): இன்னா இயைக - (வறுமையடைந்தவர்) துன்பங்கள் வந்து சேர்க. இனிய ஒழிக - நன்மைகள் ஒழிந்து போனாலும் போகட்டும். என்று - துணிந்து. தன்னையே தான் இரப்ப - தன்னையே தன் மனம் இரந்து வற்புறுத்துவதன் காரணமாக. தீர்வதற்கு - தன் வறுமை தீரவேண்டி. காதல் - செல்வத்தின்மேல் உள்ள ஆசை. கவற்றும் மனத்தினால் - துன்புறுத்தும் உள்ளத் துடன். கண் பாழ்பட்டு - அறிவுக்கண் மறைந்து. ஏதுஇல் அவரை - அறிவற்றவர்களிடம் சென்று அவர்களை நோக்கி. இரவு - இரத்தல். என்னைகொல் - என்ன பயன் தருமோ? (ஒரு பயனையும் தராது). (க-து): யாசிக்கத் துணிதலே தவறு; அதிலும் அறிவற்றவர் பால் சென்று யாசித்தல் பயனே இல்லை. 7. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்து என்றும் அவனே பிறக்கலான்;- குன்றின் பரப்புஎலாம் பொன்ஒழுகும் பாய்அருவி நாட! இரப்பாரை எள்ளா மகன். (307) (ப-ரை): குன்றின் பரப்பு எலாம் - குன்றுகளின் மேல் எல்லாம். பொன் ஒழுகும் - பொன் நிறைந்து கிடக்கின்ற. பாய் அருவி - பாய்கின்ற அருவிநீர்வளமுள்ள. நாட - நாட்டையுடைய பாண்டியனே! என்றும் - ஒவ்வொரு நாளும். புதியார் பிறப்பினும் - இவ்வுலகிலே புதியவர்கள் பிறந்துகொண்டேயிருந்தாலும். இரப்பாரை - தன்னிடம் வந்து வறுமையால் இரக்கின்றவரை. எள்ளா - இகழாமல் அவருக்கு உதவி செய்கின்ற. மகன் அவனே - சிறந்தவனாகிய அவன்தான். இவ்வுலகத்து - இவ்வுலகிலே. என்றும் பிறக்கலான் - என்றும் இறந்து பிறக்காமல் நிலைத்து வாழ்கின்றவனாவான். (க-து): வறுமையால் இரப்போர்க்கு உதவி செய்பவனே இவ்வுலகில் என்றும் நிலைத்து வாழ்கின்றவனாவான். 8. புறத்துத்தன் இன்மை நலிய, அகத்துத்தன் நல்ஞானம் நீக்கி, நிறீஇ, ஒருவனை ஈயாய்! எனக்குஎன்று இரப்பானேல், அந்நிலையே மாயானோ மாற்றி விடின். (308) (ப-ரை): புறத்து - ஒருவனை வெளியிலே. தன் இன்மை நலிய - தன் வறுமை வாட்ட அதனால். அகத்து - உள்ளத்திலே உள்ள. தன் நல்ஞானம் நீக்கி - தன்னுடைய நல்லறிவை விட்டுவிட்டு. நிறீ - இரத்தற்குத் தன்னைத் தகுதியாக்கி நிறுத்தி. ஒருவனை - ஒருவனிடம் சென்று அவனை. ஈயாய் எனக்கு - ஏதேனும் ஈக எனக்கு. என்று இரப்பானேல் - என்று யாசிப்பா னாயின். மாற்றிவிடின் - அவன் தன் சொல்லை ஒன்றும் இல்லை என்று மாற்றி விட்டால். அந்நிலையே - அப்பொழுதே. மாயானோ - இரந்தவன் உயிர் விட்டுவிட மாட்டானா? (மானமுள்ளவனாயின் உயிர் விடுவான்). (க-து): ஒருவனிடம் இரப்பவன், அவன் இல்லையென்று சொல்லக் கேட்டதும் உயிர் விடவும் துணிவான். 9. ஒருவர், ஒருவரைச் சார்ந்து, ஒழுகல் ஆற்றி, வழிபடுதல் வல்லுதல், அல்லால்- பரிசுஅழிந்து செய்யீரோ! என்னானும்; என்னும்சொற்கு, இன்னாதே பையத்தான் செல்லும் நெறி. (309) (ப-ரை): ஒருவர் - வறுமையால் வருந்தும் ஒருவர். ஒருவரைச் சார்ந்து - செல்வம் உள்ள ஒருவரை அடைந்து. ஒழுகல் ஆற்றி - அவருடன் இருந்து அவர் கூறுவனவற்றைச் செய்து. வழிபடுதல் - அவரை வணங்கி வாழ்தல். வல்லுதல் அல்லால் - செய்யத்தக்கதே அல்லாமல். பரிசு அழிந்து - தன்மானத் தன்மை அழிந்து ஒருவரிடம் போய் நின்று. என்ஆனும் செய்யீரோ - ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ. என்னும் சொற்கு - என்று கேட்கின்ற சொல்லைக் காட்டிலும். பையத்தான் - துன்பத்துடன்தான். செல்லும் நெறி - வாழும் வறுமை வாழ்வு. இன்னாதே - அவ்வளவு துன்பமுள்ளதாகுமா? (ஆகாது). (க-து): பிறரிடம் யாசிப்பதைவிட வறுமையால் வாடுவதே சிறந்த வாழ்வு. 10. பழமை கந்தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானும் செய்க;- கிழமை பொறாஅர் அவர்என்னில், பொத்தித்தன் நெஞ்சத்து அறாஅச் சுடுவது ஓர் தீ. (310) (ப-ரை): பழமை கந்தாக - பழமை காரணமாக. பசைந்த வழியே - வறியவர் ஒருவரிடம் மனம் இளகியபோதே. யாதானும் - ஏதேனும். கிழமைதான் செய்க - உதவியைச் செய்க. அவர் - அவ் வறியவர். கிழமை பொறார் என்னில் - அந்த உதவியை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பாராயின் அச்செயல். தம் நெஞ்சத்து - தமது நெஞ்சத்திலே. பொத்தி - பற்றி. அறா - நீங்காமல் நின்று. சுடுவது ஓர் தீ - சுடுகின்ற ஒரு நெருப்பாகும். (க-து): நாம் செய்யும் உதவியை நமது நண்பர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது நமக்கு மனவேதனையைத் தரும். ஆயினும் உதவி செய்ய முற்படுவது நமது கடமை. பொதுவியல் 32. அவை அறிதல் கூடியிருப்போர் இன்னார் என்று அறிந்து அதற்கேற்றபடி உரையாடல் 1. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்குஓர் அஞ்ஞானம் தந்திட்டு, அதுஆங்கு அறத்துழாய்க், கைஞ்ஞானம் கொண்டுஒழுகும் கார்அறி வாளர்முன், சொல்ஞானம் சோர விடல். (311) (ப-ரை): மெய்ஞானக் கோட்டி - உண்மை அறிவு நிரம்பிய வர்களின் கூட்டத்தை. உறழ்வழி விட்டு - சேரும் வழியை விட்டு. ஆங்குஓர் - அறிவற்றோர் நிரம்பிய அங்கே ஒரு. அஞ்ஞானம் தந்திட்டு - அறிவற்ற சொல்லைக் கூறி. அது ஆங்கு - அச் சொல்லை அங்கே. அற துழாய் -முழுவதும் பரப்பி. கைஞானம் கொண்டு - அற்ப அறிவைக் கொண்டு. ஒழுகும் - வாழ்கின்ற. கார் அறிவாளர் முன்- இருண்ட அறிஞர் முன்னே. சொல்ஞானம் - நல்லது சொல்லவேண்டும் என்று தோன்றுகின்ற அறிவை. சோரவிடல் - கைவிட்டு விடுக. (க-து): அறிவற்றோர் கும்பலிலே அறிவுள்ள சொற்களைக் கூறக் கூடாது. 2. நாப்பாடம் சொல்லி, நயம் உணர்வார் போல்செறிக்கும் தீப்புலவன் சேரார் செறிவுடையார்;- தீப்புலவன் கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும்; அல்லாக்கால் தோள்புடைக் கொள்ளா எழும். (312) (ப-ரை): செறிவு உடையார் - நிறைந்த அறிவுள்ளவர்கள். நா பாடம் சொல்லி - நாவினால் தாம் கற்ற பாடத்தைச் சொல்லி. நயம் உணர்வார்போல் - நன்மை அறிந்தவர்களைப் போலப் பேசி. செறிக்கும் - கூட்டம் சேர்க்கின்ற. தீ புலவன் சேரார் - கெட்ட அறிவுள்ளவனிடம் சேரமாட்டார்கள். தீப்புலன் - நல்லறிவற்றவனைச் சேர்ந்திருந்தால் அந்தக் கெடுமதியன். கோட்டியுள் - அவையிலே. குன்ற - நாணமடையும்படி. குடிபழிக்கும் - தம் குடும்பத்தைப் பழித்துப் பேசுவான். அல்லாக்கால் - இல்லாவிட்டால். தோள்புடைக் கொள்ளா-தோளைத் தட்டிக்கொண்டு. எழும் - சண்டைக்குப் புறப்பட்டு விடுவான். (க-து): அறிவுள்ளவனைப்போல நடிக்கும் கெட்டவனோடு சேரக்கூடாது. குறிப்பு: அறிவற்றவனைத் தீப்புலவன் என்று கூறியது, இரும்பைக் கரும்பொன் என்பது போல. 3. சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் காமுறுவர்; கற்றுஆற்றல் வன்மையும் தாம்தேறார்;- கற்ற செலஉரைக்கும் ஆறுஅறியார்; தோற்பது அறியார்; பலஉரைக்கும் மாந்தர் பலர். (313) (ப-ரை): சொல் தாற்று கொண்டு - சொற்களாகிய முட் களைக் கொண்டு. சுனைத்து - தினவுகொண்டு. எழுதல் காமுறுவர் - சண்டைக்குப் புறப்பட விரும்புவார்கள். கற்று ஆற்றல் வன்மையும் - எதிரியின் கல்வி கற்று அறிவாற்றல் பெற்றிருக்கும் வல்லமையையும். தாம் தேறார் - தாம் தெரிந்துகொள்ள மாட்டார்கள். கற்ற - தாம் கற்றிருப்பவைகளையும். செல உரைக்கும் -கேட்போர் உள்ளத்திலே பதியும்படி சொல்லும். ஆறு அறியார் - வழியையும் அறிய மாட்டார்கள். தோற்பது அறியார் - எதிரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தாம் தோல்வியடைந்து வருவதையும் அறிய மாட்டார்கள். பல உரைக்கும் - ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். மாந்தர் பலர் - இவ்விதம் உள்ள மக்கள் பலர் உண்டு. (க-து): உண்மையறியாமல் உளறிக்கொண்டேயிருக்கும் மனிதர்களுடன் சேரக்கூடாது. 4. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதைஓர் சூத்திரம்;- மற்றதனை நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். (314) (ப-ரை): கற்றதும் இன்றி - தானே கற்றுக்கொண்டதும் அல்ல. கணக்காயர் - ஆசிரியர். பாடத்தால் - சொல்லிக் கொடுத்த பாடத்தின் மூலம். பேதை -அறியாதவன். ஓர் சூத்திரம் - ஒரு செய்யுளை. பெற்றதாம் - மனப்பாடமாக வரப்பெற்றதாம். மற்றுஅதனை - அந்தச் செய்யுளை. நல்லார் இடைப்புக்கு - நல்லறிஞர் கூடியுள்ள சபையிலே புகுந்து. நாணாது - சிறிதும் வெட்கமில்லாமல். சொல்லி - தப்புந் தவறுமாகக் கூறி. தன் புல்அறிவு - தனது அற்பமான அறிவு இவ்வளவுதான் என்பதை. காட்டிவிடும் - வெளிப் படுத்தி விடுவான். (க-து): பேதை தன் சொல்லாலேயே நல்லோர் நடுவில் அவமானம் அடைவான். குறிப்பு: தானே பொருள் தெரிந்து கற்றிருக்க வேண்டும். அச்செய்திகளையே அறிஞர்கள் கூட்டத்தில் பேசவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பாராட்டுதலைப் பெற முடியும். 5. வென்றிப் பொருட்டால், விலங்குஒத்து மெய்கொள்ளார், கன்றிக் கறுத்துஎழுந்து காய்வாரோடு, - ஒன்றி உரைவித் தகம்எழுவார், காண்பவே கையுள் சுரைவித்துப் போலும்தம் பல். (315) (ப-ரை): வென்றிப் பொருட்டால் - தமக்கு எப்படியாவது வெற்றி கிடைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால். விலங்கு ஒத்து - மிருகத்தன்மையுடையவராய். மெய்கொள்ளார் - உண்மையை ஒப்புக்கொள்ளாமல். கன்றி - மனக்கனிவில்லாமல். கறுத்து எழுந்து காய்வாரோடு - கோபித்து எழுந்து சீறி விழுகின்றவர்களுடன். ஒன்றி - சேர்ந்து நின்று. உரை வித்தகம் - தம் சொல்வன்மையைக் காட்டுவதற்கு. எழுவார் - தொடங்கு கின்றவர். சுரைவித்துப் போலும் - சுரை விதையைப் போன்ற. தம் பல் - தமது பற்களை. கையுள் காண்பவே - கையிலே விழக் காண்பார்கள். (க-து): உண்மையுணராதவர்களுடன் விவாதம் செய்வ தால் கன்னத்தில் அறைதான் கிடைக்கும்;அதுதான் காணும் பலன். குறிப்பு: பல்லுக்குச் சுரைவிதை உவமானம். 6. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத, மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடரும்சீர்ச் சான்றோர், சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. (316) (ப-ரை): பாடமே ஓதி - மூல பாடத்தை மட்டும் கூறி. பயன் தெரிதல் - அதன் கருத்தை அறிந்துகொள்வதைப் பற்றி. தேற்றாத - உணராத. மூடர் - அறியாதவர். முனிதக்க - வெறுக்கத்தக்க வற்றைப் பற்றி. சொல்லும்கால் - சொல்லும்போது. கேடு அரும்சீர் - அழியாத சிறப்புள்ள. சான்றோர் - அறிஞர்கள். மற்றுஅவரை -அந்த மூடரை. ஈன்றாட்கு - பெற்ற தாய்க்காக. இறப்பப் பரிந்து - மிகவும் மனம் வருந்தி. சமழ்த்தனர் நிற்பவே - வெட்கத்தால் தலை குனிந்து நிற்பார்கள். (க-து): வெறுக்கத்தக்கவற்றைப் பேசும் மூடரைக் கண்டு, அவரைப் பெற்ற தாயை நினைத்து வருந்துவார்கள் அறிஞர்கள். குறிப்பு: மகன் அறிஞனாய் இருந்தால், ‘இவனைப் பெற்ற தாய் பாக்கியவதி’ என்று பாராட்டுவார்கள்; கொடியவனா யிருந்தால், ‘இவனைப் பெற்ற தாய் என்ன பாவம் செய்தாளோ’ என்று இரக்கப்படுவார்கள். 7. பெறுவது கொள்பவர் தோள்போல், நெறிபட்டுக் கற்பவர்க்கு எல்லாம் எளிய நூல்; - மற்றுஅம் முறிபுரை மேனியர் உள்ளம் போன்று, யார்க்கும் அறிதற்கு அரிய பொருள். (317) (ப-ரை): நூல் - ஆன்றோரால் ஆக்கப்பட்ட நூலானது. நெறிபட்டு - முறையோடு. கற்பவர்க்கு எல்லாம் - படிப்பவர்களுக் கெல்லாம். பெறுவது கொள்பவர் - கிடைக்கும் பொருளை விடாமல் பெற்றுக் கொள்ளுகின்ற விலை மாதர்களின். தோள்போல் - தோளைப்போல. எளிய - எளிதில் பொருள் விளங்குவதாயிருக்கும். பொருள் - ஆனால் அந்நூலில் அமைந்து கிடக்கும் உண்மைப் பொருள். மற்றுஅம் - அந்த. முறிபுரை மேனியர் - தளிர் போன்ற நிறமுள்ள உடம்பையுடைய அந்த விலை மாதர்களின். உள்ளம் போன்று - மனத்தைப்போல. யார்க்கும் - யாராலும். அறிதற்கு அரிய - அறிவதற்கு முடியாத ஆழ்ந்த கருத்துடையதாயிருக்கும். (க-து): உயர்ந்த நூல் விலைமாதரின் உள்ளத்தைப் போல எளிதில் பொருள் காண முடியாததாகவேயிருக்கும். 8. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார், உய்த்து அகம்எல்லாம் நிறைப்பினும், - மற்றுஅவற்றைப் போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு. (318) (ப-ரை): புத்தகமே - புத்தகங்களையே. சாலத் தொகுத்தும் - மிகுதியாகச் சேர்த்தும். பொருள் தெரியார் - அவற்றில் உள்ள பொருளைப் படித்தறியாதவராய். உய்த்து - அவற்றைக் கொண்டு வந்து சேர்த்து. அகம் எல்லாம் நிறைப்பினும் - வீடு முழுவதும் நிரப்பினாலும். மற்று அவற்றை - அப்புத்தகங்களை வைத்து. போற்றும் - பாதுகாக்கும். புலவரும் வேறே - புலவர்களும் வேறு. பொருள் தெரிந்து - அப்புத்தகங்களைப் படித்துப் பொருள் உணர்ந்து. தேற்றும் - தங்கள் உள்ளத்தைத் தெளிய வைத்துக் கொள்ளும். புலவரும் வேறு - புலவர்களும் வேறாவர். (க-து): புத்தகத்தைப் பாதுகாக்கும் புலவர் வேறு; அவற்றைப் படித்தறியும் புலவர் வேறு. 9. பொழிப்பு,அகலம், நுட்பம்,நூல் எச்சம்இந் நான்கின் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரைஆமா சேர்க்கும் நெடும்குன்ற நாட! உரைஆமோ நூலிற்கு நன்கு. (319) (ப-ரை): பழிப்புஇல் - குற்றமற்ற. நிரை ஆமா - காட்டுப் பசுக்களை. சேர்க்கும் - சேர்த்து ஆதரிக்கும். நெடும் குன்ற நாட - உயர்ந்த மலைநாட்டை உடையவனே. பொழிப்பு - பொழிப்புரை. அகலம் - விரிவுரை. நுட்பம் - கருத்துரை. எச்சம் - பதவுரை. இந்நான்கின் கொழித்து - இந்நான்கினாலும் ஆராய்ந்து. அகலம் காட்டாதார் - விரிவாகப் பொருள் சொல்லி விளக்கிக் காட்டா தவரின். சொற்கள் - வெறும் வார்த்தைகள். நூலிற்கு - ஒரு நூலுக்கு. நன்கு உரை ஆமோ -நன்றாக உரை சொல்லிய தாகுமா? (ஆகாது). (க-து): பிறருக்குப் புரியும்படி விரிவாகப் பல பொருள் களையும் ஆராய்ந்து எழுதுவதுதான் ஒரு நூலுக்கு நல்ல உரையாக அமையும். 10. இற்பிறப்பு இல்லார் எனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்கும் கருவிஅரோ? -இல்பிறந்த நல்அறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்அறிவு தாம்அறிவது இல். (320) (ப-ரை): இல்பிறப்பு இல்லார் - நல்ல குடியிலே பிறவாதவர்கள். எனைத்து நூல் கற்பினும் - எவ்வளவு பல நூல்களைப் படித்திருந்தாலும். பிறரை சொல் காக்கும் - பிறரை இகழும் சொல் தம்மிடம் தோன்றாமல் காத்துக் கொள்ளும். கருவியாரோ - அடக்கம் முதலிய சாதனத்தையுடையவரா யிருப்பாரோ? இல்பிறந்த - நல்ல குடியிலே பிறந்த. நல் அறிவாளர் - சிறந்த அறிவுள்ளவர்கள். நவின்ற நூல் - பெரியோர்கள் சொல்லிய நூலின் பொருள்களை. தேற்றாதார் - தெளிவாக அறியாதவர்களின். புல் அறிவு - கீழ்த்தரமான அறிவை. தாம் அறிவதுஇல் - தாம் தெரிந்து கொள்ள மாட்டார்கள். (க-து): நல்ல குடியிலே பிறவாதார் எவ்வளவு நூல்களைக் கற்றாலும் அடங்கி நடக்கமாட்டார்கள். நல்ல குடியிலே பிறந்த அறிஞர்கள் கல்லாதவர்களின் அற்ப புத்தியைப் பற்றிக் கவலைப் படமாட்டார்கள். பகை இயல் 33. புல்லறிவாண்மை அற்ப அறிவைப் பின்பற்றும் இழிவைப்பற்றி உரைப்பது 1. அருளின் அறம்உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்;- பொருள் அல்லா ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பால்கூழை மூழை சுவைஉணராது ஆங்கு. (321) (ப-ரை): புலவர் - அறிவுள்ளவர். அருளின் - இரக்கத்தினால். அறம் உரைக்கும் - நீதி மொழிகளைக் கூறும். அன்புடையார் -அன்பு உள்ளவர்களின். வாய்ச்சொல் - வாய்மொழியை. பொருள்ஆக - சிறந்த பொருளாக. கொள்வர் - ஒப்புக் கொண்டு அதன் வழியிலே நடப்பர். பால் கூழை - பால் கலந்த உணவை. மூழை - அதில் உள்ள அகப்பை. சுவையுணராது - அதன் சுவையை அறியாது. ஆங்கு - அதுபோல. பொருள் அல்லா - ஒரு பொருளாக மதிக்கப்பட முடியாத. ஏழை - அறிவற்றவன். அதனை இகழ்ந்து உரைக்கும் - பெரியோரின் அச்சொல்லை அவமதித்துப் பேசுவான். (க-து): அறிவற்றவனே பெரியோரின் அன்புள்ள நீதி மொழியை மதிக்க மாட்டான். குறிப்பு: அறிவற்றவனுக்கு அகப்பை உவமை. 2. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய், பால்சோற்றின் செவ்வி கொளல்தேற்றாது ஆங்கு. (322) (ப-ரை): கவ்வி - வாயால் கவ்வி. தோல் தின்னும் - வெறும் தோலைத் தின்னுகின்ற. குணுங்கர் நாய் - புலைச் சேரியில் உள்ள நாய். பால் சோற்றின் - பால் பெய்த உணவின். செவ்வி கொளல் - சிறப்பை அறிந்து உண்ணுவதை. தேற்றாது - அறியாது. ஆங்கு - அதுபோல. அவ்வியம் இல்லார் - குற்றமற்றவர்கள். அறத்துஆறு - அறநெறியைப்பற்றி. உரைக்கும்கால் - கூறும்பொழுது. செவ்வியர் அல்லார் - நல்ல பண்பில்லாத கெட்டவர்கள். செவி கொடுத்தும் - அவ்வுரையைக் காது கொடுத்தும். கேட்கலார் - கேட்க மாட்டார்கள். (க-து): தீயவர்கள் பெரியோர்களின் அறநெறியைக் காதால் கேட்கவும் சம்மதிக்க மாட்டார்கள். 3. இமைக்கும் அளவில், தம் இன்உயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டு இருந்தும் - தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாண்இல் மடமாக்கள், பொன்றில்என்? பொன்றாக்கால் என்? (323) (ப-ரை): இமைக்கும் அளவில் - கண்மூடிக் கண்திறக்கும் நேரத்திற்குள். தம் இன்உயிர் - தமது இனிய உயிர். போம் மார்க்கம் - அழிந்துபோகும் வழி இவ்வுலகில் உண்டு என்பதை. எனைத்து ஆனும் - எவ்வழியிலும். தாம் கண்டு இருந்தும் - தாம் கண்ணால் பாத்திருந்துங்கூட. தினைத்துணையும் - தினை அளவுகூட. நன்றி புரிகல்லா - நன்மை செய்வதற்கு முன்வராத. நாண்இல் - நாணம் அற்ற. மடமாக்கள் - அறிவற்ற மக்கள். பொன்றில்என் - இவ்வுலகை விட்டு இறந்தால்தான் என்ன? பொன்றாக்கால் என் - இறக்காமல் வாழ்ந்தால்தான் என்ன? (க-து): சிறிதேனும் நன்மை செய்யாத மக்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்றுதான். 4. உளநாள் சிலஆல், உயிர்க்குஏமம் இன்றால், பலர்மன்னும் தூற்றும் பழியால் - பலர் உள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது எவன்ஒருவன் தண்டித் தனிப்பகை கோள். (324) (ப-ரை): உளநாள் சிலஆல் - இவ்வுலகிலே உயிர் வாழும் நாள் சில நாட்கள்தான். உயிர்க்கு ஏமம் இன்று ஆல் - உயிருக்குப் பாதுகாப்பு ஒன்றும் இல்லை. பலர் தூற்றும் - நாம் தவறு செய்யும்போது பலராலும் இகழ்ந்து பேசப்படும். பழி மன்னும் ஆல் - பழிச்சொற்களே நம்மிடம் நிலைத்து நிற்கும். ஒருவன் பலர்உள்ளும் - ஒருவன் பலரோடும். கண்டாரோடு எல்லாம் - தன் எதிரிலே கண்டவர்களிடம் எல்லாம். நகாது - சிரித்துப் பேசாமல் விலகி நின்று. தனிப்பகை கோள் -தனித்து நின்று பகையைப் பெருக்கிக்கொண்டு வாழ்வது. எவன் - என்ன பயனைத்தரும்? (ஆல்: அசைகள்.) (க-து): ஒருவரையும் பகைத்துக்கொள்ளாமல் எல்லோ ருடனும் ஒன்றுபட்டு வாழ்வதுதான் நல்லதாகும். 5. எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்றுஎள்ளி வைதான் ஒருவன் ஒருவனை; - வைய, வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான் வாழும் எனின். (325) (ப-ரை): எய்தி இருந்த - பலர் கூடியிருந்த. அவை முன்னர்ச் சென்று - சபையின் முன்னே போய் நின்று கொண்டு. ஒருவனை - அச்சபையிலேயே இருந்த ஒருவனை. எள்ளி வைதான் ஒருவன் - இகழ்ந்து வைதவனாகிய ஒருவன் மீது சினங் கொள்ளாமல். வைய - அவன் வைய வைய. வயப்பட்டான் வாளா இருப்பானேல் - வையப்பட்டவன் சும்மா இருப்பானாயின். வைதான் - வைதவன். வாழும் எனின் - உயிர் வாழ்வானாயின். வியத்தக்கான் - அவன் வியப்புக்குரியவனே ஆவான். (க-து): வைகிறவனிடம் பொறுமை காட்டுகின்றவனுக்கு ஒரு குறையும் இல்லை. வைதவனே கெட்டுப் போவான். 6. மூப்புமேல் வாராமை முன்னே, அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான்,- நூக்கிப் புறத்துஇரு, போகு, என்னும் இன்னாச்சொல், இல்உள் தொழுத்தையால் கூறப் படும். (326) (ப-ரை): மூப்பு - கிழப் பருவம். மேல் வாராமை முன்னே - மிகுத்து வருவதற்கு முன்பே. அறவினையை - நல்வினையை. ஊக்கி - ஊக்கத்துடன் செய்து. அதன்கண் முயலாதான் - அந் நல்வினையை நிறைவேற்ற முயற்சி செய்யாதவன். இல்உள் - வீட்டிலேயே உள்ள. தொழுத்தையால் - வேலைக்காரியால். நூக்கி - வெளியே தள்ளப்பட்டு. புறத்து இரு - வெளியிலே இரு. போகு - அங்கே போ. என்னும் இன்னாச்சொல் - என்னும் கடுஞ்சொல். கூறப்படும் - கூறி வெறுக்கப்படுவான். (க-து): இளமைப் பருவத்திலே நல்லறம் புரியாதவன், முதுமையிலே தன் வீட்டு வேலைக்காரியாலும் இகழப்படுவான். 7. தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றுஆற்றார், ஏமம்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி, அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்அறிவி னார். (327) (ப-ரை): புல்அறிவினார் -அற்ப அறிவு படைத்தவர்கள். தாமேயும் இன்புறார் - தாமும் இன்பம் அடையமாட்டார். தக்கார்க்கும் - உதவி பெறத்தக்க நல்லவர்களுக்கும். நன்று ஆற்றார் - நன்மை செய்யமாட்டார்கள். ஏமம்சார் - தம் உயிர்க்கு உறுதி தருகின்ற. நல்நெறியும் சேர்கலார் - நல்ல வழியிலும் செல்ல மாட்டார்கள். தாம் மயங்கி - தாம் அறிவு தடுமாறி. ஆக்கத்துள் தூங்கி - செல்வத்திலே கிடந்து மயங்கி. வாழ்நாளை - தங்கள் ஆயுளை. அவத்தமே போக்குவார் - வீணாகக் கழிப்பார்கள். (க-து): அறிவற்றார் செல்வத்திலே மயங்கித் தம் வாழ் நாளை வீணாகக் கழிப்பார்கள். 8. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகுஇறுகத் தோள்கோப்புக் கொள்ளார், இறுகிஇறுகிப் பின்அறிவாம் என்றுஇருக்கும் பேதையார், கைகாட்டும் பொன்னும் புளிவிளங்காய் ஆம். (328) (ப-ரை): சிறுகாலையே - இளமைப் பருவத்திலேயே. தமக்கு - தமக்காக. செல்வுழி - இறந்தபின் செல்லும் வழிக்கான. வல்சி - நல்வினையென்னும் அரிசி உணவை. இறுக இறுக - நன்றாய் இறுக்கி முடிந்து. தோள்கோப்புக் கொள்ளார் - தோளிலே கோத்துக் கொள்ளும் கட்டுச் சோற்றைத் தேடிக்கொள்ளாதவர் கள். இறுகி இறுகி - செல்வத்தை இறுக்கி முடிந்து கொண்டு. பின் அறிவாம் - பின்னால் யோசித்துக்கொள்ளலாம். என்று இருக்கும் பேதையார் - என்று இருக்கும் அறிவற்றவராவார். கை காட்டும் - இறக்கும்போது வாய் பேசமுடியாமல் கையால் குறித்துக் காட்டுகின்ற. பொன்னும் - பொன்னையும். புளி விளங்காய் - புளிக்கின்ற விளாங்காய். ஆம் - ஆகும் என்று எண்ணுவார்கள். (க-து): சிறு பருவத்திலே நன்மை செய்யாதவர்களின் செல்வம் இறுதியில் ஒருவருக்கும் பயன்படாது. 9. வெறுமை யிடத்தும், விழுப்பிணிப் போழ்தும், மறுமை மனத்தாரே ஆகி;-மறுமையை ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். (329) (ப-ரை): சிற்றறிவினார் - சிறுபுத்தியுள்ளவர்கள். வெறுமை இடத்தும் - வறுமை வந்த காலத்திலும். விழுபிணி போழ்தும் - பெரிய நோய் பெற்ற காலத்திலும். மறுமை - மறுமையிலே நன்மைதரும் செயல்களைப்பற்றி நினைக்கும். மனத்தாரே ஆகி - மனம் உள்ளவர்களாய். ஆற்றிய காலத்து - நல்ல வினைகளைச் செய்யும் ஆற்றல் பெற்றிருந்த காலத்தில். ஐந்தை அனைத்தானும் - கடுகு அளவேனும். மறுமையை - மறுமைக்கு நன்மை தரும் காரியங்களைப் பற்றி. சிந்தியார் - சிறிதும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். (க-து): அறிவற்றவர்கள், வறுமையும் நோயும் வந்த காலத்தில்தான் மறுமையைப்பற்றி நினைப்பார்கள். 10. என்னே! மற்றுஇவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை;- அன்னோ! அளவு இறந்த காதல்தம் ஆர்உயிர் அன்னார்க் கொள இழைக்கும் கூற்றமும் கண்டு. (330) (ப-ரை): என்னே - என்ன வியப்பு. இவ்வுடம்பு பெற்றும் - இந்த உடம்பை அடைந்துங்கூட. அறம் நினையார் -அறம் புரிவதைப்பற்றி நினைக்காமல் வாழ்கின்றனர். அன்னோ - ஐயோ. அளவு இறந்த காதல் - அளவு கடந்த அன்புக்குரிய. தம்ஆர்உயிர் அன்னார் -தமது அரிய உயிர் போன்ற உறவினர் களை. கொள - அவர்களின் உயிர்களைக் கொண்டுபோக. இழைக்கும் - முயற்சி செய்யும். கூற்றமும் கண்டு - கூற்றுவன் செயலைப் பார்த்துக்கூட. தம் வாழ்நாளை - தமது ஆயுளை. கொன்னே கழிப்பர் - வீணாகக் கழிப்பார்கள். (க-து): தம் அன்புக்குரிய சுற்றத்தார் இறப்பதைக் கண்டும் கூடத் தமது சாவைப்பற்றி எண்ணாமல் வாழ்கின்றனர். 34. பேதமை தானும் அறியாமல் பிறர் சொல்வதையும் உணராத தன்மை 1. கொலைஞர் உலைஏற்றித் தீமடுப்ப, ஆமை நிலைஅறியாது அந்நீர் படிந்தாடி அற்றே; கொலைவல் பெரும்கூற்றம் கோள்பார்ப்ப; ஈண்டை வலைஅகத்துச் செம்மாப்பர் மாண்பு. (331) (ப-ரை): கொலைவல் - கொலை செய்வதிலே வல்லமை யுள்ள. பெரும்கூற்றம் - பெரிய எமன். கோள்பார்ப்ப - தம் உயிரைக் கொண்டு செல்லும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க. ஈண்டை - அதை அறியாமல் இவ்வுலகிலே. வலைஅகத்து - வாழ்க்கை வலையில் சிக்கி. செம்மாப்பர் - களித்து வாழ்கின்றவர்களின். மாண்பு - பெருமையானது. கொலைஞர் - கொலைபுரிந்து உடலைத் தின்போர். உலையேற்றி - உலையிலே போட்டு ஏற்றி வைத்து. தீ மடுப்ப - அடுப்பிலே நெருப்பை மூட்ட. ஆமை - அதை அறியாத ஆமை. நிலை அறியாது - தன் நிலைமையை உணராமல். அந்நீர் படிந்து - அந்த உலைநீரிலே முழுகி. ஆடிஅற்றுஏ - விளையாடிக் கொண்டி ருப்பதுபோல ஆகும். (ஏ: அசை.) (க-து): தமக்குச் சாவு வருவது உறுதி என்பதை அறியாத வர்கள் பேதைகள். குறிப்பு: பேதைக்கு ஆமை உவமானம். 2. பெரும்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றுஅற்றால்; இல்செய் குறைவினை நீக்கி, அறவினை மற்றுஅறிவாம் என்றுஇருப்பார் மாண்பு. (332) (ப-ரை): இல்செய் - வீட்டிற்குச் செய்யவேண்டிய காரியங் களில் உள்ள. குறைவினை - குறைகளை எல்லாம். நீக்கி - ஒழித்துவிட்டு (செய்து முடித்துவிட்டு). மற்று - பிறகு அறவினை - அறம் புரிவதைப் பற்றி. அறிவாம் - எண்ணிப்பார்ப்போம். என்று இருப்பார் - என்று நல்லறம் புரியாமல் இருக்கின்றவர் களின். மாண்பு - பெருமையானது. பெரும்கடல் ஆடிய சென்றார் - பெரிய கடல் நீரிலே முழுகுவதற்குப் போனவர்கள். ஒருங்குஉடன் - முழுவதும். ஓசை அவிந்தபின் - கடல் அலை களின் ஓசை அடங்கிய பிறகு. ஆடுதும் - கடல்நீரிலே குளிப்போம். என்று அற்றுஆல் - என்று எண்ணிக்கொண்டு காத்திருப்பது போல ஆகும். (க-து): நன்மை செய்ய நினைப்போர் உடனே செய்ய வேண்டும். குறிப்பு: அலையோசை அடங்கியபின் கடலாடுவோம் என்பவரும், வீட்டுக்குறைகள் முடிந்தபின் நல்லறம் புரிவோம் என்பவரும் ஒரு தன்மையர். (ஆல்: அசை) 3. குலம், தவம், கல்வி,குடிமை, மூப்பு,ஐந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும்;- நலம்சான்ற மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்இலாப் பால்சோற்றின் நேர். (333) (ப-ரை): குலம் - உயர்ந்த குடிப்பிறப்பு. தவம் - சிறந்த தவம். கல்வி - நல்ல படிப்பு. குடிமை - குடும்பத்தைக் காப்பாற்றும் செல்வ வளம். மூப்பு - முதிர்ந்த வயது. ஐந்தும் - ஆகிய இவ்வைந்தும். விலங்காமல் - தடையில்லாமல் எய்தியக்கண்ணும் - அடைந்திருந்த போதிலும். நலம் சான்ற - நன்மை நிறைந்த. மை அறு - குற்றம் இல்லாத. தொல்சீர் - பழமையான புகழையுடைய. உலகம் - உயர்ந்தோர்களாகிய அறிஞர்களால். அறியாமை - அறிந்து பாராட்டப்படாமல் வாழ்கின்றவனுடைய வாழ்க்கை. நெய் இலா - நெய் கலக்காத. பால்சோற்றின் - வெறும் வெள்ளைச் சோற்றுக்கு. நேர் - ஒப்பாகும். (க-து): சான்றோர்களால் புகழப்படும்படி வாழாதவன் வாழ்க்கை பயன் அற்றது. 4. கல்நனி நல் கடையாய மாக்களின்; சொல்நனி தாம்உணரா ஆயினும்,- இன்இனியே நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று உற்றவர்க்குத் தாம்உதவ லான். (334) (ப-ரை): கடைஆய மாக்களின் - கடைப்பட்ட மனிதர் களைவிட. கல் நனி நல் - கல் மிகவும் சிறந்ததாகும். சொல் - பிறர் உரையை. நனி தாம் உணரா ஆயினும் - மிகவும் தாம் அறியா விட்டாலும். இன்இனியே - நன்றாக. உற்றவர்க்கு - தம்மை அடைந்தவர்க்கு. நிற்றல் - நிற்பதற்கும். இருத்தல் - உட்காரு வதற்கும். கிடத்தல் - படுப்பதற்கும். இயங்குதல் - நடப்பதற்கும். என்று - என. தாம் உதவலான் - தாம் உதவிசெய்வதனால் (கல்லே சிறந்தது). (க-து): கடைப்பட்டவர்களைவிட உயிர் இல்லாத கல்லே சிறந்ததாகும். குறிப்பு: மக்கள் மூவகையினர்: உத்தமர், மத்திமர், அதமர். 5. பெறுவதுஒன்று இன்றியும் பெற்றானே போலக் கறுவுகொண்டு, ஏலாதார் மாட்டும் - கறுவினால் கோத்துஇன்னா கூறி உரையாக்கால், பேதைக்கு நாத்தின்னும் நல்ல சுனைத்து. (335) (ப-ரை): பெறுவது ஒன்று இன்றியும் - தான் பெறக்கூடிய பயன் ஒன்றும் இல்லையானாலும். பெற்றானே போல - பயன் பெற்றவனைப் போல. ஏலாதார் மாட்டும் - தன் பகையை ஏற்றுக் கொள்ளாத ஏழைகளிடத்திலும். கறுவு கொண்டு - காரணம் இல்லாமல் சினங் கொண்டு. கறுவினால் - கோபத்தினால். கோத்து இன்னா கூறி - தொடர்ச்சியாகப் பழிச்சொற்களைச் சொல்லி. உரையாக்கால் - இழித்துப் பேசாவிட்டால். பேதைக்கு -அறிவில்லாதவனுக்கு. நல் சுனைத்து - நல்ல தினவு ஏற்பட்டு. நாதின்னும் - அது அவனது நாக்கை அரித்துவிடும். (க-து): காரணமில்லாமல் பிறர்மேல் பழி சொல்லிக் கொண்டிருப்பதே பேதையின் குணம். குறிப்பு: பிறரைக் குறைகூறாவிட்டால் பேதையின் நாக்கில் அரிப்பு எடுத்துவிடும். இது பேதையர் இயல்பாகும் 6. தம்கண் மரபுஇல்லார் பின்சென்று, தாம்அவரை எம்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை நல்தளிர்ப் புன்னை மலரும் கடல்சேர்ப்ப, கல்கிள்ளிக் கையிழந்து அற்று. (336) (ப-ரை): நல்தளிர் புன்னை - நல்ல தழைத்த புன்னை மரங்கள். மலரும் கடல் சேர்ப்ப - பூத்திருக்கின்ற கடற்கரையை யுடைய பாண்டிய மன்னவனே. தம்கண் மரபு இல்லார் - தம்மிடத்திலே ஒழுக்கம் இல்லாதவர்களின். பின்சென்று - பின்னே போய். தாம் அவரை - தாம் அந்த ஒழுக்கம் இல்லாத வரை. வணக்குவதும் என்பர் -தம் வழியிலே படிந்து நடக்கும்படி செய்துவிடுவோம் என்பவர்களின். புன் கேண்மை -அற்பமான உறவு. கல் கிள்ளி - கல்லை நகத்தால் கிள்ளி. கையிழந்து அற்று - கைவிரலை இழந்தது போலத்தான் ஆகும். (க-து): நல்லொழுக்கம் அற்றவரை யாராலும் திருத்த முடியாது; திருத்தத் தொடங்குவோர் துன்பம் அடைவார். 7. ஆகாது எனினும், அகத்துநெய் உண்டாயின் போகாது எறும்பு புறம்சுற்றும்;-யாதும் கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். (337) (ப-ரை): ஆகாது எனினும்-தமக்கு உணவாகக் கொள்ள முடியாது என்றாலும். அகத்து நெய்உண்டு ஆயின் - ஒரு பாண்டத்துள் நெய் பத்திரமாக வைக்கப்பட்டிருக்குமானால். போகாது - அதை விட்டு நீங்காமல். எறும்பு புறம் சுற்றும் - எறும்புகள் அப் பாண்டத்தின் வெளிப்புறத்திலே சுற்றிக் கொண்டேயிருக்கும் (அதுபோல). யாதும் - ஒன்றும். கொடார் எனினும் - கொடுக்காதவர்களாயிருந்தாலும். உடையாரை - செல்வம் உடையவர்களை. பற்றி - பிடித்துக் கொண்டு. விடார் - விடாமல் திரிவார்கள். உலகத்தவர் - இவ்வுலகில் உள்ள அறியாத மக்கள். (கொடாஅர், விடாஅர்) உயிரளபெடைகள்: (க-து): நன்மை புரியாத செல்வர்களைச் சுற்றித் திரிவது பேதையார் தன்மை. 8. நல்லவை நாள்தொறும் எய்தார்; அறம்செய்யார்; இல்லாதார்க்கு யாதுஒன்றும் ஈகலார்; - எல்லாம் இனியார்தோள் சேரார்; இசைபட வாழார்; முனியார்கொல் தாம்வாழும் நாள். (338) (ப-ரை): நல்லவை - நற்குணம், நற்செயல்களை. நாள் தொறும் எய்தார் - ஒவ்வொரு நாளும் அடையமாட்டார்கள். அறம் செய்யார் - அறநெறியைப் பின்பற்றி நன்மை செய்ய மாட்டார்கள். இல்லாதார்க்கு - வறுமையால் வருந்துவோர்க்கு. யாது ஒன்றும் ஈகலார் - ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். எல்லாம் இனியார் - எல்லாவகையிலும் நன்மை புரியக் கூடியவராயிருக்கும் மனைவிமார்களின். தோள் சேரார் -தோள்களைத் தழுவமாட்டார்கள். இசைபட வாழார் - புகழ் பெருகும்படி வாழமாட்டார்கள். தாம் வாழும் நாள் - தாம் உயிர்வாழும் நாளை. முனியார்கொல் - பயனற்ற நாள் என்று வெறுக்கமாட்டார்களோ? (வெறுப்பார்கள்). (க-து): நன்மை செய்யாமல் கழியும் ஒவ்வொரு நாளும் பயனற்ற நாளாகும். குறிப்பு: ‘நல்லவை நாள்தோறும் சேரார்’ என்பதற்கு ‘நல்லவர்கள் கூடியிருக்கும் சபையை நாள்தோறும் சேராதவர்கள்’ என்றும் பொருள் சொல்லலாம். 9. விழைந்துஒருவர் தம்மை வியப்ப, ஒருவர் விழைந்திலேம் என்றுஇருக்கும் கேண்மை-தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே ஆய்நலம் இல்லாதார் மாட்டு. (339) (ப-ரை): ஆய்நலம் -சிறந்த நல் குணம். இல்லாதார் மாட்டு - இல்லாதவரிடம் சென்று. விழைந்து -அவர் நட்பை விரும்பி. ஒருவர் தம்மை - ஒருவர் அவரை. வியப்ப - புகழ்ந்து பேசவும். ஒருவர் - நல்ல குணம் அற்ற அவர். விழைந்திலேம் - இந்த அன்போடு கூடிய புகழுரைகளை விரும்பமாட்டோம். என்று இருக்கும் -என்று எண்ணியிருக்கும் அவருடன் கொள்ளும். கேண்மை - உறவானது. தழங்கு குரல் - முழங்குகின்ற ஓசையை யுடைய. பாய்திரை சூழ் - பாய்கின்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பட்ட. வையம் - இவ்வுலகத்தையே. பயப்பினும் -தருவதாயிருந்தாலும். இன்னாதுஏ - அந்த உறவு துன்பத்தையே தரும். (ஏ: அசை) (க-து): இருவர்பாலும் அன்பில்லாதவர்களின் நட்பால் இன்பம் இல்லை; துன்பமேதான். 10. கற்றனவும் கண்அகன்ற சாயலும், இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடுஎய்தும்; தான்உரைப்பின், மைத்துனர் பல்கி, மருந்தில் தணியாத பித்தன் என்று எள்ளப் படும். (340) (ப-ரை): கற்றனவும் - கற்ற கல்விகளைப் பற்றியும். கண் அகன்ற சாயலும் - சிறந்த அடக்கத் தன்மையைப் பற்றியும். இல்பிறப்பும் - குடிப்பிறப்பின் பெருமையைப் பற்றியும். பக்கத்தார் பாராட்ட - பக்கத்தில் உள்ள மற்றவர்கள் பாராட்டிப் பேசு வதனால் மட்டுந்தான். பாடு எய்தும் - அவை பெருமையடையும். தான் உரைப்பின் - தானே அவற்றைப் பற்றிப் புகழ்ந்து பேசினால். மைத்துனர் பல்கி - அவனைப் பரிகசிக்கும் மைத்துனர்கள் பெருகி. மருந்தில் தணியாத - மருந்தினாலும் குணம் அடைய முடியாத. பித்தன் என்று - பைத்தியக்காரன் இவன் என்று. எள்ளப்படும் - பலராலும் பரிகசிக்கப்படுவான். (க-து): தன்னையே புகழ்ந்து பாராட்டிக்கொள்ளு கின்றவன் பெரிய பைத்தியக்காரன். 35. கீழ்மை கீழான குணம் உள்ளவர்களின் தன்மை 1. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும், குப்பை கிளைப்புஓவாக் கோழிபோல் -மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும், கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். (341) (ப-ரை): கப்பி - நெய்யை. கடவதுஆ - போதுமான அளவாக. காலை தன் வாய்ப்பெயினும் - காலைப் பொழுதிலேயே தன் வாய் நிறையப் போட்டுக் கொண்டாலும். குப்பை கிளைப்பு - குப்பையைக் கிளறி இரை தேடும் வழக்கத்தை. ஓவா - விட்டு விடாத. கோழிபோல் -கோழியைப் போல. மிக்க கனம் பொதிந்த - சிறந்த உறுதிமொழிகள் நிரம்பிய. நூல் விரித்துக் காட்டினும் - நூலில் உள்ள அறங்களை விரிவாகக் கூறினாலும். கீழ் - கீழ்மைக் குணம் படைத்தவர்கள் அதன்படி நடக்கமாட்டார்கள். தம் மனம் புரிந்தஆறே - தன் மனம் விரும்பிய வழியிலேயே. மிகும் - மிகுதியாக நடப்பார்கள். (க-து): தன் மனம்போன போக்கில் நடப்பதுதான் கீழ்மைக் குணம் படைத்தவர்களின் தன்மை. குறிப்பு: கீழ்மைக்குணம் படைத்தவர்க்குக் கோழி உவமானம். 2. காழ்ஆய கொண்டு கசடுஅற்றார் தம்சாரல் தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தாம் உறங்குவாம் என்றுஎழுந்து போம்ஆம்; அஃதுஅன்றி மறங்குமாம் மற்றொன்று உரைத்து . (342) (ப-ரை): காழ் ஆய கொண்டு - உறுதியைத் துணைக் கொண்டு. கசடு அற்றார்தம் சாரல் - குற்றமற்ற பெரியவர் களிடத்திலே. தாழாது போவாம் - தாமதம் இல்லாமல் சென்று நன்மை பெறுவோம். என உரைப்பின் - என்று கூறினால். கீழ்தான் - அதைக் கேட்ட கீழ்மைக் குணம் படைத்தவன். உறங்குவாம் - தூக்கம் வருகின்றது தூங்கலாம். என்று எழுந்து போம்ஆம் - என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விடுவான். அஃது அன்றி - அதல்லாமல். மற்றுஒன்று உரைத்து - வேறு ஏதேனுமொன்றைச் சொல்ல. மறங்கும்ஆம் - பெரியார் பக்கம் வர மறுத்து விடுவான். (க-து): கீழ்மைக் குணம் படைத்தவர்கள் நல்லவர்களிடம் சேரமாட்டார்கள். 3. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது ஒருநடையர் ஆகுவர் சான்றோர்; - பெருநடை பெற்றக் கடைத்தும், பிறங்குஅருவி நல்நாட! வற்றாம் ஒருநடை கீழ். (343) (ப-ரை): சான்றோர் - நற்குணம் நிரம்பிய பெரியார்கள். பெருநடை - பெரிய செல்வத்தை. தாம் பெறினும் - தாம் பெற்றாலும். பெற்றி - தம்முடைய தன்மையிலே. பிழையாது -தவறில்லாமல். ஒரு நடையர் ஆகுவர் - ஒரே ஒழுக்கமுள்ளவ ராயிருப்பர். பிறங்கு அருவி - விளங்குகின்ற அருவிகளையுடைய. நல்நாட - நல்ல நாட்டையுடைய பாண்டியனே. கீழ் - கீழ்மக்கள். பெருநடை பெற்றக்கடைத்தும் - பெரிய செல்வத்தைப் பெற்ற பொழுதும். ஒருநடை - முன்னிருந்த ஒரு ஒழுக்கத்திற்கு மாறான வேறொரு நடத்தையை. வற்று ஆம் - பின்பற்றி நடக்க வல்லவ ராயிருப்பாராம். (க-து): கீழ்மைக்குணம் உள்ளவர்கள் செல்வமில்லாத காலத்தில் ஒருவிதமாகவும், செல்வம் வந்தபோது மற்றொரு விதமாகவும் நடப்பார்கள். 4. தினைஅனைத்தே ஆயினும் செய்தநன்று உண்டால் பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனைஅனைத்து என்றும் செயினும், இலங்குஅருவி நல்நாட! நன்றில, நன்றுஅறியார் மாட்டு. (344) (ப-ரை): இலங்கு அருவி - என்றும் வற்றாமல் விளங்கு கின்ற அருவிநீரையுடைய. நல்நாட - நல்ல நாட்டையுடைய பாண்டியனே! சான்றோர் - நற்குணம் நிரம்பியவர்கள். செய்த நன்று உண்டாயின் - தமக்குப் பிறர் செய்த நன்மையிருக்கு மாயின். தினை அனைத்தே ஆயினும் - அது தினை அளவு சிறியதாயிருப்பினும். பனை அனைத்தா -அதைப் பனை அளவு பெரிதாக. உள்ளுவர் - என்றும் நினைப்பார்கள். நன்று அறியார் மாட்டு - நன்றியின் சிறப்பை அறியாதவர்களுக்கு. பனை அனைத்து - பனை அளவு பெரிய நன்மையை. என்றும் செயினும் - தினந்தோறும் செய்தாலும். நன்றுஇல -அதனால் நன்மை யில்லை. (க-து): கீழ்மக்களுக்கு எவ்வளவு நன்றி செய்தாலும் அதை அவர்கள் மறந்துவிடுவார்கள். 5. பொன்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய்பிறர் எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர் பெருமை உடைத்தாக் கொளினும் கீழ்செய்யும் கருமங்கள் வேறு படும். (345) (ப-ரை): பொன் கலத்து - பொன் பாண்டத்திலே. ஊட்டி - உணவைப் போட்டு உண்ணச் செய்து. புறம் தரினும் - பாதுகாத்து வளர்த்தாலும். நாய் பிறர் எச்சிற்கு - நாயானது பிறருடைய எச்சில் உணவையே. இமையாது பார்த்திருக்கும் - கண் இமைக்காமல் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். அச்சீர் - அத்தன்மை போலவே. பெருமை உடைத்துஆ - எவ்வளவு பெருமை யுள்ளவர்களாக எண்ணி. கொளினும் - உயர்வாக வைத்துக்கொண்டாலும். கீழ் செய்யும் - கீழ்மைக் குணம் உள்ளவர்கள் செய்யும். கருமங்கள் வேறுபடும் - காரியங்கள் ஒழுக்கத்திற்கு வேறுபட்டனவாகவேயிருக்கும். (க-து): கீழ்மக்களை எவ்வளவு போற்றிப் பாதுகாத்தாலும் அவர்கள் தங்கள் கெட்ட நடத்தையை விட்டுவிட மாட்டார்கள். குறிப்பு: கீழ்மக்களுக்கு நாய் உவமானம். 6. சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர் எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்;- எக்காலும் முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ், தன்னை இந்திரனா எண்ணி விடும். (346) (ப-ரை): விழுமியோர் - சிறந்த குணம் உள்ளவர்கள். சக்கரச் செல்வம் பெறினும் - இவ்வுலகையே ஆளும்படியான செல்வத்தைப் பெற்றாலும். மிகுதிச் சொல் - வரம்பு கடந்த கெட்ட சொல்லை. எக்காலும் சொல்லார் - ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். எக்காலும் - எப்பொழுதும். முந்திரி மேல் -முந்திரியின் அளவுக்கு மேல். காணிமிகுவதேல் - காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின். கீழ் - கீழ்மைக் குணம் படைத்தவன். தன்னை இந்திரன்ஆ - தன்னை இந்திரனைப் போன்ற எல்லாச் செல்வங்களும் படைத்தவனாக. எண்ணி விடும் - நினைத்துக் கொள்ளும். (க-து): கீழ்மக்கள் சிறிது செல்வம் பெற்றாலும் தம்மைப் பெரிய செல்வம் உள்ளவராக நினைத்துக் கொள்வர்; அடாத செயல்களைச் செய்வார்கள். குறிப்பு: காணி என்பது அறுபத்து நான்கு பாகத்தில் ஒன்று. முந்திரி என்பது காணியின் நான்கில் ஒரு பாகம். ஒன்றை 256 பாகமாகப் பிரித்தால் அதில் ஒரு பாகம் முந்திரியாகும். இது தமிழ்க் கணக்கு. 7. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணிஅழுத்திச் செய்தது எனினும், செருப்புத்தன் காற்கேஆம் எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச் செய்தொழிலால் காணப் படும். (347) (ப-ரை): மைதீர் - குற்றமில்லாத. பசும்பொன் மேல் - பசுமையான பொன்னின் மேல். மாண்ட - சிறந்த. மணி அழுத்தி - இரத்தினங்களைப் பதித்து. செய்தது எனினும் - மிகவும் வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருப்பதாயினும். செருப்பு - செருப்பானது. தன் காற்கே ஆம் - தன் காலுக்குத்தான் பயன்படுவதாகும். எய்திய - பெற்ற. செல்வத்தர் ஆயினும் - நிறைந்த செல்வமுள்ளவர்களானாலும். கீழ்களை - கீழ்மக்களை. செய் தொழிலால் - அவர்கள் செய்யும் இழிவான தொழிலைக் கொண்டு. காணப் படும் - அவர்கள் கீழ்மக்கள் என்பதை அறிந்துகொள்ளத் தகும். (க-து): கீழ்மக்கள் எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந் தாலும் அவர்கள் செய்யும் தொழில் அவர்கள் கீழ்மக்கள் என்பதைக் காட்டிவிடும். குறிப்பு: கீழ்மக்களுக்கு செருப்பு உவமானம். 8. கடுக்கெனச் சொல்வற்றாம்; கண்ணோட்டம் இன்றாம்; இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்:- அடுத்து அடுத்து வேகம் உடைத்தாம்; விறல், மலை நல்நாட! ஏகும்ஆம்; எள்ளும்ஆம், கீழ். (348) (ப-ரை): விறல் - வெற்றியையுடையவனே. மலை நல்நாட - மலைகள் நிறைந்த நல்ல நாட்டையுடைய பாண்டியனே. கீழ் - கீழ்மைக் குணம் உள்ளவர்கள். கடுக்கு என - கசப்பான கடும் சொற்களை. சொல்வற்று ஆம் - சொல்லுவதற்கு வல்லதாம். கண்ணோட்டம் இன்றுஆம் - சிறிதும் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளுமாம். பிறர்மாட்டு - மற்றவர்களுக்கு. இடுக்கண் உவக்கும் - துன்பம் செய்வதனாலேயே மகிழ்ச்சி அடையும். அடுத்து அடுத்து - அடிக்கடி. வேகம் உடைத்துஆம் - காரண மில்லாமலே கோபம் உடையவர்களாவர். ஏகும்ஆம் - தம்மனம் போன போக்கிலேயே செல்லும். எள்ளும்ஆம் -பிறரை இகழ்ந்து பேசுவார்கள். (க-து): பிறர் வெறுக்கும் சொல்லும் செயலும் உள்ளவர்கள் கீழ்மக்கள். குறிப்பு: கடுஞ்சொல், கடுமனம், தீமை, சினம், அடங் காமை, இகழ்ச்சி இவை கீழ்மக்களின் செயல்கள். 9. பழையர் இவர்என்று பல்நாள்பின் நிற்பின், உழைஇனியர் ஆகுவர் சான்றோர்;-விழையாதே, கள்உயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப! எள்ளுவர் கீழா யவர். (349) (ப-ரை): இவர்பல்நாள் - இவர் பல நாள்களுக்கு முன்பே உறவு கொண்ட. பழையர் - பழமையானவர். என்று பின் நிற்பின் - என்று எண்ணி ஆதரித்து நின்றால். சான்றோர் - நல்ல குணம் நிறைந்தவர்கள். உழை -தாம் ஆதரிக்கும் அவர்களிடம். இனியர் ஆகுவர் - அன்பு கொண்டு நல்லவர்களாக நடந்து கொள்ளுவர். கள் உயிர்க்கும் - தேனைச் சிந்துகின்ற. நெய்தல் - நெய்தற் பூக்கள் நிறைந்த. கனைகடல் - ஒலிக்கின்ற கடலின். தண்சேர்ப்ப - குளிர்ந்த கரையை உடைய பாண்டியனே. கீழாயவர் - கீழானவர்கள். விழையாதுஏ - தம்மை ஆதரிப்பவர்களை விரும்பாமல். எள்ளுவர் - அவர்களை இகழ்வார்கள். (ஏ: அசை.) (க-து): கீழானவர்கள் தம்மை ஆதரிப்போரிடமும் அன்பு காட்ட மாட்டார்கள். 10. கொய்புல் கொடுத்துக் குறைத்துஎன்றும் தீற்றினும், வையம்பூண் கல்லா சிறுகுண்டை;- ஐயகேள் எய்திய செல்வத்தார் ஆயினும், கீழ்களைச் செய்தொழிலால் காணப் படும் (350) (ப-ரை): ஐய கேள் - தலைவனே கேட்பாயாக. கொய்புல் - அறுக்கும் பக்குவம் உள்ள புல்லை. குறைத்துக் கொடுத்து - அறுத்துக் கொடுத்து. தீற்றினும் - ஊட்டி வளர்த்தாலும். சிறு குண்டை- சிறிய எருதுகள். என்றும் - ஒருபோதும். வையம்பூண் கல்லா - பெரிய தேரில் பூட்டி ஓட்டுவதற்குத் தகுதியற்றவை யாகும். எய்திய - தாமே பெற்ற. செல்வத்தார் ஆயினும் - நிறைந்த செல்வம் உள்ளவர்களாயினும். கீழ்களை - கீழ்மக்களை. செய் தொழிலால் - அவர்கள் செய்யும் தொழில்களைக் கொண்டு. காணப்படும் - அவர்கள் கீழ்மக்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். (க-து): கீழ்மக்கள் எக்காலத்திலும் தங்கள் செய்கையை விட்டுவிட மாட்டார்கள். குறிப்பு: கீழ்மக்களுக்குச் சிறிய எருதுகள் உவமானம். 36. கயமை மிகவும் கீழான குணத்தின் தன்மை 1. ஆர்த்த அறிவினர், ஆண்டுஇளையர் ஆயினும், காத்துஓம்பித் தம்மைஅடக்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல் போத்துஅறார் புல்அறிவி னார். (351) (ப-ரை): ஆர்த்த அறிவினர் - நிறைந்த அறிவுள்ளவர்கள். ஆண்டு இளையர் ஆயினும் - வயதிலே இளையவராயிருந்தாலும். தம்மைக் காத்து ஓம்பி - தம் உள்ளத்தைத் தீய வழியிலே செல்லாமல் பாதுகாத்து. அடக்குப - அடக்கிக் கொள்ளு வார்கள். புல் அறிவினார் - அற்பமான அறிவுள்ள கயவர்கள். மூத்தொறூஉம் - வயதேற வயதேற. தீ தொழிலே கன்றி - கெட்ட செயல்களையே விரும்பி. எருவைப் போல - கழுகைப்போல. திரிதந்து - திரிந்து. போத்துஅறார் - குற்றம் நீங்காமலே வாழ்வார் கள் (குற்றம் உள்ளவர்களாகவேயிருப்பார்கள்). (மூத்தொறூஉம்: அளபெடை.) (க-து): கயவர்கள் வயதேறினாலும் தீமைகளைத்தான் செய்வார்கள். குறிப்பு: புழுத்த பிணங்களைத் தின்பது கழுகின் தன்மை. கயவர்க்குக் கழுகு உவமானம். 2. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்க கில்லாஆம் தேரை; - வழும்புஇல்சீர் நூல்கற்றக் கண்ணும், நுணுக்கம்ஒன்று இல்லாதார், தேர்கிற்கும் பெற்றி அரிது. (352) (ப-ரை): தேரை - தவளையானது. செழும்பெரும் - செழிப் புள்ள பெரிய. பொய்கையுள் - குளத்திலே. என்றும் வாழினும் - எந்நாளும் வாழ்ந்தாலும். வழும்பு - தன் உடம்பில் உள்ள அழுக்கை. அறுக்ககில்லாஆம் - நீக்கிக்கொள்ள மாட்டாவாம் (அதுபோல). நுணுக்கம் -நுண் அறிவு. ஒன்று இல்லாதார் - சிறிதும் இல்லாத கயவர்கள். வழும்புஇல்சீர் - குற்றம் அற்ற சிறப்புள்ள. நூல் கற்ற கண்ணும் - நூலைப் படித்தபோதும். தேர்கிற்கும் பெற்றி - அந்நூலின் பொருளை அறிந்துகொள்ளும் தன்மை. அரிது - அவர்களிடம் இல்லை. (க-து): நுண்ணறிவற்றவர்கள் சிறந்த நூலைக் கற்றாலும், அதன் பொருளை அறிந்துகொள்ள மாட்டார்கள். குறிப்பு: நுண்ணறிவற்றவர்க்குத் தவளை உவமானம். 3. கணம்மலை நல்நாட! கண்நின்று ஒருவர் குணன்ஏயும் கூறற்கு அரிதுஆல்;- குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு, எற்றால் இயன்றதோ நா. (353) (ப-ரை): கணமலை நல்நாட - கூட்டமான மலைகள் நிறைந்த நல்ல நாட்டையுடைய பாண்டியனே. கண்நின்று - எதிரிலே நின்றுகொண்டு. ஒருவர் குணன்ஏயும் - ஒருவருடைய நல்ல குணத்தைக்கூட. கூறற்கு - சொல்லுவதற்கு. அரிது - முடியாததாகும். குணன் அழுங்க- நல்ல குணம் மறையும்படி. குற்றம் - குற்றத்தை மட்டும். உழைநின்று - ஒருவர் பக்கத்திலே நின்று கொண்டு. கூறும் சிறியவர்கட்கு - சொல்கின்ற கயவர் களுக்கு. நா எற்றால் இயன்றதோ - அவர்களுடைய நாக்கு எதனால் ஆக்கப்பட்டதோ! (க-து): கயவர்கள் பிறருடைய குற்றத்தை மட்டுந்தான் எடுத்துரைப்பார்கள். 4. கோடேந்து அகல்அல்குல் பெண்டிர்தம் பெண்நீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப் புதுப்பெருக்கம் போலத்தம் பெண்நீர்மை காட்டி மதித்துஇறப்பர் மற்றை யவர். (354) (ப-ரை): கோடுஏந்து - பக்கங்கள் உயர்ந்த. அகல் அல்குல் - அகலமான இடுப்பின் கீழ்ப்புறத்தையுடைய. பெண்டிர் - குல மகளிர். தம் பெண்ணீர்மை - தமது பெண்தன்மையைக் காட்டும் அலங்காரத்தை. சேடியர் போல - தோழியர் தமக்குச் செய்வது போல. செயல் தேற்றார் - தாமே செய்துகொள்ள அறிய மாட்டார்கள். கூடி - தம்மைத் தாமே அழகு செய்துகொண்டு. புதுப் பெருக்கம் போல -புது வெள்ளம்போல. தம்பெண் நீர்மை - தமது பெண்ணழகை. காட்டி - பிறர் மயங்கும்படி காட்டி. மதித்து- அவர்கள் தம்மை மதிக்கும்படி செய்துகொண்டு. மற்றையவர் - விலைமாதர்கள். இறப்பர் - தம்மை மதிப்பவரின் செல்வத்தைக் கவர்ந்துகொண்டு அவர்களை விட்டுப் பிரிவார்கள். (க-து): தம்மைத்தாமே அலங்கரித்துக்கொண்டு பிறரை மயங்க வைப்பார்கள் விலைமாதர்கள். குறிப்பு: விலைமகளிர்க்குப் புதுவெள்ளம் உவமானம். 5. தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா உளிநீரர் மாதோ கயவர்;- அளிநீரார்க்கு என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். (355) (ப-ரை): கயவர் - கீழ்மக்கள். தளிர் மேலே நிற்பினும் - மெல்லிய தளிரின் மேலே நின்றாலும். தட்டாமல் செல்லா - தட்டாவிட்டால் அதிலே அழுந்தாத. உளி நீரர் - உளியைப் போன்றவர்கள் ஆவார். அளிநீரார்க்கு - தம்மிடம் அன்பு காட்டும் தன்மையுள்ளவர்களுக்கு. என்ஆனும் செய்யார் - எந்த நன்மையும் செய்யமாட்டார்கள். இன்னாங்கு - துன்பம். செய் வார் பெறின் - செய்கின்றவரைக் காணப்பெற்றால். எனைத்து ஆனும் - எவ்வளவு வேண்டுமானாலும். செய்பவே - அவர் களுக்கு நன்மை செய்வார்கள். (க-து): கயவர்கள் தம்மைத் துன்புறுத்துவோர்க்குத்தான் நன்மை செய்வார்கள். 6. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்துஒருவர் செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயம்தன்னை வைததை உள்ளி விடும். (356) (ப-ரை): குறவன் மலைநலம் - குறவன் தான் வாழும் மலை யின் வளத்தையே. உள்ளும் - நினைப்பான். உழவன் - பயிர் செய்யும் குடியானவன். பயந்த விளைநிலம் - நல்ல பலனைத் தந்த விளை நிலத்தின் சிறப்பைப் பற்றியே (அதை மேலும் பண்படுத்து வதைப்பற்றியே). உள்ளும் - நினைத்துக்கொண்டிருப்பான். சான்றோர் - நற்குணம் நிறைந்தவர்கள். சிறந்து - அன்புமிகுந்து. ஒருவர் செய்த - ஒருவர் தமக்குச் செய்த. நன்று உள்ளுவர் - நன்மையையே நினைத்துக்கொண்டிருப்பார்கள். கயம் - கயவன். தன்னை வைததை - தன்னை ஒருவன் வைததைப் பற்றியே. உள்ளிவிடும் - நினைத்துக்கொண்டு, மற்ற நன்மைகளையெல்லாம் நினைக்காமல் விட்டுவிடுவான். (க-து): பிறர் கூறிய வசைமொழியை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதே கயவர் குணமாகும். 7. ஒருநன்றி செய்தவர்க்கு, ஒன்றி எழுந்த பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்;-கயவர்க்கு எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின், எழுநூறும் தீதுஆய் விடும். (357) (ப-ரை): சான்றோர் - நற்பண்புள்ளவர்கள். ஒரு நன்றி செய்தவர்க்கு-தமக்கு ஒரு நன்மையைச் செய்தவர்களிடம். ஒன்றி எழுந்த-தொடர்ந்து தோன்றிய. பிழை நூறும்-நூறு பிழை களையும். பொறுப்பர்-பொறுத்துக் கொள்வார்கள். கயவர்க்கு-கீழ்மக்களுக்கு. எழுநூறு நன்றி செய்து-எழுநூறு நன்மைகளைச் செய்து. ஒன்று தீதுஆயின்-ஒரு காரியம் மட்டும் தீமையாக முடிந்துவிடுமானால். எழுநூறும்-அவர்க்குச் செய்த எழுநூறு நன்மைகளும். தீது ஆய்விடும்-தீமையாகவே முடிந்து விடும். (க-து): கயவர் பிறர் தமக்குச் செய்த நன்மைகள் அவ்வள வையும் மறந்துவிடுவார்கள்! தீமையை மட்டுமே நினைப்பார்கள். 8. ஏட்டைப் பருவத்தும் இல்பிறந்தார் செய்வன மோட்டு இடத்தும் செய்யார் முழுமக்கள்,-கோட்டை வயிரம் செறிப்பினும், வாள் கண்ணாய்! பன்றி செயிற்வேழம் ஆகுதல் இன்று. (358) (ப-ரை): வாள்கண்ணாய்-வாள் போன்ற கண்களையுடைய பெண்ணே. ஏட்டைப் பருவத்தும்-வறுமை வந்த காலத்திலும். இல் பிறந்தார் செய்வன-நற்குடியிலே பிறந்தவர்கள் செய்யும் நல்ல காரியங்களை. முழு மக்கள்-மூடர்களாகிய கயவர்கள். மோட்டு இடத்தும்-உயர்ந்த செல்வ நிலையில் இருக்கும் காலத் திலும். செய்யார்-செய்யமாட்டார்கள். பன்றி கோட்டை-பன்றியின் தந்தத்திலே. வயிரம் செறிப்பினும்-வைர நகையைப் பூட்டினாலும். செயிர்-அது கோபத்தையுடைய. வேழம் ஆகுதல் இன்று-யானையாகிவிடாது. (க-து): மூடர்கள் எக்காலும் நன்மை செய்யமாட்டார்கள். குறிப்பு: நற்குடிப் பிறந்தார்க்கு வேழமும், முழு மக்களுக்குப் பன்றியும் உவமைகள். 9. இன்றுஆதும்; இந்நிலையே ஆதும்; இனிச்சிறிது நின்றுஆதும்; என்று நினைத்திருந்து-ஒன்றி உரையின் மகிழ்ந்து; தம் உள்ளம்வேறு ஆகி மரைஇலையின் மாய்ந்தார் பலர். (359) (ப-ரை): இன்று ஆதும்-இன்றைக்குச் செல்வர் ஆவோம். இந்நிலையே ஆதும்-இப்பொழுதே செல்வமுள்ளவர் ஆவோம். இனி சிறிது நின்று ஆதும்-இன்னும் சிறிது நேரம் கழித்துச் செல்வர் ஆவோம். என்று நினைத்து இருந்து-அதன்பின் அறம் செய்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்து. உரையின் ஒன்றி மகிழ்ந்து - அதை வாயினால் சொல்லுவதிலும் ஈடுபட்டு மகிழ்ந்து. தம் உள்ளம் வேறு ஆகி-ஆனால் தனது மனம் மட்டும் அறம் புரிவதற்கு இணங்காமல் வேறுபட்டு. மரை இலையின்--தாமரை இலையைப் போல. மாய்ந்தார் பலர்-பயனில்லாமல் மாண்ட மக்கள் பலராவர். (க-து): ஏதேனும் சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டு அறம் புரியாமல் மாண்டுபோன மக்கள் இவ்வுலகிலே பலராவர். 10. நீருள் பிறந்து நிறம்பசியது ஆயினும் ஈரம் கிடைஅகத்து இல்ஆகும்;-ஓரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும், அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து. (360) (ப-ரை): நீர்உள் பிறந்து-தண்ணீரிலேயே பிறந்து. நிறம் பசியது ஆயினும்-நிறம் பசுமையாக இருந்தாலும். கிடைஅகத்து-நெட்டியின் உள்ளே. ஈரம்இல் ஆகும்-ஈரம் இல்லையாகும் (அது போல). ஓரும்-எண்ணிப் பார்க்கத் தகுந்த. நிறை பெரும் செல்வத்து - நிறைந்த பெரிய செல்வமுள்ளவராய். நின்ற கடைத்தும் - வாழ்ந்த காலத்திலும். அறைபெரும்-அடித்து உடைக்கத் தகுந்த பெரிய. கல் அன்னார்-கருங்கல் போன்ற வன்மனம் படைத்தவர் களை. உடைத்து - இவ்வுலகம் பெற்றிருக் கின்றது. (க-து): செல்வம் நிறைந்த காலத்திலும் மனமிரங்கி அறஞ் செய்யாத பலர் இவ்வுலகில் உண்டு. குறிப்பு: உலக மக்கள் நிலையை எடுத்துரைத்தது இச் செய்யுள். கயவர்க்கு நெட்டி உவமானம். பன்னெறியியல் 37. பன்னெறி பல ஒழுக்கங்களைப்பற்றிக் கூறுவது 1. மழைதிளைக்கும் மாடமாய் மாண்புஅமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றுஇமைப்பின் என்னாம்-விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்அகம் காண்டற்கு அரியதுஓர் காடு. (361) (ப-ரை): மழை திளைக்கும்-மேகங்கள் வந்து படிகின்ற. மாடம்ஆய்-உயர்ந்த மாளிகையாகவும். மாண்பு அமைந்த-சிறந்த. காப்பாய்-காவலை உடையதாகவும். இழைவிளக்கு-ஆபரணம் போன்ற விளக்குகள். நின்று இமைப்பின்-வரிசையாக நின்று ஒளி விடுவதாகவும் இருப்பினும். என்ஆம்-என்ன பயன் உண்டு? விழைதக்க - விரும்பத்தக்க பண்புகளையுடைய. மாண்ட மனை யாளை - சிறந்த மனைவியை. இல்லாதான் -பெற்றில்லாத வனுடைய. இல்லம்-வீடு. காண்டற்கு அரியது-பார்ப்பதற்கே முடியாத. ஓர் காடு-ஒரு பாழும் காடாகும். (க-து): நல்ல மனைவியைப் பெறாதவன் வீடு, பாழும் காட்டைப்போல் காணப்படும். குறிப்பு: மனையாள் இல்லாத வீட்டுக்குப் பாழும் காடு உவமை. 2. வழக்குஎனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறார்; ஆயின் - இழுக்குஎனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார் கைஉறாப் பாணி பெரிது. (362) (ப-ரை): வழக்கு எனைத்தும் இல்லாத-(தம்மைத்தாம் காத்துக்கொள்ளாத பெண்கள்) குற்றம் சிறிதும் இல்லாத. வாள்வாய்க் கிடந்தும்-காவல் காக்கின்ற வாளேந்திய வீரர்கள் மத்தியிலே இருந்தும். இழுக்கினை-கற்புத் தவறும் குற்றத்தை. தாம் பெறார் ஆயின்-தாம் செய்யப்பெறாதவராயிருப்பினும். இழுக்கு-குற்றத்தை. எனைத்தும் - எவ்வளவும். செய்குறாப் பாணி-உள்ளத்தால் செய்யாத நேரம். சிறிதே-சிறிது நேரம்தான். அச் சின்மொழியார்-அந்தச் சில சொற்களையுடைய பெண்கள். கைஉறா-உள்ளத்தால் ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்காத. பாணி-நேரம். பெரிது-மிகுதியாகும். (க-து): தம் கற்பைத் தாமே காத்துக்கொள்ளாத பெண் களை காவலில் வைத்து, அவர்கள் கற்பைக் காப்பாற்றிவிட முடியாது. 3. எறிஎன்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி;-அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை . (363) (ப-ரை): எறி என்று-அடி என்று சொல்லிக்கொண்டு. எதிர் நிற்பாள்-எதிரே நிற்கும் மனைவி. கூற்றம் - எமன் ஆவாள். சிறுகாலை-விடியற் காலத்திலேயே. அட்டில் புகாதாள்-சமையல் வீட்டில் புகுந்து உணவாக்கும் வேலையைப் பார்க்காத மனைவி. அரும்பிணி-கொடிய நோயாவாள். அட்டதனை-சமைத்த உணவை. உண்டி உதவாதாள் - நேரத்தில் உண்பதற்கு உதவாதவள். இல்வாழ்பேய்-வீட்டிலே வாழும் பேயாவாள். இம்மூவர்-இக்கூற்றம், பிணி, பேய் ஆகிய மூவர்களே. கொண்டானை-தம்மைக் கொண்ட கணவனை. கொல்லும் படை-கொன்றுவிடும் ஆயுதம் ஆவர். (க-து): கணவனுக்குக் கீழ்படிந்து உபசரிக்காத மனைவியே அவனைக் கொல்லும் கருவியாவாள். குறிப்பு: கீழ்ப்படியாத மனைவியைக் கூற்றமாகவும், பிணி யாகவும், பேயாகவும் உருவகம் செய்தது இச் செய்யுள். 4. கடிஎனக் கேட்டும் கடியான்; வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்தும்ஓர் இல்கொண்டு இனிதுஇரூஉம் ஏம்உறுதல் என்பவே கல்கொண்டு எறியும் தவறு. (364) (ப-ரை): கடிஎனக் கேட்டும்-இல்வாழ்க்கையைத் துறந்துவிடு என்று அறிஞர் சொல்லக் கேட்டும். கடியான்-துறக்கமாட்டான். வெடிபட-வெடி ஓசைபோல. ஆர்ப்பது கேட்டும் - பிணப் பறை ஆரவாரிப்பதைக் கேட்டும். அது தெளியான் - அதன் உண்மையை உணரமாட்டான். பேர்த்தும் ஓர்-மீண்டும் ஒரு. இல் கொண்டு-இல்லாளை மணந்து கொண்டு. இனிது இரூஉம் -இன்பத்துடன் வாழ்கின்ற. ஏமுறுதல்-மயக்கத் தன்மையே. கல் கொண்டு-கல்லைக் கையில் கொண்டு. எறியும்-தன் மேலேயே எறிந்து கொள்ளுகின்ற. தவறு என்பவே-தவறு போன்றது என்பர். (க-து): மனைவி இறந்தபின் மீண்டும் மணம் புரிந்து கொண்டு வாழ்தல் அறியாமையாகும். குறிப்பு: ‘பேர்த்தும் ஓர் இல் கொண்டு’ என்பதற்கு, ஒரு மனையாள் இருக்க மீண்டும் ஓர் மனைவியை மணந்து கொண்டு என்றும் பொருள் கூறி, இருதார மணத்தைக் கண்டிப்பதாகவும் கொள்ளலாம். 5. தலையே தவம்முயன்று வாழ்தல் ஒருவர்க்கு இடையே இனியார்கண் தங்கல்-கடையே புணராது என்றெண்ணியப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை (365) (ப-ரை): ஒருவர்க்கு தவம் முயன்று வாழ்தல்-ஒருவர்க்குத் தவம் புரிந்து வாழ்வதே. தலையே-சிறந்ததாகும். இனியார்கண் தங்கல்-நல்ல மனைவி யுடன் இருந்து இல்லறம் நடத்துதல். இடையே-நடுத்தரமான தாகும். புணராது என்று எண்ணி-தமக்குக் கிடைக்காது என்று நினைத்தும். பொருள் நசையால்-செல்வத்தின் மேல் வைத்த ஆசை காரணமாக. தம்மை உணரார் பின்-தம்முடைய பெருமையை அறியாதவர்களின் பின்னே. சென்று நிலை-திரிந்துகொண்டிருத்தல். கடையே-கீழ்ப்பட்ட செயலாகும். (க-து): தவம் உத்தமம்; இல்லறம் மத்திமம்; தம்மை அறியார்பின் திரிதல் அதமம். குறிப்பு: துறவறமே சிறந்தது என்னும் சமணர்களின் கொள்கையை வயியுறுத்துவது இச்செய்யுள். 6. கல்லாக் கழிப்பர் தலைஆயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனிதுஉண்ணேம், ஆரம் பெறேம்யாம் என்னும் முனிவினால் கண்பாடு இலர். (366) (ப-ரை): தலை ஆயார்-உத்தமமானவர்கள். கல்லாக் கழிப்பர்- எப்பொழுதும் கல்வி கற்பதிலேயே காலம் போக்கு வார்கள். இடைகள்-மத்திமர்கள். நல்லவை-நல்ல வழியிலே சேர்த்த பண்டங்களை. துவ்வாக் கழிப்பர்-அனுபவித்துக் கொண்டு காலம் போக்குவர். கடைகள் - அதமர்கள். இனிது உண்ணேம் -இனிமையான உணவுகள் உண்பதற்குக் கிடைக்க வில்லையே. யாம் - நாம். ஆரப் பெறேம் - அவற்றை நிரம்பப் பெறாமல் இருக்கின்றோமே. என்னும் முனிவினால் - என்னும் வெறுப்பினால். கண்பாடு இலர்-உறக்கமின்றி வருந்திக் கொண்டிருப்பார்கள். (க-து): கல்வி கற்பதிலே காலம் போக்குகின்றவர்கள் உத்தமமானவர்கள். 7. செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றும்அச் செந்நெல்லே ஆகி விளைதலால்-அந்நெல் வயல்நிறையக் காய்க்கும் வளவயல், ஊர! மகன் அறிவு தந்தை அறிவு. (367) (ப-ரை): செந்நெல்லால் ஆய-செந்நெல்லிலிருந்து உண்டாகிய. செழுமுளை-நல்ல விதையானது. மற்றும்-மீண்டும். அச்செந்நெல்லே ஆகி விளைதலால்-அச்செந்நெல்லாகவே விளைவதனால். அந்நெல்-அந்தச் செந்நெல். வயல் நிறையக் காய்க்கும்-வயல்கள் நிறைய விளைந்திருக்கின்ற. வளவயல் ஊர-செழித்த வயல்கள் நிரம்பிய ஊர்களையுடைய பாண்டியனே. மகன் அறிவு-மகன் பெற்றிருக்கும் அறிவு என்பது. தந்தை அறிவு-அவனுடைய தந்தைக்குள்ள அறிவாகவே இருக்கும். (க-து): தந்தையின் அறிவைப் போலவே அவன் மகனுடைய அறிவும் அமைந்திருக்கும். குறிப்பு: தந்தைக்குள்ள அறிவுதான் மகனுக்கும் உண்டு என்பதற்கு, செந்நெல் விதை செந்நெல்லாகவே விளையும் என்பது உவமானம். காய்க்கும்: விளையும். 8. உடைப்பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ணது ஆகிக் குடைக்கால்போல கீழ்மேலாய் நிற்கும் உலகு. (368) (ப-ரை): உடைப்பெரும் செல்வரும்-உடமைகள் நிறைந்த பெரிய செல்வம் உள்ளவர்களும். சான்றோரும் - நற்குண நற்செயல்களை உடையவர்களும் கெட்டு - வறுமையால் தீமையடைந்து. புடைப்பெண்டிர் மக்களும்-வைப்பாட்டி மக்கள் என்று சொல்லப்படுகின்றவர்களும். கீழும்-இழிந்த குணம் உள்ளவர்களும். பெருகி-செல்வாக்கு மிகுந்து. கடைக்கால்-கடைசி இடத்தில் இருக்க வேண்டியவர்கள். தலைக்கண்ணது ஆகி - தலைமை யிடத்தில் இருக்கக்கூடியவர்களாகி. குடைக்கால் போல் - விரித்துப் பிடித்திருக்கும் குடையின் காம்பைப் போல. கீழ் மேலாய் நிற்கும்-கீழே இருக்க வேண்டியது மேலே இருப்பதே. உலகு-இவ்வுலக இயல்பாகும். (க-து): மேலோர்கள் கீழோர் ஆவதும், கீழோர்கள் மேலோர் ஆவதும் இவ்வுலக இயற்கை. குறிப்பு: கீழோர் மேலோர் ஆவதற்குக் குடைக் கம்பு உவமானம். 9. இனியார்தம் நெஞ்சத்து நோய்உரைப்ப, அந்நோய் தணியாத உள்ளம் உடையார்-மணிவரன்றி வீழும் அருவி விறல்மலை நல்நாட! வாழ்வின் வரைபாய்தல் நன்று (369) (ப-ரை): மணி வரன்றி-மலையில் உள்ள இரத்தினங்களை வாரிக் கொண்டுவந்து. வீழும் அருவி-வீழும் அருவிகளையுடைய. விறல் மலை-சிறந்த மலைகள் நிறைந்த. நல் நாட-நல்ல நாட்டை யுடைய பாண்டியனே. இனியார்-நண்பர்கள். தம் நெஞ்சத்து-தம் மனத்தில் உள்ள. நோய் உரைப்ப-துன்பத்தை எடுத்துக் கூறி அதை நீக்கும்படி வேண்டியபோது. அந்நோய் தணியாத-அந்தத் துன்பத்தை நீக்க முடியாத. உள்ளம் உடையார்-கல்மனம் படைத் தவர்கள். வாழ்வின்-உயிருடன் வாழ்வதைவிட. வரை பாய்தல்-ஒரு மலை உச்சியில் ஏறிக் கீழே குதித்து இறத்தல். நன்று-நல்லதாகும். (க-து): தம் நண்பர்களின் மனத்துயரை நீக்க முடியா தவர்கள் உயிர் வாழ்வதைவிட இறந்துபோவதே மேலானதாகும். குறிப்பு: மலையிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வது பண்டைக் காலத்து வழக்கம். 10. புதுப்புனலும், பூங்குழையார் நட்பும், இரண்டும் விதுப்புஅற நாடின் வேறுஅல்ல;-புதுப்புனலும் மாரி அறவே அறுமே; அவர் அன்பும் வாரி அறவே அறும். (370) (ப-ரை): புதுப்புனலும்-புது வெள்ளமும். பூம் குழையார் நட்பும்-பொலிவுள்ள காதணியையுடைய வேசையர் நட்பும். இரண்டும் -ஆகிய இரண்டைப் பற்றியும். விதுப்பு அற-அவசரப் படாமல் பொறுமையுடன். நாடின்-ஆராய்ந்து பார்த்தால். வேறு அல்ல-அவை இரண்டின் காரணமும் வெவ்வேறு அல்ல. புதுப்புனலும் - புதுவெள்ளத்தின் வரவும். மாரி அறவே -மழையில்லாமல் நின்றுவிட்டாலே. அறும்-வற்றிப்போகும். அவர் அன்பும்-வேசையர் அன்பும். வாரி அறவே-வருமானம் இல்லாமல் போனால். அறும்-மாறிப்போகும். (க-து): பொருள் பறிப்பதை நோக்கமாகக் கொண்டே வேசையர்கள் அன்புள்ளவர்கள் போல் நடிப்பார்கள். குறிப்பு: வேசையர்கள் மிகுந்த அன்புள்ளவர்கள் போல் நடிக்கும் நடிப்புக்கு வெள்ளப்பெருக்கு உவமானம். 3 காமத்துப் பால் இன்ப - துன்ப இயல் 38. பொதுமகளிர் பொதுமகளிர் என்னும் வேசையரின் தன்மையைப் பற்றிக் கூறுவது 1. விளக்குஒளியும் வேசையர் நட்பும், இரண்டும் துளக்குஅற நாடின்வேறு அல்ல:-விளக்கொளியும் நெய்அற்ற கண்ணே அறுமே; அவர் அன்பும் கைஅற்ற கண்ணே அறும். (371) (ப-ரை): விளக்கு ஒளியும் - விளக்கு எரியும் ஒளியும். வேசையர் நட்பும்-வேசையர்களின் கூட்டுறவும். இரண்டும்-ஆகிய இரண்டைப் பற்றியும். துளக்கு அற-கலக்கம் இல்லாமல் தெளிவாக. நாடின்-ஆராய்ந்து பார்த்தால். வேறு அல்ல-இரண்டும் வெவ்வேறு அல்ல. விளக்கு ஒளியும்-விளக்கின் பிரகாசமும். நெய் அற்ற கண்ணே - எண்ணெய் வற்றிவிட்ட உடனே. அறும்-இல்லாது ஒழியும். அவர் அன்பும்-வேசையர் அன்பும். கைஅற்ற கண்ணே - கைப்பொருளைக் கொடுப்பது ஒழிந்தபின். அறும்-மறைந்து போகும். (க-து): பொருள் கொடுக்காவிட்டால் வேசையர்கள் அன்பு காட்ட மாட்டார்கள். குறிப்பு: வேசையர் நட்புக்கு விளக்கின் ஒளி உவமானம். நெய் விட்டு விளக்கெரிப்பதே பழங்கால வழக்கம். நெய்: எண்ணெய். 2. அம்கோட்டு அகல்அல்குல் ஆய்இழையாள், நம்மொடு செங்கோடு பாய்துமே என்றாள்மன்;-செங்கோட்டின் மேல்காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே, கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து . (372) (ப-ரை): அம் கோட்டு-அழகாக உயர்ந்த. அகல் அல்குல்-அகன்ற இடுப்பின் அடிப்பாகத்தை உடைய. ஆய் இழையாள்-சிறந்த நகைகளைப் பூண்ட வேசையாள். செங்கோடு பாய்தும்ஏ-நாம் இருவருமே மலையுச்சியிலேறி வீழ்ந்து இறப்போம். என்றாள் - என்று நான் பொன் கொடுக்கும்போதெல்லாம் கூறினாள். செங்கோட்டின்மேல்-பின்னர் நாம் மலையுச்சி யிலேறி விழுந்து இறப்போம் என்று அழைத்தபோது அதன்மேல். காணம் இன்மையால்-அவள் விரும்பும் பொன் இல்லாமையால். கால்கால் நோய் காட்டி-காலிலே வந்த வாதநோயைக் காட்டி. கலுழ்ந்து - அழுவது போல நடித்து. மேவாது ஒழிந்தாள்-என்னுடன் வராமல் நீங்கினாள். (க-து): பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் போதுதான் வேசையர்கள் அன்புள்ளவர்கள்போல் நடிப்பார்கள். 3. அம்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆகமன்;-தம்கைக் கொடுப்பதுஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது. (373) (ப-ரை): கொய் தளிர் அன்னார்-புதிதாகக் கொய்ததளிர் போன்ற நிறமுள்ள வேசையர்கள். அம்கண் விசும்பின்-பெரிய வானத்திலே. அமரர் தொழப்படும் - தேவர்களால் வணங்கப் படும். செம்கண்மால் ஆயினும் - செந்தாமரை போன்ற கண்களை யுடைய திருமாலே ஆனாலும். ஆக-ஆகட்டும். தம்கை-தம் கையிலே. கொடுப்பது ஒன்று இல்லாரை-கொடுக்கக்கூடிய பொருள் ஒன்றும் இல்லாதவரை. தம் கையால் தொழுது-தம் கையால் வணங்கி. விடுப்பர்-அனுப்பிவிடுவார்கள். (க-து): பொருள் கொடாதவரை வேசையர் விரும்ப மாட்டார்கள். குறிப்பு: கொய்த தளிர், வேசையர் உடல் நிறத்துக்கு உவமை. 4. ஆணம்இல் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணம் இல்லாதார் கடுஅனையர்;-காணவே செக்குஊர்ந்து கொண்டாரும் செய்த பொருள்உடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு. (374) (ப-ரை): ஆணம்இல் - அன்பில்லாத. நெஞ்சத்து - மனத்தை யுடைய. அணிநீலக் கண்ணார்க்கு -அழகிய குவளை மலர் போன்ற கண்களையுடைய வேசையர்க்கு. காணம் இல்லாதார் - பொன் படைத்திராதவர்கள் உயர் குடியினராயிருப்பினும். கடு அனையர் - நஞ்சைப்போல் கொடியவர்களாகவே காணப் படுவார்கள். காணவே - பலரும் காணும்படி. செக்கு ஊர்ந்து -எண்ணெய் ஆடும் செக்கை ஓட்டி. கொண்டாரும் - கூலி வாங்கிக் கொண்டவர்களும். செய்த பொருள் உடையார் - மிகுதியாகச் சேர்த்திருக்கின்ற பொருளையுடையவர்களாயின். அவர்க்கு - வேசையர்க்கு அவர்கள். அக்காரம் அன்னார் - சர்க்கரையைப் போல் இனிப்பாகக் காணப்படுவார்கள். (க-து): பொருள் உள்ளவர்களையே வேசையர்கள் மதிப்பார்கள். குறிப்பு: செக்காடும் தொழிலாளரை இழிந்த சாதியினராக எண்ணினர். பணம் படைத்தவர்க்குச் சர்க்கரையும், பணம் இல்லாதவர்க்கு நஞ்சும் உவமையாகக் கூறப்பட்டன. 5. பாம்பிற்கு ஒருதலை காட்டி, ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்;-ஆங்கு மலங்குஅன்ன செய்கை மகளிர் விலங்குஅன்ன வெள்அறிவி னார். (375) தோள் சேர்வார் (ப-ரை): பாம்பிற்கு ஒரு தலை காட்டி - பாம்புக்கு ஒரு புறத்தைக் காட்டி. ஒருதலை - மற்றொரு புறத்தை. தேம்படு - இனிமை பொருந்திய. தெள்கயத்து - தெளிந்த நீருள்ள குளத்திலே வாழும். மீன் காட்டும் - மீனுக்குக் காட்டுகின்ற. ஆங்கு- அதுபோன்ற. மலங்கு அன்ன - மலங்கு மீனைப் போன்ற. செய்கை - ஏமாற்றும் செய்கையையுடைய. மகளிர் தோள் சேர்வார் -வேசை மகளிரின் தோள்களைத் தழுவிக் கொள்ளு கின்றவர்கள். விலங்கு அன்ன - மிருகத்தைப் போன்ற. வெள் அறிவினார் - அறிவற்றவர் ஆவார். (க-து): வேசியரை விழைவோர் அறிவற்றவர்கள். குறிப்பு: ஏமாற்றுகின்றவர்களை விலாங்கு மீனுக்கு ஒப்பிடு வது வழக்கம். வேசையர்க்கு விலாங்கு மீன் உவமை! 6. பொத்தநூல் கல்லும், புணர்பிரியா அன்றிலும்போல், நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுஉரைத்த பொற்றொடியும், போர்த்தகர்க்கோடு ஆயினாள்; நல்நெஞ்சே நிற்றியோ! போதியோ நீ (376) (ப-ரை): பொத்த நூல் கல்லும் - பொத்தலிட்டு நூலிலே கோக்கப்பட்டிருக்கும் இரத்தினமும். புணர்பிரியா -சேர்ந் திருப்பதை விட்டு நீங்காத. அன்றிலும் போல் - அன்றில் என்னும் பறவையையும் போல. நித்தலும் - நாள்தோறும். நம்மைப் பிரியலம் - நம்மை விட்டுப் பிரியமாட்டோம். என்று உரைத்த - என்று சொல்லிக்கொண்டேயிருந்த. பொன்தொடியும் - பொன் வளையல்களைத் தரித்த என் காதலியும். போர்த் தகர் - போர் செய்யும் ஆட்டுக்கடாவின். கோடு ஆயினாள் - கொம்பைப் போல மாறுபட்டு முறுக்கிக் கொண்டாள். நல்நெஞ்சே - ஆதலால் என்னுடைய நல்ல மனமே. நீ நிற்றியோ - நீ இன்னும் அவளிடம் ஆசைகொண்டு நிற்பாயோ. போதியோ - அல்லது அவ்வாசையை விட்டு என்னிடம் திரும்புவாயோ; சொல்லுக. (க-து): பெண்கள் இனிமையாகப் பேசும் சொற்களை நம்பி ஏமாறக்கூடாது. குறிப்பு: அன்றில் ஒருவகைப் பறவை. ஆணும் பெண்ணும் பிரியாமல் இருப்பது அன்றில் பறவையின் தன்மை. மகளிர் மனம் மாறுபட்டதற்கு முறுக்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக் கடாவின் கொம்பு உவமானம். 7. ஆமாபோல் நக்கி, அவர்கைப் பொருள்கொண்டு, சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை, ஏமாந்து எமதுஎன்று இருந்தார் பெறுபவே தாம்ஆம் பலரால் நகை. (377) (ப-ரை): ஆமாபோல் நக்கி - காட்டுப் பசுவைப்போல் நக்கி. அவர்கைப் பொருள் கொண்டு - தம்மை விரும்பியவர்களின் செல்வத்தைப் பறித்துக்கொண்டு. சேமாபோல் - பின்னர் எருதைப் போல. குப்புறூஉம் - சண்டித்தனமாகக் குப்புறப் படுத்துக் கொள்ளுகின்ற. சில்லைக்கண் அன்பினை - வேசியிடம் காணப்படும் அன்பைக் கண்டு. ஏமாந்து எமது என்று இருந்தார் - ஏமாந்து அவள் அன்பு எம்முடையது என்று நம்பியிருந்த வர்கள். பலரால் - பலராலும். நகை தாம் பெறுபவே ஆம் - பரிகசிக்கப்படும் தன்மையையே அடைவார்களாம். (க-து): வேசையர் காட்டும் அன்பை உண்மை என்று நம்பியவர்கள், இறுதியில் பலராலும் ஏளனம் செய்யக்கூடியவர் களாகி விடுவார்கள். குறிப்பு: வேசிக்குக் காட்டுப் பசுவும், எருதும் உவமைகள். 8. ஏமாந்த போழ்தின் இனியார்போன்று, இன்னாராய்த் தாம்ஆர்ந்த போதே தகர்க்கோடாம்;-மான்நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செம்நெறிச் சேர்தும்என் பார். (378) (ப-ரை): செம்நெறிச் சேர்தும் என்பார் - நல்ல வழியிலே நடக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்கள். ஏமாந்த போழ்தின் - தம்மை விரும்பி வந்தவர்கள் மயங்கியிருக்கும்போது. இனியார் போன்று - அவர்களுக்கு நல்லவர்கள் போல நடந்துகொண்டு. இன்னாராய் - பிறகு அவர்கள் வறுமையால் துன்புறுகின்றவர் களாய். தாம் ஆர்ந்தபோதே - தாமே விரும்பி வந்தபோதிலும். தகர்க்கோடுஆம் - ஆட்டுக்கடாவின் கொம்பைப்போல் முறுக்கிக் கொள்ளுவார்கள். மான் நோக்கின் - மான்போல் மருண்ட பார்வையையுடைய. தம் நெறிப் பெண்டிர் - தம்முடைய எண்ணப்படியே நடக்கின்ற வேசையர்களின். தடம்முலை சேரார் - பெரிய மார்பைத் தழுவிக்கொள்ள மாட்டார்கள். (க-து): நல்வழியிலே ஒழுகும் கருத்துள்ளவர்கள் வேசையர் களைத் தழுவிக்கொள்ளமாட்டார்கள். குறிப்பு: ‘தந்நெறிப் பெண்டிர்’ என்பது வேசையர்களைக் குறிக்கும் காரணப் பெயர். அவர்கள் தம்முடைய எண்ணம் எதுவோ அதன்படி நடந்து கொள்ளுவார்கள். 9. ஊறுசெய் நெஞ்சம்தம் உள்அடக்கி, ஒள்நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத்-தேறி, எமர்என்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும் தமர்அல்லர்; தம்உடம்பி னார். (379) (ப-ரை): ஒள் நுதலார் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய வேசையர்கள். யார்க்கும் தமர் அல்லர் - யாருக்கும் உறவினர் ஆகமாட்டார்கள். தம் உடம்பினார் -தம்முடைய உடம்புக்கு மட்டுந்தான் உரிமை உள்ளவர்கள். ஊறுசெய் நெஞ்சம் - தம்மை அண்டியவர்களுக்குத் துன்பம் செய்யும் எண்ணத்தை. தம்உள் அடக்கி - பிறர் அறியாமல் தம் மனத்தில் மறைத்துக் கொண்டு. தேற மொழிந்த - தம்மை விரும்புகின்றவர் நம்பும்படி பேசியே. மொழி கேட்டு - பசப்பு மொழியைக் கேட்டு. தேறி - அதை உண்மையென்று நம்பி. எமர் என்று கொள்வாரும் - இவர் எமக்கு உறவினர் ஆவார் என்று எண்ணிக்கொள்கிறவர்களும். கொள்பஏ - அவ்வாறு எண்ணிக்கொண்டு ஏமாறுவார்கள். (க-து): தம்முடைய உடல்நலத்தை மட்டும் விரும்பும் தந்நலமுள்ளவர்களே வேசையர்கள். 10. உள்ளம் ஒருவன் உழையதா, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி அறிந்த இடத்தும், அறியாராம்; பாவம் செறிந்த உடம்பி னவர். (380) (ப-ரை): ஒள் நுதலார் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய வேசையர்கள். உள்ளம் - தங்கள் எண்ணத்தை. ஒருவன் உழையதா - ஒருவனிடத்திலே வைத்துக்கொண்டு. கள்ளத்தால் - வஞ்சனையால். செய்யும் - அன்புள்ளவர்களைப்போல் நடிக்கும். கருத்து எல்லாம் - எண்ணத்தின் செயல் முழுவதையும். தெள்ளிதின் அறிந்த இடத்தும் - தெளிவாகத் தெரிந்து கொண்டபோதும். பாவம் செறிந்த - பாவம் நிறைந்த. உடம்பின் அவர் - உடம்பைப் பெற்றவர். அறியார்ஆம் - அவ்வேசையர் உறவு விலக்கத்தக்கது என்பதை அறியமாட்டார்களாம். (க-து): பாவம் செய்தவர்களே வேசையர்களின் தன்மை தெரிந்தும் அவர்களுடன் கூடி வாழ்வார்கள். இன்பவியல் 39. கற்புடை மகளிர் கற்புள்ள பெண்களின் இயல்பைப்பற்றிக் கூறுவது 1. அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெருநசையால் பின்நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. (381) (ப-ரை): அரும் பெறல் - பெறுவதற்கு அரிய சிறந்த. கற்பின் - கற்பினால். அயிராணி அன்ன - இந்திராணியைப் போன்ற. பெரும் பெயர் - புகழ் பெற்ற. பெண்டிர் எனினும் - பெண் களாயினும். பெறு நசையால் - காதலியாகப் பெறவேண்டும் என்னும் ஆசையால். விரும்பி - காமங்கொண்டு. பின்நிற்பார் - தன்பின்னே சுற்றுகின்றவர்கள். இன்மையே பேணும் - இல்லாத முறையிலே தன்னைக் காத்துக்கொள்கின்ற. நறுநுதலாள் - நல்ல நெற்றியையுடைய ஒருத்தியே. நன்மைத் துணை - சிறந்த தன்மை யுள்ள வாழ்க்கைத் துணையாவாள். (க-து): பிறர் தன்னைப் பார்த்து ஆசைப்படாத முறையில் அடக்கத்துடன் நடந்துகொள்ளுகின்றவளே சிறந்த மனைவி யாவாள். 2. குடநீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும், கடன்நீர்மை கையாறாக் கொள்ளும், மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (382) (ப-ரை): குடம்நீர் - குடத்துத் தண்ணீரையே.அட்டு உண்ணும் - காய்ச்சிக் குடிக்கின்ற. இடுக்கண் பொழுதும் - துன்பம் நிறைந்த வறுமைக் காலத்தும். கடல்நீர் அற உண்ணும் - கடல்நீர் வற்றும்படி உண்ணுகின்ற. கேளிர் வரினும் - அவ்வளவு மிகுந்த எண் உள்ள உறவினர்கள் வந்தாலும். கடன் நீர்மை - தனது கடமைத் தன்மையை. கையாறாக் கொள்ளும் - விடாது சிறந்த ஒழுக்கமாகக் கொள்ளுகின்ற. மடமொழி - இனிய மொழியையும். மாதர் -அழகிய தன்மையையும் உடைய பெண்ணே. மனைமாட்சியாள் - மனை வாழ்க்கைக்குரிய சிறந்த குணமுள்ளவள் ஆவாள். (க-து): எவ்வளவு கொடிய வறுமையிலும் தன் கடமையைத் தவறாமல் செய்கின்ற பெண்தான் சிறந்த மனைவியாவாள். 3. நால்ஆறும் ஆறாய் நனிசிறிதாய், எப்புறனும் மேல்ஆறு மேல்உறை சோரினும் - மேலாய வல்லாள்ஆய், வாழும்ஊர் தன்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். (383) (ப-ரை): நால்ஆறும் - நான்கு பக்கங்களிலும். ஆறு ஆய் -வழிகளை யுடையதாய். நனி சிறிதாய் - மிகவும் சிறியதாய். எப்புறனும் - எல்லா இடங்களிலும். மேல்ஆறு - கூரையில் மேல்புறத்திலிருந்து. மேல் - தன்மேல். உறைசோரினும் - மழைத் துளி வீழ்வதாயினும். மேல்ஆய் - சிறந்தனவாகிய கடமைகளை. வல்லாள் ஆய் - செய்யும் வல்லமையுடையவளாய். வாழும் ஊர் - தான் வாழும் ஊரில் உள்ளவர்கள். தன் புகழும் - தன் குணத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசும். மாண் கற்பின் - சிறந்த கற்பினையுடைய. இல்லாள் - மனைவி. அமர்ந்ததே இல் - இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும். (க-து): பிறர் புகழும்படி இல்லறத்திற்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து வாழ்பவளே சிறந்த மனைவியாவாள். 4. கட்குஇனியாள், காதலன்காதல் வகைபுனைவாள்; உட்குஉடையாள்; ஊர்நாண் இயல்பினாள்;- உட்கி இடன்அறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். (384) (ப-ரை): கட்குஇனியாள் - கண்ணால் காண்பதற்கு அழகுள்ளவள். காதலன் - தன் கணவன். காதல் வகை - விரும்பு கின்ற வகையிலே. புனைவாள் - தன்னை அலங்கரித்துக் கொள்ளு கின்றவள். உட்கு உடையாள் - தீய காரியங்களைச் செய்வதி லேயே அச்சம் உள்ளவள். ஊர்நாண் இயல்பினாள் -ஊரார் பழிப்புக்கு நாணம் அடையும் தன்மையுள்ளவள். உட்கி - கணவனுக்குப் பயந்து. இடன் அறிந்து ஊடி - ஊடக்கூடிய சமயம் அறிந்து ஊடல் கொண்டு. இனிதின் உணரும் - கணவன் மகிழும் வகையிலே ஊடல் நீங்கும். மடமொழி - இனிய மொழியையும். மாதராள் - அழகும் உடையவளே. பெண் - இல்லத்திற்குரிய சிறந்த பெண்ணாவாள். (க-து): கணவன் மனம் கோணாமல் நடக்கின்ற மனைவியே சிறந்தவள். 5. எஞ்ஞான்றும், எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்துஎழினும், அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதும்ஆல்;- எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்ஓ! பொருள்நசையால் பன்மார்பு சேர்ந்துஒழுகு வார். (385) (ப-ரை): எஞ்ஞான்றும் - எந்நாளும். எம்கணவர் - எமது காதலன். எம்தோள்மேல் - எமது தோளைத் தழுவிக் கொண்டு உறங்கி. எழினும் - விழித்து எழுந்தாலும். அஞ்ஞான்று - மணம் புரிந்துகொண்ட அந்நாளில். கண்டேம் போல் - கண்டு நாணம் அடைந்ததைப் போலவே. நாணுதும் - இன்றும் நாணம் அடை கின்றோம். எஞ்ஞான்றும் - எந்நாளும். பொருள் நசையால் - பண ஆசையால். பன்மார்பு - பலருடைய மார்பையும். சேர்ந்து ஒழுகுவார் - தழுவிக் கொண்டு வாழ்கின்றவர்கள். என்னை - எப்படித்தான். கெழீஇனர்கொல் - நாணமில்லாமல் உறவு கொள்ளுகின்றார்களோ! (க-து): பலரையும் தழுவிக்கொள்ளும் வேசையர்கள் நாணம் இல்லாதவர்கள். 6. உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல்அற்றுஆல் வள்ளன்மை பூண்டான்கண் ஒள்பொருள்;-தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்துரோ, நாண்உடையாள் பெற்ற நலம். (386) (ப-ரை): வள்ளன்மை - கொடுக்குந் தன்மையை. பூண்டான் கண் - மேற்கொண்டவனிடம். ஒள்பொருள் - கிடைத்த சிறந்த செல்வமானது. உள்ளத்து - மனத்திலே. உணர்வு உடையான் - நுண்ணறிவுடையவன். ஓதிய - படித்த. நூல் அற்று - நூல்களைப் போல் பலர்க்கும் பயன்படும். நாண் உடையாள் - நாணத்தை அணிகலமாகக் கொண்டவள். பெற்ற நலம் - அடைந்திருக்கும் அழகு. தெள்ளிய - தெளிந்த. ஆண்மகன் கையில் - ஆண் தன்மையுள்ளவனுடைய கையிலே அகப்பட்ட. அயில்வாள் அனைத்து - கூர்மையான வாட்படை போன்றதாகும். (க-து): நாணமுள்ள பெண்ணின் அழகே, வீரன் கை வாளாயுதம்போல் பயன்படும். குறிப்பு: செல்வத்திற்கு நூலும். அழகுக்கு வாளும் உவமைகள். 7. கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்குஎன்று, ஒருங்குஒப்பக் கொண்டானாம் ஊரன்;- ஒருங்குஒவ்வா நல்நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது, என்னையும் தோய வரும். (387) (ப-ரை): ஊரன் - ஊரிலே உள்ள ஒருவன். கரும் கொள்ளும் - கருமையான கொள்ளையும். செம்கொள்ளும் - சிறந்த சிவப்புக் கொள்ளையும். தூணி - நாலு மரக்கால். பதக்கு - இரண்டு மரக்கால். என்று - என்று பேசி. ஒருங்கு ஒப்ப - ஒரே சமமாக. கொண்டான் ஆம் - வாங்கிக்கொண்டானாம் (இதைப்போல). ஒருங்கு ஒவ்வா - எனக்குச் சமமாகாத. நல் நுதலார் - நல்ல நெற்றியையுடைய பிற பெண்களை. தோய்ந்த - தழுவிக்கொண்ட. வரைமார்பன் - மலை போன்ற மார்புடைய என் கணவன். நீர்ஆடாது - குளிக்காமல். என்னையும்தோய வரும் -என்னையும் தழுவிக்கொள்ள வருகின்றான். (க-து): குலமகளிரைக் காட்டிலும் வேசையர்கள் இழிந்தவர்கள். குறிப்பு: கருங்கொள் மட்டமானது; செங்கொள் உயர்ந்தது. வேசையர்க்குக் கருங்கொள்ளும், குலமகளிர்க்குச் செங்கொள்ளும் உவமைகள். 8. கொடியவை கூறாதி பாணநீ! கூறின், அடிபைய விட்டுஒதுங்கிச் சென்று,-துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற்கு,அதனால் வலக்கண் அனையார்க்கு உரை. (388) (ப-ரை): பாண நீ கொடியவை கூறாதி - பாணனே! நீ கொடிய சொற்களை என்னிடம் சொல்லாதே. கூறின் - அப்படிச் சொல்ல வேண்டுமானால். அடி பைய - அடியை மெதுவாக எடுத்து வைத்து. விட்டு ஒதுங்கிச் சென்று - என்னை விட்டு விலகிப்போய். துடியின் - உடுக்கின். இடக்கண்அனையம் யாம்- இடதுபக்கம் போன்றவர் நாங்கள். அதனால் - ஆகையால். வலக்கண் அனையார்க்கு - உடுக்கின் வலதுபக்கம் போன்ற அந்த வேசையர்களிடம். உரை - இச் செய்தியைக் கூறுக. (க-து): என்னைக்காட்டிலும் பரத்தையரே அவர் காதலுக் குப் பயன்படு கின்றவர். ஆதலால், அவர் கூறிய செய்தியை அவர்களிடம் போய்ச் சொல்லுக. குறிப்பு: துடியின் இடது பக்கம் குலமகளிர்க்கும், வலது பக்கம் பரத்தையர்க் கும் உவமை. 9. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத் தாக்கி, முலைபொருத தண்சாந்து அணிஅகலம் நோக்கி இருந்தேனும் யான். (389) (ப-ரை): சாய்ப் பறிக்க - கோரைகளைப் பறிக்கும்படி அவை மண்டி இருக்கின்ற. நீர் திகழும் - நீர்வளம் பொருந்திய. தண்வயல் ஊரன்மீது - குளிர்ந்த வயல்கள் நிறைந்த ஊரை யுடைய தலைவன்மேல். ஈ பறக்க - ஒரு ஈ பறப்பதைக் கண்டாலும். நொந்தேனும் -அதைக்கண்டு வருந்தியவளும். யானே - நானே தான். தீப்பறக்க - வேசையர்கள் நெருப்புப் பறக்கும்படி. தாக்கி - மோதி. முலை பொருத - தங்கள் மார்பால் முட்டிய. தண்சாந்து அணிஅகலம் - குளிர்ந்த சந்தனத்தை அணிந்த அவனுடைய மார்பை. நோக்கி இருந்தேனும் -இப்பொழுது சும்மா பார்த்துக் கொண்டிருப்பவளும். யான் - நானேதான். (மன்: அசை). (க-து): அவன் பரத்தையர் வசப்பட்டதனால், அவனிடம் நான் கொண்ட அன்பு முன்போல் இல்லை. 10. அரும்புஅவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண! - கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு; அதனால் இடைக்கண் அனையார்க்கு உரை. (390) (ப-ரை): பாண - பாணனே. அரும்பு அவிழ் - அரும்புகள் விரிந்து மலர்ந்த. தாரினான் - மாலையை அணிந்தவன். எம் அருளும் என்று - எம்மிடம் அன்பு காட்டுவான் என்று. பெரும் பொய் - பெரிய பொய்ம்மொழிகளை. உரையாதி - சொல்ல வேண்டாம். ஊரற்கு - அந்த மருதநிலத் தலைவனுக்கு. நாம் - நாங்கள். கரும்பின் கடைக்கண் அனையம் - கரும்பின் கடைசியில் உள்ள கணுவைப் போன்றவர்கள். அதனால் - ஆகையால். இடைக்கண் அனையார்க்கு - கரும்பின் நடுப்பாகத்தைப் போன்ற அப் பரத்தையர்க்கு. உரை - இச்செய்தியைச் சொல். (க-து): தலைவன் எம்மிடம் அன்பற்றவன்; ஆதலால் நீ கூறுவதை நாம் நம்பமாட்டோம். குறிப்பு: கரும்பின் கணு குலமகளிர்க்கும், இடைப்பகுதி பரத்தையர்க்கும் உவமைகள். 40. காமநுதல் இயல் இன்பத்தைப்பற்றிக் கூறும் பகுதி 1. முயங்காக்கால் பாயும் பசலை, மற்றுஊடி உயங்காக்கால் உப்புஇன்றாம் காமம்; - வயங்குஓதம் நில்லாத் திரைஅலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப! புல்லாப் புலப்பதுஓர் ஆறு. (391) (ப-ரை): வயங்கு ஓதம் - விளங்குகின்ற கடல். நில்லா - நிலைத்து நிற்காமல். திரை அலைக்கும் - அலைகளால் அசைக்கப் படுகின்ற. நீள்கழி - நீண்ட நீர்நிலைகளை உடைய. தண்சேர்ப்ப - குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவனே. முயங்காக்கால் - காதலனைத் தழுவிக் கொள்ளாவிட்டால். பசலை பாயும் - பசலை நிறம் உடம்பிலே பரவுகின்றது. ஊடி - காதலனுடன் ஊடி. உயங்காக்கால் - வருந்தாவிட்டால். காமம் உப்புஇன்றாம் - காமம் சுவையற்றதாகிவிடும்; ஆதலால். புல்லா - காதலனைத் தழுவிக்கொண்டு. புலப்பது - பின்பு ஊடுவதுதான். ஓர் ஆறு - இன்பம் அடைவதற்கான ஒரு வழியாகும். (க-து): ஊடுதலும். பின்னர் ஊடல் நீங்கிக் கூடுதலுமே கணவன், மனைவிகளுக்கு இன்பமாகும். 2. தம்அமர் காதலர் தார்சூழ் அணிஅகலம் விம்ம முயங்கும் துணையில்லார்க்கு,-இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசைஎல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. (392) (ப-ரை): தம்அமர் காதலன் - தம்மை விரும்பும் காதலரின். தார்சூழ் - மாலை அணிந்த. அணி அகலம் -அழகிய மார்பை. விம்ம முயங்கும் - மகிழ்ச்சி பெருகத் தழுவிக்கொள்ளும். துணை இல்லார்க்கு - துணைவரைப் பிரிந்திருக்கும் மகளிர்க்கு. இம்மென - இம்மென்ற ஓசையுடன். பெய்ய - மழை பெய்வதற் காக. எழிலி முழங்கும் - மேகங்கள் இடி முழக்கம் செய்கின்ற. திசையெல்லாம் - திக்குகளில் எல்லாம் கேட்கின்ற அம்முழக்கம். நெய்தல் - சாப்பறை. அறைந்து -அடிப்பதைப்போன்ற. நீர்த்து - தன்மையுள்ளதாகும். (க-து): கணவரைப் பிரிந்து வாழும் மகளிர்க்கு, மாரிக் காலத்து இடிமுழக்கம் சாவுப்பறை போல் கேட்கின்றது. 3. கம்மம்செய் மாக்கள் கருவி ஒடுங்கிய மம்மர்கொள் மாலை மலர்ஆய்ந்து பூத்தொடுப்பாள், கைம்மாலை யிட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு இம்மாலை என்செய்வது என்று. (393) (ப-ரை): கம்மம் செய் மாக்கள் - வேலை செய்யும் மக்களின். கருவி ஒடுங்கிய - வேலை செய்யும் கருவிகளின் ஓசைஅடங்கிய. மம்மர்கொள் - மயக்கத்தைக்கொண்ட. மாலை - மாலைக் காலத்திலே. மலர் ஆய்ந்து - மலர்களை ஆராய்ந்து பறித்து. பூ தொடுப்பாள் - அம் மலர்களை மாலையாகத் தொடுக்கின்ற தலைவி. துணைஇல்லார்க்கு - கணவனைப் பிரிந்திருப்பவர்க்கு. இம்மாலை - இந்த மலர் மாலை. என்செய்வது - என்ன பயனைத் தரும்? (ஒன்றும் இல்லை). என்று - என்று நினைத்து. கை மாலை இட்டு - கையிலிருந்த மலர்மாலையை நழுவவிட்டு. கலுழ்ந்தாள் - கண்ணீர் விட்டாள். (க-து): மாலைக்காலத்தில் கணவன் வராததைக் கண்டு மனைவி வருந்தினாள். 4. செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெரியா விம்மித்தன் - மெல்விரலின் நாள்வைத்து, நம்குற்றம் எண்ணும்கொல், அந்தோ! தன் தோள்வைத்து அணைமேல் கிடந்து. (394) (ப-ரை): அந்தோ - ஐயோ. தன்தோள் - தனது தோளை. அணை மேல் - தலையணையின் மேல். வைத்துக் கிடந்து - வைத்துக்கொண்டு சோர்ந்து கிடந்து. செல்சுடர் நோக்கி -மேற்கே மறைந்துபோகின்ற கதிரவனைப் பார்த்து. சிதர் அரிக் கண் - பரந்த இரேகைகள் படர்ந்த கண்களிலே. கொண்டநீர் - நிரப்பிக் கொண்டிருக்கும் நீரை. மெல்விரல் - மெல்லிய விரலால். ஊழ் தெரியா - அடிக்கடி துடைத்துக் கொண்டு. விம்மி - அழுது. தன் மெல்விரலின் - தனது மெல்லிய விரல்களால். நாள் வைத்து - நாம் பிரிந்த நாளை எண்ணிக் கணக்குவைத்து. நம் குற்றம் எண்ணும் கொல் - நமது குற்றத்தை நினைத்து வருந்துவாளோ? (க-து): எனது பிரிவை எண்ணி, மாலைக்காலத்திலே என் காதலி அழுது வருந்துவாள். 5. கண்கயல் என்னும் கருத்தினால், காதலி பின்சென்றது அம்ம சிறிசிரல்; - பின் சென்றும் ஊக்கி எழுந்தும் எறிகல்லா; ஒண்புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து. (395) (ப-ரை): சிறு சிரல் - சிறிய மீன்கொத்திப் பறவையானது. கண்கயல் என்னும் கருத்தினால் - கண்களைக் கயல் மீன்கள் என்ற நினைப்பி னால். காதலி பின்சென்றது - என் காதலியின் பின்னே பறந்து போயிற்று. பின்சென்றும் - இவ்வாறு பின்னே பறந்து திரிந்தும். ஊக்கி எழுந்தும் - அவற்றைக் கொத்துவதற்காக ஊக்கத்துடன் மேலே பறந்தும். ஒண் புருவம் - அக்கண்களின் அருகில் உள்ள ஒளியுள்ள புருவங்கள். கோட்டிய - வளைந்திருப்பதைப் பார்த்து. வில்வாக்கு அறிந்து - அவற்றை வில்லின் வளைவு என்று எண்ணி. எறிகல்லா - கண்களாகிய கயல்மீன்களைக் கொத்தாமல் விட்டது. (க-து): என்காதலியின் கண்கள் கயல் மீன்கள்; புருவம் வில். 6. அரக்குஆம்பல் நாறும்வாய், அம்மருங்கிற்கு அன்னோ! பரல்கானம் ஆற்றின கொல்லோ;- அரக்கார்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும், ‘பைஎனப் பைஎன’ என்று அஞ்சிப்பின் வாங்கும் அடி. (396) (ப-ரை): அரக்கு ஆம்பல் - செவ்வல்லி மலர்போல. நாறும் வாய்- மணம் வீசும் வாயையும். அம் மருங்கிற்கு - அழகிய இடையையும் உடைய அவளுக்கு. அரக்கு ஆர்ந்த - செம்மை நிறைந்த. பஞ்சுகொண்டு - பஞ்சுக்குழம்பை எடுத்துக்கொண்டு. ஊட்டினும்- பூசினாலும். பை என பை என என்று- மெதுவாக, மெதுவாக என்று சொல்லிக்கொண்டு. அஞ்சிப் பின்வாங்கும் - பயந்து பின்னே இழுத்துக் கொள்கின்ற. அடி - பாதங்கள். அன்னோ - ஐயோ. பரல்கானம் - பருக்கைக்கற்கள் நிறைந்த பாலைவனத்தின் கொடுமையை. ஆற்றினகொல்ஓ - எவ்வாறு தாங்கிக் கொண்டனவோ! (க-து): மெல்லிய தன்மையுள்ள என் மகள் கொடுந்தன்மை யுள்ள பாலைவனத்தை எப்படித்தான் கடந்து சென்றாளோ! 7. ஓலைக் கணக்கர் ஒலிஅடங்கு புன்செக்கர் மாலைப் பொழுதில், மணந்தார் பிரிவுஉள்ளி மாலை பரிந்திட்டு அழுதாள், வனமுலைமேல் கோலம்செய் சாந்தம் திமிர்ந்து. (397) (ப-ரை): ஓலைக் கணக்கர் - ஓலையிலே எழுதும் கணக்கர் களின். ஒலி அடங்கு - எழுதும் ஓசை அடங்கிய. புன்செக்கர் - புல்லிய அந்தி வானம் வாய்ந்த. மாலைப்பொழுதில் - மாலை நேரத்திலே. மணந்தார் - தன்னை மணந்த கணவர். பிரிவு உள்ளி - பொருள்தேடப் பிரிந்துபோவதை நினைத்து. வனமுலைமேல் -அழகிய மார்பின்மேல். கோலம் செய் - எழுதப்பட்டிருந்த. சாந்தம்- சந்தனக்குழம்பை. திமிர்ந்து - உதிர்த்து. மாலை பரிந்து - முத்து மாலை, மலர் மாலை முதலியவற்றைக் கழற்றி எறிந்து. அழுதாள் - வாய்விட்டு அழுதாள். (க-து): மாலைக் காலத்திலே என் தலைவி, தனது கணவன் பிரிவை நினைத்து வாய்விட்டு அழுதாள். குறிப்பு: ஓலையில் எழுதும்போது கிறிச்சு கிறிச்சு என்று ஓசை கேட்கும். 8. கடக்கரும் கானத்துக் காளைபின், நாளை நடக்கவும் வல்லையோ, என்றி- சுடர்த்தொடீஇ! பெற்றான் ஒருவன் பெரும்குதிரை; அந்நிலையே கற்றான் அஃதுஊரும் ஆறு. (398) (ப-ரை): சுடர்த்தொடீஇ - ஒளிபொருந்திய வளையல் களை அணிந்தவளே. கடக்க அரும் - தாண்டிச் செல்லுவதற்கு முடியாத. கானத்து - பாலைவன வழியிலே. காளைபின் - காளை போன்ற உன் காதலன் பின்னே. நாளை நடக்கவும் வல்லையோ - நாளை நடந்து செல்லும் வலிமையுடையவளோ. என்றி- என்று கேட்கிறாய். ஒருவன் பெரும் குதிரை பெற்றான் - ஒருவன் ஒரு பெரிய குதிரையைப் பெற்றானாயின். அந்நிலையே- அப்பொழுதே அஃது ஊரும் ஆறு - அதில் ஏறிச்செல்லும் வழியையும். கற்றான் - கற்றுக் கொண்டவனாவான் அவன். (க-து): ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்தபோது, எப்படியும் அதைச் செய்துதான் ஆக வேண்டும். 9. முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன்:-கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என் பூம்பாவை செய்த குறி. (399) (ப-ரை): முலைக் கண்ணும் - முலைக் காம்புகளும். முத்தும் - முத்துமாலையும் அழுந்தும்படி. முழு மெய்யும் - என்உடம்பு முழுவதையும். புல்லும் இலக்கணம் - தழுவிக் கொள்ளுவதன் இலக்கணத்தை (காரணத்தை). யாதும் அறியேன் - ஒன்றும் அறியேன். என் பூம்பாவை - எனது மலரில் உள்ள இலக்குமி போன்ற மகள். செய்த குறி - இப்படிச் செய்ததன் குறிப்பு. கலைக்கணம் - மான் கூட்டங்கள். வேங்கை வெரூஉம் - புலி களைக் கண்டு அஞ்சுகின்ற. நெறி - வழியிலே. செலிய போலும் - என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத்தான் இவ்வாறு செய்தாளோ? (க-து): என் மகள் நேற்று என்னைத் தழுவிக்கொண்டதற்குக் காரணம் என்னைவிட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற் குத்தான் போலும்? குறிப்பு: இது, மகளைப் பிரிந்த தாய் கூறியது. 10. கண்மூன்று உடையானும் காக்கையும் பைஅரவும் என்ஈன்ற யாயும் பிழைத்ததுஎன்?-பொன்ஈன்ற கோங்குஅரும்பு அன்ன முலையாய்! பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி. (400) (ப-ரை): பொன் ஈன்ற - பொன் போன்ற தேமல் படர்ந்த. கோங்கு அரும்பு அன்ன - கோங்கின் அரும்பு போன்ற. முலை யாய் - முலைகளையுடைய பெண்ணே. கண் மூன்று உடை யானும் - மூன்று கண்களையுடைய சிவபிரானும். காக்கையும் - கரைகின்ற காக்கையும். பை அரவும் - படத்தையுடைய பாம்பும். என் ஈன்ற யாயும் -என்னைப் பெற்றெடுத்த தாயும். பிழைத்தது என் - எனக்கு இழைத்த குற்றம் என்ன? (ஒன்றும் இல்லை). பாங்கனார் - எனது தலைவர். பொருள் வயின் - பொருளீட்டும் பொருட்டு. சென்ற நெறி - பிரிந்து சென்ற வழிதான் எனக்குத் தவறு செய்ததாகும். (க-து): எனக்குத் துன்பத்தைத் தருவது என் காதலன் பிரிவு ஒன்றுதான். குறிப்பு: இது கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் காதலியின் கூற்று. ‘சிவபெருமான், எரிந்த மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்தான். பாம்பு, விழுங்கிய சந்திரனை மீண்டும் உமிழ்ந்தது. தாய் என்னை வளர்த்து விட்டாள். இவர்களால் நான் துன்புறுகின்றேன். ஆயினும், இவர்களைவிட காதலன் பிரிந்து சென்ற வழியே என்னை மிகவும் துன்புறுத்துகின்றது’ என்று கூறினாள் காதலி. பாட்டு முதற்குறிப்பு (எண் : பக்க எண்) அகத்தாரே அக்கேபோல் அச்சம் அடுக்கல்மலை அடைந்தார்ப் அத்திட்ட அங்கண் விசுப்பின் அம்கண் அமரர் அம்கோட்டு அம்பல் அயலெடு அம்பும் அழலும் அரக்கு ஆம்பல் அருகல் அது அரும்பு அவிழ் அரும்பெறல் யா அரும்பெற-கற் அருளின் அறம் அலகுhசல் அவமதிப்பும் அவ்வியம் இல் அழல்மண்டு அள்ளிக்கொள் அறம்புகழ் அறிமின் அற அறியாப்பரு அறியாரும் அறிவது அறிந்து அறுசுவை ஆகாஅது எனி ஆடுகோடாகி ஆட்பார்த்து ஆணம் இல் ஆமாபோல் ஆர்த்த பொறிய ஆர்த்த அறிவி ஆவாம் நாம் ஆவேறு உரு ஆற்றுந்துணை ஆன்படுநெய் இசைந்த இசையாது எனி இசையா ஒரு இசையும் எனி இடம்பட இடும்பைவர் இட்டாற்று இமைக்கும் இம்மி அரிசி இம்மை அரிசி இம்மை பயக் இம்மையும் இரவலர்கன் இருக்கை எழ இரும்பார்க்கும் இலங்குநீர் இல்லம் இன்மை இல்சார்வின் இல்லாமை இல்பிறப்பு எண் இல்லா இடத் இழிதக்க இழைத்தநாள் இளையான் அடக் இறப்பச்சிறி இறப்ப நினை இறப்பவே இற்பிறப்பில் இனநன்மை இனியார்தம் இன்பம் இன்று ஆதும் இன்றுகொல் இன்னர் இனையர் இன்னா செயினும் இன்னா விடற் இன்னா விடு இன்னா இயைக ஈட்டலும் ஈண்டு நீர் ஈதல் இசையா ஈனமாய் இல் உடாஅதும் உடுக்கை உடைப்பெரும் உடையார் இவர் உணர உணரும் உண்டாய உண்ணான் ஒளிநிறான் உபகாரம் உயிர்போயார் உருவிற்கு அமை உருவும் இளமை உலகறியத் உளநாள் சில உள்கூர் பசி உள்ளத்தால் உள்ளத்து உணர் உள்ளம் ஒரு உறக்கும் உறற்பால உறுபுலி உறுபுனல் உறைப்பு அரும் ஊக்கித்தாம் ஊர் அங்கணநீர் ஊருள் எழுந்த ஊறி உவர்த்தக் ஊறுசெய் எஞ்ஞான்று எத்துணையா எந்நிலத்து எம்மை அறிந் எய்தியிரு எறிநீர்ப் எறிஎன்று எற்றொன்றும் எனக்குத்தா தெளிவு இலார் தோணி இயக் தோற்போர்வை தோற்றம்சால் நச்சியார்க்கு நடுக்குற்றுத் நடுவூருள் நட்டார்க்கும் நட்பு நார் தம்மாலே நயவார்கண் நரம்பு எழுந்து நரை வரும்என் நல்ல குலம்என் நல்லர் பெரி நல்லவை பெரி நல்லவை செய் நல்லவை நாள் நல்லார் எனத் நல்லார் நயவர் நல்லாவின் நளிகடல் தண்நல் நளிகடல் தண்நாள் நறுமலர்த் நன்னிலைக்கண் நாப்பாடம் நாய்க்கால் நார்த்தொடுத்து நால் ஆறம் நாள்வாய்ப் நாறாத்தகடே நிலநலத்தால் நிலையாமை நின்றனநின் நீரினும்நுண் நிருள் பிறந்து நீர்மையே நுண் உணர்வினா நுண்ணுணர்வு நெடுங்காலம் நெருப்பு அழல் நேரல்லார் நேர்த்து பகைவர் பணி படுமழை பண்டம் அறியார் பரவாவெளிப் பரா அரை பருவம் எனைத் பலநாளும் பல்லார் அறியப் பல்ஆவுள் பல் ஆன்றபா பல்லான்றவீகே பழமை கந்தாகப் பழையர் இவர் பனிபடு பன்றிக்கூழ் பாடமே பாம்பிற்குஒரு பாலால் கழீஇ பாலோடு அளாய பாவமும் பிறந்தகுல பிறர்மறை புக்க இடத் புணர்கடல் புதுப்புன புத்தகமே புல்லாப்புன் எல்லா எழுத் புறத்துத்தன் புல்நுனி பெயற்பால் பெரியவர் பெரியார் பெருநட் பெரியார் பெருமை பெருகுவது பெரும்கடல் பெருநடை பெருமுத்தரை பெருவரைநாட பெறுவது பெறுவது ஒன் பொத்தநுல் பொழிந்து இனிது பொழிப்பு அகலம் பொறுப்பர் என் பொற்காலத்துப் பொன்கலத்தூ பொன்னிறச் பொன்னே மக்களால் ஆய மடுதிரை மதித்திறப் பரிஇப்பல மலைநலம்உள் மலைமிசைத் மல்குதிரைய மல்லன்மா மழைதிளைக்கு மறுமைக்குவி மறுமையும் மற்றறிவாம் மனத்தால் மனைப்பாசம் மன்றம் கறங்க மன்னர் திருவும் மாக்nழ்மட மாண்டகுண மாற்றாராய் மானம் அருங்கலம் முட்டிகை முட்டுற்ற முயங்காக்கால் முலைக்கண்ணு முல்லைமுகை முற்றல்சிறு முன்துத்தும் முன்னரே மூப்புமேல் மெய்ஞ்ஞானக் மெய்வாய்கண் மெல்லிய நல் மைதீர்பசும் யாஅர் உலகத்து யாஅர் ஒருவர் யாம்ஆயின்எம் யாக்கையை யானை அனையவர் யானை எருத் வடுவிலா வயாவும் வலவைகள் வழங்காத வழுக்குஎனைத் வளம்பட வற்றிமற்று வாழ்நாட்கு வான்இடுவில் விரிநிற விருப்பிலார் விழைந்துஒரு விளக்குஒளி விளக்குப்புக வினைப்பயன் வெறிஅயர் வெறுமையிட வென்றிப் வேம்பின் இலை வேற்றுமை வைகலும் வைப்புழிக் நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) (1960) முன்னுரை நான்மணிக்கடிகை: நான்கு இரத்தினங்கள் பதித்த ஒரு ஆபரணம். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாணிக்கம் போன்றவை. ஆதலால் இந்நூலுக்கு நான்மணிக்கடிகை என்று பெயர் வைத்தனர். இன்றுள்ள நான்மணிக்கடிகையிலே கடவுள் வாழ்த்தும் சேர்ந்து 106 வெண்பாக்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் இந்நூல் 100 வெண்பாக்கள் கொண்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். 6 வெண்பாக்கள் பிற் காலத்தில் புகுந்தனவாக இருக்க வேண்டும். பதினெண்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களில் இதுவும் ஒன்று. பதினெண்கீழ்கணக்கு நூல்கள்; நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை அறுபது (கைந்நிலை). ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறு பஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. நான்மணிக்கடிகை ஆசிரியர் விளம்பி நாகனார் என்பவர். இவருடைய இயற்பெயர் நாகநார் என்பது. இவர் விளம்பி என்னும் ஊரிலே வாழ்ந்த வராக அல்லது பிறந்தவராக இருக்கலாம். இவரைப் பற்றிய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்நூலைச் சங்ககாலத்து நூல் என்று கருதுவோர் உண்டு. சங்கநூல் களிலே புலால் உணவு, மது பானம். இவைகள் கண்டிக்கப்படவில்லை. பதினெண் கீழ்கணக்கைச் சேர்ந்த நீதி நூல்களில் புலால் உணவும், மதுபானமும் கண்டிக்கப்படுகின்றது. கொல்லா விரதம் வலியுறுத்தப் படுகின்றது. ஆதலால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியிருக்க வேண்டும் என்பதே அறிஞர்கள் பலர் கருத்தாகும். இந்நூலின் கடவுள் வாழ்த்தாக இரண்டு வெண்பாக்கள் காணப்படு கின்றன. அவைகள் திருமாலைப் போற்றுவன. நூலின் உள்ளே கூறப்படும் அறங்கள் பெரும்பாலும் சமணர்கள் போற்றும் அறங்களாகவே காணப்படுகின்றன. ஆதலால் இந்நூலாசிரியர் சமணராக இருத்தல் கூடும். கடவுள் வாழ்த்து வெண்பாக்கள் பிற்காலத்தினரால் பாடிச் சேர்க்கப்பட்ட தென்றுதான் கொள்ளவேண்டும். பொதுவான ஒழுக்கங்களை எடுத்துரைக்கும் இந்நூல் அனைவராலும் போற்றக் கூடியது என்பதில் ஐயம் இல்லை. இந்நூலுக்குப் பழைய உரையும் உண்டு; புதிய உரைகளும் உண்டு. ஆயினும் எளிதிலே புரியும் வகையில் ஒரு உரை இருந்தால் நலமல்லவா? இக்கருத்துடனேயே இவ்வுரை எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாகும். இலக்கிய நிலையம் சென்னை 5-5-60 நான்மணிக்கடிகை பாட்டும்- உரையும் கடவுள் வாழ்த்து மதிமன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்; முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும்: பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம். 1 பொருள்:- மதி- சந்திரன். மன்னும் மாயவன்- அழியாத திருமாலின். வாள்முகம் ஒக்கும்- பிரகாசம் உள்ள முகத்தைப் போல இருக்கும். கதிர் சேர்ந்த ஞாயிறு- ஒளி பொருந்திய சூரியன். சக்கரம் ஒக்கும்- அத்திருமாலின் சக்கராயுதத்தை ஒத்திருக்கும். முதுநீர்- பழமையான நீர் நிறைந்த. பழனத்து- வயல்களில் முளைத்த. தாமரைத்தாளின்- தாமரைத் தண்டிலிருந்து. எதிர் மலர்- தோன்றிய செந்தாமரை மலர். மற்றவன்- அத்திருமாலின். கண்ஒக்கும்- கண்களை ஒத்திருக்கும். பூவைப் புதுமலர்- காயாவின் புதிய பூ. நிறம் ஒக்கும்- அத்திருமாலின் நிறத்தை ஒத்திருக்கும். விளக்கம்:- சந்திரனைப் போன்றது முகம்; சூரியன் போன்றது சக்கரம்; செந்தாமரை போன்றது கண்; காயாம்பூப் போன்றது நிறம் என்று கூற வேண்டிய உவமைகள் மாற்றிக் கூறப்பட்டன. இது ‘மாறிய உவமை’ என்னும் அணியாகும். முதுமை- பழமை. பழனம்- வயல். தாள்- தண்டு. எதிர்தல்- தோன்றுதல். பூவைப்புதுமலர்- காயாம்பூ. ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு இரத்தினம் போன்ற நீதிகள் அமைந்திருக்கின்றன. ஆதலால், நான்மணிக்கடிகை என்று பெயர் பெற்றது. இக்கடவுள் வாழ்த்திலும் நான்கு உவமைகள் அமைந்திருப்பதைக் காணலாம். படியை மடி அகத்து இட்டான்; அடியினால் முக்கால் கடந்தான் முழுநிலம்:- அக்காலத்து ஆப்பனித்தாங்கிய குன்றெடுத்தான்; சோவின் அருமை அழித்த மகன். 2 பொருள்:- படியை- உலகத்தை. மடியகத்து இட்டான்- தன் வயிற்றுள் வைத்தான் அடியினால்- தனது பாதத்தால். முழுநிலம் - உலகம் முழுவதையும். முக்கால் கடந்தான்- மூன்று முறைகளில் அளந்தான். அக்காலத்து- முன்னாளில். ஆப்பனித்தாங்கிய- பசு மந்தைகளின் நடுக்கத்தைக் காக்கும் பொருட்டு. குன்று எடுத்தான் - கோவர்த்தனமலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தான். சோவின்- இவற்றை செய்தவன் பாணாசுரனது நெருப்பு மதிலின். அருமை- சிறப்பை. அழித்தமகன்- அழித்த பெருமையுள்ள திருமால். விளக்கம்:- படியை மடியகத்து இட்டான் என்பது, யசோதைக்குக் கண்ணன் உலகம் தன் வயிற்றில் இருப்பதாகக் காட்டியதைக் குறித்தது. உலகத்தை மூன்று மூன்று முறையால் அளந்தான் என்பது, திருமால் வாமனாவதாரத்தில் நிலத்தை ஓர் அடியாகவும், வானத்தை ஓர் அடியாகவும், மாபலியின் தலையை ஓரடியாகவும் அளந்ததைக் குறித்தது. பசுமந்தையின் நடுக்கத்தைத் தாங்கக் குன்றெடுத்தான் என்பது, கோவலர்கள் இந்திரனுக்குப் பூசை போடாமல் கோவர்த்தன மலைக்குப் பொங்கலிட்டுப் படைத்தனர். அப்போது இந்திரன் கோபித்துக் கடுமழை பெய்யச் செய்தான். அதனால் நடுங்கிய பசு மந்தையைக் கண்ணன், அந்த மலையையே தூக்கிக் குடையாகப் பிடித்துக் காத்தான் என்ற கதையைக் குறித்தது. ‘சோவின் அருமை அழித்த மகன்’ என்பது, கண்ணன் பாணாசுரனுடன் போர் செய்து அவனுடைய நெருப்பு மதிலை அழித்ததைக் குறித்தது. படி- உலகம். மடி- வயிறு. முக்கால்- மூன்று விதத்தால். ஆ- பசு மந்தை. பனி- குளிர் நடுக்கம். சோ- மதில். இப்பாடலிலும் நான்கு பொருள்கள் அமைந்துள்ளன. இவ்விரண்டு பாடல்களும் திருமாலைக் குறித்தவை. இவைகள் கடவுள் வாழ்த்துக்களாக அமைந்திருப்பவை. நூல் எள்ளற்க என்றும் எளியார் என்று; என்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கை மேலவா;- உள்சுடினும் சீறற்க சிற்றில் பிறந்தாரைக்; கூறற்க கூறல் லவற்றை விரைந்து. 1 பொருள்:- என்றும்- எக்காலத்திலும். எளியார்என்று- பிறரைச் செல்வத்திலும் வலிமையிலும் குறைந்தவர் என்று கருதி. எள்ளற்க- இகழக்கூடாது. என்பெறினும்- என்னதான் சிறந்த ஒன்றைப் பெற்றாலும். கொள்ளார்கை- வாங்கிக் கொள்ளத் தகாதவர்களின் கை. மேலஆ- மேலே இருக்கும்படி கீழே கை நீட்டி. கொள்ளற்க- ஒன்றையும் வாங்கிக் கொள்ளக்கூடாது. உள்சுடினும்- தன் மனத்தைத் துன்புறுத்துவதாயினும். சிறு இல்பிறந்தாரை- ஏழைக்குடியில் பிறந்தவரை. சீறற்க- கோபிக்கக் கூடாது. கூறுஅல்லவற்றை- சொல்லத்தகாத சொற்களை. விரைந்து- அவசரப்பட்டு. கூறற்க- சொல்லக்கூடாது. கருத்து:- எளியாரை இகழாதே; அற்பரிடம் ஒன்றும் வாங்காதே; ஏழையிடம் கோபம் கொள்ளாதே; சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லாதே. விளக்கம்:- எளியார்- வலிமையற்றவர். என்- எந்தச் சிறந்த பொருளை. உள்- மனம். சிற்றில்- சிறுஇல்; ஏழைக் குடி. பறைபட வாழா அசுணமா; உள்ளம் குறைபட வாழார் உரவோர்;- நிறைவனத்து நெல்பட்ட கண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச் சொல்பட வாழாதாம் சால்பு. 2 பொருள்:- அசுணமா- கேகயம் என்னும் பறவைகள். பறைபட- பறைச்சத்தத்தைக் கேட்டால். வாழா- உயிர் வாழ மாட்டா. உரவோர்- அறிவுடையோர். உள்ளம்- தமது மனத்திலே. குறைபட - தமது பெருமைக்குக் குறைவு வந்துவிட்டது என்று தோன்றினால். வாழார்- உயிர் வாழ மாட்டார். நிறைவனத்து- மரங்கள் நிறைந்த காட்டில் உள்ள. வெதிர்- மூங்கில். நெல்பட்ட கண்ணே- தாம் பூத்து நெல்லை யீன்ற பொழுது. சாம்- பட்டுப் போகும். சால்பு- நிறைந்த பண்புள்ளவர். தனக்கு ஒவ்வா- தன் பண்புக்குப் பொருந்தாத. சொல்பட- பழிச்சொல் தனக்கு ஏற்பட்டால். வாழாதுஆம்- உயிர் வாழ மாட்டார்களாம். கருத்து:- பெரியோர்கள் மானமிழந்து உயிர் வாழ மாட்டார்கள். விளக்கம்:- அசுணமா பறையோசை கேட்டால் உயிர்விடும் மென்மைத் தன்மையுள்ள ஒரு பறவை. கேகயம் என்று இதற்கு மற்றொரு பெயர். உரவு- வலிமை; இங்கு அறிவைக் குறித்தது. வெதிர்- மூங்கில். பூத்த மூங்கில் பட்டுப் போவது இயல்பு. சால்பு- நிறைவு. மண்ணி அறிப மணிநலம்; பண் அமைந்து ஏறியபின் அறிப மாநலம்; மாசறச் சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார்; கெட்டறிப கேளிரால் ஆய பயன். 3 பொருள்:- மணி நலம்- மாணிக்கத்தின் நல்ல தன்மையை. மண்ணி அறிப- கழுவிக் காண்பார்கள். மாநலம்- குதிரையின் நல்ல தன்மையை. பண் அமைத்து- அதன்மேல் சேணத்தை வைத்து. ஏறியபின் அறிப- ஏறிய பிறகுதான் அறிவார்கள். பொன்னின் நலம் காண்பார்- பொன்னின் மாற்றை அறிய விரும்புவோர். மாசுஅற- அதில் உள்ள குற்றம் கெடும்படி. சுட்டு அறிப- உருக்கிய பின் காண்பார்கள். கேளிரால்- சுற்றத்தாரால். ஆயபயன் - உண்டாகும் பயனை. கெட்டு அறிப- செல்வம் அழிந்து வறுமை அடைந்தபோதுதான் அறிவார்கள். கருத்து:- வறுமையடைந்தவர்கள்தான் உறவினரால் ஆகும் பயனை அறிவார்கள். விளக்கம்:- மணி, குதிரை, பொன் மூன்றும் உவமைகள். மற்றுதல்- கழுவுதல். பண்- குதிரைச்சேணம். மா- குதிரை. மாசு - சுற்றம், அழுக்கு. சுடுதல்- உருக்குதல். அறிப- அறிவார்கள். பலர் பால் பன்மைச்சொல். கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்; மான் வயிற்றில் ஒள்அரி தாரம் பிறக்கும்;- பெரும்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார்யார்? நல்ஆள் பிறக்கும் குடி. 4 பொருள்:- கள்ளி வயிற்றில்- கள்ளி மரத்தின் நடுவில். அகில் பிறக்கும்- வாசனைத் திரவியமான அகில் கட்டை உண்டாகும். மான் வயிற்றில் -மான் வயிற்றிலே. ஒள்- ஒளி பொருந்திய. அரிதாரம் பிறக்கும்- அரிதாரம் என்னும் பொருள் உண்டாகும். பெரும்கடலுள்- உப்புச் சுவையுள்ள பெரிய கடலிலே. பல்விலைய- மிகுந்த விலையை உடைய. முத்தம் பிறக்கும்- முத்துக்கள் உண்டாகும். நல்ஆள்- நல்ல மனிதன். பிறக்கும் குடி- பிறக்கும் குடி இதுதான் என்று. அறிவார் யார்- முன்பே தெரிந்து கொள்ளக்கூடியவர் யார்? (ஒருவரும் இல்லை). கருத்து:- உயர்ந்த பொருள்கள் பலவிடங்களில் தோன்று கின்றன. அதுபோல், நல்லவர்கள் பல குடிகளிலும் பிறப்பார்கள். ஆதலால் பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை. விளக்கம்:- வயிறு- நடு; வயிறு. ஒள்- ஒளி. நல்ஆள்- நல்ல மனிதர்; அறிவும் ஒழுக்கமும் உடையோர். கல்லில் பிறக்கும் கதிர்மணி; காதலி சொல்லில் பிறக்கும் உயர்மதம்; - மெல்என் அருளில் பிறக்கும் அறநெறி; எல்லாம் பொருளில் பிறந்து விடும். 5 பொருள்:- கதிர்மணி- ஒளியுள்ள இரத்தினங்கள். கல்லில்- மலையிலே. பிறக்கும்- தோன்றும். உயர்மதம்- மிகுந்த களிப்பு. காதலி- அன்புள்ள மனைவியின். சொல்லில் பிறக்கும்- இனிய சொல்லால் உண்டாகும். அறநெறி- அறநெறியில் ஒழுகுந் தன்மை. மெல்என்- மென்மையான. அருளில் பிறக்கும் - இரக்கத் தன்மையிலிருந்துதான் உண்டாகும். எல்லாம்- அறம், இன்பம் முதலிய எல்லாம். பொருளில் பிறந்துவிடும்- செல்வத்தால் உண்டாகிவிடும். மலையில் இரத்தினமும், காதலியின் இன்சொல்லால் களிப்பும், அருளால் அற நெறியும், பொருளால் அறம், இன்பம் முதலிய அனைத்தும் உண்டாகும். விளக்கம்:- கல்- மலை. கதிர்- ஒளி. மதம்- களிப்பு, உற்சாகம். அருள்- இரக்கம். திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம்; பெரிய அறன்ஒக்கும் ஆற்றின் ஒழுகல்- பிறனைக் கொலைஒக்கும் கொண்டு கண்மாறல்; புலைஒக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. 6 பொருள்:- தீது இல்- குற்றமற்ற. ஒழுக்கம்- நல்லொழுக்கம். திருஒக்கும்- செல்வத்தைப் போன்றதாகும். ஆற்றின் ஒழுகல்- இல்லறத்திற்குரிய வழியிலே நடத்தல். பெரிய- சிறந்த. அறன் ஒக்கும்- துறவறத்தைப் போன்றதாகும். பிறனை- மற்றொருவனை. கொண்டு- முதலில் நட்பாகக் கொண்டு. கண்மாறல்- பின்பு நட்பைக் கைவிடுதல். கொலை ஒக்கும்- அவனைக் கொலை செய்வதைப் போன்றதாகும். போற்றாதார் முன்னர்- தன்னை மதிக்காதவர்களின் எதிரிலே. செலவு - போய் நின்று ஒன்றை விரும்புதல். புலைஒக்கும்- மிகுந்த அற்பத்தன்மையைப் போன்றதாகும். கருத்து:- நல்லொழுக்கம் செல்வத்தை ஒத்தது. ஒழுங்காக நடத்தும் இல்லறம் சிறந்த துறவறத்தை போன்றது. நட்புச் செய்து கைவிடுதல் கொலைக்கு ஒப்பாகும். தம்மை மதியாத வரிடம் செல்லுதல் இழிவாகும். விளக்கம்:- திரு- செல்வம். தீது- குற்றம். அறன்- துறவறம். ஆறு - இல்லற நெறி. கண்மாறல் - கைவிடுதல். புலை- இழிந்த தன்மை. போற்றாதார்- மதிக்காதவர். கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள் செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில். 7 பொருள்:- கள்வம் என்பார்க்கும்- திருடுவோம் என்று காலம் பார்த்து இருப்பவர்க்கும். துயில் இல்லை- தூக்கம் வருவதில்லை. காதலிமாட்டு- மனைவி இடத்தில். உள்ளம் வைப்பார்க்கும்- மனத்தை அடிமைப்படுத்தி வைப்பவர்களுக்கும். துயில்இல்லை; ஒண்பொருள்- சிறந்த செல்வத்தை. செய்வம் என்பார்க்கும்- சேர்ப்போம் என்று கருதிப் பாடுபடுவோர்க்கும் துயில் இல்லை; அப்பொருள் - சேர்த்த செல்வத்தை. காப்பார்க்கும்- வைத்துக் காக்கின்றவர்களுக்கும். துயில் இல்லை- தூக்கம் இல்லை. கருத்து:- திருடர், மனைவியிடம் அடிமைப்பட்டவர், பொருள் சேர்ப்பவர், பொருளைப் பாதுகாப்பவர், இவர்கள் தூங்கமாட்டார்கள். விளக்கம்:- கள்வம்- திருடுவோம்; தன்தைப்பன்மை வினைமுற்று. உள்ளம்- மனம்; விருப்பம். துயில்- தூக்கம். கற்றார்முன் தோன்றா கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று உற்றார்முன் தோன்றாஉருமுதல்;- தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம் வெகுண்டார் முன்தோன்றாக் கெடும். 8 பொருள்:- கற்றார்முன் - கல்வி கற்றவர்களிடம். கழிவு இரக்கம்- இழந்த பொருளுக்காக வருந்தும் தன்மை. தோன்றா- உண்டாகாது. காதலித்து- மிகவும் விரும்பி. ஒன்று உற்றார்முன்- ஒரு காரியத்தைத் தொடங்கி ஊக்கத்துடன் செய்வோரிடம். உருமுதல்- காரியம் கைக்கெட்டா விட்டாலும் அதற்குரிய காரணம். தோன்றா- தெரியாது (மேலும் உழைப்பர்). தெற்று என- தெளிவாக. அல்ல புரிந்தார்க்கு- தீமைகளைச் செய்பவர்க்கு. அறம் தோன்றா- நல்லவை தெரியமாட்டா. எல்லாம்- எல்லா நன்மைகளும். வெகுண்டார் முன்- கோபிக்கிறவர்களிடம். தோன்றா கெடும்- தோன்றாமல் மறைந்து விடும். கருத்து:- கற்றவர் கைநழுவிய பொருளுக்காக வருந்த மாட்டார். முயற்சியுடையோர் காரியம் கைகூடாமையால் துண்புறமாட்டார். தீமை செய்வோர்க்கு அறத்தின் நன்மை தெரியாது. முன்கோபிகளிடம் எந்த நன்மையும் இராது. விளக்கம்:- கழிவு- கெட்டுப்போனது. இரக்கம்- துன்பம். முதல் - காரணம். அல்ல- தீமை. நிலத்துக்கு அணிஎன்ப நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணிஎன்ப தாமரை; பெண்மை நலத்துக்கு அணிஎன்ப நாணம்; தனக்கு அணியாம் தான்செல் உலகத்து அறம். 9 பொருள்:- நெல்லும் கரும்பும்- நெற்பயிரும், கரும்புப் பயிரும். நிலத்துக்கு அணி என்ப- வயலுக்கு அழகு தரும் என்பர். தாமரை- தாமரைகள் பூத்திருப்பது. குளத்துக்கு அணி என்ப- குளத்திற்கு அழகு தரும் என்பர். நாணம்- நாணம் அமையும் தன்மை. பெண்மை நலத்துக்கு- பெண்தன்மை யான கற்பு என்னும் நன்மைக்கு. அணி என்ப- அழகாகும் என்பர். தான்செல்- தான் இறந்தபின் அடையும். உலகத்து அறம்- உலகில் நன்மை பெறுவதற்காகச் செய்யும் நன்மைகளே. தனக்கு அணி ஆம்- ஒருவன் தனக்குச் செய்து கொள்ளும் அழகாகும். கருத்து:- வயலுக்கு நெல்லும் கரும்பும், குளத்துக்கு தாமரையும், பெண்ணுக்கு நாணமும், அறிவுள்ளவனுக்கு அறமும் அழகு தருவனவாம். விளக்கம்:- அணி- அழகு. பெண்மை- பெண்தன்மை. நலம்- கற்பு. அறம்- நல்ல செயல்கள். கந்தில் பிணிப்பர் களிற்றை; கதம்தவிர மந்திரத் தால்பிணிப்பர் மாநாகம்;- கொந்தி இரும்பில் பிணிப்பர் கயத்தைச்; சான்றோரை நயத்தின் பிணித்து விடல். 10 பொருள்:- களிற்றை- யானையை. கந்தில்- கட்டுத் தறியிலே. பிணிப்பர்- பாகர் சங்கிலியால் கட்டுவார்கள். மாநாகம்- பெரிய நல்லபாம்பை. கதம்தவிர- அதன்கோபம் தணியும்படி. மந்திரத் தால்- மந்திரத்தினால். பிணிப்பர்- மந்திரவாதிகள் வசப்படுத்து வார்கள். கயத்தை- கீழ் மகனை. கொந்தி- துன்புறுத்தி. இரும்பின்- இரும்பால் ஆன விலங்கால். பிணிப்பர்- காவலர் வசப்படுத்து வார்கள். சான்றோரை- அறிவு நிரம்பியவர்களை. நயத்தின்- நன்மையினால். பிணித்து விடல்- வசப்படுத்த வேண்டும். கருத்து:- தீயோரைத் தீய சாதனங்களால் வசப்படுத்து வார்கள். அறிவுள்ள பெரியோரை இன்சொல் முதலிய நன்மை களால்தான் வசப்படுத்த முடியும். விளக்கம்:- கந்து- யானை கட்டும் முளை. கதம்- கோபம். கொந்தி- கொத்தி: உடம்பிலே கொத்தி. கயம்- கயவர், கீழோர். நயம்- நன்மை: இன்சொல் பேசி நன்மை செய்தல் முதலியன. விடல்- விடுக. இரும்பு- இரும்பால் ஆகிய விலங்கு- ஆகுபெயர். கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்;- என்றும் விடல்வேண்டும் தம்கண் வெகுளி; அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை. 11 பொருள்:- கடிய- பிறர் செய்த தீமைகளை. கன்றாமை வேண்டும்- நினைத்துக் கோபம் கொள்ளாதிருத்தல் வேண்டும். பிறர் செய்த நன்றியை- பிறர் தமக்குச் செய்த நன்மையை. நன்றா- பெரிதாக. கொளல் வேண்டும்- மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தம்கண் வெகுளி- தம்மிடம் தோன்றும் பெரிய கோபத்தை. என்றும் - எப்பொழுதும். விடல் வேண்டும்- விட்டு விட வேண்டும். ஆக்கம் சிதைக்கும்- செல்வத்தைக் கெடுக்கும். வினை- காரியத்தை. அடல்வேண்டும்- செய்யாமல் அழித்து விட வேண்டும். கருத்து:- பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும்; நன்மைகளை மறத்தல் கூடாது. கோபத்தை விட்டுவிட வேண்டும். நஷ்டம் வரும் காரியங்களை செய்யக்கூடாது. விளக்கம்:- கன்றல்- நினைத்தல். கன்றாமை- நினையாமை. ஆக்கம்- செல்வம். உண்டாக்கப்படுவது ஆக்கம். பல்லினால் நோய்செய்யும் பாம்பெல்லாம்; கொல்லேறு கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை; ஊடி முகத்தால் நோய்செய்வர் மகளிர்; முனிவர் தவத்தால் தருகுவர் நோய். 12 பொருள்:- பாம்பு எலாம்- பாம்புகள் எல்லாம். பல்லினால்- பல்லால் கடித்து. நோய் செய்யும்- துன்பத்தை தரும். கொல்ஏறு- கொல்லப்பழகிய காளை. குறித்தாரை- தான் குறிவைத்தவரை. கோட்டால்- கொம்பினால். நோய் செய்யும்- துன்பம் செய்யும். மகளிர் - பெண்கள். ஊடி பிணங்கி. முகத்தால்- பிணக்கத்தை முகத்திலே காட்டி. நோய் செய்வர்- துன்பம் செய்வார்கள். முனிவர்- முனிவர்கள். தவத்தால்- தமது தவவலிமையால். நோய் தருகுவர்- துன்பம் செய்வார்கள். கருத்து:- பாம்புகள் பல்லினாலும், காளை கொம்பினாலும், பெண்கள் முகக்குறிப்பினாலும், முனிவர்கள் தவத்தின் வலிமை யாலும் துன்பம் செய்வார்கள். விளக்கம்:- நோய்- துன்பம். குறித்தாரை- தன்னைப் பிடிக்க நினைத்தவரை என்றும் கூறலாம். பறைநன்று பண்அமையா யாழின்; நிறைநின்ற பெண்நன்று பீடுஇலா மாந்தரின்; - பண்அழிந்து ஆர்தலின் நன்று பசித்தல்; பசைந்தாரின் தீர்தலின் தீப்புகுதல் நன்று. 13 பொருள்:- பண் அமையா- சுதி அமையாத. யாழின்- யாழின் ஓசையை விட. பறை நன்று - பறை ஓசை நல்லது. பீடு இலா- பெருந்தன்மையில்லாத. மாந்தரின்- ஆண்மக்களைவிட. நிறைநின்ற - கற்பு நெறியிலே நின்ற. பெண் நன்று- பெண்கள் சிறந்தவர்கள். பண் அழிந்து- பதம் கெட்டபின். ஆர்தலின்- உண்பதைவிட. பசித்தல் நன்று- பசியால் வருந்துதல் நல்லது. பசைந்தாரின்- தம்மை விரும்பினவரை விட்டு. தீர்தலின்- பிரிவதைவிட. தீப்புகுதல் நன்று- நெருப்பில் மூழ்கி உயிர்விடுதல் நல்லது. கருத்து:- இசை அமையாத யாழ் ஒலியை விடப் பறை ஒலியும், பெருந்தன்மையற்ற ஆண்களைவிடக் கற்புள்ள பெண்களும், பதங்கெட்ட பண்டத்தை தின்பதைவிடப் பசியும் சிறந்தவை. அன்புள்ளவரை பிரிந்து வாழ்தலைவிட இறத்தல் நல்லது. விளக்கம்:- நிறை- கற்பு; தன் உள்ளத்தை உறுதியுடன் நிறுத்தல் நிறை. பீடு- பெருமை. பண்- பதம், உண்ணத்தக்க பக்குவம். ஆர்தல்- உண்டல். பசைதல்- அன்பு கொள்ளுதல். பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர் என்பது இந்நூலாசிரியர் கருத்து. வளப்பாதி உள் வளரும் வண்மை; கிளைக்குழாம் இன்சொல் குழியுள் இனிது எழூஉம்; - வன்சொல் கரவு எழூஉம் கண்இல் குழியில்; இரவு எழூஉம் இன்மைக் குழியுள் விரைந்து. 14 பொருள்:- வன்மை- பொருள் வழங்கும் தன்மையென்னும் பயிர். வளம்பாத்தியுள்- செல்வம் என்னும் பாத்தியிலே. வளரும்- வளர்ந்து விளையும். கிளைக்குழாய்- உறவினர் கூட்டம். இன்சொல் குழியுள்- இனிய சொல்லாகிய பாத்தியிலே. இனிது எழூஉம் - செழிப்புடன் வளரும். கண் இல் குழியுள்- இரக்கம் இல்லாமை என்னும் பாத்தியிலே. வன்சொல்- கடுஞ்சொல். சுரவு- வஞ்சனை. எழூஉம்- என்னும் பயிர்கள் வளரும். இன்மைக் குழியுள்- வறுமை என்னும் பாத்தியிலே. விரைந்து- விரைவாக. இரவு எழூஉம்- இரத்தல் என்னும் பயிர் வளரும். கருத்து :- செல்வத்தபல் ஈகையும், இன்சொல்லால் உறவினரும், இரக்கமின்மையால் கடுஞ்சொல்லும் வஞ்சனையும்; வறுமையால் பிச்சை ஏற்றலும் வளரும். விளக்கம்:- பாத்தி - சிறுசிறு அளவில் பகுக்கப்படுவது. பாத்தி, குழி யென்பன உருவகம். எழூஉம்; என்பன உயிர் அளபடை. வன்மை - இல்லையென்னாமல் வழங்குந்தன்மை. கரவு - வஞ்சகம். கண் - கண்ணோட்டம். இரக்கம் இன்மை - வறுமை. இன்னாமை வேண்டின் இரவெழுக; இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக; - தன்னொடு செல்வது வேண்டின் அறம்செய்க, வெல்வது வேண்டின் வெகுளி விடல். 15 பொருள்:- இன்னாமை வேண்டின் - ஒருவன் துன்பத்தை விரும்பினால். இரவு எழுக - ஏற்பதற்குப் புறப்படுக. இந்நிலத்து - இவ்வுலகில். மண்ணுதல் வேண்டுதல் - அறியாமம் நிலைத்திருக்க விரும்பினால். இசைநடுக - புகழை நிலை நாட்டுக. தன்னொடு - தான் இருக்கும்போது தன்னுடன். செல்வது வேண்டின் - துணையாகச் செல்வது ஒன்றை விரும்பினால். அறம் செய்க - தருமம் செய்க. வெல்வது வேண்டின் - பிறரை வெல்ல விரும்பினால். வெகுளிவிடல் - கோபத்தை விட்டுவிடுக. கருத்து:- இரத்தல் துன்பந்தரும்; புகழை ஈட்டுவோன் அழியாமல் வாழ்வான்; துணை செய்வது அறம்; சினத்தை கைவிடலே வெற்றி. விளக்கம்:- இரவு- இரத்தல், யாசித்தல், ஏற்றல். இசை- புகழ். எழுக, நடுக, செய்க, என்பன வியங்கோள் வினை. வியம்கோள்- ஏவுதற் பொருளைக் கொண்டிருப்பது. விடல்- விடுக. இதுவும் வியங்கோள் வினை. கடல்குட்டம் போழ்வர் கலவர்; படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம்இல் தவக்குட்டம் தன்உடையான் நீந்தும்; அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும். 16 பொருள்:- கலவர்- கப்பல் ஓட்டிகள். கடல் குட்டம்- கடலின் ஆழத்தை. போழ்வர்- பிளந்து செல்வார்கள். பாய்மா உடையான்- பாய்ந்து செல்லும் குதிரையை உடையவன். படைக்குட்டம்- பகைவர்படை வெள்ளத்தின் ஆழத்தை. உடைக்கிற்கும்- சிதறச் செய்வான். தோம் இல்- குற்றமற்ற. தவக்குட்டம்- தவம் என்னும் ஆழத்தை. தன் உடையான்- தன் உள்ளத்தை அடக்கி ஆளும் தன்மை உள்ளவன். நீந்தும்- கடப்பான். அவைக்குட்டம்- கற்றவர்கள் நிரம்பிய சபை என்னும் கடலை. கற்றான்- கற்றறிந்தவன். கடந்துவிடும்- தாண்டிவிடுவான். கருத்து:- மாலுமிகள் கடலைக் கடப்பர்; குதிரைவீரர் எதிரிகள் படையை வெல்வர்; மனஉறுதியுடையவன் தவத்தில் வெற்றி பெறுவான்; கற்றவன் கற்றார் சபையில் வெற்றி பெறுவான். விளக்கம்:- குட்டம்- ஆழம். கலம்- கப்பல். கடலுக்கும் பெயர். கலத்தை உடையவர் கலவர், மாலுமிகள். தோம்- குற்றம். கடத்தல்- தாண்டுதல், வெல்லுதல். பொய்த்தல் இறுவாய நட்புகள்; மெய்த்தாக மூத்தல் இறுவாய்த்து இளநலம்; தூக்கில் மிகுதி இறுவாய செல்வங்கள்; தத்தம் தகுதி இறுவாய்த்து உயிர். 17 பொருள்:- நட்புகள்- சினேகங்கள். பொய்த்தல்- பொய் ஒழுக்கமாகிய. இறுவாய்- இறுதியை உடையவை. இள நலம்- இளமையின் அழகு. மெய்த்து ஆக- கண்கூடாக. மூத்தல்- மூப்பு மேலிடுவதாகிய. இறுவாய்த்து- இறுதியை உடையது. தூக்கில்- ஆராய்ந்தால். செல்வங்கள் - செல்வப்பொருள்கள். மிகுதி- தகுதியற்ற செயல்களை. இறுவாய- இறுதியாகக் கொண்டவை. உயிர் - மக்கள் உயிர். தம் தம் தகுதி- தாங்கள் தங்கள் ஆயுள் அளவை. இறுவாய்த்து- இறுதியாகக் கொண்டதாகும். கருத்து:- நண்பர்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிப்பதால் நட்பு அழியும்; முதுமை இளமையின் அழகைப் போக்கும்; தீய செயல் களால் செல்வம் அழியும்; ஆயுள் முடிந்ததும் உயிர்கள் இறக்கும். விளக்கம்:- இறுதி- முடிவு, அழிவு. தூக்குதல்- ஆராய்தல். மிகுதி- அறத்தை மீறிய செயல். தகுதி- வாழ்நாள். மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன் வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச்செவ்வேல் நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல்; கேட்டு ஆக்கம் கேளிர் ஒரீஇ விடல். 18 பொருள்:- மனைக்கு- இல்வாழ்வுக்கு. ஆக்கம்- செல்வம். மாண்ட- சிறந்த பண்புள்ள. மகளிர்- பெண்களாவார்கள். சினச் செவ்வேல் ஒருவன்- சினம் பொருந்திய சிறந்த வேற்படையை உடைய வீரன் ஒருவனது. வினைக்கு ஆக்கம் - செயலுக்குச் சிறப்பைத் தருவது. செவ்வியன் ஆதல்- படைப் பயிற்சியிலே தேர்ச்சி பெற்றிருப்பதுதான். நாட்டு ஆக்கம்- நாட்டுச் சிறப்பு. நல்லன்- நல்லவன். இவ் வேந்து- இந்த அரசன். என்றல் - என்று குடிமக்களால் பாராட்டப்படுவதாகும். கேளிர்- சுற்றத்தாரை. ஒரீஇ விடல்- நீக்கி விடுவது. கேட்டு ஆக்கம்- தீமையை உண்டாக்குவதாகும். கருத்து:- இல்லத்திற்கு சிறப்பு நல்ல மகளிர்; படைக்கலப் பயிற்சி உடையான் போரில் வெற்றி பெறுவான்; செங்கோல் வேந்தனால் நாட்டுக்கு நன்மை; உறவினரைக் கை விட்டால் தீமையுண்டு. விளக்கம்:- ஆக்கம்- சிறப்பு; செல்வம் என்றும் கூறலாம். செவ்வியன்- தேர்ச்சியுள்ளவன். ஒரீஇ- உயிர் அளபெடை. விடல்- விடுதல். தொழில் பெயர். பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள்தான் அதிர்க்கும்; கற்றான் அதிர்ப்பின் பொருள் அதிர்க்கும்;- பற்றிய மண்அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும். 19 பொருள்:- பெற்றான்- கணவன். அதிர்ப்பின்- தயங்கு வானாயின். பிணை அன்னாள் தான்- மான் போன்ற மனைவியும். அதிர்க்கும்- தன் கடமையில் தவறுவாள். கற்றான் அதிர்ப்பின் - கல்வி கற்றவன் குழப்பமடை வானாயின். பொருள் அதிர்க்கும்- அவன் கற்ற விஷயங்களிலும் குழப்பம் உண்டாகும். பற்றிய- தான் கைப்பற்றிய. மண் அதிர்ப்பின்- நாட்டுமக்கள் கலக்கமடைந்தால். மன்னவன்- அரசனுடைய. கோல் அதிர்க்கும்- ஆட்சியும் கலக்கமடையும். பண் அதிர்ப்பின்- யாழின் சுதி குலைந்தால். பாடல் அதிர்ந்துவிடும்- பாட்டுக்களும் இசை குலைந்துவிடும். கருத்து:- கணவன் கலக்கமடைந்தால் மனைவியும் கலங்குவாள். கற்றவன் குழம்பினால் அவன் கற்ற பொருளும் குழம்பும். குடிகள் கலங்கினால் ஆட்சியும் கலங்கும். சுதி குலைந்தால் பாட்டும் குழையும். விளக்கம்:- அதிர்தல்- கலங்குதல்; குழம்புதல்; நடுங்குதல்; குலைதல். பெற்றான்- மனைவியை அடைந்தவன். பொருள்- விஷயம். கோல்- ஆட்சி. மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ் கற்றறிவு இல்லா உடம்பு. 20 பொருள்:- மனைக்குப்பாழ்- வீட்டுக்குப் பாழாவது. வாள்நுதல் இன்மை- ஒளி பொருந்திய நெற்றியையுடைய மனையாள் இல்லாமை. தான்செல்லும்- தான்போகின்ற. திசைக்குப்பாழ்- திக்குக்குப் பாழாவது. நட்டோரை இன்மை- அவ்விடங்களில் சினேகிதர்களைப் பெறாதிருத்தல். இருந்த - பலரும் கூடியிருந்த. அவைக்குப்பாழ்- சபைக்குப் பாழாயிருப்பது. மூத்தோரை இன்மை- கல்வி கேள்விகளில் மிகுந்த பெரியோர் இல்லாதிருத்தல். தனக்குப்பாழ்- தனக்குப் பாழாவது. கற்று அறிவு இல்லா உடம்பு- கல்வி அறிவில்லாத வெற்றுடம்பாகும். கருத்து:- மனைவியில்லாத வீடும், நண்பர் இல்லாத ஊரும், கற்றவர் இல்லாத சபையும், கல்வியறிவற்ற உடம்பும் பயனற்றவை. விளக்கம்:- மனை- வீடு. வாள்நுதல் என்பது பெண்ணைக் குறித்தது. இது அன்மொழித் தொகை. சொல்லிய சொல் அல்லாத வேறொரு மொழி மறைந்திருப்பது அன்மொழித் தொகை. பெண் என்னும் சொல் மறைந்து நின்றது. மூத்தோர்- கல்வியறிவால் முதிர்ந்தோர். மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியை- பெய்த கலம் சிதைக்கும் பாலின்சுவையை; குலம் சிதைக்கும் கூடார்கண் கூடி விடின் 21 பொருள்:- ஒற்றுமை இன்மை- பிறருடன் ஒத்துவாழாமை. ஒருவனை மொய் சிதைக்கும்- ஒருவன் வலிமையை அழித்து விடும். பொன்போலும் மேனியை - பொன் போன்ற அழகிய உடம்பை. பொய் சிதைக்கும்- அவன் சொல்லும் பொய் வாடும்படி செய்யும். பெய்த கலம்- ஊற்றிவைக்கப்பட்ட பாத்திரம். பாலின் சுவையை- பாலின் ருசியை. சிதைக்கும்- கெடுத்துவிடும். கூடார்கண்- சேரத்தகாதவரிடம். கூடி விடின்- நட்பாக சேர்ந்து விட்டால். குலம் சிதைக்கும் - அந்த நட்பு குலப் பெருமையைக் கெடுத்துவிடும். கருத்து:- சேர்த்து வாழாமையால் வலிமையும், பொய்யால் உடல் அழகும், பாத்திரத்தால் பாலும், கூடா நட்பால் குலப் பெருமையும் கெடும். விளக்கம்:- மொய்- வலிமை. மேனி- உடம்பு. பெய்தல் - ஊற்றுதல். கலம்- பாத்திரம். குலம்- குடும்பம். புகழ்செய்யும் பொய்யா விளக்கம்; இகழ்ந்துஒருவர்ப் பேணாது செய்வது பேதைமை;- காணாக் குருடனாச் செய்வது மம்மர்; இருள்தீர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. 22 பொருள்:- பொய்யாவிளக்கம்-பொய் சொல்லாமை என்னும் ஒளி. புகழ் செய்யும்- புகழைத் தரும். இகழ்ந்து- வரம்பு கடந்து. ஒருவர் பேணாது- ஒருவரையும் மதிக்காமல். செய்வது- தீமை செய்வது. பேதைமை- அறி யாமையாகும். காணா- நன்மை தீமைகளைக் காணாத. குருடனாச் செய்வது- குருடனாக ஒருவனை ஆக்குவது. மம்மர்- கல்வியின்மை யாகும். இருள் தீர்ந்த- குருடு நீங்கிய. கண்ணர்ஆ- கண்களை உடைய வராக. செய்வது- ஆக்குவது. கற்பு - கல்வி அறிவாகும். கருத்து:- பொய் சொல்லாமை புகழைத்தரும்; அறியாமை தீமையைச் செய்யும்; கல்வியில்லாமை நன்மை தீமைகளை அறியாமல் செய்யும்; கல்வி அறிவைத் தரும். விளக்கம்:- பொய்யாமையை விளக்கென்று சொல்வது முன்னோர் மரபு. இகந்து- கடந்து. பேணுதல்- மதித்தல். மம்மர்- மயக்கம்; அறிவின்மை. கல்லாமையால் அறிவின்மை வளரும். மலைப்பினும் வாரணம் தாங்கும்; அலைப்பினும் அன்னேயென்று ஓடும்; குழவி சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யார்; ஒட்டார் உடன் உறையும் காலமும்இல். 23 பொருள்:- மலைப்பினும்- பாகன் தன்னுடன் சண்டை யிட்டாலும். வாரணம்- யானை. தாங்கும் - அவனைச் சுமக்கும். அலைப்பினும்- தாய் அடித்தாலும். குழவி - குழந்தை. அன்னே என்று - அம்மா என்று அலறிக் கொண்டு. ஓடும் - அவளிடையே ஓடும். சிலைப்பினும்- தம்மீது கோபங் கொண்டாலும். நட்டார் - நண்பர். நடுங்கும் வினை- அஞ்சும்படியான கெடுதியை. செய்யார் - செய்ய மாட்டார். ஒட்டார்- பகைவர்கள். உடன் உறையும் - ஒற்றுமையுடன் கூடிவாழ்கின்ற. காலமும் இல்- காலமும் இல்லை. கருத்து:- தன் பாகன் சண்டையிட்டாலும், யானை அவனைத் தாங்கும். தாய் அடித்தாலும் குழந்தை அவளிடமே ஓடும். கோபத்தாலும் நண்பர்க்குத் தீமை செய்யமாட்டார்கள். பகைவர்கள் ஒற்றுமையுடன் வாழமாட்டார்கள். விளக்கம்:- மலைத்தல் - போர் செய்தல். வாரணம்- யானை. அலைத்தல்- அடித்தல். அன்னே - விளி; அதாவது அழைத்தல். சிலைத்தல் - கோபித்தல். ஒட்டார் - பகைவர். நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும். 24 பொருள்:- நகை நலம்- முகமலர்ச்சியாகிய நன்மை. நாட்டார்கண்- நண்பர்களிடம். நந்தும்- சிறப்படையும். சிறந்த- உயர்ந்த. அவைநலம்- சபையின் நன்மை. அன்பின் விளங்கும்- அன்பினால் சிறப்படையும். விசைமாண்ட- வேகத்தில் சிறந்த. தேர்நலம்- தேரின் நன்மை. பாகனால்- தேர் ஓட்டுகின்றவனால். பாடு எய்தும்- சிறப்படையும். ஊர்நலம்- ஊரில் வாழும் குடிகளின் நன்மை. உள்ளானால்- அவ்வூரில் உள்ள அரசனைக் கொண்டு. உள்ளப்படும்- மதிக்கப்படும். கருத்து:- நண்பரைக் கண்டபோது முகமலர்ச்சி உண்டாகும். சபையின் மூலம் உண்டாகும் நன்மை, சபையோர் மற்றவர்கள் மேல் கொள்ளும் அன்பால் சிறக்கும். பாகனால் தேரின் பயன் சிறக்கும். அரசன் செயலைக் கொண்டு குடிமக்கள் மதிக்கப்படுவார்கள். விளக்கம்:- நகை- சிரிப்பு; முகமலர்ச்சி. விசை- வேகம். பாடு - சிறப்பு; பெருமை. ஊர் என்பது ஊரில் உள்ள குடிமக்களைக் குறித்தது. ஆகுபெயர். உள்ளான்- உள்ளவன்; அரசனைக் குறித்தது. அஞ்சாமை அஞ்சுதி; ஒன்றின் தனக்கு ஒத்த எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம்:- நெஞ்சறியக் கோடாமைகோடி; பொருள் பெறினும் நாடாதி நாட்டார்கண் விட்ட வினை. 25 பொருள்:- அஞ்சாமை- அஞ்சாமல் செய்யும் பாவங் களைச் செய்ய. அஞ்சுதி- பயப்படுவாயாக. ஒன்றின்- ஒரு காரியத்தில். தனக்கு ஒத்த அளவெல்லாம்- தனக்கு ஏற்ற அளவில் எல்லாம். எஞ்சாமை- பிறர்க்கு உதவுவதில் குறைவில்லாமையை. அஞ்சல்- விட்டு விடாதே. நெஞ்சு அறிய - மனம் அறிய. கோடாமை- நடு நிலைமை தவறாதிருப்பதை. கோடி- கொள்ளு வாய். பொருள் பெறினும்- பெரும் பொருள் கிடைப்பதாயினும், நட்டார்கண்- நண்பர்களின் பொறுப்பில். விட்டவினை- செய்யும்படி விட்ட காரியத்தைப் பற்றி. நாடாதி- ஆராயாதே. கருத்து:- அஞ்சத்தக்க காரியங்களைச் செய்ய அஞ்சுக; இயன்ற அளவு உதவி செய்வதில் குறையாதே; நடுநிலை தவறாதே; நண்பர்களிடம் விட்ட செயலைப் பற்றி ஆராயாதே. விளக்கம்:- கொடியவர்களிடம் பழிபாவங்களுக்கு அஞ்சாத தன்மையுண்டு. ஆதலால் அஞ்சாமை என்பது பழி பாவங்களுக்கு அஞ்சாமை என்னும் பொருளில் வந்தது. எஞ்சாமை- குறையாமை. கோடி- கொள்தி. அலைப்பான் பிறஉயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலில் கொண்டுஊன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம். 26 பொருள்:- அலைப்பான்- கொல்லும் பொருட்டு. பிறஉயிரை- மற்ற பிராணிகளை. ஆக்கலும்- வளர்ப்பதும். குற்றம் -குற்றமாகும். விலைப் பாலின் கொண்டு- விலை வகையில் வாங்கிக் கொண்டு. ஊன்மிசைதலும் - அந்த மாமிசத்தை உண்ணுவதும். குற்றம் - தவறாகும். சொலற்பால அல்லாத - சொல்லுந் தன்மையில்லாத சொற்களை. சொல்லுதலும் - கூறுவதும். குற்றம் - பிழையாகும். கொலைப்பாலும் - கொலை வகைகளும். குற்றமே ஆம்- தவறேயாகும். கருத்து:- கொல்லும் பொருட்டுப் பிராணிகளை வளர்ப்பதும், மாமிசத்தை விலைக்கு வாங்கி உண்பதும், சொல்லத் தகாத சொற்களைக் கூறுவதும், கொலை செய்வதும் குற்றமாகும். விளக்கம்:- அலைத்தல்- துன்புறுத்தல், கொல்லுதல். ஆக்குதல்- வளர்த்தல். பால்- வகை. இச்செய்யுள் புலால் உணவைக் கண்டிப்பது. கோல்நோக்கி வாழும் குடியெல்லாம்; தாய்முலைப் பால்நோக்கி வாழும் குழவிகள்; வானத் துளிநோக்கி வாழும் உலகம்; உலகின் விளிநோக்கி இன்புறூஉம் கூற்று. 27 பொருள்:- குடி எல்லாம்- குடிமக்கள் அனைவரும். கோல்நோக்கி- அரசனது ஆட்சியை எதிர்பார்த்து. வாழும்- உயிர் வாழ்வார்கள். குழவிகள்- குழந்தைகள் அனைவரும். தாய் முலைப்பால்- தாயின் முலைப்பாலை. நோக்கி- எதிர்பார்த்து. வாழும்- உயிர் வாழும். உலகம்- உலகில் உள்ள உயிர்கள் எல்லாம். வானத்துளி நோக்கி- வானத்திலிருந்து பெய்யும் மழைத்துளியை எதிர்பார்த்து. வாழும்- உயிர் வாழும். கூற்று - எமன். உலகின் விளிநோக்கி- உலகத்து உயிர்களின் சாவை எதிர்பார்த்து. இன்புறும்- மகிழ்ச்சியடைவான். கருத்து:- குடிகள் அரசன் ஆட்சியாலும், குழந்தைகள் தாயின் முலைப்பாலினாலும், உலகம் மழையினாலும் உயிர் வாழ்வர். எமன், உயிர்கள் சாவதைக் கண்டு மகிழ்வான். விளக்கம்:- கோல்- ஆட்சி. உலகம்- உலகில் உள்ள உயிர்கள். கூற்று- கூற்றுவன்; உயிரையும் உடலையும் பிரிப்பவன். கற்பக் கழிமடம் அஃகும்; மடம்அஃகப் புற்கம்தீர்ந்த இவ்வுலகின் கோள்உணரும்; கோள்உணர்ந்தான் தத்துவ மான நெறிபடரும்; அந்நெறி இப்பால் உலகின் இசைநிறீஇ உப்பால் உயர்ந்த உலகம் புகும். 28 பொருள்:- கற்ப- கல்வி கற்பதனால். கழிமடம்- மிகுந்த அறியாமை. அஃகும்- குறையும். மடம் அஃக- அறியாமை குறைந்ததனால். புற்கம் தீர்ந்து- அற்ப அறிவு நீங்கி. இவ்வுலகின் - இவ்வுலகத்தின். கோள் உணரும். இயற்கையை அறிவான். கோள் உணர்ந்தால்- இவ்வுலக இயற்கையை அறிந்தால், அவன். தத்துவமான- உண்மையான. நெறிபடரும்- வழியிலே நடப்பான். அந்நெறி- அந்த உண்மை நெறியினால். இப்பால் உலகின்- இவ் வுலகிலே. புகழ்நிறீஇ- புகழை நிலைநாட்டி. உப்பால் - அதன்பின். உயர்ந்த உலகம் புகும் - உயர்ந்த மோட்சலோகத்தை அடைவான். கருத்து:- கல்வியினால் அறியாமை நீங்கும். அறிவுள்ளவன் இவ்வுலக இயல்பை அறிவான். உலக இயல்பை அறிந்தவன் உண்மை நெறியிலேயே செல்வான். உண்மை நெறியில் செல்பவன் இவ்வுலகில் புகழும், மறுமையில் மோட்சமும் பெறுவான். விளக்கம்:- இது ஐந்து அடிகளைக் கொண்ட வெண்பா. இதற்குப் பஃறொடை வெண்பா என்று பெயர். புற்கம்- அற்ப அறிவு; அறியாமை. கோள்- கொள்கை; இயற்கை. தத்துவம்- உண்மை. உப்பால்- அதன்பின். மறுமையில் உயர்ந்த உலகம்- வீடு, அதாவது மோட்சம். குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம்;- அழித்துச் செறிவுழி நிற்பது காமம்; தனக்குஒன்று உறுவுழி நிற்பது அறிவு. 29 பொருள்:- குழித்துழி- குழித்த இடத்திலே. நிற்பது- தேங்கி நிற்பது. நீர்- தண்ணீர். தன்னைப் பல்லோர் - தன்னை அறிவுடையோர் பலரும். பழித்துழி- பழிக்கும் இடத்தில். நிற்பது- நிலைத்திருப்பது. பாவம்- பாவமேயாகும். அழித்து- தவநெறியைக் கெடுத்து. செறிவுழி- தீய நெறியை அடையும் போது. நிற்பது- துணை நிற்பது. காமம்- காமமாகும். தனக்கு ஒன்று- தனக்கு ஒரு துன்பம் வந்தபோது. நிற்பது- துணையாக நிற்பது. அறிவு- அறிவு ஒன்றுதான். கருத்து:- பள்ளத்தில் நீர் நிற்கும்; சான்றோர் பழிப்புக்கு ஆளானவனிடத்தில் பாவம் நிற்கும்; ஒழுக்கமற்றவனிடம் காமம் குடிகொண்டிருக்கும்; துன்பத்தில் துணை செய்வது அறிவுதான். விளக்கம்:- குழித்தஉழி - குழித்துழி. பழித்தஉழி - பழித்துழி. செறிஉழி; உறுவழி. பல்லோர்- அறிவுடையோர் பலர். செறிதல்- சேர்தல். திருவின் திறல் உடையது இல்லை; ஒருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை; எற்றுள்ளும் இன்மையின் இன்னாதது இல்லை; இல் என்னாத வன்மையின் வன்பாட்டது இல். 30 பொருள்:- திருவின்- செல்வத்தைவிட. திறல் உடையது- வலிமையுள்ளது. இல்லை- வேறு ஒன்றும் இல்லை. ஒருவற்கு- ஒருவனுக்கு. கற்றலின் - கல்வி கற்பதைவிட. வாய்த்த- கிடைத்த துணை. பிறஇல்லை- வேறு ஒன்றும் இல்லை. எற்று உள்ளும்- எதனினும். இன்மையின் - வறுமையைவிட. இன்னாதது- துன்பந் தருவது. இல்லை- வேறு ஒன்றும் இல்லை. இல்என்னாத- இரப் போர்க்கு இல்லையென்று சொல்லாமல் ஈகின்ற. வன்மையின்- வல்லமையைப் போல. வன்பாட்டது- உறுதியானது. இல்- வேறு ஒன்றும் இல்லை. கருத்து:- செல்வமே சிறந்த வலிமை. கல்வியே நல்ல துணை. வறுமையே துன்பம். இல்லை என்னாமல் கொடுப்பதே உறுதி யானது. விளக்கம்:- வாய்த்த- பொருந்திய; ஏற்றதுணை. எற்றுள்ளும் - எதையும் விட. வன்பாடு- உறுதி. புகைவித்தாப் பொங்கழல் தோன்றும்; சிறந்த நகைவித்தாத் தோன்றும் உவகை; பகைஒருவன் முன்னம்வித்து ஆகமுளைக்கும்; முளைத்தபின் இன்னாவித் தாகி விடும். 31 பொருள்:- புகைவித்துஆ- புகை காரணமாக. பொங்கு அழல்- எரிகின்ற நெருப்பு. தோன்றும்- உண்டு என்று காணப்படும். சிறந்த- உண்மையான. நகைவித்தா- முகமலர்ச்சி காரணமாக. உவகை தோன்றும்- உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி தெரியும். பகை- பகைமையானது. ஒருவன் முன்னம் வித்துஆக- ஒருவனது குறிப்புச் செயல்கள் காரணமாக. முளைக்கும்- வெளியே காணப் படும். முளைத்த பின்- பகைமை அவ்வாறு வெளிப்பட்ட பின். இன்னாவித்து ஆகிவிடும்- அது துன்பத்து அடிப்படையாகி விடும். கருத்து:- புகையால் நெருப்பு அறியப்படும். முகமலர்ச்சி யால் மன மகிழ்ச்சியை அறியலாம். செயல்களால் உள்ளத்தில் உள்ள பகையை அறியலாம். பகைமை துன்பத்துக்கு விதை. விளக்கம்:- வித்து- விதை. ஏது - காரணம். முன்னம்.- குறிப்பு, அடையாளம். உவகை.- உள்ளக்களிப்பு. பிணிஅன்னர் பின்நோக்காப் பெண்டிர்; உலகிற்கு அணிஅன்னர் அன்புடை மாக்கள்; - பிணிபயிரின் புல்அன்னர் புல்லறிவின் ஆடவர்; கல்அன்னர் வல்என்ற நெஞ்சத் தவர். 32 பொருள்:- பின்நோக்கா- பின்வருவதை எண்ணாத. பெண்டிர் - பெண்கள். பிணி அன்னர்- தம் கணவருக்கு நோய் போன்றவர். அன்புடை மாக்கள் - எல்லா உயிர்களிடமும் அன்புள்ள மக்கள். உலகிற்கு அணி அன்னர்- உலகத்துக்கு ஒரு ஆபரணம் போல்வர். புல் அறிவின்- அற்பத்தனமான அறிவுள்ள. ஆடவர்- ஆண்கள். பயிரின்- பயிரின் நடுவிலே முளைத்து. பிணி- அப்பயிரை வளர விடாமல் தடுக்கின்ற. புல் அன்னர்- களை போன்றவர் ஆவர். வல் என்ற- வன்மையான. நெஞ்சத்தவர்- மனம் உள்ளவர். கல்அன்னர்- கல்லை ஒப்பார்கள். கருத்து:- பின் வருவதை முன்னறியாத மகளிர், கணவனுக்கு நோய் போன்றவர். அன்புள்ளவர், உலகிற்கு ஆபரணம் போன்றவர். அறிவற்ற ஆண்கள், பயிருக்குக் களை போன்றவர். கடின மனதுள்ளவர் கல்லுக்குச் சமம். விளக்கம்:- பின்னோக்காப் பெண்டிர் என்பது வரவுக்கு மேல் செலவு செய்யும் பெண்டிரைக் குறித்தது. அணி- ஆபரணம், நகை. புல்- களை. வல்- வலிமை; கடினத்தன்மை. அந்தணரின் நல்ல பிறப்பில்லை; என்செயினும் தாயின் சிறந்த தமர்இல்லை; யாதும் வளமையோடு ஒக்கும் வனப்பில்லை; எண்ணின் இளமையோடு ஒப்பதூஉம் இல் 33 பொருள்:- அந்தணரின்- அறநெறியிலே நடப்போரைப் போன்ற. நல்ல- உயர்ந்த. பிறப்பு இல்லை- பிறப்புள்ளவர் வேறில்லை. என் செயினும்- என்ன துன்பத்தைச் செய்தாலும். தாயின்- தாயைக் காட்டினும். சிறந்ததமர்- உயர்ந்த உறவினர். இல்லை- ஒருவரும் இல்லை. யாதும்- எதுவும். வளமையோடு- செல்வத்துடன். ஒக்கும்- ஒத்த. வனப்பு இல்லை- அழகுடையது அன்று. எண்ணின்- நினைத்துப் பார்த்தால். இளமையோடு ஒப்பதூஉம்- இளமைப் பருவத்திற்குச் சமமானது. இல்- வேறு ஒன்றும் இல்லை. கருத்து:- அந்தணர் பிறப்பு உயர்வானது. தாயே சிறந்த உறவு. செல்வமே அழகாகும். இளமை இன்பந் தருவது. விளக்கம்:- அந்தணர்- அருளும் அறமும் உடையோர். வளமை - செல்வம். வனப்பு- அழகு. ஒப்பதூஉம்; உயிர் அளபெடை. இரும்பின் இரும்புஇடை போழ்ப; பெருஞ்சிறப்பின் நீர்உண்டார் நீரால்வாய் பூசுப;- தேரின் அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய பெரியரான் எய்தப் படும். 34 பொருள்:- இரும்பின்- இரும்பால் செய்த ஆய்தங்களால். இரும்பு- இரும்பை. இடைபோழ்ப- குறுக்கே வெட்டித் துண்டு போடுவர். பெரும் சிறப்பின்- மிகுந்த சிறப்புள்ள. நீர் உண்டார்- நீர் உணவை உண்டவர்கள். நீரால்- தண்ணீராலேயே. வாய்பூசு ப.- வாயைக் கழுவுவார்கள். தேரின்- ஆராய்ந்தால். சிறந்த - முயற்சிகளால். கொள்ப- முடித்துக் கொள்வார்கள். பெரிய- பெரிய நன்மைகள். பெரியரான்- பெரியோர்களின் உதவியால். எய்தப்படும்- கிடைக்கும். கருத்து:- இரும்பால் இரும்பைப் பிளப்பர். நீர் உணவு களை உண்டோர், நீராலேயே வாயைச் சுத்தம் செய்வார். பெரிய காரியங்களைச் சிறந்த முயற்சியால் முடிப்பர். பெரியோர் துணையால் பெரிய செல்வங்களை அடையலாம். விளக்கம்:- நீர்- நீர் வடிவான உணவு. பாயசம், கூழ் போன்ற உணவு வகைகள். பூசுதல்- கழுவுதல். அரிய- அரியவை, சிறந்தவை. மறக்களி மன்னர்முன் தோன்றும்; சிறந்த அறக்களி இல்லாதார்க்கு ஈயுமுன் தோன்றும்; வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக்களி ஊரில் பிளிற்றி விடும். 35 பொருள்:- மறம்களி- வீரத்தால் களித்தல். மன்னர் முன்- அரசரைக் காணும்போது. தோன்றும் - வீரர்களிடம் உண்டாகும். சிறந்த அறம்களி- மிகுந்த ஈகையால் களிப்படைதல். இல்லாதார் க்கு- வறியோர்க்கு. ஈயுமுன்- கொடுக்கும்போது. தோன்றும்- கொடுப்போரிடம் உண்டாகும். விளம்களி- வியப்படைதலாகிய களிப்பு. நல் கூர்ந்தார் மேற்று ஆம்- ஒன்றைப் பெறும்போது வறியோரிடம் உண்டாகும். கயம்களி- கீழ் மகனிடம் உண்டாகும் களிப்பு. ஊரில்- அவன் இருக்கும் ஊரில். பிளிற்றி விடும்- பலரும் அறியும்படி ஆரவாரம் செய்துவிடும். கருத்து:- வீரர்க்கு அரசனைக் காணும்போது களிப்பு மிகும். செல்வர் வறியார்க்கு ஈயும்போது களிப்பர். வறியோர் ஒன்றைப் பெறும்போது களிப்பர். கீழ் மகனிடம் தோன்றும் களிப்பு ஊர் எல்லாம் பரவி ஆர்ப்பாட்டம் செய்யும். விளக்கம்:- மறம்- வீரம். வியம்- வியத்தல். கயம்- கீழ்மகன். களித்தல் என்னும் சொல், களி என விகுதி குறைந்து நின்றது. பிளிற்றி விடுதலாவது; தன் பெருமையைத் தானே சொல்லிக் கொண்டு திரிதல். மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்; மால்இருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்; - பெய்யல் முழங்கத் தளிர்க்கும் குருகிலை; நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். 36 பொருள்:- மலர்க் கண்கள்- குவளைப் பூப் போன்ற கண்கள். மையால்- பூசப்பட்ட மையினால். தளிர்க்கும்- அழகுடன் விளங்கும். நிமிர்சுடர்- நிமிர்ந்து எரியும் விளக்கு. மால் இருள்- கரிய இருட்டிலே. நெய்யால்- எண்ணெய்யினால். தளிக்கும் - நன்றாக எரியும். பெய்யல் முழங்க- மேகம் மழை பெய்ய முழங்கும்போது. குருகு- குருக்கத்தி மரத்தில். இலைதளிர்க்கும்- இலைகள் துளிர்க்கும். மேல்- மேலோர்கள். நட்டார்- உறவினர்க்கு. வழங்க- பொருள் கொடுத்தலால். தளிர்க்கும் ஆம்- சிறப்படைவார்கள். கருத்து:- மையால் கண்கள் அழகு பெறும்; எண்ணெயால் விளக்கு எரியும்; மேகமுழக்கத்தால் குருக்கத்திமரம் தளிர்க்கும்; உறவினர்க்கு உதவுவ தனால் உயர்ந்தோர் சிறப்படைவர். விளக்கம்:- நிமிர் சுடர்- மேலெழுந்து எரியும் விளக்கு; சுடர்- நெருப்பு; அது விளக்கைச் குறித்தது. பெய்யல்- மேகம். மழைபெய்யும் இயல்புள்ளது பெய்யல். காரணப் பெயர். குருக்கத்தி- ஒருவகை மரம். நகைஇனிது நட்டார் நடுவண்; பொருளின் தொகைஇனிது தொட்டு வழங்கின்;- தகைஉடைய பெண்இனிது பேணி வழிபடின்; பண்இனிது பாடல் உணர்வார் அகத்து. 37 பொருள்:- நட்டார் நடுவண்- நண்பர்கள் நடுவிலே. நகை இனிது- மகிழ்ச்சி இன்பந்தரும். தொட்டுவழங்கின்-எடுத்து ஏழைகளுக்குக் கொடுத்தால். பொருளின் தொகை- செல்வத்தின் தொகுப்பு. இனிது- இன்பம் தரும். பேணி- கணவனைப் பாதுகாத்து. வழிபடின்- அவன் விருப்பத்தின்படி வாழ்வாளாயின். தகையுடைய- சிறந்த பண்புகளையுடைய. பெண் இனிது- பெண் இன்பந்தருபவள் ஆவாள். பாடல் - பாட்டின் சுவையை. உணர்வார் அகத்து- அறிகின்றவர்களிடம். பண்இனிது- இசையும் இன்பந்தரும். கருத்து:- நண்பர்களிடையில் முகமலர்ச்சி இன்பமாகும். வறியோர்க்கு வழங்கும்போதுதான் செல்வத்தால் இன்பம் உண்டு. கணவன் வழி நிற்கும் பெண்ணால்தான் இன்பம் உண்டு. பாட்டின் சுவையறிவாரிடந்தான் இசை இன்பம் தரும். விளக்கம்:- பொருளின் தொகை- பொருட்குவியல். பொருள்- செல்வம். கணவனை வழிபடுதல் கற்புள்ள பெண்ணின் கடமை. கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ்ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார்ஒன்று ஈவார்- பரப்பு அமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன்உண்டல் செய்யாமை செல்சார் உயிர்க்கு. 38 பொருள்:- கரப்பவர்க்கு- ஒன்றும் இல்லை என்று பொருளை ஒழிப்பவர்க்கு. செல்சார்- புகலிடம். கவிழ்தல்- இரப்போரைக் கண்டால் முகம் கவிழ்தலாகும். எஞ்ஞான்றும்- எந்நாளும். இரப்பவர்க்கு- வறுமையால் ஏற்போருக்கு. செல்சார்- சென்று சேரும் இடம். ஈவார்- தாம் வேண்டு வதைக் கொடுக்கும் செல்வர் ஆவார். பரப்பு அமைந்த - பெரிய. தானைக்கு - சேனைக்கு. செல்சார்- உறுதி. தறுகண்மை - அஞ்சாமையாகும். உயிர்க்கு - ஒருவனது உயிர்க்கு. செல்சார் - உறுதி. ஊன் உண்டல் செய்யாமை- மாமிசம் உண்ணாமை யாகும். கருத்து:- வைத்துக் கொண்டு இல்லையென்போர் ஈவாரைக் காணின் தலை குனிவர். இரப்போர் ஈவாரை நாடிச் செல்வர். சேனைக்கு உறுதி அஞ்சாமையாகும். ஊன் உண்ணா மையே தன்னுயிர்க்கு நன்மையாகும். விளக்கம்:- கரத்தல்- ஒளித்தல். சார்- சார்பு. புகலிடம்- சேர்ந்து நிற்கும் இடம். பரப்பு அமைந்த- பரந்து நிற்கின்ற. தானை- சேனை. புலால் மறுத்தலை வலியுறுத்தியது இச் செய்யுள். கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டெனக் கேட்டதே செய்பபுலன் ஆள்வார்;- வேட்ட இனியவே செய்ப அமைந்தார்; முனையாதார் முன்னிய செய்யும் திரு. 39 பொருள்:- கம்மியர்- கம்மாளர். கண்டதே - தாம் கண்ணால் கண்ட வற்றையே. செய்ப- செய்வர். புலன் ஆள்வார்- அறிவுடையோர். உண்டு எனக் கேட்டதே- பயன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டதையே. செய்ப- செய்வர். அமைந்தார்- நல்ல பண்புகள் அமைந்த பெரியோர். வேட்ட- மக்கள் விரும்பும். இனியவே செய்ப- நல்ல காரியங்களையே செய்வர். திரு- இலக்குமி. முனியாதார்- சினத்தை விட்ட சான்றோர். முன்னிய செய்யும்- நினைப்பவைகளை முடித்து வைப்பாள். கருத்து:- கம்மாளர் தாம் பார்த்த பண்டங்களைச் செய்வர். அறிஞர் தாம் கேட்டறிந்த அறத்தைச் செய்வர். சான்றோர் பிறர் விரும்பும் நன்மைகளையே செய்வர். இலக்குமி சினமற்றோர் விருப்பத்தை நிறைவேற்றுவாள். விளக்கம்:- கம்மாளர்- தட்டார், கன்னார், கொல்லர், சிற்பியர், தச்சர் முதலியவர்களைக் குறிக்கும் பொதுப்பெயர். புலன்- அறிவு; வேட்டல்- விரும்புதல். முனியாதார்- சினத்தை விட்டவர். பொறுமையுள்ளவர். பொறுமையுள்ளவரே எக்காரி யத்திலும் வெற்றிபெறுவர். திருவும் திணைவகையான் நில்லாப்; பெருவலிக் கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது;- ஆற்ற மறைக்க மறையாதாம் காமம்; முறையும் இறைவகையான் நின்று விடும். 40 பொருள்:- திருவும் - செல்வமும். திணை வகையான்- குடியின் உயர்வு தாழ்வுக்கேற்ற வகையிலே. நில்லாது - சிறிதும் பெரிதுமாக நிற்கமாட்டா. பெருவலிக் கூற்றமும் - மிகுந்த வலிமையுள்ள எமனும். கூறுவ - தன்னால் உயிர் உண்ணப் படுவோன் சொல்வனவற்றை. செய்து உண்ணாது- செய்துவிட்டு உண்ணமாட்டான். காமம் - காமமானது. ஆற்ற மறைக்க - மிகவும் மூடி மறைத்தாலும். மறையாதாம் - மறைந்து விடாதாம். முறையும்- அரச நீதியும். இறைவகையான் - அரனுடைய தன்மைக்கேற்றபடி. நின்று விடும் - அமைந்திருக்கும். கருத்து:- செல்வத்திற்கு உயர்ந்தகுலம், தாழ்ந்தகுலம் என்ற வேற்றுமை யில்லை. உயிர் கவரப்படுவோன் சொல்வதை எமன் கேட்கமாட்டான். காமத்தை மறைக்க முடியாது. அரசனது பண்புக்கேற்றபடி நீதி நடை பெறும். விளக்கம்:- திணை- குலம், குடி. முறை- நீதி. இறை - அரசன். அரசன் பண்புக் கேற்றபடிதான் அரசநீதி நடபெறும் என்பது அரசர்கள் சர்வாதிகாரி களாயிருந்த காலத்து வழக்கம். பிறக்குங்கால் பேர் எனவும் பேரா; இறக்குங்கால் நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும்- நல்லாள் உடம்படின் தானே பெருகும்; கெடும்பொழுதில் கண்டனவும் காணா கெடும். 41 பொருள்:- உயிர் எனைத்தும்- உயிர்கள் எல்லாம். பிறக்கும் கால்- பிறக்கும்போது. பேர் எனவும் - உடலை விட்டு நீங்கிப் போ என்றாலும். பேரா- நீங்க மாட்டா. இறக்கும் கால்- அவைகள் இறக்கும் போது. நில் எனவும் -.போக வேண்டாம் நில் என்றாலும். நில்லா - நிலைத்து நிற்க மாட்டா. நல்லாள்- இலக்குமி. உடன் படின் - சேர்ந்தால். .தானே பெருகும்- செல்வம் தானாகவே வளரும். கெடும் பொழுதில்- அவள் நீங்கும்போது. கண்டனவும்- அதற்குமுன்னே காணப்பட்ட செல்வங்களும். காணாக்கெடும்- காணப்படாமல் மறைந்து போகும். கருத்து:- உயிர்களைப் பிறக்கும்போது போ என்றாலும் போகமாட்டா. இறக்கும் போது நில் என்றாலும் நிற்க மாட்டா. இலக்குமி சேர்ந்தால் செல்வம் பெருகும். நீங்கினால் செல்வம் அழியும். விளக்கம்:- உயிர் எனைத்தும் என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. பேர்- பேர்தல், நீங்குதல். பேரா- நில்லா, பன்மைகள். உடம்படுதல்- சேர்தல். நல்லாள்- இலக்குமி. போர்இன்றி வாடும் பொருநர்சீர்; கீழ்வீழ்ந்த வேர்இன்றி வாடும் மரம்எல்லாம்; - நீர்பாய் மடையின்றி நீள்நெய்தல் வாடும்; படையின்றி மன்னர்சீர் வாடி விடும். 42 பொருள்:- பொருநர்சீர்- போர் வீரரின் பெருமை. போர் இன்றி- சண்டை யில்லாவிடில். வாடும்- குறைந்து விடும். மரம் எல்லாம்- எல்லா மரங்களும். கீழ் வீழ்ந்த -நிலத்தின் கீழ் ஆழமாக இறங்கிய. வேர் இன்றி- வேர் இல்லாவிட்டால். வாடும்- பட்டுப் போய்விடும். நீள் நெய்தல் - நீளமான நெய்தல் மலர்கள். நீர்பாய் மடை- நீரோடும் மடையிலே. இன்றி- நீர் இல்லாவிடின். வாடும்- காய்ந்துவிடும். மன்னர்சீர்- அரசர் செல்வம். படைஇன்றி- போதுமான சேனையில்லாவிட்டால். வாடிவிடும் - மறைந்து விடும். கருத்து:- போர் இன்றேல் வீரர்க்கும் பெருமையில்லை. வேர் அற்ற மரம் பட்டுப் போகும். நீர்வற்றினால் நெய்தல் மலர் காய்ந்து விடும். போதுமான சேனாபலமற்ற அரசன் செல்வம் அழிந்து விடும். விளக்கம்:- பொருநர்- போர் செய்வோர், வீரர். மடை- வாய்க்கால், குளம். மடு- மடை, பள்ளம். படை பலத்தால் மன்னர்கள் சிறந்து வாழ்ந்த பண்டைக் காலத்தில். ஏதிலார் என்பார் இயல்புஇல்லார்; யார்யார்க்கும் காதலார் என்பார் தகவுடையார்:- மேதக்க தந்தை எனப்படுவான் தன்உவாத்தி; தாய் என்பாள் முந்துதான் செய்தவினை. 43 பொருள்:- ஏதிலார் இல்லார்- அயலார் என்று எண்ணப் படுகின்றவர்கள். இயல்பு இல்லார்- நல்ல குணங்கள் இல்லா தவர்கள். யார்யார்க்கும்- எல்லோருக்கும். காதலார் என்பார் - அன்புள்ளவர்கள் என்பவர்கள். தகவு உடையார்- நல்ல குணமுள்ளவர்கள். மேதக்க - மிகவும் சிறந்த. தந்தை எனப்படு வான்- தந்தை என்று சொல்லப்படுகின்றவன். தன் உவாத்தி- தனது ஆசிரியன் ஆவான். தாய் என்பாள்- தாய் என்று சொல்லப் படுகின்றவள். முந்து- முன்பு. தான் செய்தவினை- தான் செய்த நல்வினை யாகும். கருத்து:- நற்குணமில்லாதவர் உறவல்லர். நற்குணம் உள்ளவர் எல் லோருக்கும் அன்பர். ஆசிரியனே சிறந்த தந்தை. முன் செய்த நல்வினையே தாய். விளக்கம்:- தந்தை உடம்பைக் காக்க உதவுகின்றவன்; ஆசிரியன் அறிவை வளர்ப்பவன். ஆதலால் ஆசிரியன் தந்தையினும் சிறந்தவன். இயல்பு- தன்மை. குணம் - பண்பு. காதல்- அன்பு. பொறிகெடும் நாண்அற்ற போழ்தே; நெறிபட்ட ஐவரால் தானே வினைகெடும்;- பொய்யா நலம்கெடும் நீர்அற்ற பைம்கூழ்; நலமாறின் நண்பினார் நண்பு கெடும். 44 பொருள்:- நாண் அற்ற போழ்தே- ஒருவனுக்கு அவனுடைய நாணம் நீங்கினபோது. பொறிகெடும்- அவன் செல்வம் அழியும். நெறிபட்ட- தன்வசப்பட்ட. ஐவரால்- ஐம்பொறிகளால். தானே வினை கெடும்- தானாகவே தீவினை அழியும். நீர் அற்ற- தண்ணீர் இல்லாத. பைம்கூழ்- பயிர். பொய்யா- பொய்க்காத. நலம் கெடும்- விளைவு நலம் குறைந்து விடும். நலம்மாறின்- நட்பின் தன்மை மாறினால். நண்பினார் நண்பு- நண்பர்களின் சினேகத்தன்மை. கெடும் - அழியும். கருத்து:- நாணம் அழிந்தால் செல்வம் அழியும். ஐம்பொறி களை அடக்கியாண்டால் தீவினைகள் அழியும். நீர் இன்றேல் பயிரின் விளைவு கெடும். நட்புத் தன்மை மாறினால் நண்பர்கள் இல்லை. விளக்கம்:- பொறி- செல்வம். நெறி- வழி. தன்நெறி- தன்வசம். ஐம்பொறி- மெய், வாய், கண், மூக்கு, காது என்பன. கூழ்- உணவைத் தருவதனால் பயிருக்குக் கூழ் என்பது காரணப் பெயர். நன்றிசாம் நன்றுஅறியா தார்முன்னர்; சென்ற விருந்தும் விருப்பிலார் முன்சாம்: அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண்அறியா தார்முன்னர்: ஊடல்சாம் ஊடல் உணரார் அகத்து. 45 பொருள்:- நன்று- நன்மையின் தன்மையை. அறியாதார் முன்னர்- தெரிந்து கொள்ளாதவரிடம். நன்றிசாம்- செய்த நன்றி கெடும். விருப்பு இலார்முன்- அன்பில்லாதவரிடம். சென்ற விருந்தும்- போன விருந்தினரும். சாம்- உள்ளம் வருந்துவர். பண் அறியாதார் முன்னர்- இசையை அறியா தாரிடத்தில். அரும் புணர்ப்பின்- சிறந்த இசையமைந்திருக்கின்ற. பாடல் சாம்- பாட்டுக்கள் கெடும். ஊடல் உணரார் அகத்து- ஊடலினால் வரும் இன்பத்தை அறியாத கணவரிடத்தில். ஊடல்சாம்- ஊடுதலால் பயன் இல்லை; ஊடல் வீணாகும். கருத்து:- நன்மையை அறியாதவரிடம் செய்ந்நன்றி மறையும். அன்பற்றவரைச் சேர்ந்த விருந்தினர் வருந்துவர். இசையறியாதார்முன் இசைப்பாடல் பயன் இல்லை. ஊடலின் இனிமையை உணராதவரிடம் ஊடுவதால் பயன் இல்லை. விளக்கம்:- முன், அகம் என்பன இடம் என்ற பொருளில் வந்தன. சாரும் என்ற சொல், சாம் என்று வந்தது. நன்றி சாம் என்றது, நன்றி மறக்கப்படும் என்ற பொருளில் வந்தது. நாற்றம் உரைக்கும் மலர்உண்மை; கூறிய மாற்றம் உரைக்கும் வினைநலம்; தூக்கின் அகம்பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம் முகம்போல முன்உரைப்பது இல். 46 பொருள்:- மலர் உண்மை- மலர் உண்டு என்பதை. நாற்றம் உரைக்கும்- அதன் மணமே சொல்லிவிடும். வினை நலம்- ஒருவனது காரியத்தின் நன்மையை. கூறிய- அவன் சொல்லிய. மாற்றம் உரைக்கும்- சொல்லே தெரிவித்து விடும். தூக்கின்- ஆராய்ந்தால். அகம் பொதிந்த- உள்ளத்திலே மறைந்திருக்கின்ற. தீமை- தீமைகளை. மனம் உரைக்கும் - அவன் மனமே அவனுக்குச் சொல்லி விடும். முன்னம்- ஒருவனது எண்ணத்தின் குறிப்பை. முகம் போல- அவனது முகத்தைப் போல. முன் உரைப்பது- முதலில் தெரிவிப்பது. இல்-வேறு ஒன்றும் இல்லை. கருத்து:- மணத்தால் மலர் இருப்பதை அறியலாம். ஒருவன் சொல்லால், அவன் செயலின் தன்மையை அறியலாம். ஒருவன் மனத்தில் உள்ள தீமை அவனையே வருத்தும். உள்ளக் கருத்தை முகம் காட்டி விடும். விளக்கம்:- நாற்றம்- நல்ல மணம். இன்று இச்சொல் துர்நாற்றம் என்ற பொருளில் வழங்குகின்றது. பொதிந்த- மூடிய. முன்னம்- எண்ணம். மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் தவம்இலார் இல்வழி இல்லை; - தவமும் அரசன் இலாவழி இல்லை; அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல். 47 பொருள்:- மழை இன்றி- மழை இல்லாமல். மாநிலத் தார்க்கு- பெரிய இவ்வுலக மக்களுக்கு. இல்லை-வாழ்வில்லை. மழையும்- அந்த மழையும். தவம் இலார்- தவம் செய்யாதவர்கள். இல்வழி- வாழாத இடத்தில். இல்லை- பெய்தல் இல்லை. தவமும்- மழைக்குக் காரணமான தவமும். அரசன் இலாவழி- நீதியுடன் ஆளும் அரசன் இல்லாத இடத்தில். இல்லை- பெய்வதில்லை. அரசனும்- அந்த அரசனும். இல்வாழ்வார்- குடிமக்கள். இல்வழி- இல்லாத இடத்தில். இல்- இல்லை. கருத்து:- மழையின்றேல் உலகம் வாழாது தவசிகள் இல்லாவிடில் மழையில்லை; செங்கோல் அரசன் இன்றேல் தவம் இல்லை; குடிகள் இல்லாவிட்டால் செங்கோல் அரசும் இல்லை. விளக்கம்:- உலகைக் காப்பது மழை; மழை பெய்வது தவத்தால் தவம் வளர்வது செங்கோல் அரசனால்; அரசன் வாழ்வது குடிமக்களால். குடிமக்கள் வாழ்வுதான் உலக நன்மைக்கு அடிப்படையாகும். போதினால் நந்தும் புனைதண்தார்; மற்றதன் தாதினால் நந்தும் சுரும்பெல்லாம்; - தீதில் வினையினால் நந்துவர் மக்களும்; தத்தம் நனையினால் நந்தும் நறா. 48 பொருள்:- புனை - கட்டப்படும். தண்தார் - குளிர்ந்த மாலை. போதினால் - மலர்களால். நந்தும்- சிறந்து விளங்கும். கரும்பு எல்லாம்- வண்டுகள் எல்லாம். அதன் தாதினால் - அம்மலரின் தேனால். நந்தும் - சிறந்து விளங்கும். மக்களும் - உலகத்து மனிதர்களும். தீதுஇல் வினையினால் - குற்றமற்ற நல்ல காரியங்களால். நந்துவர் - சிறந்து விளங்குவார்கள். நறா- தேன்கள். தம்தம் - தாம் உற்பத்தியாகும். நனையினால்- மலர்களினால். நந்தும் - சிறந்து விளங்கும். கருத்து:- மலர்களினால் மாலைக்கு மதிப்பு. மலரின் தேனால் வண்டும் சிறக்கும். தங்கள் நற்செயல்களால் மக்கள் சிறப்படைவர். தேன் அது தோன்றிய மலரைப் பொறுத்து இனிமையும் சிறப்பும் பெறும். விளக்கம்:- போது- மலர்; நனை- அரும்பு; இங்கு மலருக்குப் பெயராக வந்தது. தாது- தேன்; மகரந்தம் என்றும் கூறுவர். நறா- தேன். நந்துதல்- சிறத்தல்; உயர்வடைதல். மற்று; அசைச்சொல். சிறந்தார்க்கு அரிய செறுதல்; எஞ் ஞான்றும் பிறந்தார்க்கு அரிய துணைதுறந்து வாழ்தல்; வரைந்தார்க்கு அரிய வகுத்தூண்; இரந்தார்க்கு ஒன்று இல்என்றல் யார்க்கும் அரிது. 49 பொருள்:- சிறந்தார்க்கு- நட்பிலே சிறந்தவர்க்கு செறுதல்- தம் நண்பரைச் சினந்து நீக்குவது போன்ற செயல்கள். அரிய- இல்லை. துணை துறந்து- தம் சுற்றத்தாரை விட்டு நீங்கி. வாழ்தல்- தனியாக இன்புற்று வாழ்தல். எஞ்ஞான்றும்- எந்நாளும். பிறந்தார்க்கு- நற்குடியிலே பிறந்தவர்க்கு. அரிய - இல்லை. வரைந்தார்க்கு- தாம் உண்பது இவ்வளவுதான் என்று அளவிட்டுக் கொண்டு வாழ்வோர்க்கு. வகுத்து ஊண் - பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும் தன்மை. அரிய- இல்லை. இரந்தார்க்கு- தம்மிடம் வந்து ஒன்றைக் கேட்டவர்க்கு. ஒன்று இல் என்றல்- ஒன்றும் இல்லை என்று சொல்லுதல். யார்க்கும்- இரக்கமுள்ள யாருக்கும். அரிது- இல்லை. கருத்து:- சிறந்த நண்பர்கள் பிரியமாட்டார்கள். நற்குடியில் பிறந்தோர் உற வினர்க்கு உதவாமல் வாழ மாட்டார். தமக்கும் அளவோடு செலவழிப் போர்கள் பிறர்க்கு உதவ மாட்டார்கள். இரக்கம் உள்ளவர் இரந்தார்க்கு இல்லை என்று மறுக்கமாட்டார்கள். விளக்கம்:- எஞ்ஞான்றும் என்பதை சிறந்தார், பிறந்தார், வரைந்தார், யார்க்கும் என்பவைகளோடு சேர்த்தும் பொருள் கொள்ளலாம். செறுதல்- கோபித்தல். துணை - சுற்றம். வரைதல்- அளவிடுதல். இரைசுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்; உரைசுடும் ஒண்மை இலாரை- வரை கொள்ளா முன்னை ஒருவன் வினைசுடும்; வேந்தனையும் தன்அடைந்த சேனை சுடும். 50 பொருள்:- இரை- உணவானது. இன்புறா- சுகம் இல்லாத (பிணியுள்ள). யாக்கையுள்பட்டால்- உடம்பினுள் சென்றால். சுடும்- துன்பந்தரும். ஒண்மை இலாரை- அறிவற்றவரை. உரை சுடும்- அவர் சொல்லே அவரைத் துன்புறுத்தும். ஒருவன் - ஒருவனது. வரை கொள்ளா-அறத்தின் எல்லையைப் பெறாத. முன்னை வினை- முன் செய்த தீவினை. சுடும்- இப்பிறப்பிலே வந்து துன்புறுத்தும். வேந்தனையும்- அறநெறியில் நில்லாத அரசனையும். தன் அடைந்த- தன்னைச் சேர்ந்த. சேனை சுடும்- சேனையே கொன்று விடும். கருத்து:- நோயாளி உண்ணும் உணவு துன்பம் தரும். அறிவில்லாரை அவர் சொல்லே துன்புறுத்தும். ஒருவன் முன்செய்த தீவினை அவனை இப்பிறப்பில் துன்புறுத்தும். அறந்தவறும் அரசனை அவன் படையே கொல்லும். விளக்கம்:- ஒண்மை- அறிவு. யாக்கை- உடம்பு. அரசன் சர்வாதிகாரி யானாலும், அக்கிரமம் செய்வானாயினும், அவன் படையே அவனை அழிக்கும்; வேறு நல்ல அரசனை ஆதரிக்கும். இது முற்காலமுறை. வரை- எல்லை, அளவு. எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை; உள்ளற் பொருளது உறுதிச்சொல்; - உள்அறிந்து சேர்தல் பொருளது அறநெறி; பன்னூலும் தேர்தற் பொருள பொருள். 51 பொருள்:- ஒருவனை இகழ்தல்- ஒருவனை இகழ்ந்து பேசுதல். எள்ளற் பொருளது- பிறரால் வெறுக்கத்தக்க விஷயமாகும். உறுதிச்சொல்- ஒருவன் சொல்லும் உறுதி மொழி. உள்ளல் பொருளது- அவனை நண்பர்கள் நினைக்கும் சிறப்புடையதாகும். உள் அறிந்து- உள்ளத்தால் நன்றாக எண்ணி உணர்ந்து. சேர்தல் பொருளது- அடைவதற்குரிய பொருள். அறநெறி- தருமநெறி யாகும். பல் நூலும்- பல நூல்களையும். தேர்தல் பொருள- ஆராய்ந்து தெளிவனவே. பொருள்- உண்மைப் பொருளாகும். கருத்து:- பிறரை இகழ்தல் வெறுக்கத்தக்கது. ஒருவனது உறுதிமொழி யைக் கொண்டு அவனை நண்பனாகக் கொள்ளலாம். அறநெறியே பின்பற்றுவதற்குரிய நெறி. பல நூல்களையும் ஆராய்ந்து தெளிவதே உண்மைப் பொருள். விளக்கம்:- எள்ளல்- வெறுத்தல். உள்ளல்- நினைத்தல். உள்- உள்ளம், அகம், மனம், பல நூல்களையும் கற்று உண்மை காண்பது மக்கள் கடமை என்பதை இச்செய்யுளின் நான்காவது நீதி வலியுறுத்திற்று. யாறுள் அடங்கும் குளம்உள; வீறுசால் மன்னர் விழையும் குடிஉள; - தொன்மரபின் வேதம் உறுவன பாட்டுள; வேளாண்மை வேள்வியோடு ஒப்ப உள. 52 பொருள்:- யாறு- ஆற்று வெள்ளம் முழுவதும். உள் அடங்கும்- தன்னுள் அடங்கக் கூடிய. குளம்உள- பெரிய குளங்களும் உண்டு. வீறுசால்- பெருமை நிறைந்த. மன்னர் விழையும்- அரசரால் விரும்பப்படுகின்ற. குடிஉள- அறிவிலும் செல்வத்திலும் வீரத்திலும் சிறந்த குடிமக்களும் இருக்கின்றனர். தொன்மரபின் - பழமையான மரபையுடைய. வேதம் உறுவன- வேதக் கருத்துக்களைக் கொண்ட. பாட்டுஉள- பாட்டுக்களும் உண்டு. வேளாண்மை- பிறருக்கு உதவும் வகைகள். வேள்வியோடு- யாகங்களுடன். ஒப்பஉள- ஒத்தனவாக இருக்கின்றன. கருத்து:- ஆற்று வெள்ளத்தை அடக்கிக் கொள்ளும் குளங்கள் உண்டு. அரசர் விரும்பும் குடிகளும் உள்ளனர். வேதக் கருத்தமைந்த பாடல்கள் உண்டு. வேள்விக்குச் சமமான ஈகைகள் உண்டு. விளக்கம்:- வீறு - பெருமை. சால்- நிறைவு. மரபு - பழக்க வழக்கங்கள். வேள் ஆண்மை- உதவி செய்வதை ஆளுந்தன்மை; முயற்சியென்றும் கூறலாம். பிறருக்கு உதவுதல் வேள்வியோடு ஒக்கும். எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்; ஒருதொடையான் வெல்வது கோழி;- உருவோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்என்ப; சேனைச் செறிவுடையான் சேனா பதி. 53 பொருள்:- எருதுடையான்- உழவு மாடுகள் வைத் திருப்பவன். வேளாளன்- பயிர்த் தொழில் செய்யும் வேளாளன் ஆவான். ஏலாதான்- பழியை ஏற்றுக் கொள்ளாதவனாகிய. பார்ப்பான்- பார்ப்பானைப் போல. ஒரு தொடையான்- ஒரே எடுப்பில். வெல்வதுகோழி- வெற்றி பெறுவதே சண்டைக் கோழியின் இயல்பு. உருவோடு- அழகுடன். அறிவுடையாள்- இல்லறத்தை நடத்தும் அறிவும் உடையவளே. இல்வாழ்க்கை- குடும்ப வாழ்வுக்கு ஏற்ற பெண் என்று சொவ். சேனை- தனது படையுடன். செறிவுடையான்- ஒற்றுமை யுடன் வாழ்கின்றவனே. சேனாபதி- சிறந்த சேனைத் தலைவன். கருத்து:- வேளாளனுக்கு உழவுமாடு சிறந்த செல்வம். ஒரே எடுப்பில் வெல்வதே சிறந்த சண்டைக் கோழி. அழகும் அறிவும் உடையவளே இல்லறத்திற்கேற்ற பெண். படையுடன் ஒன்று பட்டிருப்பவனே சேனைத் தலைவன் ஆவான். விளக்கம்:- கோழிக்குப் பார்ப்பான் உவமை. பழியை ஏற்றுக் கொள்ளாதவனே பார்ப்பான் என்று தனிப் பொருளாகக் கூறினால், இப்பாடலில் ஐந்து விஷயங்கள் கூறுவதாக அமையும். இவ்வாறு பொருள் சொல்வது நான்மணிக்கடிகை என்னும் பெயருக்குப் பொருந்தாது. தொடை- தொடுப்பு, எடுப்பு. செறி- ஒற்றுமை. யானை உடையார் கதன்உவப்பர்; மன்னர் கடும்பரிமாக் காதலித்து ஊர்வர்;- கொடும்குழை நல்லாரை நல்லவர் நாண்உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு. 54 பொருள்:- யானை உடையார்- யானையை உடைய போர் வீரர்கள். கதன் உவப்பர் - அதன் கோபத்தை விரும்புவர். மன்னர்- அரசர். கடும் பரிமா - விரைந்து செல்லும் குதிரையை. காதலித்து- விரும்பி. ஊர்வர் - அதன்மேல் ஏறிச் செல்வர். கொடும் குழை- வளைந்த காதணியை உடைய. நல்லாரை- பெண்களை. நல்லவர்- நல்ல குணங்களையுடையவர்கள். நாண் உவப்பர்- நாணம் உள்ளவர்களாயிருந்தால் விரும்புவார்கள். அல்லாரை- நாணம் இல்லாதவரை. அல்லார்- தீயோர். உவப்பது- விரும்புவதற்குக் காரணம். கேடு- அவர்களின் கெட்ட ஒழுக்கமேயாகும். கருத்து:- யானை வீரர்கள் யானையின் சினத்தை விரும்புவர். அரசர்கள் வேகமாக ஓடும் குதிரையின் மேல் ஏறிச் செல்ல விரும்புவர். நாணம் உள்ள பெண்களைப் பெரியோர் விரும்புவர். நாணமற்ற பெண்களின் கெட்ட ஒழுக்கத்தைத் தீயோர் விரும்புவர். விளக்கம்:- கதம்- கோபம். கதன் என வந்தது; மகரத்துக்கு னகரம் போலி. கடுமை- விரைவு, வேகம். கொடும்- வளைவு. கேடு- கெட்ட ஒழுக்கம். கண்ணின் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறர்இல்லை; மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல். 55 பொருள்:- கண்ணின்- கண்ணைப்போல. சிறந்த- மேலான. உறுப்பு இல்லை- அவயவம் வேறு ஒன்றும் இல்லை. கொண்டானின்- குலமகளுக்குத் தன்னை மணந்து கொண்ட கணவனைவிட. துன்னிய - நெருங்கிய. கேளிர்- உறவினர். பிறர்இல்லை- வேறு யாரும் இல்லை. மக்களின் - பெற்றோர்க்குத் தம் மக்களைவிட. ஒண்மையவாய்- சிறந்தனவாக. சான்ற- அமைந்த. பொருள் இல்லை. ஈன்றாளோடு - தாயுடன். எண்ண- சமமாக நினைக்கத்தக்க. கடவுளும் இல்- எந்தக் கடவுளும் இல்லை. கருத்து:- கண்ணே சிறந்த உறுப்பு. கணவனே சிறந்த உறவு. பெற்றோர்க்கு மக்களே சிறந்த பொருள். தாயே சிறந்த செல்வம். விளக்கம்:- ஒண்மை என்பது ஒளி. இங்கு சிறப்பு என்னும் பொருளில் வந்தது. கற்றன்னர் கற்றாரைக் காதலர்; கண்ணோடார் செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர்- தெற்றென்ன உற்றது உரையாதார்; உள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்அறிவி னார். 56 பொருள்:- கற்றாரை- கற்றவர்களை. காதலர்- விரும்புகின்றவர். கற்று அன்னர்- கற்று அறிந்தவர்களை ஒப்பார்கள். கண் ஓடார்- பிறர்பால் இரக்கங் காட்டாத வன்னெஞ்சர். செற்று அன்னர்- துன்பம் செய்தாரை ஒப்பர்- தெற்றென- தெளிவாக அறியும்படி. உற்றது உரையாதார்- உண்மையைச் சொல்லாதவர்கள். செற்றாரைச் சேர்ந்தவர்- பகைவரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். புல் அறிவினார் - கீழான அறிவுள்ளவர்கள். உள்கரந்து- உள்ளே மறைந்து. பாம்பு உறையும்- பாம்பு வாழ்கின்ற. புற்று அன்னர்- புற்றை ஒப்பார்கள். கருத்து:- கற்றோரை விரும்புவோர் கற்றவர்க்குச் சமம். இரக்கம் அற்றவர் துன்பம் செய்வார். உண்மை சொல்லாதார் பகைவரைச் சேர்ந்தவர் ஆவர். அற்பபுத்தி படைத்தவர் பாம்பு வாழ் புற்றுப் போன்றவர். விளக்கம்:- காதல்- விருப்பம். கண்ணோட்டம்- தாட்சண்யம். இரக்கம். செறுதல்- துன்புறுத்தல். உற்றது- நடந்தது. உண்மை. அற்பருக்குப் பாம்பு மறைந்திருக்கும் புற்று உவமை. மாண்டவர் மாண்ட வினைபெறுப; வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே;- யாண்டும் பிறப்பார் பிறப்பார் அறன்இன் புறுவர்; துறப்பார் துறக்கத் தவர். 57 பொருள்:- மாண்டவர்- அறிவில் சிறந்தவர். மாண்ட வினை- சிறந்த காரியத்தை. பெறுப- செய்யும் ஆற்றலைப் பெறுவர். வேண்டாதார் - அறிவின் பெருமையை விரும்பாதவர். வேண்டா வினையும்- தாமும் பிறரும் விரும்பாத தீவினையையும். பெறுபவே- செய்யப் பெறுவார்கள். யாண்டும்- எப்பொழுதும். பிறப்பார் - உயர்ந்த குடியிலே பிறப்பவர்கள். பிறப்பு ஆர்- தம் பிறப்பிற்கு ஏற்ற. அறன் இன்புறுவர்- கடமையைச் செய்து இன்பம் அடைவார்கள். துறப்பார்- இவ்வுலகப் பற்றை விடுகின்றவர். துறக்கத்தவர்- மோட்சத்தைப் பெறுவதற்கு உரியவர். கருத்து:- அறிவுடையோர் சிறந்த செயலைச் செய்வர். அறிவற்றோர் தீமை செய்வர். உயர் குடியில் பிறந்தவர் தம் கடமையைச் செய்வர். ஆசையை விட்டவர் மோட்சம் பெறுவர். விளக்கம்:- மாண்டவர்- சிறந்தவர்; அறிவில் சிறந்தவர். வேண்டுதல்- விரும்புதல். பிறப்பு ஆர்- குடிப்பிறப்பொழுக் கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது முன்னோர் கொள்கை. இதை ‘பிறப்பொழுக்கம்’ என்று வள்ளுவர் கூறினார். என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்; என்றும் பிணியும் தொழில்ஒக்கும்;- என்றும் கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர். 58 பொருள்:- என்றும்- எப்பொழுதும். நாளும்- நட்சத்திரங் களும். இரு சுடரும்- சூரிய, சந்திரர்களும். உளஆகும்- நிலைத்திருப்பனவாம். என்றும்- எப்பொழுதும். பிணியும்- காரியங்களுக்குத் தடையான துன்பமும். தொழில்- தொழில்களும். ஒக்கும்- ஒரு தன்மையில் இருக்கும். என்றும் கொடுப்பாரும்- எப்பொதும் இல்லை என்னாமல் கொடுப்பவரும். கொள் வாரும்- ஏற்றுக் கொள்பவரும். அன்னர்- அவ்வாறே இருப்பர். பிறப்பாரும் சாவாரும்- பிறக்கின்றவர்களும் இறக்கின்றவர் களும். என்றும் உளர்- எந்நாளும் உள்ளனர். கருத்து:- நட்சத்திரங்கள், சந்திர - சூரியர்கள் என்றும் இருப்பவை. துன்பமும் முயற்சியும் என்றும் உண்டு. ஈவோரும் இரப்போரும் என்றும் உள்ளனர். பிறப்போரும் சாவோரும் என்றும் உண்டு. விளக்கம்:- என்றும் - எந்நாளும். பிணி- துன்பம், நோய். இப்பாடல் உலகின் இயல்பை உரைத்தது. இனிதுஉண்பான் என்பான் உயிர்கொல்லாது உண்பான்; முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்; தனியன் எனப்படுவான் செய்தநன்று இல்லான்; இனியன் எனப்படுவான் யார்யார்க்கே யானும் முனியா ஒழுக்கத் தவன். 59 பொருள்:- இனிது உண்பான் என்பான்- இனிமையாக உண்பவன் என்பவன். உயிர் கொல்லாது- பிற உயிரைக் கொன்று தின்னாமல். உண்பான்- காய்கறிகளை உண்பவன். முனிதக்கான் என்பான் - எல்லோராலும் வெறுக்கத்தக்கவன் என்பவன். முகன் ஒழிந்து- முகமலர்ச்சியில்லாமல் கடு கடுக்கும் முகத்துடன். வாழ்வான்- வாழ்கின்றவன். தனியன் எனப்படுவான்- தனியாக ஒதுக்கத்தக்கவன் என்பவன். செய்த- தன்னால் செய்யப்பட்ட. நன்று இல்லான்- நன்மை ஒன்றும் இல்லாதவன். இனியன் எனப்படுவான்- நல்லவன் என்று சொல்லப்படுகின்றவன். யார்யார்க்கே யானும்- எல்லோரிடத்திலும். முனியா- அவர்கள் வெறுக்காதபடி. ஒழுக்கத்தவன்- நடந்து கொள்ளும் நடத்தையே உடையவன். கருத்து:- புலால் உண்ணாமல் தாவர உணவுண்பவனே நல்ல உணவுள்ளவன். முகத்துள் கடுகடுப்புள்ளவன் வெறுக்கத் தக்கவன். நன்மை செய்யாதவன் மனிதருள் ஒதுக்கப்பட்டவன். யாரும் வெறுக்காதபடி நடப்பவன் நல்லவன். விளக்கம்:- இது மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று கூறிய பாடல். இனிது- இனிமையாக, நன்றாக. முனிதல்- வெறுத்தல். தனியன்- தனிப்பட்டான், ஒதுக்கப்பட்டவன். ஈத்துண்பான் என்பான் இசைநடுவான்; மற்றவன் கைத்துண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற நகையாகும் நண்ணார்முன் சேறல்; பகையாகும் பாடுஅறியா தானை இரவு. 60 பொருள்:- ஈத்து உண்பான் என்பான்- பிறர்க்குக் கொடுத்துத் தானும் உண்பவனே. இசை நடுவான்- இவ்வுலகில் புகழை நிறுத்துகின்றவன். மற்றவன் - மற்றவன் ஈகின்றவனுடைய. கைத்து உண்பான்- கைப்பொருளை ஏற்று உண்பவன். காங்கி எனப்படுவான்- பேராசைக்காரன் என்று சொல்லப்படுவான். நண்ணார்முன் - பகைவரிடம். சேறல் - ஒன்றை விரும்பிச் செல்லுதல். தெற்ற- சந்தேகம் இல்லாமல். நகையாகும் - சிரிப்புக் குரியதாகும். பாடு அறியாதானை- தகுதி அறியாதவனிடம் போய். இரவு- ஒன்றைக் கேட்டல். பகையாகும்- பகைமைக்கே இடமாகும். கருத்து:- பிறர்க்குக் கொடுத்துண்பவன் புகழ் பெறுவான். கொடுப்போரிடம் வாங்கியுண்பவன் பேராசைக்காரன். பகைவரிடம் ஒன்றை விரும்பிச் செல்லுதல் பரிகாசத்துக்கு இடமாகும். தகுதியறியாதவனிடம் யாசித்தல் பகைமை வளர இடமாகும். விளக்கம்:- காங்கி- பேராசைக்காரன். தெற்ற- தெளிவாக. நண்ணார்- பகைவர். சேறல்- செல்லுதல். பாடு- பெருமை, தகுதி. ஈந்து என்ற சொல், ஈத்து என நின்றது. வலித்தல் விகாரம். நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்புஅழல்; சேர்ந்து வழுத்த வரம்கொடுப்பர் நாகர்;- தொழுத்திறந்து கன்றூட்ட நந்தும் கறவை; கலம்பரப்பி நன்றூட்ட நந்தும் விருந்து. 61 பொருள்:- நெருப்பு அழல்- வேள்வித் தீயின் சுடர். நெய்விதிர்ப்ப- நெய்யைத் தெளிப்பதனால். நந்தும்- ஓங்கி எரியும். நாகர்- தேவர்கள். சேர்ந்து வழுத்த- தம்மையடைந்து வாழ்த் தினால். வரம் கொடுப்பர்- வாழ்த்துவோர்க்கு வேண்டும் வரம் கொடுப்பார்கள். கறவை- பசுவானது. தொழுத்திறந்து- தொழுவைத் திறந்துவிட்டு. கன்று ஊட்ட- கன்றை ஊட்ட விட்டால்தான். நந்தும்- பால் சுரப்புச் சிறக்கும். விருந்து- விருந்தினர். கலம் பரப்பி- உண்கலமாகிய இலையை விரித்து. நன்று ஊட்ட- நன்றாக உண்பித்தால். நந்தும்- மகிழ்ச்சியடைவர். கருத்து:- நெய்யால் யாகத்தீ விளங்கும். தேவர்கள் வாழ்த்தினால்தான் வரம் கொடுப்பர். கன்று ஊட்டினால் பசு பாலைச் சுரக்கும். நன்றாக உண்பித்தால் விருந்தினர் மகிழ்வர். விளக்கம்:- நந்தும் என்ற சொல். ஓங்கும், சிறக்கும், மகிழும் என்ற பொருள்களில் வந்தது. பல பொருள் ஒரு சொல். தொழு- கொட்டகை; மாடுகட்டும் இடம். கலம்- பாத்திரம்; இங்கு இலையைக் குறித்தது. பழிஇன்மை மக்களால் காண்க; ஒருவன் கெழியின்மை கேட்பில் அறிக; பொருளின் நிகழ்ச்சியால் ஆக்கம் அறிக; புகழ்ச்சியால் போற்றாதார் போற்றப் படும். 62 பொருள்:- பழி இன்மை- ஒருவனிடம் பழிக்கத் தக்க தீமை இல்லாமையை. மக்களால் காண்க- அவனுடைய மக்களால் அறிக. ஒருவன் கெழிஇன்மை- ஒருவனுடைய நட்பில்லாமையை. கேட்டில் - தனது வறுமையால். அறிக - அறிந்து கொள்ளுக. பொருளின் நிகழ்ச்சியால் - ஒருவனுக்கு வரும் பொருள் வரவைக் கொண்டு. ஆக்கம் அறிக - அவனுடைய செல்வத்தைத் தெரிந்து கொள்ளுக. புகழ்ச்சியால் - பிறர் புகழும்படி நடப்பதனால். போற்றாதார் - அவன் பகைவராலும். போற்றப்படும் - கொண்டாடப்படும். கருத்து:- பாவம் செய்யாதவனே நன்மக்களைப் பெறுவான். வறுமை வந்தால்தான் நண்பன் தன்மையை அறியலாம். ஒருவன் பொருள் வரவைக் கொண்டு அவன் செல்வத்தை அறியலாம். புகழுள்ளவன் பகைவராலும் மதிக்கப்படுவான். விளக்கம்:- பழி- பாவம்; பாவமாவது நடுநிலை தவறி நடப்பது. கேடு- வறுமை. நிகழ்ச்சி- நடப்பு, வரவு. போற்றாதார்- பகைவர். கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணின் உருஇன்றி மாண்ட உளவாம்;- ஒருவழி நாட்டுள்ளும் நல்ல பதிஉள; பாட்டுள்ளும் பாடு எய்தும் பாடல் உள. 63 பொருள்:- கண் உள்ளும்- மக்களின் கண்களுக்குள்ளும். காண்பு உழி- காணும்போது. காதற்றுஆம்- விரும்பப்படும் தன்மையுள்ள கண்ணும் உண்டு. பெண்ணின்- பெண் மக்களிடம். உருஇன்றி- அழகில்லாவிட்டாலும். மாண்டஉளஆம்- சிறந்த குணங்கள் இருப்பனவாகும். நாட்டுள்ளும்- வளமற்ற நாட்டிலும். ஒரு வழி- ஓர் பகுதியில். நல்லபதி உள- நல்ல செழிப்புள்ள ஊர்களும் உண்டு. பாட்டுள்ளும்- பாடல்களிலே. பாடு எய்தும்- என்றும் பெருமையுடன் விளங்கும். பாடல் உள- பாட்டுக்களும் இருக்கின்றன. கருத்து:- கண்களில் விரும்பத்தக்க கவர்ச்சியுள்ள கண்ணும் உண்டு. அழகற்ற பெண்களில் சிறந்த குணமுள்ள பெண்களும் உண்டு. வறண்ட நாட்டில் செழிப்புள்ள ஊர்களும் உண்டு. பாடல்களில் அழியாத பாடல்களும் உண்டு. விளக்கம்:- காண்புழி- காணும்போது, ஆராயுமிடத்து. உரு- அழகு. மாண்ட - சிறந்த குணங்கள். நல்ல- வளமுள்ள. பாடு- பெருமை. திரிஅழல் காணின் தொழுப; விறகின் எரிஅழல் காணின் இகழ்ப; ஒருகுடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக்; கற்றான் இளமை பாராட்டும் உலகு. 64 பொருள்:- திரி அழல் காணில்- திரியால் எரியும் விளக்காகிய நெருப்பைக் கண்டால். தொழுப- வணங்குவார்கள். விறகின்- விறகிலே. எரி அழல் காணின்- எரிகின்ற நெருப்பைக் கண்டால். இகழ்ப- அதை மதிக்க மாட்டார்கள். ஒரு குடியில்- ஒரு குடும்பத்துள் பிறந்தோருள். கல்லாது மூத்தானை- கல்வியின்றி மூத்திருப்பவனை. கைவிட்டு - மதிக்காமல். கற்றான்- கல்வி கற்றவனுடைய. இளமை - இளம் பருவத்தையே. உலகு பாராட்டும்- உலகத்தார் கொண்டாடுவர். கருத்து:- விளக்குச் சிறியதாயினும் வணங்குவர்; விறகு நெருப்புப் பெரிதாயினும் மதிக்கமாட்டார்கள். கல்லாதான் மூத்தோனாயினும் மதிக்கமாட்டார்; கற்றோன் இi ளஞனாயி னும் அவனை மதிப்பர். விளக்கம்:- கற்றவனுக்கு விளக்கும், கல்லாதவனுக்கு விறகு நெருப்பும் உவமைகளாக வந்தன. திரி- திரித்ததனால் திரி என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு பொருளையும் அதன் தன்மையைக் கொண்டே மதிக்க வேண்டும் என்று கூறியது இப்பாட்டு. கைத்துடையான் காம்உற்றது உண்டாகும்; வித்தின் முளைக்குழாம் நீர்உண்டேல் உண்டாம்; திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்றவள் துன்புறுவாள் ஆகின் கெடும். 65 பொருள்:- கைத்துடையான்- கையிலே பொருள் உள்ளவனுக்கு. காம் உற்றது- அவன் விரும்பியது. உண்டாகும்- கிடைக்கும். வித்தின் முளைக்குழாம்- விதையின் முளைக்கூட்டம். நீர் உண்டேல்- விதைத்த பாத்தியில் நீர் இருந்தால்தான். உண்டாம்- தோன்றும். திருக்குழாம்- செல்வக்குவியல். ஒண் செய்யாள்- ஒளி பொருந்திய இலக்குமி. பார்த்துறின்- கண்பார்த் தால்தான். உண்டாகும்- தோன்றும். மற்றவள்- அவ்விலக்குமி. துன்புறுவாளாகின்- வெறுப்பாளாகில். கெடும்- உள்ள செல்வமும் போய்விடும். கருத்து:- செல்வம் உள்ளவன் விரும்பியதைப் பெறுவான். நீர்ப்பசை இருந்தால்தான் விதைகள் முளைக்கும்; இலக்குமியின் கிருபையிருந்தால்தான் செல்வம் உண்டு; அவள் கிருபை யின்றேல் உள்ள செல்வமும் ஒழியும். விளக்கம்:- காமுறல்- விரும்புதல். குழாம்- கூட்டம், கும்பல், குவியல். ஒண் செய்யாள்- ஒளிபொருந்திய திரு. ஒளி- புகழ் என்னும் பொருளில் வந்தது. துன்புறுதல்- பிணங்குதல். ஊன்உண்டு உழுவை நிறம்பெறூஉம்; நீர்நிலத்துப் புல்லினால் இன்புறூஉம் காலேயம்; - நெல்லின் அரிசியால் இன்புறூஉம் கீழ்எல்லாம்; தத்தம் வரிசையால் இன்புறூஉம் மேல். 66 பொருள்:- ஊன்உண்டு - மாமிசத்தை உண்டு. உழுவை- புலி. நிறம்பெறூஉம்- நல்ல நிறத்தை அடையும். நீர் நிலத்து- நீர் வளம் உள்ள நிலத்தில் வளர்ந்த. புல்லினால்- புல்லை மேய்வ தனால். காலேயம்- பசுக்கள். இன்புறூஉம்- இன்பம் அடையும். கீழ் எல்லாம் - கீழ்மக்கள் அனைவரும். நெல்லின் அரிசியால்- நெல்லரிசியின் சோற்றால். இன்புறூஉம்- இன்பம் அடையும். மேல்- மேன் மக்கள். தம்தம்- தங்கள்தங்கள். வரிசையால்- பெருமையால். இன்புறூஉம்- இன்பமடைவார்கள். கருத்து:- புலி ஊனைத்தின்று மகிழும். பசு புல்லை மேய்ந்து இன்ப மடையும். கீழோர் சோற்றால் இன்பம் அடைவர். மேலோர் மதிப்பால் இன்புறுவர். விளக்கம்:- பெறூஉம்; உறூஉம்; உயிர் அளபெடைகள். காலேயம்- கால்நடை என்றும் கூறலாம். கீழ்- கீழான குணம் உள்ளவர். மேல்- உயர்ந்த குணம் உள்ளவர். பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என்பெறினும் முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு; - என்னும் அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம்; தவாஆம் அவாஇலார் செய்யும் வினை. 67 பொருள்:- பின்- தொடங்கிய பிறகு. அதிர்க்கும்- நடுங்கச்செய்யும். செய்வினை- காரியங்கள். பின்னஆம்- முன்பே ஆராய்ந்து செய்யாதவர்க்குப் பின்புதான் தெரியும். என்பெறினும் - என்ன நன்மையைப் பெறுவதாயினும். முன்னம்- ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பே. அறிந்தார்கட்கு- ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு. முன்ன ஆம்- அதன்பயன் முன்பே தெரியும். அடைந்தார்கட்கு- ஒரு பொருளை விரும்பிப் பெற்றவர்களுக்கு. உள்ளம்- அவர்கள் மனம். என்னும்- எப்படி யாயினும். அவாஆம்- அப்பொருளின் மேல் ஆசையுண்டாகும். அவா இலார்- ஆசையில்லாதவர். செய்யும் வினை- செய்யும் காரியம். தவாஆம்- கெடுவதில்லை. கருத்து:- காரியத்தைத் தொடங்குமுன் ஆராயாதவன் அதனால் துன்புறுவான். தொடங்குமுன் ஆராய்வோர், அதன் பயனை அறிவர். விருப்பத்துடன் ஒரு பொருளைப் பெற்றவர் மேலும் மேலும் அதன்மேல் ஆசை வைப்பர். பற்றற்றவர்கள் செய்யும் காரியம் வெற்றிகரமாக முடியும். விளக்கம்:- அதிர்தல்- நடுங்குதல். அதிர்க்கும்- துன்பம் செய்யும். அவா- ஆவல். அவாவுதல் என்னும் சொல் அவா என நின்றது. கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்; வைத்தாரின் நல்லர் வறியவர்;- பைத்தெழுந்து வைதாரின் நல்லர் பொறுப்பவர்; செய்தாரின் நல்லர் சிதையா தவர். 68 பொருள்:- கைத்துஉண்டாய்- கையிலே செல்வத்தைப் பெற்றிருந்து. காப்பாரின் - அதை அனுபவிக்காமல் காப்பவரை விட. கைத்து இல்லார் - கையில் செல்வம் இல்லாத மனிதர். நல்லவர்- நல்லவர் ஆவார். வைத்தாரின் - செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவரை விட. வறியவர் - செல்வ மற்றவர். நல்லர்- நல்லவராவார். பைத்து- எழுந்து- கோபித்து எழுந்து. வைதாரின்- வைகின்றவர்களைவிட. பொறுப்பவர் - அவ்வசவைப் பொறுத்துக் கொண்டிருப்பவர். நல்லர் - சிறந்தவராவர். செய்தாரின்- நன்மை செய்தவரைவிட. சிதையாதவர்- செய்த நன்மையை மறவாதவர். நல்லர்- சிறந்தவர் ஆவார். கருத்து:- செல்வத்தை அனுபவிக்காமல் காப்பவரை விடச் செல்வமில்லாதவர் நல்லவர். செல்வத்தைச் சேர்த்து வைப்ப வரை விட வறியவர் நல்லவர். கோபித்து வைபவரை விட அதைப் பொறுப்பவர் நல்லவர். நன்மை செய்பவரை விட, நன்றியை மறவாதவர்கள் நல்லவர். விளக்கம்:- கைத்து- கையில். பைத்து- கோபித்து. செய்தார்- நன்மை செய்தவர். சிதைத்தல்- அழித்தல். மறத்தல். மகன்உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன் முகன்உரைக்கும் உள்நிறை வேட்கை- அகல்நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்து விடும். 69 பொருள்:- தந்தை நலத்தை- தந்தையின் சிறப்பை. மகன்- அவன் பெற்ற மகன். உரைக்கும்- தனது நல்ல பண்புகளால் பிறர்க்கு அறிவிப்பான். ஒருவன் முகம்- ஒருவனது முகமே. உள்நின்ற- அவன் மனத்தில் உள்ள. வேட்கை- விருப்பத்தை. உரைக்கும்- சொல்லிவிடும். அகல்நீர்- பரந்த நீர் நிறைந்த. புலத்து இயல்பு- நிலத்தின் தன்மையை. புக்கான்- அந்நிலத்தில் பயிர் செய்யப் புகுந்தவன். உரைக்கும்- சொல்லி விடுவான். நிலத்து இயல்பு- உலக மக்களின் புண்ணிய, பாவங்களை. வானம்- மழையே. உரைத்து விடும்- சொல்லிவிடும். கருத்து:- தந்தையின் பண்பை மகனால் அறியலாம். ஒருவன் உள்ளத்தை அவன் முகத்தால் காணலாம். வயலின் தன்மையை அதில் பயிரிடுவோன் சொல்வான். உலக மக்கள் இயல்பை மழையே சொல்லிவிடும். விளக்கம்:- நலம்- சிறப்பு, பண்பு. முகம்- முகன். உள் - மனம், அகம். புலம்- வயல். மக்கள் நல்லவர்களானால் மழை பெய்யும்; கெட்டவர்களானால் மழையில்லை என்பது முன்னோர் நம்பிக்கை. பதிநன்று பல்லார் உறையின்; ஒருவன் மதிநன்று மாசறக் கற்பின்- நுதிமருப்பின் ஏற்றான்வீறு எய்தும் இனநிரை; தான் கொடுக்கும் சோற்றான்வீறு எய்தும் குடி. 70 பொருள்:- பதிநன்று- ஊர் நல்லதாகும். பல்லார் உறையின்- பலரும் ஒற்றுமையுடன் வாழ்வார்களானால். மாசுஅறக்கற்பின்- குற்றமறக் கல்வி கற்றால். ஒருவன் மதிநன்று- ஒருவன் அறிவு சிறந்திருக்கும். இனநிரை- பசுமந்தை. நுதி மருப்பின்- கூர்மையான கொம்புகளையுடைய. ஏற்றால்- எருதுகளால். வீறு எய்தும்- பெருமையடையும். தான் கொடுக்கும்- தான் ஏழைகளுக்கு அளிக்கும். சோற்றான்- சோற்றின் மூலம். குடி - அவன் பிறந்த குடும்பம். வீறு எய்தும்- சிறப்படையும். கருத்து:- பலரும் ஒன்றுபட்டு வாழும் ஊர் சிறந்த ஊராகும். குற்றமின்றிக் கற்றவன் அறிவு சிறந்ததாகும். எருதுகளால் பசு மந்தை சிறப்படையும். ஏழைகட்கு உணவளிப் போன் குடும்பம் பெருமையடையும். விளக்கம்:- பல்லார் என்பது முயற்சியும் ஒற்றுமையும் உள்ள பல குடியினரையும் குறிக்கும். மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதன் சிறப்பை ‘பதிநன்று பல்லார் உறையின்’ என்ற தொடர் குறித்தது. வீறு- பெருமை, சிறப்பு. குடி- குடும்பம். ஊர்ந்தான் வகைய கலினமா; நேர்ந்து ஒருவன் ஆற்றல் வகைய அறம்செய்கை; தொட்ட குளத்தனைய தூம்பின் அகலங்கள்; தத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு. 71 பொருள்:- கலினமா- கடிவாளத்தையுடைய குதிரை. ஊர்ந்தான்- அதன்மேல் ஏறிச் செல்பவனுடைய. வகைய- திறமையைப் பொறுத்திருக்கும். அறம் செய்கை- தருமம் செய்தல். நேர்ந்த ஒருவன்- தருமம் செய்யச் சம்மதித்த ஒருவனது. ஆற்றல் வகைய- வல்லமையைப் பொறுத்ததாகும். தூம்பின்- நீர்விழும் வழியின். அகலங்கள்- அளவுகள். தொட்ட- தோண்டப்பட்ட. குளத்து அனைய- குளத்தின் அளவைப் பொறுத்திருக்கும். வாழ்வார்- இல்லறத்திற் வாழ்கின்றவர்களின். வழக்கு- செலவுகள். தத்தம்- தங்கள் தங்கள். வளத்துஅனைய- செல்வத்தை ஒத்திருக்கும். கருத்து:- குதிரையின் சிறப்பு சவாரி செய்வோன் திறமையைப் பொறுத்தது. ஒருவன் ஆற்றலுக்கேற்ப அவனிடம் அறம்புரிதல் காணப்படும். நீர் ஓடும் வழியின் அளவு, குளத்தின் அளவுக்கேற்ப அமையும். குடும்பச் செலவு குடும்ப வருவாயைப் பொறுத்திருக்கும். விளக்கம்:- கலினம்- கடிவாளம். ஊர்தல்- சவாரி செய்தல். தொடுதல்- தோண்டுதல். தூம்பு- நீர் விழும் வழி. வளம்- செல்வம், வருமானம். வழக்கு- செலவு, வழக்கம். ஊழியும் யாண்டுஎண்ணி யாத்தன; யாமமும் நாழிகை யானே நடந்தன; - தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார் வெம்சொலால் இன்புறு வார். 72 பொருள்:- ஊழியும்- நீண்ட ஊழிக்காலமும். யாண்டு எண்ணி- ஆண்டுகளால் எண்ணப்பட்டு. யாத்தன- முடிவு செய்யப்பட்டன. யாமமும்- சாமமும். நாழிகையானே- நாழிகைக் கணக்கால். நடந்தன- அளவிடப்பட்டுக் கழிந்தன. தாழியா- காலதாமதம் செய்யாமல். தெற்று என்றார் கண்ணே- தெளிந்த அறிவுள்ளாரிடம். தெளிந்தனர்- அறிவுள்ளோர் கேட்டுத் தெளிந்தனர். வெட்டு என்றார் - அறிவற்றவர். வெம் சொலால்- கொடும் சொற்களைச் சொல்வதனாலேயே. இன்புறுவார்- இன்பம் அடைவார்கள். கருத்து:- ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டன. சாமம் நாழிகைகளால் கணக்கிடப்படும். அறிஞர்கள் தெளிந்த அறிவுள்ளோரிடம் உண்மையை அறிவார்கள். அறிவில்லாதார் பிறரைக் கொடுமையாகப் பேசி இன்பம் அடைவார். விளக்கம்:- ஊழி- யுகத்தின் முடிவு. தாழியா- தாமதியாமல். வெட்கு- வெண்மை, அறிவின்மை. ஊழியும், சாமமும் கழிந்து கொண்டேயிருக்கின்றன, ஆதலால் அறிஞர்கள் வீண் பொழுது போக்கார்; அறிஞர்களிடம் உண்மையறிந்த நல்வழியில் நடப்பர் என்பது இச்செய்யுளின் முடிந்த கருத்து. கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத பேதையான் வீழ்வானேல் கால்முரியும்; எல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி; தெரிவுஎண்ணின் பொய்யா வித்தாகி விடும். 73 பொருள்:- கற்றான்- கல்வியறிவுள்ளவன். தளரின்- ஒரு காரியத்தில் சோர்வடைவானாயின். எழுந்திருக்கும்- மீண்டும் உற்சாகம் அடைவான். கல்லாத பேதையான்- கல்வியற்ற அறிவில்லாதவன். வீழ்வானேல்- காரியத்தில் வெற்றி பெறாமல் தோல்வியடைவானாயின். கால் முரியும்- கால் முரிந்தவனாவான் (மீண்டும் உற்சாகம் கொள்ள மாட்டான்). ஒருமை - ஒரு பிறப்பிலே. தான் செய்த எல்லாம்- தான் செய்த வினைகள் எல்லாம். கருவி- மறுபிறப்பின் இன்ப துன்பத்திற்குக் காரணமாகும். தெரிவு- ஆராய்ந்து காணும் உண்மையே. எண்ணின்- நினைத்துப் பார்த் தால். பொய்யா- அழியாத மோட்சத்துக்கு. வித்துஆகிவிடும்- விதையாகி விடும். கருத்து:- கற்றவன் ஒரு காரியத்தில் தோற்றாலும் மீண்டும் முயல்வான். அறிவற்றவன் தோற்றால் தலை தூக்க மாட்டான். ஒரு பிறப்பின் செய்கை மறுபிறப்பின் இன்ப துன்பங்களுக்குக் காரணம். உண்மை அறிவே மோட்சத்துக்குக் காரணம். விளக்கம்:- தளர்ச்சி- சோர்வு, தோல்வி. வீழ்தல்- தோல்வி. கருவி- காரணம், சாதனம். தெரிவு- உண்மை. பொய்யா- பொய்யாமை. வீடு- மோட்சம். தேவர் அனையர் புலவரும்; தேவர் தமர்அனையர் ஓர்ஊர் உறைவார்; - தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவர்; கற்றன்னர் கற்றாரைக் காத லவர். 74 பொருள்:- தேவர் அனையர்- தேவரை ஒத்தவர்கள். புலவரும்- கற்றறிந்த புலவர்களும். தேவர்தமர் அனையர்- தேவர்களின் உறவினர்க்கு ஒப்பாவார். ஓர் ஊர் உறைவார்- அப்புலவர்கள் வாழும் ஓர் ஊரிலேயே வாழ்கின்றவர்கள். தமர்உள்ளும்- அவ்வாறு உறவினராக வாழ்கின்றவர்களிலே. பேணி வழிபடுவார்- அப்புலவர்களைப் போற்றி வணங்கு கின்றவர்கள். பெற்ற அன்னர்- அவர்களின் அருளைப் பெற்றவர் களைப் போன்றவர்கள். கற்றாரை- படித்தவர்களை. காதல் அவர்- விரும்புகின்றவர்கள். கற்ற அன்னர்- கற்றவர்க்குச் சமம் ஆவார்கள். கருத்து:- புலவர்கள் தேவரை ஒப்பார்; புலவர்கள் வாழும் ஊரிலே வாழ்வோர் தேவர்க்கு உறவினர் போல்வர்; புலவரை விரும்பி வணங்குவோர் அவர் அன்பைப் பெற்றவராவர். கற்றாரை ஆதரிப்போர் கற்றவரைப் போன்றவர். விளக்கம்:- புலமை- அறிவுடைமை. புலவர்- அறிவுள்ளவர். பண்புப் பெயர். அறிவுடையவர்களை ஆதரிப்பதனால் உண்டாகும் சிறப்பு இப்பாடலில் கூறப்பட்டது. தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே; மருத்துவன் சொல்லென்ற போழ்தே பிணிஉரைக்கும்:- நல்லார் விடுகென்ற போழ்தே விடுக; உரியான் தருகெனின் தாயம் வகுத்து. 75 பொருள்:- பொய்பிறந்த போழ்தே- நட்பினருள் பொய் தோன்றிய பொழுதே. தூர்ந்து ஒழியும்- அவர்களின் நட்பு மறைந்து விடும். மருத்துவன்- வைத்தியன். சொல்க என்ற போழ்தே- உன் நோய் என்ன சொல்லுக என்று சொன்ன உடனேயே. பிணி உரைக்கும்- நோயாளன் தன் நோய் இன்னது என்று சொல்வான். நல்லார்- பெரியோர். விடுக என்றபோழ்தே- ஒரு காரியத்தைக் கைவிடுக என்றவுடனேயே. விடுக- அக் காரியத்தைச் செய்யாமல் விடுக. உரியான்- ஒரு பொருளுக்கு உரியவன். தருக எனின்- அப்பொருளைக் கொடுக்க என்று கேட்டால். தாயம் வகுத்து- அவனுக்குரிய பாகத்தைப் பிரித்துக் கொடுத்து விடுக. கருத்து:- நட்பினர்க்கிடையே பொய்பிறந்தால் நட்புக் கெடும். மருத்து வனிடம் நோயை மறைக்கக் கூடாது. நல்லோர் தடுக்கும் காரியத்தைச் செய்யக்கூடாது. ஒருவனுக்குரிய பங்கை அவன் கேட்டவுடன் பிரித்துக் கொடுத்து விடுக. விளக்கம்:- தூர்தல்- தூந்து போவது, மறைந்து போவது. மருந்து கொடுப்போன் மருத்துவன்; காரணப் பெயர். ‘வகுத்து’ என்ற சொல்லின் பின் கொடுத்து விடுக என்ற சொல் மறைந்து நின்றது. இதற்குச் சொல்லெச்சம் என்று பெயர். நாக்கின் அறிப இனியதை; மூக்கினால் மோந்தறிப எல்லா மலர்களும்;- நோக்குள்ளும் கண்ணினால் காண்க அணியவற்றைத் தொக்கிருந்து எண்ணினால் எண்ணப் படும். 76 பொருள்:- இனியதை- இனிய சுவையை. நாக்கின் அறிப- நாக்கினால் சுவைத்து அறிவார்கள். எல்லாமலர்களும்- எல்லா மலர்களையும். மூக்கினால்- மூக்கால். மோந்து- முகர்ந்து. அறிப- அவற்றின் மணத்தை அறிவார்கள். அணியவற்றை- அழகுள்ள பொருள்களை. நோக்கு உள்ளும்- பார்வை உண்டு என்று கருதப்படும். கண்ணினால் - கண்ணால். காண்க- பார்த்து அறிக. தொக்கு இருந்து- அறிவுள்ளோர் கூடியிருந்து. எண்ணினால்- சிறந்த பொருள்களை ஆராய்ந்து கண்டால். எண்ணப்படும்- அவைகள் சிறந்தனவாகக் கருதப்படும். கருத்து:- சுவையினிமையை நாக்கால் அறிவர்; மலர் மணத்தை மூக்கால் அறிவர்; அழகைக் கண்களால் கண்டறிக. பெரியோர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைகளே சிறந்ததாகக் கருதப்படும். விளக்கம்:- நாக்கு, மூக்கு, கண் இவற்றின் பயன்கள்; சுவையறிதல், வாசனையறிதல், காட்சிகளைக் காணுதல் ஆகும். நோக்கு- பார்வை. உள்ளும்- நினைக்கப்படும். அணிய- அழகுடையன. தொக்கு- கூடி. சாவாத இல்லை பிறந்த உயிர்எல்லாம்; தாவாத இல்லை வலிகளும்; - மூவாது இளமை இசைந்தாரும் இல்லை; வளமையில் கேடுஇன்றிச் சென்றாரும் இல். 77 பொருள்:- பிறந்த உயிர் எல்லாம்- பிறந்த உயிர்களில் எல்லாம். சாவாத இல்லை- சாவாதவை ஒன்றும் இல்லை. வலிகளும்- வலிமைகளிலே. தாவாத இல்லை- கெடாத வலிமை ஒன்றுமேயில்லை. மூவாது- கிழவராகாமல். இளமை இசைந்தாரும்- எப்பொழுதும் இளமையோடு இருந்தவரும். இல்லை- ஒருவரும் இல்லை. வளமையில்- செல்வத்திலே. கேடு இன்றி- குறைவு இல்லாமல். சென்றாரும்- எப்பொழுதும் வாழ்ந்தவரும். இல்- ஒருவரும் இல்லை. கருத்து:- பிறந்தன அனைத்தும் இறக்கும். அழியாத ஆற்றல் ஒன்றும் இல்லை. யாவரும் வயதேற வயதேற மூத்துக் கிழவராவார். செல்வம் எவரிடமும் நிலைத்திராது. விளக்கம்:- வலி- வலிமை. அவை கல்வி, அறிவு, திறமை, செல்வம் முதலியவைகளால் வரும். ஆற்றல், ஆயுள், வலிமை, இளமை, செல்வம் இவற்றின் நிலையாமையைக் கூறிற்று இப்பாடல். தா- கெடுதல். இசைதல்- சேர்தல். சொல்லான் அறிப ஒருவனை; மெல்என்ற நீரான் அறிப மடுவினை; - யார்கண்ணும் ஒப்புரவினான் அறிப சான்றாண்மை; மெய்க்கண் மகிழான் அறிப நறா. 78 பொருள்:- ஒருவனை- ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை. சொல்லான் - அவனுடைய சொற்களால். அறிப- அறிவார்கள். மெல் என்ற - மெல்லிய தெளிவான. நீரான்- தண்ணீரினால். மடுவினை அறிப - மடுவின் ஆழத்தை அறிவார்கள். யார் கண்ணும் - யாரிடத்திலும் காட்டும். ஒப்புரவினான்- நடு நிலைமையால். சான்றாண்மை - ஒருவனுடைய நல்ல குணங் களை. அறிப - அறிவார்கள். நறா - ஒருவன் கள்ளுண்டிருப்பதை. மெய்க்கண் - அவன் உடம்பிலே காணப்படும். மகிழான் - களிப்பால். அறிப - அறிவார்கள். கருத்து:- ஒருவனுடைய சொல்லைக் கொண்டே அவன் குணத்தை அறிவர். நீரின் அளவால் மடுவின் ஆழத்தைக் காண்பர். ஒருவனுடைய நடுநிலையைக் கொண்டு அவனுடைய நல்ல குணங்களை அறிவார்கள். கட்குடியை அவனது உற்சாகத் தால் காண்பார்கள். விளக்கம்:- மடு-நீர் நிறைந்த பள்ளம். ஒப்புரவு - நடுநிலைமை, உதவி செய்தல். சான்றாண்மை- நற்குணங்கள் நிரம்பியிருக்கும் தன்மை. பெருந்தன்மை என்றும் கூறலாம். நறா, நறவு, கள்ளின் பெயர்கள். நாஅன்றோ நட்புஅறுக்கும்; தேற்றம்இல் பேதை விடும்அன்றோ வீங்கிப் பிணிப்பின்; அவாஅப் படும்அன்றோ பன்னூல் வலையில்; கெடும் அன்றோ மாறுள் நிறுக்கும் துணிவு. 79 பொருள்:- நட்பு அறுக்கும்- நட்பைத் துண்டிக்கும் கருவி. நாஅன்றோ- அடக்கம் இல்லாமல் பேசுகின்ற நாக்கு அல்லவா. வீங்கிப் பிணிப்பின் - மிகவும் கண்டிப்பாக வற்புறுத்தினால். தேற்றம் இல்பேதை- தெளிவற்ற அறிவில்லாதவன். விடும் அன்றோ- நல்ல செய்கைகளைக் கைவிட்டு விடுவான் அல்லவா? பல்நூல் வலையின்- பல நூல்களின் அறிவு வலையுள் அகப் பட்டால். அவா- கெட்ட ஆசை. படும் அன்றோ - அழிந்து விடும் அல்லவா? மாறுள் - பகைவரிடம். நிறுக்கும் துணிவு- ஒருவன் வைக்கும் நம்பிக்கையால். கெடும் அன்றோ - அவன் கெடுவான் அல்லவா? கருத்து:- அடக்கமற்ற பேச்சால் நட்புக் கெடும். கட்டாயத்தால், அறிவற்றவன் நன்மை செய்ய மாட்டான். பல நூல்களையும் கற்றவன் ஆசையை நீக்குவான். பகைவரை நம்புவோன் கெடுவான். விளக்கம்:- அன்றோ என்பன கேள்விகள்; ஆம் என்று விடை கூறி முடிக்க வேண்டும். வீங்கிப் பிணிப்பின்- மிகவும் கட்டாயப்படுத்தினால். கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின் உயிர்இடை யீட்டை விடுக்க; எடுப்பின் கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். 80 பொருள்:- கொடுப்பின்- வறியோர்க்கு ஏதேனும் கொடுப்பதானால் அசனம் கொடுக்க- சோறு கொடுக்க வேண்டும். விடுப்பின்- துறப்பதானால். உயிர் இடையீட்டை- உயிரைப் பெரிதாக நினைத்து வருந்தும் துன்பத்தை. விடுக்க- விட்டுவிடுக. எடுப்பின்- ஒருவரை உயர்த்துவதானால். கிளையுள்- சுற்றத்தாருள். கழிந்தார்- செல்வமிழந்த ஏழையரை. எடுக்க- உயர்த்துக. கெடுப்பின்- ஒன்றை அழிப்பதானால். வெகுளி- கோபத்தை. கெடுத்துவிடல்- விட்டு விடுக. கருத்து:- ஏழைகளுக்கு உணவிடுக; உயிரின் மேல் வைத்த பற்றை விடவேண்டும்; ஏழையை உயர்த்த வேண்டும்; கோபத்தை ஒழிக்க வேண்டும். விளக்கம்:- அசனம்- உணவு. இடையீடு- துன்பம். எடுத்தல்- உயர்த்துதல். மக்கள் கடமையை உணர்த்தும் செய்யுள் இது. நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்; குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்; வளம்இல் குளத்தின்கீழ் நெற்சாம்; பரம்அல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. 81 பொருள்:- நலனும்- அழகும். இளமையும்- இளமைப் பருவத்தின் இன்பமும். நல்குரவின் கீழ்- தரித்திரத்தில். சாம்- கெடும். குலனும்- குடியின் உயர்வும். குடிமையும்- குடியின் ஒழுக்கமும். கல்லாமைக் கீழ்- கல்வி கற்காதபோது. சாம்- கெடும். வளம்இல்- நீர் வளம் இல்லாத. குளத்தின் கீழ்- ஏரிப்பாய்ச்சலின் கீழ் உள்ள. நெல்சாம்- நெற்பயிர் கெட்டு விடும். பரம்அல்லா- சுமக்க முடியாத பாரமான. பண்டத்தின் கீழ்- பண்டத்தைத் தாங்கும். பகடு சாம்- எருதுகள் இறக்கும். கருத்து:- வறுமையில் அழகும் இளமையும் பயன் இல்லை; கல்வியில்லாவிடில் குடிப்பெருமையும், குடி ஒழுக்கமும் கெடும்; நீர் இல்லாத ஏரியை நம்பிய நெற்பயிர் கெடும்; தாங்க முடியாத பண்டத்தைச் சுமக்கும் எருதுகள் இறக்கும். விளக்கம்:- வளம்- நீர்வளம், நீர் வருவாய். பரம் அல்லா- சுமப்பதற்கு முடியாத. பரம்- பாரம், சுமை. பகடு- எருது. நெற்பயிர் சாதல் - விளையாமல் சாவியாகி விடுதல். சாகும் என்னும் சொல் சாம் என நின்றது. நல்லார்க்கும் தம்ஊர்என்று ஊர்இல்லை; நன்னெறிச் செல்வார்க்கும் தம்ஊர் என்று ஊர்இல்லை; அல்லாக் கடைகட்கும் தம்ஊர்என்று ஊர்இல்லை; தம்கைத்து உடையார்க்கும் எவ்வூரும் ஊர். 82 பொருள்:- நல்லார்க்கும்- கல்வி, அறிவு, ஒழுக்கமுள்ள நல்லவர்க்கும். தம் ஊர் என்று- தம்முடைய ஊர் என்று சொல்லக்கூடிய. ஊர் இல்லை- ஊர் தனியாக ஒன்றும் இல்லை. நல்நெறி- தவநெறியிலே. செல்வார்க்கும் - நடக்கின்றவர்களுக்கும். தம் ஊர் என்று- தம்முடைய ஊர் என்று. ஊர் இல்லை- ஊர் தனியாக ஒன்றும் இல்லை. அல்லா- நல்லவர் அல்லாத. கடை கட்கும்- கீழ் மக்களுக்கும். தம்ஊர் என்று - தமது சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய. ஊர் இல்லை- ஊர் ஒன்றும் இல்லை. தம் கைத்து உடையார்க்கும்- தமது கையில் செல்வம் உள்ளவர்க்கும். எவ்வூரும் ஊர்- எந்த ஊரும் சொந்த ஊராகும். கருத்து:- நல்லார்க்கு எல்லாவூரும் சொந்த ஊர். தவசிகளுக்கும் எவ்வூரும் சொந்த ஊர். கீழ்மக்கள் எவ்வூராலும் வெறுக்கப்படுவார்கள். செல்வர்களுக்கும் எவ்வூரும் சொந்த ஊர். விளக்கம்:- தமக்கென்று சொந்த ஊர் இல்லாதவர்கள் நல்லார், தவசிகள், கீழ்மக்கள், செல்வர் என்பவர்கள். நல்நெறி- தவமார்க்கம். கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்; மெல்இலை வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம்; அல்லவை செய்வார்க்கு அறம்கூற்றம்; கூற்றமே இல்லத்துத் தீங்குஒழுகு வாள். 83 பொருள்:- கல்லா ஒருவர்க்கு- கல்வியறிவில்லாத ஒருவர்க்கு. தம் வாயின் சொல்- தமது வாயிலிருந்து வரும் சொல்லே. கூற்றம்- எமனாகும். மெல் இலை வாழைக்கு- மெல்லிய இலையையுடைய வாழை மரத்திற்கு. தான் ஈன்ற காய்- தான் பெற்ற வாழைத்தாரே. கூற்றம்- எமன். அல்லவை செய்வார்க்கு- பாவங்களைச் செய்கின்றவர்க்கு. அறம்கூற்றம்- தரும தேவதையே எமனாகும். இல்லத்து- வீட்டிலிருந்து கொண்டு. தீங்கு ஒழுகுவாள்- கெட்டவழியில் நடக்கின்ற பெண். கூற்றமே- தன் கணவனுக்கு எமனாவாள். கருத்து:- மூடர்க்கு அவன் வாய்ச் சொல்லே எமன்; வாழைக்கு அதன் குலையே எமன்; பாவம் செய்வோர்க்குத் தர்மமே எமன்; கெட்ட நடத்தையுள்ள மனைவி கணவனுக்கு எமன். விளக்கம்:- மூடர்கள் பொய், புறங்கூறல், கடுஞ்சொற் கூறல் முதலியவைகளைப் பேசுவதால் பலர் பகையைப் பெற்றுக் கெடுவார்கள். தார் போட்ட வாழை பட்டுப் போகும். காய்- குலையைக் குறித்தது. கூற்றமே என்பதில் உள்ள ஏ தெளிவை உணர்த்தியது. இதற்குத் தேற்றே காரம் என்று பெயர். நீரான் வீறுஎய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடுஎய்தும் பட்டினம்;- கொண்டாளும் நாட்டால் வீறுஎய்துவர் மன்னவர் கூத்துஒருவன் ஆடலால் பாடு பெறும். 84 பொருள்:- நீரால்- தண்ணீர் பாய்வதால். விளை நிலம் - நஞ்சைநிலம். வீறு எய்தும்- வளம் பெறும். நீர் வழங்கும் - கடல் கொடுக்கின்ற. பண்டத்தால் - முத்து முதலிய பண்டத்தினால். பட்டினம்- நகரம். பாடு எய்தும்- சிறப்படையும். கொண்டு ஆளும்- கைப்பற்றிக் கொண்டு ஆளுகின்ற. நாட்டால் - நாட்டின் வளத்தினால். வீறு எய்துவர்- சிறப்படைவார். மன்னவர் - அரசர். கூத்து- நாடகமானது. ஒருவன் ஆடலால்- ஒருவனுடைய நடனத்தினால். பாடு பெறும்- பெருமையடையும். கருத்து:- நீரால் நஞ்சை நிலமும், கடல் வளத்தால் நகரமும், நாட்டின் வளத்தால் அரசனும், நடனத்தினால் நாடகமும் சிறப்படையும். விளக்கம்:- வீறு- சிறப்பு. விளைநிலம்- நஞ்சை. நீர் வழங்கும் பண்டம்- கடல் செல்வம்; முத்து, உப்பு முதலியன. கூத்து- நடனம். பாடு- பெருமை, சிறப்பு. ஒன்றுஊக்கல் பெண்டிர் தொழில்நலம்; என்றும் நன்றுஊக்கல் அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும் நாடுஊக்கல் மன்னர் தொழில்நலம்; கேடுஊக்கல் கேளிர் ஒரீஇ விடல். 85 பொருள்:- ஒன்று- கணவனுடன் ஒன்றுபட்டு. ஊக்கல்- அவனை உற்சாகப்படுத்துதல். பெண்டிர்- பெண் மக்களின். தொழில் நலம்- செயலின் சிறப்பாகும். என்றும்- எந்நாளும். நன்று - நன்மையில். ஊக்கல்- உற்சாகம் காட்டுதல். அந்தணர்- அறநெறியாளரின். உள்ளம்- கருத்தாகும். பிறன் ஆளும்- மற்றவன் ஆளுகின்ற. நாடு ஊக்கல்- நாட்டைக் கைப்பற்ற முயலுதல். மன்னர்- அரசரின். தொழில் நலம் - காரியத்தின் சிறப்பாகும். கேளிர்- சுற்றத்தாரை. ஒரீஇவிடல்- விட்டுப்பிரிந்து விடுதல். கேடு ஊக்கல்- கெடுதியைப் பெறமுயல்வதாகும். கருத்து:- பெண்களின் நல்ல செயல் கணவருடன் ஒன்றுபட்டு வாழ்தல்; நன்மையைச் சிந்தித்தலே அந்தணர் கடமை; பிறநாட்டைக் கைப்பற்ற முயலுதல் அரசர் கடமை; சுற்றத்தாரைப் பிரிதலால் கேடு உண்டாகும். விளக்கம்:- ஒன்று- ஒற்றுமை. நன்று- நன்மை, அறம். மன்னர்கள் தங்கள் நாட்டைப் பெரிதாக்க வேண்டும்; அதன் பொருட்டுப் பிற நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்பது பழைய நீதி. ஒரீஇ- உயிர் அளபெடை. கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்; தள்ளாமை வேண்டும் தகுதி உடையன; நள்ளாமை வேண்டும் சிறியரோடு; யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை. 86 பொருள்:- கடியவருதலால்- பின்பு தீமைகள் பல வருவதனால். கள்ளாமை வேண்டும்- பிறர்பொருளைத் திருடாதிருக்க வேண்டும். தகுதி உடையன- தமக்குத் தகுந்த ஒழுக்கங்களை. தள்ளாமை வேண்டும்- தள்ளிவிடாமல் பின்பற்ற வேண்டும். சிறியரோடு- கீழ்மக்களுடன். நள்ளாமை வேண்டும்- சினேகம் பண்ணாதிருக்க வேண்டும். யார் மாட்டும்- எவரிடத்திலும். பகை கொள்ளாமை வேண்டும்- விரோதம் கொள்ளக் கூடாது. கருத்து:- திருடுவதால் கொடுந்துன்பம் உண்டாகும். தகுந்த ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளக் கூடாது. யாருடனும் பகைத்துக் கொள்ளக்கூடாது. விளக்கம்:- கடிய- துன்பந் தருவன, தீமைகள். தகுதி- தமக்கு ஏற்றது. கள்ளாமை; தள்ளாமை; நள்ளாமை; கொள்ளாமை; எதிர்மறைத் தொழிற் பெயர்களாகும். சிறியர்- கீழ்மக்கள், சிற்றினம். பெருக்குக நட்டாரை நன்றின்பால் உய்த்துத்; தருக்குக ஒட்டாரைக் காலம்அறிந்து ஆங்கு; அருக்குக யார்மாட்டும் உண்டி; சுருக்குக செல்லா இடத்துச் சினம். 87 பொருள்:- நட்டாரை- தன்னுடன் நட்புக்கொண்டவரை. நன்றின்பால்- நன்மையிலே. உய்த்து- செலுத்தி. பெருக்குக- அவர் வாழ்வைப் பெருகும்படி செய்க. ஒட்டாரை- பகைவரை. காலம் அறிந்து- தகுந்த காலம் அறிந்து. ஆங்கே- காலம் கிடைத்த அப்பொழுதே. தருக்குக- செருக்குடன் வெல்க. யார் மாட்டும்- யாரிடத்தும். உண்டி -உணவு உண்பதை. அருக்குக- குறைத்துக் கொள்ளுக. செல்லா இடத்து- செல்லத்தகாத இடத்திலே. சினம்- கோபம் கொள்வதை. சுருக்குக- தணித்துக் கொள்ளுக. கருத்து:- நண்பரை நன்றாக வாழச் செய்க; பகைவரைப் பருவமறிந்து வெல்க; எல்லோர் வீட்டிலும் உணவுண்பதைக் குறைத்துக் கொள்ளுக. வலியாரிடம் கோபம் கொள்ளக்கூடாது. விளக்கம்:- நன்றின்பால்- நன்மையில். தருக்குக- கர்வம் அடைக; வெற்றி கொண்டு மகிழ்தல். அருக்குதல்- குறைத்தல். சுருக்குதல்- தணித்தல். மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான் பேணாமை செய்வார்கண் நிற்கும்ஆம்; பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்; நட்டுஅமைந்த தூணின்கண் நிற்கும் களிறு. 88 பொருள்:- மடிமை- சோம்பேறித்தனம். கெடுவார் கண்- கெட்டுப் போகின்றவனிடம். நிற்கும்- தோன்றி நிற்கும். கொடுமை தான் - தீமைதான். பேணாமை செய்வார்கண்- சான்றோர்கள் விரும்பாத காரியத்தைச் செய்கின்றவரிடம். நிற்கும்ஆம்- நிலைத்திருப்பதாகும். பேணிய- விரும்பப்பட்ட. நாணின் வரை- நாணத்தின் எல்லையிலே. நிற்பர்- நிற்பவர்களே. நல்பெண்டிர்- நல்ல பெண்களாவர். நட்டு அமைந்த - ஆழமாக நட்டிருக்கின்ற. தூணின்கண்- தூணின் வலிமையில். களிறு நிற்கும்- யானை கட்டுப்பட்டு நிற்கும். கருத்து:சோம்பலுடையோர் கெடுவர். அறிஞர்கள் வெறுப்பவற்றைச் செய்வோர் கெடுவர். நல்ல பெண்கள் நாணத்தைக் கைவிடமாட்டார்கள். யானை கட்டுத்தறியில் அடங்கி நிற்கும். விளக்கம்:- பேணாமை- விரும்பாமை அறிஞர் வெறுக்கும், செயல், வரை- எல்லை, தூண் - யானை கட்டும் தறி. மடிமை; கொடுமை; பண்புப் பெயர்கள். மறைஅறிப அந்தண் புலவர்; முறையொடு வென்றி அறிப அரசர்கள்;- என்றும் வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃதன்றி அணங்கல் வணங்கின்று பெண். 89 பொருள்:- அம்தண்புலவர்- அந்தணராகிய அறிஞர்கள். மறை அறிப- வேதங்களை அறிவார்கள். அரசர்கள்- மன்னர்கள். முறையொடு - நீதி முறையுடன் ஆளவும். வென்றி - போரில் வெற்றி பெறவும். அறிப -அறிவார்கள். சான்றோர்க்கு- நற்குணங்கள் நிரம்பியவர்க்கு. என்றும்- எப்பொழுதும். வணங்கல்- கர்வம் இல்லாமல் வணக்கமுடன் வாழ்தலே. அணிகலம் - அழகுதரும் ஆபரணமாகும். அஃது அன்றி- அதுவும் அல்லாமல். அணங்கல்- கணவனைத் தவிர வேறு தெய்வத்தை. வணங்கின்று- வணங்காமலிருப்பவளே. பெண்- கற்புள்ள பெண்ணாவாள். கருத்து:- வேதங்களை அறிபவர் அந்தணர். நீதியையும், வெற்றி பெறும் வழியையும் அறிபவர் அரசர். அறிஞர்க்கு ஆபரணம் கீழ்ப்படிதல். தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குகின்றவளே கற்புள்ளவள். விளக்கம்:- மறை- வேதங்கள். முறை- நீதி. அணங்கல்- துன்புறுத்தல். துன்புறுத்தும் தன்மை தெய்வங்களுக்கு உண்டு. ஆதலால், அணங்கல் என்பதற்குத் தெய்வம் என்று பொருள் கொள்ளப்பட்டது. பட்டாங்கே பட்டுஒழுகும் பண்புடையாள்; காப்பினும் பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி; - முட்டினும் சென்றாங்கே சென்றொழுகும் காமம்; காப்பினும் கொன்றான்மேல் நிற்கும் கொலை. 90 பொருள்:- பண்பு உடையாள்- நல்ல குணமுள்ள பெண். பட்டாங்கே- கற்பின் இயல்பிலேயே. பட்டு- அடங்கி. ஒழுகும்- நடப்பாள். பிணைஇலி- கட்டுப்பாடு இல்லாதவள். காப்பினும்- கணவன் பாதுகாத்தாலும். பெட்டாங்கு - தான் விரும்பிய விதமே. ஒழுகும்- நடப்பாள். காமம் - காமமானது. முட்டினும்- தடையுண்டானாலும். சென்று ஆங்கே - முன்பு சென்ற வழியிலேயே சென்று. ஒழுகும் - பின்பும் செல்லும். கொலை- கொலைவப்பாம். கரப்பினும் - எவ்வளவு மறைத்தாலும். கொன்றான்மேல்- கொலைகாரன் மேலேயே. நிற்கும் - நிலைத்து நிற்கும். கருத்து:- நல்ல பெண் கற்பு நெறியில் நடப்பாள். கெட்டபெண் கணவன் காத்தாலும் கற்பிழப்பாள். காமத்தைத் தடை செய்யமுடியாது. எவ்வளவு மறைத்தாலும் கொலை காரனைக் கொலைப்பழி சுற்றிக் கொள்ளும். விளக்கம்:- பட்டாங்கு- இயல்பு; இங்கு கற்பின் இயல்பைக் குறித்தது. பண்பு - குணம். பிணை- கட்டுப்பாடு, பிணைப்பு. கரப்பு- ஒளிப்பு. வன்கண் பெருகின் வலிபெருகும்; பால்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர்சான்ற மென்கண் பெருகின் அறம்பெருகும்; வன்கண் கயம்பெருகின் பாவம் பெரிது. 91 பொருள்:- வன்கண்- அஞ்சாமை. பெருகின்- வளர்ந்தால். வலிபெருகும்- வலிமை வளரும். பால் மொழியார்- பால்போலும் இனிய சொல்லுடைய மனைவியரிடம். இன்கண்- நல்ல இரக்கத்தன்மை. பெருகின்- மிகுந்தால். இனம் பெருகும் -சுற்றத்தார் பெருகுவார்கள். சீர்சான்ற- சிறப்பு மிகுந்த. மென்கண்- அருள் தன்மை. பெருகின்- வளர்ந்தால். அறம் பெருகும்- தருமம் வளரும். வன்கண்- கொடுமையுள்ள. கயம் பெருகின்- கீழ்மைத் தனம் வளர்ந்தால். பாவம் பெரிது- கெட்ட செயல்களே மிகுதியாகும். கருத்து:- அஞ்சாமையால் வலிமையும், மனையாளின் இரக்கத்தால் சுற்றமும், அருளால் அறமும், தீய குணத்தால் பாவமும் வளரும். விளக்கம்:- வன்கண்- அஞ்சாமை, கொடுமை. இனம்- சுற்றம். மென்கண்- அருள். கயம்- கீழ்மை. அஞ்சாமை, இரக்கம், அருள், கீழ்மைக்குணம் இவற்றால் விளையும் பயன் இன்னவை என்று விளக்கிற்று இச்செய்யுள். இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்; வளம்இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்; கிளைஞர்இல் போழ்தில் சினம்குற்றம்; குற்றம் தமர்அல்லார் கையகத்து ஊண். 92 பொருள்:- இளமைப் பருவத்து- சிறுவயதிலே. கல்லாமை- கல்வி கற்காமலிருப்பது. குற்றம் - பிழையாகும். வளம் இலா போழ்தத்து- பொருள் இல்லாதபோது. வள்ளண்மை- ஈகைத் தன்மையில் ஈடுபடுவது. குற்றம் - தவறாகும். கிளைஞர் இல் போழ்தில்- உறவினர்களின் துணையில்லாத சமயத்தில். சினம் குற்றம்- பிறருடன் கோபம் கொள்வது குற்றமாகும். தமர் அல்லார்- உறவினர் அல்லாதவர்களின். கையஅகத்து- வீட்டில். ஊண்- உணவுகொள்ளுதல். குற்றம்- தவறாகும். கருத்து:- இளமையில் கல்வி கல்லாமை குற்றம். செல்வமில்லாதபோது வழங்குதல் குற்றம். உறவினர் துணை யில்லாதபோது பிறரிடம் கோபம் கொள்ளுதல் குற்றம். தெரியாதவர் வீட்டில் உண்பது குற்றம். விளக்கம்:- வளம்- செல்வம். வள்ளன்மை- கொடுக்குந் தன்மை. தமர்- தம்மை அறிந்தவர்; உறவினர், நண்பர், முதலியோர். கையகம்- கையில்; இது வீட்டைக் குறித்தது. எல்லா இடத்தும் கொலைதீது; மக்களைக் கல்லா வளர விடல்தீது; - நல்லார் நலம்தீது நாண்அற்று நிற்பின்; குலம்தீது கொள்கை அழிந்தக் கடை. 93 பொருள்:- எல்லா இடத்தும்- எல்லா வகையிலும். கொலைதீது- உயிர்க்கொலை தீமையாகும். மக்களை- பிள்ளைகளை. கல்லா- கல்வி கற்காமல். வளரவிடல்- வளர விடுவது. தீது- தீமையாகும். நாண் அற்று நிற்பின் - நாணமில்லாமல் வாழ்வார்களானால். நல்லார்- பெண்களின். நலம்தீது- அழகு தீமைதரும். கொள்கை- சிறந்த ஒழுக்கம். அழிந்தக்கடை- கெட்டபோது. குலம்தீது- நல்ல குடியும் கெட்ட குடியாகும். கருத்து:- உயிர்க்கொலை பாவம். குழந்தைகளைப் படிக்க வைக்காமல் வளர்த்தல் தீமை. நாணமற்ற பெண்ணின் அழகு தீமை தரும். ஒழுக்கம் அழிந்த குடி கெட்டுவிடும். விளக்கம்:- எல்லாவிடத்தும் கொலைதீது என்பது யாகத்தில் உயிர்ப்பலியிடுதலும் தீமை என்பதைக் குறித்தது. கொள்கை- ஒழுக்கம். ஆசாரம் என்பது கல்வி; அறம்சேர்ந்த போகம் உடைமை பொருள்ஆட்சி; யார்கண்ணும் கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான் உள்நாட்டம் இன்மையும் இல். 94 பொருள்:- ஆசாரம் என்பது- நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது. கல்வி- கல்வியின் பயனாகும். அறம் சேர்ந்த- அறத்துடன் சேர்ந்த. போகம் உடைமை- இன்பத்தை அடைவதே. பொருள் ஆட்சி- செல்வத்தை ஆளுவதன் பயனாகும். யார் கண்ணும் - யாரிடத்திலும். கண்ணோட்டம் இன்மை- தாட்சண்யம் காட்டாமல் நடுநிலையில் நிற்றலே. முறைமை- நீதியாகும். தெரிந்து ஆள்வான்- அமைச்சர்களுடன் கூடி ஆராய்ந்து அரசாளுவோன். உள்நாட்டம் இன்மையும்- தன் மனத்தில் ஆராயாமல் இருப்பதும். இல்- இல்லை. கருத்து:- கல்வியின் பயன் நல்லொழுக்கம். அறம் புரிதலும், இன்பம் நுகர்தலும் செல்வத்தின் பயன். தாட்சண்யம் இன்றி நீதி செய்வதே ஆட்சி முறை. அமைச்சர்களுடன் ஆலோசிப்பதோடு, தானும் உண்மையை ஆராய்ந்து அறிகின்றவனே சிறந்த ஆட்சி யாளன். விளக்கம்:- அறமும், இன்பமும் பொருளால் உண்டாகும். ஆளுவோன், தானும் உண்மையை ஆராய்ந்து அறியவேண்டும்; அமைச்சர்களுடனும் ஆராயவேண்டும். போகம்- இன்பம். முறைமை- நீதியுடைமை. உள்- தன் மனத்தால். நாட்டம்- ஆராய்தல். கள்ளின் இடும்பை களிஅறியும்; நீர்இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்புஇடும்பை பல்பெண்டிர் ஆளன் அறியும்; கரப்பு இடும்பை கள்வன் அறிந்து விடும். 95 பொருள்:- கள்ளின் இடும்பை- கள் கிடைக்காமையால் வரும் துன்பத்தை. களி அறியும்- கள்ளுண்பவன் அறிவான். நீர் இடும்பை- தண்ணீர் இல்லாமையால் வரும் துன்பத்தை. புள்ளின் உள்- பறவைகளிலே. ஓங்கல் - வானம்பாடிப் பறவை. அறியும்- உணரும். நிரப்பு இடும்பை- வறுமையின் துன்பத்தை. பல்பெண்டிர் ஆளன்- பல பெண்களை மணந்தவன். அறியும்- உணர்வான். கரப்பு இடும்பை- ஒரு பண்டத்தை ஒளித்து வைப்பதால் வரும் துன்பத்தை. கள்வன் அறிந்துவிடும்- திருடன் தெரிந்து கொள்ளுவான். கருத்து:- குடிகாரன் கள் இன்றேல் வருந்துவான். வானம்பாடிப் பறவை நீர் பெறாவிடில் வருந்தும். பல தாரம் கொண்டோன் வறுமைத் துன்பத்தைக் காண்பான். ஒன்றை ஒளித்து வைப்பதில் உள்ள துன்பம் திருடனுக்குத்தான் தெரியும். விளக்கம்:- இடும்பை- துன்பம். ஓங்கல்- வானம்பாடி. உயரத்தில் பறப்பதால் இப்பெயர் பெற்றது. நிரப்பு- வறுமை. கரப்பு- ஒளித்து வைத்தல். களி- கள் உண்போன். வடுச்சொல் நயம்இல்லார் வாய்த்தோன்றும்; கற்றார்வாய்ச் சாயினும் தோன்றா கரப்புச்சொல்; - தீய பரப்புச் சொல் சான்றோர்வாய்த் தோன்றா; கரப்புச் சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும். 96 பொருள்:- வடுச்சொல்- குற்றமுள்ள சொற்கள். நயம் இல்லார்வாய்- அன்பில்லாதவரது வாயில். தோன்றும்- பிறக்கும். கற்றார்வாய்- படித்தவர்களின் வாயிலே. சாயினும்- அவர் கெடுவதானாலும். கரப்புச்சொல்- வஞ்சனையுள்ள சொற்கள். தோன்றா- உண்டாகமாட்டா. தீய பரப்புச் சொல்- தீமையைப் பரவ வைக்கும் சொற்கள். சான்றோர் வாய் - அறிவு நிறைந்தோர் வாயில். தோன்றா- பிறக்க மாட்டா. கரப்புச் சொல்- உண்மையை மறைக்கும் பொய்ம்மொழிகள். கீழ்கள் வாயின்- கீழ்மக்கள் வாயிலே. தோன்றிவிடும்- பிறந்துவிடும். கருத்து:- அன்பற்றார் வாயில் பழிச் சொல் பிறக்கும். நல்ல நூல்களை அறிந்தவர்கள் வாயிலே வஞ்சனைச் சொற்கள் பிறக்க மாட்டா. அறிவுள்ளோர் வாயில் தீமையைப் பரப்பும் சொற்கள் பிறவா. கீழ் மக்கள் வாயில் பொய்ம்மொழிகள் பிறக்கும். விளக்கம்:- வடு- குற்றம்,ண பழி. நயம்- அன்பு. சாய்தல்- கெடுதல். கரப்பு- வஞ்சனை, ஒளித்தல். வால்இழையார் முன்னர் வனப்புஇலார் பாடுஇலர்; சாலும் அவைப்படின் கல்லாதான் பாடுஇலன்; கற்றான் ஒருவனும் பாடுஇலனே; கல்லாதார்; பேதையார் முன்னர்ப் படின். 97 பொருள்:- வால்இழையார்முன்னர்- ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்த பெண்களின்முன். வனப்புஇலார்- அழகில்லாத ஆண்கள். பாடுஇலர்- பெருமையடைய மாட்டார்கள். சாலும்- கல்வி கேள்விகளிலே நிரம்பியோர் சேர்ந்த. அவைப் படின்- சபையுள் புகுந்தால். கல்லாதான்- கல்வி கற்காதவன். பாடுஇலன்- பெருமையடைய மாட்டான். கற்றான் ஒருவனும்- கல்விகற்ற ஒருவனும். கல்லாதார் முன்னர்படின்- படிக்காதவர் களிடம் சேர்ந்தால். பாடு இலன்- பெருமையடைய மாட்டான். பேதையார் முன்னர்ப் படின்- அறிவில்லாதாரிடம் சேர்ந்தாலும். பாடு இலன்- பெருமையடைய மாட்டான். கருத்து:- அழகுள்ள பெண்களுக்கு முன் அழகற்ற ஆண்களுக்குப் பெருமையில்லை. கற்றோர் சபையிலே கல்லாதவனுக்கு மதிப்பில்லை. கற்றவனுக்கு கல்லாதார் முன் பெருமையில்லை; அறிவற்றவர்கள் முன்பும் பெருமையில்லை. விளக்கம்:- வால்- ஒளி. இழை- அணிகலன். வனப்பு- அழகு. சால்பு- நிறைவு. சாலும்- நிறைந்திருக்கும். முன்னர்ப்படின் என்ற சொல்லை, கல்லாதார் முன்னர்ப்படின் என்றும், பேதையார் முன்னர்ப்படின் என்றும் கூட்டிப் பொருள் சொல்லப்பட்டது. மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்; பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசுஒட்டும்; பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். 98 பொருள்:- மாசுபடினும்- அழுக்குப் படிந்தாலும். மணி- இரத்தினம். தன்சீர் குன்றாது ஆம்- தன்சிறந்த ஒளியில் குறையாமலிருக்கும். பூசிக் கொளினும்- விளக்கிக் கழுவி எடுத்துக் கொண்டாலும். இரும்பின்கண்- இரும்பிலே. மாசுஒட்டும்- துருப்பிடிக்கும். கீழ்தன்னை- கீழ்மகனை. பாசத்துள் இட்டு- அன்பால் அகப்படுத்தி. விளக்கினும்- அறிவுரைகளைச் சொன்னாலும். மாசு உடைமை- தமது அறியாமையையே. காட்டிவிடும்- காட்டிவிடுவார்கள் (திருந்தமாட்டார்கள்). கீழ்தன்னை- கீழ்மகனை. பாசத்துள் இட்டு- விலங்கிட்டு. விளக்கினும்- அவன் குற்றத்தை எடுத்துரைத்தாலும். மாசு உடைமை- தனது கீழ்மைத்தன்மையையே. காட்டிவிடும்- காட்டிக் கொண்டிருப்பார்கள் (குற்றத்தை ஒப்புக்கொண்டு திருந்த மாட்டார்கள்). கருத்து:- அழுக்குப் படிந்தாலும் இரத்தினத்தின் ஒளி குன்றாது; கழுவி விளக்கினாலும் இரும்பில் துருப்பிடிக்கும். கீழ் மகனுக்கு அன்பால் அறிவுரை கூறினாலும் திருந்த மாட்டான்; விலங்கிட்டுத் தண்டித்துக் குற்றத்தை எடுத்துக் காட்டினாலும் திருந்த மாட்டான். விளக்கம்:- மாசு- அழுக்கு. மாசு- துரு. பாசம்- அன்பு, விலங்கு. விளக்குதல்- அறிவுரை கூறுதல், எடுத்துக் காட்டுதல். மாசுடைமை- அறியாமை, கீழ்மைத் தன்மை. பின் இரண்டடி களுக்கு இருபொருள் சொல்லப்பட்டது. எண்ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை; புண்ஒக்கும் போற்றார் உடன்உறைவு- பண்ணிய யாழ்ஒக்கும் நட்டார் கழறும்சொல்; பாழ்ஒக்கும் பண்புடையாள் இல்லா மனை. 99 பொருள்:- சான்றோர்- பெரியோர்களுடன். மரீஇயாரின்- நீண்ட நாள் பழகியவர்களைப் போல நினைத்து. தீராமை- பிரியாமல் வாழ்தல். எண் ஒக்கும்- அறிவைப் போன்றதாகும். போற்றார் உடன் உறைவு- விரும்பாதவருடன் கூடி வாழ்தல். புண் ஒக்கும்- புண்பட்டாலொத்த வருத்தத்தைத் தரும். நட்டார் - நண்பர். கழறும் சொல் - சினந்து இடித்துரைக்கும் சொல். பண்ணிய- இசையமைக்கப்பட்ட. யாழ்ஒக்கும்- யாழைப் போல இன்பம் தரும். பண்பு உடையாள்- நல்ல குணமுடைய பெண். இல்லாமனை- இல்லாத வீடு. பாழ்ஒக்கும்- பாழான வீட்டை ஒத்திருக்கும். கருத்து:- சான்றோரைப் பிரியாது வாழ்தல் அறிவாகும். விரும்பாதவருடன் வாழ்வது புண் போன்றது. நண்பர்களின் சினச் சொல் யாழ் இசையை ஒக்கும். நல்ல பெண் இல்லாத வீடு பாழ்மனை. விளக்கம்:- எண்- அறிவு. மரீஇயார் - மருவியார்- சேர்ந்தார். தீர்தல்- நீங்குதல்; தீராமை எதிர்மறைச் சொல். கழறுதல்- இடித்துப் புத்தி புகட்டுதல், சினந்து கூறல். மரீஇயார்; உயிர் அளபெடை. ஏரி சிறிதாயின் நீர்ஊரும்; இல்லத்து வாரி சிறிதாயின் பெண்ஊரும்; மேலைத் தவம் சிறிது ஆயின் வினைஊரும்; ஊரும் உரன்சிறிது ஆயின் பகை. 100 பொருள்:- ஏரி சிறிதாயின்- குளம் சிறியதாக இருக்கு மானால். நீர் ஊரும் - தண்ணீர் வெளியில் வழிந்து போய்விடும். இல்லத்து- வீட்டில். வாரி சிறிது ஆயின்- வருமானம் குறையு மானால். பெண்- மனையாள். ஊரும்- வரம்பு கடந்து பேசுவாள். மேலைத்தவம்- முன்பிறப்பிலே செய்த நல்வினை. சிறிது ஆயின்- சிறிதாக இருக்குமானால். வினைஊரும்- தீவினை பெருகி விடும். உரன் சிறிது ஆயின்- ஒருவனுடைய வலிமை குறையுமானால். பகை ஊரும்- பகைவர் அவனைச் சூழ்ந்து கொள்ளுவார்கள். கருத்து:- ஏரி சிறியதானால் தண்ணீர் வெளியே போய்விடும். வருமானம் குறைந்தால் மனையாள் முறைதவறிப் பேசுவாள். முன் செய்த நல்வினை குறைந்தால் தீவினை முன்வந்து துன்புறுத்தும். வலிமை குறைந்தால் பகைவரால் துன்பம் உண்டாகும். விளக்கம்:- வாரி- வருமானம். ஊர்தல்- மிகுதல். தவம்- நல்வினை. உரன்- வலிமை. ஏரி, வருமானம், தவம், உரன் இவைகள் குறைவதால் வருந்தீமை கூறப்பட்டது. வைததனால் ஆகும் வசையே; வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை; செய்த பொருளினால் ஆகுமாம் போகம்; நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம். 101 பொருள்:- வைததனால்- பிறரை வைததனால். ஆகும்- உண்டாவது. வசையே- தனக்குப் பழிச்சொல்தான். வணக்கம் அது செய்ததனால்- எல்லோர்க்கும் வணக்கம் செய்ததனால். செழும்கிளை- நல்ல சுற்றத்தினர். ஆகும்- பெருகுவார்கள். செய்த பொருளினால்- தேடிச் சேர்த்த பொருளால். போகம் ஆகும்- இன்பம் உண்டாகும். நெகிழ்ந்த அருளினால் - இளகிய இரக்கத்தினால். அறம்- அறச்செயல்கள். ஆகும்- உண்டாகும். கருத்து:- பிறரை வைபவன் பழிச்சொல் பெறுவான். வணக்கத்தால் உறவினர் பெருகுவர். பொருளால் இன்பம் உண்டாகும். கனிந்த இரக்கத்தால் அறம் பெருகும். விளக்கம்:- வைதல்- பழித்துப் பேசுதல்; கடுஞ்சொல் மொழிதல். வசை- பழி, குற்றம். கிளை- சுற்றம். போகம்- இன்பம். நெகிழ்தல்- இளகுதல், தளர்தல். வைதல், வணக்கம், பொருள், அருள் இவற்றால் ஆகும் பயன் கூறப்பட்டது. ஒருவன் அறிவானும் எல்லாம்; யாதொன்றும் ஒருவன் அறியா தவனும்; ஒருவன் குணன்அடங்கக் குற்றம் உளானும்; ஒருவன் கணன்அடங்கக் கற்றானும் இல். 102 பொருள்:- எல்லாம்- எல்லாவற்றையும். அறிவான்- அறிந்தவன். ஒருவனும்இல்- ஒருவனும் இல்லை. யாது ஒன்றும்- ஒன்றையும். அறியாதவன்- ஒன்றாவது தெரிந்து கொள்ளாதவன். ஒருவனும் இல்- ஒருவனும் இல்லை. குணன் அடங்க- நல்ல குணமே இல்லாமல். குற்றம் உள்ளானும்- குற்றத்தையே உடையவனும். ஒருவன்இல்- ஒருவனும் இல்லை. கணன் அடங்க- அறியாமையே இல்லாமல். கற்றானும்- கற்றறிந்தவனும். ஒருவன்இல்- ஒருவனும் இல்லை. கருத்து:- எல்லாவற்றையும் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் உணராதவனும் இல்லை. குற்றமே உள்ளவனும் இல்லை; அறியாமை அற்றவனும் இல்லை. விளக்கம்:- ஒருவன் என்ற சொற்களுடன், இல் என்ற சொல்லை வைத்துப் பொருள் சொல்லப்பட்டது. அடங்க- மறைய, இல்லாமல். கணன்- அறியாமை. மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்; மனக்கு இனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் ஓதில் புகழ்சால் உணர்வு. 103 பொருள்:- மனைக்கு விளக்கம்- வீட்டுக்கு ஒளியாக இருப்பவர். மடவார்- பெண்கள். மடவார் தமக்கு- பெண்களுக்கு ஒளி. தகைசால்- நல்ல குணங்கள் நிறைந்த. புதல்வர்- புத்திரர்கள். மனக்கு இனிய- பெற்றோர் மனத்திற்கு உகந்த. புதல்வர்க்கு- புத்திரர்க்கு ஒளி. கல்வியே- கல்வியாகும். ஓதில்- சொல்லப் போனால். கல்விக்கும்- படிப்புக்கும் ஒளி. புகழ்சால்- புகழ் நிறைந்த. உணர்வு- உண்மை அறிவாகும். கருத்து:- இல்லத்திற்கு ஒளி நல்ல மனைவி. பெண்களுக்கு ஒளி நல்ல குணமுள்ள புதல்வர்கள். புதல்வர்க்கு ஒளி கல்வி. கல்விக்கு ஒளி உண்மை அறிவு. விளக்கம்:- விளக்கம் என்ற சொல்லை மடவார், புதல்வர், கல்வி என்பவைகளோடும் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. விளக்கம்- ஒளி, சிறப்பு. இன்சொலான் ஆகும் கிழமை; இனிப்பு இலா வன்சொலான் ஆகும் வசைமனம்; - மென்சொலின் நாவினான் ஆகும் அருள்மனம்; அம்மனத்தான் வீவுஇலா வீடாய் விடும். 104 பொருள்:- இன்சொலான்- இனிய சொற்களால். கிழமை ஆகும் - ஒருவனுக்கு சினேகத்தன்மை உண்டாகும். இனிப்பு இலா- இனிமை இல்லாத. வன்சொலால்- கடும் சொல்லால். வசைமனம்- ஒருவனுக்கு கெட்ட எண்ணமே. ஆகும்- உண்டாகும். மென் சொல்லின்- மெல்லிய சொற்களைக் கூறும். நாவினால்- நாக்கினால். அருள்மனம்- ஒருவனுக்கு இரக்க மனமே. ஆகும்- உண்டாகும். அம்மனத்தான்- அந்த இரக்க மனம் காரணமாக. வீவுஇல்- அழிவற்ற. வீடு ஆய்விடும்- மோட்சம் கிடைத்துவிடும். கருத்து:- இன்சொலால் நட்புரிமை உண்டாகும்; வன்சொலால் கெட்ட எண்ணம் உண்டாகும்; இரக்கம் உள்ள சொல்லால் அருள் மனம் உண்டாகும்; அருள்மனம் மோட்சத்தை அளிக்கும். விளக்கம்:- வீவு- அழிவு. கிழமை- உரிமை. வீடு- மோட்சம். இன்சொல், வன்சொல், மென்சொல், அருள் மனம் இவற்றால் வரும் பயன் சொல்லப்பட்டது. மென் சொல்- இரக்கம் உள்ள சொல். தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் (1900- 1961) அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்பதாண்டு காலத்தைத் தமிழனுக்கும், தமிழுக்கும் அர்பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய வற்றோடு தொடர்புகொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக சமுதாயச் சீர்திருத்தம், சாதிஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண் டாற்றியவர். பிற்காலத்தில் பொது உடமை இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர். தமிழ் மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். 1920 முதல் 1961 வரையுள்ள இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். இவர் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோபகாரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத்துறையில் நாட்டம் கொண்டு ‘அறிவுக் கொடி’ என்னும் பத்திரிகையை 1936ல் கும்பகோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தி மகிழ்ந்தவர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். மேலும் “திராவிடன்” நாளேடு, தமிழரசி, தாருல் இஸ்லாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப்பொழில், செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு நாளேடு, பொன்னி, செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, புது உலகம், கவிதா மண்டலம், புதுவை முரசு, நகரத்தூதன், சண்ட மாருதம், பார்க்கவகுலமித்திரன், சுயமரியாதை, போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். இவ்விதழ்களில் மெய்கண்டான், கதைக் காதலன், ஸ்குரூலூஸ், ளு.ஊ. பரன், மிஸ்டர் திங்கர், சாமிசி, இடிமுழக்கம், காலக்கவி, ஸ்வாமிஜி, வம்பன், அரட்டை சிகாமணி, நாஸ்திகன், பொறுப்புள்ளவன், விளக்கொளி, கண்ணாடி, தமிழன், சல்லடைசலிப்பு, அரசியல்வாதி, மெய்யன் எழுதியபொய் என்னும் 20க்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் எழுதி உள்ளார். பண்டைத்தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடிவாழையென வந்த தமிழ்ப்புலவர் கூட்டத்தின் வழித் தோன்றல்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆய்ந்தவர்; தமிழ் இலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆராய்ச்சியாளர்; சங்க இலக்கியங் களைச் சாதாரணமானவர்களும் அறியும்படி செய்த தழிழறிஞர், தமது படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல்- ஆரவாரத்தை நீக்கி, அடக்கமாக வாழ்ந்து, மக்களுக்காக எழுத வேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சி காலத்திற்கு ஏற்ப தம்மைப் பொருத்திக் கொண்டவர். தொல்காப்பியர் காலத் தமிழன் முதல் பாரதி- பாரதிதாசன் காலத் தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். *** தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த கடகம் என்னும் அழகிய சிற்றூரில் வீரபத்திர மலையமான் என்னும் சைவப்பெருநிலக் கிழாரின் பேரனாகவும், திரு சாமிநாத மலையமான்- கமலாம்மாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வமகனாகவும், சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் ( 1-12- 1900) சாமி சிதம்பரனார் பிறந்தார். கிராமப் பள்ளிகளிலும் மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். தஞ்சையில் தமிழ்ப் பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மாணவராக இருந்து கல்விகற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். முறையாகப் பயின்று 1923-ஆம் ஆண்டில் பண்டிதர்ப்பட்டம், வித்வான்பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டுக் காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்பட எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் ‘தமிழ் ஐயாக்களுக்கு’ நன் மதிப்புக் கிடைப்பது அரிது. ஆனால் சிதம்பரனாரோ மாணவர் களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர்களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நன் மதிப்புக்கிலக்காகினார். இலக்கணத்தை எளிய - இனிய முறையில் கற்பித்தார். சீர் திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார். பள்ளியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரே ஆவார். பெரியார் ஈ.வே. ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன் முதலாக மலாயா சென்றபோது சாமி. சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில், சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமி. சிதம்பரனார் கும்பகோணத்தில் பிபரல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு. ஏ. குப்புசாமி பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும் சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சாமி. சிதம்பரனார் இளமையிலேயே- பள்ளிமாணவராக இருந்த காலத்திலேயே- எதையும் புரிந்துகொண்டு எளிமையாக விளக்கி எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். தன் 21-ம் வயதிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல்வடிவத்தில் வெளிவராமல் எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப்பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாடப் புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றார்கள். இவரெழுதிய ‘மணிமேகலை’ என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1934, 35, 36 ஆகிய ஆண்டுகளில் பாடப் புத்தகமாக வைத்தது. பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக- மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும் முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் - அவர் 41ஆம் வயதிலேயே ஆசிரியர் பணியிலிருந்து விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு தாம் விரும்பிய முழுநேர எழுத்துத் துறையில் ஈடுபட்டார். சாமி. சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர். முதலில் தமிழ்ப் பண்டிதர்; நீதிக் கட்சிக்காரர்; தீவிர சுயமரியாதைக்காரர்; திராவிடகழகக்காரர்; அதன் பின்னர் காங்கிரஸ்காரர்; சமதர்மவாதி; 1949, 50- ல் பொது உடைமை இயக்கம் ‘நெருப்புக் குளியலுக்கு’ ஆளானபோது அதனிடம் நட்புப் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர். விட்ட இடத்தில் தொடுவதைப் பொல, தமிழ்ப் புலவராக வாழ்க்கை யைத் தொடங்கிய சாமி. சிதம்பரனார் 1948-இல் சென்னைக்கு வந்து பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத் துடன் விளக்கும் சங்க இலக்கியங்களின் ஆய்வுப் பணியிலீடு பட்டார். *** இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தாம் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன- இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஓய். எம். சி. ஏ. பட்டிமன்றம் ஆகியவற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை மாகாஜன சபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவராக விளங்கினார். சாமி. சிதம்பரனார் 1948-லிருந்து 1961வரை உள்ள இடைக்காலத்தில் இலக்கியத்துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. தமிழகத்தின் மிகச்சிறந்த புலவர்களான கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களின் படைப்பு களையும் சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகியவற்றையும் சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பியமான மணி மேகலையையும், குறுந்தொகைப் பெருஞ் செல்வம், நற்றிணைக் காட்சிகள், பழமொழி நானூறு, புகழேந்தியின் புலமை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் பொருள் விளக்கம், இவை போன்ற சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்களைவிட எழுத நினைத்த நூல்கள் ஏராளம், ஏராளம். இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணை கொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும் உணர்ந்து கற்றுப் பயன் பெறத்தக்க வகையில், தமக்கே உரிய எளிய - இனிய நடையில் அவற்றின் அடிப்படையை ஆய்ந்து அறிவித்துள்ளார் தமிழகத்திற்கு. சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்து பாராட்டியுள்ளனர். சாமி. சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள் ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங்குகின்றன. சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர்களே சிறந்த நூல்களை ஆக்கமுடியும். அத்தகைய நேரமும் வசதியும் தமிழ் அறிஞர் சாமி. சிதம்பரனார் தம் வாழ்நாளில் பெற்று இருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள் நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அது தவிர மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பன்னிரண்டாயிரம் பாடல்கள் உடைய கம்பராமாயணத்திலிருந்து இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த நாலாயிரம் (4000) பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஆறு காண்டங்களும் கொண்ட கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இளமைக் காலத்திலிருந்தே நாத்திகராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கி, சுயமரியாதை இயக்கத்திலும், திராவிட கழகத்திலும் ஈடுபாடு கொண்ட தமிழ்பெரும் புலவர் பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள், கம்பனிடத்திலும், ஆழ்வார்களிடத்திலும் கொண்டுள்ள ஈடுபாடு முரண்பாடாகப் பலருக்குத் தோன்றக்கூடும். அதையும் சாமி சிதம்பரனார், ‘ஆழ்வார்கள் கண்ட அருள் நெறி’ என்னும் நூலின் முன்னுரையில் விளக்குகிறார்: “நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவன் அல்லன்; மத பக்தனும் அல்லன். நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் உண்மை- அன்பு- ஒழுக்கம்- அறிவு- சமத்துவம் இவற்றை விரும்புகிறேன். யாரிடத்திலும் எத்தகைய பேதமும் பாராட்டாமல் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே என் கருத்து. இத்தகைய நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்போர் பாடலைப் போற்றுகிறேன்; படிக்கிறேன்; சுவைக்கிறேன். இதற்குக் காரணம் என் கொள்கையை ஓட்டிய கருத்துகளை அப் பாடலிலே காண்கின்றேன்.” 1924 முதல் 1940வரை பதினாறு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1924முதல் 1948 வரை இருபத்து நான்கு ஆண்டுகள் அரசியல், சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றியும் வந்த சாமி. சிதம்பரனார் 1948க்கு பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961வரை பன்னிரண்டு ஆண்டு களுக்கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளேட்டில் மூன்று பகுதிகளுக்கு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பி வந்தார்; பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும், மனநிறைவும் பெற்று மெய்மறந்து உழைத்தார். இப்பணிதான் தனக்குப் பிற்காலத்தில் நிலையான புகழ் தேடித்தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். தமிழ்ப் பெரும்புலவர்- தமிழ் ஆராய்ச்சியாளர் - தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்- தமிழ்ப்பாட நூலாசிரியர்- தமிழ்ப்பாவலர் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்துகாட்டிய சாமி. சிதம்பரனார் அவர்கள் 17-1- 1961-ல் இயற்கை எய்தினார். தமிழ்ப் பேரறிஞர் சீர்திருத்தச் செம்மல் சாமி. சிதம்பரனார் புகழ் வாழ்க! வாழ்க!! ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால், பொன்றாது நிற்பதுஒன்று இல்.